28.12.15

சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 9


தாலியறுத்தான் சந்தை:
            முத்துக்குட்டி அடிகளாரின் வாழ்நாளிலேயே நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டம் தோள்சீலைப் போராட்டம். இந்தப் போராட்டத்துக்கு அடிகோலியவர் ஒரு கிறித்துவ மதகுருவின் மனைவியாகிய ஆங்கிலப் பெண் என்று கூறப்படுகிறது. கிறித்துவத்துக்கு மாறியதன் மூலம் தனக்கு அறிமுகமான சாணார்ப் பெண்கள் திறந்த மார்புடன் திரிவதைக் கண்டு அருவருப்படைந்த அந்தப் பெண்மணி தானே குப்பாயம் என்றழைக்கப்படும் ஒரு தளர்வான சட்டையை அவர்களுக்குத் தைத்துக் கொடுத்து அணிவித்தார். இதற்கு நாயர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் தொடர்ச்சியாக, சாணார்ப் பெண்கள் தோளில் உடையணியும் உரிமை வேண்டுமென்ற போராட்டம் தோன்றிப் பரவியது. இந்துச் சாணார்களும் இதில் கலந்துகொண்டனர். போராட்டம் வேகம் பெறவே திருவிதாங்கூர் மன்னர் கிறித்துவ மதகுருமார்களுடன் பேசி கிறித்துவச் சாணார்ப் பெண்கள் மட்டும் தோள்சீலை அணிவதற்கு உரிமையளிக்கப்பட்டது. அந்த உடன்பாட்டைப் பயன்படுத்தி இந்துச் சாணார்ப் பெண்களும் தோள்சீலை அணியத் தொடங்கினர். இதைக் கிறித்துவச் சாணார்கள் எதிர்த்தாகவும் அதன் எதிர்வினையாக இந்துச் சாணார்கள் கிறித்துவச் சாணார்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களது கோயில்களையும் உடைத்தும் தீ வைத்தும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படு‌‌‌கிறது[1]. இறுதியில் வேறு வழியின்றி இந்துச் சாணார்ப் பெண்களும் தோள்சீலை அணிவதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

            தோள்சீலைப் போராட்ட காலத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு சாணார்களின் வாழ்வில் ஒரு புதிய ஏட்டைத் திருப்பியது. பொற்றையடி என்னும் ஊர் அருகில் ஒரு கிழமைச் சந்தை கூடுகிறது. அதில் செட்டியார்கள் வாணிகம் செய்தனர். தோள்சீலைப் போராட்ட காலத்தில் சாணார்ப் பெண்கள் தோள்சீலை அணிந்து வந்ததை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதற்காக அவர்கள் ஆயர்கள் வைத்திருப்பது போன்ற துறட்டி அரிவாளை நீண்ட கழிகளில் பொருத்தித் தொலைவிலிருந்து பின்புறமாக நின்று அந்தத் தோள்சீலைகளைக் களைந்தார்கள். அவ்வாறு களைந்த போது ஒருமுறை ஒரு பெண்ணின் தோள்சீலையோடு அவளது தாலியையும் அறுத்தெடுத்துவிட்டது துறட்டி அரிவாள். இது சாணார்களிடையில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. அதிலிருந்து சாணார்கள் சந்தையினுள் செல்வதைத் தவிர்த்தார்கள். தாங்கள் கொண்டு வந்த பண்டங்களைச் சந்தைக்கு ‌‌‌வெ‌ளியே பரப்பி விற்றனர். தேவையானவற்றை அங்கேயே வாங்கினர். இவ்வாறு ஓர் உழவர் சந்தை உருவானது. விரைவில் செட்டி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யார்களின் வாணிகம் சந்தையில் முடிவுக்கு வந்தது. இப்போது சாணார்கள் சந்தையினுள் வாணிகர்களாக நுழைந்தனர். இன்று சந்தை முழுவதும் அவர்கள் கைக‌ளிலுள்ளது. இந்தச் சந்தை தாலியறுத்தான் சந்தை எனப் பெயர் பெற்றது[2].

மண்ணையும் உழைப்பையும் நம்பிய வளர்ச்சி:
            குமரி மாவட்டத்திலுள்ள வெற்றிலை ‌‌வாணிகம் இலை வாணிகர் எனப்படும் சாதி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாரிடம் இருந்தது. அவர்கள் இன்று உயர்ந்த செல்வ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலையில் உள்ளனர். சென்ற(இருபதாம்) நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈத்தாமொழிப் பகுதியிலுள்ள கீரிவிளை[3] என்ற ஓர் ஊரிலுள்ள சாணார்கள் அவர்களுக்காக மாட்டுவண்டிகளில் களியக்காவிளையிலிருந்து வெற்றிலையை ஏற்றி வந்து கோட்டாறு கூலக்கடைத் தெருவிலுள்ள வெற்றிலை வாணிகர்களுக்கும் வடசேரிக் கனகமூலம் சந்தையிலும் இறக்கிக்கொண்டிருந்தனர். நாளடைவில் அந்த வெற்றிலை வாணிகம் முழுவதும் அவ் வூர்ச் சாணார்களிடம் சென்றது. மாவட்டம் முழுவதும் இது போன்று ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிகழ்ந்திருக்கலாம். இவ்வாறு கூலக்கடைத் தெரு, வடசேரிச் சந்தை ஆகிய இடங்களிலும் வாணிகத்தில் நுழைந்தனர்.

            குமரி மாவட்டத்தில் சாணார்கள் குடியேறிய இடங்கள் வளமற்றவை அல்ல. ஆற்றுப் பாய்ச்சல், குளங்கள் போன்ற பாசன வசதிகள் இல்லாமையால் வளமற்றவை என்று ஒதுக்கப்பட்டவை. பஞ்சத்தாலும் பகையாலும் பின்னர் படையெடுப்பாளர்களோடும் இடம்பெயர்ந்த தெலுங்கு பேசும் மக்கள் பண்படுத்திய கரிசல் மண்ணுக்குக் குறையாத நல்ல வளமான செம்மண் நிலமாகும். அத்துடன் ஆண்டுக்கு ஏறக்குறைய 8 மாதங்களுக்கு ஒரளவு தொடர்ச்சியாக தென் மேற்கு, வட கிழக்குப் பருவ மழைகளின் மூலம் நிறைவான நீர் வளத்துக்கும் குறைவில்லை. இந்த மண்ணில் அவர்கள் குடியேறுவதற்கு முன் என்ன பயிர் செய்யப்பட்டது என்று தெரியவில்லை[4]. ஆனால் இவர்கள் பனையுடன் மா, பலா, புன்னை, புளி, கொல்லமா[5] எனப்படும் முந்திரி மரம் முதலியவற்றை வளர்த்து அவற்றிலிருந்து நல்ல பலன் எடுத்து வந்தனர். ஆண்டுக்கு இரு முறை தோட்டப் பயிறு எனப்படும் பெரும் பயிறு, காணம்(கொள்) முதலியவற்றையும் விளைத்தனர். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விளைபொருட்களைக் கோட்டாற்றுக் கடைத் தெருவிலும் நாஞ்சில் நாட்டில் தலையில் சுமந்தும் விற்றனர். நெல் பயிரிடும் காலங்களில் உழவு மாடுகளுடன் நாஞ்சில் நாடு சென்று தங்கி உழவு வேலை செய்தனர். அறுவடைக் காலங்களில் அறுப்பதற்கென்றும் மாடுகளுடன் அடிப்பதற்கென்றும் தனித் தனிக் குழுக்களாகச் சென்றனர். இவற்றில் ‌‌‌கிடைக்கும் கூலி நெல்லைத் தங்கள் உணவுத் தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டனர். தமிழகத்தின் பிற பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் செய்யும் வேளாண் பணிகளை இவர்கள் செய்தனர். தாங்கள் வாழும் பகுதிகளில் புன்செய் நிலங்களில் வேலை செய்தனர். அவர்கள் மீது வி‌‌திக்கப்பட்டிருந்த எண்ணற்ற தடைகள் அவர்களது செலவினங்களைக் குறைத்து வைத்திருந்தன. கடற்கரையில் இருந்ததால் தாராளமாக கிடைத்த மீன், பதனீர், கருப்புக்கட்டி, பனங்கிழங்கு, பழங்கள், முந்திரிப் பருப்பு, பயிறு வகைகள் என்று அனைத்தும் சத்துமிக்க உணவுப் பண்டங்கள் அதிகச் செலவில்லாமல் கிடைத்தன. எனவே அவர்களிடையில் செல்வம் திரளத் தொடங்கியது.

            குமரி மாவட்டக் கடற்கரையில் இரு பருவ காலங்களிலும் கடற்கரையிலுள்ள மணலைக் காற்று குறிப்பிடத்தக்க தொலைவுக்குக் கொண்டு சென்று தேரிகளை உருவாக்கியிருந்தன. அத்தகைய ஒரு தேரிப்பகுதி தெங்கம்புதூர். அந்த வட்டாரத்தில் முதன்முதலில் தென்னை பயிரிடப்பட்டதால்தான் அவ் வூர் அப் பெயர் பெற்றது போலும். அங்‌‌‌கிருந்து பல கல் தொலைவிலிருக்கும் தேங்காய்ப் பட்டினத்தில் தென்னைப் பயிர் ஏற்கனவே இருந்திருக்கக் கூடும். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாளடைவில் குமரி மாவட்டக் கடற்கரையை ஒட்டிய சாணார் பகுதிகள் முழுவதும் தென்னந் தோப்புகளாயின.

            சாணார்கள் வாழ்ந்த பகுதிகளில் பாசனக் குளங்கள் அருகியே காணப்பட்டன. அங்கு ஆகமக் கோயில்கள், மடங்கள் என்று எதுவும் இருந்ததில்லை. திருவிதாங்கூர் அரசதானி‌‌‌‌‌‌‌‌‌யில் தமிழகத்து வருவாய் ஊருக்கு(கிராமத்துக்கு) இணையான ஆட்சிப் பிரிவு பகுதி எனப்படும்[6]. ஆட்சி அலுவலகம் பகுதிக் கச்சேரி எனப்படும். இந்தப் பகுதிக் கச்சேரி, ஆவணப் பதிவகம், ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காவல் நிலையம், அஞ்சலகம் என்று எதுவுமே சாணார்கள் வாழும் பகுதியில் இருக்காது. வெள்ளாளர்கள் அல்லது வேறு மேல்சாதியினர் வாழ்ந்த இடங்களில்தாம் அவை இருந்தன[7]. இந் நிலையில் திருவிதாங்கூரை ஆண்ட மன்னர்களின் கீழ் அமைச்சர் நிலையிலிருந்த திவான்களில் பலர் தமிழ் நாட்டை அல்லது மைசூர் அரசதா‌னியைச் சேர்ந்த பார்ப்பனர்களாவர். அவர்களின் அறிவுரையுடன் பல மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் முதன்மையானது பேச்சிப்பாறை என்ற அணையைக் கட்டியது. சென்னை மாகாணத்தில் பெரியாற்று அணை கட்டப்பட்ட அதே கால கட்டத்தில் இவ் வணையும் கட்டப்பட்டது. அதன் மூலம் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பெரும் முன்னேற்றங்கள் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிகழ்ந்தன.

            நாஞ்சில் நாடு[8] எனப்படும் குமரி மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதி மலையடிவாரமாகும். இங்கு ஆண்டின் பெரும் பகுதியும் இரு பருவ காலங்களிலும் நல்ல மழை பெய்யும். இந்தப் பகுதி குத்துச் சாய்வாக இருப்பதால் மழைநீர் உடனடியாக ‌‌‌வெ‌ளியேறி விடுகிறது. எனவே இந்த நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதற்காகப் பெரும் எண்ணிக்கையில் சிறு சிறு குளங்களை அமைத்துள்ளனர். ஒரு சென்று பரப்புடன் ஒரு சென்று ஆயக்கட்டு மட்டும் உள்ள பல குளங்கள் பொதுப்பணித்துறையின் ப‌‌திவேடுகளில் உள்ளன. இங்கு மழையை எதிர்பார்த்துக் கோடை காலத்திலேயே நிலத்தை உழுது புழுதியாக்கி அதில் நெல்லை விதைத்து பரம்படித்து வைத்திருப்பர். இதற்குப் பொடி விதை என்று பெயர். மழை விழுந்ததும் விதை முளைத்துவிடும். மழை நீர் குளங்களில் தேங்கிப் பயிர் வளர்வதற்கு உதவும். மழை தப்பினால் விதைத்த விதை வீணாகும். இந்த இடையூறு நாஞ்சில் நாடு புத்தனாறு வாய்க்கால், புதிதாகக் கட்டப்பட்ட அணையிலிருந்து வெட்டப்பட்ட அனந்தனாறு வாய்க்கால் தோவாளை வாய்க்கால் ஆகியவற்றின் மூலம் நேரடியாகவும் குளங்களுக்கு நீரை வழங்குவதன் மூலமும் நீக்கப்பட்டது. இவ்வாறு பழைய நன்செய் நிலங்கள் பயனடைந்தன. தனி வாய்க்கால்கள் மூலம் புதிதாகப் புன்செய் நிலங்களும் நன்செய்களாயின. இந்தப் புது ஆயக்கட்டுகள் பெரும்பாலும் சாணார்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே உருவாயின. இவ் வாய்க்கால்களின் நீரைக் கொண்டு[9] பக்கத்‌‌திலிருந்த மேட்டு நிலங்களில் தென்னையும் பயிரிடப்பட்டது. இவ்வாறு தென்னையும் நெற்பயிரும் சாணார்களின் பொருளியல் வலிமையை மேலும் உயர்த்தின. இதன் விளைவாக ஊர் நா‌டான்களுக்கு இணையாகவும் மேலாகவும் பல புதிய பணக்காரர்கள் உருவாயினர். இதனால் நாங்களும் நாடான்கள்தாம் என்ற உரிமைக் குரல் சாணார்களிடமிருந்து எழுந்தது.



[1] செய்தியளித்தவர் புலவர் கு.பச்சைமால்‌.
                இது தமிழ்நாட்டுச் சாதியமைப்பில் உள்ள ஓர் அடிப்படைப் பண்பாகும். சாதிகளிடையில் மட்டுமல்ல. ஒரு சாதியின் உட்பிரிவுகளிடையில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் கூட மிக நுண்மையாகக் கடைப்பிடிப்பது நம் பண்பாடு”. பல சாதிகளில் பிழுக்கை” என்றொரு பிரிவு உண்டு. பிழுக்கை என்றால் மலக்கழிவு. ஒரு சாதியிலிருந்து அச் சாதியினரின் ஒழுக்கங்களை மீறியவர்கள் என்பதற்காக ஒதுக்கப்பட்டோரும் அவர் வழி வந்தோரும் அந்த அடைமொழியால் பிழுக்கைச் சாணான், பிழுக்கை மறவன் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். மறவர்களில் சிறுதாலி என்பவர்கள் பிழுக்கைகள்தான் என்று கூறப்படுகிறது. இந்தப் பிழுக்கைகளுடன் முதன்மைச் சாதியினர் உறவுகளைப் பேணுவதில்லை. அதே நேரம் அந்தக் குறிப்பிட்ட சாதியை விடத் “தாழ்ந்த” சாதியினர் இந்தப் பிழுக்கைகளுக்கும் அதே மதிப்பைக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் வழமையான முறையில் தண்டிக்கப்படுவர். சாணார்களிடையில் குறிப்பாகக் குமரி மாவட்டத்தில் பிழுக்கைச் சாணார்கள் இப்போது பிறருடன் இரண்டறக் கலந்து விட்டனர். அதே நேரத்தில் சீர்திருத்தக் கிறித்துவர்கள், பழஞ்சவைக் கிறித்துவர்கள், இந்துக்கள் என்ற இறங்கு வரிசையில் உட்பிரிவு உணர்வுகள் உள்ளன. கிறித்துவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ள பள்ளர், பறையர்களிடையிலும் இந்த வரிசை முறை நடைமுறையிலுள்ளது. இந்த வரிசை முறையில் இரு வரிசைகளில் உள்ளவர்களிடையில் மணவுறவு ஏற்பட்டால் கீழ் வரிசையிலுள்ளவர் மேல் வரிசையிலுள்ளவர் மதத்துக்கு மாறுவது எழுதப்படாத சட்டமாக உள்ளது. 
[2] இந்தச் செய்தியைக் கூறியவர் திரு. கேசவன் தம்பி ஆவார். தமிழகச் சமூக வரலாற்றுக் கழகம்(தசவகம்) என்ற, இந் நூலாசிரியர் உருவாக்கிய அமைப்பின் கலந்தாய்வு ஒன்றில் அவர் இச் செய்தியைக் கூறினார். தசவகம் இப்போது செயற்படவில்லை.
                கிறித்துவர்கள்தாம் தோள்சீலைப் போராட்டத்தைத் தொடங்கினர் என்பதைச் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. குமரி மாவட்டத்திலிருந்து நெல்லை மாவட்டத்துக்கு(பாண்டிக்கு) பனையேறப் போவோர் அங்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாமையைக் கண்டு இந்த இயக்கத்தை தாலியறுத்தான் சந்தையில் தொடங்கினர் என்று அண்மையில் ஒருவர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆக இரு முனைகளிலுமிருந்து இது துவங்கிகியது என்று கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
[3] நூலாசிரியரின் சொந்த ஊர் இதுதான்.
[4] ஏழூர்ச் செட்டியார்கள் என்பவர்களிடம் இந்த நிலங்கள் இருந்திருக்கலாம் என்று நாம் ஓரளவு உய்த்துணர முடிகிறது. சென்ற தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் அழகோடும் நல்ல உயர்ந்த நடையுடையோடும் காணப்படும் ஒரு பெண்ணைப் பார்த்தால் அவள் செட்டிச்சி போல்” இருப்பதாகக் கூறுவார்கள். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பார்ப்பாத்தி போல்” இருப்பதாகக் கூறுவார்கள். அதற்கு ஒப்பானது இது. இன்றைய மணிகட்டிப் பொட்டல் கூடச் செட்டியார்களிடம் இருந்ததாகக் கேள்வி.
[5]கொல்லமா என்பதன் பொருள் துறைமுகமாக இருந்த கொல்லத்தின் மூலமாக வந்த மாமரம் என்பது, அயல்நாட்டு மரம் என்பது. சீமை(சேய்மை) என்ற அடைமொழிக்கும் இதுதான் பொருள். நாட்டு மாமரம் நல்லமா எனப்பட்டது. அது போல் கருமிளகை நல்ல மிளகு என்றும் செம்மிளகை(மிளகாய்) கொல்ல மிளகு என்றும் கூறுவது வழக்கம். பிற மரக்கனிகளைப் போலில்லாமல் வெளியே முந்தித் தெரிவதால் முந்தி தெரி கொட்டை என்பது முந்திரிக் கொட்டை எனத் திரிந்து அந்த மரத்துக்கும் ஆகி வழங்குகிறது.

[6] திருவிதாங்கூரில் தமிழகத்தைப் போல் துணை வட்டம் எனப்படும் பிர்க்காக்கள் கிடையாது. பகுதிக்கு அடுத்தது வட்டம்தான். பகுதிக் கச்சேரி ஒரு முழுமையான அலுவலகமாகச் செயற்பட்டது. பகுதிக் கச்சேரியின் தலைமை அதிகாரி பார்வத்தியக்காரர் எனப்பட்டார். அவருக்குக் கீழே ஒரு கணக்கர், ஓர் அலுவலக உதவியாளர், இரு சங்கிலியாட்கள் உண்டு. இவர்கள் அனைவரும் ஓய்வூதிய உரிமையுள்ள முழு நேர அரசூழியர்கள். பார்வத்தியக்காரருக்கு அலுவலகச் சீருடையும் உண்டு என்று கூறப்படுகிறது. வெள்ளை வேட்டி, சிப்பா எனப்படும் முழுக்கைச் சட்டை, துப்பட்டா எனப்படும் சரிகைக் கரையுள்ள விசிறி மடிப்பு மேலாடையைக் கழுத்திலிருந்து இரு புறங்களிலும் தொங்கலாக அணிதல்தான் இந்தச் சீருடை. முன்னாள் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களில் சிலரும் இந்தச் சீருடையை அணிந்திருந்தனர்.
                அதே நேரம் தமிழக வருவாய்த் துறையில் ஊர் என்ற அலகின் ஆட்சிமுறை மன்னராட்சிக் கால நிலக்கிழமை வடிவம் கொண்டது. இங்கு எந்தப் பொறுப்பும் அரசுப் பணி என்ற மதிப்பைப் பெறவில்லை. கணக்குகளைப் பராமரிக்கும் கணக்குப் பிள்ளை(கர்ணம்)க்கு அரசின் ஊதியம் கிடையாது. ஊர் மக்களிடம் பெறும் இனாம் அல்லது மாமூல் எனப்படும் கைக்கூலிதான் அவர்களின் வருவாய். அல்லது எழுத்தறிவு இல்லாத மக்களிடம் பொய் சொல்லித் தண்ட வேண்டும். கணக்குப் பிள்ளை என்ற வகையில் அவர் எழுதி மேலதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டிய பதிவேடுகள், பட்டியல்கள், அறிக்கைகள் பல இருந்தன. அப் பணிகளை அவர்கள் தனியாக நிறைவேற்ற முடியாது. அதற்காகக் கூலிக்கு ஆட்களை அமர்த்த வேண்டும். அதற்கும் ஊராரிடமிருந்து பெறப்படும் கைக்கூலியைக் கொண்டுதான் செலவிட வேண்டும். வரிப் பணத்தைத் தண்டுவதற்கென்று அமர்த்தப்படும் நாட்டாண்மை எனப்படும் மணியக்காரர் ஊரில் உள்ள செல்வாக்கான சாதியைக் சேர்ந்த செல்வம் படைத்தவராக இருப்பார். அவருக்கும் சம்பளம் கிடையாது. உள்ளுர் வழக்குகளை உசாவித் தீர்க்கும் நடுவர் அதிகாரம் அவருக்கு உண்டு. ஒருவரைத் தளையிடும் முன் காவல்துறையினர் நாட்டாண்மைக்கு அறிவிப்பார். கொலை, தற்கொலை போன்ற நிகழ்வுகளைக் காவல்துறைக்குத் தெரிவிக்கும் பொறுப்பும் அவருக்கு உண்டு. இந்த அதிகாரங்களைப் பயன்படுத்திப் பல வகைகளில் அவர் பயன் பெற முடியும். காவல் பணிகள் செய்யும் தலையாரியும் நீர்நிலைகளைக் கண்காணிக்கும் வெட்டியானும் கூட அரசுச் சம்பளம் இல்லாமல் கைக்கூலியால் வாழ்வோரே. கணக்குப் பிள்ளைகளும் நாட்டாண்மைகளும் மேற்சாதிகளை அல்லது அவ் வூரிலுள்ள ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்தவர்கள். தலையாரிகள் பிற்பட்ட சாதிகளில் போர்ச்சாதிகள்” எனப்படும் பிரிவினைச் சேர்ந்தவர்கள். வெட்டியான்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர். இந்தப் பதவிகள் மரபு வழியில் வருபவை. தகுந்த ஆண் மரபு வழியில் கிடைக்கவில்லை என்றால்தான் புதியவர்கள் அமர்த்தப்படுவர். இவ்வாறு மன்னராட்சிக் காலத்துக்கு உரியதும் சாதியடிப்படையில் அமைந்ததுமான ஓர் ஆட்சி அலகுடன் மக்களாட்சி” என்று தவறாக அழைக்கப்படும் பாராளுமன்ற முறையினுள் தமிழகம் நுழைந்தது. இந்த அமைப்பை ஆங்கிலர் மாற்ற விரும்பவில்லை. வழிவழியாக வந்த இந்தத் தண்டல் முறை அவர்களுக்கு எளிதாகவே இருந்தது. ஆண்டுதோறும் வட்டங்களில் உள்ள தண்டல் கணக்குகளைச் சரிபார்ப்பதற்காக நடத்தப்படும் சமாபந்தி” எனப்படும் தணிக்கை நிகழ்ச்சிகளில் கூட பட்டயம்(பட்டா) மாற்றுதல், வருவாய்த் துறையினருக்குக் கைக்கூலியாகிய நிலையான வருவாயைத் தரும் தரிசுப் புறம்போக்கு நிலங்களை மக்களின் பயனுக்கு விட்டுத் தண்டத் தீர்வை விதித்தல் போன்ற மக்களின் வேண்டுகைகளுக்குத் தீர்வு காணுதல் என்ற பெயரில் வாங்கப்படும் கைக்கூலியே செலவுகளை ஈடுகட்டியதால் ஊர்களின் ஆள்வினையில் ஆட்சியாளருக்கு எந்தச் செலவும் இருக்கவில்லை. ஆனால் மன்னர்கள் ஆண்ட சமத்தானமான திருவிதாங்கூர் அரசர்கள் இத் துறையில் முற்போக்கான நிலையிலிருந்தனர். இந்த வேறுபாட்டை உணர்ந்து, திருவிதாங்கூரிலிருந்து விடுபட்டுத் தமிழகத்துடன் இணைந்த குமரி மாவட்டத்தில் நிலவிய ஊர் ஆள்வினை முறையைத் தமிழகத்தினுள் புகுத்த எண்ணிய ஒரே அரசியல் தலைவர் கருணாநிதியின் ஆட்சியில் வருவாய்த் துறை அமைச்சராயிருந்த .மதியழகனே. இத் திட்டத்தைச் செயற்படுத்த நினைத்திருந்த நேரத்தில் கருணாநிதிக்கும் .கோ.இரா.வுக்கும் இடையில் எழுந்த அரசியல் புயலில் அவர் அடித்துச்செல்லப்பட்டார். ஆங்கிலரால் புகுத்தப்பட்டிருந்த வருவாய் வாரியம் என்ற அரசு அமைப்பைக் கலைத்ததோடு அவரது பணி நின்று போய்விட்டது. பின்னர் ஒரு குறிப்பிட்ட கணக்குப் பிள்ளையின் செயற்பாட்டால் ஏற்பட்ட எரிச்சலில் .கோ.இரா. தன் ஆட்சிக் காலத்தில் மரபு வழி கணக்குப் பிள்ளைகளையும் மணியக்காரர்களையும் ஒரே அரசாணை மூலம் ஒழித்துவிட்டு ஓய்வூதியம் பெறும் அரசூழியர்களாக ஊர் ஆள்வினை அலுவலர்களை அமர்த்தினார். ஊர்களின் அடிப்படையான ஆள்வினைகளில் அடிப்படை மாற்றங்கள் செய்யப்படவில்லையாயினும் இது தன்னளவில் ஒரு முற்போக்கு நடவடிக்கையே. ஆனால் இதனையும் குற்றம் சொல்லி, பழைய மரபு வழிக் கணக்குப் பிள்ளைகளையும் மணியக்காரர்களையும் மீட்கவேண்டும் என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர் சில அறிஞர்கள்”. இவர்களுக்குக் கருணாநிதியின் ஆதரவு உண்டு.
            திருவிதாங்கூரில் மலையாளமே ஆட்சி மொழியாக விளங்கியது. அதில் பல தூய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டன. களத்தில் நிலம் அளத்தல், உசாவுதல் என்று அனைத்துவகை புலானாய்வுகளையும் கண்டெழுத்து என்றனர். வரிகளுக்குக் கரம் என்றும் பற்றுச்சீட்டுகளுக்குக் கச்சாத்து(கைச்சாற்று) எனவும் சொற்கள் இருந்தன. அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு வழங்கப்படும் ஈட்டுத் தொகை பொன் விலை எனப்பட்டது. சொத்துப் பட்டயம் தண்டல் பெயர் என வழங்கப்பட்டது. பட்டயம் மாற்றுதல் தண்டல் பெயர் மாற்றுதல் எனப்பட்டது.
[7] மன்னன் மார்த்தாண்ட வர்மன் ஆட்சிக்கட்டில் ஏறிய பின்னர், ஆட்சியைக் கைப்பற்றும் தன் போராட்டத்தில் தன் பக்கம் சாராமல் மரபைக் காரணம் காட்டித் தன் மாமன் மகன்கள் பக்கம் நின்ற நாடான்களின் அதிகாரங்களைப் பறித்து ஆங்காங்கே நாஞ்சில்நாட்டு வெள்ளாளர் குடியிருப்புகளை உருவாக்கி அங்கு இவ் வலுவலகங்களை நிறுவி அவற்றில் அவ் வெள்ளாளர்களை அதிகாரிகளாக அமர்த்தினான் என்ற செய்தியை எழுத்தாளர் நண்பர் பொன்னீலன் அவர்கள் 02 - 09 - 2008 அன்றைய உரையாடலின் போது கூறினார். 
[8] நாஞ்சில் = கலப்பை. கோட்டை என்றும் பொருள் உண்டு. நாஞ்சில் நாட்டின் மூன்று புறங்களிலும் கோட்டை போல் மலைகள் சூழ்ந்துள்ளதால் அப் பெயர் வந்தது என்ற விளக்கம் பொருத்தமாகவே தோன்றுகிறது.
 [9] பொதுவாகத் தென்னை மரங்களுக்கு நிலையான பாசனம் தேவையில்லை. பிள்ளைப் பருவத்தில் நீர் விட்டால் போதுமானது.     நிலத்தடியில் 30 அடி ஆழம் வரையுள்ள நீரை வேரை விட்டு உறிஞ்சும் ‌திறன் கொண்டது தென்னை.

0 மறுமொழிகள்: