28.12.15

சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 23


தொடுப்பு 6
நில உடைமைக் குளறுபடிகள்
குமரிமைந்தன்
          நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பது பற்றி செய்தித்தாள்களில் அடிக்கடி படிக்கிறோம். இந்தத் தேக்கத்துக்குப் பல காரணங்கள் உண்டு. ஒன்று நீதிபதிகள் பற்றாக்குறை என்று கூறப்படுகிறது. காலியான இடங்கள் அவ்வப்போது நிரப்பப்படுவதில்லை. புதிய பணி அமர்த்தல்களும் அவ்வாறே. இதற்கான காரணமும் தெரியவில்லை. ஒருவேளை புதிய அமர்த்தல்களுக்குப் பிற துறைகளைப் போல் பணம் கேட்கப்படுகிறதா? ஏனென்றால் சில துறைகளில் பதவி உயர்வுகளுக்குப் பணம் கேட்டதால் அப் பதவியர்வுகளை எதிர்பார்த்து நின்றோர் கணக்குப் பார்த்து ஆதாயமில்லை என்று வாளாவிருந்து விட்ட நேர்வுகள் பல உண்டு.

            இன்னொரு புறம், தேங்கிக் கிடக்கும் வழக்குகளில் மிகப் பெரும்பாலானவை உரிமையியல் வழக்குகளே என்பதை மேற்படி செய்திகளிலிருந்து தெரியவருகிறது. உரிமையியல் வழக்குகளின் இந்தப் பெருக்கத்துக்கான ஒரு பின்னணியை ஆய்வதே நம் நோக்கம்.

            நம் நாட்டில் சொத்துடைமை ஆவணங்கள் இரு துறைகளின் பொறுப்பில் உள்ளன. ஒன்று ஆவணப் பதிவுத்துறை, இன்னொன்று நில அளவைத் துறையின் உதவியுடன் வருவாய்த் துறை. சொத்துடைமை, இன்னும் குறிப்பாக நிலவுடைமை ஆவணங்களில் இவை செய்து வரும் குளறுபடிகள்தாம் உரிமையியல் வழக்குகளின் பெருக்கத்துக்கு முதன்மைக் காரணம்.

            பதிவுத் துறையில் உள்ள ஒரு நடைமுறை என்னவென்றால் தகுந்த பணம் கொடுத்துவிட்டால் யாரும் தமக்கு உரிமையில்லாத வேறு யாருடைய சொத்தை வேண்டுமானாலும் இன்னொருவருக்கு விலை, ஒற்றி, அடமானம் என்று எந்த வகை வில்லங்கம் வேண்டுமானாலும் செய்து பத்திரம் பதிந்து கொடுத்து விடுவது. ஒரு சொத்து உண்மையில் யாருடைய உடைமையாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவணங்கள் பதிவாளர்களின் வசம் இருந்தாலும் அவர்கள் மீது பொறுப்புச் சுமத்தும் வழக்கம் இல்லையாதலால் இதை அவர்கள் தயக்கம் இன்றிச் செய்து ஆதாயம் பெறுகின்றனர்.

            அதே போல் வருவாய்த் துறையினர் பட்டா எனும் பட்டயத்தை வழங்குகின்றனர். இதற்கென்று நெறிமுறைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. ஆனால் இங்கும் தகுந்த பணத்தை வழங்கிவிட்டால் ஒருவருடைய பெயரிலிருக்கும் நிலத்தையும் முதலில் கூட்டுப் பட்டா என்ற பெயரிலும் பின்னர் தனிப் பட்டாவாகவும் சில நாட்களில் இன்னொருவர் பெயருக்கு மாற்றிவிடுகின்றனர்.

            இதில் நில அளவைத் துறையினரின் பங்கு மிகப் பெரியது, கொடியது. ஒரு பகுதியை மறு அளவை செய்யும் போது, நிலவுடைமைளைத் தம் விருப்பம் போலக் குறித்துக் கொள்கின்றனர். அதனால் பாதிக்கப்படுபவர் அதைச் சரி செய்வதற்கு நீண்ட நெடும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். அதில் அவர் வெற்றி பெறுவார் என்று கூற முடியாது. தளர்ந்து, சோர்ந்து கைவிட்டு விடுவதுதான் வழக்கம். இது எப்படி நேர்ந்தது?

            ஆங்கிலேயர் நம் நாட்டைக் கைப்பற்றியபோது இங்கு நிலவரி முறை மிகக் குழப்பமாக இருந்தது. வேளாண்(ரயத்துவாரி)வகை, இனாம்வகை, காணிப்பற்று(மிராசுதார்)வகை, படையாட்சி (பாளையங்கள்)வகை என்று பல வகையாக இருந்தது. அவற்றில் வேளாண்வகை என்பது அரசே நேரடியாக வரி தண்டுவதாக இருந்தது. ஆனால் அங்கும் பல இடங்களில் நிலம் பிரிவில்லாத பங்குகளாக அவரவர் கைப்பற்றில் உள்ள நிலம் அவரவர் விருப்பம்போல் விற்கப்பட்டும் வில்லங்கம் செய்யப்பட்டும் வந்தாலும் அவற்றுக்கு வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடுகள் இருக்கவில்லை.

            காணியாட்சி நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுக் காணியாளர் மூலம் வரி அரசுக்குச் செலுத்தப்பட்டது. படையாட்சி நிலங்களுக்கு வரி என்றில்லாமல் கப்பமாக தண்டப்பட்டது.

            இவற்றில் வெள்ளையர் காணியாட்சியை ஒழித்தனர். படையாட்சிப் பகுதிகளைத் தம் அரசியல் வசதிக்கேற்பப் பறிமுதல் செய்து வேளாண் வகையாக மாற்றவோ புதிய இடையாட்சிகளிடம் (சமீன்தார்களிடம்) ஒப்படைக்கவோ அல்லது இருந்த படையாட்சிகளை இடையாட்சிகளாக மாற்றவோ செய்தனர்.

            வேளாண்வகை, காணியாட்சி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படையாட்சி நிலங்களை வெள்ளையர் அளந்து தீர்வை நிறுவினர். இவ்வாறு நிறுவுவதற்காக உள்ளூர் மக்களைத் திரட்டி அவர்களைக் கலந்து முடிவெடுத்து உடைமைகளை முடிவு செய்தனர். இந்த முறைக்கு உள்ளூர் உசாவல்(Local Enquiry) என்று பெயர்.

            விடுதலைக்குப் பின்னர் இனாம்களும் இடையாட்சிகளும் ஒழிக்கப்பட்டு வேளாண்வகையாக மாற்றப்பட்ட போதும் இந்த 'உள்ளூர் உசாவல்' முறை பேருதவியாக இருந்தது. இவை அனைத்தும் வருவாய்த் துறையாலும் அதனோடிணைந்திருந்த அளவைத் துறையாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள். இப்போது அனைத்து நிலங்களும் அளக்கப்பட்டு வரி நிறுவப்பட்டுத் தீர்வுக்கு(Settlement) வந்த பின்ரும் இந்உள்ளூர் உசாவலை வைத்துக் கொண்டு இவ்விரு துறையினரும் சித்து விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஆவணங்களைப் புதுப்பித்தல்(UDR) என்ற பெயரில் அவர்கள் செய்அழிம்புகள் சொல்லிமாளாது. மறு அளவைகள் நடந்த போது ஊரிலுள்ள செய்தியறிந்த திறமைசாலிகளுடன் இணைந்து யார்யார் நிலங்களையெல்லாமோ அத் திறமைசாலிகளுக்குப் பட்டயம்(பட்டா) போட்டுக் கொடுத்திருக்கின்றனர். அதே பழக்கத்தின் தொடர்ச்சியாக இப்போது எங்காவது அளவை செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் அங்கெல்லாம் ஆட்களைத் தேடிப் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் பெயரில் பட்டயம் போட்டு விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பதறிக் கொண்டு அலைவதுதான் மிச்சம். பத்திர ஆவணத்திற்குப் புறம்பாக எப்படிப் பெயர் மாறியது என்று கேட்டால் 'அண்டை உசாவலில்' தெரியவந்தது என்கின்றனர். அண்டை வீட்டில், மேல்மாடியில் அல்லது கீழ்த்தளத்தில் வாழ்பவர் ஆணா பெண்ணா என்றுகூட அறிய முடியாத இன்றைய உலகில் வழியில் செல்வோரிடம் சொத்துடைமைச் செய்திகளைத் திரட்டுகிறார்களாம். எப்படிக் காது குத்துகிறார்கள் பார்த்தீர்களா! "இவன்களுக்குச் சரியாக அளந்து போட்டால் நமக்கு என்ன ஆதாயம்? இப்படி நம்மைத் தேடிக் கொண்டு வருவான்களா?" என்று கூசாமல் கேட்கிறார்கள். பலருக்கு இவ்வாறு தங்கள் நிலத்தை வேறு பெயர்களுக்குப் பட்டயம் போட்டிருப்பதுகூடத் தெரிவதில்லை. விலைப் பத்திரம் தங்கள் கைகளில் இருக்கிற உறுதியில் இருந்து விடுகிறார்கள். இவ்வாறு பட்டயத்தை அல்லது பத்திரத்தைக் கையில் வைத்திருக்கிற ஒருவர் அந்த நிலத்தை வேறொருவருக்கு விற்ற பின்னர் இன்னொருவர் வழக்கு மன்றம் ஏறுகிறார். நீதிமன்றங்கள் ஒன்று மாற்றி ஒன்று பத்திரம் வைத்திருப்பவர்க்கும் பட்டயம் வைத்திருப்பவர்க்கும் சார்பாக மாற்றி மாற்றித் தீர்ப்பளித்து வழக்குகளைச் சாகாமல் காப்பாற்றி வைத்திருக்கின்றன.

            அடுத்தது, ஒரு நிலம் விற்பனையின் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட பின்னர் அதற்காகப் பட்டமாற்றம் செய்வதும் பகுதியாக விற்கப்பட்டிருந்தால் அதை உட்பிரிவு செய்வதும் ஆகும்.

            உட்பிரிவு செய்வதில் வெள்ளையர் காலத்தில் முன் அளவு ஆவணங்கள் இல்லாமையானால் இருக்கின்ற வரப்புகளை அப்படியே குறித்து உட்பிரிவு செய்தார்கள். இந்த விதியை இப்போது புல வரைபடங்கள் உள்ள நிலங்களுக்கும் கையாளுகிறார்கள் அளவைத் துறையினர். ஒரு பத்திரம் பதியும் போதே உட்பிரிவுக்கும் கட்டணம் ண்டப்பட்டு விடுகிறது. வட்டாட்சியர் அலுவலகத்துடன் இணைந்துள்ள அளவரை[1] அணுகும் போது அவர் முதலில் கேட்கும் கேள்வி "வரப்பு இருக்கிறதா?" என்பதுதான். தான் வாங்கியுள்ள ரப்புள்ள நிலத்தை அளந்து கண்டுபிடித்து அதற்கு வரப்பிடுவதற்கான தொழில்நுட்ப அறிவுரையைப் பெறுவதுதான் நிலத்தை வாங்கியவரின் உடனடி நோக்கம். அவரிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டவுடன் அவர் திகைத்துத் தடுமாறுகிறார். ஏதோ செய்யத் தகாத குற்றத்தைச் செய்துவிட்டர் போல் கலங்குகிறார். இவ்வாறு சிக்கலைக் கிளப்பிய பின்னர் அளவர் சிக்கலுக்குத் தீர்வையும் சொல்கிறார். அதாவது பணம் கொடுத்தால் வரப்பில்லாமலே உட்பிரிவு செய்யப்படும். இந்தத் தொகை ஆயிரக்கணக்கு என்ற அளவுக்கு இப்போது உயர்ந்துள்ளது.

            பட்டயம் மாற்ற வேண்டுமானாலும் அதே அளவு தொகை கேட்கிறார்கள். இதில் நில உச்சவரம்புப் பிரிவினருக்கும் பங்குண்டு. கொடுக்கவில்லை என்றால் ஏதாவது சிக்கல் உண்டாக்கி ஆளை மண்டியிட வைத்துவிடுவார்கள்.

            அனுபவ பாத்தியதை என்ற சட்டப் பிரிவும் இவ்வாறு தெளிவில்லாமலிருந்த எல்லைகளின் விளைவுதான். ஆனால் இன்று அது திருடுவோருக்குப் பரிசளிப்பதாகவும் அப்பாவிகளுக்குத் தண்டனையாகவும் ஆகிவிட்டது.

            ஒரே சொத்தை ஒருவருக்கு விற்ற பின்னர் இன்னொருவருக்கும் விற்பவர்கள் இருக்கிறார்கள். இந்த விற்பனையைப் பதியும் முன்னரே பதிவுத் துறையினரால் கண்டுபிடித்து விட முடியும். ஆனால் 'தகுந்த' கூலியைப் பெற்றுக்கொண்டு பதிந்துவிடுகிறார்கள். இந்த வழக்குகளும் நீதிமன்றங்களில் குவிக்கின்றன.

            தமிழ் நாட்டில் இன்று தீர்வைப்பணி[2] முடிவுற்றது போல் தோன்றினாலும் பல டங்களில் இன்றும் ‘பிரிவின்றிப் பங்குகளாக’ நிலங்கள் கிடக்கின்றன. பயிர்ச் செய்கை தொடர்ந்து நடைபெறும் இடங்களில் அவரவர் கைப்பற்றுகள் விற்பனைகள் மூலம் கைமாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தரிசாக விழுந்துவிட்ட நிலங்களில் எவெரெவர் பங்கு எங்கிருக்கிறதென்பதைக் கண்டுபிடிக்க முடியாதாகையால் ஏதாவது நடவடிக்கை எடுத்து நிலைமையைச் சீர் செய்யவில்லையென்றால் அவை என்றும் தரிசுகள்தாம். அவற்றில் எவராவது துணிந்து இதுதான் தன் பகுதி என்று விற்றுவிட்டார் என்றால் உடனே பிற பங்காளிகள் அனைவரும் வாங்கியவரைப் பிய்த்தெடுத்துவிடுவார்கள்.

            தேக்கு மரக் காடுகள் வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு மக்களிடம் பணம் பெற்று நாடெங்கும் பல நிறுவனங்கள் நிலங்களை வாங்கி. அவை அனைத்தும் மேலே கூறிய சிக்கல்களில் சிலவற்றையேனும் சந்தித்தே ஆக வேண்டியிருந்திருக்கும். அவற்றில் ஒன்று கூட தாங்கள் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. போடி வட்டத்தில் மலையடிவாரத்தில் இத்தகைய ஒரு நிறுவனம் தொடங்கிய தோட்டத்தை அங்கிருக்கும் ″புரட்சி பொங்கி வழியும்″(மார்க்சிய இலெனிய) அமைப்பினர் வெட்டி அழித்தனர். அதே வட்டாரத்தில் மலைகள் மீது கான்துறை வளர்க்கும் நீலகிரி மரம் இவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. நிலத்திலுள்ள ஈரத்தை எல்லாம் உறிஞ்சி எண்ணையாக்கி காற்றில் கலக்கவிடுவது இம் மரத்தின் தன்மை. அதனால் மழைப் பொழிவு அந்த வட்டாரத்தில் பாதிக்கப்படும். இதெல்லாம் இவர்களுக்குத் தெரியாது. தெரிந்தாலும் கவலை இல்லை. ″புரட்சி ஓங்குக″!

                        புறம்போக்கு நிலங்கள் என்று பல்வேறு நோக்கங்களுக்காக பெரும் பரப்பு நிலங்கள் ஒவ்வோர் ஊரிலும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இடம் பிடித்தால் அதற்குத் தண்டத் தீர்வை என்றும் தண்டிவிடுகிறார்கள். இருந்தாலும் அவ்வாறு விதிப்பதற்குக் கையூட்டு வழங்க வேண்டும். திடீர் திடீரென்று அகற்றியும் விடுவார்கள். மீண்டும் பணம் கொடுக்க வேண்டும். புறம்போக்கு எனும் திட்டம் சட்டத்தை வாடகைக்கு விட்டு (அரசூழியர்கள்) பணம் பண்ணுவதற்கான சட்டங்களில் ஒன்று.

            முன்னாள் திருவிதாங்கூர் சமத்தானத்தில் மிகுதியாக உள்ள புறம்போக்கு நிலங்களை அவ்வப்போது ஏலம் விட்டுவிடுவார்கள் என்று கேட்டிருக்கிறேன். இன்றைய நிலை என்னவென்று தெரியவில்லை.

            ஆங்கிலர்கள் நம் குமுகத்தில் தீவிரமான மாற்றங்களைச் செய்யவில்லை. இன்னொரு 1857ஐச் சந்திக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால் புதுச்சேரியின் பிரஞ்சியரும் சமத்தானங்களும் நல்ல மாற்றங்கள் பலவற்றைச் செய்தனர். திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு மாறிய குமரி மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சிறந்த வருவாய்த் துறை நடைமுறைகளைக் கடைப்பிடிக்க தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் கே. ஏ. மதியழகன் விரும்பினார். ஆனால் பின்னர் அவர் சிக்கிக் கொண்ட அரசியல் புயலில் அவரது அருமையான திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. முன்பு தன்னாட்சியுடைய சமத்தானத்தின் ஒரு பகுதியாயிருந்த குமரி மாவட்டம் இன்று பன்றியுடன் சேர்ந்த கன்றாகிவிட்டது. புதுவை மாநிலத்தின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான்.

            நிலவுடைமையாளரை அச்சுறுத்தும் இன்னொரு அரசு நடவடிக்கை வீட்டு வசதி வாரியத்துக்காக நிலம் கையகப்படுத்தலாகும். இவ் வாரியம் செயற்படும் இடங்களில் எங்கெங்கு ரளவு விலை மதிப்புள்ள நிலங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் கையகப்படுத்தும் முன்னீடுகள் முன்வைக்கப்படும். நிலவும் சந்தை மதிப்பிலிருந்து மிகக் குறைந்த விலையே வழங்கப்படுமாதலால் நிலவுடைமையாளர்கள் பதறியடித்துக்கொண்டு அதிகாரிகளை அணுகுவர். இறுதியில் ஏக்கருக்கு எவ்வளவென்று பேரம் பேசி மேலேயுள்ளவர்களுக்குக் கொடுத்துவிட்டால் முன்னீடு கைவிடப்படும். நிலத்தின் மதிப்பில் 10 விழுக்காடு ‘வெட்ட’ வேண்டுமென்பது ‘மரபு’. வாணிக நோக்கமற்ற, பொதுப் பணிக்காகவே நிலம் கையகப்படுத்தும் சட்டம் கையாளப்பட வேண்டும் என்று விதியிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் வாணிக அடிப்படையில் செயற்படும் வீட்டு வசதி வாரியத்துக்கு இச் சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? உலக வங்கி அதில் முதலிட்டிருக்கிறது என்பதாலா?

            மக்களுக்கு வீடுகள் அமைத்துத் தருவதுதான் வீட்டுவசதி வாரியத்தின் பணி. அப்படியிருக்க முறைப்படி நகர ஊரமைப்பு இயக்ககத்தின் இசைவைப் பெற்று மனைப்பிரிவு செய்து கல்லிடப்பட்ட இடங்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அடிப்படை என்ன? வீடுகள் கட்டி குடியிருந்த மனைகளையும் அளந்து மக்களை மிரட்டுகிறார்களே நிலம் கையகப்படுத்தும் துறை ஊழியர்கள், இது அரசுக்குத் தெரியுமா? அல்லது ஒவ்வொரு கட்டத்திலும் மேலேயுள்ளவர்களுக்கு இவ்விவ்வளவு வந்துவிட வேண்டுமென்று பேழைக் குறியளவு[3] நிறுவியிருக்கிறார்களா?

            வீட்டுவசதி வாரியத்தின் இந்த நடவடிக்கைகளால் மக்களின் மனதில் தோன்றியிருக்கும் எண்ணம் என்னவென்றால் இன்றைய சாலைப் போக்குவரத்தின் நிலையில் வெளியில் சென்றவருக்கு எப்போது சாவு வரும் என்று எதிர்பார்க்க முடியாதோ அதே போல் நிலம் வைத்திருப்போர் அது என்று பறிபோகும் என்பதையும் எதிர்பார்க்க முடியாது என்பதுதான்.

            வேளாண் நிலங்களை வீடுகட்டுவதற்குப் பயன்படுத்தும் முன் அவை வேளாண்மைக்குத் தகுதியற்றவை என்ற சான்றிதழை வேளாண் துறையிடம் பெறவேண்டுமென்று ர் அரசாணை சில ஆண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் வீட்டு வசதி வாரியம் உட்பட அரசுத் துறைகளுக்கும் பிற அரசுசார் நிறுவனங்களுக்கும் இவ்வாணை பொருந்தாது எனவும் கூறப்பட்டிருக்கிறது.

            அடுத்து வருவது நில உச்சவரம்பு. வருமான வரியைப் போலவே நில உச்ச வரம்பும் பெருநிலவுடையார்களிடமிருந்து நிலத்தைப் பிடுங்கி நிலமற்றோருக்குக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த ஒரு திட்டமாகும். ஆனால் இதுவரை எந்த நிலமும் கைப்பற்றப்பட்டதாகவோ கைப்பற்றப்பட்ட நிலம் எவருக்கும் கொடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. ஆனால் அதிகப்படி(உபரி) நிலங்களென்று சில நிலங்கள் அறிவிக்கப்பட்டு அவற்றை உடையோர் பயன்படுத்தாமல் ஆக்கிவைத்துள்ளனர். எவ்வாறு வருமானவரி மூலதனத்தை முடக்கிப் போடப் பயன்படுத்தப் பயன்படுகிறதோ அவ்வாறே நில உச்சவரம்பு, நிலத்தை முடக்கிப்போடப் பயன்படுகிறது.

            உச்சவரம்புக்கு மேற்பட்ட நிலங்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலங்கள் ஒரு புறம் முடங்கிக் கிடக்க மறுபுறம் அரசு அலுவலகங்கள் கட்டவும் ஏழைகளுக்கு இலவசப் பட்டா வழங்கவும் சில இடங்களில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் அமைக்கவும் பாசனக் குளங்களே பாழடிக்கப்பட்டு வருகின்றன. அரசின் அளவுகோல்கள் விந்தையானவை!

            நில உச்சவரம்பு என்பது ஒரு மாயை. அதனால் எவரும் பயன்பெறவில்லை. மாறாகக் குத்தகை ஒழிப்பு மூலம் பயிர்த் தொழில் செய்த எண்ணற்ற குத்தகையாளர்கள் நில உடமையாளர்களாக மாறியுள்ளனர். இதன் மூலம் நிலத்தின் மீதுள்ள அவர்களது பிடிப்பு உறுதிப்பட்டுள்ளதால் நிலத்தின் விளைதிறன் முன்னேறியுள்ளது. இப் புதிய நிலவுடைமையாளர்கள் தங்களது எளிய பண்பாட்டுப் பின்ணனியினால் உருவான சிக்கனத்தினால்(வாழ்க்கைச் செலவுக் குறைவு, சொந்த உழைப்பு, நேரடிக் கண்காணிப்பு, எனவே தொழில் நுட்பத் தேர்ச்சி) உச்சவரம்பை மிஞ்சிய நிலங்களின் சொந்தக்காரர்களாகியுள்ளனர். இவற்றில் கணிசமானவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர். இவர்கள் உச்சவரம்புச் சட்டங்களிலிருந்து தப்புவதற்காகக் கைக்குழந்தைகள் மீது கூட நிலங்களை வாங்குகின்றனர். அக் குழந்தைகள் வயதுக்கு வரும் வரை அந்நிலங்கள் மீது கடன் பெறல், விற்றல், வில்லங்கம் செய்தல் என்று அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளுக்கும் விலங்கிடப்படும்.

இந்த உச்சவரம்பெல்லாம் உணவுப் பொருள் பயிரிடக்கூடிய வேளாண் நிலங்களுக்கு மட்டும்தான். வாணிகப் பயிர்களுக்கு இதில் விலக்கு உண்டு. டாட்டா போன்ற பெருமுதலைகள் பல்லாயிரம் ஏக்கர்களில் இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரையில் உப்பளம் அமைப்பதற்கென்று இருபது ஆண்டுகளுக்கு முன்பே வாங்க முடிந்திருக்கிறதென்றால் இந்தச் சட்டத்தின் உண்மையான நோக்கம் என்ன? இச் சட்டத்தைத் தங்கள் அருஞ்செயல் என்று தன்பட்டம் அடித்துக்கொள்ளும் பொதுமைத் தோழர்களின் உண்மையான நோக்கம் என்ன? உள்ளூர் மக்களின் வளர்ச்சியை என்னென்ன வகையிலெல்லாம் முடியுமோ அவ்வகைகளிலெல்லாம் தடுத்துச் சிதைத்து இந்தியப் பெரும் முதலைகளுக்கும் அவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் கூட்டாளிகளாகவும் தோன்றும் துணையாகவும் இருக்கும் பன்னாட்டு முதலைகளுக்கும் களம் அமைத்துக் கொடுப்பது தவிர வேறென்னவாய் இருக்க முடியும்? நந்திகிராமம் நமக்கு அதைத் தெளிவாகக் காட்டவில்லையா?
           
மேலே குறிப்பிடப்பட்டுள்ளது நன்செய்ப் பகுதிகளின் நிலையாகும். புன்செய்ப் பகுதிகளில் சிறு நிலவுடைமையால் எந்தப் பயனுமில்லை. பொதுவாகவே சிறு உடைமைச் சொந்த உழவனாயிருப்பதை விட வேளாண் தொழிலாளியாயிருப்பதே ஆதாயமும் மன அமைதிக்கு உகந்ததுமாகும். அனைவருக்கும் நிலத்தைப் பங்கிடுவதென்ற முழக்கம் வேளாண்மையின் உண்மை இயல்பைப் புரிந்துகொள்ளாத, தெரிந்துகொள்ளும் வாய்ப்பில்லாத வெற்றுச் சிந்தனையாளர்களின் வரட்டு முழக்கம். தாழ்த்தப்பட்டவர்கள் நிலவுடைமையினுள் நுழையாமலேயே நிமிர முடியும். சிறு உடைமையாளராவது விடுதலையல்ல. புதிய பல அடிமைத்தனங்களுக்கும் விலங்குகளுக்கும் ஆளாவதாகும். எனவே அனைவருக்கும் நிலம் என்ற குறிக்கோள் கைவிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

நகர்ப்புற உச்சவரம்பு என்று ஒன்று உள்ளது. இதன்படி ஒரு நிலம் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்டுகளில் ஏதாவது வேளாண்மை, சீமைக் கருவேல மரமாயிருந்தாலும் போதும், செய்யப்பட்டிருந்ததாக அடங்கலில் பதிவாகியிருந்தால் தப்பும். இல்லையென்றால் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மிஞ்சிப் போனால் ஒரு ஏக்கர் போக எஞ்சியது பறிக்கப்படும், அதாவது முடக்கப்படும். இதைத் தவிர்க்க ஏற்கனவே வட்ட அலுவலகத்தில் பதிவாகிவிட்ட அடங்கல் புத்தகத்தை எடுத்து அதில் குறிப்பிட்ட நிலத்துக்கான நுழைவு வெறுமையாயிருந்தால் அதில் புகுத்திவிடுவார்கள். இதில் கணிசமான பணம் கைமாறும்.

            நிலவுடைமையாளரை அச்சுறுத்திக் கொண்டேயிருக்கும் இன்னொரு துறை நகர ஊரமைப்புத் துறை. ஒரு நிலப்பகுதி திட்டப்பகுதி என்று இத் துறையால் அறிவிக்கப்பட்டுவிட்டால் அதன் பின் அதில் எந்தக் கட்டுமானம் கட்ட வேண்டுமாயினும் சென்னையிலுள்ள இயக்குநராக ஒப்புதல் பெற வேண்டும். (இவ்வித ஒப்புதல்களை அந்தத் துறை அமைச்சரின் வாய்மொழி ஒப்புதல் இன்றி வழங்குவதில்லை என்பது நடைமுறை என்று கூறப்படுகிறது.) இதைவிடக் கொடுமையானது பல ஏக்கர் நிலங்களைத் திறந்தவெளி, பூங்கா, பசுமைப் பகுதி, சாலைவளைவு என்றெல்லாம் அறிவித்து விடுவார்கள். அந்த நிலங்களில் எந்தக் கட்டுமானமும் கட்ட இயலாது. இது போன்ற இடங்களுக்கு அத் துறையோ அரசோ எவ்வித இழப்பீடும் தருவதில்லை. இதைப் போல் தேவையற்ற இடங்களிலெல்லாம் கூட வாணிகப் பகுதி, தொழிற் பகுதி என்று பெரும் பரப்புகளை ஒதுக்கீடு செய்துவிடுவார்கள். இவ் விடங்களுக்கு மதிப்பு மிகவும் குறைந்துவிடும். ஆனால் இவ்வாறு செய்யப்பட்ட ‘ஒதுக்கீட்டுக்கு’ ‘ஒதுக்கீடு விலக்கம்’ செய்யும் அதிகாரம் இயக்கத்துக்கு உண்டு. இதில் பெருமளவு பணம் கைமாறும். இங்கும் நிலத்தின் மதிப்பில் திட்டவட்டமான விழுக்காடுகள் உண்டு.

            மனைப்பிரிவுத் திட்டங்களில் 10 விழுக்காடு பூங்காக்கள் என்று விடப்படுகிறது. இவ் விடங்களைப் பராமரிப்புக்காக ஒப்புதலளிக்கும் உள்ளாட்சி அமைப்பிடம் சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பரப்புடன் சேர்த்து ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட பூங்காக்களையே பராமரிக்க வக்கற்ற நிலையிலிருக்கும் நம் உள்ளாட்சி அமைப்புகளிடம் இவ்வாறு பெரும் பரப்புகளை ஒப்படைப்பது செத்தவன் கையில் வெற்றிலை கொடுப்பது போன்ற பயனற்ற செயலாகும். அத்துடன் திட்டமிடப்பட்ட வீடமைப்புகளுக்கு நடுவில் இத்தகைய வெற்றிடங்கள் சேரிகளை உருவாக்கத்தான் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.

            திட்டப் பகுதியென்று ஒரு பகுதி அறிவிக்கப்பட்டுவிட்டால் அது நன்செய்யாயிருந்தாலும் அதில் கட்டடம் கட்டுவதற்குள்ள தடை தாமே விலகிவிடும். எனவே இங்கும் ஊழலுக்கு வாய்ப்புண்டு. (ஊழலுக்காகவே இவ் வாணை இத்தனை விலக்குகளுடன் இயற்றப்பட்டதோ?)

            அடுத்து நம் குமுத்தில் நிலவும் சில மரபுகளும் நிலங்களைத் தளையிட்டிருக்கின்றன. இம் மரபுகள் இந்துச் சட்டமென்ற பெயரில் சட்ட வடிவமும் பெற்றுள்ளன.

            அவற்றில் முதலாவது வாரிசுரிமைச் சட்டம். ஒருவருக்குத் தன் மூதாதையர்களிடமிருந்து பெற்ற சொத்துகள் இருந்து அவருக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அன்றே அக் குழந்தை அச் சொத்துக்கு உரிமையாளராகிவிடுகிறது. இக் குழந்தை உரிய வயதுக்கு வரும் வரை அச் சொத்தை விற்கும் உரிமை பெற்றோருக்கு இருந்தாலும் வயதுக்கு வந்த பின்னர் அந்த விற்பனையை அம் மகவு ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். எனவே இடைக் காலத்தில் அந் நிலத்தை வாங்க விரும்புவோர் இச் சிக்கலினால் தயங்குவர்.

            குழந்தையின் படிப்புச் செலவு என்று காரணம் காட்டிச் சிலர் விற்கின்றனர். இத்தகைய விற்பனை கூட பின்னர் மறுக்கப்படுகிறது. குழந்தையின் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கி அதனைப் பத்திரத்தில் காட்டியும் விற்பனை செய்யப்படுகிறது. இதனாலும் சிக்கல் தீர்ந்து விடுவதில்லை.

            நீதிமன்றத்தில் இசைவு பெற்று விற்பதுதான் சிக்கலில்லாத முறை. ஆனால் அது ஒரு நீண்ட நெடும் நடைமுறை. அதனால் பெரும்பாலோர் இதை நாடுவதில்லை.

            இந்தச் சிக்கலின் விளைவாக விற்பனை தாமதமாவதுடன் விலையும் குறைந்துபோகிறது.

            பெற்றோர் ஊதாரித்தனத்தால் சொத்துகளை விற்று அடுத்த தலைமுறையினரை வறுமையில் ஆழ்த்திவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த மரபு உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு குடும்பத்தினர் அனைவரும் நிலம் சார்ந்து குடும்பம் சார்ந்து வாழ்ந்து வந்தபோது இருப்போரில் மூத்தோரே நடைமுறைத் தலைவராக இருந்து வந்தார். எனவே முதியவர்களுக்கு மதிப்பும் பாதுகாப்பும் கிடைத்தன. ஆனால் இன்று மக்கள் நிலத்திலிருந்து அயற்பட்டு பல்வேறு வகையில் தத்தம் வாழ்வைக் கழித்துவிடுகிறார்கள். இதனால் முதியவர்களின் நடைமுறைத் தலைமை தேவையற்றதாகிவிடுகிறது. அத்துடன் மரபு சார்ந்த இந்தச் சட்டம் சொத்துகளைப் பொறுத்தவரை முதியவர்களை வலுவற்றவர்களாக்கிவிடுகிறது. இதுதான் இன்று எண்ணற்ற பெற்றோர் தம் மக்களால் கைவிடப்பட்டு இரந்துண்ணும் நிலை ஏற்பட்டுள்ளதற்குக் காரணம்.

            இன்னொரு மரபுச் சிக்கல் நிலத்தை விருப்பாவணம்(உயில்) மூலமாகவோ தீர்வுப் பத்திரம்[4] மூலமாகவோ எழுதிவைப்போர் அந்த நிலத்தை விற்கவோ வில்லங்கம் செய்யவோ கூடாது என்று எழுதி வைத்துவிடுகின்றனர். தம் வாரிசுகள் ஊதாரித்தனமாகச் சொத்தை அழித்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் கடைப்பிடிக்கும் இந்த உத்தி அவ் வாரிசுகள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும் போது அவர்களுக்கு அச் சொத்து உதவாமல் செய்து விடுகிறது.

            சொத்து சிதறாமல் இருக்கச் செய்யப்படும் இன்னொரு ஏற்பாடு சொத்தை ஏதாவதொரு தெய்வத்துக்கு எழுதி வைத்து வாரிசுகளைப் பொறுப்பாளர்களாக அமர்த்துவது. இந்த முறையில் சொத்து கையிலிருந்தால், அதில் நல்ல வருமானமும் இருந்தால் பொறுப்பாளர் பதவிக்காக வழக்கு மன்றம் சென்று செலவழியும், அல்லது வறுமைப்பட்டு விற்க வேண்டிவந்தால் இந்தச் சிக்கல் தடையாயிருக்கும். அத்தகைய நேர்வுகளில் பத்திரம் பதியுமுன் இந்து சமய அறநிலையத்துறையினரிடம் ஒப்புதல் பெறவேண்டும். ஒப்புதல் வழங்குவதற்குள் அத் துறையினர் சரியாகக் 'கறந்து' விடுவர். நீண்ட காலம் அலைய வேண்டியும் வரும்.

            சிலர் ஏதாவது தெய்வத்துக்குக் கட்டளை என்று எழுதிவைத்து அந் நிலத்தை விற்பதில் சிக்கலை ஏற்படுத்திச் செல்லும் உத்தியைச் கையாண்டுள்ளனர். இங்கும் மேற்கூறிய சிக்கலெல்லாம் உண்டு. சில வேளைகளில் பதிவுத் துறையினருக்குச் சில்லரையைக் கொடுத்து விலையாவணத்தைப் பதிந்து விடுவதும் உண்டு. ந் நேர்வுகளில் விற்பவர் உரிய விலையை வலியுறுத்த முடியாது.

            அடுத்து பதிவுச் துறையை எடுத்துக் கொள்வோம். பொறுப்பற்று எந்தப் பத்திரத்தையும் பதிந்து விடுவது ஒரு புறம். இன்னொரு புறம் முத்திரைத்தாள் சட்டம். பதிவுத் துறை ஒவ்வொரு நிலத்துக்கும் சந்தை விலையை நிறுவுகிறது. வாங்குவோர் குறைவான விலை கொடுத்தாலும் பதிவுத் துறை நிறுவியுள்ள விலையின் அடிப்டையில் முத்திரைத்தாள் வாங்கினால்தான் பத்திரம் கைக்குக் கிடைக்கும்.

            குறைவாகப் போட்டால் பத்திரம் கைக்கு வராது என்பது இதன் பொருளல்ல. மறுப்புப் பத்திரம் என்ற விதியின்படி பதிவு செய்தால் வருவாய்த் துறையில் அதற்கென அமர்த்தப்பட்டிருக்கும் ஒரு தனி அலுவலர் உசாவி குறைந்த ஒரு தொகையை நிறுவுவார். அதைச் செலுத்திப் பத்திரத்தை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு குறைக்கப்படும் தொகையில் 10 விழுக்காடு அவருக்கு வழங்க வேண்டும்.

            பதிவுத் துறையில் இது பற்றிக் கேட்டால், மாதத்துக்கு அல்லது ஆண்டுக்கு இவ்வளவு மதிப்புக்கு முத்திரைத் தாள் விற்கவேண்டுமென்று அரசு குறியளவு நிறுவியிருக்கிறதாம்; எனவே அவர்கள் நிலத்தின் மதிப்பை உயர்த்த வேண்டியிருக்கிறதாம். ஒருவேளை வருவாய்த் துறையின் முத்திரைத்தாள் சிறப்பு அலுவலருக்கும் ‘பேழைக் குறியளவு’ ஏதாவது நிறுவப்பட்டிருக்குமோ?

            ஒரு நிலத்துக்கு நன்செய் அல்லது புன்செய் என்று பதிந்தால் அதன் மதிப்பு குறைவு. கட்டட மனை என்று பதிந்தால் கூடுதல். இதிலும் பதிவுத் துறையினர் 'விளையாட' முடியும்.

            அண்டையிலுள்ள கேரள மாநிலத்தில் இது போன்ற கெடுபிடிகள் இல்லை. அதனால் அந்த மாநிலம் ஒன்றும் வறுமைப்பட்டுப் போய்விடவில்லை. மாறாக இங்கிருந்து பலர் அங்கு சென்று பத்திரங்களைப் பதிந்து வந்தனர். அதனால் தமிழ் நாட்டரசுக்கு வருவாய் இழப்பு. அத்துடன் அந்தப் பத்திரத்தைத் தமிழக அரசு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

            இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தில் பதியப்படும் பத்திரம் இன்னொரு மாநிலத்தால் மறுக்கப்படுவது முறையா என்ற கேள்விக்கு விடை இல்லை.

இவ்வாறு கேரளத்தில் பதியப்படும் பத்திரங்களின் அடிப்படையில் அச் சொத்துக்கு பட்டயம் (பட்டா) மாற்றுதல் முதலியவை வேண்டுமாயின் கேரளத்தில் செலுத்தியது போக இங்கு நிறுவப்பட்டிருக்கும் வழிகாட்டி மதிப்பின்படியுள்ள முத்திரைக் கட்டணத்தில் குறைபடும் கட்டணத்தை இங்கு செலுத்த வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் கேரளத்தில் பத்திரம் பதியும் வழக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.

            ஒரு பதிவு அலுவலகத்தில் ஒரு பத்திரம் பதியப்பட வேண்டுமாயின் அப் பதிவு அலுவலக எல்லைக்குட்பட்ட ஒரு நிலம் அதில் அடங்கியிருக்க வேண்டுமென்ற விதி இருக்கிறது. எனவே கேரளத்தில் பதியப்படும் பத்திரங்களை எழுதும் எழுத்தர்கள் கற்பனையாக ஒரு நிலத்தைக் குறிப்பிட்டுவிடுகின்றனர். இதனால் பல பத்திரங்கள் செல்லாதவையாகிவிடுகின்றன.

            ஒரு நிலத்தைப் பொறுத்தவரை அதில் செய்யப்படும் விலை, ஒற்றி, அடமானம், பாகப்பிரிவினை, உயில் போன்ற வில்லங்கங்கள் பதிவு அலுவலகத்தில் பதியப்பட்டிருக்குமாயின் அவற்றை வில்லங்கச் சான்றிதழ் மூலம் அறிந்துகொள்ளலாம். இந் நேர்வுகளில் பதிவலுவலகத்தில் முறையாகப் பதியப்படாத வில்லங்கங்கள் சான்றிதழில் இடம்பெறா.

            அதே நேரத்தில் பதிவு அலுவலகத்தில் பதிவு பெறாமல் வங்கிகள் நிலத்தின் மீது கடன் கொடுக்கின்றன. வழக்கு மன்றங்கள் கடன்களுக்காக சொத்தைப் பிணைக்கின்றன. இவையெல்லாம் பதிவுத் துறை வில்லங்கச் சான்றிதழ்களில் தெரிவதில்லை. இத்தகைய நேர்வுகளில் மூலப் பத்திரத்தைக் கேட்டுப் பெறலாம். ஆனால் மூலப் பத்திரம் தொலைந்து போயிற்று, இதோ நகல் என்று கூறி ஏமாற்றி விடுவதும் உண்டு.

            இவ்வாறு நிலவுடைமை என்பது எண்ணற்ற குளறுபடிகளுக்கு ஆளாகி நிற்கிறது. நிலம் வைத்திருப்போரின் அமைதியை இந்தக் குளறுபடிகள் குலைத்து அவர்களது பொருளியல் செயற்பாடுகளுக்குத் தடங்கல்களாக அமைகின்றன.

            நிலம் ஒரு மக்களின் பொருளியலுக்கும் பண்பாட்டுக்கும் அடிப்படையானது. முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின் இயல்பெனப் பொருளிலக்கணம் (தொல்காப்பியம்) கூறுகிறது. அகழ்வாரையும் அகழாதாரையும் தாங்குவது நிலம். அத்தகைய நிலம் ஒரு மக்களின் பொருளியல் காரணிகளில் முதன்மையானதாகும். அதன் இயக்கம், அதாவது கொடுக்கல் வாங்கல், எவ்வித உராய்வும் இன்றி எளிதாக நடைபெற வேண்டும். அவ்வாறு இல்லாத குமுகம் முன்னேற முடியாது. ஆனால் நம் நாட்டில் நிலத்தின் இயக்கம் கடுமையாகத் தளைப்பட்டிருக்கிறது.

            ஒரு மக்களின் நிலம் தளைப்பட்டிருப்பது அம் மக்கள் தளைப்பட்டிருப்பதன் குறியீடும் காரணமும் விளைவுமாகும். மக்கள் மீது மறைமுகமாக, அவர்களறியாமலே விழுந்திருக்கும் இத் தளைகளைக் கீழ்க் கண்டவாறு அகற்ற வேண்டும்.

1.       விரிவான நில அளவை செய்யப்படாத பகுதிகள் உடனடியாக அளவை செய்யப்பட வேண்டும்.
2.       பாதைக்குத் தவிர பிரிவின்றிப் பங்கு ஒழிக்கப்பட வேண்டும்.
3.       அனைத்து நிலங்களும் அளவை செய்யப்பட்ட நிலையில் நிலப் பதிவேடுகள் புதுப்பிக்கப்படும் போது ஆவணங்களை மட்டுமே பார்க்க வேண்டும். மனுதார்கள் கேட்டால் மட்டுமே களத்தில் அளக்க வேண்டும்.
4.       உள்ளூர் உசாவல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.
5.       பத்திரங்களின் அடிப்டையில் கட்சிக்காரர்களின் இசைவுடன் உட்பிரிவு செய்ய வேண்டியது அளவைத் துறையின் கடமை. வரப்பிருக்க வேண்டுமென்ற கட்டுப்பாடு ஒழிக்கப்பட வேண்டும்.
6.       அளவைத் துறை பதிவுத் துறையின் கீழ் இயங்க வேண்டும்.
7.       பட்டய மாற்றுதலும் பதிவுத் துறையின் பொறுப்பாக வேண்டும்.
8.       ஒவ்வொரு தனி மனிதருக்கும் பிறந்தவுடன் ஒரு குடியுரிமைப் பதிவேடு வழங்கப்பட வேண்டும். அதில் அவருடைய சொத்துரிமைகள் பதியப்பட வேண்டும். அவர் பங்கு பெறும் ஆவணம் ஒவ்வொன்றும் அதில் குறிக்கப்படல் வேண்டும்.
9.       வருவாய்த் துறைக்கு வரி தண்டுவது தவிர நிலவுடைமையில் எந்தப் பங்கும் இருக்கக் கூடாது.
10.   அனுபவ பாத்தியதை என்ற பெயரில் பிறர் சொத்தைப் பறிக்க முயல்வோர் தண்டிக்கப்பட வேண்டும்.
11.   ஏற்கனவே வில்லங்கம் இருந்து அதைப் புறக்கணித்து ஆவணம் பதியும் அலுவலர் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
12.   தேவையற்ற புறம்போக்கு நிலங்களை உடனுக்குடன் ஏலம் விட வேண்டும். அரசின் தேவைகளுக்கு நிலம் வாங்கும் போது நிலவும் சந்தை விலையை வழங்க வேண்டும். இதில் வாணிக நோக்கம், பொதுநோக்கம் என்ற பாகுபாடு தேவையில்லை.
13.   வருமான வரி மூலதனத்தை முடமாக்குவதற்குப் பயன்படுவதுபோல் நில உச்சவரம்பு நிலத்தை முடமாக்குவதற்கே பயன்படுகிறது. எனவே நில உச்ச வரம்புச் சட்டம் அகற்றப்பட வேண்டும்.
14.   நகர, ஊரமைப்பு இயக்ககம் ஒரு மனைப் பிரிவுக்கு ஒப்புதல் அளிக்கும் முன் அப் பகுதிக்கு பெருந்திட்டம் ஒன்றை வகுத்துப் பொது நோக்கங்களுக்கான இடத்தை அதில் மொத்தமாகக் குறித்து அந்த நிலங்களை விலைக்கு வாங்கிவி வேண்டும். அத்துடன் பொது நோக்கங்களுக்கு 10 நூற்றுமேனி என்றிருப்பதைக் குறைக்க வேண்டும். தனித்தனி மனைப் பிரிவுகளில் பொது நோக்கங்களுக்கான இடம் ஒதுக்கத் தேவையில்லை. மொத்தமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் பூங்கா முதலியன அமைக்கும் பணியையும் அத் துறையே மேற்கொள்ள வேண்டும்.
15.   இந்துச் சட்டம் எனப்படுவதில் இடம்பெற்றுள்ள வாரிசுரிமைச் சட்டம் கைவிடப்பட வேண்டும். விற்பனை, வில்லங்கம் செய்யத் தடைசெய்து பத்திரங்கள் பதியப்படக் கூடாது. அதே போல் தெய்வத்தின் பேரில் சொத்தை வைத்து உரிமையாளரை மேலாளராக்கும் பத்திரங்களும் பதியப்படக் கூடாது. சுருக்கமாகக் கூறினால் சொத்தை நுகர்வோருக்கு அச் சொத்தின் மீது தடங்கலற்ற அனைத்துரிமையும் இருக்க வேண்டும். சொத்தின் கைப்பற்றுக்கும்(Possession) ஆவணத்துக்கும் முரண்பாடு இருக்கக் கூடாது.
16.   நீதி மன்றங்கள் கடன்களுக்காஒரு சொத்தைப் பிணைத்தால் அந்த உண்மை பதிவு அலுவலகத்துக்குத் தெரிவிக்கப்பட்டு அது ஒரு வில்லங்கமாகப் பதியப்பட வேண்டும். ஒரு சொத்தின் மீது பதிவலுவலகத்தில் பதியப்படாத எந்தவொரு வில்லங்கமும் அது வழக்கு மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இருந்தாலும் செல்லுபடியாகக் கூடாது. வங்கிகளுக்கும் இதிலிருந்து விலக்கு இருக்கக் கூடாது. மூலப் பத்திரத்தை வைத்திருப்பது உரிமையாகிவிடக் கூடாது.
17.   முத்திரை மதிப்பிற்காக சொத்துகளுக்கு அரசே விலை நிறுவும் முறை கைவிடப் படவேண்டும்.
18.   முத்திரைக் கட்டணமும் பதிவுக் கட்டணமும் சேர்ந்து சொத்தின் மதிப்பில் 5 நூற்றுமேனிக்கு மிகாமலிருக்க வேண்டும்.[5]
19.    நடப்பிலிருக்கும் உரூபாய் மதிப்பின் அடிப்படையில் கணக்கிடும் போது ஒரு சொத்தின் பத்திர மதிப்பிற்கு மேல் அதன் மீது வில்லங்கம் செய்தால் அது செல்லுபடியாகக் கூடாது. குறைந்த மதிப்பைக் காட்டி அதனை அவர் பதிந்திருந்தால் அவர் தாமாவே முன்வந்து கூடுதல் மதிப்பைக் காட்டி அதற்குரிய முத்திரைக் கட்டணத்தையும் செலுத்தினால் ஏற்றுக்கொண்டு அதன் மதிப்பிற்கேற்ப வில்லங்கம் செய்யலாம். பத்திர மதிப்பை இந்த நோக்கத்திற்காக கணக்கிடும்போது அந்த பத்திரம் பதியப்பட்ட ஆண்டையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

            நம் நாட்டின் பொருளியல் வளர்ச்சியுறாமல் தேங்கி நிற்பதற்கும் வளர்ச்சிக்கு வெளித் தூண்டல் தேவையாயிருப்பதற்கும் காரணங்கள் என்னென்ன என்பதற்கு நிலவுடைமைக் குளறுபடிகள் ஓர் எடுத்துக்காட்டாகும். வரலாற்று வழிப்பட்டனவும் இரு நூற்றாண்டுக் கால அடிமைத்தமும் மத்திய காலத் தேக்க நிலைப் பண்பாடுகள் இன்னும் தொடர்வதுமே காரணங்கள். அவற்றை ஒவ்வொன்றாக நாம் இனங்கண்டு அகற்ற முயலவேண்டும்.

இறுதியாக நம் நீதி அமைப்பைப் பற்றிய சில ஐயப்பாடுகள்:

1.       நிலவுடைமைகளைப் பொறுத்து வருவாய்த் துறை ஆவணங்களுக்கும் பதிவுத் துறை ஆவணங்களுக்குமிடையில் உள்ள முரண்பாடுகள் பற்றி நீதிமன்றங்கள் ஒன்று மாற்றி ஒன்று, மாற்றி மாற்றித் தீர்ப்பளிக்கின்றன என்று கூறினோம். இது குறித்து நீதியமைப்பு ஒரு நிறைவான தீர்மானத்துக்கு இதுவரை ஏன் வர இயலவில்லை?

2.   ஒரு சொத்து வழக்கில் உச்ச நய மன்றம் தீர்ப்பு வழங்கிய பின் மீண்டும் அதே வழக்கை கீழமை நய மன்றங்கள் ஏற்றுக்கொள்கின்றனவே அதன் சட்ட – நயன்மைத் துறை அடிப்படை என்ன?

3         ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் பெண்ணைக் கேலி செய்தது தொடர்பாக நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மேல் முறையீடு செய்தபோது அவ் வழக்கில் தொடர்புடைய இருவர் மீதான குற்றச்சாட்டுக்குத் தெளிவான சான்று இருந்தும் அவர்களைத் தண்டிக்க வேண்டுமென்று அரசு தன் முறையீட்டில் கேட்கவில்லையாதலால் தம்மால் வர்களைத் தண்டிக்க முடியாமல் போயிற்று என்று நீதிபதிகள் கூறினார்கள். நீதிமன்றத்துக்குத் தற்சார்பு உண்டா என்ற கேள்வியை அல்லவா இது எழுப்புகிறது? மேல்முறையீட்டு வரைவை முன்வைக்கும் ஓர் அரசு அலுவலக எழுத்தர் நினைத்தால் நீதிபதிகளின் கைகளைக் கட்டிப்போட்டுவிடலாம் போலிருக்கிறதே!


[1] Sureyer
[2] Settlement
[3] Briefcase target
[4] Settlement  document
[5] முன்பு 13 நூற்றுமேனியாக இருந்தது இப்போது 8 ஆகக் குறைந்துள்ளது. இந்தக் குறைப்பு கூட ஆளுவோர் நிலங்களை வாங்கிக் குவிக்கத் திட்டமிட்ட சூழ்நிலையில் நிகழ்ந்திருக்குமோ?

0 மறுமொழிகள்: