திராவிட மாயை - 13
4.தமிழகத்துக்கு முழுமையான இருண்ட
காலம் தந்த, ஊழல் கலையின் அண்டம்
புகழ் வித்தகர்.
அண்ணாத்துரை
சாவுப் படுக்கையில் இருந்த போது அவருக்குச் செய்த பண்டுவத்தின்படி அவரது உடலை
அசைவின்றிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாம்.
ஆனால் அண்ணனின் அருமைத் தம்பிகள், அதிலும் குறிப்பாக அன்புத் தம்பி கருணாநிதி
அவரது உடல் மீது விழுந்து "அண்ணா, அண்ணா" என்று கட்டிப் பிடித்து
குமுறிக் குமுறி உடல் குலுங்கிக் குலுங்கி, குலுக்கிக் குலுக்கி அழுவாராம்.
மருத்துவரும் செவிலியரும் என்ன செய்துவிடமுடியும், பெரும்பாலும் அவரே அடுத்த
முதல்வராக வரும் வாய்ப்பிருக்கும் போது? இப்படி ஒரு கூற்று பரவியது அண்ணாத்துரை
இறந்த புதிதில். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்குமோ நாமறியோம். ஆனால்
ஆட்சியாளர்களின் வரலாற்றில் இதில் புதுமையோ விந்தையோ வியப்பதற்கு எதுவுமோ இல்லை.
சேக்சுபியரின் சூலியர் சீசர் நாடகத்தில் புரூட்டன் குழுவினர் சீசரைக் கொன்ற
பின்னர் தொலைவான ஓர் இடத்தில் மார்க் அந்தோனி தன் தோழர்களுடன் கலந்து பேசி உரோமின் ஆட்சியைப்
புரூட்டன் வகையறாக்கள் கைப்பற்ற விடக்கூடாது என்று திட்டமிட்டு அதை நிறைவேற்றவே
வருகிறான். சீசரின் உடலை மேடையில் கிடத்தி மக்களை நோக்கி சீசர் செய்த கொடுமைகளைப்
புரூட்டன் விளக்கியதும் தானும் பேசத் தொடங்கி புரூட்டனின் சூழ்ச்சிகளை மக்கள்
முன்வைத்து புரூட்டன் கும்பலைத் துரத்தி தான் பதவியைப் பிடிக்கிறான். உயர்ந்ததாகத்
தோன்றும் மார்க்கு அந்தோணியின் மேடைப் பேச்சின் பின்னணியில் உள்ள திட்டம்தான்
உண்மையான அரசியல். நம் நேர்வில் கொலை என்பதற்குப் பகரம் போக வேண்டிய உயிரைக்
கொஞ்சம் விரைவாக வெளியேற்றுவதுதான். அனைத்துலக அணு ஆற்றல் முகவாண்மை புரிந்துணர்வு
ஒப்பந்தத்தை மறைவில் மன்மோகன்சிங் - சோனியா கும்பல் முடிவு செய்வதுவரை, சமாசவாதிக்
கட்சியின் அமர்சிங் அமெரிக்கா சென்று அனைத்து ஆயத்தங்களுடனும் இந்தியா திரும்பும்
வரை மக்கள் நடுவில் எதிர்ப்பு என்ற ஒரு நாடகமும் ஆடிவிட்டு கூட்டணியிலிருந்து விலகுவதாக
இன்னொரு நாடகமும் ஆடிய மார்க்சியப் பொதுமைக் கட்சியினரைப் போல் அல்லாமல், காலம்
கொடுத்தால் வேறு எவராவது ஆட்சி வாய்ப்பைப்
பறித்துவிடக் கூடுமே என்ற பதற்றம் கூடக்
காரணமாக இருக்கலாம்.
அது போலவே பதவி மாற்றத்தில் நடந்தது. இதுவரை கழகத்தின்
இரண்டாம் தலைவர் என்று கருதப்பட்ட நெடுஞ்செழியன் முதல்வராக விரும்பினார்.
கருணாநிதியும் விரும்பினார். ம.கோ.இரா., எசு.எசு.இராசேந்திரன் போன்றோர்
கருணாநிதியின் பக்கம் நின்றனர். பின்னர் ஓர் அமைதி ஏற்பாடாக நெடுஞ்செழியனைக்
கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்கினர். அதற்கு மாறாக, இதுவரை இல்லாத தலைவர் பதவியை
பொதுச் செயலாளரை விடவும் அதிகாரம் மிக்க ஒரு பதவியாக்கி அதில் கருணாநிதி அமர்ந்து கொண்டார்.
கருணாநிதி ஊழி தொடங்கியது.
கருணாநிதி அரசியலில் நுழைந்தபோதே முதலமைச்சராக வேண்டும்
என்ற அவாவுடன்தான் நுழைந்திருப்பார். தங்களுக்குத் திறமை இருப்பதாக நம்பும் எவரும்
அவ்வாறு விரும்புவது இயல்புதான். அதற்கு வேண்டிய திறமையும் உடையவர்தான் கருணாநிதி.
தி.மு.க. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த காலகட்டத்திலேயே அப்போது
முதலமைச்சராக இருந்த பக்தவத்சலத்தைப் பார்த்து தான் அமரப் போகிற இருக்கையில் அவர்
இருப்பதாக ஒருமுறை சட்ட மன்றத்தில் கருணாநிதி கூறினார் என்று கூறப்படுகிறது.
அண்ணாத்துரை உயிரோடு இருக்கும்போது நடைபெற்றது இது. அண்ணாத்துரையைப்
பாராளுமன்றத்துக்குப் போட்டியிட வைத்துவிட்டு மாநிலத்தைத் தான் கைப்பற்றலாம் என்று
கூட அவர் திட்டமிட்டு இருக்கலாம். அதனால்தான் “தம்பி”களின் போட்டியைப் பயன்படுத்தி அண்ணன் அரியணையில் அமர்ந்துகொண்டார். ஒரு
பதினாறு மாதங்கள் பொறுத்துகொண்ட தம்பி இப்போது முழு உரிமையோடு அரியணையில்
அமர்ந்தாயிற்று. இப்போது அதன் இன்பங்களை நுகர வேண்டியதுதானே. அதை முறைப்படி
முழுமையாகச் செய்தார் கருணாநிதி.
கருணாநிதி தன்னை ஒடுக்கப்பட்ட சாதி என்று கூறிக்கொள்வது
வழக்கம். ஆனால் நம் பண்பாட்டு நிலையில் பார்ப்பனர்களுக்கு அடுத்த படியிலுள்ள
தேவரடியார்களோடு தொடர்புடையது அவரது சாதி. மேளக்காரர் என்றும் இசை வேளாளர் என்றும்
அவர்களைக் கூறுவர். தேவதாசிகள் எனப்படும் தேவரடியார் குடும்பங்களில் பிறக்கும்
ஆடவர்களைக் குறிப்பதாகும் இந்த அடைமொழி. கோயில்களில் நாதசுவரம் எனப்படும்
பெருவங்கியம், மத்தளம் இசைப்பதும் இசைப் பயிற்சி, நாட்டியப் பயிற்சியாகிய
நட்டுவாங்கம் ஆகியவற்றைச் செய்வதும் இவர்களது தொழில். கோயில் சொத்துக்களில்
இவர்களுக்கென்று நிலங்களும் வீடுகளும் விடப்படும். மத்தளம் கொட்டவும் பெருவங்கியம்
இசைப்பதற்கும் என்றே கம்பர் என்றொரு சாதியும் கோயில் பராமரிப்பில் மேளக்காரர்களைப்
போல் உண்டு. ஆனால் கருணாநிதி அவர்களைச் சேர்ந்தவரல்ல. திரைப் பாடகர் சி.எசு.செயராமன்
ஒரு நட்டுவராயிருந்து திரைத்துறைக்கு இசைப் பாடகராக வந்தவர். கருணாநிதியின்
மைத்துனர். இந்த உண்மைகளை அறியாமல் மேளக்காரர் என்ற சொல்லைத் தவறாகப்
புரிந்துகொண்டு தெற்கு மாவட்டங்களில் மேளம் இசைக்கும் நாவிதர் சாதியினர்
கருணாநிதியைத் தங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்று தவறாக நினைக்கின்றனர்.
கருணாநிதியும் தான் மேற்கொள்ளும் மேற்சாதியினர் சார்பான நடவடிக்கைகளை மறைக்க தான்
ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வந்தவன் என்ற பொய்யை அடிக்கடி
கூறிக்கொண்டிருக்கிறார். இந்தச் சாதி “வரலாற்றை” நாம் இங்கு எடுத்துக்கூறக் காரணம் கருணாநிதி தான் குறிப்பிடுவதற்கு
மாறாக பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள சாதியைச் சேர்ந்தவர். மேலே நாம்
கூறியிருப்பது போல் இடைக்காலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியிலும் 20ஆம்
நூற்றாண்டு தொடக்கத்திலும் பார்ப்பனர்களோடு ஏற்பட்ட முரண்பாடுகளால்
பாதிப்படைந்தவர்கள் அச் சாதியினர். அதனால் அரசியலிலும் அதிகாரத்திலும் உறுதிப்பட்ட
பின்னர் பிற மக்களைப் பார்ப்பனர்கள் எவ்வாறு நடத்துவார்களோ அவ்வாறு நடத்துபவர்
கருணாநிதி என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவரது நடவடிக்கைகளை எடை போட வேண்டும்
என்பதை வலியுறுத்தத்தான். அத்துடன் அவரிடம் புரையோடிப் போயுள்ள ஊழல் உளவியலையும்
நாம் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும்.
கருணாநிதி பதவியில் அமர்ந்த நேரம் அவருக்கு மிக வாய்ப்பான
நேரம். லால்பகதூர் சாத்திரி மரணமடைந்து இந்திரா காந்தி பதவியில் அமர்ந்து
அவருக்கும் பேரவைக் கட்சியின் பழம் தலைமுறைத் தலைவர்களுக்கும் முரண்பாடு முற்றி
நின்ற நேரம்.
இது பற்றிச் சிறிது விரிவாகப் பார்ப்போம்.
1964இல் நேரு இறந்த போது புதிய தலைமை அமைச்சர் பதவிக்கு வர
மொரார்சி தேசாய் விரும்பினார். அதை விரும்பாத காமராசர் லால்பகதூர் சாத்திரியை
தலைமை அமைச்சராக்கினார். அவரும் 1966 தொடக்கத்தில் இறந்து விடவே அடுத்த தலைமை
அமைச்சர் பதவிக்கு மீண்டும் மொரார்சி
போட்டியிட்டார். ஆனால் தங்கள் சொற்படி நடப்பார் இந்திரா என்ற நம்பிக்கையில்
காமராசரும் பிற தலைவர்களும் இந்திராவைத் தலைமை அமைச்சர் ஆக்கினர். 1966ஆம் ஆண்டு
சனவரி 19 ஆம் நாள் பதவியேற்ற இந்திரா மே மாதம் காமராசரையோ பிற தலைவர்களையோ கலந்து
கொள்ளாமல் உரூபாய் மதிப்பை அமெரிக்க டாலருடன் ஒப்பிட 57 நூற்றுமேனி குறைத்தார். காமராசர் இதைக்
கண்டித்தார். அதன் பிறகு இந்திரா காமராசரைச் சந்திப்பது அரிதாகியது.[1]
அடுத்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பேரவைக் கட்சி இந்திய
அளவில் செல்வாக்கில் இறக்கம் கண்டது. தி.மு.க. தமிழக ஆட்சியைக் கைப்பற்றியது.
பேரவைக் கட்சிக்குள் இந்திராவுக்கும் பிற தலைவர்களுக்கும் மோதல் வலுத்தது. 1969 மே
மாதம் அப்போது குடியரசுத் தலைவராக இருந்த சாகீர் உசேன் இறந்துவிட புதிய குடியரசுத்
தலைவர் வேட்பாளராக சஞ்சிவ ரெட்டியை வெங்காளூரில் நடைபெற்ற பேரவைக் கட்சி
பாராளுமன்றக் குழு கூட்டத்தில் முடிவு செய்தனர். அதற்கு உடன்படாத இந்திரா அங்கேயே “புரட்சிகர” பொருளியல் திட்டம் ஒன்றை
அறிவித்தார். வங்கிகளை அரசுடைமை ஆக்கல், அரசர்களுக்கு வழங்கி வந்த மானியத்
திட்டங்களை நிறுத்துவது போன்றவை அவை. முற்போக்கு முகமூடி போட்ட இந்த அறிவிப்பால்
இந்திராவின் செல்வாக்கு உயர்ந்தது. பேரவைக் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து
வி.வி.கிரி என்பவரைக் களத்தில் நிறுத்தி இந்திரா வென்று காட்டினார். அதனால்
பேரவைக் கட்சி இரண்டாக உடைந்தது. பாராளுமன்றத்தில் இந்திராவின் பெரும்பான்மை போயிற்று. தி.மு.க., வலது பொதுமைக் கட்சி
ஆகியவற்றின் அருளை எதிர்நோக்கி ஆட்சி நடத்த வேண்டிய இக்கட்டான சூழல்
இந்திராவுக்கு. அதனால் கருணாநிதி தன் மனம் போல் ஆட்டம் போடலானார். இந்தச் சூழலில்
1970இல் கல்லூரிகளில் தமிழைப் பாடமொழியாக்கி கருணாநிதி ஆணையொன்று பிறப்பித்தார்.
அதனை எதிர்த்து மாணவர் போராட்டங்கள் நடைபெற்றன. அதனால் கருணாநிதி அந்த ஆணையை திரும்பப் பெற்றார்.
இந்தப் போராட்டங்களைத் தூண்டிவிட்டவர்கள் தமிழகத்தில் அன்று வலிமையுடன் இருந்த
காமராசர் சார்பான பழைய பேரவைக் கட்சியினர்
என்பதில் ஐயமில்லை. மக்களின் “ஆங்கில மோகமே” இது போன்ற போராட்டங்களுக்குக் காரணம் என்று விளக்கம் கூறப்பட்டது.
அதனால் உண்மையான காரணத்தை எவரும் அறிந்திருக்கவும் இல்லை, அறிய முயலவும் இல்லை.
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் தற்சார்புப்
பொருளியலோ அதற்கு அடித்தளமான ஒரு தற்சார்பு அறிவியல் - தொழில்நுட்பமோ
வளர்க்கப்படவில்லை. காந்தியின் ஊரகம் சார்ந்த வளர்ச்சித் திட்டம்
என்பது ஐரோப்பிய - அமெரிக்கப் பொருளியலை எதிர்க்கொள்ளும் ஓர் உள்நாட்டு அறிவியல் - தொழில்நுட்பத்தை வளர்க்காமல்
ஆங்கிலப் பேரரசின் நிழலில் வளர்ந்த பனியாக்களின் தொழில் வளர்ச்சியை அடிப்படையாகக்
கொண்டதாகவே இருக்கிறது. காந்தி அடையாளம் காட்டிப்போன அவரது வழித்தோன்றலான நேரு
ஐரோப்பிய - அமெரிக்க அறிவியல் - தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்து பனியாக்களை
வளர்ப்பதில் எந்த அளவுக்கு ஊக்கம் காட்டினாரோ அதைவிட முனைப்பாக உள்நாட்டு அறிவியல்
- தொழில்நுட்ப வளர்ச்சியை நசுக்குவதில் காட்டினார். இந்தப் பின்னணியில் அரசுப்
பணியை, அதிலும் நடுவரசின் ஐந்தாண்டுத் திட்ட ஒதுக்கீடுகளில் செயல்படும் பல்வேறு
வளர்ச்சித் திட்டங்களில் மட்டும் வேலை வாய்ப்பை எதிர்பார்த்துத் திட்டமிடப்பட்ட
கல்விச் சாலைகளில் நடுவரசு ஆட்சி மொழிகளாகிய ஆங்கிலம் - இந்தி தவிர்த்து பிற
மொழிகளில் கல்வி கற்பிப்பது எவ்வாறு பொருத்தமாக
இருக்கும்?
ஒரு மாநிலத்திலிருந்து ஒரு திட்ட முன்னீடு நடுவரசுக்குப்
போக வேண்டுமாயின் அவற்றை நடுவாட்சி மொழிகளில் ஒன்றில்தான் விடுக்க வேண்டும். அம் மொழிகளை
அறியாத ஒருவன் அவை அல்லாத தன் தாய்மொழியில் கற்று பணியில் சேர்ந்து முன்னீடுகளைத்
தன் தாய்மொழியில் எழுதினால் அதை நடுவரசுக்கு விடுக்க வேண்டுமாயின் அதை இரண்டு
ஆட்சி மொழிகளில் ஒன்றுக்கு மொழிமாற்றம் செய்ய வேண்டும். இது ஒரு முட்டாள்தனமான
வேலை. அல்லது இவ்வாறு நடுவரசுக்குச் செல்லும் பல்வேறு தாய்மொழிகளிலுள்ள
முன்னீடுகளை மொழிபெயர்க்கும் வசதியை நடுவரசே செய்ய வேண்டும். அதற்கு அந்தந்த மாநிலத் தாய்மொழிகளையும் இந்திய
அரசின் ஆட்சி மொழிகளாக்க வேண்டும். அதற்கு
இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த
வேண்டும். அதைத் திருத்த வேண்டுமாயின் அனைத்து மொழி மக்களும் ஒருங்கிணைந்து
வேண்டுகை வைத்துப் போராட வேண்டும். அப்படி எதையும் செய்யாமல் வெறுமனே ஒரு மாநிலம்
தன் மாணவர்களை மட்டும் தாய்மொழியில் மட்டும் படிக்க வேண்டும் என்று
கட்டாயப்படுத்துவது எதிர்ப்பைக் கிளப்பவே செய்யும். அந்தச் சூழலில் மாநில
ஆட்சியாளர்கள் உண்மையிலேயே தம் மாநில மொழியின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும்
மானத்தையும் விரும்புவார்களானால் அதற்கான போராட்டத்தை மக்களிலிருந்து உருவாக்கி
தான் முன்னிலை தாங்க வேண்டும். ஆனால் தி.மு.க. போல் பதவி என்ற ஒன்றைத் தவிர வேறு
குறியில்லாத கயமை நிறைந்த தலைமைகள் பெயர் வாங்குவதற்காகத் தனக்கு நம்பிக்கையே
இல்லாத திட்டங்களை மக்களின் வாக்குகளைத் தட்டிப் பறிப்பதை மட்டும் நோக்கமாகக்
கொண்டு அறிவிப்பார்களாயின் அதனை எதிர்ப்பவர்களின் பிடிக்குள் மக்கள் சிக்குவதுதான்
விளைவாயிருக்கும். மக்களின், மாநிலத்தின், மொழியின், தேசியத்தின் எதிரிகளின் கைகள் வலிமை பெறுவதுதான் இறுதி
விளவாயிருக்கும். அவ்வாறுதான் நடைபெற்றது, நடைபெறுகிறது.
தி.மு.க., வலது பொதுமைக் கட்சி ஆகிய இரண்டும்
வெளியிலிருந்து தாங்க, நடைபெற்ற இந்திராவின் ஆட்சியில்
இந்த இரண்டு கட்சிகளது நெருக்குதல்கள் இருப்பது இந்திராவுக்குப் பிடிக்கவில்லை.
எனவே தன் கட்சிக்கே பெரும்பான்மை கொண்ட ஒரு பாராளுமன்றம் தேவை என்று அவர்
கருதினார்.[2] எனவே பாராளுமன்றத்தை ஓராண்டு முன் கூட்டியே
கலைப்பதென்று அவர் முடிவு செய்தார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கருணாநிதியின் ஆட்சி மீது
மக்களுக்குக் கடும் மனக்குறை இருந்தது. அவரது தன்விளம்பர நடவடிக்கைகளும்
கட்சியினரின் அடாவடித்தனங்களும் ஊழல் பெருக்கமும் மக்களுக்குத் தன் ஆட்சி மீது
பெரும் வெறுப்பை ஊட்டியிருக்குமோ என்ற மனத் துடிப்பு அவருக்கு இருந்தது. எனவே
அவரும் ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தலில் குதிக்க ஆயத்தமானார். இந்திராவோடு
உடன்பாடு கண்டார். பாராளுமன்றத் தொகுதிகள் அனைத்தையும் இ.பேரவைக் கட்சிக்கும்
சட்டமன்றத் தொகுதிகள் அனைத்தையும் தி.மு.கவுக்கும் ஒதுக்கி ஓர் உடன்படிக்கை
செய்துகொண்டு 1971இல் தேர்தலில் குதித்தனர். தமிழகத்தில் பெரும்பாலான பாராளுமன்ற
இடங்கள் இ.பேரவைக்கும் 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 183(78.2%)
தி.மு.க.வுக்கும் கிடைத்தன. ஒருவேளை இந்தியாவில் ஒரு மாநில சட்ட மன்றத்துக்கு
தேர்தலில் ஒரு கட்சிக்குக் கிடைத்த ஆகக் கூடுதல் நூற்றுமேனி வெற்றியாக இதுதான்
இருக்கக் கூடும்.
எம் போன்றோர் இந்தத் தேர்தலில் முழு ஆர்வத்துடன் பங்கு
கொண்டோம். கருணாநிதியிடம் நிறைய எதிர்பார்த்தோம். அவரும் நிறையச் செய்தார். அதாவது
சட்டமன்றத்தில் தன் பேய்த்தனமான பெரும்பான்மையால் வந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்
தானும் தன் கட்சியினரும் மக்கள் மீது கொடுமைகள் செய்யவும் முடிந்தவரைப் பணத்தைச்
சுருட்டவும்தான் செய்தார். கட்சியையும் தன் குடும்பச் சொத்தாக்கப் பார்த்தார். இந்திராவிடமும்
திமிருடன் நடந்துகொண்டார்.
ம.கோ.இரா.வின் துணையுடன் அனைத்து அதிகாரமும் கொண்ட தலைமைப்
பதவியை உருவாக்கி அதில் தான் அமர்ந்துகொண்டு பிற தலைவர்களை எல்லாம் மூன்றாம்
தரத்துக்குத் தாழ்த்திய கருணாநிதி அடுத்த கட்டமாக ம.கோ.இரா.வை அகற்றத் திட்டமிட்டார்.
ஆனால் ம.கோ.இரா.வை அகற்றுவது அவ்வளவு எளிதான வேலையல்ல. அவரும்
கருணாநிதியைப் போல் திட்டமிட்டுச் செயற்பட்டவர். தி.மு.க.வின் கொள்கைகளுக்கு ஏற்ற
திரைப்படங்களில்தான் நடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைத் தன் படிமத்தை வலுவாக
மக்களிடையில் பதிக்கப் பயன்படுத்திக் கொண்டார் அவர். இதிலிருந்து இன்னொரு உண்மையை
இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தி.மு.க. முன்வைத்த கொள்கைகள் மீது மக்களுக்கு
எவ்வளவு ஆர்வமும் நம்பிக்கையும் உறுதியும் இருந்தது என்பதற்கு ம.கோ.இரா.வின் திரைப்படவியல்
- அரசியல் வெற்றி ஓர் அளவுகோலாகும். ஆனால் மக்களின் இந்த ஆர்வத்தை வெறும்
பதவிக்கும் பணத்துக்கும் பதவியும் பணமும் வழங்கும் எண்ணற்ற இன்பக்
களியாட்டங்களுக்கும் மட்டும் இவர்கள் பயன்படுத்திக் கொண்டனர் என்பதுதான்
தமிழகத்தின் இன்றைய காலகட்ட வரலாற்று அவலம். திரைத்துறையில் ம.கோ.இரா. பெரும் பணம்
ஈட்டி அதனை நல்ல முறையில் செலவிட்டார். செலவிட்டார் என்பதை விட முதலிட்டார் என்பது
பொருத்தமாக இருக்கும்.
தன்னை நாடி பண உதவி வேண்டி வருவோருக்குக் கொடுத்து உதவும்
பழக்கம் அவரிடம் இருந்தது. இதன் தொடர்ச்சியாக அவருக்குச் சுவைஞர் மன்றங்கள்
தொடங்கப்பட்டு அவை அவராலேயே பேணப்பட்டன. சுவைஞர் மன்றங்கள் தி.மு.க.வின் சார்பு
மன்றங்களாகவே செயற்பட்டன. அரசு மட்டத்தில் நடவடிக்கை தேவைப்படும் உள்ளூர் மக்களின்
குறைகளை எடுத்து சுவைஞர் மன்றப் பொறுப்பாளர்கள் ம.கோ.இரா.விடமோ அனைத்து மன்றங்களின்
தலைவரிடமோ கொண்டுசென்றால்,
தொடர்புடையவருக்கு எந்தச் செலவுமின்றி உரிய துறையை அணுகி தீர்த்துவைக்கும்
நடைமுறையை அவர் வகுத்திருந்தார். அதே நேரத்தில் உள்ளூர் தி.மு. கழகப்
பொறுப்பாளர்களிடம் மக்களின் ஏதாவது குறைகளை எடுத்துச்சென்றால் அவர்களுக்குப் பணம்
கொடுக்க வேண்டியிருந்தது. கருணாநிதியே அவ்வாறு தன்னை அணுகும் கட்சிப்
பொறுப்பாளர்களிடம் இலவயமாகச் செய்ய வேண்டாம், உங்களுக்கு ஏதாவது வாங்கிக்
கொள்ளுங்கள் என்று கூறுவார் என்று இத்தகைய அதிகாரத் தரகர் ஒருமுறை கூறியிருக்கிறார்.
நம் கழகத்தில் சேருபவர்களுக்கு இழப்புகள் எதுவும் இருக்கக்
கூடாது, ஆதாயங்களே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அண்ணாத்துரை
வழிவந்தவர்களல்லவா இவர்கள்? அதுவும் மகாத்துமா நடிப்பு நடித்த காந்தியின் பெயரை
அடிப்படையாக வைத்து ஊழலுக்குக் “காந்திக் கணக்கு” என்று பெயர் வைத்துப் பெருமைப்படுத்திய தமிழகம் அல்லவா இது!
இதற்கு மாறுபட்டு செயல்பட்ட ம.கோ.இரா.வுக்கு மக்களிடம்
செல்வாக்கு உயர்ந்து வந்ததில் வியப்பில்லை. இது கருணாநிதியின் கண்களை உறுத்தியது.
எனவே அவருடன் போட்டியிட அவருக்கு இணையாகத் தன் குடும்பத்திலிருந்தே ஒருவரை
வளர்த்தெடுக்க கருணாநிதி திட்டமிட்டார். அவரது மூத்த மகன் மு.க.முத்துவை நடிக்க
வைத்து இரண்டு திரைப்படங்களை முதலில் ஓடவிட்டார். மு.க.முத்து மன்றங்களை
ஆங்காங்கு தொடங்கினார்.
கருணாநிதியின் திட்டம் ம.கோ.இரா.வுக்குப் புரிந்தது.
உள்ளுக்குள் புகைந்தார். மதுரையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தமிழக விடுதலைப் போராட்டம் பற்றி வீரார்ப்பாகப் பேசிவிட்டு மாநாடு முடியும் முன்பே போய்விட்டார்.
இறுதியில் கருணாநிதி அமைச்சரவையில் இருந்த சி.பா.
ஆதித்தனார் மூலமாக ம.கோ.இரா. மன்றங்களை மு.க.முத்து மன்றங்களாக மாற்ற முயன்றார்.
ம.கோ.இரா. மன்றப் பொறுப்பாளர்கள் அவரிடம் சென்று முறையிட்டனர். இனிப் பொறுக்க
முடியாது என்று கருதிய ம.கோ.இரா. ஊழலைப் பற்றிப் பேசத் தொடங்கினார். தமிழக விடுதலை எல்லாம் காற்றோடு போயிற்று. கருணாநிதியிடம் கட்சியின் பணக் கணக்கைக் கேட்டார். கட்சியில் பிளவு
ஏற்பட்டது. ம.கோ.இரா. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைத்தார்.
தி.மு.க. பதவி ஏற்கும் முன்பே கட்சியின் பொருளாளராக இருந்த
கருணாநிதியின் மீது புகார் கூறப்பட்டது உண்டு, கட்சிப் பணத்தை எடுத்து
திரைப்படத்தில் மூதலீடு செய்து ஆதாயம் அடைகிறார் என்று. முதலமைச்சர் ஆனதும்
போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சி.பா.ஆதித்தனார் அரசுப் பேருந்து சக்கரங்களுக்கு
உறைகள்(டயர்கள்) வாங்கியதில் ஊழல் நடந்ததாகப் புகார் கூறப்பட்டது. பேருந்துகளை
அரசுடைமை ஆக்கியதிலேயே ஊழல்கள் பெருமளவில் நடந்திருக்க வாய்ப்புள்ளது.
1967 அல்லது 68 இல் முதன் முதல் காஞ்சிபுரம் - விழுப்புரம்
தடத்தில் ஓடிய மக்களுடைமை பேருந்து அரசுடைமை ஆக்கப்பட்டது. அந்நேரத்தில் தினமணியில்
அதன் ஆசிரியர் ஏ.என். சிவராமன் ஒரு குறிப்பு எழுதினார். அப்போதிருந்த சட்ட
விதிகளின் படி எந்த ஒரு பேருந்துத் தடத்தின் இசைவாணையும் முடியும் நேரத்தில் அதைப்
புதுப்பிக்காமல் எந்த இழப்பீடும் வழங்காமல் அரசு தன் பொறுப்பில் பேருந்தைவிட்டு அந்த தடத்தைக் கைக்கொள்ளலாம் என்ற
உண்மையைக் கூறினார். ஆனால் 1970களின் தொடக்கத்தில் பெரிய பேருந்து நிறுவனங்களைக்
கையகப் படுத்துவதற்குப் பெரும் தொகைகளை இழப்பீடாக வழங்கினார் கருணாநிதி. அதுவும்
குறிப்பாக டி.வி.சு. நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பல கோடி உரூபாய்கள்
இழப்பீட்டுக்கு எந்த ஞாயமான காரணங்களும்
கிடையாது.
டி.வி.சு. நிறுவனம் பல ஆண்டுகள் செயற்பட்டு மிக விரிவடைந்த
ஒரு நிறுவனமாகும். அதன் ஆள்வினைச் சிறிது சிறிதாக ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது.
நிறுவனக் குடும்பத்தார்களிடையில் பங்குப் பூசல்கள் தோன்றியிருந்தன. சரக்குப்
போக்குவரத்துக் கிளை நிறுவனத்தை அதுவரை நேரடியாக நடத்தி வந்தவர்கள் இப்போது
முகவாண்மைக்கும் விடத் தொடங்கியிருந்தனர்.
ஊழியர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஓய்வு பெறும் அகவையை
எட்டி இருந்தனர். இந்தச் சூழலில் ஓய்வு பெறுவோருக்கு சராசரி ஆளுக்கு ஓரிலக்கம்
உரூபாய்கள் வரை உள்ள ஓய்வூதியப் பலன்களை வழங்கும் பொறுப்பையும் அரசே ஏற்றுக்கொண்டு
பல கோடி உரூபாய்களை வழங்கி பழைய
பேருந்துகளைப் பெற ஏற்பாடு செய்தார் கருணாநிதி. அந்தப் பணத்தை வைத்துத்தான்
அவர்கள் பல புதிய நிறுவனங்களைத் தொடங்கினர். இந்த இழப்பீடு கைமாற்றத்தில் கருணாநிதிக்குப் பங்கு
வழங்கப்பட்டது என்பது ஒரு குற்றச்சாட்டு.
மின்சாரப் பற்றாக்குறை உண்மையாக வரும் முன்பே “முன்னெச்சரிக்கை”யாக மும்முனை மின்வெட்டை
ஏற்படுத்தி தொழிலகங்களுக்கு ஒதுக்கீடு செய்ய ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு.
நிலம் விற்பனையில் நிலத்துக்கு முகமதிப்பு நிறுவியதுடன் மறுப்புப் பத்திரம்
பதிந்து விலைச் சான்று பெற்று முகமதிப்பைக் குறைத்துக் கொள்ளலாம் என்று ஏற்பாடு
செய்து அதிலும் ஊழலுக்கு வாய்ப்பு என்று
எண்ணற்ற ஊழல் வாய்ப்புகள்.
நெல் நடமாட்டக் கட்டுப்பாடுகளை பயன்படுத்தி தஞ்சை
மாவட்டத்தின் எல்லைகளை அடைப்பதும் திறப்பதுமாக விளையாடிப் போலி வாணிகர்கள்
மூலமாகப் பெருமளவு நெல்லையும் அரிசியையும் வெளிமாநிலங்களுக்கும் படகுகளில் வெளி
நாடுகளுக்கும் கடத்தினர் என்ற குற்றச் சாட்டு இருந்தது.
அரசு ஊழியர்கள் அல்லது எந்த ஒரு துறை சார்ந்த மக்கள்
தன்னைக் கண்டு வேண்டுகைகள் வைத்தாலும் ஒரு சங்கம் அமைத்து வருமாறு கருணாநிதி
அறிவுரை கூறுவாராம். அவ்வாறு அமைத்த பின் உறுப்பினர்களிடம் பணம் திரட்டித் தருமாறு
கூறப்படுமாம். அது போல் அரசூழியர்களின் சம்பள ஆணையத்திலும் நடக்குமாம். இவை எல்லாம்
அறியாமல் இருக்கும் அப்பாவிகளுக்கு பலன்கள் குறைவாக இருக்கும். கூக்குரல்கள்
எழும். உடனே ஒரு தனியாள் ஆணையம். அறியாதார் இப்போது அறிந்தார் ஆகிப் பயன்களைப்
பெறுவர்.
ஊழியர்கள் பணியிலிருக்கும் போது மாண்டால் உரூ 10,000/
குடும்பப் பாதுகாப்புக்கு வழங்கப்படும் என்றொரு திட்டம். அவர் மாவட்டங்களுக்கு உலா
வரும் போது செத்தவரின் உறவினர்களுக்கு காசோலை கொடுத்து புகைப்படம் எடுக்க, செத்தவர்கள் இல்லையா என்று அதிகாரிகளை நெருக்குவாராம்.
இந்தப் பணத்துக்கு ஊழியரின் சம்பளத்தில் மாதம் ஒரு உரூபாய்
பிடித்தம். 7½ இலக்கம் ஊழியர்கள். இவர்களுக்கு காப்பீட்டு நிறுவனத்தில் குழுக்
காப்பீடு செய்திருந்தனர். இதற்கு முறைப்படியான தரகு கிடைத்திருக்க வாய்ப்பு. இதைப்
புரிந்து கொண்ட ஊழியர்கள் சங்கத் தலைவர்கள் தங்கள் உறுப்பினர்களை நெருக்கி குடும்பப் பாதுகாப்புத்
திட்டத்தில் சேரவைத்து காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து தரகு பெற்றுக்கொண்டனர்.
கருணாநிதி மீது ம.கோ.இரா. கொடுத்திருந்த ஊழல் பட்டியலை
வைத்து மிரட்டி இந்திரா தமிழருக்கு எதிரான பல தீங்குகளை நிறைவேற்றிக் கொண்டார்.
காவிரி நீருரிமை குறித்து காவிரிப் படிகை உழவர்கள் உச்ச நய மன்றத்தில்
போட்டிருந்த வழக்கில் தமிழக அரசும் உழவர்களின் தரப்பில் தன்னை இணைத்துக்கொண்டது.
இந்திரா கேட்டார் என்பதற்காக தமிழக அரசு பின்வாங்கியது மட்டுமின்றி உழவர்களையும்
பின்வாங்கவைத்தார் கருணாநிதி. அதன் விளைவை
நாம் இன்று கண்ணாரக் காண்கிறோம். அது போல் கச்சத் தீவையும் இந்திரா கூறியதற்காக
இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு ஒப்புதல் தெரிவித்தார். அதன் பலனை 1000 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிர்களைப்
பறிகொடுத்து நாம் பட்டறிந்து வருகிறோம்.
1938ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் முதன்முதலில் அமைந்த
பேரவைக் கட்சி ஆட்சியின் போது முதலமைச்சர் ஆச்சாரியாரால் மதுவிலக்கு
கொண்டுவரப்பட்டது. மதுவிலக்கால் அரசுக்கு ஏற்பட்ட வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட
அவர்தான் முதன்முதலில் விற்பனை வரியை அறிமுகம் செய்தார். இதற்காக அவர் பெரிதும்
பாராட்டப்பட்டார். மக்களை ஒன்று திரட்டி பல போராட்டங்களைப் பேரவைக் கட்சி
மதுக்கடைகள் முன் நடத்தியிருந்ததால் அத் திட்டத்தின் செயல்பாட்டில் மக்கள்
முழுமூச்சாக ஒத்துழைத்தார்கள். அவ்வாறுதான் சி.பி.இராமசாமியார் காலத்தில் இன்றைய
குமரி மாவட்டத்தில் மதுவிலக்கு சட்டம் கொண்டுவரப்பட்ட போதும் நடந்தது. நாட்கள்
செல்லச் செல்ல அதில் தொய்வு ஏற்பட்டது. அண்டை மாநிலங்களில், குறிப்பாக
கேரளத்திலும் புதுச்சேரியிலும் மதுவிலக்கு செயற்படாததால் குடிப்பதற்கென்றே மக்கள்
அங்கு சென்று வந்தனர். அத்துடன் வசதி படைத்தவர்கள் மருத்துவர் தரும் சான்றின்,
அதாவது குடிக்காவிட்டால் ஆசாமி செத்துப் போவார் என்ற பேரில் வழங்கப்படும் இசைவாணையின் மீது மருந்துக் கடைகளில் அயல்நாட்டு மது
வாங்கிக் குடிக்கலாம்.
இவை தவிர காவல்துறை, ஆளும் கட்சியினர்(அப்போது பேரவைக்
கட்சியினர்), ஆகியோரின் பின்னணியுடனும் ஒத்துழைப்புடனும் கள்ளச் சாராயத் தொழில்
கொஞ்சம் கொஞ்சமாகச் சூடுபிடித்து வந்தது. அதே வேளையில் காவல்துறையினர் ஏழை எளிய பொது மக்களைத் தங்கள் முகத்தில் ஊதச்
சொல்லி, கள் அல்லது சாராயம் வாடை வருகிறது என்று வழக்குப் பதிந்து மாதம் அல்லது
ஆண்டுக் கணக்கில் சிறையில் அடைத்தனர், நயமன்றத்தின் துணையோடு. பனையேறிகளையும்
கள்ளிறக்கினார்கள் என்று கொடுமைப் படுத்துவதுண்டு. தங்களுக்கு வேண்டாதவர்களையும்
இந்தக் கொடுமைக்கும் இழிவுக்கும் ஆளாக்குவதுண்டு.
இவ்வாறு பணம் படைத்தவர்கள் எந்தத் தடங்கலுமின்றி மருந்துக்
கடைகளில் மேல்நாட்டு மதுவைத் குடித்து மதர்ப்பதற்கும் ஏழை எளியவர்கள் காவலர்களின் கொடுமைகளுக்கு
ஆளாவதற்கும் காரணமான மதுவிலக்குக் கொள்கையை எதிர்த்துக் காவல்துறையில் தன்
ஆய்வாளர் பதவியிலிருந்து விலகி அருச்சுனன் என்பவர் கள் வேண்டுவோர் கழகம் என்ற
அமைப்பை உருவாக்கிப் போராட்டங்கள் நடத்தினார். அவருக்கு மக்களின் துணை பெருகி
வந்தது. அவ்வாறு அவர் ஒருமுறை ஊர்வலமாக வந்த போது ஒரு காவல்துறை ஆய்வாளர் நேரே
மார்பில் சுட்டு அவரைக் கொன்றார். இது காமராசர் ஆட்சிக் காலத்தில்தான் நடந்தது.
இந்தப் பின்னணியில் கழகக் கண்மணிகள் நடுவில் கள் -
சாராயக் கடைகளை மீண்டும் திறக்க வேண்டும்
என்ற வேண்டுகை வலுத்து வந்தது. அமைச்சரவை அமைத்த அண்ணாத்துரையிடம் தம்பிகள் கேட்ட
போது எத்தனை கோடிகள் வரி வந்தாலும் மது
விலக்கை விலக்கிக் கொள்ள மாட்டேன் என்று அவர் உறுதியாக மறுத்துவிட்டார். ஆனால்
கருணாநிதி இ.பேரவைக் கட்சியுடன் தனக்கு ஏற்பட்ட கூட்டணியில் கிடைத்த அசுரப்
பெரும்பான்மையின் வலுவில் மதுவிலக்கைத் “தற்காலிகமாக ஒத்தி
வைத்திருப்பதாக”ச் சட்ட மன்றத்தில் அறிவித்தார்.
காந்தியின் வழிவந்த பேரவைக் கட்சியையும் சேர்த்து தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்
அனைவரும் ஒரே மனதாக மேசையைத் தட்டி ஆரவாரம் செய்து அந்த அறிவிப்பை வரவேற்றனர்.
கருணாநிதி வகையறாக்கள் குல்லூகப்பட்டர்
என்று வசைபாடிய ஆச்சாரியார் குழிதோண்டிப்
புதைத்த மது எனும் அரக்கனை, அவரை மூதறிஞர் என்று அதே கருணாநிதி பாராட்டி மகிழ்ந்த
வேளையில், தோண்டி வெளியில் எடுத்து
மீண்டும் மக்களை வேட்டையாடவிட்டார்.
மதுவிலக்குச் சட்டம் வருவதற்கு முன்பு கூட பெரியவர்கள்தாம்
கள், சாராயக் கடைக்குச் செல்வதையும்
குடிப்பதையும் காண முடிந்தது. இப்போதோ, பள்ளி, கல்லூரி மாணவர்களும்
சீமைச் சாராயத்தை வாங்கி வந்து பொது உணவு விடுதிகளில் வைத்துக் குடித்தார்கள்.
குடிப்பது குமுக ஏற்புக்கான ஒரு தகுதியாகக் கருதப்பட்டது. நண்பர்கள்
சந்திப்பதே குடித்து மகிழத்தான் என்ற
புதிய பண்பாட்டு வரையறை உருவானது. குடிப்பழக்கம் இல்லாதவர்கள் பழக்கத்துக்கு(நட்புக்கு!)
ஏற்றவர்கள் அல்லர் என்று ஒதுக்கப்பட்டார்கள்.
இன்னொரு புறம் ஏழைக் குடும்பங்களில் குடும்பத் தலைவன் தான்
உழைத்துப் பெறும் கூலியைக் குடித்துத் தீர்த்துக் குடும்பத்தைப் பட்டினி போடுவது
மட்டுமின்றி அவர்களை அடித்துத் துன்புறுத்துவது, பெண்கள் உழைத்து ஈட்டினால்
அதையும் பறித்துக் குடிப்பது, குழந்தைகள் வேலைக்குச் சென்றால்தான் சாப்பிட
முடியும் என்ற நிலை உருவானது என்ற தொடர் தீமைகள் உருவாயின. ஊர்களில் அடிதடி சண்டைகள்
மலிவாயின.
இன்னொரு புறம் கள்ளச் சாராயம் கொடிகட்டிப் பறந்தது. ஆளும்
கட்சிகளைச் சேர்ந்தவர்களே, அதாவது ஆளும் கட்சிகளின் ஆதரவாளர்கள், அல்லது அப்படி
மாறிக்கொண்டவர்கள் ஆளும் கட்சிக்கு
ஆதரவாகச் சாராயம் காய்ச்சினார்கள். காவல் துறை மூலம் மேலிடத்துக்கு உரிய பங்கு
சென்று சேர்ந்தது.
கள்ளச் சாராயத்தில் எரிசாராயத்தைக் கலந்து நஞ்சாகி அவ் வப்போது
பல உயிர்கள் “வீடுபேறு” அடைவதும் உண்டு.
இடையில் ம.கோ.இரா. கள், உள்நாட்டுச் சாராயக் கடைகளை
அடைத்தும் குடிப்பதற்கு இசைவாணை (பெர்மிட்) வழங்கியதுமான
குளறுபடிகளைச் செய்தார்.
இந்தக் காலகட்டத்தில் களத்தில் இறங்கினர், இந்திய
மார்க்சியப் பொதுமைக் கட்சியினர். அவர்களின் செயல்பாடு மதுக் காப்புரிமம் பெற்ற
அயல்நாட்டு நிறுவனங்களுக்கா அல்லது அவர்களிடம்
உரிமம் பெற்று உள்நாட்டில் காய்ச்சும் நிறுவனங்களுக்கா அல்லது
இருவருக்குமா அல்லது ஆட்சியாளருக்கும் சேர்த்து
ஒப்பந்தம் செய்து கொண்டு நடந்ததா என்பது குறித்து ஐயப்பாடுகள் இருக்கலாம்; ஆனால் “அயல் நாட்டு” மதுவுக்குச் சார்பானது என்பதில்
ஐயமில்லை. கள்ளச் சாராயத்தை மட்டும் ஒழிப்பதில் மிக முனைப்பான போராட்டத்தை அவர்கள்
மேற்கொண்டனர். அவர்களுக்கான போராட்டத்துக்கு
மதிப்பளித்து செயலலிதா அம்மையார் ஒரு நடவடிக்கை எடுத்தார். அதாவது தனியார்
குப்பியடைப்பு (பாட்டிலிங்) நிறுவனங்களையும் ஏலத்துக்கு விட்ட கடைகளையும்
நிறுத்திவிட்டு குப்பியிலடைப்பதையும் கடைகளையும் அரசே தன் கையில்
எடுத்துக்கொண்டது. வட்டித் தொழில் செய்த நாட்டுக் கோட்டைச் செட்டியார்களிடம்
அடியாட்களாக இருந்தவர்கள்
இந்திராவின் கடன் தள்ளுபடிச் சட்டத்தால் உருவான வெற்றிடத்தைக் கைப்பற்றிக் கந்து வட்டித் தொழிலைத் தங்கள் கைகளில்
எடுத்துக்கொண்டது போல், இப்போது அவரது
தோழியின் ஆட்கள் உள்ளே புகுந்து ஆதாயம் கண்டனர். கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அதை அப்படியே தொடர்கிறார்.
ஊழியர்களுக்குச் சில சலுகைகளைச் கொடுத்து விட்டு. “புனிதர்” இராமதாசு மட்டும் அவ்வப்போது மதுவுக்கு எதிராகச் சில நாள் குரல் கொடுத்தார், ஆட்சிக்
கட்டிலை நோக்கிய தன் இலக்குக்காக. ஆட்சிக்கு வந்தால் தெரியும் உண்மையான வடிவம்.(ஆட்சிக்கு வருவாரா?)
இன்று ஊழியர்கள் கை இருப்புக் கணக்கைக் கொஞ்சம் முன்பின்னாகக் காட்டி
விற்ற பணத்தை வட்டிக்கு விட்டு அதில் ஒரு பங்கை ஆய்வுக்கு வரும் அலுவலர்கள் மூலம்
ஆட்சியாளர்களுக்குச் செலுத்திவிடுகிறார்கள் என்ற அளவுக்குத் “தொழில்” மேம்பட்டிருக்கிறது.
உரூ. 4,000/[3]
கோடி “வண்ண”ச் சாராயத்தின் மூலம்
அரசுக்கு ஆதாயமாம். அதில்தான் மக்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி உட்படப் பல்வேறு
இலவயங்களைச் செய்யமுடிந்திருக்கிறதாம்! சொல்லி பெருமைப் பட்டிருக்கிறார் பண
அமைச்சர். அங்கும் ஆதாயம் கிடைக்கும். எட்டிய பக்கமெல்லாம் ஆதாயம்.
பொதுமைத் தோழர்களைப் பொறுத்தவரை அவர்கள் பாட்டாளிகளின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்திவிட்டனர். அரசுக் கடைகளில் விற்ற பட்டைச் சாராயத்திலிருந்தும் தரம்
உறுதிப்படாத கள்ளச் சாராயத்திலிருந்தும் விடுபட்டு முதலாளிகள் குடிக்கும் “வண்ண”ச் சாராயத்தை குடித்து தமிழ் இனக்காவலர் விற்பனையாளர்களிடம் தரகு
பெற்று வாங்கி வழங்கிய வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டியில் அவரது பட்டப் பெயரில்
இயங்கும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளாகிய நகைக்சுவைக் கூத்துகளைக்
கண்டுகளிக்கிறார்கள், இல்லையா? புரட்சி ஓங்குக!
பாட்டாளிகளின் குடும்பத்துக்கு உணவிலிருந்தும்
உடையிலிருந்தும் நோய் நொடி வந்தாலும் மருந்திலிருந்தும் விடுதலை; அவர்கள்
பிள்ளைகளுக்கு படிப்பிலிருந்து விடுதலை;
புரட்சி ஓங்குக!!
தமிழீனத் தலைவருடனும் கன்னடத்து அன்னையுடனும் மாற்றி மாற்றிக் “கூட்டு” வைத்து பாட்டாளித் தோழர்களுக்கு என்னென்ன
நன்மைகளை எல்லாம் செய்திருக்கிறோம்! புதிதாகக் களத்தில் இறங்கியுள்ள திரைப்படத்
தலைவர்களுடன் கூட்டுவைத்துப் பாட்டாளியருக்கு இன்னும் என்னென்னவெல்லாம்
செய்யப்போகிறோம் என்று பொறுத்திருந்து பார்த்துக்கொள்ளுங்கள். புரட்சி ஓங்குக!!!
இப்படியே இங்கேயே நம் அலுவலகப் பொதுமைத் தோழர்களைப் பற்றிச்
சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி விடுவோம். அலுவலகப் பொதுமைக் கட்சிகள் என்பவை
உருசியச் சார்பான இந்தியப் பொதுமைக் கட்சியும் சீனச் சார்பான இந்திய மார்க்சியப்
பொதுமைக் கட்சியும்.
திராவிட இயக்கத்தின் இறைமறுப்பு, சாதி ஒழிப்பு, மொழி
அடையாளத்துடன் விளங்கும் தேசிய நிலப்பரப்புக்கு விடுதலை என்ற எதுவும் மார்க்சியக்
கோட்பாட்டுக்கு எதிரானவை அல்ல. ஆனால் நம்
தோழர்கள் தெரிந்தே திட்டமிட்டு அவற்றை எதிர்த்தனர்; கேலியும் கிண்டலும் பேசினர். பெரியார் வலியச் சென்று
அவர்களுக்குத் தேர்தல் பணியாற்றியதையும் புறக்கணித்தனர். ஆனால் அண்ணாத்துரை
தலைமையிலான தி.மு.க. கொள்கைகள் அனைத்தையும் வெளிப்படையாகக் கைவிட்டுப் பதவி ஒன்றே
குறியாகக் கொண்ட பதவி வெறியர்களின் கும்பல் என்பது ஐயத்திற்கு இடமின்றித்
தெரிந்ததும் ஓடிச் சென்று கூட்டணி சேர்ந்தனர். பொதுமைக் கட்சியைத் தனது முதல் எதிரி என்று அறிவித்திருந்த ஆச்சாரியாருடன்
சேர்ந்து ஒரே கூட்டணியில் தி.மு.க.வுடன் இணைந்தனர். இரு எதிர் எதிர்க் கட்சிகளின்
பார்ப்பனத் தலைமைகள் தங்கள் சாதி நலன்களைக் கொள்கைகளைத் தூக்கியெறிந்துவிட்ட தி.மு.க.வில் கண்டனர் என்பது தவிர இதற்கு வேறு
என்ன விளக்கம் கொடுக்க முடியும்? பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலைச் சாதியைச்
சேர்ந்த அண்ணாத்துரையும் கருணாநிதியும் தி.மு.க.வின் தலைமை இடத்தில் இருந்தது
அவர்களது மறைமுக நோக்கங்களுக்கு வசதியாகப் போய்விட்டது. அவர்களின் கூட்டுச்
செயற்பாடுகளின் நோக்கங்களையும் விளைவுகளையும் நாம் அலசத்தான் போகிறோம்.
நம் பாட்டாளிகளின் கூட்டாளிகளைப் பொறுத்தவரை டாட்டா, பிர்லா
போன்ற வட இந்திய பார்சி - பனியாக் கூட்டம்தான் இந்தியாவின் தேசிய முதலாளிகள். இதை அவர்கள்
வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். அவர்களைத் தவிர பிற அனைத்து இந்தியர்களும் இந்தியத்
தேசிய முதலாளியருக்கு எதிரிகள். அவர்களை அழிப்பது தோழர்களின் தவிர்க்க முடியாத “புரட்சிக்
கடமை.” அதனால்தான் தமிழகத்தின் டி.வி.சு.
நிறுவனத்தை வேலை நிறுத்தத்தின் மூலம் முடக்கிவிட வேண்டும் என்ற இந்திய
மார்க்சியப் பொதுமைக் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான சி.ஐ.டியூ.வின் திட்டம்
கசிந்து மதுரையில் பேசப்படும் பொருளாக 1980களில் இருந்தது. அது போலவே ஓசூரில்
போராட்டமும் நடந்தது. நிறுவனம் ஏற்கனவே செய்தியை அறிந்திருந்ததால்
முன்னெச்சரிக்கையாக எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு தன்னைக் காப்பாற்றிக்கொண்டது.
அந் நிறுவனம் பார்ப்பனர்க்கு உரியதாகையாலும் திட்டத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ள
வாய்ப்பிருந்திருக்கும். அந்த வாய்ப்பும் போதிய வலிமையும் இல்லாத எத்தனை
நிறுவனங்களைத் தோழர்கள் அழித்து ஊழிக் கூத்து ஆடினார்களோ நாமறியோம்.
தோழர்களுக்குத் “தனியார்” தொழில்களைக் கட்டோடு பிடிக்காது. அதில் உள்நாட்டுத் தனியார்,
வெளிநாட்டுத் தனியார் என்ற பாகுபாடெல்லாம்
கிடையாது. அவர்கள் அண்ட முழுவதும் உள்ள
பாட்டாளிகளின் ஒரே புகலிடம் அல்லவா? இது கோட்பாடு. ஆனால் நடைமுறையில் வட இந்தியப்
பனியா – பார்சி, வல்லரசிய முதலாளிகள் தவிர்த்த பிறர் முனைவுகளைக் கருவறுப்பதற்கு மட்டுமே
தனியார் என்ற சொல்லைப் பயன்படுத்தி அதனால் உருவாகும் வெற்றிடத்தில்
பனியாக்களுக்கும் அயல்நாட்டினர்க்கும் வசதி செய்து கொடுப்பர். தோழர்களின் மறைமுகத்
தோழமையினால் உலக ஏழை நாடுகளிலெல்லாம் அமெரிக்கா தலைமையிலான வல்லரசுகளும்
அவர்களுக்கு அடுத்து இந்தியப்
பனியாக்களும் பொருளியல் - அரசியல் மேலாளுமை செய்யத் தொடங்கியுள்ளனர். அப்புறம்
தமிழகம் மட்டும் எந்த மூலை இவர்களுக்கு?
“வரிகளைக் குறைத்து வசதிகளைப்
பெருக்குவதற்கு” அரசுடைமையே சிறந்த மருந்து என்று
முழக்கம் வகுத்துக் கொடுத்தவர்கள் நம் பொதுமைத் தோழர்கள். அதற்கு அடித்தளத்தில்
செயற்பட்டிருப்பது அமெரிக்காவின் “நிகர்மை”க் கோட்பாடு. பேருந்துப்
போக்குவரத்து, மின்சாரம் போன்றவை தலைமையான துறைகள். அவற்றின் அவல நிலையை நாம்
பார்க்கிறோம்.
பேருந்துப்
போக்குவரத்தை எடுத்துக்கொண்டால் பேருந்து வாங்குவதிலிருந்து உதிரிப் பாகங்கள் கொள்முதல், பணிமனைகள் என்று எங்கும் கொள்ளை.
ஒவ்வொரு புதிய மேலாண்மை இயக்குநர் பணியில்
சேர்ந்ததும் மிகுதி என்று காரணம் காட்டிப் பல ஓட்டுநர், நடத்துநர்களைப் பணி நீக்குவர்.
தோழர்களாகிய சங்கத் தலைவர்கள் உட்பட பணி இழந்த உறுப்பினர்களிடமிருந்து பணம் தண்டி
மே.இ.க்குக் கொடுத்து மீண்டும் பணிபெற்றுத் தருவர். இது ஓர் எல்லையைத் தாண்டி இந்த
ஆண்டு (2008) இரண்டு, இரண்டரை
இலக்கம் என்று அனைவரும் அறியப் பணம்
தண்டப்பட்டது. ஆனால் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு அது நிலையற்ற வேலை.
இவ்வளவு கொள்ளைக்கும் பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய
பேருந்துகள் வாங்குவதற்கென்று ஆயிரம் கோடிகள் கணக்கில் “மானியம்”. வரியைக் குறைப்பதற்கு என்று சொன்னவர்கள் மக்களின் வரிப்
பணத்திலிருந்து மானமற்றுப் போய் மானியம் வழங்குமாறு அரசுக்கு வேண்டுகை
வைக்கின்றனர்.
மாணவர்களுக்கு இலவயத்தால்தான் இழப்பு என்கிறார்கள்.
1950களில் இன்றைய குமரி மாவட்டத்தில் ஓடிய கணபதி என்ற போக்குவரத்து
நிறுவனம் அரைக் கட்டணச் சலுகையை
மாணவர்களுக்கு வழங்கி அதிலும் ஆதாயம் கண்டது. அப்போது அமரும் இடங்களுக்கு
மேல் ஆள் ஏற்றக் கூடாது என்று சரியான இருக்கை (கரெக்ட் சீட்) முறை நடைமுறையில் இருந்தது என்பதுடன் இன்றைய புளி மூட்டைத் திணிப்பை ஒப்பிட்டுப்
பாருங்கள்!
இவர்கள் “மானியம்” வாங்கிக்கொண்டிருக்கும் நிலையில் ஒன்றிரண்டு பேருந்து வைத்து நடத்தும் மக்களுடைமை நிறுவனங்கள்
இரண்டாண்டுகளில் கிடைக்கும் ஆதாயத்தில் ஒரு புதிய பேருந்து வாங்கிவிடுகிறார்கள். ஊழியர்
அமர்த்துவதற்கு இவர்களைப் போல் அவர்கள் வாங்கியிருந்தால் ஐந்து பேரிடமிருந்து
வாங்கிய பணத்தில் ஒரு புதிய பேருந்து வாங்கியிருப்பார்கள். இந்தப் பணமெல்லாம் எங்கு தோழர்களே போகின்றன? தமிழீனத் தலைவரோடு
நீங்களும் பங்கு போட்டுக்கொள்கிறீர்கள் இல்லையா?
மின்வாரியம் பற்றிக் கூறத் தேவையில்லை. அது இருட்டுக்குத்தான் வெளிச்சம்.
மாணவர் பேருந்து இலவயச்
சீட்டையும் மின்வாரியம் மானிய விலையில் வழங்கும் மின்சாரத்துக்கும் அரசு
போக்குவரத்துக் கழகத்துக்கும் மின்வாரியத்துக்கும் உரிய தொகையை அரசினரே வழங்கி விடுகிறார்கள்.
மாணவர் செல்லும் தடத்தில் ஓடும் மிதவைப் பேருந்து போன்ற கட்டணம் மிகுந்த
வண்டிக்குரிய விகிதத்தில் அரசிடம் கழகங்கள் பெற்றுக்கொள்கின்றன. மின்சாரக் கட்டணப்
பட்டியலில் அரசின் மானியத்தொகை குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ஆனால் இத் துறைகளில்
ஏற்படும் இழப்புகளுக்குக் காரணம் இலவயங்களும் மானியங்களும் அல்ல என்பது தெளிவு.
நம் ஆட்சியாளர்களும் “புரட்சி”யாளர்களும் இவ்வளவு துணிந்து பொய் சொல்வதும் நம் கைகளில் கிடைக்கும்
ஆவணங்களைக் கூடப் பார்த்து உண்மை நிலையை விளங்கிக் கொள்ளாத நம் மழுங்கட்டைத்தனமும்
வியப்பூட்டுவன.
மனிதன் பண்பாட்டில் முழுமையடைய வேண்டும்; தன்மானம் உள்ளவனாக
தன் தேவைகளை நிறைவேற்றவும் ஒழுங்குமுறையைச் பேணவும் இயல்பவனாக மனிதன், குறிப்பாக
உழைக்கும் மனிதன் உயர வேண்டுமென்று, சொல்லத் தொலையாத வறுமையைத் தாங்கிக்கொண்டு கோட்பாடு வகுத்துக் கொடுத்த
காரல் மார்க்சின் பெயரைக் கூறிக் கொண்டு உலகப் பாட்டாளி மக்களை ஆட்சியாளர் போடும்
எச்சிலுக்காகக் கையேந்துவோராக கட்டுப்பாடற்றவராக, பண்பாட்டுணர்வு அற்றவர்களாக
ஆக்கியதற்காக உலகப் பொதுமை இயக்கத் தலைவர்களை மனித வரலாறு ஒரு நாளும் மன்னிக்காது.
“மீப் புரட்சிகர”த் தோழர்களைப் பற்றித் தனியாக முதல் அதிகாரத்தில் கூறியுள்ளோம்.
இப்போது கருணாநிதி படைத்த இருள் வரலாற்றைத் தொடர்வோம்.
ஒரு பெரும் ஊழல் பட்டியலுடன் ம.கோ.இரா. தில்லி சென்று
இந்திராவிடம் அதனை ஒப்படைத்தார்.
இந்தச் சூழலில் இந்திராவின் கொடுங்கோன்மையால் மாநிலங்களில்
எதிர்ப்புகள் உருவாயின. மக்கள் அணிதிரண்டனர். செயப்பிரகாசு நாராயணன் என்பவர்
பெரும் போராட்டத்தைத் தொடங்கினார். இந்த நிலையில் அலகாபாத் உயர் நயமன்றம் இந்திரா
காந்தியின் தேர்தல் செல்லாது என்று அறிவித்தது. பதவியில் இருக்கலாம்,
பாராளுமன்றத்தில் வாக்களிக்க உரிமையில்லை என்று முறையீட்டின் மீது தீர்ப்பளித்தது உச்ச
நயமன்றம். செயப்பிரகாசு நாராயணனும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்திராவைப்
பதவியிலிருந்து இறக்குவதுவரை ஓயமாட்டோம் என்று அறைகூவல் விடுத்தனர். உடனேயே
1975ஆம் ஆண்டு சூன் 25ஆம் நாள் இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்துத் தலைவர்களைத்
தளைசெய்தார்.
அந்தக் காலகட்டத்தில் கருணாநிதி பண்டிதர் பட்டம் பெற
விரும்பினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பட்டம் கொடுக்க முன்வந்தது. மாணவர்கள்
எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல்துறை.
மாணவர்களின் பிணங்களின் மீது நடந்து சென்று பண்டிதர் பட்டம் பெற்றதாகத் தாளிகைகள்
கருத்துப் படங்களை வெளியிட்டன. அண்ணாத்துரைக்கும் அப் பல்கலைக கழகம் இவ்வாறு பட்டம் வழங்கியிருந்தது. யார் எவர்
என்றில்லாமல் அதிகாரத்தில் எந்தப் பேர்வழி அமர்ந்திருந்தாலும் அவனுக்கும் அவன்
கைகாட்டுகிறவன்களுக்கும் பட்டங்களை அளித்து பல்கலைக் கழகங்கள் தங்களையும்
தங்களிடம் முறைப்படி பட்டம் பெறுபவர்களையும் அளவுக்கு மீறி இழிவு செய்கின்றன.
பல்கலைக் கழக ஆட்சிக் குழுவிலும் துணைவேந்தர் பதவிகளிலும் ஆட்சியாளர்களை நத்திப்
பிழைப்பவர்கள் ஏறி அமர்ந்துகொள்ளும் ஒரு சூழலில் வேறென்ன நடக்கும்?
நெருக்கடி நிலைக் காலத்தில் பாளையங்கோட்டை தூய யோவான்
கல்லூரிப் பேராசிரியர் ஒருவரைக் காவல்துறையினர் கொடுமைப்படுத்தியதைக் கண்டித்து
அனைத்துக் கல்லூரி மாணவர் போராட்டம்
வெடித்தது. ஊர்வலமாகச் சென்ற மாணவர்கள் மீது தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில்
காவல்துறையினர் நடத்திய தடியடியில் ஓடிய லூர்துநாதன் என்ற மாணவன் ஆற்றினுள்
விழுந்ததில் இறந்து போனான்(தாமிரபரணிதான் கருணாநிதியின் ஆட்சிக் காலங்களில் எத்தனை
முறை குடிமக்களின் கல்லறை ஆகியிருக்கிறது!) . மாணவர் போராட்டம் மக்கள் போராட்டம்
ஆனது. வெளி மாவட்டங்களிலிருந்து ஆயுதக் காவல் படையினர் வருவிக்கப்பட்டனர். மக்கள்
சந்துகளிலும் முடுக்குகளிலுமிருந்து மறைந்து மறைந்து தாக்கினார்கள்.
காவல்துறையினர் ஊருக்குப் புதியவர்களாகையால் திணறித் தடுமாறினர். காவலர்கள் மீது
காய்ச்சிய எண்ணெய்யும் நெருப்பும் மிளகாய்ப் பொடியும் வீசப்பட்டன. ஆத்திரமுற்ற காவலர்கள்
தம்மை ஏவிய காவல்துறை கண்காணிப்பாளர் வீட்டுக்குச் சென்று கல்வீசித் தாக்கினர்
என்பது இன்றும் பாளையங்கோட்டைப் பகுதியில் பேசப்படுகிறது. தமிழக மக்களின் வீறையும்
போர்க்குணத்தையும் காட்டும் இன்னொரு நிகழ்ச்சி இது.
கருணாநிதி தன்னை நம்பியே இந்திராவின் ஆட்சியும் தமிழகத்தில்
அவரது பேரவைக் கட்சியும் இருக்கின்றன என்ற பொய் மமதையில் இருந்தார். சியார்சு
பெர்னாண்டசு போன்று, காவல்துறையினர் தேடும் அரசியல் தலைவர்களுக்கு அடைக்கலம்
கொடுத்தார். இந்திரா காந்தி அறிவித்த 20 கூற்று(அம்ச)த் திட்டத்தைப் பகடி செய்து,
21ஆம் கூறாக கைம்பெண் மறுமணத்தை வைத்து இந்திராவுக்கு மறுமணம் செய்து
வைக்கப்போவதாகக் கூட தி.மு.க. பேச்சாளர்கள் மேடையில் வாய்க்கொழுப்பேறி மனம் போனபடி
பேசினர். இந்திரா பேரவையினர் கொதித்துப் போயிருந்தனர். இந்தச் சூழலில் இந்திரா
படைப் பிரிவுகளைத் தமிழகத்து நகரங்களுக்குள் நுழையவிட்டு 1976 ஆண்டு பிப்ரவரி
ஒன்றாம் நாள் கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் மூலம் ஆணை
பிறப்பித்தார். அவர் மீது சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுகளை மூதலிக்க(விசாரிக்க)வென்று சர்க்காரியா என்பவர் தலைமையில் ஒரு மூதலிப்பு ஆணையத்தையும்
அமைத்தார்.
படைத்துறையினரும் காவல்துறையினரும் தி.மு.க.வினரைச் சல்லடை
போட்டுச் சலித்து எடுத்துப் பிடித்துப் போய்க் கொட்டடிகளில் அடைத்தனர்.
பெரும்பாலானவர்கள் தங்கள் கட்சிக்கரை போட்ட வேட்டிகளையும் துண்டுகளையும்
எரித்துவிட்டு வேறு கரை போட்ட வேட்டிகள், துண்டுகள் வரும்வரை வெறும் உள்ளாடைகளுடன்
இருந்தனரென்று குமுதம் கேலி பேசியது.
சிறைக்குள் அடைபட்டவர்களைச் சகட்டுமேனிக்கு அடித்து
உதைத்தார்கள் காவல்துறையினர். அடி தாங்காமல் பலர் இறந்ததாகவும் கூறப்பட்டது.
அப்படி இறந்தவர்களில் ஒருவர் சென்னையின் நகரத் தந்தையாக இருந்தவர்.
கருணாநிதியின் வாய்க்கொழுப்பு, மேலேயுள்ளவர்களோடு முரண்பட்டுப்
பேசுவது அன்றுடன் முடிவுபெற்றுவிட்டது. அவரிடம் அதுவரை வெளிப்பட்ட வீரார்ப்பு
தன்னையும் எதிராளியையும் பற்றிய தப்புக்கணக்கில் உருவான திமிர்தானே ஒழிய வீரம்
இல்லை என்பது தெரியவந்தது. வாய்க்கொழுப்பு இருக்கிறது. அது ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சிகளை நோக்கியது.
ஆனால் அது எப்போதும் தமிழருக்குக் கேடு பயப்பதாகவே முடிந்துள்ளது. அண்மை
எடுத்துக்காட்டு, இராமர் பாலத்தைப் பற்றிப் பேசிய தரக் குறைவான கருத்துகள்.
ஆட்சிக் கலைப்பை அடுத்து வந்த அண்ணாத்துரை நினைவு நாளில்
கட்சியின் சில தலைவர்களுடன் அண்ணாத்துரையின் கல்லறைக்கோ, சிலைக்கோ
மாலையிட்டுவிட்டுக் கண்ணீர் சிந்திக் காட்சி கொடுத்தார் கருணாநிதி. வீறுமிக்க
தமிழர்களுக்கு இத்தகைய அழுமூஞ்சிக் கோழைகளை விட்டால் வேறு தலைவர்கள் இல்லை என்று
கூறும் சிந்திக்கத் தெரிந்ததாகக் கருதப்படும் கூட்டம் ஒன்று இருப்பதுதான் தமிழகத்துக்கு
வந்த கேடுகாலம்.
நெருக்கடி நிலை ஆட்சியையோ தன் ஆட்சி கவிழ்க்கப்பட்டதையோ
எதிர்த்து நேரடியாக எதுவும் பேசத் துணியாத கோழை கருணாநிதியின் வீரம் சாவு
வீட்டிலும், சடங்கு(பூப்பெய்தல்) வீட்டிலும் அரசியல் புலம்புவதாகத் தன் வாலைச்
சுருட்டிப் படுத்துக்கொண்டது. இந்தத் தலைவனைக் கடவுளாகப் போற்றும் கட்சித்
தொண்டர்களும் ஆர்வலர்களும் எப்படி வீரமுள்ளவர்களாக இருக்க முடியும்? வீரம் என்று
நாம் இங்கு குறிப்பிடுவது தனக்கு ஒப்பாகவும் உயர்வாகவும் இருப்போரை எதிர்ப்பதைக் கனவிலும் நினைக்காத, தம்மை விட எண்ணிக்கையிலும் பொருளியலிலும் தாழ்ந்தவர்களைக்
கொடுமைப்படுத்தும் அரிவாள் தூக்கிய சாதிவெறிக் கோழைகளின் செயலை அல்ல.
எதிர்க்கட்சித்
தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாலும் கடுமையான அடக்குமுறை
செயற்படுத்தப்பட்டதாலும் நெருக்கடிநிலை ஆட்சியை எதிர்த்து வெளிப்படையாகக்
கருத்துத் தெரிவிக்கவோ போராட்டங்கள் நடத்தவோ முடியாத சூழலில், சுரணையும் அரசியல்
உணர்வுமுள்ளவர்கள் யார் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் தலைமறைவு இதழ்களைக்
காலமுறையில் அஞ்சலில் விடுத்து வைத்தனர் இந்தக் கொடுமைக்கு முடிவுகட்ட
வேண்டுமென்று விரும்பிய சிலர். பாராளுமன்ற “மக்களாட்சி”யில் ஊறிப்போனவர்கள் கூட புரட்சிகர மக்கள் போராட்டம் பற்றிச்
சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.
பாராளுமன்றத்தின் அகவையை ஆறாண்டாக உயர்த்தி நிறுவிய
சட்டத்தின்படி 1977 மார்ச்சில் நடைபெற வேண்டிய தேர்தல் ஓராண்டு தள்ளிப் போடப்பட்டு
1976 நவம்பரில் ஆணை வெளிவந்தது. ஆனால் என்ன நினைத்தாரோ, 1977 சனவரி 18 ஆம் நாளன்று
பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலுக்கு ஆணையிட்டார் இந்திரா.[4]
தலைமறைவு இயக்கங்களால் தன் குடும்பத்தினருக்குக் கேடு விளையும் என்று
உளவுத்துறைகளின் மூலம் அஞ்சியிருப்பாரோ என்பது எமது ஐயம்.
நெருக்கடிநிலைக் காலத்தில் சிறையிலிருந்த தலைவர்கள்
வெளியில் வந்து இணைந்து சனதாக் கட்சி என்ற
ஒரு கூட்டணியை உருவாக்கினர். கருணாநிதி அவர்களோடு சேர்ந்துகொண்டார்.
மாநிலக்
கட்சிகளை நெருக்கடிநிலைக் காலத்தில் இந்திரா தடைசெய்வார் என்று அஞ்சி அட்டைக் கத்தி வீரர் ம.கோ.இரா. தன்
கட்சியின் பெயரை அனைந்திந்திய அண்ணா தி.மு.க. என்று மாற்றியிருந்தார். அவர் இப்போது இந்திரா காந்தியோடு
கூட்டு.
தமிழகத்தில் ம.கோ. இரா. தனிப் பெரும்பான்மையுடன்
ஆட்சியமைத்தார். 1973 இல் கட்சி தொடங்கி 1977 இல் ஆட்சி. இந்திரா பேரவை இந்திய
அளவில் படுதோல்வி. தென்னிந்தியாவில் ஓரளவு ஆதரவு இருந்தது. வட இந்தியாவில் பெரும்
அடி.
ம.கோ.இரா. ஆச்சாரியாரின், “ஆள்வினையில்
அரசியல்வாணர்கள் தலையிடா”க் கொள்கையை முதலில்
கடைப்பிடித்தார். ஆச்சாரியாரின் நோக்கம், அன்று அனைத்து அலுவலகங்களிலும் உயர்நிலை
அதிகாரிகளாயிருந்த பார்ப்பனர்களை அரசியல்வாணர்களாகிய அவர் பார்வையில், “கண்ட
பயல்களெல்லாம்”, அதிகாரம் செய்யக்கூடாது பாருங்கள்,
என்பதாகத்தான் இருக்கும் என்பது எமது கணிப்பு. ம.கோ.இராவைப் பொறுத்தவரை இதயம்
பேசுகிறது மணியன், தூத்துக்குடி
எட்மண்டு போன்ற ஓரிருவர்தான் அணுக முடியும் என்பது நிலை. எனவே இவர்களது
காட்டில் நல்ல மழை.
கருணாநிதி ஆட்சியில் போல் நன்றாக மேயலாம் என்று நாக்கைத்
தொங்கப்போட்டுக் கொண்டு சட்டமன்றம் போன ச.ம.உ.க்களுக்கும் கட்சி உள்ளூர்த்
தலைவர்களுக்கும் பெரும் ஏமாற்றமாகிவிட்டது. கட்சித் தலைமக்களுக்குத் தன் மீது
மனக்குறை இருப்பதை ம.கோ.இரா. உணர்ந்தார். இதை ஈடுகட்டும் வகையில் முதலில் பெரியார்
நூற்றாண்டை 1979இல் ஓர் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக அரசு விழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். இதற்கான செலவை அந்தந்த
மாவட்ட அதிகாரிகளும் கட்சித் தலைவர்களும் நன்கொடை திரட்டி சேர்த்துக்கொள்ள
வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. இரு சாரரருக்கும் மேய்வதற்கு நல்ல வாய்ப்பு.
அத்துடன் பெரியார் எழுத்து முறையை அலுவலகங்களிலும் கல்வி நிலையங்களிலும்
அறிமுகப்படுத்தும் ஆணையையும் பிறப்பித்தார். இந்த ஆணையைக் கருணாநிதி
கொச்சைப்படுத்தி பழைய எழுத்து முறையையே
அவரது இதழில் தொடர்ந்தார்.
ம.கோ.இரா.வின் இந்த நடவடிக்கைகளும் கட்சிப் பெருமக்களுக்கு
முழு நிறைவைத் தரவில்லை. பண்டை அரசர்கள் தங்கள் படைத் தலைவர்களுடன் அமர்ந்து
பெருஞ்சோறு உண்ணுவதைப் போல் பெருமிதத்துடன் முன்னிருந்து ஊட்டும் கருணாநிதி போல்
இன்றி தூய்மை நடிப்புக் காட்டும் ம.கோ.இரா. “இரத்தத்தின்
இரத்தங்”களுக்கு இனியவராகப் படவில்லை.
இந்திரா
ஒரு தடவை மதுரைக்கு வந்திருந்தார். அவர் ஊர்வலம் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
அப்போது அவரைத் தாக்குவதாகத் தி.மு.க.வினர் திட்டமிட்டனர். அவ்வாறே ஊர்வலம்
ஓரிடத்தைத் தாண்டும் போது அவர் மீது கல் வீசப்பட்டது. அந்தக் கல்லை அவரருகே நின்று
கொண்டிருந்த பழ.நெடுமாறன் தாங்கி காயம்பட்டு “மாவீரன்” என்ற “விருதும்” சூட்டிக் கொண்டார்.
இந்தப் பின்னணியில் இந்திராவை இடைத் தேர்தலில் நிற்குமாறு
தமிழக இந்திராப் பேரவைக் கட்சியினர்
நெருக்கினர். தஞ்சைத் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்துக்குப் போட்டியிட
அவர் முடிவு செய்தார். ம.கோ.இரா. துணை நிற்பதாக வாக்களித்தார். மொரார்சி தேசாய் “என்ன இந்திராவுக்குத் துணை
நிற்பதாக வாக்களித்துள்ளீர்கள் போலும்?” என்று இயல்பாகக் கேட்பது போல் கேட்டார் போலும்.
தொடைநடுங்கி ம.கோ.இரா. “ஐயையோ, இல்லவே இல்லை” என்று தன் வாக்குறுதியை காற்றில் விட்டுவிட்டார். இதுதான் சமயம் என்று
“தமிழீனத் தலைவர்” இந்திராவை நெருங்கத்
தொடங்கினார்.
இந் நிலையில் 1977இல் ஆட்சி கட்டில் ஏறிய மொரார்சி தலைமையிலான
சனதாக் கட்சியின் ஆட்சி, பேரவைக் கட்சியினர் செய்து வைத்திருந்த பல
கொடுமைகளிலிருந்து மக்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தது. அவற்றுக்கு ஒரே அளவுகோல்,
இதுவரை பல ஆண்டுகளாக, மக்களின் அன்றாடத் தேவைப் பொருட்களின் விலைகள், மக்களை அரசு
நடத்தும் பங்கீட்டு(ரேசன்)க் கடைகளில் மணிக்கணக்காகக் காத்து நிற்கத் தூண்டும்
வகையில் வெளிச் சந்தையில் கூடுதலாக இருந்தன. சனதாக் கட்சி ஆட்சியின் போது அந்த
விலைகள் பங்கீட்டு கடைகளின் விலையை நெருங்கித் தாழ்ந்து வந்து பங்கீட்டுக் கடைகள்
செயலிழக்கும் நிலை வந்துவிட்டது ஆகும்.
இந்த நிலையில் அமெரிக்க சார்பாளர் என்று கருதப்பட்ட
மொரார்சி தேசாய் ஐரோப்பிய, சோவியத் நாடுகளுடன் நெருக்கமாகி வந்தார். இது தவிர்க்க
முடியாதது.
அமெரிக்கா இந்தியாவுக்கு அவ்வப்போது உதவுவது போல் காட்டித்
தன்னை வளப்படுத்திக் கொள்கிறது. அவ்வாறுதான் இந்திராகாந்தி பதவி ஏற்ற காலத்தில்
இந்திய உரூபாயின் மதிப்பைக் குறைத்தது. ஆனால் அது உண்மையில் பாக்கித்தானையே
முழுமையாகச் சார்ந்திருந்தது. ஏராளமான படைக் கருவிகளையும் பணத்தையும் வழங்கி
வந்திருக்கிறது. அதாவது, பல வழிகளிலும் இந்தியாவைக்
கொள்ளையடித்து பாக்கித்தானுக்குக் கொடுப்பதாக அதைக் கொள்ள முடியும். இந்த நிலையில்
இந்தியாவின் தலைமை அமைச்சர் பதவிக்கு வரும் எவரும் சோவியத்து மற்றும்
ஐரோப்பிய நாடுகளை நாடுவது தவிர்க்க
முடியாது, மன்மோகன்சிங் - சிதம்பரம் - சோனியா கும்பலைத் தவிர. அவ்வாறு ஒருமுறை மொரார்சி ஐரோப்பிய
நாடுகளுக்குச் சென்று திரும்புவதற்குள் அமெரிக்காவை நடுவாகக் கொண்ட நிகர்மைக்
கட்சியைச் சேர்ந்த இராசுநாராயண் என்பவர் சரண்சிங் என்ற உழவர் கட்சித்
தலைவரின் மனதைக் கலைத்து சனதாக் கட்சியில் உட்பூசலை வளர்த்தார். இந்திரா பேரவைக்
கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தது. ஆளும் கட்சியிலிருந்த நிகர்மைக்
கட்சியினரான இராசுநாராயணன், மதுலிமாயி, பெர்னாண்டசு உட்பட அனைவரும் கட்சி
மாறிவிட்டனர். பொதுமைக் கட்சியினரும் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.[5]
மொரார்சியின் அமைச்சரவை கவிழ்ந்தது.1979 சூலையில்
சரன்சிங்குக்கு ஆதரவு தருவதாக வாக்களித்து ஒரு அமைச்சரவையை அமைத்தபின்
வாக்குறுதியை மீறி ஏமாற்றினார் இந்திரா. சரண்சிங் பாராளுமன்றத்தைக் கலைத்து
மறுதேர்தலுக்கு ஆணையிட்டார்.
இப்போது, இந்திரா, தமிழகம் வந்த போது “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என்ற
வரவேற்புடன் தி.மு.க. வின் சுவரொட்டிகள் தமிழகச் சாலையோரச் சுவர்களை நிறைத்தன. தன்
கட்சியின் பல தொண்டர்களின் சாவுக்குக் காரணமான ஒருவரை இப்படி வெட்கம் கெட்டுப்
புகழும் ஒரு தலைவனின் கீழ் இருப்பவன் எப்படித் தன்மானம் உடையவனாக இருப்பான்?
அவனுக்குக் கொள்ளை அடிப்பதைத் தவிர வேறு என்ன குறிக்கோள் இருக்கும்? அவன் சல்லிக் காசுக்காக
எதனையும் விற்க, எந்தக் கொடுஞ்செயலையும் செய்ய ஆயத்தமாக இருக்க மாட்டானா?
இதுதான் தமிழகத்தில் நடந்தது.
கருணாநிதி வலியச் சென்று இந்திராவுடன் தேர்தல் கூட்டணி
வைத்துக்கொண்டார். மொத்தம் உள்ள 40 (புதுவையையும் சேர்த்து) தொகுதிகளில் 38ஐக்
கூட்டணி கைப்பற்றியது. அ.தி.மு.க.வுக்கு இரண்டேதான் கிடைத்தது.
இதற்கிடையில் அ.தி.மு.க. ச.ம..உ.க்கள் தி.மு.க.வுக்குக்
கட்சிமாற அணிதிரண்டு கொண்டிருப்பதாகப் பரவலான பேச்சு எழுந்தது. அது உண்மையாக
இருந்தால் கருணாநிதி எந்த முயற்சியும் இன்றி அமைச்சரவை அமைத்திருக்க முடியும்.
ஆனால் கருணாநிதியோ பதற்றத்தில் மதியிழந்து அ.தி.மு.க.வுக்கு மக்களிடையில் ஆதரவு
இல்லை; எனவே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று இந்திராவுக்கு நெருக்குதல் கொடுத்து
ம.கோ.இரா.வின் ஆட்சியைக் கலைக்கச் செய்துவிட்டார். இந்திராவிடம் கெஞ்சிக் கேட்டு
கூட்டணி வைத்தார். சில உதிரிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக எஞ்சிய தொகுதிகளைச்
சரிசமமாகப் பங்கிட்டு கட்சிக்கு 109 தொகுதிகள் என்று முடிவாயிற்று. மிகுந்த
கெஞ்சலுக்குப்பின் கருணாநிதிக்கு முதல்வர் பதவி வழங்குவதாக இந்திரா வாக்களித்தார்.
பேரவைக் கட்சியினரிடையில் இதற்குப் பெரும் எதிர்ப்பு இருந்தது.
ம.கோ.இரா.வுக்கு இது நல்வாய்ப்பு.
தன் கட்சி ச.ம.உ.க்கள் கருணாநிதி கட்சிக்கு மாறும் வாய்ப்பு கருணாநிதியின் அருளால்
தவிர்க்கப்பட்டுவிட்டது. இப்போது தன்னைக் கைவிட்டுக் கருணாநிதிக் கட்சிக்குப் போன
நாஞ்சில் கி.மனோகரனைச் சுட்டிக் காட்டி அவர் தன் முதுகில் குத்திவிட்டாரென்றும்
கருணாநிதி தன் நல்லாட்சியை ஒழித்து விட்டார் என்றும் மக்கள் முன் அழுதார்.
கருணாநிதியின் அழகு தமிழும், அலங்கார வக்கணைப் பேச்சும் ம.கோ.இரா.வின் தத்தக்க புத்தக்க அழுகை முன் நிற்க முடியவில்லை.
மக்களின் பரிவு அலையில் அவர் தெளிவான முன்னணியுடன் வெற்றிபெற்று வெளிப்பட்டார்.
எமக்கு இதில் ஒரு சிறு வருத்தம். எந்தக் கண்ணோட்டத்திலும் அறிவுக்குப் பொருந்தாத ஓர்
உடன்படிக்கையைச் செய்துகொண்ட கருணாநிதியின் கூட்டணி வென்று கருணாநிதி இந்திரா
கையிலும் தமிழகப் பேரவைக் கட்சியினர் கைகளிலும் தாங்கொணாத இழிவுகளுக்கு
ஆளாகியிருக்கத்தக்க ஒரு நல்வாய்ப்பு தவறிப் போய்விட்டதே என்று. பேரவைக்
கட்சியினரின் பேயாட்சி இன்னொரு முறை தமிழகத்தைப் பிடித்து ஆட்டவில்லையே என்ற ஒரு
மனநிறைவுதான் அதற்கு மாற்றாக இருந்தது.
இரண்டாம் முறை இந்திராவும் ம.கோ.இராவும் ஆட்சிக்கு வந்த
பின் ம.கோ.இரா. தமிழக உயர்நயமன்றத்தில்
தமிழிலேயே நடவடிக்கைகள் இருக்க வேண்டுமென்று ஆணையிட்டார். அந்த முயற்சியை
முறியடிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் அதுவரை இல்லாத நடைமுறையாக உயர்நயமன்ற
நயவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் மாற்றப்படுவார்கள் என்ற சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தார்
இத்திரா. ம.கோ.இரா. இதற்கு மறுப்பு எதுவும் கூறவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக
இருந்த தமிழீனத் தலைவரும் வாய்திறக்கவில்லை. ம.கோ.இரா. ஏதாவது சொல்லியிருந்தால்
அதைத் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்வார் என்ற அச்சம் ம.கோ.இரா.வுக்கு.
இந்தச் சிக்கலை மட்டுமல்ல, எந்தச் சிக்கலையும் மக்களிடம் கொண்டு செல்லும் துணிவு
ம.கோ.இரா.வுக்கு இல்லை. பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சம், எதிரியிடம்
தோற்றுவிட்டால் மானக்கேடாயிற்றே என்ற
கோழைத்தனம் ஆகியவை இவர்கள்
அனைவரையும் பேடிகளாக்கிக் காட்டுகிறது. செயலலிதா தன் ஆட்சிக் காலத்தில்
அரசூழியர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் பற்றி மக்களிடம் நல்ல
வரவேற்பிருந்ததைப் புரிந்துகொள்ளாமல் சிறு தோல்வியைக் கூடத் தாங்கிக்கொள்ள
முடியாமல், இதை மக்களிடையில் எடுத்துச் செல்லாமல் இட்ட ஆணைகளைத்
திரும்பப் பெற்றதும் இந்தப் பேடிமையில் அடக்கம்.
நம் பொதுமைத் தோழர்களும் என்றும் மக்கள் சிக்கல்களை மக்கள்
நிலையில் நின்று பார்த்து மக்களிடையில்
நெருங்கிச் சென்று அவர்கள் சார்பைப் பெறாமல் பிற அரசியல் கட்சிகளிடம் பகரம்
பேசிக் கூட்டணி வைத்து இவ் வகையிலும் இழிந்து நிற்கிறார்கள். இவர்கள் அனைவரும்
மக்களின் வாக்குகளை நம்பிக் களத்தில் இல்லை. கள்ள வாக்குகளை நம்பியே நிற்கின்றனர்.
இனி, தமிழகத்தின் வளங்கள் தமிழக மக்களுக்குப்
பயன்படாமல் செய்து ஒவ்வொரு துறையையும் அழிவு நிலைக்குக் கொண்டு வந்ததில்
கருணாநிதியின் செயற்பாடுகளைப் பார்ப்போம்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக