18.6.07

வருமான வரி தேவையா?

இந்தியாவில் பொருளியலைத் தாராளமாக்குவது பற்றி ஒயாமல் பேசப்படுகிறது. ஆனால் அதன் பயன்கள் நம் மக்களுக்கு இதுவரை எட்டவில்லை. விலையேற்றம் தான் தாராளமாக்கலின் விளைவு என்றால் அத்தகைய தாராளமாக்கலை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

மக்கள் மீது இடப்பட்டிருக்கும் பொருளியல் தளைகளில் முதன்மையானதும் கொடுமையானதுமான தளை, வருமான வரியாகும். பொருளியலைத் தாராளமாக்கல் பற்றிய பேச்சு வந்ததும் வருமான வரியின் கெடுபிடி தளரும், வருமான வரிக்கான குறைந்த பட்ச வரம்பு உயரும் என்றெல்லாம் மக்கள் கனவு கண்டார்கள். ஆனால் வி.பி.சிங் காலத்தில் ரூ. 22,000/-ஆக இருந்த வரம்பு ரூ.28000/-ஆவதற்கு மக்கள் மிகவும் கெஞ்ச வேண்டியிருந்தது. இவ்வளவுக்கும் இவ்வருமான வரி பணக்காரர்களிடமிருந்து ஏழை மக்களையும் தொழிலாளர்களையும் காப்பதற்காக விதிக்கப்படுவதாகவே பெரும்பாலோர் நம்புகிறார்கள். இந்நிலையில் 1993-91ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் வெளியிடப்படும் முன்பே தொழிலாளர்கள் சார்பில் குறைந்த பட்ச வரம்பை ரூ.50,000/-ஆக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இதை எழுப்பியவர் இந்தியாவின் ஆற்றல் மிக்க தொழிற்சங்கத் தலைவரான இராமானுசம் ஆவார். இவர் ஆளும் பேரவைக் கட்சித் தொழிற்சங்கத் தலைவர் என்பது முக்கியம். இதிலிருந்து வருமான வரி வாய்க்கும் கைக்கும் என வாழ்வோர் அல்லது நடுத்தர வகுப்பு மக்களையும் எட்டிவிட்டது புலனாகும். இந்த ஆண்டும் இக்கோரிக்கை தொடர்கிறது. ஆனால் நம் நிதியமைச்சர் மன்மோகன் சிங் வருமான வரி வரம்பில் மாற்றமேதுமிருக்காது, வேண்டுமானல் மிகுதி வரியைக் (சர்ஜார்ஜ்) குறைக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் இந்த வருமான வரி தேவைதானா? இதுவரை வருமான வரியால் நம் நாட்டின் பொருளியலிலும் சமூகத்திலும் ஏற்பட்டுள்ள விளைவுகள் யாவை? வருமான வரி தொடரத்தான் வேண்டுமா? அது இல்லை என்றால் என்ன கெட்டுவிடும்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவோம்.

நாமறிந்தவரை வருமான வரியைக் கொண்டு நம் நாட்டில் எந்தப் பொதுவான வளர்ச்சியோ, அல்லது ஏழைகளுக்கு நன்மையோ ஏற்பட்டுள்ளதாகக் கூற முடியாது. அவ்வாறு வளர்ச்சியோ அல்லது ஏழைகளுக்கு நன்மையோ ஏற்பட்டிருப்பதாகக் கூற முடியுமானால் அவற்றோடு நம் மக்கள் மீது ஏறி நிற்கும் அயல்நாட்டுக் கடன் அளவையும் அயற் செலாவணி ஈட்டுவதென்ற பெயரில் ஏற்றுமதியாகும் உள்நாட்டு மக்களின் நுகர்வுக்கு மறுக்கப்படும் பண்டங்களின் மதிப்பையும் ஒப்பு நோக்கினால் நம் மக்களுக்குப் பெரும் இழப்பே மிஞ்சுவது புலனாகும். எனவே வருமான வரியால் நம் மக்களுக்கோ நாட்டுக்கோ எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாறாக அது விளைத்து வரும் தீங்குகள் எண்ணற்றவை. சிலவற்றைத் தொகுத்துப் பார்ப்போம்.

1) வெள்ளையராட்சிக் காலத்தில் இங்கு வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. விடுதலையை அடுத்த ஆண்டுகளிலும் நிலை இதுதான். வருமான வரி விதிப்புக்கு ஓரு முற்போக்குச் சாயம் ஏற்றப்பட்ட பின்னர் தான் கெடுபிடிகள் தோன்றின. வருமானத்தில் 97.5 சதவீதம் வரை வரிவிதிக்கும் கொடுமை அரங்கேறியது. இப்போது மக்களிடையில் பணக்காரர்களின் எண்ணிக்கையும் பெருகியிருக்கிறது. எனவே வருமான வரி பற்றிய கிலி மக்களிடையில் பெருகியுள்ளது. சட்டத்துக்குட்பட்டுத் தாம் ஈட்டும் பணத்தை வரைமுறையின்றிப் பறிகொடுப்பதை யார்தான் விரும்புவர்? எனவே வருமானங்கள் மறைக்கப்பட்டன. சட்டப்படி ஈட்டப்பட்ட பணம் ″சட்டத்துக்குப் புறம்பான″ கருப்புப் பணமாக மாறிப் பதுங்கியது.

2) தனிமனிதர்கள் கைகளில் திரளும் பெரும்பணம் லாபம் என்ற வடிவில் எளிய மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் தான். ஆனால் அவ்வாறு திரளுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரம் அவ்வாறு திரளும் பணம் மூலதனமாக மீண்டும் பொருளியல் களத்தில் இறங்குமானால் அதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் பயன் கிடைக்கும். ஆனால் வருமான வரிக் கொள்கை இந்த நன்மை தரும் வாய்ப்பைக் கெடுத்து மூலதனமாக வேண்டிய பணத்தைக் கருப்புப் பணமாகப் பதுங்க வைத்தது.

3) இவ்வாறு பதுக்கப்பட்ட பணம் வாளாவிருக்குமா? அது திருமணச் சந்தையிலும் கல்விச் சந்தையிலும் புகுந்து அனைத்துத் துறையிலும் சராசரி மக்களின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டது. தேடுதல் வேட்டை என்ற பெயரில் வருமான வரித்துறையினர், வீடுகளிலும் நிறுவனங்களிலும் புகுந்து நகைகள் மற்றும் விலை உயர்ந்த நுகர்பொருள்களையும் அள்ளிச் சென்று விடுவதால் பணம் படைத்தோர் கட்டடங்களிலும் பிற ஆடம்பரங்களிலும் தேவைக்கு அதிகமாகக் செலவிட்டுப் பணத்தைக் கரியாக்கி விடுகின்றனர். இதன் மூலம் நாட்டுக்கு பெரும் கேடு பயக்கும் ஓர் ஊதாரிப் பண்பாடு பணக்காரர்களிடமிருந்து தொடங்கிச் சமூகத்தின் அடித்தளம் வரை ஊடுருவி விட்டது. நம் மக்களின் வாழ்நிலையையும் நாட்டின் பொருளியல் விடுதலையையும் பாதுகாக்க நம் நாட்டில் திரட்டத்தக்க கடைசித் தம்பிடியைக் கூடச் சேமிக்க வேண்டிய ஓர் உலகப் பொருளியல்ச் சூழலில் இந்த ஊதாரிப் பண்பாடு எனும் மாபெரும் தீமையை சிறுகச் சிறுக உரமிட்டு வளர்த்திருப்பது இந்த வருமான வரிக் கெடுபிடியாகும்.

4) வருமான வரிக் கெடுபிடி ஏற்கெனவே நிலைத்துவிட்ட முதலாளிகளுக்குப் போட்டியாக புதிய முதலாளிகள் உருவாவதைத் தடுக்கிறது. பழையவர்களுக்கு அரணிட்டுக் காத்து அவர்களது முற்றுரிமைக்கு வழிவகுத்து ஆரோக்கியமான ஓரு பொருளியல் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

5) வருமான வரி பற்றிய இடைவிடாத அச்சத்தாலும் பதற்றத்தாலும் நம் நாட்டுப் பணக்காரர்கள் முதுகெலும்பில்லாத பெரும் கோழைகளாகிவிட்டனர். நாட்டில் அதிகாரிகளும் அரசியல்வாணர்களும் அவர்களின் துணை பெற்ற போக்கிரிகளும் செய்யும் அட்டூழியங்களை எதிர்க்கும் ஒரு வலுவான இயக்கம் உருவாக முடியாமல் போனது நாட்டின் முதன்மைக் குடிமக்களாகிய பணக்காரர்களிடம் நிலைத்துவிட்ட இந்தக் கோழைத்தனமேயாகும். பணக்காரர்களே ஒதுங்கி ஓடும் போது ஏழை என்ன செய்வான்?

இன்று பொதுவாக அனைவரின் நடுவிலும் குறிப்பாக உயர்த்த வாழ்க்கைத்தரம் உடையவர்கள் நடுவில் குருதிக் கொதிப்பு, நீரழிவு, இதய நோய் போன்றவற்றிற்கு அவர்கள் உண்ணும் உணவு, வாழும் வாழ்க்கைமுறை ஆகியவை மட்டுமே காரணமாகக் கூற முடியாது. இடைவிடாத அச்சமும் பதற்றமும் முகாமையான காரணமாகும். தன் தலை நரைக்காமைக்கு சங்கப் புலவர் பிசிராந்தையார் கூறும் காரணங்களை இங்கு நினைத்துப் பார்ப்பது நன்று.

6) மத்திய அரசின் ஆளும் கட்சியினர் தங்கள் கட்சியிலுள்ளோரையும் பிற கட்சியிலுள்ளோரையும் தங்கள் விருப்பத்திற்கிசைய ஆட்டி வைக்க வருமான வரிக் கெடுபிடிகள் உதவுகின்றன. திரைப்பட நடிகர்களும் பணக்காரர்களும் வருமான வரிக் கொடுமைகளிலிருந்து தப்புவதற்காகவே அரசியல் கட்சிகளைச் சார்ந்து நிற்க வேண்டியுள்ளது.

ஊழல் செய்யும் அதிகாரிகளையும் அரசியல்வாணர்களையும் குற்றவியல் துறையினரைக் கொண்டு புலனாய்வு செய்யாமல் வருமான வரித்துறை கொண்டு தேடுதல் வேட்டை நடத்துவது அவர்களை வெறுமே அச்சுறுத்தி அதே வேளையில் அவர்களைத் தம் விருப்பத்துக்கு வளைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். இதற்கும் வருமான வரித்துறை பயன்படுகிறது.

7) வருமான வரியிலிருந்து தப்புவது எப்படி என்ற ஓரே சிந்தனையே பெரும் சிந்தனையாகிவிடுவதால் பணம் வைத்திருப்போரின் கவனம், வளர்ச்சி, மேம்பாடு என்ற திசைகளிலிருந்து விலகி நிற்கிறது. வருமானத்தை மறைக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் நாணயம், நேர்மை, போன்ற உயர்குணங்களைக் கைவிடுவதற்கு அனைவருக்கும் ஞாயம் கிடைத்து விடுகிறது. நாட்டின் ஒழுக்கப் பண்பாட்டின் சிதைவுக்கு இது அடித்தளமாகிறது.

8) வருமான வரித் தேடுதல் வேட்டைகள் வடிவத்தில் பகற்கொள்ளையை ஓத்தவை. தொலைபேசியைத் துண்டிப்பதற்குப் பகரம் ஓரு காவலர் தொலைபேசியில் நின்று கொள்வார். முன் வாசல் பின் வாசல், நான்கு புறங்கள், புகைபோக்கி, முகப்பு என்று கட்டடம் சுற்றி வளைக்கப்படும். திறவுகோல் கிடைக்கவில்லையானால் பேழைகள் உடைக்கப்படும், பொருட்கள் வாரியிறைக்கப்படும். கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லையானால் அருவருப்பான சொற்கள் உதிர்க்கப்பபடும். நடத்தப்படும் தேடுதல் வேட்டைகளில் மிகப் பெரும்பாலானவை கணக்கில் வருவதில்லை. இவ்வாறு சுருட்டப்படும் செல்வம் உயர்மட்டம் வரை செல்வதற்கான வாயில்களும் வழிமுறைகளும் உள்ளன.

தேடுதல் வேட்டையின் இந்த வடிவம் மத்திய காலத்தில் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் சிற்றரசர்கள் தத்தம் ஆட்சிப் பகுதியில் இருந்த பணக்காரர்களைக் கொன்று அவர்களின் செல்வத்தைக் கவர்ந்து கொண்டதைப் போன்றது. இங்கு கொலை மட்டுமே வேறுபாடு.

தீவட்டிக் கொள்ளையின் போது கொள்ளைக்கு ஆளாவோன் மீது அயலவர்களுக்கு பரிவு இருக்கும். உதவிக்கு வருவார்கள். ஆனால் இன்றோ மக்களின் நலன்களைக் காப்பதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கை என்று மக்கள் ஓதுங்கி விடுவதுடன் மக்களைக் கசக்கிப் பிழிந்து சேர்ந்திருக்கும் பணம் தானே என்ற பகை நிலையும் உருவாகி விட்டிருப்பது பெரும் வேதனை.

தேடுதல் வேட்டையின் இந்த வடிவத்தை ஆழ்ந்து அலசினால் நம் மக்களின் அடிப்படை உரிமைகள், குடி உரிமைகள், பொருளியல் உரிமைகள், போன்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியாது.

இவ்வளவு தீங்குகளுக்கும் காரணமான இந்த வருமான வரியின் அளவுதான் என்ன? 1993-94 ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மட்டும் இது மொத்த வருமானத்தில் 6 நூற்றுமேனியாக உயர்ந்துள்ளது. அதற்கு முன் தொடர்ந்து 5 நூற்றுமேனியாகவே இரூந்து வந்தது.

இவ்வாறு கிடைக்கும் பணம் பெரும்பாலும் சம்பளப் பட்டியலில் கையெழுத்திட்டுப் பெறும் ஊழியர்களிடமிருந்து வருவதுதான். பெரும் முதலாளிகளிடமிருந்து வருவது புத்தகக் கணக்கில்தான். ஏற்றுமதி இறக்குமதி உதவித்தொகைகள் மற்றும் பல்வேறு ஊக்குவிப்புத் தொகைகளைக் கணக்கிட்டால் இந்த முதலாளிகளுக்கு நிகரமாக அரசே ஆண்டுதோறும் பணம் வழங்குவதாக முடியும். அதுபோகக் கணக்கிலெடுக்க முடியாத மிகச் சிறு அளவு தான் சராசரிப் பணக்காரர்களிடமிருந்து கிடைக்கும்.

வருமான வரித்துறையின் மொத்த நடவடிக்கையையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மாதச் சம்பளக்காரர்களிடமிருந்து பெறப்படும் வரிப் பணத்தில் செயற்படும் வருமான வரித்துறையை அரசியல்வாணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் நலன்களுக்காகப் பொதுமக்களையும் பணக்காரர்களையும் அச்சுறுத்துவதற்காகவும் தங்கள் அதிகார ஆதிக்கத்தை மக்கள் மீது நிலைநிறுத்துவதற்காகவும் பயன்படுத்துவதாகவே முடிகிறது. இதன் விளைவாக மக்களின் சேமிப்பு மனப்பான்மையும் முதலீட்டு மனப்பான்மையும் புதியன படைக்கும் சிந்தனையும் அழிக்கப்படுகிறது. உள்நாட்டு மூலதனம் துரத்தப்பட்டு ஓளிந்து கொள்வதால் உள்நாட்டுத் தொழில் நுட்பமும் வளர வழியற்றுப் போகிறது.

எனவே, வருமான வரித்துறை முற்றாக ஓழிக்கப்பட வேண்டும். அதன் மூலம் நமக்கிருக்கும் அயல்நாட்டுக் கடன்களைப் போல் பல மடங்கு மதிப்புள்ள கருப்புப் பணம் என்று வருமான வரித்துறையால் முத்திரை குத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள பணம் மூலதனமாகப் பொருளியல் களத்தில் இறங்க வழி ஏற்பட வேண்டும். மக்களின் (தனியார் எனும் போது அது வெளிநாட்டவரைப் பிரித்துக் காட்டாது, மக்கள் என்றால் உள்நாட்டவரை மட்டும் குறிப்பிடும்) பொருளியல் நடவடிக்கைகள் பல்கிப் பெருகும். இதன் விளைவாகச் சுங்கவரி போன்ற வரி வரவுகள் ஓழிக்கப்பட்ட வருமான வரியை விடப் பல மடங்கு உயரும். மக்களின் முனைவுகளின் விளைவாக நம் சொந்தத் தொழில்நுட்பமும் நம் பொருளியல், தொழில்நுட்ப அடிமைத்தனம் நீங்கும்.

″ஒரு நாகரிகத்தின் வளர்ச்சிக்கு.............. மக்கள் பொதுவாகத் தாம் திரும்பிய இடமெல்லாம் சாவையோ வரிகளையோ எதிர்பார்க்க வேண்டியதில்லை என்று உணரும் நிலை வேண்டும்″ என்றார் நாகரிகத்தின் கதை என்ற புகழ் பெற்ற வரலாற்று நூலை எழுதிய வரலாற்று மேதை வில் டூராண்ட். இன்றைய இந்திய நிலைமைக்கு எவ்வளவு துல்லியமான விளக்கமாக இது அமைந்துள்ளது!

பின் குறிப்பு:-

வருமான வரித்துறை இப்பொழுது எளிய பெட்டிக் கடை உட்பட அனைத்துத் தொழில் மற்றும் வாணிக நிலைய உரிமையாளரையும் ஆண்டுக்கு ரூ. 1400/- வருமான வரியாகச் செலுத்தி ′′தேடுதல் நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு′′ அறிவுரை வழங்கி அதற்கென ஓரு படிவத்தையும் வழங்கி வருகிறது. இது நம் மக்களின் அடிப்படைப் பொருளியல் உரிமையில் மிச்ச மீதியையும் பறிக்கும் ஓரு கடுமையான அச்சுறுத்தலாகும். நமது அமைதியான வாழ்வுக்கும் பொருளியல் நடவடிக்கைகளுக்கும் விடப்பட்டுள்ள நேரடி அறைகூவலாகும். இவ்வறைகூவலை நாம் ஓன்றிணைந்து எதிர் கொண்டு முறியடிப்பது அனைத்து மக்களின் மன அமைதிக்கும் பொருளியல் வாழ்வுக்கும் இன்றியமையாததாகும்.

வரி செலுத்துவோர் சங்கத்தில் இணைந்து பயனடைவீர்.

(4-2-1991 தினமணி இதழில் வெளியான குமரிமைந்தனின் இக்கட்டுரை பொருளில் மாற்றமின்றி சில சொற்கள் மாற்றப்பட்டு பின்குறிப்புடன், திருநெல்வேலியிலிருக்கும் வரி செலுத்துவோர் சங்கத்தால் - பதிவு எண். 25/93 - துண்டறிக்கையாக வெளியிடப்பட்டது. தற்போது இங்கு வெளியிடப்படுகிறது.)

17.6.07

குமரிக் கண்ட அரசியல்

காலத்தின் சுவடுகள் - குழப்பத்தின் முடிவுகள்
சு.கி. செயகரனின் குமரி நில நீட்சி என்னும் நூலுக்கான எதிர்வினைகள் இந்த தளத்தில் இடம்பெறும்


குமரிக் கண்ட அரசியல் வலைப்பதிவில் காணப்படும் கருத்துகளில் சில இங்கே.

//குமரிக்கண்டம் பற்றிய அனைத்தும் தழுவிய ஒரு பெருநூல் எழுத வேண்டும், அதற்கான கருப்பொருட்களைத் தேட வேண்டும், அப்போது செயகரனின் குமரி நிலநீட்சி நூலில் எழுப்பப்பட்டுள்ள வினாக்களுக்கும் விடைகாண வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நூலைப் படிப்பதையே தள்ளிப்போட்டு வந்தேன். ஆனால் ஒரு சூழலில் இந்நூலைப் படிக்க வேண்டி வந்தது. படித்த பின் தான் தெரிந்தது, நூலினுள் ஆசிரியர் தந்துள்ள செய்திகளே குமரிக் கண்ட கோட்பாட்டுண்மையை மேலும் உறுதியான தளத்தில் நிறுத்தப் போதுமானவை என்பது.//

//தமிழார்வலர்களும் குமரிக் கண்டக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் தமிழறிஞர்களும் குமரிக் கண்டம் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவற்றையும் மேலை நாட்டு அறிஞர்கள் கூறியிருப்பவற்றையும் மட்டுமே பெரும்பாலும் தொகுத்துத் தந்துள்ளனர். செயகரனோ குமரிக் கண்டக் கோட்பாட்டை மறுப்பவர்களின் கருத்துகளையும் ஏற்றுக்கொள்பவர்கள் அல்லது பேரா.பண்டிதர் க.ப. அறவாணன் போன்று ஏற்றுக்கொள்வது போல் பாய்ச்சல் காட்டுபவர்களின் ஆக்கங்களில் ஈரெட்டாக இருப்பவற்றையும் வெறுமே தொகுத்துத் தந்திருப்பதோடு ஆங்காங்கே தன் கருத்துகளையும் பதிந்துள்ளார். அக்கருத்துகள் எதிலுமே அறிவியல் அல்லது புவியியங்கியல் சாயலே இல்லை. புவியியங்கியல் செய்திகள் என்று அவர் தந்திருப்பவை ஒன்றேல் காலங்கடந்தவை அன்றேல் அரைகுறையானவை, பொய்யானவை, ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. எனவே அவரது நூல் பற்றிய இத்திறனாய்வில் அவர் மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் மீதான திறனாய்வு ஒரு முகாமையான இடத்தைப் பெறும். அடுத்து அவரது போலி அறிவியல் - புவியியங்கியல் முக்காடு கிழித்தெறியப்படும்.//

//ஓர் எச்சரிக்கை! குமரிக் கண்டக் கோட்பாட்டை நிறுவுவதற்கு இந்துமாக்கடல் எனப்படும் குமரிமாக்கடலினுள் அகழ்வாய்வு செய்யும் வேண்டுகோளைத் தமிழார்வலர்கள் முன்வைக்குமாறு சீண்டுவதற்கென்றே குமரிக் கண்டக் கோட்பாட்டைப் பழித்துரைக்கும் இதுபோன்ற நூல்கள் வெளியிடப்படுகின்றனவோ என்றொரு ஐயம் எனக்குண்டு. கடல் அகழ்வு இன்றியே குமரிக் கண்டக் கோட்பாட்டை நிறுவிட முடியும். அகழாததால் குமரிக் கண்டக் கோட்பாடு நிலைக்காமல் போனாலும் தாழ்வில்லை. நம் மண் மீதும் கடல் மீதும் அயலவர் எவரும் மேலாளுமை செய்வதற்கு நம் ஆர்வக் கோளாறுகள் காரணமாகி விடக்கூடாது! கடந்த காலத்தை விட நம் எதிர்காலம் முகாமையானது. இதுவே நம் அனைத்து நடவடிக்கைகளின் நடுப்புள்ளியாய் அமைய வேண்டுமென்று வேண்டுகிறேன். இந்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்தே நான் வரலாற்றை அணுகுகிறேன். உலக வல்லரசியத்திலிருந்து உலக மக்களை விடுவிக்கும் போராட்டத்தின் ஒரு கருவியாகவே நான் என் வரலாற்று வரைவை முன் வைக்கிறேன் என்பதைத் தெரிவிப்பதில் உண்மையிலேயே பெருமைகொள்கிறேன்.//

விதைக்காமல் "அறுவடை" நடைபெறுமா?

தமிழக அரசின் தளர்வில்லா நெருக்குதலால் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளிலும் பிற கட்டடங்களிலும் மழை நீர் அறுவடை அமைப்புகள் நிறுவப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. மழை நீரை அறுவடை செய்வதற்கான பயிராகிய மழைநீரைத் தான் இப்போது தமிழக மக்கள் எதிர்பார்த்து ஒவ்வொரு நொடியும் நிலைத் திணைகளாகிய தாவரங்களைப் போலவே வானத்தை நோக்கி நிற்கிறார்கள். தனித் தனிச் சமய வழிபாடுகள், கூட்டு வழிபாடுகள், வேள்விகள், நடத்துகின்றனர். கழுதைகளுக்கு, பருந்துகளுக்கு, மரங்களுக்கு மணம் நடத்திப் பார்க்கிறார்கள். ஆனால் மழைதான் பெய்யவில்லை. திரளும் மேகம் மேலே நின்று நம் மாநிலத்தைப் பார்த்துவிட்டு இடி, மின்னல் எனும் வழக்கமான முணுமுணுப்புகள் கண்சிமிட்டல்கள் கூட இன்றி அப்பால் நகர்ந்து விடுகின்றன. ஏன்?

காடுகள் அழிக்கப்பட்டது தான் காரணம் என்கிறார்கள். உண்மையில் காடுகள் மழைப் பொழிவில் ஆற்றும் பங்கு தான் என்ன? பொதுவாகக் கூறப்படுவது போல் மரங்களுக்கு மேகத்தையோ மழையையோ ஈர்க்கும் மந்திர ஆற்றல் கிடையாது. காற்றில் கலந்திருக்கும் நீராவியின் செறிவால் காற்றின் அழுத்தம் உயர்கிறது. நீராவியின் விகிதம் "ஈரிப்பு"(Hcemidity) அல்லது ஆவி அழுத்தம் எனப்படும். ஒரு குறிப்பிட்ட ஈரிப்புக்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் காற்றிலுள்ள ஆவி நீர்த்துளியாக மாறும். இதனைத் "துளிநிலை" என்பர். காற்றின் வெப்பநிலை உயருந்தோறும் "துளிநிலை"யும் உயரும். அதாவது குறைந்த வெப்ப நிலையில் துளி நிலையை ஏற்படுத்தம் ஈரிப்பு விகிதம் வெப்பநிலை உயர்ந்தால் துளிநிலையை ஏற்படுத்தாது. இந்த வகையில் காடுகள் காற்றின் வெப்ப நிலையை மட்டுப் படுத்துவதில் பங்காற்றுகின்றன. காற்றின் வெப்பம் உயருந்தோறும் நிலைத் திணைகள் தங்கள் இலைத்துளைகளின் வழி நீராவியை வெளியேற்றி அந்த வெப்பத்தைச் சமன் செய்கின்றன. காற்றில் ஏற்கனவே உள்ள நீராவியுடன் அது கடலைக் கடந்து வரும் போது சுமந்து வரும் நீராவியும் நிலைத் திணைகளால் வெளியிடப்படும் நீராவியும் அதனால் குறையும் வெப்பமும் துளிநிலையைத் தூண்டி மழைப்பொழிவு எளிதாகிறது.

காடுகள், ஒரு குளத்தில் அமைந்துள்ள மறுகால் போன்று செயற்படுகின்றன. பெருமழைகளின் போது குளத்தின் கொள்ளவுக்கு மேல் நீர் தேங்கி குளத்தை உடைக்காமல், உரிய நேரத்தில் மிகுதி வெளியேற்றிக் குளத்தை மறுகால் காப்பது போல் வெப்பம் மிகுந்து அதனால் காற்றில் துளிநிலை உருவானது தடைபட்டு அளவுக்கு மீறி நீராவி காற்றில் தங்கி அதன் விளைவாகப் பெரும் புயல்களும் பேய்மழைகளும் உருவாகி அழிவுகளை விளைவிக்காமல் காற்றில் திரளும் நீராவியை அவ்வப்போது துளிநிலைக்குக் கொண்டு வந்து மழையைப் பொழிவிப்பதில் காடுகள் முதன்மைப் பணி ஆற்றுகின்றன. இதனால் நீண்ட வரட்சிகளும் பேய்மழைகளுமான பாலைவனங்களின் நிலைமை உருவாகாமல் காடுகள் தடுக்கின்றன.

இத்தகைய விளைவைத் தருவதற்கு கதிரொளி ஊடுருவ முடியாத அடர்காடுகளால் தான் முடியும். உயர்ந்தோங்கிய மரங்கள், அவற்றிற்கிடையில் உயரம் குறைந்த பல்வேறு வகைச் செடிகள், அவற்றைப் பின்னிப் பிணைந்து மரங்களின் உச்சி வரை படர்ந்து செல்லும் கொடிகள் என்ற நிலைத் திணைப் பன்மையம் இதனால் தான் சூழிலியர்கள் எனப்படும் இயற்கைச் சமநிலைக் காப்பாளர்களால் வலியுறுத்தப்படுகிறது.

காற்றில் திரளும் நீராவியை அவ்வப்போது மழையாக்கும் காடுகள் வளர்க்காமல் வெறும் மழை நீர் அறுவடை அமைப்புகளை மட்டும் உருவாக்கினால் சீர்மை அழிந்த மழைப் பொழிவு பேய் மழைகளை உருவாக்கி அவ்வமைப்புகளை ஒரே நேரத்தில் அழித்துவிடும்.

எனவே பாதுகாக்கப்பட்ட காடுகளை நிலைப்படுத்த வேண்டும். மரங்கள், தோட்டப்பயிர்கள், எவையாயினும் காடுகளை அவற்றுக்காகப் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். இன்று தோதகத்தி உட்பட அனைத்து வகை மரங்களையும் சமநிலத்தில் உருவாக்கி வரலாறு படைத்துள்ளனர் தமிழக வனத்துறையினர். ஆற்றுப் படுக்கைகளில் பொதுப் பணித் துறையின் துணையுடன் இவ்வருஞ்செயல் நிகழ்ந்துள்ளது. அனைத்து வகைத் தோட்டப் பயிர்களையும் பசுமைக் குடில்கள் மூலம் இயலச் செய்து மனித குலத்துக்கே வழிகாட்டியுள்ளனர் இசுரேலியர்கள். எனவே தமிழகத்திலுள்ள தரிசுநிலங்கள் அனைத்திலும் மரக்காடுகளும் பசுமைக் குடில் தொழில் நுட்பத் தோட்டங்களும் அமைப்பதில் பொருளியல் வலிமையுள்ள உள்நாட்டுத் தொழில் முனைவோரை ஈடுபடுத்தி முழு ஊக்குவிப்பையும் அரசு வழங்க வேண்டும். மலைவாழ் மக்கள் அனைவரையும் சம நிலத்துக்குக் கொண்டு வந்து இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். மழைச் சீர்மை அழிந்து பஞ்சம் ஏற்பட்டு பஞ்சைகளாய், அடிமைகளால் நாட்டை விட்டோடுவதை விட திட்டமிட்ட மறுவாழ்வு உறுதியானது; தன்மானத்துக்குப் உகந்தது. பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் அவற்றின் காவல் ஊழியர் தவிர்த்த எவரும் நுழைவது மரண தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட வேண்டும். நாட்டு மக்களின் உயிர்த்துணையாகிய நீரைத் தரும் மழையைப் பொழிவிக்கும் ஒரு பொறியாக பாதுகாக்கப்பட்ட காடுகளைக் கருதினால் இது ஒரு கடும் தண்டனை என்று யாரும் கருத முடியாது.

மழைநீர் அறுவடை அமைப்புகளைக் கட்டுவதால் இயல்பு மீறிய பெருமழை நீரை அறுவடை செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, பாறையைத் துளைத்து நீரை உறிஞ்சும் "உயர்" ஆழ்த்துளைக் கிணறுகளால் உறிஞ்சப்பட்ட நீரையும் மீண்டும் உட்செலுத்த முடியாது. நீரை வாங்கி உட்செலுத்துவதுடன் தன்னிடமும் வைத்திருக்கும் புரைமையுடைய நீர்கொள்ளி மண் வகைகளினுள் அல்லது அத்தகைய நீர்கொள்ளிகளுடன் தொடர்பு கொண்டுள்ள பாறையடி நீர் கொள்ளிகளின் தான் மழைநீர் அறுவடை அமைப்புகள் மூலம் நீரைத் திரட்டி வைக்க முடியும். எனவே தமிழக்த்தை நிலத்தடி நீர் கொள்ளல் என்ற அடிப்படையில் நிலத்தடி மண்ணை முழுமையாக ஆய்வு செய்து மண்டலங்களாகவும் உள்மண்டலங்களாகவும் பிரித்து ஒவ்வொன்றிலும் மழைநீர் எளிதில் உட்சென்று, உறிஞ்சப்படும் நீரை மழைப் பொழிவால் எளிதில் மிட்கும் ஆழத்தை வரையறுத்து அதற்கு மிகாமல் துளைக்கிணறுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகளை மாநில அரசு நேரடியாகச் செயற்படுத்து முடியாது. உள்ளாட்சிகள் தாம் இதற்குப் பொருத்தமான அமைப்பு. அதுவும் உள்ளாட்சிகளுக்கும் மக்களுக்கும் இன்றிருப்பதை விட பலமுனைகளிலும் நெருக்கமான உறவு வேண்டும். எனவே மழைநீர் அறுவடை என்பது மழையே "விதைப்பது" விதைத்ததை முளைக்க வைப்பது, முளைத்ததை அறுவடை செய்து உரிய வகையில் திரட்டி வைப்பது, திரட்டியதை வீணாகாமல் பகுத்தறிவுடன் பயன்படுத்துவது ஆகிய பல உறுப்புகளைக் கொண்ட நடைமுறையாகும். அடிப்படையான இந்த ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளாமல் மழை நீர் சேமிப்பு அமைப்பு என்ற பெயரில் தமிழ் நாட்டு அரசு வடிவமைத்துக் கொடுத்துள்ள அமைப்பை உருவாக்குவது பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளால் தற்காலிகத் தொய்வடைந்த தொழிலகங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டமாகச் சுருங்கி விடும்.

(இப்போது தமிழக அரசு பிறப்பித்து நிறைவேற்றியிருக்கும் "தலைக்கவச ஆணை"க்கு இணையானது இது.)

அந்த ஆறடி நிலம் யாருக்கு?

"ஆறடி நிலம்" என்ற தலைப்பில் ரஷ்ய இலக்கிய மேதை லியோ டால்‎‎சுடாய் எழுதிய சிறுகதை உலகப் புகழ்பெற்றது. அந்தக் கதையின் தலைவனிடம் ஒரு பகலெல்லைக்குள் அவன் ஓடிச் சுற்றிவரும் நிலமெல்லாம் அவனுக்குச் சொந்தம் என்று கூறுகிறார்கள். அவன் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கதிரவன் மேலை வாயிலில் வீழ்வது வரை நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தான். இறுதியில் ஓடிக்கொண்டே விழுந்து உயிரை விட்டான். இப்போது அவனுக்குத் தேவை ஆறடி நிலம் தான் என்று கதை முடிகிறது.

இன்றும் இங்கே ஒரு சிலர் ஓடி ஓடி இறுதியில் ஆறடி இடம் தான் கிடைத்திருக்கிறது. அவர்கள் டால்சுட்டாயின் கதைத் தலைவனைப் போல் பேராசை கொண்டு ஓடியவர்களல்லர். குடியிருப்பதற்கு ஒரு வீடு கட்ட ஓர் இடம் வேண்டும்; அந்த இடத்தில் சிறிய அளவில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதற்காகத் தான் அவர்கள் ஓடினார்கள். இடம் கிடைத்துவிட்டது. அதில் ஆறு அடிக்குள் தான் வீடு கட்டவேண்டும் என்கிறார் ஒருவர். ஆறடி நிலம் என்பது வீடு கட்டுவதற்கு உகந்ததல்லவே. அதற்காக நாம் இந்த இடத்துக்கு அலையவில்லையே என்று கலங்கி நிற்கிறார் நம் கதைத் தலைவர்.

புரியவில்லையா? வீட்டுவசதி வாரியத்தில் பணம் கட்டிப் பதிந்து காத்திருந்து குலுக்கலில் சிக்கன வகை(E-Type) மனையைப் பெற்றவர்களைத் தான் குறிப்பிடுகிறோம்.

இந்தச் ″சிக்கன வகை″ மனைகளின் பொதுவான அளவு நீளத்தில் 40 அடிகளும் அகலம் 16 அடிகளும் ஆகும். இந்த மனையில் முன்னால் 5 அடிகளும் பின்னால் பத்தடிகளும் திறவிடம் விட வேண்டும். நீளத்தில் மீதி இருப்பது 25 அடிகள். ஆனால் பக்கத்தில் பத்தடிகள் திறவிடம் விட வேண்டும். இது இந்த மனைப்பிரிவுக்கு ஒப்புதல் அளித்த நகர ஊரமைப்பு இயக்ககம் விதித்துள்ள விதி. மீதி இருப்பது ஆறு அடி தான். வீடு கட்டுவதற்கென்று ஆடி ஓடி அலைந்து திரிந்த நம் கதைத் தலைவருக்கு இப்போது நிரந்தர ஓய்வுக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள் வீட்டுவசதி வாரியத்தாரும் நகர ஊரமைப்பு இயக்ககத்தாரும்.

இந்த மனையில் முன்புறம் 5 அடி விட்டு முழு அகலத்துக்கும் 8¼ அடிக்கு 9½ அடி அளவில் ஒரு அறையும் 6 அடிக்கு 3¾அடியில் கழிவறையும் குளியலும் இணைந்த அறையும் வீட்டுவசதி வாரியமே கட்டிக் கொடுத்துள்ளது. இது நகர ஊரமைப்பு இயக்ககம் விதித்துள்ள மனைப்பிரிவு நிபந்தனைக்கு மாறானது. ஆனால் இந்த விதிக்கு தனக்கு மட்டும் வீட்டுவசதி வாரியம் விலக்குப் பெற்றுள்ளது.

இப்போது மனையையும் ஒற்றையறை வீட்டையும் பணம் கட்டி குலுக்கலில் பெரிய பரிசு அடித்து விட்டது என்ற மனத் திளைப்பில் பெற்ற நம் கதைத் தலைவர் ஒரு கடன் வாங்கி இன்னொரு அறை கட்டுவோம் என்று எண்ணி வரைபடம் ஒப்புதலுக்குக் கொடுத்தால் விதி மீறல் என்கின்றனர் நகராட்சியினர். முறையீடு செய்தால் மீண்டும் மீண்டும் திருப்பியனுப்பிவிடுகின்றனர் நகர ஊரமைப்பு இயக்ககத்தார். வீட்டுவசதி வாரியத்துக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கு மனையைப் பெற்றவருக்கு ஏன் வழங்கப்படவில்லை? நகராட்சி விதிப்படி மனிதர் வாழும் ஒரு அறை கட்ட குறைந்தது 8¼ அடி வேண்டும். இரண்டு சுவர்க் கனங்ளைச் சேர்ந்தால் 9¾ அடி தேவை. இந்த அகலமாவது கிடைக்குமாறு ஏன் மனையின் அளவை நிறுவவில்லை? அல்லது ஒப்பளிக்கப்பட்ட மனையின் அளவில் இந்த 9¾ அடி கிடைக்குமாறு மனைப்பிரிவு விதிகளை ஏன் வகுக்கவில்லை? அல்லது வீட்டுவசதி வாரியத்துக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கு ஏன் மனையைப் பெற்றவருக்கு விரிவு படுத்தப்படவில்லை? அவர் தனியாகக் கேட்கும் போது அது மீண்டும் மீண்டும் ஏன் மறுக்கப்படுகிறது?

வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் உயர் வருவாய்ப் பிரிவு, நடுத்தர வருவாய்ப் பிரிவு, கீழ்நிலை வருவாய்ப் பிரிவு, சிக்கனப் பிரிவு என்று நான்கு பிரிவுகள் உண்டு. அவற்றில் பரம ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்ட சிக்கன வகை மனைகளுக்குத் தான் இந்தச் சிக்கல். பிற வகைகளில் அவரவர் தேவைக்கு வீடுகட்டிக் கொள்ளும் அளவுக்கு மனைப் பரப்பு உண்டு. இந்தச் சிக்கன வகையில் அது இல்லை.

இன்னும் விந்தை என்னவென்றால் சொந்தப் பணத்தை வைத்து ஒப்புதல் பெறாமல் வீடு கட்டுவோரை யாரும் தடுப்பதில்லை. கடன் தேவைப்படும் உண்மையிலேயே ஏழையான மக்களுக்குத் தான் இந்த ஆறடி நிலம். ஏழைகளுக்கு வாழ்வளிப்பது என்ற பெயரில் அரசு அவர்களுக்கு என்ன செய்கிறது என்பதை மிகத் துல்லியமாகத் தெளிவுபடுத்தும் ஒரு சிறந்த குறியீடு இந்த ஆறடி நிலம்.

(இக்கட்டுரை 1990களில் எழுதப்பட்டது
.)

5.6.07

காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 5

இந்திய அரசியலில் தலைமையமைச்சருக்கும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருக்கும் உள்ள முரண்பாடு விடுதலையடைந்த இந்தியாவின் தொடக்க நாளிலிருந்தே தொடர்வது. நேரு-பட்டேல் முரண்பாடு தொடங்கி வாசுபேய்- அத்துவானி வரை இது முடிவடையவில்லை. அது போல் முகலாயர்களின் தலைநகராகிய பழைய தில்லியாயினும் இன்றைய புதுதில்லியாயினும் தந்தையை மகன் கொல்வது, உடன்பிறந்தாரைக் கொல்வது, மகனைத் தாயும் தாயை மகனும் கணவனை மனைவியும் கொல்வது பற்றிய செவிவழிச் செய்திகளை நாம் அறிகிறோம். இவ்வளவு இழிவில்லையாயினும் நேருவுக்கும் மொரார்சி தேசாய்க்கும் இடையிலான போட்டியை திசைதிருப்ப வேண்டியும் மொரார்சியை, அவர் பொறுப்பிலிருந்த நி‌தியமைச்சகத்தில் அவர் செயற்பாடுகளால் பொதுவாக மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பைத் தணிக்கவும் அதே போன்று மாநிலங்களில் நிலவிய உட்கட்சியிப் பூசல்களைத் தடம் மாற்றவும் காமராசர் திட்டம் என்பது வகுக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் பதவியிலிருக்கும் மூத்த கட்சித் தலைவர்கள் பதவியைக் கைவிட்டுக் கட்சிப் பணிக்கு வர வேண்டும். காமராசர் தான் வகுத்த ‌திட்டத்தின் படி தானே முதலில் பதவி விலகினார். அதே நேரத்தில் அவர் அனைத்திந்திய பேரவைக் கட்சிக் குழுவின் தலைவராக்கப்பட்டார். இந்தப் பதவி உயர்வில் அவரது கட்சிப் பற்று என்று கூறப்படும் கட்சி வெறியும், அதாவது கட்சிக்காக எதையும் இழக்கத் தயங்காத மனப்பான்மைக்கு உள்ள அதே அளவு பங்கு அன்றைய இந்திய மற்றும் பேரவைப் கட்சியின் அரசியல் சூழலுக்கும் உண்டு.

பின்னர் நேரு மறைந்தார். இப்போதும் தலைமையமைச்சர் பதவியை மொரார்சி விரும்பினார். ஆனால் கட்சியின் பெரும்பான்மையினர் அதை விரும்பவில்லை. எனவே காமராசர் உரிய வகையில் "காய்களை நகர்த்தி" நேர்மையும் எளிமையும் மிக்கவர் என்று பெயரெடுத்த லால்பகதூர் சாத்திரியைத் தலைமையமைச்சராக்குவதில் வெற்றி பெற்றார். அவர் காலத்தில் உணவு விளைச்சல் குறைவாலும் வழக்கமான இறக்குமதியை நிறுத்தியதாலும் விடுதலை பெற்ற இந்தியா அதுவரை கண்டறியாத பஞ்சத்தால் மக்கள் வாடினர். கிழமைக்கு ஒருநாள் பட்டினி கிடக்குமாறு மக்களுக்கு அறிவுரை கூறி அதன் மூலம் மக்களிடம் நற்பெயர் பெற்ற வரலாற்று விந்தை இந்தியாவில் அரங்கே‌‌றியது. இந்தப் பின்னணியில் புகுத்தப்பட்ட ''பசுமைப் புரட்சி''யும் உழவர்கள் மீது பூட்டப்பட்ட விலங்குகளும் இன்னும் உடைபடவில்லை. இந்திய வேளாண்மை இழி தொழிலாக்கப்பட்டது. வேளாண் குடியினர் தொழிலிலும் தீண்டத்தகாதவராக்கப்பட்டனர்.

தன்னால் பதவியில் அமர்த்தப்பட்டவர், தனக்குக் கட்டுப்பட்டு நடப்பார் என்று எதிர்பார்த்த காமராசருக்கும் லால்பகதூருக்கும் முரண்பாடுகள் தோன்றின. அந்த நேரத்தில் இந்திய-பாக்கித்தான் போரில் அமைதிப் பேச்சு நடத்த சோவியத்து நாட்டின் தாசுக்கண்டு சென்ற லால்பகதூர் அங்கு மாரடைப்பில் உயிரிழந்தார். அது ஒர் அரண்மனைக் கொலை என்று எதிர்க்கட்சியினரும் லால்பகதூரின் மனைவியும் குற்றக் சாட்டினர்.

மீண்டும் மொரார்சி தலைமையமைச்சர் பதவிக்கு ஆயத்தமானார். காமராசர் தன் முயற்சியால் நேருவின் மகளாகிய இந்திரா காந்தியைத் தலைமையமைச்சராக்குவதில் வெற்றி பெற்றார். அரசர்களை உருவாக்குபவர் (கிங்மேக்கர்) என்ற தன் பட்டத்தை அதன் மூலம் அவர் உறுதி செய்தார். இந்த உச்சியை அடைந்த அன்றே அவரது வீழ்ச்சியும் தொடங்கியது. தன் கண் முன்னால் தன் தலைவரின் அரவணைப்பில் வளர்ந்தவர் தானே, தனக்குக் கட்டுபட்டு நடப்பார் என்று எதிர்பார்த்தார் காமராசர். ஆனால் தன் ஆட்சியில் எவரும் தலையிடுவதை இந்திரா விரும்பவில்லை. எனவே பேரவைக் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் அவருக்கும் முரண்பாடுகள் அரும்பி வளர்ந்தன.[1] இந்த முரண்பாடுகள் முற்றிய நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தது. பேரவைக் கட்சி காமராசரின் பழைய நெருங்கிய தோழரான சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக நிறுத்தியது. இந்திரா மராட்டிய மாநிலத்தின் ஆளுநராயிருந்த வி.வி. கிரியை நிறுத்தியதோடு கட்சியின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக் கட்டளைக்குப் பணியாமல் மனச்சாட்சியின் படி வாக்களிக்கலாம் என்று அறிவித்தார். பதவியிலிருப்போர் சொல்லுக்குத் தானே எப்போதும் மதிப்பு! கிரி குடியரசுத் தலைவரானார். பேரவைக் கட்சியினுள் இந்திராவின் பின்னணியின் நின்ற இண்டிகேட் என்றும் மூத்த தலைவர்களைக் கொண்ட சிண்டிகேட் என்றும் பிளவு உறுதியானது. கட்சியின் நடவடிக்கையில் இந்திரா பேரவை என்ற கட்சி உருவானது. பதிவுகளில் இந்திரா தலைமையிலான கட்சி இந்தியத் தேசியப் பேரவைக் கட்சி(இந்திரா)எனவும் மூத்த தலைவர்களின் பிரிவு இந்தியத் தேசியப் பேரவைக் கட்சி(நிறுவனம்) எனவும் அழைக்கப்பட்டன. இது நடந்தது 1969இல்.

இதற்கிடையில் தமிழகத்தில் புரட்சிகரமான கொள்கைகளைப் பேசித் தலைமையோடு முரண்பட்டு தி.மு.க.வை உருவாக்கிய அண்ணாத்தரை தன் அளவுகடந்த பதவி வெறியால் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுத் தன் கட்சியின் அறிவிக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு எதிரான கோட்பாடுகளைக் கொண்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்து கொள்கை‌‌‌‌‌‌யில்லாக் கூட்டணியை முதன்முதல் இந்தியாவில் தொடங்கி வைத்தார். அண்ணாத்துரையால் குல்லூகப் பட்டர் என்று ஏசப்பட்ட ஆச்சாரியாரும் ஆச்சரியாரால் தன் முதல் எதிரிகள் என்று அறிவிக்கப்பட்ட பொதுமைக் கட்சியினரும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தனர். தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று தனிக்கட்சியாக முதன் முதலில் விடுதலை பெற்ற பின் தமிழகத்தில் பேரவைக் கட்சியில்லாத ஆட்சி அமைத்தது. இது 1967இல் நடைபெற்றது. ஆங்கிலர் ஆட்சியை இந்தியர்களிடம் ஒப்படைத்த போது தலைமை ஆளுநர் (கவர்னர் செனரல்) பதவியை மவுண்டு பேட்டன் கோமகனிடமிருந்து பெற்ற தன்னை ஒதுக்கிவிட்டு இராசேந்திரப் பிரசாத்தை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக்கித் தன்னை இழிவுபடுத்திய பேரவைக் கட்சியின் மீதும் முதலமைச்சாராயிருந்த தன்னை வெளியேற்றிவிட்டு அந்த அரியணையில் அமர்ந்த காமராசரின் மீதும் ஒரே நேரத்தில் பழி தீர்த்துக் கொண்டார் ஆச்சாரியார்.

பேரவைக் கட்சி தமிழகத்தில் தோல்விடைந்ததற்கும் தி.மு.க.வெற்றி பெற்றதற்கும் காமராசருக்கு அடுத்து முதலமைச்சராயிருந்த பேரவைக் கட்சியின் பத்தவச்சலத்தின் முரட்டுத் தனம் ஒரு ‌காரணம். அதனால் தான் தி.மு.க. தன்னை வளர்த்துக் கொள்வதற்கென்று அறிவித்த இந்தி எதிர்ப்பு இயக்கம் அரசுக்கும் மக்களுக்குமான போராக வடிவம் பெறத் தொடங்கியது. தொடங்கி வைத்த தி.மு.க.வினரும் பிற கட்சித் தலைவர்களும் மக்களை அமை‌திப்படுத்த வேண்டியிருந்தது. உண்மையில், போராட்டம் முனைப்படைந்ததும் அதைக் கண்டு அஞ்சிய தி.மு.க.தலைமைகள் ஒடி ஒளிந்து கொண்டன. ஆனால் தேர்தல் அறுவடையை விட்டு வைக்கவில்லை. அந்த இந்திப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவரான பெ.சீனிவாசன் காமராசரை விருதுநகர் தொகுதியில் தோற்கடித்தார். தேர்தலில் முதன்முதலில் தோல்வியைச் சந்தித்தார் காமராசர். இதன் பின்னர் தான் பேரவைக் கட்சியில் பிளவு ஏற்பட்டது. பிற மாநிலங்களில் இந்திராவுக்குக் கூடுதலாகவோ குறைவாகவோ ஆதரவு இருந்திருக்கலாம். ஆனால் தமிழகத்தில் முற்றிலும் காமராசரைப் பின்பற்றிய பழைய பேரவை எனப்படும் நிறுவனப் பேரவைக்கே முழுமையான ஆதரவு இருந்தது. அண்ணாத்துரைக்குப் பின் பதவிக்கு வந்த கருணாநிதி பாராளுமன்றத்தில் இந்திராவுக்கு முழுப் பெரும்பான்மை இல்லாத சூழலைப் பயன்படுத்தித் தன் ஆதரவை நல்கி, தான் நடத்திய ஊழல்களுக்குப் பாதுகாப்புத் தேடிக் கொண்டார். இவ்வாறு பிறரின் அருளில் ஆட்சி புரிவது இந்திராவுக்குப் பிடிக்கவில்லை. எனவே பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைத்தேர்தலுக்கு ஆணையிட்டார். தி.மு.க பதவியேற்றதும் முதல் ஆறு மாதங்கள் வரை பொறுத்திருந்து புதிய ஆட்சியின் சீர்த்துவத்தைப் பார்த்த பிறகு தான் கருத்துக் கூறுவோம் என்று அறிவித்த காமராசர் கருணாநிதியின் ஊழல்களைப் பட்டியலிடத் தொடங்கிவிட்டார். பேரவைக் கட்சி மீது என்னென்ன குற்றச்சாட்டுகளைத் ‌தி.மு.க. சுமத்தியதோ அவற்றை இன்றும் முனைப்பாகச் செய்தது தி.மு.க. அத்தடன் ஏற்கனவே பணக்காரர்களாயிருந்த பேரவைக் கட்சியினர் புதிதாகச் சொத்துகளைச் சேர்த்தது பொதுமக்கள் கண்களுக்குப் பளிச்செனத் தெரியவில்லை. ஆனால் அன்றாடங் காய்ச்சிகளாக இருந்த தி.மு.க.வினர் திடீரென மகிழுந்து வாங்கியதும் சிக்கலை உணர்ந்த அண்ணாத்துரை, சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி மக்கள் மகிழுந்து அன்பளிப்பு விழா என்று ஊழலுக்கு விழா எடுத்தார். இதனால் எல்லாம் மக்களின் வெறுப்பை ஈட்டத் தொடங்கியதால் கருணாநிதியும் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு மறுதேர்தலைப் பாராளுமன்றத் தேர்தலுடன் நடத்தத் திட்டமிட்டார். தமிழ்நாட்டின் மொத்தப் பாராளுமன்றத் தொகுதிகளும் இந்திராவுக்கும் மொத்தச் சட்டமன்றத் தொகுதிகளும் கருணாநிதிக்கும் என்று தொகுதிப் பங்கிடு செய்தனர். 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 183ஐ அதாவது 78 நூற்றுமேனி இடங்களைப் பெற்று தி.மு.க இந்தியாவிலேயே வரலாறு படைத்தது. இந்தக் காலக் கட்டத்தில் தான் கருணாநிதி தமிழகத்தின் அடிப்படை உரிமைகளான காவிரி நீர், கச்சதீவு ஆகியவற்றை விலை பேசியது. இந்திராகாந்தி தன் கட்சியைத் தொடங்குவதற்கு முன்னோடியாக வங்கிகளை அரசுடைமையாக்கல், மன்னர் மானியம் ஒழித்தல் போன்ற ''நிகர்மை''(சோசலிச)த் திட்டங்களை அறிவித்து பொதுமை, நிகர்மை கட்சியினரையும் இளம் துருக்கியர் என்ற பெயரில் பேரவைக் கட்சியினுள் இருந்த நிகர்மைச் சார்பினரையும் தன் பால் ஈர்த்துக் கொண்டார்.

பொதுமைக் கட்சி ஆயுதப் புரட்சி மூலம் பொதுமைக் குமுகத்தை அமைப்பதைத் திட்டமாகக் கொண்டது. சோவியத் உருசியாவைத் தலைமையிடமாகக் கொண்டது. நிகர்மைக் கட்சி அதே இலக்கை அமைதி வழியில் எய்துவது. அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டது. ஆனால் இரண்டின் செயற்திட்டங்களும் ஒன்றே.

1. நிறுவனங்களை அரசுடைமையாக்குதல்,
2. தொழிலாளர்களுக்குக் கூடுதல் கூலி, சலுகைகள் வழங்குவது,
3. அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளையும் அரசே எடுத்துக் கொள்வது,
4. நில உச்சவரம்பு கொண்டு வருதல்,
5. நிலமனைத்தையும் உழவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தல் என்பவையும்
பிறவும்.

இத்திட்டங்களைப் பின்பற்றிய சோவியத் நாடு இன்று இல்லை. அதன் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளும் சீனமும் பாதை மாறிவிட்டன. அமெரிக்கா இத்திட்டத்தைத் தன் நாட்டில் கடைப்பிடிக்கவே இல்லை. ஆனால் உலகை இன்று ஆட்டிப் படைக்கும் வல்லமையை அது பெறக் காரணமாயிருந்த முதலாளிய விளைப்பு முறையை ஏழை நாடுகள் கடைப்பிடித்தால் தன் ஆதிக்கத்துக்கு அறைகூவல் வரும் என்பதால் தான் அந்நாடுகளில் தன் கட்டுப்பாட்டில் நிகர்மைக் கட்சியை வளர்ப்பதுடன் எண்ணற்ற பொதுமைக் கட்சிப் பிரிவுகளையும் பெரும் செலவில் ஏழை நாடுகளில் பேணி வருகிறது. நிகர்மை அல்லது பொதுமைக் கோட்பாட்டைப் பின்பற்றிய நாடுகள் தோல்வியடையக் காரணம் பெரும்‌பாலரான பொதுமக்களின் பொருளியல் முயற்சிகளை நசுக்கிவிட்டு அதிகாரிகளும் அரசியல் தலைவர்களுமான ஆட்சியாளர்களே அனைத்தையும் கொள்ளையடித்தது தான். சோவியத்தும் நம் நாடும் சான்றுகள். அத்துடன் மாநிலங்களின் பொருளியல் அடிப்படைகள் நடுவணரசின் கைக்குச் சென்றுவிடுவதால் கூட்டாட்சிக் கோட்பாடு மீறப்படுகிறது. எனவே பொருளியலில் ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தை முறியடித்து மக்களின் பொருளியல் உரிமைகளை மீட்பது தான் நம் நாட்டு மக்களின் மீட்சிக்கான ஒரே வழி.

1967இல் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற காமராசர் அதே ஆண்டு இயற்கை எய்திய நாகர்கோயில் பாராளுமன்ற உறுப்பினரும் திருவிதாங்கூர் தமிழ் மக்கள் தாய்த் தமிழகத்தோடு இணைவதற்காகப் போராடிய திருவிதாங்கூர் தமிழ் நாடு பேரவைக் கட்சியின் தலைவராக இருந்து பின் தன் கட்சியைப் பேரவைக் கட்சியோடு இணைத்தவருமான குமரித் தந்தை எனப்படும் திரு.ஏ.நேசமணி அவர்கள் காலமானதால் வந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

குமரி மாவட்டத்தில் சாணார்களாயிருந்து நாடார்கள் என்ற புதுப்பெயருடன் புதுச் சாதியாக உருவெடுத்த மக்களும் பிற சாதியினர் அனைவரும் ஏறக்குறைய சம எண்ணிக்கையில் உள்ளனர். தீண்டத்தகாதவர்களாயிருந்து தம் உழைப்பின் மூலம் முன்னேறி மேனிலையடைந்த நாடார்களுக்கும் பிறருக்கும் உள்ள முரண்பாடே அங்கு முதன்மை முரண்டாக இருந்தது. ‌திருவிதாங்கூர் தமிழர் போராட்டம், திராவிட அரசியல் ஆகியவற்றின் பயனாக இவ்விரு முரண்பட்ட மக்கள் குழுக்களும் பண்டைய முரண்‌பாடுகளை மறந்து நெருக்கமடைந்து வந்தனர். சாதிக்கு வெளியே ஒரு விரிந்த பார்வை, அரசியல், பொது அறிவு குறித்த விழிப்புணர்வு என்று அவர்களது மனப்பான்மை மேம்பட்டு வந்தது. இந்தக் கட்டத்தில் தன் சாதி மக்கள் தான் உறுதியான தேர்தால் அடித்தளம் என்று நினைத்து காமராசர் இங்கு போட்டியிட்டார். தமிழகத் தலைவராயிருந்து இந்தியத் தலைவராக உயர்ந்து விட்ட காராசர் இதன் மூலம் ஒரு மாவட்டத் தலைவராகத் தாழ்ந்துவிட்டார் என்று இத்தேர்தல் நேரத்தில் ஒர் அரசியல் நோக்கர் கூறியது முற்றிலும் உண்மை. காமராசரின் அரசியல் வாழ்வில் அவர் சந்தித்த வீழ்ச்சிகளில் அவராகவே ஏற்படுத்திக் கொண்ட இந்த வீழ்ச்சி தான் மிகப் பெரியது.

தமிழக அரசியலில் தொகுதி மக்களில் பெரும்பான்மைச் சாதியைச் சார்ந்தவரை வேட்பாளராக நிறுத்தும் சாதி அரசியலைத் தொடங்கி வைத்தவர் காமராசர் என்று எதிர்க்கட்சியாக இருந்த வேளையில் தி.மு.க. குற்றம் சாட்டியதுண்டு. (தான் சுமத்தும் குற்றச்சாட்டுகளை தானே கடைப்பிடிப்பதும் தன் தவறுகளுக்கு மறுப்பாகப் பிறர் செய்யும் அதே தவற்றைச் சுட்டிக் ‌காட்டுவதும் கருணாநிதியின் கூச்சமற்ற இயல்பு) அதை ஐயமின்றி இச்செயல்மூலம் நிறுவினார் ‌காமராசர். அது மட்டுமல்ல, பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் செல்லாமலும் மக்கள் தொண்டாற்ற முடியும் என்று வருங்காலத் தலைமுறையினர்க்குத் தன் செயல் மூலம் தானே எடுத்துக்காட்டாக வரலாறு தனக்குத் தந்த ஓர் அரிய வாய்ப்பையும் அவர் தவறவிட்டார்.

தான் அதிகாரத்திலிருந்த காலத்தில் குமரி மாவட்டத்தின் மீது காமராசர் ஒரவஞ்சவையாக நடந்து கொண்டார் என்று குமரி மாவட்ட மக்கள் கருதினர். குமரி மாவட்ட நாடார்களுக்குத் தன் அமைச்சரவையில் ஒர் இடம் அல்லது நேசமணிக்குத் தில்லியில் ஓர் அமைச்சர் பதவி வாங்கித் தர வேண்டுமென்று விரும்பினர். சாதி அடிப்படையில் அமைந்த குமுகத்தில் இந்த எதிர்பார்ப்பைக் குறை கூறுவதற்கில்லை. இவற்றில் எதையும் செய்யாததைத் தவறென்று கூற முடியாது. ஆனால் பல நிலைகளிள் நேசமணியை இழிவுபடுத்தினார் என்ற குமுறல் குமரி மாவட்ட மக்களுக்கு உண்டு. அதனால் தான் வாழ்ந்த காலத்தில் நேசமணியை இழிவுபடுத்தியவர் இன்று பதவிக்காக அவரது கல்லறை நிழலில் ஒதுங்குகிறார் என்று எதிர்க்கட்சியினர் தேர்தலில் போது குற்றம் சாட்டினர். இவ்வளவு இருந்தும் குமரி மாவட்ட நாடர்கள் நம் சாதிப் பெரியவர், நம்மை நம்பி, நம்மை நாடி வந்துவிட்டார் என்று பெருந்தன்மையுடன் ''அப்பச்சி'' என் றுசெல்லப் பெயர் சூட்டி தேர்தலில் வெற்றி பெறச் செய்தனர். ஆனால் நெருங்கி வந்த முரண்பட்ட இரு சாதிக் குழுவினரும் இப்போது பழைய பகையை நிலைக்குத் திரும்பினர். அவர்களிடையில் துளிர்விட்டுக் கொண்டிருந்த பரந்த பார்வை, அரசியல் விழிப்புணர்வு, உலகப் புரிதல் அனைத்தும் சாதிவெறியின் முன் கருகிப்போயின. இதன் மூலம் அதிகாரத்தில் இருந்த காலத்திலும் அதை இழந்த காலத்திலும் அவர் குமரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் செய்த தீங்கையும் .இரண்டகத்தையும் வரலாறு மன்னிக்கவே செய்யாது. அது மட்டுமல்ல 1962 வரை நாயக்கர்களைப் பெரும்பான்மை மக்களாகக் கொண்ட விருதுநகர்த் தொகுதியில் அம் மக்களின் முழு ஆதரவேபொடு வெற்றி பெற்று வந்தவர், தான் தோற்றது அரசியல் சூழலின் மாற்றத்தால் தான் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை என்று வாதிட்டால் அவரது அரசியல் மேதமை கேள்விக்குள்ளாகிறது. தேர்தல் வெற்றியே அவரது குறிக்கோள் என்றால் அவரது கொள்கை உறு‌தியும் கேள்விக் குள்ளாகிறது.

இன்று காமராசரின் ஆட்சியை மீட்போம் என்று கூறுகிறவர்களுக்குச் சில உண்மைகளைக் கூறுவது இங்கு இன்றியமையாததது. இன்றைய இந்தியாவின் சீர்கேடுகளின் வேர் மூலம் காந்தியாரிடமிருந்தே தோன்றுகிறது. காந்தியும் நேருவும் எல்லாத் துறைகளிலும் எதிரெதிரான கண்ணோட்டம் உள்ளவர்கள். காந்தி பழமையைப் போற்றுபவர்; நேரு புதுமை நாடுபவர். அப்படியிருந்தும் தனக்குப் பின் பேரவைக் கட்சித் தலைவராக, இந்தியாவின் தலைமையமைச்சராக நேருவைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? நேருவின் உறுதியற்ற மனப்பாங்கு அவரது மெலிவு. தனது பதவி, உயர்நிலை ஆகியவற்றுக்கு அறைகூவல் வருமாயின் எவருடைய நெருக்குதலுக்கும் பணிந்து விடும் அவரது இயலாமை ஆகியவையே வெளித்தோற்றத்தில் புதுமை விரும்பிகளை ஈர்ப்பதற்கும் நடப்பில் பழமையைக் காப்பதற்கும் பொருத்தமான தேர்வு என்று காந்தியார் முடிவெடுத்தார். முதற்கோணல் முற்றும் கோணல். உலகில் எல்லா வளமும் மிக்க நாடாயிருந்தும் 50 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் உலகின் கடைக்கோடியில் நிற்கும் நாடாக இந்தியா தேய்வதற்கு இது தான் காரணம். இந்தத் தேய்வை நிரப்புவதற்கோ மாற்றியமைப்பதற்கோ இன்று நாட்டில் அரசியல் கட்சிகளோ இயக்கங்களோ தலைவர்களோ கோட்பாடுகளோ இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை. அவற்றை உருவாக்குவது இளந்தலைமுறையினரின் தலை மீது காலம் சுமத்தியுள்ள கடமை.

தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் வரலாற்று வரைவென்பது கடந்த காலத்தை நோக்கியதல்ல. எதிர்காலத்தைக் குறித்து நிற்பது. அது கடந்த காலத்தில் நாமும் நம் முன்னோர்களும் செய்த அருஞ்செயல்கள், செய்த தவறுகள், அவர்கள் கூறிய கருத்துகள், வகுத்த கோட்பாடுகள், அவை உருவான சூழல், இன்று நேர்ந்துள்ள சூழல் மாற்றம், அதற்கேற்ப கருத்துகளிலும் கோட்பாடுகளிலும் தேவைப்படும் மாற்றங்கள் ஆகியவற்றைத் தீர்மானிப்பதற்கு நிகழ்காலகத்திலுள்ளவர்களுக்கும் எ‌திர் காலத் தலைமுறையினருக்கும் வழி காட்டுவதாயிருக்க வேண்டும். வரலாற்று வரைவாளனது முடிவுகள் மீது அனைவருக்கும் உடன்‌பாடின்றிப் போகலாம். அவை தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் மு‌காமையான தரவுகள் மறைக்கப்படாமல் தரப்படுதல் இன்‌‌றியமையாதது. வருங்காலத்தவர் அந்தத் தரவுகளிலிருந்து தாமே முடிவுகளை மேற்கொள்ள முடியும்.

மனிதன் பகுத்தறிவுள்ள விலங்கு; அதாவது அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு. தொலைநோக்கு, வருவனவற்றை முன் கூட்டியே ஆய்ந்த‌‌றிவதும் அவ்வாறு அறிந்தவற்றுக் கேற்றபடி தன்னை மேம்படுத்திக் கொள்வதும் அவனது இயல்பல்ல. விதிவிலக்கான அத்தகையவர்களின் எச்சரிக்கைகளைப் புறக்கணிப்பதோடு அவர்களை ஏளனம் செய்வதும் தண்டிப்பதும் கூட அந்த விலங்கின இயல்பு. ஆனால் மேற்கொண்டு எப்பக்கமும் நகர முடியாத நெருக்கடிகள் வரும் போது அத்தகைய முன்னறிவுடையோர் கருத்துகளைத் தேடி அவர்கள் அ‌‌றிவுரையைப் போற்றுவதும் அதன்படி நடக்க முயல்வதும் அவனது ''பகுத்தறிவு''. அப்போது கூட பண்டை அறிஞர்கள் கூறியவற்றை அறிந்து வைத்துக் கொண்டு தாம் கண்டறிந்தவையாகப் பொய்யுரைத்து ஏமாற்றுபவர்களை பெரும்பாலும் நம்பிச் செல்வதும் உண்டு. இவ்வாறு வரலாறு என்பது வளைவு நெளிவுகள் நிறைந்த ஒரு சிக்கலான ‌பாதை. அதற்குச் சரியான வழி காட்டியாக நின்று உதவுவது விருப்பு வெறுப்பற்ற, உண்மைகளை மறைக்காத ஈவு சாய்வற்ற வரலாற்று வரைவுதான்.

காமராசரைப் பற்றிய இந்த அலச‌‌லில் அவரிடம் உள்ள குறைகள் சுட்டிக் காட்டப்பட்டாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அவர் காலத்தில் வாழ்ந்த தலைவர்களில் தனித்து உயர்ந்து அடித்தள மக்களுடன் இணைந்து நிற்கும் பெருமை மிகு தலைவர் ‌காமராசர் என்பதில் ஐயமில்லை. வரலாறு அவரை மறக்காது.

அடிக்குறிப்பு:

[1] காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 3 இல் அடிக்குறிப்பு [1] காண்க.

காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 4

காமராசரின் கல்விப் பணியையும் அதனை நிறைவேற்றியதில் அவர் கடைப்பிடித்த உத்தியையும் பார்த்த நாம் அவரது தொடர்ந்த அரசியல் செயற்பாடுகளைப் பார்ப்போம்.

சென்னை மாகாணம் என்று ஆங்கிலர்களால் பெயர் வைக்கப்பட்டதும் தெலுங்கு, கன்னடம். மற்றும் மலையாளம் பேசும் மக்களைக் கொண்ட கணிசமான பகுதிகளைத் தன்னகத்தே கொண்டதுமான தமிழ் மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டு பிரிந்து சென்றதும் மலையாள, கன்னடப் பகுதிகள் பிரிக்கப்பட்டு திருவிதாங்கூர்-கொச்சியோடு மலையாளப் பகுதிகளைச் சேர்த்துக் கேரளம் என்றும் மைசூர் மாகாணத்தோடு கன்னடப் பகுதிகளைச் சேர்த்து கர்னாடகம் என்றும் புதிய மாநிலங்களாக வடிவெடுத்த பின்னும் தமிழகம் சென்னை மாகாணம் என்றே அழைக்கப்படுவதிலிருந்து தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நியாயமான வேட்கை தமிழக மக்களுக்கு இருந்தது. அதனை ஒரு வேண்டுகையாக வைத்து காமராசரின் ஊராகிய விருதுநகரையும் அவரது சாதியாகிய நாடார் சாதியையும் சேர்ந்த சங்கரலிங்கனார் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினார். அவருக்கு வேண்டுகை(கோரளிக்கை)ப் பட்டியல் போட்டுக் கொடுத்துப் பின்னணியில் நின்றவர்கள் பொதுமைக் கட்சியினர். அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்ததும் முதன்மையானதும் தமிழ்நாடு பெயர் மாற்றமாயினும் பொதுமைக் கட்சியின் பொதுவான அனைத்துத் திட்டங்களின் நிறைவேற்றங்களும் அப்பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இது பொதுவாக எவருக்கும் தெரியாது.

சங்கரலிங்கனாரின் குடும்ப வாழ்க்கை‌‌‌‌‌‌யில் நிகழ்ந்த ஒரு துயர நிகழ்ச்சியின் விளைவாக அவருக்கும் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள், உறவினர்களுக்கும் பிளவு ஏற்பட்டு நெடுநாள் தனி வாழ்க்கையின் இறுதியில் நம் பண்டை மரபின் படி வடக்கிருத்தல் என்ற உத்தியாக இந்த உண்ணாநோன்புப் போராட்டத்தை அவர் மேற்கொண்டிருப்பார் என்பது மக்கள் செங்கோல் என்ற மாதிகை(மாத இதழ்)யின் சங்கரலிங்கனார் சிறப்பிதழில், குழந்தைப் பருவம் முதல் அவராடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சாலினி இளந்திரையனார் எழுதிய கட்டுரையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தமிழ்நாடு பெயர் வைப்பு வேண்டுகை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும் அவர் பெரும்பாலும் எஞ்‌‌‌சிய வேண்டுகைகளுக்காகத் தொடர்ந்து ''வடக்கிருந்து'' உயிர் துறந்திருப்பார் என்று உறுதியாகக் கருத இடமிருக்கிறது. வெறும் பெயர் மாற்றங்களும் சிலை வைப்புகளும் மண்டபங்கள் கட்டுவதும் மொழிக்கு அரசியல் சட்டத்தில் சிறப்பிடம் கொடுப்பதிலும் அதனைச் செவ்வியல் மொழி என்று ஏற்றுக் கொள்வதிலும் மட்டும் ஒரு மக்கள் குழு மேம்பாடடைந்துவிடாது என்பது உண்மை தான். அதே நேரத்தில் பொதுமைக் கட்சியினர் வைத்திருந்த, இன்றும் வைத்திருக்கும் குறிக்கோள்கள் ஒரேயடியாக அல்லது ஒரே படியில் எய்தக் கூடியவையல்ல என்பதையும் அதற்குப் பல படிகளைக் கொண்ட சீரிய திட்டமும் தேவை என்பதையும் கருதியே அவ்வாறு கூறினோம்.

சங்கரலிங்கனாரின் தமிழ்நாடு பெயர் வைப்பு வேண்டுகை நிறைவேற்றப்பட்டு அவர் பிற வேண்டுகைகளை முன் வைத்து உயிர் துறந்திருந்தாலும் இன்று சங்கரலிங்கனாரின் சாவுக்குப் காரணமான கொலைகாரர் என்ற வரலாற்றுக் கறை காமராசருக்கு ஏற்பட்டிருக்காது. அவரது இந்தச் செயலுக்குக் காரணம் ஒரே ஊர், ஒரே சாதியினரிடையில் வழக்கமாக உள்ள நட்புணர்வு, பொறாமை உணர்வுகள் ‌காரணமாயிருக்க முடியாது. இன்னொரு முகாமையான காரணமும் இருக்க வேண்டும். தூய நேரிய அர‌‌‌சியல் வாழ்வு வாழ்ந்தவரான ‌காமராசரிடம் இருந்த மாபெரும் குறை அவரது கட்சி வெறியாகும். பொதுமைக் கட்சியினரின் பிடியில் இருந்த சங்கரலிங்கனாரை ஒருமுறை சந்தித்துப் பேசக் கூட முன்வராத காமராசரின் முரட்டுப் பிடிவாத்துக்கு அவரது இந்தக் கட்சிவெறியே காரணமாகயிருக்கக் கூடும்.

மொழியடிப்படையில் தமிழ்நாடு அமைக்கப்பட்ட போது திருவிதாங்கூரில் இருந்த தமிழ் மக்கள் தாய்த் தமிழகத்தோடு சேர வேட்கை கொண்டு போராடினர். திரவிதாங்கூர்-கொச்சியை ஆண்ட வெறியர்களின் கொடுங்கோன்மைக்கும் கொலைவெ‌‌றிக்கும் ஈடுகொடுத்து வெற்றிக் கனியைப் பறிக்க இருந்த வேளையில் தேரிகுளம், பீர்மேட்டுப் பகுதியைப் பற்றி ''குளமாவது மேடாவது'' என்ற இழிபெயர் பெற்ற சொற்றொடர், அயல் மாநிலங்களைப் பேரவைக் கட்சி ஆண்டதாலும் தன்னால் ம‌திக்கப்படும் கட்சித் தலைவர்களை வங்கத்தின் பி.சி.இராய் போன்று எதிர்த்து நிற்கத் துணியாத, தலைமைக்குக் கட்டுப்பட்ட காமராசரின் மனநிலையின் வெளிப்பாடு தான் என்று தோன்றுகிறது. எல்லாம் இந்தியாவினுள் தாமே இருக்கின்றன என்பது வெறும் மூடுதிரை என்றே தோன்றுகிறது. வடக்கெல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. வெற்றி பெற்றதற்குக் காரணம் தன் அரசியல் போட்டியாளரான சத்தியமூர்த்தியின் மாணவரும் அவரைவிட வலிமையாகத் தன் நேரடி அரசியல் எதிரியாக வளர்ந்துவிட்டவருமான காமராசரின் போட்டியாளரும் தனது நம்பிக்கைக்குரிய தொண்டருமான ம.பொ.சி.யை அரசியலில் வளர்த்தெடுப்பதற்கு அப்போது முதலமைச்சாராயிருந்த ஆச்சாரியார் விரும்பியதே காரணமாகலாம் (ம.பொ.சி.யின் தன்வரலாறான எனது போராட்டங்கள் பார்க்க.)

கட்சியின் நலனுக்குக் கொள்கைகளைக் காவுகொடுப்பதோ, கட்சி நலன் என்ற ஒன்றைத் தவிர வேறு கொள்கை - கோட்பாடற்று இருப்பதோ அரசியல் தலைவர்களிடம் இயல்பாகக் காணக்கூடிய குறைபாடு தான். புரட்சிகரத் தலைவர்கள் எனப்படும் உலக வரலாற்றுப் பெருமக்களிடம் கூடக் காணக்கிடப்பது தான். கொள்கைப் போர் என்பதும் தனி மனிதப் போட்டி என்பதும் ஒன்றிலிருந்தொன்று பிரித்துணர முடியாதவாறு பின்னிப் பிணைந்து கிடப்பதும் வரலாற்று இயல்பு தான். உலகில் அரும்பெரும் செயல்களும் வரலாற்றுத் திருப்புமுனை நிகழ்வுகளும் வரலாற்றுப் போக்கையே மாற்றும் புரட்சிகர நிகழ்வுகளும் உயர்ந்த நோக்கங்கள் இன்றி, தன்னலமும் தன்முனைப்பும் அதிகார வெறியும் கொலைவெறியும் மனப்பிறழ்ச்சியும் கொண்ட தலைவர்களால் நிகழ்ந்திருப்பதற்கு எத்தனையோ சான்றுகளைக் காட்ட முடியும. இவ்வாறு காமராசரின் தவறான நிலைப்பாட்டின் விளைவால் தமிழகத்தின் நிலப்பரப்புகளை நாம் இழந்திருக்கிறோம்் குமரி மாவட்டத்தில் பத்மபாநபுரம் அரண்மனை, குமரி முனையில் இருக்கும் சுற்றுலா வளமனை ஆகியவற்றை இழந்துள்ளோம். கேரளத்தினர் எடுத்துச் செல்ல முயன்ற அரும்பொருட்களைசக் குமரி மாவட்டத் தலைவர்களின் வீரம் மிக்க எதிர்ப்பின்றி காப்பாற்றியிருக்க முடியாது. குமரி மாவட்டததைப் பொறுத்த வரை ‌காமராசரின் அணுகல் பரிவுடன் இருக்கவில்லை என்பது காய்தல் உவத்தலின்றி அணுகுவார்க்குப் புலப்படும் உண்மை.

உலக வரலாற்றில் பொதுவாக, வேறொரு நாட்டு எல்லைக்குள் வரலாற்றுக் காரணங்களால் சிக்கிக் கொண்ட ஒரு மொழி, இனம், சாதி அல்லது சமயம் போன்ற பொருளியல் சாராதவையும் அடையாளங்களாக மட்டும் கொள்ளத் தக்கவையுமான உறவுகளைக் கொண்ட மக்கள் தங்கள் தாய் நிலம் என்று கருதி வேறொரு நிலப்பரப்புடன் இணைய முற்படும் போது அந்தத் தாய்நில மக்கள், அதிலும் அரசியல்வாணர்கள் அதை விரும்புவதில்லை. தங்கள் உறவுடைய மக்கள் தங்களோடு இணைய வருகிறார்கள் என்று மகிழ்வதற்குப் பகரம் தங்கள் வாய்ப்புகளுக்குப் போட்டியாக வருகிறார்கள் என்றே கருதுகின்றனர். விரும்பி இணையும் மக்களுக்குப் பழைய வாழ்க்கையை விட புதிய இணைவு உண்மையிலேயே நன்மையாக அமைந்தாலும் ''தாய்''நிலத்தின் காழ்ப்புணர்வு நெடுநாள் நீடிக்கவே செய்யும். இதற்கு எடுத்துக்காட்டாக பாக்கித்தானைக் கூறலாம். சமயத்தின் அடிப்படையில் நிலத்தொடர்பு, பொருளியல் அடித்தளம் ஆகியவற்றை மீறி, கிழக்கு வங்க மக்கள் பாக்கித்தானில் இணைந்தனர். மேற்குப் பாக்கித்தானியர்களே தலைவர்களாகவும் ஆளும் கணத்தவராகவும் தொடர்ந்த சூழ்நிலையில் வங்க மக்களின் மக்களாடசி உரிமைகள் பறிக்கப்பட்டதால் அவர்கள் தொடங்கிய சட்டத்துக்குட்பட்ட போராட்டம் ஆயுதந் தாங்கிய ஒன்றாக மாற, அன்றைய இந்தியத் துணைக் கண்ட,. உலக அரசியல் சூழலால் இந்திய அரசு இடையில் புகுந்து அதன் பயனாக புதிய வங்கதேசம் உருவாதை நாம் அறிவோம். இன்று எஞ்சியுள்ள பாக்கித்தானிலும் பஞ்சாபி முகம்மதியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து சிந்து போன்ற மாகாண மக்கள் போராடுவதையும் இன்று இந்தியாவினுள்ளிருக்கும் பகுதிகளிலிருந்து இந்திய-பாக்கித்தானியப் பிரிவினையின் போது இடம்பெயர்ந்து சென்றோரின் வழி வந்தவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்தும் போராட்டங்களால் நாள்தோறும் மக்கள் உயிர்ப் பலியாவதையும் இடைவிடாத வன்முறைகள் தொடர்வதையும் பார்க்கிறோம். ஆனால் தாய்த் தமிழகத்தோடு இணைந்ததனால் குமரி மாவட்ட மக்கள் எய்திய நன்மைகள் அளப்பரியவை என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் தொடக்க காலத்‌தில் குமரி மாவட்ட மக்கள் சென்னை மாகாணத்தவரை விடக் கல்வியறிவில் மேம்பட்டவர்கள்; வருவாய்த்துறை, கல்வித்துறை போன்ற அனைத்து அமைப்புகளும் மேம்பட்டவை. மேலதிகாரி-கீழ்நிலை அதிகாரிகளிடையில் உள்ள உறவு அடிமைத் தன்மையில்லாதது ஆகிய ‌காரணங்களால் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் குமரி மாவட்ட இணைவை விரும்பவில்லை. அப்போது கல்வி அமைச்சராயிருந்த ‌‌‌சி.சுப்பிரமணியம் குமரி மாவட்டத்தில் தொடரி இணைப்பு போல் அமைந்திருந்த பள்ளிகளைப் பார்த்து அசூயையடைந்து அவற்றில் பலவற்றை மூடிவிடலாம் என்று முடிவெடுத்ததாகவும் காமராசர் அதற்கு உடன்படவில்லை என்றும் கூறப்பட்டதுண்டு. மக்களுக்குக் கல்வியளிப்ப‌தில் காமராசருக்கிருந்த ஆர்வத்தின் ஒரு வெளிப்பாடு இது. அத்துடன் தமிழகத்தில் மக்களின் எழுத்தறிவை வளர்ப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளிலும் அவரது மதிய உணவுத் திட்டத்திலும் குமரி மாவட்டத்தில் சி.பி. இராமசாமியார் மேற்கொண்ட கட்டாய இலவயக் கல்வித் திட்டத்தின் வெற்றிப் பட்டறிவுக்கு முகாமையான பங்கு இருக்க வேண்டும். அதனாலும் காமராசருக்குக் குமரி மாவட்டத்தின் மீது பரிவுணர்வு இருந்திருக்கலாம்.

(தொடரும்)

காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 3

கல்வி போன்ற பணித்துறை அல்லது அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளை நிறைவேற்ற அரசே பணத்தை அச்சிட்டுச் செலவிடலாம். மக்களிடமிருந்து வரிப்பணத்தையோ நன்கொடைகளையோ எதிர்பார்க்க வேண்டிய‌தில்லை என்பது 1930களில் வல்லரசுகள் கடைப்பிடித்தது வெற்றி கண்ட உத்தியாகும் இதற்குப் பற்றாக்குறைப் பணமுறை(Deficit Financing)என்று பெயர். இவ்வாறு செய்வதால் பணவீக்கம் எனப்படும் கூடுதல் பணப்புழக்கம் மக்களிடையில் ஏற்பட்டு விலைவாசி உயர்ந்து ஏழையரின் வாங்கும் ஆற்றல் குறையும் என்பது பொதுவாகப் பரப்பப்படும் கருத்து. இது ஒரு முழு உண்மையல்ல. பணவீக்கம் என்பது ஒரு நாட்டு மக்களிடம் உள்ள மொத்தப் பணப் புழக்கத்துக்கும் அந்நாட்டில் மக்கள் வாங்கத் தக்கதாகக் கிடைக்கும் பண்டங்களின் அளவுக்கும் உள்ள உறவைக் குறிக்கும் ஒரு குறியீடாகும். பண்டக் கையிருப்புக் கேற்பப் பணப்புழக்கமும் கூடினால் ஏழையரிடமும் பணம் புரண்டு அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன் அதன் தொடர்ச்சியாகப் பண்ட விளைப்பு ஊக்கம் பெறும். நாட்டின் வேளாண் - தொழில்துறைகளுடன் பொதுப்பொருளியலும் வளர்ச்சியடையும். பண்டக் கையிருப்புக்கும் பணப் புழக்கத்துக்கும் இடையிலான சமநிலை குலைவுறும் போது தான் பணவீக்கம் அல்லது பணமின்மை ஏற்பட்டு இரு நேர்வுகளிலும் ஏழையர் மட்டும் துயருறுவர். அ‌திலும் இந்தியா போன்று ஊழல் செய்து கொள்ளையடிப்பதற்கென்றே தேவையற்ற கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் வேளாண்-தொழில்-வாணிக மக்கள் மீது திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடுவோரால் ஆளப்படும் ஏழை நாடுகளில் இது நடைபெறுவது உறுதி. இணை நல்கை போன்ற கோணல் நடைமுறைகளைக் கடைப்பிடித்தற்காக நாம் காமராசரைக் குறைகூற முடியாது. சிறந்த படிப்பாளியும் தன் தந்தையுடன் இளமை முதலே உலகைப் பலமுறை வலம் வந்து உலக அரசியல்- பொருளியல் நிகழ்வுகளை அறிந்தவருமான இந்திரா காந்தியின் தவறான பொருளியல் அணுகல்களின் தீயவிளைவுகளைப் பற்றிக் கேட்ட போது ''நான் என்ன செய்வேன், பொருளியல் வல்லுநர்கள் சொன்னபடி செய்தேன்'' என்று கூறினார்[1] என்றால், தன் காலத்தில் உலகிலுள்ள அரசுத் தலைவர்களில் ஒப்பற்ற படிப்பாளியும் உயர்ந்த குறிக்கோள்களைப் பேசித் திரிந்தவருமான நேரு அயல்நாட்டுப் பொருளியல் வல்லுநர்களின் தவறான, அதாவது பணக்கார நாடுகளுக்கு ஆதாயமும் ஏழை நாடுகளுக்கு இழப்பும் தரும் ஐந்தாண்டுத் திட்டங்களை வகுக்கக் காரணமாயிருந்தார் என்றால், அத்தகைய பின்னணியில்லாதவரும் மக்களின் வாக்குகளைப் பெற்றாலும் உண்மையான அதிகாரங்களற்று நடுவணரசின் நேரடியான மற்றும் மறைமுகக் கட்டுப்பாடுகளுக்காட்பட்ட ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக காமராசரின் செயலுக்கு அவரை முழுப்பொறுப்பாளியாக்க முடியாது.

ஒரு நாட்டின் முதன்மையான அரசியல் கோட்பாடுகளில் முகாமையான இடம் பெற்றுள்ள இந்தப் பற்றாக்குறைப் பணமுறை குறித்த பொதுமைக் கட்சியினரின் கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.

பொதுமைக் கட்சியின் கோட்பாடுகளை உருவாக்கியவர்கள் 19ஆம் நூற்றபொண்டில் வாழந்த செருமனியர்களான காரல் மார்க்சும் அவரது நண்பரும் தோழருமான பிரடரிக் ஏங்கெல்சும் ஆவர். தொழிற்புரட்சியில் முதலிடத்தைப் பெற்று கதிரவன் மறையாத மாபெரும் உலகப் பேரரசான பிரிட்டனில் வாழ்ந்தவர்கள். தனியுடைமையின் மிக உயர்ந்த நிலையான முதலாளியம் என்ற விளைப்பு முறையில் அன்று உச்சத்தில் இருந்த இங்கிலாந்திலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் முதலாளியத்தால் உருவான மக்களில் பெரும்பாலோரான தொழிலகப் பாட்டாளி மக்களுக்கும் முதலாளியர்க்கும் இடையிலான முரண்பாடுகளைத் தடம்பிடித்து அனைத்துச் செல்வங்களும் அனைத்து மக்களுக்கும் பொதுவாகும் வகையில் தனியுடைமையின் அனைத்து வடிவங்களும் ஒழிந்த பொதுமைக் குமுகமே மனித இனத்தின் முழுமையான விடுதலைக்கும் உய்வுக்கும் வழி என்று கூறினர். அன்றைய ஐரோப்பாவில் நாடெங்கும் பண்டங்கள் விற்பனையன்றித் தேங்கிக் கிடக்க, வேலையின்மையால் கூலி கிடைக்காமல் தம் உயிர்வாழ்வுக்கு இன்‌‌றியமையா உணவுப் பொருட்களைக் கூட வாங்க இயலாமல் ஏழைகள் செத்து மடியும் ''பொருளியல் மந்தம் அல்லது நெருக்கடி'' எனப்படும் கொடிய நிகழ்வுகள் சரியாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்திருந்த அடிமை நாடுகளிலும் இந்தப் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்தன. இது பற்றிய மார்க்சின் விளக்கம் பின் வருமாறு.

ஒரு பாட்டாளி ஒவ்வொரு நாளும் தன் உயிர் வாழ்வுக்குத் தேவையாவை போன்று பல மடங்கு பண்டங்களைச் செய்கிறான்; ஆனால் அவனுக்கு வழங்கப்படும் கூலி அவன் அடிப்படைத் தேவைக்கான பண்டங்களை வாங்குவதற்குப் போதாது; பெரும்பாலன மக்கள் பாட்டாளியராக உள்ள நாடுகளில் இவ்வாறு விளைப்புக்கும் விற்பனைக்கும் உள்ள இடைவெளி மிகும்போது பண்டஙகள் வளிற்பனையின்றித் தேங்குகின்றன; செய்த பொருள் விற்றுமுதலாகாமல் தேங்கும் போது மேற்கொண்டு விளைப்பில் ஈடுபடப் பணம் இன்றி முதலாளியர் முதலில் விளைப்பைக் குறைப்பர்; அடுத்துக் கதவடைப்புச் செய்வர்; இதனால் படிப்படியாக பாட்டாளியரின் பணப்புழக்கம் மேலும் குறைந்து விற்பனையும் குறைந்து இறுதியில் ஒட்டுமொத்த வேலையிழப்பும் உச்சநிலையில் பட்டினிச் சாவுகளும் நிகழ்கின்றன; பின்னர், விளைப்பே இல்லாத நிலையில் தேங்கிய பண்டங்கள் பணம்படைத்தோரால் சிறிது சிறிதாக விற்பனையாகத் தொடங்குகின்றன; பண்ட விளைப்பும் சிறிது சிறிதாக உயர்கிறது; அதற்கேற்பப் பாட்டாளிகளிடம் பணப்புழக்கம் உயர்கிறது; அது பண் விற்பனையை உயர்த்தி, இவ்வாறான சூழற்‌‌‌சியால் விளைப்பும் விற்பனையும் மீண்டும் உச்ச நிலையை அடைந்து மிண்டும் அனைத்தும் இறங்குமுகமாகிப் பட்டினிச் சாவுகள் நிகழ்சின்றன. மனித நேயமுள்ளோரைக் கலங்க வைக்கும் இக்கொடும் சுழல் இயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர பலர் வெவ்வேறு தீர்வுகளை முன்வைத்தனர். அத்தகைய ஒரு தீர்வு தான் மால்த்தூசு என்ற பிரித்தானிய கிறித்துவ மதகுரு முன்வைத்த மக்கள் தொகைப் பெருக்கம் பற்‌‌றிய கோட்பாடு. புவியின் விளைதிறனை மிஞ்சிய மக்கள் தொகையே இந்தப் பட்டினிச் சாவுகளுக்குக் காரணம்; எனவே குழந்தைப் பேற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றார். இதை மார்க்சு மறுத்தார். இப்பட்டினிச் சாவுகள் பண்டங்களின பற்றாக்குறையினால் ஏற்படவில்லை; ஒரு புறம் மாபெரும் பண்டக்குவியலும் இன்னொரு புறம் பட்டினிச் சாவுகளும் நிகழக் காரணம் மக்களுக்கிடையிலான செல்வப் பங்கீட்டுக் கோளாறு தான் காரணம் என்றார். ஒரு சிலரிடம் உலகில் அனைத்துச் செல்வங்களும் திரண்டிருப்பதை மாற்றி அனைத்துச் செல்வங்களும் அனைத்து மக்களுக்கு பொதுவாக வேண்டும் என்றார். இது நிகழ வேண்டுமாயின் பாட்டாளிகள் ஆயதமேந்திப் போராட வேண்டும் என்றார். அத்தகைய ஒர் ஆயுதப் புரட்சி இந்தப் பட்டினிச் சாவுகளின் விளைவாகத் தான் நிகழும் என்றும் கணித்தார்.

மார்க்சு குடும்பக் கட்டுப்பாட்டுத் ‌திட்டத்துக்கு எதிரானவர் என்று அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்வோர் கூறுகின்றனர். உலகின் வளங்களுக்கும் அவற்றைப் பங்குபோட்டுக் கொள்வோருக்கும் உள்ள உறவைப் பற்றி அவர் அலசியதாகத் தெரியவில்லை. பொருளியல் மந்தம் நெருக்கடி என்ற வடிவில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் பட்டினிச் சாவுகளுக்கு பண்டங்களின் பற்றாக்குறையோ மன்ணின் விளைதிறனை மிஞ்சிய மக்கள் தொகையோ காரணமல்ல, செல்வப் பங்கிட்டிலுள்ள குறைபாடு தான் என்பதே அவரது வாதம்.

பாட்டாளியின் உழைப்பின் பயனாகிய விளைப்பின் மதிப்பு ஏற்றத்துக்கும் அவனுக்கு வழங்கப்படும் கூலியின் மநிப்புக்கும் உள்ள வேறுபாட்டால் முதலாளி‌‌‌‌‌‌யின் கைக்குச் செல்லும் மதிப்பை மீத மதிப்பு என்றார் மார்க்சு. இதைப் பற்றி அலசும் அவரது கோட்பாட்டுக்கு மீத மதிப்பிக் கோட்பாடு என்று பெயர்.

பத்தாண்டுகளுக்கொருமுறை தவறாமல் நிகழ்ந்து வந்த பட்டினிச் சாவுகளால் மார்ச்சு கணித்துக் கூறியபடி பாட்டாளிய இயக்கம் உலகெங்கும் விரைந்து வளர்ந்தது உண்மை. அதிலும் 1933-இல் தொடங்கிய பொருளியல் நெருக்கடி கொடியது. அந்த ஆண்டில் தான் பட்டினிச்சாவுகளிலிருந்து உழைக்கும் மக்களைக் காப்பதற்காக அமெரிக்காவில் கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன, பொதுமைக் கட்சியும் அங்கு வலுவாக வேர்கொள்ளத் தொடங்கியது. ஆனால் பட்டினிச் சாவுகளும் பொதுமைக் கட்சியின் விரைந்த வளர்ச்சியும் அமெரிக்காவில் தொடங்கி ஐரோப்பிய நாடுகளிலும் அவற்றைப் சாந்திருந்த அடிமை நாடுகளிலும் ஒரு முடிவை எய்தியதும் இந்தப் பொருளியல் நெருக்கடியின் போது தான். இதற்குக் காரணமானவர் கெயின்சு என்ற இங்கிலாந்தைச் சோந்த பொருளியல் மேதை. அவரது கோட்பாட்டின் சாரம் இது தான்:

தொழில்கள் இருவகையானவை, ஒன்று விளைப்பு சார்ந்தது, இன்னொன்று விளைப்பு சாராத பணித்துறைகள்; எடுத்துக்காட்டாக, கல்லுடைத்தல், சல்லியாக்கல், மணல் எடுத்தல், செங்கல், சிமென்று செய்தல் போன்றவை விளைப்புத் துறைகள் என்றால் கட்டுமானத்துறை இப்பண்டங்களை நுகரும் பணித்துறை; பருத்தி வேளாண்மை, நூற்றல், நெய்தல், ஆடை செய்தல் போன்றவை ஒரு முனையில் விளைப்பும் மறு முனையில் பணியும் சார்ந்தவையாய் ஒரே பண்டத்தைப் பல்வேறு நிலைகளிலும் வடிவங்களிலும் விளைத்து நுகரும் தொடரியின் கண்ணிகளாகின்றன; அதே வேளையில் சாலைகள், பாசன அமைப்புகள் அமைத்தல், செப்பமிடல், பராமரித்தல், மின்சாரம் போன்றவை சிறிதளவு விளைப்பும் பெருமளவு பணியும் சார்ந்தவை. கடல்வழி, நிலவழிப் போக்குவரத்து ஆகியவற்றின் அனைத்து உறுப்புகளிலும் சிறிதளவு நுகர்வும் பெருமளவு பணியும் அடங்கியுள்ளன; சுற்றுலாவும் அத்தகையதே; கலை இலக்கியப் படைப்புத் துறையில் மக்களை மகிழ்வித்தல் என்ற பணி மட்டும் அடங்களியுள்ளது; சாலை, கட்டுமானங்களைப் போல் நேரடி நுகர்வு இல்லாத துறைப் பிரிவுகள் அவற்றில் பணியாற்றுவோருக்குக் கூலி மூலம் உண்டாக்கும் பணப்புழக்கம் அவர்களது வாங்குதிறனைக் கூட்டி மறைமுகமான நுகர்வை ஏற்படுத்துகிறது; அத்துடன் அவர்களுக்குப் பலவகையான பணிகளை வழங்கும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் பணப் புழக்கத்தின் மூலமாகவும் நுகர்வை உண்டாக்குகிறது; எனவே பொருளியல் நெருக்கடி காலங்களில் விளைப்பு சாராத்துறைகளில் அரசே தலையிட்டு பணத்தாள்களை அச்சிட்டு வெளியிட்டு அப்பணத்தை இத்துறைகளில் செலவிடுவதன் மூலம் பணப்புழக்கத்தை உருவாக்கிப் பொருளியல் மந்த நிலையை முறியடிக்க வேண்டும் என்பது தான்.

கெயின்சின் இந்தத் திட்டத்தை ஐரோப்‌பாவிலிருந்த ஆட்சித் தலைவர் எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அப்போது அமெரிக்காவின் குடியரசுத் தலைவராயிருந்தவர் இதனை ஏற்றுக் கொண்டு செயற்படுத்தினார். முதன் முதலில் சாலைகளில் படிந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பனிச் சேற்றை அகற்றும் பணியைக் கொடுத்தார். வேலையற்றிருந்தோருக்கு இதன் மூலம் கிடைத்த கூலி தொடங்கி வைத்த பணப்புழக்கம் பொருளியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த உத்தியைத் தொடர்ந்து கடைப்பிடித்து நேரான விரைவுச் சாலைகள் முதற்கொண்டு அனைத்து அடித்தளக் கட்டுமானங்களையும் செய்து முடித்தனர். இதனால் ஏற்பட்ட பணப்புழக்கமும் நுகர்பொருள் தேவையும் அமெரிக்கப் பொருளியலை அனைத்து முனைகளிலும் மிகக் குறுகிய காலத்தில் உயர்த்தியது.

முதலாளிய விளைப்பு முறையின் இயல்புக்கேற்ப அரசு அச்சிட்டு வெளியிட்ட பணப்புழக்கத்தின் விளைவான நுகர்பொருள் விளைப்பின் உயர்வு அப்பணத்தை இறுதியில் முதலாளியரின் கைகளில் கொண்டு சேர்த்தது. முதலாளிகள் தங்களுக்கிடையிலான போட்டியை எதிர்கொள்ள மலிவாகப் பொருட்களை விளைக்கவும் அவற்றின் தரத்தை உயர்த்தவும் புதிய புதிய பொருட்களைப் படைக்கவுமான ஆய்வுகளில் செலவிட்டனர். இதன் மூலம் உள்நாட்டுப் போட்டி என்ற நிலையிலிருந்து உலக அளவில் போட்டியிட்டு முதலிடம் பெறவும் அமெரிக்காவால் முடிந்தது. இந்தக் காலகட்டத்தில் உலகப் போரின் இரண்டாம் கட்டம்(ஒரே உலகப் போர் தான் நடைபெற்றது என்றும் 1919இல் தொடங்கியது அதன் முதற்கட்டம் என்றும் 1939இல் தொடங்கியது இரண்டாம் கட்டம் என்றும் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். முதற்கட்டப் போரின் முடிவும் ஒப்பந்தமும் செருமனிக்கு வெளியே பிரான்சில் இடம்பெற்றதையும் இரண்டாம் கட்டப் போர் செருமனியின் தலைநகர் வரை சென்று "எதிரி" முழுமையாக முறியடிக்கப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.)தொடங்கி விட்டது. அதன் விளைவாக இடம் பெயர்ந்து அமெரிளிக்காவில் குடியேறிய முதலாளியர், குறிப்பாக யூதர்கள் இந்த நல்வாய்ப்பான சூழலில் அமெரிக்‌காவின் தொழில் வளர்ச்சியை உச்சத்துக்குச் கொண்டு சென்றனர். இவ்வாறு அமெரிக்கா இன்று உலகின் ஒரே வல்லரசாக உயர்ந்ததில் பற்றாக்குறைப் பணமுறைக்கு முதன்மையான இடம் உண்டு. ஐரோப்பிய நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகளை அடிமை கொண்டு அந்நாட்டு மக்களை வேட்டையாடிக் கொன்றும் கொள்ளையடித்தும் சுரண்டியும் குறைந்தது 150 ஆண்டுகளாவது பாடுபட்டு எய்திய வளர்ச்சியை மிகக் குறுகிய காலத்தில் அமெரிக்கா எய்த முடிந்தது இந்தப் பற்றாக்குறைப் பணமுறை உத்தியால் தான்.

ஆங்கிலர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய காலத்தில் இங்கு விளைப்பு விசைகள் போதிய அளவு வளரவில்லை என்பதும் அதனால் பற்றாக்குறைப் பணமுறை பணவீக்கத்தை விளைவிக்கும் என்பதும் உண்மை தான். ஆனால் அதைப் பின்பற்றுவதன் மூலமாயினும் மக்களிடம் நன்கொடை தண்டி பள்ளிகளைத் தொடங்குவதாயினும் அவற்றால் ஏற்படும் பணப்புழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் ஒன்றே. அதே நேரத்தில் இந்திய அரசு பற்றாக்குறை பணமுறையைக் கடைப்பிடிக்‌காமலும் இல்லை. இதை ஆச்சாரியார் போன்றோர் கடுமையாக எ‌திர்த்தனர் என்பதும் உண்மை. கல்வி முதலிய அடிப்படைக் கட்டமைப்புகளின் மூலம் அடித்தன மக்கள் மேம்பாடடைவதைப் பொறுக்க முடியாமலேயே அவர் இந்த எதிர்ப்பபைக் காட்டியிருக்க வேண்டும்.

பற்றாக்குறைப் பணமுறையை எதிர்க்கும் அல்லது அதன் நற்கூறுகளை மறைக்கும் நம் நாட்டுப் போலி, கூலிப் பொருளியல் ''வல்லுநர்கள்'' உலக வங்கி முதல் அயல்நாட்டு நிறுவனங்கள் வரை வெளிநாட்டு மூலதனத்தை இறக்குமதி செய்தும் அதற்கு ஈடாக உள்நாட்டுப் பண்டங்களை ஏற்றுமதி செய்தும் மக்களுக்குக் கிடைக்கத் தக்க பண்டங்களின் அளவைக் குறைத்தும் அதற்குத் தொடர்பில்லாத ஒர் உயர் மட்டப் பணப்புழக்கத்தை உண்டாக்கியும் வல்லரசுகளின் நெருக்குதலால் நினைத்தவாறெல்லாம் ரூபாயின் மதிப்பைக் குறைத்து அதன் வாங்கும் ஆற்றலை அழித்தும் உள்நாட்டு விளைப்பு விசைகளின் கழுத்தை நெறித்துத் கொலை செய்வதைக் கண்டிப்பதில்லை. அவ்வாறு கண்டிக்கும் நேர்மையான பொருளியலாரைப் புறக்கணிக்கவும் பல்வேறு வகைகளில் தண்டிக்கவும் தயங்குவதில்லை. அவர்களை ஆதரிக்கும் மக்கள் தொடர்பு ஊடகங்களைத் தண்டிக்கவும் பல்வேறு உத்திகளைக் கையாள்கின்றனர் ஆட்சியாளர்கள். பொதுமைக் கட்சியினரைப் பொறுத்தவரை மார்க்சோடு நேர்மையான பொருளியல் சிந்தனை என்பது மனித குலத்தில் முற்றுப்பெற்றுவிட்டது என்றே கருதுகின்றனர். மதத் தலைவர்கள் தங்கள் முற்காணியரகள்(தீர்க்கத்தரிசிகள்) அல்லது இறைத்தூதர்களுக்குப் பின் இன்னொருவர் தோன்றுவதில்லை என்று நம்புவது போன்றது தான் இதுவும். பெரியார், முத்துக்குட்டி அடிகள், போன்றோரின் அடியார்கள் அவர்களது காலத்துக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களைக் கணக்கிலெடுக்க மறுப்பது போன்றதே கெயின்சின் கோட்பாட்டை இவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதும் உண்மையில் கெயின்சின் கோட்பாடு மார்க்சின் மீத மதிப்புக் கோட்பாட்டின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமே. இத்தகைய ஒரு பின்னணியில் காமராசரின் செயற்பாடுகளுக்காக அவரைக் குறை கூறுவது சரியல்ல. கல்விக் கண்ணைத் திறந்த அவரது அரும்பணியின் பெருமை இதனால் சிறிதளவும் பாதிக்கப்படாது.

ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு ஆட்சியாளர்கள் வழங்க முன்வராத எழுத்தறிவைப் பெற வீடு தோறும் நாளொன்றுக்கு ஒரு பிடி அரிசி பெற்றுக் கல்வி கற்ற வரலாறுடையது தமிழ்நாடு. சி.பி. இராமசாமியாரின் பகல் கஞ்சியுணவுத் திட்டத்துடன் இணைந்த கட்டாய இலவயக் கல்வித் திட்டத்தைத் திருவிதாங்கூர் சமத்தானத்தில் கண்டது. இந்த இரண்டு திட்டங்களையும் இணைத்துத் தீட்டப்பட்டது தான் காமராசரின் பள்ளிக் கல்விச் சீரமைப்பு இயக்கமும் இன்று திராவிடத் தெருநாய்களின் சண்டையில் சிக்கித் தவிக்கும் சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியான காமராசரின் மதிய உணவுத் திட்டமும். இவ்வாறு அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட அனைவருக்குமான பொதுக் கல்வித் திட்டம் ஊழல் அரசியல் பேய்களின் பண வேட்கையாலும் கல்வி வாணிகர்களின் கொள்ளை முயற்சியாலும் ஏழைகளுக்கும் இதுவரை நடைபெற்ற ஒதுக்கீட்டு முறையின் பயனைத் தீண்டாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எட்டாக்கனியாகி நிற்கிறது. ஆங்கிலர் வருகைக்கு முன் இரண்டு சாதியினர்க்கே உரியதாயிருந்த கல்வி இன்று அனைத்துச் சாதிகளிலிருந்தும் உருவாகியுள்ள புதிய மேட்டுக்குடிகளான புதுச் சா‌திகளுக்கு மட்டும் கிட்டும் நிலை உருவாகி விட்டது. சிறுபான்மையினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சிறப்புரிமை இருப்பதை எதிர்த்து மதவெறியைக் கிளப்பி நாட்டைக் கொலைக்களமாக்கி ஆட்‌‌‌சியில் அமர்ந்து விட்டவர்கள், அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாட்டையே கொள்கையளவில் எதிர்க்கும் வருண முறைக் கோட்பாட்டினர். அது பற்றிய உணர்வற்றவர்கள் பொதுமக்கள்; ஏனென்றால் எழுத்தறிவின் பயனை நுகர்ந்தறியாதவர்கள் அவர்கள். அவர்களது உழைப்பின் பயனை நுகரும் நம் குமுகம் அந்த உழைப்பையும் உழைப்போரையும் மதிப்ப‌தில்லை. அவர்களது உழைப்பில் அடங்கியுள்ள அறிவியல் கூறுகளையும் தொழில்நுட்பத்தையும் அகழந்தெடுத்துப் ‌பாடத்திட்டங்களில் சேர்த்து அவற்றை வளர்த்தெடுத்து அத்தொழில்களையும் அவற்றில் ஈடுபடுவோரையும் மதிக்கும் பண்பாடற்றது நம் குமுகம். இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த மீண்டுமொரு முறை பிடியரிசித் திட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு மக்களாகவே இத்தொழில்களுக்கான பயிற்சி இணைந்த கல்விச்சாலைகளைக் திறந்து ஆட்சியாளர்களை நெருக்கி இணங்க வைக்க வேண்டிய ஒரு வரலாற்றுக் கட்டத்தின் நுழைவாயிலில் நாம் நிற்கிறோம் என்பது காமராசரின் வரலாறு நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

கல்விப் பணிக்குப் புறம்பாக நன்கொடை தண்டுதல், குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைப் பண்டுவத்துக்கு ஆள் சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு அதில் நிறுவப்பட்ட குறியளவை எய்த முடியாததால் தண்டிக்கவும் பட்ட நெருக்குதால் கல்விப் பணிக்குப் புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டதால் கல்வித் துறை சாராத அலுவலர்களின் அனுமதிப்புக்கு ஆளான நிலையில் தான் முன்பு குமுகத்தின் நேர்மையான பெருமை சான்ற வழிகாட்டிகளாயிருந்த ஆசிரியர் பெருமக்கள் தங்கள் தன்மதிப்பை இழந்து தங்களையே தரம் தாழ்த்‌திக் கொண்டு தரகர்களாகவும் கந்துவட்டிக்காரர்களாகவும் மாறி கல்வியை ஒரு சந்தைப் பொருளாக மாற்றினர், அதுவும் மிகக் குறுகிய காலத்தில் என்பதும் உண்மை.


அடிக்குறிப்பு:

[1]தான் பதவிக்கு வந்த நான்கே மாதங்களில் கட்சித் தலைவர்களையோ அமைச்சரவை உறுப்பினர்களையோ கலக்காமல் அமெரிக்காவுடனும் உலகவங்கியுடனும் பேசி இந்திய உரூபாயின் மதிப்பை 57% இந்திரா காந்தி குறைத்தார். அதிலிருந்து தான் அவருக்கும் காமராசருக்குமான இடைவெளி விரிந்தது என்று கூறப்படுகிறது. பார்க்க: இந்திரா சகாப்தம், தினமணி கதிர் 11-11-1984. அன்று தொடங்கிய இந்தியப் பொருளியலின் வீழ்ச்சியைத் அதைத் தூக்கி நிறுத்த வேண்டுமாயின் ஒரு அரசியல் புரட்சியே தேவைப்படும் என்பது இன்றைய நிலை. இந்திராவின் இந்த நடவடிக்கையில் கணிசமான பணம் கைமாறியிருக்கும் என்பது உறுதி. தேர்தல் செலவுகளுக்காக உள்நாட்டுச் சுண்டைக்காய் முதலாளிகளிடம் கையேந்துவதை விட அமெரிக்க, உலகவங்கி முதலைகளிடம் தாராளமாக எளிதில் சேர்த்துவிடலாமே! அப்போது அவர் திட்டமிட்டிருந்த தேர்தலையும் அதற்குத் தேவைப்படும் பணத்தைத் திரட்டும் வழியையும் அப்போது அவர் நெருக்கமாக இருந்த அமெரிக்காவே அறிவுறுத்தியிருக்கும்.

காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 2

முதலமைச்சராகக் காமராசரின் அருஞ்செயல்களில் சிறப்பாகக் கூறப்படுவது மக்களுக்கு எழுத்தறிவைப் புகட்டுவதில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தாம். ஆனால் அரசு வேலைவாய்ப்பை நோக்கிய நம் கல்வி முறையில் பொதுவாக வேலை வாய்ப்புகளும் சிறப்பாக அரசு வேலைவாய்ப்புகளுமின்றி கல்வித் கூடங்களைத் திறப்பதில் பயனில்லை என்பதோடு அது அனைத்து முனைகளிலும் தீங்கையே விளைவிக்கும் என்பது இன்று கண்கூடு. அந்த வகையில் காமராசர் ஆட்சிக் காலத்தில் தமிழகம் கண்ட தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சி அதற்கு முன்னரும் பின்னரும் இல்லாதது. வேலைவாய்ப்பு வளர்ச்சியைப் பொறுத்த வரையில் காமராசரின முன்முயற்சிக்கு ஐந்தாண்டுத் திட்டங்களும் முகாமையான காரணம் என்பது ஒர் உண்மை. அதே வேளையில் பேரவைக் கட்சிக்குப் போட்டியாக விரைந்து வளர்ந்து வந்த தி.மு.க.வின் ''வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது'' முழக்கத்தைக் காட்டித் தமிழகத்துக்கு ஐந்தாண்டுத் திட்ட ஒதுக்கீடுகளில் கணிசமான பங்கைப் பெற்றுத் தந்தது காமராசரின் திறன் என்பதில் ஐயமில்லை. மேற்கு வங்கத்தின் பி.சி.இராய் போன்ற முதலமைச்சர்கள் வெளிப்படையாக நடுவணரசுக் கெதிராகப் போர்க் கொடியை உயர்த்திப் பெற்ற பயன்களை வளியே தெரியாமல் தி.மு.க.வைக் காட்டிக் காமராசரால் பெற முடிந்தது. அதே வேளையில் தமிழகத்தில் தி.மு.க. இருந்தது போல் தத்தம் மாநில மக்களின் நலனுக்காப் போராடுவதாகக் காட்டிக் கொள்ளும் இயக்கங்கள் பிற மாநலங்களில் இல்லாமையால் இங்கு தி.மு.க. மேற்கொண்ட உரிமைப் பங்குப் போராட்டத்தை அங்கு இராய் போன்ற பேரவைக் கட்சித் தலைவர்களே மேற்கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில். உளத்தூய்மையோடு இல்லையாயினும் தி.மு.க.வினர் முன் வைத்த குறிக்கோள்களால் தமிழக மக்கள் அடைந்த பயன்கள் அவர்கள் எதிர்க கட்சியாகவும் காமராசர் முதலமைச்சராகவும் இருந்த காலத்தில் தான்.

காமராசரின் எழுத்தறிவு ஊட்டும் பணி சிறப்புடையதாயினும் அதில் சில அடிப்படை நடைமுறைத் குறைபாடுகள் இருந்தன. அவரும் பெரியாரின் தொண்டரும் பள்ளிக் கல்வி இயக்குநருமான நெ.து. சுந்தரவடிவேலு அவர்களும் இணைந்து நடத்திய எழுத்தறிவு இயக்கத்துக்குப் பள்ளிகள் சீரமைப்பு இயக்கம் என்று பெயர். இத்திட்டத்தின் படி ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் மக்களிடமிருந்து நன்கொடையாகத் தண்டும் தொகைக்குச் சமமாக இணை நல்கைத் தொகையை அரசு வழங்கும். இதற்காகப் பள்ளித் தலைமையாசிரியர் நன்கொடை தண்ட வேண்டும். அப்படி அவரால் தண்ட முடியவில்லையாயின் தண்டியதாகப் பொய்க் கணக்கு எழுதியாவது அரசின் இணை நல்கையைப் பெற வேண்டும். பொய்க் கணக்கு எழுதி வரவு வைத்த இல்லாத தொகைக்குப் பொய்ச் செலவுக் கணக்கும் எழுத வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும். இது தணிக்கையின் போதோ வேறு வகையிலோ வெளியாகிவிட்டால் அத்தலைமையாசிரியர் தண்டனையடைவதுடன் மக்கள் முன்பு இழிபெயரும் அடைய வேண்டும். தண்டனைக்கு அஞ்சியோ இழிபெயருக்கு இசைவின்றியோ நேர்மை நாட்டத்தாலோ இந்தப் பொய்க் கணக்கு உத்தியைக் கடைப்பிடிக்கத் தவறும் தலைமையாசிரியர்கள் அரசின் பார்வையில் திறமையற்றவர்களாகவோ முரண்டர்களாகவோ தோன்றுவர். இந்தக் காரணத்தால் கல்வி வளர்ச்சிக்காகக் காமராசர் கையாண்ட பொருளியல் உத்தியையும் அதனால் அவர் அறிவித்த பள்ளிச் சீரமைப்பு இயக்கத்தையும் காமராசரையும் குற்றம் கூறும் முதிய தலைமையாசிரியர்கள் இன்றும் வாழ்கின்றனர்.

கல்வி வளர்ச்சிக்குப் பணம் ஒதுக்குவதற்கு மக்களின் நன்கொடை பாதியும் அரசு நல்கை பாதியும் என்று திட்டம் வகுத்துப் பின் பொய் வரவும் அதற்கேற்பப் பொய்ச் செலவும் எழுதுமாறு ஆசிரியர்களை நெருக்கி அவர்களைப் பொய்யர்களாக உருவாக்கிவிட்டு உண்மையான அரசுப் பணத்தால் ஒராண்டில் 300 பள்ளிகள் கட்டுவதை விட இந்தப் பொய்க் கலப்பான திட்டத்தைக் கடைப்பிடிக்காமல் அரசே நேரடியாக ஒராண்டில் 150 அல்லது 200 பள்ளிகள் கட்டியிருந்தால் ஒரிரண்டு ஆண்டுகள் கூடுதல் சென்றிருந்தாலும் வருங்காலத்தின் குமுகத் தூண்களான மாணவர்களை உருவாக்கும் பள்ளியாசிரியர்களின் நேர்மையும் குமுகத்‌தின் ஒழுக்கச் சிறப்பும் பேணப்பட்டிருக்கும். குறைந்தது இன்று உருவாகியிருக்கும் சீர்கேடுகளின் விரைவாவது மட்டுப்பட்டிருக்கும்.

இன்று அதிகாரிகளையும் அலுவலகர்களையும் தெரிந்தே உண்மைக்குப் புறம்பான புலனங்களை(தகவல்களை)த் தரவைப்பதோடு மக்களுக்கும் அந்த நுணுக்கங்களை அலுவலர்களே சொல்லித் தருவனவாகவே அனைத்து ''மக்கள் நலத்'' திட்டங்களும் வடிவமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக டிராக்டர் எனப்படும் இழுவுந்துக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டத்தில் ''பயனாளி''யின் தகுதி பற்றிய வரையறைகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டால் இந்தியாவின் 100 கோடிப் பேரில் ஒருவர் கூடத் தேற மாட்டார். அதே நேரம் இவ்வளவு கடன் வழங்கியே தீர வேண்டும் என்ற கு‌‌றியளவு கண்டிப்பா நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அச்சுறுத்தலும் அலுவலர்களுக்கு உண்டு. எனவே வரையறைகளுக்கேற்ப பொய்ப் புலனங்கள் தரப்படுகின்றன. கடனுக்கு இழுவுந்துகள் வழங்கும் விழாவில் ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் ஒர் இழுவுந்தின், அல்லது பணம் கொடுத்து ஏற்கனவே வாங்கப் பட்டு ப‌திவெண் பொறிக்கப்படாத ஒரு புது உழுவுந்தின் திறவுகோலை அமைச்சர் அல்லது ஆட்சியர் இதழாளர்கள் புகைப்படக் கருவிகளும் தொலைக்‌காட்சிப் படக் கருவியும் பதிவு செய்ய வழங்குவார். வழங்கப்படும் ''மானியம்'' உண்மையான பயனாளிகளாகிய அதிகாரிகளிடம் சென்று அதில் ஒரு பகுதி பேழைகள் மூலம் இந்திய ஆட்சிமைப்பின் உச்சி வரைக்கும் சென்று சேரும். இந்த ஆதாயம் தவிர ஆட்சியாளர்களுக்கு இன்னொரு பெரும் ஆதாயமும் உண்டு. பொய்ப் புலனங்கள் தந்ததன் மூலம் குற்றவுணர்வுக்கும் மேலிடம் நினைத்தால் என்று வேண்டுமாயினும் ‌‌‌சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற அச்சத்துக்கும் ஆளாகும் அலுவலர்களும் அதிகாரிகளும் மேலிடங்கள் சொல்வதற்கெல்லாம் ஆட்டம் போடும் அடிமைகளாகிவிடுவர். மக்களுக்குக் குடும்ப அட்டை எனும் பங்கீட்டு அட்டை முதல் பள்ளிச் சான்று வரை அறிவிக்கப்பட்டுள்ள ''சலுகை''களுக்காக விதிவிலக்கின்றி அனைத்து மக்களும் பொய் கூற வைக்கப்பட்டுள்ளனர். அதாவது இன்றைய இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் ஒருவாய்ச் சோறுண்ண குறைந்தது மூன்று பொய்களாவது சொல்லியாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு நம் சலுகை, மானிய, ஒதுக்கீட்டு நலத்திட்டங்களால் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள குற்றவுணர்வும் தன்னிரக்கமும் தான் நம் ஆட்சியாளர்கள் செய்யும் கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளும் மனநிலையை அவர்களிடம் உருவாக்கி வைத்துள்ளது. கடுமையான பணியாயினும் இதை உடைத்தாக வேண்டும்.

(தொடரும்)

காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் (1)

வரலாறு என்பது நிகழ்ச்சிகளின் தொகுப்போ தரவுகளின் பட்டியலோ அல்ல. அது உலக மக்கள், மக்கள் தொகுதிகள் அல்லது தனிமனிதர்களின் வாழ்வில் மட்டுமல்ல, இயற்கை, உலக உருண்டை ஆகிய அனைத்திலும் இடம் பெறும் மாற்றங்களையும் அம்மாற்றங்களின் பின்னணியில் நின்று அம்மாற்றங்களை நிகழ்த்தும் காரணிகளையும் தடம்பிடிப்பதாகும். தனிமனித வரலாறுகள் அம்மனிதர்களின் சிந்தனை மற்றும் செயல்திறன்கள், அவற்றை அவர்கள் பயன்படுத்திக்கொண்ட முறை அவர்கள் எதிர்கொண்ட இடர்கள் மற்றும் இடையூறுகள் அவற்றை அவர்கள் சந்தித்த பாங்கு, அவர்கள் புரிந்த அருஞ்செயல்கள், தவறவிட்ட நல்வாய்ப்புகள், செய்யத் தவ‌‌றியவை, செய்த தவறுகள், எய்திய மேன்மைகள், அடைந்த இழிவுகள் என்று அனைத்தையும் தடம்பிடிப்பவை. அவர்களது வாழ்நாளில் அவர்கள் வ‌‌லிமையைப் பயன்படுத்திப் பயன்களைப் பெறுவதற்காக இல்லாத பெருமைகளை இட்டுக்கட்டியோ அவர்களின் எதிரிகளை மகிழ்வித்து ஆதாயம் பெறுவதற்காக அவர்களது குறைகளை மிகுத்துக் காட்டியோ அவர் சா‌‌ர்ந்த அல்லது அவரைச் சார்ந்த மக்கள் குழுக்களை மகிழ்வித்துப் பயன்பெற அவர்களின் ‌‌‌சிறப்புகளை அளவின்றி மிகைப்படுத்‌தியோ கூறுவது வராற்றுக்குச் செய்யும் இரண்டகம். ஒரு நாடு அல்லது மக்கள் தொகுதி அல்லது தனி மனிதர்களின் பட்டறிவுகளிலிருந்து எதிர்காலத் தலைமுறையினருக்குப் புதிய ‌பாதைகளை வகுத்துக்கொள்ள வழி‌காட்டுவதே வரலாற்றின் நோக்கமும் பயனுமாக இருக்க வேண்டும். வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்கு அருமுயற்சியும் கடும் உழைப்பும் தேவைப்படுவது போல் அவற்றின் பின்னணியில் நின்று இயக்கிய குமுக விசைகள் மற்றும் நிகழ்முறைகளையும் தடம்பிடிப்பதற்கும் வரலாறு தரும் படிப்பினைகளை இனம் காட்டுவதற்கும் கூட கடும் உழைப்பும் ஆழ்ந்த, ‌‌‌‌‌தெ‌‌‌ளிவான சிந்தனையும் தடம் புரளாத மெய்‌‌‌‌‌‌யியல் அணுகலும் தேவை. ஒரே வரலாற்றிலிருந்து வெவ்வேறு ஆய்வாளர்கள் தத்தமக்குரிய அணுகல்கள், கோணங்களின் அடிப்படையில் வெவ்வேறு முடிவுகளை எய்துவதுடன் வெவ்வேறு படிப்பினைகளையும் இனம் ‌காட்டுவர். இந்த வகையில் வரலாற்றுவரைவென்பது ஒரு மெய்யியல் வினைப்பாடுமாகும். அந்த அடிப்படையில் மாமனிதர் காமராசரின் வாழ்வின் சில நிகழ்ச்சிகளைத் தடம் பிடிக்க முயல்வோம்.

மிக எளிய குடும்பச் சூழலில் பிறந்து தன் உழைப்பாலும் கொண்ட கொள்கையில் கொண்டிருந்த ஈடுபாட்டாலும் உறுதியாலும் உயர்ந்த பதவிகளை மட்டுமின்றி அவற்றைப் பயன்படுத்திப் பல அருஞ்செயல்களை நிகழ்த்தியவர் என்ற வகையில் தற்கால இந்திய வரலாற்றில் ஒப்பற்ற மாமனிதராக வாழ்ந்து மக்கள் மனதில் நிறைந்தவர் காமராசர் என்பதில் ஐயமில்லை.

பள்ளியில் கல்வியைப் தொடர முடியாத வறிய சூழலிலும் இந்திய விடுதலைப் போரால் ஈர்க்கப்பட்டு சிறுவர்களைத் திரட்டி அவர்களுக்கு உணர்வூட்டி இந்தியத் தேசியப் பேரவைக் கட்சியை வளர்த்தெடுப்பதில் கடும் உழைப்பையும் கொள்கை உறுதியையும் ஈடுபாட்டையும் கொண்டிருந்த அவருக்குக் கட்சியின் அடிமட்டப் பொறுப்புகளைப் பெறும் வகையில் அமைந்த வாய்ப்புகளைப் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தமிழ்நாடு பேரவை(காங்கிரசு)க் கட்‌‌‌சியின் குழுத் தலைவர் பதவியைப் பெற்றதிலும் பின்னர் முதலமைச்சரானதிலும் அன்றைய தமிழக குமுக - அரசியல் சூழல்களுக்குப் பெரும் பங்குண்டு. பெருமக்களின் வளர்ச்சியில் அவர்களது உள்ளார்ந்த ஆற்றல்களும் சிறப்பான பண்புகளும் அவர்களது முயற்சியும் உழைப்பும் எந்த அளவுக்கு பங்கேற்கின்றனவோ அதே அளவுக்கு அவர்கள் வாழும் காலச் சூழல்களும் அவற்றால் அமையும் நல்வாய்ப்புகளும் தற்செயல் நிகழ்வுகளும் பங்கேற்கின்றன.

அவர் காலத்தில் பேரவைக் கட்சியில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இறங்கு முகத்தில் இருந்தது. மைலாப்பூர் குழு, எழும்பூர் குழு என இரண்டாகப் பிரிந்து நின்று பனிப் போர் நடத்திக் கொண்டிருந்த கட்டத்தின இறுதியில் காமராசரின் ஆசானான சத்தியமூர்த்தி இயற்கை எய்திவிட அவரது போட்டியாளரான ஆச்சாரியார் எனப்படும் இராசகோபாலாச்சாரியார் செல்வாக்குடன் இருந்தார். அதே வேளையில் பார்ப்பனரல்லாத பல தலைவர்களும் வளர்ந்து செல்வாக்குப் பெற்றிருந்தனர். ஆச்சாரியாருக்குக் காந்தியாரிடம் நெருக்கமான உறவிருந்தது. ‌காந்தியின் மகனுக்கு ஆச்சாரியாரின் மகள் மனைவியுமாவாள். இந்த நிலையில் அவர் இங்குள்ள கட்‌‌‌சியின் பிற பெருமக்களை மதிப்ப‌தில்லை என்பதோடு சாதி உணர்வுடனும் நடந்து கொண்டார். அதனால் தமிழ்நாடு பேரவைக் கட்சி‌‌‌‌‌‌யின் குழுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அவரை எதிர்த்து முறியடிப்பது என்று அனைவரும் ஒருமித்து முடிவெடுத்தனர். ஆனால் எதிர் வேட்பாளராக யாரை நிறுத்துவது? இங்கிருந்த பெருந்தலைகளெல்லாம் காந்தியாருடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தவர்கள். அவர்கள் போட்டியிட்டால் காந்தியாரின் தலையீட்டால் பின்வாங்க வேண்டியிருக்கும். எனவே தமிழக எல்லைக்குள் கூடச் சரியாக அறிமுகமாகாமலிருந்த காமராசரை எதிர்வேட்பாளாராக நிறுத்துவதென்று அனைவரும் முடிவு செய்தனர். தலைவர் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் முகாமையானவர் என்று கருதப்பட்ட முத்துராமலிங்கர் கூட காமராசர் போட்டியிடுவதை ஆதரித்தார். இவ்வாறு அன்றைய வரலாற்றுச் சூழல் காமராசரை பேரவைக் கட்சியின் தமிழ்நாட்டுக் குழுத் தலைவராக்குவதில் உறுதுணையாக நின்றது.

விடுதலை பெற்று அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட்டுக் குடியரசு அறிவிக்கப்பட்ட பின் 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதல் பொதுமைக் கட்சியினர் எதிர்பாராத அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் தேர்வு பெற்றனர். பேரவைக் கட்சி தனிப் பெரும்பான்மை பெறவில்லை. ஆனால் அவர்கள் பொதுமைக் கட்சி ஆட்சி அமைப்பதை விரும்பவில்லை. எனவே குறுக்கு வழியில் இறங்கினர். வன்னியர்களின் வாக்குகளால் சில உறுப்பினர்களைப் பெற்ற உழைப்பாளர் கட்சித் தலைவர் இராமசாமிப் படையாட்சிக்கு அமைச்சர் பதவி அளித்து அவரது கட்சியைப் பேரவைக் கட்சியில் இணைய வைத்தனர்; தி.மு.க.வோடு எழுத்து ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களது ஆதரவால் வென்ற மாணிக்கவேலருக்கு அமைச்சர் பதவி கொடுத்துச் சேர்த்துக் கொண்டனர். தேர்தலில் போட்டியிடாதவரான ஆச்சரியார் பேரவைக் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டு முதலமைச்சரானார். புழக்கடை மூலம் பதவியைக் கைப்பற்‌‌றியவர் ஆச்சாரியார் என்ற பழிச்சொல்லுக்கு ஆளானார். அதுமட்டுமல்ல, இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அரசியலில் கூட நீண்டகால நோக்கில் தீய பல விளைவுகளுக்கு அடித்தளமிட்டது. கட்சிமாறல் எனும் அருவருக்குத் தக்க அரசியல் நடைமுறையை இந்திய அரசியலில் தொடங்கி வைத்தது இந்த நிகழ்ச்சி மூலம் தான். அறத்தின் வழியில் ஆண்டவர் என்றும் அரச முனிவர்(இராச ரிசி) என்றும் பலராலும் இன்றும் தவறாகப் போற்றப்படும் ஆச்சாரியார் உண்மையில் பதவிக்காக எதையும் செய்பவர் என்ற இன்றுவரை மறைக்கப்படும் உண்மைக்குச் சான்று பகருவதாக இந்நிகழ்வு அமைந்தது. பாட்டாளியரை ஆளுவோராக்குவதே தங்கள குறிக்கோள் என்று அறிவித்துக் கட்சி நடத்தும் பொதுமைக் கட்சியின் அன்றைய தலைவரும் பார்ப்பனரும் ஆன இராமமூர்த்தி முதலமைச்சரின் தேர்வை முடிவு செய்யும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்து பார்ப்பனராகிய ஆச்சாரியார் முதலமைச்சராவதற்கு வழிவகுத்துக் கொடுத்ததன் மூலம் அவர்களின் உண்மையான நோக்கம் பார்ப்பன ஆதிக்கத்தை மறைமுகமாக நிலைநிறுத்துவதே என்பதை உலகுக்குப் பறைசாற்றியது. இன்று பொதுமைக் கட்சியின் எண்ணற்ற பிரிவுகளிலும் பார்ப்பனரல்லாத தலைமைகள் வந்துவிட்டாலும் நடைமுறைகளிலும் கோட்பாடுகளிலும் பார்ப்பனர்களின் நலன் பாதிக்கப்படாத உத்திகளே நீடிக்கின்றன.

உலகில் முதன் முதலில் நாகரிகம் எய்தியவர்கள், உலகுக்கு நாகரிகம் வழங்கியவர்கள், உலகின் மொழிகளுக்கெல்லாம் தாயாகிய தமிழ் மொழியை உருவாக்கியவர்கள் என்று, அனைத்து நாகரிகக் கூறுகளுக்கும் முன்னோடிகள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழர்கள் விடுதலை பெற்ற இந்தியாவில் மக்களிடம் காட்டி வாக்குப் பெற்ற கட்சிகளைக் கைவிட்டுப் பதவிக்காக வேறுகட்சிக்கு மாறும் கட்சி தாவல் எனும் மக்களாட்சி முறையில் புகுந்துவிட்ட புற்றுநோய்க்கும் பின்னாளில், பதவி வெ‌‌றியொன்றே வாழ்வின் நோக்கமாகக் கொண்டியங்கியவரும் ஆனால் வெளியில் கண்ணியமிக்க அரசியல் தலைவர் என்று புகழப்படுபவருமான அண்ணாத்துரை தொடங்கி வைத்த அரசியல் கட்சிகளின் கொள்ளையில்லாக் கூட்டணிக்கும் தொகுதிகளில் பெரும்பான்மையாகவுள்ள சாதியைச் சார்ந்த வேட்பாளர்களைத் தேர்திலில் நறுத்திச் சாதிவெறியைத் தேர்தல் மூலம் வளர்த்ததிலும் அரசின் செலவில் செய்த பணிகளை ஏதோ தங்கள் சொந்தப் பணத்திலிருந்து செய்தது போல் பட்டியலிட்டுஅரசின் செலவில் தாளிகைகளில் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுப்பது, முதலமைச்சரின் பிறந்த நாளன்று நலத் திட்டங்களை அறிவித்து மக்களாட்சி என் ற பெயரில் நடக்கும் ஆட்சியில் மன்னர் கால ஆட்சிக் கூறுகளைப் புகுத்துவது, ''ஆளுயர''(ஆள் உயர - இந்த வக்கணை விளக்கம் கருணாநிதி வாயாலேயே கொடுக்கப்பட்டது) மாலை அணிவிப்பது, மேடைகளில் தலைவர்களைப் பாரரட்டுவதில் நீண்ட நேரத்தைச் செலவிடுவது, துண்டுகள் அணிவது தலைவர்களின் மிகப்பெரிய வெட்டுருவங்களை (கட்டவுட்கள்) வைப்பது வருகை தரும் தலைவர்களைப் போற்றி சாலை ஒரங்களை தட்டிகளால் நிறைப்பது, சாலை முழுவதையும் தோரணங்களால் நிரப்புவது, பல்வேறு தனியார் நிறுவனங்களையும் அரசு சார் நிறுவனஙகளையும் அரசூழியர் மற்றும் தொழிலாளர் சங்கங்களையும் அலங்‌கார வளைவுகள் வைக்குமாறு அரசு அதிகாரிகளைக் கொண்டு மிரட்டுவது. அரசின் கடமைகளை நிறைவேற்றியதற்குக் கூட சங்கங்களைக் கட்டாயப்படுத்தி நன்றி அறிவிப்புகளைத் தாளிகை விளம்பரங்களாகவும் சுவரொட்டிகளால் பொதுமக்களின் சுவர்களையும் ஊர்ப்பெயர்களையும் வழிகளையும் காட்டும் அறிவிப்புப் பலகைகளையும் நிரப்புவது, தலைவர்களை வரவேற்று உள்ளூர் தலைவர்கள் சுவரொட்டிக்ள ஒட்டும் நிலையை உருவாக்கி அதைக் கடந்து கட்சிகளின் தனியாட்களின் பெயர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது. கட்சியினரின் இல்லங்களில் நடைபெறும் திருமணம், பூப்பெய்தல். சாவு போன்ற நிகழ்ச்சிக்கு வருகை தரும் கட்சித் தலைவர்களை வரவேற்பதற்குக் கூட ஊரிலுள்ள சுவர்களை சுவரொட்டிகளாலும் சாலைகளைக் கொடித் தோரணங்களாலும் வரவேற்பு வளைவுகளாலும் சாலை ஒரங்களைத் தட்டிகளாலும் நிறைத்து வழிகாட்டி இப்போது பொதுமக்களும் தங்கள் வீட்டு நிகழ்ச்‌‌‌சிகளுக்கு எண்ணற்ற சுவரொட்டி விளம்பரங்களைச் செய்யும் நிலையை ஏற்படுத்தி மக்கள் படிப்பதற்காக புத்தகங்களுக்குப் பயன்பட வேண்டிய தாளை வீண் ஆடம்பரங்களுக்குப் பயன்படுத்தித் தாளின் விலையை உயர்த்தவும் தாள் செய்யத் தேவைப்படும் மரங்களின் அழிவுக்கும் அதனால் மழைப் பொழிவு நிலை குலைந்து போவதற்கும் காரணமாயிருப்பது, நலத்‌திட்டங்கள், இலவயங்கள், மானளியங்கள் முன்னுரிமைக் கடன்கள் பெயரில் அரசுப் பணத்தை விடுவித்துக் கட்சியினரும் ஆட்சியாளரும் பங்கு போட வைத்து ஆட்சியாளரைக் கண்காணிக்கும் உரிமையுடையவராய் மக்கள் இருக்க வேண்டிய மக்களாட்சியில் அவர்களை ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்களை எற்றுக் கொள்ளும் மனநிலைக்கு ஆளாக்கியது, இலவய வீட்டுமனை, வீடுகள் தருகிறோம் என்ற பெயரில் மக்களின் வாழ்வுக்கு அடித்தளமான ‌பாசன நீர், நிலத்தடி நீர் ஆகியவற்றைந் தேக்கி வைக்கவென்று உலகிலேயே முதன் முதல் தமிழர்கள் கண்டு பிடித்த அமைப்பான குளங்களை நிரப்பி மனைகளாக மாற்றியது என்று பட்டிய‌‌லிட்டால் எல்லையின்றி நீண்டுபோகும் இன்றைய இந்தியாவின தீங்குகளில் மிகப்பெரும்பாலானவற்றுக்கு முன்னோடியான ''பெருமை'' தமிழகத்தைச் சேரும். அவற்றின் ஒரு முதன்மையான தொடக்க விழாவாக அமைந்தது ஆச்சாரியார் முதலமைச்சராகப் பதவி ஏற்றதும் அதன் பின்னணியில் நடைபெற்ற அரசியல் தில்லுமுல்லுகளும். ஒரு மாநிலத்தில் அல்லது நடுவணரசில் மக்களின் நேரடி வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களைப் புறக்கணித்துவிட்டுத் தேர்தலில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரைச் சட்டமன்ற அல்லது பாராளுமன்றக் கட்சித் தலைவராக்கி முதலமைச்சர் அல்லது தலைமையமைச்கராக்கவும் அவர் அதே போன்று பிறரை அமைச்சர்களாக்கவும் வகை செய்து வாக்‌காளர் பட்டியலில் தன் பெயர் இடம் பெறுவதற்காக. பொறுப்பற்ற அதி‌காரிகளிடம் கெஞ்சியும் மல்லுக்கட்டியும் பின்னர் வேலை வினை கெட்டு வாக்குச் சாவடியில் காத்து நின்றும் வாக்களிக்கும் குடிமக்களையும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவோரையும் எந்த மனச்சான்று உறுத்தலுமின்றி இழிவு படுத்துவதாக அமைந்துள்ள அரசியலமைப்பின் இழிந்த இந்த முறையின் தொடக்க விழாவாகவும் ஆச்சாரியாரின் பதவியேற்பு அமைந்தது. காமராசரைப் பெருமைப்படுத்துகிறேபொம் என்ற எண்ணத்தில் அன்று ஆச்சரரியரரை முதலமைச்சராக்கியது தமிழ் நாடு பேரவைக் குழுவின் தலைவராயிருந்த காமராசரின் அருஞ்செயல் என்று கூறுகின்றனர். அரசர்களை உருவாக்குபவர் (கிங் மேக்கர்) என்ற பெருமையைக் காமராசருக்குப் பெற்றுத் தருதல் என்ற நோக்கில் இவர்கள் வலியுறுத்தும் இந்த உண்மை மூலம் இந்திய அரசியலில் மக்களாட்சிக் கோட்பாடு இழிவுபட்டு யாரும் எதிர்பார்த்திராத விரைவில் சீரழிந்து போனதில காமராசருக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு என்று பறைசாற்றுகின்றனர்.

ஆச்சாரியாரின் ஆட்சிக் காலத்தில் அவர் பல்வேறு நன்மைகள் செய்தாலும் அவரது பார்ப்பனியச் சாதிவெறி அவற்றின் வழி அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய நற்பெயரை அழித்துவிட்டது, அவர் அறிவித்த குலக் கல்வித் திட்டம் அவரது அர‌‌‌சியல் வாழ்வுக்கு அறைகூவலாக அமைந்தது. இத்திட்டத்தைப் பெரியாரும் தி.மு.க.வும் முனைப்பாக எதிர்த்தனர். ஏழை. அடித்தள, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சாதி மக்கள் கல்வி பெற ஆங்கிலர் காலத்தில் தொடங்கப்பட்ட பொதுக்கல்வி என்ற நடைமுறையின் அடிப்படையையே தகர்க்கும் இந்தத் திட்டத்தை ஏற்க முடியாத மனநிலை பாதி, ஆச்சாரியார் மீதுள்ள பொதுவான வெறுப்பு பாதி என்ற நிலையில் தமிழ்நாடு பேரவைக் குழுவின் பெருந் தலைகளும் மக்களுடன் இணைந்து கொண்டனர். ம.பொ.சி. மட்டும் ஆச்சாரியாருக்குத் துணை நின்றார். ஆனால் அவரது முயற்சி எடுபடவில்லை. மக்களிடம் "வாங்கிக் கட்டிக் கொண்டது" தான் பலன். இறுதியில் கொல்லைப்புறமாக நுழைந்த ஆச்சாரியார் கொல்லைப்புறமாகவே வெளியேறினார். அடுத்து யாரை முதலமைச்சராக்கலாம் என்று பார்த்த போது சி.சுப்பிரமணியம், பத்தவச்சலம் ஆகியோர் கையைத் தூக்கினர். ஆச்சாரியரின் நோக்கங்களைத் தான் இவர்கள் நிறைவேற்றப் போகிறார்கள் என்பதோடு அவரது செல்வாக்கும் மறைமுகமாக நீடிக்கும் என்பதை உணர்ந்த த.நா.பேரவைப் பெருந்தலைகள் ''பச்சைத் தமிழர்'' காமராசர் என்ற பெரியாரின் முழக்கத்தின் பின்னால் மறைந்து நின்றனர். காமராசர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாறு தமிழகத்தில் நிலவிய ‌பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் முரண்பாடு, ஆச்சரரியார் பேரவைக் கட்சியின் பிற பெருந்தலைகள் ஆகியோருக்கிடையிலான முரண்பாடு ஆகிய குமுகியல் - அரசியல் சூழல்களே காமராசரின் முதலமைச்சரென்னும் அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் காரணமானது. முதல்வர் பதவிக்கு வேண்டிய தகுதி காமராசருக்கு இருந்தது என்று பிற்‌பாடு வரலாற்றால் மெய்ப்பிக்கப்பட்டாலும் அவர் படிப்பறிவில்லாதவர், ஆங்கிலம் அறியாதவர்; சி.சுப்ரமணியம் அனைத்துத் தகுதிகளும் வாய்ந்தவர் என்ற கருத்து பலரிடமும் இருந்தது. அவர் தேர்வு செய்யப்பட்டதை முமுமனதுடன் ஏற்றுக் கொண்டும் அவரது பதவியேற்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையான குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் அவருக்காகத் தேர்தல் பணியாற்றியும் துணை நின்ற தி.மு.க.வினர் கூடப் பிற்காலத்தில் அவர் ஆங்கிலம் அ‌‌றியாதவரென்று எத்தனையோ வகைளில் கேலி பேசியுள்ளனர். ஆனால் கோப்புகளில் ஆங்கிலத்தில் எழுதப்படும் வரைவுகளிலிருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டும் அளவுக்கு அவருக்கு ஆங்கில அறிவு தன் பல்லாண்டு பொதுவாழ்விலிருந்து கிட்டியிருந்தது என்பது பலரும் குறிப்பிடும் உண்மை. ஆனால் அன்று அவரைப் பற்றித் தமிழக்தில் பொதுவாக நிலவிய பொதுக் கருத்தையும் மீறி அவர் அந்த நிலையை எய்தியதில் தமிழகத்தின் அரசியல் - குமுகியல் சூழலுக்கு ஒரு முதன்மையான பங்கு உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது.

மற்றொன்று விரித்தல் என்ற குற்றமாயினும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் பற்றி அறியாமையால் பலரும் அறிந்தே சிலரும் வைக்கும் ஒரு கருத்தை இங்கு அலச வேண்டியுள்ளது. நம் கல்வி முறை தொழிற்பயிற்சிக்கு உரிய இடமளிக்கவில்லை என்ற குற்றக்சாட்டு எழும் போது ஆச்சாரியார் கொண்டு வந்த கல்வித் திட்டம் தொழிற் பயிற்சியளிப்பதை நோக்கமாகக் கொண்டது தான்; அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள் தாம் அதைத் திசைதிருப்பி விட்டனர் என்பது அவர்கள் வைக்கும் கருத்து. ஆனால் இது ஆராமையாலும் அறியாமையாலும் ஒரு சிலரால் குறுகிய மனப்பான்மையாலும் கூறப்படும் கருத்து. தொழிற்பயிற்சி என்பது பொதுக் கல்வியைப் போல் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிப்பதாய் இருக்க வேண்டும். அரை நாள் படிப்பும் அரை நாள் தந்தை செய்யும் தொழிலும் என்பது மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகி அவர்கள் அழிக்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் சாதியின் தொழிலடிப்படையை உறுதிப்படுத்துவதாக அமையும். அது மட்டுமல்ல, உடலுழைப்புத் தொழில் செய்வோரின் பிள்ளைகள் ஒருவேளை பள்ளிப் பருவத்தில் தந்தையின் தொழிலில் ஈடுபட முடியும். அலுவலர், ஆசிரியர், அதிகாரி, அரசியல்வாணர், ஆய்வாளர். எழுத்தாளர் போன்றோரின பளிள்ளைகள் என்ன செய்வர்? பள்ளிகளில் தொழிற்பயிற்சியளிப்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் உடனடியாகக் கிடையாது. எனவே இடைக்‌கால ஏற்பாடாக இது திட்டமிடப்பட்டது என்று வாதிடலாம். அப்படி ஒரு நோக்கம் உண்மையிலேயே இருந்திருக்குமாயின் அத்தகைய அடிப்டைக் கட்டமைப்புகளைப் படிப்படியாக உருவாக்க முயற்சிகளை எடுத்துக் கொண்டு அதுவரை நடைமுறையிலிருந்த அமைப்பைத் தொடர்ந்திருக்கலாம். திட்டம் செயல்படுத்தத் தொடங்கி நாள்தோறும் பிற்பகலில் பள்ளியை அடைத்து வைத்து ஆசரியர்களுக்கு வீணாகச் சம்பளம் கொடுக்கும் முட்டாள்தனத்தில் மிகப் பெரிய அறிவாளி என்று பரப்பப்படும் ஆச்சாரியார் ஈடுபட்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் தொழிற்பயிற்சி இணைந்த பள்ளிகள் என்று ஒன்று கூட உருவாக்கப்படவில்லை. காந்தியாரின் எண்ணத்தின் படி வடிவமைக்கப்பட்ட ஆதாரப் பயிற்சிப் பள்ளிகள் யார் காலத்தில் தொடங்கப்பட்டனவோ தெரியவல்லை. ஆனால் அவற்றை ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்துடன் ஒப்பிட்டோ, மாற்றாகவோ கூறுவதும் சரியல்ல. ஒவ்வொரு மாணவனும் தன் அன்றாடத் தேவைகளான சமைத்தல், துவைத்தல், சுற்றுச்சூழலையும் இல்லத்தையும் குடி‌‌‌‌‌‌யிருப்பையும் துப்புரவாகவும் தூய்மையாகவும் வைத்திருத்தல் என்று எதற்கும் அடுத்தவர் கையை நம்பியிருக்க கூடாது என்பது அதன் அணுகல். இதன் அடிப்படை நோக்கம், இழிவானவையாகக் கருதப்படும் சாதி சார்ந்த துவைத்தல், கழிவகற்றல், மயிர்வினை போன்றவவை பற்றி குமுகத்தில் நிலவும் கருத்துகளைத் துடைத்‌‌‌‌‌தெ‌‌‌றிவதே.

(தொடரும்)