14.4.16

தமிழில் வழிபாடு - 6



தமிழில் வழிபாடு - 6

ஆகம வழிபாடு வருண முறையிலமைந்த வழிபாடாகும். கோயில் கருவறை பார்ப்பனர்களுக்கும் தேவதாசிகளுக்கும் உரியது. உள்மண்டம் அரசன், அதிகாரிகள், சிற்றரசர்கள், நாட்டுத் தலைவர்களுக்கு, அதாவது சத்திரியர்களுக்கு உரியது. வெளிமண்டபம் வாணிகர்களுக்கும் பண்ணையார்களுக்கும் உரியது. கோயிலின் அனைத்து வரும்படிக்கும் காரணமான கோயிலைக் கட்டுவோரும் கோயில் நிலங்களில் பயிரிடுவோருமான சூத்திரர்களும் பஞ்சமர்களும் கோயிலினுள் நுழைய முடியாது. சூத்திரர்கள் கோபுர வாசலுக்கு நேரே நின்று நந்தி அல்லது மூஞ்சுறு போன்ற ″இறைவனின்″ ஊர்தி(வாகன)ச் சிலையின் பின்புறத்தையும் கொடிமரத்தின் அடியையும் பார்த்து வணங்கலாம். ″மூலவர்″ எனப்படும் கருவறைப் பொம்மையை ஒரு போதும் கண்ணால் பார்க்கவே முடியாது. இவர்களால் ″இறைவன்″ தெருவுலா வரும்போது ″உற்சவர்″ எனப்படும் விழா நாயகர் பொம்மையைத் தொலைவிலிருந்து பார்த்து வணங்கலாம். பஞ்சமர்கள் இந்தப் பொம்மையைக் கூடப் பார்க்கக் கூடாது. பார்த்தால் இறைவனுக்கு ″தீட்டு″ ஏற்பட்டுவிடும்.

            ஆகமச் கோயில்கள் வருண முறையில் அமைந்தவை என்ற உண்மையையும் சாதி ஏற்றத்தாழ்வுக்கும் தீண்டாமைக்கும் பார்ப்பனர்கள் மட்டும்தான் காரணம் எனும் பொய்ம்மையையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றினைப் பார்ப்போம்.

பார்ப்பனர்களுக்கு ஆதரவு மாலியம் மட்டுமல்ல, சிவனியமும் தானென்று சிவனியர்களைப் பெரியார் தாக்கிய செய்தியை முன்பு பார்த்தோம். இதனால் கலவரமடைந்த சிவனிய வேளாளர்களிடம் பெரும் கலக்கம் உருவானது. இரு மாநாடுகளை நடத்தினர். முடிவில் ″பழைய மரபுகளை″ப் பேணுவது என்று தீர்மானித்தனர். பழைய மரபுகள் என்றது ஆகம மரபுகளைத்தான். இம்மாநாட்டில் குறிப்பாக வெளியிடப்பட்ட கருத்து ″தூய்மையற்ற″ ″இழி சாதியினர்″ கோயிலினுள் நுழையக் கூடாது என்பதாகும்.

இதே ″ஆகம″ முறையை மீட்பதென்ற பெயரில் மீண்டும் ஆலய நுழைவு மறுக்கப்படலாம் என்று அஞ்சுகிறோம். ஏனென்றால், கோயில் நிலங்கள் ″மீட்பு″ என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்கள் மிரட்டப்படுகிறார்கள்; கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இதனை எவரும் கண்டுகொள்ளவில்லை. தேவதாசி முறையை மீட்கவேண்டும் என்று நா.மகாலிங்கம் பேசுகிறார். ஒரு முணுமுணுப்பு கூட எவரிடமிருந்தும் வெளிப்படவில்லை. தமிழ் இசை, நடனம் ஆகியவற்றை மீட்பதென்ற பெயரில் மாவட்டந்தோறும் இசைப்பள்ளிகளும் பண்பாட்டுக் கூடங்களும் தமிழ்க்குடிமகனின் முயற்சியில் செயற்படுகின்றன. இவற்றிலிருந்து வெளிவரும் மாணவிகளைத்தான் கோயில் தாசிகளாகப் பயன்படுத்த வேண்டுமென்று மகாலிங்கம் குறிப்பிட்டுள்ளார். ஆக இவர்களெல்லோரும் ஒருங்கிணைந்து செயற்படுவது உறுதியாகிறது. இன்றிருக்கும் அரிதான வேலைவாய்ப்புச் சூழலில், முன்பு நடந்தது போல் பெண்கள் தங்களையும் தங்கள் பெண்மக்களையும் கோயில்களுக்கு அடிமைகளாய், தேவரடியார்களாய், தேவடியாள்களாய், தேவதாசிகளாய் விற்க வரும் வாய்ப்புகள் மிகுதி. கோயில்களுக்கு அதற்குத் தேவையான பொருளியல் வலிமையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தாம் மும்முரமாக நடைபெறுகின்றனவே! வீட்டுப் பணிப் பெண்னென்றும் வேறு வேலையென்றும், ஏமாற்றப்படுவோம் என்று தெரிந்திருந்தும் எத்தனை பெண்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி பரத்தைமைத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை மும்பையிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்களிடமிருந்து அறிந்தோமே! அதைவிடக் ″கவுரமான″ பிழைப்புதானே ″கோயில்″ தாசித் தொழில் என்று அமைதி கூறிக்கொள்ளலாமே! மக்களை வறுமையின் பிடியில் வைத்திருப்பதில் எத்தனை பேருக்கு எத்தனை வகையான ஆதாயங்கள்? இவற்றுக்கெல்லாம் இறுதிக் கட்டமாகத் தாழ்த்தப்பட்டோரைக் கோயில்களுகுக்குள் நுழையக்கூடாது என்று தடுக்கத்தான் போகிறார்கள். அப்போது அச்சாதித் தலைவர்கள் கொதித்தெழுவார்கள் என்று கூறுகிறீர்களா? உறுதியாகச் சொல்கிறோம். அந்தத் தடுப்பு ″இயக்கத்தில்″ இவர்கள்தாம் முன்னணியில் நிற்பார்கள். இப்போது இவர்கள் பள்ளர், பறையர், சக்கிலியர் இல்லை. இப்போதே தேவேந்திரகுல வேளாளர், ஆதித் தமிழர், அருந்ததியினர் என்று பிள்ளைமாரில் ஒரு பிரிவினராக மாறிக் கொண்டிருக்கின்றனர்.

            ″பள்ளர், பறையர், கனத்த சக்கிலியர் மெள்ள மெள்ள வெள்ளாளரனார்″ என்ற புதுச் சொலவடை உருவாக வேண்டியதுதான் பாக்கி. இப்போதே படித்த மேற்தட்டினர் அனைவரும் பூணூல் அணியாத பார்ப்பனராக, வெள்ளாளராக, வெள்ளாளக்கட்டை மேற்கொண்டுவிட்டனர். படிக்காத, உடலுமைப்பில் உழலும் பிறர் இவர்களுக்கு எப்போதும் போல் பள்ளர், பறையர், சங்கிலியர்தாம்.

            இதுவொன்றும் புதிதாக நடைபெறப்போவதில்லை. தமிழகத்தில் பலமுறை நடந்ததுதான். சாதிய ஒடுக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழுவதும் அதில் தலைமை தாங்குவோரை உள்ளிழுத்துத் தங்கள் சாதியில் ஓர் உட்பிரிவாக மேற்சாதியினர் சேர்த்துக் கொள்வதும் இருவரும் சேர்ந்து எஞ்சியோரை ஒடுக்குவதும். திட்டவட்டமான சான்று இராமானுசரின் இயக்கம். புகைவண்டியில் ஏறுவதற்காக முண்டியடுக்கும் கூட்டத்தில் வாய் உள்ளவன் வெளியில் நிற்போரின் இடர்கள் பற்றி முழங்குவான். உள்ளே நுழைந்ததும் உள்ளே இருப்போரின் இடர்கள் பற்றி முழங்குவான். அதே நடைமுறைதான். சங்காராச்சாரி ″கிராமக் கோயில்″ பூசாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். ஒருவேளை அவர்களுக்குப் பூசணூலை அணிவித்துக் கோயில்களுக்குள் நுழைய விட்டு இந்தச் சூழற்சியை முடித்து வைக்கவும் கூடும்.

இவை எல்லாவற்றையும் விட இன்று பா.ச.க., இந்து முன்னணி ஆகியவற்றின் அணிகளில் தாழ்த்தப்பட்ட மக்களில் நாம் மேலே கூறியவாறு வெள்ளாளக்கட்டு மேற்கொண்ட குழுவினர் இடம்பிடிக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களும் தங்கள் சாதியினரில் தங்களைப் போல் முன்னேற்றம் காணாதவர்களை ஒடுக்கி வைக்க முயல்வார்கள் என்பது உறுதி.

            இவை மட்டுமல்ல, தன்னார்வ ″ஒற்று″ நிறுவனங்களும் வாளாவிருக்கவில்லை. ″மங்கி வரும்″ நமது பண்டை ″மரபுகளை″ மீட்பதற்கென்று வெளிநாட்டு உதவிபெறும் ஒற்று நிறுவனங்கள் மிக விரிவான திட்டங்களைச் செயற்படுத்தத் தொடங்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க போர்டு அறக்கட்டளையால் நடத்தப்படும் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறை சனங்களின் சாமிகள் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடத்தி நாட்டுப்புறக் கோயில்களின் இருப்புக்கு மதிப்புச் சேர்த்துள்ளது(சங்கராச்சாரியின் கிராமப் புறப் பூசாரிகள் பயிற்சித் திட்டத்துடன் இது இணைந்து வருவதையும் நாம் பார்க்க வேண்டும்). அடுத்து தாமரபரணித் திருவிழா என்ற பெயரில் ஒரு மாபெரும் நிகழ்ச்சிக்கு அத்துறை ஏற்பாடு செய்தது. இதன் நோக்கமாக, தாமிரபரணி ஆற்றின் கரையில் காலங்காலமாக இடம் பெற்று வந்த பண்பாட்டு வடிவங்களை மீட்பது என்று கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சி பற்றிய கலந்துரையாடலின் போது ஆற்றின் கரையிலுள்ள எண்ணற்ற கோயில் மண்டபங்கள், படித்துறைகள் போன்றவற்றை மீட்பது, அந்த மண்டபங்களில் நடைபெற்ற வழிபாடுகள், குறிப்பாக மந்திரங்கள் ஒதுவது போன்றவற்றை மீட்பது பற்றிப் பேசப்பட்டது. அவர்களது அறிக்கையில் கூறப்பட்டுள்ள இன்னொரு செய்தி முகாமையானது. அதாவது, ″மங்கி வரும்″ பழைய ″மனித உறவுகளை″ மீட்பது என்ற ஒன்று இடம் பெற்றுள்ளது. மங்கிவரும் பழைய ″மனித உறவு″ என்பது சாதிய உறவுதானே, அதற்குத்தானே இப்போது அறைகூவல் எழுந்துள்ளது அதை மீட்பது என்பதுதான் இவர்கள் நோக்கமா? அதன் வெளிப்பாடுதான் தாமிரபரணிக் கரையில் நடைபெற்ற 17 பேர் படுகொலையா? என்ற கேள்விகள் நம்முள் எழுகின்றன.
            இந்தத் திட்டத்தின் செயலாளர் நாட்டார் வழக்காற்றியல் துறையின் இயக்குநர். அவரது அறிவுரையின் படிச் செயற்படும் ஒருங்கிணைப்பாளர் யார் தெரியுமா? மாவட்ட ஆட்சியர்! இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு பெற்றோரில் மிகப்பெரும்பாலோர் அண்மைக் காலம் வரையிலும், ஏன் இன்றும் கூட ″முற்போக்கு″, ″புரட்சி″ முகமூடிகளை அணிந்தவர்கள், அணிந்திருப்பவர்கள். அறிவு ″சீவி″கள் என்று மதிக்கப்படுபவர்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசு சாரா நிறுவனங்கள் எனப்படும் ஒற்று நிறுவனங்களில் ஏதாவதொன்றின் சம்பளப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள்.

            வெளிநாட்டு ஒற்று நிறுவனங்களுக்கு நம் கோயில்களையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் மீட்பதில் என்ன ஆதாயம்? அத்துடன் நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல் கிறித்துவ நிறுவனங்களும் கோயில் சொத்துகள் பற்றிய கல்வெட்டாய்வுகளை ஏன் மேற்கொள்கின்றன? இவற்றுக்கான விடையை நாம் இறுதியில் பார்ப்போம்.

            விசயநகர ″இந்து″ப் பேரரசு தொடங்கப்பட்ட காலத்தில் செல்வாக்குப் பெற்று வந்த சமய சீர்திருத்த இயக்கங்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிகளும் புதைந்து போய், பார்ப்பனியக் கொடுங்கோன்மையுடன் ″இந்து″ சமயம் மீண்டதற்கான சூழ்நிலையை முகம்மதியத்தின் பெயரால் ஆண்டவர்கள் செய்த கொடுமைகள் உருவாக்கித் தந்தன. அதே போல் இன்று இந்தியாவினுள்ளிருந்தும் பாக்கித்தானின் தூண்டலுடனும் பின்லேடன் போன்றோர் வழங்கும் பொருளியல் உளவியல் வலிமைகளாலும் பூதமென வெடித்துக் கிளம்பியுள்ள முகம்மதிய மத அடிப்படையியம் இன்றும் பார்ப்பனியக் கொடுங்கோன்மையுடன் ″இந்து″ சமய மீட்சிக்குக் களமமைத்துக் கொடுக்கும் பேரிடர் உள்ளது. இவ்வாறு அனைத்துத் திசைகளிலிருந்தும் பார்ப்பனிய ″இந்து″ சமயக் கொடுங்கோன்மையும் காட்டு விலங்காண்டிகளாக மக்கள் மீண்டும் இழியும் அச்சுறுத்தலும் நம்மை நெருக்கிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலை நாம் எப்படி எதிர்கொள்வது? 20 ஆம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டையும் அங்கிருந்து 11 ஆம் நூற்றாண்டையும் நோக்கி நம்மைத் திருப்பும் இவ்விசைகளை எப்படி முறியடிப்பது?

இந்தக் கேள்விகளுக்கு விடை காணும் முன் நாம் ஆகம முறையின் இன்னொரு தன்மையைப் பார்ப்போம். ஆகமங்கள் என்பவை கோயில்களில் பூசை செய்யும் முறையைப் பற்றி விரிவான வழிகாட்டுதல்களையும் கட்டளைகளையும் கொண்டவை. தேவதாசி முறை, வருணங்களுக்கேற்ப மக்களைப் பிரித்து வைத்தல், தமிழ் மொழியை வழிபாட்டிலிருந்து ஒதுக்கி வைத்தல், கோயிலில் நுழைவு மறுக்கப்பட்ட மக்களின் உழைப்பிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு கோயில் பெருச்சாளிகள் வயிறு வளர்ப்பதற்கு வழி கூறுபவை என்பவற்றோடு எண்ணற்ற தொழில்நுட்பச் செய்திகளையும் உள்ளடக்கியவை. கோயில்களின் கட்டுமானத்தில் மண்ணின் தன்மையறிதல், அடிப்படை அமைத்தல், கட்டுமானப் பொருட்களைத் தேர்வு செய்தல், கல்தூண்கள், உத்திரங்கள் அமைத்துக் கூரை அமைத்தல், கோபுரங்கள், மதிற்சுவர்கள், கோயில் சுவர்கள் அமைத்தல், தளமிடுதல், வெளியே தெரியாமல் வடிகால்கள் அமைத்தல், நீர் ஆதாரமாகிய கிணற்றுக்கு நீரோட்டம் பார்த்தல், நீர் வரவும் அதிலிருந்து வெளியேறவுமான அமைப்புகளை வெளியே தெரியாதவாறு அமைத்தல் என்று கட்டுமானப் பொறியியலும் கற்சிலைகள் செய்வதற்கான கற்களைத் தேர்வு செய்தல், சிற்பங்களின் பல்வேறு வகைகளுக்கான அளவு விகிதங்கள், சிற்பங்களின் பகுதிகளை ஒட்டுதல், சிலைகளை நிறுவுதல் என்று சிற்பக்கலை நுணுக்கங்களையும் மரச்சிற்பங்கள், தேர்கள், ஊர்திகள்(வானங்கள்) ஆகியவற்றைச் செய்வதற்கான மரச் சிற்பக்கலை, தச்சுக் கலைகளையும் சுதைச் சிற்பம் செய்யும் நுட்பங்களையும் பொன்ம(உலோக)ச் சிலைகளைச் செய்யும் பொன்மம் மற்றும் வார்ப்படத் தொழில்நுட்பங்களையும் ″இறைவனுக்கு″ப் படைப்பதற்கென்று நெய்யிலும் பிறவற்றிலும் வகைவகையான உணவு வகைகளைச் சமைக்கும் சமயற்கலை, இசை, நாடகம் ஆகியவற்றை விளக்கும் இசைக்கலை, நடனக்கலை நுணுக்கங்களையும் அவற்றுக்குத் தேவைப்படும் எண்ணற்ற கருவிகள் செய்யும் நுட்பங்களையும் ″இறைவனின்″ ″திருவுருவத்துக்கு″ மஞ்சள் நீராட்டுதல் தொடங்கி ஒப்பனை செய்யும் ஒப்பனைக் கலையையும் அதற்குத் தேவைப்படும் நறுமணப் பொருட்கள் செய்வதற்கான நறுமணப் பொருள் தொழில்நுட்பத்தையும் தேர்களையும் ஊர்திகளையும் அலங்கரிப்பதற்கான வெளி அலங்காரக் கலைநுட்பத்தையும் என்று அரச வாழ்வுக்குரியனவும் அன்றாட வாழ்வில் பயன்படத் தக்கனவுமான அனைத்துக் கலை மற்றும் தொழில்நுட்பங்களும் ஆகம நூல்களில் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. அதாவது தமிழக வரலாற்றில் நாம் எய்திய மிக உயர்வான அனைத்துத்துறை அறிவும் நுட்பமும் சராசரி மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு மொழிமாற்றம் செய்யப்பட்டு அவற்றின் மீது ஆன்மீகப் பொய்ப் போர்வை போர்த்தப்பட்டு ஆகமங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

            ஆகம விதிகளின் இலக்கணமே அவற்றை இம்மியும் மீறக்கூடாது என்பது. எனவே கலைகள் என்று நாம் பொதுவாகப் பட்டியலிடும் இசை, நடனம் போன்றவை கூட இறுகிப் போய் வெறும் தொழில்நுட்பங்களாகிவிட்டன. கலையாயினும் தொழில்நுட்பமாயினும் அதற்கு நெகிழ்வும் விடுதலையும் இல்லையாயின் அது தேங்கி மறைந்து விடும். கோயில் எனும் பெரும் பொருளியல் பின்னணி இருப்பதால்தான் இவை இன்றும் அதையும் மீறி அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன. அத்துடன் தொழில் செய்வோருக்கு எழுத்தறிவு இல்லாமல் போனதும் நூல்கள் மக்கள் மொழியில் இல்லாமல் போனதும் ஒட்டுமொத்தக் குமுக வளர்ச்சியைத் தடுத்துத் தேக்கிப் பின்னோக்கி நகர்த்திவிட்டன. இந்தத் தேக்க நிலையையும் நம் அறியாமையையும் பயன்படுத்தி மேலை நாட்டார் இவற்றையெல்லாம் மாந்த நூல் (மானிடவியல் ) ஆய்வென்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வென்றும் நாட்டுப்புறக் கலை ஆய்வென்றும் கோயிற்கலை ஆய்வென்றும் சமய ஆய்வென்றும் கூறித் திரட்டிச் சென்று அவற்றில் அடங்கியுள்ள அடிப்படை அறிவியலைப் பிரித்தெடுத்து அதனைப் பயன்படுத்திப் புதுப்புதுப் தொழில்நுட்பங்களைப் படைத்து அவற்றின் மூலம் நம் பொருளியல், தொழில்நுட்ப அடித்தளங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் தங்கள் ஆதிக்கத்துள் கொண்டு வைத்துள்ளனர். இந்த ஆய்வுகளுக்குத் தேவைப்படும் கருப்பொருட்களான தரவுகளைத் திரட்டிக் கொடுப்பதற்கு நம் அரசும் பல்கலைக் கழகங்களும் படித்த பல ″அறிஞர்களும்″ ″அறிவு சீவி″களும் பெருந்துணை புரிகின்றனர்.

ஆகம நூல்கள் சமற்கிருதத்திலிருந்தாலும் அவற்றிலுள்ள பெரும்பாலான கலைச் சொற்களுக்குத் தமிழன்றி வேறு வேர் இல்லை என்று புகழ்பெற்ற ஆய்வாளர்கள் நிறவியுள்ளனர். நாம் முன்பு ஓரிடத்தில் கூறியுள்ளவாறு தமிழ் மக்கள் தங்களுக்கென்று உருவாக்கிய அறிவியல், தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்த்துத் தாங்கள் மறைத்து வைத்துக்கொண்டு மூலநூல்களை அழித்து விட்டதற்கு இது அசைக்க முடியாத சான்றாகும். தங்கள் குறுகிய நலன்களுக்குகாக ஒட்டுமொத்தக் குமுகத்தின் அறிவு மட்டத்தையும் அதனால் அதன் வலிமையையும் அழித்த பெருங்குற்றத்தை இந்தக் கோயில்களுக்குள் பதுங்கி வாழும் பெருச்சாளிகள் செய்து வந்துள்ளனர்.

            இவ்வாறு திருடப்பட்டனவும் அழிக்கப்பட்டனவுமான நம் அறிவுச் செல்வங்களைத் தேடிக் கண்டுபிடித்து மீட்டுத் தமிழுக்குக் கொண்டு வருவதை நோக்கமாக வைத்து, தமிழகம், தமிழக மக்கள், தமிழ்மொழி ஆகியவற்றின் மீது பற்றுடையார் சமற்கிருதத்தை ஆய்வு நோக்கோடு கற்று அம்மொழியையும் அதிலடங்கியுள்ள செய்திகளையும் புதிய கண்ணோடு நோக்கி இதுவரை சரியாக விளங்காதவற்றையும் தவறாகப பொருள் கொள்ளப்பட்டவற்றையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

            குமரிக் கண்ட காலம் தொடங்கி தமிழ் மக்களுக்குள் நடைபெற்ற போராட்டங்களையும் பிற வரலாற்று நிகழ்வுகளையும் மறைத்து ஒரு சிறு காலகட்டத்தினுள் ஒரு சிறு குழுவினரை முதன்மைப்படுத்திய பாடல்களின் தொகுப்பாகவே கழக(சங்க)ச் செய்யுள்கள் உள்ளன. அதனால் கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னுள்ள தமிழரின் வரலாற்றுச் செய்திகள் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் தமிழகத்துக்கு வெளியே கி.மு. 40,000 ஆண்டு வரை உலகெலாம் தமிழர்களின் நாகரிகத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இடைவெளியை நிரப்ப வேண்டுமாயின் நாம் இன்று வரை ″ஆரிய″ இனத்துக்குரியனவென்று விலக்கிவைத்த வேதங்களையும் தொன்மங்களையும் பிற அறிவுத்துறை நூல்களையும் புதுக் கண்ணோட்டத்துடன் அணுகி அதன் மீது போர்த்தப்பட்டிருக்கும் ஆன்மீகம், பார்ப்பனியம் ஆகிய போர்ப்புகளை அகற்றி நம் வரலாற்றையும் அறிவியலையும் மீட்கவேண்டும். இந்தப் பணியைத் தங்கள் நலன்களுக்கேற்றவாறு மேற்கொள்வதற்காகப் பார்ப்பனச் சார்புடைய ″இந்து″ சமய இயக்கங்கள் மாபெரும் அரசு மற்றும் மார்வாடிகளின் பொருளியல் அரசியல் பின்னணியுடன் களத்திலிறங்கி முடுக்கமாகச் செயற்படுகின்றன. அவர்களை நாம் முந்தியாக வேண்டும்.

            நிலம் தான் ஒரு நாட்டின், நாட்டு மக்களின் அனைத்து வளங்களுக்கும் வாழ்வின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் ஊற்றுக்கண். அந்த ஊற்றுக்கண்ணை ஆகமச் கோயில்களின் காலடியில் வைத்து நம் நாட்டின் வளத்தையெல்லாம் உறிஞ்சிக் கரியாக்கி நம் நாட்டுக்கு நேர்ந்த என்புருக்கி நோயாக ஆகம வழிபாட்டை வைத்துக் கொண்டிருக்கிறோம். மீதி சொத்துக்களையும் குத்தகை உழவர்களின் உழைப்பை உறிஞ்சி அழிக்கும் நிலக்கிழார்கள், பண்ணையார்களின் கைகளில் விட்டு வைத்துள்ளோம். இன்று அந்தக் குத்தகை உழவனையும் சொந்தப் பயிர் செய்வோரையும் உறிஞ்சி அழிக்கும் அரக்கனாக அரசு நிற்கிறது. அதன் படைக்கலமாக நிகர்மையை(சோசலிசத்தை) வழங்கியுள்ளனர் பொதுமைப் ″புரட்சியாள″ரும் பிற ″இடங்கை″க் கட்சியினரும். அதற்கு ஊக்கமூட்டுகின்றனர் படித்த அறிவுச் ″சீவி″ ஒட்டுண்ணிகளும் அயல்நாட்டு ஒற்றர்களும். ″தாமரபரணித் திருவிழா″க்களும் கிறித்துவ நிறுவனங்களின் கல்வெட்டாய்வுகளும் இதே நோக்கம் கொண்டவைதாம்.

நிலத்திலிருந்து உருவாகும் செல்வத்தில் மக்கள் நுகர்ந்தது போக எஞ்சியதுதான் ஒரு குமுகத்தின் வளர்ச்சிக்கான மூலப்பொருள். நம் கடந்த கால வரலாற்றைப் பேசும் ″முற்போக்கு″ எழுத்தாளர் அனைவரும் இந்த மிகுதிச் செல்வம் நம் நாட்டில் கோயில்களாலும் நிலக்கிழார்களாலும் அரசர்களாலும் உறிஞ்சி அழிக்கப்பட்டதும் உழைக்கும் மக்களும் அவர்களது உழைப்பும் கூட இழித்துரைக்கப்பட்டதும்தாம் நம் குமுகம் வளர்ச்சியற்றுத் தேங்கிப் போய்ப் பின்னோக்கிய நிலை உருவானதற்கும் அடுத்தடுத்து அயலவர்கள் முன் வீழ்ந்து அடிமையானதற்கும் காரணம் என்று சரியாகக் கூறுகிறார்கள். ஆனால் நிகழ் கால வரலாற்றுக்கு வரும்போது இந்த மிகுதிச் செல்வம் சேர்வதையே சுரண்டல் என்று கூறிப் பழிக்கின்றனர். அந்த மிகுதிச் செல்வம் விளைப்புச் செயல்முறையில் பயன்படுவதைத் தடுக்கின்றனர். முதலிடுவதே சுரண்டலை வளர்த்துவிடும் என்று உள்ளூர் மக்களின் மூதலீட்டுக்குத் தடையாக நிற்கின்றனர். வெளியிலிருந்து பாய்ந்து நம் செல்வங்களனைத்தையும் அடித்துச் செல்லும் வல்லரசு மூலதனத்துக்குத் தாம் அறிந்தோ அறியாமலோ களம் அமைத்துக் கொடுக்கின்றனர்.

             நாம் இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆகம வழிபாட்டு முறைக்கு முடிவு கட்டியாக வேண்டும். கோயிற் கருவறையாகிய இருட்டறையிலிருந்து ″கடவுளை″ விடுவிக்க வேண்டும். ″இறைவனை″க் கட்டி வைத்திருக்கும். பூசாரியின் பூணூல் அகற்றப்பட வேண்டும். எங்கும் நிறைந்தவனாக நாம் கூறும் கடவுள் அனைவருக்கும் உரியவனாக வேண்டும். மக்களை அடுக்கடுக்காகப் பிளவுபடுத்தி வைத்திருக்கும் ஆகமக் கோயிலிலிருந்து அவர் வெளிச்சத்துக்கு வரவேண்டும். வரலாற்று மனிதர்களும் மனிதனுக்கு அச்சத்தை ஊட்டியனவும் பயன் அளித்தனவுமாகிய விலங்குகளையும் மரங்களையும் பறவைகளையும் தெய்வமாக மாற்றிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொம்மைகளை வைத்துச் சுமந்தும் தேர்களில் வைத்து இழுத்தும் பொம்மைகளை வணங்கியும் பொம்மை விளையாட்டு விளையாடும் நாம் நம் குழந்தைப் பருவப் பண்பாட்டிலிருந்து விடுபட்டு மேம்பட வேண்டும். மனித உடலும் தும்பிக்கையும் மருப்பும் (தந்தமும்) கலந்த விந்தையான விளையாட்டுப் பொம்மையைக் கடவுளாகப் பாவித்து அதைத் தண்ணீரில் கரைக்கும் குழந்தை விளையாட்டுக்காகத் தெருக்களில் வெறிபிடித்தாடும் இளைஞர்களை அவர்களின் சிறுபிள்ளைத் தனத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.

            மக்களைச் சாதிகளாகப் பிரிக்காததும் மனிதனுக்கும் உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் கண்கண்ட தெய்வமும் ஆண்டு, மாதம், நாள், நாழிகை, என்று உயிர்வாழ்வின் அனைத்தையும் இயக்குவதுமான சூரியனைக் கடவுளாகக் கொண்டு உருவங்களில்லாத அகன்ற அரங்கத்தையே கோயிலாகக் கொண்ட ஒரு சமயத்தை உருவாக்க வேண்டும். நுணுக்கமான சடங்குகள் தேவையில்லை. காதைப் பிளக்கும் இசைக் கருவிகள் தேவையில்லை. சிறப்புத் தகுதி பெற்ற பூசகர் தேவையில்லை. வழிபாட்டுக்கு வரும் எவரும் தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு அது எளிமையாயிருக்க வேண்டும். அச்சமும் அடிபணிதலும் தேவையில்லை. மண்டியிட்டோ கீழே விழுந்தோ வணங்கத் தேவையில்லை. மன மகிழ்ச்சியை அளிக்கும் நல்ல உடையுடன் காலணி அணிந்து மக்கள் வழிபாட்டிடத்துக்குச் செல்ல வேண்டும். புலாலூணவோ பெண்கள் மாதவிடாய்க் காலமோ தடையாயிருக்கக் கூடாது. நாள்தோறும் வழிபாடு தேவையில்லை. வாரத்துக்கு ஒரு நாள் போதும். கோயிலுக்கு வருவதற்காக எவரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டாயப்படுத்தக் கூடாது. சமய நிகழ்ச்சிகள் கோயில்களுக்கு வெளியில் இடம்பெறக் கூடாது. அதாவது சமயம் கோயிலுக்குள்ளேயே தன்னை அடக்கிக் கொள்ள வேண்டும். மக்கள் எந்தச் சமய அடையாளத்தையும் அணியக்கூடாது. கோயில்கள் பொது வாழ்வுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறில்லாத இடங்களில் எளிமையாக அமைக்கப்பட வேண்டும்.

இந்தக் கடவுளுக்கு என்று ஒரு சொந்த ஊர், சொந்த நாடு கிடையாது. எனவே அவன் எல்லாத் தேசத்தவருக்கும் தேசியக் கடவுளாகத் தக்கவன்.

சமயம் என்பது வழிபாடு என்ற எல்லைக்கு வெளியே குமுக வாழ்க்கையில் வேறெந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது. மொத்தத்தில் ஒரு மக்களாட்சிக் குமுகத்துக்கு ஏற்றவாறு நம் சமயம் அமைய வேண்டும். சமயத்தின் நோக்கம் மக்கள் அன்றாடம் தாம் சந்திக்கும் இன்னல்கள், இடர்களின் விளைவாக உருவாகும் உளவியல் அழுத்தங்களிலிருந்து விடுபடுவதாகவும் மக்கள் தங்கள் பொதுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் என்ற உணர்வை ஊட்டுவதாகவும் இருக்க வேண்டும். கோயில் விழாக்களாலும் பூசைகளாலும் பெருநாள்களாலும் நோன்புகளாலும் நிரம்பியிருக்கும் நாட்காட்டிகளையும் பஞ்சாங்கங்களையும் மாற்றியமைக்க வேண்டும். வான்பொருட்களின் இயக்கங்களையும் அவற்றால் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களையும் சுட்டிக்காட்டும் அறிவியல் வழிகாட்டிகளாக அவை மாறவேண்டும்.

இத்தகைய ஒரு சமயம் அமைய வேண்டுமாயின் அதற்கேற்ப மக்களாட்சிக் குமுகம் அமைய வேண்டும். இன்று நடைபெறும் பாராளுமன்ற மக்களாட்சி ஒரு போலி. இங்கு வாக்குச் சீட்டு என்ற ஏமாற்றத்தை தவிர வேறு எதுவும் இல்லை. பண்டைக் கால அரசர்களும் குறுநில மன்னர்களும் சிற்றரசர்களும் நிலக்கிழார்களும் பண்ணையார்களும் சமயத் தலைவர்களும்தாம் இன்று அயல்நாட்டு ஆண்டைகளின் கூட்டோடு புதிய பெயர்களில் நம்மை ஆள்கின்றனர். எந்த வகையிலும் மக்களின் மதிப்புக்குத் தகுதியில்லாத கழிசடைகளின் காலில் மேடைபோட்டு விழுந்து வணங்கும் மானங்கெட்டவர்களைத்தான் நாம் நம்மை ஆள்பவராகத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இந்தக் கீழ்மக்களிடமிருந்து இலவயங்கள் என்ற பெயரிலும் மானியங்கள் என்ற பெயரிலும் தங்களிடமிருந்தே திருடப்பட்ட செல்வத்தை இரவலர்கள் போல் கையேந்தி வாங்கும் அறிவற்ற மக்களைக் கொண்டதாகத்தான் இந்த நாடு உள்ளது. அப்படி இரப்பதற்கும் கைக்கூலி வழங்கும் அறிவிலிகளாக, தன்மானமும் தன்னுணர்வும் அற்றவர்களாக நம் மக்கள் உள்ளனர். மக்களாட்சி நடைமுறை என்பதே மக்களுக்கும் அரசுக்குமிடையிலான ஒரு அதிகாரப் போட்டி, ஆதிக்கப்போர் என்ற உண்மை இங்கு மிகப் படித்த மேதைகளின் மூளையில் கூட உறைக்கவில்லை. இந்த அதிகாரப் போட்டியில் மக்களே தலைமை எய்த வேண்டும் என்பதுதான் மக்களாட்சித் கோட்பாட்டின் அடிப்படை என்பதும் அந்தத் தலைமைப் பொறுப்பை எய்துவதற்குக் குடிமக்கள் தன்மானம் உள்ளவர்களாகவும் தற்சார்புடையவராகவும் விளங்கவேண்டுமென்பதும் ஆட்சியாளர்கள் முன்பு இரவலர்களாகக் கையேந்துவது முடிவுக்கு வரும் வரை அவர்கள் இந்தத் தகுதியைப் பெற முடியாது என்பதும் இந்த அறிவு ″சீவி″களுக்குத் தெரியவில்லை. வாக்களிப்பது ஒன்றிலேயே அனைத்து மக்களாட்சி நடைமுறைகளும் முடிந்து போகின்றன என்று மேடைகளிலும் செய்தி ஊடகங்களிலும் இந்த ″மேதைகள்″ முழங்கி மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்நாட்டின் செல்வங்களனைத்தையும் வல்லரசுகளும் அவர்களின் தரகர்களாக ஆட்சியாளர்களும் பங்கு போட்டுக்கொண்டிருக்கையில் சிறுவுடைமை, குத்தகை வேளாண்மை , மரபுத் தொழில்கள் எனும் பாறாங்கல்களைக் கழுத்தில் சுமந்து கொண்டிருக்கும் பெரும்பான்மையினரான எளிய மக்கள் உணவு தேடும் விலங்கின் மட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் துயர்களுக்குக் காரணத்தை அறியாத மக்கள் வேறுபாடின்றிக் கண்டதை எல்லாம் வணங்குகிறார்கள். எத்தர்களை எல்லாம் ″மகான்கள்″ என்றும் ″அவதாரங்கள்″ என்றும் காலில் விழுந்து எழுகிறார்கள். தங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் அள்ளிக் கொடுக்கிறார்கள். கடன்பட்டுக் கோயில்களுக்குச் செலவழிக்கிறார்கள். எந்த சமயம் என்று பாராமல் அனைத்துத் தெய்வத்தையும் வணங்குகின்றனர்.

            ″அஞ்சியஞ்சித் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே″ என்று பாரதி நெஞ்சு பொறுக்காமல் பாடிய அவலநிலை இன்று முனைப்படைந்திருக்கிறதேயன்றித் தெளிவடையவில்லை.
மக்களின் கழுத்தில் தொங்கும் பொருளியல் வளர்ச்சியின்மை என்ற பாறாங்கல்லை அகற்ற வேண்டும். மக்களின் பங்கு மூலதனத்தால் இயங்குபவையாக தொழில் துறையும் வேளாண்மையும் இயங்க வேண்டும். பெரும்பான்மை மக்கள் தன்னுரிமையுள்ள தொழிலாளர்களாகவும் பங்கு மூதலீட்டின் மூலம் முறைமுக முதலாளிகளாகவும் மாற வேண்டும். அதற்கு முதலில் தேவைப்படுவது பெரும் பண்ணைகளும் தொழிலகங்களும். இவை உள்ளூர் மூலதனம், உள்ளூர் மூலப் பொருட்கள், உள்ளூரில் உருவாகும் தொழில்நுட்பம், உள்ளூர் மக்களின் உழைப்பிலிருந்து இயங்க வேண்டும். இன்று வருமான வரிக்கு அஞ்சிப் பதுங்கிக் கிடக்கும் மூலதனம் விடுதலை பெற வேண்டும். மக்களை ஏமாற்றாது பங்குச் சந்தை நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மக்களே வகுத்து நெறிப்படுத்தும் அமைப்புகளை அமைத்துக் கண்காணிக்க வேண்டும். குத்தகை முறை ஒழிக்கப்படவேண்டும். கோயில் நிலங்களும் பயிரிடுவோரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த நடைமுறையில் உராய்வைக் குறைக்கும் வகையில் இடைக் குத்தகையாளருக்கும் ஒரு சிறு பங்கு தரலாம். அவ்வாறு கிடைக்கும் பங்கில் அவர்கள் சொந்தப் பயிர் செய்யாவிடில் அவற்றை விற்றுவிட வேண்டும். நில உச்சவரம்புகள் ஒழிக்கப்பட வேண்டும். உழவர்கள் மீதுள்ள கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும். இவ்வாறு பெரும்பாலான மக்கள் நேரடியாகவும் பங்கு மூலதனத்தின் மூலமும் விளைப்புச் செயல்முறையிலும் அதன் ஆள்வினையிலும் ஈடுபடும் போது அதில் கிடைக்கும் கள அறிவும் பட்டறிவும் உண்மையான மக்களாட்சியின் அடிப்படையாக அமையும். தங்கள் கடமைகள் பற்றிய தெளிவும் தங்களுக்கு வேண்டியது என்ன என்பது பற்றிய புரிவும் தங்கள் உரிமைகள் பற்றிய கட்டுப்பாடும் அவர்களுக்கு ஏற்படும். அவ்வாறு மனித வாழ்வின் முகாமையான கூறுகள் குமுகத்தின் கட்டுக்குள் வரும். சமயத்தின் தேவை சுருங்கும். பூசகர்களின் செல்வாக்கு குறையும். மக்களாட்சித் தன்மையுள்ள சமயம் அமையும்.

            உண்மையான தேசிய முதலாளியப் புரட்சி மூலம்தான் நாம் இதை எய்த முடியும். ஐரோப்பாவில் நிலக்கிழமைப் பொருளியல் நிலவிய காலத்தில் வழிபாட்டிலும் ஆட்சியிலும் மக்களுக்குப் புரியாத இலத்தீனும் கிரேக்கமும் ஆதிக்கம் செலுத்தின. முதலாளியத்தின் தோற்றமும் சமய ஆதிக்கம் உடைந்து கோயில் சொத்துகள் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதும் இணைந்து நடைபெற்றன. அதன் உடனடி விளைவாக ஆட்சியிலும் வழிபாட்டிலும் மக்களின் மொழி இடம் பெற்றது. இன்று நம் நாடும் பொருளியலில் நிலக்கிழமைத் தன்மையில்தான் உள்ளது. அதற்கேற்பவே நம் அரசியலிலும் சாதி - சமயப் பிளவுகளும் உள்ளன. இந்த நிலக்கிழமைப் பொருளியலை உடைத்தெறிந்து தேசிய முதலாளியப் பொருளியலை எய்துந்தோறும் ஆட்சியிலும் வழிபாட்டிலும் நம் தாய்த் தமிழ் தலைநிமிர்ந்து நிற்கும்.

            எனவே கோயில் சொத்துகளைப் பயிரிடுவோர்க்குப் சொந்தமாக்கப் போராடுவோம்! இறைவனை வழிபடுவோரே கோயிலைப் பராமரிக்கும் செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முழங்குவோம்! தம் வழிபாட்டிடத்தைப் பராமரிக்க முடியாதோருக்கு இறைவழிபாடு செய்யும் தகுதியில்லை என்று உரத்துக் கூறுவோம்! நிலத்தில் பயிரிட இயலாதோருக்கு நிலத்தை வைத்துக் கொள்ளும் தகுதியில்லை என்றும் கூறுவோம்!

            தமிழைத் தமிழர்களின் அனைத்துத் துறைகளிலும் தலைமை தாங்கச் செய்யும் மூல முழக்கங்களாகும் இவை. இப்போராட்டங்களில் பங்கு கொள்ளுமாறு தமிழக மக்களை அறைகூலி அழைக்கிறோம். உங்களுக்கு முன்னணிப் படையாகத் தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகமும் அதன் போர்க்கருவியாகிய பொருளியல் உரிமை இதழும் துணை நிற்கும்!

வாழ்க தமிழகம்!
வெல்க தமிழ்!!

தமிழில் வழிபாடு - 5



 தமிழில் வழிபாடு - 5

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பார்ப்பனர்களுக்கும் தேவதாசிகளுக்கும் பெரும் மோதல்கள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. தாசிப் பெண்களை இழிவுபடுத்தி எண்ணற்ற நாடகங்களும் திரைப்படங்களும் கதைகளும் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டன. இதற்குக் காரணம், தேவதாசி முறைக்கு எதிராக எழுந்த பேரெழுச்சி.

            தேவதாசிகள் பொதுவாக ஆண் குழந்தைகளை விரும்புவதில்லை. பிறந்தவுடன் பச்சை நெல்லைத் தண்ணீரிலிட்டு நெல்த்தூசி கலந்த நீரைக் குழந்தைக்கு ஊட்டி விடுவாராம். மூச்சுக் குழலை அத்தூசி அடைத்துக் குழந்தை இறந்துவிடுமாம். ஆண் குழந்தை வளர்ந்தால் அவர்களது பரத்தைமைத் தொழிலுக்கு அது இடையூறு செய்யலாம் என்பதும் காரணம் போலும். அவ்வாறு கொல்லப்படாமல் வளர்ந்த ஆண்கள் நட்டுவனார்களாகவும் இசைக் கலைஞர்களாகவும் தம் வீட்டுக்கு வரும் ″வாடிக்கையாளருக்கு″ எடுபிடி வேலை செய்வோராகவும் கூட்டிக் கொடுத்தல் எனும் மாமா வேலை செய்வோராகவும் வாழ்ந்தனர். இசைத் தொழில், நாட்டியத் தொழில் போன்றவற்றில் ஈடுபடுவதால் இவர்களை இசைவேளாளர்கள் எனவும் மேளக்காரர்கள் எனவும் அழைப்பதுண்டு. (அதனால்தான் தென் மாவட்டங்களில் நாதசுரம் இசைக்கும் நாவிதர் குலத்தினர் கருணாநிதியைத் தங்கள் சாதியினராகக் கருதினர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் அவரைத் தங்களில் ஒருவராகக் கருதி இன்றளவும் அவருக்கு ஆதரவு தருகின்றனர்.) தேவதாசிகளைப் போல் மேளக்காரர்களுக்கும் கோயிலின் மானிய நிலங்கள் உண்டு.

            ஆங்கிலர் ஆட்சியில் கல்வியறிவும் வேலைவாய்ப்பும் விரிவடைந்த நிலையில் தேவதாசி மக்களிடையில் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்ற குரல் எழுந்து வலுவடைந்தது. முற்போக்கு எண்ணமுடைய தலைவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். தேவதாசி மரபில் பிறந்து மருத்துவப் பண்டிதர் பட்டம் பெற்ற பெண்மணியான முத்துலெட்சுமி இதற்காகப் போராடினார். இதற்குப் பெரியாரும் ஆதரவளித்தார். 1937இல் அன்றைய சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்டவரைவு முன்வைக்கப்பட்டது. மேலவை உறுப்பினராக இருந்த பேரவைக் கட்சிப் பெருமகன் சத்தியமூர்த்தி தேவதாசி முறையை ஒழித்தால் நம் மரபுக் கலைகளான இசையும் நடனமும் அழிந்துவிடும் என்று கூறி எதிர்த்தார். அந்த மரபு தொடர்வதில் அத்தனை ஆர்வம் இருந்தால் அவரது சாதியினரான பார்ப்பனப் பெண்களே அப்பணியைச் செய்யட்டும் என்று முத்துலட்சுமி அறைகூவல் விடுத்தார். சட்டம் நிறைவேறியது. இந்த அறைகூவலைப் பார்ப்பனர்கள் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதைச் சற்றுப் பின்னர் பார்ப்போம்.

பார்ப்பனர்கள் தேவதாசிப் பெண்களை இழிவுபடுத்திக் கதைகளையும் நாடகங்களையும் திரைப்படங்களையும் உருவாக்கினார்கள் என்று கூறினோம். அதற்கு மறுப்பாகத் திராவிட இயக்கத்தினர் குறிப்பாகத் தேவதாசி மரபில் வந்த அண்ணாத்துரை, கருணாநிதி போன்றோர் பார்ப்பனப் பெண்களை இழிவுபடுத்தும் கதைகள் எழுதினர். வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவர் எழுதி திரைப்படமாகப் பின்னால் வெளிவந்த திகம்பர சாமியார் அல்லது கும்பகோணம் வக்கீல் என்ற கதையில் கயவனான சட்டநாத பிள்ளை என்ற வழக்கறிஞன் செய்த குற்றங்களை அவன் வாயாலேயே சொல்ல வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு தேவதாசிப் பெண் மூன்று நாட்கள் பகலும் இரவும் அவனைத் தூங்காமல் பார்த்துக்கொண்டாள். களைப்பு மிகுதியால் அவன் தன் வயமிழந்து அனைத்தையும் உளறிக் கொட்டிவிடுகிறான் என்கிறது அக்கதை. அண்ணாத்துரை தன் நாடகமான சந்திரோதயத்தில் பண்டார சன்னதி எனப்படும் ஒரு மடாதிபதியை அகற்றி அம்மடத்தைக் கைப்பற்றத் திட்டமிடுவோருக்குக் கையாளாக ஒரு பார்ப்பனப் பெண் அவரைத் தன் காமவலையில் சிக்க வைத்து இரண்டு நாட்கள் வெளியே விடாமல் பார்த்துக் கொண்டாள் என்று எழுதினார்.

            தேவதாசி வகுப்பினர் கோயில்களின் உள்ளும் வெளியிலும் பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையிலும் வாழிடத்திலும் வாழ்ந்ததால் உணவு, நடையுடை, பேச்சு என்று பலவகைகளிலும் அவர்களது பண்பாட்டையே பின்பற்றினர். அதனால்தான் அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டதும் பார்ப்பனர்களுக்கு எதிர்ப்பு நிலையை எடுத்த, தேவதாசி வகுப்பில் தோன்றிய திறமை மிக வாய்க்கப் பெற்றோரான அண்ணாத்துரை, கருணாநிதி போன்றவர்களால் பார்ப்பனர்களின் உள்ளரங்கங்களை வெளியில் எடுத்து வைத்து மக்களை எளிதில் கவர முடிந்தது. அவ்வாறு அவர்கள் பெயரும் புகழும் பெற்று புறக்கணிக்க முடியாத ஆற்றலாக வளர்ந்த போது பார்ப்பனர்கள் அவர்களுக்கு ஏற்பளித்து மறைமுகமாக அழைப்பு விடுத்தனர். அதனை அவர்களிருவரும் ஏற்றுக்கொண்டு உள்ளூற ஒட்டி உறவாடினார்கள். இந்த உண்மை அண்மைக்கால வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

            இவ்வாறு அடுத்தடுத்த நிலைகளிலுள்ள மேலடுக்கினருக்குள் தோன்றும் முரண்பாடுகளிலிருந்துதாம் வரலாற்றில் பெரும் புரட்சிகர இயக்கங்கள் உருவாகியிருக்கின்றன. மேலடுக்கினருக்கிடையில் இணக்கம் ஏற்படும் சூழ்நிலையில் கீழ்மட்டத்து மக்களிடையிலிருந்து தலைவர்கள் தோன்றி அந்த மக்களியக்கத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வர். முதலில் இருந்த தலைமையே தன் களத்தை விரிவுபடுத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்வதும் மிக அரிதாக நிகழ்வதுண்டு. ஆனால் தமிழகத்தில் இந்த இரண்டுமே நடக்கவில்லை. இதற்காகப் பெரியாரையோ அண்ணாத்துரையையோ கருணாநிதியையோ மட்டும் நாம் குறைகூற முடியாது. இதற்கான காரணத்தை நாம வேறோர் இடத்தில் தேட வேண்டியுள்ளது. திராவிட இயக்கத்திலுள்ள முரண்பாடுகளால் அதிலிருந்து அயற்பட்டவர்களை ஈர்ப்பதற்கென்று வேறோர் இயக்கம் தமிழகத்திலிருந்தது. அது தான் பொதுமை இயக்கம். திராவிட இயக்கத்தின் குறிக்கோளாக அறிவிக்கப்பட்ட சாதியொழிப்பு, கடவுள் மறுப்பு, தேசிய விடுதலை ஆகியவை பொதுமைக் கோட்பாடுகளை வகுத்தளித்த மார்க்சு, ஏங்கல்சு, லெனின், மாவோ ஆகியோரின் குறிக்கோள்களுடன் முரண்பட்டவை அல்ல. இருப்பினும் திராவிட இயக்கத்தைக் கேலிபேசி நின்ற தமிழகப் பொதுமை இயக்கத்தினர் அவ்வியக்கம் தன் உட்சாரம் அனைத்தையும் இழந்து பதவிப் பித்துப்பிடித்து அலைந்த போது அதற்கு ஆதரவு அளித்து அணைத்தனர். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழவதும், ஏழை நாடுகள் முழுவதிலும் இத்தகைய ஓர் அணைத்து அழிக்கும் பணியை இவ்வியக்கம் செய்துள்ளது. அதனால்தான் இயங்கியலுக்குப் பொருந்தாத பாட்டாளியக் கோட்பாட்டால் பிறழ்ந்த மார்க்சியம் ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக ஏழை நாடுகளின் வரலாற்றை மட்டுமல்ல உலக மக்கள் வரலாற்றையே தடுத்து நிறுத்திவிட்டது என்று நாம் குற்றம் சாட்டுகிறோம்.

            எட்கார் தர்ட்டன் சென்ற நூற்றாண்டில் பார்ப்பனப் பெண்களின் பிற்பட்ட நிலையைப் பற்றித் தன் நூலில் கூறியிருப்பதைப் பார்த்தோம். ப-ர்.முத்துலட்சுமி சத்தியமூர்த்தியிடம் விட்ட அறைகூவலையும் கூறினோம். இவ்விரண்டுக்கும் அவர்கள் ஒரே தீர்வையே நாடினர். பார்ப்பனப் பெண்களும் ஆண்களும் இசை, நடனம் ஆகிய இரண்டையும் தீராப் பசியோடு கற்றனர். பார்ப்பனக் குமுகத்தின் தலைமையில் இருந்தவர்கள் இதற்கு ஆதரவளித்தனர். அதற்காக இசை வேளாளர்களாகிய இசை வல்லுநர்களையும் நட்டுவனார்களையும் பயன்படுத்திக் கொண்டனர். திரைத் துறையில் நுழைந்த தேவதாசிப் பெண்களைத் திருமணம் செய்வது அல்லது ″வைத்து″க் கொள்வது திரைத்துறையிலிருந்த பார்ப்பனருக்கு எளிதாக இருந்தது. கல்கி இதழ் உரிமையாளர் சதாசிவத்தின் இரண்டாம் மனைவி எம்.எசு.சுப்புலட்சுமி போன்ற புகழ்பெற்ற பெண்கள் தேவதாசி மரபிலிருந்து வந்தவர்கள் என்பது பலருக்குத் தெரியாது.

இன்று பார்ப்பனப் பெண்களாகிய ″நடனமணி″களும் ″இசையரசி″களும் ப-ர்.முத்துலட்சுமி விடுத்த அறைகூவலை வாய்ப் பேச்சின்றி ஏற்றுக்கொண்டு ″கலைப்பணி″ புரிந்துகொண்டிருக்கிறார்கள். உள்நாட்டிலுள்ளவர்களும் வெளிநாட்டிலிருந்து வருவோருமாகிய பெரிய மனிதர்களுக்குத் தம் கலைத்திறனாலும் பிறவகையாலும் இன்பமூட்டிக்கொண்டிருக்கிறார்கள். இது எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் 15 ஆண்டுகளில் இயன்றது? இதைப் புரிந்து கொள்வதற்குப் பார்ப்பனர்களின் ஒரு வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

            பார்ப்பனர்களை ″அறுதொழிலோர்″ எனும் மரபு தமிழில் உண்டு. ஓதல் - ஓதுவித்தல், வேட்டல் - வேட்பித்தல், ஈதல் - ஏற்றல் என்பவை அந்த ஆறு தொழில்கள்: தாங்கள் கற்றலும் பிறருக்குக் கற்பித்தலும், தாங்கள் வேள்வி செய்தலும் பிறரை வேள்வி செய்ய வைப்பதும், பிறருக்குக் கொடுத்தலும் பிறரிடமிருந்து பெறுதலும் என்று இவை பொருள்படும். இவற்றில் அவர்கள் பிறர் கற்பதைத் தடுப்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதுபோல் இவர்கள் எப்போதும் பிறரை வேள்வி செய்ய வைத்துப் பொருள் பெற்றுக் கொழுத்தவர்களே அன்றித் தங்கள் செலவில் எப்போதுமே வேட்டதில்லை. அதாவது வேள்வி செய்ததில்லை. அவர்கள் இரந்தறிவார்களேயன்றி ஈந்து அறியார்கள். பொதுவாக அரசுப் பணியாளர்களும் பூசகர்களும் புரோகிதர்களும் என்றுமே கைநீட்டி வாங்குவோர்களேயன்றி பிறருக்கு எதையும் வழங்குவதில்லை. இருப்பினும் பார்ப்பனர் என்ற வருணத்தாருக்கு என்றோ ஒரு நாள் குமுகம் வகுத்தளித்த கடமைகளாக இவற்றை நாம் கொள்வதில் தவறில்லை. இவற்றை மனதில் வைத்துத்தான் புத்தர், வள்ளுவர் முதல் பாவாணர் வரை ″உண்மையான பார்ப்பனர்″ அல்லது ″அந்தணர்″ என்ற வருணத்தாருக்கு இலக்கணம் கூறிவந்துள்ளனர்.

            ஆனால் இந்த வரையறைகளுக்குள்ளும் எல்லைகளுக்குள்ளும் பார்ப்பனர்கள் கட்டுண்டு கிடக்கவில்லை; கிடக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்களின் தோற்றப் பின்புலமே அத்தகையது. பார்ப்பனர்களாகிய பூசகர்களும் கோயிற் பரத்தைகளும் ஒரே ஒன்றியாகத் தோன்றி வளர்ந்தவர்கள். கோயில்களுக்கும் அதாவது மதங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் தோன்றித் தோன்றி மறைந்துள்ளன. அவ்வாறு கோயில்களின் செல்வாக்கு மங்கிய காலங்களில் பூசாரிகள் இந்தப் பரத்தையரை வைத்துத்தான் தங்கள் வயிற்றைக் கழுவி வந்துள்ளனர். அத்தகைய காலகட்டங்களாகத் தொல்காப்பியக் காலமும் கழக(சங்க)க் காலமும் விளங்கியுள்ளன. இந்த இலக்கியங்களில் நாம் பார்ப்பனர்களை வேறொரு வடிவில் காண்கிறோம். அதாவது காதலர்களுக்கிடையில் தூது செல்வோராக, குறிப்பாகப் பரத்தையர்களுக்கும் குடும்பத் தலைவர்களுக்கும் இடையில் இணக்கம் செய்வோராகப் பார்க்கிறோம். இதனைச் ″சந்து செய்தல்″ என்பர். எளிய மக்களை நடையில் கூறுவதாயின் கூட்டிக் கொடுத்தல் அல்லது மாமா வேலை செய்வோராக இவர்கள் காணப்படுகின்றனர். இந்தத் தொழில்தான் இவர்களைப் பெருமக்களிடமும் அரசர்களிடமும் நெருங்கவைத்தன. இதன் மூலமே இவர்கள் அரசில் உயர் பதவிகளைப் பிடிக்க முடிந்தது. அரசர்களாகவும் முடிந்தது. இவர்களின் இந்தச் செயலைக் கண்டிப்பதற்காகத் தான் திருவள்ளுவர்,
மறப்பினும் ஒத்துக் கொள்ளலாகும் பார்ப்பான் தன்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
 என்று கூறினார் போலும். வள்ளுவர்கள் என்போர் ஒரு காலத்தில் அரசர்களிடத்தில் பணியாற்றிய ஆள்வினையாளர்களாகும். தமிழ்க் குமுகத்தின் பல்வேறு அறிவியல் துறைகள் அவர்களின் கட்டில் இருந்தன. இன்று பறையர்கள் எனும் சாதியில் ஓர் உட்பிரிவாக அவர்கள் உள்ளனர். திருவள்ளுவர் பார்ப்பனரின் வரையறுக்கப்பட்ட கடமைகளை மீறிய செயற்பாட்டை மிக மென்மையாகக் கண்டிக்கிறாரேயன்றி வருணப் பாகுபாடு என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது திருக்குறளில் ஆங்காங்கே வெளிப்படுகிறது. அவர் அரசர்களிடம் பணிபுரியும் மக்கள் குழுவைச் சேர்ந்தவர் என்பதால்தான் இவர்களுடைய வரம்பு மீறலை எளிதாக விளங்கிக்கொள்ள முடிந்தது போலும்.

பொதுப் பெண்டிரோடுள்ள பார்ப்பனர்களின் இந்த உறவு இடையீடற்ற தொடர்ச்சியுடையது. அதனால்தான் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதும் பார்ப்பனத் தலைவர்கள் தம் சாதியினுள் எழுந்த சிறுசிறு எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் போர் வேகத்தில் செயற்பட்டுத் தங்கள் குலப்பெண்டிரை ″நடனமணி″ களாவும் ″இசைவாணி″களாகவும் ஆக்கி அவ்விடைவெளியை நிரப்ப முயன்று வெற்றியும் பெற்றுவிட்டனர். இவர்களது கலைத்தொழில் தொய்வின்றி நடக்க எண்ணற்ற ″அவைகளை″ (சபாக்களை)ச் சென்னையிலும் பிற நகர்களிலும் உருவாக்கி ஆண்டுதோறும் இசை, நடன விழாக்களை நடத்தி, அவர்களுக்கு எந்தக் குறையும் வராமல் குறைவும் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள். புதிது புதிதாக ″இசைமேளா″க்களையும் ″நாட்டிய மேளா″க்களையும் புகுத்துகின்றனர். தமிழ் மொழியில் இசையும் நாட்டியமும் வேண்டும் என்ற முழக்கத்தை எதிர்கொள்ள அதற்கும் அவர்களே தனியாக விழாக்களை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

            இக்கலைஞர்களில் பெரும்பாலோர் இசையும் நடனமும் கடவுள் தொடர்பானவை என்று கூறி ″மரபை″ மீறாமல் சென்று கொண்டிருக்க ஒரு சில பெண்கள் மட்டும் நம் இசை, நடனம் ஆகியவற்றின் உள் நுணுக்கங்களைப் புரிந்து கொண்டு மரபு மீறிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு இசை, நடனம் ஆகியவற்றில் தேவதாசிகளின் பங்கு முடிவுக்கு வந்து அவை கோயில்களை விட்டு வெளியேறி தமக்கென்று ஒருதனி அரங்கை அமைத்திருப்பது ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் ஒரு முன்னேற்றம்தான். இதற்காகப் பார்ப்பனர்களுக்கு அறைகூவல் விடுத்த ப-ர்.முத்துலட்சுமி அவர்களையும் அதை ஏற்று வெற்றிகண்ட பார்ப்பனர்களையும் நாம் பாராட்டலாம்.

            அது போலவே இசை, குறிப்பாக நாதசுர இசை, நட்டுவாங்கம் ஆகிய துறைகளில் புகழ்பெற்ற இசைவேளாளர்கள் முன்னாளைய இழிநிலை அகன்று அவர்கள் தங்களை இசைவேளாளர்கள் என்று பெருமையுடன் அறிமுகப்படுத்திக்கொள்ளும் நிலைக்கு உயர்ந்துள்ளார்கள். ஒரு நேரத்தில், தன்னைக் கார்காத்த வேளாளர் என்று ஏற்றுக்கொண்டால் அச்சாதியினருக்குச் சலுகைகள் தருவதாகப் பேரம் பேசியவராகக் கூறப்படும் கருணாநிதி இன்று இசைவேளாளர்கள் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு தானும் ஓர் இசைவேளாளர் என்று கூறிப் பெருமைப்படும் அளவுக்கு அவர்கள் வளர்ந்துள்ளது மகிழத்தக்கதுதான்.

            இன்று தேவதாசி மரபினர் பெருமளவுக்கு பரத்தைமைத் தொழிலிருந்து அகன்றுவிட்டனர். கோயில் மதிள்சுவருக்கு எதிரிலிருக்கும் மாடத் தெருக்கள் எனும் ஒற்றை வாடைத் தெருக்களில் வீட்டு வாயில்களில் வாடிக்கையாளர்களுக்குத் காத்து நின்றோர் இன்று இல்லை. பெண்கள் முறைப்படித் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆண்கள் பல்வேறு தொழில்களில் வளர்ச்சி பெற்றுள்ளனர். ஆணுறை, பெண்ணுறை, விற்பனைக்காக ″எயிட்சு விழிப்புணர்வு″ என்ற பெயரில் ஒற்று நிறுவனங்கள் நடத்தும் விலைமகளிர் ஊர்வலங்களில் இந்தப் பெண்கள் மிகுதியாக இருக்கமாட்டார்கள் என்று நம்பலாம்.

            இவ்வாறு ஏற்கனவே இருந்த தேவதாசி மரபினர் மறைந்துவிட்ட நிலையில் அம்முறையை மீண்டும் புகுத்த வேண்டுமென்ற ஒரு முயற்சியைக் காணும் போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. திருவருட் செல்வர் என்று அழைக்கப்படும் பொள்ளாச்சி ப-ர்.நா.மகாலிங்கம்தான் இக்கருத்தை முன்வைத்தவர். ஒரு மேடையில் அவர் வைத்த இந்த வேண்டுகோள் 10-01-1999 தினமணியில் வெளிவந்துள்ளது. இதை அவர் சொன்னதை விட அதிர்ச்சி தரும் உண்மை என்னவென்றால் மலிந்து கிடக்கும் ″பகுத்தறிவாளர்″களிடமிருந்தும் ″புரட்சியாளர்″களிடமிருந்தும் ஏன், பெண்ணுரிமை பற்றி மூச்சுப் பிடித்து முழங்கியும் தாள்கள் கிழிய எழுதியும் திரிகின்ற பெண் விடுதலையினரிடமிருந்தும் ஒரேயொரு எதிர்ப்புக் குரலை, ஒரு சிறு முணுமுணுப்பைக் கூட நம்மால் கேட்க முடியாமல் போனதுதான். இத்தகைய ஓர் உணர்விழந்த தன்மைக்கான காரணத்தை அலசும் முன் ஆலயம் என்ற நிறுவனம் குறித்த இன்னும் சில செய்திகளைப் பார்ப்போம்.

மடங்களைப் பற்றி முன்பு குறிப்பிட்டுள்ளோம். பெரும்பாலான மடங்கள் மிகப்பல கோயில்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அக்கோயில்களை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் ஒவ்வொரு மடத்தின் கீழும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நன்செய்யும் புன்செயுமாக உள்ளன. ஒரு கணக்குப்படி தமிழகத்திலுள்ள மொத்த நன்செய், புன்செய் நிலங்களில் கால்பகுதி கோயில்களுக்கும் மடங்களுக்கும் சொந்தமாக உள்ளன. கருணாநிதி - தமிழ்க் குடிமகன் கூட்டு முயற்சியால் ″மீட்கப்பட்ட″ நிலங்களையும் சேர்த்தால் இந்த விகிதம் கூடும். தஞ்சை மாவட்டம் போன்று நன்செய் நிலங்கள் மிகுந்த இடங்களில் ஒவ்வொரு வருவாய் ஊரிலும் வருவாய்த்துறை கணக்குப்பிள்ளை(முன்னாள் கர்ணம், இந்நாள் ஊர் ஆள்வினை அலுவலர் - வி.ஏ.ஓ.) ஒவ்வொரு கோயிலுக்கும் மடத்துக்கும் ஒவ்வொருவர், தவிர ஒவ்வொரு பண்ணையாருக்கும்(மிராசுதாருக்கும்) ஒருவர் என்று பல கணக்குப் பிள்ளைகள் உள்ளனர். குத்தகை உழவரிடமிருந்து வாரத்தைக் தண்டுவதே இவர்களது வேலை. அது போல் கோயில்களுக்கும் மடங்களுக்கும் சொந்தமான மனைகளிலிருந்தும் கட்டடங்களிலிருந்தும் கிடைக்கும் வாடகை வரும்படியையும் தண்ட வேண்டும். இவ்வகையில் ஒவ்வொரு மடத்துக்கும் ஒரு சிற்றரசுக்குச் சமமான வருமானம் உண்டு. இந்நிலப்பரப்பும் வருமானமும் அதன் மீது ஆதிக்கமும் உள்ள மடங்களின் தலைவர்களிடம் அதிகார வெறி தலைக்கேறுவதில் வியப்பில்லை. இந்தப் பெருஞ்சொத்தின் உடைமையாளராகிய மடங்களினுள் இடைவிடாத போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. கொலைகள் மிக இயல்பாக நடக்குமென்று கூறுவார்கள். கட்டளைத் தம்பிரான் என்பது மடத்திலுள்ள அதிகாரம் மிக்க ஒரு பதவி. அவர் மீது பகைமை கொண்ட கீழ்மட்ட அலுவலர்கள் அத்தகைய ஒருவரை எரியும் செங்கற் சூளைக்குள் சொருகிக் சாம்பலாகியது போன்ற எத்தனையோ கதைகள் தஞ்சை மாவட்டத்திலுள்ள மடத்து வட்டாரங்களில் உலவுகின்றன. நாம் முன்பு கூறிய அண்ணாத்துரையின் சந்திரோதயம் நாடகத்தில் கூட ஒரு மடத்தலைவரை ″அகற்ற″ அவரது கீழுள்ளவர்கள் செய்த சூழ்ச்சியே கதையின் முகாமையான கருவாகும்.

மடத்தின் அளப்பரிய செல்வம் தரும் சொகுசான வாழ்க்கையால் உடல் மதர்த்துக் கிடக்கும் மடத் தலைவர்களுக்கு உடல் தினவைத் தீர்த்துக் கொள்ளப் பெண்ணுறவு தேவைப்படுகிறது. அதுவும் கலவி(உடலுறவு)யின் போது விந்து வெளிப்படாமல் ஆண்குறி நீண்ட நேரம் விறைப்பாயிருக்க வேண்டுமென்பதற்காக, ″நீடித்த இன்பத்துக்காக″ அவர்கள் தங்க நீறு (தங்கபற்பம்) உண்டனர். அதே நோக்கத்துக்காகவும் உடல் பொன்னிறம் பெற வேண்டுமென்பதற்காகவும் தங்கத் தட்டில் உணவுண்டனர். மடத்துக்கு உட்பட்ட ஊர்களில் அழகான பெண்கள் கண்ணில்பட்டால் அவர்கள் மடத் தலைவரின் படுக்கையறைக்குக் கொண்டு வரப்படுவார்கள். பணம் வேலை செய்யாவிட்டால் கடத்தல், கொலைகளுக்கும் அவர்கள் தயங்குவதில்லை. தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரு மதத் தலைவர் ஒரு பெண்ணைக் கடத்திக் கற்பழித்துக் கொலை செய்துவிட்டதாகத் தளைசெய்யப்பட்டு ஓர் அமைச்சரின் தலையீட்டால் விடுதலையானர். புகழ்பெற்ற குன்றக்குடி அடிகளார் இரு பெண்களிடம் தவறாக நடந்ததாக அவர் மீது வழக்கு வந்ததும் உண்டு. இவையெல்லாம் ″திராவிட″ மதத்தலைவர்கள் மீது ″ஆரிய″ப் பார்ப்பனர் சுமத்தும் வீண்பழி என்று அப்போது அமைதி கூறினர். மதத் தலைவர்களின் அட்டூழியங்களைக் கதைக் கருவாகக் கொண்டு ரங்கராசன் எனும் ஓர் எழுத்தாளர் அந்நாளில் புதினங்கள் எழுதினார். அத்தகைய ஒரு புதினத்தின் திரை வடிவம்தான் சவுக்கடி சந்திரகாந்தா.

தமிழகத்தில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சான்றோரில் தலையானவராகிய திரு.வி.க. மடத் தலைர்களின் இழி செயல்களை மிகவும் வெறுத்துக் கடிந்து எழுதினார். அவர்களை ″மடத்தடிகள்″ என்ற சொல்லாலேயே குறித்தார். (மடத்து அடிகள் என்றும் மடத்தடியன்கள் என்றும் இரு பொருள் கொள்ளும்படி இச்சொல் அமைந்திருந்தாலும் இரண்டாவது பொருள்தான் திரு.வி.க.வின் குறி.) இவ்வாறு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மடங்களும் அவற்றின் தலைவர்களும் மக்கள் மனதில் மிக இழிவான இடத்தையே பிடித்திருந்தனர். இந்த இழிநிலையிலிருந்து அவர்களை மீட்டவர் ″தந்தை″ பெரியார்.

            பார்ப்பனர் மீது தாக்குதலைத் தொடங்கிய பெரியாருக்கு மாலியம்தான் பார்ப்பனர்களின் காவல் அரண் என்ற கருத்தை விதைத்துச் செய்திகளையும் வழங்கியவர்கள் சிவனிய வெள்ளாள அறிஞர்கள். அந்தத் தடத்தில் சென்று கொண்டிருந்த பெரியார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை,. ஒரு நாள் திடீரென்று சிவனியமும் பார்ப்பனர்களைத் தூக்கிப் பிடிக்கிறதென்று தாக்கினார். இதில் நிலைகுலைந்து போன சிவனிய வெள்ளாளர்களுக்கும் பெரியாருக்கும் முரண்பாடுகள் முற்றி உறவுகளை அறுத்துக் கொண்டனர். அந்த உறவைப் புதுப்பிக்கத் தொடங்கியவர் பெரியார்தான். சிவனியர்களின் தலைவராக மதிக்கப்பட்ட மறைமலையடிகளின் கட்டுரையொன்றைக் குறைகூறித் திறனாய்வு செய்து இந்து ஆங்கி இதழ் எழுதிய போது மறைமலையடிகளுக்கு ஆதரவாகத் தன் இதழ்களில் எழுதியதன் மூலம் இதை அவர் தொடங்கினார். 1937இல் ஆச்சாரியார்(இராசாசி) புகுத்திய கட்டாய இந்தியை எதிர்த்துச் சிவனிய வெள்ளாளத் தலைவர்கள் தொடங்கிய போராட்டத்தில் பெரியாரின் தன்மான இயக்கம் கலந்துகொண்டது. பெரியார் சிவனிய மடத் தலைவர்களை நோக்கி நேரடியாகவே வேண்டுகோள் விடுத்தார். ″இந்தச் சமயத்தில் தைரியமாய் முன்வந்து உங்களாலான காசு உதவுவதோடு உங்களிடம் பக்தி விசுவாசம் காட்டுபவர்களை எங்களிடம் விரட்டி விடுங்கள்″ என்று. இந்த இந்திப் போராட்டம் பற்றிப் பெரியார் பின்னாளில் குறிப்பிட்ட போது, அது மொழிக்காக நடத்தப்பட்டதல்ல. அரசியல் நோக்கத்துடன் நடைபெற்றது என்று கூறினார். ″காசு″ மடத்தடிகளிடம் நிறையவே உள்ளது. ஏற்கனவே தன்மான இயக்கத் தொண்டர்கள் கோயில் சொத்துகளைப் பிடுங்க வேண்டும், கோயில்களையும் கோபுரங்களையும் தேர்களையும் வெடிவைத்துக் தகர்க்க வேண்டுமென்று குமுறிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் காசு கேட்டுப் பெரியார் வந்தது அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியான நிகழ்ச்சி![1]

            இப்போது ″ஆரிய″ப் பார்ப்பனராகிய சங்கராச்சாரிக்கு எதிராகத் ″திராவிடராகிய″ ″நம்மவராகிய″ சிவனிய மடத் தலைவர்களைப் பெரியார் நிறுத்தினர். இதில் அவருக்கு ″ஆரிய - திராவிட″க் கோட்பாடு மிக உதவியாக இருந்தது. அத்துடன் ″புரட்சித் துறவி″ என இன்று அறியப்பட்டிருக்கும் குன்றக்குடி அடிகளார் மடத் தடிகளின் சார்பாளராக நெருங்கிச் செயற்பட்டார். இறைமறுப்பு இயக்கமான தன்மான இயக்கத்தில் துடிப்பு மிக்க தொண்டராக இருந்து செல்வம் புரளும் குன்றக்குடி மடத்தின் தலைமைப் பதவி கிடைத்ததும் கொள்கையை உதறி அப்பதவியை ஏற்றுக்கொண்டவர் அவர் என்று அந்நாளில் கூறுவர். எனவே முற்போக்கு - பகுத்தறிவு முகத்தை ஒரு புறமும் ஆன்மீக முகத்தை இன்னொரு புறமும் காட்டும் கலை அவருக்கு எளிதில் கைவந்தது. ″புரட்சி செய்து″ பொதுமையை நிலைநாட்டுகிறோமென்று வீரார்ப்புப் பேசிய பொதுமைக் கட்சியினர் இந்தச் சாமியாரிடம் அடைக்கலமாகி அவருக்கு மேடையமைத்துக் கொடுத்து அவரைப் புகழின் உச்சாணிக் கிளையில் ஏற்றினர்.

            ஒரு மேடையில் குன்றக்குடி அடிகளின் காலில் பெரியார் விழுந்து வணங்கியதாகவும் அது பற்றிக் கேட்ட போது, பார்ப்பனரான சங்கராச்சாரியின் காலில் ″நம்மவர்″ மானங்கெட்டு விழுந்து எழும்போது ″நம்மவரான″ அடிகளின் காலில் தான் விழுந்து நம்மவரின் மானத்தைக் காத்தேன் என்றாராம். மேடையில் அவரிடம் திருநீறு பெற்றுப் பூசிக்கொண்டுப் பின்னர் அழித்தாரம். கேட்டதற்கு, ″நம்மவராகிய″ அடிகளார் கொடுத்ததை நெற்றியிலிட்டேன்; பின்னர் கொள்கைப்படி அழித்துவிட்டேன் என்றாராம். பெரியாரின் இடைவிடாத நீண்ட நெடும் கருத்துப் பரப்பலுக்குப் பின்னும் இன்று சமய வெறி, சாதி வெறி தலைவிரித்தாடுகிறதே என்று மனம் அயரும் நேர்மை நெஞ்சங்களுக்கு நாம் சொல்லும் செய்தி என்னவென்றால், பெரியார் மேம்போக்காகச் சமயத்துக்கும் கடவுளுக்கும் எதிராக வீரார்ப்பான கருத்துகளைச் சொன்னாலும் நம் சமயத்தின், கோயில் என்ற நிறுவனத்தின் அடித்தளமாக நின்று அந்நிறுவனத்தை அழியாமல் காக்கும் பொருளியல் அடித்தளத்தை, அதாவது மடங்களையும் கோயில் சொத்துகளையும் காப்பதில் அவர் முனைப்பாக இருந்ததுதான் இன்றைய அவல நிலைக்குக் காரணம் என்பதாகும். ஒரு குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்தி அது பரவலான ஏற்பைப் பெறும் போது அதற்கு எதிரான ஒரு கருத்தின் கரு அதே மக்களிடையில் தோன்றி வளரும் என்பது இயங்கியல். குமுகத்தின் பொருளியல் குமுகியல் அடித்தளத்தில் மாற்றம் எதுவும் நிகழாதிருந்தால் இந்த எதிர்க் கருத்து முன்பு இருந்த ஒரு கருத்தின் மாற்றமில்லாத மீட்சியாகவே இருக்கும். அடித்தளத்தில் புரட்சிகர மாற்றம் நிகழ்ந்திருந்தால் புதிதாகத் தோன்றும் கருத்தும் முந்தியதிலிருந்து புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டிருக்கும். தமிழகத்தில் பெரியார் சாதி, சமயம் ஆகியவற்றின் பொருளியல் அடித்தளத்தை அழித்துப் புதிய ஒரு பொருளியல் அடித்தளத்தை உருவாக்க முயலவில்லை என்பதுடன் பழைய அடித்தளத்தை அலுங்கமல் குலுங்காமல் காப்பாற்றுவதில் மிகவும் குறியாயிருந்தார் என்பது முகாமையானது. இன்று மூலைக்கு முலை, தெருவுக்குத் தெரு திடீர் திடீரென்று ″மகான்கள்″ தோன்றிக் கோடி கோடியாகக் குவிப்பதும் கோயில்களைக் கட்டுவதும் காணிக்கைகளைக் குவிப்பதும்தான் முழுமையான உள்நாட்டுத் தொழிலாக வளர்ந்துள்ளதும் பெரியாரின் ஒரு பக்கச் சார்பான அறைகுறைச் செயற்பாடுகளின் விளைவுதான் என்பதைத் தோழர்கள் உணர வேண்டும்.

இனி, கோயில் சொத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். கோயில்களுக்கும் மடங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் பெருமளவு சொத்துக்களை அரசர்கள் வழங்கினர். மக்களும் கொடைகள் வழங்கினர். இந்தக் கொடைகள் எல்லாம் செப்புப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் பதியப்பட்டன. இந்நிலங்கள் உழவர்களிடம் குத்தகைக்கு விடப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வாரம் கோயில் பராமரிப்பு, திருவிழா போன்றவற்றுக்குச் செலவிடப்பட்டன. ஆனால் அவ்வப்போது கோயில்களும் அரசுகளும் வலிமையிழந்து செல்வாக்கிழந்த போது அல்லது கோயில்களுக்கும் அரசுகளுக்கும் உள்ள உறவு தொய்வடைந்த போது இந்த வாரத்தை உழவர்கள் செலுத்துவதில்லை; நிலத்தைத் தங்கள் சொந்தச் சொத்தாக வைத்துக்கொண்டனர். கோயில்களும் அரசுகளும் மீண்டும் வலிமை பெற்று அவர்களது உறவும் நெருக்கம் பெற்ற போது கோயில் சொத்துக்கள் ″மீட்க″ப்பட்டன. அவ்வாறு மீட்கப்பட்ட போது வெளியிடப்பட்ட பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் அந்தக் ″கொடைகளை″ மீறுவோர் மீது வசைகளும் சாபங்களும் கூறப்பட்டுள்ளன. மீறுவோர் பெற்ற தாயைப் புணர்ந்த குற்றத்தைச் செய்வோராவர் என்று மனமும் நாவும் நினைக்கவும் சொல்லவும் கூசும் இழிமொழிகள் பதியப்பட்டுள்ளன. இவை மக்களுக்கும் அரசு - கோயில் இணைந்த ஒடுக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் இருந்த வெறுப்பையும் பகையுணர்வையும் வெளிப்படுத்தும் சான்றுகள் மட்டுமல்ல, மக்களின் முன் இந்நிறுவனங்கள் அவ்வப்போது எய்திய கையறு நிலையையும் காட்டுகின்றன.

            வெள்ளையர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றிக்கொண்டிருந்த காலத்தில் கூட கோயில்கள் அவர்களில் சிலரைக் கைப்பிடிக்குள் கொண்டு வந்து நிலக்கொடைகளைப் பெற்றுள்ளன. நாட்டைக் கைப்பற்றுதல் முழுமையான போது கோயில்களின் வலிமை குன்றியது. உழவர்கள் அளந்த வாரம் குறைந்தது. அப்போதும் செல்வாக்குள்ள பல கோயில்களுக்கு வரும்படி தாராளமாகவே இருந்தது. அத்துடன் திருவிழாக் காலங்களில் உள்ளூர் வாணிகக் குழுக்களும் சாதியமைப்புகளும் ஆளுக்கொரு நாள் ″மண்டகப்படி″ என்ற பெயரில் திருவிழாச் செலவுகளை ஏற்றுக்கொண்டனர். தேரோட்டம் தெப்பத்திருவிழா செலவுகள் கோயில் வரும்படியிலிருந்து செய்யப்பட்டன. மீதி வருமானமெல்லாம் அன்றாடப் பூசைகளுக்கு என்ற பெயரிலும் வேறு வகைகளிலும் கோயில் பெருச்சாளிகளைக் சென்றடைந்தன.

கோயில் நிலங்களைக் குத்தகைக்குப் பயிரிட்டு வந்த மக்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட மக்கள். அவர்களுக்குக் கோயில்களுக்குள் நுழையும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. தங்களது உழைப்பைச் சுரண்டுவதால் நடைபெறும் இக்கோயில்களில் நுழையும் உரிமையில்லாமலிருப்பது இம்மக்களை வருத்தியது. வாரத்தை அவர்கள் அளக்காமலிருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இந்த மனநிலையில் மாற்றம் கொண்டு வரத்தான் தமிழகத்திலுள்ள பார்ப்பனத் தலைவர்களில் சிலர் முன்னின்று ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தினர்.
           
கோயில் நிலங்களைப் பயிரிடும் உழவர்கள் கோயில்களிலிருந்து நேரடியாக நிலங்களைப் பெறுவதில்லை. கோயில்களை அண்டியிருக்கும் மேற்சாதியினர் பெரும்பரப்பு நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து உட்குத்தகையாக உழவர்களுக்கு விடுவார்கள். அவர்களிடமிருந்து வாரத்தைத் தாம் சரியாகப் பெற்றுவிட்டுக் கோயில்களுக்குப் பட்டை நாமத்தைச் சார்த்தி வந்தார்கள். இதை முறைப்படுத்துவதற்கென்று உருவாக்கப்பட்டதுதான் இந்துசமய அறநிலையத் துறை. 1947 இல் சென்னை மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஓமந்தூரார் எனப்படும் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரால் இத்துறை அமைக்கப்பட்டது . அதுவரை கோவில் பெருச்சாளிகளால் சுரண்டப்பட்ட கோயில் வருமானத்தில் பங்கு போட இப்போது புதிதாக அதிகாரிகள் வந்தனர்.

            இந்து சமய அறநிலையத் துறை செயலுக்கு வந்த பின் அதன் கீழிருந்த கோயில்களின் எண்ணிக்கை மளமளவென்று வளர்ந்தது. தனிப்பட்ட குடும்பங்கள், சாதிகள் மற்றும் ஊர்களின் பொறுப்பிலிருந்த கோயில்களின் பொறுப்பாளர்கள் அல்லது அறங்காவலர்களுக்குள் முரண்பாடுகளும் மோதல்களும் உருவாகும் போது அதனைத் தீர்த்து வைக்க அவர்கள் இந்தத் துறையை நாடுவர். அப்பத்தைப் ″பங்கு போட்ட″ குரங்கு போல் துறை அக்கோயில்களின் ஆட்சியைத் தன்னிடம் எடுத்துக்கொள்ளும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் உள்ள கோயில்களையும் தன் ஆட்சியினுள் கொண்டு வந்தது. ஆனால் வலுவான சாதிப் பின்னணியுள்ள கோயில்களில் இந்த உத்தியைக் கையாளமல் ″நீக்குப் போக்குடன்″ நடந்துகொண்டது. இந்த நிலையில் இறைமறுப்பாளர்கள் என்று அறியப்பட்ட தி.மு.க.வினரின் ஆட்சி வந்தது. தி.மு.க.வின் முதல் அறநிலையத் துறை அமைச்சராக வந்த நெடுஞ்செழியன் ″அமைச்சர் என்ற முறையில்″ கோயில்களுக்குச் சென்றார். அவரைப் பூசாரிகள் ″பூரண கும்ப மரியாதை″ செய்து வரவேற்றனர். பின்னர் இந்த ″வரிசை″யை(மரியாதையை) அண்ணாத்துரையும் ஏற்றார். தலைவர்கள் கோயில்களுக்குள் நுழைந்ததும் தொண்டர்கள் சும்மாவா இருப்பார்கள், அவர்களும் நுழைந்தனர். கோயில்களின் சொத்துக்களைக் கோயில்களிலிருந்து பெற்று உட்குத்தகைக்குவிடும் இடைக் குத்தகையாளர்கள் அடிக்கும் கொள்ளை இவர்கள் கண்களைக் கவர்ந்தது. எனவே அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தக் குத்தகையைக் கைப்பற்றினர். ஏற்கனவே பேரவை ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிலவுச்சவரம்பு, குத்தகை ஒழிப்புச் சட்டங்களிலிருந்து கோயில் நிலங்களுக்கு விலக்களிக்கப்பட்டிருந்தது. ″பகுத்தறிவு″ பேசிய திராவிட இயக்கத்தினரும் ″புரட்சி″ பேசிய பொதுமையினரும் இதனைக் கண்டுகொள்ளவே இல்லை. பெரியாரின் வழி வந்தவர்களும் பார்ப்பனர் மற்றும் வெள்ளாளர்களும் அடங்கிய ″புரட்சியாளர்″களும் கண்டுகொள்ளாததில் வியப்பதற்கு எதுவுமில்லை. இந்த விலக்குகளெல்லாம் இப்போது நன்றாகப் பயன்பட்டன.

            கோயிலிலிருந்து குத்தகை பிடித்து உட்குத்தகை விட்டுப் பயிரிடும் உழவர்களிடம் மல்லுக்கட்டிப் பின்னர் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் அறங்காவலர்களுக்கும் ஈடுகொடுத்து ஆதாயம் பார்ப்பதை விட நேரடியாகக் கோயில் ஆள்வினை(நிர்வாக) அமைப்பினுள் நுழைவது நல்லதில்லையா? எனவே கோயில்களிலுள்ள மரபு அறங்காவலர்களுக்குள் பூசல் ஏற்பட்டால் அவர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ஆளும் கட்சியினர் நுழைந்தனர். அறங்காவலர் இல்லாத இடங்களில் முதலில் தக்கார் என்ற பெயரிலும் பின்னர் அறங்காவலர் என்ற பெயரிலும் இவர்கள் நுழைந்தனர்.

            இறைமறுப்பாளர்கள் என்று பொதுவாகக் கருதப்படும் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கோயில் ஆட்சியமைப்புக்குள் புகுவது பெரும் முரண்பாடாகத் தோன்றுமல்லவா? ஏற்கனவே ″சயமச் சான்றோர்கள்″ மற்றும் ″ஆன்மிகச் சான்றோர்கள்″தாம் கோயில் அறங்காவலர்களாக வேண்டுமென்ற குரல் எழத்தொடங்கி விட்டது. இதனை எதிர்கொள்ளக் களத்திலிறங்கினார் ″மானமிகு″ இராம. வீரப்பன்.

            ம.கோ. இரா. காலத்தில் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் அமைச்சர் பொறுப்பிலிருந்த இராம. வீரப்பன் பெரியாரின் கீழ் நேரடியாகத் தான் இயக்கப் பணியாற்றியதாகப் பெருமை பேசுபவர். அத்தகையவர் பட்டி தொட்டிகளெல்லாம், தமிழகத்தின் மூலை மூடுக்குகளெல்லாம் மேடை போட்டு பெரியாரின் இறைமறுப்புக் கொள்கையை நார் நாராகத் கிழித்தெறிந்தார்., கருணாநிதி இருந்த ஒரு மேடையில் பெரியாரின் இறைமறுப்புக் கொள்கை இன்று செல்வாக்கிழந்துவிட்டது என்ற உண்மையை நடிகர் ரசனிகாந்த் சுட்டினார் என்பதற்காகப் போர்க்கோலம் பூண்ட வீரமணிகள் அன்று வாய் பொத்தித் தலைகவிழ்ந்து இருந்ததேன் என்பதை தோழர்கள் நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். இதற்குக் காரணம் வீரப்பனின் தாக்குதலின் பின்னணியில் தங்களுக்கு உறுதிப்பட இருக்கும் கோயில் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருமானம்தானே! பெரியாரின் அணுகலுக்கு இசைந்ததுதானே இதுவும்!

            இவ்வாறு கோயில் சொத்துக்களின் வருமானத்திலிருந்து பேரவைக் கட்சி, ″திராவிட மரபினர்″, ″பொதுமைப் புரட்சியாளர்கள்″ என்று அனைவருக்கும் பங்கு கிடைத்துவிட்ட நிலையில் புதிதாக ஒரு குழுவினர் அதே பழைய பல்லவியை, ″கோயில் சொத்துகளைச் சமயச் சான்றோர்களும் ஆன்மிகச் சான்றோர்களும் அடங்கிய குழுவின் பொறுப்பில் விட வேண்டும்″ என்ற பல்லவியைப் பாடினர். அவர்கள் வேறு எவருமல்ல. நடுவணரசில் பதவி நாற்காலியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த ப.ச.க. படையினர். அதுவும் அவர்கள் தில்லி அரியணையில் அமர்ந்த பின்பு சிக்கல் முனைப்படைந்தது. இந்தப் போட்டியை எதிர்கொள்ளவதற்காகத்தான் ″தமிழில் வழிபாடு″ என்ற முழக்கம் திடீரென்று முன்வைக்கப்பட்டது. இதை முன்னின்று தொடங்கி வைத்தவர் தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் ″மாவீரன்″ பழ. நெடுமாறனாகும்.

            பழ. நெடுமாறன் ″திராவிட மரபில்″ நன்கு ஊறியவர், தி.க., தி.மு.க., சம்பத்தின் தமிழ்த் தேசியக்கட்சி, பேரவைக் கட்சி என்றும் பின்னர் காமராசர் பேரவைக் கட்சி, இறுதியில் தமிழ்த் தேசிய இயக்கம் என்ற சொந்தக் கட்சியிலும் இருந்து ஒரு சுற்று வந்தவர். 1989 இல்″தமிழ்″ இயக்கங்களை இணைத்துத் தமிழ்த் தேசிய இயக்கம் அமைக்க முயன்ற போது அவர் முன்வைத்த செயல்திட்டங்களில் ஒன்று கோயில் சொத்துக்களைப் ″பறித்து″க்கொண்டவர்களிடமிருந்து அவற்றை ″மீட்க″ வேண்டுமென்பது. ″தமிழ்த் தேசியத்து″க்கும் இந்தத் திட்டத்துக்கும் என்ன தொடர்பு என்று ″தமிழ்″ இயக்கங்களைச் சேர்ந்த பலரும் குழம்பினர். அந்த ஆண்டில் நடந்த தேர்தலில் தன் கட்சியை அவர் களத்திலிறக்கினார். தமிழக மக்கள் அவரைச் சீண்டவில்லை. அதற்காக அவர் அயர்ந்துவிடவில்லை. ஆனால் களத்திலிறங்கிப் பெரும் கருத்துப் பரப்பல் அல்லது போராட்டங்களை நடத்தினாரா? அதுதான் இல்லை! மாறாக முழு மூச்சில் விடுதலைப் புலிகளின் பரப்புநராக மாறிவிட்டார். அதற்காகவே அவர் ″தமிழ்″ இயக்கங்களை அணைத்துக் கொண்டு செயற்படுகிறார்.

            கோயில் சொத்துக்களை ″மீட்பது″ என்று அன்று கூறியதும் ″தமிழில் வழிபாடு″ என்று சிவனிய மடங்களின் சார்பில் போராடுவதும் அவர் சிவனிய வேளாளர் என்பதால் மட்டுமல்ல, அம்மடங்களின் பிடியிலிருக்கும் ஏராளமான சொத்துக்களின் பின்னணியிருப்பதாலும்தான். சொத்துக்கள் கொஞ்சமா நஞ்சமா? தமிழகத்தின் விளைநிலங்களில் கால்வாசிக்கும் மேலே! ஆயிரங்கோடிகள் போன்ற கணக்குகளுக்குள் எல்லாம் இது அடங்காது. நூற்றுக்கணக்கான கோடி உரூபாய்களை மக்கள் பணிகளுக்கென்று செலவிடும் புட்டப்பிரித்தி சாயிபாபாவிடம் உள்ள ஆயிரக்கணக்கான கோடி உரூபாய்கள் பெறும் சொத்துக்கள் இந்த மடங்களின் சொத்துக்களுடன் ஒப்பிடும்போது கால்தூசிக்கும் வராது. ஆனால் அந்த புட்டபிரித்தி சாயிபாபா கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் இந்தியக் குடியரசுத் தலைவர்களும், தலைமை அமைச்சர்களும் இந்தச் சிவனியப் பண்டாரங்களை ஏன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை? காரணம், தமிழகத்தில் அவர்களது போட்டியாளர்களான பார்ப்பனரின் செல்வாக்கு தில்லியில் கொடிகட்டிப்பறப்பதுதான். இதே காரணத்தால்தான் இவர்கள் அவ்வப்போது ″தமிழ்த் தேசியம்″ பேச வேண்டியுள்ளது.

″தமிழில் வழிபாடு″ போராட்டத்தில் ஈடுபட்ட பண்டாரங்களுடன் இணைந்து போராடுவதற்கென்று சில தமிழ் ஆர்வலர்கள் முன்வந்த போது அவர்களையெல்லாம் இறைமறுப்பாளர்களென்று குற்றம் கூறி ஒதுக்கித் தள்ளியுள்ளனர். இதுவே அவர்களது இந்த ″மொழிப் போராட்டத்தின் உள்ளரங்கத்தை வெளிப்படுத்துகிறது. தங்கள் சொந்தக் கோயில்களில் தமிழ் மட்டும்தான் வழிபாட்டு மொழி என்று அறிவிக்க முன்வராத இந்தப் பண்டாரங்கள் யாரைப் பார்த்துத் தமிழில் வழிபாடு வேண்டும் என்று கேட்டார்கள்? ஆனால் இப்படி ஒரு கேள்வி கேட்க எந்தத் ″தமிழ்″ இயக்கத்தாருக்கும் துப்பில்லையே என்பதுதான் நம் கவலை. நம் இளைஞர்களின் அறிவு வளமும் சிந்தனைத் திறனும் இவ்வளவு வரண்டு கிடக்கின்றனவே என்பது நம்மைத் துயரிலாழ்த்துகிறது.

            இறுதியில் நெடுமாறன் கோயில்களின் முன் ″கருத்துக் கணிப்பு″ நடத்தினார். அவ்வாறு ″கணிப்பு″ நடத்திய அனைத்துக் கோயில்களிலும் அடியவர்களில் (பக்தர்கள்) 95 நூற்றுமேனியினருக்குக் கூடுதலானோர் ″தமிழ் வழிபாட்டுக்கு″ ஆதரவு தெரிவித்தனர் என்று முடிவும் கூறப்பட்டது. இருப்பினும் எந்த முடிவும் எய்தப்படாமல் இந்தப் போராட்டம் திடீரென மாயமாய் மறைந்துவிட்டது. ″தமிழ்″ இயக்கங்களும் பேசாமல் இருந்துவிட்டன. என்னதான் நடந்திருக்கும்? நமக்குத் தெரிந்த வரையில் இதுதான் நடந்திருக்கும்; பா.ச.க. சார்பில் சிலருக்கு கோயில் அறங்காவலர் குழுக்களில் இடம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதாவது அடிக்கும் கொள்ளையில் பங்கு அவ்வளவுதான். இதுதான் நம் நாட்டில் நடைபெறும் அரசியல், குமுகியல், மொழியியல், பண்பாட்டியல் ″போராட்டங்களின்″ இலக்கும் முடிவும். இது போன்ற ஏமாற்றுகளுக்குத் துணை நிற்போர் நம் ″தமிழ்″ இயக்கத்தினர். இது இந்த இயக்கங்களின் ஏமாளித்தனமா அல்லது ஏமாற்றும் தந்திரமா? இரண்டும் உண்டு. இளைஞர்களில் பெரும்பாலோர் ஏமாறுகின்றனர்; முதியவர்களில் பெரும்பாலோர் ஏமாற்றுகின்றனர். இவர்களிலுள்ள நேர்மையாளர்கள் தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் அவர்கள் பேசும் தமிழ் மொழிக்கும் ஏற்றம் பெற்றுத்தர வேண்டும் என்று ஏங்குகின்றனர். ஆனால் அதற்குத் தேவையான விரிவான அறிவையோ கூர்மையான ஆய்வையோ தெளிவான சிந்தனையையோ வளர்த்துக் கொள்ளவும் கடுமையான போராட்டங்களைச் சந்திக்கத் தங்களை ஆயத்தப்படுத்தவும் தேவையான துணிவும் முயற்சியும் இல்லாதவர்கள். எனவேதான் போலித் தலைவர்கள் காட்டும் எளிய வழிகளை நாடி ஓடுகின்றனர். அதனால்தான் இப்போலித் தலைவர்கள் வகுத்தளித்துள்ள மொழி மூதன்மைக் கோட்பாடு இவர்களுக்கு உகந்ததாகப்படுகிறது.

            பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையிடம் வேறொரு பொம்மையைக் காட்டிப் பழைய பொம்மையை அது அறியாமலே அகற்றி விடுவதுபோல் ″தமிழில் வழிபாடு″ என்பவர்கள் திடீரென்று ″தமிழ் பயிற்றுமொழி″ என்பார்கள், ″தமிழ் ஆட்சி மொழி″ என்பார்கள், ″ஈழத்தமிழர்″ என்பார்கள், ″மரணதண்டனை ஒழிப்பு″ என்பார்கள் ″கணினித் தமிழ்″ என்பார்கள். இவர்களும் அவர்கள் காட்டிய திசையெல்லாம் ஓடி ஓடிக் களைப்பார்கள். குழந்தைகள் சிறுகச் சிறுகத் தங்கள் அறிவை விரிவுபடுத்தித் தாமாகச் சிந்திக்கும் திறனைப் பெற்றுவிடுகின்றனர். ஆனால் இந்த இளைஞர்கள் அத்திறனை பெற்றிருக்கின்றனரா என்ற ஐயம் நமக்குள்ளது. இவர்கள், மார்க்சியத் திரிபான பாட்டாளியக் கோட்பாட்டையும் ″திராவிட″ ஏமாற்றான பார்ப்பன எதிர்ப்பையும் மிக மிக மேம்போக்கான ″தமிழ் உணர்வை″யும் தமிழ்த் தேசியம் என்று குழம்பி நிற்கின்றனர். தேசிய ஒடுக்குதலின் இலக்கு பொருளியல் சுரண்டலே; அப்பொருளியல் சுரண்டலுக்கெதிராக உள்நாட்டின் அனைத்து வளங்களையும் உள்நாட்டு மக்களின் நலனுக்குப் பயன்படும் வகையில் நம் உள்நாட்டுப் பொருளியலை மாற்றியமைப்பதற்கான போராட்டம்தான் உண்மையான தேசியப் போராட்டம் என்பவற்றை அறிய மறுக்கின்றனர். உண்மையில் இது கடினமான போராட்டம் என்பதால்தான் தயங்குகிறார்களா அதனால்தான் அவர்களது உள்மனம் இத்தகைய ஏமாற்றுச் சிந்தனைகளை ஏற்குமாறு அவர்களைத் தூண்டுகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது.

இராம. வீரப்பனால் முடுக்கிவிட்பட்ட கோயில் சொத்து ″மீட்பு″ இயக்கத்தின் பின்னணியில் ஒரு பெரும் ″வரலாற்று ஆய்வு இயக்கம்″ நடைபெற்றது. கல்வெட்டாய்வு என்ற பெயரில் பாழடைந்து இடிந்து குட்டிச் சுவராகி நின்ற பழைய கோயில்களில் கல்வெட்டுகளைத் தேடியலைந்தது ஒரு கூட்டம். அக்கல்வெட்டுகளில் அக்கோயில்களுக்கு அரசர்களும் சிற்றரசர்களும் தனியாட்களும் பிறரும் எழுதி வைத்த சொத்துக்கள் யாவை, அவற்றின் அமைவிடங்கள் யாவை என்று இக்கூட்டம் தேடியது. இந்த இயக்கத்துக்கு வேகமூட்டியவர் தமிழறிஞர் இராசமாணிக்கனார் மகனும் மருத்துவப் பண்டிதருமான ப-ர். இரா.கலைக்கோவன். இராசமாணிக்கனார் வரலாற்றுப் பேரவை என்ற பெயரில் அவர் செயற்படுகிறார். அவரைப் போல் தமிழகம் முழுவதும் பல்வேறு குழுக்கள் இயங்குகின்றன. இவர்களில் பெரும்பாலோர் சிவனிய வேளாளர்களுமாவர். வெளிநாட்டுப் பணத்தில் புரளும் கிறித்துவர்கள் சிலரும் இவ்வாய்வுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது சிந்திக்க வேண்டிய செய்தி. இராம.திரு.சம்பந்தம் ஆசிரியராக இருக்கும் தினமணி நாளிதழ் ஒரு கட்டத்தில் இரண்டாம் பக்கத்தை இந்த ″ஆய்வு″ச் செய்திகளை வெளியிடுவதற்கென்றே ஒதுக்கியது. இவர்கள் ″ஆய்வு″ எவ்வளவு ″நுண்மையாக″ச் செயற்படுகிறது என்பதற்கு ஒரு சான்று. ஓர் ஊரில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. அதில் அவ்வூரின் பண்டைப் பெயர் கிடைத்தது. இந்த ஊரை அவர்கள் நெடுநாட்களாகத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலிருக்கும் கல்வெட்டொன்றில் அக்கோயிலுக்குச் சொந்தமான ஊர்களின் பட்டியல் உள்ளது. அதில் இந்த ஊரை மட்டும் அவர்களால் இனம் காணமுடியாமல் இருந்தது. இப்போது இந்தக் குறிப்பிட்ட ஊரின் பண்டைப் பெயர்தான் அது என்பது தெரிந்தும் இவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இவ்வாறு ″வரலாற்றாய்வு″ முழுமூச்சுடன் முன்னேறிக் கொண்டிருக்கையில் கருணாநிதியும் தமிழைக் காக்கவே பிறப்பெடுத்த தமிழ்க்குடிமகனாரும் தங்களை முறையே இராசராச சோழனாகவும் கருவூர்த் தேவராகவும் கருதிக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினர். தமிழகத்திலுள்ள 29 மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாவட்ட வருவாய் அதிகாரியை அமர்த்தினர். இவர்களது பணி மக்களால் ″கைப்பற்றப்பட்டிருக்கும்″ கோயில் சொத்துக்களை ″மீட்பதே″. வருவாய்த் துறையினர் எங்கு நுழைந்தாலும் எது நடக்கிறதோ இல்லையோ, தங்கள் கையில் கிடைத்தவற்றை அது குளமாயினும் கோயிலாயினும் விற்றுக் காசு பார்த்து விடுவர். இன்று வரை எந்தப் புகாரும் இன்றி இது ஓடுவதிலிருந்து பங்குகள் உரிய இடங்களை அடைந்துவிடுகின்றன என்பதை அறியலாம்.

            கோயில் சொத்து ″மீட்பு″ நடவடிக்கைகளால் இழப்பெய்தத் தக்கவர்களில் சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோரும் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்டோருமாவர். ஆனால் இவ்விரு மக்களுக்கும் ″விடிவு″ காணவென்றே பிறவி எடுத்துள்ள சாதித் தலைவர்கள் இச்சிக்கலைக் கண்டுகொள்வதே இல்லை. இம்மக்கள் உழைத்து எருவிட்டுப் பண்படுத்திப் பயிர்செய்யும் நிலங்கள் பறிக்கப்படுவது கண்டு வாய்மூடியிருக்கும் இந்தத் ″தலைவர்கள்″ அவர்களுக்கு ″இலவயங்களை″யும் ″மானியங்களை″யும் வழங்க வேண்டுமென்று போராடத் தயங்கியதே இல்லை. அப்போதுதானே ″பயனாளி″களிடம் கொள்ளையடிக்க முடியும்! அது மட்டுமல்ல, உயர்நிலையடைந்துவிட்ட சில குடும்பங்களிலுள்ளோர் தங்களுக்குப் பதவியுயர்வுகள் பெறவும் தங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வேலைகள் கிடைக்கத்தக்க கல்விக் கூடங்களில் ஒதுக்கீட்டுக்காகவும் போராட இச்சாதி அரசியல் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் பொறுக்கித் தின்னும் பதவி அரசியலிலும் நுழைந்துவிட்டனர். தங்கள் சாதி மக்களின் உண்மையான உயர்வை இவர்கள் நாடியிருந்தால் அம்மக்கள் அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்காகப் போராடியிருப்பர். ஒடுக்கீடு என்று தமக்கு மட்டும் சுருங்கியிருக்கமாட்டார். அம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அரசின் பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்களைத் திரட்டியிருப்பர். இவ்வாறு ″இலவயங்களு″க்காகவும் ″மானியங்களு″க்காவும் கையேந்தும் இரப்பாளிகளாக அவர்களை ஆக்கிவிட்டு அந்த இரப்பாளிகளிடத்திலும் கொள்ளையடிக்கும் கொடியவர்களாக இருக்கமாட்டார்கள். இதில் சேதுராம பாண்டியன்களும் திருமாவளவன்களும் விலக்கல்ல.

இதற்கிடையில் கருணாநிதியும் தமிழ்க்குடிமகனும் வலங்கைப் பொதுமைக் கட்சியின் மாநிலச் செயலாளர், ″புரட்சியாளர்″ நல்லகண்ணுவும் சேர்ந்து ஒரு திறமையான நாடகம் ஆடினர். கோயில் சொத்துகளில் பயிரிடுவோருக்கே அவற்றை விலைக்குக் கொடுத்துவிடலாம் என்பது அது. பின்னர் ஒரு கருத்தை மக்கள் முன் எடுத்து வைத்தோம் அவ்வளவுதான் என்று கூறிப் ″பின்வாங்கி″ விட்டனர். நாம் இதை அவ்வளவு எளிதான ஒன்றாக எடுத்துக்கொள்ளவில்லை. இன்று கோயில் சொத்துக்களை வைத்துக் கொள்ளையடிக்கும் இடைக் குத்தகையாளர், அறங்காவலர்கள், அறநிலைத்துறை அதிகாரிகளிடமிருந்து ″பேழைகள்″(சூட்கேசுகள்) பறிக்கும் மிரட்டல் இதுவென்றே எமக்குத் தோன்றுகிறது. அரசுடைமைப் பேருந்துகளை மக்களுடைமையாக்கப் போவதாக ஓர் அமைச்சர் பேசியதும் பின்னர் அவர் தான் அப்படிக் கூறவில்லை என்று மறுத்ததும் போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகளிடமிருந்து பேழைகள் கறப்பதற்கான உத்தியாகவே நமக்கும்படுகிறது. தொழிற்சங்கங்களும் பேழை சுமந்திருக்கலாம். பின்னர் ″அரசுடைமை″ எனப்படும் நிகர்மை(சோசலிச) நடைமுறையைக் காப்பதற்காக நூறு கோடி உரூபாய்களுக்கும் கூடுதலாக மக்கள் வரிப் பணத்திலிருந்து இந்தக் கழகங்களுக்கு ″மானியமாக″ அரசு வழங்கியிருக்கிறது. அது போல்தான் ″இழப்பெய்தும்″ அரசு நிறுவனங்களின் பங்குகளை மக்களுக்கும் தனியாருக்கும்(அயலவருக்கும்) விற்றுவிடுவதாக மிரட்டுவதும் என்பது எமது கருத்து[2].


[1]   தன்மான இயக்கத்தின் தொடக்க காலத்திலிருந்தே தன்னோடு இணைந்து செயற்பட்ட சிவனிய வெள்ளாளர்களாகிய கி.ஆ.பெ.விசுவநாதம், திரிகூடசுந்தரம் பிள்ளை, அவ்வியக்கம் பட்டிதொட்டிகளில் பரவ பிற்போக்கு விசைகளிடமிருந்து வந்த வன்முறை அறைகூவலுக்கு எதிராகப் பாதுகாப்பளித்து வளர்த்த உ.பு.ஆ.சவுந்திரபாண்டியனார் ஆகியோரைக் களத்திலிருந்து அகற்றவும் இந்த முரண் – பின்னர் நட்பு என்ற நாடகத்தை நடத்தினார் என்பது உள்ளரங்கம்.
[2] இப்போது நிலமையே வேறு. அயலவர் என்று இவர்கள் கூறுவோர் இங்கு கொள்ளையடித்து அயல்நாடுகளில் போலிப்பெயர்களில் குவித்துவைத்திருக்கும் அரசியல்வாணரும் அதிகாரிகளுமாகிய கும்பலைத்தான்.