12.12.15

திராவிட மாயை - 26


தொடுப்பு - 2
மனிதனும் கடவுளும் மதமும் சமயமும்
            நாம் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் பகுத்தறிவு என்ற ஆற்றலின் தோற்றம் விலங்கிலிருந்து மனிதனை உயர்த்தி நிறுத்தியது. பகுத்தறிவு என்பது தன்னிலிருந்து விலகி நின்று தனது மற்றும் பிறரது செயல்களையும் தன்னைச் சுற்றிலும் நிகழ்பவற்றையும் அவற்றோடு தனக்கு உள்ள உறவுகளையும் தனது, தனது குழுவினரது எதிர்காலம், தனது வாழ்வு, சாவு ஆகியவற்றையும் சீர்தூக்கி பகுத்து அறியும் திறன் ஆகும். இது தன்னுணர்வு (Self consciusness) எனப்படும். எனவே பருப்பொருள் தன்னை தன்னுணர்வுள்ள ஒன்றாக ஒழுங்கமைத்துக் கொண்டதே மனிதன் என்று மெய்யியலாளர் கூறுவர்.

            இந்தத் தன்னுணர்வு என்பது எப்போதும் சரியான மதிப்பீடுகளையும் முடிவுகளையும்  எய்தும் என்று சொல்ல முடியாது. இயற்கையை மட்டுமல்ல உடன்வாழ் மனிதர்களின் உள்ளங்களையும் செயல்களையும் கூட மனிதனால் முழுமையாகப் புரிந்து நடந்துகொள்ள முடியாது. எனவே எப்போதுமே அவன் உள்ளத்தில் ஒரு கலக்க உணர்வு இருந்துகொண்டே இருக்கும். அதை எதிர்கொள்ள அவன் மனம் ஏதோவொன்றைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு மனித மனம் படைத்ததுதான் கடவுள் என்பது. ஆனால் கடவுள் என்ற சொல்லும் அது பற்றிய ஆழமான விளக்கங்களும் எடுத்த எடுப்பில் உருவாகவில்லை. எதுவோ தன்னை மிஞ்சிய ஓர் ஆற்றல் இருந்து அனைத்தையும் ஆட்டி வைக்கிறது என்ற நிலையில், தனக்கு வியப்பூட்டிய நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய இயற்கைப் பொருட்களுக்கும் வலிமை, திறமை, ஆளுமை, நன்மைகள் அல்லது கொடுமைகள் செய்யும் இயல்புகள் உள்ள தனிமனிதர்களுக்கும் பணிந்தால் துன்பங்களைத் தவிர்க்கலாம் என்று நம்பினான். ஆனால் பணிதல் என்பது என்ன? அதற்கு ஒரு வரையறையும் நடைமுறையும் வகுத்து அதற்கேற்ற ஒருவரைத் தேர்ந்து வைப்பது தேவையாகிறது. இந்த நிகழ்முறையில் இரண்டு கட்டங்கள் உள்ளன. எவ்வெவற்றைப் பணிந்தால் தீமைகளைத் தவிர்க்கலாம் என்று முடிவு செய்வது ஒன்று. பணிதல் என்பதை நிகழ்த்துவதற்கான நடைமுறை இன்னொன்று. முதல் கட்டம் மதம் எனப்படும், இரண்டாம் கட்டம் சமயம் எனப்படும்.

            மதம் என்பது மதித்தல், அதாவது சீர்தூக்கிப் பார்த்து அதன் தகுதியைத்  தீர்மானித்தல். சமயம் என்பது சமைத்தல், அமைத்தல் நிறுவனக் கட்டமைப்பு என்று பொருள்படும். ஏழு மதம் என்ற தலைப்பில் நன்னூலில் 11ஆம் நூற்பா கூறுவது,

                        எழுவகை மதமே உடன்படல் மறுத்தல்
                        பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
                        தாஅ னாட்டித் தனாது நிறுப்பே
                        இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
                        பிறர்நூற் குற்றங் காட்டல்
                        பிறிதொரு படாஅன் தன்மதங் கொளலே.

            இந்நூற்பாவில் மதம் என்பது கொள்கை, கோட்பாடு, மெய்யியல் போன்ற பொருட்களைத் தரும்.

            மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடாகிய மார்க்சிய இயங்கியல் ஒரு மதம். அதன்  அடிப்படையில் உருவாகிய பொதுமைக் கட்சி ஒரு சமயம்.

            பொதுவாக சமயம் என்பது மதத்தின், அதாவது மெய்யியலின் மறுப்பாக, அதனை அகற்றிய ஒன்றாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, வெவ்வேறு விளைப்புப் பாங்குக் கட்டங்களுக்கு வெவ்வேறு பண்பாடுகள் உருவாகும் என்றும் தோராயமான விளைப்புப் பாங்குக் கட்டங்களை வரிசைப் படுத்தியும் மார்க்சியம் கூறும். ஆனால் பொதுமைக் கட்சியோ, ஒரு குமுகம் எந்த விளைப்புக் கட்டத்தில் இருந்தாலும், முதலாளியத்துக்குப் பின்னர் வரவேண்டிய பொதுமைக் குமுகத்தை உடனே கட்டியமைக்க வேண்டுமென்று கூறி அக் குமுகத்தின் வளர்ச்சிக்கு நிலையான தடங்கலை ஏற்படுத்தும்.

            புத்த மதத்தின் மெய்யியல் ஏறக்குறைய மார்க்சியத்துக்கு இணையாக வரும். ஆனால் வரலாற்றில் நாம் அறிந்த புத்த சமயம், அவாதான் அனைத்துத் துன்பத்துக்கும் காரணம்; எனவே அவா அறுத்தலே விடுதலைக்கான வழி என்று கூறி இரத்தலை உயர்ந்த வாழ்நெறியாகக் கூறும். கெளதம புத்தர் எனப்படும் கி.மு.6ஆம் நூற்றாண்டு புத்தருக்கு முன்பு பல புத்தர்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது. அவர்களில் ஒருவர் அல்லது தொடர்ச்சியான பலரது முயற்சியால் உருவானது புத்த மதமாக வேண்டும். ஆனால் இரப்பாளி நடைமுறையைக் கொண்ட புத்த சமயத்தைப் புகுத்தியவர் கெளதம புத்தர்.

            பழங்கால மதங்களாகிய யூதம், பாரசீகத்தின் சுராட்டிரியம், பின்னர் வந்த முகம்மதியம் ஆகியவை ஆயுதம் தாங்கிய போரைத் தம் கோட்பாட்டினுள் கொண்டிருந்தன. ஆனால் பொறையுடைமையையும் இன்னா செய்தார்க்கு மன்னிப்பு அளிப்பதையும் மதமாகக் கொண்ட பிற சமயங்கள் அனைத்துமே கூட வெறிபிடித்து அரத்த ஆறுகளை ஓடவிட்டிருகின்றன. குறிப்பாக, புத்தத்தைச் சமயமாகக் கொண்ட சப்பான், சீனம், இலங்கை போன்றவை பாயவிட்ட குருதியாறுகள் நமக்குத் தெரியும். கிறித்துவத்தைச் சமயமாகக் கைக்கொண்ட நாடுகள் அவற்றுக்குச் சளைத்தவை இல்லை. கி.பி. 16ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை ஓய்வு ஒழிவின்றி அவை மக்களின் குருதியால் உலகை முழுச் சிவப்பாக்க முனைந்து நிற்கின்றன.

            இந்த வகையிலும் சமயம் என்பது கடவுளோடோ ஆன்மிகம் எனும் ஆதனியத்துடனோ எந்தத் தொடர்புமில்லாதது. மதம் கூட அடிப்படையில் குமுகியல் அடித்தளத்தைக் கொண்டதே. இருக்கும் குமுக அமைப்பிலுள்ள குறைபாடுகள் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவுக்குள்ள இடர்ப்பாடுகளின் தீர்வுக்காக ஒரு குறிப்பிட்ட மெய்யியல் உருவாகிறது. குமுகத்தில் அரசியலுக்குக் குறைவில்லாத தாக்கத்தைக் கொண்ட, நடப்பிலிருக்கும் மதம், மெய்யியல், சமயம் ஆகியவையும் அதனோடு திறனாய்வுக்குள்ளாகின்றன. நடப்பிலிருக்கும் மெய்யியலுக்கும் சமயக் கட்டமைப்புக்கும் மாற்றாக இன்னோர் இணையை அது வைக்கிறது. இந்த வகையில் மதமும் சமயமும் கூட அரசியல் சார்ந்தவையே.

            ஆனால் ஒரு குமுகம் அல்லது நில எல்லைக்குள் உள்ள அக முரண்பாடுகளைத் தீர்க்கும் அரசியலைத் தாண்டி, அத்தகைய அக முரண்பாடுகளைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட ஒரு குமுகம் தன் நில எல்லைக்கு வெளியிலுள்ள குமுகங்களில் நிலவும் தீர்க்கப்படாத அகமுரண்பாடுகளை இனங்கண்டு அவற்றைத் தீர்த்துவைப்பது போல் சமய ஊழியர்களை ஒற்றர்களாக ஊடுருவ விட்டு அக் குமுகத்தில் ஐந்தாம் படையினரை மத மாற்றத்தின் மூலம் உருவாக்கி அந் நிலப்பரப்புகளைக் கைப்பற்றுகின்றன. இவ்வாறு முகம்மதியமும் கிறித்துவமும் சிறுசிறு குக்குலங்களாகச் சிதறிக்கிடந்த ஆப்பிரிக்கக் கண்டத்தினுள்ளும் ஆப்பிரிக்க, அமெரிக்கக் கண்டங்களினுள்ளும் நுழைந்தன. இந்து அல்லது தமிழ்ப் பண்பாடாகிய சாதிய, வருணப் பாகுபாட்டை உதறித்தள்ள மனத்திடமற்ற மக்களைக் கொண்டிருந்த இந்திய, தெற்கு - தென்கிழக்காசிய நாடுகளில் முதலில் முகம்மதியமும் அடுத்து கிறித்துவமும் எளிதில் நுழைந்து அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முடிந்தது. தங்கள் சாதியக் குமுகக் கட்டுப்பாட்டை உடைக்கும் மனத்திடமுள்ள போர்ச் சாதியைக் கொண்டிருந்த சப்பான் இவ் விரண்டு சமயங்களின் ஊடுருவலைத் தடுக்கவும் உள் நுழைந்தவற்றை அழிக்கவும் முடிந்தது.

            தமிழகத்தின் வரலாறோ இரங்கத்தக்கது. குமரிக் கண்டத்தின் அழிவால் இன்றைய தமிழகத்தினுள் நுழைந்த சேர, சோழ, பாண்டியர்கள் இங்கு வாழ்ந்த குக்குல மட்டத்திலிருந்த பாணர், துடியர், பறையர் கடம்பர்களை அடக்கித் தங்கள் ஆளுமையை நிலைநாட்டினர்[1]. இருப்பினும் விந்தியமலை வரை பரந்து ஆண்டு கொண்டிருந்த 12 வேளிர்கள் அல்லது குறுநில மன்னர்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது. அதே வேளையில் விந்தியத்துக்கு வடக்கிலிருந்த, குமரிக் கண்டத்திலிருந்து முதல், இரண்டாம் கடற்கோள்களுக்குப் பின்னர் குசராத்துக் கடற்கரையில் கரையேறிப் பரவிய மக்களிடமிருந்து தொடர்ச்சியாக வந்த அச்சுறுத்தல் இவர்களை ஓர் இணக்கமான உடன்பாட்டுக்கு நெருக்கியிருக்கிறது. அதுதான் 1300 ஆண்டுகள் நீடித்த தமிழ் வேந்தர்கள் - குறுநில மன்னர்கள் கூட்டணி. இதன்படி பிறர் மீது படையெடுக்கும் ஓர் அரசர் அந் நாட்டின் நிலங்களைத் தன் நாட்டுடன் இணைக்ககூடாது, திறை பெற்றுக்கொள்வதுடன் நிறைவுகொள்ள வேண்டும். [இது இன்று அமெரிக்கா, இற்றை(நவீன)க் குடியேற்ற(காலனி) ஆதிக்கம் எனப்படும் உத்தியில் பிற நாடுகளைத் தன் பிடியில் வைத்திருப்பது போன்றதாகும். எடுத்துக்காட்டாக, பாக்கித்தான், இந்தியா, சீனம் போன்ற நாடுகள் பார்வைக்குத் தன்னாட்சியுடன் விளங்குவதாகத் தோன்றினாலும் உண்மையில் அவற்றின் சட்டங்களையும் பிற பொருளியல், பண்பாட்டியல் நடவடிக்கைகளையும் அமெரிக்காவே முடிவுசெய்கிறது. இந்த உத்தியை ஏறக்குறைய 3500 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழக மூவேந்தர்களும் பன்னிரு வேளிர்களும் தன்னுணர்வோடு செயற்படுத்தி இருக்கிறார்கள் என்பது சிறப்பு. ஒரே கேள்வி என்ன வென்றால் ஒரு நாட்டின் மீது பிறர் படை எடுக்கும் உரிமையைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருந்தது, இன்றைய மனிதச் சிந்தனை அதைவிட மேம்பட்டிருப்பதைக் காட்டுகிறதா என்பது. ஆனால் அமெரிக்கா ஈராக் மீதும் ஆப்கானித்தான் மீதும் தன் விருப்பம் போல் பிற அரசுகளையும் துணை சேர்த்துக்கொண்டு படையெடுத்ததைப் பார்க்கும் போது படை எடுக்கும் உரிமையை ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொண்டது தரக்குறைவாகத் தெரியவில்லை.]

            இந்தச் சூழலில் மூவேந்தர் அரசுகள் வலிமை பெற்றன, பெரும்பாலும் திறைகளினால் என்று கொள்ளலாம். ஒவ்வொன்றாக குறுநில மன்னர்களை அகற்றினார்கள். அத்துடன்  தமிழக எல்லைப் பாதுகாப்பும் கிட்டத்தட்ட இல்லாதொழிந்தது. இவ்வாறு ஆள்வாரற்றுக் கிடந்த குறுநில மன்னர் பகுதிகளுக்குள் அம்மண ஒற்றர்கள் ஊடுருவுவதற்கு எந்தத் தடங்கலும் இருக்கவில்லை. அதே வேளையில் மூவேந்தர் எல்லைக்குள் வாணிகர்கள் வளம் பெற்றனர். வலுப் பெற்றனர். அரச குமரரும் பரத குமரரும் என்று இளவரசர்களையும் வாணிக இளைஞர்களையும் ஒரே தொகுதியில் வைத்து ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சிலப்பதிகாரம் கூறும் நிலை உருவானது.

            மூவேந்தர்களுக்கும் குறுநில மன்னர்களுக்கும் இடையிலுள்ள அடையாள வேறுபாடு, மூவேந்தர்கள்  மணிமுடி வைத்துக்கொள்ளலாம், குறுநில மன்னர்கள்  வைத்துக்கொள்ளக் கூடாது. அதனால்தான் முடியுடை வேந்தர் என்ற அடைமொழி வழங்கியது. அது போலவே வாணிகப் பூதத்தின் அணிமணிகளைப் பற்றி சிலப்பதிகாரம்

                   செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன்
                        மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்
                        அரைசுமுடி யொழிய அமைந்த பூணிணன் 
                        வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி
                        நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் (அழற்படுகாதை வரி 62-66) என்று கூறுகிறது.

            தமிழகத்தில் வாணிகர்களுக்கும் மூவேந்தர்களுக்கும் முரண்பாடுகள் முற்றி இருந்தன என்பது மணிமேகலைக் காப்பியத்தில் புகார் அழிவதன் மூலமும் சிலப்பதிகாரத்தில் மதுரை நெருப்பூட்டப்படுவதன் மூலமும் தெளிவாகத் தெரிகிறது. அரச கணிகையை ஒரு வாணிகன் காமக்  கிழத்தியாக வைக்குமளவுக்கு அரசு நிலை இறங்க, வாணிகர்கள் நிலை அவர்களை தாண்டி நிற்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது மறைமுகச் சான்றாகலாம். இந்தச் சூழலில் ஆட்சி வெற்றிடத்துடன் இருந்த குறுநில மன்னர் ஆட்சிப் பரப்புகளைத் தங்கள் செல்வாக்குக்குள் கொண்டுவந்து மூவேந்தர்களுக்கு எதிராக ஒரு மக்களாட்சிப் புரட்சியைத் தமிழகத்தில் நடத்துவதற்கு தமிழக  வாணிகர்களிடையில், பிரிட்டனில் தோன்றிய ஆலிவர் கிராம்வெல் போன்ற ஒரு தலைமை இல்லை. மாறாக பூம்புகார் வாணிகர்கள் புத்த சமயம் மூலமாக இலங்கைக் கயவாகுவின் கைக்கூலிகளாகச் செயற்பட்டார்கள். மாமன்னன் கரிகாலன் தன் தந்தையைத் தோற்கடித்ததற்கும் 12 ஆயிரம்  ஈழப் படைவீரர்களைச் சிறைப்பிடித்து காவிரிக்குக் கரையமைக்கும் பணியில் ஈடுபடுத்தியதற்கும் பழிவாங்க இதை அவன் செய்தான். சோழ அரசுக்கு உட்பட்ட 9 இளவரசர்களைத் தூண்டிவிட்டு அவர்களால் வேளாண்மை அழிக்கப்பட்ட நிலையில் சேரன் செங்குட்டுவன் தலையிட்டு அந்த 9 பேரையும் கொன்றான் (சிலப்பதிகாரம், நீர்ப்படைக் காதை, வரி 118-23). இருப்பினும் புத்தம் மூலமான இலங்கை ஊடுருவல் புகார் அழிவது வரை நிற்கவில்லை. மதுரைக் கலகத்திலும் புத்தத்தின் பங்கு இருப்பதற்குத் தடயங்கள் உள்ளன. சிலப்பதிகாரம் பதிகத்தில் வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்(வரி41) என்றும் மதுரை அரசைச் சேரன் செங்குட்டுவன் தண்டிக்க வேண்டும் என்று பொருள்பட,
கொற்றவேந்தன் கொடுங்கோல் தன்மை இற்றெனக் காட்டி
            இறைக்குரைப் பனள்போல் ....... நின்னாட் டகவையின்
அடைந்தனள் நங்கை.....  காட்சிக்காதை (வரி87-90) என்று சாத்தனார் கூறுவதிலிருந்து அவரது பங்கும் தன் துணைவர்களைக் காக்க வேண்டுமென்ற துடிப்பும் புலனாகின்றன. அதனோடு இலங்கை அரசின் அப்போதைய தலையீடு முடிவுக்கு வந்தது. [இலங்கையில் நடைமுறையிலிருக்கும் புத்தம் மணிமேகலையில் சாத்தனார் கருநிலையில் தந்திருக்கும் தேர வாத புத்தமாகும்(செய்திக்கு, பேரா.நா.வானமாலையின் மணிமேகலையில் பவுத்தம்  எனும் கட்டுரையைக் காண்க)]

            ஆனால் அம்மணத்தின் ஊடுருவல் இங்கே தொடர்ந்தது. குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த மக்கள் கள்ளர்களின் தலைமையில் மூவேந்தர்களையும் அகற்றி வைணவம் சார்ந்த அரசுகளை நிறுவினர். அவர்களை வரலாற்றாசிரியர்கள் களப்பிரர் என்கின்றனர் (கள்ளர் பிறர் என்பதன் மருவே இது). அவர்கள் பின்னர் அம்மணத்துக்கு மாறினர்.

            இந்த குறிஞ்சி - முல்லை மக்கள் மருத நிலத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்குள்ள  உழவர்களோடு கலந்தனர். முருகன் + வள்ளி என்றிருந்த தங்கள்  தெய்வ இணையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இந்திரன் மகள் தெய்வானையை அவனுக்கு மணம் முடித்து வைத்ததுடன் வள்ளியை அவனுக்கு இரண்டாம் தாரம் ஆக்கினர். இராமாயணத்துக்கு இணையாக கந்தபுராணத்தை யாத்தனர்.

            சிலப்பதிகாரத்தில் இருந்து புலப்படுவது போல் முல்லை - குறிஞ்சி மக்களின் கூட்டணியான களப்பிரர்களுக்குத் தொடக்கத்தில் மாலியத் தன்மை வழங்கியவர்கள் நம்பூதிரிகளாக இருக்கலாம். ஆனால் நம்பூதிரிகளின் செல்வாக்கு மருத நிலம் வரை செல்லவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள  ஆற்றுப் பாய்ச்சல் நிலங்களாகிய மருத நிலங்களில் பரவலாக பண்டைய மாலியக் கோயில்கள் காணப்படுகின்றன. பிற்காலத்தில் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கிருட்டிணாபுரம், முத்துக் கிருட்டிணாபுரம் என்ற பெயர்களில் அமைந்த ஊர்களில் தவிர தமிழகத்தில் முல்லை நிலத்துக்கு உரிய பழைய திருமால் கோயில்கள் இல்லை.

            அம்மண சமயத்தின் பேரில் நடைபெற்ற அயல் வாணிகர்களின் அளவற்ற சுரண்டலுக்கு எதிர்வினையாகச் சிவனிய எழுச்சி தோன்றியது. அடிப்படைக் கோட்பாட்டு நிலையில் திருமூலர் என்ற ஆயர் குலத்தவர் இயற்றிய நூல்களின் பின்னணியில் இதனைத் தொடங்கி வைத்தவர் காரைக்கால் அம்மையார் என்ற வாணிகர் குலப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த திருஞானசம்பந்தருக்குப் பின்னணியில் இருந்தவர்களும் வாணிக குலத்தவரே. அவருக்கு ஒரு வாணிகக் குலப் பெண்ணுடன் திருமணம் நிகழ இருந்த பந்தலில் தீயை வைத்து தமிழகத்தில் அன்று நடைபெற இருந்த  ஒரு குமுகப் புரட்சியை அழித்து வெற்றி பெற்றனர், அயல் சுரண்டல் கும்பலுடன் இணைந்து அவர்களுக்கு விலைக்குப் போய்விட்ட உள்நாட்டு பிற்போக்கினர். சம்பந்தர் ஒரு முழுமையான தமிழகத் தேசியத் தலைவர் என்பதற்குச் சான்றாக தென்புலத்துக்கு உரியவனான இராவணனுக்கு அருளியவன் சிவன் என்று ஒவ்வொரு பதிகத்திலும் ஒரு பாட்டை இராவணனுக்கு அவர் ஒதுக்கியதைக் காட்டலாம்.

            பின்னர் வந்தவர்களிடம் அந்தத்  தெளிவு இல்லை. இச் சிவனிய எழுச்சியைப் பற்றி எழுந்த சோழப் பேரரசோ தமிழைப் புறக்கணித்தது. மூவர் தேவாரத்தை மீட்க இராசராசன் செய்த முயற்சியோ, தில்லை மூவாயிரவர் தன் ஆணை வட்டத்திலிருந்து விடுபட்டுவிடக்கூடாது என்ற அரசியல் நோக்கத்துடன்தான். சிவன் கோயில்களினுள் சமற்கிருதத்தை மட்டும் ஓதுவதற்கு இடம் கொடுத்தவன்தானே அவனும்?

            சோழப் பேரரசு தமிழகத்துக்குச் செய்த அடிப்படையான கேடு, அது, எந்த தமிழக வாணிகர்களின் துணையுடன் வளர்ந்த சிவனியத்தால் உருவாக்கப்பட்டதோ, அந்த வாணிக வகுப்பை துரத்தித் துரத்தி அழித்தது. கடாரம் வரை சென்று தமிழகக் கப்பல் வாணிகத்தை அழித்தது.

            குறிஞ்சி - முல்லை நிலங்களிலிருந்து படையெடுத்து வந்த களப்பிரர்களின் படைகளில் வந்தவர்களில் படை மானியத் தலைவர்களாக இருந்து இடையில் உள்ளூர் மக்களுடன் கலந்து மாலியம், அம்மணம் ஆகியவற்றைத் தாண்டி, புலாலுண்ணாதோராக திரிவாக்கம் பெற்ற ஒரு கலப்பு உருவாக்கமே சிவனிய வேளாளர்கள்.

            இவர்களுக்குப் போட்டியாக உருவானவர்களே மாலிய ஆழ்வார்கள். முல்லை நிலத்துக்கு உரிய மாலியத்தின் ஆழ்வார்களில் ஒருவர் கூட முல்லை நிலத்தின் ஆயர் குடியினர் அல்லர் என்பது இதனைத் தெளிவாக விளக்கும்.(களப்பிரர்களுடன் வந்து இடையில் மதமாற்றம் பெறாதவர்களின் வழிவந்தவர்களாக இவர்கள் இருப்பார்களோ?)

            சோழப் பேரரசின் வரிக்கொடுமைகளிலிருந்தும் நிலப்பறிப்புகளிலிருந்தும் உருவான மக்கள் எழுச்சியின் உள்ளே குலோத்துங்கன் புகுந்து சாளுக்கிய மேலாளுமையைத் தமிழகத்தின் மீது மறைமுகமாகப் புகுத்தினான். சிவனியத்தின் மீது பெரும் தாக்குதல் நிகழாமல் மக்களுக்கு இடையில் வலங்கை - இடங்கைப் பூசலை ஊதிப் பெருக்கி, தமிழக மக்களை 19 ஆம் நூற்றாண்டு வரை அயலவர் படையெடுப்புகளிலிருந்து கவனத்தைத் திருப்பும் கேட்டினை விளைவித்தான், இன்று அனைவருக்கும் கல்வி - அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற சரியான திசையிலிருந்து ஒதுக்கீடு என்று ஒரு நச்சுவலையில் தமிழக மக்களைச் சிக்க வைத்து அயலவர் சுரண்டலில் இருந்து தமிழக மக்களின் கவனத்தைத் திருப்பிவைத்திருப்பது போல். சோழப் பேரரசின் பின்னணியில் நடைபெற்ற சிவனியர் கொடுமைகளுக்கு எதிராக மக்களிடையில் உணர்வைக் கிளம்பி ஆறிப் போயிருந்த சீற்றத்தைப் பயன்படுத்தி மாலியத்தை விரிவுபடுத்தினார் இராமானுசர். அது பின்னாளில் விசயநகரத்தார் படையெடுப்புக் காலத்தில் அவர்களுக்கு ஒரு வலுவான ஐந்தாம் படையை உருவாக்கித் தந்தது, முகம்மதியத்துக்கு மாறியோர் அயல் முகமதியப் படையெடுப்புகளில் பயன்பட்டது போல.

            இந்த மதமாற்ற நிகழ்முறையில் காலங்காலமாகத் தமிழகத்துக்கு ஏற்பட்டுவரும் மாபெரும் இழப்பு, இங்குள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக அவர்கள் பொருளியல் வலிமை பெற்று தங்கள் மீது பூட்டப்பட்டிருக்கும் கொடும் விலங்குகளை உடைப்பதற்காக அணிதிரளும் ஒவ்வொரு வரலாற்றுக் கட்டத்திலும் அவர்களிடையிலிருந்து உருவாகும் ஆற்றல் மிகு தலைமைகளை இம் மதமாற்ற நிகழ்முறை, நம்மிடமிருந்து பறித்து அந்த ஐந்தாம் படைக்கு வலுவூட்டும் அணித் தலைமைகள் ஆக்கிக் கொள்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களோ தங்கள் தலைமக்களை இழந்து  வழிகாட்ட ஆளில்லாமல் ஒவ்வொரு முறையும் இருளில் விடப்படுகிறார்கள்.

            மாலியத்தின் 12 ஆழ்வார்களும் திருமாலைவிட முதன்மையுடன் வணங்கப்படுகிறார்கள். திருவைகுண்டம், திருப்பெரும்புதூர், திருவில்லிபுத்தூர் என்று ஒவ்வோர் ஆழ்வாரின்  செயற்பாட்டு  இடங்களிலும் அவர்கள்தாம் முதன்மைத் தெய்வங்கள். ஆனால் அவர்களின் சார்புச் சமயமாகிய மாலியம் ஓர் அயல் சமயமாக நமக்குக் கேடு விளைத்துள்ளது. தென் மாவட்டங்களில் வாழும் நாடர்கள்(சாணார்கள்)ஏறக்குறைய 2 நூற்றாண்டுகளுக்கு முன்பு பட்ட குமுக, அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடத் தொடங்கி, அதன் தீர்வுக்கென்று ஒரு வழிபாட்டுமுறையை வகுத்துத் தன்னைத் திருமாலின் ஒரு தோற்றரவு என்றார் அய்யா வைகுண்டர் எனப்படும் முத்துக்குட்டி அடிகள். அவருடைய இந்தத் தவறான அணுகலால் அந்த நாடார்கள் இன்று செல்வநிலை எய்தியதும் அவர்களது பணம் கணிசமாகத் திருப்பதி உண்டியலுக்கும் குருவாயூர் போன்ற வெளி மாநிலத் திருமால் கோயில் உண்டியல்களுக்கும் பாய்கிறது.

            இன்று தமிழகத்துக்குள் தலைமை கொண்ட ஒரு சமயம் தமிழர்களுக்குக் கிடையாது. நம் வரலாற்று ஆய்வாளர்கள் என்னதான் முட்டி முட்டி, சிவனும், மாலும் தமிழகத்துக்கு உரியவர்கள் என்ற உண்மையைச் சுட்டி நிறுவினாலும் சிவன் இமயத்து உச்சியிலும் திருமால் யமுனைக் கரையிலும் இருப்பதாகத்தானே தமிழர்களில் பலர் அங்கெல்லாம் அலைகிறார்கள்?

            வரலாறு அறிந்த நாளிலிருந்து பிறரைப் போலச்செய்யாமல் நாமாகவே நமக்கென்று எதையும் படைக்காதவர்களாவே இருந்துள்ளோம். மரபை முறித்துப் புதியதாக ஒன்றை எவராவது படைக்கத் துணிந்துவிட்டால் போதும் ஐயோ! மரபு உடைந்துவிட்டது என்று கூக்குரலிட்டு அம் முயற்சியைக் கருவறுப்பதற்கென்று மேல்தட்டுக் கும்பல் தன் முழு வலிமையையும் பயன்படுத்துகிறது. ஆனால் தனக்கு மட்டும் அயலிலிருந்து மரபு மீறிய புதியவற்றை இறக்குமதி செய்துகொள்கிறது. தன் கீழ் இருக்கும் அடித்தள மக்கள் மரபை உடைத்துத் தம் மட்டத்தை நோக்கி உயர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அயலவன் எவன் காலை வேண்டுமானாலும் இந்த வெட்கங்கெட்ட கும்பல் நக்கக் காத்துக் கிடக்கிறது. என்றோ தொடங்கிய இந்த நடைமுறையால் இன்று நம் மக்கள் தொகையில்  மிகப் பெரும்பாலோர் இத்தகைய இழிசினர்களாக மாறி நிற்கிறார்கள். அழிவு தரும் இந்த நம் மனப்பான்மையை நம்மிடமிருந்து அகற்ற முனைப்பான விழிப்புணர்வுடன் கூடிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

            சமயத்தைப் பொறுத்தவரை எல்லாச் சமயமும் தங்களுக்கென்று ஒரு கடவுளைக் காட்டுகின்றன. அதனை முழு முதற் கடவுள் என்று சொன்னாலும், ஏதாவது ஒரு மனிதனைச் சாராமல் அவற்றில் எதுவும் இயங்கவில்லை. யூதர்கள் யகோவா என்ற கடவுளைக் காட்டினாலும் மோசே இன்றி அவர்கள் சமயம் இல்லை. கிறித்துவம் முழுமுதற் கடவுளைச் சுட்டினாலும் ஏசுநாதர் இன்றி அவர்கள் வழிபாடு நிறைவுறாது. இன்னும் தெளிவாகக் கூறுவதனால், நம் ஊரில் வன்கொலையாகக் கொல்லப்பட்டு தெய்வங்களாக வணங்கப்படும் காத்தவராயன், மதுரைவீரன் போன்ற சிறு தெய்வங்கள் எனப்படும் பேய்த் தெய்வமே ஏசுநாதர். பிறரைப் பார்த்து, பேய்த் தெய்வங்களை வழிபடுகிறார்கள் என்று பழித்துத் தங்கள் சமயம் நோக்கி ஈர்க்கும் கிறித்தவர்களின் மதத்தின் இந்த அடிப்படைத் தன்மையைப் பிறர் இனம் கண்டதாகத் தெரியவில்லை. ஆனால் அவர்களே அதை இனம் கண்டு பிதா – மகன் – தூய ஆவி என்று மாய்மாலம் செய்து வைத்துள்ளனர், அல்லாவைச் சுட்டும் முகம்மதியர்களுக்கு முகம்மது நபியின்றிச் சமயம் இல்லை. நம் கடவுள்கள் அனைத்தும் வாழ்ந்து மறைந்த மனிதர்கள் அல்லது விலங்குகளின் உருமாற்றங்களே.

            நம்  வழிபாட்டுத் தேவைகளுக்காக நாமும் ஒரு புதிய சமயத்தைப் படைக்கலாம். அது மனிதக் குழுக்கள் எதுவும் தனி உரிமை கொண்டாடாத ஓர் இயற்கைப் பொருளாக இருக்க வேண்டும். கதிரவனை அவ்வகையில் நம் ஒரே வழிபடுபொருளாகக் கொள்ளலாம் என்பது எம் கருத்து.

            கதிரவன் உண்மையில் நம் கண்கண்ட தெய்வம். அதற்குத்தான் நாம் வாழும் உலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்ததில் அடிப்படைப் பங்கு உள்ளது. அதற்குத் தலைமை இடம் என்று எரூசலத்தையோ மெக்காவையோ வாட்டிக்கனையோ போன்று ஒரு தனி நிலப் பரப்பை உரிமை கொண்டாட முடியாது என்ற அடிப்படையில் இந்தக் கருத்தை உருவாக்கி இருக்கிறோம்.

            கருவறை என்று ஒன்று தனியாக இல்லாத மண்டபம் மட்டும் கொண்டதாகக் கோயில் இருக்க வேண்டும். நாள்தோறும் இரண்டு அல்லது கூடுதல் வேளைகள் மக்கள் வழிபட வசதி இருக்க வேண்டும். முகம்மதியத்தைப் போல் வழிபாட்டை முன்னின்று நடத்தவென்று எவரும் தேவையில்லை. வழிபடுவோர் தத்தம் மனதுக்குள் தம் வேண்டுகைகளை குறிப்பிட்ட வழிபாட்டு நேரத்துக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.  கோயிலைப் பயன்படுத்துவோர் அதனை பராமரிக்கும் செலவுகளைப் பொதுவில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு கோயிலைப் பயன்படுத்தும் ஒவ்வொரு தனியாளுக்கும் மாதத்துக்கு ஒரு தொகையைத் தண்ட வேண்டும்.

            கோயில்களுக்கென்று தனித்தனிப் பயன்பாட்டுப் பரப்பை வரையறுக்க வேண்டும். கோயிலை வழிபாட்டுக்கு அப்பால் எந்த நோக்கத்துக்கும் பயன்படுத்தக் கூடாது. நேர்ச்சைகள் செய்வதாய் இருந்தால் அது கோயில் மேம்பாட்டுத் தொடர்பாக இருக்கக் கூடாது. பொதுப்பணியாக ஏதாவது மனதில் நினைத்துக்கொண்டு வெளியே கூறாமல் அதை தேவையானால் எங்காவது வெளி அரங்கில் செய்துகொள்ள வேண்டும். கதிரவக் கடவுள் படிமத்தை தமிழகத்துக்குப் பொதுவாக வடிவமைத்து அதனை மேடையின் பின்புறம் சற்று உயரத்தில் நிறுவ வேண்டும். கோயிலைத் திறந்து, அடைத்துப் பராமரிக்கத் தனியாகப் பணியாள் அமர்த்த வேண்டும். காணிக்கை எந்த வடிவத்திலும் கூடாது. படிமத்துக்கு எந்த வகைப் பூசனையும் கூடவே கூடாது.
           
            ஒரு தேசத்துக்கென்று ஒரு சமயத்தைத் நிறுவிவிட்டால் மட்டும் அதனால் அத் தேசத்தின் தன்னுரிமை பாதுகாக்கப்பட்டு விடாது. யூதர்களின் தாயகம் உரோமுக்கு அடிமைப்பட்டிருந்த நிலையில் அதனை விடுவிப்பவராக ஏசு களம் இறங்கினார். அவருக்கும் யூத மேற்குடியினருக்கும் மோதல் வலுப்பட்டதால் தாயகத்தை விடுவிப்பதிலிருந்து திசைதிரும்பி மேற்குடியினருக்கும் அடித்தள மக்களுக்குமான முரண்பாட்டினுள் அவர் சிக்கினார். யூத குமரனாகப் புறப்பட்டவர் தேவ குமரனாக வடிவெடுத்தார். அதனால் தேசிய விசைகள் தமக்குள் மோதலிட்டு ஒடுக்கும் உரோமப் பேரரசின் ஆளுனனே (முதன்மை முரண்பாடு) தன் பகை முரண்பாட்டின் மூல விசையாக எழுந்த ஏசுவைப் பிடித்து அதன் துணைவிசையின் கையில் கொடுத்துத் தண்டிக்க வைத்தான் (நம் நாட்டில் நம் தலைமைகள் முன்வைக்கும் நிலையான ஒதுக்கீடு, இலவயங்கள், மானியங்கள் போன்றவை இதே விளைவைக் கொண்டவை, அதாவது தம்முள் இணைந்து நின்று ஆட்சியாளரை எதிர்த்து அடிப்படுத்த வேண்டிய மக்கள் தமக்குள் பூசலிட்டு தீர்வு காண்பதற்காகக் அரசுப் பொறியின் முன் கையேந்திக் குறுகி நிற்க வைத்துள்ளன).

            ஏசு அகற்றப்பட்டு அவரது மாணவர்கள் பரந்து சென்று உரோமையின் அடிமைகளிடம் பணியாற்றிய ஒரு மாணவரால் அவரது சமயம் அங்கு பரவி அடிமைகளின் எழுச்சியின் பின்னணியில் அரச சமயமாயிற்று. விளைவு என்ன? ஏசுவைச் சிலுவையில் அறைந்தவர்கள் என்று கூறி உரோமப் படை யூதர்களின் நாட்டின் மீது படையெடுத்து அம்மக்களை நாட்டை விட்டே ஓட்டியது. ஈழத்தில் நடைபெற்றதிலும் கொடுமை நிறைந்த இன அழிப்பு நடந்திருக்கும். அதனால் அம்மக்கள் உலகமெங்கும், அதிலும் குறிப்பாக, சமயப் பகைவர்களான ஐரோப்பியர்களின் நடுவில் 14 நூற்றாண்டுகள் உலகில் எந்த இனமும் படாத பாடுபட்டார்கள். (ஆனால் இன்று யூத உலகத் தலைமைகள் அந்த மக்களைப் பயன்படுத்தி தம் வட்டாரத்தில் வாழும் மேற்காசிய மக்களுக்கு எதிராக, வல்லரசியத்துக்குத் துணை செய்கிறார்கள். உண்மையில் வல்லரசியமே கிறித்துவ சமயப் போர்வை போர்த்தி நிற்கும் இந்த யூதத் தலைமைகள்தாம்.)

            இந்தியாவில் உருவான புத்தம் இங்கு செல்வாக்கு இழந்து சீனத்துக்கும் சப்பானுக்கும் இலங்கைக்கும் பரவி அந் நாடுகளுக்கு ஒற்றர்களாக ஒரு கூட்டத்தை இங்கு உருவாக்கி இருக்கிறது.

            எனவே நம் நாட்டில் உருவான, அதன் தலைமையிடத்தைக் கொண்ட சமயம் மட்டும் ஒரு தேசத்தைக் காத்துவிடாது. சமயம் ஒரு பண்பாட்டுக்கூறே. அது காலத்துக்கேற்ப, மக்களின் பொருளியல் வளர்ச்சி நிலைக்கேற்ப மாறக் கூடியது. உண்மையான தேசிய அடிப்படை நிலமும் அந் நிலத்தின் வளங்களின் மீது அம் மக்களுக்குரிய கேள்விக்கு அப்பாற்பட்ட உரிமையும் கையாட்சியும்தாம் என்பதிலும் அத்துடன் புதுப்பிக்க முடியா இயற்கை வளங்களை எந்தக் காரணத்துக்காகவும் அந்த எல்லையைத் தாண்டவிடக் கூடாது என்பதிலும் புதுப்பிக்கத்தக்க வளங்களைக் கூட தேச மக்களின் முழு தேவைகளையும் நிறைவு செய்து எஞ்சியது என்று உறுதிப்பட்டாலொழிய வெளியே விடக்கூடாது என்பதிலும் நாம் மிக உறுதியுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.

            இன்றைய நிலையில் நம் உள்நாட்டுச் சமயம் பொதுவாக இரு கட்டங்களில் உள்ளது. குக்குல வடிவம் கொண்ட சிறு தெய்வக்  கோயில்கள் எனப்படும் ஊர்க் கோயில்கள். இங்கு சாதி அடிப்படைப் பிரிவுகள் உள்ளன. உயிர்ப் பலி உண்டு. இன்னொன்று ஆகமக் கோயில்கள். இதன் வடிவமே வருணப் பாகுபாட்டுக்கு உரியது. ஐரோப்பியர் வருகையால் மக்களிடையில் வெளிப்படையான பழைய பொருளியல் கட்டுப்பாடுகள் நீங்கி கல்வி, வேலை வாய்ப்புகள், சிறு - குறுந்தொழில்கள் என்ற வளர்ச்சி நிலையில் செல்வம் பெருகப்பெருக ஊர்க்கோயில்கள் ஆகமக் கோயில்களின் வடிவத்தைச் சிறிது சிறிதாகப் பெற்று வருகின்றன. கசாப்புக் கடைகளின், குறிப்பாகக் கோழி இறைச்சிக் கடைகளின் பெருக்கத்தால் கோயிலில் உயிர்ப் பலிக்கு உள்ள எதிர்ப்பு மதிக்கப்படுகிறது.

            ஆகமக் கோயில் என்பது தமிழகச் சூழலில் நிலக்கிழமைப் பண்பாட்டுக்குரிய வழிபாட்டு வடிவம். இப்போதைய ஆகமக் கோயில் மலர்ச்சியின் விளைவாக பழமரபு ஊர்த் தலைமைகள் புறந்தள்ளப்பட்டு புதிய பணக்காரர்கள், பழைய கோயில்களை கைப்பற்றுவதும் புதைந்து கிடக்கும் என்றோ வழிபட்ட அடையாளங்களைத் தோண்டி எடுத்துப் புதுப்பிப்பதுமாக ஒரு குழப்ப நிலை உருவாகியுள்ளது.

            இந்தப் புதிய பணக்காரர்கள் சிறுதொழில், நடுத்தொழில், பெருந்தொழில் என்று வளர்ந்து தொழில் முதலாளியர் எண்ணிக்கை குறைந்தும் பெருந்தொழிலக ஊழியர்களின் விகிதம் உயர்ந்தும் செல்லும் போது சமயத்திலும் மக்களாட்சி கேட்கும் குரல்கள் வலுக்கும். அந்தச் சூழலுக்குத்தான் நாம் மேலே சுட்டியுள்ள கதிரவ வழிபாட்டு வடிவம் பொருந்தும்; மக்களிடையில் வேர்கொள்ளும். அதுவரை, கணவனும் மனைவியுமாக மாதத்துக்கு ஓரிலக்கம் உரூபாவுக்கும் மேலாகச் சம்பளமும் அதற்கும் மேலாக வரும்படியும் பார்க்கின்ற கல்லூரிப் பேராசிரியர்கள் போன்ற ஒட்டுண்ணிக் களைச்செடிகள் மேடை மீது ஏறி நின்றுப் பாட்டாளியம் பேசுவதையும், மாதம் 50 ஆயிரம் உரூபாய் பார்ப்பதற்கு ஆட்சியாளர்கள் முன் குறுகி நின்று படாத இழிவுக்கெல்லாம் ஆளாகும் குறுந்தொழில் முனைவோரை நாக்கூசாமல் சுரண்டல்காரர்கள் என்று அவர்கள் கூறுவதையும் கண்டித்துக் கட்டுப்படுத்த வேண்டும். பொதுமைக் கட்சியினரையும் சேர்த்துத்தான். தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டே பாட்டாளியக் கோட்பாடும் பண்பாட்டுப் புரட்சியும் பேசிக் கொண்டிருப்போரை அக் களத்திலிருந்து அகற்ற வேண்டும். பனியா - பார்சி இந்திய அரசின் மாநிலத் தேசியப் பொருளியல் ஒடுக்குமுறைகள், வருமானவரி, தொழில் உரிமம், மூலப்பொருள் ஒதுக்கீடு, போன்றவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும்.


[1] அரசர்களுக்குள்ளும் குறுநில மன்னர்களுக்குள்ளும் உடன்படிக்கை ஏற்பட்டாலும் மக்களின், குறிப்பாக பறையர்களைப் பூசகத் தலைவர்களாகக் கொண்ட புலையர்களின் எதிர்ப்புகளை ஒடுக்க கி.மு. நான்காம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய 1100 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்தக் காலகட்ட நிகழ்வுகளை மறைக்கத்தான் அதற்கு முந்திய காலத்து பாடல்களைக் கழக இலக்கியத் தொகுப்பிலிருந்து “நம்மவர்கள்” கழித்துளனர்.

0 மறுமொழிகள்: