4.2.16

வேலிகாத்தானும் மாட்டிறைச்சியும்


வேலிகாத்தானும் மாட்டிறைச்சியும்.
வேலிகாத்தான் எனப்படும் சீமைக் கருவேல உடை இப்போது முகாமையான அரசியல் பொருளாகி விட்டது. இது பற்றி சிறிது விரிவாகப் பார்ப்போம். நான் சிறுவனாக இருந்த போது நாட்டு உடை, சீமை உடை என்று வேலி அமைப்பதற்கான இரு வகை முள் மரங்களைப் பார்த்திருக்கிறேன். நாட்டு உடை என்பது தன் தண்டின் மீது குடை விரித்தால் போன்று கிளைகள் விரிந்திருக்கும். அதில் பெரும்பாலும் சிறிய இலைகளைக் கொண்ட கொடிகள் படர்ந்திருக்கும். மரத்தின் அடியில் புல் முளைத்திருக்கும். வழிச் செல்வோரும் கால்நடை மேய்ப்போரும் அமர்ந்து இளைப்பாறவும் பசியாறவும் செய்யலாம். மரத்தின் மூட்டில், அதாவது தண்டின் அடிப்புறத்தில் பெரும்பாலும் பிரண்டைகள் முளைத்து மேல் நோக்கிப் படரும். இம் மரத்தின் பூக்கள் வெள்ளை, மிகு வெளிர் சிவப்பு, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கொண்ட தும்புகளை வரிசைகளைக் கொண்டு அழகாக இருக்கும். பூத்த மரம் இனிய மணத்தைக் காற்றில் பரப்பும். இலை கரும் பச்சை நிறத்தில் சிறிதாக இருக்கும். காது வடித்த பெண்கள் காதில் அணியும் குணுக்கு என்னும் வளையத்தின் அளவில் ஒன்றரை அல்லது இரண்டு சுற்றுகளைக் கொண்டதாக காய் இருக்கும். மரக் கொம்பில் கழியின் கொக்கியை மாட்டி உலுக்கினால் காய்கள் உதிரும். கால்நடைகளுக்கு, குறிப்பாக ஆட்டுக்கு இதைத் தீவனமாக வைப்பர். இதன் முள் கனம் குறைந்ததாக கவைத்து ஆங்கில V வடிவில் ஆனால் கிளையில் நெருக்கமாக இருக்கும். கிளைப்புகள் நெருக்கமாக இருப்பதால் படல் போல் நட்டு வேலியிட இம் மரக் கிளைப்புகள் பொருத்தமானவை. சுண்ணாம்புக் காளவாய்களில் இம் மரக் கரியைப் பயன்படுத்தினால் பிற கரிகளைப் பயன்படுத்துவதை விட கூடுதல் சுண்ணாம்பு கிடைக்கும் என்பது தொண்டைமான்கள் எனப்படும் சுண்ணாப்பரவர்களின் கூற்று. இம்மரத்தில் சுண்ணாம்புச் சத்தாகிய கால்சியம் இருக்கும் போலும்.

உடைவேல் என்ற சொல்லுக்கு குடைவேலமரம் என்றும் குடை என்பதற்கு உடைவேல் என்றும் பொருள்களைத் தருகிறது கழகத் தமிழ் அகராதி. இந்தக் குடை வடிவம் இடியின் தாக்குதலிலிருந்து அதைக் காக்கிறது. அதனால் உடை உடப்பிறந்தா(உடன்பிறந்தாள்) புளி பெண்டாட்டி பனை பகையாளி என்ற சொலவடை வழக்கிலிருக்கிறது. வானிலிருந்து காற்றை ஊடறுத்து இறங்கும் நிலைமின்னாற்றலான(static electricity) இடி இருப்பவற்றில் உயரமானவை, ஊசி போன்று முனை கொண்டவை, பொன்ம(உலோக)ப் பொருள்கள், உயிருள்ளவை என்ற வரிசையில் இறங்கி அவற்றின் வழியாக அப்படி எதுவுமில்லையென்றால் நேரடியாக அது தோன்றும் இடத்திலிருந்து மிக அண்மையிலுள்ள புள்ளியில் நிலத்தினுள் பாய்கிறது. எனவே இடி மின்னல்களின் போது வெளியில் நிற்க நேர்ந்தால் பனைமரத்தை விட உடையும் புளியும் பாதுகாப்பானவை என்பது இதன் பொருள். மரம் எதுவும் இல்லையென்றால் தரையில் படுத்துவிடுவதுதான் மிகப் பாதுகாப்பு. குமரி மாவட்டம் தெங்கம்புதூரில் வேலியிட்ட, ஏறக்குறைய ½ ஏக்கர் தேரி மணல் நிலத்தில் எந்த முதலீடும் இன்றி தானே வளரும் உடையை ஏறக்குறைய ஆண்டுக்கு ஒரு முறை சுண்ணாம்புக் காளவாசல்களுக்கு விற்பதைப் பார்த்திருக்கிறேன். சுற்றிலும் தென்னந்தோப்புகளும் உள்ளன.

உடை மரத்தின் குடை விரித்தாற் போன்ற, ஆனால் ஏறக்குறைய தட்டையான வானம் பார்த்த அதன் பரப்பு குடை போன்றே வெய்யிலை ஊடுருவாமல் தடுக்கும் வகையில் அதன் சின்னஞ்சிறு கிளைப்புகள் பின்னிக் கிடக்கும். 1963ஆம் ஆண்டு குமரி மாவட்டம் கடுக்கரைக்கும் ஆரல்வாய்மொழிக்கும் இடையில் கிடக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ஆரல்வாய்மொழித் தொண்டு(இது கடுக்கரை மக்கள் வழங்கும் பெயர், ஆரல்வாய்மொழி மக்கள் இதனைக் கடுக்கரைத் தொண்டு என்பர்)என்ற இடத்தில் ஏற்கனவே வேலை தொடங்கி இடையில் இரண்டாம் உலகப் போர் வந்துவிட்டதால் ஆங்கில அரசால் கைவிடப்பட்ட, மேற்கே நோக்கிப் பாயும் சுங்கான் ஓடை என்ற நீரோட்டத்தை அந்தத் தொண்டின் வழியாக கிழக்கே கொண்டுசெல்லும் பொய்கை வாய்க்கால் திட்டத்தை மீட்டு செயற்படுத்தும் பணியில்[1] வெடி வைத்து ஒரு பாறையைத்  தகர்த்த போது ஒரு பெரும் கற்பாளம் மேல் நோக்கி உயர்ந்து பக்கத்தில் மலைச்சரிவு பள்ளத்தில் நின்ற, பெரிதென்று சொல்ல முடியாத சராசரியிலும் சிறிய ஓர் உடையின் உச்சியில் விழுந்தது. அதன் தாக்கத்தை அந்த உடையின் சிறு கிளைப்புகளும் முள்ளும் கொண்ட கட்டமைப்பு மரத்துக்கோ கிளைகளுக்கோ எந்தப் பாதிப்பும் இன்றி தாங்கிக் கொண்டது. நான் அந்தக் களத்திலிருந்து மாறுதலாகும் வரை அந்தக் கற்பாளம் அங்கேயே இருந்தது.

சீமை உடை என்பதை கருவேல உடை என்றும் கூறுவர். இதன் தண்டு கன்னங்கரேல் என்று இருக்கும். கிளைகள் அடர்த்தி குறைவாக குடத்தைக் கவிழ்த்து போன்று பொதுவாக மரங்களுக்கு இருக்கும் வடிவத்தைக் கொண்டிருக்கும். பூக்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். காய் நீளமாக சாம்பல் பூத்திருக்கும். இதனையும் உலுக்கி வீழ்த்தலாம், கால்நடை உணவாகப் பயன்படும். இதன் முள் உடை முள்ளைப் போல் கவர்த்தும் அதை விடத் தடித்தும் கலத்தமாக(நெருக்கம் குறைவாக)வும் காணப்படும். படலாக வேலி அடைக்கப் பொருந்தாது. கிடையாகப் போட்டுத்தான் வேலி அடைக்க முடியும்.

வேல மரம் என்பது மிகு வெளிர் பச்சை நிறத் தண்டும் கிளைகளும் கவைத்த சிறு முள்ளும் கொண்டது. ஆலும் வேலும் பல்லுக் குறுதி என்ற சொலவடை அடிப்படையில் வேம்பைப் போல் இந்த வேல மரக் குச்சியையும் சிலர் பயன்படுத்துகிறார்கள். வேல மரத்தைப் போலவே ஆனால் அதனிலும் சிறிய இலைகளைக் கொண்டதும் ஒற்றை முள்ளைக் கொண்டதுமான விடந்தை என்ற ஒரு மரம் உண்டு. உலக்கை உருவஅந்த மரம்தான் பயன்பட்டது. உடை, கருவேல் ஆகியவற்றை வெட்டிய கிளைகளை மரத்திலிருந்து இழுக்க உதவும் கொக்கியை ஒரு முனையிலும் அவற்றைச் சேர்த்துக் கட்டியோ கட்டாமலோ தலைக்கு மேல் தூக்க 2 அடி நீளம் வரை கொண்ட கவையை மறு முனையிலும் கொண்ட கவைக் கம்புகளை இம் மரக் கிளைகளிலிருந்து வெட்டி எடுப்பார்கள். புன்செய் நிலப் பகுதிகளில் முற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இது இருக்கும். நெல் சூடடித்த பின் வைக்கோலை வெட்டிஇழுக்கும் கனத்த கொக்கிகளையும் இம் மரக் கிளைகளை வெட்டியே எடுத்தனர். இலைகளிலேயே இதன் இலைதான் சிறியது என்பது குமரி மாவட்ட மரபு.

அடுத்து வருவது நம்சீமைக் கருவேல் எனப்படும் வேலிகாத்தான். சீமை என்பது சேய்மை என்பதன் திரிபு, அதாவது தொலைவிலிருந்து வந்த அயல் நாட்டது என்பதன் குறியீடு. இதன் முள் உடை, கருவேல் முள் போன்று கவைத்தது. கனம் மிகுந்தது. காலில் தைத்தால் பெரும்பாலோருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை உடையது. இம் மரப் புதர்களுக்குள் இருந்தால் சவுக்குத் தோப்பினுள் போல் உடல் காந்தும், அதாவது வெக்கையாக இருக்கும். காய் பச்சை நிறமாகவும் கருவேல் உடையினதை விட நீளமாகவும் இருக்கும். இது உள்நாட்டு மரங்களின் வளர்ச்சியைத் தடுப்பதில்லை. உலர்ந்த காய்களை உடைத்து விதைகளை எடுத்து மண்ணில் புதைத்து தண்ணீர் விட்டால் முளைக்காது. இது பற்றிய என் பட்டறிவைப் பகிர்தல் நன்று. என் துணைவியாருக்கு சீதனமாக குமரி மாவட்ட தெங்கம்புதூர் தேரி என்ற பகுதியில் ஏக்கர் நிலம் கிடந்தது. தேரி மணல் இரு பருவக் காற்றுகளின் போதும் அங்கும் இங்கும் அடித்துச் செல்லப்பட்டு மேடும் பள்ளமும் மாறி மாறி உருவாகும். அந்த நிலத்தில் வேலியமைத்து மணல் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி தென்னை வளர்ப்பது என்ற திட்டத்தில் மாமனாரிடம் சொல்லி மனைவியின் பங்கை அளந்து கல் போட்டேன். அப்போது (1969 – 70) நான் மதுரை(இப்போது திண்டுக்கல்) மாவட்டம் நத்தத்தில் பணியாற்றினேன். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 5 கிலோ வேலிகாத்தான் விதை இலவயமாகக் கிடைத்தது. கல் போட்ட நிலத்தில் மணலால் வரப்பமைத்து 5 கிலோ விதைகளையும் வரப்பில் விதைத்தேன். ஒரு விதை கூட முளைக்கவில்லை. இது ஒரு பட்டறிவு. பின்னர் 1992 ஆண்டளவில் நானும் இன்னொருவரும் கூட்டாக நடத்திய கோழிப்பண்ணை ஒன்றில் வேலிகாத்தான் வேலியமைக்க ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அறிவுரை கேட்டேன். நன்கு சூடாக்கிய நீரில் இரவில் போட்டுவைத்து விடிந்த பின் எடுத்து சணல் சாக்கினுள் வைத்துச் சுற்றி இரண்டு மூன்று நாள் உலராமல் நீர் தெளிக்கச் சொன்னார்கள். வெந்நீரிலிருந்து காலையில் எடுத்த போது தோல் வெடித்திருந்தது. சாக்கில் சுற்றி வைத்த ஒன்றிரண்டு நாட்களில் வேர் வெளிவந்து சாக்கில் பதிந்திருந்தது. பின்னர் நிலத்தில் நட்டுத் தண்ணீர் விட்ட போது தளிர் விட்டு வளர்ந்தது. இப்போது என் கேள்வி நம் நிலங்களில் அங்கிங்கெனாதபடி எங்கும் வளரும் வேலிகாத்தான்களுக்கு இந்தப் பக்குவங்களை யார் செய்கிறார்கள் என்பதாகும். அதற்கான விடையில்தான் வேலிகாத்தானை அழிப்பதற்கான உத்தி அடங்கியிருக்கிறது.

இந்தப் பக்குவத்தை மாடு செய்கிறது. இம் மரத்தின் காய்களைத் தின்னும் மாட்டின் சாணத்தில் செரிக்காமல் வெளிப்படும் விதைகள் எளிதில் முளைத்துவிடுகின்றன. மாடு உண்ணாமல் தரையில் விழும் விதைகள் முளைப்பதில்லை என்பதே உண்மை. இந்த முள் மரம் இன்று குமரி மாவட்டம் தவிர்த்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியுள்ளதன் பின்புலத்தைப் பார்ப்போமா?

1950களில் பொதுமைக் கட்சியினரின் நெருக்குதலால் குத்தகை ஒழிப்பும் நில உச்சவரம்பும் கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட நிகர்மை(சோசலிச) அனைத்துலகியத்தின் கிளையான நிகர்மைக் கட்சியும் கடும் பரப்பல் செய்த்து. குத்தகை ஒழிப்பால் விடுபட்டு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த அடித்தள மக்கள் கைகளில் வந்து சேர்ந்த துண்டுதுக்காணி நிலங்கள் அவர்கள் கைகளில் திரண்டு சொந்த வேளாண்மையில் பெரும்பண்ணை வேளாண்மை உருவாகி விடாமல் தடுப்பதாகவே இவ் விரு கட்சியினரும் முன்வைத்த நில உச்சவரம்பு முழக்கம் அமைந்தது. இதைத் தொடர்ந்து 1964இல் கொடுங்கோலன் லால் பகதூர் சாத்திரி காலத்தில் ஏற்பட்ட வரட்சிக் காலத்தில் வழக்கமாக நடைபெறும் அரிசி இறக்குமதியைக் கைவிட்டதோடு கிழமைக்கு ஒரு நாள் மக்களைப் பட்டினி கிடக்கும்படி அறிவுறுத்தியதிலிருந்து தொடங்கியது இந்திய உழவர்கள் மீதான அடக்குமுறையும் ஒடுக்குமுறையும். (பின்னோக்கிப் பார்த்தால் அந்தப் பஞ்சம் உண்மையிலேயே உருவானதா அல்லது வழக்கம் போல புள்ளிக் கணக்குத் துறையினரைக் கதைவிட வைத்து பஞ்சத்தை முன்னுரைக்க, - இப்போதைய பருப்புப் பதுக்கல் போல் –ஆட்சியாளர்கள் அரிசி இறக்குமதியை நிறுத்தி பஞ்சத்தைச் செயற்கையாக உருவாக்கி வாணிகர்களைப் பதுக்க வைத்தார்களா என்று இப்போது ஐயமாக இருக்கிறது. இப்போதும் பருப்புகளின் கையிருப்புக்கு வரம்பு விதித்து அரிசி, கோதுமை விளைப்போர் மீது கொடுங்கோலன் சாத்திரி கட்டவிழ்த்துவிட்டது போல் கொடுங்கோன்மையை பருப்பு விளைப்போர் மீதும் கட்டவிழ்க்கத் திட்டமிடுவதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.) நெல்லையும் அரிசியையும் சாலைகளில் கொண்டுசெல்வது தடுக்கப்பட்டது. துண்டுதுக்காணி நிலம் வைத்திருக்கும் குறு உழவன் கூட தன் நிலத்தில் விளையும் தெல்லை வயலிலிருந்து நெல்லடி களத்துக்கும் அடித்த நெல்லை அங்கிருந்து வீட்டுக்கும் கொண்டு செல்ல வட்டாட்சியரிடம் இசைவு பெற வேண்டும். அதற்காக அவன் வருவாய் ஊர் ஆள்வினை அலுவலர்(வி.ஏ.ஓ. – அந் நாளில் கர்ணம் எனப்படும் கணக்குப்பிள்ளை), வருவாய் ஆய்வாளர், வட்ட அலுவலக அதிகாரிகள் ஆகியவர்களிடையில் நாய் போல் அலைய வேண்டும். திமிர் பிடித்த இந்த அதிகாரிகள் கூட்டம், கல்வியறிவற்ற இந்த அப்பாவி ஏழைகளை எப்படி நடத்துவார்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதானே! உழவனும் அரிசி ஆலைகளும் தங்கள் கைகளில் இருப்பு வைத்துக்கொள்ளும் நெல், அரிசிக்கு வரம்பு நிறுவப்பட்டது. அதைத் தாண்டினால் பறிமுதல் செய்வார்கள். கூலி அரிசி ஆலைகளுக்கு மின்சாரப் பயன்பாட்டுக்குக் கூட வரம்பு நிறுவப்பட்டது.

முன்பெல்லாம் தங்கள் தேவைக்கு மிஞ்சி நெல் விளைச்சல் உள்ளவர்கள் அறுவடைக் காலத்தில் விலை குறைவாகவும் அடுத்த அறுவடைக்கு முன்பு உச்சத்திலும் இருக்கும் என்பதால் அறுத்த உடன் விற்பதில்லை. ஆனால் அன்றாடச் செலவுக்கென்று அவ்வப்போது ஓரிரு மரக்கால்கள் இல்லத்தரசிகள் விற்பர். இதை வாங்கவென்று மிதிவண்டியிலும் மாட்டு வண்டியிலும் அன்றாடங்காய்ச்சி “வாணிக”க் கூலிக் கூட்டம் ஒன்று வீடுவீடாக அலையும். அவர்களிமிருந்து அதை வாங்கி அவித்து உலர்த்தி கைக்குத்தலாக அல்லது அரிசி ஆலைகளில் அரிசியாக்கி கடைத்தெரு ஓரத்தில் வயிறு காய்ந்த குடும்பத் தலைவிகள் விற்று வயிற்றைக் கழுவி வந்தனர். (இந்த அன்றாடங்காய்ச்சி உடலுழைப்பாளர்களை வாணிகர்கள் என்று வகைப்படுத்துவது பொதுமை மற்றும் இடங்கைப் புத்திசாலிகளின் வழக்கம். அவர்கள்தாம் விலை உயர்வுக்குக் காரணம் என்றும் இந்த அறிவிலிகள் குற்றம் சாட்டுவர்.) இந்த இருவகை “வாணிகர்”களையும் களத்திலிருந்து முற்றாக ஒழித்தனர் ஆட்சியாளர்கள். அதுவும் அந்த நெல் “வாணிகர்”கள் மீது நடத்திய கொடுமைகள் கேட்டால் நெஞ்சு நடுங்கும். 1966 – 68 ஆண்டுகளில் காஞ்சிபுரத்தில் பணியாற்றினேன். அன்றைய செங்கல்பட்டு, வடாற்காடு, தென்னாற்காடு, சென்னை மாவட்டங்களிலுள்ள குளங்கள், ஆறுகள் போன்ற நீர் வள அமைப்புகளைப் புலனாய்வது எங்கள் பணி. இதற்காக மலையுந்தில் காடு மேடெல்லாம் அலைவோம். அப்போது பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, கான்துறை போன்றவற்றுக்குத்தான் மலையுந்துகள் உண்டு. எங்கள் மலையுந்தின் ஒலி கேட்டதும் வருவாய்த்துறை அல்லது காவல்துறை வண்டியாக இருக்கும் என்று நினைத்து இந்த மிதிவண்டி “வாணிகர்”கள் மிதிவண்டியை அதிலிருக்கும் நெல் மூட்டையோடு அங்கேயே போட்டுவிட்டு அங்கு தாராளமாக வளர்ந்திருக்கும் வேலிகாத்தான் புதருக்குள் ஓடிப்போய்ப் பதுங்கிக்கொள்வர். அவர்கள் நிலையை நினைக்கும் போது மனது வலிக்கும்.    

அப்போதெல்லாம் நெல்லும் அரிசியும் முகத்தலிலேயே, அதாவது படி, மரக்கால் என்றே அளக்கப்பட்டன. நெல் அளவில் பாதி புழுங்கல் அரிசி என்பது நடைமுறை, அப்படி என்றால் நெல் விலையில் இரு மடங்கு அரிசி விலை என்பது எளிய கணக்கு. (இப்போது கிலோவிலும் தன்களிலும் அளவிடப்படுகிறது. நெல்லின் தரத்தைப் பொறுத்து அதில் 60 முதல் 65 நூற்றுமேனி அரிசியின் எடை என்பது இப்போது நடைமுறை). அதாவது அன்றாடங்காய்ச்சி நெல் “வாணிகன்” என்ன விலைக்கு வாங்குகிறானோ அதைப்போல் இரு மடங்கு விலைக்கு அன்றாடங்காய்ச்சி அரிசி “வாணிக”ப்பெண் விற்பாள். இதற்குள்தான் இந்த இருவரும் தங்கள் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த இருவரின் இணைந்த செயற்பாடுதான் நெல்லை விற்போராகிய விளைப்போருக்கும் வாங்குவோராகிய நுகர்வோருக்கும் இடையில் தரகர் என்பவரின் இடையீடில்லாத ஒரு சமநிலையை முறிவின்றிப் பாராமரித்து வந்தது. இங்கு பதுக்கல்காரர்களுக்கு இடமே இல்லை. மிதி வண்டி வாணிகன் வாங்கும் விலையை விடச் சிறிது கூடுதல் விலைக்கு நிலம் வைத்திருப்போரும் மிதிவண்டி “வாணிகனும்” கொண்டுவரும் நெல்லை மொத்த வாணிகன் வாங்கி கைக்குத்தல் “வாணிக”ப் பெண்ணுக்கும் பிறருக்கும் விற்பர்.

நெல் தரமுள்ளதாய் இருந்தால் அரிசி கொஞ்சம் “கூட்டிக் குத்தும்”. “வாணிக”ப்பெண் மகிழ்வாள். குருணை அவளது குடும்பச் சோற்றுக்கு ஆயிற்று. தவிட்டை விலைக்கு விற்கலாம் அல்லது கோழி வளர்க்கலாம். உமியை அதற்கென்று பனை ஈர்க்கால் பின்னப்பட்ட உமியரிப்பு எனும் சல்லடையில் சலித்து கீழே விழும் “குத்துமித் தவிட்டை” வண்ணார்களும் சுண்ணாப் பரவர்களும் தங்கள் கழுதைக்கு உணவாக வாங்கிக்கொள்வர்.

நில உச்சவரம்பாலும் குத்தகைக் ஒழிப்பு என்ற பெயரிலான குத்தகை நிலைப்பு[2]ச் சட்டத்தாலும் இப்போது சின்னஞ்சிறு கைப்பற்றுகளில் பயிர் செய்ய வேண்டி வந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அடிநிலை மக்களைப் பெரும்பாலராகக் கொண்டது இன்றைய உழவர் குமுகம். முன்பு பணம்படைத்த நடுத்தர வகுப்பினரிடம் வேளாண்மை இருந்தபோது வருமானம் மிக்கதாக, மதிப்பு மிக்கதாக வேளாண்மையும் செல்வாக்கு மிக்கவர்களாக அந் நிலவுடைமையாளர்களும் இருந்தனர். வயலை நம்பி வாழ்ந்திருந்தா சின்னையா ஒரு பயலை நம்பத் தேவயில்லை கண்ணையா என மதர்த்திருந்தனர் உழுவிப்போரான நில உடைமையாளர்கள். அவர்களது மீதப் பணம் சென்னை போன்ற நகரங்களில் முதலீடாக நுழைய முயன்றதைக் கண்டு அரண்ட பனியா – பார்சிக் கும்பலின் கையாள்களாகத்தான் பொதுமை, நிகர்மைக் கட்சியினர் களத்திலிறங்கினர் என்பது என் கணிப்பு. இன்றும் இடங்கை இயக்கத்தினர் என வகைப்படுத்தப்பட்டோரின் செயற்பாடுகள் மேற்குறிப்பிட்ட கும்பலுக்குப் போட்டியாக உள்ளூர் மக்கள் எவரும் தலைதூக்கிவிடக்கூடாது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் இருக்கிறது. சென்ற தலைமுறைப் பொதுமைத் தலைவர்கள் டாட்டா, பிர்லா போன்றவர்கள்தாம் இந்திய “தேசிய” முதலாளிகள் என்று வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர்.

என்று நிலங்கள் அடித்தளத்து மக்களின் கைகளுக்கு வந்ததோ அன்றே ஆட்சியாளர்களால் வேளாண்மை தீண்டத்தகாதது ஆக்கப்பட்டுவிட்டது. ஏழையான உழவன் பயிர்க் கடனுக்காக வங்கிகளிலும் அரசு அதிகாரிகளிடமும் கூனிக் குறுகி நிற்க வேண்டும். விதை, உரம், பூச்சிக்கொல்லிக்களுக்காக அலுவலகங்களில் காத்துக்கிடக்க வேண்டும். விளைச்சலை விற்பதற்காக கொள்முதல் நிலைய அலுவலர்களிடமும் உரிமம் பெற்ற வாணிகனிடமும் மடியைப் பிடித்து இரக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் சாக்கில்லை, தைக்க சணலில்லை, ஊசியில்லை என்று கையை விரித்து உழவன் கொண்டுவந்த நெல் வெட்ட வெளியில் கொட்டப்பட்டு மழையில் முளைத்து அழிவதை அடிக்கடி தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். அணைகளிலும் ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் நீர் பொங்கி வழிந்தாலும் பாசன நீரைத் திறந்துவிடுவதற்காக ஆங்காங்கு உள்ள உழவர் சங்கத்துக்குப் பணம் கொடுத்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கைக்கூலி கொடுக்க வேண்டும். இப்போது பாசன மடைகளைத் திறக்கவே முதலமைச்சர் ஆணையிட வேண்டியுள்ளது. அவருக்கு மாமுல் போய்ச் சேர வேண்டாமா?

இந்தியக் குடிமகன் தன் விருப்பம் போல் நெல் – அரிசி வாணிகத்தில் இறங்க முடியாது. அதற்கென்று அரசு வழங்கும் உரிமத்தைப் பெற்றவனிடம்தான் உழவன் விற்க முடியும். அதனால் உரிமம் பெற்ற வாணிகனிடம் அவன் சொன்ன விலைக்குத்தான் உழவன் நெல்லை விற்க வேண்டும். அவனிடமிருந்து ஆட்சியாளருக்கு அவ்வப்போது பங்கு போய்விடும்.

இந்த முறையில்தான் விளைத்த பொருளுக்கு விலை சொல்லும் உரிமை உழவனுக்கு இல்லை என்பது சொல்லாமலேயே விளங்கும். எனவே விளைபொருள் விலை நிறுவல் ஆணையம் ஒன்றை நடுவரசு உருவாக்கி வைத்துள்ளது. இதற்கும் அடி எடுத்துக் கொடுத்தவர்கள் நம் “இடங்கையர்கள்”(இடதுசாரிகள்)தாம். யார் யாரையோ உறுப்பினராக்கி உழவர்களின் கருந்துகளைப் புறக்கணித்து தன் மனம் போனபடி அது விலை நிறுவும். மாநில அரசும் தன் அரசியல் நிலைப்புக்காக பெயருக்கு ஒரு தொகையைக் “கூட்டி”க் கொடுக்கும். இந்த விலை கூட கொள்முதல் நிலையங்களும் இந்த உரிமம் பெற்ற வாணிகனும் இணைந்து நடத்தும், மேலே குறிப்பிட்ட கண்ணாமூஞ்சி விளையாட்டால் உழவனுக்குக் கிடைக்காது.

 ஏழைகளைக் கடைத்தேற்றுவதற்கென்றே பிறவியெடுத்த பொதுமைத் தோழர்கள் உழவர்களும் “வாணிகர்”களுமான இந்த ஏழைகள் மேற்குறிப்பிட்டவாறு “கடைத்தேறுவதை”க் கண்டு மட்டிலா மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். ஆட்சியாளர்களைக் கொண்டு செய்தால் மட்டும் போதுமா? நாமாக நம் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? ஒன்றென்ன நிறையவே செய்தார்கள். உழுதொழிலாளர்களிடம் மகமை பெற்றுக்கொண்டு கூலி உயர்வுப் போராட்டங்கள் நடத்துவர். அரசிடம் கேட்டு ஏரி, குளம், வாய்க்கால், ஆற்றுப் புறம்போக்குகளை இலவய வீட்டுமனையாக்கித் தாருங்கள் என்று கேட்பர். இந்த இலவய வீட்டுமனைப் பட்டா முறை இன்று தமிழகத்தில் கோடானு கோடி பணம் புரளும் ஒரு தொழிலாகும். அதற்கு ஒரு தனிக் கட்டுரையே எழுதலாம்.

ஆட்சியாளர்களும் பொதுமைக் கட்சியினரும் காலங்காலமாக இந்த உழவர் குடிமக்களை அழுத்தி, அவர்கள் உயிர்நிலைகள் அனைத்தையும் தங்கள் கைபிடிக்குள் வைத்து அவர்களை வாட்டி  வந்த சாதிகளின் மரபில் வந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழக வேளாண்மையை முழுமையாக அழித்ததில் கருணாநிதிக்கு முழுப்பங்கு உண்டு. முதன்முதலில் இவர் முதலமைச்சராக இருந்த போது தஞ்சை மாவட்ட எல்லைகளை நெல் நடமாட்டத்துக்கு அடைத்து ஆணையிடுவார். திடீரெனத் திறக்க ஆணையிடுவார். இரவோடிரவாக பல்லாயிரம் தன்கள் மாநிலத்தை விட்டு வெளியேறும். மீண்டும் அடைப்பு, திறப்பு என்று பெரும் கொள்ளை நடந்தது. கடல் வழியாக அண்டை நாடுகளுக்குக் கூடக் கடத்தப்பட்டதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன.

தஞ்சை மாவட்டத்தில் பொதுவாக விளைக்கப்படும் நெல் சம்பா போன்ற பருக்கன் வகைகள்தாம்.
வட்டத் தலைநகரல்லாத பேரூர்களில் கூட உணவகங்களில் பருக்கன் அரிசிச் சோறுதான் போடுவார்கள். 1960களில் அவ் வட்டாரங்களில் பணியாற்றிய போது என் பட்டறிவு இது. அம் மாவட்டத்தின் நெல் வேளாண்மையே கேரள மக்களின் தேவையை எதிர்நோக்கியது என்பதுதான் இதற்குக் காரணம். தஞ்சை மாவட்ட நெல் கேரளத்துக்குச் சென்றுவிட தமிழகத்துத் தேவையை ஆந்திரம் நிறைவேற்றி வந்தது. குமரி மாவட்டத்தில் நெல் விலை குறைய வேண்டுமென்றால் வள்ளியூருக்கு ஆந்திர நெல் வந்து இறங்க வேண்டுமென்பது அந் நாட்களின் நிலை.

            1976இல் கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டதிலிருந்து 1987இல் ம.கோ.இரா. மறைந்து 1989இல் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் வரை தமிழகத்தில் அரிசித் தட்டுப்பாடே வரவில்லை. அரிசியின் அரசியலைப் புரிந்துகொண்டிருந்த ம.கோ.இரா. ஆந்திரத்திலிருந்து நெல்லும் அரிசியும் தமிழகத்தினுள் நுழைவதைத் தடுக்கவில்லை. ஆந்திரத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் தொடர்வண்டிகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான தன்கள் அரிசி அன்றாடங்காய்ச்சி வாணிகர்கள் மூலம் தமிழகத்தினுள் நுழைந்து குமரி மாவட்டம் வரை பங்கீடானது. மக்கள் அந்த வகையில் மன நிறைவுடனிருந்தனர். அந்தப் பொற்காலம் ம.கோ.இரா.வுடன் முடிவுக்கு  வந்தது.

            தமிழீனத் தலைவர் மீண்டும் வந்தார். அவரது நெருக்கமாக துணைவர் அண்டப் புளுகின் அடைக்கலமாம் ஆர்க்காட்டு வீராசாமி உணவுத்துறையில் அமர்ந்தார். அரிசி ஆலைகளில் தன் கைவரிசையைக் காட்டினார். ஆலை உடைமையாளர்கள் விறைத்து நின்றனர். அண்டப் புளுகர் பின்வாங்க வேண்டியதாயிற்று. ஆனால் உழவர்கள் மீதான ஒடுக்கல் வழக்கம் போல் தொடர்ந்தது.

அடுத்து, பல கோடி உரூபாய்கள் முதலீட்டில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை நிறுவினர். அங்கு உழவர்கள் தங்கள் வேளாண் விளைபொருட்களை இருப்பு வைத்து முன்பணமாக அவற்றின் விலையில் ¾ பகுதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றனர். இங்கு உரிமம் பெற்ற வாணிகனே உழவன் என்ற சான்றைப் பெற முடிந்தது. அவன் உண்மையில் தான் இட்ட முதலைப் போல் மூன்று மடங்கு பெறுமானமுள்ள வேளாண் விளைபொருட்களை வாங்கிப் பதுக்க முடிந்தது. இதற்குக் கட்டடம், காவல் எல்லாம் வேளாண்குடிகள் உட்பட அனைத்து மக்களின் வரிப்பணத்தில்.

இந்த உழுகுடிகளும் எதிர்த்துப் போராடத் திராணியற்றவர்கள். அவர்களுடைய வாழ்நிலையே இந்தக் குமுகியல் - பொருளியல் ஒடுக்குமுறையாளர்களை அண்டி அவர்கள் முன் கையேந்தி வாழ வேண்டிவர்களாக அவர்களை ஆக்கி வைத்துள்ளது. துண்டு துக்காணி நிலத்தை வைத்துக்கொண்டு ஆண்டு முழுதும் வயிற்றுப்பாட்டைப் பார்க்க முடியாது. வேளாண்மை தவிர கூடுதலாக வேறு வேலை செய்தால்தான் பிழைக்க வேண்டிய இழிநிலை. (கணிசமாக நிலம் வைத்திருப்பவர்கள் கூட வீட்டுக்கு வயலிலிருந்து நெல் வந்து இறங்கும் பெருமைக்காகத்தான் வேளாண்மமயில் இன்று ஈடுபட்டிருக்கிறார்களேயன்றி வாழ்க்கைச் செலவுகளுக்கு வேறு தொழில்களையே நம்பியிருக்கின்றனர் என்பதுதான் இன்றைய நிலை.) காலங்காலமாக இந்த உயர்குடியினருக்கு அடங்கி வாழ்ந்து பழகி அந்த அடிமை மனப்பான்மை குருதியில் ஊறிப்போய் இருக்கிறது. இந்தப் பின்னணியில் அது இலவயம், இது இலவயம் என்று சொல்லி அவர்களை அங்கும் இங்கும் ஓட வைத்து அவர்களின் உள்ளங்களில் ஏதாவது உரம் மிச்சமாக இருந்தாலும் அதையும் அழித்துவிட்டார்கள். நடுத்தரப் பணக்காரர்களையே வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்காகவும் எரிவளி அடுப்புக்காகவும் தெருவில் ஓடவிட்டு வெற்றி பெற்று வேடிக்கை பார்க்கும் கொடிய கயவர்கள் அல்லவா இவர்கள்?

இந்த நிலையில்தான் கருணாநிதி பிறந்த நாளுக்கென்று ஓர் அறிவிப்பு, இரண்டு உரூபாய்களுக்கு ஒரு கிலோ அரிசி என்று[3].

மூன்று படி இலக்கு(இலட்சியம்) ஒரு படி உறுதி(நிச்சயம்) என்று ஆரவாரத்தோடு தொடக்கப்பட்ட படியரிசித் திட்டம் தொடங்கப்பட்ட 1967இல் கிலோ அரிசிக்கு விலை துல்லியமாக 56.25 காசுகள் (இரண்டு கிலோ அரிசி 1 என்ற கணக்கில், தோராயமாக 60 காசுகள்.) அந்த ஆண்டில் பொதுப்பணித்துறை வீதங்கள் பட்டியலில்(Schedule of Rate) ஓர் ஆணின் அன்றாடக் கூலி 75 காசுகள். கருணாநிதி இரண்டு உரூபாவுக்கு ஒரு கிலோ அரசி வழங்கத் தொடங்கிய போது ஆணின் கூலி உரு 100. 1967 கணக்குப் படி பார்த்தால், 60/75 100 = 80, கிலோ அரிசிக்கு உரூ 80/- கொடுக்க வேண்டும். இவ்வாறு அனைத்துப் பண்டங்கள், கூலிகள் வீதம் 133 மடங்கு உயர்ந்திருக்க அரிசி விலை 2.00/0.60 = 3.3 மடங்குதான் உயர்ந்திருக்கிறது. அதாவது அரிசியின் விலை அது இருக்க வேண்டிய விலையிலிருந்து நாற்பதில் ஒரு பங்காக வல்லந்தமாக ஆட்சி அதிகாரத்தின் துணையுடன் குறைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்துப் போராடும் நிலையில் உழவன் இல்லை. முன்பு போல் நடுத்தர உழவர்கள் இல்லை. இவர்கள் ஊர்ப்புறங்களில் வாழ்ந்து நேரடியாக வேளாண்மையைச் செய்தவர்கள். சீனத்தைத் தலைமையாகக் கொண்ட மார்க்சியப் பொதுமையினர் தலைமையில் பொதுமைக் கட்சிகள் முகத்தைக் காட்ட அதற்குப் பின்னணியிலிருந்த அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்ட நிகர்மைக் கட்சியினர் நெருக்குதலால் பாட்டாளியரின் பெயரால் நடைமுறைப்படுத்தப்பட்ட நில  உச்சவரம்பு, குத்தகை ஒழிப்புத் திட்டங்களை, வாக்கு வங்கி அரசியல் சூழலில் எவராலும் எதிர்த்து நிற்க முடியவில்லை. அத்துடன் அரிசி விலையை அரசியலாக்கியும் லால்பகதூர் சாத்திரியின் கொடுங்கோன்மையாலும் வேளாண்மை இழிதொழிலாகிப் போனது. அரிசி விலையால் நடுத்தர உழவர்கள் பணம் சேர்க்கிறார்கள் என்று வைத்து நடத்திய அரசியலால், இப்போது அந்த நடுத்தர உழவர்கள் களத்திலிருந்து அகன்ற பின் புதிதாகக் களத்தில் நுழைந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழைகளான முன்னாள் குத்தகை உழவர்களும் வேளாண் கூலித் தொழிலாளர்களும் மாட்டிக்கொண்டார்கள். உண்மையில் வேளாண்மையின் குரல்வளை அவர்கள் கையில் சிக்கிக் கொண்டது. தங்களது தாழ்ந்த பண்பாட்டு வளர்ச்சியால் குறைந்த வாழ்க்கைச் செலவு, தானே உழைப்பதனால் கூலி கொடுக்கத் தேவை இல்லாதது, நெடுநாள் வேளாண்மைப் பட்டறிவால் அத்துபடியான வேளாண் தொழில்நுட்பம் ஆகியவற்றால் சிறிது சிறிதாக நிலத்தை வாங்கி உச்சவரம்புக்கு மேலே சேர்த்த விரல் விட்டு எண்ணத்தக்க எண்ணிக்கையிலான உழவர்களும் நில உச்சவரம்புச் சட்டத்தினால் அதை இணைத்துக் காட்டி கடன் முதலிய வசதிகளைப் பெற முடியவில்லை. பொதுமைத் தோழர்கள் தமது அருஞ்செயல் என்று மார்தட்டித் திரியும் நில உச்சவரம்புச் சட்டம், டாட்டாக்கள் உப்பளம் அமைப்பதற்காக 20,000 ஏக்கர் நிலத்தை இராமநாதபுரம் மாவட்டத்தில் வாங்குவது, அமெரிக்காவுக்குத் தேவைப்படும் பயிர்களைச் செய்வது போன்றவற்றுக்கு விதிவிலக்கு அளித்துள்ளன என்ற உண்மையை இன்றுவரை மறைத்துள்ளனர்.

வேளாண்மை இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாவதற்கு முன்பு நடுத்தர உழவர்கள் ஒவ்வொரு பயிர்க் காலத்திலும் அரிசி ஆலை நடத்துபவர்களிடமிருந்து முன்பணம் வாங்கிப் பயிர்ச் செலவுகளை எதிர்கொள்வர். அறுவடையாகும் போது நெல் விலை அடிமட்டத்தில் இருக்கும். அந்த விலையில், தாங்கள்  பெற்ற முன்பணத்துக்கு உரிய அளவு நெல்லை ஆலைகளுக்கு அளந்துவிட்டு எஞ்சியதை விலை ஏறிய பின் விற்பர். இடைப்பட்ட காலத்து விலை ஏற்றத்துக்கேற்ப தரகர்களின் திருவிளையாடல்களுக்கு இடமின்றி மிதிவண்டிக்காரனும் கைக்குத்தல் பெண்ணும் ஒரு சமநிலையைப் பேணியதை மேலே பார்த்தோமல்லவா? இந்த வலிமையான பொறியமைப்புதான் கொடுங்கோலன் லால்பகதூர் சாத்திரியால், சேய் கிசான்!, சேய் சவான்! (உழவன் வெல்க!, போர்வீரன் வெல்க!) என்ற பொய் முழக்கத்தின் பின்னணியில் அடித்து நொறுக்கப்பட்டது.

இதற்குப் பின் ஆட்சியாளர்களுக்குக் கைக்கூலி கொடுத்த பதுக்கல்காரர்களும் கருணாநிதி போன்று அரிசியையும் நெல்லையும் வெளிநாடுகளுக்கே கடத்திய அரசியல் பொறுக்கிகளும் தமிழக, இந்திய வேளாண்மையையே அழிக்க முடிந்தது.

கிட்டத்தட்ட அறுபதாண்டுகளுக்கு முன் இந்த அழிப்பு தற்செயலாகவோ, இந்திய அரசியல்வாணர்களின் தனித்த திட்டமிடலாலோ நடைபெறவில்லை. உலகளாவிய நிலையில் அமெரிக்காவின் திட்டத்தின்படியே நடைபெற்றது என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

தென் அரைக்கோளத்தின் புல்வெளிகளில், குறிப்பாக, அர்சென்றீனா, உருகுவே ஆகியவற்றில் கால்நடை வளர்ப்பு முகாமையானது; ஆனால் இந் நிலங்களுக்கான போட்டியில் சோறு இறைச்சியை வெளியேற்றும் தெளிவான போங்கு உள்ளது. முன்பு நிலவிய எண்ணற்ற பெரும் பெரும் மேய்ச்சல் வளாகங்கள் இப்போது இல்லை. அவை உடைபட்டு வருகின்றன. கோதுமை வேளாண்மை பெரும் முகாமை பெற்று வருகிறது. எனவே இறைச்சி விளைப்புக்கான புதிய நிலங்களைக் கண்டுபிடிப்பதற்கான தேவை உருவாகியுள்ளது; ஏற்கனவே இந்தக் குறிப்பிட்ட வகையில் திருப்புகை[4] மண்டலத்தின் புல்வெளிகள் சுட்டப்பட்டுவிட்டன.

In the grasslands of the Southern Hemisphere, particularly in the Argentine and Uruguay, cattle rearing is important: but there is a distinct tendency for bread to oust meat in the competition for these lands. There are no longer the numerous huge ranches that formerly existed; they are being broken up, and wheat - farming becomes of greater importance. Hence the need for finding new lands for meat production, and reference has already been made to the importance of the Tropical Grasslands in this particular respect[5].

1936 இல் முதல் பதிப்புடன் 1951இல் 5ஆவது பதிப்பைக் கண்ட வாணிகப் புவியியல்(Commercial Geography) என்ற நூலில் காணப்படும் செய்தியாகும் இது.

இந்தப் பொருள் குறித்து தென்னமெரிக்க நாடுகளிலும் பிலிப்பைன்சு போன்ற தன் குடியேற்ற நாடுகளிலும் கள ஆய்வு செய்து அமெரிக்கா பின்னர் இந்தியா போன்ற நாடுகளில் செயற்படுத்துவது வழக்கம். தன்னிடமிருந்து உதவி பெறும் நாடுகளில் அந்த உதவியால் அந்த நாடுகளில் எத்தகைய குமுகியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஆய்ந்து அதற்கேற்பப் புது உத்திகளை வகுப்பதும் வெற்றி பெற்ற உத்திகளைப் புதிய நாடுகளில் புகுத்துவதும் அதன் வழக்கம். இந்த வகையில் தென்னமெரிக்க நாடுகளில் தன் உதவிகளால் நிகழ்ந்துள்ள மாற்றங்களை ஒவ்வொரு நாட்டையும் ஒரு மாந்தநூல் வல்லாரைக் கொண்டு ஆய்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட நூல் இலத்தீன் அமெரிக்காவில் குமுகியல் மாற்றங்கள்  (Social Changes in Latin America). அதில் அன்று அமெரிக்க வல்லரசை அச்சுறுத்திய பொதுமைப் புரட்சி என்ற கண்ணோட்டத்தில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் கூறப்பட்டுள்ளன. அமெரிக்காவின் உதவிகளால் உருவான நடுத்தர வகுப்பு எந்த விதமான புரட்சியையும் நடத்த விடாமல் தடுக்கும் தன்மைகொண்டது என்பதாகும் அது. அமெரிக்கா உருவாக்கும் நடுத்தர வகுப்பு மட்டுமல்ல சோவியத்து உருவாக்கிய தொழிற்சங்கங்களும் எந்தப் புரட்சியையும் நடக்கவிடாது என்பது நமக்கு நேரடியாகத் தெரிந்த உண்மை. அது போன்றதுதான் இந்தியாவில் புகுத்தப்பட்ட பசுமைப் புரட்சியும். அதன் நோக்கம் இந்தியாவின் வேளாண்மையை அழித்து அதை இறைச்சி விளைக்கும் ஒரு நிலப்பரப்பு ஆக்க வேண்டுமென்பது. அந்த நோக்கத்தை நிறவேற்றும் முதல் அடிதான், இந்தியாவில் வலிமையோடு இருந்த நடுத்தர வேளாண் மக்களின் நில உடைமைகளை உடைத்தது.

இந்தியா விடுதலை பெற்று புதிதாக வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்பட்ட போது இந்த நடுத்தர வேளாண் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அக் கல்லூரிகளில் சேர்ந்து படித்தனர்.  தங்கள் நிலங்களில் இற்றை அறிவியல் முறைப்படி வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களை அங்கு படிக்க வைத்த தந்தையரின் நோக்கம். மாணவர்களுக்கும் அதுதான் நாட்டம். ஆனால் அவர்கள் பட்டம் பெற்று வெளியே வருவதற்குள் அனைத்து நில உடைமைகளும் நில உச்சவரம்பாலும் குத்தகை ஒழிப்பு என்ற பெயரில் செயற்பட்ட குத்தகை நிலைப்புச் சட்டங்களாலும் சிற்றுடைமைகளாக உடைக்கப்பட்டுவிட்டன. வேளாண் பட்டந்தாங்கிகள் வேளாண்மை வளர்ச்சி அலுவலர்களாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அமர்ந்து உரம், பூச்சி மருந்து நிறுவனங்களுக்குத் தரகர்களாக இழிவெய்தினர்.

அடுத்த கட்டமாக தஞ்சை மாவட்டம் போன்று இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வேளாண் மாவட்டங்களில் முனைப்பான ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP- Intensive Rural Development Programme) என்ற பெயரில் போர்டு அறக்கட்டளையின் உதவியுடன் வீரிய விதைகள், சீமை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றை இலவயமாக வழங்கி, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்; கூட்டுறவுத் துறை, வேளாண்துறை, கால்நடை வளர்ப்புத் துறை ஆகியவற்றில் சிறப்பு ஊழியர்களை அமர்த்தி 1960களின் தொடக்கத்தில் ஆய்வு செய்தனர். அது கொஞ்சம் அதிகமான விளைச்சலைக் காட்டியது. அந் நேரத்தில்தான் மேற்கூறப்பட்ட லால்பகதூர் சாத்திரியின் கொடுமை நிகழ்த்தப்பட்டது. கருணாநிதி ஆளத் தொடங்கிய தமிழகத்தின் இந்த இருண்ட காலத்தில் அவர் பிறந்த தஞ்சை மாவட்டம் பாலைநிலமாக மாறியது.

இந்த நிகழ்முறையின் ஒரு பகுதியாகவே தமிழகத்தின் நீருரிமை பறிப்பையும் பார்க்க வேண்டும். அமெரிக்காவின் வழிகாட்டலில்(தூண்டலில்) உழவனை ஒழித்துக்கட்ட மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக ஆட்சியாளர்களுக்குக் களத்திலிருந்து கிடைத்த ஆதாயங்களைப் போல் தமிழக நீருரிமைகளை விற்றதில் கொள்ளைப் பணம் கிடைக்க வாய்ப்புண்டு. அதற்காகத்தான் 25, 30 தடவைகள் திரும்பத் திரும்பத் பேசியிருக்கின்றனர். அண்டை மாநில மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் உறவு கெட்டுப் போகுமாம்; கருணாநிதி நொந்து நிற்கிறார். தமிழக நீருரிமை பறிபோகும் வகையில் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட 4½ வட்டங்களை மாநில சீரமைப்பின் போது அண்டை மாநிலங்களுக்கு விட்டுக்கொடுத்ததையும் 1974இல் காலாவதியாக இருந்த, கன்னட மாநிலத்தோடு தமிழகம் 1924இல் செய்துகொண்ட காவிரி – மேட்டூர்  ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தேவையான உரையாடலை முன்பு இருந்த பேரவைக் கட்சி உரிய வகையில் தொடங்காததையும் இந்த வெளிச்சத்தில்தான் பார்க்க வேண்டியுள்ளது. 

இதோடு கூட தஞ்சை மாவட்டத்திலும் ஆற்றுப் பாய்ச்சலிலுள்ள பிற பகுதிகளிலும் செம்பனை போன்ற மாற்றுப் பயிர்களைப் பரிந்துரைத்தனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் திரு.வே.தி.செல்லம் அவர்கள் கூட ஓய்வுக்குப் பின்னர் செம்பனைப் பயிரிடும் பரப்பலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டேன்.

இந்தப் பரப்பலை நம்பி செம்பனை பயிரிட்டவர்களுக்குப் பேரிடி காத்திருந்தது. செம்பனைக் காய்களை அறுவடை செய்து 24 மணி நேரத்துக்குள் ஆலையில் இட்டுப் பிழிந்து எண்ணெய்யை எடுத்துவிட வேண்டுமாம். ஆனால் அத்தகைய ஆலைகள் ஒன்று கூட நிறுவப்படவில்லை. விளைவு, வேளாண் விளைநிலங்கள் தவச வேளாண்மையிலிருந்து அகற்றப்பட்டதுதான். இது போல் முன்பு பட்டுப்புழு வளர்ப்புக்கென்று பரப்பி எண்ணற்ற பேர் அரிய மரங்களை அழித்து மல்பெரிச் செடி வைத்து பட்டுப்புழு வளர்த்தனர். ஆனால் புழுவிலிருந்து நூல் எடுப்பதற்கான எந்தக் கட்டமைப்பையும் உருவாக்காததால் நம் மர வளங்கள் கணக்கற்று அழிந்ததுதான் மிச்சம்.

இந்த உணவுப் பொருள் நடமாட்டக் கட்டுப்பாடுகளால் ஆட்சியாளர்களுக்கு இங்கு விளையும் ஒவ்வொரு நெல்மணியிலிருந்தும் கோதுமையிலிருந்தும் ஊழல் பணம் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அதில் நடுவரசு ஆட்சியாளருக்கும் முறையாகப் பங்கு போய்க்கொண்டிருக்கிறது. அப்படிப் போகவில்லையானால், மாநிலங்களிடையிலான வேளாண் விளைபொருள் நடமாட்டக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக நடுவரசு ஓர் அறிக்கையை அவ்வப்போது வெளியிடும். ஆனால் உண்மையில் அது நடைமுறைக்கு வராது. இடையில் கொடுக்க வேண்டியது கொடுப்பட்டுவிடும்..

பங்கீட்டுக் கடைகள் மூலமாக ஆட்சியாளர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கிறது.

கடை ஊழியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனர். பணி உறுதி கிடையாது. எனவே மேலதிகாரிகள் விரும்பாத எதையும் செய்ய முடியாது. அவர்களுக்கு வழங்கும் சரக்குகளின் தரம், அளவு ஆகியவை பற்றி எதுவும் சொல்ல முடியாது. வேலை பெறுவதற்காகவே கணிசமாகப் பணம் செலவிட்டிருப்பர். இந் நிலையில் அரிசி, மண்ணெய், சீனி போன்ற பொருட்கள் அவ்வவற்றுக்குரிய எடை அல்லது அளவுகளில் இவர்களுக்கு வந்து சேராது. கொஞ்சமாவது அவற்றில் திருடாது பொதுவழங்கல் துறையினர் இவர்களுக்குத் தரமாட்டார்கள். எனவே அந்தக் குறைவைச் சரிகட்ட  வேண்டும். அதற்காக நிறுத்தலிலும் அளத்தலிலும் சிறு சிறு ஏமாற்றுச் செய்ய வேண்டியிருக்கும். பொது வழங்கல் துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நயன்மைத் துறை அதிகாரிகளுக்குப் பண்டங்கள் இலவயமாக வழங்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். அத்துடன் இவர்களின் துறையான பொதுவழங்கல்துறை அதிகாரிகளுக்கு அவ்வப்போது எலும்புத் துண்டுகள் போட வேண்டியிருக்கும். அது ஒழுங்காக நடைபெறவில்லை என்றால் திடீரென்று தேடுதல் வேட்டை அல்லது சரிபார்த்தல் என்று கூறி வந்து ஒரு நாடகம் ஆடி ஊழியரை இடை நீக்கம் செய்து பேயாட்டம் ஆடுவர். நம் தோழர் ஏதாவது சேர்த்து வைத்திருந்தால் அதைக் காணிக்கையாக்கித் தப்பித்துக் கொள்ள வேண்டும்.

மாநிலத்துக்குள்ளும் எல்லையைத் தாண்டியும் உணவுத் தவசங்களைச் சாலையில் கொண்டு செல்வதற்கு இசைவாணை வழங்குதல், இசைவாணை இன்றி கொண்டுசெல்லுவோரைக் கண்காணித்தல் ஆகியவற்றிலிருந்து இடைவிடாமல் கைக்கூலிப் பணம் பாய்ந்துகொண்டே இருக்கிறது. அதில் அதிகாரிகள் தங்கள் பங்குக்கு எடுத்துக்கொண்டது போக மேலிடத்துக்கு அவரவருக்கு விதித்த  அளவு கப்பம் கட்டியாக வேண்டும். அந்தக் கப்பம் நாட்டின் முதல் குடிமகன் வரைக்கும் சென்று சேர்ந்துவிடும்.

பஞ்சாப் மாநிலத்தில் நில உச்சவரம்பு கிடையாது. அங்கு புதிய வேளாண் நிலங்கள் மிகுதி. விடுதலைக்குப் பின் கட்டிய அணைகளின் கீழ்ப் பெரும் பெரும் பரப்பிலான நிலங்கள், பாசனத்தின் கீழ் வந்தன. அவற்றிலிருந்து உருவான வேளாண் பெருமக்களை இந்தியாவை ஆளும் பனியாக்  கும்பல் அரசின் கட்டுப்பாடுகள் மூலம் சுரண்டியதற்கு எதிராக உருவானதுதான் காலித்தான் விடுதலை முழக்கம். ஆனால் அந்த இயக்கத்தை மதவெறி சார்ந்ததாக மாற்றி அழித்த பெருமை  இந்திரா காந்திக்கும் இராசீவ் காந்திக்கும்  உண்டு.

புன்செய்ப் பயிர்கள் என்று எடுத்துக்கொண்டால் நாராயணசாமி(நாயுடு)யின் போராட்டம் குறிப்பிடத்தக்கது. அங்கு உண்மையான சிக்கல் வாணிகர்களின் சுரண்டல். புன்செய்ப் பயிர்கள் விளைந்த நிலைமையில் அவற்றை விற்பதற்கு மண்டிகள் எனப்படும் தரகர்களிடம் செல்ல வேண்டும். அவர்கள் பண்டத்தை கையால் தொடாமலும் கண்ணால் பார்க்காமலும் கூட ஆதாயம் பார்த்துவிடுவர்.

வேளாண்குடி மக்கள் நகர்களுக்குச் சென்று இந்தத் தரகர்களை அணுகி விலை கேட்பர். அவர்கள் நல்ல விலையாகச் சொல்வர். நம்பி, மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு வரும் போது விலை வீழ்ந்துவிட்டது, நாளை விலை ஏறும் என்பர். நகரத்தினுள்ளே வண்டியை அவிழ்த்துப்போட்டு தனக்கும் மாடுகளுக்கும் தீனி பார்த்து ஓரிருநாள் சென்றுச் சலிப்படைந்து வந்த விலைக்கு விற்றுக்கொண்டு திரும்புவர் வேளாண் மக்கள். காஞ்சிபுரத்தில் பணியாற்றிய 3 ஆண்டுகளில் பலமுறை இந்தக் கொடுமையை நான் பார்த்திருக்கிறேன். இதற்கு மாற்றாக ஆட்சியாளர் அமைத்த பல்வேறு கட்டமைப்புகளின் கதையைத்தான் முன்பு பார்த்தோமே. எனவே அவ் வேளாண் மக்களது குறைகளைத் தீர்க்கவென்று நாராயணசாமி அவர்களை ஒருங்கிணைத்துச் சில போராட்டங்களை நடத்தினார். சாலை மறியல்களில் தமிழகமே நிலைகுத்திப் போனது. துப்பாக்கிச் சூட்டில் பல பேர் தம் இன்னுயிர்களை இழந்தனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறை சென்றனர். இதற்கு ஒரு தீர்வாக அப்போது ஆட்சியிலிருந்த ம.கோ.இரா. நடைமுறைபடுத்திய திட்டம்தான் வேளாண்மைக்கு இலவய மின்சாரம் என்பது. பின்னர் அந்தப் போராட்டம் எடுபடவில்லை. நாராயணசாமியும், தன் இயக்கத்தை ஓர் அரசியல் கட்சியாக்கி ஆவியாகிப் போனார்.

இதில் வெளித் தோன்றாமல் நடந்த நிகழ்ச்சி ஒன்று உண்டு.

நாராயணசாமியின் போராட்டங்களில் கடைசி காலத்தில் ஊடுருவியது இந்திய மக்கள் முன்னணி என்ற பெயரில் செயற்பட்ட அமெரிக்கக் கையாள் வினோத் மிசிரா என்பவனின் இயக்கம். போராட்டத்தின் போது சிறையிலிருந்தவர்களிடையில், பெருவுடைமை வேளாண்மையினரின் போராட்டம் முடிந்துவிட்டது. இப்போது சிறு, குறு வேளாண் மக்களின் போராட்ட காலம் தொடங்க வேண்டும் என்று பரப்பல் செய்து அந்த இயக்கத்தை உடைத்தார்கள். இதைச்  சொன்னவர் இந்த நடைமுறையில் பங்கேற்றவரான கோயில்பட்டி பொறியாளர் பால்ராசு அவர்கள். அது தவறு என்று அவர் ஒப்புக்கொண்டார். அப்படியாயின் அந்த நிலையை மாற்றி மீண்டும் புஞ்சை வேளாண் மக்களின் உரிமைகளுக்காகப் போராட அவரது ஒத்துழைப்பைக் கேட்ட போது தன்னால் இயலாது என்று கூறி மறுத்துவிட்டார்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புன்செய்ப் பயிர்கள் செய்யும் நிலங்களை வைத்திருப்போர் பெரும்பாலும் தெலுங்கை வீட்டுமொழியாகக் கொண்ட நாயக்கர்கள். இவர்களை வட மாவட்டங்களில் பாளையப்பட்டு நாயுடு என்று கூறுவர். இவர்களில் மீப் பெரும்பாலோர் விசயநகரப் பேரரசு உருவாவதற்கு முன் முகம்மதியப் படையெடுப்பாளர்களின் கொடுமைகளிலிருந்து தப்பியும் வரட்சி, பஞ்சம் ஆகிய சூழல்களிலும் இடம்பெயர்ந்தவர்கள். இவர்களது இடப்பெயர்ச்சியின் ஒரு சிறந்த பதிவாக, கரிசல் எழுத்தாளர் என்று பெயர் பெற்ற திரு.கி. இராசநாராயணன் அவர்கள் எழுதியுள்ள கோபல்ல கிராமம் என்ற புதினம் விளங்குகிறது. பின்னர் நாயக்கர்கள் ஆட்சியின் போது இவர்கள் அண்டை மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் அரசியல் வலிமையைப் பெற்றனர்.

இவர்களது ஒரு பெரும் மனக்குறை தங்கள் வட்டாரத்து வேளாண்மை சிதையக் காரணமே விருதுநகர் நாடார்களாகிய தரகு வாணிகர்கள்தாம் என்று தமிழினி வசந்தகுமார் கூறுகிறார்.

நாம் மேலே மண்டிக்களைப் பற்றிக் கூறியது இங்கும் பொருந்தும். சிறு விளைப்பாளர்களைச் சுரண்டுவது வட்டிக்காரர்களும் வாணிகர்களும் என்று காரல் மார்க்சு தன் புகழ்பெற்ற படைப்பான மூலதனத்தில் குறிப்பிடுகிறார்.
           
மரபுவழிப்பட்ட பழைமையான முறையில் கைத்தொழில்களையும் வேளாண்மையையும் செய்துவரும் தற்சார்புடைய விளைப்பாளர்களின் பக்கத்தில் கந்துவட்டி மூலதனம் அல்லது வாணிகனின் மூலதனத்தை வைத்துக்கொண்டு கந்துவட்டிக்காரன் அல்லது வாணிகன் அவர்களை உறிஞ்சும் ஒட்டுண்ணியாக நிற்கிறான். இந்த வகையான சுரண்டல் மிகுந்திருக்கும் ஒரு குமுகத்தில் இது முதலாளிய விளைப்புப் பாங்கு உருவாவதை விலக்குகிறது. இருப்பினும் இவ் வகை விளைப்பு வடிவம், இடைக்காலத்தின் முடிவில்(ஐரோப்பாவில்) நிகழ்ந்தது போல் முதலாளியத்துக்கு மாறுவதற்கான இடைமாற்றத்துக்கு வழி வகுக்கலாம்.

(By the side of independent producers who carry on their handicrafts and agriculture in the traditional old-fashioned way, there stands the usurer or the merchant, with his usurers capital or merchants capital, feeding on them like a parasite. The predominance, in a society, of this form of exploitation excludes the capitalist mode of production; to which mode, however, this form may serve as a transition, as it did towards the close of the middle ages. [6])

அந்த கந்து வட்டிக்காரனும் தரகனும் செய்த வேலையைத்தான் இன்று கூட்டுறவுத்துறை மூலமும் நுகர்பொருள் வாணிகக் கழகத்தின் மூலமும் அரசு செய்கிறது. வாணிகனின் ஆதாயம்  மூலதனமாக குமுகத்தில் பாய்ந்து அன்றைய ஐரோப்பாவை நிலக்கிழமைக் குமுகத்திலிருந்து முதலாளியக் குமுகத்துக்கு உயர்த்தியது. இங்கு ஆட்சியாளர்கள் கைகளில் சிக்கிய ஊழல் பணம் மூலதனமாக வெளிவர அஞ்சி குமுகத்துக்குக் கேடு தரும் ஊதாரிப் பண்பாட்டை மக்களிடையில் விதைத்துள்ளது. ஆட்சியாளர்களுக்கு அப்பால் இன்றும் செயல்படும் பேட்டைத் தரகர்களிடம் திரளும் ஆதாயமும் வருமான வரித்துறை வேட்டை நாய்களுக்கு அஞ்சி அதே ஊதாரிப் பண்பாட்டுக்குத் தீனியாகிறது. ஆனால், பெருங்காற்றுக்கு அகல் விளக்குகள் அணையலாம், பெருந்தீயோ விரிந்து பரவும். நடுவரசு ஆட்சியாளர்களும் அவர்களோடு கைகோர்த்திருக்கும் மாநில ஆட்சியாளர்களும் சுருட்டிய கள்ளப்பணம் மட்டும் அயல் நேரடி முதலீடு என்ற பெயரில் இங்கு பாய்ந்து இந்த ஏற்றுமதி – இறக்குமதி மூலம் மேம்பாடு என்ற பெயரில் இம் மண்ணின் சராசரி மனிதனுக்குப் பயன்படாத சாலைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் இந் நிலத்தை மாற்றி வேளாண்மையிலிருந்து அகற்றிக்கொண்டிருக்கிறது.

குளங்களைத் தூர்த்து அவற்றில் அரசு அலுவலகங்களையும் பேருந்து நிலையங்களையும்  பேரளவில் அமைத்தது கருணாநிதிதான். அத்துடன் 1974இல் புதுப்பிக்க வேண்டிய காவேரி - மேட்டூர் ஒப்பந்தத்தை அப்போது பதவியிலிருந்த அவர் புதுப்பிக்காததுடன் கமுக்கமாக காவிரி, அதன் கிளை ஆறுகள் ஆகியவற்றின் குறுக்கே புதிய அணைகளைக் கட்ட கர்நாடகத்துக்கு ஒத்திசைவும் வழங்கினார்.

பாசன அமைப்புகளை வீட்டுமனைகளாக்கும் பெரும்பணியில் தோழர்களின் பங்கைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. எங்கும், எப்போதும் அவர்கள் முன்வைக்கத் தவறாதது, ஏழைகளுக்கு, தொழிலாளர்களுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு என்று வகைவகையாக இலவய மனைப்பட்டாக்களைப் புறம்போக்கு நிலங்களிலிருந்து வழங்குங்கள் என்று வேண்டுகை வைத்துக்கொண்டே இருப்பர்.

இந்த இலவய மனைப் பட்டா ஒரு பெருந்தொழில். எடுத்துக்காட்டாக, ஒரு துப்புரவுத் தொழிலாளி, முறைப்படியோ, வல்லடியாகவோ ஒரு புறம்போக்கில் சிறு மனையை எடுத்து அதில் ஒரு குடிசை கட்டுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரிடமிருந்து அம் மனையை ஒரு தாழ்த்தப்பட்டவர்  விலைக்கு வாங்கி ஓர் ஓட்டு வீடு போடுவார். அவரிடமிருந்து ஒரு பிற்படுத்தப்பட்டவர் வாங்கி திண்ணக்க(கான்கிரீட்)க் கூரை வீடு போடுவார். அதை வட்டிக்காரர் அல்லது கள்ளச் சாராய முதலாளி வாங்கி முடிந்தால் பக்கத்திலுள்ள மனைகளையும் சேர்த்து மாடி மீது மாடியாக வளமனை கட்டுவார். இது நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வளமாக நடைபெறும் அரசு - பொதுமை இயக்கக் கூட்டணி நடத்தும் தொழிலாகும். இதிலும் பாசன அமைப்புகள் மற்றும் சாலை என்று அனைத்து அடிப்படைக் கட்டுமானத்துக்கு உரிய நிலங்கள் பிடுங்கப்படுகின்றன. இந்த வாணிகத்துக்குக் கருணாநிதியின் ஊத்குவிப்பு மிகுதி. (ஏழ்மை இருப்பது வரை இலவயங்கள் இருந்து கொண்டே இருக்கும். ஏழ்மையையும் நாங்கள்தாமே உருவாக்குகிறோம், கிழவனும் சாகக் கூடாது, கட்டிலும் ஓயக்கூடாது).

அண்ணாத்துரை  முதலமைச்சராக இருந்த போது ஒரு முறை அமெரிக்கா சென்று அங்கிருக்கும் ஏல் பல்கலைக் கழக  விருந்தினராக இரண்டு கிழமைகள் இருந்துவந்தார். அதற்கு ஏற்பாடுகள் செய்தவர் ப-ர் எம்.எசு.உதயமூர்த்தி என்பவர். இவர் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த போது இந்த ஏற்பாடு நடந்தது. பின்னர் காவிரிச் சிக்கல் மாவீரன் போன்றவர்களால் நடுவர் மன்றத்தில் புதைக்கப்பட்டுவிட, மனம் பதைத்து நின்ற தமிழக இளைஞர்களைத் திசை திருப்ப, கங்கையை கல்லணைக்குக் கொண்டு வருவேன் என்று செல்லாத  ஊருக்கு வழிகாட்டியவர்.

தி.மு.க.வுக்குத் தொடக்க காலத்திலேயே அமெரிக்கா ஆதரவு உண்டு. எனவே தமிழகத்தைப் பற்றிய அமெரிக்கத் திட்டத்தை நிறைவேற்றுவதில் இங்குள்ள ஆட்சியாளர்களுக்கும் அமெரிக்காவுக்கும் ஒருங்கிணைப்பு இருக்கிறது. இந்திய  ஆட்சியாளர்களும் உட்கைதான்.

தமிழகப் பாசனத்தை அழிப்பது, நிலங்களைத் தரிசாக்குவது, அவற்றை மனைகளாக்குவது என்பது ஒரு தொடர் நிகழ்வு. இந்த மனைகள் இங்குள்ள வீடுகளின் தேவையை மிஞ்சியவையாகும். அத்துடன் பனியா - பார்சிக் கும்பல் தவிர்த்த பொதுமக்களுக்கு, இடங்கையினரின் துணையுடன் இந்திய ஆட்சியாளர்கள் போட்டு வைத்துள்ள முதலீட்டுக்கான எண்ணற்ற சட்டவியல், ஆள்வினையியல், உளவியல் தடைகளால் இம் மனைகள் பண மதிப்பைப் பேணும் வைப்பக ஆவணங்களாகவே செயற்படுகின்றன. எனவே உண்மையாகவே வீட்டுமனை தேவைப்படும் சராசரிக் குடிமகனின் வாங்கும் திறனுக்குள் அவை அமையா. அவை என்றும் தரிசாகவே இருக்கும். (அந்தக் காலத்தில் பகல்கொள்ளை இராக்கொள்ளைக்காரர்களுக்கும் பாளையக்காரர்களுக்கும் அஞ்சி தங்கமாக புதைத்தவர்களின் செல்வம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பின்  தலைமுறையினரிடம் கிடைக்கிறதைப் பார்க்கிறோம். ஆனால் வருமான வரித்துளை வெறி நாய்களுக்கு அஞ்சி விலையைக் குறைத்துக் காட்டிப் பத்ததிரம் பதிந்து வாங்கப்பட்ட நிலத்தில் புதைத்த செல்வம் மீண்டும் யாருக்கும் கிடைக்காது.) அவற்றில் ஆளும் கூட்டத்தினரின் கூட்டணியுடன் உருவாகும் பல்வேறு வளாகங்கள் உருவானவை, கல்வி நிலையங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் நிலங்கள் போக எஞ்சியவற்றில் இன்று போல் கட்டற்ற மேய்ச்சல் நடக்கும். பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு மக்களின் உதவியுடன் இயற்கை வேளாண்மையில் வல்லரசு நாடுகளுக்குத் தேவைப்படும் காய்கறிகளை விளைத்துக்கொள்வார்கள். அவற்றைச் சராசரி குடிமகன் வாங்கிவிடாமல் கன்னெய்ய விலை, பேருந்துக் கட்டணம் போன்றவற்றை உயர்த்தி அவனது வருமானத்தை ஒருமுனையில் பிடுங்கியும்  முன்னோக்கு அதாவது வலைதள வாணிகம் மூலம் அவற்றின் விலையை உயர்த்தியும் தடுத்து ஏற்றுமதி செய்வார்கள். உரூபாய் மதிப்பை வல்லரசு நாடுகளின் பண மதிப்போடு ஒப்பிடக் குறைத்து அங்குள்ளோருக்குக் கொள்ளை மலிவில் கிடைக்கச் செய்வார்கள்.

இந்த இயற்கை வேளாண்மை வல்லுநர்கள் ஏற்கனவே வல்லரசுகளிடம் பணம் பெற்று பண்டங்களை விளைத்து அவர்களுக்கு ஏற்றுகிறவர்கள். இவ்வாறு உலகெங்கும் உள்ள ஏழை நாடுகளிலிருந்து செல்லும் வேளாண், கடல்சார் பண்டங்கள், மது வகைகள் உட்பட மட்டுமல்ல ஆடைகள் போன்ற கிட்டத்தட்ட அனைத்து நுகர்பொருட்களுமே இலவயம் என்று சொல்லுமளவுக்கு வல்லரசு நாட்டினருக்கு மலிவாகக் கிடைக்கின்றன. இதற்கு அடிப்படையாக இருப்பது செலவாணி மாற்று விகிதம்.

எடுத்துக்காட்டாக, நம் நாட்டில் முகம் மழிக்க எளியவர்கள் பயன்படுத்தும் கரிசி(பிளேடு) விலை உரூ1. இதே உள்ளூர் சரக்கு அமெரிக்காவில் 1 டாலர் விலை. ஆனால் அதே ஒரு டாலரை இந்தியாவுக்குக் கொண்டு வந்தால் 60 கரிசிகளை வாங்க முடியும்.

அதே போல் இங்கு உருவாக்கப்படும் ஓர் உள்ளாடை உள்ளூரில் உரூ 80/-க்கு விற்கிறதென்றால், அதை அமெரிக்காவில் 15 டாலருக்கு  விலையாகும் அளவுக்கு இங்கே 5 டாலருக்கு ஏற்றுமதியாளர் ஏற்றுகிறார் என்று கொள்வோம். அவருக்குக் கிடைக்கும் தொகை உரூ 300/-. இதன் மூலம் இங்கு ஒருவர் வரம்பு மீறிய ஆதாயம் பெறுகிறார். அதே நேரத்தில் தரமான பொருள் உள்நாட்டு மக்களுக்குக் கிடைக்காமல் போகிறது. வல்லரசு நாட்டினருக்கு மலிவு விலையில் சரக்கு, இறக்குமதியாளருக்குக் கொள்ளை ஆதாயம்.

பெரும்பாலான நுகர்பொருட்கள் இவ்வாறு ஏழை நாடுகளிடமிருந்து கொள்ளை மலிவில் இறங்கி அங்குள்ள கிட்டத்தட்ட அனைத்து வெள்ளையருக்கும் கொஞ்சம் கறுப்பர்களுக்கும் நாடு கடந்து  வந்தோருக்கும் அளவுக்கு மீறிய அளவில் கிடைக்கின்றன. அதே நேரத்தில் முடிதிருத்தல், குழாய் பொருத்தல், மின்சாரப் பணிகள் போன்றவற்றுக்குத் தொழிலாளர்கள் பெரும் கூலி பெறுகிறார்கள். இவ்வாறு கொழிக்கும் வளமையின் விளைவாகப் பெரும்பாலான நுகர் பண்டங்கள் ஒரே ஒரு முறை பயன்படுத்திவிட்டு வீசப்படுகின்றன. கருப்பர்களும் வெளிநாடுகளிலிருந்து கள்ளத்தனமாகப் புகுந்தோரும் அவற்றை எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இங்குள்ள ஒடுக்கப்பட்ட மக்களைப் போல் அவர்கள் வாழ்கிறார்கள்.

தமிழக வேளாண்மை மீது கருணாநிதி இறக்கிய பேரிடி உரூபாவுக்கு 1 கிலோ அரிசித் திட்டமாகும். இந்த அரிசியில் ஒரு பகுதி பங்கீட்டுக் கடைகளை அடைவதற்கு முன்பே ஆட்சியாளர்களின் கைக்கூலிகளால் தொடர்வண்டி, சரக்கி ஆகியவை மூலம் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. இன்னொரு பெரும்பகுதி பங்கீட்டுக் கடைகளிலிருந்து செல்கிறது. மேலும் ஒரு பகுதி கிலோ 5 உரூபாய்க்கு அதற்கென்று இருக்கும் கடைகளிலும் அரிசி தேவைப்படும் ஒரு சிலருக்கும் அதைப் பெறும் பொதுமக்களாலேயே விற்கப்படுகிறது. கடைகளுக்குச் செல்வது ஆலைகளில் அரைக்கப்பட்டு சந்தைக்கு வந்து உரூ 10, 12(இப்போது உரூ.40க்கு மேல்) என்ற விலையில் விற்கிறது. இது உழவன் விளைவித்துச் சந்தைக்குக் கொண்டுவரும் அரிசியின் விலையை அமிழ்த்தி வேளாண்மையைத் தாக்குகிறது.

வீடுகளை அடையும் அரிசி ஓரளவு வசதி உள்ளவர்கள் வீடுகளில் கோழிக்குத் தீவனமாகிறது. அதைச் சோறாக்கி ஆடு, மாடுகளுக்கும் போடுகிறார்கள்.

இந்த அரிசி ஒருமுறைக்கு மேல் தீட்டப்படுவதால் மாச்சத்து தவிர வேறு சத்து எதுவும் இல்லாமல் அதை உண்ணும் மனிதர்கள் கோழிகள், ஆடு - மாடுகள் எளிதில் நோய்த்தாக்குகளுக்கு ஆளாகின்றன.

இவற்றை விட  முகாமையான செய்தி என்னவென்றால் இந்த அரிசி கொள்முதல் நிலையத்தில் நெல்லாகப் பெறப்பட்டு பங்கீட்டுக் கடையை அடைவதற்குள் அதற்கான செலவு கிலோவுக்கு உரூ 32/- என்பது 1990ஆம் ஆண்டைய கணக்கு. இன்று அது ஏறக்குறைய 120/- உரூபாவாக இருக்கும், அதாவது பங்கீட்டுக் கடையில் ஒரு கிலோ அரிசியை வாங்கினால் நேரடியாக உரூ 1ம் மறைமுகமாக, தான் செலுத்தும் வரியிலிருந்து உரூ 119/-ம் அதை வாங்கும் குடிமகன் செலவு செய்கிறான் என்பதாகும்.

இந்தச் செலவில் அடங்கும் ஓர் இனத்தை எடுத்துக்கொள்வோம். அரிசி, நெல் ஆகியவற்றைச் சேர்த்துவைத்திருக்கும் கிடங்குகளில் பூச்சித்தாக்கு போன்ற கோளாறு ஏற்பட்டுவிட்டதென்று பொய் கூறி அக் கோளாறைச் சரிசெய்வதற்காக அக் கிடங்கைத் தற்காலிகமாகக் காலி செய்வதென்ற பெயரில் அக் கிடங்கிலிருக்கும் தவசம் முழுவதையும் சரக்கியில் ஏற்றும் கூலி, அவற்றை வேறொரு கிடங்குக்குக் கடவும் சரக்கி வாடகை, அந்தத் தவசங்களை ‘’இன்னொரு’’ கிடங்கில் இறக்கும் கூலி, இங்கே கோளாறான கிடங்கியைத் கூறப்பட்ட ‘’தாக்குகளி’’லிருந்து விடுவிப்பதறகான விரிவான துப்புரவுப் பணிகளுக்கான செலவுகள், பின்னர் அந்த ‘’இன்னொரு’’ கிடங்கிலிருந்து சரக்கியில் ஏற்றும் கூலி, அங்கிருந்து இங்கு கொண்டுவர சரக்கி வாடகை, இங்கு மீண்டும் இறக்கும் கூலி என்று இவ்வளவு செலவுகளையும் போலியாகக் காட்டி எடுத்துக்கொள்வார்கள் என்பது அத் துறையில் அயல்பணிக்கு (Deputation) சென்றுவந்த பொதுப்பபணித்துறைப் பொறியாளர் ஒருவர் தந்த செய்தி. நீண்ட இந்த நடைமுறை மேலே உள்ளவர்களுக்குத் தெரியாமல் நடைபெறாது. எனவே இது உச்சியில் உள்ளவர்களின் ஊக்குவிப்பு இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை. மக்களின் அனைத்து நுகர்பொருள்களையும் பொது வழங்கலின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று குரலெழுப்பும் பொதுமைத் தோழர்களே இதில் உங்கள் பங்கு எவ்வளவு?  

தமிழகத்து ஏழை உழவன் இன்றைக்கு எந்தத் திசையில் செல்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறான்.

1.      விளைபொருள் விலை ஏற்றத்துக்குப் போராடுவதா அல்லது தானே பிறர் நிலத்தில் கூலிக்குச் செய்யும் வேலைக்குக் கூடுதல் கூலி கேட்பதா? அதே கூலியைத் தானும் கொடுக்க வேண்டுமே!
2.      கிலோ அரிசி ஒரு உரூபாய் என்பது  தனது விளைபொருள்  விலையை அழுத்துகிறதா? அதன் உயர்வுக்காகப் போராடினால் கிலோ ஒரு உரூபாய்த் திட்டத்தை எதிர்க்க வேண்டும்! தன் வாழ்க்கைச் செலவு கூடுமே!
3.      கிலோ அரிசி ஓர் உரூபாக இருப்பதால் கிடைக்கும் பணத்தில் சாராயத்தைக் குடிக்க முடிகிறது.  அது இல்லையென்றால் சாராயம் குடிக்க முடியாதே!
4.      வேளாண்மை உட்பட அனைத்துச் சிக்கல்களுக்கும் மக்கள் ஒருங்கிணைந்து போராட சாதி, சமயம், மொழி போன்ற அடிப்படையில் மக்கள் பிளவுபட்டு நிற்கிறார்களே என்ன செய்வது?

இவர்களை இந்தத் திகைப்பிலிருந்து விடுவித்து உண்மையான தமிழகத் தேசியப் பொருளியல் விடுதலை நோக்கி இட்டுச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பு நம் முன் நிற்கிறது.

அது போல் இங்கு வளரும் ஆடு மாடுகளை வாணிகர்கள் கேரளத்துக்குக் கொண்டு விற்க அதை கேரளத்தார் அறுத்துப் பாடம் செய்து ஏற்றுமதி செய்வார்கள். இங்குள்ளோர் அவற்றைத் தின்னாமல் தடுப்பதற்காக, விலங்கு உணவுக்கு எதிராக அறிவியல் பரப்பல்கள் முழு மூச்சாக ஏற்கனவே நடைபெற்று மக்களின் மண்டையில் பதியவைக்கப்பட்டுவிட்டன. இங்குள்ள வெள்ளாளச் சாதியினரும் வெள்ளாளக் கட்டு மேற்கொண்டுவிட்ட பிற சாதியினரும் முனைப்பாக இதில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் வெளிநாட்டுப் பணத்தில் புரளும் ‘’தன்னார்வ’’ ஒற்றர்களும் இரண்டறக் கலந்துள்ளனர். இவ்வாறு ஒரு சிக்கலான வலைப் பின்னலுள் கருணாநிதியும் செயலலிதாவும் மாறி மாறிப் பணம் குவிக்கிறார்கள். இருப்பினும் கருணாநிதிக்குள்ள தொழில் நுணுக்கமும் ஆள்கட்டும் செயலலிதாவிடம் இல்லை[7].

2011 தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தல் அறிக்கையில் செயலலிதா வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 30 இலக்கம் குடும்பங்களுக்குத் தலைக்கு 4 ஆடுகளை இலவயமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மதிப்புக்குரிய மருத்துவர் ஐயா அவர்கள் இந்த ஒரு கோடி இருபதிலக்கம் ஆடுகளுக்கு எங்கு போவார் அம்மையார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ஒருவேளை மேற்குலகுக்கு இறைச்சி உருவாக்கும் திட்டத்தில் இந்த ஆடுகளை அங்குள்ள அமைப்புகள் விடுத்துத் தரலாம். யார் கண்டார்கள் காலம் விடை கூறட்டும்.

ஆடு வளர்ப்பைப் பற்றி சில கூறியாக வேண்டும். ஆடுகளில் செம்மறியாடுகள் தலையை நிமிர்த்து மேய்வதில்லை. தலையைத் தரை மட்டத்தில் வைத்தே புற்களையும் புல் மட்டத்தில் இருக்கும் மரக் கன்றுகளையும் கறம்பித் தின்னும். வெள்ளாட்டின் நடவடிக்கை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அது குனிந்து மேய்வது அரிதினும் அரிது. முன்னங்கால்களைத் தூக்கி மேலே இருக்கும் மரக்களைகளில் சார்த்தி தழையைக் கடிக்கும். சுற்றுச் சுவர்களிலும் சராசரி உயரமுள்ள ஓட்டுக்கூரைகள் மீதும் ஏறி உலாத்துவதையும் காண முடியும். மரக் கன்றுகளில் வெள்ளாடுகள் வாய் வைத்துவிட்டால் அவற்றின் வளர்ச்சி மிகுந்த பாதிப்புள்ளாகும் என்பது பட்டறிவு. நிரைகளாக ஆட்டுகளை மேய்த்துச் செல்வோர் தவிர ஒன்றிரண்டு செம்மறியாடுகளை வளர்ப்போர் மிக அரிது. வெள்ளாடுகளையே அவ்வாறு வளர்ப்பர். வீட்டில் கட்டிப்போட்டு எங்கிருந்தாவது மரத்தழைகளை வெட்டிவந்து ஆடு தலையைத் தூக்கிக் கடிக்குமாறுள்ள உயரத்தில் அவற்றைக் கட்டித் தொங்க விட்டிருப்புதைக் காணலாம். வெள்ளாட்டுக்கு மோப்ப ஆற்றல் குறைவு என்று கூறப்படுகிறது. அதனால் எந்த மரமாக, செடியாக இருந்தாலும் வாய் வைத்துக் கடித்துச் சுவை பார்ப்பதால் அவற்றால் நிலைத்திணைகளுக்குக் கேடு மிகுதி. மட்டைக் கள்ளி, திருகு கள்ளி, பாம்புக் கள்ளி, சப்பாத்திக்கள்ளி போன்ற சிறிய முள்ளுள்ள கள்ளிச் செடிகளையும் கொடிக்கள்ளி போன்ற காட்டம் மிகுந்த பாலுள்ள கள்ளி வகைகளையும் கூட வெள்ளாடுகள் விட்டுவைப்பதில்லை. ஆடு தீண்டாப்பாளை எனப்படும் மருத்துவப் பயன் மிகுந்த செடியை மட்டும்தான் வெள்ளாடு கடிக்காது என்பர். 

குமரி மாவட்டத்தில் முன்பெல்லாம் இளம் பனங்காயில் நுங்கை எடுத்த பின் மிஞ்சம் காயை அரிவாளால் சீவி ஆட்டுக்குப் போடுவர். இந்தச் சீவல்களை சேர்வை என்பது அங்குள்ள வழக்கு. உயிர் வேலியான, மேல் நோக்கி வளரும் நெருக்கமாக கிளைகளுடன் ஒற்றை முள்ளுள்ள இயலை(ஏலை, இசலை என்றும் கூறுவர், குமரி மாவட்டத்துக்கு வெளியே இதை கிளுவை என்பர்) எனும் குத்துச் செடியில் வெள்ளாட்டைக் கையில் பிடித்துக்கொண்டு மேயவிடுவதும் உண்டு. நாட்டு உடை கருவேல உடைகளின் காய்களைக் கொக்கி கொண்டு உலுப்பி எடுத்து ஊட்டுவதும் உண்டு. இப்போது  பனை மரம் அருகி விட்டதால் குறிப்பிட்ட மரத் தழைகளைப் போடுகின்றனர். பூவரசின் தழை வெள்ளாட்டுக்கு ஆகாது, வயிற்றுப் போக்கு ஏற்படும். தென்னை இளமரங்களில் கைக்கு எட்டும் உயரத்திலிருக்கும் பச்சை ஓலைகளை வெட்டித் தொங்க விடுவதும் உண்டு. இது மரத்துக்கு உரியவருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக நடப்பதாகும். பலா மரத் தழைக்கு மிகுந்த முன்னுரிமை கொடுப்பது அண்மைப் போக்கு. பலா மரம் நிற்குமிடங்களில், மரத்தில் தழைகளைக் கழித்தால் நிறையக் காய்க்கும் என்று சொல்லி எப்படியாவது தழையைப் பெற்றுவிட வேண்டுமென்று மயக்கு மொழி பேசும் போக்கு இப்போது குமரி மாவட்டத்தில் வெள்ளாடு வளர்ப்போரிடம் உருவாகியுள்ளது. (இந்த விளக்கத்துக்கு ஒரு வரலாறு உண்டு. நெடுநாள் காய்க்காமல் இருக்கும் கன்னிப் பலாமரத்தில் அரிவாளால் சில இடங்களில் வெட்டிவிட்டால் அதன் இன நிலைப்பு உணர்வு தூண்டப்பட்டு தனது நிலைப்புக்கு அச்சுறுத்தல் வந்துள்ளதாக அஞ்சி இனப்பெருக்க உணர்வால் உடனடியாகக் காய்க்கத் தொடங்குகிறது என்கிறார்கள். விளக்கம் எதுவாக இருந்தாலும் இது பல நாள் பட்டறிவு. இது காய்க்கத் தொடங்குவதற்குத்தான் பொருந்துமே ஒழிய அதன் பின் அது தேவையில்லை என்பது என் பட்டறிவு). ஆடு வளர்ப்போரின் இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்டிறைச்சிக்கு இப்போது நிலவும் உயர்ந்த பண மதிப்புதான் காரணம்.

காடுகளின் அழிவுக்கு யானைகளின் அழிமதிக்கு முகாமையான பங்குண்டு. மரங்களை ஒடிப்பது யானைகளுக்குப் பொழுது போக்கு. முல்லைப் பெரியாற்று அணை மேம்பாட்டுப் பணியின் போது 6 மாதங்கள் அணைக் களத்தில் தங்கியிருந்த போதும் சம நிலத்தில் சாலைகளில் போகும் யானைகளிடமும் இந்த “விளையாட்டை”ப் பார்த்துள்ளேன். 2008இல் கண்ணகி கோயிலுக்கு தமிழினி வசந்தகுமார் குழுவினருடன் சென்று திரும்புகாலில் நடந்துவந்த போது மொட்டையாகி நின்ற எண்ணற்ற மரத்தண்டுகளைப் பார்த்து வயிறெரிந்துள்ளேன். ஆப்பிரிக்காவில் அண்மையில் கொம்புக்காக பல யானைகள் கொல்லப்பட்ட செய்தி கேட்டு மிக மகிழ்ந்தேன். தேசியப் புவியியல் (National Geography), கண்டுபிடிப்பு(Discovery) ஆகிய தொலைக்காட்சிகளில் காட்டப்படும் ஆப்பிரிக்கக் காடுகளில் நம் நாட்டு உடை போன்ற முள் மரங்களும் சில குத்துச் செடிகளும் இன்றி எங்கும் ஒரே வெட்டைக் காடாகக் கிடப்பதைக் காணும் போது அங்கு அளவின்றி அலையும் யானைகளின் கூட்டமும் மான்களின் ஓட்டமும் வரிக்குதிரைகள், காட்டுமாடுகளின் அணிவகுப்பும்தாம் இந்த நிலைக்குக் காரணம் என்பது புலனாகிறது. அவற்றின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி காட்டின் அடர்த்தியை மீட்பதற்கு ஊனுண்ணிகளின் எண்ணிக்கை போதவில்லை என்பதும் உறுதி. காடுகள் அழிந்ததால் அங்கு நிலவும் நீண்ட வரட்சியும் அரிமா போன்ற ஊனுண்ணிகளின் பெருக்கத்துக்கு இடையூறாக இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த மாபெரும் பரப்பில் அமேசான் போன்ற அடர்த்தியான காடு உருவானால் உலக சூழியல் சமநிலை பெருமளவு மேம்படும். இதற்காக அங்கு அளவுக்கு மேலிருக்கும் தழையுண்ணிகளை அறுவடை செய்யலாம். இன்று மாட்டிறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்க தன் குடும்பத்தினரை(பரிவாரங்களை) இந்திய மக்கள் மீது ஏவி விட்டிருக்கும் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி ஆப்பிரிக்காவிலுள்ள யானைகள், வரிக்குதிரைகள், காட்டெருமைகள், நீர்யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், மான்கள், காட்டுமாடுகள், காண்டாமிருகங்கள் ஆகியவற்றில் அக் காடுகளின் கொள்திறனை மிஞ்சி இருப்பவற்றை வெட்டையாடி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கும் அதற்குத் தேவையான மூலதனத்தை உலகமெலாம் பொருளியலில் ஓங்கிநிற்கும் குசராத்திகளிடமும் இந்திய அரசியல்வாணரும் அதிகாரிகளும் அவர்களின் கூட்டாளிகளான கடத்தல்காரர்களும் உலகெலாம் பொய்ப் பெயர்களில் முதலிட்டிருக்கும் பணத்தையெல்லாம் திரட்டி அயல் நேரடி முதலீடு என்று இந்தியாவில் செய்வதை உலக அளவில் செய்யலாம். இதற்குப் பணம் திரட்டவும் இந்தப் புதிய இறைச்சிப் பயன்பாட்டை உலகமெலாம் பரப்பவும்(இந்தியாவைத் தவிர்த்து – இப்போது அதைத்தானே வாக்கு வங்கிக்காக நம்பியிருக்கின்றனர் அவரும் “குடும்பத்”தினரும். இது வெறும் கிண்டலுக்காகச் சொல்லப்படவில்லை, மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகின் இரண்டாமிடத்திலிருக்கும் இந்தியாவின் மாநிலங்களில் நரேந்திர மோடி “அரும்பாடு பட்டு” உருவாக்கியுள்ள குசராத்து முதலிடத்திலுள்ளதாம், ஒரே கல்லில் எண்ணற்ற மாங்காய்களை வீழ்த்தும் மோடி மசுத்தான் திருவிளையாடல்கள் மதுரையில் சிவபெருமான் ஆடியவற்றை மிஞ்சுவது உறுதி. இன்று ஆப்பிரிக்கக் காடுகளில் சுற்றுலாவில் பணம் ஈட்டும் பெரு நிறுவனங்களிடமும் முதலீட்டைப் பெற்று அவர்களின் எதிர்ப்பையும் மட்டுப்படுத்தலாம்) இன்னும் இரண்டொரு முறை இந்திய மக்களின் வரிப் பணத்தில் இதற்காக உலகை அவர் வலம் வரலாம், உலகச் சூழியலாவது மேம்படும்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் யானைகளும் அங்குள்ள காடுகளின் பரப்பு தாங்கும் அளவுக்கு அதிகமாகவே உள்ளன. அவற்றைப் பிடித்து மலையில் பொருள் போக்குவரத்து போன்ற பணிகளில் முன் போல் ஈடுபடுத்தலாம். கன்னைய்ய இறக்குமதிக்காகக் அயல் செலாவணி கரைவதாவது குறையும்.
                                                         காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
                                    மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
                                    நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே
                                    வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும்.....
என்ற புலவர் பிசிராந்தையாரின் புறநானூற்று வரிகள் நெல்லுக்கு மட்டுமல்ல, காட்டு மரங்களுக்கும் பொருந்தும். கால் பெரிது கெடுக்கும் என்பதை கை பெரிது கெடுக்கும் என்று மாற்றினால் போதும்.
    
குமரி மாவட்டத்தில் ஆடு வளர்ப்பின் கதை இதுவென்றால் அதற்கு வெளியே என்னவென்று பார்ப்போம். குளக்கரைகளில் நின்ற பல்வேறு வகை மரங்களின் கிளைகளைக் குச்சிகளில் கட்டிய கொக்கி அரிவாள்களால் வெட்டி அம் மரங்களை மொட்டையாக்கி குளக்கரைகள் எளிதில் அழிவதற்கு வழி வகுத்துள்ளனர். சாலகளில் புளிய மரம் தவிர்த்த பிற மரங்களுக்கும் இதே விதிதான். பெரும்பாலும் தென்மாவட்டச் சாலைகளில் புளியமரங்கள்தாம் நிற்கின்றன. புளியந்தழையை ஆடு விரும்பி உண்பதில்லை. அத்துடன் புளியம் பழத்தை ஏலத்துக்கு விடுவதால் அரசுக்குக் கணிசமான வருமானமும் உண்டு. நாகர்கோயில் – நெல்லைச் சாலையில் மாவட்ட எல்லையில் குமரி மாவட்டத்திலுள்ள சாலைப் பகுதியில் நிற்கும் ஆல மரங்கள் மொட்டையாக நிற்பதும் ஆடு வளர்ப்போரின் அடாவடியின் விளைவுதான். அவ்வாறுதான் வடக்கு மாவட்டங்களிலும். இந்தப் பின்னணியில் செயலலிதாவின் “விலையில்லா” ஆடு வழங்கும் திட்டம் தமிழகத்தை மேய்ச்சல் நிலமாக்கும் பெருந்திட்டத்தின் ஒரு கட்டம் என்று கொள்வதில் தவறில்லை. ஆட்டுத் தீவனத் தழைக்காக நிலங்கள் ஒதுக்குவதான அறிவிப்பு கறி(வை)க்குதவாத வெறும் ஏட்டுச் சுரைக்காய். இருந்த மரங்களை எல்லாம் வெட்டி எறிந்துவிட்டு இட்ட நால்வழிச் சாலைகளில் உடனடியாக மரங்கள் நட வேண்டுமென்று இந்திய தேசிய பெருவழி ஆணையத்துக்கு ஆணையிட்டுள்ளது நயமன்றம். அவர்கள் நட்டுவருபவை ஆட்டுக்கு மிகவும் பிடித்த மரங்கள். ஆணையத்தினருக்கும் நயமன்றத்துக்கும் மரத்துக்கும் ஆடுவளர்ப்புக்கும் தமிழ்நாட்டில் உள்ள உறவு தெரியாது என்று தோன்றுகிறது. தெரிந்திருந்தால் ஆணையில் மரங்களையும் சுட்டிக் கூறியிருப்பர். 

ஆங்கிலர் தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றப் போராடிய நாளிலிருந்தே தமிழகத்தின் சூழியல் சமநிலை உடைபட்டுவிட்டது. 1800களின் தொடக்கத்தில் மருதிருவர் தலைமையில் ஆங்கிலரை எதிர்த்துப் போரிட்ட விடுதலைப் போராளிகளில் பலர் ஆங்காங்கே மலையிலும் பிற இடங்களிலுமிருந்த காடுகளிலேயே பாடியமைத்தனர். எனவே அவ் வெழுச்சி உள்ளூர்க் கயவர்களின் காட்டிக்கொடுப்பால் முறியடிக்கப்பட்டதும் அவர்கள் பதுங்கியிருக்க உதவிய காடுகளை அழித்து பல மலைகளை ஆங்கிலர் மொட்டையாக்கியுள்ளனர். திண்டுக்கல் நகருக்குள் இருக்கும் மலை கூட அவ்வாறு மொட்டையடிக்கப்பட்டதால்தான் இன்று ஊரின் மீது அனலை வீசிக்கொண்டிருக்கிறது. கால்டுவெல் ஐயர் சமயப் பணியாற்றிய இடையன்குடிப் பகுதியில் கடற்கரை நெடுக சதுப்பு நிலங்களும் காடுகளும் விலங்குகளும் இருந்ததன் விளைவாக அங்கிருந்த மக்கள் முறைக் காய்ச்சலால்(மலேரியா) துன்புற்றதால் அவற்றைக் கும்பினியர் ஆட்சியில் அழித்ததாக 1849இல் வெளிவந்த திருநெல்வேலிச் சாணார்கள் என்ற தன் நூலில் கூறுகிறார். அவ்வாறு “மீட்ட” நிலத்தில் பருத்தி விளைத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. அடுத்த நூற்றாண்டில் அங்குள்ள நாடார்கள் தூத்துக்குடித் துறைமுகம் மூலம் இங்கிலாந்துக்கு பருத்தி ஏற்றுமதி செய்தது தெரிய வருகிறது. இது போன்று பருத்திக்காக உள்நாட்டுப் பயிர் பச்சைகளை எந்த அளவுக்கு எங்கெல்லாம் அழித்தார்களோ தெரியவில்லை. நீலமலையின் மேல் எட்டங்களில் இருந்த இயற்கையான காடுகளை அழித்துவிட்டு தாள் செய்வதற்குப் பயன்படும் ஒரே இன ஊசியிலை மரங்களை நட்டிருக்கிறார்கள். கீழ் எட்டங்களில் கணக்கற்ற பரப்பில் தேயிலைத் தோட்டங்களுக்காகக் காடுகளை அழித்துள்ளார்கள். அத் திருப்பணியை “நம்மவர்கள்” இன்று தொடர்கிறார்கள். காட்டு மரங்களை ஏலம் விடுவதற்கென்று ஆங்கிலர் வகுத்த கூப்பு முறையைப் பயன்படுத்தி ஆங்கிலர் அதற்குத் தடை விதித்திருந்த மேல் எட்டத்திலுள்ள மரங்களையும் இன்றைய நம் ஆள்வார்கள் வெட்டி அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சிவவாக்கியர் என்ற நம் பண்டைத் தமிழ் வானியல் வல்லார் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுத்த 60 ஆண்டுகள் சுழற்சியுள்ள வாக்கியப் பஞ்சாங்கம் எனப்படும் ஐந்திறம் 20 ஆண்டுகள் நல்ல மழை, அடுத்த 20 ஆண்டுகள் சராசரி மழை, அடுத்துவரும் இறுதி 20 ஆண்டுகள் குறைவான மழை என்று வகுத்தள்ளது. இதற்கேற்ப பின்னால் வந்த உலகின் மிகச் சிறந்த வானிலையியல் வல்லுநரான (meteorologist) இடைக்காடர் அந்த 60 ஆண்டுகளுக்குமான மழைப்பொழிவு அடிப்படையிலான வேளாண்மை தொடங்கி முகாமையான பருப்பொருளியல், அரசியல் விளைவுகளைப் பற்றி 60 பாடல்களைப் பாடியுள்ளார். இந்த 60 ஆண்டுகள் சுழற்சி உடைந்து 1930களில் சென்னை மாகாண பொதுப்பணித்துறை 35 ஆண்டுகளில் இடம்பெறும் ஒரு மழைப்பொழிவுச் சுழற்சியைத் தன் நோட்டங்களின் மூலம் கண்டறிந்தது. அந்தச் சுழற்சி இன்று கழன்றுவிட்டது. எப்போது எங்கே மழை பெய்யும் புயல் வீசும் என்று முன்கணிக்க முடியாதபடி மழைப்பொழிவுச் சீர்மை இன்று முற்றிலும் சிதைந்துவிட்டது. இது தமிழகத்துக்கோ இந்தியாவுக்கோ மட்டும் பொருந்துவதல்ல, உலகெலாம் பரவிய ஐரோப்பியர்களின் அடக்கவொண்ணா பேராசையால் உலகமே அழிவை எதிர் நோக்கி நிற்கிறது.

கொங்கண் – கோவா தொடர்வண்டிப் பாதை செயற்பாட்டுக்கு வரும் வரை கேரளாவுக்கு நிலம் வழியாக எந்தப் பொருளும் தமிழகத்தின் எல்லை வழியாகத்தான் சென்றாக வேண்டும். இப் பாதை செயற்பாட்டுக்கு வந்ததும் அதன் வழியாக வடநாட்டிலிருந்தும் கன்னடத்திலிருந்தும் பொருள்கள் தாராளமாக அங்கு குவிகின்றன. இந்த மிதப்பில்தான் கேரள ஆட்சியாளர்கள் தமிழகத்தின் காய்கனிகள், கோழிகள், முட்டைகள் என்று அனைத்துப் பொருள்களையும் தரமற்றவை என்று அவ்வப்போது தடை செய்வதும், நம்மவர் போராடி தங்கள் பண்டங்களின் தரத்தை மெய்ப்பிப்பதும் அதன்பின் மாநில எல்லையில் நாட்கள் கணக்கில் சரக்கிகளை நிறுத்திக் கொடுமை செய்வதுமாகக் கொழுப்பேறி நிற்கின்றனர். இதன் உண்மையான பின்னணியை தமிழகத்தின் எந்தக் கட்சியும் தமிழ்த் தேசியம் பேசும் எந்தக் கூட்டமும் பேசுவதே இல்லை. ஏன் இதனால் நேரடிப் பாதிப்புக்குள்ளாகும் வேளாண் – வாணிக – சரக்குப் போக்குவரத்தினரும் கண்டுகொள்ளாதது நமக்கு பெரும் புதிராக உள்ளது. காவிரி நீரை அதன் படிகைப் பரப்பான தமிழகத்துக்கு வராமல் தடுத்ததும் கன்னடத்தில் அணைகளாகக் கட்டி பெருமளவில் நெல் வேளாண்மை செய்ததும் கொங்கண் – கோவா தொடர்வண்டித் தடம் அமைந்ததும் தமிழக மக்களில் மேய்ச்சல் பணிக்குத் தேவையானவர்கள் தவிர்த்த அனைவரையும் துரத்திவிட்டு அதை மேய்ச்சல் நிலமாக்கும் ஒருங்கிணந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதி என்பது தெளிவாகிறது. கூடங்குளத்தில் அணு மின் நிலையத்தை நிறுவி அதில் அடிக்கடி பழுதுகளை ஏற்படுத்தியும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு என்று ஒத்திகை நடத்தியும் கிலியூட்டி அப் பகுதியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்ற பதற்றத்தை மக்களிடையில் உருவாக்குதல், நியூட்ரினோ ஆய்வகம் என்ற பெயரில் ஒரு மலைப் பகுதி முழுவதையும் உடைத்தும் நிலத்தடியில் குடைந்தும் கிடைக்கும் கற்களைக் கொண்டு கம்பம் பள்ளத்தாக்கை மூடவுமான திட்டத்தையும் காவிரிப் படுகைப் பரப்பில் கன்னெய்யம், இயற்கை வளி எடுத்தல் என்ற பெயரில் அந் நிலத்தில் 1000 அடிகள் வரையுள்ள நீர் இருப்பை வெளியேற்ற வெறிகொண்டு நிற்பதையும் அத் திட்டத்தின் வேறு சில பகுதிகள் எனக் கொள்ள வேண்டியுள்ளது.   

“விடுதலை” பெற்ற இந்தியாவின் ஆட்சியாளரின் கொடுங்கோன்மையாலும் ஐரோப்பியரின் செயற்பாடுகளின் விளைவான மழைப்பொழிவுச் சீர்மைக் கேட்டாலும் நடுத்தர நிலவுடைமையாளர்கள் களத்திலிருந்து அகன்றார்கள். அவர்களோடு அவர்கள் வீட்டிலிருந்த மாட்டுத்தொழுவங்களும் மறைந்தன. பசுமைப் புரட்சியின் பெயரில் உழுவுந்துகளும் இழுவுந்துகளும் காளைமாட்டுத் தேவையை முடிவுக்குக் கொண்டுவந்தன.

இப்போது மாடு வளர்ப்பு வேளாண்மைக்குத் தொடர்பில்லாதவர்கள் கைகளுக்குள் வந்துவிட்டது. 1990களில் ஒரு முறை பாளையங்கோட்டைப் பொறியியல் கல்லூரிக்குத் தெற்கிலிருக்கும் டக்கரம்மாள் புரம் என்ற ஊருக்குத் தெற்கே, திருவனந்தபுரம் சாலைக்கும் கிழக்கே ரெட்டியார்பட்டிக்கும் மேற்கிலுள்ள ஓரிடத்தில் ஒரு நிலத்தை அளக்கச் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒரு குளத்தில் நீரிருந்தும் அதன் கீழிருந்த நன்செய் நிலங்கள் தரிசாகக் கிடந்ததைப் பார்த்து உடனிருந்தவர்களைக் கேட்டேன். மாடு வளர்ப்பு பண்ணையார்களிடமிருந்து இப்போது மறவர்களிடம் சென்றுவிட்டதாகவும் நான்கைந்து கல் மேற்கேயுள்ள தருவையிலிருந்து வரும் அவர்களின் மாடுகளைக் கட்டுப்படுத்த முடியாததால் பயிரிடுவதையே நிறுத்திவிட்டதாகவும் கூறினர். பக்கத்தில் மாட்டுத் தீவனத்துக்காக நாற்றுச் சோளம் எனப்படும் தீவனச் சோளம் வளரும் ஓர் ஒற்றை வயலைக் காட்டினர். சுற்றிலும் ஓராள் உயரத்துக்கு சீமைக் கருவேல மர முள்ளை வேலியாகக் குவித்திருந்ததைப் பார்த்து நெஞ்சு துடித்தது.

அதே காலகட்டத்தில் நான்குநேரியில் டி.வி.சுந்தரம் நூற்பாலைக்கு மேற்கில் ஒரு வேலைக்காகச் சென்றிருந்தேன். அங்கு மாடுகள் வெட்ட வெளிகளில் மேய்ந்து இரவும் பகலும் அங்கேயே படுத்திருந்ததைப் பார்த்தேன். கன்று ஈன்றவற்றைக் கூட எவரும் கண்டுகொள்ளவில்லை.

பாளையங்கோட்டை போன்ற நகர்ப் பகுதிகளில் ஆயர் குலத்தவர் வீட்டோடு இணைந்திருந்த தொழுவங்களை வீடுகளாக மாற்றி வாடகைக்கு விட்டுவிட்டு மாடுகளைத் தெருவுக்குத் துரத்திவிட்டனர். அவை தெருக்களிலும் சாலையோரங்களிலும் ஏதாவது புல் துளிர்த்திருந்தால் அதனைக் கறம்பிவிட்டு ஒட்டப்படும் சுவரொட்டிகள் ஈரம் உலரும் முன்பே அவற்றையும் கீழே கிடக்கும் தாள், நெகிழி(பிளாட்டிக்)க் குப்பைகளையும் தின்று வாழ்கின்றன. பெரும்பாலும் தெருவிலேயே ஈனுகின்றன. யாராவது கூறினால் வந்து கன்றையும் தாயையும் கொண்டு செல்வர். ஒன்றிரண்டு நாள்களில் தாயை வழக்கம் போல் தெருவுக்குத் துரத்திவிடுவர். பால் சுரந்து கன்றின் நினைவு வரும் போது வீட்டுக்கு வரும் தாயைப் பிடித்துக் கட்டி பாலைக் கறந்துவிட்டு மீண்டும் துரத்திவிடுவர்.

Image result for மாடுநாட்டு மாடுகள் பால் கறப்பதில்லையென்று சீமை மாடுகளைக் கொண்டுவந்தார்கள். பின்னர், உள்நாட்டு ஆமாடுகளுக்கு சீமை மாட்டு விந்தை ஏற்றி கலப்பினங்களை உருவாக்கினார்கள். முன்பு மாடுகளைச் சினைப்படுத்துவதற்கென்று வளர்த்த கோயில் காளைகள் எனப்படும் வித்துக் காளைகள் இப்போது காணாமல் போய்விட்டன. சல்லிக்கட்டு மாடாக பதுங்கியிருந்ததை அழிக்கவும் மோடி அரசு கச்சை கட்டி நிற்கிறது. தமிழ்நாட்டில் காங்கேயம் போன்ற ஒன்றிரண்டு வகைகள் தவிர கறவை மாடுகள் இல்லை. அத்துடன் பாலுக்காக மாடு வளர்க்கும் பழக்கம் கூட முன் காலங்களில் இல்லை. காளை ஈனுவதே ஆமாடுகளின் பணி. அவற்றை வளர்க்கும் ஆயர்கள் கூட பால் அருந்துவது அரிது. நோயாளிகளும் தாய்க்கு பால் சுரப்பு குறைந்துவிட்ட நிலையில் குழந்தைகளும் தவிர பார்ப்பனர் மட்டுமே பாலருந்துவோராக இருந்தனர். நம் மாட்டு வகைகளில் அரிதாக காராம்பசு என்று ஒன்று பிறந்துவிடுவதுண்டு. அது நன்றாகப் பால் கறக்கும். ஆனால் இநு வீட்டுக்கு ஆகாது என்ற நம்பிக்கையைப் பார்ப்பனர்கள் வளர்த்து வைத்துள்ளனர். அதனால் கோயிலில் கொண்டு விடச் சொல்லிவிடுவார்கள். கோயிலில் கறக்கும் பாலை கற்சிலையான கடவுளா குடிப்பார்? கோயிலைச் சுற்றியிருக்கும் பார்ப்பனர்களுக்குத் தான் அந்தப் பால்.

கன்று ஈனுவதற்காக வளர்க்கப்படும் மாடு தொடர்ச்சியாக கறக்கப்படாததால் அதன் மடி வளர்ச்சியடைய வில்லை. அத்துடன் வெட்ட வெளியில் மேயும் மாடுகள் குளங்களில் நீர் இல்லாத காலங்களில் பகல் முழுவதும் நீர் குடிப்பதில்லை. நகர்களின் விரிவாக்கப் பகுதிகளில் கட்டுமானப் பாணிகள் நடக்கும் இடங்களில் பிடித்து வைத்திருக்கும் தண்ணீர்க் குடங்களுக்குள் வாயை நுழைத்து குடத்தைச் சாய்த்து அங்கு மேயும் மாடுகள் தண்ணீர் குடிக்கப் படும் பாடு பார்ப்போர் மனதை உலுக்கும். இவற்றை சீமை மாடுகளுடன் ஒப்பிடுவதே தவறு. சீமை மாடுகள் போல் தொழுவங்களில் உரிய சத்துணவுடன் பராமரித்து முறைப்படி கறந்து வந்தால் ஒன்றிரண்டு தலைமுறைகளில் அவற்றின் மடிகளும் வளர்ச்சியடைந்து சீமை மாடுகள் போல் பால் கறக்கும். 

இவ்வாறு பல திசைகளிலுமிருந்து வேளாண்மை தாக்கப்பட்டதால் அங்கிங்கெனாதபடி மாடு மேய்ச்சல் விரிவடைந்துவிட்டது,

காமராசர் ஆட்சிக் காலத்தில்தான் வேலிகாத்தான் விதைகள் வான்வழி தூவப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுவதுண்டு. விதைகள் மேலே கூறியுள்ளவாறு பக்குவம் செய்யப்பட்டு மழைக்காலங்களில் தூவப்பட்டிருக்கலாம். வயல்களில் தூவப்பட்டவை முளைத்திருந்தாலும் அடுத்த வேளாண் பருவத்தின் உழவு – விதைப்பு - நடவு நடைமுறைகளின் போது இளங்கன்றுகள் அழிந்து போயிருக்கும். அவற்றுக்கு வாய்ப்பில்லாத குளங்களின் கரைகள், எதிர்வாய்கள், சாலையோரங்கள், மேய்ச்சல் நிலங்கள் போன்ற மாடு நடமாடும் இடங்களில்தான் அவை வளர்ந்தன என்பது கண்ணால் கண்ட உண்மை.

“விடுதலை” அடைந்த பின் வேளாண்மை மீது அன்றைய பேரவைக் கட்சி நடத்திய முதல் தாக்குதல் குளங்கள், ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பரப்பில் கருவேல் அல்லது நீர்க் கருவேல் எனப்படும் மரங்களை வளர்த்ததாகும். ஊராட்சிகளுக்கு இம் மரங்களை ஏலம் விடுவதன் மூலம் வருவாய் பெற்றுத்தருவது என்ற காரணம் கூறப்பட்டது. இதனால் ஏரி, குளங்களின் கொள்திறன் இரு விதத் தாக்குதலுக்கு உள்ளானது.

முன்பெல்லாம் குளத்தில் நீரில்லாக் காலங்களில் குளக்கரையை அடுத்திருக்கும் உள்புறத்தில், அதிகமான காலம் நீர் நின்றிருப்பதால் கருமை நிறம் பெற்றிருக்கும் உரச்சத்து மிகுந்த வண்டல் மண்ணை வண்டிகளில் அடித்து வயல்களில் போட்டு மண்ணின் வளத்தைப் பெருக்கி குளத்தின் கொள்திறனைப் பேணி வந்தனர் உழவர்கள். கருவேல மர வளர்ப்பு இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அடுத்து, மழை நீரில் அடித்து வரப்படும் வண்டல் முன்பு கரையின் அண்டை உள்புறமிருக்கும் ஆழமான பகுதியல் பெரும்பகுதியும் படியுமாறிருந்த வாய்ப்பு முடிவுக்கு வந்து குளத்தினுள் வளரும் மரங்களால் தடுக்கப்பட்டு எதிர்வாயை அடுத்த பகுதிகளிலேயே படியத் தொடங்கி குளத்தின் பரப்பு முழுவதும் ஏறக்குறைய சமமாகப் படிந்ததால் உழவர்கள் நினைத்தாலும் படிந்த வண்டலை திரட்ட முடியாத நிலை உருவாகியது. இதனுடன் மணல் கொள்ளையைத் தடுப்பதென்ற பெயரில் ஊழல் கலை வித்தகர் கருணாநிதி உருவாக்கிய “சுரங்கத்துறை”(இப்போது கனிம வளத்துறை)யினரின் பணம் பறிக்கும் கெடுபிடியும் சேர்ந்துகொண்டது. திராவிட இயக்க ஆட்சியாளர்கள் இலவயங்களில் அரசின் வருவாய் முழுவதையும் அழித்துவிட்டு பாசனம் உட்பட அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு உருவாக்கல், பராமரித்தலையும் கைவிட்டதோடு ஒரே பாசனப் பணியை பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைப் பொறியியல் துறையினரிடம் விட அனைவரும் எந்த வேலையும் செய்யாமல் பணத்தை ஆட்சியாளரோடு பங்கிட குளக்கரைகள் சிறிது சிறிதாக மழையாலும் காற்றாலும் கரைந்தன. ஒரு கட்டத்தில் ஆயக்கட்டினரே மறுகால் அளவுக்கு நீர் பெருகினால் கரை உடைந்து பயிரை அழித்து விடும் என்பதால் கரைந்து தாழ்ந்து விட்ட கரை மட்டத்தைக் குளத்து நீர் எட்டாத அளவுக்கு கரை உயரம் குறைந்த இடங்களில் கரையை வெட்டி தேங்கும் நீரை மறுகாலை உடைத்துத் தாழ்த்து அதன் வழியாக பாசனத்துக்கு நீர் கொண்டு செல்வலும் அவல நிலையை ஒரு புலனாய்வுப் பொறியாளனாக பொதுப்பணித்துறையில் பணியாற்றிய போது பார்த்திருக்கிறேன். நில உச்சவரம்பு என்ற பெயரில் எதற்கும் உதவாத நிலங்களைப் பெருமளவில் ஆட்சியாளர்கள் கைப்பற்றியதாகத் தோன்றுகிறது. ஆனால் கொடுமனம் கொண்ட கருணாநிதியின் கண்களுக்கு அரசு அலுவலகங்களும் மாணவர் விடுதிகளும் பிற அரசுக் கட்டடங்களும் கட்டுவதற்கும் விளையாட்டுத் திடல்களும் அரங்குகளும் பேருந்து நிலையங்களும் அமைப்பதற்கும் குளங்களும் ஏரிகளும்தான் தெரிந்தன.

இவை அனைத்தும் நாம் மேலே குறிப்பிட்ட “திருப்புகை மண்டலத்தின் புல்வெளிகள் சுட்டப்படுகின்றன” என்பதைத் தெளிவாக விளக்குகின்றன.

நில உச்சவரம்பு காலத்துக்கு முன்பு பெரும்பாலும் சராசரி அளவுள்ள குளங்களின் ஆயக்கட்டில் பெரும் பகுதி ஒன்று அல்லது இரண்டு பண்ணையாரின் உடைமைகளாக இருந்தன. அந்தக் குளத்தில் பராமரிப்புப் பணிகளுக்கு தன்வரிப்பு[8] விடும் போது இவர்களே பணிகளை ஏற்பர். ஆதாயத்தை விடத் தங்கள் வேளாண்மை நலனை அடிப்படையாகக் கொண்டே செயற்படுவர். எந்த வசதியும் இல்லாத பணிக்களத்துக்கு வரும் துறைப் பணியாளர்களுக்கு உணவு முதலிய வசதிகளைச் செய்து தருவர். ஆங்கிலர் காலத்தில் பணிகளுக்கு, குறிப்பாக மண் வேலைக்கு உள்ள கூலி வீதம் ஒப்பந்தக்காரருக்கு கட்டுப்படியாகும் நிலையிலிருந்தது. இக் காரணங்களால் வேலைத் தரமும் நன்றாக இருந்தது. உச்ச வரம்புக்குப் பின்னர் அதே பழைய நிலவுடைமையாளர்தான் பணியை மேற்கொள்கிறார். ஆனால் இப்போது அவரது குறிக்கோள் பணம் பார்ப்பது மட்டும்தான். வேலை செய்வோரோ முன்னாள் குத்தகையாளன் அல்லது உழவுக் கூலியான புதிய சிற்றுடைமையாளன். இங்கு நடக்கும் ஊழல்கள் தெரிய வந்தாலும் அவனால் எதுவும் செய்ய முடியாது. முறைத்தால் வெளியிலிருந்து கூலியாள் வரும்.

இவ்வாறுதான் தமிழகத்தின் வேளாண்மை உள்ளாற்றலை முற்றிலும் இழந்து நிற்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகத் தரிசாகி வரும் நன்செய் – புன்செய் நிலங்களில் மேயும் ஆடுமாடுகள் விதைக்கும் “பதப்படுத்தப்பட்ட” வேலிகாத்தான் விதைகள் எந்த இடையூறும் இன்றி வளர்கின்றன. அவற்றின் முள்ளுக்கு அஞ்சி ஆடுமாடுகள் அவற்றில் வாய்வைப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு பருவத்திலும் பல்வேறு வகைகளில் பரவும் உள்நாட்டு மர விதைகள் முளைத்துத் தலைகாட்டியதும் நம் கால்நடைகள் அவற்றை முளையிலேயே கிள்ளி அழித்துவிடுகின்றன. அதே நேரத்தில் அடர்ந்து வளர்ந்திருக்கும் வேலிகாத்தான் புதருக்குள் முளைத்து வேலிகாத்தானால் காக்கப்படும் நாட்டு மரங்கள் அவற்றின் மேல் செழிப்பான தங்கள் தலைகளை நீட்டி வளர்வது கவனமாகப் பார்ப்போர் கண்களிலிருந்து தப்ப முடியாது. அத்துடன் வலுவான வேலி அல்லது சுற்றுச் சுவர் எழுப்பப்பட்ட நிலங்களில் வேலிகாத்தானுடன் வளரும் நாட்டு மரங்கள் வேலிகாத்தானை அமுக்குவதைப் பல இடங்களில் காணலாம். அதாவது வேலிகாத்தான் முளைப்பதும் வளர்வதும் நாட்டு மரங்கள் அருகி வருவதும் நம் கால்நடைகளின் கட்டற்ற மேய்ச்சலால்தான் என்பது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகிறது.

குமரி மாவட்டத்தைப் பொறுத்த வரை “விடுதலை”க்கு முன் என் தந்தையாரும் வேறொருவரும் சில இளைஞர்களுடன் இணைந்து தலைமறைவாகத் தொடங்கிய சவகர் கிராம அபிவிருத்தி சங்கம் என்ற அமைப்பு பின்னர் முறையாகப் பதிவு பெற்று படிப்பகம், திருவிதாங்கூர் – கொச்சி மாநில அரசின் கணிசமான நல்கையுடன் நூல் நிலையம் என்று விரிவாக்கம் பெற்றது. அப்போது அப் பகுதியில் வேலி தாண்டி மேய்ந்த ஒரு ஆமாட்டை முறைப்படி சண்டை பயின்ற(பயிலுவான்) இளைஞர் வயிற்றில் அரிவாளால் பலமாக வெட்டிவிட்டார். இது சங்கத்தின் மூதலிப்பு(விசாரணை)க்கு வந்த போது, வேலி தாண்டி மேயும் மாடுகளை யாராவது பிடித்து வந்தால் அதைக் கட்டிவைத்து வைக்கோல் போடவும் மாட்டு உடைமையாளர் வரும் போது வைக்கோலுக்கு நாளொன்றுக்கு ஓர் உரூவாயும் மாட்டைப் பிடித்துவந்தவருக்கு வழங்க ஓர் உரூவாவும் தண்டுவதென்று தீர்மானிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இதை அடுத்து தேங்காய்த் திருட்டைத் தடுக்கவென்று ஈத்தாமொழி என்ற இடத்தில் பூமி பாதுகாப்பு சங்கம் என்று ஒரு அமைப்பு தொடங்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை(இங்கு தேங்காய் வெட்டுவது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்பதால் இந்த ஏற்பாடு) தேங்காய்களாகவோ பணமாகவோ நில உடைமையாளர்களிடம் தண்டி காவல் பணியாளர்களைப் பராமரித்தனர். நாளடைவில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலுமாக 30க்கும் மேலான (36 என்று நினைவு) சங்கங்கள் தொடங்கப்பட்டு ஏறக்குறைய 16 சங்கங்கள் 60 ஆண்டுகளாகச் செயற்பட்டு வருகின்றன. இவ்வாறு அம் மாவட்டத்தில் கட்டற்ற மேய்ச்சல் ஏறக்குறைய இல்லை என்று சொல்லலாம். இதனால் அங்கு வேலிகாத்தானைக் காண்பது அரிது. தென்னந்தோப்புகளுக்காக அண்டையில் நெல்லை மாவட்டத்திலிருந்து வரும் தொழுவுரச் சாணத்தில் இருக்கும் வேலிகாத்தான் விதைகள் முளைத்தாலும் மழைக்காலம் தொடங்கியவுடன் அங்கு தென்னந் தோப்புகளில் கடைப்பிடிக்கப்படும் வெட்டி வைத்தல் என்ற நடைமுறையில் கன்றுகள் மண்ணுக்குள் புதைந்து அழிந்து விடும். ஆக, தமிழகத்தின் பிற பகுதிகளில் வேலிகாத்தானை அழிக்க நினைப்பவர்கள் குமரி மாவட்டம் காட்டும் பாடத்தைப் பின்பற்ற வேண்டும். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவது இன்றைய சூழலில் எளிதானதல்ல. இது ஓர் அரசியல் இயக்கமாகவே நடத்தப்பட வேண்டியிருக்கும். அதை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

கலப்புப் பண்ணை வேளாண்மைக்கு நில உச்ச வரம்பு இல்லை என்று கூறினோம். எனவே ஓரளவு நிலத்தடி நீரும் மழைப் பொழிவும் உள்ள இடங்களில் முதலில் 100, 200 ஏக்கர்கள் பரப்பளவில் பண்ணைகள் அமைத்து சுற்றிலும் வேலியமைத்து ஆட்டு, மாட்டுப் பண்ணைகள் அமைத்து, சவுக்கு, நீலகிரி மரங்கள் போன்று நிலத்தடி நீரையும் காற்றின் ஈரத்தையும் உறிஞ்சிப் பாழடிக்காத உள்நாட்டு மரங்களைக் கொண்ட காட்டை மொத்தத்தில் 30%க்குக் குறையாத பரப்பில் வளர்க்க வேண்டும். மிகக் குறைந்த ஆழத்தில் பாறை உள்ள இடங்களில் ஆல், அத்தி, அரசு, இலவு, முருங்கை, முள் முருங்கை, உசிலை, தூங்குமூஞ்சி போன்ற மென்மரங்கள் வளர்த்தால் அவற்றின் வேர்கள் பாறையை ஊடுருவி உடைத்து நாளடைவில் மழை நீர் கீழிறங்க வழி ஏற்படும்.  ஆடு மாடுகளுக்குப் பயன்படும் தீவன மரங்கள் வளர்த்து, மாட்டுச் சாணத்திலிருந்து எரிவளி மின்சாரமும், சாணக் கழிவிலிருந்து பயிர்களுக்கும் உரமும் கிடைக்கும். தகுந்த மட்டத்தில் ஒரு சிறு குளம், பக்கத்து ஊர்களில் திரளும் மட்காத குப்பைகளைக் கொண்டு பண்ணையின் உயரம் மிகுந்த இடத்தில் ஒரு சிறு குன்று ஆகியவற்றை அமைத்தால் மழைக்காலத்தில் குளத்தில் தேங்கும் நீர் பயிர்களுக்கும் குன்றில் தங்கும் நீருடன் இணைந்து நிலத்தடி நீர் ஊட்டத்துக்கும் பயன்படும். வேளாண்மையில் கிடைக்கும் தவசங்களை அப்படியே சந்தைக்குக் கொண்டு செல்லாமல் மாவு, குருணை போன்ற பகுதிப் பக்குவம் செய்யப்பட்ட பண்டங்களாகக் கடைகளில் போட்டு ஆதாயம் பார்க்கலாம். அவை அனைத்தின் மூலமும் அங்கு பணியாற்றுவோருக்கு ஆண்டு முழுவதும் வேலையும் கொடுக்க முடியும். ஒரு கட்டத்தில் வெளியிலிருந்து எந்த இடுபொருளும் இன்றி வேளாண் பொருள்களைச் சந்தைக்கு விடும் அளவுக்கு பண்ணை வலிமை பெறும். வளர்க்கப்படும் காட்டுப்பகுதியில் சேரும் சருகுகள் மண்ணரிப்பைத் தடுத்து மழை நீரைப் பிடித்துவைத்து நிலத்தினுள் கசிவதற்கு வாப்பளிப்பதாலும் அந்த வட்டாரத்து நிலத்தடி நீர் வளம் பெருகும். .அடுத்தடுத்து இது போன்ற பண்ணைகள் செயற்பட்டால் இயற்கைச் சூழல் மேம்பட்டு நீர் வளம் விரைந்து பெருகும். வரண்டதாக இன்று கிடக்கும் அண்டை நிலங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன் மழைப்பொழிவும் மேம்படும்.

எல்லாத் துறைகளிலும் போல் முதன்முதல் இப் பணியில் ஈடுபடுவோருக்கும் பெரும் அறைகூவல்கள் காத்துக்கொண்டிருக்கும். நிலத்தில் முதலீடு செய்ததும் வருமான வரிக் கழுகுகள் தங்கள் ஒற்றர்கள் மூலம் மோப்பம் பிடித்துவந்து கொத்திக் குதறுவார்கள்[9]. இதை ஓர் அரசியல் சிக்கலாக மாற்றிப் போராட நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். இன்றைய நிலையில் இது எளிதில் அனைத்திந்தியச் சிக்கலாக மாறும் வாய்ப்புள்ளது. தங்கள் செல்வங்களைச் செலவிட்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை வளர்த்தவர்களைப் போல் ஈகம் செய்ய முன்வரும் செல்வப் பெருந்தகைகளைக் களத்துக்குக் கொண்டு வருவதற்குப் பெரும் பரப்பல்கள் மேற்கொள்ள வேண்டும். அது போல ஒவ்வொரு கட்டத்திலும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை முன்னுணர்ந்து களத்திலிறங்க இளைஞர்கள் முன்வர வேண்டும். ஏனென்றால் இது ஓர் உடனடிப் பணியாகும். தமிழகத்தை மேய்ச்சல் நிலமாக்கத் துடிக்கும் விசைகளின் பரப்பல் நடவடிக்கைகள் வீறுகொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக வேளாண் “விஞ்ஞானி" என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட ஆர்.எசு.நாராயணன்[10] என்பவர் அண்மைக் காலமாக வேலிகாத்தானின் சிறப்புகளைப் பற்றி இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளளதைக் கூறலாம். வேலிகாத்தான் விதைகளை அரைத்து மாடுகளுக்குத் தீவனமாக ஊட்டலாமென்றும் மனிதர்களும் உண்ணலாமென்றும் கூறுகிறார். பனை மரம் பணமரமல்ல என்ற தலைப்பில் 31 – 10 – 2014இல் எழுதிய கட்டுரையில் நீலகிரி மரங்களை வளர்த்தால் தாள் ஆலைகள் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்வார்கள், நான்கே ஆண்டுகளில் கொள்ளைகொள்ளையாகப் பணம் பார்க்கலாம் என்பது அவரது பரிந்துரை. இன்றைய புலன(தகவல்)த் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் பார்ப்பனர், அம்மண சமயத்தைச் சேர்ந்த பனியா இளைஞர்கள் கூட ஆண், பெண் வேறுபாடின்றி சங்க் புட் எனப்படும் கோழி, ஆடு, மாடு, எருமை, பன்றி இறைச்சிகளில் செய்யப்படும் காரசாரமான உணவை வெட்டு வெட்டென்று வெட்டுகிறார்கள் என்று புலம்பியிருக்கிறார். உண்மையிலேயே இவருடைய வருத்தம், இப்படி இங்குள்ளவர்களே தின்று தீர்த்துவிட்டால் இந்த இறைச்சிகளை ஏற்றுமதி செய்யும் பார்ப்பன – பனியாக்கள் பாடு என்னாவது என்பதுதான்.(நன்றாக ஓடிய திரைப்படமாகிய ஓவை சண்முகியில் பார்ப்பன நடிகர்களாகிய செமினி கணேசனும் கமல்காசனும் பங்கு கொண்ட காட்சியில் கதைப்படியும் பார்ப்பனராகிய செமினியைப் பார்த்து “உங்கள் தொழிலே மாட்டிறைச்சி ஏற்றுமதிதானே” என்று கமல்காசன் கேட்பதை நினைவுக்குக் கொண்டுவாருங்கள்.) நெல்லை சு.முத்து அவர்களும் தன் பங்குக்கு புலால் உணவு குறித்தும் குறிப்பாக நாடாப்புழு குறித்தும் பெரும் கிலியூட்டும் கட்டுரையொன்று தினமணியில் தீட்டியுள்ளார் அண்மையில்.

மாட்டிறைச்சி எளிதில் செரிக்கும் தரமான புரதச் சத்தை மலிவாகத் தரும் ஓர் உணவு. உலகில் வாழும் மக்களில் மாட்டிறைச்சி உண்போர்தாம் வளர்த்தியிலும் உடல் பொலிவிலும் சிறந்து விளங்குகிறார்கள். நம் நாட்டில் பால்படு பொருட்களை மிகுதியாக உண்ணும் பார்ப்பனர் முதல் மாட்டுத் தொழுவங்களும் சமயலுக்கு தவசிப்பிள்ளையும் வைத்திருந்த பணக்கார சிவனிய வெள்ளாளர்களும் பெரும்பாலான நாயக்கர்களும் ரெட்டியார்களும் வளர்த்தியும் மேனிப்பொலிவும் உள்ள தமிழக மக்கள் தொகுதியினர். செல்வச் செழிப்பின்றி பெருமைக்கு மரக்கறி உணவைக் கடைப்பிடிப்பவர்கள்(முதலியார் சம்பம் விளக்கெண்ணெய்க் கேடு – பக்கத்திலுள்ளவர்கள் இவர்கள் நெய்யூற்றி உண்டுள்ளனர் என்று நினைக்க வேண்டும் என்று உண்ட வாழை இலையில் விளக்கெண்ணெய்யைத் தடவி தெருவில் போடுவார்களாம். இது வட மாவட்டங்களிலுள்ள சொலவடை) உடல் வளர்ச்சி குன்றி முகம் சூம்பி உடல் கருகி கூன் விழுந்து பார்க்க இரங்கத் தக்கவர்களாகத் தோற்றம் தருகின்றனர். எனவே தமிழக மக்கள் பழைய தப்பெண்ணங்களைத் தூக்கி எறிந்துவிட்டு தாராளமாக மாட்டிறைச்சி உண்ண வேண்டும். நம் மண்ணில் வளரும் மாட்டின் இறைச்சி அனைத்தும் நமக்கே என்ற உரிமை உணர்வுடன் பனியா – பார்சி – வல்லரசியக் கூலி இந்திய ஆட்சியாளர்களின் ஏற்றுமதி – இறக்குமதிக் கொள்கைக்கும் கொள்ளைக்கும் எதிராக விட்டுக்கொடுக்காமல் போராட வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் எமது இயக்கமான தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் மாட்டிறைச்சியை தமிழகத்தின் தேசிய உணவாக அறிவித்துள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

மிக நெருக்கடியான இந்தப் பின்னணியில் நம் ஆற்றல்கள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி தமிழகத்தின் வேளாமையை அழித்து அதை அமெரிக்கருக்கும் ஐரோப்பியருக்கும் அரேபியருக்கும் மாட்டிறைச்சியும் பிற இறைச்சி வகைகளும் வழங்கும் வெறும் மேய்ச்சல் காடாக்கும் சூழ்ச்சியிலிருந்து மீட்க களத்திலிறங்குமாறு தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத்தின் மூலம்  கேட்டுக்கொள்கிறோம்.[1]. அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த கடுக்கரையைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுங்கானோடையை மறித்துக் கட்டிய குறுக்கணையில் கீழ் எட்டங்களில் அந்த ஓடை நீரில் ஏற்கனவே வேளாண்மை செய்வோருக்குத் தண்ணீர் செல்வதற்கான ஒரு திறப்பமைப்பு இல்லையாயின் அவர்கள் அணையை உடைத்துவிடுவார்கள் என்று என்னிடம் கூறினர். அப்போது பொறுப்பிலிருந்த எனக்கு நேர் மேலதிகாரியான உதவி செயற் பொறியானரிடம் இதைக் கூறிய போது, ஏற்கெனவே அரசால் ஆள்வினை ஒப்புதல் வழங்கப்பட்ட திட்டத்தில் மாற்றம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். உள்ளூரார் கூறியது போலவே அந்த அணை பின்னாளில் உடைக்கப்பட்டு அத் திட்டத்தில் செலவழிக்கப்பட்ட  இன்றைய மதிப்பில் 2 கோடிக்குச் சமமான உரூ 1½ இலக்கம்  மக்களின் வரிப்பணம் பாழானது.
[2] “நம்” நாட்டு குத்தகை ஒழிப்புச் சட்டத்தின்படி  குத்தகை உழவனிடமிருந்து அதாவது அவன் கைப்பற்றிலிருந்து, அவன் வாரத்தை ஒழுங்காகச் செலுத்துவது வரை நிலத்தைப் பிடுங்குவதற்கு நிலவுடைமையாளருக்கு உரிமை கிடையாது. குத்தகையாளர் வரட்சி, நோய்த்தாக்கு போன்ற தகுந்த காரணமின்றி வாரத்தைச் செலுத்தத் தவறினால் மீட்டுக்கொள்ளலாம். ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில் குத்தகை ஒழிப்பின் போது நிலத்தை ஒரேயடியாக உழுபவனுக்கு, அதாவது குத்தகையான்னுக்குச் சொந்தமாக்கினர். சிற்றுடைமைகளில் வேளாண்மை செய்து பிழைப்பை நடத்த முடியாத உழவர்கள் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு நகரங்களில் தோன்றி வளர்ந்துகொண்டிருந்த தொழிற்சாலைகளை நோக்கி நகர்ந்தார்கள். நிலத்தை வாங்கியவர்கள் பெரும் பண்ணைகளில் தாங்களை நேரடியாகப் பயிரிட்டு வேளாண் தொழில்நுட்பங்களைப் பல முனைகளிலும் வளர்த்தார்கள். பிறப்படிப்படையில் அமைந்த பண்ணையார் – பண்ணையாள், அதாவது – வாழ்நாள்   முழுவதும் ஆண்டானாகிய பண்ணையாரின் பிடியிலிருந்து தப்ப முடியாத அடிமை என்ற முறை முடிவடைந்து தொழிற்சாலைப் பணி நேரம் முடிந்த பின் விடுதலை பெற்ற மனிதனாக அந்த முன்னாள் பண்ணையடிமை மீட்சியடையும் முதலாளிய குமுகம் உருவானது.
[3] இப்பகுதி ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.
[4]   திருப்புகை மண்டலம், Tropical Region, 23½வடக்கு அக்கக் கோடு (கடக ரேகை) முதல் 23½தெற்கு அக்கக் கோடு(மகர ரேகை) வரை(Gr.tropos – a turning); நடுக்கோட்டு மண்டலம்  Equatorial Region.
[5] A Commercial Geography, L Dudley Stamp, Longmans, Green and Co., London, 1951, p.29
[6] Capital Vol , Karl Marx, Pprogress Publishers, Moscow, p.478
[7]இன்று(2014) நிலைமை தலைகீழ்.
[8] Tender
[9] .20 ஆண்டுகளுக்கு முன் அரசு தொலைக்காட்சியில் நடிகை குட்டி பத்மினி (வருமான வரித் துறைக்காக என்று நினைவு) உருவாக்கிய தொடரில் வருமான வரித் துறையினருக்கு “வரி ஏய்ப்பு” பற்றி துப்பு கொடுப்போருக்கு வெளிப்படும் மொத்த பண மதிப்பின் குறிப்பிட்ட நூற்றுமேனி தரகாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அண்மையில் தாளிகைகளில் வெளியான ஒரு செய்தியின் படி அப்படி எதுவும் இல்லாதது போலவும் இனிமேல்தான் அது பற்றி முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர். வருமான வரியைப் பொறுத்து ஆட்சியாளர்கள் ஏன் இப்படி நாடகம் ஆட வேண்டும் என்பது நம் கேள்வி.
[10].சில ஆண்டுகளுக்கு முன் பொருளியல் வல்லுநர் என அடையாளம் காட்டி தினமணியில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தவர் பொருளியல் மேதை கெயினசு பற்றி தான் எழுதிய ஒரு கட்டுரையை எனக்கு விடுத்து கருத்துக்கேட்டிருந்தார். கேயின்சின் கோட்பாடு பற்றி தவறான விளகத்துடன் உலக வங்கி, அனைத்து நாட்டுப் பணப்பண்டு போன்ற நிறுவனங்களில் கடன் பெறுவதை நயப்படுத்தி எழுதப்பட்டிருப்பதாக என் கருத்தைக் கூறினேன். அதற்கு விடையாக Times நாளிதழில் வெளியான ஒரு சிறப்புக் கட்டுரை அடிப்படையிலேயே தான் அதை எழுதியதாகத் தெரிவித்திருந்தார். அதன் பின் பொருளியல் வல்லுநர் என்ற அடையாளத்துடன் அவரது கட்டுரைகள் வரவில்லை. வேளாண் விஞ்ஞானி என்ற அடையாளத்துடன் வந்துகொண்டிருக்கின்றன. வாழ்க பாரதம்! என்ற முழக்கத்துடன் கட்டுரைகளை முடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்த அவர் அண்மைக் காலமாக அதைக் கைவிட்டிருக்கிறார்.