8.7.09

தமிழக நிலவரம்(2009) .....3

பார்ப்பனியம்தான் தமிழகத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள். பார்ப்பனியம் என்றால் ஆரியம் என்கிறார்கள்.

ஆரியம் என்பது வட இந்தியாவைக் குறிப்பது. ஆரிய “இனம்” என்பது 19 ஆம் நூற்றாண்டில் மாக்சுமுல்லர் என்னும் செருமானிய மொழி ஆய்வாளர் உருவாக்கிப் பின்னர் எதிர்ப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கைவிட்ட ஒன்று. இட்லர் போன்றோரும் ஐரோப்பியரும் இந்திய, தமிழக அரசியலாளரும் ஆள்வோரும் தத்தம் நலன்களுக்காகத் தூக்கிப் பிடிக்கும் ஒரு போலிக் கோட்பாடு. ஆரியர்கள் உருவாக்கியவை என்று கூறப்படும் வேதங்களில் தொல்காப்பியத்தில் வரும் வருணனும் இந்திரனும் தலைமையான தெய்வங்கள். கடலைப் பற்றியும் கப்பலைப் பற்றியும் இடியைப் பற்றியும் வேளாண்மையைப் பற்றியும் மருத நில மக்களைப் பற்றியும் வேதங்களில் கூறப்பட்டிருக்கிறது. அவர்களை மாடுமேய்க்கிகள் என்றால் முல்லை நிலத் தெய்வமான திருமால் தமிழர்களுக்கு அயலா? இராமனும் தமிழன், இராவணனும் தமிழன். ஆனால் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள். தொன்மங்களில் இதற்குச் சான்று உண்டு. இராமயணப் போரை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் கிரேக்கர்களும் சமண, புத்தங்களால் வீழ்ந்த வட இந்தியப் பார்ப்பனரும் சேர்ந்து ஓமரின் இலியத்துக் காப்பியத்தை அடியொற்றி இலக்கியமாக்கினர். வேதங்கள் பொதுமக்களுக்குப் புரியாமல் மறைவா(யா)க இருக்க வேத மொழியும் மக்களுக்குப் புரியாத மொழியில் ஆட்சியையும் சமயத்தையும் தொழில்நுட்பங்களையும் வைத்திருக்கச் சமற்கிருத மொழியும் தமிழர்களால் படைக்கப்பட்ட ஒரு முழுச் செயற்கை மொழி.

சிந்து வெளி நாகரிகம் குமரிக்கண்ட வாணிகர் அமைத்திருந்த ஓர் இடைத்தங்கல். கடல் மட்டம் சிறுகச் சிறுக உயர்ந்ததாலும் சிந்தாற்று வெள்ளங்களாலும் அவற்றுக்கு இணையாகக் குமரிக் கண்டம் கடற்கோள்களுக்கு உட்பட்டதாலும் கொஞ்சம் கொஞ்சமாக அது வலிமை இழக்க ஏதோ ஒரு சூழலில் பாலைக்கு அப்பால் வாழ்ந்த வளர்ச்சி நிலையில் தாழ்ந்த முல்லை நில மக்கள் அதைத் தாக்கி அழித்துள்ளனர்.

தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் சாதியற்றிருந்ததாகச் சுட்டிக் காட்டும் பண்டை இலக்கியம் எதுவுமே கிடையாது. தொல்காப்பியம் கூறும் ஐந்நிலங்களுமே வருணன், இந்திரன், திருமால், முருகன், கொற்றவை என்ற 5 தெய்வப் பூசாரிகளால் ஆளப்பட்டவை. முதலில் பெண் பூசாரிகளாய் இருந்தது ஆண் பூசகர்களுக்கு மாறியது. ஆனால் இந்தப் பூசகர் - பெண் உறவு இன்றுவரை தொடர்கிறது. அண்ணாத்துரையும் கருணாநிதியும் பிறந்த போது இருந்தது போல் இவ்விரு சாரருக்கும் அவ்வப்போது சிறு பிணக்குகள் ஏற்பட்டு, அரசியல் செல்வாக்குப் பெற்றதும் அண்ணாத்துரையும் கருணாநிதியும் பார்ப்பனர்களுடன் மறைவாகவும் வெளிப்படையாகவும் இணைந்துகொண்டது போல் இணைந்துகொள்வர்.

தொல்காப்பியம் ஆளும் கூட்டமாகிய பூசகர், அரசர், வாணிகர், நிலக்கிழார் ஆகியோரைத் தவிர அடிமைகள், கைவன்மைத் தொழிலாளர் ஆகிய மிகப் பெரும்பான்மையான மக்களை,
அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை யிலபுறத்து என்மனார் புலவர் என்கிறது (அகத்திணை இயல் - 25).

அதாவது அடிமைகளுக்கும் தொழில் செய்வார்க்கும் களவு கற்பு என்ற ஒழுக்க நெறிகள் கட்டாயமல்ல, அவர்கள் அவ்வொழுக்க நெறிக்கு வெளியே (புறத்தே)வாழ்கின்றவர்கள் என்பது இதன் பொருளாகும், அதாவது அவர்கள் ஒழுக்கங்கெட்டவர்கள் என்பதாகும்.

மேல்தட்டினர் கணக்கற்ற பெண்களைக் காதற்கிழத்திகளாகவும் வேலைக்காரியாகவும் வைப்பாட்டியாகவும் இருந்த வெள்ளாட்டி என்று இடைக்காலத்தில் வழங்கப்பட்ட நிலையிலும் வைத்திருந்தனர். செவிலி என்பவள் இந்த இரண்டாம் வகைப்பாட்டினுள் வருகிறவள்.

இவைதான் மனுச் சட்டத்தின் விதை என்பதை யார்தான் மறுக்க முடியும்?

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே,
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பா லொருவனும்
அவன்கட் படுமே
என்று மேல் கீழ் என்பதைத் தெளிவாகக் கூறுகிறான்.

திருவள்ளுவரே,
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் (குறள். 972) என்று கூறி தொழிலால் வரும் ஏற்றத்தாழ்வையும் பிறப் பொழுக்கம் குன்றக் கெடும் (குறள். 134) என்று கூறி பிறப்பால் வரும் ஏற்றத்தாழ்வையும் கூறுகிறார்.

ஆக, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று திருமூலர் ஓதுவதற்கு முன் தமிழ் இலக்கியத்தில் சாதிய ஏற்றத்தாழ்வை மறுத்த எந்தக் கூற்றையும் காண முடியாது.

சிலப்பதிகாரம் கூறும் செய்திகளின்படி தமிழ்நாட்டில் எந்த ஓர் அரசு அல்லது பொது நிகழ்ச்சியும் வருண பூதங்கள் நான்கையும் வழிபட்டே தொடங்கின. அந்த வருணங்கள் கூட இன்று நாம் அறிபவற்றுக்கு மாறாக 1) அந்தணர், 2) அரசர், 3) வாணிக – வேளாளர், 4) பாணர் – கூத்தர் என்றிருந்து பின்னால் இன்றைய வடிவத்துக்கு மாறியுள்ளது.

எனவே சாதிகள், வருணங்கள் தமிழர்கள் படைத்தவையே. உலகில் உரோம், பிரான்சு, சப்பான் ஆகியவற்றில் வருணங்கள் இருந்துள்ளமை வரலாற்றால் அறியப்பட்டுள்ளது. பிரான்சிலும் சப்பானிலும் தொழிற்புரட்சியாலும் முதலாளியத்தாலும் அவை அழிந்துள்ளன. ஐரோப்பாவில் தொழிற் சாதிகள் இருந்ததை மார்க்சு மூலதனம் முதல் மடலத்தில் குறிப்பிட்டு, தொழிற்புரட்சியால் அவை அழிந்ததைக் கூறியுள்ளார்.

வருணங்களின் தோற்றம் ஓர் ஆட்சியின் கீழ் வாழும் மக்களை அவர்களின் குமுகப் பங்களிப்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தி அந்தந்த வகைப்பாட்டின் கீழ் வரும் மக்களின் பேராளர்கள்(சட்ட மன்றம், பாராளுமன்றம் போன்று) மூலம் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்துவதே. நாளடைவில் படையைக் கையில் வைத்திருந்த ஆட்சியாளர்கள் பூசகர்களின் துணையுடன் பெரும்பான்மையினரை ஒடுக்குவதாக உலக அளவில் அது இழிந்துபோயிற்று. எனவே அதைத் தோற்றுவித்ததில் நமக்கு இழுக்கு ஒன்றுமில்லை. அதன் எச்சங்கள் இன்றும் நம்மைத் தொடர்வதே அவலம். அவற்றை முற்றாக ஒழிப்பதற்கான சூழல் உருவாவதைத் தடுப்பவர்களாக “தமிழ்த் தேசியம்”, “தமிழ் மொழி” பற்றி முழங்குவோர் இருப்பதுதான் அதைவிடப் பெரும் அவலம்.

சாதி சார்ந்த தொழிலும் தொழில் சார்ந்த சாதியும் உறைந்து போன தொழில்நுட்பத்தின் விளைவாகும். இடைவிடாத தொழில்நுட்ப மேம்பாடும் மக்களின் இடப்பெயர்ச்சியும் சாதி என்ற ஒன்று தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்துவிடும்.

நம் தோழர்கள் கூறுவதுபோல் சாதியும் வருணமும் இவர்கள் கூறும் கற்பனை “ஆரியர்”களால் இங்கு பரப்பப்பட்டது என்பதை ஓர் உரையாடலுக்காக வைத்துக்கொள்வோம். அயலாரால் புகுத்தப்பட்டது என்று தெரிந்து ஏறக்குறைய மாக்சுமுல்லர் காலத்திலிருந்து 160 ஆண்டுகள் ஆகியும் ஏன் அதனை நம்மால் அகற்ற முடியவில்லை? அயலார் கூறும் பொய்ம்மைகளை இனங்காணவோ இனங்கண்டாலும் அதனைப் புறக்கணித்து உண்மையின் பக்கம் நிற்கவோ திறனற்ற மூளைக் குறைபாடு உள்ளவர்களா நாம்?

சரி அப்படித்தான் அயலாரே நம்மிடம் புகுத்திவிட்டனர் என்று வைத்துக் கொண்டாலும் அந்த அயலாரைத் திட்டுவதாலோ அடிப்பதாலோ (அடிப்பதாவது! இவர்கள் பார்ப்பனர்களைத் தங்களது வழிகாட்டிகளாகவல்லவா இயக்கங்களுக்குள் வைத்துள்ளனர், தங்களது ஆசான் கருணாநிதியைப் போல்) அதனை ஒழித்துவிட முடியுமா? ஒருவருக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறைவால் நோய்த் தொற்று இன்னொருவரிடமிருந்து வந்தவிட்டதென்றால் நோய்த்தொற்றுக்குக் காரணமானவரை வைதுகொண்டாயிருப்பார்கள்? மூளை கலங்கியவர்கள்தாம் அதைச் செய்வர். இயல்பானவர் நோய்த் தொற்றியவனுக்கு உடனடியாக மருத்துவமல்லவோ செய்வர்? சாதி குறித்து அந்த மருத்துவத்தைப் பற்றி இவர்கள் சிந்தித்ததுண்டா?

ஒருவர் தன்னிடம் குறை இருக்கிறது என்று புரிந்து ஏற்றுக்கொள்வது அவர் தன்னை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறார் என்பதற்கு அறிகுறி. பிறர் மேல் பழிபோட்டால் எவரும் தப்பிக்க முடியாது என்பது உறுதி. பிழைகள் மேல் பிழைகள் தலைமேல் ஏறி அவர் அழிவதும் உறுதி. அந்த அழிவுதான் இன்று உலகத் தமிழ் மக்களை கிட்டத்தில் வந்து நின்று அச்சுறுத்துகிறது.




(தொடரும்)

தமிழக நிலவரம்(2009) .....2

இன்றைய உலகச் சூழலில் உலகிலுள்ள ஆளும் கணங்களெல்லாம் அஞ்சி நடுங்குவது தேசிய விடுதலை இயக்கங்களைக் கண்டுதான். அவற்றில் பலவற்றை மார்க்சிய - இலெனியக் குழுக்கள் கையிலெடுத்துக் கொண்டு சிதைத்து ஆட்சியாளர்களின் ஆயுதத் திருட்டு விற்பனைக்குத் துணைபோகிறார்கள். மற்றவை முகம்மதிய மதவெறியர்களிடம் சிக்கி முகம்மதியர்களிடமிருந்தே அயற்பட்டு நிற்கின்றன. அது போன்ற அடையாளங்கள் எதுவுமின்றி நிலம், அதன் மக்கள் என்ற தெளிவான, அறிவியல் சார்ந்த நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடிய இயக்கமும் மக்களும் ஈழத்தவர்களே. அதனால்தான் உலக ஆட்சியாளர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு அப்போராட்டத்தை முடக்கிவைத்துள்ளனர்.

தேசிய விடுதலைப் போர் என்பது நினைத்துப் பார்க்க முடியாத அளவு கடுமையானது. சென்ற நூற்றாண்டில் உலகப் போர்களில் வல்லரசுகள் ஈடுபட்டிருந்த நிலையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் குடியேற்ற நாடுகளும் அரைகுறை அரசியல் விடுதலை பெற்றன. பொருளியல் வழியில் இன்று மறைமுக அரசியல் அடிமைத்தனத்துள் அவை உள்ளன. சோவியத்து வலிமையின் பின்னணியில் இந்தியாவின் தலையீட்டில்தான் வங்காளதேசம் அமைந்தது. ஆனால் இருவர் கைகளுக்குள்ளும் அது அடங்கவில்லை. இருவருக்கும் அது ஒரு கசப்பான பாடம். தென் அமெரிக்காவும் சிம்பாபுவேயும் அமெரிக்கத் தலையீட்டில் அதன் பொம்மைகளின் அரசுகளை அமைத்தன. செர்பியா போன்றவை அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் தலையீட்டினால் விடுதலை பெற்றன. அத்தகைய எந்தத் தலையீட்டையும் ஏற்றுக்கொள்ளாததால்தான் விடுதலைப் புலிகளை உலக அரசுகள் அனைத்தும் சேர்ந்து தாக்கியுள்ளன. மனித உரிமைகள் பெயரில் நடைபெற்ற வாக்கெடுப்பு ஒரு நாடகம். தன் மீதான குற்றத்தைத் தானே உசாவ சிங்கள அரசைக் கேட்டுக்கொள்வது என்ற கோமாளித் தனம்தான் மேற்கு நாடுகள் முன்வைத்த தீர்மானம். திட்டமிட்டபடி அதை உலகம் பார்த்திருக்கவே முறியடித்தாயிற்று. ஈழத்தின் மீளமைப்புக்கு சிங்களர்க்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று அவ்வரங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஈழத்தவர்களுக்கு எதிராகச் சிங்கள அரசுக்கு வலுயூட்டுவதுதான் உண்மையான நோக்கம்.

உலகில் இன்று தேசிய உரிமைச் சிக்கல் வெளிப்படையாகவோ உள்ளுறையாகவோ இல்லாதநாடு ஒன்று கூட இல்லை என்பது உண்மை. அமெரிக்காவில் கூட இப்போதைய பொருளியல் நெருக்கடியில் அது வெளித்தோன்றலாம். ஆத்திரேலியாவில் தோன்றி, இங்கிலாந்தைத் தொட்டுள்ள “இனவெறி” அமெரிக்காவில் தற்காலிகமாக அடக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அது வெடித்து அடுத்த கட்டமாக தேசியங்களின் முரண்பாடாக வெளிப்படலாம். எனவேதான் உலகின் அனைத்து அரசுகளும் இணைந்து நிற்கின்றன.

பிற நாடுகளை ஈழத்தவர்க்கு எதிராக அணிதிரட்டுவதற்கு வேண்டுமானால் இது பயன்பட்டிருக்கலாம். ஆனால் இந்தியாவைச் சுற்றி சீனம் அமைக்கும் தளங்களில் ஒன்று ஈழத்தில் இருப்பதைப் பார்க்கும் போது இந்தியாவைச் சுற்றி வளைக்க அமெரிக்கா இட்ட திட்டத்தை அதன் கூட்டாளியும் அடியாளுமாகிய சீனம் நிறைவேற்றுகிறதோ என்றொரு ஐயம். இந்தத் திட்டத்துக்கு இந்திய ஆளும் கும்பல், கருணாநிதி உட்பட விலை போயிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

நேரு குடும்பம் இன்று வெளிநாட்டுக் குடும்பம் ஆகிவிட்டது. ”உள்நாட்டு”த் தலைவர்களின் மகன், மகள், மருமகன், மருமகள், அல்லது அவர்களுடன் பேரன் - பேத்திகள், ஏன், நம்மூர் அரசூழியர்கள், பேராசிரியர்கள் கூட பிறங்கடைகளுடன் வெளிநாட்டுக் குடிமக்கள் ஆகிவிட்டார்கள். இந்தியாவை நல்ல விலைக்கு விற்றுவிட்டு அந்நாடுகளில் குடியேறி விடலாமே! இன்னும் இங்கு இருப்பது கூட அவ்வளவு பாதுகாப்பல்லவே!

இவர்கள் இப்படிப் போய்விட்டால் கூட நல்லதுதான். இங்கு கசடுகள் கழிந்த குமுகத்தைப் புத்தம் புதிதாகக் கட்டியெழுப்பலாமே!

ஆனால் அவர்கள் அவ்வளவு எளிதில் ஓடிப்போய்விடப்போவதில்லை. ஒருவேளை போர் வந்தாலும் போர்க்களத்தில் நிற்கப்போவது இராகுலும் தாலினுமா? உயிரை விற்றுக் குடும்பத்தைக் காப்பதற்கு ஆயத்தமாகத்தான் வயிறு காய்ந்த ஒரு பெரும் படையைக் குடிமக்கள் என்ற பெயரில் தீனி போடாமலே வளர்த்துவைத்துள்ளோமே!

போர் வரவேண்டுமென்ற கட்டாயம் கூட இல்லை. வராவிட்டாலும் சீன அச்சுறுத்தல் என்ற பெயரில் சீனத்திடமிருந்தே கூட ஆயுதம் வாங்கித் தரகு பார்த்துவிடுவோமே!

இந்தப் பின்னணியில் எந்த ஒரு தேசியமும் தனித்து விடுதலைப் போரை நடத்த முடியாது. தேசியங்களுக்குள் உறுதியான ஒருங்கிணைப்பு வேண்டும். அதே வேளையில் ஒவ்வொரு தேசியத்தின் மக்களிடையிலும் எய்தத்தக்க மிகப் பெரும் ஒற்றுமையை எய்தியாக வேண்டும். அதற்கு மக்களின் பல்வேறு வாழ்க்கைச் சிக்கல்களைக் கையிலெடுத்து அவர்களை ஆளுவோருக்கு எதிராக நிறுத்த வேண்டும். ஆனால் “தமிழ்த் தேசிய”, இயக்கங்களும் “தமிழ்” அமைப்புகளும் மக்களைப் பற்றித் துளிக்கூட கவலைப்படவில்லை. அவர்கள் ஆளுவோரின் பின்னால் நிற்கிறார்கள். மக்களும் ஆளுவோரின் பின்னால் நிற்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.

மேலே விளக்கியவாறு 2009 தேர்தலின் போது ஒன்றிரண்டு பேரவைக் கட்சி வேட்பாளர்களை மட்டும் எதிர்த்துவிட்டுத் தாங்கள் கருணாநிதியின் கையாட்கள் என்பதைப் பறையறையாமல் அறிவித்தனர்.


(தொடரும்)

தமிழக நிலவரம்(2009) .....1

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 400க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை இந்திய அரசு மற்றும் கடற்படை உதவியுடன் சிங்களப் படையினர் தமிழகக் கடல் எல்லைக்குள்ளும் எல்லைக்கு வெளியிலும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இது குறித்து தமிழீனத் தலைவர் தில்லிக்கு மடல்கள் தீட்டி அதைப் பற்றி தாளிகைகளுக்குத் தெரிவிப்பதற்கு மேல் எதுவும் செய்யவில்லை. பணம் விளையும் அமைச்சகங்கள் கேட்பதற்காகத் தில்லிக்குப் போவார், ஈழத்தவர்களின் பெயரைச் சொல்லி தீர்மானம் போட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் விலகல் மடல்களையும் வாங்கி வைத்துக்கொண்டு 80,000 கோடி ஊழல் குற்றச் சாட்டைக் கைவிட வைக்க அவற்றை வைத்து மிரட்டவும் செய்வார்.

சிவசங்கரமேனனையும் எம்.கே.நாராயணனையும் வரவழைத்து ஈழத்தவர்களை அழிப்பதற்கும் தமிழக மக்களை ஏய்ப்பதற்கும் அறிவுரைகள் வழங்குவார். ஆனால் அவரது இந்த நடவடிக்கைகளை எதிர்த்து குறிப்பிடத்தக்க குரல் எதுவும் “தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து எழவில்லையே ஏன்? மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்தும் போது ஒரு சில ஆயிரங்கள் என்ற அளவில்தானே இவர்களால் தொண்டர்களை ஈர்க்க முடிகிறது, அது ஏன்? அந்த ஒரு சில ஆயிரம் பேரை வைத்துக்கொண்டு தொடர்ந்து மாநாடுகள், கருத்தரங்குகள், சிறுசிறு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு இவர்களுக்குப் பணம் வந்துவிடுகிறது. உண்ணா நோன்பிருந்த வழக்கறிஞர்களிடையில் காவல்துறையினரைக் கொண்டு கருணாநிதியும் சுப்பிரமணியம்சாமியும் திட்டமிட்டுக் கலவரத்தை உருவாக்கிய பின்னர் அவர்களை ஒருங்கிணைக்க எவரும் இல்லையே ஏன்? தன்னெழுச்சியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கிய போது அவர்களோடு தொடர்பு கொள்ளவும் எந்த நடவடிக்கையும் இல்லையே அது ஏன்? இவை அனைத்துக்கும் முடிவுரை கூறுவது போல் “ஈழச் சிக்கலால் தமிழகத் தேர்தல் களத்தில் எந்தத் தாக்கமும் இல்லை” என்று கருணாநிதியின் திருமகன் தாலின் அறிவித்தாரே, அந்தத் தன்னம்பிக்கை எங்கிருந்து வந்தது? “தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகள் அனைத்துமே எப்போதுமே கருணாநிதியுடன் இணங்கியே வந்துள்ளதுதான் இதற்கெல்லாம் காரணம். உள்ளே உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். வெளியிலிருந்து கூர்ந்து நோக்குவோருக்கும் தெரியும். அதனால்தான் ஒரு பக்கம் கருணாநிதியின் “மனிதச் சங்கிலி” என்றால் இன்னொரு பக்கம் நெடுமாறனின் “மனிதச் சங்கிலி” என்று ஈழத்தவர்க்கான தமிழகத்தின் எதிர்வினை கூத்தாடிகளின் தெருக்கூத்தாகிப் போனது.

“தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகளின் இன்றைய திரைத்துறை மின்னல்களான சீமான் வகையறாக்களின் துணையோடு நெடுமாறன் தலைமையில் பேரவைக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக மட்டும் தேர்தல் பரப்புரை செய்தனரே, அதன் பொருள் கருணாநிதியின் செயல்பாடுகளில் இவர்களுக்கு முழு உடன்பாடு என்பதா அல்லது அது கருணாநிதியின் நடவடிக்கைகளில் எந்தக் குறைபாடும் இல்லை என்ற இவர்களின் கணிப்பின் வெளிப்பாடா?

தேர்தல் முடிவுகளில் ஈழத்தவர்களுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசித்திரிந்த பேரவைக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோற்க வென்ற வேட்பாளரைச் சரிக்கட்டி சிதம்பரம் மட்டும் “வென்றாரே” அது பற்றிய “ஆதாய – இழப்புக் கணக்கை”க் கொஞ்சம் பார்ப்போமா?

சின்னப் பயல்கள் போல் “கிளாய்த்து”க்கொண்டு(கேட்டது கிடைக்கவில்லை என்றால் முறுக்கிக்கொண்டு சிறுவர்கள் மூலையில் போய் அமர்ந்துகொள்வதை இச்சொல்லால் குமரி மாவட்டத்தில் குறிப்பிடுவர்) தில்லியிலிருந்து திரும்பிவந்தாரே தமிழீனத் தலைவர் தன் “சுற்றத்தாருடன்”, அவரைத் தட்டித் தடவிச் சரிக்கட்ட தில்லியிலிருந்து தூதுவர்கள் வந்ததும் கேட்ட அமைச்சகங்களெல்லாம் இவரைவிடக் கூடுதல் உறுப்பினர்களை வத்திருந்த வங்கத்து மம்தாவை விட முன்னுரிமையுடன் வழங்கப்பட்டதும் எதனால்? நெடுமாறன் வகையறாக்கள் இன்னும் என் பின்னால்தான் இருக்கிறார்கள்; நான் நினைத்தால் பேரவைக் கட்சியையே தமிழகத்தில் தடம் தெரியாமல் செய்துவிடுவேன் என்று மிரட்டுவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்ததனால்தானே? அப்படி இல்லாமலா தமிழக அமைச்சரவையில் இடம் கேட்கச் சென்ற பேரவைக் கட்சியினரிடம் இனி கருணாநிதிதான் உங்கள் தலைவர் என்பது போல் சொல்லி விடுப்பார் “தலைவி”?

அரசியலில் பழமும் தின்று பல கொட்டைகளையும் போட்ட, எதிர் எதிர்ப் பக்கங்களிலும் இருந்து ஆதாயங்களைப் பெறுவதில் கைதேர்ந்த தமிழகத்து “மாவீரனு”க்கு(நா, கண், காது கூசுகிறதா? எமக்கும் மனமும் எழுதுகோலும் கூசத்தான்கின்றன பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே!) இந்தக் கணிப்பெல்லாம் இல்லாமலா இருக்கும்?

இவையெல்லாம் ஒரு முன்னேற்றப்படிதானே என்று மகிழ்ச்சி காட்டிய “தோழர்” மு.தனராசு வகையறாக்களுக்கெல்லாம் கூட “இவையெல்லாம்” முன்கூட்டியே தெரிந்திருக்குமோ?

இந்த நாடகத்தில் “வாழும் கலை” ரவிசங்கர், செயலலிதா, வைக்கோ, இராமதாசு ஆகியோரின் இடம் எது என்பது தெளிவாகவில்லை. தேர்தல் களத்தில் செயலலிதா பணம் ஏதும் இறக்கவில்லை என்று கூறப்பட்டதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?

நாடகமே உலகம்! தமிழகமே நாடக மேடை! உலகத் தமிழர்களோ நாடகக் காட்சிகளை உண்மைகள் என்று நம்பும் ஏமாளிகள்!

கோடிகளில் கோடிகள் புரள்கின்றன. உலகத் தமிழர்களின் வாழ்வு அதனாலேயே பிறழ்கின்றது.

இரண்டிலக்கம் ஈழத்தவர்களையும் 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் கூசாமல் கொடியவர்கள் கொன்ற பின்னரும் தமிழகத்தில் நிலவிய இந்த பிண அமைதியை நினைத்துப்பாருங்கள்! நாளை, நாள்தோறும் பெருகிவரும் மார்வாரி ஆதிக்கம் ஓர் ஊரில் பசித்துக் கிடக்கும் நம் மக்களையே கூலிப்படையினராக்கி நம் மக்களைத் தாக்கினால் ஓடிச் சென்று நம்மவர்களுக்கு உதவ நம் மக்கள் முன்வருவார்கள் என்று எப்படி ஐயா நம்ப முடியும்? தமிழகத்தில் ஆறரைக் கோடிப் பேரும் வெளியே இரண்டு கோடிக்கு மேலும் இருந்தும் மொத்தமுள்ள எட்டரைக் கோடிப் பேரும் ஆளற்றவர்களாக தனித்தனி மனிதர்கள் என்றல்லவா அம்மா ஆகிப்போனோம்!

இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? இதற்கான விடையைத் தேடுவோம்.

தமிழகத்தில் பல்வேறு மக்கள் குழுக்களுக்கென்று சங்கங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கருணாநிதியின் அறிவுரையால் அமைந்தவை. ஒரு குறிப்பிட்ட சிக்கல் குறித்து ஒரு துறை சார்ந்த சிலர் அணுகினால் சங்கம் அமைத்துக்கொண்டு வரச் சொல்லுவார். சங்கம் அமைத்துப் பணம் திரட்டிக் கொண்டு உரிய இடத்தில் சேர்த்தால் சில வேண்டுகைகள் நிறைவேறும். பணம் திரட்டுவோர் ஒன்றுக்கு இரண்டாகத் திரட்டித் தமக்கு எடுத்துக் கொள்வர். இவர்கள் அரசுக்கு எதிராகச் செயற்படுவார்களா?

இன்னொரு வகை, வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் இங்கு சங்கங்களை அமைத்து நம் ஆட்சியாளரோடும் தொடர்பு வைத்திருப்போர். தமிழ்நாட்டு மீனவர்கள் இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனர். அதனால்தான் சிங்களர் பறித்த ஒவ்வொரு உயிருக்கும் ஒன்றோ இரண்டோ இலக்கங்களைக் கொடுத்து நம் மீனவர்களைக் கருணாநிதி அரசால் அமைதிப்படுத்த முடிந்தது. ஆனால் “தமிழ்த் தேசிய” இயக்கங்கள் என்ன செய்தன? ஓராண்டுக்கு முன்னால் ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்த் தேசிய விடுதலை இயக்க மாநாட்டில் இப்பொருள் பற்றி நான் பேசத் தொடங்கியதுமே எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கடந்து விட்டதாகச் சீட்டு வந்தது. பின்னர் பேசிய ஒருவர் நான் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு வெளியே சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.

“தமிழ்த் தேசியம்”, “தமிழ்மொழி” பற்றிப் பேசுவோர் ஒன்றாகக் கலந்துதான் செயற்படுகின்றனர். அவர்கள் தமிழக மக்களிடமிருந்து முற்றிலும் அயல்பட்டு நிற்கின்றனர். ஒரு எடுத்துக்காட்டு மேலே நாம் சொன்னது. இன்னொன்று தமிழகத்தைக், தமிழகப் பொருளியலைக் குலைக்கக் கருணாநிதி அரசு நிகழ்த்தும் தொடர் மின்வெட்டு. 1974இல் இருந்தே தமிழகத்தில் தேவையில்லாமல் மின்வெட்டைக் கொண்டுவந்து தொழிலகங்களுக்கு ஒதுக்கீடு என்று ஊழலைத் தொடங்கி வைத்தவர் கருணாநிதி. அன்றிலிருந்து எப்போது மின்சாரம் வரும் எப்போது போகும் என்று எவரும் அறியமுடியாத நிலையில் நினைத்துப் பார்க்க முடியாத பகிர்மானக் குளறுபடிகள். இங்கு பற்றாக்குறை என்று கூறிக்கொண்டே அயல் மாநிலங்களுக்கு மின்சார விற்பனை. இன்று அயல் மூலதனம் என்ற பெயரில் உருவாக்கப்படும் சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் என்றும் பல்வேறு வளாகங்கள் என்றும் கூறிக்கொண்டு ஆளுவோர் தங்கள் சொந்த மூலதனத்தில் நடத்தும் தொழிலகங்களுக்குத் தடையில்லா மின்சாரம். சிறு, குறு தொழில்கள் இன்றைய பகிர்மானக் குழப்பத்திலும் காலம் குறிப்பிடாத, குறிப்பிட்ட காலத்தைக் கடைப்பிடிக்காத மின்வெட்டால் இயங்க முடியாமல், போட்டிகளை எதிர்கொள்ள முடியாமல் அழிந்து போக அதனால் ஆதாயம் அடையும் போட்டிக் குழுக்களுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டும் ஆதாயம் பார்க்கும் ஆட்சியாளர்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடக்கும் இந்தக் கொடுமையைக் குறித்து “தமிழ்த் தேசியம்”, “தமிழ்மொழி” பேசும் எவராவது ஒரு மூச்சு விட்டிருக்கிறாரா? அதே நேரத்தில் செம்மொழி அறிவிப்பு, திருவள்ளுவர் சிலை, பாவாணர் சிலை, பாவாணர் கோட்டம் என்று மொழியின் பெயரைக் கூறிக்கொண்டு உண்மையில் மக்களின் வாழ்வுக்கு பயன்படாத வேலைகளுக்காகக் கூக்குரல் இட்டு அதை நிறைவேற்றினார் இதை நிறைவேற்றினார் என்று கூறி கருணாந்திக்குப் பாராட்டும் நன்றியும் கூறித் திரியும்”தமிழ்த் தேசியம்”, “தமிழ்மொழி” பற்றிப் பேசுவோரால் தமிழக மக்களுடன் என்ன தொடர்பை ஏற்படுத்த முடியும்? மக்களிடமிருந்து முற்றிலும் அயல்பட்டு நிற்கும் இவர்களால் தமிழர்களுக்கோ தமிழகத்துக்கோ தமிழுக்கோ என்ன நன்மை செய்ய முடியும்?


(தொடரும்)

5.7.09

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....3

திராவிடர் இயக்கம் பொருளியல் குறிக்கோள்களை எந்தக் கட்டத்திலும் சரியாகவோ முழுமனதோடோ முன்வைக்கவில்லை (திராவிடர் கழகத்தில் திரண்டிருக்கும் பணம், அதன் பல கிளைப்புகளில் சேர்ந்திருக்கும் பணம், பதவிகள் என்பவற்றைத் தவிர வேறு எதனையும் குறிக்கோள்களாகக் கொண்டிருக்கவில்லை என்பது வேறு, முன்வைக்கவில்லை என்பது வேறு). அதனால் தத்தமக்குப் போதும் என்ற அளவுக்குக் குமுகியல் ஏற்புக் கிடைத்தவுடன் அவை எதிரணிக்குத் தாவி எதிரிக்குப் பணிந்து தம்மைக் காப்பாற்றிக் கொண்டன.

அவ்வாறின்றி திராவிடர் இயக்கம் ஒரு நிலையான பொருளியல் குறிக்கோளை முன்வைத்திருக்குமானால் ஒவ்வொரு சாதிக்குழுவுக்குள்ளும் இருந்த குமுகியல் விசைகளுக்கும் பொருளியல் விசைகளுக்கும் மோதல் ஏற்பட்டுப் புரட்சிகரத் தனிமங்கள் வெளிப்பட்டு இயக்கம் முன்னேறிச் சென்றிருக்கும்.

எடுத்துக்காட்டாக நாடார்களை எடுத்துக் கொள்வோம். திராவிடர் இயக்கத்தின் தொடக்க காலத்தில் மேற்சாதிகளின் ஒதுக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் வகையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்துச் சாதியினரும் சேர்ந்து பயிலும் பள்ளிகளை அவர்கள் தொடங்கினர். கூட்டு விருந்து(சமபந்தி போசனம்)கள் நடத்தினர். பொதுக் கிணறுகளையும் பொதுக் குளங்களையும் பொது இடுகாடு சுடுகாடுகளையும் அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்ற முழக்கத்தையும் முன்வைத்தனர். இந்த முழக்கங்களுடன் தங்கள் செல்வ வலிமையைத் திராவிடர் இயக்கத்துக்கு வாரி வழங்கினார். நாளடைவில் இவர்களின் குமுகியல் நிலை மேம்பட்டது. அவர்களுக்கெதிரான ஒடுக்குமுறை, ஒதுக்குமுறைகள் மட்டுப்பட்டன. ஒரு கட்டத்தில் அதுவரை தாங்கள் தங்களுடன் இணைத்துக் கொண்ட தாழ்த்தப்பட்டோர் தங்களுக்குச் சமமாவ வருவதை விட எஞ்சியிருக்கும் ஒடுக்குமுறை, ஒதுக்குமுறைகளை ஏற்றுக்கொண்டு மேற்சாதியினருடன் இணங்கிச் செல்வதே மேல் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

அதே நேரத்தில் பம்பாய் மூலதனத்தால் இதே நாடார்கள் நெருக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அதை எதிர்த்து இவர்களுக்குக் குரல் கொடுக்க திராவிடர் இயக்கம் முன்வரவில்லை. எனவே தங்களைக் காத்துக் கொள்ள ஒரே வழி பேரவைக் கட்சியிடம் அடைக்கலம் புகுவதே என்று முடிவு செய்தனர். அக்கட்சியில் பார்ப்பனர்களுக்கும் பிற மேற்சாதியினருக்கும் இடையில் உருவான முரண்பாட்டின் விளைவாகத் தலைமையைப் பெற்ற காமராசருக்குப் பின்னணியாக நின்றனர். நாளடைவில் வேறு வழியின்றி மார்வாரிகளின் காலடிகளில் வீழ்ந்துவிட்டனர்.

திராவிடர் இயக்கம் தமிழகத்தின் பொருளியல் விடுதலை என்ற திசையிலும் குரல் எழுப்பியிருக்குமாயின் தங்கள் பொருளியல் நலன்களுக்குப் போராடும் வலிமையைத் தாழ்த்தப்பட்டோரிடமிருந்து பெறுவதற்காக அவர்களின் குமுகியல் உரிமைகளுக்கு இடம் கொடுத்திருப்பர். பொருளியல் நலன்களுக்கும் குமுகியல் நலன்களுக்கும் இடையிலான இயங்கியல் உறவை விளக்க அண்மைத் தமிழக வரலாற்றின் இப்பகுதி நமக்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டாகும்.

ஒதுக்கீடு என்ற கோரிக்கை ஏற்கப்பட்ட அன்றே அதனுடைய புரட்சித் தன்மை போய்விட்டது. கிடைத்த ஒதுக்கீட்டுக்கான பங்குச் சண்டை தொடங்கிவிட்டது. அந்த வெற்றியே தோல்வியாகி விட்டது. இடையில் மங்கியிருந்த சாதிச் சங்கங்கள் புத்துயிர் பெற்று புதுப் பிளவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. பொருளியல் நலன்கள் குமுகியல் முரண்பாடுகளை மங்க வைப்பதற்குப் பகரம் இரண்டும் ஒன்று சேர்ந்து இந்தப் பூசலை வலுப்படுத்திக் கொண்டு பொருளியல் பின்னணியால் பேய்வலிமை பெற்றுவிட்ட குமுகியல் பிற்போக்குக் போராக மாறிவிட்டிருக்கிறது. இந்த நிலையில் பொருளியலைக் குமுகியலுக்கு எதிராக அதாவது பகைகொண்டு நிற்கும் குமுகியல் பிரிவுகளுக்குப் பொதுவான அதாவது அப்பிரிவுகள் ஒன்றுபடுவதை இன்றியமையாததாக்கும் பொருளியல் நலன்களை முன் வைத்துப் போராட்டங்களைத் தொடங்கினால் இன்று பொருது கொண்டிருக்கும் குழுக்களின் கவனம் திரும்புவதோடு இணைந்து நின்று அவர்களுக்குப் புதிதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் பொது எதிரியை எதிர்த்துப் போராடத் தொடங்குவர். இந்தப் போராட்டம் நெடுகிலும் அவ்வப்போது எழும் சூழ்நிலைகளுக்கேற்ப குமுகியல் பொருளியல் போராட்டங்களை நடத்திச் செல்வதன் மூலம் அகப்புற முரண்பாடுகளுக்கு நாம் தீர்வு காணலாம்.

எந்தவொரு முற்போக்கான முழக்கமும் திட்டவட்டமான மக்கள் குழுக்களைத் தொடுவனவாக இருக்க வேண்டும். தேசிய விடுதலை, தேசிய எழுச்சி, தமிழின விடுதலை, தமிழின மீட்சி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை அல்லது மீட்சி, புதிய பண்பாட்டு(கலாச்சார)ப் புரட்சி, புதிய மக்களாட்சி(சனநாயக)ப் புரட்சி பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை என்ற அருமையான முழக்கங்கள் மக்களைத் தீண்டவே தீண்டா.

தமிழக மக்கள், குறிப்பாகத் தஞ்சை மக்கள் உணர்ச்சிகளற்றவர்களல்ல. தன்மான இயக்கத்தின் உயிர்மூச்சாய் இருந்தவர்கள். வரலாற்றில் இப்பகுதி மக்களுக்கு அஞ்சித்தான் இராசேந்திரன் மக்களில்லாத இடத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தை அமைத்துப் பதுங்கி வாழ்ந்தான். அதிராசேந்திரனைக் கொன்று கோயில்களை இடித்துப் பார்ப்பனப் பூசாரிகளை வெட்டி வீசியவர்கள் இவர்களே. ஆனால் குலோத்துங்கனால் அரசியல் - குமுகியல் உரிமைகளடிப்படையில் வலங்கையினரென்றும் இடங்கையினரென்றும் கூறுபடுத்தப்பட்டுத் தங்களிடையில் கொலைவெறிச் சண்டைகளிட்டு அரசன் மற்றும் பார்ப்பனர்கள் முன் மண்டியிட்டாலும் அவ்வப்போது பொருளியல் நெருக்குதல்களால் வரிகொடா இயக்கங்கள் நடத்தியவரே.


அதே போன்று இன்று ஒதுக்கீடு என்ற மாயமானாலும் காலத்துக்கும் களத்துக்கும் பொருந்தாத பொதுமையரின் முழக்கத்தாலும் திசையிழந்து நிலைமறந்து நகர இடமிழந்து நிற்கும் இம்மக்களை வெற்று முழக்கங்களால் அசைக்க முடியவில்லை. உங்களுக்கு என் கருத்துகள் ஆயத்தக்கண என்ற நம்பிக்கையிருந்தால் நீங்கள் மக்களிடையிலேயே ஒரு கருத்துக் கணிப்பு நடத்திப் பார்த்து அடுத்த நடவடிக்கையில் ஈடுபடலாம். இந்த ஓர் அணுகலோடு காவிரி நீருக்காக நடத்தப்படும் போராட்டத்துக்குக் காவிரிப் பாசனப் பகுதி மக்களின் முழு ஒத்துழைப்பையும் பெறமுடியும் என்பது என் உறுதியான நிலைப்பாடு.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,
குமரிமைந்தன்.

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....2

2. குத்தகை முறை:

தஞ்சை மாவட்டத்தில் கணிசமான விளைநிலங்கள் கோயில்களுக்கும் மடங்களுக்கும் சொந்தமானவை. மீதயுள்ளவற்றில் பெரும்பகுதி மூப்பனார், வாண்டையார், தீட்சிதர், முதலியார் ஆகியோருக்குச் சொந்தமானவை. இவற்றில் கோயில்களுக்கும் மடங்களுக்கும் குத்தகை ஒழிப்புச் சட்டத்திலிருந்து விலக்கு உண்டு. பெருவுடைமையாளர் நிலங்கள் பொய்ப் பெயர்களிலிருப்பதனால் உச்சவரம்புச் சட்டத்திலிருந்து தப்பிவிடுகின்றன. இப்பெருமுதலைகள் நிலத்தை விற்பதில்லையாகையால் குத்தகைச் சட்டத்தின் பயன்கள் குத்தகையாளருக்குக் கிடைப்பதில்லை.

எனவே பயிரிடும் குத்தகையாளருக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க வேண்டும். சந்தை விலையில் பாதியைக் குத்தகையாளரிடமிருந்து தவணை முறையில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பொதுமை இயக்கத்தினரின் நிலச்சீர்த்திருத்த முழக்கம் "உமுபவனுக்கே நிலம் சொந்தம்" என்பது. இதில் உழுபவன் என்ற சொல்லாட்சி தெளிவற்றது. உழுபவன் என்பவன் உழுதொழிலாளியாகிய வேளாண் தொழிலாளியா பயிரிடுவோனாகிய குத்தகையாளனா என்பதில் தெளிவில்லை.

"உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கம் முழுமையான நிலக்கிழமையிய(Feudalism)த்திலிருந்த ஐரோப்பாவில் உருவானதாகும். அங்கு மிகப் பெரும்பாலான நிலங்களும் பண்ணையடிமைகளான குத்தகையாளர்களால் பயிரிடப்பட்டன. உழைப்பு, இடுபொருட்கள் ஆகிய பொறுப்புகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு பயிர் செய்து விளைந்ததில் பெரும் பகுதியை நிலக்கிழாருக்கு வாரமாகக் கொடுப்பதுடன் குறிப்பிட்ட நாட்களில் அவருக்குக் கூலியற்ற வெட்டிவேலையும் செய்ய வேண்டும். நிலத்தை விட்டுப்போக முடியாது. நிலம் கைமாறினால் அவனும் நிலத்துடன் மாற வேண்டும். அந்த நிலையில் உழுபவன் என்பவன் குத்தகையாளனே. எனவே அங்கு இந்த முழக்கம் குத்தகையாளனையே குறித்தது.

இங்கோ தமிழகத்தில் ஒரு பக்கத்தில் குத்தகை முறையும் இன்னொரு பக்கத்தில் சொந்தப் பயிர் முறையும் இயங்கி வந்தது. உடைந்த நிலையிலான நிலக்கிழமை நிலை. இது நீண்ட காலமாக நிலவுகிறது. எனவே உழுதொழிலாளர்களும் கணிசமான நிலையிலிருந்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவராக இவ்வளவு எண்ணிக்கையில் இறுகிப் போனதற்கும் இந்த இரட்டை நிலை தான் காரணமாக இருக்க வேண்டும்.

இதில் உழுதொழிலாளிக்கு முதலிடம் கொடுப்பதா குத்தகையாளருக்கு முதலிடம் கொடுப்பதா என்ற கேள்வி எழுகிறது.

குமுகம் ஒரு பொருளியல் - பண்பாட்டுக் கட்டத்திலிருந்து அதைவிட மேம்பட்ட பொருளியல் - பண்பாட்டுக் கட்டத்துக்கு (எ-டு. அடிமைமுறையிலிருந்து நிலக்கிழமையியத்துக்கு, நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு) மாறுவதற்கு உந்து விசையாயிருப்பது குமுக விளைப்புக் கருவிகளாகிய நிலம், இயற்கை வளங்கள், விளைப்பு விசைகளாகிய உழைப்பு, கருவிகள், தொழில்நுட்பம் ஆகியவற்றிலிருந்து மிக அதிகமான விளைப்புத்திறனைப் பெறும் நோக்கமே. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே சுரண்டும் வகுப்புகள் பொருளியல் கட்டமைப்பை மாற்றிக் குமுகியல் மேம்பாட்டுக்கு வழி வகுக்கின்றன. அதாவது பழைய பொருளியல் உறவுகள் மாறும் போது குமுகியல் உறவுகளில் மாற்றத்துக்கான அடிப்படை உருவாகிறது. இந்த வகையில் நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு மேம்பட்டதில் அடங்கியிருந்த பொறியமைப்பைப் பார்ப்போம்.

நிலக்கிழமையியத்தில் நிலமும் குத்தகையாளரும் ஒருவர் இன்னொருவரால் பிணைக்கப்பட்டிருந்தனர். நிலத்துக்கு நல்ல உரமிட்டுப் பண்படுத்தி விளைப்பு உத்திகளை மேம்படுத்தும் பொருளியல் வலிமை பண்ணையடிமைக்கு இல்லை. நிலக்கிழாரோ நிலத்தில் நேரடி வேளாண்மைக்கு ஆயத்தமாயில்லை. உழவனோ நிலத்தை விட்டு வெளியேறி மாற்றுப் பிழைப்புக்கு வழியில்லை. இந்நிலையில் நிலம் உழவனுக்கு, அதாவது குத்தகையாளனுக்குச் சொந்தமானால் அவனால் அதை இன்னொருவருக்கு விற்றுவிட்டு வெளியேறி வேறு பிழைப்பைப் பார்க்கலாம். நிலம் சொந்தப் பயிர் செய்யத் துணிந்த புதிய வேளாண் வகுப்புகளிடம் முழுமையான ஈடுபாட்டுடன் மிகக்கூடிய விளைதிறனை எய்தும்; குமுகத்தின் செல்வமும் மீத மதிப்பும் பெருகும். அம்மீதமதிப்பு மீண்டும் வேளாண்மையில் பாய்ந்து அதை மேம்படுத்தலாம் அல்லது தொழில்துறையில் முதலீடாகி அத்திசையில் வளர்ச்சியை ஊக்கலாம். அது தான் ஐரோப்பாவில் தொழிற்புரட்சியின்போது நடைபெற்றது.

இந்த அடிப்படையை நோக்காமல் வெறும் வெற்று முழக்கமாக "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற நிலக்கிழமையியத்துக்குரிய முழக்கத்தையும் முதலாளியத்துக்குரிய பாட்டாளியக் கோட்பாட்டையும் குழப்பி குத்தகையாளனைப் புறக்கணித்துவிட்டு உழுதொழிலாளியை முதன்மைப்படுத்தியதால் எதிர்விளைவுகளே நேர்ந்தன.

குத்தகை ஒழிப்புச் சட்டத்தால் பயன்பெற்ற குத்தகையாளர்களில் பெரும் பான்மையோராகிய பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் விரைந்து வளர்ந்தனர். அதற்குப் பல காரணங்களுண்டு. அவர்கள் நேரடியாக நிலத்தில் இறங்கி வேலை செய்தனர்; அதனால் கூலி மிச்சம். அவர்களுக்கு நடப்பிலிருக்கும் வேளாண் தொழில்நுட்பம் அத்துபடி; அதனால் இழப்புகள் குறைவு. அவர்களது தாழ்ந்த பண்பாட்டு மட்டத்தால் குடும்பச் செலவு குறைவு. இவற்றால் மீத மதிப்புப் பெருகி கணிசமான பேரின் நிலஉடைமை உச்சவரம்பின் எல்லையைத் தாண்டியது. எனவே நில உச்சவரம்பையே குறியாகக் கொண்டு பொதுமை இயக்கத்தினர் முன்வைக்கும் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் இம்மக்களை அயற்படுத்தியது.

பொருளியல் - குமுகியல் வளர்ச்சி என்ற அடிப்படையிலிருந்து பார்த்தால் நிலத்தைப் பகிர்ந்து நிலமற்றோருக்குக் கொடுப்பதென்பது ஒரு பிற்போக்கு நடவடிக்கையாகும். வளர்ச்சிப் போக்கைத் தலைகீழாக்குவதாகும். நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு மேம்படுவது என்பதில் வேளாண்துறைக் குறிதகவு என்னவென்றால் பண்னையடிமையை நிலத்திலிருந்தும் நிலத்தைப் பண்ணையடிமையிலிருந்தும் விடுவித்து முதலாளிய விளைப்பு உத்திகளுடன்(சொந்த இடுபொருட்கள் கூலி வேளாண் தொழிலாளர்களுடன்) சிக்கனமாகப் பயிரிட இயலும் வகையில் பெரும்பண்ணைகளை உருவாக்குவதாகும். நிலஉச்சவரம்பு, நிலத்தைத் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது என்பவை இந்த உருவாக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக மட்டுமின்றி அவ்வாறு வளர்ந்து வரும் நிலவுடமைகளைச் சிதறடித்து நிலத்தின், குமுகத்தின் விளைதிறனைச் சிதைப்பதுமாகிறது. சிறுவுடைமையாளர்கள் ஆதாயத்துடன் வேளாண்மை செய்ய முடியாததோடு நினைத்தபடி அவற்றை வாங்குவோர், நிலச்சீர்திருந்தச் சட்டங்களுக்கஞ்சி அருகிப் போகின்றனர். நிலம் இன்னோர் சிறுவுடமையாளருக்குச் சொந்தமாகும் அல்லது ஒரு பெருவுடைமையாளர் அதை வாங்கி மறைத்துச் சிறுவுடைமை போலவே நடத்த வேண்டியுள்ளது. அதனால் நிலத்தின் விளைதிறன் மேம்பட வாய்ப்பில்லாமல் போகிறது.

அதுமட்டுமல்ல ஒரு வேளாண் கூலித் தொழிலாளியை விட ஒரு சிறு உடைமையாளனின் பொருளியல் - உளவியல் நிலை கீழானது. இன்றைய நிலையில் ஆற்றுப் பரப்புகளில் உழுதொழிலாளர்களுக்குக் கிடைக்கும் கூலி, அவர்களிடம் வரலாற்றுக் காரணங்களால் படிந்து இறுகிப் போய்விட்ட ஊதாரிப் பண்பாட்டுக் கூறுகள் இல்லையென்றால் ஒரளவு வாழ்க்கைத் தரத்தை அமைக்கப் போதுமானது. அத்துடன் வேலை முடிந்தால் மன அமைதியுடன் வாழ முடியும். ஆனால் சிறு உடமையாளனோ விதைத் தேர்வு செய்தல், கடன் பெறுதல், உரம் வாங்குதல், பயிர் நோய்களோடு போராடுதல், தண்ணீர் பெறுவதிலுள்ள சிக்கல், நடவு, அறுவடைக் கூலியாட்கள் சிக்கல், விளைந்தவற்றை விற்பதில் அரசின் நெருக்கடி என்று எண்ணற்ற சிக்கல்களில் அவனது ஆற்றலுக்கு மீறிச் செயற்பட வேண்டியிருக்கிறது. சிறுஉடைமை, நிலத்தில் மட்டுமல்ல, அணைத்துத் துறைகளிலும் நாய் தன் வாலையே துரத்தித் துரத்திச் சுற்றிவருவது போல் நம் மக்களைச் சுற்ற வைத்து அவர்களது ஆற்றலை அழிக்கிறது. அதனால் தான் குமுகத்தில் நிலவும் எந்தக் கடும் சூழல் கூட அவர்களின் கவனத்துக்கு வருவதுமில்லை வந்தாலும் எதுவும் செய்ய இயலாதவர்களாய் அக்கறையற்றுப் போய்விடுகிறார்கள்.

இன்னும் ஒரு கோணத்திலிருந்து பார்ப்போம். "பயிரிடுவோனுக்கே நிலம் சொந்தம்" அல்லது "குத்தககையாளனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கத்தை எடுத்துக் கொள்வோம். இந்த முழக்கத்தால் பயன் பெற இருப்போருக்கு முன் கூட்டியே யார் யாருக்கு என்னென்ன பயன்கள் கிடைக்குமென்று தெரியும். எனவே அதற்காக அவர்கள் போராட முன்வருவார்கள். அதே நேரத்தில் "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற தெளிவில்லாத முழக்கத்தையோ "நிலத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடு" என்ற முழக்கத்தையோ "உச்சவரம்புச் சட்டத்தைக் கண்டிப்பாகச் செயற்படுத்து" என்ற முழக்கதையோ எடுத்துக் கொள்ளுங்கள். நிலவுடைமையாளர்கள் அனைவருக்கும் இவை அச்சுறுத்தலாகும். அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் போது(இது நடைபெறுமாயின்) ஒவ்வொருவருக்கு எவ்வளவு கிடைக்கும், தமக்குக் கிடைக்குமா அல்லது இருப்பது பறிபோகுமா என்றெல்லாம் கலக்கம் ஏற்படும். எனவே எதிர்ப்புணர்வு தான் உருவாகும். நிலமற்றவருக்கோ நில உச்சவரம்பிலிருந்து பிடுங்கப்படும் நிலம் யார் யாருக்குச் செல்லும், பகிர்ந்து கொடுப்பார்களா அல்லது ஆட்சியாளர்களே வைத்துக் கொள்வார்களா அல்லது நிலம் வைத்திருப்பவர்களை மிரட்டிப் பணம் பிடுங்க மட்டும் சட்டத்தைப் பயன்படுத்துவார்களா (இவையெல்லாம் இன்று நடைபெறுகின்றன) என்றெல்லாம் ஐயங்கள் தோன்றும். அத்துடன் சிறுவுடைமைகளின் இயலாமைகளும் உழவனுக்குத் தெரியும். உச்சவரம்பு நிலங்களிலிருந்து பகிர்ந்ததளிக்கப்பட்டவை உடனுக்குடன் விற்பனையாவது நடைமுறை. எனவே இந்த முழக்கங்களின் மீது மக்களின் எந்தப் பிரிவினருக்கும் பரிவு ஏற்படாதது மட்டுமல்ல நிலடைமையாளர்கள் அனைவரின் வெறுப்புக்கும் அவை உள்ளாகும்.


பொய்யுடைமை(பினாமி) நில ஒழிப்புச் சட்டத்திற்கு ஏற்பட்ட நிலையைப் பார்ப்போம்.

பொய்யுடைமை வைத்திருப்போர் சொந்தப்பயிர் செய்வதில்லை. பெரும்பாலும் குத்தகைக்கே விட்டுள்ளனர். இந்தப் பொய்யுடைமைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை உச்சவரம்புச் சட்டத்தின் படி பிடுங்கப்பட்டு மறுபங்கீடு செய்யப்படுமா அல்லது கைப்பற்றாக வைத்திருக்கும் குத்தகையாளருக்கு ஒப்படைக்கப்படுமா என்ற குழப்பம் ஏற்படும். (இந்த வகையில் சட்டம் என்ன சொல்கிறதென்று எனக்குத் தெரியவில்லை) அப்படியானால் இன்றைய குத்தகையாளருக்கு அது எதிரானதாக இருக்கும். எனவே அவர்கள் எதிர்ப்பர். அதே நேரத்தில் மறுபங்கீடு செய்யப்படுமானால் யார் யாருக்குக் கிடைக்கும் என்பது முன்கூட்டியே தெரியாதாகையால் அதில் எவருக்கும் கவனம் இருக்காது. மாறாக பொய்யுடைமை ஒழிப்பையும் குத்தகை ஒழிப்பையும் இணைத்து முழக்கம் வைத்தால் குத்தகையாளர்களுக்குத் தங்களுக்கு எவ்வளவு நிலம் கிடைக்கும் என்ற உறுதி ஏற்பட்டு அவர்கள் போரிட முன்வருவர்.

முதலாளியக் குமுகம் என்பது பொதுமைக் குமுகம் உருவாவதற்குத் தேவையான பொருளியல் அடித்தளத்தை உருவாக்குவது என்பது மார்க்சின் கூற்று. மிகப்பெரும்பாலான மக்கள் உடைமைகளை இழந்து விரல்விட்டு எண்ணத்தக்க சிலரிடம் உடைமைகள் அனைத்தும் குவிதல், அவற்றில் மக்கள் கூலியாட்களாக கூட்டம் கூட்டமாகப் பணியாற்றுவதால், தங்களுக்குள் மக்கள் திரளாகுதல். இந்தக் கட்டத்திலிருந்து உடைமையாளர்களாகிய விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரிடமிருந்து உடைமைகளைப் பறித்து எவருக்கும் உடைமையில்லாத அதே நேரத்தில் அனைவருக்கும் உடைமையுள்ள ஒரு நிலையே உருவாக்குவது. அந்த வகையில் குத்தகை உடைமைகள் சொந்த உடைமைகளாவதும் சிறுஉடமைகள் மறைவதும் முற்போக்கானவையேயன்றி பிற்போக்கானவையல்ல.

கோயில்கள் மற்றும் மடங்களின் நிலங்கள் குத்தகை உடைமைகளாகவே உள்ளன. ஆனால் குத்தகை ஒழிப்புச் சட்டங்களிலிருந்து விலக்கு உண்டு. இதனால் இந்தக் குத்தகையாளருக்குப் பாதுகாப்பில்லை. ஆனால் தனியார் நிலங்கள் போன்று உடைமையாளராகிய கோயில்கள் அல்லது மடங்களில் நெருக்கமான கண்காணிப்பு இல்லாததால் நாளடைவில் வாரம் செலுத்துவது குறைந்துவிட்டது. இதனால் இச்சமய அமைப்புகளின் மூலம் பயனடையும் குழுக்கள் இணைந்து ஆலயப் பாதுகாப்பு என்ற பெயரில் குத்தகை நிலங்களைப் பறிமுதல் செய்ய விரும்புகின்றன. பா.ச.க., இரா.சே.ச. (ஆர்.எசு.எசு.) இந்துமுன்னணி போன்ற அமைப்புகள் இந்த முயற்சிக்கு அரசியல் பின்னணி அளிக்கின்றன. குத்தகையாளர்கள் ஆளற்றுவிடப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் கோயில் மற்றும் மடங்களின் நிலங்களுக்கும் குத்தகைச் சட்டத்தை விரிவுபடுத்துமாறு போராடத் தொங்கினால் அதன் விளைவுகள் மிக முற்போக்காக இருக்கும்.

1. இதனால் பயன்பெறும் மக்களில் மிகப்பெரும்பாலோர் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோரே. இதனால் இவ்விரு பிரிவினரிடையிலும் உயிரியக்கமான ஒரு இணைப்பு ஏற்படும். ஆயிரமாயிரம் நல்லிணக்கக் குழுக்களும் அரசியல், குமுகியல் குழுக்களும் ஒன்றிணையுங்கள் ஒன்றிணையுங்கள் என்று குரலெழுப்பியும் இணைவதற்குப் பகரம் பிளவு விரிந்து சாதிச் சண்டைகள் மலிந்து வருகின்றன. சாதி மேட்டிமையுணர்வும் ஒதுக்கீட்டுச் சிக்கலும் பிளவுபடுத்தும் விசைகளைத் தலைமையில் கொண்டு வைத்துள்ளன, குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கு. அதே நேரத்தில் இரு சாராருக்கும் பொதுவான பொருளியல் சிக்கல்கள் வெளிப்படுத்தப்படுமானால் இப்பிளவுபடுத்தும் விசைகள் தூக்கி எறியப்பட்டு ஒற்றுமையை வலியுறுத்தும் கூறுகள் தலைமையைக் கைப்பற்றும்.


2. கோயில் சொத்துகளைப் பிடுங்குவது என்று வரும் போது சமயப் பிற்போக்கு விசைகளுக்கும் பண்ட விளைப்பிலீடுபட்டிருக்கும் பொதுமக்களுக்கும் முரண்பாடுகள் முற்றும். கடவுள், கோயில், இந்துமதம் அதன் வருண அமைப்பு முதலிய கேள்விகள் மீண்டும் பூதவடிவில் பிற்போக்கர்களை அச்சுறுத்தும் வகையில் எளிய மக்களிடமும் வேர் கொள்ளும். இதையே பயன்படுத்தி கருவறை முதல் கோபுர வாசல் வரை வருணமுறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கோயில்களை இடிக்கும் வரைகூட நாம் இதை நடத்திச் செல்லலாம். ஏனென்றால் கோயில் அல்லது மடச்சொத்துகள் தஞ்சை மாவட்டதில் மட்டும் குவிந்து கிடக்கவில்லை. தமிழகம் முழுவதுமே பரந்து கிடக்கின்றன. நன்செய் நிலத்தில் 25 நூற்றுமேனியும் புன்செய் நிலத்தில் கணிசமான அளவும் உள்ளன. எனவே போராட்டம் பரந்த அளவில் பரவும்.


3. உழவர்கள் மீது அரசு கட்டவீழ்த்துவிட்டிருக்கும் நேரடியான (கொள்முதல் விலை முதலியவை) மற்றும் மறைமுகமான (கடன், மானியம் முதலியவை) ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நிலைப்பாடு, நடுவண், மாநில அரசுக்கு எதிரான ஒரு மக்கள் போராட்டத்தை உருவாக்கும். இது அடிப்படையில் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகும். பஞ்சாபில் சமயப் போராகத் திசைதிருப்ப ஆட்சியாளர்கள் முயன்றும் வெற்றி பெறாத ஓர் வலிமையான பொருளியல் உள்ளடக்கத்தைக் கொண்டதாகும்.


4. கோயில் சொத்துகளின் மீது கைவைக்கும் போராட்டம் தொடங்கப்படும் போது பா.ச.க. போன்ற பிற்போக்கு விசைகள் தங்கள் உண்மையான உருவத்தை வெளிப்படுத்தும். சாதி மேட்டிமையால் அக்கும்பலை ஆதரிக்கும் பிற்படுத்தப்பட்டோரிடையில் பிளவுகள் ஏற்பட்டு முற்போக்கு விசைகள் வலிமை பெறும். வெளியிலிருந்து வந்திருக்கும் இந்தப் பார்ப்பனிய பிற்போக்குக் கும்பல்கள் தமிழக மண்ணிலிருந்து வீசியெறியப்படும். உள்ளிருக்கும் விசைகள் தகர்க்கப்படும்.


5. ஒரு மக்கள் போராட்டம் குமுகியல் குறிக்கோள்களைக் கொண்டதாகவோ அல்லது பொருளியல் நோக்கங்களைக் கொண்டதாகவோ இருக்கலாம். பெரும்பாலும் பொருளியல் நலன்களோடு இணைத்து மேற்கொள்ளப்படும் குமுகியல் போர்கள் தாம் வெற்றியை நோக்கிச் செல்லும். அவ்வாறு தான் திராவிட இயக்கத்தில் பல்வேறு சாதிக் குழுக்களின் செயற்பாடும். தங்களுக்கு நிறைவு தரும் அளவுக்குக் குமுகியல் சிக்கல்களில் ஒரு தீர்வு ஏற்பட்டுவிட்டால் அவை இரண்டு தளங்களில் செயற்படுகின்றன. ஒன்று தங்கள் பொருளியல் மேம்பாடு நோக்கியது. மற்றொன்று கீழ்மட்டங்களிலிருந்து தமக்கு வரும் குமுகியல் அறைகூவல்களை எதிர்கொள்வது. இவ்விரு தளங்களின் மேலிருந்து தான் தமிழ்நாட்டுத் சாதிக் குழுக்கள் திராவிட இயக்கத்தில் செயற்பட்டன. வெள்ளாளர், நாயக்கர்கள், பின்னர் நாடார்கள் என்று ஒவ்வொரு சாதியும் தத்தம் சாதிமட்டத்திற்கேற்ப ஒன்றன் பின்னொன்றாகப் பேரவை (காங்கிரசு)க் கட்சியைத் தழுவிக் கொண்டதும் பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக் கட்டிணைத் தாங்கிக் கொண்டதும் இதனால் தான்.

(தொடரும்)