13.12.15

சாதி வரலாற்றுக்கு ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 1


சாதி வரலாற்றுக்கு ஒரு பதம்
நாடார்களின் வரலாறு
குமரிமைந்தன்
மனந்திறந்து....
இந் நூலின் தலைப்பைப் படித்ததும் என்னைப் பற்றி அறிந்தவர்களிலும் என் மீது நம்பிக்கையும் நன்மதிப்பும் கொண்டவர்களிலும் சிலராவது குமரிமைந்தனும் சொந்தச் சாதி வரலாறு எழுத முனைந்து விட்டாரே என்று மனத்தளர்ச்சியும் அதிர்ச்சியும் வருத்தமும் அடையக் கூடும். அவர்களுக்குச் சில விளக்கங்களைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

            அறிமுகம் பகுதியில் இந் நூலை எழுத உடனடிக் காரணமாக இருந்தது இளந்தோட்டம் சுகுமாரனின் கட்டுரைதான் என்று கூறியுள்ளேன். ஆனால் அதற்கு நெடுநாட்கள் முன்பிருந்தே சாதி வரலாறுகளின் போலிமையையும் முரண்பாடுகளையும் மறுத்து ஒரு கருத்துப் போராட்டம் தொடங்க வேண்டும் என்ற வேட்கை என்னுள் இருந்துவந்தது. அதிலும் குறிப்பாக, அண்மைக் காலத்தில் பர்.திரு. குருசாமிச் சித்தரும் வேறு சிலரும் சேர்ந்து மள்ளர் மலர் என்ற மாதிகையி‌‌ன் பின்னணியில் மேற்கொண்டுவரும் முயற்சிகள் என் இந்த வேட்கையை மிகுத்தன. இ‌ந்த முயற்சிகளைத் தொடங்கி வைத்தவர், நானறிந்தவரை பேரா.பெ.தங்கராசு அவர்கள். பள்ளர்கள் என்று பொதுவாக அறியப்பட்டிருக்கும் தங்கள் சாதியினரைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது தங்களுக்‌கு இழைக்கப்பட்ட பெரும் இரண்டகம் என்றார் அவர். அரிசனங்கள், ஆதிதிராவிடர், ஆதித் தமிழர், தாழ்த்தப்பட்டோர், பட்டியல் சாதியினர் என்று பலவாறாக அழைக்கப்படும் தொகுப்பினுள் தங்களை இணைத்து அதற்கென்று ஒரு குறிப்பிட்ட நூற்றுமேனி கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் ஒதுக்கீடு செய்ததால் தங்களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை; அந்தப் பங்கைப் பறையர்கள் பறித்துக்கொண்டனர்; எனவே தங்களை அந்தப் பட்டியலிலிருந்து விடுவித்து ‌பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகப் ‌பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சே‌‌ர்க்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. ஆனால் இவர் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகப் பிற்படுத்தபபட்டோர் பட்டியலின் கீழ் வருபவர்களுக்கு ஏதோ கல்வியிலும் பணிகளிலும் வாய்ப்புகள் பொங்கி வழிந்து வீணாகிக் கொண்டிருக்கிறது என்று எவரும் கருதமாட்டார். இருக்கும் வாய்ப்புகளைப் பங்கிடுவதிலேயே அங்கு பெரும் சண்டை. முக்குலத்தோர், வன்னியர், வன்‌னியக் கவுண்டர் என்று முறையே தென், வட, மேற்குத் தமிழகப் பகுதிகளில் செறிந்து வாழும் மூன்று போர்ச்சாதிக் குழுக்களும் ஒதுக்கீட்டின் பங்கீட்டுக்காக ஒரு பனிப்போரில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பனிப்போரின் தீர்வாகச் சில ஆண்டுகளுக்கு முன்பாக வைக்கப்பட்டதுதான் தமிழகத்தைப் பாண்டிய, தொண்டை, கொங்கு என்ற மூன்று மண்டலங்களாகப் பிரிக்கும் திட்டம். பெரியார் சாதி ஒழிப்புப் புரட்சியாளர் என்றும் அவரது சிந்தனைகளைச் சரியாக உள்வாங்கிக் கொண்ட ஒரே மனிதன் தானேயென்றும் ன்பட்டம்அடித்துக்கொள்ளும் பெரியவர் ஆனைமுத்துவின் உலைக் களத்தில்உரு‌‌வானவர்களின் கைவேலைதான் இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தின் விளக்கமாக அவர்கள் கூறுவது, ‌பிற்படுத்தப்பட்டவர் அல்லது மிகப் பிற்படுத்தப்பட்டவர் என்ற விரிவான பட்டியலின் அடிப்படையில் மிகுந்த பயனை அடைந்தவர்கள் தென் மண்டலத்தில் செறிந்து வாழும் முக்குலத்‌தோரே; பிற இரு போர்ச்சாதிக் குழுக்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதாகும். மார்க்சையும் பெரியாரையும் பின்பற்றுவதாகப் பொருட்படும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியை நடத்தும் புரட்சியாளர்பெரியவரின் உள்ளக்கிடக்கை, பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் தன் சாதிக் குழுவினரான வன்னியர்களுக்கு உள் ஒதுக்கிடு வேண்டும் என்பதுதான். இதை மனதில் மறைத்து வைத்துக்கொண்டே தான் மண்டல் ஆணைய நிறைவேற்றத்துக்காக இந்திய அளவில் பாடுபடுபவன் என்ற படிமத்தை உருவாக்க முயன்று வருகிறார். இங்கும் அவரது இறுதி நோக்கம் அனைத்திந்திய அளவிலான ஒதுக்கீட்டிலும் தன் சாதியினருக்கு உ‌‌‌‌‌‌‌ரிய உள் ஒதுக்கீடு வேண்டும் என்பதுதான். இவ்வாறு இவரது படை‌‌‌‌‌‌‌‌‌யினர் தங்கள் திட்ட அடிப்படையில் தமிழகத்தை மூன்றாகப் பிரித்து அவற்றுக்குத் தனித்தனி மண்டலப் பெயர்களும் வண்ணங்களும் கொடுத்து வரைபடம் ஒன்றையும் வெளியிட்டனர்.

            இவ்வாறு தமிழகத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டுமென்பவர்களுக்கு இன்னோர் உள் நோக்கமும் உள்ளது. இம் மூன்று மண்டலங்களிலும் செறிந்து வாழும் தாழ்த்தப்பட்டோர் முறையே பள்ளர், பறையர், சக்கிலியர் ஆவர். ஒன்றாக இருக்கும் தமிழகத்தில் அவர்கள் ஒரே குழுவாகச் செயற்பட்டால், தாங்கள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்திருந்தால் தாழ்த்தப்பட்டோரால் தாம் முறியடிக்கப்பட்டுவிடுவோம் என்பதால், த‌மிழகத்தை மூன்றாக உடைத்துவிட்டால் இந்த இடையூறு அகன்றுவிடும் என்பது. இவர்களின் இந்தச் சிந்தனை ஓட்டத்துக்கு இணை‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாகவும் துணையாகவும் இருப்பது இன்றைய பள்ளர்(மள்ளர்?) தலைவர்களின் நிலைப்பாடாகும்.

            மக்களால் பரவலாக அறியப்படாத மூன்று தமிழகக் கோட்பாட்டை மனதில் மறைத்து வைத்துத்தான் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மரு..இராமதாசு இப்போது இரு தமிழகக் கோட்பாட்டை முன்வைத்துள்ளார். ஆனால் அவரது நோக்கம் மூன்று த‌மிழகக் கோட்பாடுதான் என்பது, அண்மையில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிகளில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவரான மரு. சேதுராமனையும் கொங்கு வேளாளர் பேரவைத் தலைவர் பாலசுப்‌பிரமணியத்தையும் தன்னோடு துணை சேர்த்துக் கொண்டதன் மூலம் வெளிப்படுகிறது.

            இந்தியப் பாராளுமன்ற மக்களாட்சி அமைப்பில் எவ்வளவு இழிவான தனிமங்கள் கட்சித் தலைமைகளாக முடியும் என்பதற்கு மரு.இராமதாசுக்கு இணையான ஓர் எடுத்துக்காட்டை நாம் காண முடியாது. வெட்கமோ கூச்சமோ அற்ற அணிச் சேர்க்கைகள், தட்டிக்குள்ளும் கோலத்துக்குள்ளும் வளைந்து நெளிந்து இலக்கை நோக்கி நடைபோடும் நரிக்குணம் ஆகியவற்றைக் கையாண்டு அரசியல் செல்வாக்கும் செல்வச் செழிப்பும் பெற்றுவிட்ட அவர், இன்று தனக்கோ தன் குடும்ப உறுப்பினர்களுக்கோ தொண்டை மண்டலத்திலாவது ஒரு முதலமைச்சர் பதவியைப் பெறத் ‌‌திட்டமிட்டுச் செயற்படுகிறார். இவருக்கு இணையாக மள்ளர் என்றும் தேவேந்திரகுல வேளாளர் என்றும் தேவேந்திரர்கள் என்றும் தம்மை அழைத்துக் கொள்ள விரும்பும் பர்.குருசாமிச் சித்தர் போன்ற பே‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ரா.பெ.தங்கராசுவின் வழித்தோன்றல்கள், பட்டியல் சாதிகளில் சேர்க்கப்பட்டதால் இட ஒதுக்கீட்டில் தமக்குரிய இடத்தைப் பறிகொடுத்ததாகக் குற்றஞ்சாட்டுவதுடன் மாட்டிறைச்சி உண்போ‌‌‌ரான பறையர்களுடன் தங்களை ஒரே பட்டியலில் இணைத்தது தங்களை இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டது; எனவே தங்களை மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். இட ஒதுக்கிட்டில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலுள்ளதை விடக் குறைந்த வாய்ப்புள்ள மிகப் ‌பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முன்வைக்கும் வேண்டுகை, த‌மிழகத்தில் ஒருபுறம் தாம் ஆண்ட மரபினர் என்று கூறிக்கொண்டே தங்களை முடிந்தவரை மிகத் தா‌ழ்ந்த சாதியாக அறிவிக்க வேண்டுமென்று அனைத்துச் சாதியினரும் போராடி வரும் சூழலில் மேலோட்டமாகப் பார்க்கும் போது முற்போக்கானதாவும் புரட்சிகரமானதாகவும் தோன்றக்கூடும். அதிலும் பொருளியல் வளர்ச்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சியின் பின்னணியில் போராடி அதுவரை தாம் அடைந்து வந்த இ‌ழிவுகளை எதிர்த்து நின்று வெற்றி வாகை சூடி தமிழகப் பொருளியல் விசைகளில் குறிப்‌பிடத்தக்க இடத்தைப் பிடித்த நாடார்கள் தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து முற்பட்டோர் பட்டியலுக்கு மாற்றுமாறு கேட்டு, திராவிடர் இயக்கம் தமிழகத்தில் புகுத்திவிட்ட ‘பிற்படுத்தப்பட்டோர் மனநோய்க்கு முடிவுகட்ட வேண்டிய தங்கள் வரலாற்றுக் கடமையை உணராமல் தங்களை மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று மாநாடு கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி தன்மானமும் தன்னம்பிக்கையும் கொண்டு தங்களை மேம்படுத்திய தம் முன் தலைமுறையினருக்கு மாறா இழுக்கையும் இழிவையும் ஏற்படுத்தியதோடு ஒப்பிடும் போது இவ்வாறு தோன்றக் கூடும். ஆனால் இத்தகைய ஒரு வேண்டுகைக்குப் பள்ளர் தலைவர்கள் கூறும் காரணம்தான் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. மாட்டிறைச்சியை உண்ணும் இழிகுலத்தோ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ரான பறையர்களோடு தங்களையும் ஒரே பட்டியலில் வைத்‌‌திருப்பது தங்களுக்கு ழுக்காகும் என்பதுதான் அந்தக் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காரணம். நாடார்கள் தங்கள் எழுத்தறிவை வளர்த்துக் கொள்வதற்காகத் தாங்களே பள்ளிகளை அமைத்த போது அந்தந்தப் பகுதி தாழ்த்தப்பட்ட சிறுவர்களையும் கட்டாயம் அவற்றில் சேர்க்கும் நடைமுறையைக் கையாண்டனர். அன்றாட நடவடிக்கைகளில் ஏற்றத்தாழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கோட்பாட்டளவில் அல்லது வெளிப்படையாகத் தாழ்த்தப்பட்ட மக்களை அவர்கள் இ‌ழிவாகப் பேசியதில்லை. அவர்களோடு ஒப்பிடும் போது பள்ளர் தலைவர்களின் இச் செயல் மிக இழிவானதாகும். தமிழர்களின் தேசியப் பண்பாட்டின்‌‌திட்டவட்டமான ஓர் எடுத்துக்காட்டுமாகும். உலகில் மிக உயர்வானது என்று தமிழார்வலர்கள், அல்லது தமிழ்த் தேசியத் தலைவர்கள் எனப்படுவோர் கூறும் தமிழ்ப் பண்பாடு என்பது சாதியப் பண்பாடே என்பதற்கு இது மறுக்க முடியாத சான்றாகும். சாதியம் அல்லது பார்ப்பனியம் என்பது தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளின் ஒட்டுமொத்த தொகுப்பே என்ற எம் இயக்கத்தின் நிலைப்பாட்டின் மெய்ப்பும் பள்ளர் தலைவர்களின் இச் செய‌‌லில் வெளிப்படுகிறது. (சாதியத்தின் பண்பாட்டு அடிப்படையை மிகச் சுருக்கமாக சாதிகள் ஒழிய... என்ற எம் நூலில் கூறியுள்ளோம்). மாட்டிறைச்சி உண்ணும் ஐரோப்பியர், அரேபியர் உட்பட அனைத்து அயலவர்களையும் முகம்மதியர், கி‌‌‌‌‌றித்துவர் போன்ற அனைத்து அயல் மதத்தினரையும் வாழ்த்தி வணங்கித் தலைமேல் தாங்கி அடிமை செய்யத் தயங்காத நாம் மாட்டிறைச்சியை உண்கிறார்கள் என்பதால் மட்டும் நம் தாய் மதத்தைச் சேர்ந்த பறையர், புலையர், சக்கி‌‌லியர்களைத் தாழ்த்திப் பேசுவது ஏன் என்ற கேள்விக்கும் விடை காண வேண்டியவர்களாக உள்ளோம். உணவின் அடிப்படையில் மக்களிடையில் உயர்வு தாழ்வைக் கடைப்பிடிக்கும் தமிழ்ப் பண்பாட்டை உடைப்பதற்காகவும் நம் நாட்டில் உருவாகி நம் மக்களுக்குக் கட்டாயம் தேவைப்படுகின்ற மாட்டிறைச்சி அயலவர்களுக்கு இன்றியமையா விலங்குப் புரதத்தை வழங்குவதற்காக ஏற்றுமதியாவதைத் தடுப்பதற்காகவும் அதனைத் தமிழர்களின் தே‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிய உணவாக அறிவித்துள்ளது எமது இயக்கமான தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம்.

            பார்ப்பானுக்கு மூத்தவன் பறையன்” என்றொரு சொலவடை தமிழகத்தில் உண்டு. இதன் பொருள் என்ன? இதற்கு மனித நாகரிக வளர்ச்சியைத் தமிழர்களின் வரலாற்றோடு பொருத்திப் பார்ப்பது இன்றியமையாதது. வேட்டையாடியும் காய்கனிகளை உண்டும் வாழ்ந்த தொடக்ககால மனிதன் தனக்கு நிலையான உணவு வழங்கலுக்காகக் கால்நடைகளை வளர்த்து அவற்றின் இறைச்சியை உண்டுவந்தான். தொழில்நுட்ப வளர்ச்சியால் வேளாண்மை, போக்குவரத்து, பால் பொருள் தொடர்பான தொழில் ஆகியவற்றுக்காகக் கால்நடைகளின் தேவை உருவாயிற்று. காட்டு விலங்குகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகத் தொடக்க கால மனிதன் அணைந்து போகாமல் பேணிய தீ அவனுக்குத் தெய்வமாக இருந்தது. தீயைப் பேணியோர் பூசாரியராயினர். அத் தெய்வத்துக்குப் படையலாகத் தங்கள் உணவுக்காக வளர்த்த கால்நடைகளையே நெருப்பிலிட்டனர். அது பகுத்தறிவு எல்லையை மீறி ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கால்நடைகளைக் காவு கொடுக்கும் காட்டு விலங்காண்டி நிலைக்கு இட்டுச்சென்றது. இதை எதிர்த்து மக்கள் முனைப்பான போராட்டங்களை நடத்தி வேள்விகள் எனும் அந்த குமுகப் பகை நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். பின்னர் குதிரைகளைக் காவு கொடுக்கும் அரசர்களின் சடங்குகளாகவும் நெய்பெய்து நடத்தப்படும் பொது ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிகழ்வுகளாகவும் அவை புது உருவெடுத்தன. இவ்வாறு மக்களின் எ‌‌திர்ப்பால் முடிவுக்கு வந்த மாட்டுக் கொலையைப் பூசாரிகளில் பெரும்பாலோர் கைவிட்டு நாளடைவில் புத்தம், அம்மணம் போன்ற சமயங்களால் பல்வேறு படிநிலைகளில் மாட்டிறைச்சி உண்ணாமை, புலாலுண்ணாமை என்ற பல்வேறு வடிவங்களை எய்தியது. இந்த ‌‌‌மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து நின்ற பழைய பூசாரி மரபினர் மக்களால் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதன் விளைவே பறையர்களின் இன்றைய நிலைக்குக் காரணமாக இருக்க வேண்டும். இதன் வெளிப்பாடே இந்தச் சொலவடை. (மாட்டு வேள்வி பற்றிய நம் இந்த அணுகலுக்கு மறைகள் எனப்படும் வேதங்கள், நம் தொன்மங்கள், யூதர்களின் மறைநூலாகிய விவிலியம் ஆகியவற்றில் சான்றுகளை அல்லது தடயங்களைக் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காண முடியும்).

            நடைமுறைகளுக்கும் பேணப்படும் மதிப்பீடுகளுக்கும் மிகப் பெரிய இடைவெளியைக் கொண்டது தமிழர்களின் மனநிலை. மாட்டிறைச்சி வேண்டுமா, ஆட்டிறைச்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சி வேண்டுமா என்று ‌‌‌வெ‌ளிப்படையாகக் கேட்டுப் பரிமாறுவது கேரள உணவு விடுதிகளில் வழக்கம். ஆனால் மாட்டிறைச்சி என்று தெரிந்தும் அதை ஆட்டிறைச்சி என்று பொய் சொல்லி விற்கும் கசாப்புக் கடையில் அதற்கு உரியதை விட இரண்டு மூன்று மடங்கு விலை கொடுத்து ‌‌வாங்கி உண்டு மகிழ்பவன் தமிழன். இந்தப் பொய்ம்மை வாழ்‌க்கையின் அடிப்படையில் உருவானதே குருசாமிச் சித்தர் வகையறாக்களின் பறையர் எதிர்ப்பு. அது மட்டுமல்ல, தனக்குக் கீழே, தான் ஆ‌‌திக்கம் செலுத்துவதற்கு ஒரு சா‌‌தியாவது வேண்டும் என்பதற்காகவே எல்லோருக்கும் மேலே பார்ப்பனர்களை வைத்துப் போற்றுவதும் தமிழ்ப் பண்பாடு. இரண்டு நூற்றுமேனிப் பார்ப்பனர்கள் 98 நூற்றுமேனியர் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று புலம்புகிற அல்லது கொதித்தெழுகிற, ‘முற்போக்கு, ‘பகுத்தறிவிய பெரியவர்கள் புரிந்துகொள்ள மறுக்கும் உண்மை இது.

            பள்ளர்களே தமிழகத்தின் ஆண்ட மரபினர் என்று பிற சாதியினரைப் போலவே உரிமை கொண்டாடும் தலைவர்கள் தங்களுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் இருப்பது ஏன் என்பதை விளக்க வேண்டும் (நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது). தேவேந்திரகுல வேளாளர், குடும்பர், பண்ணாடி, மூப்பன் என்றுள்ள எண்ணற்ற பட்டப் பெயர்களுக்கான ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விளக்கங்களையும் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டப்பெயர்கள் தோன்றிய காரணங்களையும் அவர்கள் தர வேண்டும். மள்ளர் மலர் இதழில் ‌‌‌வெ‌ளிவந்த ஒரு பாடல் அல்லது கல்வெட்டு வரியில் தேவேந்திரன், சான்றோன், தேவன் என்ற சொற்கள் வருகின்றன. அதை வைத்துக்கொண்டு அப் பெயருக்கு உரியவன் தங்கள் சாதியினன்தான் என்று அவர்கள் வாதிடுகின்றனர். சாணானும் மறவனும் அதே வரிக்கு உரிமை கொண்டாடலாம் அல்லவா?.

            சாணார் என்பதற்குச் சான்றோன் என்று பொருள் கூறும் நாடார்கள் அந்தப் பெயரைக் குறிப்பிட்டால் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கோனார் என்றால் அரசன் எனும் பொருள்படும் கோன் என்ற சொல்லிலிருந்து தோன்றியது என்று கூறிப் பெருமைப்படும் ஆயர் குல மக்கள் அப் பட்டத்தைக் குறிப்பிட விரும்பவில்லை. அதே போல் பள்ளர்களில் பொருளியல், குமுகியல், ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலைகளில் மேன்மையடைந்தோர் தங்கள் கடந்த கால இழிநிலையை நினைவுபடுத்தும் பள்ளர் என்ற பட்டப் பெயருக்கு மாற்றாக புதிய பெயர் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது இயற்கைதான். அதே நேரத்தில் அவ்வாறு மேன்மையடையாமல் பின்தங்கிவிட்டவர்களின் மேம்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? அதற்கு என்ன திட்டம் வைத்துள்ளனர்? இது பற்றி நாம் மடல் மூலம் எழுப்பிய கேள்விகளுக்கும் முன்வைத்த திட்டங்களுக்கும் பர்.குருசாமிச் சித்தரிட‌மிருந்து எந்த மறுமொழியும் இன்று வரை இல்லை.

            நாடார்களாகிவிட்டனர் தென் தமிழகச் சாணார்கள். ஆனால் அதற்கு வடக்கில் சாணார்கள் இன்றும் சேரிகளில் ஒதுக்கப்பட்டு ஒடுக்கலுக்குள்ளாகின்றனர். அது போலவே பெயர் மாற்றம் பெற்ற பிற சாதிகளும் ஒதுக்கீட்டுக்கான சாதிகளின் பட்டியலும் இதைத் தெளிவாக உணர்த்துகின்றன. மேலேயுள்ள சாதிகளின் ஆதிக்கத்தை எ‌‌திர்த்துக் கீழேயுள்ள சாதிகளை இணைத்துப் போராடிய சென்ற தலைமுறையினரைத் தொடர்ந்து வந்துள்ள இன்றைய தலைமுறையினர் நேற்றுவரை தம் முன் கைகட்டி, துண்டைக் கட்கத்தில் இடுக்கி வாய்பொத்தி நின்றவர்கள் இன்று சமமாக உட்கார வருகிறார்களே என்ற கொதிப்பில் அடிபட்டுக் கிடந்த சாதியம், வருணம், இந்து சமய சனாதன தர்மம் என்ற மூன்று தலை நச்சரவத்தை உயிர்ப்பித்து உலாவ விட்டுள்ளனர். இதற்கு உடந்தையாக நேர்முகமாகவும் மறைமுகமாகவும் எதிர்மறையாகவும் பல கோணங்களில் உதவுவோர் இன்று 50 முதல் 70 வரை அகவையுள்ள பார்ப்பனரல்லாச் சாதியைச் சேர்ந்த படித்த கூட்டம். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தம் வாழ்வின் காலத்தையும் ஆற்றலையும் கருத்தையும் செல்வத்தையும் தேய்த்துத் தேய்த்து ஒரு புதிய அறிவுத் தேடல் ஊழியைத் தொடங்கி வைத்தனர் பெரும்பான்மைப் பார்ப்பனர்களையும் வெள்ளாளர்களையும் அவர்களோடு அயோத்தி தாசப் பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர் போன்ற அடித்தளத் சாதிகளைச் சேர்ந்தவர்களையும் கொண்ட ஓர் அறிஞர் கூட்டத்தினர். அவர்களின் இந்த உழைப்‌பின் பயனை நுகர்ந்த மேலே குறிப்பிட்ட அகவையினர் அதனைத் தமக்கும் தம் குடும்பத்துக்கும் மட்டும் பயன்படுமாறு குறுக்கிவிட்டனர். மக்களைத் திசைதிருப்புவதற்காகத் தங்கள் சாதியினர்க்குத் தம்மிலும் உயர்ந்த மற்றும் தாழ்ந்த குமுக நிலை உள்ளவர்கள் மீது ஒருபுறம் பகைமையை வளர்த்துவிட்டதுடன் அனைத்துக்கும் பார்ப்பனரின் சூழ்ச்சிதான் காரணம் என்கின்றனர். உழைத்துப் பிழைக்கும் தத்தம் சாதி மக்கள் தமக்குள் கொலை வெறி மோதல்களில் ஈடுபட்டுத் தம் குருதியையும் இன்னுயிர்களையும் இழக்கும் போது இவர்கள் அதில் மிதந்து நின்று நாங்கள் ஆண்ட மர‌பினர், மூவேந்தர் மரபினர் என்று கொக்கரிக்கின்றனர். பணம் கிடைத்தால் போதும், மேடை கிடைத்தால் போதும் என்று காத்துக்கிடக்கும் கூலி, போலி அறிவாளிகள் மேடையேறி அவர்கள் போடும் தாளத்துக்கு ஆட்டம் போடுகின்றனர். நாளை காலம் மாறும், களம் மாறும், காட்சி மாறும். இன்று தன்னலத்துக்காக மோதிக்கொண்டிருக்கும் மேலடுக்கினர் தமக்குள் இணக்கம் கண்டு உடன்பாடு கொள்வர். இவர்கள் ஒன்றுசேர்ந்து, தமக்காகத் தமக்குள் மோதி அழிந்த மக்களை உங்கள் பழைய இடங்களுக்குச் செல்லுங்கள் நாங்கள் நாடார்கள், நீங்கள் சாணர்கள், நாங்கள் தேவேந்திரர்கள் நீங்கள் பள்ளர்கள் நாங்கள் செல்லும் கோவில்க‌ளினுள் நீங்கள் நுழையக் கூடாது” என்று சொல்லப் போகிறார்கள்.

            நாம் கூறும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள மிகப் பெரும்பாலோரும் மறுக்கின்றனர் அல்லது தயங்குகின்றனர். நமக்குப் பகரம் நம் கடந்த கால வரலாறு அவர்களுக்கு ஆணித்தரமாக உச்சியிலடித்து விடை கூறுகிறது. இருபதாம் நூற்றாண்டில் பெரியார் சாதியொழிப்பில் பெரும் புரட்சி நடத்தியதாகப் பலர் கூறித் திரிகின்றனர். ஆனால் 12ஆம் நூற்றாண்டில் மாலியப் பார்ப்பனராகப் பிறந்த இராமானுசர் நிகழ்த்திய உண்மையான புரட்சியின் கால் தூசுக்குக் கூடப் பெரியாரின் புரட்சிஈடாகாது.

            மாலியத்தை வளர்ப்பதே இராமானுச‌‌‌‌‌‌‌ரின் நோக்கம். அதற்காக அச் சமயத்தை அடித்தள மக்கள் சார்ந்ததாக மாற்றியமைக்க அவர் முனைந்தார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த கல்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வியை வழங்கியதுடன் பார்ப்பனர் தவிர்த்தோருக்கு மறுக்கப்பட்டிருந்த வேத, சம‌‌‌‌‌‌‌‌‌‌ற்கிருத மொழிகளையும் கற்பித்தார். அவர்களுக்குப் பூணூல் அணி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வித்தார். தமிழ் வேதங்கள் எனப்படும் திவ்விய பிரபந்தங்களை ஓத அவர்களுக்குக் கற்பித்தார். அவர்களைத் திருமால் கோயில் போற்றிகள்(அர்ச்சர்கள்) ஆக்கினார். அன்று அரசனால் ஆதரிக்கப்பட்ட சிவனியக் கோயில்களின் கருவறைகளுக்குள் நுழையத் தடைசெய்யப்பட்டிருந்த மக்கள் மொழியான தமிழில் அமைந்திருந்த பாசுரங்களை மாலியக் கோயிற் கருவறைக்குள் கொண்டுசேர்த்தார். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பார்ப்பனரான எட்டயபுரம் சுப்பிரமணிய பாரதி ஒரேயொரு பறைச் சிறுவனுக்கு வேதம் ஓதுவித்துப் பூணூல் அணிவித்து வீட்டோடு வைத்துக் கொண்டதற்கு மேல் எதுவும் செய்ய இயலாமல் மனம் நொந்து,
            நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
            சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்விடும் அறிவுடன் படைத்துவிட்டாய்
 என்று புலம்பினார். இறுதியில் மதம் பிடித்திருந்தது தெரிந்தும் யானை முன் சென்று தன் இறுதியைத் தேடிக்கொண்டார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில இருந்த தோல்வியை எ‌‌திர்கொள்ள முடியாமல் மாய்ந்த பாரதியுடன் ஒப்பிடுகையில் 12ஆம் நூற்றாண்டில் வா‌ழ்ந்து அரசனின் ஆதிக்கத்துக்கு அறைகூவலாய் விளங்கியதால் நாடு கடத்தப்பட்டு தலைக்காவிரி தொடங்கி அதன் கழிமுகம் வரை கால் நடையாய் நடந்து தன் கொள்கையிலும் குறிக்கோளிலும் உறுதியாயிருந்து வெற்‌‌‌‌‌றிபெற்ற இராமானுசரின் முயற்சி எத்துணை மடங்கு உயர்ந்தது[1]! நெடுநாள் வாழ்ந்திருந்து தமிழக வரலாறே நம்ப முடியாத அருஞ்செயல்களை நிகழ்த்துவதற்காக அரசனின் சீற்றத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்ற இராமனுசருடன் அவரைப் போல் நீண்ட நாள் வாழ்ந்து 125 கோடி உரூபாய்களை (கி.வீரமணி கூறியது) ஈட்டி வைத்துவிட்டுப் போன பெரியாரை ஒப்பிடுவதே வரலாற்றை இ‌ழிவு படுத்துவதாகும்.

            பெரியாரின் புரட்சியின் விளைவுகள் அவர் மறைந்து ஓரிரண்‌டு ஆண்டுகளிலேயே ‌‌‌வெ‌ளிப்படத் தொடங்கிவிட்டன. தி..வினரின் நிகழ்ச்சிகளில் இரா.சே..(ஆர்.எசு.எசு.)வினர் கலகம் செய்யத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு அஞ்சி நிகழ்ச்சிகளை நிறுத்த வேண்டிய நிலை உருவானது. அது ‌‌‌வெ‌ளி உலகுக்குத் தெரியாமலிருப்பதற்காக மானமிகு‌‌திரு.கி.வீரமணி நடிகர் சோவைச் சந்தித்து இணக்கம் காண வேண்டியிருந்தது. காந்தி, அண்ணாத்துரை, பெரியார் ஆகியோர் சரியான நேரத்தில் இறந்ததால் அவர்களது பொய்ப் படிமங்கள் இன்று வரை நிலைத்து நிற்கின்றன.

            அப்படிப்பட்ட இராமானுசர் நடத்திய புரட்சி 5 நூற்றாண்டுகள் சென்ற பின் பதியப்பட்டுள்ள தமிழக வரலாற்றில் எந்தெந்த தாழ்ந்த சாதிக‌ளில் இருந்து இராமானுசரால் பார்ப்பனர்களாக்கப்பட்டனரோ அந்தப் பார்ப்பனர்களே அந்தந்த சாதிகளில் உள்ள மக்கள் அனைவரையும் தாங்கள் பூசாரிகளாய் இருந்த கோயில்களினுள்ளேயே நுழையத் தடை விதித்திருந்ததைக் கண்டோம். அவர்களை மீண்டும் கோயில்களினுள் நுழைய வைக்க ஒரு பார்ப்பனர் முயன்றதில் பார்ப்பனர், வெள்ளாளர் கட்டுப்பாட்டிலுள்ள ஆகமக் கோயில்களில் ஓரளவு வெற்றி கிட்டியுள்ளது. ஆனால் இன்று மேடைப் புரட்சி பேசும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட சா‌‌தியினரின் கோயில்களில் அவ் வுரிமையை இன்னும் பெறமுடியவில்லையே! அப்படியாயின் இந்த மேடைப் புரட்சியாளர்கள் நேர்மையானவர்களாயிருந்தால் கண்டிக்க வேண்டியது பார்ப்பனர்களையா அல்லது எதிர்த்துப் போராட வேண்டியது தத்தம் சாதி வெறியர்களையா? நேர்மை நெஞ்சமுள்ளவர்கள் சிந்தித்துப் பாருங்கள்! செயற்பட விரும்பு‌வோ‌ர் ஒன்று சேருங்கள் என்கிறது எமது தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம். நீங்கள் விரும்பினால் அந்த ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ள அது அணியமாக உள்ளது. ஒவ்வொரு சாதி‌‌‌‌‌‌‌‌‌யிலுமுள்ள நேர்மையான முற்போக்கினர் தத்தம் சாதி மக்களிடையில் வெறியைக் கிளப்பிவிட்டு ஆதாயம் தேடும் தன்னலக் கூட்டங்களை எதிர்த்துப் போராடும் அணிகளை உருவாக்கட்டும். சாதி வெ‌‌‌‌‌றியர்களின் முயற்சிகளை முறியடிக்க மக்கள் பொருளியல் உரிமைக் கோட்பாடு துணை நிற்கும்.

            முன் கூறியது போல் ஒவ்வோர் ஒடுக்கப்பட்ட சாதியும் நிலையில் உயரும் போது தன் பெயரை மாற்றிக்கொள்ளும். தன்னை ஆண்ட இனமென்று காட்ட வரலாற்றைத் தேடித் தனக்கேற்பப் பொருள்கொள்ளும். இதுவரை பிறர் செய்ததை நாங்கள் செய்யும் போது மட்டும் குறை கூறுகிறீர்களே என்று கேட்கலாம். அதே போல், மேல் சாதியினரிடம் நிலங்கள் இருந்த போது மதிப்பு மிக்கதாக இருந்த வேளாண்மை அந் நிலங்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆளுகையினுள் வந்த பின் தீண்டத்தகாததாக ஆளுவோரால் மாற்றப்பட்டதை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணம் ஏன் உங்களுக்கு உருவாகவில்லை? அவ்வாறு போராட வேண்டும் என்று எமது இயக்கம் முன் வைத்த திட்டத்தைக் கிண்டல் செய்தது ஏன் என்றும் கேட்க முடியும்.

            அன்றைய இராமானுசருடைய இயக்கம் தோல்வியில் முடிந்து பழைய நிலைமை மீண்டதற்கான அடிப்படைக் காரணம் அவருக்கு சாதி அமைப்பின் பொருளியல் அடித்தளமாகிய நிலக்கிழமைப் பொருளியல் அமைப்பை ‌‌‌மாற்றுவது பற்றிய சிந்தனை இல்லாதிருந்ததோடு அப் பொருளியலின் அசைக்க முடியா நிலைக்களனாகிய ஆகமக் கோயில் வழிபாட்டு முறையை உறுதிப்படுத்தியதுமாகும். ஏறக்குறைய அவர் வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்தை ஆண்ட ஓர் அரசன் தான் விதித்த வரிகளுக்கு மக்களின் இசைவைப் பெறுவதற்காக மக்களின் பேராளர்களை அரண்மனைக்கு வரவழைத்ததன் மூலம் ஊன்றிய பாராளுமன்ற மக்களாட்சி விதை முதலாளிய, தொழில்நுட்ப, அறிவியல், அரசியல் புரட்சிகளுக்கு இட்டுச் சென்று மாபெரும் இந்தியாவை, இங்‌‌‌கிலாந்து அரசரின் மணிமுடியாக்கியது. நிலக்கிழமைப் பொருளியலில் இன்று வரை தேங்கிக் கிடக்கும் இந்தியாவும் தமிழகமும் இன்று வரை அவர்களுக்கு அடிமையாகி போலிச் சாதி வரலாறு எழுதுவோரின் கைகளில் சிக்கிக் கிடக்கிறது. இந்தச் சிக்கலை அறுத்து தமிழகம் ஒரு முதலாளியப் புரட்சியைக் கண்டு ம‌னிதனை மனிதன் மதிக்கும் முழுமையான மக்களாட்சியை நோக்கி இட்டுச் செல்லும் நோக்கத்தோடுதான் சாதி வரலாறுகளின் போலிமையைத் தோலுரித்துக் காட்டத் துணிந்தேன். நம் கண் முன்னால் நிகழ்ந்த சாணார் - நாடார் மாற்றத்தினை ஊன்றிப் பார்த்து ஒவ்வொரு சாதி முற்போக்கினரும் தத்தம் சாதிகளிள் உண்மையான வரலாற்றைத் தடம் பிடித்து சாதிகள் என்பவை வெறும் மாயை, எந்தவொரு சாதியும் நிலையானதல்ல, சாதி மாற்றமும் சாதிப் பெயர் மாற்றமும் காலங்காலமாக நிகழ்பவை. ஒரு மக்கள் வெவ்வேறு சாதிகளாக மாறலாம், பிரியலாம், இணையலாம். ஒரு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சாதியிலுள்ள மக்கள் ‌‌‌வெ‌ளியேறி வேறொரு சாதி மக்கள் உள்ளே வரலாம். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தின் மக்களில் வெளியிலிருந்து வந்தவர்கள் தவிர்த்த பிறரனைவரும் ஒரே குழுவினரே என்பதையும் ‌‌‌வெ‌ளியிலிருந்து வந்தோரில் அயல் மண்ணில் தங்கள் வேர்கள் எதுவும் மிஞ்சாமல் தமிழகத்தில் மட்டுமே வேரைக் கொண்டோரும் கூடத் தமிழக மக்களே என்பதையும் உணரலாம். இவ் விரு குழுவினரும் தத்தமக்குள் உள்ள உட்பிரிவுகளுக்குள் மட்டுமல்ல இரு பெருங்குழுக்களுக்குள்ளும் கூட உறவுகளை இறுக்கமாக்கி ஒரே மக்களாக இணைய வேண்டுமென்பதே இந்தச் சாதி வரலாற்றின் நோக்கம்.

            பொருளியல் உரிமையைக் கையிலெடுப்போம்! தமிழக மக்களை ஒன்‌‌‌‌‌றிணைப்போம்! வளமான, வலிமையான தமிழகத்தை உருவாக்குவோம்!

தெற்குச்சூரங்குடி,                                                                                                                     அன்புடன்,
26-8-2002.                                                                                                                         குமரிமைந்தன்.


[1]   இவருடைய இந்த “அருஞ்செயலுக்கு” இன்னொரு பக்கமும் உண்டு என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இவர் காவிரித் தோற்றுவாயாகிய தலைக்காவிரியில் தொடங்கி தெற்கு நோக்கி உருவாக்கி வைத்திருந்த “மாலிய” இடைகழி பின்னர், மாலியர்களாகிய கன்னடர்களும் விசயநகரத்தாரும் தமிழகத்தினுள் நுழைந்து முகம்மதியர்களால் அன்றி தமிழர்களால் வெல்ல முடியாத நிலையை உருவாக்கியது. இன்றும் காவிரிச் சிக்கலில் இந்த மாலிய இடைகழியின் செயற்பாடு என்னவென்று பார்ப்பது நல்லது. அதே போல் மாவோவியர்கள் எனப்படுவோரைக் கொண்ட ஒரு சீன இடைகழி வடக்கில் தொடங்கி தேனி மாவட்டம் வரை நீண்டுகிடப்பதையும் நாம் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும்.  

0 மறுமொழிகள்: