13.12.15

சாதி வரலாற்றுக்கு ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 3


சாதி வரலாற்றுக்கு ஒரு பதம்
நாடார்களின் வரலாறு
குமரிமைந்தன்

 அறிமுகம்

          திருச்சியிலிருந்து ‌‌‌வெ‌ளிவரும் நம் வேர்கள் என்ற இதழில் (தி.பி.2032, மீனம் - கடகம்), சபரிமலை ஐயப்பன் பாண்டியர் வழி வந்த ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சான்றோர் குலத்தவனே என்ற தலைப்பில் இளந்தோட்டம் சுகுமாரன் என்பவர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். சாதித் தலைவர்கள், தங்கள் சாதியினர் அரச மரபுகளின் வழி வந்தவர்கள் என்று வரலாறு எழுதுவது 19ஆம் நூற்றண்டின் முற்பாதியிலிருந்து தொடங்கிய ஒரு நடவடிக்கை என்று கூறலாம். அதைத் தொடங்கி வைத்தவர்கள் நாடார்கள்தாம் என்று தெரிகிறது. இன்று ஒவ்வொரு சாதியினரும் அதே தடத்தில் தங்கள் ‘வரலாறுகளை எழுதிவிட்டனர். ஒவ்வொரு சாதியிலுமுள்ள படிப்பாளிக‌ளின் சிந்தனைகளும் இன்று தம்மைச் சார்ந்த மக்களின் வாழ்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலையை, அவர்களது பண்பாட்டை, எதிர்கால வாழ்வை எவ்வாறு உயர்த்துவது என்ற திசைகளில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிறிதளவும் செல்லாமல் எந்தப் பண்டை இலக்கியத்திலிருந்து, கல்வெட்டிலிருந்து, பட்டயத்திலிருந்து, கதைப் பாடலிலிருந்து அல்லது சொல்வழக்கிலிருந்து தாங்கள் அரச மரபுகளைச் சேர்ந்தவர்கள் என்பதை நிறுவுவது என்பதிலேயே செலவிடப்படுகின்றன. இதற்காகப் பெரும் பணமும் உழைப்பும் செலவிடப்படுகின்றன. ஒவ்வொருவரும் தத்தமக்கென்று சில சொற்களை வைத்துக் கொண்டே இந்தச் சித்து ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விளையாட்டில் இறங்கியுள்ளனர். உலகமறியா இளைஞர்களும் ஆண்ட மர‌பில் வந்த தாங்களும் பிற சாதியினரால் வஞ்சிக்கப்படுகிறோம் என்ற தவறான கருத்தை மண்டையில் ஏற்றிச் சாதிவெறியர்களாக ‌‌‌மாறி இத் தலைவர்களுக்குத் துணைபோகிறார்கள். மக்களின் ஆற்றல் ஒன்றோடொன்று மோதி ஒட்டுமொத்த ஆற்றலும் அழிந்துபோகிறது. இது ‌‌‌வெ‌ளியிலிருந்து நம்மை ஒடுக்கி, சுரண்டி, கொள்ளையடித்து நம் மீது ஆதிக்கம் செலுத்தும் விசைகளுக்கு மிக உதவியாக உள்ளது. இவ்வாறு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சாதி அடிப்படையில் மக்களைப் பிளவு படுத்துவதற்குத் தவறான வரலாறுகளைக் கற்பிப்பவர்கள் தாங்கள் அறிந்தோ அறி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாமலோ இவ் ‌‌‌வெ‌ளி விசைகளுக்குத் துணை போகிறவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

            இந்த அடிப்படையில் 19ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி இன்று ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாடார் என்ற சாதிப் பெயரால் அழைக்கப்படும் சாணார்கள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடத்திய இடைவிடாப் போராட்டம் பற்றியும் சாதிப் பெயரில் ஏற்பட்ட ‌‌‌மாற்றத்தைப் பற்றியும் ஓர் ஆய்வு செய்து உண்மைகளை ‌‌‌வெ‌ளிப்படுத்தினால் பிற சாதிகளின் உண்மை வரலாறுகளை அறிந்து கொள்ள ஒரு வழி பிறக்கும் என்பதாலும் அவர்களுக்கும் பிறருக்கும் எதிர்காலத்தில் நடைபோட வேண்டிய பாதை குறித்த தெளிவு பிறக்கும் என்பதாலும் நாடார்களின் வரலாறு பற்றிய ஒரு விரிவான ‌‌திறனாய்வாக இச் சிறு நூல் எழுதப்பட்டது. படித்துப் பார்த்து நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டி இவ் ‌‌வாய்வைச் செழுமைப்படுத்த தமிழக மக்கள் மீது பரிவுடையோரைக் கேட்டுக் கொள்கிறேன்.

0 மறுமொழிகள்: