29.4.07

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 23. இந்தியத் தேசியம்

இந்தியா ஒரு தேசமா? இந்தியத் தேசியம் என்று ஒன்று உண்டா? இந்தக் கேள்விகளுக்கு ஒரே சொல்லில் "ஆம்" அல்லது "இல்லை" என்று கூறிவிட முடியாது. தேசிய உணர்வென்பது இயற்கையானது என்று முன்பு[1] கூறிவோம். ஆனால் பல வேளைகளில் அது வெளிப்படுவதில்லை. எதிரிகளால் தொடர்ச்சியான கொடுமைகளுக்கு ஆட்படும் போதும் சரியான தலைமை அமையும் போதும் தான் அது வெளிப்படுகிறது. வேறு வகைச் சூழ்நிலைகளில் தேசிய உணர்வு மங்கிப் போனதையும் வரலாற்றில் நாம் பார்க்கிறோம்.

ஆங்கிலேயர் தம் வரலாறு முழுவதும் தங்கள் கடற்கரைக்கு எதிர்ப்புறமுள்ள ஐரோப்பியக் கடற்கரை மீது கண் வைத்திருந்தனர். எப்போதெல்லாம் அந்த எதிர்க்கரை முழுவதும் ஓரரசின் ஆதிக்கத்தின் கீழ் வந்ததோ அப்போதே அவ்வரசைத் தாக்க அவர்கள் அணியமாகி (ஆயத்தமாகி) விடுவர். அப்படிப்பட்டவர்களுக்கே காட்டுலாந்து மக்கள் எப்போதும் எதிரிகளாயிருந்தனர். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பிரஞ்சியர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயரைத் தாக்கி வந்தனர். பின்னர் தொழிற்புரட்சி தொடங்கி காட்டுலாந்து நிலப்பரப்பில் கனிமங்களும் நிலக்கரியும் கண்டு பிடிக்கப்பட்டு அப்பகுதி தொழில்வளம் பெற்று பிரிட்டனின் பொருளியலில் உரிய பங்கேற்கத் தொடங்கியதும் அவர்களின் தேசிய உணர்வு மங்கிவிட்டது. ஆனால் உண்மையில் இன்னும் அது மறையவில்லை. என்றாவது ஒரு நாள் அது மீளக்கூடும்.

உரோமின் பழஞ்சவைக் கிறித்துவத் தலைமையை ஏற்றுக்கொண்டிருந்த இங்கிலாந்து எட்டாம் என்ரி காலத்தில் தன் திருமணம் தொடர்பாக உரோமுடன் ஏற்பட்டட மோதலிலிருந்து பீரிட்டெழுந்த தேசிய உணர்வே அது ஒர் உலகப் பேரரசாக மலர்வதற்கு வித்திட்டது என்பது வரலாற்று உண்மை. பறிமுதல் செய்யப்பட்ட கோயில் சொத்துக்களை அந்த அரசனோடு பங்கிட்டுக் கொண்ட அவனது நண்பர்களே இங்கிலாந்தின் முதலாளிய வகுப்பின் அடித்தளமாக அமைந்தனர்.

வில் தூரன் என்பவர் எழுதியுள்ள நாகரிகத்தின் கதை என்ற நூலின் முதல் மடலம் நாம் கிழக்கிலிருந்து பெற்ற மரபுரிமை[2] என்ற தலைப்பையுடையது. அதில் முதலில் மேற்காசிய நாடுகளின் வரலாறு கூறப்படுகிறது. யூதர்களைப் பற்றியும் அவர் கூறுகிறார். அவை அனைத்தையும் படிக்கும் போது யூதத் தேசியத்தைப் பற்றிய ஓர் உண்மை பளிச்சிடுகிறது. மேற்காசியாவின் வரலாற்றில் எகிப்து பல நாடுகளின் மீது படையெடுத்து எண்ணற்ற மக்களை அடிமையாக வைத்திருந்தது. அவ்வாறு அடிமையாக்கப்பட்ட மக்களைக் கசக்கிப் பிழிந்து அரசர்களுக்கான நினைவுச் சின்னங்களான கூம்புக் கோயில்களைக் கட்டியது. இந்நிலையில் அரச குடும்பத்தில் ஏற்பட்ட மரபுரிமைச் சண்டையில் வெளியேறிய மோசே அந்த அடிமைகளை அழைத்துச் சென்று ஓரிடத்தில் குடியமர்த்தி அவர்களுகென்று ஒரு வாழ்க்கை முறையையும் அமைத்துக் கொடுத்து ஒரு புதிய தேசியத்தையும் உருவாக்கியது தெரிகிறது. ஆனால் இந்தச் சேர்க்கைத் தேசியம் தான் உலகத்தின் நீண்ட வாழ்வைக் கொண்ட தேசியமாக நிலைத்து நிற்கிறது.

இந்தத் தேசியத்தில் இயேசுநாதரின் பங்கு வேறுபட்டது. அவரது காலத்தில் இசுரேல் எனப்படும் யூதநாடு உரோமப் பேரரசின் கீழ் அடிமைப்பட்டிருந்தது. அவரது தொடக்ககால நடவடிக்கைகள் இந்த அடிமைத்தனத்துக்கு எதிரான தேசிய உணர்வைக் காட்டி நிற்கின்றன. ஆனால் ஏதோவொரு சூழ்நிலையில் அவரது சினம் யூத மேல்தட்டினார் மீது திரும்புகிறது. எனவே முரண்பாடு உரோமர்கள் பக்கமிருந்து திசைதிரும்புகிறது. இதனால் சினமுற்ற யூதா இயேசுவைக் காட்டிக்கொடுத்தான் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அதனால் தான் உரோம ஆளுனன் இயேசுவைக் காப்பாற்ற முன்வந்தான் என்றும் கூறப்படுகிறது. பிறந்த போது யூத குமரனாக அறிவிக்கப்பட்ட அவர் இறுதியில் "தேவ குமரனாக" மாறிவிட்டார்.

இவ்வாறு உரோமப் பேரரசை எதிர்த்துத் தன் வாழ்வைத் தொடங்கிய இயேசுநாதரின் நடவடிக்கை இறுதியில் யூதர்களுக்கு எதிராக முடிந்தது. இத்துடன் அது நிற்கவில்லை. அவரது மாணவர்களால் உரோமிலுள்ள அடிமைகளிடையில் பரவிய அவரது கோட்பாடு அரசின் ஒடுக்குமுறைகளையும் மீறி வளர்ந்து அரசுகட்டிலேறியது. அரசுகட்டிலேறியதும் இயேசுவைக் கொன்றவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் கி.பி. நான்காம் நூற்றாண்டில் யூதர்கள் மேல் உரோமப் பேரரசு ஒரு பெரும் தாக்குதலை நடத்த வைத்தது. அவர்களை 1600 ஆண்டுககள் உலகமெல்லாம் சிதறி ஓட வைத்தது.

மோசேயை முன்னோடியாகக் கொண்டே அரேபியர்களின் தேசிய உணர்வை முகம்மது பெருமான் உருவாக்கி அவர்கள் ஓர் ஐந்து நூற்றாண்டுகள் உலகை ஆள வைத்தார். ஆனால் அது இன்று ஒரு தேசியமில்லா, வேரில்லா ஒட்டுண்ணிப் பண்பாடாகத் திசைமாறி நிற்கிறது.

உலகை வெல்லப் புறப்பட்ட பிரிட்டன் அமெரிக்காவில் தன் நாட்டின் சிறைகளிலிருந்த குற்றவாளிகளை அங்கு குடியேற்றியது. அவர்கள் மண்ணைப் பண்படுத்திப் பயிரிட்டு அந்நாட்டை வளம்பெறச் செய்தனர். அதே நேரத்தில் அயர்லாந்தில் தேசியப் போர் உச்சகட்டத்திலிருந்தது. இங்கிலாந்து அதை வன்மையாக ஒடுக்கிது. பெரும் எண்ணிக்கையில் அயர்லாந்தினர் அமெரிக்காவில் குடியேறினர். அவர்கள் தான் அமெரிக்க விடுதலைப் போரின் பின்னணியிலிருந்தவர்கள். மொழியிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் கூடப் பலவகைகளில் இங்கிலாந்துக்குத் தலைகீழ் உத்திகளைக் கையாண்டு அவர்கள் தங்கள் தனித்தன்மையை நிலைநாட்டி வருகின்றனர்.

வட அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர் முதலில் அங்கிருந்த சிவப்பிந்தியர் எனப்படும் மங்கோலிய இன மக்களை அடிமைப்படுத்த முயன்றனர். அவர்கள் படியவில்லை. எதிர்த்து நின்றனர். எனவே கூட்டம் கூட்டமாக அவர்களைக் கொன்றொழித்தனர். தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பர்களைக் குடியேற்றினர். அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமை செய்தனர். சாதியக் கொடுமை பற்றி நாம் இவ்வளவு வருந்துகிறோம். ஆனால் வெள்ளையர்கள் நம் முன்னோர்கள் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாத கொடுமைகளை அவர்கள் மீது நிகழ்த்தினார்கள். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தொழில் முதலாளிகளுக்கும் அமெரிக்காவிலிருந்து விளைபொருட்களைப் பெற்று வந்த வாணிகர்களுக்கும் நடைபெற்ற போட்டிகளிலிருந்தே தொழிலாளர்களுக்குச் சலுகைகள் பெறும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ஒரு தரப்பினர் தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்துவதைக் குறித்தும் இன்னொரு தரப்பினர் கறுப்பின அடிமைகளைக் கொடுமைப்படுத்துவதைக் குறித்தும் ஒருவர் மீதொருவர் குற்றம் சாட்டினர்.

இன்றும் அமெரிக்கர்கள் தங்கள் நாட்டுக் கறுப்பர்களைத் தங்களைப் போல் சமமாக நடத்தவில்லை. கறுப்பர்களுடன் கலப்பில் பிறந்தவர்களைக் கூட எத்தனை தலைமுறையானாலும் ஒதுக்கியே வைத்துள்ளனர். வெள்ளையரல்லாத (நிறமுடையோர் எனப்படும்) பிற மக்களைப் பொறுத்தவரையில் கூட அமெரிக்க வெள்ளையர் இதே போக்கையே கடைப் பிடிக்கின்றனர். மனித உரிமைகள் பற்றி உலகமெலாம் வாய்கிழியக் கூக்குரலிடும் அமெரிக்காவின் முதுகிலுள்ள சீழ்வடியும் புண் இது. இனக் கலவரங்கள் அவ்வப்போது அமெரிக்காவில் வெடிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவில் ஐரோப்பாவிலுள்ள ஏறக்குறைய அனைத்து மொழி பேசும் மக்களும் வாழ்கின்றனர். இருப்பினும் ஆங்கிலேயரே மிகுதி. எனேவ ஒரே ஆட்சி மொழியாக ஆங்கிலம் திகழ்கிறது. அளப்பரிய வளத்தில் புரள்வதால் அங்கு இன்று வரை மாநிலச் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால் செழிப்பில் திளைத்து முதுமையடைந்து கொண்டிருக்கிறது அமெரிக்கர்களின் பண்பாடு. ஏழை நாடுகளிலிருந்து சென்று அங்கு குடியேறியிருக்கும் மக்களின் உழைப்பும் அறிவும் தான் இன்று அமெரிக்காவைத் தாங்கி நிற்கின்றன. இதுவே அமெரிக்கர்கள் இம்மக்கள் மீது இனவெறித் தாக்குதல்களை நடத்துவதற்கும் அதன் தொடர்ச்சியாக அங்கு தேசியக் கிளர்ச்சிகள் உருவாகவும் வழிகோலும்.

கனடாவில் ஆங்கிலேயரும் பிரஞ்சியரும் ஏறக்குறைய சம எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். அவர்களுக்குள் தேசியப் பிணக்குகள் தோன்றியுள்ளன. அவற்றைத் தீர்க்கும் முயற்சிகள் இன்று வரை வெற்றி பெறவில்லை.

தென் அமெரிக்காவில் பெருமளவில் குடியேறியவர்கள் பெயின் நாட்டினர். அங்கே கறுப்பர்கள் இல்லை. ஆனால் மங்கோலிய இன மூலக்குடிகள் உள்ளனர். ஒரு காலத்தில் இந்தப் பெயின் நாட்டினரை பினீசியர்கள் தங்கள் கப்பல்களில் கால்நடைகள் போல் ஏற்றிச் சென்று விற்றனராம். வரலாற்று விந்தையாக வெள்ளையர்கள் உலகைக் கைப்பற்றியதிலும் கறுப்பின மக்களை அடிமைகளாகப் பிடித்து விற்றதிலும் இவர்களே முன்னோடிகளாகச் செயற்பட்டனர்.

தென்னமெரிக்காவில் பிறப்படிப்படையிலான குமுக வேறுபாடுகள் கடைபிடிக்கப்படுவதில்லை. பண்பாட்டு அடிப்படையிலேயே வேறுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. பெயின் மரபும் உள்நாட்டு மரபும் கலந்த ஒரு கலவைப் பண்பாடு உயர்வானதாகவும் உள்நாட்டு மரபுப் பண்பாடு தாழ்வானதாகவும் கருதப்படுகிறது. தென்னமெரிக்க நாடுகளில் நடைபெறும் வன்முறைப் போராட்டங்களில் இந்தப் பண்பாட்டு வேறுபாடுகளுக்கும் பங்குண்டு. மூலக் குடிமக்களுக்குத் தங்கள் ஆதித் தாய்நாட்டை மீட்கும் வேட்கை நாள்தோறும் மிகுந்து வருகிறது.

ஆத்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் தாழ்மேனியாவிலும் வாழ்ந்த பழங்குடி மக்களையும் வெள்ளையர்கள் அழித்தனர். சில குலங்கள் முற்றாகவே அழிக்கப்பட்டன. எஞ்சியுள்ளோர் இன்று தங்கள் தாயகத்தின் மீதுள்ள தங்கள் உரிமையைக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

தென்கிழக்காசியாவில் இருக்கும் நாடுகளில் பண்டைக் குமரிக் கண்டத்தின் ஒரு கரையை அடுத்த நிலப்பரப்புகள் உள்ளன. இந்தோனேசியா எனும் தீவுக்கட்டங்களில் சிலவற்றின் பெயர்களை வைத்துப் பார்த்தால் அவை குமரிக் கண்டத்தின் எஞ்சிய பகுதிகளா அல்லது அவற்றின் நினைவாகப் பெயர் பெற்றவையா என்ற ஐயம் எமும். சுமத்ரா என்பது சு + மதுரை. சுமதுரை என்பதற்கு உண்மையான மதுரை அல்லது மூலமதுரை என்ற பொருள் உண்டு.

போர்னியா, புரூனெய் என்ற பெயர்கள் பொருனை என்ற பெயரை ஒத்துள்ளன. இலாமுரிதேசம் என்று ஒரு பகுதிக்குப் பெயர் இருந்ததை சோழப் பேரரசு காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இத்தகைய தொடர்புகளால் இங்குள்ள மக்களின் பண்பாடு தென்னிந்தியப் பண்பாடாகவே நெடுங்காலம் விளங்கி வந்தது. முகம்மதியத்தின் பரவலுக்குப் பின் அந்த நிலை மாறினாலும் முற்றிலும் மறைந்துவிடவில்லை. இந்நாடுகள் நெடுநாட்கள் சீனர்களின் ஆதிக்கத்தின் கீழும் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் சப்பானின் நெருக்குதல்களுக்கு உட்பட்டும் இருந்தாலும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் முழு விடுதலை பெற்றுப் பொருளியல் மேம்பாடும் கண்டு வருகின்றன.

சீனம் வரலாற்றில் ஒரு பேரரசாகத் திகழ்ந்தாலும் அது எண்ணற்ற சிற்றரசுகளைக் கொண்டிருந்தது. மாறிமாறித் தனியுரிமையுடைய சிற்றரசுகளாகவும் ஒரு பேரரசுக்கடங்கிய சிற்றரசுகளாகவும் விளங்கி வந்தன. 1949இல் சப்பானியப் படையெடுப்பையும் அமெரிக்காவின் தலையீட்டையும் முறியடித்த பின் தான் இவை முறையான ஒரு நடுவணரசின் கீழ் உறுப்புகளான மாகாணஙங்களாக அமைந்தன.

இங்கு சீனமொழி ஒன்றே போலத் தோன்றினாலும் மொழி வேறுபாடுகள் உண்டு. ஆனால் சீன மொழியின் ஒப்பற்ற ஒரு தன்மையினால் மொழி வேறுபாடுகள் முனைப்படையவில்லை. சீனமொழி எழுத்துக்கள் ஒருவகைக் குறியீடுகளாகும். நேரடியாக அவை பொருட்களைக் குறிக்கின்றன. அதனைப் படிக்கும் ஒவ்வொரு கிளைமொழி மக்களும் தங்கள் தங்கள் மொழிச் சொற்களைச் சொல்லிப் படிப்பார்கள். ஓர் உலக மொழி உருவாக்குவதற்கும் சீன மொழியின் இந்த உத்தியைக் கையாளும் முயற்சி கூட நடக்கிறது. இவ்வாறு மொழிச் சிக்கல் பெரும் பொருட்டாகவில்லை. எனினும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. ஒரு நாள் அங்கு அது வெடிக்கும் வாய்ப்பு உண்டு.

சப்பான் எண்ணற்ற தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய நாடு. அங்கு சோகன்கள் என்ற சிற்றரசர்களின் தலைமையில் ஒரு பேரரசர் ஆண்டு வந்தார். பேரரசரின் அதிகாரங்களை அச்சிற்றரசர்களில் ஒருவர் கையில் வைத்துக் கொள்ள பெயருக்குப் பேரரசர் வாழ்ந்து வந்தார். 16ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர்கள், குறிப்பாகப் போர்ச்சுக்கீசியரின் வரவாலும் மதமாற்றங்களாலும் சலசலத்துக் கொண்டிருந்த சப்பான் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமெரிக்கக் கப்பல் ஒன்று வீசிய குண்டுகளினால் விழித்தெழுந்து நடுவப்படுத்திய ஓர் அரசை உருவாக்கி அனைத்துத் துறையிலும் சீர்த்திருத்தங்கள் செய்து வரலாற்றில் ஓர் ஒப்பற்ற எழுச்சியைக் காட்டி வளர்ந்து நிற்கிறது. அவ்வளர்ச்சியில் பின்னடைவுகள் நேரும் வரை அதன் ஒருமைப்பாட்டுக்குக் கேடு எதுவும் வர வாய்ப்பில்லை.

ஆப்பிரிக்காவின் வடக்கில் லிபியாவும் எகிப்தும் நீங்கலாகத் தெற்கேயுள்ள பகுதிகளில் எண்ணற்ற குக்குலங்கள் தனித்தனியே ஆட்சி நடத்தி வந்தன. குக்குல மக்களாட்சி எனப்படும் எனப்படும் ஆட்சிமுறை அது. வெள்ளையர் வரவால் அவை அழிந்தன. வெள்ளையரின் ஆட்சிமுறைகள் வேர் கொண்டன. பின்னர் அவை பல்வேறு நாடுகளாக விடுதலை அடைந்த பின் ஒவ்வொன்றினுள்ளுமிருக்கும் பல்வேறு குக்குல மக்களுக்குள் மோதல்கள் உருவாகி நிற்கின்றன. அவையனைத்தும் தத்தமக்கு ஒரு தேசியத்தை அமைத்துக்கொள்ளும் போராட்டத்தின் வெளிப்பாடுகளே.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளையரால் ஒதுக்கப்பட்டிருக்கும் மக்களிடையிலும் குக்குல வேறுபாட்டு மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. அவர்களுக்கும் ஒரு தேசியத் தீர்வு கிடைக்க வேண்டியுள்ளது.

இனி ஐரோப்பாவுக்குள் வருவோம். வரலாற்றில் கறுப்பின மக்கள் தொடங்கி கெல்த்துகள், யவனர்கள், உரோமர்கள்கள், தியூத்தானியர்கள், கோத்துகள், அவுணர்கள், சிலாவியர்கள் எனும் எண்ணற்ற மக்கள் ஐரோப்பாவனுள் நுழைந்திருக்கின்றனர். அவர்களின் வெவ்வேறு கலப்பினங்கள் வெவ்வேறு பகுதிகளில் ஆட்சியமமைத்து வாழ்ந்தனர். ஆனால் சிலாவியர்களுக்கென்று சொந்த அரசுகள் அமையவில்லை. அவர்கள் அடிமைகளாகவே வாழந்;தனர். அடிமை எனும் சொல்லைக் குறிக்க முதலிலிருந்த செர்வோ என்ற இலத்தீன் சொல் மறைந்து சிலேவ் எனும் சொல் இடம் பெறுமளவுக்கு அம்மக்கள் வீறு குன்றியவர்களாக இருந்தனர்.

இந்தச் சிலாவியர்கள் போலந்து, அங்கேரி, உருசியா, செக், சுலோவக், செர்பியா, சுலோவேனியா, பல்கேரியா ஆகிய நாடுகளின் மக்களாகும். அவற்றில் உருசியாவில் உள்ளவர்கள் வேதிய(Orthodox)க் கிறித்தவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். தாத்தாரியர்கள் படையெடுத்ததால் அவர்களுக்கு மேற்குடன் தொடர்பு இன்றிப் போய்விட்டது. 13 முதல் 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மங்கோலியக் கான்களுக்குத் திறை செலுத்தினர். 15ஆம் நூற்றாண்டிலிருந்த மூன்றாம் இவான் காலத்தில் இறைமை மீண்டது. மா பீட்டர் காலத்தில் 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் புத்தமைப்புப் பேரரசு உருவானது. 3ஆம் பீட்டரின் மனைவி 2ஆம் காதரின் காலத்தில் விரிவாக்கம் பெற்றது. அந்தப் பேரரசு தான் 1917ஆம் ஆண்டுப் புரட்சியில் உதித்த சோவியத் ஒன்றியத்தின் தாய். அப்புரட்சி பாட்டாளியக் கோட்பாட்டின் பெயரால் நடைபெற்றாலும் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்தீர்மானிப்புரிமை என்ற வாக்குறுதியின் அடிப்படையில் உருசியாவிலிருந்த பல்வேறு தேசியங்களைச் சார்ந்த மக்களின் ஒத்துழைப்பில் தான் அப்புரட்சி வெற்றி பெற்றது. நடு ஆசியப் புல்வெளிகளிலுள்ள பல தேசங்கள் மாருசியப் பெருங்குடியினரின் சொத்துக்களாய் இருந்தன. அவற்றை அவர்களிடமிருந்து விடுவித்து அவ்வத்தேசிய மக்களின் உரிமையை நிலைநிறுத்துவதென்ற வாக்குறுதி தான் அது.

ஆனால் இந்த வாக்குறுதிக்கு நாணயமாக இருந்த தலைவர் லெனின் ஒருவர் தான். பிறர் அவரது தன்தீர்மானிப்புரிமைக் கோட்பாட்டின் சாரத்தைப் புரிந்து கொள்ளவோ மனமுவந்து ஏற்றுக்கொள்ளவோ இல்லை. நோய்வாய்ப்பட்டிருந்த லெனின் இறுதிக் காலத்தில் உருசிய அரசு சில குடியரசுகளில் கிளம்பிய தேசியக் கோரிக்கைகளை விலங்குத்தனமாக அடக்கியது. லெனின் அந்த அடக்குமுறையைக் கண்டித்தார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஆசியப் புல்வெளிப் பகுதியில் வாழ்ந்த மக்கள் கால்நடைகளை மேய்த்துக் கொண்டு நாடோடிகளாகத் திரிந்தனர். அவர்களது மொழிகளுக்கு வரிவடிவம் கிடையாது. புரட்சியின் பின்னர் அம்மக்கள் நிலத்தில் நிலையான குடியிருப்புகளில் அமர்த்தப்பட்டு அவர்களக்குத் தொழில்களும் வேளாண்மையும் உருவாக்கப்பட்டன. அத்துடன் அவர்களது மொழிகளுக்கு உருசிய வரிவடிவங்கள் புகுத்தப்பட்டன. ஒரு கட்டத்தில் சோவியத்திலுள்ள அனைத்து மொழிகளுக்கும் உருசிய மொழியில் வரிவடிவங்கள் வழங்கும் முறை புகுத்தப்பட்டது. நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு தோன்றியது. விலங்குத் தனமாக ஒடுக்கப்பட்டது. இட்லரின் ஒற்றர்களின் ஊடுருவல் என்ற பெயரில் பொதுமைக் கட்சியினர் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது இந்தச் சூழ்நிலையைக் குறித்துத் தான் இருக்க வேண்டும். இந்தச் சிக்கல் எப்படித் தீர்க்கப்பட்டது என்பதைப் பற்றிய சரியான செய்திகள் நமக்கில்லை.

உருசியத் தேசியங்கள் குடியரசுகளாகவும் அவற்றுக்குட்பட்ட தன்னாட்சியுடைய தேசியங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனால் குடியரசுகளுக்கோ அல்லது தன்னாட்சிப் பகுதிகளுக்கோ உண்மையான தன்னாட்சி வழங்கப்படவில்லை. மாஉருசியத் தேசியமே அனைவர் மீதும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இருந்தாலும் தொழில் பெருக்கமும் கல்வியும் உண்மையான தேசிய உணர்வை ஊட்டின; முழுமை பெறாத தேசியங்களை முழுமை பெறச் செய்தன. இரண்டாம் உலகப் போரில் இட்லரின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவதற்காக ஐரோப்பிய உருசியா எனப்படும் மேற்குப் பகுதியில் குவிந்திருந்த பெருந்தொழில்கள் அப்படி அப்படியே பெயர்த்தெடுக்கப்பட்டு புகைவண்டிகளில் கிழக்கே கொண்டு சென்று நிறுவப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியால் ஆசியப் பகுதியும் தொழில்வளம் பெற்றது. இத்தொழில்வளமே தேசியத் தன்னாட்சி உணர்வுக்கு உரம் ஏற்றியது. இவையனைத்தும் சேர்ந்தே கோர்ப்பசேவின் திறந்த அரசியல் கோட்பாட்டினால் உருசியா தனித்தனிக் குடியரசுகளாகச் சிதைந்தது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ஒரு குமுகமாக ஒன்றிணைந்து நிற்கின்றன. இருந்தபோதிலும் குடியரசுகளினுள் அடைபட்டிருக்கும் தன்னாட்சிப் பகுதிக்குள் சிறைப்பட்டிருக்கும் தேசியங்களின் ஆயுதப் போராட்டம் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உருசியா வலுவிழந்ததும் தன் ஆதிக்கத்தினுள்ளிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மீதிருந்த தன் பிடியை அது விலக்கிக் கொண்டது. அவ்வாறு விடுபட்ட தேசியங்கள் தத்தம் தற்சார்பான அரசுகளை அமைத்துக் கொண்டுள்ளன.

உருசியத் தலைவர் தாலின் காலத்திலேயே அவரை எதிர்த்து நின்று தன் நாட்டை உருசியாவின் கட்டிலிருந்து விடுவித்துக் கொண்டவர் யூக்கோசுலேவியத் தலைவர் டிட்டோ. அப்படிப்பட்ட யூக்கோசுலேவியா இன்று துண்டு துண்டாகச் சிதறி செர்பியர்களால் அங்குள்ள முகம்மதியர்கள் துரத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. நான் இன்னோரிட்டத்தில் குறிப்பிட்டிருப்பது போல் ஈழத்துத் தமிழ் முகம்மதியர்கள் போலவே சமயம் சார்ந்த தேசியம் அங்கு செயற்படுகிறது.

இந்தியத் தேசியத்தைப் பார்ப்போம். இந்தியத் தேசியம் என்று ஒன்று உருவானது இராமாயண காப்பியத்தின் மூலம் வெளிப்படுகிறது. நாம் முன்பு ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளது போல் அத்தேசியம் வெளியிலிருந்து வந்த கிரேக்கர்களுடன் இந்தியப் பார்ப்பனர் கலந்ததிலிருந்து உருவானதாகத் தோன்றுகிறது. ஆனால் அது கங்கைக் கரையைச் சார்ந்த வட இந்தியத் தேசியம் தான். இந்த தடையம் தவிர வேறு தேசிய வெளிப்பாடுகள் எதையும் இந்தியாவில் காண முடியவில்லை, செர்சா சூரியால் தொடங்கி வைக்கப்பட்டு அக்பரால் முழுமை பெற்ற ஒன்றைத் தவிர.

அசோகர் கலிங்கத்தின் மீது படையெடுத்த போது அவரை வீரமாக எதிர்த்து நின்ற கலிங்கர்களின் தேசியம் குக்குலத் தேசியம். அது முற்றிலும் மண் மீது வேர் கொண்டது. சோழர்களின் படையெடுப்புகளினால் உசுப்பிவிடப்பட்ட போசாளர்களின் தேசியமும் மண் மீது வேர் கொண்டது தான். கழகக் காலத்தில் புலிகடிமால் (புலியாகிய சோழர்களைத் துரத்தியவர்கள்) எனப்படுபவர்கள் இவர்கள் தான்.

கேரளத்தில் மலையாள மொழியின் தோற்றமும் ஒரு தேசிய வெளிப்பாடு தான். இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலங்களில் உருவான பத்தி இயக்கங்களும் மேல்தட்டு தரகுத் தன்மையை எதிர்த்த அடித்தட்டு மக்களின் மண் சார்ந்த தேசிய இயக்கங்களே.

ஆனால் இந்தத் தேசிய இயக்கங்களில் படையெடுப்புகளை எதிர்த்து உருவான எதுவும் தேசியத்தைப் பற்றிய தெளிவான தன்னுணர்வுடன் வெளிப்படவில்லை. வேறு வடிவங்களிலேயே வெளிப்பட்டன. அவற்றை நாம் உய்த்துணரவே வேண்டியுள்ளது.

தேசியத்தைப் பற்றிய ஒரு தெளிவான வரையறை ஐரோப்பாவில் தான் உருவானது. அதுவும் குறிப்பாக மார்க்சியமே தேசியத்துக்கு ஒரு வரையறை வழங்க முயன்றது. அதை ஒரு வழிகாட்டியாகக் கொண்டே இன்றைய தேசியக் கோட்பாடுகள் வகுக்கப்படுகின்றன என்றால் மிகையாகாது. இது பற்றிப் பின்னால் நாம் விரிவாக ஆய்வோம்.

இந்தியாவில் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக வெளிநாட்டுப் படையெடுப்புகளாலும் உள்நாட்டு அரசுகள் ஒன்றோடொன்று நடத்திய போர்களாலும் தேசியங்கள் சிதைந்து உருக்குலைந்தன. கொள்ளையையே நோக்கமாகக் கொண்ட இப்போர்கள் மக்களை மரத்துப் போகச் செய்தன. அதிலும் முகம்மதியர்கள் படையெடுப்புக்குப் பின் நிகழ்ந்த இரத்தக் களரியில் மக்கள் வெறும் விலங்கு நிலைக்குத் தள்ளப்பட்டனர். தாங்கள் மனிதர்கள் என்ற உணர்வே அவர்களுக்கு அற்றுப் போய்விட்டது. மாறி மாறி வரும் ஆட்சிகள், அவற்றுக்குட்பட்ட சிற்றரசுகள், இவர்கள் அனைவருக்கும் படைப் பணி புரியச் செல்லும் படைவீரர்கள். அரசின் அதிகாரிகள், தீவட்டிக் கொள்ளையர் ஆகியோரின் கொடுமைகளைத் தாங்கித் தாங்கி நடுநடுங்கிப் போய் வாழ்ந்து வந்தனர் மக்கள். இதற்கிடையில் வெளிச் சமய, உட்சமயப் பூசல்கள், சாதிச் சண்டைகள், வலங்கை-இடங்கைக் கலவரங்கள் என்று எப்போது எங்கிருந்து எத்தகைய பேரழிவுகள் காத்திருக்கின்றனவோ என்று ஒவ்வொரு கணமும் செத்துக் கொண்டிருந்தனர் மக்கள். இந்தச் சூழ்நிலையில் தான் வெள்ளையர் இந்தியாவினுள் நுழைந்தனர்.உள்நாட்டு ஆட்சியாளர்களின் சண்டைகளுக்குப் பணம் கடன்கொடுத்து அவர்களின் தன்னுரிமையை முடக்கினர். அவர்களின் மூலமாக மக்கள் மீது செல்வாக்குச் செலுத்தினர். மன்னர்களை முற்றிலும் முடக்கிய நிலையில் அவர்களின் பெயரில் மக்களிடமிருந்து வரி தண்டும் உரிமையைப் பெற்றனர். இந்த வரி தண்டும் நிகழ்ச்சியில் தான் தமிழகத்தில் பாளையக்காரர்களுக்கும் ஆங்கிலக் குழுமத்துக்கும் முரண்பாடுகள் வலுப்பெற்றன. வெள்ளையர்களை எதிர்த்து நின்ற பாளையக்காரர்கள் மக்களையும் தங்களுடன் அரவணைத்துக் கொண்டனர். இத்தகைய பாளையக்காரர்களில் தலையாயவன் வீரபாண்டிய கட்டபொம்மனாவான். அவன் ஆங்கிலேயரை வெறுத்தான். டச்சு வாணிகர்களோடு சவளி விற்பனை ஒப்பந்தம் செய்து கொண்டிருந்ததால் ஆங்கிலேயர்களுக்குத் தன் பாளையத்தினுள் சவளி கொள்முதலில் இடையூறு விளைவித்தான். அத்துடன் அவர்கள் ஆர்க்காட்டு நவாபிடமிருந்து பெற்ற வரி தண்டும் உரிமையையும் மதிக்கவில்லை.

பாஞ்சாலங்குறிச்சியான தன் தலைநகரமும் கோட்டையும் சமவெளியிலிருப்பதால் போர் நோக்கங்களுக்குத் தோதாக இருக்காது என்று சிவகிரியைத் தன் முயற்சிகளின் தலைமையகமாக வைத்துக் கொள்ள முடிவு செய்தான். அதற்காக வெள்ளையரின் இணக்கத்துக்குரிய சிவகிரி பாளையங்காரரை எதிர்த்து நின்ற அவரது மகனைப் பதவியிலமர்த்தினான். வெள்ளையருக்குக் கட்டபொம்மனின் திட்டம் புரிந்து விட்டது. ஏற்கனவே அவர்கள் கட்டபொம்மனின் அண்டைப் பாளையமான எட்டையபுரத்தானுக்கு கட்டபொம்மனுடன் எல்லைச் சச்சரவை ஏற்படுத்தியிருந்தனர். இப்போது கட்டபொம்மனைச் சண்டைக்கிழுக்க நேரம் பார்த்திருந்தனர். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தான் கட்டபொம்மனின் தானாவதியாக இருந்த சிவனிய வேளாளன் சுப்பிரமணியபிள்ளை. தன் சொந்த ஆதாயத்துக்காக திருவைகுண்டத்திலிருந்த ஆங்கிலேயரின் நெல்கிடங்கைக் கொள்ளையடித்து காவலாளியையும் கொலை செய்தான்.[3] தானாவதிப்பிள்ளையைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு ஆங்கிலேயர் கேட்டனர். கட்டபொம்மன் மறுத்துவிட்டான். இதைக் காரணம் காட்டி ஆங்கிலேயர் பாஞ்சாலங்குறிச்சியைத் தாக்கிப் பின் கட்டபொம்மனைத் தூக்கிலிட்டது நமக்குத் தெரியும். ஆனால் அதன் பின் நடந்த நிகழ்ச்சிகள் மக்களுக்கு முறையாகத் தரப்படவில்லை.

கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையையும் மற்றையோரையும் ஆங்கிலேயர் பாளையங்கோட்டையில் அடைத்திருந்தனர். வெளியிலிருந்த அவர்களது ஆட்கள் சூழ்ச்சியாக அவர்களை விடுவித்து விட்டனர். தப்பிச் சென்ற வீரர்கள் தரைமட்டமாக்கப்பட்டிருந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை மக்களின் உதவியுடன் ஆறே நாட்களில் கட்டி முடித்தனர். வெள்ளையரை மலைக்க வைத்த நிகழ்ச்சி இது. நம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய பெருமை தரும் செயல் இது. மீண்டும் வெள்ளையருடன் நடந்த கடுமையான போரில் கோட்டை இடிபட்டது. ஊமைத்துரை தப்பியோடி திண்டுக்கல், சிவகங்கை ஆகிய பாளையங்களில் சேர்ந்து நின்று அடுத்தகட்டப் போருக்கு ஆயத்தமானான். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தி என்ன வென்றால் கட்டபொம்மனின் நெருங்கிய உறவினனும் அவனுடனும் பின்னர் ஊமைத்துரையுடனும் தோளோடு தோள் நின்று போரிட்டவனும் சிறந்த அறிவாளியுமாகிய செவத்தையா என்பவன் எட்டப்பனுக்கும் தஞ்சை சரபோசிக்கும் எழுதிய மடல்களாகும். அம்மன்னர்களின் தேசியக் கடமைகளை சுட்டிக்காட்டி வெள்ளையருக்குத் துணை போகாமலிருக்கும்படியும் தங்களை ஆதரிக்கும் படியும் நெஞ்சை உருக்கும் வகையில் அந்தக் கடிதங்கள் அமைந்திருந்தன. ஆனால் அந்தப் பேடிகள் சிறிதும் செவிசாய்க்கவில்லை.

கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்க்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் போதே இன்னொரு புறம் குமரியிலிருந்து பம்பாய் வரையுள்ள நாட்டுப்பற்றுள்ள தலைவர்களை இணைத்து ஒரு கூட்டணி உருவாக்கும் முயற்சியில் சிவகங்கைச் சின்ன மருது ஈடுபட்டிருந்தான். கூட்டணி உருவாகி ஒரு தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டது. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு ஓராண்டு கழிந்த நிலையில் செயற்பட இருந்த இந்தத் தாக்குதல் பற்றி உளவறிந்த ஆங்கிலேயர் தங்கள் தாக்குதலை முந்தித் தொடங்கிவிட்டனர். 1806 வரை ஏறக்குறைய 5 ஆண்டுகளாக இப்போர் நடந்து புரட்சியாளர்கள் ஒடுக்கப்பட்டனர். இப்புரட்சியின் சிறப்பு என்னவென்றால் சின்ன மருது எழுதி சீரங்கத்துக் கோயில் வாசலிலே ஒட்டி வைத்திருந்த அறிக்கை தான். இதைச் சீரங்கத்து அறிக்கை என்று கூறுவர். இந்திய நாட்டின் உரிமையைக் காத்திட மக்களனைவரையும் கூவியழைப்பதாகவும் காட்டிக் கொடுப்போரை கடுமையும் இழிவும் மிக்க சொற்களால் பழிப்பதாகவும் அது அமைந்திருந்தது. இத்தகைய ஓர் அறிக்கை இந்திய வரலாற்றிலேயே முதன்முதல் நிகழ்ச்சியாகும்.
[4]

இந்த நிகழ்ச்சியின் வரலாற்றுக் குறிதகவு பற்றி நாம் ஆய்வோம். இருண்ட காலத்தில் வாழ்ந்த இந்தியா விரைந்து காட்டுவிலங்காண்டி நிலைக்குச் சென்று கொண்டிருந்தது. இந்தியாவை ஆண்ட மன்னர்களும் சிற்றரசர்களும் கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்டு இடைவிடாமல் போர்களை நடத்தினர். போர் வீரர்களுக்குச் சம்பளத்துக்குப் பகரம் கொள்ளையடிப்பதே வருமானமாகியது. எனவே மக்களைக் காப்பதற்கென்று எந்த அமைப்பும் இல்லாதிருந்தது. தீவட்டிக் கொள்ளையர்கள் ஓயாத்தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர். மக்களே காவலுக்கு ஆளமர்த்தி வைத்திருந்தனர். நாட்டில் பெரும்பான்மை நிலத்திலும் கோயில்களுக்கு ஏதோவொரு வகை உரிமையிருந்தது. அதை வைத்து அவை கொழுத்திருந்தன. அவற்றின் பின்னணியில் இயங்கிய மேற்சாதியினர் ஒரு புறம் மக்களைப் பிழிந்தெடுக்கவும் இழிவுபடுத்தவும் செய்தனர். மக்கள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட இத்தனை கொடுமைகளையும் எதிர்க்கும் வழியறியாமல் இடங்கை-வலங்கைப் பிரிவினர்களாகப் பிரிந்து நின்று பகை கொண்டு அவ்வப்போது கொலைவெறியுடன் தமக்குள் மோதி வந்தனர். இவ்வாறு மக்களை வைத்துப் பூட்டியிருந்த கூண்டை உடைத்து அவர்களாக வெளியேறேவோ பிறர் வெளியேற்றவோ எந்தச் சூழ்நிலையும் இல்லை. அந்நிலையில் அந்தக் கூண்டை உடைப்பவர்களாக வெள்ளையர் வந்தனர். வெளியிலிருந்து வந்த அந்தத் தாக்குதலுக்கு எதிராக உள்ளுக்குள் விசைகள் கிளம்புவது இயற்கை. அதுபோல் உலக வரலாறெங்கணும் நிகழ்ந்துள்ளது. நம் நாட்டிலும் அது நடந்தது. ஆனால் அது காலங்கடந்த ஒன்று. அதற்குக் காரணம் பல்லாயிரம் ஆண்டுக் காலமாக நம்மிடம் இல்லாதிருந்த தேசிய உணர்வு. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ஒட்டுண்ணிக் கோட்பாட்டை உயரிய மாந்தநேயக் கோட்பாடாக நாம் தவறாகப் புரிந்து கொண்டது ஒரு புறமும் இன்னொரு புறம் வெளியாருக்கு அடிமைப்பட்டேனும் உள்நாட்டிலுள்ள தம் உடன்பிறப்புகளின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நம் நாட்டுப் பார்ப்பன-வெள்ளாள உயர்சாதிக் கோட்பாடு ஆகியவையும் தாம். வெளி விசைகள் நம் இறைமையைப் பறிக்க முயலும் போது எதிர்த்து நின்றிருக்க வேண்டிய இவர்கள் அவற்றுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்றனர். தலைமை தாங்கிய இவர்களின் காட்டிக்கொடுப்பின் விளைவாக வெளிவிசைகள் அடிமட்டம் வரை ஊடுருவிய போது, மண்ணுக்கு உரியவர்களான கீழ்ச்சாதி மக்களிடையிலிருந்த தலைவர்கள் எழுந்துநிற்கும் முன் காலங்கடந்து விட்டது. எனவே உள்ளிருந்து நிகழ வேண்டிய மாற்றம் நிகழவில்லை. ஆனால் உள்ளிருந்து மாற்றம் நிகழ முடியும் என்பது ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாகக் கட்டப்பொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போரிட்ட போது மக்கள் சாதி வேறுபாடின்றி ஓரணியில் திரண்டு நின்றனர். ஊமைத்துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் புதுப்பித்த வரலாற்றச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி எந்தத் தனிமனிதனின் அருஞ்செயலுமல்ல. மண்ணினைக் காக்க உறுதிபூண்டு துடித்தெழுந்துவிட்ட ஒரு மக்கள் திரளாகிய பெரும் பூதத்தின் செயல் வெறியே அது. மண்ணில் வேர் கொண்ட எந்த மக்களும் வெளிப்படுத்தும் பேராற்றலே அது. அந்தப் பேராற்றல் இந்த மண்ணின் மக்களுக்கு உண்டு என்பதை அவர்கள் ஒரேயொரு முறை உலகத்துக்குக் காட்ட வாய்ப்பளித்தவர்கள் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் மருதுபாண்டியர்களுமாவர்.

இவ்வாறு உள்ளிருந்த மக்கள் உடைக்காமல் வெளியிலிருந்தே அவர்களைச் சிறைப்படுத்தியிருந்த கூண்டு உடைக்கப்பட்டது. ஆனால் உடைத்த ஆங்கிலேயர் முழுமையாக அதனை உடைக்கவில்லை. தங்கள் நலனுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்குத் தான் உடைந்தனர்.

மீண்டும் தொடருமுன் 1857இல் தில்லியைச் சுற்றி நடைபெற்ற படைவீரர் கலகத்தைத் தமிழகத்தில் நடைபெற்ற புரட்சியுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். தமிழகத்தில் போல் மண்ணைக் காக்கும் போராட்டமாக அது இல்லை. மாறாக சமய நம்பிக்கைகளுக்குக் கேடு வந்துவிட்டதாகப் படைவீரர்கள் கருதியதே அடிப்டைக் காரணம். தேசிய உணர்வென்பது தமிழகத்திற் போல் வெளிப்படவில்லை. அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. எந்தவொரு சிற்றுயிரும் கூடத் தன் சாவை எதிர்த்துப் போராடும். அதே போல் ஏற்கனவே இருந்த ஆதிக்க அமைப்பு காட்டிய எதிர்ப்பும் அதில் இணைந்திருந்தது. தமிழகத்தில் போல் திட்டமிட்ட ஆயத்த நடவடிக்கைகளோ ஆற்றலைத் திரட்டுவதோ நடைபெறவில்லை. திடீரென்று பீறிட்டெழுந்த உணர்ச்சி வெள்ளத்தால் ஏற்பட்ட விளைவே 1857இன் நிகழ்ச்சி. திட்டமிடுதல் ஏதுமின்றி அவ்வாறு திடீரென்று ஏற்பட்டதால் அதை வெள்ளையர்கள் கண்டுபிடிக்கும் கேள்வியே எழவில்லை. அதனால் தான் தமிழகத்தில் ஏற்பட்டதை விட பெரும் எண்ணிக்கையில் வெள்ளையர்கள் பலியாக வேண்டி வந்தது.

இவ்வாறு வெளி விசைகளால் உடைபட்ட ஆதிக்க விசைகள் முற்றிலும் அழிக்கப்படவில்லை. அவை வெள்ளையர் நலனுக்குப் பயன்படும் வண்ணம் மாற்றியமைக்கப்பட்டன. வெள்ளையர்களால் ஒரு சீரான காவல்துறையும் நயன்மைத் துறையும் அமைக்கப்பட்டன. நிலவரியில் கூட ஒரு சீர்மை எய்தப்படவில்லை. கிறித்துவத்துக்கு மாறியவர்களுக்குத் தாய் மதத்தாரிடமிருந்து பாதுகாப்புக் கிடைத்தது.

வெள்ளையர்கள் தங்கள் சமயத்தைப் பரப்பவும் உள்ளூர் ஊழியர்களைப் பெறவும் வழங்கப்பட்ட எழுத்தறிவால் புத்தறிவு பெற்ற மக்கள் இங்கு மக்கள் மேலிருந்த கூண்டைத் தகர்க்க முயன்றனர். ஆனால் அதில் வெற்றி பெற முடியவில்லை. ஆல்காட், பிளாவட்கி ஆகியோரின் நுழைவால் அம்முயற்சி தோற்றது. விடுதலைப் போராட்டம் வன்முறையில் திரும்பினால் இங்குள்ள குமுகியல் கட்டுகள் நொறுங்கிப் போகும் என்று அஞ்சிய காந்தியார் ‘வன்முறையின்மை’யை வலியுறுத்தி வெள்ளையருடன் இணக்கம் கண்டு அவர்களை அப்புறப்படுத்தினார். அதனால் இன்றும் பழைய கட்டுகள் தொடருகின்றன.

இவ்வாறு ஒரே வீச்சில் நொறுங்கிப் போயிருக்க வேண்டிய இப்பழஞ்சிறைக்கூடம் சிறுகச் சிறுகத் தான் நொறுங்கி வருகிறது. இதனூடாகத் தேசிய உணர்வும் சிறுகச் சிறுகவே துளிர்க்கிறது. தேசியத்தைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பில்லாத மக்கள் கூட இன்று தேசியத்தைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டனர்.

தமிழகத்தில் தேசியம் என்ற சொல்லுக்கு இந்தியத் தேசியம் என்ற ஒரு பொருளே புரிந்து கொள்ளப்பட்டது. 1962இல் தி.மு.க. விலிருந்து பிரிந்து சென்ற சம்பத் தன் கட்சிக்குத் தமிழ்த் தேசியக் கட்சி என்று பெயர் வைத்தார். உடனே கருணாநிதி தேசியம் என்ற சொல்லைச் சுட்டிக்காட்டி சம்பத் இந்தியத் தேசியத்துடன் இணைந்து விட்டார் என்று கூறி சம்பத்தின் செல்வாக்கை வீழ்த்துவதில் வெற்றியும் கண்டுவிட்டார். இன்றும் தமிழகத்தில் மக்களின் புரிதல் மட்டம் மாறவில்லை. ஒரு சில அரசியல் குழுக்களிடமிருந்த தேசியம் என்கிற சொல்லாட்சி இப்போது அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்குப் பரந்திருக்கிறது. ஐந்தாறு ஆண்டுக் காலம் ஈழவிடுதலை இயக்கங்கள் தேசியம் எனும் கருத்துருவைப் பற்றி திரும்பத் திரும்பப் பேசியும் அது இன்னும் பொது மக்கள் நடுவில் சென்று சேராத வகையில் இங்குள்ள கட்சிகள் தடுப்பதில் வெற்றி கண்டுவிட்டன.

இருந்தாலும் முழு இந்தியாவையும், இன்றைய இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், பர்மா உட்பட ஒரே ஆட்சியில் கொண்டு வந்த வெள்ளையர்களால் ஒரு பரந்த இந்தியத் தேசியம் புதிதாக உருவானது. பர்மாவும், வங்காளதேசம் உட்பட்ட பாக்கித்தானும் இன்றைய இந்தியாவுமாகப் பிரிந்த போது புதிய நிலைமைக் கேற்ப அந்தத் தேசியம் மாறியது. இன்று இம்மூன்று நாடுகளிலும் உள்ள வெவ்வேறு பகுதிகளில் தேசிய உணர்வு வெவ்வேறு மட்டங்களில் வளர்ச்சி நிலை கண்டுள்ளது. அவற்றில் சிலவே மண்ணை அடிப்படையாக் கொண்டுள்ளன. பஞ்சாபில் சமய அடிப்படையில் வெளிப்பட்டாலும் மண்ணை அடிப்படையாகக் கொண்ட இயக்கமும் வளர்ந்து வருகிறது. பாக்கித்தானின் சிந்து, பலுச்சித்தானம் வங்காள தேசத்தின் மலைவாழ் மக்கள், இந்திய மலைவாழ் மக்களான சார்க்கண்டு மக்கள், ஈழத்து மக்கள் என்று எங்கும் தேசிய இயக்கங்கள் வளாந்து வருகின்றன. ஆந்திரத்திலுள்ள தெலிங்கானா மக்களின் போராட்டத்தை ஒரு “மார்க்சிய" இயக்கம் பாட்டாளி மக்களின் புரட்சி என்று தவறான அடையாளம் காட்டி வருகிறது.

இவ்வாறான இன்றைய தெற்காசியச் சூழ்நிலை சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்த ஐரோப்பாவை ஒத்திருக்கிறது. அன்று அங்கிருந்த அரசுகளுக்குள் சிறைப்பட்டிருந்த தேசியங்கள் தங்கள் விடுதலைக்காக வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. ஒரு நாட்டினுள் நடைபெறும் தேசியப் போராட்டத்துக்கு அண்டை நாடு ஆதரவளிக்கும். இவ்வாறு மாறிமாறி நடைபெற்றது. இதை முறியடிக்க ஆத்திரிய நாட்டுத் தலைமையமைச்சரான மெட்டார்னிக் என்பார் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்படி 7 உறுப்பு நாடுகள் கொண்ட ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உடன்பாடும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. அதில் எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டைச் சேர்ந்த தேசிய இயக்கங்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்பது முகாமையான கட்டுப்பாடாகும். ஆனால் அக்கூட்டணி வெற்றி பெறவில்லை. பின்னர் மெட்டர்னிக் நாட்டை விட்டோடும் சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் உலகப் போர்கள் வந்தன. விடுதலைக்குப் போராடிய தேசியங்கள் விடுதலையடைந்தன. இன்று இத்தேசியங்கள் மீண்டும் ஒரு கூட்டமைப்பின் கீழ் வருவதற்காகக் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

நூறாண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் மெட்டர்னிக் மேற்கொண்ட அதே முயற்சியை இந்த நூற்றாண்டிறுதியில்[5] இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் காலஞ்சென்ற ராசீவ் மேற்கொண்டார். அதன் விளைவே தெற்காசிய ஒத்துழைப்பு (சார்க்) அமைப்பு. அதன் முகாமையான குறிக்கோள் ஒரு நாட்டினுள் நடைபெறும் தேசியப் போராட்டத்துக்கு அண்டை நாடுகள் ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடாது என்பதே. ஆனால் காசுமீரச் சிக்கல் மற்றும் சமயப் பூசல்கள் காரணமாக இருதரப்புப் பேச்சுகளை இந்த ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டங்களில் பேசக் கூடாது என்ற நிலையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாறு மெட்டர்னிக் திட்டத்துக்கு ஏற்பட்ட அதே விதியே இதற்கும் ஏற்பட்டுவிட்டது.

சரி, இவ்வாறு தேசியங்களின் எல்லைகள் விரிவதும் சுருங்குவதுமாக இருப்பது ஏன்? இந்த மாற்றங்களின் பின்னணியில் இயக்கும் விதி ஏதாவது உண்டா?

இக்கேள்விகளுக்கு நாம் விடையளிக்க முடியும். குமுகம் வகுப்புகளாகப் பிளவுண்டது. குமுகத்தின் செல்வத்தை உருவாக்குவதிலும் அதை நுகர்வதிலும் வெவ்வேறு பங்குகளை ஏற்கும் மக்கள் குழுக்கள் வகுப்புகள் எனப்படும். முற்றிலும் ஒட்டுண்ணி வகுப்புகளின் (அரசு, சமயம் போன்றவை) ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் போது மண் சார்ந்த தேசியம் தோன்றுவதில்லை; தேசிய உணர்வென்பதே மங்கிக் காணப்படும். இது பழஞ்சவைக் கிறித்துவத்துக்கு உட்பட்ட ஐரோப்பாவுக்கும் வெள்ளையருக்கு முந்திய இந்தியாவுக்கும் பொருந்தும்.

ஐரோப்பாவை முகம்மதியர் தாக்கினர். ஐரோப்பாவினுள் தேசியம் விழித்தது. ஐரோப்பிய வாணிகம் அராபியர் கைகளுக்கு மாறியது. ஐரோப்பிய வாணிக வளர்ச்சிக்குப் பழஞ்சவைக் கிறித்துவம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் முட்டுக்கட்டையாக இருந்தன. குறிப்பாக வட்டிக்குக் கடன் கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் இருந்த தடை தான் மிகப்பெரிய முட்டுக்கட்டை. யூதர்களுக்கு அந்தத் தடை இல்லாதிருந்ததால் அவர்கள் கையில் செல்வம் குவிந்தது. இந்நிலையில் உரோமுக்கு எதிராக மார்ட்டின் லூதர் உயர்த்திய போர்க் கொடி இத்தடையைத் தகர்த்தெறிய உதவியது. சமயத்தில் புரட்சியும் தொடர்ந்த இரத்தக்களரியும் புதிய ஐரோப்பாவைப் படைக்க உதவின. மார்ட்டின் லூதர் கிறித்துவ உலகின் பொருளியல் மேன்மையைப் பற்றிக் கவலை கொண்டிருந்தார் என்பதை மார்க்சு எழுதிய A Contribution to the Critique of Political Economy என்ற நூலில் அவர் தரும் மேற்கொள்களிலிருந்து அறியலாம்.

ஆனால் இந்தியாவில் முகம்மதியர்களும் ஐரோப்பியரும் வந்த நேரங்களில் கூட இங்கு உள்ளே ஒரு புரட்சி தோன்ற முடியவில்லை. சங்கராச்சாரியின் முயற்சி மடங்களை உருவாக்குவதிலும் கொஞ்ச நஞ்சமிருந்த புத்த மடங்களை அழிப்பதிலும் பார்ப்பனர்களுக்குப் புத்துயிரூட்டுவதிலும் முடிந்தது. பசவனின் முயற்சி விசயநகரப் பேரரசால் முறியடிக்கப்பட்டது. வெள்ளையர்கள் வரவால் உள்ளே நிகழ்ந்த மாற்றத்துக்கான முயற்சி காந்தியாரின் பின்னின்ற பிற்போக்குக் கும்பலால் முடியடிக்கப்பட்டது.

தற்கால இந்தியாவில் உருவான முதலாளியம் வெள்ளை முதலாளியத்தின் நிழலில் உருவானது. எனவே அதற்குத் தற்சார்பான சிந்தனை கிடையாது. அவ்வாறு தற்சார்பான சிந்தனையுடன் வெளிப்பட்ட முதலாளிய முயற்சிகளை இந்தத் தரகு முதலாளியம் உலக முதலாளியத்துடன் சேர்ந்து நசுக்கிவிட்டது. அத்துடன் அரசுப் பொறுப்பில் இருந்த ஒட்டுண்ணிகள் முழு அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு நாட்டைக் கடனாளியாக்குமளவுக்கு உலகச் சுரண்டல் விசைகளுடன் சேர்ந்து சுரண்டிக் கொழுத்து நிற்கின்றனர். இந்தக் கும்பலுக்கு “இடங்கை"க் கட்சிகளும் இயக்கங்களும் இன்றியமையாக் கோட்பாடு மற்றும் போராட்டப் பின்னணி அமைத்துக் கொடுக்கின்றன. இவ்வாறு எல்லை மீறிப் போய்விட்ட நிலைமையிலிருந்து தான் இந்தியாவினுள் இருக்கும் தேசியங்கள் விழிப்படைய வேண்டிருக்கிறது.

கூடி வாழ்வதன் மூலம் இழப்புகள் இல்லையென்றால் உலகக் குமுகமே ஒன்றுபட்டு நிற்க என்றும் தயங்குவதில்லை. தன் பண்பாட்டு, மொழித் தனித்தன்மைகளில் கெடுபிடியாயிருப்பதில்லை. தங்கள் வாழ்வே கேள்விக் குறியாகும் நேரத்தில் தங்களைக் காத்துகொள்ள ஒன்றுபடுவதற்கு ஓர் அடையாளத்தைத் தேடுகிறது. அந்த அடையாளம் சமயம், மொழி போன்றவையாய் தொடங்கினாலும் இறுதியில் நிலத்திலேயே போய் நிற்கிறது.

இவ்வாறு இந்தியத் தேசியம் இந்தியாவின் வரலாற்றுத் தொடர்ச்சியில் தவிர்க்க முடியாத ஒரு கட்டமாகும். இந்த இந்தியத் தேசியத்திற்குள்ளேயே அதனுள்ளிருக்கும் தனித் தேசியங்கள் வளர்ச்சி பெற்று முதிர்ச்சி பெற வேண்டியிருக்கிறது. அவ்வாறு முதிர்ச்சி பெற்று உரிமைகளைப் பெற்றுத் தற்சார்பு அடைந்த பின் அது மீண்டும் ஒரே தேசியமாக முயலும். ஒற்றுமை என்பது தங்கள் நலன்களையும் அடுத்தவர் நலன்களையும் ஒன்றாகப் புரிந்து கொண்டவர் நடுவில் உருவாகும் உண்மையான உறவாகும். அத்தனைய ஓர் ஒற்றுமை உருவாக இந்தியாவினுள் மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்துத் தேசியங்களும் தன்னுரிமை பெற்றுத் தற்சார்புற்றுத் தன்னையும் பிறரையும் உணர்ந்து பின்னர் ஒன்றுபட வேண்டும். இது தான் ஐரோப்பா நமக்குத் தரும் பாடமாகும்.

அடிக்குறிப்புகள்:

[1] அதிகாரம் 21

[2] Story of Civilization - Our Oriental Heritage. இந்தத் தொகுதிகளில் அவர் ஐரோப்பியர்களை விளித்து அவர்களது வரலாற்றைக் கூறுகிறார்.

[3] சுப்பிரமணிய பிள்ளையின் முன்னோன் செகவீரபாண்டியன் எனும் பாஞ்சாலங்குறிச்சி சிற்றரசனிடம் பணியாற்றிய போது தான் கட்டபொம்மனின் முன்னோன் அவனைக் கொன்று பாஞ்சாலங்குறிச்சியைப் பிடித்தான். சுப்பிரமணியபிள்ளையின் முன்னோனை அவன் கொல்ல முயன்ற போது தன்னை உயிரோடு வைத்திருந்தால் பாளையத்தை ஆள்வதற்குரிய உளவுகளைக் கூறுவதாக வாக்களித்துத் தன்னுயிரையும் பதவியையும் தக்க வைத்துக் கொண்டான் என்று வரலாறு கூறுகிறது.
தானாவதி சுப்பிரமணிய பிள்ளையின் மகளைக் கட்டபொம்மன் தனக்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டதாகவும் இதனால் கலக்கமுற்ற தானாபதி இவ்விடரிலிருந்து தப்ப கட்டபொம்மனை ஒழிப்பதே வழி என்று கருதி அவனை ஆங்கிலேயரிடம் மோதவிடுவதற்காகத்தான் திருவைகுண்டம் கொள்ளையை நடததினானென்றும் ஒரு கருத்து நிலவுகிறது. சிவனிய வெள்ளாளர்களின் அடுத்துக் கெடுக்கும் தன்மைக்கு இதை ஒரு சான்றாக நெல்லைச் சீமையில் கூறுகின்றனர். இது போல் அரசர்களைக் காட்டிக் கொடுப்பதில் பார்ப்பனர்களும் வெள்ளாளர்களும் ஒரே வகையாகத்தான் நடத்திருக்கிறார்கள்.

[4] இந்தப் புரட்சி பற்றி கு. இராசய்யன் எனும் மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் தென்னிந்தியப் புரட்சி (South Indian Rebellion) என்ற நூலில் தெளிவான சான்றுகளுடன் எழுதியுள்ளார். 1857இல் நடந்த படைவீரர் கலகத்தையே முதல் விடுதலைப் போர் என்று அரசினர் கூறுவதற்கு மாறாக இது இருக்கிறது. அத்துடன் அந்நூலை இந்திய விடுதலைப் போரிலும் குமுகியலில் ஒடுக்கப்பட்டவர்களுக்கெதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற பேராட்டங்களிலும் உயிர் நீத்தவர்களுக்குக் காணிக்கையாக்கியிருந்தார். அத்துடன் நூலின் இறுதியில் வெள்ளையரை வெளியேற்ற ஆயுதந்தாங்கிப் போரிடாமல் “வன்முறையில்லாப் புரட்சி” நடத்திய காந்தியாரின் அணுகல் தான் 1947இல் நடைபெற்ற மதக் கலவரங்களுக்குக் காரணம் என்றும் அதில் சிந்தப்பட்ட குருதி நாட்டு விடுதலைப் போரில் சிந்தப்பட்டிருந்தால் உணர்ச்சி ஒன்றிய ஒருமைப்பாடு உருவாகியிருக்கும் என்றும் வரலாற்றுத் தெளிவுள்ள பேராசிரியர் எழுதியிருந்தார். இது பொறுக்குமா நம் ஆதிக்கங்களுக்கு? நா.சுப்பிரமணியன் என்ற பார்ப்பன வரலாற்றுத் துறை பேராசிரியர் தலைமையில் பேரா.இராசய்யனின் ஒழுக்கம், நேர்மை, தகுதி இவை அனைத்தின் மீதும் சேற்றை வீசி அவரைப் புண்படுத்திப் பல்கலைக் கழகத்திலிருந்தே வெளியேற்றினர். சாதி அடிப்படையில் புலித்தேவனை உயர்த்துவதற்காகக் கட்டபொம்மனை இழிவுபடுத்த முயலும் முக்குலத்தோரைச் சேர்ந்த சில “வரலாற்றாய்வாளர்” கண்களுக்குக் கூட அக்குலத்தைச் சேர்ந்த மருதுபாண்டியர்களின் வீர வரலாறு இன்னும் எட்டவில்லை.

[5] 20 ஆம் நூற்றாண்டு

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 22. ஈழ விடுதலைப் போர்

இருபதாம் நூற்றாண்டை நிகர்மைப் புரட்சியின் ஊழி என்கிறார்கள் ‘மார்க்சியர்கள்’. ஆனால் தொடர்ச்சியாக நடைபெற்ற இரு உலகப்போர்களின் விளைவாக வலிமை குன்றிய வல்லரசுகளின் பிடியிலிருந்து ஐரோப்பியத் தேசியங்கள் விடுதலை பெற்றன. இருப்பினும் அவற்றில் பெரும்பாலானவை உருசியாவின் செல்வாக்கினுள் அடைபட்டுக் கிடந்தன. உருசியப் பொதுமைக் கட்சியின் இயலாமையால் சோவியத்துகளின் ஒன்றியம் சிதைந்த போது ஐரோப்பியத் தேசியங்களனைத்தும் உருசியக் கட்டமைப்புக்குள்ளிருந்த ஆசியத் தேசியங்களில் சிலவும் விடுதலை பெற்றன. அத்துடன் ஐரோப்பிய வல்லரசுகளின் பிடியிலிருந்த அனைத்து நாடுளும் அரசியல் விடுதலை பெற்றன. எனவே இந்நூற்றாண்டை தேசிய விடுதலையின் ஊழி என்பதே பொருந்தும்.

ஆனால் ஏழை நாடுகளில் அடிமைப்பட்டுக் கிடக்கும் தேசியங்கள் எதுவும் விடுதலை பெறவில்லை. அதேவேளையில் உலகின் முழுக் கவனத்தையும் ஈர்த்து நிற்கும் ஒரே தேசிய விடுதலைப் போராட்டம் ஈழ விடுதலைப் போராட்டமே.

ஆயுதந்தாங்கிய கூர்மையான இந்தப் போராட்டத்தின் அகவை பதினைந்து ஆண்டுகளுக்குள் தான். ஆனால் இந்தக் கால எல்லைக்குள் அது எத்தனையோ திரிவாக்க வளர்ச்சிகளைக் காட்டி நிற்கிறது. இவற்றின் பரிமாணங்களைப் புரிந்து கொள்ளும் முன் ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணியை அறிந்துக் கொள்வது நலம்.

ஈழத்தீவை நாகத்தீவு என்று கூறுவர் என்பதை ஏற்கனவே கூறியுள்ளோம். அதற்குச் சேரன்தீவு என்ற பெயரும் உண்டு. இது கிரேக்கர் அத்தீவுக்கு வழங்கிய பெயர். இச்சொல்லிலிருந்து Serendipity என்ற ஆங்கிலச் சொல்லை உருவாக்கியுள்ளார் வால்போல் என்ற ஆங்கில அறிஞர். எதிர்பாராமல் நிகழும் கண்டுபிடிப்புகளைக் குறிப்பதாக இந்தச் சொல்லை அவர் அறிவித்தார். சேரன் தீவாகிய ஈழத்தீவைச் சேர்ந்த மூன்று இளவரசர்கள் உலகைச் சுற்றியதையும் அவர்கள் எதிர்பாராமல் நிகழ்த்திய பல கண்டுபிடிப்புகளையும் குறிப்பிடும் ஒரு புதினம் அல்லது தேவதைக் கதையிலிருந்து அவர் இச்சொல்லை வடித்துள்ளார்.[1] இப்புதினத்தைக் கண்டுபிடிக்கும் இந்நூல் ஆசிரியரின் முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால் தென்தமிழ்நாட்டில் வழங்கும் முத்தாரம்மன் கதையில் வரும் முப்புராதிகளின் கதையாக அது இருக்கலாமோ என்றொரு ஐயம் எழுகிறது.

பினீசியர்கள் தற்செயலாகக் கண்ணாடியைக் கண்டுபிடித்ததைப் பற்றிக் கிரேக்கத்தின் வரலாற்றாசிரியரான ஏரோதோத்தே கூறுகிறார். வெடியுப்பை ஏற்றிவந்த பினீசியர்களின் கப்பலொன்று ஓராற்றங்கரையில் உடைந்து ஒதுங்கியது. கவிழ்ந்த கப்பலிலிருந்து கொட்டிய வெடியுப்பு ஆற்றங்கரை மண்ணுடன் கலந்திருந்தது. ஆற்று மணலில் அடுப்பமைத்து மாலுமிகள் சமைத்தனர். அந்தச் சூட்டில் வெடியுப்பும் மணலும் கலந்த கலவை உருகிக் கண்ணாடி[2] உருவானதாம்.

இந்தப் பினீசியர்கள் இந்தியாவின் தென்கோடியிலிருந்து நண்ணிலக் கடற்கரை சென்று குடியேறியவர்கள். இவர்களைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். பினீசியர்களுக்கும் இந்த மூன்று இளவரசர்களுக்கும் உள்ள தொடர்பு கூட ஆயத்தக்கது.

இலங்கைத் தீவில் சிங்களர் புகுந்தது பற்றிய செய்தி இலங்கை வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ளது. கலிங்கநாடு எனப்படும் ஒரிசாவிலிருந்து விசயன் என்பானும் அவனது தோழர்கள் சிலரும் கடல் வழியாக இலங்கைத் தீவை அடைந்தனர். அங்கே ஆட்சி செய்த நாகமன்னனின் தங்கையின் மகனுக்குப் பட்டம் சூட்டுவதாக வாக்களித்து அவளது உதவியை பெற்றனர் அவர்கள். நாக மன்னனும் பரிவாரங்களும் களியாட்டத்திலிருந்த நேரம் பார்த்து அவர்களனைவரையும் தாக்கியழித்து நாட்டைப் பிடித்தனர். பாண்டிய மன்னன் தன் தங்கையை மணமுடித்துக் கொடுத்தான். விசயனின் தோற்றக்குறியான சிங்கத்தின் பெயரால் அவன் வழியினர் சிங்களர் எனப்பட்டனர். எனவே சிங்களர் தமிழரும் கலிங்கரும் இணைந்த கலப்பினத்தினர் என்பது தெளிவு.

இதே நிகழ்ச்சியை மணிமேகலை ஆசிரியர் வேறுவிதமாகக் கூறுகிறார். மணிபல்லவத் தீவில் ஒரு புத்த பீடிகைக்காக நாகநாட்டின் இரு நாகங்கள் பெரும்போர் நிகழ்த்திய போது புத்தர் தோன்றி இது தனக்குரியது என்று அமர்ந்தார் என்கிறார் அவர். விசயன் தான் முதன்முதலில் புத்த சமயத்தை ஈழத்துக்கு எடுத்துச் சென்றவன் என்பது வரலாற்று உண்மை.
[3]

மயிலிராவணன் கதையென்று ஒன்று இராமாயணத்தோடு தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது. இராவணனின் உறவினனான மயிலிராவணன் என்பவன் இராம-இலக்குவர்களைத் தன் விஞ்சையால் மயக்கித் தூக்கிச் சென்று ஒளித்து வைத்து விடுகிறான். அனுமன் அவர்களைத் தேடிச் செல்கிறான். மயிலிராவணனின் தங்கை தன் மகனுக்குப் பட்டம் சூட்டினால் தமையனின் இருப்பிடத்தையும் அவன் உயிர்நிலையையும் தெரிவிப்பதாகக் கூறுகிறாள். அவ்வாறே மயிலிராவணனைக் கொன்று இராம இலக்குவர்களை மீட்டு வருகிறான் அனுமான்.

இராமாயணத்திலேயே வீடணனுக்குப் பட்டஞ் சூட்டுவதாக வாக்களித்தே உதவி பெறுகிறான் இராமன். இவையனைத்தும் ஒரே செய்தியையே குறிப்பிடுகின்றன.

இவ்வாறு மூலக்குடிகளாகிய நாகர்களென்னும் தமிழ்க் குலத்தினரிடையில் நடைபெற்ற பதவிப் போட்டியினாலும் பாண்டியர்களின் பகைமை உணர்வாலும் அயலவர்களான ஒரியர்கள் ஈழத்தில் வந்து புதிய ஒரு இனத்தை உருவாக்கி நிலைத்து விட்டனர்.

ஈழத்தின் மீது தமிழக அரசர்கள் போர் தொடுத்த நிகழ்ச்சி முதன்முதலாகக் கரிகாலனின் படையெடுப்பாகவே நம் கவனத்திற்கு வருகிறது. அப்படையெடுப்பின் போது பன்னீராயிரம் இலங்கையரைக் கரிகாலன் சிறைப்பிடித்து வந்தான். காவிரிக்குக் கரையமைக்கும் பணியில் அவர்களை ஈடுபடுத்தினான். இவ்விலங்கையரே ஈழவர் என்றும் பணிக்கர்களென்றும் தீயர்களென்றும் கேரளத்தில் அழைக்கப்படுகிற மக்களாகும் என்று சிலர் கருதுகிறார்கள்.

தமிழகத்தினுள் இல்லத்துப் பிள்ளைகள் என்று அழைக்கப்படும் மக்களும் இவர்களே. ஆனால் அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஈழத்துப் பிள்ளைகள் என்பதே இல்லத்துப் பிள்ளைகள் என மருவி வழங்குகிறதென்ற உண்மைக்குச் சான்றுகள் உள்ளன. பட்டப்பெயர்கள், சாதி உட்பிரிவுகள் ஆகியவற்றில் ஈழவர்களுக்கும் இவர்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன.

இவ்வாறு கரிகாலன் பிடித்துவந்த மக்கள் தமிழர்களா சிங்களவரா என்பது தெரியவில்லை. இதையும் ஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். தமிழகத்தில் முறையான வரலாற்றாய்வு என்று எதுவுமே நடைபெறவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.

கரிகாலன் படையெடுத்த காலம் கயவாகுவின் தந்தை இலங்கையை ஆண்ட காலம். தன் தந்தைக்கு இழைக்கப்பட்ட இழிவுக்குப் பழிவாங்கவே மணிமேகலையைப் பயன்படுத்திச் சோழ இளவரசனான உதயகுமாரனைக் கொன்றான்; பீலிவளை என்ற நாகப்பெண் சோழ அரசனுக்குத் தான் ஈன்ற தன் மகனுடன் மணிபல்லவத் தீவுக்குப் புத்த பீடிகையை வழிபட வந்தாள். அவ்வாறு வந்தவள் அங்கு வந்து சேர்ந்த கம்பளச் செட்டியின் கலத்தில் அவனைச் சோழ மன்னனிடம் அனுப்பினாள். ஆனால் மரக்கலம் கரை சேருவதற்குள் முழுகியதாகக் கூறப்பட்டது. அவ்வாறு சோழனின் பிறங்கடையினர் இறந்தனர். புகார் கடலால் அழிந்ததென்று கூறப்படுகிறது. ஆனால் எட்கார் தர்சுட்டன்[4] செட்டியார்களைப் பற்றித் தொகுத்துள்ள கதை வேறுவிதமாகக் கூறுகிறது. சோழ மன்னன் செட்டியார் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் புரியக் கேட்டதாகவும் ஆனால் மறுத்த செட்டியார்கள் புகாரை நெருப்பு வைத்து அழித்து விட்டு வெளியேறியதாகவும் அக்கதை கூறுகிறது. அறிஞர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளையவர்களும் இவ்வாறு தான் கருதுகிறார். கோவலன் எனும் வாணிகனுக்குப் பிறந்த மணிமேகலையை வாணிகச் சாதியினர் தங்கள் சாதிப் பெண்ணாக ஏற்றுக் கொண்டனர் என்பதற்கு வாணிகரான சாத்தனார் அவள் வரலாற்றை ஒரு காப்பியமாக இயற்றியுள்ளதே சான்று.

இவ்வாறு மணிமேகலையின் உதவியோடு புகாரை அழித்த பின்னர் தான் கயவாகு கண்ணகிக்குச் சேரன் கோயிலெடுத்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டான் என்று இ.மு.சுப்பிரமணியன் கருதுகிறார். இது ஆயப்பட வேண்டியது.

இதன் பின்னர் இலங்கை மீது படையெடுத்துச் சிங்கள அரசுக்குப் பெரும் இன்னல் விளைவித்தவன் இராசராசன். அவன் காலத்திலும் அதைத் தொடர்ந்த சோழப் பேரரசின் காலத்திலும் ஈழத்தீவு சோழப் பேரரசின் முழு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. சோழப் பேரரசு வலிமை குன்றிய போது ஈழத்தை ஆண்ட சோழப் பேரரசின் பேராளனாயிருந்த ஒரு முதிய தலைவனான எல்லாளனைத் துட்கைமுனு என்ற சிங்கள வீரன் தனிப்போரில் வென்று சோழப் பேரரசிலிருந்து ஈழத்தை மீட்டான் என்று சிங்கள வரலாறு கூறுகிறது.

விசயனால் அழிக்கப்பட்டவர்கள் அரசனும் அவனது சுற்றத்தாருமே. மக்கள் எஞ்சியிருக்கவே செய்தார்கள். சோழப் பேரரசின் காலத்தில் அங்கு வந்து சேர்ந்தோரே அங்கிருக்கும் மிக உயர் சாதியினரான சிவனிய வேளாளர்கள். தமிழகத்திற் போலல்லாமல் இவர்கள் பார்ப்பனரை விடச் செல்வாக்கில் மிக்கவர்கள்.

மொழிநடையைப் பொறுத்தவரையில் இந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களுக்கும் ஈழத்தின் பிற தமிழ்ப் பகுதி மக்களுக்கும் வேறுபாடுண்டு. ஆனால் பொதுவான மொழிநடை தமிழகத்தின் உள்நாட்டுப் பகுதியிலிருந்து வேறுபட்டதாகும். ஈழத்தின் தமிழ்நடையும் தமிழகத்துத் தென் மாவட்டங்களிலுள்ள மீனவர்களின் மொழிநடையும் குமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு வட்டங்களிலுள்ள மொழிநடையும் தெக்கன் மலையாளம் எனப்படும் தென் கேரள மலையாளமும் மிக நெருக்கமானவை. முழுகிப் போன குமரிக் கண்டத் தமிழ்நடையைத் தடம் பிடிக்க வேண்டுமென்றால் மேற்கூறிய இவர்களுடைய மொழிநடையை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

இந்தப் பின்னணியில் நிகழ்ந்த தென்னவென்றால் தமிழகத்துப் பார்ப்பனரைப் போலவே ஆட்சிப் பதவிகளை யாழ்ப்பாணத்து வெள்ளாளர்கள் கைப்பற்றிக் கொண்டனர். தமிழகத்தில் இருந்தது போல் பார்ப்பனர்களின் போட்டி அவர்களுக்கில்லை. எழுத்தறிவின் மூலம் பெறப்படும் பதவிகளில் மிக உயர்ந்த நிலையை அவர்கள் எய்தியிருந்தனர்.

வெள்ளையர்கள் வந்த போது ஒட்டுண்ணிகளின் இயல்புக் கிணங்க இவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் மதம்மாறிக் கும்பினியாரிடம் பணிக்கமர்ந்தனர். பின்னர் ஆங்கிலங்கற்று இலங்கையில் மட்டுமல்ல தெற்காசியா முழுவதும் பெரும் பதவிகளைக் கைப்பற்றினர். தங்களுக்கென்று தனியாக வெள்ளையரையொத்த சில பண்பாட்டுக் கூறுகளை வகுத்து கொண்டனர்.

இவர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் வாழும் பிற தமிழர்களைத் தங்களுக்கு ஈடாக மதிப்பதில்லை. தமிழர்களிலேயே தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற ஆணவம் அவர்களுக்கு உண்டு.

19ஆம் நூற்றாண்டிலும் பின்னரும் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காகத் தமிழகத்திலிருந்து ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட பஞ்சத்திலடிப்பட்ட தமிழ் மக்களும் இலங்கையில் சிங்களர் நடுவே மலையகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. ஆனால் ஈழத் தமிழர்களின் தலைமையிலிருந்த யாழ்ப்பணத்து வெள்ளாளர்கள் தமிழர்களின் நலனைக் காத்துக் கொள்ள வேண்டுமென்று கருதவில்லை. அதற்குரிய முனைப்பான போராட்டங்களில் ஈடுபடவில்லை. அவர்கள் கணிப்பு வேறாக இருந்தது. இலங்கை ஒருங்கிணைந்து இருந்தால் தம் பதவி வாய்ப்புக்குக் கேடு வராமல் இருக்கும் என்பதே அந்தக் கணிப்பு.

ஆனால் சிங்களரின் கணிப்பு வேறாக இருந்தது. தமிழர்கள் கையிலிருக்கும் ஒட்டுண்ணி வேலைவாய்ப்பைத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்பதே அது. முதல் தேர்தலில் கணிசமான எண்ணிக்கையில் தமிழ்ப் பேராளர்கள் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒரு பெரும் பகுதியினர் மலையகத் தமிழர்களாவர். இது சிங்களர் கண்களை உறுத்தியது. யாழ்ப்பாணத்து வெள்ளாளர்கள் கண்களையும் உறுத்தியது. எனவே தான் மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறிக்க சிங்களவர் மேற்கொண்ட முயற்சிக்கு அவர்கள் துணை நின்றனர்.

தமிழர்களின் அரசியல் செல்வாக்கை ஒழிக்க இருமுனைத் தாக்குதல் திட்டத்தைச் சிங்களர் மேற்கொண்டனர். அதில் ஒன்று தான் மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறித்தது, இன்னொன்று வடகிழக்கு மாகாணம் எனப்படும் திரிகோணமலைப் பகுதியில் பரவலாகச் சிங்களரைக் குடியமர்த்தியது. இதற்கும் தமிழ்த் தலைவர்கள் உரிய எதிர்ப்பைக் காட்டவில்லை.

தாம் எழுத்தறிவு பெறுவதன் மூலம் அரசுப் பதவிகளிலிருந்த தமிழர்களின் இடத்தைப் பிடிக்கச் சிங்களர் முயன்றனர். ஆட்சி அவர்களிடமிருந்தாலும் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் முன் பிறர் தோற்றது போலவே சிங்களராலும் எளிதில் வெற்றி பெற முடியவில்லை. எனவே அடுத்த கட்ட முயற்சியாகத் தரப்படுத்தல் என்ற உத்தியைச் சிங்களர் கல்வித்துறையில் புகுத்தினர். இதன்படி ஒரு சிங்கள மாணவன் உயர்கல்விக்குச் செல்வதற்குத் தமிழ் மாணவனை விடக் குறைவான மதிப்பெண்களே போதுமானது. இது தமிழ் மாணவர்களுக்கு, குறிப்பாக எழுத்தறிவு மூலமாகவே தங்கள் வளவாழ்வை நிலைநாட்டி வந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர் மாணவர்களுக்கு ஆத்திர மூட்டியது.

இதற்கிடையில் கொழும்பிலும் பிற பகுதிகளிலும் குறிப்பாக மலையகத்திலும் அடிக்கடி சிங்களர்கள் இனவெறித் தாக்குதல்களை நடத்தி வந்தனர். தமிழர்களின் பண்பாட்டு வாழ்வைக் குலைக்கவும் முயன்றனர். 1974ஆம் ஆண்டில் அங்கு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிங்களப்படை புகுந்து வெறித் தாக்குதல் நடத்தியது.

இந்த நிகழ்ச்சிப் போக்குகளுக்கிடையில் தமிழர்களின் கட்சிகளில் காட்டிக் கொடுப்பவையே மலிந்திருந்தன. எனினும் செல்வநாயகம் என்ற தலைவர் சிங்களர்களோடு தமிழர்களின் அமைதியான உடன்வாழ்வுக்கு மனமுவந்து மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் இரு பெரும் சிங்களக் கட்சிகளால் போட்டிபோட்டுக் கொண்டு முறியடிக்கப்பட்டன. இறுதியில் தனி ஈழம் தான் தமிழர்களின் விடிவுக்கு வழியென்று முடிவு கூறி அவர் மறைந்தார். இதற்கிடையில் இளைஞர்கள் எழுச்சியடைந்தனர். அவர்களது நெருக்குதலுக்குப் பணிந்து தமிழர் கட்சிகள் ஒருங்கிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி அமைந்தது. அமிர்தலிங்கம் அதன் தலைவரானார்.

1977ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் ஈழ விடுதலை என்ற நோக்கத்தை முன் வைத்துத் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர்கள் பகுதியில் முழு வெற்றியடைந்தது. ஆனால் தேர்தலுக்குப் பின் ஆளுங்கட்சியான ஒன்றிய தேசியக் கட்சியுடன் இணங்கி நின்றது. ஈழ விடுதலைக்கான நடவடிக்கை எதிலும் இறங்கவில்லை. இதனால் இளைஞர்கள் பல்வேறு இயக்கங்களாகச் செயற்படத் தொடங்கினர்.

இந்தக் காலட்டத்தில் சிவகுமாரன் என்ற வீர இளைஞன் உருவானான். தமிழர்கள் மீது கொடுமை புரியும் காவல்துறையினரைக் கொல்வதன் மூலம் அவன் மக்களிடையிலும் இளைஞர்கள் நடுவிலும் புகழ் பெற்றான். அவன் தோழர்களாயிருந்தவர்களிலிருந்தே பின்னால் உருவான பல போராளி இயக்கங்களின் கருக்கள் உருவாயின என்று கூறப்படுகிறது.

வெவ்வேறு போராளி இயக்கங்களும் தமக்குத் தேவைப்படும் பணத்தைப் பெறுவதற்காக வங்கிகளைக் கொள்ளையிட்டன. காவல்துறையினரையும் காட்டிக் கொடுக்கும் தமிழர்களையும் கொல்லவும் செய்தனர். அவற்றில் தொடர்புள்ளவர்களைப் பிடிப்பதற்காகக் காவல்துறை தேடிய போது அவர்கள் தமிழகத்துக்கு ஓடி வந்து விட்டனர். அப்படி வந்த ஒரு சில தலைவர்களை அப்போது ஆட்சியிலிருந்த திராவிடர் இயக்க ஆட்சி பிடித்து இலங்கை அரசிடம் ஒப்படைத்து தமது “தமிழினக் காவலர்” பணியை நிறைவேற்றியது.

இலங்கையில் ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னும் சிங்களர் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கமாயிருந்தது. அது போல் 1977 தேர்தல் முடிந்தவுடனும் நடந்தது. இந்தக் கலவரச் செய்திகள் தமிழகத்து மக்களை மிகவும் பாதித்தன. ஆனால் 1982இல் நடந்த கலவரம் தேர்தலை ஒட்டி நடைபெற்றதல்ல. இனவெறி பிடித்த அரசு இயந்திரம் முழுவதும் இனவெறி பிடித்த சிங்களர்களுடன் இணைந்து திட்டமிட்டு தொடங்கப்பட்ட இந்தத் தாக்குதல் பல நாள் நடைபெற்றது. மக்கள் ஆதரவு தேடித் தமிழகத்திற்குப் படகேறி ஓடி வந்தனர். தமிழக மக்கள் முழுமனதோடு அவர்களுக்கு ஆதரவளித்தனர். சிங்களர் மீது சீற்றம் கொண்டனர். அவர்களது உணர்வுகள் தாமே வெளிப்பட்ட ஊர்வலங்கள், உண்ணா நோன்புகளாக உருவெடுத்தன. அது வரை இவை யாவற்றையும் கண்டுகொள்ளாமலிருந்த தமிழக அரசியல் கட்சிகள் புதிய ஆயுதம் ஒன்று தங்கள் முன் வந்து விழுந்திருப்பதைக் கண்டுகொண்டன. ஆளும் கட்சியும் ஆளாத கட்சியும் நாளொரு ஊர்வலமும் பொழுதொரு ஆர்ப்பாட்டமும் கடையடைப்புமாக திருவிழா நடத்தின.

ஈழத்தில் அரசு நடத்திய அடக்குமுறையிலிருந்து தப்ப அங்கு உருவாகியிருந்த பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும் தமிழத்தில் அடைக்கலம் புகுந்தனர். அப்படிப் புகுந்தவர்கள் அனைவரையும் இங்குள்ள வெவ்வேறு அரசியற் கட்சிகள் தமக்குள் பங்கு போட்டுக் கொண்டன.

தில்லியும் வாளாவிருக்கவில்லை. தெற்காசியாவில் தன் அரசியல் செல்வாக்கைச் செலுத்த வேண்டுமென்ற அவா தில்லிக்கு என்றுமே உண்டு. இந்த வகையில் இதுவரை தன் கைகளுக்குள் சிக்காமலிருக்கும் இலங்கையை ஆட்டிப்படைக்க இதை ஒரு வாய்ப்பாக அது கருதியது. அத்துடன் ஈழ விடுதலை இயக்கத்துக்கு உதவி செய்வதன் மூலம் அதனுள் புகுந்து அது (ஈழ விடுதலை இயக்கம்) தன் நோக்கத்தை ஈடேற்ற முடியாதபடி தடுக்கவும் அது எண்ணியது. அதன் மூலம் இந்த வட்டாரத்தில் அல்லது பொதுவாக உலகில் ஒரு தேசிய விடுதலை இயக்கம் வெற்றி பெறும் வாய்ப்பைத் தகர்த்து விடலாம்; அவ்வாறு இந்தியாவினுள் தோன்றி வளர்ந்துகொண்டிருந்த தேசிய எழுச்சிகளுக்கு ஓர் உளவியல் தாக்குதலையும் கொடுக்கலாம்.

இந்தக் கணிப்புகளோடு இந்தியா ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கியது. ஒவ்வொரு இயக்கத்துக்கும் தனித்தனிப் பயிற்சி முகாம்கள் அமைத்துக் கொடுத்து அங்கு போராளிகளுக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்தது. இங்கு பயிற்சி பெற்ற போராளிகள் ஈழம் சென்று அரசுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

அதே வேளையில் தமிழகத்திலுள்ள சில கட்சிகள் இவ்வியக்கங்களில் சிலவற்றோடு தொடர்பு வைத்து அவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்துப் பயிற்சியளித்து ஈழத்தில் வங்கிக் கொள்ளைகள் நடத்த வைத்துப் பங்கு பெற்றதும் உண்டு.

இதற்கிடையில் “மார்க்சியர்களும்” கையைக் கட்டிக்கொண்டிருக்கவில்லை. அவர்களில் மூன்றாம் அணியினர் எனப்படும் நக்சலர்கள் சில இயக்கங்களில் புகுந்தனர். அவர்கள் பாணியில் மாணவரனி, மகளிரணி, அலுவலர்களணி என்று தாளில் எண்ணற்ற அணிகளை ஈழ மக்கள் புரட்சிகர முன்னனி என்ற அமைப்பு உருவாக்கியது. இது ஈரோக்கள் என அழைக்கப்படும் அமைப்பிலிருந்து பிரிந்ததாகும். ஈரோக்களை உருவாக்கிய இரத்தினசபாபதி எனும் சிவனிய வேளாளர் ‘மாணிக்கவாசகர் ஒரு மார்க்சியர்’ என்று வாதிடும் ஒரு விந்தையான மார்க்சியர். இவர் சோவியத்து உருசியா தேசிய விடுதலைப் போர்களுக்கு உதவும் என்று கூறி சோவியத்துக்கு ஆதரவு தேடுபவர்.

தெலோ எனப்படும் தமிழ் ஈழ விடுதலை அமைப்பு இதுபோன்று கோட்பாட்டுச் சாயல் எதுவுமில்லாத அமைப்பாகும். அதன் தமிழகப் புரவலர் தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியாகும்.

இன்று ஈழத்தில் நிலைத்து நிற்கும் தலைவரான பிரபாகரன் தொடக்கத்தில் தமிழர் விடுதலை முன்னணித் தலைவர்களுக்கு நம்பிக்கையானவராயிருந்தார். அவர்களை நம்பியிருந்தார். ஆனால் அவர்கள் தமிழர் நலன்களுக்கு நாணயமில்லாமல் எதிரியோடு நெருங்க நெருங்க இவர் தன் வழியில் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டார். போர்க்கருவியையே எதிரி தனது ஆயுதமாகக் கொண்டிருக்கும் போது இவரும் போர்க்கருவியையே தன் முதன்மையான ஆயுதமாகக்கொண்டார். தங்களுக்கு உதவும் பல்வேறு தரப்பினரின் தனித்தனி நலக் குறிக்கோள்களை இனம் கண்டு அதில் தம் நலனை மட்டும் பேணி ஆதாயம் தேடும் பக்குவம் அவருக்கிருந்தது. உண்மையான இயங்கியல் அணுகல் இது தான். இயங்கியலைப் பற்றிப் பேசும் போது, லெனின் கூறுவார் “இயங்கியல்; என்பது இயல்பான பொது அறிவு (Common sense)தான்” என்று.

பிரபாகரனின் தொடக்க காலக் கூட்டாளியாக இருந்த உமாமகேசுவரன் என்ற முகுந்தனுக்கும் பிரபாகரனுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சென்னையில் தெருவில் ஒருவர் மீதொருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதிலிருந்து அவ்வியக்கம் இரண்டாய்ப் பிரிந்து முகுந்தனின் தலைமையில் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் (பிளாட்) உருவானது. இது வங்கிக் கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு பணம் ஈட்டியது. இவ்வியக்கத்தை வெவ்வேறு நேரங்களில் தமிழ்நாட்டின் வெவ்வேறு கட்சிகள் ஆதரித்தன. ஒரு வேளையில் இந்தியப் பேரவைக் கட்சி முகுந்தனை தமிழகமெங்கும் அழைத்துச் சென்று கூட்டங்கள் நடத்தியதுண்டு.

இந்தப் போராளி இயக்கத்தினர் எந்த ஆதரவுமின்றி உண்ணவோ உறங்கவோ எந்த வசதியுமின்றி வந்த பொது தமிழகத்திலுள்ள மனிதநேயமும் மொழியடிப்படையில் அமைந்த இனப்பற்றும் கொண்டு எந்தக் கைம்மாறையும் கருதாமல் உதவியோர் எண்ணற்றவர். ஆனால் அரசியல்வாணர்களின் உதவியும் ஆதரவும் கிடைத்தவுடன் அந்த எளியவர்கள் ஓசைப்படாமல் அனைத்து இயக்கங்களாலும் ஒதுக்கி வீசப்பட்டனர் என்பது மனம் நோக வைக்கும் உண்மையுமாகும்.

அதே நேரத்தில் அரசியல்வாணர்களின் ஆதரவு வெறும் அரசியல் ஆதாயங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. ஈழத்தில் போராளிகள் கொள்ளையடித்துக் கொண்டு வந்த பணத்தில் அவர்களுக்குக் கிடைத்த பங்கும் காரணமாகும். இத்தகைய ஒரு பங்கை அனைத்து இயக்கங்களும் இங்குள்ள அதன் ஆதரவுத் தலைவர்களுக்கு வழங்கின. தங்களுக்கு இந்தியாவில் ஒரு “தளம்” வேண்டுமென்பதற்காக அவர்கள் கொடுக்க ஆயத்தமாக இருந்த ஒரு விலையே அது.

தனித்தனிக் குழுக்களாக ஒருவருக்கொருவர் முரண்படாமல் இணைந்து நின்று போராளிகள் போராட வேண்டுமென்று இந்திய அரசும் தமிழக அரசியல்வாணர்களும் விரும்பினார்கள். அதன்படி விடுதலைப் புலிகள் இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழப் புரட்சிகர அமைப்பு (ஈரோக்கள்), தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு, தமிழீழ விடுதலை அமைப்பு ஆகிய ஐந்தும் ஒரு கூட்டணியில் வர இணங்கின.[5] சில நாட்களிலேயே அவற்றிலொன்றான தமிழ் விடுதலை அமைப்பு (தெலோ) ஈழத்தில் இந்திய அரசின் ஆதரவோடு ஓர் அரசு அமைப்பதற்கான மறைமுகமான பேச்சில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வந்தன. ஒரிரு நாட்களில் தமிழகத்திலிருந்து ஈழம் சென்றிருந்த அதன் தலைவர் சிறீசபாரத்தினம் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அது மட்டுமல்ல த.வி.அமைப்பின் போராளி உறுப்பினர்களும் மிகக் கொடுமையான முறையில் அழிக்கப்பட்டனர். சிறிது சிறிதாகப் பிற இயக்கங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் முரண்பாடுகள் முற்றி ஈழம் முழுவதும் இயக்கங்களுக்கிடையிலான போர்கள் வலிமை பெற்றன.

இதற்கிடையில் ஈழப் போராளிகளின் துணிச்சல் மிக்க தாக்குதல்களால் நடுநடுக்கிப் போன இலங்கை அரசு அதன் சிறிய படையைச் சிறிது சிறிதாக வலுப்படுத்தி வந்தது. இந்தியாவுக்கு எதிரானவையும் வழக்கமாகவே இலங்கையுடன் நட்பாகவும் உள்ள நாடுகளிடமிருந்து பெற்ற உதவிகளுடன் தான் அது தன் படையை வலுப்படுத்தியது. இவ்வாறு புது வலிமை பெற்ற இலங்கைப் படை ஈழத்தினுள் போராளிகள் மீது தாக்குதல் தொடுத்தது. போராளி இயக்கங்களுக்கிடையிலான சண்டையால் அவற்றின் எதிர்ப்பு வலிமை குன்றியிருந்தது. இலங்கைப் படை தொடர்ந்து முன்னேறியது. இலங்கைப் படைகள் மக்கள் மீது தாக்குதல் தொடுத்ததுடன் நில்லாது மக்களுக்கு உணவு, தண்ணிர், மின்சாரம் என்று முழுமையான பொருளியல் முற்றுகையையும் நடத்தியது. மீண்டும் தமிழகத்துக்கு மக்கள் ஓடி வந்தனர். இந்திய ஆட்சியாளருக்கு ஒரு புதிய சிந்தனை தோன்றியது.

உள்நாட்டுப் போரினால் நிலைகுலைந்து நிற்கும் ,இலங்கையைத் தன் முழுக்கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்கு இதை விட்டால் வேறு வாய்ப்புக் கிடைக்காது என்று இந்தியா கருதியது. அத்துடன் ஈழத்தில் வலுப்பெற்று வெற்றி நோக்கி நடைபோடும் தேசிய விடுதலைப் போரினால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் கொழுந்து விட்டெரிந்து, அந்த நெருப்பில் குளிர்காய எண்ணிய திராவிட இயக்கத்தினால் சிறிது சிறிதாக நீருற்றப்பட்டு அணையும் நிலையிலிருக்கும் தேசியத் தீ மீண்டும் புகையத் தொடங்கும் அறிகுறி வேறு இந்திய அரசின் வயிற்றில் கலக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத் தலைவர்களோ, வழக்கம் போல் ‘எங்கள் வீட்டில் பாம்பு, ஆண்கள் யாராவது வாருங்களேன்’ என்றலறும் பேடி இல்லத் தலைவனாக வெளியார் உதிவியையே வேண்டினர். ‘இந்திய அரசே வங்காள தேசத்தில் செய்தது போல் இலங்கை மீது படையெடுத்து ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வாங்கிக்கொடு’ என்று கூக்குரலிட்டனர்.

இந்திய அரசோ தமிழகத்துக்கு வந்திருந்த ஏதிலி (அகதி) ஈழ மக்களைக் காரணமாகக் காட்டி ஈழச் சிக்கலுக்கு ஒரு தீர்வு காண முயல்வதாகத் தொடக்கத்திலிருந்தே பாசாங்கு செய்து வந்தது. இவற்றையெல்லாம் பயன்படுத்தி ஈழத் தமிழர்களுக்கு உணவளிப்பதாகக் கூறி வானூர்திகளில் உணவுப் பொட்டலங்களுடன் ஈழ எல்லைக்குள் சென்று உணவை மக்களுக்கு வழங்கியது இந்திய அரசு. இருதியில் இலங்கை அரசு இந்திய அரசுடன் ஓர் உடன்பாட்டுக்கு வர இணங்கியது. இழி பெயர் பெற்ற இலங்கை இந்திய உடன்படிக்கை உருவாயிற்று.

வடமாகாணம் எனும் யாழ்ப்பாணப் பகுதியும் திருகோணமலைப் பகுதியாகிய வடகிழக்கு மாகாணமும் தமிழர்களின் மரபு நிலப்பரப்புகளாகும். அவற்றில் வடகிழக்கு மாகாணத்தில் இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து விடுபட்ட பின்னர் சிங்கள அரசு நிறைவேற்றிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களினால் அங்கு தமிழர்கள் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினராகக் குறைந்து போயினர். அத்துடன் அம்மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் பேசும் முகம்மதியர்கள் தாங்கள் தமிழரோடு இணைந்து வாழ்வதை விரும்பவில்லை என்று கூறிவந்தனர். தாங்கள் இலங்கையின் பிற பகுதிகளிலுள்ள முகம்மதியரோடு சேர்ந்து ஒரு தனித் தேசியம் என்றனர். இவர்கள் வடகிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பேசும் மக்களில் பாதியளவு இருந்ததால் தாய் மதத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் அங்கு மூன்றிலொரு பகுதியாகக் குறைந்து விட்டனர். இந்த நிலையில் தமிழ் விடுதலைக் குழுக்கள் ஒரே குரலில் வடக்கு மாகாணமும் வடகிழக்கு மாகாணமும் இணைவதை முதல் தேவையாக வலியுறுத்தி வந்தனர். அதாவது ‘மரபுத் தமிழ்ப் பகுதிகள் மேலுள்ள தங்கள் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்’ என்பது அவர்களது நிலைப்பாடு.

இந்திய அரசு இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு மிகச் சூழ்ச்சியாகத் திட்டம் தீட்டியது. வடக்கு மாகாணத்தையும் வடகிழக்கு மாகாணத்தையும் "தற்காலிகமாக" இணைக்க வேண்டும்; பின்னர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு கருத்துவாக்கெடுத்து அதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்என்று கூறியது உடன்படிக்கை. கருத்து வாக்கெடுப்பை ஈழத்தில் மட்டும் நடத்த வேண்டுமா முழு இலங்கைக்கும் நடத்த வேண்டுமா என்பது வரையறுக்கப்படவில்லை. ஆனால் இலங்கை முழுவதற்கும் தான் என இலங்கை அரசு பின்னர் விளக்கம் கூறியது. எனவே இந்தத் தற்காலிக இணைப்பு என்பது ஈழத் தமிழர்களைப் பொறியில் சிக்க வைக்கும் பொய்த் தீனி தான் என்பது தெளிவு. அத்துடன் புதிதாக அமையவிருக்கும் தமிழ் மாநிலத்திற்கு ‘இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கிருப்பவை போன்ற’ அதிகாரங்களை வழங்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் இந்திய மாநிலங்களுக்கிருப்பவற்றை விடக் கூடுதலான உரிமைகள் வழங்கப்பட்டு அதே போன்ற உரிமைகள் தங்களுக்கும் வேண்டுமென்ற கேள்வி இந்திய மாநிலங்களில் எழுப்பப்படும் வாய்ப்பு தடுக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை இலங்கையை மிரட்டியே பெறப்பட்டது என்பது தான் உண்மை.

ஈழப் போராளி இயக்கங்களில் ஈழப்புலிகள் தவிர பிறவனைத்தும் இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன. ஈரோக்கள் எனப்படும் ஈழப்புரட்சி அமைப்பு தான் இந்த உடன்படிக்கைக்கான முன்முயற்சி எடுத்த இயக்கம் என்று கூறலாம். இவ்வியக்கம் சோவியத்து உருசியாவை ஆதரிக்கும் இயக்கம் என்று முன்பே கூறினோம். ஈழ விடுதலைக்காக அது உருசிய அரசை அணுகியதாகவும் இந்தியாவின் சொற்படி நடக்குமாறு உருசியா அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்திய அரசின் உதவி பெற்றே ஈழ இயக்கத் தலைவர்கள் இந்தியாவில் தங்கியிருந்ததால் நினைத்த நேரம் அவர்களை மிரட்டித் தன் விருப்பம் போல் ஆட வைக்க இந்திய அரசால் முடிந்தது. உடன்பட மறுத்த பிரபாகரன் சூழ்நிலை எனும் சிறையினுள் அகப்பட வேண்டியதாயிற்று.

உடன்படிக்கையின்படி வட மற்றும் வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு தமிழ் மாநிலம் உருவாக்கப்படும். இந்தியா தன் அமைதிகாப்புப் படையை அனுப்பி தமிழ் மாநிலத் தேர்தலை நடத்தி அதற்குரிய உரிமைகள் வழங்கப்படுவதை மேற்பார்க்கும்; போராளிக் குழுக்கள் அனைத்தும் தத்தம் ஆயுதங்களை அமைதிகாப்புப் படையிடம் ஒப்படைத்து மக்களாட்சிக் களத்துக்குள் புக வேண்டும்.

அவ்வாறே அமைதிகாப்புப் படை ஈழத்தில் நுழைந்தது. ஈழத் தமிழ் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஈழத்திலும் தமிழகத்திலும் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். ஆனால் உலகமறிந்தவர்கள் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளைக் கவலையுடன் எதிர்பார்த்தனர்.

உடன்படிக்கையை வடிவமைத்ததில் முதல் பங்காற்றிய ஈழப் புரட்சி அமைப்பினர் முழு நம்பிக்கையுடன் ஆயுதங்களை இந்தியப் படையிடம் ஒப்படைத்தனர். ஆனால் அப்படி ஒப்படைத்த போராளிகள் அந்தமானுக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு ஈழப் புரட்சி அமைப்பினர் முகலாயப் பேரரசன் சாசகானைப் போலத் தாங்கள் கட்டிய கூண்டினுள்ளேயே சிறைப்பட்டனர். பிரபாகரன் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தப்பிச் சென்றார்.

ஈழப் போராளிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. படகில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பதினேழு விடுதலைப் புலிப் போராளிகளை இலங்கையரசு சிறைப் பிடித்தது. இந்திய அரசு எவ்வளவோ கூறியும் பயனில்லை. அப்பதினேழு பேரும் நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொண்டனர். இந்திய அமைதிப் படை போராளிகளை ஒடுக்கத் தொடங்கியது. எதிர்ப்புக் கிளர்ச்சிகளும் உண்ணாநோன்புகளும் தொடங்கின. தாய்மார்கள் கூட உண்ணாநோன்பிருந்து உயிர்விட்டனர். திலீபன் என்ற விடுதலைப்புலி இயக்கப் பெருமகன் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தான். விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் மோதல்கள் உருவாயின.

இரண்டே நாட்களில் விடுதலைப் புலிகளை அழித்துவிடலாம் என்று இந்திய அரசு போட்ட கணிப்பு தப்புக்கணக்காயிற்று. இரண்டாண்டுகளாகியும் புலிகளை ஒடுக்க முடியவில்லை. இந்தியத் தரப்பில் மிகக் கடும் இழப்புகள் ஏற்பட்ட வண்ணமிருந்தன.

தொடரும் முன் சிங்களரின் நிலைபற்றி ஒரு சிறிது ஆய்வோம்.

அண்மைக் காலத்தில் இலங்கைக்குள் இந்தியப் படை நுழைந்தது இது முதல் முறையல்ல. 1971இல் சிறீமா பண்டாரநாயக இலங்கையின் தலைமை அமைச்சராயிருந்த போது, அவரது வேண்டுகோளின் பேரில் அப்போது இந்தியாவின் தலைமையமைச்சராயிருந்த இந்திராகாந்தியால் ஒருமுறை படை அனுப்பப்பட்டது. ஆனால் அது வெளி உலகுக்கு அப்போது தெரியாது; பின்னர் தான் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சூழ்நிலை பின்வருமாறு “1960களின் இறுதியில் உலகமெங்கும் உருசியப் பொதுமைக் கோட்பாட்டை எதிர்த்து மூன்றாம் அணி என்ற பெயரில் வன்முறைக் கிளர்ச்சிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. சீனாவின் பெயரில் அவை அமைக்கப்பட்டாலும் உருசிய எதிர்ப்பு விசைகளெல்லாம் அவற்றின் பின்னணியில் நின்றன. இந்தியாவில் உருவான நக்சலர்கள் அத்தகைய குழுவினரே.

இத்தகைய ஒரு குழுவே இலங்கையில் உருவான மக்கள் விடுதலை இயக்கத்தினர் (சனதா விழுக்தி பெரமுனா). அதன் தலைவரான ரோகன விசயவீர என்பவர் வேலையின்மையால் கசப்புற்றிருந்த இளைஞர்களைத் திரட்டி ஒரு ஆயுதப் புரட்சிக்குத் திட்டமிட்டார். ஆனால் அவர் தங்கள் வேலையின்மைக்கு மலையகத் தமிழர்கள் தான் காரணமென்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் தூண்டினார். இப்படிப்பட்ட இயக்கம் பெரும் வலிமை பெற்று சிரிமா ஆட்சிக்கு அறைகூவலாயமைந்த போது தான் தோழி இந்திராவின் உதவியை நாடி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைப் பலி கொண்டார். (இந்திராவும் சிறீமாவும் உருசிய ஆதரவாளர்கள்.)

அப்போது தலைமறைவாயிருந்த ரோகன விசய வீர மீண்டும் அந்த இயக்கத்தை வளர்த்தெடுத்தார். இப்போது அவ்வியக்கம் தீவிர தமிழர் எதிர்ப்பைக் காட்டவில்லை. தமிழர்களின் உரிமைகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையைப் பெற்றுவிட்டது போலத் தோன்றியது. முன் போலவே அரசுக்கு அச்சந்தரும் அளவுக்கு விரைந்த வளர்ச்சி பெற்று வந்தது. இந்த நிலையில் ஈழத் தமிழர்களையும் மக்கள் விடுதலை இயக்கத்தையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள இயலாமல் தான் அப்போது இந்திய அமைதிப் படையை உள்ளே விட்டதாக அப்போதிருந்த இலங்கை குடியரசுத் தலைவர் செயவர்த்தன பின்னாளில் தெரிவித்தார்.

இந்திய அமைதிப்படை இலங்கையினுள் இருக்கும் போதே மக்கள் விடுதலை இயக்கத்தை அழிக்கும் இலங்கையரசின் செயல்திட்டம் நிறைவேறியது. படைத்துறை, காவல்துறை, ஆளும்கட்சி அமைத்த குண்டர் படை ஆகியவை ஒன்று சேர்ந்து மக்கள் விடுதலை இயக்க இளைஞர்களை பல்லாயிரக் கணக்கில் வெட்டி வீழ்த்தினர். சாலைகள், தோப்புகள், காடுகள் என்று எங்கெங்கும் பிணக்குவியல். தலைவர் ரோகன விசய வீரவும் கொல்லப்பட்டார்.

படைத்துறையினரும் காவல்துறையினரும் இப்படிக் கொடுமையாக நடந்து கொண்டதற்குக் காரணமும் கூறப்படுகிறது. மக்கள் விடுதலை இயக்கத்தினர் தங்களைப் பிடிக்கும் காவல்துறையினர் மற்றும் படைத்துறையினரின் குடும்ப உறுப்பினர்களைக் கொன்று பழிதீர்த்துக் கொள்ளும் உத்தியைக் கையாண்டது தான் அந்தக் காரணம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு இந்த இரு கட்டங்களிலும் ஒன்றரை இலக்கம் சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்களாம்.

தொடக்கத்திலிருந்தே ஈழச் சிக்கலில் இந்தியா தலையிடுவதைச் சில சிங்களத் தலைவர்கள் கடுமையாக எதிர்தனர். அவர்களில் அப்போதைய தலைமை அமைச்சரான பிரேமதாச முதலிடம் பெறுகிறார். இதை அவர் செயவர்த்தனவுக்கு எதிரான தன் அரசியல் நலன்களுக்காகவும் பயன்படுத்தினார். இந்தியப் படை இலங்கையிலிருப்பது இலங்கையின் இறைமைக்கே அச்சுறுத்தல் என்ற அவரது கருத்துக்குச் சிங்களரிடையில் செல்வாக்கிருந்தது. இந்தச் செல்வாக்கால் அவர் அடுத்த குடியரசுத் தலைவரானார்.

இப்போது இந்திய அமைதிப் படையைத் திருப்பி அனுப்பும் வேலையை அவர் தொடங்கினார். இந்த அடிப்படையில் அவர் விடுதலைப் புலிகளுடன் இணக்கம் ஏற்படுத்தினார். இருவரும் சேர்ந்து இந்தியப் படை வெளியேறக் குரல் கொடுத்தனர். இந்தியாவுக்குள்ளும் கண்டனக் குரல்கள் எழுந்தன. அமைதிப்படைத் தளபதிகள் கூடக் குறை கூறினர். வேறு வழியில்லாமல் இந்தியப் படையைப் பெரும் எதிர்பார்ப்புகளுடன் அனுப்பிய இராசீவ் காந்தி அதைத் திரும்பப் பெற ஒப்புக் கொண்டார்.

அதற்குள் இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. எனவே திட்டமிட்டதற்கு முன்பாகவே அமைதிப்படை விலக்கிக் கொள்ளப்பட்டது.

வியத்தாகிலிருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கிய போது வியட்நாமியப் யோராளிகள் தாக்குவார்கள் என்ற அச்சத்தால் வானூர்திகளில் ஏறுவதற்கு அமெரிக்க வீரர்கள் முண்டியடித்த நெரிசலில் கணிசமான எண்ணிக்கையில் உயிரிழந்தனர் அதுபோல இங்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காக அப்போது இந்தியத் தலைமையமைச்சராயிருந்த வி.பி.சிங் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி வழியாக பிரபாகரனுடன் தெடர்பு கொண்டு மானத்தோடு “இந்திய அமைதிகாப்புப் படையைத்” திரும்பப் பெற்றார். இதற்குள் கொழும்பிலிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கமும் தமிழ் மக்கள் விடுதலை அமைப்பின் (பிளாட்டின்) தலைவர் முகுந்தனும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்.

இப்போது ஈழம் விடுதலைப் புலிகளின் முழுக்கட்டுப்பாட்டிலிருந்தது. இலங்கைப் படையினர் "அமைதிப்படை" இருந்த போது இருந்தது போல் தங்களது பாசறைகளுக்குள்ளேயே இருந்தனர். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் பேச்சுகள் நடந்து கொண்டிருந்தன.

இலங்கைப் படைகள் தங்கள் பாசறைகளை விட்டு வெளியில் நடமாடத் தொடங்கின. புலிகள் எதிர்ப்புக் காட்டினர். சிறிது சிறிதாக மோதல்கள் உருவாகித் திடீரென்று ஒரு நாள் புலிகள் வடகிழக்கு மாகாணத்தின் சிங்களர் பகுதி மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து மீண்டும் உள்நாட்டுப் போர் தொடங்கியது.

இந்திய அமைதிப்படை ஈழத்திலிருந்த போது விடுதலைப் புலிகளுடன் மோதல் நடை பெற்றுக் கொண்டிருந்த போதே ‘தற்காலிகமாக இணைக்கப்பட்ட’ "தமிழ் மாநி"லத் "தேர்தல்" நடைபெற்றது. புலிகள் புறக்கணித்த இந்தத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி வெற்றி பெற்று அதன் சார்பில் வரதராசப் பெருமாள் என்பவர் முதலமைச்சராகப் பதவியேற்றார். அவரையும் அவரது அரசையும் விடுதலைப் புலிகளிடமிருந்து காப்பாற்றுவதே இந்திய அமைதிப் படைக்குப் பெரும் வேலையாயிருந்தது. அமைதிப்படை வெளியேறிய கையோடு வரதராசப் பெருமாளையும் இந்தியாவுக்குக் கொண்டு வந்து ‘பாதுகாப்பு நோக்கங்களுக்காக’ பூனை தன் குட்டிகளை இடம் மாற்றுவதைப் போல் வெவ்வேறிடங்களுக்கு இந்திய ஆட்சியாளர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகள், இலங்கைப் படை ஆகியோரின் மோதல் தொடங்கியவுடன் இலங்கைப் படைக்கு ஒத்துழைப்பது குறித்துக் கலந்தாய்வு செய்வதற்காக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனித் தலைவர் பத்மநாப தில்லியிலிருந்து சென்னை வந்தார். ஆனால் அங்கே அவர் தன் கூட்டாளிகளுடன் சுட்டுக் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் தான் அவரைக் கொன்றனர் என்று கூறப்படுகிறது. அவர் இயக்கத்தின் ஒரு குழுவைச் சேர்ந்த டக்ளர் தேவானந்த என்பவர் தான் அவரைக் கொன்றார் என்றும் கூறப்படுகிறது. இன்று இந்த தேவானந்தவின் கட்சியினர் சிங்களப் படையினருடன் இணைந்து நின்று ஈழப் புலிகளின் மறைவிடங்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் நாள் இந்தியத் தேசியப் பேரவைக்கட்சியின் தலைவரும் (ஓரிரண்டு கால இடைவெளிகள் நீங்கலாக) நாற்பதாண்டுகளாகத் தொடாந்து இந்தியாவை ஆண்ட நேரு குடும்பத்தைச் சேர்ந்தவரும் இந்தியத் தலைமை அமைச்சராயிருந்த போது இந்திய-இலங்கை உடன்பாட்டை உருவாக்கி அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பியவரும் தெற்காசிய மண்டலத்தில் வளர்ந்துவரும் தேசிய விடுதலை இயக்கங்களை ஒடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு தெற்காசிய ஒத்துழைப்பு அமைப்பை (சார்க்) உருவாக்கிய இருபதாம் நூற்றாண்டின் ஆசிய மெட்டர்னிக்குமான[6] இராசீவ் காந்தி தமிழகத்திலுள்ள திருப்பெரும்புதூர் எனும் இடத்தில் ஒரு மனிதக்குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகளே இக்கொலைக்குக் காரணமானவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இராசீவின் தாயாரான இந்திராகாந்தியின் கொலையைப் போலவே விடை கிடைக்காத பல கேள்விகள் இக்கொலையிலும் உள்ளன. மூடப்பட்ட நயமன்றத்திலுள் நடக்கவிருக்கும் உசாவலில் இந்தக் கேள்விகளுக்கு விடை வருமா என்பதை இப்போது கூற முடியாது.

இந்தக் கொலைகளைக் காரணம் காட்டித் தமிழக மக்களுக்கு ஈழப் புலிகள் மீது சிறிது சிறிதாக வெறுப்பூட்டப்ட்டது. இருப்பினும் அதையும் மீறி தமிழக மக்களுக்கு ஈழ மக்கள் மீது பரிவு அடிமனத்தில் இருந்தே வருகிறது.

மேலே கூறிய செய்திகள் எல்லாம் பெரும்பாலோர் அறிந்தவையே. அறியாதவை இந்த நிகழ்ச்சிகளின் அடியில் புதைத்து கிடக்கும் வகுப்புகளிடையிலுள்ள முரண்பாடுகளும் அவை எவ்வெவ்வகையில் செயலாற்றித் தங்களை வெளிப்படுத்திக் கொண்டன என்பதுமாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தவிர பிற இயக்கங்கள் அனைத்திலும் தலைமை தாங்கியோர் யாழ்ப்பானத்துச் சிவனிய வேளாளர்களே. இது இயற்கையானதே என்று நாம் முன்பே கூறியுள்ளோம். ஈழத் தமிழரில் அதிகக் கல்வி வாய்ப்புப் பெற்று உயர் பதவிகளிலும் வாழ்ந்து வந்த இவர்களுக்கெதிராகத் தான் முதன்முதலில் தேசிய ஒடுக்குமுறை செலுத்தப்பட்டது. அதாவது அவர்கள் தான் அதை உணர்ந்து ஒன்று திரண்டு போரிடும் நிலையிலிருந்தார்கள். திரிகோணமலை மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களின் மூலம் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்ட போது அதற்கு எதிர்க்குரல் எழுப்பி அதனை அரசியலாக்கும் பொருளியல், பண்பாட்டியல் பின்னணி இழப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கு இல்லை. எனவே இவ்வொட்டுண்ணிகள் தான் தேசிய ஒடுக்குமுறைக்கெதிராக முதன்முதலில் குரல் கொடுத்தார்கள். அந்த ஒடுக்குமுறை முயற்சி ஒரு திட்டவட்டமான வடிவத்தில் தரப்படுத்தலாக வெளிப்பட்ட போது அவர்கள் ஆயுதந்தாங்கிய போராட்டத்தில் இறங்கினார்கள். போர் ஒரு கட்டத்தை அடைந்தது. படித்தவர்களில் மிகப் பெரும்பாலோர் வெளிநாடுகளில் சென்று வேலை தேடிக் கொண்டனர். தம் மக்களை அயல்நாடுகளுக்கனுப்பிப் படிக்க வைத்தனர். இனி இந்த நாடு தமக்கு உதவாது என்று உலகில் எந்த மூலையிலாவது ஓடி இடம் பிடித்து அமர்ந்து கொண்டனர். அங்கிருந்தவாறு இதுவரை தம்மால் இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பிற நாட்டுத் தமிழர்களோடு இணைந்து பண்பாட்டு இயக்கங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த வேரற்ற ஒட்டுண்ணிகள். இந்தப் பண்பாட்டு இயக்கங்களின் நோக்கம் என்னவென்றால் புதிய இடத்தில் தம் நலன்களுக்கு அழிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்பது தான்.

அப்படி ஓட முடியாதவர்கள் ஏதாவது அமைதித் தீர்வு ஏற்பட்டு விட்டால் கிடைக்கும் ஒட்டுண்ணி வாழ்க்கையே போதுமென்று எண்ணுபவர்கள் தான். எதிரிப் படைகளுடன் சேர்ந்து காட்டிக் கொடுப்போரோ சிங்களம் படித்துச் சிங்களராகவே மாறத் துணிந்துவிட்ட புல்லுருவிகளே. பத்மநாப, தேவானந்த எனும் அவர்களின் பெயர்கள் விகுதியின்றி சிங்களர் பெயர் போன்ற வடிவத்தை ஒரு தலைமுறைக்கு முன்பே பெற்றுவிட்டதைக் காணலாம்.

இப்படி எந்த மாற்றுப் பாதையும் நாடாமல் எதிரியை எதிர்த்து நின்று விடுதலைப் புலிகளுடன் இணைந்து நின்று போராடுவோர் இரு பிரிவினரே. ஈழக் கடற்கரையில் இருந்து கடல் தரும் உணவை நம்பி வாழும் மீனவரும் உள்நாட்டில் உழுது பயிருட்டு உணவு தரும் உழவர்களுமே. இவர்களில் தப்பினோம் என்று கருதி எதிலிகளாக இந்தியா வந்துவிட்டவர்களோ இங்கு தாம் வாழும் அவலமும் இழியும் மிக்க வாழ்வை விடத் தம் பிறந்த மண்ணில் நின்று எதிரியுடன் போரிட்டு மானமுடன் மடிந்திருக்கலாமேயென்று ஏங்குகின்றனர்.[7]

இவ்வாறு இந்த இருபிரிவு மக்களும் மட்டும் நிலைத்து நிற்கக் காரணம் என்ன?

இலங்கையரசு தாய்மொழிவழிக் கல்வியையயும் வேலைவாய்ப்பையும் மட்டும் தமிழர்களிடமிருந்து பறிக்கப் பார்க்கவில்லை. சிங்களர்களின் குடியிருப்புகளை ஏற்படுத்தி தமிழர்களின் மண்ணையும் பறித்து வருகிறது. எனவே அந்த மண்ணைக் காப்பதற்காக அம்மக்கள் அம்மண்ணில் நிலைத்து நின்று இடைவிடாத விடுதலைப் போரை நடத்தி வருகிறார்கள். மண்ணில் வேர் ஊன்றாத ஒட்டுண்ணிகள் ஓடி விட்டாலும் எதிரியோடு சேர்ந்து கொண்டாலும் தாங்கள் ஒரு போதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று உறுதியாயிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல காலமாக வரலாற்றில் அரிதாகவே கிடைக்கத் தக்க ஒரு தலைமை அமைந்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் தலைமை, அது பிரபாகரனாயிருந்தாலும் சரி, அவருடைய கருத்துரைஞர்கள் துணைவர்களுடன் சேர்ந்ததாயிருந்தாலும் சரி சரியான சூழ்நிலைக்குச் சரியான முடிவுகளை எடுத்துச் செயற்பட்டு வெற்றிகளையும் எய்தி வருகிறது. தங்களை நேராகத் தாக்காத எந்தக் கேள்விக்கும் விடை கூற அவர்கள் முற்பட்டதில்லை. படைகொண்டு தாக்கிய இலங்கை அரசுக்கு அதன் மொழியிலேயே மறுமொழி கூறி வெறும் போரிடும் இயக்கமாகத் தோன்றிய அது ஈழத்தின் ஒரு பகுதி தன் முழுக்கட்டுப்பட்டினுள் வந்த போது ஏற்பட்ட சட்டம், பொருளியல், தொழில் நுட்பம் போன்ற பொருளியல், பண்பாட்டுச் சிக்கல்களுக்கு மிகப் புரட்சிகரமான தீர்வுகளை எடுத்து வருகிறது. வெளி உதவிகள் பல வகைகளிலும் குறையக் குறையச் சிறிது சிறிதாகத் தன் சொந்த வளங்களைக் கொண்டே அது தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அது தன் குறிக்கோளில் வெற்றி பெறப்போவது உறுதி. அப்போது அது ஏழை நாடுகளுக்கு ஒரு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்கப் போகிறது.

பிரபாகரன் மாற்றியக்கத் தலைவர்களையும் தன் இயக்கத்திலுள்ள சில தலைவர்களையும் கொன்றது சுட்டிக்காட்டப்படுகிறது. பொதுவாகத் தலைவர்களுக்குள் முரண்பாடுகள் ஏற்படும் போது அது தனிப்பட்ட முறையில் உண்டான முரண்பாடா அல்லது கொள்கையடிப்படையில் அமைந்த முரண்பாடா என்பதை இனங்காணுவது கடினம். இன்றைய இந்தியாவைப் போல் குறிப்பிட்ட கொள்கை அல்லது கோட்பாடுகள் இன்றி ஆதாயம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு மட்டும் அரசியல் நடைபெறும் போது இது தனிப்பட்டவர்களின் போட்டி ஒன்றையே அடிப்படையாகக் கொண்டதாக அமைகிறது. ஆனால் காந்திக்கும் போசுக்கும் ஏற்பட்ட முரண்பாடு திட்டவட்டமான கொள்கையினடிப்படையில் உருவானது. அவ்வாறே லெனினுக்கும் திராட்கிக்கும் உருவான முரண்பாடும். புத்தர், முகம்மது நபி போன்றோருக்கும் அவரவர் காலத்திலேயே போட்டிகள் உருவாகி அவர்கள் அவற்றை அடக்கி ஆதிக்கம் பெற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களின் தலைமைக் காய்ச்சல் எவ்வளவு இருந்தது கொள்கைப் பற்று எவ்வளவு இருந்தது என்பதை அறிவது கடினம். இரண்டும் ஒன்றையொன்று ஊடுருவி நிற்கின்றன. தன் கொள்கையைக் காப்பாற்றுவது ஒரு புறம். இன்னொரு பக்கம் தான் ஒரு தலைவனை வீழ்த்த வேண்டும் என்று கருதும் போது ஒரு கொள்கைச் சிக்கலைக் காரணமாகக் காட்டி அத்தலைவனை வீழ்த்தி தான் ஆதிக்கம் பெறுவது மற்றொன்று. இந்த வகையில் ஆதிக்கம் பெற்ற பின் தன் கொள்கையைக் கைவிட்டுக் காட்டிக் கொடுக்கவும் செய்யலாம். அல்லது தான் தன் நலன் கருதி ஏறிய புலியை விட்டுக் கீழிறங்க முடியாமல் குறிக்கோளை நோக்கிச் செல்லக்கூடிய கட்டாயத்துக்கும் ஆளாகலாம். இத்தகைய இயங்கியல் உறவில் தான் கொள்கைகளும் குறிக்கோள்களும் தலைவர்களும் தொண்டர்களும் மக்கள் திரளினரும் இயங்குகின்றனர். இப்படிச் சிக்கலான, தூய்மையானதென்று குறிப்பிட முடியாத வகையில் தான் மனித இனம் முன்னேறிச் செல்கிறது.

இந்த வெளிச்சத்தில் பார்க்கும் போது பிரபாகரனின் தலைமைப் போராட்டத்தில் எங்கே எவ்வளவு கொள்கைப் போராட்டம் இருக்கிறது எவ்வளவு தனிமனிதப் போராட்டம் இருக்கிறது என்பதை அறுதியிட்டுக் கூறுவது கடினம். கொள்கையின் வெற்றி தனிமனிதனாகிய தலைவனின் வெற்றியைச் சார்ந்தே இருக்கிறது என்கிற அதே வேளையில் அப்போதைய குமுகத்தின் மனநிலையைப் பொறுத்தும் இருக்கிறது. ஆனால் அந்த மனநிலையை உருவாக்குவதிலும் தலைவனின் பங்கு உண்டு. சூழ்நிலைகள் என்ற புறநிலைகளுக்கிசைய மக்களின் அகநிலையைப் பக்குவப்படுத்துவதும் தலைவனின் திறமையைப் பொறுத்ததே. இவ்வாறு தலைமை, புற, அகச்சூழ்நிலைகள் என்ற இயங்கியல் எதிரிணைகளின் வினைப்பாடே வெற்றிக்கு இட்டுச் செல்கிறது.

ஈழப் புலிகள் தலைமையின் சிறப்பு என்ன வென்றால் அது எதிரியின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனித்து அதற்கு எதிர் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வது தான். பேச்சுக்களையோ வாக்குறுதிகளையோ போலியான மனிதநேயக் கோட்பாடுகளையோ அது நம்பாதது தான். வெற்றி என்பதைத் தவிர வேறெந்தக் கோட்பாட்டையும் பின்பற்றாத ஆங்கிலேயரிடம் ஊமைத்துரை காட்டிய தவறான “மனிதநேயம்” விடுதலைப் போராளிகளுக்குக் கேடு விளைவிப்பது என்பதை ஈழப் புலிகள் தம் வெற்றியால் நமக்கு விளக்குகின்றனர். தன்னை எப்போதும் காட்டிக் கொடுக்க ஆயத்தமாயிருந்த எட்டப்பனை விட்டு வைத்திருந்த கட்டபொம்மனின் தயக்கம் விடுதலைப் புலிகளுக்கு இல்லை.

ஈழத்தில் வாழும் முகம்மதியர்களின் உள்ளூர் தலைவர்கள் சிங்களர்களால் தம் நிலங்கள் பறிக்கப்படுவதைக் கண்டு ஈழ விடுதலைப் போரில் தாய் மதத்துத் தமிழர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் உயர்மட்ட ஒட்டுண்ணித் தலைவர்கள் முகம்மதியர்கள் தனித் தேசிய இனம் என்று சிங்களப் பகுதியில் வாழ்கின்றவரோடு சேர்ந்து இலங்கை முகம்மதியப் பேரவைக் கட்சியை உருவாக்கினர். இலங்கை அரசு அமைச்சரவையில் இந்த ஒட்டுண்ணிகளுக்கு நிறையப் பதவிகளும் அளித்து ஊக்கம் கொடுத்தது. இதனால் வட மாகாணமும் வடகிழக்கு மாகாணமும் இணைவதைச் சிங்களவருடன் சேர்ந்து முகம்மதியர்கள் எதிர்க்கின்றனர். அதனாலேயே விடுதலைப் புலிகள் சிங்களவரோடு சேர்த்து முகம்மதியர்களையும் ஈழத்தை விட்டு விரட்டும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். முகம்மதியர்கள் தனித் தேசியம் என்பதற்கு கன்ணெய்யக் காசு[8] பொங்கி வழியும் அரபு நாடுகளின் தூண்டுதலும் இவ்வொட்டுண்ணிகளுக்கு உண்டு.

ஈழ விடுதலைப் போரின் ஒரு முகாமையான கூறு அங்குள்ள பெரும்பான்மைத் தேசியத்தின் முரட்டுத்தனமாகும். அது தன் ஒடுக்குமுறையை எவ்விதமான மறைமுக உத்திகளையும் கையாண்டு செயற்படுத்தவில்லை. மாறாக தனக்குள்ள எண்ணிக்கை வலிமையின் அடிப்படையில் நேரடியாகவும் முரட்டுத்தனமாகவும் செயற்படுத்துகிறது. தேர்தல் மூலம் பெரும்பான்மையரான சிங்களர் அந்த வலிமையால் படைத் துறையையும் காவல்துறையையும் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதால் இந்த நேரடித் தாக்குதல் இயல்வதாயிற்று. இந்தச் சூழல் ஈழத் தேசிய விசைகளின் பணியை எளிதாக்கிற்று. ஆளும் அரசு ஈழ மக்களுக்கு எதிரானது என்பதையோ தம் மீது ஒரு தேசிய ஒடுக்குமுறை நிகழ்த்தப்படுகிறது என்பதையோ சுட்டிக்காட்டுவதற்கு ஈழத் தேசிய இயக்கம் தனியாக ஆற்றல் எதையும் செலவழிக்கத் தேவையில்லை. தேவைப்பட்டதெல்லாம் தங்களை விட எண்ணிக்கையிலும் பொருளியல் பின்னணியிலும் கருவிகளின் நுண்மைணிலும் அளவிலும் மேம்பட்ட ஒரு எதிரியைத் தடுத்தும் தாக்கியும் வெற்றி பெறுவது மட்டுமே. அப்பணியை ஈழப் புலிகள் வெற்றியுடன் நிறைவேற்றி வருகின்றனர்.

ஈழச் சிக்கல் தொடக்கத்திலிருந்தே இலங்கை அரசும் சிங்களர்களும் எடுத்த ஆயுதந்தாங்கிய அடக்குமுறையிலிருந்து எழுந்ததால் எங்குமே போட்டிகளைக் கொலைகளைக் கொண்டு முடிக்கும் நிலை தவிர்க்க முடியாமல் உருவாகிவிட்டது. அந்தச் சூழ்நிலையில் முதுகுக்குப் பின்னாலிருக்கும் வாளான எட்டப்பன்களைக் கட்டபொம்மன் செய்யத் தவறியது போல் களையாமல் இருக்கவில்லை என்று பிரபாகரனைக் குறை சொல்வோர் ஈழப் போராட்டத்தை வெற்றியுற நடத்திச் செல்கிறாரே அவர் என்ற வெறுப்பாலேயே அவ்வாறு கூறுகின்றனர் என்று தள்ளத்தக்கவரே.

இவ்வாறு ஈழ விடுதலைப் போர் ஒரு பெரும் உண்மையைச் சுட்டிக் காட்டுகிறது. எந்தத் தேசியத்திலும் தேசியச் சிக்கல் முதன்முதலில் அத்தேசியத்திலுள்ள மக்களின் மிக மேல்தட்டிலிருக்கும் ஒட்டுண்ணிகளால் தான் தொடங்கி வைக்கப்படுகிறது. ஆனால் தொடர்ந்து அதன் உண்மையான இலக்கை நோக்கிப்போவது அதற்கு அமையும் சரியான தலைமையில் அணிதிரளும் அம்மண்ணில் வேர்கொண்டு நிற்கும் உழவர்களும் உழைப்பாளி மக்களும் தான். அவர்களே லெனின் கூறிய முரண்பாடற்ற புரட்சிகர வகுப்பு.

தமிழகத்தில் திராவிடர் இயக்கம் பொருளியல் சாரத்தைக் கைவிட்ட போது அதற்குச் சரியான எதிர்ப்பு எதுவும் உருவாகாததற்குக் காரணம் அதுவரை அதன் பக்கமிருந்த வலுவான பொருளியல் நலன்கள் இந்தியப் பொருளியல் அழுத்தத்தின் முன் வீழ்ந்து விட்டதும் புதிய பொருளியல் விசைகள் வலுவான முறையில் உருவாததும் ஆகும். அத்துடன் மண்ணை அடிப்படையாகக் கொண்ட கோட்பாட்டுடன் சரியான தலைமை எதுவும் உருவாகாததும் அதைவிட முகாமையான காணமாகும். புதிய பொருளியல் முனைவுகளைக் கருவறுப்பதற்கென்றே ஏழை நாடுகளில் களமமைத்துள்ள "புரட்சியாளர்களை"யும் நாம் இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நாம் முன்பு கூறிய திருவிதாங்கூர் தமிழ்நாடு பேரவைக் கட்சி முதலில் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களும் தமிழகத்துடன் இணைய வேண்டுமென்றே போராட்ட காலத்தில் கேட்டு வந்தது. ஆனால் இறுதிக்கட்ட பேரத்தில் தேவிகுளம்- பீர்மேட்டைக் கைவிட இசைந்து விட்டனர். அது ஏன்? இப்போராட்டத்தின் தலைமை சி.பி.இராசாமி ஐயரால் அளிக்கப்பட்ட கட்டாயக் கல்வியால் பயன்பெற்று ஒட்டுண்ணி வேலைவாய்ப்பை நாடிநின்றவர்களின் தலைமையாகவே இருந்தது. தேவிகுளம்-பீர்மேடோ அந்தக் கல்வியைப் பெறாத பகுதி; இன்று கேரள அரசுக்குப் பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் மலைபடுபொருட்களை வழங்கும் வளமிக்க மேற்குமலைத் தொடர்ப் பகுதி. எனவே மண்ணில் வேரில்லாத ஒட்டுண்ணிகளுக்கு மண்ணோடு இயைந்து வாழும் அந்த மக்களின நலன் பெரிதாயிருக்கவில்லை.

எனவே எந்த ஒரு தேசியத்துக்கும் உண்மையான பற்றுள்ள மக்கள் அதன் மண்ணில் வேர்கொண்டு நிற்கும் உழவர்களும் பிற உழைக்கும் மக்களுமே.[9] இந்த உழைக்கும் மக்களைச் சார்ந்து நிற்கும் போது தான் அந்தத் தேசியம் தன் இறுதி வெற்றியை எய்த முடியும். அதே நேரத்தில் எந்தத் தேசிய இயக்கமும் அதன் மேல் தட்டு ஒட்டுண்ணி வகுப்பால் தான் தட்டியெழுப்பப்படுகிறது என்பதையும் தன் சொந்த நலனுக்காக அத்தேசியத்தின் எதிரிகளுடன் தனக்குள்ள முரண்பாட்டைத் தீர்த்துக் கொள்வதற்காக அது இதனைச் செய்கிறது என்பதையும் இதிலும் இயங்கியல் செயற்படுகிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

ஈழ விடுதலைப் போர் காட்டும் தேசியச் சிக்கலிலுள்ள இன்னொரு உண்மையையும் நாம் கண்டு கொள்ள வேண்டும். தேசிய எதிரி அத்தேசியச் சிக்கலை எவ்வாறு கையாள்கிறான் என்பதைப் பொறுத்தும் தேசிய இயக்கத்தின் வெற்றி தோல்விகள் அமைகின்றன. இங்கே சிங்கள எதிரி மறைமுகமான எந்த வழியையும் கடைப்பிடிக்காமல் நேரடியாக ஆயுதங்கொண்டு தாக்கத் தொடங்கியதால் ஈழத் தமிழ் இளைஞர்கள் ஆயுதந்தாங்குவது தவிர்க்க முடியாமல் போனது மட்டுமல்ல அவர்களை ஆதரிப்பதும் அவர்களுக்குப் பின்புலமாக இருப்பதும் அம்மக்களுக்கு தவிர்க்க முடியாததாயிற்று. அவ்வாறு ஆயுதத்துடன் வராமல் மறைமுகமான வழிகளில் ஒடுக்கும் எதிரியை எதிர்க்க அதற்கேற்ற உத்திகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஈழ விடுதலைப் போர் தரும் முகாமையான பாடமாகும்.

அடிக்குறிப்புகள்:

[1] Chamber's Twentieth Century Dictionary,1972 இந்தச் செய்தியைச் சுட்டிக் காட்டியவர் பேரா.இரா.மதிவாணன் அவர்கள்.

[2] கண்ணாடியையும் வெடிமருந்தையும் சீனர்கள் தான் முதன்முதலில் கண்டுபிடித்தார்கள் என்ற கருத்தை மறுப்பதாக இது உள்ளது. ஒருவேளை மூக்குக் கண்ணாடியையும். வானவேடிக்கை வகைகளையும் அவர்கள் கண்டுபிடித்திருக்கலாம்.

[3] மணிபல்லவம் என்பது ஈழத்தைச் சுற்றியுள்ள தீவுக்கூட்டகளிலொன்று. இன்று இரத்தினத்தீவு என்று அழைக்கப்படுகிறது. மேலும் மணிமேகலைக்கும் இலங்கைக் கயவாகு மன்னனுக்கும் தொடர்பு ஏற்பட்டது இங்கு தான். பெண்கள் கடல் மீது செல்லக் கூடாது என்ற இலக்கியத் தடை இருந்ததால் அவளை மணிமேகலா தெய்வம் தூக்கிச் சென்றதாகச் சாத்தனார் கூறுகிறார். சோழநாட்டில் கொடும் பஞ்சம் ஏற்பட்ட போது மணிபல்லவத்திலிருந்து பெறப்பட்ட “அமுத சுரபி”யிலிருந்து தான் மணிமேகலை மக்களுக்கு உணவளித்து அவர்களது ஆதரவைப் பெற்றாள். இவ்வமுதசுரபி இலங்கை மன்னனளித்த உதவியேன்றி வேறல்ல. தமிழகத்துப் பஞ்சத்துக்கு உதவும் அளவில் இலங்கையில் உணவு விளைந்ததா என ஐயுறுவோர் “ஈழத்துணவும் காழகத்தாக்கமும்” என்ற கழகப் பாடல் வரியை நினைவு கூர்க.

[4] Castes and Tribes of Southern India.

[5] தமிழகத்திலுள்ள சில தாளிகைகள் (பத்திரிகைகள்) அனைத்து ஈழ விடுதலை அமைப்புகளையும் வேறுபாடின்றி அண்மைக் காலம் வரை “விடுதலைப் புலிகள்” என்றே குறிப்பிட்டன.

[6] மெட்டர்னிக் என்பவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆத்திரிய நாட்டுத் தலைமையமைச்சர். அப்போது ஐரோப்பாவில் கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்த தேசிய விடுதலை இயக்கங்களை ஒடுக்குவதற்கென்று ஒரு திட்டத்தை மேற்கு ஐரோப்பிய நாட்டு ஆட்சியாளர்களின் ஆதரவுடன் உருவாக்கியவர். மேற்குப் பேலியா உடன்படிக்கை எனப்படும் இத்திட்டம் உறுப்பு நாடுகளுக்கிடையிலிருந்த முரண்பாடுகளினால் செயற்படவில்லை. பின்னர் உள்நாட்டில் எழுந்த கொந்தளிப்புகளால் கடைந்தெடுத்த பிற்போக்கினரான மெட்டர்னிக் நாட்டை விட்டோடினார். மேற்கு பேலியா ஒப்பந்தமும் சார்க் உடன்படிக்கையும் அடிப்படையில் ஒரே தன்மையுடையன.

[7] ஈழ விடுதலைப் போரில் ஈடுபட்டு உண்மையாகப் பாடுபடுவோர் அனைவரும் இவ்விரு வகுப்புகளை மட்டும் சேர்ந்தவர்களென்றோ இவ்விரு வகுப்புகளையும் சேர்ந்த அனைவரும் இப்போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என்றோ இதற்குப் பொருளில்லை. இதில் அனைத்து வகுப்புகளிலுள்ள புரட்சிகர ஆற்றல்களும் ஈடுபட்டுள்ளன. அவ்வாறில்லாதவை அதைப் புறக்கணிக்கவோ எதிர்க்கவோ. செய்கின்றன. தலைமைக்கும் கூட இது பொருந்தும். ஆனால் மேலாதிக்கம் செய்யும் கோட்பாடு இவ்விரு வகுப்பாரின் நலன்களைப் பேணுவதாயிருக்கிறது.

[8] பெட்ரோலியக் காசு

[9] இந்த உழவர் உழைப்பாளி மக்கள் வல்லரசியத்தின் நேரடி அல்லது நிறுவன ஆதிக்கத்தினுள் வராத நிலக்கிழமை சார்ந்த மரபு வேளாண்மை. மரபுத் தொழில்களில் ஈடுபட்டோரே. பெருந்தொழில் அல்லது அரசுத்தொழில் உழைப்பாளிகளை இது குறிக்காது. இந்த பெருந்தொழில் உழைப்பாளிகள் வல்லரசியத்தின் பணியாட்களாகவே செயற்படுகின்றனர்.

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 21. தமிழ்த் தேசியம்

தேசிய உணர்வென்பது இயற்கையானது. தேசியம் நிலத்தின் எல்லை அடிப்படையில் அமைவது. விலங்குகளும் தாம் வாழும் இடங்களுக்கு எல்லை வகுத்துள்ளன. காட்டில் வாழும் மான்களில் சில வகைகள் தாம் வாழும் எல்லைகளை அடையாளம் இட்டுப் பேணுகின்றன என உயிர் நூலார் கூறுகின்றனர். நம்மூர் நாய்களும் இத்தகைய வாழ்வெல்லைகளை வகுத்துள்ளன. ஒரு நாயின் எல்லையினுள் புதிதாக ஒரு நாய் நுழைந்து விட்டால் அந்த எல்லைக்குரிய நாய் உடனே அதனைத் துரத்துவதற்கு முயலும். அண்டை நாய்களும் சேர்ந்து அதனை கடித்துத் துரத்திவிடும்.

இது போன்றே மனிதக் குழுக்களும் எல்லைகளை வகுத்துப் பேணுவதில் கருத்தாக இருந்து வந்துள்ளன. தட்ப வெப்ப நிலை மாற்றங்கள், வெள்ளங்கள், உணவு மூலங்கள் தீர்ந்து போதல், மக்கட் பெருக்கத்தால் புதிய இடங்களைத் தேடுதல், போர்கள் மூலம் மக்களை வெளியேற்றல் அல்லது கைப்பற்றிய இடங்களில் குடியேறுதல் என்று இவ்வாறு எண்ணற்ற காரணங்களால் நிகழும் இடைவிடா இடப்பெயர்ச்சிகளின் ஊடாக எல்லைகளைப் பேணுதலும் நடைபெற்று வந்துள்ளது.

மனிதர்கள் ஒரிடத்தில் இறுதித் திரிவாக்கம் பெற்றுப் பரவினர் என்று கருதப்படுகிறது. எனவே அவர்களது மொழிகளில் பல அடிப்படைச் சொற்களில் ஒற்றுமை காணப்படுகிறது. அவர்கள் பல்கிப் பெருகி உலகமெல்லாம் பரவிய போது ஆங்காங்கேயுள்ள பருப்பொருட் சூழல்கள் மற்றும் வாய்ப்புகளுக் கேற்ப அவர்களது பண்பாடுகளும் மொழிகளும் வளர்ச்சியடைந்தன.

அருகருகே வாழ்ந்த மக்கள் உணவு தேடித் தத்தம் எல்லைகளை மீறிய போது சண்டைகள் நிகழ்ந்தன. வளமில்லாப் பகுதியில் இருந்து கூட்டமாக வளமிக்க பரப்புகளில் புகுந்து கொள்ளையடித்ததிலிருந்தும் போர்கள் உருவாயின. இப்போர்களிலிருந்து பேரரசுகள் உருவாயின. பற்றாக்குறைப் பகுதியிலுள்ளோர் வளமிக்க பகுதிகளிலுள்ள வெவ்வேறு பொருட்களை வாணிகம் மூலம் பண்டமாற்றுச் செய்து உயர்நிலையடைந்த போது அத்தகைய வாணிகக் குழுக்களும் பேரரசுகளை அமைத்தன. இந்தப் பேரரசுகள் தம் மொழிகளைப் பேசும் மக்களையே அடக்கி அவர்கள் நிலத்தின் வளத்தைச் சுரண்டிச் சென்ற போது சுரண்டப்பட்ட மக்களின் தேசிய உணர்ச்சி தங்கள் மொழியைத் தம்மை அடக்கியாள்பவரின் மொழியிலிருந்து மாறுபடுத்தித் தம்மை இனங்கண்டு கொள்ளவும் செய்தது. இதற்கு எடுத்துக்காட்டாக மலையாளம். சிங்களம் ஆகிய தேசியங்களின் வளர்ச்சியைக் கூறலாம். தமிழகத்தின், குறிப்பாகச் சோழப் பேரரசின் ஒடுக்குமுறையிலிருந்தே தமிழின் சேரநாட்டுத் திசைமொழி (Dialect) மலையாளமாக மாற்றப்பட்டது. மலையாளத்துக்கு இன்றைய எழுத்து வடிவத்தைக் கொடுத்த எழுத்தச்சனின் முயற்சி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருந்தாலும் இன்றும் நாட்டுப்புறத்து மலையாளிகளிடம் பழைய கழகக் காலத் தமிழ் அழியாமல் நிற்கிறது.

அதே போன்றே சிறுபான்மையினராயிருந்த சிங்களர் பக்கம் பெரும்பான்மையினரான தமிழர்கள் சோழர்களின் தாக்குதலின் எதிரொலியாக உருவான தேசிய உணர்விலிருந்தே சாய்ந்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. சிங்களர்களின் பெயர்களிலுள்ள பின்னொட்டுகள் இத்தகைய ஓர் ஐயப்பாட்டை எழுப்புகின்றன. இதை முழுமையாக ஆயவேண்டும்.

இந்தியாவிலுள்ள தேசியங்களின் இயல்பை அறிந்து கொள்வதற்கு நாம் சிறிது தொல்பழங்காலத்திலுள் நுழைய வேண்டும்.

கடலில் முழுகிய குமரிக் கண்டம் பற்றி இந்நூலில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளோம். நம் பண்டை இலக்கியங்களில் காணக்கிடைக்கும் குறிப்புகளிலிருந்தும் மக்களிடையில் வழங்கும் மரபுகளிலிருந்தும் இன்றைய குமரிமுனைக்குத் தெற்கே ஒரு பெரும் நிலப்பரப்பு, நாடுகளும் மக்களுமாக இருந்து அடுத்தடுத்து ஏற்பட்ட கடல்கோள்களினால் அழிந்து போனதாக அறிகிறோம். இதற்கு வெளிநாடுகளில் வழங்கும் மரபுச் செய்திகளும் துணைநிற்கின்றன. உயிர்நூலாரில் ஒரு சாராரும் இக்கொள்கையை ஏற்றுக் கொள்கின்றனர். நிலத்தியலார் பெரும் நிலப்பரப்பு கடலில் முழ்கியதை ஒப்புக்கொண்டாலும் கால அளவை வைத்துப் பார்க்கும் போது அப்போது மனிதன் தோன்றியிருக்க முடியாது என்று வாதிடுகின்றனர். ஆனால் இந்தக் கால வேறுபாடு உலகில் பல பகுதிகளுக்கும் பொதுவாகக் காணப்படுகிறது. ஆங்காங்கு அவ்வப்போது நடைபெற்ற பல நிலத்தியல் நிகழ்வுகளை மக்கள் பதிவு செய்து வைத்துள்ளனர் அல்லது மரபுகளில் தேக்கி வைத்துள்ளனர். ஆனால் அந்நிகழ்ச்சிகள் மனிதன் வாழ்ந்த காலத்துக்கு முன்னர் நடைபெற்றவை என்று நிலத்தியலார் கூறிவருகிறார்கள். அப்படியானால் மனிதன் தோன்றிய காலம் சரியாகக் கணக்கிடப்படவில்லை என்பது புலனாகிறது. மனிதன் தோன்றிய காலம் கொஞ்சங் கொஞ்சமாகப் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. சில இலக்கம் ஆண்டுகளாயிருந்து அண்மையில் ஆப்பிரிக்காவில் 2½ கோடி ஆண்டுகளுக்கு முந்திய ஒரு மனித எலும்புக் கூடு கண்டிபிடிக்கப்பட்ட பின்பு மிகப் பின்னோக்கி நகர்ந்துள்ளது. எனவே உலக முழுவதும் நிலவிவரும் மரபுகளின்படி குமரிக் கண்டத்தில் மக்கள் வாழ்ந்தது உண்மை தான் என்பதை ஒரு நாள் நிலத்தியலாளர் ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

முழுகிப் போன குமரிக் கண்ட மக்கள் எந்த நாகரிக நிலையிலிருந்தார்கள் என்ற கேள்வி தானே எழும். இதற்கு விடையிறுப்பதற்கான தடயங்கள் இல்லாமலில்லை. இதற்கு கீழே தரப்படும் குறிப்புகள் உதவும்.

1) தொல்காப்பிய இலக்கண நூல் காட்டும் மொழியியல் மேன்மை, அதன் பொருளிலக்கணத்தின் பின்னணியிலுள்ள மிக முதிர்ந்த வளர்ச்சி நிலை.
2) கந்தருவர்களைப் பற்றி பிறிதோரிடத்தில் கூறியிருப்பவை.
3) எரிக் வான் டெனிக்கானின் நூல்களில் அவர் காட்டியுள்ள பண்டைக்கால அணு ஆற்றல் ஊழி.
4) 64 கலைகளின் பட்டியல் காட்டும் அறிவியல்- தொழில்நுட்ப வளர்ச்சி.

இந்தத் தடயங்களிலிருந்து உலக முழுவதையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட ஒரு பெரும் நாகரிக வளர்ச்சியைக் குமரிக் கண்ட மக்கள் எய்தியிருந்தனர்; உலக முழுவதும் வாணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர்; உலகமெலாம் குடியிருப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்; குமரிக் கண்டம் முழுக முழுக அக்குடியிருப்புகளில் நாகரிக வளர்ச்சி குன்றி வரலாற்றுத் தடங்களை மட்டும் விட்டுவிட்டு அந்நாகரிகங்கள் மறைந்தன என்பவற்றை உணர முடியும்.

குமரிக் கண்டம் முழுக முழுக இந்தியத் தீவக்குறையில் (தீபகற்பத்தில்) கிழக்குக் கடற்கரையோரத்திலும் மேற்குக் கடற்கரையோரத்திலும் குமரிக் கண்ட மக்கள் குடியேறினர். மேற்குக் கரையோரத்தில் குடியேறியமைக்குத் தெளிவான சான்று மணிமேகலையில் உள்ளது. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதையில் இது கூறப்பட்டுள்ளது.

“பிரமதருமன் எனும் முனிவன் காந்தார நாட்டில் பூருவ தேயத்தை ஆண்ட அத்திபதியிடம் அறங்கூற அணுகினான். அப்போது அவன் அத்திபதியை நோக்கி ‘நாக நாட்டின் நானூறு யோசனைப் பரப்பாய நிலம் ஏழு நாளில் நில நடுக்கத்தால் பெரும் பாதலம் புகும்; ஆதலால் மாவும் (விலங்குகள்) மாக்களும் (மனிதர்கள்) உடன் கொண்டு வேற்றிடம் செல்க’ என்று கூறினான். அவனும் அங்ஙனமே புரிந்து வடக்கு நோக்கிப் புறப்பட்டு அவந்தி நாட்டின் காயங்கரை என்னும் ஆற்றின் கரையில் பாசறை அமைத்திருந்தான். பிரமதருமன் கூறியபடியே ஏழாம் நாள் நிலநடுக்கம் உற்று அந்நிலப்பரப்பு பாதாளத்துற்றது”.

அவந்தி நாடென்பது குசராத்துக்கும் மராட்டியத்திற்கும் எல்லையில் உள்ள பகுதியைக் குறிப்பதாகும். அங்கு முன்பு கோக்ரா என்ற ஆறு ஓடிக் கடலில் வீழ்ந்து கொண்டிருந்தது. பின்னர் அது மணலுள் மறைந்து போய்விட்டது. (கங்கையின் கிளையாறுகளில் ஒன்றுக்குக் கோக்ரா என்று பெயர்.) மணிமேகலை காயங்கரை ஆறு என்று குறிப்பிடுவது இந்தக் கோக்ராவைத் தான். கங்கைச் சமவெளியில் மிகப் பின்னாளில் தான் மக்கள் குடியேறினர். கங்கைக் கரையில் மிக அடர்த்தியான காடுகள் இருந்ததே அதற்குக் காரணம். இரும்புக் கோடரி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே அந்த அடர்ந்த காட்டை அழிக்க முடிந்தது. அவ்வாறு பரவிய மக்கள் தான் கங்கையின் கிளையாற்றுக்குக் கோக்ரா என்ற பெயரைச் சூட்டியிருப்பர். அதற்கு முன் சிந்து சமவெளியில் பாலைக்கும் மருதத்துக்கும் இடைப்பட்ட மென்காடுகளிலேயே நாகரிகம் தழைத்தது. அந்த வழியாகப் பரந்த மக்கள் வடமேற்கில் நகர்ந்து இமயமலையில் குடியேறினர். தாம் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த நாட்டின் நினைவாக அதற்குக் காந்தாரம் என்று பெயர் சூட்டினர். மகாபாரதத்தின் பாண்டவர்கள் புருரவ மரபினரென்பதை ஒப்புநோக்கிப் பார்க்க வேண்டும்.

இலங்கைத் தீவுக்கு நாகத்தீவு என்றொரு பெயருண்டு. இது அதன் தொடர்ச்சியாக இருந்து கடலினுள் மறைந்த நாகநாட்டிலிருந்தே பெறப்பட்டிருக்கும்.

சிலப்பதிகாரம் நாகநாட்டின் சிறப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறது. புகார் நகரம் நாகநாட்டின் நாகம் கரோடு வைத்தெண்ணப்படும் சிறப்புடையாது என்பது அது.

நாகநீள் நகரொடு நாகநாடதனொடு
போகநீள் புகழ்மன்னும் புகார் நகரது....
[1]

இது கடலில் முழுகிய நாகநாட்டின் சிறப்பு பற்றிய நினைவினடிப்படையிலான குறிப்பாகும்.

இவ்வாறு குடியேறிய மக்களுக்கும் முழுகாது எஞ்சி நின்ற குமரிக் கண்ட அரசுகளுக்கும் தொடர்புகள் தொடர்ந்திருக்கும். ஒருவேளை இங்கிலாந்திற்கும் அங்கிருந்து வெளியேறிக் குடியேறிய அமெரிக்க மக்களுக்கும் இடையில் ஏற்பட்டது போன்ற கசப்புணர்வு உருவாகியிருக்கலாம். இதற்கும் நமக்குத் தடையம் கிடைக்கிறது.

சிந்தாற்றங்கரையில் போலவே குமரிக் கண்ட மக்களால் யூப்பிரட்டி, டைகரி ஆற்றிடை நிலத்தில் உருவாக்கப்பட்ட சுமேரிய, பாபிலேனிய நாகரிகங்களிலிருந்து உருவாகிய அசிரிய நாகரிகக் காலந்தொட்டு காந்தாரப் பகுதி மூலம் இந்தியாவுக்குள் படையெடுப்புகள் நடைபெற்றதற்கு கி.மு.9 ஆம் நூற்றாண்டிலிருந்து வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.[2] பின்னர் பாரசீகப் பேரரசின் காலத்தில் சிந்து சமவெளி அப்பேரரசின் ஒரு மாநிலமாகவே ஆகிவிட்டது. அலக்சாண்டர் சிந்து சமவெளியைக் கைப்பற்றிய போது அது கிரேக்கர்களின் ஆதிக்கத்தினுள் வந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் குமரிக் கண்டத்திலிருந்து வடக்கு நோக்கிச் சென்ற மக்களுக்கும் வெளியிலிருந்து வந்த மக்களுக்கும் ஏற்பட்ட மொழிகள் கலப்பினால் சங்கதம் (சமற்கிருதம்) உருவானது. முதல் சங்கதப் பல்கலைக் கழகமான தச்சசீலம் காந்தாரத்திலேயே இருந்தது. இவ்வாறு வடக்கிலுள்ள புதிய பண்பாடு உருவானது.

இப்புதிய பண்பாட்டிலிருந்து உருவான ஓர் இலக்கியமே இராமாயணம். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் தசரத சாதகத்தில் எளிமையாகக் கூறப்பட்ட கதை கிரேக்க நாட்டு ஓமர் எழுதிய இலியட் காப்பியத்தை அடியொற்றி இந்துமாக் கடலிலிருந்த ஒரு தீவையாண்ட மன்னனெருவனால் சீதை தூக்கிச் செல்லப்பட்டதாக நீண்டது. அத்தீவையாண்ட மன்னன் அரக்கன் என்று கூறப்பட்டான். அவனுக்கும் அவன் சுற்றத்தாருக்கும் இழிவான பெயர்கள் சூட்டப்பட்டன் இராவணன் (இராவண்ணன்), மண்டோதரி(பானைவயிறி), சூர்ப்பனகை(முறம்பல்லி), கும்பகர்ணன்(குடக்காதன்) முதலியன.

இது பண்டைய குமரிக் கண்ட மக்களின் மீது வட இந்தியருக்கிருந்த மட்டிலா வெறுப்பைக் காட்டுகிறது. இதற்கு ஒருவேளை குமரிக் கண்ட வாணிகர்கள் கையில் வடநாட்டுப் பொருளியல் சிறைப்பட்டிருந்தது காரணமாகலாம். பின்னர் புத்தமும் சமணமும் வளர்ச்சியடைந்த போது அவற்றை வீழ்த்தப் பார்ப்பனர்கள் வெளியாரை, குறிப்பாகக் கிரேக்கரையே துணை கொண்டனர். பார்ப்பனத் தெய்வங்களுக்குக் கிரேக்கர்கள் கொடைகள் கொடுத்து அத்தெய்வங்களின் அன்பர்களாக மாறியதிலிருந்தே புத்த சமணத்துக்குப் பிற்பட்ட பார்ப்பன எழுச்சி தொடங்கியது.

குமரிக் கண்ட மக்களின் மீதிருந்த வெறுப்பிலிருந்தே வடக்கில் முதன்முதல் தேசிய உணர்வு உருவானது. குமரிக் கண்டம் முழுக முழுகத் தரைவழி வடக்கே நகர்ந்து இன்றைய தமிழகத்தில் குடியேறிய சேர, சோழ, பாண்டியர்கள் முதலில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது அசோகளின் தந்தை பிம்பிசாரனின் படையெடுப்பையே. அவர்கள் உள்நாட்டுக் குறுநில மன்னர்களின் ஒத்துழைப்பினால் அப்படையெடுப்பை முறியடித்தனர். தொடர்ந்து வரும் படையெடுப்புகளிலிருந்து தந்காத்துக் கொள்வதற்காக சேர, சோழ, பாண்டியர்கள் தமக்குள் ஒரு கூட்டணி அமைத்திருந்தனர். இக்கூட்டணி 123 ஆண்டுகள் நீடித்திருந்ததாகக் கலிங்க மன்னன் காரவேலன் தன் கல்வெட்டொன்றில் கூறுகிறான். அக்கூட்டணியைத் தான் உடைத்ததாகவும் அவன் கூறுகிறான். என்ன உத்தியை அவன் கையாண்டான் என்பது தெரியவில்லை. ஆனால் இந்தச் செய்திகளெல்லாம் கழகச் செய்யுள்களில் காட்டப்படவில்லை. ஆனால் மோரியப் படையெடுப்பைப் பற்றி ஓரளவு விரிவான செய்திகள் உள்ளன.

சேரன் செங்குட்டுவன் காலத்தில் அவனும் நடு இந்தியாவில் ஒரு பேரரசை நிறுவியிருந்த சாதவாகன மன்னன் சதகர்னியும் நெருங்கிய நண்பர்கள். வங்காளத்தைச் சேர்ந்த பால மரபின் கனக-விசயர்களைச் சிறைபிடிக்கச் சென்ற சேரன் செங்குட்டுவனின் படைக்கு அனைத்துதவிகளையும் அவன் வழங்கினான்.[3]

கழகக் காலத்தில் மூவேந்தர்களிடையிலும் இடைவிடாத போர்கள் நடைபெற்றன. போர்களின் வெற்றி தோல்விகளை முடிவு செய்வோர் பெரும்பாலும் குறிஞ்சி நிலங்களில் ஆட்சி புரிந்த குறுநில மன்னர்களாயிருந்தனர். சில குறுநில மன்னர்கள் மூவேந்தர்களுக்கிணையாகத் தம் வலிமையைப் பெருக்கிக் கொண்டிருந்தனர். எனவே மூவேந்தர்களும் ஒருங்கிணைந்து கிட்டத்தட்ட அனைத்துக் குறுநில மன்னர்களையும் அழித்துவிடடனர்.

குறுநில மன்னர்களுக்கு வேந்தர்களின் உடைகளில் மணிமூடி தவிர்த்த அனைத்தும் உண்டு. சிலப்பதிகார வரண பூத விளக்கத்தில் வாணிகப் பூதத்தின் உடைகளும் அவ்வாறே கூறப்பட்டுள்ளன. எனவே வாணிகரின் தூண்டல் குறுநில மன்னர்களை அழித்ததின் பின்னணியில் இருக்க வேண்டும் என்று புலனாகிறது. இதன் மூலம் தமிழகத்தின் எல்லைகளில் குறுநில மன்னர்களின் வடிவில் இருந்த பாதுகாப்பரண்கள் மூவேந்தர்களாலேயே வீழ்த்தப்பட்டன.

கோவலனைக் கொன்றதற்காகச் செங்குட்டுவனிடம் முறையிடுவது போல் கண்ணகி சேரநாட்டு எல்லையை அடைந்துள்ளாள் என்று கூறுவதன் மூலம்[4] வாணிகர் சாத்தனார் பாண்டியன் மீது படையெடுத்து அவனைத் தண்டிக்கக் குறிப்பால் வேண்டுகிறார். வாணிகராகிய அவருக்கு ஒரு பேரரசு அமைவது தம் வகுப்பு நலனுக்கு உகந்தது என்று தோன்றியிருக்கலாம். கண்ணகிக்குப் பொதிகைமலையில் கல்லெடுத்து அதனைக் காவிரியில் நீர்ப்படை செய்யலாமென்றும் அவனுக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் அவனோ வடநாட்டிற்குச் செல்வதென்றே முடிவெடுத்தான்.

இலங்கைக் கயவாகுவால் மணிமேகலையின் துணையோடு சோழநாடு சூறையாடப்பட்டது. அதே கயவாகுவைக் கண்ணகி கோயில் நடுகல் விழாவுக்குச் செங்குட்டுவன் வரவழைத்திருந்தான். இது செங்குட்டுவனிடத்தில் தேசிய உணர்வு குன்றியிருந்ததையே காட்டுகிறது.

செங்குட்டுவனிடம் மங்கியிருந்த தேசிய உணர்வு இளங்கோவடிகளிடம் நிரம்பி வழிந்தது. உலகின் தலைசிறந்த காப்பியமாகிய அவரியற்றிய சிலப்பதிகாரத்தில் அது பொங்கி வழிவதை நம்மால் காண முடிகிறது.

அத்தேசிய உணர்வை அதன் பின் நெடுநாட்களுக்கு நம்மால் தமிழகத்தில் காண முடியவில்லை. கி.பி.1682 முதல் 7 ஆண்டு காலம் ஆண்ட அரங்ககிருட்டின முத்துவீரப்பனிடம் இந்தத் தேசிய உணர்வு மீண்டுமொருமுறை தலைநீட்டி மறைந்தது.

ஆங்கிலேயர்களை எதிர்த்து வீழ்ந்த கட்டபொம்மனிடம் தெளிவான தேசியக் கண்ணோட்டத்தைக் காண முடியவில்லை. ஆனால் அவனைத் தொடர்ந்து குமரியிலிருந்து மராட்டம் வரை விரிந்த ஒரு கட்டணி அமைத்த மருதுபாண்டியரின் சீரங்கம் அறிக்கையில் தெளிவான தேசியம் வெளிப்படுகிறது.[5]

இறுதியில் இந்த நூற்றாண்டில் தமிழ்த் தேசியம் மலர்ந்து நிற்கிறது. அதன் வரலாற்றைப் பார்ப்போம்.

உலகில் தோன்றும் அனைத்துத் தேசிய எழுச்சிகளைப் போலவே தமிழ்த் தேசிய எழுச்சியும் தமிழ் பேசும் மக்களில் மிக உயர்ந்த இடத்திலிருந்தவர்களிலிருந்தே தோன்றியது. பார்ப்பனர்கள் தான் தமிழ்த் தேசியத்திற்குப் பள்ளியெழுச்சி பாடினர் என்றால் அது தவறாகாது.

பல நூறாண்டுக் காலமாக தமிழகத்தில் தெலுங்கர்களும் பின்னர் மராத்தியர்களும் ஆட்சி செலுத்தினர். எனவே கோயில்களில் இடம்பெற்ற இலவசக் கல்விக் கூடங்களிலும் அரசுப் பணிகளிலும் அவர்களுக்கே முன்னுரிமை கிடைத்து வந்தது. உள்நாட்டினரான தமிழ்ப் பார்ப்பனர்கள் இதனால் மனக்கசப்படைந்து இருந்தனர். அதன் விளைவாக ஆரிய - திராவிடக் கோட்பாடுகள் உருவான போது பார்ப்பனரில் ஒரு சாரர் அதற்கு எதிராகப் பேசினர். அவர்களில் தலையாயவர் வி.ஆர். இராச்சந்திர தீட்சிதர் ஆவார். தமிழர்களின் தோற்றமும் பரவலும் எனும் நூலில் தமிழகத்திலிருந்து வெளியேறிச்சென்ற தமிழர்களே உலகெங்கிலுமுள்ள நாகரிகங்களை உருவாக்கினர் என்று அவர் வாதிட்டார். பாண்டித்துரைத் தேவர் தொடங்கிய நான்காம் தமிழ்ச் சங்கத்தில் இரா. இராகவய்யங்கார் மு. இராகவையங்கார் போன்றோர் தமிழிலக்கிய ஆய்வுகளை நிகழ்த்தினர். மறைமலையடிகள் வளப்படுத்திய தனித்தமிழ் இயக்கத்துக்கு வழிகாட்டியவர் தன் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என்று தமிழ்ப்படுத்திக் காட்டிய சூரியநாராயண சாத்திரி எனும் பார்ப்பனரே.

குமரிக் கண்டக் கோட்பாடு உட்படப் பழந்தமிழகப் பெருமைகளையும் சங்கத இலக்கியங்களிலுள்ள கீழ்மைகளையும் திராவிட இயக்கத்தினருக்குச் சுட்டிக் காட்டும் வகையில் சர்வ வருண சமரச விளக்கம் போன்ற நூல்களை எழுதியவரும் ஒரு பார்ப்பனரே. வெள்ளையரை ஒன்றுபட்டு எதிர்த்துப் போராடுவதில் இந்தியர்களின் ஒற்றுமைக்குத் தடையாயிருக்கும் சாதி வேற்றுமைகளைக் களையவேண்டுமென்ற நோக்கத்தில் தன் சாதிப்பட்டத்தை விடுத்து பாரதி என்று புதுப்பட்டம் புனைந்து கொண்ட சி.பி.இராசகோபால பாரதி என்ற இவர் விதவா விவாக விளக்கம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

இந்து சீர்திருத்தர் கழகம் என்ற பெயர் கொண்ட அமைப்பின் உறுப்பினர் அவர். தமிழக வரலாறு, ஆரிய - திராவிடக் கோட்பாடுகள், வரணங்கள், சாதிகள், சங்கத மொழியிலுள்ள சான்றுகள் ஆகியவற்றில் இவர் இந்நூற்களில் தந்துள்ள செய்திகளின் எல்லையை இன்றைய திராவிட இயக்கத்தினர் இன்னும் தாண்டவில்லை.

இவ்வாறு பார்ப்பனர்கள் வகுத்துத் தந்த கோட்பாடுகளிலிருந்து தான் திராவிட இயக்கம் தன் பயணத்தைத் தொடங்கியது. ஆனால் அது தன் பயணப் பாதையில் முதல் அடி எடுத்து வைக்கும்போதே பார்ப்பனர் அதற்கு எதிரிகளாகி விட்டனர்.

இது உலக வரலாற்றில் காணப்படும் பொதுக் கூறு தான். உருசியாவில் சார் மன்னனை எதிர்த்து முதன்முதலில் போர்க்கொடி தூக்கியவர்கள் உயர்குடியினர் தான். அந்த இயக்கம் மக்களை நோக்கிப் பரவத் தொடங்கியதுமே உயர்குடியினர் அதன் எதிரிகளாகி விட்டனர்.

இந்தியாவில் பேரவைக் கட்சியைத் தொடங்கியவரே ஓய்வு பெற்ற ஓர் ஆங்கில அதிகாரி தான். ஆங்கிலேயர் ஆட்சி மீது மக்களுக்குப் பெரும் வெறுப்பு ஏற்படாமல் காப்பதற்காகவே அக்கட்சியைத் தோற்றுவிப்பதாகத் தான் அவர் வெள்ளை அரசாங்கத்திற்கு எழுதினார். ஆனால் தொடங்கி 35 ஆண்டுகளுக்குள் வெள்ளையர்கள் இந்தியாவுக்கு விடுதலை தர வேண்டுமென்ற முழக்கத்தை அக்கட்சி முன்வைத்துவிட்டது.

அண்மையில் தமிழகத்துக்குள்ளேயே நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றைப் பார்ப்போம். திருவிதாங்கூர் மாகாணத்திலிருந்த தமிழ் பேசும் பகுதிகளைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று போராடிய இயக்கம் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு எனப்படும். இதன் தலைவராக நாம் அறிவது நேசமணி அவர்களையே. இவர் நாடார் சாதியைச் சேர்ந்தவர். ஆனால் அந்த இயக்கத்தைத் தொடங்கியவர்கள் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் எனப்படும் மேற்சாதியைச் சேர்ந்தவர்களாகும். பி.எசு.மணி என்பவரும் மற்றும் சிலரும் தான் இவ்வியக்கத்தின் கருவாய் அமைந்தவர்கள். இவ்வியக்கத்துக்குத் தேவையான வரலாற்றுக் கோட்பாட்டை உருவாக்கியது சேரநாடும் செந்தமிழும் என்னும் நூல். இந்நூலாசிரியர் திரு. சாதாசிவம் அவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை அவர்கள்.
[6]

இந்த இயக்கம் சிறிது வலுவடைந்த போது அதில் கிறித்தவ நாடார்களும் ஏழை நாடார்களை ஒடுக்கி அரசுக்கு ஊழியம் செய்ய வைத்த ஊர்த்தலைவர்களான முதல் பற்று நாடான்களையும்[7] பொறுத்துக் கொண்ட இவர்கள் எளிய குடும்பங்களில் பிறந்து படித்து வந்த நாடார்கள் இயக்கத்தில் நுழையத் தொடங்கியதும் ஆளுக்கொரு காரணம் கூறிக்கொண்டு வெளியேறி விட்டனர். பின்னர் அச்சாதியினர் முழுவதும் திருவிதாங்கூர் மலையாளிகளுடன் சேர்ந்து நின்றனர். இயக்கத்தை நாடார் காங்கிரசு என்றனர்.

அது போலவே திராவிடர் இயக்கமாகிய நயன்மைக் கட்சியிலிருந்த உயர்சாதியினர் அனைவரும் அவ்வியக்கத்தில் கீழ்ச்சாதியினர் சேரத் தொடங்கியதுமே வெளியேறிவிட்டனர். பெரியார் அவ்வியக்கத்தில் தலைமையை ஏற்கும் போது வெள்ளாளர்கள் எவருமே அங்கு இல்லை.[8]

அதே போல் உருசியாவிலும் உயர்குடி மக்களை அடுத்து மக்களாட்சி கேட்டுப் போராடத் துணிந்த நடுத்தர மேல்தட்டு மக்களே பாட்டாளியக் கட்சிகளுக்கு அடிகோலினர். ஆனால் உண்மையான பாட்டாளிகளின் ஒரு கட்சியைக் கட்டியெழுப்புவதற்குரிய திட்டத்தை லெனின் முன்வைத்த போது அவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்.
[9]

எனவே இந்த வரலாற்றியல் நிகழ்முறை தான் தமிழகத்திலும் நடைபெற்றது. ஆனால் பெரியார் கைகளுக்குக் கட்சியின் தலைமை வந்ததும் கட்சியின் போக்கில் ஒரு பெரும் மாற்றம் வந்தது.

நயன்மைக் கட்சி மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒதுக்கீடுச் சட்டம் மட்டும் கொண்டு வரவில்லை. தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சிக்குப் பெரும் நடவடிக்கைகள் எடுத்து அண்மைக் காலம் வரை தமிழகத்தில் இருந்த பல தொழில் நிறுவனங்களின் தோற்றத்துக்கு வழியமைத்துக் கொடுத்தது.

ஆனால் பெரியார் பார்ப்பன எதிர்ப்பை மட்டுமே தன் செயல்திட்டமாக்கினார். பார்ப்பனர்களுக்கு ஆதரவு வடநாட்டு முதலாளிகளாகிய பனியாக்களிடமிருந்து கிடைக்கிறது என்பதற்காகத் தான் பார்ப்பன-பனியா கூட்டு என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். ஆனால் இந்தப் பனியாக்களுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அவர் அசைக்கவில்லை. பம்பாயின் பணப்பெருக்கு தென்னகத்தின் பொருளியலை விழுங்கிவிடுகிறது என்பதை விளக்கும் அண்ணாத்துரையின் பணத் தோட்டம் நூலையும் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற ழுழக்கத்தையும் பெரியார் எப்படி எதிர்கொண்டார் என்று தெரியவில்லை. பெரியாரும் அண்ணாத்துரையும் பிரிந்ததற்கும் இம்முழக்கத்துக்கும் ஏதாவது தொடர்புண்டா என்பதும் தெரியவில்லை. ஆனால் தி.மு.க. அந்த முழக்கத்தை வைத்து வளர வளர சென்னையிலுள்ள மார்வாரிகளுக்குக் கலக்கம் பிறந்தது. அவர்கள் திராவிடர் இயக்கத் தொண்டர்களால் தாக்கப்படுவர் என்ற நிலை உருவானது. இதைத் திசை திருப்பத்தானோ என்னவோ உணவு விடுதிகளில் உள்ள “பிராமணாள்” என்ற சொல்லை அழிக்கும் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார். அம்பி விடுதி என்ற பார்ப்பனர் உணவு விடுதி முன்பு இப்போராட்டம் ஒன்றரையாண்டு நீடித்தது. அடுத்து பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தவரும் சும்மாயிருக்கவில்லை. மார்வாரிகளுக்கெதிராயிருந்த தம் தாக்குதலை நடுவணரசுக்கு எதிராகத் திருப்பினர். பம்பாயின் மூலதனம் தமிழகத்தைத் தாக்குகிறது; எனவே தமிழகப் பொருளியலை அதன் தாக்குதலிலிருந்து காக்கப் போராட வேண்டும் என்ற நிலை ஓசைப்படாமல் கைவிடப்பட்டது. நடுவணரசின் ஐந்தாண்டு திட்டங்களில் தமிழகத்துக்கு உரிய பங்கு வேண்டும் என்ற வகையில் மக்களின் கவனம் திசைதிருப்பப்பட்டது.

இது போன்ற முழக்கங்களை முன் வைத்துத் தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட இயக்கத்தின் ஆட்சிக் காலத்தில் நடந்ததென்ன? பேராயக் கட்சி ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அலுவலகத் தமிழ் வளர்ச்சி பின்னோக்கிச் சென்றது. எண்ணற்ற ஆங்கிலவாயில் மழலையர் பள்ளிகள் உருவாயின. நேர்மைக் கட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மீனாட்சி ஆலை, சங்கர் சிமென்றாலைகள் போன்ற எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் இந்தியப் பெரு முதலாளிகளின் கைகளுக்குப் பறிபோயின. அதற்கு நடுவணரசு நிறுவனங்களான உயிர் காப்பீட்டுக் கழகமும் அரசுடைமை வங்கிகளும் தொழில் வளர்ச்சி நிறுவனங்களும் தமிழக அரசும் துனை நின்றன. அத்துடன் இந்தியப் பெருமுதலாளிகளுடன் தமிழக அரசு கூட்டில் புதிய தொழில் நிறுவனங்களும் உருவாயின.

திராவிடர் கழகம் பொருளியல் அணுகுமுறையைத் திட்டமிட்ட வகையில் தவிர்க்கிறது. ஒருமுறை நெல்லையில் இந்நூல் ஆசிரியர் சில திராவிடர் கழக இளைஞர்களின் வேண்டுகோளின் பேரில் இளைஞரணித் தலைவரைச் சந்தித்துத் தமிழகத்தின் பொருளியல் பற்றிய சிக்கல்களைக் கையிலெடுக்க வேண்டுமென்ற தீர்மானம் ஒன்றை நிறைவேற்றச் செய்தார். ஆனால் அதையறிந்து மாவட்டத் திராவிடர் கழகச் செயலாளர் அம்முயற்சியிலீடுபட்ட இளைஞர்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டார். அத்துடன் அவ்விளைஞர்களின் அத்தகைய முயற்சிகள் கைவிடப்பட்டன. பொருளியல் அணுகுமுறையைப் பற்றிப் பேசுவோரைத் தவிர்ப்பதற்காக “பொதுமையினர்; ஊடுருவுகின்றனர்” என்ற எச்சரிக்கை அடிக்கடி விடுதலை இதழில் வெளிவரும்.

மதுரையிலுள்ள சில திராவிட இயக்க அன்பர்களின் முமயற்சியால் அனல் வீச்சு என்றொரு இதழ் தொடங்கப்பட்டது. அதில் ஒரு முறை நேர்மைக் கட்சியின் அருஞ்செயல்கள் பற்றிய ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் அக்கட்சியின் ஆட்சியில் பண்பாட்டுத் துறையிலும் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிலும் அது மேற்கொண்ட நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டிருந்தனவேயன்றி தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சியில் அதன் செயற்பாடுகள் பற்றி எதுவுமே கூறப்படவில்லை.

இவ்வாறு பொருளியலை மறந்து போவது ஒரு வகை வகுப்புக் கண்ணோட்டம். அதைப் பற்றி நாம் அடுத்த அதிகாரத்தில் விரிவாக ஆய்வோம். ஆனால் திட்டமிட்டுப் பொருளியலைப் புறக்கணிப்பது என்பதற்கு ஏதாவது தனிநலன்க இருக்க வேண்டும்.

இதைக் கண்டுபிடிப்பதற்கு இந்தப் பொருளியல் புறக்கணிப்பால் பயன்பெறுவோர் யார் என்பதைக் கண்டறிய வேண்டும். நாம் மேலே விளக்கிய வரலாற்று நிலைமைகளில் நமக்கு மனக்கண் முன் தோன்றுவோர் மார்வாரிகளே.

இது சரியாக இருக்க முடியுமா என்று ஆய்ந்து பார்ப்போம். திராவிட இயக்கம் பார்ப்பனர்களைத் தன் எதிரியாக முன் வைத்தது. பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்காக மதமாற்றம் எனும் உத்தியையும் முன் வைத்தது. வரலாற்றில் பார்ப்பன எதிர்ப்பியக்கங்களாக விளங்கிய புத்த சமண-சமயங்களைப் பாராட்டவும் செய்தது. புத்த சமயத்தவர் இன்று தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. ஆனால் செல்வமும் செல்வாக்கும் மிக்க மார்வாரிகள் சமணர்கள். இந்த அடிப்படையில் மார்வாரிகளுக்கும் திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அண்ணாத்துரை தன் திராவிட நாடு இதழில் ஒரு பொங்கல் மலரில் எழுதிய பவள பற்பம் எனும் குறம்புதினத்தில் அதன் கதைத் தலைவி சமண சமயத்துடன் தொடர்பு கொண்டு மக்கள் தொண்டாற்றுவதாகக் காட்டுகிறார். அது போல் பல ஆண்டுகளாகவே மார்வாரிகளோடு தனக்குத் தொடர்புண்டு என்று அவர்கள் நடத்திய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு கூறினார் முதலமைச்சராயிருந்த கருணாநிதி.

அ.தி.மு.க.வில் நல்ல செல்வாக்குடன் இருந்த உக்கம்சந்து என்ற மார்வாரி மார்வாரிகள் சங்கத்தில் முகாமையான பொறுப்பாளர். ம.கோ.இரா. முதலமைச்சராயிருந்த போது தமிழகத்துப் பொருளியல் நலன்களை அயலவர்களுக்கு விற்பதாகிய நுழைவுவரியைப் பொறுத்த வரை ம.கோ.இரா.வும் கருணாநிதியும் தம் உண்மை உருவை மக்கள் முன் காட்டி நின்றனர். வாணிகப் பெருமக்கள் துணிந்து களத்தில் இறங்கியதால் அந்த இடையூறு அகன்றது.

இவை அனைத்தின் பின்னணியில் என்ன உள்ளது என்பதை உணர நமக்குத் தனித்திறமை தேவையில்லை. மார்வாரிகளுக்குச் செய்து கொடுக்கும் வசதிகளுக்கு நம் திராவிடத் தலைவர்களும் பிற தமிழகத் தலைவர்களும் பங்கு பெற்று வருகிறார்கள் என்பது வெளிப்படை.

ஆனால் பெரியார் அத்தகைய தொடர்புகளை வைத்திருந்தாரா என்பது நமக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஒரு சிறு நெருடல். பெரியார் இறக்கும் போது திராவிடர் கழகத்திடம் இருந்த பணம் உரூ.125 கோடி என்று திரு. வீரமணி அவர்கள் ஒருமுறை அறிவித்ததாகத் தெரிகிறது. 1974இல் உரூ125 கோடி என்பது மிகப் பெரிய தொகை. எடைக்கு எடை வெள்ளி நாணயம், உருபாய் நாணயத்தாள் மாலைகள் என்று என்ன தான் தொண்டர்களிடம் தண்டினாலும் இத்தொகை நமக்கு மலைப்பாகத் தான் இருக்கிறது.

1989, 1991 தேர்தல்களின் போது பார்ப்பனப்பெண் என்று அடையாளம் காட்டப்பட்ட செயலலிதாவின் முன் அவர் ஆட்சிக்கு வந்த பின் மண்டியிட்டுக் கிடக்கும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி தான் செயலலிதாவிடமிருந்து 5 இலக்கம் உரூபாய்கள் நன்கொடை வாங்கியதை நயப்படுத்துவதற்காக முன்பொரு நாள் ஆச்சாரியார் தன்னை இந்தியப் பொது ஆளுநர் (Governor General) பதவியிலிருந்து இறக்கியதை எதிர்த்துக் குரலெழுப்ப வேண்டுமென்று எசு.எசு. வாசன் மூலம் கொடுத்தனுப்பிய ஒரு “நன்கொடையை”ப் பெரியார் ஏற்றுக் கொண்ட உண்மையை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பெரியார் ஆச்சாரியாரின் வேண்டுகோளை நிறைவேற்றவில்லையாம். தான் கோட்பாட்டளவில் தாக்கும் தலைவரிடமிருந்தே பணம் பெற்றுக்கொள்ளும் பழக்கம் பெரியாருக்கு இருந்தது என்பதற்கு இது ஆணித்தரமான சான்று. அப்படியிருக்க தான் போற்றிப் புகழும் சமண சமயத்தைச் சார்ந்த மார்வாரிகளிடமிருந்து பணம் பெறுவதில் அவருக்கு எந்தவிதமான தயக்கமும் இருந்திருக்க முடியாது.

பெரியார் பல வகைகளில் புதிராகவே இருக்கிறார். சாதியத்தை எதிர்த்துத் தொடக்க காலங்களில் வன்முறைகளுக்குக் கூட அஞ்சாமல் களத்திலிறங்கிப் பணிபுரிந்த பெரியார் முகுகுளத்தூர் கலவரத்துக்கு முன்னும் பின்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைக் கண்டித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. ஆனால் எண்ணிக்கையிலும் போர்க்குணத்திலும் குறைந்தவர்களான பார்ப்பனர்களை தரக்குறைவாகப் பேசுவதில் அவர் தளராத இன்பங் கண்டார்

வன்முறை மூலம் நாட்டை வலுப்படுத்துவது என்று கட்டாட்சி (பாசிச) இயக்கம் கண்டவன் முசோலினி. அவன் கட்சிக்கொடி சிவப்புப் பின்னணியில் கருப்பு வட்டம். கட்சியினரின் உடை கறுப்பு. பெரியார் தன் கட்சிக்கு அமைத்த கொடி கறுப்புப் பின்னணியில் சிவப்பு வட்டம். கட்சியினருக்கு அதே கறுப்பு உடை. ஆனால் இந்த உடைக்கும் கொடிக்கும் உரிய செயல்திட்டம் எதுவும் என்றும் தீட்டப்படவே இல்லை.

1933 இல் ஈரோட்டுத் திட்டம் என்ற பெயரில் பொதுமை நோக்கிய குறிக்கோள் ஒன்றை அறிவித்தார் பெரியார். ஆனால் ஆங்கில அரசு அடக்குமுறையை ஏவி அவரையும் பிற தலைவர்களையும் சிறையிலடைத்ததும் திட்டத்தைப் பின்வாங்கி சிறையிலிருந்து மீண்டார். பின்னர் அந்தப் பேச்சே இல்லை.

பார்ப்பனைரை ஒழிப்பேன் என்று சூளுரைத்துக் கிளம்பிய பெரியார் இராசகோபாலாச்சாரியாரைத் தன் முழு எதிரியாகக் கூறுவார். ஆச்சாரியார் என்ன கூறகிறாரோ அதற்கு நேர் எதிராகவே நாம் செயற்பட வேண்டும் என்று ஒரு மொட்டை விதியைக் கூடக் கட்சியினருக்கு அமைத்துக் கொடுத்தார். ஆனால் அதே ஆச்சாரியாரைத் தன் உயிர் நண்பர் என்று கூறிக்கொண்டு தன் வாழ்விலும் இயக்கத்தின் வாழ்விலும் முகாமையான கட்டங்களில் ஆச்சாரியாரின் அறிவுரைகளை நாடியிருக்கிறார். இவற்றைத் திராவிட இயக்கத்தின் மீது பரிவு கொண்டிருப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தாய்மதத்தினரின் வீடுகளில் ஓம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். கிறித்துவர்களின் வாயில்களில் இயேசு இவ்வீட்டின் தலைவர் என்பது போன்ற சொற்கள் இருக்கும். முகம்மதியர்களின் வீடுகளில் அரபி எழுத்துகள் காணப்படும். அதே போல் திராவிடர் கழகத் தோழர்களின் வீடுகளில் தமிழ்நாடு தமிழருக்கே என்ற சொற்களைக் காணலாம்.

இந்தச் சொற்களின் உண்மையான பொருள் என்ன? தமிழகம் அயலாருக்குரியதல்ல என்பதா அல்லது பார்ப்பனர்களுக்கு மட்டும் தமிழகத்தில் உரிமையில்லை என்பதா? இது மண்ணைக் குறிக்கிறதா “இனத்தை”க் குறிக்கிறதா? சிந்தித்துப் பார்த்தோமாயின் இனத்தையே குறிப்பிடுகிறது என்பது தெரியும். பார்ப்பனர் என்பவர் “ஆரிய இனம்” என்ற கண்ணோட்டத்தில் ஆரியர்களாகிய பார்ப்பனர்களுக்குத் தமிழகத்தில் இடமில்லை என்பது தான் இதன் பொருள். பார்ப்பனர் தவிர வேறு யார் தமிழகத்தின் மீது உரிமை கொண்டாடினாலும் இவர்களுக்குக் கவலை இல்லை.

இவர்களின் கவலை பார்ப்பனர்களை வெளியேற்றுவது என்ற தொடக்க நிலையிலிருந்து எப்போதோ மாறிவிட்டது. தமிழகத்து அரசுப் பணிகளில் பார்ப்பனர்களைப் போல் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் என்றோ வந்தாயிற்று. இன்று இந்த நிலை வளர்ந்து இந்திய அரசுப்பணி வரையில் பார்ப்பனரல்லாதோருக்கு ஒதுக்கீடு வேண்டும் என்று தமிழக எல்லையை மீறிச் சென்று விட்டது. அதற்காக ஆங்கிலம், இந்தி அல்லது வேறெந்த மொழியை வேண்டுமானாலும் அது தமிழர்களுக்குப் பரிந்துரைக்கும். தமிழ்நாடு தமிழருக்கே என்ற சொற்கள் என்றோ வெற்றுச் சொற்களாகி விட்டன.

திராவிடர் இயக்கம் ஒரு தேசிய இயக்கமல்ல. ஒரு காலத்தில் அது ஒரு தேசிய இயக்கம் போல் மிகக் குறுகிய காலம் தோற்றம் தந்தது. உண்மையில் அது ஒரு காட்டிக் கொடுக்கும் இயக்கமாகவே இருந்து வந்திருக்கிறது.

ஒரு தேசிய இயக்கத்தின் வேர்கள் அதன் மண்ணின் மீது இறங்கியிருக்க வேண்டும். அரசுப் பணி என்ற ஒட்டுண்ணிப் பிழைப்புக்கு என்றுமே மண்ணில் வேர் கிடையாது. அரசுப் பணியில் வாழ்ந்துவிட்ட பார்ப்பனர்களுக்குத் தேசியமே கிடையாது. இன்று தமிழர்களாயிருப்பார்கள், நாளை இந்தியர்களாக மாறிவிடுவார்கள், மறுநாள் அமெரிக்கர்களாகிவிடுவார்கள். அவர்களைப் போன்றோரே வெள்ளாளர்களும். இவ்விரு சாதியினரும் நிலம் படைத்தோராயிருந்த காலத்தில் கூட நிலத்தில் கால் ஊன்றியவர்களில்லை. நிலத்துக்கு எட்டாத் தொலைவிலிருந்து கொண்டு கீழ்ச்சாதியினரைப் பிழிந்து வாழ்ந்தோரே. இந்த ஒட்டுண்ணிப் பண்பாட்டுக்கு வாழ்த்துப்பாடி கீழ்ச்சாதி மக்களின் வேர்களையும் பிடுங்குவதில் ஏறக்குறைய முழு வெற்றி பெற்றுவிட்டது திராவிட இயக்கம். அந்த வகையில் தமிழ்த் தேசியத்தின் மிகப் பெரும் எதிரியாகத் திகழ்கிறது திராவிட இயக்கம்.

ஒரு தேசிய இயக்கத்தின் இலக்கணத்தையும் அதன் பல்வேறு விரிவாக்கக் கட்டங்களையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பகுத்தாய வேண்டும். அதை அடுத்த அதிகாரத்தில் பார்ப்போம்.

இந்த அதிகாரத்தை முடிக்கும் முன் திராவிட இயக்கத்தின் இன்னொரு முரண்பாட்டையும் சுட்டிக்காட்ட வேண்டும். திராவிட இயக்கத்தினர் தம்மை இறைமறுப்பாளர்களென்று கூறிக்கொள்கின்றனர். “கடவுள் இல்லை. இல்லவே இல்லை” என்று கூறுபவர்கள் அவர்கள். ஆனால் பெரியாரே “நம்மவர்” என்று கூறிக் குன்றக்குடி அடிகளின் அடிபணிந்து (கால்களில் விழுந்து) வணங்கியதாவும், “பிறர் பார்ப்பனராகிய சங்கராச்சாரியார்களின் காலில் விழுந்து வணங்கித் தமிழனின் தன்மானத்தை அழிக்கிறார்கள்; நான் தமிழராகிய அடிகளார் முன் விழுந்து வணங்குவதால் தமிழர்களின் மதிப்பை உயர்த்துகிறேன்” என்று கூறித் திருநீற்றை வாங்கிப் பூசிக் கொண்டாராம்.

புத்த சமயம், சமண சமயம், கிறித்துவம், முகம்மதியம் முதலிய சமயங்களுக்கு மாறுவதைத் திராவிடர் கழகம் பரிந்துரைக்கவும் செய்கிறது. கடவுள் இல்லாத சமயம் எது? புத்தருக்கும் மகாவீரருக்கும் கடவுளுக்கிருக்கும் ஆற்றல்கள் அனைத்தும் அவரவர் சமயங்களில் கற்பிக்கப்பட்டுள்ளனவே! மேலே கூறிய எந்தச் சமயத்தில் மூட நம்பிக்கைகள் இல்லை? அப்படியானால் இந்தக் குழறுபடிக்குக் காரணம் என்ன? திராவிடர் கழகத்தினர் தங்களையே சிறிது ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

திராவிடர் இயக்கம் பார்ப்பனர்களைப் பிற மேற்சாதியினர் குறிப்பாகச் சிவனிய வெள்ளாளர் எதிர்த்ததிலிருந்து தோன்றியது. அது பின்னாளில் கீழ்ச்சாதியினரையும் அரவணைத்துக் கொண்டது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பதற்குச் சாதி ஒழிப்பு என்ற புதிய வடிவத்தைக் கொடுத்தது. சாதிப் பற்றாளர்கள் சமய நம்பிக்கைகளையும் நூல்களையும் காட்டி சாதிகள் கடவுளால் வகுக்கப்பட்டன என்றனர். இயல்பாகவே பார்ப்பனர்கள் தான் இந்நம்பிக்கைகளின் காவலர்களாகவும் அவற்றை உயர்த்திக் கூறும் நூல்களின் பாதுகாவலர்களாகவும் அமர்த்தப்பட்டிருந்தனர். எனவே எதிர்ப்பு நம்பிக்கைகளின் மீதும் கடவுள்களின் மீதும் திரும்பியது. இறைமறுப்பு, மூடநம்பிக்கையொழிப்பு என்று இதற்குப் பெயரிடப்பட்டது.

இனி ஒரு முரண்பாடு தோன்றுகிறது. சாதியொழிப்பை விரும்புவோரெல்லாம் இறைமறுப்பாளர்களாக இருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆனால் அது நடைபெறக்கூடிய ஒன்றல்ல. எனவே பார்ப்பனர் தலைமையல்லாத சமயங்களை நாடிச் செல்ல வேண்டிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க குன்றக்குடி மடம் போன்ற சிவனிய மடங்களெல்லாம் கார்காத்தார் எனும் சிவனிய வெள்ளாளப் பிரிவினரிடமே உள்ளன. அம்மடங்களின் கீழ் எண்ணற்ற கோயில்களும் உள்ளன. அக்கோயில்களில் பார்ப்பனப் பூசாரிகளே சங்கதத்தில் மந்திரஞ் சொல்லி வழிபாடு நிகழ்த்துகிறார்கள். இங்கும் இந்த முரண்பாட்டுக்கு எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. “இந்து” சமயத்தில் சாதி வேறுபாடு இருக்கிறது என்பது தான் இவர்களது உண்மையான குறையாயிருந்தால் சாதிய வேறுபாட்டையும் எண்ணற்ற கடவுள்களையும் ஒழித்த ஒரு புதிய சமயத்தை உருவாக்குவதற்குத் தேவையான எல்லா உத்திகளையும் வகுத்திருக்கலாமே. அயல் மதங்களைப் பரிந்துரைத்தவர்கள் இதைச் செய்வதில் எந்த முரண்பாடும் இருந்திருக்காதே. இவ்வாறு முரண்பாடுகளின் நிலைக்களனாய் திராவிட இயக்கம் இருந்து வந்திருப்பதனால் தான் அதன் மீது நமக்கு ஐயம் ஏற்படுகிறது.

திராவிட இயக்கத்தின் தோற்றுவாயான நயன்மைக் கட்சியில் தமிழகத்தின் பொருளியல் நலன்களைத் தம் நலன்களாகக் கொண்ட வகுப்புகள் பங்கு கொண்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை இன்று வடக்கின் தாக்குதலுக்கு முன் வீழ்ந்து அதனிடம் அடிமைப்பட்டுப் போயின. எஞ்சியவை பெரியார்-அண்ணாத்துரைக் கும்பலை நம்பி நம்பி வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் ஒரு விடிவு நாளும் கண்களுக்குப் புலனாகாமல் இருட்டில் பதுங்கிக் கிடக்கின்றன. இந்தக் கும்பல் அவ்வப்போது காட்டும் தேசியப் பொய்யுருவை நம்பி இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த தேசிய உணர்வுள்ள எண்ணற்றோர் இலவு காத்த கிளிகளாக வாழ்ந்து மாய்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் ஒரு ஒளிமிக்க விடிவு காலம் பிறக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அடிக்குறிப்புகள்:

[1] சிலம்பு. மங்கல வாழ்த்துப் பாடல் 21-22

[2] நாகரிகத்தின் கதை - கீழைநாடுகள் நமக்களித்த சொத்து , வில்தூரன்

[3] பால மரபினர் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் தான் இன்றைய வரலாற்று வரைவின்படி முதன் முதல் தென்படுகின்றனர். எனவே சிலப்பதிகாரம் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னரே எழுதப்பட்டது என்று நம் நாட்டு “முற்போக்கர்கள்” கூறுகின்றனர். வரலாற்றில் அரச மரபுகள் உருவாவதும் மறைவதும் பல நூற்றாண்டுகள் சென்ற பின் மீண்டும் தலை தூக்குவதும் இயல்பே. சோழ மரபே இதற்குச் சிறந்த சான்று. அது போல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டளவில் பால மரபு இருந்தது என்பதற்கு ஒரு சான்றாக சிலப்பதிகாரச் செய்திகயைக் கொள்ள வேண்டும். ஆனால் தமிழ் வரலாற்றாய்வாளர்களின் தாழ்வுணர்ச்சியும் “முற்போக்கர்களின்” தமிழ்ப் பகை உணர்வும் இந்திய வரலாற்றை வளப்படுத்தக் கிடைக்கும் இது போன்ற எத்தனையோ சான்றுகளை வலியுறுத்தாமல் புறக்கணித்து விடுகின்றன. இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் இந்திய வரலாறு எழுதிய சி.எசு.சீனுவாசாச்சாரி, எம்.எசு. இராமசாமி அய்யங்கார் போன்றோர் இவ்வகையில் நம் போற்றுதலுக்குரியோர்.

[4] சிலம்பு. - காட்சிக் காதை

[5] South Indian Rebellion, Dr. Rajayyan.

[6] கவிமணி அவர்களை ஒரு சிறந்த குழந்தைப் பாவலராகத் தான் உலகம் அறியும். ஆனால் அவர் ஒரு சிறந்த வரலாற்றாய்வாளர். குமரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கல்வெட்டுகளை அவரே நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அவர் ஆய்வின் வெளிப்பாடாகத்தான் சேரநாடும் செந்தமிழும் என்ற நூல் பிறந்தது. இன்று புகழ் பெற்று விளங்கும் படூர். பத்மனாபன் அவர்களின் ஆய்வுகளுக்கும் அடித்தளமாய் அமைவது கவிமணி அவர்களின் ஆய்வுகளே. ஏனோ தெரியவில்லை கவிமணி அவர்களை ஒரு வரலாற்றாய்வாளர் என்று உலகுக்கு அறிவிப்பதை அவர் சாதியரான நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் விரும்பவில்லை.

[7] ஊர்த்தலைவர்கள்.

[8] ஆனால் வெளியேயிருந்து அவருடன் தொடர்பு வைத்துக் கொண்டனர். ஆரியர் - திராவிடர் என்ற கோட்பாட்டினால் வெள்ளாளர் திராவிடப் பக்கம் வருகின்றனர். எனவே ஒதுக்கீட்டில் முற்பட்டவர் என்ற வகைப்பாட்டில் அவர்கள் வந்தாலும் பார்ப்பனரல்லாத திராவிடர் என்ற வகையில் திராவிடர் கழகத்தின் ஆதரவு அவர்களுக்கு இருந்தது. முற்பட்ட சாதியாருக்கெதிராக எழுந்த அலையில் வெள்ளாளர்கள் மிகத் திறமையாகச் செயற்பட்டு பதுங்கித் தப்பிவிட்டனர். ஒதுக்கீட்டுக்கு முன்பிருந்த உயர்பதவி வாய்ப்புகளில் அவர்களுக்கு இன்றும் குறைவேதுமில்லை. இருப்பினும் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பாக இரா.சே.ச. விலும் பெரும் பங்கேற்று வருகிறார்கள். இந்த வகையில் திராவிட இயக்கம் சிவனிய வெள்ளார்களின் இயக்கமே என்ற சில மார்க்சியர்களின் கூற்றில் அதிகத் தவறில்லை. இவ்வாசிரியர் பொதுமை என்ற ஏட்டில் எமுதியுள்ள “சிவத்தம்பியின் அரசியற் பின்னணி” என்ற கட்டுரையிலும் விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும் எனும் நூலிலும் மார்க்சியர்களின் இந்தத் திறவாய்வு கடுமையாகச் சாடப்பட்டுள்ளது. அதில் இப்போதும் மாற்றமில்லை. திராவிடர் இயக்கம் தொடங்கி வளர்ந்து தொய்வுற்ற காலத்தில் பொதுமை இயக்கமும் தமிழகத்தில் செயலாற்றி வருகிறது. தமிழகப் பார்ப்பனர்களால் கோட்பாட்டுப் பின்னணி வகுக்கப்பட்டு மேற்சாதியினரால் இயக்கமாக்கப்பட்டு எளிய மக்களின் இயக்கமாக வளர்ந்து வந்த திராவிட இயக்கத்துக்கு உளவியல் ஊக்கம் தந்து அதைச் சரியான பாதையில் திருப்பிவிடாமல் வெளியே நின்று அதன் வேரில் வென்னீருற்றியவர்கள் பொதுமையினரே. இவ்வியக்கம் தன்னிடமிருந்த புரட்சிகரக் கூறுகளனைத்தையும் கைவிட்டுப் பதவி வெறியென்ற ஒன்றன்றி வேறு குறிக்கோளில்லா நிலையை அடைந்தபோது அதனுடன் தேர்தல் கூட்டு வைத்து ஆதாயம் தேடியவர்களும் இதே பொதுமையினரே. தமிழகத்துப் பொதுமையினர் பற்றி அடுத்துவரும் ஓர் அதிகாரத்தில் விரிவாக விளக்குவோம்.

[9] இவ்வாறு மேல் வகுப்புகளிலிருந்து கீழ் நோக்கி இயக்கங்கள் இறங்கும் நிகழ்முறையை லெனின் உருசிய குமுகியல் மக்களாட்சியின் இரு போர்முறைகள்(Two Strategies of Russian Social Democracy) என்ற நூலில் விளக்குகிறார். மேலுள்ள வகுப்புகளை முரண்பாடுள்ள புரட்சிகர வகுப்புகளென்றும் பாட்டாளிய வகுப்பை முரண்பாடில்லா புரட்சிகர வகுப்பென்றும் குறிப்பிடுகிறார். ஒரு முழக்கத்தை அல்லது நிறுவனத்தை குமுகத்திலுள்ள மிகப் பிற்போக்கான வகுப்புகள் கூட ஏற்றுக்கொண்டுவிட்டதென்றால் அம்முழக்கம் காலங்கடந்து விட்டதென்றும் அது தன் புரட்சித் தன்மையை இழந்துவிட்டதென்றும் பொருள். எனவே அடுத்த கட்டத்துக்குரிய மூழகத்துக்கு புரட்சியாளர்கள் முன்னேற வேண்டும் என்கிறார். இதற்கு ஓர் எதிர்நிலை எடுத்துக்காட்டாக இன்றைய தொழிற்கழகங்களையும் பொதுத்துறையையும் கூறலாம்.