4.12.15

திராவிட மாயை - 9


விளைப்புத்துறையும் பணித்துறையும்
          மனித உழைப்பு இரண்டு வகையில் செயல்படுகிறது, பண்டங்களை விளைப்பது ஒன்று, இன்னொன்று பண்டங்களைப் படைக்காமல் நாட்டுக்குத் தேவையான அடிப்படைக் கட்டுமானங்கள் மற்றும் மக்களுக்குத் தேவைப்படும் பல்வேறு பணிகளில் ஈடுபடுவது. இப் பணித்துறையின் செயல்பாட்டால் அதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்குப் பண வருவாய் கிடைக்கிறது. இவ் வருவாய் பண்டத்தின் விற்பனையை மிகுக்கும். இன்னொரு வகையில் பணிகளுக்குத் தேவைப்படும் பண்டங்கள் நேரடியாகவும் நுகரப்படுகின்றன. அடிப்படைக் கட்டுமானங்கள் பொதுவாக அரசினால் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே பொருளியல் நெருக்கடி காலத்தில், அரசே வரி வருவாயை எதிர்பார்க்காமல் பணத்தாள்களை அச்சிட்டு அவற்றைக் கூலியாகக் கொண்டு அடிப்படைக் கட்டுமானப் பனிகளை மேற்கொள்ள முடியும் என்று, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கெயின்சு என்பார் கூறினார். அவரது கூற்றை இங்கிலாந்தோ பிற ஐரோப்பிய நாடுகளோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அமெரிக்க அரசு அதை ஏற்றுக்கொண்டது. அந்த ஆண்டு நிகழ்ந்த கடும் பனிப்பொழிவுச் சகதியை அகற்றுவதற்கென்று பணத்தை அச்சிட்டுப் பணியைத் தொடங்கியது. பின்னர் நேர்கோட்டுச் சாலைகள் அமைத்தல், வாய்க்கால்கள், கால்வாய்கள், சாய்க்கடைகள் அமைத்தல் பராமரித்தல் போன்ற பணிகளில் இவ் வுத்தியைக் கையாண்டு பொருளியல் நெருக்கடிகளை எதிர்கொண்டது. பொதுமைக் கட்சியின் வளர்ச்சியும் கட்டுக்குள் வந்தது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளும் அவ் வுத்தியைப் பின்பற்றுகின்றன. முதல் உலகப் போரின் போது மனித குலத்துக்கு இழுக்குத் தரும் அளவுக்கு நேச நாடுகள் எனப்படுபவை செருமனி மீது எண்ணற்ற பொருளியல் நெருக்கடிகளைத் திணித்தன. அதனால் மக்கள் பட்ட வரலாறு காணாக் கொடுமைகளினால்தான் இட்லரின் கோட்பாடுகளுக்கு அம் மக்களின் இசைவு கிடைத்தது. அத்தகைய மாபெரும் தாழ்நிலையிலிருந்து ஒரு சில ஆண்டுகளில் உலகையே கிடுகிடுக்க வைக்கும் அளவுக்குச் செருமனி வளர்ந்ததென்பது இட்லரும் கெயின்சு பரிந்துவைத்த உத்தியைக் கடைப்பிடித்திருந்தால்தான் இயலும். அது போல் பல்வேறு பொருளியல் தடைகளை ஒ.நா. அவை விதித்தாலும் ஈராக்கின் சதாம் உசேன் அதனை எதிர்கொண்டு வீரார்ப்புடன் விளங்கியது மட்டுமல்ல, அந்நாட்டுப் பொருளியல் மீளத் தொடங்கியிருந்தது அவரும் அக் கோட்பாட்டைப் பின்பற்றியதால்தான் இருக்க வேண்டும். இவ்வாறு போர் ஆயுதங்களை விட வலிமையானவையாக விளங்கும் பொருளியல் தடை என்னும் ஆயுதம் செயலற்றுப் போய்விடுமோ என்ற அச்சம் அமெரிக்காவும் கூட்டணி வல்லரசுகளும் ஒரு மனதாக ஈராக்கு மீது படையெடுத்து சதாம் உசேனையும் தூக்கிலிட்டதன் காரணங்களில் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவது என்ற நோக்கத்தைவிட முதன்மைப் பங்கு ஏற்றிருக்கலாம்.

            பொருளியலைப் பொறுத்தவரை அறிவிக்கப்படாத சில தடைகள் ஏழை நாடுகள் மீது கடைப்பிடிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நாட்டில் புழக்கத்திலிருக்கும் பணத்துக்கும் அரசின் கையிலிருக்கும் தங்கத்துக்கும் சமன்பாடு இருக்க வேண்டும் என்பதை ஓர் இயற்கை விதிபோல் ஆட்சியாளர்களும் அவர்களிடம் பணியாற்றும் பொருளியல் மே(ல்)தாவிகளும் பல்கலைக் கழகங்களும் பல்லவி பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், என்று உலகப் போரின் பின்விளைவு என்ற பெயரில் உருவாகிய அனைத்து நாட்டு பண்டும் உலக வங்கியும் கணக்குப் பணத்தில் கடன்கொடுக்கத்  தொடங்கியதோ அன்றே அதுவரை இருந்த தங்க ஈடமைவு(Gold Equivalent)க் கோட்பாடு காலங்கடந்ததாகிவிட்டது. அதுபோலவே, அயல் செலாவணி மதிப்பென்பதும் நாடுகளின் பண்டவிளைப்பு ஆற்றலின் அல்லது தொழில்நுட்ப மட்டத்தின் அடிப்படையில் அமைவதில்லை. அது முற்றிலும் அரசியல் சார்பான உலக ஆட்சியாளர்கள், வல்லரசிய முதலாளிகளின் கூட்டிணைவுகளின் வழிகாட்டலின்படியே நடைபெறுகின்றன. சீனத்தின் தொழில்துறை முற்றிலும் அமெரிக்காவின் பிடியிலேயே உள்ளது. ஆனால் அமெரிக்காவிலிருந்து வரும் பொருட்களைவிட சீனத்திலிருந்து வரும் பொருட்கள் கொள்ளை மலிவு. சீனப் பொருட்கள் இந்தியாவை விட ஆங்காங்கில் விலை மிகுதி. இந்திய அரசு மேற்கொள்ளும் பொருளியல் நடவடிக்கைகளால்தான் அதாவது இறக்குமதி வரி குறைப்பு, இந்திய நாணயத்தின் டாலருடனான அயற் செலாவணி மதிப்புக் குறைப்பு, முன்னோக்கு (எதிர்கால, இணைய என்றெல்லாம் மறுபெயர்கள்) வாணிகத் தடைகளை அகற்றல், உள்நாட்டுப் பொருட்கள் போன்றவற்றின் மீதான வரிகளை உயர்த்தல் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி குறைத்தல் போன்ற நடவடிக்கைகளால்தான் இன்று அமெரிக்க அரசியல் ஆட்டங்காணாமல் நிற்கிறது. அதனால்தான் அமெரிக்காவில் தன்னைச் சந்தித்த தன் அடிமைக் கூட்டாளி மன்மோகனைப் பார்த்து அமெரிக்காவின் ஒபாமா, இந்தியாவுடனான உறவால்தான் அமெரிக்கா இன்றைய பொருளியல் நெருக்கடியை எதிர்கொள்ள முடிகிறது என்ற உண்மையைக் கூறியுள்ளார்.

            மாலி போன்ற சிறு தீவுகளில் தங்கள் ஆட்களை வைத்து அயற் செலாவணி உத்தியைக் கடைப்பிடித்து ஆட்சியாளர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். அதைச் செய்யும் பிறரை அவாலா ஊழல் என்று வேட்டையாடுகிறார்கள்.

            அது போலவே கெயின்சின் கோட்பாட்டையும் ஏழை நாடுகள் கண்டுகொள்ளக் கூடாது. பல்கலைக் கழகங்களும் அதை வலியுறுத்துவதில்லை. பணத்தாள்களை அச்சிட்டால் பணவீக்கம் வந்துவிடும் என்று அச்சுறுத்துவார்கள்.

            பணவீக்கம் என்பது பற்றியும் தவறான கருத்துகளையே மக்களிடம் பரப்பிவிட்டிருக்கின்றனர். பண வீக்கம் என்பது உண்மையில் ஒரு நாட்டில் உள்ள விற்பனைக்குக் காத்திருக்கும் பண்டங்கள், மக்களுக்குக் கிடைப்பதற்கு ஆயத்த நிலையிலுள்ள பணி வசதிகள் ஆகியவற்றுக்கும் நாட்டில் புழக்கத்திலிருக்கும் பணத்துக்கும் உள்ள விகிதமே ஆகும். பண்டப் படைப்பும் பணிவசதிகளும் தாழ்ந்த மட்டத்தில் இருக்கும் போது, அளவுக்கு மீறிய பணத்தை அச்சிட்டுப் புழக்கத்தில் விட்டால் பணவீக்கம் எனப்படும் விலைவாசி உயர்வும் அதே நேரம் பண்டங்களும் பணிவசதிகளும் மிகுந்திருக்க, பணப்புழக்கம் இல்லாமலிருந்து பண இறக்கமும் ஏற்பட்டு மக்கள் பட்டினிகிடப்பார்கள். அதே வேளையில் பண்டம் - பணி கிடைப்புக்குச் சிறிது மிஞ்சிய நிலையில் பணப்புழக்கம் இருந்தால் அதே பண்ட விளைப்பு, பணிவசதி வழங்கல் துறைகளை ஊக்கும். மக்களின் ஓர் அருந்தல் (கேட்பு) நிலை உருவாகி ஒட்டுமொத்தமான பொருளியல் வளர்ச்சியை நோக்கி அந்நாடு நகரும். ஆனால் நம் ஆட்சியாளர்கள் தங்கள் வல்லரசுக் கூட்டாளிகளின் உறுதுணையோடு செய்ததென்ன?

            ஆயுதங்கள், பிற கருவிகள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு பன்னாட்டுப் பண்டு, உலக வங்கி ஆகியவற்றில் டாலர் கடனை கணக்கில் வரவு வைத்துக்கொள்வார்கள். அதற்கு இணையான நம் நாட்டுப் பணத்தை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் உலக வங்கித் திட்டங்கள் என்ற பொய்ப் பெயரிலான திட்டங்களில் செலவிடுவர். ஆண்டைய வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காகவும் பிற தேவைகளுக்காகவும் ஒதுக்கப்பட்ட பணத்திலிருந்து திருப்பிவிடுவார்கள். மக்களுக்கு நுகர்வுக்காகப் பயன்படும் பொருட்கள் இன்றி பணப்புழக்கம் ஏற்படுவது இதன் விளைவு. இந்தக் கடனை அடைப்பதற்கென்று இங்கு விளையும் பொருள்கள், விளைக்கப்படும் பண்டங்கள் என்று பெருமளவு ஏற்றுமதி செய்வார்கள். இதன் விளைவாக, புதிதாகப் பணம் புழக்கத்துக்கு வந்த அதே நேரம் பண்டங்களின் இருப்பு குறைகிறது. இதன் மூலம் ஒரே நடவடிக்கையின் இரட்டை விளைவாகப் பணவீக்கம் உருவாகிறது. அரசின் கையிலிருக்கும் கன்னெய்ய வாணிகம், தொடர்வண்டிப் போக்குவரத்து, பேருந்துப் போக்குவரத்து ஆகியவற்றின் விலைகளையும் கட்டணங்களையும் ஏற்றி விலைகள், கட்டணங்களின் உயர்வு ஒரு முழுச் சாற்றுக்கு வருகிறது. இதன் விளைவையும் பணவீக்கத்தில் சேர்க்க வேண்டும். இந்த வீக்கத்தால் அயலவர்கள், அல்லது அவர்களுடன் கூட்டு வைத்துள்ள உள்நாட்டினரே ஆதாயம் அடைகிறார்கள். இந்த இரண்டு தகுதியும் இல்லாத உள்நாட்டினர்க்குப் புதிய தொழில்களைத் தொடங்கும் வாய்ப்புகள் கிட்டத்தட்ட அறவே இல்லை. வெளிநாட்டினர்க்கு ஏற்றுமதிப் பண்டங்கள் செய்ய அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பண்டங்களும் பணிகளும் செய்து கொடுக்க மட்டும் எளிதில் இசைவு கிடைத்துவிடும்.

            இவ்வாறு ஏழை நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படாத இந்தப் பொருளியல் உத்தியை வல்லரசுகள் கையாளத் தொடங்கிய பின்னர் வல்லரசிய ஒற்றர்களின் தலையீட்டால் சோமாலியா போன்ற நாடுகளில் நிகழ்ந்தது போன்றவை நீங்கலாகப் பொருளியல் நெருக்கடிகளால் மக்கள் பட்டினியால் சாவது ஏறக்குறைய நின்றிருக்கிறது. எனவே முதலாளியத்துக்கு உரியதாகிய இந்த நெருக்கடியை எதிர்கொள்ள வல்லரசியமும் உலகச் சந்தையும் தேவை என்ற மார்க்சு காலத்தின் நிலை இன்று காலம்  கடந்ததாய்விட்டது.

            முதலாளியத்துக்கும் வல்லரசியத்துக்குமான இந்த முரண்பாட்டைப் பற்றிய கருத்து 1980களின் தொடக்கத்தில் (1981 அல்லது 82) வெங்காளூரில் குணாவின் முன்முயற்சியில் நடைபெற்ற தேனீக்கள் பட்டறை என்ற நிகழ்ச்சியில் நான் முதன்முறை சந்தித்த ஞானி, எசு.என்.நாகராசன், குணா ஆகியோரின் தனி உரையாடலில் (கோவை)ஞானி, நாகராசன் ஆகியோரிடமிருந்து எமக்குத் தெரியவந்தது. கெயின்சு கோட்பாட்டின் பங்கைப் பற்றிய புரிவை நானாக வளர்த்துக்கொண்டேன். அதற்குமுன் எழுத்துகள் மூலம் நான் அறிந்து கொண்ட ஞானி தமிழ்த் தேசியத்தை எல்லையின்றிப் பகடி செய்பவராக இருந்தார். ஆனால் இப்போது அவர் தமிழ்த் தேசியம் பேசுவோரின் முதன்மையான வழிகாட்டிகளில் முதன்மையானவராக விளங்குகிறார். அன்று முதலாளியத்துக்கும் வல்லரசியத்துக்கும் உள்ள முரண்பாட்டைத் தெளிவாக எடுத்துச் சொன்ன ஞானி, இன்று வல்லரசுப் பொருளியலை முதலாளியம் என்ற பெயரில் சுட்டுவது மட்டுமல்ல, முதலாளியம் நம் மண்ணில் உருவாவதற்கு ஒரு போதும் இடம் கொடுக்கக் கூடாது என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்குகிறார். இப்போது நினைத்துப் பார்த்தால் அந்த 1980களின் தொடக்கத்தில்தான் மூன்றாம் அணியினர் எனப்படும் பல்வேறு குழுக்களுக்கும் உலக அளவில் தேசிய விடுதலை இயக்கங்களுக்குள் புகுந்து பொருளியல் ஒடுக்குமுறையிலிருந்து இளைஞர்களின் சிந்தனையை மொழி, பண்பாடு ஆகியவற்றின் மீது திருப்பிவிடும் பணி வழங்கப்பட்டிருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

            ஏழைநாட்டு மக்களில் படித்தோரின் சிந்தனையைத் திருப்புவதற்கு மூன்றாம் அணிச் சிந்தனையாளர்கள் எனக் கூறப்படும் சார்த்தர் போன்றோரின் கருத்துகளைத் தமிழில் தருவதற்கு எசு.வி. இராசதுரை எனப்படும் கா.மனோகரன், தமிழவன் எனப்படும் கார்லோசு, அ(அந்தோணிசாமி).மார்க்சு முதலியோர் பயன்படுகின்றனர். ஒரு கட்டத்தில் தமிழகத் தேசியப் பொருளியல் ஒடுக்கலை இனம் கண்டு அதற்கு எதிராக வலுவான கருத்துகளை முன்வைத்த குணா இன்று தமிழகத்தினுள் வாழ்கின்ற தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோருக்கும் “திராவிடர்”கள் என்று அவர் சுட்டும் பிறமொழியாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டைக் முதன்மைப்படுத்தி நடத்தியுள்ள கருத்துருவாக்கம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. மதமாற்றம் புரட்சிகரமானது என்ற கருத்தைக் கொண்டிருக்கும் அவரை விடுதலை இறையியல் என்ற அமைப்பு பயன்படுத்திக் கொண்டுள்ளது. சாதியடிப்படையில் வள்ளுவர்களைச் அம்மணர்களின் ஒரு பிரிவினராகிய நிக்கந்தர் எனப்படும் ஆசீவகர்கள் என்று முடிவு கட்டி பனியாக்களுக்கு அதரவு சேர்ப்பவராக அவர் மாற்றப்பட்டுள்ளார்.

            இதன் தொடர்ச்சியாக அண்மைக் காலமாகப் பரப்பப்பட்டு வரும் ஒரு கருத்தியல் அச்சு முதலீட்டியம் என்பதாகும். அதாவது மொழித் தேசிய உணர்வு வளர்ந்தால் அம் மொழி நூல்கள் நன்றாக விற்பனையாகும் என்பதால் அச்சுத்துறையில் ஈடுபட்டவர்கள்தாம் மொழித் தேசியத்தை வளர்த்தெடுக்கிறார்கள் என்பது இக் கருத்தாக்கத்தின் உள்ளடக்கம் என்று தோன்றுகிறது. இதுதான் மிக முன்னேறிய இன்றைய ஆய்வு நெறி. இது போன்ற இன்றைய ஆய்வு நெறிகள் பற்றி ஒரு நண்பர் கூறினார்: ஒரு தவளையின் ஒரு காலை வெட்டிவிட்டு துள்ளு என்றனர்; அது கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு துள்ளியது; இன்னொரு காலையும் வெட்டிவிட்டு மீண்டும் துள்ளு என்றனர். அது இன்னும் கூடுதலான நேரம் எடுத்துக்கொண்டு துள்ளியது; அதே போல் மூன்றாவது காலையும் வெட்டி விட்டுத் துள்ளு என்றனர். நீண்ட நேரம் எடுத்தது இப்போது. இருந்த நான்காவது காலையும் எடுத்துவிட்டுத் துள்ளச் சொன்னார்கள், தவளை துள்ளவில்லை; ஆய்வு முடிவு: தவளையின் நான்கு கால்களையும் வெட்டினால் அதற்குக் காது கேட்காது.

            ஒரு மக்கள் தங்கள் தாய்மொழியின் அடிப்படையில் ஒரு நிலப்பரப்பை அடையாளப்படுத்தி அதற்கு அரசியல் உரிமையையோ அல்லது பொருளியல் விடுதலையையோ முன்வைத்துப் போராடுவது அச்சகங்களில் முதலிட்டிருப்போரின் பரப்பல்களின் விளைவுதான் என்பது நாம் மேலே கூறிய தவளை ஆய்வாளர்களின் கூற்றைவிடக் குறும்பு நிறைந்தது.

            உண்மையில் நில எல்லைதான் அம்மக்களின் அடிப்படைக் களம். அதற்கு அடையாளமாக தங்கள் மொழியைக் கொண்டனர் ஐரோப்பிய மக்கள். பாக்கித்தானின் ஒரு பகுதியாயிருந்த கிழக்கு வங்கத்தின் மக்களும் முகம்மதியர்களே. அதனால் அங்கு மொழி அடையாளத்தை அவர்கள் கையிலெடுத்துக் கொண்டனர். இசுரேலியர்களுக்கும் பாலத்தீனியர்களுக்கும் சமயம், இனம் என்ற இரண்டிலும் வேறுபாடு உண்டு. வெள்ளைத் தோலர்களுக்கும் முகம்மதிய நாடுகளின் மக்களுக்கும் சமயத்தில் முரண்பாடு உண்டு. எனவே அதனைக் கையிலெடுக்கின்றனர். ஆனால் உண்மையான சிக்கலான பொருளியல் ஒடுக்கலைக் கையிலெடுக்காததால் இந்த இயக்கங்களில் பெரும்பாலானவை பொதுமக்களின் பங்கேற்பைப் பெறாத, ஆயுதம் தாங்கிய குழுக்களின் துணிச்சலியம், அரட்டலியமாகக் குறுகிக் கிடக்கின்றன.

            ஈழத்தைப் பொறுத்தவரை, மறைமுகமான எந்தப் பாசாங்கும் இன்றி மொழி, சமயம், இனம் என்று அனைத்து வகையிலும் இருக்கும் முரண்பாடுகளுடன் வெளிப்படையான நிலப்பறிப்பு, மக்களைக் கொன்றொழித்தல் ஆகிய குறிக்கோள்களும் தேசிய எதிரிகளுக்கு உள்ளன.

இத்துடன் இன்னொன்றும் கூறப்படுகிறது. மொழித் தேசியம் மொழி வெறியாகிவிடக் கூடாது, பிற மொழிகளுக்கும் உரிய மதிப்பு அளிக்க வேண்டும் என்பது. மொழித் தேசியம் என்பது நில எல்லை தொடர்பானது என்பதை மறக்க அச்சு முதலீட்டியம் கருத்தியல், மொழியின் முதன்மையை மறுக்க பிறமொழி ஏற்பியம், இறுதியில் மொழித் தேசியம் என்பதே மாயை, கற்பிதம் என்று மறுப்பதாகத் திரிவாக்கம் பெறுகிறது. இதுபற்றி அ.மார்க்சு தேசியம் ஒரு கற்பிதம் என்று ஒரு நூலைத் தமிழாக்கம், அதாவது தமிழில் ஆக்கம் செய்துள்ளார்.

            ஆனால் இது போன்ற அரைகுறை உண்மைகளைக் கூறி மக்களைக் குழப்பிவிட்டு உண்மையான தேசியச் சிக்கலின் உண்மையான உள்ளடக்கமான பொருளியல் ஒடுக்குமுறையிலிருந்து திசை திருப்புவதே இவர்களுக்கு எழுத்துப் பணி வழங்கும் வல்லரசியத்தின் நோக்கம்.

            மொழி, சமயம், இனம் போன்றவற்றில் ஒன்றையோ அதற்கு மேற்பட்டவையோ நாம் முன்பு சுட்டியது போன்று ஒரு நிலப் பரப்பில் வாழும் மக்களின் அடையாளமாக்கி, அந் நிலப் பரப்பில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைமை தாங்கும் மேல்மட்டக் குழுக்கள் குறிக்கோளாக முன்வைக்கின்றன. நாளை தங்கள் பொருளியல் நலன்களில் பங்குக்கு அடித்தள மக்கள் வந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான் இக் குழுக்கள் பொருளியல் ஒடுக்குமுறை பற்றிய கேள்வியை எழுப்புவதில்லை. அதனால் வல்லரசியத்தின் பணி எளிதாகிவிடுகிறது. இப்போது அதையே குழப்புவதற்காகத்தான் இந்த அச்சு முதலீட்டியம் போன்ற புதுப்புதுச் சொற்கட்டுக்களை அது தன் அறிவுக் கூலிப்படைகள் மூலம் முன்வைக்கிறது. இதன் தெளிவுநிலைதான் என்ன?

            தேசியம் என்பது இந்தியா, ஐரோப்பா அல்லது நேற்றைய சோவியத்து போன்ற பன்மொழி, பல்சமய, பல இனம் கொண்ட மக்கள் சுவிட்சர்லாந்து போன்று ஒரு நிலப்பரப்பினுள் கலந்தோ, தனித்தனி நிலப்பரப்புகள் இணைந்து இன்றைய வட அமெரிக்காவின் ஒன்றிய மாநிலங்களையும் கனடாவையும் போன்றோ ஒரு தேசியமாகக் செயற்பட முடியும். பேரவைக் கட்சியின் பின்னால் அணிதிரண்ட மக்கள் அந்தக் கண்ணோட்டத்துடன்தான் அதில் பங்கேற்றனர். ஆனால் அம் மக்கள் தங்கள் வழிகாட்டியாகக் கொண்ட காந்தியோ வாய்மைக்கு மாபெரும் அறைகூவலாக, பொய்யையே உடலாகக் கொண்ட திறன்மிக்க ஒரு உயிரியாக இருந்ததால் அனைவரும் ஏமாந்தோம். விடுதலை கிடைத்ததும் தமிழகத்து திரு.வி.க. போன்றவர்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு தங்கள் உள்ளக் குமுறலை வெளியிட்டார்கள். ஆனால் அவர்கள் காந்தியை ஐயுறவில்லை. ஏவலாளாகிய பட்டேலைக் குறை கூறினர், காந்தியம் மாண்டு விட்டது, பட்டேலியம்தான் ஆள்கிறது என்று. உண்மையில் பட்டேலியம்தான் காந்தியம். மும்பையில் கப்பல் படையினர் ஆங்கில அரசுக்கு எதிராக விடுதலை முழக்கம் எழுப்பியபோது காந்தி சொன்னது, நாளை என் ஆட்சியையும் இவர்கள் இப்படி எதிர்க்கமாட்டார்கள் என்று எப்படி நம்புவது? நேருவை விடுத்து அப் போராட்டம் அமுக்கப்பட்டது.

            முதலாளியர் தம் பண்டங்களுக்கு ஒரு விரிவான சந்தை வேண்டுமென்றுதான் விரும்புவர். அதனால் அவர்கள் விரிந்த ஒரு நிலப் பரப்பை உடைய தேசியங்களை அமைக்கவே விரும்புவர். ஆனால் சொந்த மொழி, சமயம், இனம் சார்ந்த நிலப் பரப்பே கூட தனக்குரிய சந்தையாகக் கிடைக்க முடியாத போதுதான் குறுகிய நிலப் பரப்பாவது தமக்குச் சொந்தமாக வேண்டும் என்று முடிவு செய்வர் என்பது லெனின் கூற்று. அதுதான் உண்மையும் கூட.

            இந்த அடிப்படையில் எமது நிலைப்பாடு இந்தியா என்ற பெருந் தேசியத்தினுள், அதனுள் அடங்கிய பிற தேசியங்களுடன் சமமான உரிமையுள்ள ஒரு தேசியமாகத் தமிழகம் விளங்க வேண்டும். நமக்குப் பிற தேசியங்கள் சந்தையாக வேண்டாம், நாமும் பிற தேசியங்களுக்குச் சந்தையாக மாட்டோம். நம் நாட்டில் கிடைக்கும் இயற்கை வளங்களின் அடிப்படையில் நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் தகுந்த அறிவியல் - தொழில்நுட்பத்தை நாம் வளர்த்தெடுப்போம். அதற்காக நம் நிலப் பரப்பில் ஊராட்சி ஒன்றியம் போன்ற சிறு சிறு ஆள்வினை மண்டலங்களுக்கு ஒன்றாக அறிவியல் - தொழில்நுட்பக் காப்புரிமை அமைப்புகளை உருவாக்குவோம். தொழில் முனைவோரை அனைத்து வகையிலும் ஊக்குவோம். எளிய பங்கு முதலீட்டு வாய்ப்பு மிகக் கூடிய விகிதத்திலான மக்களுக்கு கிடைக்குமாறு இரண்டாம் நிலை பங்குச் சந்தையை ஒழித்துப் புதிய பங்கு சந்தை முதலீட்டு முறையை உருவாக்குவோம். தொழிலாளர்களுக்கும் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் பங்கு உரிமை பெறச் செய்வோம்.

            இந்தியா என்ற தேசம் சம உரிமையுள்ள சிறு சிறு தேசியங்களாகப் பிரிந்து தமக்குள் ஓர் இறுக்கமான ஒருங்கிணப்பு இல்லாமல் போனால் முன்பு சீனத்துக்கு நேர்ந்தது போல் அயல் விசைகளால் இடையூறுகள் நேரலாம். இதைத் தவிர்ப்பதற்கு வரி தண்டும் அதிகாரத்தை மாநிலத் தேசியங்களுக்கு வழங்கி, பற்றாக்குறைப் பணமுறையில் நாம் மேலே கெயின்சு கோட்பாட்டைப் பற்றிக் கூறியவாறு கட்டமைப்புகளுக்கும் பணித்துறைகளுக்கும் தேவைப்படும் பணத்தை நடுவரசு அச்சிட்டு வழங்குமாறு வடிவமைக்கலாம். இவ்வாறு நடுவரசுக்கும் மாநிலத் தேசங்களுக்கும் உள்ள பிணைப்பு பேணப்படும். படைத்துறை, அயலுறவு, அஞ்சல்துறை போன்றவை நடுவரசிடம் இருக்கும். அனைந்திந்தியப் பணிகள் மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப உரிய தேர்வு, பணி மூப்பு அடிப்படையில் மாநிலங்கள் தேர்வு செய்யும் வேட்பாளர்களிலிருந்து தேர்வாக வேண்டும். நேரடி உயர் பதவி எவருக்கும் வழங்கக் கூடாது. ஆட்சி மொழி அந்தந்த மாநில மொழியாக அந்தந்த மாநிலத்தினுள் இருக்கும். நடுவரசில் பேணப்படும் மொழிபெயர்ப்பாளர்கள் இதற்காகச் செயற்கையாக உருவாக்கப்பட்டு இன்று நடைமுறையிலிருக்கும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தேவையானால் மொழி பெயர்த்து உரிய நடவடிக்கைக்குப்பின் உரிய அந்த மாநில மொழிக்கு மாற்றி விடுக்க வேண்டும்.

            இது போன்ற ஒரு அரசியல் அமைப்பை வேண்டி நாம் போராட வேண்டும்.

            இந்த இலக்கு வெற்றியடையாமல் போனால் வரும் தலைமுறையினர் அரசியல் விடுதலைக்கும் சேர்த்து போராடுவதைத் தவிர்க்க முடியாது.
முதலாளியப் புரட்சியைக் உள்ளடக்கமாகக் கொண்டது தேசிய உரிமைப் புரட்சி. நிலக்கிழமைப் பொருளியல் - பண்பாட்டுக் கட்டமைப்பை உடைத்து புரட்சிகர நிலக்கிழமைத் தனிமங்களும் வல்லரசியத்தின் தேவைகளுக்காக வளர்த்தெடுக்கப்பட்ட, வல்லரசியத்தின் பின்னணியில் வளர்ந்து ஒரு கட்டத்தில் தனக்கெனத் தனி உரிமையுடைய ஒரு பொருளியல் வேண்டும் என்று, ஒவ்வொரு வரலாற்றுக் கட்டத்திலும் உருவாகும் புதிய புனிற்றுநிலை புரட்சிகர முதலாளியத் தனிமங்களும் இணைந்து தேசியப் பாட்டாளிய வகுப்பின் ஒத்துழைப்புடன் நடத்தும் ஒன்றாகும் அது. இத்தகைய ஒரு தோற்றமும் ஓரளவு தெளிவான செயல் திட்டமும் கொண்டு வெளிப்பட்டதுதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.(அன்றைய காலகட்டத்தில் பாட்டாளியர் குறித்த ஓர்மை நம் நாட்டில் பரவலாகாததால் அவர்களுக்கான திட்டம் எதையும் அவ்வியக்கம் முன்வைக்கவில்லை.) பெரியார் தோண்டிப் புதைத்த அதன் விதைகள் மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. மார்க்சியம் ஒரு வளர்ச்சிக் கோட்பாடு, ஒரு பொருளியல் கட்டத்திலிருந்து அதற்கு அடுத்த மேம்பட்ட கட்டத்துக்கு ஒரு குமுகத்தை எடுத்துச்செல்வது என்பதைப் புரிந்துகொள்ளாது அதைப் பொதுமையியமாகச் சிதைத்த பல்வேறு வகை போலி மார்க்சியர்களும் அமெரிக்கக் கைக்கூலிகளாகக் குறுகிப் போன மாவோயியர்களும் மொழி, பண்பாடு பற்றி மட்டும் முழங்கிவிட்டு பொருளியல் கேள்வியை அதனுள் புதைத்துவிட்ட போலித் தேசியர்களும் பனியாக்களின் இந்திய அரசுடனும் வல்லரசியத்துடனும் சேர்ந்து அந்த முளைகளைக் கடந்த முக்கால் நூற்றாண்டுகளாகக் கருவறுத்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் தமிழ்த் தேசியத்தை, தமிழகத் தேசியத்தைக் காக்க வேண்டும்.

            அந்த முதலாளியப் புரட்சி முற்றுப்பெற்றால்தான், ஐரோப்பாவில் நிகழ்ந்தது போலவும் சப்பானில் நேர்ந்தது போலவும் தொழிலடிப்படையிலான சாதியும் சாதியடிப்படையிலான தொழில்களும் அகன்று எவரும் எத் தொழிலையும் செய்யும் வகையில் தொழில்நுட்பங்கள் தேக்கமடையாமல் நாள்தோறும் புதுப்பிக்கப்படும். வருணங்கள் அடிப்படையில் அமைந்த ஆகமக் கோயில்களும் (வழிபாட்டு மொழியைத் தமிழாக மாற்றினால் போதும் என்கின்றனர் போலித் தமிழ்த் தேசியர்கள், நாமோ கோயிலின் கட்டமைப்பையே மாற்ற வேண்டும் என்கிறோம்), சாதி அடிப்படையில் அமைந்த ஊர்க் கோயில்களும், அகன்று அனைவரும் சமமாகத் தத்தம் மொழியில் வழிபாடு நடத்தும் கோயில்கள் உருவாகும். இவ்வாறு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நம் மூதாதையர் கனவு கண்டும் எய்த முடியாத சாதியற்ற ஒரு குமுகம் அமையும்.

            இன்று உலகில் தேசிய விடுதலைப் போர்களில் ஈழ விடுதலைப் போர், முகம்மதிய இயக்கங்கள் ஆகியவை தவிர(இவ் வியக்கங்களிலும் நுட்பமான ஊடுருவல்களின் வாய்ப்பைப் புறக்கணிப்பதறக்கில்லை;) ஏறக்குறைய அனைத்தும் மாவோயியர்களாலேயே நடத்தப்படுகின்றன. அவை அனைத்தும் ந.ஒ.நி.(சி.ஐ.ஏ.) அமைத்துத் தந்த கோட்பாடுகளின்படி, சீன - அமெரிக்க வழிகாட்டலின்படி பண்பாட்டுத் தேசியப் போராட்டங்களையே நடத்தி புற விசைகளின் பொருளியல் சுரண்டலிலிருந்து அத் தேசிய மக்களின் கவனத்தையும் சிந்தனையையும் திசைதிருப்புகின்றன. புற விசைகளின் சுரண்டலுக்கு எதிரான தேசியப் பொருளியல் நலன்கள் உருவாகிவிடாமல் பாட்டாளியக் கோட்பாட்டை முன் நிறுத்தி வெளிவிசைகளுடன் அறிந்தோ அறியாமலோ இணைந்து இவை செயல்படுகின்றன. அதே நேரத்தில் புரட்சிகரத் தேசியப் பொருளியல் விசைகள் உருவாகிவிடாமல் கருத்தியலிலும் களத்திலும் கருவறுப்பதுடன் ஏதாவது தேசியப் பொருளியல் விசைகள் உருவாகியிருந்தால் அவற்றை அழித்தொழிப்பதற்கு அடித்தள மக்களைப் பயன்படுத்தி அம் மக்களையும் தேசியப் பொருளியல் உரிமைகளுக்கு எதிராக நிறுத்தியுள்ளன.

பெருந்தொழில்கள் வல்லரசியத்தின் வேர்களாக நம் நாட்டில் செயல்படுகின்றன. அவற்றின் பிரிக்க முடியாத உறுப்புகளாக அவற்றில் பணிபுரியும் பாட்டாளிகள் உள்ளனர். அவர்களை இந்திய மற்றும் இந்திய மார்க்சியப் பொதுமைக் கட்சிகள் ஒருங்கிணைத்துள்ளன. எஞ்சியுள்ள உதிரித் தொழிலாளர்கள் இங்கு நிலவும் உள்நாட்டுக்குரிய நிலக்கிழமை வகுப்பின் உறுப்பாக அமையத் தக்கவர்கள். இங்கு முதலாளியம் வேரூன்றும் போது இங்கிருந்தே, ஏன் அவர்களிடையிலிருந்தும் கூட வெளிப்படும் புதிய தேசிய முதலாளியத்தில் தாமே புரட்சிகரப் பாட்டாளியராக உருவாக வேண்டியவர்கள். அவர்களை அமைப்புசாராத் தொழிலாளர்கள் என்று பெயர் சூட்டி ஒ.நா. அவை போன்ற வல்லரசிய அமைப்புகளிடமிருந்து பணம் பெறும் கைக்கூலிகள் அவர்களை அமைப்புகளாகக் கட்டி, எதிலும் தரகு பார்க்கும் திறன் மிக்க கருணாநிதி போன்ற மாநில முதலமைச்சர்கள் மூலமாக நல வாரியங்கள் அமைத்துப் பணம் வழங்கி அவர்களுக்குப் பாட்டாளியக் கோட்பாட்டை ஊட்டி அக நிலையில் தேசிய முதலாளியப் புரட்சிக்கு எதிரான ஒரு வலிமையான மக்கள் தொகுதியாகக் கட்டியமைத்துள்ளனர்.

            தேசியத்தைப் பொறுத்தவரை, அயல் விசைகளின் பொருளியல் சுரண்டலை மறைப்பதற்காகத் தொடக்கத்தில் நாம் சுட்டியுள்ள பண்பாட்டுக் கூறுகளான பருப்பொருள் பண்பாட்டைத் தேசிய ஒடுக்குமுறையின் இலக்குகள் என்று கூறி அவற்றைக் காக்கப் போராடுவோம் என்று அழைக்கும் இந்த மாவோயியர்களும் சரி, மரபுப் பொதுமையினர் எனப்படும் இந்திய, இந்திய - மார்க்சியப் பொதுமைக் கட்சியினரும் சரி தொழிலாளர்களின் தனிமனிதப் பண்பாடான நடத்தைப் பண்பாட்டைப் பொறுத்தவரை ஓர் எதிர்நிலை அணுகலையே கொண்டுள்ளனர். குடித்தல், ஊதாரித்தனம் போன்ற நடத்தைகளுக்கு எதிராக அவர்கள் எதுவும் சொல்வது இல்லை. இவை பாட்டாளியர்களுக்கு இலக்கணம் என்பது போன்ற ஒரு படிமத்தையே உருவாக்கி வைத்துள்ளனர். கூட்டிக் கழித்துப் பார்த்தால் சாராயக்கடைகளைப் பின்னின்று நடத்தும் கருணாநிதி - செயலலிதா கும்பலுக்கும் பல்வேறு போதைப் பொருள்களைச் சந்தைக்கு விடும் பனியாக்களுக்கும் ஆட்சியாளர்கள் வழங்கும் பல்வேறு இலவயங்களும் மலிவு விலைப் பொருட்களின் பயன்களும் சென்று சேர்வதற்கே உள்நாட்டுத் தேசியப் பொருளியல் அடித்தளத்தை அழிக்கும் ஆட்சியாளர்களின் செயல்களுக்குத் துணை போகிறார்கள்.

            பொதுமைக் கட்சியினர் ஆட்சி செய்யும் கேரளத்தில் தொழிலாளர் நலத் திட்டங்களில் தொழிலாளர் இடும் பணத்துக்குச் சமமாகத்தான் அரசு வழங்குகிறது, தமிழகத்தில் போல் முழுவதும் இலவயமாக அல்ல. அங்குள்ள தொழிலாளர்கள் அதற்காகவேனும் தம் வரும்படியில் மிச்சம் பிடித்தாக வேண்டும், அடிப்படைச் சிக்கனத்தைக் கடைப்பிடித்தாக வேண்டும்.

            தேசியத்தில் பண்பாட்டை அடையாளமாகக் காட்டும் நம் தோழர்களில் அனைத்து வகையினரும் தொழிலாளர்களைப் பொறுத்தவரை தேசிய விசைகளுக்கு எதிராக அவர்களை நிறுத்தி அவர்களது பொருளியலை நேரடியாகவும் அரசு மூலமாக மறைமுகமாகவும் உறிஞ்சி அவர்களது பண்பாட்டு மட்டத்தை எவ்வளவு தாழ்த்த முடியுமோ அவ்வளவு தாழ்த்தத் தூண்டுகிறார்கள். இதைப் பயன்படுத்தி அரசு வருவாய் அனைத்தையும் இலவயங்களில் அழித்து ஆட்சியாளர்கள் பாசனம், வேளாண்மை போன்ற அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்து நிலங்களைத் தரிசாக்கி அவற்றை அயலவர்களோடு பங்குபோட்டுக்கொள்கின்றனர்.

தேசியப் பொருளியல் விசைகள் வலுப்பெற்று முதலாளியக் குமுகம் உருவானால்தான் அடித்தள மக்களுக்கான வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கான அடித்தளம் உருவாகும்; அப்படி உருவானால்தான். அவர்கள் அடுத்த வரலாற்றுக் கட்டத்தில் போராடி பொதுமைக் குமுகத்தை அமைக்க முடியும், பங்குபோட்டுக்கொள்ள செல்வமே இருக்கும். அதாவது அகப்பையில் வர சட்டியில் இருக்கும், இல்லை எனில் நாய்ச் சண்டைதான் மிஞ்சும் என்ற உண்மைகளை மறைக்கிறார்கள், அந்த நாய்ச் சண்டையைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள் அயல் பணத்தில் கொழிக்கும் வல்லரசிய உளவாளிகள்.

             உள்நாட்டில் படித்த கூட்டத்தையும் வயிற்றுக்கில்லாத ஏழைகளையும் தவிர வேறெவரது கருத்தியல் ஆதரவையும் இவ் வியக்கங்கள் பெறவில்லை. இக் காரணத்தால் இந்த இயக்கங்கள் வல்லரசியத்தின் பொருள் உதவியுடனே செயல்பட வேண்டியுள்ளது. அடித்தள மக்களைப் பல்வேறு உதவிகள் மூலமும் ஆயுதங்கள் மூலமும்தான் தங்களுக்கு நிலைக்களனாக ஆயுதந் தாங்கிய குழுக்கள் வைத்துள்ளன.

மாறாகத் தேசியப் பொருளியல் விசைகளின் மீது தேசிய ஒடுக்குமுறையாளர்கள் பூட்டி வைத்திருக்கும் விலங்குகளை உடைக்கும் செயல்திட்டத்தோடு களமிறங்கும் தேசிய உரிமை இயக்கங்களின் நிலையான செயற்பாட்டால் தேசிய முதலாளிய வகுப்பு தன்னை வெளிப்படுத்தி தேசிய உரிமைப் போராட்டத்துக்கான பின்னணி வலிமையை வழங்குவதுடன் அக முரண்பாடுகளான சாதி சமய - மொழிப் பகைமை உணர்வுகளை அகற்றி அவர்களை ஒரே தேசிய மக்கள் என்ற அடிப்படையில் களத்தினுள் கொண்டுவர உதவும். இன்று களத்தில் முன்னிலை பெற்றுள்ள ஒதுக்கீட்டுக்காக மக்கள் குழுக்களுக்குச் சாதி, சமய, இன, மொழி வெறியூட்டும் தலைமைகள் வெளியேறும். இந்த நிகழ்முறையின் ஒரு வரலாற்றுப் பதத்தை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நயன்மைக் கட்சி செய்து காட்டியுள்ளது. எனவே தேசியப் பொருளியல் ஒடுக்குமுறையை இனங்கண்டு அதை ஒழிப்பதற்கான திட்டத்துடன் களமிறங்குவதே நேர்மையும் உறுதியும் கொண்ட தேசிய உணர்வாளர்களின் ஒரே வழி!

            தேசியப் பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்று நாம் முன்வைத்ததன் உண்மையான பொருள் இதுவே!

0 மறுமொழிகள்: