31.3.08

தமிழினி பிப்ருவரி இதழ் ஒரு பார்வை

நாகர்கோயில்,
15.02.2008.

அன்புள்ள வசந்தகுமார் அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் கேட்டுள்ளப்படி தமிழினி பிப்ருவரி இதழின் ஆக்கங்கள் பற்றிய என் கருத்துகளைத் தருகிறேன். குறையை மட்டுமே சுட்டியுள்ளேன். பிற வகையில் சிறப்பானவை என்று பொருள் கொள்ளவும்.

ஆசிரியவுரையில் இராமதாசும் சரி, பிற தமிழ்நாட்டுத் தலைவர்களும் சரி, உண்மையான சிக்கல்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்கும் ″அறிவாளி″களின் பரிவை எளிதில் ஈட்டவும்தான் பண்பாட்டுச் சிக்கல்களைக் கையிலெடுக்கின்றனர் என்பது பட்டறிவு.

திரு. இராமதாசு அவர்களின் கடந்த கால, தட்டியில் நுழைந்து கோலத்தினுள் நுழைந்து கட்சி வளர்த்த கதையெல்லாம் நமக்கு இவ்வளவு எளிதில் மறக்க வேண்டுமா?

ஆமாம்! புலால் உண்பது அவ்வளவு கேடா? அல்லது இழிவா? தமிழ்நாட்டில் சாதி ஏற்றத்தாழ்வுக்கு அளவுகோலாயிருக்கும் பண்பாட்டு அடையாளங்களில் புலால் உணவு தலையானதல்லவா? இது போன்ற சாதி உயர்வு சார்ந்த அளவுகோல்களை அடித்துத் தகர்ப்பது குமுக மேம்பாட்டுக்கு இன்றியமையாததல்லவா?

சல்லிக்கட்டை சுற்றுலாத்துறையிடமிருந்து விடுவித்து விளையாட்டுத் துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பது சரியான வேண்டுகையாயிருக்கும் என்பது என் கருத்து.

சபர்மதி ரயில் எரிப்பு ″சங்கக் குடும்பம்″ திட்டமிட்டுச் செய்ததாக தெகல்கா கண்டுபிடித்ததை நம் செய்தித் தாள்களில் நான் படிக்கவில்லை. அதை ″நீதியின் தொலைதூர ஒளி″யில் படித்தேன். என் கணிப்பும் சரியாக இருந்தது. இதே போன்ற வேலையைக் குமரி மாவட்டக் கலவரத்தின் போதும் அவர்கள் செய்துள்ளனர்.

″உண்ணற்க கள்ளை″க் கட்டுரை மது அருந்துவதைக் குறை கூறவில்லையாயினும் பண்பாட்டுக்கு அதுவும் ஆட்சியாளரின் ″தொழில் பண்பாட்டுக்கு″ மிகச் சிறப்பான சான்றிதழைத் தந்துள்ளது பாராட்டுதற்குரியது.

″வாளிலும் வலிய பேனா″, மறைமுகமாகக் கல்வி மறுக்கப்பட்டு வரும் நம் நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் மேலடுக்குக்கும் உள்ள இடைவெளி விரிவது மனதில் தைக்கிறது.

″ஏறுதழுவல்″ செய்திகள் நன்றாகவே இருக்கின்றன. உழவு முதலில் செயற்கையாகப் பாசனம் செய்து முல்லை நிலத்தில் உழவின் மூலம் மண்ணைப் பண்படுத்திய, கலப்பையைக் கொடியாகவும் ஆயுதமாகவும் கொண்ட நாக மரபைச் சேர்ந்த பலதேவனி(பலராமன்)டமிருந்தே உருவானது. அதற்கும் பொதி சுமக்கவும் மாட்டை வசக்கியது கண்ணனின் பங்களிப்பு. அங்கிருந்து தான் உழவு மருத நிலத்துக்குச் சென்றிருக்கும். அதற்கு முன் ஆற்று வண்டலில் தான் நேரடியாகப் பயிரிட்டிருப்பர்.

மகாபாரதக் கிட்ணன் ஆடுகளை வளர்த்தவர்களைச் சார்ந்தவனோ என்றொரு ஐயம். ஏனென்றால் இந்திரன் ஏவிய மழையிலிருந்து ஆநிரையைக் காக்க குடையாகப் பிடித்ததாகக் கூறப்படும் மலையின் வடிவத்தில் தான் ஆட்டிடையர்கள் கையாளும் ″கூடு″ இருக்கிறது. அத்துடன் குமரி மாவட்டத்தில் இருக்கும் கிட்ணவகையினர் எனப்படும் குறுப்புகளும் குறும்பர்களாக இருக்கலாம். இப்போது அத்தொழிலை விட்டிருக்கலாம்.

சிலப்பதிகாரம் கண்ணனை ″அசோதை பெற்றெடுத்த″(ஆய்ச்சியர் குரவை) என்றே கூறுகிறது. ஆயர் குலத்தில் பிறந்த கண்ணனைச் சத்திரியன் என்று காட்டவே தேவகி - வாசுதேவன் மகன் என்ற கதை புனையப்பட்டிருக்கலாம்.

″தமிழுக்கு எதிரான தமிழ்ப் பற்றாளர்கள்″ கட்டுரை தமிழ்ப் பற்றாளர்கள் போலவே அடிப்படையை நழுவ விட்டுவிடுகிறது. பெட்டிச் செய்தியில் வருவது போல் எழுதுகோலும் கடிகாரமும் தமிழ்நாட்டில் செய்தால் தமிழ்ப் பற்றாளர்களின் நோக்கம் தவறாகத் தோன்றாது. ஆனால் தமிழ்ப் பற்றாளர்களில் பலரும் இந்தச் சிந்தனையிலிருந்து மக்கள் கவனத்தைத் திருப்பவே பயன்படுகிறார்கள் என்பது உண்மை. இவர்களுடைய தூய்மை முயற்சியில் உண்மையில் தமிழ் வேர் கொண்ட பல சொற்களைத் தமிழில்லை என்று பிடிவாதமாக ஒதுக்கிவிடுகின்றனர். சல்லிக் கட்டு ஜல்லிக் கட்டு என்று மாறியது போல் பல சொற்கள் உள்ளன.

″மனித உடலும் அன்பும் ஞானமும்″ என்ற கட்டுரையாளரால் எவ்வாறு இப்படிச் சிந்திக்க முடிகிறது? ″உடம்பார் அழியின் உயிரார் அழிவார்″ என்றால் உயிர் தனியானது, வெளியேறுகிறது என்றா பொருள்? அழிந்து இல்லாமல் போகிறது என்பது தானே பொருள்? உயிரும் உடலும் ஒன்றின் இருவேறு வெளிப்பாடுகள் தாமே. மனிதன் இணக்கமாக வாழ வேண்டுமென்பது வேறு, இப்படிப் பொருளற்ற கூற்றுகளை அதற்கு வழியாக வைப்பது வேறு. கடவுள் மனிதனுக்கு கட்டுப்பட்டதல்ல, சமயத்துக்கும் கடவுளுக்கும் எந்த உறவும் கிடையாது. அது ஒரு குமுகியல் கோட்பாட்டைக் கொண்டு உருவான அரசியல் நிறுவனம். கடவுள் அந்தக் கோட்பாட்டுக்குத் துணையாக, மக்களை நம்ப வைக்க முன்வைக்கப்படும் ஒரு மனக்கோளே (assumption).

″கானகத்தில் ஒரு கலைஞன்″ நல்ல படைப்பு. ″தமிழறிஞர் வரிசை″யும் சிறப்பாக இருக்கிறது.

″புதிய சாதனை - தன்வரலாற்று நாவல்கள்″ படித்தேன். கவலை மட்டும் படித்துள்ளேன். அதை நாவல் என்று வரையறுத்திருப்பது பொருத்தமாகப் படவில்லை. அத்துடன் நூலாசிரியருடைய மனக்கொதிப்பே, பருவமடைந்ததும் பள்ளிப் படிப்பு நிறுத்தப்பட்டும் தந்தையின் ஊக்குவிப்பால் நிறைய நூலறிவு பெற்று, தன்னைச் சுற்றியிருந்த பெண்களுக்கும் எழுத்தறிவைப் புகட்டி, ஆசிரியப் பணியில் திருமணத்துக்கும் முன்பே ஈடுபட்டிருந்த தன் ஆற்றல் எவராலும் கண்டுகொள்ளப்படாமல் கணவன் வீட்டின் இருட்டறைக்குள் புதைக்கப்பட்டுவிட்டதே என்று அவரே குறிப்பிட்டிருப்பதைக் கட்டுரை ஆசிரியரால் இனம் காண முடியவில்லை. பெண்களின் இந்தத் திறனழிப்புகள் இன்றும் இந்த வட்டாரத்தில் திட்டமிட்டு நடைபெறுகின்றன.

″தாரகைகள் தரை மீது″, ″என் மாணவன் லியோ பூன் கோய்″ என்ற இரு கட்டுரைகளுக்கும் ஓர் ஊடு இழை உள்ளது. வெறும் ஏட்டுக் கல்வியை எல்லா உள்ளமும் ஏற்றுக் கொள்வதில்லை. உள்ளங்களை இனங்கண்டு அதற்கேற்ப கல்வியை கற்பிக்க வேண்டும். அதற்குப் பொருத்தமாக, தொடக்கக் கல்வி ஆசிரியர் பிற நிலைக் கல்வி ஆசிரியரை விட மிகுந்த திறன்களுடன் உருவாக்கப்பட்டு அவர் மூலம் ஒவ்வொரு மாணவனின் கல்வி என்ற விதை ஊன்றப்பட வேண்டுமென்பது எமது புதுமையர் அரங்கம் (INNOVATORS FORUM) என்ற அறக்கட்டளையின் கல்வி சார்ந்த திட்டம். இப்பொருள் பற்றி எம் அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான ஆசிரியர் திரு. ம. எட்வின் பிரகாசு தொடர்ந்து கட்டுரைகள் எழுத எண்ணியுள்ளார்.

″உண்ணற்க கள்ளை″ ″மல்லுக்கட்டு″ என்ற இரண்டு கட்டுரைகளையும் படிக்கும் போது குடித்தலுக்கும் கண்ட பெண்களோடு உறவு கொள்வதற்கும் தமிழினி ஒரு குமுக ஏற்பு வழங்க நினைத்துள்ளதா என்று தெரியவில்லை. ஆசிரியவுரையில் வரும் புலால் உணவு பற்றிய கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தடம் தலைகீழாக அமைந்திருப்பது போல் தோன்றுகிறது. கட்டுரைகளின் உண்மையான நோக்கம் என்னவென்று புரியவில்லை.

″மல்லுக்கட்டில்″ கூறியுள்ளது போல் சுக்கிரனின் மாணவன் யயாதி அல்ல. தேவ குரு வியாழனின் மகனான கச்சனே. இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக்கொள்ள வந்த இவனிடம் சுக்கிரனின் மகள் தேவயானை காதல் கொண்டாள். அவன் திரும்பிப் போகும் போது தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி தேவயானை வேண்ட அவன் அற நூல்களைக் காட்டி குருவின் மகள் தங்கை என்று கூறி மறுத்துவிடுகிறான். அசுர அரசனின் மகள் சன்மிட்டையும் தேவயானையும் கிணற்றுக்குத் குளிக்கச் செல்லும் போது ஏற்பட்ட ஒரு சிறு பூசலில் தேவயானையைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுப் போய்விடுகிறாள் சன்மிட்டை. வேட்டைக்கு வந்த யயாதி தன் குழுவினரிடமிருந்து பிரிந்து வந்தவன் கிணற்றில் ஒரு வேரைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த தேவயானையின் முனகலைக் கேட்டு கை கொடுத்துக் கரையேற்றினான். தன்னைத் தொட்ட அவனையே திருமணம் செய்வேனென்று அவனைத் திருமணம் செய்து கொண்டாள் தேவயானை. சன்மிட்டை செய்த தவற்றுக்காக அவளைத் தேவயானைக்கு வேலைக்காரியாக அனுப்பினர்.

தன் குருவின் மகள் ஏமாந்தால் வளைத்துப் பார்க்கலாம் என்ற அடிமன ஓட்டம்தான் கதையைத் தலைகீழாக கட்டுரை ஆசிரியரின் மனதில் பதிய வைத்துள்ளதோ?

சரி, குருவின் மகள் மாணவனுக்கு உடன் பிறப்புக்குச் சமம் என்று அற நூல்கள் சொல்லலாம், தந்தையின் மாணவன் பெண்ணுக்கு உடன் பிறப்புக்குச் சமமானவன் என்று கூறியிருக்கின்றனவா?

செயமோகன் இலக்கியத்துக்கு குமுகக் கவலை தேவையில்லை என்று கருதுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவரது படைப்புகளில் அது உள்ளது. செங்கொடித் தோழர்களுடன் அவருக்குள்ள மனத்தாங்கலில் அவரது நரம்பு மண்டலம் சார்ந்த பகுத்தறிவு அப்படி நினைக்கலாம். ஆனால் அந்த மண்டலத்துக்கும் புறத்தே உடலினுள் நின்று அதனுடன் இடைவினைப்படும் அவரது உள்மனது அப்படி நினைக்கவில்லை என்பது அவரது படைப்புகளில் வெளிப்படுவது போலவே தேவதேவனுடைய பகுத்தறிவு இலக்கியத்தில் அரசியலைப் புறக்கணிக்கலாம். ஆனால் அவரது உள்மனது (நினைவிலி?) அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்கிறது என்பது அவரது கவிதைகளில் செயமோகன் காட்டியுள்ள முரண்பாட்டிலிருந்து தெரிகிறது.

இந்த முரண்பாடு உண்மையில் மரபு - தகவமைப்பு (Heridity and Adaption) என்ற இயங்கியல் எதிரிணைகளின் செயற்பாடு. மரபு என்பதைத் தான் பிறக்கும் போது கொண்டுவந்த பிறவிக் குணம் எனலாம். தன்னை மட்டும் நினைப்பது - பிறரைப் பற்றிக் கவலை கொள்வது, உடனடி நலன்களை மட்டும் சிந்திப்பது - நெடுநாள் நோக்கில் சிந்திப்பது என்ற வகையில் இது இருக்கலாம். தகவமைப்பு தான் வளர்ந்து வாழும் சூழலுக்கேற்ப பிறவிக் குணங்களை மிகுக்கவோ மட்டுப்படுத்தவோ அல்லது முற்றிலும் மாற்றவோ செய்வது. இது ஒருவேளை ஒவ்வொருவரின் உடலின் வேதியியலின் தன்மைக்கேற்பச் செயற்படலாம். தான் பகுத்தறிந்து வெளிப்படுத்தும் சிந்தனைக்கு மாறான ஒரு வெளிப்பாடு உணர்ச்சி வயப்பட்ட சூழலில் ஒருவரிடமிருந்தால் அவரது பகுத்தறிவை பிறவிக் குணம் வென்றுவிட்டது என்றுதான் கொள்ள வேண்டும்.

″எனது கவிதைப் கோட்பாடும் சங்கக் கவிதையும்″ என்ற சீரங்கம் மோகனரங்கனின் கட்டுரை கவிதை மொழிபெயர்ப்பைப் பற்றியது என்பது தெரிகிறது. ஆனால் எழுதியிருக்கும் முறையாலோ என்னவோ அதனுள் என்னால் புக இயலவில்லை. பொறுத்தருள்க. பாதசாரியின் ″மனநிழலி″ல் ஒதுங்கும் போது மிக வியர்க்கிறது, தாங்க முடியவில்லை. அதில் ஒன்றேவொன்றுக்கு விளக்கம் சொல்லலாம். நத்தை தாழ்ந்த தூண்டலில்(கீயரில்) போவதால் கூடுதல் சுமை இழுக்கிறது போலும். பின் குறிப்பு சுவையாக இருந்தது.

ஓர் இதழின் தொடக்கத்தில் இவ்வாறு பல்கலப்பான ஆக்கங்கள் இருப்பது நல்லதுதான். அதுவும் எல்லாக் கோட்பாடுகளும் குறிக்கோள்களும் ஒன்றுக்குள் ஒன்று மயங்கி அடுத்துச் செல்லவேண்டிய திசையோ இலக்கோ தெரியாமல் தடுமாறி, தடம் மாறி நிற்கும் இன்றைய சூழலில் இது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் கூடும். ஒரு மரக்கன்று வளர்ந்து நிலத்திலிருந்தும் வெளியிலிருந்தும் உரத்தையும் ஊட்டத்தையும் ஈர்த்துத் தன்னை மண்ணில் உறுதியாக ஊன்றிக் கொண்ட பின்னர் வேண்டாத கிளைகளைக் களைவது போல் இதழ் தன்னை உறுதியாக நிலைநிறுத்திய பின் தான் விரும்பும் தடத்தில் உறுதியாகச் செல்லலாம். ஆனால் தங்களுக்கு என்று ஒரு குமுகக் குறிக்கோள் இருந்து இதழ் நிலைப்பட்ட பின்னரும் தடம் மாறாமல் அந்தத் திசைநோக்கில் உறுதியாக நிற்பீர்களா என்பது காலம் உங்கள் முன் வைக்கும் கேள்வி, ஏனென்றால் விதிவிலக்கானவர்கள்தாம் வரலாற்றில் இந்தக் கட்டத்தைத் தாண்டி வந்திருக்கிறார்கள்.

எனவே தொடக்கத்திலேயே உறுதியான தடத்தை இனங்கண்டு பற்றிக் கொள்வதே, அதில் உறுதியுடன் நடை பயில்வதே சிறப்பு.

அன்புடன்,
குமரிமைந்தன்.

தமிழன் கண்ட ஆண்டுமுறைகள்

மனிதன் என்பவன் ஓரணுவுயிர் தன்னைத் தானே மேம்படுத்தி, தன்னையும் அறியும் அளவுக்கு கட்டமைத்துக்கொண்ட இயற்கையின் ஒப்புயர்வற்ற வடிவம். அது ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை மேம்படுத்துவதற்குத் தன்னைச் சுற்றிலுமுள்ள இயற்கையின் பிற கூறுகளை அறிந்தும் தற்செயலாகவும் கொண்ட உறவுகள் அடிப்படையானவை. அவ்வாறு தான் மனிதன் காலக் கணக்கீடும் அமைந்தது.

மனிதனும் சரி விலங்குகளும் சரி தாவரங்களாகிய நிலைத்திணைகளும் சரி தவிர்க்கமுடியாமல் அறியவும் பட்டறியவும் படும் காலப்பாகுபாடு இரவு பகல் என்பதாகும். இந்த இரு காலப் பாகுபாடுகளுக்கிடையில் பல்வேறு உயிர்களின் உயிரியக்கத் தொடர் தவிர்க்க முடியாதபடி பிணைந்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக மனிதனின் கவனத்தைக் கவர்ந்தது நிலவின் இயக்கம். கதிரவனின் ஒளியை இழந்த இரவின் இருளில் தனிக்காட்டு அரசனாக ஆட்சி செய்வது நிலவு. எனவே அதனுடைய ஒவ்வொரு அசைவையும் மனிதனால் வெறுங்கண்களாலேயே நோட்டமிட முடிந்தது. வளர்ச்சி தேய்வு என்ற இரு கோடி நிலைகளுக்குள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அது இயங்கி வந்தது. இரவு பகல் இணைந்த நாள் என்ற காலப்பகுப்புக்கு அடுத்ததாக மனிதன் நிலவின் வளர்வு தேய்வு என்ற இரு கலைகளுக்கும் இடைப்பட்ட காலத்தை, அளக்கும் அலகாகக் கொண்டான். அதையே மனிதனின் வாழ்நாளை அளக்கும் அளவையாகவும் கொண்டான். அவ்வாறுதான் யூத மறை நூலில் தாம் போன்றவர்களின் அகவை தொள்ளாயிரத்துக்கும் கூடுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இன்றுள்ள ஆண்டுக் கணக்கில் அது 80க்கு மேல் வராது.

இந்தக் காலப் பகுப்பும் மனிதனின் தேவைகளை நிறைவு செய்யவில்லை. பருவகாலங்களின் பெயர்ச்சியைத் தடம்பிடித்தல் வேளாண்மை, கடல் செலவு போன்றவற்றுக்கு இன்றியமையாததாக இருந்தது. எனவே நிலவுக்குப் பின்னால் விளங்கும் விண்மீன்களை மனிதன் நோட்டமிட்டான். அவை கூட்டம் கூட்டமாகவும் தனித்தனியாகவும் வான்வெளி எங்கும் பரந்து கிடந்ததைப் பார்த்தான். அது மட்டுமல்ல, அவை இரவு வானில் நிலையான இடங்களைப் பிடித்திருக்கவில்லை என்றும் அவற்றுக்கு ஒரு சுழற்சி இருக்கிறதென்றும் கண்டான்.

இந்த மீன் கூட்டங்களையும் நிலவையும் வைத்துப் பார்த்தபோது ஒருமுறை நிறைமதியின் பின்னணியில் காணப்படும் மீன் தொகுதி அடுத்த முறை வேறிடத்தில் இருப்பதும் நிலவின் பின்னணியில் வேறொரு மீன் கூட்டம் இருப்பதும் தெரிய வந்தது. இவ்வாறு ஏறக்குறைய 12 நிறை நிலா முடியும்போது நிலவுக்குப் பின் ஏறக்குறைய முதல் நிறை நிலாவுக்குப் பின்னணியில் இருந்த மீன்கூட்டம் தோன்றுவதைப் பார்த்தான். எனவே 12 நிலாச் சுழற்சிகளைக் கொண்ட ஓர் ஆண்டை முதன்முதலாக மனிதன் வடிவமைத்தான். அத்துடன் நிலவுக்குப் பின்னணியில் வரும் மீன்கூட்டங்களுக்கு, தான் விரும்பும் அல்லது தன் கற்பனைக்கு ஏற்ப அல்லது தான் வணங்கும் தெய்வத்தின் அடிப்படையில் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு வடிவம் கொடுத்து அவற்றுக்கு ஓரைகள் என்று பெயரும் கொடுத்தான். ஓரை என்பதற்குத் தமிழில் கூட்டம், மகளிர் கூட்டம் என்பது பொருள். அது காலத்தைக் குறிப்பதாக மாறி ஒரு மணி நேரத்தைக் குறிப்பதாக ஓரா என்று கிரேக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
மனிதனின் காலப் பகுப்புச் சிக்கல் இத்துடன் முடிந்து விடவில்லை. ஒரு 12 மாதச் சுழற்சியில் நிலவின் பின்னணியில் தோன்றும் ஓரைகள் துல்லியமாக அதே இடத்தில் அடுத்த சுழற்சியில் இருப்பதில்லை. ஓரிரு ஆண்டுகளில் ஓர் ஓரையிலிருந்து அடுத்த ஓரைக்கு நிலவின் இடம் நகர்ந்துவிட்டது. இதைச் சரிக்கட்ட வேண்டிய தேவையும் ஏற்பட்டது.

அதேவேளையில் தெற்கே மகரக்கோடு எனப்படும் சுறவக்கோட்டில் ஓர் வான் அறிவியல் புரட்சி நிகழ்ந்தது. இங்கு தான் கதிரவனின் தென்-வடல் செலவில் தென்கோடித் திருப்பம் உள்ளது. இந்தக் கோட்டிற்குத் தெற்கில் நிழல்கள் வடக்கே சாய்வதில்லை. இந்த இடத்தில் உள்ளவர்கள் மட்டுமே நோட்டமிடத்தக்க ஓர் இயற்பாடு இது. இந்த இடத்தில் கதிரவன் வரும் ஒரு நாளில் மட்டும் நிழல் சரியாகக் காலடியில் விழும் பிற நாட்களில் தெற்கில் சாயத் தொடங்கும். இந்த நாளை நோட்டமிட்டால் பருவகாலச் சுழற்சிகளைத் துல்லியமாகத் தடம்பிடிக்க முடியும். இதைச் செய்தவன் பெயர் தக்கன் என்பது. இவனைத் தொன்மங்கள் தட்சப்பிரசாபதி என்றும் பிரமனின் மானச புத்திரன் என்றும் அசுரன் என்றும் ஒரே நேரத்தில் குறிப்பிடப்படுகின்றன. தக்கன் என்பது ஒரு தனி மனிதனின் பெயராக இருக்க முடியாது. ஒரு பீடம் அல்லது தலைமையின் பெயராக இருக்க வேண்டும். அதனால்தான் திசையை(தெற்கு) வைத்துப் பெயர் சுட்டப்படுகிறது.

இந்தத் தெற்கன்கள் கதிரவனைப் புவி சுற்றிவருவதால் புவியிலிருந்து பார்க்கும்போது கதிரவன் தென்வடலாக நகர்வது போல் தோற்றமளிப்பதை மட்டும் நோட்டமிடவில்லை; கதிரவனின் தன்சுழற்சியால் ஏறக்குறைய 27⅓ நாட்களுக்கு ஒருமுறை கதிரவனின் கரும்புள்ளிகள் புவியை நோக்கி வருவதையும் அதனால் புவியிலுள்ள காந்தப்புலங்கள் தடம் புரள்வதையும் அதனால் கடலில் செல்லும் கலன்களிலுள்ள திசைமானிகள் தவறான திசை காட்டுவதையும் நோட்டமிட்டு அதனடிப்படையில் வான்வெளியை 27 பகுதிகளாகப் பிரித்து அவற்றுக்கு நாள்மீன்கள்(நாள் + சத்திரம் + இருக்குமிடம் = நட்சத்திரம்) என்ற பெயரும் இட்டனர். அத்துடன் சந்திரனை நோட்டமிட்டுக் கிடைத்த வானின் 12 பகுப்புகளான ஓரையைக் கதிரவனின் இயக்கத்துடன் இணைத்து சுறவம்(மகரம்), கும்பம், மீனம் என்ற மாதங்களையும் வகுத்தனர். அம்மாதப் பெயர்கள் இன்றும் கொல்லம் ஆண்டு முறையில் மாதப் பெயர்களாக மட்டும் நின்று நிலவுகின்றன.

அது மட்டுமல்ல, கதிரவன் தொடர்பான 27 பகுப்புகளை உடைய நாள் மீன்களை நிலவின் சுழற்சியுடன் இணைத்தனர். இது தொன்மக் கதை வடிவில் உள்ளது. தக்கன் தன் பெண்களில் 27 பேரை நிலவுக்கு (சந்திரனுக்கு) மணம் முடித்துக் கொடுத்தான். அவர்களின் பெயர்கள் கார்த்திகை, ரோகிணி என்று வருபவையாகும்.

காலத்தைக் கணித்ததால் காலன் என்றும், சாமங்கள் எனப்படும் யாமங்களை வகுத்ததால் இயமன் என்றும் அறியப்படுபவர்களும் இவர்களே. இயமன் தென்திசைக் கடவுள். யாமதிசை என்பது தென்திசை. இயமன் கதிரவனின் மகன் என்றும் கூறப்படுகிறான். ஆக, வானியல் தொடர்பான அடிப்படைகளை உருவாக்கியவர்கள் வாழ்ந்த இடம் சுறவக் கோட்டுப் பகுதியே ஆகும். எனவே அவர்கள் வகுத்த ஆண்டுப் பிறப்பும் கதிரவன் தென்கோடியில் இருக்கும் சுறவத் திருப்பத்துக்கு வரும் நாளான திசம்பர் 21/22 அன்றாகவே இருந்திருக்கும்.

இராவணனது இலங்காபுரியும் இதே சுறவக்கோட்டில் தான் இருந்தது. தாமிரபரணி எனும் நிலப்பரப்பில் நிழல் தெற்கில்தான் விழுந்தது என்று கிரேக்க ஆசிரியர்கள் பதிந்துள்ளனர். அத்துடன் இராவணனைப் பற்றிய தொன்மச் செய்தி அவன் கதிரவனைத் தன் நாட்டினுள் வரவிடாமல் தடுத்தவன் என்பதாகும். இது இராவணனது தலைநகர் ஒன்றேல் சுறவத் திருப்பத்திற்குத் தெற்கே அல்லது கடகத் திருப்பத்திற்கு வடக்கே இருந்திருக்க வேண்டும் என்பதாகும். ஆனால் தெற்கே என்பதற்குத்தான் சான்றுகள் உள்ளமையால் அவன் சுறவத் திருப்பத்தில் இருந்தான் என்பதோடு அவனது ஆண்டும் திசம்பர் 21/22 நாட்களில் தான் பிறந்திருக்கும்.

சுறவக் கோட்டிலிருந்த நிலப்பரப்பு அழிந்ததாலோ அல்லது கடலினுள் அமிழ்ந்ததாலோ அல்லது நிலநடுக்கோட்டில் வாழ்ந்த மக்கள் நாகரிக உயர்வு எய்தியதாலோ, நிலநடுக்கோட்டில் தங்கள் தலைநகரை நிறுவி தங்கள் ஆண்டுப் பிறப்பை மார்ச் 21/22 இல் வைத்துக் கொண்டனர். இதற்கான அடிப்படை வானியல் அறிவை தெக்கர்கள் வகுத்துத் தந்திருந்தனர்.

இந்த நிகழ்வுகளுக்கு ஊடாக, ஏற்கனவே நிலவின் சுழற்சியின் அடிப்படையில் மாதங்களை வைத்திருந்த மக்களின் இடையில் நிலா மாதங்களைக் கதிரவனின் சுழற்சியில் அடிப்படையில் வகுக்கப்பட்ட புதிய ஆண்டு முறையுடன் இணைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட உத்திகள் புனையப்பட்டன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.

1. சுமார்த்த ஆண்டு. இது வளர்பிறை முதல் பக்கத்தில் தொடங்கி அடுத்த காருவா (அமாவாசை) அன்று முடியும் 12 மாதங்களைக் கொண்ட ஆண்டில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு மாதத்தைச் சூனிய மாதம் என்று கழித்து விடுவது.

2. எட்டு ஆண்டுகளில் முதல் நான்கு ஆண்டு முடிவில் இரண்டு மாதங்களும் அடுத்த நான்கு ஆண்டுகளின் முடிவில் ஒரு மாதமுமாக மூன்று மாதங்கள் ஒலிம்பிக் ஆட்டங்களில் செலவு செய்து கழிப்பது. இதை சியார்சு தாம்சன் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த கிரேக்க மொழிப் பேராசிரியர் தன் நூலொன்றில் (Aeschilles and Athens) கூறியுள்ளார்.

3. 19 ஆண்டுகளுள்ள ஓர் ஆண்டுச் சுழற்சி. இதில் 7 ஆண்டுகள் 13 நிலவு மாதங்களைக் கொண்டிருக்கும். இந்த ஆண்டு முறை யூதர்கள், சீனர்கள் இடையேயும் தென்கிழக்காசிய நாடுகளிலும் நடைமுறையிலுள்ளது. இந்த ஆண்டுப் பிறப்பன்று நம் பஞ்சாங்கங்கள் எனப்படும் ஐந்திறங்களில் 'துவாபர யுகாதி' என்ற குறிப்பு இருக்கும் எனவே இந்த ஆண்டு முறையை வகுத்தவர்களும் நம் முன்னோர்களே என்பது தெளிவு.

வானியலில் எந்த ஒரு வான் பொருள் அல்லது வான்பொருள் தொகுதியின் இயக்கத்தின் கால அளவை இன்னொரு அதைவிடச் சிறிய வான் பொருள் இயக்கத்தின் முழு எண்ணாகப் பார்க்கவே முடியாது.

நம் மூதாதையர் கதிரவனின் கோள்களில் புவி தவிர்த்த ஐந்தையும் ஒரு துணைக்கோளான நிலவையும் கதிரவனையும் சேர்த்து நாட்களுக்குப் பெயரிட்டனர். வெள்ளி, செவ்வாய், பொன்(வியாழன்) என்ற பெயர்கள் அக்கோள்களின் நிறத்துக்குப் பொருந்தி வருவது அவர்களது வானியல் ஆய்வின் நுண்மைக்குச் சான்றாகும்.

இந்த ஏழு நாட்களையும் அடிப்படையாகக் கொண்டு மாதத்துக்கு 4 வாரங்கள், எனவே 28 நாட்கள் என்று வைத்து ஏற்கனவே வகுக்கப்பட்ட 27 நாள் மீன்களுடன் அபிசின் என்றொரு நாள் மீனைச் சேர்த்து 28 நாட்கள் உள்ள ஒரு மாதத்தையும் 28 x 12 = 336 நாட்கள் கொண்ட சாவனம் என்ற ஆண்டு முறையையும் கடைப்பிடித்துக் கைவிட்டிருப்பதற்குத் தடயம் உள்ளது (பார்க்க - அபிதான சிந்தாமணியில் சம்வச்சரம் என்ற சொல்லின் விளக்கம்)

அது போல் 30 நாட்களைக் கொண்ட 12 மாதங்கள் 360 நாட்களைத்தான் தரமுடியும். ஆனால் புவியின் ஒரு தென்வடல் திரும்பல் 365 'சொச்சம்' நாட்கள் ஆகும். இருப்பினும் வட்டத்தின் பாகைகள் 360 என்பது இந்த 365 'சொச்சத்'தின் தோராயப்பாடு ஆகும்.

இந்த 365 'சொச்சம்' நாட்களை முறைப்படுத்த எத்தனையோ உத்திகளை நம் முன்னோர்கள் கையாண்டுள்ளனர். அவற்றில் ஒன்று, சோதிக் ஆண்டு (sothic year) எனப்படும் 365 நாட்களைக் கொண்ட 1460 ஆண்டுகளின் சுழற்சியாகும். கதிராஆண்டு 365 நாட்கள் 5 மணி 48 நிமையங்கள், 46 நொடிகள் தோராயமாகக்(!) கொண்டது. 365 நாட்கள் போக 'சொச்சத்தைத் தோராயமாக கால் நாள் என்று எடுத்துக்கொண்டால் அதைச் சரி செய்ய நான்கு ஆண்டுக்கு ஒரு 'தாண்டு ஆண்டு' வகுத்துள்ளனர் ஐரோப்பியர். அப்போதும் கூடுதலாக்க கணக்கிடப்படும் 11 நிமைய 14 நொடி 'சொச்சத்'தைச் சரிக்கட்ட 400 ம் ண்டை 365 நாள் கொண்ட இயல்பு ண்டாக வைத்துள்ளனர். அப்போதும் சிறிது 'சொச்சம்' விழும். அது சிக்கல் தரும் அளவுக்கு வருவதற்குப் பலநூறு நூற்றாண்டுகள் ஆகும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்.

நாம் மேலே குறிப்பிட்ட சோதிக் ஆண்டு எகிப்தியர்களால் கையாளப்பட்டதாக CHAMBERS TWENTIETH CENTURY DICTIONRY 1972 கூறுகிறது (பார்க்க - sothic year)

ஆண்டுக்கு 365 'சொச்சத்'தைக் கால் என்ற எடுத்துக் கொண்டால் 365 நாட்களைக் கொண்ட 1460 ஆண்டுகளில் 1460 / 4 = 365 நாட்கள் கொண்ட ஒரு முழு ஆண்டு குறைவுபடும். அப்போது ஒரு முழுச் சுழற்சியாக ஓரைகள் தம் பழைய நிலைக்கு வந்திருக்கும். ஆனால் அதற்குள் பருவகாலங்களின் கணிப்பு பெரும் சிக்கலாகப் போயிருக்கும். நிலவு மாதங்கள் 12ஐக் கொண்ட ஆண்டு முறையுடன் ஒப்பிடும்போது இது அதிகச் சிக்கல் வாய்ந்ததாகும். இந்தச் சூழலில் உருவாக்கப்பட்டதுதான் சிவவாக்கியர் பெயரில் நிலவும் வாக்கியப் பஞ்சாங்கம் என்று தோன்றுகிறது. அறுபது ஆண்டுகள் சுழற்சியுடைய ஓர் ஆண்டு முறையாகும். ஆனால் இதுவும் ஒரு தோராயப்பாடே. உண்மையில் 59 ஆண்டுகளில் முன்பு வந்த திதிகள் மீண்டு வருகின்றன. அதுபோல் வியாழனின் சுழற்சியும் துல்லியமாக 12 ஆண்டுகள் அல்ல, அதைவிடவும் சிறிது குறைவு.

எகிப்தியர்கள் இந்த சோதிக் ஆண்டு முறையை மேம்படுத்தியிருப்பார்கள். ஏனென்றால் அவர்களிடமிருந்து தான் சூலியர் சீசர் இன்றைய கிறித்தவ ஊழியின் மூல வடிவத்தை உரோமுக்குக் கொண்டு சென்றார்.

நம் மூதாதையர்களில் ஒரு பகுதியினர் சென்று கலந்ததால் எகிப்து மிசிரத்தானம் என்ற வழங்கப்படுவதாக கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி கூறுகிறது. மிசிரம் என்ற சொல்லுக்கு கலப்பு, சமம் என்ற பொருள்களையும் அது தருகிறது.

துருக்கரால் மிசிரு என்ற வழங்கப்படுகிற ஒரு தேசம், தற்காலத்தில் ஐரோப்பியர்களால் ஈசிப்ட் என்று வழங்கப்படுகிறது. யயாதியால் தன் தேசத்தினின்றும் ஓட்டப்பட்ட அவன் புத்திரர் நால்வரும் இந்த மிலேச்ச தேசத்திற் சென்று அத்தேசத்து அரசராகி அந்த தேசத்துச் சனங்களோடு கலந்தமையால் இது மிசிரத்தானம் என்னும் பெயருடைத்தாயிற்று.

இந்தக் கருத்தை உறுதி செய்யும் சான்றுகள் உள்ளன. ஆனால் அது நாம் எடுத்துக்கொண்ட பொருளிலிருந்து நம்மை நெடுந்தொலைவு கொண்டுசென்று விடும் என்பதால் தவிர்க்கிறோம்.

நம் மூதாதையர்களிடமிருந்து ஒவ்வொரு காலகட்டமாக இடம் பெயர்ந்த மக்களிடமிருந்து நம் ஆண்டு முறைகள் எகிப்து வழியாகவும் வேறு வகைகளிலும் ஐரோப்பாவை எட்டியுள்ளன.

மீண்டும் இந்துமாக்கடல் பகுதிக்கு வருவோம். நிலநடுக்கோட்டில் தலைநகரமைத்த நம் முன்னோர் அங்கு கதிரவன் நேர் மேலே வரும் நாளை ஆண்டுப் பிறப்பாகக் கொண்டனர். அப்போது அமைந்ததுதான் மேழம்(மேடம்), விடை(இடபம்), ஆடவை(மிதுனம்) என்ற மாதங்களைக் கொண்ட ஆண்டு முறை. இந்த ஆண்டு முறை 16 ம் நூற்றாண்டுவரை ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வழக்கில் இருந்துள்ளது.

12 ஓரைகளில் 4 ஓரைகளை சரராசிகள் என்று தமிழ்மொழி அகராதி கூறுகிறது. அவை கடகம், துலாம், மகரம், மேழம் ஆகியவை. இந்த நான்கு ஓரைகளும் கதிரவன் தன் தென்வடல் செலவில் முறையே வடகோடியிலும் நில நடுக்கோட்டிலும் அடுத்து தென்கோடியிலும் மீண்டும் நிலநடுக்கோட்டிலும் வரும்போது நுழையும் முகமையான புள்ளிகளில் இருப்பவை. இவற்றின் அடிப்படையில் ஆண்டுகளை சம்சத்சரம், பரிவத்சரம், இடவத்சரம் என்ற வரிசையில் 5 ஆண்டுகளாகப் பிரித்துள்ளனர். இவற்றில் சம்வத்சரம் என்பதற்கு சம்வச்சரம் என்ற சொல்லின் அடியில் ''அயன, ருது, மாத, வார' அவயவங்களுடன் கூடிய அவயவி சம்வச்சரம் எனப்படும். அது பன்னிரண்டு மாதங்களுடன் கூடியது. இவ்வருடம் சாந்தரமானம், செளரமானம், சாவனம் என மூவிதப்படும். இதில் சாந்த்ரமான வருடம் சித்திரை மாத சுக்ல பிரதனம் முதல் பங்குனி மாதப் பெளரணைவரை கணிப்பதாம். செளரம் சித்திரை முதல் பங்குனி கடைசி வரையில் கணிப்பது. சாவனம் முந்நூற்று முப்பத்தாறு நாட்களைக் கொண்டது.'' என்கிறது அபிதான சிந்தாமணி.

தமிழகத்தில் ஆடி(கடகம்)ப் பிறப்பைக் கொண்டாடும் வழக்கம் உள்ளது. குமரி மாவட்டத்தில் முன்பு ஆண்டுப் பிறப்பை மாதப் பிறப்பு என்றுதான் கூறுவர். கொல்லம் ஆண்டு ஆவணி மாதம் பிறப்பதால் அதை மாதப்பிறப்பு என்பவர்கள் ஆடிமாதப் பிறப்பையும் மாதப்பிறப்பு என்றுதான் குறிப்பிட்டனர். அது மட்டுமல்ல, ஆடிப் பிறப்பன்று மேளம் கொட்டுவோர் வீட்டுக்கு வீடு மத்தளம் கொட்டி கை நட்டம் பெறுவர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இதை போணி பண்ணுதல் என்று குறிப்பிடுவர். ஐப்பசி மாதப் பிறப்பை ஐப்பசி விசு என்று கொண்டாடும் மரபும் உள்ளது. கதை, சித்திரை, ஆடி, ஐப்பசி ஆகிய நான்கு மாதங்களில் ஆண்டுப் பிறப்புகளையுடைய ஆண்டு முறைகளுடன் கொல்லம் ஆண்டு போன்று இந்த நான்கு ஆண்டு முறைகளிலும் சேராத ஆண்டு முறைகளையும் சேர்த்துத்தான் சம்வத்சரம் தொடங்கி ஐந்து ஆண்டுமுறைகளாக நம் முன்னோர் வகுத்துள்ளனர். இதைத் தவறாக உணர்ந்து 5 ஆண்டுகள் கொண்ட வேத யுகங்கள் என்று தவறாகச் சில ஆய்வாளர்கள் முடிவு கட்டியுள்ளனர்.

இனி, நிலநடுக்கோட்டில் தலைநகரை வைத்திருந்த நம் முன்னோர் கடற்கோளுக்குப் பின் வடக்கு நோக்கி நகர்ந்து கபாடபுரத்தில் தலைநகரை அமைத்தபின் அங்கு நேர்மேலே கதிரவன் வரும் நாளில் ஆண்டு முறையை வைத்தனர். அது ஏறக்குறைய 23/24 நாட்கள் பின் சென்று விட்டது. இப்போது கதிரவன் இருக்கும் ஓரைக்கும் மாதங்களுக்குமான ஒத்திசைவு முறிந்துவிட்டது. எனவே முழுநிலா நாளில் நிலவு இருக்கும் ஓரையில் அடங்கிய நாள்மீன்களில் முதல் நாள்மீன் பெயரை அந்த மாதத்துக்கு வைத்தனர். அவ்வாறுதான் சித்திரை, வைகாசி என்ற மாதப் பெயர்கள் புழக்கத்துக்கு வந்தன. ஆனால் அதனோடு திசம்பர் 21/22 இல் வரவேண்டிய தைப் பொங்கல் சனவரி 14/15 இல் இடம் பெறுகிறது.

கதிரவன் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு நேரே வரும் நாளைப் போற்றுவது நமது மரபு. சில கோயில்களில் கதிரவன் அவ்வூருக்கு நேர் மேலே கதிரவன் வரும் நாளில் தெய்வப்படிமத்தின் மீது கதிரவன் ஒளி படும் வகையில் துளைகள் இட்டிருப்பதைக் காணலாம். அதை விடப் பெரும்பான்மையாக கதிரவன் நிலநடுக்கோட்டில் வரும் நாளை ஒட்டி மார்ச் 19 - 22 நாட்களில் படிமத்தின் மீது ஒளிபடும் வகையில் கூரையில் துளையிட்டிருப்பார்கள். இவை நம் மரபில் ஊறியிருக்கும், ஆனால் அறிவறிந்து வெளிப்படாத நம் பண்டைய அறிவியல் தொழில்நுட்ப மேன்மையைக் காட்டுகிறது. இதை அறிவறிந்த அறிவியலாக பாதுகாக்கப்பட்ட. தொழில்நுட்பமாக வளர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

கதிரவன் நேர் மேலே வரும் சித்திரை பத்தாம் நாள் உழவு, விதைப்பு, நடவு செய்வது சிறப்பு என்று குமரி, நெல்லை மாவட்ட மக்கள் நம்புகின்றனர்.

காலத்தைக் காட்டும் நாழிகை வட்டிலில் உள்ள கோலின் நிழல் நேர் மேற்காக விழும் நாளில், அதாவது கதிரவன் நேர் மேலே இருக்கும் நாளில் மதுரை அரண்மனைக்குக் கால்கோள் செய்யப்பட்டதாக நெடுநல்வாடை கூறுகிறது. இந்த அடிப்படையில்தான் கபாடபுரத்தில் ஆண்டுப் பிறப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றப்பட்ட மாதப்பிறப்பு அப்படியே எகிப்து சென்று அங்கிருந்து உரோமுக்குச் சென்று இன்று கிறித்துவ ஊழியாகி நிற்கிறது. 16 ஆம் நூற்றாண்டில் போப் கிரிகோரி 10 நாட்களை முன்கூட்டி நாட்காட்டியைத் திருத்தியதாலும் பின்னர் மூன்று தவணைகளாக ஒவ்வொரு நாளை முன் கூட்டியதாலும் நம் தைத் தொடக்கத்தைவிட கிறித்துவ ஆண்டு 13 நாட்கள் முந்திப் போய்விட்டது. உண்மையில் அதற்கு முன் சனவரியும் தைமாதமும் ஒரே நாளில்தான் பிறந்தன. ஏப்ரலும் சித்திரையும் அவ்வாறே.

இந்தத் திருத்தத்திற்கு போப் கிரிகோரி கூறிய சாக்குப் போக்கு பொருளற்றது. நட்சத்திரமான ஆண்டு எனப்படும் sidereal ஆண்டு முறைப்படி காலம் ஒதுக்காமல் விட்டால் கிறித்துவப் பண்டிகையின் காலம் தப்பிவிட்டது என்ற காரணத்தை அவர் சொன்னார். ஆனால் நமது வாக்கியப் பஞ்சாங்கத்தில் நட்சத்திரமான ஆண்டைக் கணக்கில் எடுக்க வேண்டிய தேவையே இல்லை. கதிரவனின் கடகம் சுறவம் இடையிலான செலவு ஒன்று நாண்மீன்கள் எனப்படும் கதிரவனின் தன் சுழற்சி, நிலவின் கலைகளின் மாற்றம் மற்றும் இரண்டு தனித்தனி மாறுவான்களைக் கொண்டு வான்பொருட்களின் வெவ்வேறு தொகுப்புகளின் இயக்கத்தை ஒன்றுக்கு ஒன்று சார்பில்லாமல் தருகின்ற மிகத் துல்லியமான கணிப்புகளாக உள்ளது வாக்கியப் பஞ்சாங்கம். அவற்றைப் பயன்படுத்தி கடலில் செல்வோரும் உழவரும் ஆயர்களும் குயவர்களும் என்ற அனைத்துத் துறையினருக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். வான்பொருட்களின் இயக்கத்தின் இடைவினைப்பாட்டால் மனிதனின் உடல் உள்ளம் ஆகியவற்றுக்கும் அவனது குமுகவியல், புவியியல், வானியல் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை முன்கணிப்பதாக வடிவமைக்கப்பட்டு இன்று திசைமாறி நிற்கும் சோதிடத்துக்கும் நம் பஞ்சாங்கங்கள் தாம் அடிப்படையானவை.

போப் கிரிகோரியின் திருத்தங்களுக்கு முன்பு நமது ஆண்டு முறையும் ஐரோப்பியர்களின் ஆண்டு முறையும் ஒத்திருந்தது என்பதைப் பார்த்தோம். 'சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன' என்று ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முன் இளங்கோவடிகள் பாடியபோது இருந்ததைப் போன்றுதான் இன்றும் சித்திரை மாத நிறைமதி சித்திரை நாள் மீனில் தான் வருகிறது என்பது நமது ஆண்டுமுறை நட்சத்திரமான ஆண்டுக்கு ஈடுகொடுத்து நிற்கிறது என்பதற்கு அசைக்க முடியாத சான்று.

மதம் அற்றவர்கள் (Pagans) என்று தங்களால் தூற்றப்படும் தமிழர்களுடைய மாதப் பிறப்பும் தங்கள் மாதப்பிறப்பும் ஒன்றாக இருப்பது பிடிக்காமல் அவர் செய்த அதிரடி நடவடிக்கையே இது. இத்துடன் அவரது அரசியல் நின்றுவிடவில்லை. அதுவரை நாளின் தொடக்கம் இராவணனின் தென்னிலங்களையையும் பண்டை அவந்திநாட்டின் தலைநகரான உச்சையினியையும் தொட்டு ஓடிய லங்கோச்சையினி மைவரை(meridian)யிலிருந்து கணிக்கப்பட்டு வந்தது. ஒரு புதன்கிழமைக்கு அடுத்து வெள்ளிக்கிழமை வரும் வகையில் வியாழக்கிழமையைக் கழித்து அவர் ஆணை பிறப்பித்ததால் நாள் மேலைநாடுகளில் தொடங்குவதாக மாறிவிட்டது.

பஞ்சாங்கங்கள் சமயம் சார்ந்த அரசியலைக் கொண்டு இன்றும் விளங்குகின்றன. தமிழ்நாட்டிலுள்ள பஞ்சாங்கங்கள் சிலவற்றில் காஞ்சி சங்காரச்சாரியின் சான்றிதழ் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் வெளிவரும் வெட்டேகர் பஞ்சாங்கத்தில் ஊர்திகளை ஓட்டிச் செல்வோர் முன் விளக்குகளை ஒவ்வொரு மாலையிலும் எப்போது எரியவிடத் தொடங்கி காலை எத்தனை மணிக்கு அணைக்க வேண்டும் என்பது போன்ற செய்திகள் தரப்பட்டுள்ளன.

இன்று தமிழக அரசு யாரோ 'ஐந்நூறு தமிழறிஞர்கள்' வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் ஆண்டுப் பிறப்பைத் தை முதல் நாளில் நிறுவி திடீரென ஆணை பிறப்பித்துள்ளது. இது தேவையற்ற ஒன்று. தமிழ் ஆண்டு முறையில் மாற்றம் வேண்டுமாயின் இடையில் நிகழ்ந்த கடற்கோள்கள் இடப் பெயர்ச்சிகளால் திரிவுறும் முன்னர் தமிழர்கள் நிலநடுக்கோட்டில் இருந்தபோது கடைப்பிடித்த மேழம், விடை, ஆடவை என்ற ஓரைப் பெயர்களைக் கொண்ட மாதத்தை அறிமுகம் செய்யலாம்.

இந்தியா விடுதலை அடைந்த பின்னர் இந்திய அரசாங்கம் உருவாக்கிய அறிஞர் குழு வடிவமைத்த சக ஆண்டு இதற்குப் பொருத்தமானது. மாதப் பெயர்களை நாள் மீன் பெயர்களாயிருப்பதிலிருந்து ஓரைகளாக மாற்றினால் போதும்.

மார்ச் 21/22 உலகின் தென்முனையிலிருந்து வடமுனை வரை இரவும் பகலும் சமமாக இருக்கும் நாள். அனைத்து உயிர்களுக்கும் கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி அருள் வழங்கும் நாள். அது தான் ஆண்டுப் பிறப்பாக உலக முழுவதும் கடைப் பிடிக்கத்தக்க நாள். கடகக் கோட்டுக்கு வடக்கில் இருந்து கொண்டு கதிரவன் சுறவக் கோட்டின் அருகில் இருக்கும் ஒரு நாளை ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடும் ஐரோப்பியர்களுக்கும் இந்த உண்மையை எடுத்துரைத்து அவர்களும் இந்த ஆண்டுமுறையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தும் தகுதி நமக்கு உண்டு. ஏனென்றால் உலகில் தோன்றிய அனைத்து ஆண்டுமுறைகளையும் படைத்தவர்கள் நாம்.

உலகில் கதிரவனின் தென் வடல் செலவினை அடிப்படையாக வைத்து 365 சொச்சம் நாட்களைக் கொண்ட ஆண்டு முறையை வகுத்து அதை இன்று வரை பாதுகாத்து வருபவர்கள் உலகில் தமிழர்கள் மட்டுமே. 60 ஆண்டுச் சுழற்சியும் நமக்கே உரியது. ஆண்டுப் பெயர்கள் சமற்கிருதத்தில் இருப்பதால் பெரும்பாலான தமிழறிஞர்கள் அதனைத் தமிழர்களுக்குரியவையல்ல என்று நம்புகிறார்கள். முழுமையான வரலாற்று ஆய்வு இல்லாத சூழ்நிலையில் ஐரோப்பிய அரசியல் பின்னணியில் உருவாகிய ஆரிய இனம் பற்றிய போலிக் கோட்பாடும் சமற்கிருதம் அவர்களுடைய மொழி என்பதும் தமிழறிஞர்களுக்கு இத்தகைய மயக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

பஞ்சாங்கங்களில் நம் வானியல் அறிவுகள் அனைத்தும் இன்றைய மேலையர் எய்தியவற்றைவிட எந்தவகையிலும் குறையாத வகையில் உள்ளன. அது போல பிற அறிவுத்துறைகள் அனைத்தும் கோயில் ஆகமங்களில் அடங்கியுள்ளன. அவற்றை ஆய்வோம். புதையல்களை வெளிப்படுத்துவோம்.

பஞ்சாங்கம் என்பது ஆங்கில காலங்காட்டியில் Tthirty days for September April June and November என்பது போன்ற எளிய வாய்ப்பாடுகள், கைவிரல்களின் மூட்டுகளைத் தொடுதல் ஆகிய எளிய முறைகளில் எளிய மக்கள் நினைவு வைத்துக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும். பண்டை நாட்களைப் போல ஊர்ப்பெரிய மனிதரிடம் அல்லது பூசாரியிடம் மக்கள் கைகட்டி நிற்கும் திக்கக் கருவியாக அமைந்து விடக்கூடாது என்ற கண்ணோட்டத்தில் பஞ்சாங்கங்களை மாற்றியமைக்க வேண்டும்.

வாக்குப்பெட்டி எனும் மாய்மாலப் பெட்டியைப் பற்றிக்கொண்டு அதிகாரத்துக்கு வந்தவர்களும் அவர்களை அண்டி வாழ்கின்றவர்களும் செய்கிற அழிம்புகளை உலககெங்கும் மனிதர்கள் திருத்துவார்கள். திருத்துவோம்.

(இக்கட்டுரை தமிழினி பிப்ருவரி-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

28.3.08

தமிழ்த் தேசியம் ... 28

மனந்திறந்து... 18

ஒரு கட்டுரைக்கு எழுதிய முன்னுரை அதைவிட நீண்டதாய் அமைந்துவிட்டது விதிவிலக்கான ஒரு நிகழ்ச்சி. தமிழ்த் தேசியம் என்ற தலைப்பு மிக விரிவான பார்வையைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மிகக் குறுகியதாக, அரசியல் அரங்குக்குள் அதன் எல்லை சுருங்கி விட்டது. அதன் முழுப் பரிமாணங்களையும் படிப்போர் முன் வைக்க வேண்டிய கடமையை மனதில் தாங்கித்தான் என் சொந்தப் பட்டறிவுகளை எடுத்து வைத்ததன் இன்னொரு பயனாக அதை நிறைவேற்றியுள்ளேன். இன்று பலர் நினைப்பது போல மொழியும் பண்பாடும் மட்டும் தேசியமல்ல, மொழி தேசியத்தின் அடையாளமாகச் சில இடங்களில் பயன்படக்கூடும், பயன்படாமலும் போகும். ஆனால் பண்பாடென்பது பொருளியல் அடித்தளத்தைப் பொறுத்து மாறத்தக்கது. இவை தவிர்த்த பிற தேசியக் கூறுகளை இம்முன்னுரையில் ஓரளவு நான் சுட்டிக் காட்டியுள்ளேன், சுருக்கமாக.

மொழிவளர்ச்சிக்கு அதைப் பேசும் மக்களின் பொருளியல், அதாவது அறிவியல் - தொழில்நுட்பம், பண்ட விளைப்பில் வளர்ச்சி முதலியவை இன்றியமையாதவை. அதே வேளையில் எந்த மொழியைக் கொண்டும் பொருளியல் வளர்ச்சியை எய்தலாம். இந்தியாவிலும் ஏழை நாடுகளிலும் பொருளியல் வளராமல் போனதற்கு மொழிச் சிக்கலல்ல காரணம். வல்லரசியப் பொருளியல் ஒடுக்குமுறையே காரணம். எனவே உண்மையும் நேர்மையுமுள்ள மொழி உணர்வாளர்கள் பொருளியல் உரிமைப்படையில் முன்னணிப் பங்கேற்க வேண்டும். இல்லையெனில் பொருளியல் வளர்ச்சிக்கு மொழி ஈடுகொடுக்க முடியாமல் போகும்.

இங்கே நான் பொதுவாழ்வில் ஈடுபட்ட, ஈடுபட்டுள்ள எத்தனையோ பேரைப் பற்றிய கடுமையான திறனாய்வுகளை முன்வைத்துள்ளேன். அவர்களில் பலருடன் நான் நெருங்கிப் பழகியுள்ளேன். பொதுவாழ்வில் எனக்கு முதலடி எடுத்துக் கொடுத்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் என் ஆக்கங்கள் அச்சு வடிவம் பெறச்செய்து பெருமைப்படுத்திய குணாவும் அவர்களைப் போன்று பல்வேறு அளவுகளில் என் பொதுவாழ்வுப் பணியில் உதவியவர்களும் இந்தப் பட்டியலில் அடக்கம். அவர்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டவன். ஆனால் அவர்களும் நானும் மேற்கொண்டுள்ள பணி முழுமை எய்த வேண்டும் என்ற உறுதியின் முன் என் நன்றியுணர்ச்சி நிற்க முடியவில்லை. அதனை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இன்று தமிழுணர்வு, தமிழ்த் தேசிய உணர்வு உடையவர்கள் அதற்காகப் பாடுபடுவர்கள் என்று அறியப்பட்டவர்களில் என்னுடன் ஏதோவொரு வகையில் உறவு கொண்டவர் அனைவரையும் பற்றிய திறனாய்வுகளை எழுதும் போது இப்படி அனைவர் மீதும் குறை சொல்கிறோமே, அது நம் பணியில் எதிரான விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ, நம் பக்கம் வரத்தக்கவர்களை எதிரணியில் நிறுத்தி விடுமோ, நம் இயல்பு பற்றிய ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தி விடுமோ என்ற மயக்கமும் தயக்கமும் இருந்தது. இருப்பினும் நமது பட்டறிவுகளை நமக்குத் தெரிந்த உண்மைகளை இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற உந்துதலைத் தவிர்க்கவும் முடியவில்லை. இந்த தவிப்புக்கான காரணத்தை அறியும் தேடலைத் தொடங்கினேன். அதன் விளைவாகக் கிடைத்த உண்மை இது தான்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் அயல்மொழியினரின் ஆதிக்கத்தின் எதிர்ப்பாகத் தமிழர் நாகரிகம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டவர்களில் தமிழ் பேசும் பார்ப்பனரின் பங்கு முகாமையானது; அது விரிவடைந்து பார்ப்பன எதிர்ப்பாகத் திரிபடைந்து பார்ப்பனர் தவிர்த்த மேற்சாதியினரின் கோட்பாடாக நயன்மைக்கட்சி அரசியல் தோன்றியது. அதில் மும்பை மார்வாரி மூலதனத்தின் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்த தமிழகப் பொருளியல் விசைகளின் பங்கும் ஊடு இழையாக, ஆனால் வெளிப்படத் தெரியாமல் மறைந்திருந்தது. பெரியாரின் முனைப்பான பார்ப்பன எதிர்ப்பில் அது களத்திலிருந்து அகன்றது. ஆனால் அவரது இந்திப் போராட்டத்தில் தமிழகத் தேசிய உணர்வுகள் திட்டவட்டமான வடிவில் வெளிப்பட்டன. ஆனால் பெரியார் அதனை நேர்மையாகக் கையாளவில்லை. பொருளியல் ஆதிக்க எதிர்ப்பை முன்னெடுத்து வைத்த அண்ணாத்துரையும் அதனைத் திசைதிருப்பி இந்திய அரசின் முதலீடுகளில் பங்கு என்று மாற்றினார். இதனால் தமிழ்த் தேசியப் பொருளியல் விசைகளுக்கான அரசியல் அரங்கமே இல்லாமல் போய்விட்டது. எனவே தமிழ்த் தேசியம் என்றது ஒரு சிறு ஒட்டுண்ணி வகுப்பின் அரசு வேலைவாய்ப்புகள், அரசியல் மூலம் கிடைக்கும் ஊழல் ஆதாயங்கள் அவற்றுக்காகப் பார்ப்பனரை எதிர்ப்பதும் தாங்களே போட்டிக் குழுக்களாக மாறித் தங்களுக்குள் அடித்துக் கொண்டு தில்லி அரசின் முன் மண்டியிட்டுக் கிடப்பது என்றும் முடங்கிப்போய்விட்டது. அதனுடன் ″மார்க்சிய″த்தின் பெயரால் செயற்பட்டவர்களின் குறுக்கீடு. இன்று இந்த இரண்டு இயக்கங்களும் மயங்கிச் சேர்ந்த ஒரு விரிவான ஒட்டுண்ணிக் கும்பலின் கையில் தமிழகத் தேசியம் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த ஒட்டுண்ணி வகுப்புகளின் முழக்கம் தான் மொழி - பண்பாடு குறித்த தமிழ்த் தேசியம்.

தேசிய ஒடுக்குமுறையின் உண்மையான நோக்கம் பொருளியல் சுரண்டலே. அது மக்களின் மொழி - பண்பாடுகளை அழித்தும் தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும். மொழி - பண்பாடுகளைக் காக்கிறோம் என்று கூறி உள்நுழைந்ததும் அதைச் செய்ய முடியும். மார்வாரிகளும் இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.) இயக்கத்தினரும் சேர்ந்து காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் தாய்த் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கியது, அண்மையில் சென்னையில் நடைபெற்ற பா.ச.க. மாநாட்டில் திருவள்ளுவர் பெயரில் அரங்கம் அமைத்தது போன்ற செயற்பாடுகளையும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில ஆய்வாளர்கள் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் தூக்கிப் பிடித்ததையும் இன்று சப்பானியர் மொழி அடிப்படையில் உறவு கொண்டாடுவதும் இது போன்ற மொழி - பண்பாட்டு ஆர்வலர்கள் மூலம் மக்களின் பரிவுணர்வைப் பெற்றுத் தம் சுரண்டல் கொள்ளைக்கான எதிர்ப்பைத் திசைதிருப்பத்தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அயலாரின் பொருளியல் ஆதிக்கம் முழுமை பெற்றபின் நாம் என்ன பாடுபட்டாலும் மொழியைப் பாதுகாக்க முடியாது, மேம்பட வேண்டிய பண்பாடு தரம் தாழ்வதைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே இந்த மொழி - பண்பாட்டுத் தேசிய விசைகளின் முற்றுகையை உடைத்து அடித்தள மக்களின் பொருளியல் உரிமைகள் மீது வேர்கொண்ட ஓர் உண்மையான தேசியப் போராட்டத்தினுள் தமிழகத்தை இட்டுச் செல்ல வேண்டிய உடனடித் தேவை உள்ளது. இந்த அடிப்படைப் பொருளியல் வகுப்புகள் இன்று நேற்றல்ல, தொல்காப்பியக் காலத்திலிருந்தே தமிழகத்து ஒட்டுண்ணி வகுப்புகளால் ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்த ஒதுக்கல், ஒடுக்கல் அடிப்படையில்தான் தமிழக - இந்தியப் பண்பாடே நிலைகொண்டுள்ளது. பொருளியல் உரிமை, வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் உருவான ஆங்கில - ஐரோப்பிய ஆதிக்க காலத்தில் இந்தியப் பண்பாட்டில் ஏற்பட்ட சிறுசிறு அசைவுகளைக் கூட ″விடுதலை″க்குப் பின் வந்த பிற்போக்குக் கும்பல்கள் தடுத்து நிறுத்திவிட்டன. எனவே இந்த எதிர் விசைகளை உடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பார்க்கும்போதுதான் தமிழ்மொழி - பண்பாடு ஆகியவற்றைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு தமிழ்த் தேசியப் போராட்டக் களத்தில் நிற்கும் விசைகள் மீது நம் திறனாய்வு வெளிப்படுகிறது. இந்த விசைகளில் குணா போன்ற நேர்மையும் உண்மையான ஈடுபாடும் கொண்டவர்களும் உண்டு; நெடுமாறன் போன்று ஆதாயம் தேடும் தன்னல விசைகளும் உண்டு. தமக்குத் தாமே வகுத்துக் கொண்ட எல்லைகளுக்குள் நின்றுகொண்டு எம்மால் இயன்றதைச் செய்கிறோம் என்று அரைக்கிணறு தாண்டும் பேரா. தொ.பரமசிவம் போன்றோரும் உண்டு. 100 பேர் சேர்ந்து அரைக் கிணறு தாண்டினாலும் 50 கிணறு தாண்ட முடியாது அரைக்கிணறு தான் தாண்ட முடியும். அரைக்கிணறு தாண்டுவது தாண்டாமலே வாளாயிருப்பதைவிடத் தீங்கு பயப்பது. அதற்குப் பகரம் தன் முழு வலிமையையும் திரட்டி முழுக்கிணறு தாண்டுவோருக்குப் பக்கத்துணை நின்று வலுச்சேர்க்க வேண்டும். அதுதான் அவர்கள் மனதில் ஏற்றுக் கொண்ட குறிக்கோளுக்கு நாணயமாகச் செயற்படுவதாகும். இவர்களைத் தவிர கடலாழம் கண்டாலும் மன ஆழம் காணமுடியாத ஆழம் மிக்க ந. அரணமுறுவல் போன்றோரும் உண்டு. அரணமுறுவல் ஒருவேளை தீங்கற்றவராயிருக்கலாம். ஆனால் நாம் மிகக் கண்காணிப்பாக இருக்க வேண்டியவர்கள் இவர் போன்றோர் நிறைய உண்டு.

இந்த வகையில் தமிழகத் தேசியப் போராட்டத்தின் இன்றைய வரலாற்றுக் கட்டத்தில் ஒட்டுண்ணிகளாகிய நடுத்தர வகுப்புச் சிந்தனையாளர்களிடமிருந்து அதனைப் படைப்புச் செயலில் ஈடுபட்டு நம் பொருளியல் வலிமையைப் பெருக்கி தமிழக மக்களின் வாழ்நிலையும் பண்பாடும் மேம்படப் பாடுபடவேண்டிய முதலாளிகள், தொழிலாளர்கள், வாணிகர்கள் ஆகியோரின் தளத்துக்கு இட்டுச்செல்லும் நிகழ்முறையில் இந்தத் திறனாய்வு வெளிப்பட்டுள்ளது என்ற தெளிவு எனக்கு ஏற்படுகிறது. நான் உணராமலே செய்திருக்கும் இப்பணியின் வரலாற்று முகாமையும் சிறப்பும் இப்போது எனக்குத் தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது. இந்தத் தெளிவில் எனக்குள் தோன்றிய தயக்கங்களும் மயக்கங்களும் நீங்கிப் பெருமிதத்துடன் இந்த முன்னுரையை முடித்துக்கொள்கிறேன்.

மேலே குறிப்பிட்ட நிலையில்லா வகுப்புகளிடம் ஓர் அடிப்படை இயல்பு முனைப்பியமாகும்(தீவிரவாதமாகும்). அதாவது தமிழகத்தை ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் மூலம் இந்தியாவிடமிருந்து விடுவிக்கவேண்டுமென்று முழங்குவர். அடித்தள மக்களுடன் ஒன்றிணையும் மனப்பாங்கு இல்லாமையால் அவர்களைத் திரட்டி ஒரு மக்கள் போராட்டத்தை நடத்த இயலாமையின் வெளிப்பாடு தான் இந்த முழக்கம். அதே நேரத்தில் கருணாநிதி போன்ற பச்சை இரண்டகர்களைக்கொண்டு ஓர் ஆணையை வெளியிடவோ ஒரு சிலையைத் திறக்கவோ வைத்து அவர்களை வானளாவப் பாராட்டித் தம்மைப் பின்பற்றுவோரைக் குழப்புவர். (வெங்காலூரில் நெடுமாறனை வைத்து, அங்குள்ள தமிழர்களைத் திரட்டித் திருவள்ளுவர் சிலையைத் திறக்கத் திட்டமிட்டுள்ளனர். அது நெடுமாறனின் ஒரு வெற்றியின் அடையாளமாக அவர் கழுத்தில் விழுந்த மாலையாக்கப் போகிறாரா அல்லது திருவள்ளுவர் சிலையை ஓர் அடையாளமாகக்கொண்டு அதனைப் பற்றுக்கோடாகக் கொண்டு ஒன்றுதிரளும் மக்களைக் கொண்டு கருநாடகத் தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை வளர்த்தெடுக்கிறாரா குணா என்பதைக் காலம் காட்டட்டும்.[1] இவர்களிடையில் சிக்கித் தமிழ்த் தேசிய உணர்வு படைத்தவர்கள் திணறுவதை, ஓடி ஓடி உருக்குலைவதை, இளைத்துக் களைத்துச் செயலிழப்பதைக் கடந்த ஒன்றிரண்டு தலைமுறைகளாகக் கண்டுவருகிறோம்.

எம்மைப் பொறுத்த வரையில் அரசியல் விடுதலை மூலமே தமிழக மக்களுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று நாங்கள் நம்பவில்லை. ″இந்திய விடுதலை″ மூலம் இந்திய மக்கள் ஒடுக்கப்படுவதைத்தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே! தமிழக மக்களுக்குப் பொருளியல், மொழியியல் உரிமைகள் கிடைப்பது இந்தியக் கட்டமைப்புக்குள் இயலுமானால் அதுவே தமிழகம் அரசியல் விடுதலை பெறுவதை விட நல்லது என்று கருதுகிறோம். அது இந்தியக் கட்டமைப்புக்குள் முடியுமா அல்லது அரசியல் விடுதலைதான் தீர்வா என்பதை யாமோ தமிழக மக்களோ முடிவு செய்ய முடியாது. அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் இந்திய ஆளும் கணங்கள்தாம். இந்தியக் கட்டமைப்புக்குள் தேசியங்கள் தங்கள் பொருளியல், மொழியியல் விடுதலையைப் பெற முடியாது என்பதை ஆளும் கணங்கள் தங்கள் செயல்கள் மூலம் காட்டிவிட்டார்களாயின் அதன் பின் தமிழகத்திலும் இந்தியாவின் பிற தேசங்களிலும் அரசியல் விடுதலைப் போர்களை எந்த விசையாலும் தடுத்து நிறுத்த முடியாது. எனவே நாங்கள் திறந்த மனதுடன் உள்ளோம். அதாவது தமிழகம் அரசியல் விடுதலை பெற்றுத்தான் ஆக வேண்டுமா என்பதோ அல்லது இந்தியா முழுமையாகத் தொடரத்தான் வேண்டுமா என்பதோ இன்று எமது விடையைத் தேடி நிற்கும் கேள்விகளல்ல. இருக்கும் கட்டமைப்புக்குள் தமிழக மக்களின் பொருளியல் - மொழியியல் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டக்களத்தில் இறங்குவதைத்தான் எமது உடனடிப் பணியாகக் கொண்டுள்ளோம்.

என் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. எனக்கு மார்க்சியத்தின் இயங்கியலில் உறுதியான நம்பிக்கை இருக்கிறது. ஒரு அமைப்பு அல்லது இயக்கம் வளர்ச்சிக் கட்டத்தைத் தாண்டி மூப்படையும் போதே அதை அழித்து அந்த இடத்தைப் பிடிக்கும் அதனுடைய பின்னடி அதன் உள்ளேயே உருவாகிவிடும் என்பது அது. அதனடிப்படையில் என் கருத்துகளைப் பதிந்து வெளிப்படுத்தி வருகிறேன். அந்த கருத்து விதைகள் தனக்காகக் காத்திருக்கும் பக்குவப்பட்ட மண்ணில் விழும் வரை காத்திருப்பேன். நான் மறைந்து விட்டாலும் அந்த விதைகள் தனக்குத் தேவையான களத்தைத் தேடிக் கொண்டிருக்கும்.

இதுவரை நீங்கள் படித்த, தனிமனிதனான என் கணிப்புகளில் குற்றங்குறைகளும் தவறுகளும் இருக்கலாம். அவற்றை என்னைப் போல் திறந்த மனதுடன் திறனாய்ந்து தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்வேன். பிறவற்றுக்கு விளக்கம் கூறி என் கடமையை நிறைவேற்றுவேன். அவ்வாறு என்னுடைய பணி ஒட்டுமொத்தக் குமுகத்தின் பணியாக மேம்பட உதவுங்கள்.

கட்டுரையை முழுமையாகப் படிக்க வாய்ப்பின்றி குணாவின் நூல் மூலம் மட்டும் அறிந்தவர்கள் முழுக் கட்டுரையையும் படித்தபின் என் மீது கொண்டிருந்த தவறான கருத்துகளைக் கைவிட்டு என்னைப் பாராட்டியுள்ளனர். அவ்வாறு பாராட்டியதுடன் நில்லாது அதனை நூலாக வெளியிட வேண்டுமென்று விருப்பம் தெரிவித்து உதவ முன்வந்த அவர்களுக்கும் ஊக்கமளித்த இயக்கத் தோழர்களுக்கும் சிறப்புற அச்சிட்டுத் தந்த அச்சகத்தாருக்கும் என் நன்றி. [2] தன் நூலின் மூலம் இக்கட்டுரை அச்சாகும் முன்பே அதன் மீது தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த குணாவுக்கும் நான் அனைவருக்கும் மேலாகக் கடமைப் பட்டுள்ளேன் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(முற்றும்)

அடிக்குறிப்புகள்:

[1] நாம் ஐயுற்றவாறே நடந்தது. திட்டமிட்டவாறு சிலையைச் சுற்றிக் குழுமினார்கள். கர்னாடகக் காவல்துறையினர் அவர்களைத் தளையிட்டுச் சிறையிலடைத்துவிட்டு மாலையில் விட்டுவிட்டனர். நாம் கணித்தவாறே ஒரு கிழமை சென்று அவர் நடத்திய போராட்டத்தின் வெற்றிக்காக வெங்காலூர்த் தமிழர்கள் அவருக்கு உண்மையிலேயே ஒரு மாபெரும் வெற்றிவிழா நடத்திச் சிறப்பித்தனர். வெங்காளூர்த் தமிழர்களின் இன்றைய அவலநிலைக்கு அவர்களது அணுகல்தான் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. குணாவைப் பொறுத்தவரை அவரைப் பற்றிய நம் எதிர்பார்ப்புகள்தாம் மிகையானவையேயன்றி அவர் மீது பிழையில்லை. அவர் அறைக்குள்ளிருந்தும் சிறைக்குள்ளிருந்தும் படித்த நூல்கள் தந்த செய்திகள் மற்றும் கோட்பாடுகளின் வெளிச்சத்தில் தமிழக மக்களுக்கும் வெங்காலூர்த் தமிழர்களுக்கும் உள்ள சிக்கல்களைப் பார்த்து நூல்கள் எழுதினாரேயொழிய அவர் நிலத்தின் மீது ஏறிநின்றதில்லை; அப்படி ஏறிநிற்பது பற்றி அவர் சிந்தித்ததுமில்லை என்பது அண்மையில் அவரைச் சந்தித்த போது நான் புரிந்துகொண்டது.

[2] தமிழ்த் தேசியம் கட்டுரையை நூலாக வெளியிடுவதற்கு நண்பர் ஒருவர் விரும்புவதாக தோழர் தமிழ்மண்ணன் கூறியதை அடுத்து இந்த முன்னுரையை நான் எழுதினேன். இதை அந்த நண்பர் படித்தபின் நூலை வெளியிட மறுத்துவிட்டார். எனவே உண்மைகளை எந்தப் புனைவுமின்றி ஏற்றுக்கொள்ளும் அகநிலை தமிழக மக்களுக்கு ஏற்படும் காலத்தை அல்லது அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் ஒருவரை எதிர்பார்த்து இப்படைப்பு காத்திருக்கிறது.

தமிழ்த் தேசியம் ... 27

மனந்திறந்து... 17

திருவள்ளுவர், திருக்குறள் ஆகிய பெயர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளும் தனியாள்களும் செயற்படுகின்றனர். அவற்றுக்கு திருவள்ளுவருக்காகவும் திருக்குறளுக்காகவும் தங்கள் ஆற்றலுக்கு மிஞ்சி செலவு செய்யவும் ஆயத்தமாக பல நூறாயிரம் பேர் உள்ளனர். இது 2007ஆம் ஆண்டு வைகாசி மாதம் முதல் நாள் குமரிமுனையில் நடைபெற்ற விழாவில் தெரிந்தது. (எண்ணற்ற போலிகளும் நடமாடுகின்றனர். சான்றுக்கு குமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் திருச்சபை என்ற அமைப்பின் பெயரில் புலவர் கு. பச்சைமாலுக்கும் ஆதிலிங்கம் என்பவருக்கும் இடையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குழாயடிச் சண்டையைக் கூறலாம்.) இவ்வாறு திரளும் பணத்தைக் கொண்டு தமிழகத்துக்குத் தேவையான மாற்றுக் கல்வி, மாற்று மருத்துவம், மூலப்பொருட்களின் இயல்புகளைத் தெரிந்து அவற்றிலிருந்து பண்டங்கள் செய்வதற்கு அடித்தளமான தரவுகளைத் தெரிந்துகொள்ள ஓர் ஆய்வகம் முதலியவற்றைத் தொடங்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அவர்கள் திருவள்ளுவரை ஒரு கடவுளாக்கி முற்றோதுதல், சிலைகள், படங்களின் வாணிகம் என்று தங்கள் செயற்பாடுகளைச் சுருக்கிக் கொள்கின்றனர். தமிழ் பெயரில் இயங்கியவர்கள் இறந்தால் இழவு, பதினாறு கொண்டாட்டங்களுக்குக் கூட்டமாகப் போய்ச் செலவு செய்கின்றனர். தொடக்கத்திலேயே பணக் கணக்கு வைத்துக் கொள்வதில் பணப் பொறுப்பாளராக இருப்பவர்க்கும் மா. செ. தமிழ்மணி – அரணமுறுவல் கூட்டணிக்கும் கடும் மோதல். இப்போது சரிக்கட்டிக்கொண்டார்கள்.

மா.செ. தமிழ்மணியைப் பொறுத்த வரையில் அதி முனைப்பிய இறைப்பற்றாளர். கேரளம், கருநாடகம் என்றெல்லாம் கோயில்களுக்குச் சுற்றுவார். அவரை தனித்தமிழ் பேசும் இரா. சே. ச. (ஆர்.எசு.எசு.) என்று அழைப்பதுவே பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.

குமரி முனையிலுள்ள திருவள்ளுவர் சிலை பற்றி தாறுமாறான செய்திகள் வந்து கொண்டிருந்த ஒரு சூழலில் குமரி மாவட்டத்தில் புலவர் திரு. பச்சைமால் தலைமையில் இயங்கும் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் நானே பொறுப்பேற்றுக் கொண்டு நாகர்கோவிலில் இயங்கும் தென்பாண்டித் தமிழர் பேரவையின் திரு.சொ.நன்மாறனின் உதவியோடு திருவள்ளுவர் சிலையை விரிவாகப் புகைபடங்கள் எடுத்து விளக்கமாக ஒரு கட்டுரையும் எழுதினேன். அதனை அவருடைய வழக்கம் போல் பயன்படுத்தாமல் நடுவில் விட்டுவிட்டுப் போய்விட்டார் பச்சைமால். அந்த நிலையில் தோழர் ம.எட்வின் பிரகாசுவின் உதவியுடன் ஒரு புத்தகமாக அதை வடிவமைத்தேன். அதனை மிகத் தயக்கத்தின் பெயரில் வெளியிட்டது அறக்கட்டளை. ஆனால் திரு.பொன்.மாறன் வண்ணத்தில் அடித்துத்தர ஒப்புக் கொண்ட தொகைக்குக் குறையாத செலவில் (சரியாக எவ்வளவு செலவு செய்தனர் என்று தெரியவில்லை) கறுப்பு- வெள்ளையில் வெளியிட்டனர்.

குறள் போல் சிலையும் காலத்தை வெல்லும் என்ற தலைப்பிலான அந்த வெளியீட்டில் திருவள்ளுவர் சிலையை அடையாளமாகக் கொண்டு தமிழக மக்களுக்காக எந்தெந்த வகையில் செயல்படலாம் என்று சில குறிப்புகளைக் காட்டியிருந்தேன்.

என் இடையறாத வற்புறுத்தல்களின் பயனாகவும் திரு.அரணமுறுவல் அவர்களுக்குள் பதுங்கியிருக்கும் முற்போக்கு எண்ணங்களாலும் திருவள்ளுவர் அறக்கட்டளை நாம் மேலே குறிப்பிட்டிருக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஒரு களத்தை உருவாக்குவதற்கு வாய்ப்பாக கொஞ்சம் நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். தடுமாற்றம் இன்றி தடம் மாறாமல் நடை பயில வாழ்த்துகள்.

மா.செ.தமிழ்மணி பெருஞ்சித்திரனார் குடும்பத்தை விட்டு அரணமுறுவல் பக்கம் வந்துவிட்டார் என்றால் பறம்பை அறிவன் பெருஞ்சித்திரனார் குடும்பத்தில் போய் ஒட்டிக்கொண்டார்.

தன் பிள்ளைகள் சொந்தக்காலில் நின்று தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருளியலை ஈட்டவென்று எந்த முறையான முயற்சியையும் பெருஞ்சித்திரனார் எடுக்கவில்லையா அல்லது தனித்தமிழ் ஆர்வலர்களின் பொதுவான நடைமுறையாகிய ″தமிழ்க் குடும்பம்″ என்று அவர்களுக்குள்ளேயே அடங்கிக்கொள்ளும் கோட்பாட்டை அவர்தான் தொடங்கி வைத்தாரா என்று தெரியவில்லை. அவரது மக்கள், மருமக்கள் என்று அனைவரும் ″தமிழால் வாழ்வது″ என்ற கொள்கையையே கடைப்பிடிக்கின்றனர். ஒரு கட்டத்தில் தந்தையாரின் செல்வாக்குக்கு ஆட்பட்ட வசதி படைத்த ஆர்வலர்களை அணுகி பணம் திரட்டி செந்தமிழ் அடுக்ககம் கட்டி முடித்தனர். அடுத்து அவரது ஆண் மக்களுக்குள் புகழ்பெற்ற எல்லாக் குடும்பங்களுக்குள்ளும் கட்டுப்படுத்தும் மூத்தோர் காலத்துக்குப் பின் பிள்ளைகளிடையில் வரும் பங்குச் சண்டை போல் வந்தது போலும். பெருஞ்சித்திரனாரின் மூத்த மகன் பூங்குன்றன் தந்தையார் விட்டுச் சென்ற தமிழ் நிலம் இதழைத் தொடர்ந்து நடத்த ஆசிரியர் குழுவில் பணியாற்ற வேண்டும் என்று திடீரென்று ஒரு நாள் தொலைபேசியில் என்னைக் கேட்டார். (தமிழ் நிலம் அவர் பங்காக ஒதுக்கப்பட்டிருந்தது போலும், பறம்பை அறிவன் முன்பு சொல்லி இருக்கிறார்.) நானும் ஒப்புக்கொண்டேன். அப்புறம் பேச்சு மூச்சில்லை. ஆனால் அதுவரை பெருஞ்சித்திரனாரின் மூத்த மருமகன் இறைக்குருவனார் தென்மொழியின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது மாறி ஆசிரிய உரையில் பூங்குன்றனின் பெயர் இடம் பெற்றது. சரிதான் பங்கு படிந்துவிட்டது போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

பூங்குன்றன் அறிவியல் மன்றம் என்ற பெயரில் ஒன்று வைத்திருந்தார். எரிநீர் இராமரைத் தமிழக ஆட்சியாளர்கள் சிறையிட்டு வாட்டத் தொடங்கியிருந்த நேரத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமம் வழங்குவது என்ற பெயரில் ஒரு கருத்தரங்கை அவரது மன்றத்தின் மூலம் நடத்துமாறு கேட்டேன். ஒப்புக் கொண்டுவிட்டு நழுவி விட்டார்.

பாட்டாளியர் கோட்பாட்டைப் பற்றிக் கொண்டு ″புரட்சிகர″மாகப் பேசி எழுதி வருபவர் பெருஞ்சித்திரனாரின் இன்னொரு மகன் பொழிலன். கொள்கை அறிக்கை என்றெல்லாம் குறுநூல்கள் வெளியிடுவார். தவறாமல் எனக்கும் விடுப்பார். அவர் தந்தையார் இயற்கை எய்தியபோது துயரம் கேட்கச் சென்றிருந்தேன். என் ஆக்கங்களின் ஒரு தட்டச்சுப்படியை அவரிடம் கொடுத்து வந்தேன். நான் கூறியவற்றை மெல்லிய புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்த பொழிலன் இன்றுவரை அவற்றிலிருந்த கருத்துகள் பற்றி ஒரு சொல் கூடக் கூறியதில்லை.

அவர் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் என்று ஓர் அமைப்பையும் அதன் சார்பில் உழைக்கும் மக்கள் தமிழகம் என்ற இதழையும் நடத்தினார். பின்னர் தமிழக மக்கள் உரிமைக் கழகம் என்ற ஓர் அமைப்பையும் உரிமை முழக்கம் என்ற ஓரு இதழையும் தொடங்கினார். இடையில் அந்த இதழ் தொய்வடைந்தது. தென்மொழியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் அவை தொடங்கப்பட்டுள்ளன, இனி தொடர்ந்து வெளிவரும் என்ற அறிவிப்புடன்.

பொழிலனுடைய அணுகல் மார்க்சிய-பெரியாரிய–அம்பேத்காரிய–மாவோயியம் என்ற கலப்பில் உருவான ஒரு மாய மை. அந்த மையை நீங்கள் பூசிக் கொண்டால் உங்களைப் பார்ப்பவர்களுக்கு உங்கள் ஒரு கையில் ஏ.கே. 47 வரிசையில் மீ இற்றை(நவீன) துப்பாக்கியையும் இன்னொரு கையில் குண்டுமிழி செலுத்தியையும்(Rocket launcher) உடல் முழுவதும் மாலைகளாகத் தோட்டாக்களையும் உடைகளிலெல்லாம் வகை வகையான எறிகுண்டுகளையும் வைத்துக் கொண்டு அரசுப் படைகளை அழிப்பதற்காகக் களத்தில் நிற்பவராகத் தோற்றமளிப்பீர்கள். உங்களுக்கே அப்படித் தோன்றும். இந்த மாய மையுடன் இப்போது சூழலியல் உட்பட்ட ″தொண்டு″ நிறுவனங்களின் வாடையையும் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக, நாள்தோறும் பெரும் படகுகள் சென்றுகொண்டிருக்கும் போது கேடுறாத சேதுக் கால்வாய்ப் பகுதி கடலின் சூழல் அவற்றை விடப் பெரிய சிறு கப்பல்கள் செல்வதற்காக 5 மீட்டர்வரை ஆழம் தோண்டுவதால் எல்லாமே அழிந்து போகும் என்று கூக்குரலிடுகிறது அவரது உழைக்கும் மக்கள் தமிழகம். அங்கே இருக்கிற மணல் திட்டுதான் ஓங்கலையிலிருந்து கேரளத்தைக் காத்தது என்று ஒரு வாதம். தினமலர் வகையறாக்கள், நமக்கு சாலையும் இருப்புப் பாதையும் போதுமே, கப்பல் வழி எதற்கு என்று கேட்கிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து செல்லும் அடிமாடுகள் கேரளத்தில் இறைச்சியாக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு கொச்சித் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்து மணல், சல்லி போன்றவையும் நாகை, திரூவாரூர் மாவட்டக் கடற்கரையிலுள்ள மீன் கூட அங்கே கொண்டுசெல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகக் கடற்கரை துறைமுகங்கள் இணைக்கப்பட்டு வளர்ச்சி பெற்றால் கேரளமும் கொழும்பும் பாதிக்கப்படும் என்ற ஒரே காரணத்துக்காக, பெரியாற்று நீரையும், பொள்ளாச்சித் தொடர்வண்டிப் பாதைப் பகுதியைப் பறித்துக் கொண்டது போல் தமிழகத்துக் கப்பல் போக்குவரத்து வளர்ச்சியையும் தடுக்கும் நோக்கத்துடன் வைக்கப்படுவதே இந்தச் சூழல் கேடு பூச்சாண்டி.

தமிழகத்தில் மீன் பிடித் தொழில்நுட்பம் மேம்பட்டால் தமிழகக் கடற்கரை வரை வந்து மீன் வளத்தை அள்ளிச் செல்லும் அயல்நாட்டுக் கப்பல்களுக்கு இழப்பு என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். கட்டுமரம், தோணி இவற்றுடன் பழங்குடியினராக தமிழகக் கடற்கரை மீனவர்களை அமிழ்த்தி வைக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா சார் தொழிற் சங்க அமைப்புகள் ஓங்கலையில் உருவான குழப்பத்தைப் பயன்படுத்தி உள் நுழைந்து மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினரென்று அறிவிக்க வேண்டுமென்ற வேண்டுகையை வைத்துப் பண்டைக் காலத்தைப் போலவே அவர்களை உள்நாட்டு மக்களிடமிருந்து அயற்படுத்துகின்றன. அவ்வாறுதான் மலைவாழ் மக்கள் சமநிலத்துக்கு வந்து பிறரைப் போல் கல்வி கற்று மேம்படுவதைத் தடுத்து அவர்களை மலைசார் பழங்குடிகள் என்று வகைப்படுத்த வேண்டும் என்று அவர்களையும் அயற்படுத்த இந்த அயல் விசைகள் முயன்று வருகின்றன. மலையில் அயலவன் அமர்ந்துவிடுவான், கடற்கரையில் வெளிநாட்டான் புகுந்து விடுவான் என்று கூறுகிறவர்கள் உள்நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை ஒன்று திரட்டிப் போராட வேண்டியதுதானே! இவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள், ஏனென்றால் அவர்களுக்கு உதவுகிறவர்கள் இதை அவர்களுடைய பணியாகப் வைக்கவில்லை. உண்மையில் அயல் நாட்டானின் ஆட்கள்தாமே இவர்கள்!

பெருஞ்சித்திரனாரின் இறுதிக் காலத்தில் அவரைச் சிறையில் அடைக்கக் காரணமாயிருந்த மாநாட்டில் ″தன் தீர்மானிப்புரிமைத் தீர்மானம்″ உருவாக்கிய ″அறிவுசீவி″களில் முதன்மையானவர் அ.மார்க்சு எனப்படும் பேராசிரியர். இவர் மார்க்சிய–லெனினிய சிந்தனையாளர் என்று சொல்லப்படுபவர். எசு. வி. இராசதுரைக்கு நிலையான பணி எதுவும் இல்லை. ஆனால் இவர் கல்லூரிப் பேராசிரியர். துணைவியாரும் பேராசிரியர் என்று தெரிகிறது. இந்த வருமானங்களோடு ″தொண்டு″ பக்கத் தொழில். ″விளிம்பு நிலை″, ″பின் இற்றையியம்″(பின் நவீனத்துவம்) என்று புதிது புதிதாகப் புகுத்தப்படுபவற்றைப் பயன்படுத்தி ஏழைகளுக்காகப் பரிந்து பேசுவதாகக் காட்டி மக்களிடையில் பிளவுகளை ஏற்படுத்தப் பணியாற்றுபவர். அவ்வாறுதான் பல்வேறு சாதிக்குழு மக்களிடையில் பேச்சு வழக்கில் உள்ள மொழி வேறுபாடுகளை வைத்து ″பல தமிழ்கள்″ என்று ஒரு கருத்தைத் தென்மொழியில் முன்வைத்தார். கடும் எதிர்ப்பு வந்ததோ என்னவோ, பின்னர் அவரது ஆக்கங்கள் அதில் இடம் பெறவில்லை. இப்போது புது கட்டமைப்புகளுடன் இதழ்கள் அந்தக் குடும்பத்திலிருந்து வெளிவரும் சூழலில் அண்மையில் வந்துள்ள உரிமை முழக்கம் இதழில் அவருடைய கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. அத்துடன் ″தீராநதியில் .... அ.மார்க்சு″ என்ற தலைப்பில் பெருஞ்சித்திரனாரின் வழியில் சிறந்த ″வாரிசு″ பொழிலன் என்று கொடைக்கானல் குண்டு வெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றிருப்பதைக் காட்டிச் சான்று வழங்கியிருக்கிறார். இவற்றிலிருந்து பெருஞ்சித்திரனார் குடும்பம் செல்லும் திசையை ஒருவாறு உய்த்தறிய முடிகிறது. மக்களிடமிருந்து அயற்பட்ட கோட்பாடுகளுடன் களத்தில் இறங்குவோர் இறுதியில் பிழைப்புக்காக மண்டியிட வேண்டிய இடம் அயல்நாட்டுப் பணத்தைப் புழக்கத்தில் விடும் ″தொண்டு″ நிறுவனங்கள் என்ற எமது கருத்துக்கு இன்றைய பெருஞ்சித்திரனார் குடும்பம் இன்னொரு சான்று.

அறியா விடலைப் பருவத்தில் முற்போக்கு இளைஞர் அணி(R.Y.L.) போன்ற மா.லெ. குழுக்கள் ஏற்றிய வெறியால் கொடைக்கானல் தொலைக்காட்சி கோபுரக் குண்டுவெடிப்பில் சிறைப்பட்டு ″உரூ3000/- அளவுக்குத்தானே இழப்பு, அதற்கு 10 ஆண்டுகள் சிறையா?″ என்று கேட்கும் இரங்கத்தக்க நிலைக்கு வந்து, பாவலர் கலியபெருமாள், ″தோழர்″ தியாகு போன்றோர் சென்ற தடத்தில் வந்து சேர்ந்திருக்கிறார். இதுபோன்ற ஒரு சூழலில் திரு. பறம்பை அறிவன் அந்தக் குடும்பத்தில் சேர்ந்திருக்கிறார்.

திரு. அ.மார்க்சு பற்றிய என் ஒரு பட்டறிவையும் இங்கு பதிந்து கொள்வது நலம். முகிழ் அமைப்பு மதுரையில் நடத்திய கருத்தரங்கில் பேசிய மார்க்சு, சோழர் காலத்தில் தமிழகத்தில் தனியார் உடைமையே கிடையாது. கோயில்களுக்கு நிலம் வழங்கிய ஆவணங்களில் ″பொது நீக்கி″ என்றே காணப்படுகிறது. பொது உடைமையாக இருந்த நிலங்களிலிருந்து மக்களைத் துரத்திவிட்டு அவற்றைக் கோயில்களுக்கு அரசர்கள் வழங்கினர் என்றார். தமிழகம் மிகக் காலந்தாழ்ந்தே நாகரிகத்தினுள் நுழைந்தது என்பதை வலியுறுத்தும் ″மார்க்சியர்″களின் ஒரு வித்தை இது.

அவர் பேசி முடித்த பின் நான் கேட்டேன், சொத்துகளை அயல்படுத்தல்(alienation) அதாவது பிறருக்கு வழங்குதல் என்ற நடைமுறை தனிச் சொத்துடைமையின் இலக்கணம்; அவ்வாறு தனியாட்கள் கோயில்களுக்கு நிலங்களைக் கொடையாகக் கொடுத்ததைக் காட்டும் ஆவணங்கள் ஏராளமாக உள்ளனவே; இவை தனியார் சொத்துடைமையைக் காட்டவில்லையா என்று. அவர் தடுமாறி ஆமாம் ஆமாம், அப்படியும் இருந்தது, இப்படியும் இருந்தது என்றார். இவ்வாறு அறியாத மக்கள் முன் பொய் பேசும் ″அறிவு சீவி″களில் அவரும் ஒருவர்.

என்னுடன் இணைந்திருந்த காலத்திலும் திரு.பறம்பை அறிவன் பல சூழ்நிலைகளில் ″தொண்டு″ நிறுவனங்களிடம் இட்டுச் சென்றுள்ளார். எனக்கு அது ஒரு நெருடலாகவே இருந்தது. அவருக்கு அவர்களுடன் நெருக்கமான உறவிருந்தது உண்மை. இப்போது அவருக்கு உணவும் உறையுளும் கிடைக்கக் கூடிய ஒரு அமைப்பு கிடைத்துவிட்டது. வாழ்க!

அவரது நடவடிக்கையால் ஒரு பின்னடைவு ஏற்பட்டாலும் பொருளியல் உரிமை என்றொரு இதழைத் தொடங்கி 20 இதழ்கள் வெளிவரத் தூண்டுதலாக இருந்த அவரது தொடர்புக்கு நன்றி கூற வேண்டும். புதியவர்கள் பலருக்கு நான் அறிமுகமானேன்.

(தொடரும்)

தமிழ்த் தேசியம் ... 26

மனந்திறந்து... 16

1996 ஆம் ஆண்டு ஒரு நாள் பறம்பை அறிவன் என்பவர் பாளையங்கோட்டையில் எனக்குத் தெரிந்த ஒருவருடன் வந்து சந்தித்தார்.

இவர் ″தமிழ்″ வட்டாரங்களில் பரவலாக அறியப்பட்டவர். எல்லோரோடும் தொடர்பு வைத்திருப்பவர். மூன்றாம் அணி எனப்படும் மா.லெ. இயக்கத்தினருடனும் தொடர்பு வைத்திருப்பவர். கியூ கிளையினர் எனப்படும் உளவு நிறுவனம் தன்னை உசாவியதைப் பெருமையாகக் கூறிக் கொள்பவர்.

எமது தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத் தொடக்க விழா மதுரையில் நடைபெற்ற போது தலைமை தாங்க அழைக்கப்பட்ட கரூர் வழக்கறிஞர் திரு. பூ. அர. குப்புசாமி அவர்கள் வராததால் திரு. பறம்பை அறிவன் அவர்களே தலைமையை ஏற்றார். அவர் பெயரைக் கேட்டிருந்தாலும் அங்குதான் முதன் முதலில் அவரை நான் பார்த்தேன்.

பாளையங்கோட்டைச் சந்திப்பின் போது பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தான் தொடங்கிய உலகத் தமிழின் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகத் தன்னை அமர்த்தியதாகவும் ஆனால் பொறுப்பு எதையும் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.

பெருஞ்சித்திரனார் காலமானதும் தங்களை வந்து சந்தித்து பொறுப்பைத் தொடர்வதற்கான இசைவைப் பெற்றுக்கொள்வார் பறம்பை அறிவன் என்று பெருஞ்சித்திரனாரின் துணைவியாரும் குடும்பத்தினரும் எதிர்பார்த்ததாகவும் ஆனால் தான் அதை விரும்பாததால் சென்று பார்க்கவில்லை என்றும் அதனால் அவர்களுக்குத் தன் மேல் மனத்தாங்கல் இருப்பதாகவும் கூறினார் பறம்பை அறிவன்.

எனவே தான் தனித்தியங்க முடிவு செய்துள்ளதாகவும் தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத்தை உலகத் தமிழின் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பமைப்பாகக் கொள்ள வேண்டுமென்றும் விரும்பினார். நான் அதற்கு உடன்பட்டு எனது இரண்டு நூலாக்கங்களை(குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் பற்றிய குறிப்புகள், சாதிகள் ஒழிய.....) என் செலவில் உ.த.மு.க. பெயரில் வெளியிட்டோம்.

இந்த நிலையில் பெருஞ்சித்திரனார் குடும்பத்தோடு தொடர்பு வைத்திருந்த பலர் உ.த.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்தனர். பெரும்பாலும் இது பெருச்சித்திரனாரின் குடும்பத்தினர் நெருக்குதலில் விளைவாகத்தான் நடந்திருக்கும்.

திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ஏறக்குறைய 50 பேர் வந்திருந்தனர். வேலூர் மாவட்டத்திலிருந்து ஒரு உந்துவண்டியில் திரு. மா.செ. தமிழ்மணியுடன் வந்திருந்தவர்கள் கணிசமானவர்களாகப் பங்கேற்றனர். திரு. மா.செ. தமிழ்மணி பெருஞ்சித்திரனார் குடும்பத்தாருக்கு நெருக்கமானவர் என்று கூறினார் பறம்பை அறிவன். அவருக்கு மனைவியர் இருவர் என்றும் அவர் கூறினார். அவர்களையும் சேர்த்து உந்து வண்டியில் அவர்களது பிள்ளைகளோடு மேலும் சில இளைஞர்கள் இருந்தனர்.

உ.த.மு.க.வுக்குப் புதிய பொறுப்பாளர்களை முடிவு செய்ய வேண்டுமென்று கேட்டனர். வேலூர் மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் உ.த.மு.க.வைக் கைப்பற்றத் திட்டமிட்டு வந்திருந்தார்கள் என்று அவர்களது நடத்தைகளிலிருந்து தெரிந்தது. புதிதாக வந்தவர்கள் அனைவரும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். முறைப்படியான தேர்தல் நடத்தி விடலாம் என்று நான் கருத்துரைத்தேன். பதவிக்காக மோதல் வருவதை நான் விரும்பவில்லை. அவ்வாறே புதிய உறுப்பினர்களையும் வாக்காளர்களாக்கி நடைபெற்ற தேர்தலில் நான் எதிர்பார்த்தது போலவே மா.செ. தமிழ்மணி பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கழகத்தின் ஆவணங்களை விரைவில் ஒப்படைப்பதாகக் கூறிய பறம்பை அறிவனுடன் நானும் திரும்பினேன்.

பறம்மை அறிவனுக்கு உலகத் தமிழின் முன்னேற்றக் கழகம் கைநழுவிப் போனதில் பெரும் ஏமாற்றம்தான். த.ம.பொ.உ.க.வின் செயற்பாட்டில் முழுமையாக ஈடுபடலாம் என்று நான் ஆறுதல் கூறினேன்.

காவிரி காப்புக்குழு வைத்திருக்கும் பெரியவர் திரு. பூ. அர. குப்புசாமி அவர்கள் காவிரி நீர்ச் சிக்கல் குறித்து திருச்சியில் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நானும் பறம்பை அறவனும் சென்றிருந்தோம். வந்திருந்தோர் அனைவரும் உழவர் அமைப்புகளைச் சேர்ந்த உழவர்கள் என்பது சிறப்பு.

நான் பேசும் போது நிலஉச்சவரம்பு வந்தபின் உழவர்களின் அரசியல் வலிமை சரிந்து விட்டதென்றும் அத்துடன் உழவர்களின் மீது ஆட்சியாளர்கள் நிகழ்த்தும் எண்ணற்ற கெடுபிடிகளுக்கு எதிரான போராட்டத்துடன் இணைத்தால்தான் காவிரி நீருரிமைக்கான போராட்டத்தில் சிதறிப் போய்க் கிடக்கும் சிறு உழவர்களைத் திரட்ட முடியும் என்றும் கூறினேன். கூட்டத்தினர் ஆரவாரமிட்டு இந்தக் கருத்தை ஏற்றனர்.

சில நாட்கள் சென்று கரூரில் ஒரு கருத்தரங்கு நடத்தினார் பூ.அர.குப்புசாமி. அதற்கும் நாங்கள் சென்றிருந்தோம். அதில் சில உழவர் சங்கத் தலைவர்களும் ஏராளமான ″தன்னார்வ″த் தொண்டர்களும் வந்திருந்தனர்.

இங்கு காவிரி நீருரிமையைப் பற்றிப் பேசுவதை விட தொழிற்சாலைகளால் நீர் மாசுறுவது பற்றியும் உழவர்களின் சிக்கலுக்கு, அவர்களது பல்வேறு உரிமைகளை ஆட்சியாளர்கள் முடக்கிப் போட்டதோ, காவிரியில் நீர் வறண்டு போனதோ காரணம் அல்ல, சீமை உரங்களும் பூச்சி மருந்துகளும் நிலத்தின் வளத்தைக் கெடுத்துவிட்டதுதான் என்றும் நம்மாழ்வார் தன் பரப்புரையைச் செய்தார்.

சங்கத் தலைவர்கள் என்று வந்தவர்கள் எவரும் காவிரி நீருரிமையை நிலை நாட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி எதுவுமே உருப்படியாகக் கூறவில்லை.

என் முறை வந்தபோது நான் சில உண்மைகளை எடுத்துரைத்தேன். முன்னாள் பெருவுடைமையாளர்களில் சிலர் ஒரு சங்கம் அமைப்பதற்கு வேண்டிய எண்ணிக்கையில் ஒரு சிலரைச் சேர்த்துச் சங்கத் தலைவராகி அந்தப் பதவியைப் பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஆகியோரிடத்துத் தமக்கு வேண்டியவற்றை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்ற உண்மையை எடுத்துக் கூறினேன். அது மட்டுமல்ல, இந்தச் சங்கத் தலைவர்களும் பொதுப்பணித் துறையினரும் வருவாய்த் துறையினரும் கூட்டு வைத்து ஏரி நிரம்ப நீரிருந்தாலும் வாய்க்கால் வழிய நீர் ஓடினாலும் உழவர்களிடமிருந்து பணம் பிரித்துத் தமக்குள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள் என்று இன்று தமிழகத்தில் நிலவும் உண்மை நிலையை எடுத்துரைத்தேன். அதன் பின்னர் காவிரி தொடர்பான கூட்டம் எதனையும் பெரியவர் பூ.அர.குப்புசாமி அவர்கள் நடத்தவில்லை.

பெரியவர் பூ.அர.குப்புசாமி பழம்பெரும் பெரியார் பற்றாளர். திருச்சி நிகழ்ச்சியில் நான் பேசும் முன்னர் பெரியாரைப் பற்றி எதுவும் கூறக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். அப்படிப் பேச வேண்டும் என்று நான் நினைக்கவுமில்லை.

இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது செயலலிதா ஆட்சி நடைபெற்றது. திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி அப்போது செயலலிதா பக்கம் இருந்தார். எனவே பெரியார் பூ.அர. குப்புசாமியின் பணி காவிரிச் சிக்கலில் கருணாநிதியின் இரண்டகத்தை மக்கள் அரங்கில் எடுத்து வைப்பதாகத்தான் இருந்ததே தவிர தமிழக நீர்ச் சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை நோக்கியதாக இருக்கவில்லை.

சென்ற 20 ஆம் நூற்றாண்டில் காந்தி முதல் திரு .பூ.அர.குப்புசாமி போன்ற கீழ்மட்டத் தலைவர்கள் வரை நடந்து கொண்டது மனதில் ஒரு நோக்கத்தை மறைத்து வைத்துவிட்டு மக்களுக்கு இன்னொரு செய்தியைச் சொல்வதும் அவர்கள் சொல்வதைத் தாண்டியும் மக்கள் தங்கள் உடல் பொருள், ஆவி அனைத்தையும் கொடுக்க அணியமாயிருந்ததும்தான். அது சிறிது சிறிதாக மாறி கருணாநிதி போன்ற வெட்கமற்றவர்கள் போராட்டங்களை அறிவித்துவிட்டு அதை இழிவான முறையில் முடித்து வைப்பதான வெளிப்படையான ஏமாற்றுகளால் இன்று நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள்.

இதற்கிடையில் பறம்பை அறிவன் தனக்குத் தெரிந்த தனித் தமிழ், மார்க்சியம், தி.க., தாழ்த்தப்பட்டோரர் அமைப்புகளைச் சேர்ந்தோர் பலரையும் அறிமுகம் செய்து வைக்க நானும் அவரும் பொருளியல் உரிமைக் கோட்பாடு பற்றித் திரு.அமரன் என்பவரோடு இணைந்தும் சந்தித்தும் மடல்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டும் கூட்டங்கள் நடத்தியும் எடுத்துரைத்தோம். பொருளியல் உரிமை என்ற இதழை 1997 சனவரி முதல் தொடங்கி அதனைப் பலருக்கு விடுத்தும் வந்தோம். எவரும் ஊக்கமான ஒத்துழைப்பைத் தரவில்லை.

அவ்வாறு சந்தித்தவர்களில் ஒருவர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் திரு.கே.எம்.அப்பாசு அவர்கள். அவரைச் சந்தித்து பெரியாற்று அணை நீர் உரிமைக்காக அதன் ஆயக்கட்டு உழவர்களை ஒருங்கிணைப்பதற்காக நிலவுச்ச வரம்புச் சட்டத்தையும் உழவர்களுக்கு எதிராகத் தமிழக அரசு ஏவிவிட்டிருக்கும் கெடுபிடிகளையும் எதிர்த்தும் தேவைப்பட்டால் கேளரத்துக்குச் செல்லும் வேளாண் விளைபொருட்களை நிறுத்தியும் ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அதற்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். அவர் நாளை தங்கள் சங்கத்தின் பிற பொறுப்பாளர்களுடன் கலந்து பேசலாம் என்று எங்களை அழைத்தார். அடுத்த நாள் சென்ற போது அவர் எங்கோ காலையில் வெளியே சென்று விட்டார் என்று அவர் வீட்டிலுள்ளோர் சொன்னார்கள். நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறிய போது எங்களைத் திட்டி விரட்டி விட்டனர்.

இதற்குப் பின்னர்தான் மதுரையில் 19-09-98 அன்று தமிழக ஆற்று தமிழ் - தமிழர் இயக்கம் நீருரிமை மாநாட்டை நடத்தியது. அங்கு வைத்த பல தீர்மானங்களில் ஒன்று தன் சொந்தச் சொத்துகளை விற்றுப் பெரியாற்று அணையைக் கட்டிய பொறியாளர் பொன்னிக்குயிக்குக்கு நூற்றாண்டு விழா, எடுத்து அவரது உருவச் சிலையையும் எடுக்க வேண்டும் என்பதாகும். இதை அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசு கட்டாயம் நிறைவேற்றும். தங்கள் வேண்டுகை வெற்றியடைந்து விட்டதாக அதனை நடத்திய தி.மு.க. வைச் சேர்ந்த கே.எம்.அப்பாசும் அதன் தொங்கு சதையாக உருவாக்கப்பட்ட தமிழ் - தமிழர் இயக்கத்தினரும், குறிப்பாக, சுப.வீரபாண்டியன் வகையறாக்களும் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். சிலை அமைப்பதிலும் நூற்றாண்டு விழா நடத்துவதிலும் நிறைய பணம் வேறு புழங்குமே. ஒரே கொண்டாட்டம்தான் தோழர்களுக்கு!

தினமணி இதழில் ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஆசிரியராக இருந்த போது இற்றை(நவீன) இலக்கிய வட்டத்தையும் முன்னாள் மா.லெ.இயக்கத்தைச் சேர்ந்த சிலரையும் தன் உதவி ஆசிரியர் குழுவில் சேர்ந்திருந்தார். ஐராவதம் மகாதேவனுக்கு அடுத்து மாலன் ஆசிரியராக இருந்த காலத்தில் இடையில் ஒன்றரை ஆண்டுக்காலம் அவர் ஒரு படிப்புக்காக அமெரிக்காவில் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் திரு. சுதாங்கன் பொறுப்பிலிருந்தார். அவர் இந்த முற்போக்கு வட்டத்தினரிடம் பல பொறுப்புகளைக் கொடுத்திருந்தார். அவர்கள் குறிப்பாக க.சந்தான கிருட்டினன் என்பவர் என் ஆக்கங்களுக்கும் மடல்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வெளியிட்டனர். இவ்வாறு நான் தினமணி நேயர்களுக்கு நன்கு அறிமுகமானேன். இவ்வகையில் எனக்கு அறிமுகமானவர்தான் சேலம் மாவட்டம் ஆறகழூர் திரு. சி. வையாபுரி அவர்கள்.

இவர் தமிழக உழவர்களின் நலன் பற்றி தெளிவான சிந்தனையுடன் கட்டுரைகளையும் மடல்களையும் தினமணியில் எழுதிவந்தார். அவர் வாழப்பாடி இராமமூர்த்தியுடன் நெருக்கமான உறவுடையவர்.. இராமமூர்த்தியின் ராசீவ் காந்தி பேரவைக் கட்சியின் மாநாடு ஒன்று நெல்லையில் நடைபெற்ற போது எனக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டு அவரது தோழர்களுடன் வந்து சந்தித்தார். என் அலுவலகத்தில் இடமில்லாததால் நெல்லை சந்திப்பில் இருக்கும் கருணாநிதி மாநகராட்சி திருமண மண்டபத்தின் முன்வாயில் படிகளில் அமர்ந்து பேசினோம். பறம்பை அறிவனுக்கும் நான் செய்தி தெரிவித்து அவரும் வந்திருந்தார்.

திரு.வையாபுரி அவர்கள் இயக்கம் பரவ வேண்டுமாயின் போராட்டங்கள் நடத்த வேண்டும். சிறு ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் நடத்த வேண்டும். அப்போதுதான் நம்மைப் பற்றிய அறிமுகம் மக்களுக்குக் கிடைக்கும். அப்படி ஏற்பாடு செய்யும்போது எனக்கும் தெரிவியுங்கள், நானும் வந்து கலந்து கொள்வேன் என்றார்.

அவரிடம் விடைபெற்றுத் திரும்பும்போது ″ஆமாம், போராட்டம் நடத்துவாங்க, நடத்துவாங்க″ என்று முணு முணுத்தார் பறம்பை அறிவன்.

பறம்பை அறிவன் அடிக்கடி சொல்வது, தனக்குத் தங்க இடமும் உணவும் தரும் நண்பரோ, உறவினரோ இருக்கும் இடங்களுக்குத்தான் தான் சென்று வருவேன் என்பது. பிற இடங்களுக்கும் செல்வார். பெரும்பாலும் எங்கும் புறப்படும் முன், குமுகப் பணி அல்லது அரசியல் பணி செய்ய விருப்பமும் ஆனால் சூழல் வாய்ப்பு இல்லாமலும் இருக்கும் சிலரை இனங்கண்டு அவர்களிடம் சென்று தன் செலவுக்கென்று ஏதாவது பணம் பெற்றுக் கொண்டுதான் வருவார். பல வேளைகளில் நானும் செலவழிப்பேன். பொருளியல் உரிமைக்கென்றும் இயக்கத்துக்கென்றும் கொஞ்சம் பணம் தண்டியும் கொடுத்துள்ளார். பல வேளைகளில் சென்னையின் அண்மையில் இருக்கும் அவரது மகனோ, மகளோ வீட்டில் சென்று தங்கி விடுவதும் உண்டு.

இந்த இடைவேளையில் பறம்பை அறிவனின் ஊரான பறம்புக்குடியிலிருந்து இரா. சுகுமாரன் என்ற இளைஞர்(இப்போது அவர் தன் பெயரை தமிழ்மண்ணன் என்று மாற்றியுள்ளார்) பொருளியல் உரிமையைப் படித்துவிட்டு அவராகவே என்னைத் தொடர்பு கொண்டார். அடுத்த முறை பறம்புக்குடி சென்ற போது அவர் தன் தோழர்களுடன் என்னைச் சந்தித்தார். அவர் பள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர். தம் சாதி மக்கள் மீது அப்பகுதி முக்குலத்தோர் நிகழ்த்தும் வன்முறை ஒடுக்குதலுக்கு எதிராக வன்முறையை கையாண்டு காவல்துறையின் இடைவிடாத் தொல்லைகளுக்கு ஆளானவர். அதிலிருந்து விடுபட்டு ஓர் அரசியல் இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று விரும்பி வந்தவர். அவர் வந்தது பறம்பை அறிவனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. உள்ளூரில் தாழ்ந்த சாதியிலும் பொருளியல் நிலையிலும் உள்ளவர் என்பதால் தமிழ்மண்ணனை அவர் மதிக்கவில்லை, விரும்பவில்லை என்பது அவர் அவ்வப்போது கூறும் சொற்களிலிருந்து தெரியவந்தது. அத்துடன் அவரையும் அவரது தோழர்களையும் வெறும் எடுபிடிகளின் நிலையில் வைத்தால் போதும் என்பதும் அவரது கருத்து. எனக்கோ, ஒடுக்கப்பட்ட மக்கள் நடுவிலிருந்து ஒரு எதிர்காலத் தலைமையை உருவாக்கும் ஒரு வாய்ப்பாக இதை எண்ணி மகிழ்ந்தேன்.

தமிழ் மண்ணனின் தந்தையார் திரு பூ. இராமநாதன் அவர்கள் பறம்புக்குடி வட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர்; அம்மக்களிடையில் நல்ல மதிப்பைப் பெற்றவர்; முதுகுளத்தூர் கலவரத்துக்குக் காரணமாக இருந்த இமானுவேல் சேகரன் கொலை வழக்கு உசாவில் பசும்பொன். முத்துராமலிங்கருக்கு எதிராகச் சான்று சொன்னவர்; பறம்புக்குடி பேருந்து நிலையத்தை ஒட்டி அவர் குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை அதனாலேயே ஆதிக்க சாதியினரின் தூண்டுதலால் ஆட்சியாளர்கள் பறித்துக் கொண்டார்கள் என்றெல்லாம் அவர் கூறுகிறார். இன்று அவருடைய குடும்பம் வறுமையில் வாடுகிறது. இருப்பினும் தமிழக மேம்பாட்டுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீட்சிக்கும் பாடுபட வேண்டும் என்ற உந்துதல் அவரிடம் உள்ளது.

பறம்பை அறிவன் சில மாதங்கள் தொடர்ந்து ஆவடியில் இருந்து கொண்டு எந்தச் செயற்பாடும் இன்றி இருந்த நிலையில் தமிழ்மண்ணனிடம் தொடர்புகொண்டு பெரியாற்று நீருரிமை மீட்பை முன்வைத்து பறம்புக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓர் ஆர்ப்பாட்டத்துக்கு ஆயத்தம் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். பறம்பை அறிவனுக்கும் இது பற்றித் தெரிவித்திருந்தேன். தமிழ்மண்ணனும் துண்டறிக்கைகள் கொடுத்து ஏற்பாடுகளெல்லாம் செய்து கொண்டிருந்த நிலையில் பறம்பை அறிவன் திடீரென்று சென்னையிலிருந்து வந்து அவரைக் கடிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யக்கூடாது என்று நிறுத்திவிட்டார். ″மக்கள் நாயக″ நடைமுறைகளைக் கடைப்பிடித்து நிலைக்குழுவின் ஒப்புதலைப் பெறவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். ஏற்கனவே ″அரசியலில்″ ஈடுபட்டிருந்தவர்களாக அவரால் அறிவிக்கப்பட்டவர்கள் எவரும் ஒத்துழைப்புத் தராமல் கைவிட்டு விட்டனர். நிலைக்குழுவின் மூன்றாம் உறுப்பினரான அமரன் மருத்துவமனையில் படுத்திருந்தார். பறம்பை அறிவனுக்கோ போராட்டங்களில் உடன்பாடில்லை. அப்படி இருக்கும்போது எனது முடிவில் மனத்தாங்கல் கொள்ள பறம்பை அறிவனுக்கு எந்தக் காரணமும் இல்லை என்பதை விளக்கி மதுரையில் ஒரு நிலைக் குழுவைக் கூட்டி உறுப்பினர்களிடமும் அவரிடமும் எடுத்துச் சொல்லி நிலைக்குழுவைக் கலைத்துவிட்டேன். பொருளியல் உரிமையையும் நிறுத்திவிட்டேன்.

மேற்கொண்டு மருத்துவமனையிலிருந்து திரும்பிய அமரன் அவர்களும் புதிதாகச் சேர்ந்திருந்த அருப்புக் கோட்டையைச் சேர்ந்த தொல்காப்பியன் என்பவரும் அருப்புக்கோட்டையில் வேளாண்மை சார்ந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். உள்ளூர் உழவர்களின் உதவியில் அவை நடைபெறுவனவாக நான் நினைத்திருந்த போது அது நம்மாழ்வாரின் தொண்டு நிறுவனம் அல்லது புதுச்சேரி ″ஆரோவில்″ உதவியுடன் நிகழ்ந்ததாக அறிந்தேன். அவ்வாறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று நான் கூறிய போது தேவையான பணத்துக்கு வேறு வழி இல்லை என்று அவர்கள் கூறிவிட்டார்கள். அவ்வாறு அந்த முயற்சியும் நின்றுபோய் இயக்கம் தேங்கிக் கிடக்கிறது.

இப்போது பெருஞ்சித்திரனார் குடும்பத்துக்கும் மா.செ. தமிழ்மணி அவர்களுக்கும் இடையில் என்ன முரண்பாடோ தெரியவில்லை அவர் அங்கிருந்து விலகி திரு. நா. அரணமுறுவல் தொடங்கிய திருவள்ளுவர் அறக்கட்டளையின் தலைமைப் பொறுப்பாளராக உள்ளார்.

(தொடரும்)