திராவிட மாயை - 12
3.அண்ணன் காட்டியவழி
திராவிடக்
கழகத்தில் இருக்கும் போதே, தமிழ்நாட்டுப் பொருளியல் தனிமங்கள் கட்சியை விட்டு
வெளியேறிய பிறகு, அண்ணாத்துரையின் பணத்தோட்டம் என்ற நூல் வெளிவந்தது.
அந்த நூலின் உள்ளடக்கம் என்னவென்றால்
- அந்தக் காலகட்டத்தில் நாட்டில் பெரும் செல்வப் பெருக்கம் மக்களிடம் இருந்தது. அதைப் பயன்படுத்தி சென்னை மாகாணத்தில் அதாவது “திராவிடத்”தில் வடக்கத்தி முதலாளியர் புதிய வங்கிகளைத் திறந்தும் பழைய வங்கிகளின் கிளைகளைத் திறந்தும் காப்பீட்டு நிறுவனங்களைத் திறந்தும் மக்களிடமிருந்து பணத்தைத் திரட்டி அதனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். தங்கள் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகின்றனர். “திராவிடத்தில்” உள்ள செல்வர்கள் கோயில்களுக்கு உலாச் சென்றும் குடமுழுக்கு, திருப்பணிகளிலும் தங்கள் செல்வத்தையும் பாழாக்கி மக்களையும் அத்திசையில் மடை திருப்புகிறார்கள் என்பது.
[இன்று பனியாக்களே தேசிய தற்பணி மன்றம்(ஆர். எசு. எசு.) போன்றவற்றை
வளர்த்து மதவெறியைக் கிளப்பி மதக் கலவரங்களை உருவாக்கியும் சாதிகளின் அடிப்படையில்
குமரி மாவட்டத்தில் 1982இல் நடைபெற்ற கலவரத்துக்கு மதச் சாயம் பூசியது[1]
போன்றும் மதவெறியேற்றி வைத்துள்ளனர். இதனால் தமிழக மக்களுடைய பணம் முழுவதும் சமய
நிகழ்ச்சிகளில் கரியாகும் நிகழ்முறையைத் தூண்டிவிட்டுள்ளனர்.]
- வடநாட்டார் தொழில்களில் எத்தனை கோடிகள் முதலீடு செய்துள்ளனர் என்ற புள்ளிக் கணக்குகளைக் கொடுத்து “திராவிட நாட்”டார் முதலீடுகள் எவ்வளவு இரங்கத்தக்க நிலையில் இருக்கிறது என்பதை விளக்குகிறார்.
இன்று அதைவிட நிலைமை சீரழிந்து
போயுள்ளது என்பதை அந் நூலைப் படித்து இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால்
விளங்கும்.
- நெசவு ஆலைகளைப் பற்றிய அலசல்: 1947 இல் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பிரகாசம் கொண்டு வந்ததொரு திட்டத்தைப் பற்றியது. சென்னை மாகாணத்தில் இனி நூல் நூற்கும் ஆலைகளுக்கான கதிர்களின் எண்ணிக்கையைக் கூட்ட முடியாது; அதற்குப் பகரம் வீடுதோறும் கைராட்டைகள் கதர்த் துணிகளில் நூல் நூற்று நெய்யவும் வேண்டும் என்பதாகும் அது. அதே நேரத்தில் வட இந்தியாவில் அன்றைய மதிப்பில் 100 கோடி உரூபாவுக்குப் புதிய நெசவாலைக் கருவிகள் வாங்க தில்லி அரசு வெளிநாடுகளுக்குக் குழுவை விடுத்திருக்கிறது என்பதாகும். நடுவிலும் சென்னையிலும் பேரவைக் கட்சியினரே ஆட்சியில் இருந்துள்ளனர்.
இந்தத் திட்டத்தைப் பல
தரப்பினரும் குறிப்பாகப் பேரவைக் கட்சியினர் பலர் கண்டித்துள்ளனர். ஆனால்
முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை. துணிகளைப் பொறுத்தவரை இந்தியாவை மூன்று
மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அந்தந்த மண்டலங்களுக்கு அந்தந்த மண்டலத்திலுள்ள
ஆலைகளே துணித் தேவையை நிறைவேற்ற வேண்டும். பம்பாய் மண்டலத்தினுள் இருந்தது சென்னை.
சென்னையில் ஆலை வளர்ச்சியைத் தடுத்துவிட்டால் அதன் தேவைகளை நிறைவேற்ற பம்பாய்
ஆலைகளால்தான் முடியும். அங்குள்ள மாநில அரசு பிரகாசத்தைப் போல் ஆலைகளின்
வளர்ச்சியைத் தடுக்கவில்லை. அவர்களுக்காகத்தான் 100 கோடி உரூபாவுக்குக் கருவிகள்
வாங்க இருக்கிறார்கள். இவ்வாறு பேரவை ஆட்சியில் வடநாட்டு முதலாளிகளின்
மேலாளுமைக்காகச் சென்னையின் வளர்ச்சி முடமாக்கப்பட்டது.
எடுத்துக்காட்டுக்காகத்தான் சவளித்துறை. அனைத்துத் துறைகளிலும் நிலைமை இதுதான்.
- தில்லி அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதற்கு ஒரு சான்று, பிர்லா குமுமத்துக்கு சேர்க்கை நெய்(வனசுப்பதி) அதாவது பதப்படுத்தப்பட்ட நிலைத்திணை(தாவர) எண்ணெய் ஆலை தொடங்குவது குறித்து. தமிழகத்திலிருந்து பலரும் இசைவு கோரியிருந்தனராம். அவை புறக்கணிக்கப்பட்டு பிர்லாவுக்கு வழங்கப்பட்டது. இது பற்றி இதழாளர்கள் முதலைமைச்சரைக் கேட்ட போது அவர்கள் வரி கட்டுவார்களே என்றாராம். ஏன் சென்னை மாகாணத்தினருக்குக் கொடுத்திருக்கலாமே, அவர்களும் வரி கட்டுவார்களே என்று கேட்டதற்கு பிர்லா குழுமத்துக்குத் தாங்கள் இசைவு தரவில்லை என்றும் தில்லிதான் தந்துள்ளது என்றும் கூறியிருக்கிறார். அப்படியானால் “விடுதலை”க்கு முன்பே தில்லியில் பேரவைக் கட்சியின் ஆட்சி பனியாக்களின் அரசாகச் செயல்படத் தொடங்கிவிட்டதென்றும் அதன் அறிவுரைப்படிதான் பிரகாசம் செயல்பட்டார் என்பதும் புரிகிறது.
- வட நாட்டு முதலைகள் அப்போதே வெளிநாடுகளிலும் தங்கள் பொருளியல் நடவடிக்கைகளை விரிவுப்படுத்த அந்நாடுகளுக்குச் சுற்றுச் செலவு சென்று வருவதைச் சுட்டிக் காட்டுகிறார். அதன் விளைவுதான் இன்று உலகளவில் வடநாட்டினர் பெரும் பணக்காரர்களாக வளர்ந்துள்ளது.
- இறுதியில் அண்ணாத்துரை ஒரு குட்டிக் கரணம் அடிக்கிறார், முதலாளிகளை வளர்க்காமல் நிகர்மை அரசை அமைக்க வேண்டுமென்று. அதைக் கூறுவதற்கு முன் அவர் ஒரு செய்தியைத் தருகிறார்:
அப்போது
தில்லியில் பண அமைச்சராக இருந்த ஆர்.கே. சண்முகம்(செட்டியார்) பாராளுமன்றத்தில்
முன்வைத்த ஒரு சட்ட முன்வரைவு பற்றியது அது. அடிப்படைத் தொழிற் சாலைகளுக்குப் பண
உதவி செய்வதற்காக தொழிலியல் பணவழங்கல் கழகம் (Industrial Finance Corporation)
எனும் பண நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது அதன் நோக்கம்.
இதன்
மொத்த மூலதனம் ஐந்து கோடி உரூபாய். உரூ. 25,000 வீதம்
2000 பங்குகள். இந்திய அரசு 400, ஏம வங்கி 400, எஞ்சிய 1200 பங்குகளும்
முதலாளிகளுக்கும் அவர்கள் ஆதிக்கத்திலுள்ள வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கும்.
மற்றவருடைய முதலீட்டைத் திருப்பிக் கொடுக்கவும் 2½% ஆதாயத்தில் பங்களிக்கவும் இந்திய அரசு
உறுதியளிக்கிறது.
20 கோடிக்குக் கடன்
பத்திரங்கள் வெளியீடு. அதனைத் திரும்பச் செலுத்தவும் வட்டி கொடுக்கவும் அரசு
பொறுப்பு. 10கோடி வரையில் நீண்டகாலச் சேமிப்புக்கு வகை. எந் நாட்டவரும் இதில் பணம்
சேமிக்கலாம்.
இதன் இயக்குநர்கள் 11 பேர்.
இந்திய அரசு சார்பில் 2. தொழில் அரசர்களையே இயக்குநர்களாகக் கொண்ட ஏம வங்கியின்
சார்பில் மூவர். முதலாளிகளின் கைப்பிடியிலுள்ள வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள்
சார்பில் ஐவர். இதன் நிர்வாக இயக்குநரை ஏம வங்கி இயக்குநர்களின் இசைவுடன் அரசு
அமர்த்தும். அதாவது இந்த பண நிறுவனத்தை வடக்கிலுள்ள பண முதலைகளே இயக்குவர் என்பது
இதன் உள்ளடக்கம்.
இந்தச்
செய்திகளைத் தந்த பின்னர்தான் அண்ணாத்துரை முதலாளியத்துக்கு இனி எதிர்காலமில்லை
என்று சொல்லி பண அமைச்சரையும் நேருவையும் குறை கூறி முடிக்கிறார் நூலை.
தில்லியில்
இருக்கும் அரசு திட்டமிட்டு நெசவாலைகளைத் தமிழகத்தில் அழித்து வடக்கில் வளர்த்து
வருவதிலிருந்தும் தொழில்கள் தொடங்க தமிழக முனைவோரைப் புறக்கணித்து வடக்கத்தி பனியாக்களுக்கு
உரிமம் வழங்குவதிலிருந்தும் அதன் ஓராங்கிய(பக்கஞ் சார்ந்த) மனநிலை தெளிவாகத்
தெரிகிறது. ஒரு வளர்ச்சி நிதியை ஏற்படுத்தி பணப்பொறுப்புகள் அனைத்தையும் தானே
ஏற்றுக்கொண்டு ஆள்விளைப் பொறுப்புகளை வடநாட்டு முதலாளிகளிடம் விட்ட தில்லி அரசு
நிகர்மை என்ற பெயரில் வங்கிகளையும் பிற பண நிறுவனங்களையும் கைப்பற்றி அவற்றையும்
வடநாட்டு முதலைகள் கையில்தான் ஒப்படைக்கும் என்பது மாபெரும் மேதையான
அண்ணாத்துரைக்குத் தெரியாமலா இருக்கும்? இறுதியில் இந்திய உயிர்க் காப்பீட்டு
நிறுவனத்தை நேருவும் தமிழக முனைவோர்களிடமிருந்த வங்கிகளையும் இந்திராவும் அரசுடைமை ஆக்கியபின் அதுதானே நடந்தது! அவைதாமே கடன்
கொடுத்து மீனாட்சி ஆலை, இந்தியா சிமென்று நிறுவனம் ஆகியவற்றைப் பிடுங்கி
பனியாக்களிடம் கொடுத்தன? அதாவது தமிழகத் தேசியப் பொருளியலைத்
துடைத்து அழிக்கும் இந்திய பனியா - பார்சி அரசின் செயல்களுக்கு அண்ணன் அன்றே உத்தி
வகுத்துக் கொடுத்திருக்கிறார்.
அந்த
நூலில் சென்னை மாகாணத்தின் பொருளியல் நடவடிக்கைகளை முற்றிலும் அழிக்க
வெளிப்படையாகச் செயல்படும் பேரவைக் கட்சியின் தில்லி அரசையும் அதன் உறுப்பாகிய
சென்னை அரசையும் எதிர்த்தும் தென்னக மக்களுக்கு உரிய பொருளியல் பங்கைக் கேட்கும்
போராட்டம் நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைக்காமல் நிகர்மைக் குமுகம் என்று
கைகாட்டிவிட்டுப் போனது அண்ணாத்துரை, அவரது “அறிவு ஆசான்”
பெரியார் ஆகியோர் தமிழர்களுக்குச் செய்த பச்சை இரண்டகம். அப்போதே அவர்கள்
கூட்டுச்சேர்ந்து பனியாக்களுக்குத் தமிழர்களின் நலன்களை விற்றுவிட்டார்கள் என்பது
தெரிகிறது. இந்தியைத் திணிக்கிறார்கள், தமிழ் அழிந்து போகும் அல்லது ஆங்கிலம்
இல்லாமல் போகும் என்று கூப்பாடு போட்டு 1938இலும் 1948இலும் இரண்டுமுறை போராட்டம்
நடத்தி தமிழகத்தையே கலக்கியவர்கள் இப்போது மட்டும் பொருளியல் களத்தில் இப்படித்
திசைதிருப்பியது ஏன்?
நூலின்
இறுதிப் பகுதி தவிர நூல் முழுவதும் தென்னக மக்களுக்குப் பேரவை அரசு செய்துவரும்
இரண்டகங்களையும் திட்டமிட்ட பொருளியல் ஒடுக்குமுறைகளையும் வெளிச்சம் போட்டுக்
காட்டிய இந்த நூல் வெளிவந்த பின் திராவிடர் கழகத் தொண்டர்களிடமிருந்தோ இரண்டாம்
நிலைத் தலைவர்களிடமிருந்தோ ஆர்வலர்களிடமிருந்தோ போராட வேண்டும் என்ற கருத்து ஏன்
வெளித்தோன்றவில்லை. அப்படி என்றால் இந்தக் கருத்து, அதாவது பொருளியல் ஒடுக்குமுறை,
ஒதுக்குமுறை என்ற கணிப்பு தவறென்று பொருளா?
இல்லை,
இல்லவே இல்லை. உண்மையில் அன்று பொருளியல் வலிமையும் பொருளியல் களத்தில் ஈடுபாடும்
கொண்டவர்கள் அனைவரையும் தன் வஞ்சக நடவடிக்கைகளால் பெரியார் தன் கூட்டாளிகளுடன்
சேர்ந்து இயக்கத்தை விட்டே துரத்திவிட்டார். இயக்கத்தின் குறிக்கோள்கள் இப்போது
பார்ப்பனர்களைத் திட்டுவது, கோயில்களையும் சாமிகளையும் தொன்மங்களையும்
குறைசொல்வது, ஒதுக்கீடு பற்றிப் பேசுவது என்பனவாகவே சுருங்கிவிட்டிருந்தன.
அதனாலும் கொஞ்ச நஞ்சமிருந்த கொள்கைப் பிடிப்பு உள்ள தொண்டர்களும் தலைவர்களும்
கட்சியை விட்டு விலகிவிட்டனர். எனவே இப்போது தலைவர்களுக்கும் பனியாக்களுக்கும் ஒரே
கொண்டாட்டம்.
நிலையான
அமைதியோ சமநிலையோ கிடையாதுதானே. அண்ணாத்துரையின் நூல் தமிழகத்தில் ஒரு பரபரப்பை
ஏற்படுத்தியது என்பதில் ஐயமில்லை. எனவே அவர் பனியாக்களின் கவனத்தை ஈர்த்தார்.
அவர்களது பின்புலம் அவருக்குக் கிடைக்கும் நிலை உருவாயிற்று. இப்போது கூட்டுப்புழு
கூட்டை உடைத்து வெளியே வர வேண்டியதுதான். அந்த வேலையை அண்ணாத்துரை தொடங்கியே
விட்டார். இந்திய விடுதலை நாளைத் துயர நாளாகக் கொண்டாட வேண்டும் என்ற பெரியாரின்
அறிக்கைக்கு மறுப்புத் தெரிவித்ததிலிருந்து குறுக்குச்சால் ஓட்டும் செயல்
வெளிப்படையாகத் தெரிகிறது. அதன் பிறகு அண்ணாத்துரை கட்சியின் நடவடிக்கைகளிலிருந்து
விலகியே இருந்தார். 1948 அக்டோபர் 23, 24 நாட்களில் ஈரோடையில் நடந்த திராவிடர்
கழகத் தனி மாநாட்டில் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். அப்பொழுது கழகத்தை
நடத்திச்செல்லும் பொறுப்பை அண்ணாத்துரையிடம் ஒப்படைப்பதாகப் பெரியார் அறிவித்தார்[2].
இதனால்
எதுவும் பயன் இருக்காது, சவுந்திரபாண்டியனுக்கு நடந்ததுதான் தனக்கும் நடக்கும் என்பது
அண்ணாத்துரைக்கு நன்றாகவே தெரியும். எனவே அவர் இயக்கத்திலுள்ள ஆற்றலும் கொள்கைத்
தெளிவும் ஊக்கமும் திறமையும் உள்ளவர்களைத் தன் பக்கம் சேர்க்கும் வேலையைச்
செய்துகொண்டிருந்தார்.
இறுதியாகக் கூட்டை உடைக்கப்
பெரியாரே முன்வந்தார் 09 - 07 - 1949 அன்று நடந்த தன் திருமணத்தின்
மூலம். “கண்ணீர் சிந்தி வெளியேறுகிறோம்” என்று மேடை நாடகத்தை நாட்டில் நடத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தை
அண்ணன் 17 - 09 - 1949 அன்று தொடங்கினார்.
அண்ணன்
திறமை அளப்பரியது. கொள்கையில் மாறுபாடில்லை என்றார், இரட்டைக் குழல் துப்பாக்கி
என்றார். தொண்டர்களுக்கு மகிழ்ச்சி, நெகிழ்ச்சி.
அது
மட்டுமல்ல, “கண்ணீர் சிந்திக் கொண்டே வெளியேறுகிறோம்” என்றார். இச் சொல்லை வைத்து தி.மு.க. வினரைக் “கண்ணீர்த்
துளிகள்” என்ற பட்டப் பெயர் மூலமே பெரியார் அழைத்து வந்தார்.
ஒரு
கட்சியைப் புதிதாக் கட்டி அமைத்து வழி நடத்திச் செல்வது மிகக் கடினமான பணி. அதற்கு
ஏராளமான பணம் வேண்டும். தொண்டர் படை வேண்டும். தொண்டர்கள் இருந்தாலும் இயக்கம்
நடத்துவதற்கு அவர்களுக்கும் சிறிதளவாவது கட்சியின் பண உதவி தேவைப்படும்.
புத்தகங்கள் எழுதுவதில் கிடைக்கும் உரிமைக் கட்டணம், நன்கொடைகள் தண்டுவது
ஆகியவற்றால் மட்டும் ஒரு புதிய கட்சியை வளர்ந்துவிட முடியாது. தமிழக வரலாற்றை
எடுத்துக்கொண்டால் நயன்மைக் கட்சியைக் கட்டி வளர்ப்பதற்கு பி.தியாகராயர்,
டி.எம்.நாயர் போன்ற பெரும் செல்வப் பின்னணி உள்ளவர்கள் ஈகங்கள் செய்ய வேண்டி
இருந்தது. இணையாட்சி அரசர்கள், இடையாட்சியாளர்களின் பணப் பின்னணியும் இருந்தது.
நாடார்களின் ஆள் வலிமையும் பணப் பின்னணியும் இருந்தன. சம்பத்தால் தன் கட்சியை
வைத்துப் பேண முடியவில்லை. வைக்கோ கிடைத்த பணத்தை எல்லாம் தானே
சுருட்டிக்கொண்டதால் கட்சி தேங்கிப் போய்விட்டது. இன்று தங்களுடைய வலிமையான பணப்
பின்னணியுடன் அரசியல் மேடையில் ஏறி நிற்கும் திரை நடிகர்களுக்குக் கூட வெளியிலுள்ள
பெரிய கட்சிகளின் மறைமுகத் தாங்கல் இருப்பதாகப் பேசப்படுகிறது.
பேரவைக் கட்சியிலிருந்து வெளியேறிய வி.பி.சிங். சிறிது சிறிதாக ஓர் இயக்கத்தைக்
கட்டியெழுப்பி மக்கள் நடுவில் கொண்டுசெல்லும் நோக்கத்துடன் மக்கள் முன்னணி
(சன மோர்ச்சா) என்ற இயக்கத்தைத் தொடங்கியிருந்த நேரத்தில் கூட்டணி என்ற மாயமானைக்
காட்டி அவரை அணைத்து அழித்து தங்கள் உண்மையான நட்பாகிய பேரவைக் கட்சிக்குப்
பணிபுரிந்தனர் மார்க்சியப் பொதுமைக் கட்சியினர்.
இது போன்ற
இடர்ப்பாடுகளைத் தாண்டி வெற்றியுடன் வெளிப்பட்டவர்கள் திரை நடிகர்களான
ம.கோ.இரா.வும் என்.டி.இராமராவும்தாம்.
இவர்களுக்கு
முன்பே இதனை நிகழ்த்திக் காட்டியவர் அண்ணாத்துரை. நயன்மைக் கட்சி,
தன்மான இயக்கம், நாடார் மகாசன சங்கம் ஆகிய இயக்கங்கள் 32 ஆண்டுகளாகப் பாடுபட்டுக்
கட்டி எழுப்பிய, சிற்றூர்கள் வரையிலான கிளைகளுடான ஒரு கட்டமைப்பு அவருக்கு
ஆயத்தமாக இருந்தது. அத்துடன் பனியாக்களின் பின்னணியும் கிடைத்தது. அதற்கு
அடிப்படைக் காரணம் அவரது பணத்தோட்டம்தான். அதில் அண்ணாத்துரையின் இரட்டை
உரு தெளிவாக வெளிப்பட்டிருப்பதுதான். அவர் பொதுமை என்ற சொல்லைக் கையாளவில்லை.
நிகர்மை என்ற அமெரிக்கச் சார்புச் சொல்லைப் பயன்படுத்தியிருப்பதுதான். ஏனென்றால்
1953இல் தாலின் சாகும் வரை உலகப் பொதுமைக் கட்சிகளின் செயல்
திட்டம் ஆயுதப் புரட்சி மூலம் பொதுமைக் குமுகத்தை அமைப்பதாகும்.
பணத்தோட்டத்தைப்
படித்த “திராவிடர்” இயக்கத்திலுள்ள இளைஞர்கள் சென்னை மாகாணத்தின் பொருளியல்
உரிமைகளை பனியாக்களிடமிருந்து மீட்டுத்தரப் போகிறார்கள் என்று மனமார நம்பினார்கள்.
அந்தச் சூழலில் அண்ணாத்துரை வெளியேறியதும் மிகப்பெரும் நம்பிக்கைகளோடும்
ஆர்வத்தோடும் செயல்துடிப்போடும் அவர்கள் தி.மு.க.வைக் கட்டி எழுப்பினர்.
1952 ஆண்டு
திட்டமிட்ட வளர்ச்சி என்ற பெயரில் சுவீடன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த
இருவரின் கருத்துரைகளின் அடிப்படையில் வகுக்கப்பட்ட ஓர் ஐந்தாண்டுத் திட்டத்தை
ஐரோப்பாவின் செல்லப் பிள்ளை என்று சரியாகவே அழைக்கப்பட்ட நேரு தொடங்கிவைத்தார்.
இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட அண்ணாத்துரை ஐந்தாண்டுத் திட்டங்களில் “திராவிடத்து”க்கு உரிய பங்கைத் தரவேண்டும் என்ற வேண்டுகையை முன்வைத்தார். ஐந்தாண்டுத் திட்டத்தில் “திராவிடத்துக்கு” 1000
கோடி உரூபாய் ஒதுக்கினால் “திராவிட நாடு” “பிரிவினை” குறிக்கோளைக் கை
விட்டுவிடுவதாகக் கூட அண்ணன் ஒருமுறை கூறினார். இதை எதிர்த்து பேரவைக் கட்சி
வாதிட இவர்களது “லாவணி”யில் பனியாக்களின் பொருளியல் ஆதிக்கம்
பற்றிய உரையாடல் ஓசைப்படாமல் கைநழுவிப் போய்விட்டது. பொதுமைக் கட்சியினரின்
வளர்ச்சியைத் தடுப்பதற்கென்று திட்டமிட்டே தி.மு.க.வைத் தாக்கி மேடைகளில் பேசினர்
பேரவைக் கட்சியினர். இவ்வாறு தி.மு.க. மீது மக்களின் கவனத்தைத் திருப்பினர்.
பொருளியல்
உரிமைகளைப் பற்றி மேடைகளில் முழங்கியும் இதழ்களில் “வீர வச்சனம்”
எழுதியும் வந்த தி.மு.க. தலைவர்கள் அதற்காக எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை.
இவர்கள் மூச்சுக்கு முன்னூறு முறை மனம்போன போக்கில் குல்லூகப் பட்டர் போன்ற
வசைமொழிகளால் “போற்றும்”
ஆச்சாரியாரின் கூற்று ஒன்று குறித்து பொருளற்றது(Nonsense) என்ற நேருவின் சொல்லைக்
காட்டி, திராவிடத்தின் மானமே போய்விட்டது என்று ஒரு போராட்டம், பனியாவான டால்மியா திருச்சி மாவட்டத்தில் நிறுவியிருந்த சிமென்று
ஆலைக்குப் பக்கத்தில் இருக்கும் தொடர்வண்டி நிலையத்துக்கு டால்மியாபுரம் என்ற
பெயர் வைத்திருப்பதை எதிர்த்து கருணாநிதி தொடர்வண்டி மறியல், இந்தி எதிர்ப்பு
என்று ஒரு மும்முனைப் போராட்டம் நடத்தினர். டால்மியா சிமென்று ஆலையைத்
தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு, அவர்களது மொழியில் “திராவிடர்”களுக்கு மாற்றிக் கொடுங்கள் என்று கேட்கவேயில்லை. இவ்வாறு தங்களை நம்பி
உயிரையும் ஈகம் செய்ய ஆயத்தமாயிருந்த தொண்டர்களை மயக்கி ஏமாற்றினர்.
இந்த
வகையில் பேரவைக் கட்சி, பொதுமைக் கட்சி, தி.க., தி.மு.க. ஆகிய நான்கும்
தங்களுக்குள் சண்டை போட்டுப் பெரும் சந்தடியை உருவாக்கி மக்களைக் குழப்பத்தில்
ஆழ்த்தி தங்கள் கூட்டாளியான வட நாட்டுப் பனியாக்களுக்கு வளமான ஒரு களத்தை
அமைத்துக் கொடுத்தனர்.
1950களின்
இறுதியில் இந்த ஆசிரியர் சென்னையில் படித்துக் கொண்டிருந்த போது அங்குள்ள
பனியாக்கள் வாழ்ந்து வந்த செளக்கார்பேட்டையிலும் செனாய் நகரிலும் தாக்குதல்
நடக்கும் என்று பனியாக்கள் அஞ்சும் அளவுக்கு திராவிட இயக்கங்களின் வாய்ச்
சவடால்களால் மக்கள் உணர்ச்சி வயப்பட்டிருந்தனர். எனவே பனியாக்கள் இவ்விரு
பகுதிகளைச் சுற்றிலும் கோட்டைச் சுவர் எழுப்ப இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.
தலைவர்களுக்குப் பணம் அள்ள இது எவ்வளவு வாய்ப்பு? அப்புறம் அந்த அச்சம் நீங்கி
அவர்கள் சென்னையை விட்டு வெளியிலும் தமிழகத்து நகரங்களில் பரவத் தொடங்கியது எந்த
அடிப்படையில்? எந்தத் துணிவில்?
“கட்டு,
கட்டாக இருக்க பிட்டை நாய் கொண்டுபோனது போல்” என்று குமரி
மாவட்டத்தில் ஒரு சொலவடை உண்டு. அதற்கு ஓர் அருமையான சான்றாக அண்ணாத்துரையின் பணத்தோட்டமும்
கட்சியின் கொள்கையும் நடைமுறைகளும் இருந்தன. அதாவது கட்சியின் கொள்கைகளைக் கண்டு
மக்கள் ஏமாந்தனர். நடைமுறையில் எதிரிகளுடன் தலைவர்கள் கள்ள உறவு வைத்துக்
கொள்கைகளை விற்றுக் காசாக்கினர். அண்ணன் ஏதோ நேர்மையாக இருந்தது போலவும் தந்தையும்
தம்பியும்தான் தவறுகளுக்கெல்லாம் காரணம் என்றும் பலரும் நினைக்கிறார்கள், நம்புகிறார்கள்.
பெரியார்
தனக்குத் தேர்தல்களில் நம்பிக்கை கிடையாது, தன் கட்சி என்றும் தேர்தல்களில்
போட்டியிடாது என்று சொல்வார். ஆனால் அவர் இருந்ததுவரை ஒவ்வொரு
தேர்தலிலும் ஏதோவொரு கட்சிக்குத் தேர்தல் பணி செய்துள்ளார்.
தந்தையைப் போலவே அண்ணனும் தன்
கட்சியும் தேர்தலில் ஈடுபடாது என்றுதான் முதலில் சொன்னார். (“இரட்டைக்
குழாய்த் துப்பாக்கி”யில் இதையும் சேர்த்துக்கொள்க.) ஆனால் கட்சி தொடங்கி மூன்றே ஆண்டுகளில் 1952இல்
நடைபெற்ற தேர்தலில் எந்தவகைச் “சடங்கு சம்பிரதாயமும்” இன்றி பொதுநலக் கட்சி(Common Weal Party)யின் “உரிமையாளர்” மாணிக்கவேலு நாயக்கர்[3]
என்பவருடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு அவருக்குத் தேர்தல் பணியாற்றியது தி.மு.க.
அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் சட்டமன்றத்தில் “திராவிட
நாட்டு”ப் “பிரிவினை”க்குப் பாடுபடுவார் என்பது ஒப்பந்தம். இவர்கள் அவருக்குத் தேர்தல்
பணியாற்றினர். வென்றார். ஆச்சாரியார் அமைச்சரவை அமைப்பதற்காகத் தன் கட்சியை
அவருக்கு விற்றுவிட்டு அமைச்சராகிவிட்டார். எந்தவொரு தொழிலிலும் நேரடியாக
ஈடுபடுவதற்கு முன் இன்னொருவருடன் கூட்டுச்சேர்ந்து தொழிலின் நெளிவு சுளிவுகளைத்
தெரிந்துகொள்வது அறிவார் தொழில். அண்ணன் “அறிஞர்” அல்லவா?
எனவே அடுத்த அடியை அண்ணன்
1956இல் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் எடுத்துவைத்தார்,
சேலம் மாநாட்டுப் பாணியில். மாநாட்டின் இறுதிக் கட்டத்தில் திடீரெனத் தீர்மானம்
முன்வைக்கப்படுகிறது, திராவிட நாட்டை அடைவதற்குத் தேர்தல் களத்தில் இறங்குவதென்று,
“ஓட்டுமுறை, இல்லாவிட்டால் வேட்டுமுறை” என்ற
வழக்கமான அடுக்குமொழி “வீர வச்சனத்”துடன். வாக்கெடுப்பு நடத்தினார்களாம் கைகளைத் தூக்கச்சொல்லி. வாக்குப் பெட்டி
வைக்கப்பட்டது எனபதும் ஒரு கூற்று.
அண்ணன்
இளமையில் பொப்பிலி அரசர் அமைச்சராக இருந்த போது அவரிடம் பணியாற்றியிருக்கிறார்.
அமைச்சர் என்ற அடிப்படையில் அரசருக்கும் அவருக்குக் கீழே பணியாற்றிய இவருக்கும்
இருந்த மதிப்பையும் செல்வாக்கையும் கண்டு தானும் எப்படியாவது ஒரு முதலமைச்சராக
வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்ற தணியா வேட்கை அவரிடம் ஆலமரமாக வளர்ந்து விழுதுவிட்டு
நின்றிருக்கிறது. அதற்காகத்தான் இந்த ஆட்டமெல்லாம்.
அந்த நிலையில் 1957 பொதுத் தேர்தலில் எளிதாகக்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் வென்றார். அவரையும் சேர்த்து 15 பேர்
சட்டமன்றம் சென்றனர். ஆனால் 1962இல் பேரவைக் கட்சியினர் அந்த 15 பேரையும்
குறிவைத்து நெருக்கினர். அண்ணாத்துரைக்கு எதிராக காஞ்சிபுரத்திலுள்ள பெரும்
பணக்காரரான நடேச முதலியார் என்பவரை நிறுத்தினர். அண்ணாத்துரை வெற்றி பெறுவது
கடினம் என்பது புரிந்தது. அண்ணாத்துரை பதறிப்போய்விட்டார். கெஞ்சினார், சாதியைச்
சொன்னார், தானும் முதலியார்தான் என்று. அது உண்மைதான். ஆனால் பொட்டுக்கட்டும்
மரபினர். (காஞ்சிபுரத்தில் அவர்களைத் தேவரடியார் முதலியார் –தேவுடியா முதலியார் என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவார்கள்). ஒன்றும் பலனளிக்கவில்லை.
முன்பு ச.ம.உ.க்களாக இருந்தவர்களில் அவரையும் சேர்த்து மொத்தம் 14 பேரும்
முறியடிக்கப்பட்டனர். கருணாநிதி தன் தொகுதியை மாற்றிவிட்டுத் தப்பித்துக்கொண்டார்.
ஆனால் புதிதாக 50 பேர் தேர்வாகி வந்தனர். எம் போன்றவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு
மாமேதையை, தமிழர்களை உய்விக்கவே பிறந்த புரட்சியாளரைப் பேரவைக் கட்சியினர் இந்தப் பாடு
படுத்துகிறார்களே, இவர் ஏன் தேர்தலிலெல்லாம் நின்று தன்னைத் தாழ்த்திக்கொள்கிறார்
என்றெல்லாம் தோன்றியது. தோல்வி அடைந்ததுமே வெங்காளூருக்குச் சென்று தன் மனதை ஆற்றி
விட்டு வந்தார். பின்னர் அவரைத் தோழர்கள் மாநிலங்களவைக்கு விடுத்துவைத்தனர்.
அடுத்த
தேர்தலில் அண்ணன் விடுவதாயில்லை. பொதுமைக் கட்சியினரைத் துணை சேர்த்தார்.
அவர்களைத் தன் முதல் வரிசை எதிரி என்று அறிவித்த ஆச்சாரியாரின் சுதந்திரக்
கட்சியையும் துணை சேர்த்தார். “திராவிட நாடு”
என்ற கோட்பாட்டை மறுத்து நாம் தமிழர் இயக்கத்தை உருவாக்கிய தினந்தந்தி
ஆதித்தனாரையும் சேர்த்துக்கொண்டு, பதவி ஒன்று தவிர வேறு கொள்கையில்லாத கூட்டணி
ஒன்றை அமைத்தார். தொண்டர்களும் தலைவர்களும் கொள்கை என்பதை மறந்தவர்களாய் தேர்தல்
ஒன்றே குறியாய்க் களத்தில் இறங்கிவிட்டனர்.
இதற்கிடையில்
தி.மு.க.வில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு வந்தது. பெரியாரின் சித்து
விளையாட்டுகளால் தமிழகத் தேசிய இயக்கமாகிய நயன்மைக் கட்சியிலிருந்து தொடங்கிய சாதி
உள்ளடக்கம் மாற்றமடைந்து அண்ணாத்துரை என்ற தேவதாசி மரபைச் சேர்ந்தவர் தலைமையில்
தி.மு.க. அமைந்தது. இந்தச் சாதியினர் நம் சாதி மரபுப்படி பார்ப்பனர்களுக்கு
அடுத்து வருபவர்கள். பார்ப்பனப் பூசாரி கடவுளின் பெயரால் பொட்டு எனும் தாலியைக்
கட்டி கோயிலில் தாசி ஆகின்றனர் இச்சாதிப் பெண்கள். பார்ப்பனப் பூசாரியுடன்
கருவறைக்குள் நுழையும் உரிமை பெற்றவர்கள் அவர்கள்.
அவர்கள்
இறந்தால் கொள்ளி வைப்பது முதல் கருமாதி வரையிலான சடங்குகளில் பங்கேற்பது
பார்ப்பனப் பூசாரியே. அப் பெண்களில் பெரும்பான்மையினர் பார்ப்பனர்களுக்கே
இல்பரத்தைகளாக (வைப்பாட்டிகளாக) இருந்துள்ளனர்.(அண்ணாத்துரையின் தந்தை பார்ப்பனர்
என்பதை மேலே சுட்டியுள்ளோம்). அதனால் அவர்களின் மரபு பார்ப்பனர்களோடு மிக
நெருங்கியது. பண்பாடு, அதாவது நடை, உடை, உணவு போன்றவையும் அவர்களுடையது போன்றவையே.
மேலே நாம் கூறியது போல் வெள்ளையராட்சியில் அதிகாரிகளாக நுழைந்த சூட்டில்
பார்ப்பனர்கள் காட்டிய அளவுக்கு மீறிய அதிகாரத்தினால் இவர்கள் மனம்
கசந்திருந்தனர். இந்த முரண்பாட்டினால் பார்ப்பனர்கள் படைத்த இலக்கியங்கள்,
நாடகங்கள், திரைப்படங்களில் தேவதாசிப் பெண்களை இரக்கம், ஒழுக்கம் அற்றவர்களாக,
பணவெறி பிடித்தவர்களாகக் காட்டினர். இந்தச் சூழலில் “திராவிட” அரசியலில் புகுந்த அண்ணாத்துரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பரிந்து
பேசினார் என்பதைவிட பார்ப்பனர்களைக் குறைகூறி அரசியல் நடத்தினார். உண்மையில்
அண்மையில் கருணாநிதி தன்னைப் பற்றிக் கூறியது போல் அவர்கள் பிரமனின் காலில்
தோன்றியவர்களல்ல. வருண வரிசையில் முகத்தில் தோன்றிய பார்ப்பனர்க்கும் நெஞ்சில்
தோன்றிய சத்திரியருக்கும் இடையில் கண்டத்தில் அதாவது கழுத்தில் வைக்க
வேண்டியவர்கள். மனு இவர்களுக்கு என்று தன் வருண வரிசையில் ஓர் இடம் வைக்கத்
தவறிவிட்டான். பார்ப்பனர்களின் ஓர் உறுப்புதானே என விட்டுவிட்டான் போலும்.
இந்த உயர்
சாதியைச் சேர்ந்த அண்ணாத்துரையின் தலைமையில் நற்சூத்திரர்களான நெடுஞ்செழியன்,
அன்பழகன், மதியழகன் ஆகியோரும் கன்னட நாயக்கரும் பெரியாரின் தமையன் ஈ.வெ.கிருட்டினசாமியின்
மகனுமான சம்பத்தும் சேர்ந்து ஐம்பெரும் தலைவர்கள் என்று அழைக்கப்பட்டனர். அதாவது
அடிமட்டத்துச் சாதியினரின் தேவை இனி இவர்களுக்கு இல்லை.
இந்த
நிலையில் விரைவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமே, அமைச்சராக வேண்டுமே, அதற்குக்
கட்சியை வளர்க்க வேண்டுமே. அதற்காக நாடகங்களைப் பயன்படுத்த தொடங்கினர்.
அண்ணாத்துரை திரைக்கதை - உரையாடல்கள் எழுதினார். அவரைத் தொடர்ந்து இந்தத்
துறைகளில் நுழைந்தவர் கருணாநிதி. சிறுகச் சிறுக அவரது செல்வாக்கு திரைத்துறையில்
வளர்ந்தது. பணச் செழிப்பு ஏற்பட்டது. சொந்தமாக முரசொலியைக் கிழமை இதழாகத்
தொடங்கினார். தி.மு.க.வின் பொருளாளராகத் தேர்வானார். இந்த வாய்ப்பைப்
பயன்படுத்திக் கட்சியின் கீழ் மட்டங்களில் உள்ளவர்களோடு நெருக்கமான தொடர்புகளை
ஏற்படுத்திக்கொண்டார். அண்ணாத்துரையுடனும் நெருக்கமாக நின்றார்.
மேடைகளில்
மக்களைப் பேசி ஏமாற்றியது, இதழ்களிலும் நூல்களிலும் எழுதி ஏமாற்றியது போல்
திரைத்துறையில் நடித்தும் ஏமாற்றுவதற்கென்று முதன்முதலில் அகப்பட்டவர் “நடிப்பிசைப்
புலவர்” என்று “பட்டம்” சூட்டப்பட்ட கே.ஆர். இராமசாமி ஆவார். (பட்டங்கள் சூட்டுவதில்
தி.மு.க.வினர்க்கு உலகில் ஈடு இணை யாரும் கிடையாது.) நல்ல இசைப்புலமையும்
குரல்வளமும் உடைய இவர் தனது இளமையில் திரைத்துறையில் பணமும் புகழும் குவிக்கும்
சூழலில் அவற்றை எல்லாம் துறந்து கொள்கை என்ற நிலையில் அப்போது பெரும்பான்மையாக
வந்த தெய்வக் கதைப் படங்களையும் பேரவைக் கட்சி சார்பான படங்களையும்
புறக்கணித்தார். ஆனால் கட்சி நாடகங்களில் நடித்து நடிப்புத் திறன் உள்ளவர் என்று
கண்டறிந்த சிவாசி கணேசனுக்காக இராமசாமியின் வாய்ப்புகளைப் பறித்தார் அண்ணாத்துரை.
கணேசனோ, தனக்கு வரும் வாய்ப்புகள் பறிபோய்விடக் கூடாது என்பதற்காக, பிழைப்புக்காக
நுழைந்த திராவிடக் கூடாரத்தின் போலிப் பகுத்தறிவை ஏமாற்றுவதற்காகத் திருப்பதி
சென்று மொட்டை போட்டுக் கழகத்திலிருந்து விடுதலை பெற்றார். இருந்தாலும் கருணாநிதி
தன் படங்களில் அவரைப் பயன்படுத்தினார். கேட்டால் “கொள்கை
வேறு, தொழில் வேறு” என்றார். அவர் சரியாகத்தான் சொன்னார்.
ஆனால் மக்கள்தாம், அதாவது நாம்தான் புரிந்துகொள்ளவில்லை.
கதிர் ஆடை
உடுத்தி கழுத்தில் கொட்டை கட்டி நெற்றியில் பட்டை தீட்டியிருந்த ம.கோ.இரா.வைத்
தி.மு.க.வுக்குக் கொண்டுவந்தவர் கருணாநிதிதான். அவர் தி.மு.க.வின் அறிவிக்கப்பட்ட
கொள்கைகளுக்கு நாணயமாக, அவற்றுக்கு மாறான கதை ஓட்டம் கொண்டவையாக அவர் கருதிய
படங்களைத் தவிர்த்ததும் அதனால் அவர் குறிப்பிடத்தக்க பட வாய்ப்புகளை இழந்ததும்
உண்மைதான். ஆனால் அதையே அவர் தமக்கு ஓர் உயர்ந்த படிமத்தைக் கட்சியின் கடைசித்
தொண்டன் வரையிலும் பொதுமக்களிடையிலும் உருவாக்கப் பயன்படுத்திக்கொண்டார். இந்த
வகையில் அவர் கழகத்தின் தலைவர்களில் ஒருவராக களத்தில் நின்றார். தி.மு.க.
நாடகங்களில் நடித்துத் திரைக்கு வந்த இன்னொரு நடிகர் எசு.எசு. இராசேந்திரன்.
இவருக்கு கழக ஆர்வலர்களிடத்தில் ஒரு மதிப்பு இருந்தது.
அது போலவே,
தான் கண்ணனின் மறு தோற்றரவு(அவதாரம்) என்ற கற்பனையில் மிதந்துகொண்டிருந்த பாவலர்
கண்ணதாசனையும் கருணாநிதி இழுத்துவந்தார். நல்ல தமிழறிவும் பொதுஅறிவும் கொண்ட அவர் தென்றல்
என்ற இதழ் மூலம் சிறந்த இலக்கியப் பணியும் இயக்கப் பணியும் மேற்கொண்டு வந்தார்.
திரைத் துறையில் பாடலாசிரியராகவும் கதை உரையாடல் ஆசிரியராகவும் படம் எடுப்பவராகவும்
வளர்ந்து வந்தார். திரைக்கதை திருட்டு, போட்டி ஆகியவற்றால் அவருக்கும்
கருணாநிதிக்கும் உட்பகை உருவாகியிருந்தது.
இந்தச்
சூழலில் ஈ.வெ.கி. சம்பத்து சோவியத் உருசியச் சுற்றுச் செலவு முடித்துத்
திரும்பினார். இது 1958 இறுதியில் அல்லது 59 தொடக்கத்திலாகும். அப்பொழுது
வெளிவந்து பெரும் வெற்றி ஈட்டிய ம.கோ.இரா.வின் சொந்தப் படமான நாடோடி மன்னன்
நூறுநாள் வெற்றி விழா நடைபெற்ற அன்று சம்பத்து சென்னையில் வந்து இறங்கினார்.
நூறுநாள் விழாவுக்குத் தலைவர்களும் தொண்டர்களும் சென்றுவிட்டதால் சம்பத்தை வரவேற்க
கழகத்திலிருந்து ஒரு ஈ, எறும்பு கூட இல்லை. சம்பத்து என்ன சம்பத்து - “தம்பி(ம.கோ.இரா.)
நீ வந்து ஒவ்வொரு தொகுதியிலும் உன் முகத்தை மட்டும் காண்பித்தால் போதும், நான்
திராவிட நாட்டை அடைந்துவிடுவேன்” என்பதுதானே அண்ணனின்
அரிய அறிவுரையும் அறவுரையும்! அப்புறம் சம்பத்துகள் எதற்கு?
இந்த நிகழ்ச்சியைச்
சுட்டிக்காட்டியது நாத்திகம் இதழ். நாத்திகம் இதழ் திராவிடர்
கழகத்திலிருந்து தி.மு.க.வுக்கு வந்த இராமசாமி என்பவர் நடத்திய இதழ். இவ் விதழில்
ஒருமுறை ஒரு கிறித்துவ மதகுருவைப் பற்றிக் குறை கூறி ஓர் ஆக்கம் வெளிவந்ததும் இது
பற்றி கிறித்துவத் தலைமை அண்ணனிடம் முறையிட்டது. உடனே அண்ணன், அவ்விதழ்
தி.மு.க.வின் இதழ் அல்ல என்று கூறியதுடன் இதழில் “தி.மு.க. ஏடு”
என்று குறிப்பிடக்கூடாது; தி.மு.க. ஏடு நம்நாடு மட்டும்தான் என்று
அறிவுறுத்தினர். கருணாநிதி மட்டும் தன் இதழான முரசொலியில் “தி.மு.க. கொள்கை ஏடு” என்று போடலாமோ என்று
இராமசாமி கேட்டதற்கு மறுமொழியே இல்லை. இதற்குள் அண்ணன் இறைமறுப்பைக் கைவிட்டு “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்று
திருமூலரின் திருவுருவாக வேறு மாறிவிட்டிருந்தார்.
திராவிடர்
கழகக் காலத்திலேயே கடவுள் மறுப்பு, இந்து சமயப் பழிப்பு என்று சரியான திசையில்
சென்ற போது கூட கிறித்துவர்களும் முகம்மதியர்களும் தமிழகத்தின் தொலைவிலுள்ள
ஊர்களில் கூட நடந்த கழகத்தின் பொதுக்கூட்டங்கள், அரங்க உரையால்களில்
புகுந்துகொண்டனர். முகம்மதியம் ஒரு
பகுத்தறிவான மதம், கிறித்துவம் ஒரு சமநிலை சமயம் என்றெல்லாம் பரப்பி மதமாற்றப் பணிக்கு
ஆட்களை ஆயத்தப்படுத்திவிட்டதுண்டு நம் “பகுத்தறிவுகள்”.
(எத்தனை வகைகளில் பணம் பார்த்திருக்கிறார்கள் பாருங்கள்!) இவர்களை நம்பி
முகம்மதியத்தைத் தழுவிச் சீரழிந்தவர்களும் உண்டு. இன்று அதாவது அன்று அண்ணன் அந்த
நிலையோடு அவர்களை வாக்கு வங்கிகளாகவும் பார்க்க வேண்டிய இக்கட்டான
நிலையிலிருக்கிறார்.
இந்த
நிகழ்ச்சிக்குப் பின் சம்பத்து கட்சியினுள் குழப்பம் விளைவிக்கத் தொடங்கினார்.
கட்சி கொள்கைகளைக் கைவிட்டுவிட்டது என்று கணை தொடுத்தார். அண்ணாத்துரையின்
நடவடிக்கைகளால் மனம் சகந்து போயிருந்த தொண்டர்களும் இரண்டாம் நிலைத் தலைவர்களும்
சம்பத்தின் நிலைப்பாட்டுக்குச் சார்பு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்.
ஐம்பெரும் தலைவர்களின் பட்டியலில் இல்லாமலிருந்த கருணாநிதி அவர்களை எல்லாம் மீறி
அண்ணாத்துரைக்கு அடுத்த நிலைக்கு வந்துகொண்டிருந்தது அவர்களையும் உறுத்தத்தான்
செய்தது. இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. இந்தச் சிக்கல் குறித்துப்
பேசுவதற்காகக் கூடிய உயர்நிலைக் குழுவில் சம்பத்தையும் அவர் சார்பாளர்களையும்
ம.கோ.இரா.வும் எசு.எசு. இராசேந்திரனும் அடிப்பதற்காகப் பாய்ந்ததாகச் செய்தி
வந்தது. ஆக, உரையாடல்கள் தோல்வியில் முடிந்தன. இறுதியில் சம்பத்தும் துணைவர்களும்
பிரிந்து சென்று ஒரு புதுக் கட்சியைத் தொடங்கினர்.
சம்பத்து
தான் தொடங்கிய கட்சிக்குத் தமிழ்த் தேசியக் கட்சி என்று பெயர் வைத்தார்.
அந்தப் பெயரைப் பார்த்ததும் அவரை நம்பி அவர் கட்சியில் சேர வேண்டுமென்று
நினைத்தோரும் ஏற்கனவே சம்பத்துக்கு சார்புக் கருத்துகளை வெளிப்படுத்தியவர்களும்
ஏறக்குறைய அனைவரும் முடிவை மாற்றிக்கொண்டனர். அவர்களுள் முகாமையானவர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி;
ஐம்பெரும் தலைவர்களுக்கு அப்பால் தி.மு.க.வின் இரண்டாம் நிலைத் தலைவர்களில்
முகாமையானவர். சம்பத்து புதுக் கட்சி தொடங்குவதுவரை அவர்
தான் ஆசிரியராக இருந்த இதழில் அவருக்குச் சார்பான கருத்துகளையும் தி.மு.க.
தலைவர்களின் குற்றம், குறைகளையும் சுட்டிக்காட்டி எழுதிவந்தார். இப்போது அவர்
சம்பத்தின் கட்சியில் சேராத போதும் தி.மு.க.வில் அவருக்குத் தலைவர்களுடன் இருந்த
நெருக்கம் தளர்வடைந்தது. அவரைப் போல் கொஞ்ச நஞ்சம்
கொள்கைப் பற்றிருந்த இடைநிலைத் தலைவர்கள் பலர் அதன் பிறகு கட்சித் தலைமையுடன்
தமக்குள்ள நெருக்கத்தை இழந்து கட்சியில் தங்கள் செல்வாக்கையும் இழந்தனர். இங்கு
உண்மையாக நடந்தது என்ன? சம்பத்தின் செயற்பாட்டால், தி.மு.க.வில்
உண்மையான, முனைப்பான கொள்கை ஈடுபாட்டுடன் இருந்தோர் வெளியே இழுத்துவரப்பட்டு
தனிமைப்பட்டனர். இதனால் அண்ணாத்துரை கும்பலுக்குப் பெரும் ஆதாயம். அவர்களது “கொள்கை”த் தொல்லை தொலைந்ததல்லவா!
தேசியம்
என்ற சொல்லுக்கு இந்தியத் தேசியம் என்ற ஒரேயொரு பொருள்தான் அன்று பொதுவான அரசியல்வாணர்களாலும்
பொதுமக்களாலும் புரிந்துகொள்ளப்பட்டது. ஓர் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள முழுப்
பரப்பையும் “தேசிய” என்ற அடைமொழி கொடுத்துக் குறிப்பிடும் பொது வழக்கு நம் நாட்டில் அன்று
இருந்தது. (இன்று கூட பெருமளவில் அதுதான் நிலை. நாம் எழுதி அண்மையில் வெளிவந்த தேசியம்
வெல்லும் என்ற நூலின் பெயரில் உள்ள “தேசியம்” என்ற சொல்லுக்கு இந்தியத் தேசியம் என்று பொருள் கூறிப் பழிப்பாரும்
உளர்.) அத்தகைய ஓர் அரசின் கீழ் அடங்கிக் கிடக்கும் ஒவ்வொரு நிலப் பரப்பிலும்
மொழி, சமயம் அல்லது இயற்கை அமைப்பு ஆகியவற்றால் அடையாளம் காணப்படும் மக்கள்
குழுவினரைத் தேசியம் என்று குறிப்பிடும் மார்க்சியக் கண்ணோட்டம் அன்று அரசியல்
தலைவர்களிடையில் கூட வேரூன்றவில்லை. சோவியத் நாடு சென்று வந்த சம்பத்து அங்கு
சோவியத் அரசுக்குள் அடங்கிய பல்வேறு நிலப்பரப்புகளிலும் தனித் தேசிய
அடையாளங்களுடன் வாழும் மக்களைக் கண்ணாரக் கண்டார். அவற்றுக்குப் பிரிந்து செல்லும்
தன்தீர்மானிப்பு உரிமை வழங்கப்பட்டிருந்ததையும் அவர் கண்டார். அந்த
தன்தீர்மானிப்புரிமை வெறும் ஏட்டில்தான் இருந்தது என்பதை அவரால் அறிந்துகொள்ள
முடியவில்லை, அறிந்துகொள்ள முடியாது என்பது வேறு. ஆனால் அங்குள்ள நிலைமை
தமிழ்நாட்டு நிலைமைக்கு மிகப்
பொருந்துவதாக இருக்கும் என்று அவர் கருதியிருக்கக் கூடும். அப்படி அங்குள்ள
ஆட்சியாளர்களும் கட்சியினரும் அவருக்கு உணர்த்தியிருக்கவும் கூடும். இந்தியாவில்
அவரை அங்கு விடுத்துவைக்க முன்னேற்பாடுகளைச் செய்த பொதுமைக் கட்சியினரும் அவரிடம்
அந்தக் கருத்தைத் திணித்திருக்கலாம். இந்திய, சோவியத்து அரசுகள் அன்று நல்ல
உறவுநிலையில் இருந்தன. இந்தியாவினுள், ஏன் உலக அளவில் கூட அன்று அனைவரது
கவனத்தையும் ஈர்த்த “பிரிவினை”
இயக்கமாகிய தமிழகத்து தி.மு.க.வின் தலைவர்களில் ஒருவரை இந்தத் தன்தீர்மானிப்புரிமைக்குப்
போராட வைத்து இயக்கத்தைக் கொஞ்சம் திசைதிருப்பிவிடலாம் என்பது அவர்களது திட்டமாக
இருக்கலாம். மறுபுறம் தி.மு.க. தலைவர்கள் மீது சம்பத்து வைத்த குற்றச்சாட்டான,
ஒப்புக்கு மேடையில் “பிரிவினை”
பற்றிப் பேசுகிறார்கள் என்ற நிலையில் அவர்களிலிருந்து மாறுபட்டு தான் உண்மையாகப்
பாடுபடலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் இவை எல்லாம் நமது கருத்துகளே
அன்றி உள்ளரங்கம் என்ன என்பது திட்டவட்டமாக நமக்குத் தெரியாது.
உண்மையில்
சம்பத்தின் இயல்பு என்ன? அவர் நேர்மையானவரா இல்லையா என்ற கேள்விக்கும் தெளிவான
விடை கிடைக்கவில்லை. 1949இல் அவரது சிறிய தந்தையாகிய பெரியாரின் கட்சியிலிருந்து
அண்ணாத்துரை உடன் வந்தது அவரது நேர்மையைக் குறிக்கிறதா? அல்லது தனக்கு
வரப்போகிறது என்று தான் அதுவரை முழு நம்பிக்கையுடன் எதிர்பார்த்த, குழந்தைகள்
இல்லாத தன் சிறிய தந்தை தன்னுடைய சொத்துகளைப் பாதுகாப்பது என்ற காரணம் கூறி
மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டதனால் ஆத்திரமடைந்து அவர் அண்ணாத்துரையுடன்
இணைந்தாரா? ஆனால் பெரியாரின் திருமணத்துக்கு முன்பே புதிய கட்சி தொடங்குவதற்கான
அண்ணாத்துரையின் முயற்சியில் சம்பத்தும் பங்கேற்றிருப்பதாகத் தெரிகிறது. அது உண்மையானால்
கொள்கைக்காகத்தான் அவர் தி.மு.க.வில் இணைந்தாரா? அல்லது பெரியார் இவ்வாறு
நடந்துகொள்வார் என்று அவர் முன்கூட்டியே ஐயுற்றாரா? இந்தக் கேள்விகளுக்கும் விடை
கிடைப்பது கடினம். அது போல் தன்னுடைய முயற்சிகளை எல்லாம் மீறி அண்ணாத்துரையின்
கட்சி வளர்ந்து வந்ததைக் கண்டு ஆற்றாமையால் அண்ணன் மகனுக்குக் கமுக்கமாக அழைப்பு
விடுத்தாரா பெரியார் என்பதும் ஆய்வுக்குரியது. தனது சொத்தில் பெரியார்
சம்பத்துக்கு ஏதாவது பங்கு கொடுத்திருந்தாரா என்பது குறித்த செய்தி கிடைத்தால்
இதற்கு ஒருவேளை விடை கிடைக்கலாம். ஆனால் அவர் பணமாகக் கொடுத்திருந்தால்
கண்டுபிடிக்க முடியாது.
அவர் மீது
தி.மு.க.வினர், குறிப்பாக கருணாநிதி வைத்த குற்றச்சாட்டு அவர் பேரவைக் கட்சிக்கு
விலைபோய்விட்டார் என்பது. அதை உறுதிப்படுத்துவதற்கு அவரது கட்சியின் பெயரிலுள்ள “தேசியம்” என்ற
சொல்லை அவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். ஆனால் அண்ணன், “தம்பி” சம்பத்தைக் குற்றம் குறைகள்
சொல்லவில்லை. பாசத்தைப் பொழிந்தார். “குற்றம் பார்க்கில்
சுற்றம் இல்லை” என்று நெஞ்சுருகக் கூறினார். இது ஒரு
வலுவான உத்தி.
சம்பத்து
நினைத்திருந்தால் இந்த எதிர்ப் பரப்பல்களை எல்லாம் எளிதாக முறியடித்திருக்கலாம்.
பொறுமை காத்து தேசியம் என்பதற்கான உண்மையான விளக்கத்தை மக்கள் முன்
எடுத்துவைத்து தி.மு.க.வினர் செய்த எண்ணற்ற ஏமாற்றுகளை வெளிப்படுத்தியிருக்கலாம்.
மாறாக அவர் அறிவுக்குப் பொருந்தாத வகையில் செயல்பட்டார்.
1958 -
59இல் புகையத் தொடங்கிய தி.மு.க. உட்பூசல்
1961இல் பிளவாக வெளிப்பட்டது. 1962 தொடக்கத்தில் பொதுத் தேர்தல். அதில் தன் புதுக்
கட்சியை ஈடுபடுத்தினார் சம்பத்து. தானும் “சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கப்
போகிறேன்” என்று சவடால் பேசிவிட்டுத் தென் சென்னைப்
பாராளுமன்றத் தொகுதியில் நாஞ்சில் மனோகரனை எதிர்த்துப் படுதோல்வி அடைந்தார்.
ஒருவேளை பொதுமைக் கட்சியினரே கூட அவரைத்
தூண்டிவிட்டு தங்களது வழக்கமான அணைப்பு - அழிப்பு வேலையைச் செய்திருக்கலாம்.
அண்ணாத்துரை
ஒரு வலிமையான, கட்டுக்கோப்பான கட்சியின் அடித்தளத்தைப் பெரியாரிடமிருந்து
பிடுங்கிக்கொண்டது போல் சம்பத்துடன் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தொண்டர்கள்
செல்லவில்லை. இந்த நிலையில் ஒரு கட்சியைப் புதிதாக அமைத்து கட்டிக்காத்து
வளர்ப்பது என்பது இயலாத ஒன்று. அந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவது என்பது
தற்கொலை செய்து கொள்வதுபோல். பெரியார், அண்ணாத்துரை போன்றோருக்கு இயக்கத்தினுள்
பரவலான நேரடி ஆள் தொடர்புகள் உண்டு.
கருணாநிதியின் வலிமைகளில் முதன்மையானதே அதுதான். ஆனால் நெடுஞ்செழியன், அன்பழகன்,
மதியழகன், சம்பத்து போன்றோர் நிறையப் படித்து அழகு தமிழில் அடுக்குமொழியில்
மேடையில் பேசிக் கைதட்டு வாங்கிச் செல்பவர்கள். கட்சித் தொண்டர்களிடமும்
ஆர்வலர்களிடமும் வெளியிலும் அறியப்பட்டவர்களும் மதிக்கப்பட்டவர்களும்தாம். ஆனால்
நிலைத்துநிற்கும் ஒரு கட்சியை உடைத்துப் புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு இவை
மட்டும் போதாவே!
இப்போது இரண்டு வழிகள்தாம் உள்ளன. ஒன்று கட்சியைக் கலைத்துவிட்டு அரசியலுக்கு
முழுக்குப் போடுவது. இன்னொன்று ஏதோவொரு கட்சியில் சேர்ந்துகொள்வது. முதல் நேர்வில்
தன்னை நம்பிப் பழைய கட்சியைக் கைவிட்டுத் தன் பின்னால் வந்தவர்களை நடுத்தெருவில்
நிறுத்தினாற்போல் ஆகும். இரண்டாம் நேர்வில் தான் பாடுபடுவதாகக்
கூறிக்கொள்ளும் கொள்கைகளுக்குச் சிறிதாவது
பொருந்துவதாகிய கட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் சம்பத்து இரண்டாவது
நேர்வைத் தேர்ந்தார். ஆனால் தான் அறிவித்துக் கொண்ட கொள்கைகளுக்கு அடிப்படை
எதிரியான பேரவைக் கட்சியில் சென்று சேர்ந்தார். அவரது சிறிய தந்தையாகிய பெரியாரின்
வழி இது. அண்ணாத்துரை அறுத்துக்கொண்டு வெளியேறிய ஆத்திரத்தில் அவரது அரசியல்
எதிரியாகிய பேரவைக் கட்சிக்குப் பணியாற்றினார் அவர். ஆச்சாரியாரைக் கீழே இறக்கிய காமராசரைப் பச்சைத் தமிழர் என்று
சொல்லிக்கொண்டு ஆதரித்தார். அவர் திட்டமிட்டு வெளியேற்றிய நாடார் சாதியைச்
சேர்ந்தவர்தான் காமராசர். ஆனால் அவர் பேரவைக் கட்சியின் பெரும் வெறியர்.
நேருவுக்கு அடிமையிலும் அடிமை. மேலிடத்தவர்க்காகத் தமிழகத்தை முற்றிலும் அவர்கள்
காட்டும் எவருக்கும் அள்ளிக் கொடுக்கத் தயங்காதவர். அதுவும் பனியாக்களிடம் மிகுந்த
பற்றும் ஈடுபாடும் கொண்டவர். பேரவைக் கட்சியின், “அண்ணல்” காந்தியின்
பரிவுக்குரியவர்களல்லவா; அவரது இனத்தைச் சேர்ந்தவர்களல்லவா, கட்சிக்கு நன்கொடையை அள்ளி அள்ளிக் கொடுக்கிறவர்களில்லையா! அதனால்தான் பெரியார் வடநாட்டு துணிக் கடைகளின் முன்பு 1950
நவம்பர் 1 ஆம் நாள் தமிழகமெங்கும் மறியல் செய்யத் திட்டமிட்டதை எதிர்த்துக் குரல்
கொடுத்து அதைக் கடுமையாக ஒடுக்க வேண்டுமென்று சொன்னார். அதன் விளைவாகக் கடை
மறியலில் ஈடுபட்டவர்களின் மீது காவல் துறையினர் கடுமையான தாக்குதல் நடத்தினர்.[4]
அவர் காலத்தில் அவர் தமிழகத்துக்கு ஏதாவது செய்திருக்கிறார் என்றால், அது
தி.மு.க.வின் பரப்பல்களிலிருந்து தன் கட்சியைக் காப்பாற்றத்தான். அதையும் மீறி
அவர் ஏதாவது செய்திருக்கிறார் என்றால் அது அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்குக்
கல்வி வழங்கிய அந்தப் பெரும்பணி ஒன்றுதான். அத்தகைய ஒருவரின் தலைமையில் இயங்கும் கட்சியில்
சம்பத்து சேர்ந்தது ஒன்றுதான் அவரது நேர்மை, கொள்கைப்பற்று முதலியவற்றின் மீது
நாம் ஐயுறவு கொள்ள வைக்கிறது; தி.மு.க.விலிருந்து வெளியேறி அவர் கட்சி
அமைத்ததில் பெரியாரின் உள்கையும் இருக்கும் என்ற ஐயத்தை உறுதிப்படுத்துகிறது.
இனி அண்ணாத்துரையின் கொள்கைப் பற்று பற்றி
சம்பத்தின் திறங்கூறலைப் பார்ப்போம்.
தி.மு.க.
தலைவர்களுக்குக் கொள்கைப் பற்று என்பதெல்லாம் கிடையாது. இரவு முழுவதும்
சீட்டாடிவிட்டுப் பகலில் நன்றாகத் தூங்குவார் அண்ணாத்துரை. மாலை நான்கு மணி அளவில்
குளித்து உடுத்தி மேடையில் வந்து அழகு தமிழில் அடுக்குமொழியில் கொள்கை முழக்கம்
செய்வார்கள் அவரும் மற்றவர்களும். மற்றப்படி திராவிட நாட்டுப் பிரிவினை பற்றி
அவர்களுக்கு நம்பிக்கையே கிடையாது என்பதாகும். இது பற்றி ஒரு செய்தியை நாம்
பகிர்ந்துகொள்வோம்..
இந்திய
விடுதலை நாளைத் துயர நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பெரியார் அறிக்கை
விட்டதையும் அதற்கு அண்ணாத்துரை மறுப்பு அறிக்கை விட்டதையும் நாம் மேலே
குறிப்பிட்டிருந்தோம். இப்போது அதை நாம் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பெரியாரின் அறிக்கை:
“ஆங்கிலேயர்கள்
இந்தியாவை விட்டு வெளியேறவில்லை. இந்தியாவில் எல்லாக் கட்சி மக்களிடையேயும்
அதிகாரத்தை ஒப்படைக்காமல், எல்லோருடைய குறைகளையும் கேளாமல், எல்லாக் கட்சியாரையும்
சமரசப்படுத்தாமல் தங்களுக்குப் பல வழிகளிலேயும் வியாபாரத்துக்கும் பிரிட்டன்
நலத்திற்கும் பல இரகசிய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு காங்கிரசுக்காரரிடம்
மாத்திரம், அதாவது பார்ப்பன ஆதிக்கமும் வடநாட்டார் சுரண்டல் வசதியும் கொண்டு ஒரு
சுயநல தந்திர சூழ்ச்சி கொண்ட கூட்டத்தாரிடம்
அதிகாரத்தை மாற்றிவிட்டு
அவர்களுக்குப் பாதுகாப்பு தரும் நிபந்தனையோடு அதிகாரத்தை மாற்றி
இருக்கிறார்கள்.
“வடநாட்டாருக்கும்
தென்னாட்டாருக்கும் சமுதாயத் துறையில், பொருளாதாரத் துறையில் ஏராளமான வேறுபாடு
உண்டு. வியாபாரத்தில் வடநாட்டார் கொள்ளை இனியும் அதிகப்படுமே ஒழிய சிறிதும்
குறையாது. நாம் விரும்புவது சென்னை மாநிலத்தினுள்ள அய்ந்து கோடி திராவிட மக்கள்
தங்களுடைய காலச்சாரம், பொருளாதாரம் முதலியவைகளுக்கு ஏற்ப சுயேச்சை நாடாக இருக்கச்
செய்ய வேண்டுமென்பதே”.[5]
இதற்கு
மறுப்பாக அண்ணாத்துரை எழுதியது:
“நாம் நல்ல
முறையில் மக்களிடையில் பிரச்சாரம் செய்தால், ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியை ஒழிக்க
முடிந்ததைப் போலவே, தென்னாட்டைச் சுரண்டும் வேலையை வடநாட்டவர் ஆட்சியில் அமர்ந்து
செய்கின்றனர் என்பதை, தக்க முறையில் மக்களுக்கு உணர்த்தினால், சுரண்டும் எந்த
ஆட்சியையும் நம்மால் ஒழிக்க முடியும். ஒரு இன மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற உறுதி
கொண்டுவிட்டால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்ற உண்மையை எடுத்துக்காட்டி,
இன்று வெற்றி பெறாதிருக்கும் திராவிட நாட்டுத் தனியரசைப் பெற முடியும் என்ற
நம்பிக்கை ஏற்படுத்தும் நாளாக இந்த ஆகத்து 15 ஆம் நாளை நாம் ஒரு நல்ல நாளாகக்
கொள்ள முடியும். நமது நியாயமான
கோரிக்கையான திராவிட நாடு பிரிவினையும் தியாகப் பாதையில் நடக்கும் தீரர்களின்
இரத்தம் சிந்தப்பட்ட பிறகே வெற்றி பெற முடியுமே தவிர கொள்கையை ஆதாரப்
பூர்வமாக விளக்கி விடுவதால் மட்டும் கிடைத்து விடாது.
“எண்ணற்ற
வீரர்கள் அளவு கடந்த, வீர, தியாக உணர்ச்சி ஏற்பட்ட பிறகே கிடைக்கும். இவற்றைச்
செய்து அலுத்து மனம் நொந்து, வெந்து போன
பிறகும் நாம் வஞ்சிக்கப்பட்டால், நமது
எண்ணம் ஈடேறாவிட்டால், போர் பயனற்றுப்
போய்விட்டால் துக்கம் கொண்டாடுவது முறையாக இருக்கும். துவக்க நிலையிலே துக்கம்
கொண்டாடுவது அவசியமில்லை.
“ஆங்கில
ஆட்சி முடியும் போது நாம் துக்கம் கொண்டாடுவது பழிச்சொல்லை நாமாகவே நம் மீது
சுமத்தும்படி மற்றவர்களை வற்புறுத்தி அழைப்பதாகும். நமது வாழ்நாளில் நாம் ஆங்கில
ஏகாதிபத்திய ஆட்சியை ஏற்காதவர்கள், அது ஒழிய வேண்டுமென்ற நோக்கம் கொண்டவர்கள்.
காங்கிரசார் பழி சுமத்தியதைப் போன்று நாம் ஆங்கில அடிமைகள் அல்ல என்பதை விளக்க,
நமக்கு இருக்கும் ஒரு நாள் ஆகத்து 15 ஆகும்.
“ஆகத்து
15ஆம் நாள் இரண்டு நூற்றாண்டுகளாக இந்தத் துணைக் கண்டத்தின் மீது இருந்துவந்த
பழிச்சொல்லை, இழிவை நீக்கும் நாள், அது “திராவிடர்”க்குத் திருநாள், துக்க நாளாகாது”[6]
அண்ணனின் இந்த அறிவிப்பிலிருந்து நமக்கு உள்ளீடாகத் தெரிவது
என்னவென்றால் வெளியில் வீறு கொண்ட ஒரு தலைவனின் சூளுரை போல் தோன்றும் அவரது
கூற்றில் இறுதி முடிவு துயர நாள் கொண்டாட்டத்தை இன்னொரு கட்டத்தில் வைத்துக்கொள்ளலாம்
என்பதுதான். ஆனால் “திராவிட நாட்டு” விடுதலை என்ற உணர்வில் வளர்ந்தவர்களாகிய கட்சித் தொண்டர்களும்
ஆர்வலர்களும் பெரியாரின் அறிக்கையில் வெளிப்படும் எதிரியல் (Nihilist) அணுகலுக்கு
மாறான ஒரு நேரியல் அணுகலையும் விடுதலைக்காகக் குருதி சிந்திப் போராட அழைக்கும்
அழைப்பையும் கண்டு மனம் நிறைந்து போயினர். ஆக, சுந்தர ராமசாமியைப்
பற்றி செயமோகன் குறிப்பிடுவது போல், பணத்தோட்டம் நூலின் உள்ளடக்கம் போல்
அண்ணாத்துரை தன் அறிவிப்பின் பால் கொள்கை ஆர்வலர்களையும் அதனால்
பாதிக்கப்படுபவர்களையும் ஒரே நேரத்தில் நம்பிக்கை கொள்ள வைத்துள்ளார்.
இது குறித்து இன்னொரு நிகழ்ச்சியை நாம் இங்கு சுட்டிக்காட்ட
விரும்புகிறோம்.
1988 வாக்கில் பழ.நெடுமாறன் அவர்கள் தமிழ் இயக்கங்களை
இணைத்து தமிழ்த் தேசிய இயக்கம் என்ற ஒன்றை அமைத்தார். எமது தமிழக
மக்கள் பொருளியல் உரிமைக் கழகமும் இணைவதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் 1989 தேர்தல் வந்தது. அதில் இயக்கம் போட்டி இடுவதாக முடிவெடுத்தது.
அதற்கான கருத்தாய்வுக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டு வருமான வரி ஒழிப்பு, தொழில் உரிமங்கள்
வழங்கும் அதிகாரத்தைப் பரவலாக்குதல், நில உச்சவரம்பு ஒழிப்பு, உழவர்கள் மீது அரசு
நிகழ்த்தும் கெடுபிடிகளிலிருந்து அவர்களை விடுவிப்பது போன்ற திட்டங்களை முன்வைத்து
மக்களிடம் பரப்பல் செய்தால் இயக்கத்துக்கு மக்களிடம் செல்வாக்கு பெருகும் என்று
கூறினேன். கலந்துகொண்டவர்கள் என் கருத்துகளை வெளிப்படையாக வரவேற்றார்கள்.
நெடுமாறன் எதுவும் பேசவில்லை. பின்னர் தேர்தலில் இயக்கம் கடும் தோல்வியைச்
சந்தித்தது. அந் நேரம் நெடுமாறன் ஒரு நேர்ச்சியில் காயமுற்றுப் படுத்திருந்தார்.
நானும் பிற இயக்கங்களைச் சேர்ந்த ஒன்றிரண்டு பேரும் அவரைப் பார்த்துப் பேசினோம்.
அப்போது தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றிய காரணங்களை அலசினார்கள். கொள்கைகள்,
தேர்தல் முழக்கங்கள் பற்றிப் பேசாமல் யாருடன் கூட்டணி வைத்திருந்தால் எவ்வளவு
கிடைத்திருக்கும் என்று எண்ணிக்கைக் கணக்கு பார்த்தார்கள். அந் நேரம் நெடுமாறன்
ஒரு நிகழ்ச்சியைக் கூறினார். 1950களின் இறுதியில் அவர் அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்தில் படித்துக்கொண்டிருந்தாராம். தி.மு.க. ஆர்வலர்களான அவரும் சில நண்பர்களும் ஒரு குழுவாகச் வந்து,
சென்னைக்கா, காஞ்சிக்கா என்பது இப்போது நினைவில்லை, சென்று அண்ணாத்துரையைப் பார்த்தார்களாம்.
“உலகில் பல
பகுதிகளில் ஆயுதம் ஏந்திய விடுதலைப் போர்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன; நாமும்
திராவிட நாட்டை அடைய ஆயுதமேந்திப் போராட வேண்டும்; அதற்கு நாங்கள் ஆயத்தமாக
இருக்கிறோம்; ஆணையிடுங்கள் அண்ணா” என்ற அடிப்படையில்
பேசினார்களாம். அதற்கு அண்ணாத்துரை, திராவிட நாட்டு விடுதலைக்காக ஒரு தோட்டா கூட
வெடிக்காது, ஒரு சொட்டு குருதி கூடச் சிந்தாது என்று கடிந்து கூறித் திருப்பி
விட்டாராம். ஆக, இதுபோல் தேங்கிக் கிடந்த உணர்ச்சி வெள்ளம்தான் தி.மு.க. எனும்
அணையை உடைத்துக்கொண்டு வெளியேறத் துடித்துக்கொண்டிருந்த சூழலில் சம்பத்து வந்து
அணையை உடைத்து நெடுமாறன் போன்றோரையும் சேர்த்துக்கொண்டு பேரவைக் கட்சி என்ற
சாக்கடைக்குள் விழுந்தனர். (தமிழ்த்
தேசிய இயக்கம் தொடங்கிய பின் 1990களில் நெடுமாறன் பனியாக்களின்
நிறுவனங்கள் முன் மறியல் செய்யப் போவதாக அறிவித்தார். ஆனால் அறிவித்தபடி எதுவும்
நடைபெறவில்லை. காமராசர் காலத்தில் நெடுமாறன், குமரி அனந்தன் ஆகியோருக்கு
மாதந்தோறும் பணம் கொடுப்பதற்கு பனியாக்களிடம் அவர் ஏற்பாடு செய்திருந்தார் என்று
ஒரு பேரவைக் கட்சி பெரியவர் கூறியிருந்தார். நடந்தவற்றைப் பார்த்த போது அது
உண்மையாக இருக்கும் போல் தோன்றுகிறது. அந்தப் பணம் வராத போது இவர்கள் ‘’போராட்டங்களை’’ அறிவிப்பார்கள் போலும். வரவேண்டியவர்களிடமிருந்து வரவேண்டிய “கப்பங்கள்” வாரதபோது நம் அமைச்சர்களும் உயர்
அதிகாரிகளும் “கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவிப்போர்களே அதைப் போல). வெளியே
வந்துவிட்டுத் திரும்பவும் தி.மு.க.வுக்குச் செல்லக் கூசியவர்கள் அரசியலை
விட்டார்கள். இரண்டுங்கெட்டான்கள் தி.மு.க.வில் ஒட்டிக்கொண்டு பிழைப்பை நடத்தினார்கள்.
இரத்தம் சிந்திப் போராடுவோம் என்ற அண்ணனின் ஆகத்து
15 அறிக்கை எவ்வளவு போலியானது என்பது நெடுமாறன் கூறிய செய்தியிலிருந்து
தெளிவாகவில்லையா?
ஆனால் வெளியிலிருந்து பார்த்த தொண்டர்களுக்கும்
மக்களுக்கும் தி.மு.க. உறுதியுடன்
கொள்கையில் ஊன்றி நிற்பதாகவும் சம்பத்துதான் திசைமாறிச் சென்றுவிட்டதாகவும்
தோன்றியிருக்கும். அப்படித்தான் தோன்றியிருந்தது என்பது அடுத்து நடந்த நிகழ்ச்சிகள்
மூலம் தெரியவரும்.
1962 ஆம் ஆண்டு சீனத்துக்கும் இந்தியாவுக்கும் கடும் போர்
நிகழ்ந்தது. அதைக் காரணமாக வைத்துப் பிரிவினைத் தடைச் சட்டம் என்ற ஒன்றை அப்போதைய
இந்திய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாத்திரி கொண்டுவந்தார். அதையே சாக்காக 1962
ஆம் ஆண்டு சேலம் பொதுக்குழுவில் தி.மு.க. தன் பிரிவினைக் கொள்கையை நிறுத்தி
வைத்திருப்பதாக அறிவித்தது.[7]
ஆக, சம்பத்து கூறியது உண்மை என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் களத்தைக் கைப்பற்ற
அவர்தான் களத்தில் இல்லை.
அதே வேளையில் தி.மு.க. ஒரு சுவரொட்டிப் பரப்பல் செய்தது.
தி.மு.க. என்ற கையின் பிடியில் இந்திய அரசாகிய பாம்புகள் 1,5,3 என்று நெளிந்து 153
என்ற வடிவத்தை எடுத்திருப்பதாகப் படம் போடப்பட்டிருந்தது அந்தச் சுவரொட்டியில்
(லால்பகதூர் சாத்திரி நிறைவேற்றிய சட்டம் 153 என்ற எண் கொண்டது). பிரிவினை தடைச்
சட்டத்தை எதிர்கொள்ளத்தான் சேலம் மாநாட்டுத் தீர்மானம், “புரிகிறதா
சூட்சமம்?” என்று இன்னொரு சுவரொட்டி. சேலம் மாநாட்டுத்
தீர்மானத்தைக் கண்டு மனம் விட்டுப் போயிருந்த கழகத் “தம்பி”களைத் தன் “அரச தந்திரத்தை” மெய்ப்பித்துக் காட்டி தேற்றுவதற்காக இப்படி ஒரு ஏமாற்றை அண்ணன்
செய்தார்.
அண்ணனின் தந்திரங்களை நன்கு அறிந்திருந்த கண்ணதாசன்,
ம.கோ.இரா. நடித்த தாய் சொல்லைத் தட்டாதே என்ற திரைப்படத்தில் போயும்
போயும் மனிதனுக் கிந்த புத்தியைக் கொடுத்தானே, இறைவன் புத்தியைக் கொடுத்தானே என்று
தொடங்கும் பாடலில்,
கண்களிரண்டில் அருளிருக்கும்
சொல்லும் கருத்தினில்
ஆயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே
நிறைந்திருக்கும்
அது உடன்பிறந்தாரையும்
கருவறுக்கும்
என்ற வரிகளில் அண்ணனின்
இயல்பை எடுத்து முன்வைத்தார்.
இதற்கு அடுத்த கட்டமாக இந்தியை எதிர்த்து 1963 முதல்
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைக் கொண்டு அண்ணாத்துரை இந்தி எதிர்ப்பு
மாநாடுகள் நடத்தினார்.
இந்தப் போராட்டங்களின் போது நடுவில் இந்தி பேசாத
மக்கள் ஆங்கிலமே ஆட்சிமொழியாக நீடிக்கும் என்று நேரு ஒரு வாக்குறுதி
அளித்திருந்தார். ஆனால் அவர் காலமான பின் பதவிக்கு வந்த லால்பகதூர் சாத்திரி 1965
சனவரி 26ஆம் நாள் முதல் நாட்டில் இந்தி மட்டும் ஒரே ஆட்சி மொழியாக இருக்கும் என்று
அறிவித்தார். அந்த நாளைத் துயரநாளாகக் கொண்டாட வேண்டுமென்று அண்ணாத்துரை
அறிவித்தார். இரத்தம் சிந்திப் போராடி முடியாமல் போனால் துயரம் கொண்டாடி ஆட்டத்தை
முடித்துவிடலாம் என்ற 1947ஆம் ஆண்டின் அறிவிப்புக்கு மாறாக முன் கூட்டியே, “திராவிட நாட்டுப் பிரிவினை”க்காக ஒரு சொட்டுக்
குருதி கூடச் சிந்த ஆயத்தம் இல்லாத நிலையில் இந்தித் திணிப்பு என்பதற்கு எதிர்ப்பு
என்ற பெயரில் துயரம் கொண்டாட அழைத்தார்.
25-01-1965 அன்று இளைஞர்களும்
மாணவர்களுமாக 6 பேர் தீக்குளித்து உயிர் ஈகம் செய்தனர்.[8]
26-01-1965 அன்று பல தலைவர்களையும் தளை செய்து
விடுவித்தனர். தன் வீட்டில் கருப்புக்கொடி கட்டியிருந்த எசு.எசு.இராசேந்திரன்
மன்னிப்பு எழுதிக் கொடுத்துத் தளைப்படுவதைக் தவிர்த்தார். ம.கோ.இரா. வுக்குப்
போராட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர்களை நம்பி
போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அரசின்
வெறியாட்டத்தால் வீறு பெற்ற மக்களும் களத்திலிறங்கினர். மொத்தம் 158 பேர்
உயிரிழந்தனர்.[9]
அந்தப் போராட்டத்துடன் தி.மு.க.வுக்கு எந்தத் தொடர்புமில்லை
என்று அறிவித்தது மட்டுமின்றி போராட்டத்தைக் கைவிடுமாறு 10-02-1965 அன்று மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்கினார் அண்ணாத்துரை.[10]
ஆனால் போராட்டம் இவர்கள் கட்டுக்குள் நிற்கவில்லை. திருப்பூரில் ஒரு மாணவனைச்
சுட்டு உயரே தூக்கிப் பிடித்து போராட்டம் நடத்தியவர்களை நோக்கிக் காட்டி மிரட்டிய
காவல்துறை அதிகாரியை மக்கள், மாட்டு வண்டியில் கட்டிவைத்து எரித்தனர்.[11]
மக்களை ஏமாற்றுவதற்காக நடு அமைச்சர்களாக இருந்த சி.சுப்பிரமணியமும் அளகேசனும் பதவி
விலகினர். இறுதியில் லால்பகதூர் சாத்திரி நேருவின் வாக்குறுதியைச் சட்டமாக்குவதாக
இன்னொரு பொய் வாக்குறுதி தந்தார். தலைமைகளின் இரண்டகத்தால் தங்கள் ஈகத்தால் எந்தப்
பயனுமின்றி மக்கள் ஏமாந்தனர்.
கருணாநிதி மட்டும் பாளையங்கோட்டைச் சிறையில்
அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அடைபட்டிருந்த பொதுமைக் கட்சித் தலைவர்களுடன் பேசி
அடுத்த தேர்தலுக்கான கூட்டணியை முடிவு செய்தார் என்று கூறப்படுகிறது. அப்போது
சென்னை மாநில முதல்வராக இருந்த பக்தவத்சலம் தி.மு.க.வுடன் கள்ள உறவு வைத்து
வேண்டுமென்றே இந்திப் போரட்டத்தை குருதிக்
களரியாக்கி தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார் என்று பேரவைக்
கட்சியினர் வெளிப்படையாகவே கண்டித்தனர்.
கருணாநிதியின் “ஈகங்”களில் இந்தப் பாளையங்கோட்டைச் சிறையிருப்பு பெரிதாகப் பேசப்படுவதுண்டு.
ஓர் ஆறு மாதச் சிறையிருப்புக்கு, மாறன் குடும்பம் பிரிந்து செல்வதற்கு முன்
கருணாநிதி குடும்பச் சொத்து உரூ கோடிக்கணக்கான கோடிகள் என்றால் உயிரையே
இழந்தவர்களுக்கு எத்தனை கோடி கோடிகளின்
கணிதவியல் அடுக்குகளைக் கொடுக்கலாம்?
ம.கோ.இரா.வுக்கு விலக்கு அளிக்கப்பட்டது பற்றி ஒரு சிறிது
பார்ப்போம். அண்ணன் ஒரு முறை திராவிட நாடு இதழில் தம்பிக்கு எழுதி இருந்தது
என்னவென்றால் தி.மு.க.வில் சேர்பவர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் அதனால் எந்த வித
இழப்பும் ஏற்படக் கூடாது. மாறாக இயக்கத்தால் அவர்களுக்கு நன்மைகளும் ஆதாயங்களுமே
கிடைக்க வேண்டும் என்பது. நயன்மைக் கட்சி தொடங்கி தன்மான இயக்கம், “திராவிடர்”, இயக்கம்
என்று தலைவர்களின் போதாமைகளைக் கணக்கிலெடுக்காமல் இழப்புகளையும் பல்வேறு கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு குமுகப் புரட்சி செய்து வந்த தொண்டர்களையும் தலைவர்களையும் எத்தகைய
இழிவு நோக்கி இழுத்துச் சென்றுள்ளார் அண்ணாத்துரை என்பதற்கு இதற்கு மேல் வேறு
சான்று தேவை இல்லை.
இவ்வாறு 158 உயிர்களின் கல்லறையைக் காட்டி கொள்கைகள்
அனைத்தையும் ஈடு வைத்து தி.மு.க. 138 ச.ம.உ.க்களை 1967 தேர்தலில் பெற்று தனிக் கட்சியாக ஆட்சி அமைத்தது.
இந்த ஆட்சி மாற்றத்தில், இந்திப் போராட்டத்தில் ஈடுபட்டு
இன்னல்களைச் சந்தித்த மாணவர்களின் தேர்தல் ஈடுபாடு பெரும் பங்காற்றியுள்ளது.
அத்துடன் பேரவைக் கட்சி ஆட்சியின் ஊழலும் கட்சியினரின் அட்டுழியங்களும்
காரணங்களாகும். அனைவரும் கூறுவதுபோல் காமராசர் தனிப்பட்ட முறையில் கறைபடாதவராக
இருக்கலாம். ஆனால் கட்சிக்குப் பணம் திரட்டுவதில் அவர் எந்த உத்தியையும்
புறக்கணித்தவர் இல்லை. பனியாக்கள் மீதான பரிவுக்கு அதுவும் ஒரு காரணமாகலாம்.
அவரது அமைச்சரவையில் இருந்த கக்கன் நேர்மைக்குப்
பெயர்பெற்றவர். ஆனால் அவர் பொறுப்பிலிருந்த பொதுப்பணித்துறையில் வேலைகள் எடுத்துச்
செய்த ஒப்பந்தக்காரர்கள் பெரும்பாலும் பேரவைக் கட்சி சார்பினர். அப்படிச் சொல்வதை
விட இத்தகையோர் எப்போதும் ஆளும் கட்சியினராக மாறிவிடுவதில் வல்லவர்கள். அவர்களது
முறைகேடுகளுக்கு எந்தப் பொறியாளராவது இடையூறாக இருக்கிறார் என்று தெரிந்தால்
போதும் அவர் பந்தாடப்படுவார் என்பது நாம் நேரில் கண்ட உண்மை. இந்தப்
பின்னணியில்தான் கோயில்களை உடைப்பவர்களாக, நாட்டைப் பிரிப்பவர்களாக இருந்தால் கூட
நல்லாட்சி தருவதாகக் கூறுகிறார்களே இவர்களுக்கு வாக்களித்துப் பார்ப்போம் என்று
மக்கள் ஒரு வாய்ப்பளித்தனர்.
தி.மு.க. வினர் இறைமறுப்புக் கொள்கை தொடங்கி சாதி ஒழிப்பு,
தமிழக விடுதலை என்று அனைத்துக் கொள்கைகளையும் கைவிட்டுவிட்டது மக்கள் மனதில்
உறைக்கவில்லை. அவர்களது கொள்கை விளக்கங்களிலிருந்த ஞாயங்களை அவர்களால்
புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அந்த ஞாயங்களை எடுத்துச் சொன்னவர்களுக்கும் அந்த
ஞாயங்களுக்கும்தான் எட்டாத தொலைவு.
அவ்வாறுதான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் போதும் பேரவைக்
கட்சியினர் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். அதிலும் பெரும் பேச்சுப்
பேசும் நேருவின் மீது அறிவறிந்த பெருமக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் அவர் பெண்டுகள் மெய்க்க(மெச்ச) உலக வலம் வருவதும் பாராளுமன்றத்தில் அழகு
மிளிரப் பேசி படித்தவர்களை மயக்குவதிலும் இந்திய மக்களின் எதிர்காலக் கனவுகளை எரித்து
நீறாக்கினார்.
அண்ணாத்துரை அதை விடவும் கீழே போய்விட்டார். தனக்கு ஒரு பனியா பரிவட்டம் கட்ட[12]
இந்து அறநிலையத்துறை பொறுப்பிலிருந்த தம்பி இரா.நெடுஞ்செழியனுக்குப் பார்ப்பனப்
பூசாரிகள் பரிவட்டம் கட்ட மக்களின் நம்பிக்கைகளையும் தமிழகத்தின் எதிர்காலத்தை
தகர்த்து எறிந்தனர்.
மக்களுக்குத் தங்கள் மன அழுத்தங்களைத் தளர்த்துவதற்கு
கடவுள் என்ற ஒரு கற்பிதத்தின் மீது நம்பிக்கையும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு
வழிபாடு எனும் நடவடிக்கையும் அதற்கு ஒரு களமாகச் சமயம், கோயில்கள் போன்ற
கூட்டமைப்புகளும் தேவைதான். மனிதனின் அறிதலையும் ஆற்றலையும் மிஞ்சிய இயற்கையும்
அவன் கட்டுக்குள் நிற்காத குமுக விசைகளின் தாக்குதல்களும் இருக்கும் வரை அதைத்
தவிர்க்க முடியாது. இயற்கை பற்றிய புரிதலும் அதனைக் கட்டுப்படுத்தலும் அல்லது
அதற்கு இசைய வாழ்தலும் குமுக விசைகளை மக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும்
முன்னேறும் தோறும் கடவுள், சமயம் ஆகியவற்றின் பிடியும் தளரும். ஆனால் இந்தக்
கடவுளும் சமயமும் நம் ஆகமக் கோயில்களில் போல் மனிதனைச் சுரண்டுவதாகவும் மக்களைச் சாதிவாரியாகப்
பிளவுபடுத்துவதாகவும் இருக்கக் கூடாது. ஒன்றே கடவுள், ஒருவனே தேவன் என்று இறங்கி
வந்த நிலையில் நின்று, ஆகமக் கொள்ளைகளையும் வருணப் பிளவுகளைப் தவிர்ப்பதுமாகிய ஒரு
சமயத்தின் தேவையைப் பற்றிக் கூட இந்தப் பதவி வேட்டைக்காரர்கள் சிந்திக்கவில்லை.
1962 தேர்தலில் தான் அடைந்த தேர்தல் தோல்வியால் மிரண்டுபோன
அண்ணாத்துரை இன்னொரு தோல்வியைச் சந்திக்கத் துணிவின்றி, ஐயத்திற்கிடமின்றி வெற்றி
வாய்ப்புள்ள தென் சென்னை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தமது கட்சி
பெரும்பான்மை பெறும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை என்று எதிரணியினர் சரியாகவே
சுட்டிக்காட்டினர். ஆனால் பெரியார் சுட்டிக்காட்டியவாறு முட்டாள் தமிழக மக்கள்
அவர்கள் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெறச் செய்தனர்.
தம்பிகளுக்குள் அடிதடி, போட்டி என்று வரும் என அஞ்சி அண்ணன்
தானே முதலமைச்சர் பதிவியை ஏற்றுக்கொண்டார் என்று கூறப்பட்டது. தம்பிகள் மிக
வேண்டிக் கொண்டதால், ஊழல் செய்யக்கூடாது, முறைகேடுகள் செய்யக் கூடாது, செய்தால்
விலகி விடுவேன் என்று அனைவரிடமும் வாக்குறுதி பெற்றுக்கொண்டு பதவி ஏற்றார் என்ற
செய்தி வெளியே பரப்பப்பட்டது.
அண்ணன்தான் முதலில் தி.மு.க.வின் பொதுச் செயலாளராக
இருந்தார். கட்சியின் தலைமைப் பதவி தந்தை(!) பெரியாருக்காகக் காத்திருக்குமாம்.
இதையும் “இரட்டைக் குழல் துப்பாக்கி”யுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். பிற கட்சிகளைப் போலில்லாமல் அடுத்த
தலைமுறைத் தலைவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம் என்று, தம்பி இரா.நெடுஞ்செழினைப்
பொதுச்செயலாளர் ஆக்கியிருந்தார் அண்ணன்! ஆனால் கடிவாளம் அண்ணன் கையிலும் அடுத்த
தம்பி கருணாநிதி கையிலும்தான் இருந்தது. மாநாடுகளின் தலைமைக்கு மட்டும்தான் தம்பி.
“தம்பி வா! தலைமை தாங்கு!”
பொன்மொழிகள் புகழ் பெற்றவை.
சம்பத்துச் சிக்கல் கட்சியைக் கலங்கடித்துக் கொண்டிருந்த
போது பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் தேர்வுக்கு நெடுஞ்செழியனுக்கு எதிராகத் தான்
போட்டியிடப் போவதாக சம்பத்து அறிவித்தார். கலவரம் வரும் என்று அஞ்சிய அண்ணன் தானே
பொதுச்செயலாளராக இருக்கப் போவதாக அறிவித்தது போன்றதுதான் முதலமைச்சர் பதவியை
ஏற்றுக்கொண்ட இந்த நிகழ்வும்.
அண்ணன் உடையிலும் பொதுவான தோற்றத்திலும் எளிமையிலும் எளிமை.
ஆனால் புகைப் படத்துக்குக் காட்சி கொடுக்கும் போது தானே ஏறிவிடுமே ஒரு மிடுக்கு.
அதைக் காணக் கண் கோடி வேண்டும். “ஆள் உயரத்தில் மாலை”, மாலை போடுகின்றவராகிய ஆள் தான் உயர்வதற்காகத் தலைவர்களுக்குச் சூடும்
மாலை எனப் பொருள்படும் “ஆள் உயர மாலை” யைப் போட்டுக்கொண்டு
அண்ணன் புகைப்படத்துக்கு முகம்
காட்டும் அழகே தனி.
அப்படி இப்படி என்று அண்ணனின் வாழ்நாள் கனவாகிய முதலமைச்சர்
பதவியில் இருந்தாயிற்று. தமிழகம் முழுவதும் கழகக் கண்மணிகளும் ச.ம.உ.க்களும்
பதவியின் பயன்களைப் பொறுக்குவதில் முனைப்பாயினர். கள்ள உறவை எத்தனை நாளைக்கு மறைக்க முடியும்? கருவேறினால் உடலில் தெரியாமலா போகும்? அது போல்
நம் ச.ம.உ.க்கள் மகிழுந்துகளை வாங்கத் தொடங்கினர்.
இதுவரை ஆட்சியிலிருந்த நயன்மைக் கட்சியினரும் பேரவைக்
கட்சியினரும் பெரும்பாலோர் பிறவியிலேயே பணம் படைத்தவர்கள். எனவே அவர்கள் புதிதாக
மகிழுந்துகள், மனைகள், நிலபுலன்கள், வாங்கினாலோ வீடுகள், கடைகள், வளமனைகள்
கட்டினாலோ தொழில்கள் தொடங்கினாலோ அது எவரது கருத்தையும் கவராது. ஆனால்
தி.மு.க.வினரில் மிகப் பெரும்பான்மையர் அன்றாடங்காய்ச்சிக் குடும்பச்
சூழலிலிருந்து வந்தவர்கள். எனவே அவர்கள் மகிழுந்து வாங்கினால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்
கண்ணிலிருந்து அது எப்படித் தப்ப முடியும்? ஆனால் இந்த இக்கட்டான சூழலை அண்ணன்
எவ்வளவு திறமையாக எதிர்கொண்டார் தெரியுமா! அதை அறிந்தால் இன்றைய இளைய தலைமுறை
மூக்கில் விரலை வைக்கும், அப்படியா என்று வாயைப் பிளக்கும்.
“தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்குத்
தொகுதி மக்கள் மகிழுந்து வழங்கும் விழா” என்று ஊழலுக்கு
விழா எடுத்த உயர்தனித் தலைவராகத் தமிழர்களுக்கு வாய்த்தவர் அண்ணாத்துரை. மக்கள்
அதனையும் நம்பியது போல்தான் தோன்றியது. ஆட்சி தொடங்கி ஆறு மாதங்கள் வரை அதனைக்
குறைசொல்லமாட்டோம் என்று “பெருந்தன்மை” காட்டிய காமராசரின் பேரவைக் கட்சி கூட இந்த ஊழல் திருவிழாக்களைப்
பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அனைவரும் அறியவே இப்படி என்றால் மக்கள் அறியாமல் செய்யத்
தகுந்தவற்றில் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள்! அண்ணனுடைய படிமம் சிதைந்து
அழுகி நாற்றம் எடுக்கும் முன்பே புற்றுநோய் ஆகிய காலன் அவரை
அழைத்துக்கொண்டுவிட்டான்.
ம.கோ.இரா. புதிய கட்சி தொடங்கிய காலத்தில் தான் “அண்ணாயியத்”தைக் கடைப்பிடிக்கப் போவதாக அடிக்கடி மேடைகளில் முழங்கிவந்தார்.
அண்ணாயியம் என்றால் என்ன என்று எவருக்கும் புரியவில்லை. அண்ணாயியம் என்பது உண்மையில்
ஊழலியமே என்பதைப் புரிந்துகொண்டால் அவரது(அண்ணனது) அரசியல் பிறங்கடை(வாரிசாக)யாக
வந்த கருணாநிதியின் செயற்பாட்டைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும்.
எவ்வாறு அழுது, சிரித்து, புளுகி, மறைத்து, நடித்து
நெருக்கடிகளை எதிர்கொள்வதில் மட்டுமல்ல, அவற்றையே ஒரு பெருந்தகையின் சிறப்புகள்
என்று பிறர் தன்னைப் புகழ வைப்பதிலும் அண்ணாத்துரை வல்லவர் என்பதற்கு
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நடந்த மோதலில் மாணவர்களை
அமைதிப்படுத்திய நிகழ்ச்சியையும் கீழவெண்மணி எரிப்பைக் கேட்டு நோய்ப்
படுக்கையிலிருந்து குமுறிக் குமுறி
அழுததையும் கூடுதல் சான்றுகளாகக் காட்டலாம். அளவிறந்த திறமையும் ஆற்றலும்
படைத்துத் தலைமையிடத்தையும் பிடித்த அந்த மனிதர் அவற்றைத் தான் கூறிவந்த
கொள்கைகளின் நிறைவேற்றத்துக்குப் பயன்படுத்தாமல் மிக இழிவான அதிகாரமற்ற ஒரு மாநில முதலமைச்சர்
பதவிக்குப் பயன்படுத்தி நேர்மையும் ஈக உணர்வும் போராட்டத் தன்மையும் உள்ள மக்களை
ஏமாற்றிக் களத்திலிருந்து அகற்றினாரே, அகலாதவரின் நற்பண்புகளை அழித்துக்
குமுகத்தின் உள்ளிருந்து அரிக்கும் புற்றுநோய்க் கண்ணறைகளாக மாற்றினாரே அதுதான்
மிகப்பெரும் அவலம், தமிழகத்துக்கு மட்டுமல்ல, அந்த மனிதருடைய புகழுக்கும்தான்.
அண்ணாத்துரை
காலத்தில் அவர் செய்தவற்றில் குறிப்பிடத்தக்கவை:
- சென்னை மாநிலம் என்றிருந்த மாநிலப் பெயரை தமிழ்நாடு என்று மாற்றியது.
- 2 ஆம் உலகத் தமிழ் மாநாட்டைத் திருவிழாவாகச் சென்னையில் நடத்தியது. கருத்தரங்குகள் ஆங்கிலத்தில் நடைபெற்றதால் அதனைத் தமிழ்த்”துரை”களின் கருத்தரங்கு எனக் கிண்டல் செய்தனர். அதற்கு அண்ணாத்துரை பொறுப்பல்ல, மாநாடு நடத்தியவர்களின் வழிமுறையே அதுதான். மாநாட்டின் பகுதியாக சென்னைக் கடற்கரைச் சாலையில் தமிழகப் பெருமக்களின் சிலைகளை நிறுவியது.
- இருமொழித் திட்டம் என்ற சட்டத்தை நிறைவேற்றியது.
- சீர்த்திருத்தத் திருமணத்துக்குச் சட்ட ஏற்பு வழங்கியது போன்றவை.
இவை
அனைத்தும் மொழி, பண்பாடு குறித்தவையே அன்றி பொருளியல் குறித்தவையாக எதுவும் இல்லை.
அந்தச் சிந்தனை உள்ளவர்கள் அனைவரும் இயக்கத்திலிருந்து வெளியேறி அல்லது
வெளியேற்றப்பட்டுவிட்டதால் ஆட்சியாளர்களின் பனியாக்கள் சார்பான இந்த
நிலைப்பாட்டைத் தட்டிக்கேட்க ஆளில்லை. எதிர்க்கட்சிகளான பேரவைக் கட்சியும்
பொதுமைக் கட்சிகளும் அதே பனியாக்களின் நலன் நாடுபவையாய் இருந்ததால் அவையும் குறை
கூறவில்லை. பேரவைக் கட்சி ஊழல்களை மட்டும் சுட்டிக் காட்டியது. ஆளும் கட்சியினரும்
தமிழார்வலர்கள் எனப்படுவோரும் அண்ணாத்துரையை இந்த நடவடிக்கைகளுக்காக மிகவும்
பாராட்டினர், பாராட்டுகின்றனர்.
பொருளியல்
களத்தில் அவர் ஒன்றும் செய்யாமலில்லை. ஒன்றல்ல இரண்டு செய்தார். அவை:
- உரூபாவுக்கு ஒரு படி அரிசி வழங்கும் படியரிசித் திட்டம். லால் பகதூர் சாத்திரி தொடங்கிவைத்த உணவுத் தவசத் தட்டுப்பாடு, உழவன் மீதான கட்டுப்பாடு கட்டத்தில் அரிசிச் சிக்கலே பெரிய அரசியலாக, அரிசியியலே அரசியலாக இருந்தது. அதைப் பயன்படுத்தி ஆதாயம் காணத் திட்டமிட்ட அண்ணாத்துரை உரூபாவுக்கு மூன்று படி அரிசி வழங்குவதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறினார். அப்படி வழங்காவிட்டால் தெருமுனையில் நிற்கவைத்துச் சாட்டையால் அடியுங்கள் என்று அறைகூவலே கூட விடுத்தார். மனமறியப் பொய் சொல்பவர் அண்ணாத்துரை என்பதற்கு இது ஆணித்தரமான ஒரு சான்று.
எதிர்க்
கட்சியான பேரவைக் கட்சியின் குடைச்சல் தாங்க முடியாமல் அண்ணன் கடைசியில்
உரூபாவுக்கு ஒரு படி அரிசி வழங்கும் திட்டத்தைச் சென்னையிலும் கோவையிலும்
நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார். “மூன்று படி
இலட்சியம், ஒரு படி நிச்சயம்”, அண்ணன் அடுக்குமொழியில்
ஒன்றும் குறைச்சலில்லை. ஆனால் அதுவும் தொடரவில்லை.
ஆனால் படியரிசித் திட்டத்தினால் வரும் செலவை ஈடுகட்ட என்று
சொல்லி பரிசுச் சீட்டுத் திட்டத்தைக் கொண்டுவந்தார் அறிஞர் அண்ணன். “விழுந்தால்
வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு” எவ்வளவு இனிமையான
முழக்கம். ஆனால் அது எப்படியெல்லாம் தமிழகத்தைச் சீரழித்தது என்பதைப் பார்ப்போம்.
பரிசுச் சீட்டுத் திட்டம் செயற்படத் தொடங்கிய சில
நாட்களிலேயே பரிசு பெற்ற சீட்டு எவர் கையில் இருக்கிறதோ அவர்களை பனியாக்கள் தேடிச் சென்று
ஒன்றுக்கு இரண்டு பணம் கொடுத்து அதை வாங்கித் தங்கள் “கருப்பு”ப் பணத்தை வெள்ளைப் பணம் ஆக்கிக்கொண்டார்கள். இன்னும் சில
ஆண்டுகள் சென்றதும் பரிசுச் சீட்டு முகவர்களின் கைகள் வலுத்தன. மதுரையைச் சேர்ந்த கே.ஏ. எசு. சேகர் என்பவர் பல
மாநிலப் பரிசுச் சீட்டுகளின் முகவராக வளர்ந்தார். அவரே போலிச் சீட்டுகளை
அச்சிட்டுத் தானே தொழில் செய்ததாகப் பேசப்பட்டது. ஒரு உரூபாய்ச் சுரண்டல் பரிசுச்
சீட்டுகள் என்று ஒன்று அறிமுகமானது. இந்தப் பரிசுச் சீட்டுப் போதையால் ஓட்டாண்டியானவர்கள்
பல பேர். தற்கொலை செய்துகொண்டவர்கள் எண்ணற்ற பேர். மகள் திருமணத்துக்கு
நகை வாங்குவதற்கென்று கொண்டு சென்ற ஓரிலக்கம் உரூபாய்களுக்கும் அதிகமான பணத்தைச்
சுரண்டல் சீட்டில் இழந்து தற்கொலை செய்து
கொண்டதாகக் கூறப்பட்ட கோயில்பட்டியைச் சேர்ந்தவரின் கதை இரங்கத்தக்கது.
ஒரு வழியாக செயலலிதா இந்தக் கொடுமைக்கு முடிவுகட்டினார்.
மதுரையைச் சேர்ந்த அந்த முகவர் அசையாச் சொத்து வாணிகம்
எனும் கட்டுமானத் தொழிலில் இறங்கினார். நடுவரசின் வருமானவரித் துறையும் மாநில
அரசின் வாணிகவரித் துறையும் நடத்திய தேடுதல் வேட்டையின் போது அவர் நெஞ்சாங்குலை
வெடித்து உயிரிழந்தார். அத்துடன் ஒரு தமிழகக் குடிமகனின் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கை
திட்டமிட்டு அழிக்கப்பட்டது. மக்களின் ஈட்டங்கள் அழிந்ததுதான் மிச்சம்.
இரண்டு முதுவர் பட்டங்கள் பெற்றவர், பொருளியல் மேதை
என்றெல்லாம் போற்றப்பட்ட அண்ணனின் பொருளியல் மேதாவித்தனம் இதுதான்.
“நாம்
மின்சாரத்தைக் கொண்டு வெளிச்சம் போட்டு வாழ்கிறோம், அதைத் தொழில் வளர்ச்சிக்குப்
பயன்படுத்த இங்கு வழியில்லை” என்று ஆட்சிக்கு வருவதற்கு முன் முழங்கிய “அறிஞர்” பெருமான் ஆட்சிக்கு வந்த பின் அந்தத் தொழில் வளர்ச்சியைத் திட்டமிட்டு
மக்களின் வாழ்நிலையை உயர்த்தாமல் படியரிசித் திட்டம், பரிசுச் சீட்டு என்று
மக்களுக்கு கேடு விளைத்த துயர வரலாறு இது.
“தந்தை”, குழந்தை குட்டி இல்லாத நிலையிலும் தான் மாய்ந்து
மாய்ந்து படித்து தேர்ந்து தேர்ந்து எழுதிக் குவித்த, பேசித் தீர்த்த, மனித
வரலாற்றில் உருவான மிக உயர்ந்த, ஒப்பற்ற கொள்கைகளை விற்று உரூ 125 கோடி திரட்டி
தமிழகத்துக்குத் தாங்க முடியாத இழப்பைத் தேடித் தந்த மனநோயாளி. “அண்ணனோ”
அருந்திறன்கள் வாய்க்கப் பெற்றும் தான் பேசிய கருத்துகளுக்கு இசைய ஓர்
அப்பழுக்கற்ற குமுகத்தை தமிழகத்தில் அமைத்து உலகுக்கே வழிகாட்டக் கூடிய மக்கள் திரள்
பின்னணியிலிருந்தும் அதிகாரம் அற்ற ஒரு மாநில முதல்வர் பதவிக்காக அதனைக் குப்பையில்
வீசி, தமிழக மக்களை உலகின் மிக இழிவான ஒரு குழுவாகத் தாழ்த்திய பதவிப் பித்தன்.
இனி, அண்ணனை அடுத்து வந்த
தம்பியின் ஆற்றல்களை அளக்க முயல்வோம்.
[1]
குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு என்ற ஆசிரியரின் கட்டுரையை http//kumarimainthan.blogspot.com
இல் பார்க்க.
[2].பொன்.மாறன், அதே நூல், பக். 98
[3]
இந்த “நாயக்கர்”
நாயகர் என்ற, வன்னியர் சாதிப் பட்டப் பெயரின் திரிபு.
[4]
குணா, அதே நூல், பக். 12
[5] பொன்.மாறன், அதே நூல், பக். 96 – 97. பெரியார் திராவிட இயக்கத்திடம் நாம்
எதிர்பார்க்கும் கொள்கைகள், குறிக்கோள்களைத் தெளிவுடன் எடுத்துக் கூறுகிறார்
பாருங்கள். செயல்பாட்டில் ஏமாற்றியிருப்பது அதைவிடத் தெளிவாகத் தெரியவில்லையா?
[9] மேலது, பக். 83
[10] குணா, அதே நூல், பக். 27
[11] வே.தி.செல்லம், அதே நூல், பக்.559
[12]
குணா, அதே நூல், பக்.15
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக