12.12.15

திராவிட மாயை - 15


4.2.மீன்வளம்
            உலகில் மீன் வளமும் பிற கடல்வாழ் உயிரினங்களின் பன்மையமும் மிகுந்த கடற்கரைகளில் தமிழகக் கடற்கரை முதன்மையானது. எனவே அடுத்த இலக்கு இக் கடல் வளத்தைத் தமிழக மக்களிடமிருந்து பறிப்பது. அதற்கு முதல் வழி ஏற்றுமதி. ஓங்கலைப் பணி தொடர்பாக கொள்ளிடம் கழிமுகமான பழையாற்றில் நான் இருந்த போது அறிந்து கொண்டவை, ஏற்றுமதிக்குரிய சூறை மீன் வேண்டிய அளவு கிடைத்தால், ஏற்கனவே கிடைத்திருக்கும், உள்ளூர் மக்கள் நுகரும் பிறவகை மீன்களைக் கடலில் கொட்டிவிட்டுச் சூறை மீனோடு திரும்பிவிடுவார்கள்.  ஒரேயொரு சினை இரால் கிடைத்தால் கூட இதுதான் நிலை. சூறை மீன்கள் அங்கிருக்கும் குளிர்பதனக் கிடங்குகளில் பாதுகாக்கப்பட்டு பனிக்கட்டிப் பாதுகாப்புடன் சரக்கிகளில் கொச்சித் துறைமுகத்துக்கு விடுக்கப்படுகின்றன. சினை இறால்களை அதற்குரிய தொட்டிகளில் பராமரித்து குஞ்சுகள் வெளிவந்து உரிய பருவம் அடைந்ததும் அந்தந்த வட்டாரத்திலுள்ள இறால் பண்ணைகளில் வளர்த்து பின் கொச்சித் துறைமுகத்துக்கு விடப்படுகின்றன.

            இவ்வாறு தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பண்டங்களைக் கொச்சித் துறைமுகத்துக்குக் கொண்டு சென்று அத் துறைமுகத்துக்கு வருவாய் சேர்ப்பதும் அது தொடர்பான பல்வேறு வேலைவாய்ப்புகளும்  நின்றுபோகும் என்பதால் தான் கேரளத்துப் பார்ப்பானின்  தினமலர் சாலைச் சரக்குப் போக்குவரத்தே போதும் தமிழன் கால்வாய்க் கப்பல் போக்குவரத்து வேண்டாம் என்று வரிந்துகட்டிக்கொண்டு நின்றது.

            அதுமட்டுமல்ல, உலகக் கடல்வழிக்கு நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் அமைய இருந்த குளச்சல் துறைமுகத்தை மீனவர் மக்களை வைத்தே போராட்டம் நடத்தித் தடுத்த, வெளிநாட்டுப் பணத்துக்கு விலைபோன மீனவர் தலைவர்களின் செயலோடு, விழிஞம் துறைமுகத்தின் கொள்ளளவை விரிவுபடுத்தும் திட்டத்துக்கு இணைவிணக்கம்(Concurrence) கொடுத்த கருணாநிதியின் செயலும் திட்டமிட்டவையே. இன்று அந்தத் திட்டம் செயலுக்கு வந்ததும் கருணாநிதியைக் குத்திப்பேசும் செயலலிதா அன்று கருணாநிதி கையெழுத்திட்ட போது வாய் மூடி இருந்தது ஏன்?

      இவ்வாறு கடலில் பிடிக்காமலும் பிடித்துத் திரும்ப விடப்பட்ட பிறவகை மீன்களில் கரைமடியில் பிடித்து உள்ளூர் சந்தைக்கு வருவதற்கென்று ஒதுக்கியவை தவிர எஞ்சியவற்றை அயல் நாட்டுப் பெரும் மீன்பிடிக் கப்பல்கள் பிடித்துச் செல்கின்றன.

     கடலில் கிடைக்கும் தரமுள்ள மீன்களை அங்கு வரும் அயல்நாட்டுக் கப்பல்களுக்கு விற்றுவிட்டு வெறுங்கையுடன் அல்லது அயலவருக்கு உதவாத மீன்களுடன் கரைக்குத் திரும்புகிறார்கள் தமிழக மீனவர்கள். இவ்வாறு தமிழக மக்களுக்கு உரிய மீன் வளம் பல வகைகளிலும் பறிபோகிறது.
  
            இந்தக் கடல் வட்டத்தையே அயல்நாட்டுக் கப்பல்கள் மீன்பிடிப்பதற்கென்று எப்போதோ ஒதுக்கியாயிற்று. தமிழக, குறிப்பாகக் குமரி மாவட்டக் கடற்கரையில், நார்வே நாட்டுக் கடன் உதவியுடன் ஒரு மீன்பிடி துறைமுகம் அமைத்து, அந்தக் கடனைத் திரும்பப் பெறும் வகையில் அந்தத் துறைமுகத்தில் பிடிக்கும் மீனை எடுத்துக் கொள்வதென்று ஒரு முன்னீடு வைக்கப்பட்டது. அது, ஒரு வேளை வல்லரசுப் போட்டிகளால்தான் என்று நினைக்கிறேன், நடைபெறவில்லை. இப்போது நம் ஆட்சியாளர்களுடன் பகரம் பேசித் தமிழக மீனவர்களைத் தமிழக அரசும் இந்திய பனியா - பார்சி - இத்தாலிய அரசும் படாதபாடு படுத்துகிறார்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் தமிழக மீனவர்களை மட்டும் கடலில் செல்லத் தடைவிதித்துள்ளார்கள். அடுத்து தமிழக காவல்துறை, கடலோரக் காவல் படை, இலங்கைப் படையினர் என்ற முக்கூட்டுக் கொலைக்கும்பல் தமிழக மீனவர்களைக் கடலில் கொன்று குவிக்கிறது.

கச்சத் தீவை இலங்கைக்குக் கொடுத்ததற்கு இந்திரா காலத்தில், அமெரிக்காவின் குரல்[1] வானொலி ஒலிபரப்பு நிலையத்தை அமைக்க இலங்கையில்(திரிகோணமலை) இடம் கொடுக்காமலிருக்க வழங்கப்பட்ட கைக்கூலி என்ற கருத்து இருந்தாலும் தமிழக மக்களின் மீன் வளத்தைப் பிடுங்குவதும் முதன்மை நோக்கமாக இருந்திருக்கிறது.

தமிழக வேளாண்மையை அழிப்பதில் பங்கேற்றுக் கருணாநிதி செல்வத்தைப் பெருக்கிக் கொண்டதுடன் இடையிடையே வந்த ம.கோ.இராவும் செயலலிதாவும் பணம் பார்த்தது போல்தான் தமிழகக் கடற்கரை மீன்வளத்தைப் பிடுங்குவதிலும் இந்தக் கூட்டம் செயல்பட்டுள்ளது.

நெடுநாட்களாகவே தமிழகத்தின் மின்சாரம், குடிநீர்த்தரமுள்ள நீர், ஆகியவற்றைப் பயன்படுத்திப் பல்வேறு தொழிற்சாலைகள் வெளிநாடுகளுக்குத் தேவைப்படும் பண்டங்களை உருவாக்கச் செயற்படுகின்றன. இதற்கு ஓர் அருமையான எடுத்துக்காட்டு டெர்லைட் தாமிரத் தொழிற்சாலை. மூலப்பொருள் கடல்வழி வந்து தாமிரம் ஆக்கப்பட்டு வந்த வழியே திரும்புகிறது. மொரார்சி காலத்தில், செம்முந(சிமென்று)க் குருணைகள் அயல்நாடுகளிலிருந்து இந்தியக் கடற்கரைக்கு வந்து அங்குள்ள அரவை ஆலைகளில் அவற்றை அரைத்து மீண்டும் அந் நாடுகளுக்குக் கொண்டு செல்லும் முன்னீடு

           
           
ஒன்று உருவாகிச் செயலுக்கு வராமல் போயிற்று. ஆனால் அதைப் போன்ற எண்ணற்ற தொழிற்சாலைகள் தமிழகக் கடற்கரை நெடுகிலும் செயற்படுகின்றன. குமரி மாவட்ட மணவாளக்குறிச்சியில் இயங்கும் அருமண் தொழிற்சாலை தொடங்கி எண்ணூரில் உருவாக்கி கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் வரை எண்ணற்ற தொழிற்சாலைகளிலிருந்து கடலினுள் கழியும் அளவிறந்த நச்சுகளினால் தமிழகக் கடற்கரையில் மீன்வளம் பெருமளவில் அழிந்துபோயிற்று. அதே நேரத்தில் கச்ச தீவு இழப்பினால் தமிழர்களின் மீன்பிடிப் பரப்பு ஏறக்குறைய கால்பகுதியாகக் குறைந்துவிட்டது. இதனால் மீன்வளம் ஏறக்குறைய இல்லாத, அகலத்தில் பெருமளவு குறைந்த கடற்பரப்பில் மீன்பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான தமிழகக் கடற்கரை மீனவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து இரு புறங்களிலும் உள்ள கடற்பரப்புகளிலும் கேரளம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களைத் தொட்டுள்ள கடற்பரப்புகளிலும் மீன்பிடிக்கச் செல்கிறார்கள். அண்டை ஊர்ப்பகுதி கடலுக்குள் செல்லும் போது அப்பகுதி மீனவர்களுடன் கடும் மோதல்கள் உருவாகின்றன. அண்டை மாநிலக் கடற்கரைகளில் செல்லும் போது கடும் தாக்குதலுக்கு உள்ளாவதுடன் பல வேளைகளில் சிறை வைப்புக்கும் ஆளாகின்றனர். அத்துடன் தமிழகத்தை ஒட்டியுள்ள நமக்குரியதாகச் சுருங்கிவிட்ட கடற்பரப்பினுள்ளும் கூட இலங்கைக் கடற்படையும் சிங்கள மீனவர்களும் தமிழக மீனவர்களை அடித்து உதைப்பதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதும் கொலை செய்வதும் தளவாடங்களையும் மீனையும் பறித்துச் செல்வதையும் படகுக்கு சேதமுண்டாக்கி வலைகளைக் கிழிப்பதுமாக எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாக்குகின்றனர். இந்திய கான்துறையினர் கடல் நிலைத்தினைகளை அழிப்பதாகத் தமிழக மீனவர்களைக் கொன்ற நிகழ்வுகளும் உண்டு. உண்மையில் தமிழகக் கடற்பரப்பில் நடப்பது என்னவென்றால் சிங்களப் படையை முன்னிறுத்தி ஈழவர்களைக் கொன்று அழித்த அதே பாங்கில் அதே சிங்களக் கடற்படையை முன்னிறுத்தி ஊக்குவித்து தமிழக மீனவர்களை மீன்பிடி தொழிலிலிருந்து அகற்றும் நிகழ்முறையே தமிழக ஆட்சியாளர்களின் உட்கையுடன் நடைபெறுகிறது. தாங்கள் செய்யும் கணக்கற்ற ஊழல்களின் விளைவுகளிலிருந்து தப்பிக்கொள்ளவும் தங்கள் குடும்பத்தினர் தமிழகக் கடற்கரையில் பெருங்கொண்ட மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது போன்ற வேறு நேரடிப் பயன்களுக்காகவும் அவர்கள் இதற்கு ஒத்துழைக்கிறார்கள். இதில் கருணாநிதியின் திறமையும் அவருக்கு இருக்கும் தமிழ்த் தேசியர்களின் அறத்துணை(தார்மீக ஆதரவு)யும் செயலலிதாவுக்குக் கிடையாது.

            தமிழகக் கடற்கரையில் இராமேசுவரம் வரை மீனவர்களில், விதி விலக்காக ஓரிரு சின்னஞ்சிறு  திட்டுகள் தவிர அனைவரும் கிறித்தவர்களே. அவர்களில் மரபுவழியில் பழஞ்சபைக் கிறித்துவராகத் தொடர்ந்து வருபவர்களில் இப்போது ஐம்பதுநாள் விழாவினராக(த பெந்தகோத்தே சபையினர்ராக)ப் பலர் மாறிவருகின்றனர். அதாவது இவர்கள் இச் சமயப் பிரிவுகளின் பூசாரியரின் கட்டுகளை மீற முடியாத உளவியல் கொண்டவர்கள். பழஞ்சபைக் கிறித்துவத்துக்கு இம் மக்கள் மீதிருந்த பிடிப்பு அண்மைக் காலமாக தளர்ந்து வருவதால் வசிய வித்தையைப் பெருமளவு கையாளும் இந்த ஐம்பது நாள்  விழாவினரை இங்கு நுழைத்துள்ளன போலும் அயல்விசைகள். அதனால்தான் இப்பகுதிகளில் உலகின் முதல் கடல் மிதவையான கட்டுமரத்தை விட்டு பெருந்தொலைவு செல்ல முடியாதவர்களாக இவர்கள் உள்ளனர். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குமரிக் கண்டத்திலிருந்து தமிழக மண்ணில் நிலை கொண்டதும் கடலின் தாக்குதல்களிலிருந்து மக்களைக் காத்துக் கொள்ள மூன்றடுக்குப் பாதுகாப்பு ஒன்றை உருவாக்கினர். கடற்கரை நெடுகிலும் ஒரு தேரி(மணல்முகடு)த் தொடர். அத் தொடரிலிருந்து நிலப்புறத்தில் ஓர் உள்நாட்டு நாவிக வாய்க்காலுடன் கடல்புறத்தில் ஒரு கப்பலோடையை ஆழம் குறைந்த இடங்களில் தோண்டினர். அதனால் வங்காளக் கடலைத் தொடுகடல்(தோண்டப்பட்ட கடல்) என்று புறநானூறு(எண். ) குறிப்பிடுகிறது.  அக் கப்பலோடை முன்பு தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய இலங்கைத் தீவுப் பரப்பைச் சுற்றிச் சென்றது. தேரி மணலை உள்நாட்டினர் தங்கள் விழாப் பந்தல்களில் விரிக்கவும் தென்னந்தோப்புகளில் பயன்படுத்தவும் அள்ளிச் சென்றதை மீனவ மக்கள் ஊக்கி தேரிகள் அழிந்து சமநிலமான இடங்களில் வீடுகளைக் கட்டிக்கொண்டனர். உள்நாட்டு நாவிக வாய்க்கால் அழிந்து போவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இக் கால்வாயின் கேரளப் பகுதி இன்றும் செயற்பாட்டில் இருக்கிறது. தமிழகத்தில் ஆங்காங்கே அதன் தடங்களைக் காண முடிகிறது. வேதாரண்ணியத்திலிருந்து சென்னையைத்தொட்டு தமிழகத்துக்கு வடக்கே விசாகப்பட்டணம் வரை இக்கால்வாய் தொடர்வதாகத் தெரிகிறது.

            சோழப் பேரரசு தொடங்கிவைத்த வாணிகர்கள் மீதான ஒடுக்குமுறையில் தமிழகக் கப்பல் போக்குவரத்துத் துறை அழிந்தது. அதனோடு தமிழ் மாலுமிகள் நம் தமிழகக் கடற்கரையிலிருந்து அகன்றனர். இன்று வெறும் மீன் பிடிக்கும் குட்டையாகப் பயன் சுருங்கிவிட்ட தமிழகக் கடற்பகுதி அந்தத் தகுதியையும் இழந்து வருகிறது. கரைமடியில் பிடிக்கப்படும் சிறு மீன்கள் தவிர இங்குள்ள நடு, உயர் நடுத்தர வகுப்பினருக்கு என்று ஒரு சிற்றளவு பெரிய மீன்கள்தாம் கரைக்கு வந்துசேர்கின்றன. மிச்சமெல்லாம் கடலிலேயே அயல் நாட்டுக் கப்பல்களுக்கு விற்கப்படுகின்றன. செயற்கையான அயற் செலாவணி மதிப்பு உயர்வால் அம் மீன்கள் உள்நாட்டு மக்களுக்குக் கிடைக்காமல் ஏறக்குறைய  இலவயம் எனும் வகையில் வல்லரசு வாழ் மக்களுக்குக் கிடைக்கின்றன. இங்குள்ள பெரும்பான்மை மக்களுக்கு கையில் கொஞ்சம் செல்வம் சேர்ந்தவுடன் அயல்நாட்டுப் பணம் பெறும் குழுக்களால் பரப்பப்படும் மதவெறியால் ஊன் உணவு மீது வெறுப்பு ஏற்படுவதால் இவ்வாறு உருவாகும் பற்றாக்குறை பெரிய விளைவு எதனையும் ஏற்படுத்தவில்லை. அத்துடன் கடல் மீன் உள்நாட்டுக்குப் பச்சையாக உரிய நேரத்தில் சென்று சேர்வதற்கு முடியாத தொலைவிலிருந்த உள்பகுதிகளில் கடல் மீனைச் சமைத்துண்ணும் பழக்கம் உருவாகவில்லை. கருவாடாகத் தின்னும் பழக்கம்தான் இருந்தது. அதனாலும் மீன் போக்குவரத்து வசதிகள் மிக மேம்பட்ட இன்றும் கூட மீனின் தேவை உணரப்படவில்லை. மனிதனுக்குத் தேவையான பல்வகைச் சத்துகளின் செறிவானதும் சிறந்த புரத உணவானதுமான மீன் எனும் இயற்கையின் வளத்தைப் பற்றிய புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தி அதனைச் சமைக்கும் நுட்பங்களை முகாம்களின் மூலம் மக்களுக்குக் கற்பித்து மீனுணவை மக்களிடையில் பரப்பக் கடமைப்பட்ட ஆட்சியாளர்கள் மீன் பிடித் தொழிலிலிருந்தே தமிழக மீனவர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அதில் கருணாநிதியின் பங்கு முகாமையானது.

            மீனவர்கள் கடலுக்குச் செல்வதை இன்றியமையாத ஒன்றாக உணராமல் செய்வதில் கருணாநிதிக் கும்பலின் இரண்டு திட்டங்கள் பங்கேற்கின்றன.

  1. 2004 இன் ஓங்கலை நிகழ்த்திய அழிவுகள் மீண்டும் நேராமல் பாதுகாப்பு நடவடிக்கை எதையும் எடுக்காமல் காலமுறையில் அவர்களுக்குப் பணம் கொடுப்பது.

  1. உரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இன்று இலவய “விலையில்லா” அரிசி. அரசு கொடுக்கும் பணத்தை வாங்கி, ஒரு உரூபாவுக்குக் கிடைக்கும் அரிசியில் பசியைத் தீர்த்துக்கொண்டு எஞ்சியதைச் சாராயம் வாங்கிக் குடித்து அந்தப் பணத்தையும் கருணாநிதிக் கும்பலுக்குக் கொடுத்துவிடுவதால் கடலுக்குச்சென்றுதான் தீர வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இல்லை.

இன்று இந்தியக் கடற்படையின் பின்புலத்தோடு சிங்களர் தமிழக மீனவர்களின் மீது நடத்தும் கொடுமைகளை எதிர்த்துப் போராட நினைக்கும் மீனவர்களை கடலுக்குச் செல்வதை நிறுத்துவது என்ற ஒரேயொரு போராட்ட முறை நோக்கியே வழி நடத்துகின்றனர் அவர்களது தலைமைகள் அதாவது தெற்கே கிறித்துவ மதகுருக்களும் வடக்கே ஆட்சியாளர் உருவாக்கிய பல்வேறு சங்கத் தலைமைகளும் கரைநெடுகிலும் இயங்கும், வெளிநாட்டுப் பணத்தில் இயங்கும் எண்ணற்ற கிறித்துவ, சமயஞ் சாரா பிற நிறுவனங்களும்.

இலங்கையைச் சுற்றி ஓடிய  கப்பலோடைக்கு மாற்றாக இலங்கைக்கும் தமிழகக் கடற்கரைக்கும் இடையில் உருவாக இருந்த கடல்வழிப் பாதையான தமிழன் கால்வாயைத் தடுத்து நிறுத்தியவர்கள் இந்து வெறியர்கள் மட்டுமல்ல மேலே நாம் சுட்டிய  அனைவரும்தாம். அது மட்டுமல்ல குளச்சலில் பெரிய துறைமுகம் அமைய இருந்ததை எதிர்த்து அழிந்தவர்களும் இந்தத் தலைமைகளும் இயக்கங்களும்தாம். அதற்கு அங்குள்ள தமிழ்த் தேசியம் பேசும் போலிக் கூட்டங்கள் தலைமை தாங்குகின்றன. கடலோர மக்கள் தலையில் அவர்களைக் கொண்டே மண்ணள்ளிப் போட வைக்கிறது இந்தக் கும்பல். கேட்டால், இந்தத் திட்டங்களைப் பற்றிக் கொண்டு பார்சி - பனியாக்கள் நுழைந்து விடுவார்களாம். அதை எதிர்த்துப் போராட வேண்டியதுதானே தமிழ்த் தேசியம்  பேசும் இயக்கங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்? ஆனால் அந்த நோக்கத்துக்கு எதிர்த் திசையில் தமிழக மக்களை கடல்சார் பழங்குடிகள், மலைசார் பழங்குடிகள் என்று ஒரு புறமும் தமிழ் பேசுவோர், பிறமொழியாளர்கள் என்று மறுபுறமும் ஒதுக்கீட்டால் சாதிகளாக, மதங்களாக, மொழிகளாக அணு அணுவாகச் சிதைக்கும் தமிழ்த் தேசியர் சாதித் தலைமைகள், மதத் தலைமைகள், மொழித் தலைமைகள் கும்பல் இன்னோர் புறமும் ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகக் கருணாநிதிக்கு உட்கையாக நின்று செயற்படுகிறார்கள்.

            உள்நாட்டு மக்களுடன் கடலோர மக்களுக்கு நெருக்கமான உறவை ஏற்படுத்தி ஆட்சியாளர்களால் அவர்கள் அடையும் இன்னல்களை விளக்கித் தங்களோடு இணைந்து போராடுமாறு அவர்களை வழி நடத்தி கருணாநிதி - செயலலிதா கும்பலின் கீழறுப்புகளிலிருந்து தமிழக மக்களைக் காப்பது தமிழகத் தேசிய விசைகளின் கடமையாகும்.


[1] Voice of America

0 மறுமொழிகள்: