13.12.15

சாதி வரலாற்றுக்கு ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 4


சாதி வரலாற்றுக்கு ஒரு பதம்
நாடார்களின் வரலாறு
குமரிமைந்தன்

நுழைவாயில்        
          நாடார் என்ற பட்டப் பெயரில் அ‌‌‌‌‌றியப்படும் சாதி அப் பெயரால் அழைக்கப்படுவது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முடிவடைந்த ஒரு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிகழ்முறையாகும். நாடார் என்பதற்கு நாடன், நாடான் என்ற சொற்களை வேராகக் காட்டுவர். ஆனால் இம் முன்று சொற்களும் வெவ்வேறு காலத்தைச் சேர்ந்தவை, வெவ்வேறு பொருளைக் கொண்டவை. நாடன் என்பது கழக(சங்க)க் காலத்தில் வாழ்ந்த, தன்னாட்சியுடைய குறிஞ்சி ‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலத் தலைவர்களைக் குறிக்கும் சொல்லாகும். நாடான் என்பது பேரரசுச் சோழர், பாண்டியர் காலத்தில் இருந்த தமிழ் நாட்டின் ஆட்சிப் பிரிவுகளாகிய நாடுகளின் ஆட்சிப் பதவியைக் குறிப்பதாகும். நாடார் என்பது பத்தொன்பது - இருபதாம் நூற்றாண்டுகளில் பழக்கத்துக்கு வந்த ஒரு சாதிப் பெய‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ராகும். இது பற்றிய வரலாற்றைத் தடம் பிடித்துப் பார்ப்போம்.

            தமிழகத்தில், குறிப்பாக மதுரையில் நாயக்கர் ஆட்சி உறுதிப்பட்ட நிலையில் அதனைத் தெலுங்கர்களின் ஆதிக்கத்தினுள் கொண்டுவருவதற்கு உதவியவர் தமிழராகிய அரியநாத முதலி ஆவார். அதுவரை ஆட்சிப் பிரிவுக‌‌‌ளாக இருந்த நாடுகளையும் ஆட்சிப் பதவிகளிலிருந்த நாடான்களையும் ஒழிக்கும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டார். எதிர்த்தவர்களைப் படை கொண்டு மு‌‌‌‌‌றியடித்தார். நாடான்களில் சிலர் அவருக்குத் துணையாக நின்றார்கள். அவர்களுக்குக் கூலியாக சில பாளையங்களை ஒதுக்கினார். அவை மறவர் பாளையங்களென்று அழைக்கப்படுகின்றன[1]. முன்பு நாடான் என்ற பட்டம் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் அப் பட்டத்தை ஒழித்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்ததால் பிற்கால ஆவணங்களில் அது முற்றிலும் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது இந்தப் பாளையங்களைப் பெற்றவர்கள், நாட்டை அயலா‌ன் கைப்பற்ற கருங்காலி அரியநாதனுடன் கைகோத்து நின்று காட்டிக்கொடுத்து ஆதாயம் கண்ட நாடான்கள் அல்லாத கூட்டமாக இருக்க வேண்டும்.

            நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் தென்கோடியிலிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடிக்குத் தெற்கேயுள்ள பகுதிகளும் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டைக்குத் தெற்கு, தென்காசி, நான்குனேரி, வட்டங்களின் தெற்குப் பகுதிகள், செங்கோட்டை வட்டம், குமரி மாவட்டப் பகுதி ஆகியவை கேரள அரசர்களின் ஆதிக்கத்தினுள் இருந்தன. எனவே இங்கெல்லாம் நாடுகள் என்ற ஆட்சிப் பிரிவுகளும் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாடான் என்ற பதவிகளும் தொடர்ந்தன. இந்த நாடான்களில் தூத்துக்குடி மாவட்டத்தின் காயாமொழி என்ற ஊரைச் சேர்ந்த ஆதித்தன் வழி‌‌‌‌‌‌‌‌‌யினர், குமரி மாவட்டத்திலுள்ள பொற்றையடி என்ற ஊரைச் சேர்ந்த நாடான்கள் போன்றோர் கேரள அரசர்களிடமிருந்து சிறப்பு விருதுகள் பெற்றவர்கள். ‌‌திருவிதாங்கூர் தமிழ்நாடு பேரவை(காங்கிரசு)க் கட்சியின் தொடக்க காலத் தலைவர்களில் ஒருவராக இருந்து பின்பு பல முறை கட்சி மாறியவரும் இறுதியில் இந்து முன்னணியின் தமிழகத் தலைவராக இருந்தவருமான தாணுலிங்கர் திருவிதாங்கூர் மன்னரிடம் மாறச்சன் என்ற விருது பெற்ற பொற்றையடி நாடான் மரபைச் சேர்ந்தவர்.

            இந்த நாடான்களில் ஒருவர் கூட சாணாராக இருந்திருக்க வாய்ப்பில்லை. செட்டியார்கள் போன்ற மேல் சா‌‌தியினராகத்தான் இருந்திருக்கின்றனர். குமரி மாவட்டத்தின் மேற்கு வட்டங்களில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாயர்கள் கூட நாடான்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

            மேலே குறிப்பிடப்பட்ட நிலப்பகுதிகள், குறிப்பாக கடற்கரையை அடுத்த பகுதிகள், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களின் அரைப் பாலை நிலத்தோடு ஒப்பிடத்தக்க தேரி எனப்படும் மணற்காடுகளும் குமரி மாவட்டத்தில் பாசன வசதியற்ற கரைக்காடுகள் எனப்படுபவையுமாகும். இவற்றில் பனை தவிர வேறு வளம் இருக்கவில்லை. இந்தப் பனைகளில் ஏறிப் பதனீர் எடுப்பதும் அதனைக் காய்ச்சி கருப்பட்டி அல்லது கருப்புக்கட்டி எனப்படும் பனைவெல்லம் செய்வதிலும் பனை ஓலை, நார், மட்டை ஆகியவற்றை அறுவடை செய்வதிலும் அவற்றிலிருந்து பல்வேறு பயன்படு பொருட்களைச் செய்வதிலும் சாணார்கள் ஈடுபட்டு வந்தனர். நாடான்களிடம் அடிமைகள் போல் அவர்கள் வாழ்ந்தனர். அவர்களிடமிருந்து கூலியின்றி ஊழிய‌‌‌மாக கருப்புக்கட்டி, ஓலை முதலியவற்றைத் திருவிதாங்கூர்(திருவிதாங்கோடு) அரசருக்குத் தண்டித் தருவோராக நாடான்கள் செயற்பட்டனர். குமரி ‌‌‌மாவட்டத்தில் வாழ்ந்த முத்துக்குட்டி அடிகளின் ஆணையால் இயற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை இந்த நாடான்களையும் சேர்த்துத்தான் நீசர்கள் என்று குறிப்பிடுகிறது.

            வளமற்ற இந் நிலப் பகுதிகளைப் பற்றி அன்றைய ஆட்சியாளர்கள் அதிகக் கவனம் செலுத்த‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வில்லை. குமரி மாவட்டத்தின் அகத்தீசுவரம் வட்டம் புறத்தாய நாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாயம் என்றால் உரிமை. புறத்தாயம் என்றால் யாரும் உரிமை கோராத பகுதி என்று பொருள் கொள்ளலாம். அந்த வகையில் அவை அரசியல் வெற்றிடங்களாகவே(அரசியல் சூனியப் பகுதிகளாகவே) இருந்தன. இந்த வெற்றிட நிலைமை தமிழகத்தில் நாயக்கர்கள், முகம்மதியர்கள், கன்னடர்கள், வெள்ளையர்கள் ஆகிய படையெடுப்பாளர்களால் தங்கள் இருப்பிடங்களை விட்டு ‌‌‌வெ‌ளியேறிய பல்வேறு வகுப்பு மக்களும் தஞ்சமடையும் இடமாக அதனை மாற்‌‌‌‌‌றியது. இவ்வாறு ஆங்காங்கு குடியேறிய குடும்பங்கள் பெருகிச் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிற்றூர்களாக அவை வடிவம் பெற்ற போது அச் சிற்றூர்களின் தலைவர்களை நாடான்கள் என்றே அழைத்தனர். இந்த நாடான்களை முதல் பற்று(முதப்பத்து)க்காரர், முதலூடி(முதல் வீட்டுக்காரர்) என்றும் அழைத்தனர் (முதல் பற்று = முதல் வரிசை, முதல் மரி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாதை).

            நெல்லை மாவட்டத் தேரிகளில் குடியே‌‌‌‌‌றியவர்களின் வாழ்க்கைக்கு ஒரே வழி பனையேறுவதுதான். பனையிலிருந்து கிடைக்கும் பதனீரில் ஒரு நாள் பதனீர் பனை உடைமை‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாளருக்கும் மறுநாள் பனையேறுபவர்க்கும் என்று ஒருவகை குத்தகை முறை கடைப்‌பிடிக்கப்பட்டது. பதனீரிலிருந்து காய்ச்சப்படும் கருப்புக்கட்டி தவிர பனை ஓலையிலிருந்து நார், குருத்தோலை, முற்றிய ஓலை(சாரவோலை), பனம்பத்தை எனப்படும் அடிப்புற மட்டையிலிருந்து வலிமையான தும்பு, மட்டையிலிருந்து நார், அது தவிர நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு போன்ற துணைப் பொருட்களும் காய்வோலை(காவோலை), காய்ந்த மட்டை போன்ற எரிபொருட்களும் கிடைத்தன. நுங்கை எடுத்த பின் எஞ்சியதைச் சீவி கால்நடைகளுக்ககுத் ‌தீவனமும் ஆக்கலாம். ஆனால் இப் பண்டங்களையும் அவற்றிலிருந்து செய்யப்படும் செய்பொருட்களையும் விற்றால்தான் அப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற முடியும். அதற்கு அப் பொருட்களை ‌‌‌வெ‌ளியே கொண்டுசென்று விற்க வேண்டும். அவ்வாறு ‌‌‌வெ‌ளியே கொண்டு செல்லும் வழியில் இவர்களின் வாழிடத்தை அடுத்திருந்த மறவர்களின் வழிப்பறி முயற்சிகளைச் சந்தித்தாக வேண்டும். இதற்காக அவர்கள் 50, 100 வண்டிகள் சேர்ந்த சாத்துக‌‌‌ளாகப் புறப்பட்டனர். வழிப்ப‌‌‌‌‌றிப்போரை எதிர்த்து நின்று விரட்டியடிக்கும் உடல் வலிமையும் உள்ளத் துணிவும் உள்ளவர்கள்தாம் இந்த வண்டிகளை நடத்திச் செல்ல முடியும்[2]. இவ்வாறு தங்கள் விற்பனைப் பண்டங்களோடு நெடுஞ்செலவு மேற்கொண்ட சாணார்கள் வழியில் உணவு சமைத்து உண்பதற்கும் வண்டி மாடுகளுக்குத் தீவனம் வைக்கவும் ஓய்வு கொள்ளவும் ஆங்காங்கே வண்டிப் பேட்டைகளை நிறுவினர். அத்தகைய வண்டிப் பேட்டைகள் திருநெல்வேலியில் சிந்துபூந்துறை, கோயில்பட்டி, சாத்தூர், சிவகாசி, ‌‌‌‌‌‌‌விருதுநகர். இராசபாளையம், அருப்புக் கோட்டை, கமுதி ஆகிய ஊர்க‌ளில் அமைந்தன. தேனியிலும் இருந்ததாகத் தெரிகிறது.

            வண்டிப் பேட்டைகளைப் பராமரிக்க வண்டிகளை ட்டி வரும் வாணிகர்கள் மகமை என்ற பெயரில் கட்டணம் செலுத்தினர். இந்த மகமைப் பணம் வண்டிப் பேட்டைகளில் மூலதனமாகத் ‌‌திரண்டது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வண்டிகள் பண்டங்களை விற்று திரும்பும் போது அவற்‌‌‌‌‌றில் தம் பகுதி மக்களுக்குத் தேவைப்படும் அனைத்துப் பண்டங்களையும் வாங்கிக்கொண்டு திரும்பின. இவ்வாறு தம் பண்டங்களைக் கொடுத்துத் தமக்குத் தேவையானவற்றைப் பெறும் பண்டமாற்றாகத் தொடங்கிய நிகழ்முறை முறையான வாணிகமாக ‌‌‌மாறியது. வண்டிப் பேட்டைகளில் மகமை மூலம் திரண்ட பணத்திலிருந்து வாணிகர்கள் வட்டிக்குப் பணம் பெற்றனர். இவ்வாறு ஒவ்வொரு வண்டிப் பேட்டையும் பணச் செ‌ழிப்புடன் விளங்கியது. வண்டிப் பேட்டைகள் அமைந்திருந்த ஊர்களைச் சுற்றிலுமுள்ள பகுதிகளின் வாணிக நடுவங்களாக அவை வளர்ந்தன.

            இந்த வாணிக வளர்ச்சி தேரிப் பகுதியிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. ஊர்த் தலைவர்களாக இருந்த நாடான்களின் செல்வநிலையை மிஞ்சியவர்களாக இந்த வாணிகர்கள் வளர்ந்தனர். நாடான்களில் நலிந்து போனவர்கள் இந்தப் புதிய பணக்காரர்களுடன் மணவுறவுகளை ஏற்படுத்தினர். நா‌டான்கள் என்று அழைக்கப்பட்டாலும் இவர்கள் சாணான்கள் என்று அழைக்கப்படும் தம்மூரிலுள்ள பிறரின் சொக்காரர்களே(சொக்காரர் = சொந்தக்காரர் = தாயாதி). எனவே அண்டை ஊரிலுள்ள நாடான்களுடன்தான் இந்தப் புதிய மணவுறவுகள் ஏற்பட்டன. இவ்வாறு நாடான்கள் என்று இவர்களும் தங்களை அழைத்துக் கொண்டனர்.

            சாதிகளின் பெயர் மாற்றங்களுக்கு ஓர் உளவியல் காரணம் உண்டு. ஒவ்வொரு தொழிற்சாதிப் பெயருக்கும் பின்னணியில் அச் சாதியாருக்கென்று ஒரு படிமம் உண்டு. அத் தொழிலிலிருந்து ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விடுபட்டவர்கள் தாம் வெறுத்தொதுக்கிய அந்தப் பழைய தொழில் படிமத்தைத் தம் மீது சுமத்தும் அந்தப் பழைய சாதிப் பெயரை விரும்புவதில்லை. சூழ்நிலைக்குத் தக்கவாறு ஒரு புதிய பெயரைச் சூட்டிக்கொள்கின்றனர். முன்பு இடையர்கள் என்று குறிப்பிடப்பட்ட ஆயர்கள் தங்கள் பெயரைக் கோனார் என்று மாற்றிக்கொண்டனர். கால்நடை வளர்ப்பிலிருந்து விடுபட்டவர்கள் தாசு எனும் அடைமொழியை இடையில் சிலர் தங்கள் பெயரின் பின்னொட்டாகச் சேர்த்துக் கொண்டனர்; இன்று வட இந்தி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாவில் செல்வாக்குடன் விளங்கும் யாதவர் எனும் ஆயர்களின் பட்டத்தைச் சூட்டிக்கொள்கின்றனர். அவ்‌‌வாறே வேளாண்மையிலிருந்து விடுபட்ட பள்ளர் சாதியினர் மருதநிலத் தலைவன் என நம் மரபில் கூறப்படும் இந்திரனை அடிப்படையாக வைத்துத் தேவேந்திரர் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொள்கின்றனர். பள்ளர்களின் ஊர்த் தலைவர் குடும்பன் எனப்படுகிறார். எனவே குடும்பர் என்ற சாதிப்பெயரையும் சூட்டிக் கொள்கின்றனர். தமிழ் இலக்கியங்களில் உழவுத் தொழில், போர்த் தொழில் இரண்டையும் கையாண்ட மருத நில மக்களை மள்ளர் என்று குறிப்பிடும் வழக்கம் இருந்ததை வைத்துத் தங்களை மள்ளர் என்ற பட்டத்துடன் இணைத்துக் கொள்வோரும் உள்ளனர். இவர்களது புதிய சாதிப் பெயர் இன்னும் இறுதி வடிவம் பெறாமலேயே உள்ளது.

            செல்வச் செழிப்பால் ஊர்த் தலைமையைக் குறிக்கும் பட்டப் பெயரைச் சாதிப் பட்டமாகச் சூட்டிக்கொண்ட சூழ்நிலையில்தான் வண்டிப் பேட்டைகளை ஒட்டி உருவான ஊர்களில் வாழ்ந்த சாணார்கள் தங்களை நாடார்கள் என்று குறிப்பிடத் தொடங்கினர். இந்த வகையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆங்காங்கே நாடார் சாதிப் பட்டத்தோடு வாழ்வோரெல்லாம் தென்‌‌ ‌மாவட்டங்களிலிருந்து குடிபெயர்ந்து சென்றவர்களே. இப்படிக் குடிபெயர்ந்து சென்று இவ‌‌ர்கள் வாழும் இடங்களில் கூட அங்கே காலம் காலமாக வாழ்ந்து வரும் பனையேறிகள் சாணார்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.


[1] அவர் உருவாக்கியதாகக் கூறப்படும் 72 பாளையங்களில் 30 முதல் 34 பாளையங்கள் வரை மறவர் பாளையங்கள் என்பது வலைதளத்திலிருந்து பெறப்பட்ட செய்தியாகும்.
[2]   எங்கள் ஊராகிய கீரிவிளையில் வாழ்ந்தவரும் எனக்கு அத்தை முறை உடையவரின் கணவருமாகிய சிதம்பரம் நாடார் அவ்வாறு வண்டிகளின் கடைசியில் செல்பவர் என்று கூறுவார்கள்.

0 மறுமொழிகள்: