மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.7.09

துவரையம்பதி

முரண்பாடுகள் தாம் வளர்ச்சியின் ஊக்கு விசையாகச் செயற்படுகின்றன. இது இயற்கைக்கும் மனித வாழ்வுக்கும் மட்டமல்ல வரலாற்று ஆய்வுக்கும் பொருந்தும் ஒரு விதியாகும்.

தமிழகப் பண்டை வரலாற்றில் இத்தகைய முரண்பாடுகள் சில உள்ளன. எடுத்துக்காட்டுக்கு அவற்றில் இரண்டை இங்கு குறிப்பிடலாம்.

1. தமிழகத்தின் வாழ்வியலை இலக்கண வடிவத்தில் கூறும் தொல்காப்பியத்தில் இரு நிலப்பகுப்புகளான நெய்தல், மருதம் ஆகியவற்றின் தெய்வங்களான வருணன், இந்திரன் ஆகியவை ஆரியர்களுக்குரியதென்று சொல்லப்படும் வேதங்களில் காணப்படுவது.


2. இரண்டாம் தமிழ்க் கழக(சங்க)க் காலத்தில் வாழ்ந்த அரசர்களில் துவரைக் கோமான் என்பவன் குறிப்பிடப்படுகிறான். துவரை என்பது இன்றைய குசராத் மாநிலத்தை ஒட்டிய கட்சு வளைகுடாவினுள் ஏறக்குறைய கி.மு.1000 ஆண்டில் முழுகிய ஒரு நகரமாகும். சிசுபாலன் என்ற தன் பகையரசனுக்கு அஞ்சி வடமதுரையைத் துறந்து வந்த கண்ணபிரான் இங்கு ஒரு நகரை அமைத்து ஆண்டான் என்பது வரலாறு. இவ்வாறு வட இந்தியாவில் ஆண்ட ஓர் அரசன் எவ்வாறு கபாடபுரத்தில் அமைந்த இரண்டாம் தமிழ்க் கழகத்தில் அமர முடிந்தது?

இந்தக் கேள்வியைச் சிலர் எழுப்பினாலும் அதற்கான விடையைத் தேடி எவரும் இன்றுவரை புறப்படவில்லை. அது போலத் தான் வருணன், இந்திரன் பற்றிய கேள்வியும். முரண்பாடுகளைக் கண்டு மிரண்டு அவற்றைப் புறக்கணித்துவிடும் நம் ஆய்வாளர்களின் போக்கினால் தமிழ் மக்கள் வரலாற்றின் மீது கவிந்துள்ள இருள் இன்னும் நீங்காமல் உள்ளது.

இந்த முரண்பாடுகளில் ஒன்றை, அதாவது துவரைக் கோமான் என்ற சொற்களிலுள்ள துவரை நகரம் எது என்று ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

துவரை என்ற சொல் துவாரகை என்ற சொல்லின் தமிழ்ச் சுருக்க வடிவம். துவாரகை என்று சொல் துவார் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. துவார் என்ற சமற்கிருதச் சொல்லுக்குக் கதவு என்று பொருள். அப்படியாயின் துவாரகை என்ற சொல்லுக்குக் கதவகம் என்று பொருள் சொல்லலாம். மொழிஞாயிறு தேவநோயப்பாவாணர் அவர்கள் கதவபுரம் என்ற ஒரு சொல்லை வடித்துக் கையாளுவார். அச்சொல் கபாடபுரம் என்பதன் தமிழ் வடிவமாகும். கபாடம் என்பது சமற்கிருதச் சொல் என்று கருதி அவர் இச்சொல்லைக் கையாண்டார். இந்தக் கபாடபுரம் என்ற சொல்லுக்கும் துவாரகை என்ற சொல்லுக்கும் உறவு இருக்கிறதல்லவா? எனவே துவரை என்ற சொல் கபாடபுரத்தையே குறிக்கிறதென்ற முடிவுக்கு நாம் வரலாம். இப்போது கபாடபுரமாகிய பாண்டியனின் தலைநகரில் அமைந்திருந்த இரண்டாம் தமிழ்க் கழகத்தில் துவரைக் கோமான் அரசனாக அமர்ந்திருந்ததில் முரண்பாடு எதுவும் இல்லை.

சிக்கல் இத்துடன் தீர்ந்து போகவில்லை. இந்தக் கதவம் பற்றித் தமிழகத்துக்கு வெளியிலும் தமிழ் இலக்கிய வட்டத்துக்கும் வெளியிலும் நமக்கு ஆர்வமூட்டும் சில சிறப்பான செய்திகள் உள்ளன.

இவற்றுள் ஒன்று பாபிலோனியாவிற்குரியது. கில்காமேஷ் காப்பியம் எனப்படும் இதுவரை கிடைத்துள்ள உலகின் மிகப் பழைய காப்பியத்திலுள்ளது. கி.மு. ஏழாம் நூற்றாண்டில் அசிரியாவை ஆண்ட அசூர்பானிப்பாலின் நூல் நிலையத்திலிருந்து இது கிடைத்தது. பின்னர் கி.மு.22-21ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பாபிலோனிய அரசன் அம்முராபியின் தொகுப்புகளிலிருந்தும் கிடைத்தது. இக்காப்பியம் சுமேரியர்களுக்கு உரியதாகும். புகழ்பெற்ற தமிழ் இலக்கியத் திறனாய்வாளரும் எழுத்தாளருமான க.நா.சுப்பிரமணியம் இக்காப்பியத்தைத் தமிழாக்கியுள்ளார்.

இக்காப்பியக் கதை பின் வருமாறு.

ஊருக் என்ற சுமேரிய நகரத்தைச் சுற்றிப் பெரிய சுவரெழுப்பிய சுமேரியத் தொன்ம அரசன் கில்காமேஷ். இவன் மூன்றிலிரு பகுதி கடவுளும் ஒரு பகுதி மனிதனுமாவான். இவன் அழகில் அவன் நாட்டு மகளிர் மயங்கினர்.

அருரு என்ற பெண் தெய்வத்தால் படைக்கப்பட்டவன் எங்கிடு. இவன் உடலெங்கும் மயிரடர்ந்திருந்தது. தோல் ஆடையே அணிந்திருந்தான். காட்டில் விலங்குகளோடு விலங்காக நான்கு கால்களிலும் நடந்து புல்லை மேய்ந்து நீரில் விளையாடி வாழ்ந்திருந்தான்.

இவனைப் பற்றி அறிந்த கில்காமேஷ் அழகிய ஒரு பெண்ணை அவனிடம் அனுப்பினான். இருவரும் ஆறு நாட்கள் சேர்ந்திருந்தனர். அப்பெண்ணோடு நகருக்குள் நுழைந்த எங்கிடுவுடன் கில்காமேஷ் சண்டையிட்டு வென்று அவனை நண்பனாக்கிக் கொண்டான்.

இசுத்தார் என்ற பெண் தெய்வம் தன் மீது கொண்ட காதலை கில்காமேஷ் ஏற்க மறுத்ததனால் அவனைப் பழிவாங்குவதற்காக எங்கிடுவுக்கு நோயுண்டாக்கிக் கொன்றுவிடுகிறாள். துயரத்தால் துடித்த கில்காமேஷ் சாவாமை பற்றி அறிந்துவரக் கிளம்புகிறான். தன் முன்னோனான உட்நாப்பிட்டிமைத் தேடிச்செல்கிறான். இந்த உட்நாப்பிட்டிம் வெள்ளத்திலிருந்து தப்பிய ஒரே மனிதன். யூத மறைநூலின் நோவாவின் மூலவடிவம். இவன் மரணமற்றவன்.

அவனைச் சந்திக்க நெடுந்தொலைவு நிலத்தின் மீது செல்கிறான். வானாளாவி நிற்கும் இரண்டு மலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரு பெரும் சூரியக் கதவத்தைக் கடந்து ஒரு சுரங்கத்தின் வழியாகப் 12 மைல்கள் செல்கிறான். இக்கதவம் இரண்டு பூதங்களால் காக்கப்படுகிறது. இவன் உட்நாப்பிட்டிம் வழியினன் ஆனதாலேயே உள்ளே அனுமதிக்கப்படுகிறான். சுரங்கம் ஒரு கடற்கரையில் சென்று முடிகிறது. அங்கிருந்த ஓர் கன்னித் தெய்வத்தின் உதவியுடன் நாற்பது நாட்கள் கடலில் பயணம் செய்து உட்நாப்பிட்டிம் இருக்கும் தீவை அடைகிறான். அவனிடமிருந்து வெள்ளத்தைப் பற்றிய கதையை நேரடியாக அறிகிறான். சாவாமையைத் தரும் ஒரு பழமரக் கன்றைப் பெற்றுவிட்டுத் திரும்புகிறான். வழியில் கீழே வைத்துவிட்டுக் குளிக்கச் செல்லும் போது பாம்பு ஒன்று அக்கன்றைத் திருடிச் சென்றுவிடுகிறது. இப்படிச் செல்கிறது இக்கதை.

இதே போன்ற கதவம் ஒன்று இயமனைப் பற்றிய இந்தியத் தொன்மங்களில் கூறப்படுகிறது. இயமனும் மரணமற்றவென்பது மரபு.

இவை மட்டுமல்ல இது போன்ற பல சூரியக் கதவங்கள் உலகமெல்லாம் தொல்லாய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.

எனவே கதவபுரம் எனப் பொருள் படும் கபாடபுரமும் அதன் இன்னொரு பெயரான துவாரகையும் வெறும் கற்பனை அல்ல. அதன் நினைவுகள் உலகின் பல பகுதிகளில் எழுத்தில் பதியப்பட்டுள்ளன. அவற்றின் நினைவாக அது போன்ற கதவங்களும் நிறுவப்பட்டுள்ளன.

கதவபுரத்தைப் பற்றி இராமாயணம் கூறுகிறது. ஆனால் தமிழனின் பண்டை வரலாற்றுக்கு ஒரே மூலமாக நாம் கொள்ளும் கழக நூல் தொகுப்பில் இதைப் பற்றி ஒரு சொல் கூடக் குறிப்பிடவில்லை. இது இக்கழகத் தொகுப்பே ஏதோ காரணத்தால் தமிழர்களின் தொன்மை வரலாற்றை மறைப்பதை நோக்கமாகக் கொண்டவர்களின் ஒரு முயற்சியோ என்ற கசப்பான, ஆனால் தவிர்க்க முடியாத ஐயத்தை நம் மனதில் தோற்றுவிக்கிறது.

ஒரு வெள்ளக் காலத்துக்குப் பின் துவரை என்ற பெயர் பெற்ற கதவபுரத்தைக் தலைநகராகக் கொண்டமைந்த தமிழகத்திலிருந்து அடுத்த வெள்ளத்திலிருந்து தப்புவதற்காக வெளியேறிய ஒரு மக்கள் கூட்டம் இன்றைய குசராத் மாநிலத்திலமைந்திருந்த அவந்தி நாட்டில் காயங்கரை என்ற ஆற்றின் கரையை அடைந்தனர்.

இச்செய்திகள் மணிமேகலையின் பழம்பிறப்புணர்ந்த காதையிலிருந்து பெறப்பட்டனவாகும். (இந்தக் காயங்கரை ஆறு கோக்கரா எனும் பெயரால் குறிக்கப்பட்டது. பின்னர் அவ்வாறு பாலை மணலில் மறைந்து போனது. கங்கையின் ஒரு கிளையாறும் கோக்ரா என்ற பெயர் பெற்றுள்ளது.) காந்தாரம் என்ற நாட்டில் பூருவ தேயத்தை ஆண்ட அத்திபதியிடம் அவன் உறவினனான பிரம தருமன் என்ற முனிவன் அவன் நாடு உட்பட நாகநாட்டில் நானூறு யோசனை பரப்பான நிலம் ஏழு நாளில் நில நடுக்கத்தால் கடலினுள் புகும். ஆதலால் மாவும் மாக்களும் உடன் கொண்டு வேற்றிடம் செல்லுமாறு பணித்ததாக மணிமேகலை கூறுகிறது.

காந்தாரம் என்பது இன்று ஆப்பாகனித்தானத்தைச் சேரந்த ஒரு பகுதியாகும். பூருவ தேசம் என்பது பாண்டவர்களின் முன்னோர் பெயரைக் கொண்டதாகும். எனவே இப்பெயர்கள் முழுகிய குமரிக் கண்டப் பகுதிகளுக்கு உரியவை என்று நாம் முடிவு செய்யலாம்.

இவை நம் மரபுகளை உயர்த்திக் கூறுவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதைகளிலிருந்து நமக்குச் சார்பாக இருப்பதால் மேற்கொள்ளப்பட்ட செய்திகள் என்று ஒதுக்கித்தள்ள முடியவில்லை. கதவபுரம் எனப் பொருள்படும் துவாரகை எனப் பெயர்கொண்ட நகரம் இப்பகுதியில் இருந்ததும் வேதங்களிலும் வடஇந்தியத் தொன்மங்களிலும் தெய்வங்களாகக் கூறப்படும் வருணனும் இந்திரனும் தமிழக ஐந்நிலத் தெய்வங்களாயிருப்பதும் நமக்கு மறுக்க முடியாச் சான்றுகளாகின்றன.

துவரை என்ற இச்சொல்வழக்கு இறையனார் அகப்பொருள் உரையில் மட்டும் காணக்கிடைக்கவில்லை. சென்ற நூற்றாண்டு வரை குமரி மாவட்ட மக்களின் நாவில் பயின்றும் வரப்பட்டிருக்கிறது. சாமிதோப்பில் பள்ளி கொண்டிருக்கும் முத்துக்குட்டி அடிகளின் பெருமை கூறும் அகிலத் திரட்டு அம்மானை இம்மண்ணின் மக்களின் முன்னாளைய நிலமாக இருந்து கடலில் அமிழ்ந்து போன துவரையம்பதி மீண்டும் துவங்கும் என்று வலியுறுத்துகிறது. இதனால் கடலில் முழுகிய, முதல் வெள்ளத்துக்குப் பின் பாண்டியரின் தலைநகராயமைந்த, கதவபுரத்தைத் துவரையம்பதி என அழைக்கும் மரபு குமரி மாவட்ட மக்களிடையில் சென்ற நூற்றாண்டு வரை நிலவியது என்பதை நாம் அறிகிறோம்.

இக்கட்டுரையில் கில்காமேஷ் காவியம் பற்றிய செய்திகள் புகழ்பெற்ற வரலாற்றறிஞர் வில்தூரன் எழுதிய நகரிகத்தின் கதை என்ற நூலின் முதல் மடலமாகிய கிழக்கு நமக்கு வழங்கிய கொடை (Story of civilisation - Our Oriental Henitage) என்ற நூலிலிருந்தும் அமெரிக்காவிலிருக்கும் செருமானிய ஆய்வாளரான புகழ் பெற்ற எரிக் வான் டெனிக்காவின் கடவுளரின் தேர்கள்? (Charists of Gods?) என்ற நூலிலிருந்தும் பெறப்பட்டவை.

எரிக் வான் டெனிக்கான் ஏறக்குறைய 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் இன்றைய நாகரிகத்தை மிஞ்சிய தொழில்நுட்பங்களைக் கொண்டவர்கள் வெளி உலகத்திலிருந்து இங்கு வந்து மாபெரும் செயல்களை ஆற்றியுள்ளனர், பெருவெள்ளங்கள் கூட அவர்களை திட்டமிட்டு உருவாக்கியவை என்றெல்லாம் எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல இது போன்று இன்னும் நான்கைந்து நூல்களையும் எழுதியுள்ளார். இப்பிற நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கட்டுரையாசிரியருக்குக் கிடைக்கவில்லை. இந்த ஒரு நூலிலிருந்து கிடைக்கும் தரவுகளிலிருந்தே நம் புராணங்களில் காணப்படுவற்றில் நம்பத்தகாதவை என்று நாம் ஒதுக்கித் தள்ளிய பல செய்திகளை இன்றைய அறிவியல் வளர்ச்சியோடு ஒப்பிட்டு மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை நமக்கு உணர்த்துகிறது.

நமக்கு ஏற்படும் இன்னொரு எண்ணம் என்னவென்றால் குமரிக் கண்டம் நம் முக்கழக வரலாறு குறிப்பிடுவது போல் இரண்டே கடற்கோள்களுக்கு ஆட்படவில்லை என்பதாகும். மிக உயர்ந்த நாகரிகத்துடன் வாழ்ந்த மக்களைக் கொண்டு அண்டார்ட்டிகா வரை பரந்திருந்த ஒரு நிலப்பரப்பு பகுதி பகுதியாக கடல் கொள்ளப்பட மக்கள் உலகின் பிற பகுதிகளுக்குப் பெயர்ந்து செல்லச் செல்ல நாகரிகம் சிறிது சிறிதாக நலிந்து இன்றைய இடத்துக்கும் நிலைக்கும் தமிழ் மக்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்பதாகும்.

இச்செய்திகளைத் தடம் பிடிக்க எரிக்வான் டெனிக்கான் போன்றவர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள மக்களின் பண்பாட்டுக் கூறுகளைக் தொகுத்துத் தந்துள்ள எண்ணற்ற ஆய்வாளர்களின் ஆக்கங்களுடன் இந்தியப் தொன்மச் செய்திகளையும் ஒப்பிட்டு நாம் ஆய வேண்டும். குறிப்பாக நம் தொன்மச் செய்திகளில் வரும் கந்தர்வர்கள், விஞ்சையர் எனப்படும் யாழோர், கருடபுராணம் ஆகியவை மிகக் கவனமாக ஆயப்பட வேண்டும்.

குமரிக் கண்ட ஆய்வு என்பது வெறும் புவியியல் ஆய்வு மட்டுமல்ல. உண்மையில் புவியியல் ஆய்வு என்பது இவ்வாய்வின் மிகச் சிறியதும் கடைசியானதுமான கூறே. மிகப் பெரும் பகுதியும் முகாமையானவையும் உலகெலாம் பரந்து விரிந்து சிதறிக் கிடக்கும் பண்பாட்டுச் செய்திகளே. அச்செய்திகளைச் சுட்டிகாட்டும் ஒரு கருவியாகத் ″துவரையம்பதி″ அமைந்திருக்கிறது.

14.7.09

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - ஒரு மதிப்பீடு

அண்மையில் வாழ்வு நிறைவை எய்திய பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழக உணர்வுடைய நெஞ்சங்களில் எவ்வளவு இடம் பிடித்திருந்தார்கள் என்பதற்கு அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெருந்திரளும் ஆங்காங்கே தோழர்கள் ஒட்டிய இரங்கல் சுவரோட்டிகளும் கூட்டங்களும் சான்று கூறின. ஆனால் இவ்வளவு பெருந்திரளான ஆர்வலர்களை ஈர்த்து வைத்திருந்த பாவலரேறு அவர்களால் தன் வாழ்நாளில் தமிழார்வம் மிக்குடையவர்களைத் தவிர்த்த பிறரிடையில் ஓர் அறிமுகம் என்ற அளவில் கூடப் பரவலாக அறியப்படாமல் போனது ஒரு பெரும் கேள்வியாக நிற்கிறது.

மக்களிடையில் இயக்கங்கள் முகிழ்த்தெழுவதற்கு அவற்றைத் தொடங்குவோரின் தனித்த பொருளியல், வாழ்வியல் நோக்கங்கள் காரணமாயிருப்பதில்லை. அவர்களால் உயர்ந்தவையாய் புரிந்துகொள்ளப்படும் நோக்கங்களிலிருந்தே அவை தோற்றம்பெறுகின்றன.

அந்த வகையில் பாவலரேற்றின் பொதுவாழ்வின் தொடக்கம் தமிதழ்மொழித் தூய்மை குறித்தாகும். அதனாலேயே அவர் பாவாணரைத் தன் ஆசானாக ஏற்றுக் கொண்டார்.

தமிழ் மொழியின் உரிமை இந்தி ஆட்சிமொழிச் சட்டத்தால் அச்சத்துக்குள்ளான போது தன் எதிர்கால வாழ்வைப் பற்றிய சிந்தனையையே உதறி எறிந்துவிட்டு மொழிப் போராட்டத்தினுள் நுழைந்தார்.

சமற்கிருதக் கலப்பு மட்டுமல்ல ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிக் கலப்புகளிலுமிருந்து தமிழை மீட்கும் போர்ப்படையாகத் தென்மொழியை வளர்த்தார். அந்தத் தொடக்க காலத்தில் தென்மொழி மூலம் தமிழகத்திலுள்ள பல்துறை அறிஞர்களின் ஆற்றல் வெளிப்பட்டது. அவர்களின் படைப்புகள் தனித்தமிழின் பன்முனை ஆற்றலைத் தமிழார்வலர்களிடம் விளங்க வைத்தன. தனித்தமிழ் மீது அவை பெரும் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தின. தென்மொழி மூலம் வெளிப்பட்ட பாவாணரின் சொல்லாய்வு உத்திகள் பலரிடம் புதிய சொல்லாக்கத் திறனைப் படைத்தன. அந்தக் காலத்தில் தென்மொழி வெளிப்படுத்திய அந்த ஆற்றல் அளப்பரியது.

தமிழ் மொழி மீட்சி என்ற நோக்கத்தினடியாகப் பிறந்ததுவே தமிழக விடுதலை என்ற பாவலரேறு அவர்களின் குறிக்கோளும். அப்போது அவருடனிருந்த எண்ணற்ற இளைஞர்களின் கனவாகவும் அது உருப்பெற்றிருந்தது. ஆனால் ஒரு மக்கள் விடுதலை என்பது எவ்வளவு கடுமையான பணி, அதற்கு எத்தகைய பின்புலம் உருவாக்கப்பட வேண்டும், மக்கள் மனதில் ஒரு ஆர்வத்தை எழுப்பவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்ற சிந்தனையை விட கட்டுப்படுத்த முடியா தன் ஆர்வத்தையே வலிமையாக்கி 1972இல் மதுரையில் தமிழக விடுதலை மாநாடு நடத்தித் தளைப்பட்டார். அம்மாநாட்டில் விளைவாக அவருடனிருந்த இளைஞர்களில் பலர் அகன்றனர்.

பாவலரேற்றின் அணியில் முற்றிலும் தனித்தமிழ் ஆர்வம், தமிழக விடுதலை வேட்கை ஆகியவற்றை மட்டுமே உள்ளுணர்வாகக் கொண்டோர் மட்டும் திரளவில்லை. கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு அன்று இருந்த இரண்டாம் தர நிலையாலும் தங்களுக்கு வேலைவாய்ப்பற்றிருப்பதாலும் வெறுப்புற்றிருந்த தமிழ் இலக்கியம் முதுகலை பயின்ற இளைஞர்கள் எண்ணற்றோர் இணைந்தனர். இந்த நிலையில் கல்லூரித் தமிழாசிரியர்கள் பிற துறை ஆசிரியர்களைப் போலவே முதல்வராவதற்குச் சம தகுதியுள்ளவர்களாக்கப்பட்டனர். ம.கோ. இரா ஆட்சிக் காலத்தில் பல புதிய பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சி, தமிழாய்வு என்ற பெயர்களில் நிறுவனங்களும் உருவாயின. இவற்றால் ஏற்பட்ட எண்ணற்ற பணியிடங்களில் வேலையற்றிருந்த தமிழ் இலக்கிய முதுகலைப் படிப்பாளிகளுக்கு வேலை கிடைத்தது. இயல்பாகவே இவர்கள் இயக்கத்திலிருந்து விலகிவிட்டனர். தனித்தமிழ் இயக்கம் மொழியைப் பொறுத்தவரை ஆட்சியாளர்களைக் குறைகூறும் ஓர் அரசியல் இயக்கத்தின் தன்மையைப் பெற்றிருந்ததால் சிலர் தனித்தமிழ் இயக்கத்தோடு தமக்கு உடன்பாடில்லை என்று காட்டுவதற்காகத் தனித்தமிழுக்கு எதிரான நிலையைக் கூட எடுத்தனர். இது பாவலரேறு அவர்கள் மனதைப் புண்படுத்தியது. எனவே ″பணம்படைத்தவர் நலனையே நாடுவதாக என் கடந்த கால நடவடிக்கைகள் அமைந்துவிட்டன. இனி ஏழை மக்களின் நலன் பற்றிச் சிந்திக்கப்போகிறேன்″ என்று ஒரு கட்டத்தில் கூறினார்கள். இந்தக் கட்டத்துக்குப் பின் அவர்கள் பொதுமை என்ற நோக்கத்தை முன்வைத்தனர். பொதுமைக் கோட்பாடுகளைக் ″கரைத்துக் குடித்தவர்கள்″ கூட திசை தெரியாது மயங்கிச் சோர்ந்து நிற்கும் இன்றைய நிலையில் பாவலரேறு அவர்களால் இந்தத் திசையிலும் எந்தத் தடத்தையும் பதிக்க முடியவில்லை.

இன்னொரு பக்கம் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி மீது பாவலரேறு வைத்திருந்த அளவிலாப் பற்று அவரைப் பின்தொடர்ந்தோரை மனம் வருந்தவைத்தது.

பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி ஆகிய தலைவர்கள் அனைவருமே தமிழுக்கும் தமிழகத்துக்கும் அதன் மக்களுக்கும் இரண்டகம் செய்துவிட்டனர்; எனவே புது இயக்கம் அமைத்துப் புதுப் பாதை காண்போம் என்று புறப்பட்டவர் அவர். அப்படியாயின் ஏன் மீண்டும் மீண்டும் கருணாநிதியின் பின் நின்று கொள்கிறார் என்ற கேள்விக்கு இறுதி வரையிலும் யாராலும் விடை காண முடியவில்லை.

பெருஞ்சித்திரனாரின் பின் அணிவகுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் இறை மறுப்பாளர்கள். பெருஞ்சித்திரனாரோ அவருக்கே உரித்தான ஓரிறைக் கொள்கை ஒன்றைக் வைத்திருந்தார். இந்த முரண்பாட்டைக் கூடப் பெரிதாக எண்ணாமல் தமிழ், தமிழகம், தமிழக மக்களின் நலன் என்ற குறிக்கோளில் அவரது வழிகாட்டலை எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு இந்த முரண்பாடு தாங்கிக் கொள்ளத்தக்கதாயில்லை. அதுவும் கருணாநிதி - ம.கோ.இரா. பிரிவின் போது பலர் மனங்கசந்தனர். இதனால் பலருக்குப் பாவலரேறு அவர்களின் நேர்மை, நாணயம் ஆகியவற்றன் மீதே கூட ஐயுறவு ஏற்பட்டுவிட்டது. ஆனால் தன் இறுதிக் காலம் வரை எவரது துணையையும் நாடாது தனித்து நின்றே போராடித் தன் வாழ்நாளையே தேய்த்துக் காட்டி அனைத்து ஐயப்பாடுகளினின்றும் நீங்கிப் பெருமை பெற்றுவிட்டார்.

மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தன் உயிர்மூச்சாகக் கருதிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகமுதலி உருவாக வேண்டுமென்ற தணியாத வேட்கையில் தென்மொழி வாயிலாகப் பாவலரேறு அவர்கள் மேற்கொண்ட அரிய முயற்சியில் பக்கவிளைவே அரசு அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டது. ஆனால் பாவாணர் இறைவன் தன்னை இப்பணிக்காகவே படைத்துள்ளதாகவும் எனவே அப்பணி முடியாமல் தன்னைச் சாகவிடமாட்டான் என்ற தவறான நம்பிக்கையாலும் தன் குடும்பத்தாரின் நெருக்குதல்களை நிறைவேற்ற வேண்டியும் அகரமுதலிப் பணியில் சுணக்கம் காட்டியபோது பாவலரேறு தன் அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆசானைக் கடிந்துகொள்ளத் தவறவில்லை. ஆனால் அவரது சொல்லாய்வு நெறிகளிலிருந்து தான் மாறுபடுவதாகத் தெரிவித்த கருத்துகள் அத்துறையில் அவரது ஆழமின்மையையே காட்டின. இருப்பினும் குறிக்கோளில் அவருக்கிருந்த இறுக்கமான பிடிப்புக்கு அது ஒரு சான்றாக அமைந்தது.

இப்போது தென்மொழி அரசியல், குமுகியல் மட்டுமே கூறும் இதழாகத் தன் முகப்பைச் சுருக்கிக்கொண்டது. அத்துடன் தேசியம் என்பதன் நிலம் சார்ந்த இயல்பைப் புரிந்துகொள்ளாமல் தமிழ் பேசும் உலக மக்களனைவரையும் ஒரு தேசியமென்று கருதி உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் அமைத்து அதன் கொள்கைகளைப் பரப்பவும் அமைப்புக்கு உதவவும் தமிழ் நிலம் இதழைத் தொடங்கினார். ″தமிழ் நிலம்″ என்ற சொல் தமிழகத்தைத்தான் குறிப்பதாகக் கொண்டிருந்தாரா என்பது தெரியவில்லை.

தேசியம் பற்றிய வரையறையில் தெளிவின்றியிருந்தார் என்பதை ஒரு குறையாகக் கூறமுடியாது; ஏனென்றால் அதற்குரிய வரையறையை இன்னும் மிகப் பெரும்பாலோரால் வகுத்துக்கொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் தேசியச் சிக்கல் ஆழப் புரையோடிப்போயுள்ளது. தேசிய ஒடுக்குமுறையின் உள்ளடக்கமான பொருளியல் ஒடுக்குமுறை மிக மறைமுகமாகவும் மென்மையாகவும் மயங்க வைக்கும் முழக்கங்களின் பின்னணியிலும் நடைபெறுவதால் அதனை வெளிப்படையாகப் புரிந்துகொண்டு எதிர்ப்புக் கோட்பாடு ஒன்றை வகுக்க எவராலும் இயலவில்லையாயினும் இந்தத் தேசிய ஒடுக்குமுறைச் சூழலை இங்குள்ள மக்கள் தன்னுணர்வின்றியே புரிந்துகொண்டுள்ளனர். எனவே பழையவர்கள் விலகினாலும் மீண்டும் மீண்டும் புதியவர்கள் தென்மொழியை மொய்த்தார்கள்.

இப்படிப்பட்ட குழப்பமான நிலையில் பொதுமை இயக்கதினர், அதிலும் மூன்றாம் அணி என அறியப்படும் மா.இலெ. குழுவினர் தங்களுக்கு இளைஞர்களைப் பிடிப்பதற்குத் திராவிடர் கழகத்துடன் தென்மொழி இயக்கத்தையும் ஒரு மூலவளமாகக் கொண்டனர். இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழுணர்வும் தமிழக விடுதலை வேட்கையும் தமிழகக் குமுக மாற்ற நாட்டமும் கொண்ட இளைஞர்கள் மா.இலெ. இயக்கங்களின் தலைவர்களின் வழிகாட்டலால் எந்தவித மக்கள் பின்னணியும் பாதுகாப்பும் பெறாத நிலையில் நடுத்தெருவில் கொண்டுவிடப்பட்டு அவர்களில் கணிசமான தொகையினர் காவல்துறையினால் நாய்களைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களைப் போல் பல மடங்கு எண்ணிக்கையினர் செயலிழந்து போயினர். எனவே இந்த நிகழ்ச்சியை எம்போன்றோரால் தவறான வழிகாட்டல் என்று ஒதுக்கித்தள்ள முடியவில்லை. திட்டமிட்ட அழிம்புவேலை என்றே ஐயுற வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல இந்த அழிம்புவேலைக்கு இரையாயின இளைஞர்களில் கிட்டத்தட்ட அனைவருமே பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோருமே என்பது இதிலுள்ள கொடிய உண்மை.

இந்நிகழ்ச்சிக்குப் பின் தமிழகத் தேசியப் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட பின்னும் மக்களைத் தங்கள் பால் ஈர்காதது மட்டுமல்ல அயற்படவும் வைக்கும் பழைய ஆசான்கள் வகுத்துத்தந்த கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் நடைமுறைகளையுமே பின்பற்றியதால் தமிழரசன் போன்ற வீறுமிக்க போராளிகளும் முன்னவர்களின் துயர முடிவையே எய்தினர்.

இன்று மார்க்சிய-இலெனினியக் குழுக்களிலிருந்து தமிழகத் தேசிய சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்புக் குரல்கள் எழுவதற்குத் தங்கள் போலி மார்க்சியத் தலைவர்களை உதறிவிட்டு வெளிவந்த முன்னாள் தென்மொழிக் குழுவினர் தான் காரணம். இருப்பினும் கோட்பாட்டளவில் தமிழகத் தேசியப் போராட்டத்துக்கும் தமிழகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை ஒழிப்புக்கும் இடையிலுள்ள இயங்கியல் உறவைப் புரிந்து கொள்ளாமல் இரண்டையுமே வெற்று முழக்கங்களாகவே இவர்கள் இன்றுவரை வைத்துள்ளனர்.

இவ்வாறு பாவலரேறு அவர்களை நாடிச்சென்ற உள்ளங்கள் எண்ணிலடங்கா. அவர்களைச் சிதறாமல் வைத்துத் தமிழகத் தேசியத்துக்கேற்ற ஒரு செயற்திட்டத்தை வகுத்துச் செயலாற்ற முடிந்திருக்குமாயின் அவரது குறிக்கோள்கள் இதற்குள் நிறைவேறியிருக்கும் என்று கூற முடியாது; ஏனென்றால் இந்தக் குறிக்கோளை அடைய நாம் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் மிகக் கடுமையும் கொடுமையும் வாய்ந்தவை; போராட்டமும் நீண்ட நெடியதாயிருக்கும். ஆனால் அந்தப் பாதையில் குறிப்பிட்ட அளவு முன்னேறியிருக்க முடியும்.

ஆனால் காலம் அவ்வாறு நினைக்கவில்லை. பாவலரேறு அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள அலையெனத் திரண்டிருந்த உள்ளங்கள் தங்கள் கனவுகளும், குறிக்கோள்களும் திசையறியாமல், நடுக்கடலில் நிற்பதைக் கண்டு கலங்கியவையே. அக்கனவுகளுக்கு வேறெந்த பற்றுக்கோடும் இல்லாத நிலையில் அக்கனவுகளுக்கும் குறிக்கோள்களுக்கும் ஒரே அடையாளமாக விளங்கிய ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் திருவுருவை இறுதியாகக் காண்பதன் மூலம் தங்கள் கனவுகளையும் குறிக்கோள்களையும் மீண்டும் வலிமையேற்ற வந்து மொய்த்தனையே.

தமிழகத் தேசிய ஒடுக்குமுறை ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் 1800 ஆண்டுகள் பழமையானது. அத்தேசிய உணர்ச்சியையும் எழுச்சியையும் வெளிவிசைகளும் உள்விசைகளும் திசைதிருப்பி மக்களை ஒருவரோடொருவர் மோதவிட்டுச் சிதைந்துவைத்திருக்கின்றன. அதே விசைகளும் மேலும் மேலும் புதிதான விசைகளும் அதே வகையான குழப்பங்களைப் புகுத்தி ருகிறார்கள். தேசியத்தின் மீது உண்மையான பரிவும் பற்றும் உள்ள சிலரும் தம் அறியாமையாலும் திசை மாறிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளாலும் கூடத் தங்களை அறியாமலே, தங்களுக்கு இயல்பான தெளிவையும் மீறி இக்குழப்பமூட்டும் பணிகளைச் செய்துவருகின்றனர்.

ஆனால் தமிழகம் என்றுமே தோற்றதில்லை. கடந்த 1800 ஆண்டுகளாக அது தன் அடையாளத்தையும் தேசிய ஓர்மையையும் கட்டிக்காத்துவந்துள்ளது. ஆனால் இன்று போல் அது தன் தேசியக் குறிக்கோளை ஐயந்திரிப்பின்றி வெளிப்படையாக அடையாளங்கண்டதில்லை. எனவே அத்தேசியக் குறிக்கோளை, அதற்கு உரிய கோட்பாட்டை வகுத்தும் அதனடிப்படையில் செயல்திட்டம் ஒன்றை வரையறுத்தும் அவற்றினடிப்படையில் இயக்கமொன்றைக் கட்டியும் எய்தும் நாள் தொலைவிலில்லை.

அவ்வாறு தமிழகம் தன் தேசியக் குறிக்கோளை நோக்கி நடைபோடும் போதும் அதனை எய்திய பின்னரும் அத்தேசியக் குறிக்கோளுக்காகப் பாடுபட்ட நேர்மையான தலைவர்களில் காலவரிசையில் முதலாவதாக ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனாரே நிற்பார்.

தமிழகத் தேசியம் என்ற ஒன்றுக்காகப் பாடுபடுவதாகத் திராவிட இயக்கத்தை இத்தமிழக மக்கள் நம்பினார்கள். ஆனால் அவ்வியக்கம் தங்கள் தன்னலத்திற்காகப் பொய் பேசி இம்மக்களை ஏமாற்றிவிட்டது என்று இன்று அனைவருக்கும் புரிகிறது. அவ்வியக்கம் வீசியெறிந்துவிட்டத் தமிழகத் தேசியக் குறிக்கோளைப் பொன்னேபோல் போற்றி எண்ணற்ற இளைய தலைமுறையினரின் உள்ளங்களின் மீது அழுத்தமாக அமர்த்திவைத்துவிட்ட பாவலரேறு அவர்களின் மிகப்பெரும் பணி காலத்தால் அழியாதது. அதற்காக அவர் தன் உயிரையே தேய்த்துக் கொண்டார். அத்தகைய அரிய அந்தத் தமிழகத் தேசியத்தை அதன் திசையறிந்து, இலக்கு நோக்கி எடுத்துச் செல்வோம்.


(இக்கட்டுரை 1995ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகும்)

20.8.07

மொழியும் அரசியலும் பொருளியலும்

அறிமுகம்

இன்று தமிழகத்தில் தாய்மொழிக் கல்வி, தமிழ் ஆட்சி மொழி போன்ற சிக்கல்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு தோன்றியுள்ளது மகிழ்வூட்டுகிறது. இவ்வரங்கில் ஆட்சி மொழி பற்றி மட்டும் ஆயப்படுகிறது.

தமிழ் ஆண்ட ஒரு மொழியா?

தமிழக வரலாற்றில் தமிழ் என்று ஆட்சியிலிருந்தது என்பதே கேள்விக்குறியாக நம் முன் நிற்கிறது. சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களில் தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரமான மதுரையில் வேள்விப்புகையின் நடுவே வடமொழி வேதங்களின் ஒலியே நிறைந்திருந்ததைக் காண்கிறோம். சிலப்பதிகாரம் காட்டும் பூம்புகாரில் இந்திரவிழாவில்கூட அந்த அளவுக்கு வேதங்களின் ஆதிக்கம் காணப்படவில்லை. ஆனால் சேரனின் வஞ்சியில் அரண்மனைக் கோயிலின் உள்ளிருந்து வடமொழிப் பூசை செய்யும் பூசாரி தலையை நீட்டுவதைக் காண்கிறோம்.

பொதுவாக உலக வரலாற்றில் ஆளுவோரும் பூசாரிகளும் மக்களுக்குப் புரியாத மொழிகளையே விரும்பி வந்துள்ளனர். ஐரோப்பாவில் ஏறக்குறைய 13 நூற்றாண்டுக் காலம் ஆட்சியிலும் கோயில்களிலும் மக்களுக்குப் புரியாத கிரேக்கமும் இலத்தீனும் தான் பயன்பட்டன. இங்கிலாந்தின் நான்காம் என்ரியும் செருமனியின் மார்ட்டின் லூதரும் கிளப்பிய புயலினால் வெடித்த போர்களில் ஒரு நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக ஓடிய குருதியாறுதான் இவ்விரண்டு மொழிகளைக் கரைத்து மக்களின் தாய் மொழிகளுக்கு இடமளிக்கத் தொடங்கியது.

தமிழகத்திலும் கழகக் காலத்தில் தமிழ் ஆட்சி மொழியாயிருந்திருக்கக் கூடும். ஆனால் கழகத்தின் இறுதிக் காலத்தில் ஆட்சியினுள் வேதமொழி ஆதிக்கம் புகுந்துவிட்டதற்குத் தடயங்கள் உள்ளன.

கழக இலக்கியங்களைத் தொகுத்தவர்களில் ஒருவராகக் கருதப்படும் உருத்திர சன்மனின் பெயர் ருத்ரசர்மா என்பதன் தமிழ் வடிவமே. இந்தப் பின்னணியில் களப்பிரர்களின் காலத்திலும் பல்லவர்களின் காலத்திலும் சமற்கிருதம் ஆட்சி மொழியானது ஒரு நிகழ்முறைத் தொடர்ச்சியின் விளைவேயன்றி மாற்று மொழியாளர் படையெடுப்பின் விளைவென்று கொள்வதற்கில்லை.

பல்லவர்கள் காலஞ் செல்லச் செல்ல தமிழ் மீது கவனம் செலுத்தியதிலிருந்து மக்களின் செயற்பாடு அதன் பின்னணியில் இருந்திருக்க வேண்டுமென்பது புரிகிறது. பல்லவர்களின் இறுதிக்காலத்தில் அரசனின் ஆதரவோடு தோன்றிய நந்திக் கலம்பகம் அவனுக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காகப் பொதுமக்கள் ஆதரவை நாடிநின்றதன் ஒரு அடையாளமே.

களப்பிரர், பல்லவர் காலங்களுக்குப் பின்னர் தோன்றிய சிவனிய எழுச்சியில் ஒரு தனித்தமிழ் இயக்கமும் அடங்கியிருக்கிறது. ஆனால் அவ்வியக்கத்தையொட்டி உருவான சோழப்பேரரசு தமிழில் பொறித்த கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் குறிப்பாக அவற்றின் மெய்சீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது.

அரசுகளும், கோயில்களும் முற்றிலும் சமற்கிருதக் கல்விக்கே அனைத்து உதவிகளும் செய்தன. மடங்களும் அம்மொழிக்கே முதலிடம் தந்தன. அதனால் பொதுமக்கள் அறிவதற்காகத் தமிழில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் எழுத்து, இலக்கணம் என்று அனைத்துவகையிலும் தரம் இழந்திருந்தன. இக்காலகட்டத்தில் செப்புத் தகடுகளில் அரசனின் மெய்சீர்த்திகள் பொறிக்கப்பட்டு அவை உள்ளூர் ஆட்சியமைப்புகளுக்கு வழங்கப்பட்டனவென்றும் அவற்றில் ஆவணச் செய்திகளை உள்ளூர் மக்கள் எழுதிக் கல்வெட்டுகளிலும் பொறித்தவர் என்றும் பர்ட்டன் றீன் என்ற அமெரிக்க ஆய்வாளர் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. இவ்வாவணங்களில் காணப்படும் கழகக் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் சில சொல்லாட்சிகள் இன்று வரையிலும் கையாளப்படுகின்றன.

சோழர்களின் காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் விளைவாகவே கலிங்கத்துப் பரணி, மூவருலா, வீரசோழியம் போன்ற நூல்கள் அரசனின் ஆதரவுடன் தோன்றின. சோழனின் அமைச்சரான சேக்கிழாரைக் கொண்டு பெரிய புராணத்தை அரசனே எழுதுவித்ததற்கும் அரசியற் பின்னணி உண்டு.

கம்பராமாயணம் அரசனின் எதிர்ப்புக்கு நடுவே எழுந்ததென்று கருத இடமுள்ளது. அதுபோலவே தமிழில் இடைக்காலத்தில் உருவான பல இலக்கியங்களும் சிற்றரசர்கள் மற்றும் உயர்குடியினரின் ஆதரவினாலும் ஆட்சியாளரை அண்டியும் அகன்றும் நடைபெற்று சமய வடிவிலான மக்கள் இயக்கங்களிலிருந்தும் தோன்றியவையே.

மொத்தத்தில் சென்ற ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் அரசுகளினால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. அதையும் மீறி மக்கள் அம்மொழியின் சீரிளமைத் திறம் குறையாது வைத்திருக்கின்றனர். வெவ்வேறு காலங்களில் மேல்மட்டத்திலுள்ள வெவ்வேறு குழுக்கள் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகத் தமிழை, அதிலும் குறிப்பாக, ஒதுக்கப்பட்ட மக்களின் தமிழை மீட்டிருக்கின்றன. சிவனிய(சைவ), மாலிய(வைணவ), சமண, புத்த இலக்கியங்கள், பிற்காலத்தில் தோன்றிய குறவஞ்சி, பள்ளு போன்ற இலக்கியங்கள் இதற்கான எடுத்துக்காட்டுகள். இறுதியில் கிறித்தவர்கள், அதிலும் கத்தோலிக்கத் கிறித்தவர்கள் தமிழை மீட்டெடுப்பதில் தைரியநாதராயிருந்து தன்னை உயர்த்திக் கொள்வது மூலம் தமிழை உயர்த்திய வீரமாமுனிவரின் வழிகாட்டலில் பெரும் பங்காற்றியிருக்கின்றனர்.

ஆனால் இவர்களின் முயற்சிகளுக்குக் காரணமாகவும் மூலவளமாகவும் இருந்தது உழைக்கும் பெருங்குடி மக்களின் தமிழே. ஒதுக்கப்பட்டிருந்த அவர்களின் கோட்டையினுள் பிறமொழி ஆதிக்கம் ஊடுருவ முடியவில்லை. வெட்ட வெட்டத் தளிர்க்கும் உயிர்மரமாகத் தமிழ் அவர்களிடம் வேர்கொண்டிருந்தது. ஆனால் இன்றைய நிலை மாறிவிட்டது. அறிவியலின் விளைவான திரைப்படங்களும் வானொலியும் தொலைக்காட்சியும் தமிழின் வேரில் வென்னீர் ஊற்றுகின்றன. இந்த நிலையில் தமிழைக் காக்கவும் மீட்கவும் நாம் அதிக முனைப்போடும் ஆழ்ந்த சிந்தனையோடும் செயற்பட வேண்டியுள்ளது.

″விடுதலைக்கு″ப் பின் பதவியேற்ற அரசுகள் தமிழ் ஆட்சி மொழியாவதற்குப் பெரும் முயற்சிகள் மேற்கொண்டன. படிப்படியாகத் தமிழ் ஆட்சிப் பணிகளில் இடம் பிடித்து முன்னேறியது. ஆனால் அதற்குப் பல தடைகள் போடப்பட்டன. எடுத்துக்காட்டாக உயர்நீதி மன்றத்தில் தமிழில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற திட்டம் தமிழக அரசால் உருவாக்கப்பட்ட அதே வேளையில் நடுவணரசு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாநிலத்துக்கு மாநிலம் மாற்றப்படுவார் என்று ஆணை பிறப்பித்தது. எனவே தீர்ப்புகளைத் தமிழில் எழுதும் முயற்சி மேற்கொள்ளப்படவே இல்லை.

ஐந்தாண்டுத் திட்டம் போன்று ஏறக்குறைய மாநிலத்தின் அனைத்துத் துறைத் திட்டங்களும் நடுவணரசிடமிருந்து உதவி பெறும் வகையில் இந்திய அரசின் நிதி ஆள்வினை மாற்றப்பட்டது. எனவே உருவாக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உருவாக்கப்பட்டன.

மாற்றம் என்பது கடினமான உழைப்பும் கவனமும் தேவையான நிகழ்முறை. அதனைச் செயற்படுத்துவது எளிதல்ல. இந்தச் சிக்கலான நிலையில் மேற்கூறியவாறான தடைகள் இந்த மாற்றத்தைச் செயற்படுத்தும் எண்ணத்தையே இல்லாமலாக்கி விடுகிறது.

இந்த மாற்றத்தைச் செய்ய பொதுமக்களின் எழுச்சி தேவை. ஆனால் இந்த எழுச்சி தோன்றுவதற்குரிய சூழ்நிலையும் இல்லை. அதாவது தமிழக மக்களின் வாழ்வுக்குத் தமிழ் அறிவு இன்றியமையாதது என்ற சூழ்நிலை இல்லை. குறைந்தது தமிழால் வாழமுடியும் என்ற நிலை, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், பாட்டரங்கம், கருத்தரங்கம் நிகழ்த்துவோர் தவிர, சராரசித் தமிழ் மகனுக்கு இல்லை. உள்நாட்டில் வேலை வாய்ப்பில்லை; எனவே பிற மாநிலம், ஏதாவது அயல்நாடு ஒன்றுக்கு ஓடுவதுதான் வாழ வழி என்ற சூழ்நிலை உள்ளது. இதனால் தமிழ் ஆட்சிமொழி அல்லது கல்வி மொழியாக இருக்க வேண்டும் என்ற உந்துதலுக்கு வழியில்லை.

இந்த நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும்? நம் நாடு பொருளியலில் தற்சார்பு பெற நாம் போராட வேண்டும். மக்களின் மூலதனத்தையும் முன் முயற்சியையும் உழைப்பையும் முடக்கும் வகையில் அமைந்திருக்கும் வருமானவரிக் கெடுபிடிகள், தொழில் உரிமமுறை, மூலப்பொருட்களுக்கு ஒதுக்கிட்டுமுறை, இசைவாணை(பெர்மிட்) முறை ஆகியவை ஒழியப் பாடுபட வேண்டும். ஏற்றுமதி என்ற பெயரில் அரும்பொருட்கள் எல்லாம் மூலப்பொருள் நிலையில் ஏற்றுமதி செய்யப்படுவதை எதிர்த்து நாம் போராட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் தான் இங்கு பிழைக்க முடியாமல் பிற நாடுகளுக்கு பிழைப்பு தேடி ஓடுவதற்கும் அவ்வாறு ஓடிய இடங்களில் பன்றிகளைப் போல் இருட்டறைகளில் அடைக்கப்பட்டும் நாய்களைப் போல் கொலை செய்யப்பட்டும் அழிவை நோக்கி நடைபோடும் இளைய தலைமுறையின் கவனம் நம் நாட்டின் மீதும் அதன் இன்றைய அவலநிலைக்குரிய காரணங்கள் மீதும் திரும்பும். அவற்றின் விளைவாக எழும் செயலூக்கங்களில் ஒன்றாக கலை இலக்கிய மலர்ச்சி தோன்றும். பிற மொழிக் கல்விக்கு மக்களிடையில் இருக்கும் நாட்டம் குறையும்; அவர்களின் ஆதரவை நாடும் நம் முயற்சியும் வெற்றி பெறும்.

ஆட்சியாளர்கள் எப்போதுமே மக்களுக்குப் புரியாத மொழியொன்று ஆட்சி மொழியாக இருப்பதைத் தான் விரும்புவர் என்று மேலே குறிப்பிட்டோம். நம் நாட்டில் நேற்று சமற்கிருதம். இன்று ஆங்கிலம், மக்களிடையில் ஆங்கிலக்கல்வி பரவினமையால் அது பலருக்கும் புரிந்து கொள்ளத்தக்க மொழியாகி விட்டது. எனவே இப்போது இந்தியைப் பற்றிக்கொள்ள முனைகின்றனர். இத்தகைய சூழலில் நாம் உரிய வகையில் செயலாற்றாமலிருந்தால் அடுத்து இந்தி மொழி தான் ஆட்சிமொழி கல்விமொழியாகும்.

எனவே நாம் ஆட்சியும் கல்வியும் தமிழ் இடம் பெற வேண்டுமென்று நினைத்தால் பொருளியல் தற்சார்புக்கான போராட்டங்களின் மூலம் பொதுமக்களின் கவனத்தையும் ஆதரவையும் ஈர்த்து அத்துடன் தமிழ் மொழி மேம்பாட்டுக்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

சொல்லாக்கத்தைப் பொறுத்த வரையில் அதற்குத் தேவையான மனித வளத்தைப் பெறுவது பெரும் சிக்கலில்லை. மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட திறன் தேவையாயிருந்து அத்திறனை வெளிப்படுத்துவோருக்குச் சிறப்பு கிடைக்கும் நிலையிருந்தால் திறனுள்ளோர் தாமே வெளிப்படுவர்.

இருந்தாலும் இன்று மொழிபெயர்ப்புப் பணியிலிறங்குவோர் முதலில் கழக இலக்கியங்கள் தொடங்கி வெள்ளையர் வரும் வரை எழுந்த இலக்கியங்கள் அவற்றிலும் சிறப்பாக அந்நூற்களுக்குப் பண்டை உரையாசிரியர்கள் எழுதிய பல்வேறு வகைப்பட்ட உரையாக்கங்கள், கல்வெட்டுகள், பட்டயங்கள் ஆகிய அனைத்தையும் அலச வேண்டும். அவை அனைத்துக்கும் சொல்லடைவு, பொருளடைவு உருவாக்க வேண்டும். அவற்றிலிருந்து ஆட்சித்துறையில் தேவைப்படும் சொற்களை அப்படியே பெற்றுக்கொள்ள முடியும். அறிவியல்துறையிலும் கலையியல், மொழியியல் துறையிலும் பலவற்றுக்கு பொருள் விளக்கமும் தமிழ் வடிவமும் கிடைக்கும். அவற்றுக்கு உட்படாத சொற்களுக்கு மட்டுமே புதிய சொற்களை வடிக்க வேண்டியிருக்கும்.

அவ்வாறு புதிதாகப் புனைய வேண்டிய சொற்களை அதன் நடைமுறைக் கருத்தின் அடிப்படையிலும் மூலமொழிச் சொல்லின் வேர்ப் பொருளைக் கண்டும் புனையலாம்.

அவையன்றி கலைக்கதிர் போன்ற இதழ்களும் பாவாணர், பெருஞ்சித்திரனார், வா.மு.சேதுராமன், இராமலிங்கனார் போன்று இயக்கமாகச் செயற்பட்டவர்களும் கே.என்.இராமசந்திரன், இல.க.இரத்தினவேலு போன்ற எண்ணற்ற தனி ஆர்வலர்களும் உருவாக்கியுள்ள சொற்களைத் தொகுத்துத் தெரிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தப் பணிகளை எல்லாம் அரசாங்கம் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. கடந்த காலம் போல் தமிழகத்துப் பொதுமக்களே அமைப்புகளை ஏற்படுத்தி பணமும் நல்ல மனமும் படைத்த பெருமக்களின் ஆதரவை நாடிப் பெற்றுச் செயற்படுத்த வேண்டும். மதுரை பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியொன்று மிகச் சிறப்பான ஒரு செயல்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவது பயனுடையதாயிருக்கும். அதே வேளையில் இந்நாட்டின் பொருள் வளஞ்சிறக்கத் தேவையான முயற்சிகளின்பால் மக்களின் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் அவர்களுக்கு அதற்குரிய வழிகாட்டுதலும் கூட இன்றியமையாதது, முதன்மையானது.

நிலமும் காலமும் முதற்பொருளென்பது பொருளிலக்கணம். மொழி மரமானால் அம்மொழி பேசும் மனிதன் அம்மரத்தை ஈன்று வளர்த்துத் தாங்கி நிற்கும் நிலமாகும். நிலம் பாழாகிப் போனால் மரம் வாழாது. பேசும் மக்கள் வளங்குன்றி வறுமையுற்று வேரற்று நிற்பார்களானால் மொழி எவ்வாறு வளம் பெறும்? எனவே தமிழை வளர்க்க வேண்டுமென்று நெஞ்சார விரும்புவோர் தமிழ் மக்களின் பொருளியல் வாழ்வு சிறக்கத் தேவையான நடவடிக்கைகளில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

13.11.05

ஒரு மொழிபெயர்ப்பின் கதை

"தமிழ்வழி உயர்கல்விக்கு முன்னோடி" என்ற திரு. தமிழண்ணல் அவர்களின் கட்டுரையில் (03.07.1997) தமிழ்வழி உயர்கல்விக்கும் மழலையர் கல்விக்கும் தமிழறிஞர்களே வாதாடும் நிலை உள்ளது; அறிவியல் துறையிலுள்ளவர்கள் இதில் பங்கேற்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் இது ஒரு முழுமையான கணிப்பல்ல என்பதற்கு என் பட்டறிவு ஒன்றே சான்றாகும்.

பொதுப்பணித் துறையில் பொறியாளராய் பத்து ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் முழு ஆற்றலையும் செலவிடத்தக்க துறை அதுவல்ல என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே பொறியியல் கல்லூரியில் பாடநூலாக விளங்கியதும் இன்றும் பொதுப்பணித்துறையில் பாசனப் பணிகளுக்கான இன்றியமையாத பார்வை நூலாக விளங்குவதுமான "பொறியியல் கல்லூரிக் கைநூல் (College of Engineering-Manual Irrigation by Col.W.M.Ellis (ELLIS)) என்ற நூலைத் தமிழாக்கம் செய்யும் எண்ணம் உருவானது. பொதுப்பணித்துறையில் பட்டயப் பொறியாளர்களின் அமைப்பான தமிழ்நாடு பொறியியல் சங்கம் எனும் அமைப்புக்கு மாவட்டம் தோறும் கிளைகள் தொடங்கி "பொறியியல் கதிர்" என்ற ஒரு மாத இதழும் தொடங்கிய நேரம். இந்த விரிவாகத்தை முன்னின்று நடத்தியவர்களில் முதன்மையானவரும் தமிழில் பெரும்புலமை வாய்ந்தவருமான ஒரு பொறியாளர் இத்தமிழாக்கத்தைப் "பொறியியல் கதிரில்" வெளியிட ஒப்புக் கொண்டார். எனவே நூலின் முதலதிகாரத்தை மொழிபெயர்த்து அனுப்பினேன். ஆனால் இதழின் பொறுப்பிலிருந்தவராக இன்னொருவர் தன்னை அறிவித்துக் கொண்டு முழு நூலையும் மொழிபெயர்த்துத் தந்தாலே வெளியிட முடியும் என்று எழுதினார். ராயல் அளவு எனப்படும் பெரிய அளவில் 455 பக்கங்கள் கொண்ட இப்பெருந்நூலைத் தமிழாக்கம் செய்யக் குறைந்தது இரண்டாண்டுகளாவது ஆகும். எனவே இது ஒரு மறைமுக மறுப்பு என்பது புரிந்தது. அத்துடன் அவ்வாண்டு நடைபெற்ற சங்க மாநாட்டில் மேலே குறிப்பிட்ட தமிழ்ப் புலமை வாய்ந்த பொறியாளர் எழுதிய பொறியியல் கலைச் சொற்கள் பற்றிய இரு நூல்கள் சங்கச் செலவில் வெளியிடப்பட்டன. எனவே கொடுத்த வாக்கு நிறைவேற்றப்படாது என்று தமிழாக்கத்தைத் தற்காலமாக நிறுத்தி வைத்தேன்.

சில ஆண்டுகள் சென்ற பின் வேலை குறைவான ஒரு சூழலில் தசுநேவிசு என்ற பொறியாளர் நண்பர் மொழிபெயர்ப்பை முடிக்குமாறும் சங்கத்தின் மூலம் நூலாக வெளியிடும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்வதாகவும் வாக்களித்தார். (அவர் இன்று வரை அந்த முயற்சியில் தளரவில்லை). இரண்டாண்டு கடும் உழைப்பில் தமிழாக்கப் பணி முடிந்தது. சங்கத்தாரை அணுகிய போது அரசு மூலம் வெளியிட ஏற்பாடு செய்வதாகக் கூறினர்.

தமிழ் அமைப்பு ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரிடம் இது பற்றிப் பேசிய போது தமிழ் வளர்ச்சி இயக்கத்துக்கு ஒரு மதிப்பீடு அனுப்பினால் அவர்கள் கடன் வழங்குவர் என்றார். அன்றைய விலைவாசியில் 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும் இப்பணிக்கு நாம் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீடு போட்டுக் கடன் பெற்று மீதி 40 ஆயிரம் ரூபாயை நாம் வைத்துக் கொள்ளலாம் என்றார். அதற்கான தொடர்புகள் இருப்பதாகக் கூறினார். இந்தத் "தமிழ் வாணிகத்தை" நான் விரும்பவில்லை. பொதுப்பணித்துறையுடனோ பொறியியல் கல்லூரியுடனோ தொடர்பில்லாமல் வெளியிடப்பட்டு நூல் நிலையங்களில் நூல் தூங்குமானால் அதனால் பயனில்லை என்பதாலும் அந்தக் கருத்தை நான் ஏற்கவில்லை.

இதற்கிடையில் 1972 இல் தொடங்கி 1980 வரை அரசு வெளியீடான மேற்படி ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்வதற்கான இசைவை வேண்டி எனக்கும் பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர் (பொது) அவர்களுக்கும் அரசுத் துணைச் செயலாளருக்கும் இடையில் ஒரு நீண்ட கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. இறுதியில் பொதுப்பணித்துறை துணைத் தலைமைப் பொறியாளர் (பொது) பொறுப்பிலிருந்த திரு. பி. இராமகிருஷ்ணன் அவர்களை 1981ஆம் ஆண்டு தொடக்கத்தில் சந்தித்து நிலைமையை விளக்கினேன். அலுவலர்களை வட்டம் விட்டு வட்டம் மாற்றுவது பதவி உயர்வு போன்ற ஆள்வினைப் பணிகளுக்குப் பொறுப்பான அவர் அப்பதவிக்குப் பெருமை சேர்த்தவர்களில் ஒருவர். அதிகம் பேசும் வழக்கமில்லாத அவர் உடனேயே அதனை அரசு வெளியீடாக பொதுப்பணித்துறையே வெளியிடுவதாக அறிவித்துப் பாசனத்துக்குப் பொறுப்பான தலைமைப் பொறியாளர் (பாசனம்) அவர்களை மொழிபெயர்ப்புக்கு ஒப்புதல் அளிக்கும்படி வேண்டினார். (எண் வேலை II-1/96787/78-11 நாள் 10.04.81) பாசனத் தலைமைப் பொறியாளர் மொழிபெயர்ப்பின் தரம் பற்றிய கருத்தறிய தமிழ் வளர்ச்சி இயக்ககத்துக்கு அனுப்பினார். (எண் 3/29699/81-1 நாள் 20.11.81)

வந்தது வினை. தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினர் அனைத்தையுமே திசை திருப்பி விட்டனர். தாங்கள் அந்நூலை வெளியிட வாய்ப்பில்லையென்றும் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனமும் பொறியியல் நூல் வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கேட்காத கேள்விக்கு விடை கூறினர். (ந.க.எண் இ3/1793/081 நாள் 29.03.91). அத்துடன் தங்கள் "தொழிலில்" கருத்தாக நூல் வெளியீட்டுக்குத் தாங்கள் கடன் கொடுப்பதாகவும் கடன் தொகையில் மானியம் கொடுப்பதாகவும் ஒரு நீண்ட பட்டியலை இணைத்திருந்தனர். இறுதியில் போகிற போக்கில் "மொழிப் பெயர்ப்பாளரின் அரிய முயற்சிக்குப்" பாராட்டுதலையும் தெரிவித்திருந்தனர்.

இதற்குள் அப்போதைய முதல்வரோடு ஏற்பட்ட ஒரு கருத்து வேறுபாட்டால் திரு.பி. இராமகிருஷ்ணன் அவர்கள் எங்கோ ஒரு மூலைக்கு வீசப்பட்டுவிட்டார். புதிதாக வந்தவர்கள் தங்கள் வேலையை எளிதாக்க வேண்டி தமிழ் வளர்ச்சி இயக்கத்தினர் மடலைச் சாக்காகக் காட்டி வெளியிட வாய்ப்பில்லை என்று கதையையே முடித்துவிட்டனர். நடந்தவற்றை எவ்வளவு விளக்கிக் கூறியும் பயனில்லை.

1982ஆம் ஆண்டில் அப்போதிருந்த தலைமைப் பொறியாளர் (பொது) திரு. ஜெயபாலன் அவர்கள் இம்மொழிபெயர்ப்பைப் பாசனத்துறையால் வெளியிடப்படும் "பாசன முறையின் மறுமலர்ச்சிச் செய்தி" (New Irrigation Era) எனும் காலாண்டிதழில் வெளியிட்டு மொழிபெயர்ப்பைப் பற்றிய துறைப் பொறியாளர்களின் கருத்தை அறியுமாறு ஆணையிட்டார்.

சில நண்பர்களின் அறிவுரைப்படி மதுரைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் வ.சுப. மாணிக்கனார் துணை வேந்தராயிருந்த காலத்தில் அவரை இருமுறை சந்தித்து மொழிபெயர்ப்பின் படியொன்றையும் கொடுத்தேன். தன்னால் இயன்றதைச் செய்வதாகவும் ஊக்கத்தை இழக்க வேண்டாமென்றும் தேறுதல் கூறினார். தங்கள் நூல்களையே வெளியிட முடியாத பொருளியல் நெருக்கடியில் பல்கலைக் கழகம் இருந்ததாக அறிந்தேன்.

1985 வாக்கில் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வ.அய். சுப்பிரமணியன் அவர்களைப் புலவர் சரவணத் தமிழன் அவர்களின் பரிந்துரையின் பேரில் சந்தித்தேன். மொழிபெயர்ப்பு தூய தமிழில் இருப்பது குறித்து, "நாங்கள் படிப்படியாகச் செய்ய நினைப்பதை நீங்கள் ஒரே அடியில் செய்ய நினைக்கிறீர்கள்" என்று அவர் கூறினார். அது பாராட்டா. குறையா என்பது தெரியவில்லை. ஆனால் "பாசன முறையின் மறுமலர்ச்சிச் செய்தி" இதழில் இம்மொழிப்பெயர்ப்பு வெளியிட்டிருப்பதை அறிந்து அதைத் தாங்கி வந்த இதழ்களின் தொகுதியொன்றைக் கேட்டுப் பொதுப் பணித்துறையின் தலைமைப் பொறியாளருக்கு மடலொன்று எழுதினார். அதற்குப் பயனேதும் இல்லை. எனவே அம்முயற்சி அத்துடன் நின்றது.

முதலில் குறிப்பிடப்பட்ட தமிழ்நாடு பொறியியல் சங்கம் பொதுப்பணித் துறையிலுள்ள பட்டயப் பொறியாளர்களின் சங்கமாகும். இதைத் தவிர (பகுதி நேரத்திலன்றி) முழு நேரப்படிப்பில் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றோருக்கு உதவிப் பொறியாளர்கள் சங்கம் என்று ஒன்று உள்ளது. இவ்விரண்டின் தலைவர்களும், சாதிச் சங்கங்கள் போல் உறுப்பினர்களுக்கிடையில் பகையை மூட்டிக் கொண்டிருப்பர். இவை இரண்டையும் இணைப்பதற்கு முயன்றால் அம்முயற்சியை இருவரும் "ஒற்றுமையாகச்" செயற்பட்டு முறியடிப்பர். (அத்தகைய முயற்சியில் ஈடுபட்டவர்களில் நானும் ஒருவன்).

இது போன்ற "சாதி"ச் சங்கங்கள் அரசின் அனைத்துத்துறை ஊழியர்களிடையிலும் உள்ளன. ஆட்சியாளர்கள் இத்தகைய சங்கங்களை ஊக்குவித்துத் தாங்கள் நடுவர்கள் போலிருந்து தங்களைக் காத்துக் கொள்கின்றனர். இத்தகைய பூசல்களிலிருந்து தப்பித்துக் கொண்டவர்கள் இரு துறையினர் மட்டுமே - மருத்துவர்களும், வழக்கறிஞர்களும். மிக அதிகமாகச் சிதறுண்டு கிடப்பவர்கள் ஆசிரியர்கள்.

இந்தத் தமிழ்நாடு பொறியியல் சங்கத்தின் தலைவர்கள் பட்டயப் பொறியாளரான என்னைக் காட்டி இந்த மொழிபெயர்ப்பெனும் அரிய பணியை அரசே அச்சிடுவதற்காகத் தாங்கள் பெரும் முயற்சி எடுப்பதாக ஒவ்வொரு பொதுக்குழு அல்லது மாநாட்டில் முழுங்குவர். அண்மையில் இரண்டு மூன்று மாதங்களில் அவ்வாறு அரசை அச்சிட வைக்கும் பொறுப்பை சங்கப் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைத்திருப்பதாகவும் அதற்கு நான் ஆயத்தமாக இருக்க வேண்டுமென்றும் இருமுறை ஆட்கள் வந்து கூறினர். அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்த போது இதைப் பற்றித் தெரிந்து கொள்ள பொதுச் செயலாளரைப் பார்க்கச் சென்றேன். சில ஆண்டுகள் முன் வரை நன்றாகப் பழகியிருந்தும் முதலில் அவர் என்னை அடையாளம் "தெரிந்து கொள்ளவில்லை," சொன்னதும் தன்னால் எனக்கு ஏதாவது வேலை ஆக வேண்டியுள்ளதா என்று கேட்டார். மொழிபெயர்ப்பு பற்றிச் சங்கத்திலிருந்து தொடர்பு கொண்டதைப் பற்றி நான் கூறியதும் "ஓ...." என்று கூறி பக்கத்திலிருந்தவரிடம் "ஏம்பா இது குறித்து ஏதோ ‘பேப்பர்’ வந்தது போலிருக்கே" என்று கேட்டார். எனக்குப் புரிந்தது. "இது பற்றிய முயற்சியை நீங்கள் கைவிட்டு விடலாம், எனக்கும் ஆர்வமில்லை" என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

இது ஒரு தன் புராணமல்ல. ஒருவனின் பட்டறிவு மூலம் வெளிப்படும் அரசு அமைப்பின் குறுக்குவெட்டுத் தோற்றமே இது.

பாவாணரின் தனித்தமிழ் இயக்கத்தின் விளைவாகத் தமிழகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் தமிழாக்க முயற்சிகள் எழுந்தன. மதுரை மருத்துவக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக இருந்த இல.க. இரத்தினவேலு என்பார் மாண்டலீவின் காலமுறைத் தனிமைப்பட்டியிலுள்ள தனிமங்களனைத்துக்கும் அவற்றின் அனைத்துலகப் பெயர்களின் ஒலிப்பில் தமிழ்ப்பெயர்களை வழங்கி (எ.டு. Sulphur - சுற்பொறை. Phosphorous - பொசுப்பொறை) அவற்றுக்குச் சொற்பிறப்பியல் விளக்கங்களுடன் "தென்மொழி" இதழில் கட்டுரைத் தொடர் எழுதினார். காலமுறைப் பட்டியலையே தமிழ்க் குறிகளுடன் வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் பொறியாளர் ஒருவர் மின் துறையில் வழங்கப்படும் சொற்கள் அனைத்துக்கும் தூய தமிழ்ச் சொற்களை வடித்து அவற்றை விளக்கி நூல் எழுதியுள்ளார். "கடைசல் பொறிகள்" என்ற பெயரில் "லேத்"களைப் பற்றிய கலைச் சொற்களுடன் ஒருவர் நூலெழுதியுள்ளார். பாவாணரின் தனித்தமிழ்க் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத "தினமணி"க் கட்டுரையாளர்கள் திரு.கே.என். இராமச்சந்திரன், நெல்லை சு. முத்து போன்றோர் தூய தமிழ்க் கலைச் சொற்களைத் தங்கள் அறிவியற் கட்டுரைகளில் கையாண்டுள்ளனர். நெல்லையில் மாநிலத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பை முப்பதுகளில் நிறுவிய அறிஞர் இ.மு. சுப்பிரமணியனார் ஆட்சிச் சொல்லகராதியும் பாடநூல்களுக்குக் கலைச் சொல்லாக்கமும் வெளியிட்டுளார். அவர் தமிழப்புலவர் அல்லர். (அவருக்கிருந்த தனிப்பட்ட செல்வாக்கால் அரசே அப்பணியை அவருக்கு அளித்தது). இன்னும் வெளிச்சத்துக்கு வராதோர் எத்தனையோ பேர்.

ஆனால் உயர்கல்வி படித்த தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் என்ன செய்தனர்" அரசு உருவாக்கிய "தமிழ் வளர்ச்சி" அமைப்புகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பதவிகளைப் பெற்றனர். அதிகார அமைப்போடு அமைப்பாக ஒன்றிக் கலந்தனர். தாமும் தனக்கு வேண்டியவர்களும் எழுதிய நூல்களை வெளியிட்டனர். வேறு சிலர் தங்கள் முனைவர் ஆய்வுக்காகக் கலைச்சொல் ஆக்கத்தில் இவர்களின் உத்திகளை அலசினர்.

நமது அரசு நாட்டின் பொது வளர்ச்சிகளுக்குத் தேவையான அடிப்படைகளை உருவாக்கி மக்களின் சொந்த முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதை விட்டு உதவிகள், சலுகைகள், மானியங்கள், கடன்கள் என்ற பெயரில் அனைத்துத் துறை ஊழியர்களையும் "பணப்பட்டுவாடா" செய்பவர்களாக மாற்றி அவர்களது கைகளில் பணத்தைத் திணித்து அவர்களது நோக்கையும் போக்கையும் கெடுத்து ஊழலும் கையூட்டும் சமூகத்தின் அடி முதல் முடி வரை ஊடுருவ வைத்துள்ளது. அது போலவே "தமிழ் வளர்ச்சி" அமைப்புகளிலும் "பணப்பட்டுவாடா" உத்தியைப் புகுத்தி தமிழறிஞர்களைக் கெடுத்தது. அதற்கிசைய வெளியிலுள்ள "தமிழ்த் தொண்டு" அமைப்புகள் இடைத்தரகர்களாகச் செயற்பட்டன. இவ்வாறு தமிழ் வளர்ச்சிக்கென்று ஒதுக்கப்பட்ட பணம் வழக்கம் போல் "புல்லில் சிந்திய தவிடாக் உரியவருக்குப் பயன்படாமல் போயிற்று.

அறிவியல் துறைகளில் இருந்து கொண்டு கலைச் சொற்களையும் மொழிபெயர்ப்புகளையும் உருவாக்கியோரில் பலர் பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் பெற்றவரில்லை, உயர் பதவிகளில் அமர்ந்தவர்களில்லை. அரசுத்துறைகளிலுள்ள எளிய கீழ்நிலை அதிகாரிகள்தாம். இவர்கள் வயிற்றுப்பாட்டுக்காகவோ பணம் ஈட்டவோ "தமிழ்ப்பணி" ஆற்றியவர்களல்ல. வயிற்றுப்பாட்டுக்கென்று வேறு தொழில் செய்தவர்கள்.

அந்தத் தலைமுறையினருக்கு அவர்களது சமூக, பொருளியல் பின்னணி எதுவாயிருந்தாலும் அறிவுத் திறனுக்கேற்ற கல்வித் தகுதியை ஓரளவு பெற முடிந்தது. அத்தகுதிக்கேற்ற வேலையும் எளிதில் கிடைத்தது. ஆனால் தமிழைப் பாடமாக எடுத்தவர் நிலை வேறு. அவர்களுக்கு வேலைவாய்ப்பும் குறைவு, சம்பளமும் குறைவு, மதிப்பும் குறைவு. அதனால் தமிழில் உயர்படிப்புப் படித்தோரெல்லாம் "தென்மொழி" இதழின் பின்னால் ஓர் பேரியக்கம் உருவாகக் காரணமாயிருந்தனர். ஆனால் புதிய பல்கலைக் கழகங்களும் தமிழ் வளாச்சி அமைப்புகளும் உருவாகி தமிழ்ப் பேராசிரியர்களும் பிறதுறைப் பேராசிரியர்களுக்கு ஒப்ப மதிக்கப்படும் நிலை வளர்ந்ததும் பெரும்பாலோர் தங்கள் கடந்த காலத்தை வீசியெறிந்து விட்டு அதிகார அமைப்பினுள் ஒன்றிவிட்டனர். தமிழே அவர்களது "வாழ்வாகி" விட்டது.

பாவாணர், மற்றும் "தென்மொழி" மரபில் வந்த பேராசிரியர்கள் அனைவருக்கும் அறிவியல் துறைகளிலிருந்து தமிழாக்கம், கலைச் சொல்லாக்கம் செய்தவர்களைப் பற்றி நன்றாகவே தெரியும். ஆனால் அவர்கள் தமிழை “வளர்க்கும்” பொறுப்புகளில் அமர்ந்த பின்னர் அந்த அருஞ்செயலாளர்களின் ஆக்கங்கள் வெளிச்சத்தைக் காண எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

என் மொழிபெயர்ப்பு பற்றிப் பொதுப்பணித்துறையிலுள்ள பெரும்பாலான பொறியாளரும் அறிவார். முன் சந்தித்திராத அத்தகைய ஒருவர் என்னைச் சந்திக்க நேர்ந்து என் பெயரை அறிந்ததும் அந்த மொழிபெயர்ப்பைக் கூறிப் பாராட்டுவார். பொறியியல் கருத்துக்களைத் தமிழில் பார்ப்பதிலுள்ள ஆர்வம் அவர்களிடம் தெளிவாகவே வெளிப்படும். இவ்வாறு தான் அனைவரும் தம் தாய்மொழி வலிமை பெறுவதில் ஆர்வமாகவே உள்ளனர். ஆனால் உண்மையான தடங்கல் தமிழறிஞர்கள், தமிழப் பேராசிரியர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் போன்றோரிடமிருந்தே வருகிறது.

தமிழ் ஆட்சி மொழிக்கும் பயிற்று மொழிக்கும் தெருவில் இறங்கிப் போராடும் தமிழறிஞர்கள் தாங்கள் பதவியிலிருந்த போது செய்யத் தவறியவற்றை இனிமேலாவது செய்யுமாறு அரசை நெருக்கித் தமிழில் கலைச் சொற்களில்லை, பாட நூற்களில்லை என்ற தமிழ் எதிர்ப்பாளர்களின் கூற்றுகளுக்கு அடிப்படை இல்லாமல் ஆக்க வேண்டும். அதற்கு முதற்படியாகத் தமிழ் வளர்ச்சி அமைப்புகளிலாவது "பணப்பட்டுவாடா" உத்தியை முடிவுக்குக் கொண்டு வருமாறு அரசுக்குக் கூற வேண்டும்.

(இக் கட்டுரை 1997 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. தென்மொழி இதழிலும் திண்ணை இணைய இதழிலும் வெளிவந்தது. “தமிழ் பாதுகாப்பு குரல்” ஒலிக்கும் வேளையில் தமிழ் ஆர்வலர்களின் சிந்தனையைத் தூண்டுவதாக இக் கட்டுரை அமையும்.)