28.12.15

சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 22

இணைப்பு - 5 தொடர்ச்சி .....3


மணப்பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை செல்லும் போதும் மணம் முடிந்து மணமக்கள் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்லும் போதும் கோயிலில் முன்பு தேங்காய் உடைத்தனர். இப்போது திருமண மண்டபத்துக்கு இரு வீட்டாரும் செல்லும் போதும் திரும்பி மாப்பிள்ளை வீட்டுக்கு மணமக்கள் வரும் போதும் அதற்கென்று தனி மகிழுந்தில் ஒரு குழு அவர்களுக்கு முன் செல்கிறது. முந்திய அச்ச உணர்வு இருந்த இடத்தில் இப்போது கேளிக்கை உணர்வு உள்ளது.

பெருங்குளத்து ஆலமூடோ(மூடு = மரத்தின் அடிப்பாகம்) முற்றிலும் மாறிவிட்டது. அங்கு ஒரு தேநீர்க் கடை இரவுவரை செயல்படுகிறது. முன்பு செத்தவர்களைப் புதைப்பதற்குக் கூட ஆளில்லாமல் அள்ளிச் சென்ற கக்கல் கழிச்சல், அம்மை நோய்கள் இல்லையாகையால் முன்பு போல் அஞ்சி நடுங்கித் தெய்வங்களை வழிபடுவதில்லை. கொடைகள் எனப்படும் இவ் விழாக்கள் ஏழை எளியவர் எனப் பார்க்கமல் அனைவரிடமும் ஆயிரக்கணக்கில் ஆண்டுக்குக் குறைந்தது இரு முறைகள் ‘வரி’ என்று தண்டி அந்தப் பணத்தை வைத்து அனைத்து வகையிலும் களியாட்டம் போடும் இளவட்டங்களின் கொண்டாட்டங்களாகவே நடைபெறுகின்றன.

ஊருக்கு இரண்டுக்குக் குறையாமல் கோழி இறைச்சிக் கடைகள் வந்துவிட்ட நிலையில் கோயில்களில் உயிர்ப் பலி தடை செய்யப்பட்டதில் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ‘இந்து’ சமய அமைப்புகள் இளசுகளின் இந்தக் கூத்தாட்டத்தை ஊக்குவித்து அக் கோயில்களை எடுத்துக்கட்டி குடமுழுக்குச் செய்து பார்ப்பனப் பூசாரிகளை நுழைத்து ஆகமக் கோயில்களாக மாற்றிவருகின்றன .

அம்மன் கோயில்களில் முன்பு ஊர்ப் பணப் பண்டு வைத்து தொழில் – வாணிகம் செய்து எளிய மக்கள் வயிறு கழுவ உதவிய காலம் போய் இப்போது அவர்களிடம் ஆண்டுக்கு இரண்டு முறைக்குக் குறையாமல் கொடைக்கு ‘வரி’ என்ற பெயரில் ஈவு, இரக்கமின்றி கந்துவட்டிக்காரர்கள் போல் மடிபறிப்பதால் வேறு போக்கிடமற்ற எளியவர்கள் கிறித்துவத்துக்கு மாறிவருகிறார்கள் என்பதுதான் உண்மை நிலை. ஒருவேளை மதமாற்றிகளின் தரகர்கள் இந்த ‘இந்து’ அமைப்புகளுக்குள் மூளையாகச் செயற்படுகிறார்களோ?

அவ்வாறுதான் எளிய, கள்ளங்கவடற்ற, கடும் உழைப்பாளிகளான அன்றைய திருநெல்வேலிச் சாணார்கள் தங்கள் தலைவர்களான நாடான்களிடமும் மேல் சாதியினரிடமும் பட்ட துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கான ஒரு புகலிடமாகவே கிறித்துவத்தை நாடினார்கள் என்பதுதான் உண்மையேயன்றி கால்டுவெலார் கூறியது போல் அவர்களது தெய்வத்தை விட கிறித்துவத் தெய்வம் உயர்வானது என்று நம்பியதாலல்ல.

சிலை வழிபாட்டினரையும் சிறுதெய்வ வழிபாட்டினரையும் இவ்வாறு ஒப்பிட்டுக் கூறியவர் இந்தியாவில் கிறித்துவம் எதிர்கொள்ளும் உண்மையான சிக்கல் சமயம் சார்ந்ததல்ல, ஒழுக்கம் சார்ந்ததே என்கிறார்(பக்.44).

சாதி மேலாளுமையைத் தக்க வைத்துக்கொள்வதிலும் அந்த ஒடுக்குமுறையிலிருந்து தப்பித்துக்கொள்வதிலும் நம் மக்கள் தங்கள் உளவியலையும் நடத்தைப் பண்பாட்டையும் சிதைத்து வைத்திருப்பதைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

கிறித்துவத்துக்கு மாறிய உள்ளூர் மக்கள் கிறித்துவ வரையறைப்படியான நடத்தைகள், சிந்தனைகளுக்கு வந்து சேரவில்லை என்கிறார். ஐரோப்பாவில் சட்டங்களிலும் குமுக நிறுவனங்களிலும் அறிவியலிலும் இலக்கியங்களிலும் தேசிய நடத்தைகளிலும் கிறித்துவம் ஊடுருவியுள்ளது, அம் மக்களுக்கு ஒழுக்க உணர்வுகளை, தற்கட்டுப்பாட்டுப் பழக்கங்களையும் நேர்மை உணர்வையும் உண்மை, நயன்மை, சிந்தனையிலும் செயலிலும் தன்னுரிமை, வினைப்பாட்டில் மன உறுதி, மூட நம்பிக்கை மீது இழிவுணர்ச்சி, மேம்பாடு, முன்னேற்றம் ஆகியவற்றின் மீது அடக்கவியலா ஆர்வம் அல்லது வெறி ஆகியவற்றை அது தந்துள்ளது என்கிறார்.

இதற்கு மாறாக இந்தியாவில் கிறித்துவத்துக்கு மாறியவர்களிடம் அந்த மாற்றங்களைக் காண முடியவில்லை என்கிறார். மதம் மாறிய பின்னரும் காலங்காலமாக அவர்களைப் பின்னிப்பிணைத்திருந்த தீங்குகளும் மடமைகளும் மயக்கங்களும் உறக்கங்களும் கலையவில்லை என்கிறார். முன்னோர்களின் தவறுகள் அவர்களையும் தொடர்கின்றன என்றவர் “முன் பிறவிகளில் ஈட்டப்பட்ட தகுதி அல்லது தகுதியின்மை இப் பிறவியின் விதியைத் தீர்மானிக்கிறது எனும் ‘இந்து’க் கோட்பாடு, நம் பண்புகளும் நிலைமைகளும் நாம் நம்மோடு இந்த உலகுக்குள் கொண்டுவரும் தூண்டுதல்கள், மனப்போக்குகள், வாழ்த்துகள் அல்லது தீர்ப்புகளால் பெருமளவில் தீர்மானிக்கப்படுகின்றன என்ற முகாமையான உண்மையின் தவறான புரிதலாகும். நாம் இந்த உலகின், தனித்தனியான சார்பிலா ஒன்றிகள் அல்ல, ஒவ்வொரு மனிதனும் தனக்கு முன்பிருந்தோரோடும் தொடர்ந்து வர இருப்போரோடும் இன்பத்திஇலும் துன்பத்திலும் ஒன்றிணைந்த ஒரு நீண்ட தொடரியின் கண்ணியாகிறோம்” என்கிறார். தொடர்ந்து வரும் தலைமுறைகளில் படிப்படியாக அவர்களுடைய இன்றைய மதமற்ற நிலையிலிருந்து மேம்படுவர் என்றும் கூறுகிறார்(பக்.45-46).

இந்த இடத்தில் மிக முகாமையான ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறார். அதாவது, நினைவுக்கெட்டாத காலந்தொட்டு நெல்லை மண்டலத்தின் அந்தப் பகுதி ஓர் ஒதுங்கிய, நோய் விளைவிக்கின்ற, அடர்த்தியான மரஞ்செடிகொடிகளுடன் காட்டுவிலங்குகளுடன் சதுப்பு நிலங்களும் முறைக் காய்ச்சலும்(மலேரியாவும்) நிறைந்த காடுகளைக் கொண்டது என்றும் அந்த மரங்களை வெட்டி தேங்கிய நீரை வடிக்கும் பணி நடைபெறுவதாகவும் அப் பணி முனைப்புடன் தொடர்ந்தால் அவ் விடத்தின் ஒழுக்கச் சூழல் மாறி அது “மகிழ்வு, நலன் ஆகியவற்றின் ஒலி மட்டுமே கேட்கும் கடவுளின் தோட்டமாக” மாறும் என்கிறார்.

இந்தக் கூற்று நமக்கு ஓர் உண்மையை உச்சியிலடித்துக் கூறுகிறது. இன்று தேரிக்காடும்(அந்த மண்ணைக் கூடக் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்து அழித்துவிட்டார்கள் கயவர்கள், ஆட்சியாளர்களின் கூட்டணியுடன்) கொஞ்சம் பனங்காடும் மரங்களும் மிஞ்சியிருக்கும் அந்த நிலப் பரப்பில் காயல் நீர் தேங்கி சதுப்பு நிலங்களை உருவாக்கி அரிய நிலைத்திணைகளும் விலங்குகளும் கலந்து வாழும் பல்லுயிர் வாழிடமாக இருந்திருக்கிறது. அதனை ஆங்கில வாணிகக் குழுமத்தினர் அழித்து பருத்திக் காடாக மாற்றியுள்ளனர். அதில் பருத்தி விளைத்து சென்னைத் துறைமுகத்துக்கு விடுத்து ஏற்றுமதி செய்து பணக்காரர்களாகியுள்ளனர் பிற்காலத்தில் ‘நாடார்கள்’ ஆகிய சாணார்கள். இந்தப் பின்னணியில்தான் அடுத்த நூற்றாண்டில் வ.உ.சிதம்பரனார் கப்பல் குழுமம் தொடங்கி நடத்திய போது அவரை எதிரியாகப் பார்த்துள்ளனர் அவர்கள். பின்னர் காந்தியின் பேரவைக் கட்சியில் சேர்ந்து அந்தத் தொழிலைப் பறிகொடுத்தனர் . ஐரோப்பியர், அதாவது கால்டுவெலார் பெருமையோடு பேசும் ‘ஒழுக்கமும் பண்பும் நிறைந்த’ கிறித்துவர்கள் இவ்வாறு அவர்கள் சென்றவிடமெலாம் தங்கள் ஆலைகளுக்கு மூலப்பொருள் வேண்டுமென்பதற்காகக் காடுகளை அழித்து புவியின் இயற்கைச் சமநிலையைத் தொடர்ந்து குலைத்துவந்ததால் இன்று உலகின் தட்பவெப்ப நிலை மனித இனத்தையே காவுகொள்ள வாயைப் பிளந்துகொண்டிருக்கிறது. அதனாலேயே அவர்கள் தொடங்கிவைத்த அப் பகுதி பருத்தி வேளாண்மை போதிய மழை இல்லாமல் அழிந்துபோயிருக்கிறது.

தொடரும் கால்டுவெலார் மதம் மாறிய சாணார்கள் கிறித்துவர்களுக்கு உரிய முழுமையான பண்பாட்டு – ஒழுக்க வரையறைக்குள் வரவில்லையாயினும் சிறுதெய்வ வழிபாட்டினரான, அவர்கள் மொழியில் ‘மதமற்றவர்களான’ சாணார்களையும் அவர்களை ஒத்த தாழ்ந்த சாதியினரை விடவும் மேம்பட்டிருக்கிறார்கள் என்கிறார். அத்துடன் அவர்களது நடத்தைகளைக் கண்காணித்து சரியான நடத்தைகளையும் ஒழுக்கங்களையும் கடைப்பிடிக்கப் பயிற்சியளிக்கப்படுகிறது என்கிறார். எதிரிகளின்(பேய் வழிபாட்டினர்) இயல்புகளையும் அவர்களது வாய்ப்பு வளங்களையும் மதிப்பிட்டால்தான் அவர்களை வெல்வதற்கான வாய்ப்புகளை மதிப்பிட முடியும் என்று கூறி அவர்களுடைய பருப்பொருள் நாகரிகம், உளவியல் இயல்புகளின் தனித்தன்மைகள் ஆகியவற்றை விளக்க முற்படுகிறார்(பக்.48).

“1.ஒரு மக்களின் ஒழுக்க நிலைமை கூடக்குறைய அவர்களது வாழ்வியல் சூழல்களால் நெறிப்படுத்தப்படுகிறது, ஒரு குழுவாக சாணார்கள் ஏழ்மை அவர்களைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அவ்வளவு ஆழமாக உள்ளது.”

அவர்கள் வாழ்ந்த வரண்ட, மணற்பாங்கான, வளமற்ற நிலம் அவர்களது பருப்பொருள் நாகரிக மேம்பாட்டுக்கு உகந்ததல்ல. மழை ஆண்டுக்கு 30 விரலங்களே(75செ.மீ.). பனை வேளாண்மைக்குப் பொருத்தமான மண்ணாயினும் அதிலிருந்து கிடைக்கும் ஆதாயம் மிகக் குறைவு. அதைக் கொண்டு அவர்கள் தங்களைக் குமுகத் தரத்தில் உயர்த்திக்கொள்ள முடியாது. பெரும்பாலோர் சொந்தமாக நிலம் வைத்திருந்தாலும் நிலமின்றி வாரத்துக்குப் பனை ஏறுவோரோடு சேர்ந்து இவர்களும் நெல் வேளாண் பகுதிகளில் வாழும் பள்ளர்கள் பறையர்களைப் போன்று கொடும் வறுமையின் பிடியிலேயே உள்ளனர். நாடான்கள் பெரும்பரப்பு நிலங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ளதோடு பிற சாணார்களின் நிலங்களுக்கு வரியும் பெறுவதால் வசதியாக வாழ்கிறார்கள். சாதியின் கீழடுக்குகளிலிருந்து வாணிகத்தினுள் நுழைந்தோர் நாடான்களைப் போன்ற வாழ்க்கைத் தரத்திலுள்ளனர். ஆனால் இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. சாணார்கள் பட்டினி கிடக்கவில்லையாயினும் அவர்கள் தங்கள் நிலங்களில் வேளாண்மையை மேம்படுத்தவோ வேறு வகையில் தங்கள் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளவோ பிள்ளைகளைப் படிக்க வைக்கவோ நினைத்தாலும் அதற்கு வேண்டிய மூலதனத்தைத் திரட்டுவதற்கு வழியில்லை. இவர்களோடு சேர்த்துக் கூறியிருக்கும் பள்ளர் பறையர்கள் மற்றும் பிற தாழ்ந்த சாதிகளின் நிலையில்தான் இவர்கள் இருக்கிறார்கள் என்கிறார்.

அவர் சொல்பவற்றில் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெளியான நூல் கூறும் நிலையிலிருந்து பெரும் மாறுபாடில்லாத நிலையில் பனையேறிகளை 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் குமரி மாவட்டத்தில் நானே கண்டுள்ளேன். அந்தக் காலகட்டத்தில் மதிய உணவுடன் கூடிய கட்டாயக் கல்வித் திட்டத்துடன் புதிய அணையால் கணிசமான புன்செய் நிலங்கள் நன்செய் நிலங்களாகியதும் புதிய கால்வாய்களை அடுத்துள்ள நிலங்கள் தென்னந்தோப்புகளானதும் இணைந்து செயல்படத் தொடங்கியிருந்தது. இருந்தாலும் நகரத்துப் பள்ளிகளில், குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பெரும்பாலோராக அங்கு பணியாற்றிய மேற்சாதி ஆசிரியர்களால் அப்போது நாடார் என்ற சாதி அடையாளத்துடன் நுழைந்த மாணவர்கள் இழிவாகவும் ஏளனமாகவும் பகையுணர்வுடனும் பொறாமையுடனுமே நடத்தப்பட்டனர்.

ஏழ்மை அவர்களிடம் அறிவுக்கூர்மை, பெருமித உணர்வு, மேம்பாட்டு நாட்டம், நிலையான மனப்பாங்கு என்ற எதையுமே உருவாக்காமல் விதிவிட்ட வழி என்ற உணர்வுடையவர்களாக ஆக்கிவிட்டது. சாதியினரில் சிலர் ஏழ்மையிலிருந்து எழுந்துவிட்டாலும் அவர்களிடமும் பெரும்பான்மையினரின் மனப்பான்மை காணக்கிடக்கிறது. சாணார்கள் கிறித்துவத்தைத் தழுவிக் கொள்வதிலும் கிறித்துவக் கல்வியை அவர்களிடையில் பரப்புவதிலும் ஒழுக்கங்களை மேம்படுத்துவதிலும் குமுகியல் முன்னேற்றத்திலும் இறுதியில் தங்கள் சொந்த சமய நிறுவனங்களைப் பேணுவதிலும் எதிர்ப்படும் இடையூறுகளை மதிப்பிடுவதற்கு இவை அனைத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். கிறித்துவத்தைப் பெயரளவில் ஏற்றுக்கொள்வதற்கு அவர்களின் ஏழ்மை ஒரு தடையாக இருக்குமென்று கருதுவதற்கில்லை, ஏனென்றால் உயர்சாதியினரை விட இன, வாழ்வியல் பெருமை உணர்வுகளால் அவர்கள் குறைந்த அளவே பாதிக்கப்பட்டுள்ளனர், பிராமணர்களாலும், தங்கள் தேவைகளுக்குப் பொருந்தாத அளவுக்கு ஏழைகள் என்பதால் சூத்திரப் பூசகர்களாலும் கூடப் புறக்கணிக்கப்படுகிறார்கள். எனவே கிறித்துவத்தை ஏற்றுக்கொள்வதற்குச் சார்பானதாகவே அவர்களது நிலையைக் கொள்ள வேண்டும். ஆனால் கிறித்துவம் கொண்டுவரவுள்ள குமுகியல், பொருளியல் நன்மைகளுக்கும் பருப்பொருள், உளவியல் நாகரிக மேம்பாடுகளுக்கும் அது எதிரானது என்பது விளங்கும். இருந்த போதிலும் சாணார்கள் முழுமனதுடன் கிறித்துவத்தைத் தழுவி அதனை வெளிப்படையாக உறுதியுடன் கடைப்பிடிக்கிற இடங்களிலிலெல்லாம் விடையூழியர்களிடமிருந்து பெறும் பணப் பலன்களாலல்ல, உழைப்பு நோக்கிய நிலையான முன்னேற்றம், மரபுகளின் முற்றாளுமையிலிருந்து விடுபடல், சிக்கனம், முன்னோக்கு போன்ற பழக்கங்களைப் பெறுதல் ஆகியவற்றால் சாணார்களின் உலகியல் சூழல்கள் தெளிவாக மேம்பட்டுள்ளன என்று கூறுகிறார்(பக்.49).

“2.சாணார்களின் நடைமுறை வாழ்க்கையில் வழக்கிடும் தன்மையை உருவாக்கி அவர்களது நிலைக்குக் கேடு செய்யும் சூழ்நிலைகள் உள்ளன”

இங்கு ஒரு மிக முகாமையான, நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தமிழக நிலை பற்றி தன்னுடைய உன்னிப்பை கால்டுவெலார் கூறுகிறார்.

“திருநெல்வேலிக்கு வரும் அயலவர்களின் கவனத்தை ஈர்ப்பது சாணார்களின் வழக்கிடும் தன்மையாகும், இது அச் சாதியினரின் மிகச் சிறப்பான இயல்புக் கூறாகக் கருதப்படுகிறது. நீங்கள் சந்திக்கும் ஏறக்குறைய அனைவரும் நிலவுடைமையாளர்களாக, அவர்களது உரிமைகள் குறித்து நயமன்ற வழக்குகள் அல்லது தனிப்பட்ட வாதாட்டங்களில் சிக்கியிருப்பதைக் காணலாம். இந்த நயமன்ற வழக்குகள் அல்லது பூசல்களின் முன்னேற்றமே மக்களின் இயல்பான உரையாடல்களிலும் வம்பளப்புகளிலும் இடம்பெறுகின்றன; குறிப்பிடத்தக்க ஒவ்வோர் ஊரிலும் முதியவர்களின் பெரும்பாலான நேரம் இவ் வழக்குகளை பேசித் தீர்க்கும் முயற்சிகளிலேயே செலவாகின்றன. இருந்தாலும் சாணார்களின் வழக்கிடும் இந்தத் தன்மை தடுக்கத்தக்கதும் பெருமளவில் மாற்றத்தக்கதுமே. இவ் வழக்கத்தால் வரும் ஒழுக்கக் கேடுகள் ஒழிக்க முடியாத எந்த இயற்கைப் போக்கும் அல்ல, சூழ்நிலைகளின் விளைவுதான் என்பது என் உறுதியான நிலைப்பாடு.

“சராசரி நிகழ்வுகளில் பிற வகுப்பு இந்துக்களை விட உரிமைகளுக்கான பிடிவாதமோ எல்லை மீறல்களைப் பற்றிய பொறாமையோ அல்லது சண்டை பிடிப்பவர்களாகவோ சாணார்கள் தோன்றவில்லை. தங்கள் நிலங்களைப் பற்றிய சச்சரவுகளில்தான் வழக்கிடுவோராக அவர்களைக் குற்றங்கூற முடியும், கல்வியறிவில்லாத ஒரு மக்களிடையில் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் செயற்பாட்டைத்தான் குற்றஞ்சொல்ல வேண்டும் என்பது என் உறுதியான முடிவு.

“இந்தியாவின் பிற பகுதிகளில் குமுகத் தரத்தில் சாணார்களுக்கு நிகரான சாதி, வகுப்பு மக்கள் ஒன்றேல் குத்தகையாளர்களாக அன்றேல் பண்ணைத் தொழிலாளர்களாகவே உள்ளனர். ஆனால் ஒரு வகுப்பாக ஏழை, படிப்பறிவில்லாத, கீழ்நிலைப் பண்பாட்டு மட்டத்தில் உள்ளவர்களாயினும் சாணார்கள் சில விதிவிலக்குகள் நீங்கலாக நிலவுடைமையாளர்களாகப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

“நிலங்களின் மூல உடைமையாளர்களின் வழியினரான நாடான்கள் எண்ணிறந்தோர் அவர்கள் தங்கள் சொந்த உடைமையாக நிலங்களின் பெரும்பகுதியை வைத்துள்ளனர், ஆனால் தங்கள் நிலங்களைப் பிறருக்கு விற்பதற்கோ ஒத்திவைப்பதற்கோ எந்தத் தடையும் என்றும் இருந்ததில்லை யாதலால்(ஆனால் வரி தண்டும் உரிமை கைமாற்றத்தக்கதல்ல என்று கருதப்படுகிகிறது), நாடான்களின் குத்தகையாளர்கள் அல்லது பணியாளர்களாக இருந்த உண்மையான பயிரிடுவோர் நாளாவட்டத்தில் தாங்கள் பயிரிடும் நிலத்துக்கும் ஏறும் பனைகளுக்கும் உரிமையாளராயினர். இவ்வாறு ஒவ்வொரு சாணார் குடும்பத்துக்கும் சொந்தமாக வந்த நிலம் துண்டுகளாகவும் இன்னும் சொல்லப்போனால் துணுக்குகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இச் சட்டத்தின்படி தந்தையின் சொத்து, மரபில் வந்ததாயினும் தனிப்பட்டதாயினும் மகன்களுக்கிடையில் சமமாகப் பிரிக்கப்படுகிறது. நிலம் குறிப்பிடத்தக்கதாய் இருந்தால் ஒவ்வொரு மகளும் இரண்டொரு துண்டு நிலத்தைப் பெறுவாள். மூத்த மகன் இளைய மகன்களை விட கூடுதல் பெறுவதில்லையாயினும் தம்பிகள் சிறுவர்களாக இருக்கும் போது சொத்துகளைப் பராமரிப்பவனாகிய மூத்த மகன் கொஞ்சம் கூடுதல் சொத்தைச் சேர்த்துக்கொள்வது ஒன்றும் புதிதல்ல.

“பண்டப் படைப்புத் துறைகளோ உள்ளூர் அல்லது வெளி வாணிகமோ இல்லாததாலும் கைத்தொழில்கள் அனைத்தும் கைவினைச் சாதியினரின் முற்றுரிமையானதாலும் சாணார்களை வேளாண்மையை விட்டு வேறு வாழ்க்கை வகைதுறைகளை நாடத் தூண்டுவது எதுவும் இல்லை.

“ஒவ்வொருவரும் தத்தம் நில வருவாயிலேயே வாழ்க்கையை ஓட்டுகிறார்கள், அந்தச் சொத்திலும் அதன் வருவாயிலும் ஒரு விகிதப் பங்கை மட்டும்தான் தன் மகன்களுக்கு வாழ்க்கைப்பாட்டுக்காக விட்டுச் செல்கிறார்கள். இவ்வாறு சொத்து மேலும் மேலும் அதன் ஏழை உடைமையாளனைக் காப்பாற்றப் போதாமலாகும் வரை பிரிக்கப்படுகிறது, பட்டினியிலிருந்து தப்புவதற்காக கடைசி வழியாக வில்லங்கமில்லாமல் மிச்ச நிலம் ஏதாவது இருந்தால் விற்கிறார்கள் அல்லது அவர்களது உறவினர்களும் இடுக்கண் களையும் நண்பர்களும் கூட்டுச்சேர்ந்து இவ் வாய்ப்பைப் பயன்படுத்தி அச் சொத்தைக் கைப்பற்றிக்கொள்கிறார்கள்.

“சொத்துள்ள வகுப்பு முழுவதும் காலங்களுக்கும் மக்கள் தொகை பெருகுவது நின்றுபோனாலும் வலியவர்கள் எளியவர்களின் சொத்துகளைத் திட்டமிட்டு கைப்பற்றிக்கொள்ள அவர்கள் இடம் பெயர்ந்தது அல்லது கூலி வேலைக்குச் சென்றதும் நடைபெறவில்லையானாலும் துகளாக்கும் இந்த நிகழ்முறையால் என்றைக்கோ மிகக் கொடிய வறுமைக்கும் துயரங்களுக்கும் உள்ளாயிருக்கும்.

“பெரும்பாலான நேர்வுகளில் முதல் உரிமையாளரின் பிள்ளைகள் ஒன்றிணைந்த உழைப்பு என்ற நற்பயனுக்காக மொத்தச் சொத்தையும் பிரிக்காமலே பாதுகாக்கின்றனர், இந்த ஏற்பாடு தொடரும் வரை ஒவ்வொரு பங்காளிக்கும் கிடைப்பது மண்ணில் ஒரு பங்கல்ல, விளைச்சலில் ஒரு பங்குதான். பொதுவாக அதுவரை இல்லையென்றால் பேரப்பிள்ளைகளால் பாகப்பிரிவினை வலியுறுத்தப்படுகிறது. மிக வாய்ப்பான சூழல்களில் ஒவ்வோர் அறுவடையின் போதும் தத்தமக்குரிய பங்கைப் பெறுவதில் அவர்கள் விழிப்பாக இருக்க வேண்டியவர்களாகிறார்கள், வரப்பை நகர்த்துவதும் எதிராளி தான் பழிவாங்க அதையே செய்வதும் அடிக்கடி இடம்பெறும் சண்டைகளும் பொறாமைகளும் ஒட்டுமொத்த நாணயம், நன்னெறிகளின் இழப்பும் ஊர்த் தலைமைகள் நடுத்தீர்ப்பராகவோ ஆட்சியாளர் அமைதியை நிலைநாட்டுவோராகவோ தலையிட வேண்டிய கட்டாயம் நேர்கிறது. தொடர்ந்து வரும் தலைமுறையும் உரிமைகள் பற்றி இருந்துவரும் குழப்பத்தைக் கடுமையாக்குகிறது. விரைவாக சொத்து முரண்படும் நலன்களின் போர்க்களமாகிறது.

“பிரிவுபட்ட குடும்பத்தின் உடைமையாயிருக்கும் சட்டப்படி ‘பிரிக்கப்படாத இந்துச் சொத்து’ பங்கு முதலீட்டாளர்கள் ஒவ்வொருவரும் இயக்குநர்களாகவும் செயலாளர்களாகவும் பொருளாளர்களாகவும் செயற்பட்டு ஒவ்வொரு பங்காளியும் ஆதாயத்தைக் கைப்பற்றவும் தனது சொந்தக் கடப்பாடுகளை பொதுவில் சுமத்தவும் இடைவிடாது பாடுபடும் ஒரு பங்கு முதலீட்டுக் குழுமத்துக்கு ஒப்பானது.

“எந்த நாட்டிலும் எந்த வகுப்பிலும் இது போன்ற ஒரு கூட்டமைப்பு தீங்குகளை உருவாக்குவதாகவே இருக்கும். சிறுதெய்வ வழிபாட்டினரான, அரைகுறை நாகரிகமுள்ள, அது போலவே சட்ட அறிவோ ஒழுக்கக் கட்டுப்பாடோ இல்லாத மக்களிடையில் இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்று சொல்லத் தேவையில்லை. கூட்டுப் பங்காளிகளாயிருப்பதால் வரும் தொல்லைகளையும் சச்சரவுகளையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையில் ஒவ்வொருவரின் சொத்தின் எல்லை வரையறையுடன் பாகப் பிரிவினை பற்றி முடிவெடுக்கிறார்கள். இத்தகைய ஒரு பிரிவினை எளிதில் தீர்மானிக்கப்பட்டாலும் நடைமுறைப்படுவதில்லை, அந்த முயற்சி குடும்பச் சண்டையை வெளிப்படையான போர் ஆக்குகிறது.

“ஒருவர் தன் சொத்துரிமையை விற்றுவிட்டார், இருந்தாலும் எஞ்சியுள்ள சொத்தில் ஒரு பங்கைக் கேட்கிறார். இன்னொருவர் தனி வாணிகத்தாலும் மேம்பட்ட உழைப்பாலும் முன்னோர் சொத்தின் பங்கோடு கூடுதல் நிலங்களை வாங்கிச் சேர்க்கிறார், அச் சொத்துக்களை சம பங்கீட்டுக்கு விட்டுக்கொடுக்கக் கேட்கும் போது ஆத்திரப்படுகிறார். மூன்றாம் புள்ளி ஒருவர் தன் சொத்தை ஒருவருக்கு ஒத்திக்குக் கொடுக்கிறார், இரு கட்சிகளும் முன்வைக்க ஆவணம் எதுவும் இல்லாத நிலையில் ஒத்தி வாங்கியவருடைய மகன் ஒத்தியை விற்பனை என்று ஓங்கியடிக்கிறார். ஒருவர் தன் பங்கை மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கிறார், ஒத்தி வாங்கியவர்கள் எந்த ஒரு தீர்வுக்கும் வழியில்லாமல் தங்களுக்குள் அடித்துக்கொள்கிறார்கள். பங்காளிகளில் இருவர் மற்றவர்களுக்குத் தெரியாமல் சொத்து முழுவதற்கும் ஒரு பொய் விற்பனை ஆவணத்தை உருவாக்குகின்றனர், மற்றவர்கள் அவ் விருவரின் பங்குச் சொத்துகளை அண்டையிலுள்ள ஒரு வலிய புள்ளிக்கு விற்றுத் திருப்பியடிக்கின்றனர். இந்த நிலையில் நயமன்றங்களை விட செலவு குறைவு என்பதாலும் நடுநிலையான ஒரு தீர்வு கிடைக்கும் வகையில் முழு வழக்கின் அனைத்து உண்மைகளையும் எடுத்து வைக்க வாய்ப்புள்ளது என்பதாலும் அவ் வட்டார மக்களின் பொதுத் தேர்வு மூலம் அமர்த்தப்பட்ட ஐவர் கொண்ட பஞ்சாயம் அல்லது ஊர்க்கூட்டத்தில் இந்த வழக்கை வைப்பதற்கு இரு கட்சியினரும் ஒப்புக்கொண்டனர். வழக்கு தொடர்பான பெரும்பாலான ஆவணங்களும் தொலைந்து, அழிக்கப்பட்டு உறுதிப்பாடின்றி வரையப்பட்டவையாயும் அல்லது போலியானவையாகவும் மொத்த விலை, ஒத்தி போன்ற ஆவணங்களில் ஒன்று கூட எந்த நயமன்றத்திலோ பதிவகத்திலோ பதியப்படாமலும் ஊர்ப் பஞ்சாயங்கள் நம்பியிருக்க வேண்டிய அண்டை அயலாரின் சாட்சியங்கள் இந்தக் கட்சி அல்லது எதிர்க் கட்சியோடு தங்களுக்குள்ள உறவின் அடிப்படையில் சார்பாகவோ அல்லது எதிராகவோ இருந்து தீர்ப்பர்களின் முடிவுகள் ஞாயமாக இருப்பது பெரும்பாலும் அரிதாகிறது. பொதுவாக கட்சிக்காரர்களுக்குள் ஓர் இணக்கத்தை ஏற்படுத்த அவர்கள் பாடுபடுகிறார்கள். தாங்கள் கூறுவது உண்மையென்று ஆணையிட(சத்தியம் செய்ய) வைத்தோ திருவுளச்சீட்டாலோ(குலுக்கல் முறையிலோ) இணக்கம் எட்டப்பட்டு ஏற்கப்படும். பின் ஒருவருக்கு நிலமும் இன்னொருவருக்கு அந் நிலத்தில் வளரும் அல்லது நடப்படும் மரங்களும் மூன்றாவது ஒருவருக்கு அங்கிருக்கும் அல்லது கட்டப்படும் வீடுகளும் என்று எதிர்காலத்தில் வழக்குகளை உருவாக்க வாய்ப்புள்ள ஓட்டைகளைக் கொண்ட ஏற்பாடு உருவாகிறது.

“பெரும்பாலும் சாணார்களிடையில் வழக்காடுவோருக்கோ தீர்ப்பர்களுக்கோ எழுதவோ படிக்கவோ தெரியாது. இந்தக் குழுவுக்குச் செயலராகவோ பதிவாளராகவோ இருக்கும் திறனாளியான கயவாளியைப் பொறுத்தே அனைத்தும் அமைகின்றன, இந்த முடிவுகளை பின்னாளில் பார்க்கும் போது முகாமையான சில சொற்கள் ஒரு கட்சியினருக்குச் சார்பாகச் சேர்க்கப்பட்டிருப்பதையோ விடப்பட்டிருப்பதையோ அடிக்கடி காணலாம்.

“சொத்துகள் குறித்து தீர்ப்பர்களின் மன்றத்தில் தீர்த்துவைக்கப்பட்ட இந்த வழக்குகள் அப்போதைக்கு அமைதிப்படுத்தும் ஒரு நடைமுறையே, பல நேர்வுகளில் நாம் எதிர்பார்ப்பது போல் மன நிறைவு தராத ஐயப்பாடுகளுக்குட்பட்ட ஒரு தற்காலிகத் தீர்வே.

“வலுக்குறைந்த கட்சி தனக்கு ஞாயம் கிடைக்கவில்லை என்று குறைகூறும், பின்னால் பணத்திலோ ஆள்கட்டிலோ வலுப்பெறும் போது, அந்தத் தீர்ப்பு சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பதால் அதை ஏற்க மறுத்து தனக்கு உரிமையானவையாகத் தான் கருதுபவற்றை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றி பழி தீர்த்துக்கொள்கிறது. இப்போது பழைய வழக்குகள் மீள்கின்றன, இன்னோர் ஊரிலுள்ள நடுத்தீர்ப்பர் குழுவிடம் முறையிடப்படுகிறது.

“இந் நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தாலும் இந்தச் சொத்துகள் முழுவதும் ஒரு வகை சட்டக் கற்பனை மூலம் இன்னும் உயிரோடிருக்கும் பூட்டன்(பாட்டனின் தந்தை) சொத்தாக அரசின் வருவாய் ஆவணங்களில் பதிவாகியிருக்கின்றன. அப் பூட்டன், தன்னுடைய மூத்த மகனின் பிறங்கடையான ஒருவனால் அடையாளங்காணப்படுகிறான்(தமிழில் மகனுக்கு மகனை ‘பெயரன்’ என்று கூறுகின்றனர்), அவன் நிலவரி செலுத்துவதிலும் ‘தாய்ப் பத்திரம்’ துண்டுத் துகள்களை வைத்துக் காப்பதிலும் பிரிவுபடாத சொத்தைக் காப்பதிலும் தன் உறவினர்களுடைய முகவராகச் செயற்படுகிறான். ஒருவேளை இளமையில் குடும்பத்தின் ஊதாரியாயிருந்த, இப்போது மிகுந்த வறுமையில் வாடும் இந்த ஆள் தன் நீண்ட, கடுக்கனிட்ட காதுகளில் ஒன்று கிழிந்தும் உடல் முழுவதும் சிவப்பும் மஞ்சளுமான காயங்களுடன் காவல் நிலையத்தில் தோன்றும் போது இவ் வழக்கில் புதிய வெளிச்சம் பாயக்கூடும். முந்திய நாள்வரை தான் சில நிலங்களுக்கு உரிமையாளனாக இருந்ததாகவும் (தான் கொண்டுவந்துள்ள அரசு வழங்கிய பட்டயத்தை – பட்டாவை – யும் நிலவரி கச்சாத்துகளை – கைச்சாற்றுகளை - யும் வைத்து அதை மெய்ப்பிக்க முடியும்) இப்போது எதிரிகளின் ஒரு கூட்டம் தன்னை அடித்து உதைத்து தன்னுடைய நிலத்திலிருந்து துரத்தி, காதுகளைக் கழித்து தன் நிலத்தின் விளைச்சல்களை எடுத்துச் சென்றதாகவும் எதிர்காலத்தில் உடைமையாளராகவும் கைப்பற்றில் வைத்திருப்பவராகவும் தனக்கு பாதுகாப்பு வேண்டுமென்று முறையிடுவான். அவனது கூலி சாட்சிகள் அவன் கூறுவதை உறுதி செய்வர். ஊர்க் கணக்குப்பிள்ளையின் நல்லெண்ணத்துடன் அவனுடைய கைச்சாற்றுகளையும் பட்டயத்தையும் அவனது பெயரை மொத்த நிலவரிக்கும் பொறுப்பாளனாகப் பதிவேடுகள் காட்டுவதையும் அவனது கைப்பற்றில் நிலம் இருந்ததற்கான சான்றுகளாக ஏற்றுக்கொள்ளப்படும், முடிவு பெரும்பாலும் காவல் துறை அதிகாரிகள் அவனை அச் சொத்து முழுமைக்கும் உடைமையாளனாக ஒட்டுமொத்த தீர்மானத்தை எடுத்து, அமைதியை நிலைநாட்டுவோர் என்ற அடிப்படையில் ஆத்திரத்திலிருக்கும் பிற பங்காளிகளிடம் அவர்கள் தங்கள் குறைகளை உரிமையியல் நயமன்றத்தின் மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு கூறுவது வழக்கம்.

“இங்கே ஒரு புதிய, இன்னும் திட்டவட்டமான, ஆனால் பொதுவாக கூடுதல் ஞாயமானது என்று சொல்ல முடியாத முடிவுகள் இருக்கலாம், ஆனால் எப்போதுமே உள்ளூர் தீர்ப்பர்களைவிட இழுத்தடிக்கும், செலவு மிகுந்த இன்னும் கூடுதலாக சந்திக்கு வரும் வழக்காடுதல் நடைமுறை தொடங்குகிறது.

“பங்காளிகள் அனைவரும், பொதுவாக சாணார்கள் இருப்பது போல் படிப்பறிவில்லாதவர்களாக, நெறிமுறையற்றவர்களாக, இரப்பாளி நிலையின் விளிம்பில் உள்ளவர்களாக இருக்கையில் தொடர்ந்து நிலங்கள் பிரிக்கப்படும் இந்துச் சட்டத்தால் தவிர்க்க முடியாதபடி சச்சரவுகளும் வழக்காடல்களும் அறுவடையாகத்தான் செய்யும். வழக்காளர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமைதி விரும்பிகளும் நேர்மையானவர்களும் இருக்கும், அடிக்கடி எதிர்பார்க்க முடியாத நேர்வுகளில் கூட அவர்களுக்கு கல்வியோ முன்சிந்தனையோ முற்றிலும் இல்லாத நிலையில் சூழல்கள் அவர்கள் விரும்பாமலே வழக்குகளினுள் இழுத்துச் செல்கின்றன. படிக்கவோ எழுதவோ தெரியாதவர்களாக, அவர்கள் எப்போதும் பதிவுகளுக்குப் பகரம் வாக்குகளைக் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள், ஒருவரை மற்றொருவர் போல் நம்புகிறார்கள், அண்டையிலுள்ள ஒருவர் அது போன்ற வாக்குறுதியளிக்கும் போது பேச்சு வன்மையில் மயங்கி அதை ஏற்பதிலுள்ள இடர்களை அறியாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். மனித மனங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில வேளைகளில் மாறும் என்பதையும் இப்போது நண்பர்களாக இருப்பவர்களின் பகைமையை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டுமென்பதையும் மறந்துவிடுகிறார்கள். ஒரு கொடுக்கல் வாங்கலை அடுத்தவருடைய பிள்ளைகள் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கலாம் என்பதை மனதில் கொண்டு தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்புக்காகவும் வழிகாட்டலுக்காகவும் ஆவணச் சான்றுகள் வைத்திருக்க வேண்டும். ஆனால் இவை படிப்பறிவில்லாத சாணார் வேளாண் மக்களுக்கு மனதில் எட்டாத உயரத்திலுள்ள கருத்துகளாகும். ஒவ்வொருவரும் அண்டையிலுள்ளவர்களின் சொற்களை அவர்களிடமிருந்து ஒரு அடையாளத்தையாவது பெற வேண்டுமென்ற முன்னெச்சரிக்கை உணர்வு கூட இன்றி நம்பும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர், வழக்கேதும் நடைபெறாத நேரங்களில் ஓர் ஆவணத்தின் மதிப்பைப் பற்றிய சிந்தனை சிறிதும் இன்றி தன் தந்தை விட்டுச் சென்ற கைச்சாற்றுகளை கறையான் அரிக்க விடுகிறார்கள். ஒரு கைத்தொழிலோ சிறு வாணிகமோ நடத்துவோர் இத்தகைய நடைமுறைகளை எந்த இடையூறும் இல்லாமல் செய்துவிடக் கூடும். கூட்டு உடைமையாளர்களிடையில் அறிவாற்றலோ முன்னோக்கோ இல்லாமையும் முடிவில்லாத பிரிவினைகளும் உட்பிரிவினைகளும் நிலம் பற்றிய சிக்கலில் குழப்பத்தையும் தீச் செயல்களையும் விளைக்கும். சாணார் போன்ற எளிய, கல்வியறிவற்ற ஒரு வகுப்பினர் எவ்வாறு எங்கும் காணப்படாத வகையில் பொதுவாக நிலவுடைமையாளர் ஆனார்கள் என்பது ஒரு விந்தையாகும். இதுவே வழக்காடும் தன்மை எனும் குறைபாட்டுக்கு அடிப்படையாகிறது. பெரும்பாலோருக்கு தாங்கள் வைத்திருக்கும் நிலங்களுக்குக் தாங்கள்தாம் உண்மையான உரிமையாளர்களா என்பதே தெரியாது. தங்களுக்குப் போட்டியாக வழக்காடிகள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும், தங்கள் தந்தைகளுக்குப் போலவே அவை தங்கள் கைப்பற்றில் இருக்கின்றன என்பதும் அவர்களுக்குத் தெரியும், இந்த அறிவு அவர்களது மனச்சான்றை நிறைவு செய்கிறது.

“என் சொந்த அண்டை அயலில் நிலவுடைமை பற்றிய வழக்கு இல்லாத ஒரு நேர்வைக் கூடக் எனக்குத் தெரியாது என்னுமளவுக்கு அனைத்து உரிமைகளும் குழப்பத்தால் சூழப்பட்டுள்ளன; ஆலயம் கட்டுவதற்கு அல்லது வேறு விடையூழிய நோக்கங்களுக்காக நிலம் வாங்குவதில் உண்மையில் நிலத்தைக் கைப்பற்றில் வைத்திருப்பவன், அவன் யாராயிருந்தாலும் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. சில நேர்வ்வுகளில் கூடுதல் பாதுகாப்பாக, இரு கட்சிகளுக்கு முழு விலையையும் கொடுத்துள்ளேன், எப்போதாவது, என்னுடைய வழமையிலிருந்து விலகி நிலத்தின் உண்மையான உடைமையாளர் என்ற உரிமை யாருக்கு என்று உசாவத் தொடங்கினால், மனிதனின் நினைவுக்கு அப்பாலுள்ள காலத்திலிருந்து தொடரும் சச்சரவுகள், ஏமாற்றுகளின் ஒரு தொடர்ச்சியைக் கண்டுபிடிப்பதுதான் அதன் விளைவாக இருக்கும்.

“இந்த நிலைமைகளுக்கான தீர்வை – நயமான பலனைத் தரும் என்று எதிர்பார்க்க முடியாததாகிய, சம உட்பிரிவு குறித்த இந்துச் சட்டத்தில் ஒரு மாற்றத்தில் அல்லது இன்னும் சிறப்பாக கல்வியை, எல்லாக் கல்வியையும், குறிப்பாக நன்னெறியும் சமயப் பயிற்சியும் குறித்த கல்வியைப் புகட்டுவதன் மூலம் உருவாகும் அறிதிறன், முன்சிந்தனை போன்ற பழக்கங்களை உயர்த்துவதில் காண வேண்டும். பின்னைய இந்தத் தீர்வு இப்போது முனைப்பாகக் கையாளப்படுகிறது, சொலவடையாகிவிட்ட சாணார்களின் வழக்காடும் பண்பு ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகளில் முடிவுக்கு வரும் என்பதில் எனக்கு ஐயமில்லை. இன்னும் மதமற்றவர்களாயிருப்போரிடையில் அனைத்து உரிமைகளும் உறுதியற்றவையாயும் தீர்க்கப்படாடவையாயும் உள்ளன. எதுவுமே எவராலும் எதிர்க்கப்படலாம். பல ஆண்டுகளாக கிறித்துவக் கல்வி நடைமுறையில் இருக்குமிடங்களில் புலப்படும் அளவுக்கு வழக்குகள் குறைந்துள்ளன, நடுத்தீர்ப்புக் குழுக்கள் நயமான கண்ணோட்டங்களையும் கூடுதல் செல்வாக்கையும் பெற்றுள்ளன, அசையாச் சொத்துகளைக் கைமாற்றுவது குறித்து இப்போது செய்துள்ள பல்வேறு ஏற்பாடுகளால் பின்னாள் வழக்குகளுக்கு வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. வாரிசுரிமைச் சட்டம் மாற்றமின்றி அப்படியே தொடர்கிறது, ஆனால் அதிகரித்த அறிவொளி பொது அமைதிக்குக் கேடில்லாத வகையில் அதன் செயற்பாடு மாறியுள்ளது; மதமின்மையிலிருந்து மதமாற்றங்கள் நிகழும் போது வழக்காடல்கள் கிறித்துவக் குமுகத்தினுள் கொண்டுவரப்பட்டாலும் அவற்றைத் தீர்த்துவைக்கும்.

“கடலூரில் ஒரு சீனி ஆலை நிறுவியதன் மூலம் பனஞ்சீனியால் பதனீருக்குக் கிடைக்கும் கூடுதல் விலையாலும் இலங்கையில் காப்பி வேளாண்மையால் ஏழைகளுக்குக் கூலி வேலைவாய்ப்பு வழி திறந்ததால் உள்நாட்டினுள் பாய்ந்த பணமும் மாவட்டம் முழுவதும் விடையூழிய நிலையங்கள் நிறுவப்பட்டதும் எத்தனையோ வளமனைகளும் ஆலயங்களும் எழுப்பப்பட்டதும், தங்களின் வில்லங்கமுற்ற சொத்துகளை மீட்க வைத்துள்ளது ஏழைச் சாணார்களில் ஒரு சிலரையல்ல. ஆனால் இந்த வரவிலிருந்து கிடைக்கும் நன்மைகள் தற்காலிகமானவையே; ஏதாவது ஒரு வகை பண்டப் படைப்புத் தொழில்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் வளமற்ற மணலில் பயிர் செய்வதும் பனையேறுவதும் மட்டும் அனைத்து மக்களின் ஒரே வழியாகவும் தாங்கலாகவும் இருப்பது முடிவுக்கு வர வேண்டும் என்றும் விரும்ப வேண்டும். தங்கள் நிலத்திலிருந்து வரும் வருமானத்தை மட்டுமே அவர்கள் சார்ந்திருக்க வேண்டிய நிலை நீடிக்கும் வரை, வாரிசுரிமைச் சட்டம் இப்படியே தொடரும் வரை வெறும் நன்னெறிகளைப் புகட்டுவதால் மட்டும் சொத்துகளின் உட்பிரிவுகளைப் பயனுள்ள வகையில் கட்டுப்படுத்த முடியாமல் வழக்காடுதலின் ஒரு காரணம் நிலைத்திருக்கும்.

“வழக்காடும் தன்மை ஒரு மக்களிடம் இருப்பது அவர்களது நெறிமுறைகளிலும் சமய வாய்ப்புகளிலும் தீய தாக்கங்களை விளைப்பதை மீண்டுமொரு முறை சுட்டிக்காட்டுவது தேவையற்றது. இது எந்த அளவுக்கு செயற்படுகிறது என்பதைக் கூறினால் போதும்”.

தமிழகத்தில் இது இன்றும் தீர்க்கப்படாத சிக்கல் என்பதால் இந்தத் தலைப்பில் கால்டுவெலார் தந்துள்ள செய்திகளை அப்படியே கொடுத்துள்ளோம்.

தமிழக நிலவுடைமை நிலைமைகளைப் பற்றிய தவறான ஒரு புரிதலிலிருந்து அவர் இதைப் பார்த்திருப்பதாகத் தோன்றுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் அடுக்கில் ஆனால் அதன் உச்சியில் இருப்போராக நடத்தப்பட்ட சாணார்களிடையில் , தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இல்லை என்று அவர் கருதிய நிலவுடைமை இருந்தது அவருக்குப் புதுமையாக இருந்திருக்கிறது. அவர்களுக்கு மேலேயுள்ள சாதிகள் அனைவரிடையிலும் இந்து பிரிக்கப்படாத சொத்து ‘அவிபக்த இந்து குடும்ப’ முறை இருந்ததாக அவர் கற்பனை செய்திருப்பார் போல் தோன்றுகிறது. அதனால்தான் சாணார்களிடையில் பண்பாட்டு – உளவியல் நிலைமைகளாக அவர் கண்டவை தலைமுறைக்குத் தலைமுறை உடைபடும் சொத்துடைமைதான் காரணம் என்று அவர் கருதியிருக்கிறார். அதிலும் குறிப்பாக அவர் குறிப்பிட்டிருப்பதைப் போல ‘ஆலயம் கட்டவும் விடையூழிய நிலையங்கள், வளமனைகள் மற்றும் பணிகளுக்காக’ நிலங்களை வாங்க முற்பட்ட போது இந்த உண்மைகள் அவரது கவனத்துக்கு வந்துள்ளன.

அது போலவே நெல்லையில் கட்டுமானப் பொறியியல், மனைப் பிரிவு, அசையாச் சொத்து வாணிகம் ஆகியவற்றில் கருத்துரைஞராக ஏறக்குறைய 20 ஆண்டுகளாக பணியாற்றிய போது எனக்குக் கிடைத்த பட்டறிவு தலைமுறைக்குத் தலைமுறை உடையும் நிலவுடைமை வழக்கம் எல்லாச் சாதியினரிடையிலும் பொதுவாக இருந்ததைக் காட்டியது. ஆங்கிலர்கள் இங்கு நிலவரி தண்டும் முறையை நடைமுறைப்படுத்த முனைந்த போது ஊர்களுக்குத்தான் எல்லைக் கற்கள் இருந்தனவே யன்றி தனி உடைமைகளுக்கு எல்லைக் கற்கள் இல்லை. ஊர் எல்லைக் கற்களுக்கு எண்ணெய்க் காப்பும் குங்குமமும் சார்த்தி பூசையும் செய்து அவற்றைக் காத்துவந்துள்ளனர். எல்லையப்பன், எல்லையம்மன், எல்லைச் சாமி என்ற தெய்வங்களெல்லாம் இந்த எல்லைக்கல் வழிபாட்டிலிருந்து வளர்ந்தவையே. எல்லம்மன், எல்லப்பன் ஆகிய ஆட்பெயர்களும் இந்த ‘சாமி’யின் அடிப்படையில் சூட்டப்பட்டவையே. இந் நிலையில், குறிப்பிட்டவர் வரப்பு வைத்துள்ள நிலங்களை அல்லது பயிர் செய்தோ மரங்களிலிருந்தோ பயன் எடுக்கும் நிலங்களை ‘அனுபவ பாத்தியதை’ என்று வரையறுத்து அவர்களுக்கு உரிமையாக்கினர் ஆங்கில ஆட்சியாளர்கள். எஞ்சிய நிலங்களைப் பொறுத்தவரை ஊர் மக்களைத் திரட்டி அவர்கள் ஒப்புதலுடன் ஊர் நிலங்களைப் பிரித்து கல் போட்டு ஒவ்வொரு நிலத்துக்கும் எல்லைகளைக் காட்டும் நில வரைபடம் வரைந்து பட்டயம் (பட்டா)வும் வழங்கினர். அது மட்டுமல்லாமல் இந்தத் தீர்வுக்கு அனைவர் பெயர், தந்தை பெயர் விளக்கங்களோடு நன்செய், புன்செய், தரிசு , ஏரி, குளம், வாய்க்கால், சாலை, நடைபாதை புறம்போக்கு, நீர்நிலைகளின் முழுகடை என்ற விளக்கங்களும் நிலத்தின் மண் தன்மை கிடப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான தரம், செலுத்த வேண்டிய வரி ஆகியவை அடங்கிய பட்டியலில் அனைத்து உடைமையாளரும் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்தில் அனைவரிடமும் கையொப்பமும் பெற்றனர். இந்த நடைமுறைக்கு தீர்வு என்று பெயர். நிலவரி தீர்வை என்று குறிப்பிடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் பழைய திருவிதாங்கூர் முறைப்படி கரம் எனக் குறிப்பிடப்படுகிறது. ஊரிலுள்ள வாய்க்கால்கள், ஆறுகள் ஓடினால் அவை, ஏரிகள், குளஙங்ள் போன்ற நீர்வள அமைப்புகளைக் காட்டும் வண்ணப்படத்தையும் ஊரின் படத்தையும் தொடக்கப் பக்கங்களில் கொண்ட தீர்வுப் பதிவேட் டையும்(‘ஏ’ பதிவேடு என்றும் இதைக் குறிப்பிடுவர்) உருவாக்கினர். இப்போது புதிதாக உருவாக்கப்படும் ‘ஏ’ பதிவேடுகளில் இப் படங்கள் இருப்பதில்லை, இருப்பவற்றை மேம்படுத்தவில்லையாயினும் உள்ளவற்றையாவது பேண வேண்டும் என்ற கவலை கூட நமக்கு இல்லை என்பதற்கு இது போன்று எல்லாத் துறைகளிலும் சான்றுகளைக் காணலாம். இதுவன்றி ஒவ்வோராண்டும் ஒவ்வொரு நிலவுடைமையிலும் புறம்போக்கு, தரிசு நிலங்களிலும் நடைபெற்ற வேளாண்மை, அவற்றிற்கான தீர்வை, அதைத் தண்டல் போன்ற செய்திகளைப் பதிவதற்கும் அடங்கல் என்ற பதிவேட்டையும் நிலங்களின் உடைமை மாற்றங்களைப் பதிவதற்கு பட்டயப் புத்தகம் ஒன்றையும் வகுத்திருக்கின்றனர். 10 – 1 அடங்கல் என்று இதைக் குறிப்பிடுவர் .

அது மட்டுமல்ல இந்த தீர்வு முறை செயல்பாட்டுக்கு வராமல் பழைய குழப்பத்திலேயே நீடிக்கும் ஊர்கள் இன்றுகூட தமிழகத்தில் உள்ளன என்பது நான் கண்ட உண்மை. பாளையங்கோட்டை தியாகராச நகருக்குத் தெற்கில் இருக்கும் ஓர் ஊரில் ஒரு புல எண்ணுக்கு ஒரு தலைமுறையில் 3 பங்காளிகள் இருந்தால் மூன்றில் ஒரு பங்கு என்றும் அடுத்த தலைமுறையில் அவர்களில் ஒருவருக்கு 5 மகன்கள் இருந்தால் அவர்களுக்கு மூன்றில் ஒன்றில் ஐந்தில் ஒன்று என்றும் அவர்களில் ஒருவருக்கு 2 பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு மூன்றில் ஒன்றில் ஐந்தில் ஒன்றில் இரண்டில் ஒன்று என்றும் இவ்வாறு பாகப்பத்திரங்கள் பதிந்துள்ளனர். இந்த ஊரில் நீர் வளம் நன்றாக இருந்ததால் வேளாண்மை நடைபெற்றது, ஊரினர் பெரும்பாலும் அங்கேயே வீடுகள் கட்டி வாழ்ந்தனர். ஏறக்குறைய அனைவர் நில உடைமைகளையும் இனம்காணும் நிலை இருந்தது. எனவே நிலங்களை விற்க வேண்டிய தேவை வந்த போது அனைவரும் கூடி நில அளவைத் துறையினரையும் வருவாய்த் துறையினரையும் அணுகி தங்கள் ஊருக்கு முறைப்படியான தீர்வு செய்துகொண்டனர்.

இன்னொரு வருவாய் ஊர். அங்கு எவரும் குடியிருக்கவில்லை. உடைமையாளரில் பெரும்பாலோரும் பாளையங்கோட்டையை ஒட்டி தெற்கிலிருக்கும் இரெட்டியார்பட்டியில் குடியிருந்தனர். நிலம் வேளாண்மையோ வேறுவகைப் பயனோ எதுவுமின்றி வெற்றுத் தரிசாகக் கிடந்தது. மனைப் பிரிவுத் தொழில் செய்பவர் ஒருவர் என்னை அணுகி அவ் வூர் நிலங்களின் பத்திரங்ளை உரியவர்களைக் கண்டுபிடித்து கிடைக்கக் கிடைக்க என்னிடம் தருவதாகவும் அவற்றை இணைத்து அவற்றின் கிடக்கைகளை இனங்கண்டு தருமாறும் கேட்டுக்கொண்டார். பத்து இருபது பத்திரங்கள் பெற்றுத் தந்தார். அவற்றில் அக்கம் பக்கமாக உள்ள நிலங்களுக்குள்ள ஒரேயொரு இணை கூட கிடைக்கவில்லை. பல நூறு பத்திரங்கள் வாங்கி பல நாட்கள் அவற்றை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டால்தான் ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து நிலங்களை அடையாளம் காணும் பணியைத் தொடங்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு தன் பொருளியல் நிலையில் இது முடியாதது என்று கைவிட்டுவிட்டார்.

பாளையங்கோட்டை தூய யோவான் மேனிலைப் பள்ளி விளையாட்டுத் திடலாகவும் அதையடுத்துத் தரிசாகவும் ஒரு நிலப்பரப்பு தூத்துக்குடி சாலையை ஒட்டி கிடந்தது. (அதை ஒட்டிக் கிடந்த குளத்தைக் கைப்பற்றி கண்டவர் கட்டிய வீடுகள்தாம் பின்னர் அண்ணா நகர் ஆகியது. ஒரு சிறு மழை பெய்தாலும் குடியிருப்பு சகதிக் காடாகிவிடும்.) பொதுவாக வேளாண்மைக்கு ஏற்பட்ட நெருக்கடியால் இந்த நிலத்தில் மரபு வழியில் பயிரிட்டவர்கள் அதைத் தரிசாகப் போட்டிருந்தனர். அவர்களில் சிலர் முன்பு அந்த நிலத்தில் பயிரிட்டதால் இனாம் ஒழிப்பின் மூலம் உரிமை பெற்றவர்களின் கால்வழியினர் தாங்கள் என்று ஆவணத்துடன் ஒரு முறை என்னை அணுகினர். திருநெல்வேலித் திருமண்டலத்தை அணுகிய போது அந் நிலம் தங்களுக்கு வழங்கப்பட்டதற்கான ஆவணத்தைக் காட்டியதுடன் உடனடியாக சுற்றுச் சுவர் கட்டி விளையாட்டுத் திடலுக்கு வெளியே கிடந்த நிலத்தில் ஒரு மருத்துவ மனையையும் முதியோர் இல்லத்தையும் தொடங்கிவிட்டனர். இந்த இடம் அங்கிருந்து ஏறத்தாழ 8 கி.மீ. கிழக்கில் குடியிருப்புகளைக் கொண்ட பாளையஞ்செட்டிகுளம் என்னும் வருவாய் ஊரைச் சேர்ந்ததாகும்.

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று ஊர்களும் இனாம் எனப்படும் இறையிலி ஊர்களாக இருந்து பின்னர் வேளாண்வகையாக மாற்றப்பட்டவையாகும்.

ஆங்கிலர் இங்குள்ள நிலங்கள் குறித்து தீர்வு செய்யத் தொடங்கிய போது இங்கு மூன்று வகை நிலவுடைமைகள் இருந்தன.
1.அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த இரயத்துவாரி(வேளாண்வகை),
2.சமீன்தாரி(இடைக்கிழார்) வகை,
3.இனாம்(இறையிலி)
இவற்றில் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த வேளாண் வகை ஊர்களுக்கு மட்டுமே அவர்கள் தீர்வு செய்தனர். இடைக்கிழார் ஊர்களுக்கு இந்திய ‘விடுதலை’க்குப் பின்னர் இடைக்கிழார் ஆட்சி முறை ஒழிக்ப்பட்ட போது தீர்வு செய்யப்பட்டது. ஆனால் இறையிலி முறை ஒழிக்கப்பட்டு பயிரிடுவோர் கைகளுக்கு அது உரிமையாக்கப்பட்ட போது முறைப்படி தீர்வு நடைமுறைகள் முடிக்கப்படாததால்தான் இந்தச் சிக்கல் என்று தோன்றுகிறது. இவ்வாறு இன்னும் முறைப்படி தீர்வு செய்யப்படாத நிலங்களும் ஊர்களும் நிறையவே இருக்க வாய்ப்புள்ளது.

ஆங்கிலர்கள் முதன்முதல் தீர்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது நிலவுடைமையை முடிவு செய்ய சில வரையறைகளை வகுத்தனர். நிலத்தைச் சுற்றி வரப்பு அல்லது வேலி இருத்தல், பயிர்ச் செய்கை அல்லது பயன் எடுத்தல் போன்றவை அவை. இவை தவிர மக்களை ஒரே இடத்தில் திரட்டி அவர்களிடம் உசாவி(விசாரித்து - மூதலித்தல் என்பது குமரி வழக்கு)த் தெரிந்துத் தெரிந்து கொள்ளும் உள்ளூர் உசாவல் என்பதற்கு முகாமையான பங்கு இருந்தது. இன்று அந்த நடைமுறையைப் பயன்படுத்தி தீர்வு நடைமுறை நிறைவுற்ற ஊர்களில் பிறர் சொத்தை வேலியிட்டு வளைத்து அல்லது வரப்பையோ வேலியையோ நகர்த்தி, வெளியூர்களில் இருப்பவர்களின் நிலங்களைக் கைப்பற்றிப் பயன்படுத்தி அல்லது பங்காளி நிலத்துக்கு வரி கட்டித் திருடத் திட்டமிடுவோர்க்கு அன்று ஆங்கிலர் வகுத்தவற்றைக் காலங்கடந்தும் நடைமுறையில் வைத்திருக்கும் நில அளவைத் துறையினரும் வருவாய்த் துறையினரும் உதவி பணம் பார்க்கிறார்கள்.

மறு அளவை என்பதும் இந்தக் கொள்ளைக்காகவே நடைபெறுகிறது. 1960களில் குமரி மாவட்டத்தில் மறு அளவையின் போது நடைபெற்ற குளறுபடிகளால் மக்கள் பட்டறிந்த அலைக்கழிப்புகள் சொல்லி மாளாது. ஆனால் நிகழ்ந்த பித்தலாட்டங்களுக்கு உண்மையான தீர்வுகள் பாதிக்கப்பட்டோருக்கு இறுதி வரை கிடைக்கவில்லை.

நெல்லை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் நகராட்சிகளுடன் சில ஊராட்சிகளையும் இணைத்து திருநெல்வேலி மாநகராட்சி உருவாக்கப்பட்ட பின் 1990களில் புதிய உள்ளூராட்சியின் நிலங்களை மறு அளவை செய்ய ஒரு சிறப்பு அலுவலகம் தொடங்கப்பட்டது. அப்போது நான் நெல்லையில் செயல்படும் சிறைமீண்டார் உதவிச் சங்கத் தில் பொறியியல் கருத்துரைஞராக இருந்தேன். பாளையங்கோட்டை – நாகர்கோயில் சாலையில் சிறைச்சாலைக்குத் தெற்கில், 5 ஏக்கர்கள் என்று நினைவு, நிலமும் அதில் மண்டப அமைப்பில் ஒரு கட்டடமும் உள்ளன. அந் நிலத்தில்தான் ஈழ ஏதிலிகளின் முகாம் அமைந்துள்ளது. அந் நிலத்துக்கு ஏக்கருக்கு ஒரு கோடி உரூபாய் மதிப்பிட்டு வட்டாட்சியர் சான்று வழங்கியுள்ளார். ஒரு நாள் நானும் சங்கத்தின் செயலாளரும் அந்தப் பாதையில் செல்லும் போது நில அளவைத் துறை ஊழியர்கள் அளந்துகொண்டிருந்தனர். வண்டியை நிறுத்தச் சொல்லி செயலாளர் அவர்களிடம் அந் நிலம் யாருடையது என்று கேட்டார். கையிலிருந்த ஒரு சுவடியைப் பிரித்துப் பார்த்து ஏதோ ஆப்ராகிம், அப்துல் காதர் என்று இருவர் பெயர்களைக் குறிப்பிட்டனர். உடனே செயலாளர் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். வட்டாட்சியர் அலுவலகத்தில் அப் புல எண்ணுக்குரிய 10 - 1 அடங்கல் படிக்கு வேண்டுகை வைத்துப் பார்த்த போது சங்கத்தின் பெயரில்தான் நிலம் இருப்பது உறுதியானது. நில அளவைச் சிறப்பு அலுவலருக்கு 10 – 1 அடங்கல் பகர்ப்பின் படி இணைக்கப்பட்ட ஒரு வேண்டுகையுடன் அவரைச் சந்தித்தேன். அவர் ஒரு சுவடியைக் காட்டி நான் மேலே குறிப்பிட்டிருந்த இரு பெயர்கள் இருப்பதைக் காட்டியதுடன் அச் சுவடி வட்டாட்சியர் அலுவலகப் பதிவேடுகளிலிருந்து உருவாக்கப்பட்டதாகக் கூறினார். நான் என்னிடமிருந்த 10 – 1 அடங்கல் பகர்ப்பைக் காட்டியதும் தவறைத் திருத்துவதாகக் கூறினார். இத் தவறு எவ்வாறு நிகழ்ந்தது என்று நான் கேட்ட போது உள்ளூர் உசாவலில் நடந்துவிட்டது என்று பல்லிளித்தார்.

என் மகனுக்குக் கோழிப் பண்ணை வைப்பதற்காக இடம் தேடிய போது தருவை என்ற ஊரிலுள்ள ஒரு நிலத்தின் பாகப்பத்திரம் என் கைக்கு வந்தது. 13 பேர் கையெழுத்திட்டு பதிந்த பத்திரம் அது. வருவாய் ஊர் அலுவலகம்(வி.ஏ.ஓ.) சென்று ‘ஏ’ பதிவேட்டைப் பார்த்த போது அந்தப் பதின்மூன்று பேரல்லாத ஒரு பெண்ணின் பெயர் இருந்தது. பத்திரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்த போது அந்தப் பதின்மூவரில் ஒருவரின் மனைவி அது என்று தெரிந்தது. அண்மையில்தான் அந்த ஊரில் மறு அளவை முடிந்த பின்னணியில் இதைப் பார்த்தோமானால் நில உடைமை ஆவணங்களை நம் மாநிலத்தில் உருவாக்கிப் பராமரிக்கும் இரு துறைகளான நில அளவைத் துறையும் வருவாய்த் துறையும் இணைந்து நடத்தும் கயவாளித்தனங்கள் புரியவரும்.

இப் பொருள் பற்றி ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன் நிலவுடைமைக் குளறுபடிகள் என்றொரு கட்டுரை எழுதினேன். பின்னர் அது தமிழினி மாதிகையில் நிலத்தின் தளையறுப்போம் என்ற தலைப்பில் 9/2009 இதழில் வெளிவந்தது. தன்னுடைய இதழில் வெளியான என்னுடைய கட்டுரைகளில் படிக்குநர்களின் அதிகமான வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றது அதுதான் என்று இதழ் உரிமையாளர் திரு.வசந்தகுமார் அடிக்கடி குறிப்பிடுவார். அதாவது நான் குறிப்பிட்ட நிலவுடைமைச் சிக்கல்கள், கால்டுவெலார் 2 நூற்றாண்டுகளுக்கு முன் கூறியதை விட முனைப்பாக தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தொடர்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.(இந்தக் கட்டுரை நூலின் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.)

சேர நாட்டில் நம்பூதிரிகளின் குடும்பத்தில் மூத்த ஆண்மகனுக்கு மட்டுமே மணமுடிக்கும் உரிமை இருந்தது. இளையவர்கள் நாயர் குடும்பப் பெண்களிடம் திருமணமின்றி உறவுகொள்ளும் அதிகாரம் பெற்றிருந்தார்கள். இதனால் உடைபடாத சொத்துடைமை நம்பூதிரிகளின் தொய்யா வலிமைக்கு அடிப்படையாயிருந்தது. நாயர் குடும்பங்களில் எல்லாப் பெண்களுக்கும் சொத்துரிமை இருந்ததால் தலைமுறைக்குத் தலைமுறை சொத்துகள் உடைபட்டுச் சிறுத்துவந்ததால் நம்பூதிரிகளை எதிர்க்கும் வலிமையற்றிருந்தனர் அவர்கள். சென்ற நூற்றாண்டின் பாதிக்குப் பின் முதலமைச்சராக வந்த ஈ.எம்.சங்கரன் நம்பூதிரிப்பாடு நம்பூதிரிகளின் சொத்துகளை குத்தகை உழவர்களுக்கு உரிமையாக்கியதுடன் இந்த நிலை முடிவுக்கு வந்தது.

இங்கிலாந்திலும் பிரபுக்கள் எனப்படும் மேற்குடியினரில் கூட மூத்த மகனுக்கு மட்டுமே சொத்துரிமை. இளைய மகன்களுக்குக் கல்வியளித்து வாழ்க்கையில் நிலைநிறுத்துவதோடு பெற்றோர் கடமை முடிந்துவிடும். அவர்களுக்கு மண உரிமை உண்டு. தொழிற்புரட்சிக் காலத்தில் அவர்கள் கையிலிருந்த அமெரிக்காவிலிருந்து உணவுக்கு வேண்டிய தவசங்கள் கிடைத்ததால் தங்கள் பெரும் பண்ணைகளிலிருந்த குத்தகை உழவர்களைத் துரத்திவிட்டு கம்பிளியாடுகளை வளர்த்து கம்பிளி ஆடைகள் செய்யத் தொடங்கினர். பிரான்சில் புரட்சிக்குப் பின் உழவர்களுக்கு நிலத்தைச் சொந்தமாக்க அவர்களால் அதை வைத்துப் பிழைக்க முடியாமல் பண்ணையார்களுக்கு விற்க அவர்கள் பெரும் பண்ணைகளை அமைத்து கருவிகளை உருவாக்கி வேளாண் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினர். இரு நாடுகளிலும் வெளியேறிய உழவர்கள் அப்போது உருவாகிக் கொண்டிருந்த தொழில் நகரங்களுக்குப் பெயர்ந்து கூலித் தொழிலாளிகளாயினர்.

நம் நாட்டிலும் ஆட்சியாளர்களின் கெடுபிடிகளால் வேளாண்மை நலிந்து நிலங்கள் தரிசாகி மனைப்பிரிவுகளாகக் கிடக்கின்றன. உழைத்து பல வழிகளிலும் பணம் ஈட்டும் மக்களுக்குத் தண்டனையாக விதிக்கப்படும் வருமான வரிக்கு அஞ்சி இம் மனைப்பிரிவுகளுக்குள் பணம் புதைக்கப்பட்டு தானும் அழிந்து வேளாண்மையையும் அழித்துவருகிறது. இதிலிருந்து மீள ஒரே வழிதான் உண்டு. பணம் வைத்திருப்போரை பெரும் பண்ணைகள் அமைக்க வேண்டுகோள் விடுத்து வருமான வரிக்கெதிரான போராட்டத்தை நாட்டு நலனில் கவலை கொண்டோர் நடத்த வேண்டும். குறைந்தது தொழில் – வேளாண்மைகளில் முதலிடப்படும் பணத்துக்காவது வரி விலக்குக்குப் போராட வேண்டும். அப் பண்ணைகளை பங்கு முதலீட்டு நிறுவனங்களாக்கினால் பாகப்பிரிவினையினால் அவை சிதறுவதற்கு வாய்ப்பிருக்காது. கால்டுவெலார் சாணார்களிடம் இருப்பதாகச் சுட்டிக்காட்டும், ஆனால் அனைத்து மக்களிடமும் இருக்கும் ‘வழக்காடும்’ பண்பாடு மறையும். அந்தப் பண்பாட்டைப் பயன்படுத்தி நில அளவைத் துறை, வருவாய்த் துறை, நயன்மைத் துறை ஆகியவை காலங்காலமாக நடத்திவரும் பகற்கொள்ளை முடிவுக்கு வரும்.

ஒரு தலைமுறையில் உச்ச நயமன்றம் வரை சென்று தீர்ப்பு வாங்கிய பின்னர் மீண்டும் கீழ் நயமன்றத்தில் சொத்துரிமை வழக்கைத் தொடரலாம் என்பது போன்ற நடைமுறை ஆங்கிலர் உருவாக்கிய நயன்மைத் துறையின் சீர்கெட்ட மனப்பான்மையைக் காட்டுகிறது. ‘கொலை செய்துவிட்டு தூக்குத் தண்டனையைக் கூட ஏற்றுக்கொள்ளலாம், அது ஒரு தலைமுறையோடு முடிந்துவிடும், சொத்துரிமை வழக்கில் சிக்கிக்கொள்ளக் கூடாது, அது தலைமுறைகளுக்கும் தலைமுறைகளைச் சீரழித்துவிடும்’, ‘சொத்துரிமை வழக்கில் தோற்றவன் கையில் சட்டியும் வென்றவன் கையில் ஒரு கத்தை தாளும் தாம் மிஞ்சும்’ போன்ற பட்டறிவுக் கூற்றுகள் கவனத்தில் கொள்ளத்தக்கன.

குடும்பச் சொத்துகளாக துண்டுதுக்காணி நிலங்களை வைத்துக்கொண்டு உருப்படியான விளைப்பு நடவடிக்கைகளைச் செய்ய முடியாமல் வழக்குகளை மட்டும் அவை நீடிப்பதை முடிவுக்குக் கொண்டு வர பின் வரும் நடவடிக்கைகள்தாம் பயன்படும் என்று கருதுகிறோம். நலிந்துவரும் வேளாண்மையையும் தரிசுகளாக மாறிவரும் நிலங்களையும் மீட்கவும் இது ஒன்றுதான் வழியும் கூட. கூட்டுப்பண்ணை முறையிலோ முதலாளியப் பண்ணை முறையிலோ நிலங்களை ஒன்றிணைத்து குறைந்தது 200 ஏக்கர் பரப்புள்ள கலப்புப் பண்ணைகளை உருவாக்கி ஆண்டு முழுவதும் செயற்படும் வகையில் விளைபொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பண்டங்களாக்குதல், மலைகளில் வளரும் பயன் மரங்களையும் தடி மரங்களையும் காடுகளாக சமவெளிகளில் வளர்த்தல், தேயிலை, ஏலம், கிராம்பு, குளம்பி(காப்பி) போன்றவற்றை பசுமைக் குடில் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வளர்த்தல், சுற்றுலா தவிர காடுகளுக்குச் செல்லத் தேவையில்லா வகையில் பயன் மரங்களையும் தடிமரங்களையும் வாணிக மதிப்புள்ள செடிகொடிகளையும் காடுகளில் வளர்ப்பதைத் தவிர்த்தல், அங்கு குடியிருக்கும் மக்களைச் சமவெளிகளுக்குக் கொண்டுவந்து பிறரைப் போல் மேம்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தல் ஆகியவையாகும்.

சாணார்களின் பண்பாடுகளைக் கூற வந்த கால்டுவெலார் அவர்களிடம் மட்டும் இருப்பதாகக் கூறிய ஒரு தமிழக அவலத்தைப் பற்றி விரிவாகக் கூறி அதற்குத் தீர்வுகாணும் வழிகளாக நான் கருதுவதையும் எடுத்துவைக்க முடிந்தது நாடார்களின் வரலாற்றை எழுதப் புகுந்த என் பணியின் கூடுதல் பயன் என்று கூறி இப் பொருளை இத்துடன் முடிக்கிறேன்.

“3.காலநிலையின் வெப்பத்தின் காரணமான மந்தமும் ஆர்வமின்மையும் சாணார்களின் நெறிமுறைகளிலும் குமுகவியலிலும் அறிவுத்திறனிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.”

இப் பொருள் பற்றி அவர் மீண்டும் மீண்டும் பேசினாலும் தன் இந்தக் கூற்றுக்கு எதிராக ஆங்காங்கே புதிய புதிய கருத்துகளையும் செய்திகளையும் தருவதால் அவற்றைப் படிக்குநர் அறிந்துகொள்வதற்காக நானும் மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது.

தேசியப் பணபுகளை உருவாக்குவதில் சமயம், குமுக நிறுவனங்கள் ஆகியவை முதன்மைப் பங்காற்றுகின்றன என்று தொடங்கும் கால்டுவெலார் திருநெல்வேலி மணடலத்தின் வெப்பத்துக்கு சாணார்களின் இத் தன்மைகளுக்கான காரணமாக முதலிடம் வழங்குகிறார்.

திருநெல்வேலி மண்டலத்தில் வெப்பநிலை ஆண்டில் 9 மாதங்கள் 80〫வாரனீட்டு க்கு மேலே இருக்கும் என்பதுடன் பனையேறும் தொழிலின் கடுமை பற்றியும் பதனீரைக் காய்ச்சிக் கருப்பட்டி செய்யும் பெண்களின் கடும் உழைப்பைப் பற்றியும் கூறுகிறார். வெப்ப மண்டலம் என்று கூறப்படும் நிலநடுக்கோட்டுக்கு 23½〫வடக்குக்கும் தெற்குக்குக்கும் இடைப்பட்ட திருப்புகை மண்டல த்தில் நடைபெறும் தொழில்களில் கடினமானது இது என்கிறார். “இந்த விளைவு சாணார்களின் குற்றத்தினால் ஏற்பட்டது என்பதை விட தீயூழ் என்றே கூறவேண்டும் என அறச் சிந்தனை கொண்ட உள்ளம் கருதும்” என்ற அவரது கூற்று(பக்.56) இங்கிலாந்தில் உள்ள மேல்நிலையாளர்களின் உணர்வுகளைக் கவர்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மைத் தொகுப்பு என்றே கொள்ள வேண்டும்.

மனத்திண்மை, உணர்ச்சி வன்மை ஆகியவற்றின் வலிமையினால் கிடைக்கும் நன்மைகள், முன்னணிக்கு வரும் அவா அல்லது முனைப்பான துடிப்பு அல்லது இளக்கமான மனப்பான்மை அல்லது தீர்மானமான விடாப்பிடி என்று ஒன்றிரண்டு அல்ல, அவற்றில் சிலவற்றையே திருப்புகை மண்டலத்திலுள்ளோர் பெறுகின்றனர். ஆனால் சாணார்களைப் பொறுத்தவரை அவர்களின் போக்கு எதிர்த் திசையிலேயே உள்ளது. பெரும்பாலான நேர்வுகளில் விளைவு ஆர்வமின்மை அல்லது மந்தமான மனநிறைவு போன்றவை சாணார்களின் பளிச்சென்ற, உயர் சாதிகளின் பண்புகளில் ஏமாற்று பளிச்சென்று இருப்பது போன்ற பண்பு என்கிறார்(பக்.56-57). கக்கல் கழிச்சல்(காலரா) நோயின் போது செத்துக்கொண்டிருக்கும் தங்கள் குழந்தைகளைக் கைவிடும் அவர்கள் செயல் என்று விரித்துக்கொண்டே போகிறார். தானே நோய்த்தாக்குக்கு உள்ளான வீடுகளுக்கு நம்பகமான ஊழியர்களை அமர்த்தியதைக் கூறுகிறார். இந்த நோய்த்தாக்குக்கு உள்ளான ஊர்களில் விழும் பிணங்களைப் புதைக்கக் கூட ஆளில்லாமல் ஊரார் ஓடிவிட மனத்திண்மையுள்ள ஒரு சிலரே அப் பணியைச் செய்த செய்திகளைக் கேட்டுள்ளேன். என் அன்னையின் தந்தையும் வல்லரக்கன் என்ற பட்டப் பெயரும் கொண்ட மதுசூதனப்பெருமாள் நாடார் அந்த வட்டாரத்தில் வாரண்டு நோய் என்று அழைக்கப்பட்ட இந் நோய்த் தாக்கு வந்தால் பிணங்களைப் புதைக்கும் தொண்டில் முன்னணியில் இருப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது பட்டப்பெயருக்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறுவர். கால்டுவெலார் அமர்த்தியவர்களாகக் கூறும் ‘நம்பகமான ஊழியர்கள்’ இத்தகைய மனத்திண்மை உள்ளோராகவே இருந்திருப்பர்.

தொழிற்புரட்சிக்கு முந்திய ஐரோப்பாவிலும் கொள்ளை நோயான பிளேகுக்கு அறிகுறியாக எலி செத்து விழுந்தால் வீட்டுக்குத் தீ வைத்து ஊரை விட்டு ஓடிவிடுவார்கள் என்று அறிகிறோம். இங்கும் சரி அங்கும் சரி அடித்தள மக்கள் எண்ணிக்கையில் பெருகுவதை ஆண்டவர்கள் விரும்புவதில்லை. அதே வேளையில் அடிமைப் பணிகளுக்காக அவர்கள் குறையக் கூடாது. குறைய மாட்டார்கள், ஏனென்றால் பெண்களின் கருப்பை தாக்குப்பிடிக்கும் வரை பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டே இருப்பார்கள். 19ஆம் நூற்றாண்டிறுதியில் அல்லது 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இன்றைய குமரி மாவட்டத்தில் ஒரு மாட்டுச் சந்தை தொடங்க இருந்ததை அங்குள்ள பண்ணையார்கள் கடுமையாக எதிர்த்ததை புலவர் கு.பச்சைமால் ஒரு நூலில் குறித்திருக்கிறார். இதற்குக் காரணம், அதுவரை மனிதர்களை ஏரில் பூட்டி உழுததைவிட மாடு செலவைக் கூட்டும் என்பதாகும். மாட்டுக்கு நோய் வந்தால் உடைமையாளன் தன் செலவில் பண்டுவம் பார்க்க வேண்டும், செத்துப்போனால் புதிய ஒன்றை விலை கொடுத்து வாங்க வேண்டும். அடிமை என்றால் இந்தச் செலவுகள் எல்லாம் இல்லை. ஒருவன் செத்தால் இன்னொருவன் அவ் வேலையைச் செய்வான். இந்த நிலை தான் தொழிற்புரட்சிக்கு முந்திய ஐரோப்பாவிலும் இருந்தது.

“மன ஆற்றலை வளர்ப்பதற்குத் தோதான காலநிலையைக் கொண்ட துருக்கியப் பேரரசில் அதன் தாக்கத்தை சமய முற்கோள்களின் மிகை அதிகாரம் சமன் செய்வது போல் பிற காரணிகளும் செயல்படுகின்றன” என்று பக்.59இல் குறிப்பிடுகிறார். அப்படியிருக்க, ஆற்றலுக்கு எதிராக உடலியல், உளவியல், மந்தத்தன்மையை காலநிலை உருவாக்கும் இடங்களில் தன் நெறிமுறை மனவெழுச்சிகளாலும் அதன் முரண்கள், ஊக்குவிப்புகளாலும் இளமையுள்ள உள்ளத்துக்குக் கல்வியின் மூலமும் தன் அருள், அன்பளிப்புகள் மூலமும் கிறித்துவம்தான் அம் மக்களைக் காக்க முடியும் என்கிறார்.

அப்படி கிறித்துவத்தின் மந்திர ஆற்றல்தான் என்ன? அதன் பின்னணியில் இருக்கும் ஆட்சியாளரின் படை வலிமை. அடித்தள மக்களை விலங்குகளை விட இழிவாக நடத்திய ஆட்சியாளர்களாகிய நம் அட்டைப் புலிகள் வெளியிலிருந்து வலிமையுடன் வந்தவர்களைக் கண்டு நடுங்கினர். தொழில் – வாணிகச் சாதியினர் முகம்மதியத்தைத் தழுவிய பின்னர் அவர்கள் முன்னைவிட மதிப்போடு வாழ முடிந்தது. தகர வேலைப்பாடு செய்வோரும் நெசவுத் தொழில் செய்வோரும் தோல் பதனிடுவோரும் இவ்வாறு விடுதலை பெற்றவர்கள். கடற்கரை மக்களைத் தாக்கப் புறப்பட்ட நாயக்க அரசுப் படை அங்கிருந்த பிரான்சிசு பாதிரியாரைக் கண்டதும் காலில் விழுந்து திரும்பிச் சென்றதற்கு வேறு என்னதான் காரணம்? ஓர் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் இன்றைய குமரி மாவட்டத்தில் இருக்கும் ஆசாரிபள்ளம் ஊரில் இருந்த செக்காட்டும் எண்ணெய் வாணிகர்கள் வழக்கமாக திருவிதாங்கூர் அரசுக்குச் செய்ய வேண்டிய எண்ணெய் ஊழியத்தை(இலவயமாக வழங்குவது) ஏதோ காரணத்தால் செய்ய முடியாமல் போக அரசனின் தண்டனைக்கு அஞ்சி அனைவரும் அன்று அங்கு செல்வாக்கோடு இருந்த கத்தோலிக்க கிறித்துவத்தில் இணைந்ததும் திருவிதாங்கூர் அரசர்களும் அஞ்சி வாளாவிருந்ததும் நம் வரலாற்றின் முடைநாற்றத்தின் பதிவன்றி வேறென்ன?

வட இந்தியாவில் வாழும் முகம்மதியர்களில் மிகப் பெரும்பாலோர் படையெடுப்பாளர்களோடு வந்த அயல்நாட்டார். ஆனால் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணத்தக்க அளவில்தான் பட்டாணிகள் எனும் அயலாரின் வழியினர் வாழ்கின்றனர். பிறரெல்லாம் சாதிக்கொடுமை தாங்காமல் மதம் மாறியோர். ஆனால் திருமலை, மங்கம்மாள் போன்றோர் காலத்தில் அவர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளில் அவர்களின் திமிரை அடக்க அயலவர்களான முகம்மதியர்களுக்கும் கத்தோலிக்கக் கிறித்துவத் துறவியருக்கும் மதிப்புக் கொடுக்க அதைக் கண்டு அங்கு தாவிய பார்ப்பனர்கள், சிவனிய வேளாளர்களை இவர்களோடு சேர்க்கக் கூடாது. இன்றும் அச் சமயங்களில் இம் மேற்சாதியினர்தாம் செல்வாக்குச் செலுத்தி பிறரை அடக்கிவைத்துள்ளனர்.

ஆசியாவில், குறிப்பாக தெற்கு, தென் கிழக்கில் முகம்மதியத்துக்கும் கிறித்துவத்துக்கும் மாறியவர்கள் பெரும்பாலும் தமிழகத்துடன் தொடர்புடைய தமிழகச் சாதியப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களின் கீழேயுள்ளோர் எவ் வகையிலும் மேம்பட்டுவிடக்கூடாது என்பதுதான் இங்குள்ள ஆளும் கணங்களான அரசர், பார்ப்பனர், அவர்களது போட்டியாளரான சிவனிய வெள்ளாளர் ஆகியோரின் ஒரே குறிக்கோள். இவர்களுக்கு அடியாள்களாகி முன்பு ஆதாயம் கண்ட பிற ஒடுக்கும் சாதிகள் இன்று தங்களுக்காகவே அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. அவர்களுடன் இன்று ஒடுக்கப்பட்ட சாதிகளில் படித்து ஒட்டுண்ணிப் பணிகளில் அமர்ந்து விட்ட புதுப் பார்ப்பனியக் கூட்டமும் இணைந்துகொண்டுள்ளது. தங்களைத் தாங்கும் அடித்தட்டு மக்களின் நிலை தாழுந்தோறும் தாமும் தாழ்வோம் என்று தெரிந்தும் இந்த போக்கற்ற மக்களைத் தங்கள் கட்டுக்குள் வைப்பதற்காக எவனுக்கு வேண்டுமானாலும், மாந்தன்மையற்ற சீனர்களுக்கு செருப்புச் சுமப்பதைக் கூட அவர்கள் பெருமையாகக் கருதுகிறார்கள்.

ஐரோப்பாவில் கூட ஒரு கட்டத்தில் அராபிய முகம்மதியர்களின் மேலாளுமை முழுமையாக இருந்தது. முகம்மதியக் கோட்பாடுகள் ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களில் கற்பிக்கப்பட்டன என்று இராகுல சாங்கிருத்தியாயன் குறிப்பிட்டுள்ளார். பின்னர் வாணிகர்களின் எழுச்சியால் தூண்டப்பட்ட அரசர்களும் சிற்றரசர்களும் இணைந்து சிலுவைப் போர்களை நடத்தி தங்கள் இறைமையை மீட்டார்கள். மார்ட்டின் லூதர் தொடங்கிய சமய சீர்திருத்தம் அவ் வாணிகர்களின் பின்னணியினாலேயே வெற்றிபெற்றது. கிறித்துவத் தலைமையால் வட்டி பெறத் தடுக்கப்பட்ட கிறித்தவர்கள் அத்தகைய தடை எதுவுமில்லா யூதர்களின் பொருளியல் அடாவடிகளுக்கு ஆளான குமுறல்தான் லூதருக்கு மக்கள் துணையைப் பெற்றுத் தந்தது. ஆனால் கால்டுவெலார் துருக்கியைப் பொறுத்துக் கூறும் காரணம்தான் தங்களை மீறி ஐரோப்பியர் எழுச்சி பெற்ற போது அதை எதிர்கொள்ள அராபியர்களை இயலாதவர்களாக்கிவிட்டது.

இந்தியாவில் கட்டபொம்மனும் சிவகிரி பாளையக்காரரும் டச்சுக்காரர்களோடு செய்துகொண்ட சவளி வாணிக ஒப்பந்தத்தை முறிக்க ஆங்கிலர் கொடுத்த நெருக்கடிதான் அவர்கள் ஆங்கிலரோடு மோதத் துணிந்ததற்குக் காரணம். சிறு அளவிலான இரு பாளையக்காரர்களின் வாணிக நலன்கள் கிளப்பிய முரண் சாதி சமய வேறுபாடுகளை மீறிய ஒற்றுமையை ஏற்படுத்தியதென்றால் உள்நாட்டினரின் நாடு தழுவிய அயல் வாணிகம் இருந்திருந்தால் இவ்வாறு ஐரோப்பாவிலிருந்து கண்டவனெல்லாம் இந்தியத் தீவக்குறையிலும்(தீபகற்பத்திலும்) கிழக்கும் மேற்கும் உள்ள இரு விலாப்புறங்களிலும் இருக்கும் கடற்கரைகளில் கண்ட இடத்திலெல்லாம் இறங்கி படை அணிகளை நிலைநிறுத்தியிருப்பதைக் கனவிலும் நினைத்திருக்க மாட்டான். எனவே எப்பாடு பட்டாவது இந்தச் சாதியப் புற்று நோயை வேரோடு அகற்றியாக வேண்டும். இந்த நோயோடு வாழ்ந்து உலகிலுள்ள நாடுகள் அனைத்துக்கும் உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் உழைக்க அடிமைகளை வழங்கும் நாடாக வாழ்வதைவிட இந்த நாடு அழிந்து போவது மேல். எனவே இந்த நோய்க்கு முடிவு கட்டுவது உடனடித் தேவை. ஐரோப்பிய வரலாறு காட்டுகிற படி இதற்கு முதலாளியப் புரட்சியே ஒரே வழி. உள்நாட்டு மூலதனத்தில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உள்நாட்டு மக்களைக் கொண்டு உள்நாட்டு மக்களுக்குத் தேவையான பண்டங்களையும் பணிகளையும் வழங்குவதுதான் அதற்குரிய ஒரே வழி. வருமான வரி ஒழிப்பு, அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு எளிதில் காப்புரிமை கிடைக்கவும் புதிய தொழில்கள் தொடங்க இசைவு வழங்கவும் வட்டம் அல்லது ஊராட்சி ஒன்றிய அளவில் அமைப்புகள் உருவாக்கல், அந்தந்த மாநில மக்களுக்கே தொழில் தொடங்கவும் பணி புரியவும் உரிமை என்றவாறு இந்திய அரசியலமைப்பை மாற்றுவதற்கான போராட்டத்தைத் தமிழகத்தில் தொடங்கி பிற மாநிலங்களிலும் ஊக்க வேண்டும். வளரும் நாடுகளனைத்தின் மக்களனைவரையும் வல்லரசியத்துக்கெதிராக ஒன்றிணைத்து நிறுத்த வேண்டும். இந்தப் பின்னணியில் நாம் சாதி எதிர்ப்பு, ஒதுக்கீட்டு எதிர்ப்பு அனைவருக்கும் கல்விக்கும் வேலைவாய்ப்புக்குமான போராட்டத்தை நடத்தினால் சாதியின் அடித்தளத்தைத் தகர்க்க முடியும்.

பனையேற்றுத் தொழில் சாணார்களை வறுமையில் ஆழ்த்தியுள்ளது என்கிறார் கால்டுவெலார். நமக்குக் கிடைக்கும் தொன்ம, மரபுத் தடயங்களை வைத்துப் பார்த்தால் இத் தொழில் பெரும் ஏற்றிழிவுகளைச் சந்தித்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. வெள்ளையன் என்றும் வாலியோன்(இராமாயணத்து வாலி? வால் = வெண்மை) என்றும் அறியப்படும் பலராமன் எனப்படும் பலதேவனான தமிழ்த் தெய்வத்தின் கொடி பனை. ஆயுதம் கலப்பை. அவன் கண்ணனின் தாய் தேவகியின் வயிற்றில் கருவுற்று மாற்றாந்தாயாகிய உரோகிணி வயிற்றுக்கு மாறியதாக அபிதான சிந்தாமணி கூறுகிறது(பலராமர் 3 பார்க்க). அதாவது நீர்வளம் குன்றிய முல்லை நில மக்கள் பனையேறிப் பதனீரெடுத்தும் மாடு வளர்த்தும் வாழ்ந்த கட்டத்துக்குரியவன் இவனென்று கொள்ளலாம். இவன் பெரும் குடியனென்றும் கலப்பையால் யமுனையாற்றைத் தன் இருப்பிடத்துக்குத் திருப்பியவனென்றும் தொன்மம் கூறுகிறது. அதாவது போதிய உணவின்மையால் முல்லை நிலத்துக்கு ஆற்று நீரைத் திருப்பி கலப்பையால் உழுது பண்படுத்தி நன்செய் பயிரிடும் நுட்பத்தை வகுத்தவன் இவனென்று கொள்ளலாம். அதுவரை மழைக் காலங்களில் ஆறுகளில் பாலையைக் கடந்து வரும் நீர் கடற்கரையை நெருங்குந்தோறும் நிலம் தட்டையாகி விரைவு குறைந்து வண்டல் படிந்து உருவாகும் படிகைச் சேற்றில் மேற்கொள்ளப்பட்ட நெல் வேளாண்மையிலிருந்து மனிதச் செயலால் செயற்கையாக உருவாக்கிய சேற்றில் நெல் வேளாண்மையைப் புகுத்தியவன் அவன் என்று கொள்ள இடமிருக்கிறது. தொடக்கத்தில் கலப்பையை மனிதர்களே இழுத்திருப்பார்கள். பின்னர் கண்ணன் ஏறு தழுவல் மூலம் மாட்டை வசக்கி கலப்பையில் பூட்டும் உத்தியை உருவாக்கியிருக்க வேண்டும். அதற்கும் அடுத்த கட்டமாக மாட்டை பொதி சுமக்கவும் வண்டி இழுக்கவும் அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆக நிலம் வழியாக இடம்பெறும் வாணிகம் முல்லை நிலத்திலிருந்தே தோன்றியிருக்க வேண்டும். வாணிக வகுப்பைச் சேர்ந்த கோவலன் பெயரை இதற்கு இன்னொரு தடயமாகக் கொள்ளலாமா? இடையர்களைக் கோவலர் என்றே இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்,
குழல்வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு
மழலைத் தும்பி வாய்வைத் தூத…. - அந்திமாலை சிறப்புச் செய் காதை 15- 16

ஆக பனையேறிகளும் ஆயர்களும் வாணிகர்களும் வேளாண் மக்களில் ஒரு பிரிவினரும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியவர்களென்று தோன்றுகிறது. முதல் குக்குல மூலவர்களான ஏழு தாயர்களின் பிள்ளைகள் சாணார்கள் என்று வலங்கையர் கதை கூறுவதன் பொருளும் புரிகிறது. அவர்களிடையில் உழைப்புப் பிரிவினை ஏற்பட்ட சூழலும் பலதேவன் பற்றிய தொன்மப் பதிவிலிருந்து புரிகிறது.

பின்னர் வேளாண்மைக்கும் மேய்ச்சலுக்கும் உருவான முரண்பாட்டை கண்ணனுக்கும் பலராமனுக்கும் அவ் வப்போது வெளிப்படும் மோதல்களின் மூலம் மகாபாரதம் வெளிப்படுத்துகிறது என்று கொள்ள முடியுமா?

வலங்கையர் கதையில் கூறப்படும் ஆற்று உடைப்பை அடைக்கும் நிகழ்ச்சியின் விளக்கமாக பனை வளர்ந்த நிலங்களை நன்செய் நிலங்களாக்கும் கரிகாலனின் முயற்சியின் எதிர்வினை என்று மேலே சுட்டியிருந்தோம் . அது சரியாயின் பலதேவன் காலத்துச் சூழலுக்கு நேர் எதிரான ஒரு சூழலை இது சுட்டுகிறதென்று கொள்ள இடமிருக்கிறது. அதாவது பனையேறுவது வளம் கொழிக்கும் ஒரு தொழிலாக மாறியிருக்கிறது. இந்தக் கருத்துக்குத் துணையாக, ஏற்றுமதி மதிப்புள்ள மலைபடு பொருட்களைத் திரட்டி மலைவாழ் மக்கள் கள்ளுக்கு மாற்றாக வழங்கினார்கள் என்றும் பாண்டிய மன்னன் முத்துக்குளிப்போரிடமிருந்து முத்துச் சிப்பிகளைக் கள்ளைக் கொடுத்து பெற்றான் என்றும் ஏற்கனவே கூறியுள்ளோம் .

களப்பிரர்கள் அம்மணத்தைத் தழுவிய பின் கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் என்று உறுதியாக நம்பலாம். இது கட்டாயம் அவர்களது வாழ்நிலையை வீழ்த்தியிருக்கும். கருப்பட்டித் தொழில்நுட்பம்தான் அதிலிருந்து அவர்களைக் காத்து ஒரு வேளை அதுவரை எய்தியிராத ஒரு நிலைக்கு அவர்களை உயர்த்தியிருக்கும் .

ஆங்கிலர் சீனியை இறக்குமதி செய்த பின்னர் மீண்டும் பனைத் தொழில் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும். பின்னர் பதனீரிலிருந்து சீனி எடுக்கும் ஆலை கடலூரில் நிறுவப்பட்ட பின் சில காலம் ஏற்றத்தைக் கண்ட இத் தொழில் அவ் வாலை செயலிழந்த பின்னர் வீழ்ந்தது வீழ்ந்ததுதான்.

நாடான்கள் தங்கள் நிலங்களை பனையேறிகளுக்குச் சொந்தமாக்கியது பற்றி கால்டுவெலார் கூறியதை எடுத்துக்காட்டியிருந்தோம் . சாணார்களின் குமுகத் தரத்திலிருந்த பிற ஒடுக்கப்பட்ட வகுப்பினரிடையில் காண முடியாத ஒன்று இது என்றும் அவர் கூறுகிறார். இதற்கான விளக்கம் வேறொரு திசையிலிருந்து கிடைக்கிறது. தளவாய் அரியநாதர் காலத்தில் நாடுகளைப் பாளையங்களாக மாற்ற முடியாதவாறு திருவிதாங்கூர் அல்லது வேணாட்டார் கையில் இருந்த, பாளையங்கோட்டைக்குத் தெற்கிலிருந்த பகுதிகள் பின்னர் நாயக்கர்கள் கைகளுக்கு வந்த பின் அங்கு தொடர்ந்து இருந்த நாடான்களை ஒடுக்க கடைப்பிடிக்கப்பட்ட உத்தி அவர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய திறையை மட்டுமீறி உயர்த்தியது என தூத்துக்குடி மாவட்ட வரலாற்றுக் குறிப்பு 245ஆம் பக்கத்தில் குறிப்பிடுகிறது. இதை எதிர்கொள்வதற்கு முதலில் குத்தகைக்குப் பனையேறும் சாணார்களிடம் கூடுதல் வரி தண்டி அதுவும் போதாத போது அவர்களுக்கு நிலங்களை விற்ற நாடான்கள் அதுவும் போதாத போது நாயக்க ஆட்சியாளருக்குக் கூட்டாளிகளான சிவனிய வெள்ளாளர்களுக்கு விற்றிருக்கிறார்கள். சாணார்களுக்கு விற்றது பற்றிய குறிப்பு மேற்படி நூலில் இல்லையாயினும் கால்டுவெலாரின் கூற்றிலிருந்து இதை உய்த்தறியாலாம்.

“4.சாணார்களின் அறிதிறன் மந்தத்தன்மை அவர்களது ஒழுக்க நெறிகளையும் வாய்ப்புகளையும் பாதிக்கிறது” (பக்.60).
இந்தத் தலைப்பில் காலநிலையின் வெப்பத்தால் சாணார்கள் தங்கள் சிந்திக்கும் ஆற்றலையும் செயலூக்கத்தையும் மேம்பாட்டு அவாவையும் எதையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தையும் இழந்த மந்தத் தன்மை கொண்ட ஒரு மக்கள் கும்பல் என்று குறைகூறுகிறார். கடுமையான உழைப்பில் சிக்கனமாகச் சேர்த்து வைத்திருந்த செல்வத்தை நிலத்தைத் தலையில் கட்டி நாடான்கள் பறித்துக்கொண்டதுடன் தொடர்ந்தும் அன்றாட உழைப்பின் பயனை வரியாகப் பறித்துக்கொண்ட நிலையில், ஒரு புறம் நாடான் இன்னொரு புறம் நாயக்கர்களின் பின்னணியுடன் காணியாளர்களான வெள்ளாளர்களுடன் அவர்களது அடியாள்களான மறவர்கள் என்று நான்கு பக்கங்களிலும் முற்றுகை நிலையிலிருந்த சாணான்கள் உழைப்பிலோ வளர்ச்சியிலோ ஆர்வமின்றி இருந்ததில் என்ன புதுமையைக் காண முடியும்? அதே முற்றுகைக்கு ஆளாகியிருந்த நாடான்களும் சாணார்களைப் போலவே மந்தமான உளவியலுக்கு ஆளாகியிருந்ததில் இன்று வியப்பதற்கோ இதைக் கூறியதற்காக கால்டுவெலார் மீது குறை கூறுவதற்கோ இடமில்லை.

சாணார்கள் என்றில்லை தமிழகத்தில் மட்டும் இல்லை முழு இந்தியாவும் ஐரோப்பியர் வரவில்லையானால் முழுமையான காட்டுவிலங்காண்டி நிலைக்குத் தாழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. தென்னிந்தியாவில் தமிழ் மன்னர்களின் மரபுகள் முகமிழந்து முகம்மதியர்கள் தெலுங்கர், கன்னடர்களின் படையினர் மக்களின் மூக்குகளையும் காதுகளையும் அறுத்து மூட்டை கட்டி தங்கள் அரசர்களுக்கு விடுத்துக்கொண்டிருந்தனர், படை வீரர்கள் எனப்படுவோர் மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து கொள்ளையடித்ததுடன் பொழுது போக்காக குழந்தைகளையும் பெரியவர்களையும் வெட்டிக்கொன்று விளையாடினர். வழிப்பறியை ஆட்சியாளர்கள் குத்தகைக்கு விட்டிருந்த செய்தியை முத்துப்பட்டன் கதைப்பாடலைப் பதிப்பித்த பேரா.வானமாமலை அவர்கள் தந்துள்ளார். மக்களுக்கிடையில் எதற்காக எப்போது கலவரங்கள் உருவாகும் என்று சொல்ல முடியாத நிலை. அரசுசார், கோயில்சார் பணிகளில் உள்ளோர் வலங்கையினரென்றும் தொழில் – வாணிகம் சார்ந்தோர் இடங்கையினரென்றும் பிளவுண்டு திடீர் திடீரென்று கொலைவெறிக் கலவரங்களில் ஈடுபட்டு மக்கள் அல்லல் பட்டனர். நெசவுத் தொழில் செய்யும் கணவன் இடங்கையாகவும் கோவில் பணி செய்யும் மனைவி வலங்கையாகவும் இருந்த கைக்கோளர்களில் வலங்கையினர் கணவனைக் கொலை செய்வதைக் கவலையின்றி மனைவி வேடிக்கை பார்த்த அவல நிலையில் தமிழகம் இருந்தது. தில்லியிலிருந்த முகம்மதிய அரசு சுற்றியிருந்த சிற்றரசுகளைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் தரங்கெட்டுக் கிடந்தது. சிற்றரசுகளும் அவ்வாறே. இந்த நிலைகளை மாற்றி ஒழுங்கான ஆட்சிமுறையையும் குமுகியல் மேம்பாடுகளையும் உருவாக்கியவர்கள் இறுதியில் இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலர்தாம்.

சராசரி குடிமகன் எழுத்தறிவு பெறுவதையே பொறுக்காத ஒரு குமுகத்தில் சமய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு எழுத்தறிவு இன்றியமையாதது என்று கருதும் ஒரு சமயம் புரட்சிகர மாற்றத்தை சாணார்களிடம் ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் தொடர்வண்டி அறிமுகமான அடுத்த ஆண்டிலேயே இங்கு அதனை ஓடவிட்ட அவர்களின் செயலை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழில்முனைவுகளை நசுக்கும் இந்தக் குமுகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை உள்நாட்டார் தொடங்க வழி வகுத்தவர்கள் அவர்கள்தாம். அவர்கள் வெளியேறிய அரை நூற்றாண்டுக்குள்ளாக அனைத்துத் துறைகளிலும் பண்டைக் கொடுமைகளை மீட்க, அன்று ஆங்கிலருக்கு அஞ்சிப் பதுங்கியிருந்த கூட்டம் கொட்டமடிக்கத் தொடங்கிவிட்டது. ஆங்கிலன் கைவைக்க நினைக்காத புதுப்பிக்க முடியா இயற்கை வளங்களை, இரும்பு, நிலக்கரி, ஆற்று மணல், சல்லிகளாகவும் கற்பாளங்களாகவும் மலைகள், செம்மண், கடற்கரை மணல் என்று தொடங்கி இறுதியில் மூளைத் திறன் பயிற்சி பெற்ற மக்கள் என்று அனைத்தையும் கிட்டத்தட்ட அழித்துவருகின்றனர்.

அமெரிக்காவில் ஐரோப்பியர் செய்த இனக்கொலை ஐரோப்பியரின் உண்மையான அரக்கத்தனத்தைக் காட்டுகிறது. பண்டை அமெரிக்கர்கள் கண்டிருந்த உயர் நாகரிகம் வெளித்தொடர்பு, குறிப்பாக கடற்கோளால் செயலிழந்த குமரிக் கண்டத் தொடர்பு அறுந்து போனதால் சிறுகச் சிறுக தேய்ந்து இறுதியில் மறைந்திருந்த நிலையில் காட்டுவிலங்காண்டி நிலைக்குத் தாழ்ந்திருந்த செவ்விந்தியர்களை அழித்து அந் நிலத்தைத் தமதாக்கிக் கொண்டனர் ஐரோப்பிய அரக்கர்கள். அங்கு குமுகத் தலைவர்களின் கீழ் ஒட்டுமொத்த மக்கள் திரளினரும் திரண்டு அயலவர்களை எந்த விட்டுக்கொடுப்புமின்றி எதிர்த்த அமெரிக்க மூலக்குடிகளை ஐரோப்பியர்கள் அழித்தனர் என்றால் இந்தியவின் நிலையே வேறு. அரசர் – பூசகர் கூட்டணியினரின் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போராட மக்கள் அணிதிரண்ட காலங்களிலெல்லாம் வெளியிலிருந்து சமய, அரசியல் வடிவங்களில் நுழைந்த அயலார் அதனைக் குலைத்தனர். ஆனால் ஐரோப்பியர் புகுந்த போது அத்தகைய எழுச்சி எதுவும் உள்நாட்டில் இல்லை. படையுடன் ஐரோப்பியர் வரவுமில்லை. வாணிகர்களாக இங்கு வந்த அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்(துபாசி)களாகச் செயற்பட்ட மேற்சாதியினர்தாம் உள்நாட்டு அரசர்களுக்கு எதிராகத் துப்புகள் கொடுத்து அவர்களைத் தூண்டிவிட்டனர். உள்நாட்டு பெருந்திரள் மக்களைப் பொறுத்தவரை நெல்லை மண்டலச் சாணார்களைப் போன்று இங்குள்ள அரசுகளும் குமுகமும் தங்கள் மீது நிகழ்த்தும் வன்கொடுமைகளிலிருந்து காக்க வந்த மீட்பர்களாக அவர்களைக் கண்டனர், அல்லது பிற ஒடுக்கப்பட்ட மக்களைப் போன்று எப்போதும் போல யார் வீட்டு இழவோ என்று வழக்கம் போல் வாளாவிருந்தனர்.

சாணார்களின் சிறப்புப் பின்னணிதான் என்ன? கால்டுவெலாரே வியப்படைவது போல் அவர்களிடமிருந்த சிறு சிறு நிலப்பற்றுகள்தாம். மொத்த நிலவுடைமையாளர்களான நாடான்களைச் சாராமலே அவர்களால் பட்டினியைத் தவிர்க்க முடியும். மேலே நாம் சுட்டியுள்ளது போல் நாயக்கர் அரசும் சிவனிய வெள்ளாளப் பண்ணையார்களும் கூட்டுச் சேர்ந்து அங்கிருந்த உள்ளூர்த் தலைவர்களும் நிலவுடைமைகள் அனைத்துக்கும் உரிமையாளர்களுமான நாடான்கள் செலுத்த வேண்டிய திறையின் அளவை உயர்த்தி நிலங்களைச் சாணார்களுக்கு விற்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியதுதான் இந்த நில உடைமைக்கு அடித்தளம்.

பிற ஒடுக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை அடுத்த வேளை சோற்றுக்கு தங்களை ஒடுக்கும் பண்ணையார்களையே நம்பியிருக்க வேண்டியிருந்தது அவர்களை எந்த மதமாற்றத்தாலும் விடுவிக்க முடியாததற்குக் காரணமாகும்

.
வெளித்தொடர்பு என்பது ஒரு நாகரிகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. அந்தமான் பழங்குடியினரைப் பற்றிய ஆய்வர்கள் அவர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள அவர்கள் பயன்படுத்திய வீட்டுக் குப்பைக் குழிகளை ஆய்ந்த போது அவர்கள் ஒரு காலத்தில் நெருப்பைப் பயன்படுத்தியதையும் பின்னர் அதன் பயன்பாட்டைக் கைவிட்டிருந்ததையும் கண்டுபிடித்தனர். அவர்களது இந்த நாகரிக வீழ்ச்சிக்கு வெளியுலகத் தொடர்பு அறுந்து போனதே காரணம் என்று கூறுகின்றனர்[1]. மணிமேகலையில் வரும் சாதுவன் கப்பல் உடைந்து கரையேறிய நாகர்மலை என்பது கூட அந்தமானை அடுத்துள்ள, மாநக்கவரம் என்று பேரரசுச் சோழர் காலக் பொறிப்புகள் குறிப்பிடும் நிக்கோபார் தீவுகளாகவே இருக்க வேண்டும். அவர்கள் அந்தக் காலத்தில் நரவுண்ணிகளாக இருந்திருக்கின்றனர். நெருப்பைப் பயன்படுத்தினார்களா என்பது தெரியவில்லை.

இந்தியாவைப் பொறுத்த வரை கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான கடல் பாதையில் இருந்ததால் தவிர்க்க முடியாதவாறு வெளித்தொடர்பு இருந்தது. அதன் பயன் அடித்தள மக்களை எட்டிவிடாதபடி வடக்கில் அரசர்கள் – பூசகர் – அம்மணர்களான பனியாக்கள் கூட்டணி பார்த்துக்கொண்டது. தெற்கிலோ வாணிகர்களுக்கு வடக்கிலிருந்த உரிமைகளைக் கூட மறுத்து ஒடுக்கி வைத்திருந்தது அரசர் – பூசகர் கூட்டணி. அதை உடைத்துக்கொண்டு வெளியேறிய சாணார் வாணிகர்களின் பங்களிப்பு சாணார்களின் விடுதலை நோக்கிய செலவில் ஒரு காலின் முன்னேற்றம்(எட்டு) என்றால் இன்னொரு காலின் எட்டு கிறித்துவ சமயம் வழங்கிய எழுத்தறிவும் வெள்ளைச் சட்டை வேலை வாய்ப்பும். அவர்கள் காட்டிய வழியில் நாடான்களும் அவர்களைத் தொடர்ந்து சாணார்களும் பள்ளிகளைத் தொடங்கிப் போட்டியிட்டு இன்றுவரை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே கல்விப் பணியில் முன்னணியில் நிற்கும் ஒரு மக்கள் குழுவினராக வளர்ந்துள்ளனர். கால்டுவெல் ஐயர் குறிப்பிட்டது போல் அவர்கள் வாழ்ந்த நிலத்தின் வெப்பக் காலநிலையின் விளைவல்ல அவர்களின் மந்தத்தன்மை, குமுக – சமயச் சூழல்தான் என்பதை மெய்ப்பித்திருக்கிறார்கள். மிகக் குறுகிய காலத்திலேயே மிகப் பெரும் முன்னேற்றத்தை எய்தி உலக மாந்தவியலாளர்கள் வாயைப் பிளக்க வைத்துள்ளனர். இன்னும் நுட்பமாகப் பார்த்தால் அவர்களுடை வரண்ட வெப்ப மணல்வெளிதான் அவர்களுக்கு ஊக்கியாகச் செயல்பட்டுள்ளது. பொதுவாக வரண்ட, வேளாண் வாய்ப்பு குறைந்த பகுதிகளே வாணிக வளர்ச்சியில் முன்னணியில் நின்றிருப்பதை வரலாறு நெடுகிலும் காணலாம்.

இன்னும் நுட்பமாகப் பார்த்தால் அவர்கள் தங்கள் முன்னோக்கிய பாய்ச்சலைத் தொடங்கிய கட்டத்தில் ஆங்கிலர் உட்புகுந்து அதனை விரைவூட்டியுள்ளனர். இன்னொரு கோணத்தில் பார்த்தால் கிறித்துவம் ஒட்டுமொத்தச் சாணார்களில் ஏறக்குறைய பாதிப்பேரை கைப்பற்றியிராதிருந்தால் 1982 குமரி மாவட்டக் கலவரத்தைப் பயன்படுத்தி பனியா – பார்சி - வல்லரசியக் கூலிப்படையான இந்து வெறி அமைப்புகள் இன்னும் சாணார்களைத் தமக்கு நிகராக மதிக்காத பண்டை அரசர்களின் படிநிகராளியான கோடாரிக்காம்பு தாணுலிங்கத்தைப் பயன்படுத்தி உலகெலாம் உள்ள ‘இந்து’ நாடார்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கி அவர்களே தங்கள் தலையில் மண்ணள்ளிப் போட வைத்திருக்க முடியாது. அதனால்தான் நமது நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்களாகவே எழுந்து போராட முற்பட்ட காலங்களிலெல்லாம் அயல் சமயங்கள் உட்புகுந்து மக்கள் தலைவர்களைப் பறித்து பெருந்திரள் மக்களைத் தலைமை இல்லாமல் செய்வது தொடர்கதையாகிவிட்டது என்று நான் வலியுறுத்துகிறேன்.

“பூசகர்களாலும் முற்கோள்களாலும் சூழப்பட்ட வேறு பல இந்தியச் சாதிகளையும் வகுப்புகளையும் போல் கிறித்துவச் செல்வாக்கு எட்ட முடியாதவர்களாக சாணார்கள் இருந்தார்கள் என்று குறை கூற முடியாது.” என்கிறார் கால்டுவெலார்(பக்.71). தங்களை நகர விடாமல் பிடித்துவைத்திருக்கும் குமுகச் சூழலிலிருந்து விடுபட, அதற்கான வாய்ப்புக்காக அவர்கள் காத்திருந்திருக்கிறார்கள் என்பதே இதன் பொருள்.   

            கால்டுவெலார் இன்னொனனறையும் கூறுகிறார்: “கிறித்துவத்தைத் தழுவவும் பின் அதன் நெறியில் நிற்கவும் அதற்குக் கட்டுப்படவும் அதன் கோட்பாடுகளுக்கேற்பத் தங்களை வடிவமைக்கவும் பிற எந்த வகுப்பினரை விடவும் அவர்கள் ஆர்வமாக இருந்தனர்; சீர்திருத்த சபை விடையூழியத்தைப் பொறுத்த வரை இந்தியாவிலுள்ள பிற அனைத்து மொத்த மதம் மாறிகளை விடவும் இந்த ஒரு சாதியினரின் எண்ணிக்கை மிகுதி”.

            நூலில் காணப்படும் பதிப்பாளரின் குறிப்பு ஒன்று கால்டுவெலாரின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. இக் குறிப்பு கால்டுவெலாரின் கீழ் வரும் கூற்றுக்கு(பக்.73) அடிக்குறிப்பாக இடம்பெற்றுள்ளது:

“….அவர்களது ஏழ்மையையும் மீறி வரி விதிக்கப்படாத அளவுக்கு வறியவர்கள் என்று அவர்களை நினைக்கவில்லை, அவர்களின் பேதேமையையும் இழிவுக்குட்படுவதையும் மீறி ஆங்கில ஆட்சியின் நன்மைகளுக்குத் தகுதியற்றவர்கள் என்று அவர்களைக் கருதவில்லை, அப்படியிருக்க அறிவின் வெளிச்சமும் சமயத்தின் அருளும் பெறுவதற்கு அவர்களுக்குள்ள சம உரிமை பற்றி ஏன் சிந்திக்கவில்லை? அரசு அவர்களுக்கு கிறித்துவத்தைக் கற்பிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கவோ விரும்பவோ இல்லையாயினும் அது அவர்களை எழுதப் படிக்க – அறிதிறனில், குறைந்தது பருப்பொருள் நாகரிகத்தில் உயர்த்த முயல வேண்டும் என்று ஞாயமாக எதிர்பார்க்கலாம். ஆனால் நம் நன்னோக்குடைய கிறித்துவ ஆட்சி தன் குடிகளின் நிலைமைகளை, அறிவு சார்ந்ததாகட்டும் குமுகியலிலாகட்டும் பொருளியலிலாகட்டும் எந்த வகையிலும், அது செய்திருக்க வேண்டியவற்றில் அணுவளவை விடக் குறைவாகவே செய்துள்ளது……..தன் குடிகள் சட்டத்தை மீறும் போது தண்டிக்கிறது, ஆனால் மாபெரும் வேளாண் மக்கள் திரளினர் சட்டத்தைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு அவர்களுக்குக் கற்பிக்க ஓர் உரூவா கூடச் செலவிடவில்லை. ஒரு சிலராகிய தன் சொந்த அதிகாரிகளுக்கு மிக உயர்தரக் கல்வியை வழங்குவது தன் கடமை அல்லது தன் நலன்களுக்கு உகந்தது என்று அது கருதுகிறது; ஆனால் சாணார்களும் பிற உழைக்கும் வகுப்புகளும் அரசுப் பணிகளுக்கோ, எனவே அரசிடமிருந்து எந்த விதமான கல்வியையோ எதிர்பார்ப்பதற்கோ பெறுவதற்கோ தகுதியற்ற மிகவும் இழிவானவர்கள் என்று கருதுகிறது. எனவே இரக்கத்தாலும் கிறித்துவ ஈகையாலும் உந்தப்பட்ட ஐரோப்பியக் கிறித்துவர்கள் வழங்கிய கிறித்துவத்தின் நலன்களையும் சமய, சமய சார்பற்ற கல்வியையும் விட்டால் இவர்களுக்கு ஓர் எழுத்தைக் கூடப் படிக்க வாய்த்திருக்காது.”

            அடிக்குறிப்பு இதோ:

            “இருந்தாலும் மேலேயுள்ள கூற்றைப் பொறுத்து, சீர்திருத்த சபை பள்ளிகளுக்கு உதவியாக தஞ்சாவூர் விடையூழியம் மாதம் உரூ.350/- பெறுகிறது என்பதைக் கூறியாக வேண்டும். இந் நோக்கத்துக்காக முதலில் அரசுக்குப் பெருமை மிகு பணிகளாற்றிய சுவார்ட்சுக்கு ஒரு நல்கை வழங்கப்பட்டது, பின்னர் காலஞ்சென்ற திரு.இயோதோபு[2] வேண்டுகை மீது, இயக்குநர்கள் அவை மனநிறைவடைந்ததால் ‘தஞ்சாவூர் விடையூழியத்தின் நடத்தையும் ஆர்வமும் உள்நாட்டினர்க்கு நலன் பயப்பதாகவும் நம் அரசுடன் அவர்கள் இணக்கம் காணவும் பயன்பட்டிருப்பது புலனாகிறது’ என்ற குறிப்புடன் இப்போதைய தொகைக்கு அது உயர்த்தப்பட்டது. மதுரையில் கூட ஒரு வாய்மொழிப் பயிற்றுநர்க்கு அரசால் சில காலம் ஊதியம் வழங்கப்பட்டாலும் பின்னர் இப்போதைய ஊழியரின் சாவு அல்லது அகல்வுக்குப் பிறகு அந்தப் படி நிறுத்தப்படவுள்ளது. இவ் வுண்மைகள் நம் நண்பரான நூலாசிரியர் அறிந்திராதவையாயினும் அவை பாரதூரமாக அவரது கூற்றைப் பாதிக்கவில்லை என்பது பிசகற்ற துல்லியமாகும் என்பதைச் சுட்டியாக வேண்டும்”.[3]
            முடிக்கும் முகமாய், “நம் முயற்சிகள் முழுமையான வெற்றியை வழங்குவது வரை, உருவ வழிபாட்டினராகவும் பேய் வழிபாட்டினராகவும் உள்ள இந்த ஒட்டுமொத்த இனத்தின் வேதவழியாக்கம் மீட்பரின் புருவத்தைச் சூழும் ‘பல மணிமுடிகளில்’ ஒன்றாகும் வரை மதிப்பு வாய்ந்த இந்த பெருமுயற்சியை எப்போதும் நாம் கைவிடப்போவதில்லை என்று ஆண்டவன் அருளியுள்ளார். இக் குறிக்கோளை எய்தும் வழி ஏற்கனவே இத்தகைய ஒரு நற்பயனைத் தந்துள்ள உத்தியை உயர்ந்தவராகிய கடவுளின் தொடர்ந்த வாழ்த்துகளால் தொடர்வது தவிர வேறென்னவாக இருக்க முடியும்?.....”(பக்.76) என்று கூடுதல் பணியாற்ற வேண்டிய தேவையை வலியுறுத்தி மறைமுகமாக பணவுதவியையும் வெளிப்படையாக கூடுதல் விடையூழியர்களையும் வேண்டுகிறார்.

            மொத்தத்தில் தமிழகத்தில் அதுவும் குறிப்பாக திருநெல்வேலி மண்டலத்தில் கால்டுவெலாருக்கு முந்திய விடையூழியப் பெருமக்கள் ஏழைச் சாணார்களுக்கென்று தொடங்கிவைத்த எழுத்தறிவிக்கும் பெரும் பணியை விரிவுபடுத்தும் வேறி பிடித்தாட்ட இங்கிலாந்திலுள்ள சமயத் தலைமையகத்தாரைத் தூண்டுவதற்கான கருவியாகவே இந் நூலைக் காண வேண்டியுள்ளது. எனவே இதிலுள்ள துல்லியமின்மைகளையும் மிகைக் கூற்றுகளையும் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பது என் கருத்து.


[1] Masks of Gods, I. Premitive Mythology, Joseph Campbell
[2] எமக்குக் கிடைத்த நூலின் ஒளிப்படியில் இப் பெயர் தெளிவாகப் பதியவில்லை. ஆகையால் அப் பெயரைச் சரியாகக் குறித்திருக்கிறேனா என்பது ஐயமாக உள்ளது.
[3] It must however be mentioned in connection with the above statement that the Tanjore Mission receives a monthly allowance of Rs. 350 in support of Protestant Schools. A grant for this purpose was originally made to Schwartz who rendered eminent services to the Government, and was increased on the petition of the late Mr.Eohdhoff to the present amount; the Court of Directors being satisfied , to quote their own letter “that the conduct and spirit of the Tanjore Mission had proved beneficial to the natives and tended to conciliate them to our Government.” At Madura also a Catachist was for some time past been paid by Government, then on the death or removal of the present incumbent of the office the allowance was axed. In strict accuracy it is right to mention these facts of which our friend the auther was not aware, though they scarcely affect his statement.- EDITOR      



[24] Thoothukudi District Gazetteer

1 மறுமொழிகள்:

சொன்னது…

அன்புள்ள அய்யா குமரிமைந்தன் அவர்களுக்கு வணக்கம்.! தாங்கள் எழுதிய ”நாடார்களின் வரலாறு” என்ற நூலின் இரண்டு பிரதிகளை வாங்க விரும்புகிறேன். எங்கு கிடைக்கும் என்பதனை தெரியப்படுத்த வேண்டுகிறேன். நாடார்களின் வரலாறு பற்றிய உங்கள் வலைத்தள தொடரினையும் (இன்று 22 ஆவது தொடர் படித்துக் கொண்டு இருக்கிறேன்), உங்கள் நூலினையும் படித்த பிறகு எனது கருத்தினை ‘நூல் விமர்சனம்’ என்ற தலைப்பின் கீழ் எனது வலைத்தளத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
அன்புடன்
தி.தமிழ் இளங்கோ
நாள்: 01.01.2016 - வெள்ளி,