12.12.15

திராவிட மாயை - 16


4.3.மின்சாரத்தை வெட்டி தமிழகத்தை இருள வைத்த கருணாநிதி

தமிழக வேளாண்மையை, மீன்பிடித் தொழிலை மட்டுமல்ல, சிறுதொழில்கள், குறுந்தொழில்கள், குடிசைத் தொழில்களையும் அழிப்பதைத் தன் நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டு செயற்பட்டு அதை ஏறக்குறைய நிறைவேற்றி விட்டார் தமிழீனத் தலைவர்.

            1974இல் நீர்மின் அணைத் தேக்க மட்டங்களைக் காட்டி, முன்பு இதே நீர்த் தேக்கங்களில் இதே நிலை இருந்த ஓர் ஆண்டின் இறுதியில்(கோடையில்) 25% மின்வெட்டு வந்தது என்று கூறி முன்கூட்டியே, அதாவது ஆவணி மாதத்திலேயை “முன்னெச்சரிக்கையாக 25% மும்முனை மின்வெட்டை நடைமுறைப்படுத்தினார் தமிழீனத் தலைவர். மும்முனை மின்னாற்றலைப் பயன்படுத்தும் தங்களுக்கு மும்முனை மின்சாரம் மிகுதியாக ஒதுக்க வேண்டும் என்பதற்காக தொழிற்சாலைகளிடமிருந்து கைக்கூலி பெறும் நோக்கம் இதில் மறைந்திருந்தது நன்றாகவே புலப்பட்டது. ஆனால் மும்முனை நீரேற்றிகளைப் பயன்படுத்தும் உழவர்கள் இவ்வாறு ஆட்சியாளர்களைக் கவனிக்க முடியாது. எனவே அவர்கள் உறக்கம் இழந்து மும்முனை மின்சாரம் வரும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்க நேர்ந்தது. மின் இயக்கிகள் அடிக்கடி புகைந்து அவர்களுக்கு இழப்பும் ஏற்பட்டது. வேளாண்மை பாதிக்கப்பட்டது உண்மை.

            அடுத்த கட்டமாக, தீசலில் இயங்கும் பெரும் மின்னாக்கிகள் வாங்கும் தொழிலகங்களுக்கு அவற்றின் விலையில் 80% மானியம் வாங்குவதாகக் கருணாநிதியின் அரசு அறிவித்தது. இதில் தலைவருக்குப் பங்கிருக்கும் என்பதில் ஐயமில்லை.

            நேரம் குறிப்பிட்டு மின்வெட்டு செயற்படுத்தியது ஒரு காலகட்டம். ஓரளவு நாணயமாக அந் நேரம் கடைப்பிடிக்கப்பட்டாலும் திடீர் திடீரென ஒரு மணித்துளி முதல் மணிக்கணக்கில் கூட அறிவிப்பில்லாத மின்வெட்டுகள் சிறிது சிறிதாகத் தலைகாட்டின. இது மின் இயக்கிகள் வைத்திருப்போருக்கு அவை புகைந்துபோய் பெரும் இழப்புகளைத் தந்தன. கடைகள் வைத்திருப்போர் கன்னெய்யத்தால் ஓடும் சிறு மின்னாக்கிகளை வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். இதில் அத்தகைய மின்னாக்கிகளை விளைத்துச் சந்தைக்கு விடும் நிறுவனங்களோடு ஆள்வோருக்குத் தொடர்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

            அடுத்த கட்டமாக நாளுக்கு இரண்டு மணிநேரம் என்ற அளவில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டது. இது பெரும்பாலும் பகல் வேளையில்தான். இதனால் சிறு பட்டறைகளில் மின் இயக்கியால் இயங்கும் பொறிகளை வைத்து வேலை செய்வோர் ஊழியர்களின் வேலை நேர இழப்பால் இழப்புகளை  எதிர்நோக்கினர். இதைவிடப் பெருங்கொடுமை, இந்த வெட்டு நேரத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பதில்லை பல வேளைகளில். அத்துடன் நாளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வந்து தாக்கும் எதிர்பாரா மின்வெட்டுகள். இவற்றால் பெரும் இன்னலுக்குள்ளாகும் கணினி பயன்படுத்துவோர் மின்திரட்டி(INVERTER) வாங்கிப் பொருத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர். இந்த மின்திரட்டி விளைவிப்போர் மூலமும் ஆட்சியாளர்களுக்கு வரும்படிக்கு வழி உண்டு.

            இத்துடன் மின்பாதைகளைப் பராமரிக்கிறோம் என்று முன்னறிவிப்பின்றி திடீர் திடீரென்று ஒரு நாள் முழுவதும் மின்சாரத்தை நிறுத்திவிடும் புதிய நடைமுறை அறிமுகமானது. அந் நாட்களில் பண்டங்களைக் குளிர்பதனப் பாதுகாப்புக்குள் வைப்போருக்கு இழப்பு புதிய வரவானது.

            இந்த மின்வெட்டுகளால் மிகப் பெரும் இழப்புக்குள்ளாவது கட்டுமானத் தொழிலாகும். கட்டுமானத்தின் சுவர், கூரைப் பகுதிகள் தவிர மின்சாரப் பணிகள், தச்சு, தளம் முதலிய அனைத்தும் இப்போது மின் கருவிகளால் செய்யப்படுகின்றன. இந்த வகை வரையறையில்லா மின்வெட்டால் இப் பணிகளில் ஏற்படும் பணியிழப்பு கணிசமானது. இல்லத்தரசிகள் மின்சாரத்தை நம்பி அரைப்பான்(கிரைண்டர்), கலப்பான்(மிக்சி) என்று கருவிகளை வாங்கி வைத்திருந்தாலும் முன்காலத்து அம்மி, ஆட்டுக்கல், திரிகல் ஆகியவற்றையும் கைவிட முடியாத நிலை. இந்நிலையில் 2011 ச.ம.தேர்தல் அறிக்கையில் இலவயமாக அரைப்பான், கலப்பான், மின் விசிறி ஆகியவற்றை “விலையில்லாமல்” வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் ஆட்சியாளர்களுக்கு தரகு கிடைக்குமே அன்றி மக்களுக்கு என்ன பயன்?

            மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்கவென்று மக்கள்(தனியார்) முதலீட்டில் பெரும்பெரும் காற்றாலைகள் பெரும் எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் உருவாகும் மின்சாரத்துக்குச் சமமான மின்சாரத்தை அவற்றை நிறுவிய நிறுவனங்களின் தொழிலகங்களில் மின் பொது வலைப் பின்னலிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது ஏற்பாடு. இதில் காற்றாலையிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவை மிகைப்படுத்தி மின்வாரிய ஊழியர்கள் அந்நிறுவனங்களிலிருந்து பணம் பெற்றுக்கொள்கிறார்கள் என்றொரு கருத்து நிலவுகிறது. இது நமது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா? ஒரு காற்றாலைக்கு இவ்வளவு என்று கப்பம் நிறுவிவிட்டால் போதும், அப்புறம் மின்வாரிய ஊழியர்களின் மகளே உன் சமர்த்து.

            இந்தக் காற்றாலைகளின் மின்னாற்றலைப் பொது வலைப் பின்னலுக்குள் கொண்டுவராமல் அவை வீணாகப் போய்க்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன் தமிழக மின்வாரியத்தால் மின் பகிர்மானத்தைச் செயற்படுத்த இயலாத நிலையில் அது ஊழல்களால் இழப்பெய்தி பராமரிப்பு ஊழியர்களின்றி தேங்கிக் கிடக்கிறது. அவற்றைத் தனியாருக்கு(பெரும்பாலும் வெளிநாட்டினர் பெயரில் உள்ள தமிழீனத் தலைவரின் குடும்பத்தினருக்கு) வழங்க எடுத்த முடிவு தொழிற் சங்கங்களின்  எதிர்ப்பால் செயற்பாட்டுக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

            தமிழகத்தில் பல்வேறு மூலங்களிலிருந்து உருவாகும் மின்னாற்றல் தேசிய வலைப்பின்னலுக்குள் பாய்ச்சப்படுகிறது. அதிலிருந்து குறிப்பிட்ட ஓர் அளவு தமிழகத்துக்கு  ஒதுக்குகிறார்கள். அதுவே தமிழகத்தின் மொத்தத் தேவைகளுக்குப் போதாது. ஆனால் அதிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு வழங்குகிறார் நம் தமிழீனத் தலைவர். கேட்டால் அண்டை  மாநிலங்களுடன் நட்புறவைப் பேணுவதற்காக இது என்கிறார்.  இந்த நட்புறவுக்கு என்ன பொருள் என்பது நமக்குத் தெரியும், விலைமகளுக்கும் அவளது வாடிக்கையாளர்களுக்கும் உள்ள உறவுதான் அது என்பது.

            வேளாண்மையை அழித்துத் தமிழக மக்களின் வயிறு அயலவர்களின் அருளை நோக்கிக் கிடக்கவும் தமிழக கடற்கரையின் மீன் வளத்தை அயலவர்களுடன் தன் குடும்பத்தினர் பங்கிட்டுக் கொள்ளவும் வழியமைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி தமிழக சிறு, குறு, குடிசைத் தொழில்கள் அனைத்தையும் அழித்துத் தன் குடும்பத்தினர் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருக்கும் நாள்தோறும் பெருகி வரும் சிறப்பு  வளாகங்கள்,  மண்டலங்களுக்குள் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு இந்த வரைமுறையற்ற மின்வெட்டில் ஈடுபட்டிருக்கிறார்.
                                                                                   
            இவை மட்டுமல்ல, அண்ணாத்துரை தன் பணத்தோட்டத்தில் சுட்டிக்காட்டியவாறு கருக்கலைக்கப்பட்ட தமிழகச் சவளித் தொழில் கைத்தறிக் கட்டத்திலிருந்து ஒருவழியாக சிறிது வளர்ந்து விசைத்தறித் தொழிலாக மலர்ந்திருக்கிறது. இதன் செயற்பாட்டில் இந்த மின்வெட்டு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அத்துடன் நடுவரசின் பஞ்சு, நூல் ஏற்றுமதிக் கொள்கைகள் இத் துறையின் குரல்வளையை நெரித்துக்கொண்டிருக்கின்றன.

            சவளித்துறையில் இந்திய அரசின் விருப்பத்தையும் மீறி வளர்ந்து பெரும் வீச்சைப் பெற்றது  திருப்பூர் பின்னலாடைத் தொழில். இங்கிருந்து வெளியேறும் சாலைப் பட்டரைக் கழிவுகள் பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டு பொதுக் கழிவுப் பாடம் செய்யும் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று நயமன்றம் ஆணையிட்டது. வழக்கம்போல் கட்டுமானங்களை மட்டும் கட்டி அல்லது கருவிகளை மட்டும் வாங்கி உரிய தரகுகளைப் பெற்றுவிட்டு கட்டுமானங்களையும் கருவிகளையும் இயக்கவும் பராமரிக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்காத கருணாநிதியால் கழிவுநீர்ச் சிக்கல் பெருவடிவம் எடுத்தது. இப்போது கழிவுநீரால் மாசடைந்த நீர்வரத்தைப் பயன்படுத்தி வந்த  உழவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பால் திருப்பூர் பின்னலாடைத் தொழில் செத்துக்கிடக்கிறது. இது கூட கருணாநிதி குடும்பத்துக்கு ஆதாயம்தான். கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன் (தயாளு + நிதி =  கருணாநிதியின் உண்மையான பெயரன்)உருவாக்கும் சவளித் தொழில் வளாகங்களுக்குள் புதிதாக உருவாகும் தொழிற்கூடங்கள் செத்துப்போன திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், சிறுகச் சிறுகச் செத்துக் கொண்டிருக்கும் விசைத் தறிகளின் கல்லறைகள் மீது எழும்.

            இங்கு இடைக்குறிப்பாக ஒன்றைச் சொல்லியாக வேண்டும். தூத்துக்குடி டெர்லைட் ஆலையின் கழிவுகளுக்கு எதிராக வெளிநாட்டுப் பணத்தில் புரளும் தன்னார்வ அமைப்புகள் தொடங்கி தமிழ்த் தேசியத்தில் முற்றிய வைக்கோ வரை ஒருவர் பின் ஒருவராகப் போராட்டங்கள் நடத்தி விடைபெற்றார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் கூட நயமன்றத்தை நடவில்லை. ஏன்? நோக்கம் அந் நிறுவனத்தாரிடமிருந்து பணம் பிடுங்குவது என்பதாகத்தான் இருந்திருக்குமோ?[1]

            இங்கே கருணாநிதியின் ஆட்சியில் தமிழகத்தில் அழிவைக் கண்ட மக்களின் வாழ்வின் இன்றியமையாத் துறைகளில் நமக்கு நினைவுக்கு வந்தவற்றையும் அறிவுக்கு எட்டியவற்றையும் கூறிவிட்டோம். அவரது காமக் களியாட்டங்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது எட்டியிருந்தாலும் அவற்றை இங்கு வெளிக் கொணர்வது அருவருப்பூட்டுவதும் இந்தக் கயமை நிறைந்த மனிதனால் கறைப்பட்டவர்களை மேலும் இழிவுபடுத்துவதும் ஆகும் என்பதாலும் தவிர்க்கிறோம்.

            ஆக, தமிழகத்தின் 20-21 ஆம் நூற்றாண்டுத் துயர்களுக்குக் காரணம் “திராவிடர்” இயக்கத்தின் பெயர் அல்ல, பெரியார் தொடங்கி அதன் தலைமையில் வந்த மனச்சாட்சியை முற்றிலும் துடைத்தெறிந்த மனநோய்க்கு ஆளாகிய கயமை நிறைந்த தலைவர்கள்தாம் என்பதே உண்மை. உடலுழைப்பாளர்களையும் பண்டம் படைக்கும் தொழில் முனைவோரையும் சிறு, குறு, குடிசைத் தொழில்களையும் வாணிகத்தையும் வெறுக்கும், இழிவாக நினைக்கும், இம் மண்ணில் வேர்கொள்ளாத இம் மண்ணிலிருந்து அயற்பட்ட முழு ஒட்டுண்ணிகளின் பார்வைக்குத் தமிழ்நாட்டில் வாழும் பிறமொழியாளர்களான சில அமைச்சர்களும் சில அரசு அதிகாரிகளும் உயர் பதவியாளர்களும் பெரிதாகத் தோன்றலாம். ஆனால் கட்சிகளின் உள்ளூர்த் தலைவர்கள் போன்று தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பைப் பற்றிய, பேரவைக் கட்சி, பொதுமைக் கட்சிகள், ஐயா, மருத்துவர் கட்சி, தொல்.திருமாவளவன் வகையறாக்கள் கட்சிகள் இவற்றிலுள்ள தமிழ் பேசும் மக்களைப் பற்றிய முடிவை எடுப்பதில் இந்த வந்தேறிக் கோட்பாட்டின் தத்துத் தந்தைகள் குழம்பி நிற்பதையும் நாம் சுட்டிக் காட்டினோம்.

            ஆனால் உண்மையில், திராவிட இயக்க ஆட்சிக் காலத்தில் அழிவை எதிர்கொண்ட, நாம் மேலே குறிப்பிட்ட பல்வேறு துறைகளில் இழப்பெய்தியவர்கள் சாதி, சமய, தாய்மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தமிழக மக்கள் என்பது இந்த முழு ஒட்டுண்ணிகளின் கருத்தை எட்டவில்லை. அதுமட்டுமல்ல, நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி வலாற்றின் இறுதிக் கட்டத்தில் தமிழக அரசியலில் மேலாளுமை செலுத்தியவர்களாகிய பிற மொழியாளர்கள்தாம் இதில் மிகுதி. (கோவை, இராசபாளையம் பகுதிகளில் உள்ள சில பெரும் நிறுவனங்களும் பனியா பார்சிகளின் ஒடுக்குதலுக்கு ஆளானாலும் தங்களுக்குத் துணையாகத் தமிழகத்தில் ஓர் அரசியல் இயக்கம் இல்லாமையால் ஒடுக்குவோருடன் ஒத்துச் செல்கிறார்கள். தமது வகுப்புப் பின்புலத்தால் இந்த உண்மையை இன்றுவரை உணராதிருக்கும் நேர்மை நெஞ்சங்கள் இனியாவது இத்துறையில் சிந்திக்க  வேண்டும். அப்போதுதான் இந்தத் துறைகளில் நுழைந்து தமிழக மக்களின் வாழ்வை அழிக்கும் கருணாநிதிக் குடும்பமும் அதனுடன் இணைந்த பனியா - பார்சி - வல்லரசிய விசைகள் இவர்களின் கண்களுக்கும் புலப்படும். உண்மையில் எவர் அயலவர் என்பது விளங்கும். மொழி என்பது  மனிதனின் படைப்பு.  மொழியார்வலர்கள் கூறுவது போல் மனிதன் மொழியின் படைப்பல்ல. மனிதன் ஓர் உயிரி. அதற்கு உயிர்வாழ உணவு வேண்டும். உணவுக்குப் பொருள் வேண்டும். பொருளுக்குத் தொழில் அல்லது வேலை வேண்டும். அதற்கும் மேலே குமுகச் செல்வாக்கு வேண்டும். அதற்கு உயர் வருமானம் வேண்டும். அதற்கு எளிய வழி ஒட்டுண்ணிப் பதவி. அதற்கு குறிப்பிட்ட மொழியறிவு தேவை. அந்த வகைப் பயனில்லாத மொழியை மக்கள் தூக்கி எறியவே செய்வர். தமிழுக்காக இவ்வளவு பரிந்து பேசுவோரில் ஒட்டுண்ணிப் பணிபுரிவோரில் ஆங்கிலத்தைக் கல்விக் கூடங்களில் பயின்று தம் பணிக்குப் பயன்படுத்தாதோர் எத்தனை பேர்?

            அதுமட்டுமல்ல, தமிழே எம் உயிர் என்று கூறிக்கொண்டு தாய்த் தமிழ்ப் பள்ளிகள் நடத்துவோர் ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு மேல் “ஆங்கிலமும் கற்பிக்கப்படும் என்று அறிவித்து இறங்கி வந்தது ஏன்?

            உண்மையில் தமிழ் வளர வேண்டுமாயின் தமிழைப் படித்தால் தம் உயிர்வாழ்க்கைக்கு அது உதவ வேண்டும். அது மொழி சார்ந்த நிலப்பரப்பின் பொருளியல் உரிமையால்தான் இயலும். எனவே முழுமையான பொருளியல் தற்சார்புடைய ஒரு தேசியத்தில்தான் முழுமையான தாய்மொழி ஆட்சி அமைய முடியும். அரசியல் விடுதலை தேவையோ இல்லையோ பொருளியலில் முழுமையான தற்சார்பு மொழியின்  விடுதலைக்கு இன்றியமையாதது.

            ஒருச்சார்பான மொழிப் பார்வை தமிழகத்துக்குச் செய்துள்ள கேடு அளப்பரிது. கருணாநிதி இவர்கள்  மெச்சும்படி அவ்வப்போது தமிழ் வளர்ச்சி என்ற போர்வையில் அறிவிக்கும் திட்டங்கள் - சட்டங்கள் - அரசாணைகளுக்காக ஓகோ என்று புகழ்வது தமிழுக்கான ஒரே காப்பாளர் என்ற பொய்ப் பெயரை அவருக்கு நிலைப்படுத்துகிறது. அதே நேரத்தில் அத்திட்டங்கள் - சட்டங்கள் - அரசாணைகளை நய மன்றத்தில் எதிர்க்கும் விசைகளுடன் அவர் ஏற்கனவே தொடர்பு கொண்டுள்ளார்  அல்லது அவ்விசைகளால் இத்திட்டங்கள் - சட்டங்கள் - அரசாணைகள் தடைசெய்யப்படும் என்பதை எதிர்பார்த்தே அவற்றை முன்வைக்கிறார் என்பது எமது கருத்து. இவரைப் பற்றிய இத்தகைய ஒரு படிமத்தைத் தமிழ்ப் பற்றாளர்கள் மனதில் பதிய வைத்தபின்னும் தமிழகத்து மக்களின் பொது நலனுக்கு  எதிராக நிகழ்த்தும் அழிம்புகளை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால் தமிழ்ப் பற்றாளர் எனப்படுவோர் ஒட்டுமொத்தத் தமிழக மக்களிடமிருந்து முற்றாக அயற்பட்டு நிற்கிறார். நுணுகி ஆய்ந்தால் இவர்கள் குறித்துத் தமிழக மக்கள் மனதில் ஏளனத்துக்குரிய ஒரு படிமமே உருவாகி இருக்கிறது.

            இந்த மக்கள் மீதும் தமிழகப் பொருளியல் இறையாண்மை மீதும் கடுகளவாவது கவலை இருந்திருக்குமாயின் தமிழகத்தின் நீர் வரத்துகள் அண்டை மாநிலத்தவரால் மறிக்கப்பட்ட போது, கச்சத்தீவு பறிக்கப்பட்ட போது,  தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொலைவெறித்தாக்குதலுக்கு உள்ளான போது, தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்சார வழங்கலைச் சிதைத்து அதை அண்டை மாநிலங்களுக்கு விற்ற போது, சிறப்பு மண்டலங்களையும் வளாகங்களையும் உருவாக்கி அவற்றுக்கு நொடியும் தடங்கலில்லாத வழங்கலுக்கு மின் விசையைத் திருப்பிய போது எதிர்ப்புக் குரல் எழுப்பி மக்களை அணுகியிருப்பர். இன்றும் கூட நிகழ்ந்தவற்றுக்கெல்லாம் நடுவரசும் பேரவைக் கட்சியும்தாம் காரணம்; ஆட்சியைக் காக்கத்தான் கருணாநிதி வாளாவிருக்கிறார் என்று பெயருக்குச் சிறு மனக்குறையை வெளிப்படுத்தித் தம் குடும்பத்தினரின் நலனுக்காகவும் தன் சொந்த விருப்பு வெறுப்புக்காகவும் கருணாநிதி திட்டமிட்டுச் செய்வனவற்றை மறைக்கின்றனர் மிகப் பெரும்பான்மையினர். கபடற்ற பலர் அதை நம்பி அக் கருத்தை மூளையில் பதித்து நிற்கின்றனர். இந்தக் கண்ணோட்டத்தில் பேரவைக் கட்சியை மட்டும் தேர்தலில் எதிர்க்க வேண்டும் என்றும், அக் கட்சியுடன் உறவு வைத்திருப்பதால் கருணாநிதியையும் எதிர்க்க வேண்டும் என்றும் பலர் கிளம்பியுள்ளனர். கருணாநிதியை முதன்மைப்படுத்தி தேர்தலில் எதிர்க்க வேண்டும் என்ற குரலும் ஊடே கேட்கிறது. இவை அனைத்தும் தேர்தலின் மூலம் மட்டும் தமிழகத்தின் அனைத்துத் துயரங்களுக்கும் முடிவுகட்ட முடியுமா என்ற அடுத்த கேள்வியை நம் முன் கொண்டு நிறுத்துகின்றன. இது குறித்த சுருக்கமான ஓர் அலசல் இத் தலைப்பை அடுத்துப் பார்ப்போம்.


[1] அண்மையில் “தலைவர்” நயமன்றத்தை நாடியிருப்பதன் உள்ளரங்கம் என்னவென்று புரியவில்லை.

0 மறுமொழிகள்: