26.8.07

'சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு' நூல் பற்றி...1

மதிப்புக்குரிய பேரா. பு. இராசதுரை அவர்களுக்கு வணக்கம்.

தங்கள் படைப்பான சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு எனும் நூலைப் படித்தேன். திராவிட இயக்கத்தைப் பற்றி நான் அறியாத பல புதிய செய்திகள் கிடைத்தன.

திராவிட இயக்கமும் வேளாளர்களும் எனும் ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களின் நூலையும் படித்தேன். இரு நூல்களிலுமிருந்து திராவிட இயக்கத்தில் பெரியாரின் செயற்பாடுகள் பற்றிய சில தெளிவுகள் கிடைத்தன.

நீதிக்கட்சி தன் ஆட்சிக் காலத்தில் இரு முனைகளில் செயலாற்றியுள்ளது. தமிழ்நாட்டில் வருணப் பாகுபாட்டின் அடிப்படையில் நாட்டிலுள்ள மிகப் பெரும்பாலான பதவிகளையும் கோயில்கள் மூலமாகவும் நேரடியாகவும் பெரும் நிலவுடைமைகளையும் தம் ஆதிக்கத்தில் வைத்திருந்த பார்ப்பனர்களுக்கு எதிராகவும் வடக்கிலுள்ள மார்வாரிகள் தமிழகப் பொருளியலின் மீது செலுத்திவந்த ஆதிக்கத்துக்கு எதிராகவும் செயற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அக்கட்சியிலிருந்த பணக்காரர்களால் பேரவைக்கட்சி(காங்கிரசு) மக்களிடையில் எழுப்பிவிட்ட தேசியப் புயலை எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் பேரவைக்கட்சியில் அடைக்கலம் புகுவதே தங்கள் பொருளியல் நலன்களுக்கும் குமுகியல் ஆதிக்க நிலைபேற்றுக்கும் தோதானது என்று கண்டு அணி மாறிவிட்டனர். 1917-இலிருந்தே நாடார் மகாசன சங்கத்துடன் நீதிக்கட்சிக்கு இருந்த தொடர்பும் பாண்டியனார் மூலம் நாடார்கள் நீதிக்கட்சியினுள் பெருகியதும் மேற்சாதியினரான அவர்களை அங்கே இருக்க முடியாமல் செய்தன. இது உலகத்திலுள்ள அனைத்து இயக்கங்களிலும் நடைபெற்றுவரும் செயல்முறையாகும். இதில் நமக்குத் தெரியாத செய்தி தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சிக்குச் செய்து வந்த பணிகள் நீதிக்கட்சியால் தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டனவா அல்லது பின்னாளில்போல் வெறும் வாய்ச்சவடால் நடைபெற்றதா அல்லது எதுவுமே செய்யப்படவில்லையா என்பதுதான்.

அடுத்து வருவோர் வெள்ளாளர்கள். பார்ப்பனர் எதிர்ப்பிலிருந்து சாதி ஒழிப்புக்கு மாறி, சாதியைத் தூக்கிப் பிடிக்கும் சமயத்தை மறுப்பதாக கட்சி வடிவெடுத்தபோது வெள்ளாளர் வைணவம் எனப்படும் மாலியத்துக்கு எதிராகப் பெரியாரைத் திருப்பிவிட்டார்கள். ஆனால் சிவனியத்தின் மீதும் பெரியாரின் பார்வை சென்றபோது வெள்ளாளர் நடுவில் பெரும் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்பட்டன. ஆனால் அவை தணிக்கப்பட்டு அவர்கள் எதுவும் ஊடுருவ முடியாத கோட்டையாகத் தம் சாதியமைப்பை அமைத்துக் கொண்டார்கள். நாடார்கள், கோனார்கள், தாழ்ந்த சாதிகளிலிருந்த சில வெள்ளாக்கட்டு மேற்கொண்டோரைச் சேர்த்துக் சைவசபைகளை அமைத்துத் தம் அரணை வலுப்படுத்திக்கொண்டனர். (இந்தச் சைவசபைகள் இப்போது செயற்படவில்லை. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு வழிவழியாகப் புலாலுண்ணாதவரே உண்மைச் சிவனியர் என்ற ஒரு புதிய விதியை - வேதாந்த தேசிகர் தென்கலை மாலியர்களைப் புறந்தள்ள மேற்கொண்ட உத்திபோல - புகுத்தினர். மூக்குடைபட்ட தாழ்ந்த சாதி வெள்ளாளக் கட்டினர் சைவ சித்தாந்த சபை என்ற அமைப்பை அமைத்தனர். வெள்ளாளர் போன்ற ஒரு வகுப்பினரின் ஆதரவு இந்தப் புதிய சபைக்கு இல்லாததாலும் பழைய சபை மேற்கொண்டு வெள்ளாளருக்குத் தேவைப்படாததாலும், அதாவது தன்மான இயக்கத்தால் வந்த இடர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டதாலும் இருசபைகளும் இல்லாமல் போயின). அதாவது தமிழகச் சூழ்நிலையில் வெள்ளாளர்களின் பொருளியல், குமுகியல், இடத்துக்கு ஏற்றவாறு எத்தனை உறுப்பினர்களை ஒரு புரட்சிகர இயக்கத்தில் முழு உறுப்பினராகத் தரமுடியுமோ அவர்களைத் தவிர பிறரனைவரும் ஓரணியில் நின்றுகொண்டனர். வெள்ளாளர்கள் அனைத்து நடைமுறைக் கருதுகோள்களின் படி திராவிட இயக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டனர்.

ஆனால் பெரியார் அவர்களை விடவில்லை. பார்ப்பன எதிர்ப்பு என்ற அடிப்படையிலும் இந்தி எதிர்ப்பு என்ற அடிப்படையிலும் இவரே அவர்களை நாடி நின்றார். இந்தி எதிர்ப்புக்குக் காசு உதவுங்கள் என்று மடத்தலைவர்களைக் கேட்டார்.

இந்த இடத்தில் வேளாளர்களின் பொருளியல் பின்னணியை அலசிப்பார்க்க வேண்டும். நிலவுடைமைகள் முன்பு அவர்களிடம் பெருமளவு இருந்தாலும் ஆங்காங்கே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பணக்காரர்கள் இருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு அவர்களில் பெருந்தொழிற் குடும்பங்கள் குறைவு. அவர்களுடைய வாழ்க்கைமுறை குத்தகை வருமானத்திலிருந்து உடல் நோகாமல் உண்டும் அவ்வருமானம் இல்லாதவர்கள் கணக்கெழுதுதல் போன்ற எளிய ஆனால் உடலுழைப்பில்லாத பணிகளில் ஈடுபட்டும் அருமுயற்சிகளைத் தவிர்ப்பவர்களாகவே இருந்துள்ளனர். சிவன் கோயில்களைச் சார்ந்து தம்மை ஒற்றுமைப்படுத்திக் கொண்டு தம்மைப் பிறரிலிருந்து அயற்படுத்தித் தம் மேலாண்மையைக் காப்பாற்றிக் கொள்வதாகிய கற்பனை இன்பத்திலேயே மகிழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் சார்ந்திருக்கும் கோயில்களும் மடங்களும் தமிழ்நாட்டு நன்செய் நிலத்தில் 25 நூற்றுமேனியும் புன்செய்நிலத்தில் குறிப்பிடத்தக்க அளவும் சொந்தமாகக் கொண்டவை. நில உச்சவரம்பு, குத்தகை ஒழிப்பு ஆகிய நிலச் சீர்திருத்தங்களிலிருந்து விதிவிலக்குகளால் தப்பித்துக் கொண்டிருக்கின்றன இச்சொத்துகள். பெரியாரிடமிருந்து பிரிந்து ஓடிய பொதுமை எண்ணம் கொண்ட சீவா போன்றோர் அமைத்த தமிழகப் பொதுமைக் கட்சியில் வெள்ளாளரே மிகுதியாக இருந்தனர். ஆனால் பெரியார் இராமமூர்த்தியைப் பெரிதுபடுத்திக் காட்டிப் பொதுமைக் கட்சியின் வஞ்சனைகளுக்குப் பார்ப்பனச் சாயம் பூசி அங்கிருந்த வெள்ளாளரையும் காத்தார். இந்தியப் பொதுமைக் கட்சியின் தமிழகப் பிரிவில் வெள்ளாளர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நில உச்சவரம்பு, குத்தகை ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றிலிருந்து கோயில் சொத்துக்கு விலக்களிக்கப்பட்ட போது இம்′′மார்க்சியர்கள்′′ எந்த எதிர்ப்பும் சொல்லாதது தங்கள் சாதி நலன்களின் அடிப்படையிலேயே. பெரியார் இதைப் பற்றி மூச்சுவிடவில்லை.

பெரியார் சமயத்துக்கு எதிராகவும் கோயில்களுக்கெதிராகவும் தொடங்கிய போராட்டத்தை வெறும் பார்ப்பன எதிர்ப்பியக்கமாகச் சுருக்காமல் பரந்து விரிந்த நிலையில் மேற்கொண்டிருப்பாரேயானால் (வெங்கடாசலபதி பெரியார் பரந்து விரிந்த அளவில் மேற்கொண்டதாக குறிப்பிடுவது உண்மையல்ல. பரந்து விரிந்த அளவில் மக்கள் அவரை மொய்த்தனர். ஆனால் பெரியார் பொய்த்து விட்டார்.) இன்று கோயில்களோ மடங்களோ அவற்றின் சொத்துகளோ இருந்திருக்கா. அச்சொத்துகளைக் காப்பதற்காக மடத்தடிகளுடன் ஓர் உடன்பாடு ஏற்படுவதற்கு இந்திப் போராட்டம் உதவியதா? அன்றைய நிலையில் வேளாளர்களையும் மடத்தலைவர்களையும் அவர் ஏன் அழைத்தார். நீதிக்கட்சி அப்போது வலிமை குன்றியிருந்ததா? அல்லது முதல்வர் பதவியேற்ற ஆச்சாரியாருக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினாரா?

பெரியார் - ஆச்சாரியார் இருவரும் தங்கள் பொதுவாழ்வின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை அரசியலில் எதிரிகளாகவும் தனிவாழ்வில் நண்பர்களாகவும் இருந்துவந்துள்ளதின் கமுக்கம் என்ன? அவர்களின் தனிமனிதப் போட்டிக்காகவே திராவிடர் இயக்கத்தை அல்லது இந்தி எதிர்ப்பைத் தொடங்கினாரா? (இந்தி எதிர்ப்பில் உண்மையான தமிழ் மொழிப்பற்று அல்லது இந்தி மீது வெறுப்பினால் அவர் ஈடுபடவில்லை என்பதற்கு குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் ஏராளமான சான்றுகளைக் காட்டுகிறது.) வெள்ளாளர்களைப் பொறுத்தவரையில் அதுவும் மடத்தலைவர்களைப் பொறுத்தவரையில் அவர் மிகப் பரிவுடன் நடந்து கொண்டார். குன்றக்குடியார் மடத்தலைவர்களுக்கும் அவருக்கும் பாலமாகச் செயற்பட்டார்.

திராவிட இயக்கம் வெள்ளாளர் இயக்கம் அல்ல என்று வெங்கடாசலபதி கூறுவது உண்மையில்லை. பெரியார் இறுதிவரை வெள்ளாளர்களுக்கு அரண் செய்திருக்கிறார். உயிர்க் காப்பீட்டுக் கழகம், வங்கிகள், பல்கலைக் கழகங்கள் என்று அரசுசார் நிறுவனங்களில் பார்ப்பனர்களுடன் வெள்ளாளர்கள் நுழைந்தபோது இவர் கண்டுகொள்ளவில்லை, வெளியில் சொல்லவில்லை. தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் இன்று வெள்ளாளர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறதென்றால் அது பெரியார் இட்ட பிச்சை. இதற்குப் பார்ப்பனர் எதிர்ப்பு, திராவிடக் கோட்பாடு என்ற மூடுதிரைகள் பயன்பட்டன. வெள்ளாளர்கள் ஒரு பெரும் கண்டத்திலிருந்து பெரியார் உதவியால் தப்பிவிட்டார்கள்.

இனி நாடார்களுக்கு வருவோம்.

நாயக்கர்கள் மதுரையில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் தமிழகத்தின் தென்கிழக்கு மூலையில் ஒதுங்கிய மக்கள் நாடார்கள். தேரிகளாயமைந்திருந்து வளமற்றிருந்த அப்பகுதியில் அவர்கள் பெரும்பான்மையராயிருந்தனர். அரியநாதனால் பாளையங்களாக்கப்படுவதற்கு முன்பு பாண்டிய நாட்டு உள்ளாட்சிப் பிரிவுகளாகிய நாடுகளின் ஆட்சித் தலைவர் பட்டமான நாடான் எனும் பட்டத்தை அவர்கள் தாங்கிக் கொண்டார்கள். வளமற்ற அம்மண்ணில் வளர்ந்திருந்த பனையிலிருந்து பதனீர் இறக்கி அதிலிருந்து கருப்புக்கட்டி செய்தனர். [பனைமரம் முதலில் கள்ளெடுக்கவே பயன்பட்டது. கரும்பிலிருந்து செய்யப்பட்ட வெல்லத்துக்கே கருப்புக்கட்டி என்ற பெயர் பொருந்துகிறது. பனை ஏறிக் கள்ளிறக்கிய மக்களைக் கட்குடிகள் என்று கழக (சங்க) இலக்கியங்கள் குறிப்பதாகக் கூறுவர். நாடார்களின் வரலாற்றைக் கூறும் நாட்டுப்புறப் பாட்டு வடிவிலான வலங்கையர் கதை ஒரு முனிவர் பனை ஏறும் ஒருவன் வீட்டில் தான் உண்ட சோற்றுக்குக் கைம்மாறாக இரும்பு அரிவாளைக் கொண்டு வரச்செய்து அதில் ஒரு பச்சிலைச் சாற்றைத் தடவி அதனை அடுப்புத் தீயில் சொருகி வைக்குமாறு கூறியதாகவும் அவ்விரும்பு தங்கமாகிவிட்டதாகவும் தொடர்ந்து அப்பனையேறி கிடைத்த இரும்பையெல்லாம் அதே முறையைக் கையாண்டு தங்கம் ஆக்கி பெரும் செல்வானாகி ஆட்சியமைத்ததாக்கவும் கூறுகிறது. பதனீரை அடுப்பில் வைத்துக் காய்த்துக் கருப்பட்டியாக்கும் தொழில்நுட்பம் தான் இக்கதையில் குறியீடாகக் கூறப்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். இது எப்போது நிகழ்ந்திருக்கும் என்று தெரியவில்லை. கள்ளர் என்பதற்கும் கள்ளுக்கும் உள்ள தொடர்பும் கருப்பணசாமி என்பதற்கும் கரும்பனைக்கும் உள்ள தொடர்பும் ஆராயத் தக்கன.]

கருப்பட்டி மற்றும் பனைபடு பொருட்களை விலையாக்காமல் அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. எனவே வாணிகத்துக்கு வெளியே செல்ல வேண்டும். வழியில் மறவர்களின் தொல்லையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருந்தது. எனவே பெரும் எண்ணிக்கையிலான மாட்டுவண்டிகளைச் சேர்த்துச் செல்ல வேண்டியிருந்தது. சிறுவனாக இருக்கும்போது குமரி மாவட்டத்திலிருந்து நெல்லை மாவட்டத்துக்கு வரும் இத்தகைய வண்டித் தொகுதிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வாறு புறப்பட்ட வண்டிகள் தங்கி ஓய்வு கொள்ள அமைந்த வண்டிப் பேட்டைகளிலிருந்து நாடார்கள் பரந்தனர் என்ற செய்தியை ஆர்டுகிரவ்ன் நூலில் படித்திருப்பீர்கள். மோசே பொன்னையா எழுதிய நாடார் வரலாற்றில் இப்பேட்டைகள் புத்தர்களால் நிறுவப்பட்டன என்கிறார்.

நெல்லை குமரி மாவட்ட நாடார்களின் சிறப்பு என்னவென்றால் அவர்கள் பிற பகுதியினரைப்போல் பிற சாதியினரிடையில் அடைபட்டுக் கிடக்கவில்லை. தாங்களே பெரும்பான்மையினராய் இருந்ததால் தாழ்வுணர்ச்சியின்றி நிமிர்ந்து நின்றனர். அதுவே அவர்கள் சென்று படிந்த இடங்களிலும் அவர்களது வளர்ச்சிக்குத் துணையாயமைந்தது. இருப்பினும் அரசின் கெடுபிடியால் மேற்சாதியினரின் கொடுங்கோன்மையைத் தாங்க வேண்டித்தான் இருந்தது.

பொருளியல் ஓரளவு மேன்மையடைந்தும் குமுகியல் இழிவுகளை எதிர்த்துப் போராடுதல் இயல்பு. ஆனால் நாடார் மகாசன சங்கத்தின் அமைப்புக் கூட்டத்தில் எடுத்தக் கொண்ட பொருட்கள் அனைத்துமே பொருளியல் மேம்பாடு கருதியவை. தலைவர் உரையில்தான் கல்வி வளர்ச்சியின் மூலம் அரசுப் பணிகளிலும், வழக்கறிஞர் போன்ற தொழில்களிலும் காலூன்ற வேண்டும் என்ற நோக்கம் வெளிப்படுகிறது.

அதேபோல் தியாகராயச் செட்டியார் முழு அறிக்கையையும் படிக்க முடியவில்லை. ஆனால் நீதிக்கட்சி ஆட்சியின் அருஞ்செயல்கள் என்ற பட்டியலில் தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டது ஒரு வரலாற்று நூலில்(தமிழக வரலாறும் பண்பாடும், பேரா.வே.தி.செல்லம்) குறிப்பிடப்பட்டுள்ளது. திராவிட இயக்க வரலாறு எழுதுவோரில் எவரும் பொருளியல் பகுதிக்கு உரிய இடத்தை அளிப்பதில்லை என்ற உண்மை இன்றைய தமிழகத்தின் பொருளியல் பின்னடைவுக்கும் வேலையின்மைக்கும் இளைஞரும் முதியோரும் படித்தோரும் படியாதோரும் வேலை தேடி நாட்டை விட்டோடும் நிலைமைக்கும் அடிப்படைக் காரணமாகும். நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

(தொடரும்)

குன்றக்குடி அடிகளாருக்கு மடல்

குன்றக்குடி அடிகளாருக்கு (அருணாசலத் தம்பிரான்) 06-01-95 நாளிட்ட மடல்

நாள்: 06-01-1995.

மதிப்பிற்குரிய அடிகளார் அவர்களுக்கு வணக்கம்.

இரு நாட்களுக்கு முன் தினமணியில் தாங்கள் எழுதியிருந்த கட்டுரை படித்தேன். முதலாளியம் தன்னலத்தை அடிப்படையாகக் கொண்டது எனவே அது வேண்டாம், கூட்டுறவு முறையே சரியானது என்றும் நம் மரபுகள் அதாவது மதிப்பீடுகள் முதலாளியத்தால் அழிந்து போய்விடும் என்றும் எழுதியுள்ளீர்கள். மாற்றம் வேண்டும் அதுவும் விரைந்த மாற்றம் வேண்டும் என்று எழுதிய நீங்கள்தான் மரபு அழிந்துவிடும் என்று அஞ்சுகிறீர்கள். இது தங்களிடம் காணப்படும் ஓர் இரட்டைத் தன்மை என்று நான் கருதுகிறேன். 1981 இல் மதுரை புதூர் பேரூந்து நிலையத்தில் ஓர் அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் நீங்கள் பேசியதை ஒரேயோரு முறை கேட்டேன். முயற்சி பற்றியும் உடலுழைப்பு பற்றியும் மிக உயர்வான கருத்துகளை நெடுநேரம் உதிர்த்துவிட்டு அம்மனுக்குப் பூசையிட்டால் மழை பெய்யும் என்ற மூடக்கருத்தைக் கூறி முடித்தீர்கள். இந்த இரட்டை நிலை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதே இரட்டை நிலைதான் இன்றும் உங்களிடம் காணக்கிடக்கிறது.

மாற்றம் என்பது அமைதியாக, அழகாக, சீராக, இனிமையாக நடைபெறுவதில்லை. ஒரு மகப்பேற்றின் போது தாய் அடையும் நோவும் வலியும் சில வேளைகளில் சாவும் நேர்வதுபோல் குமுகத்திலும் நேரும். சிற்றுயிர்கள், நிலைத்தினையாயினும் விலங்கினமாயினும் பேற்றின் போது மாண்டுவிடுகின்றன. உயர் உயிர்கள் மாள்வதில்லையாயினும் அவற்றின் உடலிலுள்ள கண்ணறைகள் ஒவ்வொன்றும் புதுப்பிக்கப்படுகின்றன. அவ்வாறுதான் குமுகம் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்தை ஈனும்போது அதன் ஒவ்வொரு கூறும் ஒவ்வொரு தனியாளும் மாற்றம் பெறுகின்றனர். இதைத் தடுப்பதற்காக மாற்றத்தையே தள்ளிப் போடுவது குமுகக் கொலைக்கு ஒப்பாகும்; ஒரு தாயின் முற்றிய சூலை வெளியேறாமல் தடுத்தால் என்ன நிகழும்?

நாம் இன்று நிலக்கிழமைப் பண்பாட்டில் வாழ்கிறோம். அதன் இயல்பை வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் காண்கிறோம். பொருளியலில் முதலாளியத்தை நோக்கி இந்தக் குமுகம் நிற்கிறது. இம்முதலாளிய நிகழ்முறை முற்றுப்பெறுந்தோறும் தான் நிலக்கிழமைப் பண்பாடு அழிந்து உயர்ந்த ஒரு பண்பாட்டுத் தொகுதி உருவாகும். அதாவது பழைய ″மரபுகள்″ கட்டாயம் அழியும், அழிய வேண்டும். புதிய பண்பாட்டுத் தொகுதியில் பழைய மரபுகளில் சில மீண்டும் தோன்றும். ஆனால் அவை கட்டாயம் அகன்றே மீண்டும் தோன்றும். அதற்காக அழுது பயனில்லை. அவை அழிகின்றனவே என்று மாற்றங்களைத் தடுத்து நிறுத்துவது பேதைமை மட்டுமல்ல குமுகப் பகைமை.

நம் குமுகம் முதலாளியத்துக்கு மாறுவதை உங்களைப் போன்ற உள்நாட்டு அறிவுச் சிந்தனையாளர்கள் மட்டும் தடுக்க நினைக்கவில்லை. நம்மைச் சுரண்டிக் கொழுத்து நிற்கும் வல்லரசியத்தின் அனைத்து நிறுவனங்களும் திட்டமிட்டுத் தடுத்துவருகின்றன.

முதலாளியம் என்றால் என்னவென்று நீங்கள் அறிவீர்கள். அதாவது மார்க்சியம் கூறும் பெருமரபு அல்லது செவ்வியல்(Classical) முதலாளியம், அதாவது சிற்றுடைமைகள் எல்லாம் அழிந்து குமுகத்தின் விளைப்பு விசைகள் அனைத்தும் விரல்விட்டு எண்ணத் தக்க ஒரு சிலரிடம் குவிதல், பிறரனைவரும் அவ்வொரு சிலரிடம் கூலி பெறும் உழைப்பாளர்களாக (மூளை மற்றும் உடல் உழைப்பாளர்களாக) மாறுவது.

இந்த நிகழ்முறையால் சிற்றுடைமையாளரும் சிறு முதலாளிகளும் அச்சிற்றுடைமை எனும் மினுக்கமுள்ள விலங்கினின்று விடுபட்டு நிமிர்ந்து நின்று தத்தம் தனித்தன்மைகளை வளர்த்துக்கொள்ள முடியும். முதலாளிய நாட்டுப் பொதுமக்கள் பண்பாட்டு வளர்ச்சி இவ்வாறு வாய்த்ததே.

தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள கூட்டுறவுத் தந்தை ஓவனின் முயற்சிகள் தோற்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இங்கோ கூட்டுறவு பெயருக்குத்தான். உண்மையில் அரசின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்டு உறுப்பினர்கள் என்ற பெயரில் அடிமைகளை உருவாக்கி ஆட்டிப்படைத்து முதலாளியம் மூலம் கிடைக்கும் தொழிலாளர் நலன்கள் கூட மறுக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். அதற்கு எதிராக நீங்கள் குரல் கொடுக்கவில்லை.

உலகில் அமீபா என்ற ஒற்றைக் கண்ணறை உயிர் தோன்றியது ஏறக்குறைய 100 கோடி ஆண்டுகளுக்கு முன் என்றும் மீஇன்னாளைய கண்டுபிடிப்புகளின் படி மனித இனம் உருவாக அதிலிருந்த 97 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டது என்றும் அறிவியல் கூறுகிறது. இந்த 97 கோடி ஆண்டின் திரிவாக்கத்தை ஒவ்வொரு குழந்தையும் தாயின் வயிற்றினுள் 270 முதல் 290 நாட்களில் எய்திவிடுகிறது. தவளைக் குஞ்சாய், மீனாய், குரங்காய் மாறித்தான் ஒவ்வொரு குழந்தையும் மனிதக் குழந்தையாகிறது. இந்த விதியே குமுகத்திலும் செயற்படுகிறது. அது தான் மார்க்சு நாம் குமுக விதிகளை அறிந்து கொள்வதால் எந்த விதமான சட்ட நடவடிக்கை அல்லது உத்தியாலும் குமுகம் இடையிலுள்ள ஒரு கட்டத்தைக் கடக்காமல் குறுக்கு வழியில் இன்னொரு கட்டத்தினுள் தாவிச் சென்று விட முடியாது; ஒரு புதிய கட்டத்தை ஈனுவதற்குரிய பேற்றுக்கால நீட்சியையும் நோவையும் வேண்டுமானால் குறைக்கலாம் என்றார். இங்கும் அது தான்.

நம் நாட்டில் கூட்டுறவு அமைப்பு மூலம் மக்களை வாழவைக்கும் முயற்சி தோற்றுவிட்டது. நம் ஆளவந்தாரும் பொதுமைக் கட்சிகளும் இணைந்து நடத்திய சோசலிசம் எனும் போலி நிகர்மையும் வெளுத்துவிட்டது. அனைவரும் சேர்ந்து புரோகிதர்கள் போல் வருவோர் போவோரிடம் காணிக்கைக்காகக் கையேந்தும் இயற்கைக் குணமுள்ள அதே நேரத்தில் திமிர் பிடித்த அதிகாரக் கும்பலிடம் நாட்டின் பொருளியலையும் நாட்டுமக்களின் வாழ்வையும் ஒப்படைத்துவிட்டு மக்களுக்கு அறிவுரைகளும் அறவுரைகளும் கூறி மகிழ்கின்றோம். அயலவர்களுடைய மூலதனம் இங்கு புகுந்து நம் மக்களுக்குரிய இந்நாட்டு வளங்களனைத்தையும் வாரிக்கொண்டு போவதை எதிர்த்து வெறும் கூச்சல் போடுவதைத் தவிர வேறு எதையும் செய்ய மனமோ வகையோ அற்ற ″இடதுசாரி″ப் பொய்யர்களை நம்பி உள்நாட்டு மூலதனம், உள்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வகை காண்பதைப் பற்றிச் சிந்திக்கவில்லை.

″மனிதம்″ என்பது மனித இனத்தின் இலக்குதானே யொழிய இன்னும் எங்கும் எய்தப்பட்வில்லை. அந்த மனிதத்தை எய்தும் வழியில் அவனை இழுத்துச் செல்வது தன்னலமே. பலரின் தன்னலம் ஒன்று சேரும் போது அது பொது நலமாகிறது. ஒரு பணக்காரன் அச்செல்வத்தைத் தன் வாழ்க்கை வசதிகளுக்காகச் செலவிடும் போது அதிலிருந்து விளைவது அவனது நலன்களை மட்டுமே. அதே நேரத்தில் மீண்டும் பொருள் சேர்க்க வேண்டுமென்ற ″தன்னலத்தில்″ தொழில்களில் முதலிடும் போது நாட்டின் தொழில்துறையை வளர்க்கிறான். அதற்காக அவன் உழைப்பை, சிந்தனையைச் செலவிடுகிறான். புதிய மூலதனத்தை உருவாக்குவதற்காக மூலதனத்தின் அடிமையாகிக் குமுகச் செல்வத்தை உயர்த்துகிறான். நமது இன்றைய ″நிகர்மை″ இதனைத் தடுத்து நிறுத்த வல்லமை பெற்றுள்ளது; ஆனால் வெளியாரின் வேட்டையைத் தடுத்து நிறுத்த முடியாத பேடிமையுடையது. தங்கள் போன்ற ஆழ்ந்த அறிவுடையோருக்கு இதுவே அனைத்தையும் விளக்கும்.

இந்த நாட்டு மக்கள் தங்களுடைய நிலக்கிழமை அடிமைத்தனத்திலிருந்து அடிமைச் சிந்தனைகளிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது; தங்கள் வேட்டையும் தேட்டையும் குலைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்திய - வரவு செலவுத் திட்டத்தைப் போல் பல மடங்கு செலவில் பல்லாயிரம் ′தொண்டு′ நிறுவனங்களை இங்கு செயற்படுத்துகின்றன வல்லரசுகள். அவற்றின் நிகழ்ச்சிகளில் நீங்களும் அறிந்தோ அறியாமலோ கலந்துகொள்கின்றீர்கள்.

தாங்கள் தங்களிடம் காணும் இரட்டை நிலையையும் மீறித் தொடர்ந்து வேறுபட்டு நிற்கிறீர்கள். போலி ஆன்மிகக் குட்டையில் மக்களை மூழ்கடிக்க இடைவிடாது முயலும் சமயத் துறையினரிடையில் பொருளியல் வாழ்வின் இன்றியமையாமையை எடுத்துரைத்து எழுஞாயிறாக ஒளிர்கிறீர்கள். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் திருவாரூரில் திரு.வி.க. உருவத் திறப்புக்கு நண்பர் த.சரவணத் தமிழன் ஏற்படுத்தியிருந்த நிகழ்ச்சியில் பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரரசு முதலித் திட்டத்தைச் செயற்படுத்தாமைக்குக் கருணாநிதியைச் சபிக்கவும் நீங்கள் தயங்கவில்லை என்பதை நானறிவேன். நாம் வாழும்போது நம் பெயரும் புகழும் நம் செவிகளில் விழுந்தால் மட்டும் போதாது. நமக்குப் பின் நிலைத்து நிற்பது தான் உண்மையான புகழ். அதற்குச் சிலரது பகைமையையும் வெறுப்பையும் நாம் ஈட்டினாலும் இழப்பில்லை. இன்று நாம் வெறுக்கப்பட்டாலும் வரலாற்றில் நிலைத்து நிற்போம். புகழுக்காகத்தான் நாம் பாடுபட வேண்டுமென்பதில்லை. உண்மையான புகழ் தனியே வருவதில்லை. நாம் வாழும் மனிதக் குமுகத்தின் மேம்பாட்டைத் துணை கொண்டுதான் அது வரும்.

நல்வாழ்த்துகளுடனும் வணக்கங்களுடனும்
குமரிமைந்தன்.

கருணா மனோகரனின் நூல்கள், ″நிகழ்″ நேர்காணல் – சில கருத்து‌கள்

பாளையங்கோட்டை,
23-07-95.

மதிப்பிற்குரிய கருணா மனோகரன் அவர்களுக்கு குமரிமைந்தன் எழுதுவது,

ஏறக்குறைய இரண்டாண்டுகளுக்கு மு‌ன் தங்களின் சாதிய ச‌மூக அமைப்பும் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையும் என்ற நூலைப் படி‌த்தேன். படித்து முடித்தவுடன் என் வழக்கப்படி கருத்துகளை எழுத ஆயத்தமானேன். ஆனால் நேரம் இன்மையால் இயலாமல் போயிற்று. இப்போது நிகழ் தாங்கி வந்துள்ள தங்கள் நேர்காணல் உங்களைப் பற்றிய செய்திகளையும் கண்ணோட்டங்களையும் தெரியவைத்துள்ளது. திராவிடத்தால் வீழ்ந்தோமா? சாதியத்தால் வீழ்ந்தோமா? நூலையும் அது பற்றிய கு‌ன்றம்.மு.இராமரத்தினம் அவர்களின் திறனாய்வையும் (தாராமதி) பார்த்தேன்.

முதல் நூலைப் படித்தபோது எனக்குத் தோன்றியது தாங்கள் பா.ம.க.வின் கோட்பாட்டாளர் என்பது. ஈரோட்டில் நான் கேள்விப்பட்டது அதை உறுதி செய்தது. அதாவது பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் இணைந்து போராட வேண்டுமென்பது. ஆனால் இந்த முழக்கம் இயந்திர முறையில் வைக்கப்பட்டுள்ளது. இரு குழுவினருக்கும் பொதுவான நலன் ஏதும் முன்னிறுத்தப்படவில்லை, தமிழ்த் தேசியம் என்ற மிகப் பொதுப்படையான ஒன்றைத் தவிர. அதாவது செயல் திட்டம் உருவாக்கும் பணி தொடங்கவில்லை.

உங்கள் நூல்களின் அடிப்படையிலும் நேர்காணலின் அடிப்படையிலும் சில கருத்து‌களைச் சுருக்கமாக மு‌ன் வைக்கிறேன். இத்துடன் இணைத்துள்ள என்னுடைய எழுத்துகளின் படிகள் விளக்கமாக அமையலாம்.

மார்க்சியம்:

1. மார்க்சியம் கூறும் வளர்ச்சிப் படிநிலை சரிதான். ‌குக்குலம்(இனக்குழு) - அடிமைக் குமுகம் -‌ நிலக்கிழமை - முதலாளியம் - ? ஆனால் பாட்டாளியரே புரட்சிகரமானவர் என்பது வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகளுக்கே பொருந்தும். இன்றைய நிலையில் அதுவும் காலங்கடந்ததாகிவிட்டது. ஏழை நாடுகளில் மார்க்சியத்தின்படி புரட்சிகரப் பாட்டாளியரே உருவாகியிருக்க முடியாது. கருநிலையிலிரு‌க்கும் - தரகர்களாகிய பெருமுதலாளிகளாலும் அரசாலும் உலக வல்லரசியத்தாலும் ஒருசேர ஒடுக்கப்படும் - சிறு முதலாளிகளே அப்பங்கை ஏற்க வல்லோர்.

2. நேர்காணலில் (பக்.119,நிகழ்) "முதலாளியம் வருவதற்கு முன்பு இந்தியாவில் இருந்த சமூகக் குழுக்கள் யாவை?" என்ற வினா எழுப்பியுள்ளீர்கள். மார்க்சியக் கண்ணோட்த்திலான முதலாளியம் இங்கு எங்கே உள்ளது? இருப்பது முதலாளியத்துக்கு முந்திய ஆனால் உடைந்த அதே வேளையில் முற்றிலும் உடையாத, அழியாத நிலக்கிழமை தானே. நிலக்கிழமை ஆட்சியமைப்பை வெள்ளையன் அழித்தான். இருக்கும் பெரு‌ந்தொழில்கள் இங்கு வேர்கொள்ளாதவை, வல்லரசியத்தின் சிலந்தி வலைகள். அடிமட்டத்தில் ஏற்பட்‌ட சிறு சிறு தொழில்நுட்ப மாற்றங்களும் பழைய சாதிவரம்பை உடைக்காத வகையில் கடன், உதவி, சலுகை என்ற அளவில் அரசாலும் பொதுமைக் கட்‌சிளாலும் பேணப்படுகின்றன. நாவிதர்களுக்கு முடிதிருத்துக் கருவிகளும் வண்ணாருக்குத் தேய்ப்புப் பெட்டிகளும் செம்மாருக்கும் சக்கிலி‌யர்களும் செருப்புத் தைக்கும் கூண்டுகளும் வைத்துக்கொடுப்பதும் நெசவாளர், ஐந்தொழிற் கொல்லர்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கென்று தனித்தனிக் குடியிருப்புகளும் அமைத்துக் கொடுப்பதும் ஆச்சாரியாரின் பழைய ′′குலக்கல்வித்′′ திட்டத்தின் மறுவார்ப்புகளன்றி வேறென்ன? உண்மையில் நாம் எய்த வேண்டியது பெருமரபியல்(Classical) முதலாளியமே. அதுவும் கட்டுப்படுத்த முடியா வலிமையோடும் விரைவோடும் பழங்குமுகத்தை அடித்து நொறுக்கித் தகர்த்துக் குப்பையாக்கி வெள்ளமாக இழுத்துச் செல்லத்தக்க பேய்த்தனமான முதலாளியமே.

ஐரோப்பாவில் முதலாளியக் குமுகத்திலிரு‌ந்து பொதுமைக் குமுகத்துக்கு மாறிச் செல்வதற்குச் செயல்திட்டம் வகுத்த மார்க்சு வந்தேறி நாடுகளில் நிலக்கிழமையிலிருந்து முதலாளியத்துக்கு முன்னேறுவதற்குச் செயல்திட்டம் வகுக்கவில்லை. பிறரும் இதுவரை அதனைச் செய்யவில்லை. இப்போது நாம் செய்ய வேண்டும்.

3. முதலாளியத்துக்கான இந்தச் செயல்திட்டம்தான் நீங்கள் குறிப்பிடும் இரு குழுக்களையும் (பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர்) ஒன்றிணைக்க முடியும். அதற்கு அவ்வகுப்புகளிலுள்ள பணம்படைத்தோரையே முதலில் நாம் தொட வேண்டும். மேற்சாதியினரிடமிருந்தும் துணை கிடைக்கும்.

உலகில் இதுவரை நடைபெற்ற நாமறிந்த இயக்கங்கள் அனைத்துமே மேல்மட்டத்திலிருந்தே தொடங்கியுள்ளன. பேரவைக் கட்சி (காங்கிரசு), திராவிடர் இயக்கம், சிறிய குமரி மாவட்டத் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு, உருசிய போல்சுவிக் கட்சி அனைத்துக்கும் இது பொருந்தும்.

உங்கள் களப்பட்டறிவிலிருந்து தெரிந்து கொண்ட உண்மை என்னவென்றால் கீழிருந்து எந்த அமைப்பையும் கட்டி எழுப்ப முடியாது என்பதாகும். எந்த ஓர் இயக்கத்தையும் தொடங்குவதற்குத் தேவையான தொடக்கவிசையை வழங்குவதற்கு மேலுள்ள வகுப்புகளால்தான் முடியும். ஊர்திகள் மேலிருந்து கீயர்களால் மாற்றப்பட்டு இயங்கும் அதே நடைமுறையே குமுக இயக்கங்களுக்கும் பொருந்தும். கீழிருந்து கட்டியெழுப்புமாறு வழங்கப்பட்ட அறிவுரைகளெல்லாம் அறியாமையால் விளைந்தவையல்ல. உலகளாவிய ஒரு வல்லரசுச் சூழ்ச்சியின் விளைவுதான். சிறுதொழில் தொடங்க உதவுகிறேன் என்று ஏழை எளிய மக்களுக்கு ஆசைகாட்டி அவர்களின் மன உறுதியைத் தகர்த்தெறியு‌ம் அதே உத்திதான் இதுவும். நல்லவேளை உங்கள் மனம் இன்னும் உறுதியாக இருக்கிறது.

4. நீங்கள் கருதுவது போல் சாதியம் ஒன்றும் இறுகி‌போனதல்ல. அதற்கும் இயக்கம் உண்டு. கழக(சங்க) காலத்திலும் இடைக்காலத்திலும் அண்மை நூற்றாண்டுகளிலும் சாதியமைப்புகள் இடைவிடாமல் மாறிவந்துள்ளன இதைப்பற்றிய ′குன்றம்′ திறனாய்வு சரியே.

திராவிட இயக்கத்திற்கு முன்பும் இப்போதும் உள்ள சாதி உறவுகளே இதைப் புலப்படுத்தும். முன்பு சாதி ஏற்றத் தாழ்வு இருந்த இடத்தைச் சாதிப் பகைமைகள் பிடித்துள்ளன. முன்பு சாதிகள் இல்லையென்று கீழ்ச்சாதியினர் முழங்கினர். இன்று ஒதுக்கீட்டினால் இழப்பெய்துவோம் என்ற அச்சத்தில் (அப்படி ஒன்றும் இழந்துவிட வில்லை அவர்கள்) சாதிகள் இல்லை என்று மேற்சாதியினர் அலறுகிறார்கள்.

எண்ணூறு ஆண்டுகளாக தமிழக மக்கள் விருதுகள் என்ற குமுகியல் - அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கும் அதைத் தடுப்பதற்குமான கொலைவெறிச் சண்டையில் வலங்கையினர் - இடங்கையினர் எனப் பிரிந்து ஈடுபட்டிருந்தனர். அரசர்களும் பார்ப்பனர்களும் இதனைத் தூண்டிவிட்டனர். அதற்கு முன் 12ஆம் நூற்றா‌ண்டில் இவ்விரு குழுவினரும் இணைந்து அரசன் ஒருவனை (அதிராசேந்திரன் என்ற சோழன்)க் கொன்றனர். கோயில்களை இடிந்தனர். பார்ப்பனப் பூசாரிகளைக் கொன்றனர்.

வெள்ளையர்தான் இச்சண்டையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

5. இந்திய விடுதலைப் போராட்டத்தின்போதும் அதைவிடவும் சிறப்பாகத் திராவிட இயக்கத்தின் தொடக்கத்திலும் சாதி வரம்புகள் மங்கத் தொடங்கின. திராவிட இயக்கத்தினரின் ஏமாற்றும் பொதுமையினரின் இரண்டகமும் அந்தச் சூழலைச் சிதைத்தன. எனவே சாதி அழிக்க முடியாதது என்பது ஒரு கையறு உ‌ணர்வே.

தங்கள் திராவிடத்தால் வீழ்ந்தோமா? சாதியத்தால் வீழ்ந்தோமா?வில் மரபுத் தொழில் இறுமாப்பு பற்றிய தங்கள் கூற்று ஓர் அரிய கண்டுபிடிப்பு. இதிலிருந்து நீங்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். சாதியத்தின் அழிவுக்கு முதன்முதல் தேவை மரபுத் தொழில்களை அழிப்பது. அதுமட்டுமல்ல, மக்களின் மரபு வாழிடங்களும் சாதியத்தின் வேர்களைப் பிடித்து வைத்துள்ளன. எனவே நமக்குத் தேவையானவை:

1. மரபுத் தொழில்களின் அழிவு
2. மக்கள் ஒட்டுமொத்தமாக இடம் பெயர்வது.

இதை நடைமுறைப்படுத்த இருவகை நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும்.

1. மக்களால் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் உள்ளிருந்தே உருவாகும் பொருளியல் நடவடிக்கைகள் அல்லது
2. கடுமையான, நீண்ட ஓர் உள்நாட்டுப்போர் அல்லது
3. இரண்டும்.

இறுதியில் ஓர் ஐயம், பா.ம.க. தலைவரிடம் கூட்டணி தொடர்பாக வாழப்பாடியைச் சந்திக்க வைத்தது தாங்கள்தான் என்று ஈரோட்டில் பேசிக்கொண்டார்கள். அது ‌உண்மையா? அது ஏன்? தன் தீர்மானி‌ப்‌புரிமை பற்றிய தீர்மானம் இயற்றுமாறு தூண்டியதில் ′மார்க்சியர்களான′ தங்களுக்கும் அ.மார்க்சுக்கும் பங்குண்டா? அதனால் உருவான இக்கட்டிலிருந்து தப்பத்தான் அந்த உத்தி கையாளப்பட்டதா? அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

வழக்கமாக ′மார்க்சியர்‌கள்′ இதுபோல் தூண்டிவிட்டு நட்டாற்றில் அல்லது நடுத்தெருவில் விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள், திருப்பத்தூரிலும் தருமபுரியிலும் போல. ஆனால் நீங்கள் தவறைப் புரிந்துகொண்டு உடனிருந்து உதவியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் பா.ம.க. உங்களைப் போன்றவர்கள் இடம்பெறத்தக்க அமைப்புதானா?

தங்கள் மறுமொழியை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
குமரிமைந்தன்.

20.8.07

மொழியும் அரசியலும் பொருளியலும்

அறிமுகம்

இன்று தமிழகத்தில் தாய்மொழிக் கல்வி, தமிழ் ஆட்சி மொழி போன்ற சிக்கல்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு தோன்றியுள்ளது மகிழ்வூட்டுகிறது. இவ்வரங்கில் ஆட்சி மொழி பற்றி மட்டும் ஆயப்படுகிறது.

தமிழ் ஆண்ட ஒரு மொழியா?

தமிழக வரலாற்றில் தமிழ் என்று ஆட்சியிலிருந்தது என்பதே கேள்விக்குறியாக நம் முன் நிற்கிறது. சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களில் தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரமான மதுரையில் வேள்விப்புகையின் நடுவே வடமொழி வேதங்களின் ஒலியே நிறைந்திருந்ததைக் காண்கிறோம். சிலப்பதிகாரம் காட்டும் பூம்புகாரில் இந்திரவிழாவில்கூட அந்த அளவுக்கு வேதங்களின் ஆதிக்கம் காணப்படவில்லை. ஆனால் சேரனின் வஞ்சியில் அரண்மனைக் கோயிலின் உள்ளிருந்து வடமொழிப் பூசை செய்யும் பூசாரி தலையை நீட்டுவதைக் காண்கிறோம்.

பொதுவாக உலக வரலாற்றில் ஆளுவோரும் பூசாரிகளும் மக்களுக்குப் புரியாத மொழிகளையே விரும்பி வந்துள்ளனர். ஐரோப்பாவில் ஏறக்குறைய 13 நூற்றாண்டுக் காலம் ஆட்சியிலும் கோயில்களிலும் மக்களுக்குப் புரியாத கிரேக்கமும் இலத்தீனும் தான் பயன்பட்டன. இங்கிலாந்தின் நான்காம் என்ரியும் செருமனியின் மார்ட்டின் லூதரும் கிளப்பிய புயலினால் வெடித்த போர்களில் ஒரு நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக ஓடிய குருதியாறுதான் இவ்விரண்டு மொழிகளைக் கரைத்து மக்களின் தாய் மொழிகளுக்கு இடமளிக்கத் தொடங்கியது.

தமிழகத்திலும் கழகக் காலத்தில் தமிழ் ஆட்சி மொழியாயிருந்திருக்கக் கூடும். ஆனால் கழகத்தின் இறுதிக் காலத்தில் ஆட்சியினுள் வேதமொழி ஆதிக்கம் புகுந்துவிட்டதற்குத் தடயங்கள் உள்ளன.

கழக இலக்கியங்களைத் தொகுத்தவர்களில் ஒருவராகக் கருதப்படும் உருத்திர சன்மனின் பெயர் ருத்ரசர்மா என்பதன் தமிழ் வடிவமே. இந்தப் பின்னணியில் களப்பிரர்களின் காலத்திலும் பல்லவர்களின் காலத்திலும் சமற்கிருதம் ஆட்சி மொழியானது ஒரு நிகழ்முறைத் தொடர்ச்சியின் விளைவேயன்றி மாற்று மொழியாளர் படையெடுப்பின் விளைவென்று கொள்வதற்கில்லை.

பல்லவர்கள் காலஞ் செல்லச் செல்ல தமிழ் மீது கவனம் செலுத்தியதிலிருந்து மக்களின் செயற்பாடு அதன் பின்னணியில் இருந்திருக்க வேண்டுமென்பது புரிகிறது. பல்லவர்களின் இறுதிக்காலத்தில் அரசனின் ஆதரவோடு தோன்றிய நந்திக் கலம்பகம் அவனுக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காகப் பொதுமக்கள் ஆதரவை நாடிநின்றதன் ஒரு அடையாளமே.

களப்பிரர், பல்லவர் காலங்களுக்குப் பின்னர் தோன்றிய சிவனிய எழுச்சியில் ஒரு தனித்தமிழ் இயக்கமும் அடங்கியிருக்கிறது. ஆனால் அவ்வியக்கத்தையொட்டி உருவான சோழப்பேரரசு தமிழில் பொறித்த கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் குறிப்பாக அவற்றின் மெய்சீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது.

அரசுகளும், கோயில்களும் முற்றிலும் சமற்கிருதக் கல்விக்கே அனைத்து உதவிகளும் செய்தன. மடங்களும் அம்மொழிக்கே முதலிடம் தந்தன. அதனால் பொதுமக்கள் அறிவதற்காகத் தமிழில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் எழுத்து, இலக்கணம் என்று அனைத்துவகையிலும் தரம் இழந்திருந்தன. இக்காலகட்டத்தில் செப்புத் தகடுகளில் அரசனின் மெய்சீர்த்திகள் பொறிக்கப்பட்டு அவை உள்ளூர் ஆட்சியமைப்புகளுக்கு வழங்கப்பட்டனவென்றும் அவற்றில் ஆவணச் செய்திகளை உள்ளூர் மக்கள் எழுதிக் கல்வெட்டுகளிலும் பொறித்தவர் என்றும் பர்ட்டன் றீன் என்ற அமெரிக்க ஆய்வாளர் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. இவ்வாவணங்களில் காணப்படும் கழகக் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் சில சொல்லாட்சிகள் இன்று வரையிலும் கையாளப்படுகின்றன.

சோழர்களின் காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் விளைவாகவே கலிங்கத்துப் பரணி, மூவருலா, வீரசோழியம் போன்ற நூல்கள் அரசனின் ஆதரவுடன் தோன்றின. சோழனின் அமைச்சரான சேக்கிழாரைக் கொண்டு பெரிய புராணத்தை அரசனே எழுதுவித்ததற்கும் அரசியற் பின்னணி உண்டு.

கம்பராமாயணம் அரசனின் எதிர்ப்புக்கு நடுவே எழுந்ததென்று கருத இடமுள்ளது. அதுபோலவே தமிழில் இடைக்காலத்தில் உருவான பல இலக்கியங்களும் சிற்றரசர்கள் மற்றும் உயர்குடியினரின் ஆதரவினாலும் ஆட்சியாளரை அண்டியும் அகன்றும் நடைபெற்று சமய வடிவிலான மக்கள் இயக்கங்களிலிருந்தும் தோன்றியவையே.

மொத்தத்தில் சென்ற ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் அரசுகளினால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. அதையும் மீறி மக்கள் அம்மொழியின் சீரிளமைத் திறம் குறையாது வைத்திருக்கின்றனர். வெவ்வேறு காலங்களில் மேல்மட்டத்திலுள்ள வெவ்வேறு குழுக்கள் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகத் தமிழை, அதிலும் குறிப்பாக, ஒதுக்கப்பட்ட மக்களின் தமிழை மீட்டிருக்கின்றன. சிவனிய(சைவ), மாலிய(வைணவ), சமண, புத்த இலக்கியங்கள், பிற்காலத்தில் தோன்றிய குறவஞ்சி, பள்ளு போன்ற இலக்கியங்கள் இதற்கான எடுத்துக்காட்டுகள். இறுதியில் கிறித்தவர்கள், அதிலும் கத்தோலிக்கத் கிறித்தவர்கள் தமிழை மீட்டெடுப்பதில் தைரியநாதராயிருந்து தன்னை உயர்த்திக் கொள்வது மூலம் தமிழை உயர்த்திய வீரமாமுனிவரின் வழிகாட்டலில் பெரும் பங்காற்றியிருக்கின்றனர்.

ஆனால் இவர்களின் முயற்சிகளுக்குக் காரணமாகவும் மூலவளமாகவும் இருந்தது உழைக்கும் பெருங்குடி மக்களின் தமிழே. ஒதுக்கப்பட்டிருந்த அவர்களின் கோட்டையினுள் பிறமொழி ஆதிக்கம் ஊடுருவ முடியவில்லை. வெட்ட வெட்டத் தளிர்க்கும் உயிர்மரமாகத் தமிழ் அவர்களிடம் வேர்கொண்டிருந்தது. ஆனால் இன்றைய நிலை மாறிவிட்டது. அறிவியலின் விளைவான திரைப்படங்களும் வானொலியும் தொலைக்காட்சியும் தமிழின் வேரில் வென்னீர் ஊற்றுகின்றன. இந்த நிலையில் தமிழைக் காக்கவும் மீட்கவும் நாம் அதிக முனைப்போடும் ஆழ்ந்த சிந்தனையோடும் செயற்பட வேண்டியுள்ளது.

″விடுதலைக்கு″ப் பின் பதவியேற்ற அரசுகள் தமிழ் ஆட்சி மொழியாவதற்குப் பெரும் முயற்சிகள் மேற்கொண்டன. படிப்படியாகத் தமிழ் ஆட்சிப் பணிகளில் இடம் பிடித்து முன்னேறியது. ஆனால் அதற்குப் பல தடைகள் போடப்பட்டன. எடுத்துக்காட்டாக உயர்நீதி மன்றத்தில் தமிழில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற திட்டம் தமிழக அரசால் உருவாக்கப்பட்ட அதே வேளையில் நடுவணரசு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாநிலத்துக்கு மாநிலம் மாற்றப்படுவார் என்று ஆணை பிறப்பித்தது. எனவே தீர்ப்புகளைத் தமிழில் எழுதும் முயற்சி மேற்கொள்ளப்படவே இல்லை.

ஐந்தாண்டுத் திட்டம் போன்று ஏறக்குறைய மாநிலத்தின் அனைத்துத் துறைத் திட்டங்களும் நடுவணரசிடமிருந்து உதவி பெறும் வகையில் இந்திய அரசின் நிதி ஆள்வினை மாற்றப்பட்டது. எனவே உருவாக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உருவாக்கப்பட்டன.

மாற்றம் என்பது கடினமான உழைப்பும் கவனமும் தேவையான நிகழ்முறை. அதனைச் செயற்படுத்துவது எளிதல்ல. இந்தச் சிக்கலான நிலையில் மேற்கூறியவாறான தடைகள் இந்த மாற்றத்தைச் செயற்படுத்தும் எண்ணத்தையே இல்லாமலாக்கி விடுகிறது.

இந்த மாற்றத்தைச் செய்ய பொதுமக்களின் எழுச்சி தேவை. ஆனால் இந்த எழுச்சி தோன்றுவதற்குரிய சூழ்நிலையும் இல்லை. அதாவது தமிழக மக்களின் வாழ்வுக்குத் தமிழ் அறிவு இன்றியமையாதது என்ற சூழ்நிலை இல்லை. குறைந்தது தமிழால் வாழமுடியும் என்ற நிலை, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், பாட்டரங்கம், கருத்தரங்கம் நிகழ்த்துவோர் தவிர, சராரசித் தமிழ் மகனுக்கு இல்லை. உள்நாட்டில் வேலை வாய்ப்பில்லை; எனவே பிற மாநிலம், ஏதாவது அயல்நாடு ஒன்றுக்கு ஓடுவதுதான் வாழ வழி என்ற சூழ்நிலை உள்ளது. இதனால் தமிழ் ஆட்சிமொழி அல்லது கல்வி மொழியாக இருக்க வேண்டும் என்ற உந்துதலுக்கு வழியில்லை.

இந்த நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும்? நம் நாடு பொருளியலில் தற்சார்பு பெற நாம் போராட வேண்டும். மக்களின் மூலதனத்தையும் முன் முயற்சியையும் உழைப்பையும் முடக்கும் வகையில் அமைந்திருக்கும் வருமானவரிக் கெடுபிடிகள், தொழில் உரிமமுறை, மூலப்பொருட்களுக்கு ஒதுக்கிட்டுமுறை, இசைவாணை(பெர்மிட்) முறை ஆகியவை ஒழியப் பாடுபட வேண்டும். ஏற்றுமதி என்ற பெயரில் அரும்பொருட்கள் எல்லாம் மூலப்பொருள் நிலையில் ஏற்றுமதி செய்யப்படுவதை எதிர்த்து நாம் போராட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் தான் இங்கு பிழைக்க முடியாமல் பிற நாடுகளுக்கு பிழைப்பு தேடி ஓடுவதற்கும் அவ்வாறு ஓடிய இடங்களில் பன்றிகளைப் போல் இருட்டறைகளில் அடைக்கப்பட்டும் நாய்களைப் போல் கொலை செய்யப்பட்டும் அழிவை நோக்கி நடைபோடும் இளைய தலைமுறையின் கவனம் நம் நாட்டின் மீதும் அதன் இன்றைய அவலநிலைக்குரிய காரணங்கள் மீதும் திரும்பும். அவற்றின் விளைவாக எழும் செயலூக்கங்களில் ஒன்றாக கலை இலக்கிய மலர்ச்சி தோன்றும். பிற மொழிக் கல்விக்கு மக்களிடையில் இருக்கும் நாட்டம் குறையும்; அவர்களின் ஆதரவை நாடும் நம் முயற்சியும் வெற்றி பெறும்.

ஆட்சியாளர்கள் எப்போதுமே மக்களுக்குப் புரியாத மொழியொன்று ஆட்சி மொழியாக இருப்பதைத் தான் விரும்புவர் என்று மேலே குறிப்பிட்டோம். நம் நாட்டில் நேற்று சமற்கிருதம். இன்று ஆங்கிலம், மக்களிடையில் ஆங்கிலக்கல்வி பரவினமையால் அது பலருக்கும் புரிந்து கொள்ளத்தக்க மொழியாகி விட்டது. எனவே இப்போது இந்தியைப் பற்றிக்கொள்ள முனைகின்றனர். இத்தகைய சூழலில் நாம் உரிய வகையில் செயலாற்றாமலிருந்தால் அடுத்து இந்தி மொழி தான் ஆட்சிமொழி கல்விமொழியாகும்.

எனவே நாம் ஆட்சியும் கல்வியும் தமிழ் இடம் பெற வேண்டுமென்று நினைத்தால் பொருளியல் தற்சார்புக்கான போராட்டங்களின் மூலம் பொதுமக்களின் கவனத்தையும் ஆதரவையும் ஈர்த்து அத்துடன் தமிழ் மொழி மேம்பாட்டுக்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

சொல்லாக்கத்தைப் பொறுத்த வரையில் அதற்குத் தேவையான மனித வளத்தைப் பெறுவது பெரும் சிக்கலில்லை. மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட திறன் தேவையாயிருந்து அத்திறனை வெளிப்படுத்துவோருக்குச் சிறப்பு கிடைக்கும் நிலையிருந்தால் திறனுள்ளோர் தாமே வெளிப்படுவர்.

இருந்தாலும் இன்று மொழிபெயர்ப்புப் பணியிலிறங்குவோர் முதலில் கழக இலக்கியங்கள் தொடங்கி வெள்ளையர் வரும் வரை எழுந்த இலக்கியங்கள் அவற்றிலும் சிறப்பாக அந்நூற்களுக்குப் பண்டை உரையாசிரியர்கள் எழுதிய பல்வேறு வகைப்பட்ட உரையாக்கங்கள், கல்வெட்டுகள், பட்டயங்கள் ஆகிய அனைத்தையும் அலச வேண்டும். அவை அனைத்துக்கும் சொல்லடைவு, பொருளடைவு உருவாக்க வேண்டும். அவற்றிலிருந்து ஆட்சித்துறையில் தேவைப்படும் சொற்களை அப்படியே பெற்றுக்கொள்ள முடியும். அறிவியல்துறையிலும் கலையியல், மொழியியல் துறையிலும் பலவற்றுக்கு பொருள் விளக்கமும் தமிழ் வடிவமும் கிடைக்கும். அவற்றுக்கு உட்படாத சொற்களுக்கு மட்டுமே புதிய சொற்களை வடிக்க வேண்டியிருக்கும்.

அவ்வாறு புதிதாகப் புனைய வேண்டிய சொற்களை அதன் நடைமுறைக் கருத்தின் அடிப்படையிலும் மூலமொழிச் சொல்லின் வேர்ப் பொருளைக் கண்டும் புனையலாம்.

அவையன்றி கலைக்கதிர் போன்ற இதழ்களும் பாவாணர், பெருஞ்சித்திரனார், வா.மு.சேதுராமன், இராமலிங்கனார் போன்று இயக்கமாகச் செயற்பட்டவர்களும் கே.என்.இராமசந்திரன், இல.க.இரத்தினவேலு போன்ற எண்ணற்ற தனி ஆர்வலர்களும் உருவாக்கியுள்ள சொற்களைத் தொகுத்துத் தெரிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தப் பணிகளை எல்லாம் அரசாங்கம் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. கடந்த காலம் போல் தமிழகத்துப் பொதுமக்களே அமைப்புகளை ஏற்படுத்தி பணமும் நல்ல மனமும் படைத்த பெருமக்களின் ஆதரவை நாடிப் பெற்றுச் செயற்படுத்த வேண்டும். மதுரை பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியொன்று மிகச் சிறப்பான ஒரு செயல்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவது பயனுடையதாயிருக்கும். அதே வேளையில் இந்நாட்டின் பொருள் வளஞ்சிறக்கத் தேவையான முயற்சிகளின்பால் மக்களின் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் அவர்களுக்கு அதற்குரிய வழிகாட்டுதலும் கூட இன்றியமையாதது, முதன்மையானது.

நிலமும் காலமும் முதற்பொருளென்பது பொருளிலக்கணம். மொழி மரமானால் அம்மொழி பேசும் மனிதன் அம்மரத்தை ஈன்று வளர்த்துத் தாங்கி நிற்கும் நிலமாகும். நிலம் பாழாகிப் போனால் மரம் வாழாது. பேசும் மக்கள் வளங்குன்றி வறுமையுற்று வேரற்று நிற்பார்களானால் மொழி எவ்வாறு வளம் பெறும்? எனவே தமிழை வளர்க்க வேண்டுமென்று நெஞ்சார விரும்புவோர் தமிழ் மக்களின் பொருளியல் வாழ்வு சிறக்கத் தேவையான நடவடிக்கைகளில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள்

தமிழனுக்குக் குமரிக் கண்டம் தாயகம் என்பது குழப்பமின்றி ஏற்கப்பட வேண்டுமென்றால் முதலில் இனக் கோட்பாடு எனும் போலிக் கோட்பாடு கைவிடப்பட வேண்டும். அக்கோட்பாட்டைப் பெற்றெடுத்த மாக்சு முல்லரே அதைக் கைவிட்டுவிட்டார். (வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், origin And spread of Tamils) இன்றுவரை ஆரியர்களுக்குரியதாக ஒரேயோர் அகழ்வாய்வுக் களம்கூடக் கிடைக்கவில்லை.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசின்கீழ் சிந்து சமவெளி வந்தது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் அதனைக் கைப்பற்றினர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை அவர்களுடைய அரசியற் செல்வாக்கு அம்மண்டலத்தில் நிலவியது. இந்தக் கட்டத்தில்தான் சமற்கிருத மொழி உருவாகி வளம் பெற்றது. வட இந்தியப் பண்பாடும் உருவம் பெற்றது. இதுதான் சமற்கிருதத்தில் ஐரோப்பிய மொழிகளின் சில சொற்கள் இடம் பெற்ற பின்னணி.

ஆரிய இனக் கோட்பாடு கைவிடப்பட்டால் தமிழர் வரலாற்றிலுள்ள பல குழப்பங்கள் விலகும்.

தொல்காப்பியத்திற் கூறப்படும் வருணனும் இந்திரனும் வேதங்களிலும் கூறப்படுகின்றனர். சோழர்களுக்கும் இந்திரனுக்கும் உள்ள நெருக்கமான உறவும் பாண்டியர்களுக்கு அவனிடமுள்ள பகையும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன. இந்திரனும் வெள்ளையானையும் கரும்பும் இந்தோனேசியத் தீவுகளுடன் தொடர்புடையவை எனக் கூறுவர். அத்தீவுக் கூட்டங்கள் சுமத்ரா(நன்மதுரை -மூலமதுரை), பாலி(தென்பாலி-பாலிமொழி), புருனெய்(பொருனை) என்ற பெயர்களைக் கொண்டுள்ளன. அத்தீவுக் கூட்டங்களில் ஒன்றின் பெயர், இலாமுரி தேசம் என்று இராசேந்திரன் கல்வெட்டொன்று கூறுகிறது. எனவே இலெமுரியாக் கண்டம் என்ற பெயரும் பண்டையிலிருந்தே வருகிறதென்று தெரிகிறது.

இச் செய்திகளிலிருந்து குமரிக் கண்டத் தமிழர்களுக்கும் வேதங்களுக்கும் உள்ள உறவு புலப்படும்.

மணிமேகலையின் முன்பிறப்பு பற்றிய கதையில் காந்தார நாட்டில் பூருவ தேயத்தை ஆண்ட அத்திபதி என்ற மன்னனிடம் அவன் நாடு உட்பட நாகநாட்டில் நானூறு யோசனை நிலம் கடலில் முழுகுமென்று கூறப்பட்டது. அவன் விலங்குகளையும் மக்களையும் உடன்கொண்டு வடக்கு நோக்கிச் சென்று அவந்தி நாட்டில் காயங்கரை என்ற ஆற்றின் கரையில் சேர்ந்தான் என்று கூறப்பட்டுள்ளது.

சீத்தலைச் சாத்தனார் தமிழ்ப்பற்றை விட சமயப்பற்று மிகுந்தவர் என்பது அவர் நூலை மேலோட்டமாகப் பார்க்கும் போதுகூட வெளிப்படும். எனவே அவரது இந்தக் கூற்றை நாம் நம்பலாம். காந்தாரம் எனும் இன்றைய ஆப்கானிய நகரத்துக்குக் குமரிக் கண்டத்தில் முழுகிய நகர்ப் பெயரே இடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல பாண்டவர்களின் குலம் பூருவ இனமாகும். அவந்தி நாட்டிலுள்ள காயங்கரை என்ற ஆறு சிந்து சமவெளியில் ஓடிப் பின்னர் பாலைவனத்து மணலுள் மறைந்த கோக்ரா ஆறேயாகும். இதே கோக்ரா என்று பெயர் கங்கையின் கிளை நதி ஒன்றுக்கும் உண்டு. இவ்வாறு அவந்தி எனப்படும் குசராத்தின் கரைகளை அடைந்த குமரிக்கண்ட மக்கள் வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு என்று வடஇந்தியா முழுவதும் பரவினர். குமரிக் கண்டத்திலிருந்த போதும் புதிய இடத்திலும் அவர்களிடையில் உருவான பாடல்களே வேதப் பாடல்கள். அப்பாடல்களில் இன்னும் இனம் காண முடியாத இடப்பெயர்கள் குமரிக் கண்டத்திற்குரியனவாக இருக்க வேண்டும். எனவே குமரிக் கண்ட இடப்பெயர்களை அறிய வேதங்கள் உதவும். அதுபோலவே புராணங்களும் குமரிக் கண்ட மக்களின் வரலாற்றைப் புரிந்து கொள்ள மிகவும் உதவும்.

இன்று ஆரிய மொழிகள் என்ற வகைப்பாட்டில் கீழ் மேலையாரிய மொழிகள் என்ற பிரிவில் கிரேக்கமும் இலத்தீனும் வருகின்றன. அம்மொழிகளுக்கும் சமற்கிருதத்துக்கும் உறவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இம்மொழிகளுக்கு இடையில் காணப்படும் நெருக்கத்தைவிடத் தமிழுக்கும் கிரேக்க இலத்தீன் மொழிகளுக்கும், தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் அடிப்படையான உறவு இருப்பதை எளிதில் காண முடியும். அதுபோல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பேசப்படும் மொழிகளுக்கும் தமிழுடன் நெருக்கமான தொடர்பிருப்பதை மெய்ப்பிக்க முடியும். இதனடிப்படையில் உலகமொழிக் குடும்பங்கள் மறுவகைப்படுத்தப்பட வேண்டும்.

பினீசியர்கள் தென்னிந்தியாவிலிருந்து பாரசீகக் குடா வழியாக ஆசியாமைனர் சென்று குடியேறியவர்கள். அவர்கள்தான் கிரேக்கர்களுக்கு எழுத்துகளும் நாகரிகமும் வழங்கியவர்கள் என்று இரோடோட்டர் கூறுகிறார். ஐரோப்பா என்ற பெயரும் அவர்கள் தொடர்பானதே. தொட்டதெல்லாம் பொன்னாகும் கதையில் வரும் மன்னவன், ஓடிப்பசின் பாட்டன் காட்மஸ் எனப்படும் கடம்பன் அனைவரும் பினீசியர்களே. பினீசியர்கள் சிவந்த படகுகளில் பயணம் செய்தவராகக் கூறப்படுகிறது. நம் நாட்டுச் செம்படவர்களைப் பற்றி ஆய்ந்தால் தடையம் ஏதாவது கிடைக்கலாம்.

மக்கள் குமரிக் கண்டத்திலிருந்து தமிழகத்தினுள் நுழைந்து வடக்கு நோக்கிப் பயணம் செய்தமைக்குக் சான்றுகளாக இடப்பெயர்கள் அமைந்துள்ளன. பறளியாறு என்ற பெயர் குமரி மாவட்டத்தில் இரண்டிடங்களிலும் கேரளத்தில் ஓரிடத்திலும் சேலம் மாவட்டத்தில் ஓரிடத்திலும் வழங்குகிறது. இலங்கைக்கு நாகத்தீவு, சேரன்தீவு, தாம்பரபரணி என்ற பெயர்கள் இருந்திருக்கின்றன. இன்றைய நெல்லை தாமிரபரணியாற்றுக்குப் பொருனை, சோழனாறு என்ற பெயர்கள் இருந்திருக்கின்றன.

குமரிக் கண்டத்தில் முதலில் ஏழு குக்குலங்கள் இருந்திருக்கின்றன. அவற்றின் மூலவர்கள் ஏழு பெண்கள். அவர்களை ஏழு கன்னிகள் என்றும் ஏழு தாய்கள் என்றும் கூறுவர். பின்னர் அக்குலங்கள் ஆண்களின் தலைமையின் கீழ் இயங்கின. அவர்களை ஏழு முனிவர்கள் என அழைப்பர். இந்த ஏழு குக்குல முதல்வர்களின் துணையுடன் இந்திரன் ஆண்டான். உண்மையான ஆட்சித் தலைவர் இந்திராணியே. இந்திரனை இந்த ஏழு குக்குலத் தலைவர்களுமே தேர்ந்தெடுத்தனர், நினைத்த போது அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்றினர். இந்திராணி தொடர்வாள். மகாபாரதத்தில் வரும் நகுசன் கதையையும் சோசப் காம்பெல் எழுதிய Masks of Gods-Primitive Mythology என்று நூலில் எகிப்திலிருந்த பண்டை நடைமுறை பற்றிய குறிப்பையும் ஒப்பிடுகையில் இதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு குமுகத்தில் அரசு தோன்றுவதற்கு முதற்படி மக்கள் குக்குலங்களாகப் பிரிந்திருப்பது மாறி நில எல்லை அடிப்படையில் பிரியத் தொடங்குவதே என்று ஏங்கெல்சு என்பார் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் குறிப்பிடுகிறார். உலக வரலாற்றில் மக்கள் நில அடிப்படையில் பிரிந்து நின்றதைத் தரும் முதல் ஆவணம் தமிழின் பொருளிலக்கணமே.

பொருளிலக்கணம் குமரிக் கண்ட மக்கள் குக்குல நிலையிலிருந்து மேம்பட்டு நிலங்களுக்கேற்ற வகையில் பொருளியலிலும் அதன் விளைவாகப் பண்பாண்டிலும் ஒருவருக்கொருவர் மாறி நின்றனர். அவர்களது குடும்ப அமைப்புகளும் போர்முறையும் மாறி நின்றன. குறிஞ்சி நில மக்கள் திருமணம் இன்றி சந்தித்த இடத்தில் கூடிப் பிரிந்தனர்; ஆ கவர்தலே போர் நோக்கமாக இருந்தது. முல்லை நில மக்கள் தாங்கள் விரும்பும்வரை சேர்ந்து ′′இருந்து′′ வேண்டாதபோது பிரிந்தனர்; போர் மேய்ச்சல் நிலத்துக்காக நடைபெற்றது. பாலை நிலம் வாணிகத்தின் வளர்ச்சியையும் பாலையின் கொடுமையையும் பொருட்படுத்தாது மருதத்துக்கும் முல்லைக்கும் பாலையினூடாக நடைபெற்ற போக்குவரத்தையும் அங்கு சிலர் வழிப்பறித்து வாழ்வதென்ற ஒரு புது நிலையையும் காட்டுகிறது; மக்கள் கூட்டுழைப்பிலிருந்து பிரிந்து வாணிகம், போர், வழிப்பறி என்று ஆணும் பெண்ணுமாக வெளியேறிதையும் ′′பொய்யும் வழுவும்′′ தோன்ற, கரணமெனும் திருமணத்தின் தேவையை உருவாக்கிய பின்புலம் பாலையில் வெளிப்பட்டது; போர் வாழ்வா சாவா என்ற நிலையில் நடைபெற்றது. மருதத்தில் திருமணத்தில் இணைந்த பெண் ஆடவனின் பரத்தையர் தொடர்பை முறியடிக்க முடியாத கையறு நிலையான பொருளியல் சார்புநிலை அடைந்தாள்; போர் கோட்டையிலுள்ள செல்வத்தைக் கொள்வதற்காக நடைபெற்றது. நெய்தலிலோ பெண் கைம்மைக் கொடுமைக்கு ஆளானாள்; போர் பேரரசுப் போராக, வெற்றி நோக்கியதாக இருந்தது.

பொருளிலக்கணம் தொல்காப்பியத்துக்கு வரும்போது அதன் மூல வடிவம் மிகவும் மாறுபட்டுவிட்டது.

ஆதாமும் ஏவாளும் ஈழத்தீவில்தான் வாழ்ந்தனர். அவர்கள் மகன் சேது என்பவன் பெயரால்தான் சேது என்ற பெயர் இலங்கை இந்திய நீரிணைக்கு ஏற்பட்டது என்று மெளலானா என்பவர் சேது முதல் சிந்து வரை என்ற நூலில் குறிப்பிடுகிறார். உடன்பிறந்த ஆபேலைப் பெண்ணுக்காகக் கொன்ற காயின் இராமனாக இருக்க வேண்டும் என்கிறார் அவர். உண்மையில் வாலிக்கும் சுக்ரீவனுக்குமே இந்த ஒப்புமை பொருந்தும்.

தமிழகத்தில் பெண்ணாட்சி நிலவியது என்ற மெகாத்தனிசின் குறிப்பு, சிலப்பதிகாரத்தில் பாண்டியர் குலமுதல்வி என்று ஒரு பெண்ணைக் குறிப்பது, திருவிளையாடற் புராணத்தில் தடாதகைப் பிராட்டி, நாட்டுப்புறக் கதைகளாக அல்லி, பவளக்கொடி போன்றோர் ஆகிய சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியம் மறைக்கும் இந்த உண்மைகளைச் சிலப்பதிகார ஆசிரியர் வெளிக்கொணருகிறார். குமரி என்ற பெயரையே அவர்தான் நமக்குச் சொல்லுகிறார்.

குமரிக் கண்டத்தில் மாபெரும் பொருளியல் வளர்ச்சி இருந்தது. அதனோடு பொருளியல், குமுகியல் கோட்பாடுகளும் உருவாகியிருந்தன. குபேரன் வடிவம் இதற்கொரு சான்று. குபேரனின் ஊர்தி மனிதனாகும். இந்த வடிவத்தின் பின்னணியில் இன்றைய மார்க்சியத்தின் கோட்பாடு புலப்படுவதைக் காணலாம். மனித மண்டை ஓடுகளில் குருதியைக் குடிப்பதுதான் மூலதனம் எனும் தெய்வம் என்று மார்க்சு கூறுகிறார்.

குமரி மக்கள் இன்றைய மேலை அறிவியலுக்குக் குறையாத அறிவியல் மேன்மை பெற்றிருந்தனர். தடயங்கள் எண்ணற்றவை:

1. 64 கலை அறிவுகளில் சில: வானில் நுழைதல், வானில் பறத்தல், நெருப்பைத் தடுத்தல், நீரைத் தடுத்தல், காற்றைத் தடுத்தல்.
2. தமிழக இலக்கியங்களிலும் தொன்மங்களிலும் காந்தருவர், இயக்கர், விஞ்சையர் என்ற மக்கள் பேசப்படுகின்றனர். இவர்கள் வானூர்திகளில் பறப்போர். இராவணன் ஓர் இயக்கம் என்றே கூறப்படுகிறான்.
3. இராவணனின் மாமன் மயன் எனும் அசுரத் தச்சன். இவன் பறக்கும் ஊர்தியை இயற்றியவன் என்று கூறப்படுகிறது.
4. உலகிலுள்ள இசைக் கருவிப் புனைவில் வீணை எனப்படும் யாழ் ஓர் இறும்பூது. எண்ணிக்கையில் குறைந்த நரம்புகளைக் கொண்டு யாழ்த் தண்டிலுள்ள பள்ளங்களின் உதவியால் ஆயிரம்வரை நரம்புகளை (இசைகளை) எழுப்ப முடியும். இந்த யாழ் இராவணனின் கொடியாகும். சிவனை மகிழ்விக்கத் தன் தலையைக் கிள்ளி, கையை ஒடித்து, நரம்பை உருவி யாழ் அமைந்து இசைத்தான் எனும் புராணக் கூற்று இந்த யாழை அவனே புதிதாகப் புனைந்ததைக் குறிப்பதாகலாம்.
5. தமிழகத்தில் ஒவ்வொரு புதுப்புனைவையும் செய்தவர் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வகையில் தெய்வங்களுக்கு ஆயுதங்கள் உள்ளன.

சிவன் : நெருப்பு, உடுக்கு, மழு.
பரசுராமன் : கோடரி
பலராமன் : கலப்பை
இராவணன் : யாழ்
திருமால் : சக்கரம்
மூதேவி : குண்டாந்தடி.

ஒரு புராணக் கதையின்படி பருந்துகளின் தாயான பெண்ணும் நாகங்களின் தாயான பெண்ணும் முறையே அக்காள் தங்கைகள். தங்கையின் சூழ்ச்சியால் தமக்கை அவளுக்கு அடிமையாகிறாள். தமக்கையின் மகன் கருடன் பிறந்து போரிட்டு தாயின் அடிமைத்தனத்தை விலக்குகிறான்.

நாகமும் பருந்தும் தோற்றக்குறிகள். இரு மக்களுக்குள் நடந்த பூசலையே இது குறிக்கிறது. நாகங்கள் நம் தெய்வ வடிவங்கள் அனைத்திலும் உண்டு. பருந்து திருமாலின் ஊர்தியாக மட்டுமே காணப்படுகிறது.

உலகப் புராணங்களிலும் நாகத்துக்குச் சிறப்பிடம் உண்டு. பைபிள், கிரேக்கப் புராணம் போன்றவற்றிலும் ஒரு பெண்ணோடு அது தொடர்புபடுத்தப்படுகிறது, கில்காமேஷ் காவியத்தில் சாவா மருந்தாகிய கனியை அது பறித்துச் சென்று விடுகிறது.

பண்டை நாகரிகங்களில் தங்கம் அல்லது உலோக இறக்கைகள் உள்ள பருந்துதான் தங்கள் மூதாதை என்ற குறிப்பு காணப்படுகிறது. எரிக் வான் டெனிக்கான் பறவை போன்ற வானவூர்திகளில் வந்தோர் பண்டை மக்கள் மீது அணுகுண்டுகளைப் பொழிந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன என்று கூறுகிறார். அத்துடன் தாடி வைத்த நாகம் தங்களுக்கு நாகரிகத்தைத் தந்ததாகச் சில மக்கள் குறித்து வைத்துள்ளனர். கவிழ்ந்த கப்பல் மாலுமியைப் பற்றிக் கூறும் எகிப்திய தாள் குறிப்பில் நிலத்தின் அரசனாக ஒரு தாடி வைத்த நாகமே கூறப்படுகிறது.

இவற்றிலிருந்து நாம் பெறும் முடிவு:

நாகத்தையும் பருந்தையும் தோற்றக்குறிகளாகக் கொண்டிருந்த மக்களுக்குள் குமரிக் கண்டத்தினுள் கடும்பகையும் போரும் நிகழ்ந்தன. முதலில் உலகமெலாம் பரவியவர் நாகர்கள். அவர்கள் பரவிய இடமெல்லாம் பருந்தின மக்கள் தொடர்ந்து சென்று தாக்கினர். இதற்கு அவர்களது கண்டுபிடிப்பான வானவூர்தியும் அணுவாற்றலும் பயன்பட்டது. உலகமெலாம் பரவிய இந்த அணுவாயுதப் போரினால் அம்மக்களின் நாகரிகம் ஒரு முடிவுக்கு வந்தது.

எரிக் வான் டெனிகான் ஊர்திகளில் வந்து குண்டு போட்டோர் வேறு உலகங்களின்று வந்தவர் என்கிறார். மேலையர் தவிர வேறெவரும் நாகரிகமடைய முடியாது என்ற ஐரோப்பியக் கருத்தின் எதிரொலிதான் இது.

Serandipity என்ற சொல்லுக்கு அடிப்படையான The Three Princes of Serandip என்ற கதையும் முன்று கோட்டைகளோடு பறந்து சென்று எதிரிகளை அழித்த முப்புராதிகளின் கதைகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

குமரியை ஆண்டவர்களில் துவரைக் கோமானும் ஒருவர். துவரை என்பது வடக்கிலிருந்த துவாரகையல்ல. துவாரகா என்பதற்கு கதவகம் என்ற பொருள். இரண்டாம் கழகப் பாண்டியர் தலைநகராகிய கபாடபுரமே துவாரகை எனப்படும் துவரை. குமரி மாவட்டத்தில் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, முத்துக்குட்டி அடிகளின் வரலாறு கூறும் அகிலத் திரட்டு அம்மானையும் ″தெற்கே கடலினுள் இருக்கும்″ துவரையம்பதி பற்றிக் கூறுகிறது.

கில்காமேஷ் சாவாமை பற்றி அறிந்துவர பாபிலோனிலிருந்து பல கடல்களைக் கடந்து ஒரு பெருங்கதவு வழியாக நுழைகிறான். அங்கு பெருவெள்ளத்திலிருந்து பிழைத்த நோவாவின் மூலவடிவமான உட்னாபிற்றிட்டிம் என்ற மனிதனைச் சந்திக்கிறான்.

சாவாமை உள்ளவனாகக் கூறப்படும் இயமனும் ஒரு பெருங்கதவுக்கு அப்புறமே வாழ்கிறான். இன்றைய உலோகம் காட்டியின் (Metal Detector) பண்டைய வடிவமோ இக்கதவு?

பாண்டிய மரபின் நீண்ட நெடும் வரலாற்றில் துவரைக் கோமான் போன்ற முல்லை நிலத்தாரும் குமரவேள் போன்ற குறிஞ்சி நிலத்தாரும் மீனவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை.

தமிழ் இலக்கணத்துறையில் தலையாய இரு கோட்பாடுகள் எதிரெதிராய் நிலவி வந்தனவாகத் தோன்றுகிறது. ஒன்று அகத்தியம் இன்னொன்று ஐந்திரம். பயன்பாட்டு வேறுபாட்டு அடிப்படையில் மொழியில் பிரிவினை தேவையில்லை என்பது அகத்தியக் கோட்பாடெனவும் சிறப்புத் தொழில்களுக்கென்று தனி எழுத்துகள் கொண்ட தனிக் குழூஉக்குறி மொழி ஒன்று வேண்டும் என்பது ஐந்திறக் கோட்பாடென்றும் கொள்ளலாம். இந்தப் பிரிவினைக் கோட்பாடே வெற்றி பெற்றது. பிரிவினைக்கு முன்பு வல்லின எழுத்துகளுக்கு நான்கு தனித்தனி ஒலிப்புகளும் அவற்றுக்குத் தனித்தனி வரியன்களும் இன்றைய பிற இந்திய மொழிகளில் காணப்படுவது போல் தமிழிலும் இருந்திருக்க வேண்டும். கிரந்த எழுத்துக்கள் எனப்படும் ஓலியன்களும் இருந்திருக்க வேண்டும்.

இன்றைய தமிழ் எழுத்துகளில் ஒரே வல்லின வரியனில் மூன்றுக்கு மேற்பட்ட ஓலியன்கள் பெறப்படுதல், தொல்காப்பிய சகரக்கிளவியும் அற்றோரன்ன என்ற முரண்பாடும் ந,ன,ற,ர மயக்கங்களும்

அஃதிவண் நுவலா தெழுந்து புறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளவு நுவன் றிசினே

என்ற தொல்காப்பிய வரிகளும் ஐந்திரம் தெரிந்த தொல்காப்பியன் என்ற பாயிர வரிகளும் தொல்காப்பியருக்கும் அகத்தியருக்கும் நடைபெற்றதாகக் கூறப்படும் பூசல் பற்றிய புராண நிகழ்ச்சியும் சில தடயங்கள். அகத்தியம் மீதுள்ள காழ்ப்பினால்தான் அகத்தியர் வடக்கிலிருந்து வந்தார் என்ற கதை எழுந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சிலப்பதிகார ஆசிரியர் தொல்காப்பிய விதிகளை அதன் மூலம் ஐந்திரக் கோட்பாட்டை ஏற்கவில்லை என்பது அந்நூலை ஆய்வோருக்குப் புலப்படும். சகரக் கிளவியைத் தாராளமாகவே கையாண்டுள்ளார் அவர்.

இந்த அகத்திய-ஐந்திர மோதல் உண்மையாக இருந்தால் சமற்கிருதத்தின் பிறப்பின் பின்னணி (ஆரிய இனப் பின்னணி பொய்யென்பதால்) விளங்கும். ஒரு தமிழ் நூலின் பழமையை ′′மொழித் தூய்மை′′ பற்றிய இன்றைய அளவுகோல் கொண்டு அளப்பது தவறு என்பதும் புரியும்.

குமரிக் கண்டப் பண்பாடு மிகப் பெரிய பரப்பும் கி.மு. 50,000 வரை நீண்டு செல்லும் மிகப்பெரிய கால இடைவெளியையும் கொண்டது. இப்பெரிய பரப்பில் இந்நீண்ட காலத்தினுள் என்னென்ன மக்கள் எங்கெங்கு வாழ்ந்தனர்; அவர்கள் கால வரிசையில் இயற்றியவை என்னென்ன என்பவையெல்லாம் அறிவது மிகவும் கடினமான பணி. ஆனால் தப்பெண்ணங்களை ஒதுக்கிவிட்டு இந்தியப் புராணங்கள் மட்டுமல்லாமல் உலகப் புராணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். ஐரோப்பியப் பழம் புராணங்களை எழுத்தாளர் புதுமைப்பித்தனின் தந்தையார் சொக்கலிங்கம் பிள்ளையவர்கள் தொகுத்து அவை இன்று நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் இருப்பதாகத் தெரிகிறது. அவற்றையும் பயன்படுத்தலாம்.

வரலாற்று மேதையான வில் டூறாண்டு யூதர்களைப் பற்றிக் கூறும்போது தவறென்று மெய்ப்பிக்கப்படாதவரை பைபிளில் கூறப்பட்டிருப்பவற்றையே யூதர்களின் வரலாறாக எடுத்துக் கொள்ளலாம் என்றார். நாமும் கிடைக்கும் தடையங்களைப் பின்பற்றி தன்னம்பிக்கையுடன் நம் குமரிக் கண்ட கால வரலாற்றை எழுதுவோம்.

17.8.07

எங்கே போகிறோம்?

தினமணி ஆசிரியர் திரு மாலன் அவர்களுக்கு மடல்.

நாள்: 17-07-1994.

அன்புள்ள தினமணி ஆசிரியர் திரு. மாலன் அவர்களுக்கு வணக்கம்.

இந்தியா டுடேவில் தங்கள் எழுத்து நடையைப் பார்த்தவுடனே ஆங்கில இதழியலாளர்கள் கையாளும் மிடுக்கான ஆங்கில நடைக்கு இணையாகக் தமிழில் எழுதும் தங்களின் திறம் கண்டு மகிழ்ந்துள்ளேன். ′சன்னலுக்கு வெளியே′ நீங்கள் கண்டு சிந்தித்தவற்றை அறிந்து புதிய உலகம்(தமிழகம்) படைக்கும் தங்கள் வேட்கையை நினைந்து இறும்பூது எய்தியுள்ளேன். தொடர்ச்சியான மேம்பட்ட இயற்பாடுகளை அமெரிக்கா சென்றிருந்த தங்களின் வருகைக்குப் பின் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் ′′எங்கே போகிறோம்′′ என்ற தொடரைக் தொடங்கி திரு. இராமதாசு அவர்களைப் பேட்டி கண்டுள்ளமை நீங்கள் எங்கே போகீறீர்கள் என்பதைச் சுட்டி எனக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவொரு நிறுவனத்தையும், அது ஒரு சிறிய அரசு அலுவலகமாயினும் முதன்முதல் தொடங்கி வைப்பவரின் தன்மையில்தான் அதன் நடை அமையும். அத்தன்மையில் மாற்றங்களை எளிதான நடவடிக்கைகளால் நிகழ்த்த முடியாது. ′′புரட்சிகள்′′ தேவைப்படும்.

″விடுதலை″ பெற்ற இந்தியாவின் போக்கின் திசையை வகுத்த நேருவின் ′′பேரொளி′′யின் பின்னனியில் இருந்த அவரது இருள் மிகுந்த பகுதியின் தொடர்ச்சியில் மிக முற்றிய ஒரு பேராளர் இராமதாசு. ஒருவேளை இந்தத் திசைவழியில் இறுதிக் கட்டத்தைச் சேர்ந்தவர்களில் இவரும் ஒருவராக இருக்கக் கூடும்.

மக்களில் சிந்திக்கவும் சினக்கவும் கவலைப்படவும் முடிந்தவர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் வகையில்தான் அவரது விடைகள் அமைந்திருந்தன. நீங்கள் வெளியிடப்போகும் அடுத்த சந்திப்புகளிலும் இதுபோன்ற விடைகள் தாம் கிடைக்கப்போகின்றன. நாளொரு நிலைப்பாடு பொழுதொரு கூட்டணி என்று பொதுமைக் கட்சியினர் தொடங்கிவைத்த நாடகத்தில் உச்ச கட்டத்தை நீங்கள் முதல் காட்சியாகக் காட்டியுள்ளீர்கள் அவ்வளவு தான்.
வன்னியர்களின் வெறிபிடித்த வன்முறை எனும் புகைமண்டலத்திலிருந்து தோன்றிய தேவன் தான் இராமதாசு. தமிழகத்தில் நயன்மைக் கட்சியாலும் (இது சரிதானா) இந்தியாவின் அம்பேத்காரின் போராட்டங்களாலும் சிறிது தலைநிமிரத் தொடங்கியிருக்கும் தாழ்த்தப்பட்டோர் மீது ஏற்பட்ட வன்மத்தின் விளைவாக அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களுடன் பொதுச் சொத்துகளை கண்மூடித்தனமான அழித்தலுடன் அவரது பொதுவாழ்வின் தொடக்கம் அமைந்தது.

அமெரிக்காவில் மருத்துவம் முடிந்து பேச இயலாத நிலையில் திரும்பி வந்த மா.கோ.இரா. ஒதுக்கீட்டில் பங்கு கேட்டு நிற்போரை அழைத்து அவர்களைப் பேச வைத்து அவர்கள் தந்த புள்ளிக் கணக்கை வைத்தே தமிழகத்தின் மக்கள் தொகை 11½ கோடி என்ற அவர்களது கோமாளிக் கணக்கை வெளிப்படுத்தி அவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்தார்.

தேர்தல் ஆதாயத்துக்காகத் தமிழகச் சமுதாயத்தை ஒவ்வொரு நூற்றாண்டாகப் பின்னோக்கி நகர்த்தும் ஒவ்வொரு நகர்வையும் முன்னின்று நடத்தி ஆதாயம் கண்ட கருணாநிதி காலத்தில் இராமதாசு ஏதோ பலனும் கண்டார்.

சிக்கல் தீர்ந்து போனால் அடுத்து என்ன செய்வது? அரசியல் கட்சி தொடங்கினார். ஒவ்வொரு சாதியிலும் உள்ள ′′கட்டப் பஞ்சாயத்துத்′′ தலைவர்களை அமைப்பாளர்களாகக் கொண்டார். (கட்டப் பஞ்சாயத்தென்றால் என்னவென்று தங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சச்சரவுகள் வரும் போது வலியோர் பக்கம் நின்று கொண்டு எளியோரை மிரட்டிப் பணம் பறிப்பது கட்டப் பஞ்சாயத்து). எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை.

″தீவிர″ இடதுகளின் பேச்சைக் கேட்டு தன் தீர்மானிப்பு(சுய நிர்ணய) உரிமைத் தீர்மானம் இயற்றி மானமிழந்தார். [1] தீவிர இடதுகள் என்பவர்கள் அப்பாவிகளை அடுத்து நம்ப வைத்து அழித்துத் தாம் மட்டும் தப்பித்துக் கொள்ளும் கயவர்கள் அல்லது தாமே அழிந்து போகும் முட்டாள்கள்.

அடுத்த கட்டமாக எந்தத் தாழ்த்தப்பட்டவர்களைத் தாக்கிப் பொதுவாழ்வைத் தொடங்கினாரோ அவர்களுடன் பிற்படுத்தப்பட்டோரை இணைத்து அரசியல் நடத்தத் தொடங்கினார். இருப்பினும் வன்னியர்களுக்கு வெளியே செல்வாக்கு எதுவும் உருவாகிவிடவில்லை. பாராளுமன்ற முறையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மக்கள் முன் அறிமுகம் என்ற வகையில் அவருக்கு முன்னேற்றம் தான். திரைப்பட நடிகர்கள் அரசியல் களத்தில் எளிதில் வெற்றி பெறுவதில் அவர்களுக்கு மக்கள் மத்தியில் எளிதில் கிடைக்கும் இந்த அறிமுகம் மிகப்பெரும் பங்காற்றுகிறது. இதை நாம் பிறழ உணர்ந்து ′′சினிமா மாயை′′ என்கிறோம்.

திரைப்பட நடிகர்களை மிஞ்சித் தன்னால் அரசியலில் வெற்றி பெற முடியாது என்பது அவருக்குத் தெரியும். எனவே முதல் கட்டமாக தேர்தல்களில் தன் கட்சி போட்டியிடப்போவதாக அறிவித்துப் பின்வாங்குவதன் மூலம் காலத்தை ஓட்டினார். அது நீடித்தால் கட்சி கலைந்து போகும். எனவே அடுத்த வளர்ச்சி நிலை ஒரு கட்சிக்கு உதவியாக இன்னொரு கட்சியின் வாக்குகளை உடைக்கத் தேர்தலில் போட்டியிடுவது. ′′பெயர்′′ பரவிவிட்டது. எனவே இப்போது கூட்டணிக் கட்டம். அடுத்தது என்னவென்று பார்ப்போம். நாட்டின் அடிப்படைச் சிக்கல்கள் பற்றிய புரிதலோ தெளிந்த சிந்தனையோ இல்லாதவர். ஆனால் இருக்கும் அரசியல் சூழ்நிலைகளில் நெளிவு சூழிவுகளுடன் நீந்திச் செல்லத் தெரிந்த வித்தகர்.

40 வயது வரை திராவிட அரசியலை நம்பிக்கையோடு பார்த்து ஏமாந்து புதிதாகத் தோன்றும் இயக்கங்களைத் தொலைவில் நின்று நோட்டமிட்டு அடுத்து சிலவற்றினுள் நுழைந்து வெளியேறி இறுதியில் இராமதாசின் கட்சியின் வாசலினுள் ஒரு காலை வைத்துப் பின்வாங்கி விட்டவன் என்ற தகுதியில் இதனைக் கூறுகிறேன்.

தாங்கள் உண்மையாக குமுகக் கவலைகளுடன் தங்கள் இதழியல் பணியில் ஈடுபட்டுள்ளீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இக்கருத்துக்களைக் கூறுகிறேன். நம் அரசியல்வாதிகளின் பேட்டிகளை வெளியிடுவதென்பது பொய்யென்றும் பாசாங்கென்றும் அனைவரும் அறிந்தவற்றையே மீண்டும் மீண்டும் மக்கள் முன் வைத்து அவர்களது எரிச்சலைத் தூண்டுவதாகும். மாறாகத் தாங்கள் ஒன்று செய்யலாம்.

எடுத்துக்காட்டாக என் கருத்தொன்றை எடுத்துக் கொள்ளுங்கள். மக்களாட்சி என்ற பெயரில் ஐரோப்பியர்கள் உருவாக்கியுள்ள பாராளுமன்ற முறை உண்மையில் ஒருசிலராட்சி அல்லது குழுவினராட்சி(அலிகார்க்கி)யே. 19 ஆம் நூற்றாண்டில் முற்றிப் போன தொழிற்புரட்சியின் முதன்மை முரண்பாடான முதலாளி - தொழிலாளி முரண்பாட்டின் பாதிப்பால் இக்குழுவாட்சிக்கு மாற்றாகப் பாட்டாளிய முற்றதிகாரத்தை மார்க்சும் ஏங்கெல்சும் முன்வைத்தனர். பல கட்சி வாக்களிப்பு முறை என்ற மாயப் போர்வையைப் போர்த்திக் கொண்ட பாராளுமன்ற மக்களாட்சி நீண்ட நாள் தாக்குப்பிடித்து வருகிறது. ஆனால் பாட்டாளிய சர்வாதிகாரமோ குழுவினராட்சியின் அம்மண வடிவம். ஆதலால் எழுபதே ஆண்டுகளில் நொறுங்கிப் போய்விட்டது. அன்று தொழிற்புரட்சியின் மூலம் உலகை ஆண்ட ஐரோப்பிய நாடுகளில் மட்டும் நிலவி தம் வரம்பு மீறிய செழிப்பால் பெரும் நெருக்கடியைச் சந்திக்காமல் தப்பிவிட்ட பாராளுமன்ற மக்களாட்சி இன்று உலகின் பெருபான்மை மக்களின் பரந்துபட்ட பட்டறிவின் அடிப்படையில் உண்மையான ஒரு மக்களாட்சியை நோக்கி நம் சிந்தனையைத் திருப்ப வேண்டியுள்ளது. இதைப் பற்றி திட்டவட்டமான எண்ணங்கள் உள்ளன. அதை இன்னொரு வாய்ப்பில் தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நம் நாடு வரலாற்று வழிப்பட்ட காரணங்களால் மேன்மேலும் இருளடைந்து கொண்டிருந்த நிலையில் முற்றிலும் தன்னலத்துக்காக வெள்ளையர்கள் நம்மைத் தட்டியெழுப்பி ஓரளவு வெளிச்சத்தைத் தந்தார்கள். அவர்களது பொருளியல் வளர்ச்சிக் கோட்பாடுகள் அவர்களுக்காகவே உருவானவை. அவை நமக்கு எதிரானவையாகவே இருக்கும். அதேநேரத்தில் அவர்கள் விரும்பாமலே நாம் எய்திய குமுக மாற்றங்கள் நமக்கு வழிகாட்டத் தக்கவை என்பது என் கருத்து. அவர்களது அரசியல், பொருளியல் நலன்களும் நம் அரசியல், பொருளியல் நலன்களும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்றாலும் பொருளியலிலும் வாழ்வியலிலும் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் பட்டறிவுகள் எனும் வெளிச்சத்தைத் துணையாகக் கொண்டு 19ஆம் நூற்றாண்டின் சப்பானிய மீட்சித் தலைவர்களின் உணர்வோடு செயற்பட்டால் மேலையரை நாம் மிஞ்சுவதில் தடையேதுமிருக்கப் போவதில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் என்று நான் சொல்வதன் பொருள் இன்றைய கட்டத்தில் அவர்களுடைய நிலையை நம்முடைய இன்றைய கட்டத்துக்கு வழிகாட்டியாகக் கொள்ளக் கூடாது. நம்முடைய கட்டம் ′′வாக்கப்பட்ட பூமி″யில் சுசி.கணேசன் படம் பிடித்துக் காட்டி வருகிறாரே அது தான். ஐரோப்பாவில் இப்படிப்பட்ட கட்டத்தைத் தொடர்ந்து என்ன நடந்தது? அதை அவர்கள் எதிர்கொண்ட முறை என்ன? அல்லது அவர்களுக்கு ஏற்பட்ட சேதாரங்கள் என்ன? அந்தச் சேதாரங்களின் கடுமையையும் கால நீட்சியையும் குறைக்கும் முயற்சிகளுடன் அந்தக் கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்துக்குத் திட்டமிட்டு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். (கடுமையையும் காலநீட்சியையும் குறைக்கத்தான் முடியுமே தவிர சேதாரங்களைத் தவிர்க்க முடியாது என்பது மார்க்சின் கருத்து.)

எடுத்துக்காட்டாக அமெரிக்காவிலிருந்து தாங்கள் எழுதிய ஒரு கடிதத்தை உங்களுக்கு நினைவூட்கிறேன். அமெரிக்கப் பெண்களின் ′′சமத்துவம்′′ பற்றியது, கடந்த காலத் ′′தவறைத்′′ திருத்தும் போக்கு உருவாகியுள்ளது. ஆனால் நாம்? என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள். அதற்கு என் விடை என்னவென்றால் குடும்ப வாழ்வில் பெருந்துயர்ப்பட்டு முதுமை எய்திய ஒருவன் திருமணமாக வேண்டிய இளைஞனைப் பார்த்துத் திருமணம் செய்யாதே என்று கூறுவது எவ்வளவு தவறோ அதுபோல் வளர்ச்சிப் பாதையில் தூய்மையியல் கிறித்தவர்களான அமெரிக்கர்களையும் மீறி நடந்த, ஆண் - பெண் சமத்துவம் பற்றிய தெளிவான சிந்தனையுள்ளவர்கள் மகிழத்தக்க ஒரு நிலையை அடையும் வழியில் நிகழ்ந்த தவிர்க்க முடியாத சில ′′சேதாரங்களை′′க் காரணமாகக் காட்டி அந்த வளர்ச்சித் திசையே வேண்டாம் என்பது தவறு என்பது தான்.

நம் நாடு உலகில் உள்ள மக்களின் ஆற்றல் தொகுதியிலும் செல்வத்திலும், மூலவளத்திலும் முழுமையானது. ஆனால் காலங்காலமாக அதன் மீது படிந்துவிட்ட அழுக்குகளும் நேர்ந்துவிட்ட அழுகல்களும் நம்மைத் தலைநிமிரவிடாமல் செய்து வருகின்றன. அவற்றை அகற்ற நம் முழு ஆற்றலையும் உடனடியாகச் செலுத்தியாக வேண்டும். காலம் கடந்தால் பணி மிகக் கடுமையாகும்.

ஆனால் இதில் உள்ள சிக்கலே உண்மையான செல்வங்களை அழுகல்களாகவும் அழுகல்களைச் செல்வங்களாகவும் திரித்துக் காட்டும் போக்கு வெற்றி பெற்று நிற்பதுதான். அதை உடைத்தெறிய வேண்டுமென்பது என் அவா. ஆனால் அதை முழுமையாகச் செய்வதற்கு நீங்கள் எனக்கு உதவ வேண்டுமென்று விரும்பினாலும் உங்கள் ஆளுகையிலுள்ள களம் அதற்கு இடம் தராது என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு இசைவிருந்தால் அந்த எல்லைக்குள் இயன்றதைச் செய்யலாம். இல்லையென்றாலும் நான் வருந்தப் போவதில்லை. வேறு களம் தேடிக் கொள்வேன். ஆனால் அந்தத் திசையில் ஒரு விவாத மேடையை உருவாக்கினால் நல்லது. நீங்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ள விவாதமேடை குமுக இயற்பாடு என்ற நீர் நிலையில் உருவாகும் நுரைகளான சில துறைகளையே. உண்மையான குமுக இயற்பாடு பொருளியல் வளர்ச்சியிலிருந்தே தொடங்க வேண்டும். இது உங்களுக்குச் சரியாகப்படுகிறதா?

நல்வாழ்த்துக்களுடன்,
குமரிமைந்தன்.


அடிக்குறிப்பு:

[1] நாட்டுப் பகை நடவடிக்கை என்ற குற்றச்சாட்டிலிருந்தது தன்னைக் காத்துக் கொள்ள உறவினரும் பேரவைக் கட்சிப் பெருமகனுமான வாழப்பாடி இராமமூர்த்தியின் காலில் விழுந்து தப்பினார். ஆட்சியாளர்களின் கையாட்களான ″தீவிரர்கள்″ தலை நிமிர்ந்து திரிய அப்பாவி பெருஞ்சித்திரன்தான் அடிவாங்கிச் செத்தார்.

தமிழ் மருத்துவ வானில் புதிய விடிவெள்ளிகள்

′தினமணி′யில் ′′மாற்றங்கள் தேவை. எங்கு′′ என்ற மடல் பற்றி.

பாளையங்கோட்டை,
10-07-1994.

9.7.94 ′தினமணி′யில் ′′மாற்றங்கள் தேவை. எங்கு′′ என்ற தலைப்பிடப்பட்டு வந்துள்ள கருத்தைக் கவரும் கடிதம் உவகை கொள்ளச் செய்தது. நம் நாட்டு மரபு அறிவியல் - தொழில்நுட்பங்களை நோக்கி இளைய தலைமுறையின் கவனம் திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிப்பதில் வியப்பில்லை.

நாட்டு மருத்துவத்தை இழிவுபடுத்திக் கருத்துப் பரப்புவது தொலைக்காட்சியின் இடைவிடாத பணியாகும். அதில் பங்கு கொள்ளும் அலோபதி மருத்துவர்கள் நோய் தீர்க்கும் பணியாளர்களாக நடுநின்று கருத்துரைப்பதில்லை. தங்கள் தொழிலுக்குப் போட்டியாக விளங்கும் இன்னொரு தொழில்முறையைக் குறைகூறும் வாணிகர்களாகவே செயற்படுகின்றனர். இறக்குமதி - ஏற்றுமதித் தொழிலையே தன் ஆட்சியின் ஒரே பணியாகச் செய்யும் இந்திய அரசின் ஆளுகையிலிருக்கும் தொலைக்காட்சி அலோபதி மருத்துவர்களின் இந்தப் போக்கைத் தன் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது எதிர்பார்க்கத்தக்கதே.

டாக்டர் க.வெங்கடேசன் ′தினமணி′யில் ஒரு மருந்து பற்றி எழுதிய ஒரு கருத்தைக் குத்தலாகத் தாக்கிய ஒரு அலோபதி மருத்துவருக்கு அவரது கூற்று தொழிற் போட்டியினால் எழுந்ததே தவிர நடுநிலையானதல்ல என்று நான் எழுதியதற்கு அவர் இன்று வரை மறுமொழி கூறவில்லை.

தமிழ் மருத்துவத்தின் இன்றைய நிலை என்ன? நாட்டுப் புறங்களில் ஆங்காங்கே வாழும் நாட்டுப்புற மருத்துவர்கள் ஏதோவொரு நோய் தீர்ப்பில் மட்டும் திறன்படைத்துள்ளனர். நோய்க் கணிப்பில் தவறாலோ வேறு காரணங்களாலோ சிக்கல்கள் நேர்ந்தால் அடுத்து என்ன செய்வதென்று அறியமுடியாமல் திகைக்கிறார்கள். இதற்குக் காரணமுள்ளது. ஒரு மாபெரும் மாளிகையாயிருந்த நம் தொழில்நுட்பங்கள் வரலாற்றுக் காரணங்களால் வெடித்துச் சிதறியதில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் துணுக்குகள் போன்றவை தாம் இன்றைய நாட்டு மருத்துவர்கள். அவர்களிடம் இருக்கும் இந்தத் துணுக்குகளைத் திரட்டி அதனை அறிவியல் அடிப்படையில் தொகுத்தும் பகுத்தும் ஆய்ந்தும் தெளிந்தால் ஒட்டுமொத்தமான ஒரு மருத்துவ மண்டலத்தை அலோபதி மண்டலத்துக்கு எதிராக அல்லது இணையாக நிறுத்தலாம்.

சோழர்கள் காலத்தில் குந்தவை பிராட்டியார் போன்றோர் நிறுவிய மருந்துச் சாலைகள், அலோபதியில் இன்று விளங்கும் பொது மருத்துவமனைகளின் தன்மையில் தமிழ் மருத்துவமுறையில் பொது மருத்துவமனைகளாக விளங்கியிருக்கும்.

இதுபோன்ற வேட்கையுடன் மருத்துவக் கல்லூரியில் தேறிச் சொந்தமாக தொழில் தொடங்கியிருந்த மைக்கேல் என்ற இளைஞர் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு கூட்டம் நடத்தினார். அவரது ஆசிரியரான பெண்மணி ஒருவர் தலைமை தாங்கினார். அதில் தமிழ் மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவம் செய்வோர் சிக்கல்களை எதிர் கொள்ளும்போது அந்நோய்களில் தனித்திறமை பெற்ற நாட்டுப்புற மருத்துவர்களை சிறப்பாளர்களாகக் கொண்டு ஆலோசனை பெறுவதன் மூலம் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று அவர்களது மருத்துவ இரகசியங்களை அறியலாம். அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைக் கட்டணத்தை நோயாளிகளிடமிருந்து பெற்றுத்தருவதன் மூலம் அவர்களது தன்னம்பிக்கையையும் உயர்த்தலாம் என்று நான் கருத்துரைத்தேன். இந்தக் கருத்து அந்தக் கூட்டத்துக்கு முன் திரு. மைக்கேலுடன் உரையாடும்போது எங்களிடையில் உருவானதாகும்.

ஆனால் தலைமை தாங்கிய ஆசிரியர் இந்தக் கருத்தைப் புறக்கணித்தார். வலியுறுத்தியபோதும் கருத்தெதுவும் தெரிவிக்கவில்லை. நேரடியாகவே கேட்டேன். ′′நாட்டுப்புறத்தில் மருத்துவம் புரிபவர்களைப் பண்டாரப்பயல்கள் என்று கருதுகிறீர்களா?′′ என்று அதற்கும் அந்த அம்மையார் மறுமொழி கூறவில்லை. ′′தமிழ் மருத்துவம் பற்றித் திரட்ட வேண்டிய செய்திகளெல்லாம் திரட்டப்பட்டுவிட்டன. அவற்றை அறிவியல் அடிப்படையில் ஆய முனைந்தால் போதும்′′என்று கூறிவிட்டார். மூலிகைகளின் இயற்பியல் வேதியல் குணங்களையும் மருந்துகள் உடலில் செயற்படும் பாங்கினையும் அறிவியல் அடிப்படையில் ஆயவேண்டுமென்பதில் நமக்குக் கருத்து வேற்றுமை இல்லை. ஆனால் தமிழ் மருத்துவக் கல்வித் துறையில் கவனத்துக்கு வராத மருந்துச் செல்வங்கள் எண்ணற்றவை உண்டு என்பதையும் அவற்றைக் கையாளும் மருத்துவர்கள் நம் மதிப்புக்கு உரியவர்கள் என்பதையும் பட்டம் படித்தவர்கள் ஏற்க மறுக்கிறார்களே. தங்களை ஒரு புதிய சாதியினராகப் பார்க்கத் தொடங்கிவிட்டனரே; அதன்மூலம் தமிழ் மருத்துவத்துக்குக் கிடைக்க வேண்டிய பெருமையும் வலிமையும் கைநழுவிப் போகின்றனவே என்பதுதான் நம் கவலை.

மேற்கொண்டு நடந்த கூட்டங்களோ பிற முயற்சிகளோ என் போன்றோருக்கு தெரிவிக்கப்படவில்லை. ஓரிரண்டாண்டுகளுக்குப் பின்னர் கற்ப அவிழ்தம் என்ற காலாண்டிதழ் ஒன்றை மட்டும் தற்செயலாகக் காண நேர்ந்தது. இன்னொரு தமிழ் மருத்துவப் பட்ட மருத்துவரிடம் பேசும்போது அக்குழு சிதைந்துவிட்டதாக அறிந்தேன். (இச்செய்தி உண்மையல்ல என்பதைப் பின்னர் அறிந்தேன்.)

உண்மைநிலை என்னவென்றால் ஒருமுறை செயப்பிரகாஷ் நாராயணன் என்பவர் (இவர் சென்னை தமிழ் மருத்துவக் கல்லூரியில் ரீடராக இருக்கிறார்) கூறியதுபோல இன்னும் முப்பு போன்று பண்டை மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல பொருட்களின் உண்மையான சேர்மானம் கூட இன்றைய தமிழ் மருத்துவக் கல்வித்துறையினருக்குத் தெரியாது. தமிழ் மருத்துவத்தின் பெயரில் பட்டம் பெற்றவர்களில் மிகப் பெரும்பான்மையினர் நாடி பார்க்கும் குழலைத் தோளில் போட்டுக் கொண்டு அலோபதி மருத்துவர் போல் பாவனை செய்கின்றனர்.

அதே நேரத்தில் இங்கு எலும்பு முறிவுக்கு மருத்துவம் செய்யும் பண்டாரவிளைக் குடும்பத்தினர் எவ்விதத் தயக்கமோ தாழ்வுணர்ச்சியோ இன்றி நோவை மட்டுப்படுத்துவதற்கு அலோபதி மாத்திரைகள் எழுதிக் தருகின்றனர். தமிழ் மருத்துவத் தொழில் குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சிறுபான்மை அலோபதி மருத்துவர்கள் அலோபத் மருந்துகளுக்குத் துணையாகத் தங்கள் குடும்பத் தயாரிப்புகளான நாட்டு மருந்துகளையும் கையாள்கின்றனர்.

தமிழ் மருத்துவத்தின் மூலவர்களாகிய சித்தர்கள் நிட்டையில் அமர்ந்து உட்கார்ந்த இடத்திலேயே தம் அறிவைப் பெற்றனர் என்று தமிழ் மருத்துவக் கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதன்மூலம் மாணவர்கள் ஆய்வு மனப்பான்மையையே மடிய வைத்துவிடுகின்றனர். சித்தர் நூல்களில் இருப்பனவாகக் கல்லூரியில் சொல்லித் தரப்படுபவற்றுக்கு அப்பால் அவர்களது சிந்தனை செல்ல முடியாமல் சிறைப்படுத்திவிடுகின்றனர். ஆனால் சித்தர்கள் நூல்களில் அவர்கள் ஒவ்வொரு மூலிகையையும் உலோகத்தையும் முழுமையாக ஆய்ந்து அவற்றின் இயற்பியல் வேதியியல் பண்புகளை விளக்கியுள்ளனர். இது நிட்டையில் அமர்ந்து எய்த முடியாதது. கடும் உழைப்பின் மூலமே இதனை எய்த முடியும். ஆனால் எவ்வித ஆய்வு உத்திகளை அவர்கள் கையாண்டார்கள் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

சித்தர்கள் அனைவரும் விதிவிலக்கின்றி சோதிட நூற்களை இயற்றியுள்ளனர். சோதிடம் என்பது வானியலின் திரிந்த ஓர் வடிவமே. மனிதனும் உலகில் வாழும் பிற உயிர்கள் அனைத்தும் வான்பொருட்களின் இடைவினைப்பாட்டில் தோன்றியவையே. எனவே மனிதனின் உடல், உள்ளம் ஆகியவற்றின் செயற்பாட்டில் அவ்வான்பொருட்களில் பாதிப்பு இருப்பதில் ஐயமில்லை. அந்தப் பாதிப்புகளைக் கண்டறியும் ஒரு முயற்சியாக அல்லது கண்டறிந்து பெறப்பட்ட முடிவுகளின் ஒரு வடிவமாகச் சோதிடத்தைப் பார்ப்பதில் தவறில்லை. உடல், உள்ளம் தவிர மனைவி, மக்கள், உறவினர், எதிர்காலம் போன்றவற்றுக்கு விரிவாக்கும் போதுதான் சோதிடம் கொச்சைப்பட்டுப் போகிறது.

புகழ்பெற்ற நாட்டு மருத்துவர்கள் அனைவருமே சோதிடத்திலும் வல்லவர்களாக இருந்தனர். நோய்களின் தன்மைகளை அறிந்து கொள்ள அவர்கள் சோதிடத்தின் துணையை நாடினர். புகழ்பெற்ற கணியராக விளங்கிய நெல்லை ஈ.மு.சுப்பிரமணிய பிள்ளை ஒரு மருத்துவரும் கூட.

சோதிடத்துக்கும் தமிழ் மருத்துவத்துக்கும் உள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்படுமேயானால் நம் பண்டைத் தொழில்நுட்பம் குறித்த ஓர் அரிய உண்மை புலப்படும். அதாவது வான்பொருட்களின் இயக்கத்தைத் துல்லியமாக அவர்கள் கண்டறிந்திருந்தார்கள் என்பதுடன் அவை ஒவ்வொன்றும் மனிதனின் உடல், உள்ளம் ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் கண்டுபிடித்திருந்தார்கள் என்பதே அந்த உண்மை. எனவே சோதிட நூல்களைப் புதிய கண்ணோட்டத்தில் ஆய்வது இன்றியமையாதது.

இலக்கியத் திறனாய்வு, மொழியியல், மானிடவியல், மெய்ப்பாட்டியல்(அழகியல்) ஆகிய துறைகளில் இன்றைய மேலையர் இன்னும் திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியாமல் திணறுகின்றனர். ஆனால் பண்டைத் தமிழர் அவற்றில் திட்டவட்டமான முடிவுகளை எய்திவிட்டனர் என்பதைத் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் சான்று கூறுகின்றன. இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு எனக்கு ஒரு எண்ணம் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நாட்டுப் புறங்களில் நிலவும் பல்வேறுதுறைத் தொழில்நுட்பங்களை மேலை அறிவியலின் துணை கொண்டு ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் இனம் காணமுடியுமென்றால் மேலையர்கள் சென்றவழியில் செல்லாமலேயே அவர்களைத் தாண்டி (Bye - Pass செய்து) நாம் முன்னே செல்ல முடியும் என்பதே அது. இளைய தலைமுறை அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.

நாகர்கோயில் கார்மல் பள்ளியில் ஆபிரகாம் லிங்கன் என்றொரு அறிவியல் ஆசிரியர் உள்ளார். அவர் தன் சொந்த முயற்சியால் தமிழ் மருத்துவ நூல்களைக் கற்று மருத்துவம் செய்து வருகிறார். தான் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தன் சொந்த முயற்சியால் தீர்வுகள் கண்டு வெற்றிநடை போடுகிறார். தான் செய்யும் மருத்துவங்களின் குறிப்புகளையும் வைத்திருக்கிறார் என்று கருதுகிறேன்.

இன்று தமிழ் மருத்துவ வானில் புதிய விடிவெள்ளிகள் முளைத்திருக்கின்றன. டாக்டர் என்.கே. சண்முகம் போன்றோர் மூலிகைகளில் அடங்கியிருக்கும் பல்வேறு வேதிப் பொருட்களையும் அவை எவ்வாறு நோய்களோடு வினைப்பட்டுக் குணத்தைத் தருகின்றனவென்றும் ஆய்வு செய்து ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்துள்ளனர். இளைய தலைமுறை அதனைப் பற்றிக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை. தொலைக்காட்சியும் அரசின் பொதுத் தொடர்புக் கருவிகளும் இருட்டடித்தாலும் அரசு இயந்திரத்தில் அடங்கியிருக்கும் சிறுபான்மையினரான நாட்டுப்பற்றாளர்களின் துணையுடன் இந்த இருட்டடிப்பை நாம் வெல்லலாம்.

அன்புடன்,
குமரிமைந்தன்.

மீண்டும் ஓர் உப்பு அறப்போர்

உப்பு நம் நாட்டு மக்களின் உரிமைகளின் ஒரு குறியீடாக விளங்கி வந்திருப்பது இந்நூற்றாண்டின் புதுமை.

உப்பு ஓர் ஒப்பற்ற பொருள். பண்டைக் காலத்தில் ஒரு சிறந்த பண்டமாற்று ஊடகமாகப் பயன்பட்டுவந்தது. கடற்கரையிலிருந்து உப்பை எடுத்துக் கொண்டு உப்பு வாணிகர்கள் மலைகளின் உச்சி வரை சென்று திரும்பிருக்கின்றார்.

உப்பு உணவுக்குச் சுவை சேர்க்கவும் உடல் நலனுக்குத் துணையாகவும் பயன்படுகிறது. உணவு பதப்படுத்தலில் உப்பின் பங்கை நாம் மிகைப்படுத்தவே முடியாது.

இத்தகைய உப்பின் மீது வரி விதித்தான் ஆங்கிலேயன். வெளிநாடுகளுக்கு இந்தியச் சரக்குகளை ஏற்றிக் கொண்டு வெறுமையாகத் திரும்பும் கப்பல்களில் அந்நாடுகளிலிருந்து உப்பை ஏற்றி வந்து இங்கு விற்க வேண்டும். அதற்கு உள்நாட்டு உப்பு போட்டியாக இருந்தது. உள்நாட்டு உப்பின் விலையை ஏற்றும் முகத்தான் அதன் மீது வரி விதிக்கப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் பாதித்த ஆங்கிலேயனின் இந்தச் செய்கைக்கு எதிராக உப்பு அறப்போர் ஒன்றைக் காந்தி அறிவித்தார். நாடு முழுவதும் அறப்போரில் கலந்து கொண்டது. தன் அதிகாரத்துக்கு எதிராக மக்கள் விடுத்த இந்த அறைகூவலை வன்கரம் கொண்டு அடக்க முற்பட்டது ஆங்கில அரசு. மக்கள் கொந்தளித்து எழுந்தனர். இந்திய விடுதலைப் போரின் வீறு மிக்க கட்டங்களில் ஒன்றாகும் இந்த உப்பு அறப்போர்.

இன்று ஆங்கிலேயன் வெளியேறி விட்டான். ஆனால் மக்களாகிய நமக்கு உண்மையில் விடுதலை கிடைத்துள்ளதா என்ற கேள்வி நம் முன் பெரிதாக எழுந்து நிற்கிறது. ஆங்கில ஆட்சியின்போது மக்களின் நுகர்வுக்குக் கிடைத்த பல பொருட்கள் இன்று நேரடியாகவும் மறைமுகமாகவும் மறுக்கப்படுகின்றன. தேயிலை, முந்திரிப் பருப்பு, குளம்பி(காப்பி) மீன் வகைகள் ஆகியவற்றில் முதல் தரமானவை உள்நாட்டு மக்கள் பயன்படுத்தத் தடை உள்ளது. இவை ஏற்றுமதி, இறக்குமதி, வெளிச்செலவாணி என்ற பொருளியல் காரணங்களைக் காட்டி மறுக்கப்படுகின்றன. அதேபோல் ஏற்றமதியால் அதிக ஆதாயம் கிடைப்பதால் முந்திரிப் பருப்பு, இறால் மற்றும் பலவகை மீன்கள் ஆகிய சத்தும் சுவையும் கொண்ட உணவுப் பொருட்கள் ஏற்றமதியால் மக்களுக்கு மறைமுகமாக மறுக்கப்படுகின்றன.

உள்நாட்டு மக்கள் ஈட்டும் வருமானத்துக்கு வரியுண்டு. வெளிநாட்டிலிருந்து செலுத்தப்படும் தொகைக்கோ, வெளிநாட்டினர் இங்கு ஈட்டும் வருமானத்துக்கோ வரி கிடையாது. இவ்வாறு நாம் வெளிநாட்டவருக்காக உள்நாட்டவர்களால் ஆளப்படுகின்றோம். ஆனால் இவை பணக்காரர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ற எண்ணத்தில் எளிய மக்களிடமிருந்து எதிர்ப்புகளை உருவாக்கவில்லை. அந்தக் "குறையை" ஈடு செய்ய மீண்டும் வந்துள்ளது உப்பு, அதுதான் அயோடின் கலப்பட உப்பு.

மனிதர்களின் தைராயிடு சுரப்பி முறையாகச் செயற்பட அயோடின் தேவையாம். அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டால் தைராய்டு சுரப்பி வீங்கி முன்கழுத்துக் கழலை வருமாம். அவ்வாறு வருவதைத் தடுப்பதற்காக மக்கள் உண்ணும் உப்பில் அயோடின் சேர்த்துக்கொள்ள வேண்டுமாம். இவ்வாறு கூலிக்கு மாரடிக்கும் சில போலி அறிவியலாளர்கள் ஏறக்குறைய கடந்த பத்தாண்டுகளாகவே கருத்துப் பரப்பல் செய்துவந்தார்கள். செய்தித் தாள்கள் இந்தக் கருத்துப் பரப்பலை கருத்தோடு சுமந்துநின்றன. ஏதோ அறிவியல் புனைகதை போல் மக்களும் சுவைத்துப் படித்தனர்; ஏனென்றால் இந்தப் போலி அறிவியலாளர்கள் கூறுவது உண்மையாயின் நம் நாட்டு வீதிகளில் எங்கு பார்த்தாலும் முன்கழுத்துக் கழலையாளர்களாக மக்கள் அலைந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டைப் பொறுத்த வரையில் முன் கழுத்துக் கழலையுள்ளோர் மிக அரிதே. இப்படி அரிதாகக் காணப்படுவோருக்குக் கூட உணவில் அயோடின் குறைவினால்தான் இக்குறைபாடு நேர்ந்ததா அல்லது உணவிலுள்ள அயோடினை உடல் செரித்துக் கொள்வதிலுள்ள குறைபாடுகளால் அல்லது வேறு காரணங்களால் நேர்கிறதா என்பதை அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இதே நேரத்தில் டாடா போன்ற முதலைகள் வாளாவிருக்கவில்லை தமிழகத்துக் கடலோரங்களில் அதுவும் உப்பு விளைவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளைக் கொண்ட இராமனாதபுரம், தூத்துக்குடி மாவட்டக் கடலோரங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிப் போட்டிருக்கின்றன. இவ்வாறு இப்பெரு முதலைகள் நிலம் வாங்கிப் போட்டபோது அது எதற்காக என்று திகைத்தவர்களுக்கு இப்போது விடை கிடைத்திருக்கும்.

தங்கள் சொந்த அளங்களை அமைத்து அவற்றிலிருந்து உப்பை விளைவித்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் அயோடினைக் கலந்து (இந்த இறக்குமதிக்குத் தேவைப்படும் வெளிச் செலவாணிக்காக இன்னும் நம் பொருட்களில் எவையெவற்றை ஏற்றமதி எனும் பெயரில் இழக்க வேண்டியுள்ளதோ) இந்தக் கலப்பட உப்பைத் தங்கள் முகவர்கள் மூலம் பலசரக்குக் கடைகளுக்கு வழங்கி அங்கிருந்து அனைத்துக் குடிமக்களுக்கும் முன்கழுத்துக் கழலை வராமல் தடுக்கும் அரிய மக்கட்பணி ஆற்றுவதற்கே அவர்கள் மிக முன்னெச்சரிக்கையோடு, மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு தங்கள் குமுகக் கடமையை நிறைவேற்றும் நோக்கத்தோடு இந்நிலங்களை தமிழகத்து மண்ணில் தங்கள் பெயரில் ஒதுக்கி வைத்துள்ளனர். இதெல்லாம் உச்சவரம்புச் சட்ட வரம்புக்குள் வராது. அது உழவன் மேல்தான் பாயும். வேளாண்மை செய்து உணவைப் பெருக்குவோனது கால்களையும் கைகளையும்தான் கட்டும்.

1995 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கடைகளில் அயோடின் கலப்படமில்லாத வெறும் உப்பை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த ஆணையை நிறுத்திவைக்க வேண்டி வழக்கு மன்றத்திடம் வைத்த கோரிக்கையினடிப்படையில் தற்காலத் தடை வழங்கப்பட்டது. ஆனால் ஒரு நாளும் இல்லாத திருநாளாக 11.01.95 அன்று இறுதி உசாவல் வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதிலுமுள்ள நகராட்சிகளிலும் வரி செலுத்தும் மக்களைப் பாதிக்கும் சொத்து வரி விதிப்புக்கு 15.10.93இலும் அதைத் தொடர்ந்தும் உயர் வழக்கு மன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தடையாணைகளை விலக்கிக் கொள்ள இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு அயோடின் கலப்பட உப்பு குறித்த வாணிகர்களின் வழக்குக்கு மட்டும் முண்டியடித்துக் கொண்டு, வரிந்துகட்டிக் கொண்டு மல்லுக்கு நின்றது.

இன்று வெறும் உப்பு படி ஒன்று அல்லது ஒன்றரை ரூபாய்க்கு விற்கிறது. ஆனால் அயோடின் கலப்பட உப்பு கிலோகிராம் நான்கு உரூபாய். எடை அடிப்படையில் பார்த்தால் இன்றைய ஒரு படி வாங்கும் மக்கள் அதே அளவு அயோடின் உப்புக்கு பன்னிரண்டு ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். இன்று தெருவில் உப்பைக் கூவி விற்றுக்கொண்டிருக்கும் அன்றாடங்காய்ச்சிகள் இருளில் மூலை முடுக்குகளில் "கள்ள உப்பை" விற்கும் "கடத்தல்காரர்களாக" மாறவேண்டியிருக்கும்.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஆங்கிலேயன் பர்மாவிலிருந்து கொண்டு வந்த அரிசி நம் வயிறுகளைக் கழுவிய போது ஏற்பட்ட விளக்கவொண்ணா உணவுப் பஞ்சத்தின் போது கூட காணப்படாத அளவுக்கு நம் "சுதேசி"களின் ஆட்சிக் காலத்தில் அரிசியையும் நெல்லையும் "கடத்தும்" "கடத்தல்காரர்கள்" என்று தெருவில் அரிசி விற்றுக் கொண்டிருந்த மக்களைத் துரத்தியடித்தனர். இன்று விற்பனையாகும் ஒவ்வொரு நெல்மணிக்கும் ஏதோவொரு வகையில் "கப்பம்" தண்டும் வகையில் உணவுப் பொருள் வாணிகத்துக்கு உரிமம் கொண்டு வந்துவிட்ட கொடுமையைக் காண்கிறோம். கட்டடம் கட்டும் போது தளத்தை நிரப்புவதற்கென்று எங்காவது மண்ணை வெட்டிச் சரக்குந்தில் கொண்டு சென்றால் சரக்குந்து உரிமையாளரிடத்திலும் கட்டடங்கட்டுபவரிடத்திலும் வழிப்பறிப்பதற்கென்றே "சுரங்கத் துறை" ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் இனி உப்புக் "கடத்தல்காரர்"களிடமிருந்தும் கப்பம் தண்டப்படும் நாள் மிகத் தொலைவில் இல்லை.

அயோடின் கலப்படமில்லாத உப்பு விற்கும் கடைகளின் மீது உணவுப் பொருள் கலப்படச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே மக்கள் தாம் விரும்பாத அயோடின் உப்பை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். அல்லது "கடத்தல் உப்பை" நாட வேண்டியிருக்கும். கலப்பட உப்பை விற்பதற்காக கலப்படமில்லாத உப்பை விற்போர் மீது கலப்படத் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் கொடுங்கோன்மையைப் பாருங்கள்.

இந்த வேளையில் ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கும். பொதுவாக மருத்துவக் கருத்துகளின் படியும் புள்ளிக் கணக்குகளின் படியும் இந்தியாவில் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே அயோடின் பற்றாக்குறையால் மக்கள் துன்புறுகிறார்கள். தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் இந்த வரிசையில் வரும். அதுவும் மிகச் சிறுபான்மை மக்களே அயோடின் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அயோடின் குறைவைக் கடல் மீன் உண்பதால் கூடச் சரிப்படுத்தி விடலாம். இன்றுள்ள போக்குவரத்து வசதிகளால் கடல் மீன் எட்டாத இடமேயில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஏற்றுமதி - இறக்குமதி வாணிகத்தில் தரகு பெறும் ஆட்சியாளர்கள் உள்நாட்டு விளைபொருளான கடல்மீனை மக்கள் கூடுதலாக நுகர்வதை எவ்வாறு விரும்புவர்?

அதுமட்டுமல்ல அயோடின் உட்கொள்ளும் பலருக்கு ஒவ்வாமை நோய் வரும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தேவைக்கு மேல் உட்கொள்ளப்படும் அயோடினும் உடல் நலத்துக்குக் கேடு தரும். இவ்வேளையில் தங்களால் தாங்கமுடியாத விலையைக் கொடுத்து நோய்களை உண்டாக்கும் அயோடின் கலப்பட உப்பை வாங்குவதைக் காட்டிலும் மக்கள் வெறும் "கடத்தல் உப்பையே" வாங்க முன் வருவர். இன்றைய சிறு உப்பள உரிமையாளர்களெல்லாம் "கள்ள" உப்புக் காய்ச்சிகளாக மாறிவிடுவர். கப்பம் கொடிகட்டிப் பறக்கும். சாராயம் காய்ச்சுவதிலும் விற்பதிலும், கஞ்சா, அபின் மற்றும் போதைப் பொருள் கடத்தலிலும் விற்பனையிலும் கிடைப்பதைவிட அதிக வருமானம் இந்தக் "கள்ள உப்பு" விற்பதிலும் அரசாள்வோருக்குக் கிடைக்கும்.

வாணிகர்கள் அரசின் ஆணையை எதிர்த்து வழக்கு மன்றத்தை நாடினார்கள். இந்நாளில் வழக்கு மன்றம் என்பது மதில் மேல் பூனை. அது ஒரு புறம் தாவினால் மறுபறம் உள்ளோர் திரும்பவும் அதனை மதில் மேல் ஏற்றுவர். அது இன்னொரு தடவை தாவும் வரை நீதி நாடி நிற்போர் தவித்தே நிற்க வேண்டும்.

ஆனால் இன்னொரு வலிமையான இறுதி முடிவெடுக்கும் நீதிபதி ஒருவர் உள்ளார். அவரைக் கண்டு வாணிகர்கள் அஞ்சுவதால் அவரை அணுக அவர்கள் தயங்குகின்றனர். அந்த நீதிபதிதான் பொதுமக்கள். 1995இல் நடந்த கடையடைப்பின்போது வாணிகர்கள் முன்வைத்த கோரிக்கைகள் ஒவ்வொன்றும் பொதுமக்கள் சார்பானவையே. இருப்பினும் அக்கோரிக்கைகளைப் பொதுமக்கள் முன் விரிவாக வாணிகர்கள் எடுத்து வைக்கவில்லை. இருந்த போதிலும் பொதுமக்கள் முழு ஆதரவை வழங்கினர்.

இன்றைய உப்புச் சிக்கல் முன் நேற்றைய வரிச் சிக்கல் உப்புச் சப்பற்றுப் போய்விடும். எனவே வாணிகர்கள் இம்முறையாவது சிக்கலைப் பொதுமக்கள் முன் வைக்க வேண்டும். அயலானான ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறுவதற்காக 1920இல் உப்பு அறப்போரை நடத்தினார் காந்தியடிகள். இன்று "சுதேசி"களிடமிருந்து விடுதலை பெறுவதற்கு ஆயத்த நடவடிக்கையாக மீண்டும் ஓர் உப்பு அறப்போர் தொடங்குவதற்கு நாமனைவரும் ஆயத்தமாவோம்.


பின்குறிப்பு:

அயோடின் சத்துள்ள உணவுப் பொருட்கள்:

கேரட், தக்காளி, பசலைக் கீரை, உருளைக் கிழங்கு, பட்டாணி, வெங்காயம், வாழைப்பழம், கடல் உணவுப் பொருட்கள், பால், பாலாடைக் கட்டி, முட்டை மஞ்சள் கரு, தண்ணீர் விட்டான் கிழங்கு.


உடலில் அயோடின் சத்தைச் சேர்க்க விடாமல் செய்யும் சில உணவுப் பொருட்கள்:

முட்டைக் கோசு, காலிபிளவர், முள்ளங்கி.

சான்று: தினமணி கதிர் 24 -07-1997.

1.8.07

புதிய நூற்றாண்டு புத்தக நிலையத்தாரின் (என்.சி.பி.எச்) திறனாய்வுக்கு மறுமொழி

அன்புடையீர் வணக்கம்.

எனது 8 கட்டுரைகள் அவை குறித்த 19.4.95 நாளிட்ட தங்கள் திறனாய்வுடன் கிடைத்தன. அதில் நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விடைகளையும் என் சில ஐயப்பாடுகளையும் தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

குமரிமைந்தன் யார்?

இயற்பெயர்
செ. பெரியநாடார்

புனைபெயர்கள்
குமரிமைந்தன், பேயன்

பிறந்த இடம்
குமரி மாவட்டம்

பிறந்த நாள்
04-05-1939

பெற்றோர்
செல்லப்பெருமாள் - அன்னவடிவு

கல்வி
பொது - இடைநிலை வகுப்பு

தொழில் - எல்.சி.இ. (பொதுப் பொறியியல் உரிமம்)

வேலை
1960 முதல் 1983 வரை 24 ஆண்டுகள் தமிழகப் பொதுப் பணித்துறையில் பிரிவு அலுவராகப் பணி. பின்பு விருப்ப ஓய்வு பெற்று சொந்தத் தொழில்.

அரசியல் சார்பு

தோற்றம் - திராவிட இயக்கம்
மலர்ச்சி - தனித் தமிழ் இயக்கம்
முதிர்ச்சி - மார்க்சியம்.

எழுத்துப்பணி

ஆக்கிய நூல்கள்
1. பஃறுளி முதல் வையை வரை
2. தமிழகச் குமுக வரலாறு-வினாப்படிவமும் வழிகாட்டிக் குறிப்புகளும்
3. விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும்
4. நலிந்து வரும் நாட்டுப்புறம்

தமிழாக்கம்
1. பொறியியற் கல்லூரிக் கைநூல்-பாசனம் ஆசிரியர் டபுள்யூ.எம். எல்லிசு.
2. சோசலிச நடப்பியமும் இன்றைய இலக்கிய நிகழ்முறையும் ஆசிரியர்: ஓவ்ச்சாரெங்கோ வெளியீடு: நியூ செஞ்சரி புத்தக நிலையம்.

இனி கட்டுரைகளுக்கு வருவோம்:

பாசனம், பாலைத்திணை, தைப்பொங்கல் பற்றிய கட்டுரைகளை மனந்திறந்து பாராட்டியுள்ளமைக்கு என் நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ஒளிவு மறைவில்லா உங்கள் நேர்மையான திறனாய்வுப் பண்புக்கு என் பாராட்டுகள்.

வீட்டைக் கட்டிப்பார்:

'வங்கிக் கடன்களினால் பயம்பெறுவோர் வங்கி ஊழியர்களும் அவர்கள் பரிந்துரைக்கும் அவர்களுடைய நண்பர்களும் உறவினர்களும் தான்' என்று நான் கூறியிருப்பதற்குக் கொதித்துப் போயிருக்கிறீர்கள். அரசியல்வாதிகளும் தொழில் முதலாளிகளும் தான் என்று சாவடியிருக்கிறீர்கள். முதலில் நான் குறிப்பிட்டிருப்பது வீடுகட்டும் கடன் பற்றி. நீங்கள் ஒரு அரசியல் வாதியாகவோ தொழில் முதலாளியாகவோ இல்லாமலிருந்தால் நகைக்கடன் போன்ற சில்லரைக் கடன்களுக்குத் தான் வங்கியை நாடுவோம். அந்த மட்டத்திலிருந்து நான் பேசுகிறேன். இரண்டாவதாக, வங்கியோடு தொடர்பில்லாத அரசியல்வாதி எப்படி வங்கிப் பணத்தை விழுங்க முடிந்தது? 45.000 கோடி உரூபாய் திரும்பப்பெற முடியாத கடனாய் எப்படிப் பாழானது? நாட்டுடைமையாக்கம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் கையில் உங்கள் கட்சியினர் கொண்ட முயற்சி தானே காரணம்? நாற்பத்தைந்து ஆயிரம் கோடி மக்கள் பணம் பாழாவது எத்தனை தனியார் வங்கிகள் திவாலாலும் நிகழாதே! இப்போதாவது அரசுடைமைக்கு எதிராள நீங்கள் குரல்கொடுக்க ஆயத்தமா? உயரதிகாரிகளின் கைகளிலும் அரசியல்வாதிகளின் கைகளிலும் 85 கோடி மக்களின் பொருளியல் நடவடிக்கைகளை, பொருளியல் வாழ்வினை அடகுவைப்பது தான் சோசலிசமா? கூட்டுறவுத்துறை போன்றவையும் அத்தகையவை தானே?

வருமான வரி தேவையா?

உங்கள் எதிர்ப்பில் சாரமில்லை என்பது உங்களுக்கே புரிந்திருக்கிறது. எல்லா நாடுகளிலுமிருப்பதால் இங்கும் தேவை என்கிறீர்கள். யாருடைய நோக்கம் நன்னோக்கம்? முதலாளிகள் கொள்ளையடிப்பதைத் தடுக்காமல் மக்களை அவர்கள் கொள்ளையடிக்க விட்டுவிட்டு அவர்களிடமிருந்து வழிப்பறி செய்வதைக் கட்டுரை தெளிவாகக் கூறியுள்ளதே! முதலாளிகள் கொள்ளையடிக்கிறார்களென்றால் அரசு அதைத் தடுக்க வேண்டும். இல்லாத நிலையில் அது சட்டப்படி ஈட்டப்பட்ட பணம் தானே! அதில் எத்தனை நூற்றுமேனி கருப்புப் பணம் என்ற கணிப்பே வருமானவரித்துறை அவ்வப்போது நிறுவும் வரியில்லா வருமானத்தின் உச்சவரம்பு அடிப்படையில் தானே! அரசியல்வாணர்களும் கொள்ளைக்காரர்களும் சுருட்டும் பல கோடிக்கணக்கான கள்ளப்பணம் சட்டப்படி ஈட்டப்பட்ட இந்தக் ′′கருப்புப் பணம்′′ போல் பறிமுதல் செய்யப்படுவதில்லையே! ஆளும் கும்பலில் இந்த அடாவடியினால்லவா பல கோடிக்கணக்கான கோடி உரூபாய்கள் முடங்கிப் போய் பன்னாட்டு நிறுவனங்களும் உலகவங்கியும் பணக்கார நாடுகளிலுள்ள கயவாளிகளெல்லாம் இந்த மண்ணில் முதலை விதைத்து வளமெல்லாவற்றையும் அள்ளிச் செல்லும் வகையில் மூலதன வெற்றிடம் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது? இதற்கு உங்கள் அணுகல் தானே மூலகாரணம் .

அந்த ஆறடி நிலம் யாருக்கு?

வீடு கட்டுபவர்களுக்கு நகராட்சி தரும் தொல்லைகளையல்ல அரசு தரும் தொல்லைகளைத் தான் குறிப்பிட்டுள்ளேன். வீட்டைக் கட்டிப்பார் கட்டுரையோடு தொடர்புடையது இது. உலக வங்கியின் முதலீட்டுக்களமான வீடமைப்பு வாரியத்துடன் சேர்ந்து தமிழக அரசு பொது மக்களின் வீடுகட்டும் நடவடிக்கைகளை முடமாக்குகிறது என்பது கட்டுரையின் கரு. உங்களுக்கத் தான் அரசும் அதன் உறுப்புகளும் அவற்றின் அதிகாரிகளும் புரட்சியின் மூலவிசைகளாயிற்றே! இத்தகைய கட்டுரைகளின் சாரம் எங்கே புரியப் போகிறது?

நிலவுடைமைக் குளறுபடிகள்

நிலப் பிரச்சனை என்ன?
பொதுமை இயக்கம் ஊழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை வைத்துள்ளது. இதில் உழுபவன் என்பது நிலத்தைக் குத்தகைக்குப் பயிரிடுவோனையும் உழுதொழிலாளியையும் குறிப்பிடும் பொதுச் சொல்லாகும். இதில் பயிரிடுவோனுக்கே நிலம் சொந்தம் என்பது சரியான நிலைப்பாடு, ஏனென்றால் குத்தகை முறை என்பது பண்டை நிலக்கிழமை(நிலப்பிரபுத்துவம் - Feudalism)யின் தொடர்ச்சி அல்லது நிலத்தைத் தீண்டாத நிலவுடைமை (Absentee landlordism)யின் விளைவு. முதல் முறையில் உழவன் நிலத்திலிருந்து விடுபட முடியாதவாறு தளைப்பட்டிருக்கிறான். நிலமும் அவ்வாறே தளைப்பட்டுள்ளது. இந்த முட்டுக்கட்டையை அகற்றி நிலம் அதன் உடமையாளரால் நேரடியாகப் பயிர்செய்யப்படுவதால் நிலவுடைமையாளனின் கவனிப்பும் ஈடுபாடும் அதன் மூலம் நிலத்தின் விளைதிறனும் உயர்கின்றன. நிலவுடைமையாளனும் பயிரிடுவோனும் ஒன்றாகிவிடுவதால் அவன் தன் நிலத்தை விற்றுவிட்டு மாற்றுத் தொழிலில் இறங்கும் உரிமையையும் பெற்றுவிடுகிறான். இதன் மூலம் பெருநிலவுடைமைகள் உருவாகி முதலாளிய வேளாண்மை உருவாவதற்கு வழியேற்படும். ஐரோப்பாவின் நிலக்கிழமைச் குமுகம் உடைந்து முதலாளியம் தோன்றுவதற்கு இந்தக் குத்தகை ஒழிப்பு தான் வழிகோலியது. இதைத்தான் நானும் பரிந்துரைத்துள்ளேன். உழுதொழிலாளியை நிலவுடைமையாளனாக்குதல் அவனைப் புதிய அடிமைத் தனத்துக்கு இட்டுச்செல்லும் என்பதைப் பட்டறிவுள்ள குறு உழவன் ஒருவனைக் கேட்டீர்களாயின் புரிந்து கொள்ளலாம்.

நில உச்ச வரம்பு என்பது இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் குழப்பமானது. குத்தகையாக நிலங்களை விட்டிருக்கும் ஒருவன் அதே நிலையில் உச்சவரம்புக்கு ஆளானால் உச்சவரம்புக்குட்பட்ட நிலம் குத்தகையொழிப்புக்கு ஆளாகுமா? சொந்தப் பயிரிடும் நிலம் உச்சவரம்புக்கு மிகுந்திருந்தால் அது பறிக்கப்படுமா? என்பதெல்லாம் தெளிவாக இல்லை. சொந்தப்பயிரில் இருக்கும் நிலம் உச்ச வரம்புக்கு ஆளாவது அதாவது துண்டு துணுக்குகளாவது குமுக வளர்ச்சித் திசைக்கு எதிரான செயலாகும்.

இங்கு மார்க்சியத்தில் அடிப்படை ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். குமுக வளர்ச்சி என்பது முந்தியல் பொதுமை, அடிமைச் குமுகம், நிலக்கிழமையியம், முதலாளியம், பொதுமை என்ற வரிசையில் நிகழ்கிறது என்பது மார்க்சின் முடிவு. இவற்றில் எந்தவொரு கட்டத்தினுள்ளும் நுழையாமல் தாண்டி இன்னொரு கட்டத்தினுள் தாவிக்குதிக்க முடியாது என்பது அவரது திட்டவட்டமான முடிவு. புதிய கட்டத்தின் பேறுகால நீட்சியையும் நோவையும் வேண்டுமானால் குறைக்கலாம் என்பது அவரது கூற்று. இந்த அடிப்படையில் முதலாளியத்துக்கு முந்தியதாகிய நமது குமுகம் (பணக்கார நாடுகள் தங்கள் மூலதனத்தையும் தொழில் நுட்பத்தையும் கருவிகளையும் கொண்டு நிறுவியுள்ள தொழிற்சாலைகளை வைத்து நம் நாடு முதலாளிய நாடு என்று வாதிடுவது தவறு. பழைய சாதி சார்ந்த விளைப்பு முறைகள் முற்றிலும் உடைபட்டு, மலைகளில் வாழும் ஆதிவாசிகளும் நிலத்துக்கு வந்து முதலாளிய விளைப்பு முறையில் ஈடுபட்டு, குடும்ப அமைப்பு தகர்ந்து, சமயம் கேள்விக்குரியதாகி வரும் நிலை தான் நாம் முதலாளியத்தினுள் முழுமையாக நுழைந்து விட்டதற்கு அறிகுறி. இந்நிலை வராமல் தடுப்பதற்கே இயக்கங்களை மார்க்சிய இயக்கங்கள் நடத்துவது தான் வரலாற்று அவலம்) முதலாளியத்தினுள் நுழைய வேண்டுமானால் கோயில் நிலங்கள் உட்பட (கோயில் நிலங்களைப் பற்றி நீங்கள் மூச்சுவிடுவதே கிடையாதே ஏன்?) அனைத்துக் குத்தகை நிலங்களும் பயிரிடுவோர்க்குச் சொந்தமாக வேண்டும். அதன் மூலம் பெருநில உடைமைகள் உருவாகி சிறு நில உடைமையாளர்கள் முதலாளிய வேளாண்மையின் தொழிலாளர்களாக வேண்டும். இந்த இடைமாற்றத்தின் போது சிறு உடைமையாளர்களுக்குப் பெரும் இன்னல்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது தான் மார்க்சியர்களின் கடமை.

நிலக்கிழமைச் குமுகத்திலிருந்து முதலாளியச் குமுகத்துக்கு மாறிச் செல்வது ஒரு குமுக முன்னேற்றம என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன். ஏனென்றால் பொதுமைக் கட்சி அறிக்கையில் ஐரோப்பாவில் முதலாளியச் குமுகம் உருவாகிய நிலையில் பழைய மூடநம்பிக்கைகள், கீழ்ந்தரமான குமுக உறவுகள் போன்றவை எவ்வாறு உடைந்து சிதறின என்பதை விளக்கி அந்தக் கட்டத்தில் முதலாளியத்தின் இந்த முற்போக்குத் தன்மை பற்றி மார்க்சும் ஏங்கல்சும் மனம் மகிழ்ந்து பாராட்டியிருப்பதைப் படித்திருப்பீர்கள். எனவே குத்தகை நிலம் சொந்த நிலமாவது முற்போக்கு தான்.

சிறுவுடைமை பெருவுடைமையாவது முற்போக்கு தான். சொந்தப் பயிரிடும் நிலம் உடைந்து சிதறுவது வளர்ச்சிக்கு எதிரானது தான். பெருவுடைமையும் அது வேளாண்மையாயிருந்தாலும் தொழில்துறையாயிருந்தாலும் அதில் உழைக்கும் தொழிலாளர்களும் முதலாளியத்துக்கு அடுத்த கட்டமாகிய சோசலிசத்தின் இன்றியமையாத உறுப்புகள். அந்த உறுப்புகளை உருவாக்குகவதே மார்க்சியர்களின் வரலாற்றுக் கடமை.

நிலவுடைமையராகியுள்ள முன்னாள் குத்தகையாளர்கள் விரைந்து வளர்வதை நீங்கள் அறிவீர்களோ என்னவோ. ஆனால் அது இன்று நடைமூறை உண்மை.

நேரு மரபினரும் நரசிம்மராவும் நிலஉச்சவரம்பைச் செயற்படுத்தவில்லை என்று நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். இதில் உச்சவரம்புச் சட்டம் நிலத்தை முடமாக்கவே பயன்படுகிறது என்னும் என் கருத்தில் என்ன பிழை?

உழுபவன் என்பவன் பயிரிடுவோனா? உழுதொழிலாளியா? குத்தகை ஒழிப்பு பற்றிய தங்கள் நிலைப்பாடு என்ன அருள்கூர்ந்து தெளிவுபடுத்துங்கள். நிலச்சுவான்தார் எனும் சொல் நிலப்பிரபு அல்லாத சொந்தப் பயிரிடும் நிலவுடைமையாளரைக் குறிக்கிறதா? குத்தகைக்கு நிலத்தை விடும் நிலவுடைமையாளரைக் குறிக்கிறதா? அல்லது மூவருக்கும் பொதுவானதா? நான் வேளாண்மையை. முதலாளிய முறையில், முழுவதும் சொந்தப் பொறுப்பில் செய்பவரிடம் நிலங்கள் திரள வேண்டுமென்று கூறுகிறேன். அது தான் மார்க்சியம் காட்டும் வழி.

ஒதுக்கீடும் ஏழ்மையும்:

ஆடம்ஸ்மித்தைக் குறை சொல்லியிருப்பதை ஒரு குறையாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

வரலாறு தெரிந்த நாள் முதல் உலக வாணிகம் என்பது உலக வாணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு குழுவுடன் அந்தந்த நாட்டைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்நாட்டுக் குழுக்கள் கூட்டுச் சேர்ந்து அனைத்து மக்களையும் கசக்கிப் பிழிவதாகும். பினீசியர்கள் தொடங்கி இன்றைய ′′காட்′′ ஒப்பந்தக்காரர்கள் வரை நிலமை மாறவில்லை. ஐரோப்பாவில் தொழிற்புரட்சியே இவ்வகை வாணிகக் குழுக்களின் நடவடிக்கைகளிலிருந்து தான் உருவானது. அத்தொழிற்புரட்சியின் பொருளியல் கணக்கனான ஆடம்ஸ்மித் அத்தகைய வாணிக நலன்களை முன்னிட்டுத் தானே கோட்பாடுகளை வகுத்துள்ளார்?

இந்தப் பொருளியல் பின்னனியில் உருவாள பாராளுமன்ற மக்களாட்சி அரசியல்வாணர்களும் அதிகாரிகள் கூட்டமும் இவ்விருசாரார்க்கு வேண்டியவர்களுமாக நடத்தும் குழவாட்சி நிலையிலிருந்து மீளவில்லை. குழுக்களின் பொருளியல் நடவடிக்கைகளுக்கேற்ற குழுவினராட்சி(Oligarchy) தான் பாராளுமன்ற மக்களாட்சி. பணக்கார நாடுகளில் உள்ள 25 நூற்றுமேனி மக்களுக்கு உலக முழுவதுமுள்ள செல்வங்கள் சென்று பாய்வதால் பாராளுமன்ற வடிவத்தில் குழுவாட்சி உள்ளடக்கம் அவர்களுக்கு வெளிப்பட்டுத் தோன்றவில்லை. ஏழை நாடுகளில் அது துலக்கமாகத் தெரிகிறது. எனவே இக்குழுவினராட்சிமுறையை ஒழித்துப் பொதுமக்கள் யாவரும் பங்கு கொள்ளும் புதிய வகையிலான மக்களாட்சி மலர வேண்டுமாயின் ஒவ்வொரு நாட்டு மக்களும் தத்தம் நாட்டு வளங்களைத் தத்தம் நாட்டு மூலதனத்துடனும் உழைப்புடனும் தத்தம் நுகர்வுக்கேற்ற வகையில் உழைத்துப் பயன்படுத்த வேண்டும். அவ்வந்நாடுகளில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு அவ்வந்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் தொழில்நுட்பங்களை வளர்க்க வேண்டும். அதற்கு முதற்படித் தேவை அரசிடமிருந்து உள்நாட்டு, மற்றும் எல்லைக் காவல், நீதிமன்றங்கள், பணப்புழக்கம், வெளிச் செலாவணி போன்ற துறைகள் தவிர பொருளியல் நடவடிக்கை அனைத்தையும் பிடுங்கி அவற்றில் உள்நாட்டு மக்களுக்கு முழு உரிமை வழங்கப்பட வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் தான் ஏற்றுமதி, இறக்குமதி அடிப்படையிலமைந்த ஐரோப்பியப் பொருளியல் கோட்பாடுகளைக் குறை கூறியுள்ளேன்.

சோசலிசத்தைக் குறை கூறவில்லை, போலி சோசலிசத்தைத் தான் குறை கூறியுள்ளேன். அண்மைக் காலத்தில் 1953க்குப் பின்னர் பொதுமைக் கட்சி கடைப்பிடித்து வரும் செயல் திட்டத்தைத் தான் குறை கூறியுள்ளேன். வங்கிகளை அரசுடைமையாக்குதல், கூட்டுறவு அமைப்பின் கீழ் மரபுத் தொழில்களைக் கொண்டு வருவது, தொழில்களை அரசுடைமையாக்குவது, உணவுப் பொருட்கள் அனைத்தின் கொள்முதலையும் விற்பனையையும் அரசே மேற்கொள்வது நிலத்தை அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுப்பது, வருமானவரி மூலம் பணக்காரர்களிடமிருந்து செல்வத்தைப் பிடுங்கி ஏழைகளுக்குப் பயனுள்ள திட்டங்களைத் தீட்டுவது என்பதாகும் அது.

இதே கோட்பாடுகளைக் கொண்டு உருவான இன்னொரு இயக்கம் சோசலிச அனைத்துலகியம். இது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டது. லோகியா, ராசநாராயணன், சார்சு பெர்ணாண்டோ ஆகியோர் இவ்வியக்கத்தைச் சார்ந்தவர்கள். இவ்வியக்கம் மார்க்சு காலத்திலேயே உருவாகி விட்டது. இதைக் கற்பனைச் சோசலிசம் என்று மார்க்சு குறிப்பிட்டுள்ளார். தான் பரிந்துரைக்கும் சோசலிசத்தை அறிவியல் சோசலிசம் என்றும் பொதுமையியம் என்றும் குறிப்பிட்டார். அதைப் புரட்சிகர சோசலிசம் என்றும் கூறினார். இருக்கும் அரசுப் பொறியைத் தகர்த்தெறிந்து பாட்டாளி மக்களின் முற்றதிகாரத்தின் கீழ் அனைத்து விளைப்பு வகைதுறைகளையும் அனைத்து மக்களுக்கும் பொதுவாக்கி வகுப்பில்லா ஒரு குமுகத்தை நோக்கிச் செலுத்தி அரசே தேவையில்லா நிலையை உருவாக்க வேண்டுமேன்று அவர் கூறினார். இதை சோசலிசக் கட்டம் என்றும் பொதுமைக் கட்டம் என்றும் இரண்டாய்ப் பிரித்தவர் லெனின் தான். உருசியாவில் நடந்தது ஒரு சோசலிசப் புரட்சியா இல்லையா என்பதில் அவர் பெரும் குழப்பம் அடைந்திருந்தார் (லெனினையமா குறை சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா! மார்க்சும் லெனினும் மனிதர்கள் தானே! வளர்ச்சியென்பது தட்டுத்துதருமாறிய முன்னேற்றம் தானே!) அதனால் முதலாளியத்துக்குள் நுழையாமல் நிலக்கிழமையிலிருந்து நேரடியாக பொதுமையினுள் நுழையும் முயற்சி தோல்வியுற்றது. மாறாக முதலாளியத்தினுள் நுழைவதாகத் திட்டம் தீட்டியிருந்தால் சப்பானைப் போல் 20 ஆண்டுகளில் முதலாளியத்தை நோக்கித் தான் மட்டுமல்ல ஏழை நாடுகள் அனைத்தையும் இட்டுச் சென்று இன்று உலக மக்கள் பண்பாட்டில் அடுத்த கட்ட வளர்ச்சிக்குள் நுழைய ஆயத்தமாக்கியிருக்கலாம்.

இன்று நீங்கள் கைக்கொண்டிருக்கும் செயல் திட்டமும் மார்க்சும் ஏங்கல்சும் கற்பனைச் சோசலிசம் என்று நகையாடிய போலிச் சோசலிசமும் ஒன்று தான். நீங்கள் சோவியத் முகாமுக்கு ஆதரவாக நின்றீர்கள்; அவர்கள் அமெரிக்க முகாமுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். அடிப்படையில் இரு குழுவினரும் வல்லரசு நாடுகள் எளிதாக இங்கு நுழைந்நு தம் பொருளியல் பேரரசுகளை அமைத்துக் கொள்வதற்குத் தேவையான பொருளியல் வெற்றிடங்களை உருவாக்கிக் களம் அமைத்துக் கொடுத்துள்ளீர்கள்.

தவறான அணுகுமுறையால் மக்களாட்சிப் பட்டறிவில்லாத சோவியத் மக்களை அரசு அதிகாரிகளும் ஆளுங்கட்சியினரும் சுரண்டிக் கொழுந்திருந்தனர்; அதனை உடைக்கக் கோர்ப்பசேவ் முயன்றபோது அவரது துனைவர் ஒருவர் கூறினார், ஊழலால் ஆட்சியாளர்களிடம்(அதிகாரிகளும் ஆளுங்கட்சியினரும்) திரண்டிருக்கும் செல்வத்தை ஏற்றுக் கொண்டு அதை அவர்கள் தொழில்களில் முதலீடு செய்ய வகைசெய்தால் சோவியத்தின் பொருளியல் நெருக்கடியிலிருந்து தப்பலாம் என்று. கோர்ப்பசேன் மாறாக அமெரிக்காவின் கால்களில் வீழ்ந்தார். குடும்பத்தைப் பட்டினிபோட்டு காரல்மார்க்சு உருவாக்கிய கோட்பாடு, வாழ்நாளின் பெரும் பகுதியைத் தலைமறைவாகக் கழித்த லெனினின் கனவுகள் கோடிக்கணக்கான சோவியத் மக்களின் குருதி அனைத்தும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்ததாலும் தெளிவின்மையாலும் இரண்டகங்களாலும் வீணாயின.

இந்தப் பாடங்களிலிருந்து பெறப்படுவது என்னவென்றால் மார்க்சு முதலாளியத்தை எய்திய நாடுகள் நிகர்மையை எய்துவதற்காக செயல்திட்டத்தைத் தான் வகுத்துத் தந்தாரேயோழிய ஏழை நாடுகள் முதலாளியத்தினுள் நுழைவதற்கான செயற்திட்டத்தை வகுத்துத் தரவில்லை. அது இப்போது தேவைப்படுகிறது. எனவே ஏழை நாடுகள் முழுமையான முதலாளியத்தினுள் நுழைவதற்காக செயற்திட்டம் ஒன்றை உடனடியாக வகுக்கு வேண்டும். இந்த அடிப்படையில் தான் நான் முதலாளிய விளைப்பு முறைகளை வேளாண்மையிலும் தொழில்துறையிலும் புகுத்துவதற்கு வசதியாக பெருநிலஉடைமை (நிலப்பிரபுத்துவமோ குத்தகை வேளாண்மையா அல்ல) பெருந்தொழில் அமைப்புகள் வேண்டும் என்கிறேன்.

எனக்கொரு ஐயம் Capialism என்ற சொல்லுக்கு தனியுடைமை என்று பொருள் கொண்டிருக்கிறீர்களோவென்று. ஏழைநாடுகளில் இன்று நிலவுவது தனியுடைமை மட்டும் தான். பணக்கார நாடுகளில் தான் அதாவது மார்க்சின் சுற்றுப்படி Classical Capitalism நிலவுகிறது. அனைத்து விளைப்பு வகைதுறைகளும்(Means of Production) விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரின் கைகளில் குவிவது, பெரும்பான்மை மக்கள் கூலித் தொழிலாளர்களாக மாறுவது. இது தான் பொதுமையியத்துக்கு முந்தியதாக அதற்கு முன்னோடியாக அமையத்தக்க பொருளியல் அமைப்பென்று மார்க்சு கூறினார். இங்கு மாற்றம் மிக எளிது. தனிஉடைமையாளர்களாகிய விரல்விட்டு எண்ணத்தக்க அந்த ஒரு சிலரை அகற்றிவிட்டால் பெரும்பெரும் பொருளியல் அமைப்புகளைத் தொழிலாளர்களே கையாண்டுவிடலாம். எனவே பெரும் முதலாளியத்தைப் பரிந்துரைத்தன் மூலம் மார்க்சியத்திலிருந்து நழுவி விட்டதாக நான் கருதவில்லை.

சோவியத் ஒன்றியம் கலைந்து போய்விட்டதால் மார்க்சியம் தோற்றுவிட்டதாய் நான் கருதவில்லை. மழலைப் பருவத்து மார்க்சியம் தன் தவறுகளின் விளைவைச் சந்தித்துவிட்டது. தவறுகள் என்னென்ன என்று கண்டுபிடிக்க வேண்டிய காலகட்டத்தில் நிற்கிறது. இக்காலகட்டத்தில் அதுபற்றிய ஒரு கலந்துரை தேவையென்று நீங்கள் கருதினால் என் கட்டுரையை உங்கள் திறனாய்வுகளுடனும் என் விளக்கங்களுடனும் வெளியிடலாம். முடிவு உங்கள் கையில்.

அன்புடன்,
குமரிமைந்தன்.

பெறல்:
நியூ செஞ்சுரி புத்தக நிலையம்.