12.12.15

திரவிட மாயை - 25தொடுப்புகள்.

தொடுப்பு – 1
கடவுளும் சமயமும்
            மனித வரலாற்றில், மனித இன உருவாக்கத்தில் கடவுள் என்ற மாயையும் சமயம் எனும் நிறுவனமும் ஒரே நேரத்தில் ஆக்க முறையிலும் அழிவு நிலையிலும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளன.

            விலங்கு நிலையிலிருந்து படிப்படியாக பல்வேறு வளர்ச்சி நிலைகளை எய்தி மனிதக் குரங்கு நிலை வரையிலும் ஏற்பட்ட வளர்ச்சியை ஓர்அளவு மாற்றமாகக் கொண்டால் குரங்குமனிதனில் அது ஒரு பண்பு மாற்றமாகும். இங்கு தெளிவான பகுத்தாயும் பண்பாகிய பகுத்தறிவு மனிதனுக்கு ஏற்படுகிறது. இதுவரை பெருமளவில் உள்ளுணர்வால் செயல்பட்ட நிலையிலிருந்து பகுத்துணர்ந்து செயல்படும் கட்டத்தினுள் மனிதனாக நுழைகிறான். இந்தப் பகுத்தாய்வில் அவனுக்கு விடை கிடைக்காத எண்ணற்ற கேள்விகள்,  தான் இன்னதென்று அறிந்து கொள்ள  முடியாத, அடுத்த நொடி என்ன வகையான இடையூறுகளை, நேர்ச்சிகளை, எதனால், எப்படி சந்திக்க நேரிடுமோ என்ற ஓயாத அச்சம் அவனைப் பிடித்தாட்டுகிறது. இடி, மழை, நெருப்பு, எரிமலை, நிலநடுக்கம், ஆறு, மலை, கொல் விலங்குகள், நோய்கள், சாவு ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்வது? தங்கள் கூட்டத்தில் வலிமை உள்ளவனுக்கு அடி பணிந்து அவனால் தீங்குகள் ஏற்படாமல் காத்துக்கொள்வது போல், அவனால் கூட்டத்துக்கு சில நன்மைகளைப் பெறுவது போல், தனக்கு அச்சமூட்டும் இயற்கை ஆற்றல்களுக்கும் நலனும் பயனும் தருவனவற்றுக்கும் தன் பணிவைக் காட்டத்தொடங்குகிறான்.  தன் கூட்டத்தில், அதுவரை இல்லாத நலன் தரும் புதிய நடைமுறைகளைப் புகுத்தும் தனி மனிதர்களைத் தங்களுக்கும் மேம்பட்ட ஒரு உயிர்வகையாக எண்ணி அவர்களை வணங்குகிறான். அவ்வாறே தீயின் பயன்பாட்டைக் கண்டுபிடித்தவனையும் தீயையும் வணங்குகிறான். தீ வணக்கம் மனிதனது நிலைப்புக்கு இன்றியமையாததாகிறது. குறிப்பாகக் காட்டினுள் கொல்விலங்குகளுக்கு இடையில் வாழ்ந்த மனிதனுக்குத் தவிர்க்க முடியாத பாதுகாப்பாக அது விளங்கியது. எனவே தீ தெய்வமாகவும் அதைப் பேணும் பொறுப்பிலிருக்கும் முதிய பெண் பூசகராகவும் உருவாகிறார்கள். தெய்வம் என்ற சொல்லே தீ அடிப்படையில் பிறக்கிறது.

            கூட்டத்தில் வலிமையுள்ளவர்களுக்குச் சிறந்த உணவுப் பொருட்கள் ஒதுக்கப்படுவது போல் தெய்வத்துக்கும் வழங்கப்பட்டது. யூத மறைநூலில் யகோவாவிற்குப் பலியிடும் கன்று வடுப்படாததாக(unblemished) இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் கதையாடலில் வரும் ஒரு நிகழ்ச்சி: எது நிகழ்ந்தாலும் ‘எல்லாம் நல்லதற்கே’ என்று கூறும் பழக்கமுடைய அமைச்சர் அரசனுக்கு தற்செயலாக காயம் ஏற்பட்ட போது அதையே கூறினார். அரசன் சினந்து அவருக்கு மரண தண்டனை விதித்துச் சிறையில் இட்டான். வேட்டையாடச் சென்ற மன்னன் காட்டு விலங்காண்டிகளிடம் தனியே மாட்டிக்கொண்டான். அவனைக் காவுகொடுக்க முனைந்தனர். ஆனால் அவன் உடலில் காயம் இருந்ததால் வடுப்பட்ட உயிரைக் காவு கொடுக்கக் கூடாது என்று அரசனை விட்டுவிட்டார்கள். அரசன் அரண்மனை திரும்பி அமைச்சரைப் பாராட்டிப் பரிசளித்தான்.  அது போல் சண்டைகளில் பிடிப்பட்டவர்களை உண்டுவந்த காலகட்டத்தில் அவர்களைத் தீக் கடவுளுக்கு காவு கொடுத்தும் வந்தனர். நெல்லை, குமரி மாவட்டங்களில் வழிபடப்படும் சுடலைமாடன் கோயில்களில் இந்த நரபலியின் வரலாற்று எச்சமாக, சாமியாடி சுடலைக்குச் சென்று எரியும் பிணத்தை எடுத்துத் தின்பதையும், தெய்வக் கதையைப் பாடி ஆடும் பெண்ணுருத்தாங்கிய கணியான் கையில் கீறி வடியும் குருதியைச் சோற்றுடன் கலந்து சாமியாடி உண்பதையும் இதற்கு சான்றாகக் காட்டலாம்.

            தமிழர்களைப் பொறுத்தவரையில் ஏழு பெண்களின் கால்வழியினராக மக்கள் தோன்றி பரவியதாகப் பல்வேறு மூலங்களிலிருந்து தெரிய வருகிறது. உலக மக்களே 5 முதல் 10 பெண்களிலிருந்து வந்தவர்கள் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இந்த இரண்டும் ஓரளவு ஒத்துப்போகவில்லையா?

            தமிழர்களின் இந்த 7 பிரிவுகளையும் தொடக்க கால அல்லது முதல்நிலை குக்குலங்கள் எனலாம். இவர்கள் கடற்கரையிலிருந்து மலைமுகடுகள் வரையிலும் கலந்தே வாழ்ந்தனர். இவர்களில்  ஒரு குக்குலத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் அதே குக்குலத்தைச் சேர்ந்த ஒவ்வொரு ஆணும் புணர்முறையுள்ளவர்கள்.

            தொழில்நுட்ப வளர்ச்சி நெய்தல் நிலமாகிய கடற்கரையிலிருந்து தொடங்கியது. கடல் மூலமும் கடற்கரையில் வந்து சேரும் ஓர் ஆறு அல்லது ஆறுகள் வழி[வழிதல் வழி நீர்வழி வழி (பொது) ஆறு = வழி] யாகவும் அனைத்து நிலப்பகுதிகளுக்கும் நெய்தல் நில மக்கள் சென்று வந்தனர். இந்த வகையில் அவர்களது செல்வாக்கின் கீழ் பிற பகுதி மக்கள் வந்தனர். நெய்தல் நாகரிகத்தின் தந்தையாகிய வருணன் (வாரணம் -  கடல் → வாரணன் → வரணன் → வருணன்) அனைத்துப் பகுதி மக்களுக்கும் கடவுள் ஆனான்.

            அடுத்து பருவமழைக் காலங்களை நோட்டமிட்டு மருத நிலத்தில் வேளாண்மையை வளர்த்து அப் பகுதிக்கென ஒரு தனி நாகரிகத்தை உருவாக்கியவன் இந்திரன். மருத நிலத்தில் தனித் தனிக் கூட்டமாக, குக்குலங்களால் பிளவுண்டு  கோட்டைகள் எனும் ஒன்றிகளாகச் சிதறிக் கிடந்த மக்களை ஒன்றிணைக்க அப் பகுதியிலுள்ள 7 குக்குலப் பூசர்களும் தேர்ந்தெடுத்த தலைவனாக இந்திரன் திரிவாக்கம் பெற்றான். நெய்தல் நிலத்தவரால் இப் பகுதியினருக்கு ஏற்பட்ட இன்னல்கள் இத் தேவையைக் கட்டாயமாக்கி இருக்கலாம். இவன் நெய்தல் நிலச் செல்வாக்கிலிருந்த மருதம், பாலை, முல்லை, குறிஞ்சி நிலங்களைத் தன் செல்வாக்கினுள் கொண்டுவந்தான். வருணனுக்கும் இந்திரனுக்கும் ஆன முரண்பாடுகள் பற்றி வேதங்களில் செய்திகள் உள்ளன. வருணனும் இந்திரனும் தொல்காப்பியத் தமிழ்த் தெய்வங்கள். எனவே அவர்களைப் பற்றிய விரிவான செய்திகளைக் கூறும் வேதங்களும் தமிழர்களுக்கு உரியனவே. குழந்தைகள் உலகைப் பார்த்து முடிவுகள் கூறுவது போல இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்களின் கற்பனையில் உருவாகிய இனம் ஆகிய ஆரிய இனத்தை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால்தான் தமிழர்களின் உண்மையான வரலாற்றைக் காண முடியும்.  வேதமொழி ஓர் அயல்மொழி என்ற கண்ணோக்கில் பார்த்து அதில் 20 நூற்றுமேனி தமிழ்ச் சொற்கள் இருப்பதாகக்  கணித்துள்ளனர். அதைத் தமிழர்களின் மொழி என்று பார்த்தால் இன்னும் பெருமளவுச் சொற்களை இனங்காண முடியும், மொழியியலில் பெரும் புரட்சி ஏற்படும்.

            முல்லை நில மக்கள் மாட்டை வீட்டு விலங்காக்கி அதனை உணவாகக் கொண்டதால் உணவுக்குப் பஞ்சமின்றி வாழ்ந்தனர். புல்வெளிகள் போதாத போது ஆறுகளைத் திருப்பி நீர்ப்பாசனத்தை உருவாக்கிப் புற்களை வளர்த்தனர் அல்லது மருத நிலத்தைப் போல் வேளாண்மை செய்தனர். மருத நில மண் ஆற்று வண்டலால் சேற்றுத் தன்மையை இயற்கையாகவே பெற்றிருக்கும். முல்லை நிலத்தில் மண்ணைச் சேறாக்கக் கலப்பையைக் கண்டுபிடித்தனர். பலராமன் எனப்படும் பலதேவனாகிய தமிழ்க் கடவுள் தன் படைக்கலமான கலப்பையால் தொழுனையை(யமுனையை)த் தன் பக்கம் இழுத்தான் என்ற தொன்மச் செய்தி ஆற்றுநீரைத் திருப்பியதையும் உழுதொழிலின் தொடக்கத்தையுமே குறிக்கிறது. அடுத்த கட்டமாகக் காளையை வசக்கி, பாலிலிருந்து வெண்ணெய், நெய் ஆகியவற்றை உருவாக்கி வெட்ட வெளியில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை அகல் விளக்காகக் குடிசையினுள் கொண்டு சென்று புதிய வாழ்முறையை உருவாக்கியவன் கண்ணன் (நவநீதம் - வெண்ணெய்; புதிய ஒழுங்குமுறை. அவன் நந்தோடு போரிட்டு அதைக் கொன்றான் என்பதை நத்தையோடு போரிட்டதாக விளக்குகின்றனர். நந்து என்பதற்கு இருள் என்ற பொருளும் உள்ளது. குடிசைக்குள் அகல் விளக்கைக் கொண்டுசென்று இருளை வென்றவன் என்பதே இக்கதையின் விளக்கம்). வசக்கிய காளை உழவுக்கும் வண்டிக்கும் பொதி சுமக்கவும், நெய் விளக்கெண்ணையாகவும் முல்லை நில நாகரிகத்தை உயர்த்தியது. இப்போது கண்ணனாகிய மாலவன் செல்வாக்கினுள் பாலை, முல்லை, குறிஞ்சி நிலங்கள் வந்தன. இந்திரனின் கோயில்கள் மலைகள் மீது இருந்து அகன்றதற்கான தடயங்களை இளங்கோவடிகள் தந்துள்ளார். காடுகாண் காதையில் மாங்காட்டு மறையோன் மதுரைக்கு வழி கூறும் போது திருமால் குன்றத்து ...  புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவீர் என்ற குறிப்பின் மூலம் இன்று அழகர்மலை என்றும் பண்டை நூல்களில் திருமாலிருஞ்சோலை என்றும் அறியப்படும் மலையில் முன்பு இந்திரன் கோயில் இருந்தது தெரிய வருகிறது.

            காட்சிக் காதையில் சேரன் செங்குட்டுவன் செல்வதை
                        ஒருநூற்று நாற்பதி  யோசனை விரிந்த
                        பெருமாள் களிற்றுப் பெயர்வோன் போன்று
என்ற வரிகளுக்கு (15-16) நூற்று நாற்பது யோசனை விரிந்த பொலம் பூங்கா முதலியவற்றைப் பரப்பிக் களிற்றின் மீது செல்லும்  இந்திரன் போன்று என்று ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் கூறும் பொருளிலிருந்து அம்மலையிலும் இந்திரன் கோயில் இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

            குமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் என்ற ஊரிலுள்ள தாணு(சிவன்)மால்அயன்(பிரம்மா)- தாணுமாலயன் கோயிலைப் பற்றிய ஊர்த் தொன்மம், குமரி அம்மன் தன்வரிப்பு(சுயம்வரம்) அறிவித்து, குறிப்பிட்ட நாளில் கோழி கூவும் முன் வந்துவிட வேண்டுமென்று அக்குத்தும் வைக்கிறாள்; சிவன், மால், பிரம்மா மூவரும் புறப்பட்டு வரும் போது திருமணத்தை முடக்க நினைத்த இந்திரன் வழியில் கோழியாக நின்று கூவுகிறான்; உடனே மூவரும் சுசீந்திரத்தில் அமர்ந்துவிடுகிறார்கள். குமரி குமரியாகவே இருக்கிறாள் என்பதாகும். (இந்தக் கதைக்குத் துணையாக, சுசீந்திரத்திலிருந்து கன்னியாகுமரிக்குச் செல்லும் வழியில் வழுக்கும்பாறை என்ற ஊரில் உள்ள ஓர் பாறையில் குழந்தை, கோழி ஆகியவற்றின் ஒற்றைக் கால் தடங்கள் பதிந்தாற்போல் அழகுறச் செதுக்கியிருப்பதைக் காட்டுவார்கள்). இம் மூவருக்கும் முழுக்காட்டுவதற்கென்று இந்திரன் தன் வெள்ளை யானையைக் கொண்டு அதன் கொம்பால் குத்தி அதிலிருந்து பெருகிய ஆறாகிய தந்த நதி(தந்தம் - யானைக் கொம்பு - யானைக் கோடு. கோடு என்பதற்கு மலை என்பதும் ஒரு பொருள். மலையிலிருந்து வருவதால் கோட்டாறு என்று பெயர் பெற்ற இதற்கு இப்படி ஒரு விளக்கத்தைப் பூசாரியர் கொடுத்துள்ளனர்.)யிலிருந்து தண்ணீர் எடுத்தானாம்.  ஊர்ப் பெயர், ஊர்த் தொன்மம், ஆறு பற்றிய கதை இவை அனைத்திலும் இந்திரன் இருப்பதால் இதனையும் இந்திரன் கோயில் இருந்த இடம் எனலாம். சோழனின் பண்டைப் புகாரில் மட்டுமல்ல காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகரில்  இன்றும் இந்திர விழா நடைபெறுகிறது.

            இவ்வாறு தமிழ்த் தெய்வமாகிய இந்திரனின் ஆதிக்கத்தை முல்லை நில நாகரிகத்தை வளர்த்த கண்ணன் முடிவுக்குக் கொண்டு வந்து முல்லை, குறிஞ்சி ஆகியவற்றைத் தன் ஆளுகையினுள் கொண்டுவந்தான்.

            யானையை வசக்கி மரங்களை வெட்டிக் கடத்தத்துக்குப் பயன்படுத்தியதாலும் யானையைப் படைகளுக்காக விற்றதாலும் பல்வேறு மலைபடுபொருட்களைத் திரட்டியும் கோழி, மயில் ஆகியவற்றைப் பிடித்து விற்றதாலும் குறிஞ்சி நில மக்களின் செல்வமும் செல்வாக்கும் பெருகியது. அவர்கள் முல்லை நிலத்தினரின் ஆதிக்கத்தை உதறினர்.

            இந்திரனின்  மேலாளுமையை முல்லை நில மக்கள் மீதுற்றதை தொன்மங்களில் பார்க்கலாம். கண்ணனை ஒரு வேடன் (அவன் பெயர் சேரன் - அபிதான சிந்தாமணி சேரன் பார்க்க) அம்பெய்து கொன்றான். இது மகாபாரதம் தரும் செய்தி.

            (இன்றைய தமிழகத்திலும் அழகர்மலையில் பழமுதிர்ச் சோலை எனப்படும் முருகன் கோயில் உள்ளது. திருப்பதி பெருமாள் கோயில் முன்பு முருகன் கோயிலாக இருந்தது என்றொரு கருத்து உள்ளது. இவை முன்பு திருமால் கோயில்களாக இருந்து முருகன்  கோயில்களால் செல்வாக்கு இழந்து மீண்டும் மாலியம்  வலிமையுற்ற காலத்தில் மீண்டவையாக இருக்க வேண்டும்.)

            நடுவில் உள்ள பாலை நிலம் மக்கள் வாழத் தகுதியற்றது. ஆனால் நெய்தல் முதல் குறிஞ்சி  வரை நடைபெற்ற மிக வளமான வாணிகம் வழிப்பறியாளரான ஒரு கூட்டத்தை இரு புறங்களிலுமிருந்து ஈர்த்தது. அவர்களது  தெய்வம் அனைத்துக்கும் முந்திய, தன் கூட்டத்தினரைக் காக்கும் தாயாகவும் எதிரிகளை அடித்துக் கொன்று உணவாக ஊட்டித் தானும் உண்ணும் நரவுண்ணியுமாகிய கொற்றவை.

            (“ஆரியர்” என்ற இனத்தாருக்கு உரியனவென்று நாம் புறக்கணிக்கும் வேதங்களும், தொன்மங்களும் மறவனப்புகளும் தரும் செய்திகள் நம் பண்பாட்டில் உள்ள தெய்வங்கள் பற்றிய நம் மொழியில் இல்லாத அடிப்படைச் செய்திகளைத் தருகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.)

            இதுபோன்ற நிகழ்முறை முழுகிய குமரிக் கண்டத்தில் இடம்பெற்று நெய்தல், மருதம், பாலை, முல்லை, குறிஞ்சி என்று வெவ்வேறு தெய்வத் தலைவர்களின் அடிப்படையில் நிலம் பகுக்கப்பட்ட பின்னர் தமிழ் மொழியில் பொருளிலக்கணம் தோன்றுகிறது. இப்போது நாம் எடுத்த பொருளினுள் நுழைவோம்.

நிலமும் சமயமும்
            ஐந்நிலங்களாக மக்கள் வாழும் நிலப்பகுதி பிரிந்த பின் அந்தந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் 7 குக்குலப் பிரிவுகளைக் கைவிட்டு அந்தந்த நிலப்பகுதி மக்களாக வாழ முற்பட்டிருப்பார்கள்.

            ஐந்து நிலங்களுக்கும் ஐந்து  தெய்வங்கள் என்பதற்குப் பொருள் அந்த  ஐந்து நிலப்பகுதிகளும் அததற்குரிய தெய்வப் பூசாரியரால் ஆளப்பட்டிருக்கும் என்பதாகும். ஒவ்வொரு நிலப்பகுதியும் உள்ளூர் ஆட்சிப் பகுதிகளாகப் பரவிக் கிடக்கும். அவ் வூரின் ஆள்வினை அப் பகுதிக்குரிய அந்நிலத் தெய்வக் கோயில் பூசாரியரால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். அண்மைக் காலம் வரை தென் தமிழகத்தின் மாவட்டங்களில் முத்தாரம்மன் கோயிலில்தான் ஊரின் ஆட்சி நடுவம் கொண்டிருந்ததை இதனுடன் ஒப்பிடலாம். பாராளுமன்ற மக்களாட்சியைப் பின்பற்றும் அனைத்துக் கிறித்துவ நாடுகளிலும் இன்றும் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய தனியாள் வாழ்வு நிகழ்ச்சிச் சடங்குகள்  கோயில்களால் நடத்தி வைக்கப்படுகின்றன என்பதோடு பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய நிகழ்ச்சிகளின் நம்பத்தகுந்த பதிவேடுகளையும் அவை மிகச் சிறப்பாகப் பராமரிக்கின்றன என்பது நம் கவனத்துக்கு உரியது.

            ஆனால்  இந்த நிகழ்வுகளிலெல்லாம் இந்த கோயில்களுக்கு அப்பாற்பட்ட ஓர் அரசின் ஆட்சி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, தென்பாண்டி நாட்டில் அம்மன் கோயில்களில் ஊராட்சி நடைபெற்றது. உண்மையில் அங்கு தெய்வத்துக்கோ பூசாரிக்கோ ஊரின் ஆட்சியில் எந்தப் பங்கும் இல்லை. ஆனால் அந்த ஊர்ப் பரப்பின் ஆட்சித் தலைவன் அமர்ந்திருந்து ஊராட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடமாக மட்டும் இந்த அம்மன் கோயிலின் பங்கு அமைகிறது. அரசன் என்று பொருள்படும் கோவின் இல்லம் என்ற வகையில் அரண்மனையைக் கோயில் என்பது நம் பண்டை வழக்கு. அந்த வகையில் அரசனின் சார்பில் ஆட்சி நடைபெறும் இடமாக அம்மன் கோயில் அமைந்ததே இங்கு கோயிலின் பங்கு எனக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் தொல்காப்பியம் காட்டும் ஐந்நிலப் பகுதிகளில் ஊராட்சியை நடத்தும் அதே தெய்வத் தலைமைப் பூசாரிகளே முழு நிலப்பகுதியையும் ஆள்கின்றனர் என்பது சிறப்பு. இத்தகைய ஆட்சி பூசாரியர் ஆட்சி (Theocracy) எனப்படும். இந்த ஆட்சியின் பாதுகாப்புக்கு நில எல்லைக் காப்பு எவ்வளவு இன்றியமையாததோ அது போல் அந்த நிலத்துக்கு உரிய தெய்வம் அல்லாத வேறு தெய்வ வழிபாடு உள் நுழையாமல் காப்பது. இது குறித்து அக் காலகட்டத்திலிருந்த பூசாரி ஆட்சியினர் மிகுந்த விழிப்புடன் இருந்தனர். இது பற்றி தொல்காப்பியம் கூறுவதைப் பார்ப்போம்.

                        மேவிய சிறப்பின்  ஏனோர் படிமைய
                        முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
                        பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்         
                        இழைத்த ஒன்பொருள் முடியவும் பிரிவே - தொல். பொருள். 30

            இந்த நூற்பாவுக்கு இதன் பொழிப்பு என்ற தலைப்பில் அடைப்புக் குறியில் கொடுத்திருப்பது. தேவரது பூசை முதலாயினவும் மக்களும் முறைமை தப்பிய வழி தப்பாது அறம் நிறுத்தல் காரணமாகவும் பொருளாக்குதல் காரணமாகவும் பிரிவு உளதாம் என்றவாறு. (தொல்காப்பியம் - பொருளதிகாரம், இளம்பூரணர் உரை முதல் பகுதி, தி.தெ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், ஆகத்து 2004, பக்.32) மாயோன் மேய காடுறை உலகமும் என்று தொடங்கும் பொருளதிகாரம் 5ஆம் நூற்பாவில் வரும் மேய என்பதோடு நூற்பாவில் வரும் மேவிய சிறப்பின் என்பதையும் தெய்வத்தைக் குறிக்கும் படிமைய என்ற சொல்லை வைத்தும் இப்பொருளை பதிப்பாசிரியர் அடைகிறார்.

மக்கள் குழுக்களுக்கு இடையிலான போராட்டங்களின் வெளிப்பாடு வழிபடும் தெய்வங்களுக்கு இடையிலான முரண்பாடுகளாக நம் தொன்மங்களில் பதிவாகியுள்ளன.

எடுத்துக்காட்டுகளாக சில:
           
தக்கன் கதை: தக்கன் என்பவனது மகள் தாக்காயணி. அவளை அவன் சிவனுக்கு மணம் முடித்தான். சிவன் தன்னை இழிவுபடுத்தியதாகக் கருதிய தக்கன் தான் பல ஆயிரம் மாடுகளைப் பலியிட்டு நடத்திய வேள்விக்குச் சிவனை அழைக்கவில்லை. அது பொறுக்காத தாக்காயணி வேள்விக்குச் சென்று அதனை அழித்துத் தந்தையையும் கொன்றாள். பின்னர் மனம் பொறுக்காமல் சிவனை வேண்ட சிவன் அவனுடலில் ஆட்டுத் தலையை இணைத்து அவனைத் தன் பூதகணங்களில் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டான் என்பது கதை.

            இந்தக் கதை சுடலைமாடன் கதைப் பாடலில் வருகிறது. மாட்டுத் தலையை ஒட்டினர் என்று பாட வேறுபாடும் உண்டு. அதனால்தான் மாடன் என்ற பெயர் உள்ளது. மாட்டுத் தலை கொண்ட மனித உருவில் வணங்கப்படும் கொம்ப மாடன் என்ற தெய்வமும் நெல்லை மாவட்டத்தில் உண்டு. இருக்கும் இடத்தை வைத்து இன்று எண்ணற்ற பிள்ளையார்கள் இருப்பதுபோல் மாடனுக்கும் கோயில்கள் உண்டு.

            தக்கன் ஒருவேளை முல்லை நிலத்தில் வேளாண்மையை நிறுவிய பலதேவனுக்கும் பால்படு பொருட்களை உருவாக்கிய கண்ணனுக்கும் முந்திய, மாட்டை உணவுக்காக வளர்த்த முல்லை நிலம் சார்ந்த நாகரிகக் காலத்துக்கு உரியவனாக இருந்திருக்கலாம். மாடுகளைப் பெரும் வேள்விகளில் எரித்து அழித்ததற்கு எதிரான ஒரு பெரும் கலகம் இந்தக் கதையின்  வெளிப்படுவதாகலாம். பெண் தலைமையில் நிகழ்ந்தது இது என்பதும் புலப்படுகிறது.

            தக்கனைப் பற்றி ஏற்கனவே நாம் கூறியுள்ளோம். அவனைப் பிரம்மனின் “மானசபுத்திரன்” என்கிறது அபிதான சிந்தாமணி. இவனை மக்கள் தலைவன் என்று பொருள்படும் பிரசாபதி என்ற பின்னொட்டுடன் தக்கப் பிரசாதிபதி என்றும் கூறுவர். தட்சணாமூர்த்தி என்ற சிவனின் வடிவம் தக்கனே என்ற கருத்தும் உள்ளது. காலன் எனப்படும் தெய்வம் தருமப் பிரசாபதி என்று அழைக்கப்படுகிறது. இறந்தவர்களின் உயிர்களுக்கு அவர்கள் செய்த வினைகளின் தன்மைக்கேற்ப தண்டனையோ, தேவருலக வாழ்வையோ வரையறுப்பவன் இவனே. அது போல் ஒவ்வொருவருடைய பிறப்பின் போதும் நிறுவப்பட்டுள்ள வாழ்நாள் முடிவுற்றதும் அவர்கள் உயிரை எடுப்பது அவனுடைய அடிப்படைப் பணியாக நம் சமய மரபு கூறுகிறது. இந்தக் காலன், 16 ஆண்டுகளே வாழ்நாள் குறிக்கப்பட்டு பிறந்த மார்க்கண்டனின் உயிரை எடுக்கச் சென்ற போது, அவன் சிவனின் காலைப் பிடித்துக் கொள்ள சிவன் காலனைத் தண்டித்த கதையை நாம் அறிவோம். ஆள்வினையில் தன்னை மதிப்பவர்களுக்கு முறைமீறி நலன்களை வழங்குவதென்ற(Favouritism) கொடுமதியில் நம் தெய்வங்கள் கைதேர்ந்தவை என்பதைப் பறைசாற்றும் எண்ணற்ற கதைகளில் இதுவும் ஒன்று. முதன்முதலில் குற்றவியல் தண்டனைச் சட்டத்தை வரையறுத்தவனாக காலன் இருக்கலாம்.

            காலனைக் குலதெய்வமாக வணங்கிய குடும்பங்கள் குமரி மாவட்டத்தில்(கட்டுரை ஆசிரியரின் குடும்பம் உட்பட) உண்டு. அம்மன் கோயில்களிலும் அரிதாக  இருக்கும் காலசாமி கோயில்களிலும் மார்க்கண்டன் கதையை வில்லிசையில் பாடும்போது சாமி கொண்டாடியிடம் காலசாமியின் “அருள்” வருகிறது. காலன் அதாவது இயமன் கதிரவனின் மகன் என அபிதான சிந்தாமணி கூறுகிறது.

            அது போலவே முப்புராதிகளின் வளர்ப்புத் தாய் என்று கூறப்படும் முத்தாரம்மன் எனப்படும் முப்புராதி அம்மன் கோயில்களில் நடு நிகழ்ச்சியாக முப்புராதிகளின் கதை வில்லிசையில் பாடப்படுகிறது. முப்புராதிகளை அழிக்க, சிவன் தலைமையில் முக்கடவுள்களும் தேவர்களும் சூழ்ச்சியாக முப்புராதி அம்மனை வெளியில் செல்ல வைத்து அவர்களை அழிக்கிறார்கள். திரும்பி வந்த அம்மன் மக்களைப் பறிகொடுத்த துயரில் ஒப்பாரி வைக்கும் போதுதான் அம்மன் கொண்டாடிக்கு அருள் வருகிறது. தொன்மங்களில் முப்புராதிகள் கதையில் இந்த அம்மன் பற்றிய செய்தி எதுவும் இல்லை. முப்புராதிகளைத் தன் பூதகணங்களில் சிவன் சேர்த்துக் கொண்டார் என்று தொன்மம் சொல்கிறது.

            இவ்வாறு சிவனால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பெரும்பாலானவை அரக்கர்கள் எனக் கூறப்பட்டாலும் அவை மக்களால் வணங்கப்படுவதும் சில பிரமனின் மகன்கள் என்று கூறப்படுவதும் கருதிப்பார்க்கத்தக்கது. தக்கன், காலன்(இயமன்) போன்றவர்கள் தெற்குத் திசைக்குரியவர்கள் என்பதையும் இணைத்துப் பார்க்கும் போது, சுறவக் கோட்டுப் பகுதியிலும் அதற்குத் தெற்கிலும் தோன்றி வளர்ந்த தொன்மை நாகரிகம் புவி நடுக்குழம்பின் அலைவினைப்பாட்டினால் அழிந்து வடக்கே நிலம் உயர்ந்து கொண்டிருந்த சூழலில், வடக்கு நோக்கி நகர்ந்த மக்களிடையில் நிலவிய தெய்வங்களைச் சிவன் வழிபாட்டைக் கொண்டவர்கள் அகற்ற மேற்கொண்ட முயற்சி பெறப்படுகிறது. அத்துடன், சிவனால் அழிக்கப்பட்டவையாக, அல்லது ஒடுக்கப்பட்டவையாக தொன்மங்கள் குறிப்பிடும் தொல்பழம் தமிழ்த் தெய்வங்கள் பிரமனின் பிள்ளகளாக அல்லது அவனால் அரவணைக்கப்பட்டவர்களாகக் காட்டப்படுவதால் பிரமன் வழிபாடு கூட தென்புலத்து மக்களின் தொடக்க கால வழிபாடாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த வழிபாட்டை, பெரும்பான்மையரால் கைவிடப்பட்ட தொடக்க கால நெருப்பு வழிபாட்டை இன்றும் கடைப்பிடிக்கும் பார்ப்பனர்கள்  கைக்கொண்டுள்ளமை கருதிப்பார்க்கத்தக்கது.

ஒருவேளை குக்குலங்களின் அடிப்படையில், நிலப் பாகுபாடின்றி மக்கள் வாழ்ந்த நிலையை உடைத்து மண்ணின் மைந்தர்களின் ஆட்சியாக மலர்ந்த ஐந்நிலப் பூசகர் ஆட்சி தோன்றி அதுவும் சிதைந்து புதிய அறிவியல் – தொழில்நுட்ப – பண்பாட்டியல் உருவாக்கங்களின் அடிப்படையில் புதுப்புது தெய்வங்கள் உருவாகி குழப்பமான ஒரு குமுகச் சூழலில் ஓர் ஓரிறைத் தெய்வ வழிபாட்டை உருவாக்க முயன்ற பூசகர்களின் உருவாக்கமாக பிரமன் இருக்கலாம். அதை உடைத்து அதற்குப் போட்டியாகச் சிவனை நிறுத்த மேற்கொண்ட முயற்களே இத் தொன்மங்களில் வெளிப்படுகிறது என்று தோன்றுகிறது. இதில் “அழிக்கப்படும்” தெய்வங்கள் தெற்கே இருப்பிடத்தைக் கொண்டவையாக இருப்பதால் இந்த முடிவு தவிர்க்க முடியாததாகிறது.

            தமிழ்நாட்டின் கீழைக் கடற்கரை நெடுகிலும் நாகர்களின் பெண் தெய்வங்களின்  வழிபாட்டை அகற்றிச் சிவன் வழிபாடு நிறுவப்பட்டதைக் காண முடிகிறது. ஆனால் சிவனின் மனைவியாக்கப்பட்ட உமையவளை சிவனின் உருவத்துடன் கருவரைக்குள் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. தில்லைக் கோயிலில் அவ்வாறு அமைக்கப்பட்ட உருவத்தை அகற்றி நிலவறையினுள் வைத்துப் பூட்டிய பின் வெற்றிடமாக இருப்பதே தில்லை அம்பலம். இதுதான் “சிதம்பர இரகசியம்” என்று கூறப்படுகிறது.

            தெற்கில் ஒருவேளை அரசர்களின் தெய்வமாக இருந்த சிவனுக்கு எதிர்ப்பாகத்தான் கேரளத்து நம்பூதிரிகள் திருமால் கோயில்களை ஒருங்கிணைத்து பதின்தோற்றரவுக் கோட்பாட்டை உருவாக்கினர் போலும். அத்துடன் சிவனுக்கு எதிர்ப்பாக உமையின் இடத்தில் திருமாலை வைக்க மேற்கொண்ட முயற்சிகளும் தோற்றதன் பின்னணியில் உமையைத் திருமாலின் தங்கையாகக் கதை கட்டினர்.

            உமையின் இடத்தில் சிவன் வைக்கப்பட்டதற்குத் தெளிவான சான்றை இளங்கோவடிகள் தருகிறார்.
                        பாரதி யாடிய பாரதி அரங்கத்துத்
                        திரிபுர மெரியத் தேவர் வேண்ட
                        எரிமுகப் பேரம்பு எவல் கேட்ப
                        உமையவ ளொருதிற னாக வோங்கிய
                        இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்
            கடலாடு காதை வரி 39-43)
            பாரதி யாடிய பாரதி அரங்கத்து என்பதற்கு “பாரதியாடினமையால் பாரதியரங்கமென்று பெயர் பெற்ற சுடுகாட்டிலே” என்றும், பாரதி - பைரவி. “அவளாடுதலாற் சுடுகாடு பாரதியரங்கம் எனப்படுவதாயிற்று” என்றும் வேங்கடசாமியார் பொருள் தருகிறார். சிவன் ஆடுவதாகக் கூறப்படும் சுடுகாடு கூட உமையிடமிருந்து பறிக்கப்பட்டதுதான் என்பது இதிலிருந்து உறுதியாகிறது. இவ்வாறு நமது தொன்மங்களில் எத்தனையோ, அரசியல் - வரலாற்றியல் செய்திகள் கடவுள்களின் பெயரால் மறைந்து கிடக்கின்றன.

            இவ்வாறு வழிபாடு, அதாவது சமயம் ஐந்நிலப் பாகுபாட்டுக் குமுகத்தில் ஒரே அரசியல் நிறுவனமாகத் திகழ்ந்தது. இன்றும் சமயம் என்பது தவிர்க்க முடியாத ஓர் அரசியல்  நிறுவனமாகத்தான் விளங்குகிறது. மாந்தநூலாரும் குமுகியல் நூலாரும் சமயத்தை ஒரு குமுகியல் நிறுவனமாகப் (Social organization) பார்ப்பது தவறாகும்.

            கலிங்கத்தின் காரவேலன் தமிழக அரசர்களிடையில் பிளவை ஏற்படுத்த அம்மண  ஒற்றர்களைத் தமிழகத்தினுள் விடுத்தான். அவர்கள் காடுகளில் மலைக் குகைகளினுள் மறைந்திருந்து குறிஞ்சி, முல்லை நில மக்களை அரசர்களுக்கு எதிராகத் திரட்டினர். மணிமேகலையைப் பயன்படுத்தி இலங்கையின் கயவாகு பூம்புகாரையும் அதன் அரச குடும்பத்தினரையும் அழித்தான்.

            முல்லை, குறிஞ்சி மக்களின் கூட்டணி அம்மண ஒற்றர்களின் வழிகாட்டலில் மூவேந்தர்களையும் அகற்றிக் களப்பிரர்கள் (கள்ளர் பிறர்) என்ற பெயரில் தமிழகத்தைக் கைப்பற்றி அதனைச் அம்மண வாணிகர்களின் கொள்ளைக் காடாக்கியது.

            இவ்வாறுதான் சமயத்தைப் பயன்படுத்தி முகம்மதியர் இந்தியாவைக் கைப்பற்றியது. முகம்மதியப் படையை எதிர்த்து வீரபாண்டியன் போரிட்ட போது போர் நடுவில் அவன் படையிலிருந்த 20,000 முகம்மதிய வீரர்கள் பக்கம் மாறியதால் அவன் தோல்வியுற்றான். (முகம்மதியத்துக்கு முதலில் மாறியவர்கள்: குமுக ஒடுக்குமுறைக்கு ஆளாகி இருந்த சாலியப் பள்ளர்கள் லெப்பைகள் ஆனார்கள். அடுத்து படையிலிருந்த குதிரை வீரர்களான இராவுத்தர்கள். தமிழகத்தின் முதன்மையான ஏற்றுமதிப் பண்டமான துணியை உருவாக்குவதிலும் இறக்குமதிப் பண்டமான குதிரைகளைப் பழக்குவதிலும் ஏற்பட்ட தொடர்புகளால் இவர்கள் மதம் மாறினர், பின்னர் அரச அதிகாரம் முகம்மதியர் கைகளுக்குப் போனவுடன் நிலக்கிழார்களாகிய சிவனிய வெள்ளாளர்கள் தங்கள் சொத்துகளைக் காத்துக்கொள்ள இராவுத்தார்களாக மாறினார்கள்.)

            விசயநகரப் படைகளும் முகம்மதியப் படைகளும் மோதிய போது போரின் நடுவே விசயநகரப் படையிலிருந்த முகம்மதிய வீரர்கள் பக்கம்  மாறியதால் விசயநகரப் பேரரசே அழிந்தது.

            கிறித்துவத்தைப் பயன்படுத்தி ஐரோப்பியர் ஆப்பிரிக்க நாடுகள் அனைத்தையும் கைப்பற்றினர். 16ஆம் நூற்றாண்டில் சேவியர் சப்பானுக்குச் சென்றார். ஒரு தலைமுறையில் 1½ இலக்கம் கிறித்துவர்கள் உருவாயினர். அவர்கள் புத்தக் குருக்களை விரட்டி கோயில்களை இடித்தனர். 1597இல் அரசன் எச்சரிக்கை விடுத்தான். 1614இல் நாட்டை விட்டு வெளியேற அல்லது தாய் மதத்துக்குத் திரும்ப ஆணையிட்டான். பின்னர் கிறித்துவர்கள் தாக்கப்பட்டனர். கொல்லப்பட்டவர் போக எஞ்சிய  37,000  பேர் ஒரு தீவக்குறைக்குச் சென்று கோட்டை கட்டி வாழ்ந்தனர். 1638இல் அவர்களில் 105 பேர் தவிர அனைவரையும் கொன்றொழித்தனர். இந்த வகையில் 4 சாதிகளாகப் பிளவுண்டிருந்த சப்பான் அயல் மதத்தை நுழைய விடாமல் தடுத்தது. சப்பானுக்குச் சென்ற ஒரு போர்த்துக்கீசிய மாலுமியின் கூற்றாக, நாங்கள் முதலில் மக்களை மதம் மாற்றுவோம் பின்னர் நாட்டைப் பிடிப்போம் என்றது வரலாற்றில் பதிவாகியுள்ள பின்னணியில் இதைப் பார்த்தால் புரியும்.

            சீனத்தில் சாதிகள் கிடையாது. நிலக்கிழமைக் குமுகமே இருந்தது. முதன்மையான முரண்பாடு நிலக்கிழாருக்கும் குத்தகை உழவனுக்கும். ஆனால் தேவையான செல்வம் திரண்டால் ஒரு குத்தகை உழவன் நிலக்கிழார் ஆக முடியும். எனவே அங்கு முகம்மதியமோ கிறித்துவமோ நுழைய முடியவில்லை. அதே நேரத்தில் இந்திய, தமிழ்ப் பண்பாட்டைப் பின்பற்றிய தென்கிழக்காசிய நாடுகளை எளிதாக முகம்மதியம் கைப்பற்றியது.

            தமிழகத்தில் தென்பாண்டி நாடு, திருவிதாங்கோடு ஆகிய கடற்கரைகளில் நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் நிலம் வழியாக நாயக்கர் படைகளும் கடல் வழியாக மூர் என்ற முகம்மதியர் படைகளும் கொடுமைகள் புரிந்து வந்தனர். இச் சூழலில் போர்த்துக்கீசிய மதகுருக்கள், மீனவர்கள் போர்த்துக்கீசிய அரசரின் குடிமக்களானால் அவர்களுக்கு படைக்கலங்கள் வழங்குவார் எனக் கூறி மதமாற்றம் செய்தனர். (இன்று தமிழகக் கடற்கரையில் ஏறக்குறைய அதற்கு இணையான ஒரு சூழல் நிலவுகிறது). பின்னர் சேவியர் அங்கு வந்து கடற்கரையில் கிறித்துவ மதத்தை ஒழுங்குபடுத்தினார்.  இவ் வேளையில் நடைபெற்றதாக ஒரு நிகழ்ச்சி சுட்டிக் காட்டப்படுகிறது:

            நாயக்கர் படையொன்று கடற்கரையைத் தாக்க வருகிறது. அப்போது கடற்கரை மக்களிடையில் சேவியர் இருக்கிறார். படை வருவதை அறிந்ததும் அவர் கையில் ஒரு சிலுவையை ஏந்திக் கொண்டே படையை நோக்கிப் போகிறார். அதைப் பார்த்ததும் நாயக்கர் படைத் தலைவன் படையைத் தொலைவில் நிறுத்திவிட்டு, தான் மட்டும் குதிரையிலிருந்து இறங்கி சேவியரை நோக்கி வந்து அவரைப் பணிந்து வணங்கிவிட்டுப் படையுடன் திரும்பிவிட்டான். இதனைப் பெரும் இறும்பூது (அற்புதம்) போல் வரலாறு எழுதுவோர் குறிப்பிடுகின்றனர். உண்மையில் இதில் இயற்கைக்கு மாறான எதுவும் நடைபெறவில்லை.

            இந்தியாவிலும் தமிழகத்திலும் மக்களுக்கும் அரசர் - பார்ப்பனர் கூட்டணிக்கும் உள்ள முரண்பாடு பகை முரண்பாடாகும். அதே வேளையில் அரசர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையில் அரசனின் அதிகாரத்தையும் பார்ப்பனரின் சாதி மேன்மையையும் முன்வைத்து மிக அடிக்கடி உரசல்கள் நடைபெற்றுக்கொண்டே இருந்தன. இதனால் பார்ப்பனர்கள் தங்கள் அரசனை எதிரிகளுக்குக் காட்டிக்கொடுப்பதும் உண்டு. இந்தச் சூழல்களில் பார்ப்பனர்களின் செருக்கை அடக்குவதற்கென்று அயல் மதத்தினருக்கு அரசர்கள் சலுகைகள் வழங்கியதும் உண்டு. அரசி மங்கம்மா, மன்னன் திருமலை ஆகியோர் காலங்களில் கிறித்துவ விடையூழியர்களுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.  இந்தப் பின்னணியில் நாயக்க அரசர்கள் தங்கள் படைத் தளபதிகள் தாங்கள் செல்லும் இடங்களில் கிறித்துவ மதகுருக்களை எதிர்கொண்டால் அவர்களுக்கு பணிவுகாட்டி விலகிவிட வேண்டும் என்று அறிவுரை கூறியிருக்க வாய்ப்புண்டு.

            ஆனால் இந்தியாவில் ஐரோப்பியர் நுழைந்து நாடுகளைக் கைப்பற்றியதில் சமயத்தின் பங்கு இல்லை என்பதே உண்மை. வாணிகர்களாக நுழைந்தவர்களுக்கு துபாசி எனப்படும் மொழி பெயர்ப்பாளர்களாகப் பணியாற்றிய பல்வேறு மேல் சாதியினர் துப்பாளிகளாகவும் உளவு கூறுவோருமாகச் செயற்பட்டதாலும் இங்குள்ள அரசர்கள்  மக்களை மட்டுமல்ல, தம் போன்ற சொந்த நாட்டு மன்னர்களையே முதல் எதிரிகளாகக் கொண்டதாலும் இது எளிதாயிற்று.

            இந்த இடத்தில் இந்திய”, தமிழ்ப் பண்பாடு பற்றிய ஒரு முகாமையான செய்திக்குள் நாம் நுழைவோம். மேலே நாம் குறிப்பிட்ட, அரசர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான முரண்பாட்டின் தோற்றுவாய் குறித்ததாகும் இது.

            குக்குலப் பூசகர்கள் 7 பேரும் ஒன்று கூடி தனித்தனிக் கோட்டைகளாக வாழ்ந்த மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று இந்திரனுக்குப் பணித்த காலகட்டத்தில் பூசகர் குழுவின் முழுக் கட்டுப்பாட்டினுள்  புதிய தலைவனான இந்திரன், இருந்திருக்க வேண்டும். இருப்பினும் நாளடைவில் இந்திரனின் அதிகார வளர்ச்சியால் அவன் பூசகர்களின் கட்டுப்பாடுகளை மீதுற முயன்றிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மகாபாரதத்தில் இந்திரன் பதவியடைந்த குருகுல மன்னன் நகுசன் அகத்தியரை அதட்ட, அவர் அவனுக்குப் பாம்பாக மாறுமாறு சாபம் இடுகிறார். இந்திரன் அவையில் உருப்பசி ஆடிய நாட்டியத்தில் குறைகண்டு அவளையும் இந்திரன் மகனையும் அகத்தியர் சபிக்கிறார்(சிலப்பதிகாரம்). (இருப்பினும் அகத்தியர் எழுதிய இலக்கணமான அகத்தியத்தை புதிய வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப இந்திரன் தோற்றுவித்த ஐந்திறம் வழக்கிழக்கச் செய்தது.) இவ்வாறு அரசர்களுக்கும் பூசகர்களுக்குமான பூசல் பற்றிய இரண்டு தொன்மச் செய்திகளைப் பார்ப்போம்.

1.   கார்த்தவீரியார்ச்சுனன் என்று ஓர் அரசன். அவன் காட்டில் வேட்டையாடிக் களைத்து அவனும் சுற்றத்தாரும்(படைகளும் அரசன் துணைவர்களும்) சமதக்கினி முனிவன் தவச்சாலையை அடைந்தனர். முனிவன் தன்னிடமிருந்த தேவருலகத்துக் காமதேனுவை அழைத்து அனைவருக்கும் உணவளிக்கக் கட்டளை இட்டான். உணவுண்ட அரசன், இந்த மாடு அரசனாகிய தன்னிடமிருப்பது அதிகப் பயன் தருமே என்று கருதி முனிவனிடம் மாட்டைக் கேட்டான். முனிவன் மறுத்தான். படைகொண்டு கைப்பற்ற நினைத்த போது சண்டை மூண்டு அரசன் மாண்டான். அதை அறிந்த அவனது மகன்கள் படை கொண்டுவந்து முனிவனைக் கொன்றனர். அதற்குப் பழி தீர்க்க சமதக்கினியின் மகனான பரசிராமன் 21 தலைமுறை அரசர்களை அழிப்பதாகச் சூளுரைத்துக் கொல்லத் துணிந்தது நமக்குத் தெரியும்.

2.     கெளசிகன் என்றொரு அரசன். அவன் இவ்வாறு வேட்டையாடச் சென்ற போது வசிட்டர் தவச்சாலையில் காமதேனு உணவூட்ட அவனும் சுற்றமும் உண்டனர். அவனும் காமதேனுவைக் கவரப் படையை ஏவ அவன் தோற்றான். எனவே தவ வலிமையே சிறந்தது என்று முடிவு செய்து தவம் மேற்கொண்டு விசுவாமித்திரர் என்ற முனிவனாக வந்தான்.

இந்தக் கதைகளில் வரும் காமதேனு உண்மையில் என்ன? முனிவர்கள் எனப்படும் பூசகத் தலைவர்களின் ஆட்சிப் பகுதிகளை ஒருங்கிணைத்து அரசர்கள் ஆளுகின்றனர். பூசகர்கள் தத்தம் பகுதிகளில் தண்டும் வரிகளிலிருந்து அரசர்களுக்குச் செலுத்துகிறார்கள். இவ்வாறு செலுத்தியது போக எஞ்சிய செல்வம் பூசகர்களிடம் தங்குகிறது. இந்த வகையில் பூசகர்களின் பங்கு பெரிது; எனவே அரசனாகிய தானே நேரடியாக மக்களிடமிருந்து வரி தண்டி உனக்கு உரியதைத் தருகிறேன் என்று பூசகர்களைக் கேட்டதிலிருந்து பூசல் தொடங்கியதாகக் கொள்ள வேண்டும். கழகப் பாடலில் பிசிராந்தையார் என்ற புலவர் பாண்டியன் அறிவுடைநம்பியை நோக்கிப் பாடிய காய் நெல்லெடுத்து கவளங்கொளினே என்று தொடங்கும் பாடல் இதே பொருள் பற்றியதாகும். நிலக்கிழார்கள் தாமே வரி தண்டி அரசர்க்குத் ஒரு பங்கைச் செலுத்துவதுதான் சிக்கனமானது, அரசன் நேரே மக்களிடம் செல்வதால் அழிம்புகள் மிகும் என்பது அப்பாடலின் உள்ளடக்கம். சீவக சிந்தாமணியில் திருத்தக்கத்தேவரும் இதே கருத்தை வலியுற்றுகிறார். மாநில - நடு அரசுகளுக்கிடையிலான அதிகாரப் பங்கீடு பற்றிய சிக்கல் இதே அடிப்படையில் ஆனதாகும்.

தேவிப் பிரசாத் சட்டோபாத்தியாய தான் எழுதிய லோகாயதா என்ற நூலில் பூசகர்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் வேள்விகள் இல்லாமல் ஒழிந்ததையும் பின்னர் அரசர்கள் பூசகர்களுக்கு அடங்கிப் போனதையும் இருக்கு வேதம், உபநிசத்து ஆகியவற்றிலிருந்து மேற்கோள்களால் விளக்குகிறார்.

            மேலே தொடரும் முன், பூசாரியருக்கு மக்கள் மீது இவ்வளவு உறுதியான செல்வாக்குக்கு அடிப்படை என்ன என்ற கேள்விக்கு விடை காண்போம்.

            நெருப்புக்கோ அல்லது வேறு ஒரு தெய்வத்துக்கோ நரபலி போன்ற பலிகளைக் கொடுக்கும் போது கூட்டத்தினர் அதை ஆடிப்பாடி நிகழ்த்துவார். முந்தியல் வடிவ இசைக் கருவிகளையும் இசைப்பர். இந்த ஆட்டபாட்டத்தில் அக் கூட்டத்தில் உள்ள சிலருக்கு மெய்ம்மறப்பு எனும் ஆதாளி ஏற்பட வாய்ப்புள்ளது. மெய்ம்மறந்த நிலை அடைந்தவர் பிறரின் உள்ளத்தோடு தொடர்பு கொள்ளும் ஆற்றலைத் தற்காலிகமாகப் பெறுகிறார். இந்த ஆற்றல் சிறுகோயில் பூசாரிகளிடம் இன்றுவரை தொடர்கிறது.

            இத்தகைய ஆற்றல் வெளிப்பட்டவர்க்கு அக் குழுவில் ஒரு செல்வாக்கு உருவாகியது. இதனைப் பார்த்து அத்தகைய மெய்ம்மறப்பைப் பயிற்சியால் எய்த முயன்றனர். இவ்வாறு பயிற்சியால் மெய்ம்மறப்பு நிலை எய்திப் பிறர் மனதைத் தம் கட்டுக்குள்  கொண்டு  வரும் ஆற்றலைப் பெற்றவர்களைச் சாமன்கள் என்று மாந்தநூல் கூறுகிறது. சாமன்களின் அடையாளம் அவர்கள் கையில் ஓர் இசைக்கருவி இருக்கும் என்பதாகும். புறநானூறு மாங்குடி கிழார் பாடலில் வரும் பாணன், துடியன், பறையன், கடம்பன் என்பவர்களில் கடம்பன் தவிர பிறர் மூவரும் இசைக் கருவிகளின் தொடர்பாலேயே அறியப்படுபவர்கள். இப் பெயர்கள் குக்குலத் தலைவர் பெயர்களாக இருக்க  வாய்ப்புள்ளது.

            இச் சாமன்களின் பயிற்சிகளான நீரில் நிற்றல், நெருப்பில் நடத்தல், உடம்பில் ஊசிகளைக் குத்திக்கொள்ளல் என்பவை நம் தொன்மங்களில் வரும் முனிவர்களின் தவ முறைகளேயாகும். ஐம்புலன்களைக் கடும் தாக்குதலுக்குள்ளாக்கி அவற்றின் புலனுணர்வு எனும் தாக்கம் தங்கள் கவனத்தைச் சிதறவிடாது, ஏதோவொன்றின் மீது அதனைக் குவிப்பதில் வெற்றி பெறுவதுதான் இந்த மெய்ம்மறப்புப் பயிற்சி. இப் பயிற்சி மூலம் முன் இருந்த வாழ்முறை முடிந்து இவர்கள் புதிய ஒன்றுக்குள் நுழையும் இந்த நிகழ்முறையை மறுபிறவி என்றும் எனவே அவர்களை இரு பிறப்பாளர்கள் என்றும் மாந்தநூலார் கூறுவர்(விரிவுக்கு மனதின் ஆற்றல் என்ற எம் கட்டுரையைப் பார்க்க.) இவர்கள் வசியத்தின் மூலமும் மருந்துகள் மூலமும் நோய்களைக் குணமாக்குதல், வசியத்தின் மூலம் கெடுதல்கள் செய்தல் என்று பல திறன்கள் வாய்க்கப்பெற்றவர்கள். இதனால் மக்கள் அவர்களுக்கு அஞ்சி கட்டுப்பட்டு வாழ்ந்தனர்.

            இந்திர பதவியை அடைவதற்குத் தவ வலிமையே அடிப்படை என்பது நம் தொன்மங்களிலிருந்து புலனாகிறது. எனவே இவர்கள் சாமன்களுக்குரிய திறமைகளில் மிக மேம்பட்டவர்கள் என்பது தெளிவு. இருப்பினும் உள்ளூர் சாமன்களின் கூட்டு நடவடிக்கைகளுக்கு உட்பட்டே அவர்கள் தொடக்கத்தில் வாழ்ந்தார்கள்.

            இந்திரனின் தொடக்கம் சாமன்களுக்கு உரிய பயிற்சிதான் என்றாலும் அவனது பணியில் தன் கீழ் உள்ள நிலப் பரப்பை அயலவர்களிடம் இருந்து காக்க வேண்டிய உடல் ஆற்றல், கருவி ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளும் தேவை ஏற்படுகிறது. அது பருப்பொருட்களைப் பகுத்தாய்ந்து அவற்றின் தன்மைகளைச் செய்முறையில் புரிந்து புதியவற்றைப் படைப்பதன் தேவையைக் கட்டாயமாக்குகிறது. இது பல்வேறு புதிய அறிவியல் - தொழில்நுட்பத் துறைகளை வளர்க்கிறது. இந்தப் பல்துறை வளர்ச்சியின் விளைவான மொழியின் மேம்பாடுதான் அகத்தியத்தை அகற்றி ஐந்திறத்தைக் களத்தில் விட்டது.

            இந்திரனின் ஆட்சி அதிகாரம் உருவாக்கிய வளர்ச்சிநிலைகள் பூசாரியரின் எல்லைக்குள்ளும் ஊடுருவி அவர்களையும் வலுப்படுத்தி இருவர் போட்டியையும் நீடித்துச் சென்றது. பூசகர்கள் மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்டிருந்ததால் நாம் மேலே சுட்டிக்காட்டியது போன்று அவர்கள் அரசர்கள் மீது மேலாளுமை கொள்ள முடிந்தது. இருப்பினும் ஒரு கட்டத்தில் இயற்கையின் பருப்பொருள் மறையங்களை உய்த்தறிவு மூலமும் அவ் வுய்த்தறிவைச் செயல்முறையில் சரிபார்ப்பதன் மூலமும் இன்று சித்தர்கள் என்று நாம் குறிப்பிடும் வானியல், மருத்துவம் போன்ற பல்வேறு துறை அறிவியல் வல்லுநர்களின் கண்டுபிடிப்புகள் மூலம் சாமன்களின் வலிமையை அரசர்கள் மிஞ்சினர். அதனால் கடைசி கடற்கோளுக்கு முந்திய குமரிக் கண்டத்தில் சாமன்களின் செல்வாக்கு முடிவுக்கு வந்திருந்தது என்று கொள்ளலாம்.

            அறிவியலாளர்களின் உய்த்தறிவு  என்பது அமர்ந்திருந்த நிலையிலோ அல்லது மெய்ம்மறப்பு உத்திகளின் வழியாகவோ பெறப்படுவதல்ல. புலன்கள் மூலம் தாம் அறிந்த புலனங்களும் பிறவியிலேயே தத்தம் உடலில் பதிந்திருக்கும் மரபுச் செய்திகளும் இடை வினைப்பட்டு வெளிப்படும் முடிவுகளாகும்.

            இவ்வாறு செல்வாக்கை இழந்த சாமன்களின் செயற்பாடு கணியம், குறி சொல்லல், மருத்துவம் என்று தொழிற்பாகுபாடடைந்து மக்களிடையில் கலந்தது. இன்றும் உடுக்கு போன்ற இசைக் கருவிகளை இசைத்துக் குறிசொல்வோரை நாம் பார்க்கிறோம். அதேவேளை செய்வினை,  ஏவல் என்ற பெயர்களில் செயற்படும் மந்திரவாதிகள்  பழைய சாமன்களின் ஒரு பகுதிப் பணியை மேற்கொள்பவர்கள் எனலாம்.

            சாமன்களின் செயற்பாடு கீழை உலகு எனப்படும் மேற்காசிய நாடுகளின் எல்லை வரை பரவி இருந்தது. எகிப்து அரசால் துரத்தப்பட்ட மோசே கிழக்கு நோக்கி வந்து வசிய வித்தைகளைக் கற்று எகிப்தியப் பூசாரியரை வென்று அங்கிருந்த அடிமைகளை விடுவித்துச் சென்று யூத இனத்தை உருவாக்கினார்.  ஏசுநாதர் சோர்டான் ஆற்றங்கரையிலிருந்த ஒரு குகையில் இயங்கிய புத்த மடத்தில் வசிய வித்தைகளைக் கற்று இசுரேலுக்குத் திரும்பிச் சென்று தன் இறும்பூதுகளை நிகழ்த்திக் காட்டினார் (சான்று Dead Sea Scrolls என்ற நூல்). 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய புனைவு இலக்கியங்கள் கிழக்கில் சென்று மந்திர - தந்திர - மருத்துவ வித்தைகளைக் கற்றுத் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொண்ட கதைமாந்தர்களைக் காட்டுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை அய்யா வைகுண்டர், இராமலிங்கர் வரை வசிய வித்தையால் “தெய்வங்கள்’’ ஆனோரின் வரலாறு தொடர்கிறது.

            மெசுமரிசம், இப்நாட்டிசம் எனப்படும் உளவியல் மருத்துவம் வசியக் கலையின் அடிப்படையில் செயற்படுவதாகும். இத் துறையை ஐரோப்பியர் வளர்த்தெடுத்திருப்பது, எந்த ஒரு துறையையும் நுணுகி ஆய்ந்து அதன் உள்ளடக்கத்தைப் புரிந்து அதன் பயன்பாட்டை மேம்படுத்தும் சிந்தனையே இல்லாத நம் மழுங்கல் மனப்பான்மையைக் காட்டுகிறது. பேய் ஓட்டுவது என்பது ஒரு விலங்குத்தனமான முரட்டு வசிய - உளவியல் உத்தியே.

            பண்டைக் காலத்தில் சாமன்களாக இருந்து அரசர்களால் செல்வாக்கு இழந்த பூசகர்கள் பார்ப்பனர்களாக மீண்டெழுந்தனர். பூசகர்களின் கொடுமைகளிலிருந்து அரசர்களும் மக்களும் ஒருங்கிணைந்து போராடி அவர்களது வேள்விகளை முடிவுக்குக் கொண்டுவந்தனர். சம உரிமையுள்ள 4 வருணங்களில் ஆசிரியர்களாகவும் கணியர்களாகவும் பார்ப்பனர்கள் இருந்தனர். அரசர்களுக்கும் பிற இரண்டு வருணங்களுக்கும் ஏற்பட்ட பூசலில் அரசர்கள் அணிமாறி பார்ப்பனர்களின் உதவியுடன் அசுவமேதம், இராசசூயம் போன்று அரண்மனைகளுக்குள் மட்டும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளாக வேள்விகளை மீட்டனர். தங்களைப் பார்ப்பனர்களின் செல்வாக்குக்கு அடிப்படுத்திக்கொண்டனர். தேவிப் பிரசாத் சட்டோபாத்தியாயா எழுதியுள்ள லோகாதயா நூல் தரும் செய்திகளிலிருந்து இது புலனாகிறது. இவ்வாறு மீண்டெழுந்த பார்ப்பனர்கள் இப்போது பழைய பூசகர்களைப் போன்ற மக்கள் பணிகளைச் செய்வதில்லை. அரசனின் அரவணைப்புடன் புதிய வேளாண் விரிவாக்கங்களின் போது அங்கு முதல் அதிகாரிகளாக அமர்த்தப்பட்டு செயற்கையான ஒரு செல்வாக்குடன் இந்திய வரலாற்றில், வட இந்திய வலாற்றில் நுழைந்தனர். அத்துடன் முன்னாள் சாமன்களுக்குரிய பயிற்சிகளை இவர்கள் மேற்கொள்வதுமில்லை. குறிப்பிட்ட அகவைக்குப் பிறகு பூணூல் என்ற, குடும்பத் தலைமையைக் குறிக்கும் அணியைப் பூட்டுவதன் மூலமும் ஒரு மந்திரத்தைக் காதில் ஓதுவது மூலமும் அவர்களுக்குத் தெய்வீக ஆற்றல் வந்து விட்டதாகக் கற்பிக்கப்பட்டது. இவ்வாறு இருபிறப்பாளர் என்ற சாமன்களுக்குரிய பட்டமும் இவர்களுக்கு வழங்கப்பட்டது. அரசனோடு சேர்ந்து கொண்டு அரச அதிகாரத்தின் வலிமையுடன் இவர்கள் பிறப்படிப்படையிலான ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்ட ஒரு வருண முறையாகப் பழைய மக்கள் பேராளர் முறையைத் தாழ்த்தினர்.

            விரிவுக்கு சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் என்ற எமது ஆக்கத்தைப் பார்க்க.
        
            இவ்வாறு பார்ப்பனர்களான முன்னாள் பூசகர்கள் அரசர்களை வென்ற நிகழ்ச்சியின் அடையாளமாகப் பரசிராமனைக் கொண்டனர். கேரளத்தில் பரசிராமன் வந்தான் என்பதையே பூசகர்களின் ஆட்சி அங்கு நிலைபெற்றதன் ஒரு குறியீடாகத்தான் கொள்ள வேண்டும். அரசனுக்கும் பூசகர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் அரசர்கள் தோல்வியுற்றதையே இரணியன் கதையும் மாவலி கதையும் காட்டுகின்றன. இரண்டும் சேரநாட்டு மண்ணிலேயே நடைபெற்றதும் பிரகலாதனின் பேரன்தான் மாவலி என்பதையும் வைத்துப் பார்த்தால் அரசனின் இறுதி அதிகாரத்துக்கும் பூசகர்களின் கூட்டு மேலாண்மைக்குமான மோதலின் திட்டவட்டமான வடிவத்தைக் காணலாம்.

            இரணியன் பெரும்பாலும் குமரிக் கண்டத்திலிருந்து தமிழகத்தில் கரை சேர்ந்த சேரர்களின் தொடக்ககால அரசர்களுடன் ஒருவனாக இருக்க வேண்டும். ஏற்கனவே அந் நிலப்பரப்பில் வாழ்ந்த பழங்குடியினருக்கும் அங்கு வந்தேறிய பார்ப்பனர்களுக்கும் இருந்த பிணக்கில் அவர்கள் இப்போது அணிசேர்ந்து புதிய வந்தேறிகளான சேர மரபினரை எதிர்த்து அடிப்படுத்தியதையே இரணியன் கதை குறிப்பிட வேண்டும். பழங்குடியினரில் வலிமை மிக்க ஒரு குடியின், குலக்குறி எனப்படும் தோற்றக்குறி அரிமாவாக இருக்கலாம். பெப்ருவரி 2009, தமிழினி இதழில் செந்தீ நடராசனின் நரசிம்மர் காதலி வேட்டுவத்தி என்ற கட்டுரையில் இதற்குரிய தடயம் உள்ளது.

            இந்த மோதல் நீண்டநெடுங்காலமாக நடைபெற்றிருக்கிறது. இன்றைய நம்பூதிரிகளின் முன்னோர்கள் வீழ்வதும் மீண்டும் மீண்டும் தலைதூக்குவதும் பல முறை நிகழ்ந்துள்ளமைக்குத் தடயங்களைக் காணமுடிகிறது. கோயில்களை  நடுவாக வைத்து அவற்றின் கீழ் நிலப் பரப்பை வைத்து இரண்டையும் தம் ஆளுகையின் கீழ் வைத்தனர். பெற்றோருக்கு மூத்த ஆண்மகனுக்கு மட்டும் சொத்துரிமை. பிற ஆண் மக்களுக்குக் குடும்பம் வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. மூத்த மகன் திருமணத்துக்குப் பின் இறந்து போனால் அவனது தந்தையே மருமகளை வைத்துக்கொள்வான் அல்லது முறைப்படி மணம் செய்வான் என்று கூறப்படுகிறது. அவர்களோடு தொடர்பு (சம்பந்தம்) வைத்துக்கொள்வதற்கென்று ஒரு மருமக்கள் வழி மக்கள் குழு. இங்கு பெண்களுக்கே சொத்துரிமை. அதன் ஆள்வினையைப் பார்ப்பது அப் பெண்களின் தாயின் மூத்த மகன். அவனே காரணவன் எனப்படுவான். இப் பெண்களுக்குத் திருமணம் நடந்தாலும் “கணவனை’’த் தவிர நம்பூதிரிகள், மற்றும் பிற ஆண்களோடும் தொடர்பு வைத்துக்கொள்வர். கணவன் அவள் வீட்டில்தான் வாழ்வான். காரணவன் மனைவி மட்டும் கணவன் வீட்டில் வாழ்வாள். இது பழைய குக்குலக் குமுகத்தில் கோட்டையில் இருந்த கட்டமைப்பு. தலைவனுக்கு மட்டும் அவனுக்கே உரிமையுள்ள மனைவி. பிறருக்குக் கட்டுப்பாடு கிடையாது. இந்தக் கட்டமைப்பில் நம்பூதிரியின் சொத்து உடையாது, மருமக்கள் வழியான சூத்திரர்கள் சொத்து உடையும். இந்த முரண்பாடு, இந்த அமைப்பு உடையாமல் நீடிப்பதற்கான பொருளியல் அடித்தளமாக அமைந்தது.

            [இங்கிலாந்தில் இதிலிருந்து சற்றே மாறுபட்ட முறையில் நிலக்கிழார்களின் (பிரபுக்கள் - Lords) சொத்துகள் உடையாமல் பேணப்பட்டன.  இங்கும் மூத்த மகனுக்குத்தான் சொத்துரிமை. மற்ற மகன்கள்  கனவான்கள் (Gentlemen) எனப்பட்டனர். அவர்கள்  திருமணம் செய்யலாம்.]

            கோயில்கள் அடிப்படையில் அமைந்த இந்த நம்பூதிரிகள் அல்லது வேறு வகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்ட அவை அரசனைக் கட்டுப்படுத்தியது அல்லது அறிவுரை கூறியது. சேரனுடைய அவையிலும் பெரும் எண்ணிக்கையிலான இந்தக் கோயில் பற்றாளர்கள் இடம்பெற்றிருந்தனர் என்று தெரிகிறது. அதைக் குறிக்கத்தான் திருநிலை பெற்ற பெருநாளிருக்கை (கட்டுரை காதை வரி 56) என்று இளங்கோவடிகள் கூறியதற்கு விளக்கவுரை கூறவந்த வேங்கடசாமியார் சேரனது அவையைப் பெருநாளிருக்கை என்ற அடைமொழியால் பிற தமிழ் இலக்கியங்களிலும் கூறியிருப்பதைச் சான்று காட்டுகிறார்.

            இந்த நம்பூதிரிகள் போர்க்கலையில்தான் வல்லவர்களே அன்றி மெய்யியல் அறிவு வாய்க்கப் பெறாதவர்கள். இவர்களால் புத்த, அம்மண ஊடுருவலாளரை வாதில் எதிர்கொள்ள முடியாமல் இருந்தது. எனவே அத் திறமை வாய்ந்த பார்ப்பனர்க்குப் பெருமளவில் பரிசுகளைக் கொடுத்து ஈர்த்தான் சேர மன்னன். இதையறிந்த சோழ நாட்டைச் சேர்ந்த  பராசரன் எனும் பார்ப்பான் சேரன் அவையில் வாது செய்து எதிர்த் தரப்பினை வென்று பெருமளவில் அணிமணிகள் பெற்று திரும்பும் வழியில் பாண்டிய நாட்டின் தாங்கல் எனும் ஊருக்கு வந்தான். அங்கு பார்ப்பனச் சேரியில் விளையாடிக்கொண்டிருந்த பார்ப்பனச் சிறுவர்களிடம் போட்டி வைத்து நன்றாக வேதம் சொன்ன தக்கினன் என்னும் சிறுவனுக்கு அந்த அணிமணிகளைக் கொடுத்தான் என்ற செய்தி சிலப்பதிகாரம் கட்டுரை காதையில் வருகிறது(வரி55-98). இது மாந்தரஞ் சேரல் (இரும்பொறை) என்ற சேர அரசன் காலத்தில் நிகழ்ந்ததாகவும் குறிப்பு(வரி-84) உள்ளது.

            இந்தச் சூழலில் வேத மெய்யியல் அறிவை வளர்த்துக்கொள்வதற்காக நம்பூதிரிகள் கங்கைக் கரைக்குச் சென்றதாக ஒரு செய்தி உள்ளது[1].

            பார்ப்பனர்களுக்கும் அரசர்களுக்குமான மோதல், குறிப்பாகச் சேர நாட்டில் திருமாலின் மூன்று  தோற்றரவுகளில் வெளிப்படுகிறது. இரணியன், அவன் மகனான பிரகலாதனின் பெயரன் மாவலி ஆகியோர் தொடர்பானவை இரண்டு. பரசுராமனே கேரளத்தை உருவாக்கினான் என்ற தொன்ம வகையில் அத்துடன் ஒன்று. ஆக, பார்ப்பனர்களின் ஒரு சமய வடிவமாகவே பதின் தோற்றரவுத் திருமாலியம் உருவாக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அது பின்னர் பல்வேறு மாற்றங்களைப் பெற்றாலும் அடிப்படை மாறவில்லை. மாவலியின் மகனான பாணன் என்பவனை அழிப்பதற்காக தேவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் சிலப்பதிகாரம் கடலாடு காதையில் கூறப்படுள்ளன. பார்ப்பனர்களின் மேலாளுமையை ஏற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்றும் மறுத்தவர்களை அசுரர், அரக்கர் என்றும் தொன்மங்களில் பதிந்து வைத்துள்ளனர்.

            இரணியனின் தலைநகரம் இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள இரணியல். அவன் மகன் பிரகலாதன் என்பதிலுள்ள ஆதன் என்ற பின்னொட்டு சேர மன்னர்களுக்கு  உரியது. 

            சிலப்பதிகாரத்தில் கோவலன் குழுவினருக்கு மதுரைக்குச் செல்வதற்கு வழி சொல்லும் மாங்காட்டு மறையோன் குடகு நாட்டின் பக்கம் உள்ள மாங்காட்டைச் சேர்ந்தவன். இவன் ஒரு நம்பூதிரியாக இருக்க வாய்ப்புள்ளது. மாங்காடு என்பது மங்களூராக இருக்கலாம். அவன் திருமால் கோயில்களைக் காணச் செல்வதாகக் கூறுவதிலிருந்து நம்பூதிரிகள் மாலியத்தைத் தங்கள் அடையாளமாகக் கொண்டுவிட்டதைக் காட்டுகிறது. இன்னொரு வகையில் சொன்னால் சிவன் கோயில்கள் தலைநகரங்களுக்குள்ளும் அரண்மனைகளுக்குள்ளும்[2] இருக்க, திருமால் கோயில்கள் நாடெங்கும் பரந்து கிடந்ததால் திருமாலை அவர்கள் பற்றியிருக்கலாம். சிவனிய எழுச்சி காலத்தில்தான் குரவர்கள் சிவன் கோயில்களைக் கண்ட இடங்களிலெல்லாம் நிறுவினர்.

            நம்பூதிரிகளுக்கும் பிற மக்கள் குழுக்களுக்கும் இடையிலான பூசல் மக்கள் வழிக்கும் மருமக்கள் வழிக்கும் என்று சேர நாட்டில் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் கோயில்பற்றாளர் அவை தேர்ந்தெடுத்த சேரமான் பெருமாள் என்ற அரச பதவி நிலவியது.  இதுவும் பின்னர் மக்கள் வழி என்றும்  மருமக்கள் வழி என்றும் பிறழ்ந்து நம்பூதிரிகளின் ஆதிக்கம் வீழ்வதும் எழுவதுமாக மாறியது. மார்த்தாண்ட வர்மா ஆட்சிக்கு வருவது வரை தென் கேரளமான திருவிதாங்கூரிலும் இதுவே நிலை. பின்னர் இ.எம்.சங்கரன் நம்பூதிரிப்பாடு முதலமைச்சராக வந்து நம்பூதிரிகளின் நிலங்களை உழுபவர்களுக்குச் சொந்தமாக்கிய பின்னர்தாம் நம்பூதிரிகளின் ஆதிக்கம் வீழ்ந்தது.

            இந்தியாவில் மகதப் பேரரசை நிறுவிய சந்திரகுப்தனின் அமைச்சனாக இருந்த சாணக்கியன் எனும் கவுடில்லியனின் அர்த்த சாத்திரம் எனும் பொருள் நூலில், புதிய நிலங்களை வேளாண்மைக்குக் கொண்டுவரும் முன் அங்கு ஒரு பார்ப்பனக் குடியேற்றத்தை ஏற்படுத்தி அதன்கீழ் அந்நிலங்களைக் கொண்டுவர வேண்டும் என்று கூறியிருப்பதாக டி.டி. கோசாம்பி தன் பண்டை இந்தியா நூலில் கூறியிருக்கிறார். அம் மரபில் வந்த அசோகன், புத்த சமயத்தைத் தழுவி அறநிலையங்களை நிறுவி மக்களை அமைதியான வழியில் தன் செல்வாக்கினுள் வைத்திருந்தான். பின்னர் அந்தப் பேரரசு விரைவில் கலைந்து போயிற்று. 

            குமரிக் கடற்கோளுக்குத் தப்பி தமிழ் மூவேந்தர்களும்  ஏறக்குறைய கி.மு. 1700 இல் இருந்து தமிழகக் கடற்கரைக்கு வரத் தொடங்கினர். பின்னர் கி.மு. 1500 வாக்கில் இங்குள்ள 12 வேளிர்களுடன் இணைந்து ஒருவர் நிலப் பரப்பை மற்றவர் கைப்பற்றுவதில்லை என்ற உடன்படிக்கையைச் செய்து கொண்டனர். இது காரவேலன் பொறித்துள்ள கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது. ஆனால் நம் கழக இலக்கியத் தொகுப்பில் அங்கொன்றும் இங்கொன்றும் தவிர கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய செய்யுள் எதுவும் இல்லை. இந்த இடைக்காலப் பதிவுகளை பாக்களைத் தொகுத்தோர் அழித்துவிட்டனர் என்று தோன்றுகிறது. தமிழகத்தினுள் மூவேந்தர்கள் நுழைந்த போது இங்கு வாழ்ந்த மக்களுக்கும் மூவேந்தர்களுக்கும் இடையில் நிகழ்ந்தவற்றை மறைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது. அதனால்தான் சமற்கிருத  இலக்கியங்களில் மிக விரிவாகக் காணப்படும் குமரிக் கண்டச் செய்திகள் கழக இலக்கியங்களில் அருகேயே காணப்படுகிறது. அதாவது தாங்கள் வந்தேறிகள் என்பதை மறைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்திருக்கிறது.

            இது ஒருபுறமிருக்க, நமக்குக் கிடைக்கும் இலக்கியங்களிலிருந்து பண்டைத் தமிழ் மன்னர்கள் தங்களுக்கு மேம்பட்ட ஒரு விசையாக பூசகர்களை அதாவது பார்ப்பனர்களைக்  கொண்டிருக்கவில்லை என்றும் இறுதியில்தான் பார்ப்பனர்கள் அரசர்களுக்கு  வேள்விகளை வலிந்து அறிமுகம் செய்திருப்பதும் தெரிகிறது. பதிற்றுப் பத்தின் மூன்றாம் பத்தினால் தன்னை (பல்யானைச்  செல்குழு குட்டுவன்) பாடிய பாலைக் கெளதமருக்குக் குட்டுவன் துறக்கமளித்த வரலாறு, அதன் பதிகத்தில், பாடிப் பெற்ற பரிசில் நீர் வேண்டியது கேண்மின் என யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டுமென, பார்ப்பாரில் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பித்துப் பத்தாவது வேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணக் கூடவில்லை எனக் கூறப்பட்டுள்ளது என்று சிலப்பதிகாரம் கட்டுரை காதை வரி 63க்கு வேங்கடசாமியார் விளக்கம் கொடுத்துள்ளார். (தந்திரம், வசியவித்தை போன்ற ஏதாவதொன்றால் இதைச் செய்து காட்டியிருப்பர்.) அது போலவே சேரன் செங்குட்டுவனின் முதுமையைக் காட்டி வீடுபேறு குறித்துக் கூறி அவனை வேள்வி செய்ய வைக்கிறான் மாடலன்.

            இந்திர விழா போன்ற பொது நிகழ்ச்சிகளில் பார்ப்பனர் வேள்வி மொத்த நிகழ்ச்சிகளுள் ஒன்றாகத்தான் காட்டப்படுகிறதே அன்றி அரசர்களுடன் இணைத்துக் கூறப்படவில்லை. நாடுகாண் காதையில் அரசனின் வெற்றிக்காகவும் மேகம் மழையாகத் திரளவும் வேள்வி செய்கிறோம் எனும் பார்ப்பனச் சேரிகளையும் அவற்றுக்கு எதிராக உலகுக்கு உணவு ஊட்டும் உழவர்களின் ஊர்களையும் காட்டுகிறார் அடிகள். எனவே, கவுடில்லியனின் கோட்பாடு கழகக் காலத்தில் தமிழகத்தில் இல்லை என்பது தெளிவு. வேதப் பார்ப்பனர்களின் இந்த நுழைவு கூட வடக்கே புத்தம், அம்மணம் ஆகியவற்றின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தெற்கே ஓடிவந்த வேதப் பார்ப்பனர்களை, தமிழகத்தின் அடித்தள மக்களிடையில் பெருமளவில் ஊடுருவி விட்ட புத்த, அம்மண ஒற்றர்களின் அரசியலை எதிர்கொள்ளலாம் என்ற தமிழக அரசர்களின் நம்பிக்கையின் விளைவாகக் குடியமர்த்தியதால் இருக்கலாம்.

            பல்லவர்கள் தாங்கள் புதிதாக உருவாக்கிய வேளாண் பரப்புகளில் கவுடில்லியன் கூறியவாறு பிரம்ம தேயங்களை உருவாக்கி ஆட்சியைச் சமற்கிருதத்தில் நடத்தினார்கள். அதற்கு முன்பு இருந்த நிலக்கிழமை முறையும் தொடர்ந்தது. பின்னர் இறுதியில் மக்களுக்கும் ஆட்சியாளருக்கும்  இடையில் பிளவு பெரிதாக, அதை ஈடுசெய்ய நந்திவர்மன் போன்ற அரசர்கள் தமிழ் மேல் ஈடுபாடு காட்டத் தொடங்கினர். அரசர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான முரண்பாடுகள் முற்றியதாலும் இது நிகழ்ந்திருக்கலாம். இரு முரண்பாடுகளிலும் மக்களைச் சார்ந்திருப்பதைத் தேர்ந்தெடுத்ததால் ஐயத்திற்கிடமான அவனது சாவு நிகழ்ந்திருக்கலாம்[3].

            சோழப் பேரரசு நிலைகொண்ட பின் இராசராசன் கோயில்களைக் கட்டி அவற்றின் ஆள்வினையை மிக நுண்மையாக்கி அதற்கான பொருளியல் பின்புலத்துக்காக வளமான வேளாண் நிலங்களைக் கோயிலின் கீழே கொண்டுவந்தான். மிகுந்த விரைவுடன் வெளியிலிருந்து பார்ப்பனரையும் தேவரடியார்களையும் இறக்குமதி செய்தான். நாடு முழுவதும் கோயில் பணிகளும் கூடவே படையெடுப்புகளும் நிகழ்ந்தன. இவற்றுக்காக மக்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்பட்டன.

            இந்த நடவடிக்கை, பெரும்பாலும் சேர நாட்டில் கோயில் அடிப்படையில் அமைந்த  ஆட்சியைப் பார்த்து, அதை மேம்படுத்தி இராசராசன் மேற்கொண்ட ஒன்றாகக் கருத வேண்டும். இராசராசன் ஒரு பேரரசைக் கட்டியெழுப்பத் துணை நின்ற சிற்றரசர்கள் தன் ஆட்சியில் தலையிடுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஓர் உத்தியும் இதில் அடங்கியிருந்தது.

            இந்தப் போக்கு விரிவடைந்து மக்களால் சுமை தாங்க முடியாமல் போய் அவன் வழிவந்த அதிராசேந்திரன் காலத்தில் பெரும் மக்கள் கலவரமாக வெடித்தது. கோயில்கள் இடிக்கப்பட்டன; பார்ப்பனப் பூசாரிகள் கொல்லப்பட்டனர். அரசனையும் கொன்றனர்.

            ஆனால் இந்தக் கலகத்தின் பின்னணியில் இராசராசனின் பெண்வழியில் வந்த சாளுக்கிய அரசன் இரண்டாம் இராசேந்திரன் குலோத்துங்கள் என்ற பெயரில் சோழ அரியணை ஏறினான். இவன் தாய் அம்மங்காதேவி இராசேந்திர சோழனின் மகள். ஆகையால் இவனால் எளிதில் சோழ நாட்டு அரசியலில் விளையாட முடிந்தது. இடங்கை, வலங்கை என்ற இரு பிரிவு மக்களும்  ஒருங்கிணைந்து நடத்திய கலகத்தில் இடங்கையினர் சிலரோடு இவன் உடன்படிக்கை செய்துகொண்டிருந்தான். கோயில் கட்டுமானங்களில் செல்வம் சேர்த்த ஐந்தொழில் கொல்லர்கள், கோயில் நிலங்களில் உழுகுடிகளாக இருந்த பள்ளர் போன்ற மக்கள் ஆகியோருடன் அவன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி அவன் பொற்கொல்லர்களுக்கு ஊராட்சிப் பதவி கொடுத்ததற்குத் தடயம் உள்ளது. மடங்களைக் கலைத்து ஆணையிட்டதாகவும் மடத்தலைவர்கள் முனைப்பாகப் போராடி சிவனிய மடங்களைத் தக்கவைத்துக் கொண்டதாகவும் குகைப் போராட்டங்கள் என்ற நூல் கூறுகிறது. இந்த இடைவெளியில் கோயில் நிலங்களில் கணிசமானவற்றை உழுகுடியினர் தங்கள் உடமையாக்கிக் கொண்டனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தாழ்த்தப்பட்ட மக்களை மாலியப் பார்ப்பனராக்கி மாலியக் கோயில் சொத்துக்களைப் பெருக்க முனைந்தார் இராமானுசர் என்ற மாலியப் பார்ப்பனர். அவரை நாடுகடத்தினான் குலோத்துங்கன். அவர் குடகு நாட்டின் தலைக்காவிரியிலிருந்து தொடங்கி காவிரிக்கரை வழியே தன் மதமாற்றப் பணியைச் செய்து வந்தார். அதன் விளைவாக, பின்னர் கன்னடர்களும் விசயநகரத்தாரும் தமிழகத்தின் மீது படையெடுத்த காலத்தில் இம் மாலியர்கள் அவர்களுக்கு ஐந்தாம் படையினராகி ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
           
            இராசராசன் காலத்திலும் தொடர்ந்தும் ஆகமக் கோயில்கள் மக்களின் நிலங்களை விழுங்கிவருவதைக் கண்டு வெகுண்ட நிலக்கிழார்கள் உருவாக்கியவையே பதினெண் சித்தர்களின் மெய்யியல். 18 சித்தர்கள் பட்டியலிலுள்ள பெரும்பாலான பெயர்கள் தமிழகத்தின் அடிப்படை அறிவியல், வானியல், மருத்துவம் தொடர்பான மிகத் தொல்பழங்காலத்து அறிவியலாளர்களுடையவை. அப் பெயர்களுக்குத் தமிழக மக்களிடையிலிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அப் பெயர்களில் இவர்கள் பாடல்களை யாத்தனர். அவற்றின் அடிப்படை, ஆகம வழிபாட்டு முறையைக் கடிவதும் குண்டலினி எனும் குண்டிலினி ஓகத்தை உயர்த்திப் பிடிப்பதும். இவர்களது குறி, கோயில்களுக்காக நிலங்களைப் பிடுங்குவதைத் தடுத்து நிறுத்துவது; இன்னொன்று, குண்டியின் மீது அமர்ந்து மூக்கையோ கொப்புளையோ பார்த்திருப்பவன் கடவுளாவான், வேலை, அதாவது உடலுழைப்பின் மூலம் வினை செய்வோன் அவ் வினையின் பயனாக மீண்டும் மீண்டும் பிறந்து உழல்வான் என்று கூறி தன் கீழ் தன் நிலத்தில் பாடுபட்டு உழைத்துத் தனக்கு தவசங்களை வழங்கும் உழவனும் பிற பணியாளர்களும் மனைவியும் உட்பட அனைவரது தன்மதிப்பு உளவியலைத் தாக்குவதும் ஆகும்.

            கோயில் நிலங்களை அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப மக்கள் கைப்பற்றுவதும் மீண்டும் ஆட்சியாளர் பிடுங்கிக் கோயில்களுக்குக் கொடுப்பதுமாக மாறி மாறி நிகழ்ந்துள்ளது. மக்கள், குறிப்பாக குத்தகையாளர், உழுகுடியினர் ஆகியோர் கோயில் நிலங்களைக் கைப்பற்றுவதைத் தடுக்க இயலாத கையறு நிலையில் இருந்தது ஆட்சியாளர் - பார்ப்பனர்  கூட்டணி. இந்தக் கொடையை மீறுவோர் தங்கள் தாயைப் புணர்ந்தவர்களுக்குச் சமமானவர்கள் என்று கல்வெட்டுகளில் பொறிக்கும் அளவுக்கு கையறு நிலையில் அவர்கள் இருந்தனர். இன்று தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய முடிந்தால் கிட்டத்தட்ட அனைத்து நிலமுமே ஏதோவொரு காலத்தில் ஏதோவொரு கோயிலுக்கு யாரோ ஒருவரால் கொடையளிக்கப்பட்டதாக முடியும்.

            பள்ளு இலக்கியங்கள், உழுகுடிகளாகிய பள்ளர்களிடமிருந்து அவர்கள் கைப்பற்றிய கோயில் நிலங்களை மீட்பதற்கான ஒரு நுணுக்கமான செயல்முறையே ஆகும். மண்ணாங்கட்டி, சுடலை, பேயன் என்பது போன்ற பெயர்கள் தவிர வேறு தெய்வப் பெயர்களையோ நாகரிகமான பெயர்களையோ சூட்டிக்கொள்ளாமல் உன்னிப்பாகக் கண்காணித்துத் தாங்கள், ஒதுக்கி, ஒடுக்கி வைத்திருந்த பள்ளர்களுக்கு அவ் வூர் ஆகமக் கோயில் தெய்வத்தின் பெயரையும் அவன் முதல் மனைவி மூத்த பள்ளிக்கு கோயில் அம்மன் பெயரையும் சூட்டி பள்ளுப் பாடல்கள் இயற்றினர். கோயில் நிலங்களின் குத்தகையைக் கண்காணிக்கும் பண்ணாடி என்ற பள்ளர் தலைவனுக்கும் கோயில் ஆள்வினையாளருக்கும், பண்ணாடிக்கும் உழவர்களுக்கும் இருந்த முரண்பாடுகளைப் பயன்படுத்தி உழவர்கள் நேரடியாகவே தங்கள் கண்டுமுதலை கோயில் உட்பட எவ்வெவருக்கு இவ்விவ்வளவு என்று பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்று இனிக்க இனிக்கக் கூறுபவைதாம் பள்ளு இலக்கியங்கள். இந்தப் பங்கீட்டில் உழவனுக்குரிய பங்கு பொதுவாக இடம் பெறுவதில்லை. இதன் பின்னணியிலும் கோயில் நிலங்கள் உழவர்களின் கைப்பிடியில் சிக்கிக் கொண்ட தடயம் தெரிகிறது.

            20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோயில் சொத்துகளின் வருவாயைக் கோயில் பெருச்சாளிகள் கொள்ளையடிப்பதைக் கட்டுப்படுத்த இந்து அறநிலையத்துறையைச் சென்னை மாகாண அரசு உருவாக்கியது. இருப்பினும் சிறுகச் சிறுக, நாம் மேலே குறிப்பிட்டிருப்பது போல் கோயில்களிலும் மடங்களிலும் நடைபெறும் பஞ்சமா பாதகங்களைக் கண்டு மக்கள் கொதிப்பேறிய சூழலிலும் நயன்மைக் கட்சியின் தேவதாசி ஒழிப்புச் சட்டம், தன்மான இயக்கத்தின் இறைமறுப்பு - பார்ப்பன எதிர்ப்பு ஆகியவற்றின் பின்னணியிலும் கோயில் சொத்துக்கள் உழவர்களில் கைகளில் மீளத் தொடங்கியிருந்தன. தி.மு.க. ஆட்சிக்கு வந்து அதன் பெருமக்கள் கோயில் அறங்காவலர் குழுக்களில் நுழைந்து கோயில் சொத்துகளின் வருமானத்தில் கொள்ளையடிக்கத் திட்டம் போட்ட வரை இதுதான் நிலை.           

            கி.பி. 16ஆம் நூற்றாண்டில்  ஐரோப்பாவில், 1517இல் மார்ட்டின் லூதர் போப்பை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட 17 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்தின் எட்டாம் என்ரி  தன் நாட்டை போப்பின் மேலாளுமையிலிருந்து விடுவித்து ஆணையிட்டான்.

            எட்டாம் என்ரியை  ஒரு கீழ்த்தரமான பொறுக்கி என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். அவன் தன் முதல் மனைவியைக் கொன்றான். இரண்டாம் மனைவி பெயின் நாட்டு இளவரசி. அவளை மணவிலக்கு செய்துகொள்ள போப்பின் இசைவைக் கேட்டான். அவரோ பெயின் அரசனின் பராமரிப்பில் இருந்தார். எனவே மறுத்தார். உடனே அவன் அரசனான தானே இங்கிலாந்தின் தேவசபைக்கு தலைவன் என்று ஆணையிட்டான். மடங்கள் அனைத்தையும் கலைத்தான். மடங்களின் சொத்துக்களைத் புதிதாகத் தோன்றியிருந்த உயர்குடியினருடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தச் சொத்துகளை பெற்றுக் கொண்டோரிடமிருந்துதான் இங்கிலாந்தின் பொருளியல் புரட்சியாகிய முதலாளியம் அரும்பியது.

            இவை மட்டுமல்ல, அதுவரை இலத்தீனிலும் கிரேக்க மொழியிலும் இருந்த வழிபாட்டுப் பாடல்களை ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தான். யூத மறைநூலையும் ஆங்கிலத்தில் பெயர்த்தான். அதுவரை பூசகர்களுக்கு மட்டும் புரிந்த சமய இலக்கியங்கள் அடித்தளக் குடிமக்களுக்கும் புரியும் வாய்ப்பு உருவானது. சமயம் அனைத்து மக்களுக்கும் உரிமையாகி அங்கு மக்களியம் வேரூன்றியது.

            இதே எட்டாம் என்ரிதான் மார்ட்டின் லூதர் தன் முதல் அறிக்கையை வெளியிட்ட போது அதற்கு எதிர்மொழி கொடுத்த முதல் மனிதனாக நம்பிக்கையின் காப்பாளர் என்று போப்பிடம் விருது பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது.

            மாபெரும் புரட்சிகரமான வரலாற்று நிகழ்வுகள் மேன்மையான நோக்கங்களும் குறிக்கோள்களும் கொண்ட  மக்களின் புரட்சிகர நடவடிக்கைகளால் மட்டும் நடந்து விடுவதில்லை என்பதற்கு எட்டாம் என்ரியும் இங்கிலாந்து சமய வரலாறும் சான்றுகளாக நிற்கின்றன.

            தமிழகத்தில் நயன்மைக் கட்சி விதைத்தது ஒரு தேசிய விடுதலைப் புரட்சியின் விதையை. அதில் நிலக்கிழமை விசைகளில் புரட்சிகரமானவர்களுடன் வாணிக மூலதனத்தில் வளர்ச்சியடைந்து  தாங்கள் எதிர்கொண்டிருந்த கொடிய குமுக ஒடுக்குமுறையிலிருந்து விடுபடப் போராடிக் கொண்டிருந்த நாடார்களும், புன்செய் வேளாண்மையில் பிரிட்டனுக்கு வேண்டிய மூலப் பொருட்களை விளைத்து விற்று அதில் செல்வம் வளர்த்து அடுத்த கட்டத்தில் நுழையத் துடித்துக்கொண்டிருந்த நாயக்கர்கள் போன்ற தெலுங்கு பேசும் மக்களும் ஒடுக்குமுறையால் உளவியலில் ஒடிந்து போயிருந்த தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள் தன்மான இயக்கத்தின் பரப்பல்களினால் உளவியலில் வீறுகொண்டிருந்த நிலையில் குத்தகை நிலங்களாக அவர்கள் கைப்பற்றில் இருந்த கோயில் நிலங்களும் கிடைக்கும் நம்பிக்கை ஏற்பட்டதால் இவை இணைந்து மாபெரும் குமுக - அரசியல் - பொருளியல் புரட்சி நடக்கும் வாய்ப்பிருந்தது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமிழக வரலாற்றில் வாணிக முதல் பண்ட விளைப்பு மூலதனமாகக் கிடைத்த வாய்ப்பு சிலப்பதிகாரக் காலத்தில். அது புத்த, அம்மண ஒற்றர்களின் ஊடுருவலால் சிதைந்தது. பின்னர் வாணிகர்கள் இடங்கைச் சாதியினர் ஆக்கப்பட்டனர். கடல் மேல் செல்வோர் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கப்பட்டனர். மீண்டும் மீண்டும் கோயில் நிலங்கள் உழுகுடியினர் கைகளில் திரண்ட போது சிவனியம், மாலியம் போன்ற சமயத் தலைவர்கள் ஒடுக்கப்பட்ட அம் மக்களின் தாழ்வுணர்ச்சி உளவியலைப் பயன்படுத்தி அந் நிலங்களைப் பிடுங்கிக்கொண்டனர். ஆனால் 20ஆம் நூற்றாண்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வாணிகர்களையும் பண்டம் விளைப்போரையும் வேளாண்மை செய்வோரையும் மதித்துப் பட்டங்கள் வழங்கிய, உள்நாட்டு பிற்போக்கு விசைகளைத் தற்காலிகமாக முடக்கி வைத்திருந்த ஆங்கிலராட்சிக் காலத்தில், அவ்வாறு விடுதலை பெற்ற வகுப்புகள் தங்கள் வளர்ச்சிக்காகத் துடித்துக்கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் அவர்களுக்குப் பின்புலமாக குமுகத்தின் புரட்சிகர மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் ஓரணியில் திரண்டிருந்த, வரலாற்றில் மிக அரிதாகவே இயலத்தக்க ஒரு பொன்னான வாய்ப்பை வெறும் பணவெறிக்காக விற்றுத் தமிழகத்தின் நிகழ்காலம், வருங்காலம் அனைத்தையும் அழித்துப் பாழ்படுத்திய பெரியாரின் இரண்டகமும் அறிவழிந்த போக்கும் எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் மாபெரும் வரலாற்று அவலங்களாகும்.

            இந்த ஆகமக் கோயில்களால் அப்படி என்ன பெரும் கேடு என்று கேட்கலாம்.

            தொடக்க காலத்தில் கோயிலில் ஆறு வேளை பூசை செய்ய, தெய்வத்துக்குப் படைக்க நெய்வேதியம்(நெய் + வேது + இயம் = நெய்ச் சமையல்) செய்ய, அதற்கான அரிசி முதலாகிய பொருட்களை அவித்து உலர்த்திக் குத்தித் தீட்டிப் புடைத்து ஆயத்தம் செய்ய, தெய்வத்துக்கு பள்ளி எழுச்சி முதல் தூங்கவைத்தல்(சோபனம்) ஈறாகப் பதினாறு பணிவிடைகளையும் (சோடச உபசாரங்கள்) செய்ய மேளம் முழங்குவோர் முதல் தெரு(நகர்)வலத்துக்குத் தூக்கிச் செல்வோர், பூசகர், தேவரடியார் என்று தனி ஊழியர் படை என்று இவர்களுக்கெல்லாம் கோயிலில் மூன்று வேளையும் சாப்பாடு, பூசகர் முதல் தீவட்டிப் பிடிப்பவர் வரை அனைவருக்கும் நில மானியம், ஆண்டு முழுவதும் தெய்வத்துக்கு பால், பழம், நெய், பொங்கல், தயிர், சந்தனம் என்று கற்பனைக் கெட்டாத பொருட்களால் எல்லாம் முழுக்காட்டு (அபிசேகம்) என்று குமுக மீத்தச் செல்வம் மட்டுமல்ல, இருப்பில் இருக்கும் செல்வத்தையே அழிக்கும் ஒரு பெரும் என்புருக்கி நோய் ஆகும்  நம் ஆகமக் கோயில்கள்.                                   

            இடைக்காலத்தில், குலோத்துங்கனுக்கு முன்போ அல்லது அவன் காலத்திலோ, அதுவரை கருவறையின் மீது உயரமாகக் கட்டிக்கொண்டிருந்த விமானம் எனும் மேற்கட்டை (தஞ்சைப் பெருவுடையார் கோயில் கோபுரம் உண்மையில் ஒரு மேற்கட்டே) மட்டுப்படுத்தி நுழைவாயில் மாடக் கோபுரத்தை உயர்த்திக் கட்டத் தொடங்கினர். அவற்றின் மாடங்களிலிருந்து சுற்றிலுமுள்ள  நிலப்பரப்பைக் கண்காணிக்கலாம். எதிரிப் படைகள், உள்நாட்டு மக்களின் நகர்வுகளை நோட்டமிலாம்.

            இதைத் தொடர்ந்து கோயில்களின் செலவில் கோயில்களினுள் படைப் பிரிவுகளைப் பராமரித்தனர். அந்த வட்டார ஆள்வினையைக் கோயிலினுள் கொண்டுவந்தனர். உடல் குறை(ஊனம்) உள்ளவர்களை இசை போன்ற துறைகளில் பயிற்றுவித்துப் பயன்படுத்தினர்(இது இராசராசன் காலத்திலேயே தொடங்கிவிட்டது). வறுமைப்பட்ட பெண்கள் தங்களையும் தங்கள் பெண் மக்களையும் கோயில்களுக்கு விற்றுக்கொண்டு வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டனர். ஆனால் இதெல்லாம் கொஞ்ச நாட்கள்தாம். கோயில் மானியம் பெற்று வாழ்ந்து வந்த பல்வேறு பிரிவு மக்களின் பெண்கள் கோயில் ஆள்வினையில் பங்கேற்கும் அதிகாரம் படைத்த ஆண்களின் உடற்பசிக்குத் தீனி போட வேண்டியதாயிற்று. விழாக் காலங்களில் வெளியூர்களிலிருந்து வரும் குடும்பத்தினருக்கும் தனி மனிதர்களுக்கும் தங்க இடம் கொடுக்கும் வீட்டுப் பெண்கள் கூட அவ்வாறு தங்குவோரின் உடற்பசியைத் தீர்ப்போராக மாறுவதுண்டு. இவ்வாறு கோயில்களும் அவற்றின் சுற்றுப்புறங்களும் மாபெரும் பரத்தையர் சேரிகளாக வளர்ந்துநின்றன.

            கோயில்களில் அன்பர்கள் செலுத்தும் நகைக் காணிக்கைகள் பெருஞ் செல்வங்களாகத் திரள்வதுண்டு. அவற்றைக் கொள்ளையடிப்பதே முகம்மதிய அரசர் படையெடுப்புகளின் அடிப்படைக் காரணமாக இருந்ததை நாம் அறிவோம். இந்து அரசர்கள் இதற்கு விதிவிலக்கா? இன்று பூசகரும் அறங்காவலர்கள் குழுவும் என்று எத்தனையோ பேர் பெருச்சாளிகளாக இருந்து கோயில் நகைகளைக் களவாடுகிறார்கள். அதுபோல் அரசர்களும் அதிகாரிகளும் கையாண்டு, கையாடி இருக்கும் வாய்ப்புகள் நிறைய உண்டு. எனவே நம் அரசர்களின் படையெடுப்புகளின் நோக்கங்களில் தலையானது கோயில் செல்வங்களாக இருந்தன எனலாம். இப்படி இந்து அரசர்கள் ஒருவர் மாறி ஒருவர், ஒருவரை அகற்றி இன்னொருவர், ஒருவரை அழித்துவிட்டு இன்னொருவர் என்று யார் வந்தாலும் அவர்களுக்குப் பட்டாடை விரித்துப் பரிவட்டம் கட்டி தங்கள் நிலையைத் தக்க வைத்துக்கொண்ட, இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன என்று வாழ்நிலை அமைந்துவிட்ட கோயில் ஊழியர் படை நாட்டின் மக்கள் தொகையில் கணிசமானவர்களாகிவிட்ட நிலை எந்த அரசனின் படையெடுப்புக்கும் மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு உருவாகாமலிருந்த காரணங்களில் ஒன்றாயிருக்கலாம். உழைத்து உருக்குலைந்த மக்களைப் பொறுத்த வரையிலும் கூட எவர் வந்தாலும் அவர்களது வாழ்வு மேம்படப் போவதில்லை என்ற அளவில் அவர்களும் எதுவும் செய்யத் தோன்றாமல் இருந்துவிட்டனர். அதாவது, ஆகமக் கோயில்கள் என்ற கட்டமைப்பு வெளிப்படையெடுப்பாளர்களுக்குப் பல வகைகளில் தூண்டுதலாக இருந்தது என்று கூடக் கூறலாம். இன்றும், அறங்காவலர் குழுக்களைக் கலைத்துவிட்டுக் கோயில்களை சமயச் சான்றோர்கள் பொறுப்பில் விட வேண்டும் என்ற இந்து சமய இயக்கங்களின் முழக்கம் கூட கொள்ளை அடிக்கும் ஒரு போட்டிக் குரலே அன்றி வேறில்லை. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழலை உசாவ பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்ற முழக்கத்தில் ஆளும் கூட்டணியினர் சுருட்டிய மொத்த ஊழல் பணத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று பாராளுமன்றக் கட்சியினரின் அவா மறைந்திருப்பதைப் போல் (கொஞ்ச நஞ்சம் பணமா? அப்பப்பா!).

            ஆக, இப்படிப்பட்ட, இந்த ஆகமக் கோயில்களை அழிக்க வரலாற்றில் அரிதாகக் கிடைத்த ஒரு வாய்ப்பைப் பணவெறி பிடித்த பெரியார் விற்றுக் காசாக்கிய கொடுமையைச் சொல்லிச் சொல்லிப் புலம்புவது தவிர இப்போதைக்கு வேறொன்றும் செய்ய இயலவில்லை.


[1] கொடுங்கோளூர் கண்ணகி, முனைவர் வி.ஆர். சந்திரன், தமிழில் ஜெயமோகன், யுனைட்டெடு ரைட்டர்சு, சென்னை-14, 2005,    பக்.37
[2] சிலப்பதிகாரம் கால்கோட் காதையில் வடதிசை நோக்கி சேரன் செங்குட்டுவன் புறப்படும் முன் அரண்மனையில் சிவனை வழிபடுகிறான். ஆடக மாடம் (திருவனந்தபுரம்?) எனும் பதியில் உள்ள திருமால் கோயிலிலிருந்து வரும் பூசைப் பொருட்களையும் ஏற்றுக்கொள்கிறான். 
[3] நந்திவர்மன் தன் மீது பாடப்பட்ட நந்திக் கலம்பகத்தைக் கேட்டுக்கொண்டிருந்த போது நிகழ்ச்சி நடந்த பந்தல் தீப்பிடித்துச் செத்தான் என்பது மரபுச் செய்தி.

0 மறுமொழிகள்: