12.12.15

திராவிட மாயை - 24


7.குண()க்கேடு
            வானிலிருந்து ஒரு தீப் பிழம்பு வந்து வீழ்ந்தது. அதிலிருந்து ஓர் ஆடவன் வெளிப்பட்டான். அவனுக்கு மார்க்சியக் கோட்பாட்டிலிருந்து இன்றைய மீப் பின்னைய நானோ தொழில் நுட்பத்துக்கு அப்பாலும் தெரிந்திருந்தது. அவன் தன்னிலிருந்து ஒரு பெண்ணை எடுத்து வெளியே விட்டான். அவர்கள் இருவரும் கூடி தங்களிலிருந்து ஒரு மக்கள் இனத்தையே உருவாக்கினர். இவர்கள்தாம் தமிழர்கள்.
                                             
            ஒரு கால கட்டத்தில் எங்கிருந்தோ வெள்ளை நிறமுடைய மாடு மேய்க்கும் கூட்டம் ஒன்று வந்தது. அது இத் தமிழர்களை மயக்கி அவர்களைச் சாதிகளாகப் பிரித்துத் தமக்குள் சண்டை போட வைத்து அவர்கள் மீது மேலாளுமை செய்தது. இதுதான் நேற்றுவரை தமிழ் இன வரலாற்றை எழுதி வந்த அறிஞர்கள் கருத்தின் சுருக்கம். இப்போது இதில் சிறு திருத்தத்துடன் ஒரு புது வரலாற்று வரைவு தோன்றியுள்ளது.  நாம் மேலே குறிப்பிட்ட முதல் தமிழனின் ஒரு தொடர் மக்கள், மறையர் என்ற பெயர் கொண்ட குழுவினர், நாம் மேலே குறிப்பிட்ட மார்க்சிய மெய்யியல் முதல் நாளோ தொழில்நுட்பத்துக்கு அப்பால் வரையுள்ள அறிவுகளைத் தாமே அறிந்திருந்தவர்கள். இவர்களை 1800 ஆண்டுகள் முன்பிருந்து இன்று வரை தமிழகத்தினுள் நுழைந்த வடுக வந்தேறிகள் பறையர்களாக்கி ஒதுக்கிவைத்துவிட்டனர். இவ்வாறு மறையர் எனும் தமிழ்ப் பார்ப்பார் பறையராக்கப்பட்டதும் தமிழகத்திலிருந்து மார்க்சிய மெய்யியல் முதல் நானோ தொழில் நுட்பத்துக்கு அப்பால் வரை அனைத்தும் இல்லாமலாகி தமிழர்கள் அனைவரும் மூளை இல்லா மனிதவகையினராக மாறிவிட்டனர் என்பதுதான் இந்த “வரலாற்று வரைவு”.

            பழைய வரலாற்று உண்மைகளை மனதிலிருந்து அகற்ற முடியாத அதே நேரத்தில் இந்தப் புதிய வரலாற்று உண்மையை முழுமையாக மனதில் வாங்கிக் குறித்துக் கொண்டிருக்கின்றனர் தமிழ்த் தேசியர்கள் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொள்பவர்களில் பெரும்பான்மையர்.

            இந்த புதிய வரலாற்று உண்மைகளைக் கண்டு இவர்களுக்குப் பிட்டுப் பிட்டு வைத்தவர் ஆய்வறிஞர் என்று இவர்களால் அடைமொழி வழங்கப்பட்ட வெங்காளூர் குணா. தமிழர்களுக்கு நாகரிகம் வழங்கியவர்கள் ஆடையில்லாமல் அம்மணமாக, தம் மயிரைத் தாமே பிடுங்கிக்கொண்டு திரிந்த ஆசிவகர்கள் என்று தொடங்கிய அவர் பறையர்(அவர் மொழியில் மறையர் - பார்ப்பார்)களில் ஒரு பிரிவினராகிய வள்ளுவர்கள்தாம் அவர்கள் என்கிறார். ஆனால் இந்தப் பார்ப்பார்தாம் ஆசிவகர்களா என்ற கேள்விக்கு அவரது ஆய்வு வெளியில் விடை இருக்கிறதா என்று தெரியவில்லை.

            இந்த வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் மறையர்களாகவும் பார்ப்பார்களாகவும் இருந்த தங்களைப் பறையர்களாக்கியோர் 1800 ஆண்டுகளாகத் தமிழகத்தினுள் நுழைந்த வடுக வந்தேறிகள்தாம் என்கிறார் குணா.

            பாவாணர் அவர்கள் இயற்கை எய்திய சில நாட்களிலேயே பெருஞ்சித்திரனாரின் தமிழ் நிலம் இதழ் தமிழகத்திலுள்ள பிற மொழியாளர்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட குணாவின் கட்டுரைத் தொடரைத் தாங்கி வந்தது. பின்னர் அது நின்று போயிற்று. பாவாணருக்குப் பின் தனக்கோ தன் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கோ கிடைக்கும் என்று பெருஞ்சித்திரனார் எதிர்பார்த்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநர் பதவி தாய்மொழியைக் கன்னடமாகக் கொண்ட வீரசிவனியர் பர்.திரு.இரா.மதிவாணன் அவர்களுக்குச் சென்றுவிட்டதால் ஏற்பட்ட மனக் கொதிப்புதான் பெருஞ்சித்திரனாரை இக் கட்டுரைத் தொடரை வெளியிட வைத்தது என்பது எமது கணிப்பு. ஆனால் அவரது குடும்பத்திலேயே இந்தப் பிறமொழியாளர் கலப்பு கணிசமாக இருந்ததுதான் அந்தத் தொடரைக் கைவிட அவரைத் தூண்டியிருக்கலாம் என்பதும் எமது கருத்து.

            .... துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
                  இந்நான் கல்லது குடியுமில்லை....
என்ற புறம். 335 வரிகளைக் காட்டி, சேர, சோழ, பாண்டியர்கள் தமிழகத்தினுள் நுழைந்த போது இங்கு குக்குல நிலையில் வாழ்ந்த மக்களின் பூசாரி(சாமன்)த் தலைவர்களின் கீழிருந்த மக்களையே இவ்வரிகள் குறிப்பிடுகின்றன என்றும் கீழ்வரும் முழுமையான அப்பாடலில் தரப்பட்டிருப்பவை வந்தேறிகள் புகுத்திய பண்பாட்டுக் கூறுகளுக்கு எதிராகத் தமது பண்டைய மரபை இனங்காட்டுவதே பாடலின் நோக்கம் என்றும் 1990 களில் சொல் புதிது என்ற இதழில் நான் எழுதுவதற்கு முன் எனக்குத் தெரிந்தவரை எவரும் கூறவில்லை.

                        அடலருந்துப்பின் குரவே
                        தளவே குருந்தே முல்லை என்ற
                        இந்நான் கல்லது பூவும் இல்லை
                        கருங்கால் வரகே இருங்கதிர் தினையே
                        சிறுகொடிக் கொள்ளே அவரையொடு
                        இந்நான்கல்லது உணாவும் இல்லை
                        துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
                   இந்நான் கல்லது குடியுமில்லை
                        ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
                        ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
                        கல்லே பரவின் அல்லது
                        நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
இந் நான்கு மக்கள் குழுவினரின் பெயர்களின் தனித் தன்மை என்னவென்றால் அவற்றில் இறுதி ஒன்றைத் தவிர பிற மூன்றும் ஒரு குறிப்பிட்ட இசைக் கருவியுடன் தொடர்புடையவை. பாணர் பெயரில், நேரடியாக இடம்பெறவில்லையாயினும் யாழுடன் பாணர்களுக்குள்ள தொடர்பு ஐயத்துக்கு இடமில்லாதது. கடம்பரோடு அத்தகைய தொடர்பு எதுவும் நமக்குத் தெரிந்தவரை இல்லை.

            மாந்தநூல் ஆய்வுகளின் படி இவ்வாறு இசைக் கருவிகளுடன் தொடர்புடையவர்கள் குக்குல மக்களிடையில் அவர்களது குடித் தலைவர்களாக இருந்த சாமன்கள் எனும் பூசாரிகளே என்பது புரிகிறது. இதில் பறை, துடி, யாழ் என்பவற்றில் பறையும் துடியும் பறை என்ற ஓர் இசைக்கருவியின் வெவ்வேறு வகைகளே என்று குணா கூறியிருப்பதாக அகன் என்ற பெயரில் தேமதுரத் தமிழோசை இதழ் 11/1 இல் மறையோரைப் பறைய ராக்கியோர் என்ற கட்டுரையை எழுதியவர் கூறியிருக்கிறார்.

            பறையும் துடி எனப்படும் உடுக்கும் தோல் இசைக் கருவி என்ற வகைப்பாட்டினுள்  வருமாயினும் பறைக்கும் தொடிக்கும் தரத்தில் மிகுந்த ஏற்றத் தாழ்வு  உண்டு. பறை என்பது தோல் இசைக் கருவியில் முந்தியல் (Primitive) நிலையில் உள்ள ஒன்று. அதன் தோல் பகுதியை விறைப்பாக வைத்திருப்பதற்கு அதை அடிக்கடி நெருப்பில் காட்டிச் சூடாக்க வேண்டும். அத்துடன் அதில் எழுப்பப்படும் தாளங்களின் வரம்புகள் மிகக் குறுகலானவையாகவே இருக்கும். பறையின் நடுப்பகுதியிலிருந்து ஓரம் நோக்கிச் செல்ல செல்ல தோலின் விறைப்பின் மாறுபாட்டுக் கேற்ற  ஒலி மாற்றம் ஏற்படும். ஆயினும் பறையின் விட்டம் பெரிதாக அந் நீளம் முழுவதையும் கையாள்வது கடினமாக இருக்கும்.

            அதே வேளையில் தென்தமிழக மாவட்டங்களில் குறிப்பாக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சுடலைமாடன் கோயில்களில், நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பது போல் சாமியின் கதையை மகுடம் எனப்படும் தோல் இசைக் கருவியை இசைத்து ஆடவர் இருவர் பாட பெண்ணுருத் தாங்கிய ஆடவர் இருவர் ஆடுகின்றனர். இவர்கள் நிகழ்த்தும் கூத்தைக் கணியாட்டம் என்றனர். இப்போது மகுடக் கச்சேரி என்கின்றனர். இந்த மகுடம் பறையை விடக் குறைந்த விட்டமுடையது. ஒன்றின் தோல் விறைப்பு குறைவாக கனத்த ஒலியையும் இன்னொன்று கூடுதல் விறைப்புடன் கூர்மையான ஒலியுடனும் பேசும். பறை பொதுவாக குச்சியால் அடித்து இசைக்கப்படுகிறது. மகுடம் கையாலும் விரல்களாலும் இசைக்கப்படுகிறது. இதிலும் பறையைப் போலவே நடுப்பகுதியிலிருந்து ஓரம் செல்லச் செல்ல ஒலி மாறுபடுகிறது. தோலை விறைப்பேற்றுவதற்கு பறையைப் போலவே அவ்வப்போது நெருப்பில் சூடாக்குகின்றனர். ஆனால் இரண்டு மகுடக்காரர்கள் இசைக்கும் போது இக் கருவி எண்ணற்ற வண்ண வண்ண தாளங்களில் பேசும். ஆக, ஒரே தன்மையுள்ள இரண்டு தோல் கருவிகளில் இசையெழுவதில் இவ்வளவு ஏற்றத்தாழ்வு இருப்பது கருதத் தக்கது.

            மகுடம் என்பது மையிடம் எனும்  எருமைக்குரிய சொல்லோடு தொடர்புடையது. மை + இடம் = கருமை இருக்கும் இடம் ஒ.நோ. மை + இல் = மயில் ப-ர்.குண்டார்ட்டு[1]. மையிடம் மயிடம் → மகிடம் → மகிசம் (சங்கதம்) என்ற மருவல் சங்ககத்தினுள் மறைக்கப்பட்டு அங்கிருந்து மீண்டும் மயிடம் என்று மா மயிடற் செற்று என்று (சிலம்பு., வேட்டுவ வரி, அ.) பயின்றுள்ளது. ஒரு வேளை பறை மாட்டுத் தோலிலும் மகுடம் எருமைத் தோலிலும் செய்தவை போலும். இது போன்ற தமிழ் மண்ணின் அடித்தளப் பண்பாடுகளை அயலார் எவரும் ஆய்வு செய்து நூல்கள் எழுதவில்லை போலும். அதனால் நம் தமிழ் “ஆய்வறிஞர்கள்” கண்ணுக்கு இவை புலப்படவில்லை.

            அடுத்து துடி எனும் உடுக்குக்கு வருவோம். நடுவில் சுருங்கி இரு முனைகளிலும் அகன்ற வாய்களைக் கொண்டு பெண்களின் இடைக்கு உவமையாய் வருவது இந்தக் கருவி. சிவனின் கரங்களில் ஒன்றில் இடம் பெற்றிருப்பது. இதன் இரு வாய்களிலும் தோல்களைக் கொண்ட வளையங்களை வார்களால் இணைத்து நடுவில் ஒரு வாரைச் சுற்றி அந்த நடுவாரை அழுத்துவதற்கேற்ப இரு முனைத் தோல்களும் விறைப்பேறும் அடைப்பைக் கொண்ட நுட்பமான தோல் கருவி இது. இராப்பாட்டாளி என்று குமரி மாவட்டத்தில் வழங்கப்படும் குடுகுடுப்பைக்காரனிடம் இது இரண்டு மூன்று விரலங்களுக்கு இடைப்பட்ட நீளத்தில் இருக்கும். முனையில் ஓர் உருண்டையைக் கொண்ட ஒரு நூல் நடுப்பகுதியிலிருந்து இந்தக் குடுகுடுப்பையை அங்குமிங்குமாக ஆட்டும் போது இரு தோல் முனைகளிலும் உருண்டை தாக்கி குடுகுடு வென்ற ஒலியை எழுப்பும். குடுகுடுப்பையை ஒரு கையில் பிடித்து அதன் இடுப்பில் சுற்றியிருக்கும் துணிப்பட்டையில் விரல்களால் வெவ்வேறு அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் தோல் முகப்புகளை இணைக்கும் வார்களின் மீதுள்ள இழுவிசையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு முகப்புத் தோல்களின் விறைப்பில் அவற்றுக்கேற்ற ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு குடுகுடுப்பை ஒலியில் ஓர் இசை அமைகிறது.

            துடியில் பெரியது குறிசொல்லும் கோடாங்கிகள் வைத்திருப்பது. குமரி மாவட்டத்தில் இராப்பாட்டாளியைக் கோடாங்கி என்று சொல்வதும் உண்டு, ஏனென்றால் அவன் நடுச் சாமத்தில் சுடுகாட்டிலிருந்து புறப்பட்டுக் ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் நின்று குறிசொல்வான். அப்போது பார்ப்பது நல்லதல்ல என்பது நம்பிக்கை. வீட்டினர் அவனுக்கு இடும் படியை வீட்டு வாயிலில் வைத்துவிட வேண்டும், அதை அவன் விடியற்காலையில் வந்து எடுத்துச் செல்வான் என்பது நடைமுறை. குடுகுடுப்பைக்காரனின் மீதான இந்த அச்சம், தன் வசிய ஆற்றலால் மக்களுக்கு நன்மையும் தீமையும் செய்ய  வல்லவனான சாமனின் நினைவை நமக்குக் கொண்டுவருகிறது.

            பெரிய துடியை வைத்திருக்கும் கோடாங்கிகள் கிழமைச் சந்தைகளிலும் தெருவோரங்களிலும் அமர்ந்து மக்களுக்குக் குறிசொல்வோர் ஆவர். இத் துடியில் தோல் முகப்புகளை இழுத்துப்பிடிக்கும் வார்களைத் துடியின் நடுவைச் சுற்றியிருக்கும் துணிப் பட்டியால் துடியைப் பிடித்திருக்கும் கைவிரல்கள் கொடுக்கும் அழுத்தங்களின் மாறுபாட்டால் துடியின் ஒலிப்பில் நாம் விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

            மேற்கூறிய இரண்டு வகைக்கும் இடைப்பட்ட, வெண்கலத்தால் செய்து தோல் முகப்புகளுடன் விளங்கும் உடுக்கு எனப்படும் துடிவகையை அதைக் கையாளும் இசைப்போனின் திறமைக்கேற்ப ஆயிரக்கணக்கான ஒலிகளில் பேச வைக்கமுடியும். இக்கருவி தென் மாவட்டங்களில் பழக்கத்திலிருக்கும் வில்லிசையில் தலைமையான இசைக் கருவியாகும். திரைப்படங்களிலும் பொது மேடைகளிலும் நிகழ்த்தப்படும் வில்லிசை உண்மையில் ஒரு போலியே.

            உண்மையான வில்லிசையில் பனையின் வைரப்பகுதியில் உருவப்பட்டு(கடைசல் போன்று செதுக்கப்பட்டு) பூண்களால் வலிவுறுத்தப்பட்ட வில்லில் உள்ள பூண்களில்  அமைந்திருக்கும் கண்களின் ஊடாக வில்லின் கோடி முனைகளில் தொடங்கி நடுவில் வந்து முடியும் மணிகள் சொருகப்பட்ட இரண்டு கம்பிகள் காணப்படும். வில்லைத் தோல் வாரால் இழுத்துக் கட்டியிருப்பர். இசைக் குழுவின் தலைவர் தன் கால் பெருவிரலில் மாட்டிய ஒரு கண்ணியின் மூலம் வில்லின் ஒரு முனையைப் பிடித்திருப்பார். மறுபுறத்தை பெரிய ஒரு மண் குடத்தின் பிடரியில் தாங்கப்பட்டு குடத்தை அணைத்தபடி அமர்ந்திருக்கும் ஒருவரின் கால் மடிப்பில் ஒரு வாரால் பிணைக்கப்பட்டு இருக்கும். குடத்தின் பிடரியில் தங்குவதற்கான துணியாலான ஒரு சேணம் வில்லில் இருக்கும்.

            புலவர் என்று அழைக்கப்படும் இசைக் குழுவின் தலைவரின் கையில் ஏறக்குறைய முக்காலடி நீளமும் கோலாட்டக் குச்சியின் வடிவமும்  கொண்ட இரு கோல்கள் இருக்கும். கையில் பிடிக்கும் பகுதி சிறிது தடிமனாக இருக்கும். அந்தப் பகுதியில் பாதிகளாகப் பொருத்தப்பட்டு உள்ளே குண்டு மணிகள் இடப்பட்ட மணியும் இருக்கும். இந்தக் கோலால் புலவர் வில் நாண்மீது அடிக்கும் போது வில் அதிர்ந்து அதன் அடியில் தொங்கும் மணிகளுடன் கைக் கோல்களிலுள்ள மணியும் சேர்ந்து ஒலிக்கும்.

            குடத்தில் அமர்ந்திருப்பவர் கை விசிறி வடிவத்தில் வெட்டப்பட்ட கமுகம் பாளையின் பட்டையைக் குடத்தின் வாயில் அடித்து ஒலி எழுப்புவார். ஒருவர் சாப்ளாக் கட்டைகளை விடப் பெரிதான இரு மரக் கட்டைகளைத் தட்டி ஓசை எழுப்புவார். சிங்கி எனப்படும் சால்ராவை ஒருவர் இசைப்பார். இவற்றுக்கு மேலே உடுக்கின் இசைதான் வில்லிசையில் ஓங்கி இசைக்கும் கருவியாகும். வில்லிசையின் உயிரே இந்த உடுக்குதான். அந்த இசைக் கலைஞர் உடுக்கில் பேச விடும் குரல்கள்தாம் எத்தனை நூற்றுவகை!                                

            வில்லிசையின் போது, புலவர் பாடலை உரக்கப் பாடுவார். அப்போது அவரது கைக் கோல்களில் ஒன்று  விரல் நாண் மீது மெதுவாகத் தடவி விடுவது போல் தட்டிக் கொண்டிருக்கும். பாட்டின் சொற்கள் தெளிவாகக் கேட்குமாறு மற்ற கருவிகளும் மிக மெல்லிய ஓசையை எழுப்பும். புலவர் ஒரு வரியைப் பாடி முடித்ததும் அதே வரியை பிறர் அனைவரும் உரத்த குரலில் திரும்பப் பாட அனைத்து இசைக் கருவிகளும் உரத்து ஒலிக்கும். புலவரும் வில் நாணைக் கைக் கோல்களால் ஓங்கி அடிப்பார். (இப்போது ஆர்மோனியம் எனும் இசைக் கருவியையும் சேர்த்து பாடல் வரிகள் வெளியில் கேட்காதவாறு வில்லிசைக்கிருந்த பழைய இனிய கலவைச் சுவையை அழித்திருப்பது புதிய மேம்பாடு. தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் குயிலுவக் கருவிகள் பட்டியலுக்கு வெளியே இன்றுவரை உயிருடன் வாழ்ந்துவரும் தமிழ்க் குழுவிசை(Archestra)களில் உயர்வானது வில்லிசைதான்.  அதன் உயிர்மூச்சாக இருக்கும் இசைக் கருவி உடுக்கு. உடுக்குதான் உலகிலுள்ள தோல்கருவிகளில் மிக நுண்மையானது.

            இவ்வாறு முந்தியல் வகையான பறையையும் மீ நுட்பமான துடியையும் இசைப்பவர்களை ஒரே குழுவாகக் காட்டுவது ஒருதலைச் சார்பான பார்வையாகும்.

            மகுடம் பெரும்பாலும் குறிஞ்சி நிலத்துக்கும் பறை முல்லை நிலத்துக்கும் உரியவையாகக் கூடும். மகுடத்தை இசைத்துப் பாடி ஆடும் மக்களைக் கணியான்கள் என்பர். “ஆய்வறிஞர்” குணா அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கும் புறநானூற்றுப் பாடலைப் பாடிய பக்குடுக்கை நன்கணியார் இப்பிரிவைச் சார்ந்தவராகவே இருக்க வேண்டும். அவர்களின் சாதி அடையாளம் என்னவென்பது தெரியவில்லை. ஒருவேளை இவர்கள் துடியர்களின் வழிவந்தவர்களாக இருக்கலாம். குமரி மாவட்டத்தில் காணிகள் என்றும் காணிக்காரர்கள் என்றும் அறியப்படும் மலைவாழ் மக்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்பது ஆயத்தக்க ஒன்று.

            உடுக்கை அடித்துக் கதை சொல்லும் மக்கள் முன்பு குமரி மாவட்டத்தில் இருந்தார்கள் மருதநாயகம்பிள்ளை என்ற கொடியவனைப் பற்றிய(கான்சாகிப் எனப்படும் மருதநாயகம் அல்ல இவன்) கதைப் பாடலைப் பாடும் துடியர்களை சிறு அகவையில் பார்த்திருக்கிறேன்.  

            இந்தத் துடியர்கள் ஒருவேளை வாணிகச் சாத்துகளுடன் சென்றவர்களாக இருந்து பின்னர் வழிப்பறிக்காரர்களுடனும் தொடர்புகொண்டவர்களாக இருக்கலாம். கையடக்கமான துடி இவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும்.

            பாணர்கள் மகர யாழ் போன்ற எளிய வில் யாழ்களுடன் மருத நிலத்தில் உருவாகியிருந்த நாகரிக மக்களின் பூசகத் தலைவர்களாக இருந்திருக்கலாம். இந்திரன் அவையில் நாரதனுடன் ஆடற்பெண்டிருமாக பின்பு உருவான கட்டமைப்பின் தோற்றுவாயாக இவர்கள் இருக்க வேண்டும்.

            கடலோடிகளான கடம்பர்கள் கூட யாழை இசைக் கருவியாய்க் கொண்ட பூசகர் தலைவர்களைக் கொண்டிருந்திருக்கலாம்.

            இவ்வாறு நால்வகை மக்கள் வாழ்ந்த பண்டைத் தமிழகத்தில் தெற்கிலிருந்து சேர, சோழ, பாண்டியர்கள் நுழைந்தார்கள் ஏறக்குறைய கி.மு. 17ஆம் நூற்றாண்டு வாக்கில். சற்றேக்குறைய அதே நேரத்தில் வடக்கில் துவரையிலிருந்து இருங்கோவேளுக்கு 49 தலைமுறைகளுக்கு முந்திய யாதவர்கள் வந்து சேர்ந்திருந்தனர்.

            அதற்கும் முன்பே பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குமரிக் கண்டத்திலிருந்து உலக வாணிகத்துக்காக உலகைச் சுற்றிவந்த மக்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்கிலும் கிழக்கிலும் தங்கள் நெடும் கடற் செலவுகளின் போது தங்கிடங்களாகப் பெரு நகரங்களையும் அவற்றைச் சுற்றிப் பெரும் குடியிருப்புகளையும் அமைத்திருந்தனர். அந்தக் குடியிருப்புகளில் அவந்தி நாட்டில் காயங்கரை என்ற ஆற்றின் கரையில் (மணிமேகலை, பழம் பிறப்புணர்ந்த காதை பார்க்க) இறங்கி மேற்கிலும் கிழக்கிலும் நகர்ந்த மக்களுக்கும் உள்நாட்டில் ஏற்கனவே குறைந்த வளர்ச்சி மட்டத்தில் இருந்த மக்களுக்கும் மோதல் ஏற்பட்டு வந்தேறிகள் மேலாளுமை பெற்றிருந்தனர்.

            தீவக்குறை இந்தியாவில் இருந்த நான்கு வகை பழங்குடியினருக்கும் இருங்கோவேளின் மூதாதையருக்கும் தெற்கிலிருந்து வந்த சேர, சோழ, பாண்டியர்களுக்கும் ஏற்பட்ட பகைமை, வடக்கேயிருந்து வந்த கலப்பின மக்களிடமிருந்து வந்த படையெடுப்பு அச்சம் காரணமாக உருமாறி ஓர் ஒப்பந்தமாக வடிவம் பெற்றது. கலிங்கத்துக் காரவேலனின் பொறிப்பில் காணப்படும் 1300 ஆண்டு ஒப்பந்தம்தான் இது.

            நான்கு வகை பழங்குடியினரில் அதியமான் மரபினர் வலிமையுடன் பெரும் நிலப்பரப்பை ஆண்டுவந்ததற்குத் தடயங்கள் உள்ளன. தெற்கே குமரி மாவட்டத்தில் இருக்கும் அழகியண்டியபுரத்துக்கு அதியனூர் என்ற பெயர் இருப்பது தெரியவந்துள்ளது. அசோகன் கல்வெட்டில் சத்ய புத்ர என்பதற்கு அதியமான் என்று ஆய்வாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.  அதியமான் அதியன் அதிய மகன் (சத்யபுத்ர) அதியமகன் அதியமான் (மதிப்பியல் பட்டம் மகன் மான் ).

            நாளாவட்டத்தில் அதியமான் வலிமை குன்றிவிட முன்பு குமரிக் கண்டத்தில் மகாபாரதப் போரின் போது துரியோதனனுடன் சேர்ந்து போரிட்ட கர்ணனின் வழிவந்த நூற்றுவர் கன்னர் (துரியோதனாதியர் எனப்படும் நூற்றுவர். விரிவுக்கு பெருஞ்சோற்று உதியஞ்சேரல் என்ற ஆசிரியரின் கட்டுரை பார்க்க இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல், வேங்கை பதிப்பகம், மதுரை 2004) வலிமைபெற்று தம்முடைய பழைய உறவை மனதில் வைத்து சேரர்களுடன் இணைந்து செயற்பட்டனர் என்று தோன்றுகிறது. இவ்வுறவு பற்றி  கழக இலக்கியங்கள் எதுவும் கூறவில்லை. ஆனால் இளங்கோவடிகள் நமக்குச் செய்தி தருகிறார். சேரன் செங்குட்டுவன் கண்ணகி படிமத்துக்குக் கல்லெடுக்க இமயம் சென்ற போது கங்கையை அவனும் படைகளும்  தாண்ட படகுகளாலான  பாலம் அமைத்து அவன் தருகிறான். இந்தக் கால கட்டத்தில் அல்லது அதற்கு முன்பே அதியமான் மூவேந்தர்களின் மேலாளுமையை ஏற்றுக்கொண்டுவிட்டான்.

            திருவள்ளுவர் வரலாறாகக் கூறப்படும்  கதையில் ஆதி என்ற பறையர்குலப் பெண்ணும் பகவன் என்ற பார்ப்பானும் கூடிப் பெற்ற குழந்தைகள் முறையே ஒளவை, உப்பை, அதியமான், உறுவை, கபிலர், வள்ளி, திருவள்ளுவர் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் பிறந்தனர். இந்தக் கதையில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி அடங்கியுள்ளது. ஒளவை பாண்டிச்சேரியில் பிறந்தார். உப்பை என்பவள் ஊற்றுக்காட்டு மாரியம்மையானாள் என்றும் உறுவை பூம்புகாரில் காளியானவள் என்றும் அபிதான சிந்தாமணி தரும் செய்தியால் தெரிகிறது. ஒளவை அதியமானுடன் ஒன்றி வாழ்ந்தார். கபிலர் பாரியுடன் வாழ்ந்தார். வள்ளி திருமணமில்லாதவனாக வடநாட்டில் வழிபடும் குமரனுக்குத் தமிழகத்தில் மனைவியாக்கப்பட்டவள். பின்னர்  இரண்டாம் தாரமாக இந்திரன் மகள் தேவயானையும் சேர்ந்தாள். திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்தார் என்று மரபு. அங்கே அவருக்குக் கோயிலும் உள்ளது. குமரி மாவட்டத்தில் பிறந்தார் என்று அண்மையில் சிலர் கூறிவருகின்றனர்.

            இந்தக் கதையின் அடிப்படை என்ன? உண்மையில் இவர்கள் எழுவரும் தமிழகத்தின் மூலக் குடிகளும் அவர்கள் வழிபட்ட தெய்வங்களுமாக வந்தேறிகளான மூவேந்தர்களாலும் அவர்கள் சார்ந்த குடிமக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டோர். மாங்குடி கிழார் கூறுகிற பண்பாட்டுத் தொகுதியைக் கைவிட்டு வந்தேறிகளின் பண்பாடுகளை ஏற்றுக்கொண்டதால் வந்தேறிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டனர் என்று கொள்ளலாம்.

            வட அமெரிக்க நாடான ஒன்றிய மாநிலங்களில் அண்மைக் காலம் வரை பிற மக்களோடு வெள்ளையர் ஒருவர் கலந்து பிறந்தவர்கள் தொடர்ந்து வெள்ளையர்களுடேயே எத்தனை தலைமுறைகள் உறவு கொண்டிருந்தாலும் வெள்ளையர்கள் அவர்களைத் தங்களவர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக தென்னமெரிக்காவான லத்தீன் அமெரிக்காவில் மூலக்குடியினரான செவ்விந்தியரோ பிறரோ தங்கள் சொந்தப் பண்பாட்டைக் கைவிட்டு வந்தேறிகளின் பண்பாட்டை ஏற்றுக்கொண்டால் அவர்களும் இவர்களை ஏற்றுக்கொள்வர். இன்று ஒன்றிய மாநிலங்களில் இந்தக் கட்டுகளெல்லாம் அறுந்துவிட்டன. இந்தியாவிலிருந்து சென்றவர்கள் ஆளுநர்கள் ஆகவும் கறுப்பினக் கலப்பில் பிறந்த ஒபாமா குடியரசுத் தலைவராகவும் ஆக முடிந்திருக்கிறது. அது போன்ற ஒரு நிகழ்முறையாக மேலே சுட்டிய எழுவரையும் கூறலாம்.

            பார்ப்பனரோடு பிற பெண்கள் கூடிப் பிறப்பது இடைக்காலத்தில் உயர்வுக்குரிய ஒன்றாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. சக மரபில் பிறந்த அரசனான விக்கிரமாதித்தனைத் தலைவனாகக் கொண்டு அவன் புகழ்பாடத் தொகுக்கப்பட்டது விக்கிரமாதித்தன் கதைகள். அவன் ஒரு பரத்தைக்கும் அவள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த வழிப்போக்கனாகிய பார்ப்பானுக்கும் பிறந்தான் என்று அது கூறுகிறது. அதனால் பரத்தைக்குப் பிறந்தவனாயினும் அரசனாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான். அதே உத்திதான் இந்தக் கதையிலும் பின்பற்றப்பட்டிருக்கிறது எனலாம்.

            கி.மு. 15 ஆம் நூற்றாண்டிலிருந்து ஏறக்குறைய கி.மு. நான்காம் நூற்றாண்டு வரையுள்ள தமிழக வரலாற்றைக் கழகத் தொகுப்பு நூல்கள் மறைக்கின்றன. ஆனால் இந்த வரலாறுகளை சமற்கிருத, பிராகிருத இலக்கியங்களில் தேடினால் கிடைக்கலாம். குறைந்தது தமிழகத்துக்குள்ளும் வெளியே ஆரவல்லி மலைத் தொடர் வரையுள்ள நிலப்பரப்பிலும் ஏதோவொரு வடிவத்தில் இன்றும் அது புதைந்து கிடக்கலாம். நாம் அறிந்தவரை கடம்பர்கள் எனும் கடலோடிகளைச் சேர மன்னர்கள் துரத்தி அவர்கள் இன்றைய கோவா பகுதியில் குடியேறினர் என்று கூறப்படுகிறது. அது போல் சேர, சோழ, பாண்டிய வந்தேறிகளின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் துடியர், பாணர், பறையர் ஆகியோரில் வெளியேறியோரையும் வந்தேறிகளின் பண்பாட்டை ஏற்றுக்கொண்டு அவர்களோடு ஒன்றிப்போன சிலரையும் தவிர்த்த ஏனையோர் ஒடுக்கப்பட்ட மக்களாக, இன்று பறையர், புலையர், குறவர், போன்றவர்களாகத் தமிழகத்தில் தொடரலாம்.

            வள்ளுவர்கள் எனப்படுவோர் பெரும்பாலும் அப்பெயர் கொண்ட ஒரு தனிமனிதரின் பெயரால் அறியப்பட்டிருக்கலாம். நாஞ்சில் பொருநன் என்பவனைப் பாடும் புறநானூற்றுப் பாடலின் கீழ் தொகுப்பாசிரியர் அவனை நாஞ்சில் வள்ளுவன் என்று குறிப்பிட்டிருக்கிறார். நாஞ்சில் நாட்டை ஒரு பகுதியாகக் கொண்ட இன்றைய குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பொறிப்பில் வள்ளுவ நாடு என்ற பெயர் கொண்ட குறிப்பு ஒன்றும் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வள்ளுவன் பொற்றை என்ற ஊரும் உள்ளது. ஒருவேளை நாஞ்சில் பொருநன் அதியமானுக்கு உட்பட்டு நாஞ்சில் நாட்டின் குறிஞ்சித் தலைவனாக இருந்திருக்கலாம். பொருநன் என்ற சொல்லுக்கு குறிஞ்சி நிலத் தலைவன் என்ற ஒரு பொருளைத் தமிழ் மொழி அகராதி தருகிறது. அந்த மலை அடிவாரத்தில்தான் அழகியபாண்டிபுரம் எனப்படும் அதியனூர் இருக்கிறது. அதியமானிடமிருந்து சேரர்கள் நிலத்தைக் கைப்பற்றிய போது இந்தப் பொருநன் சேரர்களின் மேலாளுமையை ஏற்றுக்கொண்டு அவன் கீழ் வந்திருக்க வேண்டும். ஒருசிறைப் பெரியனார், மருதன் இளநாகனார், ஒளவை ஆகியோர் அவன் மீது பாடிய புறநானூற்றுப் பாடல்களில் ஒரேயோர் இடத்தில் மட்டும் அவனது வேந்தன் என்ற குறிப்பு உள்ளதே அன்றி மூவேந்தரில் யார் அவன் என்ற குறிப்பு இல்லை. அது சேரனா, பாண்டியனா என்ற வழக்கு ஆய்வாளர்களிடையில் உள்ளது. நாஞ்சில் பொருநன் என்பது ஒரு தனிமனிதப் பெயராக இல்லாமல் ஒரு மரபுப் பெயராக இருப்பதற்கான வாய்ப்பும் உண்டு. அதனால் அந்த நான்கு புறநானூற்றுப் பாடல்களிலும் வருபவன் ஒருவனேதானா என்ற ஐயுறுவதற்கும் இடமுண்டு.

            இனி முன்னோரிடத்தில் வெள்ளாளார்களைப் பற்றிக் கூறிய போது நாஞ்சில் குறவன் என்பவனைக் குறிப்பிட்டிருந்தோம். குறிஞ்சி நிலத் தலைவன் என்ற வகையில்  பின்னர் வந்த முதலியார் கீழ் வாழ்ந்த வெள்ளாளர் அவனைக் குறவன் என்ற அடைமொழியால் வழங்கியிருக்கலாம்.

            நாஞ்சில் நாடு பாண்டியர்கள் ஆளுகையில் இருந்திருப்பதற்கும் அவர்கள்தாம் இங்கு வேளாண்மையை உருவாக்கியவர்கள் என்பதற்கும் பருப்பொருட் சான்றாக, பறளியாற்றின் குறுக்கே  இருக்கும் பாண்டியன் அணை நிலவுகிறது. இங்கிருந்து பறளியாற்று நீரில் ஒரு பகுதி பழையாறு எனப்படும் கோட்டாற்றுக்குத் திருப்பிவிடப்படுகிறது. அதிலும் குறுக்கே அணைகள் கட்டப்பட்டுப் பாசனத்துக்கு நீர் வழங்கப்படுகிறது.

            குமரி மாவட்டத்தின் நிலக்கிடக்கை மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தை அடுத்து காடும் காடு சார்ந்த முல்லை நிலமும் அதை அடுத்து நேரடியாக கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலமுமாக அமைந்தது. இதில் முல்லை நிலத்தைப் பாசனத்தின் மூலமாக மருத நிலமாக மாற்றியுள்ளனர் பாண்டியர்கள். மேலே குறிப்பிட்ட ஆற்றுப் பாசனம் தவிர குளத்துப் பாசனத்தையும் விரிவாகச் செய்துள்ளனர். குத்துச் சரிவான நிலக்கிடக்கையைப் பெருமளவில் கொண்ட இம் மாவட்டத்தில் நெருக்கமான சின்னஞ்சிறு குளங்கள் முதல் பரந்த ஏரிகளையும் காண முடியும். ஒரு சென்றுக் குளப் பரப்பும் அதே ஒரு சென்று ஆயக்கட்டு எனப்படும் குளப் புரவும் கொண்ட குளங்களையும் இங்கு காண முடிகிறது. இதனையும் பாண்டியர்களே செய்திருக்கிறார்கள். பெரும்பாலும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு கள்ளரும் பிறருமாகிய குறிஞ்சி - முல்லை நில மக்களின் களப்பிரர் படையெடுப்பில் இடம் பெயர்ந்த சோழநாட்டு மருதநில மக்களில் குமரி மாவட்டத்தில் குடியேறிய மக்களைக் கொண்டே பாண்டியன் இந்தப் பணியை நிறைவேற்றியிருக்க வேண்டும். அதனை நாஞ்சில் பொருநன் மரபினர் மேற்பார்வையிலேயே செய்திருக்க வேண்டும். அதற்கு மாறாக அம் மக்களிடம் அவன் திறை தண்டியிருப்பான். இதையே நாம் முன்பு சுட்டியவாறு, நாஞ்சில் குறவன் வரியாகத் தண்டிய இரும்பை மலையில் ஓடும் ஓர் ஓடை நீரில் நனைத்துத் தங்கமாக மாற்றிய கதை குறிப்பிடுகிறது. இரும்பைத் தங்கமாக்குவது இது போன்ற கதைகளின் பொதுக் கருவாகும். நாடார்கள் வரலாற்றிலும் ஒரு முனிவர் சுட்டிக் காட்டிய செடியின் சாற்றில் இரும்பை நனைத்துத் தீயில் இட்டால் தங்கமாகும் என்பது ஒரு கதை. இதில் நெருப்புதான் அடிப்படைக் கரு. அதாவது அதுவரை கள்ளாக மாறிய பதனீரை இப்போது அடுப்பில் காய்ச்சிக் கருப்பட்டியாக்கிச் செல்வம் குவித்ததை அக் கதை குறிப்பிடுகிறது. இங்கோ தண்ணீரைக் கட்டுப் படுத்தி திறை தண்டி குறவன் எனப்படும் நாஞ்சில் பொருநன் செல்வம் திரட்டி பாண்டியனுக்கு வழங்கியதை இக்கதை குறிப்பிடுகிறது.
                                              
            இந்தப் பொருநனை, 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசு வலுவிழந்திருந்த ஒரு சூழ்நிலையில் வெள்ளாளர்கள் ஏதோவொரு திருமணம் அல்லது வேறு நிகழ்ச்சியின் போது பந்தலைத் தீவைத்து அழித்து நாஞ்சில் நாட்டைக் கூபக தேச அரசனுக்குக் காட்டிக்கொடுத்திருக்கின்றனர்.

            இந்தப் பொருநன் மரபினரில் ஒருவன் பெயர் வள்ளுவனாக இருந்திருக்கக் கூடும். அந்தப் பட்டப் பெயர் தொடர்ந்தும் வந்திருக்க வேண்டும். எனவே புறநானூற்றுத் தொகுப்பாசிரியர் அல்லது உரையாசிரியர் பொருநன் மேல் பாடப்பட்ட பாடல்களை நாஞ்சில் வள்ளுவன் மேல் ஏற்றிச் சொல்லிவிட்டனர்.

            பொருநன் என்பதற்கு ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர் என்ற பொருள்களும் உள்ளன. பெரும்பாலும் மூவேந்தர் வருகைக்குப் பின்னர் மலையில் வாழ்ந்திருந்த பொருநர் குடியினர் தங்கள் கிணைப்பறையுடன் களம்பாடுவோராக மாறியிருக்க வேண்டும். முன்பு நாம் சுட்டியது போல் சாமன்களாக இருந்த குன்றக் குடிகளின் தலைவர்களின் வளர்ச்சி நிலையே பொருநரும் அவர்களுடைய கிணைப்பறையும் என்று கொள்ளலாம். இக் கிணைப்பறையே நாம் ஏற்கனவே குறிப்பிட்ட கணியார்கள் என்பவர்களின் மகுடம் எனும் பறையாக இருக்கலாம்.

            இன்றும் நாஞ்சில் நாட்டு மலைகளில் வாழும் மக்களுக்கு காணிக்காரர் என்ற சாதிப்பெயரும் காணி என்பது சாதிப்பட்டமுமாக இருக்கிறது. கணி என்பது அதன் மரூவாக இருக்கலாம். காதால் கேட்பதற்குக் காதை என்று இருந்தது எழுத்தில் எழுதும் நிகழ்ச்சிகளைக் குறிக்கும் காதை என்றும் கல்கொள் காதை என்பதைக் கால்கோள் காதை என்றும் சிலப்பதிகார ஆசிரியரும் திரித்திருப்பதைப் போன்ற ஒரு மரூவாக இதைக் கொள்ள வேண்டும். இந்த வகையில் வள்ளுவர் என்ற பொதுப் பெயர் ஏற்கனவே இருந்த உளம் அறிதல் என்ற திறனுடன் வந்தேறிகளான குமரிக் கண்டத் தமிழர் கொண்டுவந்த வானியல், கணியம் ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும். தொடக்க காலப் பல்லவர்களின் குல ஆசான்களாக வள்ளுவர்கள் திகழ்ந்தனர் என்பதே பல்லவர்கள் மூவேந்தர்களின் வருகைக்கு முந்திய தமிழகத்தின் மூல குடிகளின் ஒரு பிரிவினர் என்பதற்குத் தடயமாகலாம்.

            தமிழர்களின் வானியல் அறிவின் வளர்ச்சி நிலை பற்றிய தெளிவான தடங்களை நம் மரபுகளில் இனம் காண முடியும். நிலவின் தேய்வு - வளர்வு அடிப்படையிலான ஆண்டுமுறை முதல் தடம் என்றால் 27 சொச்சம் நாட்களைக் கொண்ட கதிரவனின் தன் சுழற்சியின் அடிப்படையில் 27 நாள்மீன்களையும் அதனுடன் அபிசித்து என்ற ஒன்றையும் சேர்த்து 28 நாட்கள் கொண்ட 12 மாதங்களுடன் 336 நாட்களைக் கொண்ட சாவனம் என்ற ஆண்டு முறை (பார்க்க: அபிதான சிந்தாமணி, சம்வத்சரம்) இரண்டாம் தடம். 2½ ஆண்டுகளில் ஒரு நிலவு மாதத்தைக் குறைக்கும் ஆண்டுமுறையுடன் 19 ஆண்டுகளில்  7 ஆண்டுகள் 13 மாதங்களைக் கொண்டதாக, யூதர் முதல் தெற்கு தென்கிழக்காசிய நாடுகள், சீனம் போன்ற நாடுகளில் வழக்கிலிருக்கும் ஆண்டு முறைகளை வகுத்தவர்களும்  தமிழர்களே. இதைத் துவாபரயுகம் என்று நம் ஐந்திறங்கள்(பஞ்சாங்கங்கள்) கூறுகின்றன.

            தெற்கன் என்று பொருள் தரும் தக்கன் என்ற பெயர் கொண்ட ஒருவன் தன் மகள்களில் 27 பேரை நிலவுக்கு மணம் முடித்தான் என்று ஒரு கதை கூறுகிறது. இதில் மணமகள்களும் மணமகனும் மனிதர்களோ கடவுளர்களோ அல்லர், வெறும் வான் பொருட்கள். எனவே இதற்கான பொருளை வானியலிலேயே தேட வேண்டும். கதிரவனின் தன்சுழற்சியை அடையாளங்காண நிறுவப்பட்ட விண்மீன் கூட்டங்களான நாள்மீன்களை நிலவின் இயக்கத்துடன் இணைத்த தக்கனின் செயலாகவே இதைக் காண வேண்டும். இதனுடன் யமன் எனும் காலதேவனை தென்திசைக் கடவுள் என்பதுடன்  யாம திசை என்பதற்கே தெற்கு என்ற பொருள் உள்ளது. யாமம் என்ற சிறுபொழுதுகளின் பிரிவுகளை  இவனே உருவாக்கியிருக்க வேண்டும்.  இந்தத் தக்கனும் காலனாகிய யமனும் ஒரே மரபினராக, இந்த மூன்று சொற்களுமே தனி மனிதர்களை அன்றி ஒரு மரபுத்  தொடர்ச்சியைக் குறிப்பதாகலாம்.

            கதிரவனின் தென்கோடிச் செலவைக் குறிக்கும் சுறவ(மகர)க் கோட்டின் அடிப்படையில் 365 சொச்சம் நாட்களைக் கொண்ட கதிரவ ஆண்டு முறையைக் கண்டவர்கள் இவர்களாகவே இருக்க வேண்டும். அத்துடன் மகரக் கோட்டில் கதிரவன் வரும் இன்றைய டிசம்பர் 21 அன்று தொடங்கும் ஆண்டுமுறையையும் இவர்களே கண்டிருக்க வேண்டும். கதிரவன் தன் செலவின் தென்கோடியில் இருக்கும் போது தொடங்குவதாக அங்கு வாழ்ந்த தமிழர்களின் முன்னோர் வகுத்த ஆண்டுமுறை அப்படியே இடம் மாறிச் சென்று பின்னர் தமிழர்களே அதனை 24 நாட்கள் தள்ளிக் கணக்கிட்டவாறு சனவரி 14 ஆம் நாள் தொடங்கிப் பின்னர் போப் கிரிகோரியின் அறிவுரைப்படி 13 நாள்கள் முன் தள்ளி இன்று சனவரி 1 ஆம் நாளிலிருந்து கதிரவன் செலவின் வட கோடிக்கும் வடக்கிலிருக்கும் ஐரோப்பியர் தங்களது ஆண்டு முறையாக ஆக்கி உள்ளனர்[2].

            இதற்கிடையில் புவியின் தென்முனையிலிருந்து சுறவக் கோட்டை ஒட்டி வாழ்ந்த மக்களுக்கும் நிலநடுக்கோட்டைச் சுற்றி வாழ்ந்த மக்களுக்கும் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் கடல் ஆமைகள் செல்லும் கடல்வழியைத் தடம் பிடித்து உலகை வலம் வந்ததன் மூலம் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளையும் புதுப்புனைவுகளையும் எய்தினர். நம் தொன்மத்தில் திருமால் ஆமை வடிவமாக அடியில் கிடக்க அதன் மீது மந்தார மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாகக் கொண்டு தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் மறுபுறமும் நின்று கடைந்தனர். அதிலிருந்து ஆலகால நஞ்சென்பதும், அமுதமும் இலக்குமியும் இந்திரனின் யானை, குதிரை முதலியனவும் பிறை நிலவும் தோன்றியதாக ஒரு கதை மகாபாரதத்தில் உள்ளது[3]. இதில் அமுதத்தைத் தேவர்கள் தங்களுக்கு மட்டும் வைத்துக்கொள்ள அதனால் அவர்களுக்குள் பெரும் சண்டை நடந்தது என்கிறது இக்கதை. யூத மறைநூலில் மனிதனின் சாவாமையைப் பாம்பு அழித்தது என்றும் கில்காமேசு கதையில் சாவா மருந்தை அவனிடமிருந்து பாம்பு திருடியதாகவும் கதைகள் உள்ளன. இச் சாவா மருந்தைப் பற்றி கும்பகோணம் தலபுராணம் கூறுவது: பெரும் ஊழி அழிவிலிருந்து உயிர்களைக் காப்பதற்காக அனைத்து உயிர்களின் விந்தணுக்களை இந்தச் சாவா மருந்தில் வைத்து ஒரு கும்பத்தில் இட்டுக் கும்பகோணத்துக்குக் கொண்டு வந்தனர் என்பதாகும். அதாவது உலகின்  இருவேறு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இணைந்து நிகழ்த்திய ஆய்வுகள் இக் கதை மூலம்  வெளிப்படுகிறது.

            நம் இந்தத் தொன்மக்களில் வான்பொருட்களுக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பதாகும். தேவர்களின் ஆசான் வியாழனும் அசுரர்களின் ஆசான் வெள்ளியுமாகும். இவை இரண்டும் மனிதர்களோ, தேவர்களோ அல்லர். புவியிலிருந்து எளிதில் பார்த்து அடையாளம் காணத்தக்க நம் கதிரவக் குடும்பத்தின் இரு கோள்கள். இந்தக் கோள்கள் எப்படி தேவர்கள், அசுரர்கள் ஆகியோரின்  ஆசான்களாக ஆயின?

            நமக்குத் தெரியும் கதிரவனைச் சுற்றிய வியாழனின் செலவு 11 சொச்சம் ஆண்டுகளாகும். இதைத் தோரயமாக 12 ஆண்டுகள் கொண்ட  ஒரு வியாழ வட்டம் (மக்கள் வழக்கில் வியாழோட்டம்) என்பர். அது போல் வெள்ளி 118 ஆண்டுகளில் ஏறக்குறைய 8 ஆண்டுக் காலம் நில நடுக்கோட்டுக்குத் தெற்கில் சென்று மீள்கிறது. இந்த 8 ஆண்டுகள் மீ வறட்சியான  ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. காவிரியின் பிழையா  வளத்தைக் கூறவந்த இளங்கோவடிகள்,

                        கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
                        விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
                        கால்பொரு நிவப்பின் கடுங்குர லேற்றொடுஞ்
                        சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக்
                        குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
                        கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
                        காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
                        ஓவிறந் தொலிக்கு மொலியே யல்லது
                        ஆம்பியுங் கிழாரும் விங்கிசை யேத்தமும்
                        ஓங்குநீர்ப் பிழாவும் மொலித்தல் செல்லாக்
                        கழனிச் செந்நெற் கரும்புசூழ் மருங்கில்...........   காடுகாண் காதை 102-112
என்கிறார். (ஏக்கப் பெருமூச்சு வருகிறதா, தமிழக அரசியல் வாணிகர்களால் இழந்த காவிரி நீருரிமையை எண்ணி, அல்லது ஆத்திரம் வருகிறதா?)

            வெள்ளி(சுக்கிரன்), வியாழன் (பிரசுபதி) ஆகியவற்றைப் பற்றிய ஒரு தொன்மக் கதை இது:
            “அசுரன் வேண்டுகோளின்படி(சுக்கிரன்) சிவமூர்த்தியை எண்ணித் தவத்திற்குச் சென்றிருக்கையில் இந்திரன் சயந்தியை யேவி மணக்கச் செய்ய மணந்து அவளுடன் யார் கண்ணுக்கும் புலப்படாமல் பத்துவருடம் இருக்கையில் வியாழன் சுக்கிரவுருக்கொண்டு அசுரரை மயக்கி அவன் சொற்படி கேட்பிக்கக் கண்டு தான் சென்று உண்மையான சுக்கிரன் நான் எனக் கூறியும் கேளாததனால் அசுரர்களைத் தேவர்களால் அபசயமடையச் சாபம் தந்து மீண்டும் வியாழன் தன் காரிய முடிவில் மறைய அசுரர் தாங்கள் மோசமடைந்தது உணர்ந்து பிரகலாதனை முன்னிட்டு வேண்ட அசுரர்களின் வேண்டுகோளுக்கிரங்கி மீண்டும் அவர்களை மாணாக்கராக்கிக் கொண்டவன்” (அபிதான சிந்தாமணி, சுக்கிரன்,14).

            வெள்ளியை அடிப்படையாகக் கொண்டு காலக்கணிப்பும் காலநிலையியல் கணிப்பும் செய்த ஒரு மக்கள் குழுவினர் அசுரர் எனவும் வியாழனை அதே நோக்கத்துக்காக அடிப்படையாகக் கொண்டவர்களைத் தேவர்கள் என்றும் கொண்டால்[4], வான்பொருட்களின் தோற்றத்தில் வெள்ளி கதிரவனின் வெளிச்ச வட்டத்துக்குள் மறைய அந்தக் காலகட்டத்தில் வெள்ளி இருந்த இடத்தில் வியாழன் இருப்பது போல் தோன்றும் ஒரு காலகட்டத்தில் காலக்கணிப்பிலும் காலநிலைக் கணிப்பிலும் அசுரர் எனப்படுவோர் தவறு செய்து இழப்பெய்தியதை இது குறிக்க கூடும். இந்தக் கதையின் வானியல் பொருளை வெள்ளி, வியாழன் ஆகியவற்றின் இயக்கங்களுடன் ஒத்துப் பார்த்து அதன் பொருளை அறியலாம். இது 118 ஆண்டுகளுக்கொருமுறை வெள்ளி தென்புறம் சென்று திரும்பும் நிகழ்முறையைக் குறிக்கிறதா அல்லது மிக நீண்ட ஒரு கால இடைவெளியில் நிகழும் ஒரு இயற்காட்சியைக் குறிக்கிறதா என்று அறியலாம். இது ஒரு வேளை, பண்டைத் தமிழர்கள் தங்கள் வானியல் அறிவை முழுமைப்படுத்திய காலத்தின் கணிப்புக்குக் கூட நமக்கு வழிகாட்டலாம்.

            இந்தக் கதையில் இன்னொரு ஆர்வமூட்டும் செய்தியும் வருகிறது. “அசுரர்……பிரகலாதனை முன்னிட்டு வேண்ட” என்பதிலிருந்து அசுரர் என இக் கதையில் குறிப்பிடப்படுவோர் ஏதோவோரு வகையில் சேரர்களுடன் உறவுடையோராகத் தோன்றுகிறது. சேர நாட்டில் வழங்கப்படும் ஆண்டுமுறையில் வெள்ளிக் கோளின் இயக்கத்தோடு உள்ள தொடர்பு குறித்து ஆய்வது இத் திசையில் ஏதாவது வழிகாட்டக்கூடும்.  

            ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன் தினமணி சுடர் இணைப்பில் சுந்தரம் என்பார் வானியல் பற்றித் தொடர்கட்டுரைகள் எழுதி வந்தார். போகிறபோக்கில், நம் பண்டை வானியல் கணிப்பில் தவறுகள் இருப்பதாக அவர் கூறினார். ஓரைகள், நாள்மீன்கள் என்பவை விண்மீன்களின் கூட்டங்களாகும். நம் பண்டை வானியலில், ஒரு ஓரையுள் அல்லது நாள்மீனினுள் இருப்பவையாகக் கூறப்பட்டுள்ள சில விண்மீன்கள் அந்தந்த  கூட்டத்துக்கு வெளியில் உள்ளன என்பது அந்தக் குற்றச்சாட்டு.

            ஆனால் இதில் ஓர் உண்மையை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஓர் ஓரையில் அல்லது நாள்மீனில் அடங்கிய விண்மீன்கள் ஒரே தளத்தில், அதாவது புவியிலிருந்து ஒரே தொலைவில், ஒரே விரைவில் நகர்ந்து கொண்டிருப்பவையல்ல. அவை தத்தமக்கிடையே குறிப்பிடத்தக்க தொலைவுகளில், வெவ்வேறு விரைவுகளில் நகர்ந்து கொண்டிருப்பவையாகும். அவை ஒவ்வொன்றுக்கும் புவியிலிருந்துள்ள தொலைவும் அவற்றின் இயக்க விரைவும் தெரியுமாயின் அவை, நம் முன்னோர் வரையறுத்த இடத்தையும் இப்போது அவை நகர்ந்திருக்கும் தொலைவையும் வைத்து நம் முன்னோர் அவற்றை வரையறுத்த காலத்தைக் கணிக்க முடியும். ஆனால் நம் பண்டை வானியலின் சிறப்பை ஒப்புக்கொண்டால் தம்மையொத்த “அறிவியலாளர்கள்” மதிக்கமாட்டார்கள் என்று நெஞ்சில் ஊறிய தாழ்வு மனப்பான்மையால் இத்தகையோர் இத்தகைய கருத்துகளை உதிர்த்துவிடுகிறார்கள்.

ஆக, 10 வியாழ வட்டங்களும் வெள்ளியின் ஒரு திருப்பச் செலவும் ஏறக்குறைய 118 ஆண்டுகள் ஆகின்றன. இந்த அடிப்படையில் நாள்மீன், நிலவின் கலை, மாதம், நாள் ஆகியவை மீளும் 59 ஆண்டுகளை 60  ஆண்டுகள் என்று தோராயப்படுத்தி ஐந்திரம் வகுத்திருக்கிறார்கள். அத்துடன் இந்த 60 ஆண்டுகளிலும் 20 ஆண்டுகள் மிகுதி, அடுத்த 20 ஆண்டுகள் இடைநிலை, எஞ்சிய 20 ஆண்டுகள் குறைவு என்ற மழைப் பொழிவு ஆண்டுகளாக வகுத்துள்ளனர். கதிரவனின் ஒளிநிலை, மழைப் பொழிவு, வேளாண் விளைச்சல், பூச்சிதாக்கு, உப்பு விளைச்சல், எண்ணெய் வித்துக்களின் விளைச்சல் என்ற அடிப்படையில் 60 ஆண்டுகளுக்குமான வான்பதவியல் செய்திகளை ஒவ்வோராண்டுக்கு ஒரு செய்யுளாக வடித்துத் தந்துள்ளார் இடைக்காடர்.

            இடைக்காடரைப் பற்றிய தொன்ம வடிவிலான பதிவு இது. இடைக்காடர் எனும் வானியல் வல்லார் வரும் 12 ஆண்டுகள் மழை பெய்யாது என்று கணிக்கிறார். அதிலிருந்து தப்ப தன் ஆடுகளுடன் கடற்கரைக்குச் சென்று அவற்றுக்கு கடலின் உப்பு நீர்ப் பின்னணியில் செழித்து வளரும் அடம்பக் கொடியை(குமரி மாவட்டத்தில் இதைக் கடம்பாக்கொடி என்பர்)த் தின்ன வைத்துப் பழக்குகிறார். தினை அரிசியை மண்ணில் குழைத்துக் குடிசை அமைக்கிறார். வறட்சிக் காலம் தொடங்கியதும் ஒவ்வொரு நாளும் குடிசைச் சுவரைச் சிறிது தேய்த்தெடுத்து தினையைப் பிரித்து ஆட்டுப்பாலில் கூழ் சமைத்து உண்கிறார். இவ்வாறு 12 ஆண்டுகள் முடியும் நாளில் ஒன்பது கோள்களும் அவரை வந்து சந்திக்கின்றனர். அவர்களுக்கும் கூழ் ஊட்டுகிறார். அவர்கள் வயிறுமுட்ட உண்டு உறங்குகின்றனர். தூக்கக் கலக்கத்தில் அவர்கள் தாறுமாறாகக் கிடக்கின்றனர். அவர் அவர்களை வரிசையாகக் கிடத்திவிட்டுத் தானும் தூங்குகிறார். அன்று இரவு பேயாப் பெருமழை பொழிந்து வரட்சிக் காலம் முடிவுக்கு வருகிறது.

            இதன் பொருள், குறிப்பாக, கோள்களை வரிசையாகக் கிடத்தினார் என்பது ஒவ்வொரு நேரத்திலும் கோள்களின் ஒன்றுக்கொன்றான இருப்பு வரிசைக்கும் மழைப் பொழிவுக்குமான தொடர்பை அவர் வரையறுத்தார் என்பதாகும். அத்துடன் இடையர்கள் இராக் காலங்களில் ஆடு மாடுகளைக் கிடைவைத்து விட்டு திறந்த வெளியில் தூங்குவதால் வான்பொருட்களின் இயக்கத்தை நோட்டமிடும் வாய்ப்பு மிகுதி. அத்துடன் அவர்களது தொழிலுக்கு மழையின் இயக்கத்தைப் பற்றிய அறிவு பயன்படும். அவர்களுக்கு மட்டுமல்ல கடலோடிகளுக்கு வான்பொருட்களின் கிடப்பும் இயக்கமும் பற்றிய அறிவு அவர்களது உயிர் வாழ்க்கைக்கே கூட அடிப்படையானது. அவர்களுக்கு மட்டுமல்ல, உழவர்கள், குயவர்கள், ஏன் வெட்டவெளியில் ஆடிப்பாடும் கூத்தாடிகளுக்குக் கூட வான்பதத்தைப் பற்றிய முன்னறிவு தேவை. இவர்களின் கணிப்புகள் பழமொழிகளாகவும் சொலவடைகளாகவும் மக்களிடையில் நிலவும். இவற்றைத் தொகுத்தும் வகுத்தும் சரிபார்த்தும் திருத்தியும் சித்தர்கள் எனப்படும் செயல்முறை ஆய்வர்கள் வகுத்தவைதாம் வானியல் அடிப்படையில் அமைந்த பஞ்சாங்கம் எனப்படும் ஐந்திறம். இதனைப் பட்டியல்களாகச் சுருக்கி வாக்கியப் பஞ்சாங்கம் (வாக்கியம் - பட்டியல்) எனத் தந்தவர் சிவவாக்கியர் எனப்படுபவர்

            இந்த வாக்கிய ஐந்திறம் தென் மதுரையில் கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன் வகுக்கப்பட்ட தடயங்கள் உள்ளன. மேழ மாதப் பிறப்பான மார்சு 21இல் தொடங்கும் ஆண்டு முறையின் தடயங்கள் அவை. அதாவது, எடுத்துக்காட்டாக சித்திரை மாதத்தில் 7 - 9 நாட்களில் ஒன்றில் அடுத்த ஓரையான விடை மாதப் பிறப்பை ரிசபாயனம் என்று குறித்திருப்பார்கள். அதுபோல் ஓரை, அகசு எனப்படும் - பகல் நேர நீட்சி  ஆகியவற்றுக்கான பட்டியல்கள் அந்த அயன மாதங்களுக்குப் பொருந்தியவையாகவே சில ஆண்டுகளுக்கு முன்பு கூட இருந்தன.

            ஆண்டுகளை அவை தொடங்கும் மாதங்களின் அடிப்படையில் 5 வகையாகப் பகுத்துள்ளனர். 12 ஓரைகளில் மேழம், கடகம், துலை, சுறவம் ஆகியவை சர ஓரைகள் எனப்படுகின்றன. இவை நில நடுக்கோட்டுக்கு நேர் ஆண்டில்  இருமுறையும் (மேழம், துலை)  வட, தென் திருப்பங்களில் ஒவ்வொரு முறையும் (கடகம், சுறவம்) கதிரவன் வரும் நாட்களில் தொடங்கும் ஓரைகளாகும். இந்த நான்கு ஓரைகளில் தொடங்கும் 4 ஆண்டு முறைகளும் இவை தவிர்த்த பிற நாட்களில் தொடங்குபவையும் என 5 வகையாக ஆண்டுகளைப் பகுத்துள்ளனர். மேழ மாதத்தில் பிறக்கும் ஆண்டுக்கு சம்வச்சரம் என்று சமற்கிருதத்தில் பெயர். பிற நான்கும் பரிவச்சரம், இடவச்சரம், அனுவச்சரம், இடுவச்சரம்.
                                                                                                                 
            இந்த ஐந்து ஆண்டுப் பெயர்களையும் தெலுங்கு ஆண்டான 2½ ஆண்டுச் சுழற்சியுடன் குழப்பி 5 ஆண்டுகள் கொண்ட ஒரு வேதாங்க ஊழிச் சுழற்சி என்று திருவருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் நம்பும்  ஆய்வாளர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

            நம் நாட்டில் சுறவ மாதத்தில் (தை) பிறக்கும் ஓர் ஆண்டு முறை சுறவக் கோட்டுப் பகுதியில் தோன்றி இன்று அதன் வட எதிர் முனைக்கும் வடக்கிலுள்ள ஐரோப்பியர்களால் கைக்கொள்ளப்பட்டு கிறித்து ஊழியாக மாறியுள்ளது. ஆடி மாதப் பிறப்பைக் கொண்டாடுவது கடகத்தில் பிறக்கும் ஆண்டின் ஒரு தடயமாகும். மேழ ஓரையில் பிறக்கும் ஆண்டின் திரிபாகும் சித்திரை மாதத்தில் பிறக்கும் இப்போது நடைமுறையிலிருக்கும் ஆண்டுமுறை (விரிவுக்கு பொங்கல் திருநாளும் தமிழர்களின் வடக்கு நோக்கிய நகர்வும் என்ற என் கட்டுரை பார்க்க, இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல், வேங்கைப் பதிப்பகம், மதுரை.). அது போலவே ஐப்பசியான துலை ஓரையில் பிறக்கும் ஆண்டின் நினைவாக ஐப்பசி விழு கொண்டாட்டம் நம் மக்களிடையில் நிலவுகிறது. வட இந்திய மாநிலங்கள் சிலவற்றில் தெலுங்கு ஆண்டு இம்மாதத்தில் தொடங்கப்படுகிறது. இவையன்றி மடங்கல் ஓரையில் தொடங்கும் ஆண்டின் திரிபாக ஆவணியில் தொடங்கும் ஆண்டு கேரளத்தில் உள்ளது.

            இவ்வாறு தெற்கிலிருந்து வந்த வானியல், கணியச் செல்வத்தைத் தங்கள் உளமறிதல் திறனோடு இணைத்து கணியத்தொழிலைக் கையாள்பவர்களே இன்றைய வள்ளுவர்கள். சில பகுதிகளில் இவர்கள் ஏவல், சூனியம் முதலியவற்றைக் கையாள்கின்றனர். குடுகுடுப்பைக்காரர், கைவரை பார்ப்போர், மற்றும் முகத்தைப் பார்த்துக் குறிசொல்வோர் என்று பல துறைகளில் இந்த உளமறிதல் உத்தியைக் கையாள்பவர் இருக்கின்றனர். கணியத்துறையில் இத்தகையோர் தங்களிடம் வருவோரின் உடன் பிறப்புகள், தாய்மாமன்கள் போன்ற செய்திகளை அடுக்கி அவர்களைத் திகைக்கவைக்கின்றனர். இத்தகைய செய்திகள் பற்றிய பாடல்கள் கணிய நூல்களில் இருந்தாலும் அவை துல்லியமாக இருப்பதில்லை, இவை கணியத் துறையின் எல்லைக்கு அப்பாற்பட்டவை என்று கணிய நூல்களை முறையாகக் கற்றுத் தொழில் செய்வோர் கூறுகின்றனர். எந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தாலும் வள்ளுவர்கள் ஒரு பேருந்தை, சரக்கியை இயக்கும் ஓட்டுநர் போன்றவர்களே அன்றி அப் பொறிகளை முதன்முதலில் உருவாக்கி மேம்படுத்திய பொறியியல் வல்லுநர்களைப் போன்று கணியத் துறையைத் தங்கள் ஆய்வுகளால் உருவாக்கி வளர்த்தவர்களில்லை. அதற்குரிய வாழ்நிலை அவர்களுக்கு இருந்ததற்கான எந்தப் பின்னணியும் இல்லை.

            தென்னிந்தியாவில் உள்நாட்டு மக்களுக்கும் குமரிக் கண்டத்திலிருந்து வந்தேறிய மூவேந்தர் மரபினர்க்கும் இடையிலான முரண்பாடு முற்றிக்கிடந்த வேளையில் வடக்கே கால்நடைகளைப் பலியிட்டு வேள்விகள் செய்து மக்கள் மீது மேலாளுமை செலுத்த முயன்றுகொண்டிருந்த பார்ப்பனர்கள் ஒரு புறமும் அரச மரபினரும் வாணிகர்களும் இன்னொரு புறமுமாக முரண்பாடு முற்றி நின்றது. ஐரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் கிளப்பிய புயலைத் தொடர்ந்து எண்ணற்றோர் சீர்திருத்தக் கிறித்துவத்தின் பல்வேறு பிரிவுகளை உருவாக்கியதைப் போல் புத்தர், மகாவீரர் போன்று எண்ணற்றோர் உருவாகி சிறு சிறு மாறுபாடுகளுடன் கோட்பாடுகளை முன்வைத்தனர். அவற்றில் புத்தமும் அம்மணமாகிய சமணமும் பிறவற்றைத் தம் வயமாக்கி நிலைத்தன.

             கௌதம புத்தர் நமக்குச் சொல்லப்படுவது போல் மரத்தடியில் அமர்ந்திருந்து தன் கோட்பாட்டை உருவாக்கவில்லை. நாடெல்லாம் சுற்றி மக்களின் குறிப்பாக அரசர்கள், செல்வர்களின் வாழ்நிலைகளைக் கண்டு, அளவற்ற  செல்வமும் அவாவும் கொண்டு கேளிக்கைகளில் திளைத்து இறுதியில் அச் செல்வங்களைக் கைப்பற்ற பிறங்கடைகளால் துரத்தியடிக்கப்பட்டு தெருப்பிணங்களாகச் சாவதையும் பார்த்து அவாவை ஒழித்து இரந்துண்டு வாழ வழி கூறினார்.
                                                                                                                   
            அம்மணர்களின் பொதுக் கோட்பாடும் அத்தகையதே. வேளாண்மை, வாணிகம் மற்றும் பல்வேறு தொழில்வளர்ச்சிக்கு கால்நடை வேள்வி எதிரானது என்று கண்டு கொலை வேள்விகளை, மட்டுமன்று புலால் உண்ணாமையையும் இடம் பெயர்ந்து செல்லும் நுண்ணுயிர்கள் வரை காப்பது என்பதை இயக்கமாகக் கொண்டனர். இவர்கள் நிலைத்திணைகளை உயிருள்ளவையாகக் கருதவில்லை. எனவே அவற்றின்  விளைச்சல்களை உண்பதையோ அழிப்பதையோ தடுக்கவில்லை. இந்த அடிப்படையில் பார்த்தால் ஓரறிவினவே உற்றறிவினவே என்று நிலைத்திணைகளைக் குறிக்கும் தொல்காப்பியம் ஆசிரியர் அம்மண சமயத்தவர் கூற்று எவ்வளவு தவறானது புரியும்.

            ஆனால் மதம் என்ற வகையில் இச் சமயங்கள் வகுத்த கோட்பாடுகள் முந்தைய குமரிக் கண்டத்தில் உருவான பல்வேறு கோட்பாடுகளின் பலதரப்பட்ட தொகுப்புகளே. இச் சமயங்களின் முன்னோடிகள், முன்னோர்கள் எனப்படுபவரும் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தொல்பழம் அறிஞர்களும் மக்கள் தலைவர்களுமே.

            சமயம் என்ற வகையில் இவ் விரண்டு பிரிவுகளும் மௌரியப் பேரரசின் தலைவர்களால், சந்திரகுப்த மௌரியரின் மூலம் அம் மணமும் அசோகரின் மூலம் புத்தமும் தெற்கில் அரசியல் கருவிகளாகப் புகுந்தன. தமிழகத்தினுள் நேரடியாக நுழைய முடியாத அவை காரவேலனின் ஒற்றர்களால் தமிழகத்தின் குறிஞ்சி, முல்லை மக்களின் இடையில் அம்மணமும் வாணிகர்கள் மற்றும் அரசர்களின் போட்டியாளர்கள் மூலம் இலங்கை ஒற்றர்களால் புத்தமும் தமிழகத்தினுள் நுழைந்தன. இவ் விரண்டு சமய ஒற்றர்களும் தமிழர்களின் பண்டைய பண்பாட்டுக் கூறுகளை அழிக்கும் செயலில் முனைப்பாக ஈடுபட்டிருப்பதை, அரச குடும்பத்தைச் சேர்ந்த பல்துறை அறிஞரும் மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவரும் தமிழகத்தின் மீதும் தமிழர்களின் பண்டைப் பண்பாட்டுச் சிறப்புகள் மீதும் அளவில்லாப் பற்றும் அவற்றின் மீது பெருமிதமும் கொண்டிருந்தவருமான இளங்கோவடிகள் அந்த இரு சமயங்களின் ஊடாடலுடன் தமிழக அரசர்களும் மேற்குடியினரும் சீரழிந்ததன் வெளிப்பாடான சிலப்பதிகாரம் காட்டும் நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பண்டைத் தமிழகத்தில் மறைக்கப்பட்ட, மறைக்கப்பட்டுக் கொண்டிருந்த உண்மையன வரலாற்று - பண்பாட்டுக் கோலங்களைப் புதையலாக்கி ஒரு காப்பியத்தை யாத்தார். நிகழ்ச்சிகளை உள்ளது உள்ளபடி எடுத்துவைத்தால் தன் படைப்பு அழிக்கப் பட்டு விடும்  என்று எண்ணற்ற செய்திகளை ஆழத்தோண்டி எடுக்கும் வகையில் வைத்தார். எனவே சிலப்பதிகாரத்திலிருந்து பண்டைத் தமிழக தொல் வரலாறு, பண்பாடு முதலியவற்றில் பலவற்றை மீட்டெடுக்கலாம். எடுத்துக்காட்டாக, வருணங்கள் எனப்படும் அரசியல் அமைப்பு பின்பு சமூக ஏற்றத்தாழ்வுகளைக் காட்டும் குமுக அமைப்பாகக் குறுகிப்போன உண்மையை, ஒவ்வொரு நிகழ்ச்சியையையும் வருண பூதத்தை வழிபட்டுத் தொடங்குவது, பாரதி ஆடிய பாரதி அரங்கம் என்பதன் மூலம் முதலில் சுடலையில் ஆடியது சிவனல்ல, அவனுக்கு முந்திய பெண்தான் என்பவற்றைச் சுட்டலாம்.

            இருப்பினும் ஊடுருவிய ஒற்றர்களின் முயற்சிகள் வென்றன. அம்மணர்களின் அறிவுரையில் இயங்கிய களப்பிரர்கள், பல்லவர்களின் ஆட்சிகள் தோன்றின. அம்மண, புத்த ஊடுருவிகள் தமிழகப் பண்பாட்டுக் களஞ்சியங்கள் அனைத்தையும் பெயர்த்துச் சமற்கிருதத்துக்கு மாற்றிவிட்டு அவற்றை  அழித்தனர். பண்பாட்டின் பருப்பொருள் அடையாளங்களாகிய கோயில்கள் அரண்மனைகள், கோட்டைகள் என்று அனைத்தையும் அழித்தனர். ஏடுகளை ஆற்றில் இட்டு அழித்தவர்கள் இவர்களே. அதன் தடயம்தான் அம்மணர்க்கும் சிவனியர்களுக்குமான போட்டியில் ஆற்றில் இட்ட ஏடுகள் நீரோட்டத்தை எதிர்த்து நீந்திய கதையாகும். அவர்கள் வழியிலேயே சென்று தந்திர - மந்திரங்களால் அவர்களை அழித்த வரலாறு இது.

            இவர்களது அழிம்புச் செயல்களைக் கண்டு மனம் பதைத்ததன் வெளிப்பாடுதான் சிலப்பதிகாரம்.

            பெண்களை மிகவும் இழிவாக நடத்துவது அம்மண சமயம். பெண்களுக்கு மிக இழிவான கட்டுப்பாடுகளைக் கற்பித்து மாந்தன்மையற்ற கற்புக் கோட்பாடுகளை வகுத்தவர்கள் இவர்களே. பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுமையை பெண்களுக்கு உரிய இடம்கொடுத்து இயற்றப்பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் இடையிடையே புகுத்தப்பட்டிருக்கும் நூற்பாக்களில் எளிதாக அடையாளம் காண முடியும்.

            அது போல் பாணர்கள், பறையர்கள், துடியர்கள் போன்று இசைக் கருவிகளுடன் பாடிய பாடல்களிலிருந்து இறுத்தெடுக்கப்பட்ட செய்யுளியலை முற்றிலும் மாற்றி, இசைக்கு முற்றிலும் ஒத்துவராத ஒரு செய்யுளியலையும் தொல்காப்பியத்தில் புகுத்தியுள்ளனர் இவர்கள்.

            இன்றைய இந்திய அரசு பனியாவான காந்தியால், பனியாக்களுக்காக உருவாக்கப்பட்டு பனியாக்களால் நடத்தப்படுவதாகும்.

            இந்திய வரலாற்றாய்வில் இந்திய நாகரிகத்தின் தொன்மை இவர்களின் கற்பனையான ஆரிய வருகை என்று கூறப்படும் கி.மு. 2500க்கு முன்  செல்வதையோ மாநில மக்களின் நாகரிகம் மகாவீரரின் காலமான கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முன் செல்வதையோ பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அந்தக் கண்ணோட்டத்தில்தான் தமிழக நாகரிகம் கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்குப் பின் அம்மணர்களால் தமிழர்களுக்கு புகட்டப்பட்டது என்று இந்தியப் பல்கலைக் கழகங்களின் மூலம் ஆசிரியர், மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. எனவே இந்திய ஆய்வாளர்கள் எனப்படுவோர் இந்தக் கதையையே கிளிப்பாடமாக ஒப்பிப்பர்.

            ஆய்வறிஞர் குணாவும் இதே தடத்தில்தான் செல்கிறார். ஆனால் இதைப் பிறர் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காகவே ஆசீவகர் என்றொரு அம்மணப் பிரிவைக் கண்டெடுத்து அவர்கள் தமிழர்களின் பண்பாட்டு முன்னோடிகள் என்று சான்றுகளுடன் கூறுகிறார். ஆசீவகர்கள் அவிழ்த்துப் போட்டு ஆடையின்றி பிறந்த மேனியில் திரியும் காட்டுவிலங்காண்டிகள். தங்கள் மயிரைத் தாங்களே பிடுங்கிக் கொள்ளும் மனம் பிறழ்ந்த பித்தர்கள். இவர்களிடமிருந்துதான் தமிழர்கள் நாகரிகம் கற்றனராம். என்ன பெருமையைத் தமிழர்களுக்கு வாரி வழங்கியுள்ளார் பாருங்கள்  ஆய்வறிஞர் குணா அவர்கள்!

            பக்குடுக்கை நன்கணியார் என்பதில் வரும் பக்குடுக்கையைப் பக்கு + உடுக்கை என்று பிரித்து பக்கு என்பதற்கு மரவுரி என்ற பொருளை எடுத்துக் கொண்டு மரவுரி அணிந்த நன்கணியார் என்று பொருள் கூறுகிறார் குணா. இங்கும் நாகரிகக் காலத்துக்குரிய நூலாடையை அறியாத காட்டுவிலங்காண்டியாகவே தமிழக நன்கணியாரைக் காட்டுகிறார் குணா. பக்கு என்பது பை என்ற பொருளையும் கொண்டது. பக்கறை என்ற நாட்டு மக்கள் வழக்கைப் பாவாணர் காட்டியுள்ளார். புறநானூறு உரையாசிரியர் வை.துரைசாமியார் இப்படியும் பொருள் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். சட்டையை மெய்ப்பை என்று கூறுவது பண்டை வழக்கு. பக்கு உடுக்கை என்பதை பை போன்ற  உடை என்று பொருள்கொண்டு கருப்பசாமி, சுடலைமாடன் போன்ற நாட்டுப்புறத் தெய்வங்கள் அணிந்திருக்கும் சல்லடம்(சல்லடம் என்பது கால் பகுதியின் கீழ்முனை ஓரத்தில் சிறு பணிகளை வைத்துத் தைத்த அரைக்கால் சட்டையாகும்.) போன்று அது இருக்கக் கூடும் என்று ஏன் ஆய்வறிஞர் குணாவுக்குத் தோன்றவில்லை.

            தமிழ் பத்தி இலக்கியத்தில் அம்மண என்ற சொல்லின் திரிபிலிருந்து சமணர் என்று அழைக்கப்படும் சமயத்தின் ஒரு பிரிவான திகம்பரர்(திசையையே ஆடையாக அணிந்தவர், அதாவது அம்மணமாகத் திரிபவர் என்று பொருள்) என்ற பிரிவினைப் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை ஆசீவகர் என்ற அம்மணர் அல்லாத ஒரு சமயத்தினர் என்று காட்டி ஆனால் அவர்கள் அம்மணத்தில் கரைந்து மறைந்து விட்டனர், அதாவது உட்செரிக்கப்பட்டுவிட்டனர் என்று கூறுகிறார். ஆகச் சரக்கு ஒன்றுதான். ஆசீவகர்களும் திகம்பர அம்மணர்களும் வேறு வேறானவர் அல்லர் என்பதுதான் அதன் பொருள். ஆசீவகர்கள் தமிழர்களுக்கு நாகரிகம் கற்பித்தனர் என்றால் அவிழ்த்துப் போட்டுக் கொண்டு, தம் மயிரைத் தாமே பிடுங்கிக்கொண்டு திரிந்த அம்மணர்களாகிய திகம்பரர்கள் தமிழர்களுக்கு நாகரிகம் கற்பித்தனர் என்ற பனியாக்களின் கூற்றே இதுவன்றி வேறென்ன? ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் ஒன்றில் இத்தகைய கூட்டம் ஒன்று வந்ததாகவும் பெரியார் திராவிடர் கழகத்தினர் அவர்களைச் சுற்றித் துணியைப் பிடித்து நடத்திச் சென்று தமிழக எல்லைக்கு வெளியே விட்டதாகவும் செய்தி வந்தது. இவர்களின் இந்தச் செயலை சமயப் பொறையை மீறிய செயல் என்று சுந்தர ராமசாமியின் மகன் கண்ணன் காலச்சுவட்டில் கண்டித்தார். இந்த வகையில் குணாவும் காலச்சுவடு கண்ணனும் கருத்தொன்றி நிற்கின்றனர்.

            இவ்வாறு உண்மைகளுக்குப் புறம்பாகவும் பொருத்தமற்றவையுமாகத் தமிழர்களின் நாகரிக மூலங்களை இழித்துரைத்தும் கொச்சைப்படுத்தியும் கூறும் அளவுக்குத் தமிழகத்தின் மீதும் தமிழ் நாகரிகத்தின் மீதும் தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் “ஆய்வறிஞர்” குணாவிடமிருந்து வெளிப்படும் காழ்ப்புணர்ச்சிக்கு என்ன காரணமோ என்று நமக்கு மலைப்பாக இருக்கிறது.

            ஆக, பனியாக்களின் சமயமாகிய, ஆசீவகத்தை உட்செரித்த, அம்மண சமயத்தார் தமிழர்களின் மூலக்குடிகள். எனவே இந்திய பனியாக்களும் தமிழகத்தின் மூலக்குடிகள். இவர்களையும்                துடியன், பாணன், கடம்பன், பறையன் என்ற பிரிவினரையும் தவிர்த்த அனைவரும் வந்தேறிகள்.

            இது போன்ற ஓர் ஆய்வு முடிவை பக்கத்துக்கு சராசரி மேற்கோள்களுடன் 479 பக்கம் கொண்ட நூலின் மூலம் குணா நிறைவேற்றிவிட்டதாக பலரும் அடித்துச் சொல்கிறார்கள். இதில் எமக்கு உடன்பாடு இல்லை. இது குறித்து விரிவான ஒரு மறுப்பு எழுதத் திட்டமுள்ளது.

            குணா அவர்களது படைப்புகளை 1970களின் இறுதியில் படித்து அவர் மீது நான் பெருமதிப்பு கொண்டிருந்தேன். 1981 என்று நினைவு, வெங்காளூரில் அவரும் தோழர்களும், எசு.என்.நாகராசன், கோவை ஞானி ஆகியோரின் வழிகாட்டலில் நடத்திய தேனீக்கள் பட்டறை நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்தேன். தமிழை வெறுக்காத ஒரு மார்க்சியர் அவர் என்ற முடிவுக்கு வந்தேன். மார்க்சிய வரலாற்றுப் பருப்பொருளியக் கண்ணோட்டத்தில் தமிழர்களின் பண்பாட்டின் திரிவாக்கத்தை வரைய முற்பட்டு நான் எழுதியிருந்த பஃறுளி முதல் வையை வரை என்ற நூலின் கையெழுத்துப் படியை அவருக்கு விடுத்தேன். அதனைப் படித்த உடனே அவர் அச்சாக்கத்துக்கு ஏற்பாடு செய்தார். பின்னர் 1982 தொடக்கத்தில் ஈழ மக்களுக்காக பெரியார் திடலில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழக ஆய்வரணைச் சேர்ந்த திரு. பொன்.பரமேசுவரன் அச்சாக்கப் பொறுப்பை ஏற்ற திரு. அரணமுறுவலிடம் அச்சுச் செலவுக்கான ஒரு காசோலையைக் கொடுத்ததைக் கண்டேன். பின்னர் திரு. அரணமுறுவலைச் சந்தித்தபோது, தமிழ்த் தேசியம் பற்றிய அணுகல் குறித்து அவருக்கும் எனக்கும் நிகழ்ந்த சொல்லாடலின் போது குணாவுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருவது தெரியுமா என்று அவர் கேட்டார். அடுத்த முறை குணாவை வெங்காளூரில் சந்தித்த போது அரணமுறுவல் இப்படிச் சொல்கிறாரே என்று கேட்டேன். அதனால் என்ன? என்பது அவரது மறுமொழி. (இதுபற்றி தமிழ்த் தேசியம் கட்டுரையில் நான் எழுதியிருந்ததை என் வலைப் பக்கத்தில் படித்துவிட்டு என்னைத் தொலைபேசியில் கடிந்து கொண்டார். 16 ஆயிரம் உரூபாக்கள் தன் அலுவலகத்திலிருந்து கடன்பட்டு அந்நூலை அச்சிட்டதாக அவர் கூறினார். ஆனால் அந்தக் காலகட்டத்தில் நேரே கேட்கும் போது இதைக் கூறவில்லையே என்று எழுத்து மூலம் தெரிவித்தேன்).

            பின்னர் 1982 குமரி மாவட்டக் கலவரம் பற்றி நான் எழுதிய கட்டுரையை அவருக்கு விடுத்த போது அவர் அதைப் பற்றிய எந்தக் கருத்தையும் வெளிவிடவில்லை. அடுத்து அவர் எழுதிய ஒரு குறுநூலில் மதமாற்றங்கள் புரட்சிகரமானவை என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார். நானோ ஒடுக்கப்பட்ட மக்களிடையில் பொருளியல் வலிமை பெருகிய காலகட்டங்களில் அவர்களிடையில் தோன்றிய தலைவர்களையும் மேற்குடியினரையும் அயல் மதங்கள் உள்செரித்து எளியவர்களைத் தலைமையில்லாமல் செய்து ஒடுக்கப்பட்ட மக்களின் வலிமையால் தங்களை வளர்த்து தமிழக அரசியலைக் கைப்பற்றியுள்ளன என்று கூறினேன். அன்றிலிருந்து குணா என்னுடன் தொடர்பை நிறுத்திக் கொண்டார். இருந்தாலும் நான் என் கட்டுரைகளின் படியை அவருக்குத் தவறாமல் விடுத்துவந்தேன். அந்நிலையில்தான் திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலை எனக்கு விடுத்தார். தமிழ்த் தேசியம் கட்டுரையில் நான் பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி ஆகியோர் பற்றிக் கூறியிருந்த கருத்துகளை அதில் அவர் மேற்கொண்டிருந்தார். என் கருத்தை வலியுறுத்துவதற்காக அல்ல, அவர் கூறியிருப்பதை விடக் கடுமையான குற்றச்சாட்டுகளை இன்னொருவர் கூறியிருப்பதைக் காட்டி தன்னைக் காத்துக் கொளுவதற்காகத்தான் என்பது என் கருத்து.

            திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலில் என்னை மேற்கொண்டதால் எந்தப் பயனும் அவருக்கு ஏற்படவில்லை. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த செயலலிதாவிடம் நெருக்கமாக இருந்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு திரு.கி.வீரமணியின் நெருக்குதலால், கர்நாடக அரசு குணாவைச் சிறையில் அடைத்தது. அச் சிறை இருப்பின் போதுதான் அவர் வள்ளுவத்தின் வீழ்ச்சியை வடித்தார். இவ்வளவு விரிவான மேற்கோள்களுடன் ஒரு நூலை எழுதுவதற்கு வேண்டிய வசதிகளைக் கர்நாடக அரசு குணாவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்ததன் மறையம் என்ன? அதில் அம்மணச் சமயத்தால் உட்செரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆசீவகம் உண்மையான தமிழர்களால் உருவாக்கப்பட்டது என்று  ஏன் வலிந்து நிறுவ குணா முயல்கிறார் என்ற கேள்விகள் எழுகின்றன.

            குணா ஒரு கட்டத்திலிருந்தே விடுதலை இறையியல் இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தார். இந்த இயக்கம் ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய நாடுகளிடம் அடிமைப்பட்டிருந்த நாடுகளில் கிறித்துவ சமயத்தின், குறிப்பாக பழஞ்சுவைக் கிறித்துவத்தின் மூலம் கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக அணி திரட்டுவதாக அமெரிக்க ஒற்று நிறுவனமான நடுவண் உளவு முகவாண்மை(ந.உ.மு.) மூலம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் கடற்கரையில் வாழும் மீனவர்களிடையில் மத குருக்கள் மூலம் இது பரப்பப்பட்டது. தொடக்கத்தில் அது பாட்டாளியக் கோட்பாட்டைப் பரப்பியது. 1982இல் குமரி மாவட்டத்தில் நிகழ்ந்த கலவரத்தில் இவ் வியக்கத்தைச் சார்ந்த மதகுருக்களுக்கு முகாமையான பங்கு உண்டு.

            ஆப்பிரிக்கக் கண்டத்தில் குக்குல வளர்ச்சி மட்டத்திலிருந்த மக்களிடையில் குக்குலப் பகைமையை வளர்த்து அங்கு இன்று இன அழிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதில் இவ் வியக்கத்துக்கு முழுப்பங்கு உண்டு.

            அதையேதான் குணாவை முன் நிறுத்தி தமிழகத்தில் செய்கிறது அந்த இயக்கம். இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன் குணா நாகர்கோயிலுக்கு இருமுறை வந்திருந்தார். அவரை நான் சந்தித்தேன். முதல் முறை குமரிமுனை அருகிலுள்ள வட்டக் கோட்டை, தாழக்குடியிலுள்ள ஒளவையாரம்மன் கோயில் முதலியவற்றுக்கு அவருடன் சென்றிருந்தேன்.

இரண்டாம் முறை இங்கு ஒரு கலந்துரைக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் விடை கூறும் போதே அவருடன் இருந்த மைப்பா(மைக்கேல் பாண்டியன்) எனப்படும் பழஞ்சவைக் கிறித்துவ சாமியார் குறுக்கிட்டு அவரைத் திருத்திக் கொண்டிருந்தார். இவர்தான் நம் வேர்கள் மாதிகையின் ஆசிரியர். அதாவது குணாவின் பேச்சு கூட வெளிப்படையாகத் திருத்தப்படுகிறது. அப்படியானால் அவரது எழுத்து? இம் முறை அவரைச் சந்திக்க அம்பாசமுத்திரத்திலிருந்து மறவர் சாதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி விரிவுரையாளர் வந்திருந்தார். இங்கிருந்து சென்ற குணாவைக் கொண்டு மதுரையிலும் ஒரு கலந்துரையாடல் நடந்தது. அங்கு ம-ர் சேதுராமன் போன்ற ஒடுக்கும் சாதித் தலைவர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர்.

            குணாவுக்கோ அவரைக் காட்சிப்படுத்தும் கிறித்துவத் தலைமைகளுக்கோ, அவர் பரப்பலைத் தாங்கிப் பிடிக்கும் குழுவினருக்கோ அவர்கள் கூறிக் கொள்வதைப் போல் தமிழகத்தில் வாழும் பிறமொழியாளர்களின் மேலாளுமையை ஒழிக்கவோ குறைந்தது அதனைக் கட்டுப்படுத்தவோ எண்ணம் கிடையாது. அப்படி இருந்தால் அவர்களது அணுகல் அப் பிறமொழியாளருக்கு எதிராக தமிழ் பேசும் மக்களை அணிதிரட்டுவதாக இருந்திருக்கும். ஆனால் அவர்கள் அந்தத் திசையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மக்களின் வலிமையைக் காலங்காலமாக அழித்து வருவதென்று அனைவருக்கும் தெரிந்த சாதிப் பகைமைகளை, சாதி வேறுபாடுகளைக் கைவிட்டு அணிதிரளுமாறு குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இது போன்ற  சிந்தனையைக் கூட  இவர்கள் சிறிதும் வெளிப்படுத்தவில்லை. தமிழ் பேசும் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மீது அதே தமிழ் பேசும் ஒடுக்கும் பிற்படுத்தப்பட்ட, குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் அடிக்கடி நிகழ்த்திவரும் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கவோ கூட இந்த தூய தமிழ்க் கூட்டம் முன்வந்ததில்லை. அப்புறம் எங்கே இக் கொடுமைகளுக்கு எதிராக அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் அவ் வப்போது நடத்தும் போராட்டங்களில் கலந்துகொள்ளப் போகிறார்கள்? உண்மையில் குணாவை வழி நடத்தும் விடுதலை இறையியலின் குறிக்கோளான, ஒடுக்கப்படும் தேசியங்களின் மக்களிடையில் உட்பகையை மூட்டி அவர்கள் ஒருவரையொருவர் அழித்துக்கொண்டே ஒடுக்கும் தேசியங்களின் முன்பும் வல்லரசியத்தின் முன்பும் நயன்மை கேட்டு மண்டியிட வைப்பதுதான். குலோத்துங்கன் தொடங்கி வைத்து தமிழகத்தையும் அதன் பெரும்பான்மை மக்களையும் அயலார் முன்பும் ஒடுக்கும் அரசு, பார்ப்பனர் ஆகியோர் முன்பும் அடிபணிய வைத்த வலங்கை -  இடங்கைப் பூசல் போன்ற ஒன்றை உருவாக்குவதுதான்.

            தமிழகத் தேசியச் சிந்தனையாளராகக் தோற்றமெடுத்த குணா, திடீரென்று வள்ளுவத்தின் வீழ்ச்சி என்ற நூலின் மூலம் ஒரு சாதி வெறி வரலாற்றாசிரியாக வீழ்ச்சியடைந்தது ஒரு வரலாற்று  அவலம் என்றால் அவரது சாதிப் பற்றின் மறு பக்கமாக வெளிப்படும் தேசிய இரண்டகம் அதைவிடப் பெரிய அவலம். நானறிந்தவரை குணாவிடம் தமிழ்த் தேசியப் பற்றோ, சாதிப்பற்றோ இல்லை. 1980களின் தொடக்கத்தில் ஒரு முறை அவரது அழைப்பின் பேரில் வெங்காளூர் சென்றிருந்த போது அவரது உள்ளூர் நண்பர்கள் சிலருடன் அவரும் நானும் உரையாடினோம், வெங்காளூர் தமிழர்கள் கன்னடர்களின் கொடுமைகளுக்கு ஆளாவதைத் தவிர்ப்பது பற்றிய பேச்சின் போது கன்னட மாநிலத்தில் வெங்காளூரைத் தவிர்த்து வேறு எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றனர் என்று நான் கேட்டேன். கன்னட மாநிலம் முழுவதும் உழுகுடிகளாகத் திகிழர்கள் எனப்படும் தமிழ் மக்களே வாழ்கின்றனர் என்று விடை வந்தது. அப்படியானால் அவர்களைத் திரட்டிக் கன்னட மாநிலத் தமிழ் மக்களுக்குச் சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளுக்காகப் போராடலாமே என்று நான் கேட்டேன். அதற்கு ஆய்வறிஞர் குணாவின் மறுமொழி, அது எங்கள் வேலையல்ல என்பதாகும்.

            ஆக, குணா  தமிழர்கள் என்ற நிலையிலிருந்தோ ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற நிலையிலிருந்தோ செயற்படவில்லை என்பது தெளிவு.

            நாகர்கோயில் வந்திருந்த போது அவரது பொருளியல் நிலைமை பற்றிக் கேட்டேன். வெளிநாட்டில் பணியாற்றித் திரும்பிய அவரது தங்கை நடத்தும் சிறு அளவிலான கடையை வைத்துத்தான் பிழைப்பு நடப்பதாகக் கூறினார். ஆனால் நாகர்கோயிலுக்கு வந்த முதல் முறை அவர் மகிழுந்தில் வந்து திரும்பினார். இரண்டாம் முறை திருவனந்தபுரத்துக்கு வானூர்தியில் வந்து மகிழுந்தில் நாகர்கோயிலுக்கு வந்து அதிலேயே நெல்லை சென்றார். தரையில் கால்படாமல் அவரை அழைத்துச் சென்றனர். அந்த அளவுக்குப் போற்றிப் புரக்கின்றனர் விடுதலை இறையியல்  அமைப்பினர்.

            குணாவின் ஆய்வு நூல்களை வெளியிடும் வேர்கள் பதிப்பகத்தின் பெயரில் வெளிவரும் நம் வேர்கள் என்ற மாதிகையின் சிறப்பு ஆசிரியர் அரிமாவளவன்(திரு ரெசினால்டு என்று இருந்த அவரது பெயரைத் தமிழ்ப் படுத்தி இப் புதிய பெயரை அவருக்கு வைத்ததாகத் தமிழியப் பெரியார் ஒருவர் உரிமை கொண்டாடுவார்) ஒரு பழஞ்சபைக் கிறித்துவ மதகுரு. அவர் அண்மையில் முன்வைத்துள்ள  முழக்கம் தமிழர்கள் தங்கள் பெயரில் சாதிப் பட்டத்தைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்பது. சாதிப் பட்டமில்லாத பெயரை வைத்து ஒருவர் பிறமொழியாளரா என்பதைக் இனம்காண முடியவில்லையாம். தமிழர்களின் சாதிப் பட்டங்களை பிறமொழியாளர்கள் தங்களுக்குச் சூட்டுவதில்லையாம்.

            ஆனால் இவர் கூற்று முற்றிலும் தவறு. தமிழகத்திலுள்ள ஆயர்குல மக்களிடையில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டோர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால் இன்று அவர்கள்  அனைவரும் யாதவர் என்ற சாதிப்பட்டத்தினையே சூட்டிக் கொள்கின்றனர். செட்டி(யார்) என்ற பட்டத்துடன் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் உள்ளனர். துளுவ வேளாளர் சாதிப் பட்டமாகப் பிள்ளை என்றுதானே போட்டுக்கொள்வர்! ஐயங்காரு → ஐயங்கார் என்பது தமிழ், தெலுங்கு, கன்னடம் பேசும் அனைத்து மாலியப் பார்ப்பார்களுக்கும் பொதுவான சாதிப் பட்டம் அல்லவா? தெற்கேயுள்ள தெலுங்கு பேசும் நாயக்கர்களிடமிருந்து வடக்கிலிருக்கும் தமிழ் பேசும் வன்னியர்களின் நாயக்கர் பட்டத்தை எப்படிப் பிரித்துக் காண்பது? (முன்பு இவர்கள் நாயகர் என்று இந்தப் பட்டத்தைக் குறிப்பிட்டனர்).

            திரு. அரிமாவளவன் இந்த முழக்கத்தை முன்வைப்பது உண்மையில் பிறமொழியாளர்களை இனம் காண்பதற்கு அல்ல. ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்டோரும் அவர்களை ஒடுக்கும் சாதியினரும் குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்றும் சீர் மரபினர் என்றும் அறியப்படும் சாதியினரும் பெரும்பாலும் ஊர்ப்புறங்களில் ஒருவருக்கொருவர் அடையாளம் காணத்தக்க தனித்தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்துவந்தனர். வெளியூர்களில் தனியாளாகச் சென்று வாழ்வது அரிது. எனவே ஒருவர் சாதி பற்றி மற்றவர் அறிவதில் எந்தச் சிக்கலுமில்லை. உடலமைப்பும் ஓரளவு சாதியைப் புரிய வைத்துவிடும். இன்று பலர் கல்வி கற்று கணிசமான வருவாய் தரும் பணிகளில் வெளியூர்களில்  பிறருடன் கலந்து வாழ்கின்றனர். உடல் நிறமும் முகத்தோற்றமும் கூட வாழ்நிலைக்கு ஏற்றவாறு மென்மையும் மேன்மையும் அடைந்துள்ளன. எனவே ஆளைப் பற்றிய செய்தியோ உடலமைப்பு முதலியவற்றை வைத்தோ இந்த உயர்நிலையினர் சாதியை அவர் பொருளியல், பதவியியல் மட்டத்திலிருக்கும் ஒடுக்கும் சாதியினரால் இனம்காண முடிவதில்லை. எனவேதான் அரிமாவளவன் ஒடுக்கும் சாதியினர் நலனுக்காக இந்த முன்னீட்டை வைக்கிறார். எந்த ஒரு பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபு உறுப்பினரும் சாதிப் பட்டத்தின் மூலம் ஒரு நாயக்கர், ரெட்டி, நாயுடு, ராவ் போன்றவரை அறிந்தால் உடனே மாமா, மாமு, அல்லது வேறெதாவது உறவுமுறை கூறும் தமது வழக்கத்தை மாற்றப்போவதில்லை. அவர்களது உண்மையான சிக்கல் ஒடுக்கப்பட்ட சாதியார் குறித்ததுதான்.

            சாதிப் பட்டத்தைக் கட்டாயம் பெயருடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற முழக்கத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பே தூத்துக்குடியைச் சார்ந்த தமிழார் என்ற சுரேசுக் குமார் குழுவினர் முன்வைத்துவிட்டனர். அவர்களிடையில் ஒரு நாடாரும் அடையாளம் காணப்பட்டார். அந்த வட்டாரத்தில் நாடார்களுக்கு தாழ்த்தப்பட்டோர் மீது காழ்ப்புக்கு காரணம் உண்டு. தூத்துக்குடி மாவட்டத்து நாடார்கள் பனையேறுவர். ஆனால் மண்வெட்டி பிடிக்கமாட்டார். அதனை அங்கு செறிந்து வாழும் பறையர்கள்தான் செய்ய வேண்டும். பனைகளும் உடை மரங்களும் செறிந்து வளர்ந்த உடன்குடி, சாத்தான்குளம் வட்டாரத்தில் அண்மை ஆண்டுகளில் தென்னந் தோப்புகள் உருவாயின. அவற்றை உருவாக்குவதிலும் பராமரிப்பதிலும் உழைத்து வரும் பறையர்கள், அந்நிலங்கள் விற்பனைக்கு வரும் போது வயல் குத்தகை உழவர்கள் போன்று நிலத்தில் அல்லது விலையில் பங்கு கேட்கின்றனர். இதனால் ஏற்பட்ட மோதலில் உருவானவர்தான் சாத்தை பாக்கியராசு என்ற பறையர் தலைவர். இதனால் அந்த வட்டாரத்தில் நாடார்களும் இந்த சாதிப் பெயர் மீட்பில் ஆர்வம் கொண்டுள்ளனர் போலும்.

            திராவிட இயக்கத்தின் மூலவர்கள் தமிழகத்து மேற்குடியினரின் பொருளியல், அரசியல் நலன்களுக்காகத் தங்கள் சாதி மேலாளுமையை விட்டுக்கொடுத்ததால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி - வேலை வாய்ப்புகளைப் பெற்று அவர்களில் சிலர் மேனிலை அடைந்தனர், பலர் சிறிது வெளிச்சம் கண்டனர். அந்த இயக்கம் பெரியார் கைக்கு வந்ததும் அதனை  ஒட்டுமொத்த குமுக ஓட்டத்திலிருந்து பிரித்து சாதி அடிப்படையிலான ஒதுக்கீடு என்ற குட்டைக்குள் அடைத்தார். அதில்  இந்த ஒதுக்கீட்டுப் பயன்களை நுகர்ந்தோர் உருவாக்கிய அழுக்கு நுரைகளாகிய ஒட்டுண்ணி வகுப்பினரின் ஒரு சிறு பகுதியினரை நோக்கியதுதான் இன்று குணாவின் பெயரில் அயல்நாட்டுப் பணத்தில் செயற்படும் விடுதலை இறையியல் பணியாளர்கள் பரப்பி வரும் சாதி மீட்புக் கருத்துகள். பெரியார் தன் பண நலன்களைக் கருத்தில் கொண்டு செயற்பட்டாலும், தலைவர்களின் போலிமைகளையும் மீறி குமுகத்திலுள்ள முற்போக்கினர் புரட்சிகர மாற்றங்களை நிகழ்த்துவது போல் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் செயற்பட்ட தன்னலமற்ற பல பெருமக்களின் நேர்மையான செயற்பாடுகளால் சாதி மறுப்பு உணர்வு துளிர்த்து அதன் ஒரு எச்சமாக நிற்பது சாதி பட்டங்கள் இல்லா தமிழக மக்களின் பெயர்கள்தாம். அதையும் கருவறுக்கக் கிளம்பிவிட்டது நம் வேர்கள்.

            உண்மையில் மேலே நாம் குறிப்பிட்ட இந்த அழுக்கு நுரைகளின் உண்மையான போட்டியாளர்கள் நடுவரசு ஒதுக்கீட்டிலும் தமிழக ஒதுக்கீட்டிலும் தாழ்த்தப்பட்ட மக்களே.  அதனால்தான் அவர்கள் கூறும் வந்தேறிகளை எதிர்ப்பதில் தமிழ் பேசும் மக்கள் தம் சாதி வேறுபாடுகளைக் கைவிட்டு இணைந்து போராட வேண்டும் என்ற கருத்தை மறந்தும் முன்வைக்காமல் உள்ளனர்.

            சாதி மேலாளுமை என்ற இறுமாப்பில் கல்வியைப் புறக்கணித்த இந்த இன்றைய மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்களின் கண்களை உறுத்துவது, கிடைத்த கல்வி வாய்ப்பை முடிந்த வரையில் பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கைத் தரத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினர் பலர் மேம்பட்டுத் தங்களுக்கு இணையாக மட்டுமல்ல, மேலாகவும் நிற்பதுதான். ஒடுக்கீடு எனும் இந்த நல்வாய்ப்பைப் பெற்றுத் தந்த திராவிட இயக்கத்தின் மீது உருவாகி நிற்கும் இந்தக் காழ்ப்புணர்சிக்கு அதுதான் காரணம். ஆனால் இந்த உண்மைகளெல்லாம் புரியாமல் தங்கள் சாதிப்பெருமையைப் உயர்த்தும் ஆய்வாளர் என்ற தவறான கணிப்பில் குணாவின் சாதியைச் சார்ந்த சிலர் நிற்கின்றனர்.

            குணாவைப் பொறுத்தவரை அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாடு பற்றி என்றும் கவலை கொண்டதில்லை. தான் சார்ந்த சாதிப் பிரிவில் ஒரு பிரிவாகிய வள்ளுவர்கள்தாம் தமிழகப் பண்பாட்டின் வழிகாட்டிகள் என்ற தவறான ஒரு கருத்தைப் பற்றிக் கொண்டு தனக்குத் தானே இறுமாந்து நிற்கும் ஒரு மனநிலையை அவர் கொண்டுள்ளனர்.

            வெங்காளூரில் தம் மீது கன்னடர்கள் திரும்பத் திரும்ப  நிகழ்த்தி வரும் வெறியாட்டங்களுக்கு எதிராக, அம்மண்ணின் மூலக்குடிகள் என்று உரிமைகொண்டாடும் தமிழ் மக்கள் ஒரேயொரு எதிர்ப்புப் போராட்டம் கூட மேற்கொள்ளாமலிருப்பதற்கு குணா போன்றோரும் அவரைச் சார்ந்தோரும் தமிழ் மக்களுக்கிடையில் உருவாக்கிவரும் பகைமையே என்பது அவருடன் மேற்கொண்ட  உரையாடல்களிலிருந்து தெரிந்தது.

            குணா தமிழகத்தையோ தமிழக மக்களையோ அவர்களின் மரபுகளையோ அறியமாட்டார். தமிழக மக்களின் மெலிவுக்குக் காரணம் சாதி சார்ந்த ஒதுக்கீட்டை முற்றும் முழுமையுமான தீர்வாக வைத்ததே என்பதை இங்கு மீண்டும் வலியுறுத்த வேண்டும். அவர் அறிந்த தமிழகமும் தமிழக மக்களும் அயல்நாட்டினரும் வடநாட்டினரும் எழுதிய நூல்களின் மூலமும் தமிழ்  இலக்கியங்களும் அவை பற்றிய எழுத்தாக்கங்களின் மூலமுமே.

            குணா சிந்தனை நிலையில் கிழாரிய மனப்பான்மை கொண்டவர் என்பது என் கணிப்பு. தமிழ் மக்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இடையில் மணவிலக்கு - மறுமணம், கைம்பெண் திருமணம்  போன்ற உரிமைகள் பெண்களுக்கு உண்டு. பொருளியல் நிலை உயருந்தோறும் இந்த இரு உரிமைகளும் கைவிடப்படுகின்றன, இது தடுக்கப்பட வேண்டும் என்று நான் ஒருமுறை அவரிடம் கூறினேன். பணக்கார நாடுகளில் மனைவிகளை மாற்றிக் கொள்வதைப் போல் நாமும் செய்ய வேண்டும் என்றிகீர்களா என்று கடுப்புடன் என் மீது பாய்ந்தார் அவர். அது மட்டுமல்ல, தன் சாதி என்று அவர் உரிமை கொண்டாடும் பறையர்களுக்கு மறையர்கள் என்றும் பார்ப்பனர் என்றும் பெயர் சூட்டி மகிழ்வதன் மூலம் பார்ப்பனர் மிக உயர்ந்த சாதி என்ற கருத்தை அவர் உறுதிப்படுத்துகிறார். இவை  அனைத்தும் அவரது கிழாரியக் கண்ணோட்டத்தின் வெளிப்பாடு அன்றி வேறென்ன?

            குணா ஒரு முனைப்பான மாவோயியர், சீனத்துக்குச் சென்று வந்தவர் என்று கூறப்படுகிறது. மாவோவின் பெயரில் அமெரிக்க உளவு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தக் கோட்பாடு, அக முரண்பாடுதான் எப்போதும் முதன்மையானது என்று கூறி மார்க்சிய இயங்கலின் கழுத்தை நெரிப்பதாகும். எனவே இந்தக் கோட்பாட்டை நம்பும் குணாவும் தமிழக மக்களிடையில் பகைமையையும் மோதல்களையும் உருவாக்குவது மாவோயியக் கோட்பாட்டுக்கு ஏற்றதுதான் என்றும் செயற்படலாம். இந்த நிலைப்பாட்டே அமெரிக்க உளவு நிறுவனத்தின் படைப்பான விடுதலை இறையியல் கூட்டத்தினரின் அணுகலோடு அவரை ஒன்றவைத்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் புறமுரண்பாட்டின் இடைவினைப்பாடு இன்றி அகமுரண்பாடு என்றும் இயங்காது என்ற மார்க்சியத்தின் சரியான நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டு குணாவின் அணுகலைப் புறக்கணிப்பதே தமிழக நலன்களில் ஆர்வம் கொண்டோரின் கொள்கையாக இருக்க வேண்டும்.


[1] Lectures on the Science of Language, Vol.I, F.Max Muller, Longmans, Green, & Co. London, 1882, footnote,p.233
[2]    நூலாசிரியரின் பொங்கல் திருநாளும் தமிழர்களின் வடக்கு நோக்கிய நகர்வும் கட்டுரை பார்க்க.
[3]    எண்ணெய்யில் மிதக்கும் ஆமை வடிவிலான திசைகாட்டியைச் சீனர்கள் தம் கப்பல்களில் பயன்படுத்தினர் என்ற செய்தியும் இதை உறுதிப்படுத்தும்.
[4] இநதோனேசியத் தீவுகளில் ஒன்றான பாலித்தீவில் 221 நாட்கள் சுழற்சியைக் கொண்ட ஒரு ஆண்டுமுறை இருக்கிறது. கதிர் நிலவாண்டு முறை ஒன்று இருந்தாலும் பருவ காலங்களை அறிந்து வேளாண்மை செய்வதற்கு அவர்கள் இந்த ஆண்டைத்தான் பயன்படுத்துகிறார்கள். வெள்ளிக் கோள் கதிரவனைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் 225 நாட்கள் என்ற வானியல் செய்தியுடன் ஒப்பிட்டால் இதுதான் ‘அசுரர்கள்’ கடைப்பிடித்த ஆண்டுமுறை எனத்தெரிகிறது. முக்கழகங்கள் பற்றிய விளக்கங்களில் வரும் தென்பாலி முகத்திலிருந்து குடியேறிய மக்களால் இவ்வாண்டுமுறை இங்கு கடைப்பிடிக்கப்படுகிறது எனலாம். 

0 மறுமொழிகள்: