வரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.5.09

நரிதனைப் பரியாக்கி பரிதனை நரியாக்கி......

கவர்ச்சித் திட்டங்கள் தமிழக வ.செ.திட்டத்தை உறிஞ்சுகிறது (Populism eats into Tamilnadu Budget) என்ற தலைப்பில் 29-9-2008 டைம்சு ஆப் இந்தியா, சென்னைப் பதிப்பு ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. பொய்யிலே பிறந்து ... என்ற தலைப்பில் நாம் ஏப்பிரல் 2008 தமிழினியில் எப்படி உரூ 9752.00 கோடி பற்றாக்குறை வ.செ.திட்டத்தை உரூ 84.00 கோடி மீத வ.செ.தி. என்று அரங்கத்தில் சாற்றினார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தோம்.

அந்த வ.செ.தி. உரையை நிகழ்த்திய ″பேராசிரியர்″ எப்படி சாராய வாணிகத்தில் கிடைக்கும் வருமானத்தில் அரசின் நலத்திட்டங்களை, அதாவது இலவயத் திட்டங்களை நிறைவேற்றுகிறோம் பாருங்கள் என்று பெருமிதம் கொண்டார். எனவே சாராய விலை உயர்வு அதனால் கூடுதல் வரவு என்பதில் வியப்பில்லை. ஆனால் இன்னொரு சிக்கல், தமிழினத் தலைவர் அறிவித்த திட்டங்களில் தொ.கா.பெட்டி பல இடங்களில் இன்னும் வழங்கப்படவில்லை. எரிவளி தட்டுப்பாட்டினால் வளி இணைப்பு நடுவில் நின்று போயுள்ளது. இவை எல்லாம் கட்டுரையாளருக்குத் தெரியாது போலும். களத் தொடர்பு சரியில்லை.

இன்னொரு உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களை மனமகிழ வைத்துத்தான் உங்களிடமிருந்து வாக்குகளைப் பெற வேண்டுமென்ற தலை எழுத்து எங்கள் தலைவருக்கு இல்லை. பின் எதற்கு இதெல்லாம் என்கிறீர்களா? தொ.கா.பெட்டியும் எரிவளி அடுப்பும் கொள்முதல்வதில் ஏதாவது கிடைக்காதா? அதற்காகத்தானே அரசியல் நடத்துகிறோம். கட்டடம் கட்டுவோம். அதில் பணியாற்ற ஆள் அமர்த்த மாட்டோம். கப்பல் வாங்குவோம், பூம்புகார் போக்குவரத்துக் கழகத்துக்கு. மாலுமி அமர்த்த மாட்டோம். அது கடலில் மிதந்து கிடந்து துருப்பிடிக்கட்டும். அது ஓடி எங்களுக்கு என்ன ஆகப் போகிறது?

யானை வாங்கியவர்கள் துறட்டி வாங்கவில்லை என்று சொல்கிறார்களே! அதன் பொருள் என்ன? யானையில் கிடைக்கும் தரகுக்கும் துறட்டியில் வாங்கும் தரகுக்கும் எவ்வளவு வேறுபாடு. இதற்கென்று துறட்டிக்கெல்லாம் தரகு கேட்டு இழிவுபட்டு நிற்க முடியுமா? பொதுப் பணித்துறையில் ஒரு செயற்பொறியாளர். மொத்தத்தில் நல்லவர்தான். எண்ணற்ற சின்னஞ்சிறு ஒப்பந்தக்காரர்களிடமெல்லாம் சல்லிக்காசு வாங்கமாட்டார். அங்குள்ள ஒரேயொரு பெரிய ஒப்பந்தக்காரரிடம் தாராளமாக வாங்கிக் கொள்வார். அனைவரிடமும் தூய்மையானவர் என்று பெயரெடுத்து விட்டார். ஆனால் இங்கு இன்று நாட்டில் ஊழல் பேர்வழி என்று பெயர் வாங்கினால் என்ன கெட்டுவிட்டது?

1977- 78 இல் பெரியகுளத்தில் ஓர் 6 மாதம் பணியாற்றினேன். ஒரு நாள் காலையில் வராகநதி எனப்படும் பன்றியாறாகிய பழனியாற்றின் பாலத்தில் நடந்து சென்ற போது இருவர், அவர்களைப் பார்த்தால் பள்ளி ஆசிரியர்களைப் போல் தோன்றியது, பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கூறுகிறார், ″கருணாநிதி கொள்ளையடித்தாலும் பரவாயில்லப்பா, நமக்கும் நிறையக் கொடுத்தான்″ (ஒற்றைப்படைக் குறிப்பு உரையாடிவருக்குரியது, எனவே பொறுத்தருள்க) என்றார். அப்போது ஆட்சியிலிருந்த ம.கோ.இரா. நம் தமிழினத் தலைவரைப் போல இந்த ஒட்டுண்ணிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கவில்லை போலும். இந்த ஒட்டுண்ணிகளுக்கு ஏற்றவர்களாகத்தானே நம் ஆட்சியாளர்கள் இருப்பார்கள்? விதை ஒன்று போட்டால் கரையொன்று முளைக்குமா?

யானையிலிருந்து திடீரென்று வேறெங்கோ போய் விட்டோம். பொறுத்தருள்க. யானை அன்று ஒரு போர்க் கருவி அல்லவா? அதனால் இன்று போல் அன்றும் ஆயுத பேர ஊழல் நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? நன்று, நன்று, பாராட்டுகள். உங்களுக்கு ஏதாவது ஐயமிருந்தால் சேக்கிழார் பெருமானைக் கேட்டுப்பாருங்கள். அமைச்சராயிருந்த மாணிக்கவாசக அடிகளார் குதிரை வாங்க என்று அரசுக் கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்துச் சென்று சிவனுக்கு ஆலயம் எடுப்பித்தது ஆயுத பேர ஊழல்தானே! போபோர்சு பகரத்தில் 20% மேல் ஆட்சியாளர்களுக்குக் கிடைத்தது என்று போபர்சு நிறுவனத்தின் போட்டி நிறுவனம் கூறியது. உலகச் சந்தையில் ஆயுத பேரத்தில் குறைந்தது 20%க்கு தரகு, உண்டாம். அவர்களும் 20% தரகு கொடுக்க முன்வந்தார்களாம். ஆனால் போபோர்சு கூடுதல் தரகு கொடுத்ததால் அங்கே போய்விட்டார்கள் என்பது அந்த நிறுவனத்தின் மனக்குறை. அடிகளார் செய்தது 100% ஊழல் அல்லவா?

சரி, அவர் சிக்கியதும் என்ன நடந்தது? அசல் சிவபெருமானே முன்வந்து அவரைக் காக்கவில்லையா? யார் சொன்னது சிவன் சொத்து குல நாசம் என்று? வாருங்கள் அடியவர்களே! சமயத் தொண்டர்களே! துணிந்து சிவன் தொண்டில் ஈடுபடுங்கள். எவ்வளவு ஊழல் செய்தாலும் சிவன் உங்களைக் காப்பார்.

ஆனால் ஒரு சின்ன ஐயப்பாடு. மாணிக்கவாசகர் ஊழல் செய்தது அதே சிவனுக்குக் கோயில் கட்டத்தானே. வேறு நோக்கத்துக்காக அல்லது கோயில் கட்டுபேர்வழி என்று அதிலும் கொஞ்சம் சுருட்டியிருந்தால் சிவன் விட்டிருப்பாரா? நம் கடவுள்கள், துட்ட நீக்கி இட்ட பரிபாலம் செய்பவர்களன்றோ, அதாவது தீயவர்களை அழித்து தமக்கு வேண்டியவர்களைப் பாதுகாப்பவர்கள் அல்லரோ? காப்பது நல்லவர்களை அல்ல வேண்டியவர்களை என்றால் அப்போது அழிக்கப்படுபவர்கள், அதாவது துட்டர்கள் எனப்படுவர்கள் தமக்கு வேண்டாதவர்கள், அதாவது வேறு கடவுள்களை வழிபடுபவர்கள் அல்லது தன்னை வழிபடாதவர்கள் என்று பொருளாகுமல்லவா? அப்படியானால் தன் அடியவர்கள் தனக்குச் செய்யும் பணியில் தவறுகள் செய்தாலும் பொறுத்துக்கொள்வார்கள் நம் கடவுள்கள் என்று தேறலாம். மொத்தத்தில் ஊழல், வேண்டியவர் - வேண்டாதவர் பார்த்து ″நயன்மை″, நன்மை, தீமை, செய்தல் என்பவை எல்லாம் முறை என்றும் நெறி என்றும் கடவுள் பண்பாகவும் காட்டப்பட்டு நம் குருதியினுள் ஏற்விட்டது. இந்தக் குருதியை மாற்ற வேண்டும் ஈழத்தில் நடைபெறுவது போல்.

அண்மைக் காலமாக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் நுழைந்தாலே பொய் பேசும் கலை நன்றாகக் கைவந்துவிடுகிறது. சிக்குன் குனியா, பேருந்துக் கட்டண உயர்வு,″மீத″ வ.செ.தி. பற்றிய பொய்களை எல்லாம் விட்டுவிடுவோம். பெரியவர் மின்வெட்டார், மன்னிக்க, ஆர்க்காட்டர் அடுக்காத பொய்களை விடவா இலவயத் திட்டங்களால் எந்தப் பணவியல் இல்லை என்று சொன்ன இந்த அதிகாரி சொல்லிவிட்டார்?

பொய்யே பிழைப்பாகக் கொண்ட ஒருவன் தன் மகனைப் பொய் சொல்லச் சொன்னானாம். அவன் சரியாகச் சொல்லவில்லையாம். நீ பிழைச்சுக்க மாட்டலே என்று கூறி அவனைக் கிணற்றுக்குள் எறிந்துவிட்டுப் போய்விட்டானாம். சிறுவன் எப்படியோ கரை ஏறிவிட்டான். தந்தை கேட்டான், எப்படிடா மேலே வந்தே என்று. மகன் சொன்னான் தண்ணீரில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு ஒன்னுக்கு அடிச்சேன்பா, அதைப் பிடிச்சுக்கிட்டே மேலே ஏறிட்டேன் என்று. மகனைத் தந்தை மகிழ்ச்சிப் பெருக்கால் கட்டிப் அணைத்துக் கொண்டானாம். அந்தச் சிறுவனெல்லாம் நம் தலைமைச் செயலக வாழுநர்களின் முன் எம்மாத்திரம்?

கல்வித்துறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் ஐந்தாண்டுகளுக்கு எழுத்தும் கிடையாது ஏடும் கிடையாது. ஆனால் அந்த ஐந்து வகுப்புகளுக்காகவும் 25 கோடி செலவில் புத்தகம் அச்சடித்து வைத்துள்ளனர். நோக்கம் என்ன?

எழுதப் படிக்கச் சொல்லித் தராத பள்ளியில் படித்து எதற்கு என்று ஏழை மக்கள் ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு முன்பிருந்ததைப் போல் படிக்காமலே இருந்து விடுவோம் என்று முடிவு கட்டிவிடுவார்கள். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் பார்ப்பனர்கள், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களின் தலைமையில்தான் ஆட்சி நடைபெறுகிறது. எனவே அடித்தள மக்களுக்கு எழுத்தறிவு தேவையில்லை என்று அவர்கள் நினைப்பது சரிதான். அவர்கள் மட்டுமல்ல எல்லாச் சாதியின் மேல்மட்டத்தில் இருப்பவர்களுமே தாங்களும் தங்கள் மட்டத்திலுள்ளவர்களும் மட்டும் கல்வி கற்றால் போதும் என்று நினைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, நாடார் மகாசன சங்கத்தின் பொறுப்பாளர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடும் பனையேறிகளுக்கு கள்ளிறக்கும் உரிமையும் வேண்டும் என்று கேட்கவில்லையா?

தமிழக வரலாற்றைப் பார்த்தால் ஏதோவொரு வெளிவிசை தமிழகத்தைப் பிடிப்பதற்காக மத வடிவில் நுழைந்து அடித்தள மக்களுக்கு எழுத்தறிவு வழங்கிவிட்டு வந்த வேலை முடிந்ததும் கைவிட்டு விட்டிருப்பதை உய்த்தறிய முடிகிறது. அத்தகைய ஒரு நிகழ்முறை வெள்ளையர் வந்த பிறகு தொடங்கி முடிவுகாலத்தை நெருங்குவதை இப்போது உணர முடிகிறது.

கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலர் போன்ற பதவிகளில் நேரடி அமர்த்தல் நடைமுறையிலிருக்கிறது. 30 அகவைக்கு உள்ளடங்கிய இளைஞர்கள் தங்கள் தந்தை அகவையுள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மேல் ஆளுமை செய்ய வந்துவிடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஆங்கில வழிப் பள்ளிகளில் பயின்ற மேட்டுக்குடி (எந்தச் சாதியாயினும்) மக்களிலிருந்து வந்தவர்கள். இவர்களில் எவரும் சேரிப் பிள்ளைகள் படிக்கும் இந்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் பக்கமே எட்டிப் பார்த்திருக்க மாட்டார்கள். அத்துடன் தங்கள் வாழ்நாளில் ஒரு நாள் கூட ஒரு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய பட்டறிவுப் இருக்காது. பட்டறிவில் பழுத்த மூத்த ஆசிரியர்களுக்கு எப்படி கற்பிப்பது என்று இவர்கள் அறிவுறுத்துவார்கள். எவராவது உண்மை நிலையை எடுத்துரைக்க முயன்றால் அவர்களுக்குத் தண்ணீர் இல்லாக் காட்டுக்கு மாறுதல் கிடைக்கும். இவர்கள் அனைவரும் சேர்ந்து சேரிப் பிள்ளைகளுக்கான இந்தப் பள்ளிகளை இழுத்து மூடாமல் ஓயப்போவதில்லை.

இனி, பாசனத்துறையை எடுத்துக்கொள்வோம். பாசன அமைப்புகளைப் பராமரிப்பது இல்லை; உரிய பொறியாளர்களை அமர்த்துவதில்லை. உழவர்களும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஓர் உரூபாவுக்கு ஒரு கிலோவென்று அரிசி விற்கும் போது, அது தீட்டப்பட்டு மலிவாகச் சந்தைக்கு வரும்போது, ஒரு நாளைக்கு உரூ 250/- கூலி கொடுத்து வேளாண்மை செய்து கிடைக்கப் போவதென்ன? தமிழினத் தலைவர் நடுவரசில் தனக்கிருக்கும் செல்″வாக்கை″ வைத்து வேண்டிய அளவு நெல்லை நடுத் தொகுப்பிலிருந்து பெற்று ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி வழங்கிவிடுகிறார். ஆக, அதிலும் செலவு மிச்சம். அத்துடன் அரியினால் வரும் அரிசியல் சிக்கலையும் தவிர்த்துவிடலாம். ஆளுவோருக்கோ எத்தனையோ வகைகளில் வருமானம்.

தமிழகத்தில் கரும்பு வேளாண்மை செய்வோருக்கு உரிய விலை வழங்காததால் இங்கு சீனி விளைப்பு குறைந்து வருகிறது; கருநாடகத்தில் கூடுதல் விலை வழங்குவதால் அங்கு வளர்ச்சியடைகிறது என்றும் கரும்பிலிருந்து சீனி எடுத்தபின் வெளியேறும் கசடைச் சாராய ஆலைகளுக்கு வழங்கி ஆதாயம் பெறுகின்றனர்; அதில் ஒரு பகுதியை உழவர்களுக்குக் கொடுத்தால் என்ன என்றும் கேட்கிறது 25-10-2008 தினமணியின் ஆசிரிய உரை (அடிக்கரும்பும் நுனிக்கரும்பும்).

தமிழகத்தில் பாசன நீரை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி ஆதாயம் பார்த்தது போல் கரும்பு வேளாண்மையையும் சீனி ஆலைகளையும் சாராய வடிப்புத் தொழிற்சாலைகளையும் கர்னாடகத்துக்கு மாற்றி ஆதாயம் பார்க்கத் திட்ட மிட்டுள்ளார்களோ என்னவோ?

ஆக, இதனால் எல்லாம் செலவை மிச்சம்பிடித்து மக்களுக்கு இன்னும் எத்தனையோ ″நலப்பணிகளை″ச் செய்ய இருக்கிறார் தமிழினத் தலைவர்.

தான் என்னென்ன பணிகள் செய்யப் போவதாகச் சொல்வதை விட்டு எத்தனை கோடிகளுக்குப் பணிகள் செய்யப்போவதாக அரசு என்று அறிவிக்கத் தொடங்கியதோ அன்றே அந்த ″ஒதுக்கீட்டின்″ பொருள் வேறாகிவிடுகிறது. இந்த ஒதுக்கீட்டில் தத்தமக்கு எவ்வளவு எவ்வளவு கிடைக்கும் என்பது கட்சித் தொண்டர்கள் வரை இப்போது தெரிந்து போய்விடுகிறது. ஆகவே எனது அருமை உடன் பிறப்புகளே, இரத்தத்தின் இரத்தங்களே ஆயத்தமாகுங்கள்; கட்டுப்பாட்டோடு பாடுபட்டு அடுத்த தேர்தலில் வெற்றி தேடித் தாருங்கள்; உங்களுக்கு வளமான ஓர் எதிர்காலம் காத்திருக்கிறது. ″ஒதுக்கீடு″ பற்றிய இந்த அறிவிப்புகளின் நோக்கம் இதுத்தான்.

நாங்கள் பொய்களைச் சொன்னால் நீங்கள் எங்களை என்ன செய்ய முடியும்? இதுவரை சொல்லிய பொய்களுக்காக எங்களை என்ன செய்துவிட்டீர்கள்? ஏதோ ஆங்கிலன் எழுதிய அரசியல் சட்டத்தைப் படியெடுத்து உருவாக்கிய புதிய அரசியல் சட்டமும் சொல்கிறது என்பதற்காக ஆண்டுக்கு ஒரு வ.செ. திட்டத்தையும் ஒரு திருந்திய மதிப்பீட்டையும் அவையில் வைத்து நிறைவேற்றித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

எம் மூதாதைகளான சேரனும் சோழனும் பாண்டியனும் வ.செ.தி.யும் திருந்திய மதிப்பீட்டையும் போட்டா ஏரி, குளங்கள், கோயில்கள் கட்டினார்கள்? சத்திரங்கள், சாவடிகள், சாலைகள் அமைத்தார்கள்? மரங்கள் நட்டார்கள்? அந்த உயர்ந்த, ஒப்பற்ற பீடும் பெருமையும் கோலோக்சும் ″உன்னத″ நிலையை விரைவில் எய்துவோம் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறோம்!

ஓங்குக அய்யன் திருவள்ளுவர் புகழ்!

(இக்கட்டுரை தமிழினி நவம்பர்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

1.6.08

பொய்யிலே பிறந்து....

தமிழக அரசின் வரவு - செலவுத் திட்டம் 2008 – 2009

தமிழ்நாட்டில் பேரவைக் கட்சி பெருமகனார் எசு.ஆர் பாலசுப்பிரமணியம் தவிர ஒருவரைக் கூட சிக்குன் குனியா எனப்படும் மொழி முறிச்சான் நோய் தாக்கவில்லை.
தமிழகத்தில் இந்த ஆண்டு மின்வெட்டே கிடையாது.
தமிழக அரசு போக்குவரத்து நிறுவனப் பேருந்துகளில் மறைமுகமாகவோ நேரடியாகவோ எந்தக் கட்டண உயர்வும் கிடையாது.

இது போன்று தமிழக மக்களுக்கு உள்ளங்கைப் புண்ணாகத் தெரிந்த ″உண்மை″களைக் கூறிய தமிழக அரசு முன்வைத்துள்ளது 84 கோடி மிச்சமாகக் காட்டும் ஒரு மீத, அதாவது ″உபரி″ வரவு செலவுத் திட்டத்தை.

″கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள்″ என்பது மிகத் தொன்மையான பழமொழி. இன்று அது எட்டு மணிநேரம் கூட நிலைக்கவில்லை. தினமணி 21-03-2008 நாளிதழின் நான்காம் பக்கத்தில் தமிழகத்தின் மொத்தக் கடன்தொகை 2008 – 09 ஆம் ஆண்டின் இறுதியில் உரூ 74,641.35 கோடியாக இருக்கும் என பணச் செயலர் கு.ஞான தேசிகன் கூறினார் என்று செய்தி வெளியாகியுள்ளது. 2007-08 ஆம் ஆண்டின் மொத்தக் கடன் தொகை உரூ 65,750.91 கோடியாம். ஆக, இந்த ஆண்டில் தமிழக மக்கள் மீது ஏறியுள்ள கடன் 74,641.35 - 65,750.91 = உரூ 8,890.44 கோடி ஆகும். ஆனால் இத்தொகை நடுத்தர கால நிதித் திட்டம் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள அட்டவணையில் நிதி உபரி(+) / பற்றாக்குறை(-) (சரிக்கட்டப்பட்டவை) என்ற இன விளக்கத்தில் உரூ (-)9752.00 கோடி எனக் காட்டப்பட்டுள்ளது. அடிக்குறிப்பில் ″இவை சரிக்கட்டப்பட்ட எண்கள் என்பதால் இந்த மதிப்பீடுகள் நிதிக் கணக்குகள் மற்றும் ஆண்டு நிதி விபர அறிக்கையுடன் பொருந்தாது″ என்று தரப்பட்டுள்ளது.

நாம் ஒரு பணம் திட்டமிடல் வல்லுநர் அல்ல என்பதால் இதன் உண்மையான பொருள் நமக்கு விளங்கவில்லை. ஆனால் உரூ 9752.00 கோடி பற்றாக்குறை வ.செ.திட்டத்தை உரூ 84.00 கோடி மீத வ.செ. திட்டமாக சட்டமன்றத்தில் அரங்கேற்றியுள்ளனர். இதன் பொருள் இப்படியும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. இவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகைக்குச் சமமாகக் கடனை வாங்கத் திட்டமிருப்பார்கள் என்று தோன்றுகிறது. அவ்வாறு செலுத்திய பிறகு நிலுவையிலிருக்கும் பழையகடனாகிய உரூ 65,750.91 கோடியுடன் கூடுதலாக 8890.44 கோடி நிகரக் கடன் வாங்கியிருக்கிறார்கள். அப்படியும் பற்றாக்குறையாக 9752.00 – 84.00 – 8890.44 அதாவது உரூ 777. 56 கோடியை வ,செ. திட்டத்தினுள் எங்கோ மறைந்திருக்கிறார்கள்.

ஆக, வெட்டவெளியில் மக்களின் முன்னால் நோய் பற்றியும் மின்வெட்டு பற்றியும் பேருந்துக்கட்டணம் பற்றியும் கூசாமலும் தயங்காமலும் அச்சமின்றியும் திமிராகவும் பொய் கூறியவர்கள், அரசியல் சட்டத்தின்படி ச.ம.உக்களும் பா.உ.க்களும் மிகப் பாதுகாப்பாகக் குற்றங்கள் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களில் ஒன்றில் இப்படி சட்டத்துக்கு உட்பட்டதாகக் கருதப்படும் அல்லது கணக்கீடு உத்திகளின் படி அமைந்த ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டதில் வியப்பில்லை. மாநில, நடு பேராளர் மன்றங்களில் நிகழும் குற்றச் செயல்களில் தலையிட நாட்டின் பொது சட்ட ஒழுங்கு துறைக்கு அதிகாரம் இல்லை அல்லவா? நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் வாக்களிக்க கைக்கூலி வாங்கியவர்கள் அவ்வாறு வாக்களித்தது அவர்களது கடமையும் உரிமையும்; அதில் தாங்கள் தலையிட முடியாது என்று நாட்டின் நயன்மையைக் காக்கும் உச்ச நிறுவனம் தீர்ப்புக்கூறி இதை உறுதி செய்யவில்லையா? பண அமைச்சரின் பெயரின் முன்னொட்டாகிய பேராசிரியர் எனும் மதிப்பை மட்டும் பகடி செய்யும் எதிர்கட்சித் தலைவருக்கு இந்த வ.செ.திட்டத்தில் உள்ள குறைகள் அல்லது ஓட்டைகள் தெரியாது என்று கூறிவிடுவதற்கில்லை. நேற்று தான் செய்தவை, மீண்டும் தான் செய்ய இருப்பவற்றை விளம்பரம் செய்து தன் தலையிலேயே மண்னை யாராவது அள்ளிப் போட்டுக் கொள்வார்களா? ஊழல் தொழில் நுட்பத்திலும் அறிவியலிலும் வல்லவர், ஊழல் கலையின் நடமாடும் பல்கலைக் கழகம் காட்டியுள்ள புதிய வழியில் ஆசானை மீஞ்சிய மாணக்கராக அவர் மிளிரப் போகிறார் என்பது உறுதி.

இனி, வ.செ.திட்டத்திலுள்ள சிறப்பான சில கூறுகளைப் பார்ப்போம். அமைச்சரின் உரையில் எல்லா இனங்களுக்கும் உரிய ஒதுக்கீடுகள் முழுமையாகத் தரப்படவில்லை. ″பணி தொடர்ந்து நடைபெறுகிறது″ என்ற வகையில் செல்கிறது உரை. இருப்பினும் கிடைத்த தொகைகளை வைத்துப் பார்க்கும் போது மொத்த மதிப்பீட்டில் உதவிகள், மானியங்கள், இலவயங்கள் 15 நூற்றுமேனி அளவுக்கு உள்ளன. ஏறக்குறைய 58 ஆண்டுகளுக்கு முன் ஒரு முழு உரிமை பெற்ற குடியரசாக மலர்ந்ததாகக் கூறப்படும் நம் நாட்டில் நாளுக்கு நாள் முதியவர்களும் கைம்பெண்களும் நல்லவர்களென்று எந்தக் கோணத்திலிருந்தும் மதிப்பிட முடியாத ஆட்சியாளர்கள் முன் கையேந்தி நிற்கும் நிலைமை ஏன் தொடர்கிறது? 37 ஆண்டுகளுக்கு முன் 1971 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் முதல்நாள் நள்ளிரவில் திறந்து ஓடவிடப்பட்ட அரசின் சாராயத்துக்கு இதில் எவ்வளவு பங்கு? அரசின் சாராய வாணிகத்தில் வரி வருவாய் மட்டும் ஏறக்குறைய பத்தாயிரம் கோடி உரூபாய். அப்படியானால் அதன் விலை அதைப்போல் எத்தனை மடங்கு இருக்கும். அரசின் ஒட்டுமொத்த ″உதவிகள், மானியங்கள்″, ″இலவயங்கள்″ கிட்டத்தட்ட ரூ 7500 கோடி தான். மக்களின் வருவாயிலிருந்து இந்த ஒழுக்கு நிகழாமலிருந்தால் இவை தேவைப்பட்டிருக்காதே! மக்கள் எப்போதும் ஏழைகளாக இருக்க வேண்டும், அதாவது கிழவனும் சாகக் கூடாது, கட்டிலும் அதாவது மருத்துவமும் ஓயக்கூடாது. அந்த ஏழைகளைச் சிரிக்க வைத்து அதில் இவர்கள் பணமாகிய இறைவனைக் காண்பார்கள்; கொடைவள்ளல்கள் என்று போற்றவும் படுவார்கள். அன்பான அண்ணன் காட்டிய அழகான வழியில் அயராது உழைக்கும் அருமைத் தம்பிகளுக்கு நம் உளம் கசந்த சாபங்கள்.

குடியிருக்க வீடு கூட இல்லாதவர்களுக்கு கறவை மாடுகளாம். அவை இருக்கின்ற புல் பூண்டுகளையும் கறம்பித் தின்றுவிடும். இந்த மாடுகளை வாங்குவதிலும் வழங்குவதிலும் கட்டாயம் நல்ல வரும்படி கிடைக்கும், இலவய மிதிவண்டி, தொ.கா.பெட்டி, எரிவளி இணைப்பு ஆகியவற்றில் போன்று. இது ஒரு பக்கம் என்றால் உரூ. கோடி செலவில் மரம் நடப்போகிறார்களாம். என்றாவது மரம் வளர்த்தல் என்று இவர்கள் சொல்லி நாம் கேட்டிருக்கிறோமா?

இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்.

நெசவாளர்களுக்குக் குடியிருப்புகள் என்று சொல்லி பிற மக்களோடு கலந்து வாழ்ந்து, வசதி உள்ளவர்கள் நகர் விரிவாக்கங்களில் புதிய மனைகளை வாங்கி கலந்து வாழத் தொடங்கியது பொறுக்காமலே அவர்களைப் பெயர்த்துத் தனிக் குடியிருப்புகளில் அமர்த்தினார்கள். அது போல் சமத்துவபுரங்கள் என்ற பெயரில் கட்டப்படும் வீடுகளில் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனித் தொகுப்புகளை வழங்க அங்கும் வலுவிழந்தது வரும் சாதியத்துக்குப் புத்துயிரூட்டி வருகிறது இந்த அரசு. இதற்குக் காரணம் தமிழகத்தில் உருவான அரசுகளெல்லாம், மேல் சாதித் தலைவர்களிடையில் உருவான முரண்பாடுகளால் தற்செயலாக கட்சி, ஆட்சிப் பதவிகளில் அமர்ந்து விட்ட காமராசர் தவிர மேல்சாதியினரின் பிடியிலேயே இன்றும் இருந்து வருவதுதான். அத்துடன் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல் என்ற பட்டத்தைப் பெறுவதற்கு மக்கள் மீது வரி கூட விதிக்காமல் அவர்கள் பெயரில் கடன் எடுத்து வட்டியையும் அவர்கள் தலைமேல் சுமத்தவும் முடிகிறதே!

சமச்சீர் கல்வியைப் புகுத்தி கல்வியில் புரட்சிகர மாற்றம் கொண்டு வரப்போகிறார்களாம்! உள்ள பள்ளிக்கே இருந்த ஆசிரியர் – மாணவர் விகிதத்தைப் பாதியாக்கி ஓய்வு பெற்ற ஆசிரியப் பணியிடங்களை உரிய காலத்தில் நிரப்பாது, காலாகாலத்தில் கட்டமைப்புகளை உருவாக்காது ஆசிரியர் சங்கங்களுக்கு அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து அவர்களைப் பிரித்து மோதவிட்டு எதற்குமே உதவாக்கரைகளாக அவர்களை ஆக்கிக் கெடுத்துக் கல்வித் துறையையே குட்டிச் சுவராக்கிவிட்டு அதற்கு மாற்றாக உயர் குடிப் பள்ளிகளை உருவாக்கிய பின் இப்போது அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் பள்ளிகளுக்கு இறுதி அடி கொடுக்க ″அங்கு மட்டும்″ ″சமச்சீர்″ கல்வியை அறிமுகம் செய்யப் போகிறார்களாம். அடித்தளத்திலிருந்தே புதிதாகக் கட்டியெழுப்ப வேண்டிய திட்டம் இது. பச்சிளம் குழந்தைகளில் இயல்பாக அமைந்திருக்கும் திறமையை இனம் கண்டு அதை மிகுக்கவும் அதே நேரத்தில் அதனிடம் பதுங்கியிருக்கும் குமுக வாழ்வுக்குப் பொருந்தாத பண்புகளைக் கண்டுபிடித்து அவற்றின் இடத்தில் குமுக மனிதனை உருவாக்கும் பண்புகளை நடவும் தேவைப்படும் பெரும் திறன்களை வளர்த்துக் கொண்ட ஆசிரியர்களைத் தொடக்க கல்வியில் புகுத்துவதிலிருந்து இதைத் தொடங்க வேண்டும். மேல் சாதியினரான ஆட்சியாளர்கள் இதைச் செய்வார்களா? அல்லது கல்வியாளர்கள் என்று தன் பட்டம் அடிப்பவர்கள் தாம் இதைப்பற்றிச் சிந்தீத்திருப்பார்களா? இதைப் பற்றி விரிவாக நாம் தனியாகப் பேசலாம்.

அனைவருக்கும் கல்வி, தொடக்கக் கல்வி அனைத்தும் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் செயற்பட்டாலன்றி இவர்கள் புகுத்தும் இந்தச் ″சமச்சீர்″ கல்வியால் தமிழக மக்களின் கல்வி நிலை இன்னும் ஒரு தலைமுறையில்18 ஆம் நூற்றாண்டில் போய் நிற்கும் என்பதில் ஐயமில்லை.

பள்ளிகளில் கட்டணங்களையும் சிறப்புக் கட்டணங்களை ஒழித்தாயிற்று. இதுவரை இந்தப் பணத்தில் இருந்துதான் பள்ளிக்குத் தேவையான விளையாட்டுத் தளவாடங்கள், நூலகத்துக்குத் தேவையான நூல்கள் போன்ற இன்றியமையாச் செலவுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள் தலைமையாசிரியர்கள். கட்டணங்கள் ஒழிக்கப்பட்ட நிலையில் இந்தச் செலவுகளை எதிர்கொள்ள அரசு எந்த ஒதுக்கீடும் செய்ததாகத் தெரியவில்லையே என்கின்றனர் கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள்.

1940களில் தமிழகத்தில் நெசவாளர்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்று திராவிட கழகத் தலைவர்கள் கைத்தறித் துணியைச் சுமந்து சென்று விற்று கட்சி வளர்த்தார்கள். மூன்று தலைமுறை ஆகியும் அவர்களுக்கு மாற்று வாய்ப்புகளை உருவாக்கி நெசவை முழுவதும் மேம்பட்ட தொழில் நுட்பத்தின் கீழ் கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்காமல் அவர்கள் எப்போதும் இவர்களை நோக்கி கையேந்தி நிற்கும் நிலையில் வைத்துவிட்டு மானியம், உதவி என்று பேசிவருகின்றனர். அவ்வாறே உழவன் நிலையும்.

உழவனுக்கும் நெசவாளிக்கும் வழங்கும் இலவய மின்சாரத்துக்கு அரசு மின்வாரியத்துக்கு ″மானியம்″ வழங்கிவிடுகிறது. அது போல் மாணவர்களுக்கான இலவய பேருந்து கட்டணத்துக்கும். அப்படி இருக்கும் போது பேருந்து வாங்கவும் மின்வாரியத்துக்கும் அரசு ஏன் தனியாக மானியம் வழங்க வேண்டும்? பொதுமக்கள் நடத்தும் பேருந்து நிறுவனங்களில் ஒவ்வொரு பேருந்திலிருந்தும் கிடைக்கும் வருமானத்திலிருந்து இரண்டாண்டுகளில் ஒரு புதிய பேருந்தை வாங்கி விடுகிறார்களே? அரசு நிறுவனத்திலிருந்து வரும் ஆதாயம் எங்கே போகிறது? அரசுடைமைக்காக ஊழிக் கூத்தாடும் பொதுமைத் தோழர்களே, உங்களுக்கு இதில் எவ்வளவு பங்கு? புதிதாக அமர்த்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் பணி இடங்களுக்கு உரூ. இரண்டு இலக்கத்துக்கும் மேலாகப் பறிக்கப்பட்டதே இதுதான் நீங்கள் கூறும் நிகர்மையா? இதையே பொதுமக்கள் செய்திருந்தால் 5 பேரிடம் வாங்கிய பணத்திலிருந்து ஒரு புது பேருந்து வாங்கி ஓட விட்டிருப்பார்களே!

கடன்களில் வெளிநாட்டு கடன்களாக உலக வங்கியிடமிருந்து 1286 கோடி உரூபாய்களுக்குச் செய்தி அமைச்சரின் உரையிலிருந்து கிடைக்கிறது. சப்பானின் பன்னாட்டு ஒத்துழைப்பு வங்கியிடமிருந்தும் செருமானியின் கடன் வழங்கு நிறுவனத்திலுமிருந்தும் பெற்ற கடன்களுக்குத் தொகைகள் இல்லை. நபார்டு வங்கியிலிருந்து 150 கோடியும்(உரையின் இப்பகுதியில் வேறு பல இடங்களையும் போல் செய்திகள் தெளிவாக இல்லை) தமிழ்நாடு நகர்ப்புறச் சாலைக் கட்டமைப்பு நிதியக் கடன் பத்திரம் மூலம் 853 கோடியும் உரூபாய்களை இனம் காண முடிகிறது.

எண்ணற்ற சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் புலனத் தொழில்நுட்ப வளாகங்கள் உட்பட பலவகை தொழில்நுட்ப வளாகங்கள் அமைப்பதற்கான செலவு அவற்றில் முதலிடுவோர் பற்றிய செய்திகளும் உரையில் இல்லை.

அரசு என்பது எப்போதுமே ஊழல் பதுங்கியிருக்கும் ஓர் இருள் மண்டபம். அதனைத் திருந்துவதென்பது கடினம். அது இல்லாமல் வாழ்கின்ற ஒரு வளர்ச்சி நிலையை மனிதன் இன்னும் எய்தவில்லை. இந்த நிலையில் அரசோடு குமுகம் வாழ வேண்டுமாயின் அதன் அதிகாரங்களை, குறிப்பாகப் பொருளியல் நடவடிக்கைகளை முடிந்த அளவுக்குக் குறைக்க வேண்டும். அதைத்தான் மார்க்சும் ஏங்கல்சும் ″அரசு உதிர்வது″ என்று கூறினர். ஆனால் அவர்கள் ″பாட்டாளியரின் ஓர் அரசு″ என்று கூறிய இடைநிலைக் கருத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு அரசைப் பேயாக வளரத் துணை நின்று உலகையே அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளனர் பொதுமைக் கட்சியினர்.

மக்களாட்சி என்பது மக்களின் பண்பாட்டை மேம்படுத்தும் ஒரு நடைமுறை. அங்கு ஒவ்வொரு மனிதனும் தன்மானம், தற்சார்பு, தன்னம்பிக்கை, பிறரை மதிக்கும் தன்மை பழிக்கு அஞ்சுதல் போன்ற பண்புகளை உடையவனாக மேம்பட்டு வர வேண்டும். ஆனால் நம் நாட்டிலோ தான் கண்காணித்து வழி நடத்த வேண்டிய ஆட்சியாளர் முன் அவன் எச்சிலுக்காக கையேந்தி நிற்பவனாக, ஏழைகளை மட்டுமல்ல, பணம் படைத்தவர்களைக்கூட, ஒரு வேட்டி சேலைக்காக, ஒரு வண்ணத் தொ.கா. பெட்டிக்காக, ஒரு எரிவாயு அடுப்புக்காக மகிழுந்தில் வந்து இரக்க வைத்துவிட்ட தி.மு.க. அரசின் அருஞ்செயலைப் போற்றி மகிழ்வோம்!

சாராயம், அதை ஈடுகட்ட உரூ 2/-க்கு அரிசி வழங்கி உழவனின் உச்சியிலடித்து கள்ள விலைக்கு வெளி மாநிலத்துக்கும் வெளிநாட்டுக்கும் கடத்தி விற்பது, அது போலவே இலவய வண்ணத் தொ.க.பெட்டி, அதையும் விற்றுக் கொடுக்க அமைப்பு, அடுத்து எரிவாயு அடுப்பிலும் அவ்வாறே தொடர இருக்கும் இது போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் என்ற பெயரில் நிகழும் பண வழங்கல்களில் கிடைக்கும் சிதறல்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, புதிதாகக் களத்தில் நுழைந்த திரை நடிகர்களின் கட்சி, அவர்களுக்குப் பின்புலத்தில் இருப்போர் ஆகியோரிடமிருந்தும், சமயங்களின் பெயரிலும் சாதிகளின் பெயரிலும் ″தொண்டு″ நிறுவனங்களுக்கென்றும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் பாயும் கணக்கில்லாத கள்ளப் பணம், கருப்புப்பணம் அல்ல, அது சட்டப்படி ஈட்டப்பட்டு வருமானவரித் துறையினால் இழி பெயர் சூட்டப்பட்டது, மக்களிடையில் குறிப்பாக இளைஞர்களிடையில் புகுந்து, உழைப்பை மதிக்காத, எந்த நன்னெறிகளையும் புகட்டாத கல்வியுடன் சேர்ந்து பண்பாடறியாத ஓர் இளம் தலைமுறையை உருவாக்கி வைத்துள்ளது நமது ″சனநாயகம்″. மூத்தவர்களும் அதே மனப்பான்மைக்கு உள்ளாகி விட்டனர். அதனால் வேலை செய்வதற்கு இன்று ஆட்கள் கிடைக்கவில்லை. கூலியை எவ்வளவோ உயர்த்தியும் விளைந்த நெல்லை அறுக்கவும் தேங்காயை வெட்டவும் ஆள் இல்லாமல் விளைபொருட்கள் வீணாகின்றன. சக்கரவர்த்தித் திருமகள் என்ற திரைப்படத்தில் ஒரு பாட்டுப் போட்டியில் ″அன்ன சத்திரம் என்பது எதற்காக″ என்ற கேள்விக்கு ″சில திண்ண தூங்கிப் பசங்களுக்காக″ என்று கலைவாணர் விடை கூறுவார். இன்று அனைத்து சமய அனைத்துக் கோயில்களிலும் மதச்சார்பில்லாத அமைப்புகளிலும் அன்ன தானம் என்பது கள்ளக் கணக்கு எழுதி கொள்ளை அடிக்கும் ஒரே நோக்கத்துக்காக தவறாமல் இடம் பெற்று ஒரு பெரும் திண்ணை தூங்கிக் கூட்டம் உருவாகியிருக்கிறது. இவற்றிலும் மகிழுந்தில் வந்து உண்டு செல்வோரைக் காண முடியும். இவ்வாறு மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் புற்றுநோயின் கண்ணறைகளாக மாறி நிற்கின்றனர். அவற்றின் வெளிப்பாட்டை சாலையிலுள்ள தேநீர்க்கடையின் தொ.கா.பெட்டியில் குருவிப் பந்துப் போட்டி ஒளிபரப்பாகும் போது பார்க்கலாம். 28–03–2008 அன்று அதன் ஒரு குவியலைச் சேப்பாக்கம் திடலில் பார்க்க முடிந்தது. இந்த புற்றுநோய் கண்ணறைகளை எப்படி அகற்றுவது?

இந்தப் பண்பாட்டுச் சீரழிவை வளர்க்கும் இன்னொரு வ.செ. திட்டம் இது.

நடுவின் பண அமைச்சர் திருக்குறளை மேற்கொண்டது போலவே தமிழகப் பண அமைச்சர் தனக்கு நிலையான இரண்டாம் இடம் கொடுத்து வந்திருப்பதற்கு நன்றிக் கடனாக 1997 - 98 ஆம் ஆண்டு பணப் பொறுப்பையும் தானே நேரடியாகப் பார்த்த முதலமைச்சர் அப்போது அவை முன் வ.செ. திட்டத்தை வைத்த போது மேற்கொண்ட ஒரு திருக்குறளைச் சொல்லி தலைவர் வாழ்த்துப் பாடிவிட்டுத் தொடர்ந்திருக்கிறார். அந்தக் குறள் பா இதோ:

படுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து

இதில் எருமை மாடு கரடு முரடான பாதையில் பெரும் பாரத்தை இழுத்துச் செல்வது போல் ஆட்சியாகிய பாரத்தை மக்களின் நலன் என்ற ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு சுமப்பதாகப் பெருமிதப் பட்டாராம். ஆனால் இந்தக் குறளைப் படித்த உடன் எமக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. ஆண்டு முழுவதும் நீர் இருக்கும் குளங்களில் ஆழ் மதகை ஒட்டி ஆழமான சேற்றைக் கொண்ட வயலில் உழ முடியாது, ஏனென்றால் கலப்பையோடு உழவனும் சேற்றினுள் அமிழ்ந்து போவர். எனவே நெல்லை விதைத்துவிட்டு எருமையைக் கட்டி பரம்பு மட்டும் அடிப்பர். எருமை சேற்றில் நீந்திக்கொண்டே பரம்பையும் உழவனையும் இழுத்துச் செல்வது ஓர் அரிய காட்சி. இந்தக் குறளையும் படித்து இந்த வ.செ.திட்ட உரையையும் படித்தபோது அந்த எருமை இருக்கும் இடத்தில் மக்களும், குறிப்பாக உழவர்களும் உழவன் இருந்த இடத்தில் எருமை வடிவில் ஆட்சியாளரும் இருப்பதான ஒரு காட்சியே மனக்கண் முன் விரிகிறது.

மொத்தத்தில், வல்லரசியத்தின் ஓர் உறுப்பாக மாறிவிட்ட இந்திய ஆட்சியாளர்கள் – அவர்களது கூட்டாளிகள் நலனுக்காக வெள்ளையர்கள் வகுத்துத் தந்ததும் நம் பொதுமைப் ″புரட்சியாளர்″களால் நாறடிக்கப்பட்டதுமான இன்றைய வ.செ. திட்ட நடைமுறைகளை இதுவரை உள்ள பட்டறிவின் அடிப்படையில் மேம்பட்ட ஒரு தரத்தில் மாற்றி அமைப்பது உடனடித் தேவை.

(சிற்சில திருத்தங்களுடன் இக்கட்டுரை தமிழினி ஏப்பிரல்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

புல்லுக்கிறைத்த நீர்!

நடுவரசின் வரவு - செலவுத் திட்டம் 2008 – 2009

2008 – 2009 ஆண்டுக்கான நடுவரசு வரவு – செலவுத் திட்டத்தை ″மரபுப்படி″ பிப்ரவரி மாதம் கடைசி நாளில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் அமெரிக்க ஆர்வார்டு பல்கலைக் கழகத்தில் பயின்றவருமான ப.சிதம்பரம் பாராளுமன்றத்தின் முன் வைத்துள்ளார்.

பாராளுமன்றமும் அதில் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து ஒப்புதல் பெறுவதும் ஐரோப்பாவில், குறிப்பாக பிரிட்டனில் உருவான நடைமுறைகளாகும்.

தமிழ்நாட்டில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில், அதிராசேந்திரன் என்ற சோழ அரசனை மக்கள் கொன்று கோயில்களைத் தகர்த்து பார்பபனப் பூசாரிகளை வெட்டி வீசிப் புரட்சி நடத்தியதற்கு அடுத்த நூற்றாண்டில், பிரிட்டனில் அரசன் தான் விதித்த வரிகளுக்கு நாட்டு மக்களின் இசைவைப் பெற வேண்டும் என்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பேராளர்களை வரவழைத்ததிலிருந்து இன்றைய பாராளுமன்ற மக்களாட்சிக்கு விதை ஊன்றப்பட்டது என்பர் வரலாற்று ஆசிரியர்கள்.[1] இதன் பொருள் அரசின் வரிவிதிப்புகளுக்கு மக்களின் இசைவைப் பெறுவதற்காகத்தான் பாராளுமன்றம் என்ற அமைப்பு தோற்றம் கொண்டது என்பதுதான். இதைத் தெளிவாகக் கூறுவதாயின் ஓர் அரசின் வரவுகள், செலவுகள் என்ற பணம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது பாராளுமன்ற மக்களாட்சியின் அடிப்படை. ஆனால் அரசே தொழில் - வாணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் இன்றைய சூழலில் இது இயல்கிறதா?

எடுத்துக்காட்டாக பெட்ரோலியம் எனப்படும் கன்னெய்யம் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் விலையை ஏற்றுவதும் இறக்குவதும்(இது ஒரு கற்பனை, உலக ″மக்களாட்சி″ நடைமுறையில் இவை போன்ற அடிப்படைத் தேவைப் பொருட்களுக்கு விலை இறங்குவது என்பது நடைமுறையில் இல்லாத ஒன்று) மிஞ்சிப்போனால் அமைச்சரவையில் முடிவு செய்யும் ஒன்றுதானே ஒழிய பாராளுமன்றத்திலோ அல்லது வ.செ.திட்டத்திலோ முடிவு செய்யப்படுவதில்லை. உலகச் சந்தை விலை மாறுபாடுகளால் உள்நாட்டிலும் மாற்றங்கள் வருகின்றன என்று கூறுவதும் கடந்த காலங்களில் பொருந்தி வரவில்லை. எனவே பாராளுமன்றத்தின் முன் வைக்கப்படும் வ.செ. திட்டத்திக்குப் புறம்பாக அரசின் வரவு செலவு நடைமுறைகளை இயலச் செய்வதாக பொதுமைக் கட்சியினர் தங்கள் அருஞ்செயல்(சாதனை) என்று மார்தட்டிக் கொள்வதும் ஆனால் உண்மையில் அமெரிக்காவின் நிகர்மை அனைத்துலகியத்தின் செயல்திட்டத்தின்படி ″ஏழை″ நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதுமான அரசுடைமையாக்கம் செயற்படுகிறது. இதன் மூலம் பாராளுமன்ற நடைமுறைகள் அனைத்துமே கேலிக்கூத்துகளாக இங்கு இழிவுபட்டு நிற்கின்றன. நிற்க,

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அனைவராலும், குறிப்பாக ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்டது உரூ.60ஆயிரம் கோடிக்கு வேளாண் கடன்கள் தள்ளுபடி என்பதாகும். ஆகா! உழவர் பெருமக்களின் துன்பங்கள் துயரங்கள் அனைத்துக்கும் இன்றோடு முடிவு கிட்டிவிடும் என்று எவரும் ஆறுதல் பெருமூச்சு விடவில்லைதான். இருந்தாலும் பணக்கார உழவர்களுக்குத்தான் ஆதாயம், ஏழை உழவர்களுக்கு இதனால் உண்மையான பயன் இல்லை என்று கூறுவதும் உண்மைதான். ஆனால் இதனை விடவும் கசப்பான உண்மை ஒன்று உண்டு. அது, இதனால் ஆதாயம் பெற இருப்பவர்களில் மிகப் பெரும்பகுதியினர் உழவர்களே அல்ல என்பதுதான்.

பொதுவாக வேளாண்மைக் கடன் என்பது குறுகிய காலக் கடன்களாக விதை, உரம், பூச்சிக் கொல்லிகள் என்ற வகையில் அறுவடை முடிந்தவுடன் விளைபொருளை விற்றுவிட்டுக் கடனை அடைப்பதாக இருந்தது. தொடக்கத்தில் வேளாண் விளைபொருள் உணவுத் தவசங்களின் விலையை முடிவு செய்யும் ஓர் அமைப்பாக வேளாண் விளைபொருள் விலை ஆணையம் உருவெடுத்து, உணவுப் பொருளை ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குக் கொண்டு செல்வதற்கு ஏன், வயலிலிருந்து வீட்டுக்குக் கொண்டு செல்வதற்குக் கூட தடைகள் ஏற்படுத்தப்பட்டு, உழவன் தன் விளைபொருளை எவரிடமும் விற்க முடியாமல் அரசு இசைவாணை(பெர்மிட்) வழங்கிய வாணிகர்களிடமே விற்க வேண்டும் என்ற நிலையும் இவ்வளவுக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது என்ற தடையும் மான்குட்டியைச் சூழ்ந்து கொண்ட ஓநாய்களைப் போல் உழவனைச் சூழ்ந்து கடித்துக் குதறின. அவர்களுடைய எதிர்ப்புக் குரலை, அவர்களது ஓலத்தை அந்த ஓநாய்களுடன் சேர்ந்து கொண்டு எச்சிலுக்காக அலைந்து கொண்டிருந்த பொதுமைக் கட்சிகள் அமைத்த விவசாயத் தொழிலாளர் சங்கங்களாகிய நாய்களின் குரைப்புச் சத்தங்கள் எவர் காதுக்கும் எட்டாமல் அமுக்கின.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் போன்ற அமைப்புகளை உருவாக்கியது அரசு. இவை முற்றிலும் வாணிகர்களுக்கு உதவுபவையாயிருந்தன. உழவர்கள் தங்கள் விளைபொருளை நல்ல விலை கிடைக்கும் காலம் வரை இருப்பு வைத்திருந்து விற்பதற்கு இவை பயன்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் நம் ஏழை உழவர்களால் வருவாய்த் துறையினரிடமிருந்து இவர் உழவர் என்று சான்று வாங்க முடியவில்லை. ஆனால் வாணிகர்கள் எளிதில் பொய்ச்சான்று பெற முடிந்தது. அத்துடன் இந்தக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் தவசங்களுக்கு 75% விலையை முன்பணமாக அரசு கொடுத்தது. எனவே ஒரு குறிப்பிட்ட தொகையை மூலதனமாக வைத்திருக்கும் அரசின் இசைவாணை பெற்ற ஒரு வாணிகன் மீண்டும் மீண்டும் தானியத்தை ஈடாகவைத்து 1+ ¾ + 9/16+ 27/64 + 81/256 அதாவது 1, 1¾, 2 ⁵/₁₆, 2⁴⁷/₆₄, 3 ¹³/₂₅₆ அல்லது கிட்டத்தட்ட 3 மடங்கு தவசத்தை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாங்கிக் குவிக்க முடியும். நிலவுடைமையாளர்கள் தங்கள் விளைச்சலை அல்லது வாணிகர்கள் அதை வாங்கிப் பதுக்குகிறார்கள் என்று பொதுமைக் கட்சியினர் கூக்குரலிட்டதன் விளைவாகவும் அதனால் உழவன் எதிர்கொண்ட சிக்கல்களுக்குத் தீர்வு என்று சொல்லி மேற்கொண்ட நடவடிக்கைகளாலும் அரசே வாணிகனை உருவாக்கி அவனது மூலதனத்தைப் போல் இரண்டு மடங்கு பணத்தை அவனுக்கு முன்பணமாகக் கொடுத்து மூன்று மடங்காகப் பெருக்கி அதைக் கொண்டு தவசத்தை வாங்கி அவன் இருப்பு வைப்பதற்கும் கட்டமைப்புகளை உருவாக்கிப் பாரமரித்து வருகிறது. இந்தியா ″வேளாண்மை சார்ந்த″ நாடல்லவா? அதனால் இதற்கெல்லாம் தேவைப்படும் பணம் எங்கிருந்து வந்தது? இந்த உழவன் வயலில் சிந்திய உயிர்த்துளிகளிலிருந்தல்லவா? எவ்வளவு கருணை உள்ள அரசு?

இவ்வளவு வஞ்சகங்களையும் தாங்கிக் கொண்டு இந்திய உழவன் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது உரூ 60,000 கோடியையும் தாண்டிய ஒரு கேள்வி. இது இருக்கட்டும்.

இதில் வங்கியில் கொடுக்கப்பட்ட கடன் உழவனுக்குத்தான் கிடைத்ததா? உழவனிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு, அனைத்தையும் ஆட்சியாளர்களிடம் பறிகொடுத்து வெறுங்கையனாக நிற்கும் அவனிடமிருந்து எந்த வித்தையைக் காட்டி வங்கிகள் பணத்தை மீட்கும்? அதனால் நகைக் கடனாகத்தான் வங்கிகள் தங்கள் வேளாண்மைக் கடன்களைக் கொடுத்தன. தாங்கள் பொதுமக்களிடமிருந்து பெறும் வைப்புகளுக்குக் கொடுக்கும் வட்டியை விடக் குறைந்த வட்டியில் வேளாண்மைக் கடன் என்ற பெயரில் நகைக் கடனைக் கொடுத்ததால் எஞ்சிய வட்டியை அரசே வங்கிக்குக் கொடுத்துவிடும். இது சென்ற ஆண்டுவரை இருந்த நடைமுறை. இந்த முறை முதலுக்கே நாமம்தான். தள்ளுபடி செய்த கடனை வங்கிக்குச் செலுத்துவது பற்றி பண அமைச்சர் எதுவுமே கூறவில்லை. கடன் பத்திரங்களைக் கொடுக்கக் கூடும் என்று ஒரு பேச்சு. அவற்றை வைத்துக்கொண்டு தொன்னை பிடித்துத் தேநீர் ஊற்றிக் குடிக்கவா?[2] வங்கியை எப்படி நடத்துவது? நம் பொருளியல் மேதை ப.சிதம்பரம்தான் விடை கூற வேண்டும். இந்தக் கடன்களில் மிகப் பெரும்பான்மை உழவர்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டவை என்ற உண்மையையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வங்கிக் கடனால் உழவர்கள் தற்கொலை செய்யவில்லை; கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கியவர்கள்தாம் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றொரு பெருங்குரல் எதிர்த்தரப்பிலிருந்து எழுந்தது. உடனே வேளாண்துறை அமைச்சர் சரத்பவார், கந்துவட்டிக்காரர் கடன்களை அரசே செலுத்திவிடும் என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இதைப் பயன்படுத்தி அவருக்கும் அவரைச் சார்ந்த ஒரு கும்பலுக்கும் அரசுப் பணத்தைக் கொள்ளை அடிக்கும் வாய்ப்பு ஒன்று கனிந்திருக்கிறது. குருவிப் பந்து[3](கிரிக்கெட்) விளையாட்டில் கிடைப்பதை விட பெருமளவில் இது இருக்கும். இப்போது துணிச்சலாக அவரது கட்சியை அனைத்திந்திய அளவில் வளர்த்துவிடலாம்!

உழவனுக்குக் கடனெல்லாம் தேவையில்லை, அவனைப் பிணைத்து வைத்திருக்கும் விலங்குகளை அகற்றினால் போதும் என்று ஆட்சியிலிருக்கும் பெரிய தலைகளுக்கு தெரியாதா?

அறிவியல் இயக்கம் வைத்திருக்கும் திருவாளர் குருமூர்த்தி அவர்களுக்குத்தான் இவையெல்லாம் தெரியாதா? (தினமணி 09-03-2008 அரசியல் அரங்கம் பார்க்க.) அவருக்குத் தெரியும். ஆனால் வெளியே சொல்லமாட்டார். சொன்னால் அவரது கட்சி(பா.ச.க.) ஆட்சிக்கு வரும் போது விடை சொல்ல வேண்டியிருக்குமே!

இவர்களின் நோக்கம் உழவர்களைக் காக்க வேண்டுமென்பதல்லவே! வேளாண்மையை துண்டு துக்காணி நிலங்களில், காலங்கடந்துபோன உத்திகளில் நடைபெறுவதிலிருந்து விடுவித்து பெருந்தொழிலாக, குறிப்பாக, பன்னாட்டு நிறுவனங்களின், அம்பானி வகையறாக்கள் போன்றோரின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதல்லவா? அதற்காக ஏழை உழவர்களை ″அகற்றுவதற்கு″ இதைவிடச் சிறந்த வேறு வழியிருந்தால் நம் ஆட்சியாளர்களுக்குக் கூறுங்களேன்! அதற்கு முன் எதற்கும் நம் பொதுமைத் தோழர்களை ஒரு சொல் கலந்துகொள்ளுங்கள். அவர்களுக்குத்தான் ″நந்திகிராம பட்டறிவு″ உண்டே. அதிலிருந்து மேம்பட்ட உத்தி எதையாவது சிந்தித்து வைத்திருக்க மாட்டார்களா?

உள்ளூர் விசைகள் பெருங்கொண்ட வேளாண் பண்ணைகளை உருவாக்கும் வாய்ப்பை நிலச் சீர்த்திருத்தம், நில உச்சவரம்பு, வருமானவரி என்ற பெயர்களில் அழித்துவிட்டு இப்போது அயலாருக்கு விலைபேசி உள்ளூர் மக்களைக் கொன்று குவிக்கும் இவர்களுக்கு எதிர்காலம் என்ன தண்டனை கொடுக்கும்?

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம். அவ்வை கூறினாள். இங்கு நெல்லுக்கு என்று சொல்லி புல்லுக்கு மட்டும் நீர் பாய்ச்சியிருக்கிறார்கள் இந்தியாவை ஆளவந்தவர்கள்.

அடுத்து நம் கவனத்துக்கு வரவேண்டியது இந்தியப் பொருளியலின் வேரில் வெந்நீரை ஊற்றும் வருமானவரி. 1998 – 99 ஆம் ஆண்டு வ.செ.திட்டத்தில் வரி இல்லா வருமானம் உரூ 50 ஆயிரமும் வரையறைக் கழிவுகள் 25 ஆயிரமுமாக இருந்தவை இப்போது உரூ 1.5 இலக்கமாக ஆகியுள்ளதை உயர்வு என்று கொள்ள முடியவில்லை. இந்த இடைவேளையில் பண மதிப்பு வீழ்ச்சி பெருக்கல் ஏறுவரிசை(Geometrical Progression)யில் சென்று கொண்டிருக்கும் சூழலில் இந்த தொகை உண்மையில் முன்பிருந்ததைவிடக் குறைவுதான் என்று உறுதியாகக் கூறலாம் .

மொத்த வரவில் வருமான வரி 15% என்று கூறப்பட்டுள்ளது. இது நம்பும்படியாக இல்லை. நமக்கு ஐயம் என்னவென்றால் நம் ஆட்சியாளர்கள் ″சுக்ராம் வாய்ப்பாட்டை″ப் பயன்படுத்தி தங்கள் ஊழல் வருவாய் அனைத்துக்கும் ″வரி″ செலுத்திவிட்டு நல்ல பணம் ஆக்கிவிட்டார்களோ என்பதுதான். அம்பானிகள் கூட தாங்கள் பல்வேறு ஏமாற்று நடவடிக்கைகளால் சேர்ந்த பணத்தில் வரியைக் கட்டிவிட்டு சொத்து மதிப்பை உயர்த்திக் கொண்டார்களோ என்று தோன்றுகிறது.

வருவாயில் கடன் 14%உம் செலவு வகையில் கடனுக்கான வட்டி 21%உம். கடன் வாங்கியும் வட்டியைச் செலுத்தப் போதாத நிலை. இன்னும் சரியாகச் சொன்னால் செலவினத்தில் வருவாயுடன் பற்றாக்குறையையும் சேர்க்க வேண்டும். மொத்த வரவு 6,17,597 கோடியில் 14% என்பது உரூ 86,464 கோடி. மொத்தச் செலவு 7,50,884 கோடியில் 21% என்பது 1,57,686 கோடி. இவ்வாறு கடன் வாங்கும் தொகையைப் போல் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வட்டியாகச் செலுத்துகிறோம் என்பது விளங்கும். நாடு விளங்குமா?

இங்கு அரசு வாங்கும் கடன்களைப் பார்ப்போம். அவற்றில் உள்நாட்டுக் கடன்கள் எனப்படுபவை பணமாகச் செலுத்துபவை. ஆனால் வெளிநாட்டுக் கடன்களும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற உலகக் கடன் நிறுவனங்களும் வழங்கும் கடன்கள் பணக் கடன்கள் அல்ல. அவற்றில் மிகப் பெரும்பான்மையும் காசாகக் கைமாறுவதில்லை. அனைத்தும் பண்டங்களின் பரிமாற்றமே.

நம் நாட்டில் இறக்குமதியாகும் முகாமையான பண்டங்கள் போர்த் தளவாடங்களும் கன்னெய்யமுமே(பெட்ரோலியமுமே). ஏறக்குறைய இரண்டு இலக்கம் கோடி உரூபாய் அளவுக்கு அவற்றின் இன்றைய மொத்த மதிப்பு. போர்த்தளவாடங்கள் வாங்கத் தேவைப்படும் அயல் செலவாணிக்கு இணையான உரூபாய் மதிப்பிலான தொகையை வரவு – செரவுத் திட்டத்தினுள் வரும் பாதுகாப்புக்கான ஒதுக்கீட்டிலிருந்தும் அந்தக் குறிப்பிட்ட கடன் நிறுவனங்களின் திட்டம் என்ற பெயரில் உள்நாட்டில் நடைபெறும் பல்வேறு திட்டங்களிலிருந்தும் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் என்னவோ அந்தக் கடன் நிறுவனங்கள் பெரிய மனது வைத்து நமக்கு இலவயமாக எல்லாவற்றையும் செய்வது போன்று நம் நாட்டு அரசுப் பொறியின் மீது பலவகையான கெடுபிடிகளைக் காட்டி உண்மைகளை அதனுள் புதைக்கப் பார்க்கின்றனர் நமது ஆட்சியாளர்களும் கடன்வழங்கு நிறுவனங்களும். ஆனால் மேலிடங்களுக்கு நிறையவே ஆதாயங்கள் உள்ளன.

இந்தக் ″கடன்″ வாங்குவதிலும் திருப்பிச் செலுத்துவதிலும் கொள்முதல் விலையையும் விற்கும் விலையையும் கடன்வழங்கு நிறுவனமே முடிவு செய்கிறது. நடப்பிலுள்ள சந்தை விலைக்கும் இந்த விலைகளுக்கும் நமக்கு இழப்பு வரும் வகையிலும் கடன் நிறுவனத்துக்கு கொள்ளை கொள்ளையான ஆதாயம் வரும் வகையிலும் ஏற்றத்தாழ்வு உண்டு. அதாவது நாம் வாங்கும் போது சந்தை விலையை விடப் பல மடங்கு கூடுதலாகக் கொடுக்கிறோம். விற்கும் போது சந்தை விலையின் ஒரு சிறு விகிதத்தைத்தான் பெறுகிறோம். எடுத்துக்காட்டாக 1990 ஆம் ஆண்டு சர்க்கரை கிலோவுக்கு உரூ10/- ஆக இருந்த போது சர்க்கரைப் பாகை கிலோவுக்கு வெறும் தொண்ணூறு காசுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்தோம். இந்தக் கொள்ளைக்கும் மேலாக வட்டி செலுத்துவது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத கயமை. அதாவது உரூ.12363.83 கோடி மதிப்புக்கு நம் நாட்டின் புதுப்பிக்க முடியாத, புதுப்பிக்கத் தக்க மூலப் பொருட்களையும் அவற்றிலிருந்து செய்யப்பட்ட பண்டங்களையும் கள்ள விலைக்கு அதாவது திருடர்கள் திருட்டுப் பொருட்களை விற்பதை விடவும் குறைவான ஒரு விலையில் விற்கப் போகிறார்கள், இந்த ஆண்டுக்குள் மட்டும்.

இவை எதுவும் நம் கண்ணுக்குப் படக் கூடாது என்பதற்காக அரசியல்வாணர்களும் ஊடகங்களும் பொய்யான உரூ. 60,000 கோடி வேளாண் கடன் தள்ளுபடியை ஊதி ஊதிப் பெருக்கிப் பெருக்கிக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆக, ஏழை உழவர்கள் பெயரில் எவரெவரோ உரூ 60,000 கோடியைக் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டாயிற்று.

உலக வங்கியை முதன்மையாகக் கொண்ட பெருங்கடன் நிறுவனங்களுடன் உரூ.12363.83 கோடிகள் கடனையும் வட்டியையும் செலுத்துவதற்கான அயற் செலவாணியை ஈட்டுவதற்கென்று பண்டங்களைக் கடத்திப் பங்கு போடுவதென்று திட்டமிட்டாயிற்று.

கல்வித் துறையினருக்கென்று என்ன செய்துள்ளார் ப.சிதம்பரம் என்று பார்ப்போம்.

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 6,000 கோடி உரூபாய்கள்(34,400 - 28,674) கூடுதலாக ஒதுக்கியுள்ளனர். இது பணமதிப்பு வீழ்ச்சியை ஈடுசெய்யவே போதாது என்று தோன்றுகிறது. சரி, கிடைத்த பணத்தை வைத்து என்ன செய்வார்கள்?

தொடக்கக் கல்வியில் ″அனைவருக்கும் கல்வி″(″சர்வ சிக்சா அபியான்″ என்று வாசுபேயி ஆட்சிக் காலத்தில் பெயர் சூட்டப்பட்டது) என்றொரு திட்டம் உள்ளது. இதை வைத்துக்கொண்டு பள்ளிகள் இல்லாத இடங்களில் பள்ளிகளைத் திறந்து ஆசிரியர்களை அமர்த்தி கட்டடங்களைக் கட்டுவார்கள் என்று நினைத்தீர்களாயின் நீங்கள் ஒரு முழு முட்டாள். அடித்தட்டு மக்கள் கல்வியே கற்றுவிடக் கூடாது என்று நம் தெய்வத் தந்தையர் காட்டிவிட்டுச் சென்ற தங்கத் தடத்தை, ஒன்றரை நூற்றாண்டு ஆட்சியில் ஆங்கிலேயன் கலைத்துவிட்டுப் போன அந்த அரிய பாதையை அப்படியே அழிய விட்டுவிடுவார்கள் நடுவிலும் விளிம்பிலும்(மாநிலங்களிலும்) ஆள்கின்ற நம் அறத்தின் காவலர்கள் என்று நீங்கள் கற்பனை கூட செய்யத் துணியலாமா?

அப்படிப்பட்ட முட்டாள்தனங்களிலெல்லாம் நம் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுவிடவில்லை. ஊருக்கு ஊர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைத் திரட்டிப் பயிற்சி அளிப்பார்கள். பார்வையற்றவன் இன்னொரு பார்வையற்றவனுக்குப் பாதை காட்டுவது போல் எங்கிருந்தோ வந்த ஒருவர் ″ஆய்வுரை″கள் நிகழ்த்துவார். அவருக்கு அதற்கென்று கட்டணம் உண்டு. பயிற்சி பெறுபவர்களுக்கு உண்டியும் படிகளும் உண்டு.

கட்டடங்களும் கட்டுவார்கள். ஒரு பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் தேவையா என்று பார்த்துக் கட்டுவது முட்டாள்களின் செயல். எந்தப் பள்ளிக்கூடத்தில் கட்டடம் கட்ட இடம் இருக்கிறதோ அங்கு கட்டுவது கல்வியாளர் செயல்!

சரி, இந்தக் கட்டடத்தையாவது முறைப்படி மதிப்பிட்டு பொறியாளர் மேற்பார்வையில் செய்வார்கள் என்று எதிர்பார்க்கும் முட்டாளா நீங்கள்? ஏமாந்து போவீர்கள்! இத்தனை சதுர அடி, இத்தனை உரூபாய் என்று தில்லியில் இருந்துகொண்டு கூறுவார்கள், என்ன செய்வீரோ, தலைமையாசிரியரே உம் சமர்த்து!

ஆமாம்! பயிற்சி கொடுக்கிறார்களே அதை எப்படி நடைமுறைப் படுத்துகிறார்கள்? என்னய்யா இது! கிறுக்குத்தனமாக எல்லாம் கேள்விகள் கேட்டுக் கொண்டு? கல்வி மாநில அதிகாரம் அல்லவா? அவர்கள் உரிமையில் நாங்கள் தலையிடுவோமா? அதுவேறு, இதுவேறு, ஆமாம்!

உயர்கல்வி என்பது இதை விட உயர்வானதாகத்தானே இருக்க வேண்டும்! அப்படித்தான் இருக்கிறது. பாராட்டுவோம்! நிறைய கருத்தரங்குகள், மாநாடுகள் நடக்கும். போக்குவரத்துச் செலவு, தங்கும் இடம், இருக்கைப்படி, கட்டுரை படிக்கும் படி, மரக்கறி உணவினரா, புலால் உணவினரா நீங்கள்? கற்பனை செய்யமுடியா தரத்தில் உணவு. அப்புறம் கட்டுரைகளை நூலாக வெளியீடு. அதை அப்படியே மறந்து விட வேண்டும். ஆனால் பதவி உயர்வு, கல்வி அமைப்புகளில் பதவி பெறல் என்பவற்றுக்காக, ஒரு குறிப்பிட்ட கல்வியாளர் பங்கேற்ற கருத்தரங்குகளின் எண்ணிக்கைக்கு, படித்த கட்டுரைகளின் எண்ணிக்கைக்கு, கட்டுரைகள் வெளிவந்த புகழ் பெற்ற இதழ்கள் என்ற பட்டியலுக்கு கணக்குக் காட்ட இவை கட்டாயம் உதவும்.

அது மட்டுமா, பல்கலைக் கழகத்தில் ஆய்வு நூல்கெல்லாம் வெளியிடுவதைப் பொறுத்த வரையில் அவற்றில் பணி புரிவோருக்கு மட்டுமே அறிவின் மொத்தக் குத்தகை. ஆதலால் வெளியிலுள்ளோர் எழுதிய குப்பைகளை எல்லாம் பொதுப் பணத்தில் வெளியிட்டு வீணடிப்பதில்லை என்பதில் நாங்கள் மிக உறுதியாயிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

என்னங்க இது, ஒரே அடியாகத் தாக்குகிறீர்களே? நம் நாட்டில் கல்வி கற்றவர்கள் உலகெலாம் புகழ்க்கொடி பறக்கவிடுவதைச் சோற்றினுள் பூசணிக்காயை மறைப்பதுபோல் மறைக்கப் பார்க்கிறீர்களே என்று நீங்கள் ஆத்திரமாகக் குமுறுவது தெரிகிறது. இந்த ஆங்கிலர்கள் செய்த கொடுமையால் விளைந்த கேடு இது. அதைச் சீர் செய்து நின்று நிலைத்துவிட்ட பழைய பார்ப்பனர்களையும், தலையெழுத்து என்ன செய்வது, இந்த ஐம்பதாண்டுக் காலத்தில் புதிதாக உருவாகிவிட்டு இன்னும் பூணூல் அணியத் தொடங்காத புதிய பார்ப்பனர்களின் பிள்ளைகளையும் தேற்றிக் கரையேற்றுவதற்கென்று கூடுதலாக இந்த ஆண்டில் 6000 உயர்தர ″மாதிரி″ப் பள்ளிகள் தொடங்க உரூ. 650 கோடி ஒதுக்கியிருக்கிறோமே பார்க்கவில்லையா?

ஐயா, ஊரக மக்கள் நலனுக்காக என்ன செய்யத் திட்டம் உள்ளது?

தெரியாதா? பத்து ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து பேரவைக் கட்சியின் தலைவராக இருந்து அருஞ்செயல் புரிந்தவர் சோனியா காந்தி. எங்கோ இத்தாலியில் பிறந்து இந்திய ஆளும் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, ஊழ்வினையை என்னவென்று சொல்ல, மாமியாரும் கணவரும் அவரவரும் சொல்லி வைத்ததுப்போல ஆட்சியிலிருக்கும் போதே வன்கொலையாய் மாண்டுவிட வருங்கால மன்னனுக்கு மங்கம்மாவைப் போல காப்பாட்சியாளராக விளங்குவதை விடவா இது ஓர் அருஞ்செயல் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இதோ என் மறுமொழி, வாழ்க பாரதம்! வாழ்க மக்களாட்சி! அத்தகையவரது கனவுத் திட்டமாக உரூ 16,000 கோடியில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதே! அரைச் சாண் அகலத்தில் 2½ அடி ஆழத்தில் (அப்போதுதான் நிறைய கான்கீரீட் போட முடியும்) சாய்க்கடைகளும் மூன்றரை அடி அகலத்தில் சாலைகளும் கண்ட இடங்களிலெல்லாம் செம்முந்துக் கான்கிரீட்டில் போட மலைகளை ஒவ்வொன்றாக உடைத்தும் ஆறுகளிலுள்ள மணலை எல்லாம் கொட்டியும் அமைத்துக் கொண்டிருக்கிறோமே! நம் குடிமக்கள் கண்டபடி எல்லாம் வீசும் குப்பைகள் தடுக்க கழிவுநீர் தேங்கி எழும் நறுமணத்தில் ஊரக மக்களெல்லாம் மனமும் அறிவும் மயங்கி இருக்கையில் அங்கு பெருகி வழியும் கொசுவளம் கடிப்பது எப்படித் தெரியும்?

ஆமாம் இதையெல்லாம் வடிவமைக்க பொறியாளர் யாரும் கிடையாதா? யாரது பொறியாளரா? அவர்கள் எல்லாம் எதற்கு? தேவையே இல்லை! எங்க ஐ.ஏ.எசு. கலெக்டர் துரைக்கு இதெல்லாம் தெரியாதாக்கும். இப்போதானே அவரைப் பார்த்து கவனிச்சி கைகுலுக்கி விட்டு வருகிறேன்!

நீங்க இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தால் எப்படி? போன தேர்தலில் நாங்கள் எல்லாரும் எங்கள் கட்சியும் சும்மாவா அவ்வளவு பணம் செலவு செய்தோம்? அப்புறம் அடுத்த தேர்தலுக்கெல்லாம் சேர்க்க வேண்டாமா?

இனி, இறுதியாக, வரி விதிப்பு என்று கூறுகிறார்களே அதைப் பார்ப்போம். சாணக்கியன் எனப்படும் கவுடில்லியன் கூறியிருக்கிறானாம், அரசானது பூவிலிருந்து வண்டு தேனை உறிஞ்சுவது போல் பூவுக்கு நோவாமல் வரியைத் தண்ட வேண்டுமாம். பூவுக்கு வலிக்குமா என்று நமக்குத் தெரியவில்லை. இயான் பிளமிங்கைக் கேட்டுப் பார்ககலாம். அவருடைய புதினம் ஒன்றில் சேம்சு பாண்டு இதே கேள்வியைக் கேட்கிறார் தன் காதலியை நினைத்துக் கொண்டு. அது கிடக்கட்டும் சாணக்கியனிடம் வருவோம். அரசின் வருவாய்க்குத் கள் வாணிகத்தையும் பரத்தைத் தொழிலையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சத்திரகுப்த மெளரியன் காலத்தில் செயல்படுத்தினானாம். பண்டை இந்தியா என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து நியூசெஞ்சரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ள டி.டி.கோசாம்பியின் நூல் கூறுகிறது. இவ்வளவையும் செய்துவிட்டு சந்திரகுப்தன் போகிற வழிக்குப் புண்ணியம் தேடி சமணத்தில் சேர்ந்துவிட்டான்.

நம் ஆட்சியாளர்கள் தவறாமல் இந்த இரண்டு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டாவது தொழில் எப்படி என்கிறீர்களா? அது தான் சுற்றுலா! வெளிநாட்டுக்காரர்களுக்குக் கூட்டிக் கொடுக்கும் தொழில்தானே அது?

வரி விதிப்பை விட்டு விலைமகளிரின் வரிப்பாடல்களைக் கேட்கச் சென்றுவிட்டோம். பொறுத்தருள்க.

மக்களை நோகடிக்காமல் தண்டுகின்ற வரியை மறைமுக வரி என்றும் அவர்களைத் துன்புறுத்தி ஆட்சியாளர்கள் தங்கள் அதிகார வெறியையும் ஆட்சித் தினவையும் பணப் பசியையும் ஊழல் உறுத்தலையும் தணித்துக் கொள்ளப் பயன்படுவது நேரடி வரிகள் என்றும் கூறுவர். அதிலும் மிகக் குறிப்பாக வருமான வரி. நிலவரி, சொத்துவரி, போன்றவை திட்டவட்டமான அளவைகள், தரப்படுத்தல்கள் கொண்டு உறுதியான தளத்தில் நிறுவப்பட்டவை. சுங்க வரி என்பது ஓரளவு சரியாக மதிப்பிடத்தக்கதாகும். ஆனால் வருமான வரியை மதிப்பிடுவது இயலாதது என்றே கூறிவிடலாம். அதையே காரணமாக வைத்து வீட்டினுள் பகல் கொள்ளையர்கள் போல் புகுந்து வாயில்களில், ஏன் புகைபோக்கியில் கூட ஆட்களை நிறுத்தி, தொலைபேசிகளை முடக்கி, கட்டிலை, மெத்தையைக் கிழித்து பேழைகளையும் பெட்டிகளையும் சுவர்களையும் தளங்களையும் உடைத்துப் பார்க்கும் காட்டுவிலங்காண்டித்தனமான ஒரு வரிவிதிப்பை நாகரிகம் படைத்ததாகக் கூறப்படும் 21ஆம் நூற்றாண்டு உலகில் தொடர வேண்டுமென்பது எந்தப் பகுத்தறிவு அல்லது மக்களாட்சியின் பால் பட்டதென்று எமக்கு விளங்கவில்லை.

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் வரும் பொற்கைப் பாண்டியனின் கதை பண்டைத் தமிழர்கள், அவர்களது எல்லாக் குறைகளையும் மீறி மனித உரிமைகளை குறிப்பாக, மக்களது தனி வாழ்க்கையில் தலையீடு குறித்த ஓர் உயர் பண்பை எவ்வாறு போற்றினர் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. கணவன் வெளியூர் சென்ற வீட்டில் ஆடவன் குரல் கேட்க, கதவைத் தட்டிய அரசன் உள்ளிருப்பவன் ஊர் திரும்பிய கணவன் என்பதறிந்து மறுநாள் முறையீடு வந்ததும் கையை வெட்டிக் கொண்டான் என்ற இந்த நிகழ்ச்சிக்கு ஈடாக மனித வரலாற்றில் ஒன்றைக் கூட கூற முடியாது. ஒருவேளை இது கற்பனையாகவே இருக்கட்டும். இப்படி ஒரு கற்பனை செய்வதற்கும் ஒரு பண்பாட்டுப் பின்புலம் வேண்டுமே! நம் பொதுமைத் தோழர்களிடம் கேட்டால், கழகக் கால இறுதியில்தான் தமிழர்கள் ″இனக்குழு″ நிலையிலிருந்து நாகரிகக் கட்டத்தின் நுழைவாயிலில் கால் வைத்திருந்தார்கள் என்பார்கள்.

நேர்மையாளர்களான மார்க்சுக்கும் ஏங்கெல்சுக்கும் இந்திய மரபுகளை ஆழமாகப் பயில வாய்ப்பிருந்திருந்தால், இவர்கள் ″இனக்குழு″ என்று குறிப்பிடும் குக்குலக் காலத்திலேயே நாகர்கள் எனும் குக்குலத்தைச் சேர்ந்த தெக்கன், காலன், இயமன் முதலியோர் வானியலின் அடிப்படையை நிறுவிவிட்டனர் என்பதை அறிந்து மனிதனின் நாகரிக வளர்ச்சியைப் பற்றி வேறு வகை முடிவுக்கு அவர்கள் வந்திருப்பர். அப்படி வந்திருந்தால் இன்றைய பொதுமைத் தோழர்களில் பலர் அந்தப் பக்கமே எட்டிப் பார்த்திருக்க மாட்டார்கள். மார்க்சியமும் உலகமும் தப்பியிருக்கும்.

காட்டுவிலங்காண்டிகள் கூட எண்ணத் துணியாத வகையில் மதிப்பீடு செய்வதற்கென்று குடிமக்களை இழிவுக்கும் கொடுமைக்கும் ஆட்படுத்தும் வருமான வரியை நம் தோழர்கள் அதுவொன்றே புரட்சிக்கு வழி என்று கூறுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதை மறுத்துப் பேசும் நாகரிக உணர்வுள்ள ஒரு ஒற்றை அறிவு″சீவி″ கூட இல்லையே என்பதைத்தான் நாம் இங்கு சொல்ல வந்தது.

இந்த நிலையில் நம் பண அமைச்சர் மறைமுக வரிகளைக் குறைத்துவிட்டு காட்டுவிலங்காண்டித் தனமான நேரடி வரிகளை கூட்டியிருப்பது நம்மை ஆளும் அரசியல் சட்டம் சுட்டும் நாகரிக வளர்ச்சிக் கட்டத்தைத் தெளிவுறக் காட்டுகிறது.

வரி விதிப்பைப் பற்றிய ஓர் அடிப்படைக் கேள்வி. ஏன் அனைத்து வரிகளையும் ஒரே குறிப்பிட்ட விகிதத்தில் வைத்திருந்தால் என்ன? ஒரு வேளை வரி வருமானம் போதாமல் இருந்தால் ஒட்டுமொத்த வரி விகிதத்தையும் உயர்த்தினால் போதுமே!

அதுபோல் அந்த ஒட்டுமொத்தமான விகித்ததில் மாற்றம் ஏற்படுத்துவதாய் இருந்தால் அதை முன் கூட்டியே மக்களுக்கு விளக்கிவிடலாமே! ஏன் கமுக்கமாக வைத்திருக்க வேண்டும்?

ஓகோ, பணக்காரர்களுக்குக் கூடுதல் வரி விதித்து ஏழைகளைக் காப்பாற்றுகிறோம் என்கிறீர்களா? ஆமாம், செல்வத்தைப் படைப்பவன் அடித்தட்டு மனிதன் தானே, பணக்காரனுக்கு வரிவிதித்தால் அதைக் காட்டி அதைவிடக் கூடுதல் ஒரு மடங்கு ஏழையைப் பணக்காரன் சுரண்டி விடுவானே! தோழர்கள் பரிந்துரைத்த வருமான வரியை இதுவரை வந்த அரசுகள் முடிந்த அளவு காட்டுவிலங்காண்டித்தனமாகத் தண்டியும் இரு கோடியில் உள்ளோருக்கும் இடைவெளி விரிந்து கொண்டிருப்பது நடந்திருக்கக் கூடாதே!

அதுபோல் அந்த ஒட்டுமொத்தமான வரி விகிதத்தில் மாற்றம் ஏற்படுத்துவது எப்போதாவது தேவைப்பட்டால் அதை முன்கூட்டியே மக்களுக்கு விளக்கிவிடலாமே? வாணிகர்கள் விலையை ஏற்றிவிடுவார்கள், பதுக்கிவிடுவார்கள் என்பது கையாலாகாதவன் சொல் அல்லவா?.

இப்படி வரிகளைக் கமுக்கமாக மாற்றும் போதும் அது ″எப்படியோ″ தொடர்புடைய துறையினருக்கு மட்டும் தெரிந்து அப்பண்டங்களைப் பதுக்கிவைத்துக் கொள்ளையடிக்கிறார்களே, அது எப்படி?

இன்னொன்று, வ.செ. திட்டத்தை அவையின் முன் வைக்கும் போது உள்ள சில வரிகளை இறுதியில் குறைக்கவோ அல்லது முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ செய்கிறார்கள். ஆனால் வ.செ. திட்டத்தை அமைச்சர் படித்த உடனேயே குறிப்பிட்ட துறையினர் விலைகளையோ கட்டணங்களையோ உயர்த்தி விடுகிறார்கள். வரிவிதிப்பைக் குறைக்கவோ அல்லது நீக்கவோ செய்த பின்னர் உயர்த்திய விலை அல்லது கட்டணம் மட்டும் குறைவதில்லை. இது என்ன மாயமோ? நம் ஆட்சியாளர்களுக்கு இவற்றை எல்லாம் புரிந்துகொள்ளும் அறிவில்லையா, அல்லது நமக்கா?

உண்மையான காரணம் என்னவென்றால் ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்படி வாதிட்டு, ″ஒதுக்கீடுகளை″ மாற்ற, திருத்த இடம் கொடாமல் வரவு – செலவுத் திட்டம் நிறைவேறும் கடைசி அரை நாள் தவிர கத்தி, கூச்சலிட்டு ஒத்துழைக்க வேண்டுமானால் அவர்களைக் கவனிக்க வேண்டாமா? அதற்கு தொழில் – வாணிகத் துறைகளைச் சேர்ந்த ஒவ்வொரு தரப்பினரும் பணத்துறையுடன் ″இடைகழியாட்டம்″(lobbying) நடத்த வேண்டாமா? அதற்குத்தான் ஒவ்வோர் ஆண்டும் வரி வீதங்களை, ஒவ்வொரு இனத்துக்கும் வேறு வேறாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த ″இடைகழியாட்டம்″ பற்றி நம் பண அமைச்சரே குறிப்பிட்டுள்ளார். (பார்க்க தினமணி 14-6-1998.)

ஒரேயடியாக நம் பண அமைச்சரை இப்படிக் குறை கூறிவிட்டாயே என்று கேட்கிறீர்களா? தப்புதான். அவர்தான் என்ன செய்வார், மக்களாட்சி என்ற ஒய்யாரமான பெயரில் வாக்குப் பெட்டி அரசியலில் இப்படித்தான் செய்ய முடியும், செய்ய வேண்டும். சரியாகத்தான் செய்வேனென்று அடம்பிடிக்கும் எந்தப் பயலும் அந்த இடத்துக்குப் போக முடியாது.

இருந்தாலும் நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. கடந்த சில பத்தாண்டுகளாக பாராளுமன்றக் கூட்டங்களில், அதுவும் குறிப்பாக வ.செ. திட்ட அமர்வில் பண அமைச்சர் திட்ட அறிக்கையைப் படித்து முடித்த பின்னர் திட்டமிட்டுச் சொல்லிவைத்தது போல் கூச்சலும் கொந்தளிப்பும் உருவாகி கடைசி நாள் முற்பகல் வரை தொடரும். ஆனால் அதற்குப் பிறகு அனைவரும் நல்ல பிள்ளைகளாய் வ.செ.திட்டம், பணச் சட்ட வரைவு ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு கை உயர்த்துவதற்கு மட்டும் தடங்கலிராது. அண்மைக் காலங்களில் பிற அமர்வுகளும் இவ்வாறுதான். கடைசி நாளின் இறுதி மணித்துளிகளில் தீர்மானங்களைப் படிக்கக் கூட நேரமின்றி அவற்றின் எண்ணிக்கையைச் சொல்லி நிறைவேறியனவாக அறிவிப்பது மிக இயல்பான நடைமுறையாகிவிட்டது. பஞ்சாயங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இன்று இதில் உள்ள அடிப்படை வேறுபாடு, பஞ்சாயத்தில் எழுத்தர் தீர்மானங்களை நிகழ்வுக் குறிப்பேட்டில் எழுதி அதை எடுத்துக்கொண்டு ஒவ்வோர் உறுப்பினர் வீட்டுக்கும் சென்று அவருக்கு உரிய பங்கை ″வெட்டி″ கையெழுத்து வாங்கி வருகிறார் எனபதுதான்.

வெண்சுருட்டுக்கு வரி விதித்திருக்கும் கொடுமை பார்த்தீர்களா, ஏழை குடிக்கும் எளியவற்றுக்கு வரியாம் என்று கேட்கிறீர்களா? பாட்டாளிகள் கள்ளச் சாராயம் குடிக்கக் கூடாது என்று விடாப்பிடியாகப் போராடி அனைவரும் நல்ல சாராயம் குடிக்க வைத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய இடது பொதுமைக் கட்சியின் கூட்டணி அரசு, தப்பு தப்பு அணைப்பிலிருக்கும் அரசு செய்தது சரிதானே! இதன் மூலம் பாட்டாளிகளின் வாழ்க்கைத் தரம் உயர்வது உங்களுக்குப் புரியவில்லையா? அல்லது பிடிக்கவில்லையா? உங்களைப் பாட்டாளியரின் எதிரி என்று முத்திரை குத்திவிடப் போகிறார்கள். இன்னொன்று, இந்த வரியைப் பற்றியே பேசிவிட்டு மற்ற வரிகளைக் கவனிக்கமாட்டார்கள் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையே!

விற்பனை வரியைக் குறைத்திருக்கிறார்களாம். ஆனால் பண்டப் பரிமாற்ற வரி என்ற புது வரியை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் உதிரிகளாக பல பத்தாயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதை வைத்துத்தான் இந்த வ.செ. திட்டத்தைத் தேர்தல் வ.செ. திட்டம் என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின. மருமகள் உடைத்தால் பொன் குடம்!

ஆனால் இந்த நலத் திட்டங்களுக்கு எந்த வரைமுறையும் இல்லாமல் போய்விட்டது. ஒரு பயனாளிக் குழுவுக்குப் பத்து முனைகளிலிருந்து உதவிகள். ஆனால் அவை அனைத்தையும் பெறுவது அந்தக் குழுவில் ஒரு மிக மிகச் சிறு கூட்டம்தான். ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை தாங்கள் செய்ததை விளம்பரப்படுத்தி மக்கள் குழுக்களிடையில் பகைமையை மூட்டுவது ஓர் ஆதாயம் என்றால் ஒதுக்கீட்டில் தங்களுக்கென்று பெரும்பகுதியை ″ஒதுக்கி″க்கொள்வது உண்மையான ஆதாயம். சிறுபான்மையருக்கு என்று நலத் திட்டம் தனியாக ஒதுக்கிவிட்டார்கள் என்று பா.ச.க. உரக்கக் கூச்சல் போடுகிறது. இதில் அதற்கு உண்மையில் ஆதாயம் இருக்குமா? குசராத்து வாய்ப்பாடு அப்படியே எல்லா இடங்களிலும் செல்லுபடியாகுமா?

அனைத்து மக்களுக்கும் ஒரே அடிப்படையில் பயனளிக்கத் தக்கவாறு நல்ல முறையில் திட்டமிட்டு செயல்முறையில் நன்கு கண்காணிக்கப்பட்ட நலத்திட்டங்கள்தாம் நமது தேவை. அதை நடைமுறைப்படுத்த இன்றைய நம் ஆட்சியாளர்களால் இயலுமா என்ற கேள்விக்கு நம்பகமான ஒரு விடை நமக்கு இல்லை.

ஒய்யாரக் கொண்டையிலே தாழம் பூவாம் அதன் உள்ளே இருக்கிறது ஈரும் பேனும்

இன்னும் கூறவேண்டியது நிறைய இருக்கிறது. வரிகளைப் பற்றியே வரிவரியாகக் கூறலாம். தமிழினி ஆசிரியர் இடமில்லை என்று கையை விரித்துவிட்டார். இருந்தாலும் ஒரு குறளைக் கூறி முடித்து விடுகிறேன், ஏனென்றால் திரு.ப.சிதம்பரம் ஒவ்வொரு முறை வ.செ. திட்டம் படிக்கும் போதும் ஒரு குறளையும் ஒரு பெருமகனாரின் சொல்லையும் மேற்கொள் காட்டுவாராம். ″சிதம்பரமும் மேற்கோள்களும்″ என்ற தலைப்பில் தினமணி ஒரு செய்தியை 01-03- 2008 அன்று தந்துள்ளது.

என் பங்குக்கு நம் நாட்டுச் ″சொலவடை″ ஒன்றை மேலே தந்துவிட்டேன். அடுத்து குறள், ஒன்றுக்கு இரண்டாகவே தருகிறேன்!

வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

இரண்டாவது குறளுக்குப் பொருள் தெளிவு. முதல் குறளுக்குக் கொஞ்சம் சிக்கல்.

ஆட்சி அதிகாரத்தோடு வரி தண்டுவதற்கு நம் வீட்டு வாசலில் வந்து நிற்கும் அரசுக்கும் அல்லது அரசு அதிகாரிக்கும் செல்லும் வழியில் துப்பாக்கியைக் காட்டி மறித்துக்கொண்டு நிற்கும் வழிப்பறிக்காரனுக்கும் வேறுபாடு இல்லையாம். ஆக, அவர் காலத்திலும் இப்படிப்பட்ட அரசர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறதே!

(சிற்சில திருத்தங்களுடன் இக்கட்டுரை தமிழினி ஏப்பிரல்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

அடிக்குறிப்புகள்:

[1] Dynamic Europe – A Background of Ferment and Change – British Constitutionalism – C.F.Strong, Hodder and Stoughton Ltd, University of London, London 1945.

[2] குமரி மாவட்டத்தில் ′இத வச்சிக்கிட்டு கூப்பனி கோரி குடிக்கவா?′ என்று கேட்பார்கள். கூப்பனி=கூழ்ப் பதநீர் – காய்ச்சிய பதநீரில் கருப்புக்கட்டிக்கு முந்திய பதம், கோருதல்=முகத்தல்

[3] கிரிக்கெட்(cricket) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு குருவி அல்லது பூச்சி என்பது பொருள். தமிழ்நாட்டில் ஊர்ப்புறங்களில் மிக அண்மைக் காலம் வரை விளையாடப்பட்டு இன்று கிரிக்கெட்டால் அகற்றப்பட்டுள்ள விளையாட்டு ″கெட்டிப்புள்″, ″கட்டாம்புள்″ எனப்படுவது. புள் என்ற சொல்லுக்கு குருவி என்பதே பொருள். இவ்விரண்டு விளையாட்டுகளிலும் பொதுவான பல கூறுகளைக் காணமுடியும்.