13.12.15

சாதி வரலாற்றுக்கு ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 2


முனைவர் தி. கருணாகரன்
மேனாள் துணைவேந்தர்,
காந்திகிராமம் நிகர்நிலைப் பல்கலைக் கழகம்.

            சுவடிகளின் சுவடுகளைப் பின்பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்களுக்கு இணையாக தமிழ் நிலப்பரப்பையும் குமுகாய நீரோட்டங்களையும் உணர்ந்த ஒரு இயல் பொறியியலர் ஏற்படுத்திய இந்த ஆராய்ச்சிக் குறிப்பு ஒரு மாறுபட்ட சிந்தனைப் பாதையை நமக்குக் காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது.

            நான் உண்மை விரும்பியாக இருப்பினும் ஒரு வாழும் சமுதாயத்துக்குத் தேவையான புதுத் திசைகளைத் தேடும் அறிஞர்களை மிக மதிக்கிறேன். இந்தக் கண்ணோட்டத்தில் திரு.குமரிமைந்தன் அவர்களுடைய ஆய்வுமுறை சிந்தனையைக் கிளறுவதாகவும் சீர்மிகு சமுதாயக் கனவுகளால் உந்தப்பட்டதாகவும் துணிச்சலுடையதாகவும் துடிப்புடையதாகவும் எனக்குத் தோன்றுகிறது. ஆங்காங்கே கரடுமுரடாகத் தோன்றும் கணிப்புகளுக்கு உரமூட்ட பயிற்சி பெற்ற ஆய்வாளர்களின் முயற்சிகள் தேவைப்படும் என்றும் தோன்றுகிறது.

            பொதுவாகத் தமிழறிஞர்கள் முதலில் தமிழர்களைப் பிரித்துக் காட்டுவார்கள்; பின்பு படிப்படியாக தம் நிலம், தம் இனம் என்று குறுகிய வட்டங்களுக்குள்ளும் பிரதேசவாதச் சிக்கல்களெனும் பொந்துகளுக்குள்ளும் போய்ப் பதுங்கிக் கொள்வர். ஆனால், பிரிவினை வாதங்களை அழித்து ஒழிக்கும் எதிர்வாதங்கள் ஏராளம் அடங்கிய இந்த ஆய்வுக் குறிப்பு சாதியத்தை வேரோடு ஒழிக்கும் வழி தேடும் என் போன்றோருக்கு ஒரு மகிழ்ச்சி தரும் கருத்துக் கருவூலம். ஆசிரியர் எதை நிறுவ விழைகிறார் என்பதை முதலில் தெரிந்துகொள்வது நூலைப் புரிந்துகொள்ளும் முயற்சியை எளிதாக்கும்.

            ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தின் மக்களில் வெளியிலிருந்து வந்தவர்கள் தவிர்த்த பிறரனைவரும் ஒரே குழுவினரே என்பதையும் வெளியிலிருந்து வந்தோரில் அயல் மண்ணில் தங்கள் வேர்கள் எதுவும் மிஞ்சாமல் தமிழகத்தில் மட்டுமே வேரைக் கொண்டோரும் கூடத் தமிழ் மக்களே என்பதையும் உணரலாம் என்ற தொடக்கவுரைக் குறிப்பும் ஒரு முதலாளியப் புரட்சியைக் கண்டு மனிதனை மனிதன் மதிக்கும் முழுமையான மக்களாட்சியை நோக்கி இட்டுச்செல்லும் நோக்கத்தோடுதான் சாதி வரலாறுகளின் போலிமையைத் தோலுரித்துக் காட்டத் துணிந்தேன் என்ற அவரது கூற்றும் இந்த வகையில் நமது கணிப்புகளுக்கு வழிகாட்டுபவையாக உள்ளன.

            ஆசிரியர் தனது இரண்டு குறிக்கோள்களை நிறுவும் நோக்கத்தோடு தென் தமிழ்நாட்டு நாடார் வரலாற்றின் சில பரிமாணங்களைத் தொடுகிறார். நாடாரின் முழு வரலாற்றையோ அல்லது சாதிய வரலாறுகளின் அனைத்துப் பரிமாணங்களையோ இந்தச் சிறு நூலுக்குள் எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றமடைவார்கள்.

            வெவ்வேறு சமூகங்கள் தத்தம் தொழிலடிப்படையில் சாதிகளின் பெயர் பெற்றார்கள் என்றாலும் சாதி என்பது ஒரு மனிதக் குழுவினர் இன்னொரு பகுதியினரைச் சுரண்டிச் சுக வாழ்வமைக்கும் முயற்சியின் ஒரு உத்தியாக அமைந்திருப்பதை வரலாறு காட்டுகிறது. தென் திருவிதாங்கூர் வரலாறோ வேதங்களின் பெயரால் அரசை அண்டி வாழ்ந்து ஆதிக்கம் செலுத்தும் தம் நோக்கத்தில் சில வகுப்பினர் சாதி என்னும் மாய வலையை எப்படியெல்லாம் விரித்து எப்படியெல்லாம் வெற்றி பெற்றார்கள் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. விவேகானந்தர் பைத்தியம் பிடித்தவர்களின் உறைவிடம் என்று புகழ்மாலை சூட்டிய திருவிதாங்கூர் கடந்த நூற்றைம்பது ஆண்டு வரலாற்றில் ஒரு முன்னோடிச் சமுதாயமாக இந்தியத் துணைக் கண்டத்தின் முன் நிற்கிறது. அந்த வரலாற்றின் ஒரு பகுதியாகத் தென்னக நாடாரின் எழுச்சி வரலாறு அமைந்திருப்பதை இந்த நூலாசிரியர் ஓரளவு தெளிவாகக் காட்டுகிறார். அதோடு நிற்காமல் சாதியத் தடைகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்ட இந்த வகுப்பினர் சாதியை ஒழிக்கும் சமரத்தில் ஒரு அடிப்படை உந்து சக்தியாகும் வல்லமையுடைவர்கள் என்பதைப் பல கண்ணோட்டங்களில் ஆய்ந்து வாசகர்கள் முன் வைக்கிறார்.

எடுத்துக்காட்டாக...

  • நாடார்கள் தங்கள் சமூக முயற்சியில் ஏற்படுத்திய கல்விக் கூடங்களிலெல்லாம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தகுந்த வாய்ப்புக்களைத் தந்த வரலாறு.

  • பெரியாரின் சாதி மேலாதிக்க எதிர்ப்புப் புரட்சியில் நாடார் சமூகத்தினர் முன் நின்ற வரலாறு... இவற்றுக்கெல்லாம் வரலாற்று வழிகாட்டியாகப் பாதிக்கப்பட்ட பதினெட்டு நலிந்த சாதிகளையும் இணைத்துப் போர்க்குரல் கொடுத்த வைகுண்டநாதரின் வரலாறு ... அவரால் நிகழ்ந்த புனரமைப்பு மற்றும் சுயச் சீர்திருத்த முயற்சிகள் ... அதனால் அகிலம் ஒன்று எனத் திரண்டு எழும் ஒன்றுபட்ட சமூகக் கற்பனையின் காட்சி. அவதாரத் தோன்றலாக இன்று தமிழகத்தின் ஒரு கோடி மக்கள் வழிபடும் வைகுண்டரை ஆசிரியர் ஒரு சமூகப் போராளியாகவும் சமூகச் சிற்பியாகவும் காட்டுவது இந்த முன்னோடிச் சமூகமும் வேத மந்திர மாய வலைகளில் சிக்கி மற்ற எளியோரைச் சுரண்டும் ஆற்றலாக மாறிவிடாமல் தடுக்கும் முயற்சியாக இருக்கலாம். ஆனால் இந்த முயற்சியில் ஆங்காங்கே அவர் கொள்ளும் கருத்துக்கள் புதுமையான சிந்தனைத் திசையைக் காட்டினாலும் ஏதோ ஒரு எழுத்தாளரின் கருத்தை அடிப்படையாக்கிச் சற்றுக் குறைத்துக் கூறுவது போல் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக வைகுண்டர் திருவிதாங்கூர் மன்னரைச் சந்தித்தபோது என்னென்ன பேசி எந்த உடன்படிக்கை எடுத்திருப்பார் என்பதெல்லாம் கொஞ்சம் அத்துமீறிய கற்பனையாகத் தோன்றுகிறது.

நூலாசிரியர் சாதிகள் மாறி வந்துள்ளன என்பதைக் காட்டுவதில் பெருத்த அளவில் வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறவேண்டும். அதோடு இந்தச் சாதி மாற்ற நாடகத்தில் பொருளாதாரக் காரணிகள் எப்படிப் பிணைந்து செயல்பட்டன என்பதைக் காட்டுவதில் நல்ல அணுகுமுறையைக் கையாண்டுள்ளார்.

            குமரி மாவட்டத்தில் நாடான் குடும்பங்கள் பொருளாதாரத்தில் மேம்பட்ட சாணார்களோடு மண உறவுகள் கொண்டதையும் காலப்போக்கில் நாடான்கள், நாடார்கள் என்பவையெல்லாம் வேறுபாடற்றுப் போயின என்பதெல்லாம் வேடிக்கை நிறைந்த வரலாற்று உண்மைகளாகத் தரப்பட்டுள்ளன.

            இந்த மாற்றங்களுக்கெல்லாம் தொழில்நுட்பம்(technology) ஒரு காரணியாக இருந்ததை ஆசிரியர் மிக விறுவிறுப்பான வரலாற்றுண்மையாகக் காட்டுகிறார். அதோடு தொழில்நுட்பத்திலிருந்து வணிக ஆதிக்கம் ஏற்பட்டதையும் வணிக ஆதிக்கத்திலிருந்து அரசியல் ஆதிக்கமும் ஏற்பட்டதையும் காட்டுவதில் ஹார்டுக்ரேவின் நூலின் ஆய்வுத் திசையை உறுதி செய்வது போல் வாசகர்கள் இட்டுச் செல்லப்படுகின்றனர்.

            சாதி வரலாறுகளின் ஒரு பதமாக நாடார்களின் வரலாற்றைச் சமைக்கும் ஆசிரியர் தமிழகத்தின் ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டத்தை மிகத் தெளிவாகக் காட்ட முயல்கிறார். அதாவது பிற சில நலிந்த வகுப்பினரும் தத்தம் எழுச்சிக்காகத் துடிக்கும் காட்சிதான் அது. அந்த வகுப்பினருக்கு வழிகாட்டுவோருக்கு ஆசிரியர் சில எச்சரிக்கைகளைச் சுட்டுவது படிப்போருக்குத் தெளிவாகத் தெரிகிறது.

            அதாவது ... ஒரு பாதை மிக எளிதான பாதை... அதாவது தன் சாதியே தலையானது என்று சாதி வரலாறுகளைப் புனைந்து தம்பட்டம் அடித்துக் கொள்வது. அது இன்று தமிழகத்தின் சாதியடிப்படையில், மதநெறி அடிப்படையில் அரசியல் அணிவகுப்புகள் நடத்த முயல்வோருக்குக் கைவந்த கலை. ஆனால் வெறும் ஓட்டாளிகளாகப் பயன்படுத்தப்பட்டு இறுதியில் அவர்கள் ஓட்டாண்டிகளாக நடுத் தெருவில் விடப்படலாம். அல்லது சாதிய அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்ட மடிந்த மனித இன மாதிரிகளாகலாம். இது உலகெங்கிலும் இனத் தனித்துவம்(ethnic identity) என்று நிலவும் காட்சி. இன்னொரு பாதை, பழமையை மறந்து புதுத் தொழில்நுட்பம், புதுப் பொருளாதாரம் இவைகள் தரும் புது சமூக உறவுகளில் ஒவ்வொரு சமூகமும் தனக்கேற்ற தனியிடத்தைப் பெறும் சமத்துவ உரிமையை நிலைநாட்டுவது.

            இதில் இரண்டாவது பாதை நடைமுறை சாத்தியமானது என்று நிறுவும் ஆசிரியர் இதை மீறும் போது தமிழகத்துக்கு ஏற்படப்போகும் அரசியல் ஆபத்துக்களையும் அலசி ஆய்கிறார். சில பல புது அரசியல் குழுவங்களில் அவர்களின் சிந்தனைகளின் ஓட்டங்களை அடிக்கோடிட்டுக் காட்டும் ஆசிரியர், பதவி ஆசையால் தமிழகத்தைத் துண்டுபடுத்தும் தீய சக்திகள் எப்படிக் காத்துக்கிடக்கின்றன என்று எச்சரிக்கிறார்.

            இந்தக் கட்டத்தில் வரலாற்று நூல்கள் செய்யத்தகுந்த ஒரு நல்ல காரியத்தையும் சுட்டிக் காட்டுகிறது இந்த ‌நூல். அதாவது எல்லாச் சாதியும் தன் துவக்கம் என்ன என்று தேடும்போது கிட்டத்தட்ட ஒரேவிதமான கற்பனையில்தான் சிக்குகின்றன. எடுத்துக்காட்டாக, ஏழு கன்னியர்கள் வழிவந்த வரலாறு நாடார்கள் வரலாற்றில் மட்டுமல்ல எத்தனையோ சாதிகளில் வருகின்றன.

            அண்மையில் நான் அதிலாபாத் எனும் தெலிங்கானாப் பகுதிக்குச் சென்றிருந்தேன். கைவினைஞர்களின் ஒருங்கிணைப்புச் சக்தியாக இன்று இந்தியாவில் குருஜீ என்ற பெயரில் வழங்கும் சர்மா என்பவர் தலைமையில் கைவினைக் கலைஞரின் பரம்பரை வரலாற்றுக் காவியங்கள் நூற்றுக் கணக்கில் இருப்பது பற்றி அறிஞர்கள் பொழிந்து கொண்டிருந்தனர். அங்கே ஒரு கேள்வி கேட்டேன். இந்த மாதிரி வரலாறுகளால் என்ன நன்மை? மனிதக் குழுவங்களை தனித்தனியே பிரித்து வைக்கும் சக்தியாக அது வளர்ந்து விட்டால்? என்ற கேள்வியை எழுப்பினேன்.

            அதற்கு சர்மா அவர்கள் ஒரு அற்புதமான பதில் கூறினார். கிட்டத்தட்ட (தெலுங்கிலமைந்துள்ள) நூற்றறுபது புராணங்களைப் பார்த்ததில் எல்லாமே ஒரே மாதிரிதான் அமைந்திருக்கிறது. அந்த முறையில் அது ஒரு ஒற்றுமைக்கு வழிகோலுவதாகவும் கருதலாமே? என்று. ஆனால் அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்குப் பிடிபடுகிற சங்கதியா இது?

பாதை எது?
பயணம் எது?
எடுத்துக்காட்டு எது?

ஆசிரியருடைய அற்புதமான சிந்தனைகள் இதோ‌...

            இன்று தமிழகம் முழுவதும் பொருளியல் பற்றிய சிந்தனை இல்லாத பணம் படைத்த மக்கள் ஒரு கோடியிலும் கல்வி கற்கவோ பிழைக்கவோ வழியற்ற பெரும்பான்மை மக்கள் இன்னொரு கோடியிலும் ஒப்பற்ற இயற்கை வளமும் மனித ஆற்றலும் செயலற்ற நிலையில் இடையிலுமாக தேங்கி நிற்கின்றன. இந்தத் தேக்கத்தை உடைத்து அனைத்து வளங்களும் மனித ஆற்றலும் செயற்பட்டு மக்களின் கல்வி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம், பண்பாடு ஆகியவை மேம்பாடடைந்து உண்மையான மக்களாட்சி என்ற திசையில் தமிழகத்தை நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பும் தேவையும் இன்றைய இளைய தலைமுறைக்கு உண்டு. இந்த முயற்சிகளின் குறுக்கே நிற்கும் ஆட்சியாளர்களையும் ஆதிக்க விசைகளையும் முறியடித்துத் தம் குறிக்கோளை அவர்கள் எய்த வேண்டும்...

            நாடார்கள் என்ற சாதிப்பெயரில் அறியப்படும் சாணார்களின் கடந்த 200 ஆண்டுக்கால வரலாறு தமிழகத்தின் பிற ஒடுக்கப்பட்ட சாதியினர் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்கு நல்வழி காட்டும் கூறுகளை முற்பகுதியிலும் ஒரு சாதி மட்டும் தனித்து ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடியாது, தாம் வாழும் நிலத்திலுள்ள பிற மக்களோடு இணைந்து ஒரே மக்களாகத்தான் அந்த எல்லைக்கு அப்பால் செல்ல முடியும் என்ற எதிர்காலப் பாடத்தையும் கொண்டுள்ளது.

            வாழ்நாள் முழவதும் சாதிக்கு வெளியே, சமயத்துக்கு மேலே உலகக் குடிமகனாக இளைஞர்கள் வளர வழிகாட்டத் துடிக்கும் என் போன்றோர்க்கு இந்தச் சிறு நூல் சாதியை அழிக்கும் ஒரு போர்க்கருவியாக உணரப்பட வேண்டும் என்ற பேராசை இருக்கத்தான் செய்கிறது.

நாகர்கோயில்,                                                                                                முனைவர் தி. கருணாகரன்.
02-06-2008.

0 மறுமொழிகள்: