திராவிட மாயை - 23
6.இயக்கத்தின் பெயரா அல்லது தலைமைகளின் கழுத்தறுப்பா
தமிழகத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்?
இனி, இந்தப் பின்னணியில் இந்தத் தலைப்பின் அடிப்படைக்
கேள்வியான, “திராவிட” இயக்கத்தின் இரண்டகத்துக்கு, “திராவிட” என்ற அதன் பெயர் இன்னும் தெளிவாக, அதன் தலைவர்களான தமிழகத்தில் வாழும்
பிற மொழியாளர்கள், அதிலும் குறிப்பாக பெரியார் கன்னடராகவும் பிறரில் பெரும்பாலோர்
தெலுங்கர்களாகவும் இருப்பதுதான் காரணமா என்பதை அலசுவோம்.
வெள்ளையர்
வரும் முன் தமிழகம் தொடர்ச்சியாகத் தெலுங்கர், முகம்மதியர், கன்னடியர் ஆட்சியில்
இருந்தது என்றோம் (இந்தக் காலம் 1800 ஆண்டுகள் என்கிறார் திரு.க.எ.மணவாளன்
அவர்கள். உண்மையில் இது எத்தனை ஆண்டுகள் என்பதைப் பின்னால் நாம் பேசுவோம்.) இப்போதைக்கு நாம் பேசப் போவது இந்த
அயலவர் ஆளுமையில் அவர்கள்தாம் குமுகத்தின் மேலடுக்கில் இருந்திருப்பர். எனவே அக
முரண்பாடுகளும் புற முரண்பாடுகளும் அவர்களுடன்தாம் வந்து முட்டும். அவற்றில் ஒன்று
தமிழ்ப் பார்ப்பனர்களுக்கும் பிறமொழிப் பார்ப்பனர்களுக்குமான அக முரண்பாடு. அதன்
விளைவாக, தமிழ் சமற்கிருதத்தின் வழிமொழி என்ற பார்ப்பனியக் கருத்தை உடைக்கும்
பணியைத் தொடங்கி வைத்தனர் தமிழ்க் குமுகத்தின் உச்சியில் இருந்த தமிழ்ப்
பார்ப்பனர்கள். இத்தகைய மேலடுக்கினர் எதிர்கொள்ளும் புற முரண்பாட்டில் (தமிழகம்
என்ற நிலப் பரப்பில் தமிழ் பேசும் மக்களுக்கும் - பிறமொழிப் பார்ப்பனர்களுக்கும்
இடையிலானது அக முரண்பாட்டினுள் புற முரண்பாடு) எதிரி வகுப்பு சிறிது விட்டுக்
கொடுத்துச் சில சலுகைகளை வழங்கினாலே
அதனோடு இணங்கிச் சென்றுவிடுவர். அதுவும், பெரியார் போன்று
பார்ப்பனரை ஒட்டுமொத்தமாக எதிரணியில் நிறுத்தும் இன்னொரு அக முரண்பாடு உருவாகும்
போது இந்த இணக்கம் எதிர் வகுப்பின் விட்டுக் கொடுப்புகளும் சலுகைகளும் குறைவாகவே
அல்லது எதுவும் இல்லாமலே நிகழ்ந்துவிடும்.
நயன்மைக் கட்சி பார்ப்பன எதிர்ப்பு என்ற அக முரண்பாடு
மட்டுமின்றி பனியா மூலதனத்தின் படையெடுப்பு என்ற புற முரண்பாட்டையும் கையில்
எடுத்திருந்ததால், தமிழ் மற்றும் பிறமொழிப் பார்ப்பனர்களிடையில் கூட ஒரு
நெகிழ்வுக்கு வாய்ப்புகள் உண்டு. ஆனால் பெரியார் அந்தப் புற முரண்பாட்டை
முற்றிலும் புறக்கணித்ததால் அவரது இயக்கம் ஒட்டுமொத்த தமிழகப் பார்ப்பனர்களைத்
தமிழகத்தின் முழு எதிரிகளாகக் களத்தில் நிறுத்தியது.
வெள்ளையர் வரும் முன் தமிழகத்தில் தலைமை நிலையில் இருந்த
மக்கள் குழுவினரிடமிருந்து தோன்றிய
நயன்மைக் கட்சித் தலைவர்களும் பெரியாரும் முன்னணிக்கு வந்தது ஒரு குமுக விதி.
ஆனால் முன்னவர்கள் போன்ற ஈகிகளும் பெரியார் போன்ற தன்னல வெறியர்களும் முன் வருவது
வரலாற்றில் தற்செயல் நிகழ்ச்சி.
பேரவைக் கட்சியில் பார்ப்பன எதிர்ப்பைக் காட்டி வெளியேறிய
பெரியாரிடம் நயன்மைக் கட்சித் தலைவர்கள் கட்சிப் பொறுப்பைக் கொடுத்ததில் இருந்து
இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்திச் செல்லும் திறனும் துணிவோ உள்ள வேறு எவரும் இல்லை
என்று புலனாகிறது. அப்படி எவராவது இருந்திருந்தால் தமிழர் கழகம்
என்று இயக்கத்துக்குப் பெயர் வைக்க இருந்ததைத் தந்திரமாக திராவிடர் கழகம்
என்று பெயர் மாற்றிய நிகழ்ச்சியின் போது அவர் வெளிப்பட்டிருப்பார்.
ஊ.பு.அ.சவுந்திரபாண்டியன்,
கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற ஆள்வினைத் திறன் உள்ளவர்களே பின்வாங்கிவிட்ட நிலையில்
நிகழ்ந்ததை ஒரு தற்செயல் நிகழ்வு என்றுதான் கொள்ளவேண்டும், குறிப்பாக,
சவுந்திரபாண்டியனாருக்கு வேளாண்மை, பொருளியல் ஆகிய துறைகளில் திட்டவட்டமான
கண்ணோட்டங்கள் உண்டு என்பது அவரைப் பற்றிய செய்திகளிலிருந்து தெரிகிறது. அவை பற்றி
நாடார் சாதியினருக்கு அவர் தனிப்பட்ட அறிவுரைகள் வழங்கியிருப்பதாகவும் தெரிகிறது(சான்று:
மகாசனம் இதழ்கள்). ஆனால் குமுகத்தைப் பொறுத்தவரை அவருக்கு நாடார்களுக்கு
எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைதான் முதன்மையானதாக இருந்திருக்கிறது.
பெரியாரின் செயற்பாட்டைப் பொறுத்தவரை தன் கைகளுக்கு வந்து
சேர்ந்த இயக்கத்தையும் அதனோடு வந்த இதழ்கள், பணம் முதலியவற்றையும்
உறுதிப்படுத்திக்கொண்டு வளர்ப்பதுதான்
குறிக்கோளாக இருந்திருக்கிறது. பேச்சாளர்கள் மூலம் கிடைக்கும் சிறு சிறு
வருமானம் முதல் மக்கள் வழங்கும் சில்லரைகள், மடத்தடிகள் முதல் பனியாக்கள் வரை
அள்ளிக் கொட்டிய பெருந்தொகைகள் என்று அனைத்து வகை வருமானங்களையும் குவித்து
மகிழ்ந்ததுதான் துலக்கமாகத் தெரிகிறது. அதற்கு இடையூறாக இருந்தவர்களைக் கழித்துக்
கட்டுவதில் உறுதியாக இருந்திருக்கிறார்.
அது போலவே அண்ணாத்துரையும் முதலமைச்சராவதை பெரும் ஈகங்கள்
எதுவும் செய்யாமல் மேடையில் பேசியும் தாளில் எழுதியும் எய்திவிட வேண்டும் என்று
திட்டமிட்டு வெற்றிபெற்றார்.
கருணாநிதி எந்த இழப்புமின்றி பணம், பதவி உட்பட உலகின்
அனைத்து இன்பங்களையும் எய்துவதற்குத் தமிழக மக்களின் எந்த உரிமைகளையும்
உடைமைகளையும் விற்கத் தயங்கவில்லை என்பதே உண்மை. நண்பர்கள் சுட்டிக்காட்டும்
ஆர்க்காடு வீராசாமி போன்ற பிறமொழியாளர் தவிர வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன்
போன்றவர்களை எந்தக் கணிப்பில் சேர்ப்பது? தங்கபாலுவையும் எசு. ஆர்.பாலசுப்பிரமணியத்தையும்
குறை சொல்லும் நண்பர்கள் தன்னை ஒரு தமிழனாகவே கருதிச் செயற்படாத காமராசரையும்,
குமரி அனந்தனையும் மூப்பனார் வகையறாக்களையும் தமிழையும் தமிழகத்தையும் பகையாகவே
கருதும் அனைத்துப் பேரவை, பொதுமைக் கட்சியின் தமிழ் பேசும் கூட்டத்தையும் எந்தக்
கணக்கில் எடுத்துகொள்வது?
தமிழகத்தின் தேசிய நலன்கள் சார்ந்த உணர்வுகள் - செயற்பாடுகளுக்கும் இங்கு நிலையான
குடியிருப்புடைய பல்வேறு மக்களின்
தாய்மொழிகளுக்கும் உறவுகாண முற்படுவோர் அது குறித்த ஒரு முடிவுக்கு வர முடியாமல்
நிற்கின்றனர். இது குறித்து நம் வேர்கள் சிறப்பு
ஆசிரியர் எழுத முற்பட்டுத்
தடுமாறி நின்றது ஓர் எடுத்துக்காட்டு. ஏனென்றால் தனி மனிதர் சார்ந்த, அவரவர்
பொருளியல் வகுப்பு சார்ந்த இயற்பாடாகும் இது. இன்றைய நிலையில் ஒட்டுண்ணிகளின்
ஒட்டுமொத்தமான ஒரு பார்வையாகும் இது. கல்வியைக் காலங்காலமாகப் புறக்கணித்து
அடிமட்டத்து மக்கள் மீது அடக்குமுறைகளைக் கையாளும் வாய்ப்பே போதுமென்று திரிந்த
கூட்டம் தங்களால் ஒடுக்கப்பட்ட கூட்டம் இன்று கல்வியால் வேலைவாய்ப்புகள் பெற்றுத்
தம் முன் நிமிர்ந்து நிற்பதைக் காணப் பொறுக்காமல் பொருமுகிறது. புதிதாகத் தான்
களத்தில் நுழையும் போது அங்கே சென்ற நூற்றாண்டில், மேல் நிலையில் இருந்து அங்கு நுழைந்து
அமர்ந்து விட்ட பிறமொழியாளர்கள் தங்களை மறித்துக் கொண்டிருப்பதைக் கண்டு
வெதும்புகிறது. ஒடுக்கப்பட்ட மக்களிடையிலிருந்து மேல் நோக்கி நகர்ந்தவர்களும் அதே
போட்டியை எதிர்கொள்கிறார்கள்.
இந்தப் போட்டியிலிருந்து கூட தமிழ் பேசும் மக்களை ஒன்று
சேர்க்க உருப்படியான எந்த முயற்சியையும் எவரும் எடுக்கவில்லை. குறிப்பாகக்
கூறுவதனால், இந்த பிறமொழியாளர் எதிர்ப்பு நிலையில் நிற்போர் தமிழ் பேசும்
மக்களிடையில் நிலவும் சாதிசார் பகைமைக்கு முடிவுகட்டி தமிழ்நாட்டில் நிலையாக
வாழும் பிறமொழியாளர்களுக்கு எதிராக ஒரு முன்னணி அமைக்க வேண்டுமென்று கூட
எண்ணவில்லை. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்கள் ஊஞ்சனையில் தொடங்கிய போராட்டத்தின் தொடர்ச்சி
இன்னும் விடை கிடைக்காமல் நிற்கிறது. ஊர்க் கோயில்களினுள் நுழையவும் தெருக்களில்
செருப்பணிந்து நடக்கவும் மிதி வண்டிகளிலும்
மிதியுந்துகளிலும் செல்லவும் பிணங்களை பொதுப் பாதைகளில் எடுத்துச் செல்லவும்
பொதுக் குழாய்களில் நீர் பிடிக்கவும் அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டும் என்ற தமிழ்
பேசும் ஒரு கணிசமான பகுதி மக்களின் மக்களிய வேண்டுகைக்கு துணை நிற்க வேண்டும்,
அதன் மூலம் தமிழகத்திலுள்ள பிறமொழி பேசும் ஆதிக்கக் குழுக்களின் வலிமையை
எதிர்கொள்ள வேண்டும் என்று கூட எவரும் கருதவில்லை. குறிப்பாக, “தமிழ்த் தேசியம்” பேசிக் கொண்டே, தமிழ்த் தேசியம் என்பதே தமிழகத்தினுள் நிலையாக வாழும்
பிறமொழியாளர்களுக்கு எதிராகக் கருத்துரைப்பதே என்று கருதும் கூட்டம் இதைப் பற்றிச்
சிந்திப்பதே இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு உதவி செய்வது
தமது கடமை என்று அந்த ஒடுக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து தம் சாதிகளிலுள்ள
பிற்போக்கினரை எதிர்த்துக் குரல் கொடுக்கும் புரட்சியாளர்கள் எவரும் அந்த
ஒடுக்கும் சாதிக் குழுக்களுக்குள் இருந்து வெளிப்படாதது நமக்குப் பெரும் வியப்பாக
உள்ளது. அதே நேரத்தில் புதிதாகப் பிளவுகளை உருவாக்குவதற்கான களம் வலிமைப்பட்டுள்ளது.
ஒரு புறம் வெளியிலிருந்து பாயும் பணம் இந்தப் பரப்பலை விரிவுபடுத்தியுள்ளது. அதே
வேளையில் பல உதிரிகள் அதையே கிளிப்பாடமாக ஒப்பிக்கிறார்கள். மக்களிடையிலுள்ள வேற்றுமைகளை
மறந்து ஒன்றிணைக்கும் தன்மையுள்ள புற முரண்பாடுகளை, அதாவது பனியா - பார்சி -
இத்தாலிய - வல்லரசியச் சுரண்டல்களுக்கு எதிரான குறிக்கோள்களை முன்வைப்பதை இவர்கள்
சிந்திப்பதில்லை. அது இந்த ஒட்டுண்ணிக் கூட்டத்துக்கு இயல்புமல்ல.
இந்த ஒடுக்கும் சாதியினரின் வரலாற்றைப் பற்றி
திரு.க.எ.மணவாளன் கூறும் 1800 ஆண்டுகளில் பார்த்தால் இவர்களது காட்டிக் கொடுக்கும்
பின்னணியைக் காண முடியும்.
கறைகெழு
குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு
குடிகளொ டொருதிறம் பற்றி
வலம்படு
தானை மன்ன ரில்வழிப்
புலம்பட
இறுத்த விருந்தின் மன்னரின்., (சிலம்பு.,
அந்திமாலைச் சிறப்புச்செய் காதை,
வரி.9 - 11)
“இறை செலுத்துவதற்குப்
பொருந்தியுள்ள குடிகள் துயரமுற, அங்ஙனம் இறை செலுத்தாது கீழறுத்தல் செய்யும்
குடிகளை ஒருதலையாகப் பற்றி, வெற்றி பொருந்திய சேனையையுடைய வேந்தர் இல்லாத
இடமறிந்து, அவர் நிலமெல்லாம் கெடும்படி புதிதாக வந்து தங்கிய குறுநில மன்னர்போல்” என்று இதற்குப் பொருள் கூறுகிறார் நா.மு.வேங்கடசாமி(நாட்டார்) அவர்கள்.
இவ்வாறு, வளவாழ்வு வாழ்வதற்காக, தம் நாட்டில் உழைப்பு,
விளைப்பு, சிறு வாணிகம் செய்யும் மக்களைத் தம் மேலாளுமையினுள் வைத்திருக்கும் ஒரு
சிறு ஒட்டுண்ணிக் கூட்டம் அந்த ஒட்டுண்ணி வாழ்க்கை பறிபோய்விடாமல் இருக்க, தாம்
வாழும் நாடு புறப்பகைகளால் மாபெரும் அறைகூவல்களை எதிர்கொள்ளும் காலங்களில் சரியான
நேரத்தில் அந்தப் புறப்பகையுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களுக்குத் தம் நாட்டைக்
காட்டிக் கொடுப்பது 1900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியத்தில் பதிவாகியுள்ள
ஒன்று. இந் நிகழ்முறையில் ஒட்டுண்ணிக் கூட்டத்திலும் நாட்டுணர்வு மிக்கவர்களாக விளங்கிய, புற எதிரியை இறுதிவரை
எதிர்த்துத் தோற்றவர்களையும் அவர்கள் தலைமையில் இயங்கிய அடிப்படை மக்களையும்
ஒதுக்கலுக்கும் ஒடுக்கலுக்கும் ஆளாக்குவது புதிய அரசர்களுக்கும் காட்டிக்கொடுத்த
கூட்டத்துக்கும் இயல்பான வழக்கம். காட்டிக்கொடுக்கும் கூட்டத்தாரின் பின்னணியில்
கூட கணிசமான அடிப்படை மக்கள் கூட்டம் இருக்கும். இதில் முதல் குழுவினர்
தாழ்த்தப்பட்ட குழுவினராக உரிமைகள் பறிக்கப்பட்டும் இரண்டாம் குழுவினர்
வேறெந்த உரிமைகளை விடவும் முதல் குழுவினரை
தம்மை விடத் தாழ்ந்தவர்களாக ஒடுக்கும் உரிமைகளைப் பெற்றவராகவும் முடிவர்.
இத்தகைய ஒரு நிகழ்ச்சியின் ஒரு பதமாக, சாளுக்கிய மன்னனாகப்
பட்டமேறிய இராசேந்திர சோழனின் மகள் அம்மங்காதேவியின் மகன், சோழ நாட்டில்
மக்களிடையில் இருந்த அரசுக்கு எதிரான
வெறுப்பைப் பயன்படுத்தி, இங்குள்ள குறிப்பாக, இடங்கைச் சாதியினரான ஐந்தொழிற்
கொல்லர்களோடு தொடர்புவைத்து ஒரு பெரும் மக்கள் கிளர்ச்சியை உருவாக்கி அதில் சோழ
மன்னன் அதிராசேந்திரனைச் சாகடித்து குலோத்துங்கன் என்ற பெயரில் சோழ அரியணையில்
ஏறினான். இவன் ஆட்சிப் பதவிகளில் ஏறத் தகாதவர்களாக அதுவரை இருந்த
பொற்கொல்லர்களுக்கு ஊர் ஆள்வினைப் பதவிகளில் ஒன்றாகிய கணக்குப் பிள்ளைப்
பதவிகளை வழங்கியதற்கு மறைமுகத் தடயங்கள்
உள்ளன. தனக்கு உதவிய பள்ளர்களுக்குக் கோயில் நிலங்களை உரிமையாக்குவதில்
குலோத்துங்கன் முழு வெற்றி பெறமுடியவில்லை. குறிப்பாக, சிவனிய மடத் தலைவர்களின்
கடுமையான எதிர்ப்பினால் அவன் விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று. இருப்பினும் பள்ளர்
தலைவர்கள் பலர் பயனடைந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. குலோத்துங்கனை
எதிர்த்து, விசயாலயச் சோழனின் ஆண்வழி
மரபின் பக்கம் நின்று போராடித் தோற்று குலோத்துங்கனின் ஒடுக்குமுறைக்கு ஆளான, நாடு எனும் ஆட்சிப் பரப்பின் ஆள்வினைப் பதவி தாங்கிய
நாட்டார்களின் ஒரு பகுதியினர் சோழ நாட்டிலிருந்து வெளியேறி பாண்டிய மண்டலத்தில்
குடியேறினர். மேலூர் பக்கத்தில் நாட்டார் கள்ளர்கள் என்று அவர்கள்
அழைக்கப்படுகின்றனர்.
சிலர் இன்னும் தெற்கு நோக்கிச் சென்றிருக்கலாம் என்பது
நாடார்களின் வரலாறு என்று கூறப்படும் வெங்கலராசன் அல்லது வலங்கையர் கதை என்ற
நூல் மூலம் அறிய முடிகிறது.
இவ்வாறு நாயக்கர் காலத்தில் அவர்களுக்கு கள்ளர்களோடு
ஏற்பட்ட உடன்பாடு மதுரைச் சித்திரைத் திருவிழாவில் கள்ளர் எதிர்சேவை தொடர்பான
நிகழ்வுகளில் வெளிப்படுகிறது. இவற்றின் மூலம் ஏற்கனவே தங்கள் ஒடுக்குமுறைகளுக்கு
உட்பட்டிருந்தவர்களுடன் இப்போது நாயக்கர்களை இறுதிவரை எதிர்த்துத் தோற்றவர்கள்
மீதும் மேலாளுமை செலுத்தும் உரிமையைக் கள்ளர்கள் உறுதிப்படுத்தியதை உய்த்தறியலாம்.
நாயக்கர் காலத்தில் கள்ளர்களை விட மிகுதியான பலன்களை
அடைந்தவர்கள் வெள்ளாளர்கள். நாயக்கர்கள் வரும் முன் வெள்ளாளர்கள் எனப்படுவோர்
உழுகுடிகளாக இருந்தனர் போலும். பள்ளர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவு தெளிவாகத்
தெரியவில்லை. தொல்காப்பியம், பொருளதிகாரம், கற்பியல் 3 ஆம்
நூற்பா கூறும்,
மேலோர்
மூவர்க்கும் புணர்ந்த கரணங்
கிழோர்க்
காகிய காலமும் உண்டே
என்பதற்கு, “... முற்காலத்துக் கரணம் என்பது
பொதுப்பட நிகழ்தலின் எல்லார்க்கும் ஆம் என்பதும் பிற்காலத்து வேளாண் மாந்தர்க்குத்
தவிர்ந்ததெனவுங் கூறியவாறு போலும் ...” என்று இளம்பூரணரும் “முற்காலத்து நான்கு வருணத்தார்க்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதூஉம்
தலைச் சங்கத்தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தார்
என்பதூஉம் கூறியவாறாயிற்று. உதாரணம் இக்காலத்து இன்று” என்று
நச்சினார்க்கினியரும் விளக்கம் கூறியுள்ளனர் (தொல்காப்பியம் -பொருளதிகாரம்,
பகுதி - 2, தி.தெ.சை. நூற் பதிப்புக் கழகம், 1986. பக். 121). இங்கு கரணம்
என்பது திருமணம்.
15ஆம் நூற்றாண்டில், திருவிதாங்கூர் என்று பின்னாளில் பெயர்
கொண்ட வேணாட்டின் கீழிருந்த திருவிதாங்கோடு, கல்லிடைக் குறிச்சி ஆகிய ஊர்களில்
உள்ள இரண்டு கல்வெட்டுகள் முறையே, வெள்ள நாடானுக்குச் சில தடைகளையும் அவனுக்கு
உதவியதற்காக 23 பேரைக் கண்ட இடத்தில் கொல்லுமாறும் இன்னொன்றில் வெள்ள
நாடான்களுக்கு அதே தடைகளையும் சிலருக்கு மரணத் தண்டனையும் குறிப்பிடுகின்றன. (இந்த
வெள்ள நாடான்களும் இன்றைய நாடார் சாதியினரும் ஒரு குழுவினரல்ல. நாடான் என்பது நாடு
எனும் நாட்டுப் பகுதிக்கு அரசனின் கீழ் ஆள்வினை செய்யும் அதிகாரியின் பதவிப்
பெயராகும். நாடார் என்பது 19, 20ஆம் நாற்றாண்டுகளில் சாணார் சாதியினர்
தங்களுக்குச் சூட்டிக் கொண்ட சாதிப்பட்டமாகும். இது போன்ற ஒரு நிகழ்முறையில்
தமிழகத்திலுள்ள ஏறக்குறைய அனைத்துச் சாதியினரும் ஏதோவோர் ஊர்த்தலைவன் பதவிப்
பெயரையே தங்கள் சாதிப்பட்டங்களாக வைத்துள்ளனர்.)
வெள்ள நாடான் என்பது பாசனத்துக்குரிய நீர்நிலைகளைக்
கட்டுப்படுத்துவதன் அடிப்படையில் ஒரு பகுதியின் ஆட்சி அதிகாரியாக இருக்கக் கூடும். வெள்ளம் என்ற சொல்
பேரளவில் பாயும் நீரைக் குறிப்பது தமிழகத்தின் பொது வழக்காக இருக்க குமரி மாவட்டத்திலும்
கேரளத்திலும் குடிநீரையும் வெள்ளம் என்று குறிப்பிடும் வழக்கத்தில் இவர்களை வெள்ள
நாடான் என்று குறிப்பிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
குமரி மாவட்டத்தில் நாஞ்சில் நாடு தவிர பிற பகுதிகளில்
ஆற்றுப் பாசனம் அரிதாகவே இருந்தது. ஏரிப் பாசனம்
கூட எவ்வளவு வளர்ச்சியடைந்திருந்ததாகத் தெரியவில்லை. இங்கு நீர்ப்பலகை (water table) எனப்படும் நிலத்தடி நீர் மட்டம் மிகக் குறைந்த
ஆழத்திலேயே இருந்ததால் ஊருணி எனும் வைத்தூற்றி(Funnel)
வடிவில் உள்ள அகன்ற கிணறுகளைத் தோண்டி அவற்றிலிருந்தும் குளங்களிலிருந்தும் நீரை
எடுப்பார்கள். ஏறக்குறைய 40 லிட்டர் கொள்ளளவுள்ள கூந்தல் பனை எனும் கனத்த
தண்டுடன் உயர்ந்து வளரும் பனையின் அகன்று விரிந்த ஓலைளால் செய்யப்பட்ட இரண்டு தோண்டிகளில் நீர் முகந்து காக்கட்டு என்று
உள்ளூரில் வழங்கும் காவடிகளில் தோளில் எடுத்துச் சென்று பயிர்களுக்குப்
பாய்ச்சுவர். எனவே இங்கு முன் காலத்தில் நெல் வேளாண்மை அரிதாகவே இருந்தது. எனவேதான்
இங்கு “வெள்ள” நாடான் என்ற பதவி
இருந்தது போலும்.
ஆனால் நாஞ்சில் நாட்டில் நெடுங்காலமாகவே நீர்ப்பாசனம்
உயர்ந்த கரைகளுள்ள குளங்கள் மூலமும் ஆறுகள்,
வாய்க்கால்கள் மூலமும் நடந்துவந்தது. இதை முறைப்படுத்தி பராமரித்து வரியைப் பாண்டிய மன்னர்கள் குறுநில மன்னன் தரத்திலுள்ள
அதிகாரிகள் மூலமாகப் பெற்று வந்தனர். இம் மாவட்டத்தில் நிலவும் நாஞ்சில் குறவன்
என்பவன் பற்றிய கதை, அவன் உழவர்களிடமிருந்து இரும்புத் துண்டுகளை வரியாக வாங்கி
அவற்றைத் தான் தங்கியிருந்த மலையில் பாயும் ஓடை நீரில் முக்கித் தங்கமாக மாற்றிப்
பெரும் செல்வனாக வளர்ந்தான் என்று கூறுகிறது. (இவன் பெயர் நாஞ்சில் குயவன் என்றும்
சொல்லலாம் போலும், அந்த வட்டாரத்தில் குறத்தியறை என்ற பெயருள்ள
இடத்தைக் குசத்தியறை என்று முதலியார் ஆவணங்கள் தொகுப்பு குறிப்பிடுகிறது.)
இவனிடம் பாசனம் பெற்றவர்கள் வெள்ளாளர்கள். காவிரிப்பட்டினத்திலிருந்து சிலப்பதிகாரக்
காலத்தை அடுத்து இடம் பெயர்ந்து கொஞ்சங் கொஞ்சமாக நாஞ்சில் நாட்டுக்கு வந்த ஒரு
செட்டியார் குடும்பத்தில் குறவன் பெண் கேட்டதாகவும் அதை மறுக்க முடியாத செட்டியார்
கட்டடக் கலைஞர்களின் மூலம் இடிந்து விழும் அமைப்புடன் ஒரு மண்டபம் எழுப்பி அதில்
திருமணத்தை ஏற்பாடு செய்து மண்டபத்தை இடித்து குறவனைக் கொன்றதாகவும் இவர்களிடையில் நிலவும் ஒரு கதை
கூறுகிறது.
இதனோடு இன்னொரு நிகழ்ச்சி. 12 ஆம் நூற்றாண்டில் “கூபக”(“கூபகம்”, கூவம் என்பதன் திரிபாக இருக்க வேண்டும்.
அச்சொல்லுக்கு கிணறு, குளம் என்ற பொருட்கள் உள.) தேசத்து அரசன் பறளி ஆற்றில்,
இன்றைய பெருஞ்சாணி அணைக்குக் கீழே இருக்கும் பாண்டியன் அணை தொடங்கி
பறளியாற்றிலிருந்து பழையாறு எனப்படும் கோட்டாற்றுக்கு நீரைக் கொண்டுசென்ற கால்வாயையும்
பழையாற்றுடன் நாஞ்சில் நாட்டையும்
பாண்டியனிடமிருந்து வென்றதாகக் கூறுகிறது ஒரு கல்வெட்டு. (பறளியாற்றிலிருந்து
பழையாற்றுக்குச் செல்லும் கால்வாயை இந்தக் கல்வெட்டு பறளியாறு என்று தவறாகக்
குறிப்பிடுகிறது. விரிவுக்கு ம.எட்வின் பிரகாசு எழுதிய புதிய பார்வையில்
வெளிவந்த கோட்டாறு பஃறுளி ஆறான கதை என்ற கட்டுரையைப் பார்க்க.)
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் புலாலுண்ணும் விதிவிலக்கான
ஒரு குழுவினர். இவர்களும் சோழ நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்ற மரபு
உள்ளது. அப்படியானால், சிலப்பதிகாரக் காலத்தை அடுத்து களப்பிரர்களின்
படையெடுப்பு நிகழ்ந்தவுடன், அங்கு அம்மணம் பரவும் முன் நேரே இங்கு வந்து
சேர்ந்தவர்களாக இவர்கள் இருக்கலாம். (இவர்களும் களப்பிரர்களை எதிர்த்து நின்றதால்
தோல்வியின் பின்னால் இடம் பெயர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.) இதில் இன்னொரு விந்தை
என்னவென்றால் அண்மைக் காலம் வரை நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களிடம் இரு பிரிவுகள்
இருந்ததாக நண்பர் ஒருவர் கூறினார். (அவர் கூறிய செய்திக்கு நான் விளக்கம்
கூறியதும் அவர் தன் செய்தியை மறைக்க முயன்றார் என்பது நம் மக்களிடையில் படிந்துள்ள
சாதிமேன்மை உளவியல் அடிப்படையில் படிந்துள்ள தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு சான்று).
பந்தலை இங்கு காவணம் என்பர். அதில் இரு வகை உண்டு. தட்டையான கூரையை உடைய தட்டுக்
காவணம், முகட்டுக் கூரையுள்ள மோட்டுக் காவணம். நாஞ்சில்
நாட்டு வெள்ளாளரில் ஒரு பிரிவினர் திருமணம் போன்ற நிகழ்ச்சிக்குத் தட்டுக் காவணம்தான்
போட வேண்டும். மீறினால் மறு பிரிவினர் அதைப் பிரித்து எறிந்துவிடுவர். இதுதான்
அவர் சொன்ன செய்தி. இந்தச் செய்தியை அவர் வெளிப்படுத்திய சூழல் சுவையானது.
நாஞ்சில் “குறவனை” மண்டபத்தை விழவைத்துக் கொன்றதாகக் கூறப்படும் கதையில் அது கல் அல்லது
செங்கல்லால் கட்டிய மண்டபமாக இருக்க முடியாது, பல்லவ வேந்தன் நந்திவர்மனை,
கலம்பகம் கேட்டுக் கொண்டிருந்த போதும் திருஞான சம்பந்தரை அவரது திருமணத்தின்
போதும் தீவைத்துக் கொளுத்திக் கொல்லப் பயன்பட்டது போன்று அது தட்டுப் பந்தலாக
இருக்க வேண்டும் என்றேன். உடனே அவர் தன்னை அறியாமலே இந்தச் செய்தியைச் சொன்னார்.
அப்படியானால், இந்தப் பிரிவு மக்கள் நாஞ்சில் “குறவனின்” குழுவைச் சார்ந்த மக்களின் வழிவந்தவர்களாகத் தெரிகிறது என்று நான்
சொன்னதும்தான் அவர் தற்காப்பு மனநிலையை அடைந்து விட்டார். இன்று இந்தப் பாகுபாடு
அவர்களுக்குள் எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை.
12ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசு வலுவிழந்து, அதனால் “குறவனி”ன் கொடுமைகள்
கட்டுக்கடங்காமல் இருந்த நிலையில் நாஞ்சில் நாட்டு வெள்ளாளார்கள் செட்டியார்
தலைமையில் “கூபக” நாட்டு அரசனுக்குத் துணை நின்று அவன் நாடாகிய வேணாட்டோடு நாஞ்சில் நாட்டை
இணைக்க வைத்துள்ளனர்.
வேணாட்டரசன்
செட்டியாருக்கு முதலியார் என்ற பதவிப் பெயரை வழங்கி அவரை மங்கலம் (இராசாக்கமங்கலம்?)
முதல் மணக்குடி வரையுள்ள நஞ்சை நிலங்கள் செறிந்த பகுதிக்கு ஆட்சி
அதிகாரியாக்கினான்.
இவ்வாறு தமிழகக் காவிரிப் பாசனப் பரப்பிலிருந்தும் பிற
பகுதிகளிலிருந்தும் களப்பிரர் காலத்தில் பிற பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தவர்கள்
தாங்கள் புதிதாகப் படிந்த பகுதிகளில் வேளாண்மையை வளர்த்திருக்கக் கூடும்.
அவர்களிலும் வெளிப்படையெடுப்புகளில் வெற்றி பெற்ற பக்கத்தில் நின்று போராடிய
தலைவர்களின் கீழ்ப் போரிட்டவர்கள் வெள்ளாளர்களாகவும் தோற்றவர் பக்கம் நின்ற
தலைவர்களின் கீழ்ப் போரிட்டவர்கள் பள்ளர்கள் போன்ற ஒடுக்கப்பட்ட சாதிகளாகவும்
உருவெடுத்திருக்கலாம். பள்ளர்களில் உட்பிரிவுகள் நூற்றுக்கு மேல் என்று
கூறப்படுகிறது. அது போலவே வெள்ளாளர்களிலும் உட்பிரிவுகள் மிகுதி. இவை வெவ்வேறு
சூழல்களில் உருவான குழுக்களாக இருக்க வேண்டும். இந்த இடைக் காலத்தில் இந்த
வெள்ளாளர்களுக்குத் திருமண உரிமை இல்லாதிருந்ததே உரையாசிரியர்களின் பதிவாக
வெளிப்பட்டிருக்கிறது.
வெள்ள
நாடான்களுக்கு எதிராக மேலே குறிப்பிட்ட கி.பி. 1453இல் பொறிக்கப்பட்ட 2 கல்வெட்டுகளில்
அடங்கிய ஆணைகளைப் பார்ப்போம். முதலில்
திருவிதாங்கோடு:
ஏற்கனவே கல்வெட்டுகள் மூலம் பிறப்பித்த இரண்டு ஆணைகளை
வெள்ள நாடான்கள் மீறி வெள்ளார்களைத் துன்புறுத்தியுள்ளனர். எனவே இக்கல்வெட்டு
மூலம் இது அறிவிக்கப்படுகிறது.
தமிழ் எல்லைகளுக்குள் உள்ள வெள்ளாளப் பெண்களை வெள்ள
நாடான்கள் மணந்து கொள்ளக் கூடாது. வெள்ளாளப் பெண்களை வைத்திருப்பதையும்
கையாள்வதையும் அவர்கள் தவிர்க்க வேண்டும். அவர்களை(வெள்ள நாடான்களை)க் கூலி
வேலைக்குப் பயன்படுத்தக் கூடாது
எவரும் அவர்களோடு (வெள்ள நாடான்களோடு)தொடர்பு கொள்ளக்
கூடாது.
எந்த ஒருங்கிணைப்பு முயற்சியிலும் அவர்கள் ஈடுபடக்கூடாது. அவர்கள்
கணக்கர்களை வைத்திருப்பதோ கணக்குப் பதிவுகளைப் பராமரிப்பதோ கூடாது.
நாட்டை ஆள்வதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடக்கூடாது.
(மேலேயுள்ளவற்றுக்கு அடியில் வெள்ள நாடான்களுக்கு
உதவியவர்களாக 23 பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களைக் கண்ட இடங்களில் கொல்லலாமென்று
ஆணை குறிப்பிடுகிறது)
கல்லிடைக் குறிச்சி கல்வெட்டு மேலேயுள்ளது போல,
ஏற்கனவே
பிறப்பிக்கப்பட்ட இரண்டு ஆணைகளையும் மீறி வெள்ள நாடான்கள் வெள்ளாளர்களைக் கொடுமைப்
படுத்துவதாகக் சில பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கு மரண தண்டனை
அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களை(வெள்ள நாடான்கள்?)க் கூலி வேலைக்கு
வைக்கக் கூடாது.
அவர்கள் தொழில் -
வாணிகங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்
அவர்கள் தங்களுக்கென்று கணக்கர்களை வைத்துக் கொள்ளக்
கூடாது.
எந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடக் கூடாது.
அவர்கள் நாட்டை ஆளும் முயற்சி எதிலும் ஈடுபடக் கூடாது.
வெள்ள
நாடான்கள், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணைகளில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ்
எல்லையைச் சார்ந்த வெள்ளாளப் பெண்களை வைத்திருக்கவோ கையாளவோ மணம் செய்யவோ கூடாது.[1]
நாம்
ஏற்கனவே குறிப்பிட்டுள்ள நாஞ்சில் “குறவன்” பற்றிய செய்தியில், நம் நாட்டில் மேலாளுமை
செய்வோர் தமக்கு அடங்கியுள்ள மக்களிடம் பெண் கேட்பதும் அதற்கு எதிர்ப்பாக அவர்கள் ஏதோவோர்
உத்தியைக் கையாள்வதுமாகிய பொதுக் கூறு அடங்கியுள்ளது. ஆனால் வெள்ள நாடான்கள்
குறித்த செய்தியில் அவர்கள் வெள்ளாளப் பெண்களை விருப்பம் போல் கையாண்டு வந்துள்ளமை
தெரிகின்றது. அதாவது அவர்கள் திருமண உரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட
நிலையிருந்தனர் என்று தெரிகிறது. அயல் அரசர்களின் கட்டுப்பாட்டில் நாடு அக் காலகட்டத்தில் இருந்ததாலோ அல்லது வெள்ளாளர்கள் செல்வ நிலையில்
மேம்பட்டதாலோ அல்லது இரு காரணங்களினாலுமோ அவர்கள் அரசனிடம் முறையிட்டதன்
பின்னணியில் இந்தத் தண்டனைகளை வெள்ள நாடான்களுக்கு வழங்கியிருக்கின்றனர்.
இந்தப்
பின்னணியில் 16ஆம் நூற்றாண்டில் 1529 - 64 காலத்தில் பாண்டிய நாட்டை
ஆண்ட விசுவநாத நாயக்கனிடம் அமைச்சராகவும் தளபதியாகவும் இருந்த அரியநாதன்,
பாண்டிய நாட்டிலிருந்த 72 நாடுகளில் அப்போது வேணாட்டு அரசன்
கீழிருந்த பகுதி தவிர்த்த பகுதியில்
ஆட்சிப் பதவியாகிய நாடான்களை அகற்றிவிட்டு நாட்டைப் பாளையங்களாகப் பிரித்து
பாளையக்காரர்கள் என்ற பதவியை உருவாக்கி அவற்றின் ஆள்வினையை ஒப்படைத்தான். இதில்
அவனுக்கு உதவியாக இருந்த நாடான்கள் சிலர் தவிர பிறரனைவரும் நாயக்கர்கள். இந்த
நாடான்களுக்குக் கிடைத்த பாளையங்கள் மறவர் பாளையங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
விசுவநாத பிள்ளைக்கு ஏற்கெனவே நாம் குறிப்பிட்டிருந்த செட்டியாருக்கு
வழங்கப்பட்டதைப் போன்று முதலியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. வெள்ளாளர்களும் உயர் சாதியரானார்கள். இவ்வாறு
நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கள்ளர்கள், மறவர்கள், வெள்ளாளர் ஆகிய சாதியினர் பிற
சாதியினர் மீது ஒடுக்குமுறைகளையும் ஒதுக்குமுறைகளையும் மேற்கொள்ளும் “உரிமை”
பெற்றனர். இன்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் நாடார்கள் தவிர ஏறக்குறைய எல்லாச்
சாதியினரும் நாயக்கர்களையும் முகம்மதியர்களையும் மாமா, சித்தப்பா போன்ற
உறவுமுறைகளில் விளித்துக்கொள்வதைப் பார்க்கலாம். இன்று இந்தக் கூட்டத்தினர்தாம்,
தமிழர்களிடையில் பிளவுகளை உருவாக்கியவர்கள் என்று இந்தப் பிறமொழியாளர்களுக்கு
எதிராகக் குரலெழுப்பி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர். நேற்று இதே
கூட்டம்தான் பார்ப்பனர்களை “ஆரியர்”கள் என்று கூறி இதே குற்றச்சாட்டை வைத்தனர்.
தாங்கள் சொந்த அறிவே இல்லாத மனித இயந்திரங்கள் என்றும் வந்த எவனும் சொன்னால் தம்
சொந்த நாட்டினரை, வரலாற்றின் ஏதோவொரு காலகட்டத்திலேனும் தம்முடைய அரத்த உறவுகளாக
இருந்தவர்களை தமக்குக் கீழே அடக்கி ஒடுக்கி அடிமைகளாக்குவதற்காக அந்த அயலவனின்
கால்களை நக்கத் தயங்காதவர்களென்றும் சிறிதும் வெட்கமின்றி இரண்டு நூற்றாண்டுகளாக
முழங்கி வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்தத் தன்னலக் கும்பல்தான் தம் நாட்டு
உடன்பிறப்புகளை அடக்கி ஆள்வதற்காக காலந்தோறும் நம் நாட்டு எல்லையை அடைந்த
எதிரிகளுக்கு முந்தானை விரித்து பரத்தமை செய்துவந்துள்ளது. இவர்களது தொடர்ந்த இந்த
இரண்டகத்தால் உலகில் வேறெங்கும் இல்லாத எண்ணிக்கையில், எண்ணிக்கை இட முடியாத
அளவுக்கு சாதிகளும் உட்சாதிகளுமாகத் தமிழக மக்கள் பிளவுண்டு கிடக்கின்றனர். இந்தப்
பிளவுகளை மீறி அவர்கள் என்றுமே ஒன்றுபட முடியாதவகையில் இட ஒதுக்கீட்டை மட்டும் முதன்மைப்படுத்திய
பெரியாரின் ஒதுக்கீட்டு அரசியல் செயல்படுகிறது.
காட்டிக்கொடுக்கும் அல்லது எதிரிகளோடு இணக்கம் காணும்
குழுக்கள் பொருளியலிலும் குமுகியலிலும் ஆதாயங்களை அடையும். இந்த நிகழ்முறைக்கு
வரலாற்றில் நெடுந்தொலைவு செல்ல வேண்டாம். கி.பி. 20ஆம் நூற்றாண்டில் பனியா
காந்தியின் தலைமையில் நடைபெற்ற “இந்திய விடுதலை”ப் போராட்டத்தின் போலிமையைப்
புரிந்துகொண்டு ஆயுதப் போர் தொடங்கிய சுபாசு சந்திரபோசு சப்பானியர்களோடு இணைந்து
ஆங்கிலருக்கு எதிராகப் போரிட்டார். போரில் சப்பான் தோற்றுவிட போசு இருக்கும் இடம்
தெரியாமல் அவரைப் பின்தொடர்ந்த முன்னோக்கு அணி[2]ப்
படையினர் திசை தெரியாமல் திகைத்து நின்றனர். இந்நிலையில் காந்தியும் ஆங்கிலரும்
இணக்கம் கண்டு, பெரியார் சுட்டிக் காட்டியபடி, ஆங்கில - ஐரோப்பிய - அமெரிக்க வல்லரசிய நலன்களுக்கு ஊறு
நேராமல் ஓர் தொடுக்கு ஆட்சி பனியாக்கள் கைகளுக்கு வந்தது. அந்த ஆட்சி, முன்னோக்கு
அணி வீரர்களை சரணடையுமாறும் அதற்கு இணங்காதவர்களைத் தளையிடுமாறும் ஆணையிட்டது. சரணடைந்தவர்கள்
இந்தியத் தேசியப் படை வீரர்கள் என்ற விருதும் பல்வேறு சலுகைகளும்
பெற்றனர். இந்தியாவுக்குக் கிடைத்ததாகக் கூறப்படுவது ஒரு போலி விடுதலையே என்ற
முடிவுடன் சரணடையாதவர்கள் மீது இன்றும் பிடியாணை நடப்பில் உள்ளது. ஏன் சுபாசு
சந்திர போசின் மீது கூட இந்தப் பனியா ஆட்சி பிடியாணையை உயிருடன் வைத்திருந்தது.
சரணடையாதவர்கள் இன்றுவரை தேடப்படும் குற்றவாளிகளே.
ஆனால் இவ்வாறு சரணடைந்த மேற்கு வங்க மாநிலத்தைத்
தலைமையகமாகக் கொண்ட இ.தே.ப.யினர் தலைமையில் அமைந்த முன்னோக்கு அணியின் தமிழக
மாநிலத் தலைவராகத் தன்னை அமர்த்திக் கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட
மக்கள் சிறிது சிறிதாக மேலெழுந்து வருவதைப் பொறுக்க முடியாமல் முக்குலத்தோர் என்ற
பெயரில் ஒடுக்கும் சாதியினரை ஒருங்கிணைத்ததையும் சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கு
எதிராகப் போராடிய “திராவிடர்” இயக்கத்தின் முழக்கங்களுக்கு எதிராக தேசியம்,
தெய்வீகம் என்ற முழக்கத்தை முன்வைத்ததையும் தமிழ்நாடு நன்கு அறியும். அவர்
விதைத்த நச்சு விதை முளைத்து மரமாகி இன்று தமிழ் பேசும் மக்களிடையில் வெறுப்பையும்
பகைமையையும் வளர்த்துள்ளது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி
விட்டதே இந்தத் திராவிட இயக்கம் என்ற சினவெறியில் அந்த நச்சு
மரத்தின் வேர் இவர்கள் நெஞ்சங்களில் புகுந்துள்ளது கூட இந்த வந்தேறிக்
கோட்பாட்டின் பின்னணியாக இருக்கலாம்.
சாதி வரலாற்றாசிரியர்கள், தங்கள் சாதியினர் மூவேந்தர்களின்
அல்லது வேறு குறுநில மன்னர்களின் வழிவந்தவர்கள் என்பதற்குக் காட்டும் சான்றுகளில்
ஓரிரு விதிவிலக்குகள் தவிர, இவ்வாறு காட்டிக் கொடுப்போருக்குத் தம் தாய்நாட்டைக்
கைப்பற்றிய அயல் ஆட்சியாளர்கள் வழங்கிய விருதுகள், பட்டயங்கள், மானியங்கள் போன்றவையே.
உண்மையில், அரச மரபினர்
என்போர் தம் போல் அரச மரபினர் அல்லது குறுநில மன்னர்களுடன்தான் திருமண உறவுகள் வைத்துக்கொள்வர். தங்கள்
எதிரிகள் அல்லது போட்டியாளர்களான அரசர்களோடு இணக்கம் காண அவர்களுக்கோ அல்லது
அவர்களுக்கு எதிராக ஒரு கூட்டணி அமைக்க உதவத்தக்க வேற்றரசர்களுக்கோ தங்கள்
தங்கைகளையோ மகள்களையோ மணம் முடித்துவைக்கத் தயங்குவதில்லை. இந்த நிகழ்முறையைத்
தமிழக வரலாற்றிலும் அதைவிடவும் தெளிவாக ஐரோப்பிய வரலாற்றிலும் எளிதாகக் காண
முடியும். புதிதாகத்
தோன்றும் அரச குலத்தினருடன் பெருங்குடி மக்கள் கூட திருமண உறவுகளைத் தவிர்த்தனர்
என்பதற்கு நம் மரபில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
உண்மையில்
இன்று இந்தக் கூக்குரல் எழும்புவதற்குக் காரணமே ஒதுக்கீடுதான். இருபதாம்
நூற்றாண்டில் அரசுப் பதவிகளில் பார்ப்பனர்
முற்றதிகாரம் செலுத்துவதற்கு எதிராக உருவானதுதான் ஒதுக்கீட்டு அரசியல். ஆனால் அதன்
பிளவுபடுத்தும் தன்மைக்கு எதிர்விசையாகச் செயற்படுவதற்கு நயன்மைக் கட்சி முன்வைத்த
தமிழகப் பொருளியல் விடுதலை முழக்கத்தைக் குப்பையில் வீசியெறிந்த பெரியாரைத் தூக்கிச்
சுமந்தவர்களும் அவர்களது வழித்தோன்றல்களும்தாம் இன்று வந்தேறிச் சிக்கலைக்
கையிலெடுத்திருப்பவர்கள்.
நேற்று தாழ்த்தப்பட்டவர்களும் தங்களின் ஒடுக்கல்களுக்கு
அஞ்சி வாழ்ந்த பிற மக்களும் கிடைத்த கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டது போல்
பயன்படுத்தாமல் தங்கள் சாதிய மேலாளுமையில் மகிழ்ந்திருந்த “போர்ச் சாதியினர்” நேற்று தங்கள் கீழே இருந்தவர்கள் இன்று தங்களைத் தாண்டி மேலே சென்றுகொண்டிருப்பதைக்
கண்டு மனம் பதறி இன்று கல்விக்கும் உயர் வேலைவாய்ப்புகளுக்கும் துடிக்கிறார்கள்.
அங்கு பார்த்தால் இந்த முன்னாள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அடுத்தபடியாக இந்தப்
பிறமொழியாளர்கள் இருப்பதைக் காண்கிறார்கள். அந்த வெறியில்தான் இந்த கூச்சல். ஆனால்
இந்தப் போராட்டத்தில் கூட நேற்று நாடார்கள் செய்தது போல் தங்களுக்குக் “கீழே”
இருக்கும், தங்கள் ஒடுக்கல்களிலிருந்து விடுதலை பெறப் போராடிக்
கொண்டிருக்கும் தமிழ்ச் சாதியினரின் துணையைப் பெற்று களத்தில் இறங்க அவர்களின் குருதியில்
மிகுந்து நிற்கும் பார்ப்பனியக் குருதியில் ஊறிய சாதிவெறி இடம் கொடுக்கவில்லை.
இந்த ஒதுக்கீட்டுக் கூக்குரலாளர்களின் இன்னொரு அடிப்படையான
பண்பு எவ்வளவு “தாழ்ந்த” சாதியிலிருந்து வந்தவர்களாயினும் தாங்கள் மேலேறி வந்தது போல் தங்கள்
சாதிக் குழுக்களின் அடிமட்டத்து மக்கள் மேலேறி வந்துவிடக் கூடாது என்பதில் மிகக்
குறியாக இருக்கிறார்கள். இவர்களின் குறியே இந்த அடித்தட்டு மக்களை வாக்கு
வங்கிகளாக ஆட்சியாளரிடம் காட்டி தங்களுக்கு மட்டும் பலன்களைப் பெறுவதே. அடித்தட்டு
மக்களுக்கு ஒரு கல்வி வாய்ப்பாக இருந்த அரசு தொடக்கக் கல்வியைப் படிப்படியாகக்
கருணாநிதி வகையறா அழித்துவரும் இன்றைய செய்கைகளுக்கு ஒரேயொரு எதிர்ப்புக் குரலைக்
கூட இவர்களில் எவரும் எழுப்பவில்லை என்பதே போதும் இவர்களது இந்த மனப்பான்மையைக்
காட்டுவதற்கு.
இந்த ஓதுக்கீட்டு அரசியல்தான் பிற மொழியாளர்களில் உள்ள ஒட்டுண்ணிகளின்
பின்னணியில் அம் மக்களையும் திரட்டுகிறது. இவ்வாறு வைக்கோ அல்லது விசயகாந்தின் பின்னால் திரளும்
பிறமொழியாளர்களைக் காட்டி இந்த வந்தேறிக் கோட்பாட்டினர் தங்கள் பரப்பல்களுக்கு
வலுச் சேர்க்க முடிகிறது.
இன்றைய
இதே போன்ற நிகழ்முறைதான் தமிழக வரலாற்றின் கடந்த பல காலகட்டங்களிலும் கல்வி
வாய்ப்புகள் பரவலாகக் கிடைத்த சூழல்களில் ஒவ்வொரு மக்கள் குழுவிலிருந்தும் தோன்றிய
தன்னலத் தனிமங்கள் ஒன்று சேர்ந்து அடித்தள மக்களின் கல்வி வாய்ப்புகளை அழித்து
வந்துள்ளன. அதற்கு இன்று ஆங்கிலம் போன்று அன்று பிராகிருதம், சமற்கிருதம் போன்ற
புதிய மொழிகள் பயன்பட்டுள்ளன. அம்மணத்தைத் தழுவிய குழுக்கள் அம்மணமாகத் திரிந்த
மனம் பிறழ்ந்த “துறவி”களின் வழிகாட்டலில் தமிழகத்தின் அனைத்துப் பண்பாட்டு மூலங்களையும் அழித்து
அவற்றைத் திரித்து சமற்கிருதத்தில் பெயர்த்து வைத்தன. இந்த அழிம்பு வேலையின் விளைவைத்
தலைகீழ்ப் பாடமாக, தமிழர்களுக்குப் பண்பாட்டைக் கற்பித்தவர்கள் இந்த அம்மணர்களே
என்று அந்த அம்மண சமயம் சார்ந்த பனியாக்களின் இந்திய அரசு நடத்தும் பல்கலைக்
கழகங்கள் புகட்டும் பாடங்களை ஒப்புவித்துத் திரிகின்றன தமிழகத்து ஒட்டுண்ணிக்
கூட்டம்.
தமிழகத்தில் அண்மைக் காலத்தில் ம.கோ.இரா. தொடங்கி செயலலிதா,
இரசனிகாந்து வகையறா வரை
அயல் மாநிலங்களில் பிறந்தவர்களே தமிழக மக்கள் நடுவில் செல்வாக்கு பெற்றிருப்பது
எதைக் காட்டுகிறது? இங்குள்ள மக்களின் குருதியில் செறிந்து நிற்கும் சாதி வெறியினால்
உள்நாட்டிலுள்ள ஒரு தலைமையை ஒருமனதாக உருவாக்க முடியாமையும் சாதி கடந்த,
அனைவருக்கும் பயனளிக்கும் அனைத்துச் சாதிகளிலும் பெரும்பான்மையரான அடித்தள மக்களின்
பொதுச் சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் கொள்கைகளைக் கொண்டு களத்தில் நிற்கும்
தலைமைகளுக்குத் துணைநின்று அக் கொள்கைகளை மக்கள் நடுவில் கொண்டுசெல்ல இம் மேல்மட்டக்
குழுவினரின் சாதி, பண, பதவி வெறிகள் தடையாயிருப்பதும்தாம். தமிழகத்தைச் சார்ந்த
கருணாநிதியும் அயல் மாநிலத்தவரான செயலலிதாவும் இன்று களத்தில் நிற்கிறார்கள்
என்றால் அவர்களுக்கு துணை நிற்போரின் பணவெறி தவிர வேறொன்றும் இல்லை. இவர்களில்
மிகப் பெரும்பான்மையர் நாம் மேலே குறிப்பிட்ட தமிழ் பேசும் ஒடுக்கும்
சாதியினர்தாம். பணம், பதவி என்பவற்றை வென்றவர்களிடம் பெறுவதற்காக அடித்தட்டு
மக்களை மனிதர்களாகவே மதிக்காத, தமிழகத்தின் மிகப் பழம் பண்பாகிய ஒட்டுண்ணி
மனப்பான்மை காரணமாக நிற்கிறது.
“தமிழ்
பேசும்” தலைமைகள் தங்களின் பண, பதவி வெறிகளை நிறைவேற்றக்
கூடத் தங்கள் சாதி வெறியைக் கைவிட இயலாதவர்களாக தங்களின் சாதிப் பின்னணியில்
தமிழ்நாட்டை வடக்கு, தெற்கு, மேற்கு என்று மூன்றாக உடைக்க வேண்டும் என்று முழக்கம்
வைத்ததை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். இந்த முழக்கத்தையும் மக்கள் முன்
இவர்களால் கொண்டுசெல்ல முடியவில்லை. ஒதுக்கீட்டு அரசியலின் உடன்பிறப்பான மக்கள்
குழுக்களை அணு அணுவாகச் சிதைக்கும் செயல்முறையில், முக்குலத்தோர் என்று
புறப்பட்டவர்கள் இன்று கள்ளர், மறவர், அகம்படியர் என்று
சிதறிக் கிடப்பதைப் போல பிற “போர்ச்சாதி”யினரும் சிதறிக் கிடப்பதுதான் காரணம். ஆக, இன்று
தமிழகத்தின் முன் நிற்பது, சாதி உணர்வுகளைக் கைவிடத் துணிந்த, அனைத்து சாதி
மக்களிலும் உள்ள அடித்தள மக்களுக்கும் தமிழகத்தின் அனைத்துப் பொருளியல்
சிக்கல்களின் தீர்வுக்கும் பொருந்தும் குறிக்கோள்களுடன் களத்தில் நிற்கும் ஒரு
தலைமையை வளர்த்தெடுக்கும் ஒரே ஒரு பணிதான்.
அடுத்து நம் மீது நண்பர் முன்வைத்திருக்கும் “வந்தேறிகள்”
முழக்கத்தைப் பார்ப்போம். அவர் நாம் கூறிய
200 ஆண்டுகள் மட்டுமல்ல 1800 ஆண்டுகளாகவே தமிழகத்தில் வந்தேறிகள் சிக்கல் இருந்து
வருகிறது என்கிறார். அதே கண்ணோட்டத்தில் பின்னோக்கிச் சென்றால் வரலாற்றுப்
பதிவுகளின்படி இந்த “வந்தேறிச் சிக்கல்” குறைந்தது 4000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.
கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காரவேலனின் அத்திகும்பா
கல்வெட்டின்படி சேர, சோழ, பாண்டியர்களும் 12 குறுநில மன்னர்களும் செய்துகொண்ட
ஒப்பந்தம் அதற்கு முன் 1300 ஆண்டுகள், ஆக கி.மு. 15ஆம் நூற்றாண்டில் இந்த
ஒப்பந்தம் செயலுக்கு வருகிறது. இதனோடு மூன்றாம் தமிழ்க் கழகம் முடிவுக்கு
வந்த கி.பி. 150 ஐச் சேர்த்தால் ஏறக்குறைய
1650ஆண்டுகள். அதாவது மூன்றாம் கழகம் செயல்பட்ட 1850 ஆண்டுகளைக்
கணக்கிலெடுத்துக்கொண்டால் கொற்கையில் வந்து இறங்கிய பாண்டியர் வடக்கிலும்
மேற்கிலும் கிழக்கிலும் இருந்த சேர, சோழர்களை அகற்றி மதுரையைக் கைப்பற்றி அங்கு
மூன்றாம் கழகத்தைத் தொடங்குவதற்கு ஒரு 100 ஆண்டுகளாவது சென்றிருக்கும். ஆக 1850 – 150 + 100 = கி.மு. 1800. அத்துடன்
இப்போதைய 21 நூற்றாண்டுகளையும் சேர்த்துக் கொண்டால் 3900 ஆண்டுகளுக்கு
முன்பிருந்ததே அதாவது பாண்டியர்கள் வருவதற்கு முன்பே வந்துவிட்ட சேர, சோழர்களைக்
கணக்கிலெடுத்தால் குறைந்தது 4000 ஆண்டுகளுக்கு முன்பே வந்தேறிய சேர, சோழர்களையும்
கணக்கிலெடுக்க வேண்டும். வந்தேறிக் கோட்பாட்டின் அடிப்படையில் இவர்களை என்ன செய்ய?
அது மட்டுமா, முதுகுளத்தூர் கலவரம் பற்றி எழுதிய திரு.
தினகரன் கொண்டையங்கோட்டை மறவர்கள் கன்னடத்திலிருந்து குடியேறியவர்கள் என்கிறார்.
வெள்ளாளர்களில் ஒரு பிரிவினர் தங்களைக் கங்கைக் கரையிலிருந்து வந்தவர்கள் என்கின்றனர்.
நாடார் வரலாறு என்று ஒரு நூல் எழுதிய திரு. மோசசு பொன்னையா என்பவர்
சாணார்கள் அனைவரும் சீனத்திலிருந்து வந்த சான் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று
அடித்துச் சொல்கிறார். அயலிலிருந்து வந்ததாகக் கூறிக் கொள்வது பெருமைக்குரியது
என்று இன்னும் எத்தனையோ சாதியினர் “சாதி வரலாறு”களை எழுதியுள்ளனர். அல்லது “செய்தி”களாகத் தந்துள்ளனர். இவர்களை எல்லாம் என்ன
செய்வது? இந்த வந்தேறிக் கோட்பாட்டினரில் எத்தனை பேர் இந்த வந்தேறிகள் பட்டியலில்
வருவர்?
ஐரோப்பாவில் வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே அலையலையாக
பல்வேறு “இன” மக்கள் அங்கு குடியேறி இருக்கின்றனர். அவர்கள்
அனைவரும் ஒன்றிணைந்து இன்றைய இற்றை நாகரிகத்தை உருவாக்கியுள்ளனர். அதிலும் சென்ற 5
- 6 நூற்றாண்டுகளில் அங்கு ஏற்பட்ட மக்கள் கலப்பு கணக்கிடக் கடினமான ஒன்றாகும். அங்கிருந்த
நிலப்பரப்புகளில் ஒரு கட்டத்தில் உருவான நிலம் சார்ந்த தேசிய உணர்வு ஒரு
நிலப்பரப்பிலுள்ள மக்கள் தங்களுக்குள்ள பல்வேறு குழு மக்களை ஒரே தேசியமாகப்
பார்த்து புற விசைகளை எதிர்த்து நின்றதும் ஒரே மொழி பேசும் மக்கள் தங்கள் வாழும் பகுதிகளை இணைத்து ஒரு தேசியத்தை உருவாக்கியதுமாக
இன்றைய ஐரோப்பிய தேசங்கள் உருவாகியுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் வரலாற்று
வழியில் தமிழ்நாடு என்ற மாநிலம் உருவான நேரத்தில் இங்கு இடம்பெற்றுவிட்ட அனைத்து
வகைப்பட்ட மக்களும் புறச் சுரண்டலுக்கு எதிராக ஒன்றிணைவதும் நாம் பறிகொடுத்து, தமிழ் பேசும் மக்களைக் கொண்ட
அண்டை மாநிலத்தில் இப்போது இணைந்திருக்கும் பகுதிகளை மீட்பதும் நமது உடனடி
எதிர்காலப் பணியாக இருக்க வேண்டும்.
ஆசிரியரிடம் ஐயங்கள் கேட்பதையே தண்டனைக்குரிய குற்றமாகக்
கொண்டு செயற்படும் இன்றைய “கல்வி” ச் சூழலில், கொடுக்கப்பட்ட வினா வங்கியிலிருந்து விடை எழுத மட்டும்
“கற்ற” மாணவர்களை வெளித்தள்ளிக்
கொண்டிருக்கும் “கல்வி” நிலையங்களில் பொருளியல் - அரசியல் வல்லரசுகள் பொறுக்கி
எடுத்தவர் போக எஞ்சியோர் குமுகப் பதர்களாகப் பறந்துகொண்டிருக்கின்றனர். இந்த
நிலையில் வெளிநாட்டுப் பணத்துக்காக “ஆய்வு” நூல்களை எழுதித்தள்ளிக் கொண்டிருப்போர் விதைக்கும் கருத்துகளைச்
சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்காமல் முளையினுள் பதித்துவிட்டவர்களாகப்
படித்தவர்களில் பலர் மாறிவிட்டனர். அத்தகையோர் மனதில் பதிந்தவற்றை அகற்றுவது
கடினம். ஆனால் இளைய தலைமுறையினர்க்கு இக்கருத்துகளின்
உண்மையான மதிப்பை எடுத்துக் கூறுவதற்குக் கிடைத்த வாய்ப்புக்கு மகிழ்கின்றேன்.
இன்று உலகில் நிலவும் கல்வி ஒட்டுண்ணி வாழ்க்கையை எய்துவதை
நோக்கியதாகவே பெரும்பாலும் அமைந்துள்ளது. ஆனால் பணக்கார நாடுகளில் குமுக வாழ்வின்
பல்வேறு கூறுகள் பற்றிய அறிமுகமாவது இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் நம்
நாட்டில் வல்லரசுகளுக்குத் தேவைப்படும் திறன்கள் தவிர பிற எந்தத் திறனும்
கல்வித்துறை மூலம் இளைஞர்கள் பெறாமல் விழிப்பாகப் பார்த்துக் கொள்கின்றனர் நம்மை
ஆள்கிறவர்கள். இந்த
நிலையைத் தலைகீழாக மாற்றியமைக்கும் ஒரு
கல்வி முறையை நாம் இப்போதே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் பிறக்கும் போது அதன் உடலில், மனிதன்
ஓரணுவுயிராகிய அமீபா நிலையிலிருந்து அதுவரை நிகழ்ந்த மரபுகளின் ஒரு தொடர்ச்சியாகிய
திறன்கள் மற்றும் குணநலன்களின் ஒரு கலவை பதிவாகியுள்ளது. அதே வேளையில் புலனறிவுகளால்
ஆன மூளைப் பதிவு எதுவும் இன்றி மூளை வெட்ட வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஒரு சிறந்த கல்விமுறை மரபு வழியில்
அமைந்த திறன்களைக் கண்டறிந்து அவற்றை அக்குழந்தையின் வருங்காலத்துக்கும் குமுக
நலனுக்கும் மிகச் சிறந்த முறையில் பயன்படுமாறு நெறிப்படுத்தவும் குணநலன்களில்
நல்லவற்றை வளர்த்தெடுக்கவும் தீயவற்றை அகற்றவும் வழியமைப்பதாக இருக்க வேண்டும்.
இதற்காகக் குழந்தைகளைக் குழந்தைகள் காப்பகத்தில் தகுந்த குழந்தை
உளவியல் மூலம் மதிப்பிட்டு அதற்கேற்ற வழிநடத்தல்களைக் கையாளத் தகுதியுள்ள நெறியாளர் வேண்டும். அது போலவே
மழலையர் பள்ளி, தொடக்கக் கல்வி,
நடுநிலைப் பள்ளி வரையில் குழந்தைகளை வழி நடத்த வேண்டும். எழுத்தறிவுக்கு முதலிடம்
கொடுப்பதற்கு மாறாக விளையாட்டு, இயற்கையுடன் உறவுகொள்ளத் தேவையான கல்வித்
திட்டத்துக்கு முதலிடமும் அதன் வழியாக எழுத்தறிவையும் புகட்ட வேண்டும். அத்துடன்
அக்குழந்தையின் தீய குணங்களை மாற்றுவதற்கான நடைமுறைகளையும் கையாள வேண்டும். இந்த
வகையில் உளவியல் துறையினரின் உரிய பங்களிப்பு வேண்டும். அதாவது குழந்தைக் காப்பகம்
தொடங்கி நடுநிலைக் கல்வி வரை மிக உயர்ந்த பயிற்சிகளின் பின்னணியுள்ள திறமையான
ஆசிரியர்கள் அமர்த்தப்பட வேண்டும். நடுநிலைக் கல்வியின் பின்னர் மாணவன் தனக்குப்
பொருத்தமானது என்று நினைக்கும் துறையில்
பயிற்சி மேற்கொண்டு பணியில் ஈடுபட வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலப் பயிற்சிக்குப்
பின் அதே துறையில் உரிய நுழைவுத் தேர்வு பெற்று அடுத்த கட்டக் கல்வி பெற வேண்டும்.
இவ்வாறு படிப்படியான பணிப் பயிற்சி → நுழைவுத் தேர்வு → அடுத்த கல்விக் கட்டம் என்று மேலேற
வேண்டும். தான் தேர்ந்தெடுத்த துறையில் மனநிறைவு கொள்ளாதவர்கள் தங்கள் துறையை
மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு வேண்டும். எந்த உயர் பணி அல்லது பதவிக்கும் நேரடித் தேர்வு கூடவே கூடாது.
அதுபோல் எல்லாத் துறைகளிலும் ஒரு மட்டத்திலுள்ள பணிகளுக்கு ஒரே சம்பளமே வழங்கப்பட
வேண்டும். பணி இடர்கள் (Professional Hazards) அடிப்படையில்
படிகள் வழங்கி பிறர் செய்யத் தயங்கும் பணிகளை மேற்கொள்வோருக்கு ஊக்குவிப்பு வழங்க
வேண்டும்.
இத்தகைய ஒரு கல்விமுறையையும் கல்வி - பணி இணைவையும்
ஏற்படுத்தினால் நம் நாட்டிலுள்ள மனித வளத்தின் மிக உயரிய செயல்திறனைப் பெற்று
உலகில் முதலிடத்தில் நாம் இருக்கலாம்.
கிட்டத்தட்ட 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கிய இற்றை(நவீன)
வரலாற்றுக் காலத்தில் அக் குமுகத்தில் தோன்றிய மிகுதிறன் கொண்ட மக்களை, பழஞ்சவைக்
கிறித்துவத்தின் கொலைகாரக் கிடுக்கிப் பிடியையும் மீறி அக் குமுகமும் அரசுகளும்
ஊக்குவித்ததால் அவர்கள் முழு உலகையும் தம் ஆளுகையினுள் கொண்டுவந்தனர். ஆனால் நாம்
அத்தகைய திறனாளிகளை அன்றிலிருந்து இன்றுவரை திட்டமிட்டு, விடாப்பிடியாக
அழித்துவருகிறோம். இதில் நம் சாதி ஆதிக்க உணர்வுக்கும் ஆட்சியாளர்களும் குமுக
மேலடுக்கினரும் அயல் விசைகளுக்கு எளிதில் விலை போவதற்கும் முழுப்பங்கு உண்டு. இந்த
குமுக எதிர் விசைகளுக்கு எதிராகத் தமிழகத்தின் அடித்தள மக்களைத் திரட்டி,
பொருளியல் உரிமைக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் போராடி வெற்றி பெறுவதுதான் ஒரே வழி.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக