நூலாய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூலாய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.9.07

'சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு' நூல் பற்றி...3

பெரியார் எடுத்துக்கொண்ட குமுகக் குறிக்கோள்களை ஒரு நேர்மையான தலைவன் எடுத்துக் கொண்டிருப்பானானால் அவன் வீடிழந்து நாடிழந்து தலைமறைந்து ஆயுதத்தையே துணைகொண்டு வாழ்ந்திருக்க வேண்டும்.

ஆனால் பெரியாரோ அவரைப் போற்றிப் புகழும், வாழ்த்தி வணங்கும் ஒரு தொண்டர் குழாமுடன் சங்கராச்சாரி எவ்வாறு வலம் வருகிறாரோ அவ்வாறே வாழ்ந்திருந்தார்.

தான் வெறும் சீர்திருத்தர்தான்; அரசியல்வாணரல்ல என்ற சாக்குச் சொல்லி வாய்வீச்சு வீசி எதிரிகளுக்கு விழிப்புணர்வும் ஒற்றுமையும் உறுதியும் ஏற்படுத்தித் தந்நுவிட்டார். நேரடியான, தீவிரமான, குறிப்பாகச் சொல்வதனால் வன்முறை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட தொண்டர்கள் முனைந்த போதெல்லாம் அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டார். அதே நேரத்தில் ஆட்சியாளர்களுடன் இணக்கமாக இருந்து பலன்களும் பெற்றார்.

தான் மக்களுக்குச் சிந்திக்க மட்டும் கற்றுத்தருவதாகவும் செயற்பட வேண்டியது அவர்கள் பொறுப்பென்றும் தந்திரமாகப் பேசி செயற்படாத, வெறும் வாய்ப்பேச்சு அரசியலைத் தமிழகத்தில் புகுத்தி அரசியல் இவ்வளவு இழிநிலை அடையக் காரணமாயிருந்தார்.

குப்பையை அகற்றுவோம் என்று கூவி அழைத்து மக்களைத் திரட்டிக் குப்பையைக் கிளறி மட்டும் விட்டு நாட்டை நாறவைத்து விட்டார்.

இன்று கல்வி இவ்வளவு பரவிய பிறகும் கல்வி என்பது மக்களின் பிறப்புரிமையல்ல அது ஒரு சலுகை என்ற கருத்து மக்களிடையிலிருந்து விலகாததற்குப் பெரியார் ஒதுக்கீடு கிடைத்த பின்பும் அனைவருக்கும் கல்வி என்ற முழக்கத்தை வைக்காததுதான் காரணம்.

பண்ட விளைப்பு, தொழில் வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தைக் கற்றோர் கல்லாதோர், ஏழை, பணக்காரன் ஆகிய அனைவர் மனங்களிலிருந்தும் துடைத்தெறிந்துவிட்டு உடலுழைப்பற்ற ′வேலைக்கு′ மாநிலம் மாநிலமாக, நாடு நாடாக ஓடுவதற்கும் எந்தமொழியைக் கற்கலாம் என்று பித்துப் பிடித்தலைவதற்கும் ஒதுக்கீடு என்ற மிகச் சிறு வேலைவாய்ப்புள்ள ஒன்றின் மீது 75 ஆண்டுகாலம் மக்களின் மனத்தை இழுத்துப் பிடித்து வைத்தே காரணம்.

கோயில் சொத்துகளை அவற்றைப் பயிர் செய்துவரும் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோராகிய குத்தகையாளருக்கே சொந்தமென்று முழங்கி இந்து சமயத்தின் ஆணிவேரில் கைவைத்திருந்தால் இன்றைய கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். தேர், திருவிழா, குடமுழக்கு, சம்ரோச்சனம், வேள்வி, அருளாசி எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். பார்ப்பனனின் பூணூல் அறுந்து அதைத் தொடர்ந்து மேற்சாதியினரின் கட்டமைப்பும் உடைந்து இந்து சமயமே உருமாறிப் போயிருக்கும்.

ஆனால் இன்று தாழ்த்தப்பட்டோர் தமது அடிப்படை மனித உரிமைகளுக்காகப் போராடுவதன் அடையாளமாக சிற்றூர்களிலெல்லாம் கோயில்களை நிறுவி பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் போட்டிபோட்டுத் திருவிழாக்கள் நடத்தி பண்பாட்டிலும் பொருளியலிலும் பெருஞ்சிதைவு ஏற்படுத்துவதற்குப் பெரியார் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இரண்டகம் செய்து பார்ப்பனருடன் மறைமுகமாகவும் பிற மேல் சாதிக்காரர்களுடன் திராவிடர் என்ற பெயரிலும் வைத்துக் கொண்ட உறவு தானே காரணம்? அத்துடன் தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு இருக்கவும் மாநிலத்துக்கு வெளியே மண்டல் ஆணையத்துடன் இணைத்துக்கொண்டதும் தாழ்த்தப்பட்டோரில் உயர்நிலையிலுள்ளோர் அம்மக்களைப் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராகத் தூண்டிவிடக் காரணமாகிறது. உங்களை நேரடியாகக் கேட்கிறேன், உங்களுக்கு ஒன்றுபட்ட மக்களைக் கொண்ட, ஒற்றுமையுடன் மண்ணின் உரிமைக்காகப் போராடும் தமிழகம் வேண்டுமா, அல்லது வெளிமாநிலங்களிலும் நடுவணரசிலும் வேலை வாய்ப்புகள்(அவை எத்தனை?) வேண்டுமா?

இன்றைய நிலையில் இந்த மண்ணின் மக்கள் மேல் படர்ந்து நின்று அவர்களை எழ விடாமல் அழுத்திக் கொண்டு கட்டிதட்டிப் போனவை மூன்று.

1. அடிமை மனப்பான்மையை மக்கள் மனதில் புகுத்திப் பொருளியலிலிருந்து அடிமைப்பணி நோக்கி மக்களின் மனநிலையைத் திருப்பி வைத்துவிட்ட திராவிட இயக்கம்.


2. மார்க்சியத்தை ஏழைநாடுகளின் நலனுக்கு எதிராகவும் வல்லரசுச் சுரண்டலுக்கு ஏற்பவும் திரித்து இந்நாடுகளில் நடைபெறும் தொழில் முயற்சிகளைக் கருக்கலைத்து விட்டு வல்லரசுகள் நுழையும்போது கதிரவனை நோக்கிக் குலைக்கும் நாய்களைப் போல் வெற்றுக் கூச்சலிடும் பொதுமையினரின் போலி மார்க்சியம்.

3. தமிழக வரலாற்றையும் பழம் தொன்மங்களை(புராணங்களை)யும் தோண்டிப் புதைத்துத் தமிழனை வரலாறில்லாதவனாகச் செய்துவிட்ட கழக(சங்க) நூல் தொகுப்புகள்.

தமிழக மக்கள் மேல் கவிந்து பாறையாக இறுகிப் போன இம்மூன்று அடுக்குகளை உடைத்தெறிய என்னாலான முயற்சிகளைச் செய்து வருகிறேன். தொடர்பான என் எழுத்தாக்கங்கள் சிலவற்றை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.

இன்றைய நிலையில் நாடார்கள் செய்யத்தக்கவை;

1. நாடார்களை மிகப் பிற்படுத்தப்பட்டனர்களாக அறிவிக்க வேண்டுமென்று பணந்திரட்டி நம்மை இழிவுபடுத்தும் கங்காராம் துரைராசு வகையறாக்களின் முயற்சியை முறியடிக்கும் வகையில் நாம் சலுகைகளால் உயரவில்லை; தன்முயற்சியால் தான் உயர்ந்தோம்; எனவே எங்களை முற்பட்ட வகுப்பாக அறிவிக்க வேண்டும் என்ற அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் தமிழக மக்களுக்கு ஓர் அதிர்ச்சி மருத்துவம் செய்தல். இவ்வாறு செய்வதால் நமக்குப் பெரும் இழப்பு ஏதுவும் இல்லை. ஒதுக்கீட்டினால் கிடைக்கும் பயன்கள் மிகவும் சுருங்கிக் கொண்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பு என்ற ஆதாயத்துடன் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் எனும் இரு வகைப்பாட்டினுள்ளும் அடங்கியுள்ள எண்ணற்ற சாதிப்பிரிவுகளும் உட்பிரிவுகளும் உடைந்து சிதறும் போக்கு உருவாகியுள்ளதால் முழுக் குமுகத்துக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இழப்பு மிகப் பெரிது. அரசு வேலைவாய்ப்புகள் அருகத் தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில் ஒதுக்கீடு எனும் மாயமான் மாபெரும் குமுகச் சாபக்கேடு. அதைத் தெரிந்து தமிழக மக்கள் விடுபடுவதற்கு இத்தகைய ஒரு தீர்மானம் மிக உதவியாயிருக்கும்.

2. அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வேண்டும் என்ற முழக்கத்துடன் நம் ஆற்றலுக்கேற்ற வகையில் எண்ணற்ற தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி அவற்றுக்கு ஒப்புதலும் நல்கையும்(Grant) தருமாறு மக்களைத் திரட்டிப் போராடல். மிகப்பிற்பட்டோர் சலுகைக்குக் கைக்கூலியாகத் திரட்டப்பட்ட பணம் இதற்குச் செலவாகலாம்.

3. இது முதன்மையானதும் இன்றியமையாததுமாகும். உள்நாட்டுத் தொழில் வளர்ச்சியைத் தாக்கி வெளி மூலதனம் நுழைவதற்குக் காரணமாகவும் அரசியலாளர்கள், அதிகாரிகளின் அதிகார, பொருளியல், அட்டுழியங்களுக்கு மூலமாகவும் விளங்கும் வருமானவரியை எதிர்ப்பதும் தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் உரிமம், இசைவாணை, மூலப்பொருள் ஒதுக்கீடு, சுற்றுச்சுழல், மாசுத்தடுப்பு, சிறார் உழைப்புத்தடுப்பு என்பன போன்ற "உயர்ந்த" ஆனால் போலியான அரசின் உத்திகளை எதிர்த்துப் போராடுவது. இதில் நாடார்கள் தலைமைப் பங்காற்றும் பொருளியல் நிலைமையில் உள்ளனர். முக்குலத்தோரில் இதே நலன்களை உடையவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் உள்ளனர். தாழ்த்தப்பட்டோர், குறிப்பாக ஆற்றுப்படுகைப் பள்ளர்களும் அவ்வாறே. மேல் சாதிக்காரர்கள் ஆதரவும் கிடைக்கும். பூனைக்கு மணிகட்டுவோர் யாரென்பதே கேள்வி. அதனை நாம் செய்யலாம்.

4. வேளாண் விளைபொருள் விலை ஆணையத்தை ஒழிக்க, நெல், கோதுமை, வாணிகத்துக்கு வாணிக உரிம முறையை ஒழிக்க, ஆண்டுக்கு ஒன்றே கால் கோடி டன் உணவுப் பொருளை முடையிருப்பு என்ற பெயரில் மக்கள் பணத்திலிருந்து வாங்கி வைத்து அழிக்கும் நடுவணரசின் ″பதுக்கல் ஒழிப்பு″(!) நடவடிக்கையை ஒழிக்க, உணவுப் பொருள் நடமாட்டத்துக்குக் கடத்தல் என்று பெயரிட்டு உணவுப் பொருள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளோரை வேட்டையாடும் கயமையை எதிர்க்க ஆயத்தப்பட வேண்டியுள்ளது. (ஆனால் இது நாடார்களின் உடனடிச் சிக்கல்ல. அவர்களுக்கு வேளாண்மை முகாமைத் தொழிலல்ல. ஆனால் நாம் இதை முன்வைத்தாக வேண்டும்).

நமக்கிருந்த குமுக இழிவுக்கெதிராகப் போராடி வெற்றிமுகத்தை என்றோ கண்டுவிட்டோம். பொருளியல் ஒடுக்குமுறையை இனம்காணவும் அதற்காகப் போராடவும் தவறிவிட்டோம். அதுதான் நமக்கு மட்டுமல்ல முழுத் தமிழ்நாட்டுத் தேக்கத்துக்கும் மூலகாரணம். முன்னர் குமுக இழிவுக்கெதிராக போராட்டத்தில் நம் பொருளியல் வலிமை எவ்வாறு பின்னணியாக நின்றதோ அவ்வாறே தமிழகத்தின் பொருளியல் அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டத்திலும் தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சியின் முன்னோடிகளாகிய நம் பங்கு, அதனைத் தொடங்கி வைக்கும் நம் பணி துவங்கட்டும்.

உங்கள் நூலிலிருந்து நீங்கள் ஆழமான பெரியார்ப் பற்றாளர் என்பது புரிகிறது. அத்துடன் ஒதுக்கீடு, சாதி ஓழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, தமிழ்த் தூய்மை ஆகியவற்றுக்குள்ள முதன்மையைப் பொருளியலுக்கு நீங்கள் வழங்காததும் தெரிகிறது. இருந்தாலும் நான் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி விட்டேன், நீங்கள் வாழும் இடத்தின் சூழ்நிலை ஒருவேளை உங்களைச் செயலுக்குத் தூண்டும் என்ற நம்பிக்கையில்.

'சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு' நூல் பற்றி...2

பாண்டியனாரைப் பற்றிய சிறு குறிப்புகளை மகாசனம் இதழ்கள் சிலவற்றில் காண நேர்ந்தது. அவற்றிலிருந்து தொழில் வளர்ச்சி பற்றியும் வேளாண்மையில் அறிவியல் அணுகுமுறைகளின் தேவைப் பற்றியும் தரிசு நிலங்களை விளை நிலங்களாகவோ காடுகளாகவோ மேம்படுத்த வேண்டியது பற்றியும் தாம் சென்றவிடமெல்லாம் மக்களுக்கு (நாடார்களுக்கு) அறிவுரை கூறியிருப்பதை அறிய முடிந்தது. அவரது சட்டமன்ற உரைகளிலும் மேடைப் பேச்சுகளிலும் இதுபோன்ற பொருளியல் மேம்பாட்டுக் கருத்துகள் என்னென்ன இருந்தன என்று அறிய விரும்புகிறேன்.

பாண்டியனாரின் இன்னொரு சிறப்பு நாடார்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது பார்ப்பனர், வெள்ளாளர், நாயக்கர், மறவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகளுக்கெதிராக நாடார்கள்-தாழ்த்தப்பட்டோர் கூட்டணி ஒன்று அமைக்கும் முயற்சியே. இதில் அவர் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தார் என்பது தங்கள் நூலிலிருந்து தெளிவாக விளங்குகிறது. நாடார்கள் நடத்திய பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடமளித்தல், கூட்டுணவு, (சம்பந்தி போசனம்) ஆகியவை, அத்துடன் பொதுக் குளங்கள், கிணறுகள், சுடுகாடு, அவற்றுகுரிய பாதைகள் ஆகியவற்றை அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் சட்டம் இயற்றுவதற்காகச் சட்டமன்றத்தினுள்ளும் வெளியிலும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள்.

இந்தப் பின்னணியில் சராசரிப் பொருளியல் வலிமை பெற்ற நாடார்களின் அடிப்படை மன உணர்வாகிய குமுக உரிமைகளைப் பெறுதல் பாண்டியனாரின் பிற நோக்கங்களைப் பின்னடையச் செய்தனவா என்ற கேள்வி எழுகிறது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்ச்சிகள் குமுறிக் கொண்டிருந்த நிலையில் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மேல்சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான ஓர் அறைகூவலாகப்பட்டது. அத்துடன் நீதிக்கட்சியுடன் பாண்டியனாருக்கிருந்த நெருக்கமான உறவும் அவர்களுக்குப் பெரியாரின் தொடர்பை எளிதாக்கின. பெரியாருக்கு ஆதரவளித்தார்களா அல்லது பெரியாரைப் பயன்படுத்திக் கொண்டார்களா என்று இனம் பிரித்துக் காண முடியாமலிருந்தது.

தன்மான இயக்கத்துக்காகப் பெரியாரும் மற்றோரும் கலந்து கொண்ட கூட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர் உட்பட பிற்போக்கினர் ஏற்படுத்திய தடங்கல்களையும் தாக்குதல்களையும் மீதுற்று நிகழ்ச்சிகளை வெற்றி பெறச்செய்வதிலும் பெரியாரின் இயக்கம் தமிழ் மண்ணில் ஆழமாகவும் அகலமாகவும் வேர்கொள்வதிலும் நாடார்கள் பெருந்துணையாக இருந்திருக்கிறார்கள். இந்தப் பயனை எய்தத்தானோ என்னவோ பெரியார் பாண்டியனாருக்கு ஏறக்குறைய தனக்கிணையான ஓர் இடத்தை இயக்கத்தில் கொடுத்தார்.

ஆனால் பாண்டியனாரைப் பெரியார் பின்னாளில் புறக்கணித்தாரோ என்ற ஐயமேற்படுகிறது. பாண்டியனார் மாண்டபோது அவர் பற்றிய செய்திகளைத் திராவிட நாடு இதழில் படித்திருக்கிறேன். அப்போதுதான் சவுந்திரபாண்டியன் என்று ஒருவர் இருந்திருக்கிறார், அவர் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்குப் அரும்பணியாற்றி இருக்கிறார்; சேலத்திலோ, வேறெங்கோ நடைபெற்ற ஒரு மாநாட்டின் ஒரு தீர்மானத்தால் என்று நினைவு - அவர் வெளியேறியிருக்கிறார் என்பனவெல்லாம் தெரியவந்தன.

அவற்றை உங்கள் நூல் தரும் தரவுகளுடன் நினைத்துப் பார்க்கையில், உலகில் இயக்கங்கள் மக்களின் மேலடுக்குகளிலிருந்து கீழடுக்குகள் நோக்கி நகரும் நிகழ்முறை விதிகளுடன் ஒப்பிட்டு நோக்கையில், தனிமனிதர்களான தலைவர்களுக்கும் அவர்களுக்குப் பின்னணியாக நிற்கும் மக்களுக்கும் உள்ள உறவுகளைக் குறித்த விதிகளைக் கையாண்டு பார்க்கையில் அன்று நிகழ்ந்த நிகழ்ச்சி பற்றிப் பல ஐயுறவுகள் எழுகின்றன.

தன்மான இயக்கத்தினுள் பெரும் முழக்கத்துடன் நாடார்களின் நுழைவும் நாடார் - தாழ்த்தப்பட்டோர் என்ற முழக்கத்துடன் நாடார்கள் என்ற வலிமையான பின்னணியுடன் நிற்கும் பாண்டியனாரால் தன் தலைமைக்கு அறைகூவல் வருமென்று பெரியார் கருதினாரா? பாண்டியனாரின் முகாமையை நீர்த்தப் போகச் செய்யத்தான் வெள்ளாளர்களை நாடினாரா என்ற கேள்விகளெல்லாம் எழுகின்றன.

பாண்டியனார் விலகிய பின்னும் நாடார்கள் பிடி தன்மான இயக்கத்தில் வலிமையாக இருந்ததா? அண்ணாத்துரையுடன் வெளியேறிய கும்பலில் நாடார் எதிர்ப்பினர் மிகுந்திருந்தனரோ? தி.மு.க.வின் ஐம்பெருந் தலைவர்களைப் பாருங்கள். அண்ணாத்துரை தவிர நெடுஞ்செழியன், அன்பழகன் இருவரும் சிவனிய வேளாளர்கள், (சிவனிய முதலியார்களும் வேளார்களும் ஒரே சாதியினர்.) மதியழகன் கவுண்டர் அவரும் கொங்கு நாட்டு வேளாளரே, சம்பத் கன்னட நாயக்கர். மற்றும் தி.மு.கழகத்தின் பிற முன்னணித் தலைவர்களில் ஆசைத்தம்பியைத் தவிர பிறரெல்லோரும் மேல் சாதியினரே. குமரி மாவட்டத்து மனோகரன் கூட அங்கு நாடார்களை இழிவாக நடத்தும் ஈழவச் சாதியைச் சேர்ந்தவரே.

தன்மான இயக்கத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்ட நாடார்கள் மட்டுமல்ல மாநிலத்தின் தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர்கூட இந்த ஐம்பெருந்தலைவர்களில் இல்லை என்பதைக் கவனிக்க.

பெரியாருக்கும் மறைமலையடிகளுக்கும் சமரசம் ஏற்பட்ட நாளிலிருந்தே நாடார்களும் அவர்களைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோரும் இயக்கத்தினுள் நுழைந்து செல்வாக்குப் பெறுவதைத் தடுத்து நிறுத்தும் திட்டம் செயற்படத் தொடங்கிவிட்டது.

சாதி என்ற வகையில் அண்ணாத்துரையைப் பற்றியும் கருணாதியியைப் பற்றியும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. அவர்கள் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சாதி அடுக்குகளில் ஒன்றைச் சார்ந்தவர்களென்பது அது. ஆனால் உண்மை அதுவல்ல. அவர்கள் பார்ப்பனர்களுக்கு அடுத்த சாதியினர். அதாவது பொட்டுக்கட்டும் சாதி எனப்படும் அக்குலப் பெண்டிருக்குக் கடவுளின் பெயரால் கோயிலில் தாலி கட்டுபவன் பார்ப்பனப் பூசாரி. கோயில் நிகழ்ச்சிகளில் இறைத் திருமேனியைத் தொடுவது போன்று அவனுக்கிருக்கும் உரிமைகள் எல்லாம் அவளுக்கும் உண்டு. அவள் சாகும்போது அவளுக்குக் கருமாதி செய்பவனும் அவனே. இந்த வகையில் அண்ணாத்துரையும் கருணாநிதியும் பார்ப்பனர்களுக்கு அடுத்த சாதிகள். ஏதோ காரணத்தால் சென்ற நூற்றாண்டிறுதியிலும் இந்நூற்றாண்டு தொடக்கத்திலும் இவ்விரு சாதியார்க்கும் இடையில் ஏதோ பூசல் ஏற்பட்டு கதைகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் தேவதாசிப் பெண்களை பார்ப்பனர்கள் அளவுக்கு மீறி இழிவு படுத்துவதன் மூலம் அது வெளிப்பட்டது. அதே நேரத்தில் வசதியும் திறமையும் படைத்த தேவதாசிப் பெண்கள் மெல்ல மெல்லப் பார்ப்பனச் சாதியினரால் உட்செரிக்கப்பட்டனர். அடுத்த கட்டமாக அண்ணாத்துரையையும் கருணாநிதியையும் வளைத்துப் போட்டுக்கொண்டனர். இன்று கருணாநிதியின் குடும்பமும் இந்து கத்தூரிரங்கய்யங்கார் குடும்பமும் ஓசையின்றி மணவுறவினுள் இணைந்துகொண்டது தற்செயலானதல்ல.

கருணாநிதியின் சாதிக்கு மேளக்காரர்கள் என்றொரு பெயரிருப்பதால் தென்மாவட்டங்களில் நாதசுரம், தவில், இசைக்கும் நாவிதர்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையினரும் அவரை நாவிதர் என்றே கருதிக்கொண்டுள்ளனர். இவ்வாறு பார்ப்பனரில்லாதாரில் மிக உயர்ந்த சாதியினராகிய அவர் பிற்படுத்தப்பட்டவர் அல்லது தாழ்த்தப்பட்டவர் என்றொரு போலித் தோற்றத்தில் ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் அரசியல் செய்து விட்டார்.

நாடார் மகாசன சங்கத்தார் பாண்டியனாரைக் கைவிட்டுவிட்டுக் காமராசரைப் பற்றிக்கொண்டனர் என்று கூறியுள்ளீர்கள். ஒருவேளை திராவிட இயக்கம் பொருளியல் துறையில் எந்தக் கவனமும் செலுத்தாததும் பாண்டியனாரைக் கைகழுவிவிட்டதன் மூலம் நாடார்களைக் கைகழுவி விட்டதும் காரணமாயிருக்க வேண்டும். தங்கள் பொருளியல் குமுகியல் - நலன்களுக்கு அரசியலை விட்டு விலகி இருந்த பாண்டியனாரை விட அரசியல் செல்வாக்கில் உயர்ந்து வந்த காமராசர் உகந்தவர் என நாடார்களில் பெரும்பான்மையினர் கருதியிருக்க வேண்டும்.

பாண்டியனாரின் செல்வாக்கை உடைப்பதற்காகக் காமராசரைத் தூக்கிப்பிடித்தவர்கள் பேரவைக் கட்சியினர் மட்டமல்ல, பெரியாரும்தான். காமராசரைப் பச்சைத் தமிழர் என்று கூறித் தூக்கிப் பிடித்தது அவர் தானே!

தி.மு.க.வில் நாடார்களைப் புறந்தள்ள முக்குலத்தோருக்கு முதன்மை கொடுத்த பெருமை கருணாநிதியையே சாரும். தன்மான இயக்கத்தின் அரும்பணியினாலும் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டாலும் பயன்பெற்றுத் தம் குமுகியல் உரிமைகளைப் பெறத் தாழ்த்தப்பட்ட மக்கள் தலைதூக்கியதன் எதிர்விளைவே முதுகுளத்தூர் கலவரம். இந்தக் கலவரத்தில் முன்னறிவிப்பு ஏற்கனவே முத்துராமலிங்கத் தேவரால் திராவிடர் கழகத்தின் முன் அறைகூவலாக வைக்கப்பட்டுவிட்டது. விபூதி வீரமுத்து, அணுகுண்டு அய்யாவு போன்ற பிற்போக்கர்களின் தலைமையில் இந்த அறைகூவலை அவர் வைத்தார். அதனை இயக்கத்தின் தலைமையில் பெரியார் எதிர்கொண்டிருந்திருப்பாரேல் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் கூட்டு வலுப்பட்டு சாதிவேறுபாடுகளை மறந்து அம்மக்கள் நெருங்கிவர வாய்ப்பிருந்திருக்கும். பன்னூறாண்டுக் காலமாக ஆட்சியாளர்களுக்கும் மேற்சாதியினருக்கும் அடியாட்களாகச் செயற்பட்டு பிற்படுத்தப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் ஒடுக்கி வந்த முக்குலத்தோரின் ஆதிக்க மனப்பான்மை சிதைந்திருக்கும். ஆனால் பெரியார் அதைச் செய்யாமல் நழுவிவிட்டார். எனவே முதுகுளத்தூர் கலவரத்தின்போது தாழ்த்தப்பட்டோர் தனித்துவிடப்பட்டனர். அரசு தலையிட வேண்டியதாயிற்று. அப்போது முதல்வராயிருந்த நாடாராகிய காமராசர் கலவரத்தை நடத்திய மறவர்களைக் கடுமையாக ஒடுக்க வேண்டியதாயிற்று. இந்நிகழ்ச்சியைப் பயன்படுத்தி, மறவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டார் கருணாநிதி. இது அவரது அரசியலுக்கும் உயர்சாதி மனப்பான்மைக்கும் பொருத்தமாக இருந்தது.

திராவிடர் கழகத்திலும் அதன் மூலம் தி.மு.க.விலும் இடம்பெற்ற அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி ஆகியோர் பார்ப்பனர் எதிர்ப்பு என்ற நிலையில் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் நலன்களுடன் தம்மை இணைத்துக் கொண்டார்களாயிலும் அன்றைய குமுகியல் சூழலில் மறவர்களின் விழுக்காடு இயக்கத்தினுள் குறைவாகத்தான் இருக்க முடியும். ஆனால் தி.மு.க.வில் அவர்களின் நுழைவு பெருமளவில் இருந்ததன் காரணம் கருணாநிதி மறைமுகமாக பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் நலனுக்கெதிராக முக்குலத்தோரைத் தாங்கிப் பிடித்ததே.

இனி, பாண்டியனாரைப் பற்றிய சில ஐயங்கள்:

சிந்தனையிலும் செயலிலும் புரட்சிகரமானவராகவும் வீறும் எடுப்பும் மிக்கவராகவும் வீரத்திலும் ஈகத்திலும் ஈடிணைற்றவராகவும் இருந்து அவர் அரசியலில் தொட்டாற்சுருங்கியாக இருந்தாரா? அதனால்தான் ஒரேவொரு உறுப்பினர் நம்பிக்கையில்லை என்று கூறியவுடன் மாவட்டக் கழகப் பதவியைத் துறந்தாரா? அவருடைய இத்தன்மையைப் புரிந்துகொண்டு அவரை வெளியேற்றுவதற்கென்றே சேலம் மாநாட்டு அல்லது இன்னொரு மாநாட்டுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதா?

திராவிடர் கழகம் என்ற பெயரை எதிர்த்த கி.ஆ.பெ. முதலியோரோடு சேர்ந்து ஒரு தனிக்கட்சி அன்று தொடங்கும் இன்றியமையாமையைப் புரிந்துகொண்டு வரலாற்றுத் திருப்புமுனையான அக்கட்டத்தில் தலைமையேற்றுப் பாண்டியனார் செயற்பட்டிருப்பாரானால் தமிழக வரலாறு இன்று உயர்ந்திருக்கும். ஆனால், ′′ஆனால்′′களை எண்ணி ஏங்கி என்ன பயன்?

இவ்வாறு நடந்தவற்றையெல்லாம் அலசினால் பெரியாரைப் பற்றி நமக்குக் கிடைக்கும் முடிவுகள்:

1. அவர் துடிப்பான ஒரு மனிதர்.


2. தன் வாழ்வில் ஏற்பட்ட ஓர் நிகழ்ச்சியால் அல்லது நிகழ்ச்சிகளால் பார்ப்பனர்களை ஒழித்தே தீர்வது என்று புறப்பட்டிருக்கிறார்.

3. அவர் எதிர்பாராத ஆதரவும் அத்துடன் கொடும் எதிர்ப்பும் கிடைத்திருக்கிறது.

4. நாடார் என்ற பணம் படைத்த மக்களின் பேராதரவு அவருக்குப் பெரும் செல்வமாகக் கிடைத்துத் தொடக்கவிசையைக் கொடுத்து அவரது அரசியல் வாழ்வை உறுதிப்படுத்தியது.

5. குறிக்கோள் பரவலாகி வெள்ளாளர்களுடன் மோதல் உருவாகி அவர்கள் வெளியேறிவிட்ட சூழ்நிலையில் இயக்கத்தில் பெருகிவந்த நாடார்களின் செல்வாக்கும் அதன் தொடர்ச்சியும் காரணமான பாண்டியனாரின் செல்வாக்கும் அவரை அச்சுறுத்த அவர் முதலில் மறைமலையடிகளிடமும் பின்னர்? வெள்ளாளர்களாகிய மடத்தடிகளிடமும் இணக்கம் கொண்டார் ( பார்க்க: திராவிடர் இயக்கமும் வெள்ளாளரும்).

6. பேச்சிலும் கருத்துகளிலும் வீரமும் அஞ்சாமையும் இருந்தாலும் பெரும் மோதல்கள், அரசு ஒடுக்குமுறைகள் (சிறைக்காவல்கள் அத்தகையவை அல்ல) நெருங்கும்போது பின்வாங்கிவிடும் கோழைத்தனம் இருந்தது.

7. எதிரிகளிடம் பணம் வாங்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. வாசனிடம் அவர் பணம் வாங்கியதாக வீரமணியே அறிக்கை விட்டிருப்பதைப் பார்க்க.

8. அவர் முன்வைத்த குறிக்கோள்கள் பல தரப்பார் அவருக்குப் பணம் தர முன்வரும் வாய்ப்பிருந்தது.

(அ) பார்ப்பனர்

(ஆ) மார்வாடிகள்

(இ) மடத்தலைவர்கள்

(ஈ) தமிழகத்திலுள்ள பிறமொழி பேசும் மக்கள், குறிப்பாக தெலுங்கர்கள்

(உ) அயல் மதத்தினர்

திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான தமிழக வரலாற்றாசிரியர்களான தமிழ்ப் பார்ப்பனர்கள் தமிழகத்தில் அவர்களைவிடச் செல்வாக்குடனிருந்த தெலுங்கு, மராட்டிப் பார்ப்பனர்களுக்கெதிராகவே செயற்பட்டனர். பெரியாரின் ′திராவிட′ அரசியல் பார்ப்பனரிடையிலிருந்த இந்தப் பிளவை மழுங்கச் செய்து அவர்களை வலிமையாக ஒற்றுமைப்படுத்தி தமிழக நலன்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டது; தமிழர்கள் நில உணர்விழந்து மயங்கவைப்பதில் வெற்றிபெற்றுவிட்டது. குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலில் அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை ஒதுக்கிவிட முடியாது.

பணம் வாங்கிப் பழக்கமுள்ள பெரியாரிடம் இத்தரப்பினரெல்லாம் பணத்தை அள்ளிக் குவித்தனால்தான் ஒரு வாழ்நாளில் அவரால் 125 கோடி உரூபாய்கள்ச் சேர்க்க முடிந்தது.

(தொடரும்)

26.8.07

'சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு' நூல் பற்றி...1

மதிப்புக்குரிய பேரா. பு. இராசதுரை அவர்களுக்கு வணக்கம்.

தங்கள் படைப்பான சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு எனும் நூலைப் படித்தேன். திராவிட இயக்கத்தைப் பற்றி நான் அறியாத பல புதிய செய்திகள் கிடைத்தன.

திராவிட இயக்கமும் வேளாளர்களும் எனும் ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களின் நூலையும் படித்தேன். இரு நூல்களிலுமிருந்து திராவிட இயக்கத்தில் பெரியாரின் செயற்பாடுகள் பற்றிய சில தெளிவுகள் கிடைத்தன.

நீதிக்கட்சி தன் ஆட்சிக் காலத்தில் இரு முனைகளில் செயலாற்றியுள்ளது. தமிழ்நாட்டில் வருணப் பாகுபாட்டின் அடிப்படையில் நாட்டிலுள்ள மிகப் பெரும்பாலான பதவிகளையும் கோயில்கள் மூலமாகவும் நேரடியாகவும் பெரும் நிலவுடைமைகளையும் தம் ஆதிக்கத்தில் வைத்திருந்த பார்ப்பனர்களுக்கு எதிராகவும் வடக்கிலுள்ள மார்வாரிகள் தமிழகப் பொருளியலின் மீது செலுத்திவந்த ஆதிக்கத்துக்கு எதிராகவும் செயற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அக்கட்சியிலிருந்த பணக்காரர்களால் பேரவைக்கட்சி(காங்கிரசு) மக்களிடையில் எழுப்பிவிட்ட தேசியப் புயலை எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் பேரவைக்கட்சியில் அடைக்கலம் புகுவதே தங்கள் பொருளியல் நலன்களுக்கும் குமுகியல் ஆதிக்க நிலைபேற்றுக்கும் தோதானது என்று கண்டு அணி மாறிவிட்டனர். 1917-இலிருந்தே நாடார் மகாசன சங்கத்துடன் நீதிக்கட்சிக்கு இருந்த தொடர்பும் பாண்டியனார் மூலம் நாடார்கள் நீதிக்கட்சியினுள் பெருகியதும் மேற்சாதியினரான அவர்களை அங்கே இருக்க முடியாமல் செய்தன. இது உலகத்திலுள்ள அனைத்து இயக்கங்களிலும் நடைபெற்றுவரும் செயல்முறையாகும். இதில் நமக்குத் தெரியாத செய்தி தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சிக்குச் செய்து வந்த பணிகள் நீதிக்கட்சியால் தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டனவா அல்லது பின்னாளில்போல் வெறும் வாய்ச்சவடால் நடைபெற்றதா அல்லது எதுவுமே செய்யப்படவில்லையா என்பதுதான்.

அடுத்து வருவோர் வெள்ளாளர்கள். பார்ப்பனர் எதிர்ப்பிலிருந்து சாதி ஒழிப்புக்கு மாறி, சாதியைத் தூக்கிப் பிடிக்கும் சமயத்தை மறுப்பதாக கட்சி வடிவெடுத்தபோது வெள்ளாளர் வைணவம் எனப்படும் மாலியத்துக்கு எதிராகப் பெரியாரைத் திருப்பிவிட்டார்கள். ஆனால் சிவனியத்தின் மீதும் பெரியாரின் பார்வை சென்றபோது வெள்ளாளர் நடுவில் பெரும் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்பட்டன. ஆனால் அவை தணிக்கப்பட்டு அவர்கள் எதுவும் ஊடுருவ முடியாத கோட்டையாகத் தம் சாதியமைப்பை அமைத்துக் கொண்டார்கள். நாடார்கள், கோனார்கள், தாழ்ந்த சாதிகளிலிருந்த சில வெள்ளாக்கட்டு மேற்கொண்டோரைச் சேர்த்துக் சைவசபைகளை அமைத்துத் தம் அரணை வலுப்படுத்திக்கொண்டனர். (இந்தச் சைவசபைகள் இப்போது செயற்படவில்லை. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு வழிவழியாகப் புலாலுண்ணாதவரே உண்மைச் சிவனியர் என்ற ஒரு புதிய விதியை - வேதாந்த தேசிகர் தென்கலை மாலியர்களைப் புறந்தள்ள மேற்கொண்ட உத்திபோல - புகுத்தினர். மூக்குடைபட்ட தாழ்ந்த சாதி வெள்ளாளக் கட்டினர் சைவ சித்தாந்த சபை என்ற அமைப்பை அமைத்தனர். வெள்ளாளர் போன்ற ஒரு வகுப்பினரின் ஆதரவு இந்தப் புதிய சபைக்கு இல்லாததாலும் பழைய சபை மேற்கொண்டு வெள்ளாளருக்குத் தேவைப்படாததாலும், அதாவது தன்மான இயக்கத்தால் வந்த இடர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டதாலும் இருசபைகளும் இல்லாமல் போயின). அதாவது தமிழகச் சூழ்நிலையில் வெள்ளாளர்களின் பொருளியல், குமுகியல், இடத்துக்கு ஏற்றவாறு எத்தனை உறுப்பினர்களை ஒரு புரட்சிகர இயக்கத்தில் முழு உறுப்பினராகத் தரமுடியுமோ அவர்களைத் தவிர பிறரனைவரும் ஓரணியில் நின்றுகொண்டனர். வெள்ளாளர்கள் அனைத்து நடைமுறைக் கருதுகோள்களின் படி திராவிட இயக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டனர்.

ஆனால் பெரியார் அவர்களை விடவில்லை. பார்ப்பன எதிர்ப்பு என்ற அடிப்படையிலும் இந்தி எதிர்ப்பு என்ற அடிப்படையிலும் இவரே அவர்களை நாடி நின்றார். இந்தி எதிர்ப்புக்குக் காசு உதவுங்கள் என்று மடத்தலைவர்களைக் கேட்டார்.

இந்த இடத்தில் வேளாளர்களின் பொருளியல் பின்னணியை அலசிப்பார்க்க வேண்டும். நிலவுடைமைகள் முன்பு அவர்களிடம் பெருமளவு இருந்தாலும் ஆங்காங்கே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பணக்காரர்கள் இருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு அவர்களில் பெருந்தொழிற் குடும்பங்கள் குறைவு. அவர்களுடைய வாழ்க்கைமுறை குத்தகை வருமானத்திலிருந்து உடல் நோகாமல் உண்டும் அவ்வருமானம் இல்லாதவர்கள் கணக்கெழுதுதல் போன்ற எளிய ஆனால் உடலுழைப்பில்லாத பணிகளில் ஈடுபட்டும் அருமுயற்சிகளைத் தவிர்ப்பவர்களாகவே இருந்துள்ளனர். சிவன் கோயில்களைச் சார்ந்து தம்மை ஒற்றுமைப்படுத்திக் கொண்டு தம்மைப் பிறரிலிருந்து அயற்படுத்தித் தம் மேலாண்மையைக் காப்பாற்றிக் கொள்வதாகிய கற்பனை இன்பத்திலேயே மகிழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் சார்ந்திருக்கும் கோயில்களும் மடங்களும் தமிழ்நாட்டு நன்செய் நிலத்தில் 25 நூற்றுமேனியும் புன்செய்நிலத்தில் குறிப்பிடத்தக்க அளவும் சொந்தமாகக் கொண்டவை. நில உச்சவரம்பு, குத்தகை ஒழிப்பு ஆகிய நிலச் சீர்திருத்தங்களிலிருந்து விதிவிலக்குகளால் தப்பித்துக் கொண்டிருக்கின்றன இச்சொத்துகள். பெரியாரிடமிருந்து பிரிந்து ஓடிய பொதுமை எண்ணம் கொண்ட சீவா போன்றோர் அமைத்த தமிழகப் பொதுமைக் கட்சியில் வெள்ளாளரே மிகுதியாக இருந்தனர். ஆனால் பெரியார் இராமமூர்த்தியைப் பெரிதுபடுத்திக் காட்டிப் பொதுமைக் கட்சியின் வஞ்சனைகளுக்குப் பார்ப்பனச் சாயம் பூசி அங்கிருந்த வெள்ளாளரையும் காத்தார். இந்தியப் பொதுமைக் கட்சியின் தமிழகப் பிரிவில் வெள்ளாளர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நில உச்சவரம்பு, குத்தகை ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றிலிருந்து கோயில் சொத்துக்கு விலக்களிக்கப்பட்ட போது இம்′′மார்க்சியர்கள்′′ எந்த எதிர்ப்பும் சொல்லாதது தங்கள் சாதி நலன்களின் அடிப்படையிலேயே. பெரியார் இதைப் பற்றி மூச்சுவிடவில்லை.

பெரியார் சமயத்துக்கு எதிராகவும் கோயில்களுக்கெதிராகவும் தொடங்கிய போராட்டத்தை வெறும் பார்ப்பன எதிர்ப்பியக்கமாகச் சுருக்காமல் பரந்து விரிந்த நிலையில் மேற்கொண்டிருப்பாரேயானால் (வெங்கடாசலபதி பெரியார் பரந்து விரிந்த அளவில் மேற்கொண்டதாக குறிப்பிடுவது உண்மையல்ல. பரந்து விரிந்த அளவில் மக்கள் அவரை மொய்த்தனர். ஆனால் பெரியார் பொய்த்து விட்டார்.) இன்று கோயில்களோ மடங்களோ அவற்றின் சொத்துகளோ இருந்திருக்கா. அச்சொத்துகளைக் காப்பதற்காக மடத்தடிகளுடன் ஓர் உடன்பாடு ஏற்படுவதற்கு இந்திப் போராட்டம் உதவியதா? அன்றைய நிலையில் வேளாளர்களையும் மடத்தலைவர்களையும் அவர் ஏன் அழைத்தார். நீதிக்கட்சி அப்போது வலிமை குன்றியிருந்ததா? அல்லது முதல்வர் பதவியேற்ற ஆச்சாரியாருக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினாரா?

பெரியார் - ஆச்சாரியார் இருவரும் தங்கள் பொதுவாழ்வின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை அரசியலில் எதிரிகளாகவும் தனிவாழ்வில் நண்பர்களாகவும் இருந்துவந்துள்ளதின் கமுக்கம் என்ன? அவர்களின் தனிமனிதப் போட்டிக்காகவே திராவிடர் இயக்கத்தை அல்லது இந்தி எதிர்ப்பைத் தொடங்கினாரா? (இந்தி எதிர்ப்பில் உண்மையான தமிழ் மொழிப்பற்று அல்லது இந்தி மீது வெறுப்பினால் அவர் ஈடுபடவில்லை என்பதற்கு குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் ஏராளமான சான்றுகளைக் காட்டுகிறது.) வெள்ளாளர்களைப் பொறுத்தவரையில் அதுவும் மடத்தலைவர்களைப் பொறுத்தவரையில் அவர் மிகப் பரிவுடன் நடந்து கொண்டார். குன்றக்குடியார் மடத்தலைவர்களுக்கும் அவருக்கும் பாலமாகச் செயற்பட்டார்.

திராவிட இயக்கம் வெள்ளாளர் இயக்கம் அல்ல என்று வெங்கடாசலபதி கூறுவது உண்மையில்லை. பெரியார் இறுதிவரை வெள்ளாளர்களுக்கு அரண் செய்திருக்கிறார். உயிர்க் காப்பீட்டுக் கழகம், வங்கிகள், பல்கலைக் கழகங்கள் என்று அரசுசார் நிறுவனங்களில் பார்ப்பனர்களுடன் வெள்ளாளர்கள் நுழைந்தபோது இவர் கண்டுகொள்ளவில்லை, வெளியில் சொல்லவில்லை. தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் இன்று வெள்ளாளர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறதென்றால் அது பெரியார் இட்ட பிச்சை. இதற்குப் பார்ப்பனர் எதிர்ப்பு, திராவிடக் கோட்பாடு என்ற மூடுதிரைகள் பயன்பட்டன. வெள்ளாளர்கள் ஒரு பெரும் கண்டத்திலிருந்து பெரியார் உதவியால் தப்பிவிட்டார்கள்.

இனி நாடார்களுக்கு வருவோம்.

நாயக்கர்கள் மதுரையில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் தமிழகத்தின் தென்கிழக்கு மூலையில் ஒதுங்கிய மக்கள் நாடார்கள். தேரிகளாயமைந்திருந்து வளமற்றிருந்த அப்பகுதியில் அவர்கள் பெரும்பான்மையராயிருந்தனர். அரியநாதனால் பாளையங்களாக்கப்படுவதற்கு முன்பு பாண்டிய நாட்டு உள்ளாட்சிப் பிரிவுகளாகிய நாடுகளின் ஆட்சித் தலைவர் பட்டமான நாடான் எனும் பட்டத்தை அவர்கள் தாங்கிக் கொண்டார்கள். வளமற்ற அம்மண்ணில் வளர்ந்திருந்த பனையிலிருந்து பதனீர் இறக்கி அதிலிருந்து கருப்புக்கட்டி செய்தனர். [பனைமரம் முதலில் கள்ளெடுக்கவே பயன்பட்டது. கரும்பிலிருந்து செய்யப்பட்ட வெல்லத்துக்கே கருப்புக்கட்டி என்ற பெயர் பொருந்துகிறது. பனை ஏறிக் கள்ளிறக்கிய மக்களைக் கட்குடிகள் என்று கழக (சங்க) இலக்கியங்கள் குறிப்பதாகக் கூறுவர். நாடார்களின் வரலாற்றைக் கூறும் நாட்டுப்புறப் பாட்டு வடிவிலான வலங்கையர் கதை ஒரு முனிவர் பனை ஏறும் ஒருவன் வீட்டில் தான் உண்ட சோற்றுக்குக் கைம்மாறாக இரும்பு அரிவாளைக் கொண்டு வரச்செய்து அதில் ஒரு பச்சிலைச் சாற்றைத் தடவி அதனை அடுப்புத் தீயில் சொருகி வைக்குமாறு கூறியதாகவும் அவ்விரும்பு தங்கமாகிவிட்டதாகவும் தொடர்ந்து அப்பனையேறி கிடைத்த இரும்பையெல்லாம் அதே முறையைக் கையாண்டு தங்கம் ஆக்கி பெரும் செல்வானாகி ஆட்சியமைத்ததாக்கவும் கூறுகிறது. பதனீரை அடுப்பில் வைத்துக் காய்த்துக் கருப்பட்டியாக்கும் தொழில்நுட்பம் தான் இக்கதையில் குறியீடாகக் கூறப்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். இது எப்போது நிகழ்ந்திருக்கும் என்று தெரியவில்லை. கள்ளர் என்பதற்கும் கள்ளுக்கும் உள்ள தொடர்பும் கருப்பணசாமி என்பதற்கும் கரும்பனைக்கும் உள்ள தொடர்பும் ஆராயத் தக்கன.]

கருப்பட்டி மற்றும் பனைபடு பொருட்களை விலையாக்காமல் அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. எனவே வாணிகத்துக்கு வெளியே செல்ல வேண்டும். வழியில் மறவர்களின் தொல்லையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருந்தது. எனவே பெரும் எண்ணிக்கையிலான மாட்டுவண்டிகளைச் சேர்த்துச் செல்ல வேண்டியிருந்தது. சிறுவனாக இருக்கும்போது குமரி மாவட்டத்திலிருந்து நெல்லை மாவட்டத்துக்கு வரும் இத்தகைய வண்டித் தொகுதிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வாறு புறப்பட்ட வண்டிகள் தங்கி ஓய்வு கொள்ள அமைந்த வண்டிப் பேட்டைகளிலிருந்து நாடார்கள் பரந்தனர் என்ற செய்தியை ஆர்டுகிரவ்ன் நூலில் படித்திருப்பீர்கள். மோசே பொன்னையா எழுதிய நாடார் வரலாற்றில் இப்பேட்டைகள் புத்தர்களால் நிறுவப்பட்டன என்கிறார்.

நெல்லை குமரி மாவட்ட நாடார்களின் சிறப்பு என்னவென்றால் அவர்கள் பிற பகுதியினரைப்போல் பிற சாதியினரிடையில் அடைபட்டுக் கிடக்கவில்லை. தாங்களே பெரும்பான்மையினராய் இருந்ததால் தாழ்வுணர்ச்சியின்றி நிமிர்ந்து நின்றனர். அதுவே அவர்கள் சென்று படிந்த இடங்களிலும் அவர்களது வளர்ச்சிக்குத் துணையாயமைந்தது. இருப்பினும் அரசின் கெடுபிடியால் மேற்சாதியினரின் கொடுங்கோன்மையைத் தாங்க வேண்டித்தான் இருந்தது.

பொருளியல் ஓரளவு மேன்மையடைந்தும் குமுகியல் இழிவுகளை எதிர்த்துப் போராடுதல் இயல்பு. ஆனால் நாடார் மகாசன சங்கத்தின் அமைப்புக் கூட்டத்தில் எடுத்தக் கொண்ட பொருட்கள் அனைத்துமே பொருளியல் மேம்பாடு கருதியவை. தலைவர் உரையில்தான் கல்வி வளர்ச்சியின் மூலம் அரசுப் பணிகளிலும், வழக்கறிஞர் போன்ற தொழில்களிலும் காலூன்ற வேண்டும் என்ற நோக்கம் வெளிப்படுகிறது.

அதேபோல் தியாகராயச் செட்டியார் முழு அறிக்கையையும் படிக்க முடியவில்லை. ஆனால் நீதிக்கட்சி ஆட்சியின் அருஞ்செயல்கள் என்ற பட்டியலில் தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டது ஒரு வரலாற்று நூலில்(தமிழக வரலாறும் பண்பாடும், பேரா.வே.தி.செல்லம்) குறிப்பிடப்பட்டுள்ளது. திராவிட இயக்க வரலாறு எழுதுவோரில் எவரும் பொருளியல் பகுதிக்கு உரிய இடத்தை அளிப்பதில்லை என்ற உண்மை இன்றைய தமிழகத்தின் பொருளியல் பின்னடைவுக்கும் வேலையின்மைக்கும் இளைஞரும் முதியோரும் படித்தோரும் படியாதோரும் வேலை தேடி நாட்டை விட்டோடும் நிலைமைக்கும் அடிப்படைக் காரணமாகும். நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

(தொடரும்)