28.12.15

சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்க்ளின் வரலாறு - 15


வளர்ச்சி எப்போதும் நேர்கோடாக இருப்பதில்லை
            நாடார் மகாசன சங்கத்துக்கு முன்பிருந்த தலைமுறையினரின் பொருளியல் கண்ணோட்டமும் ஊக்கமும் போராட்ட குணமும் சங்கம் தோன்றியவுடன் நிலைகுத்திப் போய்விட்டது என்றே கூற வேண்டும். சாதி மதிப்பில் தாம் பிறரோடு சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற இயற்கையான, குற்றம் கூற முடி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாத துடிப்பு அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் (நயன்மைக் கட்சி) இணைந்ததன் மூலம் அந்த நோக்கம் ஈடேறும் வாய்ப்பு உறுதியானதால் அவர்களது பொருளியல் கண்ணோட்டத்துக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இந்தத் திசையிலான போக்கு அவர்களிடமிருந்து தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அனைத்துச் சாதியினரையும் தொற்றிக்கொண்டுவிட்டது. அதற்கு அடிப்படையாய் அமைந்தது, நயன்மைக் கட்சியின் தலைமை பெரியாரின் கைகளில் சென்ற பின் அவருக்கு நாடார்கள் கொடுத்த மாபெரும் ஒத்துழைப்பும் அவரது அரசியல் களம் விரிவடைவதற்கு அவர்கள் செலவிட்ட பணமும் உழைப்புமாகும். த‌மிழகத் தேசிய இயக்கத்தில் பொருளியல் உரிமைப் போராட்டம் கைவிடப்பட்டு வெறும் பார்ப்பன எதிர்ப்பாகக் குறுகியதில் நாடார்களின் பங்களிப்பு முதன்மையானது. இந்தப் பங்களிப்பு நாடார் தலைவராகிய .பு..சவுந்திரபாண்டியனாரைப் பெரியாருக்குப் போட்டித் தலைவராக உயர்த்துமளவுக்கு இருந்தது. ஆ‌னால் அவரால் அரசியலில் நிலைக்க முடியவில்லை. காரணம், அவர் கடைசி வரை ஒரு நாடார் தலைவராவே இருந்தார். அனைத்துச் சாதி‌‌‌‌‌‌‌‌‌யினரின் பொதுத் தலைவராகத் தம்மை உயர்த்திக்கொள்ள அவரால் முடியவில்லை. அத்துடன் நாடார்களின் பொருளியல் மேம்பாட்டில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்ப உத்திகள் பற்றி தெளிவான வழிகாட்ட முடிந்த அவரிடம் நாடார்களும் பொதுவாகத் த‌மிழக மக்கள் அனைவரும் பனியாக்களிடமிருந்து எதிர்கொண்ட போட்டி, ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்துப் பொருளியல் சார்ந்த ஓர் அரசியலை அறிமுகப்படுத்தும் சிந்தனைத் தெளிவு இருக்கவில்லை. அதனால் சாதித் தலைவர், அரசியல் தலைவர் என்ற இரு நிலைகளிலிருந்தும் அவர் ஒதுக்கப்பட்டார். இந்த இடை‌‌‌வெ‌ளியைப் பயன்படுத்தி அண்ணாத்துரை, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்ற முழக்கத்தை முன்வைத்து அரசியலில் வளர்ந்து முதலமைச்சராகி ஏமாற்ற முடிந்ததற்கு சவுந்திரபாண்டியனாரின் இந்த இயலாமையும் ஒரு காரணமாகும்[1].

          பாண்டியனாரைப் பற்றிய முறையான, முழுமையான வரலாறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரைப் பற்றிய சிறு குறிப்புகளை மகாசனம் இதழ்கள் சிலவற்றில் காண நேர்ந்தது. அவற்றிலிருந்து தொழில் வளர்ச்சி பற்றியும் வேளாண்மையில் அறிவியல் அணுகுமுறைகளின் தேவை பற்றியும் தரிசு நிலங்களை விளை நிலங்களாகவோ காடுகளாகவோ மேம்படுத்த வேண்டியது பற்றியும் தாம் சென்ற விடமெல்லாம் மக்களுக்கு(நாடார்களுக்கு) அவர் அறிவுரை கூறியிருப்பதை அறிய முடிந்தது. அவரது சட்டமன்ற உரைகளிலும் மேடைப் பேச்சுகளிலும் இது போன்ற பொருளியல் மேம்பாட்டுக் கருத்துகள் என்னென்ன இருந்தன என்பதை அறியமுடியவில்லை.

            பாண்டியனாரின் இன்னொரு சிறப்பு நாடார்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது பார்ப்பனர், வெள்ளாளர், நாயக்கர், மறவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகளுக்கெதிராக நாடார்கள் - தாழ்த்தப்பட்டோர் கூட்டணி ஒன்று அமைக்கும் முயற்சியே. இதில் அவர் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தார் என்பது பேரா.பு.இராசதுரையின் ஒரு நூலிலிருந்து தெளிவாக விளங்குகிறது. நாடார்கள் நடத்திய பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடமளித்தல், கூட்டுணவு(சமபந்தி போசனம்) ஆகியவை, அத்துடன் பொதுக் குளங்கள், கிணறுகள், சுடுகாடு, அவற்றுக்குரிய பாதைகள் ஆகியவற்றை அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் சட்டம் இயற்றுவதற்காகச் சட்டமன்றத்தினுள்ளும் வெளியிலும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள்.

            இந்தப் பின்னணியில் சராசரிப் பொருளியல் வலிமை பெற்ற நாடார்களின் அடிப்படை மன உணர்வாகிய குமுக உரிமைகளைப் பெறுதல் பாண்டியனாரின் பிற நோக்கங்களைப் பின்னடையச் செய்தனவா என்ற கேள்வி எழுகிறது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்ச்சிகள் குமுறிக் கொண்டிருந்த நிலையில் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மேல்சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான ஓர் அறைகூவலாகப்பட்டது. அத்துடன் நீதிக்கட்சியுடன் பாண்டியனாருக்கிருந்த நெருக்கமான உறவும் அவர்களுக்குப் பெரியாரின் தொடர்பை எளிதாக்கின. பெரியாருக்கு ஆதரவளித்தார்களா அல்லது பெரியாரைப் பயன்படுத்திக் கொண்டார்களா என்று இனம்பிரித்துக் காண முடியாமலிருந்தது.

            தன்மான இயக்கத்துக்காகப் பெரியாரும் மற்றோரும் கலந்து கொண்ட கூட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர் உட்பட பிற்போக்கினர் ஏற்படுத்திய தடங்கல்களையும் தாக்குதல்களையும் மீதுற்று நிகழ்ச்சிகளை வெற்றி பெறச்செய்வதிலும் பெரியாரின் இயக்கம் தமிழ் மண்ணில் ஆழமாகவும் அகலமாகவும் வேர்கொள்வதிலும் நாடார்கள் பெருந்துணையாக இருந்திருக்கிறார்கள். இந்தப் பயனை எய்தத்தானோ என்னவோ பெரியார் பாண்டியனாருக்கு ஏறக்குறைய தனக்கிணையான ஓர் இடத்தை இயக்கத்தில் கொடுத்தார். பாண்டியனார் நாடார்களுக்கும் அவர் சார்ந்திருந்த தன்மான இயக்கத்துக்கும் பாதுகாப்பு அளித்ததால்தான் அவரை அச்சம் தவிர்த்த அண்ணல் என்று இன்றும் போற்றுகின்றனர்.
           
            ஆனால் பாண்டியனாரைப் பெரியார் பின்னாளில் புறக்கணித்தாரோ என்ற ஐயமேற்படுகிறது. பாண்டியனார் மாண்ட போது அவர் பற்றிய செய்திகளைத் திராவிட நாடு இதழில் படித்திருக்கிறேன். அப்போதுதான் சவுந்திரபாண்டியன் என்று ஒருவர் இருந்திருக்கிறார், அவர் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்குப் அரும்பணியாற்றியிருக்கிறார்; சேலத்திலோ, வேறெங்கோ நடைபெற்ற ஒரு மாநாட்டின் ஒரு தீர்மானத்தால் என்று நினைவு - அவர் வெளியேறியிருக்கிறார் என்பனவெல்லாம் தெரியவந்தன.

            உலகில் இயக்கங்கள் மக்களின் மேலடுக்குகளிலிருந்து கீழடுக்குகள் நோக்கி நகரும் நிகழ்முறை விதிகளுடன் ஒப்பிட்டு நோக்கையில், தனிமனிதர்களான தலைவர்களுக்கும் அவர்களுக்குப் பின்னணியாக நிற்கும் மக்களுக்கும் உள்ள உறவுகளைக் குறித்த விதிகளைக் கையாண்டு பார்க்கையில் அன்று நிகழ்ந்த நிகழ்ச்சி பற்றிப் பல ஐயுறவுகள் எழுகின்றன.

            தன்மான இயக்கத்தினுள் பெரும் முழக்கத்துடன் நாடார்களின் நுழைவும், நாடார் - தாழ்த்தப்பட்டோர் என்ற முழக்கத்துடன் நாடார்கள் என்ற வலிமையான பின்னணியுடன் நிற்கும் பாண்டியனாரால் தன் தலைமைக்கு அறைகூவல் வருமென்று பெரியார் கருதினாரா, பாண்டியனாரின் முகாமையை நீர்த்துப் போகச் செய்யத்தான் வெள்ளாளர்களை நாடினாரா என்ற கேள்விகளெல்லாம் எழுகின்றன.

            பாண்டியனார் விலகிய பின்னும் நாடார்கள் பிடி தன்மான இயக்கத்தில் வலிமையாக இருந்ததா? அண்ணாத்துரையுடன் வெளியேறிய கும்பலில் நாடார் எதிர்ப்பினர் மிகுந்திருந்தனரா? தி.மு.க.வின் ஐம்பெருந் தலைவர்களைப் பாருங்கள்! அண்ணாத்துரை தவிர நெடுஞ்செழியன், அன்பழகன் இருவரும் சிவனிய வேளாளர்கள் (சிவனிய முதலியார்களும் வேளார்களும் ஒரே சாதியினர்,) மதியழகன் கவுண்டர். அவரும் கொங்கு நாட்டு வேளாளரே, சம்பத் கன்னட நாயக்கர். மற்றும் தி.மு.கழகத்தின் பிற முன்னணித் தலைவர்களில் ஆசைத்தம்பியைத் தவிர பிறரெல்லோரும் மேல் சாதியினரே. குமரி மாவட்டத்து மனோகரன் கூட அங்கு நாடார்களை இழிவாக நடத்தும் ஈழவச் சாதியைச் சேர்ந்தவரே.

            தன்மான இயக்கத்தின் வளர்ச்சியில் பெரும்பங்குகொண்ட நாடார்கள் மட்டுமல்ல தென்தமிழகத்தைச் சேர்ந்த ஒரேயோருவர் கூட இந்த ஐம்பெருந்தலைவர்களில் இல்லை என்பதைக் கவனிக்க.

வளமுண்டு மனமில்லை தோழா:
            இன்று குமரி மாவட்ட நாடார்களிடம் ஒரு பெரும் தேக்கம் நிலவுகிறது. ஒரு பக்கம் சமையல் எண்ணெய்களின் வரம்பற்ற இறக்குமதி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாலும் தேங்காயின் கொழுப்பு உடல் நலத்துக்குக் கேடானது என்ற பொய்ப் பரப்பலினாலும் தேங்காய் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வீழ்ந்துள்ளது. இருப்பினும் இங்குள்ள நில - நீர்வளங்களின்[2] சிறப்பாலும் தென்னை வேளாண்மைச் செலவுகள் கோவை போன்ற ‌‌‌மாவட்டங்களை விடக் குறைவாக இருப்பதாலும் அவர்கள் எதிர்கொள்ளும் பா‌‌திப்புகள் குறைவு. இருந்தாலும் இங்கு ஒரு பாதிப்பு உணரப்படுகிறது.

மேற்கு வட்டங்களில் முன்பிருந்த பலவகைப் பயன்மரங்களை அழித்துவிட்டு ரப்பர் மரங்கள் எனப்படும் செருப்பால்[3] மரங்ளைச் சில ஆண்டுகளுக்கு முன் பயிரிட்டனர் பெரும்பாலோர். இன்று வெளிநாடுகளிலிருந்து செயற்கைச் செருப்பால், பணக்கார நாடுகளில் கழிக்கப்பட்ட ஊர்திச் சக்கரங்கள் போன்ற செருப்பால் பொருட்களின் இறக்குமதி ஆகியவை அளவின்றி நடைபெறுவதால் இங்குள்ள செருப்பாலுக்கு ஓட்டம் குறைந்து விலை மிகவும் வீழ்ந்துவிட்டது. இதைப் பார்த்து செருப்பால் தோட்டம் வைத்துள்ளவர்கள் திகைத்து நிற்கிறார்கள். அதே நேரத்தில் கேரளத்‌‌திலுள்ள மலையாளிகள் இங்கு அண்டி(முந்திரி)க் கொட்டைத் தொழிற்சாலைகளைத் தொடங்கி இங்குள்ள பெண்களைக் குறைந்த கூலியின் மூலம் சுரண்டித் தம் மாநிலத்துக்கு நம் வளத்தைக் கடத்துகிறார்கள்.

            கல்வியைப் பொறுத்தவரையில் சென்ற தலைமுறைகளில் ஏழ்மை நிலையி‌‌லிருந்தோரின் பிள்ளைகள்தாம் படிப்பில் அதிகக் கவனம் செலுத்‌‌தினர். தாராளமாக வேலைவாய்ப்புகள் இருந்ததால் வாழ்க்கையிலும் உயர்ந்தனர். மிகப் பெரும்பாலான பணக்கார வீட்டுப் பிள்ளைகள், தாம் எவர் முன்னும் கைகட்டிப் பணிசெய்ய வேண்டியதில்லை என்று ஏளனம் பேசிப் படிப்பைப் புறக்கணித்தனர். படித்த ஏழைகளின் பிள்ளைகள் நன்னிலையடைந்ததைப் பார்த்துப் பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்புக்காகவும் வேலை பெறவும் பெரும் முதலீடுகளைச் செய்யத் தொடங்கினர். இன்று வேலைவாய்ப்‌புகள் குறுகிவிட்டதால் அதிலும் தொய்வு. ஏழைகளின் வாய்ப்புகள் முற்றிலும் பறிபோய்விட்டன. இன்று பெற்றோரும் படித்தவர்களாயிருந்தால்தான் கட்டணம் கட்டிப் படிக்க வைக்கும் பள்‌ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க முடியும் என்ற நிலை உள்ளதால் ஏழை மக்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் மேலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. சென்ற தலைமுறைகளில் கல்வி கற்று வேலை‌‌வாய்ப்புப் பெற்று வளர்ச்சியடைந்தோரின் பிள்ளைகளின் சிலர்தாம் இன்று கல்வியால் ஓரளவு மேன்மையடைய முடிகிறது. ஏழைகளின் படித்த பிள்ளைகள் கிடைத்த வேலையைச் செய்கிறார்கள். திருட்டு உட்பட குமுகப் பகை நடவடிக்கைகளில் ஈடுபடும் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது.

            பெண் கல்வியைப் பொறுத்த வரையில் குமரி மாவட்ட இந்து நாடார்களிடையில் குறிப்பிடத்தக்க வளர்ச்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சி இல்லை. பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் பொதுவாக இல்லை. நன்றாக உடுத்தி நகையணிந்து இரு சக்கர ஊர்திகளில் கணவனின் பின்னால் அமர்ந்து செல்வதே போதுமென்ற மனநிலை‌‌‌‌‌‌‌‌‌யில்தான் உள்ளனர்.

            கணிசமாக பணப் பின்னணியுள்ளவர்கள் இங்கு பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இங்குள்ள தென்னை வளத்தைப் பயன்படுத்தி எத்தனையோ தொழில்களைத் தொடங்க முடியும். செருப்பாலை மூலப் பொருளாகக் கொண்டும் பல தொழில்களைத் தொடங்க முடியும். கடற்பொருட்களின் அடிப்படையிலும் தொழில்களைத் தொடங்கலாம். இவ்வாறு முதலீட்டு ‌‌வாய்ப்புகளை உருவாக்க முடியும். ஆனால் குமரி மாவட்ட நாடார்களுக்கும் பிற சாதியினருக்கும் தொழில் முதலீடு பற்றிய ஆர்வமோ அது பற்றிய சிந்தனையோ இல்லை. கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு பெண்பிள்ளைகளுக்குப் பெருமளவில் சீதனம் பணமாகவும் நகையாகவும் கொடுப்பதிலும் திருமணங்களிலும் கோ‌‌‌‌‌‌‌‌‌யில் கொடைவிழாக்களிலும் பெருமளவில் செலவிடுவதிலும் பெரிய பெரிய வீடுகள் கட்டுவதிலும் ஊர் சுற்றுவதிலும் செலவிட்டுப் பணத்தையும் மனித உழைப்பையும் வீணடிக்கின்றனர். இங்குள்ள சீதன உயர்வு அடுத்துள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெண்களின் திருமணச் சந்தையுடன் போட்டியிடுகிறது.

            ஓரளவு வசதியுள்ள இளைஞர்களில் சிலர் பதிவு செய்த வட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை விடக் கொஞ்சம் தாழ்ந்த நிலையிலுள்ளோர் சிலர் சிறு சரக்கிகள்(லாரிகள்), உந்து வண்டிகள்(வேன்), தானிகள்(ஆட்டோ) ‌‌வாங்கி சொந்தத் தொழில் செய்கின்றனர். இது பொதுவாகத் தமிழ்நாடு முழுவதுமுள்ள நிலைதான்.

            தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நாடார்கள் நடத்தும் தொழில் - வாணிக நிறுவனங்கள் பெரும்பாலானவை புதிய தலைமுறையினர் வளர்க்கப்பட்ட சூழ்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலைகளால் வீழ்ச்சியடைந்து அழிந்தவை போக எஞ்சியவை உயிரைப் பிடித்துக்கொண்டு நிற்கின்றன. முன்பே ஓரளவு வளர்ச்சி பெற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் தாக்குப்பிடித்து நிற்கின்றன. அவை கூட பனியாக்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தாக்குதலை அன்றாடம் எதிர்பார்த்து ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிற்கின்றன.

            இந்த நிலைமை தமிழகத்திலுள்ள அனைத்துச் சாதி‌‌‌‌‌‌‌‌‌யினரும் எதிர்கொள்பவைதாம். பு‌‌திய நிறுவனங்கள் தோன்றாமலும் பழைய நிறுவனங்கள் வளர்ச்சியடைந்துவிடாமலும் நம் அரசுகள் மிக விழிப்பாகப் பார்த்துக்கொள்கின்றன. அவ்வாறு கண்காணிப்பதற்கு நம் இந்திய அரசு வளர்த்து வைத்துள்ள காவல் நாய்தான் வருமானவரித் துறை. அவ்வப்போது ஒவ்வொரு நகரத்திலுமுள்ள பணக்காரார்கள் மீது நூற்றுக்கணக்கான ஊழியர்களுடன் வேட்டை நடத்திப் பணத்தைப் பறித்துச் செல்கின்றன. ஆண்டுக் கணக்கில் அவர்களது பணத்தை முடக்கி வைக்கின்றன. தாமே மதிப்பீடு செய்த வருமானத்தை அவர்கள் மீது திணித்து 60 நூற்றுமேனி வரை வரி விதித்து வட்டியும் விதித்துக் கொடுமை செய்கின்றன. இந்த வேட்டை முடிந்ததும் அந் நகரங்களிலுள்ள பணம் படைத்த மக்கள் பண்டை நாட்க‌ளில் நடந்தவையாகக் கேள்விப்படும் பகற்கொள்ளைகள், தீவட்டிக் கொள்ளைகளுக்கு ஆட்பட்டவர் போன்று கலங்கி நிற்கின்றனர். பண்டை நாட்களில் மக்கள் ஒன்று திரண்டு கொள்ளையர்களைத் துரத்தியடிக்கும் ‌‌வாய்ப்பு இருந்தது. இன்று இக் கொள்ளையர்களின் பின்னணியில் மாநிலக் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காவல்துறையும் இந்திய அரசுப் படைகளும் சட்டப் பாதுகாப்பும் பொதுமை, நிகர்மை(சோசலிசம்) என்ற பெயர்களில் போலிக் கோட்பாடுகளும் உள்ளன. இவை முற்போக்கு நடவடிக்கைகள் என்ற எண்ணத்திலும் பணக்காரர்கள் மீது உள்ள வெறுப்பினாலும் மக்கள் இதைக் கண்டுகொள்வதில்லை. இந்த வேட்டைகளின் போது வீடுகளிலும் நிறுவனங்களிலுமிருந்து கைப்பற்றப்படும் விலை மதிப்புள்ள பல பொருட்களும் பெருமளவு பணமும் கணக்குக்குக் கொண்டு வரப்படாமல் வேட்டை நாய்களே தின்று விடுகின்றன. பெருமளவில் கைக்கூலியும் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் இவற்றினாலெல்லாம் கொடுமைகள் குறைவதில்லை.
           
சட்டத்துக்குட்பட்டுச் சேர்த்த பணத்துக்குத்தான் இத்தனை கொடுமையும். இதுதான் அவர்கள் மற்றும் இங்குள்ள படித்த மேதைகளின் அகராதிப்படி கருப்புப்பணம். ஆனால் மக்களை ஏமாற்றி அதிகார பீடங்களில் அமர்ந்து ஊழல் செய்து கொள்ளையடிப்பவர்களுக்கு இந்த வரைமுறையெல்லாம் கிடையாது. நடுவரசில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராயிருந்த சுக்ராம் என்பவரிடம் வருமானத்துக்கு மிஞ்சிய பணம் உரூ 53 கோடி இருந்து அது வருமானவரித் துறையினால் கைப்பற்றப்பட்டது. அவர்கள் அதில் உரூ 17 கோடியை மட்டும் வரியாக எடுத்துக் கொண்டு மீதி உரூ 36 கோடியைத் திருப்பிக் கொடுத்துவிட்டனர். இந்தப் பிடித்தம் 32 நூற்றுமேனிதான் ஆகிறது. அப்போது நடைமுறையிலிருந்த 40 நூற்றுமேனி வரி கூடப் பிடிக்கப்படவில்லை. சட்டத்துக்குப் புறம்பாகச் சேர்க்கப்பட்ட கள்ளப் பணம் இவ்வாறு சலுகை பெறும் போது படித்த நம் மேதாவிகள் அனைவரும் வருமானவரிக்காக மறைக்கப்பட்ட, சட்டத்துக்குட்பட்டு ஈட்டப்பட்ட பொதுமக்களின் பணத்தை கருப்புப் பணம் என்ற பெயரால் குறிப்பிட்டு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றனர். சம்பளப் பட்டியலில் கையெழுத்‌‌திட்டுத் தாம் பெறும் பணத்துக்கு கணக்குக் காட்டி வரி செலுத்த வேண்டியுள்ளது; தொழில் - வாணிகத் துறையினர் பொய்க் கணக்குக் காட்டித் தப்பித்துக் கொள்கின்றனர் என்பது இவர்களது எண்ணம். ஆனால் சரி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யான கணக்குக் காட்ட முடிகிறது என்பதால் இவர்கள் தன்‌‌‌மானத்துடன் தலை நிமிர்ந்து வருமானவரித் துறையை எதிர்கொள்ள முடிகிறது. தங்கள் பக்கத் தொழில்கள் மூலமும் கைக்கூலியாகவும் ஈட்டும் பணத்தை இவர்கள் எளிதில் வெள்ளை‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாக்கவும் முடிகிறது. இங்கும் வேட்டைகள் வந்தால் என்ன செய்வது என்ற நடுக்கமும் உள்ளது. ஆனால் திட்டவட்ட‌‌‌மான கணக்குக் காட்ட முடி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாதவர்களாகிய தொழில் - வாணிகத் துறையினர் வருமானவரித் துறை வேட்டை நாய்களிடம் படும் இழிவுகளையும் கொடுமைகளையும் இவர்கள் அறியமாட்டார்கள்.

            சுக்ராம் இவ்வளவு எளிதாக விடுபட்டதற்கு அடிப்படைக் காரணம் அவரது தேர்தல் கூட்டு ஆளும் கட்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிக்கு வேண்டியிருந்ததால்தான். இவ்வாறு வருமானவரித் துறை எதிர்க்கட்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சியினரையும் ஆளும் கட்சியிலுள்ள எதிர்ப்பாளர்களையும் மிரட்டவும் பயன்படுகிறது. 1975இல் இந்திரா காந்தியை எதிர்த்துப் போராடிய செயப்பிரகாசருக்குத் துணை நின்ற தொழில் துறையினரை ஒடுக்குவதற்கென்றே 97½ நூற்றுமேனி உயர்(‌சூப்பர்) வரி ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விதித்தார்[4]. அன்றிலிருந்து ஆளும் கட்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சியினரை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பழக்கமே தொழில்துறையினரிடமிருந்து அகன்றுவிட்டது. இந்த வகையில் வருமான வரித்துறை நம்மிடையில் மக்களாட்சி மரபுகள் என்று ஏதாவது முகிழ்த்திருந்தால் அதை முற்றாகக் கருக்கி அழிக்கும் கொடும் நஞ்சாகும்.

            வருமானவரித் துறை பல வேளைகளில் குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களில் ஒரே நேரத்தில் வேட்டை நடத்துகிறது. இரு ஆண்டுகளுக்கு முன் சவர்க்கார(சலவை சோப்பு) நிறுவனங்கள் மீது மட்டும் மதுரை, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் ஒரே நேரத்தில் வேட்டை நடத்தியது. கோவையிலுள்ள ஒரேயொரு நிறுவனத்திலிருந்து மட்டும் ஒரு கோடி உரூபாய்களைப் பறிமுதல் செய்தது. ஒரு சிறு அல்லது நடுத்தர நிறுவனத்திடமிருந்து ஒரு கோடி உரூபாய்களைப் பறிமுதல் செய்தால் அந் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிறுவனம் எப்படி உயிர் பிழைத்து நிற்கும்? வடக்கிலுள்ள நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தமிழகத்து நிறுவனங்கள் சந்தையைப் பிடித்ததால் அவற்றை அழிக்கவே இந்த நடவடிக்கை என்பதில் எவருக்கும் ஐயமிருக்க முடியாது.

            அனைவருக்கும் தெரிந்த இன்னொரு நிகழ்வு, தமிழகத்தில் பெரும் முதலீட்டுடன் இயங்கிய இரு திரைப்பட நிறுவனங்கள் தொடர்பானது. கோடிக் கணக்கில் செலவு செய்து திரைப் படங்களை எடுக்கத் தொடங்கியவை தமிழகத்தில் கே.டி.குஞ்சுமோன் என்ற கேரளத்துக்காரரதும் சவுத்திரி என்பவரது சூப்பர் குட் நிறுவனமுமாகும். கேரளத்துக்காரரை ஒழிப்பதற்கென்று அவர் மீது தேடுதல் வேட்டை நடைபெற்றது. அதன் விளைவாக அவருக்கு நெஞ்சாங்குலை நோய் (இருதயநோய்)வந்தது. அத்துடன் அவர் களத்தையே விட்டு அகன்றார். இதற்கு முன்னும் பின்னும் நமக்குத் தெரியாமல் எத்தனை வேட்டைகள் நடந்தனவோ! அவற்றில் தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை பேர் அழிக்கப்பட்டனரோ நமக்குத் தெரியாது.

            இவ்வாறு வடக்கத்திகளுக்காகவே தேடுதல் வேட்டைகள் நடைபெறுகின்றன. பணத்தாள்கள்(நோட்டுகள்) திணிக்கபட்ட திண்டுகள் மீது சாய்ந்து கிடந்து தொழில் நடத்தும் பனியாக்கள் மீது வருமானவரித் துறை தேடுதல் வேட்டை நடத்தியதாக வரலாறே கிடையாது. ஆக, பொதுவாக வடக்கத்திகளுக்கும், குறிப்பாக பனியாக்களு‌க்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் போட்டியாக உள்நாட்டு நிறுவனங்கள், அவை எந்தச் சாதி, மொ‌ழி, சமய மக்களுக்குரியவையாயினும் தலைதூக்கிவிடக் கூடாது என்பதே நடுவரசின் வரிக் கொள்கை. வருமானவரியின் நோக்கம் அதன் மூலம் தண்டப்படும் வரியின் அளவல்ல, அதன் வரம்புக்குள் கூடுதலான மக்களைக் கொண்டுவருவதுதான் என்று யசுவந்து சின்காவும், ப.சிதம்பரமும் கூறுவதன் உட்பொருள் அதுதான். அதாவது எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு உள்நாட்டு மக்களை மிரட்டுவதுதான்.

            இன்று பணம் வைத்திருப்போர் வருமானவரித் துறையையோ வருமானவரியையோ எதிர்க்கும் துணிவின்றி உள்ளார்கள். அதற்கு ஒரே காரணம் தங்கள் மீது தேடுதல் வேட்டைகள் ஏவப்பட்டு விடுமோ என்ற அச்சம்தான். ஓர் அரசுத் துறை மீது மக்களுக்கு இத்தகைய அச்சம் நிலவுவது நாட்டு நலனுக்கு உகந்ததல்ல. அதுவும் பொருளியல் சார்ந்த ஒரு துறை இத்தகைய மிரட்டல் விட்டுக்கொண்டிருப்பதற்கு இடம் கொடுப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. பணம் வைத்துக்கொண்டிருப்பவர்கள் எப்போது எந்த வடிவில் வருமானவரித் துறையினர் நுழைவார்களோ என்று எண்ணி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சி, மேம்பாடு குறித்த சிந்தனையே அவர்களிடம் தலைதூக்க முடியாமல் செய்துவிடு‌‌‌கிறது இது. அத்துடன் குருதிக் கொதிப்பு, நெஞ்சாங்குலை தாக்குதல், நீரிழிவு போன்ற பல நோய்கள் மிகு‌‌தியாயிருப்பதற்கு இவர்களது இடைவிடாத பதற்ற ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலை முகாமையான காரணமாகும்.

            வருமானவரித் துறையின் கொடுமைகளைக் கண்டு பணம் வைத்திருப்பவர்கள் கொதிப்படைந்திருந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் மன நிலை அ‌‌வர்களுக்கு இல்லை. திருடனைத் தேள் கொட்டிய நிலையில் அவர்கள் உள்ளனர். வருமானவரி என்பது பொதுமை அல்லது நிகர்மைக் குமுகத்தை எய்துவதற்கான முதற்படி என்று நம்மிடையிலுள்ள முற்போக்கினர் சொல்லி வைத்திருக்கின்றனர். தங்களை வி‌ழிப்படைந்தவர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்பும் மேதாவிகள் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றனர். பணம் வைத்திருப்போரும் தொழில் - வாணிகங்களில் ஈடுபட்டிருப்போரும் சுரண்டல் பேர்வழிகள், கொள்ளைக்காரர்கள், குமுகப் பகைவர்கள் என்றெல்லாம் எல்லோர் மனத்திலும் பதியவைத்துள்ளனர். இந்த எண்ணம் பணம் வைத்திருப்போர், தொழில் -வாணிகத் துறையினர் மனதிலும் படிந்து போய் அவர்கள் குற்றவுணர்வில் உள்ளனர். இந்த மனநிலை அவர்கள் மீது எந்த விதக் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டாலும் எதிர்த்துக் குரல் கொடுக்கும் எண்ணம் எழாமல் செய்து விடுகிறது.

            இன்று வருமானவரிதான் நம் நாட்டுத் தொழில் வளர்ச்சியைக் கருவறுக்கும் காரணிகளில் முதன்மையானது. எனவே பொருளியல் உ‌‌‌‌‌‌‌ரிமைப் போராட்டம் வருமானவரி ஒழிப்புப் போராட்டத்திலிருந்து தொடங்கி விரிவுபடுத்தப்பட வேண்டும். இதில் பணம் படைத்தோர் மற்றும் தொழில் - வாணிகத் துறையினரின் ஒத்துழைப்பைப் பெற வேண்டுமாயின் பணம் திரட்டுவது, முதலிடுவது, தொழில் வளர்ச்சியில் பங்கு கொள்வது ஆகியவை சுரண்டலோ கொள்ளையோ குமுகப் பகை நடவடிக்கையோ அல்ல, குமுகத்தின் அனைத்துத் துறை சார்ந்த வளர்ச்சிக்கு இன்றியமையாத குமுகப் பணியாகும்; அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் வளஞ்சான்ற எதிர்காலத் தமிழகத்தை உருவாக்கும் சிற்பிகளாகும்; எனவே தங்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளை வீரத்துடனும் நெஞ்சுறுதியுடனும் எதிர்த்து முறியடிக்க வேண்டியது அவர்கள் செய்ய வேண்டிய இன்றியமையாத உடனடிப் பணியாகும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

ஒன்றுபடுவோம், இணைந்து உயர்வோம்:
            நாடார்கள் என்று அழைக்கப்படும் சாணார்கள் அனைவரும் பனை ஏறுவோர் அல்லர். அவர்களிடையிலுள்ள உட்பிரிவுகள்படி பார்த்தால் அவர்களின் ஐந்தில் ஒரு பகுதியில்தாம் அத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிகிறது. இன்று அந்த விகிதமும் கூடப் பெருமளவு சுருங்கி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, சாணார்கள் தவிர பள்ளர், பறையர், வாதிரியார்கள் எனப்படும் சாதியினரும் தமிழகத்தின் பல பகுதிகளில் பனைத் தொழில் செய்கின்றனர். தஞ்சை ‌‌‌மாவட்டத்திலும் அதனை அடுத்தும் வீரகுடி வேளாளர் என்றொரு வகுப்பினர் பனைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. வட மாவட்டங்களில் கி‌ராமணி என்ற சாதியினரும் இத் தொழிலில் உள்ளனர்.

            பனைத்தொழில் மட்டுமல்ல, ஏறக்குறைய எல்லாச் சாதியினரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சாதிகளில் உள்ள மக்களில் பலர் தம் பிள்ளைகள் குலத்தொழிலில் ஈடுபடுவதை விரும்பவில்லை. அதற்கு முதன்மையான காரணம் புதிய தொழில்நுட்பங்களின் நுழைவால் தங்கள் மரபுத் தொழில்களால் தாக்குப்பிடித்து நிற்க இயலாமல் தாங்கள் வறுமையடைவது, காலங்காலமாகக் கு‌‌‌‌‌றிப்பிட்ட தொழில்கள் பற்றி மக்களிடம் படிந்திருக்கும் இ‌ழிவுணர்ச்சி, பொதுவாகக் கைத்தொழில்களுக்கு எதிர்காலம் குன்றிய நிலைமை போன்றவையாகும். சிறு தொழில் - வாணிகத்தில் ஈடுபட்டிருப்போர் கூட அரசு தம்மை உட்படுத்தும் பல்வேறு இ‌ழிவுகளினால் மனம் வெறுத்துத் தங்கள் பிள்ளைகளுக்கு உயர்கல்வியை விலைக்கு வாங்கி அவர்களைப் பெரும் அரசுப் பதவிகளில் அமர்த்த அல்லது ‌‌‌வெ‌ளி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாடுகளுக்கு விடுத்துவைக்க விரும்புகின்றனர். மாற்றுத் தொழில் ‌‌வாய்ப்புகளை ஏற்படுத்தாதது மட்டுமல்ல அத்தகைய தொழில்கள் தோன்ற முடியாத சூழலையும் ஏற்படுத்தி வைத்திருக்கும் அரசு தொண்டு நிறுவனங்களையும் துணை சேர்த்துக் கொண்டு பட்டறிவில்லாத இளைஞர்களுக்குச் சொந்தத் தொழில் நடத்த வழிகாட்டுவதாகக் கூறி ஏ‌‌‌மாற்றி ஊக்கமிழக்க வைக்கிறது[5], மரபுத் தொழில்களுக்குச் சலுகை என்ற பெயரில் அவர்களை வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் பட்டினி போடுகிறது.

            தொழில் சார்ந்த சாதிகளும் சாதி சார்ந்த தொழில்களும் நெடுங்காலம் தேங்கி உறைந்து இறுகிப்போன தொழில்நுட்பத்தின் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விளைவாகும். புதிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து உருவாகும் ஒரு குமுகத்தில் பெற்றோரின் தொழிலைப் பிள்ளைகள்தாம் செய்ய முடியும் என்ற நிலை அடிபட்டுப்போகும். அதன் மூலம் சாதியும் நிலைக்களனின்றி அழிந்துபோகும். எனவே மரபுத் தொழில்களை அவற்றின் அறிவியல் அடிப்படைகளை இனம் கண்டு மேம்படுத்திப் புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்தி அவற்றை இடைவிடாமல் புதுப்பித்துக் கொள்வது ஒன்றுதான் சாதிகளாகப் பிளவுண்டு ‌‌‌கிடக்கும் தமிழ்க் குமுகத்தை விடு‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விக்கும் ஒரே வழி. அதற்கு இட்டுச் செல்லும் ஒரே கருவி பொருளியல் உரிமைப் புரட்சிதான்.

            இன்று தமிழகம் முழுவதும் பொருளியல் பற்றிய சிந்தனை இல்லாத பணம் படைத்த மக்கள் ஒரு கோடியிலும் கல்வி கற்கவோ பிழைக்கவோ வழியற்ற பெரும்பான்மை மக்கள் இன்னாரு கோடியிலும் ஒப்பற்ற இயற்கை வளமும் மனித ஆற்றலும் செயலற்ற நிலையில் இடையிலுமாகத் தேங்கி நிற்கின்றன. இந்தத் தேக்கத்தை உடைத்து அனைத்து வளங்களும் மனித ஆற்றலும் செயற்பட்டு மக்களின் கல்வி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தரம், பண்பாடு ஆகியவை மேம்பாடடைந்து உண்மையான மக்களாட்சி என்ற திசையில் தமிழகத்தை நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பும் தேவையும் இன்றைய இளைய தலைமுறைக்கு உண்டு. இந்த முயற்சிகளின் குறுக்கே நிற்கும் ஆட்சி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாளர்களையும் ஆதிக்க விசைகளையும் முறியடித்துத் தம் குறிக்கோளை அவர்கள் எய்த வேண்டும். அதன் முதற்படியாகத் தாங்கள் ஆண்ட மரபினர் என்று சாதி வரலாற்றாய்‌‌வாளர்கள் கூறும் புனைவுகளைப் புறக்கணிக்க வேண்டும். ஒருவேளை அதில் கடுகளவு உண்மையிருந்தால் கூட அதனால் எந்தக் குழு மக்களுக்கும் பெருமையில்லை. முடியுடை மூவேந்தர்களாயிருந்தாலும் பிற மன்னர்களாயிருந்தாலும் அரசர்கள் அனைவரும் மக்களின் அரத்தத்தை உறிஞ்சி அவர்களை அடிமைப்படுத்திக் கொடுமை புரிந்தவர்களே என்பது வரலாறு காட்டும் மறுக்க முடியாத உண்மை. அதனால்தான் மனித குலமே மன்னராட்சியை ஒழித்ததை ஒரு மாபெரும் வரலாற்று எய்தலாக எண்ணிப் பெருமைகொள்கிறது. இந்தப் பின்னணியில் நாம் அரச மரபுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகத் தெரியவந்தால் அதை இழிவாகக் கருதி ஒதுக்க வேண்டும்.

            நாடார்கள் என்ற சாதிப் பெயரில் அ‌‌‌‌‌றியப்படும் சாணார்களின் கடந்த 200 ஆண்டுக் கால வரலாறு தமிழகத்தின் பிற ஒடுக்கப்பட்ட சா‌‌தியினர் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்கு நல்வழி காட்டும் கூறுகளை முற்பகுதியிலும் ஒரு சாதி மட்டும் தனித்து ஓர் எல்லைக்கு மேல் செல்ல முடியாது, தாம் வாழும் நிலத்திலுள்ள பிற மக்களோடு இணைந்து ஒரே மக்களாகத்தான் அந்த எல்லைக்கு அப்பால் செல்ல முடியும் என்ற எதிர்காலப் பாடத்தை இறுதியிலும் கொண்டுள்ளது. சாதி வரலாறோ புதிய வழிபாட்டுமுறைகளோ அவர்களை வளர்க்க‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வில்லை; ஒன்று திரட்டவும் கூடப் பயன்படவில்லை. திட்டமிட்டும் தற்செயலாகக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தியும் ஊக்கத்துடனும் வீரத்துடனும் செயற்பட்டதால் எய்திய பொருளியல் வளர்ச்சிதான் அவர்களை உயர்த்தியது.

இன்று ஒடுக்கப்படும் மக்களாகிய பள்ளர், பறையர், சக்கிலியர் ஆகியோரின் கைப்பற்றில்தான் தமிழகத்தின் மிகப்பெரும் பகுதி வேளாண் நிலங்கள் உள்ளன. பிற்படுத்தப்பட்டடோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் வகைப்பாட்டினுள் வரும் போர்ச்சாதிகளிடம் வட்டித் தொழில், சாராயத் தொழில்கள் மூலம் கணக்கிட முடியாத அளவுக்குப் பணம் திரண்டு கிடக்கிறது. அதை உரிய வகையில் முதலிட வழி தெரியாமல் தள்ளுவண்டிகளில் வாணிகம் செய்வோருக்குக் கூட ஆளாளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் என்று ஒவ்வொருவருக்கும் இலக்கக் கணக்‌‌‌கில் வட்டிக்குக் கடன் கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்கின்றனர்.

            இன்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரிடையில் தங்கள் மக்கள் தொகை விகிதத்தில் தொழில் - வாணிகத் துறையில் ஈடுபட்டிருப்போரில் நாடார்கள் முதலிடத்தில் இருக்கலாம். ஆனால் அதே மக்கள் தொகை விகிதத்தில் பார்த்தால் மேலே கூறப்பட்ட இரு சாதிக் குழுவின‌‌‌‌‌‌‌ரிடத்திலும் பண வடிவிலும் வேளாண் நில வடிவிலும் இருக்கும் செல்வம் நாடர்களுக்குள்ளதை விடக் குறைவாக இல்லை என்பதே உண்மை நிலை. பணத்தைப் பொறுத்த வரை நாம் மேலே விளக்கிக் கூறிய தடங்கல்களை உடைத்தும் வேளாண்மையைப் பொறுத்து நில உச்சவரம்பு மற்றும் உழவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒடுக்குமுறைகளைத் தகர்த்துப் பெரும் பண்ணைகளை அமைத்தும் வேளாண்மை சார்ந்த எண்ணற்ற துணைத் தொழில்களை வளர்த்தும் பாடுபட்டால் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாடார்களிடையில் உள்ளதை விடக் கூடுதலான விகித்தில் தொழில் - வாணிகத் துறைகளில் உயர முடியும். எனவே அடிமட்டம் வரையுள்ள அனைத்து மக்களும் பயன்படும் வகையில் தம் செல்வங்களை எப்படிக் கையாள்வது, தடைகளை எப்படித் தகர்ப்பது என்று சிந்தித்து எதிர்காலத் திட்டத்தை வரையறுத்துச் செயற்பட வேண்டும். சாதிப் பெருமை பேசியும் சலுகைகளைக் காட்டியும் ஏமாற்றும் சாதிச் சங்கங்களின் தலைவர்களையோ சாதி அரசியல் தலைவர்களையோ கடவுள்களாக்கி வழிபட்டுச் சீரழியும் நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும். தன்மானத்துடனும் தற்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சார்புடனும் வளர்வதற்குரிய கோட்பாடுகளை வளர்த்துச் செயற்பட வேண்டும்.

பிற்சேர்க்கை

            சாணார் சான்றார் சான்றோர் என்ற சொல் பற்றி நாடார் ஆய்வாளர்கள் பொதுவாகக் கூறுவது அவர்கள் போர் வீரர்கள் என்பதாகும். ஏதோ ஓர் காலகட்டத்தில் சாணார்கள் அதாவது பனையேறிகள் போர் வீரர்களாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. பனையேறிகளின் ஒரு பண்பு அவர்கள் தங்கள் வட்டாரத்தில் மிக உயர்ந்த இடத்திலிருந்து தொழில் செய்வதாகும். அதனால் தாங்கள் வாழும் நிலத்தினுள்ளும் அதனைச் சுற்றிலும் நடைபெறும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு மிகுதி[6].

எனவே அவர்கள் சான்று(சாட்சி) சொல்பவர்களாக இருக்கும் வாய்ப்பு உண்டு. கள ஆய்வு மூலம் ஊர் உசாவல் முறையில் பனையேறிகள் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்புகள் உண்டா என்று ஆயலாம்.

இலக்கியத்தைப் பொறுத்தவரையில் நெல்லை குமரி மாவட்டங்களினுள்ள இரண்டு கதைப்பாடல்களில் இவர்களது இந்தப் பண்பு வெளிப்படுகிறது. ஒன்று பிச்சைக்காலன் கதை. இன்னொன்று பலவேசஞ் சேர்வைக் கதை. வலங்கையர் கதை நிகழ்வு நமக்கு ஏற்கனவே தெரியும். தினமணி கதிர் இதழில் நாடாரான சு. சமுத்திரம் எழுதிய தொடர்கதை ஒன்றில் கள்ளக் காதலில் ஈடுபட்டுள்ள இருவரை ஒரு பனையேறி பார்த்து எச்சரிப்பதைக் காட்டுகிறார்.

            காட்டில் புலி, கரடி, யானை போன்ற கொடு விலங்குகள் நடமாடினால் மரத்தில் இருக்கும் குரங்குகளும் பறவைகளும் எச்சரிக்கை ஒலி எழுப்புவது இயல்பான நிகழ்ச்சி.

            பனை ஒரு வறண்ட காலநிலைக்குரிய மரம். எனவே பாசனம் செய்ய முடியாத மேட்டுநிலங்களிலேயே பனையை மட்டும் நம்பி வாழும் மக்கள் இருந்திருக்க முடியும். பண்டை நாட்களில் அரசுகளின் எல்லைப்புறங்களாக இவை போன்ற மேட்டு நிலங்களே இருந்துள்ளன. வளமற்ற இந்த மண்ணில்தான் அரசர்களின் எல்லைகளைக் காக்கும் மறவர்கள் வழிப்பறியாளர்களாக விளங்கியுள்ளர். வழிப்பறியாளர்களுக்கு உளவு சொல்பவர்களாகவும் பனையேறிகள் இருந்திருக்கலாம்.
            முருந்தேர் இளநகை காணாய்நின் னையர்
            கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்
            கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன்
            புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன ... சிலம்பு. வேட்டுவ வரி ,பாடல்-15.

            எனவே கள், களவு என்ற இரு பொருட்படவும் பனையேறிகள் கள்ளர் என அழைக்கப் பட்டிருக்கலாம்.

            பனையேற்று ஓர் பாதுகாப்பற்ற தொழில். பனையிலிருந்து தவறி விழுந்தால் எலும்புமுறிவு, முடமாதல், சாவு முதலியவை நேரலாம். எலும்பு முறிவு, நரம்புகளில் அடிபடுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றுக்கு மருத்துவம் கண்டுபிடிப்பது இத் தொழிலின் தேவையும் இதன் பக்க விளைவுமாகும். இதிலிருந்து எலும்பு முறிவு மருத்துவம் உருவானது என்பர். நெல்லை, குமரி மாவட்டங்களில் எலும்பு முறிவு, சுளுக்கு போன்றவற்றுக்கு நாடார்களே பெரும்பாலும் மருத்துவர்களாக இருக்கின்றனர். பிற பகுதிகளில் சாணார்கள் அல்லது பிற சாதிப் பனையேறிகளிடம் இது போன்ற மருத்துவ முறை உண்டா என்பதைக் கள ஆய்வு மூலம் கண்டறிவது நல்லது.

            வர்மாணியர், வர்மாணியம், வர்மக்கலை, மர்மக்கலை என்பவை நோயைத் தீர்ப்பவை என்ற நிலையிலிருந்து நோயை, சாவை உண்டாக்குபவை என்ற நிலைக்கு வரும் போது அது போர்க்கலையாகிறது. வர்மப் போர்க்கலை[7] நடப்பில் இருந்ததற்குச் சான்றாக அண்மையில் வெளியான மு.இம்மானுவேல் எழுதிய The Anatomy of a Folklore என்ற நூலில் சான்று உள்ளது. 18ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னன் வீர மார்த்தாண்ட வர்மனின் அரசுரிமைப் போரில் அனந்தபத்மநாபன் என்ற நாடானின் கீழ் இயங்கிய 108 களரி(போர்ப்பயிற்சிக் கூடங்கள்)களிலுள்ள வீரர்கள் அவனுக்குத் துணையாக இருந்ததாக அதில் ஆயப்பட்டுள்ள ஓட்டன் கதையில் கூறப்பட்டுள்ளதாக செய்தி உள்ளது.[8] ஆக, பனையேற்றம் → சான்று→ சான்றார்→ சான்றோர் → மருத்துவம்→ போர்க்கலை→ போர் வீரர் என்று இத் திரிவாக்கம் நிகழ்ந்திருக்கலாம். மற்போர் போன்ற விளையாட்டுகளில் வல்லோரை சாண்டோ என்று குறிப்பிடுவதும் இதன் அடிப்படையில்தான்[9].

            பனையேறிகளெல்லாம் வழிப்பறியாளருக்குத் துப்புக் கொடுப்போராக, கள்ளர்களில் ஒருவராக மாறியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் தொழில்களில் கடினமான ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து வாழும் மக்கள் அனைவரும் வழிப்பறிக்காரர்களுக்குத் துப்புக் கொடுத்து வயிறு வளர்க்க விரும்பமாட்டார்கள். பிறரை விட உயர்ந்த தளத்தில் தொழில் செய்யும் இவர்கள் பகைவர்களின் வருகையை மறவர்களுக்கும் நாட்டு நடப்புகளை ஊராருக்கும் சொல்லும் சான்றோர்களாகவும், நாட்டுக்காகப் போரிடும் படை வீரர்களாகவும் சிலரேனும் இருந்திருப்பர். அதனால்தான் வீரத்துக்கு சான்றாண்மை என்ற சொல் பயன்படுகிறது போலும். பனையேற்றுத் தொழிலை உள்நாட்டிலும் விரிவுபடுத்தி அரசனுக்கு அண்மையிலும் சென்றிருக்கக் கூடும். களப்பிரர் காலத்துக்குப் பின் கள்ளர்களும் சோழ அரசர்களுக்கு நெருக்கமாகியுள்ளதையும் கருதிப் பார்க்க வேண்டியுள்ளது.

            வர்மக் கலையைப் பொறுத்தவரை போர் முறை என்ற வகையில் நேருக்கு நேர் உடலளவில் மோதும் போதுதான் இது பயன்படும். வில், வேல், வாள் போன்ற கருவிப் போர்களுக்கு அது பொருந்தாது. எனவே அது ஓர் அரிய கலையாகக் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் மருத்துவமாகப் பதுங்கிக் கொண்டது என்றே கொள்ள வேண்டும்.

            சாணார் என்பது சென்ற நூற்றாண்டு வரை சான்றோர் என்று கூறும் மரபு இருந்தது என்பதற்கு மேலே கூறிய ஓட்டன் கதையில் சான்றோன், சான்றோர்ப் படை என்று வருவது மட்டுமல்ல சொத்தாவணங்களிலும் சான்றோர் மரபு என்று பொருள்படும் சான்றோர்க் கிருசி என்ற சொல் குமரி மாவட்டத்தில் வழங்கப்பட்டுவந்ததிலிருந்து தெரியவருகிறது. அகராதிகளும் இதனை உறுதிப் படுத்துகின்றன.

            கோயில்களில் உயர்ந்த மாடக் கோபுரங்களைப் பெருமளவில் எழுப்பியவர்கள் பேரரசுச் சோழர்களே என்று தோன்றுகிறது. இராசராசனின் பெருவுடையார் கோயில் கோபுரம் எனப்படுவது உண்மையில் கோபுரமேயல்ல. கருவறை மீது எழுப்பப்பட்ட விமானம் எனப்படும் மேல்கட்டுதான். உண்மையான மாடக் கோபுரங்கள் அதன் பின்னர் உருவான அல்லது செப்பனிடப்பட்ட கோயில்களில்தாம் எழுப்பப்பட்டன. கோயில்களைப் பராமரிப்பதற்கென்று கோயில்களுக்கு ஊர்களை இறையிலியாக எழுதி வைக்கும் நிலைமாறி நிலங்களையும் ஆட்சியையும் கோயில்களின் கீழ் கொண்டு வருவதற்கான ஓர் உத்தியாகவும் புதிய புதிய கோயில்கள் உருவாக்கப்பட்டன. அரசனின் நடவடிக்கைகளில் தலையிடும் வேளிர்கள் எனப்படும் குறுநில மன்னர்கள் மற்றும் படையெடுப்புகளின் போது நில மானியங்களைப் பெற்ற நிலக்கிழார்களின் தலையீட்டைத் தவிர்ப்பது இந்த அதிகார மாற்றத்தைத் தேவையாக்கின.

            அவ்வாறு கட்டப்பட்ட கோயில்களில் ஆட்சியின் அலகுகளும் படைப் பிரிவுகளும் இடம் பெற்றன. எனவே கண்காணிப்புக் கோபுரங்களாக மாடக் கோபுரங்கள் கோயில்களில் கட்டப்பட்டன. இவ்வாறு சுற்றுவட்டாரத்தைக் கண்காணிப்பதற்குப் பனையேறிகளின் தேவை இல்லாது போயிருக்கலாம்.

            கோயில்களைக் கட்டுவதற்கும் பராமரிக்கவும் பெரும் பணம் தேவைப்பட்டது. எனவே கற்பனைக்கெட்டாத வரிவிதிப்பும் குத்தகை உழவனை ஒட்ட உறிஞ்சும் வாரமும் சுமத்தப்பட்டன. அதன் எதிர்வினை தான் வலங்கையர் - இடங்கையர் புரட்சி. அதைத் தூண்டிவிட்டு விசயாலயச் சோழ மரபை அழித்து விட்டுச் சாளுக்கியத் தந்தைக்குப் பிறந்த குலோத்துங்கன் அரசைக் கைப்பற்றினான். அதில் அவனுக்கு உதவியவர்களில், இன்று தாங்கள் ஆண்ட மரபினர் என்று மார்தட்டிக் கொள்ளும் அனைத்துச் சாதியினரும் இருப்பர். அவனை எதிர்த்து ஒடுக்குமுறைக்கும் ஒதுக்குமுறைக்கும் ஆளானவர்கள் அதே சாதிகளைச் சார்ந்தவர்களாகவே இருப்பர். இன்று இந்த ஆண்ட மரபினர் ஒரு கட்டத்தில் தங்கள் சாதியினருடனும் தங்களை ஒத்த பிற சாதியினருடனும் நின்று பெற்ற உரிமைகளால் அல்லது சலுகைகளால் உயர் நிலையடைந்து தமக்கு எல்லாமே கிடைத்துவிட்டது, நாங்கள் பழையபடி பட்டமேறுகிறோம்; உழுகுடிகளே கோயில்களுக்கு ஒழுங்காக வாரம் அளந்து விடுங்கள்; உங்கள் நிலம் காணாமல் போய்விட்ட ஒரு கோயிலுக்குச் சொந்தம் என்று ஏதாவது கல்வெட்டு அல்லது பட்டயம் கிடைத்தால் அதன்படி அக் கோயிலுக்கு நிலத்தை ஒப்படைத்து விட்டுக் கைகட்டி வாய்பொத்தி ஒழுங்காக வாரத்தைக் கட்டிவிடுங்கள். நாங்கள் இதோ கோயிலைப் புனர் நிர்மாணம் செய்யப் போகிறோம்; தக்காராவோம், அறங்காவலராவோம் என்கின்றனர். சான்றோர்களோ புதிய தொழில்நுட்பங்களில் (வில்,வேல் போன்ற போர்க் கருவிகளாலும் கோபுரக் கண்காணிப்பாலும்) இழந்துவிட்ட செல்வாக்கை நினைவுபடுத்தி நாங்கள் ஆண்ட மரபினர், எனவே எங்களை மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேருங்கள், பனையேறிகளுக்குக் கள்ளிறக்க உரிமை தாருங்கள், கள்ளுக் கடைகளைத் திறந்து கற்பகம் எனப்படும் பனை மரத்தினதும் பனையேறிகளினதும் மதிப்பை உயர்த்துங்கள்(?!) என்று கேட்கிறார்கள்.

            சமணர் என்பதைச் சுருக்கமாக சானா என்று குறிப்பிடுவதிலிருந்து சாணார் என்று மருவியிருக்கலாமோ என்று பார்த்தால் அம்மணம் கள்ளுக்கு எதிரானது என்ற உண்மை அந்த வாய்ப்பை மறுக்கிறது.

            அரியநாத முதலியார் பற்றி தொடக்கத்தில் கூறியவற்றோடு இன்னும் சில சொல்ல வேண்டியுள்ளது. அண்மையில் வெளியான The Dravidian Lineages - The Nadars - A Socio-Historical Study (M.Immanuel, Historical Research & Publication Trust, 137/ H-4, Bethel Nagar, Nagercoil, 629004, 2002, பக். 179-180 )என்ற நூலில் ஒரு செய்தி இருக்கிறது. வெள்ள நாடான்கள் சிலருக்கு மரண தண்டனை விதித்து ஒன்றும் வேறு சிலரைக் கண்ட இடத்தில் கொல்லலாமென்றும் கூறும் இரு கல்வெட்டுகள்தாம் அவை. இரண்டும் கி.பி. 1453-ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. இரண்டும் வேணாட்டைச் சேர்ந்த திருவிதாங்கோடு, கல்லிடைக்குறிச்சி ஆகிய இடங்களில் கிடைத்தவை. வெள்ளாளப் பெண்களை வைத்திருப்பது, அவர்களிடம் அத்துமீறி நடந்துகொள்வது, அவர்களைத் திருமணம் செய்துகொள்வது போன்றவை இந்த நாடான்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளாகும். இந்த நாடான்கள் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதைப் போல, இப்போதிருக்கும் நாடார் சாதியினரல்லர், நாடுகள் எனும் ஆட்சி அலகுகளின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த உள்ளூர் அதிகாரிகளே என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெள்ள நாடான் என்பது பாசனத்துக்குரிய நீர்நிலைகளைக் கட்டுப்படுத்துவதன் அடிப்படையில் ஒரு பகுதியின் ஆட்சி அதிகாரியாக இருக்கக் கூடும். வெள்ளம் என்ற சொல் பேரளவில் பாயும் நீரைக் குறிப்பது தமிழகத்தின் பொது வழக்காக இருக்க குமரி மாவட்டத்திலும் கேரளத்திலும் குடிநீரையும் வெள்ளம் என்று குறிப்பிடும் வழக்கத்தில் இவர்களை வெள்ள நாடான் என்று குறிப்பிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

குமரி மாவட்டத்தில் நாஞ்சில் நாடு தவிர பிற பகுதிகளில் ஆற்றுப் பாசனம் அரிதாகவே இருந்தது. ஏரிப்பாசனம் கூட எவ்வளவு வளர்ச்சியடைந்திருந்ததாகத் தெரியவில்லை. இங்கு நீர்ப்பலகை (water table) எனப்படும் நிலத்தடி நீர் மட்டம் மிகக் குறைந்த ஆழத்திலேயே இருந்ததால் வைத்தூற்றி(Funnel) வடிவில் உள்ள ஊருணி எனும் அகன்ற கிணறுகளைத் தோண்டி அவற்றிலிருந்தும் குளங்களிலிருந்தும் நீரை எடுப்பார்கள். ஏறக்குறைய 40 லிட்டர் கொள்ளளவுள்ள இரண்டு பனை ஓலை[10]த் தோண்டிகளில் நீர் முகந்து காக்கட்டு என்று உள்ளூரில் வழங்கும் காவடிகளில் தோளில் எடுத்துச் சென்று பயிர்களுக்குப் பாய்ச்சுவர். எனவே இங்கு முன் காலத்தில் நெல் வேளாண்மை அரிதாகவே இருந்தது. எனவேதான் இங்கு வெள்ள நாடான் என்ற பதவி இருந்தது போலும்.
           
இந்த ஆணையின் மூலம் பிற நாடான்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுறவுகளில் ஒன்று அவர்கள் மீண்டும் ஆட்சியமைக்கக் கூடாது என்பதாகும். அதாவது ஏற்கனவே வேணாட்டில் தொடங்கிவிட்ட நிகழ்முறையை பின்னொரு காலத்தில் நாயக்க மன்னர்களைப் பயன்படுத்தி அரியநாதர் அதற்கு வெளியே முடித்து வைத்திருக்கிறார் என்பதுதான் இதன் பொருள்.
           
            மதுரையில் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின் வலிமையான ஒரு அரசு இல்லாத நிலையில் உள்ளூர் ஆட்சியர்களான நாடான்கள் ஆட்டம் போட்டிருப்பது இயல்புதான். வலிமையான அரசு இருக்கும் இந் நாளில் கூட அரசியல்வாணர்கள் செய்யும் அடாவடிகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந் நிலையில் வெள்ளாளரான அரியநாதரின் செயலுக்கு ஓரளவு ஞாயம் கற்பிக்கலாம் என்று தோன்றுவது இயற்கை. ஆனால் நம் குமுகத்தில் கழிந்த ஈராயிரம் ஆண்டுகளாக உள்நாட்டு முரண்பாடுகளைத் தீர்க்க நாம் அயலவர்களின் உதவியை நாடி நாட்டை அவர்களுக்கு அடிமைப்படுத்த உதவிவந்திருக்கிறோம். இதன் மூலம் இதைச் செய்பவர்கள் பல சலுகைகளையும் விருதுகளையும் நம் நாட்டிலுள்ள பிற மக்கள் மீது மேலாளுமையையும் பெறுகிறார்கள். அப்படிப் பெறுபவர்கள் மேல்சாதிகளாகியும் விடுகின்றனர்.

            உள்நாட்டு அரசுகளையோ வெளியிலிருந்து வரும் மேலாளுமைகளையோ எதிர்த்துப் போராட வேண்டுமாயின் பெரும் வலிமை தேவைப்படும். அந்த வலிமையைத் திரட்டுவதற்கு மக்களின் பிசிறில்லாத, நம்மால் எய்தத்தக்க மிகச் சிறந்த ஒற்றுமை வேண்டும். நம் குமுகத்தைப் பொறுத்த வரை இந்த ஒற்றுமைக்கு இருக்கும் மிகப்பெரும் தடை சாதிய ஏற்றத்தாழ்வென்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். குறிப்பாக அடிமட்டத்திலுள்ள மக்களின் துணையை நாடிவிட்டு பின்னர் அவர்களுக்கு உரிமைகளை வழங்குவதை விட ஏற்கனவே அதிகாரத்தில் அமர்ந்துவிட்டவர்களை அவர்கள் அயலவர்களாயினும் ஏற்றுக்கொள்வது வசதியில்லையா? வசதி மட்டுமா, ஆதாயமுமல்லவா? நாடான்களை ஒழித்துவிட்டால் தெலுங்கர் இல்லாத இடங்களில் பார்ப்பனர்க்கு அடுத்த இடம் வெள்ளாளர்களுக்குத்தானே!
             
இந்த ஒரு நிகழ்வு மட்டுமல்ல கழகம் மருவிய காலத்தில் மூவேந்தர்களின் மீது வெறுப்புற்ற மக்களைப் போன்று அயலவரின் முகமூடிகளான சமயங்களைப் பற்றிக் கொண்டு அயலவரின் எடுபிடிகளாக மாறித் தம்மை வளப்படுத்திக் கொண்டவர்களும் அவர்களுக்கும் முன்பே,
                                    அறைபோகு குடிகளொ டொருதிறம் பற்றி
                                    வலம்படு தானை மன்ன ரில்வழிப்
                                    புலம்பட இறுத்த விருந்தின் மன்னர்.......
என்று இளங்கோவடிகள் சுட்டும்(சிலம்பு. அந்திமாலை சிறப்புச்செய் காதை - 10 - 12) நிகழ்முறையில் அயல் மன்னர்களுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களும் அடங்கிய கும்பலில் கடைசிக் கட்டத்தில் முன்னிலை பெற்றவர்கள்தாம் இன்று சாதிச் செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு போன்றவற்றில் முன்னணியில் நிற்பவர்கள்.

            தமிழக வரலாற்றில் அயலவர்களின் உதவி இன்றி தமிழக மக்கள் விடுதலை பெற்ற ஒரு நிகழ்வு சிவனியத்தின் துணையோடு அயல் நாட்டுச் அம்மண வாணிகர்களின் சுரண்டலிலிருந்து தமிழகப் பொருளியலை விடுவித்த நிகழ்ச்சி, அதில் திருஞானசம்பந்தரின் அரிய பணி. அடுத்து நமக்குத் தெரிந்தது நாடார்களின் எழுச்சி.

மோகன்தாசு கரம்சந்து காந்தி கூட அன்று தனது கூட்டத்தினர்க்கிருந்த பொருளியல் முதன்மைக்கு ஊறு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி நின்ற விடுதலை மறவர்களை ஆங்கிலர்களைக் கொண்டு அழித்து ஆங்கிலர்களோடு கள்ளத்தனமாக உடன்படிக்கை செய்து தன் கூட்டத்துக்கு ஏற்புடைய ஓர் அரசியல் ஏற்பாட்டை இந்திய விடுதலை என்ற பெயரில் மக்கள் முன் வைத்தார். இந்த ஏற்பாடு வல்லரசுகள் தம் சுரண்டலைத் தங்குதடையின்றித் தொடர்வதற்கு மிகப் பொருந்திவந்ததால் வல்லரசு நாடுகளின் வரலாற்றாசிரியர்கள் 1930களிலேயே காந்தியையும் அவரது சிறப்புநிலை வன்முறை மறுப்பையும், அதாவது ஆளுவோருக்கு மட்டும் ஆயுதமேந்தும் உரிமையுண்டு, பிறர் அதற்கு அடங்கிப் போகவேண்டும் என்ற வருண நெறியையும் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளினார்கள்.
           
நம் வரலாற்றில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்த காலங்களிலெல்லாம் சமய முகமூடிகளுடன் அயல் ஒற்றர்கள் உள் நுழைத்து அம் மக்களின் தலைவர்களை வசப்படுத்தித் தமக்குப் பணியாட்களாக்கிவிடுகின்றனர். மதம் மாறாதவர் தலைவர்களை இழந்து தவிக்கின்றனர். மாறியோரில் ஒரு சிலர் தவிர பிறரெல்லோரும் பழைய நிலையில் தொடர்கின்றனர். இந்த நிகழ்முறையில் குறிப்பிடத்தக்க கூறு என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறுவதற்கு முன்பே சில ஆதாயங்களை முன்னிட்டு அந்த மதங்களுக்குத் தாவிவிட்ட மேல்சாதியினர் புதிய சமயத்திலும் பழைய ஒடுக்குமுறைகளைக் கையாள முனைவதுதான். அது மட்டுமல்ல சமயத்தின் பெயரால் கிடைக்கத்தக்க ஆதாயங்களைப் பெறுவதற்கும் மதம் மாறிய இந்த அடித்தள மக்களைத்தான் மதம் மாறிய இந்த மேல் சாதிக்காரர்கள் முன்னிறுத்துகிறார்கள்.


[1] தன்மான இயக்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட மாநாட்டு ஊர்வலத்தில் உ.பு.அ.ச. பாண்டியனார் சாரட்டு வண்டியில் அமர்ந்திருக்க பெரியார் உடன் நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
                பெரியார் தொடக்கத்தில் சாதிகளையோ சமயங்களையோ எதிர்த்தவரல்லர். பார்ப்பனர்களை மட்டுமே எதிர்த்தார். பார்ப்பன மேலாளுமைக்கு மாலிய(வைணவ) சமயமே காரணமென்று அவருக்குச் செய்தி எடுத்துக் கொடுத்தவர்கள் இ. மு. சுப்பிரமணியர் போன்ற சில சிவனிய வெள்ளாள அறிஞர்களே.
                ஒரு கட்டத்தில் பார்ப்பனர்களின் மேலாளுமை சிவனியத்திலும் உள்ளது என்று பெரியார் எழுதினார். அதிலிருந்து பெரியாருக்கும் சிவனிய வெள்ளாளருக்கும் முறிவு ஏற்பட்டது. சவுந்திரபாண்டியனாரின் போட்டியை எதிர்கொள்ள வேண்டுமாயின் சிவனிய வெள்ளாளரின் துணை தேவை என்று கருதிய பெரியார் இந்தி எதிர்பபுப் போராட்டத்தில் ஈடுபட்டு சிவனிய மடங்களிடமிருந்து ஒத்துழைப்பையும் பணத்தையும் பெற்றுக்கொண்டார். பெரியாரின் கடவுள் எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகியவற்றால் கதிகலங்கிப் போயிருந்த மடங்களுக்கு பணம் கொடுத்து அமைதியை வாங்குவது மகிழ்ச்சியாகவே இருந்தது.
                தன்மான இயக்கத்துக்கு திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டுவது என்ற தீர்மானத்தை அண்ணாத்துரை முன்மொழிந்த போது அதை எதிர்த்து சவுந்திரபாண்டியனார், திருகூடசுந்தரம் பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதர் முதலியோர் வெளியேறினர். தெலுங்கரான அண்ணாத்துரையும் பிறரும் சேர்ந்து பிறமொழி பேசுவோருக்கான இயக்கமாக திராவிடர் கழகத்தை வடிவமைத்தனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் பெரியாரின் உண்மையான நோக்கம் தன் முன்னாள் கூட்டாளிகளை, குறிப்பாக, வலிமையான சொந்த சாதிப் பின்புலம் உள்ள சவுந்திரபாண்டியனையும் ஏற்கனவே சிவனிய வெள்ளாளர் வட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்ட கி.ஆ.பெ.விசுவநாதம், திரிகூடசுந்தரம் ஆகியோரை ஒதுக்குவதாகவே இருந்தது.. ஒரு போட்டி அமைப்பை உருவாக்க சவுந்திரபாண்டியன் அணியினர் அம்பேத்காரைக் கருத்துக் கேட்ட போது, காந்திக்கு எதிராகத் தன்னால் எதுவுமே செய்ய முடியாமலிருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்களது முயற்சிக்கு முடிவுகட்டியதாகக் கூறப்படுகிறது.
[2] குமரி மாவட்டத்தில் சராசரியாக 150 அடி ஆழத்துக்குக் கீழேதான் நீர் கசியாத பாறை இருக்கிறது. மழைக் காலத்தில் இந்த மண் வேண்டிய அளவு நீரைத் தேக்கி வைத்துக் கொள்கிறது. மழையில்லாக் காலங்களில் நிலத்தடிநீர் எவ்வளவு ஆழத்துக்கு இறங்கினாலும் எத்தனை ஆண்டுக் காலம் மழையின்றி இருந்தாலும் பின்னர் மழை பெய்தவுடன் நிலத்தடி நீர் பழைய அளவுக்கு உயர்ந்து விடுகிறது. பாறை மட்டம் மேலே இருக்கும் பகுதிகளில்தான் நாளுக்கு நாள் நிலத்தடிநீர் மட்டம் கீழ்நோக்கிச் செல்வதும் மழைப் பொழிவினால் அது மீட்கப்படாமல் போவதும்.
[3] பேச்சிப்பாறை அணை அமைந்திருக்கும் குலசேகரம் பகுதியில் செருப்பா‌லூர் என்றொரு இடம் உள்ளது. இங்குதான் அணையின் கட்டுமானக் காலத்தில் பொறியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இன்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்களும் குடியிருப்புகளும் அங்கு தொடர்கின்றன. செருப்பாலூர் என்பது செருப்பு+பால்+ஊர் என்ற வகையில் அமைந்த பெயர் என்று கொள்ள முடிகிறது. ரப்பர் மரம் அறிமுகம் செய்யப்பட்டு அதிலிருந்து பால் எடுக்கப்பட்டதையும்  அதிலிருந்து செருப்பு செய்வதற்கான மூலப்பொருட்களும் பெறப்படுவதையும் பார்த்த மக்கள் அதனைச் செருப்புப் பால் என்று அழைத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. எனவே இச் சொல்லை ரப்பர் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகப் பயன்படுத்தலாம்.
[4] அந்தக் காலகட்டத்தில்தான் அம்பானி உரூ.5000 கோடி கொண்ட ஒரு மூலதனத்தை உருவாக்கினார் என்ற உண்மை வருமான வரி என்பதன் போலிமையை விளக்கப் போதுமானது.
[5]சில ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்ட ஆட்சியர் ஓர் அறிக்கை விடுத்திருந்தார். குடும்பத்தின் ஆண்டு வருமானம்   உரூ.40000/-த்துக்குக் குறைவாக உள்ளோருக்கு இலவயமாக தொழில் முனைவோர் பயிற்சி அளிக்க இருப்பதாக. மாதம் உரூ. 3500/- கூட வருமானம் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தொழில் முனைவோர் பயிற்சி பெற்று என்ன செய்வார்? இது எவ்வளவு பெரிய ஏமாற்று? கட்டணம் கூட வாங்கிக் கொண்டு விரும்புவோர் எவருக்கும் இந்தப் பயிற்சியை அளிக்கலாமே! மக்களையும் அரசூழியர்களையும் பொய் சொல்ல வைக்கும் ஆட்சியாளரின் உத்திக்கும் இது ஒரு சான்று.
[6] எழுத்தறிவு வளர்ச்சிபெற்ற பிற்காலத்தில் அதில் முன்னுரிமை பெற்றிருந்த மேற்சாதியினர் உலக நடப்புகளை மற்றவரைவிட முன்கூட்டியே தெரிந்துகொண்டு வர இருக்கும் வாய்ப்புகளைத் தாங்கள் மட்டும் முற்றுரிமையுடன் கைப்பற்றவும் தீங்குகளாக இருந்தால் அவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள வழிவகைகளைக் காண்பதற்கும் வாய்ப்பிருந்ததைப் போல இவர்களுக்கும் வாய்ப்பிருந்தது.
[7] வர்மம் என்ற சொல் வன்மம் அதாவது வன்மை வலிமை என்ற  சொல்லின் திரிபு என்று கூறப்படுகிறது. (வரலாற்று நோக்கில் வர்மக்கலை, எசு.ராமச்சந்திரன், தமிழினி, மே 2008,பக்.25)
[8] இந்தக் களரிப் பயிற்சிக் கூடங்களில் வாட்போர்ப் பயிற்சி முதன்மையானது. ஆயுதமின்றி நடைபெறும் வர்மப் போர் புதிய   தொழில்நுட்பமாகிய ஆயுதப் போரால் மேம்பாடுற்றதன் தடயம் இது.
[9] Santon என்ற ஆங்கிலச் சொல்லுக்கு an Eastern dervish or saint [Spanish santon – santo, holy – Latin sanctus, holy.] என்ற பொருள்களை CHAMBERS TWENTIETH CENTURY DICTIONARY (1972) தருகிறது. இதிலிருந்து இந்தச் சொல்லின் பழைமை தெரிகிறது.
[10] கனத்த தண்டுடன் மிகப் பெரிய ஓலையையும் கொண்டுள்ள கூந்தல் பனையின் ஓலைகளைக் கொண்டு இந்தத் தோண்டிகள் செய்யப்படுகின்றன.

0 மறுமொழிகள்: