12.12.15

திராவிட மாயை - 19


4.6.புதுப்பிக்க முடியா வளங்களை ஏற்றுமதி செய்தல்

            தமிழகத்தில் கட்டுமானங்களுக்குத் தேவைப்படும் மணலை ஆறுகளிலிருந்து மாட்டு வண்டிகளிலும் பின்னர் சரக்கிகளிலும் எடுத்து வந்தார்கள். தொடக்கத்தில் எந்தக் கட்டணமும் இன்றி மணல் எடுக்கப்பட்டது.

            வீடுகளைப் பொறுத்தவரை பெரும்பாலான வீடுகள் ஏழைகளின் ஓலைக் குடிசைகளாகவே இருந்தன. அதைவிட மேம்பட்ட வீடுகள் மண்ணைக் குழைத்துச் சுவர் எழுப்பி அதன் மீது ஓலைக் கூரை அமைத்தவையும் அதற்கும் மேம்பட்ட வகை சுடாத பச்சைச் செங்கல்களை மண்சாந்தில் கட்டி மேலே மண்சாந்தால் பூசி வெள்ளையடித்தாக ஓலை அல்லது ஓட்டுக் கூரையாக இருந்தது. இதற்கும் மேம்பட்டது மண் சாந்துக்குப் பகரம் சுண்ணாம்புச் சாந்தும் பூச்சும் சுண்ணாம்புச் சாந்தால் தளமுமாக இருந்தது. இவற்றுக்கு, பெரும்பாலும் நாழி ஓடுகள் கொண்டும் சிறுபான்மை கொல்லம் ஓடுகளைக் கொண்டும் கூரை நிறுவப்பட்டது.

            இதற்கும் மேம்பட்ட மேட்டுக் குடியினரின் வீடுகள் மட்டப்பாவு எனும் கட்டைக் குத்துக் கூரைகள் கொண்டவையாக தள மட்டம் வரை தரமான சுண்ணாம்புச் சாந்தில் கல்கட்டும் மேற்கட்டு கல் அல்லது சுட்ட செங்கல்லில் சுண்ணாம்புச் சாந்து, சுண்ணாம்புச் சாந்துப் பூச்சு, தள ஓடு அல்லது பளிங்குக்கல் தளம் கொண்டவையாக இருக்கும். இந்தக் கடைசி வகை வீடுகளுக்குத்தான் பெருமளவு மணல் அந்தக் காலத்தில் தேவைப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகமான செம்முநத்து(சிமென்று)க்குக் கட்டாயம் மணல் தேவை. அதற்கு முன் பெரியாற்று அணை போன்ற பெரிய கட்டுமானங்களுக்குக் கூட சுண்ணாம்பு, சுருக்கி எனப்படும் செங்கல்தூள், மணல் கலவையே பயன்பட்டது. செம்மண். மணல், சுண்ணாம்பு ஆகியவற்றின் கலவையான கும்மாயம் எனும் சாந்தும் பழக்கத்திலிருந்தது.

            புதிதாகப் படித்து அரசு வேலை பார்க்கும் ஒரு புதிய வகுப்பு பெருமளவில் உருவானதும் வாணிகம், சிறுதொழில் போன்று நடுத்தர வகுப்பு விரிவடைந்ததும் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களின் தோற்றமும் கல், சல்லி கொண்ட அடிப்படையுடன் சுடுசெங்கல், திண்ணக்க (கான்கிரீட்) மேற்கூரை, திண்ணக்க தளம், செம்முநப் பூச்சு என்று எல்லாக் கட்டத்திலும் மணல் தேவைப்படும் கட்டுமான உத்திகள் முழுமைபெற்றன. செங்கல்லுக்குக் கூட களி கூடிய மண்ணுக்கு மணல் சேர்க்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு மணலின் தேவை பல நூறு மடங்குகள் பெருகியது. அதற்கேற்ப ஆறுகளின் படுக்கைகளை ஆழத் தோண்டினார்கள்.

            ஆறுகளிலிருந்து மணல் எடுப்பது ஒரு எல்லை அடைந்ததும் மணலை எடுப்பதைக் கட்டுப் படுத்தும் நோக்கத்துடன் மணல் எடுக்கவரும் சரக்கிகளுக்கு கடவுச் சீட்டு வழங்கும் நடைமுறை வந்தது. இதனோடு ஊழலும் உடன் வந்தது. ஒரே சீட்டை வைத்துக் கொண்டு பல நடை மணல் அடித்தார்கள். இந் நிலையில் கள்ளச் சாராயத்திலும் கந்துவட்டியிலும் பணம் திரட்டிய கும்பல்கள் களத்தில் இறங்கின. அத்துடன் மணல் எடுக்கும் களங்களை ஏலத்தில் விடும் நடைமுறை வந்தது. இதில் செயலலிதாவின் தோழியைச் சேர்ந்தவர்கள் தனியாட்சி செய்தனர். ஆறுகளிலிருந்து மணலை அள்ளி தனியான இடங்களில் குவித்து வைத்து எல்லோரும் இவர்களிடமிருந்துதான் வாங்க வேண்டும் என்ற நிலை வந்தது. இதையடுத்து மணல் கொய்வாரங்களை(Quarry) அரசே மேற்கொள்ளும் நடைமுறை வந்தது. இங்கு ஆளும் கட்சியாளர்களும் அமைச்சர்களும் கொள்ளையடிக்கத் தொடங்கினர்.

            தமிழ்நாட்டிலுள்ள ஆறுகள் பெரும்பாலும் ஆண்டின் ஒரு பகுதியில் நீர்ப் பாய்ச்சல் இல்லாமல் வரண்டு கிடப்பவை. பெரும்பாலும் அனைத்து ஆறுகளுக்கும் குறுக்கே அணைகளை கட்டிவிட்ட இன்றைய சூழலில் அதுவே விதி என்றாயிற்று. இந் நிலையைப் பயன்படுத்தி ஆறுகளின் இன்றைய தடங்களிலும் பல்வேறு காலங்களில் அவ்வாறுகள் ஓடிய பல்வேறு தடங்களிலும் படிந்திருக்கும் மணல் முழுவதையும் அள்ளிச் சூறையாடும் கொடுமை பெரும் வீச்சில் நடைபெறுகிறது.

            பாலாறு பல்லாயிரம் அல்லது பல இலக்கம் ஆண்டுகள் பல்வேறு பாதைகளில் ஓடியுள்ளது. எடுத்துக்காட்டாக காஞ்சிபுரம் நகருக்குள் ஓடும் வேகவதியாற்றுக்கு “விருத்த சீரநதி” என்றொரு பெயர் உள்ளது. இதற்கு “பழைய பால் ஆறு” என்பது பொருள். அதுபோல் காஞ்சிபுரத்துக்குக் கிழக்கில் உள்ள திருமுக்கூடல் எனும் இடம் பழைய பாலாறும் இன்றைய பாலாறும் செய்யாறு எனப்படும் சேயாறும் கூடும் இடமாகும். இது போன்ற தடமாற்றங்களின் விளைவால் ஏறக்குறைய 50 கி.மீ. அகலத்துக்கும் 40 அடிகள் வரை ஆழத்துக்கும் அங்கெல்லாம் மணல் படுக்கை உண்டு. அதனால் மழைக் காலங்களில் அந்தப் பகுதிகளில் உள்ள வேளாண்மைக் கிணறுகளில் நீர் பொங்கி வழிந்ததைக் காண முடிந்தது. அது மட்டுமல்ல, பாலாற்றுக்குக் குறுக்கே நிலத்தடியில் ஓர் அணை கட்டினால் அதிலிருந்து சென்னையின் தேவைகளை மிஞ்சிய நீரை அறுவடை செய்யலாம் என்று 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திட்டம் கூட முன்வைக்கப்பட்டதுண்டு. அது மட்டுமல்ல, ஆற்றின் ஓரத்திலிருந்து மேல்நோக்கி நடு ஆற்றுக்குத்  தோண்டப்படும் ஊற்றுக் கால்கள் (Spring channels) எனப்படும் கால்வாய்கள் மூலம் குறிப்பிடத் தக்க பரப்பு பாசனம் பெற்று வந்தது ஒரு காலத்தில்.

            இப்போது இந்தப் பெருமளவு மணலை அகற்றிவிட்டதால் அதனடியில் கடலை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நீரை மறிக்கத்தான் ஆந்திர அரசு அணை கட்டிக் கொண்டிருக்கிறது.

            இந்த மணல் தமிழகத்தின் கட்டுமானத் தேவைகளுக்காக மட்டும் கொள்ளையடிக்கப்படவில்லை. ஏற்றுமதிக்காகவும் பெருமளவில் செல்கிறது. திருநெல்வேலியிருந்து தூத்துக்குடியை நோக்கிச் செல்லும் சாலையில் ஏறக்குறைய 15கி.மீ. தொலைவு வரை பெரும் பெரும் வளாகங்களில் மணலை மலை போல் குவித்து வைத்திருப்பதைக் காண முடியும்.

            மேற்கே, கேரள எல்லையை நோக்கிச் செல்லும் எண்ணற்ற சரக்கிகள் பாரம் மணலிலும் கணிசமான பகுதி ஏற்றுமதிக்காக கொச்சித் துறைமுகத்துக்குச் செல்கிறது.

            அது மட்டுமல்ல, நெல்லை மாவட்டத்தில் நிலத்தடியில் மிகுதியாக இருக்கும் கருங்கல் பாறைகளை உடைத்துச் சல்லியாக மாற்றும் கொய்வாரங்கள் நூற்றுக்கணக்கில் செயற்படுகின்றன. இவற்றிலிருந்து வெளிப்படும் சல்லிகளில் ஒரு சிறு பகுதி தவிர்த்த அனைத்தும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஏற்றுமதியாகிறது. சல்லி உடைக்கும் போது மிஞ்சும் நொறுக்குத்தூள்(Crusher Dust) பெருமளவில் குவிந்து நிலத்தைப் பிடித்து வைத்துள்ளது. செம்புநக் கட்டைகள்(Cement Blocks) செய்யும் ஒரு சிறு பகுதி நீங்கலாக இன்னொரு பகுதி கட்டுமானச் சாந்து, திண்ணக்கம் ஆகியவற்றில் மணலுடன் கலந்தும் கீல்(தார்)ச் சாலையில் விரிக்கவும் ஓரளவு பயன்படுகிறது. மணலை மிச்சப்படுத்த இத் தூளைப் பெருமளவில் பயன்படுத்தலாம். ஆனால் அதனால் மிஞ்சும் மணல் ஏற்றுமதியாகத்தான் பயன்படும்.

            கடும்பாறை எனப் பொருள்படும் கிரானைட் கற்கள் தமிழகத்தின் தனிச் சிறப்பு வாய்ந்தவையாகும். ஆத்திரேலியா போன்ற ஒரு சிறு கண்டம் அளவில் தாய்லாந்து பகுதியில் விழுந்த ஒரு விண்கல் புவி நடுக்குழம்பில்(Magma வில்) உருவாக்கிய அலைகளினால் அண்டை நிலப்பரப்புகள் சிதற, அடுத்திருந்த பெரும் நிலப்பரப்பு தொடர்ச்சியாக கடல் மட்டத்தின் கீழே அமிழவும் அதற்கடுத்திருந்த கடல்பகுதியிலிருந்த கடலடித் தரை மேலெழவுமான ஒரு தொடர்நிகழ்வில் நிலமாக இருந்த கண்டப் பகுதி கடலடித் தரையாகவும் கடலடித் தரையாக இருந்த கடல் பகுதி மேட்டு நிலமாகவும் உருவான தெக்காண மேட்டு நிலத்தின் ஒரு பகுதி தான் தமிழ்நாடு. அதனால் பழம் உலகின் கடல்வாழ் விலங்குகளின் கற்படிமான தொல் எச்சங்கள் இங்கு காணப்படுகின்றன.

            கண்டங்களின் நிலப்பகுதியை விட அடர்த்தி மிகுந்த கடலடித் தரையாலான இங்குள்ள கடும் பாறைகள் சிறப்பு மிகுந்தவை. மதுரை மாவட்டத்திலுள்ள செம்பழுப்பு நிறக் கற்கள் அம் மாவட்டத்தின் சிறப்பு. கனம் குறைந்த பாளங்களாகப் பிரிந்து ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக வேலியாக அடுக்கி இக் கற்களை அம் மாவட்டத்து மக்கள் பயன்படுத்தி வந்தனர். இக் கற்களைத்தான் இன்று நிலத்தடியில் தோண்டி கரும்பாறைக் கற்களாக எடுத்து வெளியேற்றுகிறார்கள். இவ்வாறு வெளியேற்றுவோர் நிலத்துக்கு வழங்கும் கூடுதல் விலைக்காக வயல்வெளிகளை அங்குள்ள மக்கள் விற்றுவிடுகின்றனர்.

            இவ்வாறு, அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கும் நீர் வளத்தை அம் மாநிலங்களுக்கு விற்று(ட்டு?)க் கொடுத்தும், தமிழக வேளாண்மையிலிருந்து தமிழக நிலங்களையும் மக்களையும் அப்புறப்படுத்தியும் நீரின் தேவையையோ ஆறுகளின் தேவையையோ அவர்கள் உணர முடியாமல் செய்து ஆறுகளிலுள்ள மணலையும் வயல்களினடியில் கிடக்கும் பாறையையும் விற்றுக் காசாக்குகிறார்கள் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள். இதில் செயலலிதா அம்மையாரின் குற்றச்சாட்டு என்னவென்றால் அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை மறைத்து தி.மு.க.வினர் கள்ளத்தனமாக அவற்றைக் கொள்ளையடிக்கிறார்கள் என்பதுதான். ஒருவேளை அம்மையாரது கட்சி வெற்றி பெற்றால் இன்று தி.மு.க.வில் இருக்கும் இந்தக் கொள்ளையர்களில் பெரும்பாலானோர் அம்மையார் கட்சிக்குத் தாவி விடுவார்கள் என்பதையும் அத்தகைய கட்சி மாறிகளுக்கு இந்திய அரசியலில் கட்சியின் நாணயமான நிலையான உறுப்பினர்களை விட முதலிடச் செல்வாக்கு என்பதையும் நாம் அறிய மாட்டோமா?

0 மறுமொழிகள்: