28.12.15

சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 13


நாட்டார்கோமாளிகள்:
            இந்து மத இயக்கங்களின் இந்த முயற்சிகளை முறியடிக்கிறோம் என்ற பெயரில் தங்களை முற்போக்கினர் என்று கருதிக் கொள்ளும் சில படிப்பாளிகள் ஓர் எதிர்மறை நடவடிக்கையில் அண்மையில் ஈடுபட்டனர். நாகர்கோயில் அரசூழியர் குடியிருப்பை அடுத்திருக்கும் குஞ்சன்விளை என்ற ஊ‌‌‌‌‌‌‌ரில் வாழும் லட்சுமி மணிவண்ணன் என்ற நாடார் சாதி இளைஞர் தானும் தன் நண்பனும் எழுதிய பாநூற்களின் வெளியீட்டு விழாவை அந்த ஊரில் நடத்தினர். அதற்கு எமக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். அதில் தொடக்க நிகழ்ச்சியாக ஆடு வெட்டிச் சிறு தெய்வங்களுக்குப் பலியிட்டு வழிபாடு நடத்துவதாகவும் நண்பகல் உணவில் அந்த ஆட்டின் இறைச்சி இடம்பெறும் என்றும் நிகழ்ச்சி ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிரலில் குறிக்கப்பட்டிருந்தது. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காலை நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை நா‌ட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் இயக்குநரும் கிறித்துவருமான பிரான்சிசு செயபதியும் வேறு சில பிற்படுத்தப்பட்ட சாதிப் படிப்பாளிகளும் கலந்துகொண்டனர். ‌பிற்பகல் நிகழ்ச்சிகளில் பார்ப்பனரும் காலச்சுவடு இதழ் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிறுவனருமான சுந்தர ராமசாமியும் சில ‌சிவனிய வெள்ளாள எழுத்தாளர்களும் படிப்பாளிகளும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை நடத்திய இளைஞர் லட்சுமி மணிவண்ணன் சுந்தர ராசாமியி‌னால் வழிகாட்டப்பட்டு இலக்கியக் களத்தில் நுழைந்தவர். ஆகம வழிபாட்டைப் பின்பற்றுபவரும் புலாலுண்ணாமையைக் கடைப்பிடிப்பவருமான சுந்தர ராமசாமியும் பிற தெய்வங்களைப் பேய் என்று கூறியும் தெய்வத்துக்கு உயிர்ப் பலி இடுவது பாவச் செயல் என்றும் கூறும் கிறித்துவராகிய செயபதியும் ஒரே மேடையில் நின்றார்கள். ஆகம வழிபாட்டை நோக்கி ஓடும் கீழ்ச்சாதி இந்துக்களை மீண்டும் உயிர்ப் பலியிட்டு வணங்கும் சிறுதெய்வ வழிபாட்டுக்குத் திருப்பும் இவர்களின் முயற்சி நேர்மையானதென்றால் முதலில் தங்கள் சமயத்துக்குள்ளும் சாதிக்குள்ளும் இவற்றைச் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் தா‌மிரபரணித் திருவிழா என்ற பெயர் வைத்து மறைந்து கொண்டிருக்கும் பழம் பண்பாடையும் ம‌னித உறவுகளையும் மீட்கிறோம் என்று பெரும் திட்டம் தீட்டினார்கள். நெல்லை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இந்தியப் பொதுமைக் கட்சி(மார்க்சியம்) ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சார்ந்த தலைவர்கள் உட்பட பெரும் படிப்பாளிகள், ‘முற்போக்கினர் கூட்டம் உடனிருந்தது. மறைந்து கொண்டிருக்கும் பண்பாடு, ‘மனித உறவு என்பவை தமிழகத்தைப் பொறுத்தவரை சாதிய ஏற்றத் தாழ்வுகளும் ஒடுக்குமுறையும் தவிர வேறென்ன? இந்தத் தாமிரபரணித் திருவிழா நெல்லை ‌‌‌மாவட்ட ஆட்சியரும் அவரது காவல்துறையும் 17 தாழ்த்தப்பட்ட மக்களைக் குழந்தைகள், பெண்கள் என்று பாராமல் தாமிரபரணி ஆற்றினுள் அடித்துப் போட்டுக் கொலை செய்ததுடன் இனிதே நிறைவடைந்தது. அதில் பொதுமைக் கட்சி(மார்க்சியம்) மாவட்டச் செயலர் பழனி என்பவரும் அடி வாங்கியதால்தான் இந்தப் பண்பாட்டு மனித உறவுகள் மீட்பு முயற்சி முடிவுக்கு வந்தது. ‘தா‌மிரபரணித் திருவிழா திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் இதே ‌‌‌மாவட்ட ஆட்சியர்தான் என்பது நினைவுகூரத்தக்கது.

            நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் முயற்சிகள் இத்துடன் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிற்கவில்லை. சனங்களின் சாமிகள் என்ற பெயரில் கருத்தரங்குகளும் கண்காட்சிகளும் தொடர்ந்து நடத்துகின்றனர். சிறுதெய்வங்கள் தொடர்பான அனைத்துப் பொருட்களையும் காட்சிக்கு வைக்கின்றனர், கலை நிகழ்சிகள் நடத்துகின்றனர், மறைந்துகொண்டிருக்கும் சிறுதெய்வ வழிபாட்டுக்குப் பெருமை சேர்க்க முயல்கின்றனர். இவ் வழிபாட்டுமுறையைப் பேய் வழிபாடு என்றும் அதைக் கடைப்பிடிப்பவர்களை விரியன் பாம்புக் குட்டிகள் என்றும் இழித்துப் பேசும் ஒரு சமய நிறுவனம் இத்தகைய நடவடிக்கையில் ஏன் ஈடுபட வேண்டும்?

            மாபெரும் வரலாற்று ஆய்வாளரான ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வில் டூரான்று தன் அரிய படைப்பான நாகரிகத்தின் கதை தொகுதியின் முதல் மடலமான கிழக்கு நமக்கு வழங்கிய கொடை என்ற நூலில் யூதர்களின் சமயத் திரிவாக்கத்தை(படிமுறை வளர்ச்சியை)ச் சிறப்பாகத் தடம் பிடித்துக் காட்டுகிறார். தன்னை மதிக்காத மனிதர்களை அழிப்பேன் என்று தொடங்கி தனக்குப் போட்டியாகவுள்ள தெய்வங்களை அழிப்பேன் என்று மாறி என்னை வணங்கும் மக்களுக்கு அருள்வேன் என்று மென்மையடைந்து இறுதியில் துயருறும் மக்களுக்குத் தன் குருதியையும் உயிரையும் வழங்கி அடியவரின் தோழனாய் மாறிய ஏசுநாதர் என்ற வடிவம் பெற்றது என்று கூறுகிறார். இன்று அந்த ஏசுநாதர் படிமம் கூடப் பணக்கார நாடுகளில் கோயில்களினுள் முடங்கிவிட்டது. சமயம் கூறும் எந்தக் கோட்பாட்டையும் அம் மக்கள் பின்பற்றுவ‌‌தில்லை. ஒரு மக்களின் பொருளியல் விளைப்புப் பாங்குதான் அவர்களது சமயம் உட்பட அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளையும் முடிவு செய்கிறது என்பதற்குச் சான்றாக இன்று கிறித்துவம் நிற்கிறது.

            நம் நாட்டில் யூதக் கடவுள் பெற்ற பல்வேறு திரிவாக்கங்களின் அனைத்து வடிவங்களுமே ஒரே நேரத்தில் நம் மக்களிடம் நிலவுகின்றன. சுடலை மாடன் பீடத்துக்கு முன் பலியிடப்படும் ஆட்டின் அவலக் குரல் ஒரு திக்கிலும் சிவனியக் குரவர்களான அப்பர், சம்பந்தர் போன்றோரின் அன்புக் குரல்கள்(கழுவிலேற்றப்பட்ட 8000 அம்மணர்களின் மரண ஓலங்களோடு) இன்னொரு திக்கிலும் ஆண்டாளின் பெண்ணியக் குரல் இன்னொரு திக்கிலும் மக்களுக்கு புரியாததும் அதனாலேயே மதிக்கப் படுவதுமாகிய பார்ப்பனப் பூசாரிகளின் அத்யயனக் குரல்கள் (அத்யயனம் என்றால் பொருள் என்ன வென்று புரியாவிடினும் ஓசை பிறழாமல் பாடுவது என்று பொருள்) இன்னொரு திக்கிலும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்து இனங்காண முடியாமல் ஒலிக்கின்றன. மக்களிடையில் உள்ள இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் மக்களிடையில் நிலவும் பொரு‌ளியல் நிலையில் உள்ள ஏற்றத் தாழ்வுக்கேற்ற பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளே. அடித்தள மக்கள் தங்கள் பொருளியல் இயலாமையால் உருவான அறியாமையாலும் இறுகிப் போய்விட்ட சாதிப் பிளவுகளின் காரணமாகவும் எண்ணற்ற சிறு தெய்வங்களை வழிபடுகிறார்கள். அவற்றின் அருள் மூலம் பொருளீட்டி வாழ்க்கை எனும் கடலை நீந்திக் கரையேறிவிடலாம் என்ற நம்பிக்கையில் தம்மிடம் அரிதாகச் சேரும் சிறிதளவு செல்வத்தையும் இழக்கின்றனர். ஊர்ப்புறங்களில் உள்ள சாதியமைப்பு கோயிலின் உள்ளே யார் யார், ‌‌‌வெ‌ளியே யார் யார் என்று பிரித்து வைக்கிறது. எனவே ‌‌‌வெ‌ளியே நிற்போர் தமக்கென்று தனிக் கோயிலும் உள்ளே நிற்போர் தம்மை வலுப்படுத்திக் கொள்ளவென்று தனிக் கோயிலுமாக வளர்க்கின்றனர். ஆகமக் கோயில்கள் பார்ப்பனர்களைத் தவிர வேறெவரும் உள்ளே புக முடியாத நிலையில் அவர்களே மக்களுக்கும் தங்களுக்கும் கூடப் புரி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாத சொற்களில் ஆண்டவனைப் போற்றுகின்றனர். இன்று ஆட்சியாளர்களும் இந்து சமய இயக்கங்களும் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெற்றால் தமிழகத்தில் மக்களுக்கென்று சொல்ல ஒரு காலடி நிலம் கூடக் கிடைக்காது. எல்லா நிலமும் கடந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலத்தில் இருக்கின்ற அல்லது அழிந்து போய்விட்ட ஏதோவொரு கோயிலுக்கு யாரோவொருவரால் எப்போதாவது ஒருமுறை எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கும். அந்தத் தடயங்களைத் தோண்டிப் பார்ப்பதே இன்று அகழ்வாய்வாளர்கள் வரலாற்றாய்வாளர்களின் வேலையாகிப் போய்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விட்டது. அப்படியும் இன்று தமிழகத்‌‌தில் உள்ள நிலங்களில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கால்பகுதிக்குக் குறையாமல் கோயில் சொத்துகளாக உள்ளன. இந்தச் சொத்துகளின் வரும்படியில் அரசியல் ஆதிக்கம் உள்ள பல்வேறு மடத் தலைவர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள் ஆகியோர் சுருட்டியது போக எஞ்சியவை குடமுழுக்கு, சம்ரோச்சணம், எண்ணற்ற முழுக்குகள்(அபிசேசங்கள்) ஆகியவற்றில் பாழாவதுடன் பால், நெய், பழம், தேன் போன்ற மக்களுக்குப் பயன்படும் பண்டங்களும் மக்களின் உழைப்பும் பாழாகின்றன. கடவுளென்ற பெயரால் கருவறைக்குள் சிறை வைக்கப்பட்டுள்ள சிலைக்குப் பார்ப்பனர்கள் அன்றாடம் குளியல், ஆடை - அலங்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காலம், திருவீதி உலா என்று ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிறுபிள்ளைத்தனமான சடங்குகள் செய்வதில் மகிழ்கின்றனர். அதனாலேயே தாங்கள் மக்களில் உயர்ந்தவர்கள் என்று இறுமாந்து நிற்கின்றனர். பிள்ளை விளையாட்டு விளையாடும் இவர்களது அறிவு வளர்ச்சி அல்லது வளர்ச்சியின்மைக்குக் கீழ்ப்பட்டதாகத்தானே இவர்களை உயர்வாக எண்ணிப் பின்பற்றத் துடிக்கும் பிறரது அறிவு வளர்ச்சியும் இருக்கும்!

            மிகப் பழமை வாய்ந்த இந்த மண், வரலாற்றுக் காரணங்களால் வளர்ச்சி தடைப்பட்டு நிற்கிறது. சிறந்த மண்வளம், நீர்வளம், இயற்கைச் சூழல், தட்பவெப்ப நிலையுடன் ஆற்றலுள்ள மனித வளமும் மிக்க இம் மண்ணில் இவற்றைச் சிறந்த முறையில் கையாண்டு செல்வத்தைப் பெருக்கி மக்கள் வளவாழ்வு வாழ முடியாமல் எண்ணற்ற தடைகள் உள்ளன. உழைப்போரும் விளைப்புச் செயல்களில் ஈடுபடுவோருமான உழுதொழிலோரும், உழு‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வித்துண்ணும் நிலவுடைமையாளரும் தொழில் வல்லாரும் வாணிகரும் கடல் தொழில் செய்வோரும் இழிகுல மக்களாக ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்ததால் இத் துறைகளில் ஈடுபட்டிருந்த மக்கள் தங்கள் துறைகளில் மேம்பாடு செய்வது பற்றிச் சிந்திக்கவே முடியவில்லை. இத் தடைகளைத் தம் நாடுகளில் உடைத்து ‌‌‌வெ‌ளிப்பட்ட ஐரோப்பியர்களால் நம்மை எளிதில் வெற்றிகொள்ள முடிந்தது. அவர்கள் நம் மீது நேரடியாக ஆதிக்கம் செய்த காலத்தில் இங்கிருந்த பிற்போக்கு ஆதிக்க விசைகள் வலுவிழந்தன. உழவுக்கும் தொழிலுக்கும் மதிப்பு ஏற்பட்டது. பலர் புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு புதிய தொ‌ழில்களில் முன்னேற்றம் கண்டனர். ஆனால் அந்த வளர்ச்சி காந்தியின் அமைதிப் புரட்சியால் ஆங்கிலேயருடன் பகரம்(பேரம்) பேசிப் பெறப்பட்ட விடுதலையின் பின் காந்தியின் வகுப்பினரான  குசராத்தி பனியா - பார்சிகளின் வளர்ச்சியாகக் குறுகியது. காந்தி வகுத்த வஞ்சகமான ஊரகப் பொருளியல் இக் குழுவினர் தவிர்த்த பிறரின் வளர்ச்சிக்கு எதிராகச் செயற்படு‌‌‌கிறது. அதற்குத் தோன்றாத் துணையாகப் பாட்டாளியக் கோட்பாட்டைத் தூக்கிக் கொண்டு திரியும் பொதுமைக் கட்சிகள் செயற்படுகின்றன. இன்னொரு புறம் அமெரிக்காவிடம் பணம் பெற்றுக் ‌கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனங்கள் திசை‌க்கொன்றாக நின்று கொண்டு நம் பொருளியல் வளர்ச்சிக்கு எதிராக உளவியல் தாக்குதல்கள் நடத்து‌‌‌கின்றன. இவர்களோடு அரசும் சேர்ந்து கொண்டு வருமான வரி, நில உச்சவரம்பு ஆ‌‌‌கியவற்றையும் வேளாண் பொருட்களின் நடமாட்டக் கட்டுப்பாடு, இருப்பு வைத்துக் கொள்ள வரம்பு என்று வேரில் வெந்நீர் ஊற்றுகிறது.

            பணக்கார நாட்டு மக்கள் உறுதியான வேலைவாய்ப்புகள், வளமான வாழ்வு, தரமான மருத்துவ வசதிகள் போன்றவற்றின் மூலம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைத் தாங்கும் ஒரு நிறைவான பொருளியல் பின்னணியில் தேவையற்ற மூடநம்பிக்கைகளை ஒ‌ழித்து மக்களாட்சி முறையில் அமைந்த ஓர் இறை வழிபாட்டு முறையை வகுத்துக்கொண்டுள்ளனர். அங்கு சமயம் கோயில்களின் எல்லையை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விட்டு ‌‌‌வெ‌ளியே வருவதில்லை. சமயத் தலைவர்கள் மக்களின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அது போல் நம் நாட்டிலும் நம் சமயத்தை மாற்றியமைத்து மேம்படுத்தும் ஒரு தேவை இன்று உள்ளது. அந்தத் தேவையின் ‌‌‌வெ‌ளிப்பாடுகள்தாம் சிறுதெய்வ வழிபாடு, ஆகம வழிபாடு இரண்டையும் சாராத சாய்பாபா, மேல்மருவத்தூர் பீடம் போன்றவற்றுள் படித்த மக்கள் அடைக்கலம் ஆவது. இவ் வழிபாட்டு முறையின் தலைவர்கள் இதன் திரைமறைவில் தந்திரங்கள் செய்து கோடி கோடியாகக் குவிக்கிறார்கள். இந்தத் திரிபுகளை ஒழித்து மக்கள் தங்கள் உளவியல் தேவைகளை நிறைவேற்ற சீர்திருத்தக் கிறித்துவ சபையைப் போன்றும் அதற்கு மேம்பட்டதாகவும் உள்ள ஒரு சமயத்தை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்குப் பின்புலமாக ஓர் உயர்ந்த பொருளியல் வளர்ச்சியையும் நாம் எய்த வேண்டியுள்ளது. இதைப் புரிந்துகொள்ள இயலாத சிலர் முற்போக்கினர் என்று தம்மைக் கருதிக்கொண்டு ஆகம முறையை எதிர்க்கிறோம் என்று காலங்கடந்து போனதும் மக்களைச் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சாதிகளாகவும் சிறு குழுக்களாகவும் பிரிப்பதுமான சிறுதெய்வ வழிபாட்டை மீட்க முயல்‌‌‌கின்றனர். இவர்கள்தாம் சுந்தர‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ராமசாமியும் பிரான்சிசு செயப‌‌தியும் திட்டமிட்ட அந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டவர்கள். ‌‌‌வெ‌ளிப் பார்வையில் சாதி ஒழிப்பு, ஆகம எதிர்ப்பு என்று கூறிக்கொண்டு இன்றைய சாதி அமைப்பில் கிடைக்கும் ஒதுக்கீட்டுச் சலுகைகளால் தங்கள் பதவி உயர்வுகள், தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் பதவி வாய்ப்புகளை மனதில் எண்ணி, ‘பண்பாட்டுப் பன்மையத்தின் தேவை பற்றிப் பேசுகின்றனர். ‘சிறுபான்மைச் சமயங்கள் எனப்படுபவற்றின் உரிமைகள், பல்வேறு பண்பாடுகள் கொண்ட இந்தியாவின் மொழித் தேசியங்களின் உரிமை என்ற முழக்கத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு இவர்கள் தங்கள் தங்கள் சாதிப் பண்பாடுகளைப் பேண முயல்கின்றனர்.

            இந்த உளவியல் பின்னணியில்தான் உவரி கோயிலுக்குக் குமரி மாவட்ட நா‌டார்களிடையில் இருக்கும் செல்வாக்கைப் பார்க்க வேண்டும். அதே நேரத்‌‌தில் அண்மையில் முத்துக்குட்டி அடிகளாரின் தொண்டர்களாகிய சீடர்கள் வழிவந்த சிலர் அய்யா வழியைப் பரவலாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளளனர். அதற்குப் படித்த நாடார்கள் பலருடைய ஆதரவும் பெருகியுள்ளது. இதற்கான பொருளியல் பின்புலத்தையும் பார்க்க வேண்டும். அகத்தீசுவரம், தோவாளை வட்டங்களில் அடிகளின் தொண்டர் குடும்பங்களின் வட்டத்துக்கு ‌‌‌வெ‌ளியே வடசேரிச் சந்தை மற்றும் கோட்‌டாறு கூலக்கடைத் தெருவில் தொழில் செய்யும் நாடார் சாதி வாணிகர்களே அய்யா வழியைப் பின்பற்றினர். இந்த வாணிகர்களின் எண்ணிக்கையும் ஆட்சிப் பரப்பும் கோட்டாற்றுக்கும் வடசேரிக்கும் இடைப்பட்ட இடத்தில் விரிவடைந்ததும் தங்கள் இருப்பை நிலைநாட்ட நகரின் நடு‌‌வாகிய வேப்பமூடு சந்திப்பில் ஒரு காமராசர் சிலையை நிறுவ முயன்றனர். நகராட்சி இசைவு தர மறுத்தது. நாடார்கள் அதை மீறிச் சிலையை நிறுவி‌னர். நகராட்சி அதை அகற்‌‌‌‌‌றியது. பெரும் போராட்டத்துக்குப் பின் அச் சிலை உரிய இசைவுடன் நிறுவப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது அங்கிருக்கும் புகழ்பெற்ற சச்சிவோத்த‌‌‌மா(இது சி.பி. இராமசாமி ஐயருக்கு அவர் திருவிதாங்கூர் ‌‌திவானாக இருந்த போது வழங்கப்பட்ட பட்டம்) பூங்காவினுள் அமைந்திருந்த நூல் நிலையத்துக்கு நாடார்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக மக்களுக்குப் பயன்பட்டு வருவதாகும். இருந்தாலும் அது நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் முதலிய மேல் சாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்‌‌‌கிறது. நூல் நிலையம் எரிக்கப்பட்ட பின்னர் அதை அரசு மீண்டும் கட்டிக் கொடுத்து பூங்காவினுள் சீவாவுக்கு ஒரு நினைவு மண்டபமும் அமைத்துத் தந்தது. இது, நூல் நிலையங்கள் போன்ற மக்களுக்குப் பயன்படும் அமைப்புகளை அழிப்பதுடன் சீவா போன்ற மேம்பட்ட தலைவர்களைச் சாதி வட்டத்துக்குள் கொண்டு வந்து சாதி மோதல் தன் அருவருப்பான தோற்றத்தை ‌‌‌வெ‌ளிப்படுத்திய ஒரு நிகழ்வாகும்.      

 குமரி மாவட்டக் கலவரம் :
            குமரி மாவட்டத்திலுள்ள மொத்த நாடார்களில் ஏறக்குறைய பாதிப்பேர் ‌‌‌கிறித்துவர்கள். அவர்கள் மேற்கு ‌‌‌வட்டங்களில்தான் மிகுதியாக உள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவையன்றி தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் பெருமளவில் பணத்தைப் பெறும் நிறுவனங்களும் உள்ளன. கல்வி நிறுவனங்களில் உள்ள சிறுபான்மையர் சிறப்புரிமையைப் பயன்படுத்தி அங்கு பெரும்பாலும் கிறித்துவர்களையே பணிக்கு அமர்த்துகின்றனர். தலைமையாசிரியர், முதல்வர் முதலிய பதவிகளும் அவர்களுக்கே வழங்கப்படுகின்றன. ‘தொண்டு நிறுவனங்களிலும் பெரும்பாலும் கிறித்துவ இளைஞர்களே அமர்த்தப்படுகின்றனர். இந்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ நிறுவனங்களில் இந்துக்கள், குறிப்பாக ஆடவர்கள் வேலைக்குச் சேர்ந்தால் அவர்களுடன் பணியாற்றும் கிறித்துவப் பெண்களுடன் நெருக்கம் ஏற்பட்டு அவர்களை மணந்துவிட்டு மதம் மாறி விடுகின்றனர் (இந்நிறுவனங்களில் பெரும்பாலும் ஆண் - பெண் இணைகளாகவே பணி ஒதுக்கீடு செய்கின்றனர். இங்கு நடைபெறும் பணிகள் மீது மனநிறைவு இல்லாம‌‌லிருந்தால் கூட இளைஞர்கள் அதில் தொடர்ந்து ஈடுபடும் ஈர்ப்பை இந்த நடைமுறை தருகிறது). அதே நேரத்‌‌தில் இந்து நாடார்களிடையில் இளைஞர்களின் படிப்புக்கு ஈடுகொடுக்கத் தக்க கல்விய‌‌‌‌‌றிவுள்ள பெண்கள் வேண்டிய எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால் உயர்கல்வி பயின்றாலும் கிறித்துவப் பெண்கள் போன்று ‌‌‌வெ‌ளியில் செல்வதும் பிற ஆடவருடன் இயல்பாகப் பழகுவதும் இல்லை. வேலைக்‌குச் செல்வதும் மிகக் குறைவு. எனவே தங்கள் பெண்க‌ளின் படிப்புத் தகுதிக்கு ஏற்ற மணமகன்களைக் கிறித்துவ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாடார்ப் பெண்கள் பறித்துவிடுகின்றனர் என்ற ஆத்திரம் இந்து நாடார்களுக்கு இருந்தது[1].

            வேலைவாய்ப்பு, படித்த பெண்களுக்குத் தகுந்த மணமகன்கள் கிறித்துவத்தால் ஈர்க்கப்பட்டமை ஆகியவற்றால் கிறித்துவத்துக்கு எதிரான மனநிலை இளையோர், முதியோர் என்ற வேறுபாடின்றி உருவானது. இது படித்தோர் நடுவில்தான் முதலில் வலுப்பெற்றது. அத்துடன் கிறித்துவர்களை விட இந்துக்கள் கல்வியிலும் பொதுவான செல்வ நிலையிலும் பண்பாட்டு மட்டத்திலும் பின்தங்கியிருந்ததால் சராசரி இந்து நாடார்களுக்கும் கிறித்துவ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாடார்களுக்கும் இடையில் இலைமறை காய்மறையான ஒரு மன இடை‌‌‌வெ‌ளி உருவாகி இருந்தது. இந்தப் பின்னணியில் அதுவரை முன்னாள் நாடான்க‌ளிடையில் மட்டும் வேரூன்றியிருந்த தேசியத் தற்பணிக் கழகம்(இராட்டிரீய சுயம்சேவக் சங்கம் - ஆர்.எசு.எசு.) சிறுகச் சிறுக பிற நாடார்களிடையில், குறிப்பாக படித்த இளைஞர்களிடையில் பரவத் தொடங்கியது[2]. கன்னியாகுமரியிலிருக்கும் விவேகானந்தர் நடுவம் இதற்கு ஊக்கமளித்து வளர்த்தது. (வங்காளிகளின் முன்முயற்சியால் தமிழகத்து மேற்சாதிப் பணக்காரர்களின் நன்கொடை களுடன் தொடங்கப்பட்ட இந் நடுவத்தில் இன்று வங்காளிகளுடன் மலையாளிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ‘தமிழர்கள் வழக்கம் போல் அடிமை செய்கின்றனர்.) நாளடைவில் இந்து முன்ணணி, விசுவ இந்து பரிசத் போன்ற அமைப்புகள் பரவலாக முளைத்தன. மேற்கு வட்டங்களில் செறிந்திருந்த நாயர்கள் அங்கு இந்து சமய அமைப்புகளில் மிகுந்திருந்தனர். இந் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலையில் 1982ஆம் ஆண்டு மண்டைக்காடு அம்மன் கோயில் கொடைவிழா வந்தது.

            உவரி கோயில் போல் மண்டைக்காட்டம்மன் கோயிலும் பொய்யிலிருந்து உருவானதுதான். மண்டைக்காடு என்னும் ஊரில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் கடற்கரை மணலில் கோயில் அமைத்து எலியைப் பிடித்துப் பலிகொடுத்து விளையாடி ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விட்டுக் கலைத்து விடுவார்களாம். அவ்வாறு கலைக்கும் போது ஒரு நாள் கலைக்கப்பட்ட மணற்கோயிலிலிருந்து குரு‌‌தி வந்ததாம். அதைக் கேள்விப்பட்ட பெரியவர்கள் அந்த இடத்தில் கோயிலை அமைத்தார்களாம். கிறித்துவத்தின் பரவலைத் தடுப்பதற்காகக் கட்டப்பட்ட அற்புதம் குறித்த கதையும் கோயிலுமாகத்தான் இது இருக்க வேண்டும். நாடார்களில் தாய்வ‌ழிப் பிரிவான நட்டாத்திகள்தாம் இங்கு பூசகர்களாம். இந்தக் கோயிலில் வழிபடும் அடியார்கள் பெரும்பாலும் நாடார்களும் மதம் மாறாத மீனவர்களுமாவர். கேரளத்திலிருந்தும் பலர் வருவதுண்டு. திருவிழாவின் போது மீன் சமைத்துப் படையலிட்டு வழிபடுவது வழக்கம். இந்தக் கோ‌‌‌‌‌‌‌‌‌யில் கிறித்துவ மீனவர்களுக்குரிய ஒரு மாதா கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. 1982ஆம் ஆண்டு கொடைவிழாவின் போது மாதா கோயிலை நோக்கி வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிக் குழாயில் இந்துத் தெய்வப் பாடல்களைப் பரப்பியதிலிருந்து தொடங்கிய சச்சரவு மோதலாக வளர்ந்து இறுதியில் மீனவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திப் பலர் உயிரிழக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது. உயிரிழந்தவர்களின் பிண ஆய்வுக்குப் பின் அவற்றை நாகர்கோவிலில் உள்ள ‌‌‌மாவட்ட மருத்துவமனையிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல கோட்டாறு பேராயர் முயன்றார். காவல்துறை அதற்கு இசைவு தரவில்லை. கிறித்துவர்களுக்கெதிராக அரசு செயற்படுகிறது என்ற உணர்வு கிறித்துவர்களுக்கு வலுப்பட்டது. இது நடந்து சில நாட்களில் கடற்கரை மீனவர் குடியிருப்பை அடுத்துள்ள ஈத்தாமொழி எனும் ஊரில் நாடார்களின் கடைகள், வீடுகள், தோப்புகளின் மீது மீனவர்கள் திரண்டு வந்து தாக்குதல் நடத்தினர். இதில் அந்தப் பகுதியிலுள்ள முகம்மதியர்களின் பின்னணியும் இருந்தது. வன்முறைத் தாக்குதல், சூறையாடல், தீவைப்பு என்று இந்தத் தாக்குதல் நடந்தது. இது விரிவடைந்து கடற்கரையை அடுத்து வாழ்ந்த நாடார் பகுதிகளிலெல்லாம் நடைபெற்றது. மேற்கில் கிறித்துவ நாடார்களின் மீது நாயர்களும் குறுப்புகள் எனும் மலையாளச் சாதியினரும் தாக்குதல் நடத்தினர். ‌‌‌வெ‌ளிப் பார்வைக்கு இது மதக் கலவரம் போன்று தோன்றினாலும் உள்ளடக்கத்தில் சாதிக் கலவரமாகவே திகழ்ந்தது. சாணார்களால் மீனவர்கள் தாழ்வாகவே நடத்தப்பட்டனர். அவர்களது பொருளியல் - பண்பாடு தாழ்நிலையிலேயே இருந்தது. இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களினால் கல்வியறிவும் ‌‌‌வெ‌ளி வேலை வாய்ப்புகளும் பெற்ற புதிய தலைமுறையினர் தங்களுக்கெதிரான இ‌ழிவுகளை எதிர்க்க முனைந்ததன் ‌‌‌வெ‌ளிப்பாடுதான் இந்தத் தாக்குதல். அது போல் தங்கள் கீழ் அடிமைகளாக இருந்த சாணார்கள் விடுதலை பெற்றதோடு தங்களுக்கு இணையாக வளர்ந்துவிட்டதைப் பொறுக்க முடியாத நாயர்களும் அவர்களது அடியாட்களாகச் செயற்பட்ட குறுப்புகளும் தாக்கினர். ஒரே நேரத்தில் இரு முனைகளில் எதிரெதிரான குறிக்கோள்களை உடையவர்களின் தாக்குதல்களை நாடார்கள் சந்தித்த ஒரு விந்தையான ஒப்பற்ற வரலாற்று நிகழ்ச்சி இது. தமிழகச் சாதியமைப்பின் இயல்பைத் தெளிவாக ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விளக்கக் கூடியது. மேற்கோடியிலிருக்கும் சாதிக்கும் கீழ்க் கோடியி‌‌லிருக்கும் சாதிக்கும் இடைப்பட்ட எல்லாச் சாதிகளும் ஒரே நேரத்‌‌தில் ஒடுக்குபவையாகவும் ஒடுக்கலை எதிர்கொள்பவையாகவும் இருப்பதைக் காட்டும் தெளிவான சான்று இது.

            வெள்ளாளர், செட்டியார் போன்ற சாதியினர் இந்த மோதலைத் தூண்டி விடுவதில் குறியாயிருந்தனர். இதில் ஒரு நுண்ணிய கணிப்பும் உண்டு. குமரி மாவட்ட நாடார்களில் கிறித்துவர்களும் இந்துக்களும் சம எண்ணிக்கையில் உள்ளனர். குமரி ‌‌‌மாவட்டத்துக்கு ‌‌‌வெ‌ளியிலும் ஏறக்குறைய இதுதான் நிலை. இந்த நிலையில் சமய அடிப்படையில் ஒரு மோதல் உறுதிப்பட்டதென்றால் அது அவர்களது வலிமையை அழித்துவிடும். அத்துடன் ஏறக்குறைய அனைத்துக் குடும்பங்களிலும் கிறித்துவர்களும் இந்துக்களும் உள்ளனர். இந்த நிலையில் ஒரு மோதல் ஏற்பட்டால் வீட்டுக்கு வீடு, தெருவுக்குத் தெரு குருதியாறு ஓடும். காவல்துறையினால் கட்டுப்படுத்த முடி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாத நிலை ஏற்படும். ஆனால் அத்தகைய ஒரு நிலை ஏற்படாமல் இருக்க அந்த நிலை ஏற்பட விரும்பிச் செயற்பட்ட மேற்சாதியினரின் ஒரு முயற்சியே காரணமானது. நாகர்கோயிலில் நடைபெற்ற ஓர் அமைதிப் பேச்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சின் நடுவே பக்கத்து ஊரிலுள்ள ஒரு கிறித்துவக் கோயில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பேச்சை இடையில் நிறுத்திவிட்டுப் போய்ப் பார்த்த போது அது பொய்யென்று தெ‌‌‌‌‌‌‌ரிந்தது. எனவே நாடாரில் இரு சாராரும் விழித்துக் கொண்டனர். அனைவரும் சேர்ந்து பள்ளம் எனும் ஊரில் நாடார்கள் மீது தாக்குதல் நடத்‌‌திய மீனவர்கள் மீது கடுமையான எதிர்த் தாக்குதல் நடத்தியதுடன் கலவரம் ஒரு முடிவுக்கு வந்தது.

            இந்த மோதல் தற்செயலாக நடந்ததாகத் தோன்றினாலும் இதனுள் ‌‌‌வெ‌ளிவிசைகளின் செயற்பாடு இருப்பதற்கான தடயங்கள் வெளிப்பட்டன. இரண்டாம் கட்டக் கலவரம் தொடங்கிய ஈத்தாமொழிக்கு பிர்லா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து சென்றதாக ஒரு பேச்சு அடிபட்டது. கடற்கரை மீனவர்களை ஆங்காங்கிருந்த மாதா கோயில்களில் தீப்பந்தம் காட்டிச் செய்தி சொல்லித் திரட்டியதாகவும் அதில் மத குருக்கள் முன்னின்று செயற்பட்டதாகவும் கூறப்பட்டது.

            தமிழ் நாட்டில் மத அடிப்படையில் மோதல் ஏற்பட்டால் மத அடிப்படையில் சாதி மக்கள் பிளவுபடும் வாய்ப்பு நாடார்களிடையிலும் தாழ்த்தப்பட்ட மக்களிடையிலும்தான் உண்டு, ஏனென்றால் இங்கு தான் கிறித்துவர்கள் குறிப்பிடத்தக்க விகிதத்தில் உள்ளனர். அவர்களுக்குத்தான் ஓர் எதிர்ப்பு விசையை உருவாக்கும் அளவிலான எண்ணிக்கை வலிமை உள்ளது. இந்த உண்மை இந்து முன்னணித் தலைவ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ராக இக் கலவரத்தின் போது திடீரென்று அமர்த்தப்பட்ட தாணு‌‌லிங்கர்(நாடார்) வாயிலிருந்து வந்ததுதான் சிறப்பு. இந்த வகை‌‌‌‌‌‌‌‌‌யில் நாடார் சாதியினர் மத அடிப்படையில் பிளவு படுவதில் சில ‌‌‌வெ‌ளிவிசைகளுக்கு ஆதாயம் உண்டு. கிட்டத்தட்ட சம எண்ணிக்கையிலுள்ள கி‌‌‌‌‌றித்துவ, இந்து நாடார்களுக்கிடையில் ஒரு மோதலை ஏற்படுத்துவது எளிது. அது தமிழகம் முழுவதுமுள்ள நாடார்களிடையில் பிளவை ஏற்படுத்தும். அதனால் அவர்களால் ஏற்படும் தொழில் வாணிகப் போட்டியைத் தணிக்கலாம். இது பனியா - பார்சிகளின் கணிப்பு. உலகில் எந்தவொரு மூலையிலும் புதிதாக ஒரு பொருளியல் விசை வளர்வது தன் உலகளாவிய அரசியல் - பொருளியல் ஆ‌‌திக்கத்துக்கு வெடித்துக் கிளம்பும் அறைகூவல் என்பதை அமெரிக்கா தலைமையிலுள்ள வல்லரசுகள் உணர்ந்துள்ளன. எனவே கிறித்துவர்களை உலுப்பிவிடும் பணியை எண்ணற்ற தன் தொண்டு நிறுவனங்கள் மூலமாக அவை மேற்கொண்டன. இவ்வாறு குமரி மாவட்டத்திலிருந்த சாதி சமய முரண்பாடுகளைப் பயன்படுத்தி ஒரு கலவரத்தை உருவாக்குவதில் பனியா - பார்சிகளும் அவர்களது காப்பாளர்களாகிய வல்லரசுகளும் இணைந்தே செயற்பட்டன என்பது உறு‌‌தி.

            இந்தக் கலவரத்துக்கு முன்பே மாவட்டங்களுக்கும் பேருந்துப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் தலைவர்களின் பெயர்களைச் சாதி அடிப்படையில் வைக்கும் திருப்பணியைக் கருணாநிதி தொடங்கி அதை .கோ.இ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ரா. வளர்த்து வைத்திருந்தார்[3]. அந்த வழியில் குமரி மாவட்டத்தில் இயங்கும் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு நேசமணியின் பெயர் வைப்பதாக .கோ.இரா. அறிவித்திருந்தார். அதற்கு வெள்ளாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பொதுமை இயக்கத் தலைவர் சீவாவின் பெயரை வைக்க வேண்டுமென்று கேட்டனர். இவ்வாறு இது சாதி வடிவம் எடுத்திருந்தது. இந் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலையில் கலவரத்துக்குப் பின் மீண்டும் அரசு நடவடிக்கை எடுத்த போது நேசமணியைக் கிறித்துவராகவும் சீவாவை இந்துவாகவும் காட்டினர். இறுதியில் நேசமணியின் பெயர் வைப்பதாக முடிவு செய்து நடைமுறைப்படுத்திய போது நாடார்களிடையில் மத அடிப்படையில் பிளவும் கலவரமும் ஏற்படும் என்ற அச்சமும் கலக்கமும் ஒரு தரப்பிலும் அதுவே ஒரு எதிர்பார்ப்பாக மறுதரப்பிலும் இருந்தது. ஆனால் இரண்டுமே பொய்த்தன.

            இந்தக் கலவரத்தினால் வெளிப்படையாக ஆதாயம் அடைந்தவர்கள் இரு சாரார். அரசியலில் செல்வாக்கிழந்து ஏதிலியாக(அனாதையாக)க் கிடந்த தாணுலிங்கரைத் தூக்கிப்பிடித்து நாடார் என்ற அவரது சாதியைப் பயன்படுத்தி இந்தியா முழுவதுமுள்ள நகர்களிலும் ஊர்களிலும் தொழில் நடத்திவரும் பணம் படைத்த இந்து நாடார்களிடமிருந்து பல கோடிக் கணக்கான பணத்தைக் கறந்துவிட்டனர் இந்து முன்னனியினரும் தே..கழகத்தினரும். அதே நேரத்தில் கடலோர மீனவர்களுக்கிடையில் நாடார்கள் நடத்தி வந்த வாணிகம் முகம்மதியர்களின் கைக்குச் சென்றது[4].


[1] தமிழகத்தில் பார்ப்பனர்களிடை‌‌‌‌‌‌‌‌‌யில் சீதனம், திருமணச் சடங்குகள் என்று பெருஞ்செலவு ஏற்படுவதால் பல பெண்க‌ளின் திருமணம் தள்ளிப் போவதால் நன்கு படித்து வேலையிலுள்ள தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர். தம் சாதியுடனான உறவுகளை இந்த இளைஞர்கள் துண்டித்துக்கொண்டு முழுப் பார்ப்பனர்களாக மாறிவிடு‌‌‌கின்றனர். தங்கள் பழைய சாதியை மறைப்பதற்காக பழைய பார்ப்பனர்களை விட முனைப்பான சாதி ஆர்வம் காட்டுகின்றனர். அதே நேரம் கலப்புத் திருமணம் செய்த இணைகளுக்கும் அவர்களது பிறங்கடைகளுக்கும் உரிய சலுகைகளையும் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறு சலுகைகளால் தூண்டப்பட்டும் தங்கள் நெருக்கடிகளுக்குத் தீர்வாகவும் மேற்கொள்ளப்படும் கலப்பு”த் திருமணங்களால் சாதி ஒழிப்பை எய்த முடியாது. ஆணும் பெண்ணும் கல்வி பெற்று அனைவருக்கும் தாராளமான வேலை ‌‌வாய்ப்புகள் உருவாகி அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்பும் உரிமையுணர்வும் பெற்று குடும்பக் கட்டுகளை அறுத்துக் கொண்டு ‌‌‌வெ‌ளியே வந்து தான் விரும்பும் எவரையும் மணந்து கொள்ளும் நிலை பரவலாகும் போதுதான் எய்த முடியும்.
[2] பழைய நாடான்களிடையில் தே... பரவியதற்கும் இப்போது பரவியதற்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு. முன்னது சாணார்கள் மத மாற்றத்தினால் தங்கள் ஆதிக்கத்திலிருந்து விடுபடுகிறார்களே என்ற ஆத்திரத்திலிருந்து தோன்றியது. இப்போதைய மாற்றம் கிறித்துவர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக உருவானது. அதே நேரத்ததில் தமிழகத்தில் முக்குலத்தோர் போன்ற ஆதிக்க சாதியினர்களிடையில் அவ்வியக்கம் பரவுவதற்குக் காரணம் தம் ஆதிக்கத்தினுள்ளிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் மேம்படுகிறார்களே என்பதுதான்.
[3] ம.கோ.இரா. தன் அரசியல் செல்வாக்கு வட்டத்தை வரிவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாக மதுரைப் பல்கலைக் கழகத்துக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழகம் என்று பெயர் சூட்டினார். உடனே தமிழ் ஈனத் தலைவர் கருணாநிதி “அய்யய்யோ, முக்குலத்தோருக்கு ம.கோ.இரா. இரண்டகம் செய்துவிட்டார்” என்று ஓலமிட்டு ஒரு ஊர்வலம் கூட நடத்தினார். அவர் எதிர்பார்த்தது போல் கலவரம் எதுவும் வெடிக்கவில்லை. எத்தகைய இழிபிறவிகள் நம் தலைவர்களாகும் பேறு பெற்றிருக்கிறோம் பார்த்தீர்களா? 
[4] இது தற்காலிகமானதே. இந்த வாணிகம் இப்போது மீனவர்களிடம், குறிப்பாக மீனவப் பெண்களிடம் நிலைத்துவிட்டது.

0 மறுமொழிகள்: