28.12.15

சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 19


இணைப்பு 5

திருநெல்வேலிச் சாணார்கள்
அவர்களிடையில் கிறித்துவத்தின் முன்னேற்றத்துக்கு இருக்கும் வாய்ப்புகளையும் இடயூறுகளையும் சிறப்பாக காட்டும் வகையில் ஒரு சாதியாக அவர்களது சமயம், நிலைமைகள், இயற்பண்புகள் ஆகியவை குறித்த
ஒரு வரைவு
மறைத்திரு. இரா. கால்டுவெல், க.இ. திருநெல்வேலி இடையங்குடியில் அயலகங்களில் மறைநூலைப் பரப்புவதற்கு உள்ளான கழகத்தின் விடையூழியர்[1]
சென்னை – 1849
THE
TINNEVELLY SHANARS
A Sketch
OF
THEIR RELIGION, AND THEIR MORAL CONDITION
AND CHARACTERISTICS AS A CASTE.

WITH SPECIAL REFFERNCE TO

THE FACILITES AND HINDRANCES TO THE PROGRESS
OF CHRISTTANITY AMONGST THEM.

BY

THE REV. R. CALDWELL, B.A.

Missionary of the Society for the Propagation of the Gospel in Foreign Parts.
At Edeyengoody, Tinnevelly.

MADRAS.

PRINTED BY REUBENETWIGG. AT THE CHRISTIAN KNOWLEDGE
SOCIETY CHURCH STREET, VEPERY.

1849.
{மேலே தரப்பட்டுள்ள தலைப்புடைய நூலின் உலர்ப்படி(செராக்சு)யொன்றை பேரா.அ.க.பெருமாள் அவர்களிடமிருந்து பெற ஏற்பாடு செய்தார் நண்பர் தமிழினி வசந்தகுமார் அவர்கள். அந் நூலில் கால்டுவெல் ஐயரவர்கள் கூறியிருக்கும் கருத்துகளிலிருந்து பெறப்பட்ட புதிய செய்திகளையும் எனக்கு உருவான மாறுபட்ட கருத்துகளையும் கீழே பதிந்திருக்கிறேன். திரு.வசந்தகுமார் அவர்களுக்கும் பேராசிரியர் அவர்களுக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.}

            திருநெல்வேலிச் சாணார்கள் என்ற நூலை எழுதிய மறைத்திரு. இராபர்ட்டு கால்டுவெல் சாணார்கள் பற்றித் தாழ்த்திக் குறிப்பிட்டிருப்பதாக நாடார்களில் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். தான் சாணார்கள் பற்றி மட்டும் கூறவில்லை, திருநெல்வேலி மற்றும் தென் தமிழகத்திலுள்ள அடித்தள மக்களில் ஒரு பகுதியினர் என்ற வகையில் தாழ்ந்த நிலையில் சாணார்கள் உள்ளமையையே குறிப்பிட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

            “மதமற்றவர்களுக்குள்[2] மீப்பெரும் எண்ணிக்கையில் திருநெல்வேலியின் தென் - கிழக்குப் பகுதிகளில்[3] சாணார்கள் உள்ளதோடு விடையூழியகங்களுடன்(Missions) தொடர்புள்ள மீப் பெரிய குழுவாக அமைந்திருக்கிறார்கள்; திருநெல்வேலிக்கு வடக்கிலுள்ள மாவட்டங்களிலும், பொதுவாக, வடக்குக் கர்னாடகத்திலும் வாழ்பவர்களிலிருந்தும் இப் பகுதிகளில் வாழும் பெருந்திரள் மக்களைப் பிரித்துணர்த்தும் குணநலன்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் உருவாக்கத்துக்கு வேறு எந்த வகுப்பினரையும் விடவும் அவர்கள்தாம் அதிகமான பங்கை அளித்துள்ளனர். எனவே நான் தரவுள்ள குறிப்புரைகளில் பல முதன்மையாக சாணர்களையும், சுற்றி வளைத்தலைத் தவிர்ப்பதற்காகச் சில வேளைகளில் அந்த முதன்மை பெற்ற பெயரின் கீழ் இவ் வண்டைப் பகுதியிலுள்ள தாழ்ந்த வகுப்பினரின் ஒட்டுமொத்தத்தையும் சேர்ப்பேன்”.[4]

            “நான் குறிப்பிட்ட மரபுகளின்படி, திருநெல்வேலியில் வாழும் சாணார்கள் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தின் அண்டைப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள்; நாடான்கள்(நிலத்தின் தலைவர்கள்) என்று இப்போது அழைக்கப்படும் அவர்களின் ஒரு பகுதியினர் இராமநாதபுரத்தின் வழியாக திருநெல்வேலியினுள், கிழக்கிலுள்ள மிகச் சிறந்ததாகிய யாழ்ப்பாணப் பனங்கொட்டைகளைக் கொண்டுவந்தனர். திருநெல்வேலியின் தென்கிழக்கிலுள்ள (பனைமரங்கள் பயிரிட மீப் பொருத்தமான) மேனாட்டின் மணற்பாங்கான தரிசு நிலங்களைக் கைப்பற்றினர் அல்லது பாண்டிய மன்னர்களிடமிருந்து பெற்றனர்; இந் நிலங்களிலிருந்து இன்று அவர்கள் மேல்வார உரிமை கொண்டாடுகிறார்கள். இடம் பெயர்ந்தோரின், அச் சாதியின் தாழ்ந்த ஒரு பிரிவு என்று மதிக்கப்படுகிற வேறொரு பிரிவினர் இன்றும் அவர்களைப் பெரும் எண்ணிக்கையில் காணக்கிடைப்பதாகிய திருவிதாங்கூரின் தெற்கே கடல் வழியாக வந்தனர். தங்கள் ஏழை அண்டையிடத்தவரான, தங்களுக்கென்று சொந்த நிலம் இல்லாத இவர்களின் பனையேறிகள் என்ற நிலையில் கிடைக்கும் உதவியின்றி நாடான்களும் பிற நில உடைமையாளரும் தங்கள் அளப்பரிய பனங்காடுகளிலிருந்து ஆதாயம் எதையும் பெற முடியாது என்பதால் விடுத்த அழைப்பின் பேரில் அவர்கள் திருநெல்வேலியினுள் பரவினர். இவ் விடப்பெயர்ச்சி கிறித்துவ தொடக்கத்துக்குப் பின்னர் நிகழ்ந்திருக்க வேண்டும். அத்துடன் இக் குலக்குழுவினரின் இன்னொரு பிரிவாகிய ஈழவர்களை தங்கள் முன்னோர்கள் தென்னை பயிரிடுவதற்காக இலங்கையிலிருந்து கொண்டுவந்தனர் என்று சிரியக் கிறித்துவர்கள் உறுதி செய்கின்றனர். இருந்தாலும் இந்த மரபுச் செய்தி சாணார் இனம் சிங்களவர் என்ற சொல்லின் கண்டிப்பான பொருளில் அக் குழுவைச் சுட்டுகிறது என்று கொண்டுவிடக் கூடாது. புத்தர்களாகிய சிங்களவர்களின் மரபுச் செய்திகள் தேசியம், சமயம் ஆகியவற்றில் அவர்களைப் பீகாருடன், அதனால் பார்ப்பனியக் குழுக்களுடன் இணைக்கிறது. மாறாக, சாணார்கள் வந்தேறிகளாக இருந்தாலும் இந்துக்கள், ஆனால் பார்ப்பனியம் அல்லாத தமிழ் அல்லது மூலக்குடிகளின் இனத்தவர்; இலங்கையின் வடக்குக் கடற்கரையில் வாழ்வோர் - அவர்கள் பண்டை நாளில் குடியேறியவர்களாயினும் அல்லது கிறித்துவ ஊழியின் முன்னும் பின்னும் திரும்பத்திரும்ப இலங்கையினுள் படையெடுத்த சோழர்களின் சூறையாடும் கும்பலின் வழிவந்தவர்களாயினும் தமிழர்களேயாவர்”. (பக் 4 - 5)
           
            கால்டுவெலார் குறிப்பிட்டிருக்கும் இந்தச் செய்தியின் ஊடே இன்னொரு வரலாற்று நிகழ்வையும் கணக்கில் எடுக்க வேண்டும். ஏறக்குறைய கி.மு.1700 வரை இலங்கை தமிழகத்துடன் இணைந்தே இருந்தது. அப்போது அது சேரநாட்டின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. அதனால்தான் இலங்கையைச் சேரன்தீவு (Serandip) என கிரேக்கர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். சேதுக் கால்வாய் எனப்படும் தமிழன் கால்வாயின் முன்னிடப்பட்ட தோண்டப்பட வேண்டிய பகுதிதான் இறுதியாக இரண்டு நிலப்பகுதிகளையும் இணைத்திருக்கும். இராமேசுவரம் பகுதியிலிருந்து குமரி மாவட்டத்தின் குளச்சல் வரை இந் நிலப்பரப்பு தொடர்ச்சியாக இருந்த போது இரு நிலப்பரப்பு மக்களும் ஒரே மக்களாக வாழ்ந்திருப்பர். எனவே இலங்கைச் சாணர்களுக்கும் தமிழகச் சாணார்களுக்குமான உறவு படையெடுப்புகள் அல்லது இடப்பெயர்ச்சியால் மட்டும் ஏற்பட்ட து என்று கூற முடியாது.

            பனை வேளாண்மையைப் பொறுத்தவரை உலகில் பனை மிகச் செறிந்து காணப்படுவது யாழ்ப்பாணம் என்றும் வடக்கே செல்லச் செல்ல செறிவு குறைந்து விந்திய மலைப் பகுதிகளில் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விடுகிறது என்றும் ஈழத் தமிழ் நண்பர் மதுரை நண்பர்களுக்கு சுந்தர் என்று அறிமுகமான கி.பி.அரவிந்தன் கூறினார்.

            இனி, போகிற போக்கில் ஒரு குறிப்பும் தருகிறார் கால்டுவெலார்:

            “சாணார்கள், மற்றும் திருநெல்வேலியில் அவர்களோடு தொடர்புள்ளவர்களும் அவர்களால் தூண்டுதல் பெறுவோருமான அவர்களிலும் தாழ்ந்த பிற சாதியினர் ஆகியோரின் சமய நம்பிக்கைகளையும் ஒழுக்க நிலைமைகளையும் விளக்குவதில் சாணர்கள், பறையர்கள் ஆகியோருடன் மீண்டெழாத அனைத்து மக்களுக்கும் பொதுவான இயல்பான தப்பெண்ணங்கள், கூரிய உணர்ச்சிகள், நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறிப்பிடுவது என் நோக்கமல்ல” (பக்.5) என்று குறிப்பிடும் அவர் தொடர்ந்து “‘அவர்கள் இயற்கையாகவே சினவெறியின் குழந்தைகள்’, ‘பிறரைப் போலக் கூட’ ஒரு கீழ்மை இயல்பைப் பெற்றுள்ளனர். அதன் விளைவாக, வீழ்ந்துபட்ட மனிதர்களிடம் நாம் காண்பவையாகிய தீயவற்றை விரும்புவதும் நல்லவற்றில் விருப்பமற்றிருப்பதும் அவர்களது இயல்பின் முதன்மையான கூறுகளாக உள்ளன. அவர்களது சமயமும் ஒழுக்கமும் குறித்த நிலைமைகள் இந் நாட்டிலும் பிறவற்றிலும் வாழும் பிற வகுப்பு மக்களிடமிருந்து எப்படி வேறுபடுகின்றன என்பதுடன் என் கருத்துகளை கட்டுப்படுத்திக் கொள்கிறேன்”(பக்.5)

            இங்கு கால்டுவெலார் ‘வீழ்ந்து பட்ட மனிதர்கள்’((fallen men) என்பதை என்ன பொருளில் கையாண்டுள்ளார் என்பது புரியவில்லை. பண்பில் வீழ்ந்துவிட்டவர்கள் என்றா அல்லது குமுகத் தரத்தில் வீழ்ந்துவிட்டவர்கள் என்றா என்பது புரியவில்லை.

            திருநெல்வேலிச் சாணார்கள் திருவிதாங்கூரின் தெற்குப் பகுதிகளிலிருந்து பனை ஏறுவதற்காகக் குடியேறினார்கள் என்பது கள நிலைமைகளுக்குப் பொருந்துவதாக இல்லை.

            இன்றைய குமரி மாவட்டத்தில் அடங்கியது நாஞ்சில் நாடு. அது மணக்குடி முதல் மங்கலம் எனப்படும் இராசாக்க மங்கலம்வரை உள்ளது. அதற்குக் கிழக்கே கன்னியாகுமரி - காவல் கிணறு சாலைக்கு மேற்கே உள்ள பகுதியும் சேர்த்து இன்றைய அகத்தீசுவரம் வட்டம் அமைகிறது. இந்தப் பகுதியில் கடற்கரையை ஒட்டியுள்ள மீனவர்களை அடுத்துத்தான் சாணர்கள் ஆகிய நாடார்களின் வாழ்விடங்கள் அமைந்துள்ளன.

            இந்தக் கடற்கரைப் பகுதி தேரிக்காடு என்றழைக்கப்படும் கடல் மணல் பருவக்காற்றுகள் வீசும் திசைகளில் நகர்ந்து கொண்டிருக்கும் நிலமே. நெல்லை மாவட்டத்திலும் (இன்றைய தூத்துக்குடி மாவட்டம் உட்பட) இதுதான் நிலை. இந்த நிலை இடையில் ஏற்பட்டதாகத்தான் இருக்கும். அதாவது இலங்கை தமிழகத் தாய் நிலப் பகுதியிலிருந்து பிரிந்த பின் புகுந்த கடல் நீரின் ஏற்ற வற்ற மட்டங்களுக்கிடையிலிருந்து பருவக் காற்றுகளின் ஆற்றலால் அடித்துவரப்பட்ட மணல் அதுவரை வேறுபட்ட பண்புடன் காணப்பட்ட நிலைப்பட்ட மண் வகைகளை மூடின. எனவே அங்கு வாழ்ந்த மக்கள் வெவ்வேறிடங்களுக்குப் பெயர்ந்தனர். இதற்கு ஒரு சான்று ஈழத் தமிழர்கள் பேச்சுவழக்குக்கும் குமரி, நெல்லை, தூத்துக்குடி கடற்கரை மீனவர்கள் பேசும் பேச்சு வழக்குக்கும் கல்குளம், விளவங்கோடு நாடார்களின் பேச்சு வழக்குக்கும் நெருங்கிய உறவைக் காண முடிகிறது. ஆனால் குமரி மாவட்டம் அகத்தீசுவரம் வட்டம் தொடங்கி கிழக்கில் வாழ்கின்ற நாடார்கள் பேசும் பேச்சுவழக்கும் ஒலிப்புகளும் வேறானவை. அ துபோல் குமரி - காவல்கிணறு சாலைக்கு மேற்கிலும் கிழக்கிலும் உள்ள நாடார்களின் பேச்சு வழக்குகளும் ஒலிப்பு முறையும் வெவ்வேறானவை.

            குமரியிலிருந்து மேற்கேயுள்ள கடற்கரையில் மிஞ்சிப் போனால் ஒரு கிலோ மீற்றருக்குட்பட்டு தேரி மணல் பரவியுள்ளது. பாழ்நிலத்தையும் முந்திரி மரக்காடுகளையும் கொண்ட பெரும்பகுதியும் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குள்தாம் முழுமையாக தென்னந்தோப்புகிளாயுள்ளன.

            ஆனால் அதற்குக் கிழக்கே பல கிலோ மீற்றர் தொலைவுக்குத் தேரிமேடு பரவியுள்ளது. அங்கே பனை மரங்கள்தாம் மிகுதி. அந்த மணல் சூடு தாங்க முடியாமல் பனம் பத்தைகளை வெட்டி நார்களை இணைத்துச் செய்யப்பட்ட செருப்புகளை அப் பகுதி மக்கள் அணிந்து செல்வதை 40 ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்திருக்கிறேன். பனைவோலையில் செருப்பை முடைந்து அதில் நாரை முடிந்தும் செருப்பாகப் பயன்படுத்தினார்கள். அந்தப் பகுதியில் பனை தவிர அவர்கள் பயிரிட்டது நாட்டு உடை எனப்படும் முள் மரம், குடை போல் விரிந்து வளரும் இம் மரத்தின் காய்கள் சுருண்டு காதுவளைகள் போல் காணப்படும். உள்நாட்டுக்குரிய இம் மரத்தின் அடியில் பிரண்டை போன்ற செடிகொடிகள் செழித்து வளரும். இந்த உடங்கரியைச் சுண்ணாம்புடன் கலந்து நீற்றினால் கரியிலுள்ள சுண்ணாம்புச் சத்து கூடுதல் சுட்ட சுண்ணாம்பைத் தரும் என்பது அங்குள்ளோர் கூற்று. ‘உடை உடப்பிறந்தாள் புளி பெண்டாட்டி பனை பகையாளி’ என்பது இப் பகுதியிலுள்ள ஒரு சொலவடை. உயரம் மிகுதியின்றி பரந்திருக்கும் உடை மரத்தையும் உயர்ந்திருந்தாலும் அதிக பரப்பையுடைய புளிய மரத்தையும் இடி தாக்காது; உயர்ந்து ஊசி போல் உச்சியையுடைய பனையைத் தாக்கும். எனவே இடி முழக்கங்களின் போது பனையினடியில் செல்லக் கூடாது என்பது இதன் பொருள். பனை தென்னை போன்ற மரங்கள் அக்கம் பக்கத்தில் இல்லாவிட்டால் உயரமாக உள்ள மின்கடத்தத்தக்க எந்தப் பொருளையும் இடி தாக்கும் என்பது அறிவியல்.

            இந்தப் பகுதியிலுள்ள இன்னோர் வழக்கம் இங்குள்ள கிணறுகள். நீர் இறைப்பதற்குத் துலாக்கோலும் வாளியும் நிறுவப்பட்டிருக்கும் கிணற்றின் கரையில் கூரையில்லாத ஒரு சிறு அறை இருக்கும். அறையின் கிணற்றுப் பக்கத்துச் சுவரில் நீரை ஊற்றும் வகையில் ஒரு கோப்பை வடிவ அமைவும் அதில் ஊற்றும் நீரைச் சுவரின் மறுபக்கம் பாய்ச்சும் ஒரு குழாயும் இருக்கும். மலம் கழித்துவிட்டு வருபவர்கள் வெளிப்பக்கக் கோப்பையில் நீரைக்கொட்டிவிட்டு உட்பக்கம் சென்று கால் கழுவிக் கொள்வார்கள்.

            சென்னையில் நெல்லை மாவட்ட நாடார்களின் குடியிருப்புகளில் தூலாக்கோல் நிறுவிய கிணறுகளும் நீர்த்தொட்டிகளும் உள்ள பொதுக்குளியல் வளாகங்களைக் காணலாம்.

இந்தக் கள நிலைமைகளிலிருந்து பார்த்தால் குமரி மாவட்டத்தில் நாகர்கோயில் - இராசாக்கமங்கலம் சாலைக்கு மேற்கே உள்ளவர்கள் பண்டைச் சேரநாட்டின் குடிகளாகத் தொடர்ந்து வாழ்ந்தவர்கள் என்றும் அச் சாலை தொடங்கி குமரி - காவல்கிணறு சாலை வரை உள்ளவர்கள் காவல் கிணற்றைக் கடந்து நேரடியாகவோ அல்லது நெல்லை மாவட்டத்தில் நாடார்கள் வாழும் பகுதியில் தங்காமல் நேரடியாகவோ இன்றைய வாழிடங்களுக்கு வந்தவர்கள் என்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ளவர்கள் வடக்கிலும் மேற்கிலும் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்றும் தோராயமாகக் கூறலாம். அகத்தீசுவரம் வட்டாரத்தில் வாழும் நாடார்களுக்கும் தங்களின் வரலாற்றை 200 அல்லது 250 ஆண்டுக்கு அப்பால் தடம்பிடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் அண்மைக் கடந்த கால வரலாற்றின் இறுதிக் காலத்தில்தான் இங்கு குடியேறி இருக்கிறார்கள் என்று கொள்ளலாம்.

            நாடான்கள் என்பவர்கள் பாண்டிய அரசின் கீழ் இருந்த நாடுகள் என்ற நிலப்பிரிவுக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள். இந் நாடுகளின் எண்ணிக்கை 72 என்று குறிப்பிடுகிறார்கள். அந் நிலப்பிரிவுகள் என்னென்ன என்ற பதிவு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. நமக்குத் தெரிந்தவரை திருவிதாங்கூர் அரசரின் கீழ் ஆட்சி அதிகாரியாகக் காயாமொழி ஆதித்தன் குடும்பம் இருந்துள்ளது. அதன் தடயமாக இன்றும் திருச்செந்தூர்க் கோயிலின் தேரை வடம்பிடித்து முதல் வரிசை (மரியாதை)யை அக் குடும்பத்தினர் பெறுகின்றனர். அவர்களோடு தொடர்புடைய குடும்பங்கள் குமரி மாவட்டம் ஈத்தாமொழிப் பகுதிகளில் (அத்திக்கடை, புதுக்குடியிருப்பு) வாழ்கின்றனர்.

            குமரி மாவட்டத்தில் அகத்தீசுவரம் நாடானைப் பழைய பாண்டிய மன்னனின் கிழீருந்த நாடு ஒன்றின் அதிகாரிகளின் வழியினராகக் கொள்ளலாம். அது போல் சூரங்குடியையும் ஒரு நாடாகக் கொள்ளலாம். பிச்சைகாலன் என்ற சிறுதெய்வக் கதைப்பாடலில் (பிச்சைக்காலன் கதை) இந்த நாடானின் சிறப்பு கூறப்படுகிறது. பனைகளில் கிடைக்கும் பதனீரை பனங்காடுகளிலிருந்து வாய்க்கால்களில் ஊற்றி அவரது இருப்பிடத்துக்குக் கொண்டு சென்றனராம்.

            ஓட்டன் கதை என்ற, திருவிதாங்கோட்டு மன்னன் மார்த்தாண்டவர்மன் தொடர்பான கதைப்பாடலில் தன் தாய்மாமன் மகன்களுக்குரிய அரசுரிமையை தந்திரமாகப் பறிப்பதற்கு அவனுக்கு உதவியவர்களில் ஒருவரான பெற்றையடி நாடானின் முன்னோர் பாண்டியன் மரபின் வள்ளியூர்க் கிளையின் குலசேகர பாண்டியன் கன்னடியனால் தோற்றுத் தற்கொலை செய்துகொள்ள அங்கிருந்து குடிபெயர்ந்த அவன் வழியினர்கள் என்று கூறப்பட்டிருக்கிறதே ஒழிய பாண்டிய நாட்டின் 72 நாடுகளில் பெற்றையடியைத் தலைமையகமாகக் கொண்ட ஒரு நாடு இருந்ததா என்று தெரியவில்லை. அது போல மார்த்தாண்டவர்மனுக்கு முற்றும் முழுமையுமாகத் துணைநின்ற அனந்தபத்மநாபனுடன் சேர்ந்து மார்த்தாண்டவர்மனுக்கு உதவுவது பற்றிக் கலந்துரையாடிய 39 நாடான்கள் பாண்டிய நாட்டின் நாடான்களுடன் கணக்கிடத்தக்கவர் அல்லர் என்று கூறலாம்(இணைப்பு எண் 2 பார்க்க). பிற அனைத்து நாடான்களும் படையெடுப்புகளின் விளைவாக வெளியேறிய பொதுமக்கள், பின்னடைவு பெற்ற படைவீரர்கள் அவர்களின் தலைவர்கள் ஆகியோர் குடியிருந்த இடங்களில் தாங்களே உருவாக்கிக் கொண்ட நாடான் என்ற ஊர்த் தலைவன் பட்டம் பெற்றவரே. இவர்கள் புறப்பட்ட இடத்தில் பல்வேறு சாதிகளைச் சார்ந்தவர்களாயிருக்கலாம் என்று கருதுவதற்குத் தடயங்கள் உள்ளன.

            பனையேறுவதற்காக ஒட்டுமொத்தமாகத் திருவிதாங்கூரிலிருந்து பனையேறிகள் இடம் பெயர்ந்தனர் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதாகத் தெரியவில்லை. திருவிதாங்கூரில் தென்மேற்குப் பருவக் காற்றின் சாரால் மழை வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி ஆகிய நான்கு மாதங்கள் மண்ணைத் திளைக்கச் செய்யும். இந்த மழையை இடவப் பாதி(இடவம் என்பது வைகாசிக்கு இணையான கொல்லம் ஆண்டின் மாதப் பெயர்) என்பர். வடகிழக்குப் பருவக் காற்று கொண்டு வரும் மழையும் கணிசமாக உண்டு. இருப்பினும் இடவப் பாதி மழையின் விளைவாகத்தான் இங்குள்ள பனை மரங்களில் பாளைவர(பூக்க)த் தொடரும். அதே நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையே முதன்மையானது. அதற்கேற்பவே அங்குள்ள பனை மரங்களில் பாளைவரும். பாளைவரும் பருவத்திலுள்ள இந்தக் கால வேறுபாட்டுக்கு ஏற்ப இரு பகுதி பனையேறிகளும் இடம் மாறிக் கொண்டே இருப்பர். அவர்களுக்குத் தங்கள் தங்கள் பகுதிகளில் சொந்தமாகச் சிறிதளவு நிலமும் வீடும் பெரும்பாலானவர்க்கு உண்டு.

            இவ்வாறு அரசியல் காரணங்களால் இந்த வரண்ட வளமற்ற பகுதிக்கு வந்த இவர்களிடம் முன்பு நல்ல நிலைமையில் வாழ்ந்த முன்னாள் நினைவில் தாங்கள் தற்போதுள்ள அவல நிலையை நினைத்து இந்தச் ‘சினவெறி’யும் ‘தீய’ பண்புகளும் வந்திருக்கலாம்.

            “சாணார்களின் மூலக் குழுவினர் என்று கருதத்தக்க இலங்கைச் சாணார்கள் அச் சாதியின் பிற எந்தக் கிளைப்பினரையும் விட இப்போது குமுகியலில் அதிக மதிப்பு வாய்ந்த இடத்தில் உள்ளார்கள். தங்களைச் சூழ வாழ்கின்ற உயர் சாதியினரின் நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டும் அந்தத் தூண்டுதலின் பேரிலும் அவர்கள் தங்கள் நாகரிகத்தில் உயர்ந்து காணப்பட வாய்ப்புள்ளது. ஆனால் அந்த வட்டாரத்திலுள்ள பல்வேறு குடியிருப்புகளில் வேறேந்த வகுப்பினரோடும் எந்தத் தொடர்புமின்றி ஒட்டுமொத்தத் தொகுப்பாக வாழும் திருநெல்வேலிச் சாணார்களை, பிரிவினைக்கும் சிதறலுக்கும் முந்தியதாகிய முழுமையான சாதிக் குடும்பத்துக்கு உரிய மூலமான நிலைமைகளில் வாழ்க்கின்றனர் என்று கொள்ளலாம்”. (பக்.5)

            கால்டுவெலாரின் இந்தக் கூற்று ஏற்புடையதாகத் தெரியவில்லை. சாணார்களிடையில் பெண்களுக்கு மணவிலக்கு, மறுமணம் இன்மை மற்றும் பல மரபுகள் நம் குமுகத்தில் சாதியத்தின் மேனிலையிலிருந்து கீழிறிங்கிய ஒரு குழுவினர் அவர்கள் என்பதைக் காட்டுகிறது. இலங்கையில் வாழ்ந்தவர்கள் சோழர்களின் படையெடுப்புகள் நிகழ்வதற்கு முன்பு கால்டுவெலார் குறிப்பிடுகிற காலத்தில் இருந்ததை விட மேம்பட்ட நிலையில் இருந்திருக்கலாம் என்பதற்கு தமிழ்நாட்டிலுள்ள சாணார்களின் பல மரபுகளைப் பார்க்காலம். எடுத்துக்காட்டாக, நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் வட்டத்தில் மன்னார்புரம் என்ற இடத்தில் வயலில் அறுவடையின் போது நெல்லை அறுக்க ஒரு குழுவும் அறுத்த நெல்லைக் கட்ட இன்னொரு குழுவுமாகச் செயல்படுவார்களாம். கேட்டால் பிற சாதிகளைப் போல், நாங்கள் ‘அறுத்துக்கட்ட மாட்டோம்’[5] என்று தங்களைச் சுற்றி வாழும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம் நிலவும் மணவிலக்கு, கைம்பெண் மறுமணம் ஆகியவற்றைக் குறித்துக் கேலி செய்வாராம்.

            குமரி மாவட்டத்தில் அகத்தீசுவரம் வட்டம் பகுதியில் புறத்தாய நாடு என்று வழங்கும் சாணார் வாழும் பகுதியில் மக்கள் வாழிடங்களைத் தவிர மா, பலா, புளி, புன்னை, கொல்லமா போன்ற மரங்கள் வளர்ந்திருந்த இடங்களில் அங்கிங்கெனாதபடி ஓட்டாஞ்சல்லி எனப்படும் ஓட்டாங்கண்ணிகளும் சாணான் காசு எனப்படும் வாகை விதையளவுள்ள செப்பு அல்லது வெள்ளித் துட்டு(நாணயங்)களும் காணப்படும். பெரியவர்களிடம் கேட்டால் இங்கெல்லாம் முன்பு மக்கள் குடியிருந்துள்ளனர் என்பர். ஆனால் கட்டடங்களின் சுவடுகள் எதையும் பார்த்ததில்லை. மணிகட்டிப் பொட்டலை அடுத்த கேசவன் புதூர் என்ற சிற்றூருக்குக் கிழக்கில் கூனாச்சிப் பொட்டல்(கூனை வச்சிப் பொட்டல்) என்றழைக்கப்பட்ட பரந்து விரிந்த வெட்டவெளி ஒன்று இருந்தது. மழை அரிப்பில் உருவாகும் ஓடைகளுக்குள்ளிருந்து நெல்லைப் பாதுகாத்து வைக்கும் ஆளுயரமுள்ள மண்பாண்டமான குலுக்கைகள்(குதிர்கள்) வடிவக் கூனைகள் எனப்படும் முதுமக்கள் தாழிகள் முற்காலத்தில் வெளிப்பட்டன என்று மூத்தோர் சொல்லக் கேட்டுள்ளேன். ஆதித்தநல்லூர் போன்ற ஒரு பரந்த மக்கள் குடியிருப்பு இங்கு இருந்ததை இவற்றின் மூலம் அறிய முடிகிறது. ஒரு வேளை முதல் கடற்கோளின் பின் இங்கு குடியேறிய சோழ நாட்டின் மக்களான இவர்கள் இரண்டாம் கடற்கோளின் போது இலங்கைக்கும் அவர்கள் வாழ்ந்த பகுதிக்கும் இடையில் கடல் புகுந்துவிட அங்கிருந்து பருவக் காற்றுகளால் நகர்த்தப்பட்ட மணல் தங்கள் நிலப்பரப்பை மூட அங்கிருந்து மேற்கிலும் கிழக்கிலும் நகர்ந்து சென்றோரில் கிழக்கே சென்றோர் சோழநாடு, தொண்டைநாடு வரை பரந்திருக்க வேண்டும். ஆதித்தநல்லூர் குடியிருப்புக்கும் இந்த விளக்கம் பொருந்தலாம். தமிழ்க் கழகங்களின் கால நீட்சிக்கு காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டு கூறும் மூவேந்தர் – குறுநில மன்னர்களின் 1300 ஆண்டு ஒப்பந்தம் மறுக்க முடியா சான்று.  

சமயத்தைப்பற்றி:
            கால்டுவெலாரின் நூலில் இது பெரும்பகுதியைப் பிடித்துள்ளது. முதலில் ‘இந்து’ மதத்தைப் பற்றிய அவரது கருத்துகள்:

            இந்து மதத்தை சீரொன்றிய ஒரு சமயமாகக் கூற முடியவில்லை. குறிப்பிட்ட சில பொதுவான இறையியல் கருத்துகள் இருப்பதாகத் தோன்றினாலும் அவற்றின் அடியில் நடைமுறை பன்முகத்தன்மை மறைந்துள்ளது. இதுவும் கூட அவர்களின் மெய்யியல், ஆதனியல் கோட்பாடுகளைப் பொறுத்துத்தான். நடைமுறையில் ஒரு சில கருத்துகளும் நடைமுறைகளுமே பொதுவாக உள்ளன; ஆனால் இக் கருத்துகள் மற்றும் நடைமுறைகளும் தாங்கள் வெறுக்கும் தங்கள் எதிரிகளினுடையவையும் ஒன்றே என்ற கருத்தே அவர்களுக்குக் கசக்கும். ஆனால் கிறித்துவ விடையூழியர்கள் மெய்யியல் ஒப்பீடுகளோடோ இறந்துபோன தொன்மையோடோ வினையாடவில்லை; அவர்களது பணி தங்களைச் சுற்றிவரும் மதமற்றவர்களின் மூடநம்பிக்கைகள், நடவடிக்கைகள் ஆகியவை, அம் மக்களின் கூற்றுப்படியுள்ள கருத்துகள் மற்றும் உள்ளூர் மரபுகளின் படி நிலைகொண்டுள்ளன என்பது தொடர்பானதே. இந்த மூலக் கருத்தின்படி செயற்பட்டால் ‘இந்து’ சமயத்தைச் சீரொன்றிய ஒன்றாக விடையூழியர்கள் கருத முடியாது. ‘இந்தியா’ என்ற புவியியல் சொற்கட்டு போலவே ‘இந்துயியம்’ என்ற ஐரோப்பியப் பொதுபடுத்தும் சொற்கட்டும் இந்துக்கள் அறியாத ஒன்று. ‘இந்து’க்களே தாங்கள் வழிபடும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் பெயரில் ‘சிவனியம்’ ‘மாலியம்’ போன்ற பெயர்களில்தான் தங்கள் சமயத்தை அழைக்கிறார்கள். இதற்கு ஒரே விதிவிலக்கு சாணர்கள் போன்ற பார்ப்பனியம் சாரா அடித்தள வகுப்புகளின் நேர்வில் மட்டும் அவர்கள் மாறுபட்ட ஒரு மத நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும் அதற்கு ஒரு திட்டவட்டமான பெயரைக் குறிக்கும் வகையில் போதிய ஒரு மெய்யியலைக் கொண்டிருக்கவில்லை. இங்குள்ள கோயில்களையும் சிலைகளையும் தேர்வலங்களையும் அடிக்கடி காணும் ஐரோப்பியர்கள் அவை ஒரே அமைப்புக்கு உரியனவென்று எளிதாகக் கற்பனை செய்து கொள்கின்றனர். உண்மை என்னவென்றால் பல நேர்வுகளில் அவை முற்றிலும் வெவ்வேறான சமயங்களுக்கு உரியவை, ஒவ்வொரு சமயத்தின் தலைமைத் தெய்வமும் குறித்த அதன் போட்டியாக உள்ள தலைமைத் தெய்வத்தினை வழிபடுபவனின் மதிப்பீடு அது. தீய ஆற்றல்களின் வெளிப்பாடு, உண்மையான தெய்வத்துடன் எப்போதும் போரிட்டுக் கொண்டிருப்பது, அல்லது குறைந்தது தெய்வத்தின் விருப்பமில்லாப் பணியாளர் என்றும் அதை வழிபடுவது பெரும் கேடு என்பவையாகும். தொகுத்துப் பார்த்தால் இந்தியாவிலுள்ள பெரும்பாலான சமயங்கள் ஒரு பொது மூலத்திலிருந்து உருவானவை என்று கூறலாம். எல்லாத் தெய்வங்களும் பார்ப்பனியம் சார்ந்தவையாயினும் அல்லவாயினும் ஒன்றே என்றும் தான் புரிந்துகொண்டுள்ளபடி உண்மையில் அவை அனைத்தும் மாயையே என்று அடித்துச் சொல்லும், அலைந்துகொண்டிருக்கும் அடியவனை அல்லது நூல்களைப் படித்த ஆதனியனை(ஆன்மீகனை) எப்போதாவது நாம் காணலாம்[6]. ஆனால் தங்கள் சமயத்தை நோன்புகளும் குறியீடுகளும் கொண்ட ஒன்றாகும் என்றும் ஒரு நோன்பின் அழகே அது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துள் அடங்கியது என்றும் போட்டி நோன்புகளுக்கு மாறானது என்றும் கருதும் மக்களின் நடுவில் இத்தகைய கருத்துகள் பரிவைப் பெறுவதில்லை. இந்தியாவின் தேசங்கள் ஒரே மதத்தைக் கொண்டுள்ளன என்றும் பல்வேறு ‘இந்து’ இனங்களின் இயல்புகளும் அவர்களது நம்பிக்கைகளும் எண்ணங்களும் எங்கும் ஒன்றே; இந்தியாவின் ஒரு பகுதியில் கிறித்துவத்தைப் பரப்புவதற்கு மிகச் சிறந்த வழி எங்குமே மீச் சிறந்ததாகும்; ஒவ்வோர் இடத்திலும் விடையூழியர் ஒரே வாதங்களுக்கு மறுப்புரைப்பதும் ஒரே இடையூறுகளை எதிர்கொள்வதும்தான் என்ற கற்பனையில் பலர் இருப்பதால்தான் இந்த தொடக்கக் கருத்துரையைக் கூறுவதாகத் தொடங்குகிறார். வேதாந்தத்தைப் பற்றி அறியாத விடையூழியரோ வேதாந்தப் பார்பனர்களுடனுள்ள தம் முதல் வாதின் முடிவு பற்றி நினைக்கும் போது எரிச்சலடையாத விடையூழியரோ எவராவது இந்தியாவிலிருந்து வெளியேறியவரில் உண்டா? திருநெல்வேலியில் உள்ள 8,00,000க்கு மேற்பட்ட ஆதன்களில்(ஆன்மாக்களில்) 8 பேர் கூட, இப் பொருள் குறித்த ஐரோப்பிய ஆக்கங்களை ஒரு மணி நேரம் புரட்டிப் பார்க்கும் ஒரு ஐரோப்பிய மாணவனுக்குத் தெரிந்தவை கூடத் தெரிந்தவர்கள் தேறமாட்டார்கள் என்று தான் அடித்துச் சொல்வதாகக் கூறுகிறார். பலி கொடுப்பதன் மூலம் மீட்கும் கிறித்துவத்திலுள்ள கோட்பாடு சில பார்ப்பனப் பிரிவினர்க்குக் குற்றமாகத் தோன்றும் அதே வேளையில் எங்கும் ‘இந்து’க்களுக்குக் குற்றமாகவே தோன்றும் என்று கருதப்படுகிறது, ஆனால், பலிகளில் குருதியைச் சிந்துவதும் உயிருக்கு உயிரை மாற்றாக வைப்பதும் பழகிப்போன திருநெல்வேலியில் இது குற்றமாகக் கருதப்படுவதில்லை. இவ்வாறு தான் பணியாற்றும் வட்டாரத்திலுள்ள மக்களின், அவர்களின் சமயத்தின் சிறப்புத் தன்மைகளையும் தனது பணியின் இடர்களையும் கூறுவதற்கான முன்னுரையாக இதைக் கூறுகிறார். (பக்.6-7)

            ஒரு கடவுள் உள்ளமை பற்றிய ஒரு முதல்நிலை நம்பிக்கையின் தடங்கள் சாணார்களிடையில் உள்ளதா என்று தேடினால் ஆண்டவன்(ruler), பிரபு(Lord) போன்ற சொற்களே கிடைக்கின்றன. அந்தப் பிரபு யார், அவன் பெயர் என்ன என்று கேட்டால் அவர்கள் என்ன விடை கூறுவதென்று தெரியாமல் விழிக்கிறார்களாம். ஒரு தீயவன் தண்டனை பெறும் போது வேறு எந்த பேயையோ தெய்வத்தையோ அதற்குக் காரணமாகக் கூறாமல் ‘பிரபு’ வைத்தான் சுட்டுகிறார்களாம். அதைப் போல் ஒரு குழந்தை சாகும் போது அந்தப் ‘பிரபு’வைத் திட்டுகிறார்களாம். அரிதான இந்த உண்மைகள்தாம் அவர்களிடம் தான் கண்ட கடவுள் பற்றிய நம்பிக்கை என்கிறார். இவ்வாறு விரிவாக விளக்கிவிட்டு, ஆனால் கிறித்துவ விடையூழியர் ஒரு கடவுள் இருப்பது பற்றியும் அவர்தான் உலகத்தை உருவாக்கி அதனை வழி நடத்துபவர் என்று கூறியதும் அதை மறுப்பதற்கு எதுவும் தோன்றாமல் விழிக்கிறார்களாம். (பக். 9-10)

            மேலே தரப்பட்டுள்ள அவரது கருத்துகள் குறித்து நம் எண்ணத்தை இங்கு பதிவது பொருத்தமாக இருக்கும். அவர் குறிப்பிடும் ‘உண்மையான சமயங்களில்’ கிறித்துவமும் முகம்மதியமும் ஒன்றுசேர முடியாத உட்பிரிவுகளைக் கொண்டு சொந்த சமயத்தாருடன் கொலை வெறித் தாக்குதல்களை, படுகொலைகளை இன்றும் நிகழ்த்தி வருவதை நாம் அறிவோம். அதற்கான காரணம் மதங்களும் சமயங்களும் என்றும் கடவுளோடு தொடர்புடையனவல்ல. உலகு அனைத்துக்கும் ஒரே கடவுள்தான் என்று புத்தம், அம்மணம் தவிர்த்த அனைத்துச் சமயமும் கூறிக்கொண்டே தத்தமக்குள்ளும் தத்தமது உட்பிரிவுகளுக்குள்ளும் கொலைவெறித் தாக்குதல்களையும் படுகொலைகளையும் நிகழ்த்தி குருதி வெள்ளத்தை ஓடவிட்டுக் கொண்டிருக்கின்றன. புத்தமும் அம்மணமும் அதையே செய்துவந்திருக்கின்றன. எனவே ‘இந்து’ சமயத்தினுள் உள்ள சிவனியம் மாலியம் போன்ற சமயங்களுக்கிடையில் மட்டுமல்ல அவற்றின் உட்பிரிவுகளுக்கிடையிலும் இத்தகைய பகைமை கொண்டு குருதியாறுகள் ஓடியதுண்டு.

            சாணார்களிடையில் கடவுள் பற்றிய மெல்லிய நம்பிக்கை உண்டு என்று கூறியவர் கிறித்துவர்கள் முன்வைக்கும் ஒரு கடவுள் கொள்கையை எதிர்த்து வழக்காடத் தெரியாமல் அவர்கள் விழிக்கிறார்கள் என்பதில் எந்தப் பொருளுமில்லை. அவரது கிறித்துவக் கடவுள் கொள்கையில் அவர்கள் எந்தப் புதுமையையுமோ, முரண்பாட்டையோ காணவில்லை என்றே பொருள் கொள்ள வேண்டும். அதாவது சாணார்களிடையில் மதமாற்ற முயற்சிகள் எளிதாகப் பலனளிக்கின்றன என்பதை கால்டுவெலார் மேலேயுள்ளோர்க்குத் தெரிவிப்பதாகவே இதனைக் கொள்ள முடியும்.

            இறப்புக்குப் பின் மேலுலக வாழ்க்கைக்கு உயிர்கள் (சமயவாணர்கள் மொழியில் ஆதன்கள்) செல்கின்றன என்பது குறித்து சாணார்களுக்கு உறுதியான ஒரு கருத்து இல்லை என்பது அவரது அடுத்த குறைகூறல். அதிலும் இப் பிறப்பில் செய்தவற்றுக்கு மேலுலகில் பரிசுகளோ தண்டனையோ உண்டு என்று சாணார்கள் கருதவில்லை என்கிறார்.

            இறந்த உயிர் தன் வாழ்நாளில் செய்தவற்றுக்கு உரிய நற்பலன்களைத் தேவருலகிலும் தண்டனைகளை நரக உலகிலும் வழங்குபவனாகக் கூறப்படும் காலதேவனை(கால சாமியை) வழிபடும் சாணர்களுக்கு இதைப் பற்றி தெரியாது என்பது கால்டுவெலாரின் அறியாமையைக் காட்டுகிறது என்பதை விட பிரிட்டனிலுள்ள தன் உயர் அதிகாரிகளை ஏமாற்றும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றே கொள்ளவேண்டியுள்ளது.

            மறுபிறப்பு பற்றிச் சாணார்களுக்குத் தெளிவான சிந்தனை கிடையாது என்று கால்டுவெலார் கூறுகிறார். இந்தச் சிந்தனை பற்றிய மிக மெலிதான ஒரு தடமாக இளம் அகவையில் துள்ளத் துடிக்கச் சாவோரின் ஆவி அந்த உடல் அடக்கம் செய்யப்பட்ட வட்டாரத்தில் பேயாகச் சுற்றித் திரியும் என்ற நம்பிக்கையைக் கூறுகிறார். ஆனால் ஆதனின் அழிவு உடல் செத்ததுடன் நடந்துவிடுகிறது என்பது சாணார்கள் மரபு என்கிறார்(பக்.10). இது முற்றிலும் தவறான கூற்று.

            சாணார்கள் மட்டுமல்ல, தமிழக மக்களின் பொதுவான நம்பிக்கை முதியவர் ஒருவர் இறந்துவிட்டால் அவர் குடும்ப வட்டாரத்தில் பேரன், பேர்த்தி, பூட்டன், பூட்டி முறையுடைய குழந்தை ஒன்று பிறந்தால் அது இறந்துவிட்ட முதியவரின் மறுபிறப்பே என்று மகிழும் வழக்கம் உண்டு. பேரன், பேர்த்தி என்ற சொற்கள் ஒருவரின் பெயர்க்கு உரியவர்கள் அவர்கள் என்பதன் மூலம் மனித வாழ்நாள் குறைவாக இருந்த ஏதோவொரு காலகட்டத்தில் பெயருக்குரியாரின் மறுபிப்புகள்தாம் அவர்கள் என்ற கருத்தின் தடயம் தான் இது.

அது மட்டுமல்ல, சாணார்களின் சாவுச் சடங்கில் சில சிறப்பான நடைமுறைகள் உண்டு.

            குமரி மாவட்டத்தில் சாணார்கள் பிணத்தை எரிப்பதில்லை. ‘துள்ளத் துடிக்க’ச் செத்தவர்களை மட்டும் எரிப்பார்கள். புதைக்கும் குழி சிறப்பான ஒரு வடிவத்தைக் கொண்டது. ஏறக்குறைய 6 அடி ஆழத்துக்குத் தோண்டும் குழியின் அடிப்பாகத்தில் பக்கவாட்டில் ஓர் ஆள் சப்பணமிட்டு வசதியாக நிமிர்ந்து அமரும் அளவுக்கு சிறு ‘அறையை’க் குடைவார்கள். இதற்கு ‘இருப்புக் குழி’ என்று பெயர். குமரி மாவட்டத்திலுள்ள ‘செவ்வல்’(செம்மை + வன்மை?) மண் இந்தக் குடைவுக்கு ஏற்றதாக உள்ளது. இருப்புக் குழி குடையும் இடம் முன்பு எப்போதோ புதைப்பதற்காகத் தோண்டிய முதன்மைக் குழியாயிருந்து விட்டால் மேலேயுள்ள மண் குடைபவர் மீது நழுவி விழுந்து அவரைச் சாகடிப்பது மிக மிக அரிதாக நிகழ்ந்துள்ளதாகக் கூறுவர்.

            ஒருவர் இறந்ததும் அந்த உடலை பிணம் கிடந்த இடத்திலேயே சுவர் மீது சாய்ந்திருக்கும் பாணியில் காலை மடக்கி சப்பணமிட்டவாறும் கைகள் இரண்டும் மடியில் இருக்குமாறும் அமர்த்துவர். இவ்வாறு உட்கார வைக்கும் வழக்கம் ஐந்தொழிற் சொல்லர்களிடையிலும் உண்டென்று தெரிகிறது. சப்பணமிட்டோ குந்தியோ தனியாக அமர்ந்திருப்பவரைப் பார்த்து “என்ன கம்மாளப் பிணம் போல இருக்கிறாய்?” என்று கேலி செய்வதைப் பல இடங்களில் பார்க்கலாம். ஆனால் அவர்கள் பிணத்தை எரிப்பார்கள்.

            சாணார்கள் பிணத்தை அமர்ந்த நிலையில் வெள்ளைத் துணி கொண்டு தலையை மூடி கைகளையும் கால்களையும் கட்டிவிடுவர். கழுத்தைச் சுற்றியும் கட்டுவார். குழிவாயிலில் பிணத்தை இறக்கும் போது குழியில் இருப்பவர் பிணத்தின் தலை தன் தோளில் படியுமாறு அணைத்துப் பிடித்து உட்கார்ந்து பிணத்தை இருப்புக் குழியில் சரியாக வசதியாக அமர்த்திய பின் மேலேயிருந்து குழியினுள் மண்ணைத் தள்ளுவர். மண் இருப்புக் குழியில் சென்றுவிடாமல் கவனமாக இருப்பர்.

            இந்த முறை இத்தாலி போன்ற மேலை நாடுகளில் பிணத்தை நிலவறைகளிலுள்ள மாடக் குழிகளுக்குள் வைத்த முறையை நினைவுபடுத்துகிறது.

            அது மட்டுமல்ல, கிறித்துவர்கள் பிணத்தை மரப்பெட்டியில் இட்டு அதனைச் சுற்றி கல்லால் சுவர் எழுப்பி மேலே கற்பலகை வைத்துப் பாதுகாப்பது ஏன்? ஏசுநாதர் கூறியதாகக் கூறப்படும் ‘நடுத்தீர்ப்பு நாளில்’ அனைத்து ஆதன்களும் தத்தமக்குரிய உடல்களுக்குள் புகுந்து உயிர்பெறும் என்பதான ஒரு நம்பிக்கையால் தானே!

            இந்த நம்பிக்கைக்கும் ஓர் அடிப்படை உண்டு. பண்டை எகிப்தில் அரசர்கள், பெரும் பணம் படைத்தோரின் பிணங்களைப் பல்வேறு மூலிகைகளையும் வேதிப் பொருட்களையும் பயன்படுத்தி உருவான எண்ணெய்யில் 41 நாட்கள் ஊற வைத்து வெளியில் எடுத்து துணியால் பொதிந்து மெழுகால் இழைத்துப் பாதுகாத்து வைத்தனர். இறந்தவர்கள் வானுலகம் சென்று திரும்பி வருவர் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம். பல்லாயிரம் ஆண்டுகள் சென்ற பின்னும் இந்த உடல்களின் உயிராற்றல் அழியவில்லை, அவற்றின் துணுக்குகளிலிருந்து பதியன் முறையில் (குளோனிங்) புதிய மனிதர்களைப் படைக்கலாம் என்பது ஒரு சார் அறிவியலார் கருத்து. அதுதான் நடு ஆசியாவின் இசுரேலில் இருந்து கிறித்துவத்தின் மூலம் உரோம் சென்றிருக்கிறது.

            பண்டை எகிப்தில் திடீரென்று முளைத்த ஒரு பெரும் நாகரிகத்தைத் தந்தவர்கள் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் என்பதற்கு வலிமையான தடயங்கள் உள்ளன. அதுமட்டுமல்ல பண்டைச் சீனம், மங்கோலியா போன்ற இடங்களிலும் எகிப்திய பாணி மம்மிகளை ஆய்வாளர்கள் அகழ்ந்தெடுத்திருக்கிறார்கள். இவ்வாறு இந்தியாவின் கடைத் தென்கோடியில் அத்தகைய புதைக்கும் ஒரு மரபைச் சாணார்களிடம் தடம் பிடிக்க முடிந்திருக்கிறது.

            இன்று இந்த இருப்புக் குழி முறை காணாமல் போய்விட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்குள் சிறுகச் சிறுகச் சவப்பெட்டியினுள் நீட்டி நிமிர்த்திக் கிடத்தி மூடிப் புதைக்கும் வழக்கம் முழுமையாகப் புகுந்துவிட்டிருக்கிறது.

            எகிப்தியர்கள் உடலைப் பதப்படுத்தும் முன் அதன் குடல், ஈரல் போன்ற உள் உறுப்புகளை அகற்றிவிடுவார்கள். மூக்கின் வழியாக மூளை முழுவதையும் சுரண்டி விடுவார்கள் என்றெல்லாம் கிரேக்க வரலாற்றாசிரியர்கள் பதிந்து வைத்துள்ளனர். நம்மிடையில் கிறித்துவர்களும் ‘இந்து’க்களும் உடலைக் குளிப்பாட்டுவதற்கு மேல் தூய்மைப்பாடு எதையும் செய்வதில்லை. ஆனால் முகமதியர்கள் உடலிலிருந்து மலத்தையும் பிற அழுக்குகளையும் வெளியேற்றி விடுகின்றனர் என்ற வகையில் எகிப்தியரின் முறையைப் பின்பற்றியதன் ஒரு தடயமா அது என்று தெரியவில்லை. மற்றப்படி உடல் கெடாமலிருக்க உப்பைக் கொட்டுவார்கள் என்று தெரிகிறது. சவப்பெட்டியை குழி வாசலுக்குக் கொண்டுசெல்வதற்கு மட்டும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

            அது மட்டுமல்ல சாணார்கள் இறந்த 16ஆம் நாள் அன்று மோச்ச விளக்கு அல்லது அடியந்தரம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். மாவைப் பிசைந்து அதை ஒரு மண் சட்டியில் வைத்து மாவில் ஒரு குழி செய்து எண்ணெயும் திரியும் வைத்து விளக்கேற்றி[7] ஒரு குளம் அல்லது நீரோடைக்குச் சென்று சட்டியை மிதக்க விடுவர். செத்தவரின் ஆவி மோச்சத்துக்குச் செல்வதன் குறியீடாக இது நடைபெறுகிறது. (இன்று கங்கையில் பிணங்களை அப்படியே வீசிவிடுவது போல் ஆறுகளில் விடும் ஒரு பழக்கத்தைக் கொண்டிருந்து அதைக் கைவிட்டு அதற்கு மாற்றாக இந்த மாவிளக்கு வழக்கம் வந்திருக்குமோ?) அதற்கு முன் செத்த அன்று பிணம் இருந்த இடத்தில் படையல் வைத்து வழிபடுவர். குழிவாசலில் புது மண் பானையில் சோறு சமைத்துப் படைத்து கும்பிட்டு எடுத்துக்கொள்வார் குடிமகன் எனப்படும் ஊர் நாவிதர்.

            இந்தப் பின்னணியில் ஆதனின் மறுபிறப்பைப் பற்றிய மங்கலான சில தடயங்களே உள்ளன என்று கால்டுவெலார் சொல்வது முற்றிலும் சரியாகாது. அவர்களது பேச்சு வழக்குகளிலும் இதை நாம் காணலாம். கிறித்துவர்களைப் பார்த்துத்தான் அவர்கள் அனைத்துக்கும் மேலான ஒரு கடவுளைப் பற்றியோ நன்மைக்கு இன்பமும் தீங்குக்குத் தண்டனையும் கிடைக்கும் என்பதைப் பற்றியோ மறுபிறப்பைப் பற்றியோ அறிந்தனர் என்பது நாம் மேலே குறிப்பிட்டிருப்பதைப் போல் அவரது உயர் அதிகாரிகளை ஏமாற்றவேயன்றி வேறில்லை.

            இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒரு கடவுளைப் பற்றி கூறினாலும் ஒவ்வொருவரும் தாம் வணங்கும் ஒரு குறிப்பிட்ட கடவுளைத்தான் கூறுவார். ஆனால் எண்ணற்ற பேர் எதற்கும் பாதுகாப்பாக ‘அனைத்துக் கடவுள்’களையும் வணங்கிவிடுவார். இருப்பினும் உள் மனதில் இவற்றுக்கும் அப்பால் ஒருவன் இருக்கிறான் என்பது உறுத்தும்.

            நல்லதற்கு நன்மையும் தீயவற்றுக்குத் தண்டனையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆயினும் தண்டனையிலிருந்து தப்புவதற்கு இந்திய, குறிப்பாகத் தமிழ் இலக்கியங்கள் நல்ல வழிகளைக் காட்டியிருக்கின்றன. திருவிளையாடல் புராணத்தில் மாபாதகம் தீர்த்த படலத்தில் தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்றவன் சிவன் கோயிலை மும்முறை வலம் வந்ததும் சிவனின் திருவடி நிழலில் இன்பம் கிடைத்ததைச் சொல்லியிருக்கிறதே!

            செத்தவர்கள் தங்கள் தங்கள் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப, நல்வினை மிகுதியாயின் தீவினைகளுக்குரிய தண்டனையை முதலில் பட்டுத் தீர்த்துவிட்டு நல்வினைக்கான தேவருலகத்தை அடைவர் என்றும் தீவினை மிகுதியாயின் முதலில் நல்வினைகளுக்குரிய இன்பங்களைத் துய்த்துவிட்டு நரகுக்கு நிலையாகக் குடியேறுவார்களென்றும் சொல்வது ஒன்று.

            ஓர் உயிர் ஒரு பிறவியில் செய்த தீவினைகளுக்கு ஏற்ப தாழ்ந்ததொரு உயிரியாகப் பிறந்து அப் பிறவியில் நன்மை செய்தால் அதைவிட மேம்பட்ட உயிரியாக மறுபிறப்புற்று அவ்வாறு படிப்படியாக உயர்ந்து மனிதனாகப் பிறந்து இறுதியில் பார்ப்பன ஆண்மகனாகப் பிறந்து நல்வினைகள் செய்தால் தேவருகலம் அடைந்து இறைவனுடன் இரண்டறக் கலந்து எல்லையில்லா இன்பத்தில் திளைத்திருக்கலாம் என்பது இன்னொன்று. எந்த ஒரு பிறவியிலும் தீவினைகள் மிகுந்தால் உடனே பிறவி வரிசையில் ‘பதவி இறக்கம்’ கிடைக்கும் என்பது உறுதி, பரம்பதம் விளையாட்டில் போல். விளையாட்டின் பெயரும் பொருந்தித்தானே வருகிறது!

            ஆதன்கள் கட்டற்றவையாய் அண்ட வெளியில் அலைகின்றன. அவை மாயையில் சிக்கி பருப்பொருள்களாகிய ஐம்பூதங்களால் கவரப்பட்டு உயிர்களாகின்றன. அவ் வுயிர்கள் தங்கள் நல்வினை - தீவினைகளால் ஆதனைக் கறைப்படுத்துகின்றன. நல்வினைக்குரிய நன்மைகளையும் தீவினைகளுக்குரிய தண்டனைகளையும் துய்ப்பதற்காக ஆதன் மீண்டும் பிறப்பெடுத்து உழல்கிறது. இந்தப் பிறப்பு - இறப்புச் சுழலிலிருந்து வெளிப்பட வேண்டுமாயின் நன்மையோ தீமையோ செய்யாத வினையற்ற நிலையை அடைய வேண்டும். அதற்குரிய ஒரே வழி இருக்கையில் (ஆசனத்தில், குண்டியில்) அமர்ந்து மூச்சை எண்ணி, மூக்கு நுனியை அல்லது தொப்புழின் குழியைப் பார்த்து காலங்கடத்திச் சாவது. இதைவிட எளிய வழி எதுவும் சிந்திக்கவோ, செயல்படவோ தெரியாத, முடியாத பித்துக்குளியாய்ப் பிறப்பது. இதன் விளைவாக பேராதன் எனும் முழுமுதற் கடவுளுடன் ஒன்றி ஆதன் மீளா இன்பத்தில் திளைக்கும் என்பது இன்னும் ஒன்று.

            இந்த ‘ஒப்புயர்வில்லாத’ கோட்பாட்டில் மூச்சை எண்ணுவது, மூக்கு நுனியையோ தொப்புள் குழியையோ பார்ப்பது என்பதற்குப் பகரம் சிவன், திருமால், முருகன், காளி போன்ற தத்தம் வழிபடு தெய்வத்தை நினைத்திருத்தல் என்ற உத்தியை வகுத்திருக்கின்றன எண்ணற்ற கடவுளர்களின் கடைவிரிப்புகளும்.

            இவை அனைத்துக்கும் அப்பால் இரண்டன்மைக் கோட்பாடு என்ற ஒன்றை ஆதி சங்கரர் என்பவர் வகுத்தார். அதன்படி ஆதன், பேராதன் என்று இரண்டு கிடையாது, இருப்பவை அனைத்தும் ஒரே வகை ஆதன்கள்தாம். ஆதனுக்குரிய புலன்கள் அறியும் எதுவும் உண்மையல்ல, மனத்தின் கற்பனையே. உலகம், நாம் காணும் பொருட்கள் எல்லாம் நம் மனதின் கற்பனையாக நம் மனத்துள்தாம் இருக்கின்றன. கடவுள் என்பதும் அத்தகைய கற்பனையில் ஒன்றுதான். இங்கு நல்லது, தீயது என்று எதுவும் இல்லை என்று செல்கிறது இந்தக் கோட்பாடு. ஆனால் இந்த மாயக் கோட்பாட்டைக் கூறிய சங்கரர் காமாட்சியம்மனை வழிபட்டு அவள் குறித்து நூலும் எழுதியுள்ளார் என்பதுடன் புத்தர் மடங்களை உடைத்து தன் மடங்களை நிறுவினார் என்றும் வரலாறு கூறுகிறது.

            இத்தகைய கோட்பாட்டுக் குழப்பங்களுக்குள் சாணார்கள் நுழையவில்லை என்பது கால்டுவெலாரின் குறை - இந்தக் குறைகள் சராசரி தமிழகக் குடிமக்கள் அனைவருக்கும் உரியது என்பதையும் ஆங்காங்கே அவர் சுட்டிச் செல்கிறார் என்பதைக் காண வேண்டும்.

            “பேய்களில் சில பார்ப்பனிய முறையிலிருந்து இறக்கம் பெற்றவையும் ஒப்பிட இற்றை வளர்ச்சி கொண்டவையுமான காளியின் வடிவங்களாகும்; அவை அம்மன், அதாவது தாய் என்ற வேறான பெயரில் அறியப்படுகின்றன; அவற்றின் வழிபாடு சில சிறப்பான தனியியல்புகளைக் கொண்டவை. இந்த வழிபாடு பேய் வழிபாடு போல் நினைத்தவர்களாலெல்லாம் நடத்தப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட சூத்திரச் சாதி பூசாரியரால் நிகழ்த்தப்படுகிறது. பேய்களில் மிகப் பெரும்பாலானவை சாணார்கள் அல்லது தமிழர்களிலிருந்து தோற்றம் கொண்டவையாக, பார்ப்பனியத்திலிருந்து முற்றிலும் தொடர்பற்றவை. (பக்.13)
 தொர்ரும்.....


[1] விடையூழியர் - Missionary
[2]   பேய் வழிபாட்டினர், உருவ வழிபாட்டினர், சமயம் என்ற கட்டமைப்பு இல்லாதவர், காட்டுவிலங்காண்டிகள், நாகரிகமற்றவர்கள், யூத, கிறித்துவ, முகம்மதிய மதம் ஆகியவற்றைப் பின்பற்றுவோர் தவிர்த்த பிற மக்களைக் குறிப்பிட ஐரோப்பியர் வழங்கிய heathens, pagens என்ற சொற்களுக்கு இணையாக இச் சொல்லைக் கையாண்டுள்ளோம். 
[3] 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருநெல்வேலியைத் தலைமையகமாகக் கொண்டு இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பகுதியும் இருந்தது.
[4]   பக். 4
[5]அறுத்துக்கட்டுதல் என்பது குறிக்கும்  பெண்களின் மணவிலக்கு, மறுமண உரிமைகள் இழிவானவையல்ல, பெருமைப்படத்தக்கவை என்பது எமது கருத்து(மொ – ர்)
[6] விவேகானந்தரையும் இந்த வகைப்பாட்டினுள் கொண்டுவரலாமா?
[7] மாவில் விளக்கேற்றும் இந்த நடைமுறை யூதர்களின் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதில் கடைப்பிடிக்கப்பட்டதாக மறை நூலிலிருந்து தெரிகிறது.

0 மறுமொழிகள்: