12.12.15

திராவிட மாயை - 20


4.7.பல்வகை  (Miscellaneus) ஊழல்கள்
           
இவை போக அவ்வப்போது பொதுமக்களை உறுத்தும் சிறு சிறு சிக்கல்களிலிருந்தும் காசு பார்ப்பதில் தமிழீனத் தலைவர் கில்லாடி. ஒரு சமயம் உணவு விடுதிகளில் விலைவாசி மிகவும்  ஏறிவிட்டதென்று ஒரு குரல் தாளிகைகள் மூலமாக எழுந்தது (ஒருவேளை இந்தக் குரல் எழும்பியதே  தலைவரின் தூண்டுதலால்தானோ என்னவோ?). உடனே உணவு விடுதி உரிமையாளர்களை அழைத்து  பேச்சு வார்த்தை. அளவுச் சாப்பாடு இரண்டு கூட்டுகள், ஓர் ஊறுகாய், சாம்பார், ரசம், மோர் உட்பட உரூ 20/-க்கு எளிய மக்களுக்குச் சாப்பாடு போட வேண்டும்,  அதற்கு மேலே கூட்டுகள் குழம்புகள் வேண்டுவோருக்கு விடுதியாளர் தம் விருப்பம் போல் விலை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. கேட்பதற்கு இனிப்பாய் இல்லையா?

            ஆனால்  உண்மை என்ன? உரூ 20/-க்கு எளிய உணவகங்களில் இதைவிட நல்ல சாப்பாடு கிடைக்கும். எனவே பெரிய உணவு விடுதிகளில் ஏற்கனவே கூடுதல் என்று குரலை எழுப்பிய விலைவாசியை விட இன்னும் கூட்டிவிட்டு அதிலொரு பங்கு தலைவருக்குக் கிடைக்கும்.

            ஊழல் செய்வதற்கும் திறமை வேண்டும். எல்லோரும் எளிதாகச் செய்துவிட முடியாது. செயலலிதா அம்மையார் ஆட்சியில் சென்னையில் இருக்கும் சிறு பட்டறைகள் மக்கள் வாழுமிடங்களிலும் நடமாட்டம் மிகுந்த இடங்களிலும் இரைச்சலை எழுப்புவதுடன் சூழலையும் மாசுபடுத்துகின்றன; எனவே அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று ஓர் ஆணை பிறப்பித்தார். அவற்றை அமைப்பதற்கான இடம் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. இந்தப் பட்டறைகள் அந்தந்த வட்டாரத் தேவைகளுக்கேற்ற கட்டமைப்புகளின் உறுப்புகளாகச் செயற்படுபவை போன்ற எளிதில் தீர்வு காண முடியாத பல சிக்கல்கள் இந்த ஆணை குறித்து எழுந்தது. இந்த ஆணையைச் செயற்படுத்தாமலிருக்க, தமிழீனத் தலைவர் பாணியில் சங்கம் அமைத்து வருமாறு அறிவுரை கூறப்பட்டதாம். பட்டரைக்கு உரூ 5000/ என்றும் கூறப்பட்டதாம். சென்னையில் அப்போது இத்தகைய பட்டரைகள் ஏறக்குறைய 50,000 இருக்கும் என்பது அப்போது வெளிப்பட்ட ஒரு கணக்கு. 5000 × 50,000 = உரூ. 25கோடிகள். ஆனால் எதுவும் நடைபெற வில்லை. ஆணை முடங்கிப் போய்விட்டது.

             வண்டுகள் மலருக்குநோவு இன்றி (மலருக்கு நோகுமா இல்லையா என்பது யாருக்குத் தெரியும்? சகதீசு சந்திரபோசு, அல்லது வேறெவராவது இதைப் பற்றி ஆய்வு செய்தனரா என்று தெரியவில்லை? யான் பிளமிங்கின் சேம்சு பாண்டு புதினத்தில், இதே கேள்வியை முன்வைத்து ஆடவன் காதலியை நெருங்குவான்.) தேனை உறிஞ்சுவது போல் ஆட்சியாளர்கள் மக்களிடம்  வரிகளைத் தண்ட வேண்டும் என்று கவுடில்லியனின் பொருள்நூல் கூறுகிறதாம். நம் ஊழல் வித்தகர் மலருக்கு இன்பமாக இருக்கும்படி ஊழல் செய்வதில் நிகரற்றவர். இந்த வகையில் உலகில் மிகத் திறமையான ஊழல் கலைஞர் என்று உலகமே ஏற்கத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தவர்.

0 மறுமொழிகள்: