28.12.15

சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 10


அக்கானி க் காவடி[1]:
            பெரியார் கலந்துகொண்ட வைக்கம் போராட்டத்தின் ‌பின்விளைவாக மாதவையா என்ற தி‌‌வான் காலத்தில் சாணார் உட்பட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆகமக் கோயில்கள் திறந்து விடப்பட்டன. இதற்கு மேற்சாதியினர் எதிர்ப்புக் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காட்டினர். சட்டம் வழங்கிய இந்த உரிமையை நிலை நாட்டுவதற்காக ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சாணாரொருவர் தக்கலை அருகில் இருக்கும் குமாரகோயிலுக்குத் தீக்காவடி(அக்கினிக் காவடி) எடுப்பதாக அறி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வித்தார். 41 நாட்கள் நோன்பிருந்து ஒரு பெரும் சாணார் கூட்டம் ஆரவாரத்துடன் பின் தொடர அவர் கோயிலை நோக்கி வந்தார். கோயிலில் தீ வளர்த்து வைத்து மேற்சாதியினரும் பெரும் எண்ணிக்கையில் திரண்டு காத்திருந்தனர். ஊர்வலம் கோயிலை நெருங்கியதும் கோயிலில் இருந்தோர் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காவடி எடுப்பவர் மட்டுமே உள்ளே வரட்டும் என்றனர். நந்தனார் போல் தீயில் மடிய, தன் போராட்டம் தோல்வியில் முடிய விரும்பாத அவர் ‘என் மக்கள் முதலில் செல்ல வேண்டும், ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நான் பின்னால் வருவேன்’ என்றார். சச்சரவு ஏற்பட்டது. ஆயத்தமாக இருந்த மேற்சாதியினர் காவடியுடன் வந்த சாணார் கூட்டத்தைத் தாக்கினர். மக்கள் சிதறி ஓடினர். அக்கினிக் காவடி என்ற இந்த நிகழ்ச்சியை அக்கானிக் காவடி என்று மேற்சாதியினர் கேலி பேசினர். இன்று இந்தத் தடைகள் தகர்ந்துவிட்டன. நாடார்கள் ஆகிவிட்ட சாணார்களில் பலர் குமாரகோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மேன்மைமிகு சி.பி. இராமசாமியார்:
            இந்தியா விடுதலை பெற்ற நேரத்தில் திருவிதாங்கூரின் திவானாக இருந்தவர் தமிழ்நாட்டுப் பார்ப்பனராகிய சி.பி. இராமசாமி ஐயர். அவர் ஆய்வு நோக்கில் முன்னோடித் திட்டங்கள் என்ற பெயரில் பல திட்டங்களைத் தமிழர் வாழும் பகுதிகளில் நிறைவேற்றினார். திருவனந்தபுரத்திலிருந்து கன்னி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாகுமரி வரையிலும்[2] நாகர்கோவிலிருந்து அன்று திருவிதாங்கூர் எல்லையாக இருந்த ஆரல்வாய்மொழி வரையிலும் சிமென்றுச் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சாலைகள் அமைத்தார். கட்டாய இலவயக் கல்வியைப் புகுத்தினார். முழு மதுவிலக்குச் சட்டத்தைச் செயற்படுத்தினார். இவை தவிர இன்னொரு புரட்சிகரமான திட்டத்தையும் செயற்படுத்தினார். அதுதான் நாகர்கோயில் நகரமைப்புத் திட்டம். நாகர்கோயிலின் நடுப்பகுதியாக விளங்கும் மணிமேடையிலிருந்து 5கி.மீ. தொலைவு வரை இரண்டு சதுரச் சாலைகள் திட்டமிடப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டு வேலிகள் அகற்றப்பட்டு சாலைகள் அமைக்கும் பணி தொடங்கிவிட்ட நேரத்தில் பொதுமைக் கட்சியினர் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். இந்திய விடுதலை’ப் போரின் சூழலில் கேரளத்திலும் இராமசாமி ஐயருக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அவர் பதவியிலிருந்து ‌‌‌வெ‌ளியேற்றப்பட்டார். அத்துடன் அத் திட்டம் கைவிடப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டிருக்குமாயின் நாகர்கோயில் இந்தியாவிலுள்ள சிறந்த நகரமைப்புக் கொண்ட நகரமாக வளர்ந்திருக்கும். இன்று குப்பைகளை அள்ளிக் கொட்டினாற்போல் அமைந்திருக்கும் குடியிருப்புகள், வாணிகப் பகுதிகள், ஊர்திகள் செல்ல முடியாமல் குறுகலாகவும் கோணல்மாணலாகவும் உள்ள சாலைகள் இன்றி நல்ல அமைப்புடன் திகழ்ந்திருக்கும்.

            பொதுமைக் கட்சியினர் இத் திட்டத்தை எதிர்த்ததற்கு ஒரே காரணம் புதிய திட்டத்தின் பெரும் பகுதி நாடார்கள் வாழும் பகுதியாக இருந்ததுதான். மேற்சாதி‌‌‌‌‌‌‌‌‌யினர் வாழும் எல்லைக்குத் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் 3 கி.மீ. தொலைவு வரையிலும் இத் திட்டத்தில் உள்ளடங்கியிருந்தது. இதற்கும் அடிப்படை உண்டு. நாடார்கள் வாழும் பகுதி முழுவதும் புன்செய்களான மேட்டு நிலங்கள். மேற்சாதியினர் வாழும் பகுதி நன்செய் நிலங்கள். ஆனால் புதிய திட்டம் நிறைவேறினால் நகரின் நடுப் பகுதியும் அதனோடு உருவாகும் வாணிக அமைப்புகளும் நாடார்களுக்கு வாய்ப்பாகிப் போகும் என்பதுதான் எதிர்பாளர்களின் எதிர்ப்புக்குக் காரணம். பொதுமைக் கட்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சியில் அன்றும் இன்றும் மலையாளிகள்தாம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அடுத்து வருவோர் பிற மேற்சாதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

            தமிழகத்திலும் இந்தியா முழுவதும் பொதுமைக் கட்சிகள் பார்ப்பனர் மற்றும் மேற்சாதியினரின் தலைமையிலேயே இன்று வரை இயங்கி வருகின்றன. ஏழைகளின் காவலன் என்ற கோட்பாட்டுப் பொய் முகமூடி அணிந்திருக்கும் இத் தலைவர்கள் பால், ஏழ்மையின் கொடுமையையும் இழிவையும் பட்டுணர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் எளிதில் ஈர்க்கப்படுகின்றனர். ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றை வலியுறுத்தாமல் கூடுதல் கூலி என்ற ஒரே முழக்கத்தால் உழைக்கும் மக்களும் ஈர்க்கப்படுகின்றனர். இவர்களைப் பயன்படுத்தி அதே ‌பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளி‌‌லிருந்து தங்கள் சாதிப் பணக்காரர்களுக்குப் போட்டியாகப் புதியவர்கள் தலைதூக்கிவிடாமல் தடுப்பதில் இன்று வரை இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்ப‌ட்ட சா‌‌திகளைச் சேர்ந்த அறிவாளிகளும் ஏழைபங்காளர் என்ற பொதுமைக் கட்சியினரின் முகமூடி முன் எதிர்நிற்கத் துணிவின்றியும் கடுமையாக உழைத்துப் பணம் ஈட்டும் ஒரு நடுத்தரப் பணக்காரனுக்கு இணையாக எந்தக் கடும் உழைப்பும் மன ஈடுபாடும் இழப்பும் கொள்ளாமல் வருவாய் ஈட்டி இன்ப வாழ்வு வாழும் குற்றவுணர்வாலும் பொதுமைக் கட்சியினரின் கோட்பாட்டுத் தாக்குதலுக்குத் துணை நிற்கின்றனர்.

            சி.பி.இராமசாமி ஐயர் புகுத்திய கட்டாயக் கல்வித் திட்டம் ‌புரட்சிகரமானது. திடீரென்று ஒரு கல்வியாண்டின்(1946-47) தொடக்கத்தில் இத் திட்டம் செயலுக்கு வந்தது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி எல்லைக்குள்ளிருக்கும் ஊர்களுக்குச் சென்று 5 அகவை நிரம்பிய சிறார்களை இனங்கண்டு அவர்களைப் பள்ளிக்கு விட வேண்டுமென்று பெற்றோரிடம் அறிவுறுத்த வேண்டும். அதைச் செய்யாத பெற்றோருக்குத் தண்டனை உண்டு. இவ்வாறு 5 அகவை நிரம்பிய சிறார்கள் அனைவரும் பள்‌ளிகளில் சேர்ந்தனர். பள்ளியில் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு தேங்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காய்த் துருவல் இட்ட உளுந்தங்கஞ்சி தேங்காய்த் துவையலுடன் மதிய உணவாக வழங்கப்பட்டது. தட்டுகளும் இலவயமாக வழங்கப்பட்டன. கூடுதல் பள்ளி‌க் கட்டடங்கள் கட்டிக் கூடுதல் ஆசிரியர்கள் அமர்த்தப்படும் வரை ஒரு நாள் 5 மணி நேரமாக இருந்த பள்ளி வேலை நேரம் காலை 3 மணி, மாலை 3 மணி நேரங்களாக இரு மாற்று நேரங்கள் செயற்பட்டு இரு மடங்கு மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். எட்டாம் வகுப்புப் படித்தவர்களை ஆசிரியர் பணியில் ஆசிரியர் பயிற்சியின்றியே அமர்த்தினர். ஏற்கனவே இருந்த ஆ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிரியர்களுக்குத் தலைமையாசிரியர் பதவி உயர்வு கிடைத்தது. திருவிதாங்கூர்த் தமிழர் வாழும் தென் வட்டங்களில் பள்‌ளிக்குச் செல்லாத 5 அகவைக்கு மேற்பட்ட குழந்தைகளே இல்லை என்ற நிலை உருவானது.

            குமரி மாவட்டத்தில் புகுத்தப்பட்ட மதுவிலக்குத் திட்டம் முழுமையான வெற்றியைப் பெற்றதென்று உறுதியாகச் சொல்லலாம். காந்‌‌தியாரின் மதுவிலக்குக் கோட்பாட்டின் உட்கருவை மக்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களை ஏற்க வைப்பதில் அன்றைய அரசியல் தலைவர்களும் இளைய தலைமுறையினரும் முழு வெற்றிபெற்றனர். மீட்க முடியாதவர்கள் என்று கருதப்பட்ட பெருங்குடியர்கள் கூட திட்டம் செயற்படுத்தப்பட்ட நாளிலிருந்து குடிப்பதை நிறுத்தினர். இந்தியா விடுதலை பெற்று குடியரசு அமைக்கப்பட்டு தேர்தல்கள் மூலம் மக்களின் படிநிகராளிகளாக சட்டமன்ற உறுப்பினர்களும் உருவாகி குற்றம் புரியும் பொதுமக்களுக்குக் காவல் துறை‌‌‌‌‌‌‌‌‌யினரிடமிருந்து பாதுகாப்புப் பெற்றுத் தரும் காப்பாளர்களாக மாறியது வரை மது‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விலக்கு முழு வெற்றியுடன் செயற்பட்டது. இதன் மூலம் ஏழைக் குடும்பங்கள், இவர்களில் சாணார்கள் மிகு‌‌தி, மிகுந்த பயனடைந்தன.

            சி.பி.இராமசாமியாரால் தொடங்கப்பட்டு மக்களாட்சித் தலைவர்களால் சிதைக்கப்பட்ட இன்னொரு சீரிய திட்டம் பெருஞ்சாணி அணைத் திட்டமாகும். பறளி[3] ஆற்றின் குறுக்கே பெரும் பரப்பில் நீரைத் தேக்குமாறு திட்டமிடப்பட்டு வாணம்(அத்துவாரம்) தோண்டும் வேலை தொடங்கப்பட்ட நிலையில் நமக்கு விடுதலை கிடைத்தது. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு நம்மை ஆள வந்தவர்கள் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு மலைத்தோட்டக்காரர்களின் நலன்களுக்காக அணையை ஏறக்குறைய அரைக் கிலோமீற்றர் மேலே தள்ளிக் கட்டினர். பெருஞ்சாணி அணையாக சி.பி.இராமசாமியார் தொடங்கிய பணி பெருஞ்சாணிக் குளமாக முடிந்தது. இராமசாமியாரின் திட்டப்படி தோண்டப்பட்ட அத்துவாரத்தை இன்றும் பார்க்கலாம். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் அணையைக் குளமாகச் சுருக்கியதால் ஆதாயமடைந்த மலைத்தோட்ட உரிமையாளர் தனக்கு உரிமைப்பட்டதைப் போல் பத்து மடங்கு காட்டை வளைத்துப்போட்டு ஊரையும் உலகையும் ஏமாற்றிவந்தது அண்மையில் தெரியவந்ததுதான்[4].

நாடான் + சாணான் = நாடார்:
கட்டாய கல்வியின் பின்விளைவு மிக விரிவும் ஆழமும் உடையது. திருவிதாங்கூரில் மலையாளமே ஆட்சிமொழி என்பதைப் பார்த்தோம். அங்கு அரசுப் பணி பெற வேண்டுமாயின் மலையாளம் பயின்றிருக்க வேண்டும். தமிழர் வாழ்ந்த பகுதிகளில் உயர்நிலைப் பள்ளிகள் ‌‌‌கிடையா. திண்ணைப் பள்ளிகளும் ஒரு சில தொடக்கப் பள்ளிகளுமே இருந்தன. ஒரு சில இடங்களில் கிறித்துவத் ‌‌திருமண்டலங்கள் நடத்திய பள்‌ளிகளும் இருந்தன. நாகர்கோயிலில் இருந்த ஒன்றிரண்டு பள்‌ளிகளிலும் மலையாள வகுப்புகள் குறைவாகவே இருந்தன. இந்தச் சூழலில் கட்டாயக் கல்வி மூலம் தொடக்கப் பள்ளியில் தமிழில் படித்த மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதும் மலையாளம் படிப்பதும் இயலாமல் இருந்தது. அதே வேளையில் நிலம் கொடுத்தால் பள்ளிகள் கட்டித் தருவதாக அரசு அறிவித்தது. அதனால் சாணார்கள் பகுதிகளில் பல அரசுப் பள்ளிகள் தோன்றி அவை ஆண்டுக்கொரு வகுப்பாகப் பள்ளியிறுதி வரை பெற்று உயர்நிலைப் பள்ளிகளாக வளர்ந்தன.

            அப்போது தமிழர்கள் வாழும் பகுதியில் இருந்த கல்லூரி காட் ‌‌‌கிறித்துவக் கல்லூரி மட்டுமே. அதில் முதலில் இன்றர்மீடியேட் எனப்படும் இடைநிலை வகுப்பு மட்டுமே இருந்தது[5]. இளவல் பட்டம் பெற வேண்டுமாயின் திருவனந்தபுரம் அல்லது பாளையங்கோட்டை செல்ல வேண்டும். காட் கிறித்துவர் கல்லூரி படிப்படியாக இளவல் பட்டப் படிப்பு மட்டத்துக்கு உயர்ந்தது. இதனால் சாணார்களில் பட்டப் படிப்பு வரை படித்தோர் தொகை விரைந்து பெரு‌‌‌கியது.

            இந்தக் கட்டத்தை எட்டுவதற்குள் ஊர் நாடான்களுக்கும் பிற சாணர்களுக்கும் இடையில் திருமண உறவுகள் பெருகின. அத்துடன் நாடான்களும் சாணார்களும் ஒரே சாதியராகவும் ஓர் ஊருக்குள் சொக்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காரர்கள்[6] எனப்படும் தாயாதி உறவுடையவர்களாகவும் இருந்ததால் சாணார்களும் நாடான் என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டனர். நாளடைவில் நாடார் என்று அது ‌‌‌மாறியது. இருப்பினும் ஊர் நாடான்களை நாடான்[7] என்று குறிப்பிடும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. இனிமேல் இவர்களை நாடார்கள் என்றே ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாம் குறிப்பிடலாம்.

கருவில் குமரி:
            இப்போது இதுவரை ‌வெ‌ளித்தோன்றாத ஒரு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிக்கல் உருவாகியிருந்தது. அதற்கான தீர்வுக்கான முயற்சியும் இவ் விரண்டுக்கும் உள்ள தொடர்பு அறியப்படாமலே தொடங்கப்பட்டுவிட்டது. சிக்கல், புதிய கல்வி வாய்ப்புக‌‌‌ளால் படித்து ‌‌‌வெ‌ளிவரும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு. அந்தச் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிக்கலை யாரும் ‌‌‌வெ‌ளிப்படையாகக் கூறவில்லை. அதற்குத் தீர்வு என்று நாம் குறிப்பிடும் முயற்சியின் இந்தத் தன்மையையும் அம் முயற்சியில் ஈடுபட்டவர்கள் உணர்ந்திருக்கவில்லை. அந்த முயற்சிதான் திருவிதாங்கூரிலுள்ள தமிழர்கள் வாழும் பகுதிகள் தமிழகத்தோடு இணைய வேண்டுமென்ற வேண்டுகை.

            இன்றைய குமரி மாவட்டப் பகுதி பாண்டிய மன்னர்களின் கீழும் சேர, கேரள மன்னர்களின் கீழும் மாறி மாறி இருந்துள்ளது. அக் காலத்தில்தான் சுசீந்திரம் கோயில் போன்றவை கட்டப்பட்டன. பாண்டியர் ஆட்சியில் கட்டப்பட்ட கோயில்களும் சோழ மன்னர்கள் கட்டியவை போன்ற அமைப்பி‌‌லிருந்தன. சேர, கேரள மன்னர்கள் கட்டிய கோயில்கள் ஓடு வேய்ந்தவையாயிருந்தன. குமரி ‌‌‌மாவட்டத்திலுள்ள பழைய சிறு தெய்வக் கோயில்களும் ஓடு வேய்ந்தவைதாம். குமரி மாவட்டப் பகுதி வேணாடு என்ற பெயரால் வேளிர் குலக் குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டுள்ளது. நாஞ்சில் பொருநன்[8] என்பவனும் இப் பகுதியில் கழக(சங்க) காலத்தில் ஆட்சி புரிந்துள்ளான். இருப்பினும் இப் பகுதி வேணாட்டின் கீழே பெரும்பாலும் இருந்துள்ளது என்று ஐயம் கொள்ளுமாறு இங்குள்ளவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளோரைப் பாண்டிக்காரர்கள் என்றும் அவர்கள் இவர்களை மலையாளத்தார் என்றும் கு‌‌‌‌‌றிப்பிடும் வழக்கம் இன்றும் தொடர்‌‌‌கிறது. ‘மலையாளிகள் என்று கூறுவதில்லை. எனவே இந்த வழக்கம் இறுதி நூற்றாண்டுகளில் இப் பகுதி வேணாட்டு அரசின் கீழ் இருந்ததன் விளைவென்று கூறலாம்.

            இந்தச் சூழ்நிலையில் மலையாளம் ஆட்சி மொழியாயிருந்ததனால் ஆட்சிப் பதவிகளில் மலையாளிகளே ஆதிக்கம் செலுத்திவந்தனர். கிட்டத்தட்ட 1928 ஆம் ஆண்டில் தொடங்கபபட்ட சேது லட்சுமி பாய் (எசு.எல்.பி.) ஆங்கில உயர்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலைப் பள்ளியிலும் (இப்போது ஆங்கிலம் என்ற சொல் அகற்றப்பட்டுவிட்டது) அதற்கு முன்பே தொடங்கப்பட்டிருந்த லண்டன் மிசன் உயர்நிலைப் பள்ளியிலும் காட் ‌‌‌கிறித்துவக் கல்லூரியிலும் படித்தும் மேற்கொண்டு திருவனந்தபுரம் அல்லது பாளையங்கோட்டையில் பட்டம் பெற்றுக் குமரி மாவட்டப் பகுதியில் அல்லது ‌‌திருவிதாங்கூரின் பிற பகுதிகளில் ஆசிரியர், வழக்கறிஞர், அரசு ஊழியர், பொறியாளர் ஆகப் பணிபுரிந்தவர்கள் மலையாளிகளால் இ‌ழிவுபடுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டனர். இந்தக் கால கட்டத்தில் சிறந்த தமிழறிஞரும் பாவலருமான கவிமணி தேசிக வினாயகர் குமரி மாவட்டத்திலுள்ள வரலாற்று அடையாளங்களையும் கல்வெட்டுகளையும் தோழர்களின் துணையோடு விரிவாக ஆய்ந்தறிந்தார். அவற்றின் அடிப்படையில் புலவர் சதாசிவம் என்ற தமிழறிஞரான தமிழாசிரியர் சேர நாடும் செந்தமிழும் என்ற அரிய ஆய்வு நூலை எழுதினார்.

            இந்தப் பின்னணியில் சங்கரன் பிள்ளை என்பவர் தலைமையில் திருவிதாங்கூ‌‌‌‌‌‌‌ரிலுள்ள தமிழ் பேசும் மக்களின் நலன்களைக் காக்கவென்று 1943இல் ஓர் அமைப்பு சமத்தான பேரவைக் கட்சி (காங்கிரசுக் கட்சி)யின் கீழ் ஏற்படுத்தப்பட்டது. 1945இல் கன்னி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாகுமரி முதல் காசர்கோடு வரை ஒரே கேரள மாநிலம் வேண்டும் என்ற தீர்மானத்தை மலையாளிகள் நிறைவேற்றினர். இந்தத் தீர்மானத்தின் மீது அந்த அமைப்புக்குள் பிளவு ஏற்பட்டது. அதிலிருந்து பிரிந்துவந்த பெ.சு.மணி என்பவர் முன்முயற்சியில் நாஞ்சில் தமிழர் காங்கிரசு என்ற அமைப்பு உருவானது. அந்த அமைப்புக்குத் தலைமை தாங்குமாறு வழக்கறிஞரும் தமிழறிஞருமாகிய பி.சிதம்பரம் பிள்ளையை[9] அணுகிய போது அவர் திருவிதாங்கூர் முழுவதும் தழுவியதாகவும் நாடார்களையும் இணைத்துக் கொள்வதாகவும் ஓர் அமைப்பை உருவாக்குமாறு அறிவுறுத்தினார். இதே கால கட்டத்தில் மேற்கு வட்டங்களில் உள்ள தமிழர்களின் உரிமைகளை மலையாளிகளிடமிருந்து மீட்பதற்காக தி.த.நா.கா. என்ற அதே பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கிச் செயற்படுத்தி வந்தவர் திரு. நேசமணி அவர்களாகும். சிதம்பரம் பிள்ளையின் அறிவுரையின் பயனாகவும் நேசமணி அவர்களின் முன்முயற்சியாலும் நத்தானியல் என்பவர் தலைமையில் திருவிதாங்கூர் தமிழர் காங்கிரசு என்ற பெயரில் இருந்த அமைப்பு இணைந்து ஏற்பட்டது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு(தி..நா.‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கா.). இதில் வெள்ளாளர்கள், கிறித்துவ நாடார்கள், முதப்பத்து நாடான்கள், முகமதியர்கள் முதலியோர் இடம்பெற்‌‌‌‌‌றிருந்தனர். இந்த இயக்கம் ‌‌திருவிதாங்கூரிலுள்ள தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டுமென்ற வேண்டுகையை முன்வைத்தது.

குறைப்பேறாகக் கிடைத்த குமரி:
            இந்த இயக்கத்தில் நாடார்கள் பெருமளவில் சேரத் தொடங்கினர். அவர்களில் முகாமையாவர் நேசமணியாகும். இவர் நாயர்கள் செறிந்து வாழும் மேற்கு வட்டமாகிய விளவங்கோட்டைச் சேர்ந்தவர். தம் கீழ் அடிமை நிலையிலிருந்த நாடார்கள் மீது பொய் வழக்குகள் போட்டு அவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தனர் நாயர்கள். அவர்களுக்காக வழக்கு மன்றங்களில் இலவயமாக வாதாடிச் செல்வாக்குப் பெற்றவர் நேசமணி[10]. இவ்வாறு நாடார்களின் செல்வாக்கு இயக்கத்தில் பெருகுவதைக் கண்ட வெள்ளாளர்களில் பெரும்பாலோர் ஆளுக்கொரு நொண்டிச் சாக்‌கைக் கூறிக் கொண்டு ‌‌‌வெ‌ளியேறினர். நேசமணியின் செல்வாக்கு உயர்வதைப் பொறுக்காத பி.எசு.மணி எனும் வெள்ளாளரும் தாணுலிங்க நாடார் என்ற முதப்பத்து நாடானும்[11] சேர்ந்து அதே பெயரில் ஒரு போட்டிக் கட்சியைத் தொடங்கினர். இந்தியத் தேசியக் காங்கிரசின் கேரளக் குழுவோடு(கமிட்டி) கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டனர். அவர்கள் சொன்ன காரணம், கட்சி கிறித்துவர்களின் பிடியில் இருக்கிறது என்பதாகும். தேர்தலில் கூட்டணி படுதோல்வியடைந்தது. நேசமணியின் தலைமையிலான கட்சி போட்டியிட்ட எல்லாத் தொகுதிகளிலும் வென்றது. பிரசா சோசலிசக் கட்சியுடன் திருவிதாங்கூர் ஆட்சியிலும் 1952இல் பங்கேற்றனர். நேசமணி பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் திருவிதாங்கூர்த் தமிழர்கள் பகுதிகள் தமிழகத்தோடு இணைவது பற்றிய சிக்கலில் அரசிலிருந்து வெளியேறி போராட்டங்களில் கட்சி ஈடுபட்டது. ‌‌‌மாணவர்களும் மக்களும் சாதி, சமய வேற்றுமையின்றி உறுதியாகப் போராடினர். அப் போராட்டத்தின் போது பிரசா சோசலிசக் கட்சியின் முதலமைச்சராயிருந்த பட்டம் தாணுபிள்ளையின் அரசு நடத்திய அடக்குமுறை வெறியாட்டம் மிகக் கொடுமையானது. இறுதியில் 1956இல் மாநிலங்கள் சீரமைப்பின் போது சென்னை மாகாணத்தில் முதலமைச்சராயிருந்த காமராசருடன் கேரள அரசு பேசியது. தேசியத் தலைவர்களில் ஒருவராயிருந்த காம‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ராசர் எந்தப் பகுதி எங்கேயிருந்தாலும் இந்தியாவினுள்தானே இருக்கிறது என்ற மிகப் பரந்த மனப்பான்மையுடையவர். எனவே தமிழர்கள் கேட்ட 9 வட்டங்களில் பாதியாக 4½ வட்டங்களை ஏற்றுக்கொண்டார். தி.தா.நா.கா. தலைவர் நேசமணியும் அதனை ஏற்றுக்கொண்டார். அத்துடன் நில்லாது, கேட்டதில் பாதி கிடைத்துவிட்டது, மீ‌‌தியை உள்ளிருந்தே போராடிப் பெறுவோம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றி விட்டுப் பேரவைக் கட்சியோடு தன் கட்சியை இணைத்துவிட்டார். பின்னர் அந்தத் தீர்‌‌‌மானத்தை அவர்கள் மறந்தே விட்டனர்.

நாம் இழந்த வட்டங்களில் முகாமையானவை தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை ஆகிய மூன்றும் ஆகும். இந்த மூன்று வட்டங்களுக்குள்தாம் பெரியாற்று அணை, கண்ணகி கோயில், நெய்யாற்று அணை ஆகியவை அமைந்துள்ளன. இந்தப் பகுதியில்தான் கேரளத்தின் முகாமையான, ஏற்றுமதி மதிப்புள்ள தேயிலை, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காப்பி, ஏலம், மிளகு, இலவங்கப்பட்டை, இலை, கிராம்பு ஆகியவை விளைகின்றன. எனவே இம் மூன்று வட்டங்களையும் கொடுப்பதற்குக் கேரளத்தினர் பெரும் எதிர்ப்பைக் காட்டியிருப்பர் என்பது உறுதி. ஆனால் குறைந்தது பெரியாற்று அணை, கண்ணகி கோயில், நெய்யாற்று அணை ஆகியவற்றை அடக்கிய பகுதிகள் அவற்றின் வளங்களோடு நமக்கு கிடைத்திருக்கும். ஆனால் “குள‌‌‌மாவது மேடாவது எல்லாம் இந்தியாவில்தானே இருக்கின்றன” என்ற காமராசரின் புகழ்பெற்ற கூற்றை ஏற்றுக்கொண்டு நேசமணியும் அவரைச் சேர்ந்தவர்களும் அமைதியடைந்தனர். இதற்குக் காரணம் தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளில் வா‌ழ்ந்த தமிழர்களில் படித்து வேலைவாய்ப்பைத் தேடி நின்றோர் குறைவு. இத்தகையவர்கள்தாம் இது போன்ற சிக்கல்களை முன்னெடுத்துச் செல்வர். மிகப் பெரும்பாலான மக்கள் தோட்டக்காடுகளில் கூலி வேலை செய்தவர்கள். அத்துடன் அவர்களை இணைத்துச் செயல்படுத்துவதற்குக் குமரி மாவட்டத்தில் போல் ஒரு முனைப்பான குமுகச் சிக்கலும் இல்லை. அத்துடன் சி.பி.இராமசாமி ஐயரின் கட்டாயக் கல்வித் திட்டம் அங்கு நிறைவேற்றப்பட்டதாகவும் தெரியவில்லை.

            தேசிய இயக்கங்கள் என்ற வகைப்பாட்டினுள் மட்டுமல்ல, மக்களாட்சி, மக்கள் உரிமைகள் என்று தொடங்கப்படும் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிய நாடுகளவையின் முகமூடியுடன் நுழையும் வல்லரசு ஒற்றர் இயக்கங்களும் கூட, முதலில் படித்த மேல்தட்டினரிடமிருந்தே தோன்றுகின்றன அல்லது வேரூன்றுகின்றன. திராவிட இயக்கத்தின் முன்னோடியான நயன்மைக் கட்சி, அதற்கும் பொதுமைக் கட்சிக்கும் முன்னோடிகளான சாதி சார்ந்த அமைப்புகள், ஆண்ட ஆங்‌‌‌கிலர் ஒருவரால் தொடங்கப்பட்ட இந்தியத் தேசியப் பேரவைக் கட்சி போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். அவை பெரும்பாலும் நடுத்தர மக்களின் இயக்கங்களாகவே தேங்கி விடுகின்றன. உருசியாவில் பாட்டாளிகளை முதன்மைப்படுத்தி ஒரு புரட்சியை நடத்தினாலும் அவர்களின் தன்முயற்சியை முடக்கி கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் கீழ் அவர்களை அடிமைகளாக்‌‌‌கியதால் அது தோல்வியைத் தழுவியது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சா‌‌திகளிலுள்ள படித்தவர்களின் கருத்தியலாகத் திராவிட இயக்கம் தேங்கிக் கிடக்கிறது. அவ்வாறே அதிலிருந்து கிளைத்த தனித்தமிழ் இயக்கமும். தமிழக மக்களில் உழைப்பு - விளைப்புச் செயல்களில் ஈடுபடும் பெரும்பான்மை மக்களின் ஆற்றல்களை ஒருங்கிணைத்து ஒரு குமு‌‌‌கியல் - அரசியில் - பொருளியல் புரட்சியை நடத்தும் எண்ணமே தோன்றாமல் செய்து விட்டனர் இந்த நடுத்தர வகுப்புப் படிப்பாளிகள். அது போல்தான் பொருளியல் சிக்கல்களைக் கணக்கிலெடுக்காத தி..நா.கா.வின் முயற்சிகளும் அரைகுறையாய் முடிந்தன. தமிழக இயக்கங்களில் இருந்த இதே குறைபாடுதான் பெரியாற்று அணைச் சிக்கல் மட்டுமல்ல, மேற்குத் தொடர்ச்சி மலை முகட்டிலிருந்து தமிழகம் நெடுகிலும் கேரளத்தோடுள்ள நமது எல்லைப் பகு‌‌தியிலிருந்து நமக்குக் கிடைத்துக்கொண்டிருந்த நீர்வளம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பறிக்கப்பட்டிருந்தும் அதனால் இழப்பெய்‌‌தித் துயருறும் மலையடிவாரத் தமிழ் மக்களின் துயர்களைத் தீர்த்து தமிழக - கேரள எல்லையை வரையறுக்க வேண்டுமென்ற எண்ணம் கூட எவருக்கும் தோன்ற முடியாமல் செய்துள்ளது.


 [1] அக்கானி என்பது பதனீரைக் குறிக்கும் மலையாளச் சொல். அக்க நீர் என்பதே இவ்வாறு மருவியது என்பார் பாவாணர். பாயசம் என்பதனைப் பார்ப்பனர் அக்காரவடிசில் என்று கூறுவதைச் சான்று காட்டுவர். அக்காரம்+அடிசில் என்று வேர் காட்டுவார்.    அக்கம் அக்காரம் = இனிப்பு.

[2] கடற்காற்றால் அரிமானம் ஏற்பட்டுவிடும் என்பதற்காக இச் சிமென்றுச் சாலை ஈத்தங்காடு என்னுமிடத்தில் முடிவடைந்து கீல்(தார்) சாலையாகக குமரியை நோக்கித் தொடர்கிறது. மாட்டு வண்டிகள் சென்றால் இச் சாலை வண்டியின் பைதா ஓடும் தடத்தில் தேய்வுற்றுச் சாலை கேடுறும் என்றும், எனவே இச் சாலையில் மாட்டுவண்டிகளைத் தடைசெய்யுமாறும் இராமசாமியாருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் வண்டி ஓட்டிகளின் பணிக்கடுமையைக் குறைப்பதும் சிமென்றுச் சாலை அமைப்பதன் நோக்கங்களில் ஒன்று என்று அவர் விடையிறுத்ததாகவும் கூறப்படுகிறது.
[3]  பறளியாறும் கோதையாறும்  இணைந்து தாமிரபரணி ஆறு அல்லது குழித்துறை ஆறு என்ற பெயரில் கடலில் கலக்கின்றன.
[4] இராமசாமியாரின் பணிகள் என்று மேலே கூறப்பட்டவை நூலாசிரியர் பள்ளி மாணவனாக இருந்த போது நேரில் பார்த்து அறிந்தவையே. இவற்றுக்கு அப்பால் அவர் செய்த, செய்யத் திட்டமிட்டிருந்த  மேம்பாட்டுப் பணிகளைப் பற்றி ஆய வேண்டியது அறிஞர்கள் கடமை.
[5] அதைப் படித்தவர்களுக்கு முதலில் எஃப்.ஏ. (Faculty of Arts)என்ற பட்டம் வழங்கப்பட்டது. பின்னாளில் அந்தப் பட்டம் எடுக்கப்பட்டு மேலும் இரண்டாண்டுகள் பயின்றால் மட்டும் இளங்கலைப் பட்டம் வழங்கப்பட்டது.
[6]               சொம் எனும் சொல்லுக்கு சொந்தம் என்று பொருள் கூறுவார் பாவாணர். குடும்பச் சொத்துக்கு சொம்மு என்றும் அதற்கு உரிய பிறங்கடை(வாரிசு)யை சொம்மி என்றும் கூறுவர், அது சென்மி என்று வழங்கப்படுகிறது. சொம் சும் சும்மா = சொந்தத்துக்கு, விலைக்கல்ல. சொந்தம் என்பதைக் குறிப்பிடும் சு முன்னொட்டு, சுயம் என்னும் சொல் ஆகிய சமற்கிருத வழக்குகளுக்கு சொம் என்ற தமிழ்ச் சொல்லே வேர். நல்லெண்ணெய் - பிற எண்ணெய்கள், நற்றாய் - செவிலித்தாய், நல்ல மா -கொல்லமா, நல்ல மிளகு - கொல்ல மிளகு என்பவற்றிலுள்ள நல்ல என்ற சொல்லுக்கு மூலமான, சொந்தமான என்ற பொருள்களுண்டு. சுகந்தம், சுகன்யா போன்ற சமற்கிருதச் சொற்களின் முன்னொட்டுகளுக்கும் தமிழச் சொல்லான “சொம்"மே மூலம்.
[7]நாடார் பெண்களின் கணவர்களை நாடான் என்று பிறர் குறிப்பிடுவார்கள். “உன் நாடான் நலமா?” என்பது போல. பார்ப்பனர்களிடையில் உங்கள் வீட்டு ஐயர்” என்று குறிப்பிடுவது போல்.
[8]   நாஞ்சில் பொருநன் என்பவனை நாஞ்சில் வள்ளுவன் என்று கழக இலக்கியத் தொகுப்பாளர்கள்தாம் குறித்துள்ளனர். நாஞ்சில் வள்ளுவன் என்ற பெயர் கழகத் தொகைப் பாடல் எதிலும் இல்லை. ஆனால் இந்தத் தவறான தரவை வைத்துக்கொண்டு பர்.திரு.எசு.பத்மநாபன் உட்பட எண்ணற்றோர் திருவள்ளுவர்தான் நாஞ்சில் வள்ளுவன் என்பது உட்பட பல வேடிக்கையான ஆய்வு முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
[9] இவர் நயன்மைக் கட்சி மரபில் தோன்றிய திராவிடர் கழக ஈடுபாட்டாளர் என்று தெரிகிறது. சென்னை மாகாணத்தில் நயன்மைக் கட்சி நாடார் மகாசன சங்கத்துடன் இணைந்து செயற்பட்ட அதே உத்தியை அவர் இங்கும் பரிந்துரைத்திருக்கிறார். இங்கும் இந்தக் கூட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
[10] பி. எசு. மணி போன்றோர் நேசமணி மீது வைத்த பெரிய குற்றச்சாட்டு அவர் தொடக்க காலத்தில் சி.பி. இராமசாமியாரோடு இணைந்து செயற்பட்டார் என்பதாகும். நடந்துள்ள நிகழ்ச்சிகளை அலசிப் பார்க்கும் போது இதில் குற்றம் சொல்வதற்கு எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. இருவரும் திருவிதாங்கூர் தமிழர்களின் நலனில் நாட்டங்கொண்டவர்கள். இராமசாமியார் தன் பதவிக் காலத்தில் தன் பதவியைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் செய்து முடித்திருந்த பல்துறை அடிப்படை மேம்பாட்டுப் பணிகள் வரலாறு மறக்கவோ மறைக்கவோ கூடாத சிறப்பு வாய்ந்தவை. மேற்கு வட்டங்களில் வாழ்ந்த தமிழர்களான நாடார்களின் மீது மலையாளிகளான நாயர்களும் குறுப்புகளும் நிகழ்த்திய கொடுமைகளுக்கெதிராக நேசமணி நடத்திய போராட்டத்தல் தமிழ் மக்களின் நலத்தை மனதில் கொண்டு செயற்பட்ட இராமசாமியாரின் அரவணைப்பையும் உதவிகளையும் பெற்று அவரோடு இணைந்து செயற்பட்டது எந்த வகையில் குற்றம்?
                சி.பி.இராமசாமியார் மீது வைக்கப்படும் மிகப்பெரும் குற்றச்சாட்டு அவர் திருவிதாங்கூர் தனி நாடாக இருக்குமென்று அறிவித்தார் என்பதாகும். நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கணக்கிலெடுக்காத ஒரு குற்றச்சாட்டாகும் இது. இந்தியாவுக்கு ″விடுதலை″ அளிப்பதாக ஆங்கிலர் காந்தியோடு உடன்பாடு கொண்ட போது சமத்தானங்கள் விரும்பினால் தனி நாடுகளை அமைத்துக் கொள்ளலாம் என்றுதான் முடிவு செய்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் இராமசாமியார் இந்த அறிவிப்பைச் செய்தார். மலையாளிகள் கேட்ட “அகண்ட கேரளத்”தை விட தனித் திருவிதாங்கூரே இங்குள்ள தமிழ் மக்களுக்கு அதிகப் பாதுகாப்பானது என்று அவர் கணித்திருந்ததில் தவறேதுமில்லையே! மலையாளிகளின் அகண்ட கேரள முழக்கத்தின் எதிர்வினையாகத்தானே கிழக்கு, மேற்கு வட்டங்களில் தமிழர் வாழும் பகுதிகளில் தாய்த் தமிழகத்தோடு சேர வேண்டும் என்ற துடிப்பும் அதை நிறைவேற்றும் கருவியாக திருவிதாங்கூர் தமிழ்நாடு பேரவைக் கட்சியும் தோன்றின!
                காந்தியோடு ஆங்கிலர் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு மாறாக “விடுதலை” பெற்றதும் உள்துறை அமைச்சராய் வந்த வல்லபாய் பட்டேல் படையைக் காட்டி மிரட்டி சமத்தானங்களை வல்லந்தமாய் ″இந்திய ஒன்றியத்″துடன் இணைத்தார். காந்தியம் ஒரு பொய்ம்மை என்றுணராமல் அதன் மீது நம்பிக்கை வைத்திருந்த இந்தியா முழுவதுமிருந்த நேர்மையான பேரவைக் கட்சிப் பெருமக்கள் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்தனர், ஏனென்றால் பேரவைக் கட்சி அதுவரை பிரிந்துசெல்ல விரும்பும் சமத்தானங்கள் பிரிந்துசெல்லலாம் என்று வாக்களித்திருந்தது. பேரவைக் கட்சியின் இந்த இரண்டகத்தை எதிர்பார்த்திராத நேர்மையாளர்கள், தமிழகத்தின் திரு. வி.க. உட்பட, “காந்தியம் செத்துவிட்டது, பட்டேலியம்தான் இப்போது ஆள்கிறது” என்று கூறி அரசியலையே விட்டு ஒதுங்கினர்.
                இராமசாமியார் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு அவர் இந்தியத் தேசியப் பேரவைக் கட்சிக்கு எதிராகச் செயற்பட்டார் என்பது. அன்றைய நிலையில் இந்தியத் தேசியப் பேரவைக் கட்சி திருவிதாங்கூர் தமிழர்களுக்கு எதிராகத்தானே செயற்பட்டது? ஆங்கிலர் ஆட்சியின் கண்காணிப்பில் நடைபெற்ற சமத்தான ஆட்சியின் தலைமை ஆள்வினையாளர் என்ற வகையில் அவரது கடமையும் தமிழ் மக்கள் மீதான பரிவுணர்வும் ஒன்றோடொன்று மயங்கி அவரிடம் செயற்பட்டிள்ளன.
                இந்தியத் தேசியப் பேரவைக் கட்சியைப் பொறுத்தவரை அன்றைய திருவிதாங்கூர் மாநிலக் குழுவாயினும் தமிழ்நாட்டுக் குழுவாயினும் இன்றைய தமிழ்நாட்டுக் குழு உட்பட அனைத்து மாநில, நடுவண் குழுக்களும் தமிழர்களுக்கு எதிரிகளாகவே செயற்பட்டுள்ளன, செயற்பட்டு வருகின்றன; அதுவே இந்திய நாட்டுப்பற்றுக்கு அடையாளம் என்ற உறுதியான முடிவில் உள்ளன. 
[11] தாணுலிங்க நாடார் தோன்றிய பொற்றையடி நாடான்  குடும்பத்தை  அரியநாத முதலியாரால் அகற்றப்பட்ட பாண்டிய நாட்டின் 72 நாடுகளில் ஒன்றன் ஆட்சியாளரின் வழி வந்தவர்களாகவோ அல்லது ஊர் முதலூடி மரபினராகவோ கொள்ள முடியவில்லை. பிற்காலத்தில் ஆண்டவர்களாக அறியப்படும் பஞ்சபாண்டியர்களில் வள்ளியூரைத் தலைநகராகக் கொண்டு ஒரு பகுதியை ஆண்டவர்களில் கன்னட அரசனிடம் தோற்று சிறைப்பட்டு அவன் மகளை மணம் செய்ய மறுத்துத் தற்கொலை செய்துகொண்ட குலசேகர பாண்டியன் மரபில் தப்பித்து வந்தவர்களின் பின்னடியினர் இவர்கள் என்று கருதப்படுகிறது. பட்டத்துக்குரிய இளவரசர்களுக்கு எதிராக மருமகனான மார்த்தவர்மனுக்கு ஆதரவளித்து சாணார்களுக்குப் பெருங்கேடு விளைத்து மாறச்சன் என்ற விருதுப் பெயரைத் தன் குடும்பத்துக்குப் பெற்றுத்தந்த திருமாலயப்பெருமாளுக்குப் பின்னர் திருவிதாங்கூர் தமிழ்நாடு போராட்டத்தில் மக்களுக்கு எதிரான நிலயெடுக்கத் தயங்காத தாணுலிங்கரைப் போலவே அவ் வழியில் தோன்றிய, எழுத்தாளராகவும் பாவலராகவும் காலச்சுவடு வகையறாக்களாலும் இலக்கிய வட்டத்தின் ஒரு குழுவினராலும் புகழப்படும் இராசமார்த்தாண்டனும் தமிழ், தமிழகச் சிந்தனைகளுக்கு எதிர்நிலையிலேயே சிந்தித்தவர் என்பதை இங்கு பதிவது நலம் என்று கருதுகிறேன். அதாவது அடிப்படைத் தமிழ்ப் பொதுமக்கள் தங்களது பரிவைப் பெறத் தகுதியற்றவர்கள் என்றும் தாம் அவர்களிலிருந்து மேம்பட்டவர்கள் என்றும் “ஆண்டவர்கள் மரபில் வந்த” இந்த “நாடான்களி”ல் மிகப் பெரும்பாலோர் கருதுகின்றனர்.  

0 மறுமொழிகள்: