28.12.15

சாதி வரலாறுகளின பதம் - நாடார்களின் வரலாறு - 25


பின்னுரையாக……..
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச் சொற் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந் திறுதல் நின்றுபயன் இன்மை
என்றிவை ஈரைங் குற்றம் நூற்கே
என்று நூல் குற்றங்களை வரிசைப் படுத்துகிறார் நன்னூல் ஆசிரியர். இவற்றுள் கூறியது கூறல், மற்றொன்று விரித்தல் ஆகிய இரண்டு குற்றங்கள் நிறைந்த ஒரு நூலைத் தங்கள் முன் வைப்பதற்காகப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். நம் குமுகத்தின் வலுக்குறைவான சாதியத்தை எவ்வாறாயினும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற குறிக்கோள் எப்போதும் என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது. என் தந்தையாருக்கு அதில் பெரும் பங்குண்டு. உள்ளூர் நாடானின் பங்காளி(சொக்காரன்)யின் தூண்டுதலில், ஊர் அம்மன் கோயிலில் மாதம் ஒரு வெள்ளிக் கிழமையில் நடைபெறும் ஊர்க் கூட்டத்தில் வரவு – செலவுக் கணக்கைக் கேட்டுள்ளார் என் தந்தை. அந்த வன்மத்தை மனதில் வைத்து எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு சாவின் போது பிணத்தை எடுப்பதைத் தடுத்துள்ளனர். எங்கள் குடும்பத்துப் பெண்மணி ஒருவர், நாங்கள் ஊருக்கு வரி பாக்கி வைத்துள்ளோமா, எங்கள் பெண்கள் யாராவது முறை தவறி நடந்துள்ளனரா என்று கேள்விக் கணைகளைத் தொடுக்கவும் வந்தவர்கள் பின்வாங்கியிருக்கின்றனர். இது என் தாயார் சொன்னது. பின்னர் அவர் வெற்றிலைக் கொள்முதல் செய்த கோட்டாற்றிலும் வாணிகம் செய்த வடசேரி கனக மூலம் சந்தையிலும் நாடார் சாதியினர்க்கு எதிராக நடைபெற்ற இழிவுபடுத்தல்களால் அப்போது கோட்டாறு ஈழவர்களிடையில் பரவி வந்த பகுத்தறிவு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். பெரியபெருமாள் என்பது யாரோ சாமியார் எனக்கு இட்ட பெயர். என் தந்தையார் பெயர் செல்லப்பெருமாள் என்பதால் பெருமாள் என்ற சொல்லைத் தவிர்த்து என் தாயார் என்னைப் பெரியநாடான் என்றே அழைக்க அனைவரும் அப் பெயராலேயே அழைத்தனர். ஆனால் என் தந்தையார் என்னைப் பள்ளியில் சேர்க்கும் போது சாமியார் இட்ட பெயரைக் கூறாமல் வீட்டில் அழைக்கும் பெயரையே கூறியது, பெரியநாடான் என்ற பெயரைப் பொதுவாக ஊர் நாடான்களும் பணம் படைத்தவர்களும்தாம் இடுவார்கள் என்பதால், ‘என் மகனுக்கு நீங்கள் இடும் பெயரை இட்டிருக்கிறேன் பாருங்கள்’ என்று அறைகூவத்தான் என்று ஒரு முறை ஒருவர் என்னிடம் சொல்லிக்காட்டிய போதுதான் தெரிந்தது.

            தந்தையார் தவறாமல் வாங்கிய திராவிட நாடு, அது தவிர அவ்வப்போது வாங்கும் விடுதலை, முரசொலி, மன்றம், இயக்கத்தினர் எழுதிய நூற்கள் ஆகியவற்றைப் படித்து பகுத்தறிவியம், சாதிய ஒழிப்பு, தமிழ், தமிழகப் பற்று ஆகிய சிந்தனைகளை என்னுள் வளர்ந்தன. நாகர்கோயில் எசு.எல்.பி. எனப்படும் சேது லட்சுமி பாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் அங்கிருந்த ‘மேல்’சாதி ஆசிரியர்களில் சிலரின் வெறுப்பைப் பார்த்துள்ளேன். கேட்ட கேள்விக்கு விடை சொல்ல இயலாவிட்டால், ‘பனையேறப் போவதுதானே’ என்று திட்டுவார்கள் என்று மூத்த மாணவர்கள் சொல்லக்கேட்டதுண்டு. எனக்கு அந்தச் சிக்கல் இருந்ததில்லை, அதனால் பொறாமை கொண்டு காரணமில்லாமல் திட்டி அடித்திருக்கிறார்கள் சில ஆசிரியர்கள். இவற்றால் நான் சினந்ததோ வருந்தியதோ இல்லை. வேடிக்கையாகத்தான் தோன்றும். என் படிப்புத் திறமைக்காகப் பெருமைப்பட்டிருக்கிறேன். நாடார்களில் கிறித்துவர்களே அப்போது அங்கு ஆசிரியர்களாக வர முடிந்தது. அவர்களில் ஒருவர், சோசுவா கமலம் என்று பெயர் என் மீது பரிவுடன் விளையாட்டு போன்ற நடவடிக்கைகளில் ஊக்குவிப்பார். என் வகுப்பில் 55 மாணவர்களில் நாடார் சாதி மாணவர்கள் என்னைத் தவிர இரண்டு பேரே உண்டு. பிற ‘மேல்’ சாதி மாணவர்கள் பலர் என்னோடு நெருக்கமாக இருப்பர். திராவிட இயக்க ஈடுபாடுள்ள மாணவர்கள் ஓரணியாகச் செயற்படுவோம். அப்போது நடைபெற்ற திருவிதாங்கூர் தமிழர் போராட்டங்களில் ஏறக்குறைய அனைத்து மாணவர்களும் சாதி பாகுபாடு இன்றி ஈடுபாடு காட்டினர். சாதியை மறந்து இப்படி மாணவர்கள் நெருங்கி வந்தது எனக்குப் பெரும் மன நிறைவையும் பெருமிதத்தையும் தந்தது. இந்தியப் பேரவைக் கட்சியின் கேரள மாநிலப் பிரிவும் தமிழ்நாடு பிரிவும்[1] திருவிதாங்கூர் தமிழர் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்ற குமரி மாவட்ட மக்களின், குறிப்பாக மலையாள ஆட்சியாளர்களால் பெரும் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான மேற்கு வட்டங்களிலுள்ள நாடார்களின் போராட்டத்துக்கு எதிராக இருந்தன. அம் மக்களின் போராட்டங்களால் தலைவரான நேசமணி காமராசரோடு கூட்டுச் சேர்ந்து கேட்ட 9இல் 4½ வட்டங்களை ஏமாற்றி ஒரு ஏற்பாட்டைத் திணித்து பெரியாற்று அணை, நெய்யாற்று நீர், பாலாற்று நீர், கன்னடத்து கோலார் ஆகியவற்றின் உரிமைச் சிக்கலுக்கு கால்கோளிட்டனர். அதனால் வளர்ந்து வந்த தி.மு.க.வுக்கு குமரி மாவட்ட நாடார்களிடையில் செல்வாக்கு வளர்ந்தது. நாடார் – பிற சாதியினர் என்ற குமரி மாவட்ட நாட்பட்ட உள்ளூர் சிக்கலிலிருந்து தமிழ்நாடு என்ற பரந்த அரசியல் களத்துக்கு மக்களின் பார்வை பரந்தது. பேரவைக் கட்சியைக் குமரி மாவட்ட நாடார்கள் புறக்கணிக்கத் தொடங்கினர். அந் நேரத்தில் நேசமணி இயற்கை எய்தினார். அந்த வெற்றிடத்தில் காமராசரை நிறுத்தினார்கள். சாதியினர் வாக்குகளை நம்பி அந்தப் ‘பெருந்தலைவரு’ம் போட்டியிட்டார். ஆனால் அங்கிருந்த நாடார் சாதி மூத்தோரும் இளையோரும் அவரது கடந்த கால இரண்டகங்களையும் செய்த கெடுதல்களையும் புறந்தள்ளி சாதி வெறி என்ற பெரும்பிணிக்கு ஆளாயினர். அவர்கள் மட்டுமல்ல தமிழக நாடார் சாதியினரில் மிகப் பெரும்பாலோரும் என்றும் தான் ஒரு தமிழன் என்றோ தமிழ்நாட்டுக் குடிமகன் என்றோ நாடார் என்றோ உணர்ந்து செயல்பட்டிராத காமராசரை முன்னிட்டு என்றும் தமிழக நலனுக்கு எதிராகவே செயல்பட்டுவரும் பேரவைக் கட்சிக்கும் இன்று தாணுலிங்கரையும் நாடார் சங்கத் தலைமையையும் முன்னிட்டு பாரதிய சனதா கட்சிக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பது தமிழகத்துக்கும் அதன் குடிமக்களின் ஒரு பகுதியாகிய தங்களுக்கும் மாறாக் கேடு பயக்கும் செயல் என்பதை உணர வேண்டும்.

            நாடார் என்று அறியப்படும் மக்கள் குழுவினர்க்கு குமுகத்தில் இருக்கும் இழிநிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த சாதிப் பெரியோர்கள் நாடார் மகாசன சங்கத்தை உருவாக்கி தங்களுக்கு முற்பட்ட சாதி ஏற்பு வேண்டுமென்று கேட்டுப் பெருமிதப்பட்டார்கள். அடுத்து வந்தவர்கள் கல்விக் கூடங்களையும் தொழிற்கூடங்களையும் தொடங்க ஆட்சியாளர்கள் அவ்வப்போது அறிவிக்கும் சலுகைகளை உறுப்பினர்களுக்கு அறிவித்து இவ்விரு துறைகளிலும் சாதி மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் பயன்படும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால் பின்னால் தலைமையேற்ற கங்காராம் துரைராசு வெள்ளை வேட்டி வேலைககளை நாடுவோர் நலன்களை மட்டும் முன்னிலைப்படுத்தி அரசின் பல்வேறு சலுகைகளுக்கு வாய்ப்பளிக்கும் சாணார் என்ற சாதிப்பட்டம் கொண்ட மக்களை அணுகி அவர்களை நாடார் என்ற சாதிப்பட்டத்துடன் சங்கத்தில் இணையக் கேட்ட போது அவர்கள் பழைய சாதிப்பட்டத்தைக் கைவிட மறுத்துவிட[2], இப்போது இருப்போர் தமிழகத்துக்குக் கொடும் பகையாளியாகச் செயற்பட்ட கன்னடத்துப் பங்காரப்பாவை தங்கள் சங்க மாநாடுகளில் இருமுறைத் தலைமை தாங்க வைத்து சங்கத்தை உருவாக்கிய தம் முன்னோடிகளை எல்லையில்லா இழிவுக்கு ஆளாக்கியுள்ளனர். அதே போல் தமிழகத்தையும் தமிழக மக்களையும் நஞ்சென வெறுக்கும் கேரளத்து அச்சுதானந்தனைத் தங்கள் சாதியினரென்று புகழ்ந்து பாராட்டியுள்ளனர். அத்துடன் ஒரு சில பணக்காரர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் உயர் படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் பதவி உயர்விலும் உயர் பதவிகளிலும் ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக பனையேறிகளுக்கு கள்ளிறக்க இசைவும் தங்களுக்கும் அவர்களுடன் மிகப் பிற்படுத்தப்பட்டோர் வகைப்பாடும் வேண்டுமென்ற இழிவு மிக்க வேண்டுகையை வைத்துள்ளனர். இப்படி இரப்பதற்குப் பயன்படுமென்றே பட்டிவீரன்பட்டி சவுந்திரபாண்டியனாரோ பிற பழம்பெருந்தலைவர்களோ வலியுறுத்தாத, நாங்கள் ஆண்ட மரபு என்ற ஓலத்தை எழுப்புகின்றனர். இவர்களைப் பார்த்து பிற சாதியினரும் இதையே எதிரொலிக்கத் தொடங்கிவிட்டனர்.

            நம் பண்டை அரசர்களான சேர, சோழ, பாண்டியரோ பின்னால் வந்தவர்களோ தூய மரபில் வந்தவர்களல்ல. தங்கள் குறுகிய நோக்கங்களுக்காக பகைவர்களாக இருந்த அயல் அரசர்களோடு மணவுறவுகள் வைத்துக்கொள்ள அவர்கள் தயங்கியதில்லை. சேரனின் கட்டுப்பாட்டில் இருந்த சேரன்தீவாகிய இன்றைய இலங்கையை கைப்பற்றிய விசயனுக்கு பாண்டிய மன்னன் ஓடோடிப் போய் தன் தங்கையை மணமுடித்துவைத்தான். அரசியல் ஆதாயங்களுக்காக அண்டை மன்னர்களுக்கு தன் தங்கையையோ மகளையோ மணம் செய்து கொடுப்பதும் அவர்களுடைய தங்கையை அல்லது மகளை மணந்துகொள்வதும் இங்கு மட்டுமல்ல ஐரோப்பா உட்பட்ட அனைத்து நாட்டு அரசர்களுக்கும் பொதுவான நடைமுறை. அந்த வகையில் உலகிலுள்ள அனைத்து அரச மரபுகளும் பலபட்டரை மரபுகளே. அத்தோடு இன்றைய மக்களாட்சி ஊழியில் மக்களைக் கொடுமைப்படுத்தி வாழ்ந்த பண்டை அரச மரபில் வந்தவர் நாங்களென்று கூறுவதற்கு நாம் கூச வேண்டும்.  

எங்கள் குடும்பத்தைப் பொறுத்த வரை நானறிந்து மூன்று தலைமுறைகளில் எங்கள் வீட்டுக்கு ஊர் நாடான்கள் மகள்கள் மணமகள்களாக வந்துள்ளனர். என் தந்தை வழிப் பாட்டி அறுபத்திமூவர் நாடாச்சி கீழ வண்ணான்விளை(அதை சரக்கல்விளை என்றே நான் சிறுவனாக இருக்கும் போது குறிப்பிடுவோம்) ஊர் நாடான் திருக்குழி நாடனின் தங்கையாகும். என் பாட்டனார் நீலன் என்ற நீலபெருமாள் நாடார் தலையில் வெற்றிலையைச் சுமந்து வீட்டுக்கு வீடும் கடைகளுக்கும் போட்டும் மாலையில் அத்திக்கடை என்ற எங்கள் ஊர் நாளங்காடியில் விற்றும் வாழ்ந்தவர். எங்கள் ஊரான கீரிவிளை நாடானின் சொக்காரர்கள் என்ற செய்தியை வைத்துத் தெரியாமல் அந்த திருமணம் முடிந்துவிட்டதாம். உண்மையில் எங்கள் ஊர் நாடான் வீட்டின் என் அகவையினர் என் தந்தையையும் அன்னையையும் பாட்டன், பாட்டி முறையிலும் என்னை சிற்றப்பன் முறையிலும் சிலர் பாட்டன் முறையிலும்தாம் அழைப்பர். இது பற்றி ஊர் நாடான் குடும்பத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான முதியவர் பால்பாண்டியனை அண்மையில் கேட்ட போது இது அனந்தரச் சொக்காரர் முறையிலிருந்து வந்ததாக இருக்கும் என்றார். அவர் கூறியது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத் தோன்றவில்லை. அவர்கள் உண்மையில் சொக்காரர்கள்தாம். ஆனால் முதலூடிகள் என்ற வகையில் அவர்களுக்குச் சமமானவர்களில்லை. திருமண உறவுகளைப் பொறுத்த வரை இன்னோர் ஊரின் முதலூடிகள்தாம் அவர்களுக்குச் சமமானவர்கள்.

அனந்தரம் என்பது நாடார்களின் திருமணங்களில் மட்டும் நடைபெறும் ஒரு நிகழ்முறையாகும். தாலிகட்டி முடிந்ததும் மணமக்களின் முன்னால் வைத்திருக்கும் கிண்ணத்தில் தண்ணீரிர் அல்லது பாலில் போட்டிருக்கும் பூக்களை அல்லது ஆலிலைத் துணுக்குளில் ஒவ்வொன்றை இரு கைகளிலும் எடுத்து மணமகன் குடும்பத்தைச் சேர்ந்த ஆடவரான ஆண்வழி உறவினர், அதாவது முப்பாட்டன்கள், பாட்டன்கள், பெரியப்பன் – சிற்றப்பன்கள், தந்தை, மகன், பேரன், கொள்ளுப் பேரன் முறையினர், கைக்குழந்தை உட்பட, எடுத்து பாலை மணமக்கள் மீது தெளித்து துணுக்குகளை மீண்டும் கிண்ணத்தில் போடுவார்கள். முன்பு பிற சாதியினரில் மணமக்களுக்குப் பொட்டுவைக்கும் வடிவத்தில் இது இடம் பெற்றதாகவும் இப்போது எந்த வேறுபாடுமின்றி அனைவரும் அதைச் செய்து அதன் குறிதகவு மறக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர். இந்த நிகழ்வு பற்றிய விளக்கம், இந்த ஆடவர் அனைவரும் அந்த மணப்பெண்ணிடம் உடலுறவுகொள்ள உரிமைப்பட்டவர் எனவும் அந்த உரிமையைத் ‘தண்ணீர் தெளித்து’க் கைவிடுவதாக ஊரார் முன் தெரிவிப்பதாகவும் கூறுகின்றனர். தமிழ்க் குமுகத்தின் மிகப் பழமை வாய்ந்த ஒரு மரபைச் சுட்டும் இந்தச் சடங்கு இச் சாதியினர் தமிழகத்தின் தொடக்க கால வரலாற்றின் தொடர்ச்சியைக் கைவிடாமல் பேணுவதைக் காட்டுகிறது. ஊர் நாடான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது தொடக்க காலத்தில் குழுத் தலைவன் மனைவி அவனுக்கு மட்டும் உரிமையாயிருக்க பிற பெண்கள் அத்தகைய கட்டுப்பாடு இல்லாத நிலையின் தடையமாகக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

அனந்தரம் என்ற சொல்லுக்கு பிறகு, பின்னர் என்ற பொருள்களையும் அனந்தர வாரிசு என்ற சொல்லுக்கு அடுத்த பாத்தியதை உள்ளவன் என்ற பொருள்களைத் தருகிறது கழகத் தமிழ் அகராதி. ஒரு பெண்ணின் கணவனின் உடன்பிறந்தான் மனைவியை அனந்தரத்தி என்று குறிப்பிடும் வழக்கமும் நாடார்களிடையில் மட்டுமே உள்ளது. பார்ப்பனர்களிடையில் உள்ள ஓரகத்தி, ஓர்ப்படி ஆகிய சொற்களுக்கு இணையானது இச் சொல்வழக்கு. இதுவும் பழைய உறவுமுறைகளின் ஒரு குறியீடாகவே விளங்குகிறது.

ஓர் ஊருக்கு ஒரு பெண் திருமணமாகி வந்தால் அவளுடன் முதலிரவு உறவு வைத்துக்கொள்வது அவ் வூர் பெரியதனம் எனும் ஊர்த்தலைவன், பண்ணையார், இடைக்கிழார் ஆகிய சமீன்தார் போன்றோரில் ஒருவர் என்பது தமிழகத்தின் பல பகுதிகளில் சென்ற நூற்றாண்டு வரை பொதுப் பழக்கம் என்றும் (இன்றும் ஒதுக்குப்புறமான ஊர்களில் இது தொடரலாம் என்று தோன்றுகிறது) இவ்வாறு ‘முதலிரவு’ முடிந்து ‘பெரிய மனிதரி’ன் வீட்டை விட்டுக் கிளம்பும் புதுமணப்பெண்ணிடம் சீர்வரிசை என்று சேலை, நகை போன்றவற்றைக் கொடுத்து மணமகனின் வீட்டுக்கு விடுவிப்பார்கள் என்றும் நான் ஆங்காங்கே கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த வெளிச்சத்தில் பார்த்தால் ஊர் நாடானின் இந்த ‘அனந்தச் சொக்காரன்’ உறவு பற்றிய ஒரு விளக்கத்தை என்னால் பெற முடிகிறது. இவ்வாறு ‘முதலூடி’க்கு இருக்கும் இந்த உரிமையைத் தவிர்க்கும் முதல் முயற்சியாக தங்கள் ஊர்ப் பெண்களுக்கு ‘ஊர் மாப்பிள்ளைகளை’, அதாவது பெண் ஊரில் நிலையாகத் தங்கும் மாப்பிள்ளைகளைப் பார்த்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. நான் அறிந்த ஊர்களில் பெரும்பாலும் சொக்காரர்களுக்குச் சமமாக மைத்துன முறையுள்ள குடும்பங்களையும் காண முடிகிறது. அவர்களது சொக்காரர்கள் வேறு ஊர்களில் இருக்கின்றனர். உள்ளுரில் இந்த மைத்துன உறவினருடன் திருமண உறவு கொள்வது இப்போது பெரும்பாலும் இல்லை. இதன் அடுத்த கட்டமாகத்தான் ஊர் முதலூடி அனந்தரம் செய்து தண்ணீர் தெளித்து விலகிக்கொள்ளும் நடைமுறை வந்திருக்கக் கூடுமோ?

முதலூடிகள் சாணார் சாதியைச் சேர்ந்தவர்களாயினும் அவர்கள் சராசரிச் சாணார் குடும்பங்களுடன் மணவுறவு கொள்வதில்லை என்று ஏற்கனவே கூறியுள்ளோம். முதலூடி ஏழ்மை எய்த, முதலூடி இல்லாத ஒரு சாணார் பணம் படைத்தவராகும் நேர்வுகளிலேயே இத்தகைய ‘கலப்பு’ மணங்கள் பிற்காலங்களில் நடைபெற்றன.  என் பாட்டனார் திருமணம் இவற்றிலிருந்து விதிவிலக்கான ஒரு நேர்வே. 
  
திருமணத்துக்குப் பின் என் பாட்டனார் மாமனார் வீட்டுக்குச் சென்றால் அவர்களுக்கு இணையாகக் கட்டிலில் அமர விடமாட்டார்களாம், தரையில்தான் குந்தியிருப்பாராம். பின்னர் ஒரு கடும் பஞ்சத்தின் போது நாஞ்சில் நாட்டில் வெற்றிலையை நெல்லுக்கு மாற்றாகக் கொடுத்து கிடைக்கும் நெல்லை மாமனார் வீட்டுப் பசிக்குக் கொடுத்த பின்தான் மருமகனுக்குக் கட்டிலில் உட்காரும் மதிப்பைக் கொடுத்தார்களாம். பின்னர் என் தந்தையின் தாய்மாமனுக்கும் அவர்கள் சொக்காரனுக்கும் நடைபெற்ற சொத்து வழக்கில் சொத்துகளை இழந்து ஏழ்மையடைந்துவிட்டனர் அவர்கள்.            

பாட்டனாரை பாட்டா, பாட்டையா, கண்ணையா என்ற சொற்களால் அக் காலத்தில் அழைத்தோம். பாட்டியை பாட்டம்மா, கண்ணம்மா என அழைத்தோம். தந்தையை ஐயா என்றே அழைப்பர். நானும் என் தந்தையை ஐயா என்றே அழைத்தேன். அப்பா, பப்பா போன்ற சொற்கள் பெரிய இடங்களில் புழக்கத்துக்கு வந்துகொண்டிருந்தன.

என் தாயாரின் தந்தை மதுசூதனப்பெருமாள் நாடார் மிகுந்த வீம்புக்காரர். குடும்பத்தில் மூத்தவரான அவருடைய தந்தை இளமையிலேயே பனையிலிருந்து விழுந்து இறந்துபோனதால் அவருடைய சிற்றப்பனார்களால் செல்லப்பிள்ளையாக வளர்க்கப்பட்டவர். அவர்களில் ஒருவரான குட்டி நாடார் அப்பொழுது பத்திர எழுத்தராகப் புகழும் செல்வாக்கும் பெற்றவர். இவர்களுக்கு நிறைய சொத்தும் இருந்தது. என் பாட்டனாருடைய திருமணத்தின் போது குதிரையில் மாப்பிள்ளை அழைப்பு நடந்ததாக என் தாயார் கூறுவார். இவர்கள் இருந்தது பிலாவிளை. இது அவர்களது மரபு ஊர் அல்ல. சில கல் தொலைவிலுள்ள பறக்கை என்ற ஊரிலிருந்து பெயர்ந்தவர்களாகக் கூறுவர். அதனால்தான் போலும் பறக்கையின் புகழ்பெற்ற தெய்வமான மதுசூதனப்பெருமாள் என்ற பெயர் என் பாட்டனார் தலைமுறையினரில் மூன்று பேருக்கு இருந்தது.

என் பாட்டனார் யாரிடமோ இருந்து வாக்குத்தத்தப் பத்திரத்தின் மீது கடன் வாங்கியுள்ளார். அதைச் செலுத்தாததால் வழக்குமன்றத்துக்குச் சென்ற போது வீம்புக்காக தன் சகலையின் பேரில் சொத்துகள் முழுவதையும் எழுதிவைக்க இறுதியில் உட்கார இடமின்றி ஊர் பொது நிலத்தில் ஒரு குடிசை வீட்டைக் கட்டி வாழ்ந்தார். அவரது சொக்காரர்கள் அவ் வூர்க்காரர்கள் அல்லவாயினும் தங்கள் குலதெய்வமான சுடலைமாடனுக்குக் கோயில் அமைத்து ஆண்டுக்கு இரண்டு முறை கொடையும் நடத்துவார்கள். பிலாவிளை அம்மன் கோயில் சார்ந்த ஊர் நாடான் தனியாக இருந்தாலும் வெளியில் பிலாவிளை நாடான் என்றால் குட்டிநாடார் என்றே பொதுவான எண்ணம் இருந்தது.

இந் நிலையில் என் தாயார் வயதுக்கு வரும் வரை வெற்றிலை, மீன் போன்ற பண்டங்களை வாங்க அத்திக்கடைக்கு வருவார். அவர் வயதுக்குவந்து(நிரம்புதல், புத்தியறிதல் என்ற சொற்களால் இதைக் குறிப்பர்) கடைக்கு வருவது நின்றதும் அவருடன் வரும் பெண்மணியிடம் செய்தியறிந்து சென்று பெண் கேட்டு நகை, நட்டு, புடவைகளைப் போட்டு என் தந்தை மணமுடித்தார்.

உள்ளூர் உழவு தவிர நாஞ்சில் நாட்டில் பயிர்ச் செய்கை காலத்தில் குழுவாக தங்கி உழப்போவார்கள், அறுவடைக் காலத்தில் சூடடிக்க(போரடிக்க)வும் நாடார்கள் செல்வர். என் பாட்டனார்தான் இவற்றில் ஒரு கூறுடி. கூறுடி என்பவர் அறுப்பு, சூடடி போன்றவற்றுக்கு ஆட்களைத் திரட்டி வயல்காரர்களை அணுகி வேலை அமர்த்தி வேலையை ஆட்களுக்குப் பங்கிட்டு(கூறிட்டுக் கொடுத்து) பின்னர் கொத்தாக[3](கூலியாக)க் கிடைக்கும் நெல்லைக் கூறு போட்டுப் பிரித்துக் கொடுப்பவரைக் கூறுடி என்பார்கள், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இவர்களைக் கொத்தனார் என்பார்கள். எங்கள் ஊரான கீரிவிளை நாடான் குடும்பத்தில் மூத்தவர் என் பாட்டனார் குழுவில் உழவுக்கும் சூடடிக்கும் நாஞ்சில் நாடு செல்வார்.

எங்கள் ஊர் நாடான் குடும்பத்திலும் சுற்றியுள்ளோர் குடும்பங்களிலும் என் தாயாரை பிலாவிளை நாடாச்சி என்று மிகுந்த மதிப்புடன் குறிப்பிடுவார்கள்.

என் தந்தை 8 ஆம் அகவையிலேயே தாயை இழந்துவிட்டார். என் மூத்த பெரியம்மா அவரது மூன்றாம் மகப்பேற்றின் போது, என் தந்தைக்கு ஏறக்குறைய 15 அகவை ஆன போது இறந்துவிட்டார். இரண்டாம் பெரியப்பா அம்மை கண்டு இளமையிலேயே இறந்துவிட அந்த பெரியம்மாவும் தாய்வீடு சென்றுவிட்டார்கள். என் பெரியப்பாவும் தந்தையும் சோற்றுக்காக அலைக்கழிந்துள்ளனர். என் தந்தை 5 பெண் குழந்தைகளின் தாயும் கைம்பெண்ணுமான ஒன்றுவிட்ட அக்கா வீட்டில் வாணிகத்திலும் சொத்துகளிலும் இருந்து வரும் தன் வருவாய் அனைத்தையும் தந்து சாப்பிட்டார். அவருக்கு படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தும் என் பாட்டனார் அவர் 4ஆம் வகுப்பு முடித்ததும் “பையைப் பறித்துப் போட்டு என்னோடு சந்தைக்கு வாலே என்று இழுத்துப் போய்விட்டதாக” மனம் நொந்து சொன்னார். அக்காவின் 5 பெண்களுக்கும் திருமணம் ஆன பிறகுதான் என் தந்தையின் திருமணம் முடிந்தது. அக்காவின் இளைய மகளுக்கும் என் தாயாருக்கும் சம வயது.

ஊரை விட்டு விலகி சொந்த நிலத்திலிருந்த குடும்ப வீடு ஆளில்லாமல் குட்டிச் சுவராகிவிட்டதால் அக்கா வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அத்திக்கடை நாடான் என்பவரின் நிலத்தில் ஒரு வீட்டைக் கட்டி குப்பைக்காய்ச்சிக் குடியிருப்பாக[4] என் பெற்றோர் குடியேறினார். அந்த அத்தை நன்றாக அகவை முதிர்ந்து கண் பார்வை மங்கி இறப்பது வரை எங்கள் பராமரிப்பில்தான் இருந்தார்.

அந்த வீட்டில் ஒரு கைசாலைக் கதவு[5] அமைப்பதில் பக்கத்திலிருந்த எங்களைப் போன்ற ஒரு குப்பைக்காய்ச்சிக் குடியிருப்புக்காரர் சச்சரவு செய்தார்[6]. இது ஒரு முடிவுக்கு வராத நிலையில் சொந்த நிலம் கிடக்க அடுத்தவர் நிலத்துக்காக அதனோடு தொடர்பில்லாத ஒருவனோடு எதற்கு மல்லுக்கு நிற்க வேண்டும் என்று பழைய வீடு இருந்த நிலத்தில் கடன்பட்டு புதிய வீடு கட்டினார். ஊரில் வழக்குகள் வரும் போது ஊர் நாடான், பணம் படைத்தவன், செல்வாக்கு உள்ளவன் என்று பாராமல் மனதில் பட்டதை வலுத்துக் கூறும் என் தந்தையின் இயல்பால் பெரும்பாலோருக்கு எங்கள் மீது அசூயை இருந்தது. அதனால் புது வீட்டுக்குச் செல்வதைக் கசப்புடனேயே பார்த்தனர். இவ்வளவுக்கும் என் தந்தை ஊர் நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கு கொள்பவர்தான். கோயில் கொடைகளின் போது வில் பாட்டுக்காரர், மேளக்காரர்களுக்குச் சாப்பாடு போடுவது, கொடையின் போது பயன்பட்ட கோக்கறைப் பானை எனப்படும் பெரிய பானைகள் விற்பனை ஆகியவற்றில் ஏலத்தில் பங்கெடுத்தலும் உண்டு. இப் பானைகள் பதனீர் காய்ச்சவும் நெல் அவிக்கவும் தவசங்கள், கூழ்பதனீர் இட்டு வைக்கவும் பயன்படும். இரண்டு மூன்று ஆண்டுகளில் தந்தையார் ஒரு மாதத்துக்கும் மேலாக நோய்ப் படுக்கையில் கிடந்தார். ஒரேயொரு குடும்பத்தினர் தவிர ஊரார் எவரும் வந்து பார்க்கவே இல்லை. எனவே அடுத்த ஊர்க்கூட்டத்தில் செத்த பின் பிணத்தை எடுத்துப் போடுவதற்காக மட்டும் ஓர் ஊருக்கு வாழ்நாளெல்லாம் வரி செலுத்த விரும்பவில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிட்டார். வண்ணார் – நாவிதர்களை விலக்க முயன்றனர். அவர்களோ அங்கு ஒரு மகன் இருக்கிறான், அவன் திருமணத்தின் போது எங்களுக்குக் கிடைக்கும் வழக்கங்களைத் தருவீர்களா என்று கேட்டு மறுத்துவிட்டனர். ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல. தந்தையார் நாவிதர், வண்ணார் போன்ற அன்றைய ஒதுக்கப்பட்ட மக்களை ஒட்டுமொத்தமாக ஒருமையில் அழைப்பதில்லை. அகவைக்கேற்ப மதிப்புக் கொடுத்துத்தான் விளிப்பார். வீட்டிலும் தாயார் அவர்களுக்கு நாங்கள் புழங்கும் பாத்திரங்களில்தான் உண்ணக் கொடுப்பார். அதனால் அவர்களெல்லாம் எங்களிடம் பற்றுடன் பழகுவர்.

இந்தப் பின்னணியில் படிப்பில் எப்போதும் முன்னணியில் இருந்த நான் தந்தையின் நாட்பட்ட நோயாலும் வீட்டுக் கடனாலும் பொறியியல் பட்டம் படிக்க முடியாமல் உறவினர்களில் பலரும் மறுத்துவிட ஒருவர் மட்டும் சொத்தின் மீது கொடுத்த கடனால் பட்டயம் படித்தேன்.

இவரைப் பற்றி விரிவாகக் கூறாமலிருந்தால் நான் மிக நன்றி மறந்தவனாவேன். என் பாட்டனார் உடன்பிறந்த மூத்த ஆடவர்கள் இருவர். இரண்டாமவருக்கு இரண்டே பெண்கள். மூத்த அத்தையை தெற்குக் கீரிவிளை பண்டாரக்குட்டி நாடார் என்பவருக்கு மணமுடித்திருந்தார்கள். அவர்களுக்கு 5 பெண்களும் இளையவராக ஒரு ஆணும் உண்டு. பெண்களில் மூத்தவருக்கு என் தந்தை அகவை இருக்கும்(என் பாட்டிக்கு 8 குழந்தைகள் பிறந்து இறந்துவிட அதன் பின் பிறந்த 3 ஆண்கள்தாம் தங்கினார்களாம். அவர்களில் என் தந்தை கடைக்குட்டி. அதனால்தான் என்தந்தையும் நானும் குடும்பத்திலேயே அனைவருக்கும் இளையவர்களாக இருந்தோம்). அந்த அத்தை என் மீது மிக அன்புடன் இருப்பார். எங்கள் ஊரிலுள்ள சம்பக்குளம் கால்வாயில் தண்ணீர் அடைத்த பின் சிறிது தொலைவில் வயல்களைத் தாண்டிச் செல்லும் பழையாற்று ஓடை(இது இராசாக்கமங்கலம் பண்டையாற்றுடன் சேர்கிறது)யில் குளிப்போம். குளிக்கும் இடத்துக்கு இறங்குவதற்கு ஒரு மிக ஒடுங்கிய குத்துச் சாய்வான நடைபாதை உண்டு. அதை ஒட்டி வயல்களிலிருந்து கசியும் நீரால் அறுக்கப்பட்ட ஒரு பள்ளம் உண்டு. ஒரு முறை, அப்போது எனக்கு 2½ அகவை, என்னைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு அத்தை கீழே இறங்கும் போது நான் கசிவுக்குட்டையில் விழுந்துவிட என் கையைப் பிடித்திருந்த அத்தையும் என்னோடு விழுந்ததால் படுக்கையில் விழுந்தவர் தொடர்ந்த காய்ச்சலுக்குப் பின்னர் எழவே இல்லை. அத்தைக்குக் கனத்த உடம்பு. “மருமகனே உனக்கு என் மகள் ஒருத்தியை மணம் செய்து கொடுக்கலாமென்று பார்த்தால் அவர்கள் அனைவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டதே” என்று அத்தை அடிக்கடி கேலி பேசுவதும் மேலே நான் கூறிய நிகழ்ச்சியும் இன்றும் என் மனதில் அடிக்கடித் தோன்றிக்கொண்டிருக்கின்றன.

அத்தையின் மூத்த மகளின் கணவர் பண்டாரதாணுமாலயப்பெருமாள் நாடார். இவர் அத்தையின் கணவர் பண்டாரக்குட்டி நாடாரின் தங்கையின் மகன். இவருடைய தந்தை ஆறுமுகப்பெருமாள் நாடாரது தொழில் பத்திர எழுத்து. வாத்தியார் என்றே அவரைக் குறிப்பிடுவர். என் தாயாரின் பாட்டனார் குட்டி நாடாரின் கீழ் எழுத்தராகப் பயிற்சி பெற்றவர் அவர். அவருடைய மூத்த மகன்தான் பண்டாரதாணுமாலயப்பெருமாள். இவர்களுடைய குடும்பத்தின் கொள்வினை கொடுப்பினைகளைத் தடம் பிடித்தால் அந்த வட்டாரத்திலுள்ள பெரும்பாலான பணக்காரக் குடும்பங்களோடு எனக்கு உறவுகளைக் காண முடியும். ஆனால் இவற்றில் எதையும் அறியும்படியான பொருளியல் சூழலில் அப்போது நான் இல்லை. உண்மையில் இதனை எழுதும் போதுதான் இவை எல்லாம் என் சிந்தனையை எட்டுகின்றன. குமரி மாவட்டத்தில் இருக்கும் என் இரு மகள்கள் திருமண நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது அங்கு வருவோர் எங்கள் குடும்பத்தோடு தங்களுக்குள்ள உறவுகளைக் கூற அதைக் கேட்கும் போது இளமையில் பலர் சிறுவனான என்னைப் பார்த்து முறை சொல்லி அழைத்ததன் பொருள் விளங்கும்.
    
எங்கள் குடும்பம் கீரிவிளையிலிருந்து விலகியிருந்த நிலையில் வடலிக்காட்டு மூத்தவர் என்று குறிப்பிடப்படும் பண்டாரதாணுமாலயப்பெருமாள் நாடார் என் தந்தையை அணுகி அவர்கள் ஊரான வடலிக்காட்டுடன் சேர்ந்துவிடுமாறு கேட்டுக்கொள்ள தந்தையும் உடன்பட்டு அங்கு இணைந்தோம். இந்தச் சூழலில்தான் உறவினர்கள் அனைவரும் கைவிட்ட நிலையில் எங்கள் வீட்டடி தோப்பை ஒற்றியாகப் பெற்று உரூ.1500/- தந்தார்.

இந்த உதவியை வெறும் உறவு என்ற அடிப்படையில் அவர் செய்தார் என்று கூற முடியாது. பொதுவாகவே நலிந்தவர்களுக்கு உதவும் குணம் அவரிடம் உண்டு. இவர்களது குடும்பத்தினர் வழக்கமாக உவரி சுயம்புலிங்க சாமி கோயிலுக்குச் செல்வர். அங்கு அவர்களுக்கு ஒரு மண்டபமோ கட்டடமோ இருந்ததாகவும் தெரிகிறது. அங்கு தன்னை அணுகிய ஏழை பொற்கொல்லர் ஒருவரை அழைத்துவந்து பக்கத்துத் திக்கிலான்விளையில் செட்டியார் தெருவில் குடியமர்த்தி எங்கள் வீடிருக்கும் எங்கள் நிலத்தை ஒட்டியிருக்கும் தன் நிலத்தில் இருக்கும் கடையில் ஒரு கோடியில் இருந்த ஒரு சின்னஞ்சிறு கடையைப் பட்டறை அமைக்கக் கொடுத்தார். அவருக்கு என் அகவையில் ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு நெல்லை மாவட்டத்தில் ஒரு மாப்பிள்ளைக்கு மணமுடித்து அவர் இந்தப் பட்டறையில் வேலை செய்தார். இன்று அவருடைய வழியினர் ஒன்றுக்கு மேற்பட்ட சிறு நகைக்கடைகளுடன் சிறப்பாக வாழ்கின்றரனர்.

அடுத்து ஆசாரிபள்ளத்துக்காரர் என்று ஒருவரை மனைவியுடனும் சிறியவர்களாயிருந்த மக்களுடனும் எங்கள் வீட்டுக்கு அருகிலேயே குடியமர்த்தினார். கணவன் பொறுப்பில்லாதவர், மனைவி தென்னந்தும்பு அடித்துப் பிள்ளைகளை வளர்த்தார். பிள்ளைகள் வளர்ந்து அவர்களும் உழைத்து இன்று அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் நல்ல நிலையிலிருக்குன்றனர். இப்படி அந்த தோப்பில் மட்டும் நான்றிய ஐந்து குடும்பங்களுக்கு அவர் அடைக்கலம் கொடுத்திருக்கிறார். அண்டையில் இருப்பதால் என் அன்னையாரும் இக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு அவ்வப்போது உணவளிப்பார். அவரது வேறு தோப்புகளிலும் இது போல் ஏழைக் குடும்பங்களைக் குடியமர்த்தி உதவியதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

முதலில் வீட்டடித் தோப்பின் மீது உரூ.1500/- கொடுத்தது போக அடுத்த ஆண்டு இன்னொரு தோப்பின் மீது உரூ.1000/-மும் அடுத்த ஆண்டு எந்த ஆவணமும் இன்றி ‘வெறுங்கையில்’ உரூ.1000/- கொடுத்தார். ஒட்டுமொத்தமாக அவருடைய இந்த உதவும் குணத்துக்கு அவரது மனைவியாகிய என் மதனியாரின் ஒப்புதலும் மகளாகிய இராசம்மாள் இசைவும் இருப்பதை நான் கண்டுள்ளேன்.

நான் இடைநிலை(இன்றர்மீடியேற்று) வகுப்பில் முதல் வகுப்பில் தேறியதும் எங்களூர் முன்னாள் திருவிதாங்கூர் – கொச்சி மாநிலத்தில் தி.த.நா.கா. சார்பில் அமைச்சராக இருந்தவரும் எங்கள் தொகுதி ச.ம.உ.வுமான திரு.சிதம்பரநாத நாடார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்புக்கு இடம் பெற்றுத் தருவதாகத் தானே முன்வந்து உறுதியளித்திருந்தார். ஆனால் பணச் சிக்கலை முழுமையாக உணர்ந்திருந்த நான் பணத்தால் கல்வியை இடையில் நிறுத்த வேண்டிவரும் என அஞ்சி அத்திசையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காட்டு கிறித்துவக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்துவிட்டேன்.

திரு.சிதம்பரநாதன் நாடார் அவர்கள் என் தந்தையின் தொடக்கப்பள்ளி உடன் மாணவர். அவருக்கு நெருக்கமான நண்பர். என் தந்தையாரின் திராவிட இயக்க ஈடுபாட்டால் இருவரும் பேசுவதில்லை. இருந்தாலும் பழைய நட்பாலும் சாதியினர் முன்னேற்றம் என்ற நோக்கிலும் எனக்கு உதவ விரும்பினார். நான் சேர்க்கைப் படிவம் பெறக்கூட முயலவில்லை என்பதறிந்து அவருக்கு இயல்பான வகையில் என்னைக் கடுமையாகக் கடிந்துகொண்டார்.

அவர் பதவியிலிருந்த காலத்தில் நாடார் சாதியினருக்கு எதிராக அரசுத் துறையினர், குறிப்பாகக் காவல் துறையினர் பகையுணர்வுடன் நடந்துகொள்வதை ஓரளவு முடிவுக்குக் கொண்டுவந்தார் எனலாம். தமிழ்நாட்டோடு குமரி மாவட்டம் இணைந்த பின் அவர் ச.ம.உ.வாக இருந்த போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி அவரது போக்கைப் புலப்படுத்தும். குமரி மாவட்ட ஆட்சியராக திருமலை என்ற பார்ப்பனர் இருந்த போது ச.ம.உ. என்ற நிலையில் ஒரு முறை அவரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரை வீட்டுக்குள் விட மனமின்றி ஆட்சியர், “வாங்கோ நாடார்வாள், வாங்கோ வாங்கோ” என்று விறுவிறுவென்று வீட்டு முற்றத்தில் கிடந்த இருக்கைக்குச் சென்றுள்ளார். சாதி பார்த்து தன்னை வீட்டுக்குள் விடுவதைத் தவிர்க்கும் அவரது எண்ணத்தைக் கண்டித்துவிட்டு வீட்டினுள் சென்று வரவேற்பறையில் அமர்ந்து தன் உரிமையை நிலைநாட்டியவர் அவர்.

எனக்கு மிகப் பிடித்த துறை உயிரியல். ஆனால் அதில் எண்ணற்ற பெயர்களை மனப்பாடம் செய்ய வேண்டியிருப்பதாலேயே நான் கல்லுரியில் இரண்டாம் குழு எனப்படும் உயிரியல், இயற்பியல், வேதியலுக்கு மாற்றாக கணிதம், இயற்பியல், வேதியலைக் கொண்ட முதல் குழுவைத் தேர்ந்தேன். மூத்தோர் சிலரும் பொறியியல் படிக்க கணிதம் தேவை என்று அறிவுறுத்தினர். அப்போதும் சரி பொறியியல் படித்துத் தேறிய போதும் சரி அப் படிப்பின் உண்மையான மதிப்பு என்ன என்பதை நான் அறிந்திருக்கவில்லை. இருந்தாலும் அனைவரும் உருவாக்கிய ஆவலால் கலைக் கல்லூரிப் படிப்பில் மனம் ஒன்றவில்லை. இந் நிலையில் அத்திக்கடையை ஒட்டியிருக்கும் திக்கிலான் விளையில் ஏழைப் பனையேறி ஒருவரின் மகனான படிப்புத் திறனில் சிறந்து விளங்கியவரும், பின்னாளில் புள்ளியியல் துறையில் உயர் பதவியடைந்து காலமானவரும் புலவர் சா.வேலப்பன் என்ற பெயரில் பல நூல்கள் எழுதியவருமான என் நெருங்கிய நண்பர் தன் கல்லூரிப் படிப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் திரு.சிதம்பரநாதன் நாடார் வீட்டில் தங்கி அவர் உதவியுடன் படித்துவந்தார். சென்னையில் சட்டமன்ற நிகழ்ச்சிக்குச் சென்று தங்கியிருந்த போது இரண்டு புதிய பல்தொழிற் பயிலகங்களின்(பாலிடெக்னிக்கு – இப்போதுதான் கல்லூரி என்ற அடைமொழியை அவை பெற்றுள்ளன) சேர்க்கைப் படிவங்களை தகுந்த சாதி மாணவர் யாருக்காவது வழங்குமாறு திரு.வேலப்பன் அவர்களுக்கு விடுத்திருந்தார் முன்னாள் அமைச்சர். அவரது வீட்டுக்குச் சென்ற போது நண்பர் வேலப்பன் அந்த இரு படிவங்களையும் என்னிடம் கொடுத்தார்.

பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தும் முருகப்பா குழுமத்தினர் சென்னை ஆவடியிலும் பெருந்தொழில் நிறுவனர் நா.மகாலிங்கம் அவர்கள் பொள்ளாச்சியிலும் அந்த ஆண்டில் தொடங்கவிருந்த பல்தொழில் பயிலகங்களுக்குரியவை அவை. அவற்றில் முன்னதிலிருந்துதான் முதலில் அழைப்பு வந்ததால் அதில் போய்ச் சேர்ந்தேன். அடுத்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளுக்கு சேர்க்கைப் படிவங்களை விடுக்க வேண்டுமென்ற அறிவுரையுடன் என்னை வாழ்த்தினார் முன்னாள் அமைச்சர்.

காட்டுக் கிறித்துவக் கல்லூரிக்குச் சென்று மாற்றுதல் சான்றுக்கு எழுதிக்கொடுத்து முதல்வரைச் சந்தித்தேன். முதல்வராக இருந்தவர் திரு.அருமைநாயகம் அவர்கள். நான் இடைநிலை வகுப்பு படிக்கும் போது துணை முதல்வராக இருந்தார். மிகத் திறமையான கணித ஆசிரியர். கல்லூரியின் பழைய நாட்களில் எஃப்.ஏ. மட்டும் இருந்த போது கணிதப் பிரிவுகள் அனைத்துக்கும் இவரே ஆசிரியர் என்றும் அந் நாட்களில் கணிதத் தேர்வுகளில் மாணவர்கள் எப்போதும் 100% தேர்ச்சி என்றும் கூறுவர். நான் இடைநிலை வகுப்பு படிக்கும் போது அவர் நடத்தும் வகுப்புகளில் அவர் கடைப்பிடிக்கும் உத்தி, அதாவது ஓர் அடியின் இடது பக்கத்தை எழுதி அடுத்து சமம் குறியும் இட்ட பின் வலது பக்கத்தை அவர் ஒரு போதும் எழுத மாட்டார், மாணவர்களைக் கேட்டு அவர்கள் வாயிலிருந்து வரவழைத்துத்தான் எழுதுவார். ஆசிரியர் கணிதத்தைச் சொல்லித்தந்தார் என்பதாகவன்றி தாங்கள் தங்கள் முயற்சியால் கற்றுக்கொண்டது போல் உணர்வர். ஒன்றைச் சொல்லியாக வேண்டும் அவரது தோற்றமே மாணவர்களைக் கட்டுப்படுத்தும் தன்மையில் இருக்கும்.

மாற்றுதல் சான்று கேட்ட என்னிடம் பொறியியல் பட்டப் படிப்பில் ஏன் சேரவில்லை என்று கேட்டார். நிலைமையை எடுத்துரைத்ததும் சிறிது நேரம் முகத்தில் கவலைக் குறியுடன் அமைதியாக இருந்த பின் வழக்கமாக திரும்ப வழங்காத சில கட்டணங்களையும் விதிவிலக்காக உனக்கு வழங்குகிறேன் என்று கூறி வழங்கி வாழ்த்தினார். முந்தைய ஆண்டு மாணவர்களில் குறிப்பிடத்தக்கவன் நான் என்பது துணை முதல்வராக இருந்த போது அவருக்குத் தெரிந்தே இருக்கும்.

நான் வேலையில் சேர்ந்து இரண்டாண்டுகளில் ஏறக்குறைய மூன்று இடமாற்றல்களைச் சந்தித்துவிட்டேன். புள்ளம்பாடி வாய்க்கால் திட்டத்தில் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் பணியில் சேர்ந்த என்னைக் களத்தில் பார்த்த கண்காணிப்புப் பொறியாளர் எனக்கிட்ட நிறைவேற்ற முடியாத ஓர் ஆணை குறித்து ஐயங்கள் கேட்டேன் என்பதை மனதில் வைத்துக்கொண்டு 6 மாத்ததில் வந்த ஆட்குறைப்பில் வட்டத்திலிருந்து என்னை வெளியேற்றினார். அடுத்து கல்லணைக் கால்வாயின் தலைப்பு எட்டத்தில் ஏறக்குறைய 80 ஆயிரம் அடிகள் வரை எக்கல் என்றும் வண்டல் என்றும் கூறப்படும் மணல் படிவை அகற்றும் 6 மாதப் பணியில் கல்லணையில் அமர்த்தப்பட்டேன். அங்கிருந்து இற்றை(நவீன)ப்படுத்தல் கோட்டம் என்பதன் கீழ் முத்துப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்ட பிரிவில் பிரிவு அலுவலரானேன். அங்கு பணியில் சேர்வதற்கு முன்பே 1961 சூலை மாதம் ஏற்பட்ட காவிரி வெள்ளத்தில் காவிரி ஆற்றுப்பரப்பில் ஏற்பட்ட உடைப்பு அடைப்புப் பணியில் திருக்காட்டுப்பள்ளி, அணைக்கரை ஆகிய இடங்களில் அலைந்தேன். அது முடிந்து ஓராண்டு ஆவதற்குள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.கோபாலசாமி ஐயங்கார் என்ற தமிழ்நாட்டரசு தலைமைச் செயலர் ஓய்வு பெற இருந்த நிலையில் அம் மாவட்டத்தில் முதன்மை, கிளை வாய்க்கால்கள், வயற்கால்கள் என்று ஓடிய பல்லாயிரக்கணக்கான அனைத்தையும் ஆண்டு தோறும் வண்டல் அகற்றும் பணியை பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் ஆகியவை மேற்கொள்ளுமாறு வகைப்படுத்த வேண்டும் என்று மறுவகைப்பாட்டுக் கோட்டம் ஒன்றை அமைக்க வாய்வழி ஆணை பிறப்பித்து அதன்  முன்னோட்டமாக திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்தில் என்னோடு பணியாற்றிய நான்கு பிரிவு அலுவலர்களும் உத்வி(செயற்)பொறியாருடன் 15 நாட்கள் திருவாரூர் வட்டத்து கீழ்வேளூரில் தங்கினோம். புதிய கோட்டம் அமைக்கப்பட்ட போது என்னை மட்டும் மயிலாடுதுறை வட்டத்திலுள்ள செம்பனார்கோயிலுக்கு மாற்றினர். உட்கோட்ட அலுவலகம் சீர்காளியிலிருந்தது. என்னோடு இன்னும் மூன்று பேர் செம்பனார்கோயிலில் பணியாற்றினர். தலைமைப் பொறியாளரின்     ஆள்வினை ஆணையால் கோட்டம் உருவாக்கப்பட்டாலும் உரிய அரசாணை பிறப்பிக்கப்படாததால் எங்கள் யாருக்கும் ஏறக்குறய 3 மாதங்கள் சம்பளம் வரவில்லை. செம்பனார்கோயிலின் முதன்மைச் சந்தியிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் சாலை தொடர்வண்டித் தடத்தைக் குறுக்கிடும் இடத்துக்கு முன்பு அஞ்சல் அலுவலம் இருந்த கட்டடத்தின் மாடியிலிருந்த 10 அறைகளில் இரண்டில் நாங்கள் தங்கியிருந்தோம். எனக்குச் சாப்பாட்டுக்கு அங்குள்ள ஓர் உணவகத்தில் அந்தக் கட்டடத்தில் தங்கியிருந்த அரங்கராசன் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் சம்பளம் கிடைக்காத நிலையில் முதலில் என் மோதிரத்தை அடகு வைத்து உணவகத்துக்குச் செலுத்தினேன். ஒரு சிறு உணவகத்தை நடத்துபவராகிய உரிமையாளர் என் பாக்கிக்காகப் புலம்புவார். எனவே ஒரு நாள் அரங்கராசன் அவர்களையும் அழைத்துக்கொண்டு அவ் வுணவகத்தில் என் போல் பதிவாகச் சாப்பிடுபவரான வட்டிக்கடைக்காரரை அணுகி என் மிதிவண்டி மீது கடன் கேட்டேன். அவர் 5 வட்டி கேட்டார். அரங்கராசன் என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியேறினார். திரும்பும் வழியில் அஞ்சல்காரர் அவரை அழைத்து தீபாவளி பண்டிகை முன்பணம் வந்திருப்பதைக் கூறி வழங்கினார். அதை வாங்கி அப்படியே  உணவகம் சென்று பாக்கியை அடைத்தார் அரங்கராசன். அன்றிரவு என் தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தொலைவரி வந்தது. அரங்கராசன் அவர்கள் தன்னிடம் மீதியிருந்த பணத்தைத் தந்து ஊருக்கு என்னை விடுத்துவைத்தார்.

தந்தை சாமித்தோப்பு கோயிலில்தான் இருந்தார். அமைதியாக வடக்குவாயில் திண்ணையில் படுத்திருந்தார். அதிகமாகப் பேசவில்லை. அவ்வப்போது கோயில் அறங்காவலர் திரு.கிருட்ணநாமாமணி நாடார் அவர்கள் பார்த்துச் செல்வார். அன்னையார், தந்தையார் நோய்வாய்ப்பட்டிருந்த காலம் முழுவதும் அவருக்குச் சோர்வின்றிப் பணிவிடை செய்த என் இளைய தாய்மாமன் திரவியம் என்று எவருமே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்று கருதவேயில்லை. மருத்துவ மனைகள் கைவிட்ட பின் கோயிலுக்கு வந்துதான் குணமடைந்ததால் இந்த நிலைப்பாடு(விரிவுக்கு மனதின் ஆற்றல் என்ற என் கட்டுரையைப் பார்க்க). ஏறக்குறைய ஒரு கிழமை சென்ற பின் திரு.கிருட்ணநாமாமணி நாடார் வீட்டுக்குக் கொண்டுசெல்வது நல்லது என்று அறிவுறுத்தினார். உடனே என் பெரியப்பா மகனான அண்ணன் குமாரசாமி அவர்களுக்கு செய்தி விடுக்க அவர் மகிழுந்துடன் வந்து வீட்டில் விட்டு தன் குடும்பத்தினரை அழைத்துவரச் செல்லவும் நான் தந்தையாருக்கு நீரூட்டிச் சிறிது நேரத்தில் உயிர் பிரிந்தது.

எங்கள் நிலம் ஒன்றில் அடக்கம் செய்த பின் அங்குள்ள வழக்கப்படி குழிக்கரையிலேயே வண்ணார் விரிக்கும் துணியின் மீது ஊர் ஆடவர்கள் சதுரமாக உட்கார்ந்திருக்க தமிழகத்தின் பிற பகுதிகளில் காரியம் என்றும் கருமாதி என்றும் குறிப்பிடப்படும் குளிமுறை எனப்படும் பதினாறாம் சடங்கு என்று நடைபெறும் என்பது அறிவிக்கப்பட்டு வண்ணார், நாவிதர் ஆகியோருக்குக் கொடுக்க வேண்டிய வழக்கம் என்று அங்கு குறிப்பிடப்படும் மாமூலை வழங்குவதற்குத் தேவையான பணத்துக்கு, அடக்கம் செய்யும் முன் வீட்டில் பெண்களும் குழிக்கரையில் ஆடவரும் வாய்க்கரிசி போடும் போது கொடுத்தது சரியாக இருந்தது. நான் ஊருக்கு வந்த நாளிலிருந்து ஒரு காசு கூட கையில் இன்றித்தான் இருந்தேன் என்பதைக் கூறியாக வேண்டும். ஊர்த் தலைவரான பண்டாரதாணுமாலயப்பெருமாள் நாடார் குழிக்கரைச் செலவுக்குத் தேவைப்படுமென்று ஆயத்தமாகப் பணம் எடுத்துவந்திருந்ததையும் ஆனால் வாய்க்கரிசிப் பணமே செலவை ஈடு செய்துவிட்டதென்றும் அங்கேயே குறிப்பிட்டார்.

இந்த இடத்தில் பெரும்பாலும் அம்மன் கோயிலை நடுவாகக் கொண்டு ஊர்த் தலைவரான ஊர் நாடான் தலைமையில் நடைபெற்ற ஊராட்சியையும் அதில் ஊர் மக்களின் பங்களிப்பையும் அவர்களுக்குக் கிடைத்த பல்வேறு வசதிகளையும் மீண்டும் ஒரு முறை கூற விரும்புகிறேன். ஊர் மக்களுக்கு எதிர்பாராமல் நிகழும் சாவு, பெண்கள் பூப்பெய்தல், திட்டமிட்டு நடத்தப்படும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அக் குடும்பத்தினரின் செலவுகளை ஒரு வகை பங்கீட்டு முறையில் அரிசி, மொய், எண்ணெய், வாய்க்கரிசி போன்றவை மூலம் வழங்குவதுடன் ஊரழைப்பு, சமையல், விருந்தின் போது பரிமாறல் என்றும் உதவினர். இந்த உதவிகளைப் பெற்றோர் அவற்றை வழங்கியோர் வீடுகளில் இடம்பெறும் இது போன்ற நிகழ்ச்சிகளின் போது அதே போன்ற உதவிகளைச் செய்து சரிக்கட்டிக்கொண்டனர். சாவுச் செய்திகளை வெளியூர்களிலுள்ள நெருங்கிய உறவினர்களுக்கு ஊர்க் குடிமகனான நாவிதர் சென்று சொல்வார். ஊர்க் கூட்டங்களில் பணப்பண்டு நடத்தி சிறு தொழில்கள், வாணிகம் செய்வோருக்கு உதவுதல், வழக்குகளை உசாவுதல், தவறு செய்வோருக்கு தண்டம் விதித்தல் போன்றவை நடைபெற்றன. இவற்றுக்கு ஒரு சான்றாகவே என் தந்தையாரின் இறுதிச் சடங்கு நிகழ்வு விளங்கியது.

இந்த ஊராட்சி முறையின் அடிப்படைக் கோளாறு இது ஒவ்வொரு ஊரையும் தனித்தனித் தீவுகளாக்கி அண்டை ஊர்களோடு எந்த உறவுமில்லாமல் செய்ததுடன் இவற்றை இணைக்கும் எந்த ஓர் அடிப்படைக் கட்டமைப்பும் இல்லாதிருந்ததுதான். அரசுகள் மக்களிடம் வரி தண்டுவதற்கும் ஊர்த் தலைவர்கள் மூலம் ஊழியம் என்ற பெயரில் பண்டங்களையும் பணிகளையும் கட்டாயப்படுத்திப் பறிப்பதை மட்டுமே செய்துவந்தன. காவல் முதற்கொண்டு அனைத்தையும் ஊர் மக்கள் தங்கள் முயற்சியில் ஏற்பாடு செய்ய வேண்டி வந்தது. பாசன வாய்க்கால்களில் மராமத்து செய்யும் பொறுப்பு அதன் தலைப்பிலிருந்து பயன் பெறும் முதல் ஊர் வரை உள்ளதை முதல் ஊராரும் அடுத்தடுத்த ஊர்களுக்கு இடையிலுள்ள இடங்களை அந்த வரிசைப்படியுள்ள ஊராரும் உடைமையாளர்கள் தங்களுடைய நிலப்பரப்புக்கு ஏற்ப ஆட்களைக் கொடுத்தும் நடைபெற்றதைக் கேள்விப்பட்டுள்ளேன். குளங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு மதகிலிருந்தும் செல்லும் வாய்க்கால்களில் இதே முறையைக் கடைப்பிடிக்க மொத்தக் குளத்துக்குமான பராமரிப்பு மொத்த ஆயக்கட்டு உரிமையாளின் விகிதமுறைப் பங்களிப்பில் செய்யப்பட்டது. அம் முறை முறிவுபட்டுப்போனதால்தான் நான் மேலே கூறிய மறுவகைப்பாட்டுத் திட்டம். குமரி மாவட்டம் உருவாகும் முன் அங்கிருந்த அரசர்கள் கட்டிய அணைகளிலிருந்து நீர் சுமந்து சென்ற வாய்க்கால்களில் அடைப்புக் காலத்தில் முழுமையான வண்டல் அகற்றலும் பாய்ச்சல் காலத்தில் ஒரு நாள் நீரை அடைத்து அனைத்து வாய்க்கால்களிலும் பாசி அகற்றும் பணியும் தொய்வின்றி நடைபெற்றது. குமரி மாவட்டம் உருவான பின்னும் தொடர்ந்த இந்த முறை குல்சாரிலால் நந்தா என்ற நடுவமைச்சர் ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் செய்த குளறுபடியால் அதுவும் நின்று போனது. ‘படித்தவர்கள்’ நிறைந்த குமரி மாவட்டத்தில் அம் மக்கள் குப்பைகளை, குறிப்பாக சிறப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்திக் கழிக்கும் வாழை மரங்களைப் போடக் கிடைத்த ஒரே இடம் நீர் நிரம்பி ஒடும் வாய்க்கால்கள்தாம். நான் கருதுவது ஊர்க்கூட்டங்களின் வடிவில் மக்களின் நேரடிப் பங்களிப்பில் இயங்கும் ஊராட்சிகளை அடித்தளமாகக் கொண்டு அவற்றின் கூட்டுக் கண்காணிப்பில் இயங்கும் மேல் நோக்கிய வட்டம், மாவட்டம், வட்டாரம், மாநிலங்கள், இந்தியா என்ற புதிய அரசியலமைப்பு மக்களின் உண்மையான பங்களிப்பைக் கொண்ட மக்களாட்சியாக இருக்கும் என்று. அதில்தான் இது போன்ற தான்தோன்றித்தனங்கள் முடிவுக்கு வரும் என்பது.    
 
தேர்வு முடிவு வெளிவந்த 17ஆம் நாளே வேலையில் சேர்ந்ததும் சில குறைபாடுகளுள்ள பெண்களைப் பெற்ற சுற்றியிருந்த மூவர் வெளியிலிருந்து வரும் மணத்தொடர்புகளைக் கோள் சொல்லிக் கெடுத்துவிட அந்த வட்டாரத்து எங்கள் மட்டத்துப் பெண்களை எல்லாம் பேசி ஓய்ந்துவிட்ட நிலையில் (நான் பணியில் சேர்ந்து ஏறக்குறைய 2½ ஆண்டுகள் சென்ற பின்தான் தந்தையார் காலமானார், இறுதி நாட்களில் அவருக்கு இருந்த மனக்குறை என் திருமணத்தைக் காண முடியவில்லையே என்பதுதான், அவர் இயற்கையெய்தி 1½ ஆண்டுகளுக்குப் பின்தான் என் திருமணம் முடிந்தது) நைனாபுதூர் நாடானின் இரண்டாம் மகளுடன் திருமணம் முடிந்தது. இராமன் சுடலைமுத்து நாடார் என்ற இவர் அப்போது பெருமளவில் பேசப்பட்ட நைனாபுதூர் கொலை வழக்கில் சிறை சென்றவர். இந்த வழக்கைப் பொறுத்தவரை திரு.பொன்னீலன் அவர்களின் தாயார் திருமதி.அழகியநாயகி அம்மாள் அவர்கள் தன் தன்வரலாறான கவலையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த ஊரைப் பொறுத்தவரை இங்குள்ள தென்னந்தோப்புகளும் பிற நிலங்களும் பெரும்பாலும் இவர்கள் குடும்பத்தினருக்கு உரியவை. அவற்றில் பெரும்பாலானவை தலைமுறைகளில் இங்கிருந்து கட்டிக்கொடுத்த பெண்களுக்குச் சீதனமாக வழங்கப்பட்டவை. அவை போக எஞ்சிய ஒரு சிறு பகுதிதான் நான் குறிப்பிடும் காலத்தில் உள்ளூரில் வாழ்ந்த ஆண் வழியினருக்கு உரியவாக இருந்தது. இந் நிலையில் இங்கிருந்து மணமாகிச் சென்ற ஒரு பெண்மணிக்குக் குழந்தைகள் இன்றி கணவனும் இறந்து போக அந்த அம்மையார் இந்த ஊரில் தனக்குரிய சொத்துக்களை என் மாமனாரின் தங்கை கணவருக்கு விற்றிருக்கிறார். கிழவி செத்தால் அவளது முழுச் சொத்தும் தங்களுக்குத்தான் என்று காத்திருந்த அவளது சொக்காரர் மூவர் புறப்பட்டு நைனாபுதூர் வந்து சொத்தை வாங்கிய என் மாமனார் தங்கை கணவரைக் கொல்ல முயன்று ஊராரிடம் சிக்கிக் கொண்டனர். மூவரில் ஒருவர் தப்பிவிட கிடைத்த இருவரையும் அண்மையிலுள்ள ஆத்திக்காட்டுவிளை ஓடை என்ற இடத்துக்குக் கொண்டுசென்றுள்ளனர். இந்த ஓடை காலங்காலமாக மழைநீரால் குமரி மாவட்டத்தின் சிறப்பான செவ்வல் மண்ணை அறுத்து உருவாகிய ஆழமான ஓடையாகும். இங்கு கொல்லமா என்ற முந்திரி மரமும் வகைவகையான பிற மரங்களும் நிறைந்து பகலில் கூட தனியாகச் செல்வோருக்கு அச்சமூட்டும் ஒன்றாகும். நரிகள் தாராளமாக இங்கு நடமாடின[7]. இங்கு கொண்டுவரப்பட்ட இருவரையும் எழுதக் கூசும் கொடுமைகளை அரங்கேற்றிக் கொன்றார்கள். தப்பியோடிய மூன்றாம் ஆள் இது நிகழ்ந்து கொண்டிருந்த கொல்லமாவின் மேல்தான் ஒளிந்துகொண்டிருந்து அனைத்தையும் பார்த்திருக்கிறான்.

இவ் வழக்கு என் மாமனாரை முதல் எதிரியாகக் கொண்டு நடந்தது. அப்போதுதான் புதிதாக காவல் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தவரும் என் மாமனாரின் தந்தையின் முதல் மனைவியின் மகளுக்குப் பிறந்த(இருவரும் ஏறக்குறைய சம அகவையுடையவர்கள்), இவருக்கு மருமகனுமான தங்கசாமியால் நடத்தப்பட்டது. இதில் அவர் விடுதலையானார். முதலில் தப்பிய மூன்றாம் ஆள் பின்னாலிருந்து அவரைக் கொல்ல பின்னாலிருந்து கத்தியுடன் நெருங்கிய போது பனையிலிருந்து இதைப் பார்த்த பனையேறி ஒருவர் எச்சரிக்கவும்[8] இவர் முந்திக்கொண்டு கத்தியைப் பிடுங்கி அந்த ஆளைக் கொன்று 8 ஆண்டுகள் சிறையிலிருந்தார்.

கொலைகாரக் குடும்பம் என்ற கெட்ட பெயர் பெற்ற இவரது மூன்று பெண்களில் மூத்தவரை கொள்ளியற்ற சொம்மு[9] என்ற கணிப்பில் கட்டிக்கொண்டவர் இங்கு உருவாகும் செல்வங்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு அவ்வப்போது ‘அறுவடை’ செய்துவிடுவார். மாமனாரிடமிருந்து எதிர்ப்பு ஏதாவது வெளிப்பட்டால் “உம் மகளை இங்கே கொண்டு விட்டுவிடுவேன்” என்று மிரட்டுவார். நகர்மன்றத்தில் பணியாற்றி நாகர்கோயிலில் தங்கியிருந்த தம்பிக்கு இங்கிருந்து மாமனார் விடுத்துவந்த தேங்காய், விறகுகள் போன்றவற்றை நிறுத்தியது போன்ற மருமகனின் செயல்களால் அண்ணனுக்கும் தம்பிக்கும் பகை ஏற்பட்டு அண்ணன் செத்த போது ஊர்ப்பணத்தைக் கையாடியதாகக் குற்றம் சாட்டிப் பிணத்தை எடுக்கவிடாமல் தம்பி தடுத்தார். 

நான் நெருங்கிப் பழகியவரை இராமன் சுடலைமுத்து நாடார் பொதுநல நாட்டமுள்ள ஓர் உயர்ந்த மனிதர். எங்கள் ஊரில் உள்ள சம்புக்குளத்திலிருந்து (நீர்நிலைகளில் காணப்படும் நீண்டு வளரும் சம்பு எனும் ஒருவகை புல் செறிந்திருந்ததால் அப் பெயர் வந்ததாகக் கூறுவர். சம்பு என்பதற்கு நெல் என்ற பொருளும் உண்டு) புத்தளம் என்ற ஊர் வரை ஏறக்குறைய 6 மைல்களுக்கு ஒரு வாய்க்கால், சம்புக்குளம் வாய்க்கால் என்று பெயர், வெட்டி மணல் பகுதியான அந்த வட்டாரத்துக்கு பாசன வசதியளித்திருந்தார் அந்த வட்டாரத்திலுள்ள ஒரு மாமனிதர். இது ஏறக்குறைய 130 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றிருக்கும் என்று தோன்றுகிறது. அவருடைய பெயர் கூட பெரும்பானோருக்கும் இன்று தெரியாது. அப்போது அதற்கு 6000 உரூ. செலவானது என்று கேள்வி. ஒரு பொறியாளன் என்ற வகையில் அவ் வாய்க்காலில் உள்ள பாலம் போன்ற துணை அமைப்புகள் என்னைப் போற்றவைக்கின்றன. கோட்டாறு – ஈத்தாமொழி சாலையில் சுண்டபற்றிவிளை விலக்கிலும் ஈத்தாமொழியிலும் மங்காவிளையிலும் நைனாபுதூரிலும் இவ் வாய்க்கால் சாலைகளைக் கடப்பதைக் காணலாம். வாய்க்கால் ஓடும் நிலவுடைமையாளர்களை அணுகி இசைவு பெற்று அதனை அமைத்த அவருடைய பேருழைப்பும் பொறுமையும் வியப்பூட்டுவன. அண்மையில்தான் பொதுப்பணித்துறை வாய்க்காலை அளந்து அந் நிலங்களைப் புறம்போக்காக்கும் பணியை முடித்தது. ஈத்தாமொழி தாண்டிய பின் அந்த வாய்க்காலில் காற்றுக் காலங்களில் மணல் படியும். இராமன் சுடலைமுத்து நாடார் வயல்காரர்களிடம் காசு தண்டி அந்த மணலை அகற்றி தண்ணீர் தேவைப்படும் போதெல்லாம் சம்புக்குளத்துக்கு நடந்துவந்து கரைக் காவலரை(லசுக்கர்)க் கண்டு கூடுதல் நீர் திறக்க வைத்துத் தங்கள் பகுதிக்கு நீர் கொண்டுசெல்வார். அவரது நடமாட்டம் நின்ற பின்னர் அங்கிருந்த வயல்கள் காணாமல் போய்விட்டன.

நைனாபுதூர் தென்னந்தோப்புகளில் பெரும்பாலானவை அங்கிருந்து திருமணமாகிச் சென்ற பெண்களின் வழியினருக்குச் சொந்தமாக இருந்தாலும் தேங்காய் வெட்டுதல், விற்பனைக்கு வாணிகனுக்குப் போடுதல், வேலி சீர் செய்தல், உரம் வாங்கி மரத்துக்குக் கொண்டுசேர்த்தல், தென்னை மூடுகளில் களைகளையும் சல்லி வேர்களையும் களைதல் போன்ற தோப்புப் பராமரிப்பு பெரும்பாலும் அவரிடமே இருந்தது. இவற்றுக்குரிய கணக்குகளைப் பராமரித்து எஞ்சிய பணத்தை உரியவரிடம் உரிய காலத்தில் வழங்கிவிடுவார். அதனால் அவரிடம் எப்போதும் பணம் கைவசம் இருக்கும். ஊர் மக்களில் கைவேலை செய்து பிழைக்கும் பெரும்பாலான ஏழை மக்கள், அதாவது அன்றாடங்காய்ச்சிகள் எனப்பட்டும் அற்றைப் பிழைப்புக்காரர்கள்(அத்தப்பொழப்பு பொழைக்குறவர்கள்) தங்களுக்கு வேலே இல்லை என்று முறையிட்டால் உடனே ஏதாவதொரு தென்னந்தோப்பில் ஏதாவதொரு வேலைக்கு அவர்களை அமர்த்தி சம்பளம் கொடுத்துவிடுவார். அவர் நடமாடித் திரிந்த காலத்தில் அவ் வூரில் எவரும் வேலையில்லாமல் வாடியதில்லை. கடன் கேட்போருக்கு குறிப்பேட்டிலிருந்து ஒரு தாளைக் கிழித்து அதில் ஒரு வாக்குத்தத்தப் பத்திரம் எழுதி எப்போதும் கைவசம் இருக்கும் வருவாய் வில்லையை ஒட்டி கையெழுத்து வாங்கி பணம் கொடுப்பார். எனக்குப் பணம் தேவைப்பட்ட போது அப்படித்தான் தந்தார். என்னிடமும் அப்படித்தான் கடன் வாங்கியிருக்கிறார். இப்படித்தான், சற்று தொலைவிலிருந்த சாலையிலிருந்து குடியிருக்கும் பகுதிகளுக்குப் போவதற்கென்று இருந்த ஒரு ஒடுக்கமான இடுவழி(இடுவை என்பர். பொதுவாக அடுத்தடுத்து இருக்கும் இரு நிலங்களின் எல்லையைச் சற்று விட்டுக்கொடுத்து உருவாக்கப்பட்ட ஒரு பொதுப்பாதை)யை அகலப்படுத்த ஊர்ப்பணத்தைச் செலவிட்டுக் கணக்கெழுதியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதான் அவரது தம்பி அண்ணனின் பிணத்தை எடுக்கவிடாமல் தடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒதுக்குப்புறமான அவரது வீட்டில் அக்கம்பக்கம் வரும் பேருந்துகளின் கால அட்டவணை போன்றவை பராமரிக்கப்பட்டன. அக்கம்பக்கமாக இல்லாமல் விளைக்கு ஒன்றாக வீடுகள் இருக்கும் அந்த வட்டாரத்தில் அவர் உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தலால் இராசபாளையம் நாய் ஒன்றை வளர்த்தார். அயலவர் யாராவது வந்தால் அது நேரே கழுத்தைக் குறிவைத்துத்தான் பாயும். பகலில் கட்டிப் போட்டிருந்தாலும் அந்தப் பாதையில் வருவோர் அச்சத்துடன்தான் அவ் வீட்டைக் கடந்து செல்வர். இரவில் நாயை அவிழ்த்து விட்டுவிடுவார். பிற்காலங்களில் இரவிலும் கட்டிப்போட்டுத்தான் வைத்திருந்தார். இருந்தாலும் யாரும் அந்தப் பக்கம் இரவில் வருவதில்லை. அவரது வீடும் அது இருந்த நிலமும் அவருக்குச் சொந்தமானவையல்ல. தேங்காய்ப் போட்டுவைக்கும் கொட்டகையாய் இருந்ததைச் சீரமைத்துத்தான் அவர் குடியிருந்தார். இளமையில் பட்ட கடும் துன்பங்களின் விளைவுகளில் இதுவும் ஒன்று. அதனால் அவரை தேங்காய்ப் புரை நாடான் என்றே குறிப்பிடுவர்.  

இவர் மேற்பார்வையில் இருந்த தோப்புகளில் பெரியது அளத்தங்கரைப் பழைய வீட்டு நாடான் என்பவருடையது. அவருக்குப் பிள்ளைகள் இல்லை. அளத்தங்கரை மச்சான் என்று இவர் குறிப்பிடும் அவர் இட்ட வேலைகளைத் தட்டாமல் செய்தார். தன் பிள்ளைகளுக்கு அவரது சொத்துகளிலிருந்து ஏதாவது செய்வார் என்று மிக நம்பியிருந்தார். ஆனால் அந்தப் பெரியவர் முதுமையெய்தி படுக்கையிலிருந்த காலத்தில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த அவரது சொக்காரர்கள் அனைத்துச் சொத்துகளையும் தங்கள் பெயருக்கு எழுதிவாங்கிக் கொண்டனர். இது என் மாமனாருக்குப் பெரும் உளவியல் தாக்குதலை ஏற்படுத்தியிருக்கும். சிறிது நாட்களிலேயே பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாய் இருந்து இறந்தார். சொந்தத் தம்பியால் எடுக்கத் தடை செய்யப்பட்ட அவரது பிணத்தை அவ் வூர் ஏழை ஆடவர்கள் ஒருவர் தவறாமல் முத்தமிட்டு அழுது செலுத்திய இறுதி வணக்கம் யாருக்கும் கிடைக்காத ஒன்று.

என் மூத்த சகலபாடியின் மூத்த மகளின் கணவரின் பிள்ளையில்லா உறவினர் ஒருவர் தன் சொத்துகளை அவர் பெயருக்கு எழுதிவைத்துள்ளார். அவள் அச் சொத்திலிருந்த ஒரு வீட்டை உறவினர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருக்கிறாள். கணவரின் சில இயலாமைகளால் தோப்புகளில் தேங்காய் வெட்டிச் சந்தைக்கு விடுக்கும் பொறுப்பையும் அவ் வுறவினரிடம் விட்டிருக்கிறாள். இப்போது அந்த ஆள் கணவருக்கு சொத்தை எழுதி வைத்தவருக்கு தான் சொக்காரன் எனவே அவர் இறந்துவிட்டதால் அச் சொத்துகளும் வீடும் தனக்கே என்று வீம்பு பிடிக்கிறார், தேங்காயைத் தானே எடுத்துக்கொள்கிறார். வழக்குமன்றத்துக்குப் போனால் காலாகாலத்துக்கும் இழுத்தடிக்குமே என்று அப்பெண்ணும் அவள் மகன்களும் திகைத்து நிற்கின்றனர்.

 எங்கள் ஊரான கீரிவிளையை அடுத்துள்ள அத்திக்கடையில் அத்திக்கடை நாடான் குடும்பம் என்று ஒன்று இருந்தாலும் அவர்கள் இந்த ஊருக்கு உரியவர்களாகத் தோன்றவில்லை, ஏனென்றால் பிற ஊர்களைப் போல் இங்கு அம்மன்கோயிலும் இல்லை ஊர்க்கூட்டமும் நடந்ததில்லை. இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி நாடான்களுடன் தொடர்புள்ளவர்கள் என்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்தத் தொடர்புக்கான எந்த போக்குவரத்தும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த ஊரிலிருக்கும் வேறு சில பழம் குடும்பங்களும் வேறு ஊர்களில் சொக்காரச் சண்டைகளில் ஓடிவந்தவர்களாகத் தோன்றுகின்றன. நான் சிறுவனாயிருக்கும் போது பழவிளை நாடான் என்பவர் பெரிய மீசையுடன் தாழ் பாய்ச்சிய பட்டு வேட்டியும் இடையில் வார்பட்டையும்(பெல்ட்) துப்பட்டா எனும் மேல் துண்டுமாக இடையில் தொங்கும் பெரிய ஓர் அரிவாளுமாகச் சாலையில் வருவார். பின்னால் அரிவாள் தாங்கிய இருவர் காவலுக்கு வருவர். இவர்களுடன் நாய்கள் வந்தனவா என்பது நினைவில்லை. இவரும் சொக்காரச் சண்டையில் எச்சரிக்கையாக இந்தத் தற்காப்புகளுடன் வாழ்ந்ததாகக் கூறுவர். இவர் அத்திக்கடை நாடானுடன் அங்கு புளியமரத்தடியில் போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்து பேசிவிட்டுச் செல்வார்.

நான் சிறுவனாக இருந்த போது என் தந்தையும் அவர் அகவைக்கு அடுத்தாற்போலுள்ள இராமகிருட்டினன் என்பவரும் பள்ளி, கல்லூரிகளின் மாணவர்கள் சிலரும் சேர்ந்து சவகர் கிராம அபிவிருத்தி சங்கம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கியிருந்தனர். அப்போது இந்திய விடுதலை தொடர்பான இயக்கங்களுக்கு திருவிதாங்கூர் அரசு தடை விதித்திருந்ததால் இதன் கூட்டங்கள் மறைவாகவே நடைபெற்றன. எனக்கு 6 அல்லது 7 அகவை இருந்த போது இருட்டி முகம் தெரியாத ஒரு பொழுதில் கீரிவிளைக்கும் தெற்குக் கீரிவிளைக்கும் இடையில் இருந்த அத்திக்கடை நாடான் விளையில் ஓர் உடை மரத்தின்(பெண்கள் காதில் அணியும் குணுக்கு போன்று சுருண்ட காய் காய்க்கும் உள்நாட்டு முள் மரம். இதனை நாட்டு உடை என்றும் கருவேல மரத்தைச் சீமை உடை என்றும் குறிப்பிடுவோம், இன்றைய வேலிகாத்தான் அங்கு இல்லை) அடியில் நடைபெற்ற கூட்டத்துக்கு என்னைத் தந்தை அழைத்துச் சென்றுள்ளார்.

நாடு ‘விடுதலை’ பெற்ற பின் சங்கம் வெளிப்படையாகச் செயற்பட்டது. அந்தச் சுற்றுவட்டாரத்திலுள்ள மக்களிடமிருந்து பணம் தண்டி அத்திக்கடை நாடார் எழுதிக் கொடுத்த[10] சாலையோரமுள்ள நிலத்தில் ஒரு கட்டடம் கட்டப்பட்டது. என் தந்தையார் சேர்த்து வைத்திருந்த நூல்களின் ஒரு பகுதியைக் கொடுத்து ஒரு நூலகம் அமைந்தது. நாளிதழ்கள், கிழமை, மாத இதழ்களுக்கு வசதியுள்ள சிலர் கட்டணம் செலுத்த ஒரு முழுமையான படிப்பகம் செயற்பட்டது. அத்திக்கடையைச் சேர்ந்த மந்திரி சிதம்பரநாதன் நாடாருக்குச் சிற்றப்பனார் மகனான சின்னச்சிதம்பரம் என்று அறியப்படும் இன்னொரு சிதம்பரநாதன் இந்தப் பொறுப்புகளைக் கவனித்து வந்தார்.

வேலியிட்ட நிலங்களில் சென்று மேயும் ஆடு மாடுகளைப் பிடித்துவந்தால் அதைப் பாதுகாத்து வைக்கோல் போட்டு உரிமையாளர் வரும் போது அவரிடம் இரண்டு உரூபா தண்டி ஓர் உரூபாவை மாட்டைப் பிடித்துவந்தவர்க்கும் மீதி ஓர் உரூபாவை வைக்கோலுக்கும் பாதுகாவலுக்காகவும் எடுத்துக்கொள்ளும் பவுண்டு எனும் கால்நடைக் கொட்டில் முறை சங்கத்தில் உருவாக்கப்பட்டது. முன்பு இது பகுதிக் கச்சேரி என்று திருவிதாங்கூரிலும் நாட்டாண்மை அல்லது மணியம் என்று சென்னை மாகாணத்திலும் கூறப்படும் ஊர் ஆள்வினை அமைப்பினரால் பேணப்பபட்டு கைவிடப்பட்ட முறை. இதன் விளைவாக குமரி மாவட்டத்தின் இந்தப் பகுதிகளில் கட்டற்ற மேய்ச்சல் முடிவுக்கு வந்தது. தேங்காய்த் திருட்டுகளையும் மூதலித்து தண்டம் விதிக்கும் நடைமுறையும் சங்கத்தால் கைக்கொள்ளப்பட்டது. இதன் வளர்ச்சி நிலையாக மாவட்டத்தில் ஏறக்குறைய 30 பூமி பாதுகாப்பு சங்கங்கள் உருவாகி அவற்றில் மிகப் பெரும்பாலானவை இன்றும் இயங்குகின்றன.

வழக்கு உசாவல்களும் நடைபெற்றன. அவற்றில் தலைமைப் பொறுப்பில் இருந்த பணக்காரர்கள் வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்த்துத் தீர்ப்பளிக்கும் ஓராங்கிய ஞாயத்தைக் கடைப்பிடித்ததால் பொருளாளர் பொறுப்பிலிருந்த என் தந்தை முரண்பட்டு பதவி விலகித் தன் கையிலிருந்த சங்கப் பணத்தை ஒரு பொட்டலமாகக் கட்டி எங்கள் வீட்டின் முன்னறையில் ஒரு கூரைக் கட்டையில் கட்டித் தொங்கவிட்டார். பல ஆண்டுகள் அப்படியே கிடந்த பண்த்தை எங்கள் உறவினர் ஒருவர் ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் அவிழ்த்துச் சென்றுவிட்டார். சங்கத்தை அதற்குப் பின்தான் பதிவு செய்தனர் போலும். சங்கப் பதிவேடுகளில் என் தந்தையார் பெயர் எங்கும் இல்லை.

சங்க நூலகத்துக்கு 1950களிலேயே ஆண்டுக்கு 150 உரூவாக்களைத் திருவிதாங்கூர் அரசு மானியமாக வழங்கியது. இன்றைய மதிப்பில் இது சில இலக்கங்களுக்கு இணையாகும். நான் பள்ளியில் படிக்கும் போது பள்ளி விட்டு வந்ததும் நூலகம் சென்று தொடர்கதைகளையும் கலைக்கதிர், சோவியத் நாடு, அமெரிக்கன் ரிப்போர்ட்டர் போன்றவற்றையும் செய்தி இதழ்களையும் படித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். நூலகத்திலிருந்து நூல்களையும் எடுத்துப் படிப்பேன். நூலகத்தில் நூலெடுக்க வேண்டுமானால் மாதம் ¼ உரூபா கட்டணம் உண்டு. தந்தையார் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் என்னால் கட்டணம் செலுத்த முடியாது, ஆனால் புத்தகம் வேண்டுமென்று திரு.சின்னச்சிதம்பரம் அவர்களைக் கேட்டேன். அவர் தந்தையார் சங்கத்துக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளைச் சுட்டிக்காட்டி சங்கப் பொறுப்பாளர்களின் இசைவு பெற்று விதிவிலக்காக எனக்கு மட்டும் கட்டணமின்றி நூல்கள் வழங்கினார். அவருக்கு என் மீது மிகுந்த அன்பு உண்டு.

அந்தக் காலகட்டத்தில் நாடார்கள் முகம்மதியத் தெருக்களில் செருப்பணிந்து நடமாட முடியாத நிலையிருந்தது. ஆண்டுக்கொருமுறை பள்ளிவாசலில் நடைபெறும் சந்தனக் கூடு விழாவுக்கு எல்லோரும் போவார்கள். அவர்கள் பொதுவாக அகவை வரம்பின்றி நாடார்களை ஒருமையில் அழைப்பதுண்டு. இத்தகைய பின்னணியில் எனக்கு ஏறக்குறைய 8 அகவை இருக்கும் போது அத்திக்கடையில் வெற்றிலை விற்றுக்கொண்டிருந்த தந்தையாரிடம் கிட்டத்தட்ட என் அகவையுள்ள ஒரு முகம்மதியச் சிறுமி வெற்றிலை வாங்கிய போது எல்லோரையும் போல கூடுதலாக ஒன்று கேட்பதற்கு “கூட ஒன்று வை” என்று ஒருமையில் கூறினாள். தொடர்ந்த என் தந்தையின் நடத்தை என்னை அதிர வைத்தது. வசவுச் சொல் ஒன்றைக் கூறி அவளை அடிக்கக் கையை அவர் ஓங்க அச் சிறுமி அலறிக்கொண்டு ஓட இவர் இருந்த இடத்திலிருந்து எழுந்து விரட்ட அவள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அச் சிறுமி ஓடியது இப்போதும் என் மனக்கண் முன் நிற்கிறது. நாடார்கள் மீது பிறர் அன்று காட்டிய இழிவுணர்ச்சிக்கு எதிராக என் தந்தைக்கு இருந்த வெறுப்புக்கு இது ஒரு சான்று. இந்தப் பின்னணியில் சவகர் கிராம அபிவிருத்தி சங்கத்தில் அவரது தோழர்களாக இருந்த இளைஞர்களில் நாடார்கள் நீங்கலாக முகம்மதியர்கள், நாவிதர் போன்றோரும் இருந்தனர். அங்கிருந்த முகம்மதியர்களின், குறிப்பாக சங்க உறுப்பினர்களின் வீடுகளில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் சாதி, சமய வேறுபாடின்றி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தந்தையார் திராவிட இயக்கச் செயற்பாட்டாளராக இருந்ததால் இந்த இளைஞர்களில் பலர் திராவிட இயக்கச் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டிருந்தனர். அவர்களில் மேலே நான் குறிப்பிட்டிருந்த சின்னச்சிதம்பரம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். சங்கத்துக்குக்கு வெளியே அந்த வட்டாரத்தில் திராவிட இயக்க முன்னோடியாகவும் என் தந்தை இருந்தார். திராவிடர் கழகம் உடைந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவான பின் அதன் உள்ளுர்க் கிளையில் என் தந்தை பொறுப்பாளர் பதவிக்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமைக் கழகத்துக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் அந் நேரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மங்காவிளை நாடான் குடும்பத்தைச் சேர்ந்த, பின்னர் தன் பெயரை எம்.சி.பாலன் என்று மாற்றிக்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ச.ம.உ.வாக வந்த பாலையாவும் புதுக்குடியிருப்பு நாடான் குடும்பத்தைச் சேர்ந்த கண்ணப்பனும் தங்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மூலம் தலைமைக் கழகத்தோடிருந்த தொடர்புகளை வைத்து அப் பதவிகளில் தம் பெயல்களை நுழைத்துக்கொண்டனர். தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் நடத்திய போர்வாள் என்ற ஏட்டின் சார்பில் ஆண்டுதோறும் ஒரு சேப்பு நாட்குறிப்பு(Pocket Diary) வெளிவரும். நாளுக்கொரு பக்கத்துடன் தடிமனாக இருக்கும். என் தந்தை தவறாமல் அதை வாங்குவார். தன் அன்றாட வாணிக வரவு – செலவுகளை அதில்தான் பதிவார். அந் நாட்குறிப்பில் தி.மு.க. பற்றிய முகாமையான செய்திகளும் அந்த ஆண்டில் தலைமைக் கழகம் தொடங்கி ஊர்க்கிளைகள் வரை உள்ள பொறுப்பாளர்களின் பெயர்களும் இடம்பெற்றிருக்கும். அந்த ஆண்டு நாட்குறிப்பைப் பார்த்த பின்தான் பாலையாவும் கண்ணப்பனும் செய்திருந்த திருவிளையாடல் தந்தைக்குத் தெரிய வந்தது. அதை எனக்குக் கூறி வருந்தினார். கழகத்தின் கொள்கைகளை, குறிப்பாக இறைமறுப்புக் கொள்கைகளை பொது இடங்களில் பலருக்கும் முன் வாதாடி குமுகத்தின் செல்வாக்கு மிக்கவர்களின், குறிப்பாக ஊர் நாடான்களின் பகைமையைத் தேடிக்கொண்ட என் தந்தையின் மனதில் திராவிட இயக்கத்தின் மீதிருந்த நம்பிக்கை ஆட்டங்கண்டுவிட்டது. ஆனால் தந்தையின் நெஞ்சில் பட்ட வடு பற்றிய பட்டறிவு எனக்கு இல்லாததால் என்னில் அது தொடர்ந்தது. அதே நேரத்தில் அந்த இயக்கம் விட்ட குறிக்கோள்களின் விளைவுகளை இன்று தமிழகம் பட்டுவரும் சூழலில் அக் குறிக்கோள்களை இலக்கு நோக்கி இட்டுச் செல்லும் திசையில் நான் பணியாற்றுவது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது.

என் பாட்டனார் என் தந்தையின் பள்ளிப் படிப்பைத் தடை செய்தாலும் இளமையில் வீசிய புயல்கள் ஓய்ந்து இயல்பான ஒரு நிலைக்கு வாழ்க்கை வந்த போது அவர் நூல்களை வாங்கிப் படித்து தன் அறிவை வளர்த்துக்கொண்டார். அவர் வாழ்ந்த காலத்தில் அந்த வட்டாரத்தில் உள்ள சிறந்த படிப்பாளிகளில் அவர் ஒருவர். அவர் தொகுத்து வைத்திருந்த நூல்கள்தாம் சவகர் கிராம அபிவிருத்தி சங்க நூலகத்தின் தொடக்கத்துக்குப் பயன்பட்டன என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதன் பின்னரும் அவர் நூல்களை வாங்கிக்கொண்டுதான் இருந்தார்.

என் தந்தை இசை ஆர்வம் மிக்கவர். வில்லுப்பாட்டுக் குழுவில் இருந்திருக்கிறார், நாகர்கோயில் மீனாட்சிபுரம் பகுதியில் வாழ்ந்த அருணாசலம் அண்ணாவி என்ற ஆசிரியரிடம் முறைப்படி இசை கற்றிருந்தார். எங்கள் வீட்டில் ஆர்மோனியப் பெட்டியும் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் எங்கள் வட்டாரத்தில் நிகழ்ந்த குமுகியல் – அரசியல் நிகழ்ச்சிகளில் நடைபெற்ற பல நாடகங்களில் பாடி நடித்திருக்கிறார். அப்போது வெளிவந்த ஏராளமான திரைப்படங்களின் பாட்டுப் புத்தகங்கள் எங்கள் வீட்டில் இருந்தன. அவர் பார்த்த படங்களுக்குரியவை அவை. அவற்றிலிருந்து அக் காலத் திரைப்படங்களைப் பற்றிய ஒரு தோராயமான வடிவத்தை என்னால் பெற முடிந்தது.

படிப்பு ஆர்வமுள்ள பணக்காரர்கள் பலர் அவரது நண்பர்கள். மணிகட்டிப் பொட்டல் நாடான் அத்தகைய நண்பர்களில் ஒருவர். இரவில் கடைகளில் வெற்றிலை போட்ட பணம் தண்டல் செய்து திரும்பும் வழியில் பெரும்பாலான நாட்களில் அவருடன் பேசிவிட்டுத்தான் நேரம் சென்று வீட்டுக்குத் திரும்புவார்.

உடல் நலங்குன்றி சாமிதோப்பு கோயிலில் இருந்த போது அங்கு மூத்த கோயில் பணிவிடையாளராகவும் கோயில் உரிமைக் குடும்ப மூத்தவராகவும் இருந்தவரும் இன்றைய பாலபிரசாபதியின் பெரிய தந்தையுமாகிய திரு.கிருட்ணநாமாமணி நாடார் என் தந்தையின் சம அகவையினர். அந்தக் கால இடைநிலை(F.A.)ப் பட்டம் பெற்றவர். கோயில் பணிவிடை நேரம், ஓய்வு நேரம் தவிர்த்த எஞ்சிய நேரமெல்லாம் இருவரும் சேர்ந்தே இருப்பர். என் தந்தை இறந்த போது இறுதிக் கடன்களையும் என் திருமணத்தையும் அவரே நடத்தி வைத்தார்.

நான் தொடக்கக் கல்வியை எங்கள் ஊருக்குப் பக்கத்திலிருக்கும் கொய்யன்விளை என்ற ஊரிலிருந்த தனியார் பள்ளியான கொய்யன்விளைப் பள்ளியில்தான் படித்தேன். பள்ளிக்கூடத்துப் பெரியநாடார் என்பவர் அதை நடத்திவந்தார். நல்ல தரமான பள்ளி.(பின்னர் அப் பள்ளியை, சி.பி.இராமசாமியின் திட்டப்படி என்று நினைக்கிறேன், அரசிடம் ஒப்படைத்துவிட்டனர். அது அங்கிருந்து அண்மையிலிருக்கும் சுண்டபற்றிவிளையில் மேனிலைப் பள்ளியில் விரிவாக்கம் செய்ய முடியாத ஒரு முடுக்குக்குள் ஒடுங்கிக் கிடக்கிறது.) தொடக்கப்பள்ளியான அதில் படிப்பை முடித்த பின் என்னை நாகர்கோயிலில் இருக்கும் சேது இலட்சுமி பாய்(எசு.எல்.பி.) உயர்நிலைப் பள்ளியில் கொண்டு சேர்த்தார் தந்தை. அந்தப் பகுதி நாடார்களில் எங்கள் ஊர் நாடான் குடும்பப் பிள்ளைகள்தான் அந்தப் பள்ளியில் படித்தார்கள். அன்றும் இன்றும் அது ஒரு தரமான அரசுப் பள்ளியாக விளங்குகிறது.  

என் தந்தை வாழ்ந்த காலம் இந்திய விடுதலைப் போராட்டமும் திராவிட இயக்கமும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் ஊர்ப்புறங்களில் வீச்சைப் பெற்ற நேரம். முற்போக்கான மூத்தோர் முழுமனதோடு தம்மை அழித்துக்கொண்டு வழிகாட்ட இளைஞர்கள் குறிப்பாக, மாணவர்கள் ஆர்வத்தோடு இவ் விரண்டு இயக்கங்களிலும் ஈடுபாடு காட்டினர். தலைவர்கள் காட்டிய குறிக்கோள்களில் வஞ்சகம் மிக்க அவற்றின் தலைவர்களைப் போலன்றி உண்மையான ஈடுபாடுகொண்டிருந்தனர். ஆனால் இயக்கங்கள் மக்களிடையில் செல்வாக்குப் பெற்ற போது இதுவரை அவற்றைக் கண்டுகொள்ளாமலோ எதிர்நிலை எடுத்தோ இருந்த மேட்டுக்குடியினர் எளியவர்களை அப்புறப்படுத்தி புதிய இயக்கங்கள் தந்த பலவகை வாய்ப்புகளைத் தங்களுக்கு அறுவடை செய்துகொண்டனர் அல்லது எளியவர்களில் சிலர் தங்களைப் புதிய மேட்டுக்குடியினர் ஆக்கிக் கொண்டனர். தலைவர்களை நம்பிய உள்ளூர் பெரும் உள்ளங்கள் தலைவர்களின் போலியான முழக்கங்களை நம்பி உண்மையான சீர்திருத்த முயற்சிகளில் இறங்கித் தம்மைத் தேய்த்துக்கொண்டனர். ஆனால் பயன்பெறத்தொடங்கியிருந்த அவர்களது முயற்சிகளை தலைமைகளின் போலிமைகளும் உள்ளூர் போலிகளும் அழித்துவிட்டனர். ஆனால் இவை அனைத்தையும் மீறி இன்றும் நிலைத்திருப்பது மக்களின் பெயர்களில் இருந்த சாதிப் பட்டங்கின் அகற்றமே. பேரவைக் கட்சி, அதன் போட்டியாளராகக் களத்தில் இறங்கிய திராவிட இயக்கம் ஆகிய இரண்டுமே இதில் பங்கேற்றுள்ளன. பேரவைக் கட்சியின் பல தலைவர்கள் இதை ஊக்கவில்லையாயினும் சிலர் எதிர்த் திசையில் செயற்பட்டாலும் மக்கள் அவற்றை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நிகழ்ந்திராத இறும்பூது இது. இதற்காக, இது ஒன்றுக்காக மட்டுமே இன்றைய தமிழக மக்கள் பெருமைப்பட்டுக்கொள்ள முடியும்.

நான் குறிப்பிட்ட இந்தக் கால கட்டத்தில் தமிழகம் முழுவதும், ஏன் இந்தியா முழுவதுமே அனைத்து வட்டாரங்களிலும் சாதிகளுக்கு இடையிலான பூசல்களும் சாதிகளினுள் ஊர்த் தலைமைகளுக்கும் அடித்தள மக்களுக்குமான மோதல்களும் நடந்து ஒரு இடைநிலையிலான இன்னொரு சமன்பாடு உருவாகும் சூழல் நிலவியது. அந்தக் காலத்தில் என்னைப் போன்ற பருவத்திலிருந்த முற்போக்குப் பின்னணி அல்லது வளர்ந்த போது முற்போக்குக் கருத்துகளைக் கொண்டோர் நினைத்தால் ஒவ்வொரு சாதியினுள்ளும் தாங்கள் மூவேந்தர் மரபினர், ஆண்ட மரபினர் என்று போலி வரலாறு எழுதும் பிற்பொக்குக் கும்பல்களின் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பது என் உறுதியான நம்பிக்கை.

என் வாழ்க்கைச் சூழல் நெடுகிலும் சாதி மீறிய அன்பைத் தாராளமாக நுகர்ந்துள்ளேன். நாகர்கோயில் சேது லட்சுமி பாய் பள்ளியில் திராவிட இயக்கப் பின்னணி இல்லாத உடன் மாணவர்களும் சில ஆசிரியர்கள் போலன்றி என்னுடன் அன்புடன்தான் பழகினர். பல்தொழில்நுட்பப் பயிலகத்தில் முதல்வர் கன்னடப் பார்ப்பனர். நான் புதிதாகத் தோன்றிய அந்த நிறுவன ஆசிரியர்கள் சிலர் வகுப்புகளில் பொறுப்பின்றி நடப்பதைத் தட்டிக்கேட்டு அவர்களை மாற்றியிருக்கிறார்கள். பாடம் நடத்தத் தெரியவில்லை என்று சில ஆசிரியர்களை நடு வகுப்பிலேயே குற்றம் சாட்டியுள்ளேன். அதனாலோ என்னவோ முதல்வர் என் மீது மிக மென்மையான போக்கை மேற்கொள்வார். என் உடன் மாணவர்களில் அடைக்கலதுரை என்று ஒருவர் செயங்கொண்டத்தைச் சேர்ந்த கிறித்துவ ரெட்டியார். குற்றம் செய்பவர் அல்லது திமிராகப் பேசுவோரை உடனடியாக அடித்துவிடுவார். நான் ஆவடியில் தங்கியிருந்த வீட்டில் தொடர விரும்பாமல் அவரோடு தங்க விரும்புவதாகத் தெரிவித்த போது அவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். அன்றிலிருந்து ஒரு வலிமையான நட்பு உருவானது. பெரம்பூரில் நாங்கள் நான்கு பேர் ஒரு சிறு அறையில் தங்கினோம் பிறர் இருவரில் ஒருவர் கடலூல் மாவட்ட உடையார், இன்னொருவர் சேலம் மாவட்ட சௌராட்டிரர். அனைவரிலும் இளையவன் என்பதால் என்னைச் செல்லப்பிள்ளை போல் நடத்தினர். சனிக்கிழமை ½ நாளும் ஞாயிற்றுக் கிழமையும் விடுமுறை என்பதால் மூவரும் சென்னையில் உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டுக்கும் போய்விடுவர் அல்லது திரைப்படம், கடற்கரை என்று கிளம்புவர். என் ஏழ்மையை அறிந்தவர்களாதலால் நீ வரவில்லையா என்று என்னைக் கேட்டதில்லை. அம் மூவரில் அடைக்கலதுரையும் நானும் மிக நெருக்கம். அடிதடி குற்றச்சாட்டுகளால் அவரை முதல்வருக்குப் பிடிக்காது. ஆனால் நாங்கள் இருவரும் கைகோத்துக்கொண்டு முதல்வர் காணுமாறு அலைவோம்.

செம்பனார்கோயிலில் எனக்கு உதவிய அரங்கராசன் அவர்களும் ரெட்டியார்தான். தில்லைவிளாகம் பக்கத்தில் அவரது ஊர். அந்த மாடியில் இருந்த மாணவர்கள் சிலரும் கூட அவருக்கு உறவினர்கள். அவர் என்னை உடன்பிறந்த தம்பி போலவே நடத்தினார். வயிற்றுக்கோளாற்றால் உணவுண்ணத் தயங்கும் எனக்கு வாயில் ஊட்டுவார். மாடியிலிருந்தவர்களில் ரெட்டியார், சிவனிய முதலியார், சீரங்கத்து ஐயங்கார் என்ற வேறுபாடு இன்றி தஞ்சை மாவட்டத்தில் புலால் உணவுச் சமையலில் புகழ்பெற்ற மராட்டியர்களான ராவ்சி ஒருவரின் கடையிலிருந்து வரவழைக்கும் சாப்பாட்டில் இருக்கும் மீனுக்காக அடித்துக்கொண்ட நிகழ்ச்சி இன்றும் நினைத்து இன்புறத்தக்கதாகும். அங்கு தங்கியிருந்த ரெட்டியார் மாணவர் ஒருவர் கூறிய அவருடைய வரலாறு உருக்கமானது. கைக்குழந்தையாக அவர் இருந்த போது அவரது தாய் தூக்கத்திலேயே இறந்து போய்விட்டார். இதை உணர்ந்துகொள்ள முடியாத குழந்தை இறந்த தாயின் மார்பைச் சப்பிக்கொண்டிருந்தாராம். அவர்கள் வீட்டில் பண்ணையாளாக இருந்த, கைக்குழந்தையைச் சாகக் கொடுத்த பள்ளர் குல பெண்தான் அவருக்குப் பால் கொடுத்து வளர்த்திருக்கிறார். அந்தப் பெண்ணை அம்மா என்றுதான் விளிப்பதாக அவர் கூறினார். என் மீது பரிவும் அன்பும் காட்டியவர்களில் ரெட்டியார்கள் மிகுதி என்று கூறலாம். போதுப்பபணித்துறை உதவி செயற்பொறுயாளர் ஒருவர், நண்பர் வெள்உவன் வைகை குமாரசாமி, தமிழினி வசந்தகுமார் என்று பலர் அதில் வருவார்கள்.

1961 - 62இல் திருத்துறைப்பாண்டியில் இருக்கும் போது வயிற்றுப்புண்ணால் ஒன்றிரண்டு மாதங்களுக்கு மூன்று வேளையும் தயிர் விட்டுத்தான் சாப்பிட வேண்டி வந்தது. காலையில் அப்போது தரத்துக்குப் பெயர் பெற்றதாகிய தொடர்வண்டி நிலைய உணவகத்தில் இட்டிலியைத் தயிரிட்டு உண்பேன். மதியத்துக்கு ஊருக்குள் இருந்த, நான் பதிவாக சாப்பிடும் நடராச ஐயர், என்று நினைவு, கடை முதலாளியிடம் தயிருக்குக் கேட்டேன். கடையில் தயிர் பரிமாறுவதில்லை, எனவே எனக்கு மட்டும் தயிர் கடையில் பரிமாற முடியாது, உணவு விடுதியை ஒட்டி இருக்கும் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கள் என்றார். அவ்வாறே அவரது துணைவியார் அல்லது வயதுக்கு வந்த மகள் பரிமாற உண்டேன். செம்பனார் கோயிலில் நான் தங்கியிருந்த கட்டடத்துக்கு எதிரில் சிறிய ஓர் ஐயர் கடை இருந்தது. ஏழை, நாலைந்து பெண்கள் வேறு. அவருக்கு உச்சிக்கு மேல் சினம். என்னோடு வேலை பார்த்த ஐயங்கார் இளைஞன் சாப்பாட்டைப் பற்றி ஏதோ கூறிவிட்டான் என்று அவன் என் கடைக்கு வரக்கூடாது என்று கூறிவிட்டார். நான் எவ்வளவு எடுத்துக்கூறியும் அவர் இறங்கி வரவில்லை. எனவே நானும் அங்கு செல்வதில்லை. ஆனால் பலகாரங்களும் காப்பியும் எங்கள் ஆட்கள் என் கணக்கில் வாங்கிவருவர். அப்போதெல்லாம் என்னைப் புகழ்ந்து பேசுவார் என்று கூறுவார்கள். அவர் கடை உணவு வகைகள் நன்றாகத்தான் இருக்கும். நாங்கள் அந்த ஊரை விட்டுப் புறப்படும் போது அவரிடம் விடை பெறச் சென்றேன். அடுத்த நாள் எங்களுக்கு விருந்து வைப்பதாகக் கூறினார். அதைப் போலவே விருந்து முடிந்தது. மாலையில் சிற்றுண்டிக்குக் கட்டாயம் வர வேண்டுமென்றார். அவர் வீட்டுப் பிள்ளைகள் அம்மை நோய் கண்டிருந்த நிலையில் அவர்களைத் துன்புறுத்த வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் பிடிவாதமாக நின்று எண்ணெய்ப் பலகாரங்கள் செய்து எங்களுக்கு ஊட்டியதை நினைத்தால் இன்றும் மனது உருகுகிறது. அதே செம்பனார்கோயிலில் பணியாற்றிய போது எங்களுக்கு உதவி செயற்பொறியாளராக இருந்தவர் தென்காசியைச் சேர்ந்த கே.எம்.எசு.அப்துல்காதர் அவர்கள். என் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். செம்பனார்கோயிலில் பணியாற்றிய எங்கள் நால்வரின் பணிகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டார். என் தந்தை இறந்துவிட்ட சூழலில் தாயாரின் பக்கத்தில் இருந்தால் அவருக்கு ஆறுதலாக இருக்கலாம் என்று நாகர்கோவிலுக்கு மாற்றம் வேண்டி தலைமைப் பொறியாளருக்கு வேண்டுகை வைத்திருந்தேன். அதை ஏற்றுக்கொண்டு பிறப்பித்த மாற்றுதல் ஆணையை தஞ்சையிலிருந்த எங்கள் கோட்ட அலுவகத்தில் நிறுத்தி வைத்திருந்தார்கள். வழக்கமான அலுவல்களுக்காகக் கோட்ட அலுவலகம் சென்ற உதவி செயற்பொறியாளர் அவர்கள் மாற்றுதல் ஆணையைப் பற்றி அறிந்து அதை எனக்கு விடுக்க வேண்டியதுதானே என்று கேட்க, அவர் போய்விட்டால் அவர் பார்க்கும் வேலைகள் என்னாகும் என்று கூறியிருக்கின்றனர். “பெரிய நாடார் இறந்து போனால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டு அவர்களிடம் சண்டையிட்டு ஆணையைப் பெற்று “நல்வாழ்த்துகளுடன் விடுக்கப்படுகிறது” என்ற வழக்கத்தை மீறிய பின்குறிப்புடன் எனக்குத் தந்து வழியனுப்பினார்.

 கோட்ட அலுவலகத்தில் உள்ளவர்கள் கூறியதற்குக் காரணம் உண்டு. மறுவகைப்பாட்டுக் கோட்டத்தின் பணி பொதுவாக பொதுப்பணித்துறையில் நடைபெறும் பணிகளிலிருந்து மாறுபட்டது. அதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள், அதற்குத் தேவைப்படும் படிவங்கள் ஆகியவற்றை நான்தான் வடிவமைத்துக் கொடுத்தேன். கீழ்வேளூர் முன்னோடிப் பணியின் போதும் இற்றைப்படுத்தல் கோட்டத்திலும் என் செயற்பாடுகளைக் கண்டுதான் புதிய கோட்டத்தின் கூடுதல் பொறுப்பை ஏற்ற செயற்பொறியாளர் என்னை அங்கு மாற்றினார் என்பதுதான் உண்மை.

 கே.எம்.எசு.அப்துல் காதர் அவர்கள் கண்காணிப்புப் பொறியாளராக ஓய்வு பெற்றதைக் கேள்விப்பட்டேனே தவிர அவரைப் பார்க்க வாய்க்கவில்லை. 1984இல் விருப்ப ஓய்வு பெற்று கருத்துரைஞராக வாழ்க்கை நடத்திய நான் பாளையங்கோட்டை நகரவைக்குச் சென்றிருந்த போது தனக்கு வீடு கட்ட வரைபடம் ஒப்புதல் பெற வந்நவரை ஏறக்குறைய 22 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து இருவரும் மகிழ்ந்தோம். நான் விருப்ப ஓய்வு பெற்றுச் சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்ததை அறிந்த அவர் தான் பாளையங்கோட்டையில் செயல்படும் முசுலீம் அனாதை நிலையத்தில் மதிப்பியல் பொறியாளராக இருப்பதாகவும் வரைபடங்கள் போடுதல், உள்ளாட்சிகளில் ஒப்புதல் பெறுதல், மனைப் பிரிவுப் பணிகள், நில அளவை போன்றவற்றுக்குத் தகுந்த ஆள் இல்லை என்றும் கூறி என்னை அங்கு வந்து சந்திக்குமாறு கூறினார். அன்றிலிருந்து ஏறக்குறைய 18 ஆண்டுகள் என் குடும்பச் செலவில் ஒரு கணிசமான பகுதி அந் நிறுவனத்திலிருந்துதான் கிடைத்தது. 2002ஆம் ஆண்டு அவர் இயற்கை எய்தியது வரை இது தொடர்ந்தது. தன் சொந்த மகன் போல அவர் என் மீது அன்பு செலுத்தினார். நான் நாகர்கோயிலுக்கு வந்துவிட்டதாலும் முதலிலிருந்தே சமய அடிப்படையில் என்னை வெளியேற்ற நடைபெற்ற முயற்சிகளை முறியடித்த பெரியவர் பொறியாளர் உயர்திரு.கே.எம்.எசு.அப்துல் காதர் அவர்கள் இல்லாததாலும் அதோடு அந் நிறுவனத்துடனான தொடர்பு நின்றுபோனது. என் பணிகளின் தரத்தினாலும் நம்பகத்தன்மையாலும் அங்கு பொருளாளர்ப் பொறுப்பிலிருந்த தாகீர் என்ற பெரியவரும் எனக்கு ஆதரவு தந்தார்.

இன்னும் எத்தனையோ பேர், கருத்துரைஞர் தொழிலில் ஈடுபடத் தேவையான அடிப்படைகள் குறித்து விளக்கி ஊக்குவித்த பொதுபணித்துறை முன்னாள் வரைவாளர் திரு.விசயகுமார், எனக்கு சிறிய பணிகளும் தாராளமாகக் கூலியும் கொடுத்து தொடக்க காலத்தில் எனக்கு முழு மனதுடன் ஆதரவளித்த நகர ஊரமைப்புத் துறை மேற்பார்வையாளர் வரிசைமியாப் பிள்ளை ஆகியோர் காட்டிய அன்பு பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. என் மீது அன்பு வைத்து என் எழுத்தாக்கங்களுக்கு அச்சு வடிவம் கொடுப்பதில் எனக்கு சலுகைகள் வழங்கிய பாளையங்கோட்டை கோமதி அச்சக உரிமையாளர் மணி, எனக்கு ஒரு மனைப் பிரிவுப் பணி வழங்கி ஆதாயத்தில் சரி பங்கு வழங்கி உதவிய அவரது உறவினர் எசு.ட்டி.ஆர்.முருகேசன் ஆகியோர் மூப்பனார் வகுப்பைச் சேர்ந்தவர்களாவர். தன் பொறுப்பிலிருந்த திருநெல்வேலித் திருமண்டல ஆசிரியர் வீடமைப்புச் சங்கத்துக்கு பொறியியல் கருத்துரைஞராக என்னை அமர்த்தி கட்டுமானப் பொறியாளராக ஒரு விரிவான களத்திலும் ஓர் ஆய்வாளராக பாளையங்கோட்டை சிந்தனையாளர் வட்டத்திலும் அறிமுகம் செய்துவைத்த பேரா.ப–ர்.பா.வளனரசு அவர்கள், பல்வேறு வகையில் அத் திசையில் உதவிய பேரா.ப–ர்.தே.லூர்து அவர்கள், அப்போது பாளையங்கோட்டையில் கல்லூரிக் கல்வி துணை இயக்குநராகப் பணியாற்றிய பே-ர்.கோ. சங்கரராசுலு அவர்கள், பேரா.ப–ர்.வே.மாணிக்கம், பேரா. ப–ர்.நா.இராமச்சந்திரன் போன்றோர் சாதி வரம்புகளை மீறி எனக்கு உதவியவர்கள்.

என் எழுத்தாக்கம் ஒன்று முதன்முதல் அச்சேறக் காரணமாயிருந்தவரும் அந்த அச்சேற்றத்தை நிகழ்த்தியவருமான வெங்காளூர் திரு.குணா அவர்களிலிருந்து தொடங்குவதுதான் முறையாக இருக்கும்.

சொல் புதிது என்ற தன் இதழ் மூலம் என்னோடு தொடர்பு கொண்ட புகழ்பெற்ற எழுத்தாளர் செயமோகன் பொள்ளாச்சி ப – ர்.நா.மகாலிங்கம் அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். தமிழினி வசந்தகுமாருடன் நெருங்கிய உறவுக்கு அவர்தான் காரணம். என் பல்வேறு துறை சார்ந்த பல கட்டுரைகளைத் தன் இதழ் மூலம் வெளியிட்டுள்ளது மட்டுமின்றி என் எழுத்து முயற்சிகளுக்கு இடைவிடாத ஊக்கமும் அவர் கொடுத்து வருகிறார்.      

      இன்றும் என்னுடன் இணைந்து பணியாற்றும் திரு.பொன்.மாறன், தமிழ்மண்ணன், ம.எட்வின் பிரகாசு ஆகியோர் சாதிகளை உடைக்க வேண்டும் என்பதற்காகத் தங்களை ஒப்படைத்துக்கொண்டவர்கள்.  சாதியை மறைக்காமல் குறிப்பிட முடியாத ஒரு பெயரைக் கொண்டவன் நான் என்ற வெளிச்சத்தில் பார்த்தால்தான் நான் மேலே குறிப்பிட்டவற்றின் குறிதகவு தெரியும்.

பாளையங்கோட்டையில் குடும்பம் நடத்தவே இயலாது நான் இருந்த காலத்தில் என்னை நாடி வந்த ஒன்றிரண்டு நாடார் சாதிப் பெரியவர்கள் என்னிடம் சாதியைக் காட்டி இலவயமாகப் பணி பெறத்தான் வந்தார்கள். பள்ளி ஆசிரியராக இருந்த தங்கசாமி ஒருவர்தான் உண்மையான பரிவுடன் உதவிகள் செய்தார்.

என் எழுத்து முயற்சிகளுக்கு ஊக்கம் தந்து இயன்ற வகையிலெல்லாம் உதவி வரும் நாடார் சாதியைச் சார்ந்தவர் புலவர் கு.பச்சைமால் அவர்கள். குமரி மாவட்டக் கலவரம் தொடங்கிய செய்தியை அறிந்ததும் நானும் நண்பர் திக்கிலான்விளை புலவர் சா.வேலப்பனும் மதுரையிலிருக்கும் நாடார் மகாசன சங்கம் அலுவலகம் சென்று பொறுப்பாளர்களைக் கண்டு பேசிய போது அவர்கள் புலவர் பச்சைமாலைக் காட்டி விட்டார்கள். அப்போது தொடங்கிய எங்கள் உறவு இன்றும் தொடர்கிறது. தாராமதி ஆசிரியர் குன்றம் மு.இராமரத்நம் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்ததன் மூலம் என் முகாமையான சில ஆக்கங்கள் அவ் விதழில் வெளிவந்ததுடன் சிற்றிதழ்கள் வட்டத்தில் நான் அறிமுகமானேன். இன்னொரு நாடார் நண்பர் திரு.செ.கு.வேள் ஆவார். அவரது என் மீதுள்ள ஈடுபாடு திராவிட இயக்கத்தின் மூலக் கொளகைகளின் அடிப்படையிலாகும். கார்மெல் பள்ளியின் ஆசிரியராக இருந்து இப்போது பணிநிறைவு பெற்றுள்ள ஆய்வாளர் ஆபிரகாம் லிங்கம் அவர்கள் அளித்துவரும் ஊக்கமும் உதவிகளும் மறக்கத்தக்கவையல்ல.

இவ்வளவு விரிவாக, நுவல்பொருளை விட்டு நான் சொந்த வாழ்க்கையின் மூலை முடுக்கொல்லாம் அலைவதன் நோக்கம் தமிழக மக்களிடம் சாதி உணர்வென்பது நாம் பொதுவாக நினைப்பது போல் அவ்வளவு ஆழமானது அல்ல என்பதை விளக்கத்தான். மன்னராட்சிக் காலங்களிலும் ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளால்தான் தமிழகம் வலுவிழந்ததுடன் தங்களைக் காத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் கையாண்ட உத்திகளே அவர்களை இம் மண்ணிலிருந்து தடம் தெரியாமல் துடைத்தழித்துவிட்டன. சென்ற நூற்றாண்டில் இந்திய விடுதலைக்காகவும் திராவிட இயக்கத்தின் இரண்டாம் கட்டத்திலும் அவ் வியக்கங்களின் நாணயமற்ற தலைமைகள் முன் வைத்த ஒற்றுமை முழக்கங்களை ஏற்று சாதிப்பட்டங்களை முற்றிலும் களைந்துவிட்ட  அருஞ்செயல் இம் மக்களின் உளக்கிடக்கையை ஐயத்துக்கிடமின்றி விளக்குகிறது. அப்படியானால் இன்றும் ஏன் சாதி மோதல்களும் ‘மதிப்பியல்(கௌரவ)க் கொலை’களும் தமிழகத்தில் நடக்கின்றன? இதற்கான காரணங்களைத் தேடுவோம்.

முதலில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக, தமிழ் மக்களிடையில் நிலவிய, தொல்காப்பியம் காட்டும் மேலோர், கீழோர் என்ற வகைப்பாடும் அவர்களுக்கிடையிலான பொருளியல் – குமுகியல் ஏற்றத்தாழ்வும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் கடுமையான சாதிய ஏற்றத்தாழ்வாக உருமாறி விரிவடைந்தன. கி.மு. 1700 ஆண்டளவில் நிகழ்ந்த, இலக்கியங்கள் காட்டும் இரண்டாம் கடற்கோளுக்குப் பின் இன்றைய தமிழகத்தினுள் நுழைந்த சேர, சோழ, பாண்டியர்களுக்கும் இங்கு ஏற்கனவே வாழ்ந்த பாணர், துடியர், பறையர், கடம்பர் என்போரைக் குலத்தலைவர்களாகக் கொண்ட மக்களுக்கும் இடையில் நிகழ்ந்த 1300 ஆண்டுகள் நீண்ட போரின் முடிவில் பிற குழுக்கள் இன்றைய தமிழக எல்லையிலிருந்து அகன்று அல்லது வந்தேறிகளுடன் கலந்து மறைந்துவிட எஞ்சிய பெரும்பான்மையரான பறையர்களை ஒடுக்குவதற்கு வகுத்த உத்திகளே தமிழகத்தில் உருவாகியிருக்கும் சாதிய ஒடுக்குமுறைகளாக வடிவெடுத்திருக்கும் என நான் கருதுகிறேன். இப்படி உருவான சாதியப் பிளவுகளை விரித்து தமிழக மக்கள் ஒரு குழுவினரை மற்றொரு குழுவினர் வெறுத்து அல்லது அவர்களுக்கு அஞ்சி அயலவரை காப்பாளராகக் கொண்டாடி அவர்களுக்கு அடிமை செய்து தம் நாட்டு மக்களைத் தம் மேலாளுமையினுள் வைத்துக்கொள்ளவும் அத்தகைய மேலாளுமைக்கு ஆட்பட்டோர் தங்களை விடுத்துக்கொள்ளவுமான தொடர்நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் விளைவாக புதிய படையெடுப்பாளர்களுக்கு முன்னோடிகளாக வந்த சமயங்களும் படையெடுப்பாளர்களோடு வந்தவர்களும் பிழைக்க வந்தவர்களுமாக இங்கு சாதிகளும் உட்சாதிகளும் ஆயிரக்கணக்கில் பெருகிவிட்டன. முதலில் குறிப்பிட்டது போல் பொருளியல் உரிமைகளுக்காக களத்திலிறங்கிய தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அதற்குத் தடையாக இருந்த பார்ப்பனர்களை எதிர்த்து வைத்த ஒதுக்கீட்டு வேண்டுகையையுடன் பார்ப்பன எதிர்ப்பை மட்டும் அதனைத் தொடர்ந்த திராவிட இயக்கத் தலைமைகள் பிடித்துக்கொண்டு பொருளியல் உரிமைப் போராட்டத்தைத் திட்டமிட்டுப் புறக்கணித்ததால் ஒட்டுண்ணி வேலைகளை நோக்கி மக்கள் ஓட இங்கு இன்று உழைப்போர் இல்லாமல் நிலம் செயலற்றுக் கிடக்கிறது. செம்மண் உட்பட இயற்கை வளங்கள் ஒட்டுமொத்தமாகக் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறது. கையிலிருந்த சேமிப்புகளையும் நிலபுலன்களை விற்றும் கடன் வாங்கியும் எதற்கும் பயன்படாத கல்வி என்பதற்குச் செலவிட்டு தெருவில் நிற்கும் பெற்றோர், பிள்ளைகளின் எண்ணிக்கை நாள்தோறும் கடும் விரைவில் உயர்ந்து வருகிறது. இல்லாத வேலைக்கு எண்ணற்றோர் போட்டியிடுவதால் ஒதுக்கீடு என்ற பொய்ம்மானை நம்பி சாதிப் பகைமைகள் வளர்கின்றன. அதே வேளையில் பாராளுமன்ற முறை என்ற போலி மக்களாட்சியில் மக்களை வாக்குவங்கிகளாக்கி விற்றுக் காசு பார்க்க நாளுக்கொரு கட்சியாகத் தொடங்கிக்கொண்டிருக்கும் கயவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டிருக்கிறது. இவர்களின் சாதி பாதுகாப்புக் கண்காணிப்புகளை மீறி காலங்காலமாக அங்கென்றும் இங்கொன்றுமாக நடைபெற்ற காதல் திருமணங்கள், இன்று ஊர்ப் புறங்களை விட்டுப் வெளியேறிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் மீது ஊர்க் கட்டுப்பாடுகளும் கண்காணிப்பும் இல்லாத இந்தப் புதிய சூழலில் பெருகியுள்ளன. தேர்தல் ஆதாயம் காண மதிப்பியல் கொலைகளையும் சாதிக் கலவரங்களையும் உருவாக்கி தமிழகத்திலுள்ள பிற்போக்குக் கும்பல்களை எந்தக் கூச்சமும் இன்றி ஒருங்கிணைக்கும் கயமை நிறைந்த ம-ர்.ச.இராமதாசு போன்றோரின்  அழிமதிகள் அளவின்றி, கேள்வி கேட்பாரின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சாதிய ஒடுக்குமுறை என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும் உரியதல்ல, 2 நூற்றுமேனியரான அவர்கள் எஞ்சிய 98 நூற்றுமேனியரை அடக்க முடிகிறதென்றால் அந்த 98 நூற்றுமேனியரில் கணிசமானவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் முடியாது, சாதியை நிலை நிறுத்துவதில் சாதி வேறுபாடின்றி குமுகத்தின் அனைத்துப் பிற்போக்கு விசைகளின் ஒத்துழைப்பும் உண்டு என்பது தெளிவாகி வருகிறது. ஊர்ப் புறங்களை விட்டு வெளியேறிவிட்ட பார்ப்பனர்களை சிறுதெய்வங்கள் எனப்படுபவற்றுக்குப் புதிய கோயில்களைக் கட்டியும் பழைய கோயில்களைப் புதுப்பித்தும் பார்ப்பனப் பூசகர்களைக் கொண்டுவந்துவிட்ட புதுப்பணக்காரர்கள் அன்றி வேறு யார் காரணம்? இந் நிலை நெடுநாட்கள் தொடராது, தொடரக் கூடாது. படிப்பறிவு குறைந்த தமிழக மக்கள் வளமான வாழ்வு கிடைக்கும் என்ற ஏமாற்றை நம்பி தமிழகத்தை விட்டு வெளியேறி தாங்கொணா அடிமைக் கொடுமையினுள் சிக்கி வருகின்றனர். அயல் மாநிலத்தார் தமிழக நிலத்தை மட்டுமல்ல உடலுழைப்பு வேலை வாய்ப்புகளைக் கூட மிக  விரைவாகக் கைப்பற்றி வருகிறார்கள். எனவே தமிழகம் முதலில் தன் நிலத்தையும் அடுத்து அந்த நிலத்தின் வளத்தையும் மீட்க வேண்டியுள்ளது. குசராத்தி பனியாவான காந்தி உருவாக்கிய பனியா – பார்சி – வல்லரசிய கூட்டரசின் பொருளியல் ஒடுக்குமுறையின் அடிப்படைக் கருவியான வருமான வரி ஒழிப்பை முதன்மையாகக் கொண்ட பொருளியல் உரிமைப் போராட்டத்தின் மூலம் பெரும் கூட்டுப்பண்ணைகளை அமைத்து தரிசாகக் கிடக்கும் மாபெரும் நிலப்பரப்புக்கும் பசுமையூட்டி குன்றிவிட்ட மழைச் சீர்மையை மீட்பதுடன் காமராசர் – நேசமணி எனும் கோடாரிக்காம்புகள் தமிழக மக்களிடமிருந்து பறித்து அண்டையிலுள்ள தமிழகப் பகை ஆட்சியாளர்களுக்குக் கொடுத்த நிலப் பரப்புகளையும் நீர் வளங்களையும் மீட்டு ஆறு, கால்வாய், குளம், சாலைகள் என்று அனைத்து அடிப்படைக் கட்டமைப்புகளையும் சிறப்பாகவும் வனப்பாகவும் அமைத்தும் பராமரித்தும் அவற்றுக்குத் தேவைப்படும் கருவிகள், புதிய தொழில்நுட்பங்களையும் உருவாக்கவும் என்று ஒளி மிக்க எதிர்காலத்தை நோக்கித் தமிழகத்திலுள்ள இளைஞர்களை அழைத்துச் செல்லும் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் சாதி என்ற மாயை தானே விலகும் என்பது எமது உறுதியான நம்பிக்கை மட்டுமல்ல கோட்பாடுமாகும். சாதி ஒழிப்புக்கு என்று மேற்சொன்ன களப்பணிக்கு முன்னோட்டமான கருத்துருவாக்கத்தை ஒவ்வொரு சாதி உருவாகத்தின் உண்மை வரலாற்றுப் பின்னணியையும் மக்கள் முன் வைக்க வேண்டியது தேவை, அத் தேவையை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில்தான், தமக்கும் தம் பின்னடிகளுக்கும் பதவிகள் அரசியல் ஆதாயங்கள் வேண்டுமென்பதற்காகவே பொய்ச் சாதி வரலாறு எழுதும் தன்னல விசைகளின் பொய்ம்மைகளைத் தோலுரித்துக்காட்ட ஒவ்வொரு சாதியிலுமுள்ள முற்போக்குத் தனிமங்களை தூண்டவும் ஊக்கவும்தான் நாடார்களின் சாதி வரலாற்றை ஒரு பதமாக முன்வைக்கிறேன்.

பனையேறுதல் என்ற தொழில் மகரக் கோட்டுக்குத் தெற்கில் இருந்த இராவணனின் தென்னிலங்கைப் பகுதியில் தோன்றி கடற்கோள்களாலும் மக்களின் பெருக்கத்தாலும் வடக்கு நோக்கி நகர்ந்து நாளடைவில் இத் தொழில் செய்வோர் சாணார் என்ற பெயர் பெற, கருப்புக்கட்டித் தொழில்நுட்பத்தால் செல்வமும் செல்வாக்கும் பெற்று இறுதியில் கி.மு.1700இல் நிகழ்ந்த கடற்கோளில் அவர்கள் வடக்கு நோக்கிப் பரந்து சென்றுவிட ஒட்டுக் காய்கள்[11] போல் தென் தமிழ்நாட்டில் எஞ்சி நின்றோரை நோக்கி அரசியல் புயல்களால் அடித்து வரப்பட்ட பலவகைப்பட்ட மக்களும் அச் சாதிப் பெயரைத் தாங்களும் ஏற்று வாழ்ந்த சூழலில் பொருளியல் வளர்ச்சியின் பின்னணியில் இவ் வட்டாரத்தில் ஒட்டுக்காய்களாகத் தங்கிவிட்ட நாடான் என்னும் ஆட்சித் தலைவன் பட்டத்தை ஊர்த்தலைவன் பட்டமாகச் சூட்டிக்கொண்ட வந்தேறி ஊர்த்தலைவர்களிடமிருந்து எளிய சாணார்களும் அப் பட்டத்தைப் பிடுங்கிக் கொள்ள அதுவும் நாடார் என்று உருமாறியதுதான் இன்றைய நாடார் சாதிப் பெயர். வந்தேறிகளில் நாம் முன்பு கூறியது போல் இருளப்பபுரத்துக்கு வந்த ஒரு குடும்பத்தினர் கொண்டுவந்தது வலங்கையர் வரலாறு கூறும் நூல்களில் ஒன்று. அதிலிருந்த செய்திகளில் சிலவற்றை முத்துக்குட்டி அடிகளார் பயன்படுத்தியுள்ளார். வலங்கையர் என்ற சொல் மட்டுமே மேற்கண்ட நூல்களிலிருந்து கிடைக்கிறதேயன்றி அது பற்றிய வேறெந்த விளக்கமும் நமக்குக் கிடைக்கவில்லை. வலங்கையினரான தமக்குரிய சிறப்புகளை இடங்கையினரான வேறெவருக்கோ கொடுத்துவிட்டார்களே என்ற ஆற்றாமையைத்தான் இந்த நூல் தலைப்பு காட்டுவதாக எனக்குப் படுகிறது. அத்துடன் இழந்த சிறப்பை மீட்க வேண்டும் என்ற தவிப்பை வரும் தலைமுறைகளுக்கு உருவாக்கவும் இத் தலைப்பை வைத்திருந்தவர்கள் விரும்பியிருக்கலாம்.

ஒரு சாதி மக்கள் அனைவரும் அதே சாதியில் தொடர்வது, சாதியின் பெயர் மாற்றமில்லாமல் தொடர்வது என்பது எங்கும் நிகழவில்லை. இடைவிடாமல் மாறிக்கொண்டிருப்பதாகும் என்ற உண்மையை இந்த சாதி வரலாறு மூலம் உரிய வகையில் எடுத்து வைத்துள்ளேன் என்று மனநிறைவடைகிறேன்.
 
நானாகத் தொடங்கிய இந்தப் பணியை ஆழமும் விரிவும் கொண்டதாக்க ஊக்குவித்த நண்பர் தமிழினி வசந்தகுமார் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.     
திருமங்கலம்                                                                                                                              அன்புடன் 
23 – 06 -2015                                                                                                                   குமரிமைந்தன்    [1] மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படும் என்ற பொய் வாக்குறுதியின் பேரில் இந்தப் பிரிவுகளுக்குப் பெயர்கள் வைத்திருந்தனர் வாய்மை, உண்மை, மெய்ம்மைகளுக்கு அறைகூவலாக உருவாகியிருந்தவரான காந்தியின் பேரவைக் கட்சியினர்
[2]   சாணார் என்ற சாதிப்பெயர் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருப்பதால் அதன் மூலம் கிடைக்கும் பலனகளை, பெரும்பாலும் பனையேற்றுத் தொழிலை நம்பி வாழும் அவர்கள் இழக்க விரும்பாததுதான் காரணம்.
[3]   அறுவடையின் போது காசு பெறாமல் அவ் வீட்டுக்கு பணியாற்றும் நாவிதர், வண்ணார் ஆகியோருக்கு அளக்கும் நெல்லையும் கொத்து என்பார்கள். வயல் இல்லாதவர்கள் இவர்களுக்குப் பணமாகக் கூலி கொடுப்பார்கள். தமிழகத்தின் பிற பகுதிகளில் போல் இப் பணியாளர்கள் எல் சோறு என்ற பெயரில் இரவில் ஒவ்வொரு வீட்டிலும் சோறு வாங்குவதை நான் பார்த்ததில்லை. ஆனால், பொங்கல், ஆடி, ஆவணி மாதப் பிறப்புகள் ஆகிய நாட்களில் சமைக்கும் இறைச்சியையும் சோற்றையும் திருநாள் சிறப்புப் பண்டங்களையும் வீடுவீடாகச் சென்று வாங்கும் பழக்கம் இருந்தது. இப்படி கொத்துக்காகப் பணியாற்றுவோரைத்தான் கொத்தடிமைகள் என்று குறிப்பிடும் மரபு உருவானது.
[4]   குப்பைக் காய்ச்சி குடியிருப்பு என்பது ஒருவர் வேறொருவர் நிலத்தில் தானே வீடு கட்டிக் குடியிருப்பது. ஒரே கட்டுறவு, குடியிருப்பவர் தன் வீட்டில் சேரும் குப்பைகளைத் தனக்கு எடுத்துக் கொள்ளாமல் நிலவுடைமையாளருக்குக் கொடுத்துவிட வேண்டுமென்பதுதான்.
[5]   கைசாலைக் கதவு என்பது வீட்டின் சுற்றுச் சுவரில் அமைக்கப்படும் கதவு. சுவர்கள் பொதுவாக பச்சைச் செம்மண் கொண்டு கட்டப்பட்டன. சுற்றுச் சுவரை மழைநீரிலிருந்து காக்க ஓடுகளை இரு புறங்களிலும் பதித்து மேலே சுண்ணாம்புச் சாந்து காப்பிடுவர். கதவைப் பொறுத்து கதவுச் சட்டத்தின் நெடியதை உயர்த்தி அதில் ஒரு கூரைச் சட்டத்தைப் பொருத்தி அதை ஓலையோ ஓடோ வேய்ந்து  மழையிலிருந்து காப்பர்.
[6]   என் தந்தையார் மீதிருந்த காழ்ப்புணர்வில் ஊர் நாடானும் நிலத்துக்கு உரியவரான அத்திக்கடை நாடானும் இதன் பின்னணாயில் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
[7]    இது போன்ற ஓடைகள் அப்பகுதியில் பல இருந்தன. ஒன்றிரண்டு தவிர பிறவெல்லாம் தூர்க்கப்பட்டுவிட்டன.
[8]    பக். 86 – 87 பார்க்க
[9]   ஆண் பிள்ளை இல்லாமல் பெண்கள் மட்டும் உள்ள, அல்லது குழந்தையே இல்லாத குடும்பச் சொத்தைக் குறிக்கும்  சொல் இது. சொந்தம் என்று பொருள்படும் சொம் என்ற வேரினடிப்படையில்தான் சொத்து, சொந்தம், சொக்காரன், சொம்மு, சொம்மி(உரிமைக்காரன்) என்ற தமிழ்ச் சொற்களும் சொந்த எனப் பொருள்படும் சுயம், தனது எனப்பொருள் தரும் சு முன்னொட்டு போன்ற சமற்கிருதத்துக்குரியவை என்று கூறப்படும் சொற்களும் உருவாகியுள்ளதாக பாவாணர் அவர்கள் கூறுவார்கள். உடமையாளன் என்ற பொருள்படும் சொம்மி என்ற சொல்லை முன்னாள் திருவிதாங்கூர் சொத்தாவணங்களில் ஜென்மி என்று குறிப்பிட்டனர்.   
[10] இந்த இடம் தங்களுக்குச் சொந்தமாக இருந்தது என்று அண்டையிலுள்ள வடலிக்காட்டுவிளையைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
[11] புன்னை, மா போன்ற மரங்களின் விளைச்சலை உரியவர்கள் இறுதியாகப் பறித்த பின் தப்பிக் கிடக்கும் காய்களை ஒட்டுக்காய் என்பது வழக்கம். தப்புக்காய் என்றும் குறிப்பிடுவர். இவற்றை யார் வேண்டுமானாலும் பறித்துக்கொள்ளலாம் என்பது நடைமுறை.

2 மறுமொழிகள்:

சொன்னது…

அய்யா வணக்கம்! உங்களுடைய மின்னஞ்சலைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது உங்கள் வலைத்தளத்தில் ’ சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு’ என்ற தொடரினை தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறேன். (இப்போது தொடர் எண்.13) . எனக்குத் தெரியாத பல அரசியல் நிகழ்வுகளையும், தமிழகத்தின் சூழலையும் அறிந்து கொள்ள முடிகின்றது..

அன்புடன் –தி.தமிழ் இளங்கோ

சொன்னது…

அய்யா அவர்களுக்கு வணக்கம்! இந்த தொடரின், இறுதியாக இருக்கும் இந்த 25 – ஆவது தொடரை இன்றுதான் படித்து முடித்தேன். நான் நாடார் வகுப்பு கிடையாது. இருப்பினும் , தங்கள் எழுத்தின் மீது உள்ள ஆர்வம் காரணமாக கடந்த ஒரு வாரமாக, நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த தொடர் படித்ததன் மூலம் பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன். ‘நாடார் வரலாறு” – பற்றிய தொடர் என்றாலும், அனைத்து சமூக வரலாற்றுக் குறிப்புகளையும் காணமுடிகிறது.

இந்த தொடர் முழுதும் புத்தகமாக வந்தால் நாட்டுக்கு நல்லது. ( நீங்கள் கொண்டிருக்கும் தனித்தமிழ் பற்று போற்றற்குரியது; இருப்பினும் சில சொற்களை அல்லது பெயர்களை, தனித்தமிழில் சொல்லும்போது (உதாரணமாக அரசியல் கட்சியின் பெயர்கள்) அடைப்புக் குறிக்குள் அவற்றின் ஆங்கிலச் சொல்லை அல்லது பெயரைச் சொல்லி இருந்தால் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். நூலாக வரும்போது இதனைக் கவனத்தில் கொள்ளவும். நன்றி!

அன்புடன்,
தி.தமிழ் இளங்கோ
நாள்: 01.01.2016 - வெள்ளி - 16.26 p.m