குமரி மாவட்டக் கலவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குமரி மாவட்டக் கலவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.5.07

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (10)

இணைப்பு - 3

நாள்: 15 - 5 - 2000.

அன்பு நண்பர் பொன்னீலன் அவர்களுக்கு வணக்கம்.

குமரி மாவட்டக் கலவரம் பற்றிய என் கட்டுரை குறித்த தங்கள் மடல் கிடைத்தது. நன்றி. தொடர்ந்த அஞ்சலட்டையும் பெற்றேன். தாங்கள் விடுத்துள்ள வினாக்களுக்கு விடையளிக்கின்றேன்.

1,2 சாணாப்பள்ளர்களைப் பற்றி என்னுடன் பணியாற்றிய பள்ளர் வகுப்பைச் சேர்ந்த பொறியாளர் நண்பர் கூறினார். அவர் பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் தங்கி விட்டார். வரலாற்றாசிரியர்களும் பொதுவாகப் பிறரும் நம் பண்டை வரலரற்றின் நிகழ்ச்சிகளின் தொகுப்பை வரலாறு என்று நினைத்து ஒதுக்கிவிடுகின்றனர். ஆனால் அந்த நிகழ்ச்சிகளின் ஊடாக ஏற்படும் மாற்றங்கள் தாம் உண்மையான வரலாறு (வரல்+ஆறு) ஆகும். இந்த வரல் ஆற்றைத் தடம் பிடிப்பது தான் உண்மையாக வரலாற்றுவரைவாகும். இந்த வகையில் சிவனிய எழுச்சியின்போது தாக்குதலுக்குள்ளான சமணர்கள் பள்ளர்களாகவும் பனையேறிகளாகவும் ஒடுக்கப்பட்டிருக்கலாம். இந்த ''அனுமானத்தின்'' பேரில் தான் சாணார்கள் என்ற சொல்லுக்கு சமணம் மூலமாக இருக்கலாம் என்று ஒரு கருத்தை முன் வைத்துள்ளேன். அவர்கள் தெய்வம் பலி கொள்ளாதது ஒரு துணைக் கருத்தாகும். இது சரியா தவறா என்பதை உரிய நுண்ணிய ஆய்வுகளின் மூலம் தான் முடிவு செய்ய முடியும். களப்பணிகள் செய்ய என் இயலாமைகளால் இந்த உய்த்தறிவு (அனுமானம்) வெறும் ஊகம் என்ற மட்டத்தில் நின்று விடுகிறது. வாய்ப்புள்ளவர்கள் கள ஆய்வில் ஈடுபட்டு இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

3,4 தமிழக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் ''மகட்பால் காஞ்சி'' சிறப்பிடம் பெறுகிறது. புதிதாக உயர்ந்து வரும் அரச மரபினர் பழைய மரபினரிடம் பெண் கேட்கும் போது அதனைத் தமக்கு நேர்ந்த இழிவாகக் கருதிப் பழைமையோர் மறுப்பதும் போர் முண்டுப் பழையோர் அழிவதும் அல்லது அடங்குவதும் வரலாறு. நம் நாட்டு மக்களின் இடப்பெயர்ச்சிகளில் இந்தப் பெண் கேட்டல் பெரும் பங்காற்றியுள்ளது. ஐவர் இராசக்கள் கதை இத்தகையது தான். வள்ளியூரைத் தலைநகராகக் கொண்ட குலசேகர பாண்டியனைத் தன் மகளை மணந்து கொள்ளுமாறு வற்புறுத்திய கன்னட மன்னன், அவன் மறுக்கவே அவன் மீது படையெடுத்து அதில் தோல்வியுற்ற குலசேகரன் சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டு செல்லும் போது தற்கொலை செய்து கொள்ள கன்னடன் மகளும் தற்கொலை செய்து கொண்டாள் என்பது கதை. இது போன்ற சூழல்களில் பாண்டிய மரபினர் நெல்லை குமரி மூலைநோக்கி ஒடி வந்திருக்கலாம். ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் அப்பகுதிகள் கேரளர்களின் ஆதிக்கத்திலிருந்ததன. திட்டவட்டமான நிகழ்ச்சி ஒன்று உள்ளது. சாமிதோப்பு வழக்கறிஞர் தினகரன் கூறியது. இது அவர் குடும்பக் கதை. கடம்பூர் பகுதியில் உள்ள பெருங்குடி(பாண்டியர் மரபு என்று கூறினாரா என்பது நினைவில்லை. ஆனால் கயத்தாற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த குறுநில மன்னர்கள் தங்களைப் பஞ்ச பாண்டியர் என்று கூறினர் என்று கே.கே.பிள்ளையின் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் நூல் கூறுகிறது. தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1981வெளியீடு, பக்கம் 398,399 பார்க்க)யினரது வீட்டைச் சூறையாடப் போவதாகக் கட்டப்பொம்மன் ஓலை விடுத்திருந்தனாம். அப்போதைய மரபுப்படி பாளையக்காரர்களுக்குப் பணத்தட்டுப்பாடு வந்ததென்றால் இவ்வாறு ஓலை விடுப்பாராம். செல்வக் குடியினர் தங்கள் செல்வத்தையெல்லாம் கொடுக்க முன்வந்தாலும் அவற்றைப் பெற்றுக்கொண்டு குடும்பத்தினர் அனைவரையும் கொல்வது வழக்கமாம். இது நிலவுடைமைக் குமுகத்தில் உலகமெலாம் நிலவிய ஒரு வழக்கம் என்று தெரிகிறது. பிரெஞ்சின் புகழ்பெற்ற புதின ஆசிரியர் அலெக்சாந்தர் டூமாவின் புதினம் மான்த் கிறித்தோவின் மன்னன் (Count de Mont cristo). இதனை மா.இல. நடராசன் என்பவர் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் என்று நினைவு. நான் சுருக்கப்படாத அந்தப் புதினத்தின் ஆங்கில வடிவத்தையும் படித்திருக்கிறேன். அதில் கிடைத்த செய்தி தான் இது: போப்பாண்டவருக்குப் பணத்தட்டுப்பாடு வந்தால் தன் ஆட்சியின் கீழுள்ள பெருங்குடியினர் குடும்பம் ஒன்றை விருந்துக்கு அழைத்து நஞ்சிட்டுக் கொல்வாராம். பின்னர் சொத்தை எடுத்துக் கொள்வாராம். அழைப்பு வந்தவுடனே அழைப்புப் பெற்றவர்களுக்கு அது மரண ஓலை என்பது தெரிந்து விடும். அவ்வாறு அழைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் மறைத்து வைத்த செல்வங்கள் அக்கதையில் முகாமையான பங்கேற்கின்றன. (அலெக்சாந்தர் டூமா நெப்போலியன் போனப்பார்ட்டு காலத்தில் வாழ்ந்தவர். போனப்பார்ட்டின் ஆதரவாளர். எனவே அவர்களது அரசியல் கண்ணோட்டத்தின் படி போப்புக்கு எதிரானவர். அதனால் இத்தகைய பல உண்மைகள் அவரது புதினங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அன்று ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் வாழ்ந்த இலக்கியப் படைப்பாளிகளின் துணிச்சலில் இன்றைய தமிழ்ப் படைப்பாளிகளிடையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை என்பது துயரூட்டும் உண்மை.) ஆக வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்லது அவன் மரபினனான இன்னொரு கட்டபொம்மனோ தினகரன் அவர்களின் மூதாதைக்கு ஓலை விடுத்தானாம். இவர்கள் உடனே உயிரைக் காத்துக்கொள்ள அங்கிருந்து புறப்பட்டனராம். வழியில் அவர்களுக்கு ஏற்பட்ட கெடுதி ஒன்றைத் தன் உயிரைக் பொருத்து ஒரு செட்டிகுலப் பெண் நீக்கினாளாம். எனவே அவளைக் குல தெய்வமாக வழிபட்டு வந்தனராம். அய்யாவழிக்கு மாறிய பின் அவளது கோயிலையும் கதை ஏட்டையும் அழித்து விட்டனராம். இது அவர் வாய் மொழிக் கூற்று.

தளவாய் அரியநாதர் காலத்தில் அவருடைய எதிரிகளுக்கு வேணாட்டு மன்னன் அடைக்கலம் கொடுத்ததாக கே.கே.பிள்ளை மேலே சுட்டிய நூல் அதே பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.

5. நாயர் பெண்கள் குப்பாயம் அணிந்திருக்கலாம் என்பது ஓர் உய்த்துணர்வு தான். இன்றை இரவிக்கை என்று கேரளத்துக்குச் சென்றது? தமிழகத்துக்குக் கூட அது எப்போது வந்தது? இதனைப் பழைய ஓவியங்களிலிருந்து தான் தீர்மானிக்க முடியும். கேரளத்தைப் பொறுத்தவரை ஓவியர் இரவிவர்மாவின் ஓவியங்களைக் கூட எவ்வளவு நம்ப முடியும் என்று தெரியவில்லை. அவரது தெய்வ ஓவியங்களில் தமிழகப் பெண்களின் ஆடைகள் தாம் காட்டப்பட்டுள்ளன.

குப்பாயம், மெய்ப்பை என்பன ஆண், பெண் இருபாலரின் சட்டையைக் குறிக்கும் பொதுப்பெயர். சட்டை என்றும் சொல் கூட பாம்புச் சட்டையிலிருந்து தான் வந்திருக்கும் என்று தோன்றுகிறது.

கேரள உடை மரபுப்படி உயர் சாதியினர் அணியும் உடைக்கு இணையாகக் கீழ்ச் சாதியினர் அணியக் கூடாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே மேற்சாதியினரான நாயர் பெண்கள் அணிந்த அதே உடையை, தோள்சீலைப் போராட்டத்துக்கு உடனடிக் காரணமான குப்பாயத்தை வடிவமைத்த ஆங்கிலப் பெண் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். முகம்மதியப் பெண்கள் அணியும் குப்பாயத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

6. சாவின் போது பட்டம் கட்டுவது எம் பக்கத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒருமுறை எங்கள் ஊர் பொறியாளர் நடராசன் அரசுத் தடையிருப்பதால் வெளியே தெரியாமல் இது செய்யப்படுவதாகக் கூறினார். அதைத் தான் நான் குறிப்பிட்டுள்ளேன்.

7. அகத்தீசுவரம் வட்டத்தை விட கல்குளம் விளவங்கோடு நாடார்கள் தாம் நாயர்களின் நேரடிக் கொடுமைகளுக்கு ஆளானவர்கள். நானறிந்த வரையில் அங்கு தான் கத்தோலிக்க நாடார்கள் மிகுதி. சவேரியார் தன் மதமாற்ற இயக்கத்தின் போது மதம் மாறினால் அவர்கள் பேர்த்துக்கீசிய மன்னரின் குடிமக்களாகலாம்; அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று வாக்களித்ததாக கே.கே.பிள்ளை தன் நூலில் கூறியுள்ளார். எனவே மீனவர்களுடன் சேர்ந்து சாணார்களும் கத்தோலிக்கத்தைத் தழுவியிருக்கலாம் என்பது என் கருத்து.

8. தோள்ச்சீலைப் போராட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் கிறித்துவ நாடார்கள் மீது இந்து நாடார்கள் தாக்குதல் நடத்திய செய்தியை அளித்தவர் புலவர் கு.பச்சைமால்.

9. காயல்பட்டினத்து முகம்மதியர்கள் தாங்கள் சாணார்களின் கொடுமைகளிலிருந்து தப்ப மதம் மாறிய பிழுக்கைச் சாணார்கள் என்று தன்னிடம் கூறியதாக தி.க. பொதுச்செயலர் கி.வீரமணி ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அது போலவே சாணார்கள் செறிந்து வாழும் பகுதிகளிலுள்ள முகம்மதியர்களும் மாறியிருக்காலாம் என்று கருதுகிறேன். சாந்தான்செட்டிவிளை சுடலைமாடன் கோயிலுக்குத் தெற்கு வீட்டில் வாழும் சவுந்திரபாண்டியன் எனும் வழக்கறிஞர் (அவர் என் துணைவியார் மூலம் எனக்கு உறவு) தனக்கு வந்த பழைய இடலாக்குடி முகம்மதிய குடும்பத்துச் சொத்தாவணம் ஒன்றில் அவர்களது மூதாதையர் நாடார் (சாணார் என்றிருந்ததா என்று நினைவில்லை) என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறினர். அத்துடன் வடக்குச் சூரங்குடி முகம்மதியக் குடியிருப்பை ஒட்டியே இன்றும் பிழுக்கைச் சாணார் குடியிருப்பு ஒன்று உள்ளது. திருமணத்தின் மூலம் அவர்கள் இன்று பிறருடன் கலந்திருக்கலாம். வடக்குச் சூரங்குடியில் சாலையைக் குறுக்கிடும் வாய்க்காலுக்கும் குண்டல் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அவர்கள் உள்ளனர், ஈத்தாமொழிச் சாலையை ஒட்டியே.

10 & 13. அரியநாதர் பதவியிறக்கியது நாடார்களையல்ல, நாடா''ன்''களை. அதுவரை நாடு என்பது ஓர் ஆட்சி அலகாக இருந்தது. அதன் பொறுப்பிவிருந்தவன் நாடான். குமரி மாவட்டத்தில் சூரங்குடி (பிச்சகாலன் கதையில் வரும் நாடான்), அகத்தீசுவரம், ஒரு வேளை ஈத்தாமொழி போன்றவை அத்தகைய நாடுகளாக இருக்கக் கூடும். முயன்றால் பட்டியலிட்டு விடலாம். விருதுநகரில் வாழும் முனைவர் பு.இராசதுரை (இவர் நாடார், முகவரி: 6-251 - இராச வீதி, முதன்மைச் சாலை, அறிஞர் அண்ணா நகர், விருது நகர், 626001) நாடார் உறவின் முறை என்ற நூல் எழுதி உள்ளார். அவரிடம் கேட்கலாம், நூலை நான் படிக்கவில்லை. அவரிடம் படிகள் இல்லை. நூலகங்களில் பார்க்கலாம். பதவி ஒழிக்கபட்டதும் பதவி இழந்தோர் எதிர்த்தனர். சிலர் ஏற்றுக் கொண்டனர். அவ்வாறு தமக்கு ஒத்துழைத்தோரில் சிலருக்கு அரியநாதர் பாளையங்கள் வழங்கியுள்ளார். சிங்கம் பட்டி, ஊத்துமலை, இராமநாதபுரம் போன்ற ''மறவர்'' பாளையங்கள் பழைய ''நாடான்''களுக்கு அளிக்கபட்டனவையாயிருக்கும் என்பது என் கருத்து. மறவர், நாடார் இரு சாதியினரும் பாண்டியன் பெயரைத் தம் பெயரோடு சேர்த்துப் கொள்வது இதனால் தான் போதும். (கல்வெட்டுகளை ஆய்ந்து நாடுகளைப் பட்டியலிட்டு நாட்டு வரைபடத்தில் குறிக்க முயன்றால் நாடுகளையும் நாடான்களையும் பட்டியலிட்டு நாடான்களைத் தடம் பிடிக்கலாம்.)

14. பக்கம் 16, பத்தி 3, வரி முன்றில் தெளிவில்லாத நூல் ''ஆளாகிய''.

என் அணுகல் பற்றி ஒரு சொல். குமுக இயக்கம் பற்றிய மார்க்சிய இயங்கியல் என்ற சரட்டில் எனக்கு கிடைக்கும் செய்திகளைக் கோர்க்கிறேன். செய்திகளின் பின்னணியில் என்ன நடந்திருக்கும் என்ற தெளிவை அந்த மார்க்சியச் சரடு தருகிறது. அதிலிருந்து நான் சில முடிவுகளை எடுக்கிறேன். பின்னர் தேடும்போது அந்த இடைவெளிகள் நான் நினைத்தது போலவே நிரப்பப்படுகின்றன. மிகப் பெரும்பாலான என் முடிவுகள் சரியாக இருப்பதை நான் கண்டுள்ளேன். என் பொருளியல் எல்லைகள் மிகக் குறுகியவை. என்னால் நினைத்த இடங்களுக்குச் செல்லவோ நினைத்த நூல்களை வாங்கவோ நேரம் ஒதுக்க முடியவில்லை. அதே நேரத்தில் எனக்குக் கிடைக்கும் செய்திகளின் அடிப்படையில் நான் பெறும் முடிவுகள், பல வேளைகளில் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் குறைபாடுடையவை என்று எனக்குத் தோன்றினாலும் எனக்குத் தோன்றிய எண்ணங்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வால் அவற்றைப் பதிவு செய்கிறேன். வாய்ப்பும் வசதியும் வலிமையும் உள்ளவர்கள் இக்குறைபாட்டை நிறைவு செய்வார்கள், செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். என் முயற்சிகள் தனி மனிதன் தொடர்பானவையல்ல, குமுகம் தொடர்பானவை. எனவே குமுகத்தின் பங்களிப்பும் அதில் வேண்டுமென்று நான் எதிர்பார்ப்பதில் தவறில்லையென்று நான் கருதுகிறேன்.

பிறர் நுழையாத துறைகளில், நுழைய நினைக்காத, நுழையத் துணியாத வரலாற்றின் சந்து பொந்துகளில், வரலாற்றைச் செய்திகளின் தொகுப்பாகப் பார்க்கும் கட்டத்திலிருந்து நிகழ்முறைகளின் தொடர்ச்சியாகப் பார்க்கும் கட்டத்தினுள் தமிழகப் படிப்பாளிகளின் சிந்தனைகளை நெறிப்படுத்த முயல்கிறேன் என்ற வகையில் நான் மன நிறைவு பெறுகிறேன். தங்களுடன் விரிவான கலந்துரையாடல் வாய்ப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
குமரிமைந்தன்.

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (9)

இணைப்பு - 2


நாள்: 9 - 5 - 2000

அன்புக்குரிய திரு. குமரிமைந்தன் அவர்களுக்கு வணக்கம்.

''குமரி மாவட்டம் ஒரு பகுப்பாய்வு'' (குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு என்றிருந்திருக்க வேண்டும்.) என்னும் தங்கள் அச்சில் வராத நூலை இன்றுதான் படித்தேன். கலவரத்தைப் பற்றி விரிவாக ஆய்வு செய்திருக்கிறீர்கள். நான் கவனிக்க மறந்த, அல்லது அலட்சியப்படுத்திய சில முக்கியமான பகுதிகளை மிக அருமையாக பதிவு செய்து இருக்கிறீர்கள். பல அம்சங்களில் நமக்குள் அழுத்தமான கருத்தொற்றுமை இருக்கிறது. சில இடங்களில் நாம் முரண்படுவது போல் தோன்றுகிறது. இந்த முரண்பாடுகள் குறித்து தங்களிடம் விரிவாகப் பேச வேண்டும்.

1. சாணாப்பள்ளர் எங்கு வாழ்கிறார்கள்? அவர்கள் தொழில் என்ன? அவர்களுக்கும் சாணார்களுக்கும் உறவு உண்டா?

2. சமணர், சாணார், என்ற திரிபு ஏதாவது குறிப்புகள் உள்ளனவா?

3. ஐவர் ராசா கதை நூல் கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் பார்க்கவில்லை பார்க்க வேண்டும்.

4. பஞ்ச பாண்டியர் பதினாலாம் நூற்றாண்டு இங்கு வந்து குடியேறியதற்கு இலக்கிய, வரலாற்று, வாய்மொழி சான்று ஏதும் உள்ளதா?

5. நாயர் பெண்கள் குப்பாயம் அணிந்ததாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். வரலாற்று ஆதாரமா? வாய்மொழி ஆதாரமா!

6. சாவின் போது ''பட்டம் கெட்டும்'' நிகழ்ச்சி எந்த ஒழிவு மறைவும் இல்லாமல் எங்கள் பக்கத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது. பட்டம் கெட்டாமல் பிணம் தூக்க மாட்டார்கள். இன்றும் அப்படிதான்.

7. கல்குளம் விளவங்கோடு நாடார்கள் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்தமைக்கான உடனடிக் காரணங்கள் - உங்களிடம் ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா?

8. தோள்ச்சீலை கலவரம் மூன்றாம் கட்டம் - இந்துநாடார் தோள்ச்சீலை போட்ட போது கிறிஸ்தவ நாடார் தடுத்து நிறுத்திய கலவரம், இது பற்றிய ஆதாரங்கள் ஏதாவது வகையில் உங்களிடம் இருக்கிறதா?

9. புழுக்கைச் சாணார்கள் இஸ்லாமுக்கு மாறியது வரலாற்று குறிப்புகள் ஏதாவது இருக்கிறதா?

10. நாயக்கர்களின் அதிகார விரிவின் போது நாடார்கள் உயிர்க்கு பயந்து இஸ்லாமில் சேர்ந்ததாகச் சொல்ல கேட்டிருக்கிறேன். (நீங்கள் சொல்லவில்லை) உங்களிடம் இது பற்றி ஏதாவது குறிப்புகள் இருக்கிறதா?

11. நாடான், சாணான், வேறுபாடு அற்புதமாக சொல்லிருக்கிறீர்கள்.

12 குமரி மாவட்டத்தில் நாஞ்சில் நாட்டுப் பகுதியில் தமிழர் உணர்வு வளர்ந்த கதையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

13. நாயக்கர் காலத்தில் அரிய நாயக முதலியார் நாடார்களை பதவி இறக்கி அந்த இடங்களில் பாளையக்காரர்களை குடி அமைத்தார். இந்த செய்தி இன்னும் விரிவாக எனக்கு வேண்டும்.

14. பக்கம் 16, பத்தி 3, வரி 3 இவர்கள் சாணார்களோடு சேர்ந்து -------- போது தான் நான் விட்டு வைத்திருக்கும் வார்த்தை என்னவென்று புரியவில்லை.

15. பால பிரஜாபதி அடிகளாரைச் சரியாகச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். முதல் அவர் இரா.சு.சே.சா. ஆதரவு எடுக்க காரணமென்ன? உங்களிடம் விவாதிக்க விரும்புகிறேன்.

16. அத்திக்கடை பள்ளிவாசல் நிகழ்ச்சி நான் அறியாதது.

17. ஈத்தாமொழி நாடார் பற்றி உங்கள் மதிப்பீடு அருமை.

18. ஈத்தாமொழிக்கு பிர்லா குடும்பம் வந்தது அதிர்ச்சி தருகிறது. ஆதாரம் திரட்ட முடியுமா?

19. நாடார் வலிமையை உடைக்க வடக்கு முதலாளிகள் முயற்சி. நான் இதுவரை யோசிக்காத புதிய செய்தி.

இரண்டாம் பகுதி ''குமரி மாவட்டத்தின் இருப்பெரும் மக்கள் பிரிவினர்'' இனிதான் படிக்க வேண்டும். படித்து விட்டு தனியாக எழுதுகிறேன்.

தங்கள் கட்டுரையைப் பற்றி தங்களுடன் ஒரு 2 அல்லது 3 மணி நேரம் பேச வேண்டும்.

அன்புடன்
பொன்னீலன்.

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (8)

இணைப்பு 1

நாள்: 04-04-2000.

அன்பு நண்பர் பொன்னீலன் அவர்களுக்கு வணக்கம்.


இதற்கு முன்பு நாம் சந்தித்த போது குமரி மாவட்டக் கலவரம் குறித்து ஒரு புதினம் எழுத இருப்பதாகத் தாங்கள் தெரிவித்தீர்கள். நான் அது தொடர்பாக ஒரு கட்டுரையெழுதியுள்ளதாக, அதைத் தங்களுக்கு விடுப்பதாகக் கூறினேன். ஏறக்குறைய 9 மாதங்களுக்குப் பின் அதை விடுக்கிறேன். என் வேலைப்பளு குறையும் என்பதற்காகத் தோழர் ஒருவரிடம் முதலில் எழுதிய குறிப்பைப் படியெடுக்க வேண்டினேன். அவரால் இயலவில்லை. எனவே அவரிடமிருந்து வாங்கிப் படியெடுத்து இப்போது விடுக்கிறேன் .பொறுத்தருள்க.


கலவரத்தின்போது நான் மதுரையிலிருந்தேன். நானும் திக்கிலான்விளையைச் சேர்ந்த கவிஞர் திரு.சா.வேலப்பன் என்பவரும் நாடார் மகாசன சங்கத்தில் சென்று செய்திகள் கேட்டோம். அவர்கள் திரு.பச்சைமாலைக் காட்டினார்கள். அப்புறம் தான் நான் அவரைச் சந்தித்தேன். அவர் மூலம் தான் புத்தளம் முருகேசன், ஆசிரியர் பரமசிவன் போன்றவர்களை அறிந்தேன். ஈத்தாமொழி தியாகராசனின் கருத்துப்படி நாடார் ஒற்றுமை இயக்கம் ஒன்று அமைக்க முயன்றோம். அதில் வெற்றிபெறவில்லையாயினும் பல செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அவற்றை வைத்து என் சொந்த அணுகளில் இக்கட்டுரையை முடித்தேன். இக்கட்டுரையை என் நெருங்கிய தோழராகச் செயற்பட்ட வெங்காலூர் குணாவுக்கு விடுத்தேன். அதில் கிறித்துவர்களைப் பற்றிய என் கருத்துகள் அவருக்கு வெறுப்பேற்றியிருக்கும்மென்று நினைக்கிறேன். வேறு சில கருத்து வேறுபாடுகளும் இருந்தன. ஒரு சில ஆண்டுகளில் அவர் தன் தொடர்புகளை அறுத்துக் கொண்டார். இக்கட்டுரை 1983 ஆண்டு இறுதியில் முடிந்தது.

இரண்டாம் கட்டுரை ஏறக்குறய 1½ ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. இக்கட்டுரை எழுதப்பட்ட பின் முத்துக்குட்டியடிகளைப் பற்றிய இரண்டு முகாமையான செய்திகள் என் கவனத்துக்கு வந்தன. ஒன்று தங்கள் அன்னையாரின் கவலை தருவது. தங்கள் முப்பாட்டனாரும் முத்துக்குட்டி அடிகளும் தொடக்கத்தில் இணைந்து செயற்பட்டாலும் பின்னர் பிரிந்து தனி வழிகளில் சென்றதும். வழிபாடு பற்றிய அணுகலில் இருவரும் எதிரெதிர் திசைகளில் சென்றனர். தங்கள் முப்பாட்டனர் பழைய முறையைத் தொடர்ந்தார். அடிகள் புதிய முறையொன்றைப் புகுத்தினார். இதில் அவர்களுக்கிடையில் உள்ள தனிப்பட்ட முரண்பாடுகளின் பங்கென்ன, குமுகம் பற்றிய கண்ணோட்ட முரண்பாட்டின் பங்கென்ன, அவர்கள் சார்ந்திருந்த குமுக உறுப்பினர் நலன்கள் யாவை என்பது குறித்து ஆய்வது பயனளிக்கும். இரண்டாவது செய்தி நண்பர் ஒருவர் மூலமாக அறிந்தது. சிவகாசி - இராசபாளையத்தின் பக்கத்திலுள்ள திருத்தங்கல் எனும் ஊரில் ஒரு அய்யாவழி நிழல் தாங்கல் இருக்கிறதாம். அக்கோயிலின் தலபுராணத்தில் உள்ள செய்தி: முத்துக்குட்டியடிகள் ஒரு பார்ப்பனரிடம் மூன்றாண்டுகள் தங்கிக் கல்வி பயின்றாராம். இந்தத் தலபுராணத்தைப் பெற நண்பர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டதில் பலனில்லை. எனக்கும் நேரமில்லை. எனக்கு ஒய்வூதியம் மிகக குறைவாகவே வருகிறது. குடும்பத்தை நடத்தவும் இதழ் நடத்தவும் இயக்கம் நடத்தவும் தேவைப்படும் பணத்தை நானே ஈட்ட வேண்டியுள்ளது. இதற்காகப் பெரும்பகுதி நேரம் செலவாகிவிடுவதால் என் விருப்பப்படி செயற்பட முடிவதில்லை. தாங்கள் ஒவ்வொரு நூலும் எழுதும் முன் களப்பணிக்காகக் கொஞ்சம் நாள் செலவழிப்பதாக ஒரு முறை கூறியுள்ளீர்கள். இது குறித்தும் களப்பணி செய்தீர்களாயின் நன்று.

இந்தச் செய்தி உண்மையாயின் திருச்செந்தூர்க் கடலில் அடிகள் தவமிருந்ததாகக் கூறப்படும் கூற்றின் பொய்ம்மை வெளிப்படும். தங்களுக்கும் என்னைப் போல் இறும்பூதுகளில்(அற்புதங்களில்) நம்பிக்கை இருக்காது என எண்ணுகிறேன். அடிகள் 19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஐரோப்பியர் கல்வியால் நம் நாட்டில் பரவியிருந்த புதிய அறிவுத்துறைகளைப் பற்றி ஓரளவேனும் அறிந்திருந்தார் என்பது புலப்படும். அவரது இயக்கத்தின் முற்போக்குக் கருத்துகளின் பின்னணி பற்றிய உண்மைகள் வெளிப்படும். எனவே அருள் கூர்ந்து இந்தச் செய்திகளின் உண்மை பற்றித் தெரிந்து எழுதுக.

ஒருவேளை இந்தக் கட்டுரைகளை நான் தங்களுக்குக் காலங்கடந்து விடுக்கிறேனோ என்று ஐயுறுகிறேன். அப்படியாயின் பொறுத்தருள்க. இயன்றால் ஒரு மறுமொழி எழுதுக.

அன்புடன்,
குமரிமைந்தன்.

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (7)

படிப்பினைகள்

இந்தக் கலவரத்தின் போது பெற்ற இரு படிப்பினைகள் மதிப்பு மிக்கவை.

ஒன்று, சிறு எண்ணிக்கை கொண்ட மீனவர்கள் பெரும் வெள்ளமெனப் பாய்ந்த நாடார்களைக் கலக்கியடித்தது. இது வரலாற்றில் அடிக்கடி நிகழும் ஒன்று. நெடுங்காலம் ஒடுக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு எழுந்து வரும் மக்கள் கூட்டம் எப்போதுமே இத்தகைய வீரத்தைக் காட்டிவந்துள்ளது. முன்பு தம்மை ஒடுக்கிய நாயர், குறுப்பு, வெள்ளாளர்களை எதிர்த்த போதும் சிவகாசிக் கலவரத்திலும் இதே நாடார்கள் காட்டிய வீரம், இபபோது புளியங்குடியில் காவல்துறை - பிற்படுத்தப்பட்டோர் கூட்டணியை எதிர்த்து நின்ற தாழ்த்தப்பட்டோரின் சான்றான்மை, இராமநாதபுரம் கலவரத்திலும் மற்றும் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் வழிவழியாகப் படைவீரர்களென்று இறுமாந்திருக்கும் சாதியினரை வெற்றி கொண்டு நிற்கும் தாழ்த்தப்பட்டோர் காட்டும் வீரம் ஆகியவை இதற்குச் சான்றுகளாக நின்று நிலவுகின்றன.[1] ஒரு குமுகத்தை முன்னோக்கிச் செலுத்தும் விசை அதிலுள்ள வீரம் மிக்க இந்த மக்கட்கூட்டம் தான். இக்கூட்டத்தோடு அக்குமுகத்தின் பொருளியல் விளைப்பு விசைகளும் உயிரியக்கமாக ஒன்றிணையும்போது அக்குமுகத்தின் வளர்ச்சியை உலகிலுள்ள எந்த ஆற்றலும் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வளர்ச்சியைத் தமிழகம் காணத்தான் போகிறது.

இரண்டாவதாக, புதூர் என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சி. இவ்வூர் ஈத்தாமொழிக்குக் கிழக்கிலுள்ள அதை அடுத்த பெரிய ஊர். இவ்வூரை ஒட்டி அலைவாய்க் கரையில்[2] பொழிக்கரை, கேசவன் புத்தன்துறை, புத்தன்துறை என்ற மீனவர் ஊர்கள் உள்ளன. இந்த ஊர்களில் அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு அடங்கிய போதிலும் மோதல் என்று எதுவும் நிகழ்ந்து விடாமல் இரு புறத்து மக்களும் மிக விழிப்பாக இருந்தனர். தீவிரப்போக்கு காட்டியோரை அடக்கி வைத்தனர். பள்ளம் இவ்வூர்களை அடுத்துத் தான் உள்ளது. பள்ளத்து மீனவர்களின் தூண்டுதல்களுக்கும் இவ்வூர்களிலுள்ள மீனவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இதற்குக் காரணம் உண்டு. புதூரில் தென்னந்தும்பு(தென்னைநார்) அடிக்கும் ஆலைகள் உள்ளன. அப்பகுதியிள்ள கயிறு முறுக்கும்(திரிக்கும்) சிறு தொழிலுக்கு தும்பு அடித்துக் கொடுப்பவை இவ்வாலைகள் தாம். எனவே ஆலைகளில் விலை மதிப்புள்ள தும்பு குவிந்து கிடக்கும். அத்துடன் மேலே குறிப்பிட்ட ஊர்களிலுள்ள கடற்கரையர் (மீனவர்) ஓரளவுக்குச் செல்வ நிலையிலுள்ளவர்கள். அவர்களுக்குத் தென்னந்தோப்புகள் உண்டு. ஆண்மக்கள் பலர் வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள். இந்தக் காரணங்களால் கலவரம் விளைந்தால் தமக்கு வரும் இழப்புகளை எண்ணி இரு தரப்பாரும் தமக்குள் கூடிப் பேசி உறுதியாக அமைதி காத்து இன்றளவும் நிற்கின்றனர். 'இழப்பதற்கு விலங்குகளைத் தவிர எதுவுமில்லாத' (இழப்பதற்குச் சாதியைத் தவிர எதுவுமில்லாத என்றும் சேர்த்துக் கொள்ள வேண்டும்) ஏழைகள் நிரம்பிய ஊர்களில் தான் இம்மக்கள் தீய விசைகளின் கைப்பாவைகளாகிக் கலவரத்தில் இறங்கினர். முற்போக்கு ஆற்றல்களின் கைகளில் புதிய குமுகத்தை உருவாக்கும் கருவியாக வேண்டிய மக்கள் உண்மையாக முற்போக்கு ஆற்றல்கள் உருவாகாத காரணத்தால் நாட்டைப் பின்னோக்கி நகர்த்தும் கயவர்களின் கருவியாகச் செயற்படும் கொடுமை இக்கலவரத்தில் தெளிவாகத் தெரிந்தது.

கலவரத்தின் விளைவாக யாருக்கு என்ன நேர்ந்ததோ, ஒரேயொரு நிலையான விளைவு மட்டும் தெரிகிறது. கலவரத்துக்கு முன்பு ஏழை மீனவப் பெண்கள், பெரும்பாலும் அகவை முதிர்ந்தவர்கள் தலையில் கடகங்களில்[3] மீன் சுமந்து குமரி மாவட்டத்துக் கடலை அடுத்த ஊர்ப்புறங்களில் விற்பது வழக்கம். அவர்களுக்குச் சோற்றுக்கு அது தான் ஒரே வழி. இது அவர்கள் கைகளிலிருந்து இன்று பிடுங்கப்பட்டு பெரும்பாலும் முகமதியர்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டார்கள்[4] அது மட்டுமல்ல வெளியேயுள்ள பெரும் வாணிகர்கள் சுமையுந்துகளில் மீனை அள்ளிச் சென்றுவிடுகின்றனர். மீனை ஒரு முகாமையான உணவாக உண்டு வந்த நாடார்களின் கையிலிருந்தும் அது தட்டிப் பறிக்கப்பட்டு விட்டது. ஆடுகளிள் சண்டையில் குருதி குடித்த ஓநாய் போல் இடைத்தரகர்கள் ஆதாயம் பெற்றுவிட்டனர்.[5]

அனைத்தையும் விடக் குறிதகவுள்ள ஒன்றை, ஒரு விளைவை இக்கலவரத்தைத் திட்டமிட்டவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்துமாக் கடலில் ஆதிக்கம் செலுத்த உலக வல்லரசுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்திய அரசு அதை முழுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில் இந்திய அரசுக்கும் கடற்கரையில் வாழும் மக்களுக்கும் பகைமையை மூட்டி விட்டால் அவர்கள் தமக்கு ஐந்தாம் படையாக உதவுவார்கள் என்று இவ்வல்லரசுகள் கணிக்கின்றன. எனவே ஏதாவதொரு அடிப்படையில் உள்நாட்டு மக்களையும் கடற்கரை மீனவர்களையும் மோதவிட்டு ''கிறித்துவர்களான'' மீனவர் துயர்களுக்கு ''இந்து அரசான'' இந்திய அரசு தான் காரணம் என்று கூறிவிட்டால் தம் நோக்கம் எளிதில் நிறைவேறும். போர்த்துக்கீசியர் நுழைந்த காலத்தில் இயல்பாகவே நிலவியது போன்ற சூழலைத் திட்டமிட்டு உருவாக்க இவர்கள் விரும்புகிறார்கள். இந்நோக்கத்தை நிறைவேற்ற கிறித்துவ இயக்கங்கள் மட்டுமல்ல, ''நாட்டுப் பற்று நிரம்பி வழியும்'' இரா.சே.ச.வும் உடந்தை என்பதை அண்மை நிகழ்ச்சிகள் ஐயத்துக்கிடமின்றி மெய்ப்பித்து விட்டன. எனவே மக்களைப் பிளவு படுத்தும் இந்த மத இயக்கங்களின் மயக்கு வலையில் வீழாமல் மக்கள் எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.



இனிவரும் காலத்தில் என்ன செய்யலாம்?

இனிமேலும் இத்தகைய பிற்போக்கு விசைகளின் முயற்சிகளை முறியடிக்க அல்லது தவிர்க்க குமரி மாவட்ட நாடார்களும் மீனவர்களும் என்ன செய்ய வேண்டுமென்பதைப் பார்ப்போம்.

நாடார்களில் இப்போது நடுப்பருவத்தைத் தாண்டிக் கொண்டிருப்போருக்கு முந்திய தலைமுறையினர் வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. இன்றைய தலைமுறையனரின் வாழ்க்கை முறை அதற்குத் தலைகீழானது. முன் தலைமுறையினர் கடைப்பிடித்த சிக்கன வாழ்க்கை சிறப்பு மிக்கது. வளம் படைத்தோர் கூட அன்றைய வட்டத் தலைநகரான நாகர்கோயிலுக்குச் செல்வதாயின் காலையில் வீட்டில் உண்ட உணவுடன் வில் வண்டியில் சென்று வீடு திரும்புவது வரை வெளியில் உணவுண்ணார். முன்பு சிக்கனத்துக்குப் பேர் போன குமரி மாவட்டத்தினரே கேலி பேசுமளவுக்கு இவர்களது சிக்கனம் இருந்தது. ஆனால் இன்று இருசக்கர உந்துகளின் மீது நாடார் இளைஞர்கள் மாவட்டத்தையே கலக்குகிறார்கள், பெரும்பாலும் வீணாக. நடைபெற்ற கலவரங்களில் இந்த வெற்று இளைஞர்களின் வீண் வம்புகள் மீனவர்களுடன் ஏற்பட்ட கசப்புக்குப் பெருமளவு காரணமாக இருந்தன.

அத்துடன் இவ்வேலையில்லா இளைஞர்கள் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமுள்ள மத இயக்கங்களுக்கு, தமிழர்களைப் பிளவு படுத்தும் ஆப்புகளாகச் செயற்பட்டு கொண்டிருக்கும் இந்த நச்சியக்கங்களுக்குக் கூலிக்கு உழைக்கப் போய்விடுகிறார்கள். இதனை முதலில் நிறுத்தியாக வேண்டும்.

இந்தக் கலவரத்தில் தம் நலன்களைக் கொண்டவர்கள் மூன்று வகையினரே. உடைமைகளைச் சார்ந்திராமல் சம்பளம், கோயிற்பணம், வைப்பகத்திலுள்ள பணம் ஆகியவற்றை நம்பியிருப்போராகிய ஒட்டுண்ணிகளைப் பெரும்பாலோராகக் கொண்ட சீர்திருத்த சபை கிறித்துவர்கள், வாணிகத்தை நம்பியிருப்போரான முகமதியர்கள், தலைமை வேட்கை கொண்டு இறந்த காலத்தை எண்ணிக் கனவு கண்டு மேல் சாதியாரோடு ஒட்டி வாழ எண்ணும் தாணுலிங்கர்கள், நந்தனர்களாக மாறிவிட்ட மதுரானந்தசீகள் தம் நாட்டு நலன்களை அயலவர்களுக்கு விற்றுவிட்ட முருகேசன்கள், எம்.ஆர்.காந்திகள், வெளிநாட்டு ''நன்கொடை''களுக்காக மக்களிடையில் மதவெறியை ஊட்டும் கிறித்துவ மத இயக்கத் தொழில் நடத்துவோர், கிறித்துவ வழக்கறிஞர் சங்கம் போன்றவற்றை அமைத்து மக்களைப் பிளவுபடுத்துவோர் ஆகியோர். இவர்களன்றி நாடார்களில் பிறருக்கு சாதிப்பூசல் ஏற்பட்டால் இழப்பு தான். எப்படி?

குமரி மாவட்ட நாடார்களில் மிகப் பெரும்பான்மையினர் நிலஞ்சார்ந்த வாழக்கையினர். கை நிறைய மாதச் சம்பளம் வாங்குவோருக்கும் கூட நிலத்தின் மீதுள்ள பற்று சிறிதும் குறையவில்லை. எனவே தான் கிடைக்கும் பணத்தைத் தொழில்களிலோ வங்கிகளிலோ போடாமல் சொத்துகளில் முதலிட முனைந்து நிலங்களின் விலையை மலையளவுக்கு இங்கு உயர்த்தியுள்ளார்கள். இது இங்குள்ள பணம் படைத்த பிற பிரிவினர்க்கும் பொருந்துவதாயினும் வருமானத்தில் பெரும் பகுதியை நிலத்தில் முதலிடுவோரில் நாடார்களே மிகுதி. கலவரங்கள் மூலம் இச்சொத்துகளுக்கு குறிப்பாகத் தென்னந்தோப்புகளுக்கும் வீடுகளுக்கும் இழப்பு வந்தால் என்னவாகும்?[6]

அதேபோல் பழஞ்சபைக் கிறித்துவர்களிலும் பெரும்பாலோர் உழைப்பாளிகள். ஆனால் அவர்களுக்கும் சொந்த வீடுகளும் கொஞ்சமாவது நிலமும் இருக்கும்; அதிகமாக நிலமுடையோரும் உண்டு. மொத்தத்தில் இவ்விரு பிரிவினரும் சீர்திருத்தசபைக் கிறித்துவர்களிலிருந்து பொருளியல் அடித்தளத்தைப் பொறுத்த வரையில் மாறுபட்டவர்கள். இந்த ஒற்றுமை இவர்களைப் பிரிக்க எண்ணிய விசைகளைத் தோல்வியுறச் செய்தமைக்கு முகாமையான காரணமாகும். ஒரு மதப் பூசல் இவர்கள் இருவரின் பொருளியல் நிலைப்பாட்டையும் அழித்துவிடும். ஆனால் இந்த உண்மைகளை உணராமல் இவர்கள், குறிப்பாக இந்து நாடார்களில் செல்வம் படைத்தோர் பழைய முதலூடி மனப்பான்மையின் தாக்கத்தில் மதவெறியை மனதில் வளர்த்து வைத்துள்ளனர்; தம்மை அழிக்க எண்ணும் கருவிகளுக்குத் தாமே விசையாகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் செய்ய வேண்டியது இதுதான். குமரி மாவட்டத்தில் ஏராளமான மூலப்பொருட்கள் உள்ளன. தேங்காய், தேங்காய் நார், கயிறு, இரப்பர், அரும் மண்கள், மீன், கம்புக் கிழங்கு, முந்திரிப் பருப்பு முதலியன. இவற்றைக் கொண்டு எண்ணெய் ஆலை, கயிற்று விரிப்புகள், தேங்காய்ப பால், தேங்காய்ப் பொடி, இரப்பர் பொருட்கள், மெத்தைககள், இரப்பர் மரக் கொட்டையிலிருந்து எண்ணெய் எடுத்தல், அரும் மண்களைப் பிரித்தெடுத்தல், அதிலிருந்து இறுதிப் பொருட்களைச் செய்தல், மீன் பதப்படுத்தல், விசைப்படகுகளில் மீன் பிடித்தல், முந்திரிப் பருப்பு பிரித்தெடுத்தல், முந்திரிக்கொட்டைத் தோட்டிலிருந்து எண்ணெய் எடுத்தல், முந்திரிப் பழச்சாறெடுத்தல், கிழங்கிலிருந்து உணவுப் பொருட்கள் ஆக்கல் என்று எத்தனையோ தொழில்களில் தம் பணத்தை முதலிடலாம். மீனவர்களும் இம்முயற்சிகளில் அவர்களோடு ஒத்துழைக்கலாம். நாடார் இளைஞர்களுக்கும் மீனவ இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பளிக்கலாம். கல்வி, அரசுப் பணிகளில் மட்டுமல்ல, தொழில்துறைகளிலும் குமரி தலைசிறந்த மாவட்டம் என்று நிறுவிக் காட்டலாம். எதிர்காலத் தமிழகத்தைத் தெற்கிலிருந்து தொடங்கி வைக்கலாம்.

இவ்வாறு, எங்களைப் பிளவுபடுத்த முடியாது, நாங்கள் வளர்வதைத் தடுக்க முடியாது, உங்கள் முயற்சி எங்களை ஊக்குமே ஒழிய தளர்வடையச் செய்யாது என்று தம் மேல் அழுக்காறு கொண்டுள்ள மேல் சாதியினருக்கு உணர்த்திவிட்டால் அவர்கள் தம் போக்கைக் கட்டாயம் மாற்றிக் கொள்வார்கள், தமிழகம் என்ற பெரும் நீரோட்டத்தில் அனைவரும் ஒன்றாகக் கலக்கலாம். இது ஒன்றும் வரலாற்றில் புதிய நிகழ்ச்சியல்ல.

குமரி மாவட்டத்துக்கு ஒரு சாபக்கேடுண்டு. அங்கு பிறந்து புகழ் பெற்றோரில் பெரும்பாலோர் உள்ளூரில் வாழந்து பெயர் பெற்றவரில்லை. தேசிக வினாயகர், நேசமணி போன்றோர் உள்ளூர்ச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முயன்றவர்கள். ஆனால் அவர்கள் எடுத்துக் கொண்டவை ஒருவகையில் சாதிச் சிக்கல்களே. கலைவாணர், சீவா, அப்பாத்துரையார், கே.கே.பிள்ளை, தி.க. சண்முகம் போன்றோர் இம்மாவட்டத்துக்கு வெளியே சென்றதால் தான் வளர்ச்சியடைந்தனர் என்றால் தவறாகாது, ஏனென்றால் சாதியுணர்வை மீறிய வலுவான எந்த உணர்வும் மேலோங்க முடியாத ஒரு சூழ்நிலை இங்கு நிலவுகிறது. பொன்னீலனும் அவரைத் தொடர்ந்த எழுத்தாளளர்களில் பெரும்பாலோரும் கூட இம்மாவட்டத்தில் வாழ்ந்தாலும் சிறிது காலமாயினும் வெளி மாவட்டங்களில் வாழ்ந்துள்ளனர்.

அயல் விசைகள் இங்கு புகுந்து இதுவரை நிலவிவந்துள்ள மயக்கத்திலிருந்து இம்மாவட்ட மக்களை உலுப்பிவிட்டடிருக்கிறதென்று கூறலாம். அந்த இவகையில் இத்தீய விசைகளின் வினையில் ஒரு நன்மை இருக்கிறது. இதைப் பயன்படுத்தி அம்மாவட்ட மக்களை முன்னோக்கி நடத்திச் செல்ல வேண்டிய கடமை உண்மையான முற்போக்கு விசைகளுக்கு உண்டு.

குமரி மாவட்டத்தின் ஒர் இரு நூறாண்டுக் கால வரலாறு தமிழ்நாட்டு வரலரற்றின் ஒப்புருப் போல் விளங்குகிறது. குறிப்பாகச் சீர்திருத்த சபைக் கிறித்துவர்கள் நடத்தை சிறப்பானது. குமுக ஒடுக்குமுறையால் இவர்கள் மதம் மாறிய காலத்தில் தமக்குரிய குமுகத்தரத்தை மேல் சாதியினர் வழங்காத போது மதம் எனும் கட்டை அறுத்து நாடார்களை ஒன்றிணைத்து ஒரு பெரும் போராட்டத்ததை இவர்கள் நடத்தினர். பின்னர் தம் சாதியினர் என்று இன்றும் அவர்கள் உரிமை கொண்டாடும் இந்து நாடார்கள் தமக்கு இணையாக (போட்டியாக?) வளர்ந்து வந்தவுடன் சாதி என்ற கட்டை ஊடறுத்து மதம் என்ற அடிப்படையில் பிற சாதியினரைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டனர். சாதி வரம்புகளை மங்க வைப்பது முற்போக்கில்லையா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இவர்கள் ஒரு போதும் மீனவர்களையோ அல்லது தாழ்த்தப்பட்டோரையோ தமக்கு இணையாக மனம் விரும்பி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி.[7] மொத்தத்தில விளைவு இவ்வாறிருக்கும். சாதியாகப் பிளவுண்டிருக்கும் மக்களுக்குள்ளேயே ஒரு மத அணிவகுப்பு மத அடிப்படையில் ஒன்று சேர முடியாத பிளவுகளை (இந்து நாடார், கத்தோலிக்க நாடார், சீர்திருத்த சபை நாடார் என்று) உண்டாக்கும். இன்று அது இருந்தாலும் சாதியின் முன் வலுவிழந்தே நிற்கிறது. இவர்களது முயற்சி அதன் வலுவைக கூட்டும்

தமிழகத்தில் இதற்கிணயாக பார்ப்பனரல்லா உயர்சாதியினரின் நடத்தையைக் கூறலாம். இவர்கள் பார்ப்பனர்களை எதிர்த்து பிற்படுத்தப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் ஒன்றிணைத்தனர். இவர்களின் நலன்களை எதிரொளிப்பதாக திராவிடர் கழம் வளர்ந்தது. சாதியையும் மதத்தையும் எதிர்த்து அது வன்மையாகப் போராடியது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வியிலும் அரசுப் பணியிலும் சலுகை பெற உதவியது. ஆனால் இந்தச் சலுகைகளைப் பெற்ற அம்மக்களின் ஒரு சிறு பகுதியினர் வளர்ந்து வந்ததைக் கண்டதும் அம்மேல்சாதியினர் தம் முன்னாள் பகைவர்களான பார்ப்பனர்களுடன் சேர்ந்து பிற்படுத்தப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் பிளவு படுத்தும் பணியில் இரா.சே.ச. வுக்கு முன்னணிப்படையாக இயங்குகின்றனர். இத்தகைய போக்கைக் கொண்டோரைப் புத்தன் பார்ப்பனர் என்றும் இப்போக்கை புத்தன் பார்ப்பனியம் என்றும் கூறுகின்றனர். உண்மையில் இது புதிய இயற்காட்சியல்ல; தமிழ்க் குமுகத்தின் நெடுநாள் பண்பு. இத்தகையோர் எல்லாச் சாதிகளிலும் இருந்தாலும் ஒரு சாதியின் இடம் குமுகப்படியில் எவ்வளவு உயரத்திலிருக்கிறதோ அதற்கிசைய இது விகிதத்தில் கூடும். இதைச் சீர்த்திருத்தச் சபைக் கிறித்துவர்களிடையில் நாம் குமரி மாவட்டத்தில் வெள்ளிடை மலைபோல் காண்கிறோம்.

தமிழ்க் குமுகத்தின் வளர்ச்சிக் கட்டங்களில் தொழிலடிப்படையில் சாதிகள் ஏற்பட்டு பொருளியல் ஏற்றத் தாழ்வுகளால் சாதி உயர்வு தாழ்வுகளும் ஏற்பட்டன. இவ்வாறு மக்கள் பிளவுண்டு தம்முள் பகைகொண்டு நின்ற நிலையில் வெளியிலிருந்து வந்தோரை உள் நாட்டிலுள்ள தம் போட்டியாளர்களிடமிருந்து தம்மைக் காக்கும் மீட்பார்கள் என்று நினைத்த தமிழ் மக்கள் அவர்கள் வீசிய மதங்கள் எனும் நச்சு வலைகளில் சிக்கி வந்துள்ளனர். ஒரு வலையில் சிக்கியோர் அதிலிருந்து மீள இன்னொரு வலையை நாடினரேயன்றித் தம் சொந்த முயற்சிகளில் ஈடுபடவில்லை. இவ்வாறு புதிய புதிய வலைகளில் சிக்கி எண்ணற்ற புதுப்புதுச் சாதிகளான இம்மக்கள் பிளவுண்டனர். இன்று இறுதியாக இந்து, கிறித்துவம், முகமம்தியம் எனும் நச்சு வலைகளில் சிக்கி இவர்கள் உழல்கின்றனர். இவ்வாறு நச்சு வலைகளில் சிக்கிய மக்களின் குருதியை இவ்வலைகளை வீசுவோர் தடங்கல் ஏதுமின்றிச் சுவைத்து உறிஞ்சிக் குடிக்கின்றனர்.

இவ்வாறு வெளியாருக்கு வரவேற்புக் கூறுவதில் உண்மையில் ஒட்டுண்ணி வகுப்பினர், அதாவது உழைப்பிலோ உழைப்பை உருவாக்குவதிலோ எவ்விதப் பங்கும் எடுத்துக் கொள்ளாதவரே முன்னணியில் இருக்கின்றனர். நேற்று வரை பார்ப்பனர்களும் பிற மேல் சாதியினரும் இதை முன்னின்று நடத்தினர் என்றால் இன்று சலுகைகள் மூலம் ஒட்டுண்ணித்தனமான அரசுப் பணிகளில் அமர்ந்துவிட்ட எல்லாச் சாதித் தலைவர்களும் தத்தம் குழு நலன்களுக்காகத் தத்தம் சாதியினரைத் தம் பின்னால் அணிவகுக்க வைத்து அவர்களுக்குள் மோதல்களை உருவாக்கக் கடுமையாக முயல்கிறார்கள். இந்த ஒட்டுண்ணிகளிடமிருந்து குமுக இயக்கம் என்று விடுபட்டு உழைப்போர், உழைப்பை உருவாக்குவோரிடம் போய்ச் சேருகிறதோ அன்று தான் தமிழகம் முன்னோக்கி நகரும்.

பச்சையான சாதிப் பூசல் என்ற மாயையில் சிக்கியிருந்த குமரி மாவட்டத்ததை மதச் சாயம் பூசப்பட்ட சாதிப் பூசல் என்ற குளவி கொட்டிவிட்டது. குமரி மாவட்டம் நெளிவது தமிழகத்தின் கண்களையும் கருத்தையும் குமரி மாவட்டத்தின் மீது மட்டுமல்ல, தன் மீதே திருப்பியிருக்கிறது. இதன் விளைவுகளைக் காலம் காட்டும்.

அடிக்குறிப்புகள்:

[1]புளியங்குடி கலவரத்தில் பிற்படுத்தப்படடோருடன் காவல்துறையினரும் சேர்ந்து தாழ்த்தப்பட்டோரைத் தாக்கினர். ஆனால் தாழ்த்தப்படடோர் தம் பக்கத்தில் நேர்ந்த உயிரிழப்புகளுக்குக் குறையாத அளவுக்கு எதிரிகளிடையிலும் உயிரிழப்பை ஏற்படுத்தினர் என்றும் தாக்கியோரின் வீரம் பற்றி நிலவி வரும் கற்பனைப் படிமம் கலைந்து விடக் கூடாது எனத் திட்டமிட்டும் தாழ்த்தப்போர் மீது பொது மக்களுக்குப் பரிவு ஏற்படவேண்டும். என்ற நோக்கத்திலும் (மதிப்பு ஏற்படவேண்டும் என்று நினைத்திருந்தால் இதைச்செய்திருக்க மாட்டார்கள்) அனைவரும் இவ்வுண்மையை இருட்டடிப்புச் செய்தனர் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதி நண்பர் ஒருவர் கூறினார்.

[2]அலைவாய்-கடலைக் குறிக்கும் அலைவாய் எனும் கழக (சங்க) காலச்சொல்போன்று இன்னும் பல எண்ணற்றசொற்கள் குமரி மாவட்டத்தில் இன்றும் வழக்கிலிருக்கின்றன.
[3]கடகம் அளவாக வாரப் படாத பனை ஓலைளைக் கொண்டு முடையப்படும்

[4]இது கலவரம் நடைபெற்ற உடனடி நிலைமை. இன்று நிலைமை மாறிவிட்டது. கடகத்துக்குப் பகரம் அலுமினியக் கூடை புழக்கத்துக்கு வந்துள்ளது. தலையில் சும்ப்பதற்குப் பகரம் தானிகளிலும் சிறு சரக்கிகளிலும் மீனைக் கடைக்குக் கொண்டு வருகின்றனர்.

[5]நாடார்கள் இப்போது பார்ப்பனியத்துக்குள் நுழையத்தொடங்கிவிட்டதால் புலால் உண்ணா நாட்களின் எண்ணிக்கை மிகுந்து வருகிறது. இதனால் மீன் ஏற்றுமதியாளர்களுக்கு வசதி தானே!

[6]இந்தாண்டு (1983) வறட்சி அதை ஏறக்குறையச் செய்துவிட்டது.

[7]இன்று தமிழகத்தில் உள்ள கிறித்துவத் தேவாலயங்களிலும் அவை நடத்தும் கல்வி உட்பட்ட பிற நிறுவனங்களிலும் நடைபெறும் சாதிப் பூசல்கள் உலகறிந்தவை. இந்து நாடார்களும் மேம்பட்டவர்களில்லை. ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைப் போல் இந்து நாடார்களும் கோயில்களுக்குள் நழையத் தடை இருந்தது. அனைவருக்கும் கோயில் நுழைவு ஆணை வந்த போது தாழ்த்தப்பட்ட மக்களோடு தாமும் ஒரே நாளில் நுழைவது இழுக்கென்று கருதி நெல்லை மாவட்டத்தில் அவர்களுக்கு முன்று நாட்கள் முன்பே இவர்கள் கோயில்களில் நுழைந்தார்களாம். நாடார்களிடையில் தங்களுக்கென்று ஓர் உள்ளடுக்கு உள்ளது. சீர்திருத்த சபையினர் முதலடுக்கு, பழஞ்சபைக் கிறித்துவர்கள் இரண்டாம் அடுக்கு, இந்துக்கள் முன்றாம் அடுக்கு தாழ்த்தப்பட்டோரிடையில் பள்ளர், பறையர், சக்கிலியர் என்ற முப்பிரிவினடையிலும் கூட நாடார்களிடையிலுள்ளதைப் போன்ற உள்ளடுக்குகள் உள்ளன. காப்பதற்குச் சாதிமானம் தவிர வேறு எதுவுமில்லாத(ஏழை) மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது தான் இதற்குக் காரணம் போலும். பருப்பொருள் முந்திச் செல்கிறது, தன்னுணர்வு தொடர்ந்து செல்கிறது என்ற அடிப்படையில் மக்களிடையில் பொருளியல் உறவுகளில் மாற்றம் ஏற்பட்டாலும் குமுகத் தன்னுணர்வில் மாற்றம் ஏற்படச் சிறிது காலம் நாம் காத்திருக்க வேண்டும்.

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (6)

கலவரத்தைத் தூண்டியோரின் உள்நோக்கங்கள்

இனி, கலவரத்தின் விளைவுகளையும் அதை நிகழ்த்தியவர்களின் விளக்கங்களையும் அத்தீய நோக்கங்களை முறியடிக்க வேண்டிய இன்றியமையாமையையும் அப்படி முறியடிக்காவிடின் விளையவிருக்கும் கேடுகளையும் அதை முறியடிக்கும் முறைகளையும் இக்கலவரம் நடந்தவிடத்து, தமிழகத்து, இந்திய, அனைத்துலகக் குறிதகவுகளையும் பற்றி ஒரு சிறு ஆய்வை மேற்கொள்வோம்.

இந்தியாவில் முகாமையான இரு போங்குகள் வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே நிலவி வந்திருக்கின்றன. ஒன்று பார்ப்பனர் சார்பானது, சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை, பெண்ணடிமை ஆகியவற்றைக் கற்பிப்பது. மற்றொன்று அதை எதிர்ப்பது. இவ்விரு போங்குகளுக்கும் நிலவிய பகைமையே இந்தியாவினுள்ளும் தமிழகத்தினுள்ளும் நடைபெற்ற எண்ணற்ற படையெடுப்புகளுக்கு ஊக்கமூட்டின என்றால் மிகையாகாது. சென்ற நூற்றாண்டில் வட இந்தியாவில் ஆரிய சமாசம் என்ற பெயரில் ஒன்றும் மற்றொன்று பிரம்ம சமாசம் என்ற பெயரிலும் முறையே தம்மை அடையாளம் காட்டிக் கொண்டன. இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் வடக்கில் செறிவாக இருந்த முகம்மதியர்களுக்கெதிராகப் பார்ப்பனத் தலைவர்களும் இந்தியாவில் புதிதாக உருவாகியிருந்த குசராத்தி - மார்வாரி முதலாளிகளும் அணி திரண்டனர். இந்துத்தானி என்ற மொழியிலிருந்து இந்தி என்ற மொழியை இறுத்தெடுத்து அதற்குச் சமற்கிருத(தேவநாகரி) வரிவடிவம் கொடுத்தனர்.[1] இந்து, இந்தி, இந்தியா என்ற முழக்கத்தை முன் வைத்தனர்(காந்தியிடம் இந்தப் போங்கு மிகுந்திருந்தது.) இந்த இயக்கம் தான் பின்னர் இரா.சே.ச. என்ற பெயரைப் பெற்றது. சாதிவெறி பிடித்த பார்ப்பனர் தம் குமுக மேலாதிக்கத்தைக் காக்க இதைத் தலைமையேற்று நடத்தினர். அதனால் தான் அது ஒரு மத இயக்கம் என்ற மாயையை உருவாக்கியது. குசாரத்தி - மார்வாரிக் கூட்டம் இந்தியா முழுவதையும் சுரண்டுவதை நிலைநிறுத்தவும் வளர்ந்து வரும் பொதுமைப் போக்குக்கு ஓர் எதிரணியாகவும் இதற்கு உரமிட்டு வளர்த்து வருகிறது. இதற்கு எதிராகத் தமிழகத்தில் தோன்றிய திராவிடர் இயக்கம் இருந்தது. இரா.சே.ச.வுக்கு நடுக்கம் தந்த ஓர் இயக்கம் என்று கூற வேண்டுமானால் அது பெரியாரின் திராவிடர் இயக்கமே. (இன்று நிலமை மாறிவிட்டதென்று துணிந்து கூற முடியும்.) பார்ப்பனர்களை எதிர்த்த உயர்சாதி இந்துக்களும் அவர்களுக்குப் பின்னால் நின்ற தமிழகத்து வாணிகர்களும் முதலாளிகளும் இவ்வியக்கத்தை ஆதரித்தனர்.

இவ்வாறு தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ் மக்களின் நலன்களைப் பேணுவதற்காகத் தோன்றிய திராவிடர் இயக்கம் எனும் கோட்டையை உடைத்துக் கொண்டு இரா.சே.ச.வோ இந்தியோ தமிழகத்தில் நுழைய முடியவில்லை. ஆனால் நாளடைவில் நிலமை மாறியது.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினை (தமிழக விடுதலை) கேட்டது. அதன் பிரிவினைக் கோரிக்கைக்கு அஞ்சிய நடுவணரசு பல புதிய தொழில்களைத் தமிழ்நாட்டில் நிறுவியது. ஆனால் அவற்றைப் பொதுத்துறையில் நிறுவியது. அதுமட்டுமல்ல, அதுவரை தமிழ்நாட்டிலுள்ள வாணிகத் தொழில்துறைக் சாதியராயிருந்த நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் மற்றும் நாயுடுகளிடம் இருந்த இந்திய உயிர்க் காப்பீட்டுக் கழகம், இந்திய வங்கி, இந்திய ஓவர்சிசு வங்கி, தென்னிந்திய வங்கி ஆகியவற்றை நாட்டுடைமை என்ற பெயரில் பிடுங்கிக் கொண்டது. இத்தோடு இச்சாதியினரின் பின்னணி திராவிட இயக்கங்களுக்கு இல்லாது போயிற்று. குசராத்தி மார்வாரி மூலதன ஊடுருவலுக்குத் தடை ஏதுமில்லாது போயிற்று. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தி.மு.க. தலைமை கோழைத்தனமாகப் பதுங்கிக் கொண்ட பின் இந்தி எதிர்ப்பில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாது போயிற்று. அத்துடன் இன்னொன்றும் நிகழ்ந்தது.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்ட கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளால் கல்வி பெற்று வந்தோர்க்குச் சில சிக்கல்கள் நேரிட்டன. தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தமக்கு இடையூறாக இருப்பதாக பிற்படுத்தப்பட்டோர் கருதினார். குமுக அடிப்படையை மாற்றாமல் சலுகைகளாலேயே ஒரு குமுகத்தின் சிக்கல்களைத் தீர்த்துவிட முடியுமென்ற பொய்யான நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்தியதின் விளைவு இது. உண்மையில் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய மக்களைத் தமக்குள் பகை கொண்டு போரிட வைத்து குமுகப் பகைவர்களுக்கு உதவும் வேலையை இச்சலுகைகள் இன்று தொடங்கிவிட்டன. சலுகைகளுக்கு உண்மையான தேவையிருந்த காலம் ஒன்றிருந்தது. அதைப் பயன்படுத்திக் குமுகத்தைப் பற்றியும் அதில் தமக்குரிய இடத்தைப் பற்றியும் அதைப் பெறப் போராட வேண்டிய தேவையைப் பற்றியும் அப்போராட்டத்தை நடத்த வேண்டிய விதத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள அச்சலுகைகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவின. அப்போராட்டங்களை உரிய காலத்தில் உரிய விதத்தில் நிகழ்த்தாமையால் ஒன்று கூடிப் போராட வேண்டி மக்கள், குறிப்பாக பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் தம்முள் பிணங்கிப் போரிட அணி திரண்டு நிற்கின்றனர். எந்தக் கல்வியறிவு இவர்களிடையிலுள்ள குமுக ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து அவர்களை சிறிது சிறிதாக நெருங்கி வரச் செய்திருக்கிறதோ அதே கல்வியறிவு பழம் பகைமைகளை மிண்டும் புதிய வடிவில் மீட்கவும் பயன்பட்டிருக்கிறது. முன்பு திராவிட இயக்கத்தை உருவாக்கிய பார்ப்பனரல்லாத மேல்சாதியினர் இச்சலுகைகளால் பார்ப்பனர்களைப் போல் தாமும் தாக்குறுவதைக் கண்டு பார்ப்பனரோடு கூட்டுச் சேர்ந்து இரா.சே.ச.வைத் தாங்கி நிற்கின்றனர். பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரால் தம் வாய்ப்புகள் பறிபோவதாகக் கருதி அதே நச்சியக்கத்தைத் தாங்குகின்றனர். நடுவணரசில் ஒதுக்கீடுகளுக்காகப் போராடும் பிற்படுத்தப்பட்டோரால் தம் வாழ்வு பறிபோய்விடுமோ என்றஞ்சி தாழ்த்தப்பட்டோரும் இரா.சே.ச.வை ஆதரிக்கின்றனர். இதிலிருந்து நாம் பெறும் பாடம் மேலேயிருக்கும் வகுப்புகள் அல்லது சாதிகள் தம் கீழேயுள்ள வகுப்புகள் அல்லது சாதிகளின் ஒற்றுமை தமக்குத் தேவையாகும் போது அவர்களை ஒன்றுகூட்டுவர்; அது தமக்கு இடையூறாகும்போது அவ்வொற்றுமையை உடைப்பர். அவர்களது உதவியில்லாமல் மக்களை ஒன்று திரட்டுவது விதிவிலக்கான நிலைமைகளிலேயே முடியும். அவ்வாறு ஒன்றுதிரண்ட மக்களை ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் நடத்திச்செல்ல முடியாது என்பதாகும். இது திராவிட இயக்கத்தின் வரலாற்றிலிருந்து மட்டுமல்ல குமரி மாவட்ட வரலாற்றிலிருந்தும் பெறப்படும் பாடமாகும். அப்படிப்பட்ட நிலைமைகளில் முற்போக்கு விசைகள் அக்களத்தினுள் இறங்க வேண்டும். திராவிட இயக்க வளர்ச்சிக் காலத்தில் தம்மை முற்போக்காளர் என்று பறைசாற்றிக் கொள்ளும் பொதுமைக் கட்சியினர் அதற்கு எதிராக நில்லாமல் இணைந்து நின்று அந்தப் போராட்டத்தைக் கைக்கொண்டிருப்பார்களாயின் இன்று இம்மக்கள் இவ்வாறு தமக்குள் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. அதனால் எந்த பார்ப்பனரல்லா மேற்சாதியினர் தம் நலனுக்காக கீழேயுள்ள அனைத்து மக்களையும் ஒன்றுகூட்டினரோ அதே கூட்டத்தினர் இன்று அம்மக்களைப் பிளவுபடுத்தும் நிலை உருவாகியுள்ளது.

இந்த அணிதிரட்டலை இரா.சே.ச. திறமையாகச் செய்கிறது. மக்களை இவ்வாறு பிளவுபடுத்தி தில்லியின் பின்னணியில் செயல்படும் விசைகள் தமிழகத்தை ஒடுக்குவதையோ பணம் படைத்தோர் ஏழையரைச் சுரண்டுவதையோ எதிர்த்து ஒன்றாக நின்று போராட வேண்டிய மக்களை எதிரெதிராக நிறுத்தியுள்ளது.

இந்தத் துயர நிலைக்கு இரா.சே.ச. மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. திராவிட இயக்கத்துக்கும் பொதுமை இயக்கத்துக்கும் சமமான, ஏன் அதிகமான பங்கு கூட உண்டு. தமிழகம் சுரண்டப்படுவதை எதிர்த்துத் தொடர்ச்சியான போராட்டம் நடத்தாமல் தில்லிக்கு முகவர்களாகிவிட்ட திராவிட இயக்கத்தின் தலைவர்களும் உழைப்போரின் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் கூலி பெற்றுக் கொடுத்துக் கூலி பெறும் போராட்டங்களையே நடத்திக்கொண்டிருக்கும் பொதுமைக் கட்சியினரும் இரா.சே.ச.வினருக்கு மக்கள் மனதில் பரிவு ஏற்படப் பெருமளவில் உதவியுள்ளனர்.

இந்தியைப் படித்து மாவட்ட ஆட்சித் தலைவராகலாம், காவல்துறை அதிகாரியாகலாம் என்று கனவு காணும் இளைஞர்களால் இந்தி உள்ளே நுழைந்து விட்டது; இந்திக்காரர்களும் நுழைந்துவிட்டனர். அதே நேரத்தில் தமிழ் மக்கள் கொத்தடிமைகளாக உலகெங்கும் விலையாகிக் கொண்டிருக்கின்றனர். ஆக, அரசியல், பொருளியல், மொழி, மதம் ஆகிய நான்கு முனைகளிலும் இரா.சே.ச. சார்பான நிலை மக்களிடையில் தோன்றிவிட்டது. பின்னர் அது நுழைய வேண்டியது தானே! தமிழகம் அதன் சுவையைக் குமரி மாவட்டத்தில் கண்டு விட்டது. அத்துடன் இந்தியை ஏற்றுக் கொண்டால் தமிழர்களாகிய நாம் அதிகாரிகளாக முடியாது, வடவர் தாம் நம் அதிகாரிகளாக வருவர் என்பதையும் மக்கள் கண்டுவருகின்றனர். பொருளியலில் நாம் ஒவ்வொரு முனையிலும் இரக்கமின்றிச் சுரண்டப்படுவதையும் கண்கூடாகக் கண்டுவருகிறார்கள். அதனால் தான் நாம் உறுதியாகக் கூறுகிறோம், இரா.சே.ச. என்றும் இந்த மண்ணில் நிலைத்து நிற்க முடியாது என்று.

மக்களைப் பிரிப்பது தான் இரா.சே.ச.வின் நோக்கம் என்பது புளியங்குடி நிகழ்ச்சியாலும் நன்கு நிறுவப்பட்டு விட்டது. குமரி மாவட்டத்தில் மதத்தைப் பிடித்துக்கொண்டு நின்ற இரா.சே.ச. புளியங்குடி கலவரத்தில் சாதியைப் பிடித்துக் கொண்டு நின்றது. அங்கு மதத்தைப் பிடித்திருந்தால் இன்று தாழ்த்தப்பட்டோராகவும் பிற்படுத்தப்பட்டோராகவும் பிளவுண்டு கிடக்கும் ''இந்து'' மதத்தினர் ஒன்றுகூடும் வாய்ப்பு இருந்திருக்கும், அல்லது பிளவு விரியாமலாவது இருந்திருக்கும்.[2] ஆனால் அது தான் அவர்களது நோக்கமல்லவே!

குமரி மாவட்டத்திலும் புளியங்குடியிலும் கிறித்துவ, முகம்மதிய இயக்கங்களும் இதே பணியைத் தான் செய்தன. மதத்தைக் குமரி மாவட்டத்தில் பிடித்துக் கொண்ட அவை புளியங்குடியில் கிறித்துவர் முகமதியர் தாழ்த்தப்பட்டோர் கூட்டணி பற்றிப் பேசினர். ஆனால் கலவரத்தின் போது தாழ்த்தப்பட்டவர்களைத் தனியாக விட்டு விட்டு ஒடி ஒளிந்து கொண்டனர். இந்த வகையில் இந்து, முகமதிய, கிறித்துவ மத இயக்கங்களின் நோக்கம் ஒன்றாகவே இருப்பதை நாம் காண முடியும். மக்கள் தம் போராட்டத்தில் ஒன்று சேராமல் பார்த்துக் கொள்வது தான் அந்த நோக்கம்.

அடுத்து நமக்குத் தெரியவருவது குமரி மாவட்டத்தில் நடைபெற்றது அடிப்படையில் சாதிக் கலவரமே என்பது. தொடக்க காலத்தில் உள்நாட்டுப் பகுதிகளில் நாயர் - குறுப்புகளுக்கும் நாடார்களுக்கும் நடைபெற்ற சாதிப் பூசல்கள் இந்து - கிறித்துவர் மோதல்களென்று விளக்கப்பட்டன. ஏனென்றால் இங்குள்ள நாடார்களில் பெரும்பான்மையினர் கிறித்துவர்களாகவும் எதிரணியிலிருந்தோர் இந்துக்களாகவும் இருந்தனர். பின்னர் நாடார் - மீனவரிடையில் நடைபெற்ற சாதிப் போரையும் கிறித்துவர் - இந்துக்களின் மோதல் என்றே கூறினர்; இங்கு நாடார்களில் பெரும்பாலோர் இந்துக்களும் மீனவர்கள் கிறித்துவர்களுமாவர். ஆனால் மீனவர்களைத் தாக்கியதில் குறிப்பாகப் பள்ளத்தில் கிறித்துவ நாடார்களும் கலந்துகொண்ட செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டது. இவ்வாறு இருபுறத் தாக்குதலாக நடைபெற்ற சாதிச் சண்டைக்கு மதச்சாயம் பூசப்பட்டது. இவ்வாறு மதச்சாயம் பூசி நாடார்களைத் தமக்குள் மத அடிப்படையில் மோதவிட முயன்றனர். ஆனால், இந்து நாடார்களைத் தாக்கும் போது அவர்களுக்கு கிறித்துவ நாடார்களும் கிறித்துவ நாடார்களைத் தாக்கும் போது அவர்களுக்கு இந்து நாடார்களும் முழு உதவி வழங்கவில்லை என்பதைத் தவிர மோதல் சாதித்தன்மையிலிருந்து மதத்தன்மைக்கு மாறவேயில்லை.

இம்மோதலை உருவாக்கியவர்கள் இதன் மூலம் தமிழகம் முழுவதும் மாபெரும் அறுவடைக்குக் காத்திருந்தனர்.

இந்து - கிறித்துவர் என்று மோதல் வந்தால் குமரி மாவட்டத்திலுள்ள நாடார்கள் மட்டுமல்ல, பிற பகுதிகளிலுள்ள நாடார்களும் தாழ்த்தப்பட்டவர்களும் தத்தம் சாதிகளுக்குள் இரண்டிரண்டு கூறுகளாகப் பிரிவர் என்று கனவு கண்டனர். இரு கனவுகளும் பொய்த்துப் போயின. நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டுப் போராடி ஒரளவு உலகைப் பற்றியும் குமுகத்தைப் பற்றியும் புரிந்து கொண்டு குமுக ஒடுக்குமுறையாலும் பொருளியல் புறக்கணிப்பாலும் ஏற்பட்ட இழிவுகளையும் துயரங்களையும் மீறத் தொடங்கியுள்ள மக்களுக்கு தம் சாதிப் பாதுகாப்புணர்வு அவ்வளவு எளிதில் மறைந்து விடும் என்று இந்த நச்சுப்பாம்புகள் கண்ட கனவு நனவாகவில்லை.

அடுத்து, இந்த மோதலிலிருந்து இரா.சே.ச.வின் புரவலர்களான குசராத்தி - மார்வாரிக் கூட்டணியினர் அறுவடை செய்ய நினைத்த விளைச்சல் ஒன்றுண்டு.

சென்ற நூற்றாண்டில் நெல்லை மாவட்டத்தில் சாணார்கள் வாழ்ந்த பகுதிகளில் கிடைத்த பனைபடுபொருட்களையும் சம்பை(கருவாடு)யையும் வாணிபம் செய்வதற்காகச் சாணார்கள் வண்டிகளில் வடக்கு நோக்கிச் கிளம்பினார்கள். வழிப்பறிக் கொள்ளைக்காரர்களாகிய மறவர்களிடமிருந்து தற்காப்புக்காக இருபத்தைந்து ஐம்பது வண்டிகள் கொண்ட சாத்துகள் ஒருசேரப் போய்த்திரும்பின. இவ்வண்டிகள் நின்று இளைப்பாறுவதற்கு வண்டிப் பேட்டைகள் நிறுவப்பட்டன. இவ்வண்டிப் பேட்டைகளைப் பராமரிப்பதற்காகத் தண்டப்பட்ட மகமைப் பணம் வாணிக முதலாகி சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை முதலிய ஊர்களிலிருந்து தொடங்கி வெங்காலூர்(பெங்களூர்) வரையில் விரிவடைந்த பெரும் வாணிகக் குமுகமொன்றை வளர்த்தது. இவ்வாணிக முதல் சிறுகச் சிறுகத் தொழில் முதலாகியது. வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்ட பின் தம் மூலதன அடித்தளத்தை இழந்துவிட்ட செட்டியார், நாயுடு ஆகியோருக்குப் பின் தமக்குப் போட்டியாக நாடார்களின் இம்மூலதனம் எழுவதைக் கண்டு இதையும் முன் போல (செட்டியார், நாயுடுகளின் மூலதனத்தின் நேர்வில் போல்) முளையிலேயே கிள்ளிவிடும் முயற்சியாகவே இம்மதப் பூசல் விளங்குகிறது. இது எப்படி?

தமிழ் நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் நாடார்கள் வாழ்கின்றனர். எல்லா இடங்களிலும் இந்துக்களாகவும் கிறித்துவர்களாகவும் கலந்து வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் தமக்குள் மோதிக் கொள்ளத் தக்க வகையில் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையில் இல்லை. அப்படி இருக்கும் இடங்களிலும் கிறித்துவர்களின் எண்ணிக்கை குறைவே. எனவே எதிர்த்து நிற்க மாட்டார்கள். எதிர்த்து நிற்கத் தக்க எண்ணிக்கையிலும் செறிவிலும் கிறித்துவ நாடார்கள் உள்ள இடம் குமரி மாவட்டமே. இங்கு மதப் பகைமையை வளர்த்து இருவருக்குள்ளும் மோதலை உருவாக்கி விட்டால் அதன் எதிரொலி தமிழகமெங்கும் இருக்கும். இது ஒன்றுபட்ட நாடார்களின் மூலதன வலிமையை உடைக்கும். உடைபட்ட இந்த மூலதனம் எளிதில் சிதைந்து விடும். இப்படிச் செல்கிறது இந்தக் கணக்கு.[3] கிறித்துவ மத இயக்கங்களுக்கு 'நன்கொடை'யளித்து நற்செய்திக் கூட்டங்களை நடத்தும் விசைகளுக்கும் இந்தக் குறிக்கோள் உண்டு. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு, அவன் மும்பைக் கூத்தாடியாயினும் நியூயார்க்குப் கூத்தாடியாயினும் கொண்டாட்டம் தானே!

அதேபோல் தென்னந்தோப்புகளிலிருந்து கிடைக்கும் வருமானம் சிறுகச் சிறுக நாகர்கோவிலில் கடைகளில் மூலதனமாகிறது. இதன் மூலம் பிற சாதியாரும், குறிப்பாக வேளாளர்களும் முகம்மதியர்களும் நடத்தி வரும் வாணிகம் தாக்குதலுக்குள்ளாகிறது. நாடார்கள் தமக்குள் அடித்துக் கொண்டு தோப்புகளை அழித்துக் கொண்டால் இன்று முளைத்திருக்கும் போட்டி ஒழிவதுமல்லாமல் அடிநாள் போல் மீண்டும் நமக்கு நாடார்கள் அடிமையாவார்கள் என்றும் இவர்கள் தம் ''மதப் பணிகளை'' முடுக்கி விட்டனர்.

இனி, இரா.சே.ச. கூறும் சில கருத்துகளை நாம் ஆய வேண்டியுள்ளது. ''கிறித்துவம், முகமதியம், பொதுமை ஆகியவை வெளிநாட்டவர்களின் கைக்கூலி இயக்கங்கள்; பழஞ்சபைக் கிறித்துவர்கள் உரோமுக்கு நம் நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார்கள், சீர்திருத்த சபையினர் இங்கிலாந்துக்கு அல்லது ஐரோப்பிய நாடுகளுக்குக் காட்டிக் கொடுக்கின்றனர், முகம்மதியர் பாக்கித்தானுக்கும் அரபு நாடுகளுக்கும் காட்டிக் கொடுக்கின்றனர்,[4] பொதுமைக் கட்சியினர் உருசியாவுக்கும் சீனத்துக்கும் காட்டிக் கொடுக்கின்றனர்''. உண்மை ஒப்புக் கொள்கிறோம். மரபுப் பொதுமைக் கட்சியினரும் இடங்கை மற்றும் தீவிர மார்க்சிய - லெனினியக் குழுக்களும் வழக்கமான தன்னலத்தினாலும் அறியாமையாலும் உள்நாட்டுச் சிக்கல்களை விட உருகிய, சீனச் சிக்கல்களுக்கே முதலிடம் தருகின்றனர்.

இவர்களைப் பற்றியெல்லாம் கூறிவிட்டீர்கள் இரா.சே.ச.வினரே! ஆனால் நீங்கள் யார்? தமிழில் ஓம் என்று எழுதுவதை ॐ என்று எழுதுகிறிர்களே, நீங்கள் யார்? இந்தியே எல்லோருக்கும் தாய்மொழி என்கிறிர்கள், தமிழர்களைப் பொறுத்தவரையில் உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு யாது? பிள்ளையார் சதுர்த்தியையும் தீபாவளியையும் ஆயுத பூசையையும் தூக்கி வைத்து ஆடும் இரா.சே.ச.வினரே உங்களுக்கும் தமிழர்களாகிய எங்களுக்கும் உள்ள உறவின் தன்மை என்ன? திருநீறு இட்டுக் கொள்ளும் எங்கள் நெற்றிகளில் குங்குமம் இடவருகிறீர்களே, ஏன்? நீங்கள் எங்கள் கைகளில் கட்டவரும் காப்புக் கயிறு (இரட்சாபந்தன்) உண்மையில் எங்களுக்கு நீங்கள் இட விரும்பும் விலங்கில்லையா? நீங்கள் உண்மையில் எங்கள் நலன்களை, எங்கள் தாய்மொழியை, எங்கள் தமிழகத்தை இந்திக்காரனுக்கும் குசராத்திக்கும் இராசத்தான் மார்வாரிக்கும் காட்டிக்கொடுக்கும் கைக்கூலிகளில்லையா?

இந்துபூமி என்ற இதழில் டி.இராமன் என்ற ஒருவர் கூறியிருக்கிறார், இரா.சே.ச. ஒன்று தான் உண்மையான நாட்டுப் பற்றுள்ள ஒரே இயக்கம் என்று! திராவிட இயக்கத்துக்குக் கூட நாட்டுப்பற்று இல்லை என்று! அட, இராமா! தமிழர்களைப் பொறுத்தவரை உண்மையான நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் மக்கட்பற்றும் உள்ள ஒரே இயக்கம் திராவிட இயக்கமே. திராவிட இயக்கத்தின் நாட்டுப் பற்றைப்பற்றி இரா.சே.ச. கேள்வி கேட்க வந்துவிட்ட துணிவு நமக்கு வியப்பூட்டுகிறது. யாருக்கு எதில் முடிவு சொல்வதென்ற வரையரை இல்லாமல் போய்விட்டது. நாட்டையும் மக்களையும் மொழியையும் காட்டிக்கொடுக்கும் இரண்டகர்கள், வடநாட்டு மார்வாரிகளின் கைக்கூலிகள் தமிழக மக்களின் உரிமைப் படையை (இன்று அது சிதைந்த நிலையிலிருந்தாலும்) பார்த்து நாட்டுப் பற்றற்ற கூட்டம் என்று கூறுவதைப் பார்த்து இன்று நாம் பெருமூச்சு விட வேண்டியவர்களாகவே இருக்கிறோம் என்பது ஒரு கசப்பான உண்மை.[5]

இரா.சே.ச. மக்களைத் தமக்கே எதிரான கருவியாகப் பயன் பயன்படுத்துகிற தென்பதற்கு ஒரு சான்றையும் குமரி மாவட்டம் தந்துள்ளது. தாணுலிங்கரை இந்து முன்னணித் தலைவராக்கியது பற்றி முன்பே குறிப்பிட்டோம். அத்துடன் அது நிற்கவில்லை. அவரது பெயரின் பின்னால் நாடார் என்ற அடைமொழியிருப்பதை அது நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. தமிழகத்து முகாமையான நகர்களிலும் தமிழ்நாட்டுக்கு வெளியிலும் செல்வம் படைத்த நாடார்கள் வாழும் பகுதிகளுக்கு அவரை அழைத்துச் சென்று இலக்ககணக்கான, ஏன், கோடிக்கணக்கான பணத்தை இவர்கள் சேர்த்துவிட்டார்கள். குமரி மாவட்டத்தில் இவருக்குச் செல்வாக்கு இல்லாதிருந்தும் தாளிகைகள் தந்த விளம்பரத்தால் இவருக்கு இங்கு பெரும் செல்வாக்கு இருப்பது போல் காட்டி இந்த ஏமாற்று முடிந்துவிட்டது.

ஆனால் தமிழகம் விழித்துக் கொண்டுள்ளது. திராவிட இயக்கம் தன் பாதையில் செய்த தவறுகளையும் பொதுமை இயக்கத்தினர் செய்த சூதுகளையும் கண்டு தெளிந்து உண்மையான பொதுமைக் கோட்பாடு என்ன, அது எவ்வாறு திராவிடக் இயக்கத்தின் குறிக்கோள்களுடன் உயிரியக்கமாகப் பொருந்துகிறது என்பதைப் புரிந்துகொண்டுள்ளது. இந்தப் புரிதலின் முன்னே இரா.சே.ச.வாயினும் சரி கிறித்துவ இயக்கங்களாயினும் சரி முகம்மதிய இயக்கங்களாயினும் சரி இந்தியப் பொதுமை இயக்கங்களாயினும் சரி எதிர் நிற்க முடியாது என்பதைத் தெளிவு படுத்தியாக வேண்டும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1]ராம்மோகன் என்பவர் எழுதிய Hindi Against India என்ற நூலில் மேற்கொள். ஆட்சிமொழிக் குழுவில் சுனீதி குமார் சாட்டர்சி கூறியது. சாட்டர்சி இந்தி ஆட்சிமொழியாவதை மிக விருப்புடன் ஆதரிப்பவர்.

[2]மதத்தைப் பிடித்தால் நெல்லை மாவட்டத்தின் அந்தப் பகுதியில் இந்துக்களாகவும் கிறித்துவர்களாகவும் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்குள் பூசலை உருவாக்க மட்டுமே வாய்ப்பு உண்டு. ஆனால் குமரி மாவட்டத்தில் இந்து நாடார்களை மதமென்ற வடிவில் சாதிச் சண்டைக்கிழுக்க மீனவர்கள் இருப்பதைப் போன்று அங்கு வலுவுள்ள கிறித்துவச் சாதி எதுவும் இல்லை. எனவே அங்கு(நெல்லை மாவட்டத்தில்) அந்த வாய்ப்பு மத மோதலாக நடைமுறைக்கு வர வழியில்லை.

[3]ஈத்தாமொழியில் கலவரம் நடந்து கொண்டிருந்த போது பிர்லா என்ற வட நாட்டுப் பணமுதலை கமுக்கமாக அங்கு வந்து போனதாக ஒர் இந்து மதத் ''துறவி'' தன்னிடம் கூறியதாக நண்பர் ஒருவர் கூறினார். பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவரான அந்த நண்பரை இந்து மத உணர்வுள்ளவரென்று கருதி இதைக் கூறினாராம்.

[4]அமெரிக்காவைக் கூறமாட்டார்கள், ஏனென்றால் பொதுமை எனும் எதிரியை எதிர்ப்பதிலும் இந்திய மக்களைச் சுரண்டுவதிலும் இவர்களுக்கு நம்பகமான கூட்டாளி அது.

[5]20 ஆண்டுகளுக்கு மேலாயிற்று இதை எழுதி. இன்றைய பாராளுமன்றத் தேர்தல் என்ற ஏமாற்றைப் பயன்படுத்தி திராவிட இயக்கத்தின் வலிவு மிக்க பிரிவான தி. மு.க. இன்று மாநிலத்திலும் தில்லியிலும் வலுவான நிலையிலிருந்துகொண்டு முழு இந்தியாவையும் விற்றுக் காசாக்கிக்கொண்டிருக்கிறது.

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (5)

மீண்டும் தாணுலிங்கர்

கலவரம் நடந்து கொண்டிருந்தபோது முதல்வர் ம.கோ.இரா. நாகர்கோயிலுக்கு வருகை புரிந்தார். பல்வேறு தலைவர்களும் அவரைப் பார்த்து முறையிட்டனர். அப்போது தன் மகள் வாழ்ந்த ஊராகிய ஈத்தாமொழி தாக்கப்பட்டபோது அவரது மகளின் உடைமைகளுக்கும் ஏற்பட்ட சிறு அழிவுகளால் உந்தப்பட்ட தாணுலிங்கரும் முதல்வரைப் பார்த்துக் குறைகளை எடுத்துரைத்தார். அவரது பேச்சுவன்மையைக் கண்ட மேல் சாதி, குறிப்பாக வெள்ளாளத் தலைவர் சிலர் அவரையே இந்து முன்னணித் தலைவராக்க அப்போதே முடிவு செய்தனர். முன்னாள் காங்கிரசு ச.ம.உ. திரு. ஏ. பாலையா என்ற நாடாரை இ.மு. தலைவராக்க முன்பு முடிவெடுக்கப்பட்டிருந்ததாம். அந்த முடிவு அங்கேயே கைவிடப்பட்டது.

ஏற்கனவே அரசியலிருந்து தூக்கியெறியப்பட்டிருந்த தாணுலிங்கருக்குத் தானே தேடி வந்த தலைமைப் பதவி இனிப்பாயிருந்தது. அவரது பெயர் தமிழ், ஆங்கில நாளிதழ்களில் அடிபட்டது. இராம.கோபாலன் போன்ற பார்ப்பனத் தலைவர்களும் காமகோடி போன்ற ''மகான்களும்'' ''நாடார்வாள்'' என்று அழைக்கும் போது எவ்வளவு இனிமை! பார்ப்பனர்கள் எவ்வளவு திருந்தி விட்டார்கள் என்று அவர் வியந்தார். அந்த வேகத்தில் இந்து மதத்தைத் காக்கப் புறப்பட்டு விட்டார். அவரது முதலூடி மனப்பான்மைக்கும் இது உவப்பாகவே இருந்தது.

இதற்காக நாம் தாணுலிங்கரை மட்டும் ஒரேயடியாகக் குறைகூற முடியாது. ஏனென்றால் கிறித்துவர்களான நாடார்களும் சும்மா இருக்கவில்லை. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. தர்மராசு சந்தோசம் குமரி மாவட்டக் கிறித்துவர்களுக்காக வாதாடினார். இவரே அதே சூட்டோடு நடைபெற்ற நாடார் மகாசன சங்க மாநாட்டில் நிகழ்த்திய தலைமையுரையில் நாடார்கள் தங்கள் மத வேற்றுமைகளை மறந்து சாதியடிப்படையில் ஒன்றுபட வேண்டுமென்று கூறினார். தாணுலிங்கரிடம் இத்தகைய இரட்டை நாக்குத் தன்மை இல்லை என்று கூற முடியும்.

இந்து முன்னணித் தலைவராக்கப்பட்ட தாணுலிங்கரும் குமரி மாவட்ட இந்து நாடார் சங்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இவருக்குப் பின்னால் நின்று இவரை இயக்கிய விசைகள் இவர் கூறும் இந்து மக்களுக்கோ அல்லது இந்து நாடார்களுக்கோ எவ்வாறு பயன்படுகின்றன என்று அவர் எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை. இதுபோன்ற சிந்தனைகள் அவரது இளமைக் காலத்திலேயே இல்லை. தள்ளாத இந்த அகவையில் எவ்வாறு அதை எதிர்பார்க்க முடியும்?

இந்த நேரத்தில் நாம் இன்னொரு சேதியையும் கூறாமல் மேலே செல்ல முடியாது. கலவரத்துக்கு ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு பொதுமைக் கட்சிப் பெருமானார் சீவா அவர்களின் நினைவு நாள் கூட்டமொன்றில் குமரி மாவட்டப் போக்குவரத்துக் கழகத்துக்கு சீவாவின் பெயரை இடப் போவதாக முதல்வர் ம.கோ.இரா. அறிவித்தார்.[1] ஏற்கெனவே நேசமணியாரின் பெயரை வைப்பதாக அரசு ஒப்புக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. எனவே நாடார்கள் இதில் சாதிச் சிக்கலைக் கொண்டு வந்தனர். நாடார்களிடமிருந்து கடும் எதிர்ப்பு உருவானதும் அரசு தன் முடிவை மாற்றிக் கொண்டு நேசமணி பெயரில் போக்குவரத்துக் கழகம் அமைக்கப்போவதாகவும் அறிவித்துவிட்டது. இது கலவரத்துக்கு முந்திய நிலை. இதைத் தங்களுக்கு விடப்பட்ட அறைகூவலாக நாடாரல்லாத மேல்சாதியினர் எடுத்துக் கொண்டது இயல்பே. மொத்தத்தில் குமரி மாவட்டப் போக்குவரத்துக் கழகத்துக்கு நேசமணியின் பெயரை வைப்பதென்ற அரசின் முடிவு நாடார்களின் சாதி ஒற்றுமைக்கு ஒரு வெற்றியாக கலவரத்துக்கு முன் கருதப்பட்டது.

ஆனால் கலவரத்துக்குப் பின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. புதிது புதிதான அமைப்புகளின் பெயரில் ″சீவா பெயர் நிலைநிறுத்தப் போராட்டக் குழுக்கள்'' சுவரொட்டிகள் ஒட்டின. எதிர்ப்புறத்திலிருந்து வலுவான குரல் இல்லை. நேசமணியின் பெயர் வைக்குமாறு வலியுறுத்தினால் அது நாடார்களிடையில் மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்தி விடுமோ என்று நாடார்களிடையில் அச்சமேற்பட்டுவிட்டது. கலவரத்தின் விளைவு எவ்வளவு ஆழமாக மத உணர்வுகளைக் கிளறிவிட்டுள்ளது என்பதையும் ஒரு சாதிச் சண்டை மதச் சண்டையாகக் கற்பிக்கப்பட்டதன் விளைவாக வலுவான ஒரு மக்கள் கூட்டம் எவ்வளவு எளிதில் பிளக்கப்பட்டுவிட்டதென்பதையும் இது தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு நாடார்களில் ஒரு சிலர் சாதிவெறியினால் உருவாக்கிய ஒரு சிக்கல் (நேமணியின் பெயர் வைத்தல்) இன்னொரு வடிவில் அவர்கள் மீதே திருப்பியடித்ததைப் பார்க்கிறோம்.

இன்று இச்சிக்கல் நேசமணியின் பெயரை குமரி மாவட்டப் போக்குவரத்துக் கழகத்துக்கு வைத்ததன் மூலம் தீர்க்கப்பட்டு விட்டது. பெரும்பாலோர் எதிர்பார்த்தது போல் இது நாடார்களிடையில் மோதல்களையோ புகைச்சல்களையோ ஏற்படுத்தவில்லை. சாதியை மதத்தால் உடைக்க முடியவில்லை.

இருந்தாலும் நாடார்கள் சிலரின் சிந்தனைகள் இப்பிளவின் தன்மைமையும் அது ஏற்படுத்தப் போகும் விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்த்தன. குறிப்பாகக் கலவரத்தின் போது தங்களது தென்னந்தோப்புகள் அழிக்கப்பட்டது அவர்களுக்கு அச்சத்தை மூட்டியது.


நச்சரவு மீண்டும் படமெடுத்தாடியது

ஓராண்டு கழித்து மீண்டும் அதே பிப்ரவரி 12,13 நாட்களில் 'இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு' நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்று நடக்க இருந்த ஊர்வலத்துக்குத் தடைவிதித்தது அரசு. தடையை மீறி ஊர்வலம் புறப்பட்டது. கோட்டாறு எனுமிடத்திலிருக்கும் சவேரியார் கோயில் என்னும் கிறித்துவர் கோயிலின் பக்கம் ஊர்வலம் வந்தபோது காவலர்களுக்கும் ஊர்வலத்தினருக்கும் சச்சரவு ஏற்பட்டு துப்பாக்கிச் சூட்டில் இருவர் மாண்டனர். கோட்டாற்றில் அரசுப் பேருந்துகள் கொளுத்தப்பட்டன. பேருந்துகள் கொளுத்தப்பட்ட இடத்தில் இந்து நாடார்கள், பிற சாதியினர் முகம்மதியர்கள் அனைவரும் செறிந்து வாழ்கின்றனர். ஆனால் காவல் துறையினருக்கு இரா.சே.ச.வினர் இந்து நாடார்களைச் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது. கோட்டாற்றைச் சுற்றியிருக்கும் ஐந்து சிற்றூர்களில் இந்து நாடார்களின் வீடுகளில் புகுந்து காவல்துறையினர் தாக்கினர். தாக்குதல் நடத்தப்பட்ட பின் அப்பகுதிகளிலுள்ள சுவர்களில் காணப்பட்ட எழுத்து முழுக்கம் இது தான்: ''இந்துக்களின் காவலன் இரா.சே.ச.'' எப்படி இருக்கிறது சேதி! இரா.சே.ச.வின் உத்தியே இது தான். எதிரிகள் என்று இவர்கள் யாரைக் கூறுகிறார்களோ அவர்கள் அல்லது அவர்கள் சார்பில் அரசு தாக்குவது போன்ற ஒரு தோற்றத்தை இவர்கள் உருவாக்குவார்கள். பின்னர் எங்களை விட்டால் உங்களுக்கு வேறு ஆளில்லை என்பார்கள். ஏதுமறியா மக்கள் இவர்களை நம்பி ஏமாறுவார்கள்.

ஊர்வலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் கண்டு கிறித்துவர்களில் பெரும்பாலோர் மகிழ்கின்றனர். உண்மையில் மதவெறி அவர்கள் கண்களை மறைக்கிறது. மக்களுக்கு எந்த வகையிலும் நன்மை செய்யாத, செய்ய நினைக்காத இரா.சே.ச. போன்ற மக்கள்பகைக் கும்பலுக்கு உதவுவதாக அரசின் செயல் அமைந்திருப்பது நன்றாகத் தெரிகிறது. இதை அரசு அறிந்து செய்கிறதா அறியாமையினால் செய்கிறதா என்று நம்மால் கூற முடியவில்லை. ஆட்சியையே தொழிலாகக் கொண்டவர்களிடம் இன்னது செய்தால் இன்னது நடக்கும் என்ற தெளிவிருக்காது என்று நம்மால் நம்ப முடியவில்லை. கிறித்துவர்களின் தூண்டுதலினால் தான் ஊர்வலத்துக்குத் தடைவிதித்துத் தாக்குதலும் நடத்தியது அரசு என்றும் திருச்செந்தூர் இடைத் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர்வதற்காகவே இது செய்யப்பட்டது என்றும் சென்னையிலிருந்தே காவலர் உடையில் அடியாட்கள் வந்தனர் என்றும் இரா.சே.ச. இதழான இந்து பூமி கூறுகிறது.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1]கருணாநிதி தொடங்கி வைத்த இந்தப் பெயர்வைக்கும் நடைமுறையால் மக்கள் நடுவில் மகோ.இரா. உண்டாக்கிய பிளவுகள் தாம், மோதல்கள் தாம் எத்தனை? ஒருவேளை அவர்களதுநோக்கமே இது தானோ?

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (4)

வெடி மருந்துக் கிடங்கில் தீ

மண்டைக்காட்டில் என்ன நடந்ததென்று யாராலும் தெளிவாகக் கூற முடியவில்லை. ஆளுக்கொன்றதாகக் கூறுகிறார்கள்.

மண்டைக்காட்டுக் கோயில் பற்றிய வரலாறு இது தான்: மண்டைக்காடு கடற்கரையூர். இவ்வூரில் சிறுவர்கள் மாடு மேய்க்கும் போது கடல் மணலைக் கூட்டிச் சாமி விளையாட்டு விளையாடி வெள்ளெலியைப் பிடித்துக் காவு கொடுத்துப் பின்னர் கலைத்துப் போட்டுவிட்டுப் போவது வழக்கமாம். அப்படி ஒரு நாள் கலைக்கும் போது ″கடல் மணல் கடவுளிடமிருந்து′′ குருதி பொங்கியதாம். அன்றிலிருந்து இது மண்டைக்காட்டம்மன் என்று வழிபடப்படுகிறது. பெரும்பாலும் கேரளத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களும் குமரி மாவட்ட மக்களும் இதில் கலந்து கொள்வார்கள். கேரளத்திலுள்ள மதம் மாறாத மீனவர்களும் வருவதாகத் தெரிகிறது. அடியார் அனைவரும் மீன் சமைத்துண்டு அம்மையை வழிபட்டுச் செல்வதே இங்குள்ள சிறப்பு.

இக்கதையைக் கேட்கும் போது நமக்குத் தோன்றுவது இதுதான்: கிறித்துவத்துக்கு அடித்தள மக்கள் மாறுவதைத் தடுக்க இக்கதை புனையப்பட்டுக் கோயிலும் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இதே போன்ற கதைகளுள்ள கோயில்கள் தமிழகம் நெடுகிலும் உள்ளன.[1] தாழ்த்தப்பட்டோர் மிகுதியாகக் கலந்துகொள்வதும் மீன் சமைத்துண்பதும் பார்க்கும் போது இந்தக் கருத்து உறுதியாகிறது.

இனி மண்டைக்காட்டு நிகழ்ச்சிக்கு வருவோம். ஒரு கூற்றின்படி மண்டைக்காட்டுத் திருவிழாவுக்கு முன்பே கடற்கரை நெடுகிலும் உள்ள மீனவர்களுக்குச் செய்தி சொல்லி ஏற்பாடு செய்து வைத்திருந்தார்களாம். கடலில் குளிக்கச் சென்ற பெண்களைத் துரத்தினார்களாம். இதனைத் தடுக்கக் காவலர்கள் முயன்ற பொது மீனவர்கள் அவர்களைத் தாக்கியதால் காவல்துறையினர் சுட்டார்களாம். மாதா கோயில்களின் கோபுர உச்சிகளில் நின்று தீப்பந்தங்களை அசைத்ததன் மூலம் மீனவர்கள் திரட்டப்பட்டனர் என்று கூறுகிறது இக்கதை.[2]

மண்டைக்காட்டுக் கோயிலின் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியை மாதா கோயிலை நோக்கித் திருப்பிவைத்து இந்து மதப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டனவாம். அதற்கு எதிர்ப்பாக மாதா கோயில் ஒலிபெருக்கி அம்மன் கோயிலை நோக்கித் திருப்பப்பட்டதாம். அதை நிறுத்தும் படி கேட்கப்போன காவலரைத் தாக்கினதால் அவர்கள் சுட்டார்களாம். இது இன்னொரு கதை.

மூன்றாவதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. மீனவர் ஒருவர் நடத்தும் தேநீர்க் கடையில் காவலர்கள் தேநீர் அருந்தினராம். அவர்கள் காசு கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட சண்டை மீனவர்க்கும் காவலருக்கும் மோதலாக மாறிச் சூட்டில் முடிந்தது என்கிறது இக்கதை.

இதற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றும் மண்டைக்காட்டு நிகழ்ச்சிக்கு முன்பே மதப் பகைமையை வளர்த்து வைத்திருந்தது. திங்கட்சந்தை[3] என்னுமிடத்தில் பேருந்து நிலையத்தருகே சாலை கூடுமிடத்தில் சிறிது வெற்றுப் புறம்போக்கு நிலம் கிடந்ததாம். அதில் ஒரு சிலுவை நிறுவப்பட்டதாம். இது குறித்து இந்துக்கள் முறையிட்ட போது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்துக்கள் சிலுவையை அகற்றிவிட்டுப் பிள்ளையாரை நிறுவினராம். காவல் துறை இரவோடிராவாக அச்சிலையை அகற்றியதாம். இவ்வாறு பிள்ளையாரை நிறுவியோர் நாடார்களல்லாத பிற சாதியினர். பிள்ளையார் நாம் மேலே குறிப்பிட்டதைப் போல் நாடார்களின் அடிப்படைத் தெய்வமல்லவாதலால் இந்நிகழ்ச்சியின் மூலம் நாடார்களிடையில் பிற சாதி இந்துக்கள் எதிர்பார்த்த கிளர்ச்சி நடைபெறவில்லை.

எப்படியோ துப்பாக்கிச் சூடு நடந்துவிட்டது. ஆறு மீனவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாயினர். இவ்வாறு மக்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலை கிறித்துவர்கள் மீது இந்துக்கள் நடத்திய தாக்குதலாகக் காட்டிப் பெரிதுபடுத்தினார் நாகர்கோயில் கத்தோலிக்கப் ஆயர் ஆரோக்கியசாமி. ஓர் ஊர்வலத்துக்கு அவர் ஏற்பாடு செய்தார். அரசு அதைத் தடைசெய்தது. கிறித்துவர்கள் மீது அரசு அடக்குமுறை நடத்துவதாக அவர் அறிக்கை வெளியிட்டார். இந்தக் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது 1.3.1982 அன்று.

ஆயரின் இந்தச் செய்கைக்குக் காரணம் இருக்கிறது. சிறிது காலம் முன்பு வரையில் கடற்கரையில் கத்தோலிக்கச் சாமியார்கள் ''கொடிகட்டி'' வாழ்ந்தனர். மக்கள் கல்வியறிவு பெறப்பெற மக்கள் மீது அவர்களின் பிடி சிறிது சிறிதாகத் தளர்ந்தது. இந்நிலையில் விசைப் படகுகளின் போட்டியாலும் இறால் மீன் பிடிப்பினாலும் ஏழை மீனவர்கள் பலரது வருமானம் குறைந்தது. எனவே பிடிக்கப்பட்ட மீனில் கோயிலுக்குத் தரும் தெரிப்பு பங்கு பற்றிய கேள்விகள் எழுந்தன. அத்துடன் உரோமிலுள்ள மதத் தலைமையகத்திலிருந்து ''குமுக நீதிக்காகப் பாடுபடுதல்'' என்ற திட்டம் சாமியார்கள் மூலம் செயற்படுத்தப்பட்டது. விசைப் படகுகளை எதிர்த்து கட்டுமர மீனவர்களை அணி திரட்டும் பணி இதன் மூலம் நடைபெற்றது. அவ்வாறு திரட்டப்பட்ட அணியினர், மத குருக்கள் உண்மையில் பணக்கார மீனவர்களுக்கே சார்பாக இருப்பதைக் கண்டு அவர்களை எதிர்க்கும் நிலை தோன்றியது. இந்த இக்கட்டிலிருந்து மதத்தைக் காப்பாற்ற மண்டைக்காட்டு நிகழ்ச்சி அவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. அதை ஆயர் நன்கு பயன்படுத்திக் கொண்டார்.



தீ பரவியது

மண்டைக்காட்டு நிகழ்ச்சி நடந்து பதினொரு நாட்களுக்குப் பிறகு மார்ச்சு 12 ஆம் நாள் வெள்ளிக் கிழமை நண்பகலில் ஈத்தாமொழியில் நாடார்கள் மீது பெரியகாடு, இராசாக்கமங்கலம் ஆகிய இரு பகுதிகளிலுமுள்ள மீனவர்கள் தீடீர்த் தாக்குதல்கள் நடத்தினர். இங்குள்ள நாடார்களில் ஏறக்குறைய அனைவரும் இந்துக்கள். இதற்கு முன் இப்பகுதியில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகள் இத்தாக்குதலின் அடிப்படையைப் புரிந்து கொள்ள உதவும்.

ஈத்தாமொழிக்கு அருகில் இருக்கும் அத்திக்கடையில் உள்ள முகம்மதியர்களின் பள்ளிவாசல் நிகழ்ச்சியொன்றில் இந்து மதத்தைக் குறைகூறிப் பேசினராம். அதன் பின்னர் நடைபெற்ற இந்துக்களின் நிகழ்ச்சியொன்றில் முகமதியர்களைத் தாக்கிப் பேசியிருக்கிறார்கள். இப்பேச்சை நாடாவில் பதிவு செய்து ஈத்தாமொழி முகம்மதியர்களிடையிலும் பெரியகாடு மற்றும் இராசாக்கமங்கலம் துறையிலுள்ள மீனவர்களிடையிலும் போட்டுக்காட்டியிருக்கிறார்கள். இவ்வாறு இத்தாக்குதலில் முகம்மதியர்களும் பங்கு கொண்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் கலவரம் நடந்த அன்று மீன் விற்கப் போன மீனவப் பெண்களைத் திரும்பிப் போய்விடும்படி நாடார் பகுதியிலுள்ள சிலர் கூறியதாகவும் திரும்பிப் போன பெண்களைக் கண்டு மீனவர்கள் கொதிப்படைந்ததே உடனடிக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

மீனவர்களின் தாக்குதலின் போது நாடார்களாகிய இந்துக்களின் கடைகளும் வீடுகளுமே தாக்கப்பட்டு கொளுத்தப்பட்டன. ஈத்தாமொழியிலுள்ள முகம்மதியர்களும் இத்தாக்குதலில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஏறக்குறைய மீனவர் குடியிருப்புகளையும் நாடார் குடியிருப்புளையும் பிரிக்கும் சாலை என்ற பெயருடைய சாலை ஒன்றுண்டு. சாலைக்குத் தெற்கிலும் நாடார்கள் வாழ்கின்றனர். ஆனால் வடக்கில் மீனவர் யாரும் கிடையாது. சாலைக்குத் தெற்கில் வாழ்ந்த நாடார்களின் வீடுகள் எளிதில் தாக்குதலுக்குள்ளாயின. அம்மக்கள் சாலைக்கு வடக்கே ஒடி வந்தனர். மொத்தத்தில் ஈத்தாமொழியிலுள்ள மக்கள் கையில் கிடைத்த பாத்திரம் பண்டங்களை எடுத்துக்கொண்டு நாகர்கோயிலை நோக்கி ஓடத் தொடங்கினர்.

ஈத்தாமொழிக்கும் நாகர்கோயிலுக்கும் ஏறக்குறைய பத்து கிலோமீட்டர் தொலைவுண்டு. ஈத்தாமொழி தாக்கப்பட்டதை அறிந்த ஈத்தாமொழியை அடுத்த பகுதிகளைச் சார்ந்த இந்து நாடார்கள் ஈத்தமொழிக்கு விரைந்தனர். மீனவர்களுக்கும் முகம்மதியர்களுக்கும் சொந்தமான கடைகளைச் சூறையாடி நெருப்பிட்டனர். தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து யார் எவருடையது என்று பாராமல் தேங்காய்களை வெட்டிச் சுமந்து சென்றனர். இங்குள்ள தென்னந்தோப்புகளில் பெரும்பாலானனைவ இந்து நாடார்களுக்குச் சொந்தமானவையே. மீனவர் குடியிருப்புகளைத் தாக்கவுமில்லை, அங்கு செல்லவுமில்லை. எனவே இந்த ''எதிர்த்தாக்குதலை'' நடத்தியவர்கள் கொள்ளையடிக்கப் போனவர்களே என்று இந்து நாடார்கள் நடுவிலேயே பேசப்பட்டது.

அன்று ஈத்தாமொழிக்கு வடக்கிலிருக்கும் சூரங்குடி எனும் ஊரிலுள்ள கிறித்துவ நாடார்களின் கோயில் முன்பு நின்ற பூச்செடிகள் வெட்டியெறியப்பட்டன. அங்கு குடியிருக்கும் கிறித்துவர் சிறு தொகையினரே. இதை அறிந்த மறவன் குடியிருப்பு(இது சூரங்குடிக்கு வடக்கிலிருக்கும் ஓர் ஊர்) கிறித்துவ நாடார்கள் போகும் வரும் வண்டிகளையும் ஆட்களையும் மறித்தனர். நாடார்களுக்குள் மத அடிப்படையில் சண்டை மூண்டுவிடும் நிலை. நாடார்களாகிய கிறித்துவர்களும் நாடார்களாகிய இந்துக்களும் கூடி நாகர்கோயிலில் அமைதிப் பேச்சு நடத்தினர். குருசடி எனும் நாடார்களின் ஊரிலுள்ள மாதா கோயில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதாக ஒரு வதந்தி திடீரெனப் பரவியது. அமைதிப் பேச்சு முறிந்தது. ஆனால் வதந்தி பொய்யெனத் தெரிந்ததும் நிகழவிருந்த மோதல் ஒரு வழியாகத் தவிர்க்கப்பட்டது. கிறித்துவ நாடார்கள், குறிப்பாகக் கத்தோலிக்கர்கள் நிலைமையை ஒரளவு புரிந்து கொண்டு தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டனர்.[4]

மார்ச்சு 13ம் நாள், அதாவது அடுத்த நாள் பெரியகாடு நோக்கி இந்து நாடார்களின் பெருந்திரள் கையில் கிடைத்தவற்றை ஏந்தி நடந்தது. இவர்கள் பெரியகாட்டை நெருங்கும் போது பெண்டு பிள்ளைகள், முதியோரைக் கட்டுமரங்களில் ஏற்றியனுப்பிவிட்டு மீனவர்களில் ஒரு சிறு பகுதியினரே எஞ்சி நின்றனர். அவர்கள் வெடிகுண்டுகளாலும் தூண்டில்களாலும் தங்களைத் தாக்க வந்தவர்களைத் தாக்கினர். திரண்டு சென்ற நாடார்கள் இச்சிறு தொகை மீனவர்களுக்குப் புறமுதுகிட்டுப் பிழைத்தால் போதுமென்று திரும்பி வந்தனர். முன்பின் பாராமல் மாதா கோயிலினுள் சென்ற இருவர் திரும்பவேயில்லை.

இவ்விரு நிகழ்ச்சிகளிலும் ஈத்தாமொழியிலுள்ள பணக்கார நாடார்கள் தம் கோழைத் தனத்தையும் வஞ்சகத்தையும் மிகத் தெளிவாகக் காட்டினர். மீனவர்களுக்கும் நாடார்களுக்கும் பகைமையை வளர்ப்பதில் முதப்பத்து நாடான்களாகிய ஈத்தாமொழி பணக்கார நாடார்கள் பெரும்பங்காற்றினர். ''இந்து மதத்துக்கு''த் தூண்களாக நாடார்களிடையில் ஈத்தாமொழி நாடார்கள் பெயர் பெற்றவர்கள். ஆனால் ஈத்தாமொழித் தாக்குதலின் போது அவர்கள் நாகர்கோயிலில் தங்களுக்கிருந்த வீடுகளில் ஒடி ஒளிந்து கொண்டார்கள். இரு நாட்களிலும் அவர்களுக்கு உதவி செய்யத் திரண்டு வந்த மக்களுக்கு வழிகாட்டக் கூட ஆளில்லை. பெரியகாட்டுக்குச் சென்றவர்கள் வழி தெரியாமல் இடர்ப்பட்டதே மிகுதி.

இந்நிகழ்ச்சிகளால் துணிவு பெற்ற மீனவர்கள் கிட்டத்தட்ட எல்லா முனைகளிலும் தாக்குதல் தொடங்கினர். சில இடங்களில் காவலரோடு மோதல்கள் ஏற்பட்டுத் துப்பாக்கிச் சூடுகளும் நடந்தன. இறுதியில் பள்ளம் எனுமிடத்தில் நாடார்கள் நடத்திய கொடுந்தாக்குதலுக்குப் பின் கலவரம் முடிவுக்கு வந்தது.

இவ்வூரில் மீனவர்களில் ஒரு பிரிவினர் அமைதிப் பேச்சு நடத்திக் கொண்டிருந்ததாகவும் இன்னொரு பிரிவினர் அதை ஏற்காமல் நாடார்களின் வீடுகளைக் கொளுத்தி தோப்புகளை அழிக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதைக் கண்ட நாடார்களில் சிலர் மிதியுந்துகளில் விரைந்து சென்று பல ஊர்களுக்கும் செய்தியறிவித்து சரக்குந்துகளில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டு குவித்தனர். இறுதியில் பள்ளம் மீனவர் குடியிருப்பு முழுவதும் சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டது. கிணறுகளில் மண்ணெய் ஊற்றப்பட்டது. மீனவர்கள் கடலுக்குள் கட்டுமரங்களில் தப்பியோடி கன்னியாகுமரி போன்ற இடங்களில் உள்ள மீனவர் குடியிருப்புகளில் தஞ்சம் புகுந்தனர். ஏராளமான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அவ்வூர் இயல்பு நிலைக்குத் திரும்பப் பல மாதங்கள் ஆயின.

இவ்வாறு மோதல்கள் ஏற்பட்டு மக்கள் ஒருவரைக் கண்டு ஒருவர் அஞ்சி ஒருவரையொருவர் பகைத்திருந்த நேரத்தில் காஞ்சி காமகோடியும் மதுரை மடமும் அறிக்கைகள் விட்டன. இந்து மதம் அழிக்கப்படுவதாகக் கூக்குரலிட்டனர் இம்மடத்தலைவர்கள்.

மதுரை ஆதினம் கலவரத்தில் மாண்ட ''இந்துக்கள்'' குடும்பங்களுக்கு நேரில் சென்று பரிவு தெரிவித்தார். உதவிகள் செய்வதாக வாக்களித்தார். வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்பது தெரியவில்லை.

குன்றக்குடி அடிகள் மேற்கொண்ட அணுகல் வேறு விதமானது. மதங்களைக் கொண்டு மக்களிடையில் பகைமையை வளர்க்காமல் இரு மத மக்களையும் ஒன்றுபடுத்தும் நோக்கில் நெடும்பயணம் மேற்கொண்டார். இரா.சே.ச.வினர், அவர் முகம்மதியர்களோடும் கிறித்துவர்களோடும் கூட்டுச் சேர்ந்து இந்து மதத்தினரைக் காட்டிக் கொடுத்துவிட்டதாகக் கூறினர். ஊரெல்லாம் சுவரொட்டிகள் ஒட்டினர். சாமிதோப்பு பாலபிரசாபதி தன் முன்னாள் தவற்றுக்குக் கழுவாய் தேடுவார் போல் இப்பயணத்தில் கலந்து கொண்டார்.[5] ஆனால் மக்களிடையில் மனக்கசப்பு குறையவில்லை. சிக்கல் உண்மையில் மதச் சிக்கலாயிருந்தால் தானே!

இந்தக் கலவரம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது மாபெரும் சுவரொட்டிப் போர் ஒன்று நடந்தது. அதோடு சுவருக்குச் சுவர் இரா.சே.ச.வுக்கு விளம்பரங்களும் செய்யப்பட்டன. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள், குறிப்பாக இந்து நாடார்கள் இரா.சே.ச.வுக்கு ஆதரவு அளிக்கவில்லை.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1]தமிழ் நாட்டுக் கோயில்களின் தல புராணங்களில் பெரும்பாலானவற்றுக்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. இக்கோயில்களின் தெய்வப் படிமங்கள் தற்செயலாக வெளிப்பட்டனவென்று அக்கதைகள் கூறும். அப்படிமங்களை முதலில் கண்டு பிடித்தவர் பெரும்பாலும் தீண்டாமைக் கொடுமைக்கு உட்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவராக இருப்பார். இதன் பொருளென்ன?


கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகம் அலையலையான மதப்படையெடுப்புகளுக்கு ஆளாகி வந்துள்ளது. புத்தம், சமணம், வேதியம், சிவனியம், முகம்மதியம், கிறித்துவம் என்று இப்படையெடுப்பு தொடர்ந்து வந்துள்ளது. குமுகத்தில், குறிப்பாகச் சாதிவெறிக்கு உள்ளாகி ஒடுக்கப்படும் மக்களையே இம்மதங்கள் முதலில் பற்றிக்கொண்டு உள்ளே நுழைகின்றன. இவ்வாறு நுழைந்த புதிய மதங்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மாறுவதைத் தடுத்து நிறுத்துவதற்காக அச்சாதியைச் சேர்ந்த ஒருவரைப் பிடித்து அவர் மூலம் நடத்தப்பட்ட நாடகங்களாகவே தமிழகக் கோயில்களில் பெரும்பாலானவற்றின் தோற்றக் கதைகள் அமைந்துள்ளன. இந்த அடிப்படையில் தமிழகக் கோயில்களின் வரலாற்றை அணுகினால் தமிழக வரலாற்றில் வெவ்வேறு சாதியினர் வெவ்வேறு காலங்களில் குமுகத்தில் தாங்கிய பங்கு பற்றியதெளிவையும் பெற முடியும்.

[2]அண்மையில் சந்தித்த பள்ளத்தைச் சேர்ந்த நண்பர் அப்போது மண்டைக்காட்டு மாதா கோயில் பொறுப்பிலிருந்த சாமியார் தான் இதற்குக் காரணம் என்றும் முன்பு அவர் பள்ளத்தில் பொறுப்பிலிருந்த போது புதிய ஒரு கோயிலைக் கட்டி ஊரை இரண்டாகப் பிரித்து ஊர் மக்களுக்குள் பகைமூட்டிவிட்டதாகக் கூறினார். இப்போது அவர் ஆத்திரேலியாவிலிருக்கிறாராம். (நம் ஆட்சியாளர்கள் போல கோயில் கட்டுமானத்தில் காசுபார்க்க அவர் இதைச் செய்திருக்கலாம்.)

[3]இப்போது திங்கள்நகர்

[4]கிறித்துவ நாடார்கள் மோதலைத் தவிர்த்தது அவர்களது சாதி உணர்வைக் காட்டுவதாக மட்டும் கூறி விட முடியாது. நாம் ஏற்கனவே கூறியுள்ளது போல் அகத்தீசுவரம் வட்டத்தில் நாடார்களிடையில் கிறித்துவர்களின் விழுக்காடு குறைவு. எனவே மோதல் ஏற்பட்டால் இந்து நாடார்கள் வாழும் பகுதிகளால் சூழபட்டிருக்கும் கிறித்துவ நாடார்கள் பேரிழப்பு எய்த வேண்டியிருக்கும். ஆனால் மேற்கு வட்டங்களில் கிறித்துவ நாடார்களின் எண்ணிக்கை இந்து நாடார்களின் எண்ணிக்கையை விட மிகுதி. மாவட்டம் முழுவதையும் எடுத்துக் கொண்டால் இரு சாரரும் ஏறக்குறைய சம எண்ணிக்கையுடையவராய் இருப்பர்.


கலவரம் உண்மையிலேயே மதத் தன்மை பெற்றிருந்தால், அதாவது இந்து நாடார்களும் கிறித்துவ நாடார்களும் மோதியிருந்தால் கலவரத்தை அடக்குவது மிகக் கடினமாயிருந்திருக்கும். இழப்புகளும் மிகப் பெரிதாயிருந்திருக்கும். மீனவர் - நாடார் மோதலை சாலையைக் கண்காணித்ததன் மூலமே காவல்துறையினரால் எளிதில் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் உண்மையான மதவடிவைக் கலவரம் எடுத்திருந்தால் ஒவ்வொரு ஊருக்குள்ளும் குருதியாறு ஒடியிருக்கும். கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல் துறையின் ''அத்துமீறல்களும்'' பேரளவில் நிகழ்ந்திருக்கும்.

[5]இடங்கைப் பொதுமைக் கட்சியினர் போல் ஊர்வலம் எதுவாயிருந்தாலும் கொடி பிடித்துக்கொண்டு கலந்துகொள்ளும் பழக்கம் தன்னிடம் படிந்து விடாமல் இவர் பார்த்துக்கொள்வது நல்லது.

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (3)

புதிய உறவுகள்

1956இல் மாநிலங்கள் மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் குமரி மாவட்டம் உருவாக்கப்பட்டு தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. அதன் விளைவுகள் நாடார்களிடையிலும் மீனவர்களிடையிலும் புதிய சூழ்நிலைகளை உருவாக்கின.

தி.த.நா.கா. 1956இல் ஒட்டுமொத்தமாக இந்தியத் தேசியக் காங்கிரசின் தமிழ்நாடு மண்டலக் குழுவில் இணைந்தது. தாம் வேண்டி நின்றவாறு தேவிகுளம்-பீர்மேடு தமிழகத்துடன் இணையவில்லையாயினும் இ.தே.கா.வினுள்ளிருந்தே தொடர்ந்து போரடப்போவதாகத் தீர்மானம் நிறைவேற்றி அவர்கள் அக்கட்சியில் இணைந்தனர்.[1]

திருவிதாங்கூர் முடியாட்சியின் கீழ் இருந்த போது அங்கு திவானாக இருந்த சி.பி. இராமசாமி ஐயர் கட்டாய இலவயக் கல்வித் திட்டத்தை ஆய்வு அடிப்படையில் இன்றைய குமரி மாவட்டப் பகுதிகளில் புகுத்தினார்.

இந்தத் திட்டத்தின் படி 5 ஆண்டுகள் நிறைந்த ஒவ்வொரு சிறுவரையும் கண்டுபிடித்து ஆசிரியர்கள் பள்ளியில் சேர்க்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளைப் பள்ளிக்கு விட மறுத்தால் தண்டனை உண்டு. பள்ளிகளில் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு காலை, மாலை என்று முறை வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டன. ஏழை மாணவர்களுக்கு நண்பகல் உணவு வழங்கப்பட்டது. அரிசி, உளுந்து போட்டுக் கஞ்சி வைத்து அதன் மீது தேங்காய்த் துருவலைத் தூவி தேங்காய்த் துவையலுடன் கூடியது இந்த நண்பகல் உணவு. எளிமையுடன் சுவையுமுள்ள சத்துணவு இது. இத்திட்டம் 1946 அல்லது 47இல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் குமரி மாவட்டத்தில் எழுத்தறிவற்றோரே இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

இந்தக் கல்வித் திட்டத்தின் பயனாக, குமரி மாவட்ட மக்களிடையில், குறிப்பாக, கல்வி வாய்ப்பு குன்றியிருந்த நாடார்களிடையில் கல்வியறிவு திடீரென வளர்ந்து நின்றது. குமரி மாவட்டம் உருவாகித் தமிழகத்துடன் இணைந்தவுடன் கல்வியறிவு பெற்றிருந்த குமரி மாவட்ட இளைஞர்களுக்கு மேற்படிப்பு வாய்ப்புகளும் வேலைவாய்ப்புகளும் பெருகின. இவற்றுக்கு தி.த.நா.கா. காலத்தில் திருவிதாங்கூரில் ஒரு கூட்டணி அரசில் அமைச்சர் பொறுப்பிலிருந்த சிதம்பரநாதனாரும் பிறரும் மிகவும் உதவி புரிந்தனர். இந்தக் கட்டாயக் கல்வியால் தாய் மொழியாகிய தமிழில் கல்வி பெற்று மலையாளத்தை ஆட்சி மொழியாகக் கொண்ட திருவிதாங்கூர் அரசில் வேலைவாய்ப்பும் மேற்படிப்பு வாய்ப்பும் அற்ற நிலையை எதிர்நோக்கியிருந்த இளைஞர்களின் பங்கு தி.த.நா.கா.வின் போராட்டங்களில் மிகப் பெரிதாகும்.

புதிய சூழ்நிலைகளில் உருவான இந்து நாடார்களின் வளர்ச்சி சீர்திருத்தக் கிறித்துவ நாடார்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை ஏன்?

முன்பு கல்வியில், அதிலும் சிறப்பாகப் பெண் கல்வியில் சிறப்புற்றிருந்தவர்கள் இவர்களே. ஆனால் இன்று கல்வியில் ஆண்களோடு மட்டுமல்லாமல் பெண்களோடும் ஒவ்வொரு துறையிலும் இந்து நாடார்கள் சீர்திருத்த சபைக் கிறித்தவர்களுக்கு இணையாகிவிட்டார்கள். இது சீர்திருத்த சபைக் கிறித்துவர்கள் மனதில் அழுக்காற்றை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல முன்பு ஆடவர்கள் தகுந்த மணமகளுக்காகவே மத மாற வேண்டியிருந்தது.

இருந்தாலும் பெண்களைப் பொறுத்தவரையில் கிறித்துவர்களின் நிலைமை இந்துக்களை விட இன்றும் ஒரு படி மேலாகவே உள்ளது. இந்து நாடார்ப் பெண்களிடையில் கல்வி வளர்ச்சி பெருகினாலும் பிற ஆடவரோடு நெருங்கிப் பழகுவதற்கு அவர்களுக்கு இன்னும் உரிமை கிடைக்கவில்லை. நிலக்கிழமைக் குடும்ப அமைப்பினுள் அவர்கள் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஆனால் கிறித்துவப் பெண்கள் ஆடவர்களுடன் நெருங்கிப் பழகுவதற்கு அவர்களது குடும்பத்தினர் தடையாயிருப்பதில்லை. எனவே கல்வித் திறனிலும் பதவி நிலையிலும் உயர் நிலையிலுள்ள பல இந்து நாடார் இளைஞர்கள் கிறித்துவப் பெண்களை மணக்க விரும்பி மதம் மாறுவது இன்றும் தொடர்கிறது. இந்துக்களிடையில் கிறித்துவதத்தின் மீது வெறுப்பு மிகுவதற்கு இது ஒரு பெரும் காரணியாக இன்றும் நீடிக்கிறது. தகுதி உயர்வுள்ள இளைஞர்கள் தங்கள் பெண்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு நழுவி விடுகிறதே என்பது தான் முகாமையான காரணம்.[2]

குமரி மாவட்டம் கல்விச் சாலைகள் நிறைந்த மாவட்டம். அரசுக் கல்வி நிறுவனங்கள் நீங்கலாக எஞ்சிவற்றில் பெரும்பாலானவை கிறித்தவ மத நிறுவனங்களின் கைகளிலேயே உள்ளன. கிறித்துவ மதத்துக்குப் பிறரை ஈர்க்கும் அமைப்புகளாக இந்தக் கல்விச் சாலைகள் இயங்கி வருகின்றன. பழைய தலைமுறைக் கிறித்துவர்களைவிடப் புதிதாக மதம் மாற ஆயத்தமாயுள்ளவர்களுக்கு இங்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதையும் மீறி இந்துக்களுக்கு இங்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும் பதவி உயர்வுகளில் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். எனவே இந்து நாடார்களில் படித்தோருக்கு, குறிப்பாக ஆசிரியர்களுக்கு கிறித்துவர்கள் மேல் கசப்பு உருவாகியுள்ளது.

இவ்வாறு தங்களை நாடார்களிடையில் ஓர் உயர்ந்த பிரிவினராகக் கருதியிருந்த சீர்த்திருத்தக் கிறித்துவர்களுக்கும் இவர்கள் மீது ஏற்கெனவே பகை கொண்டிருந்த பழைய முதலூடிகளின் பின்னால் அணிவகுத்து நின்ற படித்த நாடார்களின் பகுதியினருக்கும் பகை வளர்ந்து வந்தது.

இதற்கிடையில் இன்னொரு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் இந்து மதத்தையும் தில்லி ஆதிக்கத்தையும் எதிர்த்து திராவிட இயக்கம் வளர்ந்து மக்களிடையில் பெரும் செல்வாக்குடனிருந்தது. தமிழக(திராவிட) விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து அது போராடியது. இந்தப் போராட்டத்தால் தமிழகத்தில் பார்ப்பனர்களின் கைகளிலிருந்த சாதியமும் பல்வேறு மதத் தலைவர்களுக்கு மக்கள் மீதிருந்த செல்வாக்கும் இற்று நொறுங்கத் தொடங்கின.[3] இதைக் கீழறுக்க இந்திய முதலாளிகளும் தமிழகத்துப் பார்ப்பன, மேல் சாதியினரும் சூழ்ச்சி செய்தனர். விவேகானந்தர் என்ற துறவியைப் பற்றி, அவர் இந்தியாவின், இந்து மதத்தின் மதிப்பை உலகில் நிலைநாட்டியவரென்ற கருத்துப் பரப்பப்பட்டது. ஆனால் உண்மையில், பார்ப்பனர்களின் வல்லாண்மையைச் சாடியதால் பார்ப்பனரல்லாத இத்துறவியை ஒரு காலத்தில் இவர்கள் புறக்கணித்தனர். தமிழரான இராமநாதபுரம் அரசர் தான் இவரை அமெரிக்கா அனுப்பி வைத்ததுடன் இந்தியா முழுவதையும் சுற்றி வரவும் வைத்தார். ஆனால் தமக்கு இடர் வந்த காலத்தில் முன்பு தம்மால் புறக்கணிக்கப்பட்ட இந்தத் துறவியின் பெயரைத் தங்கள் ஆயுதமாக இவர்கள் பயன்படுத்தத் தயங்கவில்லை. (பாரதியாரைப் பொறுத்தும் இவர்கள் இதே நடைமுறையைத் தான் பின்பற்றினர். வ.உ.சி.யைப் பொறுத்து சிவனிய வெள்ளாளரும் இவ்வாறே.) புத்த மதக் கருத்துகளை இந்து மதத்துக்கு ஏற்றிக் கூறி அதை விவேகானந்தர் வெளிநாடுகளில் கவர்ச்சி பெறச் செய்திருந்தார். வீரார்ப்பான சில முழக்கங்களையும் இந்து மதத்துக்கு அவர் வைத்தார். ஆனால் குமுக அமைப்பில் மாற்றம் எதுவும் நிகழ்த்தாமல் கம்பும் தடியும் கொண்டே செத்துக் கொண்டிருக்கும் இந்து மதத்தை உயிர்ப்பிக்க ஒரு கும்பல் கிளம்பியது.

இந்தத் துறவி குமரி முனைக்கு வந்ததாகவும் கடலில் நீந்திச் சென்று ஒரு பாறையின் மீது ஊழ்கத்தில்(தியானத்தில்) இருந்ததாகவும் ஒரு கதை. எனவே விவேகானந்தருக்கு ஒரு நினைவாலயம் எழுப்புவதாகக் கூறி ஒரு குழு புறப்பட்டது. திராவிடர் இயக்கத்தால் மனம் புழுங்கியிருந்த பண முதலைகள் மனம் போல் பணத்தை வாரியிறைத்தனர். வடநாட்டு முதலாளிகளும் மார்வாரிகளும் ஏராளமான பணத்தைக் குவித்தனர். மண்டபம் கட்டி முடித்ததும் அதைக் கட்டியாள வங்கத்துப் பார்ப்பனர் வந்து சேர்ந்தனர். அத்துடன் இரா.சே.ச.வும் (இராட்டிரீய சுயம் சேவக் சங்கம்) குமரி மாவட்டத்தில் நுழைந்து எங்கு கால் ஊன்றலாம் என்று இடம் தேடியது.

குமரி மாவட்டத்தின் மேற்கு வட்டங்களில் நாடார்களுக்கும் நாயர் - குறுப்புகளுக்கும் பூசல்கள் அடிக்கடி நடைபெற்றன. நாடார்கள் பெரும்பாலும் கிறித்துவர்களாயிருந்ததால் இந்துக்கள் என்ற பெயரில் நாயர் - குறுப்புகளிடையில் இரா.சே.ச. முதன்முதலில் புகுந்தது. தோவாளை, அகத்தீசுவரம் வட்டங்களில் தம் மேல்சாதிச் செல்வாக்கை நாள்தோறும் இழந்துவரும் மேல்சாதியினரிடமும் முதலூடி நாடார்களிடமும் அது செல்வாக்குப் பெற்றது.

அடுத்து குமரி முனையில் விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு முன்பிருந்தே அப்பாறை மீது மீனவர்களாகிய கிறித்துவர்கள் உரிமை கொண்டாடினர். இப்பாறையைக் குறித்து நெடுநாள் வெளியுலகுக்குத் தெரியாத போராட்டம் நடைபெற்று வந்திருக்கிறது. அது பின்னர் 1980இல் வெடித்தது.

விவேகானந்தர் நடுவத்தைச் சேர்ந்த வங்கப் பார்ப்பனர்கள் தமக்கு மீனவர்கள் இடையூறு செய்வதாகத் தாளிகைகள் மூலம் ஓலமிட்டனர். மீனவர்கள் தம் குடியிருப்புகள் அழிக்கப்படுவதாகவும் கட்டுமரங்கள் விடும் இடம் பறிக்கப்படுவதாகவும் முறையிட்டனர். மாநில முதல்வர் ம. கோ. இராமச்சந்திரன் வந்து பார்த்து எந்த முடிவையும் கூறாது சென்றார். தமக்கெதிராக அரசு இயங்குவதாக மீனவர்கள் கருதினர். மீனவரான திரு எட்மண்டின் கட்சிமாற்றம்[4] வேறு அரசுக்கு எதிரான உணர்வை மீனவர்களிடையில் தோற்றுவித்தது. இதற்கிடையில் இந்துக்களுக்குக் கொடுமை இழைக்கப்படுவதாகத் தாளிகைகள் ஓலமிட்டன. பணக்கார நாடார்களும் பிற சாதியினரும் நடத்தும் விசுவ இந்து பரிச்சத் எனும் அமைப்பு இந்து மதத்துக்கு வந்துள்ள ''அறைகூவலை'' ஊரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டிப் பரப்பியது.


இதற்கிடையில் இந்து நாடார்களின் வளர்ச்சியால் தம் தனி உயர்வுக்கு ஏற்பட்டுள்ள அறைகூவலை எதிர்கொள்ள கிறித்துவ நாடார்கள், குறிப்பாக சீர்திருத்த சபையினர் ஆள் திரட்டினர். கிறித்துவ வழக்கறிஞர் சங்கம் என்பது போன்ற அமைப்புகளை நிறுவினர். பழஞ்சபைக் கிறித்துவர்களாகிய நாடார்களையும் மீனவர்களையும் கிறித்துவரான பிற சாதியினரனைவரையும் ஒன்றுகூட்டினர். நாளெல்லாம் நற்செய்திக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தியா போன்ற ஏழை நாடுகளைக் குலைப்பதையே தம் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அமெரிக்கா, கானடா, மேற்கு செருமனி போன்ற நாடுகளிலிருந்து நன்கொடைகள் என்ற பெயரில் பெருந்தொகையான பணம் வந்து குவிந்தது. இரு புறத்திலும் மக்கள் தாங்கள் விரும்பாமலே, தங்களை அறியாமலே அணி திரட்டப்பட்டனர்.

குமரி மாவட்டம் உருவான பின்னர் நாடார்களைப் போல மீனவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் பெருகின. தி.த.நா.கா.விலிருந்து இ.தே.கா.வுக்குச் சென்ற மீனவரான திருமதி லூர்தம்மாள் சைமன் தமிழக அமைச்சராக இருந்த காலத்தில் அவர் மீனவர்களுக்குப் பல வழிகளில் உதவினார். மீன்வளத்துறையிலும் பிற துறைகளிலும் வாணிகக் கப்பல்களிலும் கப்பற்படையிலும் அவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். வெளிநாடுகளுக்குச் சென்றும் பெரும் பொருள் ஈட்டினர். தங்கள் இருப்பிடமாகிய கடற்கரையை அண்டியுள்ள நாடார்களின் வயல்களையும் தென்னந்தோப்புகளையும் விலைக்கு வாங்கினர். இவ்வயல்களையும் தோப்புகளையும் பெரும்பாலும் நாடார்களே பராமரித்தனர். இவ்வாறு ஒரு புறம் உறவுகள் வளர்ந்தாலும் இன்னொரு புறம் கசப்புகளும் வளர்ந்தன. ஏழைகளாக இருந்த மீனவர்கள் செல்வ நிலையடைவதும் தம் நிலங்களை விலைக்கு வாங்குவதும் நாடார்களிடையில் அழுக்காற்றை ஏற்படுத்தின. அதே நேரத்தில் தாம் கல்வியிலும் செல்வ நிலையிலும் உயர்ந்தும் நாடார்கள் முன்போலத் தாழ்த்தியே நடத்துவது மீனவர்களிடையில், குறிப்பாக இளைய தலைமுறையினரிடையில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அவர்களது தமிழ் ஒலிப்பைக் கேலிப்பொருளாக்குவதுடன் பேருந்துகளில் மீனவப் பெண்களை(மாணவிகளை) நாடார் இளைஞர்கள் கேலி பேசுவதும் வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும். இதுவும் ஆத்திரம் வளர்வதற்குக் காரணமாகியது. பார்ப்பதற்கு எல்லாம் இயல்பாக இருப்பதாகத் தோன்றினாலும் உள்ளே எரிமலை குமுறிக் கொண்டிருந்தது.

இதே போன்று முகமதியர்களும் முனைப்பாக மதப்பணிகள் புரிந்து வந்தனர். எண்ணிக்கையில் இவர்கள் சிறு விழுக்காட்டினரே. இருப்பினும் இவர்களது பங்கு பெரிது.

1982 பெப்ருவரி 12, 13 ஆம் நாட்களில் இந்து மத ஓற்றுமை எழுச்சி மாநாடென்ற பெயரில் ஒரு மாநாடும் மாபெரும் ஊர்வலமும் நடந்தன. ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இதில் ஒரு மறையம் அடங்கியுள்ளது. வைகுண்டர் எனப்படும் முத்துக்குட்டியடிகளின் கல்லறை இன்று அய்யா வழியினர் எனப்படும் வைகுண்ட நெறியினரின் சாமிதோப்புப் பதி என்ற பெயரில் திகழ்கிறது. அதை நடத்தும் அறங்காவலர் குடும்பத்தைச் சேர்ந்த பால பிரசாபதி என்ற இளைஞரை இம்மாநாட்டை நடத்தியோர் மயக்கி வயப்படுத்தி விட்டனர். [5] அவரது வேண்டுகோளின் பேரில் கலந்து கொண்ட அய்யா வழி மக்களாலேயே மாநாடும் ஊர்வலமும் ''மாபெரும்'' எனும் அடைமொழிக்கு உரியவாயின.

இங்கு ''இந்து'' மதத்துக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவைப் பற்றி ஒன்றைக் கூறியாக வேண்டும். ''இந்து'' மதம் என்று மேல்சாதியினரும் படித்தவரும் இந்து மத இயக்கங்கள் எனப்படுபவையும் கூறுவதும் தமிழகத்தின் சராசரி மக்களின் மதமும் வெவ்வேறானவை. சிவனும் திருமாலும் முருகனும் பிள்ளையாரும் காளியும் இந்துக்களின் தெய்வங்கள் என்று போற்றி அவற்றுக்கு சமற்கிருதத்தில் மந்திரங்களைச் சொல்லும் பார்ப்பனர்களை முகவர்களாக்கி அம்முகவர்களுக்குத் தரகுப் பணம் (தட்டில் போடும் காணிக்கை) கொடுத்து அத்தெய்வங்களிடமிருந்து எட்டி நின்று வணங்குவர் ''மேல்''வருப்பார். ஆனால் எளிய தமிழனோ ''தரகு'' கொடுக்கமாட்டான். ''காணிக்கைப் பெட்டியில்'' வேண்டுமானால் பணம் போடுவான். ஆனால் அவன் மதிக்கும் தெய்வங்கள் வேறுண்டு. காடன், பன்றிமாடன் உட்பட எண்ணற்ற மாடன்கள், கறுப்பண்ணன், மதுரை வீரன், இயக்கி, சாத்தன், காலன், கன்னி, பேய்ச்சி, முண்டன் என்று இப்பட்டியல் நீண்டுகொண்டே போகும். இத்தெய்வங்களுக்கு அவன் பூசை செய்வான்; அவற்றோடு தன் தாய்மொழியில் பேசி தன் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வான்; அதாவது ''சங்கடங்கேட்பான்'', சினமேற்படும் போது நேருக்கு நேர் ஏசவும் செய்வான். அடிப்படையான குமுக மாற்றம் நிகழாமல் அவனை இத்தெய்வங்களிடமிருந்து பிரிக்க முடியாது. அதுவரை எந்த உத்தியைக் கையாண்டும் இவர்களது ''இந்து மதக் கூண்டுக்குள்'' அவர்களைக் கொண்டு வரவும் முடியாது.

இனி விட்ட இடத்துக்கு திரும்புவோம். மாநாட்டில் வீராவளியான உரைகள் நிகழ்த்தப்பட்டன. வெட்டுவோம், குத்துவோம் என்ற முழக்கங்கள் கேட்டன. இந்த வெற்றாரவாரம் கிறித்துவ மக்களைத் தம் பின்னால் அணி திரட்டி வைத்திருந்தோரின் பணியை எளிதாக்கியது. மிக எளிதாக மீனவர்களை அணிதிரளச் செய்ய இது போதியதாக இருந்தது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1]இத் தீர்மானம் பற்றிப் பின்னர் எவரும் பேச்சே எடுக்கவில்லை ''கட்சியைக் காப்பாற்றுவதற்காகக் கொள்கையைக் கைவிட்ட'' தி.மு.க.வினர் அவ்வப்போது கட்சித் தொண்டர்களைக் கிளர்ச்சி பெறச் செய்யவும் நடுவணரசிடம் கொஞ்சம் ''பிடிமானம்'' வைத்திருக்கவும் ''பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டாலும் அதைத் தேவையாக்கும் சூழ்நிலைகள் இன்னும் நிலவுகின்றன'' என்று கூறுவது போன்றது இது. இது பதவியைப் பிடிப்பதற்காகக் கொள்கையைக் கைவிடும் போது அரசியல் கட்சிகள் பொதுவாகக் கையாளும் ஓர் உத்தி. ஆனால் தி.மு.க.வினரை விட தி.த.நா.கா.வினர் எய்திய வெற்றி பெரிது என்பதில் ஐயமில்லை.

[2]கலப்புத் திருமணங்களில் பெரும்பாலும் தகுதி மிகுந்த ஆடவர்களையே அவர்களை விட உயர்ந்த சாதிப் பெண்கள் மணந்து கொள்கின்றனர். இதன் மூலம் ஆடவனின் சாதியிலுள்ள பெண்களுக்கு இவ்வாறு நடைபெறும் ஒவ்வொரு கலப்பு மணத்தின் விளைவாகவும் ஒவ்வொரு தகுதி மிகுந்த மணமகன் குறைந்து விடுகிறான். ஒருவேளை கலப்பு மணம் பரவலாகும் போது இது ஒரு புதுச் சிக்கலாக வெடிக்கக் கூடும்

[3]இன்றைய நிலை சொன்னால் வெட்கக்கேடு. இன்று திராவிட இயக்கங்களே பார்ப்பனியத்தை எதிர்த்து ஒன்று திரண்டு நின்ற மக்களைத் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகத் தம்முள் மேல்ச்சாதி, பிற்படுத்தப்பட்டோர், தாழத்தப்பட்டோர் என்று பிளவுபடுத்தி அவர்களைத் தனித்தனியே பார்ப்பனர்களுடன் கூட்டுச்சேர உதவி மத வேறுபாடுகளை மதப் பகைமையாகக் கூர்மைப்படுத்த உதவி வருகின்றன.

[4]அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு. இன்று மீண்டும் அ.தி.மு.க.வுக்குத் திரும்பி விட்டார். இவர்களையும் ஒரு மக்கள் கூட்டம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய இழிநிலை தான் கொடுமை?

[5]இவர் பின்னாட்களில் தான் பிறரின் கருவியாகிவிட்டதை உணர்ந்து இந்தக் கும்பலிலிருந்து விலகிவிட்டார் என்பது வேறு கதை. இருந்தாலும் நடந்தது நடந்தது தானே!

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (2)

மாவட்டத்தின் மக்கள் வரலாறு

இம்மாவட்டம் மாறி மாறி சேர, பாண்டிய அரசர்களின் செல்வாக்கின் கீழ் இருந்திருக்கிறது. பாண்டியர்களின் ஆட்சியின் கீழிருந்தமைக்குச் சான்றாக பூதப்பாண்டி, அழகியபாண்டிபுரம் போன்ற ஊர்ப் பெயர்கள் நிலவுகின்றன. பாண்டியன் அணை என்ற பெயரில் ஒர் அணைக்கட்டு பெருஞ்சாணி அணையின் கீழே அமைந்துள்ளது. தென்பாண்டி நாட்டின் ஒரு பகுதியாகவும் இப்பகுதி குறிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தைப் பாண்டி என்றும் நெல்லை மாவட்டத்தினரைப் பாண்டிக்காரர்கள் என்றும் இங்குள்ள மக்கள் அழைப்பதை இப்பகுதி சேரர்களின் அல்லது வேறு சிற்றரசர்களின் கீழ் நெடுங்காலம் இருந்தது என்பதற்குச் சான்றாகக் காட்டலாம்.

இம்மாவட்டத்தில் தோவளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய வட்டங்கள் முறையே கிழக்கிலிருந்து மேற்காக அமைந்துள்ளன. தோவாளை வட்டத்தின் பெரும்பகுதி நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படுகிறது. நாஞ்சில் என்ற சொல்லுக்கு கலப்பை என்பது பொருள். இப்பகுதி பெரும்பாலும் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு இரண்டு பருவங்கள். ஏறக்குறைய 8 முதல் 10 மாதங்கள் வரை மழையுண்டு. குத்திறக்கமாகச் சாயும் நிலத்தில் நீரின் கசிவு எப்போதும் இருக்கும். இக்குத்துச் சாய்வில் சிறு சிறு குளங்களை அமைத்து அவற்றின் கீழுள்ள நிலத்தை அகப்பற்று என்று அழைக்கிறார்கள். மலையிலிருந்து அடித்து வரப்படும் வண்டலால் இயற்கையாகவே உரவளமிக்க மண்ணைக் கொண்டது இந்ந நிலப்பரப்பு.

நாஞ்சில் நாட்டில் வாழ்வோரில் பெரும்பாலோர் மருமக்கள் வழி வேளாளர் எனப்படும் நாஞ்சில் நாட்டு வேளாளராவர். பள்ளர்களும் நாடார்களும் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இவர்களிடையில் மருமக்கள் தாய முறை எனும் பெண்ணுரிமைக் குமுக அமைப்பு இருந்து அண்மையில் தான் மறைந்தது. இவர்கள் குமரி மாவட்டத்தை அடுத்த நெல்லை மாவட்டத்திலிருந்து வந்து குடியேறியிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. மேலும் நாஞ்சில் நாட்டு வேளாளர்கள் பேசும் மொழி பிற மக்களின் பேச்சு வழக்குகளிடமிருந்து மாறுபட்டு நெல்லை மாவட்ட வேளாளர்கள் பேசும் மொழி வழக்கை ஒத்திருக்கிறது. சேர நாட்டு அரச மரபைத் தழுவி இவர்கள் மருமக்கள் வழியைக் கடைப்பிடித்திருக்கலாம். ஆனால் நாயர்களின் தாய்வழி முறைக்கும் இவர்களது மருமக்கள் வழி முறைக்கும் சில அடிப்படை வேறுபாடுகள் உள்ளன.

நாஞ்சில் நாட்டு வேளாளர்களிடையில் நிலவிய மருமக்கள் வழியை எதிர்த்துப் போராடியோரில் கவிமணி தேசிக வினாயகர் சிறப்பிடம் பெறுகிறார். அவர் எழுதிய மருமக்கள் வழி மான்மியம் என்ற பாவியம் இப்போராட்டத்தில் முகாமைப் பங்கு ஏற்றது. இன்று இவ்வமைப்பு சட்டத்தின் மூலம் அகற்றப்பட்டுவிட்டது.

நாஞ்சில் நாட்டை நாஞ்சில் வள்ளுவன் என்ற கழகக்காலக் குறுநில மன்னன் ஆண்டதாகக் கழக இலக்கியம் கூறுகிறது. அவனைச் சார்ந்த மக்கள் இன்று எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.

கடற்கரையைத் தொட்டு அமைந்திருக்கும் அகத்திசுவரம் வட்டத்தில் கடற்கரையில் மீனவர்களும் அதை அடுத்த பகுதியில் நாடார்களுமாகச் செறிந்து வாழ்கிறார்கள். அகத்திசுவரம் வட்டம் என்று வழங்கப்படும் பகுதி முன்பு புறத்தாய நாடு என்று வழங்கப்பட்ட பகுதியாகும்.

நாடார்கள் எனும் சாதியினர் ஒரு வரலாற்றுப் புதிராகவே உள்ளனர். இன்று தமிழகத்தில் மேலோங்கி நிற்கும் பெரும்பான்மையான சாதிகளும் இது போன்ற புதிர்களாகவே உள்ளன. ஆனால் நாடார்களின் புதிர் ஒர் இருமடிப் புதிர்.

நாடார்களைப் பிற சாதியார் சாணார்கள் என்று குறிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு அழைக்கப்படுவதை நாடார்கள் இழிவாகக் கருதுகிறார்கள். சாணார், நாடார் எனும் இரு சொற்களும் ஒரே சாதியினரையே குறிக்கும் சொற்கள் என்பதைத் தென் மாவட்டங்களில் வாழும் மக்கள் அறிவர். ஆயின் கோவை போன்ற மாவட்டங்களில் தொழில்-வாணிக நிமித்தமாகக் குடியேறியுள்ள தென் மாவட்டத்து நாடார்களுக்கும் அங்கு வாழும் சாணார்களுக்கும் தொடர்பு ஏதும் இல்லாததால் அங்குள்ள மக்களுக்கு இவ்விரு பிரிவு மக்களும் வெவ்வேறு சாதியினராகவே தோன்றுகின்றனர். இதிலிருந்து நமக்குத் தோன்றுவது, சாணார் என்பது பனையேறும் மக்களின் பெயர். இது தமிழகம் முழுவதற்கும் பொருந்தும். குமரி மாவட்டம் நெல்லை மாவட்டம் ஆகிய பகுதிகளில் ஊர்த் தலைவர்கள் நாடான்கள் எனப்பட்டனர்.[1] ஊர்த்தலைவனும் ஊராரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக, பல நேர்வுகளில் ஒரே குடும்பத்தினராக இருந்ததால் நாளடைவில் ஊர்த்தலைவன் பட்டத்தை ஊர் மக்களும் தமக்கு வைத்துக் கொண்டனர்.

சாணார் என்ற சொல்லுக்குச் சரியான பொருள் தெரியவில்லை. சான்றோர் என்பதன் மருவே சாணார் என்பர். சான்றோர் → சான்றார் → சாணார் என்பார் தேவநேயப் பாவாணர். இலங்கையில் பனை யேறுவோருக்கு நளவர் என்று பெயர். நறவு = கள், நறவர் = கள் இறக்குவோர். நறவர் → நளவர். இது போன்ற பொருட்பொருத்தம் எதுவும் சான்றோர் என்ற சொல்லுக்கோ சாணார் என்ற சொல்லுக்கோ பனையேறும் தொழிலோடு இல்லை.

சான்றாண்மை என்ற பண்புப் பெயரில் ஒரு சாதி எழ வேண்டுமாயின் அவர்கள் அரசியலில் அல்லது போரில் சிறப்புற்ற தலைவர்களாயிருந்திருக்க வேண்டும். அப்படியாயின் அவர்கள் பனையேற வேண்டிய தேவை என்ன என்ற கேள்வியும் எழுகிறது. எதிரியின் படையெடுப்புகளின் விளைவாக உள்நாட்டுப் படை தோல்வியுற்ற போது தண்டித்துத் துரத்தப்பட்ட படைத் தலைவர்கள் இந்நிலையடைந்திருக்கலாம்.

பள்ளர்களில் சாணாப் பள்ளர்கள் என்றொரு பிரிவினர் உள்ளனர். இவர்கள் சாத்தனை வழிபடுகின்றனர். உயிர்ப் பலி ஏற்காத சமணச் சாத்தன் இவன். சமணர் என்ற சொல்லிலுள்ள சகர முதல் சானா என்று ஆரியிருக்கும். சானாப்புள்ளி → சாணாப்புள்ளி → சாணார். எடு. வேனாப்புள்ளி = வெள்ளாளப் புள்ளி, தூனாப்புள்ளி = துலுக்கப் புள்ளி. சமணர்கள் மீது இடைக் காலத்தில் நிகழ்த்தப்பட தாக்குதல்களின் விளைவாக இறுதியில் சிலர் பனை ஏறும் தொழிலை மேற்கொண்டிருக்கலாம்.

கரிகாலன் ஈழத்திலிருந்து சிறைப்பிடித்து வந்த பன்னீராயிரம் போர்வீரர்களைக் காவிரிக்குக் கரைபோடப் பணித்தான் என்பதை அறிவோம். அப்போது அடிமை வேலை பார்க்க மறுத்தோரை யானைக்காலில் இடறப் பணித்தான் கரிகாலன். அதற்கு அவர்கள் அஞ்சாமல் நிற்கவே அவர்களை விடுவித்ததாகவும் ஆனால் தொடர்ந்து கொடுமைகள் புரிந்ததாகவும் நாடார்களின் வரலாறு கூறுகிறது. இவர்களும் இச்சாதியினரில் கலந்திருக்கலாம். இவ்வாறு சாணார்களின் தோற்றம் பல காரணங்களின் விளைவாக இருக்கலாம்.[2]

சாணார் என்ற சொல்லுக்குச் சான்றோர் என்ற சொல்லை மூலமாகக் கூறிப் பெருமைப்படும் நாடார்கள் தங்களை அப்பெயரால் அழைப்பதை விரும்புவதில்லை. கோனார் என்ற சொல்லுக்கு அரசன் என்று பொருள்படும் கோன் என்ற சொல்லை மூலமாகக் காட்டும் ஆயர் குலத்தார் தம்மைக் கோனார் என்று அழைப்பதை விரும்பாமல் இன்று யாதவர் என்று அழைத்துக் கொள்வது போன்றது தான் இதுவும்.

ஒவ்வொரு சாதிப் பெயரும் அச்சாதியின் ஒரு குறிப்பிட்ட வாழ்நிலையைக் குறிக்கிறது. வாழ்நிலையில் மேம்பாடடைவோருக்குப் பழைய பெயர் இழிவாகத் தோன்றும். எனவே அவர்கள் புதிய பெயர்களைத் தேடிச் சூட்டிக் கொள்ளும் போது அவ்வாறு மேம்பாடடையாதோரும் அவர்களைப் பின்பற்றுகிறார்கள்.

நாடார்கள் குமுகத் தரத்தில் உயர்நிலையிலிருந்து கீழிறங்கியவர்களாயிருக்கக் கூடும் என்ற எண்ணத்தை உருவாக்கும் சான்று ஒன்று உள்ளது. பெண்களுக்குக் கைம்மையில் கடும் நோன்பும் மறுமணமோ மணவிலக்கோ இன்மையுமே அது. (இன்று இவை தளர்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது). இவற்றை மீறுவோரை பிழுக்கைகள் என்று ஒதுக்கி வைக்கும் வழக்கம் அண்மையில் தான் மறைந்திருக்கிறது.

குமரி மாவட்டத்து அகத்திசுவரம் வட்டத்தில் வாழும் நாடார்களில் பெரும்பாலோர் சென்ற இருநூறு ஆண்டுகளுக்குள் அங்கு குடியேறியவராகவே காணப்படுகின்றனர். நாயக்கர்கள் மதுரையிலிருந்து தெற்கு நோக்கிப் பரவிய போது அங்கு வாழ்ந்த மக்களில் பலர் துரத்தப்பட்டனர் அல்லது தப்பியோடினர். குமரி மாவட்டம், நெல்லை மாவட்டம் ஆகியவற்றின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் அரசியல் சூனியப் பகுதிகளாக இருந்தன. இப்பகுதிகள், குறிப்பாக நெல்லை மாவட்டப் பகுதிகள் மக்கள் வாழத் தகுதியற்ற தேரிகளாய் இருந்தன. நெல்லை மாவட்டத்து வெற்றிடத்தில் குடியேறியோர் போக எஞ்சியோர் குமரி மாவட்டத்தில் குடியேறி ஏற்கனவே இருந்தோரை வெளியேற்றினர். இங்குள்ளோரில் பெரும்பாலோரிடம் கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்து வந்தமைக்கான மரபுச் செய்திகள் காணப்படுகின்றன. கடம்பூர் பகுதியில் 14 ஆம் நூற்றாண்டில் ஆண்ட பஞ்ச பாண்டியர் மரபினர் இங்கு வந்து குடியேறியதாகவும் தெரிகிறது. இவ்வாறு குடியேறியவர்கள் முன்பு ஒரே சாதியாக இருந்தவர்கள் என்று கூற முடியவில்லை. இங்குள்ள தனித்தனிக் குடும்பவழிகளின் வரலாற்றைக் கேட்கும் போது இங்கு வந்து சேர்ந்த பல்வேறு சாதியினரும் தமக்கு முன்பிருந்தவர்களைப் பார்த்துத் தாமும் சாணார்கள் என்று கூறிக் கொண்டார்கள் என்று தோன்றுகிறது. இத்தகைய நிகழ்முறை தமிழகத்தின் பிற பகுதிகளில் பெரும்பான்மையோராக வாழும் பல்வேறு சாதிகளுக்கும் பொருந்தி வரும்.


தோவாளை வட்டத்து நாஞ்சில் நாட்டு வேளாளரின் பேச்சு வழக்கு ஒரு வகை. அது நெல்லை மாவட்டத்து வெள்ளாளர் கையாளும் பேச்சு வழக்கை ஒத்தது. அகத்தீசுவரம் வட்டத்து நாடார்களின் பேச்சு வழக்கு நெல்லை மாவட்டத்து நாடார்களின் பேச்சு வழக்கை ஒத்து வரும். இவற்றிலிருந்து வேறுபட்டதாக ஈழத்துத் தமிழும் குமரி மாவட்ட மீனவர் தமிழும் தோவாளை அகத்திசுவரம் வட்டங்களுக்கு மேற்கேயுள்ள அனைத்து மக்களும் பேசும் தமிழும் தெக்கன் மலையாளம் எனப்படும் அங்கு வழங்கும் மலையாளமும் நெருக்கமானவை. இவையனைத்தும் சேர்ந்து குமரி மாவட்டத்தை வரலாற்றாய்வாளர்களுக்கு வற்றா வளமுள்ள களமாக்குகின்றன.

தோவாளை வட்டத்து வேளாளர்களும் அகத்தீசுவரம் வட்டத்து நாடார்களும் அடுத்தடுத்து வாழ்ந்தாலும் தனித்தனிப் பகுதிகளில் செறிந்து வாழ்கின்றனர். ஆனால் மேற்கேயுள்ள கல்குளம், விளவங்கோடு வட்டங்களில் நாடார்களோடு நாயர்களும் குறுப்புகள் எனும் சாதியாரும் கலந்து வாழ்கின்றனர். இப்பகுதி வள்ளுவ நாடு என்று முன்பு வழங்கப்பட்டதென்றும் வேணாடு என்று வழங்கப்பட்ட பகுதியென்றும் இருவேறு கருத்துகள் வரலாற்றாசிரியர்களிடையில் நிலவுகின்றன.

நாயர்களும் குறுப்புகளும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். முடியாட்சிக் காலத்தில் இவர்களிடம் தான் பெரும்பான்மை நிலங்கள் இருந்தன. சாணார்கள் இவர்களின் நிலத்தில் உழைக்கும் அடிமைகளாக இருந்தனர். நாயர்களின் கொடுமைகள் தாங்காது இவ்வடிமைகள் அவ்வப்போது எதிர்த்து எழும் போது அடக்குவதற்காக நாயர்களால் பேணப்பட்டவர்களாகவே இக்குறுப்புகள் கருதப்படுகின்றனர். தமிழக வரலாற்றில் குறும்பர்கள் எனும் அடங்கா மக்கள் கூட்டத்தை அடிக்கடி எதிர்கொள்கிறோம். அவர்ளைக் கரிகாலன் அடக்கியதாக கழகப் பாடல்கள் கூறுகின்றன. அவர்களுக்கும் இந்தக் குறுப்புகளுக்கும் தொடர்புண்டா என்று ஆய்வது பயன் தரும்.

சென்ற இரு நூற்றாண்டுகளில் குமரி மாவட்டத்தில், குறிப்பாக நாடார்ளிடையில் நிகழ்ந்ததாக நமக்குத் தெரியவந்துள்ள வரலாறு சிறப்பானது.

சாணார்கள் வாழ்ந்த பகுதியில் அவர்களைச் சேர்ந்தோரே நாடான்கள் என்ற பெயரில் ஊர்த் தலைவர்களாக இருந்தனர். இவர்கள் திருவிதாங்கூர் மன்னரின் படிநிகராளியராக மக்களிடம் இறை தண்டி அரசனுக்கு இறுத்து வந்தனர். அரசனுக்குத் தேவையான பனை ஒலை, ஈர்க்கு, கருப்புக்கட்டி போன்ற பனைபடு பொருட்களையும் பிறவற்றையும் பெற்றுத் தர வேண்டியது இந்த நாடான்களது பொறுப்பு. இதற்காக அவன் சில சிறப்புரிமைகளை அவர்களுக்கு அளித்திருந்தான். இவை சாணார்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன. திருவிதாங்கூர் மரபுப்படி (குமரி மாவட்டம் அன்று திருவிதாங்கூர் அரசரின் கீழ் இருந்தது.) மேல் சாதியினர் அணியும் ஆடைகளுக்கு இணையாக கீழ்ச்சாதியினர் அணியக் கூடாது. அதன்படி நாயர் பெண்கள் அணியும் குப்பாயத்தைச் சாணார் பெண்கள் அணியக் கூடாது; அவர்கள் அணிந்த தாவணியையும் (மேலாக்கு, முந்தானை, தொள்சீலை என்று எப்படி வேண்டுமானாலும் குறிப்பிடலாம்) அணியக்கூடாது. சாணார் பெண்கள் இடுப்பில் குடம் வைத்துச் செல்லக் கூடாது; மண் பாண்டங்கள் தவிர பொன்ம(உலோக) ஏனங்களைப் பயன்படுத்தக் கூடாது; தாளிதம் செய்து சமைக்கக் கூடாது; வாழையிலையில் சோறுண்ணக் கூடாது; பார்ப்பனரை வைத்துப் புரோகிதம் செய்யக் கூடாது என்றெல்லாம் தடைகள் இருந்தன. தீண்டாமைக் கொடுமைகள் அனைத்துக்கும் அவர்கள் ஆட்பட்டனர். அத்துடன் பொருளியல் சுரண்டலுக்கும் வன்முறைக் கொடுமைகளுக்கும் ஆளாயினர். மாடன், இயக்கி போன்ற சிறு தெய்வங்களை மட்டுமே வணங்க அவர்களுக்கு உரிமை இருந்தது. சாவின் போது பட்டங்கட்டுதல்(உருமால் கட்டுதல்) என்ற சடங்கை மறைவாகவே நிகழ்த்த வேண்டியிருந்தது. இன்று இந்தச் சடங்கு இவர்களிடையில் அறவே இல்லை.

இதற்கு மாறாகச் சாணார்களுக்கு மறுக்கப்பட்ட இந்த உரிமைகளில் சில ஊர் நாடான்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சாணார்களுக்கும் நாடான்களுக்கும் பிணக்குகள் இருந்தன.

அதே போன்று மீனவர்கள் அரபு வாணிகர்களின் கொடுமைகளுக்கு ஆளாயினர். அரசர்களும் அவர்களை ஒடுக்கி வந்தனர். திருவிதாங்கூர் அரசாலும் அராபிய வாணிகர்களாலும் இவ்விரு சாதியாரும் கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில் 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியக் கத்தோலிக்கக் கிறித்துவ விடையூழியர்கள்(சமய ஊழியர்கள்) இம்மாவட்டத்தினுள் நுழைந்தனர். கத்தோலிக்க சமயத்தில் சேருமாறு மதகுருக்கள் மக்களுக்குக் கூறினர். போர்த்துக்கீசிய அரசரின் குடிமக்களானால் அவர் அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பார், அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவார் என்று உறுதியளிக்கப்பட்டது. உயிர் வாழ்வதே கடினமாக இருந்த நிலையில் வெளியிலிருந்து வந்த இந்தப் ''பாதுகாப்பை'' அவர்கள் ஏற்றுக் கொண்டனர். மீனவர்கள் அனைவரும் ஒரே நாளில் புதிய மதத்தைத் தழுவியதாக கூறப்படுகிறது. சாணார்களில் அகத்தீசுவரம் வட்டத்தில் சிறு அளவிலும் மேற்கேயுள்ள வட்டங்களில் பெருமளவிலும் கத்தோலிக்கத்தைத் தழுவினர். போர்த்துக்கீசியர்களின் ஆதிக்கம் இந்தியாவில் நிலைக்கவில்லை. ஆனால் மதம் மாறியோர் பழைய கொடுமைகளிலிருந்து ஒரளவு மீண்டனர். மதம் மாறாத மக்களின் துயரம் தொடர்ந்தது.

பின்னர் ஆங்கிலர் வந்தனர். தங்கள் பங்குக்கு அவர்களும் சாணார்களை மதம் மாற்றினர்; மதம் மாறியவர்களுக்குக் கல்வியூட்டினர்; தம் கல்வி நிறுவனங்களிலும் சமய நிறுவனங்களிலும் மலைத் தோட்டங்களிலும் வீடுகளிலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பளித்தனர். இவ்வாறு கல்வியும் செல்வமும் பெற்ற மதம் மாறிய சீர்திருத்த சபை (புராட்டற்றன்று) கிறித்துவச் சாணார்கள் தமக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை வேண்டிப் போராடினர். குறிப்பாகத் தோள்சீலைப் போராட்டம் என்பது அவற்றில் குறிப்பிடத்தக்கது.

தோள்சீலைப் போராட்டம் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. நாடார்கள் மத வேறுபாடின்றி இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இது முதலில் வெறும் கருத்துப் போரட்டமாகவே இருந்தது.

இரண்டாவது கட்டத்தில் (1830வாக்கில்) கிறித்துவர்கள் தனித்து நின்று போராடி இலக்குமிபாய் அரசி காலத்தில் தோள்சீலை அணியும் உரிமை பெற்றனர்.

பின்னர் மூன்றாம் கட்டத்தில் இந்து நாடார்கள் தாங்களும் தோள்சீலை அணிவதற்கான உரிமைப் போரட்டத்தில் இறங்கினர். அதைக் கிறித்துவ நாடார்கள் எதிர்த்தனர். போராட்டம் கிறித்தவர்களை எதிர்த்தும் நடைபெற்றது. பல கிறித்தவக் கோயில்களுக்குத் தீ வைக்கப்பட்டது. இறுதியில் நாடார்கள் அனைவரும் தோள்சீலை அணியும் உரிமை பெற்றனர்.[3]

நாடார்கள் மீது செலுத்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிறித்துவர்கள் நடத்திய போராட்டம் நெடுந்தொலைவு செல்லவில்லை. கிறித்தவ விடையூழியர் தம் ஆட்சியில் தலையிடுவதாக திருவிதாங்கூர் மன்னர் சென்னை ஆளுநருக்கு ஆங்கில அரசின் உள்ளுறை முகவர்(ரெசிடெண்ட்) மூலம் முறையிட்டார். எனவே கிறித்துவ விடையூழியர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் புதிதாக ஒர் இயக்கம் தோன்றியது.

இவ்வியக்கத்தை நிறுவியவர் இன்று வைகுண்டர் என்று அழைக்கப்படும் முத்துக்குட்டி அடிகளாவார். இவர் பெயர் முடிசூடும் பெருமாள் என்று இருந்ததாகவும் இவ்வாறு பெயர் வைப்பதற்குச் சாணார்களுக்கு உரிமை இல்லையென்று மறுக்கப்பட்டதால் முத்துக்குட்டி என்று பெயர் மாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது உண்மையாயின் முத்துக்குட்டி அடிகளாரின் பெற்றோரும் போராட்டத் தன்மையுடையோராகவே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.


முத்துக்குட்டி அடிகள் பிறந்தது நெல்லை மாவட்டம் என்றும் குமரி மாவட்டம் என்றும் இரு வேறு செய்திகள் நிலவுகின்றன. இதே போன்று கருத்துமுரணுக்குரிய இன்னொரு செய்தியும் உலவுகிறது. இவர் கிறித்துவராயிருந்தார் என்றும் பின்னர் தான் அதிலிருந்து திரும்பி தன் புதிய நெறியை நிறுவினாரென்றும் இச்செய்தி கூறுகிறது. கிறித்துவம் சாணார்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் என்ற மதகுருக்களின் வாக்குறுதியை நம்பி அவர் மதம் மாறினார் என்றும் கிறித்துவ மதகுருக்கள் சென்னை ஆளுநரின் ஆணைக்கடங்கி சாணார்களின் போராட்டத்தில் பங்கு கொள்வதைக் கைவிட்டதோடு மதம் மாறாத சாணார்களின் போராட்டத்தை எதிர்த்தும் நின்றதால் தான் அவர் கிறித்துவத்தைக் கைவிட்டுத் தன் புதிய நெறியை நிறுவினார் என்று இச்செய்தி கூறுகிறது. ''இந்து'' சமயப் பக்கத்திலுள்ள சிலர் இதை மறுக்கின்றனர். இந்தப் பெரியார் இயற்கையெய்தி நூற்றைம்பது ஆண்டுகளுக்கு உள்ளாக அவருடைய வரலாற்றுச் செய்திகளில் ஏற்பட்டுள்ள குழப்பம் சொல்லத் தரமன்று.

முத்துக்குட்டி அடிகள், தான் திருமாலின் தோற்றரவு என்றும் கலியை அழிக்கவே தான் தோன்றியிருப்பதாகவும் கூறினார். தான் எதிர்த்துப் போராடிய நாயர்கள் சிவனடியார்களாயிருந்ததால் இவர் மாலியத்தைக் கைக்கொண்டிருக்கலாம். இந்து சமயச் சடங்குகளுக்கு மாற்றாகப் புதிய சடங்குகளை வகுத்தார். எல்லாத் தெய்வங்களும் தன்னுள் அடங்கிவிட்டதாகவும் கூறினார். மொத்தத்தில் பல தெய்வ வழிபாட்டை ஒழித்து ஒரு தெய்வ வழிபாட்டை நிறுவி மக்களை ஒன்றுபடுத்தி பேராற்றல் மிக்கோராய்ச் செய்த மோசேயையும் முகமது நபியையும் பின்பற்றி இவர் கூறினாலும் அவர்களைப் போல் தானும் இறைவனின் தூதன் என்று கூறி போராட்ட நெறியைக் கடைப்பிடிக்காமல் தானே கடவுளின் தோற்றரவு என்று கூறி மக்களைச் செயலற்றவர்களாக்கிவிட்டார் என்று சொல்வதே பொருந்தும். மற்றும் புலால் மறுப்பு போன்ற உயர்சாதிப் பழக்கங்களை ஏழைச் சாணார்களிடையில் புகுத்த முயன்றதும் மக்களை இவரிடமிருந்து அயற்படுத்தியிருக்க வேண்டும். இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காலமானார். மொத்தத்தில் இவருடைய இயக்கம் வெற்றி பெறவில்லை என்றே கூற வேண்டும், ஏனென்றால் மீண்டுமொருமுறை அந்த மண்ணில் நாடார்களிடையில் மதமாற்றம் நிகழ்ந்தது. இம்முறை மக்கள், குறிப்பாக பிழுக்கைச் சாணார்கள் சாணார்களின் கொடுமை தாள முடியாமல் முகம்மதியத்துக்கு மாறினர். இந்த உண்மையை முகம்மதியர்கள் பலரும் ஏற்றுக் கொள்வதாகக் கூறப்படுகிறது. அவர்களிடமுள்ள சொத்தாவணங்களிலும் இதற்குச் சான்றுகள் காட்டப்படுகின்றன. இம்மதமாற்றம் கிட்டத்தட்ட 1890இல் நடைபெற்றதாகத் தெரிகிறது.

இதற்குள் சாணார்கள், குறிப்பாக அகத்தீசுவரம் வட்டத்தில் குடியேறிய சாணார்கள் தாம் வாழ்ந்த வளம் மிகுந்த செம்மண் பகுதியில் புன்னை, மா, முந்திரி(கொல்லமா), பலா, புளி முதலிய மரங்களை வளர்த்தனர். ஆண்டுக்கு இரு பருவங்களிலும் பயிறு, காணம் முதலிய புன்செய்ப் பயிர்களை வளர்த்தனர். பனை ஏறிய நேரம் போக எஞ்சிய நேரங்களில் இதைச் செய்தனர். நாஞ்சில் நாட்டில் வேளாண்மைக் காலத்தில் அங்கு சென்று தங்கி உழவுத் தொழில் செய்தனர். அறுவடைக் காலத்தில் அறுவடை, சூடடிப்பு(போரடித்தல்) முதலிய வேலைகளைச் செய்து ஆண்டு முழுவதும் உணவுக்குத் தேவையான நெல்லைச் சேர்த்து வைத்தனர். சிலர் மாங்காய், மாம்பழம், கொல்லாங்கொட்டை(முந்திரிக் கொட்டை), கொல்லாம்பழம்[4](முந்திரிப்பழம்), சக்கைப்பழம்(பலாப்பழம்), பனங்கிழங்கு, நுங்கு, கருப்புக்கட்டி, பனம்பழம், பயிறு, காணம் போன்ற பொருட்களை நெல்லுக்கும் மீனுக்கும் மாற்றினர். மீனவர்கள் நெல் முதல் பலாப்பழம் வரை அனைத்தையும் சாணார்களிடமிருந்தே பெற வேண்டியிருந்தது. ஏராளமாக மீன்படும் காலங்களில் சாணார்களில் பலரும் மீனவர்களும் நெல்லின் தேவையின்றி மீன், கருப்புக்கட்டி, பழங்கள் முதலியவற்றிலேயே வாழந்தனர். (என்னே ஊட்டமிக்க உணவு!) வண்டி வைத்து சம்பை(கருவாடு), வெற்றிலை, கருப்புக்கட்டி, போன்ற பொருட்களின் போக்குவரத்திலும் பணம் ஈட்டினர். நாளடைவில் வெற்றிலை வாணிகம் இலை வாணிகர்களிடமிருந்து சாணார்கள் கைகளுக்குள் வந்து விட்டது. நிறைய நிலம் வைத்திருந்த ஊர் நாடான்களிடம் கூலி வேலை செய்தனர். கொத்துவேலை, தச்சுவேலை முதலிய தொழில்நுட்பங்களிலும் தேர்ச்சி பெற்றனர்.

கடற்கரையை ஒட்டி குமரி முனையிலிருந்து தொடங்கி மணக்குடி எனும் ஊரில் பழையாறு எனப்படும் கோட்டாற்றைக் கடந்து திருவனந்தபுரம் வரை அரச குடும்பத்தினர் படகில் சென்று வருவதற்காக ஒரு கால்வாய் ஓடியது. அதற்கு அனந்தன் விக்டோரியா மார்த்தாண்டவர்மா (A.V.M.) வாய்க்கால் என்று பெயர். அது ஆங்காங்கே தூர்ந்து கிடந்தது. சாணார்கள் அதை முழுமையாகத் தூர்த்து எந்நாளும் நீர்வளம் குன்றாத கழனிகளாக்கினர். அத்துடன் கடற்கரையை அடுத்த மணற்பாங்கான பகுதிகளில் தென்னை மரங்களை நட்டனர். நாளடைவில் செம்மண்ணிலும் தென்னைகளை வளர்த்தனர். அவை சாணார்ப் பெண்களின் இடைவிடா உழைப்பால் வளமிக்க தோப்புகளாயின. அத்துடன் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட பேச்சிப்பாறை நீர்த்தேக்கம் இச்செம்மண் நிலத்தில் பெரும் பரப்புகளை நன்செய் ஆக்கி இம்மக்களது வளத்தை மேலும் பெருக்கியது. இந்த நிலத்தைத் தான் இங்கு காட்டுப்பத்து என்கின்றனர்.

இவ்வாறு செல்வ நிலையில் சாணார்கள் உயர்ந்த போது இவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்த வேளாளர், நாயர், குறுப்பு முதலியோரின் ஆதிக்கத்தை எதிர்க்கத் தலைப்பட்டனர். வீறு கொண்டெழுந்த சாணார்களின் முன்னே அவர்களால் எதிர்நிற்க முடியாமல் போயிற்று. மேற்சாதியாரை எதிர்க்கும் போது அச்சாதியார்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அரசாகிய திருவிதாங்கூர் அரசின் ஊழியர்களான ஊர் நாடான்களையும் இம்மக்கள் எதிர்த்தே வந்தனர். நாடான் - சாணான் பிணக்கு தொடர்ந்து வந்தது. புதிதாகச் செல்வம் பெற்ற சாணார்களுடன் சூழ்நிலைகளால் வறுமையெய்திய நாடான்கள் மணவுறவுகளை மேற்கொண்டனர். நாடான் - சாணான் ''கலப்பு'' தோன்றி வளர்ந்தது. (ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான ஊர் நாடான்களும் ஊர் மக்களும் வெவ்வேறு சாதியார் போல் பிளவுண்டு, பின்னர் அவர்களுக்குள் மணவுறவுகள் ஏற்படுவதைக் ''கலப்பு'' என்று கூற வேண்டிய விந்தையைப் பாருங்கள்! சாதி என்பது எத்தகைய ஒரு மாயை!) நாடான் - சாணான் வேறுபாடுகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலவின. [5]

இவ்வாறு செல்வமும் அதன் விளைவாகக் கல்வியறிவும் பெற்று விட்ட நாடார்கள் (இனி அவர்களை நாடார்கள் என்று கூறுவதே பொருத்தம் என்று கருதுகிறோம்) பிற சாதியினரோடு தங்களுக்குச் சம மதிப்பு வேண்டுமென்று விரும்பினர். திருவிதாங்கூர் அரசு வேலைவாய்ப்பு முதல் அனைத்திலும் நாடார்களுக்கு உரிய பங்கைத் தர வேண்டுமென்று கேட்டனர்.

இக்காலத்தில் 1943இல் ஏ.சங்கரபிள்ளை என்பவர் தலைமையில் ஒரு சிறு அமைப்பு தோன்றியது. இதில் முகாமையாக நாஞ்சில் நாட்டு வேளாளர்களும் கிறித்துவ நாடார்களும் முதப்பத்து நாடான்களும் இருந்தனர். 1945இல் குமரி முதல் காசர்கோடு வரை கேரளம் என்று மலையாளிகள் ஒரு தீர்மானம் நிறைவேற்றினர். இதை ஏற்பதா எதிர்ப்பதா என்ற கருத்து வேறுபாட்டால் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டது. அதே ஆண்டு திசம்பரில் நத்தானியல் என்ற கிறித்துவ நாடாரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழகக் காங்கிரசு என்ற பெயரில் ஒரு அமைப்பு தோன்றியது. அப்போது அவருக்கு மிக உறுதுணையாயிருந்தவர்கள் பி.எசு.மணி, காந்திராமன் ஆகியோர். இவர்கள் கட்சியின் மேல்மட்டத் தலைவர்களாயிருந்தனர். 1946 சூனில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற பெயரை அது பெற்றது. தி.த.நா.கா. என்று இதைச் சுருக்கமாக அழைப்பது வழக்கம்.

அக்காலகட்டத்தில் நெல்லை மாவட்டத்துக்கும் திருவனந்தபுரத்துக்கும் சென்று கல்வி பெற வாய்ப்புப் பெற்றோர் நாஞ்சில் நாட்டு வேளாளர்களும் கிறித்துவ நாடார்களும்; அதிலும் குறிப்பாக சீர்திருத்தக் கிறித்துவ நாடார்களும் சில முதப்பத்து நாடான்களும் தாம். மலையாளத்தை ஆட்சி மொழியாகக் கொண்ட திருவிதாங்கூர் அரசு தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இத்தொகுதியினருக்கு வேலைவாய்ப்பில் வஞ்சனை செய்தது. தமிழர்கள் வந்தேறிகள் என்றும் திருவிதாங்கூர் முழுவதும் மலையாள நாடென்றும் மலையாளிகள் கூறினர். இதற்கு எதிர்க் கருத்துகளை இவர்கள் வைத்தனர்; சேரநாடு முழுவதும் தமிழர் நாடே, மலையாளிகளை விட தமிழர்களுக்கு அதில் அதிக உரிமை உண்டென்று நிறுவ முயன்றனர். கவிமணி தேசிய வினாயகர் இதற்கென்று அரிய வரலாற்றாய்வுகள் செய்து பல இலக்கியச் சான்றுகளைக் காட்டியதுடன் எண்ணற்ற கல்வெட்டுகளை ஆய்ந்து வெளிக்கொணர்ந்தார். வித்துவான் சதாசிவம் என்ற ஆசிரியர் பெருமகன் சேரநாடும் செந்தமிழும் என்ற அரிய ஆய்வு நூலை எழுதினார். குமரி மாவட்ட மக்களின் விடுதலைப் போருக்கு அடிப்படையான வரலாற்று ஆவணமாக இது போற்றுதற்குரியது.

ஆனால் இவையனைத்தையும் செய்து இயக்கத்தின் தோற்றத்துக்குக் காரணமான நாஞ்சில் நாட்டு வேளாளர்கள் அதில் நாடார்களின் எண்ணிக்கை பெருகியவுடன் பின்வாங்கினர். தம்மை விட இழிந்தவர்களென்று தாம் கருதிய நடார்கள் தம்மோடு சம உரிமை பெறுவதை விடத் தமக்கு மேல்மக்கள் அல்லது தமக்கு இணையானவர்கள் என்று இவர்கள் கருதிய மலையாளிகளிடம் குட்டுப்படுவதே மேல் என்று கருதினர். தோள்சீலைப் போராட்டத்தில் மதம் மாறாத நாடார்களுடன் சேர்ந்து போராடிய கிறித்துவ நாடார்கள் தமக்கு மட்டும் கிடைத்த அந்த உரிமையை மற்றவரும் கேட்டபோது எதிர்த்தது போன்றது இது.[6] இத்தகைய தாக்கத்தை வென்று தி.த.நா.கா.வில் தொடர்ந்து ஈடுபட்ட நாஞ்சில் நாட்டு வேளாளரில் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் ஆர்.கே. இராம் என்று அழைக்கப்படும் திரு. இராமன் பிள்ளை அவர்களே. இன்று தி.த.நா.கா.வை உருவாக்கியவர் என்று உரிமை கொண்டாடும் திரு.பி.எசு.மணி அவர்கள் இன்று வரை விடுபட்டுப் போன 4½ வட்டங்களும் விடுவிக்கப்பட்டுத் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தாலும் இடையில் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவில் பங்கு கொண்டு எதிரியாகிய கேரள (இந்தியத் தேசியக்) காங்கிரசுடன் கூட்டு வைத்த தாணுலிங்க நாடாருடன் உறவு வைத்ததனால் அன்று மக்களிடமிருந்து அயற்பட்டு நின்றார். அவரை நம்பிய மா.பொ.சி.யின் பணிகளும் மக்களின் கவனத்துக்கு வரவில்லை.

அகத்தீசுவரம் வட்டத்தில் உள்ள நாடார்களைப் போலன்றி விளவங்கோடு வட்டத்தில் வாழ்ந்த நாடார்கள் செல்வ நிலையில் உயரவில்லை. அவர்களுக்குச் சொந்த நிலங்கள் இல்லை. பெரும்பாலான நிலங்கள் நாயர், குறுப்பு சாதிகளிடமே இருந்தன. அவர்களிடம் இவர்கள் கூலிகளாகவே, அடிமைகளாகவே வாழ்ந்து வந்தனர். 'அட கடவுளே'! என்று கூறுவதற்குப் பகரம் 'அட நாயனே!'' என்று கூறுவதை இந்தப் பகுதிகளில், ஏன், குமரி மாவட்டம் முழுவதும் கேட்கலாம். இந்தச் ''சாணான் - நாயன்'' உறவு எப்படி இருந்திருக்கும் என்பதற்கு இது ஒரு சான்று. இவர்களது உணவு கூட பெரும்பாலும் கம்புக் கிழங்கும்[7] மீனுமே. அவ்வாறு வாழ்ந்தவர்களுள்ளும் பெரும்பாலோர் மதம் மாறாதவர்களும் கத்தோலிக்கர்களுமே இருந்தனர். இவர்களுக்கு அரசு அரவணைப்பு இல்லை. வலுவான மத நிறுவனங்களும் உதவ முன்வரவில்லை. இவ்வாறு இடருற்றுக் கொண்டிருந்தோர்க்குப் பாடாற்ற நேசமணி முன் வந்தார். சீர்திருத்த சபைக் கிறித்துவரான அவர் தான் பெற்ற கல்வியறிவையும் சட்ட அறிவையும் இம்மக்களை மேற்சாதியாரின் கொடுமைகளிலிருந்து மீட்கவே பயன்படுத்தினார் என்று அப்பகுதியில் அவர் காலத்தில் வாழ்ந்த மக்கள் நினைவுபடுத்துகின்றனர்.

இவ்வாறு நாடார்கள் நடுவில் தி.த.நா.கா. வளர்ந்து தேர்தல்களிலும் வெற்றியீட்டி நாடான் காங்கிரசு என்று மேல்சாதிக்காரர்களால் பெயர் சூட்டப்பட்டுவிட்டது. மீனவர்களும் இக்கட்சியை ஆதரித்தனர். இந்நிலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று குறிப்பிடத்தக்கது.

தி.த.நா.கா.வின் தலைவர்களில் ஒருவராயிருந்த தாணுலிங்கம் நாடார் என்பவர் திடீரென்று கட்சியை விட்டு வெளியேறினார். கிறித்துவர்களின் ஆதிக்கம் கட்சியிலிருப்பதாகக் குற்றம் சாட்டினார். ஒரு போட்டி தி.த.நா.கா.வைத் தொடங்கி இந்தியத் தேசியக் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தார்.

உண்மையில் கிறித்துவர்களின் போட்டியினால் மட்டும் அவர் கட்சியிலிருந்து வெளியேறவில்லை. தாணுலிங்கர் முதப்பத்து நாடான்கள் குடும்பத்தில் பிறந்தவர். திருவிதாங்கூர் மன்னர்களுடன் தொடர்பு கொண்டது அவரது குடும்பம். மாறச்சன்[8] என்ற பட்டத்தை அரசரிடமிருந்து பெற்றவர்கள் அவர்கள். முதல் தேர்தலில் பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கிறித்துவர்களும் தேர்தலில் நின்று வென்றனர். அடுத்த தேர்தலில் எளிய குடும்பத்தில் பிறந்த வேட்பாளர்களே வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. அப்போது தான் தன் குழுவின் நலன் எங்கிருக்கிறதென்பதை அவர் உணர்ந்து கொண்டார். தன்னையொத்த மேற்சாதி - மேட்டுக்குடித் தலைவர்களுடன் சேர்ந்து கொண்டார். தொடக்கத்தில் சீர்திருத்த சபைக் கிறித்துவருடன் கூட்டுச் சேர்ந்து ஏழை மக்களைத் தட்டியெழுப்பிய முதப்பத்து நாடான்கள் முதல் கட்ட வெற்றியிலேயே தங்கள் வகுப்பு நலன்களுக்காக எதிரிகளுடன் கூட்டுச் சேரும் நிகழ்முறையை இங்கு காண்கிறோம்.

அணி மாறியதன் விளைவாகத் தாணுலிங்கரின் செல்வாக்கு குன்றியது. மீண்டும் தி.த.நா.கா. திரும்பினார். இருந்தும் அவருக்குப் பழைய மதிப்பு திரும்பவில்லை. நாளடைவில் அவர் அரசியலிலிருந்து ஒய்வு பெற்றார்.

மீனவர்களைப் பற்றிப் பார்ப்போம். எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் நாம் மீனவர்களென்று கூறும் பரவர்கள்(பரதவர்கள்) இன்று அவர்கள் வாழும் நிலத்துக்கே உரியவர்கள்; பதியெழுவறியாப் பழங்குடியினர். மீனவர்களில் முக்குவர், சவளக்காரர் என்ற பிரிவினர் இருந்தாலும் குமரி மாவட்டத்தில் உள்நாட்டில் சவளக்காரர்கள் மிகுதியாக உள்ளனர். கடற்கரையில் வாழ்வோரில் பரவரே மிகுதி.

தமிழர் நாகரிக வரலராற்றில் மிகப் பழமையானவர் பரதவர். வாணிகத்திலும் கடற்படையிலும் பரந்து திரிந்தோராகிய இவர்கள் சங்கம் மருவிய காலத்திலும் சிறப்புடன் வாழந்தனர். அரச குமரரும் பரத குமரரும் என்று இளங்கோ அடிகள் இவர்களைக் குறிப்பிடுகிறார். பரவை = கடல், பரவர் → பரதவர் → பரதர். மாபாரதக் காலத்திலேயே பரதர் என்ற சொல் நிலைத்து விட்டதாயின் இவர்களதும் தமிழினதும் தொன்மையை என்னென்பது!

மாபாரத்தில் வரும் ஐவரும் நூற்றுவரும் மச்சகந்தி என்ற பரதவப் பெண் வயிற்றுப் பேரர்களே என்பதும் அதனாலேயே அப்பாவியத்துக்கு மாபாரதம் என்ற பெயர் வந்தது என்பதும் இராமாயணத்தில் பரதனுக்கு உரிய அரசு இராமனுக்கு வழங்கப்படுவதைப் பரதனின் தாய் எதிர்த்ததனாலேயே இராமன் காட்டுக்குச் செல்ல வேண்டியிருந்த தென்பதும் கவனிக்கத்தக்கவை. இவ்வாறு காட்டுக்குச் சென்ற இராமன் ஆற்றில் படகு விடுவோனான குகனை உடன்பிறந்தானெனச் சிறப்பிப்பதும் இரானைத் தேடி வந்த பரதனை இக்குகன் எதிரியாகப் பார்ப்பதும் பின்னர் இராமனின் அரசுரிமையைப் பரதன் ஏற்றுக்கொண்டு இராமனின் காலணிகளை அரியணையில் வைத்து ஆட்சி செய்வதும் ஆராயத் தக்கன. இந்தியாவுக்குப் பரதநாடென்ற பெயர் வந்ததும் கருதத்தக்கது. அந்தக் காலகட்டத்தில் மீனவர்களிடமிருந்து உள்நாட்டினர்க்கு அதாவது நெய்தல் நிலத்தாரிடமிருந்து மருத நிலத்தாருக்கு ஆட்சி அதிகாரம் பெயர்ந்ததனை இந்நிகழ்ச்சிகள் காட்டுகின்றனவா என்றும் பார்க்க வேண்டும்.

பாண்டியர் கொடியான மீனை வைத்து பாண்டிய முதல்வியான மீனாட்சியை மீனவப் பெண் என்று கருதுவோரும் உளர். பாண்டியர்களை மீனவர்கள் என்றே குறிப்பிடுவதையும் காண்கிறோம். அதைப் போல் பரத நாடு என்பது பரதவ நாடு என்பதன் திரியே என்றும் கருதப்படுகிறது. இலங்கையில் மீனவர்களில் திமிலர் என்ற ஒருபிரிவினர் உள்ளனர். இது திரமிலர் என்பதன் திரிபென்பதற்குச் சான்றுகள் உள்ளனவாம். அப்பர் ஈராசு(ஈராசுப் பாதிரியார்) திரைமிலர் என்ற சொல்லுக்கு கடலின் குழந்தைகள் என்று பொருள்; இதிலிருந்து தான் திராவிடர் என்ற சொல் வந்ததென்று கூறுகிறார். திரௌபதியம்மன் தமிழக நாட்டுப்புறத் தெய்வங்களில் சிறப்பு வாய்ந்தது. இது திரைபதி என்பதன் மருவாயிருக்கலாமோ என்றோரு கேள்வி. அதே போல் திருமகளை அலைமகள் என்பது தமிழ் வழக்கு. கடல் வாணிகத்துக்ம் செல்வப் பெருக்குக்கும் உள்ள தொடர்பை நோக்கினால் வரலாற்றுக்கு முந்திய நாளில் கடல் வாணிகத்தில் சிறந்திருந்த தமிழர்களின் தெய்வமே திருமகள் என்பதும் அதனாலேயே அவளை அவர்கள் அலைமகளாகக் கண்டனர் என்றும் எண்ணத் தோன்றுகிறது. பரவை என்ற சொல்லுக்கு திருமகள் கூத்து எனும் பொருளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. பரதவர்களின் வரலாற்றுப் பழமையைக் குறிக்கவே இத்தகைய செய்திகள் இங்கு வைக்கப்படுகின்றன. உண்மையில் மீனவர்களின் வரலாற்றை யாரும் சரியாக ஆயவில்லை என்றே கூற வேண்டும். அது மட்டுமல்ல தமிழகத்தில் அண்மைக் காலம் வரை மிகப் புறக்கணிக்கப்பட்ட மக்கள் மீனவர்களென்றே கூற வேண்டும்.

உள் நாட்டினர், குறிப்பாக திருவிதாங்கூர் அரசு மற்றும் முகம்மதிய வாணிகர்களின் தாங்கொணக் கொடுமைகளுக்கு இவர்கள் சாணோர்களோடு சேர்ந்து ஆளாகிய போது தான் 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய மதகுருக்களால் மதம் மாற்றப்பட்டனர். இவர்கள் படையணிகளாக்கப்பட்டு திருவிதாங்கூர் அரசருக்காகப் போரிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலோரின் வன்முறைக் கொடுமைகளிலிருந்து விடுபட்டாலும் இவர்கள் பொருளியலில் முன்னேறவில்லை. போர்த்துக்கீசியர் தமிழகத்தில் நிலைக்காதது இதற்கு ஒரு காரணம்; கத்தோலிக்க மதகுருக்கள் இவர்களது வளர்ச்சியை முழுமனதுடன் விரும்பாதது இன்னொரு காரணம். இவர்கள் வாழும் பகுதிகளில் மாதா கோயில்கள் வளர்ந்த அளவுக்கு இவர்களது வாழ்வு வளரவில்லை. மீன் பிடிப்பதில் கிடைக்கும் அவர்களது வருமானத்தில் பெரும் பகுதி தெரிப்பு என்ற பெயரில் கோயிலுக்கு வழங்கும் பங்கிலேயே சென்று விடுகிறது.

இருந்தாலும் இந்திய விடுதலைக்குப் பின்னர் இவர்களுக்குக் கல்வி வாய்ப்புகளும் வேலை வாய்ப்புகளும் பெருகின. குமரி மாவட்ட நாடார்கள் திருவிதாங்கூர் அரசின் கீழ் அடைந்த இன்னல்களையே இவர்களும் அடைந்தனர். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாயர்களும் குறுப்புகளும் இவர்களுக்கும் இடையூறாகவே இருந்தனர். எனவே தி.த.நா.கா. காலத்தில் அக்கட்சியையே இவர்கள் ஆதரித்தனர்.

திருவிதாங்கூர்-கொச்சி (இன்றைய கேரள மாநிலம் உருவாவதற்கு முன் இருந்த மாநிலப் பெயர் இதுவே) மாநிலத்தின் முதல்வராயிருந்த பட்டம் தாணுபிள்ளையின் கொடுங்கோன்மையின் விளைவாகக் குமரி மாவட்டத் தமிழர்கள் ஏற்க நேர்ந்த கடும் இழப்புகளுக்குப் பின் குமரி மாவட்ட வரலாற்றுப் போக்கில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட்டது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] முதலூடி, முதப்பத்துக்காரன், முதப்பத்து நாடான், ஊர் நாடான் என்றெல்லாம் இவர்கள் அழைக்கப்படுவர். ஊர் நாட்டாண்மைக்காரன் என்று பொருள்படுபவை இச்சொற்கள்.

[2] இந்நிகழ்ச்சி வெங்கலராசன் கதை அல்லது வலங்கையர் கதை எனும் கதைப்பாடலில் வருகிறது. குலோத்துங்க சோழன் காலத்தில் இது நடந்திருக்கலாமென்று கருதவும் இடமுள்ளது. இரண்டும் ஒன்றோடொன்று மயங்கியும் இருக்கலாம்.

[3] இத்தோள்சீலைப் போராட்டம் ஒரு விந்தையான பண்பாட்டு மோதலின் வெளிப்பாடெனக் கொள்ளலாம். தமிழ்ப் பெண்களின் உடையென நாம் இன்று கருதும் சேலை இடைக்காலத்தில் தெலுங்கர்களிடமிருந்து பரவியதாகும். பேரரசுச் சோழர் காலத்து ஓவியங்கள், சிற்பங்களில் இன்றைய சேலை இல்லை. இடுப்பில் ஒரு முண்டு அல்லது பாவாடையும் மேலே கச்சை அல்லது குப்பாயமும் (இரவிக்கை) அணிந்து அதன் மீது ஒரு மெல்லிய துணியை மார்பில் அணியும் வழக்கமே அன்று இருந்தது. இன்று தமிழகத்தில் வாழும் சில மலைவாழ் மக்களிடம் இவ்வுடை நிலவுகிறது. முதிய முகமதியப் பெண்களிடையில் இவ்வுடையை நாம் காணலாம். அதே போல் மலையாளத்துப் பெண்கள் அணியும் உடையும் பழந்தமிழ்ப் பெண்களின் உடையின் தொடர்ச்சியேயாகும். தெலுங்கு நாட்டிலிருந்து கோயிற்பணிக்காக சோழ மன்னர்கள் காலத்தில் வரவழைக்கப்பட்ட தேவரடியார்கள் மூலமாகவோ பரத நாட்டியத்தில் அணியப்படும் உடைகளிலிருந்தோ மேல்மட்டத்து மக்களிடையிலும் இன்று துப்புரவு வேலை பார்க்கும் தெலுங்கு பேசும் பெண்களிடமிருந்து கீழ்மட்டத்து மக்களிளடையிலும் இது பரவி இருக்கலாம். மேல்தட்டுப் பெண்களுக்கு ஒட்டியானம் குப்பாயம் முதலிய விலை மிகுந்த துணை அணிகளுடன் அணியத் தக்கதாகவும் கீழ்த்தட்டுப் பெண்களுக்குப் பிற துணையணிகள் எதுவுமின்றி மிக மலிவாக அணியத்தக்கதாகவும் இது உள்ளது. ஒரே உடையை வைத்துக்கொண்டு அதனைத் துவைத்து ஒரு பகுதியை உடலில் சுற்றி மீதியை உலர்த்தி உடுக்கத்தக்க உடை சேலை ஒன்றே. முந்தானையின் தொங்கலைத் தலையில் சும்மாடாகச் சுற்றி வைத்துக் கொள்ளவும் முடியும்.

இந்த உடை வகை தமிழகத்தினுள் நுழைந்த போது இங்கு எத்தகைய பண்பாட்டு மோதல்கள் நிகழ்ந்தனவோ நமக்குத் தெரியாது. ஆனால் பழங்காலத் தமிழ் உடையாகிய மலையாளப் பெண்களின் உடைக்கும் தமிழகப் பகுதியில் புழங்கிய தெலுங்குச் சேலைக்கும் ஏற்பட்ட இந்த மோதல் ஆளும் மலையாள மக்களுக்கும் ஒடுக்கப்பட் தமிழ் பேசும் மக்களின் ஒரு பிரிவினருக்கும் இடையில் நடைபெற்ற போராட்டமாக வெளிப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு நிகழ்ச்சி பண்பாட்டு ஆய்விளருக்குச் சிறந்த ஆய்பொருளாகத்தக்கது.

[4] வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உணவுப் பயிர்களின் முன்னொட்டாகக் கொல்லம் என்னும் சொல்லைச் சேர்த்துக் கொள்வது கேரள வழக்கு. கொல்லம் என்ற துறைமுகத்தில் வந்து இவை இறங்குவதால் இவ்வடைமொழியைப் பெற்றுள்ளன. உள்நாட்டுப் பொருள் ''நல்ல'' என்ற அடைமொழியைப் பெறுகின்றன. எ-டு. கொல்லமா x நல்லமா, கொல்ல மிளகு x நல்ல மிளகு. ஒப்புநோக்கு: செவிலித்தாய் x நற்றாய், கடலை எண்ணெய் முதலியன x நல்லெண்ணெய்.

[5] நெல்லை மாவட்டத்தில் இன்றும் சில பகுதிகளில் நாடார் - சாணார் வேறுபாடுகள் நிலவுகின் றன. இங்கு ஊர் நாடான் - ஊர் மக்கள் என்றவாறு அது இல்லை. பனை ஏறுவோர் சாணாரென்றும் அதனைக் கைவிட்டோர் நாடார் என்றும் கருதப்படுகின்றனர். குமரி மாவட்டத்தில் பனையேறும் தொழில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. பெரும்பாலான பனை மரங்களும் வெட்டப்பட்டுவிட்டன. நெல்லை மாவட்டத்தில் இன்னும் கணிசமான எண்ணிக்கையில் பனை மரங்கள் உள்ளன.

சான்றோர் என்று பொருள் தருவதாகவே சாணார் என்ற சாதிப் பெயரை நாடார் சாதியைச் சேர்ந்த சாதி வரலாற்றாசிரியர்கள் பெருமையுடன் கூறிக்கொள்கின்றனர். அதே நேரத்தில் தங்களைச் சாணார் என்று பிறர் அழைப்பதை இழிவாகக் கருதி ஆத்திரப்படுகின்றனர். நாடார் என்ற புதுப் பெயரால் அழைக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர். இது நம் நாட்டில் மட்டுமல்ல, உலக மக்களிடையில் நிலவும் ஒரு மனப்பான்மையின் வெளிப்படாகும். சாணார் என்ற பெயருடன் அவர்களிடையில் ஒரு காலத்தில் நிலவிய வறுமையும் பிற்பட்ட நிலையும் தொடர்புடையன. இன்று நாடார் என்ற பெயருடன் செல்வமும் அரசியல் செல்வாக்கும் குமுகத் தரமும் தொடர்புடையன. எனவே பட்டப்பெயர்களின் பொருளை விட அது குறிக்கும் குமுகத் தரமும் செல்வ நிலையுமே மக்கள் மீது அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிகழ்முறைக்குத் தமிழகத்திலும் வெளியிலும் பல சான்றுகளைக் காட்ட முடியும். மூப்பன், பண்ணையாடி(பண்ணாடி), குடும்பன் எனும் பட்டப் பெயர்களைக் கொண்ட பள்ளர்களில் ஒரு பகுதியினர் ஒரளவு செல்வநிலையில் உயர்ந்ததும் தேவேந்திரகுல வேளாளர் என்ற பட்டத்தைச் சூடுவது அண்மைக் காலத்தில் நிகழ்ந்தது. அரசன் என்ற பொருள்படும் கோன் என்ற சொல்லடிப்படையில் பிறந்த கோனார் (கோங்கமார்←கோன்கள் மார்) என்று பிறர் அழைக்கின்றனர்.) என்ற பட்டம் தங்கள் கடந்த கால ஏழ்மையையும் குமுகத் தரத்தில் தாழ்வையும் குறிப்பதாகக் கருதி அவர்கள் வடக்கிலிருந்து இறக்குமதியான ''யாதவர்'' என்ற பட்டத்தைச் சூடிக்கொள்வதும் இது போன்றதே.

கறுப்பின மக்கள் இன்று பொருளியலிலும் செல்வாக்கிலும் உயர்வடைந்த பின் முன்பிருந்த நீக்ரோ என்ற பட்டத்தை வெறுத்துக் கறுப்பர்கள் என்று அழைக்கப்ட வேண்டுமென்று விரும்புவது இது போன்றதே. இரு சொற்களுக்கும் ஒரே பொருள் தான் என்பது இந்த நிகழ்வின் சிறப்பு.

[6] மக்களுக்கு நலத்திலும் கேட்டிலும் உதவுவதற்கென்று உருப்படியான அரசியல் அமைப்புகள் இல்லாத போது சாதி, சமயம், மொழி போன்ற குமுக அமைப்புகளின் அடிப்படையில் மக்கள் திரள்கின்றனர். அவ்வக்குழுவில் மேல் நிலையிலிருப்போர் தம் தேவைகளுக்கேற்ப இக்குழுக்களை உடைத்தோ இணைத்தோ தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். அடிப்படை மக்கள் இம்மேல்மட்டத்தோருக்காய் போராடி, குருதி சிந்தி உயிர்களை ஈந்து பின்னர் கைவிடப்படுகின்றனர். குமுக மேம்பாட்டுக்காகப் பாடுபடுவோர் இம்மேல்மட்டத்தார் கைக்கொள்ளும் உத்திகளில் எவை பிளவுகளை நீக்கி முன்னோக்கித் தள்ளுபவையாயிருக்கின்றனவோ அவற்றை அம்மேல்மட்டத்தார் கைவிட்ட இடத்திலிருந்து பற்றி மேற்கொண்டு செலுத்தி அவ்வடிப்படை மக்கள் விடுதலை பெறுமளவும் நடத்த வேண்டும்.

[7] கம்புக் கிழங்கு என்பது மரவள்ளிக் கிழங்கு, கப்ப(ல்)க் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு, குச்சிக் கிழங்கு, எழிலைக் கிழங்கு என்றெல்லாம் குறிப்பிடப்படும் கிழங்கு தான். வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பண்டத்துக்கு இத்தனை பெயர்கள் வைத்துத் தமிழின் சொல்வளத்தைப் பெருக்கிய தமிழக உழைக்கும் மக்களின் சொல்லாக்கத்திறனை என்னென்று புகழ்வது! ஆனால் இன்றைய ''கற்றோரோ'' தமிழின் சொல்லாக்க வல்லமையைத் தங்களின் இயலாமையையே அளவுகோலாகக் கொண்டு அளக்கும் கொடுமையைக் காண்கிறோம்.

[8] மதுரை நாயக்கர் ஆட்சி நிலைப்பட்ட போது பாண்டிய நாடு, நாடுகள் எனும் ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அதில் நாடான்கள் என்போர் ஆட்சி அதிகாரிகளாக இருந்தனர். தளவாய் அரிய நாத முதலியார் என்பவர் நாயக்கர் படைகளை நடத்தி அந்த நாடான்களைப் பதவியிறக்கினார். தனக்கு ஒத்துழைப்பு நல்கிய சிலரைப் பாளையக்காரர்கள் ஆக்கினார். பிற பகுதிகளை நாயக்கர் பாளையங்களாக மாற்றினார். அப்போது நாயக்கர் ஆட்சிப் பகுதிக்கு வெளியே கேரள அரசின் பிடியிலிருந்த குமரி மாவட்டத்திலும் நெல்லைப் பகுதிகளிலும் நாடான் என்ற ஊர்த் தலைவன் பட்டம் தொடர்ந்தது. இப்பட்டத்திலிருந்து தான் நாடார் என்ற சாதிப் பட்டம் பிறந்தது. மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு எதிரிகளால் ஒருமுறை ஏற்பட இருந்த கேட்டிலிருந்து இவருடைய மூதாதை ஒருமுறை காத்தார் என்பதனால் தந்தைக்கு இணையானவர் என்ற பொருளில் மாறச்சன் என்ற பட்டம் வழங்கப்பட்டதாம்.