22.7.09

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு - சில கேள்விகள்

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க இந்திய அரசு முனைந்து நிற்கிறது. அதற்குத் துணைபுரியப் பல்வேறு "தன்னார்வ"த் "தொண்டு" நிறுவனங்கள் களத்தில் துடிப்புடன் செயற்பட்டு வருகின்றன. அத்துடன் அண்மையில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பொன்று குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளியர் அத்தொழிலாளர் கல்வி அறிவு பெறுவதற்காகவும் மறுவாழ்வுக்காகவும் ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளருக்கும் 20000 ⁄-ரூபாய்கள் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. எல்லாம் சேர்ந்து விரைவில் குழந்தைத் தொழிலாளர்களை "ஒழித்து" விடுவார்கள் போல் தோன்றுகிறது. இந்நேரத்தில் நமக்கு எழும் சில அடிப்படைக் கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.

1. குழந்தைகள் ஏன் உடலுழைப்புக்கு அனுப்பப்படுகிறார்கள்?

இன்றைய நிலையில் பல்வேறு காரணங்களால் நம் வேளாண்மை வீழ்ந்துவிட்டது. நிலம் தரிசாகப் போடப்பட்டுப் பாலைவனமாக மாறி வருகிறது. அதன் விளைவுதான் நீண்ட வறட்சியும் திடீர் வெள்ளங்களும். அதனால் பெரியவர்களின் வேலைவாய்ப்புகள் அருகிவிட்டன. இருப்பவை எல்லாம் குழந்தைகளைப் பயன்படுத்தும் வேலைவாய்ப்புகள் தாம். எனவே குடும்பத்தை நடத்தப் பெற்றோர்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்.

வேலையில்லா நிலையில் பெற்றோர்கள், குறிப்பாக ஆடவர்கள் குடிப்பதற்கும் பரிசுச் சீட்டு வாங்குவதற்கும் கூட இக்குழந்தைகளின் உழைப்பையே சுரண்டுகின்றனர். பெரியவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் நிலையிலும் கூட சாராயம், பரிசீச் சீட்டு போன்றவற்றில் அவ்வருமானம் கரைந்து போனதால் ஏற்படும் வறுமையும் குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுவதற்கான ஒரு முகாமையான காரணம்.

2. குழந்தை உழைப்பைத் தடை செய்துள்ள அரசு அதன் விளைவாகிய குடும்ப வருமான இழப்பை ஈடு செய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?

ஒன்றுமே இல்லை. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான சட்டத்தை இயற்றியதுடன் அதற்குச் தோதான ஒரு மனநிலையைப் பொதுமக்களிடையில் ஏற்படுத்துவதற்காக அரசே நேரடியாகவும் தன் ஆளுகையின் கீழிருக்கிற மற்றும் மக்களுக்கு(தனியாருக்கு)ச் சொந்தமான பொதுத் தொடர்பு வகைதுறைகளின் மூலமாகவும் "தன்னார்வ"த் "தொண்டு" நிறுவனங்கள் மூலமாகவும் பலவகைகளிலும் கருத்துப் பரப்புவதற்குப் பல கோடி உரூபாய்களைச் செலவு செய்வதோடு சரி.

3. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பின் விளைவுகள் என்னவாக இருக்கும்?

முதலாவதாக, உழைப்பிலிருந்து விடுபட்ட குழந்தைகளும் அவர்களது உழைப்பை நம்பி வாழும் குடும்பமும் இப்போது கிடைக்கும் அரைவயிற்றுக் கஞ்சியிலிருந்தும் "விடுபடுவர்". அதன் தொடர்ச்சியாகப் பட்டினிச் சாவுகளும் தற்கொலைகளும் பெருகும். மக்களின் இடப்பெயர்ச்சி கூடும்.


மானத்தோடு உழைத்துப் பிழைத்து வந்த சிறுவர்கள் இனி நாய்களோடும் பன்றிகளோடும் போட்டியிட்டு எச்சில் இலைகளுக்காகச் சண்டை போடுவர். குப்பைகளில் காகிதம் பொறுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை பெருகும்.

சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவர். குமுகப் பகைக் கும்பல்களுக்கு ஆள் வலிமை சேரும். விலைமகளிராக மாறும் சிறுமிகளின் எண்ணிக்கை பெருகும். இத்துறைத் தரகர்களுக்கு நல்ல வேட்டையாகும்.

இரண்டாவதாகக் குழந்தைத் தொழிலாளர்களை வைத்து மலிவாகப் பண்டங்கள் செய்த நிறுவனங்கள் வெளிப்போட்டியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்படும். தொழில் குறிப்பிட்ட பகுதிகளில் அழித்து போகும். எனவே அங்குள்ள பெரியவர்களுக்கிருக்கும் வேலைவாய்ப்புகளும் அழிந்து போகும். அப்பகுதிகள் ஆளற்ற பாலைவனங்களாகும். இப்போது பெருகி வரும் வழிப்பறிகளும் கொள்ளைகளும் இனிமேல் விரைந்து பெருகும்.

மூன்றாவதாக இத்தொழில்களின் மூலம் செய்யப்பட்ட பொருட்களைச் செய்ய இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் நிறுவப்படும். அவற்றை இறக்குமதி செய்வதற்காக வெளிச்செலாவணித் தேவை கூடும்.

நான்காவதாகச் சட்டத்துக்குப் புறம்பாகக் குழந்தைத் தொழிலாளர் முறை தொடரும். இதனால் குழந்தைகளுக்கு இப்போது வழங்கப்படும் கூலியும் குறையும். இவ்வாறு குறைவதால் மிச்சப்படும் தொகை இச்சட்ட மீறலை மறைப்பதற்கான கையூட்டாக ஆட்சியாளரைச் சென்றடையும்:

4. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் இவ்வளவு முனைப்புக் காட்டும் ஆட்சியாளரின் உள்நோக்கம் என்ன?

முன்பு "நெருக்கடி நிலை"யின் போது மக்களிடையில் "பணப் புழக்கத்தைக் குறைப்பதற்காக" ஊதிய முடக்கம், பஞ்சப்படி முடக்கம் எல்லாம் செய்தார்களல்லவா அதே நோக்கம் தான். அதாவது மக்களின வாங்கும் ஆற்றலைக் குறைப்பது தான். அதாவது தங்கள் தேவைகளை வாங்க இயலாத வறியவர்களாக்குவது தான். இதன் மூலம் மிஞ்சும் பண்டங்களை ஏற்றுமதி செய்யலாம். இப்போது ஏற்றுமதி செய்யப்படும் 30 லட்சம் டன் உணவுத் தவசங்களை(தானியங்களை) இன்னும் கூட்டலாம்.

குழந்தைத் தொழிலாளர்களின் இடத்தை நிரப்ப இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கு வழக்கமான தரகு கிடைக்கும். இறக்குமதியால் ஏற்படும் வெளிச் செலாவணிக்காக புதிதாக ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கும் தரகு கிடைக்கும்.

5. "தொண்டு" நிறுவனங்களின் உள்நோக்கம் என்ன?

இத்"தொண்டு" நிறுவனங்கள் இந்திய அரசிடமிருந்தும் உலகின் பெரும் தொழிற்பேரரசுகள் நடத்தும் அறக்கட்டளைகளிலிருந்தும் பணம் பெறுவதால் அப்பேரரசுகள் செய்யும் கருவிகளை இறக்குமதி செய்வதற்குத் தோதான சூழ்நிலையை உருவாக்கப் பாடுபடுகின்றன. குழந்தைகளுக்குக் குறைவான கூலி கொடுத்து ஏழை நாடுகள் மலிவாக பண்டங்களைப் படைத்துத் தங்களுடன் போட்டியிடுவதிலிருந்து அவற்றைத் தடுப்பது முகாமையான நோக்கம்.

6. குழந்தைத் தொழிலாளரை வேலைக்கு வைத்திருப்போர் தான் வேலைக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளருக்கும் 20,000⁄-உரூபாய்கள் மறுவாழ்வுக்காக வழங்க வேண்டுமென்ற நீதிமன்றத் தீர்ப்பின் விளைவு என்னவாக இருக்கும்?

குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகளுக்கு மறைமுகமாக விதிக்கப்படும் தண்டமாகும் இது. குழந்தைகள் வேலையிழக்கும் வேகத்தை இது கூட்டும். குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்போர் தங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச இரக்கம், மாந்தநேய உணர்வுகளைத் துடைத்தெறிந்துவிட்டு அவர்களைத் தெருவில் இறக்கிவிடத் தூண்டும்.

7. குழந்தைத் தொழிலாளர் பற்றிய இந்த நிலைப்பாடு சரிதானா?

பதின்மூன்று அகவைக்குட்பட்ட குழந்தைகள் உழைத்துப் பிழைக்க வேண்டிய சூழ்நிலை வருந்தத்தக்கது தான். ஆனால் குழந்தைகளின் உழைப்பில் குடும்பம் வாழ வேண்டுமென்றிருக்கும் நிலையை மாற்றுவது பற்றிய சிந்தனையே இன்றி அத்திசையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குழந்தை உழைப்புக்கு எதிராக முனைப்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வது தவறு மட்டுமல்ல இரக்கமற்ற கொடுஞ் செயலுமாகும். அதே வேளையில் உடலுழைப்பு இழிவானது என்ற உணர்வு எழுத்துறிவுடன் கூடவே பள்ளிகளில் உருவாகி விடுகிறது. இது நெடுங்காலமாகப் பெருந்திரள் மக்களுக்கு எழுத்தறிவு மறுக்கப்பட்டதன் விளைவாகும். அத்துடன் உழைப்போருக்கு உரிய ஊதியமோ குமுக மதிப்போ இல்லை. அதனால் இன்று இருக்கும் எத்தனையோ வேலைவாய்ப்புகளைப் படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் வீண் பொழுது போக்குவதுடன் குமுகத்துக்குத் தொல்லை தருபவர்களாகவும் மாறிவிட்டிருக்கிறார்கள். எனவே இதில் ஒரு மாற்றத்தின் தேவையுள்ளது. குறைந்தது பத்து ஆண்டுகள் தொடர்ந்து உடலுழைப்பையே தவிர்த்து வருவதால் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களிடத்தில் உழைப்பை ஏற்றுக்கொள்ள ஓர் எதிர்ப்பு நிலை உருவாகி விடுகிறது. அதை மாற்ற எட்டாம் வகுப்பு முடிந்தவுடன் ஒரு மூன்றாண்டுக் காலம் உடலுழைப்பில் ஈடுபடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். எட்டாம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வி அனைவருக்கும் அளிக்க வேண்டும். மூன்றாண்டு உடலுழைப்பிற்குப் பின் மேற்படிப்புக்கு மாணவன் கட்டணம் செலுத்த வேண்டும். எட்டாம் வகுப்பு மட்டத்தில் மனமும் உடலும் முற்றிப் போகாவாகையால் உழைப்பு பற்றிய சிந்தனையிலும் உடல் வணக்கத்திலும் எதிர்ப்பு இருக்காது.

கட்டிடத் தொழிலிலாயினும் வேறு எந்தக் தொழிலிலாயினும் ஈடுபடுவோருக்கு அத்தொழில் குறித்த அடிப்படைத் தொழிற்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போது தொழில்களின் தரம் மேம்படுவதுடன் புதியன படைக்கும் ஆர்வமும் உண்டாகும்.


8. இது பற்றி மேலையாடுகளின நிலை என்ன?

மேலை நாடுகளில் பதினபருவம்(Tennage) எனப்படும் பதின்மூன்று அகவை எட்டிய இளைஞர்கள் குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்களாகக் கருதப்படுகின்றனர். அப்போதிலிருந்து பெற்றோரைச் சார்ந்திருப்பதிலிருந்து அவர்கள் அகலுகின்றனர். பகுதி நேர உழைப்பின் மூலம் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இது அவர்களின் முழு ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளும் பயிற்சியாகிறது. தன்னம்பிக்கை, குமுகத்துடன் நெருக்கமான உறவு, பொது அறிவு, குமுக உணர்வு ஆகியவற்றை வளர்க்கப் பெருந்துணை புரிகிறது. மாறாக நம் நாட்டு இளைஞர்கள் பெற்றோர் நிழலிலேயே நெடுங்காலம் ஒதுங்கி, ஒடுங்கி உடலியல், உளவியல் ஆற்றல்களை வளர்க்கும் பயிற்சியின்றி இருவகைகளிலும் மெலிந்து போகின்றனர்.

9. இது குறித்து நம் பண்டைமரபுகள் ஏதேனும் உண்டா?

உண்டு. சில சாதியினர் தங்கள் மகன்களைத தங்களையொத்த பிற தொழில் நிறுவனங்களில் கூலி வேலைக்குப் பயிற்சியாளர்களாய் அனுப்புவதுண்டு. மாதவி ஏழாண்டுப் பயிற்சிக்குப் பின் பன்னீரண்டாம் அகவையில் அரங்கேறியதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

மகாபாரதத்தில் நளாயினி கதையில் வரும் ஆணி மாண்டவியர் வரலாற்றில் ஒரு குறிப்பு உள்ளது. தவறுதலாகத் தான் கழுவேற்றப்பட்டதற்கு எமனிடம் விளக்கம் கேட்கிறார் ஆணி மாண்டவியர். அதற்கு, அவர் சிறுவனாயிருக்கும் போது ஒரு முனிவரிடம் தவறாக நடந்து கொண்டதன் விளைவே அது என்று கூறுகிறான் எமன். பதின்மூன்று அகவைக்குள் செய்த தவறுகளுக்குத் தண்டனை கிடையாதென்ற அறநூல் கூற்றைத் காட்டித் தவறிழைத்த எமனுக்குச் சாபமிடுகிறார் முனிவர். இதிலிருந்து பதின்மூன்று அகவையடைந்தவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படத் தக்கவர் என்ற கருத்து மிகப் பண்டை நாட்களிலேயே நம் குமுகத்தில் நிலவியது தெளிவாகிறது.

10. குழந்தைத் தொழிலாளர் குறித்த நம் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்?

முதலாவதாக, ஏழைச் சிறுவர்களின் வாழ்வின் அடிப்படையையே தகர்க்கும் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தின் செயற்பாட்டை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும்.

இரண்டாவதாக, குழந்தைத் தொழிலாளரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் முதலாளிகளும் அரசும் இணைந்து அவர்களுக்கு அடிப்படைக் கல்வி அளிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் அவர்களது வேலை நேரத்தை அமைத்துக் கொடுக்க அம்முதலாளிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இக்குழந்தைத் தொழிலாளர் கல்வி நிலையங்கள் அரசின் பொறுப்பிலிருக்க வேண்டும்.

மூன்றாவதாக, அழிந்து கொண்டிருக்கும் வேளாண்மையை மீட்டெடுக்க நிலவுச்சவரம்பு, வேளாண் விளைபொருள் ஆணையம், உணவுப் பொருள் நடமாட்டக் கட்டுப்பாடுகள், உணவுப் பொருளின் வாணிகத்தில் உரிம முறை, வருமான வரி போன்ற தடைக்கற்களை உடனடியாக அகற்றி வேளாண்மைக்கு மறு உயிர் கொடுத்து பெரியவர்களின் வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும்.

வருமானவரியை முற்றாக ஒழித்து உரிமம், இசைவாணை, மூலப்பொருள் ஒதுக்கீடு போன்ற தடைக் கற்களை அகற்றி உள்ளூர் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமூட்டியும் உள்ளூர் தொழில்நுட்பக் கண்டு பிடிப்புகளை ஊக்குவித்தும் தொழில் வளர்ச்சியை பாய்ச்சல் நிலைக்குக் கொண்டு வந்து அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் பெருக்க வேண்டும்.

சாராயத்தையும் பரிசுச் சீட்டையும் முற்றாக ஒழிக்க வேண்டும்.

மூன்றாவதாக, குழந்தைத் தொழிலாளர்களை அகற்ற உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் உள்நாட்டில் உருவான கருவிகளையே பயன்படுத்த வேண்டும்.

நான்காவதாக, அனைவருக்கும் எட்டாம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வித் திட்டத்தை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். இதற்கும் உலக வங்கியிடம் நாட்டை அடகு வைக்கக் கூடாது. இத்தொடக்கக் கல்வி முழுவதும் அரசாலேயே செல்வநிலை வேறுபாடின்றி அனைவருக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். எட்டாம் வகுப்புக்குப் பின் மூன்றாண்டு உடலுழைப்புக்குப் பின் மேற்படிப்புக்குத் தகுதியான ஏழையர் தவிர அனைவரிடமும் கட்டணம் பெற வேண்டும்.

அனைத்துக்கும் மேலாகப் போலி மாந்தநேயத்தைக் காட்டி நம் பொருளியல் நடவடிக்கைகளில் தலையிடும் வெளியுதவி பெறும் "தொண்டு" நிறுவனங்களின் நடவடிக்கைகளை மிகக் கூர்மையாகக் கண்காணித்து அவர்களது இது போன்ற அழிம்பு வேலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.


15.7.09

பெரியாரை ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை

பெரியாரின் பணி பற்றிய திறனாய்வு முழுமூச்சாக நடத்தப்படும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். சாதியை ஒழிப்பதில் பெரியாரின் பங்கு என்ன என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் பெரியார் ஆற்றிய பணிகளுக்குப் பின்னும் சாதியத்தின் அடித்தளங்களான சாதி அடிப்படையிலான தொழில்களும் சாதியடிப்படையில் இருப்பிடங்களைக் கொண்ட ஊரமைப்பும் இன்னும் அசையவில்லை.

சாதி என்பது தமிழகத்தில் அரிப்பனிலிருந்து தொடங்கி அந்தணன் வரை நம் ஒவ்வொருவரின் குருதியிலும் இரண்டறக் கலந்துள்ளது. மிக நுண்மையாக கீழேயுள்ள சாதியினரின் ″ஆக்கிரமிப்பிலிருந்து″ நம்மைக் காத்துக் கொள்வதில் நாம் மிக விழிப்பாக உள்ளோம். இந்த நிகழ்முறையின் ஓர் அடையாளமாகவே பார்ப்பனர்கள் உள்ளனர். பெரியார் இந்த அடையாளத்துக்கு எதிராகத் தான் போராடினாரேயொழிய உண்மையான நோய்க்கு எதிராக எதையுமே செய்யவில்லை. அது மட்டுமல்ல சாதிவெறி பிடித்த பார்ப்பனரில்லா அனைத்துச் சாதியினரையும் தன் பக்கத்திலேயே வைத்துக்கொள்ள வெள்ளையன் வகுத்துக் கொடுத்த ஆரியன் - திராவிடன் இனக் கோட்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டார்.

வருணக் கோட்பாடு தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து புகுத்தப்பட்டது என்ற கருத்து தவறென்பது தமிழர்களின் வாழ்வில் நாள்தோறும் மெய்ப்பிக்கப்படுகிறது.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமையான்
என்று தொழிலடிப்படையான வருணப் பாகுபாட்டையும்

மறப்பினும் ஓத்துக் கொள்ளலாகும் பார்ப்பான் தன்
பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்
என்று பிறப்படிப்படையிலான வருணப் பாகுபாட்டையும் திருக்குறளே வலியுறுத்துவதைக் காண நாம் மறுத்துவிட்டோம்.

இந்தப் பிறப்படிப்படையிலான வருணப் பாகுபாடே பின்னாளில், அரிசி விற்கும் அந்தணர்க் கோர்மழை
புருசனைக் கொன்ற பூவையர்க் கோர்மழை
வரிசை தப்பிய மன்னவர்க் கோர்மழை
வருசம் மூன்று மழை யாகுமே
என்று பிரித்துக் கூறப்பட்டிருப்பதும் நம் சிந்தையைத் தொடவில்லை. மனு பார்ப்பனர் கண்ணோட்டத்திலிருந்து வலியுறுத்தியதை மேலே காட்டப்பட்டுள்ள தமிழ்ப் பாக்கள் பார்ப்பனர் அல்லாதார் கண்ணோட்டத்திலிருந்து வலியுறுத்துவதிலிருந்து வருணப் பாகுபாட்டுக்கும் சாதியத்துக்கும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே காரணம் என்பது நடைமுறையில் மட்டுமல்ல இலக்கியச் சான்றுகளாலும் விளங்குகிறது.

முதுகுளத்தூர் கலவரத்துக்குப் பின் முத்துராமலிங்கத் தேவர் சிறைவைக்கப்பட்டதை ஆதரித்ததாகப் பெரியார் பாராட்டப்பட்டுள்ளார். ஆனால் அக்கலரவத்துக்கு முன்பே அவர் பெரியாரை அவரது கொள்கைகளின் அடிப்படையில் வெளிப்படையாகவே போருக்கழைத்தார். ஆனால் பெரியார் அந்தச் சூழ்நிலையில் வீரம் காட்டவில்லை. கலவரம் முடிந்த பின் ஆட்சியாளர்களின் பின்னால் நின்று கொண்டு அவர்களைப் பாராட்டினார். அதனால் தான் அன்று முடிந்திருக்க வேண்டிய சிக்கல்கள் இன்று ஊர் ஊராக, தெருத் தெருவாக, மாவட்டம் மாவட்டமாகக் கலவரமாகத் தொடர்கிறது. தீர்வுக்கு வழியில்லை. நல்லதொரு தலைமை இல்லை.

சைவர்களுக்கும் பெரியாருக்கும் பூசல் ஏற்பட்டு இவர் அவர்களால் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட பின் இந்திப் போராட்டத்தை அறிவித்து அதற்குத் துணை தேடுவதென்ற சாக்கில் அவர்களிடம் சரண்டைந்தார். சாதியமைப்பின் எதிராகப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் பெயரும் புகழும் பொருளும் சேர்த்துக் கொண்டே சாதி வெறியர்களை அரவணைத்துச் சென்றார்.

சாதிகளுக்கெதிராகத் தமிழகத்தில் ஓர் இயக்கம் வலுப்பெற்று ஏதாவது அந்தத் திசையில் நிகழ்ந்திருக்கிறதென்றால் அதற்குப் பெரியார் காரணமல்ல. தமிழக மக்களே காரணம். ஏகலைவனுக்கு உளவியல் துணையாகத் துரோணரின் சிலை பயன்பட்டது போல் தமிழக மக்களுக்குப் பெரியாரின் பெயர் பயன்பட்டது. துரோணர் ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டார். பெரியாரோ தமிழர்களின் தன்முயற்சியையும் தன்னம்பிக்கையையும் அழித்து அடிமைத்தனமான, மக்கள் பகையான அரசுப் பதவிகளுக்காக ஒருவரோடு ஒருவர் மோதி அணு அணுவாகச் சிதைய வைக்கும் இட ஒதுக்கீட்டை மட்டுமே ஒரு செயல்திட்டமாக வைத்து அவர்களது எதிர்காலத்தையே அழித்துவிட்டார். தம் நாட்டையும் மொழியையும் மறந்து எந்த நாடு எந்த மாநிலம் என்றில்லாமல் மானங்கெட்டு அலையவைத்துவிட்டார். தம் மண்ணைப் பாலைவனமாக்கிவிட்டுத் திசை தெரியாமல் அல்லற்பட வைத்துவிட்டார்.

பெரியார் தாழ்த்தப்பட்டவருக்காக எதையாவது செய்திருப்பாரேல் இங்கு இன்று அம்பேத்கார் சிலைகள் நிறுவப்படும் தேவை இருந்திருக்காது. பிற்படுத்தப்பட்டோருக்கு ஏதாவது செய்திருப்பரேயானால் அவர்கள் இன்று சாதிகளாக முன்னை விட இறுகிப்போய் இப்படிப் பகைமை பாராட்டிக்கொண்டிருக்கமாட்டார்கள்.

பெரியாரின் பின் வந்தவர்கள் மீது அதாவது திராவிட இயக்க ஆட்சியாளர்கள் மீது குறை சொல்லிப் பயனில்லை. அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு அவர் முழு ஆதரவு வழங்கினார். அவர் வாழ்நாளில் அவர் ஆதரிக்காத ஆட்சித் தலைவர்கள் இருவரே. ஒருவர் இராசகோபாலாச்சாரியர், இன்னொருவர் பக்தவத்சலம். எனவே ஆட்சியாளர்களின் மீது பழிபோட்டு யாரும் பெரியாரைக் காப்பாற்றிவிட முடியாது. சொல்லொன்றும் செயலொன்றுமாகத் தமிழகத்தில் கலகத்தை ஏற்படுத்திச் சாதியத்தின் அடித்தளத்தைக் காத்தவர்களில் பெரியாரின் பங்கு முன்னிலை பெறுகிறது என்பது தான் பெரியாரைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை.

(18.10.95 தினமணியில் திரு. இரவிக்குமார் அவர்கள் எழுதிய ″உ.பி.விழாவின் எதிரொலி″ என்ற கட்டுரையின் எதிரொலியாகும் இது.)

துவரையம்பதி

முரண்பாடுகள் தாம் வளர்ச்சியின் ஊக்கு விசையாகச் செயற்படுகின்றன. இது இயற்கைக்கும் மனித வாழ்வுக்கும் மட்டமல்ல வரலாற்று ஆய்வுக்கும் பொருந்தும் ஒரு விதியாகும்.

தமிழகப் பண்டை வரலாற்றில் இத்தகைய முரண்பாடுகள் சில உள்ளன. எடுத்துக்காட்டுக்கு அவற்றில் இரண்டை இங்கு குறிப்பிடலாம்.

1. தமிழகத்தின் வாழ்வியலை இலக்கண வடிவத்தில் கூறும் தொல்காப்பியத்தில் இரு நிலப்பகுப்புகளான நெய்தல், மருதம் ஆகியவற்றின் தெய்வங்களான வருணன், இந்திரன் ஆகியவை ஆரியர்களுக்குரியதென்று சொல்லப்படும் வேதங்களில் காணப்படுவது.


2. இரண்டாம் தமிழ்க் கழக(சங்க)க் காலத்தில் வாழ்ந்த அரசர்களில் துவரைக் கோமான் என்பவன் குறிப்பிடப்படுகிறான். துவரை என்பது இன்றைய குசராத் மாநிலத்தை ஒட்டிய கட்சு வளைகுடாவினுள் ஏறக்குறைய கி.மு.1000 ஆண்டில் முழுகிய ஒரு நகரமாகும். சிசுபாலன் என்ற தன் பகையரசனுக்கு அஞ்சி வடமதுரையைத் துறந்து வந்த கண்ணபிரான் இங்கு ஒரு நகரை அமைத்து ஆண்டான் என்பது வரலாறு. இவ்வாறு வட இந்தியாவில் ஆண்ட ஓர் அரசன் எவ்வாறு கபாடபுரத்தில் அமைந்த இரண்டாம் தமிழ்க் கழகத்தில் அமர முடிந்தது?

இந்தக் கேள்வியைச் சிலர் எழுப்பினாலும் அதற்கான விடையைத் தேடி எவரும் இன்றுவரை புறப்படவில்லை. அது போலத் தான் வருணன், இந்திரன் பற்றிய கேள்வியும். முரண்பாடுகளைக் கண்டு மிரண்டு அவற்றைப் புறக்கணித்துவிடும் நம் ஆய்வாளர்களின் போக்கினால் தமிழ் மக்கள் வரலாற்றின் மீது கவிந்துள்ள இருள் இன்னும் நீங்காமல் உள்ளது.

இந்த முரண்பாடுகளில் ஒன்றை, அதாவது துவரைக் கோமான் என்ற சொற்களிலுள்ள துவரை நகரம் எது என்று ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

துவரை என்ற சொல் துவாரகை என்ற சொல்லின் தமிழ்ச் சுருக்க வடிவம். துவாரகை என்று சொல் துவார் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. துவார் என்ற சமற்கிருதச் சொல்லுக்குக் கதவு என்று பொருள். அப்படியாயின் துவாரகை என்ற சொல்லுக்குக் கதவகம் என்று பொருள் சொல்லலாம். மொழிஞாயிறு தேவநோயப்பாவாணர் அவர்கள் கதவபுரம் என்ற ஒரு சொல்லை வடித்துக் கையாளுவார். அச்சொல் கபாடபுரம் என்பதன் தமிழ் வடிவமாகும். கபாடம் என்பது சமற்கிருதச் சொல் என்று கருதி அவர் இச்சொல்லைக் கையாண்டார். இந்தக் கபாடபுரம் என்ற சொல்லுக்கும் துவாரகை என்ற சொல்லுக்கும் உறவு இருக்கிறதல்லவா? எனவே துவரை என்ற சொல் கபாடபுரத்தையே குறிக்கிறதென்ற முடிவுக்கு நாம் வரலாம். இப்போது கபாடபுரமாகிய பாண்டியனின் தலைநகரில் அமைந்திருந்த இரண்டாம் தமிழ்க் கழகத்தில் துவரைக் கோமான் அரசனாக அமர்ந்திருந்ததில் முரண்பாடு எதுவும் இல்லை.

சிக்கல் இத்துடன் தீர்ந்து போகவில்லை. இந்தக் கதவம் பற்றித் தமிழகத்துக்கு வெளியிலும் தமிழ் இலக்கிய வட்டத்துக்கும் வெளியிலும் நமக்கு ஆர்வமூட்டும் சில சிறப்பான செய்திகள் உள்ளன.

இவற்றுள் ஒன்று பாபிலோனியாவிற்குரியது. கில்காமேஷ் காப்பியம் எனப்படும் இதுவரை கிடைத்துள்ள உலகின் மிகப் பழைய காப்பியத்திலுள்ளது. கி.மு. ஏழாம் நூற்றாண்டில் அசிரியாவை ஆண்ட அசூர்பானிப்பாலின் நூல் நிலையத்திலிருந்து இது கிடைத்தது. பின்னர் கி.மு.22-21ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பாபிலோனிய அரசன் அம்முராபியின் தொகுப்புகளிலிருந்தும் கிடைத்தது. இக்காப்பியம் சுமேரியர்களுக்கு உரியதாகும். புகழ்பெற்ற தமிழ் இலக்கியத் திறனாய்வாளரும் எழுத்தாளருமான க.நா.சுப்பிரமணியம் இக்காப்பியத்தைத் தமிழாக்கியுள்ளார்.

இக்காப்பியக் கதை பின் வருமாறு.

ஊருக் என்ற சுமேரிய நகரத்தைச் சுற்றிப் பெரிய சுவரெழுப்பிய சுமேரியத் தொன்ம அரசன் கில்காமேஷ். இவன் மூன்றிலிரு பகுதி கடவுளும் ஒரு பகுதி மனிதனுமாவான். இவன் அழகில் அவன் நாட்டு மகளிர் மயங்கினர்.

அருரு என்ற பெண் தெய்வத்தால் படைக்கப்பட்டவன் எங்கிடு. இவன் உடலெங்கும் மயிரடர்ந்திருந்தது. தோல் ஆடையே அணிந்திருந்தான். காட்டில் விலங்குகளோடு விலங்காக நான்கு கால்களிலும் நடந்து புல்லை மேய்ந்து நீரில் விளையாடி வாழ்ந்திருந்தான்.

இவனைப் பற்றி அறிந்த கில்காமேஷ் அழகிய ஒரு பெண்ணை அவனிடம் அனுப்பினான். இருவரும் ஆறு நாட்கள் சேர்ந்திருந்தனர். அப்பெண்ணோடு நகருக்குள் நுழைந்த எங்கிடுவுடன் கில்காமேஷ் சண்டையிட்டு வென்று அவனை நண்பனாக்கிக் கொண்டான்.

இசுத்தார் என்ற பெண் தெய்வம் தன் மீது கொண்ட காதலை கில்காமேஷ் ஏற்க மறுத்ததனால் அவனைப் பழிவாங்குவதற்காக எங்கிடுவுக்கு நோயுண்டாக்கிக் கொன்றுவிடுகிறாள். துயரத்தால் துடித்த கில்காமேஷ் சாவாமை பற்றி அறிந்துவரக் கிளம்புகிறான். தன் முன்னோனான உட்நாப்பிட்டிமைத் தேடிச்செல்கிறான். இந்த உட்நாப்பிட்டிம் வெள்ளத்திலிருந்து தப்பிய ஒரே மனிதன். யூத மறைநூலின் நோவாவின் மூலவடிவம். இவன் மரணமற்றவன்.

அவனைச் சந்திக்க நெடுந்தொலைவு நிலத்தின் மீது செல்கிறான். வானாளாவி நிற்கும் இரண்டு மலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரு பெரும் சூரியக் கதவத்தைக் கடந்து ஒரு சுரங்கத்தின் வழியாகப் 12 மைல்கள் செல்கிறான். இக்கதவம் இரண்டு பூதங்களால் காக்கப்படுகிறது. இவன் உட்நாப்பிட்டிம் வழியினன் ஆனதாலேயே உள்ளே அனுமதிக்கப்படுகிறான். சுரங்கம் ஒரு கடற்கரையில் சென்று முடிகிறது. அங்கிருந்த ஓர் கன்னித் தெய்வத்தின் உதவியுடன் நாற்பது நாட்கள் கடலில் பயணம் செய்து உட்நாப்பிட்டிம் இருக்கும் தீவை அடைகிறான். அவனிடமிருந்து வெள்ளத்தைப் பற்றிய கதையை நேரடியாக அறிகிறான். சாவாமையைத் தரும் ஒரு பழமரக் கன்றைப் பெற்றுவிட்டுத் திரும்புகிறான். வழியில் கீழே வைத்துவிட்டுக் குளிக்கச் செல்லும் போது பாம்பு ஒன்று அக்கன்றைத் திருடிச் சென்றுவிடுகிறது. இப்படிச் செல்கிறது இக்கதை.

இதே போன்ற கதவம் ஒன்று இயமனைப் பற்றிய இந்தியத் தொன்மங்களில் கூறப்படுகிறது. இயமனும் மரணமற்றவென்பது மரபு.

இவை மட்டுமல்ல இது போன்ற பல சூரியக் கதவங்கள் உலகமெல்லாம் தொல்லாய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.

எனவே கதவபுரம் எனப் பொருள் படும் கபாடபுரமும் அதன் இன்னொரு பெயரான துவாரகையும் வெறும் கற்பனை அல்ல. அதன் நினைவுகள் உலகின் பல பகுதிகளில் எழுத்தில் பதியப்பட்டுள்ளன. அவற்றின் நினைவாக அது போன்ற கதவங்களும் நிறுவப்பட்டுள்ளன.

கதவபுரத்தைப் பற்றி இராமாயணம் கூறுகிறது. ஆனால் தமிழனின் பண்டை வரலாற்றுக்கு ஒரே மூலமாக நாம் கொள்ளும் கழக நூல் தொகுப்பில் இதைப் பற்றி ஒரு சொல் கூடக் குறிப்பிடவில்லை. இது இக்கழகத் தொகுப்பே ஏதோ காரணத்தால் தமிழர்களின் தொன்மை வரலாற்றை மறைப்பதை நோக்கமாகக் கொண்டவர்களின் ஒரு முயற்சியோ என்ற கசப்பான, ஆனால் தவிர்க்க முடியாத ஐயத்தை நம் மனதில் தோற்றுவிக்கிறது.

ஒரு வெள்ளக் காலத்துக்குப் பின் துவரை என்ற பெயர் பெற்ற கதவபுரத்தைக் தலைநகராகக் கொண்டமைந்த தமிழகத்திலிருந்து அடுத்த வெள்ளத்திலிருந்து தப்புவதற்காக வெளியேறிய ஒரு மக்கள் கூட்டம் இன்றைய குசராத் மாநிலத்திலமைந்திருந்த அவந்தி நாட்டில் காயங்கரை என்ற ஆற்றின் கரையை அடைந்தனர்.

இச்செய்திகள் மணிமேகலையின் பழம்பிறப்புணர்ந்த காதையிலிருந்து பெறப்பட்டனவாகும். (இந்தக் காயங்கரை ஆறு கோக்கரா எனும் பெயரால் குறிக்கப்பட்டது. பின்னர் அவ்வாறு பாலை மணலில் மறைந்து போனது. கங்கையின் ஒரு கிளையாறும் கோக்ரா என்ற பெயர் பெற்றுள்ளது.) காந்தாரம் என்ற நாட்டில் பூருவ தேயத்தை ஆண்ட அத்திபதியிடம் அவன் உறவினனான பிரம தருமன் என்ற முனிவன் அவன் நாடு உட்பட நாகநாட்டில் நானூறு யோசனை பரப்பான நிலம் ஏழு நாளில் நில நடுக்கத்தால் கடலினுள் புகும். ஆதலால் மாவும் மாக்களும் உடன் கொண்டு வேற்றிடம் செல்லுமாறு பணித்ததாக மணிமேகலை கூறுகிறது.

காந்தாரம் என்பது இன்று ஆப்பாகனித்தானத்தைச் சேரந்த ஒரு பகுதியாகும். பூருவ தேசம் என்பது பாண்டவர்களின் முன்னோர் பெயரைக் கொண்டதாகும். எனவே இப்பெயர்கள் முழுகிய குமரிக் கண்டப் பகுதிகளுக்கு உரியவை என்று நாம் முடிவு செய்யலாம்.

இவை நம் மரபுகளை உயர்த்திக் கூறுவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதைகளிலிருந்து நமக்குச் சார்பாக இருப்பதால் மேற்கொள்ளப்பட்ட செய்திகள் என்று ஒதுக்கித்தள்ள முடியவில்லை. கதவபுரம் எனப் பொருள்படும் துவாரகை எனப் பெயர்கொண்ட நகரம் இப்பகுதியில் இருந்ததும் வேதங்களிலும் வடஇந்தியத் தொன்மங்களிலும் தெய்வங்களாகக் கூறப்படும் வருணனும் இந்திரனும் தமிழக ஐந்நிலத் தெய்வங்களாயிருப்பதும் நமக்கு மறுக்க முடியாச் சான்றுகளாகின்றன.

துவரை என்ற இச்சொல்வழக்கு இறையனார் அகப்பொருள் உரையில் மட்டும் காணக்கிடைக்கவில்லை. சென்ற நூற்றாண்டு வரை குமரி மாவட்ட மக்களின் நாவில் பயின்றும் வரப்பட்டிருக்கிறது. சாமிதோப்பில் பள்ளி கொண்டிருக்கும் முத்துக்குட்டி அடிகளின் பெருமை கூறும் அகிலத் திரட்டு அம்மானை இம்மண்ணின் மக்களின் முன்னாளைய நிலமாக இருந்து கடலில் அமிழ்ந்து போன துவரையம்பதி மீண்டும் துவங்கும் என்று வலியுறுத்துகிறது. இதனால் கடலில் முழுகிய, முதல் வெள்ளத்துக்குப் பின் பாண்டியரின் தலைநகராயமைந்த, கதவபுரத்தைத் துவரையம்பதி என அழைக்கும் மரபு குமரி மாவட்ட மக்களிடையில் சென்ற நூற்றாண்டு வரை நிலவியது என்பதை நாம் அறிகிறோம்.

இக்கட்டுரையில் கில்காமேஷ் காவியம் பற்றிய செய்திகள் புகழ்பெற்ற வரலாற்றறிஞர் வில்தூரன் எழுதிய நகரிகத்தின் கதை என்ற நூலின் முதல் மடலமாகிய கிழக்கு நமக்கு வழங்கிய கொடை (Story of civilisation - Our Oriental Henitage) என்ற நூலிலிருந்தும் அமெரிக்காவிலிருக்கும் செருமானிய ஆய்வாளரான புகழ் பெற்ற எரிக் வான் டெனிக்காவின் கடவுளரின் தேர்கள்? (Charists of Gods?) என்ற நூலிலிருந்தும் பெறப்பட்டவை.

எரிக் வான் டெனிக்கான் ஏறக்குறைய 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் இன்றைய நாகரிகத்தை மிஞ்சிய தொழில்நுட்பங்களைக் கொண்டவர்கள் வெளி உலகத்திலிருந்து இங்கு வந்து மாபெரும் செயல்களை ஆற்றியுள்ளனர், பெருவெள்ளங்கள் கூட அவர்களை திட்டமிட்டு உருவாக்கியவை என்றெல்லாம் எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல இது போன்று இன்னும் நான்கைந்து நூல்களையும் எழுதியுள்ளார். இப்பிற நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கட்டுரையாசிரியருக்குக் கிடைக்கவில்லை. இந்த ஒரு நூலிலிருந்து கிடைக்கும் தரவுகளிலிருந்தே நம் புராணங்களில் காணப்படுவற்றில் நம்பத்தகாதவை என்று நாம் ஒதுக்கித் தள்ளிய பல செய்திகளை இன்றைய அறிவியல் வளர்ச்சியோடு ஒப்பிட்டு மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை நமக்கு உணர்த்துகிறது.

நமக்கு ஏற்படும் இன்னொரு எண்ணம் என்னவென்றால் குமரிக் கண்டம் நம் முக்கழக வரலாறு குறிப்பிடுவது போல் இரண்டே கடற்கோள்களுக்கு ஆட்படவில்லை என்பதாகும். மிக உயர்ந்த நாகரிகத்துடன் வாழ்ந்த மக்களைக் கொண்டு அண்டார்ட்டிகா வரை பரந்திருந்த ஒரு நிலப்பரப்பு பகுதி பகுதியாக கடல் கொள்ளப்பட மக்கள் உலகின் பிற பகுதிகளுக்குப் பெயர்ந்து செல்லச் செல்ல நாகரிகம் சிறிது சிறிதாக நலிந்து இன்றைய இடத்துக்கும் நிலைக்கும் தமிழ் மக்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்பதாகும்.

இச்செய்திகளைத் தடம் பிடிக்க எரிக்வான் டெனிக்கான் போன்றவர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள மக்களின் பண்பாட்டுக் கூறுகளைக் தொகுத்துத் தந்துள்ள எண்ணற்ற ஆய்வாளர்களின் ஆக்கங்களுடன் இந்தியப் தொன்மச் செய்திகளையும் ஒப்பிட்டு நாம் ஆய வேண்டும். குறிப்பாக நம் தொன்மச் செய்திகளில் வரும் கந்தர்வர்கள், விஞ்சையர் எனப்படும் யாழோர், கருடபுராணம் ஆகியவை மிகக் கவனமாக ஆயப்பட வேண்டும்.

குமரிக் கண்ட ஆய்வு என்பது வெறும் புவியியல் ஆய்வு மட்டுமல்ல. உண்மையில் புவியியல் ஆய்வு என்பது இவ்வாய்வின் மிகச் சிறியதும் கடைசியானதுமான கூறே. மிகப் பெரும் பகுதியும் முகாமையானவையும் உலகெலாம் பரந்து விரிந்து சிதறிக் கிடக்கும் பண்பாட்டுச் செய்திகளே. அச்செய்திகளைச் சுட்டிகாட்டும் ஒரு கருவியாகத் ″துவரையம்பதி″ அமைந்திருக்கிறது.

14.7.09

விடுதலை இறையியல் - சில கேள்விகள்

பாளையங்கோட்டை,
19-8-95.

அன்புள்ள ஆசிரியர் (நிகழ்) அவர்களுக்கு வணக்கம்.

நிகழ் 30-இல் வெளிவந்த திரு கே.அல்போன்சு அவர்களின் ′விடுதலை இறையியல்′ குறித்து சில கேள்விகள், ஐயங்கள்.

விடுதலை இறையியல் தமிழர் (தேசிய) விடுதலையுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. இப்போக்கு இப்போது இங்கு புதிதாக அரும்பியுள்ளது. ஆனால் ஏசுநாதரின் வரலாற்றோடு தேசிய விடுதலைக்கு ஓர் உறவு உண்டு. அது தரும் செய்தி வேறு வகையானது.

ஏசுவின் தொடக்ககால நடவடிக்கைகள் இசுரேலைத் தன் ஆதிக்கத்தினுள் வைத்திருந்த உரோம வல்லரசு எதிர்ப்பாக இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நாளடைவில் அவரது நடவடிக்கைகள் யூதர்களிடையிலிருந்த ஆதிக்கர்களுக்கு எதிராக முழுமூச்சுடன் திரும்பியமையால் அவரது இயக்கமே மறைமுகமாக வல்லரசுக்கு வாய்ப்பாக மாறிவிட்டது. யூத குமாரனாகத் தொடங்கிய ஏசு தேவ குமாரனாக மாறிவிட்டார். அதனால் தான் வல்லரசு ஆளுநன் வழக்குசாவலை யூதத் தலைவர்களிடமே ஒப்படைத்துவிட்டுக் கையைக் கழுவிக்கொண்டான். தண்டனையிலிருந்த ஒருவரை விடுவிக்கக் கிடைத்த வாய்ப்பை அவன் ஏசுநாதருக்கு அளிக்க முன்வந்ததும் ஏசுநாதரால் வல்லரசுக்கு எந்தக் கேடும் நேராது என்ற அவனது கணிப்பின் விளைவேயாகும்.

ஏசுநாதருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது பொதுமக்களிடையில் கொந்தளிப்பு எதுவும் ஏற்படாததும் அவருக்குப் பின் அவரது மாணவர்கள் யூதர்களிடையில் வாழ முடியாததும் அவரால் தம் மக்களின் மனதில் தன் மீது ஒரு பரிவுணர்ச்சியை உருவாக்க முடியவில்லை என்பதையே உணர்த்துகின்றன. ஏசுநாதரின் மாணவர்கள் செயலூக்கம் மிக்கவர்கள். அவரது மரணத்துக்குப் பின் உலகெங்கும் பரந்து சென்று தம் ஆசானின் செய்திகளைப் பரப்பிய அருஞ்செயலே இதற்குச் சான்று. அத்தகையவர்களால் கூட அவரது மரண தண்டனைக்கு எதிராக மக்களைத் திரட்ட முடியவில்லை என்றால் ஏசுவும் அவரது மாணவர்களும் யூத மக்களிடமிருந்து அயற்பட்டிருந்தனரென்றே பொருட்படுகிறது. இதற்கான காரணங்களை ஏசுநாதரின் வாழ்க்கையைப் புதிய கோணத்திலிருந்து ஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

ஏசுநாதரின் இயக்கத்தால் அவர் வாழ்நாளில் மட்டும் யூதத் தேசியத்துக்கு பின்னடைவு ஏற்படவில்லை. நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின் உரோம வல்லரசு கிறித்துவத்தை அரச மதமாக ஏற்றவுடன் தங்கள் இறைவனான ஏசுநாதரைச் சிலுவையில் அறைந்தவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் யூதர்கள் மீது கொடுந்தாக்குதலை நடத்தி அவர்களை அடுத்த பதினாறு நூற்றாண்டுகள் உலகெலாம் ஏதிலிகளாக அலையவும் வைத்தது.

தேசிய விடுதலை இயக்கத்துக்கு மட்டுமல்ல, எந்த ஓர் இயக்கத்துக்கும் ஒரு திரிவாக்கம் உண்டு. அது குமுகத்தின் உச்சியிலிருந்து தொடங்கி பிற்போக்கு விசைகளைக் கழித்தும் அடுத்த மட்டத்து மக்களை ஈர்த்தும் படிப்படியாகக் கீழ்மட்டத்தை நோக்கி நகர வேண்டும். எடுத்த எடுப்பிலேயே கீழ்மட்டத்து மக்களின் சிக்கல்களை மட்டும் அதாவது உள்முரண்பாடுகளை மட்டும் முதன்மைப்படுத்தினால் யூதர்களின் பட்டறிவு காட்டுவது போல் சிதைவுதான் மிஞ்சும். இன்றைய தமிழகம் கண் முன்னால் காணக்கிடைக்கும் இன்னொரு சான்று.

உருசியாவிலும் சீனத்திலும் பொதுமைக் கட்சிகளிடத்தில் அரசியல் நடுவம் கொள்வதற்கு முன் மேல்மட்டத்திலும் பல இயக்கங்களின் திரிவாக்கம் இருந்தது. அத்தொடர்ச்சியில் தொய்வு இன்றி அவ்வந்நாட்டுப் பொதுமைக் கட்சிகள் உரிய காலத்தில் களத்தில் இறங்கிச் செயற்பட்டன.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது தன்னைப் பேராய(காங்கிரசு)க் கட்சியினுள் உட்படுத்திக் கொண்டதுடன் நில்லாமல் வெள்ளையனை எதிர்ப்பதற்குப் பகரம் உள்முரண்பாடுகளுக்கு அதிலும் உடமை முரண்பாடுகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து மக்களிடமிருந்து அயற்பட்டு நின்றது, நிற்கிறது இந்தியப் பொதுமை இயக்கம்.

தமிழகத்தில் திரைப்படங்களில் தமிழகத் தேசிய விடுதலைக் குறிப்புகள் வரும்போது மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்ற காலம் ஒன்று இருந்தது. அதை உருவாக்கிய இயக்கம் தொய்வடைவதைக் கொடுநெஞ்சுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல அவ்வாறு தொய்வடைந்த இயக்கத்துடன் கூட்டுச்சேர்ந்து கொஞ்ச நஞ்சமிருந்த தேசிய இயக்கத்தையும் அழித்தொழிந்துவிட்டன தமிழகப் பொதுமைக் கட்சிகள். இன்று தமிழகத் தேசியம் என்பது ஒரு மக்கள் இயக்கமாக இல்லை. விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரின் கனவாகவே இருக்கிறது.

இந்த வெற்றிடத்திலிருந்து ஒரு மக்களியக்கத்தை அதன் இயல்பான படிமுறையில் வளர்த்தெடுக்க விடுதலை இறையியலாரும் பொதுமையரும் ஆயத்தமாக இருக்கிறார்களா? அதாவது தமிழகத் தேசியத்தின் வலிமையாகத் தக்கவர்களாகிய தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோரில் உள்ள உடைமை வகுப்பினர் மீது இந்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுக்கத்தக்க ஒரு செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்வார்களா? இந்திய, பன்னாட்டு முதலைகளைப் பாதிக்காத ஆனால் உள்நாட்டினரின் குரல்வளையை நெரிக்கிற வருமானவரி, நில உச்சவரம்பு, வேளாண் விலை நிறுவுதல், தொழில் உரிமம், மூலப்பொருள் கட்டுப்பாடு, உள்ளூர் விளைப்புக்கும் நுகர்வுக்கும் எதிரான கட்டுப்பாடுகள்(ஏற்றுமதிப் பொருட்களுக்கும் இறக்குமதிப் பொருட்களுக்கும் இக்கட்டுப்பாடுகள் கிடையா. எ-டு. இப்போது இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் பருப்பு வகைகள்) போன்றவற்றுக்கு எதிராகவும் கோயில் நிலங்கள் உட்பட அனைத்து நிலவுடைமையிலும் குத்தகைமுறையை ஒழித்து நேரடியாகப் பயிரிடுபவனுக்கே நிலத்தை உரிமையாக்குவதற்கு ஆதரவாகவும் போராட வருவார்களா? அவ்வாறு தொடங்கினால் தமிழக மக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனவரும் இந்தியத் தரகு அரசிடமிருந்தும் அதனைப் பிடித்துக்கொண்டு கொள்ளையடிக்கும் பணக்கார நாடுகளிடமிருந்தும் விடுதலை பெற வழி பிறக்கும்.

அத்தகைய ஒரு ″விடுதலை இறையியலை″ உருவாக்கும் மனநிலை யாருக்கும் இப்போது இல்லை என்பதே என் கருத்து.

அன்புடன்
குமரிமைந்தன்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - ஒரு மதிப்பீடு

அண்மையில் வாழ்வு நிறைவை எய்திய பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழக உணர்வுடைய நெஞ்சங்களில் எவ்வளவு இடம் பிடித்திருந்தார்கள் என்பதற்கு அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெருந்திரளும் ஆங்காங்கே தோழர்கள் ஒட்டிய இரங்கல் சுவரோட்டிகளும் கூட்டங்களும் சான்று கூறின. ஆனால் இவ்வளவு பெருந்திரளான ஆர்வலர்களை ஈர்த்து வைத்திருந்த பாவலரேறு அவர்களால் தன் வாழ்நாளில் தமிழார்வம் மிக்குடையவர்களைத் தவிர்த்த பிறரிடையில் ஓர் அறிமுகம் என்ற அளவில் கூடப் பரவலாக அறியப்படாமல் போனது ஒரு பெரும் கேள்வியாக நிற்கிறது.

மக்களிடையில் இயக்கங்கள் முகிழ்த்தெழுவதற்கு அவற்றைத் தொடங்குவோரின் தனித்த பொருளியல், வாழ்வியல் நோக்கங்கள் காரணமாயிருப்பதில்லை. அவர்களால் உயர்ந்தவையாய் புரிந்துகொள்ளப்படும் நோக்கங்களிலிருந்தே அவை தோற்றம்பெறுகின்றன.

அந்த வகையில் பாவலரேற்றின் பொதுவாழ்வின் தொடக்கம் தமிதழ்மொழித் தூய்மை குறித்தாகும். அதனாலேயே அவர் பாவாணரைத் தன் ஆசானாக ஏற்றுக் கொண்டார்.

தமிழ் மொழியின் உரிமை இந்தி ஆட்சிமொழிச் சட்டத்தால் அச்சத்துக்குள்ளான போது தன் எதிர்கால வாழ்வைப் பற்றிய சிந்தனையையே உதறி எறிந்துவிட்டு மொழிப் போராட்டத்தினுள் நுழைந்தார்.

சமற்கிருதக் கலப்பு மட்டுமல்ல ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிக் கலப்புகளிலுமிருந்து தமிழை மீட்கும் போர்ப்படையாகத் தென்மொழியை வளர்த்தார். அந்தத் தொடக்க காலத்தில் தென்மொழி மூலம் தமிழகத்திலுள்ள பல்துறை அறிஞர்களின் ஆற்றல் வெளிப்பட்டது. அவர்களின் படைப்புகள் தனித்தமிழின் பன்முனை ஆற்றலைத் தமிழார்வலர்களிடம் விளங்க வைத்தன. தனித்தமிழ் மீது அவை பெரும் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தின. தென்மொழி மூலம் வெளிப்பட்ட பாவாணரின் சொல்லாய்வு உத்திகள் பலரிடம் புதிய சொல்லாக்கத் திறனைப் படைத்தன. அந்தக் காலத்தில் தென்மொழி வெளிப்படுத்திய அந்த ஆற்றல் அளப்பரியது.

தமிழ் மொழி மீட்சி என்ற நோக்கத்தினடியாகப் பிறந்ததுவே தமிழக விடுதலை என்ற பாவலரேறு அவர்களின் குறிக்கோளும். அப்போது அவருடனிருந்த எண்ணற்ற இளைஞர்களின் கனவாகவும் அது உருப்பெற்றிருந்தது. ஆனால் ஒரு மக்கள் விடுதலை என்பது எவ்வளவு கடுமையான பணி, அதற்கு எத்தகைய பின்புலம் உருவாக்கப்பட வேண்டும், மக்கள் மனதில் ஒரு ஆர்வத்தை எழுப்பவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்ற சிந்தனையை விட கட்டுப்படுத்த முடியா தன் ஆர்வத்தையே வலிமையாக்கி 1972இல் மதுரையில் தமிழக விடுதலை மாநாடு நடத்தித் தளைப்பட்டார். அம்மாநாட்டில் விளைவாக அவருடனிருந்த இளைஞர்களில் பலர் அகன்றனர்.

பாவலரேற்றின் அணியில் முற்றிலும் தனித்தமிழ் ஆர்வம், தமிழக விடுதலை வேட்கை ஆகியவற்றை மட்டுமே உள்ளுணர்வாகக் கொண்டோர் மட்டும் திரளவில்லை. கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு அன்று இருந்த இரண்டாம் தர நிலையாலும் தங்களுக்கு வேலைவாய்ப்பற்றிருப்பதாலும் வெறுப்புற்றிருந்த தமிழ் இலக்கியம் முதுகலை பயின்ற இளைஞர்கள் எண்ணற்றோர் இணைந்தனர். இந்த நிலையில் கல்லூரித் தமிழாசிரியர்கள் பிற துறை ஆசிரியர்களைப் போலவே முதல்வராவதற்குச் சம தகுதியுள்ளவர்களாக்கப்பட்டனர். ம.கோ. இரா ஆட்சிக் காலத்தில் பல புதிய பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சி, தமிழாய்வு என்ற பெயர்களில் நிறுவனங்களும் உருவாயின. இவற்றால் ஏற்பட்ட எண்ணற்ற பணியிடங்களில் வேலையற்றிருந்த தமிழ் இலக்கிய முதுகலைப் படிப்பாளிகளுக்கு வேலை கிடைத்தது. இயல்பாகவே இவர்கள் இயக்கத்திலிருந்து விலகிவிட்டனர். தனித்தமிழ் இயக்கம் மொழியைப் பொறுத்தவரை ஆட்சியாளர்களைக் குறைகூறும் ஓர் அரசியல் இயக்கத்தின் தன்மையைப் பெற்றிருந்ததால் சிலர் தனித்தமிழ் இயக்கத்தோடு தமக்கு உடன்பாடில்லை என்று காட்டுவதற்காகத் தனித்தமிழுக்கு எதிரான நிலையைக் கூட எடுத்தனர். இது பாவலரேறு அவர்கள் மனதைப் புண்படுத்தியது. எனவே ″பணம்படைத்தவர் நலனையே நாடுவதாக என் கடந்த கால நடவடிக்கைகள் அமைந்துவிட்டன. இனி ஏழை மக்களின் நலன் பற்றிச் சிந்திக்கப்போகிறேன்″ என்று ஒரு கட்டத்தில் கூறினார்கள். இந்தக் கட்டத்துக்குப் பின் அவர்கள் பொதுமை என்ற நோக்கத்தை முன்வைத்தனர். பொதுமைக் கோட்பாடுகளைக் ″கரைத்துக் குடித்தவர்கள்″ கூட திசை தெரியாது மயங்கிச் சோர்ந்து நிற்கும் இன்றைய நிலையில் பாவலரேறு அவர்களால் இந்தத் திசையிலும் எந்தத் தடத்தையும் பதிக்க முடியவில்லை.

இன்னொரு பக்கம் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி மீது பாவலரேறு வைத்திருந்த அளவிலாப் பற்று அவரைப் பின்தொடர்ந்தோரை மனம் வருந்தவைத்தது.

பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி ஆகிய தலைவர்கள் அனைவருமே தமிழுக்கும் தமிழகத்துக்கும் அதன் மக்களுக்கும் இரண்டகம் செய்துவிட்டனர்; எனவே புது இயக்கம் அமைத்துப் புதுப் பாதை காண்போம் என்று புறப்பட்டவர் அவர். அப்படியாயின் ஏன் மீண்டும் மீண்டும் கருணாநிதியின் பின் நின்று கொள்கிறார் என்ற கேள்விக்கு இறுதி வரையிலும் யாராலும் விடை காண முடியவில்லை.

பெருஞ்சித்திரனாரின் பின் அணிவகுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் இறை மறுப்பாளர்கள். பெருஞ்சித்திரனாரோ அவருக்கே உரித்தான ஓரிறைக் கொள்கை ஒன்றைக் வைத்திருந்தார். இந்த முரண்பாட்டைக் கூடப் பெரிதாக எண்ணாமல் தமிழ், தமிழகம், தமிழக மக்களின் நலன் என்ற குறிக்கோளில் அவரது வழிகாட்டலை எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு இந்த முரண்பாடு தாங்கிக் கொள்ளத்தக்கதாயில்லை. அதுவும் கருணாநிதி - ம.கோ.இரா. பிரிவின் போது பலர் மனங்கசந்தனர். இதனால் பலருக்குப் பாவலரேறு அவர்களின் நேர்மை, நாணயம் ஆகியவற்றன் மீதே கூட ஐயுறவு ஏற்பட்டுவிட்டது. ஆனால் தன் இறுதிக் காலம் வரை எவரது துணையையும் நாடாது தனித்து நின்றே போராடித் தன் வாழ்நாளையே தேய்த்துக் காட்டி அனைத்து ஐயப்பாடுகளினின்றும் நீங்கிப் பெருமை பெற்றுவிட்டார்.

மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தன் உயிர்மூச்சாகக் கருதிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகமுதலி உருவாக வேண்டுமென்ற தணியாத வேட்கையில் தென்மொழி வாயிலாகப் பாவலரேறு அவர்கள் மேற்கொண்ட அரிய முயற்சியில் பக்கவிளைவே அரசு அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டது. ஆனால் பாவாணர் இறைவன் தன்னை இப்பணிக்காகவே படைத்துள்ளதாகவும் எனவே அப்பணி முடியாமல் தன்னைச் சாகவிடமாட்டான் என்ற தவறான நம்பிக்கையாலும் தன் குடும்பத்தாரின் நெருக்குதல்களை நிறைவேற்ற வேண்டியும் அகரமுதலிப் பணியில் சுணக்கம் காட்டியபோது பாவலரேறு தன் அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆசானைக் கடிந்துகொள்ளத் தவறவில்லை. ஆனால் அவரது சொல்லாய்வு நெறிகளிலிருந்து தான் மாறுபடுவதாகத் தெரிவித்த கருத்துகள் அத்துறையில் அவரது ஆழமின்மையையே காட்டின. இருப்பினும் குறிக்கோளில் அவருக்கிருந்த இறுக்கமான பிடிப்புக்கு அது ஒரு சான்றாக அமைந்தது.

இப்போது தென்மொழி அரசியல், குமுகியல் மட்டுமே கூறும் இதழாகத் தன் முகப்பைச் சுருக்கிக்கொண்டது. அத்துடன் தேசியம் என்பதன் நிலம் சார்ந்த இயல்பைப் புரிந்துகொள்ளாமல் தமிழ் பேசும் உலக மக்களனைவரையும் ஒரு தேசியமென்று கருதி உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் அமைத்து அதன் கொள்கைகளைப் பரப்பவும் அமைப்புக்கு உதவவும் தமிழ் நிலம் இதழைத் தொடங்கினார். ″தமிழ் நிலம்″ என்ற சொல் தமிழகத்தைத்தான் குறிப்பதாகக் கொண்டிருந்தாரா என்பது தெரியவில்லை.

தேசியம் பற்றிய வரையறையில் தெளிவின்றியிருந்தார் என்பதை ஒரு குறையாகக் கூறமுடியாது; ஏனென்றால் அதற்குரிய வரையறையை இன்னும் மிகப் பெரும்பாலோரால் வகுத்துக்கொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் தேசியச் சிக்கல் ஆழப் புரையோடிப்போயுள்ளது. தேசிய ஒடுக்குமுறையின் உள்ளடக்கமான பொருளியல் ஒடுக்குமுறை மிக மறைமுகமாகவும் மென்மையாகவும் மயங்க வைக்கும் முழக்கங்களின் பின்னணியிலும் நடைபெறுவதால் அதனை வெளிப்படையாகப் புரிந்துகொண்டு எதிர்ப்புக் கோட்பாடு ஒன்றை வகுக்க எவராலும் இயலவில்லையாயினும் இந்தத் தேசிய ஒடுக்குமுறைச் சூழலை இங்குள்ள மக்கள் தன்னுணர்வின்றியே புரிந்துகொண்டுள்ளனர். எனவே பழையவர்கள் விலகினாலும் மீண்டும் மீண்டும் புதியவர்கள் தென்மொழியை மொய்த்தார்கள்.

இப்படிப்பட்ட குழப்பமான நிலையில் பொதுமை இயக்கதினர், அதிலும் மூன்றாம் அணி என அறியப்படும் மா.இலெ. குழுவினர் தங்களுக்கு இளைஞர்களைப் பிடிப்பதற்குத் திராவிடர் கழகத்துடன் தென்மொழி இயக்கத்தையும் ஒரு மூலவளமாகக் கொண்டனர். இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழுணர்வும் தமிழக விடுதலை வேட்கையும் தமிழகக் குமுக மாற்ற நாட்டமும் கொண்ட இளைஞர்கள் மா.இலெ. இயக்கங்களின் தலைவர்களின் வழிகாட்டலால் எந்தவித மக்கள் பின்னணியும் பாதுகாப்பும் பெறாத நிலையில் நடுத்தெருவில் கொண்டுவிடப்பட்டு அவர்களில் கணிசமான தொகையினர் காவல்துறையினால் நாய்களைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களைப் போல் பல மடங்கு எண்ணிக்கையினர் செயலிழந்து போயினர். எனவே இந்த நிகழ்ச்சியை எம்போன்றோரால் தவறான வழிகாட்டல் என்று ஒதுக்கித்தள்ள முடியவில்லை. திட்டமிட்ட அழிம்புவேலை என்றே ஐயுற வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல இந்த அழிம்புவேலைக்கு இரையாயின இளைஞர்களில் கிட்டத்தட்ட அனைவருமே பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோருமே என்பது இதிலுள்ள கொடிய உண்மை.

இந்நிகழ்ச்சிக்குப் பின் தமிழகத் தேசியப் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட பின்னும் மக்களைத் தங்கள் பால் ஈர்காதது மட்டுமல்ல அயற்படவும் வைக்கும் பழைய ஆசான்கள் வகுத்துத்தந்த கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் நடைமுறைகளையுமே பின்பற்றியதால் தமிழரசன் போன்ற வீறுமிக்க போராளிகளும் முன்னவர்களின் துயர முடிவையே எய்தினர்.

இன்று மார்க்சிய-இலெனினியக் குழுக்களிலிருந்து தமிழகத் தேசிய சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்புக் குரல்கள் எழுவதற்குத் தங்கள் போலி மார்க்சியத் தலைவர்களை உதறிவிட்டு வெளிவந்த முன்னாள் தென்மொழிக் குழுவினர் தான் காரணம். இருப்பினும் கோட்பாட்டளவில் தமிழகத் தேசியப் போராட்டத்துக்கும் தமிழகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை ஒழிப்புக்கும் இடையிலுள்ள இயங்கியல் உறவைப் புரிந்து கொள்ளாமல் இரண்டையுமே வெற்று முழக்கங்களாகவே இவர்கள் இன்றுவரை வைத்துள்ளனர்.

இவ்வாறு பாவலரேறு அவர்களை நாடிச்சென்ற உள்ளங்கள் எண்ணிலடங்கா. அவர்களைச் சிதறாமல் வைத்துத் தமிழகத் தேசியத்துக்கேற்ற ஒரு செயற்திட்டத்தை வகுத்துச் செயலாற்ற முடிந்திருக்குமாயின் அவரது குறிக்கோள்கள் இதற்குள் நிறைவேறியிருக்கும் என்று கூற முடியாது; ஏனென்றால் இந்தக் குறிக்கோளை அடைய நாம் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் மிகக் கடுமையும் கொடுமையும் வாய்ந்தவை; போராட்டமும் நீண்ட நெடியதாயிருக்கும். ஆனால் அந்தப் பாதையில் குறிப்பிட்ட அளவு முன்னேறியிருக்க முடியும்.

ஆனால் காலம் அவ்வாறு நினைக்கவில்லை. பாவலரேறு அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள அலையெனத் திரண்டிருந்த உள்ளங்கள் தங்கள் கனவுகளும், குறிக்கோள்களும் திசையறியாமல், நடுக்கடலில் நிற்பதைக் கண்டு கலங்கியவையே. அக்கனவுகளுக்கு வேறெந்த பற்றுக்கோடும் இல்லாத நிலையில் அக்கனவுகளுக்கும் குறிக்கோள்களுக்கும் ஒரே அடையாளமாக விளங்கிய ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் திருவுருவை இறுதியாகக் காண்பதன் மூலம் தங்கள் கனவுகளையும் குறிக்கோள்களையும் மீண்டும் வலிமையேற்ற வந்து மொய்த்தனையே.

தமிழகத் தேசிய ஒடுக்குமுறை ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் 1800 ஆண்டுகள் பழமையானது. அத்தேசிய உணர்ச்சியையும் எழுச்சியையும் வெளிவிசைகளும் உள்விசைகளும் திசைதிருப்பி மக்களை ஒருவரோடொருவர் மோதவிட்டுச் சிதைந்துவைத்திருக்கின்றன. அதே விசைகளும் மேலும் மேலும் புதிதான விசைகளும் அதே வகையான குழப்பங்களைப் புகுத்தி ருகிறார்கள். தேசியத்தின் மீது உண்மையான பரிவும் பற்றும் உள்ள சிலரும் தம் அறியாமையாலும் திசை மாறிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளாலும் கூடத் தங்களை அறியாமலே, தங்களுக்கு இயல்பான தெளிவையும் மீறி இக்குழப்பமூட்டும் பணிகளைச் செய்துவருகின்றனர்.

ஆனால் தமிழகம் என்றுமே தோற்றதில்லை. கடந்த 1800 ஆண்டுகளாக அது தன் அடையாளத்தையும் தேசிய ஓர்மையையும் கட்டிக்காத்துவந்துள்ளது. ஆனால் இன்று போல் அது தன் தேசியக் குறிக்கோளை ஐயந்திரிப்பின்றி வெளிப்படையாக அடையாளங்கண்டதில்லை. எனவே அத்தேசியக் குறிக்கோளை, அதற்கு உரிய கோட்பாட்டை வகுத்தும் அதனடிப்படையில் செயல்திட்டம் ஒன்றை வரையறுத்தும் அவற்றினடிப்படையில் இயக்கமொன்றைக் கட்டியும் எய்தும் நாள் தொலைவிலில்லை.

அவ்வாறு தமிழகம் தன் தேசியக் குறிக்கோளை நோக்கி நடைபோடும் போதும் அதனை எய்திய பின்னரும் அத்தேசியக் குறிக்கோளுக்காகப் பாடுபட்ட நேர்மையான தலைவர்களில் காலவரிசையில் முதலாவதாக ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனாரே நிற்பார்.

தமிழகத் தேசியம் என்ற ஒன்றுக்காகப் பாடுபடுவதாகத் திராவிட இயக்கத்தை இத்தமிழக மக்கள் நம்பினார்கள். ஆனால் அவ்வியக்கம் தங்கள் தன்னலத்திற்காகப் பொய் பேசி இம்மக்களை ஏமாற்றிவிட்டது என்று இன்று அனைவருக்கும் புரிகிறது. அவ்வியக்கம் வீசியெறிந்துவிட்டத் தமிழகத் தேசியக் குறிக்கோளைப் பொன்னேபோல் போற்றி எண்ணற்ற இளைய தலைமுறையினரின் உள்ளங்களின் மீது அழுத்தமாக அமர்த்திவைத்துவிட்ட பாவலரேறு அவர்களின் மிகப்பெரும் பணி காலத்தால் அழியாதது. அதற்காக அவர் தன் உயிரையே தேய்த்துக் கொண்டார். அத்தகைய அரிய அந்தத் தமிழகத் தேசியத்தை அதன் திசையறிந்து, இலக்கு நோக்கி எடுத்துச் செல்வோம்.


(இக்கட்டுரை 1995ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகும்)

12.7.09

தமிழக மறுமலர்ச்சிக்கான உடனடித் திட்டங்கள்

தமிழக மறுமலர்ச்சிக்கான உடனடி திட்டங்கள்:

1. மூலதனம்:

· வருமான வரியை முற்றாக ஒழிக்க வேண்டும்.

· இரண்டாம் நிலை பங்குச் சந்தையை முற்றாக ஒழிக்க வேண்டும்.

· பங்குகள் மறு விற்பனையை வெளியிடும் நிறுவனங்களே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். மறுவிற்பனை விலையே பங்குகளின் புதிய முகமதிப்பாக வேண்டும்.

· 10 கோடி உரூபாய்க்கு மேல் மூலதனமுள்ள நிறுவனங்கள், 51 நூற்றுமேனிக்கும் குறையாத மூலதனத்தைப் பங்கு முதலீட்டின் மூலமே பெற வேண்டும்.

· வங்கிகள் பங்குகள் மூலமோ கடன்கள் மூலமோ தொழில் முதலீட்டில் இறங்கக் கூடாது.

· தமிழகத்தில் வெளியார் யாரும் முதலிடக் கூடாது.

· வாக்குத்தத்தப் பத்திரத்தின் மீது கடனைக் கொடுப்பவர்களுக்கு ஆண்டுக்கு 12% வட்டியுடன் சட்டப் பாதுகாப்பு வேண்டும். கடன் பணத்தை விரைந்து மீட்பதற்கான நடவடிக்கைகளுக்குச் சட்டத்தில் வகை செய்ய வேண்டும்.

2.நிலமீட்பு:

மாநிலங்கள் சீரமைப்பின் போது நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட

· நெய்யாற்றின்கரை, செங்கோட்டையில் பாதி, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகியவற்றைக் கேரளத்திடமிருந்தும்,

· சித்தூர்,புத்தூர், நெல்லூர், திருப்பதி, ஆகியவற்றை ஆந்திரத்திடமிருந்தும்,
· வெங்காலூர், தங்கவயல், கொள்ளேகாலம் ஆகியவற்றைக் கன்னடத்திடமிருந்தும்,

· கச்சத்தீவை சிங்கள அரசிடமிருந்தும் மீட்க வேண்டும்.

3. குடியுரிமை:

· 1.11.1956க்குப் பின் தமிழகத்திலும் தமிழகத்துக்குரிய மேற்கூறப்பட்ட பகுதிகளிலும் குடியேறியவர்களுக்குத் தமிழகத்தில் குடியுரிமை கூடாது. அவர்கள் தமிழகத்திலும் தமிழகத்திற்குரிய பகுதிகளிலும் நிலங்கள் வாங்கவோ தொழில்கள் தொடங்கவோ வாணிகம் செய்யவோ உரிமை கூடாது. ஏற்கனவே நிலம் வாங்கியவர்கள், தொழில்கள் தொடங்கியவர்கள், வாணிகம் செய்தவர்கள் ஆகியவர்களிடமிருந்து அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். 1.11.1956க்கு முன்பே வெளியிலிருந்துவந்து தொழில் வாணிகம் செய்து ஆதாயத்தை வெளியே கொண்டுசென்றவர்களிடமிருந்தும் பறிமுதல் செய்யப்படும்.

4. நிலவுடைமை:

· நில உச்சவரம்பு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

· குத்தகைப் பயிர்முறையை முற்றாக ஒழிக்க வேண்டும்.
உடமையாளருக்கும் பயிரிடுவோருக்கும் 50:50 என்ற வாய்பாட்டைக் கையாள வேண்டும். இதில் கோயில்களுக்கோ அறக்கட்டளைகளுக்கோ பிற நிறுவனங்களுக்கோ எந்த விலக்கும் கூடாது.

· உரிமை மாற்று ஆவணமின்றி பட்டா வழங்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும். பட்டா வழங்கும் அதிகாரத்தை வருவாய்த் துறையிலிருந்து எடுத்துவிட வேண்டும். உரிமைமாற்று ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்குவதைப் பதிவுத்துறையின் பொறுப்பில் விட வேண்டும்.

· பத்திரப் பதிவுக்கு வழிகாட்டி விலை நிறுவுவதைக் கைவிட வேண்டும்.

5. வேளாண்மை:

· வேளாண் விளைபொருட்களைத் தமிழகத்தின் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கோ, அண்டை மாநிலங்களுக்கோ கொண்டுசெல்வதற்கும் அங்கிருந்து கொண்டுவருவதற்கும் எந்தத் தடையும் கூடாது.

· வேளாண் விளைபொருட்களில் வாணிகம் செய்ய உரிமம் பெற்ற வாணிகர் முறையை ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அதற்கு உரிமை வேண்டும்.

6. தொழில்வளம்:

· தொழில் தொடங்குவதற்கான உரிமம் வழங்கும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

· ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ஓர் அறிவியல் - தொழில்நுட்பக் காப்புரிம அலுவலகம் தொடங்க வேண்டும். தேவையானால் மக்களே அவற்றை அமைக்க வேண்டும்.

7. வாணிகம்:
· சில்லரைக் கடைகளில் எந்த வகையான வரியும் தண்டக் கூடாது. எல்லாப் பொருட்களையும் அனைத்து வரிகளும் அடங்கியவாகிய பொதியல்களாகவே விற்க வேண்டும். அவ்வாறு பொதிய முடியாப் பண்டங்கள் இருந்தால் அவற்றுக்கு வரிகளை நீக்க வேண்டும்.

· வாணிகர்கள் அமைப்பாக இணைந்து கூட்டாக பெரும் வாணிக வளாகங்களை அமைப்பதை ஊக்க வேண்டும். நாகர்கோயில் அப்டா சந்தையை ஒரு முன்னோடி அமைப்பாகக் கொள்ளவேண்டும்.

· டாலரின் நாணய மதிப்பை உரூ.30 ஆக உடனடியாகக் குறைக்க வேண்டும்.(நம் நாணய மதிப்புக்குச் சமமாக்குவது இறுதி இலக்கு.)

8. பண்பாடு:

· சாதிக்கு பார்ப்பனர், ஆரியர் என்ற பிறர் மீது குற்றம் கூறி நம்மிடையே உறைந்திருக்கும் சாதிவெறியை மறைப்பதைக் கைவிட்டு தத்தம் சாதிகளுக்குள் இருக்கும் சாதி ஆதிக்க வெறியை ஒவ்வொருவரும் எதிர்த்துப் போராட வேண்டும்.

· ஆணுக்குப் பெண் இளைத்தவள் என்று அவளுக்கு மட்டும் கற்பை வலியுறுத்தும் நம் பண்பாட்டை எதிர்த்து மணவிலக்கு, மறுமணம், கைம்பெண் மறுமணத்தை வலியுறுத்திப் பெண்களிடையில் பரப்பல் செய்ய வேண்டும்.

· பல நூறு தன்கள் எடையுள்ள மரக்கட்டை மீது பொம்மையை வைத்து இழுக்கும் மடமையும் கயமையும் நிறைந்த, வருணக் குமுக அமைப்பைக் காட்டும், ஆகமக் கோயில்களை இடித்து நிரவி அனைவரும் சமமாக அமர்ந்து தமிழ் மொழியில் வழிபாடு நிகழ்த்தும் சமய நெறியைப் புகுத்த வேண்டும்.

· பண்டம் விளைப்போரையும் உழைப்போரையும் வினைசெய்து மீண்டும் மீண்டும் பிறந்து உழலும் தீவினையாளர்கள் என்று இழிவுபடுத்தி குண்டியிலிருந்து ஆற்றலை எழுப்பி கடவுளாகலாம் என்று கூறும் உலகில் எங்குமில்லாத கடைகெட்ட ஒட்டுண்ணிக் “குண்டிலினி”க் கோட்பாட்டை அடியோடு ஒழிக்க வேண்டும்.

· ஊருக்கு இளைத்தவனாக அனைவருக்கும் ஏளனத்துக்குரியவனாகத் தமிழனை ஏமாளியாக்கும், இங்குள்ள ஏமாற்றுக்காரர்களுக்கு வாழ்வளிக்கும் “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற மடைமையைக் கைவிட்டு தமிழகமே எம் ஊர், தமிழக மக்களே எம் உறவினர் என்ற உறுதியான நிலையை எடுக்க வேண்டும்.


9. கல்வி:

· கட்டாய இலவயக் அகல்வி முழுவீச்சில் செயல்படுத்தப்படும்.

· தொடக்கக் கல்வி முழுவதும் பத்தாம் வகுப்பு வரை அரசே பொறுப்பேற்க வேண்டும்.

· தமிழகம் முழுவதும் பிற மொழிப்பாடங்கள் தவிர தமிழே பாடமொழியாக வேண்டும்.

· உடலுழைப்பு தொடர்பான அனைத்துத் தொழில்களும் குறித்த பாடத்திட்டங்கள் கல்வித் துறையில் புகுத்தப்பட வேண்டும்.

· இளஞ்சிறார்களின் திறமை, மனச்சாய்வு அறிந்து அவர்களை இளங்காணும் உளவியலில் தேர்ந்த ஆசிரியர்களையே மழலை மற்றும் தொடக்க நிலை வகுப்புகளுக்கு அமர்த்த வேண்டும். இயற்கையான திறமைகளை வளர்க்கவும் தீங்கான மனப்போக்குகளை நீக்கவும் தொடக்கக் கல்வியை இந்த வகையில் திட்டமிட வேண்டும்.

· துறைக் கல்விகளில் சான்றிதழ் கல்வி → வேலை → நுழைவுத் தேர்வு → பட்டயம் → வேலை → நுழைவுத் தேர்வு → பட்டப் படிப்பு என்று இடை முறித்து வழங்க வேண்டும். பணிகளில் நேரடி உயர்பதவி முறையை ஒழிக்க வேண்டும்.

· ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:20க்குக் குறையக் கூடாது. அதாவது ஒரு வகுப்பறையல் ஓர் ஆசிரியருக்கு 20 மாணவர்களுக்கு மேல் இருக்கக் கூடாது.

10. சட்டம்:

· இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும்.

· முழுத் தன்னாட்சியுடைய மாநிலங்களின் கூட்டாட்சியாக அரசியல் அமைப்பை மாற்றியமைக்க வேண்டும்.

11. தேர்தல்:

· வாக்குச் சீட்டுத் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

· நிறுவப்பட்ட தகுதிகளை உடைய குடிமக்களிலிருந்து அனைத்து வகை ஆள்வினையாளர்களையும் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஊராட்சியின் நடவடிக்கைகளை அதனுள் அடங்கிய குடிமக்களின் ஊர்க்கூட்டத்தில் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.

· தேர்தல்களை நடத்துவதற்கென்று தனியான ஊழியர்களுடன் நிலையான ஓர் ஆணையம் இயங்க வேண்டும்.


தொடர்புக்கு:
குமரிமைந்தன்
தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம்
72அ. என்.சி.ஓ. நகர், சவகர் நகர் 12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம் - 625 706, பேசி: 97906 52850.
மின்னஞ்சல் kumarimainthan@gmail.com

திரு. பொன். மாறன்,
தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (மதுரைக் கிளை)
80ஏ, மேலமாசி வீதி, மதுரை - 625 001, பேசி: 94439 62521.

திரு. இரா.தமிழ்மண்ணன்,
தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (பறம்புக்குடி கிளை),
3/538, எம்.சி.ஆர்.நகர், பொன்னையாபுரம், பறம்புக்குடி - 623 707, பேசி: 97893 04325.

தமிழக நிலவரம்(2009) .....5

ஆற்றுநீர்ச் சிக்கலைப் பற்றிச் சிலவற்றைக் கூற வேண்டும்.

இச்சிக்கலில் கேரளம், ஆந்திரம் ஆகியவற்றைப் பொறுத்தவரை நாம் 1956 நவம்பர் 1ஆம் நாள் இழந்த நிலப்பரப்புகளுக்குள்தாம் இழக்கும் நீருரிமைக்குரிய கட்டமைப்புகள் உள்ளன. எனவே அந்நிலப்பரப்புகளை மீட்க வேண்டும் என்பது தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத்தின் குறிக்கோள்களில் முகாமையான ஒன்று.

அதே வேளையில் இது குறித்து சில செய்திகளைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். 1964இல் இலால்பகதூர் சாத்திரி தலைமை அமைச்சராக இருந்த காலத்தில் தற்காலிகமாக ஏற்பட்ட ஒரு வரட்சியைப் பயன்படுத்தி, வழக்கமாகச் செய்து வந்த உணவுத் தவச இறக்குமதியை நிறுத்தி, அந்த வகையில் தவிர்த்திருக்கத்தக்க செயற்கையான ஒரு பஞ்சத்தை ஏற்படுத்தி உழவர்கள் மீது மிகக் கொடுமையான ஒடுக்குமுறைகளை ஏவினார். உணவுத் தவச(தானிய)ங்களின் நடமாட்டத்துக்குப் பெரும் கட்டுப்பாடுகள், உழவர்களும் வாணிகர்களும் அரிசி ஆலைகளும் உணவுத் தவசங்களை வைத்திருப்பதற்குக் கொடுமையான கட்டுப்பாடுகள், அரசு கொள்முதல் நிலையங்களிலும் உரிமம் பெற்ற வாணிகர்களுக்கும்தான் உணவுத் தவசங்களை உழவர்கள் விற்கமுடியும் என்ற நிலை, உணவுத் தவசத்தில் சில்லரை வாணிகத்தை ஒழித்தல் என்று தொடங்கிய கொடுமை இன்றும் தொடர்கிறது. இதில் மாநில அரசுகளுக்கு கோடி கோடியாக ஊழல் வருமானம் சேர்கிறது. இதில் பங்கு பெறுவதற்காக நடுவரசு அவ்வப்போது மாநிலத்துக்கு மாநிலம் உணவுத் தவச நடைமாட்டத் தடையை நீக்குவதாக அறிவிக்கும். உடனே மாநிலங்கள் தங்கள் ஊழல் பங்கை உரியவர்களிடம் சேர்க்கும். இது இன்றுவரை தொடர்கிறது. முடையிருப்பு என்ற பெயரில் நடுவரசும் மாநில அரசுகளும் பல கோடி தன்கள் உணவுத் தவசங்களை வாங்கி வெட்டவெளியில் போட்டு பெருமளவில் அழிய விட்டுக் கள்ளக் கணக்கு எழுதி அதிலும் கொள்ளையடிக்கிறார்கள். இந்தக் கொடுமை நின்று போகாமல் நம் பொதுமைக் கட்சிகள் கண்கொத்திப் பாம்புகள் போல் கண்காணிப்பதில் குறியாக இருக்கின்றன.

இந்தக் கெடுபிடிகளெல்லாம் செயற்கையானவை என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. 1977இல் பதவியேற்ற சனதா அரசு இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கியதும் பங்கீட்டுக் கடைவிலைக்கும் வெளிச் சந்தை விலைக்கும் இடைவெளியின்றி பங்கீட்டுக் கடைகள் ஏறக்குறைய செயலிழக்கும் நிலை வந்தது. அமெரிக்கக் கையாளான இராசநாராயணன் வகையறாக்கள் அந்த ஆட்சியைக் கவிழ்க்க, மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா அக்கட்டுப்பாடுகளை மீண்டும் புகுத்தினார்.

பொதுமைத் தோழர்களைப் பொறுத்தவரை, அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளும் அரசின் கீழ் வர வேண்டும்; அரசூழியர் படை பெருக வேண்டும்; சங்கங்களை அமைக்க வேண்டும்; அவர்கள் கொள்ளை அடிக்க வேண்டும்; அதில் பங்குபெற வேண்டும்; கூலி உயர்வுக்கும் சலுகைகளுக்கும் போராட வேண்டும்; கிடைத்ததிலும் பங்கு பெற வேண்டும். தொழில்கள் நட்டமடைந்தால் மக்களின் வரிப் பணத்தை “மானியமா”கக் கொடுக்க வேண்டும்; வருமான வரியை முடுக்கிவிட்டு பனியாக்களுக்குப் போட்டியாகத்தக்க பல்வேறு தேசியங்களின் மூலதனத்தை முடக்க வேண்டும். மாதத்துக்கு 70,000க்கு மேல் சம்பளமும் அதற்கு மேல் கிம்பளமும் எத்தனையோ பக்க வருமானமும் வரவுவைக்கும் உயரதிகாரிகள் அவ்வளவையும் வாங்கி கிழமைக்கு ஏழு மணி நேரம் மட்டும் பணி செய்ய வேண்டிய பேராசிரியர்கள் தலைமையில் சங்கங்களும் கலை – இலக்கியப் பேரவை, முற்போக்கும் இலக்கிய மன்றங்களும் அமைத்துப் “பாட்டாளியப் புரட்சி” பற்றி நீட்டி முழங்க வேண்டும். பத்தாயிரம் உரூபாய் ஈட்டுவதற்கு நாய் படா பாடு படும் சிறுதொழில் செய்வோனையும் சிறு வாணிகனையும் சுரண்டல்காரன், கொள்ளை அடிப்பவன், அரத்தக் காட்டேரி என்று ஈவிரக்கமின்றி வசைபாடி அவன் உள் வலிமையை அழித்து அடித்தாலும் அழமுயலாத திருடன் மனநிலையில் அமிழ்த்தி தேசிய ஒடுக்குமுறையாளர்கள் தங்கள் விருப்பம் போல் நம் செல்வங்களைக் கொள்ளை கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும். மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? எந்த மூலையில் எந்தக் கடையின் முன்னால், எந்த அலுவலகத்தில் கையேந்திக் காத்துக்கிடந்தால் என்ன? எவன் எந்த நாட்டைக் கொள்ளையடித்தால் என்ன?

நில உச்சவரம்பால் 10 ஆயிரம் கணக்கில் நிலம் வைத்திருந்த பெரும் முதலைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டார்கள். 100 ஏக்கருக்கு உட்பட்டவர்கள்தாம் இல்லாமல் ஆனார்கள். அதனால் வேளாண்மையில் வலிமையான அரசியல் விசைகள் இல்லாமல் போயின. எனவே நீர் வரத்துகளில் அண்டை மாநிலங்கள் கைவைத்த போது எழுந்து நின்று போராடும் வலிமை வேளாண் மக்களுக்கு இல்லாமல் போயிற்று.

இந்நிலையில் 1990களின் நடுப்பகுதியில் கரூர் பூ.அர.குப்புசாமி அவர்கள் காவிரி நீர் தொடர்பாகத் திருச்சியில் கூட்டிய கூட்டத்தில் நான் கலந்துகொண்டு உழவர்கள் மீது அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் கொடுமைகளை விளக்கி இந்தச் சிக்கலையும் சேர்த்து முன்னெடுத்தால்தான் காவிரிச் சிக்கலில் உழவர்களை ஒருங்கிணைக்க முடியும் என்று கூறினேன். கலந்துகொண்ட வேளாண் தலைவர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். ஆனால் பெரியவர் குப்புசாமி அது குறித்து எதுவும் கூறவில்லை. அடுத்து அவர் கரூரில் கூட்டிய கட்டத்தில் உழவர் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை. தொண்டு நிறுவனங்கள்தாம் கலந்துகொண்டன. உழவர்களின் சிக்கல்களுக்கு சீமை உரங்கள் மட்டும்தான் ஒரே காரணம் என்று அவர்கள் அடித்துக்கூறினர்.

பின்னர் எமது இயக்கத்தின் சார்பில் பெரியாற்று அணை நீர் உரிமைப் போராட்டம் குறித்து கம்பம் உழவர் சங்கத் தலைவர் அப்பாசு என்பவரிடம் அவர் வீட்டில் சந்தித்து எம் கருத்தை எடுத்துரைத்தோம். அடுத்த நாள் காலையில் எங்களை அவர் வரச்சொல்ல, சென்ற போது வீட்டிலிருந்த இரண்டு இளைஞர்கள் எங்களைத் திட்டி விரட்டினர்.

அதன் பின்னர் மதுரையில் பெரியாற்று நீருரிமை குறித்து ஒரு மாநாடு நடந்தது. அதை திரு.தியாகு அவர்கள் ஒருங்கிணைத்தார் என்று நினைவு. அதில் அந்த அப்பாசும் கலந்து கொண்டார். அவர் தி.மு.க. என்று அறிந்தேன். மாநாட்டு மலருக்காக மதுரை திரு.வி.மாறன் கட்டுரை கேட்டிருந்தார். விடுத்தேன். மாநாட்டில் என் கருத்துகளை எடுத்துரைத்தேன். அனைவரும் பாராட்டினர். மாநாட்டு மலர் வெளிவந்ததாகத் தெரியவில்லை. பூ.அர.குப்புசாமியும் கலந்துகொண்டார். பின்னர் அப்பாசு அவர்கள் கேட்டதற்கு இணங்க பெரியாற்று ஆணையைக் கட்டிய ஆங்கிலப் பொறியாளர் பென்னிக்குயிக்குக்கு ஒரு சிலை வைத்துக்கொடுத்தார் கருணாநிதி. பெரியாற்று அணை நீருக்கு நமக்குக் கிடைத்த விலை இந்தச் சிலைதான். ஆனால் கருணாநிதிக்கோ கேரளத்தில் இரண்டு மூன்று தொ.காட்சி வாய்க்கால்கள் கிடைத்தன. நமக்குத் தெரியாமல் என்னென்னவோ, எத்தனை எத்தனையோ! தி.க. தலைவர் கி.வீரமணி செயலலிதாவின் காலடியில் இருந்த போது கருணாநிதியைக் குறைசொல்ல ஒரு வாய்ப்பாகக் காவிரிச் சிக்கலை எடுத்துவைப்பவராகச் செயற்பட்ட பூ.அர.குப்புசாமி, “மானமிகு” வீரமணி கருணாநிதியின் காலடிக்கு வந்ததும் ஓய்வுக்குப் போய்விட்டார்.

மதுரை மாநாடு உண்மையில் பூ.அர.குப்புசாமியின் முயற்சிக்கு இணையாக தி.மு.க. சார்பில் நடத்தப்படதுதான். இரண்டும் ஒரு நாடகத்தின் இரண்டு அங்கங்கள். தமிழகத்திலுள்ள “தமிழ்த் தேசிய” இயக்கங்கள் கருணாநிதி பக்கம் இருந்ததற்கு இம்மாநாடும் ஒரு சான்று.

தஞ்சையிலும் ஒரு பேரணி, பொதுக் கூட்டம் எல்லாம் நடந்தது. நானும் கலந்துகொண்டு என் கருத்தைச் சொன்னேன். இது குறித்து த.தே.பொ.க.தலைவர் மணியரசனுடன் மடல் போக்குவரத்தும் வைத்துக்கொண்டேன். எந்தப் பயனும் இல்லை. இங்கும் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு எந்தத் “தமிழ்த் தேசிய” அமைப்பும் முன்வரவில்லை.

இதற்குக் காரணம்தான் என்ன? நாம் மேலே குறிப்பிட்டவாறு “தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகள் ஆகியவற்றில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒட்டுண்ணிகளின் கோட்பாட்டைக் கொண்டுள்ளனர். தாம் வாழும் மண்ணின் மீது மனத்தளவில் வேர் கொள்ளாதவர்கள் இவர்கள். ஊர்ப்புறங்களிலிருந்து வெளியேறிய பார்ப்பனர்கள் அனைந்திந்தியப் பணிகளிலும் பெரும் நிறுவனங்களின் ஆட்சிப் பணிகளிலும் இடம் பிடித்தனர். அவர்களோடு இவர்கள் ஒதுக்கீட்டின் மூலம் பங்குக்காகப் போட்டியிடப் போராடுகின்றனர். வெளிநாடுகளிலும் பார்ப்பனர்களோடு இதே போட்டி உள்ளது. அதனால் பார்ப்பனர்களே அவர்களின் முதல் எதிரி, பெரிய எதிரி. (எலிக்கு பூனைதான் உலகிலேயே பெரிய விலங்காம் தோழர் லேனின் அடிக்கடி சுட்டிக்காட்டும் எடுத்துக்காட்டு இது.) அவ்வாறு தமிழகத்திலுள்ள பார்ப்பனரல்லா “கீழ்” (பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட) சாதிகளில் மேல்தட்டிலுள்ள ஒட்டுண்ணி வாழ்க்கையை நாடுவோரின் நலன்களை நிகரளிப்பவர்களாகவே இந்தத் தலைவர்கள் விளங்குகின்றனர்.

இந்த ஒட்டுண்ணிப் பணிகளில் இடம் பிடிப்பதற்காகப் போராடிப் பெற்ற ஒதுக்கீட்டினால்தான் தமிழக மக்கள் அணு அணுவாகச் சிதைந்து சிதறிக் கிடக்கிறார்கள். ஒதுக்கீட்டுக்கான போராட்ட காலத்தில் பார்ப்பனர் தவிர்த்த அனைத்துச் சாதியினரும் தம் சாதிவெறியைச் சிறிது அடக்கி வைத்திருந்தனர். ஆனால் ஒதுக்கீடு கிட்டியதும் முதலில் வெள்ளாளர் உட்பட பிற மேல்சாதியினர் தமக்கு வரும் இழப்பை ஈடுகட்ட அரசுடைமை நிறுவனங்களில் இடம்பிடித்துத் தப்பித்துக்கொண்டனர். அத்துடன் புதிதாகத் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்குப் புதிதாகத் தொடங்கப்பட்ட கல்வி நிலையங்கள் போதிய எண்ணிக்கையில் படித்தவர்களை வெளிக்கொணர முடியாததால் வேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டால் எந்தப் பெரும் சிக்கலும் உருவாகவில்லை. ஆனால் படித்தவர்களின் எண்ணிக்கை மிகுந்து அதற்கு வேலைவாய்ப்புகள் ஈடுகொடுக்க முடியாதபோது சிக்கல்கள் உருவாயின. முதலில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இடையில் மாணவர்கள் மட்டத்தில் மோதல்கள் வெடித்தன. அடுத்து பிற்படுத்தப்பட்டோரில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் என்றொரு வகைப்பாட்டுக்காகப் போராட்டம். தாழ்த்தப்பட்டோரில் பறையர், பள்ளர்களிடையில் பிளவு. கிறித்துவர்களிடையில் மேல்சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்று பிளவு. புதிய புதிய சாதி அமைப்புகள். தங்கள் சொந்த நலன்களைக்காகவும் மேல்மட்டத்தினர்க்கு ஒதுக்கீடு கிடைக்கவும் அடித்தள மக்களுக்குச் சாதிவெறியூட்டிப் பிற சாதி மக்களோடு மோதவிட்டு அவர்களை வாக்கு வங்கிகளாக்கி விலை பேசி விற்கும் தலைவர்கள் ஒவ்வொரு சாதியிலும் சாதிப் பிரிவிலும் உருவாகிவிட்டது என்று தமிழகத்தில் மக்கள் அணு அணுவாகப் பிளக்கப்பட்டுள்ளனர். சமயங்களுக்குள்ளும் புதிது புதிதாகப் பிளவுகள் தோன்றிவருகின்றன. பிற மொழி பேசும் மக்களிடையிலும் இதே நிலை.

ஒரு நெருக்கடித் தீர்வாக மட்டும் முன்வைக்கப்பட்ட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் வென்ற உடனேயே நம் தலைவர்கள் நாணயமானவர்களாக இருந்திருந்தால் அனைவருக்கும் கல்விக்காகப் போராடி திட்டங்களும் தீட்டியிருப்பார்கள். அதுதான் போகட்டும் இன்றைய “சாதி ஒழிப்புப் புரட்சியாளர்”கள் அந்தத் திசையில் சிந்திக்கவாவது செய்திருக்கிறார்களா? செய்யாமல் போனாலும் போகட்டும், கேடாவது செய்யாமல் இருக்கலாமல்லவா? இவர்கள் தலையில் தூக்கிவைத்துக் கூத்தாடும் “தமிழீனத் தலைவர்”தானே 1க்கு 20 ஆக இருந்த ஆசிரியர் - மாணவர் விகிதத்தை 1க்கு 40 ஆக்கியது? கருணாநிதிதானே பள்ளிகளில் காலியான ஆசிரியப் பணியிடங்களை நிரப்பாமலும் தொடக்கப்பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக்கியும் குழந்தைகளை ஆங்கில வாயில் பள்ளிகளுக்குத் துரத்தியது? இன்று புதிய புதிய “திட்டங்களி”ன் பெயரில் அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் ஏழைக் குழந்தைகளுக்கு எழுத்தறிவே இல்லாத நிலையை உருவாக்கி பண்டை வரணமுறையைப் புகுத்திக்கொண்டிருப்பது? கருணாநிதியின் பின்னர் அணிவகுத்து நிற்கும் உங்களுக்கு சாதி ஒழிப்பைப் பற்றியும் வருணமுறை ஒழிப்பைப் பற்றியும் பேச என்ற தகுதி இருக்கிறது? சாதி சார்ந்த, வருணம் சார்ந்த உங்கள் மனச்சாய்வை இது காட்டவில்லையா? சொந்தச் சாதி ஏழை மக்கள் உங்கள் மட்டத்துக்கு உயரவிடாமல் தடையாயிருப்பது நீங்கள் தானே?

மக்களுக்கு எதிராக அரசூழியரை ஊட்டி வளர்க்கும் கருணாநிதி அவர்களுக்கு இடையிலும் பல்வேறு பிரிவுகளை உருவாக்கித் தீர்க்க முடியாச் சிக்கல்களாக்கி வைத்துள்ளார். இதனால் முழுத் தமிழ்க் குமுகமே எண்ணற்ற குழுக்களாகப் பிளவுண்டு ஒருவர் மற்றவரைக் கண்காணிப்பது தவிர வேறு நோக்கில்லாமல் போயிற்று. அதனால் ஆட்சியாளர்கள் அயலாருடன் சேர்ந்து நடத்தும் கயமைகள் மக்களின் கவனத்துக்கு வராமலே போகிறது. மார்வாரியையும் மலையாளியையும் விட அண்டை வீட்டுக்காரனே முதல் எதிரியாகத் தெரிகிறான் நமக்கு. அப்படியிருக்க ஈழத்தவரை அழிக்கும் இராசபக்சே மீதோ அவர்களுக்குத் துணையாக இருக்கும் கருணாநிதி மீதோ சோனியா மீதோ நமது கவனம் எப்படிச் செல்லும்?

அண்டை மாநிலங்களைப் பொறுத்தவரை சென்னை மாகாணத்திலிருந்த அண்டை மாநில மொழி பேசும் மக்களைக் கொண்ட மாவட்டங்கள் தொடர்பாக வந்த மனப் புகைச்சலுடன் பண்டை வரலாற்றுத் தொடர்ச்சியான பகைமையும் உண்டு. இதனையே மூலதனமாகக் கொண்டு அங்கு ஆண்டுவரும் இந்தியக் கட்சிகள் அதைப் பகையாக்கி அரசியல் ஆதாயம் பார்த்து வருகிறார்கள். ஆனால் வல்லரசியம், தில்லியின் மேலாளுமைகள் என்ற வகையில் பல நெருக்கடிகள் அம்மாநிலங்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து மாநில மக்களுக்கும் இருக்கின்றன. எனவே உண்மையான தேசியப் பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் சென்றால் அங்கெல்லாம் தேசிய நலன்களைக் கொண்ட குழுக்கள் வெளிப்பட்டு பகைமை உணர்வுகளைத் தணிக்க முனையும். ஒத்துழைப்புகள் உருவாகும்.

நம் நாடு என்னதான் வல்லரசிய ஊடுருவலால் முதலாளிய நாடு போன்று தோன்றினாலும் அத்தோற்றம் மிக மேலோட்டமான ஒரு போர்வையே. வளர்ச்சி என்பது உண்மையில் வீக்கமே. உண்மையில் அடித்தளத்தில் நிலக்கிழமைக் கூறுகளும் குக்குல(இனக்குழு)க் கூறுகளுமே மிகுந்து காணப்படுகின்றன. அவற்றை உடைத்து தேசிய முதலாளியத்தை நோக்கிச் செல்லும்போதுதான் சாதியற்ற நிலைமைக்கான அடித்தளம் உருவாகும்.

தேசிய அரசியல் விடுதலையாயிருந்தாலும் பொருளியல் விடுதலையாயிருந்தாலும் இன்றைய தமிழகத்தில் அதற்கான முலவிசை நிலக்கிழமைக் குமுகத்திலுள்ள முற்போக்கு விசைகளே. அவை வளர்ந்து தேசிய முதலாளியத்தை வளர்த்துப் புரட்சிகரமான பாட்டாளியரை உருவாக்குவது வரை முதலாளியரும் பாட்டாளியரும் இணைந்து தேசிய எதிரிகளையும் நிலக்கிழமைக் கூறுகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். ஆனால் வெளியிலிருந்து இறக்குமதியான பாட்டாளியக் கோட்பாடு தேசிய முதலாளியம் உருவாகத் தடையாக இருக்கிறது. அதனை மாற்றவே நாம் பங்கு வாணிகம் என்ற சூதாட்டம் இல்லாத பங்கு மூலதனத்தில் பாட்டாளியரும் முதலாளியரும் கூடி இயங்கும் ஒரு கூட்டுடைமை முதலாளியத்தைப் பரிந்துரைக்கிறோம்.

“தமிழ்த் தேசிய” இயக்கங்களும் “தமிழ்” இயக்கங்களும் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கு மாற்றாக ஈழவிடுதலைப் போரைப் பார்த்தும் காட்டியும் மனநிறைவடைந்து வந்தன. இவர்கள் நடத்தும் மாநாடுகளிலும் பிற அரங்குகளிலும் தமிழக விடுதலை (அது என்னவோ கிட்டிப்புள் விளையாட்டு என்பது போல் – அதுதானே நம் “மரபு” விளையாட்டு) பற்றி அல்லது தமிழ்மொழி வளர்ச்சி, அதற்கு எதிரான நிலைமைகள் பற்றிப் பேசுவர். இறுதியில் ஈழத்துவிடுதலைப் புலிகளின் வெற்றி முழக்கம் பற்றி நெடுமாறன் விரிவான ஒரு உரை நிகழ்த்துவார். தன்னால் இயலாதவன் அடுத்தவன் புணர்வதைப் பார்த்தோ அதைப் பற்றிப் பேசக் கேட்டோ உணர்ச்சியும் உவகையும் மனநிறைவும் கொள்வது போல நம் “தமிழ்த் தேசியர்கள்” மெய்ம்மறந்து மெய்சிலிர்த்துப் போவார்கள். இதுதான் ஆண்டுகள் பலவாகத் தமிழகத்தில் “தமிழ்த் தேசிய”ச் செயற்பாடு. இது உள்நாட்டின் மீது வேர் கொள்ளாத ஒரு நிலைப்பாட்டின் விளைவும் வெளிப்பாடுமன்றி வேறென்ன? ஈழத் தேசிய வெற்றி தமிழ்த் தேசிய வெற்றிக்குக் கொண்டு செல்லும் என்று முடித்துக் கூற முடியாது. ஆனால் தமிழ்த் தேசியப் போராட்டம் வலிமை பெற்றிருந்தால் அது கட்டாயம் இந்திய ஆட்சியாளரையும் கருணாநிதியையும் தடுத்து நிறுத்தியிருக்கும். ஈழத் தேசிய வெற்றிக்குக் கைகொடுத்திருக்கும். இன்றைய கையறு நிலை ஏற்பட்டிருக்காது என்பது உறுதியிலும் உறுதி.

எதுவுமே எப்போதுமே காலங்கடந்ததாகி விடாது. காலம் எப்போதுமே புதிய வாய்ப்புகளைத் தந்துகொண்டே இருக்கும். உன்னிப்பாகப் பார்த்து முன்னேறுவோம்! வெல்வோம்!

தேசிய விடுதலை என்பது அரசியல் விடுதலையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அப்படியிருந்தால் இந்தியா என்றோ முன்னேறி இருக்கும். பொருளியல் விடுதலை இல்லாத அரசியல் விடுதலை பொருளற்றது, பயனற்றது.

பொருளியல் விடுதலை இல்லாத அரசியல் விடுதலை தில்லியிலிருக்கும் அதிகாரத்தைச் சென்னைக்குக் கொண்டு வரும்; கருணாநிதி, செயலலிதா வகையறாக்கள் கேள்வி கேட்பின்றிக் கொள்ளையடிப்பார்கள் அவ்வளவுதான்,

நாம் மக்களுக்கான பொருளியல் உரிமைக்காகக் குரல் கொடுக்கிறோம்! அரசின் ஆட்சியாக இருப்பது மக்களின் ஆட்சியாக மாற வேண்டுமென்று கேட்கிறோம்! இந்திய மக்கள் அனைவருக்கும் பொருளியல் உரிமைகள் வேண்டும் என்ற கண்ணோட்டத்தோடு நாம் நம் தமிழகத் தேசியப் பொருளியல் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்!

தமிழக நிலவரம்(2009) .....4

1950கள் வரை தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஊர்ப்புறங்களிலும் கோயில்களைச் சுற்றித் தங்கள் கூட்டாளிகளான தேவதாசிகளுடன் வாழ்ந்தவர்கள் பார்ப்பனர்கள். கோயில் நிலங்கள் தவிர சொந்த நிலங்களும் வைத்திருந்தனர். குத்தகைப் பயிரிடுவோரிடம் நிலவுடைமையாளர் என்ற வகையிலும் கோயில் பூசாரிகள், கோயிலில் இலவயச் சோறு உண்பவர்கள் என்ற வகையிலும் அடங்காத திமிருடன் நடந்துகொண்டனர். அத்துடன் தேவதாசிகளைக் காட்டி ஆங்கிலரிடம் பெற்ற அரசுப் பதவிகளை வைத்துப் பெரும் நிலக்கிழார்கள், சமீன்தார்களையும் மிரட்டிவந்தனர். இதற்கு எதிர்வினையாக நயன்மைக் கட்சியும் பின்னர் தன்மான இயக்கமும் ஒரு புறமும் பொதுமை கட்சிகளின் உழவர் போராட்டங்களும் மறுபுறமும் அவர்களது செல்வாக்கை இழக்கவைத்தன. விட்டால் போதும் என்று கண்டவிலைக்கு விற்றுவிட்டு நகரங்களுக்கு நகர்ந்தார்கள். அவர்களுக்கு அதுவரை அடியாட்களாக இருந்த “போர்ச் சாதிகள்” எனப்படும், வந்தவர்களுக்கெல்லாம் அடிமைசெய்து தம் சாதி மேலாளுமையை நிலைநிறுத்தக் காத்திருக்கும் கூட்டம் அந்தச் சொத்துகளில் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றியதுடன் அவர்களிடமிருந்து எளிய மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையையும் வசப்படுத்திக்கொண்டது.

இன்று ஊர்ப்புறங்களில் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பார்ப்பனர்களின் குடியிருப்புகள் அழிந்து போய்விட்டன. அவற்றில் புதிதாக மேனிலையடைந்த சாதியினர் குடியேறிவிட்டனர். எதிரில் வந்தால் ”ஒத்திப்போ” என்று பிறரைத் துரத்திய பார்ப்பனப் பெண்களைக் கழிந்த இரண்டு தலைமுறை மக்கள் அறியமாட்டார்கள். ஆனால் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நின்றாலோ கையை நீட்டிப் பேசினாலோ அடிக்க வரும் “போர்ச்சாதி”களை, அதாவது எளியவர்களைக் கொடுமைப்படுத்தும் நாயினும் கீழான கோழைகளைத்தான் இன்று நாம் பார்க்கிறோம். உங்களுக்குத் தெரியுமா, இன்று கூட திருநெல்வேலி மாவட்டத்தின் சில மூலைகளில், பல்வேறு தொழில்களும் வாணிகமும் செய்து சிலர் படித்து வேலாக்கும் சென்று நாலு காசு பார்த்தவுடன் நாங்கள் ஆண்ட மரபினராக்கும் என்று தம்பட்டமடிக்கும் மேலடுக்கினைக் கொண்ட நாடார் சாதியினர் மறவர் தெருக்களில் செருப்பணிந்தோ மீதிவண்டியிலோ செல்ல முடியாது என்பதை? ஏதோ சாதியை ஒழிக்கப் போகிறோம் என்று வரிந்து கட்டிக்கொண்டு முழங்கும் தோழர்களே, குடிதண்ணீர்க் குழாயில் தண்ணீர் பிடிக்க, குளத்தில் குளிக்க, சுடுகாட்டுக்குப் போகும் பாதையில் செல்ல உரிமை கேட்டுப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக, ஒடுக்கும் உங்கள் சாதியினருக்கு எதிராகப் போராட நீங்கள் ஒரு நாளாவது எண்ணியதுண்டா? உங்கள் சாதியாரின் வெறியை உலகின் கண்ணிலிருந்து மறைக்கத்தான் நீங்கள் பார்ப்பனர்கள் மீது குற்றம்சாட்டுகிறீர்களா? அல்லது உங்கள் மனச்சான்று உள்ளுணர்வைத் தாக்கி உங்கள் சிந்தனை திசைமாறிப் போய்விட்டதா? சொல்லுங்கள்!

மார்வாரியும் மலையாளியும் நம் நிலங்களைப் பறிக்கிறார்கள் என்று அவ்வப்போது கூறிக் கொள்வீர்கள். ஆனால் மார்வாரிகளின் விளைப்புப் பொருள்களுக்குப் போட்டியாக வளர்ந்துவிட்ட தமிழக மக்களின் தொழில்களை நசுக்கவென்று வருமான வரித்துறையை அந்த மார்வாரி ஏவிவிடுவதற்கு எதிராக என்றாவது நீங்கள் குரல் கொடுத்ததுண்டா? அல்லது வருமான வரித்துறையின் உண்மையான பயன்பாடு பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமா? வருமானவரியால் முடக்கப்படும் பணம் கள்ளப்பணமா? அதாவது சட்டத்துக்குப் புறம்பாக ஈட்டப்பட்ட பணமல்லவே அது! அது மூலதனச் சந்தையில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக எத்தனை விதிவிலக்குகள்? கொஞ்சம் படித்துப் பாருங்கள் தோழர்களே! ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களிலும் தனியார்களிடத்திலும் மட்டும் வேட்டை நடத்துகிறார்களே அது ஏன்? அரசு தன் வருமானத்துக்கு இவ்வாறு மக்களின் வீட்டையும் நிறுவனங்களையும் பகல் கொள்ளையர் போல் சுற்றி வளைத்து சுவரை உடைத்து பேழையைப் பிளந்து படுக்கையைக் கிழித்து தரையைக் குடைந்துதான் வரி தண்ட வேண்டுமா? தேசியப் பொருளியல் ஒடுக்குமுறையில் மிகக் காட்டுவிலங்காண்டித்தனமான இந்த ஒடுக்குமுறை உங்கள் சிந்தையில் உறைக்கவில்லையே ஏன்? “பாட்டாளியப் புரட்சி” வெற்றிநடை போடுகிறது என்றல்லவா மகிழ்ந்து போவீர்கள்? உங்கள் நடவடிக்கைகள் மக்களைச் சார்ந்தவையல்ல, ஆட்சியாளரைச் சார்ந்தவை.

தமிழக எல்லைக்குள் எவர் பணம் ஈட்டினாலும் அது தமிழக மக்களுக்கு உரியது. அதன் பயன் தமிழக மக்களுக்குச் சேரவேண்டும். அதற்கு ஒரே வழி அது மக்களுக்கு வேலைவாய்ப்பையும் நுகர் பொருட்களையும் வாழ்க்கை வசதிகளையும் செய்து தந்து அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் வகையில் தமிழகத்தில் முதலீடாக வேண்டும். அதற்குத் தடையாக எந்த வடிவில் யார் என்ன செய்தாலும் அதை எதிர்க்காமல் வேடிக்கை பார்ப்பதோ, சரியான செயல் என்று கோட்பாட்டுச் சான்று தேடுவதோ தமிழகத் தேசியத்துக்கு இரண்டகம் செய்வதாகும். இது தமிழகக் குடிமக்களைக் குறித்ததே அன்றி அயலாரைக் குறித்தல்ல. தமிழகத்தில் தொழில் நடத்தும் உரிமை 1956 நவம்பர் 1ஆம் நாள் தமிழகத்தில் வாழ்ந்து தமிழகத்திலிருந்து அன்றும் இன்றும் ஆதாயத்தை வெளியில் கொண்டு செல்லாதவர்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.

மார்வாரியும் மலையாளியும் மட்டுமல்ல தமிழகத்து நிலங்களைக் கொள்ளையடிப்பது. அயல்நாட்டு நிறுவனங்களின் பெயரில் மூலதனமிட்டிருக்கும் கருணாநிதி குடும்ப வகையறாக்களும்தான். இந்தியப் பொதுமைக் கட்சிகள் தங்கள் அருஞ்செயலென்று மார்த்தட்டிக் கொள்வது நில உச்சவரம்புச் சட்டங்களை. உண்மையில் அமெரிக்க அமைப்பான நிகர்மை(சோசலிச) அனைத்துலகியத்தின் நெருக்குதல் மூலம் நிறைவேறியவையாகும் அவை. அவற்றில் உணவுப் பொருள் வேளாண்மைக்கு மட்டுமே உச்சவரம்பு என்பதைப் புரிந்து கொள்க. அதனால்தான் வருமான வரியால் தமிழக மக்கள் நசுக்கப்பட அத்துறையைத் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் மார்வாரியும் மலையாளியும் கருணாநிதியின் கூட்டமும் இங்கு நிலங்களை வாங்கிக் குவிக்க முடிகிறது. அதற்கு நபார்டு எனப்படும் தேசிய வேளாண் ஊரக வளர்ச்சி வங்கியும் ஊழல் துணையிருந்து பெரும் பகற்கொள்ளை நடப்பதை அறிவீர்களா தோழர்களே!

நில உடைமையைப் பொறுத்தவரை சில உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். சிற்றுடைமை வேளாண்மை என்றும் சோறு போடாது. ஆதாயம் கிடைக்காது என்பதோடு ஆண்டு முழுவதும் வேலையும் கொடுக்காது. சிற்றுடைமையாளன் வேறு சொந்தத் தொழில் இல்லையானால் கூலித் தொழிலாளி என்ற நிலையிலிருந்து உயரவே முடியாது.

தொழிற்புரட்சிக் காலத்தில் ஐரோப்பாவில் குத்தகை முறை ஒழிக்கப்பட்டு ஒருங்கிணைந்த பெரும்பண்ணை முறை புகுத்தப்பட்டு ஆண்டு முழுவதும் வேலை செய்யும் பல எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து போராடித் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடிந்தது. இங்கு கடனுக்காகவும் விளைந்ததை விற்பதற்காகவும் ஏழை உழவன் தெரு நாயினும் கீழாகத் துயருறுகிறான். குத்தகை ஒழித்தால் உழவனுக்கு இழப்பீடு வழங்கத் தமிழ்நாட்டுச் சட்டத்தில் இடமிருக்கிறது. அதைப் பங்கு மூலதனமாக்கி அவனை உழைப்பாளியாகவும் கூட்டுடைமையாளனாகவும் ஆக்கலாம். அதற்கு தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் தன் செயல்திட்டத்தில் வகை செய்கிறது

மரபுத் தொழிலை மீட்டெடுப்பது பற்றி தோழர்கள் உரக்கப் பேசுகிறார்கள். மரபுத் தொழில் என்பதே நிலக்கிழமைப் பொருளியல் கட்டத்துக்கு உரியது. சாதி - வருணங்கள் அடிப்படையில் அமைந்த ஒரு கட்டமைப்பில் பல்வேறு குழுவினர் அவரவர்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட வகையில் வாழ்வதற்கு வடிவமைக்கப்பட்டவை அவை. இன்று குமுகக் கட்டமைப்பு பெருமளவில் மாறியுள்ளது. மக்களின் தேவைகள் பழைய சிறைக்கூண்டுகளை உடைத்துவிட்டுப் பரவலாகிவிட்டன. அவற்றுக்கு ஈடு கொடுக்க மரபுத் தொழில்கள் உதவா. ஆனால், மரபுத் தொழில்கள் என்ற இந்த முழக்கத்தை வலியுறுத்துவது, வெளியிலிருந்து வரும் நெருக்கல்களை எதிர்கொள்ளும் புதிய ஆற்றல்கள் உள்ளே உருவாவதை உளவியலில் தடுக்கும் ஒரு முயற்சியாக முடிய வாய்ப்பிருக்கிறது.

இன்றைய தொழில்நுட்பங்கள் அயலிலிருந்து மூலப்பொருட்களைத் தேவையாக்குகின்றன. இருக்கும் பல மூலப்பொருட்களை இல்லை என்றே அறிவித்துள்ளார்கள் நம் ஆட்சியாளர்கள். அயலார் அவற்றைக் கண்டு ஆட்சியாளருக்கு பங்கும் கொடுத்தால் அவற்றை எடுத்து அவர்களுக்கு வழங்குவார்கள், அல்லது இங்கேயே பயன்படுத்தி பண்டங்களைச் செய்து ஏற்றுமதியும் செய்து கழிக்கப்பட்ட கடைத் தரத்தை நம் மக்களுக்கு விற்கவும் செய்வார்கள். நம் மரபுத் தொழில்நுட்பங்கள் நம்மிடம் கிடைக்கும் மூலப்பொருட்களிலிருந்து நம் தேவைகளை நிறைவேற்றுபவை. அவற்றை இன்றைய அறிவியலுக்கு ஏற்றவாறு மேம்படுத்தி பெருந்தொழில்களாக வளர்த்து நம் மக்களின் வளர்ந்துவரும் தேவைகளை ஈடு செய்ய வேண்டும்.

இங்கு மரபுத் தொழில்களுக்கும் மரபுத் தொழில்நுட்பங்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மரபுத் தொழில்நுட்பங்களை மூத்த தலைமுறையினரிடமிருந்தும் ஆகம நூல்களிலிருந்தும் எளிதில் திரட்டிவிட முடியும்.

பெருந்தொழில்கள் என்றதுமே சுற்றுச் சூழல் சிக்கலை முன்வைக்கின்றனர் நம் தோழர்கள். இங்கு நாம் ஒரு அடிப்படையான உண்மையை மனங்கொள்ள வேண்டும். இன்று நம் நாட்டில் பெருந்தொழில் என்ற பெயரில் உள்ளது முதலாளிய விளைப்பு அல்ல, வல்லரசிய விளைப்பு ஆகும். அயலவருக்காக நம் நிலம், நீர், ஆற்றல்வளங்கள், சுற்றுச் சூழல்கள் பாழாக்கப்படுகின்றன. திண்டுக்கல்லிலும் இராணிப்பேட்டையிலும் பதப்படுத்தும் தோல் நமக்குப் பயன்படுவதில்லை. நாம் பயன்படுத்தும் செருப்பும் பைகளும் நெகிழி(பிளாட்டிக்)யால் செய்யப்படுகின்றன.

திருப்பூரில் செய்யப்படும் ஆடைகளும் அவ்வாறே. தூத்துக்குடியில் டெர்லைட் ஆலையில் தூய்மைப் படுத்தப்படும் செம்புக் கனிமம் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டு பணிமுடிந்த பின் திருப்பியனுப்பப்படுகிறது. சூழல் சீர்கேடு மட்டும் நமக்கு. அதுபோல் இங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் வடிவில் நம் மின்சாரமும் குடிநீரும் தூய்மையான காற்றும் இன்னும் என்னென்னவோ மறைமுகமாக ஏற்றுமதியாகின்றன. கல்லும்(சல்லி வடிவில்) மணலும் கருங்கல்லும் என்று எண்ணற்ற வகை மீளப்பெற முடியா இயற்கை வளங்கள் கணக்கின்றிக் கடத்தப்படுகின்றன. நாம் பரிந்துரைப்பது நம் நாட்டில் நம் மூலதனத்தில் நம் தொழில்நுட்பத்தைக் கொண்டு நம் மக்களின் தேவைகளுக்காக நாமே பண்டங்களை விளைப்பதும் பணிகளைச் செய்வதுமாகும். அதற்கு நம் பண்டைத் தொழில்நுட்பங்களைத் தேடியெடுத்து இன்றைய அறிவியல் வளர்ச்சிநிலைக்கு ஏற்ப மேம்படுத்திப் பயன்படுத்துவதை. எடுத்துக்காட்டாக, தமிழ் மருத்துவத்தை எடுத்துக்கொள்வோம். அதைப் பற்றிய கட்டுரைகளும் எழுத்துகளும் ஒவ்வொரு மூலிகையையும் எந்தெந்த நோய்க்கு எப்படி எப்படிப் பக்குவப்படுத்தலாம் என்று விளக்குகின்றன. அவற்றின்படி பயன்படுத்த வேண்டுமாயின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு மருந்து செய்யும் கட்டமைப்பு வேண்டும், வீட்டிலுள்ள ஒருவர் மருந்து செய்யும் பக்குவத்தைக் கற்க வேண்டும். மாறாக, ஒரு குறிப்பிட்ட மூலிகையில் அடங்கியிருக்கும் குறிப்பிட்ட நோய் தீங்கும் உரிப்பொருளை இனங்கண்டு பிரித்து மாத்திரையாகவோ குளிகையாகவோ, நீர்மமாகவோ கடைகளில் விற்றால் அலோபதி மருந்துகள்போல் பயன்படுத்துவார்களே! இன்றைய சூழலுக்கு அதுதானே பொருந்தும்? எந்த ஆழ்ந்த சிந்தனையும் இல்லாமல், எதையும் கணக்கிலெடுக்காமல் மரபு, மரபு என்று மந்திரம் போடுவது ஏன்? பழைய சாதி சார்ந்த தொழில்நுட்பங்களை வைத்து அந்தக் கட்டமைப்பை மீட்கும் ஒரு அவாவின் தன்னுணர்வற்ற வெளிப்பாடா? அல்லது தாங்களே தவிர்க்க முடியாத மாற்றங்களைத் தங்களை விடத் தாழ்ந்த படியிலுள்ளோரும் மேற்கொள்வதைப் பொறுக்க முடியாத உள்ளுணர்வின் எரிச்சலா?

நம் தேவைகளுக்காக இயங்கும் பெருந்தொழில்களால் வெளிப்படும் கழிவுகள் சூழல்கேடுகள் ஏற்படும் அளவுக்கு இருக்காது. இருந்தாலும் அவற்றை உரிய தொழில்நுட்பங்கள் மூலம் எதிர்கொண்டுவிடலாம். தேவை மக்கள் உதிரத்தைக் குடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாத ஓர் அரசும் இன்று போல் ஆட்சியாளர்களுக்கு விலைபோகாத “ அறிவாளிகளு”மே.

உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தாத, அதைக் கண்டுகொள்ளவே செய்யாத ஒரு சூழலைப் பார்ப்போம். உலகில் ஆண்டு முழுவதும் பெரும் ஏற்றத்தாழ்வில்லா வெப்பநிலையைக் கொண்டது தமிழ்நாடு. அந்த வெப்பநிலையை மின்னாற்றலாக்குவதற்குத் தேவைப்படும் அளமியம்(அலுமினியம்) தாராளமாகக் கிடைக்கும் நாடுகளில் ஒன்று தமிழ்நாடு. ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள், மின்வாரிய அலுவலகத்தில் “கதிரவ” மின்னாற்றலைப் பயன்படுத்துங்கள் என்று எழுதிவைத்திருப்பர் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று அரசு சாராயக் கடையில் எழுதி வைத்திருப்பது போல. மின் செலவை மிகுக்கும் தொ.கா.பெட்டியையும் எரிவளி இறக்குமதியை மிகுக்கும் வளி அடுப்பையும் இலவயமாக கோடி கோடியாக வழங்குவர். ஆனால் கதிரவ மின்னாக்கலுக்கு ஒரு தம்பிடி கொடுக்கமாட்டார்கள். தமிழகத்தில் பிறந்த கறுப்பு அறிவியல் கதிரவன் அப்துல் கலாம் கூட காட்டாமணக்கைப் பயன்படுத்துங்கள் என்றுதான் சொல்லுவார். பதவியிலிருந்து இறங்கிய பின் எங்கோ கதிரவ ஆற்றலைப் பற்றிப் பேசியதாகக் கேள்வி. “தமிழ்த் தேசியம்” பேசுவோர் இது போன்ற சிக்கல்களைப் பேசுவதே இல்லை. தாம் இழந்து விடுவோம் என்று அஞ்சும் சாதி மேலாளுமையை மீட்பதற்காக அல்லது பேணுவதற்காக மரபு பற்றிப் பேசுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை மின்சாரம் உருவாக்குவதற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி கன்னெய்யம்(பெட்ரோலியம்), எரிவளி ஆகியவற்றில் 20 நூற்றுமேனிக்குக் குறையாமல் கிடைக்கும் தரகு, அவற்றுக்கு டாலரில் பணம் திரட்ட இங்கிருந்து ஏற்றுமதியாகும் மூளை வளம் உள்ளிட்டற்றின் மீது கிடைக்கும் தரகு ஆகியவைதான் குறி. அவர்கள் எப்படி உள்நாட்டு வளங்களை உள்நாட்டு நலன்களுக்குப் பயன்படுத்துவர்? இப்படி எதை எடுத்தாலும் தரகு பார்க்காமல் இருந்தால் தேநீருக்கு வக்கில்லாமல் அலைந்தவர்கள் 70 ஆண்டுகளில் 2 இலக்கம் கோடிக்கு மேல் சொத்துள்ள குடும்பத்தின் தலைவராக எப்படி முடியும்? தமிழனை ஈழத்தில் கொன்றழிக்கத் துணையிருந்துவிட்டுப் பாராளுமன்றத்தில் கட்சி பா.ம. உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றால் போதும், இங்கிருக்கும் “தமிழ்த் தேசியர்” களுக்கு உச்சி முதல் உள்ளங்கால்வரை குளிரெடுத்துவிடும், மன்னிக்க, குளிர்ந்துவிடும்!

மொழியைச் சுமப்பது அதைப் பேசும் மனிதன். மண் இல்லாமல் எப்படி மரம் இல்லையோ அப்படி மனிதன் இல்லாமல் மொழி இல்லை. மனிதனோ உணவின் பிண்டம் என்றார் நம் முன்னோர் (திருமூலரா?).


பார்ப்பனியம் என்பதே ஒட்டுண்ணி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அதாவது உடலுழைப்பை, குறிப்பாக, பண்டம் படைத்தல், பணிகள் செய்தல், பண்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வாணிகம் போன்றவற்றை வெறுத்து வெள்ளை வேட்டி வேலை செய்வதைப் பெருமையாகக் கருதுவது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாணிகர்களின் எழுச்சியின் போது கிடைத்த பட்டறிவிலிருந்து கடல் வாணிகர்களையும் உள்நாட்டு வாணிகர்களையும் கருவறுத்தனர் நம் ஆட்சியாளர் – பூசாரியர் கூட்டணியினர். அதனால்தான் அரேபியரும் ஐரோப்பியரும் வாணிகர்களாக இங்கு நுழைந்தபோது இங்கு அவர்களை எதிர்க்க விசை எதுவும் இல்லாது போயிற்று. இன்று வல்லரசியத்தின் ஊதுகுழலாகச் செயற்படும் பொதுமைக் கட்சியினரும் உள்நாட்டு வாணிகத்துக்கு எதிராக இருக்கின்றனர்.

இந்த அடிப்படையில் பார்ப்பனர்கள் அரசுப் பணிகளில் அமர்ந்துகொண்டு கொடுமை செய்வதற்கு எதிராகக் கொண்டுவந்த ஒதுக்கீட்டு முறை ஒட்டுண்ணி வாழ்க்கையின் மீதான பார்ப்பனர், வெள்ளாளரின் ஈர்ப்பை முழுக் குமுகத்துக்கும் பொதுவாக்கிறது. அந்த வெறியை மிகுப்பதாக அரசூழியர்க்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் கருணாநிநியின் செயல் அமைகிறது. அதனால் மக்களின் வருவாய், குறிப்பாக படித்துவிட்டுச் சில்லரை வேலைக்குப் போகும் மக்களின் வருவாய் அதனுடன் ஒப்பிட மலைக்கும் மடுவுக்கும் ஆயிற்று. அதோடு பன்னாட்டு முதலைகளின் புலன(தகவல்)த் தொழில்நுட்ப வளர்ச்சி அந்தத் திசையில் மக்களை ஈர்த்தது. ஆக, இன்று நன்றாக வாழ வேண்டுமென்றால் அயல்நாடு செல்ல வேண்டும் அல்லது அயல்நாட்டு நிறுவனத்தில் உள்நாட்டில் வேலை பார்க்க வேண்டும்.

இன்னொரு புறம் தமிழகம் உட்பட எல்லாத் தேசியங்களின் பொருளியலும் இந்திய அரசுடனும் வல்லரசியத்துடனும் இணைக்கப்பட்டுள்ளன. எனவே நடுவரசிடமோ வெளி முகவாண்மைகளுடனோ மாநில அரசு தொடர்பு கொள்ள வேண்டுமாயின் மாநில மொழி உதவாது. அத்துடன் பொருளியலே ஏற்றுமதி இறக்குமதி சார்ந்தாக மாறியுள்ள நிலையில் எழுத்துப் பணிகளுக்கு மாநில மொழி உதவாது. இந்தப் பொருளியல் நெருக்குதலின் காரணமாக நம் விருப்பங்களையும் மீறி புதிய தலைமுறையினர் தாய்மொழிகளைக் கைவிட வேண்டிய உளவியல் நெருக்கலில் உள்ளனர். இது இந்தியா மட்டுமல்ல, உலகளாவுதலின் விளைவாக உலக முழுவதும் உருவாகியுள்ள நிலையாகும். இதிலிருந்து விடுபட இன்று உலகைப் பிடித்துள்ள பொருளியல் நெருக்கடியும் அதன் விளைவாக அயல்பணி வாய்ப்புகள் குறைவதும் பணக்கார நாடுகளில் பொருளியல் நெருக்கடியின் விளைவாக இனவெறி வளர்ந்து வருவதும் மிகவும் கைகொடுக்கும். தற்சார்புப் பொருளியல், அதன் வளர்ச்சிக்கு இன்றியமையாத சந்தையாக உள்நாட்டு அடித்தள மக்களை பொருளியல் வலிமையுள்ள நுகர்வோராக வளர்த்தெடுப்பது, அதாவது மக்களிடையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்குவது போன்ற குறிக்கோள்களை முன்வைத்து ஊக்கமுடன் செயற்பட இதுவே சரியான நேரம். அதனோடு தாய்மொழி வளர்ச்சியையும் இணைத்தால் பொருளியலை அடுத்து தேசியத்தின் முகாமையான கூறான தேசியமொழி ஆட்சிக் கட்டில் ஏறுவதும் நிகழும். வேறு எந்த மந்திரத்தாலும் தமிழை அழிவிலிருந்து மீட்க முடியாது.


(தொடரும்)

8.7.09

தமிழக நிலவரம்(2009) .....3

பார்ப்பனியம்தான் தமிழகத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள். பார்ப்பனியம் என்றால் ஆரியம் என்கிறார்கள்.

ஆரியம் என்பது வட இந்தியாவைக் குறிப்பது. ஆரிய “இனம்” என்பது 19 ஆம் நூற்றாண்டில் மாக்சுமுல்லர் என்னும் செருமானிய மொழி ஆய்வாளர் உருவாக்கிப் பின்னர் எதிர்ப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கைவிட்ட ஒன்று. இட்லர் போன்றோரும் ஐரோப்பியரும் இந்திய, தமிழக அரசியலாளரும் ஆள்வோரும் தத்தம் நலன்களுக்காகத் தூக்கிப் பிடிக்கும் ஒரு போலிக் கோட்பாடு. ஆரியர்கள் உருவாக்கியவை என்று கூறப்படும் வேதங்களில் தொல்காப்பியத்தில் வரும் வருணனும் இந்திரனும் தலைமையான தெய்வங்கள். கடலைப் பற்றியும் கப்பலைப் பற்றியும் இடியைப் பற்றியும் வேளாண்மையைப் பற்றியும் மருத நில மக்களைப் பற்றியும் வேதங்களில் கூறப்பட்டிருக்கிறது. அவர்களை மாடுமேய்க்கிகள் என்றால் முல்லை நிலத் தெய்வமான திருமால் தமிழர்களுக்கு அயலா? இராமனும் தமிழன், இராவணனும் தமிழன். ஆனால் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள். தொன்மங்களில் இதற்குச் சான்று உண்டு. இராமயணப் போரை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் கிரேக்கர்களும் சமண, புத்தங்களால் வீழ்ந்த வட இந்தியப் பார்ப்பனரும் சேர்ந்து ஓமரின் இலியத்துக் காப்பியத்தை அடியொற்றி இலக்கியமாக்கினர். வேதங்கள் பொதுமக்களுக்குப் புரியாமல் மறைவா(யா)க இருக்க வேத மொழியும் மக்களுக்குப் புரியாத மொழியில் ஆட்சியையும் சமயத்தையும் தொழில்நுட்பங்களையும் வைத்திருக்கச் சமற்கிருத மொழியும் தமிழர்களால் படைக்கப்பட்ட ஒரு முழுச் செயற்கை மொழி.

சிந்து வெளி நாகரிகம் குமரிக்கண்ட வாணிகர் அமைத்திருந்த ஓர் இடைத்தங்கல். கடல் மட்டம் சிறுகச் சிறுக உயர்ந்ததாலும் சிந்தாற்று வெள்ளங்களாலும் அவற்றுக்கு இணையாகக் குமரிக் கண்டம் கடற்கோள்களுக்கு உட்பட்டதாலும் கொஞ்சம் கொஞ்சமாக அது வலிமை இழக்க ஏதோ ஒரு சூழலில் பாலைக்கு அப்பால் வாழ்ந்த வளர்ச்சி நிலையில் தாழ்ந்த முல்லை நில மக்கள் அதைத் தாக்கி அழித்துள்ளனர்.

தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் சாதியற்றிருந்ததாகச் சுட்டிக் காட்டும் பண்டை இலக்கியம் எதுவுமே கிடையாது. தொல்காப்பியம் கூறும் ஐந்நிலங்களுமே வருணன், இந்திரன், திருமால், முருகன், கொற்றவை என்ற 5 தெய்வப் பூசாரிகளால் ஆளப்பட்டவை. முதலில் பெண் பூசாரிகளாய் இருந்தது ஆண் பூசகர்களுக்கு மாறியது. ஆனால் இந்தப் பூசகர் - பெண் உறவு இன்றுவரை தொடர்கிறது. அண்ணாத்துரையும் கருணாநிதியும் பிறந்த போது இருந்தது போல் இவ்விரு சாரருக்கும் அவ்வப்போது சிறு பிணக்குகள் ஏற்பட்டு, அரசியல் செல்வாக்குப் பெற்றதும் அண்ணாத்துரையும் கருணாநிதியும் பார்ப்பனர்களுடன் மறைவாகவும் வெளிப்படையாகவும் இணைந்துகொண்டது போல் இணைந்துகொள்வர்.

தொல்காப்பியம் ஆளும் கூட்டமாகிய பூசகர், அரசர், வாணிகர், நிலக்கிழார் ஆகியோரைத் தவிர அடிமைகள், கைவன்மைத் தொழிலாளர் ஆகிய மிகப் பெரும்பான்மையான மக்களை,
அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை யிலபுறத்து என்மனார் புலவர் என்கிறது (அகத்திணை இயல் - 25).

அதாவது அடிமைகளுக்கும் தொழில் செய்வார்க்கும் களவு கற்பு என்ற ஒழுக்க நெறிகள் கட்டாயமல்ல, அவர்கள் அவ்வொழுக்க நெறிக்கு வெளியே (புறத்தே)வாழ்கின்றவர்கள் என்பது இதன் பொருளாகும், அதாவது அவர்கள் ஒழுக்கங்கெட்டவர்கள் என்பதாகும்.

மேல்தட்டினர் கணக்கற்ற பெண்களைக் காதற்கிழத்திகளாகவும் வேலைக்காரியாகவும் வைப்பாட்டியாகவும் இருந்த வெள்ளாட்டி என்று இடைக்காலத்தில் வழங்கப்பட்ட நிலையிலும் வைத்திருந்தனர். செவிலி என்பவள் இந்த இரண்டாம் வகைப்பாட்டினுள் வருகிறவள்.

இவைதான் மனுச் சட்டத்தின் விதை என்பதை யார்தான் மறுக்க முடியும்?

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே,
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பா லொருவனும்
அவன்கட் படுமே
என்று மேல் கீழ் என்பதைத் தெளிவாகக் கூறுகிறான்.

திருவள்ளுவரே,
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் (குறள். 972) என்று கூறி தொழிலால் வரும் ஏற்றத்தாழ்வையும் பிறப் பொழுக்கம் குன்றக் கெடும் (குறள். 134) என்று கூறி பிறப்பால் வரும் ஏற்றத்தாழ்வையும் கூறுகிறார்.

ஆக, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று திருமூலர் ஓதுவதற்கு முன் தமிழ் இலக்கியத்தில் சாதிய ஏற்றத்தாழ்வை மறுத்த எந்தக் கூற்றையும் காண முடியாது.

சிலப்பதிகாரம் கூறும் செய்திகளின்படி தமிழ்நாட்டில் எந்த ஓர் அரசு அல்லது பொது நிகழ்ச்சியும் வருண பூதங்கள் நான்கையும் வழிபட்டே தொடங்கின. அந்த வருணங்கள் கூட இன்று நாம் அறிபவற்றுக்கு மாறாக 1) அந்தணர், 2) அரசர், 3) வாணிக – வேளாளர், 4) பாணர் – கூத்தர் என்றிருந்து பின்னால் இன்றைய வடிவத்துக்கு மாறியுள்ளது.

எனவே சாதிகள், வருணங்கள் தமிழர்கள் படைத்தவையே. உலகில் உரோம், பிரான்சு, சப்பான் ஆகியவற்றில் வருணங்கள் இருந்துள்ளமை வரலாற்றால் அறியப்பட்டுள்ளது. பிரான்சிலும் சப்பானிலும் தொழிற்புரட்சியாலும் முதலாளியத்தாலும் அவை அழிந்துள்ளன. ஐரோப்பாவில் தொழிற் சாதிகள் இருந்ததை மார்க்சு மூலதனம் முதல் மடலத்தில் குறிப்பிட்டு, தொழிற்புரட்சியால் அவை அழிந்ததைக் கூறியுள்ளார்.

வருணங்களின் தோற்றம் ஓர் ஆட்சியின் கீழ் வாழும் மக்களை அவர்களின் குமுகப் பங்களிப்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தி அந்தந்த வகைப்பாட்டின் கீழ் வரும் மக்களின் பேராளர்கள்(சட்ட மன்றம், பாராளுமன்றம் போன்று) மூலம் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்துவதே. நாளடைவில் படையைக் கையில் வைத்திருந்த ஆட்சியாளர்கள் பூசகர்களின் துணையுடன் பெரும்பான்மையினரை ஒடுக்குவதாக உலக அளவில் அது இழிந்துபோயிற்று. எனவே அதைத் தோற்றுவித்ததில் நமக்கு இழுக்கு ஒன்றுமில்லை. அதன் எச்சங்கள் இன்றும் நம்மைத் தொடர்வதே அவலம். அவற்றை முற்றாக ஒழிப்பதற்கான சூழல் உருவாவதைத் தடுப்பவர்களாக “தமிழ்த் தேசியம்”, “தமிழ் மொழி” பற்றி முழங்குவோர் இருப்பதுதான் அதைவிடப் பெரும் அவலம்.

சாதி சார்ந்த தொழிலும் தொழில் சார்ந்த சாதியும் உறைந்து போன தொழில்நுட்பத்தின் விளைவாகும். இடைவிடாத தொழில்நுட்ப மேம்பாடும் மக்களின் இடப்பெயர்ச்சியும் சாதி என்ற ஒன்று தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்துவிடும்.

நம் தோழர்கள் கூறுவதுபோல் சாதியும் வருணமும் இவர்கள் கூறும் கற்பனை “ஆரியர்”களால் இங்கு பரப்பப்பட்டது என்பதை ஓர் உரையாடலுக்காக வைத்துக்கொள்வோம். அயலாரால் புகுத்தப்பட்டது என்று தெரிந்து ஏறக்குறைய மாக்சுமுல்லர் காலத்திலிருந்து 160 ஆண்டுகள் ஆகியும் ஏன் அதனை நம்மால் அகற்ற முடியவில்லை? அயலார் கூறும் பொய்ம்மைகளை இனங்காணவோ இனங்கண்டாலும் அதனைப் புறக்கணித்து உண்மையின் பக்கம் நிற்கவோ திறனற்ற மூளைக் குறைபாடு உள்ளவர்களா நாம்?

சரி அப்படித்தான் அயலாரே நம்மிடம் புகுத்திவிட்டனர் என்று வைத்துக் கொண்டாலும் அந்த அயலாரைத் திட்டுவதாலோ அடிப்பதாலோ (அடிப்பதாவது! இவர்கள் பார்ப்பனர்களைத் தங்களது வழிகாட்டிகளாகவல்லவா இயக்கங்களுக்குள் வைத்துள்ளனர், தங்களது ஆசான் கருணாநிதியைப் போல்) அதனை ஒழித்துவிட முடியுமா? ஒருவருக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறைவால் நோய்த் தொற்று இன்னொருவரிடமிருந்து வந்தவிட்டதென்றால் நோய்த்தொற்றுக்குக் காரணமானவரை வைதுகொண்டாயிருப்பார்கள்? மூளை கலங்கியவர்கள்தாம் அதைச் செய்வர். இயல்பானவர் நோய்த் தொற்றியவனுக்கு உடனடியாக மருத்துவமல்லவோ செய்வர்? சாதி குறித்து அந்த மருத்துவத்தைப் பற்றி இவர்கள் சிந்தித்ததுண்டா?

ஒருவர் தன்னிடம் குறை இருக்கிறது என்று புரிந்து ஏற்றுக்கொள்வது அவர் தன்னை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறார் என்பதற்கு அறிகுறி. பிறர் மேல் பழிபோட்டால் எவரும் தப்பிக்க முடியாது என்பது உறுதி. பிழைகள் மேல் பிழைகள் தலைமேல் ஏறி அவர் அழிவதும் உறுதி. அந்த அழிவுதான் இன்று உலகத் தமிழ் மக்களை கிட்டத்தில் வந்து நின்று அச்சுறுத்துகிறது.
(தொடரும்)

தமிழக நிலவரம்(2009) .....2

இன்றைய உலகச் சூழலில் உலகிலுள்ள ஆளும் கணங்களெல்லாம் அஞ்சி நடுங்குவது தேசிய விடுதலை இயக்கங்களைக் கண்டுதான். அவற்றில் பலவற்றை மார்க்சிய - இலெனியக் குழுக்கள் கையிலெடுத்துக் கொண்டு சிதைத்து ஆட்சியாளர்களின் ஆயுதத் திருட்டு விற்பனைக்குத் துணைபோகிறார்கள். மற்றவை முகம்மதிய மதவெறியர்களிடம் சிக்கி முகம்மதியர்களிடமிருந்தே அயற்பட்டு நிற்கின்றன. அது போன்ற அடையாளங்கள் எதுவுமின்றி நிலம், அதன் மக்கள் என்ற தெளிவான, அறிவியல் சார்ந்த நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடிய இயக்கமும் மக்களும் ஈழத்தவர்களே. அதனால்தான் உலக ஆட்சியாளர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு அப்போராட்டத்தை முடக்கிவைத்துள்ளனர்.

தேசிய விடுதலைப் போர் என்பது நினைத்துப் பார்க்க முடியாத அளவு கடுமையானது. சென்ற நூற்றாண்டில் உலகப் போர்களில் வல்லரசுகள் ஈடுபட்டிருந்த நிலையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் குடியேற்ற நாடுகளும் அரைகுறை அரசியல் விடுதலை பெற்றன. பொருளியல் வழியில் இன்று மறைமுக அரசியல் அடிமைத்தனத்துள் அவை உள்ளன. சோவியத்து வலிமையின் பின்னணியில் இந்தியாவின் தலையீட்டில்தான் வங்காளதேசம் அமைந்தது. ஆனால் இருவர் கைகளுக்குள்ளும் அது அடங்கவில்லை. இருவருக்கும் அது ஒரு கசப்பான பாடம். தென் அமெரிக்காவும் சிம்பாபுவேயும் அமெரிக்கத் தலையீட்டில் அதன் பொம்மைகளின் அரசுகளை அமைத்தன. செர்பியா போன்றவை அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் தலையீட்டினால் விடுதலை பெற்றன. அத்தகைய எந்தத் தலையீட்டையும் ஏற்றுக்கொள்ளாததால்தான் விடுதலைப் புலிகளை உலக அரசுகள் அனைத்தும் சேர்ந்து தாக்கியுள்ளன. மனித உரிமைகள் பெயரில் நடைபெற்ற வாக்கெடுப்பு ஒரு நாடகம். தன் மீதான குற்றத்தைத் தானே உசாவ சிங்கள அரசைக் கேட்டுக்கொள்வது என்ற கோமாளித் தனம்தான் மேற்கு நாடுகள் முன்வைத்த தீர்மானம். திட்டமிட்டபடி அதை உலகம் பார்த்திருக்கவே முறியடித்தாயிற்று. ஈழத்தின் மீளமைப்புக்கு சிங்களர்க்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று அவ்வரங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஈழத்தவர்களுக்கு எதிராகச் சிங்கள அரசுக்கு வலுயூட்டுவதுதான் உண்மையான நோக்கம்.

உலகில் இன்று தேசிய உரிமைச் சிக்கல் வெளிப்படையாகவோ உள்ளுறையாகவோ இல்லாதநாடு ஒன்று கூட இல்லை என்பது உண்மை. அமெரிக்காவில் கூட இப்போதைய பொருளியல் நெருக்கடியில் அது வெளித்தோன்றலாம். ஆத்திரேலியாவில் தோன்றி, இங்கிலாந்தைத் தொட்டுள்ள “இனவெறி” அமெரிக்காவில் தற்காலிகமாக அடக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அது வெடித்து அடுத்த கட்டமாக தேசியங்களின் முரண்பாடாக வெளிப்படலாம். எனவேதான் உலகின் அனைத்து அரசுகளும் இணைந்து நிற்கின்றன.

பிற நாடுகளை ஈழத்தவர்க்கு எதிராக அணிதிரட்டுவதற்கு வேண்டுமானால் இது பயன்பட்டிருக்கலாம். ஆனால் இந்தியாவைச் சுற்றி சீனம் அமைக்கும் தளங்களில் ஒன்று ஈழத்தில் இருப்பதைப் பார்க்கும் போது இந்தியாவைச் சுற்றி வளைக்க அமெரிக்கா இட்ட திட்டத்தை அதன் கூட்டாளியும் அடியாளுமாகிய சீனம் நிறைவேற்றுகிறதோ என்றொரு ஐயம். இந்தத் திட்டத்துக்கு இந்திய ஆளும் கும்பல், கருணாநிதி உட்பட விலை போயிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

நேரு குடும்பம் இன்று வெளிநாட்டுக் குடும்பம் ஆகிவிட்டது. ”உள்நாட்டு”த் தலைவர்களின் மகன், மகள், மருமகன், மருமகள், அல்லது அவர்களுடன் பேரன் - பேத்திகள், ஏன், நம்மூர் அரசூழியர்கள், பேராசிரியர்கள் கூட பிறங்கடைகளுடன் வெளிநாட்டுக் குடிமக்கள் ஆகிவிட்டார்கள். இந்தியாவை நல்ல விலைக்கு விற்றுவிட்டு அந்நாடுகளில் குடியேறி விடலாமே! இன்னும் இங்கு இருப்பது கூட அவ்வளவு பாதுகாப்பல்லவே!

இவர்கள் இப்படிப் போய்விட்டால் கூட நல்லதுதான். இங்கு கசடுகள் கழிந்த குமுகத்தைப் புத்தம் புதிதாகக் கட்டியெழுப்பலாமே!

ஆனால் அவர்கள் அவ்வளவு எளிதில் ஓடிப்போய்விடப்போவதில்லை. ஒருவேளை போர் வந்தாலும் போர்க்களத்தில் நிற்கப்போவது இராகுலும் தாலினுமா? உயிரை விற்றுக் குடும்பத்தைக் காப்பதற்கு ஆயத்தமாகத்தான் வயிறு காய்ந்த ஒரு பெரும் படையைக் குடிமக்கள் என்ற பெயரில் தீனி போடாமலே வளர்த்துவைத்துள்ளோமே!

போர் வரவேண்டுமென்ற கட்டாயம் கூட இல்லை. வராவிட்டாலும் சீன அச்சுறுத்தல் என்ற பெயரில் சீனத்திடமிருந்தே கூட ஆயுதம் வாங்கித் தரகு பார்த்துவிடுவோமே!

இந்தப் பின்னணியில் எந்த ஒரு தேசியமும் தனித்து விடுதலைப் போரை நடத்த முடியாது. தேசியங்களுக்குள் உறுதியான ஒருங்கிணைப்பு வேண்டும். அதே வேளையில் ஒவ்வொரு தேசியத்தின் மக்களிடையிலும் எய்தத்தக்க மிகப் பெரும் ஒற்றுமையை எய்தியாக வேண்டும். அதற்கு மக்களின் பல்வேறு வாழ்க்கைச் சிக்கல்களைக் கையிலெடுத்து அவர்களை ஆளுவோருக்கு எதிராக நிறுத்த வேண்டும். ஆனால் “தமிழ்த் தேசிய”, இயக்கங்களும் “தமிழ்” அமைப்புகளும் மக்களைப் பற்றித் துளிக்கூட கவலைப்படவில்லை. அவர்கள் ஆளுவோரின் பின்னால் நிற்கிறார்கள். மக்களும் ஆளுவோரின் பின்னால் நிற்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.

மேலே விளக்கியவாறு 2009 தேர்தலின் போது ஒன்றிரண்டு பேரவைக் கட்சி வேட்பாளர்களை மட்டும் எதிர்த்துவிட்டுத் தாங்கள் கருணாநிதியின் கையாட்கள் என்பதைப் பறையறையாமல் அறிவித்தனர்.


(தொடரும்)

தமிழக நிலவரம்(2009) .....1

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 400க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை இந்திய அரசு மற்றும் கடற்படை உதவியுடன் சிங்களப் படையினர் தமிழகக் கடல் எல்லைக்குள்ளும் எல்லைக்கு வெளியிலும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இது குறித்து தமிழீனத் தலைவர் தில்லிக்கு மடல்கள் தீட்டி அதைப் பற்றி தாளிகைகளுக்குத் தெரிவிப்பதற்கு மேல் எதுவும் செய்யவில்லை. பணம் விளையும் அமைச்சகங்கள் கேட்பதற்காகத் தில்லிக்குப் போவார், ஈழத்தவர்களின் பெயரைச் சொல்லி தீர்மானம் போட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் விலகல் மடல்களையும் வாங்கி வைத்துக்கொண்டு 80,000 கோடி ஊழல் குற்றச் சாட்டைக் கைவிட வைக்க அவற்றை வைத்து மிரட்டவும் செய்வார்.

சிவசங்கரமேனனையும் எம்.கே.நாராயணனையும் வரவழைத்து ஈழத்தவர்களை அழிப்பதற்கும் தமிழக மக்களை ஏய்ப்பதற்கும் அறிவுரைகள் வழங்குவார். ஆனால் அவரது இந்த நடவடிக்கைகளை எதிர்த்து குறிப்பிடத்தக்க குரல் எதுவும் “தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து எழவில்லையே ஏன்? மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்தும் போது ஒரு சில ஆயிரங்கள் என்ற அளவில்தானே இவர்களால் தொண்டர்களை ஈர்க்க முடிகிறது, அது ஏன்? அந்த ஒரு சில ஆயிரம் பேரை வைத்துக்கொண்டு தொடர்ந்து மாநாடுகள், கருத்தரங்குகள், சிறுசிறு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு இவர்களுக்குப் பணம் வந்துவிடுகிறது. உண்ணா நோன்பிருந்த வழக்கறிஞர்களிடையில் காவல்துறையினரைக் கொண்டு கருணாநிதியும் சுப்பிரமணியம்சாமியும் திட்டமிட்டுக் கலவரத்தை உருவாக்கிய பின்னர் அவர்களை ஒருங்கிணைக்க எவரும் இல்லையே ஏன்? தன்னெழுச்சியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கிய போது அவர்களோடு தொடர்பு கொள்ளவும் எந்த நடவடிக்கையும் இல்லையே அது ஏன்? இவை அனைத்துக்கும் முடிவுரை கூறுவது போல் “ஈழச் சிக்கலால் தமிழகத் தேர்தல் களத்தில் எந்தத் தாக்கமும் இல்லை” என்று கருணாநிதியின் திருமகன் தாலின் அறிவித்தாரே, அந்தத் தன்னம்பிக்கை எங்கிருந்து வந்தது? “தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகள் அனைத்துமே எப்போதுமே கருணாநிதியுடன் இணங்கியே வந்துள்ளதுதான் இதற்கெல்லாம் காரணம். உள்ளே உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். வெளியிலிருந்து கூர்ந்து நோக்குவோருக்கும் தெரியும். அதனால்தான் ஒரு பக்கம் கருணாநிதியின் “மனிதச் சங்கிலி” என்றால் இன்னொரு பக்கம் நெடுமாறனின் “மனிதச் சங்கிலி” என்று ஈழத்தவர்க்கான தமிழகத்தின் எதிர்வினை கூத்தாடிகளின் தெருக்கூத்தாகிப் போனது.

“தமிழ்த் தேசிய” இயக்கங்கள், “தமிழ்” அமைப்புகளின் இன்றைய திரைத்துறை மின்னல்களான சீமான் வகையறாக்களின் துணையோடு நெடுமாறன் தலைமையில் பேரவைக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக மட்டும் தேர்தல் பரப்புரை செய்தனரே, அதன் பொருள் கருணாநிதியின் செயல்பாடுகளில் இவர்களுக்கு முழு உடன்பாடு என்பதா அல்லது அது கருணாநிதியின் நடவடிக்கைகளில் எந்தக் குறைபாடும் இல்லை என்ற இவர்களின் கணிப்பின் வெளிப்பாடா?

தேர்தல் முடிவுகளில் ஈழத்தவர்களுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசித்திரிந்த பேரவைக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோற்க வென்ற வேட்பாளரைச் சரிக்கட்டி சிதம்பரம் மட்டும் “வென்றாரே” அது பற்றிய “ஆதாய – இழப்புக் கணக்கை”க் கொஞ்சம் பார்ப்போமா?

சின்னப் பயல்கள் போல் “கிளாய்த்து”க்கொண்டு(கேட்டது கிடைக்கவில்லை என்றால் முறுக்கிக்கொண்டு சிறுவர்கள் மூலையில் போய் அமர்ந்துகொள்வதை இச்சொல்லால் குமரி மாவட்டத்தில் குறிப்பிடுவர்) தில்லியிலிருந்து திரும்பிவந்தாரே தமிழீனத் தலைவர் தன் “சுற்றத்தாருடன்”, அவரைத் தட்டித் தடவிச் சரிக்கட்ட தில்லியிலிருந்து தூதுவர்கள் வந்ததும் கேட்ட அமைச்சகங்களெல்லாம் இவரைவிடக் கூடுதல் உறுப்பினர்களை வத்திருந்த வங்கத்து மம்தாவை விட முன்னுரிமையுடன் வழங்கப்பட்டதும் எதனால்? நெடுமாறன் வகையறாக்கள் இன்னும் என் பின்னால்தான் இருக்கிறார்கள்; நான் நினைத்தால் பேரவைக் கட்சியையே தமிழகத்தில் தடம் தெரியாமல் செய்துவிடுவேன் என்று மிரட்டுவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்ததனால்தானே? அப்படி இல்லாமலா தமிழக அமைச்சரவையில் இடம் கேட்கச் சென்ற பேரவைக் கட்சியினரிடம் இனி கருணாநிதிதான் உங்கள் தலைவர் என்பது போல் சொல்லி விடுப்பார் “தலைவி”?

அரசியலில் பழமும் தின்று பல கொட்டைகளையும் போட்ட, எதிர் எதிர்ப் பக்கங்களிலும் இருந்து ஆதாயங்களைப் பெறுவதில் கைதேர்ந்த தமிழகத்து “மாவீரனு”க்கு(நா, கண், காது கூசுகிறதா? எமக்கும் மனமும் எழுதுகோலும் கூசத்தான்கின்றன பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே!) இந்தக் கணிப்பெல்லாம் இல்லாமலா இருக்கும்?

இவையெல்லாம் ஒரு முன்னேற்றப்படிதானே என்று மகிழ்ச்சி காட்டிய “தோழர்” மு.தனராசு வகையறாக்களுக்கெல்லாம் கூட “இவையெல்லாம்” முன்கூட்டியே தெரிந்திருக்குமோ?

இந்த நாடகத்தில் “வாழும் கலை” ரவிசங்கர், செயலலிதா, வைக்கோ, இராமதாசு ஆகியோரின் இடம் எது என்பது தெளிவாகவில்லை. தேர்தல் களத்தில் செயலலிதா பணம் ஏதும் இறக்கவில்லை என்று கூறப்பட்டதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?

நாடகமே உலகம்! தமிழகமே நாடக மேடை! உலகத் தமிழர்களோ நாடகக் காட்சிகளை உண்மைகள் என்று நம்பும் ஏமாளிகள்!

கோடிகளில் கோடிகள் புரள்கின்றன. உலகத் தமிழர்களின் வாழ்வு அதனாலேயே பிறழ்கின்றது.

இரண்டிலக்கம் ஈழத்தவர்களையும் 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் கூசாமல் கொடியவர்கள் கொன்ற பின்னரும் தமிழகத்தில் நிலவிய இந்த பிண அமைதியை நினைத்துப்பாருங்கள்! நாளை, நாள்தோறும் பெருகிவரும் மார்வாரி ஆதிக்கம் ஓர் ஊரில் பசித்துக் கிடக்கும் நம் மக்களையே கூலிப்படையினராக்கி நம் மக்களைத் தாக்கினால் ஓடிச் சென்று நம்மவர்களுக்கு உதவ நம் மக்கள் முன்வருவார்கள் என்று எப்படி ஐயா நம்ப முடியும்? தமிழகத்தில் ஆறரைக் கோடிப் பேரும் வெளியே இரண்டு கோடிக்கு மேலும் இருந்தும் மொத்தமுள்ள எட்டரைக் கோடிப் பேரும் ஆளற்றவர்களாக தனித்தனி மனிதர்கள் என்றல்லவா அம்மா ஆகிப்போனோம்!

இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? இதற்கான விடையைத் தேடுவோம்.

தமிழகத்தில் பல்வேறு மக்கள் குழுக்களுக்கென்று சங்கங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கருணாநிதியின் அறிவுரையால் அமைந்தவை. ஒரு குறிப்பிட்ட சிக்கல் குறித்து ஒரு துறை சார்ந்த சிலர் அணுகினால் சங்கம் அமைத்துக்கொண்டு வரச் சொல்லுவார். சங்கம் அமைத்துப் பணம் திரட்டிக் கொண்டு உரிய இடத்தில் சேர்த்தால் சில வேண்டுகைகள் நிறைவேறும். பணம் திரட்டுவோர் ஒன்றுக்கு இரண்டாகத் திரட்டித் தமக்கு எடுத்துக் கொள்வர். இவர்கள் அரசுக்கு எதிராகச் செயற்படுவார்களா?

இன்னொரு வகை, வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் இங்கு சங்கங்களை அமைத்து நம் ஆட்சியாளரோடும் தொடர்பு வைத்திருப்போர். தமிழ்நாட்டு மீனவர்கள் இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனர். அதனால்தான் சிங்களர் பறித்த ஒவ்வொரு உயிருக்கும் ஒன்றோ இரண்டோ இலக்கங்களைக் கொடுத்து நம் மீனவர்களைக் கருணாநிதி அரசால் அமைதிப்படுத்த முடிந்தது. ஆனால் “தமிழ்த் தேசிய” இயக்கங்கள் என்ன செய்தன? ஓராண்டுக்கு முன்னால் ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்த் தேசிய விடுதலை இயக்க மாநாட்டில் இப்பொருள் பற்றி நான் பேசத் தொடங்கியதுமே எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கடந்து விட்டதாகச் சீட்டு வந்தது. பின்னர் பேசிய ஒருவர் நான் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு வெளியே சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.

“தமிழ்த் தேசியம்”, “தமிழ்மொழி” பற்றிப் பேசுவோர் ஒன்றாகக் கலந்துதான் செயற்படுகின்றனர். அவர்கள் தமிழக மக்களிடமிருந்து முற்றிலும் அயல்பட்டு நிற்கின்றனர். ஒரு எடுத்துக்காட்டு மேலே நாம் சொன்னது. இன்னொன்று தமிழகத்தைக், தமிழகப் பொருளியலைக் குலைக்கக் கருணாநிதி அரசு நிகழ்த்தும் தொடர் மின்வெட்டு. 1974இல் இருந்தே தமிழகத்தில் தேவையில்லாமல் மின்வெட்டைக் கொண்டுவந்து தொழிலகங்களுக்கு ஒதுக்கீடு என்று ஊழலைத் தொடங்கி வைத்தவர் கருணாநிதி. அன்றிலிருந்து எப்போது மின்சாரம் வரும் எப்போது போகும் என்று எவரும் அறியமுடியாத நிலையில் நினைத்துப் பார்க்க முடியாத பகிர்மானக் குளறுபடிகள். இங்கு பற்றாக்குறை என்று கூறிக்கொண்டே அயல் மாநிலங்களுக்கு மின்சார விற்பனை. இன்று அயல் மூலதனம் என்ற பெயரில் உருவாக்கப்படும் சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் என்றும் பல்வேறு வளாகங்கள் என்றும் கூறிக்கொண்டு ஆளுவோர் தங்கள் சொந்த மூலதனத்தில் நடத்தும் தொழிலகங்களுக்குத் தடையில்லா மின்சாரம். சிறு, குறு தொழில்கள் இன்றைய பகிர்மானக் குழப்பத்திலும் காலம் குறிப்பிடாத, குறிப்பிட்ட காலத்தைக் கடைப்பிடிக்காத மின்வெட்டால் இயங்க முடியாமல், போட்டிகளை எதிர்கொள்ள முடியாமல் அழிந்து போக அதனால் ஆதாயம் அடையும் போட்டிக் குழுக்களுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டும் ஆதாயம் பார்க்கும் ஆட்சியாளர்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடக்கும் இந்தக் கொடுமையைக் குறித்து “தமிழ்த் தேசியம்”, “தமிழ்மொழி” பேசும் எவராவது ஒரு மூச்சு விட்டிருக்கிறாரா? அதே நேரத்தில் செம்மொழி அறிவிப்பு, திருவள்ளுவர் சிலை, பாவாணர் சிலை, பாவாணர் கோட்டம் என்று மொழியின் பெயரைக் கூறிக்கொண்டு உண்மையில் மக்களின் வாழ்வுக்கு பயன்படாத வேலைகளுக்காகக் கூக்குரல் இட்டு அதை நிறைவேற்றினார் இதை நிறைவேற்றினார் என்று கூறி கருணாந்திக்குப் பாராட்டும் நன்றியும் கூறித் திரியும்”தமிழ்த் தேசியம்”, “தமிழ்மொழி” பற்றிப் பேசுவோரால் தமிழக மக்களுடன் என்ன தொடர்பை ஏற்படுத்த முடியும்? மக்களிடமிருந்து முற்றிலும் அயல்பட்டு நிற்கும் இவர்களால் தமிழர்களுக்கோ தமிழகத்துக்கோ தமிழுக்கோ என்ன நன்மை செய்ய முடியும்?


(தொடரும்)

5.7.09

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....3

திராவிடர் இயக்கம் பொருளியல் குறிக்கோள்களை எந்தக் கட்டத்திலும் சரியாகவோ முழுமனதோடோ முன்வைக்கவில்லை (திராவிடர் கழகத்தில் திரண்டிருக்கும் பணம், அதன் பல கிளைப்புகளில் சேர்ந்திருக்கும் பணம், பதவிகள் என்பவற்றைத் தவிர வேறு எதனையும் குறிக்கோள்களாகக் கொண்டிருக்கவில்லை என்பது வேறு, முன்வைக்கவில்லை என்பது வேறு). அதனால் தத்தமக்குப் போதும் என்ற அளவுக்குக் குமுகியல் ஏற்புக் கிடைத்தவுடன் அவை எதிரணிக்குத் தாவி எதிரிக்குப் பணிந்து தம்மைக் காப்பாற்றிக் கொண்டன.

அவ்வாறின்றி திராவிடர் இயக்கம் ஒரு நிலையான பொருளியல் குறிக்கோளை முன்வைத்திருக்குமானால் ஒவ்வொரு சாதிக்குழுவுக்குள்ளும் இருந்த குமுகியல் விசைகளுக்கும் பொருளியல் விசைகளுக்கும் மோதல் ஏற்பட்டுப் புரட்சிகரத் தனிமங்கள் வெளிப்பட்டு இயக்கம் முன்னேறிச் சென்றிருக்கும்.

எடுத்துக்காட்டாக நாடார்களை எடுத்துக் கொள்வோம். திராவிடர் இயக்கத்தின் தொடக்க காலத்தில் மேற்சாதிகளின் ஒதுக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் வகையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்துச் சாதியினரும் சேர்ந்து பயிலும் பள்ளிகளை அவர்கள் தொடங்கினர். கூட்டு விருந்து(சமபந்தி போசனம்)கள் நடத்தினர். பொதுக் கிணறுகளையும் பொதுக் குளங்களையும் பொது இடுகாடு சுடுகாடுகளையும் அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்ற முழக்கத்தையும் முன்வைத்தனர். இந்த முழக்கங்களுடன் தங்கள் செல்வ வலிமையைத் திராவிடர் இயக்கத்துக்கு வாரி வழங்கினார். நாளடைவில் இவர்களின் குமுகியல் நிலை மேம்பட்டது. அவர்களுக்கெதிரான ஒடுக்குமுறை, ஒதுக்குமுறைகள் மட்டுப்பட்டன. ஒரு கட்டத்தில் அதுவரை தாங்கள் தங்களுடன் இணைத்துக் கொண்ட தாழ்த்தப்பட்டோர் தங்களுக்குச் சமமாவ வருவதை விட எஞ்சியிருக்கும் ஒடுக்குமுறை, ஒதுக்குமுறைகளை ஏற்றுக்கொண்டு மேற்சாதியினருடன் இணங்கிச் செல்வதே மேல் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

அதே நேரத்தில் பம்பாய் மூலதனத்தால் இதே நாடார்கள் நெருக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அதை எதிர்த்து இவர்களுக்குக் குரல் கொடுக்க திராவிடர் இயக்கம் முன்வரவில்லை. எனவே தங்களைக் காத்துக் கொள்ள ஒரே வழி பேரவைக் கட்சியிடம் அடைக்கலம் புகுவதே என்று முடிவு செய்தனர். அக்கட்சியில் பார்ப்பனர்களுக்கும் பிற மேற்சாதியினருக்கும் இடையில் உருவான முரண்பாட்டின் விளைவாகத் தலைமையைப் பெற்ற காமராசருக்குப் பின்னணியாக நின்றனர். நாளடைவில் வேறு வழியின்றி மார்வாரிகளின் காலடிகளில் வீழ்ந்துவிட்டனர்.

திராவிடர் இயக்கம் தமிழகத்தின் பொருளியல் விடுதலை என்ற திசையிலும் குரல் எழுப்பியிருக்குமாயின் தங்கள் பொருளியல் நலன்களுக்குப் போராடும் வலிமையைத் தாழ்த்தப்பட்டோரிடமிருந்து பெறுவதற்காக அவர்களின் குமுகியல் உரிமைகளுக்கு இடம் கொடுத்திருப்பர். பொருளியல் நலன்களுக்கும் குமுகியல் நலன்களுக்கும் இடையிலான இயங்கியல் உறவை விளக்க அண்மைத் தமிழக வரலாற்றின் இப்பகுதி நமக்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டாகும்.

ஒதுக்கீடு என்ற கோரிக்கை ஏற்கப்பட்ட அன்றே அதனுடைய புரட்சித் தன்மை போய்விட்டது. கிடைத்த ஒதுக்கீட்டுக்கான பங்குச் சண்டை தொடங்கிவிட்டது. அந்த வெற்றியே தோல்வியாகி விட்டது. இடையில் மங்கியிருந்த சாதிச் சங்கங்கள் புத்துயிர் பெற்று புதுப் பிளவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. பொருளியல் நலன்கள் குமுகியல் முரண்பாடுகளை மங்க வைப்பதற்குப் பகரம் இரண்டும் ஒன்று சேர்ந்து இந்தப் பூசலை வலுப்படுத்திக் கொண்டு பொருளியல் பின்னணியால் பேய்வலிமை பெற்றுவிட்ட குமுகியல் பிற்போக்குக் போராக மாறிவிட்டிருக்கிறது. இந்த நிலையில் பொருளியலைக் குமுகியலுக்கு எதிராக அதாவது பகைகொண்டு நிற்கும் குமுகியல் பிரிவுகளுக்குப் பொதுவான அதாவது அப்பிரிவுகள் ஒன்றுபடுவதை இன்றியமையாததாக்கும் பொருளியல் நலன்களை முன் வைத்துப் போராட்டங்களைத் தொடங்கினால் இன்று பொருது கொண்டிருக்கும் குழுக்களின் கவனம் திரும்புவதோடு இணைந்து நின்று அவர்களுக்குப் புதிதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் பொது எதிரியை எதிர்த்துப் போராடத் தொடங்குவர். இந்தப் போராட்டம் நெடுகிலும் அவ்வப்போது எழும் சூழ்நிலைகளுக்கேற்ப குமுகியல் பொருளியல் போராட்டங்களை நடத்திச் செல்வதன் மூலம் அகப்புற முரண்பாடுகளுக்கு நாம் தீர்வு காணலாம்.

எந்தவொரு முற்போக்கான முழக்கமும் திட்டவட்டமான மக்கள் குழுக்களைத் தொடுவனவாக இருக்க வேண்டும். தேசிய விடுதலை, தேசிய எழுச்சி, தமிழின விடுதலை, தமிழின மீட்சி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை அல்லது மீட்சி, புதிய பண்பாட்டு(கலாச்சார)ப் புரட்சி, புதிய மக்களாட்சி(சனநாயக)ப் புரட்சி பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை என்ற அருமையான முழக்கங்கள் மக்களைத் தீண்டவே தீண்டா.

தமிழக மக்கள், குறிப்பாகத் தஞ்சை மக்கள் உணர்ச்சிகளற்றவர்களல்ல. தன்மான இயக்கத்தின் உயிர்மூச்சாய் இருந்தவர்கள். வரலாற்றில் இப்பகுதி மக்களுக்கு அஞ்சித்தான் இராசேந்திரன் மக்களில்லாத இடத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தை அமைத்துப் பதுங்கி வாழ்ந்தான். அதிராசேந்திரனைக் கொன்று கோயில்களை இடித்துப் பார்ப்பனப் பூசாரிகளை வெட்டி வீசியவர்கள் இவர்களே. ஆனால் குலோத்துங்கனால் அரசியல் - குமுகியல் உரிமைகளடிப்படையில் வலங்கையினரென்றும் இடங்கையினரென்றும் கூறுபடுத்தப்பட்டுத் தங்களிடையில் கொலைவெறிச் சண்டைகளிட்டு அரசன் மற்றும் பார்ப்பனர்கள் முன் மண்டியிட்டாலும் அவ்வப்போது பொருளியல் நெருக்குதல்களால் வரிகொடா இயக்கங்கள் நடத்தியவரே.


அதே போன்று இன்று ஒதுக்கீடு என்ற மாயமானாலும் காலத்துக்கும் களத்துக்கும் பொருந்தாத பொதுமையரின் முழக்கத்தாலும் திசையிழந்து நிலைமறந்து நகர இடமிழந்து நிற்கும் இம்மக்களை வெற்று முழக்கங்களால் அசைக்க முடியவில்லை. உங்களுக்கு என் கருத்துகள் ஆயத்தக்கண என்ற நம்பிக்கையிருந்தால் நீங்கள் மக்களிடையிலேயே ஒரு கருத்துக் கணிப்பு நடத்திப் பார்த்து அடுத்த நடவடிக்கையில் ஈடுபடலாம். இந்த ஓர் அணுகலோடு காவிரி நீருக்காக நடத்தப்படும் போராட்டத்துக்குக் காவிரிப் பாசனப் பகுதி மக்களின் முழு ஒத்துழைப்பையும் பெறமுடியும் என்பது என் உறுதியான நிலைப்பாடு.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,
குமரிமைந்தன்.