11.12.15

திராவிட மாயை - 14


4.1.வேளாண்மை:
            தமிழக வேளாண்மையை முழுமையாக அழித்ததில் கருணாநிதிக்கு முழுப்பங்கு உண்டு.

            1976இல் ஆட்சி கலைக்கப்பட்டதிலிருந்து 1987இல் ம.கோ.இரா. மறைந்து 1989இல் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் வரை தமிழகத்தில் அரிசித் தட்டுப்பாடே வரவில்லை. அரிசியின் அரசியலைப் புரிந்துகொண்டிருந்த ம.கோ.இரா. ஆந்திரத்திலிருந்து நெல்லும் அரிசியும் தமிழகத்தினுள் நுழைவதைத் தடுக்கவில்லை. ஆந்திரத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் தொடர்வண்டிகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான தன்கள் அரிசி அன்றாடங்காய்ச்சி வாணிகர்கள் மூலம் தமிழகத்தினுள் நுழைந்து குமரி மாவட்டம் வரை பங்கீடானது. மக்கள் அந்த வகையில் மன நிறைவுடனிருந்தனர். அந்தப் பொற்காலம் ம.கோ.இராவுடன் முடிவுக்கு  வந்தது.

            தமிழீனத் தலைவர் மீண்டும் வந்தார். அவரது நெருக்கமாக துணைவர் அண்டப் புளுகின் அடைக்கலமாம் ஆர்க்காட்டு வீராசாமி உணவுத்துறையில் அமர்ந்தார். அரிசி ஆலைகளில் தன் கைவரிசையைக் காட்டினார். ஆலை உடைமையாளர்கள் விறைத்து நின்றனர். அண்டப் புளுகர் பின்வாங்க வேண்டியதாயிற்று. ஆனால் உழவர்கள் மீதான ஒடுக்கல் வழக்கம் போல் தொடர்ந்தது.

            பல நூறு கோடி செலவு செய்து நுகர்பொருள் வாணிகக் கிடங்குகளைக் கட்டிவைத்து நெல் கொள்முதல் அலுவலகங்களையும் மாநில அரசு திறந்து வைத்திருக்கும். ஆனால் சாக்குப் பை இல்லை, அவற்றைத் தைக்கச் சணல் கயிறு இல்லை என்று சாக்கு சொல்லி உழவன் கொண்டுவந்த நெல்லைத் திருப்பி உரிமம் பெற்ற வாணிகனிடம் அடைக்கலமாக்கினர் ஆட்சியாளர்கள். அவன்  வைத்ததுதானே விலை? அவனிடம் ஆட்சியாளர்கள் பங்குபோட்டுக்கொண்டார்கள்.

            அடுத்து, அதே போல் பல கோடி உரூபாய்கள் முதலீட்டில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை நிறுவினர். அங்கு உழவர்கள்  தங்கள் வேளாண் விளைபொருட்களை இருப்பு வைத்து முன்பணமாக அவற்றின் விலையில் ¾ பகுதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றனர். இங்கு உரிமம் பெற்ற வாணிகனே உழவன் என்ற சான்றைப் பெற முடிந்தது. அவன் உண்மையில் தான் இட்ட முதலைப் போல் மூன்று மடங்கு பெறுமானமுள்ள வேளாண் விளைபொருட்களை வாங்கிப் பதுக்க முடிந்தது. இதற்குக் கட்டடம், காவல் எல்லாம் வேளாண்குடி மக்களின் வரிப்பணத்தில்.

            நில உச்சவரம்பாலும் குத்தகைக் ஒழிப்பு என்ற பெயரிலான குத்தகை நிலைப்புச் சட்டத்தாலும் இப்போது சின்னஞ்சிறு கைப்பற்றுகளில் பயிர் செய்ய வேண்டி வந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அடிநிலை மக்களைப் பெரும்பாலராகக் கொண்டது இன்றைய உழவர் குமுகம். முன்பு பணம்படைத்த நடுத்தர வகுப்பினரிடம் வேளாண்மை இருந்தபோது வருமானம் மிக்கதாக, மதிப்பு மிக்கதாக வேளாண்மையும் செல்வாக்கு மிக்கவர்களாக அந் நிலவுடைமையாளர்களும் இருந்தனர். என்று நிலங்கள் அடித்தளத்து மக்களின் கைகளுக்கு வந்ததோ அன்றே ஆட்சியாளர்களால் அது தீண்டத்தகாதது ஆக்கப்பட்டுவிட்டது. ஏழையான உழவன் பயிர்க் கடனுக்காக வங்கிகளிலும் அரசு அதிகாரிகளிடமும் கூனிக் குறுகி நிற்க வேண்டும். விதை, உரம், பூச்சிக்கொல்லிக்களுக்காக அலுவலகங்களில் காத்துக்கிடக்க  வேண்டும். விளைச்சலை விற்பதற்காக கொள்முதல் நிலைய அலுவலர்களிடமும் உரிமம் பெற்ற வாணிகனிடமும் மடியைப் பிடித்து இரக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் சாக்கில்லை, தைக்க சணலில்லை, ஊசியில்லை என்று கையை விரித்து உழவன் கொண்டுவந்த நெல் வெட்ட வெளியில் கொட்டப்பட்டு மழையில் முளைத்து அழிவதை அடிக்கடி தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். இறுதியில் உரிமம் பெற்ற வாணிகனிடம் அவன் சொன்ன விலைக்கு விற்க வேண்டும்.
பாசன நீருக்காக ஆங்காங்கு உள்ள உழவர் சங்கத்துக்குப் பணம் கொடுத்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கைக்கூலி கொடுக்க வேண்டும். இப்போது பாசன மடைகளைத் திறக்கவே முதலமைச்சர் ஆணையிட வேண்டியுள்ளது. அவருக்கு மாமுல் போய்ச் சேர வேண்டாமா?

பொதுமைத் தோழர்கள் சும்மா இருப்பார்களா? உழுதொழிலாளர்களிடம் மகமை பெற்றுக்கொண்டு கூலி உயர்வுப் போராட்டங்கள் நடத்துவர். அரசிடம் கேட்டு ஏரி, குளம், வாய்க்கால், ஆற்றுப் புறம்போக்குகளை இலவய வீட்டுமனையாக்கித் தாருங்கள் என்று கேட்பர்.

ஆட்சியாளர்களும் பொதுமைக் கட்சியினரும் காலங்காலமாக இந்த உழவர் குடிமக்களை அழுத்தி, அவர்கள் உயிர்நிலைகள் அனைத்தையும் தங்கள் கைபிடிக்குள் வைத்து அவர்களை வாட்டி வந்த சாதிகளின் மரபில் வந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த உழுகுடிகளும் எதிர்த்துப் போராடத் திராணியற்றவர்கள். அவர்களுடைய வாழ்நிலையே இந்தக் குமுகியல் பொருளியல் ஒடுக்குமுறையாளர்களை அண்டி அவர்கள் முன் கையேந்தி வாழ வேண்டிவர்களாக அவர்களை ஆக்கி வைத்துள்ளது. வேளாண்மை தவிர கூடுதலாக வேறு வேலை செய்தால்தான் பிழைக்க வேண்டிய இழிநிலை. காலங்காலமாக இந்த உயர்குடியினருக்கு அடங்கி வாழ்ந்து பழகி அந்த அடிமை மனப்பான்மை குருதியில் ஊறிப்போய் இருக்கிறது. இந்தப் பின்னணியில் அது இலவயம், இது இலவயம் என்று சொல்லி அவர்களை அங்கும் இங்கும் ஓட வைத்து அவர்களின் உள்ளங்களில் ஏதாவது உரம் மிச்சமாக இருந்தாலும் அதையும் அழித்துவிட்டார்கள். நடுத்தரப் பணக்காரர்களையே வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்காகவும் எரிவளி அடுப்புக்காகவும் தெருவில் ஓடவிட்டு வெற்றி பெற்று வேடிக்கை பார்க்கும் கொடிய கயவர்கள் அல்லவா இவர்கள்?

            இந்த நிலையில்தான் கருணாநிதி பிறந்த நாளுக்கென்று ஓர் அறிவிப்பு, இரண்டு உரூபாய்களுக்கு ஒரு கிலோ அரிசி என்று.

மூன்று படி இலக்கு(இலட்சியம்) ஒரு படி உறுதி(நிச்சயம்) என்று ஆரவாரத்தோடு தொடக்கப்பட்ட படியரிசித் திட்டம் தொடங்கப்பட்ட 1967இல் கிலோ அரிசிக்கு விலை துல்லியமாக 56.25 காசுகள் (இரண்டு கிலோ அரிசி 1 என்ற கணக்கில், தோராயமாக 60 காசுகள்.) அந்த ஆண்டில் பொதுப்பணித்துறை வீதங்கள் பட்டியலில்(Schedule of Rate) ஓர் ஆணின் அன்றாடக் கூலி 75 காசுகள். கருணாநிதி இரண்டு உரூபாவுக்கு ஒரு கிலோ அரசி வழங்கத் தொடங்கிய போது ஆணின் கூலி உரு 100. 1967 கணக்குப் படி பார்த்தால், 60/75100 = 80, கிலோ அரிசிக்கு உரூ 80/- கொடுக்க வேண்டும். இவ்வாறு அனைத்துப் பண்டங்கள், கூலிகள் வீதம் 133 மடங்கு உயர்ந்திருக்க அரிசி விலை 2.00/0.60 = 3.3 மடங்குதான் உயர்ந்திருக்கிறது. அதாவது அரிசியின் விலை அது இருக்க வேண்டிய விலையிலிருந்து நாற்பதில் ஒரு பங்காக வல்லந்தமாக ஆட்சி அதிகாரத்தின் துணையுடன் குறைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்துப் போராடும் நிலையில் உழவன் இல்லை. முன்பு போல் நடுத்தர உழவர்கள் இல்லை. இவர்கள் ஊர்ப்புறங்களில் வாழ்ந்து நேரடியாக வேளாண்மையைச் செய்தவர்கள். சீனத்தைத் தலைமையாகக் கொண்ட மார்க்சியப் பொதுமையினர் தலைமையில் பொதுமைக் கட்சிகள் முகத்தைக் காட்ட அதற்குப் பின்னணியிலிருந்த அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்ட நிகர்மைக் கட்சியினர் நெருக்குதலால் பாட்டாளியரின் பெயரால் நடைமுறைப்படுத்தப்பட்ட நில  உச்சவரம்பு, குத்தகை ஒழிப்புத் திட்டங்களை, வாக்கு வங்கி அரசியல் சூழலில் எவராலும் எதிர்த்து நிற்க முடியவில்லை. அத்துடன் அரிசி விலையை அரசியலாக்கியும் லால்பகதூர் சாத்திரியின் கொடுங்கோன்மையாலும் வேளாண்மை இழிதொழிலாகிப் போனது. அரிசி விலையால் நடுத்தர உழவர்கள் பணம் சேர்க்கிறார்கள் என்று வைத்து நடத்திய அரசியலால், இப்போது அந்த நடுத்தர உழவர்கள் களத்திலிருந்து அகன்ற பின் புதிதாகக் களத்தில் நுழைந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழைகளான முன்னாள் குத்தகை உழவர்களும் வேளாண் கூலித் தொழிலாளர்களும் மாட்டிக்கொண்டார்கள். உண்மையில் வேளாண்மையின் குரல்வளை அவர்கள் கையில் சிக்கிக் கொண்டது. தங்களது தாழ்ந்த பண்பாட்டு வளர்ச்சியால் குறைந்த வாழ்க்கைச் செலவு, தானே உழைப்பதனால் கூலி கொடுக்கத் தேவை இல்லாதது, நெடுநாள் வேளாண்மைப் பட்டறிவால் அத்துபடியான வேளாண் தொழில்நுட்பம் ஆகியவற்றால் சிறிது சிறிதாக நிலத்தை வாங்கி உச்சவரம்புக்கு மேலே சேர்த்த விரல் விட்டு எண்ணத்தக்க எண்ணிக்கையிலான உழவர்களும் நில உச்சவரம்புச் சட்டத்தினால் அதை இணைத்துக் காட்டி கடன் முதலிய வசதிகளைப் பெற முடியவில்லை. பொதுமைத் தோழர்கள் தமது அருஞ்செயல் என்று மார்தட்டித் திரியும் நில உச்சவரம்பு, டாட்டாக்கள் உப்பளம் அமைப்பதற்காக 20,000 ஏக்கர் நிலத்தை இராமநாதபுரம் மாவட்டத்தில் வாங்குவது, அமெரிக்காவுக்குத் தேவைப்படும் பயிர்களைச் செய்வது போன்றவற்றுக்கு விதிவிலக்கு அளித்துள்ளன என்ற உண்மையை இன்றுவரை மறைத்துள்ளனர்.

            வேளாண்மை இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாவதற்கு முன்பு நடுத்தர உழவர்கள் ஒவ்வொரு பயிர்க் காலத்திலும் அரிசி ஆலை நடத்துபவர்களிடமிருந்து முன்பணம் வாங்கிப் பயிர்ச் செலவுகளைச் செய்வர். அறுவடையாகும் போது நெல் விலை அடிமட்டத்தில் இருக்கும். அந்த விலையில், தாங்கள் கடன்பெற்ற தொகைக்கு உரிய அளவு நெல்லை ஆலைகளுக்கு அளந்துவிட்டு எஞ்சியதை விலை ஏறட்டும் என்று வைத்திருப்பர். மாட்டு வண்டிகளிலும் மிதி வண்டிகளிலும் வீடுவீடாகச் செல்லும் அன்றாடங்காய்ச்சி வாணிகர்கள் அன்றாடச் செலவுக்காக நெல்லை விற்கும் குடும்பத் தலைவிகளிடமிருந்து நெல்லை வாங்கி அதை அரிசி குத்திப் பிழைக்கும் பெண்களிடம் விற்று அது சில்லரையாகச் சந்தைகளில் விற்கப்படும். இவ்வாறு விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணும் பொறியமைப்பு செயற்பட்டது. இந்த வலிமையான பொறிக்கு எதிராக எந்தக் கொம்பனாலும் அரிசியையோ நெல்லையோ பதுக்கி ஆதாயம் காண முடியாது. இந்த வலிமையான பொறியமைப்புதான் கொடுங்கோலன் லால்பகதூர் சாத்திரியால், சேய் கிசான்!, சேய் சவான்! (உழவன் வெல்க!, போர்வீரன் வெல்க!) என்ற பொய் முழக்கத்தின் பின்னணியில் அடித்து நொறுக்கப்பட்டது.

            இதற்குப் பின் ஆட்சியாளர்களுக்குக் கைக்கூலி கொடுத்த பதுக்கல்காரர்களும் கருணாநிதி போன்று அரிசியையும் நெல்லையும் வெளிநாடுகளுக்கே கடத்திய அரசியல் பொறுக்கிகளும் தமிழக, இந்திய வேளாண்மையையே அழிக்க முடிந்தது.

            கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளுக்கு முன் இந்த அழிப்பு தற்செயலாகவோ, இந்திய அரசியல்வாணர்களின் தனித்த திட்டமிடலாலோ நடைபெறவில்லை. உலகளாவிய நிலையில் அமெரிக்காவின் திட்டத்தின்படியே நடைபெற்றது என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

            தென் அரைக்கோளத்தின் புல்வெளிகளில், குறிப்பாக, அர்சென்றீனா, உருகுவே ஆகியவற்றில் கால்நடை வளர்ப்பு முகாமையானது; ஆனால் இந் நிலங்களுக்கான போட்டியில் சோறு” “இறைச்சியை வெளியேற்றும் தெளிவான போங்கு உள்ளது. முன்பு நிலவிய எண்ணற்ற பெரும் பெரும் மேய்ச்சல் வளாகங்கள் இப்போது இல்லை. அவை உடைபட்டு வருகின்றன. கோதுமை வேளாண்மை பெரும் முகாமை பெற்று வருகிறது. எனவே இறைச்சி விளைப்புக்கான புதிய நிலங்களைக் கண்டுபிடிப்பதற்கான தேவை உருவாகியுள்ளது; ஏற்கனவே இந்தக் குறிப்பிட்ட வகையில் திருப்புகை[1] மண்டலத்தின் புல்வெளிகள் சுட்டப்பட்டுவிட்டன.

            In the grasslands of the Southern Hemisphere, particularly in the Argentine and Uruguay, cattle rearing is important: but there is a distinct tendency for bread to oust meat in the competition for these lands. There are no longer the numerous huge ranches that formerly existed; they are being broken up, and wheat - farming becomes of greater importance. Hence the need for finding new lands for meat production, and reference has already been made to the importance of the Tropical Grasslands in this particular respect[2].

            1936 இல் முதல் திப்புடன் 1951இல் 5ஆவது பதிப்பைக் கண்ட வாணிகப் புவியியல் என்ற நூலில் காணப்படும் செய்தியாகும் இது.

            இந்தப் பொருள் குறித்து தென்னமெரிக்க நாடுகளிலும் பிலிப்பைன்சு போன்ற தன் குடியேற்ற நாடுகளிலும் கள ஆய்வு செய்து அமெரிக்கா பின்னர் இந்தியா போன்ற நாடுகளில் செயற்படுத்துவது வழக்கம். தன்னிடமிருந்து உதவி பெறும் நாடுகளில் அந்த உதவியால் அந்த நாடுகளில் எத்தகைய குமுகியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஆய்ந்து அதற்கேற்பப் புது உத்திகளை வகுப்பதும் வெற்றி பெற்ற உத்திகளைப் புதிய நாடுகளில் புகுத்துவதும் அதன் வழக்கம். இந்த வகையில் தென்னமெரிக்க நாடுகளில் தன் உதவிகளால் நிகழ்ந்துள்ள மாற்றங்களை ஒவ்வொரு நாட்டையும் ஒரு மாந்த நூல்வல்லாரைக் கொண்டு ஆய்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட நூல் இலத்தீன் அமெரிக்காவில் குமுகியல் மாற்றங்கள்  (Social Changes in Latin America). அதில் அன்று அமெரிக்க வல்லரசை அச் சுறுத்திய பொதுமைப் புரட்சி என்ற கண்ணோட்டத்தில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் கூறப்பட்டுள்ளன. அமெரிக்காவின் உதவிகளால் உருவான நடுத்தர வகுப்பு எந்த விதமான புரட்சியையும் நடத்த விடாமல் தடுக்கும் தன்மைகொண்டது என்பதாகும் அது. அமெரிக்கா உருவாக்கும் நடுத்தர வகுப்பு மட்டுமல்ல சோவியத்து உருவாக்கிய தொழிற்சங்கங்களும் எந்தப் புரட்சியையும் நடக்கவிடாது என்பது நமக்கு நேரடியாகத் தெரிந்த உண்மை. அது போன்றதுதான் இந்தியாவில் புகுத்தப்பட்ட பசுமைப் புரட்சியும். அதன் நோக்கம் இந்தியாவின் வேளாண்மையை அழித்து அதை இறைச்சி விளைக்கும் ஒரு நிலப்பரப்பு ஆக்க வேண்டுமென்பது அந்த நோக்கத்தை நிறவேற்றும் முதல் அடிதான், இந்தியாவில் வலிமையோடு இருந்த நடுத்தர வேளாண் மக்களின் நில உடைமைகளை உடைத்தது.

            இந்தியா விடுதலை பெற்று புதிதாக வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்பட்ட போது இந்த நடுத்தர வேளாண் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அக் கல்லூரிகளில் சேர்ந்து படித்தனர்.  தங்கள் நிலங்களில் இற்றை அறிவியல் முறைப்படி வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களை அங்கு படிக்க வைத்த தந்தையரின் நோக்கம். மாணவர்களுக்கும் அதுதான் நாட்டம். ஆனால் அவர்கள் பட்டம் பெற்று வெளியே வருவதற்குள் அனைத்து நில உடைமைகளும் நில உச்சவரம்பாலும் குத்தகை ஒழிப்பு என்ற பெயரில் செயற்பட்ட குத்தகை நிலைப்புச் சட்டங்களாலும் சிற்றுடைமைகளாக உடைக்கப்பட்டுவிட்டன.

            அடுத்த கட்டமாக தஞ்சை மாவட்டம் போன்று இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வேளாண் மாவட்டங்களில் முனைப்பான ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP- Intensive Rural Development Programme) என்ற பெயரில் போர்டு அறக்கட்டளையின் உதவியுடன் வீரிய விதைகள், சீமை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றை இலவயமாக வழங்கி, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்; கூட்டுறவுத் துறை, வேளாண்துறை, கால்நடை வளர்ப்புத் துறை ஆகியவற்றில் சிறப்பு ஊழியர்களை அமர்த்தி 1960களின் தொடக்கத்தில் ஆய்வு செய்தனர். அது கொஞ்சம் அதிகமான விளைச்சலைக் காட்டியது.

            அந் நேரத்தில் ஏற்பட்ட சிறிது மழைக் குறைவைப் பயன்படுத்தி அதுவரை இறக்குமதி செய்துவந்த உணவுப் பொருள் இறக்குமதியை நிறுத்தி ஓர் உணவுப் பஞ்சத்தை உருவாக்கினர் கொடுங்கோலன் இலால் பகதூர் சாத்திரியின் குறுகிய ஆட்சிக் காலத்தில். உணவுப் பொருட்களின் நடமாட்டத்துக்கும் சேர்த்துவைப்பதற்கும் எதிரான கட்டுப்பாடுகள் வேளாண்குடிகள் மீதும் சில்லரை வாணிகர்கள் மீதும் சிறுவாணிகர் மீதும் அரிசி ஆலைகள் மீதும் பேரிடியாக இறங்கின. மேலே குறிப்பிட்டவாறு மிதிவண்டிகளிலும் மாட்டுவண்டிகளிலும் நெல்லை வாங்கி சில்லரைக் கடைகளில் விற்று வந்த வாணிகர்கள், அந்த நெல்லை வாங்கி குத்தி அரிசியாக்கி விற்று வயிறு வளர்த்துவந்த ஆண் துணையற்ற ஏழைப் பெண்கள் ஆகிய அனைவரும் ஆட்சிப் பொறியால் இரக்கமற்று வேட்டையாடப்பட்டு களத்திலிருந்து அகற்றப்பட்டனர். அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் மனக்கண்ணில் கொண்டுவந்தால் ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் இன்று கூட நெஞ்சு நடுங்குகிறது.

            இவர்கள் அகற்றப்பட்டதன் மூலம் வேளாண் மக்களுக்கும் வேளாண் பொருட்களை நுகரும் பொது மக்களுக்கும் இடையில் சமநிலையைப் பேணி வந்த ஒரு பொறியமைப்பு தகர்க்கப்பட்டது. அதன் இடத்தில் அரசின் கொள்முதல் நிலையங்களும் உரிமம் பெற்ற வாணிகனும் வந்தனர். அறுவடை உச்ச கட்டத்தில் இருக்கும் போது கொள்முதல் நிலையங்கள் சாக்கில்லை, சணலில்லை என்று உழவனைத் திருப்பிவிடும். உரிமம் பெற்ற வாணிகன் அரசின் கொள்முதல் விலையை மதிக்கமாட்டான். உழவனை ஆட்சியாளரும் உரிமம் பெற்ற வாணிகனும் கூட்டுச்சேர்ந்து கொள்ளையடித்துக் கொழுத்தனர். கருணாநிதி ஆளத் தொடங்கிய தமிழகத்தின் இந்த இருண்ட காலத்தில் அவர் பிறந்த தஞ்சை மாவட்டம் பாலைநிலமாக மாறியது.

            இந்த நிகழ்முறையின் ஒரு பகுதியாகவே தமிழகத்தின் நீருரிமை பறிப்பையும் பார்க்க வேண்டும். அமெரிக்காவின் வழிகாட்டலில்(தூண்டலில்) உழவனை ஒழித்துக்கட்ட மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக ஆட்சியாளர்களுக்குக் களத்திலிருந்து கிடைத்த ஆதாயங்களைப் போல் தமிழக நீருரிமைகளை விற்றதில் கொள்ளைப் பணம் கிடைக்க வாய்ப்புண்டு. அதற்காகத்தான் 25, 30 தடவைகள் திரும்பத் திரும்பத் பேசியிருக்கின்றனர். அண்டை மாநில மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் உறவு கெட்டுப் போகுமாம்; கருணாநிதி நொந்து நிற்கிறார்.

            இதோடு கூட தஞ்சை மாவட்டத்திலும் ஆற்றுப் பாய்ச்சலிலுள்ள பிற பகுதிகளிலும் செம்பனை போன்ற மாற்றுப் பயிர்களைப் பரிந்துரைத்தனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் திரு.வே.தி.செல்லம் அவர்கள் கூட ஓய்வுக்குப் பின்னர் செம்பனைப் பயிரிடும் பரப்பலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டேன்.

            இந்தப் பரப்பலை நம்பி செம்பனை பயிரிட்டவர்களுக்குப் பேரிடி காத்திருந்தது. செம்பனைக் காய்களை அறுவடை செய்து 24 மணி நேரத்துக்குள் அவற்றை ஆலையில் இட்டுப் பிழிந்து எண்ணெய்யை எடுத்துவிட வேண்டுமாம். ஆனால் அத்தகைய ஆலைகள் ஒன்று கூட நிறுவப்படவில்லை. விளைவு, வேளாண் விளைநிலங்கள் தவச வேளாண்மையிலிருந்து அகற்றப்பட்டதுதான். இது போல் முன்பு பட்டுப்பூச்சி வளர்ப்புக்கென்று பரப்பி எண்ணற்ற பேர் அரிய மரங்களை அழித்து மல்பெரிச் செடி வைத்து பட்டுப்புழு வளர்த்தனர். ஆனால் புழுவிலிருந்து நூல் எடுப்பதற்கான எந்தக் கட்டமைப்பையும் உருவாக்காததால் நம் மர வளங்கள் கணக்கற்று அழிந்ததுதான் மிச்சம்.

            இந்த உணவுப் பொருள் நடமாட்டக் கட்டுப்பாடுகளால் ஆட்சியாளர்களுக்கு இங்கு விளையும் ஒவ்வொரு நெல்மணியிலிருந்தும் கோதுமையிலிருந்தும் ஊழல் பணம் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அதில் நடுவரசு ஆட்சியாளருக்கும் முறையாகப் பங்கு போய்க்கொண்டிருக்கிறது. அப்படிப் போகவில்லையானால், மாநிலங்களிடையிலான வேளாண் விளைபொருள் நடமாட்டக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக நடுவரசு ஓர் அறிக்கை வெளியிடும். ஆனால் உண்மையில் அது நடைமுறைக்கு வராது. இடையில் கொடுக்க வேண்டியது கொடுப்பட்டுவிடும்..

            பங்கீட்டுக் கடைகள் மூலமாக ஆட்சியாளர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கிறது.

            கடை ஊழியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனர். பணி உறுதி கிடையாது. எனவே மேலதிகாரிகள் விரும்பாத எதையும் செய்ய முடியாது. அவர்களுக்கு வழங்கும் சரக்குகளின் தரம், அளவு ஆகியவை பற்றி எதுவும் சொல்ல முடியாது. வேலை பெறுவதற்காகவே கணிசமாகப் பணம் செலவிட்டிருப்பர். இந் நிலையில் அரிசி, மண்ணெய், சீனி போன்ற பொருட்கள் அவ்வவற்றுக்குரிய எடை அல்லது அளவுகளில் இவர்களுக்கு வந்து சேராது. கொஞ்சமாவது அவற்றில் திருடாது பொதுவழங்கல் துறையினர் இவர்களுக்குத் தரமாட்டார்கள். எனவே அந்தக் குறைவைச் சரிகட்ட  வேண்டும். அதற்காக நிறுத்தலிலும் அளத்தலிலும் சிறு சிறு ஏமாற்றுச் செய்ய வேண்டியிருக்கும். பொது வழங்கல் துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நயன்மைத் துறை அதிகாரிகளுக்குப் பண்டங்கள் இலவயமாக வழங்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். அத்துடன் இவர்களின் துறையான பொதுவழங்கல்துறை அதிகாரிகளுக்கு அவ்வப்போது எலும்புத் துண்டுகள் போட வேண்டியிருக்கும். அது ஒழுங்காக நடைபெறவில்லை என்றால் திடீரென்று தேடுதல் வேட்டை அல்லது சரிபார்த்தல் என்று கூறி வந்து ஒரு நாடகம் ஆடி ஊழியரை இடை நீக்கம் செய்து பேயாட்டம் ஆடுவர். நம் தோழர் ஏதாவது சேர்த்து வைத்திருந்தால் அதைக் காணிக்கையாக்கித் தப்பித்துக் கொள்ள வேண்டும்.

            மாநிலத்துக்குள்ளும் எல்லையைத் தாண்டியும் உணவுத் தவசங்களைச் சாலையில் கொண்டு செல்வதற்கு இசைவாணை வழங்குதல், இசைவாணை இன்றி கொண்டுசெல்லுவோரைக் கண்காணித்தல் ஆகியவற்றிலிருந்து இடைவிடாமல் கைக்கூலிப் பணம் பாய்ந்துகொண்டே இருக்கிறது. அதில் அதிகாரிகள் தங்கள் பங்குக்கு எடுத்துக்கொண்டது போக மேலிடத்துக்கு அவரவருக்கு விதித்த  அளவு கப்பம் கட்டியாக வேண்டும். அந்தக் கப்பம் நாட்டின் முதல் குடிமகன் வரைக்கும் சென்று சேர்ந்துவிடும்.

            பஞ்சாப் மாநிலத்தில் நில உச்சவரம்பு கிடையாது. அங்கு புதிய வேளாண் நிலங்கள் மிகுதி. விடுதலைக்குப் பின் கட்டிய அணைகளின் கீழ்ப் பெரும் பெரும் பரப்பிலான நிலங்கள், பாசனத்தின் கீழ் வந்தன. அவற்றிலிருந்து உருவான வேளாண் பெருமக்களை இந்தியாவை ஆளும் பனியாக்  கும்பல் அரசின் கட்டுப்பாடுகள் மூலம் சுரண்டியதற்கு எதிராக உருவானதுதான் காலித்தான் விடுதலை முழக்கம். ஆனால் அந்த இயக்கத்தை மதவெறி சார்ந்ததாக மாற்றி அழித்த பெருமை  இந்திரா காந்திக்கும் இராசீவ் காந்திக்கும்  உண்டு.

   புன்செய்ப் பயிர்கள் என்று எடுத்துக்கொண்டால் நாராயணசாமி(நாயுடு)யின் போராட்டம் குறிப்பிடத்தக்கது. அங்கு உண்மையான சிக்கல் வாணிகர்களின் சுரண்டல். புன்செய்ப் பயிர்கள் விளைந்த நிலைமையில் அவற்றை விற்பதற்கு மண்டிகள் எனப்படும் தரகர்களிடம் செல்ல வேண்டும். அவர்கள் பண்டத்தை கையால் தொடாமலும் கண்ணால் பார்க்காமலும் கூட ஆதாயம் பார்த்துவிடுவர்.

            வேளாண்குடி மக்கள் நகர்களுக்குச் சென்று இந்தத் தரகர்களை அணுகி விலை கேட்பர். அவர்கள் நல்ல விலையாகச் சொல்வர். நம்பி, மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு வரும் போது விலை வீழ்ந்துவிட்டது, நாளை விலை ஏறும் என்பர். நகரத்தினுள்ளே வண்டியை அவிழ்த்துப்போட்டு தனக்கும் மாடுகளுக்கும் தீனி பார்த்து ஓரிருநாள் சென்றுச் சலிப்படைந்து வந்த விலைக்கு விற்றுக்கொண்டு திரும்புவர் வேளாண் மக்கள். இதற்கு மாற்றாக ஆட்சியாளர் அமைத்த பல்வேறு கட்டமைப்புகளின் கதையைத்தான் முன்பு பார்த்தோமே. எனவே அவ் வேளாண் மக்களது குறைகளைத் தீர்க்கவென்று நாராயணசாமி அவர்களை ஒருங்கிணைத்துச் சில போராட்டங்களை நடத்தினார். சாலை மறியல்களில் தமிழகமே நிலைகுத்திப் போனது. துப்பாக்கிச் சூட்டில் பல பேர் தம் இன்னுயிர்களை இழந்தனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறை சென்றனர். இதற்கு ஒரு தீர்வாக அப்போது ஆட்சியிலிருந்த ம.கோ.இரா. நடைமுறைபடுத்திய திட்டம்தான் வேளாண்மைக்கு இலவய மின்சாரம் என்பது. பின்னர் அந்தப் போராட்டம் எடுபடவில்லை. நாராயணசாமியும், தன் இயக்கத்தை ஓர் அரசியல் கட்சியாக்கி ஆவியாகிப் போனார்.

            இதில் வெளித் தோன்றாமல் நடந்த நிகழ்ச்சி ஒன்று உண்டு.

           நாராயணசாமியின் போராட்டங்களில் கடைசி காலத்தில் ஊடுருவியது இந்திய மக்கள் முன்னணி என்ற பெயரில் செயற்பட்ட அமெரிக்கக் கையாள் வினோத் மிசிரா என்பவனின் இயக்கம். போராட்டத்தின் போது சிறையிலிருந்தவர்களிடையில், பெருவுடைமை வேளாண்மையினரின் போராட்டம் முடிந்துவிட்டது. இப்போது சிறு, குறு வேளாண் மக்களின் போராட்ட காலம் தொடங்க வேண்டும் என்று பரப்பல் செய்து அந்த இயக்கத்தை உடைத்தார்கள். இதைச்  சொன்னவர் இந்த டைமுறையில் பங்கேற்றவரான கோயில்பட்டி பொறியாளர் பால்ராசு அவர்கள். அது தவறு என்று அவர் ஒப்புக்கொண்டார். அப்படியாயின் அந்த நிலையை மாற்றி மீண்டும் புஞ்சை வேளாண் மக்களின் உரிமைகளுக்காகப் போராட அவரது ஒத்துழைப்பைக் கேட்ட போது தன்னால் இயலாது என்று கூறி மறுத்துவிட்டார்.

            தமிழக மக்களின் மிகுந்த வீறுடைமையை விளக்கிய இன்னொரு நிகழ்ச்சி நாராயணசாமியாரின் தலைமையில் நடைபெற்ற போராட்டமாகும். இதில் இயக்கத் தலைவரும் படித்த கூட்டமும் இரண்டகம் செய்து தமிழக மக்களின் முதுகில் குத்தினர்.     

            தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புன்செய்ப் பயிர்கள் செய்யும் நிலங்களை வைத்திருப்போர் பெரும்பாலும் தெலுங்கை வீட்டுமொழியாகக் கொண்ட நாயக்கர்கள். இவர்களை வட மாவட்டங்களில் பாளையப்பட்டு நாயுடு என்று கூறுவர். இவர்களில் மீப் பெரும்பாலோர் விசய நகரப் பேரரசு உருவாவதற்கு முன் முகம்மதியப் படையெடுப்பாளர்களின் கொடுமைகளிலிருந்து தப்பியும் வரட்சி, பஞ்சம் ஆகிய சூழல்களிலும் இடம்பெயர்ந்தவர்கள். இவர்களது இடப்பெயர்ச்சியின் ஒரு சிறந்த பதிவாக, கரிசல் எழுத்தாளர் என்று பெயர் பெற்ற திரு.கி. இராசநாராயணன் அவர்கள் எழுதியுள்ள கோபல்ல கிராமம் என்ற புதினம் விளங்குகிறது. பின்னர் நாயக்கர்கள் ஆட்சியின் போது இவர்கள் அண்டை மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் அரசியல் வலிமையைப் பெற்றனர்.

            இவர்களது ஒரு பெரும் மனக்குறை தங்கள் வட்டாரத்து வேளாண்மை சிதையக் காரணமே விருதுநகர் நாடார்களாகிய வாணிகர்கள்தாம் என்பது.

            நாம் மேலே மண்டிக்களைப் பற்றிக் கூறியது இங்கும் பொருந்தும். சிறு விளைப்பாளர்களைச் சுரண்டுவது வட்டிக்காரர்களும் வாணிகர்களும் என்று காரல் மார்க்சு தன் புகழ்பெற்ற படைப்பான மூலதனத்தில் குறிப்பிடுகிறார்.
           
            மரபுவழிப்பட்ட பழைமையான முறையில் கைத்தொழில்களையும் வேளாண்மையையும் செய்துவரும் தற்சார்புடைய விளைப்பாளர்களின் பக்கத்தில் கந்துவட்டி மூலதனம் அல்லது வாணிகனின் மூலதனத்தை வைத்துக்கொண்டு கந்துவட்டிக்காரன் அல்லது வாணிகன் அவர்களை உறிஞ்சும் ஒட்டுண்ணியாக நிற்கிறான். இந்த வகையான சுரண்டல் மிகுந்திருக்கும் ஒரு குமுகத்தில் இது முதலாளிய விளைப்புப் பாங்கு உருவாவதை விலக்குகிறது. இருப்பினும் இவ் வகை விளைப்பு வடிவம், இடைக்காலத்தின் முடிவில்(ஐரோப்பாவில்) நிகழ்ந்தது போல் முதலாளியத்துக்கு மாறுவதற்கான இடைமாற்றத்துக்கு வழி வகுக்கலாம்.

            (By the side of independent producers who carry on their handicrafts and agriculture in the traditional old-fashioned way, there stands the usurer or the merchant, with his usurers capital or merchants capital, feeding on them like a parasite. The predominance, in a society, of this form of exploitation excludes the capitalist mode of production; to which mode, however, this form may serve as a transition, as it did towards the close of the middle ages. [3])

       இந்த வெளிச்சத்தில் பார்க்கும் போது தமிழக வேளாண்மையை அழித்து அதை ஒரு மேய்ச்சல் நிலமாக மாற்றும் திட்டம் கருணாநிதி ஆட்சிக்கு வரும் முன்பே கருக்கொண்டுவிட்டது என்பது புரிகிறது. காவிரி - மேட்டூர் திட்ட ஒப்பந்தத்தை உரிய காலத்தில் புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் தி.மு.க.வுக்கு முன் ஆண்ட பேரவைக் கட்சியினர் சுணக்கம் காட்டியதே இந்த அடிப்படையில்தான் போலும்.

            குளங்களைத் தூர்த்து அவற்றில் அரசு அலுவலகங்களையும் பேருந்து நிலையங்களையும்  பேரளவில் அமைத்தது கருணாநிதிதான். அத்துடன் 1974இல் புதுப்பிக்க வேண்டிய காவேரி - மேட்டூர் ஒப்பந்தத்தை அப்போது பதவியிலிருந்த அவர் புதுப்பிக்காததுடன் கமுக்கமாக காவிரி, அதன் கிளை ஆறுகள் ஆகியவற்றின் குறுக்கே புதிய அணைகளைக் கட்ட கர்நாடகத்துக்கு ஒத்திசைவும் வழங்கினார்.

            பாசன அமைப்புகளை வீட்டுமனைகளாக்கும் பெரும்பணியில் தோழர்களின் பங்கைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. எங்கும், எப்போதும் அவர்கள் முன்வைக்கத் தவறாதது, ஏழைகளுக்கு, தொழிலாளர்களுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு என்று வகைவகையாக இலவய மனைப்பட்டாக்களைப் புறம்போக்கு நிலங்களிலிருந்து வழங்குங்கள் என்று வேண்டுகை வைத்துக்கொண்டே இருப்பர்.

     இந்த இலவய மனைப் பட்டா ஒரு பெருந்தொழில். எடுத்துக்காட்டாக, ஒரு துப்புரவுத் தொழிலாளி, முறைப்படியோ, வல்லடியாகவோ ஒரு புறம்போக்கில் சிறு மனையை எடுத்து அதில் ஒரு குடிசை கட்டுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரிடமிருந்து அம் மனையை ஒரு தாழ்த்தப்பட்டவர்  விலைக்கு வாங்கி ஒரு ஓட்டு வீடு போடுவார். அவரிடமிருந்து ஒரு பிற்படுத்தப்பட்டவர் வாங்கி திண்ணக்க (கான்கிரீட்)க் கூரை வீடு போடுவார். அதை வட்டிக்காரர் அல்லது கள்ளச் சாராய முதலாளி வாங்கி முடிந்தால் பக்கத்திலுள்ள மனைகளையும் சேர்த்து மாடி மீது மாடியாக வளமனை கட்டுவார். இது நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வளமாக நடைபெறும் அரசு - பொதுமை இயக்கம் கூட்டணி நடத்தும் தொழிலாகும். இதிலும் பாசன அமைப்புகள் மற்றும் சாலை என்று அனைத்து அடிப்படைக் கட்டுமானத்துக்கு உரிய நிலங்கள் பிடுங்கப்படுகின்றன. இந்த வாணிகத்துக்குக் கருணாநிதியின் ஊத்குவிப்பு மிகுதி. (ஏழ்மை இருப்பது வரை இலவயங்கள் இருந்து கொண்டே இருக்கும். ஏழ்மையையும் நாங்கள்தாமே உருவாக்குகிறோம், கிழவனும் சாகக் கூடாது, கட்டிலும் ஓயக்கூடாது)

            அண்ணாத்துரை  முதலமைச்சராக இருந்த போது ஒரு முறை அமெரிக்கா சென்று அங்கிருக்கும் ஏல் பல்கலைக் கழக  விருந்தினராக இரண்டு கிழமைகள் இருந்துவந்தார். அதற்கு ஏற்பாடுகள் செய்தவர் ப-ர் எம்.எசு.உதயமூர்த்தி என்பவர். இவர் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த போது இந்த ஏற்பாடு நடந்தது. பின்னர் காவிரிச் சிக்கல் மாவீரன் போன்றவர்களால் நடுவர் மன்றத்தில் புதைக்கப்பட்டுவிட, மனம் பதைத்து நின்ற தமிழக இளைஞர்களைத் திசை திருப்ப, கங்கையை கல்லணைக்குக் கொண்டு வருவேன் என்று செல்லாத  ஊருக்கு வழிகாட்டியவர்.

            தி.மு.க.வுக்குத் தொடக்க காலத்திலேயே அமெரிக்கா ஆதரவு உண்டு. எனவே தமிழகத்தைப் பற்றிய அமெரிக்கத் திட்டத்தை நிறைவேற்றுவதில் இங்குள்ள ஆட்சியாளர்களுக்கும் அமெரிக்காவுக்கும் ஒருங்கிணைப்பு இருக்கிறது. இந்திய  ஆட்சியாளர் உட்கைதான்.

            தமிழகப் பாசனத்தை அழிப்பது, நிலங்களைத் தரிசாக்குவது, அவற்றை மனைகளாக்குவது என்பது ஒரு தொடர் நிகழ்வு. இந்த மனைகள் இங்குள்ள வீடுகளின் தேவையை மிஞ்சியவையாகும். அத்துடன் இந்திய ஆட்சியாளர்கள் பனியா - பார்சிக் கும்பல் தவிர்த்த பொதுமக்களுக்கு, இடங்கையினரின் துணையுடன் போட்டு வைத்துள்ள முதலீட்டுக்கான எண்ணற்ற சட்டவியல், ஆள்வினையியல், உளவியல் தடைகளால் இம் மனைகள் பணமதிப்பைப் பேணும் வைப்பக ஆவணங்களாகவே செயற்படுகின்றன. எனவே உண்மையாகவே வீட்டுமனை தேவைப்படும் சராசரிக் குடிமகனின் வாங்கும் திறனுக்குள் அவை அமையா. அவை என்றும் தரிசாகவே இருக்கும். அவற்றில் ஆளும் கூட்டத்தினரின் கூட்டணியுடன் உருவாகும் பல்வேறு வளாகங்கள் உருவானவை, கல்வி நிலையங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் நிலங்கள் போக எஞ்சியவற்றில் இன்று போல் கட்டற்ற மேய்ச்சல் நடக்கும். பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு மக்களின் உதவியுடன் இயற்கை வேளாண்மையில் வல்லரசு நாடுகளுக்குத் தேவைப்படும் காய்கறிகளை விளைத்துக் கொள்வார்கள். அவற்றைச் சராசரி குடிமகன் வாங்கிவிடாமல் கன்னெய்ய விலை, பேருந்துக் கட்டணம் போன்றவற்றை உயர்த்தி அவனது வருமானத்தை ஒருமுனையில் பிடுங்கியும்  முன்னோக்கு அதாவது வலைதள வாணிகம் மூலம் அவற்றின் விலையை உயர்த்தியும் தடுத்து ஏற்றுமதி செய்வார்கள். உரூபாய் மதிப்பை வல்லரசு நாடுகளின் பண மதிப்போடு ஒப்பிடக் குறைத்து அங்குள்ளோருக்குக் கொள்ளை மலிவில் கிடைக்கச் செய்வார்கள்.

            இந்த இயற்கை வேளாண்மை வல்லுநர்கள் ஏற்கனவே வல்லரசுகளிடம் பணம் பெற்று பண்டங்களை விளைத்து அவர்களுக்கு ஏற்றுகிறவர்கள். இவ்வாறு உலகெங்கும் உள்ள ஏழை நாடுகளிலிருந்து செல்லும் வேளாண், கடல்சார் பண்டங்கள், மது வகைகள் உட்பட மட்டுமல்ல ஆடைகள் போன்ற கிட்டத்தட்ட அனைத்து நுகர்பொருட்களுமே இலவயம் என்று சொல்லுமளவுக்கு வல்லரசு நாட்டினருக்கு மலிவாகக் கிடைக்கின்றன. இதற்கு அடிப்படையாக இருப்பது செலவாணி மாற்று விகிதம்.

     எடுத்துக்காட்டாக, நம் நாட்டில் முகம் மழிக்க எளியவர்கள் பயன்படுத்தும் கரிசி(பிளேடு) விலை உரூ1. இதே உள்ளூர் சரக்கு அமெரிக்காவில் 1 டாலர் விலை. ஆனால் அதே ஒரு டாலரை இந்தியாவுக்குக் கொண்டு வந்தால் 45 கரிசிகளை வாங்க முடியும்.

          அதே போல் இங்கு உருவாக்கப்படும் ஒரு உள்ளொட்டி(பனியன்) உள்ளூரில் உரூ 80/-க்கு விற்கிறதென்றால், அதை அமெரிக்காவில் 15 டாலருக்கு  விலையாகும் அளவுக்கு இங்கே 5 டாலருக்கு ஏற்றுமதியாளர் ஏற்றுகிறார் என்று கொள்வோம். அவருக்குக் கிடைக்கும் தொகை உரூ 225/-. இதன் மூலம் இங்கு ஒருவர் வரம்பு மீறிய ஆதாயம் பெறுகிறார். அதே நேரத்தில் தரமான பொருள் உள்நாட்டு மக்களுக்குக் கிடைக்காமல் போகிறது. வல்லரசு நாட்டினருக்கு மலிவு விலையில் சரக்கு, இறக்குமதியாளருக்குக் கொள்ளை ஆதாயம்.

       பெரும்பாலான நுகர்பொருட்கள் இவ்வாறு ஏழை நாடுகளிடமிருந்து கொள்ளை மலிவில் இறங்கி அங்குள்ள கிட்டத்தட்ட அனைத்து வெள்ளையருக்கும் கொஞ்சம் கறுப்பர்களுக்கும் நாடு கடந்து  வந்தோருக்கும் அளவுக்கு மீறிய அளவில் கிடைக்கின்றன. அதே நேரத்தில் முடிதிருத்தல், குழாய் பொருத்தல், மின்சாரப் பணிகள் போன்றவற்றுக்குத் தொழிலாளர்கள் பெரும் கூலி பெறுகிறார்கள். இவ்வாறு கொழிக்கும் வளமையின் விளைவாகப் பெரும்பாலான நுகர் பண்டங்கள் ஒரே ஒரு முறை பயன்படுத்திவிட்டு வீசப்படுகின்றன. கருப்பர்களும் வெளிநாடுகளிலிருந்து கள்ளத்தனமாகப் புகுந்தோரும் அவற்றை எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இங்குள்ள ஒடுக்கப்பட்ட மக்களைப் போல் அவர்கள் வாழ்கிறார்கள்.

 தமிழக வேளாண்மை மீது கருணாநிதி இறக்கிய பேரிடி உரூபாவுக்கு 1 கிலோ அரிசித் திட்டமாகும். இந்த அரிசியில் ஒரு பகுதி பங்கீட்டுக் கடைகளை அடைவதற்கு முன்பே ஆட்சியாளர்களின் கைக்கூலிகளால் தொடர்வண்டி, சரக்கி ஆகியவை மூலம் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. இன்னொரு பெரும்பகுதி பங்கீட்டுக் கடைகளிலிருந்து செல்கிறது. மேலும் ஒரு பகுதி கிலோ 5 உரூபாய்க்கு அதற்கென்று இருக்கும் கடைகளிலும் அரிசி தேவைப்படும் ஒரு சிலருக்கும் அதைப் பெறும் பொதுமக்களாலேயே விற்கப்படுகிறது. கடைகளுக்குச் செல்வது ஆலைகளில் அரைக்கப்பட்டு சந்தைக்கு வந்து உரூ 10, 12 என்ற விலையில் விற்கிறது. இது உழவன் விளைவித்துச் சந்தைக்குக் கொண்டுவரும் அரிசியின் விலையை அமிழ்த்தி வேளாண்மையைத் தாக்குகிறது.

        வீடுகளை அடையும் அரிசி ஓரளவு வசதி உள்ளவர்கள் வீடுகளில் கோழிக்குத் தீவனமாகிறது. அதைச் சோறாக்கி ஆடு, மாடுகளுக்கும் போடுகிறார்கள்.

        இந்த அரிசி ஒருமுறைக்கு மேல் தீட்டப்படுவதால் மாச்சத்து தவிர வேறு சத்து எதுவும் இல்லாமல் அதை உண்ணும் மனிதர்கள் கோழிகள், ஆடு - மாடுகள் எளிதில் நோய்த்தாக்குகளுக்கு ஆளாகின்றன.

      இவற்றை விட  முகாமையான செய்தி என்னவென்றால் இந்த அரிசி கொள்முதல் நிலையத்தில் நெல்லாகப் பெறப்பட்டு பங்கீட்டுக் கடையை அடைவதற்குள் அதற்கான செலவு கிலோவுக்கு உரூ 32/- என்பது 1990ஆம் ஆண்டைய கணக்கு. இன்று அது ஏறக்குறைய 75உரூபாவாக இருக்கும், அதாவது பங்கீட்டுக் கடையில் ஒரு கிலோ அரிசியை வாங்கினால் நேரடியாக  உரூ 1ம் மறைமுகமாக, தான் செலுத்தும் வரியிலிருந்து உரூ 75/-ம் அதை வாங்கும் குடிமகன் செலவு செய்கிறான் என்பதாகும்.

          இந்தச் செலவில் அடங்கும் ஓர் இனத்தை எடுத்துக்கொள்வோம். அரிசி, நெல் ஆகியவற்றைச் சேர்த்துவைத்திருக்கும் கிடங்குகளில் பூச்சித்தாக்கு போன்ற கோளாறு ஏற்பட்டுவிட்டதென்று பொய் கூறி அக் கோளாறைச் சரிசெய்வதற்காக அக் கிடங்கைத் தற்காலிகமாகக் காலி செய்வதென்ற பெயரில் அக் கிடங்கிலிருக்கும் தவசம் முழுவதையும் சரக்கியில் ஏற்றும் கூலி, அவற்றை வேறொரு கிடங்குக்குக் கடவும் சரக்கி வாடகை, அந்தத் தவசங்களை ‘’இன்னொரு’’ கிடங்கில் இறக்கும் கூலி, இங்கே கோளாறான கிடங்கியைத் கூறப்பட்ட ‘’தாக்குகளி’’லிருந்து விடுவிப்பதறகான விரிவான துப்புரவுப் பணிகளுக்கான செலவுகள், பின்னர் அந்த ‘’இன்னொரு’’ கிடங்கிலிருந்து சரக்கியில் ஏற்றும் கூலி, அங்கிருந்து இங்கு கொண்டுவர சரக்கி வாடகை, இங்கு மீண்டும் இறக்கும் கூலி என்று இவ்வளவு செலவுகளையும் போலியாகக் காட்டி எடுத்துக்கொள்வார்கள் என்பது அத் துறையில் அயல்பணிக்கு (Deputation) சென்றுவந்தவர் தந்த செய்தி. நீண்ட இந்த நடைமுறை மேலே உள்ளவர்களுக்குத் தெரியாமல் நடைபெறாது. எனவே இது உச்சியில் உள்ளவர்களின் ஊக்குவிப்பு இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை.  மக்களின் அனைத்து நுகர்பொருள்களையும் பொது வழங்கலின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று குரலெழுப்பும் பொதுமைத் தோழர்களே இதில் உங்கள் பங்கு எவ்வளவு?  

            தமிழகத்து ஏழை உழவன் இன்றைக்கு எந்தத் திசையில் செல்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறான்.

1.      விளைபொருள் விலை ஏற்றத்துக்குப் போராடுவதா அல்லது தானே பிறர் நிலத்தில் கூலிக்குச் செய்யும் வேலைக்குக் கூடுதல் கூலி கேட்பதா? அதே கூலியைத் தானும் கொடுக்க வேண்டுமே!
2.      கிலோ அரிசி ஒரு உரூபாய் என்பது  தனது விளைபொருள்  விலையை அழுத்துகிறதா? அதன் உயர்வுக்காகப் போராடினால் கிலோ ஒரு உரூபாய்த் திட்டத்தை எதிர்க்க வேண்டும்! தன் வாழ்க்கைச் செலவு கூடுமே!
3.      கிலோ அரிசி ஓர் உரூபாக இருப்பதால் கிடைக்கும் பணத்தில் சாராயத்தைக் குடிக்க முடிகிறது.  அது இல்லையென்றால் சாராயம் குடிக்க முடியாதே!
4.   வேளாண்மை உட்பட அனைத்துச் சிக்கல்களுக்கும் மக்கள் ஒருங்கிணைந்து போராட சாதி, சமயம், மொழி போன்ற அடிப்படையில் மக்கள் பிளவுபட்டு  நிற்கிறார்களே என்ன செய்வது?

இவர்களை இந்தத் திகைப்பிலிருந்து விடுவித்து உண்மையான தமிழகத் தேசியப் பொருளியல் விடுதலை நோக்கி இட்டுச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பு நம் முன் நிற்கிறது.

            அது போல் இங்கு வளரும் ஆடு மாடுகளை அறுத்துப் பாடம் செய்து கேரளக் கடற்கரை மூலம் ஏற்றுமதி செய்வார்கள். இங்குள்ளோர் அவற்றைத் தின்னாமல் தடுப்பதற்காக, விலங்கு உணவுக்கு எதிராக அறிவியல் பரப்பல்கள் முழு மூச்சாக ஏற்கனவே நடைபெற்று மக்களின் மண்டையில் பதியவைக்கப்பட்டுவிட்டன. இங்குள்ள வெள்ளாளச் சாதியினரும் வெள்ளாளக் கட்டு மேற்கொண்டுவிட்ட பிற சாதியினரும் முனைப்பாக இதில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் வெளிநாட்டுப் பணத்தில் புரளும் ‘’தன்னார்வ’’ ஒற்றர்களும் இரண்டறக் கலந்துள்ளனர். இவ்வாறு ஒரு சிக்கலான வலைப் பின்னலுள் கருணாநிதியும் செயலலிதாவும் மாறி மாறிப் பணம் குவிக்கிறார்கள். இருப்பினும் கருணாநிதிக்குள்ள தொழில் நுணுக்கமும் ஆள்கட்டும் செயலலிதாவிடம் இல்லை[4].

            2011 தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தல் அறிக்கையில் செயலலிதா வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 30 இலக்கம் குடும்பங்களுக்குத் தலைக்கு 4 ஆடுகளை இலவயமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மதிப்புக்குரிய மருத்துவர் ஐயா அவர்கள் இந்த ஒரு கோடி இருபதிலக்கம் ஆடுகளுக்கு எங்கு போவார் அம்மையார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ஒருவேளை மேற்குலகுக்கு இறைச்சி உருவாக்கும் திட்டத்தில் இந்த ஆடுகளை அங்குள்ள அமைப்புகள் விடுத்துத் தரலாம். யார் கண்டார்கள் காலம் விடை கூறட்டும்.


[1] திருப்புகை மண்டலம், Tropical Region, 23½வடக்கு அக்கக் கோடு (கடக ரேகை) முதல் 23½தெற்கு அக்கக் கோடு(மகர ரேகை) வரை; நடுக்கோட்டு மண்டலம்  Equatorial Region.
[2] A Commercial Geography, L Dudley Stamp, Longmans, Green and Co., London, 1951, p.29
[3] Capital Vol , Karl Marx, Pprogress Publishers, Moscow, p.478
[4]இன்று(2014) நிலைமை தலைகீழ்.

0 மறுமொழிகள்: