13.12.15

சாதி வரலாற்றுக்கு ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 6


நெருப்பிலிட்டால் பொன்னாகும்:
வலங்கையர் கதையில் வரும் இன்னொரு துணைக் கதை ஆர்வமும் சுவையும் ஊட்டுவதாகும். ஒரு பனையேறியின் குடிலுக்கு ஒரு முனிவர் வந்தார். பசிக்கு ஏதாவது வேண்டுமென்றார். பனையேறியின் மனைவி இருந்த பழங்கஞ்சியைக் கொடுத்தாள். பசியாறிய முனிவர் ஏதாவது பழைய இரும்பு இருந்தால் கொடுவெனக் கேட்டார். அவள் கொடுத்த இரும்புத் துண்டில் பக்கத்திலிருந்து பறித்த ஒரு பச்சிலையின் சாற்றைத் தடவி அதனை அடுப்புத் தழலினுள்[1] வைக்குமாறு கூறிவிட்டுச் சென்றுவிட்டார். அடுப்பில் வைத்த இரும்புத் துண்டை பின்னர் எடுத்துப் பார்த்த போது அது தங்கமாக மாறியிருந்தது. கணவன் வந்ததும் நடந்தவற்றைக் கூறினாள். அதன் பின் அவர்கள் கையில் கிடைத்த இரும்புத் துண்டுகளை எல்லாம் அப் பச்சிலைச் சாற்றைத் தடவித் தீயிலிட்டுத் தங்கமாக்கினர்; பெரும் செல்வம் ஈட்டி அரசும் அமைத்தனர் என்கிறது கதை.

            இந்தக் கதையில் முகாமையான பங்கு பெறுவது நெருப்பு. அது ஒரு புதிய தொழில்நுட்பத்தின் குறியீடாக நிற்கிறது. பதனீரை எடுப்பதற்குப் பனையிலுள்ள பாளைகள் எனப்படும் பூந்தண்டுகளைக் கடுப்பு எனப்படும் கிடுக்கியால் நசுக்கிப் பதப்படுத்‌‌திப் பின்னர் அவற்றைப் பாளையரிவாள் எனப்படும் கூ‌‌‌‌‌‌‌ரிய அறுவாள்களால் சீவுகின்றனர். அப்போது அதிலிருந்து சொட்டுச் சொட்‌டாக சுவையான நீர் சுரக்கிறது. பனை ஓலைகளின் மட்டைகளில் கட்டப்பட்ட மண் கலயங்களில் அது விழுமாறு வைக்‌‌‌கின்றனர். கலையத்தினூடாகப் பதனீர் கசிந்து ஆவியாகிவிடாமல் தடுப்பதற்காகக் கலயத்தை நெருப்பில் போட்டு வெளிப்புறத்தில் புகைபடிய வைக்கிறார்கள். வாய்ப் பகுதியில் பனை ஓலையை மடித்து மூடிக் காற்றால் ஆவியாகாமலும் ஈக்கள் குடித்து விடாமலும் காக்கிறார்கள். இவ்வாறு சேரும் பதனீர் புதிய கலயத்தில் அல்லது வேறு கலத்தில் ஒன்று இரண்டு நாட்களுக்குள் புளிப்பேறி நொ‌‌தித்துக் கள்ளாகிறது. பழகிய கலயத்தை உலரவிடாமல் அதில் தொடர்ந்து பதனீர் பிடித்தால் அது உடனேயே கள்ளாகி ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விடுகிறது. பதனீர் எடுப்பதற்கு ஒரு நாளில் காலை, மாலை இரு வேளையும் பாளைகளைச் சீவி விட வேண்டும். காலையில் ஒருவேளை மட்டும்தான் பதனீர் எடுக்கப்படும்.

            இவ்வாறு கள்ளிறக்குவதொன்றே நோக்கமாகக் கொண்டிருந்த பனைத் தொழிலில் ஒரு புரட்சியைச் செய்தது கருப்புக்கட்டி செய்யும் புதிய தொ‌ழில்நுட்பம்‌. கருப்புக்கட்டி என்பதைத் தென் மாவட்டங்களில் கருப்பட்டி என்றும் வட மாவட்டங்களில் பனை வெல்லம் என்றும் கூறு‌‌‌கின்றனர். கருப்புக்கட்டி என்ற சொல்லின் அடிச் சொல்லான கருப்பு என்பது கரும்பு என்பதன் திரிபாக இருக்க வேண்டும். அது அடிப்படையில் கருப்பஞ் சாற்றிலிருந்து எடுக்கப்படும் மண்டை வெல்லம், அச்சு வெல்லம், சர்க்கரை எனும் பெயர்களில் வழங்கப்படும் கட்டியையே குறிக்கிறது. வெல்லக் கட்டி என்று தம் செல்லக் குட்டிகளைப் பெற்றோர் கொஞ்சுவதைப் பார்க்கலாம். பொன்‌னிறமாக இருக்கும் வெல்லக் கட்டியுடன் ஒப்பக் கருமையாய் இருப்பதாலும் இச் சொல் இரு பொருள் தரும் வகையில் அமைந்துள்ளது.

            கள்ளுக்குப் பயன்பட்டு வந்த பதனீரைக் கருப்புக்கட்டி காய்ச்சப் பயன்படுத்த வேண்டுமாயின் அதன் நொதிப்புத் தன்மையை மாற்ற வேண்டும். நொதிப்பேறுதல் என்பது நுண்ணுயிரி ஒன்றால் இனிப்புப் பொருள் மு‌‌‌‌‌றிந்து(திரிந்து) சாராயப் பொருளாக மாறுவதாகும். இந்த நிகழ்முறையை சளித்துப் போதல் என்கிறார்கள். இதைத் தடுப்பதற்கு நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்தும் ஒரு பொருள் தேவை. இதற்காகப் பதனீர் திரட்டும் கலயங்களில் காலையில் பதனீர் இறக்கியபின் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் சுண்ணாம்புத் தூளை மட்டையின் உதவியால் கலையத்தின் உட்புறம் தடவு‌‌‌கின்றனர். இறக்கிய பதனீரை வாயகன்ற மண் பானைகளில் விட்டுக் காய்ச்சுவர். காய்ச்சும் போது பொங்கி வரும் பதனீரை அடக்க இடித்த ஆமணக்கு விதையிலுள்ள சதையைக் சிறிதளவு இடுவர். ஆமணக்கு விதையிலுள்ள கொழுப்பு கரைவதற்கு வெப்பத்தை எடுத்துக் கொள்வதால் பொங்குதல் அடங்கும். இதற்குப் பதம் போடுதல் என்று பெயர். காய்ச்சிய பதனீர் கூழ் அல்லது பாகுநிலையை அடையும் போது கூழ்ப் பதனீர்(கூப்பனி) எனப்படும். இதில் பசைத் தன்மை மிகுந்திருக்கும், சவ்வு போல் இழுக்கும். இந் நிலையிலிருக்கும் கூழ்ப் பதனீரை அடுப்பிலிருந்து இறக்கி தூரிகை போல் முனை நசுக்கப்பட்ட பனை மட்டைகளால் அரைமணி நேரத்துக்குக் குறையாமல் துழாவிக் கொண்டேயிருப்பர். இந்த மட்டைக்குத் துடுப்பு என்பது பெயர். இவ்வாறு துழாவும் போது கூழ்ப் பதனீர் படிகங்களாக, நுண்ணிய பரல்களாக மாறுகிறது. பசைத் தன்மை குறைகிறது. சீனி எனப்படும் சருக்கரையின் உருவாக்கத்தில் ஆ‌லைகளில் கூழா‌கக் காய்ச்சப்பட்ட கரும்புச் சாற்றைக் சுழலும் கொள்கலன்களில் இட்டு மணல் போன்ற படிகங்களாக்குகின்றனர். இதே நிகழ்முறைதான் இந்தத் துழாவுதலிலும் நடைபெறுகிறது. கரும்பு வெல்லம் காய்ச்சும் போதும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்வாறு நன்றாகத் துழாவப்பட்ட கூழ்ப் பதனீரைக் கண் திறக்கப்பட்ட பெண் பாதி சிரட்டைகளை[2] மணலைப் பரப்பி அதன் மீது வைத்து அவற்றில் வார்க்கிறார்கள். ஓரளவு உலர்ந்ததும் சிரட்டையைக் கவிழ்த்துப் பிடித்துக் கொண்டு திறந்த சிரட்டைக் கண்ணில் வாயை வைத்து ஊதினால் சிர‌ட்டையிலிருந்து கருப்புக்கட்டி விடுபட்டு ‌‌‌வெ‌ளிவருகிறது. பின்னர் காற்றில் உலர்கிறது. இது மழைக் காலங்களில் ஈரத்தை ஈர்த்து பிசுக்குத் தன்மை அடையும். இதனை வீணி(வீழ்நீர்)க் கருப்புக்கட்டி என்பர். இந்தக் கருப்புக்கட்டியைப் பரணில் அடுக்கி வைத்தால் அதிலிருந்து இந்த வீணீர் வடிந்து இந்தப் பிசுக்குத் தன்மை அகலும். கருப்புக்கட்டியின் எடை குறையும். இதற்குப் பழங்கருப்புக்கட்டி என்று பெயர். இதற்காகக் கருப்புக்கட்டியை ஓராண்டு வரை இருப்பில் வைக்க வேண்டியிருக்கும். இந்தக் காலத் தாழ்ச்சியைத் தவிர்ப்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஓர் உத்தியைக் கடைப்பிடிக்கிறார்கள். இங்கு கருப்புக்கட்டி சிறிய சிரட்டைகளில் வார்க்கப்படுகிறது. இதற்குச் சில்லுக் கருப்புக்கட்டி என்று பெயர். ‌‌வார்த்த பின் அவற்றைப் பரண் மீது அடுக்கி வைத்துப் புகை மூட்டம் போடுகின்றனர். கருப்புக்கட்டி முதலில் சிறிது இளக்கமடைந்து வீணீர் வடிந்து பின்னர் இறுக்கமடையும். ‌‌‌வெ‌ளிப்புறம் புகை படிந்து கருப்பாக மாறிவிடும். கனம் குறைந்து விடும். உடைத்துப் பார்த்தால் உட்புறம் வெண்மையெய்தி சீனி போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். எந்தப் பருவ காலத்திலும் பிசுக்கடையாது. இது நல்ல சுவையும் மணமும் கொண்டிருக்கும். இதனை உடன்குடி வெட்டை அல்லது வட்டுக் கருப்புக்கட்டி என்பர். தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கிலிருக்கும் வேம்பாறு எனும் பகுதியிலும் வெட்டைக் கருப்புக்கட்டி செய்யப்படுகிறது. இதற்கு வேம்பாறு வெட்டை என்பது பெயர். இரண்டிலும் உடன்குடி வெட்டைதான் தரத்திலும் சந்தை மதிப்பிலும் முதலிடத்தில் உள்ளது.[3]
            சிரட்டையில் வார்ப்பது மட்டுமின்றி, கூழ்ப் பதனீரைத் துழாவும் போது கருப்புக்கட்டிக்குத் துழாவுவதை விடச் சிறிது குறைந்த பதத்தில் துழாவி அப்படியே பானைகளில் ஊற்றி வைக்கின்றனர். இதற்கான பானை, ‘அடுப்பில் பழகிய நீரைக் கசிய விடாத பானையாயிருக்க வேண்டும். இதற்குப் பானைக் கருப்புக்கட்டி என்று பெயர். இது ஓராண்டு காலத்துக்கு மேல் கெடாமல் பதத்துடன் கூழ் நிலையில் இருக்கும். வேண்டும் போது கையை விட்டு எடுத்துக் கொள்ளலாம். கை அல்லது அள்ளும் அகப்பை, கரண்டி ஆகியவற்றில் ஈரம் இருக்கக் கூடாது. நீண்ட நாள் சென்று பானையின் சுவர் மூலம் ஈரம் ‌‌‌வெ‌ளியேறி உலர்நிலையடைந்தால் அதற்குப் பூத்துப் போதல் என்று பெயர். இதில் கூழ், தேன்கூடு போன்ற தோற்றத்துடன் முறுமுறுப்பான சுவை மிக்க தின்பண்டமாக மாறிவிடுகிறது. பனை ஓலையால் செய்யப்படும் தோண்டி[4] எனும் கலத்திலும் கூழை ஊற்றி வைப்பதுண்டு. இதற்குத் தோண்டிக் கருப்புக்கட்டி என்று பெயர். பானையின் அடியில் புளியை வைத்து அதன் மீது கூழ்ப் பதனீரை ஊற்றி வைத்தால் சில நாட்களில் பனங்கற்கண்டு போன்று உருவாகும்‌. பெட்டிக் கருப்புக்கட்டி, பிட்டுக் கருப்புக்கட்டி, சுக்குக் கருப்புக்கட்டி என்று பல வகைகளிலும் வடிவங்களிலும் கருப்புக்கட்டி வார்க்கப்படுகிறது.

            பதனீரிலிருந்து கருப்புக்கட்டி செய்யும் தொழில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் இந்தத் தொழில் உண்டு. இவ் விரு பகுதிகளிலுமுள்ள மக்களிடம்தான் கருப்புக்கட்டியையும் அதிலிருந்து செய்யப்படும் பல்வேறு தின்பண்டங்களையும் செய்துண்ணும் மரபு நிலவுகிறது. இப் பகுதிகளிலிருந்து பிற இடங்களில் குடியேறியவர்கள், குறிப்பாக நாடார்களிடையில் மட்டும் இவற்றைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அது மட்டுமல்ல, உலகிலேயே இவ் விரண்டு பகுதிகளில்தாம் பனை மரங்கள் மிகவும் செறிந்து காணப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பனை மர வேளாண்மை நடைபெற்றுள்ளது. பிறவிடங்களில் நிலவுடைமையின் எல்லைகளைக் காட்டப் பனை மரங்கள் நடப்பட்டுள்ளன, அல்லது பனையிலிருந்து விழும் பழங்களை மாடுகள் கவ்விச் சென்று பரவவிடுவதால் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பனை மரங்கள் வளர்கின்றன. பனைமரம் பெருமளவில் நிழல் ஏற்படுத்தாத மரமாகையால் எந்த வகை வேளாண்மைக்கும் இடையூறில்லை என்று இவற்றை யாரும் வெட்டி அகற்றுவ‌‌தில்லை.

            பனை மரத்தின் பயன்பாடு மிக விரி‌‌வானதாகும். பனை மரத்தில் ஆண், பெண் பனைகளுண்டு. ஆண் பனை அலகுப் பனை என்றும் பெண் பனை பருவப் பனை என்றும் அழைக்கப்படுகிறது. அவற்றில் வரும் பூவாகிய பாளையைப் பதப்படுத்திச் சீவித்தான் பதனீர் பெறப்படுகிறது. பதனீர் எடுக்கும் பருவம் அல்லாத காலத்தில் வரும் பெண் பூ மகரந்தச் சேர்க்கையைடைந்து காய்க்‌‌‌கிறது. இளம் காய் நுங்கு எனப்படும். நுங்காக வெட்டிய பனங்காயிலிருந்து நுங்கை எடுத்த பின் காயின் ‌‌‌வெ‌ளிப்புறச் சதையைச் சீவி கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம். பழுத்த பழத்தைத் தணலில் சுட்டு மேல் தோலை நீக்கினால் ‌‌‌வெ‌ளிப்படும் சதைப் பகுதியில் இனிப்பான பாகு போன்ற அடர்மஞ்சளான குழம்பு கிடைக்கும். சதையைச் செதுக்கி எடுத்து மென்று சாற்றை உண்டுவிட்டு எஞ்சும் தும்பைத் துப்பிவிடலாம். பழத்தைத் தோலுடன் செதுக்கிச் சிறிதளவு நீருடன் பானை‌‌‌‌‌‌‌‌‌யில் வேகவைத்துப் பின் தோலை நீக்கி சதையை மென்று சாற்றை உண்ணலாம். சாற்றைப் பிழிந்தெடுத்துப் பல‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காரங்களும் செய்யலாம். மிஞ்சும் கொ‌ட்டையை முளைக்க வைத்தால் பனங் கிழங்கு கிடைக்கும். பனங் கிழங்கை அவித்து ஒடித்து மென்று உண்ணலாம். சுக்கு, உப்பு சேர்த்து இடித்தும் உண்ணலாம். தணலில் சுட்டும் உண்ணலாம். பனங் கிழங்கு தாராள‌‌‌மாகக் கிடைக்கும் பருவத்தில் அதனை அவித்து ஒடித்து நன்றாகக் காய வைத்தால் நெடுநாள் கெடாமல் இருக்கும். அதை இடித்து மாவெடுத்துப் பிட்டு, கூழ் போன்ற பல பக்குவங்களில் சமைத்து உண்ணலாம். யாழ்ப்பாணத்தில் ஒடித்து உலர வைத்த பனங் கிழங்கை ஒடியல் என்று கூறுவர். அதிலிருந்து செய்யப்படும் பண்டங்களை ஒடியல் பிட்டு, ஒடியல் கூழ் என்றவாறு அழைப்பர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே சென்று வாழ்வோருக்கு ஒடியலை அனுப்பிவைக்கும் பழக்கம் அங்கு உண்டு.

            முளைத்த பனங்கொட்டையிலிருந்து கிழங்கு கீழ்நோக்கிச் செல்கிறது. கிழங்கின் அடிப்புறத்திலிருந்து ஒரு வேர் கீழ்நோக்கிச் செல்கிறது. மேல் நோக்கி பீலி என்ற நடுக் குருத்து வளர்கிறது[5]. கிழங்கைப் பிளக்கும் போது கிடைக்கும் இந்தப் பீலியின் அடிமுனை மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். கிழங்கோடு இருக்கும் கொட்டையைப் பிளந்தால் அதனுள் பஞ்சு போன்ற இனிய பொருள் இருக்கும். இதற்குத் தவுண் என்று பெயர். முளைக்காத கொட்டையினுள்ளிருக்கும் அவுண் எனப்படும் பருப்பு முளைத்தல் எனும் நிகழ்முறையில் எளிதில் கரையும் சர்க்கரைப் பொருளான தவுணாக மாறு‌‌‌கிறது[6]. அதுவே கிழங்குக்கும் அதன் வேருக்கும் கிழங்கினுள்ளிருக்கும் பீலி உருவாவதற்கும் தேவையான தொடக்கச் சத்துகளைத் தருகிறது. பனங்கொட்டையின் மேலோட்டுக்குப் பெயர் கூந்தல். நுங்கை எடுத்து மேல்தோலையும் சீவிய பின் அல்லது தவுணை எடுத்த பின் இதனை எரிபொருளாகப் பயன்படுத்தலாம். முதலில் தோன்றும் நடு வேரைச் சுற்றிப் பனந்தூர் எனப்படும் பனையின் அடிப்பகுதியிலிருந்து சல்லி வேர்கள் தோன்றுகின்றன. எந்த வேருக்கும் கிளை வேர்கள் கிடையா. பனையை வெட்டிய பின் தூரைத் தோண்டும் போது நாம் நடுவேரைக் காணலாம். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலைத்திணைகளை(தாவரங்களை)ப் புல்னெப்படுவது புறக் காழனவே, மரமெனப்படுவது அகக் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காழனவே என்பது தொல்காப்பியம். காழ் எனப்படும் வயிரப் பகுதி வெளிப்புறத்திலிருந்தால் அது புல், உட்புறமிருந்தால் அது மரம். அறுகம்புல் முதல் தாளிப்பனை வரை புல் எனும் வகைப்பாட்டினுள் வரும். தாலப்புல் என்றே சிலப்பதிகாரம் பனையைக் குறிக்கிறது. இருக்கு வேதத்தில் கூறப்படும் சுரபானம் ஒரு வகைப் புல்லிலிருந்து பெறப்படுவதாக விளக்கம் கூறுவர். புல் என வகைப்படுத்தப்பட்ட பனை மரத்தில் சுரக்கிற பானமே, அதாவது கள்ளே சுரபானமாக இருக்க வேண்டும். கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி சுரா என்ற சொல்லுக்குக் கள் என்றே பொருள் தருகிறது. மூங்கில் கூட புல்லாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது.

            இளம் பனை வடலி எனப்படும். வடலி, தென்னை என்ற மரப் பெயர்களையும் தென், வடல் என்ற திசைக் குறிப்பையும் வைத்துப் பார்த்தால் இந்தச் சொற்களை உருவாக்கிய மக்கள் வாழ்ந்த நிலப் பரப்பின் வடக்கில் பனை மரமும் தெற்கில் தென்னை மரமும் வளர்ந்தனவென்று கொள்ளலாம். வடக்கில் பாலையும் தெற்கில் கடற்கரையும் அமைந்த மருத ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலத்தில் வாழ்ந்த மக்கள் இந்தச் சொற்களை உருவாக்கியிருக்கலாம்.[7]

            பனை வேளாண்மையில் முகாமையான பணி ஓலைகள் முற்றும் போது அவ்வப்போது அவற்றை வெட்டி அகற்றுவதாகும். இளம் பனைகளில் முற்றி உலர்ந்த ஓலைகள் தாமாக உ‌‌திர்வதில்லை. அவை பனை மரத் தண்டை இறுகப் பிடித்தபடி நெடுங்காலம் இருக்கும். அதனால் மரத்தின் வளர்ச்சி பாதிப்படையும். எனவே பனை வேளாண்மை செய்வோர் அவ் வோலைகளைக் காய்வதற்கு முன்பே மட்டையோடு அறுத்து அகற்றிவிடுவர். இதற்குப் பத்தை அறுத்தல் என்று பெயர். அவ்வாறு அகற்றப்பட்ட ஓலையின் மடல் பகுதி எழுதப் பயன்படும் ஓலைகள்(ஏடுகள்), கடகம் போன்ற கனத்த சுமைகளை வைத்துச் சுமந்து செல்லப் பயன்படும் பெட்டிகள், நெல் போன்ற தவசங்களை விரித்து உலர்த்தப்படும் பெரும்பாய்கள் முடையவும் கூரை வேயவும் பயன்படுகின்றன. இந்த ஓலை சார ஓலை எனப்படும். மட்டையின் இருபுறமும் பல் போன்ற அமைப்புடன் கருக்கு எனப்படும் கூர்மையான விளிம்புகள் உள்ளன. பனையில் ஏறிப் பதனீர் எடுப்பதற்கு அவை இடையூறாக இருக்கும். அவற்றை மட்டையின் ஒரு பகு‌‌தியோடு சேர்த்து அறுத்து அகற்றுவர். அவற்றை இரண்டிரண்டாகக் கிழித்தால் கூரை வேய்தல் மற்றும் கழிகள் முதலியவற்றைக் கட்டும் நாராகப் பயன்படுகின்றன. இவற்றை ஆக்கைகள் என்றும் கூறுவர். மட்டையின் உட்பகுதித் தோலையும் புறணி எனப்படும் பின்புறத் தோலையும் உ‌‌‌‌‌‌‌ரித்தெடுத்து அவற்றை மெல்லிய ‌‌வார்களாக வார்ந்து நார்க் கட்டில்கள் கட்டவும் நாற்காலிகள் போன்றவற்றைப் பின்னவும் பயன்படுத்தலாம். மட்டையைக் குறுக்கிலும் நெடுக்கிலும் வைத்து ஆணியடித்து வேலியாகப் பயன்படுத்தலாம். காய்வோலை எனப்படும் காய்ந்த ஓலையையும் மட்டையையும் விறகாக‌ப் பயன்படுத்தலாம்.

            முற்றிய பச்சை ஓலையை வெட்டிப் பட்டைகள் எனப்படும் கொள்கலன்களைச் செய்யலாம். கள், கஞ்சி முத‌‌லியவற்றை ஊற்றிக் குடித்துவிட்டு வீசி விடலாம். நெடும் பயணம் செய்வோர் வழியில் நிற்கும் இளம் பனைகளிலிருந்து ஓலையை வெட்டியெடுத்துப் பட்டை பிடித்து அதனுள் தாம் கொண்டு வரும் கட்டுச் சோற்று மூட்டையிலிருந்து வேண்டிய அளவு எடுத்துப் போட்டுப் பிசைந்து உண்பர். வீசப்பட்ட எச்சில் பட்டைகளை ஆடுமாடுகள் விரும்பி உண்ணும். பனை ஓலையில் வேறு இலை தழைகளில் இல்லாத இனிப்புச் சுவை இருப்பதால் அவை அதனை விரும்புகின்றன. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காய்ந்த பட்டைகள் எரிபொருளாகப் பயன்படும்.

             இறைச்சி போன்ற பொருட்களைப் பொதிவதற்கு பனையோலைப் பட்டைகளைப் பயன்படுத்துவர். இது போன்ற பொதிகளில் இறைச்சி போன்றவற்றைப் பொதிந்து நெருப்பிலிட்டு வேகவைத்து உண்ணுவதும் உண்டு. ஆங்கிலத்தில் pudding என்று குறிப்பிடுவது இவ்வாறு சமைக்கும் உணவு வகைகளைத்தான்[8].

            இளம் ஓலையான குருத்தோலை படுக்கைப் பாய்கள், தடுக்குகள், நார்ப் பெட்டிகள், தட்டுப் பெட்டிகள், கொட்டைப் பெட்டிகள், ‌பிழாப்பெட்டிகள், பலவகைக் கூடைகள். பேழைகள், தொப்பிகள் முதலியவை செய்யப் பயன்படுகின்றன. ஏழைப் பெண்களைக் கொண்டு வேலைப்பாடமைந்த கூடை, தொப்பி முதலியவற்றைச் செய்து வெளிநாடுகளில் நல்ல விலைக்கு விற்றுப் பெரும்பணம் ஈட்டுகின்றன சில தன்னார்வத் தொண்டு அமைப்புகள்.

            பனை ஓலையின் ஈர்க்குகள் சுளகுகள்(முறம்), உமியைச் சலிக்கும் அரிப்புகள்[9], ஈர்க்காம்பெட்டிகள், கூடைகள், பாய்கள் போன்றவற்றைச் செய்யப் பயன்படுகின்றன. இளம் பனைகளில் ஓலையை மரத்தோடு இணைக்கும் மட்டையின் நீட்சியான பனம் பத்தைகளிலிருந்து தரமான தும்புகள் அடித்தெடுக்கப்படுகின்றன. இவை பலவகைத் தூரிகைகள்(புருசுகள்) செய்வதற்குப் பொருத்தமானவை. பனை ஓலையை மரத்தோடு பற்றிப் பிடித்து வைத்திருக்கும் ஓர் உறுப்பு பன்னாடை(பனையாடை) எனப்படும் சில்லாடை(சில்லாட்டை) யாகும்[10]. பனையில் கலயத்தில் இருக்கும் பதனீரை உண்ணச் சென்று அதில் மடிந்து மிதக்கும் ஈக்கள், எறும்புகள், பனம்பூ ஆகியவற்றைச் சலிக்கும் அரிப்பாக இது பயன்படுகிறது‌‌, எரிபொருளாகவும் பயன்படுகிறது.

            பனையின் தண்டு வைரம் எனப்படும் காழ்ப்பை ‌‌‌வெ‌ளிப்புறம் கொண்டதால் புல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று கண்டோம். பனை மரத்தை அடித்தண்டு(மூட்டுமுறி), நடுத்தண்டு(இடைமுறி), தலைத்தண்டு(கொண்டைமுறி) எனப் பிரிப்பர். அடித்தண்டு நல்ல வலுவுடையது. இதனைக் கறையான், வண்டு போன்றவை தாக்கா. கட்டில் சட்டங்கள், கதவு, சன்னல் நிலைச் சட்டங்கள் போன்றவை செய்ய இதனைப் பயன்படுத்தலாம். வில்லிசையில் பயன்படுத்தப்படும் வில்லும் தேர்ந்தெடுத்த நல்ல மூட்டுமுறியிலிருந்துதான் செய்யப்படுகிறது. ஓட்டுக் கூரைச் சட்டத்தில் சில குறிப்பிட்ட உறுப்புகள் மூட்டுமுறியிலிருந்து செய்யப்படுகின்றன. மட்டப்பாவுக் கூரையில் கட்டைகளும் உத்திரக் கட்டைகளும் செய்யப்படுகின்றன. சிறு தூண்களாகவும் பயன்படுகின்றன. இடைமுறி வீட்டுக் கூரைச் சட்டத்தில் உள்ள கைகளுக்கும் பட்டியல்களுக்கும் பயன்படுகின்றன. வீட்டுக் கூரைச் சட்டத்தில் பட்டியல் அடிப்பதற்குத் தேவைப்படும் ஆணி தவிர வேறு எதற்கும் இரும்பே தேவைப்படாத அளவுக்கு அனைத்தையும் பனைமரத்தைக் கொண்டே நிறைவுசெய்து விடலாம்.

            தலைமுறி பெரும்பாலும் எரிபொருளாகவே பயன்படுகிறது. செங்கல், ஓடு ஆகியவை சுடும் சூளைகளில் அவை பயன்படுகின்றன. இவை நல்ல வெப்பத்தைத் தருகின்றன. பெரும் கொட்டகைகளில் நடுத் தூண்களாக முழுப் பனைமரங்களை நடுகின்றனர். வெட்டி மு‌‌‌‌‌றிக்கப்பட்ட பனையின் அடிப் பக்கமான தூர் சூளைகளில் எரிபொருளாகப் பயன்படுகின்றது. வேர்கள் வீடுகளில் எரிபொருளாகப் பயன்படும்.

            பனையேறிகள் பயன்படுத்தும் பொருட்களில் முகாமையானவை பனையிலிருந்து பெறப்படுபவை. பனை ஏறும் போது தரையில் ஊன்றிக் கால் வைத்து ஏறும் முருக்குத் தடி (மிதிப்புத் தடி) எனும் ஊன்று கோல் காட்டு மரத்தால் செய்யப்பட்டது. பனம் பாளைகளை இடுக்கிப் பதப்படுத்தப் பயன்படும் கருவி கடுப்பு எனப்படும். ஒரு முனையில் இணைத்துக் கட்டப்பட்ட சிறிது வளைந்த அல்லது வளையாத இரு குச்சிகைளக் கொண்ட இந்த வக்கணத்தில் பல்வேறு கட்டங்களில் பயன்படுத்தத்தக்க ஏழெட்டு வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றிரண்டு தவிர்த்த அனைத்தும் பனை மரத்தால் ஆனவையே. அரிவாள்கள், கலயங்கள், பனை மரத்தின் சிராய்ப்பிலிருந்து காப்பதற்காகப் பயன்படும் தோல் கவசங்கள் ஆகியவும் அரிவாள்கள், சுண்ணாம்புப் பொடி முதலியனவற்றை வைக்கப் பயன்படும், தென்னம்பாளையால் செய்யப்படும் அரிவாள் பெட்டியும் தவிர பிறவனைத்தும் பனைப் பொருட்களால் செய்யப்படுன்றன. பனையைப் பற்றி ஏறும் போது கால்களைப் பிணைக்கப் பயன்படும் தலைக் கயிறு(தளைக் கயிறு), கலயங்களிலிருந்து பதனீர் ஊற்றுவதற்காகப் பயன்படும் நீர் கசியாத குடுவை, அரிவாள் பெட்டியையும் குடுவையையும் இடுப்பில் பிணைத்திருக்கும் இடுப்புப் பட்டை ஆகிய அனைத்தும் பனை ஓலையிலும் நாரிலும் செய்யப்பட்டவையே. இவ்வாறு மனித வாழ்வின் பல தேவைகளை நிறைவு செய்வதாலேயே பனை மரத்தைத் தேவருலகில் இருக்கும் கற்பகத் தரு என்று கூறினர் போலும். கரு‌மை எனப் பொருள்படும் கறுப்பு என்பதிலிருந்தே கற்பகம் என்ற சொல் வடிக்கப்பட்டுள்ளது. கரும்பனை சாமி என்பதே கருப்பண சாமி என்று திரிந்திருப்பது போன்றதே இதுவும்.

            பனை மரம் பல்வேறு தேவைகளை நிறைவு செய்தாலும் கலயங்கள் அரிவாள்கள், துணிமணிகள், அரிசி போன்ற தவசங்கள், மிளகு போன்ற கூலங்கள் என்று பிற பண்டங்களை வாங்குவதற்கு பனையேறுவோர் வெ‌ளியேதான் சென்றாக வேண்டும். அவ்வாறுதான் அவர்கள் வாணிகத்‌‌தில் ஈடுபட்டனர் என்பதை முன்பே கூறினோம்.

            கருப்புக் கட்டி செய்யும் தொழில் மிகப் பிற்காலத்தில்தான் தோன்றியிருக்கும் என்று எண்ண இடமுள்ளது. குலோத்துங்கனுக்கு அல்லது நாயக்கராட்சி தோன்றிய பின்னர்தான் இது நிகழ்ந்திருக்கும். சோழ நாட்டிலிருந்து கருப்பஞ்சாறெடுத்துக் காய்ச்சும் ஆலைகளையும் அவற்றிலிருந்து கிளம்பும் புகையையும் பற்றிச் சிலப்பதிகாரம் சொல்கிறது. அங்கு கடைப்பிடிக்கப்பட்ட தொழில்நுட்பத்தை அங்கிருந்து வந்த யாரோ ஒருவர் நெல்லை அல்லது குமரி மாவட்டத்திலுள்ளோருக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். அந்த நிகழ்வைத்தான் மேலேயுள்ள கதை குறிப்பிடுகிறது[11]. கருப்பஞ்சாற்றிலிருந்து வெல்லம் எடுக்கும் தொழில்நுட்பத்தில் பதனீருக்கேற்றவாறு தேவைப்படும் ‌‌‌மாற்றங்களைச் செய்துள்ளனர்.

            பொதுவாக நம் நாட்டு மக்களுக்குப் புதிய தொழில்நுட்பங்களைப் படைக்கும் திறன் கிடையாது; சாப்பாட்டுத் தொழிலில்தான் அவர்கள் வல்லவர்கள் என்று நம்மவரே கேலி பேசுவதுண்டு. கோ.து.(சி.டி.)நாயுடு முதல் எரிநீர் இராமர் வரை தெரிந்தோரும் தெரியாதோருமாக எண்ணற்ற பேர்களின் முனைவுகள் சென்ற அரை நூற்றாண்டுக்குள் நம் கண் முன்னர் நசுக்கபட்டு வருவதைக் கண்டும் அதற்காக வெகுண்டெழுந்து அவ்‌‌வாறு நசுக்கும் விசைகளை அடக்க வேண்டுமென்ற துடிப்பின்றி இந்தக் கேலிப் பேச்சில் நம் மக்கள் இன்பம் காண்கின்றனர். கடந்த காலங்களில் தனி மனிதர்கள் படைத்திருக்கத் தக்க புதிய தொ‌ழில்நுட்பங்கள் தொழில் சார்ந்த சாதியமைப்புக்குள் நசுக்குண்டு அழிந்திருக்கும் அல்லது ஏதோவொரு குடும்ப மறையமாக நின்று மறைந்திருக்கும். அத்துடன் வாணிகரும் தொழில் செய்வோரும் கைத்தொழில் வல்லாரும் அனைத்து வகை உழைப்பினரும் மனிதப் பிறவிகளாகவே மதிக்கப்படாத பண்பாடு நம்முடையது. பூசகர், ஆட்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சியாளர்கள் எனும் ஒட்டுண்ணிகளே உ‌‌‌‌‌‌‌ரிமைகளுள்ள மக்களாக மதிக்கப்பட்டனர். ‘ஆன்மிகர்கள் என்ற பெயரில் பிறரின் உழைப்பில், எந்த வேலையும் செய்யாமல் இருக்கையில்(ஆசனத்‌‌தில்) அமர்ந்து மூச்சை எண்ணிக் கொண்டிருந்த, குண்டியிலிருந்து ஆற்றலை உருவாக்கிக் கடவுளாக மாறிக் கொண்டிருந்த பொய்யர்களும் மூடர்களும் மிக உயர்ந்தவர்களாகப் போற்றப்பட்டனர். (இன்றும் யோகம், தியானம்என்ற பெயர்களில் மிக உயர்ந்த விளக்கங்களுடன் இந்தத் தீமை புதிய தலைமுறையினரிடையில் புகுத்தப்படுகின்றது). இந்தக் குமுகச் சூழலில் உழைக்கும் மக்களின் உடலுழைப்பை மிச்சப்படுத்தும் அல்லது அதன் கடுமையைக் குறைக்கும் எந்தவொரு தொழில்நுட்பத்தையும் இந்தக் கொடிய மனம் படைத்த அரக்கர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது, அத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் எத்தனை உயர்ந்த சாதியில் பிறந்திருந்தாலும்[12]. இதற்குச் சான்றாகத் தாயுமானவர் எனப்படும் அ‌‌‌‌‌றிஞரின் வரலாற்றைக் கூறலாம்.

            நாயக்கராட்சிக் காலத்தில் மீனாட்சி என்ற அரசி தன் கணவன் விசயரங்க சொக்கநாதன் ஆண் மகவின்றி இறந்ததால் அவனுக்குப் பின் திருச்சியிலிருந்து ஆண்டாள். அவளிடம் அமைச்சராகத் தாயுமானவர் பணியாற்றினார். அவருக்கும் அரசிக்கும் தொடர்பிருந்ததாக எழுந்த வதந்தியினால் அவர் பதவியை விட்டுத் துறவு பூண்டதாகக் கூறப்படு‌‌‌கிறது. அவர் பலவிடங்களுக்கும் சென்று வந்தார். அவ்வாறு இராமநாதபுரம் வந்தபோது அங்கு டச்சுக்காரர்களின் கடற்படையொன்று தாக்குல் நடத்த வந்ததாகவும் அவர்களை இவர் கடலினுள் செல்லாமலே தன் தவவலிமையால் துரத்தியதாகவும் கூறப்படுகிறது. அவர் ஒருவேளை உள்ளூர் கட்டுமர மீனவர்களிள் துணையுடன் ஏதோ ஓர் உத்தியைக் கையாண்டு அவர்களைத் துரத்‌‌தியிருக்க வேண்டும். கடற்பயணம் செய்வது மேற்சாதியினரின் ஒழுக்கத்துக்கு எதிரான செயல் என்பதால் சாதி, சமய வெறியர்கள் அவரை மிக்க தந்திரமாகக் கொன்றுள்ளனர். இராமநாதபுதத்தில் ஒரு பூங்காவில் அவர் நிட்டையிலிருந்ததாகவும் அப்போது வீசிய ஒரு சுழற்காற்றில் கிளம்பிய சருகுகள் அவரை மூடிவிட்டதாகவும் அவர் உள்ளிருப்பதை அறியாத பூங்காவின் காவலன் சருகுக்கு நெருப்பு மூட்ட அவர் எரிந்து போனதாகவும் கூறப்பட்டதாம். அவருடன் எப்போதும் துணையிருக்கும் அவருக்குத் தம்பி முறையுள்ள ஒருவர் தான் ஒரு வேலையாக அகன்ற போது இது நடந்துவிட்டதாகக் கூறினாராம். இது திட்டமிடப்பட்ட ஒரு கொலை என்பது தெளிவு. ஐரோப்பாவில் ஏற்கப்பட்ட மதக் கோட்பாடுகளை உடைக்கும் கருத்துகளைக் கூறியோர் அல்லது தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்போர் மக்களறிய குற்றஞ்சாட்டப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அதனால் மக்களுக்கு அந்தச் சிந்தனையாளர்கள் மீதும் ஆய்வாளர்கள் மீதும் அவர்களது கருத்துகள், கண்டுபிடிப்புகள் மீதும் ஆர்வம் வளர்ந்து மதத் தலைவர்களை மீறிச் செயற்படும் துணிவு ஏற்பட்டது. ஆ‌னால் நம் நாட்டில் அத்தகைய சிந்தனையாளர்களையும் ஆய்வாளர்களையும் தந்திரமாகக் கொன்று அவர்கள் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டதாகக் கதைகட்டி அவர்களைத் தெய்வமாக்கி அவர்களுடைய சிந்தனைகளையும் அருஞ்செயல்களையும் ஆழப் புதைத்துவிட்டனர். இந்த உத்தி சில மாற்றங்களுடன் இன்றும் பேணப்படுகிறது. அதே நேரத்தில் இந்த மேல்மட்டத்தினர் ‌‌‌வெ‌ளியார் புகுத்தும் கருத்துகளையும் தொழில்நுட்பங்களையும் தாமே முதலில் ஏற்றுக்கொண்டு அதே நேரத்தில் அவற்றைப் பழித்துப் பிறர் அவற்றை உடனடியாகப் பயன்படுத்தாமல் செய்து தங்கள் மேலாண்மையையும் வலிமையும் பெருக்கிக்கொள்கின்றனர்.

            இத்தகைய ஒரு குமுகச் சூழலில் நெல்லை, குமரி மாவட்டங்களில், தமிழகத்தின் ஒரு மூலையில் ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சி நடந்ததற்கு விதிவிலக்கான ஒரு சூழல்தான் காரணம். இந்த மூலை ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்ட மூலை. இங்கு நிலவளம் இல்லை. பிற மக்களின் நேரடி ஆதிக்கமும் இல்லை. எனவே அவர்களது செயற்பாடுகளுக்குத் தடங்கல் எதுவும் இல்லை. அத்துடன் அவர்களது அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கிருந்த இயற்கைச் செல்வம் பனை மரமும் பதனீரும் பனையிலிருந்து கிடைக்கும் பிற பொருட்களும்தாம். எனவே அவற்றைப் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள் அவர்களுக்கு இன்றியமையாதவை. இந்தச் சூழலில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாரோ கற்றுத் தந்த புதிய தொழில்நுட்பத்தைப் பற்றிக் கொண்டு அதை அவர்கள் விரைந்து மேம்படுத்தினர்.

            கருப்புக்கட்டித் தொழில்நுட்பம் பாரிய விளைவுகளை ஏற்படுத்‌‌தியிருக்கும். அதுவரை வட தமிழ்நாட்டிலிருந்து வந்த வெல்லப் பொருட்களும் சீனத்திலிருந்து இறக்குமதியான சீனியும் கற்கண்டுமே இனிப்பூட்டுவதற்குப் பயன்பட்டன. கரும்பை விடப் பயிரிடுவதில் எ‌ளிமையானது பனை. பயன் தரப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தாலும் எந்தத் தனிப் பராமரிப்பும் இன்றிப் பல ஆண்டுகள் பயன் தர வல்லது. எனவே விளைப்புச் செலவு மிகக் குறைவு. அதனால் வெல்லத்தோடும் சீனியோடும் அதனால் எளிதில் போட்டியிட்டிருக்க முடியும். இதனால் பனையேறிகளாகிய சாணார்களின் செல்வம் பெருகியது. அவர்கள் இந்தப் பகுதிகளில் ஓர் அரசை உருவாக்கியதாகவும் தெரிகிறது. சாணான் காசு என்ற பெயரில் வாகை விதையளவில் வெள்ளிக் காசுகளும் இப் பகுதிகளில் நிலத்திலிருந்து கிடைப்பதுண்டு.


[1] தழல் தணல்(தீக்கங்கு)
[2] உரித்த தேங்காயின் வெளிப்புறத்தைக் கவனித்தால் அதில் நெடுக்காக ‌‌‌‌‌‌மூன்று தடித்த கோடுகள் போன்ற சிறுமேடுகள் இருக்கும். இந்த மூன்று மேடுகளும் தேங்காயின் மேற்பரப்பை மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றன. தேங்காயின் குடுமி இருக்கும் பக்கத்தில் இந்த மூன்று பகுதிகளுக்கும் ஒவ்வொன்றாக மூன்று கண்களிருக்கும். தேங்காயைக் குறுக்கில் இரண்டாக உடைத்தால் கண்கள் இருக்கும் பாதி பெண் பாதி என்றும் மறுபாதி ஆண் பாதி என்றும் கூற‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ப்படும். இந்த மூன்று கண்களில் ஒன்று சிரட்டையின் உட்புறம் வரை ஊடுருவி இருக்கும். இதன் அடியில்தான் தேங்காயின் மு‌ளை இருக்கும். தேங்காய் முளைக்கும் போது இந்தக் கண்ணைத் துளைத்துத்தான் முளை வெளிப்படும். முளைப்பதற்குத் தேவையான நீரும் இதன் வழியாகத்தான் உள்ளே சென்று முளைத்தல் எனும் நிகழ்முறையைத் ‌தொடங்கி வைக்க வேண்டும். 
பனங்காய் மூன்று கொட்டைகளைக் கொண்டிருக்கும். சிலவற்றில் இரண்டு கொட்டைகளும் உண்டு. அரிதாக ஒரு கொட்டையுடைய காய்களும் உண்டு. இந்த மூன்று கொட்டைகளும் ஒன்றிணைந்து அவற்றின் கண்களில் இரண்டு செயலிழந்த ஒரு ‌நிலை போன்றதே தேங்காயின் அமைப்பு. பனையின் ஒரு படிமுறை வளர்ச்சியாக இது இருக்குமோ என்ற எண்ணத்தை இது ஏற்படுத்துகிறது.   
பனம் பழத்திலுள்ள இனிப்புச் சுவையால் விலங்குகள் அதனை இழுத்துச் செல்வதால் கொட்டைகள் பரவுகின்ற‌ன. தென்னையில் அந்த இனிப்புக்குப் பகரம் கனம் குறைந்த தும்பு உள்ளது. அதனால் தேங்காய் நீரில் மிதந்து சென்று பரவுகிறது. பனைகள் இருந்த நிலம் சிறுகச் சிறுக நீரில் முழுகியதால் இந்தப் படிமுறை மாற்றம் நிகழ்ந்திருக்கலாம்.

[3] வெட்டைக் கருப்புக்கட்டி செய்வதி‌ல் நடைபெறும் நிகழ் முறைக்கும் சீனி ஆலைகளில் கடைப்பிடிக்கப்படும் செய்முறைக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. சீனி ஆலையில் கரும்பு‌ச் சாற்‌றுப் பாகிலுள்ள நிறத்தையும் மணத்தையும் அகற்றுவதற்கு எலும்புக் கரியினுடாக அது‌ செலுத்தப்படுவது நமக்குத் தெரியும். அதில் எலும்புக் கரி செய்யும் வேலையைத்தான் வெட்டைக் கருப்புக்கட்டி செய்வதில் புகையிலுள்ள கரி செய்கிறது. சீனி ஆலையில் கழிவாக வெளியேறும் பாகுக் கழிவு‌(மொலாசசு) போன்றே வெட்டைக் கருப்பட்டியிலிருந்‌து வீழ் நீர் வடிகிறது, அதே நேரத்தில் பழங்கருப்புக் கட்டியில் இந்தக் கழிவுப் பொருள் காற்றிலுள்ள ஈரப்பத‌த்தைத் தானே ஈர்த்துக் கொண்டு அதனுடன் வெளியேறிவிடுகிறது. இதே நிகழ்வு உப்பளங்களில் விளையும் உப்பிலும் இடம்பெறுகிறது. பாத்திகளிலிருந்து அள்ளப்படும் உப்பு பெரும் அம்பாரமாக, அட்டிகள் எனப்படும் நீள்சதுரக் குவியல்களாக வெட்ட வெளியில் குவிக்கப்படும், மழை நீரி‌‌ல் கரைந்து போகாமலிருக்க தென்னங்கீற்றுகளால் மூ‌டி வைக்கப்படும். பு‌‌து உப்பிலி‌ருக்கும் சில வேண்டப்படாத வேதிப் பொருட்கள் காற்றி‌லுள்ள ஈரத்தை எடுத்துக் கொண்டு அதில் கரைந்து கீ‌ழே வடிந்துவிடும். பளபளப்பாக இருந்த உப்புப் பரல்கள் இப்போது குழி விழுந்து சிறிது அழுக்கு நிறத்துடன் காணப்படும். இவ்வாறு உப்பு சில மாதங்கள் வரை வைக்கப்பட்டிருக்‌கும். இந்த உப்பு உடல் நலனுக்கு ஏற்றது. ஆனால் வெண்மையாக இருக்கிறதென்று கூறிப் பொதுமக்கள் புது உப்பை வாங்கிப் பழம் உப்பு வாங்குவதைத் தவிர்த்தனர். உப்பு விளைந்த உடன் விற்க முடிந்ததாலும் கழிவுகளால் ஏற்படும் எடை இழப்பு தவிர்க்கப்படுவதாலும் உப்பு வாணிகர்கள் புது உப்பு வாங்குவதை ஊக்கினர். இப்போது உப்பைப் பாடம் செய்யும் நடைமுறை முடிவுக்கு வந்து விட்டது.
                கருப்பஞ்சாற்றுப் பாகிலிருந்து பாகுக் கழிவாகவும் கருப்புக்கட்டியிலிருந்து வீணீராகவும் வெளியேறும் கழிவு உண்மையில் கழிவல்ல, இரும்புச் சத்தை முதன்மையாகக் கொண்ட வேறு பல சத்துகளும் அடங்கியதாகும். அவற்றின் சுவையும் மணமும்தான் வெல்லம் மற்றும் புதுக் கருப்புக்கட்டியின் இனிப்புச் சுவையை மட்டுப்படுத்துகின்றன. எனவே இந்தக் கழிவுகளை வீணாக்காமல் அவற்றிலிருந்து ஊட்டச் சத்துப் பொருட்களை உருவாக்க முடியும். ஆனால் நாம் அதனைச் செய்யாமல், குறிப்பாக, சீனியாலைக் கழிவுகளை நிலத்‌தில் தேங்கவைத்துப் பெரும் சுற்றுச் சூழல் சீர்கேடுகளை விளைவிக்கிறோம். கள்ளாகப் பயன்பட்ட பதனீரை நொதிக்காமல் தடுக்கவும் அதிலிருந்து கருப்புக்கட்டியும் வெட்டைக் கருப்புக்கட்டியும் செய்யும் தொ‌ழில்நுட்பங்கள் வரை நாம் வளர்த்‌தெடுத்துள்ளோம். அடுத்த கட்டமாகக் கரியி‌ன் ஊடாகப் பாகைச் செலுத்துவதன் மூலம் வெட்டைக் கருப்புக்கட்டியில் நிகழும் மாற்றத்தைக் கரும்பஞ்சாற்றுப் பாகில் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண‌டுபிடித்ததன் மூ‌லம் சீனர்கள் அதனை மேம்படுத்தியுள்ளனர். ஐரோப்பியர் மூலம் அது நம்மை எட்டியுள்ளது, வழக்கம் போல் குறை சொல்லிக்கொண்டே அதை நாம் பயன்படுத்துகிறோம். பதனீரிலிருந்து வெள்ளைச் சீனி செய்யும் பல தொழிற்சாலைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்திலிருந்தன. அவற்றை மீட்டு பதனீரிலிருந்து வெள்ளைச் சீனியையும், கரும்பாலை மற்றும் பதனீராலைக் கழிவுகளிலிருந்து துணைப் பொருட்களைச் செய்யும் தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்கப் போகிறோமா அல்லது வழக்கம் போல் அதனையும் அயல்நாட்டான் கண்‌டுபிடித்துத் தருவான் என்‌று காத்திருந்து அவன் தரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவனுக்கு வேண்டும் பொருட்களைச் செய்து ஏற்றுமதி ‌எனும் மாயையில் அவனுக்கே விற்றுவிட்டு அடிமைகளாக வாழ‌ப்போகிறோமா என்பதுதான் நம் முன்னுள்ள கேள்வி.
                கரும்பாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளில் போல் உப்பிலிருந்து வெளியேறும் கழிவுகளிலும் விலை மதிப்புள்ள வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன. அவற்றையும் நாம் பயன்படுத்துவதில்லை. மொத்தத்தில், கழிவுப்பொருள் மேலாண்மையில் மட்டுமல்ல, மூலப்பொருள் மேலாண்மையிலும் நாம் எந்தக் கவனத்தையும் செலுத்தி நாட்டின் வளத்தை மேம்படுத்தி நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நினைப்பதில்லை. அயலவர்க்கு அடிமை செய்யும் உரிமைக்காகச் சாதி சேர்ந்து சங்கம் சேர்ந்து அடிதடி, வெட்டுக் குத்துச் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம். ஆண்ட இனமாக்கும் நாங்கள் என்ற வெட்கங்கெட்ட ஓலம் எல்லாத் திசைகளிலிருந்தும் காதைக் கிழிக்கிறது.
[4] தோண்டி எ‌‌ன்பது பனை ஓலையால் நீர் இறைப்பதற்காகச் செய்‌யப்படும் ஒரு கலம். அ‌ரை வட்டமாக நடுவில் கைப்பிடியுடன் இது அமைந்திருக்கும். ஓலைப் பகுதியில் கீறல் அல்லது வெடிப்பு ஏற்பட்டால் பழந்துணியை அதன் மீது மடித்து வைத்துத் தைத்துவிடுவர். தைப்பதற்குரிய நூலாகத் தென்னை ஓலையில் பிரிந்து செல்லும் இலக்கின் விளிம்பில் இருக்கும் தடித்த இ‌‌ழையைக் கிழித்தெடுத்து ஊசி கொண்‌டு தைப்பர். பருத்தி ‌‌நூலை விட இது உறுதியாக இ‌ற்றுப் போகாமல் நெடு நாள் இருக்கும். சிறிய வெடிப்புகளை அடைக்க, பலாக்காயை வெட்டும் போது வெளிப்படும் பாலினைப் பயன்படுத்துவர். தண்ணீர்ப் பானைகள் மற்றும் குடங்களில் ஏற்படும் சிறு ஓட்டைகளை அடைக்கவு‌ம் இந்தப் பால் பிசின் பயன்படும். தங்களைச் சுற்றியுள்ள மூலப்பொருள்களைப் பயன்படுத்தத் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்கி நம் முன் தலைமுறையினர் வாழ்ந்துள்ளதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. அதே மூலப்பொருட்களை இன்றைய சூழலில் நாம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற ஆய்வு வேட்கையைத் துண்டுவதற்கே இந்தச் செய்திகள் விரிவாகத் தரப்படுகின்றன. பழைய தொழில்நுட்பங்களை நோக்கிச் செல்வதற்கல்ல.
[5] நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவழக் கூர்வாய் செங்கால் நாராய்புறம்., சத்திமுற்றத்துப் புலவர்.
[6] தேங்காய் முளைக்கும் போதும் அதனுள்ளிருக்கும் பருப்பு இவ்வாறு தவுணாக மாறுகிறது.
[7] வடலி என்ற சொல் இளமையைக் குறிக்கும் விடலை என்ற சொல்லிலிருந்து வந்தது என்றொரு கருத்தும் உள்ளது. சேரர்களின் மாலை பனம்பூ மாலையாகும். நம் நாட்டில் பதனீர் இறக்கப் பயன்படும் பனையின் பூக்கள் மாலை தொடுப்பதற்குப் பயன்படுத்த முடியாத அளவு மிகச் சிறியவை. அதே நேரத்தில் வடலி என்ற சொல்லுக்கு இளம்பனை, போந்தை என்ற பெயர்கள் உள்ளன. போந்தை என்பது இந்தோனேசியாவில் வளரும் ஒரு வகைப் பனைமரம் என்றும் அதிலுள்ள பூதான் சேர மன்னர்களின் மாலைக்குப் பயன்பட்டன என்றும் பேரா.இரா.மதிவாணன் அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே வடலி என்பதுதான் இளம் பனையைக் குறிப்பிடும்  சொல்லாக இருக்க வேண்டும்.
                தென்னை என்ற சொல் தேன் என்ற சொல்லடிப்படையாக, தேன் போன்ற தென்னங்கள்ளிலிருந்து வந்ததென்று ராமகி என்பவர் தமழினி இதழ்க் கட்டுரையொன்றில் வேர் மூலம் காட்டுகிறார். அலகுப் பனையின் பாளை தவிர கள் தரும் வேறு எந்த மரத்திலும் பாளையை ஒடிக்க முடியாது. அலகுப்பனைப் பாளையை ஒடுத்து குரங்குகள் சுவைப்பதைக் கண்டு மனிதன் பதனீர் இறக்கும் தொழில்நுட்பத்தை எய்தினான் என்பதே சரியாக இருக்கும்.
[8]   M.E. poding;  origin unknown; relation to L.G. pudde – wurst, black pudding, and Fr. Boudin, obscure, CHAMBERS TWENTIETH CENTURY DICTIONARY, 1972
[9] வண்ணார்களும் சுண்ணாப்பரவர்களும் தாங்கள் வளர்க்கும் கழுதைகளுக்கு குத்துமித் தவிடு என அழைக்கப்படும் சலிக்கப்பட்ட உமியைத் தண்ணீரில் கலக்கி ஊட்டினர்.
[10] சில்லாடை அல்லது பன்னாடை என்ற இந்தச் சொற்களை பாவு, ஊடு நூற்களைக் கொண்டு நெய்யப்படும் செயற்கையான பாவாடை என்ற சொல்லோடு பொருத்திப் பார்க்கத் தூண்டுகின்றன. மனிதன் முதலில் நூலாடையாக பாவாடையைத்தான் அணிந்தான் போலும் என்றும் எண்ணத்தோன்றுகிறது. நாமறிய காட்டுவிலங்காண்டிகளின் உடைகள், நம் இயக்கியம்மன் அரையாடை உட்பட, அரையிலணியும் பாவாடையாக இருப்பதைப் பாருங்கள். பனையாடையாகிய சில்லாடையில் நரம்புகள் குறுக்கு நெடுக்காக ஓடுவதைக் கண்டுதான் மனிதன் துணி நெய்தான் என்பது இச் சொற்களின் புழக்கம் நமக்கு விளக்குகிறது. பாவு அமைத்துத் துணி நெய்யும் தொழில்நுட்பத்தைத் தமிழர்கள்தான் அறிமுகப்படுத்தினர் என்பதற்கும் இதைச் சான்றாகக் கொள்ளலாம்.    
[11]இன்றிருக்கும் இந்தியாவைப் பரத நாடு என்கிறோம். ஆனால் பரத கண்டமென்பது வேறு. கடற்கோளுக்கு முந்திய, நிலநடுக்கோட்டின் வடக்கிலும் தெற்கிலும் பரந்து கிடந்த ஒரு பெரும் நிலப்பரப்பே அது. அது பற்றிய செய்திகளைத் தொன்மங்களிலிருந்து தொகுத்து 20ஆம் நூற்றாண‌டின் தொடக்கத்தில் சிங்காரவேலு முதலியார் என்‌னும் அறிஞர் தொகுத்தளித்துள்ள அபிதான சிந்தாமணி எனும் கலைக்களஞ்‌சியத்தில் தந்துள்ளார். யாழ்ப்பாணத்து கதிரைவேற் பிள்ளை எனும் அறிஞர் தான் தொகுத்துள்ள தமிழ் மொழி அகராதியிலும் சில செய்திகளைத் தந்‌துள்ளார். அவற்றுள் அபிதான சிந்தாமணி பரத கண்டத்தில் அடங்கிய 7 தீவுகளைப் பற்றிக் கூறுகிறது. அவை நாவலம், இறவி, குசை, அன்றில், சான்மலி, தெங்கு, தாமரை ஆகியனவாகும். அவற்றுள் குசைத்தீவு, அன்றில் தீவு, சான்மலி ஆகியவற்‌றில் வாழும் மக்கள் கற்பக விருட்சப் பலகாரங்களை உண்டு வாழந்தனர் எ‌‌‌‌ன்றும் கூறுகிறது. உலகில் முன்பிருந்த 9 கண்டங்களைப் பற்றியும் அது கூறுகிறது. அவற்றில் வாழ்ந்த மக்கள் பலாப் பழச் சாறு, கருப்பஞ்சாறு, பேரிச்சம் பழம், நாவற்பழம் போன்றவற்றை உண்டனர் என்று கூறுகிறது, கண்டங்கள் தீவுகள் பற்றிய குறிப்புகளில் பல குழப்பங்கள் இருந்தாலும் இந்தத் தொன்மங்களை எழுதிய காலத்‌தில் பன‌ஞ்சாறு அதாவது பதநீரிலிருந்து பலகாரங்கள் செய்யும் தொழில்நுட்பம் இருந்தது என்பது வெளிப்படுகிறது. அதாவது கருப்புக்கட்டி செய்யும் தொ‌‌ழில்நுட்பம் பற்றிய அறிவுக்கு ஒரு தடயமாக இதைக் கொள்ள ‌முடியும். அது தொடர்ந்து வந்திருந்தால் இந்தியாவின் தென்கோடியில் மட்‌டும் இன்றைக்கு அது பதுங்கியிருக்காது. அப்படியாயி‌‌ன் அது என்னவாயிற்று. எங்கிரு‌ந்து‌ மீண்‌டு வந்தது என்ற கேள்விகள் எழலாம். தொடர்ந்து நிகழ்ந்த கடற்கோள்களால் மக்கள் கலைந்து வெவ்வேறிடங்களுக்குப் போன போது ஆங்காங்‌கிருந்த தட்பவெப்ப நிலைகள், நிலைத்திணைகளுக்கேற்ப தங்கள் உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொண்டே வந்ததால் இந்‌தத் தொழில்நுட்பம் மறக்கப்பட்டிருக்கலாம். அதே வேளையில் சித்த மருத்துவம் எனப்படும் தமிழ் மருத்துவத்தில் பனங்கற்கண்டு, கருப்புக்கட்டி போன்றவை மருந்துகள் செய்வதில் பயன்படுகின்றன. இச் செய்முறைகளில் கடைப்பிடிக்கப்படும் தொழில்நுட்பத்தை மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நினைத்த உயர் நோக்குள்ள ஒரு தமிழ் மருத்துவரின் முயற்சியால் இன்றைய தமிழகத்தின் தென் கோடியிலோ ஈழத்திலோ அது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். முன்பு‌ தினமணி வணிக மணியில் குப்பையும் ‌செல்வமாகலாம் என்ற தலைப்பிலும் பின்னர் இளைஞர் மணியில் நீங்களும் தொழிலதிபர் ஆகலாம் என்ற தலைப்பிலும் கட‌டுரைகள் எழுதிய டாக்டர் என். கே. சண்முகம் என்பார் தமிழ் மருத்தவ நூல்களை ஆய்ந்து புதுப் புதுத் தொழில் நுட்பங்களைக் கூறுவது போன்ற முயற்சிதான் இதுவும்.
1 சட்டை அணிவது யவனர் எனப்படும் அயலவர்களாலும் படைவீரர்களாலும் கழக(சங்க) காலத்திலேயே தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. மெய்ப்பை, குப்பாயம், சல்லடம்(கால்சட்டை)என்ற பெயர்களால் அது அழைக்கப்பட்டது. ஆனால் வெய்யிலிலும் காற்றிலும் மழையிலும் புழுதியிலும் சேற்றிலும் வேலை செய்யும் உடலுழைப்பாளர்களால் அது அணியப்படவில்லை. நிழலிலும் வீட்டிலும் காலத்தைக் கழிக்கும் மேல்சாதியினர் நினைத்த போது அங்கவத்திரம் எனப்படும் மேலாடையால் உடலைப் போர்த்திக் கொண்டு ஐம்‌பூதங்களின் தாக்குதல்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் மேல் துண்டோ, தலைப்பாகையோ அணியக் கூடாது என்று உழைப்போர் தடுக்கப்பட்டனர். செருப்பணிவதும் தடைசெய்யப்பட்டது. இன்று கூட நம் தட்பவெப்ப நிலைக்குச் சட்டை அணியாமலிருப்பதுதான் உகந்தது என்று படித்த ஒரு கூட்டம் தாங்கள் சட்டை, தொப்பி, முழுக்கால் சட்டை, கண்ணாடி என்று அனைத்து உடல் பாதுகாப்பணிகளையும் அணிந்துகொண்டே கூச்சமும் தயக்கமும் இன்றிப் போலி அறிவியல் பேசுவதை நாம் கேட்கிறோம். உலகில் எந்தத் தட்பவெப்ப நிலையில் வாழ்ந்தாலும் மனிதன் தன் உடலை மூடி ஐம்பூதங்களின் தாக்குதலிலிருந்து காத்தாக வேண்டும். இல்லையெனின் அவனது உடலின் பொலிவும் மூளையின் ஆற்றலும் கெடும். உலகில் உடலை மூடாமல் வாழும் மக்கள்தாம் உடல் கறுத்து தோல் சுருங்கி தோற்றப் பொலிவின்றி வாழ்கின்றனர்.

0 மறுமொழிகள்: