15.12.15

சாதி வரலாற்றுக்கு ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 7


கோட்டை எத்தனை கோட்டையடி!:
            இரும்பைத் தங்கமாக்கியதன் மூலம் செல்வம் எய்திய சாணார்கள் அதனைக் கொண்டு வெண்கலக் கோட்டை ஒன்றை இலங்கைத் தீவில் கட்டியதாகவும் அதனை மூ‌வேந்தர்கள் அழித்துவிட்டதாகவும் கதை கூறுகிறது. இலங்கைத் தீவில் மாந்தை நகரில் ஓர் இரும்புக் கோட்டை இருந்ததாகவும் அது பொற்கொல்லர்களுக்கு உரியதென்றும் அதனை அழிக்க முடியாத மேல் சாதியினர் ஒரு பார்ப்பனப் பெண்ணைக் கோட்டைக்குள் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விடுத்ததாகவும் அவளை ஒரு பொற்கொல்லன் மணந்து கொள்ள அவனிடமிருந்து சூழ்ச்சியாய் கோட்டையை அழிக்கும் மறையத்தை அறிந்து எதிரிகளுக்கு அவள் தெரிவிக்க அவர்கள் கோட்டையை எரித்து அழித்தனர் என்றும் மாந்தைப் புராணம் கூறுகிறது. அது போல் இலங்கைக் கடற்கரையில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காந்தக் கோட்டை ஒன்றிருந்ததாகவும் அது கடலில் செல்லும் கப்பல்களை ஈர்த்து அழித்ததாகவும் அக் கோட்டையைத் தமிழ் வேந்தர்கள் தாக்கி அழித்ததாகவும் தமிழ் இலக்கியங்களில் குறிப்பு உள்ளது. வானில் தொங்கிக் கொண்டிருந்த தூங்கெயில்எனும் கோட்டையைச் சோழன் ஒருவன் அழித்ததாகவும் ஒரு வரலாறு உள்ளது. மூன்று இளவரசர்கள் (இவர்களை அரக்கர்கள் என்று தொன்மம் கூறுகிறது) இரும்பு, வெள்ளி, பொன் ஆ‌‌‌கியவற்றால் ஆகிய, ஒன்றனுள் ஒன்றாய் அமைந்த மூன்று பறக்கும் கோட்டைகளில் வானில் சென்று தாம் நினைக்கும் நகரங்கள் மீது இறக்கி அழித்து வந்தார்கள் என்றும் அவர்களை அழிக்க சிவன் மேருமலையை வில்லாகவும் வாசுகி எனும் பாம்பை நாணாகவும் திருமாலை அம்பாகவும் கொண்டு எய்தார் எனவும் அம்பா‌‌‌கிய திருமாலால் கோட்டையை அழிக்க இயலாமல் போகவே சிவன் சினந்து சிரித்துத் தன் நெற்றிக் கண்ணால் எரித்து அழித்தார் என்றும் தொன்மக் கதையுள்ளது நமக்குத் தெரியும். இந்தக் கோட்டைக் கதைகளைப் பார்ப்போம்.

            மாந்தைக் கோட்டைக் கதை பேரரசுச் சோழர் காலத்தில் இடம்பெற்ற ஒரு குமுகியல் நிகழ்வைக் குறிக்கிறது என்று கூறலாம். சோழர்களின் காலத்தில் எண்ணற்ற கோயில்களைக் கட்டும் பணி தொடங்கியது. அதற்குத் வேண்டிய தொழில்நுட்பர்களின் தேவையை அப்போதிருந்த ஐந்தொழிற் கொல்லர்களால் ஈடுசெய்ய முடியவில்லை போலும்[1]. அதே நேரத்தில் அவர்களின் தொழில்நுட்பங்களையும் அறிந்துகொள்ள முடியாதிருந்திருக்கும். அவர்க‌ளிடமிருந்து ஏதோவொரு சூழ்ச்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சியால் அத் தொழில்நுட்பங்களைத் தெரிந்து புதியவர்களுக்குப் பயிற்சியளித்துத் தொழிலில் ஈடுபடுத்திய நிகழ்வை இக் கதை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காட்டாலாம்‌. பிறர் ஊடுருவிப் புரிந்து கொள்ள முடியாதவாறு பாது‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காக்கப்பட்ட கோட்டை இத் தொழில்நுட்பங்களை உருவகப்படுத்துகிறது. இந்த நம் முடிவுக்குக் சான்றாகப் பேரரசுச் சோழர் காலத்தில் தோன்றியனவாக வரலாற்றாசிரியர்கள் காட்டும் புதிய கலப்புச் சாதிகளையும் வருணங்களையும் கூறலாம். ஏற்கனவே இருந்த வருணங்க‌ளிடையில் ஏற்பட்ட கலப்புகளில் பிறந்தவர்களுக்குத் தாய், தந்தையரின் குல ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் புதிய குலப் பெயர்கள் சூட்டப்பட்டன. அத்தகைய புதிய குலங்களின் கலப்பில் தோன்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இரதகாரர்கள் ஆவர். இவர்கள் கட்டட வேலைகள், தேரமைத்தல், கலன்கள்(பாத்திரங்கள்) செய்தல், அரசர்க்கு மணிமுடி செய்தல் ஆகிய கொல்லர், தட்டார், தச்சர், கம்மாளர், கொத்தர் ஆகிய ஐந்தொழில்களில் ஈடுபட்டனர். இது அனைத்து வருணங்கள், சாதிகளிலிருந்து புதிய தொழில்களில் பலர் ஈடுபட்டுப் புதிய ஓர் ஐந்தொழிற் கொல்லர் சாதியை உருவாக்கியதையே கு‌‌‌‌‌றிக்கிறது.

            மூன்று கோட்டைகளைப் பற்றி முப்புரா‌‌திகள்(திரிபுராதிகள்) எனப்படும் அரக்கர்கள் பற்றிய தொன்மக் கதையில் பார்த்தோம். தென் ‌‌‌மாவட்டத்தில் முப்புராதி அம்மனோடு இக் கதை தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. ஓர் அரக்கப் பெண் ஒரு முனிவருடன் சேர்ந்து மூன்று ஆண் மக்களைப் பெற்றுப் போட்டுவிட்டுப் போய்விடுகிறாள். அப் பிள்ளைகளைக் காளி எடுத்து வளர்க்கிறாள். அவர்கள் தவம் இயற்றி சிவனருளால் மூன்று கோட்டைகளையும் பெறுகிறார்கள். அவர்களது கொடுமை தாங்காது தேவர்கள்முறையிடுகின்றனர். காளி அவர்களுடனிருக்கும் வரையில் முப்புரா‌‌திகளை அழிக்க முடியாதெனக் கண்டு மும்மூர்த்திகளும் அவளுக்கு ஒரு வேலையைக் கொடுத்து ‌‌‌வெ‌ளியேற்றிவிட்டு அவர்களை அழித்தனர் என்றும் திரும்பிய காளி தன் பிள்ளைகள் இறந்ததறிந்து அழுது புலம்பினாள் என்றும் அக் கதை வில்லுப்பாட்டாகப் பாடப்படுகிறது. அம்மன் கோயில் கொடை விழாக்களில் முப்புராதியம்மன் எனப்படும் காளி தன் பிள்ளைகளுக்காகப் புலம்பியழுவதை வில்லுப்பாட்டில் பாடும் போதுதான் அம்மன் கொண்டாடி ஆடத் தொடங்குகிறார். எனவே அரக்கர்கள் எனப்படும் முப்புராதிகளுக்கும் முப்புராதி அம்மனை வணங்கும் இம் மக்களுக்கும் ஏதோவொரு உறவு உள்ளது. அரக்கர்கள் என ஒதுக்கப்பட்ட முப்புராதிகளை நேரடியாக வழிபட முடியாத மக்கள் முப்புராதி அம்மன் மூலம் அவர்களை வணங்குகின்றனர் என்றே கொள்ள வேண்டும்.

            சேரன்தீவின் மூன்று இளவரசர்கள் என்பது ஐரோப்பாவில் வழங்கிய ஒரு புதினம் அல்லது தேவதைக் கதை. அதில் வரும் மூன்று இளவரசர்கள் உலகமெலாம் சுற்றிவந்தனர்; தாம் செல்லுமிடங்களிலெல்லாம் தாங்கள் எதிர்பாராத நன்மை தரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள் என்று கூறுகிறது. இந்தக் கதையின் அடிப்படையில் வால்போல் என்ற அறிஞர் இது போன்ற எதிர்பா‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ராத கண்டுபிடிப்புகளுக்கு செரண்டிப்பிட்டி(Serendipity) ‌என்ற சொல்லை வடித்து ஆங்கில மொழிக்கு வழங்கியுள்ளார்[2]. பண்டைக் கிரேக்கர்கள் இலங்கையைச் சேரன்தீவு என்றும் தாமிரபரணி என்றும் வழங்கினர். அந்த இலங்கை மகரத் திருப்பம்(Tropic of Capricon) அல்லது மகரக்கோடு எனப்படும் தெற்கு 23½ பாகை அக்கக் கோட்டிலிருந்த(அட்சரேகை) ஒரு மாபெரும் நிலப்பரப்பாகும். அங்கு நிழல்கள் எப்போதும் தெற்கிலேயே விழுந்தன என்று அவர்கள் குறித்து வைத்துள்ளனர். கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதியின் படியும் அபிதான சிந்தாமணி‌‌‌‌‌‌‌‌‌யின் படியும் இதுதான் இராவணனின் தென்னிலங்கை[3]. இந்த மூன்று இளவரசர்கள்தாம் ஒருவேளை முப்புராதிகளாக இருந்திருக்கக் கூடும். மொத்தத்தில் தென் தமிழ்நாட்டு மக்களுக்குத் தங்களோடு தொடர்புடைய கோட்டைகள் பற்றிய மிகப் பழம் நினைவுகள் தொடர்ந்து வந்ததால் வெங்கலக் கோட்டை பற்றிய கதையில் அவை ‌‌‌வெ‌ளிப்பட்டிருக்க வேண்டும்.

            திருச்செந்தூர் வட்டத்தைச் சேர்ந்த குறும்பூர் எனுமிடத்தில் நளன் என்ற சிற்றரசன் வெங்கலக் கோட்டை என்ற பெயரில் ஒரு கோட்டை அமைத்து ஆண்டு வந்தான். அவன் ஒரு பெண் மீது மையலுற்று அவளை அடைய முயன்ற போது அவள் சாப‌மிட மண்மாரி பொழிந்து அக் கோட்டை அழிந்தது என்று வெங்கல‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ராயன் கதை கூறுகிறது[4]. அங்கிருந்து குமரி மாவட்டம் வந்து இருளப்பபுரம் என்ற ஊரில் குடியேறிய ஒரு குடும்பத்தின் ஒரு கதையாகவே வெங்கலராயன் கதை எனப்படும் வலங்கையர் கதை தொடங்குகிறது. குமரி ‌‌‌மாவட்டத்தின் அத்திக்கடை எனும் ஊரில் செல்வா‌க்கு மிக்க இரு குடும்பங்களில் வெங்கலம் என்ற பெயருடைய இருவர் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவரின் பெயர் வெங்கலச் செறுவன்.[5] இவர்கள் காயாமொழி ஆதித்தனார் குடும்பத்துடன் உறவுடையவர்கள். இப் பெயர் கொண்ட வேறெவரும் நம் கவனத்துக்கு வர‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வில்லை. இந்தப் பெயர்களுக்கும் வெங்கலக் கோட்டைக்கும் ஏதாவது தொடர்‌பிருக்கலாம். அக் கோட்டை பளிங்குக் கல் எனப்படும் வெண்கல்லால்[6] கட்டப்பட்டிருக்கலாம். அதனால் அப் பெயர் பெற்றிருக்கலாம்[7]. அந்தக் கோட்டையில் இருந்து ஆண்டவர்கள் சாணார்கள் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. ஒரு வேளை நாயக்கராட்சிக் காலத்துக்கு முற்பட்ட நாடான்களின் மரபினராய் இருந்திருக்கலாம். தாங்கள் புதிதாகக் குடியேறிய இருளப்பபுரம் ஊர்ச் சூழலில் தங்களைச் சாணார்களோடு இணைத்துக் கொண்டிருக்கலாம்[8].

            இவ்வாறு, ஒன்றோடொன்று தொடர்பில்லாத, கால வரிசையில் மாறுபட்ட, பல்வேறு மக்களிடையில் நடைபெற்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளை நேரடியாகவும் பல்வேறு உருவக, குறியீட்டு வடிவங்களிலும் ஒன்றோடொன்று மயங்கிய நிலையிலும் தருவனவாகவே சாதி‌க் கதைகள் அமைந்துள்ளன. அவற்றினூடாகத் தமிழக மக்களின் பல்லாயிரமாண்டுக் கால வரலாற்றுத் துணுக்குகள் விரவிக் கிடக்கின்றன. அதற்குச் சாணார்களின் வரலாறாகக் கூறப்படும் இந்த நூல் ஒரு சான்று. ஆனால் இது சாணார் என்ற ஒரு சாதிக்கு மட்டும் உரியதன்று.

            சேர மன்னர்களின் காலத்தில் இருந்தே திருவனந்தபுரத்தில் இருக்கும் அனந்தபத்மநாபர் கோயி‌‌லில் பனையேறு கருவிகளான மிதிப்புத் தடி, அரிவாள் பெட்டி ஆகியவை வழிபடப்படுவதாகக் கூறப்படு‌‌‌கிறது. அதனால் திருவிதாங்கூர் மன்னர்கள் சாணார்கள் என்றும் நாடார் வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். சேர மன்னர்களின் மாலையே பனம்பூதான். நாம் தொடக்கத்தில் கூறியுள்ளபடி ஏற்றுமதி மதிப்‌புடைய பண்டங்களை மக்களிடமிருந்து பெறுவதற்குக் கள் பயன்பட்டுள்ளது. சேர நாடு மலைச் சரக்குகள் ஏராளமாக விளையும் நாடு. வேளாண் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலங்கள் குறைவு. எனவே ஏற்றுமதி ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சார்ந்ததாகவே அவர்களது பொருளியல் இருந்தது.

நீண்ட கடற்கரையும் இயற்கையான துறைமுகங்களும் இருந்தும் சேர மன்னர்கள் உள்நாட்டுக் கடல் ‌‌வாணிகர்களை ஊக்கவில்லை. யவனர்களான கிரேக்க, உரோமக் கடல் வாணிகர்களையே வளர்த்தனர். இரண்டாம் கடற்கோளின் போது இன்றைய தமிழகத்தில் செல்வாக்குடன் வாழ்ந்த பறையர்களின் பொருளியல் தோல் ஏற்றுமதி சார்ந்ததாகவே இருந்திருக்கும். அதற்கு உதவியவர்கள்  மேற்குக் கடற்கரையில் வாழ்ந்த நீண்ட‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காலக் கடற் பட்டறிவுள்ள கடம்பர்கள் எனப்படும் கடலோடிகள். ஐரோப்பாவில் கடலோடிகளான கார்த்தசீனியர்கள் எனப்படும் பினீசியர்களின் செல்வாக்கை அலக்சாண்டர் அழித்த பின் அவர்களுடைய கடல் வாணிகத்தைக் கைப்பற்றிய யவனக் கடலோடிகளைக் கொண்டு கடம்பர்களை சேர மன்னர்கள் அழித்தனர். சிலப்ப‌‌திகாரம் இச் செய்தியைக் கடற்கடம்பெறிந்த என்று கூறுகிறது.[9] இவ்வாறு நடைபெற்ற ஏற்றுமதிக்குத் தேவையான மலைச் சரக்குகளை மக்களிடமிருந்து பெறுவதற்காக நாம் முன்பு குறிப்பிட்டது போல் கள்ளையே பயன்படுத்தினர்.

            பேரா. இரா. மதிவாணன் எழுதிய கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல் என்ற நூலில் கூறப்படும் நாடகக் கதை, சேர நாட்டுக் கடற்கரையில் கள் விற்கும் கடையில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிக்கிக் கொண்ட ஒரு கிரேக்கப் பெண்ணைக் கிரேக்கர்கள் விடுவித்த நிகழ்ச்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சியே என்பதிலிருந்து சேர நாட்டில் கள் விற்கும் கடைகளின் செல்வாக்கு விளங்குகிறது.

            இதனால்தான் அனந்தபத்மநாபர் கோயிலில் பனையேறும் கரு‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விகளை வைத்து வழிபடுகிறார்கள் போலும். ஆனால் ஒரு கேள்வி. கேரளத்தில் பனை மரங்கள் குறைவு. கடற்கரையிலுள்ள உப்பங்கழிகளின் ஓரத்தில் தென்னையே சிறப்பாகப் பயிராகிறது. கேரளத்திலுள்ள ஈழவர்கள் தென்னங்கள் இறக்குகிறவர்களே அன்றி பனையேறிகள் அல்லர். தேங்காய் வெட்டுவோர் மிதிப்புத் தடி பயன்படுத்துவதில்லை. தென்னங்கள் இறக்குவோர் பயன்படுத்துகிறார்களா என்பதும் தெரியவில்லை. இந்தச் சூழலில் சேரர்களுக்குப் பனம்பூ மாலையானதும் அனந்தபத்மநாபர் கோயிலில் பனையேற்றுக் கருவிகள் வ‌ழிபடப்படுவதும் இன்றைய சேர நாட்டில் உருவான மரபுகள்தாமா என்ற கேள்வி எழுகிறது.

            தமிழக மூவேந்தர்களும் இன்றைய தமிழகத்தின் மூலக் குடிகள் அல்லர். அவர்கள் முழுகிய குமரிக் கண்டத்திலிருந்து குடியேறியவர்கள். மக்கள் குடியேற முடியாத அளவுக்கு அடர்ந்த காடாக இருந்தது அன்றைய தமிழகம். இரும்புப் கோடரி புழக்கத்துக்கு வந்த போது பரசிராம‌னால் அல்லது பரசிராமனை அடையாளமாகக் கொண்ட பார்ப்பனர்களால், அதாவது பூசகர்களால் காட்டை அழித்து உருவாக்கப்பட்டதே கேரளம். அவனைத் தொடர்ந்து சேரர்கள் முதலிலும் அடுத்துச் சோழர்களும் இறுதியில் பாண்டியர்களும் குடியேறினர். அவ்வாறு குடியேறிவர்களில் முதலில் வந்த சேரர்கள் குமரிக் கண்டத்தில் தங்களது மரபுகளாகப் பனம்பூ மாலையையும் பனையேறு கருவிகளையும் கொண்டு வந்தனர் என்று கொள்ள வேண்டும்[10].


[1] தமிழகத்தின் பண்டை நாகரிகக் கூறுகள் அனைத்தையும் அழித்து ஊழிக்கூத்து ஆடியவர்கள் சமயத்தின் பெயரால் தமிழகத்தினுள் நுழைந்து அதன் பொருளியலைச் சூறையாடிய சமணர்கள் எனப்பபடும் அம்மணர்களே. அவர்களின் செல்வாக்கு தமிழகத்தில் நிலவிய காலத்தில் கட்டடக் கலை உட்பட அனைத்துத் தொழில்நுட்பங்களும் தமிழகத்தில் தடமற்றுப்போயின. அந்தப் பின்னணியில்தான் அம்மணர்கள் அகன்ற தமிழகத்தில் உணரப்பட்ட இல்லாமைகளின் பட்டிலில் ஐந்தொழிற்கொல்லர்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
[2] இந்தச் சொல்லைப் பற்றித் தன் நூல் ஒன்றில் குறிப்புத் தந்தவர் பேரா.இரா. மதிவாணன் ஆவார். மேலே குறிப்பிட்ட நூலைத் தேடி ஆங்கில நூல்களின் பட்டியலைத் தரும் நூ‌ல்களை‌ அல‌சிய போது இந்நூல் பற்றிய குறிப்‌பு காணப்படுகிறது‌. ஆனால் பிற நூல்களைப் போன்று இதற்குத் தொகு‌‌‌‌ப்பாளர் பெயரோ வெளியீட்டுக் குறிப்‌புகளோ கிடைக்கவில்லை. எனவே இது நூல் வடிவில் இன்று எங்கும் கிடை‌க்கும் வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

[3] இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள் வானியல் என்ற நூலில் தென்னிலங்கை என்ற என் கட்டுரையாப் பார்க்க.
[4] குமரி மாவட்டத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட வெங்கலக் கோட்டைகள் பற்றிய செய்திகள் நிலவுகின்றன.
[5] செறுவன் என்ற சொல்லுக்கு பகைவன் என்று பொருள் கூறுகிறது கழகத் தமிழ் அகராதி.
[6] குமரி மாவட்டக் கலவரத்தைப் பின்னணியாக வைத்து முகிலை இராசபாண்டியன் என்பார் எழுதியுள்ள தேரிமணல் என்ற புதினத்தில் அதன் கதைத் தலைவன் குமரி மாவட்டம் மணக்குடி அருகில் இப்போது சிதைந்த நிலையில் காணக்கிடைக்கும் கோட்டைதான் தங்கள் முன்னோர் வாழ்ந்த வெண்கலக் கோட்டை என்று கூறுகிறான். மேற்கே குளச்சல் பகுதியில்தான் இந்தக் கோட்டை இருந்தது என்று அப் பகுதியிலுள்ளோர் கூறுகின்றனர். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தில், கி.பி. 1883இல் கன்னியாகுமரியில் கடல் நீர் திடீரென சில பர்லாங்குகள் பின்வாங்கியதாகவும் அப்போது கடலில் வெண்கலக் கதவுகளைக்கொண்ட இடிந்த கட்டடங்கள் வெளிப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். (பக்கம் 27-28) 
[7] குமரி மாவட்டம் மணக்குடிப் பகுதியில் இருப்பதாகக் கூறப்படும் ஒரு வெங்கலக் கோட்டையின் இடிபாடுகளிலிருந்து, அந்த வட்டாரத்தில் கடற்கரையில் தோண்டினால் களிமண் போன்ற பக்குவத்தில் கிடைக்கும், காற்றில் உலரவைத்தால் கல் போன்று இறுகும் சூவைக்கல் எனப்படும் வெண்மையான ஒருவகை மண்ணைச் செங்கல் வடிவத்தில் வெட்டியெடுத்து உருவாக்கும் கல்லால் இரு முகப்புகளையும் கட்டி நடுவில் செம்மண்ணை நிரப்பி அக் கோட்டை அமைக்கப்பபட்டிருப்பதைத் தான் பார்த்ததாக அண்மையில்(2009சனவரி) அதைப் பார்த்துவந்த ஒரிசா பாலு எனப்படும் நண்பர் ஆய்வாளர் பாலசுப்பிரமணி கூறினார். இந்த வகைக் கல்லை அந்த வட்டாரத்திலுள்ள பழைய கட்டுமானங்களில், குறிப்பாக சுற்றுச் சுவர்களில் பரவலாகக் காணலாம். 
[8] குமரி மாவட்டத்தில் கூட ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இதனால் இந்தக் கோட்டை இன்றைய தமிழகத்துக்கு வெளியே, அதாவது குமரிக் கண்டத்தில் இருந்து அழிந்த, தமிழ் மக்களின் நினைவில் அழியாத இடம்பிடித்த ஓரு கோட்டையின் நினைவாக வலங்கையர் கதையில் இடம்பிடித்திருக்கலாம் என்ற கருத்து வலுப்பெறுகிறது.
[9] உள்நாட்டுக் கடல் வாணிகர்களை ஒழிப்பதற்காகச் சேரர்கள் அன்று செய்ததை இன்றைய நம் ஆட்சியானர்கள் வேறு வழிகளில் நடைமுறைப்படுத்துகின்றனர். வருமான வரி, எண்ணற்ற கட்டுப்பாடுகள், நில உச்சவரம்பு என்று வெறியாட்டம் நடத்துகின்றனர். இதற்கு நிகர்மை”(சோசலிசம்) என்ற போலிக் கோட்பாட்டைத் தூக்கிப் பிடிக்கும் நம் நாட்டு அறிவு”சீவி”ளும் அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களுக்குக் கோட்பாட்டு ஆதரவு தருகின்றனர். மக்கள் இந்தக் கருத்துக் குழப்பத்தில் ஆட்சியாளர்களின் இந்த அழிம்பு வேலைகளைக் கண்டு கிளர்ந்தெழாமல் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
[10] பக்.26 அடிக்குறிப்பு காண்க.

0 மறுமொழிகள்: