28.12.15

சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 14


குமரிக்கு அப்பால்

            குமரி மாவட்டத்துக்கு வெளியே தமிழகத்திலுள்ள நாடார்களின் வரலாறு வேறு வகையானது. இங்கு முத்துக்குட்டி அடிகளின் வீச்சு எட்டவில்லை. நெல்லை மாவட்டத்திலுள்ள ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சாணார்கள் வாணிகத்தின் மூலம் வளர்ச்சியடைந்தனர். கோயில்பட்டி, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, கமுதி, தேனி, மதுரை போன்ற இடங்களில் அவர்கள் வாணிகத்தால் சிறப்புற்றனர். அவ் வூர்களும் வளர்ச்சியடைந்தன. அந்த ஊர்களில் மேற்சாதியினர், குறிப்பாக வெள்ளாளர்கள் வழிபடும் கோயில்களினுள் நுழைய அவர்கள் முயன்றனர். மேற்சாதியினர் தடுத்தனர். மோதல் நிலை உருவானது. மேற்சாதியினரின் அடியாட்க‌‌‌ளாக நின்று கீழ்ச்சாதியினரை ஒடுக்கும் மறவர் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சாதியினர் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்க வந்தனர். புகழ் பெற்ற சிவகாசிக் கலவரத்தில் மறவர்கள் முறியடிக்கப்பட்டுத் தோற்றோடினர். இது 1901இல் நடைபெற்றது. இது போன்ற கலவரங்கள் இதற்கு முன்னும் பின்னும் வெவ்வேறு நகரங்களில் நடந்துள்ளன. பின்னர் நாடார்களே சொந்தமாகக் கோயில் கட்டி அவற்றில் ஆகம நடைமுறைகளைப் புகுத்தியுள்ளனர்.

சங்கம் வைத்து வலுச் சேர்த்தோம்:
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடார் மகாசன சங்கம் அமைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் (இப்போது நாகப்பட்டினம் மாவட்டம்) பொறையாற்றைச் சேர்ந்த இரத்தினசாமி நாடார் என்பவரது முன்முயற்சிக்கு இதில் முதலிடம் உண்டு.

நாடார்கள் செ‌‌‌‌‌றிந்து வாழ்ந்த ஊர்களில் நாடார்களே பள்ளிகளை அமைத்தனர். எல்லாச் செலவுகளையும் நாடார்களே ஏற்றுக்கொண்டனர். தங்கள் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் ‌பிள்ளைகளைச் சேர்ப்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்தனர் என்று தெரிகிறது. நயன்மைக் கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அமைக்கப்பட்ட உடனேயே நாடார் மகாசன சங்கத்தினர் அவ் வமைப்பினரை அணுகினர். அவர்களும் தம் அமைப்போடு அதனை இணைத்துக் கொண்டனர். கல்வி, பொருளியல் ஆகிய துறைகளில் வளர்ந்து கொண்டிருந்த அவர்களின் குமுகச் செல்வாக்கும் இதன் மூலம் வளர்ந்தது.

            நாடார் மகாசன சங்கம் உருவாக்கிய நாடார் வங்கியின் உதவியுடன் நயன்மைக் கட்சி வழங்கிய பொருளியல் உரிமைகளும் இணைந்ததால் பல தொழில்களையும் வாணிக நிறுவனங் களையும் அவர்களால் தொடங்க முடிந்தது. சங்கத்தின் மூலம் பல கல்வி ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிறுவனங்களை நிறுவினர். ஏழை ‌‌‌மாணவர்களுக்குக் கல்விக் கடனுதவி வழங்கினர். நாடார்களில் பெருமளவு கிறித்துவர்கள் இருந்ததால் கிறித்துவத் திருமண்டிலங்களும் எண்ணற்ற பள்ளிகளை நிறுவி நாடார்களுக்குக் கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். ஆண்களும் பெண்களுமாகப் பெருமளவில் கிறித்துவ நாடார்கள் ஆசிரியர்களும் அரசூழியர்களும் ஆயினர்.

            வாணிகத் துறையைப் பொறுத்த வரையில் விருதுநகர் நா‌டார்கள் முதலிடம் பெறுகின்றனர். தவசங்கள், கூலங்கள், பஞ்சு, எண்ணெய் வித்துக்கள் வாணிகத்தில் தென்தமிழகத்தில் அவர்கள் பெரும் பங்கு ஏற்கின்றனர். பல எண்ணெய் ஆலைகளையும் அங்கு நிறுவியுள்ளனர். பிற நகர்களில் குறிப்பாக மதுரையில் தொழில் வாணிகத் துறைகளில் விருதுநகரிலிருந்து சென்றவர்கள் சிறப்புற விளங்குகின்றனர்.

            சிவகாசியில் தீப்பெட்டி, பட்டாசு என்று தொடங்கிய நாடார்கள் அவற்றுக்குத் தேவைப்படும் படங்களை அச்சிடத் தொடங்கியதிலிருந்து மாபெரும் வண்ண அச்சுத் தொழிலில் வளர்ச்சியடைந்தனர். புதிய புதிய அச்சுக் கருவிகளை இறக்குமதி செய்து தமிழகத்தின் அச்சுத் தொழிலில் முதலிடம் பிடித்தனர். அது மட்டுமல்ல, தமிழகத்து நகர்களில் கட்டுமானப் பொருள் வாணிகத்தில் அவர்களுக்கு ஈடு இல்லை எனும் நிலையை எய்தியுள்ளனர்.

            நெல்லை மாவட்டத்திலிருந்து சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கை சென்று வாணிக நிறுவனங்களில் வேலை பார்த்துப் பின் சிறுகச் சிறுகச் சொந்த வாணிகம் தொடங்கிப் பெருமளவில் வளர்ச்சியடைந்தவர் பலர். அவர்களில் நாடார்கள், வெள்ளாளர்கள், ரெட்டி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யார்கள், முகம்ம‌தியர்கள் என்று அனைத்து வகுப்பினரும் உண்டு. அங்கு சேர்த்த செல்வத்தைக் கொண்டு நெல்லை மாவட்டத்தில் நிறைய நிலங்களை வாங்கிப் போட்டனர். 1950க்குப் பிறகு இலங்கை அரசு தமிழ் நாட்டினரைத் துரத்தத் தொடங்கிய போது அனைவரும் அங்குள்ள தம் தொழில் - வாணிக ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிறுவனங்களைக் கண்ட விலைக்கு விற்றுவிட்டு இங்கு வந்தனர். நாடார்கள், வெள்ளாளர்கள், முகம்மதியர்கள் போன்றோர் பல்வேறு தொழில் வாணிக நிறுவனங்களைத் தொடங்கினர். ரெட்டியார்கள் தமிழகமெங்கும் உணவகங்கள், தங்ககங்களைத் தொடங்கி நடத்து‌‌‌கின்றனர்; கேரளத்தில் துணி வாணிகம், அச்சுத் தொழில் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.

            சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தொழில், வாணிகம், அரசியல் போன்ற பல காரணங்களுக்காக ‌‌‌வெ‌ளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்குச் செல்வோர் பார்ப்பனர், வெள்ளாளர், ரெட்டியார் போன்ற புலாலுண்ணா மேற்சாதியினரே. எனவே அங்குள்ள உணவகங்களும் தங்ககங்களும் பெரும்பாலும் மரக்கறி உணவுகளை வழங்குவனவாகவே இருந்தன. புலாலுண்ணும் சாதியினரிடையில் தொழில், வாணிக, அரசியல் குழுக்கள் வளர்ச்சியடைந்த பின் புலாலுணவுக்குப் பெரும் தேவை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி புலாலுணவகங்கள் இணைந்த தங்ககங்களை நாடார்கள், குறிப்பாக நெல்லை மாவட்டத்திலிருந்து சென்ற ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாடார்கள் தொடங்கி நல்ல வாணிகம் செய்கின்றனர். அவர்களைப் பார்த்த தங்ககங்கள் நடத்தும் மரக்கறி உணவினரான ரெட்டியார்கள் பலரும் தங்ககங்களோடு புலாலுணவுப் பகுதியையும் இப்போது இணைத்துள்ளனர்.

            சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விறகுக் கடைகளாகத் தொடங்கி சவுக்கு வாரிகள்(க‌ழிகள்), மூங்கில்கள், ஓலைகள், ஓடுகள் என்று வளர்ந்து மரக்கடை, கட்டடப் பொருட்கள் கடை என்று பெரும் நிறுவனங்களை வளர்த்தோர் எண்ணற்றோர். இவர்களில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலர்.

            நாடார்கள் பெருமளவில் ஈடுபட்டுள்ள இன்னொரு வாணிகம் பலசரக்கு(மளிகை) வாணிகமாகும். இவர்களில் பெரும்பான்மையினர் நெல்லை ‌‌‌மாவட்டத்தினர். இவ் வாணிகத்தில் அவர்கள் தமிழக எல்லையைத் தாண்டி மும்பை வரை பரவியிருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களது உத்தி பின்வருமாறு: ஒருவர் முதலில் ஓர் ஊரில் ஒரு கடை தொடங்கு‌‌வார். கடை பெரும்பாலும் வீட்டோடு இணைந்ததாக இருக்கும். ‌‌வாணிகம் சூடு பிடித்ததும் தம்மூரிலிருந்து ஒரு சிறுவனைத் துணைக்கு வைத்துக் கொள்வார். உதவியாளர்கள் நாளடைவில் இருவர் மூவராக வளர்வர். இப்போது அதில் திறமையுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து பக்கத்து ஊர்களில் தன் செலவில் கடை வைத்துக் கொடுத்துச் சில்லரை விலையை விடக் குறைந்த விலைக்குப் பண்டங்கள் வழங்குவார். அதே போல் சுற்று வட்டார ஊர்களில் துணைக் கடைகளை வைத்து ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாளடைவில் இவர் ஒரு மொத்த ‌‌வாணிகராக உயர்ந்து விடுவார். ‌‌‌பார்சி - பனியாக்களும் கேரளத்து மலையாளிகளும் இன்று இதே உத்தியைக் கையாண்டு பரவி வருகின்றனர். வாணிகம் மேற்கொள்ளும் நகரமல்லாத பேரூர்களில் அவர்கள் செல்வாக்குள்ள ஏதோவோர் அரசியல் கட்சியில் ஆர்வம் காட்டுவார்களாம். ஏனென்றால் கட்சி சார்பில்லாத வாணிகர்களை விடக் கட்சி சார்புடையவர்களுக்குத்தான் நன்றாக வாணிகம் நடைபெறுகிறதாம்.

            தமிழகத்தில் இவர்கள் கணிசமான வாணிகத்திலும் ஓரளவு பண்ட விளைப்பிலும் ஈடுபட்டிருந்தாலும் தாங்கள் பெருமளவில் விளைக்கும் பண்டங்களை ‌‌‌வெ‌ளி மாவட்டங்களிலும் ‌‌‌வெ‌ளி மாநிலங்களிலும் ‌‌‌வெ‌ளி நாடுகளிலும் சந்தைப்படுத்துவதற்கு மும்பையிலிருக்கும் பனியாக்களைத்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. நாடார்கள் மட்டுமல்ல, தமிழகத்தைச் சேர்ந்த பிறர் மட்டுமல்ல, பிற மாநில மக்களுக்கும் கூட இதே நிலைதான். தூத்துக்குடியில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விளையும் உப்பானாலும் சிவகாசியில் செய்யப்படும் பட்டாசுகளானாலும் கோவில்பட்டி, சாத்தூர் பகுதிகளில் செய்யப்படும் தீப்பெட்டியானாலும் மலைப் பகுதிகளில் விளையும் ஏலம், கி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ராம்பு, இலவங்கம், மிளகு, சேலம் ஈரோடு பகுதிகளில் விளையும் மஞ்சள், பருத்தி போன்ற எந்தப் பொருளானாலும் அவற்றை வட மாநிலங்க‌ளில் விற்கவும் ஏற்றுமதி செய்யவுமான உரிமங்களை பனியாக்களே வைத்துள்ளனர். எனவே விளைக்கப்பட்ட பண்டங்களை மொத்தமாக அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவற்றை விளைப்போர் வாய்க்கும் வயிற்றுக்குமாக வாழ வேண்டியுள்ளது. எனவே இங்குள்ள விளைப்போர் மீது அவர்களது பிடி இறுக்கமாக உள்ளது. நிறுவனங்கள் நெருக்கடிகளில் சிக்கும் போது அவை முழுமையாகவோ பங்கு மூலமோ கடன் மூலமோ பனியாக்களின் கைகளில் சிக்குகின்றன. அவ்வாறு பல நிறுவனங்கள் கைமாறியுள்ளன. எனவே இங்குள்ள தொ‌ழில் நகரங்களில் உள்ள தமிழ்நாட்டு வாணிகர்களும் விளைப்போரும் பனியாக்களைக் கடவுள்கள் போல் மதித்து அவர்கள் வந்தால் தங்குவதற்கென்றே தனி தங்ககங்களை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது[1]. இவ்வாறு தமிழகப் பொருளியல் மிகவும் நசுக்கப்பட்டுள்ளது. அரசு, பொதுமைக் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவை தரும் நெடுக்கடிகளை மீறி விளைக்கும் பண்டங்களை விற்பதிலும் அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்களை வாங்குவதிலும் ‌‌‌பனியாக்களே விலைகளை நிறுவுவோராக நின்று நம்மைச் சுரண்டுகின்றனர்.

            மூலதனத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் அதற்குக் குறைவில்லை. நம் நாட்டு மக்களிடம் கணக்கில்லாத பணம் உள்ளது. ஆனால் அதை முதலிடும் எல்லா வாயில்களையும் ஆட்சியாளர்கள் அடைத்துவிட்டனர். வருமான வரித்துறையும் அதன் தேடுதல் வேட்டைகளும் பணம் மூலதனமாவதைத் தடுக்கும் முதல் தடை. அடுத்து வருவது தொழில் தொடங்குவதற்கான உரிமம், மூலப்பொருள் ஒதுக்கீடு, மின் இணைப்பு என்று இருந்த தடங்கல்கள் இப்போது சுற்றுச் சூழல் பாதுகாப்பு, ‌‌‌மாசுக் கட்டுப்பாடு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, தொழிலாளர் சட்டங்கள் என்று நாளுக்கு நாள் வி‌‌‌‌‌‌‌ரிவடைகின்றன. பங்குச் சந்தை பற்றி 25 ஆண்டுகளுக்கு முன் அரசு செய்த மாபெரும் விளம்பரங்களை நம்பி மக்கள் பல இலக்கக் கணக்கான கோடி உரூபாய்களை முதலீடு செய்தனர். ஆட்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சியாளர்கள் அர்சத் மேத்தா என்ற கயவனின் மூலம் பல்லாயிரம் கோடி உரூபாய்களைச் சுருட்டினர். அர்சத் மேத்தாவைத் த‌னிமைப்படுத்தி அவனையே அனைத்துக்கும் பொறுப்பாக்கினர். (இன்று அவன் திடீரென்று இறந்து போனான். இதைச் சாக்காக வைத்து அவன் மீதுள்ள 27 வழக்குகளை நடுவண் புலனாய்வு நிறுவனம் கைவிட்டுள்ளது. அவன் இறந்தாலென்ன, வழக்கில் அவன் குற்றவாளி என்று ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிறுவப்பட்டால் அவன் சேர்த்து வைத்துள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்து பொதுமக்களுக்கு மீட்கலாமே. ஆக இவன் சாவு கூட நமக்கு ஐயத்தை ஏற்படுத்துகிறது.)

 நடுவரசின் பங்குப் ப‌ரிமாற்ற வாரியம்(செபி) ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களின் பங்கு ‌‌‌வெ‌ளியீட்டுக்குப் பட்டியலிட்டு உரூ 5000 கோடிக்கு மேல் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கத் துணைபோயுள்ளது. தாராளமாக்கல் என்பதை நம்பி தொழிலில் இறங்க நினைத்து பல புதிய தொழில் முனைவோர் பங்கு மூலதனம் திரட்டினர். உள்நாட்டினர்க்குத் தாராளமாக்கல் ஒரு பொய்மான் என்பதைக் காலங்கடந்து உணர்ந்து செயலிழந்தனர். அவர்கள் திரட்டிய பணம் மக்களுக்கு இழப்பா‌‌‌‌‌‌‌‌‌யிற்று. பண(நிதி) நிறுவனங்கள் பல தமிழகத்தில் தோன்றின. அவற்றில் பெரும்பாலானவை வீட்டுமளை வாணிகத்தை நம்பித் தொடங்கப்பட்டவை. அவற்றில் வருமான வரித்துறையின் கிடுக்கிப் ‌பிடியினால் அழிந்தவை போக எஞ்சிவை ஏம(ரிசர்வு)வங்கி ‌‌‌வெ‌ளியிட்ட நம்பத்தகாதபண நிறுவனங்களின் பட்டியலைப் பார்த்துப் பதறிய மக்கள், போட்ட பணத்தை ஒரே நேரத்தில் மீட்க வரிசையில் நின்றதால் அழிந்தன.[2] ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காவல் துறையினருக்குக் கையூட்டுத் தராததினால் அவர்களால் தூண்டப்பட்டு அழிக்கப்பட்டவையும் உண்டு. அரசுடைமை வங்கிகளிலும் நல நிதியங்களிலும் (பெனிபிட் பண்டுகள்) அரசியல் செல்வாக்குள்ளோர் பல இலக்கம் கோடி உரூபாய்களைச் கொள்ளையடித்துள்ளனர். யூனிட் நிறுவனத்‌‌திலும் இதுவே நடந்துள்ளது. இந்த இழப்புகளை மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு ஈடுசெய்துள்ளனர். நல நிதியங்களில் அவர்கள் அடித்த கொள்ளைப் பணம் மக்களுக்குக் கிடைக்காமலே போயிற்று. இந்த அழிமதிகளுக்கு அஞ்சிய மக்களுக்கு இருக்கும் முதலீட்டு வழி அரசு வங்கிகளும் உயிர்க் காப்பீட்டுக் கழகமும் கூட்டுறவு வங்கிகளும்தாம். கடன்களைத் தண்டுவதற்குரிய சட்டங்களின் வலுவின்மையால் அதிகாரிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கடன் கொடுப்பதைத் தவிர்க்கின்றனர். இதனால் மக்கள் செய்யும் முதலீடுகளுக்கு வட்டி கொடுக்க முடி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாமல் தவிக்கும் வங்கிகள் வட்டியை நம்ப முடியாத அளவுக்குக் குறைக்கின்றன. இறுதியில் மக்களுக்கு இருக்கும் ஒரே வழி இருக்கும் பணத்தைச் செலவழிப்பதுதான். ஆட்சியாளர்களுக்கும் அவர்களது ஏமான்க‌‌‌ளான வல்லரசுகளுக்கும் வேண்டியதும் அதுதான். மக்களிடம் இருக்கும் பணம் முதலீடாகக் கூடாது. பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றின் உள்ளூர் முகவர்களும் செய்யும் நுகர்பொருட்களை வாங்கிக் குவிப்பவர்களாகவும் வழங்கும் பணிகளை நுகர்வோராகவும் மக்கள் இருக்க வேண்டும்; முதலிடுவோராகவோ தொழில்முனைவோராகவோ இருக்கக் கூடாது என்பதுதான்.

            நாடார் மகாசன சங்கம் பிற ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சாதி சங்கங்களைப் போலவே அது பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் சாதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் உதவவில்லை. ஆனால் தொழில் - வாணிகத்தில் ஈடுபட்டோருக்கும் கல்வி கற்போருக்கும் பெருமளவு உதவியது. நம் நாட்டிலுள்ள இது போன்ற சங்கங்களோடு ஒப்பிடும் போது அதன் பணி உச்சியில் வைத்துப் போற்றத்தக்கது. நயன்மைக் கட்சியில் இணைந்திருந்த காலத்தில் நாடார்கள் சட்டமன்ற உறுப்பினர்களாவதற்குச் சங்கம் பயன்பட்டது. சட்டமன்றத்தில் நாடார்களின் நலன்களுக்காகக் குரல் கொடுப்பதில் பட்டிவீரன்பட்டி ஊ.பு..சவுந்திரபாண்டியனார் குறிப்பிடத்தக்க பணியாற்றினார். பெரியார் தலைவரான பிறகு அவரது இயக்கத்தைப் பரப்புவதில் சங்கத்தின் மூலமும் தன்மான இயக்கத்தில் உறுப்பினராகியும் அவர் ஆற்றிய பணி பெரிது.

சவுந்திரபாண்டியனார் இன்றைய ‌‌திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ள பட்டிவீரன்பட்டியைச் சோந்தவர். வழிவழி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யான பணக்காரக் குடும்பத்தைச் சோந்தவர். நாடார்களுக்காக அரசியலில் செயற்பட்டவர். நாடார்கள் அனைவரும் கல்வி, வாணிகம், வேளாண்மை, தொழில்துறை ஆகியவற்றில் மேம்பட வேண்டும் என்று பாடுபட்டவர். பொருளியல், வேளாண்மை, தொழில்துறை ஆகியவை பற்றிய தெளிவான கருத்துகள் அவருக்கு இருந்தனவாகத் தெரிகிறது. வே‌‌‌ளாண்மையில் பெரும்பண்ணை வேளாண்மையே சிறந்தது என்பது அவரது கருத்து. அதே நேரத்தில், வருவாய் உறுதியற்ற வேளாண்மையையும் தொழிலாளர் சிக்கல்களால் தொழில் துறையையும் தவிர்க்குமாறும் வாணிகமே இடையூறற்ற துறை என்றும் நாடார்களுக்கு அவர் அறிவுரை கூறியதாகவும் சிலர் கூறுகின்றனர். சென்னையிலுள்ள பாண்டி ப‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சார் எனும் பெரும் கடைத்தெருவின் பெயர் அவர் பெயர் தழுவியதே என்றும் சிலர் கூறுகின்றனர்.

            தொழில்துறையிலும் நாடார்களில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் நாம் மேலே குறிப்பிட்டுள்ளது போல் விளைக்கும் பண்டங்களைச் சந்தைப்படுத்தல் அவர்கள் கையில் இல்லை. இருக்கின்ற தொழில்களிலும் பங்குச் சந்தை மூலம் மூலதனம் திரட்டிச் செயற்படும் தொழில் நிறுவனம் ஒன்று கூட இல்லை. அவ்வாறு செயற்படும் ஒரே பண நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்றைல் வங்கி மட்டுமே.

சங்கம் பெற்றெடுத்த வங்கி:
இந்த வங்கி சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடார் மகாசன சங்கத்தால் நாடார் வங்கி என்ற பெயரில் தூத்துக்குடியைத் தலைமையகமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. ஒரு சாதிச் சங்கத்தால் தொடங்கப்பட்டு உலகிலேயே மிகச் சிறப்பாகச் செயற்படும் வங்கி என்று சில ஆண்டுகளுக்கு முன்பு புகழப்பட்ட வங்கி அது. ஆனால் அப்போதே அதன் உள்ளமைப்பு உளுத்துப் போயிருந்தது. வங்கியின் பங்குகள் சிவகாசியைச் சேர்ந்த ஒரு சிலரிடம் குவிந்து கிடந்தன. வங்கியும் நாடார்களுக்குப் பொதுவாகச் செயற்படவில்லை. சிவகாசி ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாடார்களுக்கும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்குமாகச் செயற்பட்டது. தமிழகத்தில் தொழில் வாணிகத்தில் ஈடுபட்டுள்ள நாடார்களில் பாதிப்பேர் அதில் வரவு செலவு வைத்‌‌திருந்தால் கூட அதன் வளர்ச்சி பேரளவினதாக இருந்திருக்கும். இந்த வங்கியின் பங்குகள் அடிக்கடி கைமாறாததினால் அதன் சந்தை விலை மிகக் குறைவாகவே இருந்தது. இந்த ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலையில் பெரும்பாலான பங்குகளை வைத்திருந்த குழுவினரில் ஒரு பகுதியினர் தங்களிடமிருந்த பங்குகளை அப்போதிருந்த அவற்றின் சந்தை மதிப்பை விட மிகக் கூடுதலான ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விலை கொடுக்க முன்வந்த வட இந்திய பனியாக்க் குழுமமான எசு ஆர் நிறுவனத்துக்கு விற்றுவிட்டனர். வங்கியின் பங்குகளில் பாதிக்கு மேல் அவர்கள் கைகளுக்குச் சென்றுவிட்டதால் வங்கியின் ஆள்வினையை(நிர்வாகத்தை)க் கைப்பற்ற நடைவடிக்கைகளை அவர்கள் தொடங்கிய போதுதான் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலைமை ‌‌‌வெ‌ளிச்சத்துக்கு வந்தது. சாதித் தலைவர்கள் எழுப்பிய கூக்குரலால் வங்கி கைமாறுவது தடைப்பட்டது. பங்குகளைக் கையில் வைத்திருந்த வடக்கத்திக் குழுமம் அதை மலேசியாவில் இருக்கும் சிவசங்கரன் என்பவருக்கு விற்றுவிட்டு அகன்றது. இந்தச் சிவசங்கரன் கருணாநிதியின் போலி(பினாமி) என்று கூறப்படுகிறது. இந்தப் பின்னணியைப் பற்றிய பார்ப்போம்.

            இந்த வங்கியின் பங்குகளை ‌‌வாங்குமாறு பனியாக்களைத் தூண்டியது வங்கியின் மொத்தப் பங்குகளின் விலைக்கும் வங்கிச் சொத்துகளின் மதிப்புக்கும் இருந்த மாபெரும் ஏற்றத்தாழ்வே. ஏறக்குறைய உரூ. 3000/- சந்தை விலையிலிருந்த பங்குகளை ஏறக்குறைய உரூ. 5000/- வீதம் கொடுத்து வாங்கிய மொத்தத் தொகை உரூ. 300 கோடி என்று கூறப்படுகிறது. ஆனால் வங்கியின் மொத்தச் சொத்து மதிப்பு ஏறக்குறைய உரூ. 3000 கோடியாம். அப்படிப் பார்த்தால் பாதிப் பங்குகளை எசுஆர் நிறுவனம் வாங்கியதாகக் கொண்டாலும் அதற்கு முன்பிருந்த பங்கின் சந்தை விலைப்படி பார்த்தால் மொத்தப் பங்குகளின் சந்தை விலை= 3000/ 5000 x 300 x 2 = 360 கோடி தான் ஆகிறது. இப்படி இருக்கும் போது அந்த நிறுவனப் பங்குகளை வாங்க யார்தான் துடிக்க மாட்டர்கள்.

            வங்கியை மீட்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் முயல்கையில் தி.மு..வைச் சேர்ந்த நாடார்கள் சிலர் தங்கள் ஒப்பற்ற தலைவரான கருணாநிதி மீது பெரும் நம்பிக்கை வைத்து அவரது உதவியை நாடினார்களாம். வங்கியின் உள்கட்டமைப்பின் சிறப்பு, செயற்பாட்டு மேன்மை, வளர்ச்சி வாய்ப்புகள், வங்கிச் சொத்துகளின் மதிப்பு ஆகியவற்றை படங்களின் உத‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வியுடன் தெளிவாக அவர்கள் தமிழினத்தைக் கரையேற்றவென்றே பிறவி ‌எடுத்துள்ள தலைவரிடம் விளக்கியதாகக் கூறப்படுகிறது. ‘த‌மிழர்களை உய்விக்கவே பிறவியெடுத்துள்ள கருணாநிதி இவ் வங்கி ஒரு தனிச் சாதியாரின் சொத்தாக இருப்பதை விட வாழ்வையே தமிழகத்துக்கு ஒப்படைத்துவிட்ட தன் குடும்பத்தின் சொத்தாக இருப்பதல்லவா முறை என்று மனதில் எண்ணி, “இந்த வங்கி ‌மீட்புக்கென்று நீங்கள் திரட்டியுள்ன பணத்தில் ஒரு புதிய வங்கியையே தொடங்கி விடலாமே” என்றாராம். காப்பார் கலைஞர் என்று தேடிப்போன கழகக் கண்மணிகள் அவர் மலைப்பாம்பாய்ச் சுற்றி முழுவதையும் விழுங்க வாய் பிளக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு விட்டால் போதுமென்று ஓடிப் போனார்க‌‌‌ளாம். இதைப் புரிந்துகொள்ளுமளவுக்காவது கழகக் கண்மணிகளுக்கு அறிவிருந்ததே! இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. பணத்தைப் பொறுத்த வரையில் கழகக் கண்மணிகள் என்றுமே விழிப்புணர்வுடையவர்கள்தாமே!

            இன்று அரசியலாளர்களின் துணையின்றியே வங்கி மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. இருப்பினும் பங்குகளை மீட்பதற்குத் தேவையான முழுத் தொகையும் மீட்புக் குழுவினரால் திரட்ட முடியவில்லை. காரணம் வங்கியும் அதனை இயக்கும் தாய் நிறுவனமான நாடார் மகாசன சங்கமும் பெரும்பாலான நாடார்களிடமிருந்து அயற்பட்டு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிற்பதுதான்.

            மெர்க்கன்றைல் வங்கிக்கு நேர்ந்த இந்த நெருக்கடி பங்கு முதலீட்டின் மீது ஐயப்பாடு கொண்டிருக்கும் நாடார்களுக்கும் பொதுவாகத் தமிழகத்திலிருக்கும் தொ‌ழில் முனைவோருக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஐயப்பாடும் அச்சமும் தேவையற்றவை. நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கு எவரும் முயலாமலிருக்க சில எளிய நடைமுறைகளைக் கடைப்பிடித்தால் போதும். நிறுவனங்களின் சொத்து மதிப்பு, அவற்றின் சீரிய செயற்பாடுகளால் மக்களிடையில் உள்ள நல்லெண்ண மதிப்பு ஆகிய இரண்டும் சேர்ந்து நிறுவனம் ‌‌‌வெ‌ளியிட்டுள்ள மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பி‌‌லிருந்து பெருமளவில் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை இயலச் செய்ய ஒவ்வோராண்டும் நிறுவனம் ஈட்டும் ஆதாயத்தில் தேய்மானத்துக்காகவும் இடர் பாதுகாப்புக்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காகவும் ஒதுக்கப்படும் ஒதுக்கீடு(ரிசர்வு), விரிவாக்கங்களுக்காக ஒதுக்கப்படும் தொகை ஆகியவை நீங்கலாக எஞ்சிய தொகை முழுவதையும் ஈவுத் தொகையாகப் பங்கு முதலீட்டாளர்களுக்கு வழங்கி விட வேண்டும். விரிவாக்கங்கள், மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம் நிறுவனங்களின் சொத்து மதிப்பில் ஏற்படும் உயர்வுகளுக்கு ஏற்பப் பங்கு முதலிட்டாளர்களுக்குக் கட்டாயம் இலவசப் பங்குகளை வழங்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளோடு நாடா‌ர்கள் மட்டுமல்ல தமிழகத்திலுள்ள அனைத்து நடுத்தர நிறுவனங்களும் துணிந்து பங்கு முதலீட்டில் இறங்கலாம். பங்குச் சந்தை ஏமாற்றுகள் அந்தப் பங்குகளை ‌‌‌வெ‌ளியிடும் நிறுவனங்களின் முதலீட்டைப் பாதிப்பதில்லை. அதன் பாதிப்பு பங்குகளை வாங்குவதும் விற்பதுமே தொழிலாகக் கொண்ட சூதாடிகளுக்குத்தான். பங்கு ஆவணங்களைச் சொத்தாக நினைத்து வாங்கி வைத்திருக்கும் முத‌‌லீட்டாளர்களையும் அது பாதிப்ப‌‌தில்லை. தற்காலிகமாக அதன் விலையில் ஏற்படும் வீழ்ச்சியும் பரிமாற்ற மந்தமும் உடனடித் தேவைகளுக்காகப் பங்குகளை விற்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்குக் ‌‌‌கிடைக்கும் நிகர ஆதாயத்தில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தும், அவ்வளவுதான். பங்குகளின் உண்மையான மதிப்பும் அவற்றிலிருந்து கிடைக்கும் ஈவுத் தொகையும் முற்றிலும் நிறுவனத்தின் செயற்பாடுகளில்தாம் அடங்கியுள்ளள. மெர்க்கன்றைல் வங்கியைப் பொறுத்தவரை புதிய பங்குகளை ‌‌‌வெ‌ளியிடுவதில் தவறில்லை. இந்த நடைமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தால் பிற சாதியினரின் பங்கு முதலீடும் சேர்ந்தால் வங்கிக்கும் சங்கத்துக்கும் நன்மைதானே! நாடார்களில் ஒரு பகுதியினருக்கு மட்டும் பயன்படுவதாக இருக்கும் இன்றைய நிலையை மாற்றி அனைவருக்கும் பிற சாதி‌‌‌‌‌‌‌‌‌யினருக்கும் வங்கியின் பணிகள் சென்றடைவது நல்லதுதானே!

ஐந்து பேர் நாங்கள்:
            நாடார்களில், அதாவது, சாணார்களில் ஐந்து உட்பிரிவுகள் சொல்லப்படுகின்றன. அவை கருக்குமட்டை[3], மேனாட்டான், தோலாண்டி, நட்‌டாத்தி, பிழுக்கை என்பவையாகும். கருக்குமட்டை என்பது பனையேறிகளைக் குறிக்கும்[4]. இரு பக்கங்களிலும் மரம் அறுக்கும் வாள்(அரம்பம்) போன்ற பல்லமைப்புடன் இருக்கும் பனை ஓலையின் மட்டையே கருக்குமட்டையாகும். நட்டாத்தி என்பது பெண்வழிப் பிரிவு. இவர்கள் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலும் ஏற்கனவே குறி‌‌‌ப்பிட்டது போல் மண்டைக்காட்டுப் பகுதியிலும் உள்ளனர் என்று தெரிகிறது. நாயக்கர்கள் போல் இல்லங்கள் எனப்படும் கிளைகள் மூலம் இவர்கள் இனம் காணப்படுகின்றனர். பிழுக்கை என்பது நாம் ஏற்கனவே கூறியது போல் குமுக ஒழுக்க வி‌‌திகளை மீறியதால் ஒதுக்கப்பட்டவர்கள். மேனாட்டான் என்ற பிரிவு யாரைச் குறிக்கிறதென்று தெளி‌‌வாகத் தெரியவில்லை[5]. ஆறு நகரங்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌களாகிய சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகர், கமுதி, தேனி ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும். ஆறு நகரத்தாரும் கருக்குமட்டையரும் தங்களை பிரிவு என்றும் மற்றவரை பி பிரிவு என்றும் இரு பிரிவுகளில் தாங்களே உயர்ந்தவர் என்றும் கூறிக் கொள்வதுண்டு. (நாகர்கோயில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காமராசரை எதிர்த்துப் போட்டியிட்ட ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாடாரான மத்தியாசு என்ற மருத்துவருக்கு ஆதரவாகப் பரப்புரை‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாற்ற வந்த ஆதித்தனார், தானும் குமரி மாவட்ட ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாடார்களும் பிரிவென்றும் பி பிரிவைச் சேர்ந்த காமராசருக்கு வாக்களிக்காமல் அவர்கள் மருத்துவர் மத்தியாசுக்கே வாக்களிக்க வேண்டுமென்றும் கூறியது இங்கு நினைவு கூரத்தக்கது.)

இங்கு ‌‌திருமணங்களின் போது உட்பிரிவுகளான கிளைகள் பார்க்கப்படுகின்றன. ஒரே குலதெய்வத்தை வணங்குவோர் தமக்குள் திருமணம் செய்வதில்லை. ஆறு நகர நாடார்கள் தங்கள் பெயரின் முன்பு நான்கைந்து முன்னெழுத்துகளைப் பயன்படுத்துவதுண்டு. அவற்றில் முதல் எழுத்து ஒன்றாயிருப்பவர்களுக்கிடையில் திருமணம் செய்வதில்லை. ஒரே ஊர் அல்லது ஒரே தந்தை வழியில் அவர்கள் வந்தவர்களாயிருக்கலாம் என்ற ஐயப்பாட்டில் இந்த முன்னெச்சரிக்கையாம். தாய்மாமனைப் பெண்கள் மணப்பதும் அத்தை - மாமன் மக்களிடையிலும் திருமணம் உண்டு. நட்‌டாத்தி எனும் பெண் வழியினரிடையில் தாய் மாமனை மணப்பது கிடையாது. ஆறு நகர நாடார்கள் பிறரோடு முன்பெல்லாம் மணவுறவு வைத்துக் கொள்வதில்லை. இப்போது அது பரவலாக நடைபெறுகிறது. இருந்தாலும் பெண் எடுக்கும் அளவுக்குப் பெண் கொடுப்பதாகத் தெரியவில்லை. சிவகாசி, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விருதுநகர் போன்ற இடங்களில் இரகசியக் கிறித்துவர்கள் என்ற நடைமுறை உள்ளது. மேற்சாதிகளின் ஒடுக்குமுறைக்கு நாடார்கள் ஆட்பட்டிருந்த காலத்தில் தொடங்கி, கிறித்துவப் பரப்புரைப் பெண்கள் நாடார்கள் வீட்டுப் பெண்களை அணுகி, கிறித்துவம் மக்களை உய்விக்க வந்ததென்று கூறி அவர்களை ஏற்கச் செய்து வீட்டினுள்ளேயே வழிபாடுகளை நடத்தும் வழக்கம் உண்டாம். அப் பெண்கள் மணமாகிச் செல்லும் இடங்களில் இந்த வழிபாட்டு முறையை வீட்டினுள் கடைப்பிடிப்பதுடன் தங்கள் குழந்தைகளையும் அதில் பழக்கி விடுவார்கள் என்று அஞ்சி இவ் வூர்ப் பெண்களைப் பிற ஊர் நாடார்கள் திருமணம் செய்வதில்லை என்றும் கூறப்படு‌‌‌கிறது. விருதுநகரில் ஆண்டுக்கொரு முறை பொன் காட்சி என்றொரு நிகழ்ச்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது. அங்குள்ள பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவின் போது இடம்பெறும் பொருட்காட்சித் திடலில் திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்களை அவளுக்குரிய அனைத்து நகைகளையும் பூட்டி உட்கார வைத்திருப்பார்களாம். மணமகள் தேடலில் இருக்கும் பெற்றோர் அவர்களைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்களாம். இந் நடைமுறை இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. இவர்கள் சீதனத்தைப் பணமாகப் பெறுவதை இழிவாகக் கருதுவதாகவும் தெரிகிறது. திருமண உறவு வைத்துக்கொள்வதில் தாம் மணம் பேசும் குடும்பத்தினர் தாம் வாழும் ஊரின் மூலக் குடிகள் தாமா என்றும் பார்க்கின்றனர். இடையில் குடிவந்தவர்களை வந்தட்டி, வரத்தட்டி (வந்தேறிகள்) என்று குறிப்பிடுகின்றனர். இவர்களுக்குத் ‌‌திருமணச் சந்தையில் மதிப்புக் குறைவு. இந்த மரபையும் ஆறு நகர நாடார்களில் சிலர்தான் கடைப்பிடிக்கிறார்கள் என்று தெரிகிறது. வேறு சாதியினர் தாம் நாடார் என்று பொய் கூறி ஏமாற்றாமலிருப்பதற்கு இது முன்னெச்சரிக்கையாயிருக்கலாம்.

விருதுநகர், சிவகாசி போன்ற ஊர்களில் மணமகன் வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து நகைகள் தவிர பணமாக வாங்குவதில்லை என்பதுடன் சில இடங்களில் பெண் வீட்டார் போடும் நகைக்குச் சமமாக மணமகன் வீட்டாரும் மணமகளுக்கு நகைபோடுவர் என்றும் கூறப்படுகிறது.

            திருமணங்கள் பொதுவாக இப்போது பார்ப்பனரை வைத்து நடந்தாலும் உறவின் முறை என்ற அமைப்பின் தலைமையில் பார்ப்பனர் இன்றியும் நடைபெறுகிறது. தங்கள் ஊரை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விட்டு ‌‌‌வெ‌ளியே சென்று வாழும் நாடார்கள் தங்கள் சொந்த ஊரின் பெய‌‌‌‌‌‌‌ரில் உறவின்முறைச் சங்கம் அமைத்து செயற்படுகின்றனர். மாதந்தோறும் ஒவ்வொருவரும் தங்கள் வருவாயின் ஒரு பகுதியை மகமையாக வழங்குகின்றனர். திருமண மண்டபம், இடுகாடு, சுடுகாடு போன்ற வசதிகளை ஏற்படுத்துகின்றனர். தங்கள் சொந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் புதிதாக வந்து குடியேறினால் அவரை அணுகி அவரையும் சேர்த்துக்கொள்கின்றனர். உறுப்பினர்களில் எவராவது தொழிலில் நசித்துப் போனால் ஓரிருமுறை மகமையிலிருந்து உதவவும் செய்கின்றனர். திருமணங்கள் உறவு முறைத் தலைவரின் முன்னிலையில் நடைபெறுகின்றன. பதிவேட்டில் மணமக்களிடம் கையெழுத்துப் பெற்றுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

            இதற்கு மாறாகக் குமரி மாவட்டத்தில் நாடார்களுக்குள் உட்பிரிவுகள் உண்டு என்பதே பொதுவாக யாருக்கும் தெரியாது. பிழுக்கைப் பிரிவு மட்டும் சிறிது ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காலம் முன்பு வரை இருந்து இன்று அது ஏறக்குறைய மறைந்து போயிற்று. ஊர் நாடான் - சாணான் வேறுபாடுகள் மனத்தளவில் சில ஊர் நாடான்களிடம் இன்றும் பதுங்கியிருந்தாலும் கூடத் திருமண உறவுகளில் பெரும்பாலும் மறைந்துவிட்டன. பெண் தாய்மாமனை மணப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டாலே முகஞ்சுளிப்பர். அது அவர்கள் அறியாத ஒன்று. ஆனால் அத் திருமண வழக்கம் இருந்ததற்கான எச்சமாக திருமணத்தின் போது முதலில் மாமன் கல்யாணம்(மாப்பத்தேறுதல்) என்ற சடங்கு நடைபெறுகிறது. அத்தை - மாமன் மக்களுக்கிடையிலான திருமணங்கள் ஏறக்குறைய வழக்கொழிந்துவிட்டன. இப்போது பணம்தான் திருமணத்தை முடிவு செய்கிறது. இவ்வாறு கலப்பு மணத்துக்கு எதிரான தடைகளில் மிகப் பெரும்பாலானவையாகிய சாதி உட்பி‌‌‌‌‌‌‌ரிவுகள், திருமண உறவுக் ‌‌‌கிளைகள், முறை மணமக்கள் ஆகியவை அகன்றுவிட்டன. அடுத்துத் தேவைப்படுவது தம் பிள்ளைகள் தமக்குத் தாமே தேர்வு செய்யும் இணைக்குத் திருமணம் செய்து வைக்க மறுக்கும் பிடிவாதம் தளர்வதுதான். பல நேர்வுகளில் இந்த வகையில் பெற்றோர்களின் பிடிவாதம் தளர்வது கண்கூடு. தம் பிள்ளைகள் தேர்வு செய்யும் இணையின் தகுதியை வைத்துப் பெற்றோர்கள் எளிதில் இணங்கி விடுகின்றனர். தம்மைவிடக் குமுக மட்டத்தில் கீழ் நிலையிலுள்ளவர்களைத் தங்கள் பிள்ளைகள் தேர்வு செய்தால் அதற்கு ‌மிகக் குறைந்த அளவு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் குமரி மாவட்ட நாடார்களே. பிற சாதிகளிலும் படித்து வேலை பார்க்கும் ஆண் - பெண்களிடையில் காதல் ஏற்பட்டுக் கலப்புத் திருமணம் புரிவதற்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கான எதிர்ப்புகள் நாளுக்கு நாள் தளர்ந்து வருகின்றன. கலப்புத் திருமணங்கள் இணையரின் கொலைக்கும் சாதிச் கலவரத்துக்கும் இட்டுச் செல்வது இந்தியாவின் நெஞ்சாங்குலையாக(இருதயமாக)க் காந்தியா‌‌‌‌‌‌‌‌‌‌‌ல் உருவகிக்கப்பட்ட ஊர்ப்புறங்க‌ளில்(கிராமங்களில்)தான். அவர் அவற்றை(ஊர்ப்புறங்களை)க் காக்க வேண்டுமென்றார். நாம் அவற்றைக் கலைக்க வேண்டும் என்‌‌‌கிறோம்.

நாடாண்ட வரலாறு:    
          நாடார்களின் வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி தமிழக வரலாற்றில் முகாமை‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யான இடம் கொள்ளத்தக்கது. ஆங்கிலரின் தொடர்பால் கல்வி கற்று வேலைவாய்ப்பு பெற்ற நாடார்கள் கல்வி நிலையங்களிலும் அலுவலகங்களிலும் மேல் சாதியினரால் பல்வேறு இழிவுகளுக்கும் இடையூறுகளுக்கும் ஆளா‌‌‌‌‌‌‌‌‌யினர். அதன் எதிர்வினையாகத் தங்களுக்குள் சங்கமாக இணையும் கருநிலை முயற்சிகள் தோன்றின. இந்த வேளையில் நெல்லை மாவட்டத்தில் சாணார்க‌ளிடையில் சமய ஊழியம் செய்து மொழியாய்விலும் ஈடுபட்ட கால்டுவெல் ஐயர் சாணார்களின் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டு கல்வி நிலையங்கள் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிறுவுவது போன்ற பல பணிகள் செய்துள்ளார். சாணார்களைப் பற்றி திருநெல்வேலிச் சாணார்கள் என்றொரு நூலை அவர் எழுதினார். அ‌‌தில், பனையேறிகளான சாணார்களின் அவல நிலையையும் அவர்களது கல்வியின்மை, அறியாமை, துப்புரவின்மை ஆகியவற்றையும் எடுத்துரைத்தார். இதனால் சீற்றமடைந்த தேவதா‌‌‌‌‌‌‌‌‌‌‌சு நாடார் என்பவர் கால்டுவெல்லுக்குச் செருப்படி என்றொரு நூலெழுதி அவரைக் கண்டித்தார். இது போன்ற நிகழ்ச்சிகளால் கால்டுவெலார் தன் இறுதிக் காலத்தில் மனம் நொந்து இறந்தார் என்று கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் நாடார்களாகிய சாணார், தாங்கள் சான்றோர் என்றும் போர் மறவர்கள் என்றும் சத்திரியர் என்றும் மூவேந்தர் வழிவந்தவரென்றும் சாதி வரலாறுகளை எழுதத் தொடங்கினர்‌. பண்டை இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் சான்றோர் என்ற சொல் வருமிடங்கள் எல்லாம் தம் சாதி முன்னோர்களையே குறிக்கிறதென்றனர். தாங்கள் பாண்டியன் மரபினர் என்று கூறி பாண்டியன் என்று முடியும் பெயர்களைச் சூ‌ட்டிக்கொண்டனர். இவர்களைத் தொடர்ந்துதான் முதலில் மறவர்களும் பின்னர் தாழ்த்தப்பட்டோரும் பாண்டியன் என்ற அடைமொழியைத் தம் பெயர்களின் பின்னர் சேர்த்துக்கொண்டனர் என்று தெரிகிறது[6]. பல இடங்களில் சத்திரிய நாடார்கள் என்ற பெயரில் கல்வி நிலையங்களையும் தோற்றுவித்தனர். இவ்வாறு தங்கள் சாதி மூவேந்தர் வழி வந்தது என்று சாதி வரலாறு எழுதும் போக்கைத் தமிழகத்தில் தொடங்கி வைத்தவர்கள் நாடார்கள்தான் என்று தெரிகிறது. இன்றும் நாடார்களின் வரலாற்‌‌‌‌‌றில் அவர்களுக்குப் பெருமை தராத செய்திகள் எதையாவது யாராவது கூறிவிட்டால் உடனடியாகச் சீ‌‌‌‌‌றிப் பாய்ந்து களத்தில் இறங்க அவர்கள் தயங்குவதில்லை.[7]

 இது அவர்களிடம் உள்ள தாழ்வுணர்ச்சியையே காட்டுகிறது. சாணார்க‌‌‌ளாக இருந்த போது இருந்த இழிநிலையை நினைவுபடுத்துவது ஒரு குறுகிய காலத்தில் அவர்கள் பெற்றுவிட்ட வளர்ச்சியை வைத்துப் பார்க்கும் போது அவர்களைப் பெருமைப்படுத்துவதேயன்றி இழிவுபடுத்துவதன்று. தங்கள் ஆற்றலைச் சுட்டிக்காட்டி அவர்கள் இன்னும் பல படிகள் முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டுவதாகவே அந்த நினைவுபடுத்தலைக் கொண்டு அவர்கள் தொடர்ந்து செல்ல வேண்டும். இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் அரசின் போலியானவையாயினும், பல்வேறு சலுகைகள் அவர்களது விடுதலைக்கும் தொடக்க நிலை வளர்ச்சிக்கும் துணையாயிருக்கின்றன. ஆனால் சாணார்கள் எழுச்சியடைந்த காலத்தில் ஆட்சியாளர்கள் அவர்களுக்கு ஆதரவாயில்லை. சுற்றிலுமிருந்த ஆ‌‌திக்கச் சாதியினர் வலிமையிலும் எண்ணிக்கையிலும் அரசியல் செல்வாக்கிலும் உயர்ந்தவர்கள். சாணார்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது அரசு எந்த உதவியும் வழங்கவில்லை. மாறாக இரு சாராரையும் கலவர வரி விதித்துத் தண்டித்தது. இராமநாதபுரம் மாவட்டத்தில் நா‌டார்களுக்கும் மறவர்களுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு கலவரத்தின் பின்னர் இரு சாதியினர் மீதும் விதிக்கப்பட்டடிருந்த கலவர வரியை நீக்க வேண்டி உ.பு..சவுந்தரபாண்டியனாரும் இராம‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாதபுரம் மன்னரும் சென்னை சட்டமன்றத்தில் நெடுநாள் வாதாடி நீக்க வேண்டியிருந்தது. தங்கள் தங்கள் சாதியினரும் கலவரங்க‌ளில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வதாக இருவரும் வாக்குறுதி அளிக்க வேண்டியிருந்தது. அந்த முறையை இன்றும் கடைப்பிடிக்கலாம். ஆனால் இன்றைய வாக்குவேட்டை அரசியலில் இவையெல்லாம் வெறும் கனவுகளே. கலவரத்தால் மக்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு மக்களிடம் அரசு மன்னிப்பும் கேட்டுக்கொண்டு மக்களின் வரிப் பணத்திலிருந்து இழப்பீடுகளும் மீட்புப் பணிகளும் செய்வது என்ற தலைகீழ் நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.

நமக்கு நாமே கல்வித் திட்டம் x கள்ளுக்கடை வேண்டும் திட்டம்:
            சிவகாசி நாடார்களைத் தாக்குவதற்கு என்று மறவர்படை ‌‌‌வெ‌ளிப்படையாக அறைகூவல் விடுத்து சிவ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காசி நோக்கிச் சென்ற போது அதைத் தடுக்க அன்றைய ஆங்கில அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. வாணிகம் செய்வதற்கும் தொழில் தொடங்குவதற்கும் இன்று அரசு பல்வேறு நிதியங்களை ஒதுக்குவது போல் அன்றைய அரசு அவர்களுக்கு எதையும் செய்யவில்லை. தங்களது கூட்டுறவாலும் உழைப்பினாலும் சிக்கனத்தாலும்தாம் அனைத்தையும் எய்தினர். கல்விச் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சாலைகளை அவர்களே தொடங்கினர். தொடக்கத்தில் பிடியரிசித் திட்டம் என்ற பெயரில் நாள்தோறும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பிடி அரிசி திரட்டித்தான் பள்ளிகளை நடத்தினர்[8]. தங்கள் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்துக்கொள்வதைக் கொள்கையாக வைத்‌‌திருந்தனர். நாடார் மகாசன சங்கம் கல்லூரிகளைத் தொடங்கிய போது தென் தமிழகத்தில் ஒரு தனிப்பட்ட சாதி அமைப்பால் நடத்தப்பட்ட கல்லுரி‌‌‌களில் நாடார்களால் தொடங்கப்பட்ட கல்லூரிகள்தாம் எண்ணிக்கையிலும் தரத்திலும் மேம்பட்டிருந்தன. ஒதுக்கீட்டுக்கான சாதிப் பட்டியல் உருவாக்கப்பட்ட போது தங்களைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என்று சவுந்திரபாண்டியனார் போன்ற தலைவர்கள் அரசைக் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த உண்மைகளெல்லாம் அவர்களது கடந்த ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கால இழிநிலையை நினைவுபடுத்தும் போது அவர்களைப் பெருமைப் படுத்துபவையாக, அவர்கள் உணர வேண்டும். ஆனால் அன்றைய தன்னம்பிக்கையும் தன்மான உணர்வும் இன்று அற்றுப் போய்விட்டதாகத் தோன்றுகிறது‌. இந்த ஆத்திரம் அதன் ‌‌‌வெ‌ளிப்பாடுதானேயன்றி வேறில்லை. பொருளியல் செயற்பாடுகள் மதிப்பிழந்து தொழிலும் வாணிகமும் செய்வோர் கொள்ளைக்காரர்கள் என்றும் சுரண்டுவோர் என்றும் கூறும் ஒட்டுண்ணிகளான ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களும் அரசியலாளரும் பெரும் பரப்பல் செய்து வரும் சூழலில் தாங்களும் அரசு ஊழியத்தில் பங்கு பெற வேண்டுமென்று நாடார் தலைவர்கள் சிலர் முயன்றனர். அதற்காக. இதுவரை நாடார்கள் என்று அறியப்படாத வடக்கு, மேற்கு ‌‌‌மாவட்டங்களைச் சேர்ந்த சாணார்களை நா‌டார் மகாசன சங்கத்தில் உறுப்‌பினர்களாக்கும் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார் முன்னாள் நா‌டார் மகாசன சங்கப் பொதுச் செயலாளர் திரு.கங்காராம் துரைசாசு. அவரது நோக்கம் மிகவும் பிற்பட்ட நிலையிலிருக்கும் பனைத் தொழிலாளர்களைக் காட்டி நாடார் சாதியை மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதுதான். இவ்வாறு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டால் பயனடையப் போவது நாடார்களிடையிலுள்ள உயர் மட்டத்திலுள்ளவர்களில் உயர் கல்வியையும் உயர் பதவிகளையும் எதிர்பார்ப்பவர்கள்தாம். ஏனென்றால் அடிமட்டத்‌‌திலுள்ளவர்களுக்குக் கல்வியே நாளுக்கு நாள் எட்டாக்கனியாகி வருகிறது. அரசு வேலை வாய்ப்புகள் மட்டுமல்ல, ‌‌‌வெ‌ளியே கூட வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இது போன்ற ஒதுக்கீட்டு வேண்டுகைகளை அண்மைக் காலங்களில் முன்வைத்து வெற்றி பெற்றோரும் இன்று முன்வைப்போருமாகிய அனைத்துச் சாதித் தலைவர்களின் நோக்கமும் இதுதான். நாடார்களைப் பொறுத்த வரையில் அடித்தள மக்கள் கல்வி பெற அவர்கள் உண்மையிலேயே விரும்புவார்களா‌‌யின் முந்திய தலைமுறையினர் பின்பற்றிய அதே உத்தியைக் கையாண்டு தங்கள் சங்கத்தின் மூலமாகவே கல்வி ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிறுவனங்களைத் தொடங்க முடியும். முந்திய தலைமுறையினரை விட இதைச் செய்வதற்கான இவர்களது வலிமை பெருகியே உள்ளது. பனைத் தொழில் செய்வோரின் அவலங்களைத் தீர்க்க மீண்டும் கள்ளுக்கடைகளைத் ‌‌திறக்க வேண்டுமென்று கேட்கும் சாதித் தலைவர்களும் உழவர் தலைவர்களும்[9] தென் மாவட்டங்களில் உள்ள கருப்புக்க‌ட்டி தொடர்பான தொழில்நுட்பத்தின் அடிப்படையை அ‌‌‌‌‌றிய மாட்டார்கள். கள் இறக்குதல் என்பதை மீறி அவர்களால் சிந்திக்க முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது. இன்று பனையேறுவதை எளிமையாக்கும் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றைக் களத்தில் நடைமுறைப்படுத்தத்தான் ஆளில்லை. அந்தத் துறையில் முதலீடு செய்து புதிய படித்த இளைஞர்களை இத் தொழிலுக்கு ஈர்க்கலாம். சூரிய வெப்பத்தைக் கொண்டு பதனீரைக் காய்ச்சும் தொழில்நுட்பத்தைப் புகுத்தினால் கருப்புக்கட்டியின் விளைப்புச் செலவைக் குறைக்கலாம். சந்தையில் அதன் ஓட்டத்தை எளிதாக்கலாம்[10]. தரிசு நிலங்களில் பனந்தோப்புகளை உருவாக்கலாம். பனை வே‌‌‌ளாண்மையில் ஆய்வுகளை மேற்கொண்டு குறுகிய காலப் பனை இனங்களை உருவாக்கலாம். பதனீரைப் பதப்படுத்தும் உரிய தொழில்நுட்பங்களைக் கண்டு குப்பிகளில் அடைத்த குடிநீர்களைச் சந்தையில் விடலாம். நாடார்களை விடக் குறைவில்லாத அளவில் பணம் வைத்துள்ள வட்டித் தொழில், சாராயத் தொழில்களில் ஈடுபட்டுள்ள பிற சாதியினர் கூட இத்துறையில் ஈடுபடலாம். பதனீரிலிருந்து முன் போல் சீனியும் விளைக்கலாம்.


[1] பனியாகளின் இந்த ஆதிக்கம் ஒரு தனிச் சாதியினர் மீதோ ஒரு தனி மாநிலத்‌‌தின் மீதோ என்றில்லாமல் இந்திய மக்கள் அனைவர் மீதும் உள்ளது. இதன் எதிர்‌வினைதான் பஞ்சாபிலும் காசுமீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் வெடித்திருக்கும் போராட்டங்கள். பனியாக்களின் அரசான இந்திய அரசு படை வலிமை கொண்டு அவற்றை அடக்க முயன்று வருகிறது.
[2] பண நிறுவனங்கள் உருவாக்கிய மனைப் பிரிவுகளில் மனைக்கு அச்சாரம் செலுத்தியவர்களின் வீடுகளிலும் நிறுவனங்களிலும் வருமானவரி வேட்டை நடந்ததாம்; அதனால் எவரும் அந்தப் பக்கமே செல்லாமல் அந் நிறுவனங்கள் நலிந்தன; கட்டுமானத் தொழிலும் பெரும்பின்னடைவைச் சந்தித்தது என்பது கட்டுமானத்துறையைச் சேர்ந்த ஒருவரின் கூற்று. ப.சிதம்பரம் பண அமைச்சராக இருந்த இருவேறு கட்டங்களிலும் அவர் தமிழகத்துப் பொருளியலுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளார். காந்தி காலத்தில் காந்திக்கும் விடுதலை பெற்ற இந்தியாவின் நடுவரசின் முதல் பண அமைச்சராக இருந்த ஆர்.கே.சண்முகம் செட்டியாருக்கும் ஏற்பட்ட ஓர் உடன்பாட்டில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களில் ஒரு பிரிவினரும்  பனியாக்களும், தமிழகத்தில் இணைந்து செயற்படுகிறார்களோ என்று எமக்கோர் ஐயம்.
[3] கருக்குமட்டை என்பது கருக்குப்பட்டை என்பதன் திரிபு என்கின்றனர் சிலர். எமக்கு அது சரியாகத் தோன்றவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட பட்டியல்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
[4] தமிழ் நாட்டில் பனை ஏறும் அனைவரும் சாணார்கள் அல்லர். வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு சாதியினர் பனை ஏறுகின்றனர். பறையர், பள்ளர், வீரகுல வேளாளர், வாதிரியார் என்ற பல சாதிகளின் உட்பிரிவினரும் பனையேற்றுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
                        கிராமணிகள் வட தமிழ் நாட்டின் பனையேறும் சாதியினர். நாடான் என்பவன் நாடு என்ற ஆட்சிப் பிரிவின் அதிகாரி என்பதுபோல் கிராமணி என்பவன் கிரா‌மம் எனும் ஆட்சிப் பிரிவி‌ன் அதிகாரி ஆவான். இவர்கள் தொ‌ழிலும் கள்ளிறக்குவதாகும். இவர்களும் சாணார்களைப் ‌போல் ஒடுக்கப்பட்டவர்களாவர். கள்ளுக்கும் அரசியல் செல்வாக்குக்குமுள்ள தொடர்பு பற்றி நாம் முன்பு குறிப்பிட்டுள்ளதை இங்கு நினைவு கொள்க. களப்பிரர்கள் ஆண்ட ம‌ண்டலமே இவர்கள் வாழும் பகுதி என்பதும் இங்கு இணைத்துப் பார்க்கத் தக்கது.
            ஈழத்தில் பனையேறுவோர் பெயர் நளவர். நறவு = கள், நறவர் நளவர்‌. சாணார்களிலும் 5இல் ஒரு பகுதியினர் தாம் பனையேறிகள்.
[5] திருவிதாங்கூரில் இருந்த சாணார்களை இது குறிப்பதாக தூத்துக்குடி வரலாற்றுச் சுவடி(கெசட்டீயர்) கூறுகிறது.
[6]1950களின் போது கண்ணதாசன் நடத்திய தென்றல் இதழில் ஒரு வினாவிடையில் தென் தமிழ் நாட்டில் நாடார்களும் மறவர்களும்தாம் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் பாண்டியன் என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொள்கின்றனர் என்று எழுதினார். இன்று அப் பழக்கம் தாழ்த்தப்பட்டோர்கிடையிலும் பரவியுள்ளது.
[7] சில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் சுசாதா, குமுதம் இதழில் ஒரு தொடர்கதையின் தொடக்கத்தில் கள்ளச் சாணான் என்றொரு சொல்லால் கதையில் வரும் ஒரு பெண்ணைக் குறிப்பிட்டார் என்பதற்காக நாடார்கள் கொதித்தெழுந்து காட்டிய எதிர்ப்பைக் கண்டு குமுதம் அந்தத் தொடர்கதையையே நிறுத்திவிட்டது. அப்போது வெங்காளூர் சென்றிருந்த நான் ''கள்ளச் சாணான்கள்'' பற்றி அவரிடம் இருக்கும் செய்திகளையும் சான்றுகளையும் அறியும் ஆவலில் அவருடன் பணியாற்றிய ஒரு தோழர் மூலம் என் முகவரி அட்டையைக் கொடுத்து அவரைக் சந்திக்க இசைவு கேட்டுவரச் சொன்னேன். என் பெயரைப் பார்த்து அரண்டு போன அவர் தனக்கு நாடார்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகக் கூறிச் சந்திக்க மறுத்துவிட்டார்.
[8] இந்தப் பிடியரிசித் திட்டத்தைப் பின்பற்றுமாறு பின்னாளில் காஞ்சி சங்கர மடத் தலைவர் தன் சாதியாருக்கு அறிவுறுத்திறினார்.
[9] கோவை மாவட்டத்தில் அண்மை ஆண்டுகளில் பெருமளவில் தென்னந்தோப்புகள் உருவாயின. ஆனால் தற்போது நோய்த் தாக்கு, செம்பனை எண்ணெய், சோயா எண்ணெய் போன்றவற்றை அரசு அளவின்றி இறக்குமதி செய்வதோடு தேங்காய் எண்ணெயால் குருதிக் கொதிப்பு ஏற்படுகிறது என்ற ஆட்சியாளர்களின் பொய்ப் பரப்பல்களும் சேர்ந்து தேங்காய் விலையில் கடும் வீழ்ச்சி ஆகியவற்றை அவர்கள் கடுமையாக எதிர்கொள்கிறார்கள். பிற பகுதிகளை விட தென்னை வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை இவர்கள் கையாள்வதால் அதில் போடப்பட்டுள்ள முதலீடும் பெரிது. இந்தச் சூழலை எதிர்த்து அரசுடன் போராடத் துணிவற்றவர்கள் உழவர் சங்கத் தலைவர்கள். சங்கத் தலைவர்கள் என்ற பெயரில் அரசு - அரசியல் மட்டத்தில் சொந்த ஆதாயங்களைத் தேடிக் கொள்பவர்களே உழவர் சங்கங்கள் உட்பட இன்று நாட்டிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து சங்கங்களின் தலைவர்களும். இவர்களுக்குச் சங்க உறுப்பினர்களைப் பற்றியோ நாடு மற்றும் மக்கள் நலம் பற்றியோ கவலை இல்லை. அதனால்தான் ஆட்சியாளர்கள் மகிழும் வகையில் கள்ளுக் கடைகளைத் திறக்க வேண்டுமென்று ஓலமிடுகின்றனர்.
[10]தமிழ் மருத்துவத்தில் கருப்புக்கட்டி பயன்படுத்த வேண்டிய மருந்துகளுக்கு இப்போது கரும்பு வெல்லத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். கருப்புக்கட்டி விலையில் பாதிதான் கரும்பு வெல்லத்தின் விலை. இதனால் மருந்தின் தரம் குறையத்தான் செய்யும் என்பதை தமிழ் மருத்துவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இதைத் தவிர்க்க தமிழ் மருத்துவத்தைக் கண்டிப்பான தரக்கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவருவதுடன் கருப்புக்கட்டியையும் அதே போன்ற தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்த வேண்டும்.

0 மறுமொழிகள்: