12.12.15

திராவிட மாயை - 28


தொடுப்பு – 4
பாராளுமன்றமும் மக்களாட்சியும்
            நம் நாடு உலகின் மிகப் பழமையான நாடு. உலகிலுள்ள மக்களுக்கெல்லாம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தந்த நாடு. அதனாலேயே அது முதுமையெய்தி தன்னினைவின்றி தன்னிலை மறந்து நிற்கிறது. வரலாற்று ஓட்டத்தில் மேல் நிலையடைந்த ஒட்டுண்ணிக் கூட்டம் ஆட்சியிலும் சமயத்திலும் அமர்ந்து உடலுழைப்பால் பண்டம் விளைப்போர், பணிகளை வழங்குவோர், அவர்களது பணிகளை ஒருங்கிணைக்கும் முதலாளியர், பண்டங்களைச் சந்தைப்படுத்தி அவற்றை மக்களுக்கு வழங்கும் வாணிகர்கள் ஆகியோரை இடங்கையினரென்றும், தொழிலாளர்கள், குத்தகை உழவர்கள் ஆகியோரை தீண்டத்தகாதவரென்றும் ஒடுக்கி ஒதுக்கி வைத்தனர். குமுகத்தின் இவ் விரண்டு மூலவிசைகளும் ஒருங்கிணைய முடியாத எதிரிணைகளாகிவிட்ட நிலையில் அவற்றுக்கிடையில் ஓயாத மோதல் நிலைத்துவிட்டது. இந்தச் சூழலில் வெளியிலிருந்து வரும் படையெடுப்பாளர்களிடம், இவ்விசைகள் ஒவ்வொன்றும் மற்றதனிடமிருந்து தம் நலன்களைக் காத்துக்கொள்ள மாற்றானிடம் தன்னை ஒப்படைத்தது. அறிந்த வரலாற்றில் பாரசீகர்களிடம் சிந்து சமவெளி வீழ்ந்ததும் அலெக்கசாந்தரிடம் வட இந்தியா வீழ்ந்ததும் தொடர்ந்து வந்த சிறு சிறு படையெடுப்பாளர்கள் இங்கு காலூன்றியதும் இதன் விளைவுதான். இறுதியாக முகம்மதியம், கிறித்துவம் ஆகியவற்றுக்கும் அவற்றின் மூலம் இறங்கி வரும் வல்லரசியத்துக்கும் நம்மால் ஈடுகொடுக்க முடியவில்லை.

            இதே போன்ற ஒர் இருண்ட சூழலில் இருந்த பழஞ்சவை(கத்தோலிக்க)க் கிறித்துவம் ஐரோப்பாவில் மார்டின் லூதர் எழுப்பிய சீர்த்திருத்தப் புயல், அரேபியர்களின் வாணிகப் போட்டிக்குத் தங்களை ஆயத்தப்படுத்தத் தடையாயிருந்த வட்டிக் கடன் முறையைத் தடை செய்த போப்பின் ஆணையால் புழுங்கிக் கொண்டிருந்த ஐரோப்பிய வாணிகர்களை அவருக்குப் பின்னணியில் கொண்டு சேர்த்தது. நூறாண்டுப் போர்களால் பாய்ந்த குருதியாறு ஐரோப்பியக் குமுகத்தின் உடலிலிருந்து அதன் முதுமையை வெளியேற்றி இளமையூட்டியது. அங்கு உயிர்ப்போடிருந்த வாணிக வகுப்பு புதிய அறிவியல் - தொழில்நுட்ப எய்தல்களை ஏற்றுக்கொண்டு தானும் வளர்ந்து அறிவியல் -தொழில்நுட்பத்தையும் வளர்த்தது. கொஞ்ச நஞ்சமிருந்த பழமையை இரு பெரும் உலகப் போர்கள் துடைத்தெறிந்தன.

            தமிழகத்தில் நுழைந்த அயல் மதமான அம்மணம் இங்கிருந்த முரண்பாடுகளைப் பயன்படுத்தி முல்லை, குறிஞ்சி நில மக்களை சேர, சோழ, பாண்டியர்க்கு எதிராகத் திருப்பித் தன் புரவலர்களான வெளி வாணிகர்களின் வேட்டைக் காடாக்கியது தமிழகத்தை. இலங்கையிலிருந்த புத்தமும் கடற்கரை வழியாகத் தன் அழிம்புகளை நிகழ்த்தியது. இந் நிலையில் ஒடுக்கப்பட்டிருந்த மக்களைத் திரட்டித் துணைக்கழைத்து அம்மண ஒற்றர்களையும் அவர்களைத் தாங்கி நின்ற உள்நாட்டு விசைகளையும் அழித்தனர் தமிழகத் தலைவர்கள். ஆனால் ஐரோப்பாவில் போல் தமிழகத்தில் உள்நாட்டு வாணிகர்கள் உருப்பெற முடியாமல் அம்மண ஒற்றர்களின் போர்வையில் நுழைந்த வெளி வாணிகர்களால் கருவறுக்கப்பட்டிருந்தனர். எனவே இங்கு தொடர்ந்த நிலக்கிழமைப் பொருளியலுக்கேற்ற சாதி முறை முன்னை விடக் கொடுமையாகத் தொடர்ந்தது. இராசராசனும் இராசேந்திரனும் தூண்டிவிட்ட கோயில் சார்ந்த பொருளியலில் வளர்ச்சி பெற்ற வாணிகர்களைத் தங்கள் மேலாளுமைக்கு அறைகூவலாக வளர்ந்து விடாமல் திட்டமிட்டு அழிந்தனர். குலோத்துங்கள் தூண்டிவிட்ட இடங்கை - வலங்கை பூசல் 800 ஆண்டுகளாக இங்கு குருதி ஆறு பெருகக் காரணமாயிருந்தது. மக்களோ தம் பொது எதிரியான ஆள்வோர் - பூசாரி கூட்டணியை நடுவராகக் கருதிப் பணிந்து நின்றனர்.

            பூசகர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஏற்பட்ட சிறு சிறு பூசல்களில் கிறித்துவ விடையூழியர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்து அவர்களைத் தொடர்ந்து வந்த ஐரோப்பிய வாணிகர்களுக்கும் உள்நாட்டு வாணிகர்களுக்கில்லாத உரிமைகளை வழங்கினர் அரசர்களும் அரசிகளும். இறுதியில் மேல் சாதிக்காரர்களான மொழிபெயர்ப்பாளர்களும் அரசர்களின் அமைச்சர்களும் தந்த ஊக்கத்தாலும் உளவினாலும் ஆங்கிலர் இங்கு வேரூன்றினர். டச்சுக்காரர்களிடம் சவளி ஏற்றுமதிக்கு ஒப்பந்தம் செய்திருந்த கட்டபொம்மனும் பூலித்தேவனும் அந்த ஒப்பந்தங்களைக் கைவிடச் சொன்னதனால் ஆங்கிலரோடு முரண்பட்டு அவர்களை எதிர்த்தனர். அவ்வாறே நம் நாட்டு வாணிகம் நம் நாட்டு வாணிகர்கள் கைகளிலிருந்து, அவர்கள் ஒரு வலிமையான விசையாக இருந்திருந்தால் நம் நாட்டை எந்த வல்லரசாலும் அசைத்திருக்க முடியாது என்பது நமக்கு வரலாறு புகட்டும் பாடம்.

            அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மருதுபாண்டியர் தலைமையிலான தீவக்குறை(தீபகற்ப)க் கூட்டணியின் தலைமையிலிருந்தோர் அரச குடும்பங்களைச் சேர்ந்தவரில்லை. எனவே அவர்களால் மக்களைச் சாதி வேறுபாடின்றி ஒன்றுதிரட்ட முடிந்தது. ஆங்கிலரால் அழிக்கப்பட்ட பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டையை ஏழே நாளில் மீளக் கட்டிய வரலாற்று இறும்பூதை ஒன்றிணைந்த குடிமக்களின் ஒற்றுமை எனும் பெரும் பூதம் நிகழ்த்திக் காட்டியது.

            ஆனால் காலம் கடந்துவிட்டது. ஏற்கனவே ஆள்வினை வெற்றிடமான நம் நாட்டினுள் அயலவன் வசதியாக அமர்ந்துவிட்டான். பிரஞ்சியரின் தொடர்பு மருதுபாண்டியருக்கு இருந்தது. என்றாலும் மக்களின் ஒன்றிணைந்த ஆற்றல் செயற்படத் தேவையான காலம் இருந்திருக்குமென்றால் வெள்ளையர் இங்கு காலூன்றியிருக்க முடியாது.

            தங்களை எதிர்த்து பார்ப்பனர் தலைமையிலான தீவிரர் அணி வெளிக் கிளம்பியதைக் கண்டு கலங்கிய ஆங்கிலர் தன் சாதியினரான பனியாக்கள் நலனில் வெறி கொண்ட காந்தியிடம் தென்னாப்பிரிக்காவில் பகரம் பேசி இந்தியாவுக்கு அழைத்து வந்து. இங்கு ஆயுதப் புரட்சி வெடித்து சாதி அமைப்பும் அதன் பயனாகத் தன் சாதியினருக்கு இருக்கும் வாணிக மேலாண்மையும் அழிந்துவிடாமல் காக்க வன்முறையற்ற புரட்சி என்ற கருத்தை முன்வைத்து இந்தியாவிலுள்ள பிற்போக்கர்களை முன்னுக்குக் கொண்டுவந்தார் அவர். அவரை நம்பிய நேர்மையாளர்கள் பலரும் அவர் பெயரால் தாங்கள் விரும்பிய தொண்டுகளில் ஈடுபட்டனர்.

            முழுத் தன்னாட்சியுள்ள மாநிலங்கள், விரும்பும் சமத்தானங்கள் விடுதலை பெறலாம் என்றெல்லாம் மக்களை ஏமாற்றி இறுதியில் ஒற்றை ஆட்சி என்றும் படை கொண்டு சமத்தானங்களை மிரட்டியும் இந்திய மக்களை பனியாக்களுக்கும் அவர்கள் மூலமாக வல்லரசுகளுக்கும் நிலையான அடிமைகளாக்கினார். பனியாக்களுக்கு ஒரே போட்டியாளரான பஞ்சாப் முகமதியர்களுக்கு பாக்கித்தானைப் பிரித்துக் கொடுத்தார். 1930களிலேயே காந்திக்குக் கடவுள் படிமம் கொடுத்த ஐரோப்பிய, அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் இன்றளவும் அந்தப் படிமத்தைப் பேணிக்காக்க இடைவிடாது பாடுபட்டு வருகின்றனர்.

            ஆயுதம் தாங்கிப் போராடி ஆங்கிலரை விரட்டியிருந்தால் உலகப் போரால் நசுங்கிப் போயிருந்த பிரிட்டனை எளிதில் வென்று நமக்குரிய பொருளியலை வளர்ந்திருக்க முடியும். இந்திய மக்கள் உணர்வொன்றிய ஒற்றுமையை எய்தியிருப்பார்கள். ஆனால் இந்திய மக்களைச் சமயத்தின் பெயரால் பிரித்து அவர்களின் குருதியை பனியா நலன் என்ற பேய்க்குக் காணிக்கையாக்கி அப் பேய்க்குத் தன்னுயிரையும் தந்து ஈகியாகி விட்டார் மோகன்தாசு கரம்சந்து காந்தி . அவருக்கு பனியாக்கள்தான் நன்றி செலுத்த வேண்டும். உலகின் அடிமை மக்கள் ஆயுதந் தாங்கிப் போராடாமல் தடுத்து ஐரோப்பிய, அமெரிக்க வல்லரசுகளை நிலைக்க வைத்த காந்தி உலகில் தோன்றிய கொடுமதியாளர்களில் முதலிடத்தில் வைத்துத் தூற்றத்தக்கவர்.

            முதுமையெய்தி விட்ட தமிழ் மக்களின் சிந்தனைகளுக்கும் அவர்களது பண்பாட்டுக்கும் புதிய குருதி பாய்ச்ச ஈழத்தமிழ் மக்களும் சிங்கள ஆளும் கணங்களும் போராடி அடுத்த கட்டத்துக்காகக் காத்திருந்த நிலையில் இந்திய ஆளும் கணங்கள் வல்லரசுகளின் வாய்மூடிய ஒப்புதலுடன் தமிழ் மக்களை அழித்து வெறியாடிவிட்டன.

            நம் பங்குக்கு நாமும் நமக்கேற்ற வகையிலே போராடியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வரலாற்றில் தமிழகத்தை ஆண்ட தமிழர், தமிழரல்லாத அரசர்களின் சூழ்ச்சிகளை எல்லாம் மிஞ்சிய சூழ்ச்சியும் தன்னல வேட்டையும் மிகுந்த ஓர் ஆளும் கூட்டத்திடம் தமிழகம் சிக்கிக் கிடக்கிறது. மயக்கு மொழி பேசியே தமிழனின் மண்ணும் நீரும் மனித வளம் உட்பட அனைத்து வளங்களும் விலையாகிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கூட்டம் நம் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஒடுக்குமுறை மறைமுகமானது, எளிதில் புரிந்துகொள்ள முடியாதது. அது மட்டுமல்ல நம் வளங்களை நாமே பயன்படுத்த முடியாமல் கடத்தி நம் மக்களை வறுமையில் ஆழ்த்தி அவர்களுக்குச் சலுகைகள், இலவயங்கள் என்று கூறி அவர்களை இரவலர்களாக்கி சிந்திக்கும் ஆற்றலற்றவர்களாக்கி வைத்திருக்கிறது இந்த வஞ்சகக் கூட்டம். முன்பு சமயங்கள் கூறிய மெய்யியல் பொய்களை இன்று கோட்பாடுகளின் பெயர்களில் சொல்லி நேர்மையுள்ளவர்களின் சிந்தனைகளைத் திசைதிருப்புகிறது. ஆசிரியர் - அரசூழியர் எனும் ஓர் ஒட்டுண்ணி வகுப்புக்கு எல்லையில்லாச் சலுகைகள் வழங்கித் தன் பொய்யுருவைப் புகழ்பாட வைத்துள்ளது. ஆற்றல் மிகுந்த இந்த வஞ்சகக் கும்பலை நம் நுண்ணிய செயற்பாடுகளால் எதிர்க்க வேண்டும்.
                         
            ஈழத்தில் போல் தமிழகத்தில் ஒடுக்கல் கருவியாக ஆயுதங்கள் இல்லை. பொருளியல் ஒடுக்குமுறையும் கோட்பாட்டு ஏமாற்றுகளும்தாம் உள்ளன. எனவே நாமும் பொருளியல் களத்தில்தான், அதை நோக்கித்தான் நமது நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

            இந்தப் போராட்டம் தமிழகத்துக்கு மட்டும் உரியதல்ல, முழு இந்திய மக்களுக்கும் உரியது. ஆனால் இந்தியாவை ஆளும் இந்தியக் கட்சிகள் பேரவை, பா.ச.க., இரு பொதுமைக் கட்சிகள், சனதாக் கட்சியின் பல பிரிவுகள் என்று அனைத்துமே தமிழகத்தின் நீருரிமையைப் பறித்து அண்டை மக்களுடன் தமிழக மக்களுக்குப் பகைமையை வளர்த்து வைத்திருக்கின்றனர். இது நம் ஆட்சியாளர்கள் காலங்காலமாக வளர்த்து வந்துள்ள பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு தெள்ளிய வடிவம். ஆனால் அதே நேரத்தில் மாநிலங்கள் சீரமைப்பின் போது அளவுக்கு மீறிப் "பரந்த உள்ளம்" கொண்ட காமராசர் போன்ற தலைவர்களின் இரண்டகத்தால் நம் அண்டை மாநிலங்களுக்கு இழந்த நிலப்பகுதிகளை மீட்டுவிட்டால் இந்த நீருரிமைக்கென்று நாம் தனியாகப் போராடத் தேவையில்லை என்பதற்காத்தான் மண்ணுரிமை முழக்கம் வைக்கப்பட்டுள்ளது.

            உண்மையில் நம்மிடையில் நீருரிமைச் சிக்கலுக்கு அடிப்படையே இல்லை. மொத்தத்தில் நமது நீர் மேலாண்மை மட்டுமல்ல, நில மேலாண்மை, மூலப்பொருள் மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை, மனிதவள மேலாண்மை, கழிவுப் பொருள் மேலாண்மை என்று அனைத்திலும் நாம் காட்டுவிலங்காண்டி நிலையிலுள்ளோம். அந்தத் திசையில் கவனம் செலுத்தாமல் நம் ஆளும் களத்தினர் தங்கள் ஆதாயம் ஒன்றே குறியாக, அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும் வாக்குப் பொறுக்கி அரசியலில் முதலிடத்தில் நிற்கவும் போட்டி போட்டுக்கொண்டு அண்டை மாநில மக்களிடையில் பகைவெறியேற்றி வருகின்றனர். நமது உரிமைகளுக்காகப் போராடும் அதே நேரத்தில் நீர் மேலாண்மை உட்பட அனைத்து மேலாண்மைகளிலும் நாம் முன் நின்று அண்டை மாநில மக்களுக்கு வழிகாட்டி நம்பிக்கையூட்டி ஆற்று நீர்ப் பங்கீட்டில் அறிவியல் சார்ந்த தீர்வு காண வேண்டும். போராட்டத்துக்கு மக்கள் ஆயத்தமாயிருந்த நிலையில் நடுவர் மன்றம் என்ற பொய்மானைக் காட்டி எல்லா அண்டை மாநிலங்களும் தங்கள் எல்லைகளுக்குள் அணைகளைக் கட்டி முடிக்கவும் மாநிலத்துக்கு இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தென்று வாய்க்கால்களை, தொலைக்காட்சி வாய்க்கால்களை கருணாநிதி தோண்டுவதற்குத் தோதாகவும் 18 ஆண்டுகளாகியும் முடியாமல் சிக்கலை இழுத்தடிக்க வைத்து அவர்களுக்கு நேரம் பெற்றுத்தந்த பழ.நெடுமாறன் போன்று உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் அசல் அரசியல் கயவாளிகளை நாம் கைவிடத் தயங்கக் கூடாது.

            பொருளியல் உரிமை என்பது பனியாக்கள் மற்றும் நிலைத்துவிட்ட சில குழுமங்கள், அரசியல்வாணர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு மட்டுமே இருக்கிறது. அந்த உரிமை மக்களுக்குக் கிடைக்காமலிருப்பதற்கு வருமான வரி, தொழில் உரிமம், மூலப்பொருள் ஒதுக்கீடு என்று எத்தனையோ உத்திகளை ஆட்சியாளர்கள் வைத்துள்ளனர். இந் நடவடிக்கைகளுக்கு கோட்பாட்டுச் சாக்குச் சொல்லி வருகின்றனர், பொதுமைத் தரகர்களும் ஒற்றர்களும். நாம் உருவாக்கிய செல்வத்தை ஆக்கமான வழியில் முதலிட்டு நம் மக்கள் கண்டறியும் அறிவியல் - தொழில் நுட்பச் செல்வங்களுக்குப் பாதுகாப்பளித்து அவற்றைக் கையாண்டு, நம் நாட்டு மக்களின் உழைப்பை நம் நலன்களுக்குப் பயன்படுத்தவும் நம் மக்களின் கல்வி வளர்ச்சியை நமக்குப் பயன்படுத்தவும் நம் நாட்டில் உள்ள இயற்கை விசை மூலங்களான வெய்யில், காற்று, நீர், கழிவுகள் ஆகியவற்றை நம் ஆற்றல் தேவைகளுக்குப் பயன்படுத்தவும் நம் நாட்டுக் கனிம வளங்களை நம் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தவும் நாம் விளைத்த பண்டங்கள் முழுவதையும் வாங்கி நுகருமளவுக்கு நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவுமான சில திட்டங்களை நாம் கொண்டுள்ளோம். இவற்றை எய்துவதற்கான போராட்டமே அனைத்து மாநில மக்களையும் சாதி, சமய, மொழி, நிலப்பரப்பு வேறுபாடின்றி ஓரணியில் திரட்டும்.

            பாராளுமன்ற மக்களாட்சியைப் பொறுத்தவரை அதன் வரலாற்றை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 12ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் மன்னன் ஒருவன் தான் விதித்த வரிகளின் தேவையை மக்களுக்கு எடுத்துரைக்கவென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பேராளர்களைத் தலைநகருக்கு வரவழைத்தான். இந்த நடைமுறை தொடர்ந்த போது பேராளர்கள் தலைநகருக்குச் சென்று வரும் செலவுகளை அரசே ஏற்றது. பின்னர் அதுவே சம்பளமாக மாறியது. ஒரு கட்டத்தில் பேராளர்களில் சிலர், தங்கள் வட்டாரங்களில் தங்களுக்குத் தேவைப்படும் சில சலுகைகள் அல்லது பணிகள் குறித்து அரசனுக்கு மனுச் செய்ய முயன்றனர். அரசனிடம் வேண்டுகைகள் வைப்பதா என்று இன்னொரு தரப்பினர் எதிர்த்தனர். இப்போது பேராளர்கள் வேண்டுகையாளர்கள் என்றும் நடுங்கிகள் என்றும் இரு பிரிவினராக பிரிந்தனர். நடுங்கிகள் எப்போதுமே அரசின் பக்கம் நின்றனர். இவ்விரு பிரிவினருமே பின்னர் முறையே முன்பாய்ச்சலர் (விக்குகள்) என்றும் தேக்கநிலையினர் (டோரிகள்) என்றும் வழங்கப்பட்டனர். இந்தப் பிரிவினரிடமிருந்துதான் முறையே தளர்நிலையினர், பழமையாளர்கள் என்ற கட்சிகள் உருவாயின. இதுவரை மக்களின் பேராளர்கள் என்ற பெயரில் தேர்வானவர்கள் மக்களின் எண்ணங்களை அரசருக்கு எடுத்துச் சொல்பவர்கள் என்ற நிலையிலிருந்து அந்தந்தக் கட்சியின் நிலையினை எடுத்துச் சொல்பவர்களாக மாறினர். இந்தத் தொடக்க கால பாராளுமன்றம் வரி விதிப்பை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் பேராளர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்களார் தகுதி வரி செலுத்துவோருக்கே வழங்கப்பட்டது. பழமையாளர்கள் பெரும்பாலும் உயர்குடிகள் எனப்படும் நிலக்கிழார்களாகவும் முன்பாய்ச்சலர்கள் புதிதாக உருவான வரி செலுத்தும் மக்களாகவும் இருந்ததால் இவ்விரு சாரரின் நலன்களுக்கான பொருதுகளமாகப் பாராளுமன்றம் இருந்தது.

            தொழிற்புரட்சியின் விளைவாகப் புதிதாக உருவான பாட்டாளியர் தங்கள் வேண்டுகைப் பட்டயத்தை வெளியிட்டு நடத்திய மாபெரும் போராட்டம் அவர்களை ஓர் அரசியல் விசையாக்கியது. அதன் விளைவாக தளர்வியக் கட்சியின் இடத்தை தொழிற்கட்சி கைப்பற்றி அதை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியது.

            பிரிட்டனில் எழுதப்பட்ட அரசியல் சட்டம் என்று ஒன்று கிடையாது, மரபுகள் தாம் அரசியல் சட்டம் என்று கூறுகிறார்கள். ஆனால் மரபு, பண்பாடு என்பவை நிலையானவை அல்ல. ஒரு காலத்தில் புகுந்த புதிய நிலைமைகளுக்கு மரபில் முன்நிகழ்வுகள் இல்லாத போது புதிய ஒன்று மரபினுள் நுழைகிறது. இந்தியாவில் அரசியல் சட்டம் புனிதமானது, அதை மாற்ற முடியாது என்று சொல்லிக்கொண்டே ஆளும் கணங்கள் தங்களுக்குத் தேவைப்படும் நேரங்களில் செய்த திருத்தங்களின் எண்ணிக்கை நூறை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அழகில் இலங்கையில் ஈழத் தேசியச் சிக்கலை இலங்கை அரசியல் சட்ட வரையறைக்குள் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று இங்குள்ள ஆளும் கணங்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றன.

            இங்கிலாந்து வளர்த்தெடுத்துள்ள பாராளுமன்ற மக்களாட்சி மக்களிடமிருந்து என்றோ அயற்பட்டுவிட்டது. எடுத்துக்காட்டு ஈராக்குச் சிக்கலில் தோணி பிளையர் நாட்டு மக்களின் எதிர்ப்பையும் மீறி விலை போனது.

            உறுப்பினர்கள் இந்த வகை நிலைப்பாட்டைத்தான் எடுக்க வேண்டுமென்று கட்டளையிடவென்றே விப் எனப்படும் சட்டாம்பிள்ளை(கொறடா)யை வைத்துக்கொள்ள இருக்கும் அதிகாரம் பாராளுமன்ற மக்களாட்சியின் மக்கள் சார்பற்ற நிலையைத் தெற்றென விளக்கும் ஓர் அடையாளமாகும். Whip என்ற ஆங்கிலச் சொல்லின் சாட்டை என்ற பொருளைப் பொருத்திப் பார்க்கும் போது மன்ற உறுப்பினர்களின் “உரிமை”களின் எல்லை நன்கு விளங்கும். 

            பாராளுமன்ற மக்களாட்சியின் ஒரு நடைமுறை, நடப்பிலிருக்கும் அரசை ஒரு கட்சியின் சொத்தாக்குகிறது. ஆளும் கட்சி அல்லது அரசு ஒரு சட்ட முன்வரைவை முன்வைத்து அது தோற்றுவிட்டால் அந்தக் கட்சி பதவியிறங்க வேண்டுமென்பதுதான் அது. இது எப்படி சரியாகும்? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்றம் தன் முன்னால் வைக்கப்படும் ஒரு சட்ட முன்வரைவின் தரத்தை எடை போட்டுத் தன் முடிவை வாக்கெடுப்பு மூலம் வெளிப்படுத்தினால் அம் முடிவு எத்தகையதாயினும் அதனை ஏற்றுக்கொள்வதே பாராளுமன்றத்தைத் தேர்ந்த மக்களை மதிப்பதாகும். மாறாக அரசின் அல்லது ஆளும் கட்சிக்கு எதிராகத் திர்ப்பளித்துவிட்டதற்குத் தண்டனையாக பாராளுமன்றத்தையே கலைப்பது உறுப்பினர்க்கும் நாட்டுக்கும் இழைக்கும் பச்சை இரண்டகமாகும். அத்துடன் ஆளும் கட்சி தன் சட்டவரைவு நிறைவேற வேண்டுமென்பதற்காக தன் கட்சி, தேவையானால் எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கும் கூட, அதே போல் ஆளும் கட்சி அரசைக் கவிழ்க்க வேண்டுமென்பதற்காக எதிர்க் கட்சி ஆளும் கட்சி, தன் கட்சி உறுப்பினர்களுக்குக் கூட விலை கொடுத்து குதிரைப் பகரம் பேசவேண்டிய கட்டாயம் நேர்கிறது. இது ஒன்றன் பின் ஒன்றான ஊழல்களுக்கு வாயிலை விரியத் திறந்து விடுகிறது. அமெரிக்க அரசியல் சட்டத்தில் குடியரசுத் தலைவர் ஒரு கட்சியையும் பாராளுமன்றம் எதிர்க்கட்சியையும் சார்ந்திருப்பது மிக இயல்பான ஒன்று. அரசு அல்லது குடியரசுத் தலைவர் முன்வைக்கும் சட்ட வரைவுகளை பேரவை எனப்படும் பாராளுமன்றமும் மூப்பரவை எனப்படும் மேலவையும் முறியடிப்பது அங்கு மிக இயல்பான ஒன்று. ஆனால் அங்கும் பாராளுமன்றமும் வாக்குச் சீட்டுத் தேர்தலும் மக்களின் உண்மையான எதிரொளிப்பான்கள் என்றாகிவிடவில்லை. பேராளர்களை மக்கள் தேர்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவ்வாறு தேர்வாகிறவர்களின் செயல்களையும் சிந்தனைகளையும் மக்கள் கட்டுப்படுத்த எந்த வழியுமில்லை. வேட்பாளர் தேர்வில் போட்டியிடும் பதவிக்கேற்ற நிலப்பரப்பில் உள்ள கட்சி உறுப்பினர்களின் வாக்குகள்தான் செயற்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றச்செய்ய எந்த வழியுமில்லை. அங்கும் கூட வாக்கு எண்ணிக்கையில் ஏமாற்று நடைபெறுகிறது என்பது புசுவின் குடியரசுத் தலைவர் தேர்தலின் போது அடித்த முடைநாற்றத்திலிருந்து தெரிந்தது. பேரவை எடுக்கும் முடிவுகள் மக்கள் விரும்பும் முடிவுகளாக இருப்பதில்லை பல நேர்வுகளில். உலகை ஆட்டிப் படைக்கும் ஒரு நாடாக இருக்கும் பெருமையிலும் வளமையிலும் இந்தக் குறைகளையெல்லாம் பொறுத்துக்கொள்கிறார்கள் அந்த மக்கள். ஆனால் இந்த வல்லரசுப் பெருமையில் ஆதாயமடையும் பன்னாட்டு நிறுவனங்கள்தாம் ஆட்சியாளரின் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன என்பதே உண்மை. அங்கும் கறுப்பர், வெள்ளையர் என்ற பாகுபாட்டை வைத்து வாக்குப் பொறுக்கும் பொறுக்கித்தனம் நிலவவே செய்கிறது.

            இங்கிலாந்தின் பாராளுமன்ற முறைக்கும் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் முறைக்கும் இடைப்பட்டனவாக பல உத்திகள் உள்ளன. விகிதமுறைப் படிநிகரியம் அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று. பதிவான வாக்குகளில் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் விகிதத்தில் மொத்த இருக்கையும் பங்கிடப்படும். வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் தேர்வுபெறும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கும் பெற்ற வாக்குகளின் விகிதப்படியுள்ள எண்ணிக்கைக்கும் உள்ள இடைவெளியைக் கட்சியின் தலைமை சரி செய்யும். இம் முறையிலுள்ள சிறப்பு என்னவென்றால் இந்தியாவில் போல் ஒரு சில நூற்றுமேனி வாக்கு வேறுபாட்டில் ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற எதிர்க் கட்சி படுபள்ளத்தில் விழும் விந்தை நிகழாது. அத்துடன் காலியாகும் ஒர் இருக்கையை நிரப்புவதற்காக ஆட்சியாளர்கள் தங்கள் எத்துவேலைகளையும் அதிகார அடாவடிகளையும் அவிழ்த்துவிட்டு வென்று மக்கள் தங்கள் ஆட்சிக்குச் சான்றளித்துவிட்டார்கள் என்று காட்ட வேண்டிய இடைத்தேர்தலுக்குத் தேவை இருக்காது.

            இவையன்றி பாராளுமன்றத்தை வெறும் கருத்துரைக்கும் மன்றமாக வைத்துக்கொண்டு அதிகாரத்தைத் தன்னிடம் அரசரோ அல்லது குடியரசுத் தலைவராகத் தன்னை அறிவித்துக் கொள்ளும் படைத் தலைவரோ தன் விருப்பம் போல் ஆளும் மக்களாட்சிகளும் உண்டு. சாரத்தில் பார்த்தால் இவற்றுக்கிடையில் எந்த வேறுபாடும் இல்லை. மொத்தத்தில் பெரிதோ சிறிதோ ஆன ஒரு குழுவின் ஆட்சி(Oligarchy)தான் பாராளுமன்ற ஆட்சி.

            இந்தியப் பாராளுமன்றம் நிறைவேற்றும் வரவு - செலவுத் திட்டத்துக்குள் அடங்காத வருவாய்களைக் கணிசமாகக் கொண்டுள்ளது இந்திய அரசு. பொருளியல் நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும் பல்வேறு அரசுசார் நிறுவனங்களின் கட்டணங்களை அல்லது விற்பனை விலையை உயர்த்துவதால் கணிசமான வருவாய் அரசுக்குக் கிடைக்கிறது. இது பாராளுமன்றத்தை ஒரு கேலிக்கூத்தாக மாற்றிவிடுகிறது. அது மட்டுமல்ல கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் எந்த வரவு - செலவுத் திட்டத்தின் மீதும் பாராளுமன்றத்தில் உரையாடல் எதுவும் நடைபெறவில்லை. ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் திட்டமிட்டு அவையில் அமளியை எழுப்பி அவையை நடத்தாமலேயே இறுதி அரை நாளில் அனைத்து முன்னீடுகளும் எந்த உரையாடலும் இன்றி ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. மற்ற அமர்விலும் இந்த நிலைதான். இறுதி அரை நாளில் நூற்றுக்கணக்கான வரைவுகள் படிக்கப்படாமலே கூட நிறைவேற்றப்படுகின்றன.

            இந்தியச் சூழலில் ஆட்சியில் குடிமக்களின் பங்களிப்பைப் பார்ப்போம். தேர்தலில் போட்டியிடத்தக்க அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் ஏற்பு வழங்குகிறது. இராசீவ் காந்தியின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத் திருத்தத்தின் படி ஓர் அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தின் ஏற்பைப் பெறவேண்டுமென்றால், கீழே தரப்படும் 5 கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாக கட்சியின் உரிய குழுவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவை:
1.        இந்திய அரசியல் சட்டம்
2.        இந்திய ஒருமைப்பாடு
3.        நிகர்மைக் கோட்பாடு
4.        மதச்சார்பின்மை
5.        அயலுறவில் அணி சாரக் கொள்கை

            இங்கு மக்களின் கருத்துரிமைக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேறிய போது பாராளுமன்றத்தில் எந்தக் கட்சியுமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மக்களின் அல்லது தங்கள் கருத்துரிமையை நம் அரசியல் கட்சிகள் எவ்வளவு மதிக்கிறார்கள் பார்த்தீர்களா!

            இப்போது, கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை முடிவு செய்கின்றன. ம.கோ.இரா.வின் காலத்தில் தன் கட்சியின் வேட்பாளராக விரும்பி வேண்டுகை விடுப்போர் இவ்வளவு தொகை முதலிலேயே கொடுத்துவிட வேண்டுமென்று வெளிப்படையாக அறிவித்தார். அவ்வாறு பணம் கொடுத்து விடுத்த வேண்டுகை ஏற்கப்படவில்லையாயின் அவர் தந்த பணம் திரும்ப வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் செயலலிதா காலத்தில் தொகை வளர்ந்தது. ஏற்கப்படாத வேண்டுகையாளரின் பணத்தைத் திருப்பித் தரவில்லை.

            இவ்வாறு பணம் செலுத்தி வேட்பாளரானவர் தேர்தல் செலவுகளையும் ஏற்க வேண்டும். சில நேர்வுகளில் தேர்தல் செலவுகளை எதிர்கொள்ளவென்று கட்சி அளிக்கும் பணத்தைச் செலவிடாமல் சுருட்டும் வேட்பாளர்களும் உண்டு. ஆக, வேட்பாளர் தேர்விலேயே அரசியல் ஒரு வாணிகம் என்பது தெளிவாகவே விளங்குகிறது. அத்துடன் நாணயமற்றவர்கள்தாம் தலைவர்களும் வேட்பாளர்களும் என்பதும் தெரிகிறது. சாதிச் சாய்கால் உள்ளவர்கள்தான் வேட்பாளருக்குத் தகுதியானவர் என்பது எழுதப்படாத சட்டம்.
                                             
             மக்கள் வரிப் பணத்திலிருந்து இவ்வளவு செலவிலும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்ப்பதற்கும் இல்லையென்றால் சேர்ப்பதற்கும் விளத்தங்கள்(விவரங்கள்) தவறாக இருந்தால் திருத்துவதற்கும்(உண்மையில் அவர்கள் திருத்துவதில்லை, திருத்தியதாகக் கணக்குக் காட்டிப் பணத்தைச் சுருட்டிக்கொள்வார்கள் என்று தோன்றுகிறது,) அதற்காக வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு மக்களை அலையவைத்தும் மக்கள் தேர்ந்தெடுத்தவர்களிலிருந்து அமைச்சர்களாக, முதல்வர்களாக, தலைமை அமைச்சர்களாக வருபவர்களுக்கு ஓர் ஒப்பந்தத்திலோ சட்டத்திலோ அரசாணையிலோ கையொப்பமிடும் அதிகாரம் கிடையாது. நடுவரசால் அமர்த்தப்படும் மாநில ஆளுநருக்கும் மறைமுகத் தேர்தலில் தேர்வாகும் குடியரசுத் தலைவருக்கும் பல்வேறு பணித் தேர்வாணையங்களால் அமர்த்தப்படும் மாதச் சம்பளம் வாங்கும் அரசுச் செயலாளர்களுக்கும்தான் அந்தத் தகுதி வழங்கப்பட்டிருக்கிறது.[1]   
                       
அணு ஆற்றல் குறித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்வதை எதிர்த்து வேறெவரும் களமிறங்கிக் “காரியத்தை”க் கெடுத்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் தன் ஏமான் சீன அரசின் அறிவுரையின் பேரில் எதிர்ப்பதாகப் பாராளுமன்றத்தின் உள்ளும் புறமும் “நம் இந்திய” மார்க்சியப் பொதுமைக் கட்சி படங்காட்டிக் காலங்கடத்திக்கொண்டிருந்தது. அப்போது அதிகாரிகள் கமுக்கமாகக் “காரியத்தை” முடித்து அது இணைய தளங்களில் வெளியாகி இந்தியக் குடிமக்கள் அனைவரின் முகத்திலும் கரி பூசியதை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். இந்தியக் குடிமகன், தேர்தல் பணியாற்ற வருகிறோம் என்று வருகிறவர்கள் முன்னால் அடிமைகள் போன்று புகைப்படத்துக்கு முகம் காட்டி வாக்காளர் பட்டியலில் தன் பெயர் இடம்பெற்றிருக்கிறதா என்று அலுவலகம் சென்று பலமுறை அலைந்து அதிகாரிகள் முன் மானம்கெட்டு தேர்தல் காலத்தில் தெருவை நிறைக்கும் பரப்பல் கூச்சலால் காதைக் கெடுத்து வாக்குச்சாவடிக்குச் சென்று கால்கடுக்கக் காத்துநின்று தன் பெயரில் வேறெவரும் அதற்குள் “நம்” வாக்கை அளித்துவிடாமல் இருந்தால் தேர்தல் ஊழியர் தடவும் மையால் கையைக் கறையாக்கி வாக்களிக்கும் பொறியின் மொட்டை ஒரே ஒரு முறை அழுத்தும் “மக்களாட்சிக் கடமையை ஆற்றி”த் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளோடு சேர்ந்து கொள்ளையடிப்பதன்றி வேறெந்த உரிமையும் அதிகாரமும் அரசியல் சட்டத்தில் கிடையாது என்பதைப்போது புரிந்துகொள்ளலாம். கொள்ளையடிக்கும் உரிமையையும் அதிகாரத்தையும் பற்றி அரசியல் சட்டத்தில் வெளிப்படையாக எதுவும் கிடையாது, அது உட்கிடையானது.

இது பற்றி ஆங்கிலர்கள் கூறுவது என்ன தெரியுமா? “மக்களாட்சி” என்ற மாபெரும் மண்டபத்தை மூன்று பெரும் தூண்கள் தாங்குகின்றனவாம். ஒன்று மக்கள் தேர்ந்தெடுக்கும் பேராளர்களைக்கொண்ட பேராளர் மன்றம் என்ற பெரும் தூணாம். இன்னொன்று ஊழியர் தேர்வு வாரியங்கள் “தேர்ந்து” அமர்த்தும் மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களைக்கொண்ட   ஆள்வினைக் கட்டமைப்பு எனும் பெருந்தூணாம். மூன்றாவது பெரும் தூண் குடியரசுத் தலைவரால் அமர்த்தப்பட்டு புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்க வரும் போது அவருக்கே பதவி வாக்குறுதி செய்துவைக்கும் உச்ச நயமன்றத் தலைமை நடுவரைத் தலைவராகக் கொண்டதாகக் கருதப்படும் நயன்மைத் துறையாம்.  தூண்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ள இம் மூன்று “மக்களாட்சி” உறுப்புகளும் ஒன்றின் உரிமைகளிலும் அதிகாரங்களிலும் மற்றவை தலையிடாமல் நடந்துகொள்ள வேண்டுமாம். இதன் பொருள் நமக்குப் புரியவில்லை. அதிகாரிகளின் நடவடிக்கைகளில் பேராளர் மன்றங்களோ நய மன்றங்களோ தலையிடவில்லை என்றால் அவை இருப்பதன் நோக்கம் என்ன? உண்மையில் நடைமுறை அப்படித்தான் இருக்கிறதா? இருக்க முடியுமா? இந்த விளக்கம் உண்மையில் ஓர் ஏமாற்று. மக்களின் வாக்குகள்தாம் ஆட்சியின் தன்மையைத் தீர்மானிக்கிறது என்ற பொய்யை நயப்படுத்துவதற்காக, பச்சைக் குழந்தைகளின் குழப்பங்களைப் போக்குவதற்காகச் சொல்லும் கதைகள் போன்றவைதாம் இதுவும். வேறு மாற்று வழி எதுவும் சிந்தைக்குப் புலப்படாத நிலையில் இந்தச் சப்புக்கொட்டலுக்குத் தலையாட்டிக்கொண்டிருக்கிறது மனித குலம்.   

            மூன்று தூண்களில் ஒன்று இன்னொன்றின் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை என்பதில் சரக்கு இல்லாமலில்லை. எடுத்துக்காட்டாக, நரசிம்மராவ் காலத்தில் அவர் மீது வந்த ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பணம் வாங்கிக்கொண்டு எதிர்த்து  வாக்களித்தார் ஓர் எதிர்க்கட்சி உறுப்பினர். அவர் வாக்களித்ததைச் செல்லாமலாக்க வேண்டும் என்பது நயமன்றத்துக்கு வந்த வழக்கு. பாராளுமன்றத்தில் வாக்களிக்கும் நடவடிக்கையில் நயமன்றம் தலையிட முடியாது என்பது தீர்ப்பு.

            பேராளர் மன்றங்களில் பொய்ப் புலனங்கள்(தகவல்கள்) தருவது, வசைவது, அடிதடி, கொலை என்று எந்தக் குற்றம் இழைத்தாலும் அது குறித்து பொதுமக்களோ அந்த மன்ற உறுப்பினர்களோ எந்த நயமன்றத்திலும் வழக்குத் தொடர முடியாது. அதாவது அரசியல்வாணர்கள் எந்தத் தயக்கமும் இன்றித் துணிந்து எந்தக் குற்றத்திலும் ஈடுபட மிகப் பாதுகாப்பான, மிகப் பொருத்தமான இடம் பேராளர் மன்றங்கள்தாம். இந்த உண்மையை இப்போதுதான் அவர்கள் புரிந்துகொண்டு அங்கு பெருமளவில் இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே சண்டைப் படங்களில் போன்ற காட்சிகளை இனி அடிக்கடி நம் பாராளுமன்றத்தில் காணலாம்.      

அமெரிக்காவைப் பொறுத்த வரை குடியரசுத் தலைவர் விரும்புபவர்களை ஆள்வினையாளர்களாக வைத்துக்கொள்ளலாம் என்று தெரிகிறது. ஆட்சியிலிருந்த கட்சி தேர்தலில் தோற்று வேறு கட்சி ஆட்சிக்கு வரும் போது அரசூழியர்கள் பெருமளவில் வெளியேற்றப்படுவதும் புதியவர்கள் அமர்த்தப்படுவதும் அங்கு இயல்பாக நடைபெறுபவை. ஆனால் அங்கும் நய மன்றங்கள் “தன்னாட்சி”யுடன் இயங்குகின்றனவாம். நம்புங்கள்!

            இந்த மூன்று தூண்களன்றி பொதுத்தொடர்புத் துறை எனப்படும் இதழியல், தொலைக்காட்சிகள் போன்றவற்றை மக்களாட்சியின் நான்காவது தூண் என்று வகைப்படுத்துவர். இவற்றின் அழகோ இன்று வல்லரசியத்தின் ஒரு பங்காளியாக ஏழை நாடுகளைச் சுரண்டிக் கொழுக்கும் ஒரு பெரும் வல்லூறாக அத்துறை முதலாளியர் கூட்டம் வளர்ந்து நிற்பதில் முடிந்திருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, இலங்கையில் விலை மதிப்பு மிக்க தேயிலைத் தோட்டங்களை தமிழ்நாட்டிலுள்ள புகழ் பெற்ற ஆங்கில நாளிதழின் முதலாளியர் வைத்திருப்பதாகவும் அதறகுச் சிக்கல் ஏதும் வராமலிருக்கவே ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அவ் விதழ் எடுத்ததாகக் கூறப்படுவதையும் தமிழ் தாளிதழ்கள் சில மேற்கு மலைத் தொடரில் அது போல தேயிலைத் தோட்டங்களை வைத்திருப்பதால் தேயிலைத் தோட்டங்களால் விளையும் இயற்கைச் சமநிலைக் கேடுகளைப் பற்றி எந்த இதழும் கருத்தே வெளியிடுவதில்லை என்றும் ஒரு முறை புகழ் பெற்ற ஒரு தமிழ் எழுத்தாளர் கூறியதையும் கொள்ளலாம்.   

மேலே நாம் குறிப்பிட்ட நான்கு “தூண்களு”ம் உண்மையில் பொம்மைத் தூண்களே. இவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு பொதுவாக எல்லார் கருத்திலும் படாமல் ஒரு முதன்மைத் தூண் உள்ளது. அது என்ன? அதுதான் நிலைப்படை என்ற தூண். மக்களுக்கும் வெளிப்படையான நான்கு தூண்களுக்கும் முரண்கள் முற்றும் போது அந்தத் தூண் வெளிவந்து தன் “அமைதிப் பணி”யை ஆற்றிவிட்டு மீண்டும் போய்ப் பதுங்கிக் கொள்ளும். அல்லது மக்களை ஏமாற்றவும் அவர்கள் கவனத்தைத் திருப்பவும் ஏதோவோர் அண்டை நாட்டோடு சிறு சிறு மோதல்கள், எப்போதாவது பெரும் சண்டைகளில் ஈடுபட்டிருக்கும். அதற்காகவென்று மற்ற தூண்கள் மக்கள் வரிப் பணத்தில் ஆயுதங்களாக வாங்கிக் குவிக்கும். வாங்குவதில் தரகு முறையாகப் பங்கிடப்படும். தெருச் சண்டைகள் சந்திக்கு வருவதும் உண்டு. அவ்வப்போது காலமுறையில் ஆயுதக் கிடங்குகள் தீப்பிடித்து எரியும். ஆங்காங்குள்ள “தீவிரவாதி”களுக்கு விற்கப்பட்ட ஆயுதங்கள் அத் தீயில் எரிந்து போகும். இப்படி வாங்கப்பபடும் ஆயுதங்களைக்கொண்டு வயிற்றுப்பாட்டுக்கு உயிரை விலைக்கு விற்றுவிட்ட ஏழைப் படைவீரனும் குடிமக்களும் கொல்லப்படுவார்கள். தூண்களுக்கு அழகூட்டும் உயர்மேலடுக்கோ பிற “தூண்களு”டன் கூடியோ தனியாகவோ அவ்வப்போது எதிரி என்று அறிவிக்கப்பட்ட நாடுகளின் தம் போன்ற தூண்களுடன் கூடியோ உலகின் இன்பங்களை எல்லாம் திகட்டத் திகட்ட “உவக்கும்”.

மிகுந்த ஆற்றலும் ஆணவமும் கொண்டிருந்தாலும் இந்தப் பெருந்தூணுக்கு ஒன்றிணைந்த மக்கள் என்ற மனித குலத்தின் ஒப்பற்ற ஆற்றலைக் கண்டு நடுக்கமே. மக்களின் இந்த ஆற்றல் தன் வலிமையை வரலாறு நெடுகிலும் மெய்ப்பித்து வந்திருக்கிறது. அதனால்தான் ஆட்சியாளர்களும் அவர்களின் “அறிவுசீவி”ப் படையும் இந்தத் தூண் பற்றி மூச்சே விடுவதில்லை. அதோடு மட்டும் அவர்கள் அடங்கிவிடுவதில்லை. மக்கள் ஒன்றுசேர்ந்துவிடாமல் ஒருவருக்கொருவர் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டேயிருக்கத்தக்க சூழ்நிலைகளை உருவாக்குவதுடன் மக்கள் தங்களுக்கிடையில் பூசலிட்டுக்கொள்ளத் தூண்டிவிடும் தரகர்களையும் ஊட்டி வளர்க்கிறார்கள்.

சுவிட்சர்லாந்தில் நிலைப்படை என்று ஒன்று இல்லை. ஆனால் இதைக்கொண்டு எந்த நாடும் அதைப் பின்பற்றினால் வல்லரசு ஓநாய்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமாட்டா. நம் “அரசு சாரா நிறுவனங்களு”க்குச் சான்று காட்டுவதற்கென்று கியூபாவை அமெரிக்கா விட்டுவைத்திருப்பது போல (உண்மையில் கியூபா மக்களில் பாதிப்பேருக்கு மேல் அமெரிக்காவில் பதிவில்லாமல் கூலித்தொழில் செய்து வயிறுவளர்க்கிறார்கள் என்பதை இந்த “அரசு சாரா”த் தொண்டர்கள் மறைக்கிறார்கள் என்பது வேறு) சுவிட்சர்லாந்தையும் ஒரு அருங்காட்சிப் பொருளாக வல்லரசுகள் விட்டுவைத்திருக்கலாம். அல்லது ஐரோப்பியப் பண்பாட்டு மேன்மையை ஏழை நாட்டு மக்களுக்குப் “புரியவைப்பதற்காக”வும் இருக்கலாம்.

இவ்வாறு இன்று திரைக்குப் பின்னாலிருந்து இயக்கும், உலகையே பல முறை அழிக்கும் வல்லரசுகளின் ஒட்டுமொத்தப் படை வலிமை அகன்றால்தான் உண்மையான மக்களாட்சி என்ற பேரெல்லையை மனித குலம் எட்டும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அதனை அகற்றுவது இயலக் கூடியதா?

இந்தப் படைத் திரட்சியின் வரலாற்றுப் பங்கு உலகளாவிய வாணிகக் குழுக்களின் நலன்களைக் காப்பதே; உலகின் அனைத்து வளங்களையும் அக் குழுக்களின் காலடியில் கொண்டு சேர்ப்பதே. அதற்காக வாய்ப்புள்ள நாடுகளின் தலைவர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு அண்டை நாடுகளோடு சண்டை மூட்டிவிடுவது, ஒ.நா.அவையைத் தன் கட்டுக்குள் வைத்துக்கொண்டு பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி சில நாடுகளின் மீது படையெடுத்துத் தன் கைக்கூலிகளை ஆட்சியில் அமர்த்துவது, வழிக்குவராத தலைவர்களை “அகற்றுவதற்கு” கொலையாளிகளைப் பயன்படுத்துவது என்று எண்ணற்ற உத்திகளை இவ் வுலக வாணிகக் குழுக்களின் நலன் நாடும் வல்லரசுகள் கையாள்கின்றன. இவற்றின் முயற்சிகளை முறியடிக்கும் எளிய வழி ஒவ்வொரு தேசத்தின் மக்களும் தங்கள் தங்கள் தேசத்திலுள்ள எந்த வளமும் தங்கள் தங்கள் தேச மக்களின் தேவைகளுக்கு மட்டும் பயன்படுமாறு அமைந்த ஒரு அரசியல் - பொருளியல் கோட்பாட்டுப் பின்னணியில் ஒன்றுதிரண்டு இந்த உலக வாணிகக் குழுக்களைத் தங்கள் தங்கள் தேசங்களின் எல்லைகளுக்கு வெளியே துரத்துவதாகும். இவ்வாறு ஒன்றுதிரளும் மக்களுக்கு எதிராக வல்லரசு ஆற்றல்களும் ஒன்றுதிரளும். அவ்வாறு திரளும் அணிகளுக்கு இடையிலான போர், உலகு அதாவது மனித குலம் அடுத்துச் செல்ல வேண்டிய திசை எது, அனைத்து மக்களும் சமமாக தத்தம் நாட்டு வளங்களைத் தத்தமக்குப் பயன்படுத்தி கண்மண் தெரியாத விரைவில் முன்னேற்றம் என்ற பெயரில் அழிவை நோக்கி விரைந்து ஓடவைக்கும் வல்லரசியப் பாதையிலிருந்து விடுபட்ட அமைதியான உலகை நோக்கியதா அல்லது உலக வாணிகத்தைப் பங்குபோடுவதற்காக வல்லரசுகள் அணிகளை அமைத்து அணு ஆயுதப் போர் ஒன்றால் உலகை அழித்துவிட அழியாமல் மிஞ்சும் குகை மனிதர்களில் இருந்து மீண்டும் மனித நாகரிகம் முளைவிட்டு வரவேண்டுமா என்பதை முடிவு செய்யும்.

            1952 தேர்தலில் திரைக்குப் பின்னாலிருக்கும் வாக்குப் பெட்டிகளின் வண்ண வேறுபாட்டைக் கொண்டு வாக்காளர்கள் வாக்களித்தனர். அடுத்து திரைக்குப் பின்னாலிருக்கும் பெட்டிகளில் ஒட்டப்பட்டிருக்கும் கட்சிகளின் தேர்தல் அடையாளங்களை இனம் கண்டு அவற்றில் போட்டார்கள். அப்போது ஒவ்வொரு கட்சியினரும் வாக்காளர்களுக்கு முன்பணம் கொடுத்து, வாக்காளர்கள் சீட்டைப் பெட்டியினுள் போடாமல் மறைத்து வெளியில் கொண்டு வரும் சீட்டுகளை வாங்கி கட்சிக்காரர் ஒருவர் தன்முறை வரும் போது பெட்டியினுள் போட்டுவிடுவார். இப்போது வாக்குச் சீட்டில் கட்சியின் தேர்தல் அடையாளத்தை இனம் கண்டு திரையினுள் சென்று முத்திரை குத்தி மடித்து அலுவலர்கள் முன்னிருக்கும் பெட்டியில் போட்ட முறையைத் தாண்டி திரைக்குப் பின்னாலிருக்கும் மின்னணு வாக்குப்பதிவியில் தேர்தல் அடையாளத்தை இனம் கண்டு அழுத்தும் உத்தியில் கள்ள வாக்குகளே ஆட்சி செலுத்துகின்றன.

            கள்ள வாக்குகளை உருவாக்குதல் என்ற செயல்முறையில் வாக்காளர் பட்டியல் உருவாகும் போதே கட்சிகள் களமிறங்கிவிடுகின்றன. ஆயிரக்கணக்கான வேண்டுகைகளை கட்சித் தொண்டர்கள் எனப்படும் அடியாட்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளான உள்ளூர் அதிகாரிகளிடம் கொடுக்கின்றனர். வாக்களார்களின் பெயர்களை நீக்குவதிலும் இதே முனைப்பைக் காட்டுகிறார்கள். கள்ள வாக்குகளை போட வருபவர்களை இனங்காணவென்றே ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு முகவர் இருப்பார். முன்பு கள்ள வாக்கிட வருபவர்களை இம் முகவர்கள் பிடித்தனர். ஆனால் தண்டனை எதுவும் அப்போது இருந்ததில்லை. இப்போதோ தண்டனை அறிவிக்கப்பட்ட பின் கட்சி முகவர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை. அவரவர் திறமைக்கேற்ப கள்ள வாக்குப் போட்டுக் கொள்வது, மகளே உன் சமர்த்து என்பதுதான் கோட்பாடு. பிறருக்கு ஊறு செய்யாமல் தன் நலனைக் காத்துக்கொள்வது என்ற அடிப்படை மக்களாட்சிப் பண்பாடு கள்ளவாக்குப் பதிவில்தான் தன் நிறைவைக் காண்பது பாராளுமன்ற மக்களாட்சியின் உயிர்நிலை.

            பல்வேறு சூழ்நிலைகளில் இந்தத் தேர்தலின் போலிமையை உணர்ந்த வாக்காளர்களில் பெரும்பான்மையினர் வாக்களிப்பதில்லை. கள்ள வாக்குகளையும் சேர்த்து பல நேர்வுகளில் மொத்த வாக்குப்பதிவு 50 நூற்றுமேனியைத் தாண்டுவதில்லை. ஆனால் பாருங்கள், வாக்குப் பதிவன்று மாலையில் தேர்தல் அதிகாரி பதிவான நூற்றுமேனியை 50க்குச் சற்று முன்பின்னாக  அறிவிப்பார். ஆனால் மறுநாள் காலையில் நூற்றுமேனி 60ஐத் தாண்டிவிடும். முதல் நாள் அறிவிக்கப்பட்டதை விட நூற்றுமேனி அடுத்த நாளில் கூடுமேயன்றி குறைந்த வரலாறே இல்லை. அது என்ன மாயமோ என்ன வகையான ஒத்துழைப்போ தெரியவில்லை, மிக நுட்பமான ஓர் உத்தி மூலம் இந்த விந்தை தவறாமல் அரங்கேறுகிறது. தன் கட்சித் தொண்டனையோ கட்சியின் அமைச்சனையோ தலைவனையோ தாய் மகனையோ மகன் தாயையோ மனைவி கணவனையோ கணவன் மனைவியையோ கொல்லக் கூசாத இந்த அரசியல் களத்தில் இப்படி ஒத்துழைப்பு செயற்படுவதில் வியப்பதற்கு எதுவுமில்லை; ஏனென்றால் தேர்தலில் எவர் தோற்றாலும் கவலையில்லை, இன்னொரு தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் தேர்தலே தோற்றுப் போனால் என்னவாவது? மக்களுக்காக ஆள்கிறோம், மக்களின் கட்டளைப்படி ஆள்கிறோம் என்று கூறி வல்லரசுகளுக்கு மக்கள் உட்பட நாட்டின் வளமனைத்தையும் மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்கும் ஏமாற்று அம்பலமாகி விடுமே! எனவே தேர்தலை வெற்றிபெறச் செய்ய வேண்டும், தேர்தல் வாழ வேண்டும், வாழ்க மக்களாட்சி!

            இந்தியாவில் வாக்களிப்போரின் சராசரி நூற்றுமேனி 60. அதில் கள்ள வாக்குகள், எவ்வளவு குறைத்துப் பார்த்தாலும் 20 நூற்றுமேனியாகக் கொண்டு கழித்தால் எஞ்சுவது 40 நூற்றுமேனி. வைப்புத் தொகையைக் காப்பாற்றும் தகுதியுடன் சராசரியாக மூன்று பேர் களத்தில் இருப்பதாகக் கொள்ளலாம். அவர்களில் வென்றவர் பாதி வாக்குகளைக் கைப்பற்றுவதாகக் கொண்டால் கூட மொத்த வாக்காளர்களில் 20 நூற்றுமேனி வருகிறது. இந்த 20 நூற்றுமேனியர் தாம் எஞ்சிய 80 நூற்றுமேனியரை விட பெரும்பான்மையினராகக் கொண்டு அவர்களின் பெயரில்(!?) நம்மை ஆள்கிறார்கள்.

            இந்தத் தேர்தல் ஏமாற்று தோற்றுவிடக் கூடாது என்பதற்கு உலகளாவிய முயற்சிகள் நடைபெறுகின்றன. அயல்நாடுகள் தரும் பணத்தில் மக்கள் தொண்டு செய்யும் சில அறிவு சீவிக் கழிசடைகள், அனைவரும் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தால் நாட்டின் எல்லாக் கேடுகளும் உடனேயே மாயாமாய் மறைந்துவிடும் என்று தாளிகை, மேடை என்று களமமைத்து நாடகமாடுகின்றனர். சில மேல்தாவிகள், வாக்களிக்கத் தவறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அற(மற)ச் சினம் காட்டிக் குதிக்கிக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் இந்த நாடகத்தில் பங்கேற்றால் அரசியல் கயவாளிகளின் அடாவடிகளைப் பெரும்பான்மை மக்களும் ஏற்றுக்கொள்வதாகவல்லவோ ஆகிவிடும்? அது இந்தக் கூலிக் கும்பலுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்துதான் இந்தப் படங்காட்டல்.

            இந்த பாராளுமன்ற “மக்களாட்சி” வல்லரசியத்தின் இருப்புக்கு இன்றியமையாத்து. ஆட்சியைப் பிடிக்கவும் பிடித்த ஆட்சியைக் காக்கவும் கட்சித் தலைமைகளுக்குப் பெருமளவு பணத்தேவை தவிர்க்க முடியாதது. நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவோர் கூட தோல்விகளை எதிர்கொள்ளக் கூசி பணம் திரட்டும் வாய்ப்புகளை நாடுவது தவிர்க்க முடியாது. அதற்கு இருப்பவற்றில் மிக எளிய வழிகளாக ஏற்றுமதி – இறக்குமதிகளை ஊக்குதல், அயல் நாட்டுத் தொழில்களுக்கு உள்நாட்டில் வாய்ப்பளித்தல், அதற்காக உள்நாட்டுத் தொழில் முனைவுகளைக் கருவறுத்தல், அயல் தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்தல், அதற்கு வசதியாக உள்நாட்டில் உருவாகும் புதிய தொழில்நுபங்களைக் கருவறுத்தல், உலக வங்கி, ஆசியான் போன்ற வல்லரசு நிறுவனங்களிடம் கடன் பெறல் என்று வல்லரசியம் மூலம் எண்ணற்ற வாயில்கள் உள்ளன. குறிப்பாக, போர்த் தளவாடங்கள் இறக்குமதி மிக முகாமையான ஒன்றாகும். இதற்காக அண்டை நாடுகளால் அச்சுறுத்தல் இருப்பதாக இடைவிடாத பரப்பல்களில் ஆட்சியாளர்கள் ஈடுபடுவர். உள்நாட்டில் அரசு மேற்கொள்ளும் பல்வேறு இன்றியமையாப் பணிகள், பொதுமைத் தோழர்களைக் காட்டி மேற்கொள்ளப்பட்ட அரசுடைமை நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடங்கி பல நாடுகள் கலந்துகொள்ளும் விளையாட்டுப் போட்டிகள்  போன்ற வெறும் பகட்டு நிகழ்ச்சிகள் வரை எண்ணற்ற ஊழல் வாயில்கள் உள்ளன. இந்த ஊழல்களை அம்பலப்படுத்துவதாக வல்லரசியம் தன் ஒற்றமைப்புகள் மூலம் மிரட்டி தன் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்கின்றன. அரசியல் நடத்துவதற்கு பெரும் பணம் தேவைப்படுவதும், அவ்வப்போது வாக்கு கேட்டு மக்களை அணுக வேண்டிய கட்டாயத்தைக் கொண்டதுமான பாராளுமன்ற முறைதான் வல்லரசிய நலன்களுக்கு ஏற்றது. அதனால்தான் எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மக்களைத் தூண்டிவிட்டும், படைத்துறையில் ஊடுருவியும் “புரட்சிகளை” நிதழ்த்திக் காட்டி வருகிறது வல்லரசியத் தலைமையகமான அமெரிக்கா.
     
            இப்போது நம் தேர்தல் நடைமுறையைத் தொகுத்துப் பார்ப்போம்.
1.       கட்சிகளின் கொள்கைகளை இறுதி செய்வது மக்கள் இல்லை, கட்சித் தலைமையும் இல்லை, கட்சித் தொண்டர்களா? அவர்கள் யார்? எங்கிருக்கின்றனர்? பணம் கொடுத்தால் கொடி பிடிக்கும் பொறுக்கிகள் தாமே இருக்கின்றனர்!
                  கொள்கைகளை முடிவு செய்வது தேர்தல் ஆணையம் மூலம் அரசு.

2.       வேட்பாளர்களைத் தேர்வு செய்பவர் யார்? கட்சி மேலிடம். பணத்தை வாங்கிக் கொண்டு சாதி, சமய, மொழி அடிப்படையில் தேர்வு செய்கின்றன. தேர்தலில் தில்லுமுல்லு, அடிதடி கொலை, பணம் - காசு கொடுத்தல் என்று எதற்கும் துணிந்த குமுகத்தின் மிகக் கொடிய கயவாளிகள்தாம் இன்றைய சூழலில் வேட்பாளராக முடியும்.

3.       தேர்தல் அறிக்கைகளா கட்சியின் தகுதியை முடிவு செய்கின்றன? தேர்தலைத் திருவிழாவாக நினைத்து சிங்காரித்து வரும் அடித்தள மக்களுக்கு இதெல்லாம் தெரியாது. இலவயங்களை மட்டும் மோப்பம் பிடிக்கத்தான் நம் மக்களாட்சி மக்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. அந்த இலவயங்கள் எதுவும் இலவயமாகக் கிடைப்பதில்லை, ஒரு சிறு பகுதியாவது அன்பளிப்பாக உரியவர்களுக்குக் கொடுத்தே ஆக வேண்டும். இலவயப் பொருட்களைக் கொள்முதல் செய்யும் போது ஆட்சியாளர்களுக்குக் கிடைக்கும் தரகு மக்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதை விட முகாமையானது என்பது மக்களுக்குத் தெரிவதில்லை. அரசியல்வாணர்களின் அப்பனும் அம்மையும் பாடுபட்டோ படுத்தோ ஈட்டியதிலிருந்துதான் இந்த இலவயங்கள் வழங்கப்படுகின்றன என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஆட்சியாளர் ஏற்படுத்துகின்றனர். மக்களின் மனதிலும் அத்தகைய ஒரு சிந்தனை ஓட்டமே உள்ளது. தாங்கள் செலுத்திய வரிப் பணத்திலிருந்து, தங்கள் நல்வாழ்வுக்காக, தாங்கள் மானத்துடன் உழைத்து ஈட்டி நல்ல தரமான, வளமான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான அடிப்படைத் திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்தவென்று அவர்கள் அரும்பாடுபட்டு ஈட்டிச் செலுத்திய வரிப் பணத்திலிருந்து தங்களுக்குத் தரகு வேண்டுமென்பதற்காகவும் மக்களை எமாற்றித் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள அவர்களிடையில் ஓர் இரப்பாளி உளவியலை உருவாக்கவும் வாங்கிக் கொடுக்கும் தரமற்ற பொருட்களை எதிர்பார்த்துத்தான் நம் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பது இரங்கத்தக்க உண்மை. அரசு அதைத்தான் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மக்களை மீளா மடைமையில் அழுத்தி வைப்பது மனிதச் சிந்தனையில் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் மார்க்சியத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் பொதுமைப் பொறுக்கிகளின் கைவண்ணம்.

4.       உண்மையில் தேர்தலில் வாக்காளனின் பங்கு என்ன? அரசு ஒப்பளிக்கும் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துக் கொள்ளும் கட்சி பணம் பெற்றுக் கொண்டு வேட்பாளராக அறிவிக்கும் ஒருவரை, தேர்தல் ஆணையம், அதாவது அரசு, நிறுவும் நாளிலும் நேரத்திலும் அவரவர்க்கு அதே அரசு, அதாவது, தேர்தல் ஆணையம் குறிப்பிடும் வாக்குச் சாவடியில் அவர்கள் செய்து மறைவாக வைத்துள்ள ஒரு வாக்களிப்புப் பொறியில் வாக்காளர் விரும்பும் தேர்தல் அடையாளம் உள்ள குமிழை அழுத்துவதுதான், அந்த ஒரு நொடி வேலைதான் அடுத்த தேர்தல் வரும் வரை வாக்களரின் பங்களிப்பு.

            அத்துடன் எஞ்சிய அனைத்தையும் தேர்வாகும் வேட்பாளர், அதாவது அவர் பெயரில் கட்சி, அதாவது அதன் பெயரில் ஆளும் கூட்டம் பார்த்துக் கொள்ளும் என்று கைகழுவிக்கொண்டு வர வேண்டியதுதான். அதற்கென்று வாக்குச்சாவடியில் தண்ணீர் எதுவும் வைத்திருக்க மாட்டார்கள். மனதிற்குள் கழுவிக் கொள்ள வேண்டியதுதான். வேண்டுமானால் முகம்மதியப் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு முன் கை, கால், முகம் கழுவவென்று தண்ணீர் வைத்திருப்பது போல் வாக்களித்த பின் கை கழுவுவதற்கென்று தண்ணீர் வைத்திருக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்துக்கு, அதாவது அரசுக்குச் பரிந்துரைப்போம். ஏசுநாதர் மீதான குற்றச்சாட்டுகளை உசாவிய உரோம ஆளுநன் பிலாத்து அவரை யூத மேட்டுக்குடியினரிடம் ஒப்படைத்துவிட்டுத் தன் கையை அவை முன்னர் கழுவியதை நினைவு கொள்க.

            நம் மக்கள் மனிதன் என்ற வகைப்பாட்டில் விலங்குகளை விட இழிந்த ஒரு பிரிவாக உள்ளனர். விலங்குகள், இரை தேடி உண்ணல், இனப்பெருக்கம், பிறங்கடைகளைப் பேணல் என்ற சுழற்சியில் செயற்படுபவை. நம் மக்களும் ஆடை அணிகலன், வீடு வாசல், வேலை, ஊர்தி, மனைவி - கணவன், மக்கள் என்றிருந்தாலும் அந்த எல்லைகளுக்கு வெளியே வரவில்லை. விலங்குகளாவது ஓர் ஈற்றில் பெற்றவை ஒரு பருவமெய்தியதும் அவை தம் வாழ்வைப் பார்த்துக்கொள்ள விட்டுவிட்டுத் தனக்கென ஒரு தனிவாழ்வுடன் தன் இனத்தின் நிலைப்புக்கான இனப்பெருக்கத்துக்கு ஆயத்தமாகிறது. ஆனால் நம் மக்களோ எத்தனை ஆண்டுகள் வாழ நேர்ந்தாலும் தன் பிறங்கடைகளைத் தூக்கித் திரிவது என்பதன்றி வேறொரு சிந்தனை இன்றியே வாழ்கின்றனர். அரசியலில் வாக்குச்சாவடி சென்று கருவியில் ஒரு குமிழை அழுத்தினாலே தன் கடமை முடிந்து விட்டது என்று நினைக்கின்றனர். நடக்கும் தவறுகளுக்கு எவரையாவது, கட்சியை, அரசை என்று குற்றம் சொல்லிவிடுகின்றனர். அது போலவே ஊழியர் சங்கங்கள் போன்ற அமைப்புகளிலும் உறுப்பினர் மகமையோ நன்கொடையோ வழங்கினால் போதும் மற்றவற்றைச் சங்கங்களின் பொறுப்பாளர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று விட்டுவிடுவதால் சங்கங்களின் பொறுப்பாளர்களும் ஆட்சியாளர்களோடு இணைந்து நின்று மக்கள் எந்தப் பக்கமும் நகர முடியாமல் கிட்டிப்பிடி கிடுக்கிப்பிடியினுள் மாட்டிவைத்துள்ளனர். தாங்களே தங்களுக்கு விலங்குகளை மாட்டிக்கொண்டு விலங்குகளிலிருந்து விடுபடவும் புதிய விலங்குகளினுள் சிக்காமல் வாழவும் வழி கூற வருபவர்களை ஒரு புதிய விந்தை விலங்கைப் பார்ப்பது போல் பார்த்து ஒதுங்குவது மட்டுமல்ல, சீ போ! என்று கடியவும் செய்கின்றனர்.

            பிள்ளைகளைத் தம் காலில் நிற்கப் பழக்கிவிட்டுக் குடும்பம் என்ற சிறைக்கூட்டை உடைத்துக் குமுகம் என்ற பரந்த வெளியில் வந்து பணியாற்றுவதென்பது எவ்வகையில் பார்த்தாலும் பிள்ளைகளின் நலனுக்கு எதிரானதல்ல.

            மனிதர்களிடையில் ஏற்றத்தாழ்வுகள் இயல்பானவை; தேவையானவையும் கூட. ஆனால் அவை அளவுமீறும் போது அவை மொத்தக் குமுகத்துக்கும் அழிவைத் தரும். குமுகத்தின் செல்வத்தில் கூடுதல் பங்கு பெறும் வகுப்பு தத்தம் பிள்ளைகள் மட்டும் வளமாயிருப்பது பாதுகாப்பென்று கருதினால் ஒரு பவுன் நகைக்காக கொலை செய்யத் தயங்காத ஒரு படித்த கூட்டம் உருவாகி வரும் சூழலில் அந்த வளமே அவர்களது வாழ்வுக்கு எமனாக முடியும். அவர்களுக்கு நாம் சேர்ந்து வைக்கும் ஒவ்வொரு தம்பிடியும் ஒரு கொடுவாளாக, ஒவ்வொரு உரூபாவும் ஒரு துப்பாக்கியாக மாறிவிடும். ஓர் உயர்ந்த குமுகத்தை உருவாக்க நாம் செலவிடும் உழைப்பு நாம் திரட்டிய செல்வத்தைப் பெற்ற நம் செல்வங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கித் தரும். இந்த நோக்கில் மக்களின் மிகக் கூடுதலான பங்கேற்புடைய ஓர் அரசியல் சட்ட வரைவை உருவாக்கியுள்ளோம்.

            இன்று நமக்கிருக்கும் அரசியல் சட்டம் ஐரோப்பிய - ஆங்கிலேய ஆட்சியாளர்கள் ஓர் அடிமை மக்களாகிய இந்தியர்களுக்கு உருவாக்கிய 1935 அரசியல் சட்டத்தின் மறுபெயர்ப்பு. ஆங்கிலர் வகுத்த கல்வி முறையில் உருவாகி அவர்கள் உருவாக்கியுள்ள சூழலில் சிந்தித்து வளர்ந்த, இங்கு அடிப்படை மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று அமைதி வழியில்” “விடுதலை பெற்றுத் தந்த காந்தியின் பின்னர்களிடமிருந்து வேறு ஒரு வகை அரசியல் சட்டத்தை எதிர்பார்க்க முடியாது. இன்று அதே ஐரோப்பியம் - காந்தியம் கூட்டுக் கொள்ளைக் கோட்பாட்டினுள் சிக்கி பனியா - வல்லரசு சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட பனியாக்களின் அரசிடம் சிக்கி இந்திய மக்கள் அல்லலுறுகிறார்கள். இதிலிருந்து விடுபட பொருளியல் உரிமையுள்ள மக்களுக்கான ஓர் அரசியல் சட்டத் தேவையை நிறைவு செய்ய இந்த அரசியல் சட்ட வரைவை முன்வைக்கிறோம். அதற்கு முன் அரசின் தோற்றம் பற்றி ஒரு சில:

            அமீபா எனப்படும் ஒற்றைக் கண்ணறை(செல்) உயிரியிலிருந்து திரிவாக்கம் மூலம் எண்ணற்ற இனம்காண முடியாத மாற்றங்களைப் பெற்று மனிதர்களாகிய நாம் உருவாகியுள்ளோம். இயற்கையே இயற்கையை எதிர்த்து நடத்திய போராட்டங்களின் விளைவாக இயற்கை பெற்ற தன்னுணர்வுடைய பருப்பொருள் வடிவம் மனிதன். நீண்ட நெடுங்காலம் தொடர்ந்த அந்த மாற்றங்களினூடாக எதிரெதிர் நிலைகளை அவன் பலமுறை சந்தித்திருக்க வேண்டும். தனித்து, குடும்பமாக, கூட்டமாக என்று எத்தனையோ வடிவங்களை மீண்டும் மீண்டும் எடுத்திருக்கலாம். எனவே எந்த ஒரு குமுக வடிவமும் இறுதியானதோ உறுதியானதோ அல்ல. ஆனால் எங்கிருந்து நம் தேடலைத் தொடங்குவது என்றால் மனிதனாக, இரு கால்களில் நடந்து எஞ்சிய இரு கால்களையும் கைகள் என்ற புதிய உறுப்பாக்கி தனக்கு வேண்டியவற்றை வேட்டையாடி, செய்கை, ஒலிகள், மொழி என்று வளர்ச்சியடைந்ததிலிருந்து தொடங்குவோம்.

            தொடக்கத்தில் மனிதர்கள் தாய் என்ற ஒரேயொரு பெற்றோரை மட்டுமே அறிந்திருந்தனர். எனவே தாயின் தலைமையிலேயே குழுக்கள், குடும்பங்கள் அமைந்தன. எப்போதோ ஒரு சூழலில் 7 பெண்களின் வழி வந்த 7 குக்குலங்கள் வாழ்ந்தன.

            கொல்விலங்குகளிலிருந்து தங்கள் கூட்டத்தைக் காக்க நெருப்பை வளர்த்து அதை அணையாது காத்தனர். குழுவின் மூத்த பெண்கள் நெருப்பை ஒம்புவோராக, குழுத்தலைவராக, பூசாரியராக இருந்தனர். வேட்டையாடலில் பிற குழுக்களைச் சேர்ந்த மனிதர்களையும் வேட்டையாடி உண்டனர். எல்லா உணவுப் பொருட்களையும் தங்கள் தெய்வமாகிய நெருப்புக்குப் பலியாக இடுவது போல் மனிதர்களையும் பலியிட்டனர், தங்கள் குழந்தைகளையும் கூட.

            பெண் தலைமையை எதிர்த்து ஆடவர்கள் போராடினர். குழந்தை வளர்ப்புச் சுமையைப் பெண் எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் முதலில் பருவமெய்தாத பெண்களைத் தலைவராக்கி ஆள்வினைப் பொறுப்பை ஆடவர்க்கு அளித்தனர். அந்த ஆடவரைத் தேர்ந்தெடுக்க பல்வேறு வகைப் போட்டிகளை வைத்தனர். தலைவி பூப்பெய்தியதும் புதியவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஆடவன் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்கப்பட்டான்.

            இன்னொரு வகையில் பார்த்தால் ஒரு மக்கள் குழுவில் ஒருவன் வல்லடியாளனாக உருவாகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனது அட்டூழியங்கள் எல்லை மீறும் போது அவனை எதிர்கொள்ளும் துணிவுள்ள இன்னொருவன் வெளிப்பட்டால் அவனை அனைவரும் ஆதரித்துத் தங்கள் தலைவனாக ஏற்றுக்கொள்வர். அது போல் கொடியவன் ஒருவன் தனக்குத் துணையாகச் சிலரைச் சேர்த்துக் கொண்டு எஞ்சியவரை அடக்கி ஒடுக்குவதாகவும் அரசு அதிகாரத்தின் தொடக்கம் இருக்கலாம். அல்லது தனிமனிதர்கள் நடுநிலை தவறி ஒருவருக்கொருவர் பூசலிட்டுக் கொள்ளும் போது நடுத்தீர்ப்பர்களாக அறிவுக் கூர்மையும் உடல் வலிமையும் உள்ளோர் சிலர் வெளிப்படுவர். அவர்கள் நாளடைவில் இன்றைய கட்டப் பஞ்சாயத்தார் போல் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடும். வாணிகர்கள் வழிப்பறியாளர்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வைத்துக்கொள்ளும் படை கூட சில வேளைகளில் அரச அதிகாரத்தின் அடிப்படையாயிருக்கலாம். இங்கெல்லாம், மனிதனிடமுள்ள விலங்குத் தன்மையின் விளைவுதான் அரசுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரம். அதாவது மனிதர்கள் ஒருவருக்கொருவர் மனிதர் என்ற குமுக உயிருக்குரிய பண்பாட்டிலிருந்து இழிந்த நிலையில் தங்களை வைத்துள்ளதால் தங்கள் விலங்கு மனப்பான்மையிருந்தே தங்களைக் காத்துக்கொள்ள அமைத்த அரசு என்ற நிறுவனம் தன் ஆளுகையிலுள்ள அனைவரது விலங்குத்தன்மையின் கூட்டுத்தொகையைத் தன்னுள் கொண்டிருக்கிறது. அது தன்னுடைய இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள மக்களிடமுள்ள விலங்குத்தன்மை மறையாமல் குறையாமல் பார்த்துக்கொள்வது மட்டுமின்றி இயன்றவரை வளர்க்கவும் ஓயாமல் பாடுபடுகிறது. எனவே அரசின் விலங்குத்தன்மையைக் குறைத்து அதில் மனிதத்தன்மையை மலரச்செய்ய வேண்டுமாயின் மக்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் தம்மிடமுள்ள விலங்குத்தன்மையை இனங்கண்டு அழிக்க வேண்டும். அதற்கு எளிய ஒரு வாய்பாடு நமக்கு பிறர் என்ன செய்ய வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோமோ அதை நாம் பிறருக்குச் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும்; நமக்கு பிறர் என்ன செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ அதை நாம் பிறருக்குச் செய்யக்கூடாது. அத்துடன் பிற மனிதர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுதல் இன்றியமையாததாகும் அதுவும் சாதிய எற்றத்தாழ்வுகளால் சிதறுண்டு கிடக்கும் நம் நாட்டுச் சூழலுக்கு இது மிக இன்றியமையாதது.

            இந்தியாவில் முகலாயர்களுக்கு முந்திய முகம்மதிய ஆட்சியில் ஓர் அரசன் மாண்டதும் அடுத்தவன் எதிராளிகளை வீழ்த்தி தன் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்குள் அவன் ஆயுளில் பெரும்பகுதி கழிந்துபோயிற்று; அவன் மாண்டதும் மீண்டும் அதிகாரப் போட்டி என்று தொடர்ந்து சீரழிந்தது. விசயநகர இந்துப் பேரரசிலும் இதே நிலை. மொகலாயர்களிடையில் முறையான மரபுரிமை பேணப்பட்டாலும் அவரங்கசீப் நிகழ்த்திய உடன்பிறப்புக் கொலைகள் வரலாறறிந்தவை. இருப்பினும் அவை மிகக் குறுகிய காலத்திலேயே முடிவடைந்துவிட்டன. இந்தப் பின்னணியில்தான் மரபுரிமை ஆட்சிக்கு வரலாற்றில் ஓர் இடம் அமைந்துள்ளது.

            ஆட்சிக்காக நடக்கும் போட்டியில் புகுந்துவிட்ட ஏமாற்றுகள், கொலைகளைத் தவிர்ப்பதற்காக மரபுரிமை ஆட்சி வந்தது. தேர்வு முறை சிதைவடைந்ததால் இன்று போல் குமுகத்தின் கடைந்தெடுத்த கயவர்கள் மட்டும்தாம் ஆட்சிக்கு வர முடியும். மரபுரிமையிலென்றால் நல்லவர்களும் கயவர்களும் திறமையானவர்களும் மேதைகளும் பேதைகளும் மாறி மாறி வரும் வாய்ப்புண்டு. எனவே மரபுரிமை முறையை மனிதக் குமுகம் ஏற்றுக்கொண்டது. இப்போது பெண்வழி ஆண் தலைமகனுரிமை உருவானது. தலைமைக் குடும்பத்தில் ஆண்குழந்தை பெறும் பெண் தெய்வமாகவே கருதப்பட்டாள். அவளது அடையாளமாகவே குழந்தையைக் கையில் வைத்திருக்கும் இயக்கியும் அவளது மகனான பழையோள் குழவியும் திகழ்கின்றனர். இந்தக் குழந்தையும் தாயும் உரோமில் தாய்த் தெய்வமாகி கிறித்துவத்தில் மேரியும் ஏசுவுமாகந் திரிந்துள்ளனர்.

            அரசுகள், அரச மரபுகள் மாறினாலும் மேலடுக்கு, கீழடுக்கில் உள்ள மக்களில் சிலரது பெயர்ச்சிகள் நிலத்திலும் தரத்திலும் இருந்ததேயொழிய ஆட்சியாளர் - பூசகர் கூட்டணி மக்களை அடக்கி ஒடுக்கி ஆளும் பொதுத் தன்மையில் மாற்றம் இல்லை. அந்த நிலையை மாற்றியது ஐரோப்பாவில் முகமதியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையிலான முரண்பாடே. அதுதான் அங்கு இந்தக் கூட்டணியை முறியடித்து அறிவியல் - தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்கி இன்றைய பாராளுமன்ற மக்களாட்சிக்கு வழிவகுத்தது. இப்போது பெரும் தொழிற் பேரரசுகளும் அவற்றின் காவலர்களாகவும் ஏவலர்களாகவும் நாட்டரசுகளும் அவை அனைத்துக்கும் ஒட்டுமொத்தக் காவலனாகவும் சட்டாம்பிள்ளையாகவும் அமெரிக்காவும் விளங்குகின்றன. நாட்டரசுகளில் அமெரிக்கர்கள் உட்பட்ட பணக்கார நாட்டரசுகளின் கீழுள்ள மக்களுக்கும் அவற்றிலிருந்து தோன்றிய தொழிற் பேரரசுகளுக்கும் தங்கள் நாட்டினுள்ளும் பணக்கார நாடுகளுக்குச் சென்றும் அடிமைகளாகப் பணியாற்றத் தம் மக்களை ஆயத்தப்படுத்துவது ஏழை நாடுகளின் பணியாக உள்ளது. அதிலிருந்து மீள்வதற்கு நமக்கு இன்று ஒரே வழி நமது பொருளியலை நாமே கையிலெடுத்து நம் வளங்களனைத்தும் நமக்கே பயன்படுமாறு கட்டுப்படுத்தி அவை வெளியே பாய்ந்து பணக்கார நாடுகளைக் கொழுக்க வைப்பதை முடிவுக்குக் கொண்டு வருவதுதான். அதன் முதல் படிதான் மக்களின் பொருளியல் உரிமைக்காகப் போராடி வெல்வது. அந்த வெற்றிக்கு அடுத்த படி புதிய மக்களாட்சி முறையினுள் நுழைவது.

            விளைப்புப் பாங்கு எனப்படும் பண்டம் விளைத்தல் மற்றும் மக்களுக்குத் தேவைப்படும் அனைத்துப் பணிகளையும் பங்கு மூலதனம் மூலம் மேற்கொள்ளும் நிறுவனங்களின் கீழ் கொண்டு வருவதை அடிப்பபடையாகக் கொண்டது இந்த மக்களாட்சி. இங்கு தொழிலாளர்களும் பங்கு மூலதனம் மூலம் பங்கு பெறுவர். தொழிலாளி - முதலாளி என்ற முரண்பாடு ஒவ்வொரு குடிமகனுக்குள்ளும் செயற்படும். அதனடிப்படையில் பெற்ற பட்டறிவின் பின்னணியில் அரசியல் சட்டம் வகுக்கப்படும். இன்று முத்திரை குத்துவதோடு முடிந்துவிடும் மக்களின் பங்கேற்பு தங்களின் நேரடிப் பங்களிப்பின் மூலம் அரசியல் சட்டத்தைக் கீழிருந்தே உருவாக்கும் அளவுக்கு மேம்படும். நாட்டின் ஒட்டுமொத்த வரவு - செலவுத் திட்டம் கூட அடித்தள மக்களின் கைவண்ணத்தால் வடிக்கப்படும்.

            இன்றைய வாக்குச் சீட்டு மக்களாட்சில் காவாலித்தனம், கயவாளித்தனம் போன்ற இழிதகைமைகள் தவிர வேறெந்தத் தகுதியும் இல்லாமல், அப்படி ஏதாவது இருந்தாலும் அவற்றைக் காட்டிக்கொள்ளாதவர்களே ஆட்சிக் களத்தினுள் நுழைய முடிகிறது. புதிய முறையில் திருட்டு, ஏமாற்று என்று தொடங்கி எந்தக் குற்றத்திலும் ஈடுபட்டிராத, தத்தம் நிலம் சார்ந்த, தாம் போட்டியிடும் பதவிக்குரிய தகுதியைப் பெற்றவர்கள் திருவுளச் சீட்டு எனப்படும் குலுக்கல் அல்லது குடவோலை முறையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இங்கே குமுகத்தில் உள்ள நல்லவர், அல்லாதவர், திறமை மிகுந்தவர், குறைந்தவர் என்ற சராசரி விகிதத்தில் இயற்கையான இந்தத் தேர்வு இடம்பெறும். அது மட்டுமல்ல, சாதி - சமய விகிதமுறை கூட நாட்டில் இருப்பதற்கேற்ப ஒட்டுமொத்தக் குமுகத்தில் வெளிப்படும். நிகழ்வாய்ப்பு(Probability), சகட்டுமேனித் தேர்வு(Random Selection) என்ற நிகழ்முறைகள் இங்கு செயற்படுகின்றன.

            இன்றைய படிநிகராளியர் மன்றங்களில் கட்சித் தலைமை காசு வாங்கிக் கொண்டு ஒரே நேரத்தில் ஒன்றுக்கொன்று முரணான சட்டங்களை, தனித்தனி ஆட்கள், குழுக்களின் தேவைகளுக்கேற்ப நிறைவேற்றுவது பொது வழக்கமாக உள்ளது. அது மட்டுமல்ல அலுவலகங்களுக்குள் புகுந்து கட்சி செல்வாக்கைக் காட்டி பணம் தருவோருக்கு வேண்டியவற்றைச் செய்து கொடுக்கும் தரகர்களாகவும் வேண்டாதவருக்குக் கேடு செய்யும் கெடுமதியாளராகவும் மாறியுள்ளனர் ஆட்சியாளர் – அரசியலாளர் கூட்டத்தினர். காலமுறையில் உருவாக்கப்படும் அரசியல் சட்டத்துக்குள் நின்று ஆள்வினையாற்றும் பேராளர்களை குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கும் போது இது போன்ற தேவைகளும் வாய்ப்புகளும் உருவாகா.

            இந்தத் தேர்தலில் கட்சிகள் தேவையில்லை. எனவே கட்சிகளைக் கட்டமைக்கவும் பராமரிக்கவும் கைப்பிடியில் வைத்திருக்கவும் என்று எந்தச் செலவுக்காகவும் என்று சொல்லி யாரும் பணம் திரட்டத் தேவை இராது. தேர்வு பெறுவோர் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் மக்களுக்கு மட்டுமே பொறுப்பானவர். தேர்தலில் போட்டியிட எந்த குறிப்பிட்ட நன்மைகளை அல்லது சலுகைகளை மக்களுக்குச் சொல்வோம் என்று எவரும் வாக்களிக்கத் தேவையில்லை. அவ்வப்போது மக்களே தங்கள் தேவைகளின் அடிப்படையில் நிறைவேற்றும் அரசியல் சட்டங்கள் குறிப்பிடும் கடமைகளை ஒழுங்காகச் செய்தால் போதும்.

            இப்பொழுது பெரும் வருவாயுள்ள வரிகளை நடுவரசும் மாநில அரசுகளும் வைத்துக்கொண்டு பெயருக்குச் சில வரிகளை உள்ளாட்சிகளுக்கென ஒதுக்கியுள்ளன. புதிய முறையில் வரிதண்டுவதில் முதன்மை அதிகாரம் உள்ளாட்சிகளுக்கும் பெயருக்கு மாநில அரசுக்கும் உள்ளது. நடுவரசுக்கு வரி எதுவும் கிடையாது. அதே நேரத்தில் அடிப்படைக் கட்டமைப்பு போன்று வரியால் அல்லது கட்டணத்தால் ஈடுசெய்ய முடியாத பணித்துறைகளின் விரிவாக்கத்துக்கும் பராமரிப்புக்கும் முழு நாட்டுக்கும் தேவைப்படும் பணத்தை அச்சிடும் அதிகாரம் நடுவரசுக்கு வழங்கப்படுகிறது. முற்றிலும் தன்னாட்சியுள்ள உள்ளாட்சிகள் நாட்டின் கட்டுக்கோப்பைக் குலைக்கும். எனவே இந்தப் பற்றாக்குறைப் பணமுறை மூலம் ஒரு மறைமுகமான கட்டுப்பாட்டை நடுவரசு வைத்திருப்பது நாட்டின் கட்டுக்கோப்புக்கு இன்றியமையாதது.

        விரிவான அரசியல் அமைப்புச் சட்டமோ, குற்றவியல், உரிமையியில் சட்டங்களோ இயற்றுவது எளிதான பணியல்ல. இருக்கின்ற சட்டங்களைப் பற்றிய ஒரு பொதுவான புரிதலும் அதன் நிறை குறைகளைப் பற்றிய தெளிவான ஒரு மதிப்பீடும் நம் நாட்டின் இன்றைய சூழலுக்கும் இன்றிருக்கும் சட்டங்களுக்கும் உள்ள இடைவெளியைப் பற்றிய ஒரு மதிப்பீடும் இருந்தால்தான் இன்றைய தேவைகளுக்கு இசைய நாளைய சட்டத் தொகுதியை உருவாக்க முடியும். அதற்குத் தகுதியானவர் என்று நமக்குப் பொதுவாகத் தோன்றுகிற சட்டத்துறை, நயன்மைத் துறைப் பணியாளர்களும் (வழக்கறிஞர்களும் நயவர்களும்) இருக்கின்ற குறைபாடுகளைப் பணம் பண்ணும் வாய்ப்பாகக் கருதுகிறார்கள் அல்லது அவற்றை வைத்து இவ்வளவுதான் செய்ய முடியும் என்று அமைந்து விடுகிறார்களே அன்றி மாற்றுவழி ஒன்றைக் காண முடியும் என்ற நம்பிக்கையோ காண வேண்டும் என்ற தவிப்பையும் துடிப்பையுமோ எங்கும் காண முடியவில்லை. எனவே சட்டத்துறை சாராத, சட்டம் பற்றி அறியாத நாம், அரசியல் சட்டத்தை நடத்தும் காரணி உழைப்பு - படைப்பு - பங்கீடு - பணியாற்றல் என்ற அடிப்படையில் மார்க்சிய இயங்கியல் - பருப்பொருளியக் கண்ணோட்டத்தில் ஒரு சட்டகத்தை முன்வைக்கிறோம். இதன் இடைவெளிகளை நிரப்பும் கடமையையும் பொறுப்பையும் முதலில் தமிழக மக்களுக்கும் அடுத்து இந்திய மக்களுக்கும் விட்டுவிடுகிறோம்.

தொடரும்....


[1]  அண்மையில் ஈழச் சிக்கல் பற்றி பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டு மடக்கிய போது அரசுச் செயலாளர்கள் தந்துள்ள கருத்துகளுக்குப் புறம்பாகத் தான் எதுவுமே பேச தனக்கு அதிகாரம் கிடையாது என்று இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் எசு. எம். கிருட்ணா அவையில் கூறியது கருதத்தக்கது.

0 மறுமொழிகள்: