திராவிட மாயை - 11
2.பெரியாரின் வஞ்சகம்
பெரியாரின்
வரலாற்றில் பல கேள்விகள் விடை தேடி நிற்கின்றன. பெரியார் எப்படி காந்தியின் சமயம்
சார்ந்த அரசியலால் ஈர்க்கப்பட்டு அதில் முனைப்பாக ஈடுபட்டார்? காந்திக்கு முந்திய
தமிழகப் பேரவைக் கட்சித் தலைவர்களைப் பொறுத்து அவரது நிலைப்பாடு என்னவாக இருந்தது?
அவர் நடத்திய குடியரசு முதல் இதழில் சாதியையும் வருணத்தையும் கடவுளையும்
ஏற்றுக் கட்டுரையும் தலையங்கமும் வந்த நிலையில் அடுத்த இதழிலிருந்து சாதி
மறுப்பையும் கடவுள் மறுப்பையும் தூக்கிப் பிடித்தது எப்படி? பெரியார் திடீரென்று
பார்ப்பன எதிர்ப்பாளராக மாறிய மறையம் என்ன? இவற்றைப் போன்றவை அவை.
தொடக்கத்தில் இருந்த பேரவைக் கட்சியின் முனைப்பியர்களை விட
காந்தி மீது அவ்வளவு ஈர்ப்பு ஏற்பட்டதை மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத அவரது தன்மையின் ஓர்
அடையாளமாகக் கொள்ள முடியுமா? அவர் புகுத்திச் செய்துகாட்டிய மாற்றங்கள் அடையாள
மாற்றங்களே அன்றி அடிப்படை மாற்றங்கள் அல்ல என்று முடிவுகட்ட முடியுமா? அவரது சாதி
எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்புதானே ஒழிய உண்மையான சாதி ஒழிப்பு அல்ல என்று
பொருள்படுமா?
அவர் பிறந்து வாழ்ந்து நகரவைத் தலைவராக அரசியலில் விளங்கிய
காலத்திலும் வட்டாரத்திலும் வாழ்ந்தவர் ஆச்சாரியார் எனப்படும்
இராசகோபாலாச்சாரியார். பெரியாரை விட ஒரேயொரு ஆண்டு மூத்தவரான அவரும் பெரியாரும் பேரவைக்
கட்சியில் சம தரத்தில் இருந்தவர்கள். காந்தியின் மதுவொழிப்புத் திட்டத்தை
அடுத்துத் தன் தோப்பில் இருந்த தென்னை மரங்களை வெட்டி அழித்து தான் காந்தியின்
திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவு ஊக்கத்துடன் பாடுபடுகிறார் என்பதைக் காட்டியவர்.
இருப்பினும் கட்சியில் பெரும்
செல்வாக்குடன் இருந்த பார்ப்பனர்களின் கூட்டணியால்
தன்னைப் போன்றவர்கள் கட்சியில் உரிய மதிப்புடன் நடத்தப்படவில்லை என்பதிலிருந்து
உருவான ஆத்திரம்தான் பெரியாரிடம் பார்ப்பனர் எதிர்ப்புணர்ச்சியை உருவாக்கி இருக்க
வேண்டும். அதன் தொடர்ச்சியாகத்தான் அவர் நயன்மைக் கட்சியின் இட ஒதுக்கீட்டுத்
திட்டத்தைப் பேரவைக் கட்சி மாநாடுகளில் முன்வைத்திருக்கிறார். கட்சியில் இருந்த
பார்ப்பனர்களும் பிற்போக்கினரும் எதிர்த்ததனால் அத்தீர்மானம் ஏற்கப்படாமலே
இருந்தது. 1925 நவம்பர் மாதம் 21, 22 ஆம் நாட்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற
தமிழ் மாநில பேரவைக் குழுவின் 31ஆம் மாநாட்டுக்குத் திரு.வி.க. தலைமை
ஏற்றிருந்தார். அதிலும் எட்டாவது முறையாகத் தன் தீர்மானத்தைப் பெரியார்
முன்வைத்தார். மாநாட்டில் கலவரம் வரும் சூழல் ஏற்பட்டதால் தலைவர் தீர்மானத்தை
ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதன் பின்னர் பேரவைக் கட்சியிலிருந்து பெரியார் விலகினார்[1].
அதற்கு முன்பே அவர் குடியரசு என்ற இதழைத்
தொடங்கியிருந்தார். அதன் முதல் இதழ்தான் நாம் மேலே குறிப்பிட்டிருந்ததைப் போல வருண
அமைப்பையும் கடவுளையும் ஏற்றுக்கொண்ட ஓர் இதழாக இருந்தது.
ஒரு மனிதனின் கொள்கை என்பது அவனது பிறவிக் குணமாக அல்லது
பிறவியில் அமைந்த ஒன்றாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்
போது அதன் நரம்பு மண்டலம் எந்தப் புலனப் பதிவுமில்லாத ஒரு வெற்றுத்தாள் போலவே இருக்கிறது.
அந்தக் குழந்தை வளர வளர அது தன் உடலில் பதிந்திருக்கும் எண்ணற்ற மரபுச்
செய்திகளுடன் புற உலகு, ஐம்புலன், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் இடைவினைப்பாட்டால் எய்தும் புதிய முடிவுகள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு புதிய
ஆட்பண்பை உருவாக்கிக்கொள்கிறது. அது ஒரே சீர்மையாக
எப்போதும் இருப்பதில்லை. காலத்துக்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப மாறுகின்றது. அதற்கேற்பத்தான்
மனிதர்களின் கோட்பாடுகள், சிந்தனைகள், அணுகல்கள், குணங்கள் கூட மாறுகின்றன.
அது போல் பெரியாரின் சிந்தனைகளிலும் அணுகல்களிலும் மாற்றம்
ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை.
தனி ஒரு மனிதனின் மீது இருந்த வெறுப்பு அம் மனிதன் சார்ந்திருந்த
குழுவின் செயற்பாட்டுக்கு நிலைக்களனாக இருந்த கோட்பாடுகளின் மீதும் அந்தக்
கோட்பாடுகளுக்குப் பின்னணியாக இருந்த நம்பிக்கைகளின் மீதும் பாய்வதில் புதுமை
இல்லை.
நயன்மைக் கட்சியின் பணி பார்ப்பனரல்லாத மக்களில் மேல்நிலையில் உள்ளவர்களின்
பார்ப்பன எதிர்ப்பு, நாடார்களில் பொருளியல் வலிமை பெற்றவர்கள், தங்கள் சாதியார்
மேல் நடப்பில் இருந்த சாதியக் கொடுமைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஒதுக்குமுறைகளுக்கும்
எதிராக உணர்ந்த, பார்ப்பனியக் குமுக அமைப்புக்கு எதிரான எதிர்ப்பு, பனியாக்களின்
போட்டியை எதிர்நோக்கிய பார்ப்பனரல்லாத மக்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை
அடித்தளமாகக் கொண்டு இயங்கி வந்தது. அது தன் குறிக்கோள்களை எய்த ஆங்கிலரின் இந்திய
அரசின் உதவியையே நாடி நின்றது. அதே நேரத்தில் அதற்கு இணையான இன்னொரு அரசியல் கட்சி
பேரவைக் கட்சியை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவில் இல்லை.
பேரவைக் கட்சியோ காந்தியின் வருகையின் பின் ஆங்கில அரசின்
கமுக்கமான ஒத்துழைப்புடன் ஊதிப் பெருக்கப்பட்ட காந்தியின் தலைமையின் கீழ் வலிமையாக
வளர்ந்துவந்தது.
நயன்மைக் கட்சி எளிய பொதுமக்களுடன் தொடர்புகொள்ளும்
நிலையில் உள்ள தலைவர்களையும் கொண்டிருக்கவில்லை. அதனோடு உறவு வைத்திருந்த நாடார்
மகாசன சங்கத்துக்கும் விரிவான ஒரு மக்கள் பின்னணி இல்லை.
1920 முதல் 1937 வரையில் பதவியிலிருந்த நயன்மைக்
கட்சியில் ஊழல்களும் போட்டிகளும் ஏற்பட்டு கட்சி வலுவிழந்து இருந்தது.[2]
நயன்மைக் கட்சி வலுவிழந்து பேரவைக் கட்சி வலுப்பெற்று வந்த நிலையில் நயன்மைக்
கட்சியில் இணைந்திருந்த பொருளியல் துறை சார்ந்த வகுப்புகள் தங்கள் எதிர்கால நலன்களுக்குப்
பேரவைக் கட்சியைச் சார்ந்திருப்பதுதான் உகந்தது எனக் கருதி அப்பக்கம் சாய்ந்தனர்.
பேரவைக் கட்சியிலிருந்து வெளியேறிய பெரியார் தன் பார்ப்பன
எதிர்ப்பை பார்ப்பனரல்லா மக்களின் தன்மான(சுயமரியாதை)ச் சிக்கலாக எடுத்துவைத்துப்
பரப்பியதால் அவரது இயக்கம் தன்மான இயக்கம் என்ற பெயரைப் பெற்றது.
பெரியார் தன்மான இயக்கத்தைத் தொடங்கிய அடி
நாட்களிலிருந்தே அவரோடு இணைந்து செயல்பட்டவர் நாடார் மகாசன சங்கத் தலைமகனும்
நயன்மைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இரு முறை இருந்தவருமான
ஊ.பு.அ.சவுந்திரபாண்டியனார். இயக்கம் நடத்திய மாநாடுகளில் சவுந்திரபாண்டியனார்
முகாமையான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். பெரியாருடன் தமிழகம் எங்கும் சுற்றுச்
செலவு மேற்கொண்டு தன்மான இயக்கத்தின் விதைகளைத் தமிழகத்தின் பட்டி
தொட்டிகளிலெல்லாம் விதைத்தார்.
தென் மாவட்டங்களில் வாழ்ந்த சாதி வெறிபிடித்த
பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்களைத் துணை சேர்த்துக்கொண்டு தன்மான இயக்கம்
நடத்திய கூட்டங்களில் வன்முறைக் கலகம் செய்ய முயன்றவர்களைச் சவுந்திரபாண்டியனாரின்
ஆணையில் உள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளிலிருந்து வந்த நாடார்
படையினர் எதிர்கொண்டு முறியடித்தனர். பிற மாவட்டங்களிலும் ஆங்காங்கே வாணிகம்
முதலியவற்றில் ஈடுபட்டிருந்த நாடார் சாதியினர் உதவினர். இதற்காகவே பெரியார்
சவுந்திரபாண்டியனாரைத் தன்மான இயக்கத் தலைவராகவும் தன்னைத் துணைத் தலைவராகவும்
வைத்திருந்தார்.[3]
இயக்கத்துக்குப் பெருமளவு உறுப்பினர்களும் நாடார்
சாதியிலிருந்து கிடைத்தனர். பணமும் தாராளமாக நாடார்களிடமிருந்து கிடைத்தது.[4]
நாடார்களிடம் தேவையான அளவு திரண்டிருந்த செல்வமே அவர்களுக்கு எதிராக அன்று நிலவிய
குமுக ஒடுக்குமுறைகளையும் ஒதுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடும் கருவிகளாக
நயன்மைக் கட்சியையும் தன்மான இயக்கத்தையும் நாட வைத்தது. அதுதான் அவர்கள் அவ் வியக்கங்களைத்
தாங்கவும் வளர்க்கவும் தூண்டியது. உண்மையில் நயன்மைக் கட்சி சென்னை மாகாணத்தின்
பார்ப்பனரல்லா மக்களில் உயர்நிலையில் இருந்தவர்களின் பொருளியல் பின்புலத்தில்
தோன்றி கீழ்நிலையில் பணவலிமை கொண்டிருந்த நாடார்களால் பேணப்பட்டது. தொடர்ந்து
தன்மான இயக்கத்துக்கு அடியுரமாகவும் அவர்கள் இருந்தனர்.
இந்த நிகழ்முறையில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது தம்
போட்டியாளர்களுடன் அதாவது பார்ப்பனர்களுடன் தங்களுக்கு இருந்த முரண்பாட்டைத்
தீர்த்துக்கொள்ள பார்ப்பனரல்லா மேல் சாதியினர் தமிழ்க் குமுகத்தின் மிகத் தாழ்ந்த
நிலைக்கு அடுத்த நிலையில் இருந்த சாதியினருடன் கூட்டுச்சேர்ந்து அவர்களுக்குக்
குமுக ஏற்பை வழங்க முன்வந்ததும் அந்தப் பயனைப் பெற்றுக்கொண்ட நாடார் சாதியினர்
தமக்குக் கீழேயுள்ள சாதியினர்க்கு அது போன்ற குமுக ஏற்பைக் கொடுக்க
முன்வந்தத்துமாகும். ஆனால் இந்த அடிமட்டத்துத் தாழ்ந்தப்பட்ட சாதி மக்கள் இந்த
ஏற்பை ஏற்றுக்கொண்டு ஒரு
போராட்ட ஊக்கத்துடன் மேல்நோக்கி வரும் வகையில் பொருளியல்
அடித்தளம் அமையாத நிலையிலிருந்தனர். தெளிவாகக் கூறுவதாயிருந்தால் இந்த அடிமட்டத்து மக்கள் மீது
ஒடுக்குமுறைகளையும் ஒதுக்குமுறைகளையும் செலுத்துகிறவர்களின் முன்னால் அடுத்த
வேளைக் கஞ்சிக்காக வேலை தேடிச் செல்லவோ முன்பணம் பெறவோ வேண்டிய பொருளியல்
சார்புநிலையில் உள்ளவர்கள் அந்த ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகக் குரல் எழுப்ப
முடியாது என்பதால்தான் இந்த நிலை. ஆக, தாங்கள் எதிர்த்துப் போராட வேண்டிய
கட்டாயத்திலிருக்கும் மேலடுக்கினரும் அவர்களைப் பொருளியலில் சார்ந்து வாழத்
தேவையில்லாத ஓர் ஒடுக்கப்படும் கீழடுக்கிலுள்ள மக்கள் குழுவினரும் தத்தம்
தேவைகளுக்காகக் கூட்டுச் சேரும் போதுதான் இத்தகைய குமுகப் புரட்சிச் சூழல்
உருவாகிறது.
தமிழகத்தில் இத்தகைய ஒரு புரட்சிச் சூழல் 20ஆம்
நூற்றாண்டில் இருந்ததால் அது மிகப் பெரும் குமுகியல் - அரசியல் மாற்றங்களை
ஏற்படுத்தியுள்ளது.
சிவனிய வேளாளர்
நயன்மைக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் சிவனிய
வேளாளர்களின் பெயர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காணப்படவில்லை. ஆயினும்
ஆதரவாளர்கள் என்ற நிலையில் அவர்கள் இருந்திருக்கிறார்கள். “ஆரியர்” என்று
ஐரோப்பியர்களின் தவறான ஆய்வால் “இனம்” காணப்பட்ட பார்ப்பனர்களில் பிறமொழியாளர்களோடு சேர்ந்துகொண்டு
பெரும்பாலான தமிழ்ப் பார்ப்பனர்களும் தமிழைச் சமற்கிருதத்திலிருந்து வந்த மொழி
என்று சொல்லியும் பார்ப்பனரல்லாதோரை வைப்பாட்டி மக்கள் என்று பொருள்படும் “சூத்திரர்” என்ற சொல்லால் குறிப்பிட்டும்
வந்தனர். இதை மறுக்கும் வகையில் தமிழ் தனித்தன்மை கொண்ட மொழி என்றும் சமற்கிருதம்
உட்பட எந்தப் பிறமொழியின் சார்புமில்லாமல் அதனால் வாழ முடியும் என்றும்
நிறுவியிருந்தார் ஆங்கிலரான கிறித்துவ மதகுரு கால்டுவெல் ஐயர். அதற்கு அவர் தாம்
வாழ்ந்த தமிழ்நாட்டின் ஊரக மக்களிடையில் வழங்கும் மொழியையே அடிப்படையாகக்
கொண்டிருந்தார். பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் சாணார்களும்
பேசிய மொழிதான் அந்த வட்டாரத்தில் அவருக்கு வேண்டிய தரவுகளைத் தந்தது. அதை அவர்
தன் ஆய்வு நூலாகிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில்
குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறம் என்றால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்
பகுதியில் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள், அவர்களிலும் குறிப்பாக வெள்ளாள அறிஞர்கள்
தமிழின் மேன்மை, முன்மை, முதன்மை, தமிழர்களின் வரலாற்று முன்மை, முதன்மைகளை பெரும்பாலும்
இலக்கியங்களின் அடிப்படையில் ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்திலும்
ஆய்வுகள் வளர்ந்தன. அதற்கு இணையாக தமிழ் சமற்கிருதத்திலிருந்து கடன் வாங்கித்தான்
தன் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் படைத்தது, தமிழர்களின் வரலாற்றுக்
காலம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது, தமிழ்க் கழகங்கள் என்பவை கற்பனை என்பது போன்ற கருத்துகளை
வையாபுரிப் பிள்ளை, சிவராச பிள்ளை போன்ற தமிழ்நாட்டு வெள்ளாள ஆய்வாளர்கள்
முன்வைத்தனர்.
தமிழர்களின் நாகரிகம், மொழி, வரலாற்றுச் சிறப்புகளை
மறுத்துவந்த பார்ப்பன, வெள்ளாள ஆய்வாளர்களை எதிர்த்துத் தமிழ்ப் பண்பாட்டு
மேன்மைகளை உரக்க முன்னெடுத்து முதலில் வைத்தவர் சூரியநாராயண சாத்திரி என்ற தன்
பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று தூய தமிழில் மாற்றிக் கொண்ட பார்ப்பனத் தமிழ்ப்
பேராசிரியராகும். கால்டுவெலாரின் காலத்தில் வெளிப்படாமல் கிடந்த தமிழ் இலக்கிய
இலக்கணங்கள் பதிப்பு வெளிச்சங்காண அரும்பாடுபட்ட உ.வே. சாமிநாதய்யரையும் நாம்
குறிப்பிட வேண்டும். பரிதிமாற் கலைஞரை முன்னோடியாகக் கொண்டு சுவாமி வேதாசலம் என்ற
தன் பெயரைத் தூய தமிழில் மாற்றிக்கொண்ட மறைமலை அடிகள் தன் ஆய்வுகளில் சிவனிய
வேளாளர்களே உண்மையான பழந்தமிழர்கள் என்ற கண்ணோட்டத்தில் ஆய்வுகளைச் செய்தார்.
அவரைப் போலவே சிவனியம்தான் தமிழர் மதம் என்ற நோக்கில் சிவனிய வேளாளர்கள் ஒரு
வரலாற்று அணுகலைக் கொண்டிருந்தனர்.
தமிழகத்திலுள்ள சிவன் கோயில்களில் பெரும்பாலானவை சிவனிய
வேளாளர்களின் கீழிருந்த சிவனிய மடங்களின் ஆட்சியினுள் அடங்கியிருந்தன. ஆனால்
அங்கெல்லாம் பார்ப்பனர்களே பூசகர்களாக இருந்தனர். சமற்கிருதமே பூசை மொழியாக
இருந்தது. “சிவனியமும் தமிழும்”
என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் நிலைக்கு மாறாகவே உண்மை நிலை இருந்தது. இக் கோயில்களில்
சிவனிய வேளாளர்களுக்கும் பூசகர்களாகிய பார்ப்பனர்களுக்கும் உண்டான முரண்பாடுகளே
சிவனிய வெள்ளார்களிடையில் தமிழ்ப் பற்றை ஊட்டியதோ என்று எண்ண வேண்டி இருக்கிறது.
பார்ப்பனரல்லாதோருக்கு இட ஒதுக்கீடு என்ற குறிக்கோளை
முன்வைத்து முழுமையான பார்ப்பன எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டுக்கு மாறியிருந்த
பெரியோரோடு மறைமலையடிகளும் மற்றும் பல வேளாள அறிஞர்களும் இணைந்து செயல்பட்டது ஒரு
முற்போக்கு நடவடிக்கை என்றே கொள்ள வேண்டும்.
மாலிய சமயம்தான் பார்ப்பனர்களின் சாதி மேலாளுமையை
நிலைப்படுத்துகிறது என்ற தவறான கண்ணோட்டத்தை வேளாள அறிஞர்கள் பெரியாருக்கு
வழங்கினர். இந்தக் கருத்து அவரது இதழ்களிலும் வெளியீடுகளிலும் இடம்பெற்றது. ஒரு
கட்டத்தில் சிவனியமும் பார்ப்பன உயர்வையும் சாதி வேறுபாடுகளையும் தாங்கி நிற்கிற
ஒரு சமயம்தான் என்ற கருத்தை அவர் வலிமையாக முன்வைத்தார். இதிலிருந்து
பெரியாருக்கும் சிவனிய வேளாளருக்கும் பிணக்குகள் ஏற்பட்டன. பெரியாரின் இந்த
நடவடிக்கையின் உண்மையான நோக்கம் என்னவென்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை
சிவனிய வேளாளர்கள் இயக்கத்தில் தனக்குரிய இடத்தைக் கேள்விக்குரியதாக்கிவிடக்
கூடும் என்று அஞ்சினாரோ என்னவோ தெரியாது. ஆனால் இதன் விளைவு சிவனிய
வேளாளர்களிடையிலிருந்து தன்மான இயக்கத்தின் பக்கம் வந்துகொண்டிருந்த, சாதி
வேறுபாடுகளை மறந்து தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவர்களை, முற்போக்கு
எண்ணம் கொண்ட வெள்ளாளர் தலைவர்களைத் தனிமைப்படுத்தியது. சாதிவெறி பிடித்த சிவனிய
வேளார்களின் கைகளை வலுப்படுத்தியது. மறைமலையடிகளே அவர்களுக்குத் தலைமை தாங்க
வேண்டிய இக்கட்டை உருவாக்கியது. வெள்ளாள முற்போக்கர்கள் வெளியே நின்றனர்.
இதை வேறு ஒரு வகையாகவும் பார்க்கலாம். பார்ப்பனர்களை
எதிர்ப்பதற்கு வலிமையான ஒரு கூட்டணிக்காக வெள்ளாள முற்போக்கர்களைப் பயன்படுத்திக்கொண்டு
அவர்களின் தேவை இனி இல்லை என்ற கட்டத்தில் “கழற்றிவிடுவதற்காக”ப் பெரியார் இதைச் செய்திருக்க வேண்டும், ஏனென்றால் சிவனியத்துக்கும்
பார்ப்பனியத்துக்கும் உள்ள நெருக்கமான உறவு அவருக்குத் தெரியாமலிருந்திருக்கும்
என்பது அவரது வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது நம்பும்படி இல்லை.
இந்த நிகழ்வுகள் 1927 - 29
காலகட்டத்தில் இடம் பெற்றன.[5]
“”
அதன் பின்னர் பார்ப்பனர் எதிர்ப்பு என்ற நிலையில் மட்டும்
இவ்விரு தரப்பினருக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்தன. கடவுள் மறுப்பு, சமய
மறுப்பு, சாதி மறுப்பு போன்றவற்றில் உரசல்கள் இருந்துகொண்டே இருந்தன.
இந்தச் சூழலில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பாடமாக
வைக்கப்பட்ட மறைமலையடிகளின் கட்டுரை ஒன்றை கடுமையாகக் குறைகூறி பார்ப்பனத்
தாளிகைகள் எழுதியதைத் தொடர்ந்து தன்மான இயக்கத்து இதழ்கள் மறைமலையடிகளுக்குச்
சார்பாகக் களத்தில் இறங்கின. இப்போது வெள்ளாள
பிற்போக்கினர் தலைவராக வெளிப்பட்ட மறைமலை அடிகளுடன் பெரியார் கைகோர்த்துக்கொண்டுவிட்டதால்
ஏற்கனவே அங்கிருந்து அயற்பட்டு நின்ற வெள்ளாள முற்போக்கினர் இப்போது தன்மான
இயக்கத்துள்ளும் புறந்தள்ளப்பபட்ட நிலைக்கு ஆளாயினர்.
இந்தப்
பின்னணியில் 1937இல் பெரியாரின் அனைத்து முயற்சிகளையும் மீறி பேரவைக் கட்சி
நயன்மைக் கட்சியை வெற்றிகொண்டு ஆட்சியைப் பிடித்தது. ஆச்சாரியார்(இராசாசி)
முதலமைச்சரானார்.
பதவியில் அமர்ந்த ஆச்சாரியார் தன் கட்சியின் கொள்கைப்படி
இந்தி மொழியைப் பள்ளிகளில் கட்டாயமாக்கினார். அதனைப் பெரியார் கடுமையாக
எதிர்த்தார். சிவனிய வேளாளர் அமைப்புகள் இந்தியை ஏற்கனவே எதிர்த்து வந்தன. தமிழருக்குத் தனி
மாகாணம் வேண்டும் என்ற தீர்மானம் கூட 1937 திசம்பரில் வேலூரில் நடைபெற்ற சித்தாந்த
மகாசமாச மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.[6]
இந்தக் கட்டத்தில் பெரியார் சிவனியர்களை இந்தி எதிர்ப்பு
என்ற நிலையில் ஒரு கூட்டணி அமைத்துக்கொள்ள அழைப்பு விடுத்தார். “நீங்கள் இதுவரை நடந்துகொண்டதையும் மறந்து விடுகிறோம். இந்தச் சமயத்தில்
தைரியமாய் முன்வந்து உங்களாலான காசு உதவுவதோடு உங்களிடம்
பக்தி விசுவாசம் காட்டுபவர்களை எங்களிடம் விரட்டி விடுங்கள்” என்று சிவனிய மடத் தலைவர்களை நோக்கி வேண்டுகோள் வைத்தார்.[7]
இதற்கு மறுமொழி கூறுவது போல் சிவனியர் உலகத்தின்
தன்னேரில்லாத பெரியாராக மதிக்கப்பட்டவரான ஞானியாரடிகள் என்ற மடத் தலைவர் ஒரு
விழாவின் போது இந்தி எதிர்ப்பின் இன்றியமையாமை பற்றிப் பேசினார். அதன்
தொடர்ச்சியாக இந்திப் போராட்டம் வீறுபெற்றது. ஆச்சாரியாரின் அமைச்சரவை பேரவைக்
கட்சியின் தீர்மானப்படி பதவி விலகியது. இந்தியாவை இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன்
அரசு ஈடுபடுத்தியதை எதிர்த்து இந்த விலகல். 1940 இல் ஆளுநர் ஆணையால் கட்டாய இந்தி
விலக்கிக் கொள்ளப்பட்டது.[8]
இந்த நிகழ்ச்சித் தொடரில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால்
சிவனிய வேளாளர்கள் தங்கள் பங்குக்கு 1937 இலேயே முனைப்பான இந்தி எதிர்ப்புப்
பரப்பலில் ஈடுபட்டனர். பேரவைக் கட்சியின் செயல் திட்டத்தில் இந்தியை இந்தியாவின்
ஆட்சி மொழி ஆக்குவது என்றிருப்பதை எதிர்த்து அவர்கள் இந்த நடவடிக்கையில்
ஈடுபட்டனர். ஆச்சாரியார் ஆட்சியின் ஆணை 21-4-1938இல்தான் வெளிவந்தது.
4-6-1938 அன்று பெரியார் தன் போராட்டத்தைத் தொடங்கினார். ஏற்கனவே இந்தி
எதிர்ப்புப் பரப்பலில் முனைப்பாக ஈடுபட்டிருந்த சிவனியர்களுடன் ஒரு கூட்டணியை
எளிதில் அவரால் உருவாக்கிட முடிந்திருக்கும். ஆனால் மடத் தலைவர்களை நோக்கி
பணமும் “பக்தி விசுவாசம்” உள்ளவர்களை எங்களிடம் “விரட்டி விடுங்கள்” என்றும் கேட்டது ஏன்?
பார்ப்பன எதிர்ப்பு, தமிழ்க் காப்பு என்ற இரு நிலைகளிலும்
கருத்து உடன்பாடும் சமயம், கடவுள், கோயில்கள் என்ற நிலையில் முரண்பாடும் கொண்டு
சிவனியரும் பெரியாரும் செயல்படுவதாகக் கருதப்படும் நிலையில் பெரியார் மடத்
தலைவர்களை நோக்கி அறைகூவல் விடுத்தது ஏன்?
இதைப் புரிந்துகொள்ள வேண்டுமாயின் இந்தி எதிர்ப்பு பற்றிய
பெரியாரின் கண்ணோட்டத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவர் 1965 மார்ச் 3 ஆம் நாள்
விடுதலையில் எழுதிய ஆசிரிய உரையில், “ஆனால் நமக்கு
ஆங்கில அறிவு தேவை என்பதால் இந்தியை எதிர்க்கிறேன்! இந்தி எதிர்ப்பு மொழிச்
சிக்கல் அல்ல, அரசியல் சிக்கல்தான்”[9] என்று கூறியிருக்கிறார்.
இப்போது, அவர் கூறிய அரசியல் எது என்ற கேள்வி எழுகிறது.
அவர் கூறிய அரசியல் அவரது கட்சியினுள்ளிருந்த அரசியல்தான். நயன்மைக் கட்சியின்
தொடர்ச்சியாகவும் பார்ப்பனர் எதிர்ப்பு என்ற வகையிலும் இயக்கத்தினுள் “ஊடுருவிய” சிவனியப் வேளாளர்களை ஓரம்
கட்டியாயிற்று. இப்போது கட்சியினுள் செல்வாக்குடனிருக்கும் நாடார்களையும்
அவர்களின் தலைவராகிய ஊ.பு.அ. சவுந்திரபாண்டியனையும் ஓரம் கட்ட வேண்டும். கட்சிக்குப்
பரப்பல் செய்ய அண்ணாத்துரை போன்ற பேச்சு, எழுத்து வன்மையுள்ள இளைஞர்கள்
வந்தாயிற்று. இந்தச் சூழலில் சிவனிய வேளாளர்களை சேர்த்துக்கொண்டால் நாடார்களின் எண்ணிக்கை குறையும், அதனால் அவர்களால் எந்த அறைகூவலும் வராது என்பதாக இருக்க வேண்டும்.
அடுத்து, மடங்களைப் பற்றிப் பார்ப்போம். தமிழகத்தின் நில
உடைமைகளில் 25 நூற்றுமேனி கோயில்கள், மடங்களிடம் உள்ளது. அந் நிலங்கள்
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கைப்பற்றில் குத்தகையாகப் பயிரிடப்படுகின்றன.
அம் மக்கள் மீதும் மடங்களின்
ஆளுகைக்கு உட்பட்ட ஊர்களின் மக்களின் மீதும் மடத்
தலைவர்களும் அவர்களுடைய அடியாட்களும் நிகழ்த்தும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இவை பற்றி புதினங்களும் திரைப்படங்களும் அந்தக் காலக் கட்டத்தில் கூட வந்துள்ளன. இந்தச் சூழலில்
சமயம் - கடவுள் - கோயில்களுக்கு எதிராகப் பெரியார் நிலையாக நடத்தி வந்த பரப்பல்
போர், கொள்கை வெறியோடு அன்று இருந்த அவரது தொண்டர்கள் நடுவில் கோயில்களைத் தகர்க்க
வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியிருந்தன. அவ்வாறே பாடல்களும்
எழுதப்பட்டிருக்கின்றன[10].
இந்தச் சூழலில் நடுங்கிப் போயிருந்த மடத் தலைவர்களுக்குப் பெரியாரின் இந்த அழைப்பு
எவ்வளவு பெரும் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் கொடுத்திருக்கும்?
கோயில்களையும் கடவுள் படிமங்களையும் தகர்க்க
வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த தொண்டர்களை “தந்தை’’ எதிர்கொண்ட முறையை திரும்பிப் பார்த்தால் இயக்கத்தின் கொள்கை நிறைவேற்றத்தில்
இத்தகைய திறமையைப் பயன்படுத்த நினைக்கும் ஒரு தலைமை நமக்கு இன்றுவரை
வாய்க்கவில்லையே என்ற துயரம் நெஞ்சை வாட்டுகிறது. கோடி கோடிகளுக்குச்
சொந்தக்காரர்களான “கடவுள்களை’’ விட்டுவிட்டு ஏதிலியாகத் தெருவில்
அமர்ந்து இரந்துகொண்டிருந்த பிள்ளையார் சிலைகளை உடைக்கும் பணியைத் தன்னைத்
தந்தையாக நம்பி வாழ்வையே காணிக்கையாக்கிய தொண்டர்களுக்கு வழங்கினார் ‘’தமிழர் தலைவர்’’.
அது மட்டுமல்ல, பெரியார் கருஞ்சட்டைப் படை என்று ஓர்
அமைப்பை உருவாக்கியிருந்தார். தங்கள் குடும்பப் பொறுப்புகளுக்கு மாற்று ஏற்பாடு
செய்துவிட்டு தேவையானால் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்கவும் உயிரைவிடவும்
ஆயத்தமாக இருப்போர் முன்வர வேண்டும் என்ற பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க
ஏறக்குறைய 3500 பேர் தங்கள் பெயர்களை அவரிடம் பதிந்துகொண்டனர் என்று
கூறப்படுகிறது. கழக மாநாடுகளில் அணிவகுத்து வந்தது தவிர அவர்களைப்
பெரியார் வேறு எந்த நோக்கத்துக்காகவும் பயன்படுத்தவில்லை என்று கருஞ்சட்டைப்
படையில் இடம்பெற்றிருந்த முதியவர் ஒருவர் கூறினார். அதனால்தான் அந்த அமைப்பு பற்றி
திராவிட இயக்க வரலாறு எழுதுவோர் எதுவும் கூறுவதில்லை.
பெரியாரின் கட்சிக் கொடி
கறுப்புப் பின்னணியில் சிவப்பு வண்ண வட்டம் என்பது நமக்குத் தெரியும். அப்போது உலக
மக்களின் அடிவயிற்றைக் கலக்கிக்கொண்டிருந்த உலகப் போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த இத்தாலியின்
முற்றதிகாரி முசோலியின் பாசியக் கட்சியின் கொடியும் இதே அமைப்பைக் கொண்டதுதான்.
கட்சி உறுப்பினரும் கறுப்புச் சட்டையினர்தாம்.
இந்தப் படையைப் பெரியார்
எதற்காகப் பயன்படுத்தியிருப்பார்? ஒரு சமயம் பார்ப்பனர்களின் பூணூலை அறுக்க
வேண்டும் என்று பெரியார் பேசினார். அடுத்த
நாள் திருவரங்கம் காவிரியாற்றில் குளித்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களின் பூணூல்களை நீருள் முக்குளித்து
வந்த தி.க.வினர் அறுத்தனர். அடுத்த நாள் அச்செயலைக் கண்டித்துப் பெரியார் அறிக்கை
விடவும் அந் நிகழ்ச்சி தொடரவில்லை. தன் வலிமை குறித்த அச்ச உணர்வை உருவாக்க பெரியார் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதை இது
காட்டுகிறது. கருஞ்சட்டைப் படையையும் இது போன்ற அச்சுறுத்தலுக்காகவே அவர் வைத்திருக்க
வேண்டும்.
அந்த
வகையில் கூட மடத் தலைவர்கள் இவரது அழைப்பைக் கண்டு மிகுந்த அமைதிப் பெருமூச்சு
விட்டிருப்பர். அவர் கேட்டபடி தாராளமாகப் பணத்தையும் வாரி வழங்கியிருப்பர். இதில்
தொடர்புடைய சொத்து எவ்வளவு பெரியது? தமிழக நன்செய், புன்செய்களில் கால்வாசி அல்லவா?
இதை விடவும் அடிப்படையான கேள்வி, கடவுள், சமய, கோயில்
எதிர்ப்பென்றும் பகுத்தறிவு என்றும் பெரியார் தன் இறுதிக் காலம் வரை நடத்திய
பெரும் பரப்பல் இந்த நிகழ்வுக்குப் பிறகு பொருளற்றுப் போகவில்லையா? கடவுள் - சமயம்
- மூடநம்பிக்கை ஆகியவற்றின் அடித்தளமும் ஆணிவேரும் ஆகிய கோயில்களுக்கும்
மடங்களுக்கும் இவ்வாறு மறைவில் பாதுகாப்பளித்துவிட்டு வெளியில் வெற்றுப் பரப்பல்
செய்துவந்த பெரியாரின் நடவடிக்கைகள் அவரை நம்பிய எண்ணற்ற தொண்டர்களை
அடிமுட்டாள்கள் ஆக்கவில்லையா? 1938இலிருந்து 1973 வரை ஏறக்குறைய 35 ஆண்டுகள் தமிழக
மக்களை முட்டாள்களாக்கி வந்திருக்கிறார் பெரியார். “நீங்கள்ளாம்
முட்டாப் பசங்க” என்று அவர் சொல்லியும்
காட்டியிருக்கிறார். இப்படிப்பட்டவரை நாம் “பகுத்தறிவுப்
பகலவன்” என்று இன்றும் போற்றிக்கொண்டிருக்கிறோம்.
மக்களின் முழு வெறுப்புக்கும் ஆளாகி தன்மான இயக்கத்தின்
பரப்பல்களால் வீறுபெற்ற இளைஞர்களால் தன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த,
தமிழ்க் குமுகத்தின் செல்வம் அனைத்தையும் ஒட்ட உறிஞ்சிக்கொண்டிருந்த, தமிழ்க்
குமுகத்தின் நாட்பட்ட என்புருக்கி நோயாகிய
ஆகமக் கோயில்கள் என்ற கட்டமைப்பு அழிந்து தமிழ்க் குமுகம் தன் விடிவின்
வெளிச்சத்தைக் காண இருந்த நொடியில் வெளிப்படையாகவே அந்த ஆகம நச்சுயிரிகளிடம்
பணத்தைக் கேட்டுப் பெற்று தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் மீட்க முடியாத இழப்பை
ஏற்படுத்தியிருக்கிறார் பெரியார். பார்ப்பனர்களுக்கும் மிக நெருக்கடியான ஒரு
கட்டத்தில் அவர்களையும் இதன் மூலம் கைதூக்கிக் காப்பாற்றியிருக்கிறார்.
தமிழர்களைத் தேடி வாராது வந்த மாமணியை விற்றுக் காசாக்கியிருக்கிறார். அவரை
அன்றும் இன்றும் பெரும் புரட்சியாளர் என்றும் தமிழர் தலைவர் என்றும் நம்பிப்
பாராட்டும் தமிழர்கள், அவர் எள்ளி நகையாடியது போல் முட்டாப் பயல்கள்தாம்.
பெரியாரையும்
திராவிட இயக்கத்தையும் அது முன்வைத்த கொள்கைகளையும் கோவை ஞானியுடன் கூட்டுச்சேர்ந்து
கொஞ்ச நாள் முன்பு வரை பகடி பேசிவிட்டு இன்று கூலிக்குப் பெரியாரைப் புகழ்ந்து
எழுதி எழுதிக் குவித்துக்கொண்டிருக்கும் எசு.வி. இராசதுரை எனப்படும் க.மனோகரன் வகையறாக்களை
நாம் அந்த முட்டாள்களோடு சேர்க்கவில்லை.
பெரியார் தங்களுக்கு ஆற்றியிருக்கும் அரும்பெரும் பணியை
நன்றாகப் புரிந்துகொண்டு வேளாளர் தலைவர்கள் அன்றே அவரைப் பாராட்டியுள்ளனர்.
பெரியாரின் வரைமுறையில்லாப்
பணவேட்கைக்கு ஒரு சான்றைக் காண்போம். இந்திய “விடுதலை”க்குப் பின் குடியரசு அமைத்த
போது, இடைக்காலத்தில் தலைமை ஆளுநர் (கவர்னர் செனரல்) ஆக இருந்த ஆச்சாரியாரை விட்டுவிட்டு
இராசேந்திர பிரசாத் என்ற இந்தி மண்டலத்தவரை முதல் குடியரசுத் தலைவராக்க பேரவைக்
கட்சி முடிவு செய்திருந்தது. அதை எதிர்த்து, தன்னை அப் பதவியில் அமர்த்துமாறு
குரல் கொடுக்கச் சொல்லி திரைத்துறை, செமினி பட நிறுவனம், ஆனந்த விகடன்
இதழ் நிறுவனம் ஆகியவற்றின் தலைவரான எசு.எசு. வாசன் மூலம் உரூ 5000/- கொடுத்து
விட்டிருந்தார் ஆச்சாரியார். பெரியார் அப் பணத்தை வாங்கிக்கொண்டார். ஆனால் எதுவும்
செய்யவில்லை. பின்னர் கேட்டதற்கு “ஆமாம், கொடுத்தார்;
வாங்கிக் கொண்டேன்” என்றாராம் பெரியார். பெரியாரின் பின்னடி
மான(ம்) மிகு(ந்து பொங்கி வழியும்) கி.வீரமணி செயலலிதாவிடம் உரூ ஐந்திலக்கம்
பெற்றுக்கொண்டதைப் பற்றி கேட்ட போது தந்தை செய்த “முன்நிகழ்வை”ச் சுட்டிக்காட்டி நயப்படுத்திச் சொன்னது இது.
இது உண்மையாக இருந்தால்
இரண்டு செய்திகள் வெளிவருகின்றன. காரியங்கள் செய்வதற்கு பெரியார் பணம் வாங்குவார்,
அதாவது கூலிக்கு இத்தகைய போராட்டங்கள் (பணிகள்) மேற்கொள்பவர் என்பது
ஆச்சாரியாருக்குத் தெரிந்திருந்தது. இன்னொன்று தான் செய்ய நினைக்காத பணிக்குக்கூட
கூசாமல் பணம் வாங்குவதுடன் அதைப் பற்றி பெருமையடித்தும் கொள்வார் என்பது.
காசு, பணம், இலவசமாக அல்லது
தள்ளுபடியில் கிடைக்கும் பண்டங்கள் என்றால் தேவை பற்றிய கவலையில்லாமல் வாங்கிக்
குவிக்கும் அவரது மனநோய் பற்றி எழுத்திலும் திரையிலும் நிறைய வந்துள்ளன. இந்த
வெளிச்சத்தில் ஒரு நிகழ்ச்சியின் பின்னணியில் என்ன நடந்திருக்கும் என்பதை இங்கு
கூற முயல்வேன்.
இராசா அண்ணாமலை(செட்டியார்)
சென்னையில் தமிழ் இசை மன்றம் நிறுவினார். இது, ஆபிரகாம் பண்டிதர் நிறுவியது போன்ற
ஆய்வு நிறுவனம் அன்று. தமிழிசையை மக்கள் மன்றத்தில் அரங்கேற்றும் செயல்பாட்டு
நிறுவனம் ஆகும். இதில் ஓர் அரசியலும் உண்டு.
20ஆம் நூற்றாண்டுத்
தொடக்கத்தில் அன்றைய உலகச் சூழலில் தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட அரசியல்
கொந்தளிப்புகளால் அங்கிருந்து தம் மூலதனங்களை தமிழகத்துக்குப் பெயர்த்த
தமிழர்களில் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் கணிசமானவர்கள். அன்று சென்னையில்
தமிழகத்தைச் சேர்ந்தவர்களை விட அயலிலிருந்து சென்னைக்கு வந்து பெரும் வாணிக
நிறுவனங்களைத் தங்கள் கைகளில் வைத்திருந்த தெலுங்கர்கள் மிகுதி. அதற்கு ஏற்றாற்போல்
சென்னையில் எண்ணற்ற “சபா”க்கள் உருவாகி அங்கு ஆண்டுதோறும் குறிப்பாக, தமிழகத்திலுள்ள பெருநிலவுடைமையாளர்களான
பார்ப்பனர்களுக்கு இசை, நாட்டிய விருந்துகளைத் தெலுங்கில் மட்டும் வைத்துக்
கொண்டிருந்தன. தமிழ் பேசும் - பிறமொழி பேசும் பார்ப்பனர்களிடையில் அப்போது நிலவிய
முரண்பாட்டினால், தமிழ் இசைக்கு வ.ரா., கல்கி போன்றோர் ஆதரவும் தெரிவித்து வந்தனர்.
இந்தப் பின்னணியில் தெலுங்கு வாணிகர்களுக்குப் போட்டியாகத் தங்கள் வாணிகம்
நிலைப்பதற்கு ஓர் அரசியல் அடித்தளம் உருவாக்குவதாக இந்த தமிழிசை மன்றம்
அமைந்திருந்தது. இந்த மன்றத்துக்குப் பெரியார் தன் ஆதரவை வழங்கினார். எமக்குத் தோன்றுவது
என்னவென்றால், இந்த மன்றத்தின் எதிர்க் குறியான தெலுங்கு வாணிகர்களே
பெரியாருக்கும் குறியாக இருந்திருக்கும். அவருக்குப் பின்னால்தான் ஒரு
கருஞ்சட்டைப் படை இருக்கிறதே!
நயன்மை இயக்கத்தின் தொடக்க
காலத்தில் அதில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் ஈடுபாடு காட்டியிருந்தனர்.
கருமுத்து தியாகராச செட்டியார், ஆர்.கே. சண்முகம் செட்டியார் போன்றவர்கள்
குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழக நாட்டுக் கோட்டைச்
செட்டியார்களில் கருமுத்து தியாகராசச் செட்டியார் தவிர நயன்மைக் கட்சி ஆட்சியில்
தொழில் துறையில் நுழைந்தவர் எவரும் இல்லை. அருணாசலம் செட்டியார் வெள்ளையரின்
நிறுவனங்களைப் பெற்றுக்கொண்டவரே. பிறரில் பெரும்பாலோர் வங்கிகளையும் ஒருவர் இந்திய
உயிர்க்காப்பீட்டுக் கழகத்தையும் தொடங்கினார். அதாவது சென்னையில் குறிப்பிட்டுச்
சொல்லுமளவுக்கு வாணிக நிறுவனம் எதனையும் நிறுவவில்லை. இதில் பெரியாரின் பங்கு
அல்லது காட்டிக்கொடுப்பு என்ன?
பெரியார் தமிழசைச் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்றதைக் கண்ட வெளி வாணிகர்கள் அவருக்கு
கொடுக்க வேண்டியதைக் கொடுத்துச் சரிக்கட்டியிருப்பார்கள், அவரிடம்தான் ஒரு
கருஞ்சட்டைப் படை இருந்ததே!
ஒரு வாழ்நாளில் 1974
கணக்கில் உரூ 125 கோடி ஈட்டுவதென்றால் எளிதா என்ன? (இந்தக் கணக்குக் கூட “மானமிகு” வீரமணியார்
தந்ததே.)
இவ்வாறு ஒன்றை எதிர்த்துக் கடுமையாகப் பரப்பல் செய்து
தொண்டர்களையும் பொதுநல நாட்டம் உள்ள மக்களையும் ஆர்வம் கொள்ள வைத்துச் செயலில்
எதுவும் செய்யாமல் விட்டுவிடும் போது எதிராளிகள் தங்களை நன்றாக வலுப்படுத்திக்
கொள்கின்றனர். மக்களும் அவர்களின் செல்வாக்குக்குள் சென்றுவிடுகின்றனர். இவ்வாறு
ஒவ்வொரு துறையிலும் நயன்மைக் கட்சிக்குப் பின்வந்த திராவிடக் கட்சிகள் செய்து
அனைத்துத் துறைகளிலும் பிற்போக்குத் தன்மையும் இழப்புகளும் நமக்கு ஏற்பட்டுள்ளன.
அவற்றில் இன்று நம்மை மிகவும் அச்சுறுத்திக்கொண்டிருப்பது எல்லை மாநிலங்களின்
ஆட்சியாளர்கள் தங்கள் மாநில மக்களைத் தமிழகத்துக்கு எதிராக அணிதிரட்டி
நிறுத்தியிருப்பது. ஆனால் இவற்றுக்குக் காரணமான திராவிடக் கட்சிகளோ நம் மக்களை
அணிதிரட்ட எதையும் செய்யாமல் அவர்களை அணு
அணுவாகச் சிதைக்க என்னென்ன முடியுமோ அவை
அனைத்தையும் செய்கின்றன. பஞ்சாகக் கிடந்த தமிழகத்தின் எதிரிகளைப் பாறையாக்கி
பாறையாகக் கிடந்த தமிழக மக்களைப் பஞ்சாக்கி விட்டிருக்கின்றனர் திராவிட
இயக்கத்தார்.
இந்திப்
போராட்டத்தில் அவருடைய இன்னொரு அரசியல் நோக்கம் அவரது தனிநிலை எதிரியாகிய
ஆச்சாரியாருக்கு அவர் பதவியை விட்டு ஓடும் வகையில் தொல்லை கொடுத்தல். அவர்
இரண்டாம் முறை பதவிக்கு வந்த போது குலக் கல்வித் திட்டத்தை முன்வைத்துப் போராட்டம்
நடத்தி அவரை வெளியேற்றினார் என்பதை இணைத்துப் பார்க்க வேண்டும். பெரியார்
எதிர்த்துப் போராடியது இரண்டே இரண்டு முதலமைச்சர்களைத்தான். ஒருவர் ஆச்சாரியார்,
இன்னொருவர் பக்தவத்சலம். அவரது தனி மனிதர் குறித்த பரிந்துரைகளை அவர்கள் இருவரும்
மதித்ததில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
1932 இல் பெரியார் சோவியத் நாடு சென்று திரும்பினார்.
திரும்பிய பின் ஈரோட்டுத் திட்டம் என்ற பெயரில் ஒரு
திட்டத்தை முன்வைத்தார். அது பொதுமைக் குமுகத்தை அமைப்பதற்கான ஒரு திட்டமாக
இருந்தது.
சோவியத் நாட்டுக்குச் செல்லும் முன்பே 1931இல் சிங்காரவேலர்
தமிழாக்கம் செய்த பொதுமைக் கட்சி அறிக்கையையும் லெனினும் மதமும் என்ற
நூலையையும் பெரியார் வெளியிட்டார்.[11]
இவற்றுக்காக 1933இல் பெரியாரை ஆங்கில அரசு
சிறைப்படுத்தியது. கட்சியின் மீதும் ஒடுக்குமுறைகளை நிகழ்த்தியது. அத்துடன் அவர்
அத்திட்டத்தைக் கைவிடுவதாக எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். பின்னர் அது
பற்றிய பேச்சே இல்லை.
இவை போன்ற நிகழ்வுகள், கடுமையான பின்விளைவுகளை
எதிர்கொள்ளும் துணிவில்லாத கோழை மனம் படைத்த பெரியார் பண வரவு என்றால் அதற்கு
எத்தகைய இழிசெயலுக்கும் தயங்காதவர் என்ற ஒரு படிமத்தை அவருக்குத் தருகின்றன.
அதற்கு மாற்றாக 1935இல் தன்மான இயக்க வேலைத் திட்டம் என்ற
பெயரில் ஒரு திட்டத்தை முன்வைத்தார். இது பின்னாளில் ஆவடியில் 1950களில் நடைபெற்ற
பேரவைக் கட்சி அனைத்திந்திய மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மக்களாட்சி
நிகர்மை(சனநாயக சோசலிச)த் திட்டத்தின் முன்வடிவமாகவே இருந்தது.
இந்தச் செயல்திட்டத்தை அவர் பேரவைக் கட்சி, நயன்மைக் கட்சி
ஆகியவை முன்வைத்தார். பேரவைக் கட்சி ஏற்கவில்லை. நயன்மைக் கட்சி ஏற்றுக்கொண்டது.
அதைக் காரணமாக வைத்து அவர் 1938இல் நயன்மைக் கட்சியின் தலைவராகக் ஆனார். ஆனால்
அவர் என்றுமே இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தன் கட்சியின் செயல்களை
அமைத்துக்கொள்ளவில்லை.
அது போல் திராவிட நாடு “பிரிவினை”யை 1940இல் திருவாரூரில் நடைபெற்ற நயன்மைக் கட்சி மாநாடு முன்வைத்தது.
பெரியார் திராவிட நாடு “திராவிடர்”க்கே என்ற முழக்கத்தை முன்வைத்தார். ஆனால்
இதுவும் நாட்டு எல்லை என்ற அடிப்படையில் அல்லாது, பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார்
என்ற அடிப்படையில் வைக்கப்பட்டது. திட்டவட்டமாகக் கூறுவதாயின், பார்ப்பனர்க்குத்
திராவிட நாட்டில் இடமில்லை, அவர்கள் வெளியேறிவிட வேண்டும் அல்லது தனியாகச் சென்று
விட வேண்டும் என்பதாகும். பிற்காலத்தில் மாநில மறுசீரமைப்புக்குப் பின் தமிழ்நாடு
தமிழருக்கே என்று மாற்றிக் கொண்டாலும் அதன் உள்ளடக்கம் மாறவில்லை.
இவ்வளவுக்கும் பிறகு 1944இல் சேலத்தில் நடைபெற்ற ஒரு
மாநாட்டில் திருவாளர் க.ந.
[சி.என்.(கஞ்சீவரம் –
Conjeevaram நடராச ஐயர்) நையாண்டி ஐயர் என்றும் ஒரு கருத்து உள்ளது]
அண்ணாத்துரை பெயரில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அவை:
1.
ஆங்கில ஆட்சியில் தரப்பட்ட சர்.,
ராவ்பகதூர், திவான்பகதூர், ராவ்சகேப் போன்ற மதிப்பியல் பட்டங்களைப் பெற்றவர்கள்
அந்தப் பட்டங்களைத் துறக்க வேண்டும். மீண்டும் அவர்களோ மற்றவர்களோ அத்தகைய
பட்டங்களையும் விருதுகளையும் ஆங்கிலரிடமிருந்து பெறக் கூடாது.
2.
உள்ளாட்சி மன்றத்தில் தலைவர்கள்
முதலிய பதவிகள், மதிப்பியல் நடுவர்(மாசித்திரேட்), ஆள்வினைத் தொடர்பு கொண்ட
பதவிகளை விட்டு உடனே விலகுவதுடன் மீண்டும் பெறுதல் கூடாது.
3.
தங்கள் பெயருக்குப் பின்னர் உள்ள
சாதிப் பெயரைக் குறிக்கும் பட்டங்களை விட்டொழிக்க வேண்டும். எதிர்காலத்தில் எவரும்
பயன்படுத்தவும் கூடாது.
4.
தென்னிந்திய நல உரிமைச்
சங்கம்(நீதிக் கட்சி) என்ற பெயரை மாற்றி திராவிடர் கழகம் எனப்
பெயரிட வேண்டும்.
இந்தத் தீர்மானங்களில்
இயக்கத்தின் பெயர் மாற்றம் குறித்த இறுதித் தீர்மானம் ஒரு சூழ்ச்சியின் வெளிப்பாடு
என்று தெரிகிறது. மாநாட்டுக்கான ஆயத்தங்கள் நடைபெற்ற போது தமிழர் கழகம்
என்று பெயர் வைப்பதாக முடிவு செய்திருந்தனர். ஆனால் மாநாடு நடந்த அன்று காலை
தனியாக ஓரிடத்தில் சிலர் கூடி திராவிடர் கழகம் என்று பெயர்
வைப்பதாகத் தீர்மானத்தை வடித்து அதனை அண்ணாத்துரை மாநாட்டில் விளக்கிப் பேச
வேண்டும் என்றும் கமுக்கமாக முடிவு செய்திருக்கின்றனர். மாலையில் தீர்மானம்
படிக்கும் போதுதான் இயக்கத்தின் பிற மூத்த தலைவர்களுக்கு இது தெரியவந்தது.
திடீரென்று நடைபெற்ற இந்த “கொள்கைக் கவிழ்ப்பை” எதிர்பார்க்காத பிற மூத்த தலைவர்கள் மாநாடு முடிந்த பின்னர் தனியாகக்
கூடி சென்னைக்கு வந்திருந்த அம்பேத்காரிடம் சென்று அறிவுரை கேட்டிருக்கின்றனர்.
அவரோ, தானே காந்தியை எதிர்த்து வெளியேற முடியாமல் அவரோடு இணங்கிச் செல்ல
வேண்டியிருக்கிறது; அது போல அவர்களும் பெரியாரோடு “ஒற்றுமை”யாகச்
செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அத்துடன் அத் தலைவர்கள்
இயக்கத்திலிருந்து சிறிது சிறிதாக ஒதுங்கியிருக்கிறார்கள்.
பெரியாருக்கும் பிற முன்னணித் தலைவர்களுக்கும் இடையில் ஒரு
பூசல் அல்லது கருத்து வேற்றுமை இருந்துள்ளது என்பதற்குச் சான்றாக ஒரு மடல் உள்ளது.
24-8-1944 அன்று சேலத்தில் மாநாடு நடப்பதற்கு இரண்டு கிழமைகளுக்கு முன்பு
10-8-1944 அன்று சவுந்திரபாண்டியனார் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களுக்கு எழுதியது
இந்த மடல்:
“அன்புமிக்க நண்பர் அவர்களுக்கு
சவுந்திரபாண்டியன் வணக்கம். நலம். நண்பர் ராமசாமி வந்தார். கடிதம் காண்பித்தார்.
வாலிபர்கள் உள்ளத்திலும் கட்சி ஆர்வம் உள்ளவர்கள் உள்ளத்திலும் கிளர்ச்சி வேகம்
ததும்பி நிற்கிறது. ஒரு வேளை சேலத்தில் நல்ல காலம் கிட்டுமென நம்புகிறேன்.
கட்டுத்திட்டத்துடன் கட்சி வேலைகளை நடைபெற ஏற்படலாம். நான் தங்களுக்கு பூரா ஓய்வு
கொடுக்க வேண்டுமென சில காலம் நடந்த நிகழ்ச்சிகளைத் தெரிவிக்கவில்லை. சைமன் அவர்களிடம்
நடந்தவைகளைச் சொல்லியிருக்கிறேன். தாங்கள் கட்சி மாநாடு திறந்து வைக்க ஒப்புக்கொண்டால்
அதிமேன்மையாக இருக்குமென நம்புகிறேன்”.[12]
இயக்கத்துக்குள் எவரும் கொள்கை அது இது என்று விடாப்பிடியாக
நின்று தனக்கு இணையாக வளர்ந்து விடக்கூடாது என்பதிலும் தன்னைக் கேள்வி
கேட்பவர்களைக் களைவதிலும் பெரியார் குறியாக இருந்துள்ளார் என்பது அவருடைய
நடவடிக்கைகளிலிருந்து விளங்குகிறது. அந்தந்த நேரத்தில் அததற்குரிய குழுக்களைக்
கையில் வைத்துக்கொண்டு அவர் விளையாடியிருக்கிறார். இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில்
புதிதாக இயக்கத்துக்குள் நுழைந்த அண்ணாத்துரை தன் பேச்சு வன்மையால் இளைஞர்களை
இயக்கத்தினுள் ஈர்த்து வந்ததால் இயக்கத்தின் ஓட்டம் தொடரும் என்பதுடன் அது
விரைவடையும், விரிவடையும் என்பதும் இப்போது உறுதியாகிவிட்டது.
முதல் மூன்று தீர்மானங்களும் ஆங்கில அரசைச் சார்ந்து
நிற்கும் இயக்கம் நயன்மைக் கட்சி என்ற பழியைத் துடைக்கத் தேவைப்பட்டன. அத்துடன்
ஆங்கிலர் வெளியேறும் கட்டம் உருவாகிவிட்ட நிலையில் அவர்களது பின்புலம் கிடைக்காது
என்பதும் காரணம்; மேட்டுக்குடியினரையும் அப்புறப்படுத்திவிடலாம் என்பதும்
காரணமாகலாம்; இயக்கத்துக்கு ஒரு புரட்சிச் சாயத்தையும் பூசிவிடலாம்.
நான்காவது தீர்மானத்தின் ஒரு குறிதகவு நயன்மைக் கட்சி
என்ற பெயரே ஆங்கிலர் சார்பாகச் செயற்பட்ட கட்சி, பணக்காரர்களின் கட்சி என்ற
படிமத்தைக் கொண்டது. அது இத் தீர்மானத்தால் அகலும் என்பது. இன்னொன்று, அதாவது
தமிழர் கழகம் எனப் பெயர் சூட்டுவது என்று முடிவுகட்டிவிட்டுக் கமுக்கமாகத்
திராவிடர் கழகம் என்று பெயர் வைத்ததிலிருந்து தெரியவருவது இயக்கத்தில் பிறமொழி பேசும்
தமிழ்நாட்டார் செல்வாக்குச் செலுத்தும் வகையில் தம்முள் அணிதிரண்டுவிட்டனர் என்று
கூற முடியுமா என்பது ஐயத்துக்குரியதே. ஏனென்றால் நெடுஞ்செழியன், அன்பழகன்,
மதியழகன் போன்ற சிவனிய வெள்ளாள இளைஞர்களும் இயக்கத்தில் பின்னர் செல்வாக்குச்
செலுத்தினர்.
கட்சியின் மேல் மட்டத்தில் இப்படி ஒரு பூசல் அல்லது பிளவு
இருந்ததும் அதற்கான ஒரு முடிவு சேலம் மாநாட்டின் போது வெளிப்படும் என்பது இரு
தரப்பாருக்கும் தெரிந்திருந்தது என்பதும் மேற்படி மடலிலிருந்து தெரியவருகிறது.
அதற்காகத் தத்தம் பக்கத்துக்கு ஆள் சேர்த்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.
அதாவது, பெரியாருக்கு எதிர்த்தரப்பில் உள்ளவர்களுக்கு ஆதரவாக “வாலிபர்கள் உள்ளத்திலும் கட்சி ஆர்வம் உள்ளவர்கள் உள்ளத்திலும்
கிளர்ச்சி வேகம் ததும்பி நிற்கிறது” என்பது
தெரிந்திருக்கிறது. அதாவது நாம் புதிதாக ஓர் இயக்கம் தொடங்கினால் தங்கள் பின்
அணிதிரள ஓர் இளைஞர் - கட்சி ஆர்வலர் கூட்டம் ஆயத்தமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. ஆனால்
அந்தக் கூட்டத்தையும் அவர்களது ஆர்வத்தையும் பயன்படுத்துவதில் உறுதியின்றி
ஊசலாட்டத்தில் இருந்ததால்தான் அவர்கள் அம்பேத்காரிடம் சென்று அறிவுரை
கேட்டுள்ளனர். அன்று தமது சாதியினராகிய தாழ்த்தப்பட்டோரின் பொருளியல் இயலாமைப்
பின்னணியில் தான் எடுத்த முடிவை அதிலிருந்து வேறுபட்ட, நேர் எதிரான பொருளியல்
நிலையிலிருந்தோர்க்குப் பரிந்துரைத்தது அவர் அப் பொருள் பற்றி ஆழமாகச்
சிந்தித்திருக்கவில்லையோ என்று எண்ண வைக்கிறது. அவர் அப்படிக் கூறினாலும் அதைப்
புறக்கணித்து, தம்மை நம்பியிருக்கும் இளைஞர்களையும் கட்சி ஆர்வலர்களையும் வழி
நடத்திச் செல்லும் தங்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றத் தேவையான தன்னம்பிக்கையும்
ஊக்கமும் உடைய ஒரு தலைமையை உருவாக்க அவர்களால் இயலவில்லை என்று தெரிகிறது.
பாண்டியனாரின் மடல் அவரது ஆர்வத்தையும் ஊக்கத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. அவர்
தவிர்த்த பிறருடைய நிலைப்பாடுகளின் இயல்புகள் என்னவென்று தெரியவில்லை. கட்சிப்
பணியாற்றியும் மக்களிடமும் தொண்டர்களிடமும் தண்டியும் தாங்களாகவே முன்வந்து
நன்கொடையாகவும் இந்தத் தலைவர்கள் கொடுத்த பணத்தில் கட்சியை வளர்த்து அதைக் காட்டி
மடங்களிலிருந்தும் பனியாக்களிடமிருந்தும் சேர்த்த பணம் பெரியாரிடம் நிறையவே இருந்தது.
அதனால் ஒரு கட்சியைத் தொடங்கி பெரியாரிடம் போட்டி போட்டு நடத்துவதற்குத் தேவையான
கட்டமைப்புப் பின்னணி இல்லாதிருந்தது அவர்களைத் தயங்க வைத்திருக்கக் கூடும்.[13]
பெரியாரிடம் குடியரசு,
விடுதலை ஆகிய இதழ்களும் அண்ணாத்துரையிடம் திராவிட நாடும் பெரியாரின்
தமையன் ஈ.வே.கிருட்ணசாமியிடம் பகுத்தறிவு, புரட்சி ஆகிய இதழ்களும்
கண்ணப்பரிடம் திராவிடன் இதழும் இருந்தன. இவற்றைப் பரப்புவதிலும் இத் தலைவர்கள்
பெரும் பங்கு ஏற்றுள்ளனர். இப்போது தங்கள் பக்கத்துக்கு என்று வலிமையான இதழ்
ஒன்றும் இல்லாததும் இந்தத் தலைவர்களை மலைக்க வைத்திருக்கும். பெரியாரிடம் தாம்
முழுமையாக ஏமாந்துவிட்டதை நினைத்து மனம் வெம்பியிருப்பர். இருப்பினும் அவர்கள்
தங்களிடம் இருந்த ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒரு முழு முயற்சி எடுத்திருக்க
வேண்டும் என்பது எமது கருத்து.
பெரியார் இந்தப் பெயர் மாற்றம் பற்றிக் கூறிய கருத்துகள்:
“திராவிடர் என்பதற்கு மாறாகத்
′தமிழர்கள்′ என்று ஏன் வழங்கக் கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று
சொன்னாலே பார்ப்பனர்கள் நாங்களும் தமிழர்கள்தாம் என்று கூறி அதில்
சேர்ந்துகொள்கிறார்கள். நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம் வளர்கிறோம், தமிழே
பேசுகிறோம், தமிழ்நாட்டிலேயே இருக்கிறோம்; அப்படி இருக்கும் போது எப்படி எங்களைத்
தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும் என்று கேட்கிறார்கள். ஒரு காலத்தில்
தமிழர் என்பது தமிழ்(திராவிடப்) பண்புள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்கக்
கூடுமானாலும் இன்று அது மொழிப் பெயராக மாறிவிட்டிருப்பதால், அம் மொழியைப் பேசும்
′ஆரியப் பண்புடைய′ மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன்
வந்துவிடுகிறார்கள். அதோடு, ஆரியப் பண்பை நம் மீது சுமத்த, அந்தச் சேர்க்கையைப்
பயன்படுத்துகிறார்கள்”.[14]
பெரியாரின் இந்தக் கூற்றில் ஓர் உண்மை தெளிவாகத் தெரிகிறது.
திராவிட இனம், ஆரிய இனம் என்பவை பொய், “திராவிடப் பண்பு”, “ஆரியப் பண்பு”,
என்ற பண்புகள் அதாவது பண்பாடுகள்தாம் அவை என்பது அவருக்குப் புரிந்தே இருந்தது.
ஆனால் இனக் கோட்பாட்டைத் தூக்கிப் பிடித்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்காலம்
பொய் அரசியல் செய்திருக்கிறார் பெரியார். அவர் பெயரை இன்றுவரை சொல்லிக்கொண்டிருப்போரை என்ன சொல்ல? “திராவிடநாடு திராவிடருக்கே” என்ற முழக்கத்தைத் “தமிழ்நாடு தமிழருக்கே” என்று மாற்றிய போது தமிழ்ப் பார்ப்பனர்கள் உரிமை கொண்டாடுவர் என்ற கூற்று
பொய்யாகிவிட்டதா?
அவரது கூற்றுப்படி, திராவிட இயக்கத்தின் ஒதுக்கீட்டுச்
சலுகையால் பயனடைந்து பூணூல் மட்டும் அணியாமல் பார்ப்பனியத்தினுள் அதாவது "ஆரிய"ப்
பண்பினுள் பார்ப்பனரை விடவும் ஆழமாகப் புதைந்துள்ளவர்களையும் நாம் “ஆரியர்”கள்
என்று முத்திரைகுத்தி பார்ப்பனரோடு சேர்த்து ஒதுக்கிவைத்துவிட வேண்டும், அப்படித்தானே!
“திராவிடக் குமுகம் என்று நம்மைச் சொல்லிக் கொள்ளவே பெரும்
பாடாயிருக்கும்போது, தமிழர் என்று எல்லோரையும் ஒற்றுமையாக்க முயற்சியெடுத்தால்
இன்னல்கள் கூடும். இங்கேயே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர்
அண்ணாத்துரை தமிழர். இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப் பிரிவுகள். என்னைப்
பொறுத்தவரை, நான் தமிழன் எனச் சொல்லிக்கொள்ள ஒப்புகிறேன். ஆனால் எல்லாக்
கன்னடியர்களும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தெலுங்கரும் அப்படியே. எனவே திராவிடக்
குமுகத்தின் உறுப்பினர்கள் நாம்; நம் நாடு திராவிட நாடு என்று வரையறுத்துக்
கொள்வதில் இவர்களுக்கு மறுப்பு இருக்காது. அது நன்மை பயக்கும்.”[15]
மேலே சுட்டியதில் அண்ணாத்துரை தமிழர் என்பது பெரியார்
தெரிந்தே கூறிய பொய். அண்ணாத்துரை வீட்டில் பேசியது தெலுங்கு என்பது
காஞ்சிபுரத்தில் பொதுவாக எல்லாருக்கும் தெரிந்தது.[16]
இது பற்றி குணாவிடம் கேட்ட போது அவர் தன் நூலில் அவரைத் தமிழர் என்று தாம்
குறிப்பிட்டது தவறு என்று கூறி அண்ணாத்துரை தெலுங்கர் என்பதற்குப் பாரதிதாசனின்
ஒரு பாடலையும் குறிப்பிட்டார். ஆக, திராவிடர் கழகம் என்று பெயர் வைத்ததைப்
பொய்களைச் சொல்லி ஞாயப்படுத்தியிருக்கிறார்
பெரியார்.
இப்பொழுது, சூழ்ச்சியாகக்
கட்சியின் பெயரைத் தாங்கள் கூட்டாக முடிவு செய்ததற்கு மாறாக வைத்ததும் பனியாக்கள்
தமிழகத்தின் மீது நிகழ்த்தும் பொருளியல் படையெடுப்புக்கு எதிராக அல்லது மாற்றாக
நயன்மைக் கட்சி ஆட்சி தமிழக தொழில்முனைவோருக்குச் செய்துவந்த பணிகளும்
முன்னுரிமைகளும் இல்லாது போனதும் பெரியார் திட்டமிட்ட வகையில் பொருளியலைப்
புறக்கணித்ததும் பொருளியலில் வலிமைகொண்ட தனிமங்கள் திராவிடர் கழகத்திலிருந்து
வெளியேறக் காரணங்கள் ஆயின. எஞ்சிய கி.ஆ.பெ.விசுவநாதம், திரிகூடசுந்தரம்,
ஊ.பு.அ.செளந்திரபாண்டியன் போன்றோர் புறக்கணிப்புக்குள்ளாகி ஒதுங்கிக்கொண்டனர்.
பெரியார் பல்வேறு வகையிலும் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்துக்கொண்டு
தனிக்காட்டு அரசனாக வாழ்ந்தார். இவருடைய பேச்சாளர்கள் பல்வேறு ஊர்களுக்குச்
சொற்பொழிவுக்குச் சென்று கொண்டுவரும் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களின் உண்மையான
செலவுக்கு மட்டும் பணம் கொடுப்பார். அண்ணாத்துரை போன்றவர்களுக்கு மாதச் சம்பளம்
கொடுத்துச் சாப்பாடும் போட்டதாக பெரியாரே மேடையில் பேசியதைக் கேட்டதுண்டு. அதாவது
அவர் ஒரு தொழில் நிறுவனம் அல்லது மடம் போன்று இயக்கத்தை நடத்திவந்தார். அவர் ஒரு
முதலாளி அல்லது மடத்தடிகள் போல் செயற்பட்டார்.
பெரியாரின் இந்தக் கொடுங்கோன்மையிலிருந்து வெளியேற நேரம்
பார்த்திருந்தனர் அண்ணனும் தம்பிகளும். அருமையாய் அமைந்தது ஒரு வாய்ப்பு.
பகுத்தறிவுப் பகலவன் சாதியை, இனத்தை, பகுத்தறிவைக் காட்டிச் சேர்த்த பெருஞ்செல்வத்தைக்
கட்டியாள ஒரு பிறங்கடை வேண்டுமென்று சொல்லி தனது 72ஆம் அகவையில் 26 அகவை
மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டார். எனவே அதைச் சாக்காக வைத்துப் பெரும்
கூக்குரலிட்டு அண்ணனும் தம்பிகளும் புறப்பட்டு 1949இல் திராவிட முன்னேற்றக்
கழகத்தைத் தொடங்கினர்.
[1] திராவிட இயக்கங்களின் வரலாற்றுப் பின்னணி, பொன்.மாறன்,1988, பக். 39. பேரவைக் கட்சி ஆட்சில் பங்கேற்கப் பங்கேற்கப் போவதில்லை என்று முடிவெடுத்த
நிலையில்தான் அந்த மாநாடு நடந்ததாகவும் அதில் தேர்தலில் போட்டியிட சாதிவாரி ஒதுக்கீடு
கேட்டுத்தான் பெரியார் தீர்மானம் கொண்டுவந்ததாகவும் கட்சி தேர்தலில் நிற்கப் போவதில்லையென்பதால்
இத்தீர்மானம் தேவையில்லை என்று தலைமை தாங்கிய திரு.வி.க.தீர்மானத்தைத் தள்ளுபடி செய்ததாகவும் 2014 சூன் இதழில் தமிழர் எழுச்சி
இதழ் தரும் செய்தியிலிருந்து தெரிகிறது. இருப்பினும் தொடர்ந்து பல மாநாடுகளில் கொள்கை
அடிப்படையான ஒரு வேண்டுகையாக அவர் இதை வைத்தார் என்று இதைக் கொள்ளலாம். இருந்தாலும்
அன்று நயன்மைக் கட்சி நாடார்களுக்கு ச.ம.உ. இடங்களை ஒதுக்கி ஒரு முன் நிகழ்வைக் காட்டியிருந்ததனால்
பிற சாதியினரைத் தன் பக்கம் ஈர்க்க இதை ஓர் உத்தியாகப் பெரியார் கையாண்டிருக்கக் கூடும்.
[4]. மேலது பக். 84 -118
[6] மேற்படி நூல், பக் 50
[7] அதே நூல்,பக். 50. வலியுறுத்தம் எமது.
[8] பொன். மாறன், அதே நூல், பக்.80
[9] திராவிடத்தால் வீழ்ந்தோம், குணா, 2006 பக்.22.
[10] சீரங்க நாதனையும் தில்லைநட
ராசனையும்
பீரங்கி
வைத்துப் பிளக்குநாள் எந்நாளோ!
-பாரதிதாசன் பிறங்கடை(பரம்பரை)ப் பாவலர் மு.
அண்ணாமலை. செய்தி புலவர் இறைக்குருவனார், தவறான மேற்கோள்களும்
ஆள்மாறாட்டங்களும், தென்மொழி, 2008 கட்டுரை.
[13]
திராவிட இயக்க வரலாறுகளை எழுதியுள்ளவர்கள்
அதிலுள்ள குறைகளையும் பூசல்களையும் முரண்பாடுகளையும் எங்கும் சுட்டி எழுதவில்லை
என்பதால் நாமே அலசி இந்த முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
[14]
திராவிடத்தால் வீழ்ந்தோம், குணா, 2006, பக். 33 -34, மேற்கோள், பெரியார்
ஈ.வெ.ரா. சிந்தனைகள், முதல் தொகுதி,
பக், 556,550
[15] குணா,அதேநூல் பக். 35, மேற்கோள் மேலே
உள்ளபடி.
[16] இந்நூலின் ஆசிரியர் 1965 இறுதியிலிருந்து 1968 இறுதிவரை 3
ஆண்டுகள் காஞ்சிபுரத்தில் வாழ்ந்திருக்கிறார்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக