திராவிட மாயை - 17
4.4.தமிழக
மக்களை இரப்பாளிகளாக்கித் தரகு பார்க்கும் வள்ளல் பெருமான்.
அண்மைத்
தமிழக வரலாற்றில் இலவயங்கள் கொடுத்து மக்களைக் கவரும் உத்தியைத் தொடங்கி வைத்தவர் ம.கோ.இரா. தான் நடித்த ரிக்சாக்காரன்
திரைப்படத்தைத் தொடர்ந்து நரவண்டி(கை ரிக்சா) இழுத்துப் பிழைப்பு நடத்திய சிலருக்கு
மிதி நரவண்டி(சைக்கிள் ரிக்சா)களை இலவயமாகக் கொடுத்து அவர் இதைத் தொடங்கிவைத்தார்.
அதை அவர் தன் சொந்தப் பணத்தில் செய்தார். இதைப் பார்த்தது ஊழல் வித்தகரின் “புத்தி” எதிர்த் திசையில்
சிந்தித்தது. அரசுப் பணத்தில் இதையே
செய்தால் மிதி நரவண்டி வாங்குவதில் தரகு கிடைக்கும்.
வரும்படியை வரவு வைத்துவிட்டு வள்ளல் பட்டத்தையும் பெற்றுவிடலாமே.
எனவே தன் அடுத்த பிறந்த நாளில் மிதி நரவண்டி, கண்ணாடி போன்ற
பொருட்களை அரசுப் பணத்திலிருந்து
வழங்கினார்.
ம.கோ.இரா. தன் ஆட்சிக் காலத்தில் ஏழைக் குழந்தைகளுக்கென்று
மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார். வயல்களிலும் பிற இடங்களிலும் அன்றாடப் பிழைப்புக்குக்
கூலி வேலை செய்யும் பெண்கள் தங்கள் குழந்தைகளை இம் மையங்களில் விட்டுச் செல்ல
முடிந்தது. அங்கு எழுத்தறிவும் புகட்டப்பட்டதால் அக் குழந்தைகள் தொடர்ந்து
தொடக்கக் கல்வியையும் கற்றனர். இதனால் மதிய உணவுத் திட்டம் தொடக்கப் பள்ளிகளுக்கும்
விரிவடைந்தது. இது ஊர்ப்புற தமிழகக் குழந்தைகள் கல்வி பெறுவதில் ஒரு பாய்ச்சல்
நிலையை உருவாக்கியது. அத்துடன் குழந்தைகளுக்குச் செருப்பு போன்ற திட்டங்களைத்
தொடங்கி நடுவில் விட்டுவிட்டார்.
அதே சத்துணவுத் திட்டத்தில் ஊழல் வித்தகர் நுழைந்தார்.
குழந்தைகளுக்கு முட்டை வழங்குகிறேன் என்றார். நாமக்கல் முட்டைப் பண்ணையாளர்களோடு
என்ன உடன்படிக்கை செய்தாரோ தெரியாது முட்டை விலை கூரையைப் பிய்த்துக்கொண்டு பறந்தது.
2006 சட்டமன்றத் தேர்தலின் போது நிலமில்லாத உழவர்களுக்கு
ஆளுக்கு 2 ஏக்கர்கள் நிலம், ஏழைக் குடும்பங்களுக்கு இலவய வண்ணத் தொ.கா.பெட்டி, ஓர்
உருளையுடன் எரிவளி அடுப்பு என்று அறிவித்தார். நிலத்தைப் பொறுத்தவரை சில
தி.மு.க.வினருக்கு வழங்கியிருக்கிறார்கள் போலும். “சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்”
என்று முழங்கியவர்கள் ஏறக்குறைய
அனைவருக்கும் தொ.கா.பெட்டியும் எரிவளி வகையறாவும் வழங்கிவிட்டதாகக் கூறிக்கொள்கிறார்கள்.
குறைந்தது கணக்கிலாவது வழங்கிவிட்டதாகக் காட்டியிருப்பர். ஏழைகளுக்கு மட்டும்
என்று கூறியவர்கள் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வழங்குவதாக மாற்றிவிட்டார்கள்.
தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளது. ஒரு எரிவளி
அடுப்பின் உண்மையான விலை உரூ 400/. ஆனால்
அரசுக் கணக்கில் அதை 800 என்று காட்டியிருக்கிறதாம். ஆக, 400 × 2 கோடி = 800 கோடி அதில்
பார்த்தாயிற்று. இது போல் தொ.கா.பெட்டி ஒன்றில் உரூ 1000/ - என்று
வைத்துக்கொண்டாலும் அதில் 2000 கோடி பார்த்தாயிற்று. கொடுக்காமலே கொடுத்ததாகக் காட்டியவற்றுக்கு வேறு இதனுடன்
சேர்க்க வேண்டும்.
மக்களைப் பொறுத்தவரை பொருளியல் நிலைக்கு ஒரு தொ.கா.பெட்டியை
வாங்கி அதற்குரிய கூடுதல் மின் கட்டணம், கேபிள் எனும் கம்பித் தொடர்புக் கட்டணம் ஆகியவற்றை எதிர்கொள்ள
இயலாது என்று தொ.கா.பெட்டி வாங்குவதைத் தள்ளிப்போட்டு வந்தவர்கள், அதே போன்ற கண்ணோட்டத்தில் எரிவளி அடுப்பைத் தள்ளிப்போட்டு வந்தவர்கள் என்று அனைவர்
தலைகளிலும் இவை இரண்டையும் கட்டியாயிற்று.
ஏற்கனவே இவற்றை வைத்திருந்தோர் இலவயமாகக் கிடைத்ததை
மறுவிலைக்கு விற்றனர். ஆனால் வித்தகரின் தரகு குறையாதல்லவா? இடைத்தரப் பணக்காரர்கள்
கூட இந்த இலவயங்களை வாங்க அலைந்ததைப் பார்க்கும் போது வித்தகர்
உருவாக்கியிருக்கும் பண்பாட்டுச் சிதைவு வெறுப்பு மூட்டியது.
இதே போல் இலவய வேட்டி, சேலை, பொங்கலுக்கு இலவய மலிகைப்
பண்டங்களின் பொதியல் என்று வித்தகர்
வழங்குவதைப் பார்த்து மக்கள் மகிழ்ந்திருக்கிறார்கள்.
இந்த இலவய வேட்டியும் சேலையும் மிகுந்த ஏழ்மை
நிலையிலிருப்போர் தவிர சராசரி மக்களின்
பயன்பாட்டுக்கு உகந்தவையல்ல. இவையனைத்தையும் எல்லோரும் வாங்குவதை நாம் ஏன் வாங்காமல் விட வேண்டும் என்ற மனப்பான்மையில்
வாங்குவதில் தொடங்கி ஏதாவது இலவயமாக ஆட்சியாளர்கள் வழங்க மாட்டார்களா என ஏங்குவதில் வந்து
முடிந்திருக்கிறது.
தமிழகத்திலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு கேபிள் எனும்
கம்பி இணைப்பு அனைத்தும் இன்று தமிழீனத் தலைவரின் குடும்பத்தினரின் ஆளுகைக்குள்
வந்தாயிற்று. ஒவ்வொரு இணைப்பின் மூலமும் மாதம் ஒன்றுக்கு குறைந்தது உரூ 50/- “தலைவர்” குடும்பத்துக்குச் செல்கிறது. இதில் இவர்கள் வழங்கிய இலவயப் பெட்டிகள்
மூலமாக குறைந்தது ஒரு கோடி இணைப்புகள் புதிதாக
செயற்பாட்டுக்கு வருகின்றன என்று வைத்துக்கொண்டால் மாதம் ஒன்றுக்குக்
கூடுதலாக 50 கோடி உரூபாய்கள் பெறுபவனை விட
கொடுப்பவனுக்குக் கூடுதல் பல மடங்கு ஆதாயம். எத்தகைய “கணித வித்தகர்” தமிழக மக்களுக்குத் தலைவராக வாய்த்திருக்கிறார்
பாருங்கள்!
2011 ச.ம.தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மாவரைக்கும் பொறி(அரைப்பான்) அல்லது வெஞ்சணம் அரைக்கும் பொறி(கலப்பான்) ஒவ்வொரு
குடும்ப அட்டைக்கும் இலவயமாக வழங்கப்படும் என்கிறது. ஏற்கனவே இப் பொறிகளை வைத்திருப்போரே மின் வெட்டால்
ஆட்டுக் கல்லிலும் அம்மியிலும் அரைக்க வேண்டிய சூழலில் இவன்கள் தரும் பொறிகளை
வாங்கி வைத்துக் கொண்டு இவன்களின் தலையிலா அரைப்பது என்று இல்லத்தரசிகள்
குமுறுகிறார்கள்.
இந்த இலவய ஏமாற்று பற்றி மக்களுக்குப் புரிந்திருந்தாலும் “பூனைக்கு யார் மணி கட்டுவது” என்பதுதான் உண்மையான நிலை. ஆக இவையும் தொடக்கத்தில்
மக்களின் கசப்புணர்வைத் தூண்டினாலும் தாங்கிக் கொண்டு மக்கள் முன் எடுத்து வைக்க
வேண்டியவர்களாக உள்ளோம்.
ஊழல்
வித்தகரின் தேர்தல் அறிக்கைக்காகக் காத்துக்கொண்டிருந்த அம்மையார் ஒவ்வொரு
குடும்பத்துக்கும் அரைப்பான், கலப்பான் மற்றும் மின்விசிறியும் வழங்குவதாக
அறிவித்திருக்கிறார் தன் தேர்தல் அறிக்கையில்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக