28.12.15

சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 20இணைப்பு - 5 தொடர்ச்சி......1
போகிற போக்கில் கால்டுவெலார் குறிப்பிட்டுவிட்டுச் செல்லும் அம்மன் வழிபாடு சாணார்கள் நடுவில் மட்டுமல்ல, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் காணக்கிடக்கும் முகாமையான ஒரு தொல்வரலாற்றுத் தடயமாகும். அத்துடன் பண்டை ஊராட்சிமுறை பற்றிய முகாமையான தடமுமாகும். முத்தாரம்மன், முத்தாலம்மன் முத்துமாரியம்மன், முப்புராதியம்மன், முப்பிடாதி அம்மன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் இவ் வம்மன் கோயில் நாடான்கள் எனும் ஊர்த் தலைவனின் ஆட்சி வினைப்பாடுகள் செயற்படும் களமுமாகும்.

            இங்கு மாதம் ஒரு முறை ஊர்க் கூட்டம நடைபெறும். அதில் வரும் ஊர் வழக்குகள் உசாவப்பட்டு தீர்ப்புகளும் வழங்கப்படும். தீர்ப்புகளில் எளிய தண்டனை பெரும்பாலும் பிழை(அபராதம்) விதிப்பதாகும். ஊரிலிருந்து தள்ளி வைப்பது அரிதான நிகழ்வாகும்.

            ஊரில் நடைபெறும் திருமணங்களுக்கு ஊராரை அழைப்பது ஊர்த் தலைவனின் அதாவது ஊரின் பொறுப்பாகும். திருமண வீட்டார் குறிப்பிட்ட அளவு வெற்றிலையும் களிப்பாக்கும் வாங்கிக் கோயிலுக்குக் கொண்டு சேர்ப்பார். ஊராரில் சிலர் அவ் வெற்றிலையில் கழிவு நீக்கி நல்லவற்றைப் பாக்குடன் எடுத்துச் சென்று ஊரிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுத்து வருவார்.

            ஊரில் பண பண்டுகள் நடத்துவதுண்டு. இதற்கான ஏலம், திரும்பச் செலுத்துதல் முதலியவை ஊர்க் கூட்டங்களில்தான் நடைபெறும்.

            திருமணம், சாவு போன்ற நிகழ்வுகளில் ஊர்த்தலைவரான நாடான், தொடர்புடையவர் தனக்குக் கடும் பகையாளியாக இருந்தாலும் கலந்து கொள்ள வேண்டும்.

            திருமணத்தன்று முதல் நிகழ்ச்சி கால் நாட்டுவது. பனை ஓலையில் பூக்கூடை வடிவத்தில் முடைந்த பெட்டியில் (முன்பு பந்திகளில் சோறு பரிமாற இது போன்ற பெட்டியில் சோற்றை வைத்துக் கைபடாமல் கொட்டுவர். இதற்குச் ‘சோத்தாம் பெட்டி’ என்பது பெயர்) மணலை நிரப்பி ஆலின் ஒரு சிறுகிளையை நாடானும் திருமண வீட்டுத் தலைவனும் அதனுள் அழுத்தி நடுவர். (இது அரசாணிக்கால் நடுதல் என்று வட மாவட்டங்களில் குறிப்பிடுவர். ‘அரசாணைக் கால்’ என்பது இதன் பெயர் என்றும் திருமணத்துக்கு அரசன் சார்பாக ஊர்த் தலைவன் வழங்கும் இசைவாணையை இக் கால் நாட்டல் குறிக்கும் என்றும் திருவாரூர் தமிழாசிரியர் திரு.த.சரவணத் தமிழன் குறிப்பிடுவார்.)

            திருமணத்தின் போது மண வீட்டாரிடம் ஊர்ப் பணம் எனும் கட்டணத்தையும் நாடான் பெற்றுக்கொள்வார்.

            மணப்பெண் வீட்டுக்கு வரும் மணமகன் வீட்டாரிடமிருந்து பரியப் பணத்தை(பரிசம்)ப் பெற்று பெண்வீட்டாருக்குக் கொடுப்பதுடன் அவர்கள் ஊராருக்கென்று கொண்டு வர வேண்டிய வெற்றிலை, பாக்கு, புகையிலை ஆகியவற்றை அளந்து சரிபார்த்து ஊராருக்குப் பங்கிடுவது நாடானின் பொறுப்பாகும். இப் பணிகளில் நாவிதர் அவருக்கு உதவுவார். மணப் பெண் தான் உடுத்திருக்கும் தாய்வீட்டு உடைகளைக் களைந்து மணமகன் கொண்டுவரும் மணப்பட்டை உடுத்துவதற்கு இடைவேளையில் கட்டிக்கொள்வதற்கென்று மாற்று எனப்படும் மாற்றுச் சேலை வழங்குவதும் மாப்பிள்ளை வீட்டார் நடந்து மணமகள் வீட்டு வாயிலுக்கு வருவதற்கு மணப்பந்தல் முன் நடை பாவாடையை விரிப்பதும் ஊர் வண்ணார் பொறுப்பு. இதற்காக நாவிதருக்கும் வண்ணாருக்கும் அரிசியும் பணமுமாக வழங்குவதற்கு ‘வழக்கம்’ என்று பெயர் ‘சுதந்திரம்’, ‘சுவாதந்திரியம்’ என்ற சொற்களையும் சில வேளைகளில் கையாள்கின்றனர். உரிமை என்று பொருளில் இது வழங்கப்படுகிறது. ‘மாமூல்’ என்று இது பிற பகுதிகளில் கூறப்படுகிறது.
           
மணமகன் வீட்டார் கொண்டுவரும் பொருட்களில் புகையிலையை அளக்கும் முறை விந்தையானது. மணமகள் ஊர் நாவிதரின் கையின் பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் அவர் எவ்வளவு புகையிலையை அதன் காம்பை பிடித்து அடக்குகிறாரோ அதுதான் அந்த அளவு. இந்தப் புகையிலை ‘நனைவு’, ‘நனைந்த’ அல்லது ‘கருப்பட்டி’ப் புகையிலை எனப்படும்.

            வெற்றிலை போடுபவர்கள் வெற்றிலையோடு பாக்கு சுண்ணாம்பு மட்டுமல்ல புகையிலையையும் சேர்த்து கன்னத்தில் ஒதுக்கிக் கொள்வார்கள். புகையிலைக் காரம் வெற்றிலைச் சாற்றை விழுங்க முடியாமல் செய்துவிடும். எனவே வெற்றிலையை மென்று கொண்டே அல்லது கன்னத்தில் ஒதுக்கிக் கொண்டே தாங்கள் இருக்குமிடங்களில் துப்பிக் கொண்டே இருப்பர். அவர்கள் இருக்கும் இடம் இவ்வாறு பார்க்க அருவருப்பாக மாறிவிடும்.

            பாக்கில் காய்ந்த பாக்கு, பச்சைப் பாக்கு என்று இருவகை உண்டு. கமுகு மரத்தில் காய்க்கும் பாக்கைச் சற்றுப் பிஞ்சுப் பருவத்தில் வெட்டி காய்ச்சி சாற்றை வடித்துவிட்டுக் காய வைத்தால் அது களிப்பாக்கு. முற்றிய பருவத்தில் அவ்வாறு செய்தால் கிடைப்பது கொட்டைப் பாக்கு. வடித்த சாற்றை உலர்த்தும் போது கட்டியான காசுக் கட்டி என்ற பொருள் கிடைக்கிறது. சிலர் இக் கட்டியில் சிறிது கிள்ளி வெற்றிலையோடு சேர்த்துக் கொள்வார்கள். இது கடுமையாகத் துவர்க்கும். அது போல் பிஞ்சுப் பாக்கும் களிப் பாக்கும் துவர்ப்பு மிகுதியானவை. அதிகத் துவர்ப்பை விரும்பாதவர்கள் கொட்டைப் பாக்கை நாடுவர். காசுக் கட்டி தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தும் ஒரு கடைச் சரக்காகும்.

            பச்சைப் பாக்கைப் பெரும்பாலும் குமரி மாவட்டத்தினர் விரும்புவர். இன்றும் வெற்றிலை பாக்குக் கடைகளில் அதனைப் பார்க்கலாம். பச்சைக் காய் கிடைக்காத காலத்துக்காக நன்றாக முற்றிய காய்களை நீர்த் தொட்டிகளில் ஊறப் போடுவதுண்டு. அத் தொட்டிகள் முடை நாற்றம் வீசும். அடிக்கடி தண்ணீரை மாற்றுவர். ஒரு கிணறு அல்லது ஓடைத் தண்ணீரில் ஊறப் போட்ட பாக்கை வேறு தண்ணீருக்கு மாற்றக் கூடாது, மாற்றினால் பாக்கு அழுக வாய்ப்புண்டு. தொட்டியிலிருந்து எடுத்து நீரை வடியவிட்டு சந்தைக்கு விடுவர். நாம் மேலே குறிப்பிட்ட திருமண அழைப்பு, மணமகள் வீட்டாருக்கு மணமகன் வீட்டார் கொடுப்பவை என்ற அனைத்துமே காய்ந்த பாக்குதான். வரும் விருந்தினர்களுக்கு காய்ந்த பாக்குடன் பச்சைப் பாக்கை அல்லது கோறைப் பாக்கு எனப்படும் ஊறிய பாக்கையும் வெற்றிலை, புகையிலை சுண்ணாம்புடன் பனையோலையில் முடையப்பட்ட தட்டுப்பெட்டி அல்லது வெற்றிலைத் தட்டு எனப்படும் செம்புத் தகட்டால் ஆன, அல்லது வெண்கலத் தட்டுகளில் மணப்பந்தலில் வைத்திருப்பார்கள்.

            புகையிலையைப் பொறுத்தவரை யாழ்ப்பாணம் புகையிலை, வடக்கன் புகையிலை, நனைந்த புகையிலை என்ற வகைககள் உண்டு. யாழ்ப்பாணம் புகையிலை தரம் கூடியது. வடக்கன் புகையிலையைப் போல் அதையும் சிறு துண்டுகளாக நறுக்கி வாயில் போட்டுக் கொள்வார்கள். இவற்றைப் பொதுவாகக் காய்ந்த புகையிலை என்று குறிப்பிடுவர்.

            இவையன்றி சண்டுப் புகையிலை என்ற ஒன்று உண்டு. புகையிலைச் செடியில் முற்றிப் பழுத்த இலைகள் அவை. அவற்றைக் கருப்பட்டிக் கரைசலில் நனைத்துப் பயன்படுத்துவர். இதற்காகத் தரங்குறைந்த கருப்பட்டியைப் பயன்படுத்துவர். கரைசல் அதிகமாகக் காய்ச்சப்பட்டு கருகிப் போனது அல்லது சரியாகக் காய்ச்சாதது, சரியாகத் துழாவப்படாதது ஆகியவற்றியிலிருந்து வார்க்கப்பட்ட கருப்பட்டியில் இருந்து பெறும் கரைசலை கருப்பட்டிப் பாணி[1] என்பர். அதனுடன் தரமான கருப்பட்டியிலிருந்து பழங்கருப்பட்டி உருவாகும் நிகழ்முறையில் வழியும் வீணி எனப்படும் கசடும் சேரும். இப் பாணியில் முக்கிய பின் புகையிலையைக் கட்டுக்கட்டாகத் தொங்கவிடுவர். புகையிலையில் படிந்த கருப்பட்டிச் சாரம் போக கரைசலில் எஞ்சிய நீர் வடிந்துவிடும். இதற்கு புகையிலைப் பாணி என்று பெயர். நாகர்கோவில் கோட்டாற்றுக் கூலக்கடைத் தெருவினூடாகச் செல்லும் பறக்கைக்கால் எனும் ஓடையின் அருகிலுள்ள புகையிலைக் கிடங்குகளிலிருந்து வெளியேறும் புகையிலைப் ‘பாணி’ யின் வாடை 50 - 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தக் கடைத்தெருவையே நிறைத்திருக்கும். நனைவுப் புகையிலை என்றழைக்கப்படும் இதனைக் கிள்ளி வெற்றிலையோடு சேர்த்துக் குதப்புவர்.

            சண்டுப் புகையிலையை வாங்கித் துண்டுகளாக நறுக்கிக் கருப்பட்டிக் கூழுடன் பக்குவமாக அடுப்பில் கிளறி எடுத்துப் பாதுகாத்துப் பயன்படுத்துவதும் உண்டு. இதன் மேம்பட்ட படைப்புதான் அங்கு விலாசுப் புகையிலை என்ற முத்திரையுடன் திண்டுக்கல் முத்தையா பிள்ளையின் நிறுவனம் சந்தைக்கு விட்டு பல பத்தாண்டுகள் ஆட்சி செய்தது. உலர் புகையிலையுடன் நறுமணப் பொருட்களைச் சேர்ந்து முக்கோண வடிவில் கண்ணாடித் தாளில் பொதிந்து சந்தைக்கு வந்தது கடையநல்லூர் மங்கள சுந்தரி நிறுவனப் படைப்பு.

            பல் வலுவில்லாதவர்கள் வெற்றிலையையும் பாக்கையும் சுண்ணாம்பையும் சேர்த்து உரல் வடிவிலிருக்கும் சிறு கல்லில் இட்டு கல் அல்லது இரும்பாலான இடிப்பானால் இடித்து வாயில் ஒதுக்கிக் கொள்வர். வெற்றிலை பாக்குக் கடைகளில் வாயில் படியிலோ அல்லது அதற்கென்று நட்ட ஒரு கல்லிலே செதுக்கியிருக்கும் குழியில் பக்கத்திலிருக்கும் இடி கல்லாலோ கம்பியாலோ இடித்துக் கொள்ளவும் வசதியிருந்தது.

            இரும்பால் அல்லது வெண்கலத்தால் ஆன ஒரு சிறு குடுவையையும் அதனுடன் தொடரியால் இணைந்த ஒரு கம்பியை மடியில் அல்லது பையில் வெற்றிலை - பாக்கு - சுண்ணாம்பு - புகையிலையுடன் செல்லுமிடங்களுக்கு எல்லாம் கொண்டு செல்வோரும் உண்டு.

            வீட்டுக்கு வரும் விருந்தினர் முன்பு வீட்டார் முதலில் வைப்பது வெற்றிலைப் பெட்டியைத்தான். வெற்றிலைத் தட்டம் என்ற தட்டு வடிவிலும் கால்களுடன் முக்காலி வடிவிலுமான தட்டுகள் உண்டு. சுண்ணாம்பு வைப்பதற்குச் சுண்ணாம்புக் கரண்டி என்ற வேலைப்பாடு அமைந்த வெண்கலக் குடுவையும் உண்டு.

            இன்று வெற்றிலையோ, அதிலும் புகையிலை சேர்த்தோ போடும் பெண்கள் நாடார்களிடையில் குமரி மாவட்டத்தில் அருகி விட்டனர். முன்னர் பெண்களிடையில்தான் இப் பழக்கம் மிகுதியாக இருந்தது. நாடார்கள் மீது பிற மேல்சாதியினர் கூறிவந்த ஒரு பழி இதன் மூலம் அகன்றுள்ளது.

            கால்டுவெலார் குறிப்பிட்டுள்ள அம்மன் வழிபாட்டைத் தொடர்ந்து அந்த அம்மன் கோயிலில் நடைபெறும் ஊராட்சி, அவ் வூராட்சியின் தலைவரான நாடான், அவர்களின் பணிகள் என்று தொடர்ந்து திருமண நிகழ்ச்சிகளில் இடம் பெறும் வெற்றிலை பாக்கு - புகையிலை என்று நாடார்களின் மரபுகளில் முகாமையான சிலவற்றைப் பதிவாகும் அவாவில் பிறிதொன்று கூறலாக அமைந்த இப் பகுதிக்காக என்னைப் பொறுத்தருள வேண்டும்.

            இக் கோயில்களில் உள்ள அம்மன் உண்மையில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றால் முறையே ஒன்றைச் சுற்றி ஒன்றாக அமைந்த முப்புரங்கள் எனும் கோட்டைகளுடன் சிவனால் எரித்தழிக்கப்பட்ட அரக்கர்கள் என்று பார்ப்பனிய தொன்மங்கள் கூறும் முப்புராதிகளுக்கு அத் தொன்மங்கள் கூறாத வளர்ப்புத்தாயான முப்புராதி அம்மனே. இக் கோயில் கொடை(விழா என்பது அண்மைக்கால ஒட்டு)யின் போது நடு நிகழ்ச்சியாயிருப்பது சாமி கொண்டாடி மீது அம்மன் வந்து ஆடுவதே. தன்னைத் தந்திரமாக வெளியேற்றிவிட்டுத் தன் பிள்ளைகளைக் கொன்றொழித்துவிட்ட முக்கடவுள்களின் செயலுக்கு இரங்கி அம்மன் ஒப்பாரி வைக்கும் நிகழ்வு வில்லுப்பாட்டில் பாடப்பட்டும் போதுதான் அம்மன் ஆடுவாள். இவ்வாறு ஒரு மக்கள் கூட்டத்தின் தெய்வத்தை வழிபாட்டிலிருந்து நீக்கிவிட்டு சிவன் வழிபாட்டை நிலைநிறுத்தித் தங்கள் புதிய மேலாளுமையை நிலைநிறுத்திய இன்னொரு குழுவின் முயற்சியை அம் மக்கள் முறியடித்ததன் ஒரு தடயமாகவே இதைக் கொள்ள வேண்டும்.

            இந்த அம்மன் கோயில்களில் பீடங்கள்(பூடம் என்பர்) எனப்படும் துணைத் தெய்வங்கள் உண்டு. அவற்றில் ஒன்று காலசாமி. மார்க்கண்டனின் உயிரைக் கொள்ள வந்த காலனைச் சிவன் உதைத்த கதை பாடப்படும்போது இத் தெய்வம் ஆட வருகிறது. அதாவது இங்கும் சிவன் வழிபாட்டால் காலன் வழிபாட்டை அழிக்க மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்ட தடத்தைப் பார்க்க முடிகிறது. கால சாமியைக் குலதெய்வமாகக் கொண்டவர்களின் குடும்பத்தினரில் இந் நூலாசிரியரின் குடும்பத்தாரும் அடங்குவர்.

            இன்னொரு பீடமான சுடலை மாடனோ ஆடி வரும்போது சுடுகாட்டுக்குச் சென்று எரியும் பிணத்தை எடுத்துத் தின்னும் தெய்வம். இத் தெய்வத்துக்கு என இருக்கும் கோயில்களில் கணியான்கள் எனப்படும் குழுவினரில் பெண் கோலம் கொண்ட ஆடவர் தங்கள் கைகளில் கீறி வடித்த குருதியைப் பிசைந்த சோற்றை சாமியாடி உண்பது உள்ளிட்டவற்றைப் பார்த்தால் மனித, நாகரிகத் தொடக்கத்தில் நெருப்புக்கு நரபலியிட்டு வெந்த பிணத்தைத் தின்ற சிலப்பதிகாரம் கூறும் பாரதியாகிய பைரவி(கடலாடு காதை வரி 45)யின் தடயத்தைக் காண முடிகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் சாணார்களின் இந்த வழிபாட்டுமுறை காளி வழிபாட்டை சிவன் வழிபாடாக மாற்ற மேற்கொண்டவர்களின் முயற்சியை முறியடித்து நிலத்துநிற்கும் ஒன்று என்பதில் ஐயமில்லை.

            பொருளிலக்கணம் காட்டும் தெய்வம் தழுவிய ஐந்நிலப் பூசாரியர் ஆட்சிக்கும் முந்திய மந்திரவாதப் பூசகத் தலைமைகளின் மட்டுமல்ல அதற்கும் முந்திய நரபலியுண்ணும் நெருப்பு வழிபாட்டு நாகரிகக் காலத்திலிருந்து தொடர்ந்த மந்திரவாதப் பூசகர்களின் சாமன் தலைமையைத் தூக்கியெறிந்து அரசர்களுடன் கூட்டுச் சேர்ந்த பார்ப்பனர் என்ற புதிய பார்ப்பனப் பூசாரிகளின் படைப்புகளான தெய்வங்களிலிருந்து அடிமட்டச் சாணார்களும் செல்வம் படைத்த சாணார்களும் அம்மன் வழிபாட்டைக் கற்றுக்கொண்டனர் என்பது ‘ஆரிய’ இனம் என்ற கற்பனையின் அடிப்படையில் அமைந்த, இன்று ஆளும் வரலாற்று வரைவின் விளைவே அன்றி வேறல்ல.

            அம்மன் கோயில்களைக் களமாகக் கொண்டு இத்தகைய ஊராட்சி முறை ஒன்று இயங்கியதைப் பதிவது கால்டுவெலார் எடுத்துக்கொண்ட பொருளுக்கு வலிமை சேர்க்காது. கிறித்துவத்தில் உள்ளூராட்சியின் பல கூறுகள் ஆலயங்களில் வேர்கொண்டிருந்தன; பிறப்பு, இறப்பு, திருமணம், பெயர் சூட்டல் ஆகியவற்றுடன் அவற்றின் துல்லியமான பதிவுகளுடன் அரசர்களின் ஆணைகளும் பூசகர்களின் வழியாக மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

            ஆனால் சாணார்கள் உட்பட தென்மாவட்டக் கோயில்களில் ஊராட்சி நடுவம் கொண்டிருந்தாலும் அதில் பூசகருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆட்சி சமயச் சார்பின்றியே நடந்தது. வடக்கில் நாம் மேலே குறிப்பிட்டிருந்ததைப் போல் பூசகர்களின் செல்வாக்கு அரசர்களின் மீதிருந்தாலும் தெற்குக் கோடியில் கோ என்ற அரசனின் இல்லமாகவே கோயில்கள் ஊர் ஆட்சியைப் பொறுத்தவரையில் செயல்பட்டது என்பது நடைமுறை உண்மை.

            இந்த அம்மன் கோயில்களில் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை உயிர்ப்பலி இருந்தது. பொதுவாக ஆட்டை வெட்டிப் பலியூட்டினர். சில கோயில்களில் ‘துள்ளுமறி’ எனப்படும் மிக இளம் வெள்ளாட்டுக் குட்டிகளின் கழுத்தில் அறுத்து அந்த இடத்தில் வாயை வைத்து சாமியாடி இரத்தம் குடிப்பது உண்டு. இது சாமியாடிகளின் விருப்பு வெறுப்பா, ஊர் வழக்கமா என்று தெரியவில்லை.

            கோயில் செலவாக ஒன்று அல்லது இரண்டு ஆடுகளைக் கழுத்தை வெட்டிப் பலியிட்டுச் சமைத்துப் படைப்பார்கள். இதனை முத்துச் சொரிதல் என்பார்கள். பின்னர் அது ஊராருக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்படும்.

இதுவன்றி ஊர் மக்களும் நேர்வதுண்டு. அவர்கள் பலியிட்ட ஆட்டை வீட்டுக்கு எடுத்துச் சென்று உறவினர்களுடன் சமைத்து எஞ்சியதை ‘உப்புக் கண்டம்’ போட்டு உலர்த்தி வைத்துக் கொண்டு தேவையானபோது நீரில் ஊறவைத்துக் குழம்பு செய்தோ அல்லது அப்படியே நெருப்பிலிட்டுச் சுட்டோ உண்பர். எண்ணெயில் பொரிக்கும் பழக்கம் பரவலாக இல்லை. பலி ஆடுகளை வெட்டுபவர் ஊர் நாவிதர். அது மட்டுமல்ல, இக் கோயில்களுக்கு வெளியே இருக்கும் துணைத் தெய்வப் பீடங்களைக் கொடைக்கு முன்பு திருத்தி ஆயத்தப்படுத்துபவரும் அவரே. படியமைவு கொண்ட கூம்புக் கோபுர (Stepped pyramid) வடிவம் கொண்ட இப் பீடங்கள் மண்ணால் செய்யப்பட்டிருக்கும். மழையில் கரைந்து உருமாறி இருக்கும் அவற்றை மீட்டு அதன் உச்சிப் படியில் ஒரு குழிவை ஏற்படுத்தியிருப்பர். அதில் ஒரு மண்குடத்தைத் தண்ணீருடன் வைத்து அதன் உள்ளே தென்னம் பூவைச் சொருகியிருப்பர். இவரது இந்தப் பணிகளைப் பார்க்கும் போது இக் கோயில்களில் நாவிதர்கள் ஒரு காலத்தில் பூசகர்களாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. நாவிதரைக் குடிமகன் என்று அழைப்பது உண்டு[2].

            கொடைகள் நடப்பதற்கு முன் அதனை ஊர்க் கூட்டத்தில் அறிவிப்பார்கள். செலவை மதிப்பிட்டு வரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரிக்கு இவ்வளவு என்று விதிப்பார்கள்.

            திருமணமான ஆண்களுக்கு ஒரு வரி என்றும் மணமாகாத இளைஞர்களுக்கு அரை வரி என்றும் கணக்கிடுவது ஒரு முறை. கூலி வேலைக்குச் செல்வோர்க்கு முழு ஆள் சம்பளம், அரையாள் சம்பளம் என்று அகவைக் கேற்பக் கொடுப்பதுண்டு. அதனடிப்படையில் வரி நிறுவுவதும் உண்டு.

            கொடை நிகழ்ச்சியில் வரும் வில்லுப்பாட்டுக்காரர், கொட்டுக்காரர் ஆகியோருக்கு உணவளிப்பதையும் ஏலத்தில் விடுவர். அதுபோல் கோயிலில் பொங்கலிடவும் கறி சமைக்கவும் பயன்பட்ட பெரிய மண்பாணை போன்றவற்றையும் ஏலம் விடுவர்.

ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன்பு கூட ஊர்ப்புறங்களில் இறைச்சிக் கடைகள் கிடையா. நகரங்களில்தான் இருந்தன. பொங்கல், ஆண்டுப் பிறப்பு போன்ற சிறப்பு நாட்களில் சிலர் முறையான இறைச்சிக் கடைகளைத் தற்காலிகமாக நடத்துவதுண்டு. அதுவும் இல்லாத இடங்களில் சிலர் ஒன்றுசேர்ந்து ஓர் ஆட்டை வாங்கி அறுத்துப் பங்கிட்டுக் கொள்வர். இவ்வாறு பலியாடுகள்தாம் ஊர்ப்புற மக்களுக்கு இறைச்சி உணவுக்கான முகாமையான வழியாக இருந்தது.

            இன்று இறைச்சிக் கோழிகள் தாராளமாக வந்தும் கூட குமரி மாவட்டக்காரனுக்கு நெல்லை மாவட்டத்துக்காரனுக்கு உள்ள கொடுப்பினை இல்லை. நெல்லை மாவட்டத்தில் கழுத்தை அறுத்துக் கொன்ற கோழியை கொதிக்கும் நீரில் முக்கி மயிரை அகற்றி மஞ்சள்பொடி கொண்டு துப்புரவாக்கித் தோலுடன் வேண்டிய அளவுக்கு விற்கிறார்கள். அத்துடன் வாடிக்கையாளர் விரும்பினால் ஒரு முழுக் கோழியின் இறைச்சியும் விற்றுவிடும் நிலையிருந்தால் வெந்நீரில் முக்காமல் தோலை உரித்தும் விற்பர். இதனால் கையில் ரூ 10, 15 வைத்திருப்பவர் கூட கொஞ்சம் கோழிக்கறியை வாங்கிச் சமைக்கலாம்.

            குமரி மாவட்டத்தில் இந்த வசதியையெல்லாம் கோழி இறைச்சிக் கடைக்காரர்கள் செய்யவில்லை. முழுக்கோழி வாங்கியாக வேண்டும். தோலை உரித்துத்தான் தருவார்கள். இதனால் இங்கு சராசரி குடும்பத்தில் கோழி இறைச்சி நுகர்வு இங்குள்ள பொருளியல் நிலைக்கு ஒப்பிடக் குறைவாகத்தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். தோலுடன் கோழிக்கறி சுவையாக இருப்பதோடு கேடு தராத கோழியின் கொழுப்பும் உடலுக்கு நல்லது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

            இந்த வசதி எதுவும் இல்லாத சென்ற நூற்றாண்டுச் சூழலில் இன்று ‘இந்து’ சமய அமைப்பினர் போல் கோயில்களில் உயிர்ப்பலிக்கு எதிராக குரல் எழுப்பியிருப்பார்களாயின் அவர்கள் மக்களிடம் கட்டாயம் உதை வாங்கியிருப்பர். அதாவது, மக்கள் தங்கள் இறைச்சித் தேவையை தனியாட்களாக நிறைவேற்ற முடியாத சூழலில் கோயில்கள் அந்தத் தேவையை நிறைவு செய்தன என்று சொல்ல வேண்டும்.

            முருகனைப் பார்ப்பனியக் கடவுள் என்கிறார், ஏனென்றால் அவன் கோயில்களில் உயிர்ப்பலி இல்லையாம்(பக்.12). ஆனால் திருமுருகாற்றுப்படையில் முருகன் உயிர்ப்பலி கொண்டது குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்துப் பார்ப்பானிய(ஆகம)க் கோயில்களிலும் கொடிமரத்துக்கு முன்பு ஒரு பலிபீடம் உள்ளது. அதில் குருதிக்குப் போலியாக எலுமிச்சம் பழச்சாற்றைக் குங்குமத்தில் தோய்த்துப் பலியிடுகிறார்கள்.

            பனையேறிச் சாணார்கள் திருச்செந்தூர்க் கோயில் திருவிழாவுக்குப் பெருமளவில் செல்கிறார்கள் என்கிறார் (பக்.12). உண்மையில் இக் கோயில் காயாமொழி நாடானின் ஆட்சிக்கு உட்பட்டது என்ற வகையில் அவரது ஆட்சிக்குட்பட்ட மக்கள் அங்கு செல்கின்றனர். இக் கோயிலில் இன்றும் ஆடும் கோழியும் நேர்ச்சைக்காகத் தரப்படுகின்றன. அவற்றைப் பலியிடுவதற்குப் பகரம் ஏலத்தில் விற்றுக் காசைக் கோயிலுக்கு எடுத்துக்கொள்கிறார்கள்.

            ‘பார்ப்பனியக் கடவுளர்கள்’ உயிர்ப் பலியைத் தவிர்த்ததன் காரணத்தைப் பார்ப்போம்.

            அம்மண சமயத்தை எதிர்க்கொள்ளவே ‘பார்ப்பனியத்’ தெய்வக் கோயில்கள் உயிர்ப்பலியிடுவதை முடிவுக்குக் கொண்டுவந்தன. ஆனால் குமுகச் செல்வத்தின் பெரும்பகுதியைத் தமக்கு உரிமையாக்கிக் கொண்டிருந்த பார்ப்பனர்களுக்கும் அவர்களுக்கு அடுத்த உயர் சாதியினருக்கும், குறிப்பாக சிவனிய வேளாளருக்கும் வகைவகையாகச் சமைத்து உண்டு விலங்குணவின் சத்துமிக்க சாரமாகிய பால் முதல் அனைத்தையும் தமக்கே உரிமையாக்கியும் தமக்கு இன்றியமையாத ஊட்டச் சத்துகளைப் பெற முடிந்தது. ஆனால் கூழும் மிளகாயும் வெங்காயமும் என்று பெரும்பாலும் உண்டு வாழவேண்டிய நிலையிலிருந்த அடித்தட்டு மக்களுக்குச் சாதி வேறுபாடின்றி மீனும் இறைச்சியும்தாம் ஊட்டச் சத்து உணவுகள். எனவே புதிது புதிதாக சிறுதெய்வங்களை உண்டாக்கி அவற்றுக்கு உயிர்களைப் பலியிட்டு உண்டார்கள். தென் மாவட்டங்களில் வழிபடப்படும் சிறு தெய்வங்கள் பெரும்பாலானவற்றுக்குக் கதைப்பாடல்கள் உள்ளன. இவை அனைத்தும் ஐந்தாறு நூற்றாண்டுகளுக்குள் வரலாற்றைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

            பண்டைத் தெய்வங்களில் சாத்தன் குறிப்பிடத்தக்கது. ஐயனார் எனப்படுவதும் இத் தெய்வந்தான். தமிழர் நாகரிகத்தின் தொடக்ககாலத் தெய்வங்களில் இதுவும் ஒன்று. வாணிகச் சாத்துகளின் தலைவனே சாத்தன். இவ் வகையில் அது ஒரு காவல் தெய்வம். சாத்தன், இயக்கி போன்ற பண்டைத் தெய்வங்களை அம்மணம், புத்தம் ஆகியவை உட்செரித்து தங்கள் கோயில்களில் எல்லைத் தெய்வங்களாகக் வைத்துக்கொண்டன. சாத்தனை பார்ப்பனியம் சிவனுக்கும் திருமாலுக்கும் நடந்த ஓரினச் சேர்க்கையில் பிறந்த கடவுளாக இழிவுபடுத்தி சிவனிய - மாலியப் பூசலை முடிவுக்குக் கொண்டுவந்ததாகக் கூறிக்கொள்கிறது.

            இந்தத் தெய்வம் இடம் பெயர்ந்த மக்களின் அடையாளமாகப் பேணப்படுகிறது. பங்குனி மாத வெள்ளுவாவாகிய பங்குனி உத்திரம் நாளன்று பல்வேறு ஊர்களிலிருந்து சாத்தன் கோயில்களில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் வந்து குவிவர். சாத்தன் உயிர்ப்பலி ஏற்காத தெய்வமாயினும் வெளியே இருக்கும் ‘பரிவார’ தெய்வங்களுக்கு ஆடுகளை காவுகொடுத்து சமைத்து உண்டு எஞ்சிய இறைச்சி கெட்டுப்போகாமல் இருக்க தாங்கள் வந்த வில் வண்டி அல்லது கூண்டு வண்டியின் மீது தோலுரித்த ஆட்டின் உடலை விரியப் பிளந்து கட்டிக் கொண்டு செல்வதைக் காண முடிந்தது. இப்போது உந்து வண்டிகளில் வருவதால் இறைச்சியை அதனுள் வைத்து வீட்டுக்குச் சென்று பதப்படுத்துகிறார்கள் போலும்.

            சாத்தன் கோயில்கள் தடமின்றிப் போன இடங்களில் வடிவம் ஏதுமற்ற ஒரு கல்லையே கோயிலாகக் கொண்டு பங்குனி உத்திரத்தன்று அதன் மீது பெரிய பந்தலைக் கட்டி பலி, பூசை, சாப்பாடு என்று அனைத்தையும் முடித்து மேலே கூறியவாறு வந்து திரும்புகிறார்கள். அடுத்த நாள் பார்த்தால் அந்தக் கல்லும் சில பூக்களும், மாலைகளும் தவிர நடைபெற்ற வழிபாட்டுக்கு எந்த அடையாளமும் இருக்காது.

            இந்த தெய்வங்கள் அன்றி, பண்டைத் தெய்வங்களில் மீப் பழையதாகக் கொள்ளக் கூடிய, நரபலியின் தடயத்தை கொண்ட சுடலைமாடன் கோயில்களிலும் உயிர்ப்பலி தொடர்கிறது. இக் கோயில் தென்மாவட்டங்களில் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. இத் தெய்வங்கள் குறிப்பிட்ட சாதியினர்க்கு மட்டும் உரியவையல்ல. பிற்பட்ட, மிகப் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள் என்று அனைத்துச் சாதியினர்க்கும் உரியவையாகும்.

இது மக்களின் இடப்பெயர்ச்சிகளைத் தடம் பிடிக்கவும் இடப்பெயர்ச்சிகளின் போது சாதிமாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை இனங்காணவும் இந்த நிகழ்ச்சிகளைக் குமுக ஆய்வாளர்கள் பயன்படுத்த முடியும்.

            எந்த குறிப்பிட்ட அடையாளமும் இன்றி வழியில் செல்வோரைத் துன்புறுத்தும் வாதை என்பதொன்று அண்மைக் காலம் வரை வழக்கிலிருந்தது. வாதையன் கோயில் என்பது நான்கு முள்முருங்கைக் கம்புகளை ஏறக்குறைய 5 அடிகள் உயரத்துக்கு ஏறக்குறைய 5 அடிகள் இடைவெளியில் சதுரமாக நட்டு மேல் மட்டத்தில் கம்புகளால் இணைத்துக்கட்டி அதன் மீது தென்னங்கீற்றுகளைப் பாவி தென்னைக் குருத்தோலைகளால் தோரணம், பூமாலை முதலியவை கட்டி மூன்று பக்கங்களில் தொங்கவிட்டு நான்காவது பக்கத்தில் பெரிய மாலைகள் கட்டி அப் பக்கத்தில் நின்று பூசை செய்வார்கள். பூசைகள் நள்ளிரவில் நடக்கும். கொட்டுமேளம் எதுவும் இருக்காது. பன்றியறுத்துப் படைப்பார்கள். பன்றியின் வயிற்றைப் பிளந்து அதனுள் வாழைப் பழங்களை உரித்துப் போட்டு அவற்றுடன் ஈரலைச் சாமியாடி பிடுங்கித் தின்பதாகக் கேட்டிருக்கிறேன். கோழி, ஆடு முதலியனவும் பலியிடப்படும். இந்தப் பூசையில் நாட்டு வாழைப் பழம், நாடன் பழம், வயல் பழம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் பழத்தைப் படைப்பார்கள். இந்தப் பழத்துக்கு நானறிய பேயன் பழம் என்ற பெயர் குமரி மாவட்டத்தில் மட்டும்தான் வழங்குகிறது. ஒருவேளை மூவேந்தர்கள் இன்றைய தமிழகத்துக்கு தெற்கிலிருந்து குடியேறும் முன்பு இங்கிருந்த மூலக்குடியினர் வணங்கிய பேய்த் தெய்வமாக இது இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அதற்குப் படைக்கும் பழத்துக்குப் பேயன்பழம் என்ற பெயர் போலும். பூசை முடிந்த பின் இத்தகைய இடங்களில் அந்த முள்முருங்கைக் கம்புகள் துளிர் விட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை மரங்களாக வளர்ந்து பார்த்ததில்லை. அடுத்த கொடையின் போது பழையவற்றைப் பிடுங்கி எறிந்துவிட்டுப் புதியவற்றை நடுவார்கள் போலும். அத்தகைய இடங்களைத் தாண்டிப் போகும் போது பகலிலேயே அச்சமாக இருக்கும். அத்தகைய அச்சத்தை ஒட்டுமொத்தக் குமுகமே உருவாக்கி வைத்திருந்தது. இத்தகைய ‘வாதையன்’ கோயில்களை வழிபடும் இடங்களைத் தாண்டி பட்டப் பகலில் செல்வோர் கூட நடுங்குவர். இது பெரும்பாலும் அவ் விடத்தைத் தாண்டிச் சென்ற ஒருவருக்குத் தற்செயலாக உண்டான அச்ச உணர்வில் தெடங்கியதாக இருக்க வேண்டும். இதைப் பற்றி கால்டுவெலார் பக்.13இல் குறிப்பிடுகிறார்.

            “பார்ப்பனியத் தெய்வங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சாணார்களின் சொந்தப் பேய்கள் பொறாமை, உன்னிப்பாகக் கவனித்தலை, பழிவாங்கல் போன்ற தன்மை கொண்டவையாகவே உள்ளன” என்கிறார் கால்டுவெலார் (பக்.12).

            கிறித்துவ மறைநூலான திருப்பொத்தகத்தின் பழைய ஏற்பாட்டில், மோசே மூலம் பேசும் கடவுள் தான் பொறாமை உள்ளவரென்றும் மக்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் தன்னை விட்டுப் பிற கடவுள்களை வணங்குவோரை அழித்து விடுவதாகவும் கூறுகிறார்.

            அதுமட்டுமின்றி தன்னை வழிபடும் மக்கள் தங்கள் பயிர் விளைச்சலில் முதலில் கிடைப்பவற்றையும் கன்றுகள், பறவைகளில் முதல் பேறுகளையும் தனக்குப் பலியாகத் தந்துவிட வேண்டுமென்றும் கூறுகிறார். (பயண நூல், ஆதி. 23) அது போலவே ஆபிரகாம் மகன் ஈசாக்கை கடவுள் பலியாகக் கேட்கிறார். எந்த மறுப்போ வருத்தமோ இன்றி ஆபிரகாம் பலிகொடுக்க இருந்தபோது இறைவனின் தூதுவர் தோன்றி பலியை நிறுத்தி ஓர் ஆட்டை காட்டினார். மகனுக்கு மாற்றாக ஆட்டை பலி கொடுத்தார் ஆபிரகாம். (தொடக்க நூல் அதி. 22)

            ஏறக்குறைய இக் கதையின் கருவைக் கொண்ட கதையொன்று இருக்கு வேதத்தில் உள்ளது. அரிச்சந்திரன் என்பவன் வருணனை நோக்கித் தவம் செய்து, ஒரு மகனைத் தருமாறும் அவ்வாறு தந்தால் அவனை வருணனுக்கு பலியிட்டு வேள்வி செய்வதாயும் கேட்டு ஒரு மகனைப் பெற்றான். பலியாவதிலிருந்து தப்பிக்க மகன் இந்திரனின் கட்டுப்பாட்டிலிருந்த(மருத நில) காட்டுக்குள் பதுங்கினான். வருணன் தந்தைக்கு நோயை உண்டாக்கினான். மகன் ஒரு பார்ப்பானுக்கு 100 மாடுகள் கொடுத்து அவன் மகன் சுபச்சேனனை விலைக்கு வாங்கி வருணனுக்குப் பலிகொடுத்தான்.

            இந்தக் கதையில் நரபலி தவிர்க்கப்படவில்லையாயினும் பலியிடப்பட்ட நரனுக்கு மாடு ஈடாகக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு மோசே எழுதியுள்ள யூதர்களின் வரலாற்றில் நரபலிக்கான ஒரு தடயம் உள்ளது.

            அந்தக் காலகட்டத்தில் அந்த வட்டாரத்தில் முதல் ஆண் குழந்தையைப் பலியிடும் வழக்கம் இருந்தத்தற்கு பினிசியர் வரலாற்றில் சான்றுள்ளது.

            எனவே கிறித்துவ திருப் பொத்தகம் காட்டும் பண்டை வரலாற்றுக் காலத்தில் இருந்து பின்னர் தவிர்க்கப்பட்டவை நம் ‘இந்து’ சமயத்தில் தொடர்கின்றன என்பதுதான் உண்மை.

            கத்தோலிக்க மாதா கோயில்களில் உள்ள புனிதர்களுக்கு அரத்தப் பலி கொடுக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் கூட பல இடங்களில் இருந்தது.

            கால்டுவெலார் சார்ந்த சீர்த்திருத்தக் கிறித்துவம் பண்டைக் குக்குலக் குமுகம் நிலக்கிழமைக் குமுகம் ஆகியவை முடிந்து நிலக்கிழமைக் குமுகத்தை உடைத்து அரசர்களின் அதிகாரத்தையே முடக்கிப் புரட்சி செய்த வாணிக மூலதனத்தின் ஆட்சியில் உருவான புதிய குமுக நிலைகளுக்கு ஏற்ப உருவானது என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் புதிய ஊழியில் பிறப்பால் அல்லது தொழிலால் உயர்வு தாழ்வு காணும் குமுகக் கண்ணோட்டம் அங்கு மாறிவிட்டது.

            ஆனால் நம் நாட்டில் அம்மணமாகத் திரிந்த, தம் மயிரைத் தாமே பிடுங்கிக் கொண்ட மனம் பேதலித்த மூடர்கள், வேளாண்மைக்கும் போக்குவரத்துக்கும் பாலுணவுக்கும் தேவைப்பட்ட கால்நடைகளை வேள்விகள் என்ற பெயரில் நெருப்புக்கு இரையாக்கிய கொடுமைக்கு எதிராக கால்நடைகளைப் பாதுகாப்பது என்ற எல்லையை மீறி முகத்திரை போட்டு காற்றில் உலவும் உயிரிகளையும் மயிர்ப்பீலிகளைக் கொண்டு நிலத்தில் நடமாடும் சிற்றுயிரிகளைதயும் அகற்றுவதென்றும் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளைக் காக்கவென்று இருட்டும் முன்பே உணவை முடித்துக்கொண்டு இருட்டு வாழ்க்கை என்றும் செய்த கோமாளித்தனத்தால் விளைந்த புலாலுண்ணாமை என்ற இயற்கைக்குப் பொருந்தாத, குறிப்பாக, ஏழை மக்களுக்குப் பொருந்தாத கோட்பாட்டால் அம் மக்களை இழிவுபடுத்தி அடக்கி ஒடுக்கி வைக்கவும் பயன்படுத்திவிட்டதால் நம் மக்கள் இன்றும் மனத்தளவில் தங்களைத் தாழ்ந்தவராகக் கொண்டுவிட்டனர் என்பது நமக்குப் பாடமாக இருக்க வேண்டும்.

            இனி, பேயோட்டுவதைப் பற்றிக் குறிப்பிடுகையில், நாட்டு மருந்துவர்கள் பேய் பிடித்தலுக்குக் கோழி அறுத்துப் பூசை செய்யச் சொல்லுவர் என்று(பக்.14) கால்டுவெலார் கூறுகிறார். அரைகுறையாக அவர் இந்த நிகழ்முறைகளைப் புரிந்துகொண்டதன் விளைவாகும் இது. இனம் காணா நோய்கள் (பேய்பிடித்து ஆடுவதல்ல) குறித்து பொதுவாக நாட்டுப்புற மக்கள் கூறுவது என்னவென்றால் “மருத்துவனிடம் சென்றால், அவன் நாடியைப் பார்த்துவிட்டு நோய்நாடி பேசுகிறது என்பான், மந்திரவாதியிடம் சென்றால் அவனும் கையைப் பிடித்துப் பார்த்து பேய் இருக்கிறது என்பான்” என்பதாகும். மருத்துவனையும் மந்திரவாதியையும் மக்கள் வேறு வேறாகவே பார்த்தனர் என்பதுதான் உண்மையாகும். மருத்துவரிடம் குணமாகாத நோய்களுக்கு மந்திவாதியை நாடினார்கள் என்பதுதான் நடப்பு. மந்திரவாதியின் மருத்துவம் முரட்டுத்தனமான உளவியல் உத்தி என்பதை மனதில் கொண்டு மேம்பட்ட உளவியல் உத்திகளை வகுத்து வேண்டிய எண்ணிக்கையில் உளவியல் மருத்துவர்களை உருவாக்குவதுதான் இந்தச் சிக்கலைத் தீர்க்க வழி. பண்டை வாழ்வியல் முறைகளிலிருந்து மாறிக்கொண்டிருக்கும் இந்த இடைமாற்ற[3]க் காலத்தில் உளவியல் சார்ந்த நோய்களுக்கு வாய்ப்பு மிகுதி.

            தெற்கு வட்டங்களில் இது நிலைமை என்றால் திருநெல்வேலியின் வடக்கில், நோய் வந்தால் பொறுக்கு மருந்து எனப்படும் நாட்டு மருத்துவம் எனும் மக்கள் மருத்துவத்தில்(Folk medicine)[4] நோய் அடங்கவில்லை என்றால் ஏதாவது ஒரு சாமிக்கு நேர்ச்சைக்கு என்று ‘முடிந்து’ கொள்வார்கள். நோய் குணமானால் சரி இல்லையெனில் நோயாளியின் தலைவிதிதான். தொடக்கநிலை உடல்நல நிலையங்கள்(ஆரம்ப சுகாதார நிலையங்கள்) என்ற அமைப்பை உருவாக்கி, ஊருக்கு ஊர் செவிலியர்களை அமர்த்தி மக்களை வலிந்து மருத்துவமனைகளுக்கு இட்டுச் சென்றது வரை இதுதான் நிலை.

            மருத்துவர் அரசனையும் மேற்குடியினரையும் பார்ப்பதும் தொடுவதும் தீட்டு என்ற நிலையில் ஒடுக்கி வைத்திருந்த நமது குமுகத்தில் மக்களுக்கு மருத்துவம் வளர்வதென்ன, நிலைப்பதே எங்கே இயலும்? ஆனால் குமரி மாவட்டத்தில் அந் நாளில் மருத்துவர்களும் பொது மக்களும் ஒரே சாதியினராக இருந்ததால் மேலை மருத்துவத்துக்குப் போட்டியாகும் அளவுக்குப் பல நோய்களுக்கு நாட்டு மருத்துவம் நடப்பிலிருந்தது.

            இன்று கல்வியும் மருத்துவ வசதிகளும் பெருகிய நிலையில் கூட, படித்த கூட்டத்தினரே சோதிடர்களைக் கேட்டுப் பெயர்களை மாற்றியும் ‘வாத்து நூல்’ வல்லாரை அணுகி வீடுகளை இடித்து மாற்றிக் கட்டியும் தடுமாறி நிற்கிறார்கள்.

            அறிவியலில் வளர்ந்துவிட்டதாகக் கூறப்படும் மேலை நாடுகளில், நம் நாட்டு ‘ஆதனிய’ ஆசான்கள் ‘ஓகப் பயிற்சி தொழில்’ செய்து கோடி கோடிகளாகக் குவிக்கின்றனர்.

            ‘பேய் பிடிப்பதில்’ பெரும்பாலானவை இல்லாததை இருப்பதாகக் காணும் மயக்கமும் (Hallucination) ஒன்றை மற்றொன்றாகக் காணும் திரிபும் (Illusion) பெருமளவில் வினைப்படுகின்றன. பெண்களைப் பொறுத்த அளவில் நம் குமுகக் கட்டமைப்பில் பாலியல் உறவில் பெண்களைப் பிணித்துள்ள கொடுமையான விலங்குகளை மீறித் தம் அழுத்தங்களைத் தணித்துக்கொள்ள மனம் வகுத்துக் கொண்ட ஒரு வெளிப்போக்கியாக இது பெரும்பாலும் செயல்படுகிறது.

            இன்று, பெருமளவில் முன்னேறிவிட்டதாகப் பெருமையடித்துக் கொள்ளும் மருத்துவ உலகில் மருத்துவர்களே புரிந்துகொள்ள முடியாத அளவில் உளவியல் அழுத்தங்கள் எத்தனையோ புதிரான நோய்களை உருவாக்குகின்றன. நெருக்கடியான நிலைமைகளில் நோயாளியின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் நோய் குணமாகி நோயாளி உயிர்பிழைக்க வேண்டும் என்று நோயாளியைச் சுற்றி நின்று கடவுளை வேண்டிக் கொள்வது நோயாளியின் உள்ளத்தை வலுவாக்கி நோயை எதிர்க்கும் வலிமையை வழங்கும் என்று கிறித்துவ உலகம் கூறத் தொடங்கியுள்ளது[5]. இந்தச் சூழலில் தமிழகத்தின் வரலாற்றின் இருண்ட காலமாகக் கருதத்தக்க ஒரு கால கட்டத்தில் நிலவிய மருத்துவ - உளவியல் சிக்கல்களை கால்டுவெலார் அன்றைய பண்பாட்டு நிலையோடு ஒப்பிட்டுப் பேசுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

            பேய் வழிபாடு திருநெல்வேலியில் சாணார்களிடையில்தான் உள்ளது என்ற கருத்தை முன்வைக்கும் கால்டுவெலார் (பக்.17) மதுரைக்குத் தெற்கில் நாடார்கள் வாழும் விருதுநகரிலிருந்தும் (விருதுப்பட்டி) திருவனந்தபுரத்துக்குத் தெற்கில் சாணார்களின் குடியிருப்புகள் தொடங்கும் இடத்திலிருந்தும்தான் பேய் வழிபாடு தொடங்குகிறது என்பதைச் சான்றாகக் காட்டுகிறார். பேய் என்று அவர் கூறுவது வாதையன் என்றால் அவர் கூற்று சரிதான். பேய் வழிபாடு வடக்கு நோக்கிச் செல்லும்போது சாணார்களிடம்தான் காணப்படுகிறது என்பது இவர்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்ததற்கான ஒரு சான்றே அன்றி வேறில்லை. “இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் எண்ணற்ற பேய்களும் அவற்றின் தொல்லைகளும் பற்றிய கதைகள் உள்ளன. ஆனால் வழிபாடு என்பதன் சரியான பொருளில் அவற்றின் முழுமையான வழிபாட்டை சாணார்கள் அல்லது பிற எழுத்தறிவற்ற முந்தியல் குக்குலங்கள் காணப்படும் மாவட்டங்களுக்கு அப்பால் காணவே முடிவதில்லை” என்று கூறுகிறார். ‘முந்தியல்’ என்பது உண்மைதான். அதாவது வரலாற்றின் ஒரு கட்டத்தில் மக்களால் வழிபடப்பட்ட தெய்வங்களை பெருந்தெய்வங்கள் எனப்படுபவை அழித்துவிட்டதாகத் தொன்மங்கள் எழுதிவிட்டார்கள். இத் தொன்மங்கள் உருவான சூழலிலிருந்து விலகியிருந்த மக்கள் குழுவினர் அத் தொன்மத்தை ஏற்றுக்கொண்ட மக்களின் ஆளுகைக்கு உட்பட்ட போது தங்கள் பண்டைத் தெய்வங்களை வழிபடுவதற்கு வகுத்துக் கொண்ட வழி பற்றி முப்புராதி அம்மன், காலசாமி போன்ற கதைகள் மூலம் மேலே கூறியுள்ளோம். இது கால்டுவெலாருக்கு மட்டுமல்ல, இன்றைய ‘ஆய்வாளர்களு’க்குக் கூட எட்டாத உண்மையாகும். தொன்மங்களில் இத் தெய்வங்களை அழித்து மீட்டும் அல்லது அடக்கியும் தன் பூதகணங்களில் சேர்த்துக்கொண்டான் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றையே சிறு தெய்வங்கள் என்ற வகைப்பாட்டில் வைத்துள்ளனர்.

            இத் தெய்வங்களில் சுடலைமாடன் என்ற தெய்வம் குறிப்பிடத்தக்கது. சிவனுக்கு முந்தியவளான பைரவி என்பவளாகிய பாரதி ஆடிய பாரதி அரங்கம் என்று சிவன் ஆடிய சுடலையை சிலப்பதிகாரம், கடலாடு காதை வரி 39 குறிப்பிடுகிறது. இன்றும் சுடுகாட்டில் சென்று பிணம் தின்னும் சாமி கொண்டாடியையும் அவனோடு ஆடும் பெண் உடை அணிந்த கணியார் எனும் ஆட்டக்காரரையும் கொண்டது இத் தெய்வம். இவ்வாறு, பைரவி, சிவன், தக்கன் என்று இறுதியில் அஞ்சல் ஓட்டக்காரன் வரையுள்ள படிவுகள் இத் தெய்வத்தில் உள்ளன.

            திருநெல்வேலியின் தென் கிழக்குப் பகுதியிலும் திருவிதாங்கூரின் தென்கோடியிலும் வாழ்ந்த மக்கள் வடக்கிலிருந்து கிழக்குக் கடற்கரை வழியாகவும் வந்தவர்கள் என்று நாம் ஓரிடத்தில் கூறியதற்கும் தெற்கே இருந்து மேற்கிலும் வடக்கிலும் பரவினார்கள் என்பதற்கும் முரண்பாடு காண முயலக் கூடும். இதில் முரண்பாடு எதுவும் இல்லை. கடல் இடையில் புகுந்து சேரன் தீவைப் பிரித்த பின்னர் அங்கு வாழ்ந்த மக்கள் வடக்கே சிதறிச் சென்றதாகக் கூறினோம். அவர்கள் துடைத்தெறிந்தாற்போல் அகன்று விடவில்லை. ஊருண்ணி போன்று நீர் வளம் இருந்த இடங்களில் சிதறினாற் போல் வாழவே செய்தனர். பிற்கால அரசியல் சூறாவளிகளில் அடித்து வந்தவர்களும் பெருங்கூட்டங்களாக வராமல் குடும்பம் குடும்பமாகவே வந்தனர். ஏற்கனவே இருந்த மக்களின் மண்ணுக்கேற்ற வாழ்நிலையை புதிதாக வந்தவர்களும் மேற்கொண்டார்கள். பின்னர் நாம் நூலில் குறிப்பிட்டிருப்பது போல் தங்கள் தேவைகளுக்காக வெளியேறிய போது தங்கள் வழிபடு தெய்வங்களையும் உடன்கொண்டு போனார்கள் என்பதுதான் இதற்கான விளக்கம். வேறு சாதிகளாக உள்ளே நுழைந்தவர்கள் முற்றிலும் வேறுபட்ட இன்னொரு சாதியாக உருமாறி வெளியேறும் இந்த நிகழ்முறை இடப்பெயர்ச்சியால் சாதிகளில் ஏற்படும் இயங்குநிலையின் ஒரு நேர்வாக விளங்குகிறது.

            பக்.17 - 18இல் நாம் மேலே குறித்துள்ள சதுரக் கூம்பு வடிவிலான தெய்வப் பீடங்களைக் குறிப்பிடுகிறார். அவற்றுக்குக் கோயில் என்ற கட்டடம் கிடையாது என்கிறார். இது அவரது அறியாமையைகாட்டுகிறது என்று கொள்ள வேண்டும். மூன்று புறங்களிலும் சுவரோடும் உள்ளே 18 அல்லது 27 வரை எண்ணிக்கையிலான கற்சிலைகளையும் கொண்ட கோயில்களாக இன்று காணப்படுபவை இவை. இவை அந்த கோயிலின் ஆட்சி எல்லைக்குள் வாழும் பல்வேறு மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்கள் வழிபடும் தெய்வங்களாகும். சாத்தன் கோயில்கள் கூட இவ் வடிவத்தில், ஆனால் மிகச் சிறியதாக உள்ளன. இந்தக் கோயில் வடிவத்துக்குக் காவு என்ற பெயர் வழங்குகிறது. மெக்காவில் உள்ள காபா எனும் வழிபாட்டிடம் கூட இந்த வடிவத்தைக் கொண்டதுதான். தமிழில் காவு என்பதுதான் அரபியில் காபா என்று திரிபடைந்துள்ளது என்று காலஞ்சென்ற பொறியாளர் அய்யூர் இ.அப்பாசு மந்திரி அவர்கள் கூறினார். அதாவது இந்தக் கோயில் வடிவம் மிகவும் தொன்மையானது என்பதுதான் உண்மை. அதாவது இது பார்ப்பனியத்துக்கு முந்தியதா அல்லது பார்ப்பனியத்தை அகற்றியதா என்பது ஆய்வுக்குரிய பொருளாகலாம்.

            நாம் மேலே ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்த சாமியாட்டம் என்பதைப் பேயாட்டம் (Devil dance) என்று குறிப்பிடும் கால்டுவெலார், வில்லுப்பாட்டு [அல்லது கணியான் ஆட்டம் (கணியாட்டம்[6]) இக் கணியாட்டத்தைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை)] நையாண்டி மேளம் ஆகியவற்றின் பெரும் இரைச்சலைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இதனைப் பற்றிச் சிறிது விரிவாக இங்கு பேச வேண்டும்.

            ‘இந்து’க் கோயில்களில், அவை மாபெரும் ஆகமக் கோயில்களாயினும் சிறு பீடங்களாயிருந்தாலும் பூசை வேளையில் பெரிய காண்டா மணி ஆயினும் கொட்டு மேளம் முதலியவற்றுடன் இணைந்து காதுதாங்கப் பேரிரைச்சலை உண்டாக்குகின்றன. வழிபட வந்திருக்கும் அனைவரும் இப் பேரிரைச்சலுக்குள் மூழ்கி ஒவ்வொருவரும் தனித்தனித் தீவாக மாறிவிடுகின்றனர்.

            கிறித்துவக் கோயில்களில் பூசகர் சொல்ல, அதை வழிபட வந்த மக்கள் திரும்பச் சொல்ல அல்லது பூசகரோடு சேர்ந்து சொல்ல அல்லது இசைப் பாடல்களைக் கருவியின் துணையுடன் இசைப்பவர்களுடன் சேர்ந்து மக்களும் பாட என்று அனைவரும் ஒருவராய் இணைந்து சேயல்படுகின்றனர். இவ்வாறு அவை கோயில்கள் சிறிது நேரமாயினும் ஒன்றாய்ச் செயல்படும் பயிற்சியை மக்களுக்கு அளிக்கும் இடமாகச் செயற்படுகின்றன. இந்த இணைந்த செயற்பாட்டைக் கோயிலுக்கு வெளியிலும் விரிவாக்கும் நடைமுறைகளும் அவர்களிடையில் உள்ளன.

            முகம்மதியர்களை எடுத்துக்கொண்டால் ஓசை எதுவுமின்றி அவர்களது வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில் பண்டிகை நாட்களில் பல்லாயிரவர் கூடியிருக்கும் திடல்களில் எவருடைய ஆணையோ அடையாளமோ இன்றி அனைவரும் ஒரே நேரத்தில் தலைசாய்த்துத் தொழுவதும் எழுவதும் தலையை இருபுறமும் திருப்புவதும் ஆகிய செயற்பாடுகள் வியக்க வைப்பவை. முந்தியல் குக்குல உளவியல் அவர்களிடம் காணப்படுகிறது போலும். இந்த உளவியலால் அவர்களிடையில் உள்ளது வேறு எந்தக் குழு மக்களிடையிலும் உள்ளதை விட தம் சமயத்தார் பக்கஞ் சார்ந்து சிந்திக்கும், பேசும், செயல்படும் இயல்பு.

            அதே நேரம் இந்துக் கோயில்களில் குறிப்பாக ஆகமக் கோயில்களில் காதைப் பிளக்கும் மணி, மேளங்கள் ஆகியவற்றின் இரைச்சலுக்குப் பின்னர் நடைபெறுவது திருநீறு போன்ற ‘பிரசாத’ங்களைப் பெறுவோரும் போற்றி(அர்ச்சனை) செய்பவர்களும் போட்டி போட்டுக் கொண்டு முண்டியடித்துக் கொள்ளும் ‘அருள்’ வாணிகம். இது போன்ற வாணிகத்தை எதிர்த்துத்தான் ஏசு, முகம்மது நபி போன்றவர்கள் போராடினார்கள். நம்மிடையில் அதற்கு எதிரான எந்த இயக்கமும் வேர்கொள்ளவே முடியவில்லை.

            எதிர்ப்பவனின் ஆயுதம் தன் ஆயுதங்களை விட மேம்பட்டதாக இருந்தால் அந்த ஆயுதத்தைத் தானும் கையாள மறுப்போன் வெற்றியைப் பற்றிச் சிந்திக்கக் கூடத் தகுதியற்றவன். ஆனால் நாமோ அத் திசையில் சிந்திக்காதது மட்டுமல்ல, அதன் எதிர்த்திசையில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

            நம் நாட்டுப் ‘பேய்’ வழிபாடாயினும் சரி ஆகம வழிபாடாயினும் சரி, சாமியாடிகள் தவிர கோயிலுக்கு வரும் சராசரி இறையன்பர்கள் ஆடுவது கிடையாது. ‘பேய்’ பிடித்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் ஆடக் கூடும்.

            ஆனால் இன்று சாமியாட்டம், பேயாட்டம் அன்றி ஒருவகை வெறியாட்டம் இத் தலைமுறையினர் நடுவில் தலைதூக்கியுள்ளது. பிள்ளையார் சதுர்த்தியாயினும் ‘அய்யா வைகுண்டர்’ பிறந்த நாள் ஆயினும் ஊர்வலத்தில் மேளங்களை முழக்கிக் கொண்டு தெருவில் இறங்கியோ சரக்கிகளில் நின்றுகொண்டோ கூத்தாடுவதுதான் இந்த வெறியாட்டம். கிறித்துவம், முகம்மதியம் போன்ற பிற சமயங்களைத் தம் மனக் கண் முன் நிறுத்திக்கொண்டு நிகழ்த்துவதுதான் இந்த வெறியாட்டம். இடையில் மரவுரியும் இலை தழைகளும் தலையில் இலை தழைகள் பூக்கள், பறவை இறகுகளையும் தலையிலும் இடையிலும் கழுத்திலும் கைகால்களிலும் பல்வேறு பாசி மணிகளையும் கட்டிக் கொண்டு பேயாட்டம் ஆடும் ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் சமயச் சடங்குக்கும் மேலைநாட்டு ஆடை அணிகளுடன் கூத்தாடும் இக் கூட்டத்துக்கும் அடிப்படைப் பண்பாட்டில் எந்த வேறுபாடுமில்லை.

            கோயிலில் வழிபாடும் வெளியில் சமயப் பரப்பலையும் நோக்கமாகக் கொண்ட ‘மக்கள் தொண்டு’மாக போட்டிச் சமயங்கள் செயற்படும்போது அதை எதிர்கொள்ளும் வகையில் தம் மதத்தினரிடமிருந்து திரட்டத்தக்க செல்வத்தைத் திரட்டி அதனை எதிர்ச் சமயங்களின் ‘தொற்றுக்கு’ ஆளாகத்தக்க, வலிமையற்ற, தன் சமய மக்களுக்குப் பயன் தரும் வகையில் செலவிட வேண்டுமென்ற சிந்தனை கூட எவருக்கும் இல்லை. மாறாக வீடுவீடாக ஏறி இறங்கி தண்டல் செய்து தாங்கள் குடித்துக் கூத்தடித்துச் செலவழித்தது போக எஞ்சியதை வைத்து வெறியாட்டம் போடுவதுமின்றி மக்கள் தாங்க முடியாத இரைச்சலில் ஊர் முழுவதையும் முழுக்காட்டுகின்றனர். ஏற்கனவே உள்ள பெருவழித் தடங்களை மறித்துக்கொண்டு நிற்கின்றன நம் கோயில்களைச் சார்ந்த கட்டுமானங்கள். அவற்றோடு இன்று ‘பெருந்தெய்வ’க் கோயில்களாக மாறிவரும் ‘பேய்’க் கோயில் கொடைகளின் போது குறைந்தது மூன்று நாளைக்காவது சாலைகளை மறித்தே ஆக வேண்டுமென்று வெறிபிடித்து நிற்கிறது இளைஞர் கூட்டம். இவர்களுக்கு நல்வழிகாட்ட இங்கு எந்தத் தலைமையும் இல்லை. மக்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு ஆட்சியாளர்களுக்கும் பனியாக்களுக்கும் அமெரிக்கா தலைமையிலான வல்லரசியத்துக்கும் பணியாற்றும் காவிக் கும்பலே அவர்களின் நம்பகமான தலைமையாக இன்று விளங்குகிறது.

            தங்களின் பேய்கள் ஐரோப்பியருக்கு எந்தக் கேடும் செய்யாது என்பதைச் சாணார்களே ஏற்றுக் கொண்டுள்ளனர் என்கிறார் கால்டுவெலார் (பக்.20.21). இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. வெளியூர் குளத்துக்கும் உள்ளூர் தெய்வத்துக்கும் அஞ்ச வேண்டுமென்பது இவ் வட்டாரத்திலுள்ள ஒரு சொலவடை. உள்ளூர் குளமென்றால் அங்கு எங்கெல்லாம் மடு உள்ளது, சேறு உள்ளது, பாறை உள்ளது என்பது ஒருவருக்கு அத்துபடியாக இருக்கும். எனவே அவர் அக் குளத்துக்கு அஞ்ச வேண்டியதில்லை. வெளியூர் குளத்தின் தன்மைகள் தெரியாததால் அதில் இறங்க அஞ்சுவது, அதாவது இறங்காமலிருப்பதுதான் பாதுகாப்பு. அது போல் உள்ளூர்த் தெய்வத்தின் இயல்புகள், கோயில் நடைமுறைகள் தெரிந்த ஒருவன் அவற்றுக்கு ஏற்ப நடந்துகொள்வான். மாற்றமாக நடந்தால் அதனால் ஏற்படுமென்று அவன் நம்பும் தீய விளைவுகள் உளவியலாக அவனை வந்தடைய வாய்ப்புண்டு. அவற்றை அறியாத ஓர் அயலூரான் அவ்வாறு மீறி நடந்தால் என்ன விளையும் என்பதை அறியமாட்டானாகையால் அவனுக்கு எந்த உளவியல் சார்ந்த பாதிப்பும் ஏற்படாது. இதுதான் கால்டுவெலாரின் இந்தக் கூற்று மீது நம் குறிப்பு.

            பேய்களுக்கு குருதிப் பலி கொடுப்பதைப் பற்றி விளக்கும் கால்டுவெலார், மனித உயிருக்கு மாற்றாக வேறொரு உயிரைப் பேய்க்குக் காணிக்கையாக்குவதாகக் கூறுகிறார். அத் தோடு, மரபு வழியில் திருடர்களாகிய மறவர்களுக்குக் கப்பம் கட்டித் திருட்டைத் தவிர்ப்பதோடு இதை ஒப்பிடுகிறார். இவ்வாறு கப்பம் கொடுப்பதை நடுவர்கள் கூட கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றனர் என்ற வரலாற்றுச் செய்தியையும் தருகிறார். பேரழிவுக் காலங்களில் பார்ப்பனர்கள் கூட அம்மனை வழிபடுவதற்குத் தயங்காததுடன் திருட்டுத்தனமாக அல்லது கீழ்ச் சாதியினரைக் கொண்டு பேய்களுக்குப் குருதிப் பலி கொடுக்கவும் தயங்கமாட்டார்கள் என்கிறார். மனித உயிருக்கு மாற்றாக விலங்கின் உயிரைக் கொல்வது குறித்து யூத மறைநூலில் ஆபிரகாமின் கதையில் வருவதை நாம் முன் கூட்டியே குறிப்பிட்டுள்ளோம். அது போல் பார்ப்பனியம் ஊடுருவாத தொன்மை மிகு மரபுகள் இவை என்பதையும் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

            “நான் இப்போது விளக்கியுள்ளவாறான இந்தியாவில் மிக விரிவாக விளங்கும் பேய்வழிபாட்டு மரபு, பொதுவாகக் கருதப்படுவதைவிட மேம்பட்ட தொன்மையுடையதாகலாம். ஒரு சில வேறுபாடுகளுடன், அனைத்து மலைப் பகுதிகளிலும் அரைகுறை நாகரிகம் பெற்ற அல்லது இடம் பெயர்ந்து செல்கிற, இன்னும் மேல்சாதியினரால் அடிமைப்படுத்தப்பட்டு பார்ப்பனியத்துக்கு உட்படுத்தப்படாத மக்கள் குழுவினரிடையில் இது காணப்படுகிறது. இந்தியா முழுவதிலும் தாழ்ந்த வகுப்பினரிடையில், குறிப்பாக, சிவனின் பெண் வடிவங்களின் வழிபாட்டுடன் கூட்டாக இது நிலைபெற்றுள்ளது”(பக்.13).

            இனி பக்கங்கள் 25 முதல் 28 வரை பேய் வழிபாடு, பார்ப்பனியத்துக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் பார்ப்பனியம் அறிமுகம் ஆவதற்கு முந்தியது என்று 7 பத்திகளில் விளக்குகிறார்.

1.       பார்ப்பனியத் தொன்மங்களில், பேய்களைக் கடவுளுக்கு எதிராகப் போரிட்டு சில வேளைகளில் கை ஓங்கியவை கூட; அவற்றை அழிக்க அழிக்க புதியவை தோன்றின, பார்ப்பனர்கள் நடு ஆசியாவிலிருந்து வரும் முன்பே இங்கு நிலவியவை என்கிறார்.
2.       பார்ப்பனிய நூல்கள் தீவக்குறை இந்தியாவில் அவர்கள் நுழைந்தபோது பேய்களை வழிபட்டு அரத்தப் பலி கொடுத்த காட்டுவாழ் மக்கள் இருந்தனர் என்றும் பார்ப்பனிய இனத்தின் அடிமை வகுப்பினர் வரை அம்மனை வழிபடுவதற்குத் தயங்காதததுடன் அரத்தமில்லாச் சடங்குகளால் தங்கள் கடவுள்களை வழிபட்டனர் என்கிறார்.
3.       பார்ப்பனிய சமயத்தின் கடவுள் பெயர்கள், அவற்றின் வழிபாட்டுச் சொற்கள் அனைத்தும் சமற்கிருதத்திலும் தெற்கிலுள்ள சாணார்கள் வழிபடும் தெய்வங்கள் பேய்கள் என்று தமிழ் பெயரிலும் விளங்குகின்றன. சிவன் அல்லது காளி குறித்த விதிவிலக்கான நேர்வுகளில் அவை சமற்கிருதத்தில் உள்ளன. தமிழ் மக்களின் பழக்கத்திலிருக்கும் சொற்களை வைத்து தீவக்குறை இந்தியாவுக்கு நாகரிகம் வழங்கியவரான பார்ப்பனர்கள் வருவதற்கு முன் அவை தோன்றின என்பது ஓரளவு ஏற்றுக் கொள்ளதக்க வாதமாகத் தனக்குத் தோன்றுகிறது என்கிறார். அறிவியல், இலக்கியம், உளவியல் மேம்பாடு என்று மேம்பட்ட நாகரிகத்துக்கும் சமயம், அதன் கண்ணுக்குப் புலப்படாத உலகம் என்பவற்றுக்கும் உரிய அனைத்துச் சொற்களும் பார்ப்பனர்களின் மொழியிலும் முரட்டுத்தனமான ஏறக்குறைய காட்டுவிலங்காண்டி வாழ்க்கையின் இயல்பான கலைகள், இயற்கையின் வெளிப்பாடுகள் அவர்களின் தேவைகள், கடமைகள் பற்றியவை தமிழிலும் உள்ளன. பேய் வழிபாட்டின் சொற்கள் முற்றிலும் தமிழாக இருப்பதால் பேய் வழிபாடு குறித்த இந்த மூட நம்பிக்கைகள் பார்ப்பனர்கள் வருவதற்கு முன் இங்கு இருந்தவை என்கிறார்.
4.       பார்ப்பனிய வழிபாட்டிலும் அவற்றிலும் குறைந்த, அம்மன் போன்ற குருதிப் பலி வழிபாட்டிலும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்த ஒரு பூசகர் வேண்டும். ஆனால் பேய் வழிபாட்டில் ஊர்த் தலைவன் பூசாரியின் இடத்தைப் பிடித்தாலும், தானே முன்வரும் இன்னொருவர் கூட அந்த இடத்தைப் பிடிக்கலாம் என்கிறார். ஊர்த் தலைவன், பூசகன், சாமி கொண்டாடி ஆகியவர்களுக்கு இடையிலுள்ள வேறுபாடு புரியாத கூற்று இது.
5.       வேதங்கள் அல்லது ‘தூய’ தொன்மங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களிலிருந்து குருதிப் பலிகள் தோன்றியிருக்குமென்பது பொருத்தமாவது அரிது. ஒப்பிட அண்மையில் தோன்றிய சிவனியத் துறவு வழிபாடும் துர்க்கையின் குருதிப் பலி வழிபாடும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் மரபுப்படியான பார்ப்பனியத்துக்கும் மெய்யியல் பள்ளிகளின் அறிவுரைகளின் வரம்புகளுக்கும் அவை புறம்பானவை. இவற்றைக் கண்டுபிடித்தோரும் கைக்கொள்வோரும் பார்ப்பனர்களின் மேலாளுமையை நேரடியாக எதிர்த்து அவர்களின் பணியை ஒதுக்குகின்றனர். அவர்கள் பூசகத்தையும் தங்கள் மடங்களின் குருமரபுகளைத் தங்கள் சொந்தச் சாதிகளில் கொண்டோருமாவர். இந்துக்களின் எந்த விகிதத்தினர் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் குருதிப்பலி கொடுப்பவராயினும் அவர்கள் பார்ப்பனர்களின் தாக்கத்துக்கும் எடுத்துக்காட்டுக்கும் மட்டுமல்ல, கூடுதல் பண்பட்ட இந்துக்கள் மற்றும் உயர் சாதியினரில் மிகப் பெரும்பான்மைக்கு நேர் எதிரானவர்கள். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் பிற எவரையும் விட தாங்கள் உயிர்களின் வாழ்வுரிமையை மிகப் பெரிய சட்டமாகக் கருதும் தூய்மையானவர்கள் என்று கருதுபவர்கள், அதிலும் புத்தத்தின் தாக்கம் உணரப்பட்ட பின் பார்ப்பனக் கொள்கை நிலைத்துள்ளது. எனவே உயர் சாதிகளைச் சேர்ந்த இந்துக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு பார்ப்பனியத் தெய்வத்துக்கும் - ஒன்று மகிழ்வூட்டுதல் இன்னொன்று அச்சமூட்டும் தோற்றத்துடன் கொடிய, குருதியுண்ணுதல் ஆகிய இரட்டைத் தன்மை இருப்பதாகத் தோன்றும். அந்தத் தெய்வங்கள் எவற்றுக்கேனும், அதன் இருண்ட தன்மைக்கு குருதிப் பலி கொடுக்கும் செயலைப் பின்பற்றும் அளவுக்கு ஒரு இணக்கத்துக்காக அல்லது இன்னும் சரியாக, தங்கள் முன்னோர்களிடமிருந்து அல்லது அண்டையிலுள்ளோரிடமிருந்து குறிப்பிட்ட அளவு அச்சமும் மயக்கமும் பெற்று மூலக்குடிகளுக்குரிய பேய்வழிபாட்டுக்கு மதிப்பளிக்கிறார்கள். இதே போன்று பர்மாவிலும் இலங்கையிலும் உள்ள புத்தர்கள் புத்தத்தின் பிறப்பியல்புக்கு வேறெதையும் விட எதிரான உள்நாட்டுப் பேய்களின் வழிபாட்டைப் புத்தத்துடன் இணைத்துள்ளனர்.
6.       பேய் வழிபாட்டின் பார்ப்பனியமல்லாத தன்மைக்கு மீச் சிறந்த மெய்ப்புகளில் ஒன்று அச் சிறுதெய்வங்களின் தோற்ற வரலாறாகும். சாணார்களிலும் சிறு தெய்வ உருவாக்கம் இன்றும் தொடர்கிறது, ஒவ்வொரு நேர்விலும் சிறு தெய்வத்தின் குணநலன்கள் அதன் மனித வடிவுக்கு உரியவற்றிலிருந்தே பெறப்படுகின்றன. முகம்மதியர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் ‘மதுரை முதல் கொல்லம் வரை’ கொள்ளைகளுக்காகவும் அடாவடித் தனங்களுக்காகவும் கொண்டாடப்பட்ட அடிமைக் குடும்பத்தைச் சேர்ந்த மறவராகிய பலவேசம் இப்போது மிகவும் அஞ்சப்படும் பேயாகும். பார்ப்பனியத்துடன் கண்டிப்பாக எந்தத் தொடர்புமற்ற முகம்மதியர்களும் சிறு தெய்வங்களாகியுள்ளனர். கி.பி. 1809இல் திருவிதாங்கூரில் கடல் போரில் படுகாயமுற்று அங்கிருந்து 25 மைல் தொலைவில் தேரியில் புதைக்கப்பட்ட ஐரோப்பியப் படைத் தலைவன் ஒருவனுக்கு சில ஆண்டுகள் சென்றபின் அண்டையிலுள்ள சாணார்களின் வழிபாடு தொடங்கியது. வழிபாட்டில் அவனது ஆவிக்குச் சாராயமும் சுருட்டும் படைக்கப்படுகிறது.
7.       “சாணார்கள் செயல்படுத்தி வரும் சிறுதெய்வ வழிபாட்டுமுறை தொடக்கத்தில் பார்ப்பனர்கள் கற்பித்த அல்லது அவர்களிடமிருந்து இரவல் பெற்ற ஒன்று என்ற நிலைமைக்கு எதிராக, பார்ப்பனியம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதனைச் சாணார்கள் தங்களுக்குப் போட்டியான ஒரு முறை என்று கருதினார்கள் என நினைப்பதற்கு ஏற்புடைய சான்று இருப்பதாகக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, சாணார்களின் மிகப் பெரிய தேசிய விழா, ஆண்டு முழுவதிலும் விடுமுறையாக வைத்திருக்கும் சாணார்களுக்குக் களிப்பூட்டும் ஒரு சிறப்பு நாளாகக் கருதும் நாள் கதிரவ மாதமாகிய ஆடி மாத முதல்நாளாகும். இந்து வாணியலின் படி இது கதிரவனின் தென் செலவின் முதல் நாளாகும், ஆனால் சாணார்களுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. அவர்களை விட வானியலைப் பற்றி முற்றிலும் அறியாத ஒரு மக்கள் இருக்க முடியாது. அவர்களைப் பொறுத்து ஆடி முதல் நாள், பார்ப்பனர்களின் வீரக் கடவுளான இராமனின் மனைவியாகிய சீதையை இலங்கையின் அரக்க அரசனான இராவணன் சிறை எடுத்த நாள் என்று பெருமையோடு கொண்டாடுகிறார்கள். இராவணனின் அமைச்சன் மகோதரன் ஒரு சாணார் என்று நம்பப்படுகிறது; தங்கள் சாதியைச் சேர்ந்த ஒருவரால் ஒரு காலத்தில் தாங்கள் பெற்றிருந்த வரலாற்றுப் பெருமையை இராமனின் துயரத்திலும் இராவணனின் மகிழ்ச்சியிலும் திளைத்து மகிழ்கிறார்கள். இச் சூழல் சாணார்களின் சிங்களர் சார்ந்த தோற்றத்தையும் முற்காலத்தில் அவர்களிடையில் பார்ப்பன எதிர்ப்பின் வீரார்ப்பு இருந்ததையும் காட்டவில்லையா? பார்ப்பனியத்தின் மீதான எதிர்த்தாக்குதலை நடத்துவதிலும் சாணார்கள் வெற்றி பெற்றுள்ளனர். என் அண்டையிலுள்ள ஓர் ஊரில் இராமனே ஒரு சிறு தெய்வமாக்கப்பட்டுள்ளான். இந்துக்களின் மாபெரும் பெருமைக்குரிய இராமச்சந்திரன், அரக்கர்கள், பூதங்கள் ஆகியவற்றை வென்றவன், தீவக்குறைக்கு நாகரிகம் தந்தவன். அவனே குருதிப் பலிகள், பேயாட்டங்கள் மற்றும் வெறியாட்டங்களுடன் வழிபடப்படுவதை நினைத்துப் பாருங்கள்! இங்கு பார்ப்பனியம் பெயரை மட்டும் வழங்கியுள்ளது; வடிவமும் இந்த முறையின் தோற்றமும் பார்ப்பனியத்துக்கு எதிரானது; சாணார் முறையின் தோற்றப்பாங்கான தன்னியல்பும் மரபு சார்ந்த முனைப்பும் வலிமையும் இங்கே பொருத்தமான எடுத்துக்காட்டாகின்றன”.

கால்டுவெலார் மேலே 1 முதல் 6 எண்ணிட்ட பத்திகளில் தந்திருப்பவற்றின் அடிப்படை அணுகல், இந்தியாவின் குறிப்பாக, தீவக்குறை இந்தியாவின் மூலக்குடி மக்கள் என்றுமே காட்டுவிலங்காண்டி நிலையைத் தாண்டாதவர்கள். நடு ஆசியாவிலிருந்து வந்தவர்களாகிய பார்ப்பனர்கள்தாம் அவர்களுக்கு நாகரிகத்தை வழங்கினார்கள் என்பதைத் திரும்பத் திரும்ப கூறுகிறார். அவரது தரவுகளை வைத்துப் பேசுவோம். அன்றாட வயிற்றுப்பாட்டுக்குப் படாத பாடுபடும், இன்றைய சோற்றுக்கு என்ன செய்வது என்று தவிக்கும் மக்கள் கூட்டம் என்னவென்று புரியாத நோய்க்கு அல்லது வானம் வரண்டுபோனதற்கு அல்லது எதிர்பாராமல் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் தோன்றி அழிவைத் தரும் கொள்ளை நோய்களுக்கு மாற்று என்னவென்று தெரியாத போது தாம் அறிந்த வகையில் சாமியாடி மூலம் தங்களோடு பேசும் அவர் குறிப்பிடும், பேய், பூதங்கள் எனப்படும் தெய்வங்களை நடுவார்களா அல்லது தங்களை உள் நுழையக் கூடாது என்று பார்ப்பனர் - அரசர் - மேல் சாதியினர் கூட்டணி தடுத்துவைத்திருக்கும் ‘உயிர்ப்பலி இல்லா’(பலி பீடங்கள் இருக்கின்றன என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்க) பார்ப்பனிய(ஆகமக்) கோயில்களையோ அங்குள்ள சாமிகளையோ நாடுவார்களா? எந்த ஒரு கடவுளையோ சிலைகளையோ வழிபடாமல் வேதத்தையே மூலத் தெய்வமாகக் கொண்டு நெருப்பின் முன் அமர்ந்து ஆகுதிகளை(மாடு, குதிரை, நெய் போன்றவற்றை)ப் பெய்து வேத மந்திரங்களை ஓதும் முழுமையான வேதியக் கோயில் எதுவும் ‘தீவக்குறை இந்தியாவில்’ இல்லை என்பதையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும்.

            வாய்க்கும் கைக்குமாக வாழ்ந்த நாகரிகக் கட்டத்தில் இருந்த வழிபாட்டு முறை விளைப்பு ஆற்றல்கள் வளர்ந்து செல்வங்கள் ஒருசிலரிடம் குவியவும் பிறரிடம் செல்வங்கள் திரளுவதையே அவ் வொருசிலர் தடுக்கவும் ஆன வளர்ச்சி நிலைகளில் அடிப்பட்ட மக்கள் பழைய வழிபாட்டு நிலையிலேயே தங்கிப் போக, உழைக்காமல் அந்த அடிப்பட்ட மக்களைச் சுரண்டி வாழ்ந்த மேல் மட்டத்தினரிடையில் உருவான போட்டிகளிலிருந்து பல்வேறு மெய்யியல் பள்ளிகளும் புதிய வழிபாட்டு முறைகளும் கொல்லாமை என்ற போலி கோட்பாடும் உருவாயின என்பது அன்று மட்டுமின்றி இன்று வரை வரலாற்றாய்வாளர்கள் கருத்தில் தட்டுப்படாத உண்மைகள். ஆனால் உவத்தல் காய்தல் இன்றிப் பார்ப்பவர்களுக்கு இதுதான் உண்மை என்பது அவர் அந்த 6 பத்திகளிலும் தந்திருக்கும் செய்திகளிலிருந்தும் புரிந்து கொள்ள முடியும்.

            மொழியைப் பொறுத்தவரையில் கூட தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் வேதமொழிக்கும் உள்ள உறவுகளைக் கூட தெள்ளத் தெளிவாகத் தடம் பிடிக்கத் தக்க உண்மைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பார்ப்பனர் எதிர்ப்பு என்ற நிலையை விட்டு உழைக்கும் அடித்தள மக்கள், சுரண்டும் ஒட்டுண்ணி வகுப்பினர் என்ற கண்ணோட்டத்துடன், இவர்கள் கூறும் பார்ப்பனர் அல்லது ஆரியர் மொழிகளை இந்த அடி மட்டத்து மக்கள் படிக்கக் கூடாது என்று ஏன் தடைவிதித்தனர்? 19ஆம் நூற்றாண்டு இறுதிவரை தமிழகத்து ஆள்வினைகளில் பார்ப்பனர்களுக்குச் சமமான இடத்தைப் பிடித்த சிவனிய வேளாளர்கள் கூட பார்ப்பனர் - அரசர் கூட்டணியுடன் எப்படிச் சேர்ந்திருந்தனர் என்ற கேள்விக்கு விடை கூற வேண்டும். இந்த மக்களை ஒடுக்குவதற்கு அவர்களுக்குப் புரியாத ஒரு மொழி வேண்டும் என்பது தவிர வேறென்ன இருக்க முடியும்? அதற்காக மொழிகளில் காலத்துக்குக் காலம் நம் ஆளும் கூட்டத்தினர் விளையாடி வந்துள்ளனர் என்பதே உண்மை.
...தொடரும்......

1வீழ்நீரை “வீணி” என்பது போல் பாழ்நீரைப் “பாணி” என்று குறிப்பிடுகிறார்கள். இச் சொல் சமற்கிருதத்திலும் அதிலிருந்து   இந்தியிலும் தண்ணீரைக் குறிக்கப் பயன்படுகிறது. எ-டு, தாரை வார்த்தல் – பாணிக் கிரகணம்.
           புண்ணில் உருவாகி வழியும் சீழை “சலம்” என்பது குமரி வழக்கு. சிலம்பு சலம் என்பதை இழிவான பொருள் தரும் சொல்லாகவே கையாண்டுள்ளார்.
                                சலம்புணர் சொள்கைச் சலதியொ டாடிக்
                                குலந்திரு  வான்பொருட் குன்றம் தொலைத்தகனாத்திறமுகத்த காதை வரி 69-70
என்பதற்கு “வஞ்சம் பொருந்திய கொள்கையையுடைய பொய்த்தியோடும் கூடி ஒழுகினமையால், நம் குலத்திலுள்ளோர் தேடித் தந்த மலைபோலும் பெரிய பொருட்குவையெல்லாம் கெட்டதனாலாய” என்று வேங்கடசாமியார் உரை கூறியிருக்கிறார். இவ்வாறு மூலச் சொல்லின் உண்மையான பொருளைப் பற்றிக் கவலைப்படாமல் தமக்கு வேண்டிய தமிழ்ச் சொற்களைத் திருடி உருவாக்கப்பட்டதே சமற்கிருதம் என்பதற்கான பல சான்றுகளில் இவையும் அடங்கும். சலம் என்பதற்கு நீர் என்றும் சலதி என்பதற்கு கப்பல் என்றும் பொருள்கள் இருப்பதை வைத்து கோவலன் இரட்டுற(சிலேடை) மொழிந்தான், அதாவது கடல் நீரில் மிதக்கும் கப்பல் வாணிகம் செய்து அனைத்தையும் இழந்ததாகவும் பொருள்படக் கூறியதாக புலவர் த.ச.தமிழனார் கூறுவார்.  
[2]   முன்பு நாடார் வீட்டுத் திருமணங்களில் புரோகிதம் எனப்படும் மணவினையை நடத்திவைப்பவர் நாவிதரே. மணமகனையும் மணமகளையும் மாப்பிள்ளை நாடான், நாடாச்சி என்று அழைத்து அவர்களுக்கு செய்முறை ஆணைகளைக் கூறி மணவினைகளை முடித்துவைப்பார். அது போன்று பூப்பெய்தல், இழவுச் சடங்குகளிலும் அவர் செயற்பட்டார். மகப்பேற்றுக்கு நாவிதர் பெண்களே மருத்துவச்சிகளாகச் செயற்பட்டனர். வண்ணார்களின்  பங்கும் சரிக்குச் சரி உண்டு.
 [3] Transition period
[4]    சித்த மருத்துவம் எனப்படும் தமிழ் மருத்துவம் வேறு, நாட்டு மருத்துவம் வேறு. நாட்டு மருத்துவம் பொறுக்கு மருத்துவம் என்ற அடிப்படையில் உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட அனைத்து மக்களிடையிலும் உள்ளது. தமிழ் மருத்துவம் தனிப்பட்ட கோட்பாடுகள், நோயறி முறைகள், மருந்து மூலப்பொருள்கள், அவற்றுக்குப் பொருந்திய செய்முறைகள், மருந்தைப் பயன்படுத்தும் உத்திகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான ஒரு கட்டமைப்பாகும். அதைத் தொலைத்துவிட்ட நம் நாட்டு மருத்துவர்கள் அதனிடத்தில் பொறுக்கு மருத்தவத்தைக் காட்டி தமிழ் மருத்துவத்தைப் பொறுக்கி மருத்துவமாக்கிவிட்டு நிற்கிறார்கள்.
[5]   உயிர்களின் திரிவாக்கத்தில் நரம்பு மண்டலம் உருவாவதற்கு முன் அவற்றின் தசையே இயற்கையுடன் நேரடித் தொடர்பு கொண்டு அவற்றைத் தற்காத்துக்கொண்டன. நரம்பு மண்டலமும் அதன் முற்றிய நிலையாக மூளையும் வளர்ச்சி பெறப்பெற தசையின் இந்தப் பயன்பாடு குறைந்து ஐம்புலன்களின் பயன்பாடும் பகுத்தறிவும் சிறுகச் சிறுக வளர்ந்து மனிதனிடத்தில் உச்சத்தை அடைந்தது. இதனால் தசையின் செயற்பாடு வெளித்தெரியாமல் போனது. ஆனால் மூளைச் சாவு அடைந்தவர்களில் விதிவிலக்காகச் சிலர் உயிர்த்தெழுதல் தசையில் நன்னிலையல் இருக்கும் உயிராற்றல் மூளையைச் செயல்பட வைப்பதன் விளைவாகும். நோயாளியைச் சுற்றியிருப்போர் பேச்சுக்கொடுத்தும் உடலைத் தடவியும் ஐம்புலன்களில் சிலவற்றைத் தூண்டிவிட்டு மூளையின் செயற்பாட்டை மீட்பதுதான் இந்த நடைமுறையின் மறையம். உண்மையில் ஆதன்(ஆன்மா) என்று நம் படித்தவர்களில் பெரும்பாலோர் நம்புவது நரம்பு மண்டலத்துக்கு வெளியே உள்ள தசை மண்டலத்தையே. 
[6] இப்போது மகுடக் கச்சேரி என்ற “திருந்திய”  பெயரால் வழங்கப்படுகிறது.

0 மறுமொழிகள்: