28.12.15

சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 24


தொடுப்பு 7
2015ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்த போது தமிழினி வசந்தகுமார் அவர்கள், 2004ஆம் ஆண்டு யுனைட்டெடு ரைட்டர்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட, திரு.தெ.வே.செகதீசன் என்பார் பண்டிதர் ஆய்வுக்காக எழுதிய பத்திரகாளியின் புத்திரர்கள் என்ற நூலைத் தந்தார். வலங்கையர் வரலாறு என்ற அடிப்படையில் நாடார் அல்லது சாணார்களின் வரலாறு பற்றிய ஒரு அலசலை முன்வைப்பதாக அந் நூலின் உள்ளடக்கம் இருந்தது. இக் கால ஆய்வேடுகளின் அரைகுறைத் தன்மையுடன் உண்மைகளை மறைக்கும் அல்லது திரிக்கும் போக்கும் அந் நூலில் இருந்ததைக் குறிப்பிட வேண்டும். தமிழக மக்களுக்குப் பொதுவாகவும் வரலாற்று ஆய்வர்களுக்குச் சிறப்பாகவும் தெளிவுபடுத்த வேண்டிய பல பொருள்களை இந்த நூலைக் கோட்சுட்டி எடுத்துக்கூறுவது இன்றியமையாதது என்று கருதுவதால் சுருக்கமாக அவை பற்றி கூற எண்ணுகிறேன்.

முதலில் வலங்கையர், இடங்கையர் பிரிவினையின் வரலாற்றுப் பின்புலம். அதைப் பற்றி ஆசிரியர் எதையும் கூற முற்படவில்லை. நான் அறிந்தவரை வரலாற்றில் முதன் முதல் வலது – இடது என்ற பிரிவு பற்றிய பதிவு கி.மு.671 – 617 வரை எகிப்தை ஆண்ட சம்மாட்டிக்கசு காலத்தின் அவன் படைவீரர்களிடையில் ஏற்பட்டதைக் குறித்ததாகத் தெரிகிறது. இது பற்றி திரு. எசு.வி.எசு.இராகவன் அவர்கள் எழுதியுள்ள ஃஇராடாட்டசு (484 – 408) வரலாறுகள் என்ற நூலில் தரப்பட்டுள்ளவை: சம்மேட்டிக்கசு சீதோ மன்னருக்குப் பின் மற்ற அரசர்களால் நாடுகடத்தப்பட்டு அயோனியர், காரியர் இனத்துக் கொள்ளையர்களின் துணையோடு எகிப்தின் அரசரானார். வெளிநாட்டினர் பணியிலமர்த்தப்பட்டதன் காரணமாக 2,40,000 எகிப்திய வீர்ர்கள் எத்தியோப்பியாவில் குடியேறினர்……. டெசர்ட்டர்கள் எனும் மக்கள் நைல்சு ஆற்றின் கரையில் வாழ்கின்றனர். இவர்கள் பெயர் அஷாம் என்பதாகும். சம்மேட்டிக்கசு காலத்தில் வெளியேறிய 2,40,000 எகிப்திய வீரர்கள் இவர்கள். அஷாம் என்றால் கிரேக்க மொழியில் அரசரின் இடப்பக்கம் நிற்பவர் என்று பொருள்[1]. இவர்கள் 3 வருடங்கள் ஒரே இடத்தில் இருந்தனர். இது பிடிக்காமல்தான் எத்தியோப்பியாவுக்குச் சென்றனர். சம்மேட்டிக்கசு அவர்களை ஓரிடத்தில் சந்தித்து உங்கள் மனைவி, குழந்தைகள் தெய்வங்கள் யாவரையும் தவிக்விட்டுச் செல்வது நியாயம்தானா உடன் திரும்பி விடுங்கள் என்று பணிந்து இரங்கி அழைப்பு விடுத்தார். ஆனால் அவ் வீரர்களின் தலைவன் தன் மறைவிடத்திலிருந்த ஆண்குறியைத் தொட்டுக் காண்பித்து இது எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் மனைவிகளையும் மக்களையும் சம்பாதித்துக் கொள்வோம், தாங்கள் அதற்குக் கவலற்க என்று மிடுக்காகப் பதிலளித்தான். அந்த வீரர்களை எத்தியோப்பிய அரசன் வரவேற்றுத் தன் அரசில் இருக்குமாறு செய்து தனக்குப் பகையாக விளங்கிய சில எத்தியோப்பிய மக்களை ஒழித்துக் கட்ட அவர்களைப் பயன்படுத்திக் கொண்டான். – உலகின் பெரும்பான்மை அரசர்களுக்கோ படைஞர்களுக்கோ நாடு, மக்கள் நலன் பற்றிய கவலைகள்  என்றுமே இருந்ததில்லை என்பதற்கான ஒரு வரலாற்றுப் பதம் இது என்பது நம் குறிப்பு.

பிற்கால வரலாற்றில் பாமினிப் பேரரசின் படையிலும் ஆள்வினையிலும் வெளிநாட்டினராகிய துருக்கியர், அரேபியர், பாரசீகர், முகலாயர் ஆகியோருக்கு கட்டுக்கோப்பும் வீரமும் மிக்கவர்கள் என்று முன்னுரிமைகள் வழங்கப்பட்டு சுல்தானின் வலப்பக்கம் நிற்கும் பெருமை பெற்றார்கள், உள்நாட்டு மதமாறிகளும் ஆப்பிரிக்க நீக்கிரோக்களும் ஆப்பிரிக்க ஆண்களுக்கும் இந்தியப் பெண்களுக்கும் பிறந்த முகம்மதியர்களும் ஒழுங்குமுறை இல்லாதவர்களென்றும் கோழைகள் என்றும் பேரரசரின் இடப்பக்கம் நிற்க வேண்டிய தாழ்வை எய்தினார்கள் என்று கே.ஏ.நீலகண்ட சாத்திரி அவர்கள் எழுதியுள்ள தென்னிந்திய வரலாறு (முதல் பகுதி) பக். 392 – 93 (தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1973 வெளியீடு) கூறுகிறது. இந்தப் பிளவும் பகைமையுமே பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமாயின.

விருதுகள் எனப்படுபவை இன்று பாரத ரத்னா என்ற பெயர்களில் வழங்கப்படும் பட்டயங்கள், சான்றிதழ்கள் போலின்றி ஊர்திகளில் பச்சை, நீல விளக்குகள், முன்னும் பின்னும் பாதுகாவலர்கள் என்பன போன்றவையாகும்.
கூடார வண்டியும் பல்லக்கும் மணிகள் இழைத்த கால்களையுடைய கட்டிலும் நீராவி(நீர் வாவி – நீச்சல் குளம்?)ச் சோலையில் வந்து சேர்ந்த துணைவர்களுடன் இன்பம் காண்பதும் சாமரையால் ஆ கவரியும் பொன்னால் செய்த வெற்றிலைப் பெட்டியும் கூர் முனையுடைய வாளும் தம் அரசன் கொடுக்க அங்ஙனம் பெற்ற விருதுகளாகிய செல்வம் எக் காலத்தும் மாறாத பொன்வளையலை அணிந்த பெண்கள்” என்று வேங்கடசாமி நாட்டார் அவர்கள் பொருள் கூறியிருக்கும்     
வையமுஞ் சிவிகையும் மணிக்கால் அமளியும்
உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்
சாமரைக் கவரியுந் தமனிய அடைப்பையும்
கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப்
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்
பொற்றொடி மடந்தையர் …….என்ற இந்த சிலப்பதிகாரம், ஊர்காண் காதை 126 – 131 வரிகள் விருதுகளின் ஒரு பதத்தைக் காட்டுகின்றன. இந்த விருதுகள் விலைமகளிருக்கு வழங்கப்பட்டவை என்பதிலிருந்து நம் பாண்டிய அரசர்களின் ‘ஆட்சிச் சிறப்பை’ அறியலாம்.

            கி.பி.68இல் செரூசலம் கோயில் அழிக்கப்பட்டதும் அங்கிருந்து வெளியேறிய யூதர்களில் கணிசமானவர்கள் மலபாருக்கு, அதாவது சேர நாட்டின் வட பகுதிக்கு கடல் மூலம் வந்தனர். அவர்களுக்கு கேரள அரசன் பாற்கர இரவி வர்மன் கி.பி.192 வழங்கிய செப்பேடு அவர்களுக்கு வழங்கிய சிறப்புரிமைகளான விருதுகளைப் பற்றிக் கூறுகிறது. மேற்குடியினர்க்கு உரிய 72 உடன்  பகலில் விளக்குப் பிடித்துச் செல்வது, நடக்கும் போது தரையில் துணி விரிப்பதாகிய நடைபாவாடை, பல்லக்கு, குடை பிடித்தல், வடுகப் பறை, தாரை(தாரை – தப்பட்டை), காலணிகள், தோரணவாயில், தலைக்குடை, தோள் மேல் கழியின் முனைகளில்(காவடி, காக்கட்டு என்பது குமரி மாவட்ட வழக்கு) சுமந்துவரப்படும் பரிசுகள் என்று பட்டியலிடுகிறது வி.கனகசபையாரின் The Tamils Eighteen Hundred Years Ago(திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிக்குக் கழகம், வெளியீட்டு எண் 841, 1966, பக். 60 – 61).

            இவ்வாறு அரசனுக்கு அணுக்கமான உயர்குடியினருக்கும் அவனுக்கு விருப்பமானவர்களுக்கும் வழங்கப்பட்ட விருதுகள், பிற்காலப் பல்லவர் காலத்திலிருந்து தடுப்பணைகள், நீர் நிலைகள் போன்ற பாசன அமைப்புகளை உருவாக்கி அவற்றின் அடிப்படையில் பார்ப்பனர் தலைமையில் அமைந்த பிரம தேயங்களில் படிப்படியாக உருவான கோயில் சார்ந்த ஆட்சி அலகுகள் பெருகிய போது கோயில் சார்ந்தவர்களான பார்ப்பனர், தேவதாசிகள் உள்ளிட்ட பல்வேறு கோயில் பணியாளர்களையும் அரசு சார்ந்தவர்களான ஆள்வினையாளர்கள், படைத்துறையினரையும் அந்தணர், அரசர் என்ற வருண அடிப்படையில் வலங்கைச் சாதியினராக, மேற்கூறிய விருதுகளுக்கு உரிமையுள்ளோராகவும் எஞ்சியவரில் பண்ணையார்கள் அல்லது நிலக்கிழார் ஒழிந்த(அவர்கள் இரண்டாம் வருணமான அரச – அதாவது சத்திரிய வருணத்தினுள் வருவர்) வேளாண் தொழிலாளர் உட்பட தொழில் - வாணிகம் சார்ந்தவர்களை வாணிகர், உழவர் எனும் மூன்றாம் நான்காம் வருணங்களின் அடிப்படையில் இடங்கையினராகவும் வகைப்படுத்தி விருதுகளுக்கு உரிமை இல்லாதவராகவும் பிரித்துள்ளனர். பக்கத்துக்கு 98 சாதிகள் இருந்ததாகப் பதிவுகளை கே.கே.பிள்ளை அவர்களின் தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும் காட்டுகிறது. இதில் “கரிகாற் சோழன் வலங்கை – இடங்கைப் பாகுபாட்டைத் தோற்றுவித்தான் என்று ஒரு வரலாறு கூறுகிறது” என்ற குறிப்பு வருகிறது. “மூன்றாம் குலோத்துங்கனுக்கு கரிகாலன் என்ற பெயரும் வழக்கிலிருந்தது வெளிப்படுகிறது” என்றும் கூறுகிறார். அதைத்தான் திரு.செகதீசன் பிடித்துக்கொண்டு திரும்பக் திரும்பக் கூறுகிறார். இராசராசனின் தந்தை இரண்டாம் பராந்தகனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை வென்று புகழ் பெற்றவன். இவன் எவராலோ கொலை செய்யப்படுகிறான். பராந்தகனின் சிற்றப்பன் கண்டராதித்தனின் மகன் உத்தம சோழன் இவனைக் கொலை செய்திருக்கலாமென்று கருதப்படுகிறது. கழகக் காலத்தில் ஒரு கரிகாலன் இருந்தானெனக் கொண்டு ஆதித்த கரிகாலனை இரண்டாம் கரிகாலனென்றும் வீர ராசேந்திரனை மூன்றாம் கரிகாலனென்றும் முதல் குலோத்துங்கனை நான்காம் கரிகாலனென்றும் வரிசைப்படுத்துகிறது அபிதான சிந்தாமணி. ஆதிமந்தியின் தந்தையும் கல்லணை கட்டியவனுமான கரிகாலன் முந்தியவனென்றும் காவிரிக்கும் கிளையாறுகளுக்கும் கரையமைத்து பெருவளவாய்க்கால் என்ற பெயரில் திருச்சி மாவட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஏறக்குறைய 90 கிலோமீற்றர் நீளமுள்ள வாய்க்காலை வெட்டிய பெருவளத்தான் எனப்படும் கரிகால் திருவளத்தானும் வேறென்றும் நான் கருதுகிறேன்(பஃறுளி முதல் வையை வரை என்ற என் நூலைப் பார்க்க).

            இரண்டாம் கரிகாலனான பெருவளத்தான் பல அடிப்படை மாற்றங்களை உருவாக்கிய பெருமைக்குரியவன். உறையூரிலிருந்த சோழத் தலைநகரைக் காவிரிப்பூம் பட்டினத்துக்கு மாற்றியவன் அவனே. காவிரிக்கும் அதன் கிளைகளுக்கும் கரையமைத்து காவிரிப் படிகைப் பரப்பு முழுவதும் நன்செய் வேளாண்மையைப் புகுத்தியவனும் அவனே. இந்த நடவடிக்கைகளில் அவன் பலவகை முட்டுக்கட்டைகளை அகற்ற வேண்டியிருந்தது. ஆடு மேய்க்கிகளான குறும்பர்களை அடக்க முயன்று அவர்களை நாட்டை விட்டே துரத்தியிருக்கிறான். இந்த நடவடிக்கைக் குமுகத்தில் பெரும் தாக்கத்தை விளைத்துள்ளது. தொல்லை தரும் செயல் என்ற பொருளில் குறும்பு என்ற சொல்லையும் நாம் தொடக்கத்தில் காட்டியுள்ளவாறு(பக்.17) திருவள்ளுவர் வேந்தலைக்கும் கொல்குறும்பும் என்ற சொற்கட்டைப் பயன்படுத்திய அளவுக்கு கரிகாலனுக்கு அவர்கள் கடும் அறைகூவலாக, இடைவிடாத தொல்லையாக இருந்துள்ளனர்.   பனைமரக் காடுகளை நன்செய் நிலங்களாக மாற்ற முனைந்த போது பனையேறிகளுடனும் மோதல் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டிருக்கும். அதில் ஏற்பட்ட ஓர் உடன்பாடு, நாடார் வரலாற்றாய்வாளர்கள் சுட்டிக்காட்டும் காவிரி உடைப்படைப்புக் கதையில் வெளிப்பட்டிருப்பதாக நான் சுட்டிக்காட்டியுள்ள இராசுகுமார் என்பவருடைய கருத்து பொருந்துகிறது. இது மட்டுமல்ல அண்டை அயலில் நடப்பவற்றைக் கண்காணிக்க மதுரையைப் பொறுத்தவரை திருப்பரங்குன்றம் முதன்மையாகவும் யானை மலை, நாக மலை, அழகர் மலை போன்றவை துணையாகவும் விளங்கின. உறையூரில் மலைக்கோட்டையைக் கொண்டிருக்கும் மலை இருந்தது. ஆனால் காவிரிப் படிகைப் பரப்பில் மலைகளே இல்லை. எனவே பனைகளிலிருந்து சுற்றி நிகழ்பவற்றையும் குறிப்பாக குறும்பர்களின் நடமாட்டங்களையும் கண்காணிக்கும் பணியைச் சாணார்களிடம் அவன் ஒப்படைத்திருக்கலாம். இந்தக் கட்டத்தில்தான் தனக்கு நாணயமான துணையாக இருந்தவர்களுக்கு வலது பக்கத்தவர் என்ற பொருள்படும் வலங்கையர் என்றும் எதிர்நிலை எடுத்தவர்கதளுக்கு இடங்கையர் என்றும் அவன் பெயர் சூட்டியிருக்கலாம். இதன் தொடர்ச்சியாகத்தான் மேலே குறிப்பிட்டவாறு பல்லவர்கள் மொத்த மக்கள் குழுக்களையும் வலங்கை இடங்கை என்று பிரித்து இடங்கையினருக்கு விருது, உரிமைகள் எதுவும் இல்லாத நிலையை உருவாக்கியிருக்க வேண்டும்.

இந்தப் பின்புலத்தில் சோழ நாட்டில் அதற்குப் பின் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி குலோத்துங்கன் ஆட்சியைப் பிடித்ததாகும். அம்மணர்களான காட்டுவிலங்காண்டிகள் தாங்கள் கிளப்பிவிட்ட களப்பிரர் ஆட்சியாளர் துணையுடன் தமிழகத்தின் கோயில்கள், கோட்டை கொத்தளங்களை மட்டுமல்ல இசை – நடனம் உள்ளிட்ட கலைக் கட்டமைப்புகளையும் தடந்தெரியாமல் துடைத்து அழித்திருந்தார்கள். பெரும்பாலும் தமிழகத்திலிருந்து துரத்தப்பட்ட கட்டிடக் கலைஞர்களும் கல் நுண் வினைஞர்களான சிற்பிகளும் வட இந்தியாவுக்கும் தாய்லாந்து போன்ற கிழக்கு – தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பெயர்ந்து அங்கு தமிழகத் தொல் கட்டிடக் கலை நுணுக்கத்தில் அமைத்த கோயில்களை அமைத்தனர். அம்மணம் ஆட்சியாளர் சமயமாகத் தரம் உயர்ந்த பின் அதன் இன்ப மறுப்புக் கண்ணோட்டம் செல்வாக்கிழந்தது. இளங்கோவடிகளும் அம்மண சமய உயர் மட்டத்தினரை,                           நிவந்தாங் கொருமுழம் நீணிலம் நீங்கிப்
பவந்தரு பாசம் கவுந்தி கெடுகென்று
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது
பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்துநாடுகாண் காதை – வரிகள் 210 - 13
என்று மக்களிடமிருந்து தாங்கள் அயற்பட்டதோடு துன்பத்திலிருந்த கோவலன் – கண்ணகிக்கு இரங்குவதைப் பவந்தரு பாசம் என்று கவுந்தியடிகளை இழித்துரைத்ததைக் காட்டுகிறார். எனவே இப்போது தங்கள் தெய்வங்களுக்குக் கோயில் எடுக்கும் பணியை குகைகளுக்கு உள்ளிருந்து தொடங்கி மலைகளை உடைத்து உருவாக்கும் கட்டத்தைத் தாண்டி அடுத்த கட்டமாக சம நிலங்களிலும் கோயில்களைக் கட்டத் தொடங்கிவிட்டனர். இந்தக் கட்டத்தில்தான் அம்மண அயல்வாணிகர்களின் கொடுங்கோன்மையை எதிர்த்து சிவனிய முன்னவராகிய தமிழக வாணிகக் குலத்தில் பிறந்த காரைக்காலம்மையார் தொடங்கிவைத்த சிவனிய எழுச்சிக்கு ஆட்பட்ட பல்லவர்கள் தொடங்கிய முதல்நிலைக் கோயில் கட்டுமானங்களைக் காஞ்சிபுரம் போன்ற தொண்டை மண்டலப் பகுதிகளில் காண முடிகிறது. இந்தக் கோயில் கட்டுமானக் கலையின் ஓர் உச்சமாகத்தான் இராசராசனின் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தக் கோயிலின் சிறப்பாகப் போற்றப்படும் ‘கோபுரம்’ உண்மையில் கோபுரமேயில்லை, கருவறைக்கு மேல் கட்டப்படும் விமானம் எனப்படும் மேற்கட்டே. அக் கட்டுமானத்தின் பெருமையே, அதாவது அளவில் பெரியதாகிய அதன் தன்மையே அதன் பெருமை. உள்ளூர் ஆட்சியைக் கோயிலினுள் கொண்டுவரும் உள்கட்டமைப்புகளையும் அது கொண்டிருப்பது அதன் அரசியல் குறிதகவையும் காட்டுகிறது. அவன் மகன் தன் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றி தந்தை செய்ததைப் போல் அங்கு தன் பெயரில் ஒரு கோயிலையும் கட்டியது சோழப் பேரரசு உருவாக்கத்துக்குப் போர்களுக்காகவும் மாபெரும் கோயில்களைக் கட்டவும் அனைத்து மக்களையும் வாட்டி வதைத்துத் தண்டிய வரிக்கொடுமைகளால் மக்களிடையில் உருவாகியிருந்த வெறுப்பைக் கண்டு மக்கள் செறிந்து வாழ்ந்த தஞ்சை தனக்குப் பாதுகாப்பாக இருக்காது என்றுதான்.

            நாளடைவில் கோயில்களின் வடிவமைப்பில் மாற்றங்கள் புகுத்தப்பட்டன. மேற்கட்டுக்கு இருந்த முதன்மை வெளிச்சுற்று வாயிலில் அமைந்திருக்கும் கோபுரத்துக்குக் கொடுக்கப்பட்டது. மாடங்களாய் அமைந்த அவை போர் வீரர்களைக் கொண்டு சுற்றிலும் நடைபெறுபவற்றைக் கண்காணிக்கும் பணிக்குப் பயன்பட்டன. வெளிச்சுற்றினுள் படைகளைப் பராமரிக்கும் வசதிகளும் செய்யப்பட்டன. தொடர்ந்து நடந்து வந்த கோயில் கட்டுமானப் பணிகளால் புதிகாக வளர்ந்துவந்த ஐந்தொழில் கொல்லர்கள் பொற்கொல்லர்களின் தலைமையில் வலங்கை உரிமைகளுக்காகப் போராட ஆயத்தமாகி நின்றனர்.

            இதற்கிடையில் மக்களுக்கு அரசு மீதிருந்த வெறுப்பு வளர்ந்து வந்தது. இடங்கை வலங்கை என்ற எதிரெதிர் குழுக்கள் ஒன்றிணைந்து அரசை எதிர்க்கும் மனநிலை உருவாகியது. இதைப் பயன்படுத்தி அரசுக்கு எதிரான கலகத்தை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்ட, இராசராசனின் கொள்ளுப்பேரனும் இராசேந்திரனின் மகள்வயிற்றுப் பேரனுமான சாளுக்கிய அரசன் இரண்டாம் இராசேந்திரன் என்பவன் ஐந்தொழிற் கொல்லர்கள் தலைமையில் வலங்கையினர், இடங்கையினர் இரு தரப்பினரையும் இணைத்து கலகம் உருவாக்கி இராசராசனின் ஆண்வழியினனான அதிராசேந்திரனைக் கொன்று ஆட்சியைப் பிடித்ததைப் பற்றி ஏற்கனவே கூறியுள்ளோம். அதற்குப் பின்னர்தான் வலங்கை, இடங்கைச் சாதிகளின் பட்டியலில் மாற்றத்துக்காவும் விருதுகளுக்காவுமான போராட்டங்களும் கலகங்களும் இடைவிடாமல் நடைபெற்றன. இந்தப் பின்னணியில் இன்றைய ஒதுக்கீட்டுப் பட்டியல் போல் வலங்கை – இடங்கைச் சாதிகளின் பட்டியலிலும் விருதுகளின் ஒதுக்கீட்டிலும் பெரும் குழப்பங்கள் நடைபெற்றன. அந்தப் பட்டியல், ஒதுக்கீட்டுக் குழப்பங்களைப் பயன்படுத்தித்தான் திரு.செகதீசன் தன் ஆய்வேட்டில் விளையாடியிருக்கிறார்.

            இனி வருவது ‘மேனிலையாக்கம்’ பற்றி அடிக்கடி அவர் கூறுவது. இந்தச் சொற்கட்டு பற்றி நான் எழுதி என் இணையப் பக்கமான kumarimainthan.blogspot.comஇல் வெளிவந்துள்ள சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் என்ற ஆக்கத்தில் அடிக்குறிப்பாக இடம்பெற்றிருருப்பதைத் தருகிறேன்: “சங்கதப்படுத்தல் என்ற சொல்லை எம்.என். சீனிவாசு என்ற பார்ப்பன ஆய்வாளர் பயன்படுத்தினார். அன்றிலிருந்து பலர் அச் சொல்லைப் பிடித்துக்கொண்டனர். ஆனால் எம்.என். சீனிவாசு ஆங்கிலத்தில் பயன்படுத்திய Sanskritisation என்ற சொல் சில பார்ப்பனரல்லா மேற்சாதி அறிஞர்களுக்குப் பிடிக்கவில்லை. வேளாளச் சாதியினராகிய முத்துச்சண்முகனார் அதை மேனிலையாக்கம் என மொழிபெயர்த்தார். அதாவது சங்கதமும் அதை அடையாளமாகக் கொண்ட மேற்சாதிப் பண்பாட்டுக் கூறுகளும் கீழ்ச்சாதியினரின் பண்பாடுகளையும் அவர்களது மொழியையும் விட மேம்பட்டவை என்பதைச் சங்கதப்படுத்தல் என்ற சொல் வெளிப்படையாகக் காட்டவில்லை என்பது அவர்களது மனக்குறை. எனவேதான் மேனிலையாக்கம் என்ற சொல்லை வடித்து வழக்கிற்குக் கொண்டுவர முயல்கின்றனர். இவரைப் பின்பற்றியே சி. கனகசபாபதி என்பவரும் பாரதியும் பாரதிதாசனும் - ஒப்பியல் திறனாய்வு என்ற தன் நூலில் பார்ப்பனரின் பண்பாடு உயர்வானது என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார்.

ஆனால் முதன்முதலில் கூட்டுக் குடும்ப உழைப்புக்கு மாறான ஒரு வழியில் செல்வத்தைத் திரட்டிய வாணிக வகுப்பே தன் தனிச் செல்வத்திரளைப் பெற்றுக் கொள்வதற்குத் தனக்கேயுரிய பிள்ளைகள் வேண்டுமென்று பெண்ணடிமையை உருவாக்கியது. இந்த நோக்கத்தில் கணவனோடு வாழும் போது மட்டும் பிற ஆடவரை நாடக்கூடாது என்ற பகுத்தறிவு எல்லையை மீறித் திருமணத்துக்கு முன்னரும் கணவன் இறந்த பின்னரும் கூட எவரையும் பெண் நாடக்கூடாது என்ற கொடுங்கோன்மைக்கு அவளை ஆளாக்கினர். இவ்வாறு குமுக வளர்ச்சியில் வெவ்வேறு கட்டங்களில் புதியதாகத் தோன்றிய உயர்ந்த பண்பாட்டுக் கூறுகளையெல்லாம் குமுக மேல்மட்டத்திலிருந்த பார்ப்பனர் தம் நிலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று………மேலைநாட்டு ஆய்வாளர்களும் அவர்களைப் பின்பற்றும் நம் நாட்டு அறிஞர்களும் அறியாத ஒரு சொல்வழக்கு இவ் வொழுக்கங்கள் பார்ப்பனர்க்குரியவையல்ல என்பதை நம் நாட்டுப்புற மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. புலாலுணவைக் கைவிடல், காலையிலெழுந்து குளித்துத் திருநீறு பூசி மணியடித்துப் பூசைசெய்தல், உடுத்தும் உடையை அன்றாடம் துவைத்துக் கட்டல், பார்ப்பனரை வைத்துச் சடங்குகள் நிகழ்த்தல், கைம்பெண் மறுமணத்தை மறுத்தல், மணவிலக்கு, மறுமணம் ஆகியவற்றை விலக்கல், உழைப்பை வெறுத்தல், சாதி வேற்றுமையை நுணுக்கமாகக் கடைப்பிடித்தல் ஆளுவோருக்கு எப்போதும் சார்பாக இருத்தல் போன்ற ஒழுக்கங்களைக் கைக்கொள்வதற்கு வெள்ளாளக் கட்டு மேற்கொள்ளுதல் என்ற சொல் வழங்குகிறது……” என்பது அந் நூலில் எனது இன்னோரு கூற்று. மேனிலையாக்கம் என்ற சொல்லை வெள்ளாள அறிஞர்கள் புகுத்தியதன் பின்னணி இப்போது புரியும்.
   
            நம் குமுகத்தில் உடைமை வகுப்பினருக்கும் உழைக்கும் வகுப்பினருக்கும் இடையிலான பருப்பொருள் பண்பாட்டு[2]க் கூறுகளை அலசி உழைக்கும் மக்களிடையிலுள்ள பண்பாட்டுக்கூறுகளே முற்போக்கானவை என்று வலியுறுத்துவதே அந் நூலின் இலக்கு. இவற்றில் ஒன்று பெண்களுக்கு மணவிலக்கு, மறுமணம், கைம்பெண் மறுமணம் பற்றியது. சாணார்களிடையில் பெண்களுக்கு இந்த உரிமை இருந்ததில்லை என்று மேலே கூறியுள்ளோம். இப்போது நிலைமை வேறு. இந்த உரிமை குறித்து கொள்கையளவில் அனைத்துத் தரப்பினரும் உடன்பாடு கொண்டுள்ளனர் என்பதுடன் நாடார்களிடையில் இது இயல்பாகிவிட்டது. இவ் வுரிமை மிக இயல்பாக இருந்த முக்குலத்தோர் போன்ற சாதியினரிடையில் உடைமையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவிட்ட நிலையில் இந்த உரிமையைப் பெண்கள் வலியுறுத்துவதில்லை என்பது இன்றைய நிலை.

            அடுத்து முகாமையாக வருவது புலாலுண்ணாமை குமுக உயர்வுக்கு இன்றியமையாதது என்ற கருத்து குறித்தது. இன்றைய நிலையில் வேளாளர் என்ற சாதி அடையாளம் உடையவர் அனைவரும் புல்லுணவினரே என்ற கருத்து பெரும்பாலோர் மனதில் உள்ளது. ஆனால் இது உண்மையல்ல, சிவனிய வெள்ளாளர் எனப்படும் ஒரு சிறு விகிதத்தினரே இந்த வகைப்பாட்டினுள் வருவர். பிறர் பிற சாதியினரைப் போல் செல்வநிலையில் உயரும் போதுதான் புலாலுண்ணாமையைக் கைக்கொள்கிறார்கள். இந்தச் சிவனிய வெள்ளாளர்களும் வரலாற்றுத் தொடக்கத்திலிருந்தே புல்லுணவினர் அல்லர். குறிஞ்சி, முல்லை நிலங்களைச் சார்ந்த கள்ளர், பிறர் ஆகிய களப்பிரர்கள் மலைக் குகைகளுக்குள் பதுங்கியிருந்து மௌரிய அரசன் சந்திரகுப்தன், கலிங்க அரசன் காரவேலன் ஆகியோருக்கு உளவுப் பணியாற்றி அவர்களை மூவேந்தர்களுக்கு எதிராக அணிதிரட்டிய அம்மணர்கள் வழிகாட்டலில் மூவேந்தராட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த போது முல்லை நிலத்துப் பண்பாட்டு அடிப்படையில் மாலியராகவே இருந்தனர். பின்னர் அம்மணத்தைத் தழுவினர். இந்த நிகழ்முறையில் ஏற்கனவே மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் அவர்களிடம் படையாட்சியர்களாகவும் காணியாட்சியாளர்களாகவும் இருந்தோரில் தம் அரசர்களைக் காட்டிக்கொடுத்து படையெடுப்பாளர்களின் அருளைப் பெற்றவர்களும் படையெடுப்பாளர்களான குறிஞ்சி, முல்லை மக்களில் சிலரும் குறிஞ்சி மக்களுக்கும் உள்நாட்டு உழுகுடியினர்க்கும் கலப்பில் பிறந்து படையாட்சியாளர்களாகவும் காணியாட்சியாளர்களாகவும் உயர்ந்தவர்களும் அம்மணர்களானார்கள். இதன் குறியீடுதான் சூரபதுமனிடமிருந்து[3] இந்திரனைக் காத்ததற்காக தன் மகள் தேவயானையை மருத நிலக் கடவுளான இந்திரன் குறிஞ்சித் தெய்வமான முருகனுக்கு இரண்டாம் மனைவியாக மணமுடித்துக் கொடுத்த தொன்மக் கதை. இவ்வாறுதான் இவர்கள் புல்லுணவினராயினர். சிவனிய இயக்கத்தைத் தொடங்கிவைத்த வாணிகப் பெண்ணான காரைக்காலம்மையாரின் பின்னணியில் பெருந்திரள் மக்கள் இருப்பதறிந்து மருள்நீக்கியாராயிருந்து மதம் மாறிய அம்மண சமயத்தைச் சார்ந்த வெள்ளாளராகிய அப்பர் எனப்படும் திருநாவுக்கரசரைத் தொடர்ந்து மாணிக்கவாசகர், சேக்கிழார் என்று தொடர்ந்ததே சிவனிய வேளாளர் வலிமை. அப்பர் காலத்தில் வாழ்ந்து சாதிய ஒழிப்பிலும் தமிழகத் தேசியத்திலும் முனைப்புக் காட்டியதால் சூழ்ச்சிக்கு இரையகி அகால மரணமடைந்த பார்ப்பனரான சம்பந்தர் போல் இவர்கள் சாதி ஒழிப்பிலோ தமிழகத் தேசியத்திலோ முனைப்புக் காட்டியதில்லை. வடவன் என்று கருதப்படும் இராமனுக்கு எதிரியாக இராமாயணத்தால் காட்டப்படும் இராவணனுக்கு அருள்பவனாக சிவனை தன் பதிகம் ஒவ்வொன்றின் எட்டாம் பாடலிலும் புகழ்வது சம்பந்தருக்குத் தமிழகத் தேசியத்தின் மீதிருந்த வெறியைக் காட்டுகிறது. 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மக்கள் பொருளியல் உரிமையின் அடையாளமாகக் கப்பல் ஓட்டி காந்தி – ஆங்கிலர் கூட்டுச் சூழ்ச்சியால் களத்திலிருந்து அகற்றப்பட்ட வ.உ.சி.யாரை நினைவூட்டுகிறது சம்பந்தர் வரலாறு.

            நாம் மேலே சுட்டியுள்ள, சிலப்பதிகாரம், அந்திமாலை சிறப்புச்செய் காதை வரிகள் 9 – 13களில் காணப்படும்,
                           கறைகெழு குடிகள் கைதலை வைப்ப                                                                  
                                    அறைபோகு குடிகளொ டொருதிறம் பற்றி
வலம்படு தானை மன்ன ரில்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
என்பதில் இந்த அறைபோகு குடிகளாகவே இன்றைய சிவனிய வெள்ளாளர்களும் இருந்துவருகின்றனர்.

            களப்பிரர் எழுச்சியில் உருவாயினோர் ஒரு குழுவினர் என்றால், தொல்காப்பியம் உரையாசிரியர்கள் காலத்தில் மண உரிமை இல்லாத வெள்ளாளர்கள் இருந்துள்ளனர்.
                        மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
                        கீழோர்க் காகிய காலமும் உண்டே பொருளதிகாரம்கற்பியல் நூற்பா         142.
மேற்குலத்தாராகிய அந்தனார் அரசர் வாணிகர் என்னும் மூன்று வருணத்தார்க்கும் புணர்ந்த கரணம் கீழோராகிய வேளாண் மாந்தர்க்கும் ஆகிய காலமும் உண்டு என்றவாறு.
           
இதனால் சொல்லியது, முற்காலத்துக் கரணம் பொதுப்பட நிகழ்தலின் எல்லார்க்கும் ஆம் என்பதும் பிற்காலத்து வேளாண் மாந்தர்க்குத் தவிர்ந்ததெனவுங் கூறியவாறு போலும். அஃதாமாறு தரும சாத்திரம் வல்லாரைக் கொண்டுணர்க.என்கிறது இளம்பூரணர் உரை.

முற்காலத்து நான்கு வருணத்தார்க்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதாம். அஃது இரண்டாம் ஊழி தொடங்கி வேளாளர்க்குத் தவிர்ந்தது என்பதூஉம். தலைச் சங்கத்தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தார் என்பதூஉம் கூறியவாறாயிற்று. உதாரணம் இக் காலத்து இன்று என்ற நச்சினார்க்கினியர் விளக்கத்தை அடிக்குறிப்பாகத் தருகிறது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான (எண் 629, 1986, அக்தோபர்) தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரையுடன் பகுதி 2 (பக்.121). இது நிலக்கிழார் எனும் பெருநிலவுடைமையாளர், இன்னும் துல்லியமாகக் கூறுவதாயின் சோழப் பேரரசின் காலத்தில் நிலவிய சிற்றரசர்கள் எனப்படுவோர், மடத் தலைவர்கள் ஆகியோருடன் அவர்களின் கட்டிலிருந்த உழவர் குடிப்பெண்களின் உறவு பற்றியதாகும்.

            தொல்காப்பியம், கழக இலக்கியங்கள், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களில் வரும் செவிலியர் தங்களுக்கென்று தனி குடும்பம் இன்றி தலைவன் அல்லது தலைவியின் குடும்ப ஆடவர்களுக்கு வைப்பாட்டிகளாகவும் அவர்களது மக்கள் அடுத்த தலைமுறையினருக்கு தோழன் அல்லது தோழியாகவும் இருந்திருக்கிறார்கள். இத்தகையவரைக் குறிப்பதே வெள்ளாட்டி என்ற சொல். ஆனால் உழுதொழிலாளர்களான வெள்ளாளர்களுக்கு உரையாசிரியர்கள் காலத்தில் திருமண உரிமை இல்லாதிருந்திருக்கிறது. புதிதாக ஆட்சியைப் பிடித்த களப்பிரர்க்கும் அடுத்து வந்த பல்லவர்களுக்கும் இன்னும் தொடர்ந்த சோழருக்கும் இசைவாய் நடந்து சிவனிய வேளாளர் என்ற பட்டத்தைப் பெற்று சிவனியப் பெரியோர் பெயரில் பெரும் எண்ணிக்கையில் பல ஊர்களின் நிலங்களை உடைமையாகக் கொண்டு, சிற்றரசுகளுக்கு இணையான அதிகாரங்களுள்ள மடங்களைப் பெற்றவர்கள் ஒரு புறம் இருக்க இவர்களின் பழைய குலத்தவரான உழுகுடியினரை இழிகுலத்தாராக்கி திருமண உரிமையற்றோராக இவர்கள் ஆக்கியிருக்கிறார்கள் என்று ஐயுற வேண்டியிருக்கிறது. இவர்களைத்தான் பின்னர் பள்ளர் என்றனரோ? இவர்களுக்கு மணவுரிமையை வழங்கியவர் யார்? இராசராசன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. அவன் இத்தகைய குமுகச் சீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டவனாகத் தெரியவில்லை. குலோத்துங்கன் சோழ அரியணையைக் கைப்பற்றும் தன் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கலாம். அத்துடன் சிவனிய மடங்களை ஒழிக்க அவன் முயன்றதாகவும் அதைத் தடுக்க குகைப் போராட்டங்கள் என்ற நீண்ட ஒரு போராட்டத்தை மடத் தலைவர்கள் நடத்தியதாகவும் தெரிகிறது. இந்த இடைவெளியில் இந்த மடங்களின் சொத்துகளை குத்தகை உழவர்களான பள்ளர்கள் உரிமையாக்கிக் கொள்ள உரிமை அளித்திருக்கவும் கூடும். இப்படிப் பறிபோன சொத்துகளை அவர்களாகவே கோயில்களுக்கு வழங்குவதற்காக உழவனான பள்ளனுக்கு அவன் பயிரிடும் சொத்துக்கு உரிய கோயிலின் கடவுளின் பெயரையும் அவன் முதல் மனைவிக்கு அக் கடவுளின் தேவியின் பெயரையும் சூட்டி இரண்டாம் மனைவியையும் காட்டி, கோயிலுக்கும் அவனுக்கும் இடைத்தரகனாக விளங்கிய மண்ணாடி என்ற பள்ளர் தலைவனுக்கும் அவனுக்கும் இடையிலான முரண்பாடுகளைப் பயன்படுத்தி மண்ணாடியைக் கயவனாகக் காட்டி பள்ளு நூல்களால் அவனைக் குளிர்வித்து நிலங்களைப் பறித்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இத்துறையில் ஆழமான ஆய்வில் ஈடுபட்டிருப்போர் இத்தகைய நிகழ்வுக்குச் வாய்ப்பிருக்கிறதா என்று பார்க்கலாம்.
 
மேலே இந் நூல் பக். 89இல் காட்டப்பட்டுள்ள கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, இன்றைய குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருவிதாங்கோட்டிலும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லிடைக்குறிச்சியிலும் காணப்படும் வேணாட்டரசர்களின் கல்வெட்டுகளின் படி வெள்ள நாடான்கள் எனப்படுவோர் வெள்ளாளப் பெண்களை வைத்திருந்ததற்காகவும் அவர்களிடம் அத்துமீறி நடந்துகொள்வதற்காகவும் திருமணம் புரிவதற்காகவும் மரண தண்டனை விதித்தது தெரிய வருகிறது. இந்தப் பின்னணியில்தான் தளவாய் அரியநாதரும் அயல் படையெடுப்பாளர்களுக்காகக் களத்தில் இறங்கி பாண்டியர் காலத்து நாடுகள் எனும் ஆட்சி அலகுகளின் தலைமை அதிகாரிகளான நாடான்களை அகற்றி பாளையங்களை உருவாக்கியிருக்கிறார். இங்கும் வெள்ளாளர்களில் உண்மையாக மேன்மையடைந்தோர் எத்தனை பேர், பள்ளர் என்று குமுகச் சேற்றில் புதைக்கப்பட்டோர் எத்தனை பேர் என்று ஆய்ந்தால் அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிப்படக்கூடும்.

நாஞ்சில் நாட்டில் பாண்டிய மன்னனுக்காக பாசன வரி பிரித்துக்கொண்டிருந்த நாஞ்சில் குறவனை பாண்டிய அரசு வலுவிழந்திருந்த ஒரு காலத்தில் கூபக தேசத்தரசன் எனப்படும் வேணாட்டரசனுக்காக ஒரு திருமணத்தின் போது அமைக்கப்பட்டிருந்த தட்டுக்காவணத்தில் தீ வைத்து சம்பந்தர் வகையறாக்களைக் கொன்றது போல் கொன்றிருக்கின்றனர். அவனது வழியினர் இன்றும் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் ஒரு பிரிவினராக வாழ்கின்றனர். அண்மைக் காலம் வரை திருமணங்களின் போது அப் பிரிவினர் மோட்டுக்காவணம்[4] அமைத்தால் மற்ற பிரிவினர் அதைக் கலைத்துப்போடும் வழக்கம் இருந்திருக்கிறது.  

            தமிழகத்தின் இரங்கத்தக்க வரலாற்றில் எந்த ஒரு குறிப்பிட்ட சாதிப் பெண்களும் இத்தகைய ஓர் அருவருப்பான கட்டத்தைத் தாண்டாமல் வந்திருப்பார்களா என்பதே ஐயத்துக்குரியதாக இருக்கிறது. சென்ற இரு நூற்றாண்டுகளில் குமரி மாவட்ட மேற்கு வட்டங்களில் நாயர்களின் கொடுமைகளுக்கு ஆளான சாணார் பெண்கள், அதற்கு முன் மண்ணாப்பேடி, புலப்பேடி[5] என்ற இழிவான ஒரு நடைமுறையில் பொழுது சாய்ந்த பின் வீட்டுக்கு வெளியே வந்த நாயர் பெண்களை புலையர்களும் வண்ணார்களும் இழுத்துக்கொண்டு போகலாம் என்றும் அப் பெண்கள் பனைமரத்தைக் கட்டிக்கொண்டால் அல்லது சாணார்களிடம் அடைக்கலம் புகுந்தால் தப்பித்துக்கொள்ளலாம் என்றும் இருந்ததை நாம் மறக்க முடியுமா? அது போல் குலோத்துங்கன் காலத்துக்குப் பின் தப்பியோடிய சாணார்கள் தவிர எஞ்சியோர் காட்டிக் கொடுத்தவர்களிடம் என்னென்ன கொடுமைகளைப் பட்டறிந்தார்களோ தெரியவில்லை. மொத்தத்திலில் பார்ப்பனியமாயினும் புதுப் பார்ப்பனியமாயினும் சங்கதப்படுத்தல் ஆயினும் திரு.செகதீசன் அவர்கள் குறிப்பிடும் மேனிலையாக்கமாயினும் மோசசு பொன்னையா அவர்கள் சுட்டிக்காட்டிய வெள்ளாளக்கட்டாயினும் தமிழக மக்களைப் பொறுத்தவரை கழித்துக்கட்ட வேண்டிய, ஒழித்துக்கட்ட வேண்டிய ஒரு பண்பாட்டு இழிதகைக் கண்ணோட்டம் இது என்பது எமது நிலைப்பாடு.
  
            இவ்வாறுதான் சைவ உணவு என்று அறியப்படும் புல்லுணவினராக சிவனிய வெள்ளாளர்கள் வரலாற்றுள் வருகிறார்கள். சிவனிய இலக்கியங்கள் பற்றிய சிறந்த அறிஞராக அறியப்படும் சிவனிய வெள்ளாளரான காலஞ்சென்ற பாளையங்கோட்டை சி.சு.மணி அவர்கள் ‘சைவ உணவு என்பது தவறு, சமண உணவு என்றுதான் குறிப்பிட வேண்டும்’ என்பார். இவர்களில் சிலர்தாம் இப்போது புலால் மறுப்பென்ற இந்தப் பொய்ம்மையை மேனிலையாக்கம் என்ற பொய்ம்மைக்குள் கொண்டுவர முயல்கின்றனர்.

            அம்மணம் புலால் மறுப்பென்ற இந்தப் பொய்ம்மைப் பித்துக்குளித்தனத்துக்குள் எவ்வாறு வந்தது? தமிழர்கள் தங்கள் நாகரிகத்தின் தொடக்க காலத்தின் ஒரு கட்டத்தில் தங்களில் இறந்தோரின் பிணங்களையே தின்றார்கள். தங்களுடன் சண்டையிட்ட அண்டைக் கூட்டத்தினரில் இறந்தோரையும் உயிருடன் பிடிபட்டோரையும் அவ்வாறே உண்டனர். சிலரைத் தங்கள் கடவுளாகப் பேணப்பட்ட நெருப்புக்கு பலியிட்டனர். நாளடைவில் நேர்ச்சையாகக் குழந்தைகளையும் பலியிட்டனர். ஒரு கட்டத்தில் அவ்வாறு நெருப்பிலிடப்பட்டு வெந்த(அவிந்த) உடலை ஆகுதி என்ற பெயரில் நெருப்பை ஓம்பிய பூசகர்களான குடித்தலைவர்கள் உண்டனர். தொடக்கத்தில் இந்தப் பூசகத் தலைவர்கள் மூத்த பெண்களாகவே இருந்தனர். பின்னர் இந்தப் பெண்கள் அகற்றப்பட்டு ஆண்கள் குடித்தலைவராயினர். இந்தப் பெண்கள் சுடுகாட்டில் பிணந்தின்னிகளாக வாழ்ந்தனர். இவர்களைத் தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியலில் அச்சம் பற்றிய நூற்பாவில் (8) அணங்கு என்ற சொல்லுக்கு, ... அணங்குதல் தொழிலராகிய சவந்தின் பெண்டிர் முதலாயினாரும் ....” என்பதன் வாயிலாக உரையாசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் குறிப்பிடுகிறார். பின்னர் சுடுகாட்டுப் பொறுப்பும் ஆடவர்கள் கைகளுக்கு வந்த போது உருவானோர்தாம் இப்போது சவண்டிப் பார்ப்பனர் என்றறியப்படுவோரின் முன்னோடிகளான சவந்தின் பார்ப்பனர். இவர்களது தெய்வம் முதலில் காளியாகிய, பைரவியாகிய பாரதியாக இருந்து பின்னர் சிவனாக, கபாலியாகிய பைரவனாக மாறியது. பாரதி யாடிய பாரதி அரங்கத்து என்ற சிலப்பதிகார வரிக்கு (கடலாடு காதை வரி 39) பாரதியாடினமையால் பாரதியரங்கமெனப் பெயர் பெற்ற சுடுகாட்டிலே என்றும் பாரதி என்பதற்குப் பைரவி என்றும் பொருள் கூறுகிறார் வேங்கடசாமியார். பெண்ணுருத்தாங்கிய ஆட்டக்காரர்கள், ஆணாகிய சாமியாடுவோர், அவர் சுடுகாட்டுக்குச் சென்று எரியும் பிணத்தை எடுத்து உண்ணல் என்று இன்றும் தென் மாவட்டங்களில் வழக்கிலிருக்கும் வழிபாட்டு முறை, இவை அனைத்தையும் தாண்டித்தான் தமிழர்களின் நாகரிகம் வந்துள்ளது என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளாகும். இந்த வழிபாட்டில் பார்ப்பனர், சிவனிய வெள்ளாளர் தவிர்த்து சாதி வேறுபாடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சவந்தின்னிகளின் எச்சமாகத்தான் கங்கைக் கரையில் அகோரிகள் இன்றும் வாழ்கிறார்கள்.

            ஒரு கட்டத்தில் தமிழன் மாடு வளர்க்கத் தொடங்கினான். இப்போது அவனுக்குத் தாரானமான உணவுக்கு வழி கிடைத்துவிட்டது. நரபலியின் இடத்தை கால்நடைப் பலி பிடித்துக்கொண்டது. ஆனால் அதிலும் நெருக்கடி வந்தது. முல்லை நிலத்தார் மாட்டை வசக்கி வாணிகர்களுக்குப் பொதி சுமக்கவும் உழவர்களுக்கு ஏரோட்டவும் வண்டியிழுக்கவும் ஆமாட்டைப் பால்கறக்கவும் அதிலிருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய் முதலியன செய்யவும் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். இப்போது நெருப்புக் கடவுளுக்கு மாட்டைப் பலி கொடுக்கும் வேள்விக்குக் குமுகத்தில் எதிர்ப்புக் கிளம்பியது. இந்த மக்கள் எழுச்சியைத்தான் அன்றைய பூசகர்கள் அரக்கர்களின் அடாவடி என்று பதிந்துவவத்துள்ளனர். ஒரு குமுகப் பொருளியல் பின்னணியில்தான் மாட்டுக் கொலை நிறுத்தப்பட்டதேயன்றி உயிர்க் கொலைக்கு எதிரான உணர்வோட்டங்களிலிருந்தல்ல எனபதைப் புரிந்துகொள்ள வேண்டும். மாட்டுக்கொலை சேர, சோழ, பாண்டியர்களைப் பொறுத்தவரை அவர்கள் இன்றைய தமிழகத்துக்குள் நுழைவதற்கு முன் குமரிக் கண்ட காலத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அவர்கள் இங்கே நுழைந்த போது இங்கு நன்செய் வேளாண்மைக்கு முந்திய நிலைமையில், ஆனால் காட்டு வளங்கள், கடல் வளங்கள் மற்றும் முகாமையாகத் தோல் ஏற்றுமதியில் சிறந்திருந்த பாணர், பறையர், துடியர், கடம்பர்களிடம் மாட்டிறைச்சி உணவும் தோலுக்காக மாட்டைக் கொல்வதும் நிலைத்திருந்தன. சேர, சோழ, பாண்டியர் ஆகிய வந்தேறிகளுடன் ஏறக்குறைய 1300 ஆண்டுகள் உள்நாட்டினர் ஆகிய இவர்கள் போரில் தாக்குப் பிடித்து நின்றது இந்த ஏற்றுமதி வலிமையில்தான். கிரேக்க - உரோமை யவனர்களின் துணை கொண்டு கடலோடிகளான கடம்பர்களை சேர அரசர்கள் இப் பகுதியிலிருந்து துரத்திய பின்னர்தான் அவர்களை அடக்க முடிந்தது. அதனால்தான் தமிழகத்தில் மாட்டிறைச்சிக்கு எதிர்ப்பும் அதைக் காரணமாகக் காட்டிப் பறையர்களை இழிவுபடுத்தவும் இன்றும் முடிகிறது.

            கி.மு.6ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பார்ப்பனர்களின் அட்டூழியங்களால் பொறுமையிழந்த அரச, வாணிக வகுப்பினரின் இயக்கங்களாக முறையே புத்தமும் அம்மணமும் தோன்றின. பார்ப்பனர்களின் முதன்மையான சமயச் சடங்கான கொலை வேள்விகளை எதிர்த்து இரு சமயங்களும் பரப்புரை செய்தன. குமரிக் கண்டத்தில் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட கால்நடை வேள்விக்கான இந்த எதிர்ப்பு வேளாண்மை, வாணிகம் சார்ந்த மக்களின் ஆதரவுடன் முழு வெற்றி பெற்றன. இவ் விரண்டு சமயங்களில் புத்தம் உணவுக்காக விலங்குகளைக் கொல்வதை எதிர்த்ததே அன்றி புலாலுணவை எதிர்க்கவில்லை. தானே இறந்த விலங்கின் இறைச்சியை உண்ணலாம் என்றது. புத்தரும் தன் பற்றாளர் ஒருவர் கொடுத்த இறந்த பன்றியின் கெட்டுப்போன இறைச்சியில் சமைத்த உணவை உண்டதால் வயிற்றுப்போக்கில் இறந்தார்[6]. அவாவறுத்தல் என்ற பெயரில் இரந்துண்டு வாழ்வதைப் பரிந்துரைத்து இரப்பாளிகளின் அமைப்பாக ‘புத்த சங்கத்’தை உருவாக்கினார். அம்மணமோ கொல்லாமை என்பதை பித்துக்குளித்தனத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. நடந்து செல்லும் போது காலடியில் உயிர்கள் மாண்டுவிடும் என்று நிலத்தைப் பெருக்குவதற்கென்று கையில் மயில் பீலியுடனும் மூச்சுக் காற்றின் வழியாக உயிர்கள் புகுந்துவிடும் என்று வாய்த்திரை அணிந்தும் விளக்கேற்றினால் அதில் பூச்சிகள் விழுந்து மாண்டுவிடும் என்று இருட்டும் முன்பே உண்டு விளக்கேற்றாமல் இருட்டு வாழ்க்கையுமாக வாழ்ந்தனர். அவாவறுத்தலின் அடையாளம் என்று அம்மணமாகத் திரிந்தனர். இச் சமயங்களை எதிர்கொள்ள பார்ப்பனர்களும் புலாலுணவைத் தவிர்த்தனர். குதிரையையும் நெய்யையையும் கொண்டு வேள்விகளை நடத்தினர். புத்தமும் அம்மணமும் மக்களிடம் செல்வாக்கிழந்த போது அப்போது வட இந்தியாவைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிரேக்கர்களுடன் பார்ப்பனர்கள் கூட்டு வைத்துத் தங்களை மீட்டுக்கொண்டனர்.

            கொல்லாமை என்று சொன்னாலும் விலங்குணவைத் தவிர்த்தல் என்று கொண்டாலும் புலால் மறுப்பென்பது ஒரு கற்பனையே. புல்லுணவு எனும் தவசங்கள் அனைத்தும் உயிர்களைத் தம்முள் தேக்கி வைத்திருக்கும் விதைகளின் தொகுப்பே. கீரை போன்றவையும் உயிருள்ள நிலைத்திணைகளை வருத்தி ஒடிக்கப்படுபவையே. நம் பண்டை அறிவியல்களின் பிழிவாக இன்று நமக்குக் கிடைத்திருக்கும் தொல்காப்பியம் நிலத்திணைகளை ஓரறிவுயிர் என்றே வகைப்படுத்தியிருக்கிறது.

            விலங்குணவைத் தவிர்த்தல் என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் பொருந்தாப் பெருமை பேசும் ‘சைவ’ உணவினர் மாட்டுப் பாலை மட்டும் சுவைத்துச் சுவைத்தும் அதன் துணைப்பொருள்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்றவற்றை நக்கி நக்கியும் சப்பிச் சப்பியும் உண்பதை எந்தக் கணக்கில் சேர்க்க? துல்லியமாகக் கூறுவதானால் தாய்ப்பாலை உண்ணும் எவரும் தன்னை புல்லுணவினர் என்று பெருமையடித்துக்கொள்ள முடியாது. சிலருக்கு விலங்குணவு வகை இயற்கையாகவே பிடிக்காமல் அல்லது ஒத்துவரமல் இருக்கலாம். ஆனால் புலால் மறுப்பாளரென்று பொய்ப்பெருமை பேசி பிறரை இழிவுபடுத்தும் பொய்யர்களை, போலிகளைத்தான் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

            நாடார்களை, அதாவது முன்னாள் சாணார்களையும் ஊர் நாடான்களையும் பொறுத்த வரை நான்றிந்த வரை அவர்கள் என்றும் புலால் மறுப்பாளர்களாக இருந்ததில்லை. இன்றும் அதுதான் நிலை. அதற்காக அவர்கள் என்றும் வெட்கப்பட்டதுமில்லை. எனவே இத் திசையிலும் அவர்களைப் பொறுத்த வரை திரு.செகதீசன் அவர்கள் கூறத்தலைப்பட்ட ‘மேனிலையாக்கத்’துக்கு இடமில்லை.

            உயிர்மப் பொருள்கள், உயிர்மமில்லா (organic and inorganic)ப்  பொருட்கள் என்று அனைத்தையும் உட்செரித்து வாழ்பவை நிலைத்திணைகள், அந் நிலைத்திணைகளை உண்டு உடல் வளர்ப்பவை இயங்குதிணைகளாகிய விலங்குகளும் பிறவும். அத்தகைய தழையுண்ணிகளை(herbivores) உண்டுவாழ்பவை ஊனுண்ணிகள்(carnivores), நிலைத்திணைகளையும் இயங்குதிணைகளையும் உண்டு வாழ்பவை அனைத்துண்ணிகள்(omnivores). இவற்றுக்கு இடைப்பட்ட எத்தனையோ வகைகள் இயற்கையில் உள்ளன. இவற்றில் மனிதன் ஓர் அனைத்துண்ணி.

தழைகள் எளிதில் செரிப்பதில்லை. எனவே அவற்றைச் செரிப்பதற்கான பல்வேறு சுரப்பிகளைக் கொண்ட ஒரு நீண்ட குடலமைப்பை தழையுண்ணிகள் கொண்டுள்ளன. மாடு போன்ற அசைபோடும் விலங்குகள் கொல்விலங்குகளுக்கு அஞ்சி அரக்கப் பரக்க கிடைப்பவற்றை மேய்ந்து பின்னர் பாதுகாப்பான இடத்தில் படுத்து ஓய்வாக வயிற்றுக்குள் சென்ற உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டுவந்து நன்றாக மென்று அரைத்து, அதாவது அசைபோட்டு விழுங்குவதை நாமறிவோம். யானைக்கு அத்தகைய அச்சம் கிடையாது. உண்பதும் அதற்காக தேவைக்கு மேல் மரங்களை மட்டுமீறி ஒடித்தெறிவதும் அதற்கு விளையாட்டு. உண்ணும் தழைகளும் சரியாகச் செரிக்காமலே எச்சமாக வெளியேறுகின்றன. இந்த நிலையில் பெரும் கொள்ளளவுள்ள ஒரு குடலமைப்பும் அதைத் தாங்கும் அளவிலான ஓர் உடல்மொத்தையுமாக அது திரிவாக்கம் பெற்றுள்ளதென்று தோன்றுகிறது.    

            ஊனுண்ணிகள் ஏற்கனவே செரித்து பல வகைத் தசைகளாகவும் எலும்புகளாகவும் நிணங்களாபவும் நரம்புகளாவும் நாளங்களாகும் உருப்பெற்ற எளிதில் செரிக்கத்தக்க ஓர் உணவை உட்கொள்கிறது. எனவே தழையுண்ணிகளினதைவிட எளிமையான செரிமான அமைப்பையும் குட்டையானதுமான ஒரு குடலையும் அவை கொண்டுள்ளன. அனைத்துண்ணிகளின் குடல் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட அமைப்பும் நீளமும் கொண்டவை. கிடைக்கும் தழைகளிலிருந்து தனது வெவ்வேறு உறுப்புகளின் பராமரிப்புக்கும் செயற்பாட்டுக்கும் தேவையான வேதிமங்களை வளர்சிதைமாற்றம்(metabolism) மூலம் உருவாக்க வேண்டிய சுரப்பிகள் வலிமையுடன் தழையுண்ணிகளுக்குச் செயற்பட வேண்டும். ஊனுண்ணிகளுக்கு ஏற்கனவே தன் உடலின் பல்வேறு செயல்பாட்டு உறுப்புகளைக்குத் தேவையான சத்துகளின் செறிவை அவை போன்ற உறுப்புகளில் பெற்றிருக்கும் இன்னொரு விலங்கின் உறுப்புகளிலிருந்து அவற்றைத் தன் உடலுக்குப் பொருந்துமாறு பிரித்து மாற்றுவதுதான் பணி. அனைத்துண்ணிகளுக்கு இவை இரண்டுக்கும் இடைப்பட்ட தரத்தில் இரு வழிகளிலும் செயல்படும் குடல் அமைப்பும் நீளமும் வேண்டும்.

            மனிதன் ஓர் அனைத்துண்ணியாயிருப்பதால் ஓர் ஊனுண்ணியினதை விட நீளமுள்ள குடல் அமைந்துள்ளது. எனவே ஊனுணவை மிகுதியாக உண்டால் அது செரித்த உடன் வெளியேறாமல் அங்கு தங்க வேண்டியுள்ளது. இது மலச்சிக்கல் போன்ற பிணிகளுக்குக் காரணமாகிறது. அதைத் தவிர்ப்பதறகே, தவிர்ப்பதற்கு மட்டிமே காய்கறிகள், கீரைகள் போன்ற தழை உணவுகளை உண்ண வேண்டியுள்ளது. ஊனுணவில் மனித உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் ஆயத்த நிலையிலுள்ளன. அதிலும் குறிப்பாக சிறிய மீன்கள் உட்பட நண்டு போன்ற சிறிய கடலுணவுகள் தலை உட்பட அனைத்தும் நமக்கு வேண்டிய அனைத்துச் சத்துகளையும் தந்துவிடுகின்றன. அடுத்து கோழி. ஆடு மாட்டைப் பொறுத்தவரை ஊன், ஈரல், தலை, குடல் என்று பல்வேறு உறுப்புகளையும் ஒரே நேரத்தில் இல்லையாயினும் மாறிமாறியாவது உண்ண வேண்டும்.

அதே நேரத்தில் மரக்கறிகளிலிருந்து நமக்குத் தேவைப்படும் ஊட்டங்களைப் பெற வேண்டுமென்றால் நூற்றுக்கணக்கான காய்கள், கீரைகளைப் பயன்படுத்தி வகைவகையாகச் சமைக்க வேண்டும். இதற்காகத்தான் பணக்கார சிவனிய வெள்ளாளர்கள் தவசி(ச)ப்பிள்ளை என்று ஒரு சமையல்காரரை வீட்டிலேயே வைத்திருந்தனர். முதலியார் சம்பம் விளக்கெண்ணெய்க் கேடு என்று நாங்களும் சைவம் என்று சூடுபோட்டுக்கொண்ட ஏழை சிவனியப் பூனைகள் கறுத்து மெலிந்து கூன் விழுந்து குறுகிப் போனார்கள். பார்ப்பனர்களில் மிகப் பெரும்பாலோரும் பால் பொருட்களை உணவில் தவறாமல் சேர்ப்பதால் பொலிவான உடலுடன் காணப்படுகின்றனர்.

உலகில் மாட்டுணவை ஏதாவது ஒரு வடிவில் உணவாகக் கொண்டவர்கள்தாம் உடல் வளர்ச்சி, தோற்றப் பொலிவு ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்கள். புரதம், கொழுப்பு போன்ற சத்துகள் மாட்டிறைச்சியில்தான் மலிவாகக் கிடைக்கின்றன. இந்தியாவின் நாணய மதிப்பையும் உலக நாணயங்களுக்கு நிகராக உயர்த்தி மீன், இறைச்சி ஏற்றுமதியையும் நிறுத்திவிட்டால் நம் மக்கள் அனைவரும் சத்தான உணவை வயிறார உண்டு பெருமிதத் தோற்றம் கொண்டு விளங்க முடியும். இம் மக்களின் மேம்பாடு தன்மானம் ஆகியவற்றில் உண்மையான ஆர்வம் கொண்டுள்ளோர் ‘மேனிலையாக்கம்’ எனும் இந்த நச்சுக் கோட்பாட்டையும் அதன் பின்னணியிலிருக்கும் சாதியக் கட்டமைப்பையும் உடைத்தே ஆக வேண்டும்.
      
இனி தாம் வழிபடும் ‘சிறு’தெய்வக் கோயில்களை ஆகமக் கோயில்களாக்கி பார்ப்பனப் பூசகர்களைக் கொண்டு வழிபடுவது என்ற ‘மேனிலையாக்க’க் கூறு குறித்துக் கூறுகிறாரா என்பதைப் பார்ப்போம். நாடார்களின் மூல வாழிடமான குமரி, நெல்லை மாவட்டங்களைப் பொறுத்தவரை அங்குள்ள பிற்பட்ட, மிகப் பிற்பட்ட சாதியினர், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சென்றுகொண்டிருக்கும் தடத்திலேயே செல்கிறார்களே அன்றி இவர்களுக்கு என்று எந்தத் தனித் தடமும் இல்லை.

            ஒருவேளை திரு.செகதீசன் அவர்கள் சிவகாசி போன்ற இடங்களில் நாடார்கள் நிறுவியிருக்கும் பத்திரகாளி அம்மன் கோயில்களை மனதில் கொண்டு இந்தச் சொல்லைக் கையாள்கிறாரோ என்று தோன்றுகிறது. இது பிறரைப் பார்த்து வெட்கிச் செய்யப்பட்டதல்ல. குமரி மாவட்டத்தில் நிகழ்ந்த தோள்ச்சீலைப் போராட்டம் போன்ற ஓர் உரிமைப் போரின் வெளிப்பாடாகும். அப் பகுதிகளில் மேல்சாதி சிவனிய வெள்ளாளர்களின் கட்டிலிருந்த கோயில்களில் நுழைவு மறுக்கப்பட்டு அவர்கள் தங்கள் அடியாள்களாகிய மறவர்களைத் தூண்டிவிட போர்ச் சாதியினர் என்று பெயர் பெற்ற அவர்களையும் வீழ்த்தி வென்ற பின் அடுத்தவன் சாமியை விட்டு தம் சாதியினரின் தாய்த் தெய்வமான பத்திரகாளிக்குக் கோயில் அமைத்ததுடன் அவர்களுக்குப் போட்டியாகப் பார்ப்பனப் பூசகரையும் அமர்த்தியிருக்கிறார்கள். மற்றப்படி ஊர்ப்புறங்களிலுள்ள ‘சிறுதெய்வ’க் கோயில்கள் ஆகம வடிவம் நோக்கி நகர்ந்துகொண்டிருப்பது நாடார்களிடையில் மட்டுமல்ல அனைத்துச் சாதியினரிடையிலும் இன்று காணக் கிடக்கும் ஒரு பொதுப்போக்காகும்.

            ஊர் நாடான்களை விட பணம்படைத்த சாணார்கள் அவர்கள் குடும்பங்களோடு மண உறவுகளை ஏற்படுத்தி தங்கள் சாதிப் பட்டத்தையும் நாடார் என்று மாற்றியது கடந்த காலத்தின் நிகழ்வு என்றால் ஊர் நாடான் குடும்பங்களைச் சாராத இன்றைய புதுப் பணக்கார நாடார்கள் இப்போது அந்த ஊர் நாடான் பதவியையும் அவர்களிடமிருந்து பறிக்க இந்து சமய இயக்கத்தினரைத் துணை சேர்த்து கோயிலை விரிவுபடுத்தி ஒரு மேற்கட்டை(விமானத்தை) அமைத்து அதற்கு குடமுழுக்கு  முதலியவற்றை நிகழ்த்தி ஊரின் அடையாளத் தலைமையாகி வருகின்றனர். பிற சாதியினரிடையிலும் இதுதான் நடைபெறுகிறது. நான்றிந்த வரை குமரி மாவட்டத்தில் இந்த நிகழ்முறை இருளப்பபுரம் என்ற ஊரில் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன் நடைபெறத்தொடங்கியது என்று கூறலாம். அரிட்டம் என்னும் சாராயக் குடிநீர்த் தொழிலில் பெரும் பணம் ஈட்டிவிட்ட ஒருவர் ஊர்த் தலைவர் பதவியைப் பிடிக்க தேவாரம் முதலியவற்றை ஓதத்தொடங்க, அவர் பின்னணியில் ஓர் இளைஞர் கூட்டம் பின்தொடர அடிதடி, வெட்டுக்குத்து கொலை முயற்சி என்ற கலவரச் சூழலில் 1982 கலவரத்தின் பின்னணியில் குமரி மாவட்டத்தில் காலூன்றிய சங்கக் குடும்பம்(பரிவாரம்) அந்த ஊரை ஒரு தொடக்கப்புள்ளியாகக் கொண்டுவிட்டது.

            இந்த நிகழ்முறையில் இன்னொரு பண்டை நிறுவனமும் மாண்டுவிட்டது. அதாவது பூசகரின் பங்களிப்பு சிறிதும் இன்றி ஆனால் அம்மன் கோயில் போன்ற ஊர்க் கோயிலை களமாகக் கொண்டு ஊர்த் தலைவனின் கீழ் நடைபெற்ற சமயச் சார்பற்ற ஊராட்சி முற்றிலும் மாண்டுவிட்டது. சாவு நிகழ்ச்சிகளில் பங்கேற்காத வரி செலுத்துவோருக்குப் பிழை விதிப்பதும் அதைச் சிலர் எதிர்ப்பதுமான இப்போதைய கட்டுப்பாடுகள் உள்ளுர் ஆட்சிமுறை முடிவுக்கு வந்துவிட்டதையே காட்டுகிறது. இந்த இடைவெளியைக் கூலிக்கு மந்திரம் ஓதும் பார்ப்பனப் பூசாரியால் நிரப்ப முடியாது. ஆனால் இன்று பாராளுமன்ற முறை எனும் போலி மக்களாட்சியின் மாற்றாக பழைய ஊர் நாடான் தலைமையிலில்லாத ஊராட்சியை அடிப்படை ஒன்றியாகக் கொண்ட ஒரு புதிய மக்களாட்சியை உருவாக்குதற்கான களமாகத்தக்க ஒரு வெற்றிடம் கிடைத்துள்ளது என்பது உண்மை நிலை(விரிவுக்கு அண்மையில் வெளி வந்துள்ள நூலாசிரியரின் போலி மக்களாட்சிக்கு ஒரு மாற்று என்ற நூலைப் பார்க்க.  

            மொத்தத்தில் திரு.செகதீசன் அவர்கள் குறிப்பிடுவது போல் ‘மேனிலையாக்க’ நிகழ்முறை எதுவும் நாடார்களிடையில் இடம்பெறவில்லை. வரலாற்றுச் சூழலில் அயலவர்க்கு நாட்டைக் காட்டிக்கொடுத்ததால் உயர்நிலையடைந்தவர்களுடன் வெற்றி பெற்ற அயல் மன்னர்களும் சேர்ந்து நிகழ்த்திய ஒடுக்குமுறைகளைத் தம் சொந்த வலிமையில் எதிர்த்துப் போராடி வெற்ற பெற்றவர்களே தமிழகத்தின் தென் மாவட்டங்களைத் தங்கள் தோற்றக்களமாகக் கொண்டு உருவான நாடார்கள் என்ற ஒரு புதுச் சாதியினர் ஆகிய இந்த மக்கள். அதனால்தான் அவர்களைப் பிற ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான முன்னணிப் படையினர் என்று தலை நிமிர்ந்து நான் கூறுகிறேன்.           


[1] வலியுறுத்தம் எமது
[2]Material culture
[3] இந்தச் சூரபதுமனே மூவேந்தர்களின், குறிப்பாக சோழ மன்னனின் குறியீடுதானோ?
[4]   காவணம் என்ற சொல் பந்தலைக் குறிக்க குமரி மாவட்டத்தில் கையாளப்படுவது. தட்டுக்காவணம் என்பது கூரையை மட்டமாக அமைத்து ஓலை கொண்டு வேய்வது, மோட்டு(முகட்டு)க் காவணம் என்பது மழையையும் தாங்குமாறு உயர்ந்த முகட்டுடன் இரு பக்கங்களையும் சாய்வாக அமைப்பது. சாதிய, உட்சாதிய ஒடுக்குமுறைகள்  தமிழக மக்களால் எவ்வளவு நுட்பமாகவும் “அறிவியல்” அடிப்படையிலும் அமைந்துள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பிற திசைகளில் இந்த எந்த அறிவியலும் நம்மிடையில் தோன்ற முடியவில்லை என்பதுதான் அவலம்.
[5]    தாய்வழி ஆண் தலைமகனுரிமை என்ற நாயர்களின் சொத்துரிமை முறையில் சொத்துகளின் உண்மையான உரிமையாளரான பெண்களுக்கும் அவற்றின் ஆள்வினைப் பொறுப்பிலிருந்த அவர்களது மூத்த உடன்பிறந்தானுக்கும் இடையில் உருவான மோதலில் அப் பெண்களின் தலையீட்டைத் தடுத்து அவர்களை ஒடுக்கும் வழியாக அவர்களது இராக்கால நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஓர் உத்தியாக இதைப் பார்க்கலாம். ஆனால் இறுதிக் காலத்தில் இதை நாயர்களுக்கும் வண்ணார் - பறையர்களுக்குமான ஒரு சிக்கலாகக் கொண்டே நாயர் தரப்பினர் இம் முறையை எதிர்த்து முடிவுக்குக் கொண்டுவந்ததாக மண்ணாப்பேடி புலப்பேடி என்ற தெக்கன் மலையாள நாட்டுப்பாடல் கூறுகிறது.

                நாடோடி வாழ்க்கையினரான  நரிக்குறவர்களிடையில் இருட்டுவதற்குள் தங்கள் கூட்டத்தார் இருப்பிடத்துக்கு வந்தசேராத பெண்களை ஒதுக்கிவைத்துவிடும் வழக்கத்தையும் அப்பெண்களின் உரிமைகளை முடக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்க வேண்டும்.
[6]   இது போன்ற பட்டறிவுகளின் பின்னணியில்தான் முகம்மது நபி உடல் நலமுள்ள விலங்குஙளை பூசாரியர் பார்த்து ‘ஓதி’ கொல்ல வேண்டும் என்று வரையறுத்தார். மீனை கடலினுள்ளோ நீர்நிலைகளினுள்ளோ சென்று மந்திரித்து அப்புறம் பிடிக்க முடியுமா? அதனால்தான் இறைவனே மீன் போன்ற நீர்வாழ் உணவு உயிர்களை மந்திரித்து விட்டிருக்கிறார் என்கின்றனர்.   

0 மறுமொழிகள்: