28.12.15

சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 17


இணைப்பு: 2
விமர்சனம்

            பெரும் அறிஞர் திரு.இரா.மதிவாணன் அவர்கள் தொல்காப்பியர் காலம் என்ற நூலில், எனது The Dravidian Lineages – Nadars Through The Ages என்ற புத்தகத்திலிருந்து சில குறிப்புகள் எடுத்துக் கூற அவை 2006, December மாதத்திலுள்ள மள்ளர் மலர் இதழ்களில் வெளியாக அந்தக் குறிப்புகளின் நகலுடன் ஒரு நாள் குமரிமைந்தன் திரு. பெரியநாடார் அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். ஒரு விபத்தில் சிக்கி கால் முறிந்த நான் சிகிட்சை பெற்றுப் படுக்கையில் இருந்தேன். நாங்கள் சில மணி நேரம் பேசிக் கொண்டே இருந்தோம். விடை பெறும் தருவாயில் அவர் எழுதிய நாடார்களின் வரலாறு என்ற நூலின் ஒரு பிரதியை எனக்குக் கொடுத்து, முடிந்தால் இதற்கு ஒரு விமர்சனம் எழுதிக் கொடுங்கள் என்றார். ஒரு விமர்சனம் என்று அவர் கூறியதால் நான் மறுக்கவில்லை.

            உலகில் தனிப்பட்ட வேறெந்த சாதியினருக்கும் இல்லாத அதிக வரலாற்றுப் புத்தகங்கள் (ஏறத்தாழ ..... நூல்கள்) நாடார் சாதியினருக்கு உண்டு என்ற செய்தியே மிகச் சிறந்த ஒன்றாகும். அந்த வரலாற்று நூல்களின் எண்ணிக்கையோடு இன்னும் ஒரு எண் நூலாசிரியர் பெரியநாடார் அவர்கள் சேர்ந்துக்கொண்டு பெருமை பெறுகிறார்.

            பல மணிநேரம் திரு. குமரிமைந்தனோடு கலந்துரையாடியதால் அன்னாரது குணாதியங்களைப் புரிந்துகொண்டேன். மேலும் அவருடைய இதர புத்தகங்களையும் படித்தேன். அவர் ஒரு முற்போக்குவாதி. முன்பெல்லாம் அவர் ஒரு சிறந்த பெரியார் பக்தன், ஒரு சமத்துவ சமுதாயம் உருவாக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவர். சமுதாயத்தில், தாம் ஒரு சாதி வெறியற்ற, தன்னலமற்ற, ஒரு நபராக காணப்பட வேண்டும் என்று கருதுகிறார். ஒரு அரை நூற்றாண்டிற்கு முன் உருவான சில கம்யூனிஸ்ட் முற்போக்குவாதிகளும் இன்னும் சில பெரியாரிசக்காரர்களும் அப்படியே சிந்தித்தார்கள். காலத்தின் சுழற்சியில் கொள்கைகள் மெலிந்து நலிந்த போது அவர்கள் யதார்த்தத்திற்குத் திரும்பி, சாதி ஆராய்ச்சியில் இறங்கி உள்ளனர். ஆனாலும் மனதில் ஏதோ ஒரு மூலையில் ஒரு சிறு குற்ற உணர்வு. அது அன்னாரின் ஏட்டில் மனம் திறந்து என்ற பகுதியில் காண்கிறோம். “இந் நூலின் தலைப்பைப் படித்ததும் என்னைப் பற்றி அறிந்தவர்களிலும் என் மீது நம்பிக்கையும் நன்மதிப்பும் கொண்டவர்களிலும் சிலராவது குமரிமைந்தனும் சொந்த சாதி வரலாறு எழுத முனைந்துவிட்டாரே என்று மனத்தளர்ச்சியும் அதிர்ச்சியும் வருத்தமும் அடையக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

            இவ் வண்ணம் அவர் மனம் புண்பட்டு சிந்திக்கத் தேவையில்லை. ஏனென்றால் இந் நாட்களில் எல்லா சாதியினருக்கும் சாதி அமைப்புகள் உண்டு. பிராமணர்கள் முதல் கீழற்றம் தீண்டத்தகாதவர்கள் என கருதப்படும் சாதியினர் வரை அனைத்து சாதிக்கும் தங்கள் தங்கள் சாதி அமைப்புகளும் செயல்பாட்டு குழுக்களும் உண்டு. அந்தந்த சாதியாரில் படித்து பட்டம்பெற்று உயர் நிலையில் இருக்கும் அங்கத்தினர்கள் முழு மூச்சோடும் ஆர்வத்தோடும் தயங்காமல் தங்கள் சமுதாயத்திற்காக செயலாற்றுகின்றனர். அப்படி இருக்க, ஏன் நாடார்களுக்கு மட்டும் தயக்கம்? இந்தத் தயக்கம் நாடார்களில் உயர் பதவி எட்டிய அங்கத்தினர் படித்து உயர்நிலை எட்டிய பெரும் பேராசிரியர்கள் மத்தியிலும் தெள்ளத்தெளிவாகக் காணப்படுகிறது.

            இது ஒரு தேவையற்ற தயக்கம். அரசு கூட நம் மாணவர்களின் சாதியைக் கேட்கின்றதே! மட்டுமல்லாமல் சாதிச் சான்றிதழ் தருவதற்கென்றே அலுவலகங்களை வைத்திருக்கின்றதே. பிறகு ஏன் தயக்கம்? சாதி வேறுபாடே இல்லை என்ற ஒரு கோட்பாட்டை அரசு கொண்டு வரும் வரை ஒரு சாதியில் பிறந்த நபர் அந்த சாதியைக் குறித்து ஆராய்ந்து அறியாமல் இருப்பதே தயக்கமாக இருக்க வேண்டும். சாதிப் பிரிவுகளின் ஆராய்ச்சி ஒரு சமூக இயல். வளர்ச்சிக்கு நேராக தூண்டிவிடும் ஒரு வழிகாட்டி. ஆதலால் திரு. பெரியநாடார் அவர்கள் எக் காரணம் கொண்டும் தயங்க வேண்டாம்.

            இது இப்படியிருக்க, குமரிமைந்தனாகிய திரு. பெரியநாடார் அவர்கள், உலக கலாச்சாரத்திற்கே வித்திட்டவர்கள் என்று என்னால் முழுமையாகக் கருதப்படும் சான்றோர் என்று அழைக்கப்பட்டு, சாணார்கள் ஆக்கப்பட்ட நாடார்களைக் குறித்து எழுத முன்வந்துள்ளார்கள், பாராட்டுகிறேன்! ஆனால், காலம் சென்றபோதும் தன் இதயத்தில் மங்காமல் ஒளிந்துகிடக்கும் பெரியாரிசமும் இன்னும் புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று தன் உள்ளத்தின் பெரும் தாக்கமும் சேர்ந்து சான்றான் என்னும் நாடான் முழுமையாக பெறவேண்டிய மேன்மையை அள்ளிக்கொடாமல் நாடார்களைச் சில இடங்களில் கொச்சைப்படுத்திவிட்டாரே என்ற எண்ணம் எனக்கு ஏட்டினை முழுமையாக வாசித்தபின் தோன்றுகிறது. ஏனென்றால் உலகெல்லாம் பரந்த திராவிட தமிழ் நாடார் கலாச்சாரம் ஆரிய தாக்கத்தால் அடியோடு அழிக்கப்பட்டு மாற்றப்பட்டும் திருத்தப்பட்டும் சிதைந்து பொடிந்து சீரழிந்துள்ளது. இந்த நாடார் சரித்திரத்தை ....... கலாச்சாரத்தினை ஆராய்ச்சி செய்து ஒருங்கிணைப்பது மிக மிக கடுமையான ஒரு இமய முயற்சி ஆகும். அதனை ஒரு நபர், ஒரு ஜென்மத்தில் செய்து முடிப்பது கடினம் என்றாலும், தனது மன திருப்திக்காக இம் முயற்சியை எடுத்துள்ள பெரியநாடார் பாராட்டுதலுக்குரியவர்.

            ஆனாலும் சில கொச்சைப்படுத்துதல்களையும், தவறுகளையும், தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் நாம் விட்டுச் செல்லும் நம் ஆவணங்கள்தான் நம் வருங்கால இளம் தலைமுறைகளுக்கு ஆற்றலும், உயிரும், ஊட்டும் ஜீவ சுரப்பிகள். அந்தப் பிராண வாயுவை கசக்கிவிடுவது தர்மம் அல்ல. சான்றாக ஆசிரியர் கூறுகிறார் குமரி மாவட்டத்தின் மேற்கு வட்டங்களில் நாயர்கள் கூட நாடார்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது மிக தவறு. நாயர்கள் என்றால் பிற்கால பிராமணர்களால், ஈழவர்களையும், நாடார்களையும் வெல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கலப்புப் சாதி. இவர்கள் தம் தந்தை பெயரைத் தெரியாதவர்கள். காரணவரான மாமனாரை(அம்மாவன்) முதன்மைக் கொண்டாடுபவர்கள்.

            இன்னமும் நூலாசியர், அகிலத்திரட்டு அம்மானையில் நாடார்களைத்தான் நீசர்கள் என முத்துக்குட்டி சாமி அவர்கள் கூறியுள்ளார் என்பதும் மாபெரும் தவறாகும்.1138[1]-1963-ல் பதிப்பான அகிலத்திரட்டு அம்மானை .... பக்கம் 110 -114 களில் நீசன், வெண்ணீசன் என்ற வார்த்தை வேணாட்டு மன்னனையும், வெள்ளைக்காரனையும், முறையே குறிப்பிடுகிறார். நாடான்களை சான்றோன் என்றழைக்கிறார். இத் தவறுகள் சமுதாய வரலாற்றுத் தவறுகளுக்கு வழிகாட்டும். அகஸ்தீஸ்வரம் நாடான்கள் தங்களுக்கு வேலை செய்த சான்றோரை, வேணாட்டு அரசர்களைப் போல சாணான் என்று பிற்காலத்தில் அழைத்தது உண்மைதான். இச் செயல் 18-ஆம், 19-ஆம் நூற்றாண்டுகளில் அரசர்களும், ஜமீன்தார்களும், நம்புதிரி - நாயர் மத்தியில் உருவான ஐக்கிய கூட்டணி காரணமாக, நாடார்களைக் கொச்சைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கொச்சைச் சொல். இச் சொல் சான்றோர்கள் இந்துக்கள் ஆக்கப்படுவதற்கு முன் மணர்களாக இருந்ததையும் குறிக்கும்.

            ஆசிரியர் ஒரு ஆராய்ச்சிப் பணியில் முழுக்க ஈடுபட்டதாகத் தெரியவில்லை. ஆரிய தாக்கத்தினால் பிற்காலத்தில் ஏற்பட்ட சில சிதறுண்ட நிகழ்வுகளை எடுத்துக் கொண்டு பலவற்றையும் குழப்பி இருக்கிறார். நாடார்களையும், சமண மத வாரிசுகளான சாணார்களையும் - (சான்றோர்) பிளவுபடுத்துகிறார். வேறு யாரையோ திருப்திப்படுத்துவதற்காக இதனைச் செய்திருந்தாலும் இது தன் சாதிக்கு செய்த ஒரு கேடாகும். வேறெந்த சாதியினரும் இப்படி செய்யத் துணியார்கள். மேற்கத்திய எழுத்தாளர்களாகிய ராபர்ட் ஹார்டு கிரேவ் உம் டென்னிஸ் டெம்பிள் மேனும் இப்படி நாடார்களை பிளவுபடுத்த முயன்றுள்ளனர். (Nadars of Tamilnadu, The Northern Nadars).

            தமிழ் நாட்டில் கறுப்புச் சாமிக்கும், கள்ளழகர் சாமிக்கும் கள் உற்பத்தியாளர்களாகிய நாடாருக்கும் களப்பிரர்களுக்கும் உள்ள தொடர்பை ஆசிரியர் எடுத்துரைக்கிறார். பனை நீரும் கருப்புக் கட்டி உற்பத்தியும் பிற்காலங்களில் வந்தது என்று கூறுவது ஏற்புடையது அல்ல. கி.மு.408க்கு முந்தின காலங்களிலேயே சேர நாட்டு நாடார்கள் பதனிட்ட பனை நீரை, எகிப்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்ததாக கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோட்டஸ் கூறியுள்ளார்.

            வெங்கலராஜன் திருச்செந்தூரில் இருந்து வந்தவரென்று ஆசிரியர் கூறுகிறார். ஆனால், வேறு கதைகள் இலங்கையில் இருந்து வந்தவரென கூறும்.

            சில இடங்களில் ஆசிரியர் அரசியலையும் தொடுகிறார். மொரார்ஜியின் தங்கக் கட்டுப்பாடு இங்கு தேவையுள்ளதாகத் தெரியவில்லை.

            மொத்தத்தில் நூலாசிரியர் பல சம்பந்தமற்ற காரியங்களையும் இணைத்து குழப்புகிறார். ஒழுக்கத்தோடு எழுதப்பட்ட இதர நாடார் சரித்திரப் புத்தங்களைப் படிக்காதவர்களுக்கு இப் புத்தகம் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும். இது இச் சமுதாயத்திற்கு ஆரோக்கியமானதல்ல. மேலும், சொல்லப்பட்டிருக்கும் செய்திகளை இன்னும் சிறப்பாக சொல்லியிருக்கலாம்.

            குமரிமைந்தனுடைய வேறு பல புத்தகங்களையும் படித்த எனக்கு இவர் ஏன் இந்த புத்தகத்தை இப்படி எழுதினார் என்று புரியவில்லை. ஆதலால் சமுதாய வரலாறு ஆராயும் நபர்கள் இப் புத்தகத்தில் மட்டும் மூழ்கி நின்றுவிடாமல் விரிவான ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

        Immannel
         19-08-07
        (I.M. IMMANNEL)

நூலாசிரியர் குறிப்பு:

            திறனாய்வில் கூறப்பட்ட முகாமையான குறைபாடு நாடார்களின் வரலாறு கொச்சைப்படுத்தபட்டுள்ளது என்பதாகும். நாடார்களின் வரலாறு மட்டுமல்ல அனைத்துச் சாதி வரலாறுகளும் தாங்கள் காட்டும் சான்றுகளுக்கு வலிந்து பொருள்கொண்டு எழுதப்பட்டவை என்ற ஒரு நிலைப்பாட்டிலிருந்து அதற்குச் சான்றாக நாடார்களின் வரலாற்றை ஒரு பதமாக முன்வைப்பதே நூலின் நோக்கம்.

            கற்றறிந்தவர்களும் சாதிச் சங்கங்களில் நுழைகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால் சாதிச் சங்கங்களை அமைத்தவர்களே அந்தந்தச் சாதிகளிலுள்ள படித்தவர்கள்தாம் என்பதுதான். தங்கள் தங்கள் குடும்பத்தினரின் உயர்வுக்குப் போராடுவதற்குத் தம் சாதிகளிலுள்ள அடித்தள மக்களின் சதையை உரமாக்குவதே அவர்களின் நோக்கமும் உத்தியும். அந்தப் போக்கை மாற்றி அடித்தள மக்களை மேம்படுத்துவதற்குப் பாடுபடுமாறு அந்தந்தச் சாதிகளிலுள்ள முற்போக்கினரை வேண்டுவதே எமது நோக்கம்.

            நாயர்கள் கூட நாடான்களாக இருந்திருப்பதாக குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலுள்ள ஒருவர் கூறியதை நான் பதிந்துள்ளேன். இது மிகத் தவறு... நாயர்கள் என்பார் பிற்கால பிராமணர்களால் ஈழவர்களையும் நாடான்களையும் வெல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கலப்புச் சாதி என்பது ஒரு திறனாய்வு.

            மாந்தவியலின்படி குழுத் தலைவர்கள் - அவர்களுக்கு கீழுள்ள பிறர் என்ற பிரிவினை எல்லாக் குமுகங்களிலும் இருந்தது. குழுத் தலைவர்களின் மனைவிகள் கண்டிப்பான ஒழுக்கமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியவர்கள். குழுவிலுள்ள சராசரி உறுப்பினர்களுக்கு அத்தகைய கட்டுப்பாடு கிடையாது. இது உலகெல்லாம் நிலவிய ஒரு பொது விதி. இந்த விதியின் அடிப்படையில் தொல்காப்பியம் தலைமக்கள், புலமக்கள் என்ற பாகுபாட்டைத் தருகிறது. உடலுழைப்புப் பணிகளைச் செய்யும் அடியவர், வினைவலர் ஆகியோருக்கு ஐந்திணை ஒழுக்கம் பொருந்தாது என்றும் அது வரையறுத்துள்ளது.

            பிரிட்டனில் உயர்குடியினரிடையில்(லார்டுகள்) மூத்த மகனுக்கு மட்டும் சொத்துரிமை உண்டு. இளைய மகனைப் படிக்கவைத்தல், பணியில் அமர்த்தல் போன்ற பொறுப்புகளை மட்டும் குடும்பம் ஏற்றுக்கொள்ளும். அவர்கள் கனவான்கள்(சென்றில்மென்) எனப்பட்டனர்.

            நன்குடி வேளிர்கள் என்ற பெயரில் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் வாழும் மக்களிடையில் மூத்த மகன் பெயருக்கு முன் தாயின் குடும்பப் பெயரும் அடுத்து அவனது சொந்தப் பெயரும் முடிவில் தந்தையின் குடும்பப் பெயரும் அடுத்தடுத்த மகன்களின் பெயர்களுக்கு முன் தந்தையின் குடும்பப் பெயரும் அடுத்து அவர்களின் சொந்தப் பெயரும் இறுதியில் தாயின் குடும்பப் பெயரும் இருந்துள்ளதாக அச் சாதியைச் சேர்ந்தவரும் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் முதல்வராக இருந்தவருமான பேரா.இராமசாமி தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தி முன்பு அவர்களிடையில் தாய்வழிக் குமுகம் இருந்ததன் வரலாற்று எச்சமாகவும் மூத்த மகனுக்கும் இளைய மகன்களுக்கும் இடையில் இருந்த ஏற்றத்தாழ்வைக் காட்டும் ஒரு தடயமாகவும் உள்ளது. (இந்த நன்குடி வேளிர் குலத்திலிருந்து தமிழக மூவேந்தர்களும் பெண்ணெடுத்தனர் என்றும் எனவே மூவேந்தர்களும் தங்கள் தாய் வீடாகிய நன்குடி வேளிர் இல்லங்களிலேயே பிறந்தனர் என்றும் இவர் கூறுவார். ஆவி நன்குடி என்ற வேளிர் மரபையும் சிலப்பதிகாரத்தில் மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் என்று அரசர்களைப் பற்றி செங்குட்டுவன் காட்சிக்கதையில் கூறுவதையும் சான்றாகக் காட்டுவார்.)

அண்மைக் காலம் வரை பெற்றோர் இறந்தால் மூத்த மகனுக்கு மட்டும் மொட்டை போடும் வழக்கம் இருந்து இப்போது சிறுகச் சிறுக மறைந்து வருகிறது. இது மூத்த மகனே குடும்பத்தின் அடுத்த தலைமைக்கு உரியவன் என்றிருந்த மிகப் பழைய பண்பாட்டின் எச்சமே.

இதுபோல் குமுக வளர்ச்சிக் கட்டங்களில் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் தேங்கி நின்றதுதான் நம்பூதிரி - நாயர் உறவு. இங்கு நம்பூதிரிகளின் சொத்துரிமை நடைமுறையின் தவிர்க்கவியலா எதிரிணையாக நாயர் குடும்ப அமைப்பு உள்ளது.

இந்த நம்பூதிரி - நாயர் இணை, வரலாற்றில் நீண்ட நெடுங்கலாம் நிலைத்து அல்லது அழிக்க அழிக்க மீண்டும் மறுபிறப்பெடுத்துள்ளது என்று தோன்றுகிறது.

வரலாற்றின் மிக முந்திய ஒரு காலகட்டத்தில் ஒரு மக்கள் கூட்டத்தின் முதல் தாய், குமுகத்துக்குப் பெரும்பணி செய்தோர், இயற்கை ஆற்றல்கள், மரங்கள், விலங்குகள், மலைகள், ஆறுகள், கடல்கள் என்று எத்தனையோ தெய்வங்களில் ஏதோவொன்றை ஒவ்வொரு குழு மக்களும் வழிபட்டனர். அந்த வழிபாடு நடத்தியவள் அல்லது நடத்தியவன் அக் குழுவின் மூத்தவளாக அல்லது மூத்தவனாக இருந்தனர். அவர்களே அவ்வக்குழுக்களின் தலைவர்கள்.

ஒரு நிலப் பரப்பிலுள்ள வளங்களைக் கவர அண்டை நிலப் பரப்பிலுள்ள மக்கள் குழுக்கள் எல்லை கடந்து வந்தபோது வளமிக்க நிலத்திலுள்ள மக்களை ஒன்று திரட்டுவதற்கு ஒரு ஏற்பாடு தேவைப்பட்டது. அதை அந்தப் பரப்பிலுள்ள பூசாரியர் இணைந்து ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து தங்கள் அரசனாக, இந்திரனாக வைத்துக்கொண்டனர்.

தமிழகத்திலும் இந்தியாவிலும் உள்ள மக்கள் அனைவரும் ஏழு தாயர்கள், ஏழு கன்னியர்கள், ஏழு மாதர்கள் என்று அறியப்படும் ஏழு பெண்களிலிருந்து தோன்றியதாக பல சாதிகளின் கதைகள் மூலம் தெரியவருகிறது. இவர்களின் தொடர்ச்சியாக ஏழு பெண்கள் என்று இருந்த தலைமைகள் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து அந்த நிலப்பரப்பு முழுமைக்கும் தலைவியாக்கினர். அப் பெண்ணைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். நாளடைவில் அத் தலைமை ஆண்களிடம் சென்றது. புதிதாக இந்திரன் எனும் ஆடவனைத் தேர்ந்தெடுத்து அந்தப் பெண்ணின் கணவனாக வைத்தனர். இந்திரன் மாறினாலும் இந்திராணி தொடர்வாள். இந்தத் தேர்வு முறை பற்றி நம் தொன்மங்களிலும் பரவலாகக் காணக்கிடக்கிறது. இது போன்ற ஒரு தேர்வுமுறை பற்றி பண்டை எகிப்திய வரலாற்றில் சான்றுகள் உள்ளன.

வேதங்களின்படி இந்திரனுக்கு வழங்கப்பட்ட பணி அந்த நிலப்பரப்பில் தனித்தனியாக வாழ்ந்த குழுக்களை உடைத்து ஒரு தலைமையின் கீழ் கொண்டுவருவது. இந்தக் குழு ஒவ்வொன்றும் ஒரு கோட்டை எனப்பட்டது. அதனால் இந்திரன் புரந்தரன்(கோட்டைகளை அழிப்பவன்) எனப்பட்டான். இவ்வாறு பாலை தவிர்த்த நான்கு நிலங்களுக்கும் வெவ்வேறு வரலாற்று மாந்தர்கள் ஒருங்கிணைப்பாளர்களாகத் தோன்றினர். அவர்களுக்கு இந் நிலத்தின் மரபுப் பெயர்களாக வருணன், இந்திரன், மாயோன், சேயோன் என்பவை அமைந்தன. இந் நிலங்களிலிருந்து பிரிந்துசென்று பாலையில் வழிப்பறி செய்தோருக்குத் தங்கள் பழைய தாய்த் தெய்வங்களின் தொகுப்பாக கொற்றவை அல்லது ஐயை என்ற தெய்வம் அமைந்தது.

இந்தக் காலகட்டத்துக்குப் பின்னரும் இவர்கள் பூசகர்களின் நேரடி ஆளுமையில்தான் இருந்தனர். அவர்களிடம் இருந்து தண்டிய இறையின் ஒரு பகுதியை அரசர்களுக்கு வழங்கினர். அரசர்களே இறையை நேரடியாக மக்களிடம் திரட்ட முற்பட்ட போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. கார்த்தவீரியன் சமதக்கினியிடமிருந்த காமதேனு எனும் ஆவைக் கவர முற்பட்ட போது ஏற்பட்ட மோதலில் பரசிராமன் கார்த்தவீரியனைக் கொன்றான். கார்த்தவீரியனின் மகன்கள் தந்தையின் சாவுக்குப் பழிவாங்க சமதக்கினியைக் கொன்றனர். பரசிராமன் 21 தலைமுறை அரசர்களை அழிக்கச் சூளுரைத்துக் கிளம்பினான்.

கெளசிகன் எனும் அரசன் வேட்டையாடிக் களைத்து தன் படையினருடன் வசிட்டரின் இருப்பிடத்தை அடைந்தான். அனைவருக்கும் காமதேனு சிறப்பாக விருந்து அளித்தது. அதைக் கண்ட கெளசிகன் அதைக் கவர முயன்றான். வசிட்டரின் தவ வலிமையால் அவன் படைகளும் நூறு மகன்களும் மாண்டனர். தவத்தின் வலிமையறிந்து அவன் விசுவாமித்திரன் என்ற முனிவனானான். அருமுயற்சி செய்து பிரம்மரிசி (பார்ப்பன முனிவன்) என்ற ஒப்புதலையும் பெற்றான் என்கின்றன நமது தொன்மங்கள்.

இவ் விரு கதைகளிலும் காமதேனு என்பது முனிவர்களின் இறை(வரி) வருமானத்தினால் அவர்களிடமிருந்த பெரும் செல்வங்களின் தொன்மக் குறியீடு. அந்த வருமானத்தின் அடிப்படையான இறையைத் தாங்களே நேரடியாகப் பெற அரசர்கள் முனைந்ததே காமதேனுவைக் கவர முயன்றதாக தொன்மங்களில் பதிவாகியுள்ளது. இந்த வகையில் அரச அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் பார்ப்பனர்களின் ஒரு குறியீடாக பரசிராமன் விளங்குகிறான். எனவே கேரள வரலாற்றில் இடம் பெறும் பரசிராமனைப் பற்றிய குறிப்புகளை எல்லாம் ஆயுதம் தாங்கி அல்லது மக்களைத் தூண்டிவிட்டு அரசர்களின் மீதான மேலாளுமையை நிறுவிக் கொள்ளும் முயற்சிகளின் பதிவுகளாகவே கொள்ள வேண்டும்.

இரணியன் - பிரகலாதனிடையில், அரசனாகிய தந்தையை வணங்குவதா இறைவனாகிய திருமாலை வழிபடுவதா என்று எழுந்த பூசல், இறுதி அதிகாரம் நாடு முழுவதற்கும் தலைவனான அரசனுக்கா அல்லது பகுதி பகுதிகளாகிய நிலங்களைக் கட்டியாளும் கோயில்கள் மூலம் ஆளும் பூசகர் கூட்டமைப்புகளுக்கா என்ற கேள்வியின் தொன்ம வடிவம். மாவலி வாமனன் இடையே நிகழ்ந்த கொடையும் பறிப்பும் கூட நிலம் தொடர்பான ஓர் ஏமாற்று என்பது தெற்றென விளங்கும். மாவலியை ஓர் அரக்கன் என்று தொன்மங்களை வைத்து எவ்வளவுதான் பரப்பி வந்தபோதும் இன்றும் மலையாளிகள் அவனைத் தங்கள் ஒப்பற்ற மாபெரும் வேந்தன் நிலையில் வைத்து ஓணம் திருநாள் மூலம் போற்றுகிறார்கள் என்பதிலிருந்து நாட்டு மக்கள் அனைவரின் அன்பையும் பெற்றிருந்த ஒரு பெருவேந்தனை ஏதோ பெரும் சூழ்ச்சியால் அழித்திருக்கிறார்கள் பூசகர்கள் என்பது தெளிவாகிறது. பரசிராமன் கேரளக் கடற்கரையில் வந்து கடலினுள் கோடாரியை எறிந்து கேரளத்தை உருவாக்கினான் என்ற கதை கூட பரசிராமன் மரபினர் அல்லது ஒரு பார்ப்பனக் கூட்டம் முழுகிய குமரிக் கண்டத்திலிருந்து கடல்வழியாக வந்து கரையேறி இரும்புக் கோடரியால் அடர்த்தி மிகுந்த காட்டை அழித்துக் குடியேறினர் என்பதன் தொன்ம வடிவமென்றே எண்ணத் தோன்றுகிறது. இத்தனை கதைகள் இருப்பதே இந்தப் பூசகர்களின் ஆதிக்கம் மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்டு அவர்கள் மீண்டும் மீண்டும் மீண்டதின் ஒரு திட்டவட்டமான சான்றாகும். ஒரு கால கட்டத்தில் 36000 நம்பூதிரிப் பார்ப்பனர்கள் போர்ப்பயிற்சி பெற்றுப் பெரும்படையாக இருந்தனர் என்று கொடுங்கோளூர் கண்ணகி என்ற நூல் கூறுகிறது.[2]

கேரளத்தில் கோயில்களைச் சார்ந்த நிலங்களும் அவற்றை இணைத்த ஆட்சிமுறையும் என்று இருந்ததை முன்னோடியாக வைத்துத்தான் போலும் தமிழகத்தில் கழகக் கால இறுதியிலிருந்து இறையிலி நிலங்களைப் பார்ப்பனர்களுக்குக் கொடுத்து வந்த நிலையிலிருந்து பல்லவர் காலத்தில் பிரம்ம தேயங்களை உருவாக்கியும் சோழர் காலத்தில் எண்ணற்ற கோயில்களைக் கட்டி அவற்றின் கோபுரங்களிலிருந்து சுற்று வட்டத்திலுள்ள மக்கள் மற்றும் படைகளின் நடமாட்டங்களைக் கண்காணிக்கும் வசதியுடன் அங்கு ஆட்சி அலகுகளையும் வைத்துப் படைகளையும் பராமரிக்கும் உத்தியை வகுத்தனர் போலும்.

இவ்வாறு நம்பூதிரிகளின் மூத்த மகனுக்கு முறையான திருமணமும் இளைய மகன்களுக்கு உறவு வைத்துக் கொள்வதற்கென்று ஒரு சாதியிலுள்ள அனைத்துப் பெண்களையும் ஒதுக்கீடு செய்துவிட்ட ஒரு குமுக அமைப்பு மிகப் பண்டைய நாட்களிலிருந்தே நிலவிவந்துள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட சாதியில் பெண்வழிச் சொத்துரிமை இருந்தது. ஆனால் ஒரு தாயின் மக்களில் ஆண்மகன்களில் மூத்தவன் அச் சொத்துகளைக் கட்டி ஆண்டான். அவனைக் காரணவன் என்றனர். அவன் மனைவி மட்டும் கணவன் வீட்டில் இருப்பாள். அவனுடன் பிறந்த ஆண் மக்கள் தாங்கள் திருமணம் செய்யும் தங்கள் சாதிப் பெண்களின் வீட்டில் இருந்தனர். இந்தக் கட்டமைப்பில் நம்பூதிரிகளின் சொத்துரிமையை தந்தை வழித் தலைமகனுரிமை (Male primogeniture on the male line) என்றும் நாயர் குடும்பங்களின் சொத்துரிமையை தாய் வழித் தலைமகனுரிமை (Male primogeniture on the female line) என்றும் மாந்தநூலார் கூறுவர். அது போல் காரணவன் மனைவிக்கு அமைந்ததை கணவன் இல்ல வாழ்க்கை(virilocal) என்றும் அவனது தம்பிகளுக்கு அமைந்ததை மனைவி இல்ல வாழ்க்கை என்றும் கூறுவர்.

இவ்வாறு நம்பூதிரிகள் குடும்பங்களில் உள்ள சொத்துகள் குலையாமலிருப்பதற்காக இந்த ஏற்பாடு என்று இதற்கு விளக்கம் அளிக்க முடியுமென்றாலும் அடுத்த சாதி மீது ஆதிக்கம் செலுத்துவதற்கே இது பெருமளவில் பயன்பட்டுள்ளது. இதற்கு அடிப்படையாக இருந்தது என்றுமே உடையாத நம்பூதிரிகளின் சொத்துகளின் வலிமையின் முன் ஒவ்வொரு தலைமுறையிலும் பிறக்கும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கேற்ப உடைந்து சிதறும் நாயர்களின் சொத்துகள் நாயர்களின் வலிமையைக் கட்டுக்குள் வைக்க உதவின என்பதை மறுக்க முடியாது.

இந்த அமைப்புகள் இன்று இல்லை. நம்பூதிரிச் சாதியில் பிறந்த இ.எம்.எசு. எனப்படும் இ.எம்.சங்கரன் நம்பூதிரிப்பாடு தலைமையில் கேரளத்தில் உருவான பொதுமைக் கட்சி ஆட்சி இந்தச் சொத்துரிமை முறையை ஒழித்து குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் பயிரிட்ட குடியானவர்களுக்கும் சொத்துகளைப் பிரித்துக் கொடுத்து மாபெரும் புரட்சியைச் செய்துவிட்டது.

தமிழகத்திலும் காலம் காலமாக கோயில் சொத்துகளை உழவர்கள் கைக்கொள்வதும் நயந்தும் ஏய்த்தும் வன்முறையாலும் அவற்றைக் கோயில்களுக்கு மீட்பதும் தொடர்ந்து வரும் நிகழ்முறையாகும். இப்போது அவ்வாறு மீட்கும் பணியை அந்த நிலங்களில் பயிர் செய்து வாழும் பள்ளர்களின் பெயரில் மள்ளர்களின் தலைவர் என்று அறிவித்துச் செயற்படும் பண்டிதர் குருசாமிச் சித்தர் தலைமேல் கொண்டுள்ளார். கேரளத்தின் நல்ல காலத்தையும் தமிழகத்தின் கேடு காலத்தையும் கணிக்க இதுவே போதுமானது.

இந்திய மரபில் நான்காம் வருணமாகக் கூறப்படும் சூத்திரன் எனும் சொல்லைக் குமரி மாவட்ட நாடார்கள், குறிப்பாக மேற்கு வட்டங்களிலுள்ளவர்கள் நாயர்களைக் குறிக்கவே பயன்படுத்துகின்றனர். மனுச் சட்டத்தில் சூத்திரர்கள் என்பதற்கு வைப்பாட்டி மக்கள் என்று பொருள் கொள்ளப்படுவதால் நாயர்கள் நம்பூதிரிகளின் வைப்பாட்டி மக்கள் என்ற கருத்தில் இவ்வாறு கூறுகின்றனர். ஆனால் உண்மையில் சூத்திரன் என்பதற்கு நூலோன், அதாவது இலக்கியம் படைப்போன் என்றும் நூலைக் கையாண்டு துணி நெய்வோன் என்றும் அதன் அடையாளமாகவும் தலைமையைக் குறிக்கவும் பூணூல் அணிந்தவன் என்று கூடப் பொருள் கொள்ள முடியும். அவர்களது அணியை அதாவது பூணூலைத் தாம் பிடுங்கிக்கொண்டு பெயருக்கு இழுக்கான விளக்கம் கொடுத்துள்ளனர் பார்ப்பனப் பூசாரிகள். இதில் தென்கோடி கேரளத்திலிருந்து வடகோடி தச்சசீலம் வரையுள்ள பூசகர்கள் ஒரு கூட்டணி அமைத்துள்ளனர். இந்தக் கூட்டணியின் தடயம் சிலப்பதிகாரத்தில் வெளிப்படுகிறது.

குடகு மலையின் மாங்காட்டிலிருந்து புறப்பட்டு மதுரை வந்து அங்கிருந்து திருவரங்கத்தில் கிடந்த கோலத்திலிருக்கும் அரங்கனையும் திருமலையில் நின்ற கோலத்திலிருக்கும் வேங்கடவனையும் பார்க்கச் செல்லும் மறையோன் கோவலனுக்கு மதுரை செல்லும் வழியைக் கூறுகிறான். இந்த மாங்காடு இன்றைய மங்களூராகவும் அவன் நம்பூதிரியாகவும் இருக்கலாம். சிவனியம் அரண்மனைகளுக்குள்ளும் தலைநகரங்களுக்குள்ளும் முடங்கிக் கிடக்க மாலியம் மலைகளிலும் ஆற்றங்கரைகளிலும் பார்ப்பனர் தலைமையில் வலுப்பெற்று ஒரு நிறுவனப்பட்ட சமயமாக வளர்ச்சி பெறுவதை இது காட்டுகிறது. இமயமலை நோக்கிச் செல்லும் சேரன் செங்குட்டுவனை பார்ப்பன முனிவர்கள் கண்டு வடக்கே இமயத்திலிருக்கும் அந்தணர்களுக்கு ஊறுவராமல் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டுகின்றனர். சோழ நாட்டைச் சேர்ந்த மாடல மறையோன் குமரி முனை சென்று நீராடி மதுரை சென்று கோவலனைக் கண்டு உரையாடி, அவன் கொலையுண்டு கண்ணகி மறைந்ததைப் புகார் சென்று கூறிவிட்டு அதனால் இருவர் தாயரும் உயிரைவிட அந்தக் கரிசைப் போக்கிக்கொள்ளவென்று கங்கைக்குச் செல்கிறான். அதே போல் சோழ நாட்டைச் சேர்ந்த பராசரனென்ற பார்ப்பனன் சேர நாடு சென்று மறைகள் குறித்த வாதப் போரில் வென்று அரசனிடம் பெரும் பரிசுகளைப் பெற்று மதுரை வந்து பார்ப்பனச் சிறுவன்களிடம் மறைகளை ஒப்புவிக்கச் சொல்லி நன்றாகக் கூறிய தக்கினன் என்ற சிறுவனுக்குத் தன்னிடமிருந்த பொன்னணிகளைக் கொடுத்தான்[3]. இவ்வாறு இந்தியா முழுமையும் குறுக்கும் நெடுக்குமாகப் பார்ப்பனர் செல்கை மேற்கொண்டதே பெரும் செல்கைகள் (பிருகத் சரணம்) என்றும் அவ்வாறு சென்றவர்களை பிருகத் சாரணர்கள் (பெரும் தொண்டூழியர்கள்) என்றும் கூறுகின்றனர். இதைத் தவறாகப் புரிந்துகொண்டு பெரும் எண்ணிக்கையில் கைபர் கணவாய் வழியாக இந்தியாவினுள் நுழைந்த ஆரியர்களைக் குறிப்பது இது என்று சில வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களும் கூறுகின்றனர்.

சேர நாட்டில் நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கும் அரசர்களுக்கும் நாயர்கள் அல்லது அவர்களின் இடத்தில் முன்பு இருந்த வேறு பெயர் கொண்ட குழுவினருக்குமான முரண்பாடுகளின் விளைவான பல்வேறு அணிச் சேர்க்கைகளால் இந்தக் கட்டமைப்பு உடைவதும் மீண்டும் உருவாவதுமாக இருந்துள்ளது. இது அரசியல் மேலாளுமைக்கான போட்டி. இன்றும் இந்த அணிச் சேர்க்கையை பேரவைக் கட்சி, உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலுமுள்ள யாதவர்களின் கட்சி, தமிழகத்துத் திராவிடக் கட்சிகள், பா.ச.க. கட்சிகளின் பல்வேறு அணிச் சேர்க்கைகள், இறுதியில் பார்ப்பனர் - தாழ்த்தப்பட்டோரின் அணிச் சேர்க்கையான மாயாவதி வாய்பாடு என்று இந்திய அளவில் பார்க்கிறோம். இவை அனைத்தும்தான் பார்ப்பனியத்தை இன்றும் வலிமையுடன் இந்தியாவில் உலவவிட்டுள்ளன.

இந்தப் போராட்டங்கள், மோதல்களின் பொதுக் கூறு, இவர்கள் அனைவரும் உழைப்போர் விளைப்போர் ஆகிய பண்டப் படைப்பாற்றலுள்ள மக்களைத் தத்தம் கட்டுக்குள் வைப்பதற்காக அவர்களைச் சாதிகளாகப் பிரித்துவைத்து அவர்களைக் கொண்டே அவர்களை விடுபட முடியாத விலங்குகளில் சிக்க வைத்து வருவதுதான். படைப்பவர்களாகிய இம் மக்களின் பக்கம் நின்று பேச இன்று வரை இந்திய மண்ணில் ஒருவர் பிறக்கவில்லை.

அரசர் - நம்பூதிரி முரண்பாட்டில் கடைசியாக நிகழ்ந்த நிகழ்ச்சி 18ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மார்த்தாண்டவர்மன் ஒரு பக்கமும் நம்பூதிரிகளும் கோயில்களைச் சார்ந்து நின்ற நாயர்களும் எதிர்ப்பக்கமுமாக நடைபெற்ற போரே. அதில் மார்த்தாண்டவர்மனுக்கு உதவியாக நின்றவர்கள் நாடான்கள் பறக்கோட்டூர் அனந்தபத்மநாபன் நாடானும் பொற்றையடி திருமாலயப் பெருமாளும். இவர்கள் பெயருக்குப் பின் நாடான் என்றிருப்பதை நாடார் என்று இப்போது குறிக்கிறார்கள் நாடார் வரலாற்றாசிரியர்கள். நாடான் என்பது பொறுப்பும் அதிகாரங்களும் மிகுந்து அரசனின் ஆணைகளையும் கொண்டுசெலுத்துகின்ற ஓர் உள்ளூர் ஆட்சியாளனின் பதவிப் பெயர்; நாடார் என்ற சாதிப் பட்டத்துடன் வைத்து எண்ண முடியாத உயர்மதிப்புள்ள பதவிப் பெயர். அவரைச் சான்றோர் குலத்தவர் என்று திரு. இமானுவேல் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் நாயர்கள் அவரைத் தங்கள் சாதியைச் சார்ந்தவர் என்று கூறுகின்றனர். இந்த அடிப்படையில்தான் எனக்கும் நாயர்களும் நாடான்களாக இருந்தனர் என்ற செய்தி கிடைத்திருக்கும் என்று கருதுகிறேன்.

பொற்றையடி நாடான்களைப் பற்றிய ஒரு செய்தியை இவ் விடத்தில் குறிப்பிடுவது இன்றியமையாதது. மதுரையிலிருந்து முகம்மதியர்களாலும் நாயக்கர்களாலும் துரத்தப்பட்ட பாண்டியர்களில் ஒரு பிரிவினர் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஆண்டுவந்தனர். அவர்களில் குலசேகரன் என்பவனை கன்னட மன்னன் ஒருவன் தன் மகளை மணம் செய்ய வற்புறுத்தினான். இவன் மறுத்ததனால் கன்னடன் வள்ளியூர் மேல் படையெடுத்து குலசேகரனைச் சிறைபிடித்து[4] மகளுக்குக் கட்டாய மணமுடிக்கக் கொண்டு செல்லும் வழியில் பாண்டியன் தற்கொலை செய்துகொண்டான். அங்கிருந்து தப்பி அப்போது வேணாட்டார் எல்லைக்குள் வந்த அவனது மரபினரே இவர்கள். அவர்களுக்கு ஒரு நிலப்பரப்பைக் கொடுத்து அதற்கு நாடான்களாக்கி வைத்திருந்தனர் வேணாட்டு அரசர்கள். அரச மரபினராகையால் அவர்கள் இங்குள்ள மக்களை எப்போதும் தமக்குச் சமமாக நினைத்ததில்லை. சாணார்களும் அவர்களிலிருந்து உயர்ந்து வந்த நாடார்களும் அரச மரபினரென்ற கற்பனையில் மிதக்கும் அய்யா இம்மானுவேல் போன்றவர்கள்தாம் இந்த சாணார்ப் பகைவர்களை, தமிழர் பகைவர்களை மக்கள் பகைவர்களைத் தலை மேல் வைத்துக் கூத்தடுகிறார்கள்.

வரலாறு என்ன கூறுகிறது என்று பார்ப்போம். மார்த்தாண்டவர்மன் நாடான்கள், எனப்படுவோரின் ஒரு பகுதியினரின் துணையுடன் நம்பூதிரிகள், அன்றைய முறைப்படி அரசுரிமைக்குரிய தாய்மாமனான அரசரின் மகன்கள், நாயர்கள் ஆகியோரின் கூட்டணியை எதிர்த்து வெற்றி கொண்டு அரியணை ஏறியவுடன் கோயில்களைச் சார்ந்திருக்கும் நிலங்களின் அடிப்படையில் வாழ்ந்துவரும் நாயர்களையும் அவர்களுக்குத் தலைவர்களாக இருந்த நம்பூதிரிகளையும் பகைத்துக்கொண்டு தான் அமைதியாக ஆட்சி நடத்த முடியாது என்பதை உணர்ந்து தன் நாட்டை பத்மநாபபுரத்தில் இருக்கும் பத்மநாபன் என்ற தெய்வத்துக்கு எழுதி வைத்து விட்டு அந்தக் கோயில்களின் கூட்டமைப்புக்கு அடிபணிந்துவிட்டான். அவனை அரியணை ஏற்றுவதற்கு உதவிய அனந்தபத்பநாபன் நாடானை, திருவனந்தபுரத்தில் தனக்கு அருகில் மெய்க்காவலனாக வைத்திருந்தாலும் அதிகாரங்களை நம்பூதிரிகளும் நாயர்களும் சிறிது சிறிதாகக் கைப்பற்றிக்கொண்டனர். அனந்தபத்மநாபனுடன் சேராமல் அரசனின் மகன்களுடன் இருந்த பிற நாடான்கள் அனைவரையும் அவர்களுக்குக் கீழே இருந்த சாணார்களையும் மார்த்தாண்டவர்மன் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கினான். ஆக, ஒரு தவறான அணிச் சேர்க்கையால் அனந்தபத்மநாபனும் தாணுமாலயப் பெருமாளும் அவரது ஓட்டனின் துணையுடன் திருவிதாங்கூர்ச் சாணார்களுக்கு வரலாற்றில் எந்த மக்களுக்கும் நேராத இழிவை வரவழைத்தனர் என்பதே வரலாறு காட்டும் உண்மை.

திரு.இம்மானுவேல் அவர்கள் ஓட்டன் கதை மூலம் சொல்லும் வரலாற்றுச் செய்திகளை ஆய்ந்தால் மார்த்தண்டவர்மன் ஒரு கோழை என்றும் அனந்தபத்மனாபன்தான் அவனுக்கு அரச பதவி ஆசை காட்டி தன் வீட்டில் வைத்து பாதுகாத்து யாருமறியாமல் பொற்றையடிக்கு விடுத்து தாணுமாலயப்பெருமாளின் வீட்டில் பாதுகாத்திருக்கிறான். பொற்றையடி ஓட்டனின் பல முனைச் செயற்பாடுகளும் இறுதியில் தன்னுயிரையே பணயமாக வைத்து மார்த்தாண்டனாக நடித்து மேற்கொண்ட நடவடிக்கையும்தாம் மார்த்தாண்டன் உயிரையும் காத்து அரசனின் மக்களையும் கொல்ல உதவியது. இவ்வளவுக்கும் பிறகு திருவிதாங்கூர் ஆட்சியில் 8½ பாகங்களில்(யோகம்) நம்பூதிரிகளுக்குரிய 8 பங்குகள் போக அரசனுக்கென்றிருந்த ½ பங்கையும் ஆண்டவனாகிய பத்மநாபனுக்கு தான் அடிமை என்ற பெயரில் நம்பூதிருகளின் காலடியில் வைத்து மன்னன் மாவலி போல் அவர்களின் காலடியில் தலையைக் கொடுத்த மார்த்தாண்டவர்மனை தலைமேல் தாங்கியும் அன்றும் சரி இன்றும் சரி சாணார்களை வெறுத்து வந்திருக்கும் பொற்றையடி நாடானும் அவனோடு அனந்தபத்மநாபனும் சாணார்களுக்கு விளைத்திருக்கும் தீங்குகள் தெளிவாகத் தெரிந்திருந்தும் அவர்களைப் புகழ்ந்து நூல் எழுதியிருக்கும் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை.   

இவ்வாறு அணிச் சேர்க்கைகளும் அதிகாரமும் எதிர்பார்க்க முடியாத திசைகளிலும் விரைவுடனும் மாறி மாறிப் பாயும் எந்த ஒரு குமுகத்திலும் குறிப்பிட்ட பதவி எந்த ஒரு குறிப்பிட்ட சாதிக்குள்தான் இருந்தது என்று எப்படிக் கூற முடியும்? அரியநாதர் ஒழிப்பதற்கு முன் இருந்தவர்களாகக் கூறப்படும் 72 ஆட்சி அதிகாரிகளான நாடான்கள் ஒரேயொரு சாதியைச் சேர்ந்தவர்கள்தாம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

            சாதிகள் அதாவது மக்கள் குழுக்கள் ஏற்றம் பெறுவதும் கீழ்நிலை எய்துவதும் தொடர்ந்து நடைபெறும் ஒரு நிகழ்முறையாகும். அவ்வாறு வீழ்ந்த மக்கள் தாமாகவே போராடி எழுவது கடினமான பணியாகும். அத்தகைய அரிய பணியை வெற்றிகரமாக முடித்த, நாடார்கள் என்று இன்று அழைக்கப்படும் மக்களின் ஊக்கத்தையும் உழைப்பையும் போற்றுவதற்காகவே நான் இந்த ஆய்வை மேற்கொள்ளத் துணிந்தேன். இன்று அவர்களது வளர்ச்சியில் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது. வேளாண்மையில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் வாணிகம், தொழில்துறைகள் என்றும் வளர்ந்து வந்த நாடார்கள் மேல் செல்ல முடியாதபடி பனியாக்களின் இந்திய அரசும் அவர்களின் வங்கியையும் பிற நிறுவனங்களையும் இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அவர்களது நிலங்களையே கூட விழுங்க வாய் பிளந்து நிற்கும் தமிழக ஆட்சியாளர்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்தச் சிக்கல் இன்று இந்தியாவிலுள்ள பார்சி - பனியாக்கள் நீங்கலாக அனைத்து மக்களுக்கும் பொதுவானவையாகும். ஆனால் ஏற்கனவே இத் துறைகளில் பட்டறிவுள்ளவர்களாகவும் இருப்பவற்றையே பறிகொடுக்கும் நிலையிலும் இருக்கும் நாடார்கள் தலைமைப் பங்கேற்க வேண்டிய வரலாற்றுச் கடமை உள்ளது. அதைத் திசைதிருப்பி ஒரு முனையில் நாடார் மகாசன சங்கத் தலைமைகள், கல்வி, வேலை வாய்ப்புகள் மூலமாக மேனிலையடைந்தவர்கள், அரசின் பொருளியல் ஒடுக்குமுறைகளால் வாணிகம், தொழில்துறைகளில் இறங்கித் தம் பின்னடிகள் இழிவெய்த வேண்டாம் என்று கருதும் பெரும்பான்மை வாணிகர்கள் மற்றும் சிறுதொழில் முனைவோர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒதுக்கீடு பெற வேண்டும் என்பதற்காக இன்று வரை அவர்கள் கண்ணெடுத்தும் பார்க்காத பனையேறிகளைச் சங்கத்தில் உறுப்பினராக்கி அவர்களின் பின்தங்கிய நிலையைக் காட்டி தங்களுக்கு மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடும் பனையேறிகளுக்குக் கள்ளிறக்கும் உரிமையும் வேண்டுமென்று கேட்கிறார்கள். குமரி மாவட்டத்தில் செருப்பால்(ரப்பர்) வேளாண்மை செய்வோரை அழிப்பதற்கென்றே செயற்கை செருப்பாலையும் பயன்படுத்தப்பட்ட செருப்பால் பொருள்களையும் இறக்குமதி செய்யும், தென்னை வேளாண்மை செய்யும் மக்களின் பொருளியலை அழிக்கவென்று பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்களை அளவின்றி இறக்குமதி செய்வதுடன் தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்று பொய்ப் பரப்புரை செய்யும் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க எவருமில்லை. அது போலவே ஏதோ உயர் பதவியிலுள்ள நாயர்கள் இழிவாகப் பேசினார்கள் என்பதற்காக உலகமெல்லாம் நாடார்களே, சான்றோர்களே ஆண்டார்கள் என்ற ஒரு தோல்வி வரலாற்றைப் படைப்பதற்கு பொருத்தமில்லாச் சான்றுகளை அல்லது திரிக்கப்பட்ட சான்றுகளை அவ் வட்டாரத்திலுள்ள சில ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பரப்பல்களை முறியடிப்பதற்காகவே வீழ்ந்த நிலையிலிருந்து அண்மைக் கடந்த காலத்தில் நாமாக உயர்ந்த வெற்றி வரலாற்றையும் இன்றைய நெருக்கடிகளை எதிர்க்கொண்டு நாம் பிற மக்களுடன் இணைந்து முன்னோக்கிய நம் போராட்டத்தைத் தொடர்வது எப்படி என்பதை இனம் கண்டு முன்வைக்கும் முயற்சியின் ஒரு தொடக்கப் புள்ளியாகத்தான் இந்த ஆய்வை முன்வைத்துள்ளேன்.

            சாணார் என்பது சான்றோர் என்பதன் மரூஉ என்றால் சாணான் என்ற பெயருக்காக நாம் ஏன் குறைப்பட்டுக் கொள்ள வேண்டும்? நான் நூலில் கூறியுள்ளபடி ஒவ்வொரு சாதிப் பெயருக்கும் ஒரு மனப் படிமம் உண்டு. அந்தப் படிம நிலையிலிருந்து அந்த மக்கள் மேம்பட்ட ஒரு நிலையைத் தாம் எய்தியதாகக் கருதினால் அவர்கள் தம் சாதிப் பெயரை மாற்றிக் கொள்வார்கள் என்பதை நூலிலேயே கூறியுள்ளேன். அதற்காக வரலாற்றைத் தடம்பிடிப்பது எந்தச் சாதியையும் இழிவுபடுத்துவதாக நாம் கருதினால் இன்னும் நம்மிடையில் தாழ்வுணர்ச்சி நீங்கவில்லை, தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் உருவாகவில்லை என்பதுதான் பொருள்.

தாம் பிறந்த மண்தான் எந்த மக்களுக்கும் உயிரூட்டுவது, அந்த மண்ணில் அந்த மண்ணை நம்பி அந்த மண்ணைச் சார்ந்து வாழ்வோரே உண்மையான உறவினர்கள், எக்காரணத்தாலும் மண்ணை விட்டு வெளியேறியோர் நம்பத் தகாதவர் என்பவர் எமது உறுதியான கருத்து. இந்த வெளிச்சத்தில் முன்பின் அறியாத எங்கெங்கோ வாழ்வோரை சாண், சான், நாடு என்ற ஒலிகளை ஒத்திருக்கும் பெயர்களை வைத்தே அல்லது பனையேறுவோர் என்றோ உறவு காண முற்படுவது நாம் வாழும் மண்ணுக்கும் நம்மோடு வாழும் நம்மையொத்த மண்ணின் மைந்தர்களுக்கும் மட்டுமல்ல நம் சாதியினர் என்று நாம் குறிப்பிடும் உள்நாட்டு மக்களுக்கும் பெரும் கேடு என்பதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

கருப்புக் கட்டி தொழில்நுட்பத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது கி.மு. 408க்கு முந்தின காலங்களிலேயே சேரநாட்டு நாடார்கள் பதனிட்ட பனை நீரை எகிப்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்ததாக கிரேக்க வரலாற்றாசிரியர் எரோடோட்டசு கூறியுள்ளார் என்று திறனாய்வில் கூறப்பட்டுள்ளது. பதனிட்ட பனை நீரைத்தான் ஏற்றமதி செய்திருக்கிறார்களேயன்றி, கருப்புக் கட்டியை அல்ல, எனவே இது கருப்புக்கட்டித் தொழில்நுட்பம் அப்போது இருந்ததற்குச் சான்றாகாது.

            வெங்கலக் கோட்டை குமரி மாவட்டக் கடற்கரையில் மணக்குடி பக்கத்திலும் மண்டைக்காடு பக்கத்திலும் கூட இருந்ததாக அவ் விடங்களிலுள்ள நாடார்களிடையில் மரபுகள் உலவுகின்றன. குமரி முனைப் பகுதியில் 1883 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கடல் உள்வாங்கலின் போது தெற்கே ஒரு கோட்டையும் அதில் வெண்கலக் கதவுகளும் காணப்பட்டதாக ஒரு செய்தி பதிவாகியுள்ளது. முன் நாட்களில் கடல்காற்றின் அரிப்பைத் தவிர்க்க வெண்கலக் கதவுகளைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது. கோட்டைகள் கட்டுவதில் ஓர் உத்தி இரு புறங்களிலும் கல்லால் அடைப்புச் சுவர் கட்டி உள்ளே செங்கல் கப்பி, சுண்ணாம்பு, மணல் சேர்த்த கலவையை நிரப்புவதும் இரு கல் முகப்புகளையும் இணைக்க ஊடே ஆணிக் கற்கள் என்ற நீண்ட கற்களைப் பயன்படுத்துவதும் வழக்கம். அதுபோல் முகப்புகளிலும் ஆணியாகவும் வெண்கலத்தால் ஆன கட்டைகளைப் பயன்படுத்தியும் இருக்கலாம்.

            வரலாற்று வரைவென்பதே அரசியலின் முதன்மையான ஒரு கூறு என்பதை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இந்த வரலாற்று வரைவிலும் அரசியல் தெளிவாகவும் துலக்கமாகவும் உள்ளது. இந்திய மக்களை பனியா - வல்லரசியங்கள் கூட்டணியின் ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பதற்கான அரசியலின் ஆயத்த நடவடிக்கையின் ஒரு கூறு இது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

            மொத்தத்தில் தன் சாதிதான் உலகத்தின் தோற்றத்திலிருந்து மாற்றமெதுவும் இன்றி தொடர்ந்து வந்திருக்கிறது என்று பெருமை பேசி ஒவ்வொரு சாதித் தொகுப்பின் உச்சியிலுமிருக்கும் சிறுகுழுவினர் கீழேயுள்ள அப்பாவிகளைக் காட்டித் தாங்கள் மட்டும் வளவாழ்வு வாழ்வதற்கான உளவியலை உருவாக்குவதற்காக எழுதப்படும் போலி வரலாறுகளை முடிவுக்குக் கொண்டுவந்து அனைத்து மக்களும் வளம் பெறும் வகையில் குமுகச் செல்வத்தை மிகுத்து அனைவரும் பயனடையும் வகையில் அதனை வகுத்து வாழ்வதற்கான வழிகளைக் காண ஊக்குவிப்பதே எம் நூலின் நோக்கம்.

            ஏதத்தில் கால் ஒடிந்து நடக்க முடியாத நிலையிலும் தனது அடிப்படைக் கருத்துக்கு ஒவ்வாத எமது நூலைப் பொறுமையுடன் படித்துத் தன் உணர்வுகளைப் பகிர்ந்து இந்த நூலுக்குக் கருத்துவளம் சேர்க்க உதவிய ஐயா உயர்திரு.எம்.இமானுவேல் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


[1] கொல்லம் ஆண்டு.
[2] கொடுங்கோளூர் கண்ணகி, தமிழாக்கம் செயமோகன், யுனைட்டெட் ரைட்டர்பிசு, 63, பீட்டர்சு சாலை, ராயப்பேட்டை, சென்னை, 2005, மூலநூல் (மலையாளம்) சிறீகொடுங்கல்லூரம்ம சரித்திரமும் ஆசார அனுட்டானங்களும் பண்டிதர் வி.ஆர். சந்திரன், பக்.37.
[3] நம்பூதிரிகள் ஒரு கட்டத்தில் வேதங்களைக் கற்றுக்கொள்வதற்காக வட இந்தியா சென்றுவந்ததாக மேலே குறிப்பிட்டுள்ள கொடுங்கோளூர் கண்ணகி நூல் கூறுகிறது(பக்.37 ). இதற்கான தேவையே கூட சேரன் நம்பூதிரிகளின் கொட்டத்தை அடக்க தமிழகத்திலுள்ள வேதப் பார்ப்பனர்களை நம்பூதிரிகளுக்கு எதிராக வாதப்போட்டிகளில் ஈடுபட ஊக்கியதன் எதிர்விளைவாகவும் இருக்கலாம்.
[4] இந்த வரலாறு ஐவர் இராசாக்கள் கதை என்ற கதைப்பாடலில் உள்ளது. பேராசிரியர் வானமாமலை அவர்கள் பதிப்பித்துள்ளார்கள். இதில் வரும் ஒரு சிறப்புச் செய்தி, வள்ளியூரை நெடுங்காலம் முற்றியும்(முற்றுகையிட்டும்) அது அடிபணியவில்லை. இறுதியில் ஒரு ஆயர் குலப் பெண் மூலம். மேற்கே மலையிலிருக்கும் ஒரு சுனைக்கு அடியிலிருந்து வள்ளியூர்க் கோட்டைக்குள் திறக்கும் ஒரு பிளவின்(பிலத்தின்) மூலமாக அவர்கள் வேளாண்மைக்கும் குடிக்கவும் தண்ணீர் பெறுகிறார்கள் என்பதறிந்து அவள் அதைக் காட்ட அதை அடைத்து வள்ளியூரை பணியவைத்தனர் கன்னடர்கள் என்பதாகும். இராமானுசர் தலைக்காவிரியிலிருந்து தமிழகத்தின் தென் கோடி வரை உருவாக்கிய மாலிய(வைணவ) இடைகழி(corridor) பிற்காலத்தில் கன்னட, விசயநகரப் படையெடுப்பாளர்களுக்கு மிக உதவியுள்ளதைக் காட்டும் தடங்கள் வரலாற்றில் நிறையவே உள்ளன.

0 மறுமொழிகள்: