12.12.15

திராவிட மாயை - 27


தொடுப்பு 3

கடவுளும் கடவுள் மறுப்பும்

          பகுத்தறியும் திறனால் தன்னையும் தன் பல்வேறு வகைச் சூழல்களையும் பகுத்தறிய இயன்ற மனிதன் என்ற உயிரிக்கு, தன் உய்த்தறிவினால் (பகுத்தறிவதால் உருவாகும் எதிர்காலப் படிமங்கள்) ஏற்படும் அச்சங்களைத் தாங்க வேண்டிய மன உறுதி தேவைப்பட்டது. அதற்காக அந்த மனம் தனக்குத் துணையாக இருப்பவையான இயற்கைப் பொருட்களையும் விசைகளையும் நம்ப முடியாப் பேராற்றல்களைக் காட்டிவிட்டு மறைந்த மாமனிதர்களில் எச்சங்களாக அவன் கற்பனை செய்த (அத்தகைய பேராற்றல் உள்ளவர்கள் எப்படி சராசரி மனிதர்களைப் போல் முற்றிலும் மறைந்து போவார்கள் என்ற கேள்வியும் அதன் விடையுமாக) தெய்வங்கள் அல்லது ஆற்றல்கள், தன்னைக் கொல்விலங்குகளிலிருந்து காக்கும் நெருப்பு, இவற்றுக்கும் அப்பால் தன்னையும் தன்னையொத்தவர்களையும் பிறவற்றையும் படைத்துக் காக்கும் ஏதோவொன்று என்று ஒரு தொகுதியே தனது பாதுகாப்புக்கு இருக்கிறது என்று அவனது மனமே உருவாக்கிக் கொண்ட ஒரு கற்பனையே கடவுள்.  பகுத்தறிவு இல்லாத ஒரு விலங்குக்கு எத் திசையில் செல்வது என்று முடிவு செய்ய முடியாத இக் கட்டான சூழல் ஏற்பட்டால் அதன் நரம்பு மண்டலம் சிதைந்து இறந்துவிடும் என்கின்றன உளவியல் ஆய்வுகள். மனிதனுக்கு அவ்வாறு நிகழாமல் காப்பது கடவுள் போன்ற மாயைகள்தாம். ஆக, மொத்தத்தில் பகுத்தறிவு என்பதன் இயங்கியல் எதிரிணைதான் கடவுள் என்ற கற்பனை.

இந்தக் கற்பனை, பெரும்பாலும் உழைப்பில்லா, ஓய்வு நிறைய வாய்க்கப் பெற்ற பலரை தத்தம் வாழ்க்கைச் சூழல், சிந்தனைச் சுழல்களுக்கேற்ற விந்தையானவை முதல் வருணங்கள் போன்ற வலிமையான குமுக நஞ்சைத் தாங்கியவை வரை என்று எண்ணற்ற விளக்கங்களைக் கடவுளுக்கு வழங்கியுள்ளது. பொறுமையாகச் சிந்தித்தால் இயற்கை என்பது நம் சிந்தனை எல்லைக்குள் அடங்காதது. இயற்கையை முற்றிலுமாக அறிய முடியாது எனும் அறியொணாமைக் கோட்பாடும், இயற்கையை முழுமையாக அறிய முடியும், இயற்கை இடைவிடாமல் மாறிக்கொண்டே இருப்பதால் அது பற்றிய அறிவும் மாறிக்கொண்டே இருக்கும் எனும் மார்க்சிய இயங்கியலும் இந்த நொடியில் நாம் இயற்கையை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்ற புள்ளியில் இணைகின்றன. அதாவது உள்ளம் என்னும் அறிவுக் களத்தின் எல்லையைக் கடந்தது கடவுள் (கட + உள்) என்பது முடிவாகிறது. (இந்த விளக்கத்தைத் தந்தவர் திரு.வி.க.) ஆக, அந்தக் கடவுளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பது மட்டுமல்ல, அதனைப் போற்றுவதாலோ, தூற்றுவதாலோ, புறக்கணிப்பதாலோ ஒருவருக்கு எதுவும் ஆகிவிடப் போவதில்லை. அதே நேரத்தில் தன்னை மீறிய ஆற்றல் ஒன்று உள்ளது; அது அருள் நிறைந்தது; தன்னைக் காக்கும்; (இன்னும் வேடிக்கையாக) தன்னை வளர்த்துப் பெரிய நிலைக்கு உயர்த்துவதே அந்த ஆற்றலின் நோக்கம் என்று நம்பி அல்லது தனது உள் மனது அத்தகைய நம்பிக்கையைத் தானே உருவாக்கி அதன் மீது ஊன்றி நின்று துணிச்சலை வளர்த்துக்கொண்டு வளர்ந்து விடவும் மனிதனால் முடியும். இதற்கு இந்த நம்பிக்கை மட்டும் கூடப் போதும். இயற்கையில் தமக்கு வாய்க்கப்பெற்ற திறமைகளுக்கும் தேர்ந்தெடுத்த செயல்பாட்டுத் துறைக்கும் ஒத்திசைவு அமையும் போதுதான் இந்த நம்பிக்கை பலன் தரும். மேலே கூறியவாறு கடவுள் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு வளர்ந்து விட்ட ஒருவன் தான் அவ்வாறு நம்பிய ஒரு குறிப்பிட்ட ஒரு தெய்வம்தான் தன் செல்வத் திரட்சிக்குக் காரணம் என்று அத் தெய்வத்துக்குக் காணிக்கை செலுத்துகிறான். திருப்பதியில் கொட்டும் பணத்தில் பெருமளவு இத்தகையதுதான். உண்மையில் பார்த்தால், இது தன்னம்பிக்கை அதன் எதிரிணையான அந்தத் தன்னம்பிக்கையின் இழப்புக்குக் கொண்டுசென்று விடுகிறது இயங்கியல் விந்தை.

            தன்னைச் சுற்றியிருக்கும் குமுகத்தில் வலிமை பெற்றோர் செய்யும் கொடுமைகளைத்  தடுக்கவோ தட்டிக் கேட்கவோ முடியாத சூழல்களில் அவற்றைப் பார்க்கும் நேர்மையும் நயன்மை உணர்வும் கொண்ட மனிதன்  மட்டுமல்ல, சராசரி மனிதனும் கையற்று மனம் நொந்து நிற்கும் போது இந்தக் கொடுமையாளரை கடவுள் தண்டிப்பான் என்று சொல்லி மனதை ஆற்றிக்கொள்கிறார்கள். தங்கள் கையாலாகாமையைத் தங்களுக்கே மறைக்கும் மனதின் ஓர் உத்தி இது என்றும் கூறலாம். இவ்வாறு உலகில் முரண்பாடுகளும் அளவுக்கு மீறிய ஏற்றத்தாழ்வுகளும் நிலவும் வரை கடவுளைப் பற்றி நிற்கும்  மனிதப் பண்பாடும் தொடரும்.

            ஏற்றத்தாழ்வே இல்லாத நிலை ஏற்பட முடியாது. அகவை, இயற்கையாக அமைந்த திறமைகள், தனிமனிதர்களின் கூட்டணிச் சேர்க்கை என்று பல்வேறு சூழல்கள் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. மட்டுப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், அதாவது முரண்பாடுகள் குமுக இயக்கத்துக்கு இன்றியமையாதவையும் ஆகும். அவை மட்டுமீறிப் போகும் போதுதான் தீங்குகள் விளைகின்றன. எனவே அறிவறிந்த குமுகம் முரண்பாடுகள் அளவுமீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் இயற்கையோடுள்ள முரண்பாடுகளும் உள்ளன. மனிதனின் அறிவறிந்த செயல்களினால் அவற்றால் வரும் தீங்குகளைப் பெருமளவில் தவிர்த்துவிட, களைந்து விட முடியும். எந்த இயக்கத்திலும் ஏற்றத்தாழ்வுகளே அவற்றின் நிலைப்புக்குக் காரணம் ஆகின்றன. நீரின் பாய்ச்சலில் மட்ட ஏற்றத்தாழ்வு, மின்சாரத்தில் பொதியல் வேறுபாடு(Potential difference), காற்றில் அழுத்த வேறுபாடு என்றபடி. இந்த ஏற்றத் தாழ்வுகள் மட்டுமீறினால் என்ன நிகழும் என்பது நமக்குத் தெரிந்ததுதானே?

            தமிழகத் தேசியச் சூழலில், நயன்மைக் கட்சி பார்ப்பனரை எதிர்த்து உருவாக்கிய இயக்கம். சாதி ஏற்றத்தாழ்வைப் போக்குவது என்ற ஒரு செயல் திட்டத்தையும் வைத்திருந்தது. தனிப்பட்டமுறையில் பார்ப்பன எதிர்ப்புக்குள் நுழைந்த பெரியார் கைகளுக்கு இயக்கம் வந்த போது சாதியொழிப்பு என்பதிலிருந்து அது கடவுள் மறுப்பாகவும் விரிவு கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயற்பட்ட அயோத்திதாசப் பண்டிதர் மற்றும் இந்து சீர்திருத்த இயக்கங்களின் செயல்பாடுகளும் பெரியாரின் சிந்தனை ஓட்டத்துக்குத் துணை செய்திருக்கும். கடவுள் படைத்தவைதாம் சாதியும் வருணமும் என்ற பிற்போக்கினரின் கூற்றுக்கு மறுமொழியாகக் கடவுள் மறுப்பு இங்கு முன்வைக்கப்பட்டது. இவ்வாறு தமிழ்த் தேசியம், சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு என்பவை ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து பிணைந்து நின்றன. இன்றும் தமிழ்த் தேசியர்களில் பெரும்பாலோர் இறைமறுப்புக் கோட்பாட்டாளர்களாகவே தம்மைக் காட்டிக்கொள்கின்றனர். அப்படிக் காட்டிக்கொள்பவர்களில் பலர் ஒரு விந்தையான வடிவத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள். அதுதான் ஆதனியம் எனப்படும் ஆன்மிகம், அதாவது மனதின் எல்லை இல்லா ஆற்றல். கடவுளே இல்லையானால் உலகை அல்லது மனித வாழ்வை எது இயக்குகிறது? மனித மனம் என்னும் ஆற்றல்தானே! இன்னும் சிலர் பெரியார் தரகு பார்த்த பிற சமயங்கள், குறிப்பாக பனியாக்களின் அம்மண நெறியைப் பிடித்துக்கொண்டு புலாலுண்ணாமை என்ற கீழ் - நடுத்தர மக்களுக்குக் கட்டுபடியாகாத மரக்கறி உணவுப் பண்பாட்டில் நுழைந்துவிட்டிருக்கிறார்கள். பெரியார் பன்றிக்கறியை உண்டு தீமிதி விழா நடத்தினர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் புலாலுண்ணாமை என்ற இந்தப் பனியாப் பண்பாட்டுக்கு எதிராக வெளிப்படையான பரப்பல் செய்ததாக அறியக் கூட இல்லை.

            இந்த ஆன்மீகர்களைப் பற்றி சற்று விரிவாகக் கூறுவோம். இந்தப் பேரண்டத்தில் எண்ணத் தொலையாத பால்வெளிகளும் அவை ஒவ்வொன்றிலும் எண்ணத் தொலையாத விண்மீன்களும் அவை ஒவ்வொன்றிலும் ஒன்றோ பலவோ கோள்களும் உள்ளன. அவற்றில் எதிலாவது மனிதன் போன்ற தன்னுணர்வுடைய உயிரி, குறைந்தது ஏதோவொரு உயிரியாவது இருக்கிறதா என்பது இன்னும் உறுதிப்படவில்லை. ஒன்றுக்கு மேற்பட்டவை இருக்கும் வாய்ப்புண்டு. நம் புவிக் கோளத்தில் இருக்கும் 800 கோடி மனிதர்களில் சிலர் கூறுகின்றனர், இந்தப் பேரண்டத்தின் அனைத்து மறையங்களையும், அவற்றில் தனது பங்கையும் அறிந்துகொள்ள குண்டி மீது அமர்ந்து கொப்புளை அல்லது மூக்கு நுனியை நோக்கி மூச்சுவிடுவதை எண்ணிக் கொண்டிருந்தால் போதுமாம். ஆறாம் அறிவுக்கு மேல் ஒவ்வொரு அடுக்காக அறிவுநிலைகள் தோன்றி திக்குமுக்காட வைக்குமாம். இதுதான் பெரியாரியத்தின் கடவுள் கொள்கையின் இன்றைய  வளர்ச்சிநிலை!

            இந்த ஆதனிய நெறி மனிதனின் அகந்தையை ஆணவத்தை அழித்துவிடுமாம்! ஆனால் அண்டத்தில் கற்பனை செய்ய முடியாத ஒரு சிறு துகளான மனிதன் அமர்ந்திருந்தபடியே தன்னுள்ளேயே அந்த அண்டத்தின் அனைத்து மறையத்தையும் கண்டறிந்து விடுவேன் என்று கூறுவதற்கு இந்த அண்டத்தைவிடப் பெரிய ஆணவமும் அறியாமையும் வேண்டும். இவர்களால் இப்படிக் கண்டுபிடிக்க முடிந்திருந்தால், நாம் கட்டியிருந்த தாழ்ச்சீலையை(கோவணத்தை) மாற்றி வேட்டி கட்டச் சொல்லிக் கொடுக்கவே அயலார் தேவைபட்டிருக்காதே! இன்றைய மேற்குலகின் அறிவியல் வளர்ச்சி நிலையையும் மிஞ்சிய ஒரு வளர்ச்சி நிலையை அடைந்திருந்த நாம் தாழ்ச்சீலை கட்டும் நிலைக்குத் தாழ்ந்ததே இந்த ஆதனியத் தெளிவினால்’’தான் என்பதுதான் உண்மை.

            இது ஒருபுறம் இருக்க, வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை, நெளிவு சுளிவுகளைக் கண்டறியாத இளமையில், ஒரு கண்ணோட்டத்தில் சரி என்று பட்ட பகுத்தறிவியம், வாழ்க்கையின், குமுகத்தின், மனித உறவுகளின், இயற்கை ஆற்றல்களின் வினைப்பாடுகளைப் பார்த்த பின் அவற்றின் இயல்புகளை மனதில் வாங்கி, அவற்றில் கடவுள் என்ற, வழிபாட்டுக்கோ, அச்சத்துக்கோ, அச்சுறுத்தலுக்கோ வளைந்து கொடுக்காத ஆற்றல்களின் செயல்பாடுகள் அவை என்பதைப் புரிந்துகொண்டு வாழப் பழகியவர் தவிர பிறர் இறை மறுப்பாளர்களாகத் தொடர்ந்து இருக்க முடியாது. அவ்வாறு பக்கம் மாறியோர் எண்ணற்றவர்.

            இறைமறுப்பாளர் என்று தம்மைக் கூறிக்கொண்டும் கருதிக்கொண்டும் உள்ள பலர் தனிமனிதர்களை, அரசியல் தலைவர்களை, திரை நடிகர்களை, விளையாட்டு வீரர்களை வழிபடுவோராக மாறுகின்றனர். எம்முடன் 50 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய ஒருவர் பெரியாரின் அன்பர். அவர் படுக்கும் இடத்துக்கு நேரே எதிரில் பெரியார் உருவப்படத்தைச் சுவரில் மாட்டியிருப்பார். காலையில் கண் விழித்ததும் ஐயா வின்  முகத்தில் விழித்தால்தான் அன்று நாள் நிறைவுள்ளதாகும் என்று கூறுவார் அந்த இளைஞர்.

            வாழ்க்கையில் நடப்பவை எவற்றையும் கடவுள் நடத்துவதில்லை, கடவுளை நம்பி மட்டும் எதையும் நடத்திட முடியாது என்ற தெளிவுதான் ஏறக்குறைய எல்லோரையும் இயக்குகிறது. இருப்பினும் கடவுள் எனும் கற்பனையின் துணை இல்லாது சராசரி மனிதனால் வாழ முடியாது. மனத்தெளிவும் திண்மையும் உள்ளவர்கள் கடவுள் நம்பிக்கையை விட்டுவிடலாம். மனத்திரிபுள்ள ஒரு சிலர் கடவுள் மீது உண்மையான நம்பிக்கை வைத்திருக்கலாம்.

            மனிதர்களின் கற்பனை போன்ற ஒரே கடவுள் இருந்து அவர் முழு உலகின் ஒவ்வோர் அணுவையும் ஆட்டி வைப்பவர் என்றால், இங்கு மக்கள் குழுவினர் ஒவ்வொருவரும் தத்தமக்கென்று வெவ்வேறு கடவுள்களைக் கூறித் தங்களுக்குள் கொலை செய்து கொண்டிருப்பதைக் கட்டுப்படுத்த முடியாதவர் என்றாகவில்லையா? அல்லது இது போன்ற கொலைகளை இயக்கி வைக்கிறவரா அவர்?

            மனிதன் பல்வேறு வகைக் கடவுளைக் கற்பித்தாலும் முதன்மையான கடவுளாக மனிதனைப் போன்று உடலமைப்புடன் கற்பித்திருப்பதுதான் இறுதி நிலை. அக் கடவுளை மனைவி, வைப்பாட்டி, மகன், மகள், மருமகன், மருமகள், அண்ணன், தம்பி என்ற உறவுகளுடன் குறிப்பாக இந்து சமயத்தில் மனிதனின் முழுப் படிமமாகவே வைத்திருக்கிறான்.

            மனிதனுக்குத் தன் சதையையும் குருதியையும் கொடுக்கும் கருணை மிகக் கடவுள் கூட அவரை வழிபடும் சமய நம்பிக்கையாளனுக்கு ஒரு பேட்டைப் போக்கிரியாகத்தான் தெரிகிறார். தன்னை இந்த மனிதன் மதிக்கிறானா? தான் இருப்பதை ஏற்றுக்கொள்கிறானா? தான் கூறியதாகக் கூறப்படும் அறிவுரைகளைக் கேட்கிறானா? தனக்கு அல்லது தான் சொல்லுகிறவர்களுக்கு உதவிகள் செய்கிறானா? என்றெல்லாம் பார்த்து அவ்வாறு செய்யவில்லையானால் அவனைத் தண்டிப்பவனாகத்தான் மனிதன் கடவுள் படிமத்தை உருவாக்கியிருக்கிறான். எழுத்திலும் உரையிலும் ஆயிரம் சொன்னாலும் உள்ளத்துள் உள்ள படிமம் இதுதான். மனிதன் படைத்த கடவுள் இத்தகையதுதான். ஆனால் மனிதன் என்ற உருவமுள்ள உயிரி இன்றும் வெறும் விலங்காகத்தான் இருக்கிறது. விதிவிலக்கான ஒரு சிலரைத் தவிர முட்டுக்கட்டை நிலைகளில்தான் அது பகுத்தறிவைப் பயன்படுத்தும். அப்படிப்பட்ட மனிதன் அந்த விலங்குத்தன்மைகளற்ற அப்பழுக்கற்ற ஒரு மனிதப் படிமத்தைப் படைத்து வைத்துள்ளான். தன்னிடமிருந்து இவ்வாறு கற்பனையில் அகற்றிய விலங்குத்தன்மையின் ஒட்டுமொத்த உருவம்தான் மனிதனின் உள்மனதில் உள்ள கடவுளும் வாழ்க்கையில் அவன் நம்பிவாழும் அரசும். இங்கும் தெய்வமும் அரசும் இணைகின்றன. மனிதன் தன் திட்டமிட்ட குமுகச் செயற்பாட்டால் தன்னிடம் எஞ்சியுள்ள விலங்கின் தீய பண்புகளைச் சிறிது சிறிதாக அகற்றும்தோறும் சமயம், அரசு ஆகியவற்றின் வல்லாண்மைகளில் இருந்து விடுபட முடியும்.

            இந்தச் சூழலில் கடவுளும் வழிபாடும் மனித குலத்துக்கு இன்னும் நெடுநாள் தேவைப்படும். எனவே வெறும் அரசியல் நடவடிக்கைகளால் அல்லது முனைப்பான பரப்புரைகளால் கடவுள் நம்பிக்கையை அகற்றிவிட முடியாது. வரலாற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. 20 ஆம் நூற்றாண்டில் பொதுமைப் புரட்சியைக் கண்ட நாடுகள் அனைத்திலும் இது நடந்துள்ளது.

இந்தப் பின்னணியில் ஒரு பகுத்தறிவுள்ள அமைதியான உலகுக்கு ஒரு கடவுள் தேவைதான். ஆனால் அது ஒட்டுண்ணிகளை வளர்க்காத, குமுகச் செல்வத்தை உறிஞ்சாத, மனித குல அமைதிக்குக் கேடு விளைக்காத ஒன்றாக இருக்க வேண்டும். மனிதன் தன் மனத்துயர்களைத் தனக்குத்தானே கூறி ஆற்றிக்கொள்ள இடம் கொடுக்கும் மண்டப வடிவில் அமைந்த கோயிலில் அது இருக்க வேண்டும் அத்துடன், நம் நாட்டைப் பொறுத்தவரை சிற்றூருக்கு ஒருவருக்குக் குறையாமல் உளவியல் மருத்துவரை உருவாக்க வேண்டும். இதன் மூலம் பேய் ஓட்டிகளையும் வஞ்சனை, ஏவல் செய்வோரையும் களத்திலிருந்து அகற்ற வேண்டும்.

0 மறுமொழிகள்: