28.12.15

சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 18


இணைப்பு: 3
   மணிகட்டிப் பொட்டல்,
30-01-2008.
அன்பு மிக்க குமரிமைந்தன் அவர்களுக்கு,

            வணக்கம். இன்றுதான் ஊர் வந்தேன். நாடார்களின் வரலாறு பார்த்தேன். பெரும்பாலும் கன்னியாகுமரி நாடார்களின் வரலாறாக இது இருக்கும் என்று தோன்றுகிறது. நிறைய மக்கள் சார்ந்த நம்பிக்கைகளையும் செய்திகளையும் இதில் சேர்த்திருக்கிறீர்கள் என நம்புகிறேன். நூலின் இறுதியில் இமானுவெல் அவர்களின் கோபத்தையும் பதிவு செய்திருக்கிறீர்கள். வைகுண்ட சாமியை பகுத்தறிவு பார்வையில் மதிப்பிடுகிறீர்கள் என்றும் தோன்றுகிறது. எங்கள் குடும்பத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள்.

            பெரும்பாலும் பிப்ரவரிக்குள் படித்து விடுவேன். படித்து விட்டு என்னுடைய விரிவான கருத்துகளை எழுதுகிறேன். நீங்கள் மதிப்புரையாக எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சியே.
அன்புடன்,
பொன்னீலன்.
            அதற்கு முன் படித்து முடித்து விட்டாலும் உடனே எழுதுகிறேன்.
பொன்னீலன்.

இணைப்பு: 4
மணிகட்டிப் பொட்டல்,
01-02-2008.
அன்பு மிக்க நண்பர் அவர்களுக்கு,

            வணக்கம். எதோ ஒரு உந்துதலில் நாடார்களின் வரலாறு முழுவதையும் நேற்றே படித்து விட்டேன். நான் அதிகமாக எதிர்பார்த்துவிட்டேனோ என்னவோ, எனக்கு இந்த நூல் திருப்தியளிக்கவில்லை. இளந்தோட்டம் சுகுமாறனுக்கும் குருசாமிச் சித்தருக்கும் ஆனைமுத்து அவர்களுக்கும் பதில் சொல்லும் நோக்கத்தோடேயே இதை எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் நூலில் ஓரளவுக்குச் சாரமுள்ள பகுதி என்பதே ஏற்கனவே ஹாட்கிரேவ் எழுதிய பகுதிகளாகத்தான் தெரிகிறது. அவருடைய நூல் நடுநிலையிலிருந்து ஆய்வியல் நோக்கில் நாடார் சாதியின் நீண்ட வரலாற்றைப் பதிவு செய்யவில்லை. காமராசரின் எழுச்சிக்கு எதிரான ஒரு வரலாற்று அறிமுகமே அது. சீர்திருத்த கிறிஸ்தவர்களின் பதிவுகளை அடிப்படையாக வைத்து ஒரு 200 ஆண்டு கால வரலாறைத் தொகுத்திருக்கிறார் அவர். இந்தியத் துணைக் கண்டத்தின் தென் முனையின்(திருவனந்தபுரம் மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம்) பெரும்பான்மைச் சாதியான இச் சாதி எந்த இனக் குழுவிலிருந்து உருப்பெற்றது? எப்படி வளர்ச்சி பெற்றுச் சாதியானது? நீண்ட கால வரலாற்றில் எந்த அடிப்படையில் இந்தச் சாதி தொகுக்கப்பட்டுள்ளது? அதன் உழைப்பு என்ன? உற்பத்தி என்ன? ஒரு இனக்குழு சாதியாவது உபரி உற்பத்தி வழியாகத்தான். இதனுடைய உபரி உற்பத்தி என்ன? எந்த நூற்றாண்டிலிருந்து அது உபரி ஆனது? சாணார் என்ற சொல்லின் வேர்ச்சொல் என்ன? எந்தெந்தச் சாதிகள் எல்லாம் இந்தப் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன? நாடாருக்கும் சான்றாருக்கும் உள்ள வேறுபாடு என்ன? எட்டுத் தரத்து நாடார்கள் யார்? அவர்கள் எப்போது பட்டையமும் அதிகாரமும் பெற்றார்கள்? இவர்களுடைய அதிகாரம் எப்போது ஒடுக்கப்பட்டது? மக்கள் வழி - மருமக்கள் வழி மோதல்களில் அடித்தள, மேல் நிலை நாடார்களின் நிலை என்ன? நாடார் - சாணார் ஒருங்கிணைப்பு எப்போது நடந்தது? இவைகளெல்லாம் வரலாற்று ரீதியில் அடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

            எந்த மனிதக் குழுவும் திடீரென்று உருவாவதில்லை. வரலாறோடு உருவாகி வளர்ந்துவருவது அது. கல்வெட்டுச் சான்றுகள், தொல்லியல் சான்றுகள், இலக்கியச் சான்றுகள், நாட்டார் வழக்காற்றியல் சான்றுகள், வாய்மொழிச் சான்றுகள், இவை அறிவியல் பூர்வமாகப் பொருள் கொள்ளப்பட வேண்டும். இம் மாதிரியான அடிப்படைகளில் திரட்டப்படும் தகவல்கள் வரலாற்று அறிவியல் அடிப்படையில் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும்.

            உங்கள் நூலிலோ, பெரும்பான்மையான தகவல்கள் யூகங்களே. நீங்கள் தரும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏற்கனவே உறுதிப் படுத்தப்பட்டவை. கோயில் நுழைவுப் போராட்டத்தில் கூட 1924-ல் நடந்த கடைசி போராட்டத்தைத்தான் உங்கள் நூல் குறிப்பிடுகிறது. 1874-ல் முதல் போராட்டம் தொடங்கியது. பிற ஒடுக்கப்பட்ட சமுகங்கள் போராடத் தொடங்குவதற்கு நூறாண்டுகளுக்கு முன்னாலேயே போராடி சாதனை படைத்த ஒரு சமூத்தின் உள்ளாற்றலை நீங்கள் தொட்டுக் காட்டவே இல்லை. மேலும் உங்கள் நூலில் கிட்டத்தட்ட பாதிப் பகுதி இந்த வரலாற்றுக்குச் சம்மந்தமில்லாத பொதுத் தகவல்களின் தொகுப்பாக இருக்கிறது. என்னுடைய வேண்டுகோள், நீங்கள் அவசரப்படாமல் இன்று வரை வெளிவந்துள்ள எல்லா நூல்களையும் பார்வையிட்டு ஒரு வரலாறு எழுத வேண்டும் என்பது. உங்களால் அது முடியும். தயவு செய்து செய்யுங்கள். யாருக்கும் பதிலாக ஒரு வரலாறு எழுதாதீர்கள்.
அன்புடன்
பொன்னீலன்.
நூலாசிரியரின் விளக்கம்
 நாகர்கோயில்,
08-02-2008.
அன்பு நண்பர் பொன்னீலன் அவர்களுக்கு வணக்கம்.

            தாங்கள் எழுதிய உள்நாட்டு அஞ்சல் அட்டை படித்தேன். தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல ஓர் உந்துதலில் விரைந்து படித்ததனால் நூலில் உள்ள செய்திகளில் சில தங்கள் கவனத்தில் பதியாமல் போயுள்ளன என்று தோன்றுகிறது. அதே வேளையில் நாடார்களின் வரலாற்றின் ஒரு முழுமையான பதிவு அல்ல என் ஆக்கம் என்பதுதான் உண்மை. அந்தக் குறைபாட்டை ஓரளவாவது நிறைவு செய்வார் என்ற நம்பிக்கையில்தான் திரு. இம்மானுவேல் அவர்களிடம் ஒரு திறானாய்வை வேண்டினேன். அவர் தன் கோணத்தில் நூலின் அணுகலில் தனக்குள்ள மனக்குறையைப் பதிந்துள்ளதைத் தாங்கள் படித்திருப்பீர்கள்.

            தங்கள் மடலில் தாங்கள் சில செய்திகளைக் குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மையில் அச் செய்திகள் எனக்குப் புதியவை. தாங்கள் நினைப்பது போல் நான் நூல்களைத் தேடிப் படிப்பதில்லை. அதற்கான வாய்ப்புகளை என் வாழ்நிலை எனக்கு வழங்கவில்லை. நான் என் பணியின் நிமித்தம் காடு, மேடு, மலை, மடு என்று அலைந்தவன். அந்த அலைச்சலின் ஊடே கிடைத்தவற்றைப் படித்தவற்றிலும் பார்த்தவற்றிலும் கேட்டவற்றிலும் பதிந்தவற்றை மனதில் அசைபோட்டு எனது முடிவுகளை எடுக்கிறேன். அந்த முடிவுகளை உய்த்தறிவு(Infenence) என்று கூறலாம். அவை ஊகம்(Guess) என்றும் நீங்கள் கூறலாம். இரண்டுக்கும் உள்ள எல்லை மெல்லியது, நிலையற்றது. இதுவா அதுவா என்பதை அந்தக் குறிப்பிட்ட பொருள் பற்றி முடிவு செய்பவரது கண்ணோட்டம் தீர்மானிக்கிறது.

            இந்த அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு இப்படி ஒரு வரலாற்று நூல் எழுதலாமா என்று கேட்பீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் நான் படித்ததும் பார்த்ததும் கேட்டதும் அவற்றிலிருந்து எனக்கு கிட்டிய முடிவும் கல்வெட்டுப் போலவும் தொல்பொருட்கள் போலவும் ஏட்டுச் சுவடி போலவும் மண்டையோடுகள் போலவும் பருப்பொருள் சான்றுகளல்லவே! என்னோடு அழிந்து போகக் கூடியனவல்லவா? அதனால் அதைப் பதிய வேண்டிய கடமை உணர்வினால்தான் அதைப் பதிந்துள்ளேன். அத்துடன் எந்தவொரு வரலாறும் ஒரு தனி மனிதனுடைய படைப்போ உரிமையோ அல்ல. அதன் உருவாக்கத்தில் எவ்வாறு முழுக் குமுகமும் பங்கேற்கிறதோ அது போல் அதன் பதிவிலும் ஒரு கூட்டுப் பங்களிப்பு வேண்டும் என்பது என் கருத்து. அதனால்தான் இந்தக் குறிப்பிட்ட முயற்சியில் தங்கள் பங்களிப்புகளை வழங்க முடிந்தவர்கள் என்ற எண்ணத்தில் இம்மானுவேல் அவர்களையும் தங்களையும் அணுகியுள்ளேன். தங்கள் மடலில் தங்களால் உதவ முடியும் என்று காட்டும் சில குறிப்புகள் உள்ளன, எட்டுத் தரத்து நாடார்கள், மக்கள் வழி மருமக்கள் வழி மோதல்கள் என்பன போன்று. அவற்றைத் தாங்கள் விரிவாகத் தந்து இந் நூலை முழுமைப்படுத்த வேண்டுகிறேன்.

            இனக்குழு பற்றித் தாங்கள் கூறியுள்ள கருத்துகள் பற்றி சில சொல்ல விரும்புகிறேன்.

            இனக்குழு என்ற சொல்லுக்கு குக்குலம் என்ற பாவணர் வடித்த சொல்லை நான் பயன்படுத்துவேன். குக்குலங்கள் தாய்கள் வழியாக அறியப்படுபவை. ஒரு நிலப்பரப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட அத்தகைய குக்குலங்கள் அனைத்து இடங்களிலும் மலை முதல் கடல் வரை, குறிஞ்சி நிலம் முதல் நெய்தல் நிலம் வரை கலந்து வாழ்பவர்கள், ஆனால் அதே நேரத்தில் தம் சொந்தக் குக்குலத்து ஓர்மையைப் பேணிக் காப்பவர்கள். அவர்களுடைய உறவு அரத்த உறவு(Consanguinity) எனப்படும். நில எல்லை தாண்டிய இந்த உறவில் உடைவு ஏற்பட்டு நில எல்லை அடிப்படையிலான உறவுகள் உருவாவது அரசின் தோற்றத்துக்கு அடிப்படையானது என்று ஏங்கல்சு தனது ஒப்பற்ற குடும்பம், தனியுடைமை, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் குறிப்பிட்டார். பழைய குக்குல வழிமுறையிலிருந்து வேறுபட்டதாகிய அரசு, முதலில் தன் குடிமக்களை, நில எல்லைக்கு ஏற்ப பிரிக்கிறது...... வாழும் இடத்திற்கு ஏற்ப குடிகளின் இந்த ஒருங்கிணைப்பானது அனைத்து அரசுகளுக்கும் பொதுவான ஒரு கூறாகும். அதனால்தான் அது இயற்கையானதாக நமக்குத் தோன்றுகிறது... ஆனால் ..... குக்குலத்துக்கு ஏற்ப இருந்த பழைய ஒருங்கிணைப்பை அகற்றுவதற்கு ... நீண்ட கடுமையான போராட்டங்கள் தேவைப்பட்டன என்கிறார் அவர்.

            As distinct from the old gentile order, the state, first, divides its subjects accoridng to territory...This organization of citizens according to locality is common to all states. That is why it seems natural to us; but ... long and arduous struggles were needed before it could replace... the old organization according to the gentile,(F.Engels, The Origin of Family, Private Property and the State, Progress Publishers, Moscow, 1972 p. 167)

            இதை மேற்கொண்ட லெனின் மேலேயுள்ளதன் பிற்பகுதியைத் தெளிவுபடுத்தும் வகையில்..

            இந்தப் பிரிவினை நமக்கு இயல்பானதாகத் தோன்றுகிறது. ஆனால் இதற்கு, தலைமுறைகள் அல்லது குக்குலங்கள் அடிப்படையிலான கட்டமைப்புக்கு எதிரான நீண்ட போராட்டம் வேண்டியிருந்தது என்று தனது அரசும் புரட்சியும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
            This division seems natural to us, but it cost a prolonged struggle against the old organisation according to generations or tribes (V.I.Lenin, State and Revolution, Progress Publishers, Moscow, 1972, P.10)

            இவ்வாறு மனிதனின் தொல்வரலாற்றில் நிலத்தின் அடிப்படையிலான பண்பாடு பற்றிய பதிவு உலகிலேயே தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் பொருளிலக்கணத்தில்தான் உள்ளது. அதுவோ முந்து நூல் கண்டு முறைப்படி வகுத்த ஒன்று. எனவே பொருளிலக்கணம் என்பதன் தோற்றக் காலத்தில் இன்னும் தூய வடிவில் அந்தப் பதிவுகள் இருந்திருக்கும். இந்த நிலை உருவாவதற்குரிய காரணமாக இருந்த போர்களும் நம் தொன்மங்களில் உள்ளன. குறிப்பாக மகாபாரதத்தில் மிக விரிவான அளவில் உள்ளன.

            நான் நூலில் குறிப்பிட்டுள்ளது போல் நம் மரபில், பல்வேறு சாதிகளின் வரலாறுகளில், நாடார்களின் வரலாற்றில் அவர்கள் எந்தவொரு தனிப் பெண்ணிலிருந்தும் என்றில்லாமல் ஏழு கன்னியர் அல்லது ஏழு மாதர்களின் வழிவந்தவர்கள் என்று குறிப்பிடுவதிலிருந்து குக்குலங்கள் தங்கள் தனித் தன்மையை இழந்து ஒன்றுகலந்துவிட்டதைக் காட்டுகிறது.

            இந்த ஏழு பெண்களில் ஒருத்தியைப் பற்றிய ஒரு பதிவு சிலப்பதிகாரத்தில் வருகிறது. பாண்டியனிடம் முறை கேட்க அவன் அரண்மனை வாயிலில் வந்து நின்ற கண்ணகி பற்றி அரசனிடம் செய்தி தெரிவித்த வாயிலோன் அச்சமூட்டும் அவளது தோற்றத்தைக் கூறும் போது,
                                    அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
                                    பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
                                    வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்
                                    அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
                                    ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
                                    கானகம் உகந்த காளி தாருகன்
                                    பேரூரம் கிழித்த பெண்ணுமல்லள்.... வழக்குரை காதை 34-40
என்று கூறுவதாக இளங்கோவடிகள் விளக்குகிறார். இதில் வரும் அறுவர்க்கிளைய நங்கை என்பதற்கு கன்னியர் எழுவரில் இளையாளாகிய பிடாரி என்று உரையாசிரியர் கூறுகிறார் (வேங்கடசாமி நாட்டார் உரை). பிடாரி என்பது பிடாரன் என்பதன் பெண்பால். பிடாரன் என்பது பாம்பாட்டியைக் குறிக்கும் சொல். எனவே இவள் நாகர்கள் எனும் குக்குலத்தினரின் முதல் தாய். நாகர்களின் குலத்தின் தாயைக் கத்துரு என்கிறது மகாபாரதம். அவளை காசிபரின் பதின்மூன்று மனைவியரில் ஒருத்தியாக அது கூறுகிறது. அவளுடைய ஒரு மகன் நகுசன் என்பவன். இந்த நகுசன் குரு மரபின் ஓர் அரசனாக, தவங்கள் செய்து இந்திர பதவி அடைந்து அகத்தியரால் சாபம் ஏற்று பாம்பாக மாறுவதாக மகாபாரதம் கூறுகிறது. இவன் நாக மரபினன் என்பதைக் காட்டும் ஒரு தடயமாக இதைக் கொள்ள வேண்டும்.

குரு மரபினர் நாகர்கள் வழிவந்தவர்கள் என்பதை மறைக்க அவர்கள் நிலவின் வழிவந்தவர்கள் என்று கதை கூறினாலும் அவர்களது உண்மையான தோற்றக்குறி(Totem) நாகமே என்பது இந்தக் கதைத் துணுக்கிலிருந்தும் துரியோதனனின் பாம்புக் கொடியிலிருந்தும் வெளிப்படுகிறது(அரவக் கொடியோன்).

            சந்திரன் மகன் புதன், புதன் வழிவந்தவர்கள் குரு மரபினர் என்கிறது மகாபாரதம். குருவின் மனைவியைக் கூடி சந்திரன் புதனைப் பெற்றான் என்பது அக் கதை. குரு என்பதற்கு தேவர்களின் குருவாகிய வியாழன் என்பர் தொன்மையர். ஆனால் சுக்கிரனாகிய வெள்ளியிலிருந்து பிரிந்து வந்து புவிக்கும் வெள்ளிக்கும் இடையில் புதிதாகத் தோன்றிய ஒரு கோள் புதன்; அது பின்னர் கதிரவனின் ஈர்ப்பு வட்டத்தினுள் கொண்டுவரப்பட்டு கதிரவனின் முதல் கோள் ஆகியுள்ளது என்றொரு கருத்து வானியலாரிடம் உள்ளது. அதன்படி இங்கு குரு என்பது அசுர குருவாகக் கூறப்படும் சுக்கிரன் அதாவது வெள்ளியாகவே இருக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிலப்பதிகாரத்தில் ஊர்காண் காதையில் ஒன்பான்(நவ) மணிகளை விளக்கும் போது சந்திர குருவே அங்கா ரகனென வந்த நீர்மைய வட்டத் தொகுதியும் எனும் 195-6 வரிகளுக்கு வெள்ளியும் செவ்வாயும் போல் வெண்ணீர்மை, செந்நீர்மை உடையனவும் திரட்சியுடையனவுமாகிய முத்து வருக்கமும் என்று வேங்கடசாமியார் உரையில் தரப்பட்டுள்ளது. அத்துடன் விளக்க உரையில் சந்திரகுரு : வெள்ளி; வியாழன் என்றது புராணத்திற் கொத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

            புதனை எடுத்து விட்டுப் பார்த்தால் கதிரவனை அடுத்த முதல் கோள் வெள்ளி. அடுத்து வருவது புவி. புவியின் துணைக்கோள் நிலவு. இவற்றின் இயக்கத்தில் புவியை விட நிலவுக்கே வெள்ளிக்கு நெருக்கமாகச் செல்லும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மிக நெருக்கமாக வந்த ஒரு நேரத்தில் சந்திரன் தன் ஈர்ப்பு விசையால் வளி நிலையிலிருக்கும் வெள்ளியிலிருந்து ஒரு பகுதியை ஈர்த்து புதன் என்றொரு புதிய கோளை உருவாக்கி இருக்கலாம் என்பது வானியலார் கருத்து. புதியது புத்தன் புதன் என்று அது அழைக்கப்படுகிறது. அறிவு என்பதே புதிது தானே. எனவே அறிவது புதியது புத்தி புத்தன்.
           
பண்டை வரலாற்றைத் தொன்மமாக மாற்றி கதைத் தலைவர்கள் அல்லது தெய்வங்களின் தோற்றத்தின் எளிமையை மறைத்து அல்லது இழிவை பெருமைப்படுத்தி வான் அறிவியல் போன்ற நிகழ்ச்சிகளை எவ்வளவு திறமையாகக் கலந்துள்ளனர் நம் முன்னோர்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த தெளிவான சான்று.

            நாக மரபில் வந்த நகுசனின் மகன் யயாதி. அவனது மனைவியாகிய தேவயானைக்குப் பிறந்த மக்களைத் துரத்தி விட்டு வேலைக்காரியாகிய சன்மிட்டையின் மகனுக்குப் பட்டத்தை அளித்தான் யயாதி. அவ்வாறு துரத்திய மகன் பெயர் யது. அவன் வழி வந்தவர்கள்தாம் யாதவர்கள். அந்த யாதவர் வழியில் வந்தவன்தான் கண்ணன். ஆக கண்ணனும் நாக மரபினனே என்பது புலனாகும். இந்தக் கண்ணன்தான் ஐந்நிலங்களில் ஒன்றான முல்லையின் நிலம் சார்ந்த தெய்வமாகிய மாயோன்.

            முதல் தாய்வழிக் குக்குலங்களுக்குத் தந்தை என்ற உறவே கிடையாது. தொன்மங்களை எழுதியவர்களால் அவர்கள் காலத்துக்குப் பொருந்தாத இந்த உண்மையைச் செரிக்க முடியாது. எனவே தக்கனின் மகள்களில் 13 பேரைக் காசிபருக்குத் திருமணம் செய்து கொடுத்ததாகவும் அதில் ஒருத்தி கத்துரு என்றும் எழுதி வைத்துள்ளனர். ஆனால் இந்தக் கதையின் உண்மையான பின்புலம் சிலப்பதிகாரத்திலும் மக்களின் சாதி வரலாறுகளிலும் உள்ளது. எந்த ஒரு சாதியும் தன்னுடைய தோற்றத்தை ஓர் ஒற்றைத் தாயிலிருந்து காட்டவில்லை என்பதிலிருந்தே அந்த ஏழு குக்குலங்களும் தம் தனித்த அடையாளங்களை இழந்து ஒரே குழுவாகக் கலந்து பின்னர் சாதிகளாக உடைந்துள்ளன என்பதற்குத் தெளிவான சான்றுகளாகும். இருப்பினும் வரலாற்று எச்சங்களாக நாக வழிபாடு மட்டும் இன்றும் துலக்கமாக எஞ்சியிருப்பது, ஏழு குக்குலங்களில் இறுதிக் காலத்தில் வலிமையுடன் இருந்தது பிடாரியின் வழிவந்த நாகர்கள்தாம் என்பதற்குச் சான்று.

            அறுவர்க் கிளைய நங்கை என்பதில் வரும் இளைய என்ற சொல்லாலும் இது விளங்குகிறது. இன்று களத்தில் பார்த்தாலும் நாகர்களின் பெயரில் விளங்கும் நாகர்கோயிலில் உள்ள, இன்று நாகராசா கோயில் என்று அழைக்கப்படும் கோயில் நாகரம்மன் கோயில் என்றுதான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அழைக்கப்பட்டது என்பது ஒரு சான்று. கீழைக் கடற்கரை வழி சென்றால் நாகப்பட்டினம், நாகூர் போன்றவை நாகர்களின் பெயர் சொல்கின்றன. சீர்காழி[1]யில் சிவன் கோயிலைச் சுற்றியிருக்கும் தெருக்களின் பெயர்கள் பிடாரி வடக்குத் தெரு, பிடாரி தெற்குத் தெரு, பிடாரி மேற்குத் தெரு, பிடாரி கிழக்குத் தெரு என்பவை ஆகும். அதில் ஒரு மூலையில் இருக்கும் சிறுகோயிலுக்குப் பெயர் புற்றடி மாரியம்மன் கோயில் என்பது. இது நாகரம்மனைக் குறிக்கவில்லையா? அதே போன்று பெயர் திரிந்த நாகரம்மன் கோயில்களைச் சிதம்பரத்திலும் பார்த்துள்ளேன்.

            குக்குலங்களில் இறுதியாக வலிமை பெற்றிருந்த நாகர்களில் இருந்தே உருவான தலைவர்கள் குக்குலக் கட்டமைப்பை உடைத்து நிலம் சார்ந்த அரசுகளை அமைத்ததன் ஒரு நிகழ்வையே மகாபாரதம் துரியோதனனுக்கும் கண்ணனுக்கும் நடைபெற்ற போராட்டமாகத் தருகிறது. அது மட்டுமல்ல, தக்கன், பலராமன் எனப்படும் பலதேவன் என்று எண்ணற்ற தொன்மத் தலைவர்கள் நாக மரபினராகக் காணப்படுகின்றனர். இவை அனைத்தும் தொல்காப்பியம் காட்டும் ஐந்நிலப் பாகுபாட்டுக்குப் பின்னணி விளக்கம் தரும் தொன்மப் பதிவுகள்.

            இவ்வாறு குக்குலங்கள் கலந்து உடைந்து நிலஞ்சார்ந்த மக்களாக உருவாகி அதே நேரத்தில் முன்னாள் தொடர்புகளின் தொடர்ச்சியாக வாணிகம் - அறிவியல் - தொழில்நுட்பம் - விளைப்பு வகைதுறைகள் வளர்ந்து அதன் விளைவாக பன்முக வளர்ச்சிகள் உருவான போது தொழில் சார்ந்த சாதிகள் உருவாகத் தொடங்கின.

            குக்குலம் என்பது அரத்த அடிப்படையிலான உறவுடைய மக்களின் குழு. அது உடைந்து புதிதாக சாதிகள் உருவானபோது அதுவும் அரத்த உறவுடையதாகத்தான் இருந்தது. அந்த ஒரு தன்மைதான் குக்குலத்துக்கும் சாதிக்கும் உள்ள ஒற்றுமை. அந்த வகையில் குக்குலத்தின் அகற்றலின் அகற்றல் (Negation of negation)தான் சாதியே ஒழிய குக்குலத்து மக்களுக்கும் சாதி மக்களுக்கும் அரத்தவழி உறவோ தொடர்ச்சியோ கிடையாது.

            சாதிகளும் கூடத் தம் இயல்பில் மாறியுள்ளன. கழக இலக்கியங்களில் தொழில்களின் பெயரில் சாதிகள் அமைந்தன. அளவர், கொல்லர், தட்டர், தச்சர், வலையர், மீனவர், மறையோர், பறையர், வேடர், வேட்டுவர், எய்யுநர்(எயினர்), நளவர்(நறவர்=கள்ளிறக்குவோர், நறவு=கள்), வண்ணார், நாவிதர்(நால்விதர் என்று நான் பொருள் கொள்கிறேன். பண்டிதம், முண்டிதம், சங்கீதம், புரோகிதம்), பாணர், கூத்தர், போன்றவை. ஆனால் பண்பு சார்ந்த அந்தணர் என்ற சொல் குறளிலும் கழக இலக்கியங்களிலும் வந்துவிட்டன. மறவர் என்ற பண்பு அடிப்படையிலான சொல் வேடர், வேட்டுவர், எயினர் என்ற தொழிலடிப்படையிலான சொல்லுடன் மயங்கிக் காணப்படுகிறது சிலப்பதிகாரத்தின் வேட்டுவ வரியில். ஆனால் சான்றோர் என்ற பண்பு அடிப்படையிலான சொல் ஒரு குழுவைக் குறிக்கும் பொருளில் கழகக் கால கட்டத்தில் பதிவாகியுள்ளதாகத் தெரியவில்லை. அதுதான் மக்கள் வழக்கில் சான்று கூறுவோர் என்ற பொருளில் வழகிகில் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளேன். பார்ப்பான் என்ற சொல்லுக்கு ஏற்கத்தக்கதாக ஒரு விளக்கம் இதுவரை கிடைக்கவில்லை. அரசர்களின் அணுக்க அறிவுரையாளராகவும் பரத்தையர்களுக்குத் தரகர்களாகவும் முற்றிலும் முரண்பட்ட நிலைகளில் அவர்களைக் காண்கிறோம். பரத்தையருடனுள்ள தொடர்புதான் அவர்களை உயரத்துக்கு இட்டுச் சென்றதோ என்னவோ?

            அடுத்த கட்டமாக சாதி என்பது குமுகத்தில் அம் மக்களுக்கு உள்ள இடத்தைக் குறிப்பதாக மாறியதென்று கொள்ளலாம். உழவர், உழத்தியர் என்று தொல்காப்பியம் குறிப்பிடும் மக்கள் பின்னர் கடையர், கடைசியர், என்றும் பின்னர் பள்ளர் என்றும் மாறினர். பள்ளர்களிலிருந்தும் வேறுபட்ட, வன்னியர்களாக இன்று அறியப்படும் வகுப்பினருக்குப் பள்ளியர் என்றொரு பெயரும் உள்ளது. இந்த மாற்றங்கள் கூட நேரான அரத்தத் தொடர்பான தொடர்ச்சியிலிருந்து வந்ததென்று கொள்ள முடியவில்லை. கழகக் காலம், களப்பிரர் இடையீடு, புதிய அரசுகள், அவற்றின் மூலம் அயலவர் வரவு, காட்டிக்கொடுப்போர், அதனால் செல்வாக்குப் பெற்றோர், அத்தகைய அரசியல் நிகழ்ச்சிகளால் நிலையில் இறங்கியவர், இறக்கப்பட்டவர் என்று சாதித் தொகுப்புகள் இடையீடின்றி மாறிக்கொண்டே இருந்தன. அதன் ஒரு இறுதி விளைவாகத்தான் பள்ளர்களிடையில் உள்ள உட்பிரிவுகள் 100க்கும் மேல் என்றும் 300க்கும் மேல் என்றும் கூறப்படுகிறது. இந்த வகையில் நாடார்கள் எனும் சாதியினரை நாம் எப்படித் தடம்பிடிக்க முடியும்? எந்தச் சாதியைத்தான் தடம்பிடிக்க முடியும்? இராமானுசர் செய்தது போல் வேறு எத்தனை பேர் பார்ப்பனர்களைப் புதிதாக உருவாக்கினார்களோ? எத்தனை பேர் தாங்களாகவே மாறிக்கொண்டார்களோ?

            இதற்கும் அடுத்து வருபவை அரசியல் அல்லது ஆட்சியியல் பட்டங்களை அடையாளமாகக் கொண்டவை. மூப்பன், கோனான், குடும்பன், சேர்வை, கிராமணி, கவுண்டன், முத்தரையன், அம்பலம், முதலி, நாடான், நாட்டான் போன்ற சாதிப்பட்டங்கள் இந்த வகைப்பாட்டில் அடங்கும். மூப்பன், சேர்வை, அம்பலம், முதலி போன்ற பட்டங்களைக் கொண்ட சாதிகள் ஒன்றுக்கு மேற்பட்டவை உள்ளன.

            பிள்ளை என்ற பட்டத்துக்கு உண்மையான பொருள் அல்லது குறிதகவு என்ன என்றே தெரியவில்லை.

            சாதிகள் நிலையானவை அல்ல, தொடர்ச்சியானவையுமல்ல என்ற என் முடிவுக்கு முதலடி எடுத்துக் கொடுத்ததே தாங்கள்தான். மத மாற்றம் போன்று சாதி மாற்றமும் உண்டு என்று ஒரு முறை தாங்கள் கூறினீர்கள். எங்கோ நெல்லை மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த மறவர் சாதியைச் சேர்ந்த மூவரில் ஒருவர் கன்னியாகுமரியில் பிள்ளைகள் எனவும் இன்னொருவர் பழவிளையில் சாணார் எனவும் மூன்றாமவர் இராசாக்கமங்கலத்தில் பிள்ளைகள் எனவும் குடியேறியதாகவும் அக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இப்போதும் தொடர்புகளைப் பேணுவதாகவும் தாங்கள் ஒரு முறை கூறினீர்கள். மணிகட்டிப் பொட்டலுக்கு செட்டியார் அல்லது வெள்ளாளர் சாதியைச் சேர்ந்த ஒரு சிவந்த நிறமுடைய பெண்ணும் கறுத்த நிறமுடைய சாணார் சாதி ஆணும் ஓடிவந்து குடியேறினர்; அவர்கள் வழிவந்தவர்கள்தாம் இன்று பொட்டலில் வாழும் மக்கள்; அவர்களிடையில் கறுப்பும் சிவப்புமான அந்த இரு வகையினரையும் காணலாம் என்றும் கூறினீர்கள். இந்த நிறக்கலவை இன்று ஏறக்குறைய எல்லா ஊருக்கும் பொதுவானது.

            நான் ஒரு முறை மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் மாவட்ட எல்லையிலுள்ள ஓர் ஊரில் ஒரு புன்செய்ப் பகுதியில் மட்ட அளவு(சர்வே) பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

            அப்போது அங்கு வெட்ட வெளியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்க ஓர் உடை மரத்தடியில் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்த இரு விடலைப் பெண்களில் ஒருத்தி இன்னொருத்தியைப் பார்த்து “கத்தரிக்காய்க்குக் காலுங் கிடையாது; கோனார் சாதிக்கு முறையும் கிடையாது என்று கேலியாகக் கூறினாள். இந்தச் செய்தியை எங்கள் அலுவலகத்தில் எழுத்தராயிருந்த நண்பர் ஒருவரிடம் கூறி விளக்கம் கேட்டேன். அவர் சொன்னார், ஆயர்களில் தாய்வழியினர் மகள் முறையுள்ளோரைத் திருமணம் செய்துகொள்வர். இதற்கான வாய்பாடு, மச்சியையும் கட்டிக்கலாம் மச்சி வயத்துப் பிள்ளையையும் கட்டிக்கலாம் என்பதாகும் என்று கூறியதுடன் தான் தாய்வழி என்றும் தன் மனைவி தந்தைவழி என்றும் இதனால் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் திருமணத்துக்கு சாதி உறவு விதிமுறைகளின்படி இணைகள் தேடுவது கடினம் என்றும் கூறினார்.

            மறவர்களிலும் கொண்டயங்கோட்டை என்ற பிரிவினரிடையிலும் இதே தாய்வழி உறவுகள் உள்ளன என்பதை அறிந்தேன்.

            இவை போன்ற செய்திகளிலிருந்துதான் தமிழகச் சமூக வரலாறு - வினாப்படிவமும் வழிகாட்டிக் குறிப்புகளும் என்ற எனது நூல் உருவானது. அந் நூலின் முன்னுரையில் நூலின் இந்தச் சாதிமாற்ற வரலாறு பற்றியும் அதில் உங்கள் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடாமை அப்போது எனக்கிருந்த பொதுவான அறியாமையின் விளைவு. அதற்கு என்னைப் பொறுத்தருளுங்கள்.

            அந் நூல் பற்றிய ஒரு கலந்தாய்வின் போது என்னைச் சந்தித்த ஆய்வு மாணவர் ஒருவர் இராசபாளையம் பக்கத்தில் உள்ள சாலியப் பள்ளர் என்ற சாதியினரைப் பற்றித் தான் ஆய்ந்ததாகவும் அதில் சில பகுதிகளில் தங்கள் சாதியினர் ஏழு கன்னியர் வழியில் வந்ததாகக் கூறுவதாகவும் வேறு சில ஊர்களில் தாங்கள் ஒரு முனிவரின் வழியில் வந்ததாகக் கூறுவதாகவும் கூறினார். ஆக இந்த ஏழு கன்னியரிலிருந்து தோற்றம் என்ற கருத்து தமிழகச் சாதிகள் அனைத்துக்கும் ஏதோவொரு காலத்தில் பொதுவாக இருந்துள்ளது தெளிவாகிறது. சாதி நிலையில் உயர்ந்த மட்டத்துக்குச் சென்றவர்கள் அல்லது செல்ல விரும்புவோர் தங்கள் தோற்றத்தை ஏதோவொரு முனிவரிடமிருந்து தடம் காட்டுவர். நாடார் வரலாற்றைப் பொறுத்த வரை வெவ்வேறு காலத்தில் அல்லது வெவ்வேறு பகுதியில் வெவ்வேறு தந்தையாரைக் காட்டியுள்ளனர். தாய் அந்த எழுவர்தாம். இந்த ஏழு பெண்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவானவர்களும் கூட. இவற்றிலிருந்தே இன்றைய சாதி என்பது குக்குலம் என்ற மக்கள் கட்டமைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இணைந்தும் உடைந்தும் உருவானவை என்பது தெளிவாகிறது. அந்த அடிப்படையில்தான் சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் உருவான நாடான் + சாணான் = நாடார் என்ற வாய்பாட்டை எய்தினேன்.

            1976 இல் நான் இன்றைய திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பணியாற்றிய போது அதே துறையில்(பொதுப்பணித்துறை) வேறொரு அலுவலகத்தில் வடிகால் கோட்டத்தில் சரக்கி ஓட்டுநராகப் பணியாற்றிய ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டது. அவர் கோவை அல்லது ஈரோடு மாவட்டத்தில், எதுவென்று உறுதியாகத் தெரியவில்லை, பொங்கல்லூரைச் சேர்த்தவர். பேச்சுவாக்கில், தங்கள் பகுதியில் சாணார் என்றொரு சாதியினர் இருப்பதாகவும் அவர்கள் சிக்கனத்தில் தேர்ந்தவர்களென்றும் கூறினார். நானும் அந்தச் சாதியைச் சேர்ந்தவன்தான் என்றேன். அவர் உறுதியாக, எனக்கு நாடார்களைத் தெரியும், கோயம்புத்தூரில் நிறையப் பேர் இருக்கிறார்கள், அவர்களல்ல இந்தச் சாணார்கள் என்று அடித்துச் சொல்விவிட்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் இறுதிவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இதுவும் சாணார் - நாடார் இணைப்பு தென்மாவட்டங்களில் மட்டும் நிகழ்ந்த ஒன்று என்ற என் முடிவுக்குச் சான்றாக அமைந்தது. தஞ்சை மாவட்டத்திலும் சாணார்கள் இருக்கிறார்கள் தனிச்சேரிகளில். அவர்களும் மரம் ஏறுகிறவர்கள்தாம். ஆனால் நாடார்கள் தனியாக சிறு அளவில் உள்ளனர். நாடார் - சாணார் இணைப்பு தென் மாவட்டங்களில்தான் நிகழ்ந்துள்ளது என்பதற்கு இவை சான்றுகளாய் அமைந்தன.

            அது போல் கருப்புக்கட்டியையும் தென்மாவட்டங்களிலிருந்து சென்றவர்கள்தாம் பயன்படுத்துகிறார்கள் என்பதுடன் அதை எப்படிக் கையாள்வது என்பதைப் பிற பகுதிகளிலுள்ள மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதையும் கண்டிருக்கிறேன். காஞ்சிபுரத்தில் எங்கள் அலுவலகத்தில் காவலராக இருந்த ஒரு முதியவர் எங்கள் வீட்டில் போட்ட கருப்புக்கட்டி காப்பியைப் பருகிவிட்டு இதை எவ்வாறு செய்ய வேண்டுமென்று என் துணைவியாரைக் கேட்டு அறைகுறையாக அறிந்து கொண்டு பாலில் கருப்புக்கட்டியைப் போட்டுக் காய்ச்சியுள்ளார். பால் முறிந்து போனது. மீண்டும் கேட்டுச் சென்று சரியாகச் செய்தார்களாம்.

            1924 ஆலய நுழைவுப் போராட்டத்துக்கு முன்னர் 1901இல் நடைபெற்ற சிவகாசிப் போர் பற்றிக் கூறியுள்ளேன் என்பதையும் விருதுநகரில் அதற்குமுன் நடைபெற்ற போர் பற்றி(ஆண்டு தெரியாததால் குறிப்பிடவில்லை)யும் கூறியுள்ளேன்.

            இவை தவிர தொடர்பற்ற செய்திகள் நிறைய உள்ளனவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது தமிழக வரலாற்றிலிருந்துள்ள குறிப்புகளைக் குறிப்பிடுகிறீர்களா பொருளியலின் கடந்த கால வளர்ச்சி, நிகழ்காலத் தேக்கம், வருங்கால மேம்பாட்டுக்கான கருத்துரைகள் என்பவற்றைப் பற்றிக் கூறுகிறீர்களா அல்லது பனைபடு பொருட்கள், கருப்புக்கட்டித் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்களா என்று தெரியவில்லை. அனைத்தையும் தழுவித்தான் கூறியுள்ளீர்கள் என்ற கணிப்பில் சில விளக்கங்களைத் தருகிறேன். நான் அடிப்படையில் வலங்கையர் கதை எனும் வெங்கல்ராயன் கதை என்ற நூலில் தரப்பட்டுள்ள வரலாற்றுச் செய்திகளைத் தமிழக வரலாற்றோடு பொருத்திக் கூறியுள்ளேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்ற அந்தந்தக் காலத்தைச் சேர்ந்த வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களில் சிறிது சிறிதாகத் தெற்கு நோக்கிச் சென்றவர்களின் பதிவாக அவற்றின் செய்திகளைப் பொருத்திப் பார்த்துள்ளேன். இந்த நகர்வின் பொதுத் தன்மை இந்த மக்கள் அயல் விசைகள் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த உள்நாட்டு இரண்டகர்களைத் துணை சேர்த்து செயற்பட்ட போது அம் முயற்சிகளை எதிர்த்து நின்றதுடன் தங்களை ஒடுக்கி அடிப்படுத்த முயன்றவர்களை எதிர்த்து வெளியேறியதுமாகும். இவ்வாறு வெளியேறியவர்கள் தங்கள் சொந்த முயற்சியால் ஒன்றுசேர்ந்து தம் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறையை முறியடித்து பொருளியல் வலிமை மூலம் வெற்றிபெற்று முன்னேறிய வரலாற்றுப் பெருமையை எடுத்துரைப்பது என் நோக்கங்களில் முதன்மையானது. முகம் தெரியாத, ஒரு தனிக் குழுவைச் சேராத முன்னோர்களைத் தடம்பிடிக்க முயன்று அவர்களது வீழ்ச்சியை முதன்மைப்படுத்தி பழம் பெருமை பேசுவதை விட தெளிவாகத் தெரியும் நம் அண்மைக்கால மீட்சியை, அதில் பிறர் எவருடைய கையையும் எதிர்பார்க்காமல் அவர்களுடைய எதிர்ப்புகளையும் தடங்கல்களையும் நேருக்கு நேர் எதிர்கொண்டு முறியடித்த வீர வரலாற்றுக்குதான் முதன்மை கொடுத்திருக்கிறேன். அத்துடன் தம்மை விட ஒடுக்கப்பட்டவர்களையும் ஒருங்கிணைத்துக்கொண்டு வெற்றிபெற்ற வரலாற்றைத் தடம் பிடிப்பதில் நான் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளேன். அந்தப் பாதையிலிருந்து விலகி, தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு தங்கள் முந்திய தலைமுறையினருக்கு இழிவு தரும் வகையில் தங்களை ஆட்சியாளர்கள் முன் தாழ்த்திக் கொண்டு, தங்களுக்குத் தூணாக நின்று காத்த பனைமரத்துக்கு இழிவு தேடும் வகையில் செயற்படும் தலைவர்களின் செயல்களை நம்மவர் முன்னும் தமிழக மக்கள் முன்னும் எடுத்து வைக்கிறேன்.

            நாடார்கள் தமிழர்களில் ஒரு பகுதியினர் என்பதை உணர வேண்டும். பனைமரத்தையோ கள்ளையோ அடையாளமாக வைத்துக் கொண்டு நம் மீது காரணமின்றி அரசியல் வாக்குப் பொறுக்கிகளின் வெறியேற்றலுக்கு இரையாகி தமிழக நலன்களுக்கு எதிராகச் செயற்படத் தயங்காத அயல் மாநிலத்தவரோடு சாதி இணைப்புக் கொள்வது போன்ற கயமை, மடமைச் சிந்தனைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தமிழகத்திலுள்ள பிற சாதி மக்களோடு ஒத்த குறிக்கோள்களை இனங்கண்டு முதலில் தமிழனாகவும் அடுத்து இந்தியனாகவும் இறுதியில் உலகக் குடிமகனாகவும் தங்களையும் பிறரையும் வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கான பட்டறிவும் பயிற்சியும் அண்மைக் கடந்தகால வரலாறு நமக்குத் தந்துள்ளதால் அதைத் தலைமையேற்றுச் செய்யும் தகுதியும் நமக்கு உண்டு என்பதை வலியுறுத்துவது என்னுடைய நோக்கங்களில் ஒன்று.

            இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் ஆவணங்களிலும் உள்ள செய்திகளைத் தங்கள் நோக்கங்களுக்கு இசைவாகத் திரித்து பொய் வரலாறுகள் எழுதி தமிழக மக்களை அணு அணுவாகப் பிளந்து ஒதுக்கீடு எனும் இரக்கமற்ற கொடும் தேவதைக்குத் தமிழக மக்களின் நலன்களைப் பலிகொடுக்கத் துணிந்து நிற்கும் போலிப் பூசாரிகளிடமிருந்து தமிழக மக்களை விடுவித்து அவர்கள் வரையும் பொய் வரலாறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் ஒரு பதமாக(Sample)த்தான் இந்த நாடார் வரலாறு எழுதப்பட்டுள்ளது என்பதை நூலின் தலைப்பிலேயே புலப்படுத்தியுள்ளேன். நாடார் வரலாறு என்ற பெயரில் கூறப்படும் செய்திகளைத் திறனாய்ந்து உண்மையில் அதை தமிழக மக்களின் ஒட்டுமொத்த வரலாற்றின் பகுதிகளே என்று காட்டுவதன் மூலம் இது போன்ற பிற சாதி வரலாறுகளையும் திறனாய்வதற்காக அந்தந்தச் சாதி முற்போக்கர்களுக்கான ஒரு முன்னோடித் திறனாய்வே தவிர புதியதான ஒரு சாதி வரலாற்று முயற்சியல்ல என்பதை சாதி வரலாறுகளின் ஒரு பதம் என்ற அடைமொழியின் மூலம் விளங்க வைத்துள்ளேன். கால வரிசையில் அண்மையில் நடைபெற்ற இந்த சாதி உருவாக்கத்தை தடம்பிடித்தால் அதற்கு முந்திய காலங்களில் நடைபெற்ற உருவாக்கங்களை ஒவ்வொன்றாகத் தடம்பிடிக்க இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதும் என்னுடைய நம்பிக்கை.

            நான் ஆர்டுகிரேவ் சூனியர் எழுதிய நூலைப் படித்துள்ளேன் என்பது உண்மைதான். அது எனக்கு வழிகாட்டவில்லை என்பதுடன் இதிலுள்ள என் அணுகல் எனக்கே உரியது, அதற்கு வேறு யாருக்கும் காப்புரிமை கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

            ஒரு வேண்டுகோள். நாடார் என்ற பட்டம் இன்று ஒரு சாதியைச் சேர்ந்த எந்த ஒரு சராசரி உறுப்பினருக்கும் பொதுவானது. ஆனால் நாடான் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் அரசனுக்கு அடுத்தபடி முழு அதிகாரத்துடன் செயற்பட்ட ஓர் ஆட்சிப் பதவியின் பெயர். ஆனால் அந்த ஆன் விகுதி இழிவென்று கருதி, பழைய பதிவுகளில் ஆன்ஆர் ஆகத் திருத்தித் தங்கள் ஆக்கங்களில் ஆய்வாளர்கள் வெளியிடுகிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்களுக்கு இந்த உண்மையைத் தெளிவாக எடுத்துக் கூறுவது நல்லதென்று கருதுகிறேன். நாடான் என்றிருக்கும் இடங்களில் அப்படியே குறிப்பிடுவது உண்மையான வரலாற்றைத் தடம்பிடிக்க உதவியாயிருக்கும்.

            தங்கள் மடல் நான் தெளிவுபடுத்த வேண்டிய சிலவற்றை எனக்குச் சுட்டிக் காட்டியுள்ளதால் நான் தங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். இருப்பினும் தாங்கள் எழுப்பியுள்ள பல கேள்விகளுக்கு விடைகள் ஏற்கனவே நூலில் சுருக்கமாக உள்ளன. மீண்டும் ஒரு முறை பொறுதியாகப் படித்து தங்கள் கருத்துகளைத் தந்தால் மட்டும் போதாது, தங்களிடம் இருக்கும் தரவுகளின் அடிப்படையில் என் முயற்சியிலுள்ள குறைகளை இட்டு நிரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றியுடன்,
குமரிமைந்தன்.[1] சீர்காளி?

0 மறுமொழிகள்: