சிலப்பதிகாரப் புதையல் - 11
9. கனாத்திறமுரைத்த
காதை
அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு
தூஉய்ப் பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர்
கோலங் கொடியிடையார் தாங்கொள்ள
மேலோர்நாள்
5. மாலதி மாற்றாள்
மகவுக்குப் பாலளிக்கப்
பால்விக்கிப் பாலகன் றான்சோர மாலதியும்
பார்ப்பா னொடுமனையா ளென்மேற்
படாதனவிட்
டேற்பன கூறாரென் றேங்கி மகக்கொண்
டமரர் தருக்கோட்டம் வெள்யானைக்
கோட்டம்
10. புகர்வெள்ளை நாகர்தங்
கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம்
வேற்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான்
வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம்
புக்கெங்குந்
தேவிர்காள் எம்முறுநோய் தீர்மென்று
மேவியோர்
15. பாசண்டச் சாத்தற்குப்
பாடு கிடந்தாளுக்
கேசும் படியோ ரிளங்கொடியாய் ஆசிலாய்
செய்தவ மில்லோர்க்குத் தேவர்
வரங்கொடார்
பொய்யுரையே யன்று பொருளுரையே கையிற்
படுபிணந்தா வென்று பறித்தவள்கைக் கொண்டு
20. சுடுகாட்டுக்
கோட்டத்துத் தூங்கிருளிற் சென்றாங்
கிடுபிணந் தின்னு மிடாகினிப்பேய் வாங்கி
மடியகத் திட்டாள் மகவை இடியுண்ட
மஞ்ஞைபோ லேங்கி
யழுதாளுக் கச்சாத்தன்
அஞ்ஞைநீ யேங்கி
ழயலென்று முன்னை
25. உயிர்க்குழவி காணாயென் றக்குழவி யாயோர்
குயிற்பொதும்பர் நீழற் குறுக
அயிர்ப்பின்றி
மாயக் குழவி யெடுத்து மடித்திரைத்துத்
தாய்கைக் கொடுத்தாளத் தையலாள் தூய
மறையோன்பின் மாணியாய் வான்பொருட்
கேள்வித்
30. துறைபோ யவர்முடிந்த பின்னர் இறையோனும்
தாயத்தா ரோடும் வழக்குரைத்துத்
தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து
மேயநாள்
தேவந்தி யென்பாள் மனைவி அவளுக்குப்
பூவந்த வுண்கண் பொறுக்கென்று
மேவித்தன்
35. மூவா இளநலங் காட்டியெங்
கோட்டத்து
நீவா வெனவுரைத்து நீங்குதலுந்
தூமொழி
ஆர்த்த கணவன் அகன்றனன் போயெங்கும்
தீர்த்தத் துறைபடிவே னென்றவனைப்
போ்த்திங்ஙன்
மீட்டுத் தருவா யெனவொன்றன்
மேலிட்டுக்
40. கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள்
வாட்டருஞ்சீர்க்
கண்ணகி நல்லாளுக் குற்ற குறையுண்டென்
றெண்ணிய நெஞ்சத் தினையளாய் நண்ணி
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச்
சென்று
பெறுக கணவனோ டென்றாள் பெறுகேன்
45. கடுக்குமென் நெஞ்சங் கனவினால் என்கை
பிடித்தனன் போயோர்
பெரும்பதியுட் பட்டேம்
பட்ட பதியிற் படாத தொருவார்த்தை
இட்டன ரூரா ரிடுதேளிட் டென்றன்மேற்
கோவலற் குற்றதோர் தீங்கென்
றதுகேட்டுக்
50. காவலன் முன்னர்யான்
கட்டுரைத்தேன் காவலனோ
டூர்க்குற்ற தீங்குமொன் றுண்டா
லுரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடிஇ
தீக்குற்றம்
உற்றேனொ டுற்ற உறுவனோ டியானுற்ற
நற்றிறங் கேட்கின் நகையாகும்
பொற்றெடீஇ
55. கைத்தாயு மல்லை கணவற்
கொருநோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பிற்
போய்க்கெடுக வுய்த்துக்
கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில்
மடலவிழ் நெய்தலங் கானற் றடமுள
சோமகுண்டஞ் சூரிய
குண்டந் துறைமூழ்கிக்
60. காமவேள் கோட்டந்
தொழுதார் கணவரொடு
தாமின் புறுவ ருலகத்துத் தையலார்
போகஞ்செய் பூமியினும்
போய்ப்பிறப்பர் யாமொருநாள்
ஆடுது மென்ற அணியிழைக்கவ் வாயிழையாள்
பீடன் றெனவிருந்த பின்னரே நீடிய
65. காவலன் போலுங்
கடைத்தலையான் வந்துநம்
கோவல னென்றாளோர்
குற்றிளையாள் கோவலனும்
பாடமை சேக்கையுட் புக்குத்தன்
பைந்தொடி
வாடிய மேனி வருத்தங்கண் டியாவுஞ்
சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
70. குலந்தரு வான்பொருட்
குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன
நலங்கேழ் முறுவல்
நகைமுகங் காட்டிச்
சிலம்புள கொண்மெனச் சேயிழை கேளிச்
சிலம்பு முதலாகச் சென்ற கலனோ
75. டுலந்தபொரு ளீட்டுத
லுற்றேன் மலர்ந்தசீர்
மாட மதுரை யகத்துச்சென் றென்னோடிங்
கேடலர் கோதா யெழுகென்று நீடி
வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குற்
கனைசுடர் கால்சீயா முன்.
வெண்பா
காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க - மூதை
வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குற்
கனைசுடர்
கால்சீயா முன்.
பொழிப்புரை
அகன்ற
இருப்பிடங்கள் தோறும் அரும்பு முறுக்கு அவிழ்ந்த முல்லையின் ஒளிரும் மலரை நெல்லுடன்
தூவி பகலவன் மறைந்த மாலைப் பொழுதிலே அழகிய விளக்கை ஏற்றி இராப் பொழுதிற்கு
ஏற்றதோர் கோலத்தை கொடியைப் போன்ற இடையை உடைய மகளிர் கொண்டு நிற்க,
முன்னொரு
நாளிலே மாலதி எனும் பெயருடைய ஒரு பார்ப்பனி, தனது மாற்றாளின் மகவுக்குப் பாலூட்ட,
பால் விக்கி அக் குழந்தை மரிக்க, மாலதியானவள்,
பார்ப்பானும்
அவன் மனைவியும் என்மேல் அடாப் பழி கூறுவதன்றி ஏற்கத் தக்கன கூறார், எனவே என்ன
செய்வதென்றறியாமல் மனம் கலங்கி அம் மகவை எடுத்துக்கொண்டு, தேவன் தருவாகிய கற்பகம்
நிற்கும் கோயில், ஐராவதம் நிற்கும் கோயில்,
அழகிய வெள்ளை நாகர் ஆகிய பலதேவர் கோயில், கீழ்த்திசையில் தோன்றும் சூரியனார்
கோயில், இறைவன் ஊராகிய கைலாயம் நிற்கும் கோயில்(அல்லது ஊராட்சி நடக்கும் அம்மன் கோயில்),
வேற்படை நிற்கும் கோயில், வச்சிரப் படை நிற்கும் கோயில்,
சாதவாகனன் வாழும் கோயில், அருகன் கோயில், நிலவுக்கான கோயில் ஆகிய கோயில்களில் எங்கும் புகுந்து,
தெய்வங்களே
எனக்கு வந்த துன்பத்தைத் தீர்த்துவையுங்கள் என்று கூறிக்கொண்டு சென்று, ஒரு பாசண்டச்
சாத்தன் கோயிலை அடைந்து அவன் பால் வரம் வேண்டிக் கிடந்தவளுக்கு,
பிறரைப்
பழிக்கும் வடிவையுடையதொரு பெண் வடிவமாய்த் தோன்றி, பாடுகிடந்த மாலதியை நோக்கி, குற்றமற்றவளே, செய்த தவப்பயன்
இல்லாதவர்க்குத் தெய்வங்கள் வரந்தரமாட்டா. இது பொய்யுரை இல்லை, மெய்யுரையே எனச்
சொல்லி, கையிலுள்ள குழவியின் இறந்த பிணத்தைத் தாராய் என்று அவள் கையிலிருந்தும்
பறித்து, சுடுகாட்டிலுள்ள சக்கரவாளக் கோட்டத்தில் செறிந்த இருளில் சென்று ஆங்கே
குழியில் இடும் பிணங்களைத் தின்னும் அந்த இடாகினிப் பேயானவள்
அக் குழவியின் பிணத்தை விழுங்கிவிட்டாள்.
அப்போது,
இடிக்குரல் கேட்ட மயில் கூவுவது போல் ஏங்கி அழுகின்றவளை நோக்கி, அச் சாத்தன்
என்னும் தெய்வம் அன்னையே நீ ஏங்கி அழாதே என்று கூறி, நீ செல்லும் வழியில்
குயில்கள் நிறைந்த ஒரு மரச் சோலை நிழலில் உயிருடன் உன் குழவியைக் காண்பாய் என்று
அங்கு தான் ஒரு குழவியாய்ச் சென்று
கிடக்க, ஐயமேதுமின்றி அந்த மாயக் குழவியைத் தன் குழவி என்று எடுத்து வயிற்றில் அணைத்துக்கொண்டு போய்க் குழவியின் தாயின் கையில் கொடுத்தாள்.
தூய
மறையோனிடம் பிரம்மச்சாரியாய் சிறந்த கல்வியிலும் கேள்வியிலும் துறைபோய் தந்தையும் இரு
தாயரும் இறந்த பின்பு, தன் கூட்டுக் குடும்பத்தாருடன் வழக்குரைத்து தந்தைக்கும் தாயார்க்கும் செய்ய வேண்டிய நீர்க்கடன் முதலியவற்றைச் செய்து முடித்து வாழ்ந்த பின் ஒருநாள்,
தேவந்தி
எனும் தன் மனைவியின் பூப் போன்ற மையுண்ட கண்கள் இதனைப் பொறுக்கட்டு மென்று அருள்
செய்து பின்பு அவளைப் பொருந்தி, தனது என்றும் முதுமை அடையாத இளைய
அழகினை வெளிப்படுத்தி நீ எமது கோட்டத்துக்கு வாவெனச் சொல்லி நீங்கினான்.
எனது
நெஞ்சினைப் பிணித்த கணவன், தீர்த்தத் துறைகள் எல்லாம் சென்று தீர்த்தமாடுவேன்
என்று என்னை விட்டுப் போனான். அவனை மீண்டும் இங்கு அழைத்துத் தருவாயாக என்ற
பெயரில் கோயிலுக்குச் சென்று நாள்தோறும் வழிபட்டுக் கொண்டிருப்பவளாகிய, தூய மொழியினை
உடைய தேவந்தி,
குறைதற்கரிய
சிறப்பை உடைய கண்ணகியாகிய நல்லவளுக்கு கணவன் பிரிந்ததால் உற்றதொரு துன்பம் உண்டென்று நினைத்து
வருத்தமுற்ற நெஞ்சத்துடன் கோயிலை அடைந்து அறுகு சிறுபூளை முதலியவற்றை நெல்லுடன்
தூவி வழிபட்டு கண்ணகியிடம் சென்று, கணவனை மீண்டும் பெறுவாயாக என்று வாழ்த்தினாள்.
நீ
இங்ஙனம் கூறுவதனால் நான் பெறுவேன் ஆயினும் நான் கண்ட ஒரு கனவினால் என் நெஞ்சம்
ஐயுறுகிறது. என் கணவன் என்னைக் கைப்பற்றி அழைத்துச் செல்ல, நாங்கள் ஒரு பெரிய
நகரத்தினுள் புகுந்தோம். அந்த நகரில் எங்களுக்கு ஏற்காத ஒரு பழியை அவ் வூரார்
இடுதேளிடுவது போல் என் மீது சுமத்தினர். அப் பழிமொழியால்,
கோவலனுக்கு
ஒரு துன்பம் உண்டாயிற்று என்று பிறர் சொல்ல அதனைக் கேட்டு அவ் வூர் அரசன் முன்னர்
யான் சென்று வழக்குரைத்தேன். அதனால் அவ் வரசனோடு அவ் வூர்க்கும் உண்டாகிய தீங்கு ஒன்று
உண்டு. அதை உனக்கு உரைக்கமாட்டேன். செறிந்த தொடியினை உடையவளே கடியதொரு குற்றம்
நிகழ்வதாயிற்று. அத் தீய குற்றத்துக்கு ஆளான என்னோடு பொருந்திய என் கணவனுடன் நான் அடைந்த
நற்பேற்றினை நீ கேட்டால் உனக்கு அது சிரிப்பை மூட்டும் என்று கண்ணகி சொல்ல,
பொன்னாலான
தொடியினை உடையவளே நீ அவனால் வெறுக்கப்படவும் இல்லை, பழம்பிறப்பில் நின் கணவன் பொருட்டு காக்க வேண்டிய
ஒரு நோன்பில் தவறு செய்தாய். அதனால் உண்டாகிய தீங்கு நீங்குவதாக. காவிரி தன் நீரை
செலுத்திச் சென்று கடலோடு எதிர்த்து அலைக்கும் கழிமுகத்துக்கு அயலில் பூவின் இதழ் விரியும் நெய்தல் நிலத்துக் கானலில்
சோம குண்டம், சூரிய குண்டம் எனும் பெயரையுடைய இரண்டு பொய்கைகள் உள்ளன. அவற்றின்
துறைகளில் மூழ்கி மன்மதன் கோயிலை அடைந்து அவனை வணங்கினாராயின் பெண்கள் இவ் வுலகத்தில் தம் கணவரோடு பிரியாதிருந்து இன்பமுறுவர். மறுபிறவியிலும் போக
பூமியில் போய்ப் பிறக்கவும் செய்வர். அவற்றில் நாமும் ஒரு நாள் சென்று ஆடுவோம்
என்று கூறிய தேவந்திக்கு, அவ்வாறு துறை மூழ்கிக் காமக் கடவுளை வேண்டுதல் பீடன்று
என்று கண்ணகி கூறிய பின்னர்தான்,
பெருமையுடைய
நம் அரசன் போலும் தோற்றமுடைய நம் கோவலன் கடைவாயிலில் தோன்றினான் என்று பணிப்பெண்
கூறினாள்.
அவ்வாறு
வாயிலில் வந்த கோவலன் பெருமையுடைய படுக்கை அறையினுள் புகுந்து தன் காதலியின் வாட்டமுற்ற
மேனி வருத்தம் கண்டு, எல்லாம் வஞ்சம் பொருந்திய போக்கையுடைய பொய்ம் மகளோடு ஆடி நம் குல முன்னோர் தேடித் தந்த மலைபோலும்
செல்வக் குவிவு எல்லாம் கெட்டதனால் வந்த வறுமை எனக்கு
நாணத்தைத் தருகிறது என்றான்.
சிரித்த
முகத்தில் நல்ல இளநகையைக் காட்டி என் சிலம்புகள் உள்ளன, எடுத்துக்கொள்ளுங்கள்
என்று கண்ணகி கூறினாள்.
சேயிழையே
இதனைக் கேள், நீ கூறிய இந்தச் சிலம்பை மூலதனமாகக் கொண்டு
மாடங்களையுடைய பரந்த புகழ்பெற்ற மதுரை என்னும் நகருக்குச் சென்று முன்பு நான்
இழந்த கலன்களையும் அழித்த செல்வங்களையும்
தேடத்துணிந்துள்ளேன். அங்கு செல்ல நீ இப்பொழுதே இங்கிருந்து என்னோடு புறப்படு
என்று கூறி, முற்பிறப்பில் தான் செய்த வினை நெடுங்காலம் நின்று நெஞ்சை வழிப்படுத்த
அவ் வினையினது ஏவலைக் கொண்டான் இருளை ஞாயிற்றின் மிகுந்த ஒளி துரத்துவதற்கு
முன்பாகவே.
வெண்பா
கண்ணகி
கண்ட கனவு கரிய நெடிய கண்களை உடைய மாதவியின் சொல்லைப் பயனற்றதாக்க, பழவினை நெஞ்சை
இயக்குதலால் கங்குலைக் கதிரவன் போக்குவதற்கு முன் அவ்வினையின் ஏவலைக் கொண்டான்.
இக் காதையிலுள்ள சிறப்புகள்
1. மாலை நேரத்துக்கென்று பெண்கள் தங்கள் தோற்றத்தை வடித்துக் கொள்ளும் சிறப்பு
பற்றிய கூற்று சிறப்பானது.
அந்திமாலைச் சிறப்புசெய் காதையில்(வரி 19),
எல்வளை மகளிர் மணிவிளக் கெடுப்ப
என்று மாலைப் பொழுதையும் கடலாடு காதையில் (வரி 116 – 127),
வைகறை யாமம் வாரணங் காட்ட
… ………………………………….
மாடமலி மறுகின் பீடிகைத் தெருவின்
மலரணி விளக்கத்து மணி விளக்
கெடுத்தாங்கு
அலர்கொடி அறுகும் நெல்லும் வீசி
மங்கலத் தாசியர் தங்கலன் ஒலிப்ப
இருபுடை மருங்கினும் திரிவனர்
பெயருந்
திருமகளிருக்கை
என்று காலைப் பொழுதையும்
விளக்கிய அடிகள் இந்தக் காதையில்,
அகநக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை
நிகர்மலர்
நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கங் காட்டி
இரவிற்கோர்
கோலங் கொடியிடையார் தாங்கொள்ள
என்று மாலைப் பொழுதைப் பணம் படைத்த மக்கள் வரவேற்கும் சிறப்பை
விரிவாகக் கூறுகிறார்.
அகனகர்
என்பதற்கு அகன்ற மனையிடம் என்று வேங்கடசாமியார் பொருள் கொண்டுள்ளார். இதை அகநகர் -
நகரின் நடுப்புறம் என்பது பொருத்தமாக இருக்கலாம். புறநகரில் ஏழை மக்கள் தாம் வாழ்வர்.
அங்கு இது போன்று காலை, மாலை என்று வாழிடத்தைக் கோலம் செய்யும் வழக்கம் இன்று கூட இல்லை.
2. குழந்தை
இல்லாத பெண்களின் நிலை நம் குமுகத்தில் எத்தனை கொடியது என்பதை மாலதி என்ற
பார்ப்பனப் பெண்ணின் கதையில் அடிகள் அழகாக எடுத்துச்சொல்கிறார். கணவனின் மறுமணத்தைப்
பொறுத்துக்கொண்டு மாற்றாளுடன் கணவனின் கொடுமைகளையும் தாங்கிக்கொள்ள வேண்டும். பார்ப்பா னொடுமனையா ளென்மேற் படாதனவிட் டேற்பன கூறாரென றேங்கி என்ற அடிகளின் விளக்கம் அப் பெண் அவ்விருவராலும் நாள்தோறும் பட்ட
கொடுமைகளைப் பட்டியல் இடாமலே புரிய வைக்கிறது.
3. புகார்
நகரத்தில் இருந்த கோயில்களின் பட்டியல் ஒன்றை அடிகள் தருகிறார். அடுத்த காதையிலும்
ஒரு பட்டியல் வருவதால் இதுவரை வந்த பட்டியல்களின் ஓர் ஒப்பீடு
அங்கே தரப்படும்.
4. பாசண்டம்
என்பதற்கு “தொண்ணூற்றறு(96) வகைச் சமய சாத்திரத் தருக்கர்
கோவை என்பர்” என்று வேங்கடசாமியார் விளக்கவுரை
கூறியுள்ளனர். பாசண்டத் துறையு மிவற்றுட்
பலவாம், பேசிற் றொண்ணூற்றறுவகைப் படுமே என்ற திவாகரச்
செய்யுளையும் காட்டியுள்ளார். சிலப்பதிகார உரையையே அபிதான சிந்தாமணி
மேற்கோளாகக் காட்டுகிறது. கழகத் தமிழ் அகராதி பாசண்டம் என்பதற்கு ‘’புறச் சமயக் கொள்கை” என்றும் பாசண்டர் என்பதற்கு “சமயிகள்” என்றும் பொருள் கூறுகிறது.
புறம்பணையான்,
பாசண்டச் சாத்தன் என்று இரு தெய்வங்களை அடிகள் பட்டியலிடுகிறார். இவற்றில் புறம்பணையான்
என்ற தெய்வத்தைப் பற்றி முதலில் பார்ப்போம்.
கழகத் தமிழ் அகராதி
புறம்பணை:
மருத நிலம், முல்லை, குறிஞ்சி நிலங்கள்
புறம்பு
: தனியானது, புறத்தி, மற்றை, வெளியிடம், முதுகு
புறத்தி
: பின்பக்கம், புறம்பு.
புறம்பணையான்: சொல் இல்லை
தமிழ் மொழியகராதி
புறம்பணை : குறிஞ்சி நிலம், முல்லை நிலம்
புறம்பனையான்: சாதவாகனன்
புறம்பு:
தனியானது, புறத்தி, மற்றை.
தமிழ் மொழியகராதியில் தரப்பட்டிருக்கும் சாதவாகனன் என்ற பொருளைத்தான் வேங்கடசாமியாரும்
தருகிறார்.
சாதவாகனன் என்ற சொல்லுக்கு, கழகத் தமிழ் அகராதி, தமிழ் மொழியகராதி ஆகியவை ஐயனார், சாலிவாகனன் என்றும் அபிதான
சிந்தாமணி சாதவாகன என்னும் நூல் செய்வித்தவன், சாத்தன் என்றும் பொருள்களைத் தருகின்றன.
சாத்தன் என்ற
சொல்லுக்கு கழகத் தமிழ் அகராதி அருகன், ஐயன்,
தெரிவிக்கிறவன், தண்டிப்போன், சீத்தலைச் சாத்தன், வணிகர் கூட்டத் தலைவன், ஒருவனைக்
குறிப்பதற்குச் சொல்லும் சொல்[1] என்ற பொருள்களையும் தமிழ் மொழியகராதி: அருகன், ஐயன்,
தண்டிப்போன், தெரிவிக்கிறவன், புத்தன், வயிரவன் என்றும் அபிதான
சிந்தாமணி ஐயனார்க்கு ஒரு பெயர் என்றும் பொருள் கூறுகின்றன.
ஐயனார் என்ற சொல்லுக்கு கழகத் தமிழ் அகராதி: அரிகர புத்திரர்,
சாத்தன், ஐயனார் என்றும் தமிழ் மொழியகராதி: அரிகர புத்திரன்,
வன ரட்சகன், இவன் சாத்தன் என்றும்
அபிதான சிந்தாமணி: அரிகர புத்திரர், இவருக்கு ஆயுதம் வளை, செண்டு; வாகனம் - குதிரை, யானை....என்றும் கூறுகின்றன.
இவறிலிருந்து ஐயனார், சாத்தன், பறம்பணையான் ஆகிய மூன்றும் ஒரே
தெய்வத்தையே குறிக்கின்றன என்பது தெளிவாகிறது.
வளை என்பது பூமராங் என்று ஆங்கிலத்திலும் சென்றுதிரும்பி(பூமராங்
என்ற சொல்கூட போம்வரும் என்பதன் திரிபேயாகும் என்ற ஒரு கருத்தும்
உள்ளது) என்று வட்டார வழக்கிலும் குறிக்கப்படும் வளைதடியேயாகும்.
திருமாலின் கையிலிருக்கும், ஏவினால் திரும்பிவரும் சக்கராயுதத்தையும் வளைதடி என்றே
கூறுவர். அதனால்தான் கழகத் தமிழ் அகராதியும் தமிழ் மொழியகராதியும்
வளை என்பதன் பொருட்களில் ஒன்றாகச் சக்கரம்
என்பதைத் தருகின்றன. தண்டம் எனும் சொல்லுக்கும் வளைதடி
என்ற பொருளைக் கழகத் தமிழ் அகராதி தருகிறது.
செண்டு என்பதற்கு, குதிரைச் சம்மட்டி என்ற பொருளைத்
தருகிறது கழகத் தமிழ் அகராதி. குதிரைச் சம்மட்டிக்கு, குதிரையடிக்குங்
கயிறு என்று பொருள் தருகிறது தமிழ் மொழியகராதி. ஆக, வளையாகிய
தண்டத்தையும் பாசம் எனும் சவுக்கையும் ஆயுதங்களாகக் கொண்ட சாத்தனை அதாவது பாச
தண்டச் சாத்தனைப் பாசண்டச் சாத்தன் என்று பெயரிட்டு, தொண்ணூற்றாறு
வகை மெய்யியல்களை அறிந்த சாத்தன் என்று பொருளும் கூறியுள்ளனர்.
சாத்தன் என்பவன் சாத்து எனப்படும் வாணிகச் சாத்தைத் தலைமை தாங்கி
நடத்திய வாணிகக் குழுத் தலைவர்களின் பெயராக இருந்து பின்னர் அவர்கள் வழிபடும்
தெய்வமாகி அடுத்த கட்டத்தில் ஊர்க்காவல் தெய்வங்களுள் ஒன்றாகி, ஊருக்குப் புறத்தே
நிறுவி வழிபடப்பட்ட ஒன்றாகும். இவ்வாறு நம் பண்பாடு இழித்துக் கூறும் கீழ்ச்சாதி
மக்களின் கடவுளாகிய சாத்தன் பெயருக்குப் புது விளக்கம் கூறி அவனை மேலடுக்கினர்
தங்கள் தெய்வமாக ஆக்கிக்கொண்டனர். மக்கள் இவ்வாறு மேல் கீழ் என்று பிளவுபடாமல்
இருந்த காலத்தில் வழிபடப்பட்ட தெய்வங்கள் அனைத்துமே இவ்வாறு “பெருந்தெய்வங்கள்” என்றும் “சிறுதெய்வங்கள்” என்றும் அல்லது தெய்வம் - அரக்கம் என்று
இரண்டு வடிவங்களில் பிளக்கப்பட்டிருப்பதையும் நாம் காணலாம். மேலும் எடுத்துக்
காட்டுகளை நாம் பார்க்கலாம்.
5. இடாகினிப் பேய் என்பது பற்றிச்
சிறிது பார்ப்போம்.
இடாகினி என்ற சொல்லுக்கு
கழகத் தமிழ் அகராதி - சுடுகாட்டுப் பேய்
என்றும்
தமிழ் மொழியகராதி - காளியேவல் செய்வோன்[2],
பிணந்தின்னும் பேய் என்றும்
அபிதான சிந்தாமணி - பிணந்தின்னும் பேய்,
ஒரு வஞ்ச துட்ட தேவதை என்றும் பொருள்
கூறுகின்றன.
அதற்கு முன் சுவாகா தேவி என்ற சொல்லைப் பார்ப்போம்
சுவாகா:
கழகத்தமிழ் அகராதி : அக்கினி தேவி, மந்திர
முடிவினொன்று, ஆகுதி செய்யும் போது
தேவதையின் பெயர்க்குப் பின் கூறும் மொழி.
தமிழ் மொழியகராதி : அக்கினி தேவி, மந்திர முடிவினொன்று
அபிதான சிந்தாமணி : சொல் இல்லை.
சுவாகா தேவி:
கழகத் தமிழ் அகராதி : சொல் இல்லை.
தமிழ் மொழி அகராதி : அக்கினி தேவன் பாரி.
அபிதான சிந்தாமணி : தக்கனுக்குப் பிரசூதியிடம் பிறந்த குமரி. இவள் மீது யமன்
காதல்கொண்டு மணந்து இவளை எலுமிச்சம் பழமாக்கி விழுங்கி வேண்டும் போது
வெளிப்படுத்தி மீண்டும் அவ் வகை விழுங்கி வருவான். இப்படி யிருக்கையில் ஒரு முறை
நந்தவனத்தில் இவளை வெளியிட்டு இவளுடன் விளையாடிய இளைப்பில் நித்திரை கொண்டனன்.
சுவாகாதேவி அந்த வழி வந்த அக்கினியின் மீது ஆசை கொண்டு அவனைப் புணர்ந்து அக்நியைப்
பழமாக்கி விழுங்கினள். பின் யமன் விழித்து இவளைப் பழமாக்கி விழுங்கினன். உலகத்தில்
அக்நி மறைந்தமையால் தேவர் திருமாலிடம் முறையிட திருமால் யமனிடம் வந்து சுவாகா
தேவியை வெளியிடச் செய்து அவளிடமிருந்த பழவுருக்கொண்ட அக்நிதேவனை வெளிப்படுத்திச்
சுவாகா தேவியை அக்நிக்கு அளித்தனர்.
இந்தக் கதையின் வரலாற்றுப் பின்புலத்தை அலசிப் பார்ப்போம். தக்கன்
ஆயிரம் ஆக்களைக் கொன்று வேள்வி செய்தவன். அதனை அவன் மகளான உமை(தாக்காயணி)
அழித்தாள் என்ற கதையை கால்நடைகளை வேள்வி என்ற பெயரில் நெருப்பிலிடுவதையும் காளை,
ஆக்களை உணவாக்குவதையும் எதிர்த்து நடத்திய போர்களில் இறுதியானது என்று கொள்ளலாம்.
காட்டில் கொல் விலங்குகளின் நடுவில் அமைதியின்றி வாழ்ந்துவந்த
தொடக்க கால மனிதன் நெருப்பைக் கையாளத் தொடங்கியதும் கொல் விலங்குகளைத்
தொலைவில் நிறுத்துவதற்கு நெருப்பை அணையாமல் வளர்க்கத் தொடங்கினான். அதனை அணையாமல்
பாதுகாக்கும் பொறுப்பு மூத்த குலத் தலைவியர் பொறுப்பில் விடப்பட்டது.
வேட்டையாடியும் காய்கனிகளை உண்டும் வந்த மனிதனுக்கு எப்போதுமே உணவுப் பஞ்சம்
இருந்தது. எனவே உயிரிழந்த தம் கூட்டத்தினரின் உடலையும் அவர்கள் உண்டுவந்தனர். உணவு
தேடும் போது பிற கூட்டங்களுடன் நிகழும் போர்களில் இரு புறத்திலும் செத்தவர்களின்
பிணங்களில் அவரவர்க்குக் கிடைத்தவற்றை உண்டார்கள். வென்றவர்கள் எதிரிகளில்
சிக்கியவர்களையும் கொன்று தின்றார்கள். இந் நிலையில் நெருப்பு ஓம்பல் தொடங்கிய
பின் நெருப்பு அவர்களது கடவுளாகியது. அதற்குக் காவு கொடுப்பதற்காகத் தாம் விரும்பி
உண்ணும் மனித இறைச்சியை அதற்கு இட்டனர். அதிலிருந்து இறைச்சியைச் சுட்டு உண்ணும்
மரபு தோன்றியது. தங்களுக்கு இடையூறுகள் வராமல் இருக்க தங்கள் தெய்வமாகிய
நெருப்புக்குக் குழந்தைகளைக் காவு கொடுக்கும் பழக்கமும் வந்தது. பின்னர் கால்நடைகளை வளர்த்து உணவுப் பஞ்சம்
குறைந்த பின்னரும் அவற்றை நெருப்புக்குக் காவு கொடுத்ததுடன் முன்போல் பிணத்தையும்
நெருப்பிலிட்டு உண்டனர். பெரும்பாலான குமுகங்களில் குழந்தைகளைக் கடவுளுக்குக் காவு
கொடுப்பதற்குப் பகரம் கால்நடைகளைக் காவு கொடுக்கும் பழக்கம் அறிமுகமானது பற்றிய
தொன்மப் பதிவுகள் உள்ளன. யூத மறை நூலும், குரானும் இதனைக் கூறுகின்றன. வேறொரு
வடிவில் இந்திய வேதங்களில் பதிவாகியுள்ளது. பினீசியர்களிடம் குழந்தையைக் காவு
கொடுக்கும் மரபு இருந்துள்ளது.
இந்தியாவில் மாடுகளுக்குப் பல்வேறு பயன்பாடுகள் வந்த பின்னர்
அவற்றைக் காக்க கொலை வேள்விகளுக்கு எதிராக நீண்ட நெடும் போராட்டங்கள் நடந்துள்ளன.
அவற்றை எதிர்த்தவர்களுள் தாக்காயினி தவிர்த்த
அனைவரையும் அரக்கர்கள் என்று நம் தொன்மங்கள் இழிவுபடுத்தியுள்ளன.
வேள்விகளுக்கு எதிரான இந்தப் போராட்டத்துக்குப் பின் இறந்தவர்களை
நெருப்பிலிடும் நடைமுறை முடிவுக்கு வந்து மண்ணில் புதைக்கும் வழக்கம்
வந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதைத்தான் மரண தெய்வமான யமன் தக்கனின் மகளை
விரும்பி மணந்த கதை குறிப்பிடுகிறது என்று கூறலாம்.
இது போன்ற வளர்ச்சிக் கட்டத்தில் மனிதச் சிந்தனைகளும் வளர்ந்து
செத்த பின் மனித உயிருக்கு என்ன நேரும் என்ற கேள்விக்கு விடையாக மறுபிறப்பு என்ற
கோட்பாடு உருவாகி அவ்வாறு மறுபிறப்புக்கு இடம் அளிக்கும் வகையில் உடலைப்
பாதுகாப்பாகப் புதைத்து வைக்க வேண்டும் என்ற கருத்துப் பரப்பப்பட்டு அதுவும்
பிணத்தைச் சுடுவதற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்[3].
இந்தக் கோட்பாட்டின் வளர்ச்சி நிலைதான் எகிப்தின் பிரமிடுகள் போன்ற அமைப்புகள்
உலகின் பல்வேறு பகுதிகளிலும் இனங்காணப்பட்டுள்ளமைக்கு அடிப்படை (பார்க்க,Chariots of Gods, Eric Von Denicken).
பிணத்தைப் புதைக்கும் வழக்கம் தோன்றுவதற்கு முன், அணையாமல்
ஓம்பப்பட்ட நெருப்பில் இட்டுவந்த வழக்கத்தை நிறுத்தி அதனைச் சுடுவதற்குத் தனி இடம்
ஒதுக்கி அதில் இறந்தவரின் பிள்ளைகளைக் கொண்டு நெருப்பிடும் பழக்கமாகிய “கொள்ளி” வைத்தல் உருவாகியிருக்கும் என்று தோன்றுகிறது. அதனால்தான் இன்று
புதைக்கும் பழக்கமுள்ள மக்களிடையில் கருமாதிக்குரியவர் கொண்டு செல்லும் தண்ணீர்க் கலயத்தைக் “கொள்ளிக் கலயம்” என்றும் அதைப் போட்டு
உடைப்பதைக் “கொள்ளி வைத்தல்”
என்றும் குறிப்பிடும் மரபு உள்ளது. அது மட்டுமல்ல, இந்தச் சொல் மரபுகள், எரிக்கும்
முறை புதைக்கும் முறைக்கு முந்தியது என்பதைத் தெளிவாக்குகிறது.
தமிழ்க் குமுகத்தில் ஒரு காலத்தில் மனிதப் பிணத்தை நெருப்பிலிட்டு
உண்டார்கள் என்பற்கு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வணங்கப்படும் சுடலைமாடன்
தெய்வமேறி ஆடுபவன் சுடுகாட்டுக்குச் சென்று எரியும் பிணத்தைத் தின்பதும் அண்மையில் வெளிவந்த நான் கடவுள் என்ற திரைப் படத்தில்
காட்டப்படும் அகோரி எனப்படும் குழுவினர் எரியும் பிணத்தை உண்பதும் சான்றுகள்.
முன்பு பெண் பூசகர்கள் இதனைச் செய்தார்கள் என்பதற்கு சுடலை மாடனோடு சேர்ந்து ஆடும்
கணியான் கூத்தர்கள் பெண் உருத்தாங்கி ஆடுவதையும் இந்த சுவாகா தேவியையும் சான்றாகக் காட்டலாம்.
மக்கள் தொகை பெருகி நெருக்கமான குடியிருப்புகளைக் கொண்ட நகரங்கள்
உருவான போது பிணங்களைப் புதைப்பதற்கான நிலத்தேவையை ஈடுசெய்ய முடியவில்லை என்ற நிலை
உருவாகியிருக்கிறது. அல்லது பெரும் போர்களோ கொள்ளை நோய்களோ நெருக்கடிகளை
உருவாக்கியிருக்கவும் கூடும். அதைத்தான் இயமன் சுவாகா தேவியை வெளியிலெடுத்து
அவளோடு விளையாடிவிட்டு மீண்டும் எடுத்து விழுங்குவதற்குள் சோர்ந்து உறங்கிய
நிகழ்ச்சி குறிப்பிடுகிறது. அவ்வாறு வெளியே விடப்பட்டவள்தான் தன் வேட்கை தணியாத
நிலையில் அக்கினி தேவனை நாடி அவனை விழுங்குகிறாள். முடிவில் சாவுச் சடங்கு
நெருப்பைக் கொண்டு முடிப்பதாகிறது. ஆனால் இது அனைத்து மக்களுக்கும் பொதுவானதல்ல.
பார்ப்பனர்கள் அனைவரும் பிணத்தை எரிக்கின்றனர். பல சாதியினர் ஊர்ப்புறங்களில்
புதைக்கின்றனர், நகரங்களில் எரிக்கின்றனர்.
இதற்கேற்பத்தான ஆதன்(ஆன்மா)க் கோட்பாடும் நம நாட்டில் உருவாகியிருக்கும் போலும். உடலே மீண்டும் பிறவி எடுத்து வரும் என்பதற்கு மாற்றாக ஆன்மா பருப்பொருளுடன் இணைந்து மீண்டும் ஒரு உயிராக வரும் என்ற கரும(கர்மா)க் கோட்பாடு உருவாகியிருக்கலாம் என்று கொள்ளலாம்.
மறு உயிர்ப்பு பற்றிய நம்பிக்கையால் மிகுந்த பாதுகாப்புடன்
பிணங்களைப் புதைத்த கிறித்துவர்கள் அண்மை ஆண்டுகளில் மின்சுடுகாட்டில் எரித்து
சாம்பலைச் சிறு பேழைகளில் அடைத்துப் பாதுகாக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
நம் மரபில் சுவாகா தேவி என்பவள் இப்போது வேள்வியில் இடும் பண்டங்களை
உரிய தெய்வங்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு அஞ்சல் தொழிலைப் பார்ப்பவளாக
நெருப்பு வளர்க்கும் பார்ப்பனர்கள் கருதி “சுவாகா!” “சுவாகா!” என்று கூறி பொருட்களை நெருப்பில் போடுகின்றனர். ஆனால் மேலே கூறிய
கதையின்படி சுவாகா தேவி நெருப்பிலிடும் பிணத்துக்குரிய உயிரை மேலுலகத்துக்கு
விடுவித்துவைப்பவளாகவே தோன்றுகிறாள். அந்த வகையில் சுடுகாட்டுப் பேய் என்று கழகத்
தமிழ் அகராதி கூறும் இடாகினிப் பேய் என்பது சுவாகா தேவியின் தொடக்க காலச் செயலின்
வடிவமாகவே கொள்ள வேண்டும். இடு + அக்கினி → இடாகினி என்ற பொருளில் இது சுவாகா தேவி
அன்றி வேறல்ல. இடுதல் என்றால் வேக வைத்தல் என்ற பொருளில் தமிழில் வழங்குகிறது. இடு
+ அளை →
இட்டளை → இட்டளி → இட்டிலி, இடு + ஆப்பம் → இடியாப்பம் போன்றவை ஆவியில்
வேகவைப்பதைக் குறிக்கின்றன. எனவே இடுகாடு என்பதற்குச் சுடுகாடு என்ற பொருளும் பொருந்தும்.
பிணத்தைக் குழியில் இடும் காடு என்றும் பொருள் கொள்ளலாம்.
தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலில் அச்சம் பற்றிய நூற்பாவில்
(8) அணங்கு என்ற சொல்லுக்கு, “... அணங்குதல் தொழிலராகிய சவந்தின் பெண்டிர் முதலாயினாரும் ....” என்று பேராசிரியர் உரை கூறுகிறார். சவம் + தின் பெண்டிர் என்பது இன்று
நாம் மேலே கூறிய அகோரிகள் போன்றவர்கள் என்பது தெளிவு. இத்தகைய சவந்தின்
மக்களிடையிலிருந்து, இன்று புலாலுண்ணாமை முதலியவற்றைக் கைக்கொண்டிருப்பவர்களாகிய
பார்ப்பனர்களில் ஒரு பிரிவினராகிய, சாவுச் சடங்கு நிகழ்த்தும் சவண்டிப்
பார்ப்பனர்கள் உருவாகியிருப்பார்களோ என்று தோன்றுகிறது (சவந்தின் → சவந்தி - சவண்டி). சவண்டிப் பார்ப்பனர்கள் வளர்க்கும் தீயைத்தான் முத்தீ
என்பதில் ஒன்றான தக்கினாக்கினி (தென்திசைத் தீ) என்கின்றனர். தென் திசை எம
திசையல்லவா?
சவம் + தின் → சவந்தின் → சவண்டி. இந்தப் பின்னணியில் சுவாகா
தேவியின் திரிவாக்கத்தின் ஒரு கட்டம்தான் இடாகினிப் பேய்.
சாத்தனை ஐயனார், சாத்தன் என்று இருவராகப் பிளந்தது போல் இடு
அக்கினியாகிய தீயை இடாகினிப் பேய் என்றும் சுவாகாதேவி என்றும் இரண்டாகப்
பிளந்துள்ள இன்னோர் நிகழ்வு இது.
6. தாயத்தார் என்போர் தந்தை வழியில் வரும் கூட்டுக் குடும்ப உறுப்பினர்
ஆவர். இந்தக் கூட்டுக் குடும்பச் சொத்து அனைவருக்கும் பொதுவானது. அதிலிருந்து
வெளியேறிச் செல்ல விரும்புவோர் அதற்குரிய விதிப்படி தமக்குரிய பங்கைப் பொருளாகப்
பெற்றுக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. இதற்குத் தாய பாகம் என்று பெயர். இதுவும் “இந்து
அவிபக்த குடும்ப” அமைப்பு என்பதும் ஒன்றா என்று
தெரியவில்லை.
தாய பாகம் என்ற சொல் தாய்வழிக் குமுகத்தில் சொத்துகள்
தாய்க்கு உரிமையாக இருந்து அதிலிருந்து ஒவ்வொருவரும் பெறும் பங்காகும். மொத்தச்
சொத்தையும் பிரித்துக் கொண்டு அவற்றுக்கு அடையாளமாகக் கட்டங்களைத் தரையில் வரைந்து
கண்ணை மூடிக் கொண்டு சில்லுகளை எறிந்து யார் யாருக்கு எந்தப் பங்கு என்பதை முடிவு
செய்வர். இதிலிருந்துதான் தாயம் என்ற விளையாட்டு உருவாயிற்று என்று மாந்தநூலார்
கூறுவர். இங்கு சாத்தன் வெளியேற விரும்பியதால் தனக்குரிய பங்கை வழக்கிட்டுப்
பெற்று அவளுக்கு வழங்கினான் என்று கொள்ள வேண்டும்.
7. தேவந்தி சாத்தன் கோயிலுக்குக் கொண்டுசென்ற வழிபடு பொருட்களில் ஒன்று
சிறுபூளை. பூளை என்பது பொங்கல் திருநாளின் போது படைக்கும் ஒரு சிறுசெடி வகை. இதில்
வெண்மையாக நுரை வடிவில் பூக்கள் இருக்கும். கண்ணில் இருந்து வெளிப்படும் பீழை
போன்ற வடிவத்தில் இருப்பதால் இதனைப் பூளை என்று குறிப்பிடுகின்றனர். பீழை என்ற
இலக்கியச் சொல்லுக்குப் பூளை என்பது ஊர்ப்புற வழக்குச் சொல். ஊர்ப்புற வழக்கும்
இலக்கிய வழக்கும் இவ்வாறு ஒன்றோடொன்று மயங்கிக் கிடப்பதற்கு இதுவும் ஒரு சான்று.
7. தேவந்திக்குக் கண்ணகி தான் கண்ட கனாவைப் பற்றி உரைக்கும் போது இட்டன(ர்)
ஊரா(ர்) இடு தோளிட்டு என்றன்மேல் என்று கூறுகிறாள். இடுதேள் என்ற சொல்லுக்கு “தேளல்லாத
தொன்றை மறைய மேலே போகட்டு அஞ்சப் பண்ணுதல்” என்று
வேங்கடசாமியார் விளக்கவுரை கூறியுள்ளார். இந் நாளில் குழந்தைகள் தேள் போன்ற சிறு
பொம்மைகளைத் தோழர்கள் மேல் போட்டு அச்சுறுத்துவது போல் அன்றும் விளையாட்டுப்
பொம்மைகள் இருந்திருக்கும் என்ற எண்ணத்தை இவ்வரி நமக்குத் தருகிறது.
8. காமவேள்
கோட்டம் தொழுதார் கணவரொடு
தாமின் புறுவ ருலகத்துத்
தையலார்
என்று தேவந்தி கூறியதற்கு கண்ணகி “பீடன்று”
எனவிருந்த பின்னரே கோவலன்
வந்தான். இங்கே “பீடன்று” என்று
தேவந்தியை நோக்கிக் கண்ணகி கூறினாளா அல்லது தனக்குள்ளேயே கூறிக்கொண்டாளா என்பது
தெளிவாகத் தெரியவில்லை. அத்துடன் “பீடன்று” என்று கூறியதன் உண்மையான பொருள் என்ன என்ற கேள்வியும் எழுகின்றது.
தெய்வந்
தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனபப்
பெய்யும் மழை
என்ற குறட்பாவை மனதில் கொண்டு இச் சொல்லுக்குப் பொதுவாக
விளக்கம் கூறுகின்றனர். அப்படியும் கொள்ளலாம்.
இன்னொன்று, கணவனைத் தன்பால் ஈர்ப்பதற்காகக் கோயில்களுக்குச் சென்று துறைகளில்
மூழ்குவதும் வசியம் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதும் பெண்ணாகிய தன் பெருமைக்கும்
தன்மானத்துக்கும் இழுக்கு தரும், அதாவது தன் பீடுடைமைக்கு இழுக்கு தரும் என்ற
பொருளில் இச் சொல் பயன்பட்டிருக்கலாம்.
அல்லது, ஒரே ஆடவனோடு வாழ வேண்டுமென்ற கணிகையாகிய மாதவியின்
விருப்பத்துக்காக, அவனாக மாதவியைப் பிரிந்து வந்தால் அன்றி அவனைத் தன்பால்
வரவழைக்கத் தான் எதுவுமே செய்யப் போவதில்லை என்றும் அவன் அவ்வாறு அவளைவிட்டுப்
பிரிந்து வரும் காலங்களில் அவள் அவனை, அவன் விரும்பினால் திரும்ப அழைத்துச்
செல்லலாம், அவ்வாறு விரும்பிப் புறப்படுகிறவனைத் தான் தடுக்கப் போவதில்லை என்றும்
ஒரு வாக்குறுதியைக் கண்ணகி அளித்திருந்தாள் என்று வைத்துக்கொள்வோம். அந்தச்
சூழலிலும் அவள் இவ்வாறு “பீடன்று” என்று கருதியிருக்கலாம். இது
தொடர்பாக முன் காதையில் தேர்ச்சிவரி, காட்சி வரி, எடுத்துக்கோள்வரி, ஆகியவை
பற்றியும் மாலை வாரா ராயினும் மாணிழை காலை காண்குவம் என்று மாதவி
கூறியதனோடும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
9. சலம்புணர்
கொள்கைச் சலதியொ டாடிக்
குலந்தரு
வான்பொருட் குன்றந் தொலைத்த
இலம்பாடு
நாணுத் தருமெனக்கு ....... என்ற கோவலன் கூற்று ஓர் இரட்டுற மொழிதலாகும். சலம் என்பதற்கு
வஞ்சனை என்னும் பொருளும் நீர் என்னும் பொருளும் உண்டு. சலதி என்பதற்குப் பொய்புகல், கடல்,
கப்பல் என்ற பொருள்களும் உண்டு. இவ்வாறு பொய் நிறைந்த வஞ்சகப் பெண்ணோடு ஆடி என் குலத்தின் செல்வம் அனைத்தையும் இழந்தேன் என்றும் நீரில்
மிதக்கும் கப்பல் வாணிகத்தில் ஈடுபட்டு இழப்பெய்தினேன் என்றும்
இருபொருள்படும்படி கோவலன் கூறினான். சிலம்பு கொள்க என்று கண்ணகி கூறிய போது சிலம்பு
முதலாகச் சென்ற கலனோ(டு) உலந்தபொரு ளீட்டுத லுற்றேன் என்று கோவலன் கூறியதில் கலன்
என்பதற்கு அணிகலன் என்றும் கப்பல், கொள்கலன் என்றும் பொருள்கள்
உண்டு. இவ்வாறு இரட்டுற மொழிந்த கோவலனின் திறன் கண்டுதான் நலங்கேழ் முறுவல் நகைமுகங்
காட்டினாளா கண்ணகி என்று நமக்குக்
கேட்கத் தோன்றுகிறது. (இவ்வாறு இருபொருள்படும் தன்மையை
எமக்குச் சுட்டிக் காட்டியவர் புலவர் திரு.த. சரவணத் தமிழனர் ஆவர். Vessel என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கப்பல்,
கொள்கலன் என்று தமிழில் போன்ற இரு பொருள்கள் இருக்கும் ஒற்றுமை சுவையானது.)
10. கங்குல் கனைசுடர் கால்சீயா முன் என்பதற்கு இருளைக் கதிரவனின் ஒளி அகற்றத் தொடங்குவதற்கு முன் என்று பொருள்
கொண்டால் கதிரவனின் வெளிச்சத்தின் மூலம் கீழ்வானத்தின் வண்ணம் மாற்றம் அடையத் தொடங்கும்
முன் என்று பொருள் கொள்ள வேண்டும்.
11. வெண்பாவும், காலை கண்குவம் என்ற
மாதவியின் திட்டத்தைத் தகர்க்க வினையானது கோவலனை உந்தித் தள்ளியது என்ற கருத்தை மீண்டும்
கூறுகிறது. அதாவது கோவலன் புகாரில் இருந்தால்தானே காலையில் அவள் திட்டமிட்டபடி அவனைச்
சென்று காண முடியும். அல்லது அவன் விடியும் முன்பே அவளைத் தேடி வந்துவிடுவான் என்று
அவள் எதிர்பார்த்தாளா? வாய்ப்பில்லை. விடிந்த உடன் அவள் தன் வீட்டு வாயிலில் வந்து
நிற்பாள் என்று கோவலன்தான் எதிர்பார்த்து சரியாக விடியும் முன்பே ஊரை விட்டு ஓடிவிடுகிறான்.
★ ★ ★ ★ ★
[1] ஆங்கில மொழி இலக்கண நூல்களில் எடுத்துக்காட்டுகளில் ஆண் பெயர்களுக்கு
John என்ற சொல்லைப் பயன்படுத்துவது போல் தமிழ் இலக்கண நூல்களின் பண்டை உரையாசிரியர்கள்
சாத்தன் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். ஊர் வம்பு பேசும் போது ஓர்
ஆளை மறைமுகமாக சாத்தப்பிள்ளை என்று குறிப்பிடும் வழக்கம் குமரி மாவட்டத்தில்
சென்ற தலைமுறையினரிடம் இருந்தது.
[2]
செய்வோள் என்பது செய்வோன் என்று அச்சுப்பிழையாக இருக்கலாம்
என்றுதோன்றுகிறது.
[3] பிணத்தைப் புதைக்கும்
பழக்கமுள்ள குமரி மாவட்ட நாடார்களிடையில் இருப்புக் குழி என்ற ஒன்றை
சவக்குழியில் அமைக்கும் பழக்கம் அண்மைக் காலம் வரை இருந்தது. ஆள் இறங்கி செயல்படும்
அளவுக்கு ஏறக்குறைய 6 அடிகள் ஆழத்துக்குத் தோண்டப்படும் குழியின் ஒரு பக்கத்தில் அமர்ந்த
நிலையில் ஓர் ஆளுக்கு இடம் அளிக்கும் அளவில் ஓர் “அறை”யைக் குடைவர். அமர்ந்த நிலையில்
இருக்கும் பிணத்தை குழியினுள் நிற்பவர் தோளில் தாங்கி அந்த இருப்புக் குழியில்
அமர்த்துவார். குழியினுள் மண்ணை இட்டு மிதிக்கும் போது அது பிணத்தை அழுத்தாது. அகழ்வில்
இடிந்துவிழாத அதே வேளை மென்மையான இப் பகுதி செம்மண் இதற்குப் பொருந்தி வந்தது. அண்மைக்
காலங்களில் இது போன்ற நுண் பணிகளைத் தவிர்க்கும் மனப்பான்மையின் விளைவாக சவப்பெட்டியில்
வைத்துப் புதைக்கும் பழக்கம் வேரூன்றிவிட்டது.
இந்த உத்திக்குப் பொருந்தாத மண்வகை உள்ள இடங்களில்
மண் பாண்டங்களில்(முது மக்கள் தாழிகளில்) வைத்துப் புதைக்கும் பழக்கம் உருவாகி இருக்கலாம்.
இந்த மண் பாண்டங்களை கூனை என்ற சொல்லால் இங்கு வழங்குகிறார்கள். குமரி
மாவட்டத்தில் முகிலன்விளையை ஒட்டிய பிள்ளையார்புரம் என்ற ஊருக்குப் பக்கத்தில் கூனாச்சிப்
பொட்டல் என்றொரு பெரும் செம்மண் திடல் இருந்தது. அங்கு முன்பெல்லாம் மழைநீர்
உருவாக்கிய அறுத்தோடிகளில் பழங்காலத்துக் கூனைகள் தெரிந்தன என்று சிறுவனாக இருந்த போது
மூத்தவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். கூனை வைக்கும் பொட்டல் என்பதன்
மருவலாகலாம் மேலே தந்துள்ள அதன் பெயர். ஆக, கூனையிலிருந்து இருப்புக் குழி வந்ததா அல்லது
தலைமாறாகவா என்பதை ஆய்வாளர்களுக்கு விட்டுவிடலாம்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக