29.8.18

திசைமாறிய கல்வி

திசை மாறிய கல்வி:
குமரிமைந்தன்
உச்ச நய மன்றத்திலிருக்கும் அறிவு பேதலித்த தலைமை இரண்டு நாட்களில் மருத்துவ பொது நுழைவுத்தேர்வை நடத்த வேண்டுமென்று "ஆணை" இட்டிருக்கிறது. உண்மையில் இந்த நுழைவுத்தேர்வு என்பதுதான் என்ன என்பதை இறுதியில் பார்ப்போம். அதற்கு முன் கல்வி என்றால் என்ன பார்ப்போம்..

கல்வி என்பது கரையிலா ஒரு பெருங்கடல், 'கல்வி கரையில' என்றார் பண்டைப் புலவர். ஒரு குழந்தையாகப் பிறந்து முதுமையாகிச் சாவது வரையிலும் தொடர்வது கல்வி. அப்படியானால் கல்வி என்ற பெயரில் கட்டிடங்களில் இருந்து பெறப்படுவது யாது? அது எழுத்தறிவின் மூலம் கற்பது. இவ்வாறு் எழுத்தறிவின் மூலம் கற்பதை செயலறிவின் மூலம் மேம்படுத்துவதற்கு வாய்ப்பு இன்றைய கல்வி முறையில் உள்ளதா?

இல்லை என்று உறுதியாகக் கூற முடியும்.

பல்லாயிரக்கணக்கில் வானூர்திகள் செயற்படும் இந்தியாவில் ஒரு வானூர்தியைக் கழுவிவிடுவதற்கு(சர்வீசு என்கிறார்களே அந்தப் பராமரிப்புக்கு)க் கூட ஓர் அமைப்பு இல்லை என்பது இழிவுகூர் அண்மைச் செய்தி. அப்புறம் வானூர்தியியல்(aeronautics) படிப்பு என்று வைத்து அங்கு என்னதான் கிழிக்கிறார்கள்? புத்தகங்களில் இருந்து பாராமல் படித்து தேர்வில் கக்குகின்றனர். இதில் எவன் புத்தகத்தில் இருப்பதை எழுத்து பிசகாமல் தாளில் எழுதித் தருகிறானோ அவன் அறிவாளி. படித்ததைச் சிந்தனையில் வாங்கி சொந்தச் சொற்களில் எழுதுகிறவன் அறிவு குறைந்தவன். இதில் கொடுமை என்னவென்றால், மதிப்பெண் வழங்குபவனுக்கும் செய்திகள் சிந்தனையில் ஏறியிருக்காது, அவனும் பாராயணம் பண்ணி வந்தவனே. கோயில்களில் மந்திரம் சொல்வதில் அத்யயனம் என்று ஒன்று உண்டு. அதன் பொருள், ஒன்றன் பொருள் புரியாவிடினும் அதனை ஒலிப்பு மாறாமல் ஓதுதல் என்பதாகும். இதுதான் இன்றைய கல்விமுறையின் உள்ளடக்கம்.

உடலுழைப்பவரும் கைத்தொழில் வல்லோரும் இழிபிறவிகள் என்பது பண்டைத் தமிழக - இந்திய மரபு. தொல்காப்பியமே அதைத்தான் கூறுகிறது. பார்ப்பனர் என்றும் வெள்ளாளர் என்றும் கூறப்படுவோர் உச்சியில் அமர்ந்துகொண்டு மடங்கள் மூலமாகவும் கோயில்கள் மூலமாகவும் இலவய உணவு, உடை, உறையுள் வசதிகளுடன் படித்து ஆள்வினை(நிர்வாக)ப் பதவிகளிலும் படையணித் தலைவர்களாகவும் ஆட்சி புரிந்தது மட்டுமின்றி மக்களின் தாய்மொழிகளை இழிக்கவும் ஒழிக்கவும் செய்தனர்.

அத்துடன் பார்ப்பனர்கள் தாங்கள் பூசை செய்த கோயில்களிலிருந்த தேவதாசிகளைப் பயன்படுத்தி எளிதில் பதவிகளைப் பிடிக்க முடிந்தது. ஆங்கிலர் காலத்திலும் அதுதான் நடந்தது. வடக்கத்தி பனியாக்கள் முன்னாள் சென்னை மாகாணத்தின் பொருளியலைக் கைப்பற்ற முனைந்த காலகட்டத்தில் இங்குள்ள மேற்குடியினர் தாங்களும் தொழில்முனைவுகளில் ஈடுபட முயன்று அரசின் ஒப்புதல்களைப் பெற அலுவலகங்ககளுக்குச் சென்ற போது அலுவல்கங்கள் முழுவதையும் தம் கைப்பிடிக்குள் வைத்திருந்த பார்ப்பனர்களின் ஆடிய பேயாட்டம்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் வித்தானது. பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரசு எனப்படும் பேரவைக் கட்சியின் வளர்ச்சியால் கவலை அடைந்திருந்த ஆங்கில அரசு கொடுத்த வாய்ப்பால் தேர்தலில் வென்று ஆட்சியமைத்த தென்னிந்திய நல உரிமைச் சங்கமாகிய நயன்மை(நீதி)க் கட்சி பல பெருந்தொழில்கள் தமிழகத்தில் உருவாக வழியமைத்தது மட்டுமின்றி கல்வியிலும் அரசுப் பணியிலும் ஒதுக்கீட்டை நடைமுறைக்குக் கொண்டுவந்தது, தேவதாசி முறையை ஒழித்தது.

காலவோட்டத்தில் நயன்மைக் கட்சி செல்வாக்கிழக்க அது பெரியார் கைக்கு வந்தது. பார்ப்பன - பனியா எதிர்ப்பு என்று கூறிவிட்டு பார்ப்பன எதிர்ப்பை மட்டுமே கையிலெடுத்துக்கொண்டார் பெரியார். ஆக பார்ப்பனியம் எனப்படும், உடலுழைப்பையும் தொழில்வல்லாரையும் இழிவுபடுத்தும் தமிழ் - இந்தியப் பார்ப்பனியம் இன்று முழு வலிமையுடன் தமிழகத்தை வேறு எந்த மாநிலத்தையும் விட பிடித்தாட்டுகிறது. அதன் உச்ச கட்டமாக வேலை இல்லாமல் கோடிக்கு மேற்பட்ட இளைஞர்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் போது சில்லரை வேலைகளைச் செய்யக்கூட அயல் மாவட்டத்தினர் இங்கு சிற்றூர்கள் வரை இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது இங்கு யார் கண்களையும் உறுத்தவில்லை, எவர் கருத்திலும் தைக்கவுமில்லை. ஏற்கனவே இங்கு நுழைந்து அனைத்து வாணிகத் துறைகளையும் பிடித்துவிட்ட மார்வாரிகளோடு இந்தப் புது வந்தேறிகளும் சேர்ந்து எதிர்காலத் த்மிழகத்தில் உருவாகப் போகும் சிக்கல்கள் அத்தனை எளிதாக இருக்கப்போவதில்லை.

இது இப்படி இருக்க, இதற்குத் தீர்வுதான் என்ன? அதை இப்போது பார்ப்போம்.

கல்வி வாழ்க்கை முழுவதும் தொடர்வது என்றால் இன்றைய கல்வி நிலையங்களில் புகட்டப்படும் எழுத்தறிவால் பயனே இல்லையா என்ற கேள்வி எழும். எழுத்தறிவுக்கு மனித வரலாற்று வளர்ச்சியில் முதன்மையான பங்கு உண்டு. அது என்ன? ஒவ்வொரு தலைமுறையும் தன் பட்டறிவுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுதல் என்ற இன்றியம்மையாத பணியை எழுத்தறிவு செய்கிறது. நம முன்னோர் தாம் பட்டறிந்தவற்றை நமக்கு இட்டுச் செல்ல அவற்றை அடுத்த கட்டத்துக்கு நாம் உயர்த்தி எழுதி வைக்க, வரும் தலைமுறையினர் அதை உள்வாங்கி நாம் எய்தியதை விட ஓர் உயர்ந்த கட்டத்துக்கு தாம் மேலெழ என்றவாறு மனிதக் குமுகத்தை எழுத்தறிவு உயர்த்துகிறது. ஆனால் இந்தத் தொடர்நிகழ்வு எழுத்தறிவால் நம் நாட்டில் நிகழ்ந்துள்ளதா என்றால் இல்லை என்பதே அதன் விடையாக இருக்கிறது. ஏனென்றால் நமது கல்விமுறையின் அமைப்பு அத்தகையது.

மனப்பாடம், பாராமல் படித்தல், பாராயணம் என்ற சொற்களால் குறிக்கப்படும் திறமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இப்படிப்பட்டவர்களின் மூளை அமைப்பு ஒரு சரக்கறை எனப்படும் கிடங்கு போன்றது. நீங்கள் ஒரு பொருளை உள்ளே போட்டால் அதை எந்த மாற்றமும் இன்றி மீண்டும் எடுத்துக்கொள்ளலாம், அவ்வளவுதான்.

வேறு சிலரின் மூளையமைப்பு பாராயணம் செய்யப் பொருத்தமற்றதாக, ஆனால் படித்ததன் உள்ளடக்கத்தை உள்வாங்கும் திறன் பெற்றதாக இருக்கும். மூளையினுள் சென்ற சரக்கு வகைப்படுத்தப்பட்டு வெவ்வேறு தளங்க்ளில் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும். ஒரு சிக்கலுக்குத் தீர்வுகாணத் தேவைப்படும் போது திரட்டப்பட்டிருக்கும் செய்திகள் கருத்துகளின் இணைவு(association of ideas) என்ற நிகழ்முறையில் செயற்பட்டு விடை கிடைக்கும். இது மேலே சொல்லப்பட்ட மனப்பாடத் திறனைவிட மேம்பட்டது. ஒரு தொழிலகம் போன்றது. இன்று கணக்கு விடையின் ஒவ்வொரு அடியையும் கூட பாராமல் படித்து கக்குவோராகிய முதல் வகையினர் முன் அவர்களைவிட திறன்மிக்கோராகிய இரண்டாம் வகையினர் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றனர். இந்த இரு திறன்களும் ஒருவரிடமே வாய்க்கப்பெறுவது மிக அரிது.

இனி, இவ்விரு வகையினரும் வேலை வாய்ப்புத் தேர்வுகளுக்குச் செல்லும் போது பெரும்பாலும் கேட்கப்படும் கேள்விகள் பொது அறிவு என்ற தலைப்பில் நினைவாற்றலை அடிப்படையாகக் கொண்டவையே. ஆக இங்கும் மனப்பாடக்காரர்கள்தாம் வெற்றி பெறுவார்கள். இவர்களுக்குத் தங்கள் வலுக்குறைவு, அதாவது சொந்த சிந்தனைக் குறைவு நன்றாகவே தெரியும். அதனால் மேலே உள்ளவர்கள், அதிகாரிகளாயினும் அரசியல்வாணர்களாயினும் அவர்களுக்கு இசைந்து தலையாட்டித் தங்களுக்குச் சிக்கல் இல்லாமல் மட்டுமல்ல நல்ல பலன்களையும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள். அதாவது பதர்களைப் பானையில் போட்டு அவித்து நெல் குத்திக்கொண்டிருக்கிறது இந்தியக் குமுகம்.

சொந்தச் சிந்தனை உள்ளவன் தன்னம்பிக்கை உள்ளவனாக இருந்தால் மேலே உள்ளவர்கள் தவறான செயல்களில் தங்களை ஈடுபடச் சொல்லும் போது அது குறித்த உண்மையான செய்திகளைக் கூறி அவர்களிடம் கெட்ட பெயர் வாங்கிக்கொண்டு வாழ்க்கையில் பின்தங்கிப் போகிறார்கள். உண்மையான திறமையுள்ள தனிமங்களெல்லாம் புறந்தள்ளப்பட்ட தமிழக, இந்தியக் குமுகம் உலகின் கடைக்கோடியை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தச் சிக்கலை ஆங்கிலர் எப்படி எதிர்கொண்டனர் என்று பார்ப்போம்.

ஆங்கிலராட்சிக் காலத்தில் பொறியாளர்களுக்கும் தொழில்நுட்பத்துறையினருக்கும் தனிச் சிறப்பு அளித்து பொது ஆள்வினைத்துறையாகிய வருவாய்த்துறையை ஒதுக்கி வைத்திருந்தனர். ஊருக்கு ஊர் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக இருந்த I.B. எனும் ஆய்வு மாளிகையில் ஒரு மாவட்ட ஆட்சியர் இருந்தாலும் பொதுப்பணித்துறைப் பொறியாளர் வந்தால் காலிசெய்து கொடுக்க வேண்டும். இன்று அந்த வளமனைகள் அனைத்தும் வருவாய்த்துறையினரிடம் அமைச்சர்களும் அரசியல்வாணர்களும் வைப்பாட்டிகளுடன் கும்மாளம் அடிக்கும் இடங்களாக மாறிவிட்டன. இப்போது ஆட்சியர் அலுலகத்தில் நடக்கும் பாசன மாநாடு அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியாளர் அங்கு வந்து கலந்துகொள்வார்.

அன்று பாசன மூலங்களான ஆறுகள், ஓடைகள், குளங்கள் கால்வாய்கள் அணைகள் போன்றவற்றை ஆய்வுசெய்து வரைபடங்கள் பதிவேடுகள் உருவாக்கும் பொறியாளர்களுக்கு எண்ணற்ற வசதிகள் செய்துகொடுத்தனர். ஆங்கிலர் 100 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் உருவாக்கித் தந்த அளப்பரிய மலைக்க வைக்கும் ஆவணங்களைப் பாதுகாக்கக் கூட மகா எத்தன் காந்தியின் வழிவந்தவர்களுக்குத் துப்பில்லை. மார்வாரிகள் - குசராத்தியர் தவிர பிறர் அனைவரும் இராட்டை சுற்றியும் வரட்டி தட்டியும வாழ வேண்டும் என்றுதான் சொல்லிவிட்டானே அந்தக் கொடியவன்.

இன்று இத்தகைய ஆவணங்கள் உருவாக்கத் தேவைப்பட்டால் ஊழல் செய்து மேலிடத்துக்குக் காசு பெற்றுக் கொடுக்காத நேர்மையாளர்கள், அல்லது கிடைத்தது அனைத்தையும் தானே சுருட்டிவிட்டு மேலே எதுவும் தராதவர்கள் என்று கழித்துப்போட்டவர்களைத்தான் அப்பதவிகளில் அமர்த்துவர். எந்த வசதியும் செய்து கொடுக்கமாட்டார்கள், பயணப்படி கூட ஒழுங்காகக் கொடுக்க மாட்டார்கள். இவர்கள் உருவாக்கும் ஆவணங்கள் அனைத்தும் போலியாகத்தான் இருக்கும். இது போன்ற பின்னணிதான் இத்தனூண்டு சிறிய இங்கிலாந்து இம்மாம் பெரிய இந்தியாவை இங்குள்ள போர்வீரர்களைக் கொண்டே கைப்பற்றியதன் கமுக்கம்.

படிப்பினை: உடலுழைப்புக்கும் உள்நாட்டு அறிவியல் - தொழில்நுட்பத்துக்கும் மதிப்பளித்து ஊக்கமூட்ட வேண்டும். ஆங்கிலன் இதில் தன்னாட்டான அடிமை நாட்டான் என்று வேற்றுமை பாராட்டவில்லை. இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வாழந்து நோபல் பரிசை ஆங்கிலன் காலத்தில்தான் சி.வி.இராமனால் வாங்க முடிந்தது. பெரும் அணைகளையும் கட்டுமானங்களையும் ஆங்கிலர் காலத்தில் வாழ்ந்த இந்தியரான பொறியாளர் விசுவேசுவரய்யாவால்தான் இயற்ற முடிந்தது. பின்னுள்ளவை எல்லாம் அயலவனுக்குப் பணம் கொடுத்து அதில் தரகு பெற்ற பொறுக்கி அரசியல்வாணர்களின் கைவண்ணமே. பள்ளி இறுதித் தேர்வில் தோற்ற தமிழகத்து இராமானுசத்தின் மேதைமை வெள்ளையர்கள் இல்லையென்றால் இந்தக் குமுகக் குப்பையினுள் புதையுண்டு போயிருக்குமே! இவ்வாறு நமது கல்வி முறை தரகு பெறும் கூட்டத்திடம் சிக்கி திசை அறியாமல் திகைத்து நிற்கிறது. இந்த முட்டுக்கட்டையிலிருந்து எப்படி மீள்வது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது குறிப்பிட்ட திறன்களோடும் குறைகளோடும் பிறக்கின்றன. திறன்களை வளர்த்து குறைகளைக் களைந்து குமுகத்துக்கு மிக அதிகமாகப் பயன்படும் ஒரு குடிமகனாக அக்குழந்தையை உருவாக்க வேண்டியது கல்வியின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்த குறிக்கோளை மனதில் கொண்டு பார்த்தால் தொடக்கக் கல்வி ஆசிரியர் மிகத் திறமையான குழந்தை உளவியல் வல்லுநராக இருக்க வேண்டுமென்பது விளங்கும். ஒரு குமுகத்தின் அனைத்துக் குழந்தைகளின் திறமைகளையும் வளர்த்து குறைபாடுகளை, குறிப்பாக நடத்தை மற்றும் உளவியல் குறைபாடுகளை நீக்குவது அக்குமுகத்துக்கு ஒரு மீ உயர்வான மனித வளத்தை வழங்கும். அதனை உருவாக்க அக்குமுகம் தன் வருமானத்தில் எவ்வளவு கூடுதலான விகிதத்தையும் செலவிடலாம்.

ஆசிரியப் பணி என்பது அயர்வூட்டும் ஒரு பணி. பிற வேலைகளில் வீட்டிலிருந்து புறப்பட்டோம், அலுவலகம் அல்லது வேலைக்களம் சென்றோம், வேலை செய்தோம், திரும்பினோம் என்று முடிந்துவிடும். ஆனால் ஆசிரியர் பணி, குறிப்பிட்ட அகவை உடைய வெவ்வேறு தொகுப்பிலான மாணவர்களைக் குறிப்பிட நேரம் கட்டுப்படுத்தி கற்பித்தல் என்ற தொழிலைச் செய்வது மிக எரிச்சலூட்டும் பணியாகும். எனவே படித்து வேறு வேலை கிடைக்காதவர்கள் நாடும் பணியாக ஆசிரியர் பணி உள்ளது. அதே நேரத்தில் அந்தந்த அகவைக் குழந்தைகளின் உளவியலில் நல்ல தெளிவுள்ளவர்களாக ஆசிரியர்கள் இருந்தால் அவர்களுக்கு உளவியல் அழுத்தங்கள் கட்டுக்குள் இருக்கும். அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கும் அவ்வப்போது உளவியல் கலந்துரைகள் வழங்கி உளவியல் அழுத்தங்கள் ஏதாவது இருந்தால் அதைத் தளர்த்த வேண்டும்.

ஆனால் இன்றைய நிலையில் வெளிப்படையான உளவியல் கோளாறுகளுக்கு உட்பட்டவர்களுக்கே கலந்துரை மூலம் பண்டிதம்(சிகிச்சை) செய்யும் உளவியல் மருத்துவர் நம் நாட்டில் ஒருவர் கூடக் கிடையாது. நோயாளியின் உணர்வுகளை மரத்துப்போக வைக்கும், அதாவது சிக்கல்களிலிருந்து தப்பி ஓட வைக்கும் மனநிலையை உருவாக்கும் ஒரு வகை மயக்கம் தரும் மாத்திரைகளையே அவர்கள் தருகிறார்க்ள். இந்தப் பின்னணியில் நம் உளவியல் மருத்துவத்துறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரவும் வேண்டியுள்ளது. இந்த ஆயத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு தொடக்கக் கல்வியிலிருந்து எப்படி கல்வித் துறையைச் சீரமைக்கலாம் என்று பார்ப்போம்.

குழந்தை தாயின் மடியிலிருந்து இறங்கி உட்காரத் தொடங்கியதும் இயற்கையோடு உறவாடத் தொடங்குகிறது. தன் சிறுநீரையே தொட்டும் தரையில் தேங்கி நற்கும் சிறுநீரைக் கையால் தப்பியும் வாயில் வைத்துச் சுவைத்தும் பார்க்கிறது.(இப்போது சிறுநீரை உறிஞ்சவென்று பஞ்சு அட்டைகள் வந்துவிட்டதால் இந்த வாய்ப்பு பறிக்கப்பட்டுவிட்டது). அதைப் போலவே மலத்துடனும் குழந்தைகள் விளையாடுகின்றன.

குழந்தை தவழ்ந்து வாயில்படி வழியாக இறங்கி வெட்டவெளிக்கு வந்து அங்கிருக்கும் அனைத்து வகைப் பொருள்களையும் தொட்டும் சுவைத்தும் தன் அறிவை வளர்த்துக்கொள்கிறது. குழந்தையின் இச்செயல்களைக் கூர்ந்து கவனித்தோமாயின் மனிதன் குரங்கு நிலையிலிருந்து மேல் நோக்கி நகர்ந்த போது தன்னைச் சுற்றியிருந்த உலகை எவ்வாறு அணுகி நுணுகி ஆய்ந்து இயற்கையில் உள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் அறிந்திருப்பான் என்பது நம் மனக்கண் முன்னால் ஓடும். சித்தர்கள் எனப்படும் செயல்வீரர்கள்(குண்டிலினி எனப்படும், உட்கார்ந்து உலகை அளப்பது பற்றிக் கூறியுள்ள போலிகளை அல்ல, மருத்துவம், வானியல் பற்றிய நம் அறிவியல்களைத் தோற்றுவித்தவர்கள் பற்றி) காடு மேடுகளெல்லாம் அலைந்து மூலிகைகளின் வேர் முதல் விதை வரை ஆய்வு செய்தவர்களும், இடுகாடு, சுடுகாடுகளுக்குச் சென்று பிணங்களை அறுத்துக் கூறுபோட்டு உடலியல், நரம்பியல், எலும்பியல் என்று வகுத்தறிந்தவர்களும் இன்றைய மேலையர் நாகரிக வளர்ச்சியில் ஆப்பிள் பழம் வீழ்வதைக் கண்டு ஈர்ப்புவிசையைக் கண்டுபிடித்த ஐசக் நியூட்டன் முதற்கொண்டு புளோரின் என்ற வளியின் மணத்தை அறிய உயிரை விட்ட அறிவியலாளர் வரை நம மனக்கண் முன்னால் வருவர். எனவே குழந்தைகளின் இந்த ஆய்வுகளுக்கு நாம் வாய்ப்பளிக்கும் அதேவேளையில் அவர்களின் இந்த விளையாட்டை பாதுகாப்பு எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தவும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

குழந்தைகள் உரிய பருவம் எய்தும் போது மண்ணில் விளையாடவும் வாய்ப்பளிக்க வேண்டும். மாசு மிகுந்த இடங்களைத் தவிர்க்க வேண்டும். இது குழந்தைகளின் நோயெதிர்ப்பு ஆற்றலை வளர்க்கும். அது போல் பள்ளியிலும் குழந்தைகளை இயற்கைச் சூழலில் நடமாட விட்டு அவர்கள் இயற்கையோடும் தன்னையொத்த பிள்ளைகளோடும் ஆசிரியர்களோடும் நடந்துகொள்ளும் முறைகளை வைத்து அவர்களின் ஆர்வங்கள், திறமைகள், மனச்சாய்வுகள், விருப்பு - வெறுப்புகள், வலிவு மெலிவுகள் போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டும். உரிய அகவையில் மொழிப்பயிற்சியும் அளிக்க வேண்டும்.

மொழிப்பயிற்சியில் எந்த முறை சிறந்ததென்று பார்ப்போம்.

ஏறக்குறைய 65 ஆண்டுகளுக்கு முன்வரை குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முன் வீட்டில் ஓர் ஆசிரியரை வரவழைத்து அவர் பூசை செய்து ஒரு பனை ஓலை ஏட்டில் எழுத்துகளை எழுதி தரையில் அரிசியை அல்லது மணலைப் பரப்பி குழந்தையின் விரலைப் பிடித்து ஒன்றிரண்டு எழுத்துகளை எழுதுவார். இதற்கு ஏடு தொடங்கல் என்று பெயர். அந்த ஏட்டை துப்பாக்கியைத் தோளில் சார்த்திச் செல்வதைப் போல் குழந்தைகள் பள்ளிக்குக் கொண்டு செல்வர். அங்கு முதலில் ஆனா, ஆவன்னா சொல்லித்தருவர். குறிலுக்கு 'னா'வும் நெடிலுக்கு 'வன்னா'வும் பின்னிணைப்புகளாக வரும். உயிரெழுத்துகள் ,பின்னர் மெய்யெழுத்துகள், இறுதியில் உயர்மெய் எழுத்துகள் ஆகியவை சொல்லித்தரப்படும். அதனோடு கூடவே ஒன்று, இரண்டு என்று எண் வரிசையும் கற்பிக்கப்படும். எழுத்துகளுக்கு அரிச்சுவடி என்றும எண்ணுக்கு எண்சுவடி என்றும் சிறு புத்தகங்கள் உண்டு. எண்சுவடியில் கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் என்று வாய்பாடுகள் உண்டு. அவை அனைத்தையும் ஏளக்குறைய அனைத்துப் பிள்ளைகளும மனப்பாடம் செய்துவிடுவர். மழலைப் பருவத்தில் படித்த அவ்வாய்பாடுகளும் அரிச்சுவடியும் நினைவு ஆற்றலை இழக்கும் முதுமையில் கூட மூளையில் பதிந்திருக்கும். இதன் அடுத்த கட்டமாகத்தான் அணில், ஆடு போன்று எழுத்துக்கும் சொல்லுக்கும் உள்ள உறவுகள் பயிற்றுவிக்கப்படும்.

நாள் செல்லச் செல்ல, பிரிட்டனின் செல்வாக்கு இந்தியாவில் குறைந்து அமெரிக்கச் செல்வாக்கு ஏறியது. எனவே 'புரட்சி'கர மாற்றங்களை அமெரிக்காவின் கையாட்களான ஆட்சியாளர்கள் புகுத்தினர். ஒரு குழந்தையின் இயற்கை ஆற்றல்களை அழிக்கும் ஒரு விரிவான திட்டத்தின் தொடக்கமாகும் இது. இப்போது மனப்பாடம் செய்யும் குழந்தையின் ஆற்றல் முழுவதும் செயலுக்கு வராமல் முடக்கப்பட்டது. அணில், ஆடு என்பதிலிருந்தே எழுத்துக கல்வி தோடங்கப்பட்டது.

இப்பொழுது ஓர் அடிப்படைக் கேள்வி எழுகிறது. பாராமல் படித்தல் அல்லது மனப்பாடம் செய்தல் என்பது சிந்திக்கும் ஆற்றலைச் சிதறடித்துவிடும் என்றாயே, இப்போது அது ஓர் ஆற்றல் அதைப் பேண வேண்டும் என்கிறாயே என்பது அது. அதற்கான விடை இதோ:

ஒரு குழந்தை பேசத் துவங்கும் போது முதலில் அம்மா என்ற சொல்லைக் கற்றுக்கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கட்டத்தில் அக்குழந்தை ஓயாமல் அம்மா, அம்மம்மம்மா என்று கூறிக்கொண்டே இருக்கும். திடீரென்று உரக்க அம்மா என்று கத்தும் ஓடிப்போய்ப் பார்த்தால் அது சொல்பயிற்சிதான் என்பது புரியும். ஒரு அவயல்கிளவி(கெட்ட வார்த்தை) அதற்குக் கிடைத்தாலும் அதையும் அவ்வாறே கையாளும். ஆக இது மூளை பயன்பாட்டு வளர்ச்சியில் ஒரு கட்டம். அதை நாம் பயன்படுத்தாமல் போனால் பயன்பாட்டுக்கு வராத அந்தத திறன் நமக்கு வாய்க்காமலே போகும். இப்போது ஒரு சராசரி கூட்டலையே செய்து முடிக்க குழந்தைகள் படும்பாடு பார்க்க முடியவில்லை. சிறிது மேல் வகுப்புகளுக்குப் போகும் போது கணித்தான்(கால்குலேட்டர்) போன்ற கருவிகளைக் கையாளத் தொடங்கிவிடுகின்றனர். இந்தக் கருவிகளைச் செய்து சந்தைக்கு விடும் அயல்நாட்டு நிறுவனங்களின் வழிகாட்டுதல்களால்தான் கல்வி முறையில் இத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன். இந்த மாற்றங்கள் நம் நாட்டு நிலைமைகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்ப நாம் மேற்கொண்டவையல்ல.

அடுத்து கல்விக்கூடம் அமைய வேண்டிய சூழலைப் பார்ப்போம்.:

இன்று உலகளவில் கல்வி என்பது உடலுழைப்பின்றி இருக்கையில் அமர்ந்து செய்யும் "வேலை" ஒன்றைப் பெறுவதற்காகத் தம்மைத் தகுதி பெறச் செய்வதாகவே கருதப்படுகிறது. அண்மையில் சத்துணவுப் பணியாளராகிய ஒரு பெண்ணிடம் பேசும் போது பத்தாவது படிக்கும் தன் மகளை இ.ஆ.ப. தேர்வுக்கு ஆயத்தப்படுத்தப் போவதாகக் கூறினார். பொதுவாக இது போன்ற பட்டங்கள் இப்போது மரபு வழி வருவது இயல்பாகிவிட்டது. அதற்கு அடுத்தபடி அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு. அங்கொன்றும் இங்கொன்றும் ஏழைகளில் ஒருவர் வந்துவிட்டால் நாட்டிலுள்ள ஊடகங்கள் அனைத்தும் அதனை ஊதிப் பெருக்கி முயற்சியுள்ள அனைவருக்கும் இது போன்ற பட்டங்கள் காத்திருப்பது போன்ற பொய்த்தோற்றத்தை உருவாக்குகின்றன. மகளை தொழிற்பயிற்சி எதிலாவது சேர்க்குமாறு நான் கூறிய போது அந்தப் பெண் தன்னை நான் இழிவுபடுத்தியது போல் உணர்ந்தாள். இதற்காக நான் அவளைக் குறைகூறுவதற்கில்லை. இன்றைய நடைமுறைச் சிந்தனை நிலை அது.

இன்று நம் நாட்டில் எல்லாமே கலைந்து ஒரு புதிய மறுசீரமைப்புக்காகக் காத்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக 18, 19ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து பெரும் நிலக்கிழார்களின் நிலங்கள் அங்கு குத்தகைக்குப் பயிரிட்ட குடியானவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவர்களுக்குக் கிடைத்த துண்டுதுக்காணி நிலங்களில் பயிரிட்டு தங்கள் வயிற்றுப்பாட்டை பார்க்க முடியாமல் வயல்களை விற்றுவிட்டு நகரங்களில் உருவாகிக் கொண்டிருந்த தொழிற்சாலைகளை நோக்கிச் சென்றனர் அக்குடியானவர்கள். நிலங்களை வாங்கிய புதுப்பணக்காரர்கள் பெரும் பண்ணைகளை உருவாக்கி கருவிகள் மூலமும் புதிய தொழில்நுட்பங்கள் மூலமும் வேளாண்மையை வளர்த்தனர். பழைய இருப்பிடங்கள் கலைந்து புதிய நகரமைப்பு உத்திகளில் புதிய நகரங்கள் உருவாயின.

இங்கிலாந்தில் நிலக்கிழார்கள் பண்ணையாள்களைத் துரத்திவிட்டு கம்பிளி ஆட்டுப்பண்ணைகளை உருவாக்கினர். உணவு அமெரிக்காவிலிருந்து வந்தது. பண்ணைகளிலிருந்து வெளியேறிய பண்ணையாட்கள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். அங்கும் புதிய தொழில் நகரங்களும் குடியிருப்புகளும் உருவாயின.

ஆனால் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில இருந்தது அழிந்திருக்கறது புதியது உருவாகவில்லை. உருவாக்க வேண்டும் என்ற எண்ணமும் இங்கு எவருக்கும் இருப்பதாகவும் தெரியவில்லை. அதை உருவாக்கவும் அதன் உருவாக்கத்திலேயே புதிய கல்வி முறையை, உண்மையான கல்விமுறையை வளர்த்தெடுக்கவும் ஆன உத்தியை வகுக்க முயல்வோம்.

கல்வியில் மாற்றம் கொண்டுவர நாம் எங்கிருந்து தொடங்குவது?

எந்த உயிரும் வாழ்வதற்கு முதல் தேவை உணவு, அது நிறைவேறிய பின் அடுத்துத்தான் மானம் காக்கும் உடையும் உடலைக் காக்கும் உறைவிடமும். இவை நிறைவேறினால்தான் மனிதன் சிந்திப்பான். மனிதன் வயிறு நிறைந்தால்தான் சிந்திப்பான் என்றார் மார்க்சு. ஆனால் தமிழகத்தானுக்கு பட்டினி அச்சம் இன்றும் அகலவில்லை, அதனால்தான் அவனது சிந்தனை பணம் சேர்ப்பதில் மட்டும் நிலைத்துவிட்டது. அறிவுசீவிகள் என்போரும் அறிவை விற்பதற்காகவே சீவிவிடுகிறார்கள்.

1917இல் நடைபெற்ற உருசியப் புரட்சிக்குப் பின் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களான ஐரோப்பியர்கள் அவற்றைப் பூட்டிவிட்டு ஓடிவிட தொழிலாளர்கள் திக்கு தெரியாமல் திகைத்து நின்றனர். லெனின் அவர்களை அணுகி தொழிற்சாலைகளை அவ்வவற்றின் தொழிலாளர்களே கூட்டாக எடுத்து நடத்த அறிவுரை கூறினார். அவர்களுக்கு உணவுக்கு என்ன செய்வது? உழவர் பெருமக்களை அணுகி தங்கள் விளைபொருட்களில் ஒரு பகுதியை நகரத்திலுள்ள தொழிலாளருக்கு அரசு நிறுவும் விலைக்குக் கொடுத்துவிட்டு மீதியை வெளிச்சந்தையில் விற்றுக்கொள்ள வேண்டுகோள் விடுத்தார். தொழிற்சாலைகள் அவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் என்றும் கூறினார். இவ்வாறுதான் அங்கு நிலைகுத்திப்போன பொருளியல் நடவடிக்கைகள் மீட்கப்பட்டன. இந்தப் பின்னணியில் நாமும் உணவை உருவாக்கும் வேளாண்மையிலிருந்து தொடங்குவோம்.

நம் நாட்டில் பாட்டாளிகளின் கட்சி எனப்படும் பொதுமைக் கட்சி நில உச்சவரம்பு, குத்தகை ஒழிப்பு என இரண்டு முழக்கங்களை முன்வைத்தது(1962க்கு அப்புறமே இரண்டாக அக்கட்சி உடைந்தது. வலது கட்சி உருசிய கைக்கூலி, இடது கட்சி சீனத்தின் அதன் மூலம் அமெரிக்காவின் கையாள்). அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட நிகர்மை(சோசலிச) அனைத்துலகியம் என்ற அமைப்பின் கீழ் இயங்கிய கட்சி இந்தியாவில் இருந்த ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளான நிகர்மைக் கட்சி. பொதுமைக் கட்சிக்கும் நிகர்மைக் கட்சிக்கும் செயல்திட்டத்தில் எந்த வேறுபாடும் கிடையாது. தொடக்கத்தில் ஆயுதப் புரட்சி மூலம் பொதுமைக் குமுகத்தை உருவாக்குவதாக இருந்த பொதுமைக் கட்சியின் முழக்கம், 1953இல் தாலின் இறந்த பின்னர் தேர்தல் மூலம் அக்குறிக்கோளை எய்துவதாக மாற்றப்பட்டது.

இந்த இரண்டு கட்சிகளும் வைத்த குத்தகை ஒழிப்பை அரசு ஏற்றுக்கொண்டு ஒரு சட்டம் இயற்றியது. அதன் படி ஒரு குத்தகை உழவன் ஒழுங்காக வாரம் அளந்துவந்தால் அவனிடமிருந்து நிலத்தைப் பிடுங்க முடியாது. மூன்று முறை தகுந்த காரணமின்றி வாரம் செலுத்தவில்லை என்றால் பிடுங்கிவிடலாம் எனபதாகும். அத்துடன் உடைமையாளன் நிலத்ததை விற்றால் விற்ற பணத்தில் 50%ஐ குத்தகை உழவனுக்கு வழங்கிவிட வேண்டும், அல்லது பாதி நிலத்தை அவனுக்கு வழங்க வேண்டும் அல்லது பாதி நிலத்துக்குப் பண்த்தை வாங்கிவிட்டு மொத்த நிலத்தையும் உழவனுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது. நிலத்தில், செலவுகள் அனைத்தையும் தானே நேரடியாக ஏற்றுக்கொண்டு வேளாண்மை செய்பவனுக்கே நிலம் உரிமையாக இருக்க வேண்டும் என்பது குத்தகை ஒழிப்பின் அடிப்படை நோக்கம். அப்படியானால்தான நிலத்தின் முழு விளைதிறனும் செயலுக்கு வரும் என்பது அடிப்படை. ஆனால் இங்கு குத்தக்கை ஒழிப்புச் சட்டம் என்பது குத்தகை நிலைப்புச் சட்டமாகவே பிறவி எடுத்தது.

அடுத்து நில உச்சவரம்பு. நன்செய் நிலங்கள் 12½ ஏக்கர்களும் புன்செய் நிலங்கள் 25 ஏக்கர்களும் என வரம்பு நிறுவப்பட்டது. அதற்கு மிஞ்சிய நிலங்களை இனங்கண்டு கைப்பற்ற என்று வருவாய்த்துறையில் தனிப்பிரிவுகளும் உருவாக்கப்பட்டன. ஆனால் கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள் குளங்களில்தாம் கட்டப்பட்டனவே அன்றி நில உச்சவரம்பில் கைப்பற்றியவை என்று ஒரு சதுர அடி கூட சுட்டப்படவில்லை. நம் பொதுமைக் கட்சித் தோழர்களோ, ஏழைகளுக்கென்றும் தொழிலாளர்களுக்கென்றும் இலவய வீட்டுமனைகளுக்காக குளங்கள், வாய்க்கால்கள், சாலைப் புறம்போக்கு நிலங்களைத்தான் காட்டினார்களே அன்றி தங்கள் அருஞ்செயலாக மார்தட்டிக்கொண்ட நில உச்சவரம்புச் சட்டத்தின் படி மீட்கப்பட்ட நிலம் என்று ஒரு காலடி தடத்தைக்கூடக் காட்டவில்லை.

இந்தப் போலி குத்தகை ஒழிப்பு, நில உச்சவரம்பு நடைமுறையில் நிலங்கள் பொருளியல் வலிமையற்ற ஏழைபாழைகளிடம் துண்டுதுக்காணி நிலங்களாக வந்த சூழலில்தான் அமெரிக்காவின் போர்டு அறக்கட்டளை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 13 மாவட்டங்களை எடுத்துக்கொண்டு அங்கு இலவயமாக, வீரிய வகைகள் என்ற பெயரில் ஒட்டுவகை நெல்கள், சீமை உரம், பூச்சி மருந்துகளை இலவயமாக வழங்கி கொஞ்சம் கூடுதல் விளைச்சலைக் காட்டியது. இந்தத் திட்டத்துக்கு முனைப்பான ஊரக வளர்ச்சித் திட்டம (I.R.D.P. - Intensive Rural Development Programme) என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. அடுத்த கட்டமாக போர்டு அறக்கட்டளை வெளியேறிவிட நாடு முழுவதும் அரசே மானிய விலையில் விதை, உரங்கள், பூச்சி மருந்துகள் வழங்கும் முனைப்பான வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தை(I.A.D.P.) நடைமுறைக்குக் கொண்டுவந்தது.

காவிரிப் படிகைப் பகுதி முழுவதும் தஞ்சை என்ற ஒரே மாவட்டமாக இருந்த அந்தக் காலகட்டத்தில்(1950 - 60களில்) கிட்டத்தட்ட 90,000 ஏக்கர்கள் நன்செய் நிலங்கள் கொண்ட குன்னியூர் சாம்பசிவ ஐயர், அதற்கடுத்து இன்றைய சி.கே.வாசனின் தந்தையான சி.கே.மூப்பனார் ஆகிய கருப்பையா மூப்பனார் என்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்த பெருநில பூதங்களுக்குத் தங்கள் நிலங்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பதே தெரியாது. இன்று வி.ஏ.ஓ. எனப்படும் ஊர்க் கணக்குப்பிள்ளையாகிய கர்ணத்துக்கு இணையாக ஒவ்வொரு வருவாய் ஊரிலும் ஒவ்வொரு கோயில் அல்லது மடத்து நிலங்களுக்கும் ஒவ்வொரு பண்ணையார் நிலங்களுக்கும் தனித்தனி கணக்குப்பிள்ளைகள் உண்டு. நிலங்கள் குத்தகை, உள்குத்திகை என்று ஒன்றுக்கு மேற்பட்ட கைகளுக்குச் சென்று இறுதியில் பயிர் செய்யும் உழவன் கையில் ஓர் ஏக்கர், அரை ஏக்கர் அளவுக்கு வந்து சேரும்.

நில உச்ச வரம்புச் சட்டத்தை ஏமாற்ற போலிப் பெயர்களில் நிலத்தை மாற்றினார்கள் இப்பெரும் பண்ணையார்கள்.(பிற்காலத்தில் இப்போலி உடைமைகளை இனங்கண்டு மீட்பதற்காக ம.கோ,இரா. காலத்தில் கொண்டு வந்த சட்ட்ததுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராமல் பார்த்துக்கொண்டார் வாசனின் தந்தை கருப்பசாமி மூப்பனார்.)

இந்தக் கால கட்டத்தில் 50, 100 ஏக்கர்கள் நிலம் வைத்துச் சொந்தப் பயிர் செய்த சிறு பண்ணையார்கள் வேளாண்மையில் அறிவியலைப் புகுத்தும் அவாவில் அப்போதுதான் புதிதாகத் தொடங்கியிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தனர். படிப்பு முடிந்து வெளியே அவர்கள் வந்த போது நிலங்கள் சிதறடிக்கப்பட்டு அவர்கள் கைகளை விட்டுப்போயிருந்தன. அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேளாண் வளர்ச்சி அதிகாரிகள் என்ற பெயரில் சீமை உர, பூச்சி மருந்து நிறுவனங்களின் படைப்புகளைப் பரிந்துரைக்கும் முகவர்களாக முடக்கப்பட்டனர்.

இதற்கு அடுத்த கட்டமாகத்தான் கொடுங்கோலன் லால் பகதூர் சாத்திரி வேளாண் விளைபொருள் நடமாட்டத்துக்கும் இருப்பு வைக்கவும் நல்ல விலை தருவோருக்கு விற்கவும் தடை விதித்து வேளாண்மையை ஒரு தீண்டத்தகாத தொழிலாக்கினான்.

வயலுக்குப் போகாத பெரும் பண்ணையார்கள் சென்னையில் இசை அரங்குகளிலும் பரத்தையர் ஆட்டங்களிலும் கூட்டங்களிலும் கூத்தடிக்க இந்த சிறு பண்ணையார்களின் வருமானம் சென்னையில் முதலீடாக, பனியாக்களுக்குப் போட்டியாக நுழைந்ததைப் பார்த்த பின்தான் நம் பாட்டாளியப் புரட்சியாளர்களான பொதுமைக் கட்சியினரும் அமெரிக்க முகவர்களான நிகர்மைக் கட்சியின்ரும் நில உச்சவரம்பு, குத்தகை ஒழிப்புப் போராட்டங்களில் இறங்கினர் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஆக தாழ்த்தப்பட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினரில் ஏழைகள் கைகளில் இன்று வேளாண்மை சிக்கி ஆட்சியாளர்களின் வகைவகையான கொடுமைகளால் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த அழகில் நம் பொதுமைப் புரட்சியாளர்கள் வேளாண் தொழிலாளர்களைத் திரட்டி கூலி உயர்fவுப் போராட்டங்களை நடத்தி வெந்த புண்ணில் ஈயத்தை உருக்கி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று நிலம் வைத்திருக்கும் உழ்வன் கூலி வேலைக்குப் போகாமல் தன் அன்றாடப் பாட்டை ஓட்ட முடியாது. கணிசமாக நிலம் வைத்திருக்கும் வசதியுள்ளவர்களும் வேறு தொழில் ஒன்றில் ஈடுபடாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது. வயலிலிருந்து வீட்டுக்கு நெல் வரும் பெருமைக்காகவே இவர்கள் வயல் வைத்திருக்கின்றனர். இன்று அவர்களும் அருகி வருகிறார்கள்.

இந்தப் பின்னணியில் முதலில் வயிற்றுக்குச் சோறிடும் வேளாண் தொழிலை மீட்கும் ஓர் உத்தியை முன்வைத்து அதைச் சார்ந்து தோன்றி கிளைத்து வளரும் ஒரு கல்வி முறையைச் சிந்திப்போம்.

நில உச்ச வரம்பு தவச(தானிய) வேளாண்மைக்கு மட்டுமே. பெருந்தோட்டங்களுக்கும் ஏற்றுமதி நோக்கம் கொண்ட வாணிகப் பயிர்களுக்கும் பொருந்தாது என்ற உண்மையை நம் பாட்டாளியப் புரட்சியாளர்கள் சட்டத்தினுள் புகுந்து அறிந்துகொள்ள முடியாத எளிய மக்களிடமிருந்து மறைத்தார்கள். இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வாலிநோக்கம் பகுதியில் டாட்டாக்கள் அந்தக் காலத்திலேயே 20,000 ஏக்கர்கள் வாங்கி உப்பளம் நடத்தி தமிழக ஆட்சியாளர்களின் ஒத்துழைப்புடன் மக்களின் உடல் நலத்துக்க் கேடுதரும் அயோடின் உப்பை மக்களின் தலைகளில் கட்டுகிறார்கள்.

இந்தப் பின்னணியில் தரிசாகக் கிடக்கும் நிலங்களில் 100 அல்லது 200 ஏக்கர்களுக்குக் குறையாத பண்ணைகளை உருவாக்க வேண்டும். நிலங்களை விலைக்கு வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அண்டை நில உடைமையாளர்களை ஒருங்கிணைத்து பங்கு முதலீட்டு முறையில் பண்ணையை உருவாக்க வேண்டும். பணத்தையும் அவ்வாறே திரட்ட வேண்டும். படித்து உரிய வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் தங்கள் பெற்றோரை அணுகி இந்த முன்முயற்சியை எடுக்க வேண்டும். அவர்களே பண்ணையில் முன்னோடிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆடு மாடுகள் புக முடியாத அளவில் சுற்றி வலிமையான வேலி அமைக்க வேண்டும். அவற்றில் குறைந்தது 10%க்குக் குறையாத பரப்பில் ஓர் ஓரத்தில் காடு வளர்க்க வேண்டும். ஒன்றை ஒட்டி ஒன்றாக பண்ணைகள் அமையும் போது அவற்றிலுள்ள காட்டுப்பகுதிகள் ஒன்றையொன்று தொட்டுக்கிடக்குமாறு அமைய வேண்டும். பாறை மிகுதியாக உள்ள இடங்களில் ஆல், அத்தி அரசு, முருங்கை, முள்முருங்கை, உசிலை போன்ற பசும் மரங்களை நட்டால் அவற்றின் வேர்க்ள் பாறைகளைப் பிளந்து மண்ணை மெனமையாக்கும். ஆனால் தொடக்க நிலைகளில் இத்தகைய நிலங்களைத் தவிர்க்க வேண்டும்.

பண்ணையில் ஆடு மாடுகளுக்குத் தொழுவங்கள் அமைக்க வேண்டும். தொழுவங்களில் நாட்டுவகை கால்நடைகளைத்தான் வளர்க்க வேண்டும். அவற்றின் தீவன்த்துக்கு அங்கேயே தீவனப் புற்களையும் மரங்களையும் வளர்க்க வேண்டும். தேவைக்கு ஏற்றாற்போல் ஒன்றோ பலவோ கிணறுகள் அமைக்க வேண்டும். மாட்டுச் சாணத்திலிருந்து எரிவளி எடுத்து அடுப்புக்கும் விளக்குக்கும் முடிந்தால மின்சாரம் எடுக்கவும் பயன்படுத்தலாம்.

நிலக்கிடப்புக்கு ஏற்றாற் போல் ஒரு சிறு குளம் அமைக்க வேண்டும். அண்டை ஊர்களில் சேரும் மட்காத குப்பைகளால் ஒரு சிறு குன்றையும் அமைக்கலாம். அதிலும் காடு வளர்க்கலாம். இவை அனைத்தும் அந்நிலத்தில் விழும் மழை நீரை நிலத்தின் மேலும் அடியிலும் பிடித்துவைத்து மண்ணின் நில நீர் வளத்தைப் பெருக்கும்.

எஞ்சியுள்ள நிலத்தில் நீர் வளத்துக்கு ஏற்ப நன்செய்யோ புன்செய்யோ பயிர் வளர்க்க வேண்டும். நன்செய் நிலங்களில் கூட அவ்வப்போது புன்செய்ப் பயிர்களை மாற்றுப்பயிராக இட வேண்டும்.

கிடைக்கும் விளைபொருட்களை அப்படியே சந்தைக்கு விடுக்கக் கூடாது. முடிந்த அல்லது பகுதி முடிந்த பொருளாகவோதான் விடுக்க வேண்டும். பண்ணையின் ஒட்டுமொத்த அணுகல், அதில் பணியாற்றுவோர் ஆண்டு முழுவதும் வேலை செய்வதாக இருக்க வேண்டும். அதனால் ஊழியர்களுக்கு, பண்ணையில் மிகக் குறைந்த இடம் பிடிக்கக் கூடிய அதே வேளையில் தூய்மையான சூழலில் பராமரிக்கத்தக்க அடுக்ககம் போன்ற வீடுகள் அமைக்க வேண்டும்.

இது போன்ற ஒரு திட்டம் தொடங்குவதானால் முதலில், நம்பகமான நீர்வளமும் வளமான மண்ணும் உள்ள இடமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். முன்னோடியான இத்திட்டம் தோல்வியில் முடிந்து பிறர் எவரும் இம்முயற்சியில் ஈடுப்படுவதைத் தடுப்பதாக அமைந்துவிடக்கூடாது.

உடனடியாக ஆதாயத்தை எதிர்பார்ப்பவர்கள் இந்த முன்னோடித் திட்டத்துக்குப் பொருத்தமானவர்களல்ல. இதை வெற்றியுடன் நிறைவேற்றுவதன் மூலம் பிறரையும் இது போன்ற முயற்சிகளில் இறங்க ஊக்கமூட்டுவதை ஒரு குமுகப் பணியாக மேற்கொள்ளும், பொதுப்பணியில் நாட்டமும் பொருளியல் வலிமையும் உள்ளவர்கள்தாம் ஈடுபட முடியும்.

வெளிநாடுகளிலிருந்து தன்னார்வத்தொண்டு என்ற பெயரிலோ அரசுகளிடமிருந்தோ பணம் பெற்று இத்திட்டத்துக்கு முயலக் கூடாது. அயலகத்தில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த, தமிழக நலம் நாடுவோர் இம்முயற்சியில் பங்கேற்பவராக இருப்பதை வரவேற்கலாம்.

இந்த இயற்கைக் களத்தின் பின்னணியில் மழலைகளின் கல்வியை, அதாவது மழலைகள் இயற்கையையும் அவர்களை நாமும் அறிந்துகொள்ளும் "தொடக்க"க் கல்வியைத் தொடங்க வேண்டும்.

மழலையர் பள்ளி தொடங்கி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மேலே, பக்.4இல் குறிப்பிட்டுள்ளது போல் சிறந்த குழந்தை உளவியல் வல்லுநர்களாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு விளையாட்டே கல்வியாக, வேலையாகத் தொடக்கக் கல்வி அமைய வேண்டும். வீட்டைச் சுற்றிலும் நிலமும் அவற்றில் மரங்கள், செடிகளை வளர்ப்பதுமாக உள்ள வீட்டுக் குழந்தைகள் ஒரு பருவத்தில் மூத்தோர் குடங்கள், வாளிகளில் நீர் ஊற்றுவதைப் பார்த்துத் தாமும் அதைச் செய்ய அடம் பிடிக்கும். அப்போது அவர்களுக்குச் சிறு குடங்களோ வாளிகளோ வாங்கிக் கொடுத்து தண்ணீர் பிடித்து ஊற்ற விடுவது உண்டு. அது போல் பெரியவர்கள் மண்வெட்டி போன்றவற்றைப் பயன்படுத்துவதைப் பார்த்து தாமும் அதே மண்வெட்டியைப் பிடித்து வெட்ட முயல்வர். கால்களில் மண்வெட்டி காயங்களை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, சிறு மண்வெட்டிகளான களைக்கொத்திகளை வாங்கிக் கொடுத்து விளையாட விடுவது உண்டு. அதைப் போல் இந்தப் பருவத்தில் எண்ணையும் எழுத்தையும் கொஞ்ச நேரம் சொல்லிக்கொடுத்துவிட்டு சிறிது நேரம் வேலைகள் நடக்கும் இடத்தில் நடமாட விட்டு அவரவருக்குப் பிடித்த வேலைகளை விளையாட்டுப் போல் செய்ய விட வேண்டும். பாடவும் ஆடவும் நேரம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் செயற்படும் போது அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அவர்க்ளது திறன்கள், மனச்சாய்வுகள், அடுத்தவரோடு பழகுதல், சேர்ந்து இயங்குதல் போன்ற இயல்புகள் என்று அனைத்தையும் அளவிட்டு மதிப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு அகவை ஏற ஏற கொஞ்சம் கொஞ்சமாகக் கனத்த கருவிகளைக் கையாண்டு கனத்த வேலைகளைச் செய்யப் பழக்க வேண்டும். எழுத்தறிவைப் பொறுத்த வரை, எண்ணுக்கும் எழுத்துக்கும் அடுத்தபடி அக்குழந்தைகள் வாழும் வட்டாரம், மாவட்டம் குறித்த புவியியல், நிலவளம், வேளைண்மை, தொழில்கள், வரலாறு குறித்த பாடங்களை நடத்த வேண்டும். சுவையான கதைகள், விடுகதைகள், செய்யுள்களுக்கு உரிய இடம் வேண்டும். விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

அக்கம் பக்கங்களில் இத்தகைய பண்ணைகள் பெருகப் பெருக பண்ணைகளில் பயன்படும் கருவிகளைப் பழுது பார்க்கும் பணிமனைகள் உருவாகும். மாணவர்களை அப்பணிமனைகளில் பயிற்சி பெற விடுத்து அதில் ஈடுபாடு காட்டுவோரை அத்துறையில் திருப்பிவிட்டு அதற்குரிய கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டும். குடியிருப்புகள் பெருகும் போது மருத்துவ வசதி தேவைப்படும். அதற்கு உருவாகும் மருத்துவ மனைகளில் மாணவர்களைப் பயிற்சி பெற விடுத்து அதில் சிறப்பு ஈடுபாடு உள்ளோரை அந்தத் துறைக்குத் திருப்பி விட வேண்டும். அது போல்தான் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, காடு வளர்ப்பு என்று ஒவ்வொரு துறைக்கும். ஒட்டுமொத்தத்தில், ஒரு கட்டடப் பொறியாளன், கட்டட வேலையில் கையாளாக இருந்து அத்துறையில் சான்றுப் படிப்பு படித்து அடுத்து கொத்தனாராக, கம்பி கட்டுவோனாக, தச்சனாக, மின்னியல் பணியாளனாக, வெள்ளையடிப்பானாகக் களத்தில் பயிற்சி பெற்று தான் விரும்பும் துறையில் பகுதி நேரப் படிப்பு படித்து நுழைவுத் தேர்வெழுதி அத்துறையில் பட்டயப்படிப்பு படித்து முடித்து, களத்தில் மேற்பார்வையாளனாகப் பயிற்சி பெற்று தான் விரும்பும் சிறப்புத்துறையில் பகுதி நேரப் படிப்பு படித்து நுழைவுத் தேர்வெழுதித் தான் பட்டப் படிப்பினுள் நுழைய வேண்டும். அதைப்போல் ஒரு மருத்துவரிடம் குறைந்தது துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றியவர்தான் உரிய படிப்பு படித்து ஒரு செவிலியருக்கான நுழைவுத்தேர்வு எழுதி செவிலியராகி அப்படித்தான் படிப்படியாக மருத்துவப் பட்டப் படிப்புக்குள் நுழைய வேண்டும்.

பணத்தையும் செல்வாக்கையும் வைத்து 22 அகவைக்குள் பொறியாளராகவும் மருத்துவராகவும் வேளாண் பட்டந்தாங்கியாகவும் இ.ஆ.ப. ஆகவும் வரும் அறப்பிஞ்சுகளால் நாட்டை நிரப்பும் இன்றைய நடைமுறை முடிவுக்கு வர வேண்டும். எழுத்துப் படிப்பில் நாட்டமின்றி ஆனால் தொழிலில் ஆர்வமும் திறமையும் உரியோரை இனங்கண்டு அவர்களுக்கு உயர் கல்வி அல்லது பயிற்சி அளித்து சான்று, பட்டயம், பட்டம் முதலியன வழங்குவதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும். வெவ்வேறு பணிநிலைகளில் உள்ளோருக்கான சம்பள வேறுபாடு எல்லைப்படுத்த வேண்டும். அப்படியானால்தான் சம்பளத்துக்காகப் பட்டங்கள் பெற முயல்வோரின் மறைமுகத் தலையீடுகள் இரா.

நாடு முழுவதுமுள்ள வேளாண்மை, காடுவளர்ப்புக்குள்ள நிலங்கள் இவ்வாறு முழுப் பயன்பாட்டுக்கு வரும் போது பெரும் பணிமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் என்று உருவாவது தவிர்க்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் மின்னணுவியலையும் அவற்றுக்குத் துணையாக, இணையாக வளர்த்தெடுக்க வேண்டும். அவற்றைத் திட்டமிட்டு கண்டிப்பான வரைமுறைகளின் கீழ் வடிவமைக்க வேண்டும். பண்ணைகளுக்குள் அமையும் கட்டடங்கள் தவிர எந்தக் கட்டடமும் உரிய நகரமைப்பு உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில்தான் அமைய வேண்டும். தமிழகத்தில் தகுந்த மண்டல தலைநகரங்களை உருவாக்க வேண்டும். அவை மழைநீரை எளிதில் வழிய விடக்கூடிய உயர்ந்த இடங்களில் அமைய வேண்டும்.

இந்த நகரங்களை வளைவுகளற்ற நேர்ச்சாலைகளால் இணைக்க வேண்டும். இதனால் இடப்பெயர்ச்சி அதாவது செல்கைகளுக்கு(பயணங்களுக்கு) எடுத்துக்கொள்ளும் நேரம் குறைவதுடன் எரிபொருளும் மிச்சமாகும். இணைப்புச் சாலைகளும் நேர்ச்சாலைகளாகவே இருக்க வேண்டும். இந்த நேர்ச் சாலைகளை முடிவுசெய்யும் போது அவை நிலத்தின் முகடுகள் வழியாச் செல்வதற்காக வளைவதற்கு முன்னுரிமை கொடுக்கவும் வேண்டும். இதன் மூலம் பாலங்களுக்கான செலவுகள் குறையும், விளை நிலங்கள் சாலைகளுக்காக அழிக்கப்படா.

இந்தச் சாலைகளை ஒட்டிக் குடியிருப்புகள் இருக்கக் கூடாது. குறைந்தது இரண்டு கிலோமீற்றர் தொலைவுக்குக் காடுகளாக இருக்க வேண்டுமென்ற நகரமைப்பு வல்லுநர்கள் கூறுகிறார்கள். நாம் அதை 500 மீற்றர்கள் என்று வரையறுக்கிறோம். இந்தக் காடுவளர்ப்பு சாலைப் பரப்பில் உருவாகும் வெப்பத்தைத் தணித்துச் சூழலை இனிமையாக்கும்.

பொதுவாக எந்தச் சாலையையும் தொட்டுக் குடியிருப்புகள் அமைவது நல்லதல்ல. அது குடியிருப்போருக்கும் சாலையில் சொல்வோருக்கும் இடர்களைத் தரும். தெருக்களில் வாயில்களைக் கொண்ட வீடுகள், கடைகள் கூட இருக்கக் கூடாது. வளாகங்களுக்குள் வீடுகளும் அவற்றுக்கு உடனடித் தேவைகளுக்கான கடைகளும் அமைந்து வெளிச்செல்வழி மட்டும் தெருவில் அமைய வேண்டும்.

சென்ற நூற்றாண்டின் பாதிவரை நெடுஞாசாலைகளை ஒட்டிய குடியிருப்புகள் அறவே இல்லை. அச்சாலைகளை பெருநகர்களை ஊருக்கு வெளயில்தான் கடந்தன. நகர்களுக்கு வெளியிலும் ஊர்கள் சாலைகளிலிருந்து குறிப்பிடத்தக்க தொலைவு உள்ளடங்கியே இருந்தன. அதனால்தான் வழிச் செல்வோருக்கு உணவுக்கும் உறைவிடத்துக்கும் சத்திரங்களைப் பண்டை ஆட்சியாளர்கள் அமைத்துப் பேணினர். இன்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் அவற்றின் இடிபாடுகளைக் காணலாம். அது போல் நெடுஞ்சாலைகளில் இது போன்ற ஊட்டல்கள்(ஓட்டல்கள்) விடுதிகள் போன்ற கட்டமைப்புகளை குறிப்பிட்ட தொலைவு இடைவெளிகளில் உருவாக்க வேண்டும். இன்னும் நெருக்கமான இடைவெளிகளில் வழி நெடுக கழிவறைகளை உருவாக்கி முறையாகப் பேண வேண்டும்.

பழைய நகரங்களில் பாளையங்கோட்டையின் நகரமைப்பை என்னால் இனங்காண முடிந்தது. தென்மேற்கு மூலையில் கட்டபொம்மன் சிலையிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சாலை மெரீனா சிற்றுண்டியகம் என்னுமிடத்தில் வடக்கே திரும்பி யோவான் கல்லூரி முன்புறம் வழியாக நேரே திருச்செந்தூர் சாலையில் சேர்கிறது. கட்டபொம்மன் சிலையிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் சாலை சித்த மருத்துவக் கல்லூரியை ஒட்டி மேற்குப் புறமாகச் செல்லும் தெரு வழியாகத் திருச்செந்தூர்ச் சாலையைச் சென்றடைகிறது. இதுதான் பாளையங்கோட்டையின் நான்கு எல்லைகளும். இந்தச் சாலையை ஒட்டி மேற்கில் உயிர்க் காப்பீட்டுக் கழக அலுவலகம், வ.உ.சி. விளையாட்டரங்கம், நகராட்சி அலுவலகம், கண்காட்சித் திடல், சித்த மருத்துவக் கல்லூரி என்று தோடரும் பகுதி முன்பு காடுகளாகப் பராமரிக்கப்பட்டவை. அவ்வாறே பாளையங்கோட்டைச் சந்தையிலிருந்து கிழக்கேயும் மேற்கிலும் உள்ள பகுதிகளும் காவல் கட்டுப்பாட்டறையிலிருந்து தெற்கே செல்லும் சாலையிலிருந்து யோவான் கல்லூரிச் சாலைக்கு இடையிலுள்ள பகுதிகளும் தெற்கில் தூய சேவியர் பள்ளியைத் தொடர்ந்து கட்டபொம்மன் சிலை வரை உள்ள பகுதியும் காடுகள். சேவியர் பள்ளிக்குப் பின்புறம் இருக்கும் திடல்கள், இடுகாடுகள், கிறித்துவக்கோயில், அஞ்சலகம் என்று மேற்கே வரை மாடுகள் தங்கும் மந்தைவெளி, அதற்கு வடக்கே ஆயர்கள் குடியிருப்பு. அதறகு வடக்கே ஒரு சிவன் கோயில், ஒரு பெருமாள் கோயில், அவற்றுக்குரிய தேர் வீதிகள், மாடத்தெருக்கள், இரண்டுக்கும் நடுவே ஒரு சந்தை(அந்தச் சந்தை இப்போது தெருவாகிவிட்டது). நகரின் ஒரு பக்கச்சாலையிலிருந்து எதிர்ப் பக்கச்சாலைக்குச் செல்வதற்கு நேரான இரண்டிரண்டு குறுக்குச்சாலைகளும்.

திருச்செந்தூர் சாலைக்கு வடக்கே கிழக்கில் கசாப்புத் தொழில் செய்வோரான சீவு இடையர்கள், பள்ளர் – பறையர் குடியிருப்புகள், மேற்கில் செம்மார் குடியிருப்புகள், வட கிழக்கில் சக்கிலியர் குடியிருப்புகள் என்று இனம்காண முடிகிறது. இதில் இந்தக் காட்டுப் பகுதி நகரைச் சுற்றிலும் பாதுகாத்ததையும் நெடுஞ்சாலைக்கும் நகருக்கும் இடையில் காடு நான்கு பக்கச்சாலைகளிலும் இருந்ததையும் சுட்டுவதற்காகவே இதை விரிவாகக் கூறினேன். இது போன்று சாதி அடிப்படையிலோ தோழில் அடிப்படையிலோ சமய அடிப்படையிலோ இன்றி ஒரு நகரமைப்பை நாம் உருவாக்க வேண்டும். முதலாளிய அமைப்பில் தொழிலாளி தொழிற்சாலையினுள்ளும் பண்ணைகளினுள்ளும்தான் அவன் ஒரு தொழில் தொடர்பானவன். அதைவிட்டு வெளியில் வந்தவுடன் அவன் ஒரு சராசரி குடிமகன். இந்த அடிப்படையை மனதில் கொண்டு நாம் நகரங்களை அமைக்க வேண்டும்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.15.4.18

சிலப்பதிகாரப் புதையல் - 20. வழக்குரை காதை

20. வழக்குரை காதை

ஆங்குக்
குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
5. கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா
கருப்பம்
செங்கோலும் வெண்குடையும்
செறிநிலத்து மறிந்துவீழ்தரும்
10. நங்கோன்றன் கொற்றவாயில்
மணிநடுங்க நடுங்குமுள்ளம்
இரவுவில்லிடும் பகல்மீன்விழும்
இருநான்கு திசையும் அதிர்ந்திடும்
வருவதோர் துன்பமுண்டு
மன்னவற்கியாம் உரைத்துமென
ஆடியேந்தினர் கலனேந்தினர்
அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர்
கோடியேந்தினர் பட்டேந்தினர்
கொழுந்திரையலின் செப்பேந்தினர்
15. வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்
மான்மதத்தின் சாந்தேந்தினர்
கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்
கவரியேந்தினர் தூபமேந்தினர்
கூனுங்குறளும் ஊமுங்கூடிய
குறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தர
நரைவிரைஇய நறுங்கூந்தலர்
உரைவிரைஇய பலர்வாழ்த்திட
ஈண்டுநீர் வையங்காக்கும்
பாண்டியன்பெருந் தேவிவாழ்கென
20. ஆயமுங் காவலுஞ்சென்
றடியீடு பரசியேத்தக்
கோப்பெருந் தேவிசென்றுதன்
தீக்கனாத் திறமுரைப்ப
அரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன்
திருவீழ் மார்பின் தென்னவர் கோவே; இப்பால்
வாயி லோயே வாயி லோயே
25. அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே
இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று
அறிவிப் பாயே அறிவிப் பாயே, என
30. வாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்சவ வாழி
அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்
35. பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேற றடக்கைக் கொற்றவை யல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
40. பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே
கணவனை இழந்தாள் கடையகத் தாளே, என
45. வருக மற்றவள் தருக ஈங்கென
வாயில் வந்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி
நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடி யோய்எனத்
50. தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
55. அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
60. சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரேயெனப், பெண்ணணங்கே
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
65. வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை
நற்றிறம் படராக் கொற்கை வேந்தே
என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத்
தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே
70. தருகெனத் தந்து தான்முன் வைப்பக்
கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே. மணிகண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்தங்செங கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
75. யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்குந் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுளென
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்
கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்
80. கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.

வெண்பா
அல்லவை செய்தார்க் கூறங்கூற்ற மாமென்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே - பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் றேவி
கடுவினையேன் செய்வதூஉங் காண்.

காவி யுகுநீருங் கையில் தனிச் சிலம்பும்
ஆவி குடிபோன அவ்வடிவும் - பாவியேன்
காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக்
கூடலான கூடாயினான்.

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் - வையைக்கோள்
கண்டளவே தோற்றான்அக் காரிகதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.
பொழிப்புரை
அங்கே, மன்னவன் கோயில் வாயில்முன் அவள் சென்ற போதில்,
மன்னவனின் வெண் கொற்றக் குடையோடு செங்கோலும் விழவும் நின்று அதிரும் வாயில் மணியின் ஓசையையும் காண்பேன் தோழீ!
எட்டுத் திசைகளும் அதிர்ந்திடவும் அத்துடன் கதிரவனை இருள் விழுங்கவும் காண்பேன் தோழீ!
இரவில் ஒழுங்குபட்ட வானவில் தோன்றவும் கடும் வெய்யில் வீசும் பகலில் விண் மீன்கள் வீழ்வதையும் காண்பேன் தோழீ!

கருப்பம்
அரசனுடைய செங்கோலும் வெண்கொற்றக் குடையும் மண்செறிந்த நிலத்தில் சாய்ந்து விழும், நம் மன்னனின் வெற்றி தரும் வாயிலில் உள்ள மணி அசையும் ஒலியால் என் நெஞ்சம் நடுங்கும், இராப்பொழுதில் வானவில் தோன்றும் பகல் வேளையில் விண்மீன்கள் எரிந்து விழும், எட்டுத் திசைகளும் அதிரும், எனவே ஒரு துன்பம் வர இருக்கிறது அதனை அரசனுக்கு நாம் கூறுவோம் என்று கூற,

ஒளி வீசும் அழகிய அணிகலன்களை அணிந்த கூனரும் குள்ளரும் ஊமையும் ஆன குற்றேவல் மகளிர் கண்ணாடியையும் அணிகலன்களையும் புதிய நூலாடையையும் பட்டாடையையும் செழுமையான வெற்றிலைச் செப்பையும் பலவகை வண்ணப் பொடிகளையும் சுண்ணங்களையும் கத்தூரிக் குழம்பையும் ஆரங்களையும் மாலைகளையும் கவரியையும் புகையையும் ஏந்திய வராய் சூழ்ந்து வர,

நரை கலந்த மணம் வீசும் கூந்தலை உடைய பெண்டிர் பலர் கடல் சூழ்ந்த இவ்வுலகினைக் காக்கும் பாண்டியனின் பெருந்தேவியாகிய (பட்டத்தரசியாகிய) நீவிர் நீடு வாழ்கவென்று சொல்லிப் புகழ் கலந்த சொறகளால் வாழ்த்த சுற்றமாகிய தோழியரும் காவல் பெண்களும் காலடி எடுத்து வைக்கும் தோறும் போற்றிப் புகழ்ந்திட பாண்டியனின் பெருந்தேவி சென்று தனது தீய கனவின் தன்மைகளை எடுத்துக் கூற திருமகள் மயங்கும் மார்பினையுடைய பாண்டிய மன்னன் அரிமாக்கள் ஏந்திய இருக்கையில் இருந்தனன்.

அதே வேளையில், அறிவு இரண்டகம் செய்த சிந்தனை, செயலிழந்த நெஞ்சை உடைய அரச நெறித் தவறியவனின் வாயில் காப்போனே! சிலம்புகளின் இணையில்(சோடியில்) ஒன்று ஏந்திய கையினள், கணவனை இழந்தவள் அரண்மனை வாயிலில் நிற்கின்றாள் என்று அறிவிப்பாய்! அறிவிப்பாய்! என்று கூறினாள்.

வாயில் காப்போன், எங்கள் கொற்கையின் வேந்தனே வாழ்க! தெற்கில் உள்ள பொதிய மலையின் தலைவனே, வாழ்க! செழியனே வாழ்க! தென்னவனே வாழ்க! பழி தரும் வழியில் செல்லாத பஞ்சவனே வாழ்க!

வெட்டுவாயினின்றும் செறிந்து எழுந்து ஒழுகும் குருதி அடங்காத பசும் துண்டமாகிய பிடரியோடு கூடிய மையிடன் தலையாகிய பீடத்தில் ஏறி நின்ற இளம் கொடி போன்றவளாகிய வெற்றி தரும் வேலைக் கையிலேந்திய கொற்றவையும் அல்லள், கன்னியர் எழுவருள் இளயவளான பிடாரியும் இறைவனை ஆட வைத்துப் பார்த்து அருளிய சுடலைக் காளியும் அச்சம் விளைக்கும் கானகத்தை இருப்பிடமாக விரும்பி ஏற்றுக்கொண்ட காளியும் தாருகனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கையும் அல்லள். வன்மம் கொண்டவள் போலவும் சினம் மிக்கவள் போலவும் தொழில்திறம் அமைந்த பொற்சிலம்பு ஒன்றை ஏந்திய கையுடன் கணவனை இழந்த ஒருத்தி வாயிலில் உள்ளாள், வாயிலில் உள்ளாள் என்றான்.

அவள் இங்கு வரட்டும்! அவளை இங்கு அழைத்து வா! என்று அரசன் கூறவும் வாயில் காப்போன் கண்ணகிக்கு அரண்மனைக்குள் வழிகாட்டினான். அரண்மனைக்குள் மன்னனை அவள் நெருங்கிச் சென்றாள். அப்போது மன்னன்,

நீர் ஒழுகும் கண்களுடன் என் முன் வந்த இளங்கொடி போன்ற பெண்ணே நீ யாரோ? என்று கேட்டான்.

தேர்ந்து தெளியும் இயல்பில்லாத மன்னனே, உன்னிடம் செல்ல வேண்டிய செய்தியைக் கேள்!

எவரும் இகழ முடியாத சிறப்பினை உடைய தேவர்கள் இறும்பூது எய்தும் வண்ணம் புறாவொன்றுக்கு நேர்ந்த பெரிய துன்பத்தை நீக்கியவன் மட்டுமின்றி வாயிலில் தொங்கும் மணியின் நடுவிலுள்ள நாக்கு நடுங்கி அசைந்து ஒலியெழுப்ப ஆவின் கண்மணியின் ஒரத்திலிருந்து வழியும் நீர் தன் நெஞ்சைக் சுட்டதால் தன்னுடைய பெறுதற்கரிய மகனைத் தானே தேர்க்காலிலிட்டுக் கொன்றவனும் ஆகிய இவர்களது பெரும் புகழுடைய புகார் நகரமே என் பிறந்த ஊர். அவ்வூரில் எந்தப் பழிக்கும் ஆட்படாத பெருமையுடைய புகழ் விளங்கும் பெரிய குடியைச் சேர்ந்த மாசாத்துவான் எனும் வாணிகனுடைய மகனாகப் பிறந்து வீரக்கழல் அணிந்த மன்னா, தொழில் செய்து வாழ்வதற்கென்று முன் வினைப்பயன் தன்னைத் துரத்தியதாலே உன் மதுரை நகரத்தினுள் புகுந்து இங்கு என் காலில் உள்ள சிலம்பை விற்பதற்காக வந்த இடத்தில் உன்னால் கொலைக்களப்பட்ட கோலவனுடைய மனைவி நான், கண்ணகி என்பதே என் பெயர் என்றாள்.

அழகிய பெண்ணே, கள்வனைக் கொல்வது கொடுங்கோன்மை அல்ல, அதுதான் வேலால் ஆளும் அரச நெறியாகும் என்பதை அறிந்து கொள் என்று மன்னன் கூறினான்.

ஒளிபொருந்திய அணியினை உடைய கண்ணகி அரசனை நோக்கி, நல்ல நெறியில் செல்லாத கொற்கையின் அரசனே என் கால் சிலம்பு மாணிக்கப் பரல்களைக் கொண்டது என்று கூறினாள். தேன் போன்ற மொழியினை உடைய இந்தப் பெண் கூறியது செம்மையான நல்ல கூற்றாகும். எமது சிலம்பில் உள்ள பரல்கள் முத்துக்களாகும் என்று அரசன் கூறி, கோவலனிடமிருந்து பறித்த சிலம்பைக் கொண்டு வாருங்கள் என்று கேட்டு வாங்கி தானே எடுத்துக் கண்ணகி முன் வைத்தான். தான் அணியும் அழகிய கால்சிலம்பை எடுத்து நிலத்தில் வீசி உடைத்தாள். சிலம்பிலிருந்து மாணிக்கப் பரல்கள் மன்னனின் வாய்வரை தெறித்தன.

அவ்வாறு எறிந்த மாணிக்கப் பரல்களைக் கண்டு, தாழ்வுற்ற குடையும் சோர்வுற்ற செங்கோலும் உடையவனாய் பொன்தொழில் செய்யும் கொல்லன் சொற்களைக் கேட்டுச் செயல்பட்ட நான் ஓர் அரசன் என்பதற்குத் தகுதியுடையவன் அல்லன், யானே கள்வன்; குடிமக்களைக் காக்கும் பாண்டி நாட்டு ஆட்சி என்னிலிருந்து தவறுடையதாயிற்று. என் வாழ்நாள் முடிந்து போகட்டும் என்று மயங்கிச் சாய்ந்தான் மன்னன்.

கோப்பெருந்தேவியான பாண்டிமாதேவி, நிலை குலைந்து நடுங்கினாள். கணவனை இழந்தவர் தம் கணவனென்று காட்டுவதற்கு எவருமே இல்லாதவர் என்று கூறி கணவனது திருவடிகள் இரண்டையும் தொழுது வீழ்ந்தனன்.

வெண்பாக்கள்

தீய செயல்களைச் செய்தவர்களுக்கு அறமாகிய தெய்வமே கூற்றுவனாகித் தண்டிக்கும் என்று பல அறிஞர் பெருமக்களின் கூற்றும் தவறுவதில்லை. கொடிய தீங்கினைச் செய்த வெற்றி மிக்க பாண்டியனுடைய மனைவியே கொடும் வினையைச் சந்தித்தவளாகிய நான் செய்ய இருக்கும் வன்செயல்களையும் காண்பாயாக.

கண்ணகியின் நீல மலர் போன்ற கண்களிலிருந்து பொழிந்த கண்ணீரையும் அவள் கையிலிருந்த ஒற்றைச் சிலம்பையும் உயிர் நீங்கினால் போன்று காட்சியளித்த அவள் தோற்றத்தையும் காடுபோல் அவள் உடல் முழுவதும் விரிந்து கிடந்த கரிய கூந்தலையும் கூடல் நகரத்து அரசனான பாண்டியன் நான் பாவியானேனே என்று கண்டவுடன் அஞ்சி உயிரற்ற கூடாயினான.

உடம்பில் படிந்த புழுதியையும் விரிந்து கிடந்த கரிய கூந்தலையும் கையிலுள்ள ஒற்றைச் சிலம்பையும் கண்ணீரையும் வையை அரசான பாண்டியன் பார்த்த அளவிலேயே வழக்கில் தோல்வியுற்றான். அப்பெண்ணின் சொல்லைச் செவியிலே கேட்ட அளவிலேயே உயிரையும் இழந்தான்.

இக்காதையின் சிறப்புகள்
1. கேடுகள் வரும் முன் தீக்குறிகளும் தீக்கனவுகளும் வருவதாக இலக்கியப் படைப்பாளிகள் கூறுவர். ஆய்ச்சியர் குரவையில் தீக்குறிகளைக் காட்டிய அடிகளார் இக்காதையில் தீக்கனாவைக் காட்டுகிறார். வானில் துளிநிலையடைந்து நிலத்துக்கு இறங்கியும் இறங்காமலும இருக்கும் நீர்த்திவலைகளின் ஊடாக மேகத்தால் மறைக்கப்படாத கதிரவ ஒளி கடந்துசெல்லும் போது கதிரவனுக்கு எதிர்த்திசையில் தோன்றுவது வானவில். கதிரவனின் வெண்ணிற ஒளி கூம்பு எனப்படும் ஒளி கடத்தும் ஊடகத்தின் ஊடாகச் செல்லும் போது ஊதா, அவுரி(இண்டிகோ), நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள் (ஆரஞ்சு – ஆங்கிலத்தில் naranj என்ற அரபு மொழி மூலத்தைக் காட்டுகிறது Chambers Twentieth Century Dictionary. மலையாளத்தில் நாரத்தங்காயை நாரைங்கா என்பது வழக்கு. அது மட்டுமல்ல, சாத்துக்குடி ஆரஞ்சுப் பழத்தை இரண்டு பப்பாதிகளாகப் பிளக்க முயன்றால் அவற்றிலுள்ள 11 சுளைகளில் ஒரு புறம் ஆறும் இன்னொரு புறம் ஐந்துமாக ஆறைந்தாக – ஆறஞ்சாகப் பிளக்கும் இயல்பை ஒரு பெண்மணி ஒருமுறை சுட்டிக்காட்டினார்.) – vibgyor என்று வானவில்லாகத் தோன்றும். பகலில்தான் நிகழும் இந்த இயற்காட்சி இரவில் நடந்ததாகத் தான் கனவு கண்டதாக கோப்பெருந்தேவி கூறுகிறாள்.
2. அது போல் இரவு வானில் தோன்றும் விண்மீன்கள் நிலம் நோக்கியும் ஒரு திசையிலிருந்து இன்னொரு திசை நோக்கியும் பாய்வதைக் காண முடியும். ஆனால் பகல் ஒளியில் இவ்வியக்கங்கள் நம் கண்களுக்குத் தோன்றா. ஆனால் அத்தகைய இயல்பு மீறிய காட்சியைத் தான் கனவில் கண்டதாக அரசி கூறுகிறாள்.
3. தான் கண்ட கனா அவள் உள்ளத்தை மிகவும் வருத்தியதால் சொன்னதையே மீண்டும் மீண்டும் அவளை அறியாமலே சொல்லிப் புலம்புவதை அருமையாக உணர்த்துகிறார் அடிகள். கருப்பம் என்ற சொல் இப்பொருளில்தான் கையாளப்பட்டுள்ளதோ?

ஏன் இந்தப் புலம்பல்? அரசனின் ஏலா நடத்தைகளால் அவனுக்கும் நாட்டுக்கும் என்னென்ன கேடுகள் எப்போது எங்கிருந்து, குறிப்பாக மக்களிடமிருந்து வருமோ என்ற கலக்கம் அவளிடமிருந்து வெளிப்படுகிறது எனலாம். ஊர்காண் காதையில்,
சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்
முடியர சொடுங்கும் கடிமனை வாழ்க்கை
வேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து
மாத்திரை அறிந்து மயங்கா மரபின்
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து
நால்வகை மரபின் அவினயக் களத்தினும்
ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்
மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும்
என்ற வரிகளில்(146 – 154) அரசனும்,
வையமுஞ் சிவிகையும் மணிக்கால் அமளியும்
உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்
சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும்
கூர்நுனை வாளும் கோமகன் கொடுப்ப
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்
பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து
செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய
அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப்
பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும்
நறுமலர் மாலையின் வறிதிடங் கடிந்தாங்
கிலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்பப்
புலவிக் காலத்துப் போற்றா துரைத்த
காவியங் கண்ணார் கட்டுரை யெட்டுக்கும்
நாவோடு நவிலா நகைபடு கிளவியும்
அஞ்செங் கழுநீர் அரும்பவிழ்ந் தன்ன
செங்கயல் நெடுங்கண் செழுங்கடைப் பூசலும்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத்
திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும்
செவ்வி பார்க்கும் செழுங்குடிச் செல்வரொடு
வையங் காவலர் மகிழ்தரு வீதியும்
என்று அரசு அதிகாரிகளும் கணிகையர் வீடுகளுக்கும் பரத்தையர் வீடுகளுக்கும் செல்வதைக் குறிப்பாகத் தந்துள்ளார்.

இதுவரை அரசனின் நடத்தைககளுக்கு எதிர்ப்பாக ஊடலையே உத்தியாகக் கையாண்டுவருபவள் இந்தக் கனாக்காட்சியை அவனுக்கு எடுத்துரைத்து எச்சரிப்போம் என்ற எண்ணம் தன்னை மீறி வாய்விட்ட புலம்பல்களாக வெளிப்படுவதைச் சிறப்பாகப் புலப்படுத்துகிறார் அடிகளார். கொலைக்களக் காதையில் கோப்பெருந்தேவி ஊடியதன் காரணமாக,
கூடன் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவல னுள்ளம் கவர்ந்தன என்றுதன்
ஊட லுள்ளம் உள்கரந் தொளித்துத்
தலைநோய் வருத்தந் தன்மே லிட்டுக்
குலமுதல் தேவி கூடா தேக
என்று அவனது ஒழுக்கக் கேட்டையே காட்டுகிறார். அதை வெளிப்பட எதிர்த்துக் குரலெழுப்பத் துணிவற்ற அரசியோ தலைநோவென்று சாக்குக் கூறித்தான் தன் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறாள். அவள் அரசன் மனதைப் புண்படுத்த விரும்பவில்லையா அல்லது அவனுக்கு அஞ்சினாளா? அப்படிப்பட்டவள் தன் மனக்கலக்கத்தை இப்படிப் புலம்பி வெளிப்படுத்துகிறாள்.
4. அடுத்து அரசியுடன் செல்லும் ஊழியர் அணி பற்றிய ஒரு பட்டியலைத் தருகிறார் அடிகள். கண்ணாடியையும் அணிகலன்களையும் ஏந்தியவர்களையும் கோடி எனப்படும் புதிய நூலாடைகளையும் பட்டாடைகளையும், வெற்றிலைத் தாம்பாளத்தையும் பல நிற வண்ணப்பொடிகளையும் கத்தூரி கலந்த சந்தனத்தையும் மலர்தொடுப்புகளையும் மாலைகளையும் கவரியையும் அகிற்புகைக் கூடையையும் தாங்கிய கூனர்கள், குள்ளர்கள், ஊமைகள் அடங்கிய ஏவல் மகளிர் என்பது வியப்பாக உள்ளது. உடற்குறை உடையோருக்கு வேலைவாய்ப்பளிப்பது இதன் நோக்கமா அல்லது குறையில்லாத பெண்களால் அரசனின் கவனம் திரும்பும் என்ற எச்சரிக்கையின் விளைவா இது என்ற ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
5. அரசவை வாயிற் காவலன் அரசனை விளிக்கும் போது அவனது துறைமுகச் சிறப்பையும் மலைச் சிறப்பையும் கூறி வாழ்த்துவது கவனிக்கத்தக்கது.
6. வாயிலில் வந்து நின்ற கண்ணகியின் கோலத்தைக் காவலன் எடுத்துரைக்கும் பாங்கு சீற்றம் மிகுந்த அவளது தோற்றத்தை விளக்குவதற்கு அடிகளார் மேற்கொண்டுள்ள ஒப்பற்ற உத்தி. மயிடன் எனும் காட்டெருமை வடிவிலான அரக்கனை அழித்த பத்திரகாளியோ, ஏழு மாதர்களுள் இளையவளான நாக கன்னிகையோ, சிவனை ஆட வைத்த உமையவளோ, காட்டை இருப்பிடமாகக் கொண்ட காளியோ, தாருகனின் பெரிய வயிற்றைக் கிழித்த பெண்ணாகிய கொற்றவையோ அல்ல என்பதன் மூலம் அவளது சீற்றத்தின் உச்சத்தை விளங்க வைக்கிறார்.
7. யார் நீ என பாண்டியன் கேட்க சோழ அரசர்களின் நயன்மை முறை பற்றிய இரண்டு செய்திகளை கண்ணகி வாயிலாக அடிகள் எடுத்துவைக்கிறார். வேடனால் எய்யப்பட்டு காயமுற்று காலடியில் வீழ்ந்த புறாவுக்கு ஈடாகத் தன் உடம்பை அரிந்து அளித்த செம்பியனாகிய சிபியையும் தன் கன்றின் மீது தேரை ஓட்டிக் கொன்ற இளவரசனைத் தேர்க்காலில் கொன்று கன்றின் தாயான ஆவுக்கு நயன்மை வழங்கிய மனுநீதிச் சோழனையும் நமக்கு அறிமுகம் செய்கிறார்.
8. தன்னை விட செல்வத்தில் உயர்ந்தவனாயினும் பாண்டியனின் மனைவியின் சிலம்பில் அவன் நாட்டின் சிறப்பான கல்லாகிய முத்துதான் இருக்கும் என்ற உறுதியில் தன் சிலம்பில் மாணிக்கப் பரல்கள் உள்ளன என்று சொல்கிறாள். அவள் எதிர்பார்த்தவாறே அரசன் தன் அரசியின் சிலம்பில் உள்ளது முத்து எனக் கூறுகிறான்.
9. கோவலனிடமிருந்து பெற்றதாகிய சிலம்பை அரசன் எடுத்துவைக்க கண்ணகி அதை எடுத்து வீச அது உடைந்து தெறித்த வேகத்தில் அரசனின் வாய் மீது தெறித்தது என்றால் கண்ணகியின் சீற்றத்தின் மிகுதியையும் அவள் சிலம்பை எறிந்த வெறியையும் எவ்வளவு சிக்கனமான சொற்செலவில் வெளிப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்!
. ❋ ❋ ❋

சிலப்பதிகாரப் புதையல் - 19. ஊர்சூழ் வரி

19. ஊர் சூழ்வரி

என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி
நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி
முறையில் அரசன்றன் ஊரிருந்து வாழும்
நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று

5. பட்டேன் படாத துயரம் படுகாலை
உற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று

கள்வனோ அல்லன் கணவன்என் காற்சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று

மாதர்த் தகைய மடவார்கண் முன்னரே
10. காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று

காதற் கணவனைக் கண்டா லவன்வாயில்
தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று
தீதறு நல்லுரை கேளா தொழிவேனேல்
நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று
15. அல்லறுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி
மல்லல் மதுரையா ரெல்லாருந் தாமயங்கிக்
களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல்

மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன்
20. தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல்

மண்குளிரச் செய்யு மறவேல் நெடுந்தகை
தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கோல்
செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல்

25. ஐயரி யுண்கண் அழுதேங்கி யரற்றுவாள்
தெய்வமுற்றாள் போலுந் தகைய ளிதுவென்கொல்
என்பன சொல்லி இனைந்தேங்கி யாற்றவும்
வன்பழி தூற்றுங் குடியதே மாமதுரைக்
கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச்
30. செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான்
மல்லன்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற்
செவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென்றொளிப்பப்
புல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட
ஒல்லென் ஒலிபடைத்த தூர்

35. வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன்மேற்
கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப்
புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்
கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம்

என்னுறு துயர்கண்டும் இடருறும் இவள் என்னீர்
40. பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ
மன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு
என்னுறு வினைகாணா இதுவென வுரையாரோ

யாருமில் மருள்மாலை இடருறு தமியேன்முன்
தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ
45. பார்மிகு பழி தூற்றப் பாண்டியன் தவறிழைப்ப
ஈர்வதோர் வினைகாணா இதுவென வுரையாரோ

கண்பொழி புனல்சோரும் கடுவினை யுடையேன்முன்
புணபொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ
மன்பதை பழிதூற்ற மன்னவன் றவறிழைப்ப
50. உண்பதோர் வினைகாணா இதுவென வுரையாரோ

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்

சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
55. ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம்
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்

தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்

60. என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன்
பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள
நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம்
கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற
அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன்
65. தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப்
பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான்
எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப்போனான்

மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல்
போயெங்கு நாடுகேன் பொருளுரையோ இதுவன்று
70. காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்
தீவேந்தன் றனைக்கண்டித் திறங்கேட்பல் யானென்றாள்

என்றாள் எழுந்தாள் இடருற்ற தீ்க்கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர
நின்றாள் நினைந்நாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச்
75. சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன்.

பொழிப்புரை
காய்கதிர்ச் செல்வன் உன் கணவன் களவனல்லன் என்றான்.

அறுத்து உருவாக்கப்பட்ட வளையல்களை அணிந்த தோள்களை உடைய கண்ணகி அவ்விடத்தில் நிற்காமல் தன்னிடம் எஞ்சி இருந்த சிலம்பு ஒன்றைக் கையிலே ஏந்தி,

முறைமை இல்லாத அரசனின் ஊரில் வாழும் கற்புடைய பத்தினிப் பெண்களே இந்த சிலம்பைப் பாருங்கள், இது அந்தச் சிலம்புடனுள்ள இன்னொன்று, இதனைப் பாருங்கள்!

இம்மாலை வேளையில் பிறர் எவரும் படாத துன்பத்தைப் பட்டேன், பிறர் படாத துன்பத்தை அடைந்தேன், பிறர் அடையாத நிலையை அடைவேன், இது ஒன்று!

என் கணவன் கள்வனே அல்லன், என் கால் சிலம்பை விலை கொடுக்காமல் பறிப்பதற்காகக் அவனைக் கொன்றாரே! இது ஒன்று!

தம் கணவரின் காதலுக்குத் தகுந்த பெண்களின் கண் முன்னாலேயே அன்பு நிறைந்த என் கணவனை உயிருடன் காண்பேனே! இது ஒன்று!

என் கணவனை அவ்வாறு கண்டால் அவன் வாய் மொழியாகக் கூறும் குற்றமற்ற இனிய சொற்களைக் கேட்பேன்! இது ஒன்று!

அவ்வாறு குற்றமற்ற நல்ல மொழிகளை அவன் வாயிலிருந்து கேளாமல் இருந்தேனானால் பிறருக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்தவள் இவள் என்று என்னை இகழுங்கள்! இது ஒன்று!

இவ்வாறு துன்பம் மேலிட்டு ஆற்ற முடியாமல் அழுகின்ற கண்ணகியைக் கண்டு வளம் மிக்க மதுரை நகரம் வாழ் மக்கள் எல்லாரும் தாம் ஏக்கமுற்றுக் கலங்கி களைய முடியாத துன்பத்தை இந்தப் பெண்ணுக்குக் கொடுத்தது என்றும் வளையாத செங்கோல் வளைந்துவிட்டதே இது என்ன கொடுமை!

மன்னர்களுக்கு மன்னனும் திங்களைப் போன்று குளிர்ந்த வெண்கொற்றக் குடையையும் வாளையும் உடைய வேந்தன் ஆகிய பாண்டியனது ஆட்சி இவ்வாறு சிதைந்ததே, இது எப்படி?

மண்ணுலகினைக் குளிரச் செய்யும் மறம் மிக்க வேலையுடைய பெருஞ்சிறப்பு மிக்கவனாகிய மன்னனது குளிர்ந்த குடை வெம்மையாகச் செயற்பட்டதே இது எப்படி?

செம்பொன்னால் செய்த ஒரு சிலம்பைக் கையில் ஏந்தி ஒரு புதிய தெய்வம் நமக்காக இங்கு வந்தது என்ன வியப்பு!

அழகிய வரி பரந்த மை பூகிய கண்கள் அழுது ஏங்கி புலம்புகின்ற இவள் தெய்வம் கொண்டவள் போன்று செயற்படுகிறாளே இது என்ன காரணம்? என்பவற்றைக் கூறி வருந்தி ஏங்கி அரசனின் செயலை வன்மையாகப் பழித்து ஆர்ப்பரித்த மதுரைக் குடிமக்கள் கண்ணகிக்கு அவள் கணவனைக் காட்டினர்.

தன்னைக் கண்ட சிவந்த பொன்னால் செய்த கொடி போன்ற கண்ணகியைக் காணப் பொறாதவனாய் வளம் நிறைந்த பெரிய உலகுக்கு இருளை ஊட்டிப் பெரிய கரிய மலையின் மேல் சிவந்த தன் கதிர்க் கற்றைகளைச் சுருக்கிக் கொண்டு கதிரவன் மறைந்தான்.

சிறிது நேரமே நிலவும் மயங்கும் பூங்கொடி போன்ற மாலைப் பொழுது மறையும் கதிரவனோடு பூசலிடுகின்ற அந்த வேளையில் கோவலன் கொலையுண்டதால் கண்ணகி மக்களிடம் உருவாக்கிய உணர்வுகளால் மாநகரில் பெரும் சலசலப்பு உருவானது.

காலையில் கணவனின் கரிய கொண்டையில் சூடியிருந்த வண்டு ஒலிக்கும் மாலையை வாங்கித் தன் நீண்ட கூந்தலில் சூடிக் கொண்டவளாகிய கண்ணகி இப்போது மாலையில் புண்ணிலிருந்து வழியும் குருதி அவன் உடம்பை நனைக்க அவன் தன்னைக் காண முடியாததால் பெருந்துயரத்தை அடைந்தாள்.

என்னுடைய இந்தப் பெரிய துயரத்தைக் கண்டும் இவள் துன்பமடைவாள் என்று எண்ணாமல் பொன் பொருந்திய மணம் மிக்க தங்கள் உடலம் புழுதி படிந்து கிடக்கலாமா? மன்னவன் செயலால் விளைந்த இந்தத் துயரத்தின் தன்மையை அறியாத என்னை இக்கொலைக்கு என் முற்பிறவி வினைதான் காரணம் என்று ஊரார் கூறாரோ?

துணை என எவரும் இல்லாத இந்த மாலை மயங்கும் நேரத்தில் துயருறும் தனியாளாகிய என் கண் முன்னே மாலைகள் நிறைந்திருக்கும் அழகிய மார்பு வெறும் தரையில் வீழ்ந்து கிடப்பதோ!

உலகத்தார் பெரும் பழிகளைச் சொல்லித் தூற்றும் வண்ணம் பாண்டியன் குற்றம் புரிய நின் தீவீனைகளின் பயன் வெளிப்பட்டுள்ளது என உரைக்க மாட்டார்களா?

நீரைச் சொரியும் கண்களைக் கொண்ட கொடிய தீவினையுடைய என் முன் புண்ணிலிருந்து குருதி வடியுமாறு புழுதியினுள் கிடப்பதோ, குடிமக்கள் பழிகூறித் தூற்ற மன்னவன் குற்றம் புரிய இது நடந்தது நீ செய்த வினையால்தான் என்று பிறர் கூறாரா?

இந்தக் கூடல் நகரில் தன்னுடைய கணவர்களுக்கு படும் பழிகளையும் துன்பங்களையும் தாங்கிக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்களா? பெண்களும் இருக்கிறார்களா?

பிறர் ஈன்ற குழந்தையை எடுத்து வளர்க்கும் சான்றோர்கள் இருக்கிறார்களா? சான்றோர்கள் இருக்கிறார்களா?

கூரிய வாளால் கொடிய குற்றத்தைச் செய்த பாண்டியனின் கூடலில் தெய்வமும் இருக்கிறதா? தெய்வமும் இருக்கிறதா?

என்று இவற்றைச் சொல்லி அழுகின்ற கண்ணகி தன் கணவனுடைய திருமகள் தங்கும் மார்பை இறுகத் தழுவிக் கொள்ளவும் கோவலன் உயிர் பெற்று எழுந்து நின்று நிறை மதி போன்ற வெண்மையான முகம் கன்றியது என்று கூறி அவள் கண்ணீரைக் கையால் துடைத்தான். அப்பொழுது கண்ணகி புலம்பி ஏங்கி நிலத்தில் வீழ்ந்து தன் கணவனின் கால்களை இரு கரங்களாலும் பற்றினாள். அவ்வளவில் அவன் குற்றமற்றவனாக, பல தேவர்களின் குழுவில் இருப்பதைக் கண்டாள். அவன் அவளை நோக்கி நீ இங்கு இரு என்று கூறிப் போயினான்.

இப்போது நிகழ்ந்தது மாய நிகழ்வோ வேறு எதுவோ, என்னை மருள வைக்கும் ஒரு தெய்வமோ, இனி எங்கு சென்று என் கணவனைத் தேடுவேன் இப்போது கூறிய சொற்கள் உண்மையானவை அல்ல. என் கடும் சினம் தணியாமல் என் கணவனிடம் செல்ல மாட்டேன். தீயவனாகிய பாண்டியனைக் கண்டு அவன் நடத்தைக்கு விளக்கம் கேட்பேன் என்றாள். என்று கூறியவள் எழுந்தாள் துன்ப நிகழ்ச்சியைக் கொண்ட தீய கனவை நீண்ட கயல் போலும் கண்களில் நீர் சொரிய நினைத்துப் பார்த்தாள். நின்று நினைத்து பார்த்து தன் நீண்ட கயல் போலும் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்காமலே அரசனுடைய செழுமையான அரண்மனையில் வாயிலை நோக்கிச் சென்றாள்.

இந்தக் காதையின் சிறப்புகள்
1. கதிரவன் கண்ணகியுடன் பேசிய இறும்பூது உண்மையானதா அல்லது அவள் உள்மனதின் தோற்றமா? தவறு செய்யாத தன் கணவனைக் கொன்ற இந்த அரசனின் தலைநகரை அழிக்க வேண்டுமென்ற வெறியா? பரத்தைகளோடு ஆடியும் மாதவியோடு வாழ்ந்தும் தன் கணவன் தன் வாழ்வையே பொருளற்றதாக்கிவிட மதுரை போய்விடலாம் என்று அவன் கூறியதும் இழந்த வாழ்வை மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கையோடு புறப்பட்டு நிலத்தையே தொட்டு அறியாத தன் காலால் கரடு முரடான 60 காதம், 180 மைல், கிட்டத்தட்ட 300 கி.மீ. தொலைவை பொறுக்க முடியாத துன்பத்தைப் பொறுத்து வந்த இடத்தில் அவன் திருட்டுப்பழி சுமத்தப்பட்டு வன்கொலையாகக் கொல்லப்பட்டதற்குப் பழியாக அவ்வரசன் ஊரையே அழி என்று அவள் உள்ளம் விடுத்த அறைகூவல்தான் கதிரவன் கூற்றாக, உறுதிப்பாடாக அவள் உள்ளத்தில் வெளிப்பட்டதைத்தான் அடிகளார் நமக்குத் தருகிறார்.
2. தெருவில் இறங்கி தன் இன்னொரு சிலம்பைக் கையிலேந்தி தன் கணவன் கையிலிருந்த சிலம்பின் இணை இதுவென்றும் கணவன் கையிலிருந்த சிலம்பைப் பறிக்கவென்றே தன் கணவனைக் கொன்றுள்ளனரென்றும் கூக்குரலிட்டுச் செல்பவளைக் கண்டு திகைத்து நம் மன்னனைக் குறைகூறி ஒரு பெண் தெருவிலிறங்கி குரலெழுப்புவதைக் கண்டு, பாண்டிய மன்னனின் ஆளுமைக்கு இப்படி ஓர் அறைகூவல் வந்தது கண்டு அவர்கள் திகைத்து நிற்கின்றனர்.
3. அடிகளார் இதை மட்டும் சுட்டவில்லை, செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல் என்று மக்கள் மக்கள் அரற்றினார்கள் என்று கூறுவதன் மூலம் ஆட்சியாளர்கள் செய்யும் கொடுமைகள் தாங்காது தவித்து வரும் மக்களின் முன் கண்ணகி தம்மை விடுவிக்க வந்த, தாம் அறியாத ஒரு தெய்வமாகவே படுகிறாள் என்பதைப் பதிகிறார். கள்வன் எனக் குற்றம் சுமத்தப்பட்டு அயலூரான் ஒருவன் எந்த மூதலிப்பும் இன்றி ஒரு காவலனால் வன்கொலையாகக் கொல்லப்படும் இந்த நடைமுறை அந்நாட்டில் இயல்பான ஒன்றாகவே இருந்திருக்கும். அதைத் தட்டிக்கேட்கும் ஒரு தலைமை இல்லாமல் விழி பிதுங்கியிருந்த மக்கள் ஒரு பெண் அந்த இடத்தை நிரப்ப வந்ததைக் கண்டு இறும்பூது எய்தினர் என்பதை இந்த வரிகள் மூலம் அடிகள் நமக்குக் காட்டுகிறார்.
4. கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்ட என்ற வரி கண்ணகி தன் கணவன் கொலைப்பட்டுக் கிடக்கும் இடத்துக்குத் தனியாகப் போகவில்லை என்பதைக் காட்டுகிறது. ஆரவாரம் இட்டுக்கொண்டே ஒரு மக்களின் பெருந்திரள் அவளைத் தொடர்கிறது என்பதை ஐயத்திற்கிடமின்றிக் காட்டுகிறது.
5. பகல் பொழுது முடிந்து இரவு வரும் முன் இரண்டும் மயங்கும் வேளையில் கணவன் கிடக்கும் இடத்தைக் கண்ணகி அடைந்த போது ஊர் மக்களிடையில் மிகுந்த சலசலப்பு ஏற்பட்டதை ஒல்லென் ஒலிபடைத்த தூர் என்ற வரி தருகிறது.
6. கணவனின் குருதி வழியக் கிடந்த உயிரற்ற உடலைக் கண்டு மனம் பதைத்த கண்ணகி மன்னவன் செய்த கொடுவினையைச் சொல்லிக் குமுறுகிறாள். இது தான் செய்த வினையின் விளைவு என்று ஊரார் பழி கூறாரோ என்றும் குமைகிறாள்.
7. அடுத்து அவளுடைய சினம் அவ்வூர் மக்களின் மீது திரும்புகிறது. இந்த ஊரில் கணவனுக்கு வரும் இழிவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பெண்கள் இல்லையா, ஏதிலிகளாக வரும் மக்களைப் பேணும் மேன்மக்கள் இல்லையா, இந்த ஊரில் தெய்வங்கள் இல்லையா என்று குமுறுகிறாள்.
8. இந்த இடத்தில் அடிகளார் ஓர் இறும்பூது நிகழ்த்துகிறார். கணவனின் உயிரற்ற உடலை கண்ணகி தன் மார்போடு இறுகத் தழுவிக்கொள்ள அவன் எழுந்து நிற்கிறான் என்கிறார். “உன் வெண்மையான முகம் கன்றிப்போனதே” என்று அவள் கண்ணீரைத் துடைக்கிறான். அவனுடைய அழகிய அடியை அவள் கையாற்பற்ற எந்த உடலூறும் இன்றி எழுந்து நின்ற அவன் தேவர் குழுவினருடன் “நீ இங்கேயே இரு” என்று சொல்லிச் சென்றான் என்கிறார். இது ஒரு இரும்பூறு(தெய்வீக அற்புதம்) என்றே நமக்குத் தோன்றும். ஆனால் இதை இன்றைய திரைப்பட உத்திகளின்படி பாருங்கள். தன் கணவன் உயிர்த் தெழுந்தது போலவும் தன்னைத் தேற்றித் தேவர்களுடன் விண்ணுலகம் சென்றதாகவும் அவள் மனதுக்கு மட்டும் காட்சியாகத் தெரிந்ததையும் பின்னர் தான் கண்டது ஒரு மாயை, மனக்காட்சி என்று அவள் உணர்ந்ததாகவும் நாம் முடிவு செய்வதற்கு ஏற்றாற்போல், மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல் போயெங்கு நாடுகேன் என்ற வரிகளால் குறிப்பிடுகிறார்.
9. நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச் சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன் என்ற வரிகள் ஒரு முகாமையான கேள்வியை எழுப்புகின்றன. கண்ணகி கணவனின் பிணத்தைக் கண்டு என் சீற்றம் தணிந்தாலன்றி இறந்து போன என் கணவனைத் தேவருலம் சென்று, அதாவது உயிரை விட்டு அவனுயிருடன் கலக்க மாட்டேன் என்று சூளுரைப்பது மாலை மயங்கி இருள் சூழ்ந்த நேரம். அப்போது அரசன் அவை கூடியிருக்குமோ? வாய்ப்பில்லை. மறுநாள் காலைதான் மீண்டும் அவை கூட வாய்ப்புண்டு. அப்படியானால் இந்தக் கால இடைவெளி இளங்கோவடிகள் செய்த ஒரு காலவழு (anachronism) என்று ஓர் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழறிஞர்களிடையில் ஓர் உரையாடல் நடைபெற்றது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க இந்த அதிகாரத் தலைப்பைப் பார்க்க வேண்டும். ஊர்சூழ்வரி என்பது. அதாவது ஊரைச் சுற்றி வந்து ஒரு தனியாள் எழுப்பிய(ஓரி → வரி) பாடல் அல்லது, இந்த இடத்தில், ஒப்பாரி. அதாவது கோவலனின் உடல் கிடந்த இடத்திலிருந்து எழுந்து நின்ற கண்ணகி அரசன் அவை கூடும் நேரம் வரை மதுரை நகரைச் சுற்றிச் சுற்றி வந்து குரல் எழுப்பி மக்களைத் திரட்டினாள் என்ற செய்தியை அதிகாரப் பெயரில் அடிகள் மறைத்து வைத்திருக்கிறார்.
அவர் ஏன் இப்படி மறைத்து வைக்க வேண்டும்? அவர் வாழ்ந்த காலம் முடிமன்னர் காலம். அம் முடிமன்னர்களின் ஆட்சிகள் ஆட்டம் கண்டு அம்மணர்களான அயலவர் ஊடுருவி மக்களை அரசர்களுக்கெதிராகத் திரட்டிக்கொண்டிருந்த காலம். அதாவது அரசர்களின் ஆளும் திறன் சிதைவுற்று கொடுங்கோலாட்சி கோலோச்சிய காலம். அதைப் பதிய வேண்டும். ஆனால் அது வெளிப்படையாக இருந்தால் இந்த நூலாக்கமே வெளியுலகைக் காணாமல் அழிக்கப்பட்டுவிடும். அதனால்தான் ஆங்காங்கு ஒவ்வொரு சொற்களைச் சொருகி அடிகளார் உண்மைகளை அவற்றுக்குள் புதைத்து நமக்குத் தருகிறார். அதனால்தான் ஒட்டுமொத்தச் சிலப்பதிகாரமே ஒரு புதையலின் தன்மையைப் பெற்றிருக்கிறது.
❋ ❋ ❋

சிலப்பதிகாரப் புதையல் - 18. துன்பமாலை

18. துன்பமாலை

ஆங்கு,
ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்
5. தூவித் துறைபடியப் போயினாள் மேவிக்
குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்

அவள்தான்,
சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச்
10. சொல்லாடும் சொல்லாடுந் தான்

எல்லாவோ,
காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின்
15. ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ

நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும்
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின்
மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ

20. தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன்
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ
சொன்னது:-
25. அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
குரைகழல் மாக்கள கொலைகுறித் தனரே
எனக்கேட்டு,
30. பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த்
திங்கள் முகிலோடுஞ் சேண்நிலங் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை
எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்

இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத்
35. துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல்
மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப
அன்பனை இழந்தேன்யான் அலவங்கொண் டழிவலோ

நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித்
துறைபல திறமூழ்கித் துயருறு மகளிரைப்போல்
40. மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப
அறனெனும் மடவோய்யான் அவலங்கொண் டழிவலோ

தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக்
கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல்
செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப
45. இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ
காணிகா,
வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க
50. பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி
காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்
கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய்
ஒள்ளெரி யுண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்.

பொழிப்புரை
ஆட்டத்தில் ஈடுபட்ட தோற்றத்தை உடைய முதியவளாகிய மாதரி குரவைக் கூடத்தின் முடிவில் மலரும் புகையும் புனையும் சந்தனமும் மாலையும் ஆகியவற்றைத் தூவி இடையறாது பாயும் நீரினையுடைய வையைக் கரையில் திருமாலின் திருவடிகளை வணங்கித் துறையில் நீராடப் போனாள். அவ்வேளையில் நகரத்தினுள் உலவும் ஒரு பேச்சைக் கேட்டு வந்த ஒருத்தி அங்கு வந்து நின்றாள். அவள் தான் கேட்ட மொழிகளைச் சொல்ல வாய் வராதவளாக நின்றாள். அப்படி நின்றவளைப் பார்த்து கண்ணகி, பேச்சுக் கொடுக்கிறாள்.

ஏளா (தோழீ?)

என் காதல் கணவனை இதுவரைக் காணவில்லை என் உள்ளம் கலங்கித் துன்பம் கை மீறுகிது என் நெஞ்சம் கொல்லனது ஊது உலையும் தோற்கும் அளவுக்கு மூச்சிரைக்கிறது. அவ்வாறு ஊது உலையும் தோற்க என் நெஞ்சம் இரைக்கும் அளவுக்கு ஊரார் கூறிய செய்தி என்ன தோழி?

நண்பகல் போதிலேயே நடுங்க வைக்கும் துன்பம் என்னை மீறுகிறது அன்புக் கணவனைக் காணாமல் என் உள்ளம் அலைகிறது. அன்பனைக் காணாது என் உள்ளம் அலைவுறுமனால் ஊர் மக்கள் கூறியதென்ன தோழீ?

என் தலைவன் வரக்காணேனே, இது எளிய நிகழ்ச்சியாக எனக்குத் தோன்றவில்லை, ஏதோ வஞ்சகம் நடந்துள்ளது, என்று என் நெஞ்சம் ஐயுறுகிறது. வஞ்ககம் நடந்துள்ளது என்று என் நெஞ்சம் ஐயுறுவதால் அயலார் கூறிய செய்தி யாது தோழீ?

சொன்னது - (என்ன?)

அரசன் வாழும் கோயிலில் இருந்த அழகு மிக்க சிலம்பினை ஓசையின்றி கவர்ந்த கள்வன் என்றே ஓசையின்றி திருடிய கள்வன் என்றே ஓலிக்கின்ற கழலை அணிந்த ஊர்க்காவலர் அவனுக்குக் கொலைத் தண்டனை விதித்தனர்.

என்பதைக் கேட்டு,

சீறி எழுந்தாள், நிலவினைப் பொழியும் திங்கள் முகிலோடு நிலத்தில் விழுந்தது போல் விழுந்தாள் செவ்வரி படர்ந்த கண்கள் மேலும் சிவக்குமாறு அழுதாள் எங்கிருக்கிறாய் எனத் தன் கணவனை கூவி அழைத்து வருந்தி ஏங்கி உழன்றாள்.

தம்முடன் இன்புற்ற தம் கணவன்மார் அழிக்கும் எரியும் நெருப்பில் மூழ்கவும் துன்பம் தருவனவாகிய கைம்மை நோன்புகளைக் கடைப்பிடித்து துயர மடையும் பெண்டிரைப் போல் மக்கட் கூட்டம் என்னைப் பழிதூற்றுமாறு பாண்டியன் குற்றமிழைத்தனால் கணவனை இழந்த நான் அழுதுக் கொண்டு உள்ளம் அழிவேனோ?

மணம் மிக்க அகன்ற மார்பினை உடைய தன் கணவனை இழந்து ஏங்க பல நீர்த்துறைகளிலும் முறைப்படி அழுக்கு ஆறக் குளித்துத் துயருறும் மகளிரைப் போல் கொடுமை என்பதைத் துணையாகக் கொண்டு திரியும் கொடுங்கோலனாகிய மன்னவன் குற்றம் செய்ய அதற்காக அறம் என்று அழைக்கப்படும் அறிவற்றவனே நான் துன்பத்தைச் சுமந்து உள்ளம் அழிந்து திரிவேனோ?

தம்மோடு பொருந்தி வாழ்ந்த பெருமை மிக்க கணவன் தழலாகிய நெருப்பினுள் முழுகத் தாம் பல நீர்த்துறைகளிலே மூழ்கிக் கைம்மை நோன்பு கடைப்பிடிக்கும் துன்பநிலையிலுள்ள பெண்கள் போன்று செம்மையினின்றும் நீங்கிய கோலையுடைய பாண்டியன் தவறு செய்ததால் நான் இப்பிறவியிலும் புகழை இழந்து துன்புற்று உள்ளம் அழிவேனோ?

இதோ என்னைப் பாருங்கள்!

வரவிருக்கும் துன்பத்தை நீக்குவதற்காக நிகழ்த்திய குரவைக் கூத்தில் பங்கேற்க வந்த ஆயர்குலப் பெண்களே நீங்கள் யாவரும் கேட்டுக் கொள்ளுங்கள்! பரந்த அலைகளை உடைய கடலால் வேலியாகச் சூழப்பட்ட இவ்வுலகில் உள்ள அனைத்தையும் அறிந்திருகின்ற காயும் கதிர்களை உடைய கதிரவனே நீ சொல் என் கணவன் கள்வனோ? இப்படி, அவள் கேட்ட கேள்விக்கு கள்வன் அல்லன் கரிய கயல் போலும் கண்களை உடைய பெண்ணே இவ்வூரை ஒளிரும் நெருப்பு உண்ணும் என்று ஓர் உருவிலி(அசரீரி) விடை கூறிற்று.

இக்காதையில் உள்ள சிறப்புகள்
1. கணவன் இன்னும் வரவில்லையே என்று நண்பகலிலேயே மனம் கலங்கிய கண்ணகி தான் சொல்ல வந்த செய்தியைச் சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்ணைப் பார்த்தவுடன் தன் கணவனுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று எதையெதையோ கற்பித்துத் தவிக்கிற தவிப்பை அழுத்தமாகப் பதிகிறார் அடிகள்.

2. கணவனைக் கள்வனென்று காவல்துறையினர் கொன்றுவிட்டனர் என்ற செய்தி கேட்டதும் அவள் விழுந்து புரண்டழுவதைக் காட்டிய அடிகளார் அவள் வாய்மொழியாக வெளிப்படுத்தும் கருத்துகள் கணவனை இழந்த தமிழகத்தின் உயர்குடிப் பெண்கள் உட்படும் கொடுமைகளுக்குப் பெரும் எதிர்ப்புக் குல்லாக வெளிப்படுகின்றன.

கணவன் எரியும் நெருப்பில் வெந்து நீறாகிப் போக கைம்மை என்னும் கொடிய துன்பத்தை நுகர்வது போல் அரசனின் தவற்றால் அன்புக் கணவனை இழந்து துன்பமுறுவேனா என்று கொதிக்கிறாள்.

வன்முறை கொண்டு திரியும் மன்னவன் பிழையால் கணவனை இழந்த தான் பிற பெண்களைப் போல் ஆற்றுத்துறைகளில் நீராடித் திரிய மாட்டேன் என்று சூளுரைக்கிறாள்.

3. பிணத்தை எரிக்கும் மரபு இங்கு கூறப்படுகிறது. தமிழர்கள் பிணத்தைப் புதைப்பார்களென்றும் ஆரியர்கள் என்ற கற்பனை இனத்தைச் சார்ந்தவர்கள் என்று தவறாகக் கருதப்படும் பார்ப்பனர்கள் எரிப்பார்கள் என்றும் ஒரு தவறான கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால் பெரும்பாலும் ஊர்ப்புறங்களில் எரிப்பதும் காலியிடம் அரிதாக உள்ள நகர்ப்புறங்களில் புதைப்பதும் பல சாதியினரிடையில் தமிழகத்தில் நிலவும் மரபாகும். பார்ப்பனராகிய முன்னாள் காஞ்சி சங்கராச்சாரியாரான சந்திர சேகரேந்திர சரசுவதி என்பாரது உடலைப் புதைத்தனர் என்பதையும் இன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட எரித்து சாம்பலை காப்பறைகளில் வைக்கும் நடைமுறை தொடங்கியுள்ளதையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். ஆதி சங்கரர் உலகையே மாயை என்றவர். அவரது பெயரில் இயங்கும் மடம் மனித உடலான ஆச்சாரியாரின் உடலைப் புதைக்க எந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்று புரியவில்லை. அது போல்தான் மனிதன் மீண்டெழும் நாள்வரை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்கக் கிறித்தவர்களிடையில் முளைவிட்டிருக்கும் எரிக்கும் பழக்கத்துக்கு என்ன கோட்பாட்டு விளக்கம்?

4. பெண்கள் மீது நடத்தப்படும் கைம்மைக் கொடுமை பணம் படைத்தவர்களிடையிலும் உடலுழைப்பற்ற மேற்சாதியினரிடையிலும்தான் என்பது சென்ற 20ஆம் நூற்றாண்டிம் முன்பாதி வரை இருந்த நிலைமை. மணவிலக்கு – மறுமணம், கைம்பெண் மறுமணங்கள் பெரும்பாலான பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரிடையில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி நடந்தன. எழுத்தறிவு பரவி பெரும் எண்ணிக்கையில் அரசூழியம் மற்றும் ஒட்டுண்ணி வேலைவாய்ப்புகளில் ஆடவர்கள் நுழைந்த சூழ்நிலையில்தான் சிறிது சிறிதாக மணவிலக்கு பெற்ற அல்லது கைம்மை எய்திய பெண்ணை மணமுடிப்போர் இழிவாகக் கருதப்பட்டு அந்த உரிமைகள் பெண்ணுக்கு மறுக்கப்பட்டு பெண்களும் அதை விரும்பாத நிலை இன்று உருவாகியுள்ளது. முன்பு பெண்கள் வயல்களிலும் காடுகளிலும் உழைத்து வருவாய் ஈட்டிய பணம் குடும்பத்தை நடத்தத் தேவைப்பட்டதாலும் மறுமணம் செய்து தன்னோடு வாழவரும் பெண்ணின் குழந்தைகளும் இளம் அகவையிலேயே உழைத்து தம்மால் குடும்பத்துக்கு ஏற்படும் செலவை ஈடுகட்டியதாலும் அது தொடர்ந்தது. இப்போது அரசூழியம் பார்க்கும் கணவனின் வருவாய் குடும்பத்தை நடத்தப் போதியதாக இருப்பதால் உழைத்துப் பணம் ஈட்டக்கூடிய பெண் தேவையில்லாத நிலை ஏற்பட்டதும் ஒரு காரணம். இன்று இருவரும் ஒட்டுண்ணி வேலை செய்து குடும்பத்தை வளமாக நடத்தி மிச்சமும் சேர்த்து வைத்துக்கொள்ள முடிவதால் கணவனை இழந்த பெண் வாழ்க்கைச் செலவுக்காக மறுமணம் செய்துகொள்வது தேவையில்லாமல் போகிறது.

அதே வேளையில் கணவன், மனைவி இருவரும் நல்ல ஊதியம் தரும் வேலைகளில் இருக்கும் குடும்பங்களில் முன் போலின்றி பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்தை எதிர்க்க முயல்வதால் மணவிலக்குகளும் மறுமணங்களும் இன்னொரு முனையிலிருந்து நுழைந்துகொண்டிருக்கின்றன. இந்த வரலாற்றுப் போக்கை உணர்ந்துகொள்ளாமல் நம் சட்ட அமைப்பு மணவிலக்கு பெறும் நடைமுறையை மிகச் சிக்கல் நிறைந்ததாக வைத்திருப்பதால் அது மக்களின் மன அமைதியைக் குலைக்கிறது. முன்பெல்லாம் ஊர்க்கூட்டத்திலேயே ஒரே உசாவலில் இணையினர் மணவிலக்கு பெற முடிந்தது. அதிலும் பெண்கள் விலக்கு கேட்டால் ஆண்களிடம் தண்டுவது போல் அவர்களிடம் ஈடு தண்டுவதில்லை.

முகம்மதியர்களிடையில் உள்ள “தலாக்” உரிமை ஆண்களுக்கு மட்டும்தான் என்ற தவறான கருத்து உள்ளது. பல இடங்களில் பெண் மணவிலக்கு கேட்டால் அவன் கணவனுக்கு இழுக்கு என்று கருதி ஊர் மன்றம் முடிவு செய்து கணவனைக் கேடக வைத்து விலக்குகிறார்கள். சில இடங்களில் பெண்களே கேட்கிறார்கள்.

இளங்கோவடிகள் தன் காலத்தில் குமுகத்தில் வெவ்வேறு வகுப்பினரிடையே பெண்ணுரிமையில் நிலவிய முரண்பாடுகளை மனதில் வைத்துத்தான் குமுக மேலடுக்கில் நிலவுய கைம்பெண்களின் அவலநிலைக்கு எதிரான தன் உள்ளக்குமுறலைக் கண்ணகி வாய் வழியாக வெளிப்படுத்தினாரோ?
❋ ❋ ❋

சிலப்பதிகாரப் புதையல் - 21 வஞ்சினமாலை21. வஞ்சினமாலை

கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன்
யாவுந் தெரியா இயல்பினே னாயினும்
முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே
5. வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக
முன்னி றுத்திக் காட்டிய மொய்குழலாள் பொன்னிக்
கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று
உரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து
அழியாது சூழ்போக வாங்குந்தி நின்ற
10. வரியா ரகலல்குல் மாதர் உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று
கல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக்கொண்டு
15. பொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னி
மணல்மலிபூங் கானல் வருகலன்கள் நோக்கிக்
கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாய
மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று
வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன்
20. நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாண்முகத்தைத்
தானோர் குரக்குமுக மாகென்று போன
கொழுநன் வரவே குரக்குமுக நீத்த
பழுமணி அல்குற்பூம் பாவை விழுமிய
பெண்ணறி வென்பது பேதைமைத்தே என்றுரைத்த
25. நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன்
வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால்
ஒண்டொடி நீயோர் மகற்பெறிற் கொண்ட
கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம்
கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால்
30. சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத்
தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர்
கோடிக் கலிங்க முடுத்து குழல்கட்டி
நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த
ஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடிய
35. மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்
பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா
நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும்
40. வானக் கடவுளரும் மாதவருங் கேட்டீமின்
யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
45. மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்றோன்றி
50. மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள்
பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்
ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப்
பார்ப்பா ரறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
55. தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்

வெண்பா

பொற்பு வழுதியுந்தன் பூவையரும் மாளிகையும்
விற்பொலியுஞ் சேனையுமா வேழமுங் கற்புண்ணத்
தீத்தரு வெங்கூடற் றெய்வக் கடவுளரும்
மாத்துவத் தான்மறைந்தார் மற்று.
பொழிப்புரை

மன்னர் மன்னனான பாண்டியனின் பட்டத்து அரசியே கொடியவினைப் பயனாய் கணவனை இழந்தவளாகிய நான் ஒன்றுமறியாத தன்மையை உடையவள் ஆயினும் பிறருக்கு முற்பகலில் கெடுதி செய்த ஒருவனுக்கு அன்றைப் பிற்பகலிலேயே தனக்குக் கேடுவருவதைக் காட்டுவன வினைகள்.

நல்ல பகல் பொழுதிலே வன்னி மரமும் மடைப்பள்ளியும் தனக்குச் சான்று உரைக்கும் பொருட்களாக பலரும் அறிய அவரெதிரில் நிறுத்திக் காட்டிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடையவளும்

பொன்னி ஆற்றின் கரையில் விளையாடுவதற்காக அமைந்த மணலால் ஆன சிற்பத்தை உனக்குக் கணவன் என்று உடன் விளையாடிய பெண்கள் கூறியதால் அவர்களோடு வீடு திரும்பாமல் அலைகள் வந்து அச்சிற்பத்தை அழிக்காமல் சுற்றிச் செல்லுமாறு ஆற்றிடைக் குறையாகிய அவ்விடத்திலே நின்ற வரி பொருந்திய அகன்ற அல்குலை உடைய ஒரு பெண்ணும்

புகழ் மிக்க அரசனாகிய கரிகால் வளவனது மகளான ஆதிமந்தி தான் மணந்த வஞ்சியின் அரசனான ஆட்டனத்தியைக் காவிரி நீர் அடித்துச் செல்ல அவள் அவ்வெள்ளத்தின் பின்னாலே சென்று கடற்கரையில் நின்று கல்லினை ஒத்த தோள்களை உடையவனே என்று அவள் அழைக்கவும் கடல் அவனைக் கொண்டுவந்து அவன் முன்னே நிறுத்திக் காட்ட அவனைத் தழுவிக் கொண்டு பொன்னால் ஆன கொடியைப் போலச் சென்றவளும்

மணல் நிறைந்த பொலிவுபெற்ற பூக்கள் நிறைந்த கடற்கரைச் சோலையிலே கடலில் வரும் கப்பல்களை நோக்கியவாறு சிலையாக நின்று கணவன் கலத்திலிருந்து இறங்கி வந்தவுடன் தன் கல்லுருவத்தை நீக்கியவளும்

தனக்கு இணையான மாற்றாளின்(சகக் கிழத்தி) குழந்தை கிணற்றில் விழுந்துவிட தன் குழந்தையையும் கிணற்றினுள் விழவைத்து இரு குழந்தைகளையும் கிணற்றிலிருந்து மீட்டெடுத்த வேல் போன்ற கண்ணை உடையவளும்.

அயலானொருவன் தன்னைத் தொடர்ந்து பார்த்து வருவதைக் கண்டு நிறைமதி போன்ற வெண்மைமயான தன் முகத்தைக் குரங்கின் முகமாக ஆகட்டுமென்று அவ்வாறே ஆக அயலூர் போயிருந்த கணவன் வரவே. இக்குரங்கு முகத்தைக் கைவிட்ட சிவந்த மணிகள் பதித்த மேகலையணிந்த அல்குலையுடைய பூப் போன்ற பாவையும்

பெண்களின் அறிவு என்பது அறியாமை நிறைந்தது என்று உரைத்த துண்ணறிவுடையோர் பார்வையை மதிக்காமல், அதைப் பற்றி உணர்வின்றி மணலில் விளையாடும் இடத்தில் ஒளிரும் வளையல்களை அணிந்தவளே நான் ஒரு மகளையும் நீ ஒரு மகனையும் பெற்றால் என் மகளுக்கு அவன் கணவன் ஆவான் என்று நான் கூறிய கூற்றைத் தோழியானவள் இப்போது நினைவுறுத்திக் கூறுவதைக் கேட்ட துன்பத்தால் அறிவற்ற எனக்கு மனம் வருத்தமுறுகிறது என்று தாய் தந்தைக்கு எடுத்துக் கூறக்கேட்டு அவளாகவே ஒரு கோடிப் புடவையை எடுத்து உடுத்தி கூந்தலை வாரி முடித்துக் கட்டி நெடிதாகத் தலையை வணங்கி தன் தாய் முன்பு ஒப்புக் கொண்டதனால் கணவனாகத் தக்கவனை தலையில் சுமந்த தங்கத்தால் செய்த பொலிவான பாவையாகிய அவளைப் போன்ற நீண்ட தேன் நிறைந்த கூந்தலை உடைய மகளிர் பிறந்த பதியாகிய புகாரிலே பிறந்தேன்.

அத்தகைய ஊரில் பிறந்த நான் உண்மையாகவே ஒரு பத்தினியானால் நான் விடமாட்டேன் மன்னனோடு மதுரையையும் ஒழிப்பேன் என் கொடுமையையும் நீ காணத்தான் போகிறாய் என்று கூறி அரண்மனையிலிருந்து வெளியேறி,

நான் மாடக் கூடலான மதுரையின் பெண்களும் ஆண்களும் வானத்திலுள்ள தெய்வங்களும் தனமுனிவர்களும் கேட்டுக் கொள்ளுங்கள்.

என் அன்புக்குரிய காதலனுக்குக் கேடு செய்த மன்னனது நகரத்தின் மீது சீற்றம் கொண்டேன், அதற்கு நான் பொறுப்பல்ல என்று கூறி இடப்பக்கத்து முலையைக் கையால் திருகி மதுரை மாநகரத்தை மும்முறை வலமாக வந்து மயங்கி ஊர் எல்லையில் உள்ள ஒரு தெருவில் விளங்குகின்ற அணியினை அணிந்த கண்ணகி சூளுரைத்து விட்டெறிந்தார்கள்.

அவ்வாறு அவள் எறிந்த உடன் வட்டமான நீல, நிறத்தை உடைய பின்னப்பட்ட சிவந்த கடையினையும் பாலை ஒத்த வெண்மையான பற்களையும் கொண்ட பார்ப்பன வடிவத்தோடு ஒழுங்காக எவற்றையும் எரிக்கும் தீக்கடவுள் தோன்றினான். பெரும் பத்தினியான உனக்குத் தவறு செய்யும் நாளில் இந்த நகரை பரந்து விரிந்த நெருப்புக்கு இரையாவதற்கு முன்பே ஒரு கட்டளை நான் பெற்றிருப்பதால் இந்த இடத்தில் எவர் எவர் பிழைத்துச் செல்லத் தகுதியுடையவர் என்று கண்ணகியைக் கேட்டான்.
பார்ப்பனரும் ஆக்களும் கற்புடை மகளிரும் முதியவர்களும் குழந்தைகளும் ஆகியோரைத் தவிர்த்து தீய இயல்புடையவர்கள் பக்கத்திலே சென்று எரிப்பாயாக என்று பொன் தொடிகளை உடைய கண்ணகியின் ஏவலால் தீயோரை எரிப்பதற்கக நல்ல தேரினை உடைய பாண்டியனது கூடல் நகரில் புகையும் நெருப்பு மண்டிற்று.

வெண்பா
பொலிந்து தோன்றும் பாண்டியனும் பெண்களும் அரண்மனையும் வில்கள் மின்னுகின்ற படைகளும் பெரிய யானைகளும் கண்ணகியின் சீற்றம் எனும் தீ உண்ண வெம்மை அடைந்த கூடலில் உள்ள தெய்வங்களும்அச்சத்தால் வெளியேறினார்.

இக்காதையில் சிறப்புகள்:

தான் பிறந்த பதியாகிய புகாரில் கற்பில் சிறந்த பெண்கள் நிகழ்த்திய இறும்பூதுகள் சிலவற்றை அரசி முன் கண்ணகி எடுத்துக் கூறுவதாக சில செய்திகளை இளங்கோவடிகள் பட்டியலிடுகிறார்.
1. பூம்புகாரிலுள்ள ஒரு பெண் தன் முறைமாப்பிள்ளையாகிய தாய்மாமன் மகனுடன் புறப்பட்டு வரும் வழியில் இருந்த சத்திரத்தில் தங்க அங்கு அவளுடன் உறவுகொள்ள அவன் முயன்ற போது சத்திரத்திலிருந்த வன்னி மரத்தையும் மடைப்பள்ளியையும் சான்றாக வைத்துத் திருமணம் முடித்துப் பின்னர் வேறு ஊரில் வாழ்ந்த போது இவர்கள் திருமணம் பற்றி ஐயப்பாடு எழுந்த நிலையில் அவளது கற்பாற்றலால் மடப்பள்ளியையும் வன்னி மரத்தையும் வரவழைத்து சான்றுகூற வைத்தாள் என்று இதற்குப் பொருள்கொள்ள முடிகிறது. இதில் மாமன் மகனென்பதும் பிறவும் கூறப்படவில்லை. உரை எழுதிய வேங்கடசாமியார் திருவிளையாடற் புராணங்களில் திரிஞானசம்பந்தர் நிகழ்த்திய இறும்பூதுகளில் ஒன்றான விடந்தீர்த்த கதையில்தான் இவர்களது உறவு முதலியவையும் அவர்கள் மதுரை செனறதும் கூறப்பட்டுள்ளது. அதில் அவன் பாம்பு கடித்து இறந்து போனதாகவும் அவளது அவல நிலை கண்டு இரங்கிய திருஞானசம்பந்தர் அவனை உயிர்ப்பித்து வன்னி மரத்தையும் கிணற்றையும் சிவக்குறியையும் சான்றாக வைத்து மணவினை முடித்துவைத்தாரென்றும் மதுரையில் மாற்றாளால் இகழப்பபட்ட போது சான்று வைத்த மரமும் கிணறும் குறியும் அங்கு வந்து சான்று கூறியதாகவும் இரு நிருவிளையாடரற் புராணங்களிலும் உள்ளதை உரையாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். திருத்தொண்டர் புராணத்தில் சான்று வைக்கப்பட்டது குறித்து எதுவுமில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். சம்பந்தர் காலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் கூறும் நிகழ்ச்சிக்கு மூக்கும் முழியும் வைத்துத் திருவிளையாடல் புராணக் கதை புனையப்பட்டிருக்கலாம் என அவர் கருதுகிறார்.

இன்னொரு நோக்கில் பார்த்தால் பின்னாட்களில் நெடுஞ்சாலைகளில் செல்வோர் உண்டு உறங்கிச் செல்வதற்காக இருந்தவையாகக் கூறப்படும் சத்திரம் போன்ற அமைப்புகளைத்தான் மடைப்பள்ளி என்ற சொல் குறிப்பிடுகிறதா என்ற ஐயமும் எழுகிறது. சிலப்பதிகாரத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அசோகர் நிறுவியது போல் தமிழகத்திலும் அன்னச் சத்திரங்கள் இருந்தனவா என்ற கேள்வியும் எழுகிறது. அத்தகைய ஒரு சத்திரத்தில் ஓடி வந்தவர்கள் தங்கிய போது சத்திரத்தின் பொறுப்பிலிருந்தவர்கள் முன்னிலையில் திருமணம் புரிந்து அவளிடம் இன்பம் தூய்த்து பின் சேர்ந்த ஊரில் அவளைக் கைவிட அவன் முயல அவள் உரிய இடத்தில் முறையிட சான்றுக்கு மடைப்பள்ளி ஊழியர்களையும் மடைப்பள்ளியின் அடையாளமாக வன்னி மரத்தையும் அவள் குறிப்பிட்டு அதனை உறுதி செய்து தன் உரிமையை நிலைநாட்டியதாகவும் இந்நிகழ்வைக் கூறலாமல்லவா?
2. இரண்டாவது நேர்வில் பொழிப்புரையில் கூறியவாறு ஆற்றிடைக்குறையில் நின்றதாகத் தோன்றவில்லை. மணல் பொம்மையை நீரலைகள் கலைத்துவிடாதவாறு அவற்றை விலக்கிக்கொண்டு நின்றாள் என்பதுதான் பொருத்தமாகத் தெரிகிறது.
3. கரிகாலனின் மகள் ஆதிமந்தியின் கணவனும் சேர அரசனுமான ஆட்டனத்தி காவிரியில் புதுப்புனல் ஆடும் போது நீர் அடித்துச் சென்றுவிட ஆதிமந்தி காவிரிக் கரை நெடுகிலும் அழுதுகொண்டே தேடிச் செல்ல காவிரி கயவாய்ப் பகுதியின் சிற்றரசன் மகள் மருதி என்ற பெண் அவனை ஆற்றுவெள்ளத்திலிருந்து மீட்டுப் பேணி வந்தவள் ஆதிமந்தியிடம் ஒப்படைத்தாள். இந்நிகழ்ச்சிகள் பற்றி ஆதிமந்தி பாடிய பாடல்கள் கழக இலக்கியங்களில் உள்ளன. அதன் பின்னர் மருதி தான் காதலித்த ஆட்டனத்தியைப் பிரிந்ததனால் கடலில் வீழ்ந்து மாய்ந்தாள் என்றும் புத்த மடத்தில் துறவியாகச் சேர்ந்தாள் என்றும் இருவிதச் செய்திகள் உள்ளன. இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பாரதிதாசன் அவர்கள் சேரதாண்டவம் என்ற அருமையான நாடகம் ஒன்று இயற்றியுள்ளார்கள். ஆட்டன் அத்தி என்பவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனாக இருக்கலாமென்று தோன்றுகிறது. ஆடற்கலை பற்றிய ஒரு கோட்பாட்டு நூலை அவன் எழுதியிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.
4. வாணிகத்துக்காகக் கப்பலில் சென்ற கணவன் திரும்பி வரும் வரையும் கற்சிலையாக காயல்(கழிக்கானல்) கரையில் நின்று கணவன் திரும்பியதும் இயல்புருவம் பெற்ற பெண், மாற்றாள்(சகக் கிழத்தி)யின் குழந்தை கிணற்றில் விழுந்துவிட தன் மேல் பழி வருமோ என்று அஞ்சித் தன் குழந்தையையும் கிணற்றில் வீசித் தன் கற்பின் வலிமையால் இரு குழந்தைகளையும் மீட்ட பெண்(ஊரைக் கூப்பிட்டுக் காப்பாற்ற வசதியாகத் தன் குழந்தையையும் தள்ளியிருப்பாளோ?), கணவன் வெளியூர்ச் சென்றிருக்க அயலானொருவன் தன்னை நோக்குவதை வழக்கமாகக் கொணடிருப்பது பொறுக்காமல் தன் முகத்தைக் குரங்குமுகமாக்கிக் கணவன் வந்ததும் முகத்தை மீட்டல் என்பவை பெண்களுக்கு கற்பு என்ற பெயரிலும் கணவனின் பிற மனைவிகளாலும் இழைக்கப்பட்ட கொடுமைகளைக் காட்டுகின்றன என்று கொள்ளலாமா?
5. தாய் தன் குழந்தைப் பருவத் தோழியோடு செய்துகொண்ட வாய்மொழி ஒப்பந்தத்தைத் தாய் தந்தைக்கு எடுத்துரைக்கக் கேட்ட பருவப் பெண் தாயின் தோழியின் ஆண்மகவைக் கணவனாக ஏற்றுக் குழந்தையாக இருந்த அதனைக் கூடையில் சுமந்த கதையை எந்த வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை.
6. மதுரையையும் அதன் ஆட்சியையும் அழிப்பேன், அதைக் காணத்தான் போகிறாய் என்று அரசியிடம் சூளுரைத்துவிட்டு அரண்மனையை விட்டு வெளியே வரும் கண்ணகி வீதியில் நின்று ஆடவரையும் பெண்டிரையும் முனிவர்களையும் தேவர்களையும் கூவி அழைத்து என் கணவனைக் கொன்று தவறுசெய்த மதுரையை நான் சினப்பது குற்றமாகாது என்று இடது முலையைக் கையால் திருகி மதுரையை மூன்று முறை சுற்றிவந்து எறிந்தாள் என்னும் இந்தப் பகுதியினுள்ள சில செய்திகள் படிப்போரின் கவனத்தில் உரிய வகையில் பதியத்தக்கவை அல்ல. ஆனால் அந்தப் பகுதிகளில் அடிகளார் சில அடிப்படைச் செய்திகளைப் புதைத்து வைத்திருக்கிறார். அவற்றில் ஒன்று ஊர்சூழ் வரியில் தெருக்களில் மக்கள் அனைவரும் கண்டும் கேட்டும் கலங்குமாறு சூளுரைத்து கோவலன் கொலையுண்டு கிடக்கும் இடத்தை நோக்கி வரும் போது ஆர்ப்பரிக்கின்ற ஒரு மக்கள் கூட்டம் அவள் பின்னாலும் முன்னாலும் திரண்டு அவனுடலைக் காட்டுவதை(கம்பலை மாக்கள் கணவனைத் தாங் காட்ட)க் கூறுகிறர். அப்படியானால் அப்பெரும் கூட்டம் அவளைத் தொடர்ந்து சென்று அரசனிடம் ஞாயம் கேட்க அரண்மனையினுள் நுழைந்த போது அரண்மனை வாயிலில் மொய்த்துக்கொண்டுதான் இருந்திருக்கும்.

இந்த இடத்தில் இன்னும் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்வது தேவை. சிலப்பதிகாரத்தைச் சில கால வழுக்களுடன் இளங்கோவடிகள் படைத்திருப்பதாக ஓர் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு வழக்காடல் நடைபெற்றது. அதைச் சுருக்கமாக இங்கு கூறுவோம்.

கோவலன் கொலையுண்டதறிந்து அவன் உடல் கிடந்த இடத்துக்கு வந்து அதனைக் கண்டு அரசனிடம் வழக்குரைப்பேன் என்று புறப்படும் முனபே கதிரவன் மறைந்துவிட்டான். அரசவைக்கு அவள் உடனடியாகச் செல்லவில்லை, ஏனென்றால் இரவில் தான் கண்ட தீக்கனவை அரசனிடம் கூறிப் பலம்பியபடியே அரசவைக்கு அரசி வருவதால் அடுத்த நாள் காலைதான் கண்ணகி அரசவைக்கு வருகிறாள். அதுவரை அவள் என்ன செய்தாள்? மதுரை உள் நகர் தெருக்களில் அலைந்து மக்களிடம் முறையிட்டுக்கொண்டிருந்தாள் என்ற விடை தவிர வேறெதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஏற்கெனவே ஊர்சூழ் வரியில் கண்ணகி தன் கணவனை வஞ்சகமாகக் கொன்றுவிட்டார்கள் என்று சினமுற்று முறைகேட்பேன் என்று தெருவில் ஓங்கி உரைத்து நடந்ததைப் பார்த்து,
செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல்
என்ற வரிகளில் வரும் நம் பொருட்டால் என்ற ஒரு சொல் மூலம் அந்நகர மக்கள் படும் துயரங்களுக்கு எதிராகப் போராட ஒருவரும் இல்லாத நிலையில் கண்ணகி எழுப்பும் இந்த எதிர்ப்புக் குரல் தங்கள் துயரங்களுக்கு ஒரு விடியலைத் தரும் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருப்பதை அடிகள் வெளிப்படுத்தியிருக்கிறார். வம்பப் பெருந்தெய்வம் என்ற சொற்கட்டு கூட உளவாகிய தெய்வங்கள் அரசனின் கொடுமைகளிலிருந்து தமக்கு விடிவைத் தராத நிலையில் புதிதாக(வம்ப) ஒரு பெருந் தெய்வம் இப்பெண்ணின் வடிவில் வந்துள்ளதாக நினைத்து மகிழ்கிறார்கள் என்றுதான் இதற்குப் பொருள்கொற்ற வேண்டும். இவ்வாறு தன்னைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் மேலும் மேலும் திரளுவதைக் கண்டு இன்னும் மிகுதியான மக்களைத் திரட்ட வேண்டுமென்று விடிந்து அரசவை கூடுவது வரை அவள் நகர வீதிகளில் முறையிட்டுக்கொண்டே அலைந்திருப்பதை அடிகளார் தெளிவாகக் கூறவில்லை. அதற்கான காரணத்தைக் காணும் முன் இன்னொரு கருத்தை அலசிப் பார்ப்போம்.

சிலப்பதிகாரம் கூறும் பாண்டியன் நெடுஞ்செழியனின் ஆட்சி எப்படி இருந்திருக்கும்? மக்கள் மகிழ்வுடன் இருந்திருப்பார்களா? அல்லது இந்த நரகிலிருந்து விடுபடுவது எப்போது, எவ்வாறு என்று ஏங்கிக் கொண்டிருந்திருப்பார்களா என்று பார்ப்போம்.

௧.ஊர்காண் காதையில் கோவலன் மதுரை நகரைச் சுற்றி வரும் போது அடிகள் காட்டுபவை அரசன் அடிக்கடி செல்லும் கணிகையர் இல்லங்கள், அரசு அதிகாரிகள் தங்கள் சுற்றத்தாருடன்(பரிவாரங்களுடன்) தங்கும் வகையில் சிறப்புரிமை பெற்ற பரத்தையர் இருப்பிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து அரசியின் சிலம்பைத் திருடியவன் கிடைத்துவிட்டான் என்று என்று அரசனிடம் பொற்கொல்லன் அறிவித்த இடமும் நேரமும் அரசன் கணிகையர் வீட்டுக்குச் சென்றதற்காக ஊடியிருந்த அரசியின் வளமனை வாயிற்கதவை அரசன் தட்டிக்கொண்டிருந்த போது.
௨.அரசியின் வளமனை வாயில் வரை வந்து செல்லும் தகுதியுடைய அரண்மனைப் பொற்கொல்லன் கொலைக்கு அஞ்சாத ஒரு கயவாளியாக இருந்தது, மனிதர்களை எடைபோடும் திறமை அரசனுக்கு இருக்கவில்லை அல்லது அவர்களது கூட்டு நடவடிக்கைகள் போற்றும்படியாக இருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
௩.குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை எந்தவோர் உசாவலும் இன்றி வெட்டிக்கொலை செய்ய அரசன் ஆணையிடுவதும் காவலர் தலைவனும் பிறரும் கோவலனைக் கண்டு அவன் திருடியிருப்பானா என்று தயங்கிக் கொண்டிருக்கும் போதே ஒருவன் அவன் தலையை வெட்டிக் கொல்வதும் பாண்டிய அரசின் நயன்மை முறையின் இழிநிலையைக் காட்டுகிறது. (எந்த உசாவலும் இன்றி ஒருவனைச் சிறைப்படுத்தும் நிகழ்ச்சி பின்னால் இருக்கும் கட்டுரை காதையிலும் வருகிறது.)
௪.1970இல் இன்றைய திண்டுக்கல், அன்றைய மதுரை மாவட்ட நத்தத்தில் “கோவிலன் கர்ணகி” என்ற பெயரில் ஒரு தெரு நாடகம் பார்த்தேன். அதில் முறை கேட்க வந்த கண்ணகியை நோக்கி பாண்டிய மன்னன் தனக்கு மனைவியாகும் படி கூறி தன் தொடை மீது கைவைத்துக் காட்டுவான். அதைக் கேட்ட கண்ணகி உடனே காளியாக மாறி அவனது குடலைப் பிளந்து கொல்லுவாள். இந்தக் கதைக்கருவுக்கு சிலப்பதிகாரத்தில் ஒரு தடம் இருப்பதாகத் தோன்றுகிறது. பாண்டியனின் ஆட்சித்திறம் பற்றிக் கூறவந்த பாண்டியர்களின் குலதெய்வமான மதுராபதி
கூடன் மகளிர் கோலங் கொள்ளும்
ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச்
செய்யாக் கோலமொடு வந்தீர்
என்பது மதுரையின் நகர்ப் பகுதி உயர் வகுப்பு மக்கள் மீது புறநகர்ப் பகுதி உழைக்கும் மக்களுக்கு இருந்த இழிவுணர்ச்சியையும் வெறுப்புணர்வையும் காட்டுகிறது.
….. நன்னுதல் மடந்தையர்
மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது
ஒல்கா வுள்ளத் தோடு மாயினும்
ஒழுக்கொடு புணர்ந்துவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு
இழுக்கந் தாராது…..
என்ற இவ்வரிகள் அரசன் பரத்தையர் அல்லது கணிகையர் வீட்டுக்குச் செல்வானென்றாலும் குடும்பப் பெண்களை நாட மாட்டான் என்பதாகும். இதை விட இன்னும் சிறப்பு என்னவென்றால் பாண்டியன் முறைப்படி ஆயாமல் கோவலனுக்குத் தண்டனை விதித்தான் என்ற குற்றச்சாட்டுக்கு அமைதி கூறத்தான் மதுராபதி கண்ணகி முன் தோன்றி விளக்கங்கள் கூறிக்கொண்டிருக்கிறாள் என்பதாகும். பெண்கள் குறித்த அவன் நடத்தை பற்றிய குற்றச்சாட்டு நூலில் வெளிப்படையாக எதுவும் இல்லை. அப்படி இருக்க மதுராபதி வாயிலாக பெண்கள் குறித்த பாண்டியனின் நடத்தைகள் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய தேவை என்ன என்பதுதான் நமது கேள்வி. அரசனுடைய முறையற்ற ஆட்சியைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிட்டால் தன் படைப்பு அழிக்கப்பட்டுவிடும் என்பதனாலேயே பல செய்திகளை மறைபொருட்களாக அடிகளார் புதைத்து வைத்துள்ளார் என்ற கண்ணோட்டத்தில் இவற்றைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
௫.கண்ணகி தன் முலையைத் திருகினாளா அல்லது முறை கேட்கப்போன இடத்தில் அவள் முலை அறுக்கப்பட்டதா என்ற ஐயமும் வருகிறது. நம் நாட்டில், குறிப்பாக ஊர்ப்புறங்களில் பெண்களுக்குள் வாய்ச்சண்டைகள் வரும் போது “முலையை அறுத்துவிடுவேண்டி” என்று எடுத்த எடுப்பிலே திட்டுவதுண்டு.

ஆண்களும் பெண்களை இப்படித் திட்டுவார்கள். இது தவிர குமரி மாவட்டத்தில் நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சி ஒன்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஈத்தாமொழிக்குப் பக்கத்திலிருக்கும் பழவிளை என்ற ஊரைச் சேர்ந்த பிள்ளைத் தாய்ச்சியான ஒரு நாடார் சாதிப் பெண் இராசாக்கமங்கலத்தில் இருந்த பார்வத்தியக்காரர் (அந்தக் கால கட்டத்தில் திருவிதாங்கூர் சமத்தானத்தில் வருவாய்த் துறையில் அடிப்படைப் பிரிவான “பகுதி” என்ற நிலப்பரப்புக்கு அரசு ஆள்வினை அதிகாரியின் பதவிப் பெயர்) அலுவலகமான பகுதிக் கச்சேரிக்கு கரம் எனப்படும் நிலவரி கட்டச் சென்றாள். அங்கு பணம் தண்டும் பொறுப்பிலிருந்த அக்கௌண்டு எனப்படும் கணக்கன் நெடுநேரம் அப்பெண்ணைக் காக்க வைத்தான். இறுதியில் பணம் கட்ட அப்பெண் அவனுக்கு நேரே வந்த போது அப்பெண்ணின் மார்பில் கட்டி முட்டு நின்ற பால் அவளை அறியாமல் கணக்கன் முகத்தில் பீச்சி அடித்தது. அந்நாளில் நாடார்களுக்கு மார்பை மறைப்பது தடைசெய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வெகுண்ட கணக்கன் அப்பெண்ணின் முலையை அறுத்தான். குருதி வடிய ஊர் நோக்கி ஓலமிட்டபடியே ஓடி வந்த அப்பெண்ணைக் கண்டு செய்தியறிந்த ஒருவர் ஒரு பறையை எடுத்து அடித்துக்கொண்டு நேரே இராக்கமங்கலம் சென்று அந்தக் கணக்கன் சாதியான நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சாதிப் பெண் ஒருவரைத் தூக்கிவர, அப்பெண்ணின் சாதியார் அவரைத் துரத்திவர இறுதியில் அவர் பழவிளையிலிருக்கும் கோயில் ஒன்றினுள் நுழைந்து பூட்டிக்கொள்ள துரத்தி வந்தவர்கள் கோயிலுக்குத் தீ வைக்க இருவரும் கருகிச் செத்தனர். இவ்விருவருக்கும் அவ்வூரில் கோயில் ஒன்று இருப்பதாக இந்நிகழ்ச்சியை எடுத்துரைத்த எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் கூறினார்கள்.

இது தவிர பெண்களை வாயில் நடையில் அமர்த்தி உச்சியில் எண்ணெய் விளக்கை வைத்து ஏற்றும் “நடைவிளக்கெரிக்கும்” தண்டனை பற்றியும் பெண்களுக்கிடையிலுள்ள சண்டைகளில் வெளிப்படுவதுண்டு. நாயர் குடும்பங்களில் பெணகளின் மூத்த ஆண் உடன்பிறப்பும் அவள் மக்களுக்கு மூத்த தாய்மாமனுமான காரணவன் என்றழைக்கப்படும் குடும்ப ஆள்வினையாளனின் மனைவி மருமகள்களுக்கு நடைவிளக்கெரிக்கும் தண்டனை வழங்கி நிறைவேற்றுவதைப் பற்றிப் படித்திருக்கிறேன். இத்தகைய ஒரு குமுகத்தில் கோடுங்கோலனான பாண்டிய அரசன் கண்ணகிக்கு இத்தகைய கொடுமையை இழைத்திருக்கும் வாய்ப்பும் உண்டு.

7. அரசவைக்குச் செல்வதற்கு முதல் நாள், அதாவது கோவலன் கொலையுண்ட நாள் இரவில் உள்நகர்த் தெருக்களில் சுற்றி மக்களைத் திரட்டினாள் என்றால் முலையை இழந்த நிலையில் மதுரையை மும்முறை வலம் வந்ததாக அடிகளார் கூறுகிறார். அப்படியானால் மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நகர மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்யும் ஆயர், குயவர், வண்டியோட்டுவோர், வண்ணார், நாவிதர் பொன்ற எண்ணற்ற மக்கள் வாழும் பகுதிகளுக்கும் சென்று திரும்பினாள் என்றே இதற்குப் பொருள் கொள்ள வேண்டும். கொலைக்களக் காதையில்
கூடன் மகளிர் கோலங் கொள்ளும்
. ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச்
செய்யாக் கோலமொடு வந்தீர்
என்ற வரிகள் புறநகரில் வாழும் மக்களுக்கு நகருக்குள் செல்வச் செழிப்புடன் வாழும் மக்கள் மீதிருந்த வெறுப்பையும் கசப்பையும் காட்டுகிறது. அது மட்டுமல்ல,
புரைநீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது
ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர்
காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு
கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும்
ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக்
காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர்
வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோமகன் கோயிற் கொற்ற வாயில்
தீமுகங் கண்டு தாமிடை கொள்ள
என்ற அழல்படு காதை வரிகள் 6 முதல் 15 வரை, அரசனும் அரசியும் அரியணையிலேயே உயிர்விட்டது அறியாது அவையிலிருந்தோர் திகைத்திருந்த போது அரண்மனை வாயிலில் தீப் பற்றி எரிவதைக் கண்டு தோட்டி, யானை, குதிரைப் பாகர்களும் வாயிலை நெருங்கினார்கள் என்று கூறியிருப்பது கண்ணகி முலையைத் திருகி மதுரையை மும்முறை வலம் வந்து சூளுரைத்து வீச நெருப்புக் கடவுள் தொன்றி ஆணை கேட்க அவள் வழிகாட்டல்கள் கொடுக்க பின்னரே தீப்பற்றியது என்ற கூற்றுக்கு முற்றிலும் முரணாக உள்ளது. அதாவது அரண்மனையினுள்ளிருந்து அறுபட்ட முலையுடன் கண்ணகி வெளியில் வந்ததைக் கண்டவுடன் வாயிலில் திரண்டிருந்த மக்கள் உள்ளே புகுந்து அரசனையும் அரசியையும் கொன்று தீயும் இட்டனர் என்பதுதான் பொருந்தி வரும்.

8. அடுத்து தீயைக் கையிலெடுத்துக் கிளம்பிய மக்களை வழிப்படுத்திய கண்ணகியின் முயற்சியை, நெருப்புக் கடவுள் அவளை நெருங்கி வழிகாட்டுதல்கள் கேட்டதாகவும் அதற்கு அவள் சில வரையறைகளை எடுத்துரைத்ததாகவும் கூறும் அடிகளைக் காண்போம்.

நெருப்புக் கடவுள் தோன்றுவதும் கண்ணகியைப் பார்த்து யார் யாரை, எது எதை அழிக்கலாம் என்று அறிவுரை பெறுவதையும் நோக்கும் போது நாம் மேலே கூறியபடி மக்கள் முற்ற முழுக்க தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து நெருப்பிட்டிருந்தால் இதற்கு வாய்ப்பில்லை என்பது புரியும். அப்படியானால் ஏதோ ஒரு குழு இதில் ஒருங்கிணைப்பை மேற்கொண்டுள்ளது என்பது தெளிவு. அப்படியானால் அவர்கள் யார் என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். அதற்கு ஏற்கனவே அடிகளார் ஒரு குறிப்பை தந்துவிட்டார் பதிகத்தில் .
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
என்று பதிகத்தில் கூலவாணிகன் சித்தலைச் சாத்தனார் “வினைவிளை காலமாதலின்” என்று கூற “யாதவர் வினை” என்று அடிகளார் வினவ அதற்கு விடைகூறும் வகையிலே தான் சிவனின் கோயிலில் இருட்டில் கிடந்ததையும் கண்ணகியைச் சந்தித்த மதுராபதித் தெய்வம் கோவலனின் பழம் பிறப்பு உரைத்ததையும் கூறி இருக்கிறார். இது கட்டுக்கதை என்று அடிகள் நினைத்ததனாலேயே இதற்கான மூலத்தை பதிகத்தில் பதிந்துவிட்டார். ஆக இந்தத் தீமூட்டும் கலவரத்தில் புத்தர்களின் பங்கு இருப்பது உறுதியாகத் தெரிகிறது. அடுத்து கோவலன் கண்ணகி இணையினர் அம்மண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களை அறிந்தவர்களுக்கு வெளிப்படையாகவே தெரிந்திருக்கிறது. ஆயர் குல மூதாட்டி மாதரி அவர்களை இனம் கண்டதுபோல் (சாவக நோன்பிக ளடிக ளாதலின் – கொலைக்களக் காதை – வரி 18) கொலைப்பட்டவன் அம்மண சமயத்தான் என்ற செய்தியும் அவர்களிடேயே பரவியிருக்கும். அன்றைய புத்தம் இலங்கையின் கயவாகுவினதும் அம்மணம், குறிப்பாக கங்கைச் சமவெளியின் வாணிகர்களினதும் ஒற்றமைப்புகளாக இன்றே போல் செயல்பட்டன. ஆனால் இந்த உண்மையை அறியாது அன்றைய ஆட்சியாளர்களின் கொடுமைகளைக் கண்டு மனம் கசந்து அவற்றின் பரப்பல்களில் மயங்கிச் செயற்பட்ட ஆரவலர்கள் அவர்கள் வெறுத்த அன்றைய ஆட்சியாளர்களின் கட்டமைப்புகளைத் திட்டமிட்டு இனங்கண்டு அழித்தார்கள் என்பதே சரியான விளக்கம். உளநாட்டில் உருவானதாயிருந்தாலும் சரி வெளியிலிருந்து புகுந்ததாயினும் அரசியல், குமுக இயக்கங்களில் முதன்முதல் இடம்பிடிப்போர் நாணயமும் குமுக நலன் குறித்த ஆர்வமும் உள்ளவர்களாகவே இருப்பர். அவர்களின் செயற்பாடுகளைக் கண்டு அவர்கள் பால், அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கங்கள் பால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரளும் போது வாய்ப்பியர்(சந்தர்ப்பவாதி)களும் ஆதாயம், அதிகாரம் தேடிகளும் ஓசைப்படாமல் அந்த நேர்மையாளர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தைப் பிடித்துக்கொள்வர். ஈ.வே.இராமசாமி, கா.ந.அண்ணாத்துரை போன்ற தலைமைகள் தங்களுக்கு வாய்ப்பான நேரத்தில் கொள்கைகளைக் கைவிட்டு எவரை எதிரிகளாகக் காட்டித் தாங்கள் இயக்கத்தைத் தொடங்கினார்களோ அவர்களோடு கள்ள உறவுகொண்டு பணம் பதவி என்று போய்விடுவார்கள். ஆனால் சிலப்பதிகாரம் - மணிமேகலை காலத் தமிழகத்தில் கோவலன் சாவையும் சாத்தனாரையும் பயன்படுத்தி அம்மணமும் புத்தமும் இங்கு வேரூன்றிவிட்டன. இந்தப் பின்புலத்தில் கண்ணகி என்ற ஒரு பெண்ணின் அரசனையே கேள்வி கேட்கத் துணிந்த வீரம் நிறைந்த நடவடிக்கையின் பின்னணியில் திரண்ட இவ்விரு சமயத் தொண்டர்களும் கண்ணகியை மதுரையைத் தீக்கிரையாக்குவேன் என்ற போது அணுகி அவள் வாய் மோழியாக யார் யாரை எதை எதை அழிக்க வேண்டும் எதை எதை யார் யாரைக் காக்க வேண்டும் என்று அறிவுரை கேட்டு செயற்பட்டதையே நெருப்புக் கடவுள் கண்ணகியிடம் ஆணைபெற்றதாகிய நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்துகிறார் என்று கொள்ள வேண்டும்.
* * *