பொருளியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொருளியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22.7.09

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு - சில கேள்விகள்

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க இந்திய அரசு முனைந்து நிற்கிறது. அதற்குத் துணைபுரியப் பல்வேறு "தன்னார்வ"த் "தொண்டு" நிறுவனங்கள் களத்தில் துடிப்புடன் செயற்பட்டு வருகின்றன. அத்துடன் அண்மையில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பொன்று குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளியர் அத்தொழிலாளர் கல்வி அறிவு பெறுவதற்காகவும் மறுவாழ்வுக்காகவும் ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளருக்கும் 20000 ⁄-ரூபாய்கள் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. எல்லாம் சேர்ந்து விரைவில் குழந்தைத் தொழிலாளர்களை "ஒழித்து" விடுவார்கள் போல் தோன்றுகிறது. இந்நேரத்தில் நமக்கு எழும் சில அடிப்படைக் கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.

1. குழந்தைகள் ஏன் உடலுழைப்புக்கு அனுப்பப்படுகிறார்கள்?

இன்றைய நிலையில் பல்வேறு காரணங்களால் நம் வேளாண்மை வீழ்ந்துவிட்டது. நிலம் தரிசாகப் போடப்பட்டுப் பாலைவனமாக மாறி வருகிறது. அதன் விளைவுதான் நீண்ட வறட்சியும் திடீர் வெள்ளங்களும். அதனால் பெரியவர்களின் வேலைவாய்ப்புகள் அருகிவிட்டன. இருப்பவை எல்லாம் குழந்தைகளைப் பயன்படுத்தும் வேலைவாய்ப்புகள் தாம். எனவே குடும்பத்தை நடத்தப் பெற்றோர்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்.

வேலையில்லா நிலையில் பெற்றோர்கள், குறிப்பாக ஆடவர்கள் குடிப்பதற்கும் பரிசுச் சீட்டு வாங்குவதற்கும் கூட இக்குழந்தைகளின் உழைப்பையே சுரண்டுகின்றனர். பெரியவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் நிலையிலும் கூட சாராயம், பரிசீச் சீட்டு போன்றவற்றில் அவ்வருமானம் கரைந்து போனதால் ஏற்படும் வறுமையும் குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுவதற்கான ஒரு முகாமையான காரணம்.

2. குழந்தை உழைப்பைத் தடை செய்துள்ள அரசு அதன் விளைவாகிய குடும்ப வருமான இழப்பை ஈடு செய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?

ஒன்றுமே இல்லை. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான சட்டத்தை இயற்றியதுடன் அதற்குச் தோதான ஒரு மனநிலையைப் பொதுமக்களிடையில் ஏற்படுத்துவதற்காக அரசே நேரடியாகவும் தன் ஆளுகையின் கீழிருக்கிற மற்றும் மக்களுக்கு(தனியாருக்கு)ச் சொந்தமான பொதுத் தொடர்பு வகைதுறைகளின் மூலமாகவும் "தன்னார்வ"த் "தொண்டு" நிறுவனங்கள் மூலமாகவும் பலவகைகளிலும் கருத்துப் பரப்புவதற்குப் பல கோடி உரூபாய்களைச் செலவு செய்வதோடு சரி.

3. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பின் விளைவுகள் என்னவாக இருக்கும்?

முதலாவதாக, உழைப்பிலிருந்து விடுபட்ட குழந்தைகளும் அவர்களது உழைப்பை நம்பி வாழும் குடும்பமும் இப்போது கிடைக்கும் அரைவயிற்றுக் கஞ்சியிலிருந்தும் "விடுபடுவர்". அதன் தொடர்ச்சியாகப் பட்டினிச் சாவுகளும் தற்கொலைகளும் பெருகும். மக்களின் இடப்பெயர்ச்சி கூடும்.


மானத்தோடு உழைத்துப் பிழைத்து வந்த சிறுவர்கள் இனி நாய்களோடும் பன்றிகளோடும் போட்டியிட்டு எச்சில் இலைகளுக்காகச் சண்டை போடுவர். குப்பைகளில் காகிதம் பொறுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை பெருகும்.

சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவர். குமுகப் பகைக் கும்பல்களுக்கு ஆள் வலிமை சேரும். விலைமகளிராக மாறும் சிறுமிகளின் எண்ணிக்கை பெருகும். இத்துறைத் தரகர்களுக்கு நல்ல வேட்டையாகும்.

இரண்டாவதாகக் குழந்தைத் தொழிலாளர்களை வைத்து மலிவாகப் பண்டங்கள் செய்த நிறுவனங்கள் வெளிப்போட்டியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்படும். தொழில் குறிப்பிட்ட பகுதிகளில் அழித்து போகும். எனவே அங்குள்ள பெரியவர்களுக்கிருக்கும் வேலைவாய்ப்புகளும் அழிந்து போகும். அப்பகுதிகள் ஆளற்ற பாலைவனங்களாகும். இப்போது பெருகி வரும் வழிப்பறிகளும் கொள்ளைகளும் இனிமேல் விரைந்து பெருகும்.

மூன்றாவதாக இத்தொழில்களின் மூலம் செய்யப்பட்ட பொருட்களைச் செய்ய இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் நிறுவப்படும். அவற்றை இறக்குமதி செய்வதற்காக வெளிச்செலாவணித் தேவை கூடும்.

நான்காவதாகச் சட்டத்துக்குப் புறம்பாகக் குழந்தைத் தொழிலாளர் முறை தொடரும். இதனால் குழந்தைகளுக்கு இப்போது வழங்கப்படும் கூலியும் குறையும். இவ்வாறு குறைவதால் மிச்சப்படும் தொகை இச்சட்ட மீறலை மறைப்பதற்கான கையூட்டாக ஆட்சியாளரைச் சென்றடையும்:

4. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் இவ்வளவு முனைப்புக் காட்டும் ஆட்சியாளரின் உள்நோக்கம் என்ன?

முன்பு "நெருக்கடி நிலை"யின் போது மக்களிடையில் "பணப் புழக்கத்தைக் குறைப்பதற்காக" ஊதிய முடக்கம், பஞ்சப்படி முடக்கம் எல்லாம் செய்தார்களல்லவா அதே நோக்கம் தான். அதாவது மக்களின வாங்கும் ஆற்றலைக் குறைப்பது தான். அதாவது தங்கள் தேவைகளை வாங்க இயலாத வறியவர்களாக்குவது தான். இதன் மூலம் மிஞ்சும் பண்டங்களை ஏற்றுமதி செய்யலாம். இப்போது ஏற்றுமதி செய்யப்படும் 30 லட்சம் டன் உணவுத் தவசங்களை(தானியங்களை) இன்னும் கூட்டலாம்.

குழந்தைத் தொழிலாளர்களின் இடத்தை நிரப்ப இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கு வழக்கமான தரகு கிடைக்கும். இறக்குமதியால் ஏற்படும் வெளிச் செலாவணிக்காக புதிதாக ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கும் தரகு கிடைக்கும்.

5. "தொண்டு" நிறுவனங்களின் உள்நோக்கம் என்ன?

இத்"தொண்டு" நிறுவனங்கள் இந்திய அரசிடமிருந்தும் உலகின் பெரும் தொழிற்பேரரசுகள் நடத்தும் அறக்கட்டளைகளிலிருந்தும் பணம் பெறுவதால் அப்பேரரசுகள் செய்யும் கருவிகளை இறக்குமதி செய்வதற்குத் தோதான சூழ்நிலையை உருவாக்கப் பாடுபடுகின்றன. குழந்தைகளுக்குக் குறைவான கூலி கொடுத்து ஏழை நாடுகள் மலிவாக பண்டங்களைப் படைத்துத் தங்களுடன் போட்டியிடுவதிலிருந்து அவற்றைத் தடுப்பது முகாமையான நோக்கம்.

6. குழந்தைத் தொழிலாளரை வேலைக்கு வைத்திருப்போர் தான் வேலைக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளருக்கும் 20,000⁄-உரூபாய்கள் மறுவாழ்வுக்காக வழங்க வேண்டுமென்ற நீதிமன்றத் தீர்ப்பின் விளைவு என்னவாக இருக்கும்?

குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகளுக்கு மறைமுகமாக விதிக்கப்படும் தண்டமாகும் இது. குழந்தைகள் வேலையிழக்கும் வேகத்தை இது கூட்டும். குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்போர் தங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச இரக்கம், மாந்தநேய உணர்வுகளைத் துடைத்தெறிந்துவிட்டு அவர்களைத் தெருவில் இறக்கிவிடத் தூண்டும்.

7. குழந்தைத் தொழிலாளர் பற்றிய இந்த நிலைப்பாடு சரிதானா?

பதின்மூன்று அகவைக்குட்பட்ட குழந்தைகள் உழைத்துப் பிழைக்க வேண்டிய சூழ்நிலை வருந்தத்தக்கது தான். ஆனால் குழந்தைகளின் உழைப்பில் குடும்பம் வாழ வேண்டுமென்றிருக்கும் நிலையை மாற்றுவது பற்றிய சிந்தனையே இன்றி அத்திசையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குழந்தை உழைப்புக்கு எதிராக முனைப்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வது தவறு மட்டுமல்ல இரக்கமற்ற கொடுஞ் செயலுமாகும். அதே வேளையில் உடலுழைப்பு இழிவானது என்ற உணர்வு எழுத்துறிவுடன் கூடவே பள்ளிகளில் உருவாகி விடுகிறது. இது நெடுங்காலமாகப் பெருந்திரள் மக்களுக்கு எழுத்தறிவு மறுக்கப்பட்டதன் விளைவாகும். அத்துடன் உழைப்போருக்கு உரிய ஊதியமோ குமுக மதிப்போ இல்லை. அதனால் இன்று இருக்கும் எத்தனையோ வேலைவாய்ப்புகளைப் படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் வீண் பொழுது போக்குவதுடன் குமுகத்துக்குத் தொல்லை தருபவர்களாகவும் மாறிவிட்டிருக்கிறார்கள். எனவே இதில் ஒரு மாற்றத்தின் தேவையுள்ளது. குறைந்தது பத்து ஆண்டுகள் தொடர்ந்து உடலுழைப்பையே தவிர்த்து வருவதால் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களிடத்தில் உழைப்பை ஏற்றுக்கொள்ள ஓர் எதிர்ப்பு நிலை உருவாகி விடுகிறது. அதை மாற்ற எட்டாம் வகுப்பு முடிந்தவுடன் ஒரு மூன்றாண்டுக் காலம் உடலுழைப்பில் ஈடுபடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். எட்டாம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வி அனைவருக்கும் அளிக்க வேண்டும். மூன்றாண்டு உடலுழைப்பிற்குப் பின் மேற்படிப்புக்கு மாணவன் கட்டணம் செலுத்த வேண்டும். எட்டாம் வகுப்பு மட்டத்தில் மனமும் உடலும் முற்றிப் போகாவாகையால் உழைப்பு பற்றிய சிந்தனையிலும் உடல் வணக்கத்திலும் எதிர்ப்பு இருக்காது.

கட்டிடத் தொழிலிலாயினும் வேறு எந்தக் தொழிலிலாயினும் ஈடுபடுவோருக்கு அத்தொழில் குறித்த அடிப்படைத் தொழிற்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போது தொழில்களின் தரம் மேம்படுவதுடன் புதியன படைக்கும் ஆர்வமும் உண்டாகும்.


8. இது பற்றி மேலையாடுகளின நிலை என்ன?

மேலை நாடுகளில் பதினபருவம்(Tennage) எனப்படும் பதின்மூன்று அகவை எட்டிய இளைஞர்கள் குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்களாகக் கருதப்படுகின்றனர். அப்போதிலிருந்து பெற்றோரைச் சார்ந்திருப்பதிலிருந்து அவர்கள் அகலுகின்றனர். பகுதி நேர உழைப்பின் மூலம் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இது அவர்களின் முழு ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளும் பயிற்சியாகிறது. தன்னம்பிக்கை, குமுகத்துடன் நெருக்கமான உறவு, பொது அறிவு, குமுக உணர்வு ஆகியவற்றை வளர்க்கப் பெருந்துணை புரிகிறது. மாறாக நம் நாட்டு இளைஞர்கள் பெற்றோர் நிழலிலேயே நெடுங்காலம் ஒதுங்கி, ஒடுங்கி உடலியல், உளவியல் ஆற்றல்களை வளர்க்கும் பயிற்சியின்றி இருவகைகளிலும் மெலிந்து போகின்றனர்.

9. இது குறித்து நம் பண்டைமரபுகள் ஏதேனும் உண்டா?

உண்டு. சில சாதியினர் தங்கள் மகன்களைத தங்களையொத்த பிற தொழில் நிறுவனங்களில் கூலி வேலைக்குப் பயிற்சியாளர்களாய் அனுப்புவதுண்டு. மாதவி ஏழாண்டுப் பயிற்சிக்குப் பின் பன்னீரண்டாம் அகவையில் அரங்கேறியதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

மகாபாரதத்தில் நளாயினி கதையில் வரும் ஆணி மாண்டவியர் வரலாற்றில் ஒரு குறிப்பு உள்ளது. தவறுதலாகத் தான் கழுவேற்றப்பட்டதற்கு எமனிடம் விளக்கம் கேட்கிறார் ஆணி மாண்டவியர். அதற்கு, அவர் சிறுவனாயிருக்கும் போது ஒரு முனிவரிடம் தவறாக நடந்து கொண்டதன் விளைவே அது என்று கூறுகிறான் எமன். பதின்மூன்று அகவைக்குள் செய்த தவறுகளுக்குத் தண்டனை கிடையாதென்ற அறநூல் கூற்றைத் காட்டித் தவறிழைத்த எமனுக்குச் சாபமிடுகிறார் முனிவர். இதிலிருந்து பதின்மூன்று அகவையடைந்தவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படத் தக்கவர் என்ற கருத்து மிகப் பண்டை நாட்களிலேயே நம் குமுகத்தில் நிலவியது தெளிவாகிறது.

10. குழந்தைத் தொழிலாளர் குறித்த நம் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்?

முதலாவதாக, ஏழைச் சிறுவர்களின் வாழ்வின் அடிப்படையையே தகர்க்கும் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தின் செயற்பாட்டை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும்.

இரண்டாவதாக, குழந்தைத் தொழிலாளரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் முதலாளிகளும் அரசும் இணைந்து அவர்களுக்கு அடிப்படைக் கல்வி அளிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் அவர்களது வேலை நேரத்தை அமைத்துக் கொடுக்க அம்முதலாளிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இக்குழந்தைத் தொழிலாளர் கல்வி நிலையங்கள் அரசின் பொறுப்பிலிருக்க வேண்டும்.

மூன்றாவதாக, அழிந்து கொண்டிருக்கும் வேளாண்மையை மீட்டெடுக்க நிலவுச்சவரம்பு, வேளாண் விளைபொருள் ஆணையம், உணவுப் பொருள் நடமாட்டக் கட்டுப்பாடுகள், உணவுப் பொருளின் வாணிகத்தில் உரிம முறை, வருமான வரி போன்ற தடைக்கற்களை உடனடியாக அகற்றி வேளாண்மைக்கு மறு உயிர் கொடுத்து பெரியவர்களின் வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும்.

வருமானவரியை முற்றாக ஒழித்து உரிமம், இசைவாணை, மூலப்பொருள் ஒதுக்கீடு போன்ற தடைக் கற்களை அகற்றி உள்ளூர் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமூட்டியும் உள்ளூர் தொழில்நுட்பக் கண்டு பிடிப்புகளை ஊக்குவித்தும் தொழில் வளர்ச்சியை பாய்ச்சல் நிலைக்குக் கொண்டு வந்து அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் பெருக்க வேண்டும்.

சாராயத்தையும் பரிசுச் சீட்டையும் முற்றாக ஒழிக்க வேண்டும்.

மூன்றாவதாக, குழந்தைத் தொழிலாளர்களை அகற்ற உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் உள்நாட்டில் உருவான கருவிகளையே பயன்படுத்த வேண்டும்.

நான்காவதாக, அனைவருக்கும் எட்டாம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வித் திட்டத்தை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். இதற்கும் உலக வங்கியிடம் நாட்டை அடகு வைக்கக் கூடாது. இத்தொடக்கக் கல்வி முழுவதும் அரசாலேயே செல்வநிலை வேறுபாடின்றி அனைவருக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். எட்டாம் வகுப்புக்குப் பின் மூன்றாண்டு உடலுழைப்புக்குப் பின் மேற்படிப்புக்குத் தகுதியான ஏழையர் தவிர அனைவரிடமும் கட்டணம் பெற வேண்டும்.

அனைத்துக்கும் மேலாகப் போலி மாந்தநேயத்தைக் காட்டி நம் பொருளியல் நடவடிக்கைகளில் தலையிடும் வெளியுதவி பெறும் "தொண்டு" நிறுவனங்களின் நடவடிக்கைகளை மிகக் கூர்மையாகக் கண்காணித்து அவர்களது இது போன்ற அழிம்பு வேலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.


12.7.09

தமிழக மறுமலர்ச்சிக்கான உடனடித் திட்டங்கள்

தமிழக மறுமலர்ச்சிக்கான உடனடி திட்டங்கள்:

1. மூலதனம்:

· வருமான வரியை முற்றாக ஒழிக்க வேண்டும்.

· இரண்டாம் நிலை பங்குச் சந்தையை முற்றாக ஒழிக்க வேண்டும்.

· பங்குகள் மறு விற்பனையை வெளியிடும் நிறுவனங்களே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். மறுவிற்பனை விலையே பங்குகளின் புதிய முகமதிப்பாக வேண்டும்.

· 10 கோடி உரூபாய்க்கு மேல் மூலதனமுள்ள நிறுவனங்கள், 51 நூற்றுமேனிக்கும் குறையாத மூலதனத்தைப் பங்கு முதலீட்டின் மூலமே பெற வேண்டும்.

· வங்கிகள் பங்குகள் மூலமோ கடன்கள் மூலமோ தொழில் முதலீட்டில் இறங்கக் கூடாது.

· தமிழகத்தில் வெளியார் யாரும் முதலிடக் கூடாது.

· வாக்குத்தத்தப் பத்திரத்தின் மீது கடனைக் கொடுப்பவர்களுக்கு ஆண்டுக்கு 12% வட்டியுடன் சட்டப் பாதுகாப்பு வேண்டும். கடன் பணத்தை விரைந்து மீட்பதற்கான நடவடிக்கைகளுக்குச் சட்டத்தில் வகை செய்ய வேண்டும்.

2.நிலமீட்பு:

மாநிலங்கள் சீரமைப்பின் போது நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட

· நெய்யாற்றின்கரை, செங்கோட்டையில் பாதி, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகியவற்றைக் கேரளத்திடமிருந்தும்,

· சித்தூர்,புத்தூர், நெல்லூர், திருப்பதி, ஆகியவற்றை ஆந்திரத்திடமிருந்தும்,
· வெங்காலூர், தங்கவயல், கொள்ளேகாலம் ஆகியவற்றைக் கன்னடத்திடமிருந்தும்,

· கச்சத்தீவை சிங்கள அரசிடமிருந்தும் மீட்க வேண்டும்.

3. குடியுரிமை:

· 1.11.1956க்குப் பின் தமிழகத்திலும் தமிழகத்துக்குரிய மேற்கூறப்பட்ட பகுதிகளிலும் குடியேறியவர்களுக்குத் தமிழகத்தில் குடியுரிமை கூடாது. அவர்கள் தமிழகத்திலும் தமிழகத்திற்குரிய பகுதிகளிலும் நிலங்கள் வாங்கவோ தொழில்கள் தொடங்கவோ வாணிகம் செய்யவோ உரிமை கூடாது. ஏற்கனவே நிலம் வாங்கியவர்கள், தொழில்கள் தொடங்கியவர்கள், வாணிகம் செய்தவர்கள் ஆகியவர்களிடமிருந்து அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். 1.11.1956க்கு முன்பே வெளியிலிருந்துவந்து தொழில் வாணிகம் செய்து ஆதாயத்தை வெளியே கொண்டுசென்றவர்களிடமிருந்தும் பறிமுதல் செய்யப்படும்.

4. நிலவுடைமை:

· நில உச்சவரம்பு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

· குத்தகைப் பயிர்முறையை முற்றாக ஒழிக்க வேண்டும்.
உடமையாளருக்கும் பயிரிடுவோருக்கும் 50:50 என்ற வாய்பாட்டைக் கையாள வேண்டும். இதில் கோயில்களுக்கோ அறக்கட்டளைகளுக்கோ பிற நிறுவனங்களுக்கோ எந்த விலக்கும் கூடாது.

· உரிமை மாற்று ஆவணமின்றி பட்டா வழங்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும். பட்டா வழங்கும் அதிகாரத்தை வருவாய்த் துறையிலிருந்து எடுத்துவிட வேண்டும். உரிமைமாற்று ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்குவதைப் பதிவுத்துறையின் பொறுப்பில் விட வேண்டும்.

· பத்திரப் பதிவுக்கு வழிகாட்டி விலை நிறுவுவதைக் கைவிட வேண்டும்.

5. வேளாண்மை:

· வேளாண் விளைபொருட்களைத் தமிழகத்தின் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கோ, அண்டை மாநிலங்களுக்கோ கொண்டுசெல்வதற்கும் அங்கிருந்து கொண்டுவருவதற்கும் எந்தத் தடையும் கூடாது.

· வேளாண் விளைபொருட்களில் வாணிகம் செய்ய உரிமம் பெற்ற வாணிகர் முறையை ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அதற்கு உரிமை வேண்டும்.

6. தொழில்வளம்:

· தொழில் தொடங்குவதற்கான உரிமம் வழங்கும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

· ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ஓர் அறிவியல் - தொழில்நுட்பக் காப்புரிம அலுவலகம் தொடங்க வேண்டும். தேவையானால் மக்களே அவற்றை அமைக்க வேண்டும்.

7. வாணிகம்:
· சில்லரைக் கடைகளில் எந்த வகையான வரியும் தண்டக் கூடாது. எல்லாப் பொருட்களையும் அனைத்து வரிகளும் அடங்கியவாகிய பொதியல்களாகவே விற்க வேண்டும். அவ்வாறு பொதிய முடியாப் பண்டங்கள் இருந்தால் அவற்றுக்கு வரிகளை நீக்க வேண்டும்.

· வாணிகர்கள் அமைப்பாக இணைந்து கூட்டாக பெரும் வாணிக வளாகங்களை அமைப்பதை ஊக்க வேண்டும். நாகர்கோயில் அப்டா சந்தையை ஒரு முன்னோடி அமைப்பாகக் கொள்ளவேண்டும்.

· டாலரின் நாணய மதிப்பை உரூ.30 ஆக உடனடியாகக் குறைக்க வேண்டும்.(நம் நாணய மதிப்புக்குச் சமமாக்குவது இறுதி இலக்கு.)

8. பண்பாடு:

· சாதிக்கு பார்ப்பனர், ஆரியர் என்ற பிறர் மீது குற்றம் கூறி நம்மிடையே உறைந்திருக்கும் சாதிவெறியை மறைப்பதைக் கைவிட்டு தத்தம் சாதிகளுக்குள் இருக்கும் சாதி ஆதிக்க வெறியை ஒவ்வொருவரும் எதிர்த்துப் போராட வேண்டும்.

· ஆணுக்குப் பெண் இளைத்தவள் என்று அவளுக்கு மட்டும் கற்பை வலியுறுத்தும் நம் பண்பாட்டை எதிர்த்து மணவிலக்கு, மறுமணம், கைம்பெண் மறுமணத்தை வலியுறுத்திப் பெண்களிடையில் பரப்பல் செய்ய வேண்டும்.

· பல நூறு தன்கள் எடையுள்ள மரக்கட்டை மீது பொம்மையை வைத்து இழுக்கும் மடமையும் கயமையும் நிறைந்த, வருணக் குமுக அமைப்பைக் காட்டும், ஆகமக் கோயில்களை இடித்து நிரவி அனைவரும் சமமாக அமர்ந்து தமிழ் மொழியில் வழிபாடு நிகழ்த்தும் சமய நெறியைப் புகுத்த வேண்டும்.

· பண்டம் விளைப்போரையும் உழைப்போரையும் வினைசெய்து மீண்டும் மீண்டும் பிறந்து உழலும் தீவினையாளர்கள் என்று இழிவுபடுத்தி குண்டியிலிருந்து ஆற்றலை எழுப்பி கடவுளாகலாம் என்று கூறும் உலகில் எங்குமில்லாத கடைகெட்ட ஒட்டுண்ணிக் “குண்டிலினி”க் கோட்பாட்டை அடியோடு ஒழிக்க வேண்டும்.

· ஊருக்கு இளைத்தவனாக அனைவருக்கும் ஏளனத்துக்குரியவனாகத் தமிழனை ஏமாளியாக்கும், இங்குள்ள ஏமாற்றுக்காரர்களுக்கு வாழ்வளிக்கும் “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற மடைமையைக் கைவிட்டு தமிழகமே எம் ஊர், தமிழக மக்களே எம் உறவினர் என்ற உறுதியான நிலையை எடுக்க வேண்டும்.


9. கல்வி:

· கட்டாய இலவயக் அகல்வி முழுவீச்சில் செயல்படுத்தப்படும்.

· தொடக்கக் கல்வி முழுவதும் பத்தாம் வகுப்பு வரை அரசே பொறுப்பேற்க வேண்டும்.

· தமிழகம் முழுவதும் பிற மொழிப்பாடங்கள் தவிர தமிழே பாடமொழியாக வேண்டும்.

· உடலுழைப்பு தொடர்பான அனைத்துத் தொழில்களும் குறித்த பாடத்திட்டங்கள் கல்வித் துறையில் புகுத்தப்பட வேண்டும்.

· இளஞ்சிறார்களின் திறமை, மனச்சாய்வு அறிந்து அவர்களை இளங்காணும் உளவியலில் தேர்ந்த ஆசிரியர்களையே மழலை மற்றும் தொடக்க நிலை வகுப்புகளுக்கு அமர்த்த வேண்டும். இயற்கையான திறமைகளை வளர்க்கவும் தீங்கான மனப்போக்குகளை நீக்கவும் தொடக்கக் கல்வியை இந்த வகையில் திட்டமிட வேண்டும்.

· துறைக் கல்விகளில் சான்றிதழ் கல்வி → வேலை → நுழைவுத் தேர்வு → பட்டயம் → வேலை → நுழைவுத் தேர்வு → பட்டப் படிப்பு என்று இடை முறித்து வழங்க வேண்டும். பணிகளில் நேரடி உயர்பதவி முறையை ஒழிக்க வேண்டும்.

· ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:20க்குக் குறையக் கூடாது. அதாவது ஒரு வகுப்பறையல் ஓர் ஆசிரியருக்கு 20 மாணவர்களுக்கு மேல் இருக்கக் கூடாது.

10. சட்டம்:

· இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும்.

· முழுத் தன்னாட்சியுடைய மாநிலங்களின் கூட்டாட்சியாக அரசியல் அமைப்பை மாற்றியமைக்க வேண்டும்.

11. தேர்தல்:

· வாக்குச் சீட்டுத் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

· நிறுவப்பட்ட தகுதிகளை உடைய குடிமக்களிலிருந்து அனைத்து வகை ஆள்வினையாளர்களையும் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஊராட்சியின் நடவடிக்கைகளை அதனுள் அடங்கிய குடிமக்களின் ஊர்க்கூட்டத்தில் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.

· தேர்தல்களை நடத்துவதற்கென்று தனியான ஊழியர்களுடன் நிலையான ஓர் ஆணையம் இயங்க வேண்டும்.


தொடர்புக்கு:
குமரிமைந்தன்
தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம்
72அ. என்.சி.ஓ. நகர், சவகர் நகர் 12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம் - 625 706, பேசி: 97906 52850.
மின்னஞ்சல் kumarimainthan@gmail.com

திரு. பொன். மாறன்,
தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (மதுரைக் கிளை)
80ஏ, மேலமாசி வீதி, மதுரை - 625 001, பேசி: 94439 62521.

திரு. இரா.தமிழ்மண்ணன்,
தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (பறம்புக்குடி கிளை),
3/538, எம்.சி.ஆர்.நகர், பொன்னையாபுரம், பறம்புக்குடி - 623 707, பேசி: 97893 04325.

5.7.09

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....3

திராவிடர் இயக்கம் பொருளியல் குறிக்கோள்களை எந்தக் கட்டத்திலும் சரியாகவோ முழுமனதோடோ முன்வைக்கவில்லை (திராவிடர் கழகத்தில் திரண்டிருக்கும் பணம், அதன் பல கிளைப்புகளில் சேர்ந்திருக்கும் பணம், பதவிகள் என்பவற்றைத் தவிர வேறு எதனையும் குறிக்கோள்களாகக் கொண்டிருக்கவில்லை என்பது வேறு, முன்வைக்கவில்லை என்பது வேறு). அதனால் தத்தமக்குப் போதும் என்ற அளவுக்குக் குமுகியல் ஏற்புக் கிடைத்தவுடன் அவை எதிரணிக்குத் தாவி எதிரிக்குப் பணிந்து தம்மைக் காப்பாற்றிக் கொண்டன.

அவ்வாறின்றி திராவிடர் இயக்கம் ஒரு நிலையான பொருளியல் குறிக்கோளை முன்வைத்திருக்குமானால் ஒவ்வொரு சாதிக்குழுவுக்குள்ளும் இருந்த குமுகியல் விசைகளுக்கும் பொருளியல் விசைகளுக்கும் மோதல் ஏற்பட்டுப் புரட்சிகரத் தனிமங்கள் வெளிப்பட்டு இயக்கம் முன்னேறிச் சென்றிருக்கும்.

எடுத்துக்காட்டாக நாடார்களை எடுத்துக் கொள்வோம். திராவிடர் இயக்கத்தின் தொடக்க காலத்தில் மேற்சாதிகளின் ஒதுக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் வகையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்துச் சாதியினரும் சேர்ந்து பயிலும் பள்ளிகளை அவர்கள் தொடங்கினர். கூட்டு விருந்து(சமபந்தி போசனம்)கள் நடத்தினர். பொதுக் கிணறுகளையும் பொதுக் குளங்களையும் பொது இடுகாடு சுடுகாடுகளையும் அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்ற முழக்கத்தையும் முன்வைத்தனர். இந்த முழக்கங்களுடன் தங்கள் செல்வ வலிமையைத் திராவிடர் இயக்கத்துக்கு வாரி வழங்கினார். நாளடைவில் இவர்களின் குமுகியல் நிலை மேம்பட்டது. அவர்களுக்கெதிரான ஒடுக்குமுறை, ஒதுக்குமுறைகள் மட்டுப்பட்டன. ஒரு கட்டத்தில் அதுவரை தாங்கள் தங்களுடன் இணைத்துக் கொண்ட தாழ்த்தப்பட்டோர் தங்களுக்குச் சமமாவ வருவதை விட எஞ்சியிருக்கும் ஒடுக்குமுறை, ஒதுக்குமுறைகளை ஏற்றுக்கொண்டு மேற்சாதியினருடன் இணங்கிச் செல்வதே மேல் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

அதே நேரத்தில் பம்பாய் மூலதனத்தால் இதே நாடார்கள் நெருக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அதை எதிர்த்து இவர்களுக்குக் குரல் கொடுக்க திராவிடர் இயக்கம் முன்வரவில்லை. எனவே தங்களைக் காத்துக் கொள்ள ஒரே வழி பேரவைக் கட்சியிடம் அடைக்கலம் புகுவதே என்று முடிவு செய்தனர். அக்கட்சியில் பார்ப்பனர்களுக்கும் பிற மேற்சாதியினருக்கும் இடையில் உருவான முரண்பாட்டின் விளைவாகத் தலைமையைப் பெற்ற காமராசருக்குப் பின்னணியாக நின்றனர். நாளடைவில் வேறு வழியின்றி மார்வாரிகளின் காலடிகளில் வீழ்ந்துவிட்டனர்.

திராவிடர் இயக்கம் தமிழகத்தின் பொருளியல் விடுதலை என்ற திசையிலும் குரல் எழுப்பியிருக்குமாயின் தங்கள் பொருளியல் நலன்களுக்குப் போராடும் வலிமையைத் தாழ்த்தப்பட்டோரிடமிருந்து பெறுவதற்காக அவர்களின் குமுகியல் உரிமைகளுக்கு இடம் கொடுத்திருப்பர். பொருளியல் நலன்களுக்கும் குமுகியல் நலன்களுக்கும் இடையிலான இயங்கியல் உறவை விளக்க அண்மைத் தமிழக வரலாற்றின் இப்பகுதி நமக்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டாகும்.

ஒதுக்கீடு என்ற கோரிக்கை ஏற்கப்பட்ட அன்றே அதனுடைய புரட்சித் தன்மை போய்விட்டது. கிடைத்த ஒதுக்கீட்டுக்கான பங்குச் சண்டை தொடங்கிவிட்டது. அந்த வெற்றியே தோல்வியாகி விட்டது. இடையில் மங்கியிருந்த சாதிச் சங்கங்கள் புத்துயிர் பெற்று புதுப் பிளவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. பொருளியல் நலன்கள் குமுகியல் முரண்பாடுகளை மங்க வைப்பதற்குப் பகரம் இரண்டும் ஒன்று சேர்ந்து இந்தப் பூசலை வலுப்படுத்திக் கொண்டு பொருளியல் பின்னணியால் பேய்வலிமை பெற்றுவிட்ட குமுகியல் பிற்போக்குக் போராக மாறிவிட்டிருக்கிறது. இந்த நிலையில் பொருளியலைக் குமுகியலுக்கு எதிராக அதாவது பகைகொண்டு நிற்கும் குமுகியல் பிரிவுகளுக்குப் பொதுவான அதாவது அப்பிரிவுகள் ஒன்றுபடுவதை இன்றியமையாததாக்கும் பொருளியல் நலன்களை முன் வைத்துப் போராட்டங்களைத் தொடங்கினால் இன்று பொருது கொண்டிருக்கும் குழுக்களின் கவனம் திரும்புவதோடு இணைந்து நின்று அவர்களுக்குப் புதிதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் பொது எதிரியை எதிர்த்துப் போராடத் தொடங்குவர். இந்தப் போராட்டம் நெடுகிலும் அவ்வப்போது எழும் சூழ்நிலைகளுக்கேற்ப குமுகியல் பொருளியல் போராட்டங்களை நடத்திச் செல்வதன் மூலம் அகப்புற முரண்பாடுகளுக்கு நாம் தீர்வு காணலாம்.

எந்தவொரு முற்போக்கான முழக்கமும் திட்டவட்டமான மக்கள் குழுக்களைத் தொடுவனவாக இருக்க வேண்டும். தேசிய விடுதலை, தேசிய எழுச்சி, தமிழின விடுதலை, தமிழின மீட்சி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை அல்லது மீட்சி, புதிய பண்பாட்டு(கலாச்சார)ப் புரட்சி, புதிய மக்களாட்சி(சனநாயக)ப் புரட்சி பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை என்ற அருமையான முழக்கங்கள் மக்களைத் தீண்டவே தீண்டா.

தமிழக மக்கள், குறிப்பாகத் தஞ்சை மக்கள் உணர்ச்சிகளற்றவர்களல்ல. தன்மான இயக்கத்தின் உயிர்மூச்சாய் இருந்தவர்கள். வரலாற்றில் இப்பகுதி மக்களுக்கு அஞ்சித்தான் இராசேந்திரன் மக்களில்லாத இடத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தை அமைத்துப் பதுங்கி வாழ்ந்தான். அதிராசேந்திரனைக் கொன்று கோயில்களை இடித்துப் பார்ப்பனப் பூசாரிகளை வெட்டி வீசியவர்கள் இவர்களே. ஆனால் குலோத்துங்கனால் அரசியல் - குமுகியல் உரிமைகளடிப்படையில் வலங்கையினரென்றும் இடங்கையினரென்றும் கூறுபடுத்தப்பட்டுத் தங்களிடையில் கொலைவெறிச் சண்டைகளிட்டு அரசன் மற்றும் பார்ப்பனர்கள் முன் மண்டியிட்டாலும் அவ்வப்போது பொருளியல் நெருக்குதல்களால் வரிகொடா இயக்கங்கள் நடத்தியவரே.


அதே போன்று இன்று ஒதுக்கீடு என்ற மாயமானாலும் காலத்துக்கும் களத்துக்கும் பொருந்தாத பொதுமையரின் முழக்கத்தாலும் திசையிழந்து நிலைமறந்து நகர இடமிழந்து நிற்கும் இம்மக்களை வெற்று முழக்கங்களால் அசைக்க முடியவில்லை. உங்களுக்கு என் கருத்துகள் ஆயத்தக்கண என்ற நம்பிக்கையிருந்தால் நீங்கள் மக்களிடையிலேயே ஒரு கருத்துக் கணிப்பு நடத்திப் பார்த்து அடுத்த நடவடிக்கையில் ஈடுபடலாம். இந்த ஓர் அணுகலோடு காவிரி நீருக்காக நடத்தப்படும் போராட்டத்துக்குக் காவிரிப் பாசனப் பகுதி மக்களின் முழு ஒத்துழைப்பையும் பெறமுடியும் என்பது என் உறுதியான நிலைப்பாடு.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,
குமரிமைந்தன்.

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....2

2. குத்தகை முறை:

தஞ்சை மாவட்டத்தில் கணிசமான விளைநிலங்கள் கோயில்களுக்கும் மடங்களுக்கும் சொந்தமானவை. மீதயுள்ளவற்றில் பெரும்பகுதி மூப்பனார், வாண்டையார், தீட்சிதர், முதலியார் ஆகியோருக்குச் சொந்தமானவை. இவற்றில் கோயில்களுக்கும் மடங்களுக்கும் குத்தகை ஒழிப்புச் சட்டத்திலிருந்து விலக்கு உண்டு. பெருவுடைமையாளர் நிலங்கள் பொய்ப் பெயர்களிலிருப்பதனால் உச்சவரம்புச் சட்டத்திலிருந்து தப்பிவிடுகின்றன. இப்பெருமுதலைகள் நிலத்தை விற்பதில்லையாகையால் குத்தகைச் சட்டத்தின் பயன்கள் குத்தகையாளருக்குக் கிடைப்பதில்லை.

எனவே பயிரிடும் குத்தகையாளருக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க வேண்டும். சந்தை விலையில் பாதியைக் குத்தகையாளரிடமிருந்து தவணை முறையில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பொதுமை இயக்கத்தினரின் நிலச்சீர்த்திருத்த முழக்கம் "உமுபவனுக்கே நிலம் சொந்தம்" என்பது. இதில் உழுபவன் என்ற சொல்லாட்சி தெளிவற்றது. உழுபவன் என்பவன் உழுதொழிலாளியாகிய வேளாண் தொழிலாளியா பயிரிடுவோனாகிய குத்தகையாளனா என்பதில் தெளிவில்லை.

"உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கம் முழுமையான நிலக்கிழமையிய(Feudalism)த்திலிருந்த ஐரோப்பாவில் உருவானதாகும். அங்கு மிகப் பெரும்பாலான நிலங்களும் பண்ணையடிமைகளான குத்தகையாளர்களால் பயிரிடப்பட்டன. உழைப்பு, இடுபொருட்கள் ஆகிய பொறுப்புகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு பயிர் செய்து விளைந்ததில் பெரும் பகுதியை நிலக்கிழாருக்கு வாரமாகக் கொடுப்பதுடன் குறிப்பிட்ட நாட்களில் அவருக்குக் கூலியற்ற வெட்டிவேலையும் செய்ய வேண்டும். நிலத்தை விட்டுப்போக முடியாது. நிலம் கைமாறினால் அவனும் நிலத்துடன் மாற வேண்டும். அந்த நிலையில் உழுபவன் என்பவன் குத்தகையாளனே. எனவே அங்கு இந்த முழக்கம் குத்தகையாளனையே குறித்தது.

இங்கோ தமிழகத்தில் ஒரு பக்கத்தில் குத்தகை முறையும் இன்னொரு பக்கத்தில் சொந்தப் பயிர் முறையும் இயங்கி வந்தது. உடைந்த நிலையிலான நிலக்கிழமை நிலை. இது நீண்ட காலமாக நிலவுகிறது. எனவே உழுதொழிலாளர்களும் கணிசமான நிலையிலிருந்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவராக இவ்வளவு எண்ணிக்கையில் இறுகிப் போனதற்கும் இந்த இரட்டை நிலை தான் காரணமாக இருக்க வேண்டும்.

இதில் உழுதொழிலாளிக்கு முதலிடம் கொடுப்பதா குத்தகையாளருக்கு முதலிடம் கொடுப்பதா என்ற கேள்வி எழுகிறது.

குமுகம் ஒரு பொருளியல் - பண்பாட்டுக் கட்டத்திலிருந்து அதைவிட மேம்பட்ட பொருளியல் - பண்பாட்டுக் கட்டத்துக்கு (எ-டு. அடிமைமுறையிலிருந்து நிலக்கிழமையியத்துக்கு, நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு) மாறுவதற்கு உந்து விசையாயிருப்பது குமுக விளைப்புக் கருவிகளாகிய நிலம், இயற்கை வளங்கள், விளைப்பு விசைகளாகிய உழைப்பு, கருவிகள், தொழில்நுட்பம் ஆகியவற்றிலிருந்து மிக அதிகமான விளைப்புத்திறனைப் பெறும் நோக்கமே. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே சுரண்டும் வகுப்புகள் பொருளியல் கட்டமைப்பை மாற்றிக் குமுகியல் மேம்பாட்டுக்கு வழி வகுக்கின்றன. அதாவது பழைய பொருளியல் உறவுகள் மாறும் போது குமுகியல் உறவுகளில் மாற்றத்துக்கான அடிப்படை உருவாகிறது. இந்த வகையில் நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு மேம்பட்டதில் அடங்கியிருந்த பொறியமைப்பைப் பார்ப்போம்.

நிலக்கிழமையியத்தில் நிலமும் குத்தகையாளரும் ஒருவர் இன்னொருவரால் பிணைக்கப்பட்டிருந்தனர். நிலத்துக்கு நல்ல உரமிட்டுப் பண்படுத்தி விளைப்பு உத்திகளை மேம்படுத்தும் பொருளியல் வலிமை பண்ணையடிமைக்கு இல்லை. நிலக்கிழாரோ நிலத்தில் நேரடி வேளாண்மைக்கு ஆயத்தமாயில்லை. உழவனோ நிலத்தை விட்டு வெளியேறி மாற்றுப் பிழைப்புக்கு வழியில்லை. இந்நிலையில் நிலம் உழவனுக்கு, அதாவது குத்தகையாளனுக்குச் சொந்தமானால் அவனால் அதை இன்னொருவருக்கு விற்றுவிட்டு வெளியேறி வேறு பிழைப்பைப் பார்க்கலாம். நிலம் சொந்தப் பயிர் செய்யத் துணிந்த புதிய வேளாண் வகுப்புகளிடம் முழுமையான ஈடுபாட்டுடன் மிகக்கூடிய விளைதிறனை எய்தும்; குமுகத்தின் செல்வமும் மீத மதிப்பும் பெருகும். அம்மீதமதிப்பு மீண்டும் வேளாண்மையில் பாய்ந்து அதை மேம்படுத்தலாம் அல்லது தொழில்துறையில் முதலீடாகி அத்திசையில் வளர்ச்சியை ஊக்கலாம். அது தான் ஐரோப்பாவில் தொழிற்புரட்சியின்போது நடைபெற்றது.

இந்த அடிப்படையை நோக்காமல் வெறும் வெற்று முழக்கமாக "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற நிலக்கிழமையியத்துக்குரிய முழக்கத்தையும் முதலாளியத்துக்குரிய பாட்டாளியக் கோட்பாட்டையும் குழப்பி குத்தகையாளனைப் புறக்கணித்துவிட்டு உழுதொழிலாளியை முதன்மைப்படுத்தியதால் எதிர்விளைவுகளே நேர்ந்தன.

குத்தகை ஒழிப்புச் சட்டத்தால் பயன்பெற்ற குத்தகையாளர்களில் பெரும் பான்மையோராகிய பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் விரைந்து வளர்ந்தனர். அதற்குப் பல காரணங்களுண்டு. அவர்கள் நேரடியாக நிலத்தில் இறங்கி வேலை செய்தனர்; அதனால் கூலி மிச்சம். அவர்களுக்கு நடப்பிலிருக்கும் வேளாண் தொழில்நுட்பம் அத்துபடி; அதனால் இழப்புகள் குறைவு. அவர்களது தாழ்ந்த பண்பாட்டு மட்டத்தால் குடும்பச் செலவு குறைவு. இவற்றால் மீத மதிப்புப் பெருகி கணிசமான பேரின் நிலஉடைமை உச்சவரம்பின் எல்லையைத் தாண்டியது. எனவே நில உச்சவரம்பையே குறியாகக் கொண்டு பொதுமை இயக்கத்தினர் முன்வைக்கும் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் இம்மக்களை அயற்படுத்தியது.

பொருளியல் - குமுகியல் வளர்ச்சி என்ற அடிப்படையிலிருந்து பார்த்தால் நிலத்தைப் பகிர்ந்து நிலமற்றோருக்குக் கொடுப்பதென்பது ஒரு பிற்போக்கு நடவடிக்கையாகும். வளர்ச்சிப் போக்கைத் தலைகீழாக்குவதாகும். நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு மேம்படுவது என்பதில் வேளாண்துறைக் குறிதகவு என்னவென்றால் பண்னையடிமையை நிலத்திலிருந்தும் நிலத்தைப் பண்ணையடிமையிலிருந்தும் விடுவித்து முதலாளிய விளைப்பு உத்திகளுடன்(சொந்த இடுபொருட்கள் கூலி வேளாண் தொழிலாளர்களுடன்) சிக்கனமாகப் பயிரிட இயலும் வகையில் பெரும்பண்ணைகளை உருவாக்குவதாகும். நிலஉச்சவரம்பு, நிலத்தைத் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது என்பவை இந்த உருவாக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக மட்டுமின்றி அவ்வாறு வளர்ந்து வரும் நிலவுடமைகளைச் சிதறடித்து நிலத்தின், குமுகத்தின் விளைதிறனைச் சிதைப்பதுமாகிறது. சிறுவுடைமையாளர்கள் ஆதாயத்துடன் வேளாண்மை செய்ய முடியாததோடு நினைத்தபடி அவற்றை வாங்குவோர், நிலச்சீர்திருந்தச் சட்டங்களுக்கஞ்சி அருகிப் போகின்றனர். நிலம் இன்னோர் சிறுவுடமையாளருக்குச் சொந்தமாகும் அல்லது ஒரு பெருவுடைமையாளர் அதை வாங்கி மறைத்துச் சிறுவுடைமை போலவே நடத்த வேண்டியுள்ளது. அதனால் நிலத்தின் விளைதிறன் மேம்பட வாய்ப்பில்லாமல் போகிறது.

அதுமட்டுமல்ல ஒரு வேளாண் கூலித் தொழிலாளியை விட ஒரு சிறு உடைமையாளனின் பொருளியல் - உளவியல் நிலை கீழானது. இன்றைய நிலையில் ஆற்றுப் பரப்புகளில் உழுதொழிலாளர்களுக்குக் கிடைக்கும் கூலி, அவர்களிடம் வரலாற்றுக் காரணங்களால் படிந்து இறுகிப் போய்விட்ட ஊதாரிப் பண்பாட்டுக் கூறுகள் இல்லையென்றால் ஒரளவு வாழ்க்கைத் தரத்தை அமைக்கப் போதுமானது. அத்துடன் வேலை முடிந்தால் மன அமைதியுடன் வாழ முடியும். ஆனால் சிறு உடமையாளனோ விதைத் தேர்வு செய்தல், கடன் பெறுதல், உரம் வாங்குதல், பயிர் நோய்களோடு போராடுதல், தண்ணீர் பெறுவதிலுள்ள சிக்கல், நடவு, அறுவடைக் கூலியாட்கள் சிக்கல், விளைந்தவற்றை விற்பதில் அரசின் நெருக்கடி என்று எண்ணற்ற சிக்கல்களில் அவனது ஆற்றலுக்கு மீறிச் செயற்பட வேண்டியிருக்கிறது. சிறுஉடைமை, நிலத்தில் மட்டுமல்ல, அணைத்துத் துறைகளிலும் நாய் தன் வாலையே துரத்தித் துரத்திச் சுற்றிவருவது போல் நம் மக்களைச் சுற்ற வைத்து அவர்களது ஆற்றலை அழிக்கிறது. அதனால் தான் குமுகத்தில் நிலவும் எந்தக் கடும் சூழல் கூட அவர்களின் கவனத்துக்கு வருவதுமில்லை வந்தாலும் எதுவும் செய்ய இயலாதவர்களாய் அக்கறையற்றுப் போய்விடுகிறார்கள்.

இன்னும் ஒரு கோணத்திலிருந்து பார்ப்போம். "பயிரிடுவோனுக்கே நிலம் சொந்தம்" அல்லது "குத்தககையாளனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கத்தை எடுத்துக் கொள்வோம். இந்த முழக்கத்தால் பயன் பெற இருப்போருக்கு முன் கூட்டியே யார் யாருக்கு என்னென்ன பயன்கள் கிடைக்குமென்று தெரியும். எனவே அதற்காக அவர்கள் போராட முன்வருவார்கள். அதே நேரத்தில் "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற தெளிவில்லாத முழக்கத்தையோ "நிலத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடு" என்ற முழக்கத்தையோ "உச்சவரம்புச் சட்டத்தைக் கண்டிப்பாகச் செயற்படுத்து" என்ற முழக்கதையோ எடுத்துக் கொள்ளுங்கள். நிலவுடைமையாளர்கள் அனைவருக்கும் இவை அச்சுறுத்தலாகும். அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் போது(இது நடைபெறுமாயின்) ஒவ்வொருவருக்கு எவ்வளவு கிடைக்கும், தமக்குக் கிடைக்குமா அல்லது இருப்பது பறிபோகுமா என்றெல்லாம் கலக்கம் ஏற்படும். எனவே எதிர்ப்புணர்வு தான் உருவாகும். நிலமற்றவருக்கோ நில உச்சவரம்பிலிருந்து பிடுங்கப்படும் நிலம் யார் யாருக்குச் செல்லும், பகிர்ந்து கொடுப்பார்களா அல்லது ஆட்சியாளர்களே வைத்துக் கொள்வார்களா அல்லது நிலம் வைத்திருப்பவர்களை மிரட்டிப் பணம் பிடுங்க மட்டும் சட்டத்தைப் பயன்படுத்துவார்களா (இவையெல்லாம் இன்று நடைபெறுகின்றன) என்றெல்லாம் ஐயங்கள் தோன்றும். அத்துடன் சிறுவுடைமைகளின் இயலாமைகளும் உழவனுக்குத் தெரியும். உச்சவரம்பு நிலங்களிலிருந்து பகிர்ந்ததளிக்கப்பட்டவை உடனுக்குடன் விற்பனையாவது நடைமுறை. எனவே இந்த முழக்கங்களின் மீது மக்களின் எந்தப் பிரிவினருக்கும் பரிவு ஏற்படாதது மட்டுமல்ல நிலடைமையாளர்கள் அனைவரின் வெறுப்புக்கும் அவை உள்ளாகும்.


பொய்யுடைமை(பினாமி) நில ஒழிப்புச் சட்டத்திற்கு ஏற்பட்ட நிலையைப் பார்ப்போம்.

பொய்யுடைமை வைத்திருப்போர் சொந்தப்பயிர் செய்வதில்லை. பெரும்பாலும் குத்தகைக்கே விட்டுள்ளனர். இந்தப் பொய்யுடைமைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை உச்சவரம்புச் சட்டத்தின் படி பிடுங்கப்பட்டு மறுபங்கீடு செய்யப்படுமா அல்லது கைப்பற்றாக வைத்திருக்கும் குத்தகையாளருக்கு ஒப்படைக்கப்படுமா என்ற குழப்பம் ஏற்படும். (இந்த வகையில் சட்டம் என்ன சொல்கிறதென்று எனக்குத் தெரியவில்லை) அப்படியானால் இன்றைய குத்தகையாளருக்கு அது எதிரானதாக இருக்கும். எனவே அவர்கள் எதிர்ப்பர். அதே நேரத்தில் மறுபங்கீடு செய்யப்படுமானால் யார் யாருக்குக் கிடைக்கும் என்பது முன்கூட்டியே தெரியாதாகையால் அதில் எவருக்கும் கவனம் இருக்காது. மாறாக பொய்யுடைமை ஒழிப்பையும் குத்தகை ஒழிப்பையும் இணைத்து முழக்கம் வைத்தால் குத்தகையாளர்களுக்குத் தங்களுக்கு எவ்வளவு நிலம் கிடைக்கும் என்ற உறுதி ஏற்பட்டு அவர்கள் போரிட முன்வருவர்.

முதலாளியக் குமுகம் என்பது பொதுமைக் குமுகம் உருவாவதற்குத் தேவையான பொருளியல் அடித்தளத்தை உருவாக்குவது என்பது மார்க்சின் கூற்று. மிகப்பெரும்பாலான மக்கள் உடைமைகளை இழந்து விரல்விட்டு எண்ணத்தக்க சிலரிடம் உடைமைகள் அனைத்தும் குவிதல், அவற்றில் மக்கள் கூலியாட்களாக கூட்டம் கூட்டமாகப் பணியாற்றுவதால், தங்களுக்குள் மக்கள் திரளாகுதல். இந்தக் கட்டத்திலிருந்து உடைமையாளர்களாகிய விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரிடமிருந்து உடைமைகளைப் பறித்து எவருக்கும் உடைமையில்லாத அதே நேரத்தில் அனைவருக்கும் உடைமையுள்ள ஒரு நிலையே உருவாக்குவது. அந்த வகையில் குத்தகை உடைமைகள் சொந்த உடைமைகளாவதும் சிறுஉடமைகள் மறைவதும் முற்போக்கானவையேயன்றி பிற்போக்கானவையல்ல.

கோயில்கள் மற்றும் மடங்களின் நிலங்கள் குத்தகை உடைமைகளாகவே உள்ளன. ஆனால் குத்தகை ஒழிப்புச் சட்டங்களிலிருந்து விலக்கு உண்டு. இதனால் இந்தக் குத்தகையாளருக்குப் பாதுகாப்பில்லை. ஆனால் தனியார் நிலங்கள் போன்று உடைமையாளராகிய கோயில்கள் அல்லது மடங்களில் நெருக்கமான கண்காணிப்பு இல்லாததால் நாளடைவில் வாரம் செலுத்துவது குறைந்துவிட்டது. இதனால் இச்சமய அமைப்புகளின் மூலம் பயனடையும் குழுக்கள் இணைந்து ஆலயப் பாதுகாப்பு என்ற பெயரில் குத்தகை நிலங்களைப் பறிமுதல் செய்ய விரும்புகின்றன. பா.ச.க., இரா.சே.ச. (ஆர்.எசு.எசு.) இந்துமுன்னணி போன்ற அமைப்புகள் இந்த முயற்சிக்கு அரசியல் பின்னணி அளிக்கின்றன. குத்தகையாளர்கள் ஆளற்றுவிடப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் கோயில் மற்றும் மடங்களின் நிலங்களுக்கும் குத்தகைச் சட்டத்தை விரிவுபடுத்துமாறு போராடத் தொங்கினால் அதன் விளைவுகள் மிக முற்போக்காக இருக்கும்.

1. இதனால் பயன்பெறும் மக்களில் மிகப்பெரும்பாலோர் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோரே. இதனால் இவ்விரு பிரிவினரிடையிலும் உயிரியக்கமான ஒரு இணைப்பு ஏற்படும். ஆயிரமாயிரம் நல்லிணக்கக் குழுக்களும் அரசியல், குமுகியல் குழுக்களும் ஒன்றிணையுங்கள் ஒன்றிணையுங்கள் என்று குரலெழுப்பியும் இணைவதற்குப் பகரம் பிளவு விரிந்து சாதிச் சண்டைகள் மலிந்து வருகின்றன. சாதி மேட்டிமையுணர்வும் ஒதுக்கீட்டுச் சிக்கலும் பிளவுபடுத்தும் விசைகளைத் தலைமையில் கொண்டு வைத்துள்ளன, குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கு. அதே நேரத்தில் இரு சாராருக்கும் பொதுவான பொருளியல் சிக்கல்கள் வெளிப்படுத்தப்படுமானால் இப்பிளவுபடுத்தும் விசைகள் தூக்கி எறியப்பட்டு ஒற்றுமையை வலியுறுத்தும் கூறுகள் தலைமையைக் கைப்பற்றும்.


2. கோயில் சொத்துகளைப் பிடுங்குவது என்று வரும் போது சமயப் பிற்போக்கு விசைகளுக்கும் பண்ட விளைப்பிலீடுபட்டிருக்கும் பொதுமக்களுக்கும் முரண்பாடுகள் முற்றும். கடவுள், கோயில், இந்துமதம் அதன் வருண அமைப்பு முதலிய கேள்விகள் மீண்டும் பூதவடிவில் பிற்போக்கர்களை அச்சுறுத்தும் வகையில் எளிய மக்களிடமும் வேர் கொள்ளும். இதையே பயன்படுத்தி கருவறை முதல் கோபுர வாசல் வரை வருணமுறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கோயில்களை இடிக்கும் வரைகூட நாம் இதை நடத்திச் செல்லலாம். ஏனென்றால் கோயில் அல்லது மடச்சொத்துகள் தஞ்சை மாவட்டதில் மட்டும் குவிந்து கிடக்கவில்லை. தமிழகம் முழுவதுமே பரந்து கிடக்கின்றன. நன்செய் நிலத்தில் 25 நூற்றுமேனியும் புன்செய் நிலத்தில் கணிசமான அளவும் உள்ளன. எனவே போராட்டம் பரந்த அளவில் பரவும்.


3. உழவர்கள் மீது அரசு கட்டவீழ்த்துவிட்டிருக்கும் நேரடியான (கொள்முதல் விலை முதலியவை) மற்றும் மறைமுகமான (கடன், மானியம் முதலியவை) ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நிலைப்பாடு, நடுவண், மாநில அரசுக்கு எதிரான ஒரு மக்கள் போராட்டத்தை உருவாக்கும். இது அடிப்படையில் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகும். பஞ்சாபில் சமயப் போராகத் திசைதிருப்ப ஆட்சியாளர்கள் முயன்றும் வெற்றி பெறாத ஓர் வலிமையான பொருளியல் உள்ளடக்கத்தைக் கொண்டதாகும்.


4. கோயில் சொத்துகளின் மீது கைவைக்கும் போராட்டம் தொடங்கப்படும் போது பா.ச.க. போன்ற பிற்போக்கு விசைகள் தங்கள் உண்மையான உருவத்தை வெளிப்படுத்தும். சாதி மேட்டிமையால் அக்கும்பலை ஆதரிக்கும் பிற்படுத்தப்பட்டோரிடையில் பிளவுகள் ஏற்பட்டு முற்போக்கு விசைகள் வலிமை பெறும். வெளியிலிருந்து வந்திருக்கும் இந்தப் பார்ப்பனிய பிற்போக்குக் கும்பல்கள் தமிழக மண்ணிலிருந்து வீசியெறியப்படும். உள்ளிருக்கும் விசைகள் தகர்க்கப்படும்.


5. ஒரு மக்கள் போராட்டம் குமுகியல் குறிக்கோள்களைக் கொண்டதாகவோ அல்லது பொருளியல் நோக்கங்களைக் கொண்டதாகவோ இருக்கலாம். பெரும்பாலும் பொருளியல் நலன்களோடு இணைத்து மேற்கொள்ளப்படும் குமுகியல் போர்கள் தாம் வெற்றியை நோக்கிச் செல்லும். அவ்வாறு தான் திராவிட இயக்கத்தில் பல்வேறு சாதிக் குழுக்களின் செயற்பாடும். தங்களுக்கு நிறைவு தரும் அளவுக்குக் குமுகியல் சிக்கல்களில் ஒரு தீர்வு ஏற்பட்டுவிட்டால் அவை இரண்டு தளங்களில் செயற்படுகின்றன. ஒன்று தங்கள் பொருளியல் மேம்பாடு நோக்கியது. மற்றொன்று கீழ்மட்டங்களிலிருந்து தமக்கு வரும் குமுகியல் அறைகூவல்களை எதிர்கொள்வது. இவ்விரு தளங்களின் மேலிருந்து தான் தமிழ்நாட்டுத் சாதிக் குழுக்கள் திராவிட இயக்கத்தில் செயற்பட்டன. வெள்ளாளர், நாயக்கர்கள், பின்னர் நாடார்கள் என்று ஒவ்வொரு சாதியும் தத்தம் சாதிமட்டத்திற்கேற்ப ஒன்றன் பின்னொன்றாகப் பேரவை (காங்கிரசு)க் கட்சியைத் தழுவிக் கொண்டதும் பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக் கட்டிணைத் தாங்கிக் கொண்டதும் இதனால் தான்.

(தொடரும்)

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....1

08 – 09 - 1995.
பாளையங்கோட்டை.

அன்புத் தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கு வணக்கம்.

தமிழக எல்லையில் தாங்கள் திட்டமிட்டுள்ள சாலை மறியல் போராட்டத் துண்டறிக்கை[1] கிடைத்தது. நன்றி. தங்கள் போராட்டம் வெற்றிபெற நல்வாழ்த்துகளுடன் என் மனம் நிறைந்த ஆதரவையும் தருகிறேன்.

பொதுவுடைமைப் பெயர் கொண்ட ஓர் இயக்கம் தமிழக மக்களுக்குரிய பொருளியல் உரிமைச் சிக்கல்களிலொன்றைக் கையிலெடுத்திருக்கும் நிலை கண்டு வியப்பும் மகிழ்வும் அடைகிறேன். அதிலும் பாட்டாளியப் புரட்சி, கூலி உயர்வு என்ற வழக்கமான தடத்திலிருந்து விலகி வந்திருப்பது பெரும் இறும்பூது!

அதே வேளையில் என் மனதினுள் சில கேள்விகள். 29 இலக்கம் ஏக்கர் நிலத்துக்குப் பாய வேண்டிய நீரை மறித்துக் கன்னட அரசு தர மறுத்தும் அதற்கு எவரும் எதிர்பார்க்கத்தக்க எதிர்ப்பு அப்பகுதி மக்களிடமிருந்து எழவில்லையே ஏன்? திரு. நெடுமாறன் நெடும்பயணம் மேற்கொண்ட போதும் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லையே ஏன்? ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் வழக்கு மன்றத்துக்குச் சென்ற போதெல்லாம் மாநில அரசு இறங்கி வந்து ஏமாற்றியும் பெருநிலக்கிழார்கள் வலிய எதிர்ப்பொன்றையும் தெரிவிக்கவில்லையே என்ற கேள்விகளுக்கு விடைகாண நான் என் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்குக் சில விடைகள் கிடைத்துள்ளன. அவற்றைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் முடிவுகள் சரியானவை அல்லது ஆய்ந்து பார்க்கத் தக்கவை என்று நீங்கள் கருதினால் காவிரிப் பரப்பில் அவற்றை நடைமுறைப்படுத்திப் பாருங்கள் என்று வேண்டுகிறேன்.

1. தஞ்சை மாவட்டத்தை மூடி(சீலிட்டு)க் கொள்முதலை அரசு மட்டும் நடத்துவது.

இது பற்றிய உண்மைகளாவன:


தஞ்சை மாவட்டத்தில் விளையும் நெல் கேரளமாகிய சந்தையை நோக்கியது. கேரளத்தில் விரும்பப்படும் பருக்கன்(மோட்டா) வகை நெல்லே அங்கு விளைகிறது. பெருநிலவுடையோர் மட்டும் தங்களுக்கென்று பொடி வகைகளைப் பயிரிட்டுக் கொள்கின்றனர். கேரளத்தில் நெல், அரிசி ஆகியவற்றின் விலைகள் தமிழகத்திலுள்ளதை விட மிகக் கூடுதலாகும். எனவே கட்டுப்பாட்டு விலையில் கொள்முதல் செய்யப்பட்டு இசைவாணை(பெர்மிட்) வைத்திருக்கும் வாணிகர்கள் மூலமாக இந்நெல் கேரளத்துக்கு விற்பனையாகும் போது அவ்வாணிகர்கள் பெரும் ஆதாயம் ஈட்டுகிறார்கள். ஆனால் அவ்வாதாயத்தில் பெரும் பகுதியை நாட்டிலிருக்கும் எண்ணற்ற சோதனைச் சாவடிகள் மூலம் ஆட்சியாளர்கள் பிடுங்கிக்கொள்கிறார்கள். விளைப்பவனும் நுகர்பவனும் ஒருசேர இழப்பெய்துகின்றனர். வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் நெல் வாணிகம் செய்யலாமென்று விட்டால் போட்டியில் வாங்குமிடத்துக்கும் விற்குமிடத்துக்குமுள்ள விலை வேறுபாடு குறையும்; உழவன் உண்மையில் ஆதாயம் பெறுவான். ஆனால் அதற்கு இன்று வழியில்லை. ஆதாயமில்லாத தொழிலாக நெற்பயிர் மாறியபடியால் அரசு பணப்பயிர்களைப் பரிந்துரைத்த போது அதனை நாடத்தொடங்கினர். பணப்பயிர் விற்பனையில் நெல் விற்பனையில் போன்ற கெடுபிடிகள் இல்லை. இந்தச் சூழ்நிலையில் தான் காவிரி தண்ணீர் குறைந்தது மிகப் பெரிய பாதிப்பாக தஞ்சை உழவர்களுக்குத் தெரியவில்லையோ என்று நினைக்கிறேன்.

கேரளத்து எல்லையைத் திறந்து விட்டால் தமிழகத்திலுள்ள அரிசியை எல்லாம் அவர்கள் கொண்டுபோய் விடுவார்களே என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இன்று என்ன கேரள மக்கள் பட்டினியா கிடக்கிறார்கள்? நன்றாக வயிராறச் சாப்பிடத் தான் செய்கிறார்கள். எல்லைகளைக் கண்காணிப்பதால் கேரள மக்களின் அரிசி நுகர்வு ஒன்றும் குறைந்துபோய்விடவில்லை. தில்லியில் இருப்பவர்கள் உட்பட நம் ஆட்சியாளர்களின் பைகள் தாம் நிரம்புகின்றன.

உண்மையில் நடப்பது என்னவென்றால் தமிழகத்துக்கு வேண்டிய பொடி அரிசி ஆந்திரத்தில் விளைவதாகும். தஞ்சையில் விளையும் பருக்கன் அரிசி கேரளத்துக்குச் சென்று விடுவதால் தமிழகத்தின் தேவையை ஆந்திர அரிசி ஈடுசெய்கிறது. குமரி மாவட்டம் வரை இந்நெல் வந்து இறங்குகிறது. அதாவது ஆந்திரம், கேரளம், தமிழகம் மூன்றும் ஒரே உணவு மண்டலமாக நெடுங்காலம் செயற்பட்டு வருகிறது. இவற்றின் எல்லைகளில் வள்ளுவர் கூறியது போல் ஆட்சியாளர்கள் “வேலொடு நின்று” பணம் பறிக்கிறார்கள்.

இன்றைய நிலையில் ஆந்திரத்திலிருந்தோ வேறு எந்த மாநிலத்திலிருந்தோ நெல் உட்பட பிற பொருட்கள் கேரளத்துக்குச் செல்வதற்குச் சரியான பாதை கிடையாது. தமிழகத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் கொங்கன் இருப்புப் பாதை திட்டம் நிறைவேறிவிட்டால் கன்னடத்திலிருந்து கேரளத்துக்கு அரிசி நேரடியாகச் சென்று விடும். காவிரியை மறித்துக் கட்டப்பட்ட பல்வேறு அணைகளின் பாசனப் பரப்பில் விளையும் மிகுதி நெல்லை வாங்கிக் கொள்ளும் சந்தையாகக் கேரளம் மாறிவிடும். தஞ்சை மாவட்டத்து நெல்லுக்குச் சந்தை இல்லாமல் போய்விடும். காவிரி நீரின் மீது தஞ்சை மக்களுக்கு இருக்கும் ஆர்வம் இன்னும் குன்றிவிடும்.

இந்த மறியல் போராட்டத்தைக் காணரம் காட்டிக் கன்னட வெறியர்கள் கொங்கன் இரும்புப் பாதையை உடனடியாக முடிக்கச் சொல்லி நெருக்குவர். செயலிலும் கன்னடனாக விளங்கும் இருப்புப் பாதை அமைச்சர் சாபர் செரீப் இதையே சாக்காகக் கொண்டு அப்பாதையை விரைந்து முடித்து விடுவான். எனவே நீங்கள் போராடினாலும் இல்லையென்றாலும் தஞ்சை நெல்லுக்குக் கேரளச் சந்தை இழப்பு என்பது சற்று முன்பின்னாகத் தான் நடைபெறும். எனவே தமிழகத் தேவைகளுக்கு உகந்த நெல்வகைகளைப் பயிரிடுமாறு அம்மக்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும். அத்துடன் அரசை எதிர்த்துக் கீழ்க்கண்ட முழக்கங்களை வைக்க வேண்டும்.

1. வேளாண் பொருட் போக்குவரத்துக்கு அனைத்து மாநிலங்களின் எல்லைகளையும் திறந்து விட வேண்டும்.

2. வேளாண் விளைபொருட்களுக்கு விலைவைக்கும் உரிமை உழவர்களுக்கே இருக்க வேண்டும்.

3. வேளாண் விளைபொருள் விலை ஆணையம் ஒழிக்கப்பட வேண்டும்.

4. நெல் போன்ற உணவுப் பொருள் வாணிகத்துக்கு உரிமம், இசைவாணை போன்ற முறைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

5. உழவர்களுக்கு அரசு வழங்கும் கடன் பணமாகவே இருக்க வேண்டும்.

6. அரசின் முற்றுரிமை (ஏகபோக)க் கொள்முதல் திட்டம் முற்றாகக் கைவிடப்படல் வேண்டும்.

இவற்றில் வேளாண் விளைபொருளுக்கு விலை வைக்கும் உரிமை பற்றி: 1982என்று நினைவு, அந்த ஆண்டில் வேளாண் விலை ஆணையம் நிறுவிய நெல் விளைப்புச் செலவு குவின்றாலுக்கு பஞ்சாபில் உரூ.122⁄-தமிழகத்தில் உரூ.150⁄-. இந்த நிலையில் இந்தியா என்ற பெரிய சந்தையில் பஞ்சாபியர்கள் ஆதாயத்தை அள்ளிக் குவித்திருக்க முடியும். இந்தியா அவர்களுக்குத் தேவருலகமாகத் திகழ்ந்திருக்கும். ஆனால் இந்தக் காலக் கட்டத்திலிருந்து தான் பஞ்சாபில் விடுதலை வேட்கை ஆயுதம் தாங்கிய போராக வெடித்தது. காரணம் என்ன? வேளாண் விளைபொருள் விலை ஆணையமும் கட்டாயக் கொள்முதல் திட்டமும் தேசிய ஒடுக்குமுறையின் ஓர் வடிவமாகும் என்பதே. பஞ்சாப் உழவர்கள் உழைத்த உழைப்பின் பயனை ஆட்சியாளர்கள் உரிமம் பெற்ற வாணிகர்களை மூலம் பறித்துக் கொண்டனர் என்பதே. எனவே இக்கோரிக்கைகள் தஞ்சை உழவர்கள் மட்டுமல்ல இந்திய உழவர்கள் அனைவரின் கவனத்தையும் கவரும்.

அரசின் கடன் கொள்கை ஆட்சியாளர்களின் ஊழல்களுக்காகவே அமைந்துள்ளது. விலை குறைப்புடன் வழங்கப்படும் உரம், அடியுரம் தேவைப்படும்போது மேலுரமும் மேலுரம் தேவைப்படும்போது அடியுரமும் வழங்கப்படுகிறது. இவ்வுரத்தைக் கடைகளில் குறைந்த விலையில் விற்று உயர்ந்த விலையில் தேவையான உரத்தை வாங்க வேண்டியுள்ளது. இதனால் பெயரளவில் உள்ள விலை குறைப்பு உழவர்களுக்குப் பயனளிக்கவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் உயர் வட்டியில் வெளியாரிடம் வாங்கப்படும் கடனை விட இது இழப்புத் தருவது. கடன் பெறுவதற்கு முன் உழவர்கள் அலையும் அலைச்சலும் படும் தொல்லைகளும் சொல்லி மாளாது. முன்னுரிமைத் துறை என்ற பெயரில் குறைந்த வட்டி கூட வேண்டாம், சந்தையில் நிலவும் வட்டியிலாயினும் பணமாகக் கிடைப்பதே உழவர்களுக்கு ஆதாயமாகும்.

(தொடரும்)

==============

[1] காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கக் கோரி தமிழக எல்லையில் சாலை மறியல்

நாள் : 25.9.95 திங்கள் காலை


இடம் : சத்தியமங்கலம்

தலைமை: தோழர் பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

காவிரிப் பாசனப் பகுதியில் 29 லட்சம் ஏக்கர் நன்செய் நாசமாகும் நிலை. குறுவை, சம்பா முற்றிலும் பாதிப்பு. நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி வேண்டிய தண்ணீரைக் கர்நாடகம் தர மறுப்பதால் தமிழ்நாட்டிற்கு இந்த அவலம்.

கர்நாடகக் கிருஷ்ணராஜ சாகர் அணையில் நிறைய நீர் உள்ளது. கபினி நிரம்பி விட்டது. ஆனாலும், கர்நாடகம் மோசடி செய்கிறது. இந்திய அரசோ, இதைக் கண்டு கொள்ளாமல் தமிழர்களை வஞ்சிக்கிறது.

கர்நாடகத்திற்கு நெருக்கடி கொடுத்துதான் நமது உரிமையை நிலைநாட்ட முடியும். தமிழக அரசு கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழகத்தின் வழியாகக் கர்நாடகம் பொருள் போக்குவரத்து நடத்தத் தடை விதிக்க வேண்டும்.

தமிழக அரசு இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி நடைபெறும் சாலை மறியலுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

தலைமையகம்,
53,ஜமீன்தார் குடியிருப்பு,
புது ஆற்றுச் சாலை,
தஞ்சாவூர் - 613 001.

தஞ்சை நெல் கொள்முதல்

“தஞ்சை நெல் கொள்முதல்” - தினமணிக்கு மடல்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

7.2.95 தினமணியில் தஞ்சையில் நெல் கொள்முதலில் தனியார் கை ஒங்குவது பற்றிய செய்தியைப் படித்தேன். தனியாரின் போட்டியை எதிர்கொள்வதற்காக அரசு தன் அரியாசனத்திலிருந்து இறங்கி மக்களிடம் வரத் தொடங்கியிருப்பது ஒரு நல்ல அறிகுறி. இருந்தாலும் தனியாரின் கையை முறுக்கி வழிக்குக் கொண்டும் வரும் வசதிகள் அரசுக்கு உண்டு.

தஞ்சையில் பெரும்பாலும் விளைவிப்பது மோட்டா ரகம் எனப்படும் பருக்கன் நெல்லாகும். இது கேரளத்து மக்களுக்கென்றே விளைவிக்கப்படுகிறது. இது தஞ்சை மண்டலத்து உழவர்களுக்கும் தெரியும், ஆள்வோருக்கும் தெரியும், வாணிகர்களுக்கும் தெரியும். இருந்தாலும் தமிழகம் அரிசியில் பற்றாக்குறை மாநிலமென்றும் அதனால் கேரளத்துக்கு நெல் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும் ஒரு பொய்யான காரணம் கூறப்படுகிறது. உண்மையில் கேரளத்து மக்களுக்குத் தேவையான அரிசி தமிழகத்திலிருந்து சென்றுகொண்டுதான் இருக்கிறது. ஆனால் எல்லையை "அடைத்து" விடுவதனால் கேரளத்து மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். அந்த அதிக விலையில் வாணிகர்களும் அதனை விட அரசாள்வோரும் பங்கு பெறுகிறார்கள். விளைப்போராகிய தஞ்சை உழவர்களும் உண்போராகிய கேரள மக்களும்தான் இழப்பெய்துகிறார்கள்.

இப்போது தஞ்சையில் முற்றுரிமைக் கொள்முதலைக் கைவிட்டதனால் ஊக்கம் பெற்றுவிட்ட வாணிகர்களை எல்லைகளை இன்னும் "இறுக்கமாக" மூடுவதன் மூலம் நெருக்கடிக்குள்ளாகிப் பைகளை நிரப்பிக் கொள்வர் ஆள்வோர்.

தஞ்சை, மேற்குமலைத் தொடரின் அடிவாரம் ஆகிய இடங்களில் கேரளச் சந்தையை மனதில் கொண்டு நெல் விளைவிக்கப்பட்டு தமிழக அரசாள்வோருக்குக் கப்பம் கட்டப்பட்டு கேரளத்துக்குச் செல்கிறது. அதே போல் ஆந்திர நெல்தான் எப்போதும் தமிழக மக்களின் பசியைப் போக்குகிறது. இவ்வாறு ஆந்திரம், தமிழகம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் நெல்லைப் பயன்படுத்துவதில் ஓரே மண்டலமாகச் செயற்படுகின்றன. இந்த நிலையைப் பயன்படுத்தி இம்மாநிலங்களை ஆள்வோர் தத்தம் எல்லைகளை அடைத்து மக்களின் உணவு எனும் அடிப்படைத் தேவையைப் பயன்படுத்தி ஏறக்குறைய முப்பதாண்டுகளாக வழிப்பறி செய்து வருகின்றனர்.

மேற்படி மூன்று மாநிலங்களும் ஒரே மண்டலமாகச் செயற்படுவதை மறைத்துத் தமிழகம் பற்றாக்குறை மாநிலமென்ற பொய் அரங்கேற்றப்பட்டுள்ளது. ம.கோ.இரா. ஆட்சிக் காலத்தில் ஆந்திர எல்லையைக் "கண்காணிக்காமல்" இருந்ததனால்தான் அக்காலகட்டத்தில் என்றென்றும் தமிழகத்தில் மக்களுக்கு அரிசிப் பஞ்சமே வரவில்லை.

1989இல் தி.மு.க. மறுபடியும் ஆட்சிக்கு வந்தபோது உணவமைச்சரான ஆர்க்காட்டு வீராசாமி ஆந்திர எல்லையில் விளையாடியதும் அதன் காரணமாக அரிசி விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்ததும் இதைக் காரணமாகக் காட்டி திருச்சி வட்டார அரிசி ஆலைகளுக்கு அவர் பெரும் தொல்லை கொடுத்ததும் அவரது அட்டூழியங்களைப் பொறுக்க முடியாதபோது அவரை வெளியேற்றித் தன்னைக் கருணாநிதி தற்காத்துக் கொண்டதும் இன்றும் நினைவில் நிற்கும் நிகழ்ச்சிகள்.

இன்று ஆந்திர முதலமைச்சர் 2 உரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம் அறிவித்திருக்கிறார். அவருடன் தமிழக முதல்வர் அடிக்கடி கூடிக் குலாவி வருகிறார். இரு மாநில உழவர்கள் வயிற்றிலும் மூன்று மாநில மக்கள் வயிற்றிலும் மண்ணள்ளிப் போட என்ன இரகசியத் திட்டம் வகுத்திருக்கிறார்களோ என்ற கலக்கம் ஏற்படுகிறது.

சாராயம், போதைப் பொருட்கள், வெடி மருந்து போன்ற நச்சுப் பொருட்களின் கடத்தல் தங்கு தடையின்றி அரசாள்வோரின் ஆதரவுடன் நடந்துகொண்டிருக்கிறது. காற்று, நீர் போன்று மக்களின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருளின் போக்குவரத்தில் குறுக்கீடு செய்து அந்தப் போக்குவரத்தைக் "கடத்தல்" என்ற இழிசொல்லால் குறிப்பிடுவதும் அதைப் பொதுமக்கள் பொருட்படுத்தாமல் பொறுத்துக்கொள்வதும் கொடுமை. வெடிப் பொருள்கள், நச்சுப் பொருட்கள் ஆகியவற்றின் விற்பனைக்குத் தேவைப்படுவது போல் உணவுப் பொருட்கள் வாணிகத்திலும் உரிமம் பெற வேண்டுமென்பது பகுத்தறிவற்ற செயல். விருப்பமும் வாய்ப்பும் உள்ள எவருக்கும் உணவுப் பொருட்களை வாங்கவும் விற்கவும் உரிமை வேண்டும். குறிப்பாகச் சில்லரை வாணிகர்கள் உணவுப் பொருள் விற்பனையில் தங்கு தடையின்றி ஈடுபட வேண்டும். அப்போதுதான் விளைப்போருக்கும் உண்போருக்கும் இடையில் ஏறக்குறைய நேரடியான தொடர்பு ஏற்படும். தேவைக்கும் வழங்கலுக்குமாக உறவு பேணப்படும். பதுக்கல்காரர்களின் முயற்சிகளை நுண்ணுயிரிகள் போல் சிதைக்கும் ஆற்றல் இந்தச் சில்லரை வாணிகர்களுக்கு உண்டு.

நம் நாட்டில் உணவுப் பொருள் பற்றாக்குறை இல்லை என்பது நாமனைவரும் அறிந்ததே. அப்படியிருக்க போக்குவரத்துக் கட்டுப்பாடும் வாணிகத்துக்கு உரிமமும் எதற்காக? பொது வழங்கலுக்காக என்றால் அரசு வெளிச் சந்தையில் வாங்கி வழங்கட்டுமே. ஏழைகளின் பெயரைச் சொல்லி உழவனின் வயிற்றிலடித்து வேளாண்மையை நசுக்கி மண்ணைத் தரிசாக்கினால் இந்த நாட்டு ஏழைக்கு எங்கிருந்து வாழ்வு கிடைக்கும். இந்தக் கேள்வி அனைவர் அறிவிலும் உறைக்க வேண்டும்.

குமரிமைந்தன்,
12, தெற்குக்கடைவீதி(மாடி),
பாளையங்கோட்டை - 627002.

வெற்றிடம்

'இந்தியா'வினுள் அயல்நாட்டு மூலதனம் இறங்குவதற்கெதிராகப் "பொதுமை"யினர் அடிக்கடி வெற்றுக் கூச்சல் எழுப்புவதைப் பார்க்கிறோம். இவர்களது இந்தக் கூக்குரல் நேர்மையாயிருந்தால் அவர்கள் இரு கேள்விகளுக்கு விடை கூறியாக வேண்டும். நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கும் அதன் விளைவான வளமைக்கும் முதலீடு என்ற ஒன்று தேவையா இல்லையா, அந்த முதலீட்டுக்கு வெளி மூலதனத்தை இங்கே நுழைய விடுவதைத் தவிர வேறு வழிகள் ஏதாவது உள்ளனவா என்பனவே அந்தக் கேள்விகள்.

ஆனால் இவர்களுக்கு நன்றாகத் தெரியும் பொருளியல் வளர்ச்சிக்கு முதலீடு தேவை என்பதும் 'இந்திய' அரசால் அந்தத் தேவையை நிறைவேற்ற முடியாது என்பதும். அப்படியானால் வெளி முதலீடு தான் ஒரே வழியா என்ற கேள்வியும் எழுகிறது.

இல்லை என்பதே நம் விடை. நம் நாட்டில் மூலதன வாய்ப்பு மிகப் பெரிதாக உள்ளது. அது கருப்புப் பணம் என்ற முத்திரையிடப்பட்டு பதுங்கிக் கிடக்கிறது.

உண்மையில் கருப்புப் பணம் என்பது என்ன?

'கருப்புப் பணம்' என்ற சொல்லைக் கேட்டவுடனேயே அது ஏதோ சட்டத்துக்குப் புறம்பான வழியில் சேர்ந்த பணம் என்ற எண்ணம் தான் நம் கருத்தில் எழுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.

போபர்சு ஊழலில் சுருட்டப்பட்ட பல நூறு கோடி உருவாக்களையோ பங்குச் சந்தை ஊழலில் திருடப்பட்ட பல்லாயிரம் கோடி உருவாக்களையோ போன்றதல்ல கருப்புப் பணம் எனப்படுவது. இன்றைய சட்டங்கள் ஏற்றுக் கொள்ளும் விதிகளின் படி ஈட்டப்பட்ட பணம் தான் கருப்புப் பணம் எனும் முத்திரை குத்தப்படுகிறது. ஒருவன் வருமான வரித்துறைக்குக் காட்டாமல் மறைக்கும் பணம் கருப்புப் பணமாகிறது.

அதே நேரத்தில் ஒரு போலி நிறுவனத்தைப் பெயருக்கு நடத்துவது போல் நடிக்கும் ஒரு வழிப்பறிக்காரன் தன் தேட்டைகளைத் தன் போலி நிறவனத்திலிருந்து வந்த வருமானமாகக் காட்டிவிட்டு அரசு நிறுவும் ஏதோவொரு நூற்றுமேனியை வருமான வரியாகக் கட்டிவிட்டானானால் அவன் பணம் "வெள்ளை"யாகிவிடுகிறது.

ஆனால் பாடுபட்டு உழைத்துச் சிந்தித்துத் திட்டமிட்டுப் பொருளியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவன் தன் ஈட்டத்தை ஒரு திருடன் தன் தேட்டையை ஆட்சியாளர்களிடம் பங்கு போட முன் வருவது போல் பங்கு போட முன்வரமாட்டான். எனவே ஆட்சியாளரின் வரம்பு மீறிய வருமான வரி விதிப்பை எதிர்ப்பதாகவே "வரி ஏய்ப்புகள்" நடைபெறுகின்றன.

இதனால் தான் தங்கள் தேட்டைகளை ஆட்சியாளர்களுடன் பங்குபோடுவதில் எந்தத் தயக்கமும் தேவைப்படாதக் குமுகப் பகைவர்கள் மட்டும் இன்றைய நிலையில் ஆதிக்கர்களாகச் சிறப்புப் பெற முடிகிறது.

உண்மையில் வருமான வரித்துறை குமுகத்தில் உருவாகும் பணத் திரட்சியைக் கருப்புப் பணமாக மாற்றும் பணியையே செய்து வருகிறது. அத்துறைக்கு வேண்டும் சம்பளம் முதலான செலவுகளை மாதச் சம்பளம் பெறுவோரிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. ஆசிரியர்கள், அரசூழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என்ற வகையினர் தான் உண்மையிலேயே வரி கட்டுகின்றனர். அண்மை ஆண்டுகளில் பெருந்தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் வருமான வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதனால் தான் ஐ.என்.டி.யூ.சி.த் தலைவராயிருந்த திரு. இராமானுசம் வருமான வரி உச்சவரம்பை உயர்த்துமாறு கேட்டார். இவர் தொல்லை தருவார் என்பதற்காக அவரை ஆளுநராக்கி அப்புறப்படுத்திவிட்டனர் பேரவைக் கட்சியினர்.

இவ்வாறு செயற்கையாக உள்நாட்டு மூலதனத்துக்கு ஓர் வெற்றிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை ஈடுசெய்வதாகக் கூறித்தான் 'இந்திய' அரசு வெளி மூலதனத்தை இறக்குமதி செய்வதாகக் கூறி நம்மை ஏமாற்றுகிறது.

ஆனால் ஆட்சியாளரின் ஏமாற்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அதே நேரம் பொதுமையினரின் ஏமாற்று மிகத் திறமையானது. ஏனென்றால் இவர்கள் வெளியார் - உள்நாட்டினர் என்றெல்லாம் பாகுபடுத்துவதில்லை. "தனியார்" என்ற சொல்லைத்தான் பயன்படுத்துவர். ஆட்சியாளர்கள் மக்களின் பொருளியல் நடவடிக்கைகளை ஒடுக்கி அயலாருக்கு நாட்டின் வளங்களை விற்றுத் தமக்குக் காசாக்குவதற்காகத் திட்டமிட்டுச் செயற்படும் போது தனியாருக்குக் கொடுக்காதே என்ற இவர்களின் கூப்பாடு உள்நாட்டு மக்களைப் புறக்கணிப்பதற்கு ஆட்சியாளருக்கு ஒரு சாக்காகவும் மக்கள் மனதில் ஒரு தடுமாற்றத்தை உண்டாக்குவதாகவும் உள்ளது. அதே நேரத்தில் அயலாருக்கு அவ்வாய்ப்புகளைக் கொடுப்பதற்கெதிராக இவ்வெற்றுக் கூச்சலால் எதையுமே செய்ய முடிவதில்லை.

எனவே இம்மண்ணின் வளங்கள் வெளிநாட்டு மூலதனப் படையெடுப்பால் கொள்ளையடிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், உள்நாட்டின் வேலை வாய்ப்புகள் பெருகி இளைஞர்களின் எதிர்காலம் ஒளிபெற வேண்டுமென்றால் உள்நாட்டு விளைப்பு பெருகி அனைத்து மக்களுக்கும் உணவு, உடை, உறையுள் என்ற நிலையை நோக்கி நாம் முன்னேற வேண்டுமானால் இந்தச் செயற்கை மூலதன வெற்றிடம் நிரப்பப்படல் வேண்டும். கருப்புப் பணம் ஆக்கப்பட்டுள்ள பணத் திரட்சி வெள்ளையாக மாற்றப்படல் வேண்டும். அதற்கு முதன்முதல் தேவை வருமான வரித்துறையின் ஒழிப்பு. தமிழகத்து இளைஞர்களே உங்கள் பார்வையை வருமான வரித்துறைக்கு எதிராகத் திருப்புங்கள். பதுக்கப்பட்டிருக்கும் பல கோடிக்கணக்கான கோடி உரூபாய்களை மூலதனமாக்கி உங்கள் எதிர்கால வாழ்வை வளப்படுத்தும் போராட்டத்தை வருமானவரித் துறை ஒழிப்புப் போராட்டத்திலிருந்து தொடங்குங்கள்.

விடுதலை பெற.....

08-09-1995,
ஆதளவிளை.

அன்புடன் அண்ணாச்சிக்கு,

வணக்கம்.

தீவட்டி இதழை பாளை இளைஞர் பீட்டர் மூலம் உங்களுக்கு கொடுத்து அனுப்பியிருந்தேன். சில நாட்களுக்கு முன்பு தொ.பேசி மூலம் கேட்டபோது நீங்கள் சென்னை சென்றிருப்பதாக அறிய முடிந்தது.

தாராமதி இதழ் கட்டுரைகளைப் படித்தேன், மார்க்சியம் கட்டுரை எழுதி முடித்து வைத்திருக்கிறீர்களா? அக்கட்டுரை வந்த தாராமதி இதழ்கள் இருக்கின்றனவா?

நீங்கள் எழுதியிருந்த தமிழ்த் தேசியம் கட்டுரையின் ஒரு பகுதி விடுதலை பெற..... என்ற தலைப்பில் தீவட்டியில் வெளியிடப்பட்டதற்கு கடிதமொன்று வந்துள்ளது.


இதற்கு விடை மடல் எழுத வேண்டும். அடுத்த இதழில் வெளியிட 2 (அ) 3 பக்க அளவில் நிற்குமாறு ஒரு கட்டுரை தேர்ந்தெடுத்து வையுங்கள் அல்லது எழுதுங்கள்.

அன்புடன்
அசுரன்
தீவட்டி, "விடியல் இல்லம்" ஆதள விளை, வெள்ளமடம் (அஞ்), குமரி – 629 305.


===============

கடிதம்:

குமரிமைந்தன் எழுதிய விடுதலை பெற... என்ற கட்டுரையினை வாசிக்கும் போது தீவட்டியின் நோக்கம், குறிக்கோள் என்ன என அறிய ஆர்வம் ஏற்படுகிறது.

தேசிய இனச் சிக்கலில் ஒடுக்கும் தேசம்/ஒடுக்கப்படும் தேசியம் என இரு கூறுகள் இருக்கும். இந்தியாவில் ஒடுக்கப்படும் தேசியமாக தமிழ் தேசியம் உள்ளது. ஆனால், அதே சமயம் ஒடுக்கும் தேசமாக இந்திய தேசியம் இல்லை. பார்ப்பனர்களால் தங்களது வசதிக்காக, தங்களது ஆளுமைக்காக, சுரண்டலுக்காக கட்டப்பட்டதே ′இந்திய தேசிய′ மாயையாகும்.

இதில் பார்ப்பனர்களால் மறுக்கப்பட்ட கல்வியினை பெறுவதற்கான போராட்டமே வகுப்புரிமைப் போராகும். இன்றைய சமுகம் சாதி எனும் கொடிய அமைப்பால் மக்களை பிரித்து வைத்துள்ளது. இத்தகைய சாதியினை ஒழிக்க வழிதான் என்ன? மனிதனின் பிறப்பு என்பதும் அவனது தொழில் என்பதையும் அவனது சாதியே நிர்ணயிக்கிறது. சாதியின் பெயராலேயே அவனுக்கு தரப்படும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

எனவே, எந்தச் சாதியின் பெயரால் உரிமை மறுக்கப்பட்டதோ அதே சாதியின் பெயரால் உரிமைகளைப் பெறுவதே வகுப்புரிமை எனப்படும் இட ஒதுக்கீட்டு முறையாகும். இதனைக் கொச்சைப்படுத்தி வெறும் வேலைவாய்ப்பு என சுருக்கியுள்ளார் குமரிமைந்தன்.

மேலும், தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களாக பார்ப்பனர்களே உள்ளனர். எனவே பார்ப்பனர்களே நமது எதிரிகள். மேலும் பிற மாநிலத்தவர் இங்கு சுரண்டுவதும் கண்டிக்கத் தக்கதே. மார்வாரிகளின் சுரண்டல் பார்ப்பன ஆதரவுடனேயே நடைபெறுகிறது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.


மேலும், பொருளியல் விடுதலையும், மண் விடுதலையும் மட்டுமே ஒரு நாட்டின் விடுதலையைப் பெற்றுத் தராது. மக்கள் விடுதலை மட்டுமே உண்மையான விடுதலையாக அமையும். மண்ணுக்கு மட்டும் விடுதலை வாங்கி எவ்வித பயனுமில்லை. வெள்ளைக்காரர்களிடம் இருந்து பெற்ற ′விடுதலை′ என்பது மண்ணுக்கான விடுதலையே மக்களுக்கான விடுதலை அல்ல. பெரியார் கூற்றுப்படி ′மேடோவர்′ செய்யப்பட்ட ′அதிகார மாற்று′ ஆகும்.

மக்களுக்கான விடுதலை என்பது மக்களைச் சாதியத் தளையிலிருந்து விடுவித்து, பெண்ணடிமையை ஒழித்து, பெறும் விடுதலையே சிறந்ததாகும்.

சாதிய ஒழிப்பிற்கு முன் நடவடிக்கையாக SC/BC ஒற்றுமையை வசப்படுத்துவதே, ஏற்படுத்துவதே சரியானதாகும். அதற்கான வழிமுறை இட ஒதுக்கீட்டு முறையே ஆகும்.

எனவே, தமிழ் தேசியத்திற்கு முன் நிபந்தனையாக சாதி ஒழிப்பு (SC/BC ஒற்றுமை), பெண் விடுதலை, போன்றவற்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

பூ. மணிமாறன்
மதுரை.

=================

விடை மடல்:

தமிழக் மக்களைத் திராவிட இயக்கம் எவ்வளவு குழப்பி வைத்துள்ளது என்பதற்குத் தோழர் மணிமாறனின் கடிதம் ஒரு சிறந்த சான்றாகும்.

1. இந்தியத் தேசியம் ஒடுக்கும் தேசியம் இல்லை. பார்ப்பனர்களால் தங்களது வசதிக்காக தங்களது ஆளுமைக்காக, சுரண்டலுக்காக கட்டப்பட்டதே இந்தியத் தேசியம்.


2. பார்ப்பனர்களால் மறுக்கப்பட்ட கல்வியைப் பெறுவதே ஒதுக்கீட்டின் நோக்கம். வேலைவாய்ப்பு தான் ஒதுக்கீட்டின் நோக்கம் என்பது அதனைக் கொச்சைப் படுத்துவதாகும்.

3. மார்வாரிகளின் சுரண்டல் பார்ப்பனர்களின் ஆதரவுடனேயே நடைபெறுகிறது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

4. மண்ணின் விடுதலை என்பது மக்களின் விடுதலை அல்ல.

5. சாதியை ஒழித்து, பெண்ணடிமையை ஒழித்துவிட்டுத்தான் தேசிய விடுதலையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

6. சாதிய ஒழிப்பிற்கு முன் நடவடிக்கையாக பிற்படுத்ததப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையை வசப்படுத்துவதே சரியாகும்.

முதலில் தேசிய ஒடுக்குமுறையின் நோக்கம் பற்றிய தோழரின் கருத்து என்னவென்பதே குழப்பமாக இருக்கிறது. ஆனால் இதில் முதலில் தெளிவு வேண்டும்.

1. தேசிய ஒடுக்குமுறையின் இறுதி நோக்கம் பொருளியல் சுரண்டலே. இந்தியாவிலுள்ள அனைத்துத் தேச மக்களின் உழைப்பினையும் செல்வங்களையும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருப்பவர்கள் மார்வாரிகள், அவர்களுக்கும் துணைபுரிந்து வல்லரசுகளுக்கும் இந்நாட்டின் செல்வங்களை எல்லாம் அள்ளிக்கொடுத்து அதில் பங்கு பெற்று இந்நாட்டின் மீது முழு ஆதிக்கம் செலுத்துபவர்கள் இந்திய அரசின் அதிகாரக் கூட்டம். அந்த அதிகாரக் கூட்டத்துக்கு மூடுதிரையாக அமைந்து இந்தத் தேசியக் கொள்ளையில் பங்கு போடுவதற்காக ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள்.

இந்த அதிகாரிகள் கும்பலில் பார்ப்பனர்கள் பெரும்பான்மையினர். பிற சாதியினர் இந்த அணியில் சேர்ந்தாலும் கொள்ளை நோக்கத்தில் மாறுபடுவதில்லை. இந்திய அரசியல் கட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்துவோர் பார்ப்பனரே, பிற சாதியைச் சேர்ந்த கட்சியினரிடமும் இந்தக் கொள்ளையிலோ அல்லது அதற்குத் துணைபோவதிலோ மாற்றமில்லை.

2. மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியைப் பெறுவது தான் ஒதுக்கீட்டின் நோக்கம் என்று உறுதிபடக் கூறுகிறார் தோழர். ஆனால் அதற்கு ஒதுக்கீடு ஏன் என்று தான் தெரியவில்லை. அனைவருக்கும் கட்டாய இலவசத் தொடக்கக் கல்வி இருந்தால் தானே அனைவரும் கல்வி பெற முடியும். ஆனால் கல்வியை விரிவுபடுத்து, அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விக்கு வகை செய் என்ற முழக்கத்தை இந்த ஒதுக்கீட்டுப் போராளிகள் இதுவரை முன் வைக்கவில்லையே ஏன்? தோழர் சிந்தித்துப் பார்க்கட்டும். கல்வி விலைப் பொருளாகிறதே. நாளுக்கு நாள் கீழ்மட்டத்து மக்களின் வறுமை பெருகுகிறதே; கல்வியின் செலவு உயர்கிறதே; பணம் படைத்தோர் பிள்ளைகள் மட்டுமே கல்வி பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டதே இதற்கு எதிராக இந்த ஒதுக்கீட்டு முழக்கம் செயல்படுகிறதா? கல்வியை இன்னும் ஒரு சலுகையாகக் காட்டுவது தானே ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையின் உட்பொருள். ஆகவே ஒதுக்கீடு என்ற முழக்கம் தானாகவே கொச்சைப்பட்டு நிற்கிறது. இன்று வேறு யாரும் அதைக் கொச்சைப்படுத்தத் தேவையில்லை. எனவே அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி என்ற போராட்டமே மறுக்கப்பட்ட கல்வியை அனைவரும் பெறுவதற்குரிய வழி.

3. தமிழகத்துப் பார்ப்பனர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் கூட முதலிடத்திலில்லை. தொழில் முதலாளிகள் என்ற நிலையிலும் தமிழக மக்களில் அவர்களுக்குத் தான் முதலிடம். (அவர்களுக்கு இணையாகவோ அல்லது அடுத்த கட்டத்திலோ செட்டியார்களும் அதற்கடுத்து நாடார்களும் வரக்கூடும்.) அவர்களது தொழில் நிறுவனங்களை விழுங்க மார்வாரிகள் ஓயாமல் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. தொழில் நிறுவனங்களின் ஆள்வினைக்கு (நிர்வாகத்துக்கு)த் தேவையான கல்வித் தகுதிகள் உள்ளவர்கள் என்பதாலேயே பார்ப்பனர்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அத்துடன் அயலவர்க்குத் தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே காலங்காலமாக விற்றுவிற்றே ஆதாயம் அடைந்துகொண்டிருப்பவர்கள் பார்ப்பனர்களும் தமிழகத்திலுள்ள வெள்ளாளர்களும். இதுவும் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டிய ஒன்றாகும்.

4. மண்ணின் விடுதலை என்பது வெறும் அரசியல் விடுதலை அல்ல. பொருளியல் விடுதலை தான் உண்மையான மக்களின் விடுதலை. மண்ணின் வளத்தின் மீதும் அந்த வளத்திலிருந்து உருவாகும் செல்வத்தின் மீதும் அந்த மக்களுக்குக் கிடைக்கும் தடையற்ற உரிமை தான் அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைக்கும் அடிப்படை உரிமை. அந்த உரிமையிலிருந்துதான், அந்த உரிமைக்கான போராட்டத்தின் போதுதான், அந்தப் போராட்டம் கூர்மை பெற்று உச்ச கட்டத்தை அடையும் போதுதான் அனைத்து மக்களின் ஒற்றுமையின் தேவை அனைவராலும் உணரப்பட்டு அதற்கான உண்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அம்முயற்சிகள் தாம் உண்மையான மக்கள் ஒற்றுமையை உருவாக்கும்.

5. மண்ணின் உரிமைக்கான, அதாவது பொருளியல் உரிமைக்கான போராட்டத்தில்தான் சாதிய ஒழிப்புக்குரிய களம் உருவாக முடியும். அப்போராட்டத்தில்தான் பெண்ணடிமைக் கருத்துகள் தளரும். பொருளியல் உரிமையோடு அனைவருக்கும் கல்வியும் கைவந்து வேலைவாய்ப்புகள் மட்டின்றிப் பெருகிப் பெண் தன் காலில் நிற்கும் சூழலில்தான் பெண் உரிமை முழுமை பெறும். சாதிகள் தொழிலடிப்படையில் அமைந்தவை தானே. அத்தொழில்கள் சிதைந்து அனைவரும் ஈடுபடத்தக்க பெருந்தொழில்களால்தான் சாதியத்தின் தொழிலடிப்படை முடிவுக்கு வரும். அது மட்டுமல்ல இன்று இருக்கின்ற ஊர்களின் அமைப்பே சாதித் தகர்ப்புக்குத் தடையானவையாகும். இந்த ஊர் மக்கள் தங்கள் இருப்பிடங்களைக் கைவிட்டு வெளியேறுமளவுக்குப் பொருளியல் வேகம் பெற்றால்தான் சாதியம் கலைந்து சிதையத் தேவையான பின்னணி உருவாகும். இந்த உண்மைகள் நாட்டுப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கே எளிதில் விளங்கும். அதுவரை சாதி ஒழிப்பும் பெண்ணடிமை ஒழிப்பும் வெற்றுக்கனவாகவும் வெறும் முழக்கமாகவும் தானிருக்கும்.

6. சாதிய ஒழிப்புக்கு முன் நடவடிக்கையாக பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையை வசப்படுத்துவதே சரியாகுமாம். இதற்கு ஏதாவது வசிய மருந்து வைத்திருக்கிறாரா தோழர். இன்று பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் தான் முரணி நிற்கின்றனரா? பிற்படுத்தப்பட்டோர் என்ற வகைப்பாட்டினுள் வரும் அனைத்துப் பிரிவினரும் ஒதுக்கீட்டில் தத்தமக்கு அதிகப் பங்கு வேண்டும் என்பதற்காகத் தானே தனித்தனிச் சங்கங்கள் அமைத்து அனைவருக்கும் சாதி வெறியூட்டிக் கொண்டிருக்கிறார்கள். தோழர் கண்ணையும் காதுகளையும் இறுகப் பொத்திக் கொண்டுள்ளாரா? அல்லது நாம் அவ்வாறு பொத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? இல்லாத அல்லது அருகி வரும் வேலை வாய்ப்புக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிகளாகப் பிரிந்தும் சாதிகள் உட்சாதிகளாகப் பிரிந்தும் சண்டை போடுவது அவருக்குப் புரியவில்லையா?

தாழ்த்தப்பட்டோரிலும் வேலை வாய்ப்புக்காகவும் சாதிய ஒடுக்குமுறையினாலும் தம்முள் பள்ளர், பறையர், சக்கிலியர் எனப் பிரிந்து நிற்பதைத் தோழர் அறியாரா?

பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் முரண்பாடு இரண்டு கேள்விகளை எழுப்புகிறது. சாதியக் கொடுமைகளுக்குப் பார்ப்பனர்கள் மட்டும் தான் காரணமா? இந்த மக்களின் குருதியோடு கலந்து விட்ட ஒரு செயற்பாட்டின் உச்சியிலிருப்போர் தானே பார்ப்பனர். மக்களுக்குள் நிலைத்துவிட்ட இந்தச் சாதிக் கொடுமையின் அடையாளம் தான் பார்ப்பனர்களே ஒழிய வேறில்லை. சாதியம் அனைத்து மக்களிலும் நிலைத்து நிற்கிறது. இந்தச் சாதியம் இந்த நூற்றாண்ணில் இருமுறை தமிழகத்தில் இளகியது. ஒருமுறை ′இந்திய′ விடுதலைப் போரின் போது, மறுமுறை திராவிட இயக்கம் தமிழக அதாவது திராவிட விடுதலையையும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பார்ப்பனரல்லாதார் அனைவருக்கும் ஒதுக்கீடு கேட்டுப் போராடிய போதும் அந்த ஒதுக்கீடு என்று கிடைத்ததோ அன்றே அதில் பங்குச் சண்டைக்காகச் சாதிச் சங்கங்கள் மீண்டும் வலுப்பெறத் தொடங்கி விட்டன. எனவே இன்றைய நிலையில் இல்லாத வேலை வாய்ப்புக்காக வலிந்து ஒதுக்கீட்டுப் போராட்டம் நடத்துவது தமிழ்க் குமுகத்தைச் சிதைத்து அழித்துவிடும்.

கண்முன் நடப்பது தமிழக வளங்கள் சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுச் செல்வத்தை வைத்திருப்போர் மார்வாடிகளாலும் வல்லரசு விசைகளாலும் இந்திய மாநில அரசுகளாலும் ஒடுக்கப்படுவதும் கொடுமைப்படுத்தப்படுவதுமாகும். அந்தச் செல்வத்துக்குத் தமிழக மக்கள் அனைவரும் உரிமையுள்ளவர்கள். அதற்காகப் போராடுவோம். அப்போராட்டத் தீயில் சாதி வேற்றுமைகளைப் பொசுங்க வைப்போம். இதைத் தன்னுணர்வுடன் திட்டமிட்டுச் செய்வோம்.

பார்ப்பனர்கள் அரசுப் பணிகளில் மட்டும் வேலைவாய்ப்புகளைப் பெறவில்லை. எண்ணற்ற தங்கள் தொழில் நிறுவனங்கள் மூலமாகவும் பெறுகிறார்கள். அதே போல் பிற சாதியினரும் சாதி வேறுபாடின்றி தங்கள் வேலைவாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளும் வகையில் தங்களிடமிருக்கும் வளங்களைத் திரட்டித் தமிழகத்தின் தொழில் வளத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதற்குத் தடையாக நிற்கும் அரசின் சட்ட திட்டங்களையும் கட்டுத்திட்டங்களையும் எதிர்த்து அனைவரும் சாதிவேறுபாடின்றிப் போராடி வெற்றி பெற வேண்டும்.

ஆனால் இந்த ஒதுக்கீடு என்ற மாயமான் பிற சாதிகளிடையில் செய்யும் சிதைவு வேலையைப் பார்த்தீர்களா? தமிழகத்தில் பார்ப்பனர்களை அடுத்துச் செல்வம் படைத்தவர்களாகிய நாடார்கள் பணம் திரட்டி மாநாடு கூட்டி தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோரென்று அறிவிக்கக் கேட்கிறார்கள்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்கள் இருந்த நிலைக்கும் இன்று அவர்கள் எய்தியிருக்கும் உயர் நிலைக்கும் அவர்களை பந்தயத்தில் முதலில் வந்தவன் போன்று இறுமாப்பெய்தித் தங்களை முற்பட்டவர்களென்று அறிவிக்க வேண்டுமென்று கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு தமிழக மக்களின் ″பிற்பட்டோர் மனப்பான்மை″யை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் மிகப்பிற்படுத்தப்பட்டோர் என்று அறிவிப்பதற்காகக் கையூட்டு கொடுக்கவும் இன்று அவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இது எவ்வளவு கொடுமை? இந்த ″பிற்படுத்தப்பட்டோர் மனக்கோளாறு″ நம்மை எங்கே கொண்டு நிறுத்தியிருக்கிறது பார்த்தீர்களா? ″நாங்கள் எவருக்கும் சளைத்தவரில்லை″ என்று ஒவ்வொரு குழுவினரும் போட்டி போட்டு முன்னேறி வெளி எதிரிகளை அடித்துத் துரத்த வேண்டிய ஒரு சூழலில் என்னைப் பிற்படுத்து, மிகப்பிற்படுத்து என்று கைக்கூலி கொடுத்துக் காலைப் பிடித்துத் தன்மானமிழந்து கெஞ்சும் நிலைக்கு இந்த ஒதுக்கிட்டு முழக்கம் தமிழக மக்களைக் கொண்டு நிறுத்தியிருப்பது உங்கள் மனதைக் கலக்கவில்லையா? ஐம்பது ஆண்டுகளுக்கு முன் புரட்சிகரமாக இருந்த இந்த முழக்கம் தமிழக மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டிச் சாதி வேறுபாடுகளைப் பின்னுக்குத் தள்ளி நெருங்க வைத்தது. அப்போதே பொருளியல் உரிமைகளுக்காகவும் போராட்டத்தைத் தொடங்கி நடத்தியிருந்தால் ஒதுக்கீட்டிலும் வெற்றியடைந்திருப்போம்; ஒட்டு மொத்தமான வேலைவாய்ப்பிலும் நிறைவை எய்தியிருப்போம்; தமிழக மக்களின் உரிமைகள், தன்மானம் அனைத்தும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

கானல் நீரைத் தேடி ஓடும் மான்களாகத் தமிழக மக்கள் திசையறியாமல் ஓடுவது மனதை வாட்டுகிறது தோழரே. அருள்கூர்ந்து அவர்களுக்குச் சரியான வழி காட்டுங்கள்.

குமரிமைந்தன்.

28.6.09

தேசியம் வெல்லும் .....13

வெற்றி உறுதி:

ஈழ விடுதலைப் போராளிகள் இன்று பெருமளவில் தற்சார்பு பெற்றுவிட்டார்கள். அவர்கள் அதைக் கொண்டே தங்கள் தேசிய எதிரிகளை முறியடிப்பார்கள். ஒருவேளை எதிர்பாராத பின்னடைவுகள் வந்தாலும் அவர்களுக்கு உதவ நாம் உலகத் தமிழர்களிடையில் தமிழுக்கும் உலகத் தமிழ் மக்களுக்கும் கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை யூதர்களின் தாய் மொழிக்கும் யூதர்களுக்கும் நேர்ந்த இன்று பாலத்தீன மக்களுக்கு நேர்ந்துள்ள வரலாற்று அவலம் போன்று நேராமல் இருக்க வேண்டுமாயின் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் தன்னாட்சி உரிமையுள்ள தாயகம் வேண்டும் என்பதைப் பரப்புவோம். குமுதம் - தீராநதி திசம்பர் இதழில் திரு. அ.முத்துலிங்கம் கூறியுள்ளது போல் தமிழ் வாழ அதற்கு ஓர் நாடு வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு, தமிழர்களிடையில் பரப்பப்பட்டுவரும் நச்சுக் கோட்பாடான மொழி முதன்மைக் கோட்பாட்டைக் கைவிட்டு மண் முதன்மை - பொருள் முதன்மைக் கோட்பாட்டைக் கைக்கொண்டு செயற்படுவோம். பொருளியல் உரிமைகளையும் பொருளியல் விடுதலையையும் முன்வைத்து அந்தக் களத்தில் முற்போக்குச் சிந்தனையும் குமுகத்தில் புரட்சித்தன்மையுள்ள மாற்றத்தையும் சாதி, சமய வேறுபாடற்ற மனித உறவுகளைக்கொண்ட புதிய குமுகத்தைப் படைக்கும் குறிக்கோளுடையவர்களை முன்னணிப் படையாகக் கொண்டு அவர்களின் பின்னால் தமிழக மக்களை அணிதிரட்டுவோம்.

இன்று தமிழகத்திலும் உலகிலும் வாழும் தமிழக மக்களிடையில் திராவிட, தமிழ் இயக்கங்கள் பரவவிட்ட ஒதுக்கீடு, மொழி முதன்மை போன்ற, தேசியத்துக்கு, தேசியப் பொருளியலுக்கு, தேசியப் பொருளியல் உரிமைக்கு எதிரான நஞ்சுகளினால் புதிய கருத்துகளும் சிந்தனைகளும் வேர்கொள்ள முடியாத அக வறுமை நிலவலாம். ஆனால் காலம் நாள்தோறும் உலகையும் அதனோடு சேர்த்து தலைமுறையையும் புதுப்பித்துக்கொண்டிருக்கிறது. களர் மிகுந்த நிலத்தில் அதனை உண்ணும் உயிரிகள் தோன்றலாம். வானிலிருந்து புது ஆற்றல்கள் பாயலாம். மண்ணின் மீது பொழிந்த அயற்பொருட்களிலிருந்து மண் புதுவளம் பெறலாம். அதுவரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. நம்பிக்கையுடன் விதைகளை ஊன்றுவோம். அவை இன்றே கூட முளைக்கலாம். விதையூன்றும் இந்தச் செயற்பாடே ஒரு புரட்சிகர நடவடிக்கைதான். அதை மனமும் உடலும் சோர்வின்றி செய்து கொண்டிருப்போம். வெற்றி பெறுவோம்.

உலகத் தமிழர்கள் ஒன்றுபடுவோம்!


ஈழத் தமிழர்களுக்கு உதவுவோம்!

தமிழகத் தேசியத்தை வளர்த்தெடுப்போம்!

உலகில் ஒடுக்கப்படும் தேசியங்களை ஒருங்கிணைப்போம்!

தேசியம் வெல்லும்!

மார்க்சியம் வெல்லும்!

மனிதம் வெல்லும்!

(சிற்சில மாற்றங்களுடன் தமிழினி பிப்பிரவரி 2009 இதழில் இக்கட்டுரை வெளிவந்துள்ளது)


தேசியம் வெல்லும் .....12

காந்தியமும் அமெரிக்காவும்:

இந்தியை உயர்த்திப் பிடித்து தன்னை ஓர் இந்துவாக முன் நிறுத்தி இந்திய மக்களைப் பனியா - பார்சிக் கும்பலுக்கு அடிமையாக்கிய காந்தியைப் போல் அமெரிக்க புசுவின் செயற்பாடு மேற்காசிய நாட்டு மக்களுக்கும் வல்லரசுகளுக்கும் இடையிலான மோதலை கிறித்துவ - முகம்மதிய மதங்களுக்கு இடையிலான ஒரு மோதலாக காட்டுவதாக அமைந்துள்ளது. இது ஏற்கனவே அரபு நாட்டுத் தலைமைகளின் பணம் செய்த வேலையை இன்னும் எளிதாக்கிவிட்டது. ஏற்கனவே தத்தம் தேசியங்களிலிருந்து தங்களை அயற்படுத்திக்கொண்டு முகம்மதியத் தேசியம் என்ற மாயைக்குள் சிக்கியவர்களின் தவறான நிலைப்பாட்டுக்கு இது வலுச் சேர்த்துள்ளது. இது அரபு நாடுகளின் ஆவல்களுக்கும் பொருந்திவருவதே. வல்லரசுகள்க்கு எதிரான ஒரு விசையாக உலக முகம்மதிய மக்களை ஒருங்கிணைத்துச் செயற்படும் ஒரு புரட்சிகரத் தலைமை முகம்மதியத் தேசியத்துக்கு இல்லை. அரபு நாடுகளின் அரசர்கள்தாம் அந்த இடத்தில் இருக்கின்றனர். எனவே அது ஒரு மாயமானாகத்தான் இருக்கும். அவர்களது குறிக்கோளோ முகம்மதிய அனைத்துலகியம் என்ற பெயரில் தங்கள் தலைமையில் அமெரிக்காவோடு சேர்ந்து ஒரு கூட்டு வல்லரசை நிறுவுவதாகும். இவர்களின் திட்டம் வெற்றி பெறுமா என்ற கேள்வி இருக்கவே இருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் புதிய குடியரசுத் தலைவர் தன் பதவி ஏற்பின் போது பேசியதும் அதே வேளையில் அரேபியத் தலைவர்கள் தங்கள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பேசியவையும் நம்மை இந்த முடிவுக்குத்தான் இட்டுச்செல்கின்றன.

இன்று முற்றி நிற்கும் பொருளியல் நெருக்கடியில் அண்மை ஆண்டுகளில் உருவான “உலகளாவுதலின்” விளைவாகத் தங்களிடம் குவிந்த மாபெரும் பணக் குவியலைக் கொண்டு அரபுத் தலைவர்கள் அமெரிக்காவின் மதிப்புக்குச் கட்டியம் கூறும் கட்டடங்களையும் நிறுவனங்களையும் வாங்கியிருக்கிறார்கள். இவ்வாறு அமெரிக்காவின் குரல்வளையில் அவர்கள் கைவைத்துவிட்டார்கள் என்றொரு மாயை உருவாக்கப்படுகிறது. ஆனால் இந்த அரபுப் பெருந்தலைகள் தங்களிடம் குவிந்த பணத்தைக் கொண்டு தங்கள் சொகுசு வாழ்க்கையைத்தான் மேம்படுத்தியிருக்கிறார்களே அன்றி தங்கள் அறிவியல் - தொழில்நுட்பத்திறனை மேம்படுத்த ஒரு மின்னணுவளவு கூட முயலவில்லை. அதாவது போர் வலிமை இன்னும் வெள்ளைத் தோலர்களிடம்தான் அளவுமீறிய நிலையில் உள்ளது. எனவே அரபுத் தலைவர்கள் முயன்றாலும் வெள்ளைத் தோலர்களை எதிர்கொள்ள இயலாது. அமெரிக்காவுக்கு எதிர்முகம் காட்டி நிற்கும் ஈரான் அரபு நாடல்ல, அது பாரசீகர்களின் நாடாகும். அந்நாட்டை அரபுத் தலைவர்கள் பொருட்படுத்தவில்லை என்பதுதான் இன்றைய நிலை.

இந்தச் சூழ்நிலையில் அந்தந்த மண் சார்ந்த தேசியங்கள் முதலில் தங்கள் தேசங்களிலுள்ள மக்கள் அனைவரும் சாதி, சமய, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து இணைந்து நின்றும் உலகளவில் ஒருங்கிணைந்தும் தங்கள் தங்கள் தேசிய விடுதலைக்காக நாம் மேலே கூறிய செயல் திட்டத்துடன் இயங்கும் மார்க்சியக் கட்சியின் கீழ் இயங்கி ஒவ்வொரு தேசிய மக்களையும் தங்கள் பொருளியலை அயலவர்களிடமிருந்து விடுவிக்கும் இறுதி இலக்கை எட்டுவதுதான் தேச விடுதலையின் அறுதி நோக்கம் என்பதை மறந்துவிடாமல் போராடும் போதுதான் அந்தந்த மண் சார்ந்த தேசியம் வலுப்பெறும். வல்லரசியத்தின் வேர்களும் கிளைகளும் பரவியிருக்கும் இடங்களிலெல்லாம் அவை வெட்டி எறியப்படும். வல்லரசியத்துக்குத் தேசியங்களிலிருந்து பாயும் மீத்த மதிப்பு வாய்க்கால்கள் அடைபடும்; வல்லரசியம் விழும். இதை நேர்மையும் சிந்தனைத் தெளிவும் தத்தம் தேசியங்கள் மீது பற்றும் கொண்ட மார்க்சியர்களும் முகம்மதியத் தோழர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். உலகில் நெடுந்தொலைவால் பிரிக்கப்பட்டிருக்கும் பாலத்தீனமும் ஈழமும் ஒரே நேரத்தில் வல்லரசியத்தின் இரு வேறு கைக்கூலிகளான இசுரேலாலும் இந்தியாவாலும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்விரண்டு தேசிய மக்களையும் ஒற்றுமையுடன் செயற்படவிடாமல் பிரித்து வைக்கும் வல்லரசுகளின் கைக்கூலிகளாகச் செயற்பட்டு முகம்மதிய உலகியம் பேசும் கும்பல்களை இனம்கண்டு ஒதுக்க வேண்டும்.


(தொடரும்)

தேசியம் வெல்லும் .....11

சீனமும் 21ஆம் நூற்றாண்டின் புத்தன் அடிமைக் குமுகமும்:

மா சே துங் மரணமடைந்து, நால்வர் குழு வீழ்ச்சியடைந்த பின்னர் சீனத்தில் மார்க்சிய வழியில் முதலாளியத்தை எய்துவதாகக் கூறி அமெரிக்க மூலதனத்துடன் “மாபெரும் தொழில் புரட்சி” அங்கு நடைபெற்றுவருகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் பிடுங்கப்பட்டுவிட்டன. தொழிற்சாலைகளில், குறிப்பாகச் சுரங்கங்களில் ஏதச் சாவுகள் உலக அளவில் அங்குதான் மிகுதி. கொடுமைகள் தாங்காது மக்கள் படகுகளில் தப்பிச் சென்ற போது அவை மூழ்கியும் பெட்டகச் சரக்கிகளில் பதுங்கியவர்கள் நசுங்கியும் செத்த செய்திகள் வந்த வண்ணமாக இருந்ததை நாமறிவோம். திடீரென்று அச்செய்திகள் நின்று போயின. என்னதான் நடக்கிறது?

சீனத்தின் “வளர்ச்சியை” இந்திய மக்களுக்கு எடுத்து விளக்குவதற்காகப் பல்வேறு செய்தியாளர் குழுக்களை இங்குள்ள சீனச் சார்பாளர்கள் விடுத்துவைக்கின்றனர். அப்படிப் போய்வந்த செய்தியாளர்கள் பதிவு செய்தவற்றுக்கு மாறான செய்திகள் அவர்கள் மூலம் கசிந்துள்ளன. அவற்றின்படி, சீனத்தில் தொழிலாளர்கள் காவலிடப்பட்ட குடியிருப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்; அவர்களது நடமாட்டங்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன, அதாவது, அவர்களால் அங்கிருந்து தப்பிச்செல்ல முடியாது; அவர்களது பிள்ளைகள் என்ன படிப்பது என்ன தொழில் செய்வது என்பதைக் கூட அரசுதான் முடிவு செய்யும். ஆனால் அவர்களுடைய உணவு, உடை, உறைவிடம், மருத்துவ வசதிகள் போன்றவற்றை அரசு அல்லது அவர்களின் உழைப்பைப் பெறும் அமைப்பு ஏற்றுக்கொள்கிறது. நம் நாட்டு அடித்தள மக்களுடையதை விட அவர்களது வாழ்நிலை, மனித உரிமைகளின் வெளிப்படையான பறிப்பு (நம் நாட்டில் அது மறைமுகமாக நடைபெறுகிறது என்பதுடன் அவர்களது “உரிமைகள்” எனப்படுபவை அவர்களது பண்பாட்டுச் சீரழிவை ஊக்குவனவாகவே உள்ளன) என்பதைக் கழித்துவிட்டுப் பார்த்தால் பல படிகள் உயர்ந்தது என்பதாகும். இப்போதும் நம்முடைய கேள்வி, இவ்வாறு பறிக்கப்படும் மக்களின் மீத உழைப்பு, அதன் மீத மதிப்பு யாரைச் சேருகிறது; அதாவது பெரும்பங்கு யாருக்கு, சீன ஆட்சியாளருக்கா அல்லது அமெரிக்க வல்லரசுக்கா? இன்று என்ன நிலை? நாளை இதில் இவர்களுக்குள் இது குறித்து முரண்பாடு முற்றினால் அளவு மாற்றம் பண்பு மாற்றமாக மாறுமா? எப்போது? இது மனித குலத்தைப் பொறுத்தவரை இன்று மிக மிக அடிப்படையான ஒரு கேள்வி.

ஆனால் ஏற்றுமதியை கிட்டத்தட்ட 60%க்கும் மேல் நம்பியிருக்கும் சீனம் உள்நாட்டுச் சந்தையை, அதாவது உள்நாட்டு மக்களின் வாங்கும் திறனை உயர்த்துமா? அதாவது அந்த மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வத்தில் அவர்களது வாழ்க்கைத் தரமும் பண்பாட்டுத் தரமும் உயர்வதற்கு ஏற்றுமதிக்குப் போக எஞ்சிய 40%யிலிருந்து ஏதாவது கிடைக்குமா? அப்படி உயர்த்த அமெரிக்கா இடம் தருமா என்ற கேள்விகளும் நம்முன் விடைதேடி நிற்கின்றன.

ஆனால் நாம் பரிந்துரைப்பது அந்தந்தத் தேசியத்தின் அனைத்துவகை மூலவளங்களையும் அங்கு உருவாகும் அல்லது உருவாக்கப்படும் மூலதனத்துடன் அங்குள்ள மூலப் பொருட்களின் உதவியுடன் உள்நாட்டில் வளர்த்தெடுக்கப்படும் தொழில்நுட்பங்களில் அம்மக்களே தங்கள் தேவைக்காக, அதாவது தங்கள் சொந்தத் தேசீயச் சந்தைக்கு என்று பண்டங்களைப் படைப்பதும் பணிகளை வழங்குவதுமான ஒரு செயல்திட்டத்தை. அதாவது நாம் ஏற்றுமதியைக் குறிக்கோளாகக் கொண்ட பொருளியலை எதிர்க்கிறோம். அரசின் பொருளியல் தலையீடு அடிப்படைக் கட்டமைப்புகளை அளவு மீறாமல் அச்சிடப்பட்ட பணத்தாள்களை கொண்டு உருவாக்கிக் கொடுப்பதாக இருக்க வேண்டும். இதில் அளவு மீறுதல் என்பது மக்களின் நுகர்வுக்காக நாட்டில் கிடைக்கும் பண்டங்கள், பணிகளின் அளவுக்கு மிஞ்சியதாகப் பணத்தின் வழங்கல் சென்றுவிடக்கூடாது என்பதாகும்.

உலகத் தேசியங்களில் உள்ள மார்க்சியர்கள் தங்கள் தங்கள் தேசிய விடுதலைக் களத்தில் இத்தகைய ஒரு செயல்திட்டத்துடன் களமிறங்க வேண்டும். அதுதான் உலக வராலாற்றை, மனித குல மேம்பாட்டின் அடுத்த கட்டத்தினுள் இட்டுச்செல்லும்.


(தொடரும்)

தேசியம் வெல்லும் .....10

மார்க்சியமும் தேசியமும்:

பாட்டாளிகளுக்கு நாடு கிடையாது என்று மார்க்சு – ஏங்கெல்சு இணையர் நம்பினர். இந்தியாவில் பழைய குமுகத்தை, அதன் கட்டமைப்பை உடைத்த இங்கிலாந்து அதைப் புது வடிவில் மீளக்கட்டாமல் விட்டுவிட்டது என்று எழுதிய மார்க்சு, இந்தியா உட்பட ஐரோப்பாவின் அடிமை நாடுகளுக்குரிய வரலாற்றுப் பங்கைக் கணக்கிலெடுக்கவில்லை. ஒரு விடுதலைப் போரின் சிறு அறிகுறி கூட அன்று எங்கும் வெளித்தோன்றவில்லை. ஏங்கெல்சு, சிலாவிய நாடுகளை வரலாற்றிலிருந்து அகன்ற தேசங்கள் என்றே கணித்தார். ஆனால் அயர்லாந்து விடுதலைப் போராட்டமும் இங்கிலாந்துக்குள் பணியாற்றிய அயர்லாந்தினரான தொழிலாளர்களை இங்கிலாந்தின் தொழிலாளர்கள் தாக்கியதும் மார்க்சையும் ஏங்கெல்சையும் அதிரவைத்தன. அயர்லாந்து மக்களின் தேசிய உரிமைகளை இங்கிலாந்தின் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அயர்லாந்து தொழிலாளர்களும் இங்கிலாந்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து பிரிட்டன் அரசை எதிர்க்க வேண்டுமென்றும் அறிவுரை கூறினர். அது எவர் செவியிலும் ஏறவில்லை. ஏறவும் செய்யாது. இன்றைய வல்லரசிய ஊழியில், (அனைத்துவகைப் பொதுமைக் கட்சிகள் உட்பட) ஆட்சியாளர்கள் வல்லரசியங்களுடன் கள்ள உறவு கொண்டிருந்தாலும் “தாய்நாட்டுப் பற்று” என்ற அவர்களது பரப்பலில் மக்கள் மயங்கிவிடுவது தவிர்க்க முடியாதது. உலகப் போரின் போது இப்போக்குக்கு, குறிப்பாக செருமனியின் காட்கி போன்றோரின் செயற்பாட்டுக்கு எதிராக லெனின் மேற்கொண்ட கொள்கைப் போர் சோவியத்துப் புரட்சி வெற்றிபெற்று உலகப் போரின் முதல் கட்டம் முடிவதுவரை வெற்றிபெறவில்லை என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

அதைத்தான், அதாவது ஈழப் பாட்டாளியரும் சிங்களப் பாட்டாளிகளும் இணைந்து இலங்கை அரசை எதிர்த்துப் போராட வேண்டும் என்று, ஈழ விடுதலைப் போரைப் பொறுத்தவரை இந்தியாவின் மார்க்சியப் பொதுமைக் கட்சியின் நிலைப்பாடு என்று அக்கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத் அண்மையில் கூறி, தான் ஈழவிடுதலைப் போரை ஏற்கவில்லை என்றார். இவர்களுக்கு பனியா - பார்சி ஆதரவு வெறியினால் அறிவே பேதலித்து கிடக்கிறதென்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

தேசிய விடுதலைப் போரை ஏற்றுக்கொள்வதாகக் கூறிக்கொள்ளும் பல்வேறு வண்ணங்கள், வடிவங்களில் உலாவரும் மார்க்சிய லெனினிய அல்லது மாவோயியப் பொதுமைக் கட்சிகள் எனப்படும் அமெரிக்க - சீனக் கூட்டுறவில் இயங்கும் இயக்கங்கள் பாட்டாளியக் கோட்பாட்டை அதன் மிகக் கொச்சையான வடிவில் எடுத்துரைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, முதலிடுவது என்பதே சுரண்டலுக்கு வழிவகுத்துவிடும் என்கிறார்கள்; இது ஒடுக்கப்படும் தேசியங்களின் மூலதனத்துக்கு மட்டும்தான்!

அத்துடன் அவர்கள் மண் சார்ந்த, பொருளியல் சார்ந்த தேசியத்தைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கப் பயிற்றுவிக்கப்பபட்டுள்ளனர். அவர்கள் பண்பாட்டுத் தேசியம் பற்றித்தான் பேசுவார்கள். பொருளியல் மாற்றம் வளர்ச்சி பற்றி யாராவது பேசினால் அடித்தள மக்களின் பண்பாடு சிதைந்துபோகும் என்று முட்டுக்கட்டை போடுவார்கள். தொழில்நுட்பமும் விளைப்புப் பாங்கும் மேம்பட்டால் மக்களின், குமுகத்தின் பண்பாட்டு மட்டம் உயரும் என்ற மார்க்சியத்தின் அடிப்படைப் புரிதலை இவர்கள் அறியாதவர்கள். விளைப்புப் பாங்கு உயருந்தோறும் மக்களின் பண்பாடு, அதிலும் பண்பாட்டின் அடிப்படையான மனிதர்களிடையிலான உறவு, இன்னும் குறிப்பாக, இந்தியா, தமிழ்நாடு, ஈழம் போன்று சாதிய ஒடுக்குமுறைகளால் காலங்காலமாக வலுவிழந்து கிடக்கும் குமுகங்களில் பண்பாட்டு உயர்வுக்குப் பொருளியல் விளைப்புப் பாங்கின், இன்னும் தெளிவாகச் சொல்வதனால், நிலக்கிழமைப் பொருளியலிலிருந்து முதலாளிய விளைப்புப் பாங்குக்கு மேம்படுவது எவ்வளவு உடனடித் தேவை என்பது அவர்கள் சிந்தனைக்குள் புகவில்லை ஆனால் அதற்கு எதிராக, பண்பாட்டைக் காத்தல் என்ற கூப்பாடு எவ்வளவு தீங்கானது, அந்த முழக்கத்தை முன்வைத்தவர்கள் எத்தகைய கயவர்கள் என்பதை நினைக்குந்தோறும் அவர்கள் மீது எமக்குக் கட்டுக்கடங்காத வெறுப்பும் சினமும் உருவாகின்றன. இவர்கள் முன்வைக்கும் நஞ்சினும் கொடிய இந்தத் தீய கருத்தை இதுதான் மார்க்சியம் என்று நம்பி ஏற்றுக்கொள்வோரின் அறியாமை அல்லது செம்மறியாட்டுத்தனம் நம்மை வியப்பின் எல்லைக்கே கொண்டுசென்றுவிடுகிறது.

இவர்கள் பரப்பலை முறியடித்து, ஏழை நாடுகளிலுள்ள ஒவ்வொரு தேசத்திலும் இன்று பெருவழக்காய் நிலவுகின்ற விளைப்புப் பாங்குக்கு அடுத்த விளைப்புப் பாங்குக் கட்டத்துக்கு அத்தேசத்தை இட்டுச் செல்லும் செயல்திட்டத்தை முன்வைக்க வேண்டும் உண்மையான மார்க்சியர்கள். அவ்வாறு ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பான்மையான பகுதிகளிலும் குக்குலக் குமுகம் நிலவுவதால் அங்கு அடிமைக் குமுகத்துக்கான செயல்திட்டம் வேண்டும் என்கிறோம். இது சரிதானா? செயற்படுத்த முடியுமா என்றொரு கேள்வி எழும். இதற்கு விடையை இன்றைய சீனம் தருகிறது.

(தொடரும்)

தேசியம் வெல்லும் .....9

யாரைத்தான் நம்புவது மக்கள் நெஞ்சம்?

குணாவைக் குறித்து இன்னும் தொடர்ந்து செல்வதானால், க.ப.அறவாணன் போல் ஐராவதம் மகாதேவன் போல், நம் பல்கலைக் கழகங்கள் போல் தமிழர்களின் நாகரிகமும் பண்பாடும் சமணர்களிடமிருந்துதான் வந்தன என்ற கேடு பயக்கும் கருத்தை மிகத் திறமையாக முன்வைத்துள்ளார் அவர். சமணர்களை ஆசீவகர்கள் என்றும் அவர்கள் சமணர்களிலிருந்து வேறுபட்டவர்கள் போன்றும் அவர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மை உடையவர்கள் என்றும் அவர்கள்தாம் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே வானியல் அறிவைத் தந்தவர்கள் என்றும் அவரை நம்பும் தமிழ், தமிழக, தமிழ்த் தேசிய ஆர்வலர்களை நம்ப வைத்துவிட்டார். உண்மையில் ஆசீவகர்கள் எனப்படுவோர் பிறந்த மேனியோடு திரியும் மனம் பேதலித்த அம்மணர்கள்; அமண்பேய்கள் என்று சம்பந்தர் இழித்துரைத்த, ஒற்றர்களாகவும் தமிழகத்தைப் பொருளியலில் சுரண்டிய வெளிவிசைகளின் திரையாகவும் செயற்பட்ட, திசைகளையே ஆடையாகக் கொண்டவர்கள் எனப் பொருள்படும் திகம்பரர் என்ற பெயரால் அறியப்படும் சமண சமயப் பிரிவினர். சிவனியர்களை வந்தேறிகள் என்று இன்று குணா முன்வைக்கும் ஆய்வுரையைப் பழம் வரலாற்றுடன் ஒப்பிடும் போது சமணர்களாகிய இன்றைய பனியாக்களை நம் கண் முன் கொண்டு நிறுத்தவில்லையா?

அன்று அம்மணர்களைத் தமிழ் மண்ணிலிருந்து அகற்றிய சிவனியம் அயலிலிருந்து வந்ததென்றால், “நம்மவர்”களான அம்மணர்களை “வந்தேறி”களான சிவனியர்கள் வெளியேற்றினர் என்று அன்றைய வரலாற்றுக்குப் பொருள் கொள்வதா? அதைத் தொடர்ந்து இன்று தமிழகத்தை மிகுந்த விரைவில் கைப்பற்றிக் கொண்டிருக்கும் சமணர்களாகிய மார்வாரிப் பனியாக்களைத் தமிழகத்தின் மூலக் குடிகள் என்றும் தமிழகத்தைத் அவர்களிடம் விட்டுவிட்டு குணா ஒருவர் பின் ஒருவராக வரிசைப்படுத்தும் தமிழகத்தினுள் வாழும் “வந்தேறி”களை வெளியேற்றுவது என்றும் பொருள்கொள்ள வேண்டுமா?

வரலாறு, மொழிப் பெருமை, பண்பாட்டுப் பெருமை என்பவை அவற்றுக்கு உரிமைகொண்டாடும் மக்களின் பொருளியல், அரசியல், படையியல் வலிமைகளையே சார்ந்துள்ளன. அப்படித்தான் இன்று இந்தியப் பொருளியல், அரசியல், படையியல் வலிமைகளைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் பனியாக்களே தமிழகத்துக்குப் பண்பாட்டுக் கொடை வழங்கியவர்கள் என்ற “வரலாற்று வரைவு” நம் பல்கலைக் கழகங்களின் மூலம் சம்பளம் பெறுவோர், பெற வாய்ப்பிருப்பதாக நம்புவோர்களின் மண்டையில் படிந்திருக்கிறது. அது போலவே வெள்ளைத் தோலர்களின் மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவையே மேன்மையானவை என்ற கருத்தும் படிந்துள்ளது. இந்நிலையில் குணாவின் “ஆய்வுரை”களைக் காட்டி ஆசீவகத்தைத் தன் உட்பிரிவுகளில் ஒன்றாகக் கொண்ட சமணத்தைச் சார்ந்த தாங்களே இம்மண்ணுக்கு உரியவர்கள், பிறரெல்லாம் வந்தேறிகள், அவர்கள் வெளியேற வேண்டும் அல்லது தங்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்று தங்கள் பொருளியல், அரசியல், படையியல் வலிமையைக் காட்டி அச்சுறுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி?

இன்னுமொரு முகாமையான கேள்வி, வானியலையே அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தும் கடலோடிகளும் வாழ்வின் அனைத்துத் தொழிற்பிரிவினரும் வான் குறித்த அறிவியலில் தங்கள் தங்கள் பங்களிப்புகளைச் செய்ய வாய்ப்பிருக்கும் போது எந்தவொரு தொழிலுக்கும் உரிமை கொண்டாட முடியாத, ஒரு மெய்யியலுக்கு மட்டும் உரியவர்களாக குணா முன்வைக்கும் இந்த ஆசீவகர்கள் எப்படித் தமிழர்களின் ஒட்டுமொத்த வானியலுக்கும் உரிமை கொண்டாட முடியும்? குணாவின் இந்த “ஆய்வு முடிவு” எஞ்சாமையாக அறவாணன், ஐராவதம் அணுகலோடு ஒத்துவருவது எப்படி? இந்த “ஆய்வுக்காக”த்தான் அவரையும் நெடுஞ்செழியனையும் ஒரே இடத்தில் சேர்த்து இருத்தினார்களா? அமர்த்தியவர்கள் யார்? தமிழக மக்களின் நிலையைக் கண்டு இரங்குவதா, கலங்குவதா, அழுவதா, ஆத்திரப்படுவதா? ஒன்றுமே புரியவில்லை அம்மா!


(தொடரும்)

தேசியம் வெல்லும் .....8

தேசிய மக்களும் வந்தேறிகளும்:

தேசியம் என்பதன் வரையைறை நில எல்லை என்பதை மறந்துவிட்டு மொழிதான் என்று நம் “தமிழ்” அறிஞர்களும் “தமிழ்” இயக்கத்தாரும் “தமிழ்த் தேசிய” இயக்கங்களும் இடைவிடாமல் முழங்கி நம் இளைஞர்கள், முதியவர்கள் ஆகிய அனைவரின் மூளைகளையும் உலர் சலவை செய்து வைத்துள்ளனர். தமிழ்த் தேசியம், பொருளியல் சுரண்டல் பற்றிப் பேசி வந்த வெங்காளூர் குணா, சாதி வெறிபிடித்து அமெரிக்காவின் பண உதவியில் செயற்படும் விடுதலை இறையியல் கூட்டத்தின் கைக்கருவியாகி தமிழகத்தின் ஒவ்வொரு மக்கள் குழுவாக எடுத்துக்கொண்டு அவர்கள் வந்தேறிகள் என்று முத்திரை குத்திக்கொண்டிருக்கிறார். இறுதியாக அவர் கையில் எடுத்துக்கொண்டிருப்பது சிவனியத்தையும் சிவனியர்களையும். அவரது பின்னால் நின்றுகொண்டு அவரை ஊக்குவோரோ, தமிழக அடித்தள மக்களை நசுக்குவதற்குத் தம்மால் இயன்றதை எல்லாம் செய்யவென்று தம் தலைவர்களால் வெறியேற்றப்பட்டிருக்கும் முக்குலத்தோர் போன்ற “போர்ச் சாதிகள்” எனப்படுபவற்றைச் சேர்ந்த ஒரு படித்த கூட்டத்தினர். இவ்வாறு ஒடுக்கும் சாதியினரது தலைமைகளது பொதுவான வரலாறோ, தமிழகத்தின் மீது படை எடுத்த அயலவர்களுக்கு ஒத்துழைப்புத் தந்ததாகும். அப்படித்தான் இன்றைய ஆதிக்க நிலையை எய்தியுள்ளன தமிழகத்தின் உயர்சாதிகள் எல்லாம். இதில் ஓர் அவலம் என்னவென்றால், முதுகுளத்தூர் கலவரம் முடிந்த உடனே அதைப் பற்றி முதுகுளத்தூர் கலவரம் என்ற தலைப்பில் நூல் ஒன்று எழுதிய தினகரன் என்பவர் தனது பிரிவான காரண மறவர்களுக்கு எதிரான கொண்டயங்கோட்டை மறவர்கள் எங்கோ கன்னட தேசத்திலிருந்து வந்தவர்கள் என்கிறார். நான் இப்போது குணா வகையறாக்களைக் கேட்கிறேன், தமிழகத்துக்கு உரியவர்கள் என்று புறநானூறு கூறும் பாணன், பறையன், துடியன், கடம்பன் எனப்படும் நான்கு வகையினரையும் தவிர்த்துப் பிறர் அனைவரையும் தமிழக எல்லைக்குள்ளிருந்து துரத்தி விடுவோமா? அப்படித் துரத்துவதானால் எந்தக் காலத்தில் இருந்த எந்தத் தமிழகத்தின் எந்த எல்லைக்கு வெளியே அவர்களைத் துரத்துவது?

தெலுங்கர் என்று குணாவுடன் சேர்ந்து அவரைத் தாங்கி நிற்கும் தமிழர் களம் வசைபாடி வந்த, வை.கோபாலசாமியாக இருந்து இன்று வைக்கோவாக மாறியுள்ள கலுங்குப்பட்டியாரை, ஈழத் தமிழர்களை ஒழித்தே தீர்வது என்று தமிழகத்தினுள் கச்சைகட்டிக் கூப்பாடு போட்டுத் திரியும், தமிழ்த் தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவராகிய, சி.கே. வாசன் வகையறாவினரின் கொடுமதிக்கு ஈடுகொடுக்க முடியாமல் அண்மையில் நெல்லையில் நடைபெற்ற விழாவில் பாராட்டியது எப்படி?

எம்மைப் பொறுத்தவரை வைக்கோ என்று அவர் தில்லிக்குப் போனாரோ அன்றிலிருந்தே அவர் தன் பிற திராவிட இயக்கப் பாராளுமன்ற உறுப்பினர்களைப் போன்றும், “தமிழ்”, “தமிழ்த் தேசிய” அமைப்புகளினதும் இயக்கங்களினதும் தலைமைகளைப் போன்றும் பனியா - பார்சிகளின் சுரண்டல் என்ற அடிப்படைச் சிக்கலிலிருந்து தமிழக மக்களின் கவனத்தைத் திருப்பும் அரசியலையே செய்துவருகிறார் என்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளோம்.

இந்தக் கேள்விகள், குழப்பங்களிலிருந்து தெளிவதற்கு ஓர் அடிப்படையை நாம் உருவாக்க முடியும். அதாவது ஒரு தேசத்தின் இன்றைய எல்லையிலிருந்து ஒருவரைத் துரத்தினால் அவர் சென்று அடைவதற்கென்று பிறிதொரு தேசத்தில் அரத்த உறவினர்களோ நிலபுலன்களோ இருந்து தன் நிலம், தன் வீடு, தன் மக்கள் என்று சென்றடையவும் அங்குள்ளவர்கள் அவர்களைத் தங்கள் மக்கள் என்று தங்கள் தேசத்துக்குள் ஏற்றுக்கொள்ளவும் செய்வார்களானால் அப்படிப்பட்டவர்களைத் துரத்திவிடலாம். அப்படி இன்றி அயல் மண்ணில் உள்ள தங்கள் வேர்களை முற்றிலும் இழந்து தங்கள் அனைத்துப் பொருளியல், பண்பாட்டியல் வேர்களைத் தாங்கள் இன்று வாழும் தேசத்தில் கொண்ட அனைவரும் அத்தேசத்தின் மக்கள்தாம். நம் தேசத்தில் முதலீடுகள் செய்து ஆதாயத்தை வெளியே கொண்டு செல்வோர் இன்று இந்த மண்ணில் வேர் கொண்டவர்களாக இருந்தாலும் நம் தேசத்து மக்கள் ஆகமாட்டார்கள் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

அந்த வகையில், இந்திய ஆளும் கூட்டமும் தமிழக அரசியல் இரண்டகர்களும் 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாளில் உருவாக்கிய தமிழகத்தில் அன்றைய குடிமக்களாக இருந்த அனைவரையும் தமிழகத் தேசியக் குடிமக்களாக வரையறுக்கிறோம். அந்த நாளில் தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்து இங்கு முதலிட்டு ஆதாயத்தை வெளியே எடுத்துச் செல்வோரைத் தமிழக மக்களாகக் கொள்ளக் கூடாது என்பதும் எமது உறுதியான நிலைப்பாடு. அத்துடன் அன்றைய நாளில் தமிழக அரசியல் இரண்டகர்கள் “விட்டுக்” கொடுத்ததால் நாம் பறிகொடுத்த நிலங்களும் தமிழகத் தேசத்துக்கு உரியவை. அதன் பின்னால் பறிகொடுத்த கச்சத் தீவும் தமிழகத் தேசத்துக்கு உரியது.

இது போன்ற ஒரு வரையறையில் நாம் மேலே கூறியுள்ளபடி உலக நாடுகள் அனைத்துள்ளும் அடைபட்டுக் கிடக்கும் தேசங்கள் அனைத்தும் ஓர் உலகமாகவும் வல்லரசியத்தின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள நாடுகளெல்லாம் ஓர் உலகமாகவும் பிளவுண்டு கிடக்கின்றன. இந்தப் பிளவில் ஒடுக்கும் முதல் உலகம் தம்மிடையில் மிகச் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் ஒடுக்கப்படும் தேசியங்கள் அத்தகைய ஒருங்கிணைப்பு இல்லாமல் சிதறுண்டு கிடக்கின்றன. அந்த ஒருங்கிணைப்பு இல்லாமை அல்லது சிதறிய நிலைமைக்கு முகம்மதிய அனைத்துலகியக் கோட்பாட்டுக்கு முகாமையான பங்குண்டு. அமெரிக்கா தலைமையிலான வல்லரசியத்தோடு நெருக்கமான, இறுக்கமான உறவு வைத்துள்ள அரபு நாட்டுத் தலைமைகள் பாயவிடும் பணத்தில்தான் இந்த முகம்மதிய அனைத்துலகியம் இயங்கி வருகிறது. எனவே வல்லரசிய நலன்களுக்கு எதிராக ஒருபோதும் அது செயல்படாது. அதனை நம்பினால் ஒடுக்கும் தேசங்கள் ஒரு நாளும் தங்கள் அடிமை விலங்குகளைத் தகர்க்க முடியாது. அந்தந்தத் தேசங்களிலுள்ள முகம்மதியர்களை இந்த முகம்மதிய அனைத்துலகியம் தம் தேசிய விடுதலைக்காகப் போராடும் அணிகளுக்கு எதிராக நிறுத்தி அதன் போராட்ட வலிமையைச் சிதைத்துவிடும். இதற்கு மறுக்கவொண்ணாத சான்றாகத் திகழ்வது ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம்.

தேசம் என்பது நில எல்லை அடிப்படையானது என்பது உண்மையாக இருந்தாலும் அந்த நில எல்லை கூட நிலையானதல்ல. மொழி, மதம், இனம் என்ற பொது அடையாளங்களைக் கொண்டிருந்தாலும் ஒரு நில எல்லைக்குட்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் பிற பகுதியினர் மீது மேலாளுமை செலுத்தினாலோ அவர்களைப் புறக்கணித்தாலோ அல்லது ஒன்றுபட்ட அந்நாட்டின் வளங்களில் அப்பகுதி மக்களுக்கு நயமாகக் கிடைக்க வேண்டிய பங்கைத் தராமல் தாமே எடுத்துக்கொண்டாலோ நாளடைவில் அவ்வாறு புறக்கணிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட அல்லது சுரண்டப்பட்ட பகுதிகளின் மக்கள் தனித் தேசங்களாகப் புரிந்து செல்லும் முயற்சியில் இறங்குவார்கள். எனவே நாடு எனும் ஒரு நிலப்பரப்பிலுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் சமமான உரிமைகளுடன் அந்த நிலப்பரப்பிலுள்ள அனைத்து வகை வளங்களின் மீதும் நயமான, சமமான பங்கும் கிடைத்தால் அந்த நாட்டின் நிலப்பரப்பு ஒரு தேசத்தின் நிலப்பரப்பாக மாறும். இந்த சம உரிமையாக்கம் விரிவடையும் போது எவருடைய கட்டாயம் அல்லது தூண்டுதலும் கூட இன்றி உலகமே ஒரு தேசமாக மாறும். எடுத்துக்காட்டாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியமாக மாறியுள்ளதைக் கூறலாம். இந்தப் போக்கை இன்னும் விரிவாக்கினால் உலகமும் தேசமாக மாறும். மனித குலத்தின் குறிக்கோள் இதுவாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் விருப்பமும் முயற்சியுமாகும்.


(தொடரும்)

தேசியம் வெல்லும் .....7

இருவேறு உலகங்கள்:

இன்று உண்மையில் உலகம் இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. ஒன்று அமெரிக்காவின் தலைமையிலான அனைத்து நாடுகள், மறுபக்கம் இந்த நாடுகளின் உள்ளே சிறைப்பட்டுக் கிடக்கும் எண்ணற்ற தேசங்கள்.

இவ்விடத்தில் தேசம் என்பது பற்றித் தோராயமான ஒரு வரையறையை முயல்வோம்.

தேசத்தின் அடிப்படை நிலம். நிலம் இன்றி, நில எல்லை இன்றி ஒரு தேசியத்துக்கு எந்த அடையாளமும் அடிப்படை ஆனதல்ல. நிலம், பொழுது ஆகிய இரண்டுமே முதற்பொருள் என்ற தொல்காப்பியத்தின் அடிப்படைக் கருத்தும் இதை வழிமொழிகிறது.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் ஒரு விடுதலை பெற்ற நாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக அயல் மொழியான இந்தியைக் கூட பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டனர். காந்தியின் “இந்து” சமயப் பசப்பல்களைக் கூடப் பொறுத்துக்கொண்டனர்.

தமிழ்த் தேசிய எழுச்சியின் போது, அப்போது தேசத்தின் பொருளியலில் முன்னணியில் இருந்த தெலுங்கர்களில் பலர் தமிழைத் தங்கள் வீட்டு மொழியாக்கத் தயங்கவில்லை. சாதிப் பட்டங்களை மக்கள் புறக்கணித்தனர். நம்ப முடியா அடிப்படை மாற்றங்களை மக்கள் தாங்களாகவே ஏற்றுக்கொண்டனர். ஆனால் தலைமை தாங்கிய கயவர்கள்தாம் தேசியப் பொருளியல் சுரண்டலிலிருந்து மக்கள் கவனத்தைத் திருப்புவதற்காக, அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்ற குறிக்கோளை முன்வைக்காமல் வேண்டுமென்றே புறக்கணித்து ஒதுக்கீடு, சிலை வைத்தல், மணிமண்டபம் அமைத்தல் என்று அனைத்து மட்டங்களிலும் மக்களை அணு அணுவாகப் பிளவுபடுத்தியும் அனைத்து மட்டங்களிலும் ஊழல் பொறுக்கிகளை வளர்த்தும் தங்களை வளர்த்துவிட்டுத் தமிழ்த் தேசத்தையே சிதைத்துப் சின்னாபின்னமாக்கி வைத்துள்ளனர். பொருளியல் விடுதலை அல்லது உரிமை என்ற குறிக்கோள் கைவிடப்பட்டதால் பிறமொழி பேசும் தமிழக மக்களிடையிலுள்ள பிற்போக்கினரின் கை ஓங்கி அனைவரும் இன்று பனியா – பார்சிகளிடம் கடன்வாங்கித் தொழில் செய்யவைண்டிய நிலைக்குத் தாழ்ந்துள்ளனர். அவ்வாறே செல்வம் படைத்த பிற சாதியினரும். அப்படியானால்தான் வருமானவரித் துறையினரின் கொடுமையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பது இன்றைய நிலை. தொழில் சாராத பிறர் வாக்குவங்கியாக மாற்றப்பட்டுள்ளனர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட வைக்கோ தெலுங்கு பேசும் தமிழக மக்களை உருவாக்கிய வாக்கு வங்கியை உடைக்க தெலுங்கரான விசயகாந்தை ஆயத்தப்படுத்திக் களத்தில் விட்டுள்ளார் தமிழீனத் தலைவர்.

தமிழக எல்லைகளை அண்டை மாநிலங்கள் உரிமை கோரும் போது அதற்கு எதிராக உருவாகியிருக்க வேண்டிய எழுச்சி கூட “தமிழ்த் தேசிய” இயக்கங்களால் திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டது. எல்லை மாவட்டங்களில் வாழும் அண்டை மாநில மொழி பேசும் தமிழக மக்கள் மீது வெறுப்புப் பரப்பலை இந்த “தமிழ்” அமைப்புகள் தூண்டிவிட்டுள்ளன. அதனால் அண்டை மாநிலங்கள் அம்மக்களிடையில் தங்களுக்குச் சார்பான மனநிலையை எளிதில் உருவாக்க முடிகிறது, அண்டை மாநிலங்கள் தங்கள் விளைநிலங்களுக்கு வழங்கிய நீரை மறுத்த போது தாம் வாழும் தமிழகத்தின் அரசோ அரசியல் கட்சிகளோ இயக்கங்களோ அதைக் கண்டுகொள்ளாமல் தங்கள் மீது தங்கள் தாய்மொழியைக் காரணமாக வைத்துக் காழ்ப்புணர்ச்சியை மட்டும் கொட்டும் போது தாங்கள் வாழும் எல்லை மாவட்டத்தைத் தம் தாய்மொழி பேசும் அண்டை மாநிலம் உரிமை கேட்பதற்குத் துணையாக நின்று வென்றால் நம் வேளாண்மைக்கு நீரும் கிடைக்குமே என்று அண்டை மாநிலத்தாரின் பரப்பலுக்குப் பலியாகவும் கூடுமே.

தமிழக மீனவர்களை இலங்கைப் படையும் இந்திய அரசும் சேர்ந்து 400 பேருக்கு மேல் சுட்டுத் தள்ளிய பின்னும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட அந்த மீனவ மக்களிடையிலிருந்து கூட ஓர் எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை. ஒப்பாரியுடன் பண உதவிதான் கேட்க வைத்துள்ளனர் அங்குள்ள தலைமைகள். இந்தத் தலைமைகள் ஆட்சியாளர்களுடன் கள்ள உறவில்லை, “நல்ல” உறவையே வைத்துள்ளனர். கூட்டுக்கொள்ளை அடிப்பதற்கு இத்தகைய “உதவிகள்”தாமே வாய்ப்பாக அமையும்?

தன் கணவன், தந்தை, மகன் ஆகிய எவருடைய உயிருக்கும் விலை வைத்துச் செயல்படும் தங்களைச் சேர்ந்த கங்காணிகளுக்கும் அவர்களை இயக்கும் ஆட்சியாளர்களாகிய கொடும் கொள்ளையர்களுக்கும் எதிராகக் குரல் எழுப்புமாறு அந்த அப்பாவிப் பெண்களுக்கு எடுத்துச்சொல்வார் யாருமில்லை. அது போல் தாக்குதலுக்கு ஆளாகி மக்கள் உயிரிழந்ததற்கு எதிர் நடவடிக்கையாகப் படகுகளை முடக்கிப் போட்டுத் தங்கள் பிழைப்பையும் மக்களின் உணவு வழங்கலையும் மட்டும் நிறுத்த வழிகாட்டும் தம் தலைவர்களைப் புறக்கணித்து நாட்டின் உட்பக்கம் திரும்பி ஆட்சியாளருக்குத் தம் குமுறல் சென்றடையும் வகையிலான போராட்ட வடிவங்களைக் கைக்கொள்ளுமாறு அவர்களுக்கு வழிகாட்ட எவருமில்லை. ஒவ்வொரு நாளும் தாமும் தம் குடும்பமும் உயிர்வாழத் தம் உயிரையே பணயம் வைத்து கொடும் கடலோடு போராடி வாழும் மீனவர்களையே இவ்வளவு கோழைகளாக்கிவிட்டார்களே, அப்படி இருக்க சராசரித் தமிழ் மக்களின் மனநிலையை எப்படி ஆக்கியிருப்பார்கள்?

(தொடரும்)

தேசியம் வெல்லும் .....6

மார்க்சியமும் அமெரிக்காவும்:

பதிவாகியுள்ள மனித வரலாற்றில் மனிதனின் மெய்யியல் எய்தல்களில் மிக உயர்வானது மார்க்சியம். அது நடைமுறையை அல்லது களச் செயற்பாட்டை மெய்யியல் அல்லது அறிவியலின் அறுதி நிலையாகக் கொண்டுள்ளது. உலகில் மிக உயர்ந்த மெய்யியலைக் கொண்டுள்ளதாகக் கூறிப் பெருமைப் பட்டுக்கொள்ளும் நம் அறிவு“சீவி”களில் பலர் முன்வைக்கும் இந்திய மெய்யியலின் “குண்டலினி” எனத் தவறாகக் குறிக்கப்படும் “குண்டிலினி”க் கோட்பாட்டைப் போல் குண்டி மீது அமர்ந்து கண்ணிரண்டையும் மூக்குநுனி மீது அல்லது கொப்புளின் மீது குவித்து மூச்சை எண்ணிக் கொண்டிருப்பதால் மனித இனத்தின் மட்டுமல்ல அண்டத்தின் மறையங்களையெல்லாம் ஒளிவு மறைவின்றி அறிந்துகொள்ளலாம் என்று சொல்லி நாட்டுக்கும் மக்களுக்கும் வளம் சேர்க்க வேண்டிய திறன் மிக்க மனித ஆற்றல்கள் அனைத்தையும் அரங்குகளுக்குள் அமர்த்தி அழிம்பு வேலை செய்யவில்லை மார்க்சியம். இயற்கையும் மனிதனும் நிகழ்த்தும் செயல்களையெல்லாம் கண்டு நாள்தோறும் தன்னை வளப்படுத்திக்கொள்ளும் கோட்பாட்டு அடித்தளம் கொண்ட வளமான மெய்யியல் ஆகும் அது. எல்லைக்குட்பட்ட வாழ்நாளைக் கொண்ட நேர்மையான மனிதர்களாகிய மார்க்சும் ஏங்கல்சும் லெனினும் டிராட்கியும் சேகுவாரா போன்றவர்களும் தங்கள் வெற்றிகளாலும் தோல்விகளாலும் அக்கோட்பாட்டுக்கு மேலும் மேலும் வளம் சேர்த்துள்ளனர். இவர்கள் அன்றி அமெரிக்க ஆளும் கும்பலும் கூட மானிடத்துக்கு எதிரான தன் அழிம்பு வேலைகளுக்கு நேர்மையான மார்க்சிய மரபின் பெருமை மிக்க மனிதர்களின் குழப்பங்களையும் மயக்கங்களையும் தவறுகளையும் பயன்படுத்தி உலகின் பெரும் கொடுமை மிக்க வல்லரசாகத் தம் நாட்டை வளர்த்துவிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வாறு பயன்பட்டவற்றில் ஒன்று மார்க்சியத்தின் பாட்டாளியப் பிறழ்ச்சி, மற்றொன்று மாந்தவியலுக்கும் குமுகியலுக்கும் மார்க்சியம் தந்துள்ள மிகப்பெரும் பங்களிப்பு. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மார்க்சியம் இரண்டு அடிப்படைக் கூறுகளைக் கொண்டது.


1. இயங்கியல் பருப்பொருளியம்.

2. வரலாற்றுப் பருப்பொருளியம்.

இயங்கியல் பருப்பொருளியம், இயற்கை, குமுகம், மனிதச் சிந்தனை ஆகியவை இயங்கியலாகச் செயற்படுகின்றன என்கிறது. இயங்கியல் என்பது எதிரிணைகளின் மோதல், ஒன்றையொன்று அழிக்காத, ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறும் தன்மையுள்ள எதிரிணைகளின் முரண்பாடுகளிலிருந்து மாற்றங்கள் இடைவிடாமல் நிகழ்கின்றன. மாற்றம் மேல் நோக்கியதாகவும் இருக்கலாம்; கீழ் நோக்கியதாகவும் இருக்கலாம். முரண்பாடுகளில் எது வெற்றிபெறுகிறது என்பதைப் பொறுத்தது அது. பருப்பொருளிலிருந்து தோன்றிய சிந்தனையாகிய நுண்பொருளும் கூட பருப்பொருளுடன் இயங்கியலாகச் செயற்படுகிறது என்கிறது மார்க்சியம்.

வரலாற்றுப் பருப்பொருளியம் சொல்வது, ஒரு குமுகத்தின் குமுகத் தன்னுணர்வு ஆகிய பண்பாடுகள் எனப்படும், தெய்வம், குடும்பம், உணவு, அறிவியல், தொழில்நுட்பம், கலை இலக்கியங்கள், சட்டம், அரசியல், நம்பிக்கை முதலியவை அக்குமுகம் இருக்கும் பண்ட விளைப்புப் பாங்குக்கும் ஏற்ப மாறுபடுகிறது. ஒவ்வொரு பண்ட விளைப்புப் பாங்குக்கும் ஏற்ப மனித உறவுகள் அமைகின்றன. பண்ட விளைப்புப் பாங்கு மேம்படுந்தோறும் மனித உறவுகளும் மேம்படுகின்றன. குக்குலக் குமுகம் ஒருவகை மனித உறவுகளைக் கொண்டிருந்தது. அப்போது அண்டைக் குழுக்களோடு போர் நடந்தால் பிடிபட்டவர்களைக் கொன்றார்கள் அல்லது கொன்று தின்றார்கள். அடுத்த விளைப்புக் கட்டமான அடிமைக் குமுகத்தில் பிடிபட்டவர்கள் அடிமைகளாயினர். நிலக்கிழமைக் கட்டத்தில் அடிமைகள், அதைவிட மேம்பட்ட உரிமைகள் கொண்ட கொத்தடிமைகள் ஆயினர். அதற்கும் மேம்பட்ட முதலாளியக் கட்டத்தில் கொத்தடிமைகள் தொழிற்சாலைக்கு வெளியே சட்டப்படி பிறருக்குச் சமமான உரிமையுள்ள கூலித்தொழிலாளிகளாயினர், இனி வர இருக்கும் பொதுமைக் குமுகத்திலே தொழிலாளி முதலாளி வேறுபாடு இருக்காது; அனைவரும் சமம் எனும் நிலை உருவாகும் என்பது வரலாற்றுப் பருப்பொருளியத்தின், அதாவது மார்க்சியத்தின் நிலைப்பாடு.

குக்குலக் குமுகம் → அடிமைக் குமுகம் → நிலக்கிழமைக் குமுகம் → முதலாளியக் குமுகம் → பொதுமைக் குமுகம் என்ற வரிசையில் குமுகம் மேலேறிக்கொண்டிருக்கிறது என்று மார்க்சு கூறினார். எந்தச் சட்டத்தாலும் அல்லது நடவடிக்கையினாலும் இந்த வரிசையில் வராமல், ஒரு கட்டத்திலிருந்து அடுத்தடுத்துள்ள கட்டங்களுக்குள் நுழையாமல் எந்தக் குமுகமும் தாண்டிச் செல்ல முடியாது என்று வரையறுத்த மார்க்சே உருசியாவில் பழைய குக்குல வடிவாகிய முந்தியல் பொதுமைக் கூறுகள் கொண்ட ஊர் அவைகளைக் கண்டு அதிலிருந்து நேராக பொதுமைக் குமுகத்துக்குள் நுழைந்துவிட முடியுமோ என்று ஐயுற்றார். அதற்கேற்ப லெனின் முழு முதலாளியத்தினுள் நுழையாமல் இருந்த உருசியக் குமுகத்தில் முதலாளியம் முழுமை பெற்றுவிட்டதாகக் கணித்து பொதுமைப் புரட்சியை நடத்தினர். அது போலவே சீனத்திலும் பிற நாடுகளிலும் பொதுமைப் புரட்சிகள் நடந்து தோல்வியைத் தழுவின.

லெனினை மறுத்து அவரது தோழரான டிராட்கி கூறியது போல் உலகின் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் முதலாளியம் முழுமை பெற்ற பின்தான் பொதுமைப் புரட்சி நிலையான வெற்றியைத் தரும் என்ற முடிவுதான் சரி என்பதை நடைமுறை தெளிவாக்கியுள்ளது. இந்தக் கோணத்தில் ஏழை நாடுகளில் முதலாளியம் முழுமைபெற வேண்டும். அதை இயலச் செய்வது மார்க்சியர்களின் கடமையாகும். ஆனால் நடப்பது என்ன? நடந்தது என்ன?

சோவியத்தின் தலைமையில் இருந்த மூன்றாம் பொதுமை அனைத்துலகியம் ஆயுதப் புரட்சி மூலம் தங்கள் தங்கள் நாடுகளில் பொதுமைக் குமுகத்தை அமைக்கும் செயல்திட்டத்தை வகுத்துக் கொடுத்தது. அதற்கு அது முன்வைத்த செயல்முறை நிலத்தை உழுதொழிலாளிக்குப் பங்கிட்டுக் கொடுப்பது, நிலவுச்ச வரம்பு, தொழிலாளர்களுக்குக் கூலி உயர்வு, சங்கம் அமைக்கவும் வேலை நிறுத்தம் செய்யவும் உரிமை வழங்குதல் என்பவையாகும். ஐரோப்பியரின் தலையீட்டினால் நிலக்கிழமையின் ஊடே முதலாளியக் கூறுகள் ஏழை நாடுகளில் அரும்பியிருந்த சூழலில் இச்செயல்முறை அதைக் கருவிலேயே கருக்கியது. அதே நேரத்தில் அமெரிக்கா இதே செயல்முறையைத் தன் கீழிருந்த நிகர்மை அனைத்துலகியத்தின் மூலம் முன்வைத்தது. அனைத்து ஏழை நாடுகளும் இவ்விரண்டு வல்லரசுகளில் ஒன்றின் செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டு தங்கள் வளர்ச்சியைத் திட்டமிட்டன. அதற்கு உதவுவது என்ற பெயரில் ஏழை நாடுகளில் உள்ள இயற்கை வளங்கள், மனித வளம், ஆற்றல் வளங்கள், அடிப்படைக் கட்டமைப்புகள் ஆகியவற்றை உறிஞ்சி இரு வல்லரசுகளும் எடுத்துக் கொண்டன. என்புருக்கி நோயாகிய ஆட்சியாளர் - கட்சிவாணர்களின் ஊழலால் பீடிக்கப்பட்ட சோவியத் வீழ்ந்தது. அமெரிக்கா பேயாக, காட்டேரியாக வளர்ந்து நிற்கிறது.

இன்னும் காலம் கடந்துவிடவில்லை. மார்க்சியத்துக்கு ஒப்பற்ற ஒரு பட்டறிவு அதன் நடைமுறைச் செயற்பாட்டிலிருந்து கிடைத்துள்ளது. அடுத்த நடவடிக்கைக்கு, அதாவது அந்தந்த நாட்டில் அல்லது தேசத்தில் பெருவழக்காக இருக்கும் பொருளியல் கட்டத்திலிருந்து அதற்கு அடுத்த பொருளியல் கட்டத்துக்கு அந்தந்த நாட்டை அல்லது தேசத்தை அழைத்துச் செல்வதற்கு அது தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சோவியத்து தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்கா சீனத்தோடு கூட்டுச் சேர்ந்து உலகிலுள்ள ஏழை நாடுகளில் எல்லாம் அங்கங்கே உள்ள தேசிய முதலாளிய அரும்புகளை அழித்தொழிப்பதோடு அத்தேசியங்களை எதிர்காலத்தினுள் இட்டுச் செல்லத்தக்க துடிப்பும் துணிவும் தெளிவும் நேர்மையும் உள்ள இளம் தலைமுறையினரையும் அழித்தொழிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றி வருகிறது. பாட்டாளியக் கோட்பாடு என்ற பெயரில் முதலாளிய உருவாக்கத்துக்கு எதிரான மனநிலையை அனைத்து மட்டங்களிலுள்ள மக்களின் மனதிலும் விதைப்பதில் வெற்றிபெற்றுவிட்டது.

இதற்காக வல்லரசு நாடுகள் தங்கள் சொந்த நாட்டு வரவு செலவுத் திட்டத்துக்கு ஒதுக்குவதிலும் குறையாத அளவு பணத்தை ஏழை நாடுகளில் செலவிடுகின்றன. பணத்தை வாரி இறைத்து ஏழை நாடுகளில் “தொண்டு” நிறுவனங்களை இயக்குகின்றன. அவற்றின் முதன்மைப் பணி பாட்டாளியக் கோட்பாட்டு நஞ்சை விதைப்பது. அடுத்து, தாங்கள் செய்யப்போகும் “தொண்டு” பற்றிய தெளிவை அடைவதற்காக உள்ளூர் அடிப்படைச் செய்திகளைத் தொகுத்துக் கொடுப்பது. இந்தத் தரவுகள் வல்லரசு நாடுகளுக்கு ஏழை நாடுகளின் அனைத்துக் கூறுகளையும் வெள்ளிடை மலைபோல் காட்டுகின்றன. அவற்றிலிருந்து அந்நாடுகளிலிருந்து எவ்வெவற்றைச் சுரண்டலாம், எவ்வாறு மக்கள் குழுக்களிடையில் மோதல்களை உருவாக்கலாம் எவ்வெவற்றை அழிக்கலாம் என்பவை போன்ற கேள்விகளுக்கு வல்லரசுகளுக்கு நம்பகமான விடைகள் கிடைக்கின்றன.

அடுத்து ஏழை நாடுகளின் பல்கலைக் கழகங்களுக்கு ஆய்வுகளுக்காகவென்று பெரும் மானியங்களை வழங்கி அப்பணத்தைப் பெற்றுக்கொள்வோர் மேற்கொள்ளும் “ஆய்வுகள்” மூலமும் பலவகையான தரவுகளைப் பெற்றுக்கொள்கின்றன, ஆய்வாளர்கள் தாங்களாக எந்த முடிவுகளையும் ஆய்வுகளில் வெளியிடக்கூடாது என்ற மறைமுகக் கட்டுறவுடன், அதாவது, முந்தைய ஆசிரியர் ஒருவரின் மேற்கோள் அத்தகைய முடிவுகளுக்கு வேண்டும் என்பதன் மூலம்.

தொழிற்சங்கங்களுக்குள் புகுந்து மக்களை, எடுத்துக்காட்டாக, மலைசார் பழங்குடியினர், கடல் சார் பழங்குடியினர் என்பது போல் பிரித்து அவர்களைத் தமக்குள் பகைக் குழுக்களாக ஆக்கி வைக்கின்றன அமெரிக்கா தலைமையிலான வல்லரசுகள்.

காந்தியின் உண்மையான படிமத்தை மறைத்து எவ்வாறு கடவுளின் தோற்றரவு(அவதாரம்) என்ற தோற்றத்தை உருவாக்கினார்களோ அதுபோல் இன்று சிதையத் தொடங்கியிருக்கும் பெரியாரின் படிமத்துக்குப் புத்துயிருட்ட எசு.வி.இராசதுரை போன்றாரைப் பயன்படுத்தி நூல்களை வெளியிட வைத்துள்ளனர். அதன் மூலம் அவரது பங்களிப்பான தமிழக மக்களையும் இந்திய மக்களையும் அணு அணுவாகச் சிதைக்கும் ஒதுக்கீட்டு வேண்டுகைக்கு நீண்ட வாழ்நாளை அளித்து வருகின்றனர்.

இந்த எல்லாவகை நடவடிக்கைகளிலும் பாட்டாளியக் கோட்பாட்டுப் பரப்பல் கட்டாயம் இருக்கும்.

இவ்வாறு உலகின் மிகப் பெரும்பான்மை மக்களான ஏழை நாட்டு மக்களின் உழைப்பு, அந்நாடுகளின் அனைத்துவகை வளங்களிலிருந்து கிடைக்கும் பலன்கள் என்று அனைத்தும் வல்லரசுகளை, அவற்றின் தலைவனான அமெரிக்காவை அளவுக்கு மீறி, மனித குலத்துக்கே பெரும் அச்சுறுத்தலாகும் அளவுக்கு வளர்த்து வைத்துள்ளன. இதிலிருந்து மனித குலத்தை மீட்டெடுக்கும் வழி உண்டா?


(தொடரும்)